நூலகம் திட்டம்

முகப்பு | நூல்கள் | இதழ்கள் | நூலகம்

  1. பொது அறிமுகம்
2. எழுத்தாளருக்கான அறிமுகம்
3. வாசகருக்கான அறிமுகம்
4. பங்களிப்போருக்கான அறிமுகம்
5. மின்னூல் அனுமதி

1. பொது அறிமுகம்

1.1 நூலகம் திட்டம் என்றால் என்ன?
ஈழத்து எழுத்தாவணங்களுக்கான ஒரு மின்னூலாக்கத் திட்டம்.

1.2 இத்திட்டத்தின் நோக்கம் என்ன?
ஈழத்து எழுத்தாவணங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக் கூடியதாக ஆவணப்படுத்தி, அவற்றை வாசிப்பதற்கும் உசாத்துணைப் பாவனைக்கும் இலகுவில் பெறக்கூடியதாக இணையத்தில் வெளியிடல்.

1.3 எத்தகைய நூல்கள் மின்னூலாக்கப்படுகின்றன?
அ) ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள், சஞ்சிகைகளும் ஈழம் தொடர்பான நூல்களும் மட்டுமே வெளியிடப்படலாம்.
ஆ) பதிப்புரிமையுள்ள நூல்களை வெளியிட பதிப்புரிமையுள்ளோரின் அனுமதி பெறப்பட வேண்டும்.

1.4 நூலகம் திட்டம் இதுவரை சாதித்தது என்ன?
இதுவரை 500 நூல்களும் 500 இதழ்களும் மின்வடிவில் வெளியிடப்பட்டுள்ளன.

1.5 இந்தத் திட்டம் யாருக்குச் சொந்தமானது?
இது எந்தத் தனிநபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ சொந்தமானதல்ல. தன்னார்வலர்களின் கூட்டுழைப்பாலேயே இது முன்னெடுக்கப்படுகிறது.

1.6 அவ்வாறாயின் யாரால் முன்னெடுக்கப்படுகிறது?
நூலகம் மடலாடற் குழுவில் இணைந்த தன்னார்வலர்களும் அவர்களது தோழர்களும் இத்திட்டத்தை முன்னெடுக்கின்றனர். திட்டம் திறந்த நிலையிலேயே முன்னெடுக்கப்படுகிறது.

1.7 நூலக வலைத்தளம், நிதி போன்றவையும் எல்லோராலும் கையாளப்படுகின்றனவா?
இல்லை. இவை இதுவரை நூலக ஆரம்ப உறுப்பினர்களால் கையாளப்பட்டன. இப்பொழுது அவற்றைக் கையாளுவதற்கு ஓர் இலாப நோக்கற்ற நிறுவனம் பதிவுசெய்யப்படுகிறது.

1.8 நூலகம் திட்டத்தில் எத்தனை பேர் பங்குபற்றுகின்றனர்?
இதுவரை நேரடியாக சுமார் 50 பேரளவில் பங்குபற்றுகின்றனர். நேரடியாக என்றில்லாமல் நோக்கினால் பங்குபற்றுவோர் தொகை பெரிது.

1.9 நூலகம் திட்டச் செயற்பாடுகள் பற்றி எவ்வாறு உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்?
நூலகம் மடலாடற் குழுவில் இணைந்து கொள்வதன் மூலம் செயற்பாடுகள் தொடர்பில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

1.10 குழுவில் இணையாமல் நூலகம் திட்டத்தினரை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்?
noolaham@gmail.com என்ற முகவரிக்கு எழுதலாம். அல்லது பிரதேசத் தொடர்பாளர்களை அணுகலாம்.

1.11 நூலகம் திட்டத்துக்கும் மதுரைத்திட்டம் போன்ற திட்டங்களுக்கும் தொடர்பு உள்ளதா?
நேரடித் தொடர்புகளில்லை. ஆயினும் தன்னார்வலர்கள் பலர் பல திட்டங்களிலும் பங்குபற்றுவதால் செயற்பாடுகள் தொடர்பான அறிமுகம் மற்றும் தொடர்புகள் உண்டு.


