நம்மைப் பற்றிய கவிதை…கவிதை நூல் அறிமுகம்
பறவைகளுடன், பருண்மை தேடும் பாடல்களைத் தேடி….
சிறுமியாய் பற்பல கேள்விகளுடன் பதின்மம் (1990) ஆரம்பித்தது தொட்டு 2003வரை ஆகர்ஷியாவால் எழுதப்பட்ட 42+ கவிதைகள் அடங்கிய தொகுதி ‘நம்மைப் பற்றிய கவிதை.’
தீர்வுகளுடன் மனிதர்களை அணுகுவதும், மற்றையவருடைய “மதிப்பீட்டில்” [சட்டகத்துள்] வாழ்வதும், புகைத்தல் குடித்தல் உடன் தடைசெய்யப்பட்ட தனது பால் தன்மையும் அவரது கவிதை முரண் கொள்வனவாகின்றன. இவற்றை வலியுறுத்தி ‘உரத்து’ப் பேசுபவர்களாக, தடைவிதிப்பவர்களாக, மதிப்பிடுபவர்களாக சதா ‘ஒலித்தபடி’ இருப்பவர்களுடன் சன்னமாக ஏனும் முரண்டிக் கொண்டிருக்கிறது, அவரது அக வெளி.
…உள்ளின் தகிப்பவிந்து
புகைமூட்டம்
உன் ஒற்றைக் குரலே உச்சமாய்க்
கேட்கும்.
மற்றப் பகுதி மெளனத்துள்.
வரலாற்றுப் பயங்கள்
புனைதலின் பயங்கள்
அரிப்பெடுக்கும் அரிதாரம்
முகஞ்சொறியக் கையலையும்
இடையில்
இன்னுமென்ன திரைகள்?
சற்றேனும்
தனிமையில் விட்டுப் போ
என்னை.
பிறழ்ந்துதான் பார்க்கிறேன்
ஒருமுறையேனும்.
(பக். 61)
ஆகர்ஷியாவை -பெரும் பாதிப்புக்களை விட்டுச் சென்ற - அவருக்கு முந்தைய தலைமுறை கவிஞைகளின் நீட்சி என்று கூறலாம். போராட்டச் சூழல் மற்றும் அதில் பெண்ணாக வாழுதலின் வன்-அழுத்தங்களுள் இல்லாமற் போன அந்தப் பெண்களை ஆகர்ஷியாவின் சொற்கள் தொடருகின்றன. நம்பிக்கையிழந்து வேரறுந்(/த்)த நண்பியின் யதார்த்தம் மீண்டும் திரும்பக்கூடாதென்பதிலும் வாழ்வு குறித்த நம்பிக்கையை கைவிடாதிருப்பதிலும் கவனம் கொள்கின்றார் அவர் [நேற்று / நம்பிக்கை செத்து / வேரறுந்த / நண்பியின் நினைவுப் புண்கள் / ஆறுமுன்னரே / நம்புகிறோம் வாழ்வு பற்றி / ...அதன் அர்த்தம் பற்றி / இன்னும் வலுவாய் - பக். 37]. நம்பிக்கைகள் அழிந்துகொண்டிருக்கிற ஒரு சூழலுள் வாழ்ந்தபடி, அப்படியான நம்பிக்கையை எழுத முடிவது முக்கியமானது. எனினும், முன்னுரையில் ஆகர்சியா கூறுவதுபோல, அவர் வாழ்ந்த காலத்தின் புற நிகழ்வுகள் (போர், இடப்பெயர்வு) கவிதைகளில் மைய்யப் பேசுபொருள்களாக இல்லை. கவிதை அந் நிகழ்வுகளுள்ளும் அவரது அகவெளியின் ஓட்டங்களையே பதிவு செய்திருக்கிறது. ஆகவே அவர் கூறுவதுபோல, இவற்றை பெண்ணியப் படைப்பாக அன்றி, -தரப்பட்ட தீர்வுகளையும், எல்லைகளையும் விரும்பாத - ஒரு பெண்ணின் படைப்பாகப் பார்க்கலாம்
