|
நூலகம் திட்டம் (நூலக எண்: 26) |
||
|
மின்னூலாக்கம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, தி. கோபிநாத் |
||
| மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
| கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
| கந்தன் கருணை | ||
|
|
| கந்தன் கருணை என். கே. ரகுநாதன் அம்பலத்தாடிகள் நடிகர் ஒன்றியம் தேசிய கலை இலக்கியப் பேரவை -------------------------------------------------------------------------------- தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 100 நூற்பெயர் :கந்தன் கருணை பதிப்பு :ஜனவரி, 2003 வெளியீடு :தேசிய கலை இலக்கியப் பேரவை அச்சிட்டோர் :கௌரி அச்சகம் முகப்பு ஓவியம் :இரா. சடகோபன் விநியோகம் :சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11. தொலைபேசி : 335844. வசந்தம் புத்தக நிலையம் 05, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். விலை: ரூபா. 200/= Title :Kanthan Karunai Edition :January, 2003 Publishers :Dheshiya Kalai Ilakkiyap Peravai Printers ::Gowry Printers Cover Design :R. Shadagopan Distributors :South Asian Books, Vasantham (Pvt) Ltd, No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo -11. Tel : 335844. Vasantham Book House, 405, Stanly Road, Jaffna. ISBN No :955-8567-03-5 Price: Rs.200/= -------------------------------------------------------------------------------- பதிப்பும் தொகுப்பும் தமிழ் மக்கள் மத்தியில் நிலமானியத்தின் எச்ச சொச்சமான சாதியமைப்புக்கெதிரான 'சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்' என்ற பதாகையின் கீழ் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் விடுதலைப் போராட்ட வீரத்தில் விளைந்த பயிர்தான் 'கந்தன் கருணை' எனும் நாடகமாகும். சமத்துவத்தை சாதிக்க விரும்பிய எழுத்தாளர் கலைஞர் தோழர்களுக்கிடையிலான சந்திப்பின் விளைவு இந்நாடகமாகும். இந்நாடகத்தின் மூன்று எழுத்துருக்களை இங்கு தொகுத்துள்ளோம். எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் 11.12.1999ல் நூலாக வெளியிட்ட எழுத்துருவும் அம்பலத்தாடிகள் 1973.10.21ல் வெளியிட்ட நூலின் பிரதியையும், நடிகர் ஒன்றியம் ஆகியன தயாரித்த எழுத்துருக்களையும் இணைத்துள்ளோம். இதற்கு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கிய என்.கே.ரகுநாதன் அவர்களுக்கும் அம்பலத்தாடிகள், நடிகர் ஒன்றியக் கலைஞர்களுக்கும் எமது நன்றிகள். இந்நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்களினதும் தயாரிப்பாளர்களினதும் கருத்துக்களையும் நூலின் குறிப்புக்களையும் பின்னிணைப்பாக்கியுள்ளோம். அத்துடன் இந்நூலின் வெளியீட்டுக்காகவே கவிஞர் இ.முருகையன், தோழர் சி.கா. செந்திவேல், பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் கட்டுரைகளை எழுதித் தந்தனர். அவற்றைப் பின்னிணைப்பில் இணைத்துள்ளோம். இத்துடன் லண்டனிலிருந்து கொழும்பு வந்திருந்த கந்தன் கருணை நெறியாளர் அ.தாஸீசியஸ் அவர்களுடன் நேரில் கேட்டு எழுதிய கட்டுரையையும் பின்னிணைப்பில் இணைத்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். இந்நூல் எமது 100வது வெளியீடாகும். எமது நாடகநூல் வெளியீட்டு வரிசையில் இது பன்னிரண்டாவது நூலாகும். அட்டைப்படம் வரைந்த ஓவியர் இரா. சடகோபனிற்கும் கணனி வடிவமைத்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும், இந்நூலை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும், திரு.எஸ்.இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள். நூல் விமர்சனங்களை வரவேற்கிறோம். தேசியகலை இலக்கியப் பேரவை இல. 44, 3-ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி கொழும்பு - 11 தொலைபேசி : 335844 -------------------------------------------------------------------------------- சமர்ப்பணம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்தில் முன்னின்றவரும் அம்பலத்தாடிகளின் கூட்டு முயற்சியால் காத்தான் கூத்து மெட்டில் உருவாகிய கந்தன் கருணை நாடக வார்ப்பில் பங்கு கொண்டு அதன் ஐம்பதுக்கு மேற்பட்ட அரங்கச் செயற்பாட்டிற்கு தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்றவருமான தோழர் கிருஷ்ணபிள்ளை சிவஞானத்தின் மறக்க முடியாத நினைவுகளுக்கும் வெகுஜனப் போராட்டங்களில் முன்னிலைப் போராளியாகவும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை நாடகத்தில் நாரதராகவும் நடித்து அந் நாடகத்தின் வெற்றிக்கு தன் குரல் வளத்தாலும் நடிப்பாற்றலாலும் மக்கள் மத்தியில் ‘நாரதர் சிவராசா’ என வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட தோழர் குமாரசுவாமி சிவராஜாவின் நினைவுகளுக்கும் கந்தன் கருணை நாடகத்தில் நவீன சூரனாகத் தோன்றி ‘டேய் ஆரடா கோவிலுக்கு நுளைய வந்திருக்கிறியள்’ என்று இறுமாப்பு வேடம் தாங்கி நடித்து மக்களின் பாராட்டைப் பெற்ற நவிண்டில் சிவராஜாவின் நிறைவுகளுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. -------------------------------------------------------------------------------- உள்ளடக்கம் பக்கம்கந்தன் கருணை (ஓரங்க நாடகம்) 01 - என். கே. ரகுநாதன்கந்தன் கருணை 30(காத்தான் கூத்துப்பாணி இசைநாடகம்)- அம்பலத்தாடிகள்கந்தன் கருணை 109 - நடிகர் ஒன்றியம்பின்னிணைப்பு -01 136 - இளைய பத்மநாதன் பின்னிணைப்பு -02 139 - இ. சிவானந்தன்பின்னிணைப்பு -03 141 - சி. மௌனகுருபின்னிணைப்பு -04 145 - க. சொக்கலிங்கம்பின்னிணைப்பு -05 146 - இ. முருகையன்பின்னிணைப்பு -06 152 - சி.கா. செந்திவேல்பின்னிணைப்பு -07 160 - எச்.எம்.பி. முஹிதீன்பின்னிணைப்பு -08 166 - பேராசிரியர் சி. மௌனகுரு பின்னிணைப்பு -09 180 - ஏ.சி. தாஸீசியஸ் -------------------------------------------------------------------------------- கந்தன் கருணை(ஓரங்க நாடகம்)என். கே. ரகுநாதன் -------------------------------------------------------------------------------- சில குறிப்புகள் +1969ஆம் ஆண்டில் இந்நாடகம் எழுதப்பட்டது. +முதலில், நெல்லியடி அம்பலாத்தாடிகள் சார்பில் நண்பர் இளைய பத்மநாதன் இதனைக் காத்தான் கூத்துப் பாணியில் உருவமைத்து, வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடை ஏற்றினார். நாடகம், நூலாகவும் வெளியிடப்பட்டது. மிக அண்மையில் சென்னையிலும் மேடையேற்றப்பட்டது. +கலாநிதி மௌனகுரு, அ. தாஸீசியஸ், குழந்தை ம. சண்முகலிங்கம், பிரான்சிஸ் ஜெனம் மற்றும் பல முன்னணி நாடகக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, நாடகத்தை மோடியுற்ற வடிவில் நெறிப்படுத்தி, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு சரஸ்வதி மண்டபம் உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் மேடையேற்றினர். +சமகாலப் பிரச்சினையொன்றை முன்னெடுத்து அதனை மக்கள் மத்தியில் பரப்பியதன் மூலம், அந்தப் பிரச்சினையை வென்றெடுக்கச் சகல மக்களையும் அணி திரட்டிய சிறப்பு இந்நாடகத்துக்குரியது. +“முற்போக்கு கலைஞர்களின் சிறந்த நாடகங்களில் பொதுப்படையாகவும், கருத்து ரீதியாகவும் அலசப்படும் பிரச்சனைகள், கந்தன் கருணை என்ற இந்த நாடகத்தில், குறியீடுகளுக்குள் புகலிடம் தேடாமல், மிகத் துல்லியமாகவும், கூர்மையாகவும், அழுத்தமாகவும் சித்திரிக்கப்பட்டு நேரடியாகவே மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது” என்று பேராசிரியர் கைலாசபதி இந் நாடகத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்டுள்ளார். +நாடகம் எழுதப்பட்டு மூன்று தசாப்தங்கள் நிறைவுற்ற போதும் அக்காலத்தவர்க்கு மூலப் பிரதியைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இன்றுள்ள இளம் தலைமுறையினர் நாடகத்தைப் பார்க்கவே சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இவற்றை ஈடுசெய்வதற்கு நாடகத்தின் மூலப் பிரதி தற்போது அச்சில் வெளிக் கொணரப்படுகின்றது. நாடகம் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கிய காரணமாகும். +“சாதி ஒழிந்து விட்டது!” என்று சிலர் முணுமுணுக்கிறார்கள். சிறுபான்மைத் தமிழர்களின் விடிவுக்காகவே தன் வாழ்நாள் முழுதும்பாடுபட்டுழைத்து மறைந்த தோழர் எம்.