| ஈழநூல் 063 | |
| நூல் |
நீலாவணன் நினைவுகள் (பகுதி 1, பகுதி 2) |
| ஆசிரியர்: |
எஸ். பொ. |
| மின்னூலாக்கம் |
இ. பத்மநாப ஐயர் |
| மின்பதிப்பு | ஈழநூல் |
நீலாவணன்
எஸ். பொ. நினைவுகள்
பகுதி
1
--------------------------------------------------
நீலாவணன்
எஸ்.
பொ.
நினைவுகள்
-------------------------------------------------
பதிப்புரை
'தேமதுரத்
தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்கிற பாரதியின் இலட்சியக்
கனவினைக் காரிய சாதனையாக்குவதே நமது பணி என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
கனவுகளும், காரிய சாதனைகளும் அடிவானம் போன்று தோன்றினாலும், நமது பயணம் தொடரும்.
இன்று உலகின் பல நாடுகளிலும் பரம்பி வாழும் தமிழர் மத்தியிலே முகிழ்ந்து
வரும் தமிழ் உணர்ச்சிகளும் கலை-இலக்கிய நேசிப்புகளும், படைப்பு முனைப்புகளும்
கௌரவிக்கப் படுதல் வேண்டும். இவற்றை நாளைய தலைமுறையினருக்கு விட்டுச் செல்லும்
மார்க்கங்களுள் ஒன்று, இந்த எத்தனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நூல்களைப்
பிரசுரித்தலாகும். இந்தத் துறையில் உருபு வாய்ந்த பக்களிப்புச் செய்ய
நிறுவப்பட்டதுதான் மித்ர வெளியீட்டு நிறுவணம்.
இந்த ஆண்டில் நமது
பிரசுரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஏற்பாடு செய்துள்ளதுடன், நமது இலக்கிய
அக்கறைகளின் பரப்புகளையும் விசாலித்துள்ளமை நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் படைப்பாளிகள் கவிதைத் துறையிலே அதிகம்
ஆர்வம் காட்டுகிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளிலே பொருந்தும் வாழ்க்கை முறைக்கு
'கவிதை' தோதான இலக்கிய வடிவம் என்று கருதுகிறார்களோ நாம் அறியோம். இருப்பினும்
இக்கவிஞர்கள் தமது வேரடி மண்ணான ஈழத்திலே கவிதையின் நவீனத்துவம் எவ்வாற நிகழ்ந்தது
என்பது பற்றிய அறிவு சகாயமானது. இத்தகைய ஒரு துறைக்கு உபகாரமாய் 'நீலாவணன் எஸ்.பொ.
நினைவுகள்' அமைகின்றது.
இந்த நூலை வெளியிடுவதற்குக் 'காலம் வெளியீடு'
முந்தி நின்றது. காலம் வெளியீடுவின் இந்த நூலை நாம் மேற்கொண்டுள்ள விரிவாக்கப்
பணியின் ஓரம்ஸமாக தமிழ்நாட்டு-ஈழநாட்டு விநியோக பரம்பலை வசதி செய்வதற்காக, காலம்
வெளியீட்டுடன் இணைந்து, தமிழ்நாட்டுப் பதிப்பினை நாம் வெளியிடுகின்றோம். புலம்
பெயர்ந்த நாடுகளிலே இயங்கும் சிறு பிரசுர வெளியீட்டாளர்கள் வெளியிடும் தரமான
நூல்களை அவர்களுடன் இணைந்து வெளியிடுதல் பயனும் அர்த்தமும் உள்ள பணியாகும். இந்த
ஏற்பாட்டின் முதலாவது நூலாக இதனை வெளியிடுவதிலே நமக்கு மகிழ்ச்சி. இணைந்து
வெளியிடும் இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தினால், புலம் பெயர்ந்த ஈழத்தார்
படைப்புகள் விரிந்த வாசகர் வட்டத்தைச் சென்றடையும். அத்துடன், நமது படைப்புகளுக்கு
தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பரந்து வாழும் தமிழ் வாசகர் மத்தியிலும் ஓர்
அங்கீகாரத்தினை வென்றெடுத்தல் சாத்தியமும் என்று நினைக்கின்றோம்.