2. எழுத்தாளருக்கான அறிமுகம்

2.1 மின்னூல் என்றால் என்ன?
மின்வடிவத்தில் வெளியிடப்படும் நூல்கள் மின்னூல்களாகும். இவற்றைத் தொட்டுணர முடியாது. கணினி அல்லது அதையொத்த கருவிகளின் திரையிலேயே வாசிக்க வேண்டும்.

2.2 இணைய நூலகம் என்றால் என்ன? இதற்கும் சாதாரண நூலகத்துக்கும் என்ன வித்தியாசம்?
இணைய நூலகம் என்பது மின்வெளியில் உள்ள நூலகமாகும். இதனைப் பயன்படுத்தக் கணினியும் இணைய இணைப்பும் அவசியமாகும். இது தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் சாத்தியமாகியுள்ள நவீன நூலகம் என்றால் மிகையாகாது.

2.3 எனது நூல்கள் இணையத்தில் கிடைப்பதனால் வேறு யாரும் அதனை பதிப்பிக்கலாமல்லவா? அல்லது அச்சுப் பொறியில் அச்சிட்டு எடுக்கலாமல்லவா?
வாசிப்பதற்கும் உசாத்துணைப் பாவனைக்கும் மாத்திரமே இம் மின்னூல்கள் வெளியிடப்படுகின்றன. பதிப்புரிமை எழுத்தாளருடையதே. மின்வடிவில் வெளியிட மட்டுமே நூலகம் திட்டத்துக்கு நீங்கள் அனுமதி வழங்குகிறீர்கள். வேறெவரும் உங்கள் நூல்களைப் பதிப்பிக்க முடியாது. அச்சுப்பொறியில் அச்சிடுவதைவிட நூலொன்றை வாங்குவது மிக இலாபமானது.

2.4 எனது நூல்களை நூலகத்தில் வெளியிட அனுமதி அளித்தால் நூலகம் எனக்கு சன்மானம் வழங்குமா?
இல்லை. நூலகம் திட்டம் எதுவித இலாப நோக்கங்களும் இல்லாமலேயே முன்னெடுக்கப்படுகிறது.

2.5 அவ்வாறாயின் நான் எழுதிய நூலொன்றை ஏன் மின்னூலாக வெளியிட வேண்டும்?
அ. உங்கள் நூல்கள் அடுத்த தலைமுறைகளுக்குக் கிடைக்கக் கூடியதாக ஆவணப்படுத்தப்படுகின்றன.
ஆ. நீங்களும் உங்கள் படைப்புக்களும் உலக அளவில் குறிப்பாக இந்திய, புலம்பெயர் வாசகர்களுக்கு அறிமுகமாகிறீர்கள்
இ. உங்கள் பெயரையோ அல்லது நூல்களையோ ஆராய்ச்சிக்காகத் தேடும் மாணவர்கள், கல்வியலாளர்களுக்கு தகவல்கள் இலகுவாகக் கிடைக்கும்
ஈ. உங்கள் நூல்கள் இந்திய, புலம் பெயர் ஆராய்ச்சிகளில் பயன்படும்
உ. மிக முக்கியமாக உங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அறிவு உலகத்தமிழருடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனால் தமிழும் தமிழரும் பெருமளவு நன்மை பெறுகின்றனர்.

2.6 எனது நூலை நூலகம் திட்டத்தில் எவ்வாறு இணைக்கலாம்?
கேள்வி 4.2 இல் அது விளக்கப்பட்டுள்ளது. உங்களால் மின்னூலாக்குவதற்கான ஒழுங்குகளை செய்ய முடியாதிருந்தால் நூலகம் தன்னார்வலர்களை அணுகுவதனூடாக இணைக்க முடியும். உங்கள் நூல்களை இணைப்பதற்கான அனுமதியை குழுவினருக்குத் தெரியப்படுத்துவது பொருத்தமான முதற்படி.

2.7 இன்னும் வெளிவராத எனது நூலை நான் நூலகம் திட்டத்தில் இணைக்கலாமா?
இல்லை. அச்சில் வெளியான நூல்கள் மட்டுமே நூலகத்தில் வெளியிடப்படுகின்றன.