சி.சுப்பிரமணியம் நினைவாக அண்மையில் ஒரு சிறப்பு மலர் வெளிவந்திருக்கிறது. அம்மலரில் “துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன: மரித்துவிடவில்லை!” என்று ஓர் அன்பர் கருத்தை முன்வைத்துள்ளார். இவற்றின் அடிப்படையில் எதிர்கால சமுதாயம் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள, இந் நாடகப்பிரதி தன் பங்களிப்பை நல்குமாக! என்.கே.ரகுநாதன் தெஹிவளை. 11.12.1999 -------------------------------------------------------------------------------- காட்சி ஒன்று தேவலோகம் பாத்திரங்கள் : நாரதர், முருகன், தெய்வானை. (திரை விலகுகிறது. நாரதர் வருகை) பாட்டு - வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா, வடிவேலவா - அங்கோர் வெற்பு நொறுக்கிப் பொடிப் பொடியானது வேலவா, வடிவேலவா! சொல்லினைத் தேனிற் குழைத் துரைப்பாள் சிறு வள்ளியைக் - குறவள்ளியைக் - கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே, வடிவேலா! கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட காதகன் கொடும்பாதகன் - சிங்கன் கண்ணி ரண்டாயிரம் காக்கைக் கிரையிட்ட வேலவா, வடிவேலவா! வேலவா, வடிவேலவா, வடிவேலா வா! வடிவேலா வா! (நாரதர் முருகன் கொலுவீற்றிருக்கும் அலங்கார மண்டபத்தை வந்தடைகிறார்) முருகன்: நாரதரே, வருக! வருக!! ஏது, நாமார்ச்சனை பலமாக இருக்கிறதே! எங்கிருந்து வருகிறீர்? நாரதர்: கந்தா, கடம்பா, கார்த்திகேயா, வெவினை தீர்த்தருளும் வேல்முருகா! அடியேன் லோகசஞ்சாரி என்பதுதான் தங்களுக்குத் தெரியுமே. பூலோகத்தில் இருந்து சத்தியலோகம் செல்லும் வழியில், தங்கள் அனுக்கிரகம் பெற வந்தேன். ரக்ஷ்ஷித்தருள வேண்டுகிறேன். தெய்வானைத் தேவீ, திருமகளே, பாலித்தருள் செய்க! வள்ளி நாயகீ, வேடர் குலக் கொழுந்தே, (வள்ளி நாயகி அங்கில்லாததால் சிறு துணுக்குற்று) முருகா! எங்கே, வள்ளியைக் காணவில்லை. முருகன்: நாரதரே பண்பாட்டின் பிறப்பிடம் என்று முன்னொரு காலத்தில் போற்றப்பட்ட பாரத பூமியில் தோன்றிய நாகர்கள், தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரிக் கலகம் செய்து வருகின்றார்கள். இந்திய அரசு தனது படை பலத்தால் நாகர்களின் கிளர்ச்சியை நசுக்க முயன்று வருகின்றது. நாகர்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகின்றனர். அவர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு வள்ளி அங்கு சென்றுள்ளாள். (இந் நாடகம் எழுதப்பட்ட 1969ம் ஆண்டுக் காலத்தில், மலைக்குறவர்களான நாகர்கள், தமக்குச் சுயநிர்ணயம் கோரிக் கிளர்ச்சி செய்தனர்.) நாரதர்: அப்படியா?.... (கேலியான தொனியில் இழுத்தபடி) நான் என்னமோ..... ஏதோ..... என்று நினைத்தேன்..... முருகன்: ஏன் இழுக்கிறாய்? நீ நினைத்ததைச் சொல் நாரதரே! நாரதர்: தெய்வானை நாச்சியுடன் உல்லாசமாக இருக்கிறீர்கள். வள்ளியை..... வழி அனுப்பி விட்டீர்களோ என்று நினைத்தேன். தெய்வானை: நாரதர் சும்மா வந்திருக்கமாட்டார். ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று நான் முதலிலேயே நினைத்தேன். நாரதர்: இல்லைத் தேவீ! சேவலும் மயிலுமின்றி முருகனைக் காண முடியாது. அதேபோல, வள்ளியும் தெய்வானையுமின்றி; காணவும் முடியாதே!... அதனால்தான் அப்படி நினைத்தேன். முருகன்: நாரதா, இன்று உனக்கு இப்படிச் சந்தேகம் வரக் காரணம் யாதோ? நாரதர்: சொன்னால் கோபிக்க மாட்டீர்களே? முருகன்: கோபிக்க மாட்டேன் சொல்! நாரதர்: எப்படியானாலும் வள்ளி... குறமகள்தானே! இழிந்த குலத்தவள்தானே..! முருகன்: (ஆத்திரத்துடன்) நாரதா! என்ன விளையாடுகிறாய், உனக்கு இன்று வேறு இடம் கிடைக்கவில்லையா? தெய்வானை: நான் அப்போதே சொன்னேனே, நாரதர் ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று. நாரதர்: சொன்னால் கோபிக்க மாட்;டேன் என்றீர்கள். இப்போ இருவருமே என் மீது பாய்ந்து விழுகிறீர்கள். நான் மனதில் பட்டதைச் சொன்னேன். முருகன்: நாரதரே! வள்ளி குறமகள் என்று தெரிந்துதானே அவளை ஆட்கொண்டு கடிமணம் புரிந்தேன். அப்பப்பா! அவளை இணங்க வைப்பதற்கு நான் பட்டபாடு உனக்குத்தான் தெரியுமே! பிறகு எதற்குச் சந்தேகம்? நாரதர்: ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்று அனுபவஸ்தர்கள் சொல்வார்கள், காட்டு மலரான வள்ளி, இளமை முறுக்குடன் இருந்தபோது, அவளை அடையத் துடித்திருப்பீர்கள். பின், மோகம் தணிந்ததும் கை கழுவி விட்டிருப்பீர்களோ.. என்று சந்தேகித்தேன். தெய்வானை: நாரதரே! நீ சொல்வதைக் கேட்கவே என் காதுகள் கூசுகின்றன. நாரதர்: தேவீ! பூலோகத்தில் இந்த வழக்கம் இருந்து வருகின்றது. அந்த வழக்கம் ஒரு வேளை தேவலோகத்தையும் பற்றிவிட்டதோ என்று நினைத்தேன். முருகன்: நாரதரே! பூலோகத்திலுள்ள எனது அடியார்கள் சாதி பேதம் பாராட்டக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே, குறவர் குலப் பெண்ணான வள்ளியைக் கடிமணம் செய்தேன். அப்படி இருக்கும் போது ஏன் தவறாக நினைக்கிறாய்? நாரதர்: (ஏளனச் சிரிப்புடன்) முருகா! என்னை ஏமாற்ற வேண்டாம். வள்ளி உண்மையாகவே வேடர்குலப் பெண்ணாக-ஒரு கீழ்சாதிப் பெண்ணாக இருந்து இருந்தால், அவளை நீ திருமணம் செய்திருக்க மாட்டாய். தெய்வானையைப் போல வள்ளியும் தெய்வப் பெண்ணே! திருமாலின் புத்திரியே! அவள் பூமியில் சிவமுனிவரிடம் தோன்றி, வேடர் குலத்தவர் இடையே வளர்ந்தவள் என்ற கதை உலகறிந்தது தானே! முருகன்: பேதத்தை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காகவே இத் திருவிளையாடலை நிகழ்த்தினேன். நாரதர்: சமத்துவத்தை உயர்த்த வேண்டுமானால், உண்மையில் ஓர் அசல் வேடர்குலப் பெண்ணையே திருமணம் புரிந்திருக்க வேண்டும். தெய்வப் பெண்ணைப் பூலோகத்திற்கனுப்பி வேடர்கள் மத்தியில் வளரச் செய்து, அவளைத் திருமணம் செய்வதில் என்ன சமத்துவம் இருக்கிறது? போலிச் சமத்துவம்! முருகன்: (தடுமாற்றத்துடன்) என்ன நாரதரே! வேடிக்கை செய்வதுதான் உனது வழக்கம். ஆனால், இன்று வலுச்சண்டைக்கு வருகிறீரே! பிறப்பினால் உயர்வு என்றும் தாழ்வென்றும் இல்லை. எல்லா உயிர்களும் ஒன்றே! அப்படி இருக்கும்போது வேடர் குலம் என்றும் வேதியர் குலம் என்றும் பேதங்கள் கற்பிக்கலாமா? நாரதர்: சண்முகா! என்னை மன்னித்தருள வேண்டும். பூலோகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கியுள்ளது. அக்கிரமம் தாண்டவமாடுகின்றது! உங்களுடைய அடியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு திருக்கூட்டம் செய்யும் அட்டூழியங்களை நேரில் பார்த்து வருகிறேன். அந்த வயிற்றெரிச்சலில் பேசிவிட்டேன். தெய்வானை: வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்க நாங்கள்தானா அகப்பட்டோம்? நாரதர்: தேவீ, பொறுத்தருள்க! முருகனுடைய பெயரைக் களங்கப்படுத்துகிற காரியம் நடைபெறுகிறது அங்கே! முருகனே தலையிட்டுப் பரிகாரம் தேட வேண்டும். அதனால்தான் இங்கு வந்தேன். முருகன்: பூலோகத்தில் என்ன நடக்கிறது நாரதரே! நாரதர்: வேலவா! வேதம் முழுதும் அறிந்தவன் நீ. அதை உன் தந்தைக்கு உபதேசம் செய்து ஞானபண்டிதன் என்று பெயரும் பெற்றவன். ஆனால் உனக்கு பூலோக வேதம் தெரியாது. அங்கே பேதங்கள் பெருகிவிட்டன. உலகம் உய்ய உழைக்கும் உத்தமர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பவர்கள், தங்களைத் தாங்களே, உயர்சாதியினர் என்று கூறிக் கொண்டு, உண்டு கொழுத்து வாழ்கிறார்கள்: திமிர் பிடித்துத் திரிகிறார்கள். உண்மையான உழைப்பாளிகள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். நசுக்கப்படுகிறார்கள். அவர்களுக்குச் சமூகத்தில் உழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. முருகன்: (ஆத்திரத்துடன்) எங்கே நடக்கிறது இதெல்லாம்? நாரதர்: “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பன போன்ற உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் வாழ்ந்த தமிழர் மத்தியில்தான் இந்த அக்கிரமம் நடக்கின்றது. அருள்வேந்தன் இராவணேஸ்வரன் ஆண்ட இலங்காபுரியின் வடபகுதியில், யாழ்ப்பாணம் என்ற அசல் தமிழ் நாடு ஒன்றிருக்கிறது. முருகன்: ஓ, தெரியுமே! என் கோயில்கள் நிறைய உண்டே அங்கு. நாரதர்: அந்தக் கோயில்களில் ஒன்றில்தான் இந்த அக்கிரமம் தலைவிரித்தாடுகின்றது. கோவிலில் வழிபட வரும் உழைப்பாளிகளை உண்மையான அடியார்களை உள்ளே செல்லவிடாது தடுத்து வைத்துள்ளார்கள். உள்ளே செல்ல முற்படுபவர்களைத் திமிர் பிடித்த சாதி வெறியர்கள் அடித்தும் உதைத்தும் தீப்பந்தத்தால் சுட்டுப் பொசுக்கியும் துன்புறுத்தி வருகின்றார்கள். முருகன்: (கோபத்துடன்) எந்தக் கோயிலில் இத்திருவிளையாடல் நடைபெறுகிறது? நாரதர்: மாவிட்டபுரம் என்னும் திருத்தலத்தில்! முருகா, நீ குடிகொண்டிருக்கும் கோயிலில்தான். முருகன்: (ஆச்சரியம் பொங்க) என் கோயிலில்? நாரதர்: ஆம்,முருகா! உன் கோயிலில்தான்! மாவைக் கந்தன் ஆலயத்தில்தான்! தெய்வானை: நாரதரே! கோயிலில் பூஜை நடக்கின்றதா? நாரதர்: பூஜையாவது, புனஸ்காரமாவது? கோயிற் கதவுகளை இழுத்து மூடி, பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். போதாததற்கு கோயிலைச் சுற்றிச் சண்டியர்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள். முருகன்: வேதாகமப்படி பூஜை நடக்கும் கோயிலாயிற்றே அது? நாரதர்: வேதமாவது, ஆகமமாவது! அதைத் தங்கள் அக்கிரமத்துக்குத் துணையாகவல்லவா வைத்து இருக்கிறார்கள். தெய்வானை: என்ன அநியாயம் எனக்கு உடம்பு எல்லாம் நடுங்குகின்றது! முருகன்: நாரதா, எனக்கு மூச்சுத் திணறுகிறதே! நாரதர்: (வேடிக்கையாக) மூச்சுத் திணறாமல் என்ன செய்யும் முருகா? இருட்டறைக்குள்-மூலஸ்தானத்துக்குள் அல்லவா உன்னைப் பூட்டி வைத்திருக்கிறார்கள் உன் “பக்தர்கள்”. தெய்வானை: நாரதரே இத்தனை அக்கிரமங்களும் நடக்க அங்கு ராஜாங்கமே இல்லையா? நாரதர்: ராஜாங்கம் இருக்கிறது. ஆட்சியாளரே இது போன்ற சமூகக் குறைபாடுகளை ஒழிப்பதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். முருகன்: சட்டமா? எதற்குச் சட்டம்? நாரதர்: உன் அடியார்கள் உன் திருக்கோயிலுள் சென்று வணங்குவதற்குச் சட்டம்! முருகன்: (காதுகளைப் பொத்திக்கொண்டு) சிவ... சிவ... கோயிலுக்குச் சென்று வணங்குவதற்குச் சட்டமா? பூலோகத்தில் ஆத்ம நெறியே அழிந்து விட்டதா? தெய்வானை: தெய்வத்தை வணங்கக் கட்டளையா? நாரதர்: அவசரப்படுகிறீர்களே! தெய்வத்தை வணங்கச் சட்டமல்ல. வணங்கச் செல்பவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்கச் சட்டம்! தெய்வானை: வேடிக்கையாயிருக்கிறதே! தெய்வத்தை வணங்கச் செல்பவர்களைத் தடுப்பதற்கு ஒரு கூட்டம்? முருகன்: அவர்களைத் தண்டிப்பதற்கு ஒரு சட்டம்! நாரதர்: அப்படி இருக்கிறது வேலவா, பூலோக வேதம்! தெய்வானை: சீ, வெட்கமாயிருக்கிறதே! முருகன்: நாரதா! அண்மையில்தான் ஆட்சியாளர் இச்சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ? நாரதர்: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்த சட்டம் இது. சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்று அதற்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். (1956ம் ஆண்டளவில்) தெய்வானை: அப்படியானால் இவ்வளவு காலமும் ஏன் இச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை? நாரதர்: யார் அமுல்படுத்துவது? சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அரசாங்க அதிகாரிகளே சாதி வெறியர்களும் பிற்போக்குவாதிகளும் தானே! தங்களின் சுகபோகத்தைப் பாதிக்கும் சட்டத்தை அமுல்படுத்த முட்டாள்களா அவர்கள்? முருகன்: அப்படியானால் ஏன் இச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்? நாரதர்: பூலோகத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் ஒருவித மாய ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் சமத்துவம், சம அந்தஸ்து என்று சொல்லிக்கொண்டு, அவர்களைக் கண்ணா மூச்சி காட்டவல்லது இந்த அரசு முறை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளுக்காகக் கிளர்ந்தெழும்போது, அக் குறைகளைத் தீர்க்க முயல்வதாகப் பாசாங்கு காட்டிக் கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அது பிற்போக்கு வாதிகளையே பாதுகாக்கிறது. பல்லாண்டு காலமாகச் சாதிக் கொடுமைகளுக்காளாகி வந்த மக்கள், தங்கள் விமோசனத்துக்காகக் குரல் எழுப்பியபோது, சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்ற இச்சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இச்சட்டத்தின் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் பொது மயானங்களில் பிணத்தை எரிக்கவும், பொதுக் கிணறுகள், தேநீர்க் கடைகள் போன்றவற்றில் சரி சமமாக நடாத்தப்படவும், ஆலயங்களுள் சென்று வழிபாடு செய்யவும் அவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்கவும் விதி செய்யப்பட்டது. ஆனால் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. முருகன்: மயானங்களில், இறந்தவர்களின் பிணத்தை எரிப்பதற்குக் கூட இந்த மக்களுக்கு உரிமை கிடையாதா? நாரதர்: கிடையாது வேலவா! வில்லூன்றி என்ற மயானத்தில், ஓர் உறவினரின் பிணத்தை எரிக்கச் சென்ற முதலி சின்னத்தம்பி என்பவனை அங்கேயே வைத்துத் துப்பாக்கியால் சுட்டுப் பிணமாக்கி விட்டார்கள், பாதகர்கள்! தெய்வானை: என்ன கொடுமை! நாரதர்: (ஏளனச் சிரிப்புடன்) நீங்கள் கொடுமை என்கிறீர்கள்! செத்த பிணத்தைச் சுட்டெரிக்கும் மண்ணுக்கே சாதி பார்க்கும் “மகத்தான கலாசாரம்” தேவி இது! முருகன்: இது போன்ற அக்கிரமச் செயல்கள் எவ்வளவு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நாரதரே! நாரதர்: பல்லாண்டு காலமாக முருகன்: இப்போது மட்டும் அவர்களுக்கு எப்படி இந்த உணர்ச்சி ஏற்பட்டது? தங்கள் அடிமை விலங்கை அறுத்தெறிய அவர்கள் எப்படித் துணிந்தார்கள்? நாரதர்: கொடிய அரக்கன் சூரனைக் கொன்றொழித்த தங்களுக்கா நான் இதனைச் சொல்ல வேண்டும்? அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மம் வீறுகொண்டெழுவது இயற்கை நியதிதானே முருகா! அதனடிப்படையில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு, தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கத் துணிந்து