இத்தகைய
கூட்டு முயற்சிகளுக்கு இத்தால் நேசகரம் நீட்டப்படுகின்றது. இந்த இணைப்புப் பிரசுர
முயற்சிக்கு முதலிலே நேசகரம் நீட்டிய கனடாவிலுள்ள காலம் வெளியீட்டினருக்கும் அதன்
அதிபர் செல்வம் அவர்களுக்கும் நமது நன்றிகள்.
டாக்டர் பொ. அநுர
1/23
Munro Street,
Eastwood NSW - 2122
AUSTRALIA.
--------------------------------------------------------------------
முன்னீடு
'நண்பர் நீலாவணன் பற்றிய நினைவுக் கட்டுரை இந்த ஞாயிறு இதழில் வெளிவர
வேண்டும். அதனை நீங்களே எழுதுதல் வேண்டும்' என்று மின்னாமல் முழங்காமல்' சடுதியாகத்
தொலைபேசியிலே தொடர்பு கொண்டு தினகரன் பொறுப்பாசிரியர் ஆர். சிவகுருநாதன் சொன்னார்.
கவிஞரின் சடுதியான மறைவு ஏற்படுத்திய சோகங்களை ரணமாக நெஞ்சிலே சுமந்த நேரம்அது.
தயக்கம். பின், 'நீளம்?' என்றேன் 'நீலாவணன் பற்றிய உங்கள் நினைவுகளுக்குக்
கட்டுப்பாடு கிடையாது' என்று தமக்கே உரிய பாணியிலே சிரித்தார். இவ்வாறு பிரசித்தமான
தினகரன் கட்டுரைகளே இந்நூலின் அடித்தளம்.
பிரான்ஸ’ல் என் இலக்கிய இனியன்
கலாமோகனின் விருந்தினனாய்த் தங்கியிருந்த காலத்தில், செல்வம் வீட்டில் ஓர்
இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்தது. அதுவே 'பாரீஸ் பகர்வுகள்'. அங்கு ஏற்பட்ட இலக்கிய
நட்பு, இன்றும் தொடர்கிறது. ஈழத்தின் தற்காலக் கவிதைப் போக்கிலே ஒரு தாக்கத்தையும்
மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய 'மஹாகவி'யை மீளநினைவுறுத்தும் வகையில் 'காலம்'
சிறப்பு மலர் சென்ற ஆண்டில் வெளிவந்தது. அதனைப் பாராட்டியதுடன் 'யாழ்ப்பாண
இலக்கியப் பங்களிப்பு சமன் ஈழத்து இலக்கிய வளம்' என்கிற பழைய தவறுகளை இயற்றாது.
மட்டக்களப்பு மாநிலத்தின் தற்கால எழுத்து எழுச்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் கவிஞர்
நீலாவணன் பற்றியும் ஒரு சிறப்பு மலர் வெளியிடும்படியும் கேட்டேன். நீலாவணன் பற்றிய
நூல் ஒன்று வெளிவருதல் நன்று என்கிற என் ஆசைக்குச் செல்வம் மசிந்தார். ஈற்றில்
இந்நூல் இவ்வாறு சமையலாயிற்று. உக்கிப்போன தினகரன் நறுக்கு ஒன்றிலிருந்து கிடைத்த
படத்தை வைத்து நிக் வில்லியம்ஸ் அமைந்துள்ளார்.