2.8 வெளிவந்த எனது நூலொன்றை மின்னூலாக்கி அனுப்பினால் அது வெளியிடப்படுமா?
நிச்சயமாக வெளியிடப்படும். ஈழத்துப் படைப்புக்கள் படைப்பாளி விரும்பும் பட்சத்தில் நிச்சயம் நூலகத்தில் இணைக்கப்படும். அதற்காகத்தான் நூலகம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

2.9 வெளிவந்த எனது நூலொன்றை மின்னூலாக்கி அனுப்பியும் அது நூலகத்தினரால் வெளியிடப்படாவிட்டால் நான் என்ன செய்யலாம்?
எழுத்தாளரின் அனுமதியுடன் அனுப்பப்படும் நூல்கள் நூலகத்தில் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இது எழுத்தாளரின் உரிமை ஆகும். ஆதலால் நூலகம் மடலாடற் குழுவுக்கு நேரடியாக அல்லது நூலகத்தில் இணைந்துள்ள ஒருவரூடாக குழுவுக்குத் தெரியப்படுத்துவதன்மூலம் குறித்த உங்கள் நூல் நூலகத்தில் இணைக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.

2.10 நான் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளேன். ஏன் எனது நூல்கள் நூலகத்தில் இல்லை?
நூலகத்திற்குப் பங்களிக்கும் தன்னார்வலர்களுக்குக் கிடைக்கும் நூல்களே இணைக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் உங்கள் நூல்கள் கிடைத்தாலும் அனுமதி பெறமுடியாமையாலும் நூலகத்தில் இணைக்கப்படாதிருக்கலாம்.

2.11 எனது அனுமதியில்லாமல் நூலகத்தில் எனது நூல் இணைக்கப்பட்டு உள்ளதாயின் நான் என்ன செய்யலாம்?
நூலகம் மடலாடற் குழுவுக்கு நேரடியாக அல்லது நூலகத்தில் இணைந்துள்ள ஒருவரூடாக குழுவுக்குத் தெரியப்படுத்துவதன்மூலம் குறித்த உங்கள் நூலை நூலகத்திலிருந்து நீக்கலாம்.

2.12 நான் என்னைப் பற்றிய விபரங்களையும் எனது நூலுடன் அனுப்பி வைக்கலாமா?
எழுத்தாளர் பற்றிய விபரங்கள் நூலகம் திட்டத்தில் வெளியிடப்படுவதில்லை. ஆனால் நூலகம் உறுப்பினர்கள் சிலர் விக்கிபீடியா என்னும் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியத்திலும் பங்குபற்றுகிறார்கள். அவர்களால் உங்களைப் பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில் இணைக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் நூலகம் அதனை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றது.


3. வாசகருக்கான அறிமுகம்

3.1 நூலகத்தில் நான் எவ்வாறு நூலொன்றைத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்?
நூலகம் தளத்தில் உள்ள தேடற்பொறிமுறையைப் பயன்படுத்தித் தேடலாம். அல்லது நூலகம் திட்ட மின்னூல் விபரங்களைக் கொண்ட noolahamlist இனைப் பதிவிறக்கித் தேடலாம். (வின்டோசில் ctrl+f)

3.2 நூலகம் திட்ட நூல்களை நான் எத்தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்?
தனிப்பட்ட வாசிப்பு மற்றும் உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு எந்தப் பயன்பாடுகளுக்கும் குறித்த நூலின் பதிப்புரிமையாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

3.3 நூலகம் திட்டம் தொடர்பான பக்கங்களை நான் பிரதிசெய்யலாமா?
இல்லை. இவை அவ்வப்போது மாற்றங்களுக்குள்ளாகுபவை.

3.4 மின்னூல்களில் எழுத்துப் பிழைகள், பக்கங்கள் விடுபட்டுள்ளமை போன்ற தவறுகளை நான் யாருக்கு அறிவிக்கலாம்?
தட்டெழுதிய பிரதிகள் பல மெய்ப்புப் பார்க்கப்படவில்லை. ஆதலால் அவை தொடர்பாகக் குறைகளைச் சுட்டிக் காட்டுவதைவிட மெய்ப்புப்ப் பார்க்க முன்வருவதே விரும்பப்படுகிறது. மின்நகற் பக்கங்களில் உள்ள பிழைகளை noolaham@gmail.com க்கு எழுதலாம்.