மற்றது: கவிஞன்கள் தமது கவிதைகளை, கவிதையிருப்பை வலியுறுத்தி வருவதும், -ஆகர்ஷியா போன்ற - பெண்கள் அதனைத் தம் அந்தந்தப் பருவங்களின் நிழலாக மட்டுமே பார்ப்பதும் (அல்லது தம் வாழ்வின் அடுத்த படிநிலைகளில் அது அதி முக்கியமற்றதாய் கடக்கப்பட்டு விடுவதும்) 1998-2000 ஆண்டுப் பகுதிகளில் வெளிவந்திக்க வேண்டிய இத் தொகுதியின் தாமதத்துக்கான காரணமாக இருக்கக் கூடும். அத்துடன், கவிதைகள் குறைந்த எண்ணிக்கையிலும், தொடர்ச்சியாய் எழுதுப்படாமலும் போனதற்கு, போர்ச் சூழலும் தனிமைப்படலும், தன் கவிதையை வெளிப்பாடுகளாயேயன்றி பிற வகையில் ‘உரிமை’ கோராத தன்மையும் காரணங்களாய்ப் படுகிறது.
(பெண், போர்) வாழ்வில் ஏற்படுகிற தேக்கம் கவிதைகளுடையதாகவும் ஆகிவிட்டிருக்கிறது. ஆகர்ஷியாவின் கவிதைவெளி விரிபிற்கும் தன் தொடர்ச்சிக்கும் காத்திருக்கிறது. அக(ம்)-புறமாய்(!!) தேங்கிய வாழ்விலிருந்து வெளியேறி -அவை எங்கும் தங்கியிருப்பதில்லை என்பதால் அவர் விரும்புகிற பறவைகளாய் - கவிதைகளும் சுதந்திரவெளியை வேண்டுகின்றன.
ஆகர்ஷியா, 13 வயது சிறுமியாக,
மெல்லிய நிலவொளி கலந்த
இரவும்
வீசிச் சுழலும் காற்றிடை
சலசலக்கும்
வெண்கலப் பனித்துளிகளும்
அதில் தோய்ந்து சிரிக்கும்
சீமைக் கிளுவைக் கதியாலின்
ரோஸ் நிறப் பூக்களின்
மங்கலான வடிவமும்
என் மனதில்
மெல்லிய சலனத்தைத் தோற்றுவிக்கும்.
(பக்.11)
என்றும், அவரது மெல் சலனங்களிற்கும், இனிய நினைவுகளிற்கும் இடைஞ்சலாக ‘அடுப்பங்கரைப் புகையில் அவிந்த கண்களும்’ ‘கர்ணகொடூரமான குறட்டை ஒலியும்’ இருப்பதை எழுதி,
வம்புப் பேச்சுகள்
சலித்து விட்டன
ஒரே கதையை
எத்தனை தடவைதான் நன்னுவது?
..
அர்த்தமற்ற
அவித்துப் போடலும் விழுங்கலும்
தினம் தினம் காதில் விழும்
சாவுகளை இரைமீட்டபடி
வெற்றிறைச் சாற்றை உமிழ்ந்தபடி
ஏன் இந்த இருப்பு
(பக் 13, 14)
என்றும்,
வழிவழியாய்த் தொடருதல்கள் மீதான கேள்விகளுடன் வளர்கிறார். போரும் வாழ்வும் அவரைத் தனிமைப்படுத்துகிறது. எனினும் ‘மனிதர்களிடம் பெற முடியாதவற்றக்காக’ அவர் ஏங்கிக் கொண்டோ, யாருக்காவும் காத்திருக்கவோ இல்லை. அவர், அச் சூழலுக்குள் தொலைந்துபோன தன்னையே தேடிக் கொண்டிருக்கிறார்.