இலக்கிய நிகழ்வுகளின்
கட்டித்த அக்கறையின் உயிர்ப்பாகத் திகழும் 'ஞானி' யின் நேரடித் தொடர்பு கோவையில்
நிகழ்ந்தது. 'கண்டதும் காதல்' இதற்கும் பொருந்தும். நான் அவர் வசப்பட்டேன். அவர்
வீட்டிலே விருந்துண்டு, சேர்த்தே இலக்கிய நயம் அருந்திய இனிய பொழுதினை மறவேன். இந்த
இலக்கிய பந்தத்தின் பிரசித்தமாகவும் அவருடைய அணிந்துரை இந்நூலுக்குக் கிட்டுதல்
வேண்டுமென நான் விரும்பினேன். இலக்கிய நயப்பிலும் நோக்கிலும் கருத்து வேறுபாடுகள்
சங்கையானவை. அந்த வேறுபாடுகளைக் கௌரவித்தல் நாகரிகமானது மட்டுமல்ல, இலக்கியம் பற்றி
தரிசன அகலத்திற்கு அவசியமானதும். எனவே நான் ஏற்றுக் கொள்ளாத 'ஞானி'யின்
கருத்துக்களை என்னால் மதிக்க முடிகிறது. கைலாசபதி-சிவத்தம்பி கூட்டின் புத்தி ஜ“வித
சர்வாதிகாரம் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே இயற்றிய அதாப்பியங்கள், இருட்டடிப்புகள்,
பிறழ்வுகள், தவறான மதிப்பீட்டுத் திணிப்புகள் அநந்தம். இவை நேர் செய்யப்பட்டு
உண்மைகள் ஆவணப்படுத்தப் படுதல் வேண்டும். என் நேரம் இதனால் அதம் போகிறது என்பது
நிஜம். இலக்கிய சாதனைக்கு மேலானது, உண்மையின் உபாசகனாய் வாழுதல் என்பது என் தளம்.
அவர்கள்மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் எனக்கு இல்லை. ஆனால் சந்தியத் தேடலிலே
ஈடுபட்டுள்ள ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படக்கூடிய உணர்ச்சியே என்று என் ஆவேசத்தினை
விளங்கிக் கொள்ளவேண்டும் என்று 'ஞானி'யை மட்டுமல்ல, இலக்கிய நேசர்களையும் கேட்டுக்
கொள்ளுகிறேன்.
எஸ்.பொ.
---------------------------------------------------------------------
அணிந்துரை
எஸ்.பொ.
அவர்களை கோவையிலே நடைபெற்ற 'சுபமங்களா' நாடக விழாவின் போதுதான் (94 ஜூலை 13-17)
நான் சந்தித்தேன். 'நனவிடை தோய்தல்' வரையிலான அவரது படைப்புகளைப் படித்திருந்தேன்.
அவரிடம் எனக்கு ஏற்பட்டிருந்த மரியாதை உணர்வோடு அச்ச உணர்வும் கலந்திருந்தது.
இலங்கையில் முற்போக்கு முகாமிற்கு அவர் ஒரு 'டெர' ராக இருந்தார். கோவையில்
அச்சத்தோடு தான் அவரை நெருங்கினேன். அவரோடு நிறையப் பேசினேன். கைலாசபதி
முதலியவர்களோடு அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணம் கேட்டு அறிந்தேன்.
விரிவாகவும் அன்பாகவும் வெளிப்படையாகவும் அவர் உரையாடினார். என்னிடமிருந்த பாடலை
நினைத்துக் கொண்டேன். அதியமான் எதிரிகளைப் பொறுத்தவரை மதம் பொருந்திய யானை
போன்றவன். ஆனால் அவ்வை போன்றவர்களுக்கு....? நீர்த் துறையில் பாகர், யானையைக்
குளிப்பாட்டுகிற பொழுது, அவர்களோடு சேர்ந்து கொள்ளுகிற சிறுவர் யானையின்
வெண்கோடுகளைக் கழுவுகின்றனர். சிறுவர்களிடம் யானை அடங்கி நிற்கிறது. அவ்வை
போன்றவர்களுக்கு அதியன் இத்தகையவன்.
ஈழத்தின் முற்போக்கு முகாமோடு
முரண்பட்டு நின்றவர் எஸ்.பொ. மார்க்சியக் கட்சி சார்ந்தவர்களோடு, எஸ்.என்.நாகராசன்
அவர்களை முதல்வராகக் கொண்ட (எஸ்.வி.அர்., நான் போன்ற) எங்களுக்கும் சில அனுபவங்கள்
உண்டு. இதன் காரணமாக எஸ்.பொ. தன் மேம்பட்ட படைப்பாற்றல் காரணமாக முற்போக்கு
முகாமுக்கு ஈடுகொடுத்து நின்றார்.