விட்டார்கள். முருகன்: ஆம் நாரதரே! அடக்குமுறை ஒரு போதும் வெற்றி பெற முடியாது. அதை உடைத்தெறிய பாதிக்கப் பட்டவர்கள் அணிதிரளவே செய்வார்கள். அதுசரி, மாவிட்டபுரத்தில் இப்போ என்ன நடைபெறுகிறது? நாரதர்: அராஜகம் நடைபெறுகிறது! அங்கே ஆலயமணி ஒலிப்பது நின்றுவிட்டது. பூஜைகள் இல்லாது ஒழிந்து விட்டன. பக்தர்கள் தங்கள் தெய்வத்தை வணங்க முடியாது திண்டாடுகிறார்கள். முருகன்: அவ்வளவு தூரம் அக்கிரமம் தலை தூக்கவிட்டதா? துஷ்டர்களின் அட்டகாசம் மேலோங்கிவிட்டதா? நாரதர்: அட்டூழியங்களுக்கு மத்தியிலும் கோயிலை வணங்கச் செல்லும் அடியார்கள் பொறுமையாய் இருக்கிறார்கள். ஆலய வாயிலிலே அமைதியாய் இருந்து திருக்கதவுகள் திறப்பதை எதிர்நோக்கி இருக்கிறார்கள். பசி தாகத்தையும், கொடிய வெயிலையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். உனது முருக நாமத்தைப் பஜனை செய்து கொண்டு இருக்கிறார்கள். முருகன்: அப்படியா நாரதரே! நாம் உடனே புறப்பட வேண்டும். பூலோகம் சென்று எமது அடியார்களை ர~pத்து வரவேண்டும்! நாரதர்: அப்படியே ஆகட்டும் முருகா! இதோ புறப்பட்டு விட்டேன். தெய்வானை: (முருகனிடம்) நாதா, நானும் உங்களுடன் வருகின்றேன். பூலோகத்தைப் பார்த்து வெகு நாளாகிவிட்டது. வள்ளியுமில்லாமல் என்னால் தனியே இருக்கவும் முடியாது. முருகன்: தேவீ! அக்கிரமம் தலை தூக்கியுள்ள இடத்துக்கு நீ வருவது நல்லதல்ல. பூலோகத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். தெய்வானை: வள்ளியைத் தனியே கலகப் பிரதேசத்துக்கு அனுப்பி உள்ளீர்கள். நான் மட்டும் வரக்கூடாதா? அதுவும் உங்களுடன். நாரதர்: தேவீ! அவள் வள்ளி. காட்டிலும் மேட்டிலும், குடிசையிலும் வாழ்ந்து பழகியவள். தாங்களோ தேவயானி. பெரிய இடத்துப் பெண். துன்பத்தை உங்களால் தாங்க முடியாது. முருகன்: ஆம் தேவீ! கலங்காதே! நாம் விரைவில் திரும்பி விடுவோம்! (இருவரும் டங் என்று மறைகின்றனர்) -------------------------------------------------------------------------------- காட்சி இரண்டு பூலோகம் பாத்திரங்கள் : முருகன், நாரதர் (மனித உருவில்) (உஷத்காலம், கீரிமலையில் நீராடி, இடுப்பிலே வேட்டிக்கு மேலே ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு, வெடவெடக்கும் குளிரில் மாவிட்டபுரத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும்) முருகன்: ஆகா என்ன சுகம். என்ன ஹிதம்! விடிகாலையில் இக் கங்கையின் ஸ்பரிஷம் உடலைச் சற்றே வருத்தினாலும், உள்ளத்துக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது நாரதரே! மனசு படிகம் போலத் தூய்மையாயிருக்கிறது. புனித தீர்த்தம் அல்லவா? நாரதர்: அளவுக்கு மிஞ்சிப் புகழாதீர்கள் முருகா! உங்கள் மனது தூய்மையானது. கங்கை ஒன்றையும் புனிதமாக்க வில்லை... ஹி... ஹி... (கேலியாகச் சிரிக்கிறார்). முருகன்: நாரதரே! உனக்கு என்ன கோளாறு பிடித்துவிட்டதா? புனித கங்கையைப் போய் இப்படிக் கீழ்மையாகப் பேசுகிறீரே! கர்ம பலனால் நகுலமுனிக்கு கிடைத்த கீரிமுகத்தையே மாற்றி ஜென்ம சாபல்யம் செய்த கங்கையாயிற்றே நாரதரே! நாரதர்: புனித கங்கை நகுல முனியை ரட்சித்ததுடன் நின்று விட்டதா? அது வெறும் கட்டுக் கதை முருகா! பிறகு ஒரு புதுமையும் நடைபெறவில்லையே முருகா! முருகன்: (கோபத்துடன்) என்ன சொல்கிறாய் நீ! புதுமையாய் இருக்கிறதே நீ சொல்வதெல்லாம். நாரதர்: புதுமைதான் முருகா! காலம் காலமாய் அக்கம் பக்கத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்லாது, தூரந் தொலையில் இருந்தெல்லாம் வந்து இக் கங்கையில் நீராடுகிறார்களே, அவர்களின் மனம் ஒன்றும் சுத்தமாகவில்லையே!... தங்களில் ஒரு சாராரைத் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து இருக்கிறார்களே! அவர்கள் பாடுபட்டு உழைப்பதால் தான் நாடு வாழ்கிறது. ஆனால் அவர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். முருகன்: ஆச்சரியமாய் இருக்கிறதே முருகா! நாரதர்: அனைவரும் ஆண்டவன் படைப்பே என்று சொல்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. அந்த ஆண்டவனையே வணங்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்களே கொடியவர்கள்! அதுவும் உங்கள் திருக்கோயிலில்! முருகன்: எனக்கு உள்ளம் கொதிக்கிறது நாரதரே. பூலோகத்தில் அந்தளவு தூரத்துக்குத் தர்மநெறி சீரழிந்து விட்டதா? நாரதர்: அதைத்தானே, இப்போ நேரில் பார்க்கப் போகிறோமே! இதோ ஆலய வாசலுக்கு வந்து விட்டோம். இங்கு நடப்பதைக் கண்முன்னே காண்போமே... -------------------------------------------------------------------------------- காட்சி மூன்று மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முகப்பு வெளிமண்டபத்துக்கும் உள்மண்டபத்துக்குமிடையில் உள்ள இரும்புக் கிராதியின் கதவு அடைக்கப்பட்டுத் தாழ்ப்பாள் ஒன்றினால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பூட்டிய கதவுக்குப் பக்கத்தில் கரிய திருமேனி கொண்ட நவீன சூரன் ஒருவன் நிற்கின்றான். வேட்டியை மடித்துக்கட்டி, அதற்கு மேலே ஒரு துண்டு. உச்சி பிளந்த தலைமுடி. நெற்றியில் முக்கீற்று விபூதி. அவனுக்கு அக்கம் பக்கமாகச் சில குண்டர்கள். இரும்புக் கிராதிக்கு உள்ளேயும் குண்டர்கள். மூலஸ்தானக் கதவு அடைக்கப்பட்டுள்ளது. வெளிமண்டபத்தையொட்டிய வெற்றுத் தரையில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் சம்மணங்கட்டியிருந்து முருக பஜனை செய்கிறார்கள். (மாவிட்டபுர ஆலயத்துக்கு மனித உருவில் வந்த முருகனும் நாரதரும் வெளிமண்டபத்துக்கு அப்பால் நின்று, அங்கே நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிமண்டபத்தில் அமைதியாக அமர்ந்திருந்த பக்தர்கள்; முருகனை வேண்டிப் பஜனை செய்கின்றார்கள்.) பஜனை : ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா, ஓம்! ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா, ஓம்! காலமெல்லாம் கடிதுழைத் தெம் உடல் நலிகின்றோம் - எம் கால் வயிற்றுக் கஞ்சிக்காகத் துயர் வடைகின்றோம். -ஓம் முருகா உழைத்துழைத்து உருக்குலைந்தும் மீட்சியில்லையே - நம் உழைப்பையெல்லாம் சுரண்டுவோர்க்கும் வீழ்ச்சி இல்லையே! -ஓம் முருகா ஏழை சிந்தும் கண்ணீரை உன் கண் திறந்துபார் - நாம் வாழ உந்தன் வரமளித்தெம் துயர் இதனைத் தீர்! -ஓம் முருகா சமத்துவத்தைப் பேணி வையம் ஓங்கி வளருது - இங்கே சாதி பேசிக் கோயில் வாசல் சாத்திக் கிடக்குது! -ஓம் முருகா தாள் பணிந்தோம் வேல் முருகா தயை புரிவாயே - திருத் தலம் திறந்துன் பக்தர் நமக் கருள் பொழிவாயே! -ஓம் முருகா (மூன்று இளைஞர்கள் கோயிலுக்குச் சென்று வணங்குவதற்காக வாசலண்டை செல்கின்றார்கள்.) சூரன் : (அவர்களை மிறாய்த்துப் பார்த்தபடி) எங்கை போறியள்? இளைஞன் 1 : நாங்கள் கோயில் கும்பிட வந்தனாங்கள். சூரன் : உள்ளே போகேலாது. வெளியாலை நிண்டு கும்பிடுங்கோ. இளைஞன் 1 : தெய்வச் சன்னதியிலை ஏனையா உள்ளே, வெளியே எண்டு பாக்கிறியள்? சூரன் : எளிய சாதி உள்ளை போறதில்லை. வெளியாலை நிண்டுதான் கும்பிடோணும். இளைஞன் 2 : சாதியை எழுதி நெத்தியிலை ஒட்டியிருக்குதோ? நீ என்ன சாதி எண்டு கண்டுபிடிக்கிறது? சூரன் : என்னடா கதைக்கிறாய்? என்னை யாரெண்டு தெரியாதோடா? (கோபத்துடன்) போங்கடா அங்காலை! அங்கை இருந்து பாடுறவங்களோடை போய் நீங்களுமிருந்து பாடுங்கோடா! இளைஞன் 3 : என்ன? மரியாதையில்லாமல் எடா, புடா