******
இக் கவிதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. இருப்பின் அர்த்தத்தைத் தேடுபவை. இவரது ஆரம்பகாலக் கவிதைகள் இவ் வகைக்குள் அடங்கும். பெண்ணாய் வளருதல் மற்றும் அதன் கேள்விகளைக் கொண்டிருக்கின்றன…(”அர்த்தமோன இருப்புகள்” “மீன் மான் தேன் / தொடர்பிலா உவமைகள்”)
2. சில, புற அரசியல் நிகழ்வுகள் பதியப்பட்டிருப்பவை (”நகரத்தின் சத்தங்கள்” “தொன்மம்” “இரவு அசையவில்லை” “கதிரை ஒன்றாயிருக்க”)
3. தங்கிப்போதல்-அந்நியப்படல் / தொலைதல் - தொலைந்துபோன நாட்களிற்காய் ஏங்குதல் (”என் கவிதைகளைத் தேடிச் செல்கிறேன்” “சோற்றுப்பிடிகளை உருட்டித் தருகிறாள் அம்மா”)
தனக்கென விதிக்கப்பட்டவற்றை மீற விழைதலையும், முடியாதபோது மகிழ்வுற்றிருந்த கடந்த பால்ய காலங்களிற்காய் ஏங்குதலுமென, தொடர் ஏக்கமும் தொலைதலும் நிகழ்வதாயினும், தீர்க்கமானது ஆகர்ஷியாவின் உலகம். தனது வளரிளம் பருவத்தில் (Adolescence) அவர் எப்படி யாருக்காவும் காத்திருக்கவில்லையோ எப்படித் தன்(/பெண்)மீதான சமூக எதிர்பார்ப்புக்கள் குறித்து விசனமுற்றாரோ, பிறகும் அதைக் கைவிடாதவராய், இளம் பெண்ணாய்ப் எழுதுகிறார்:
உன்னுடைய தீர்ப்புக்காக
இப்போதும் நான் காத்திருக்கவில்லை
..
நல்ல நண்பன் ஒருவனைத்தான்
நான் நேசிப்பவளேயன்றி
எஜமானனை அல்ல.
எப்படி நிகழ்ந்துவிடுகின்றன
இந்த மாற்றங்கள்
யாருக்கும் தெரியாமலே?
(பக்.63)
இதில், குறுக்கப்பட்ட தனது எல்லைகளுக்குள்ளும், தனக்கான தேர்வுகளை தேடி அலைந்து, அடைகிற பெண்ணின் முகம் தெரிகிறது. அவள் தன் வெளியை நிரப்பும் பருண்மை தேடும் பாடலைத் துரத்திச் சென்றாள். போரின் நிமித்தம் ஆளுக்கொரு திசையாய் சகோதரர்கள் பிரிந்து போய் விட்டார்கள்; தோழமைகளை இழந்து நிற்கையில், உயிர்ப்பாக இருக்க விடாது, நம்பிக்கைகளை மிதித்துத் துவைக்கும் மனிதர்களுள்,அவள் தனக்குள் தேங்கிப் போகிறாள். வெளிப்பாட்டிற்கெதிரான அத் தேக்கத்துள், அப்பால் ஏதுமற்று, வெறுமனே விரிந்திருந்தது வானம். -பிறகு - இன்னொரு நம்பிக்கை பொழுதிற்காய் -ஆகர்ஷியாவுடன் இணைந்து - அதே வானம் தலைசாய்த்திருக்கிறது! போர் நிரந்தரமின்மையை பயிற்றுவித்த வாழ்வில், நம்பிக்கைகளை இழப்பதும் மீளப் பெறுவதும் இயல்பானது. இக் கவிதைகளில் தொடர்ந்து வருகிற அலைச்சலும், அலைக்களிப்பும் ஏக்கமும் அகன்று, இன்றைய அவரது வாழ்பனுபவத்தை உள்ளடக்கிய படைப்புகளிற்காய் நாமும் காத்திருப்போம்.
-பிரதீபா