கட்சி சார்ந்தவர்கள் தம் அரசியல் காரணமாக
தமக்குள் இறுகித்தான் இருக்கின்றனர். அவர்களுடைய கட்சிக் கண்ணோட்டத்திற்குத்தான்
அவர்கள் முதன்மை கொடுக்கின்றனர். கலை-இலக்கியத்திற்கும் கட்சி வழிகாட்ட முடியும் என
நம்புகின்றனர். படைப்பிலக்கியத்தின் தனித்தன்மை அவர்களுக்குப் புரிவதில்லை,
மேற்கட்டின் ஒரு பகுதிதான் கலாச்சாரம் என்ற வாய்ப்பாட்டைத் தொடர்ந்து
நம்பியிருப்பதன் மூலம், கலாச்சாரத்தின் உள் ஆழங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை.
பாட்டாளிய சர்வாதிகாரம் என்று பேசுகிறவர்கள் கட்சிக்குள்ளும், தமக்குள்ளும்
அதிகாரத்தை நிறுவிக் கொள்கின்றனர். இந்த அதிகாரம் அவர்கள் பார்வையை அடைத்துக்
கொள்கிறது. தம் அதிகாரத்துவ செயல்பாட்டின் மூலம் வெற்றி பெறுவது முதலாளியம் தான்
என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. சோவியத் யூனியன் தகர்ந்ததை அடுத்து சில
அதிர்வுகள் அவர்களுக்குள் ஏற்பட்டது என்பது உண்மைதான். ஆனால் மிக விரைவில் அந்த
அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு 'நிமிர்ந்து' நிற்கின்றனர். வரலாற்றில் மீண்டும்
இவர்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. மார்க்ஸ’யத்தின்
உள்ளுரை ஆற்றல்களை இவர்கள் தப்ப விட்டிருக்கின்றனர். இவர்களுக்குள் செயல்பட்டது
'ஸ்டாலினியம்' என்றுகூட சொல்வதற்கில்லை. மார்க்சியத்தை அதன் படைப்பியல் தன்மையோடு
தம் சம கால வரலாற்றுக்கு அதன் தனித் தன்மைகளோடு சேர்த்து பொருத்தி இவர்கள் கற்றுக்
கொள்ளவில்லை. இதன் காரணமாக இவர்கள் தம் பெருமையை முன்னிருத்தி மார்க்ஸ’யத்தின்
பெருமையை குறைத்திருக்கிறார்கள்! அழித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்.
சற்றுக் காலம் கடந்து பார்க்கிறபொழுது இவர்கள் நம் அனுதாபத்திற்கு உரியவர்கள்
இவர்களைக் கோபித்துப் பயனில்லை.
எஸ்.பொ. அவர்கள் இவர்களிடம் இன்னும் கோபம்
கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது. அவர் தன் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இது என் வேண்டுகோள். கைலாசபதி முதலியவர்களின் சாதனைகளை நாம் குறைத்து மதிப்பிட
இயலாது. பேராசிரியர் வையாபுரி அவர்களுக்கு அடுத்த படியாக தமிழின் ஆற்றல் மிக்க
ஆய்வாளராக தம்மை நிறுவிக் கொண்டவர் கலாநிதி கைலாசபதி அவர்களும், அவரை அடுத்து
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களும். இங்கு விளக்கம் அவசியமில்லை.
கவிஞர்
நீலாவணன் அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை இந்த சிறு நூலில் எஸ்.பொ. தொகுத்துக்
கொள்கிறார். சில காலந்தான் கவிஞரோடு எஸ்.பொ. பழயிருக்கிறார். 'மச்சான்' என்று
அழைத்து, தன் அன்பால் கவிஞர், எஸ்.பொ வை வென்றிருக்கிறார். அற்பமான ஒரு காரணம்
அவர்களைப் பிரித்து வைத்திருந்தது. இதற்காக இப்பொழுது எஸ்.பொ. வருந்துகிறார்.
கவிஞர் பற்றிய நினைவுகள் இவருக்குள் சோகமாய்க் கொந்தளிக்கிறது. மனம் நெகிழ்ந்து
மனம் உடைந்து இறுதியில் எழுதுகிறார். எஸ்.பொ.வும் கவிஞராகிறார். இவருக்குள்ளும் சில
தரிசனங்கள் எழுகின்றன. தம் இலக்கிய வாழ்வில் கவிஞரின் பங்களிப்பை எஸ்.பொ.