எண்டு கதைக்கிறீர்? பெரிய படிப்பாளி எண்டு சொல்லுறாங்க... இது தானோ படிப்பின்ரை இலட்சணம்? மனிசக் குணத்தைக் கொஞ்சமும் காணேல்லையே...? இளைஞன் 2 : சகல மனிசரும் ஆண்டவன் படைப்பே எண்டு சொல்லி வைச்சிருக்கிறாங்க... படிச்ச மனுஷங்கள். சூரன் : கனக்க கதைக்காதையுங்கோ! வீண் தொந்தரவுதான் வரும். இளைஞன் 2: அதைத்தான் நாங்களும் ஒருக்கால் பாத்திட்டுப் போக வந்தனாங்கள். (சத்தியாக்கிரகம் இருந்தவர்களில் ஒருவர் ஓடிவந்து “இங்காலை வாருங்கோ தம்பிமாரே! எங்களோடை வந்திருங்கோ” என்று அழைத்துப் போகிறார்) (தூரத்திலிருந்து பார்த்தக் கொண்டிருக்கும் முருகன் நாரதரைப் பார்த்து, அவர் வேளையிற் சொன்ன சம்பவங்கள் கண்முன்னே நடைபெறுவதைக் கண்டு, வியப்போடு கண்ணைச் சிமிட்டுகிறார்) (மேலும் மூன்று, நான்கு இளைஞர்கள் கோயில் வாசலண்டை செல்கிறார்கள்) சூரன் : எங்கை போறியள்? வந்தவர்கள் : (ஒருமித்த குரலில்) நாங்கள் கந்தனை வணங்க வந்தனாங்கள். சூரன் : வணங்குங்கோவன். வந்தவர்கள் : நாங்கள் உள்ளை போய்க் கும்பிடப் போறம். சூரன் : உள்ளை போகேலாது. வந்தவர் 1 : ஏன் போகேலாது? சூரன் : பூட்டிக் கிடக்குது. வந்தவர் 2 : ஏன் பூட்டி வைச்சிருக்கிறியள்? சூரன் : அது... வந்து... கண்ட நிண்ட சாதியளையும் உள்ளை விடேலாது. வந்தவர் 3 : என்னையா கதைக்கிறியள்? எல்லாரையும் கடவுள் தானை படைச்சவர்? பிறகென்ன, கண்ட நிண்ட சாதிக்கதை? சூரன் : அந்தக் கதை இந்தக் கதை ஒண்டும் வேண்டாம். போற இடத்தை போய் உங்கடை அலுவலைப் பாருங்கோ? வந்தவர் 3 : எங்கடை அலுவல் இங்கைதான்! கந்தக் கடவுளைக் கும்பிடத்தான் வந்தனாங்கள். நீங்கள் வழி மறிக்காதையுங்கோ! சூரன் : எங்கடை கோயில்! அதைப் பூட்டுறதும் திறக்கிறதும் எங்கடை விருப்பம்! வந்தவர் 4 : உங்கடை கோயிலில்லை. இது கந்தசாமியின்ரை கோயில். அதைக் கும்பிடுறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு. மறிக்கிறதுக்கு ஒருவருக்கும் உரிமை இல்லை. சூரன் : என்ன கனக்கக் கதைக்கிறாய்? வந்தவர் 4 : நீங்கள் விசர்க் கதையெல்லாம் கதைக்கிறியள். அதுக்குத்தான் நான் பதில் சொன்னனான். சூரன் : போதும், போ அங்காலை. வந்தவர் 4 : அங்காலை போகேல்லை. (மூலஸ்தானத்தைக் காட்டி) இங்காலைதான் போகோணும். சூரன் : போ, பாப்பம்! வந்தவர் 4 : போகத்தான் போறம்! (சற்றுத்தூரத்தில் நின்ற குண்டன் ஒருவன் மெல்ல நகர்ந்து வந்து, சூரனாரின் காதுக்குள்ளே ஏதோ இரகசியமாகச் சொல்கிறான்). சூரன் : (ஆச்சரியம் மேலிட, வாதாடிய அந்த இளைஞனைப் பார்த்து) நீ, நிச்சாமத்து விதானை வேலாயுதம் பிள்ளையின்ரை பொடியனெல்லே? வந்தவர் 4 : ஓ! நான் அவற்றை மோன்தான்! சூரன் : சீ! உனக்கு வெக்கமில்லையே? ஏன் இவங்களோடை கூடிக்கொண்டு வந்தனி? நீ எப்பவும் கோயிலுக்கு உள்ள வரலாம் போகலாந்தானே! வந்தவர் 4 : நான் மட்டும் வரேல்லை. இன்னும் கனபேர் வந்திருக்கிறம். நாங்கள் எல்லாரும் ஒரு இனம். ஒரு வர்க்கம்! உலகத்திலை நடக்கிற கொடுமைகள், அக்கிரமங்களை இல்லாமல்ச் செய்ய ஒண்டாய்ச் சேர்ந்திருக்கிறம்... நாங்கள் எல்லாரும் கோயிலுக்கை ஒண்டாய் வந்து கும்பிடவேணும். சூரன் : ம்... சேர்ந்து என்ன செய்யப் போறியள்? வந்தவர் 4 : உலகம் ஊத்தையாய்ப் போச்சு. படிஞ்ச தூசி ஒருக்காலும் தானாகப் போகாது. அதைத் தட்டித் தான் அப்புறப்படுத்த வேணும். அதைத்தான் செய்யப் போறம்! சூரன் : சரி, போய்த் துடையுங்கோ! இருவர் : (சூரனின் நெஞ்சை சுட்டிக்காட்டி) முதல்லை இங்கை படிஞ்சிருக்கிற தூசியை துடைக்க வேணும். உன்ரை நெஞ்சிலை படிஞ்சிருக்கிற தூசியை... (சூரன் வாய் பேசாது அவர்களை நிமிர்ந்து பார்க்கிறான். அதற்கிடையில் சத்தியாக்கிரகி ஒருவன் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்களும் வேண்டா வெறுப்பாக அங்கு செல்கிறார்கள்) (முருகனும் நாரதரும் கோயில் வாசலை நோக்கி வருகிறார்கள். அருகில் வந்ததும்) சூரன் : எங்கை போறியள்? நாரதர் : நாங்கள் சுவாமி கும்பிட வந்தனாங்கள்... உள்ளுக்கை போய்க் கும்பிடவேணும்! சூரன் : உள்ளை போகேலாது. இதிலை நிண்டு கும்பிடுங்கோ... இல்லாட்டி... நாரதர் : இல்லாட்டி? சூரன் : அங்கையிருந்து பசனை வைக்கினம். அவையோடை போயிருந்து நீங்களும் பசனை வையுங்கோ! முருகன் : நாங்கள் பசனை வைக்க வரேல்லை. கந்தனைக் கும்பிடத்தான் வந்தனாங்கள். கதவைத் திறந்து நாங்கள் உள்ளை போக வழி விடுங்கோ! சூரன் : அப்படி விடேலாது. நாரதர் : ஏன் நந்தி மாதிரி வழி மறிச்சுக் கொண்டு இருக்கிறியள்? சூரன் : நளம், பள்ளுகள் வந்தால் வழி மறிக்கத்தானே வேணும்! நாரதர் : நந்தனாருக்கு வழிமறிச்சது போல? சூரன் : ஓ! அந்தப் பறைக்கூட்டமும் உதுக்கை இருக்குதுகள். நாரதர் : அது, அந்தக் காலம்! நந்தனாரை வழிமறிச்சு, அவரை அக்கினி பகவானுக்குப் பலி கொடுத்திட்டுச் சிவலோகம் அனுப்பியாச்செண்டு கதை கட்டி விட்டியள்... இப்ப அப்படி நடக்காதெண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ! சூரன் : என்ன, கனக்க கதைக்கிறாய்? நாரதர் : நீங்க முரட்டுக் கதை கதைச்சால், நாங்கள் அதுக்குப் பதில் சொல்லத்தானை வேணும். நந்தி மாதிரி நிக்காதீங்க. வழி விடுங்க! சூரன் : வழி விடேலாது. நாரதர் : (முருகனைத் தொட்டுக் காட்டி) இவர் ஆரெண்டு தெரியுதே? இவர்தான் உள்ளை இருக்கிற கந்தன். அவரையே மறிச்சு வைச்சிருக்கிறிங்க... சூரன் : ஹ... ஹ... ஹா கந்தன்! இந்தக் கந்தனுகள், வேலனுகள்தான் இப்ப கோயிலுக்கை போகத் துடிக்கினம். கந்தனாம், கந்தன்! நாரதர் : அவர் குடியிருக்கிற கோயிலுக்கை அவர் போகத்தானை வேணும். தடுக்கிறதுக்கு நீ யார்? முருகன் : வழிவிடுங்கள். நாங்கள் மட்டுமல்ல, இங்கே முருக நாமம் பாடிக்கொண்டிருக்கிற பக்தர்கள் அனைவரும் கந்தனை வழிபட வழிவிடுங்கள்! சூரன் : முடியாது. அங்காலே போங்கள்! நாரதர் : இந்த அக்கிரமத்தின் பலனை நீங்கள் அடையத்தான் போறியள்! சூரன் : என்ன செய்வியள்? (தள்ளி நிற்கும் குண்டர்களைக் கை தட்டி அழைக்கிறார்) (அதற்குள் சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் சிலர் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகிறார்கள். முருகள், அவர்களை நோக்கிக் கை அசைத்து) முருகன்: உங்கள் போராட்டம் வெல்லட்டும்! கந்தன் உங்களுக்கு அருள் பாலிப்பான். நாம், இதோ போய் வருகிறோம்! (என்று சொல்லிவிட்டு, நாரதரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு முன்னால் உள்ள பனங்கூடல் காணிக்குச் செல்கின்றார்) -------------------------------------------------------------------------------- காட்சி நான்கு பாத்திரங்கள் : நாரதரும், முருகனும். நாரதர் : முருகா, பார்த்தீர்களா? இந்த நாரதன் சொன்னதைக் கண்முன்னே கண்டீர்கள்தானே! முருகன்: ஆம், நாரதரே! யாவும் அறிந்தோம்! இந்தப் பக்தர்கள் சாந்தி வழியிலே தமது கோரிக்கைக்காகப் போராடுகிறார்கள். இந்த மார்க்கம், ஒரு போதும் அவர்களுக்கு வெற்றியளிக்கப் போவதில்லை. நான் அவர்களுக்கு என் வேலைக் கொடுத்து அதன் மூலம் வெற்றியீட்ட அனுக்கிரகம் புரிகிறேன். இதோ... (தனது வலக்கரத்தை உயர்த்தி, மானசீகமாகத் தன் கை வேலைப் பெற்று, இரு கரங்களாலும் அதனைத் தன் பக்தர்களுக்குக் கொடுத்தருளி, ஆசீர்வதிக்கின்றார். அத்துடன் இருவரும் மறைகின்றார்கள்) -திரை- -------------------------------------------------------------------------------- கந்தன் கருணை (காத்தான் கூத்துப்பாணி இசை நாடகம்) மூலக்கதை : என்.கே.