3.5 நூலகத்தில் முக்கியமில்லாத நூல்கள் ஏன் வெளியிடப்படுகின்றன?
முக்கியம், முக்கியமல்லாதவை போன்றவற்றை நூலகம் திட்டம் தீர்மானிப்பதில்லை. நூலகம் திட்ட வரையறைக்குள் அடங்கும் மின்னூல்கள் யாவும் வெளியிடப்படுகின்றன.

3.6 நூலகத்தில் ஏன் சில எழுத்தாளர்களின் நூல்கள் இல்லை?
இது ஒரு தன்னார்வத் திட்டம். திட்டத்தினருக்குக் கிடைக்கும் நூல்களே வெளியிடப்படுகின்றன. ஏதாவது நூல்கள் அல்லது எழுத்தாளர்கள் தவறவிடப்பட்டுள்ளதாகக் கருதுவோர் குறித்த நூல்களை மின்னூலாக்க உதவ முன்வரவேண்டும்.

3.7 இந்த மின்னூல்களை இணையத்தில் பிற தளங்கள் பயன்படுத்தலாமா?
பதிப்புரிமை காலாவதியான நூல்களை மட்டும் பயன்படுத்தலாம். பதிப்புரிமையுள்ள நூல்களைப் பிற இணையத் தளங்களில் வெளியிடப் பொதுவாக அனுமதியளிக்கப்படுவயில்லை.

ஆனால் முழுமையாக மின்னூலாக்கத்துக்கான தளங்கள் நூலகம் திட்டத்தினரின் அனுமதியுடன் பின்வரும் நிபந்தனைகட்குட்பட்டுப் பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என்பது நூலகம் திட்ட ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

1. எதுவித வணிக நோக்குமின்றியதாக இருத்தல் வேண்டும். 2. மூல மின்பதிப்பை ஆக்கியவர், வெளியிட்டோர் பற்றிய குறிப்புகள் மின்னூல்களில் தொடர்ந்தும் பேணப்படவேண்டும். 3. அவர்களது மின்பதிப்புகளைப் பிற வணிக நோக்கற்ற திட்டங்கள் பயன்படுத்துவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்.

3.8 ஏன் இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது?
மிகுந்த வேலைப்பளு மத்தியில் தனிநபர்களால் மேற்கொள்ளப் படுகின்ற இத்தகைய தன்னார்வ முயற்சிகளில் ஒரே வேலை மீண்டும் செய்யப்படுவது தவிர்க்கப்படுவதோடு இத்தகைய ஒழுங்குமுறையின் கீழ் தனிப்பட்ட முயற்சிகளின் தனித்துவம் பேணப்படுவதோடு உண்மையான ஒரு கூட்டுமுயற்சியின் பெறுபேற்றையும் அடையலாம்
தமிழ் நூல்களை மிகவேகமாக மின்பதிப்புகளாக்கும் தொழிநுட்பம் சாத்தியமாகும் ஒரு காலத்தில் இன்றைய தன்னார்வ முயற்சிகள் புறந்தள்ளப்படாதிருக்கவும் இது வழிவகை செய்யும்.
இத்தகைய ஒரு தன்னார்வ முயற்சியை எதிர்பாராத சிக்கலான சூழ்நிலைகளிலும் எவரும் உரிமை கொண்டாடிச் சுயநலன்களுக்குப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படும்.


4. பங்களிப்போருக்கான அறிமுகம்

4.1 நான் நூலகம் திட்டத்துக்கு எவ்வாறு பங்களிக்கலாம்?
1. நூல்களைத் தட்டெழுதி இணைத்தல்
2. நூல்களை மின்நகல் செய்து இணைத்தல்
3. வலையேற்றப்பட்டுள்ள மின்னூல்களில் ஏதாவது பிழைகள், குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுதல்
4. நூலகம் குழுவினூடாக இணைந்து நிதி அனுசரணை வழங்குதல்

(நிதி அனுசரணை மின்னூல்களை இணைக்கும் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் பயன்படுத்தப்படும். இது தொடர்பான விபரங்களும் பகிரங்கமாக வெளியிடப்படும். நூலகம் திட்டம் virtual ஆகவே இருப்பதால் நேரடியாக எந்த நிதியும் நூலகம் திட்டத்திற்குப் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை)