சிறப்பாகக் குறிப்பிடுகிறார். கல்முனையில் இலக்கிய அமைப்பு உருவாகியதைச்
சொல்கிறார். முற்போக்கு முகாமுக்கு எதிர் நின்று கிழக் இலங்கை செய்த இலக்கியச்
சாதனைகளைச் சொல்கிறார். முற்போக்கு முகாம்தான் ஈழத்தில் நவீன இலக்கியத்திற்கு
தொடக்கமாக இருந்தது என்பதை ஆணித்தரமாக எஸ்.பொ. மறுக்கிறார். விபுலானந்தரை பண்டிதச்
சிமிழுக்குள் புலவர்கள் அடைத்து வைத்திருப்பதை உடைக்கிறார். ஈழத்தில் நவீன
இலக்கியத்திற்கு விபுலானந்தரை முன்னோடியாக்குகிறார். அங்கிருந்து இன்னொரு ஆழ்ந்த
உண்மையைக் கண்டெடுக்கிறார். நவீன இலக்கியப் போக்கிற்கு ஆதிமூலம் என நாட்டார்
கவிதைகளைச் சொல்கிறார். நாட்டார் கவிதைகள்தான் சங்க இலக்கியத்திற்கும் மூல வடிவம்
என்கிறார்.
கவிஞர் நீலாவணன் பற்றிய நினைவுகள் என்று தொடங்கியவர், ஈழத்தின்
இலக்கிய வரலாறு சொல்கிறார். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட அல்லது சிலர்
ஏற்படுத்தியிருக்கிற தவறுகளை எஸ்.பொ. களைகிறார். இந்த அம்சம்இ இந்தச் சிறு நூலை
ஆற்றல்மிக்க ஒரு திறனாய்வு நூலாக உயர்த்துகிறது. எஸ்.பொ. தனித்தன்மை மிக்க
திறனாய்வாளர் என்பதற்கு இந்த நூல் நெடுகிலும் ஆதாரங்கள் குவிந்திருக்கின்றன.
கவிஞர் நீலாவணன் பற்றிய நினைவுகளினூடே இன்னும் பலர் பற்றிய நினைவுகளையும்
இந்த நூலில் தொடுத்திருக்கிறார் எஸ்.பொ. கவிஞர் அண்ணல், புரட்சிக் கமால்
முதலியவர்களின் படைப்புத்திறனை எடுத்துரைக்கிறார். எம்.ஏ. ரஹ்மான் முதலியவர்களோடு
தன் தோழமையைச் சொல்லுகிறார். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் கிழக்கு இலங்கையின்
இலக்கியத்தை நிறுவினார்கள். ஈழத்து இலக்கியம் என்றாலே யாழ்ப்பாணத்து இலக்கியம் என்ற
பொய்மையைத் தகர்த்து கிழக்கு இலங்கையின் இலக்கியச் சாதனையின் தனித்தன்மை சொல்கிறார்
எஸ்.பொ.
இந்த இடத்தில் மரபு பற்றி, மண்ணின் மாண்பு பற்றி ஆழ்ந்த ஒரு
ஆய்வைச் செய்கிறார் எஸ்.பொ. மண்வாசனை அல்லது மரபு என்பது எத்தனை பரிமாணங்களோடு
எத்தனை நெடுங்காலமாய் நம் உணர்வுகளுக்குள் தங்கி நம்மைப் புதுமைப் படுத்துகிறது;
பொலிவுற செய்கிறது என்பதைச் சொல்கிறார். 'மூர்த்தி சிறிது ஆயினும் அதன் கீர்த்தி
பெரிது, என்ற வாசகத்தை இந்த நூலின் இப்பகதி மெய்ப்பிக்கிறது.
கவிஞர்
நீலாவணன் தன் அன்பால் எஸ்.பொ. வை வென்றார் என்பதைக் குறிப்பிட்டேன். இலங்கையர்
கோளோடு நீலாவணன் மூலம் தனக்கு ஏற்பட்ட உறவை எஸ்.பொ. குறிப்பிடுகிறார். கண்ணில்
உறுத்துகிற சிறு மணல் மாதிரி இங்க நமக்குள் உறுத்தல் ஏற்படுகிறது. தன் தவற்றை
ஒப்புக் கொண்டதன் மூலம் இலங்கையர்கோன் நமக்குள் மீண்டும் நிமிர்ந்து நடையிடுகிறார்.