ரகுநாதன் நாடக வார்ப்பு : “அம்பலத்தாடிகள்” -------------------------------------------------------------------------------- அவர்க்கே உரித்தாம் வீர மரணத்தால் மரணத்தை வென்றுவிட்ட தீரர்- தீண்டாமையாம் தீமைக்கு எதிர் நின்ற வீரர் அவர் தமக்கே உரித்தாம் இச்சிறு நூல். -------------------------------------------------------------------------------- தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைவர் திரு.எஸ்.ரீ.என்.நாகரத்தினத்தின் வாழ்த்துச் செய்தி பன்னெடுங் காலமாக, இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக வடபகுதியில் நிலவிவரும், எதுவித நீதி நியாயமுமற்ற காட்டுமிராண்டித்தனமான தீண்டாமைக்கும், சாதி ஒடுக்கு முறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் காலத்துக்கு காலம் தமது எதிர்ப்பைத் தனி நபர் அல்லது குழு ரீதியான போராட்டங்கள் மூலமும், தனிப்பட்ட சங்கங்கள், நிறுவனங்கள் மூலமும், வேறுபல வழிகளிலும் காட்டி வந்துள்ளனர். எனினும் 1966-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21-ம் திகதி சுன்னாகத்தில் இருந்து ஆரம்பித்த பிரசித்த பெற்ற ஊர்வலத்தின் பின்னர், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டமன்றி, தீண்டாமைக்கெதிராக ஐக்கியப்படக் கூடிய சகல மக்களையும் அணிதிரட்டித் தனது போராட்டப்பாதையை முன் வைத்த போதுதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஒரு புதிய வடிவை எடுத்தது. அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் பொது இடங்களான பல கோயில்களும் தேனீர்க்கடைகளும் திறந்து விடப்பட்டதும் இன்றைய சரித்திரம். இப்போராட்டங்களில் அணி அணியாகத் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் முற்போக்கு எண்ணம் கொண்ட கணிசமான பலர் நேரடியாகவும் பொருளாதார, தார்மீக ரீதியிலும் ஆதரவளிப்பது முக்கிய அம்சமாகும். இவ்வகையில் “அம்பலத்தாடிகள்” மன்றத்தினரின் “கந்தன் கருணை” நாடகம் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கதாகும். கலை, இலக்கியப் பிரச்சாரத் துறையில் எமது இயக்கத்தின் முன்னோட்டத்துக்கு அந்நாடகம் பெரிதும் உதவியது. இந்த “அம்பலத்தாடிகள்” இன்றைய சமுதாய மாற்றத்துக்கான பொதுப் பிரச்சினைகளை மையமாக வைத்து, இன்னும் பல உயிர்ப் படைப்புக்களை உருவாக்க வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துகின்றேன். அன்பன் எஸ். ரீ. என். நாகரத்தினம் 30A, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம். -------------------------------------------------------------------------------- நாடகத்திற்கு ஓர் அறிமுகம் கலாநிதி க. கைலாசபதி கடந்த இரு தஸாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் நாடகங்களைப் பற்றிப் பலவிதமான சர்ச்சைகளும், வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வந்துள்ளன. தமிழ் நாடகக் கலையின் இன்றைய நிலை, அதன் குறைபாடுகளுக்கான காரணங்கள், அதன் எதிர்காலம் இவை குறித்து இரங்கி ஏங்கும் எத்தனையோ குரல்கள் ஒலித்துள்ளன. இவற்றைக் கூர்ந்து கவனித்தால் ஓருண்மை பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் காணலாம். அதாவது தமிழ் நாடகங்கள் நாம் திருப்தியடையும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்பதாம். குறிப்பாகத் தற்காலத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிதை, சிறுகதை, நாவல் என்பன வளர்ந்திருக்கும் மட்டத்திற்கு நாடகம் விருத்தியடையவில்லை என்பது அப்பட்டமான உண்மை ஆகும். இந்த நிதர்சன உண்மையை ஏற்றுக்கொண்டதும், இக்குறையை எவ்வாறு நிவிர்த்திக்கலாம் என்னும் நியாயமான கேள்வி எழுகின்றது. இதற்கு ஏகமனதான விடை இருக்கும் என எதிர்பார்க்க இயலாது. எழுத்தாளர்களினதும், திறனாய்வாளர்களினதும் கலைக்கொள்கை, சமுதாய நிலைப்பாடு, உலக நோக்கு முதலியவற்றுக்கியைய இவ்வினாவுக்குரிய விடையும் வேறுபடும். “கந்தன் கருணை” என்னும் இந்நாடகப் பிரதியைப் படித்த பொழுது நமது நாடகக் கலைக்குப் புதுநோக்கும் போதிய வலுவும் அளிக்கக்கூடிய ஒரு நெறி இதில் உள்ளடங்கி இருப்பதைக் கண்டேன். இந்நெறியை மேலும் பலர் கைக்கொண்டு இத்தகைய நாடகங்களை எழுதித் தயாரிப்பார்களாயின் இத்துறையில் எம்மை எதிர்நோக்கும் “பற்றாக்குறை” பெருமளவிற்கு நீங்கும் என்றே எண்ணுகிறேன். இக்கூற்றுக்கு இரண்டொரு விளக்கங்கள் அவசியமாயுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியளவிலிருந்து எமது வாழ்க்கையிலும் கலை இலக்கியத்திலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட அந்நியத் தாக்கத்தின் விளைவுகளில் ஒன்றாக “டிராமா” எனப்படும் மேனாட்டு நாடகவகை சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. காலனித்துவ அமைப்பிலே ஆங்கிலக் கல்வியும் அதையொட்டிய மதிப்பீடுகளும், செல்வாக்கும் நாட்டில் மேலோங்கிய பொழுது அவற்றின் நிழலில் வளர்ந்த புதுமுறை ‘டிராமா’வும் போற்றப்பட்டதில் வியப்பெதுவுமில்லை. இப் புதுமுறை ‘நாடகம்’பன்னெடுங்காலமாக இருந்து வந்த மரபுவழி நாடகத்திலிருந்து சிற்சில அம்சங்களில் வேறுபட்டது. மரபுவழிக் கூத்தில் ஆடலும் பாடலும்,ஓரளவிற்கு மிகை நடிப்பும் இவற்றுக்கு நிறைய வாய்ப்பளிக்கும் புராண இதிகாசக் கதைக் கூறுகளும் பிரதான அம்சங்களாய் விளங்கின. புதுமுறை நாடகத்தில், ஆடல் பாடல் என்பவற்றிற்குப் பதிலாக இயல்பான உரையாடல் இடம்பெற்றது. பொருளைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடான வரையறைகள் இல்லாவிடினும், பெரும்பாலும் சமகாலச் சமுதாய வாழ்க்கையின் அம்சங்கள் சிறப்பிடம் பெற்றன. சுருங்கக்கூறின், டிராமாவில் குறிப்பாக (நகர) வாழ்க்கையிற் காணக்கூடிய நடையுடை பாவனை, பேச்சு முதலியவற்றை ஏறத்தாழ அவை உள்ளவாறே கதை நிகழ்ச்சிகளின் வாயிலாக நடித்தல் நவீன நாடகத்தின் தலையாய பண்;பாய்க் கருதப்பட்டது. இதனையே இயற்கை நவிற்சி என்றும் வற்புறுத்தினர். இத்தகைய நாடக வகையே ஏற்புடை மாதிரியாயும் உயர்வு நயமுடையதாயும் கருதப்பட்டமையால், நாளடைவில் எமது நாடகம் கட்டிறுக்கமான வரையறையைப் பெறுவதாயிற்று. அதாவது நாடகம் என்ற சொல்லின் பொருள் வரம்பு சுருங்குவதாயிற்று. நவீன மேடையமைப்பு, ஒலி, ஒளியமைப்பு, ஒப்பனை என்பனவற்றின் பெயரில் அணிமணியாடைத் தொகுதிகளும், வியப்பையுண்டாக்குவதையே நோக்கமாய்க் கொண்ட வெற்றலங்காரங்களும் முதன்மை பெற்றன. மேடைக் காட்சியமைவு (செற்ஸ்) நாடக மாந்தரை விட முக்கியமாய்க் கருதப்படலாயிற்று. நாடகத்தின் உயிர்நிலையான நிகழ்ச்சிப் புணர்ப்போ, முரணோ, ஆன்ம அனுபவமோ சிறப்பிழந்தன. ஏல விற்பனையிலே ஒருவரை மிஞ்சி மற்றொருவர் விலையைக் குறிப்பது போன்று, ஒரு தயாரிப்பாளரை விஞ்சி மற்றொருவர், “தத்ரூபமான” காட்சியமைவுகளை மேடையிற் காட்டும் நிலை தோன்றியுள்ளது. இவை யாவற்றின் விளைவாலும், நாடகச் சுவைஞர்கள் அதாவது இரசிகர்கள் கேவலம் வெறும் பார்வையாளராகவே அமர்ந்து காட்சிகளைக் கண்டுவிட்டுப் போகின்றனர். இத்தகைய ஓர் அவலநிலைக்கு எதிர்விளைவாகவே சமீப காலங்களில் அமெரிக்கா, ஐரோப்பா முதலிய மேலைப் புலங்களில் சம்பிரதாயமான “டிராமா” வகையை நிராகரித்து விட்டு, மக்களோடு நேரடியான தொடர்பு கொள்ளக் கூடிய வௌ;வேறு நாடக முறைகளைக் கலைஞர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர். கீழைத்தேய மரபுவழிக் கூத்து முறைகளைக் கூட அவர்கள் ஆங்காங்கே தழுவிக் கொண்டுள்ளனர். “டிராமா” என்ற இயற்பண்பு வாய்ந்த நாடக வகை ஒரு வாய்ப்பாடாக அமைந்துவிட்டதெனப் பலர் இப்பொழுது