4.2 நூலகம் திட்டத்தில் எவ்வாறு ஒரு நூலை இணைக்கலாம்?
(1) நூலகம் திட்டத்தில் மின்னூல் இணைப்பதற்கான பதிப்புரிமையாளர் அனுமதி பெறுதல்
(2) நம்பகமான பிரதியொன்றைப் பெற்றுக் கொள்ளல்
(3) நூலகம் குழுவில் (இணைந்து) தெரியப்படுத்துதல்
(4) குறித்த எழுத்தாவணம் ஏற்கனவே நூலகத்தில் இல்லையென்பதை உறுதி செய்தல்
(5) தட்டெழுதல் / மின்படியாக்கம்
(6) Proof read/ Clean & arrange
(7) அனுப்பி வைத்தல்
(8) அதனைக் குழுவுக்குத் தெரியப்படுத்தல்
(9) அது சரியாக வெளியாகியுள்ளதா என்பதை உறுதி செய்தல்

4.3 மின்படியாக்கத்திற்கான (scan) ஒழுங்குமுறை என்ன?
black&white பக்கங்களை 300dpi இல் black& white ஆகவும் (black&white, text enhanced, line art போன்ற பெயர்களில் அந்த option உள்ளது) colour பக்கங்களை 100dpi இலும் scan செய்து வருகிறோம். பக்கங்களில் வரும் கறுப்புப் பிரதேசங்களை அழிக்க adobe photosop இன் eraser tool இனைப் பயன்படுத்தலாம். வேறு சில மென்பொருட்கள், toolகள் பயன்படுத்தும்போது கோப்பு அளவு (file size) பெரிதாகி நூலகத்துக்குப் பயன்படுத்த முடியாது போன அனுபவங்கள் உள்ளதால் உறுதிப்படுத்தப்பட்ட முறைகளையே பின்பற்ற வேண்டும். அனைத்துப் பக்கங்களும் scan செய்து அவற்றின் கறுப்புப் பிரதேசங்களை அழித்த பின்னர் adobe acrobat கொண்டு பக்கங்களை pdf கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.


5. மின்னூல் அனுமதி

நூலகத்தில் ஒரு நூல் இணைக்கப்படுவதற்கான நிபந்தனைகள் அது ஈழத்தவ்ருடையதாக அல்லது ஈழம் தொடபானதாக இருக்க வேண்டுமென்பதும் நூலாசிரியரின் அல்லது பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டுமென்பதும் ஆகும்.

இங்கே அனுமதி மின்னூலாக இணையத்தில் வெளியிடுவதற்கானது மாத்திரமே ஆகும்.

பின்வரும் மாதிரி ஒப்புதலை அளிப்பதன் மூலம் நூலகம் திட்டத்தின் வினைத்திறனான செயற்பாட்டுக்கு எழுத்தாளர்கள் ஒத்துழைப்பதுடன் ஈழத்தின் முக்கிய கூட்டு முயற்சியொன்றின் பங்காளராகலாம்.


நூலகம் திட்டத்துக்கான மின்னூல் அனுமதி

................................................................. ஆகிய நான்,

1. இணையத்தில் மின்னூல்களாக மட்டுமே வெளியிடலாம்.
2. மின்னூல்கள் எக்காலத்திலும் எவ்வித வணிக நோக்கிலும் பயன்படுத்தப்படக் கூடாது.

ஆகிய நிபந்தனைகளின் கீழ் நான் எழுதிய/ எனது பதிப்புரிமையுள்ள

* சகல நூல்களையும்
* வெளியாகி .... ஆண்டுகள் கடந்த சகல நூல்களையும்
* கீழ்க்குறிப்பிடும் நூல்களை மட்டும்
(பொருத்தமானதைத் தெரிக)

இணையத்தில் மின்னூல்களாக வெளியிட அனுமதியளிக்கிறேன்.

# நூல் பதிப்பு
1. .............................. ..............
2. .............................. ..............
3. .............................. ..............
4. .............................. ..............
5. .............................. ..............


............................ ...............
ஒப்பம் திகதி