நீலாவணன் அவர்களின் கவிதைகள் பற்றி நிறையச் சொல்லுகிறார் எஸ்.பொ. அவர்
கவிதைகளை ஆய்வதோ, மதிப்பிடுவதோ தன் நோக்கம் அல்ல என்று குறிப்பிடுகிறார். இந்தப்
பகுதியில் புதுக்கவிதை பற்றிய சர்ச்சையில் கவிஞரைப் போலவே எஸ்.பொ.வுந்தான்
ஈடுபடுகிறார். தமிழ்க் கவிதைக்கு-இலக்கியத்துக்கு-பாரதியின் பங்களிப்பை, தனக்கே
உரியே தனித்த பார்வையில் சிறப்பாக குறிப்பிடுகிறார் எஸ்.பொ.பாரதியைப் போல
பாரதிதாசனிடம் எஸ்.பொ.வுக்கு ஈடுபாடு இல்லை. இங்கு ஒன்றை அவசியம் குறிப்பிட
வேண்டியிருக்கிறது.
ஈழத்தின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றுக்கும்,
தமிழகத்தின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு
இருப்பதை நாம் இங்கு நினைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இயற்கை, நிலம், நீர்
மக்களின் அன்பு, அறம், கலை உணர்வு, காதல், வீரம் என்று எல்லாவற்றையும் தமிழாக,
தமிழின் வழியே தனக்குள் செரித்துக் கொண்வர் பாரதிதாசன். அதாவது, மத நம்பிக்கை
உள்ளவர்களுக்கு இறைவன் எப்படியோ, அப்படி பாரதிதாசனுக்கு தமிழ். தமிழகச் சூழலில்
ஆரியத்திற் கெதிரான தமிழ் உணர்வின் தேவையை வரலாற்றின் வழியே புரிந்து கொள்ள
முடியும். ஈழத்து வரலாற்றில் ஆரியம் இல்லை. ஆகவே பாரதிதாசனை எஸ்.பொ.வால்
ஒதுக்கிவைக்க முடிகிறது. எங்களுக்கு இது சாத்தியமில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன்
பாரதிதாசனின் ஆளுகைக்கு ஆட்பட்டவராக இருந்திருக்கிறார். பாரதி தாசனைப் போலவே தமிழ்
என்றும், இயற்கை என்றும் பாடியிருக்கிறார்.
ஈழத்தின் புதுக்கவிதைக்கு
மூலவராக இருந்தார் 'மஹாகவி'. மஹாகவி அவர்களை ஈழத்தில் மார்க்சியர் பாராட்டவில்லை.
தமிழகத்தில் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. இதற்கும் வரலாற்று ரீதியாக நாம் காரணம்
தேடவேண்டும். எங்களுக்குள் கம்பரும் திருத்தக்க தேவரும்தான் பெருமிதத்தோடு காவியப்
பரிமாணத்தில் வீற்றிருக்கிறார்கள். தமிழ்க் கவிஞர்களுக்கு 'வானம் வசப்படும்'. ஆனால்
தரையில் கால் பதிவதில்லை. ஈழத்தில் அப்படியில்லை. தரையில் அவர்கள் எல்லாக்
களங்களிலும் காலூன்றி மண் வாசனை முகங்களில் தவழ உறுதியோடு நிற்கிறார்கள். மஹாகவி
அவர்களின் பேச்சோசையோடு கலந்த யாப்பு மரபின் பேரழகை இப்பொழுது வியந்துரைக்க நமக்கு
சொற்கள் இல்லை. கவிஞர் நீலாவணன் மஹாகவி அவர்களைப் போலவே யாப்பின் திறம் குறையாமல்
பேச்சோசையில் கவிதைகள் எழுதினார். பாடவும் செய்தார். யாப்பு அற்ற புதுக் கவிதையை
கடுமையாகச் சாடினார். புறநாநூற்றுச் செய்யுளுக்கு நிகர்ந்த கவிதைகளை எழுதிக்
காண்பித்தார். தமிழகத்திலும் இப்படி சில கவிஞர்கள் புதுக்கவிதை முறையோடு முரண்பட்ட
நிலையில் கவிதைகள் செய்தார்கள். நீலாவணன் அவர்களின் 'வழி' கவிதையை எஸ்.பொ. ரசிக்கிற
அளவுக்கு என்னால் ரசிக்க முடியவில்லை. 'பாவம் வாத்தியார்' கவிதையில் 'பெட்டிக்கடை
நாராயணன்' என்ற ந.பி.யின் கவிதையும் 'துயில்' கவிதையில் புதுமைப் பித்தனையும் கண்டு
நாம் ரசிக்கிறோம்.