எண்ணுகின்றனர். உலகின் சில பகுதிகளிற் காணப்படும் இப்போக்கிற்கு இயையவே ஈழத்திலும் நாடகத் துறையில் மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. சிறப்பாகச் சிங்களக் கலைஞரும் ஓரளவிற்குத் தமிழ்க் கலைஞரும் அண்மைக் காலத்தில், கூத்து வடிவத்தை நாடுவதற்கும் இதுவே காரணமாகும். நொண்டி நாடகத்திலிருந்து பள்ளு நாடகம் வரை, வில்லுப் பாட்டிலிருந்து கதாகாலட்சேபம் வரை, தெருக்கூத்திலிருந்து பொம்மலாட்டம் வரை, மக்கள் மத்தியில் வழங்கி வந்துள்ள கலை வடிவங்களும் கரகம் முதல் காவடி ஈறான சடங்கு வழிபாட்டு முறைகளும் நமது நாடக மரபுக்கு உரியனவே. இவையெல்லாம் வௌ;வேறு அளவிலும் வகையிலும் கருத்தை உணர்த்தவும் கதையைக் கூறவும் பயன்பட்டனவேயாகும். ‘டிராமா’ முறை செல்வாக்குப் பெற்றபின் இவை தீண்டத்தகாதனவாய்ப் புறக்கணிக்கப் பட்டன. இதனால் எமது மக்களின் அனுபவ மரபிலும் வளத்திலும் பெரும்பகுதி பயன்படாமற் போனது. வர்க்க சமுதாயத்திலே கீழ்மட்டத்து மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவதைப் போலவே, அவர்தம் அருஞ்செல்வங்களாய ஆடலும் பாடலும் அனாதரிக்கப்பட்டன. மரபுவழிவரும் இக் கூத்து முறையைப் பேணுவதோ அப்படியே இயங்க வைப்பதோ நாடக வளர்ச்சிக்கு உதவும் என்று நான் கூறவில்லை. ஆனால், நாடகம் என்ற வரம்புக்கு அப்பால் அது இது காலவரை நிறுத்தப்பட்டமையால் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் காலத்திற்கேற்ற மாற்றம் பெறும் வாய்ப்பினை இழந்தது என்பதே நாம் இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டியதொன்றாகும். ‘டிராமா’ என்றதுமே, ஒரு குறிப்பிட்ட விதமான நாடகப் பிரதி, வசதிகள் பல வாய்க்கப்பெற்ற மண்டபம், ஒலி-ஒளிக் கருவிகள், மேடையமைப்புத் தளபாடங்கள் முதலியன இன்றியமையாதவை என்று நாம் நம்புமளவுக்கு, நாடகம் பற்றிய மனப்பதிவு எமக்கிருக்கிறது. இத்தகைய ஒரு நாடகம் அரங்கேற்றுவதற்குப் பணம் கணிசமான தொகை தேவைப்படுகிறது. பொதுமக்கள் பலரின் சக்திக்கு அப்பாற்பட்ட தொன்றாகி விடுகிறது. இதனாலேயே யப்பான், இந்தோனீஷியா, வங்காளம் முதலிய நாடுகளில் மரத்தினடியிலும், தெருச் சந்தியிலும், கடற்கரையிலும் நின்று நடிகர்கள் தாமே உடன் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவினதான தளபாடங்களுடன் நாடகம் ஆடும் குழுக்கள் தோன்றின. இவற்றை “வாழும் நாடகக் குழுக்கள்” என்றும் “நடமாடும்; நாடகக்காரர்” என்றும் அழைக்கின்றனர். இப்புதிய போக்கின் விளைவாக நாடகக் குழுக்கள் பல்கிப் பெருகின் மொத்தத்தில் நாடகக் கலை துடிப்பும் செழிப்பும் பெற்றது. பலரது உள்ளார்ந்த-உள்ளடங்கிக் கிடந்த கலையாற்றல் வெளிப்பட்டது. மேலே விவரித்த பின்னணியிலேயே கந்தன் கருணை நாடகத்தை நான் நோக்குகிறேன். திரிலோக சஞ்சாரியான நாரதரும், கலியுகவரதனான கந்தனும் அவன் காதற்குரியாரும் மேலேழுந்தவாரியாகப் பார்க்குமிடத்துப் பழைய புராணக் கதாபாத்திரங்களேயாவர். எனினும் அவர்கள் ஆய்ந்து பங்கு பற்றும் சம்பவங்களோ நாம் கண்முன் காண்பவை. மக்களுக்கு நன்கு தெரிந்த கதைக் கருவை முற்றிலும் புதிய தேவைக்காகப் பயன்படுத்தியிருத்தல் கவனிக்கத்தக்கது. இன்னொரு விதத்திலும் இந்நாடக முயற்சி விதந்துரைக்க வேண்டியது. நவீன இலக்கியத்தின் பெரும்பகுதியான (கவிதை, சிறுகதை, நாவல் போன்ற) ஆக்கங்கள் தனி நபர்களினால் சிருஷ்டிக்கப்படுவன. தனிநபர்கள் படித்துச் சுவைப்பதற்காகப் படைக்கப்படுவன: அவ்வாறு தனிமையில் படித்து இன்புறுவதற்காகப் படைக்கப்படும் இலக்கியங்களும், நூற்றுக் கணக்கானோர் ஒருங்கிருந்து பார்த்துச் சுவைக்கும் நாடகத்திற்கும் சில பல வேறுபாடுகள் உள்ளன. ரசனையில் உள்ள வித்தியாசம் ஒருபுறமிருக்க, கலையாக்கத்திலும் முக்கியமான வேறுபாடுகள் உள. நாடகம் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு ஆகும். கூட்டு முயற்சியிற் பிறந்து, கூட்டமாக மக்கள் இருந்து அனுபவிக்கும் கலை வடிவத்துக்குச் சமுதாய முக்கியத்துவம் நிரம்பவுண்டு. இந்நாடகமும், எழுத்தாளர் என்.கே.ரகுநாதன், கலைஞர்கள் (அம்பலத்தாடிகள்) சேர்ந்து உருவாக்கியதொன்று, தனிமனிதவாதம் அழிந்து சமூகப் பிரக்ஞை நாடகத்தின் தோற்றத்திலேயே முக்கியமாயிருக்கிறது. இயக்கத்தின் சாயலைப் பெற்றுவிடுகிறது. ‘பெயர் பெற்ற’ நாடகாசிரியர்களுக்காகக் காத்திராமல் தொடர்பும் ஆர்வமும் உடைய சிலரது முயற்சியால் நாடகம் சிறப்பாக மேடையேற்றப் படலாம் என்பதற்கு இந்நாடக முயற்சி தக்க எடுத்துக்காட்டாகும். கடந்த பத்தாண்டு காலத்திற்குள் ‘டிராமாவின்’ அதீத செல்வாக்கை எதிர்த்து, மரபுவழிக் கலை வடிவங்களை ஏற்றவாறு பயன்படுத்தித் தேசியப் பண்பு பொருந்திய நாடகங்களை உருவாக்குதல் வேண்டுமென்ற வேணவா சிலரிடத்துக் காணப்பட்டது. சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். இருவகையாக இப்பரிசீலனை முயற்சிகள் வெளிப்பட்டு உள்ளன. முதலாவது, யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வழங்கிவரும் நாட்டுக் கூத்துப் பாணியில், சமகாலப் பிரச்சினைகள் சிலவற்றைக் கதைவடிவிலே மேடையேற்றுதல் ஆகும். இப்போக்கிற்குச் சிறந்த உதாரணமாக, சி.மெனகுரு தயாரித்தளித்த சங்காரம் என்னும் நவீன வடமோடிக் கூத்தைக் குறிப்பிடலாம். ;ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைக் காவியப் பண்புடன் காட்டுவதாய் இந்நாடகம் அமைந்ததும் இரண்டாவது, ‘இயல்பான’ உரையாடலுக்குப் பதிலாக, கவிதையில் பாத்திரங்கள் கதைக்கும் கவிதை நாடகங்களைக் குறிப்பிடலாம். இவையும் ‘டிராமா’க்களுக்கு மறுதலையாகத் தோன்றியனவே. இ.முருகையன் எழுதி, நா.சுந்தரலிங்கம் தயாரித்தளித்த கடூழியம் என்னும் குறியீட்டு நாடகத்தை இப்போக்கிற்குச் சிறந்த உதாரணமாய்க் காட்லாம். இதுவும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் எழுச்சியைச் சித்திரிப்பதாகும். இவற்றை நோக்கும் பொழுது முக்கியமான ஓருண்மை புலப்படுகின்றது. அடிப்படையான-சமதாய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை கலைஞர்கள் எடுத்தாள முனையும்போதே வடிவத்திலும் பாரதூரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சங்காரம், கடூழியம் ஆகியவற்றில் பொதுப்படையாகவும் கருத்து ரீதியாகவும் அலசப்பட்ட பிரச்சினை கந்தன் கருணை என்னும் இந்நாடகத்தில் மிகவும் துல்லியமாகவும், கூர்மையாகவும், அழுத்தமாகவும் சித்திரிக்கப் படுகிறது. குறியீடுகளில் புகலிடம் தேடாமல், நேரடியாகவே பிரச்சினையை முன்வைத்து நிவாரண மார்க்கம் தேடும் இலக்கிய நோக்கையும் இதிற் காணலாம். ஆக, எளிமை, கூர்மை, பயன்பாடு, மக்கட்சார்பு, கூட்டு முயற்சி, தேசியப் பண்பு முதலாய நல்லம்சங்கள் நன்கு பொருந்திய நாடகமாகக் கந்தன் கருணை விளங்குகிறது. தன்னளவில் நிறைவு தருவதாயும், பிறருக்கு முன்மாதிரியாயும் இது அமையும் என நம்புகிறேன். -------------------------------------------------------------------------------- கதையின் கதை என்.கே.ரகுநாதன் யாழ்ப்பாணத்தில் நிலவும், நிலவுடைமைச் சமுதாயத்தின் மிச்ச சொச்சமான சாதி முறையையும் தீண்டாமைக் கொடுமையையும் எதிர்த்த கிளர்ச்சிகள் பன்னெடுங்கால வரலாற்றையுடையன. காலத்துக்குக் காலம், கிராமங்கள் தோறும் நடைபெற்று வந்த, சிறிதும் பெரிதுமான சாதியடக்கு முறையிலான அக்கிராமங்கள், தனிப்பட்ட முறையிலோ அன்றிக் கிராமம் தழுவிய முறையிலோ எதிர்க்கப்பட்டு வந்துள்ளளன. பொது ஸ்தாபனங்களில் உரிமை கோரும் அடிப்படையில் 1947-ம் ஆண்டு வில்லூன்றி மயானத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், சாதியடக்குமுறைக் கெதிரான கிளர்ச்சிகள் ஒரு பொதுமையான உருவம் பெற்றதைக் குறிப்பிடலாம். அதன் பின்பு, அண்மைக் காலங்களில், சங்கானை, கரவெட்டி, அச்சுவேலி, கொடிகாமம் போன்ற இடங்களில் முன்பு நடைபெற்றதைவிட உருவத்திலும், குணாம்சத்திலும், கனத்திலும் முற்றிலும் வித்தியாசமான முறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களையும் பிற்போக்குவாதிகளையும் எதிர்த்து உக்கிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். இழப்புகளும், தியாகங்களும் தவிர்க்க முடியாதவையாயிற்று. வெற்றிகளும், போராட்ட அனுபவங்களும் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் முன்னெடுத்துச் சென்றன. இதனையடுத்து, ஆலயப் பிரவேசத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்து, சாதிவெறியர்களும், பிற்போக்குவாதிகளும் ஆலயங்களில் வியூகம் அமைத்து நின்றபோது, ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த எதிர்ப் புரட்சியாளர்களை முறியடிக்க அணி திரள வேண்டியது தவிர்க்க முடியாத சரி;த்திரக் கடமையாயிற்று. முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்கு நாடு முழுதும் பொங்கெரி பரந்தது போன்ற உத்வேகம் தலைதூக்கியது. பன்றித்தலைச்சி, மாவிட்டபுரம், செல்வச்சந்நிதி போன்ற இடங்களில் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டம், வட இலங்கையைக் கிடுகிடுக்க வைத்தது எனலாம். பிற்போக்குவாதி, தனது வர்க்க சுபாவத்தின்படி உடனடியாக அடி பணியாவிட்டாலும், ‘மீசையில் மண் ஒட்டாத’இ கதையாக, அடுத்த ஆண்டுகளில் அவன். ‘சமாதானமாக’ ஆலயக் கதவுகளைச் சகல மக்களின் வழிபாட்டுக்கும் திறந்துவிட்டமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். இந்தப் போராட்ட காலத்திலெல்லாம், நடுநிலைமை வகிப்பதாகச் சொல்லிக் கொண்ட ஒரு பகுதியினர் ‘தர்மோபதேசம்’ செய்ததை நாம் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. ‘கோயிலுக்குள் சென்று வணங்கினால்தான் ஆண்டவன் அருள்புரிவானா? அவன், அங்கும், இங்கும், எங்கும் இருக்கின்றானே!’ என்று தத்துவம் பேசினார்கள் இவர்கள். இது, பச்சையாக, பிற்போக்குவாதிகளுக்கு உதவும் வாதம் என்பதில் சந்தேகமென்ன? இவர்கள், பிற்போக்குவாதிகளுக்குச் சாதகமாகத் திருவாய் மலர்ந்தருளியதைப்போல, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலுள்ள, ‘கனவான்கள்’ சிலரும் “ஆண்டவன் எங்களை உள்ளே வரச் சொல்லிக் கேட்கிறானோ? வெளியே நின்று வணங்கி நாம் ஆசார சீலராகவில்லையோ?” என்று பித்தலாட்டம் செய்தனர். இந்த இருசாராரின் பசப்பு வார்த்தை களிலும் மயங்காது, ஒடுக்கப்பட்ட மக்கள் சரியான போராட்டப் பாதையில் முன் சென்றனர். உண்மையில், இந்த ஆலயங்களில் நடைபெற்றதென்ன? “ஆசார சீலராய் எவரும் உள்ளே சென்று வணங்கத் தடையில்லை” என்று பிற்போக்குவாதிகள் மாயமாலம் செய்தார்கள். ஆனால் ஆலயங்களில் ஆசார சீலம் நிலை தடுமாறிற்று. கோயில்களுக்குள் பயங்கரமான ஆயுதங்களும், சண்டியர்களும், சாராயம் போன்ற குடிவகைளும் நிறைத்து வைக்கப்பட்டமை நாடறிந்த கதை. பிற்போக்குவாதிகள், இவற்றை நிறைத்து வைப்பதற்காகக் கர்ப்பக் கிரகத்திலிருந்த தெய்வத்தை நிர்த்தாட்சணியமாக வெளியே, புழுதியில் வீசியெறிந்தார்கள். அப்படி வெளியே, புழுதியில் வீசியெறியப்பட்ட தெய்வத்தை எடுத்து, புழுதி துடைத்து உள்ளே பிரதிஷ்டை செய்ய ஒடுக்கப்பட்ட மக்கள் முயற்சியெடுத்தார்கள் என்று யாரும் பசப்ப முன்வரவில்லை. கோயில்கள், சாதியடக்கு முறையின் நிலைக்களனாகப் பாவிக்கப்படும் அநாகரிகமான ஏகபோகத்தை உடைத்து சகல மக்களுக்கும் அங்கு வணங்கும் உரிமையை நிலைநாட்டவே அவர்கள் ஒன்று திரண்டனர் என்பதே உண்மையாகும். * * * “எல்லாம் வல்ல ஆண்டவன், அடியார்க்கெல்லாம் அருள்பாலிக்கும் ஆண்டவன், ஆண்டாண்டு காலமாய் இந்த மக்கள் அல்லற்படுவதை அறியாதிருக்கிறானா? சாதியமைப்பைக் கட்டிக் காக்கும் நிலைக்களனாக, ஆண்டவா, நீ குடிகொண்டிருந்கும் கோயிலையே பாவிக்கிறார்களே பாவிகள். இதை நீ சகித்துக் கொண்டிருக்கிறாயா? துஷ்டர்களை நிக்கிரகம் செய்து சிஷ்டர்களாகிய எம்மைப் பரிபாலிக்க மாட்டாயா? எம் குறை தீராதா? நாம் ர~pக்கப்படமாட்டோமா?” என்றெல்லாம் ஆலய வாயில்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலித்தது. “கந்தா, கடம்பா, கார்த்திகேயா, முருகா, ஷண்முகா! நீ உண்மையிலேயே எம்மத்தியில் தோன்றி இந்த அக்கிரமத்துக்கு ஒரு முடிவு காணமாட்டாயா?” என்று அவர்கள் பிரலாபித்தார்கள். உண்மையே கந்தன் உருவில் வந்து, தங்கள் குறை தீர்க்க மாட்டாதா? என்று ஏங்கினார்கள். அக்கிரமத்தைப் பூண்டோடு அறுக்க, “கந்தா, உன் கைவேலைத் தா” என்று இரந்து வேண்டினார்கள். எழுத்தாளன் நெஞ்சில் கருணை சுரந்தது; கந்தன் கருணை பிறந்தது. இதுவே கதையின் கதையாகும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமன்றி-இந்த மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு முழுவதுமுள்ள நல்லவர்களையும், முற் போக்காளர்களையும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒரே அணியில் திரட்டியது. ஆலயப்பிரவேச இயக்க உச்சக்கட்ட காலமான, 1969-ம் ஆண்டில், பரபரப்பான சூழ்நிலையில், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தனது இரண்டாவது மாநாட்டைக் கூட்டியது. இம் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் பிரசுரிப்பதற்காக, கந்தன் கருணை என்ற தலைப்பில், நான் ஓரங்க நாடகமொன்றை எழுதினேன். மாநாடு நெருங்கிய சமயம், சிறப்பு மலரை விரைவில் அச்சிட்டு முடிக்க வேண்டியிருந்ததால், அம்மலரில் கந்தன் கருணையைப் பிரசுரிக்க முடியாமல் போயிற்று. சில மாதங்களின் பின், நெல்லியடி அம்பலத்தாடிகள், மேடையேற்றுவதற்கு ஒரு நாடகம் எழுதித் தரும்படி கேட்டனர். நான் கந்தன் கருணையைத் தூக்கிக் கொடுத்தேன். ஓரங்க நாடகமான கந்தன் கருணை, காத்தவராயன் கூத்து ரூபத்தில் மாற்றப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும், கொழும்பு-சரஸ்வதி மணடபத்திலும் மேடையேற்றப்பட்டது. காத்தவராயன் கூத்துக்கு அடுத்தபடியாக, அதே கூத்து வடிவத்தில் உருவாக்கப்பட்ட நாடகம்; கந்தன் கருணையாகும். தேவையே ஒரு பொருளின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் பிறந்து, அம்மக்களின் போராட்டத்துக்கு ஓர் ஆதர்ஸமாக, ஆயுதமாக மிளிரும் கந்தன் கருணை பல இடங்களில் மேடையேறிப் பெருமை பெற்றுள்ளது. இந்த நாடகத்தின் மூலக்கதையை எழுதியவன் என்ற வகையில் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. * * * எதிரி மூர்க்கத்தனமாகத் தாக்க வருகின்றான். அவனை எதிர்த்துத் தாக்கி முறியடிக்க வேண்டும். வேலியில் கிடக்கும் பட்ட தடியோ, வீட்டு அடுக்களையில் கிடக்கும் ஒரு பாறாங்கத்தியோ அல்லது கொல்லன் பட்டடையில் உள்ள ஒரு கட்டாரியோ ஏதோ ஓர் ஆயுதம் வேண்டிக் கிடக்கிறது. அவசரத்தில், மிக அருகில் கையில் பட்டது வேலியில் கிடந்த பட்ட தடிதான். பிடுங்கி, உருவி, எதிரியின் மண்டையைப் பிளந்து அவன் கொட்டத்தை அடக்க முடிந்தது. கொல்லன் பட்டடைக்கு ஓடிப்போய் “அழகாய், கூராய், ஒரு வேல் வடித்துத் தா” என்று கேட்கலாம்; வாங்கலாம்; எதிரியையும் சாய்க்கலாம். ஆனால் அவனைச் சற்றும் முன்னேற விடாமல் அவன் மூர்க்கத்தை, அது எழுந்த அந்தக் கணத்திலேயே மட்டம் தட்டி அடிபணிய வைக்க உதவிய பட்ட தடிக்குள்ள ஆயுதப் பெருமை, வேலுக்குள்ள பெருமைக்குச் சற்றும் குறைந்ததன்று. அந்தச் சந்த |