யாப்பு முறைக் கவிதையா, புதுக்கவிதையா என்ற விவாதத்தில்
இன்று தீவிர எதிர்நிலைகளுக்குத் தேவையில்லை. வடிவம் எப்படியாயினும், அது கவிதையாக
இருக்கிறதா என்பதுதான் இன்று மேலெழுந்து வருகிற சிந்தனை. நீலாவணன் அவர்கள் தன்
'வேளாண்மை' காவியத்தை முற்றுப் பெறச் செய்யவில்லை. இது தமிழ்க் கவிதைக்கு ஒரு
பேரிழப்பு. நீலாவணன் நாம் வியக்கத் தக்க முறையில் கவிதையோடு கவிதையாய்
வாழ்ந்திருக்கிறார் என்பதை இச்சிறு நூல் மெய்ப்பிக்கிறது. நீலாவணன் வாழ்க்கை
மற்றும் கவிதை குறித்து முழு நூல் வெளிவருதல் வேண்டும். மஹாகவி அவர்கள் பற்றியும்
இப்படி நூல் வெளிவர வேண்டும்.
தன் இலக்கிய வாழ்வு பற்றிய முழுமையான நூல்
ஒன்றை வெளியிடப் போவதாக எஸ்.பொ. அறிவித்திருக்கிறார். அந்த நூலையும் பெரிதும் நாம்
எதிர்பார்க்கிறோம்.
- ஞானி
'நிகழ்'
123 காளீஸ்வரர்
நகர்,
காட்டூர், கோவை-641 009
செப்ரெம்பர்
1994
------------------------------------------------------------------------------------
I
இன்னோர்
ஆண்டு பிறந்தது. பொங்கல் திருநாளை நோக்கி ஜனவரி மாதம் நகருகின்றது. அது 1975ஆம்
ஆண்டு. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்கிற நம்பிக்கையை மனசிலே சுமந்த ஒருத்தியின்
வயிற்றிலே பிறந்தவன் நான். எனவே தையின் பூபாளம் என் செயல்களிலே என்னை அறியாமலே
ஒட்டிக் கொண்டது.
அன்று சனிக்கிழமை. அன்றைய இரவினை, புதிய ஆண்டிற்கான
இலக்கிய முயற்சிகள் பற்றிய சட்டகம் ஒன்றினை இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் உடன்சேர்ந்து
உருவாக்குவதற்காக ஒதுக்கியிருந்தேன். கடந்த மூன்ற தசாப்தங்களக்கு மேலாக ரஹ்மான் என்
இனிய நண்பனாயும், பரமார்த்த இலக்கிய சகாவாகவும் வாழ்பவர் என்பதை ஈழத்து இலக்கிய
உலகம் நன்கறியும். அவருடைய நட்பின் செழுமையும் இணைந்ததுதான் என்னுடைய வாழ்க்கை.
மனித பிரேரிப்புகளும்; ஆண்டவனின் நிராகரிப்புகளும்! அன்றிரவு எங்களுடைய
பிரேரிப்புக்குப் பிள்ளையார் சுழிகூடப் போடவில்லை. ரஹ்மானின் தாயார் சென்னையிலே
காலமாகிவிட்டார் என்கிற செய்தி கிட்டியது. அவருடைய நெஞ்சமெல்லாம் நீக்கமற அந்த
அன்னையின் நேசிப்பு வியாபித்திருந்ததை நான் உணர்வேன். அந்த இழப்பு-மரணக்
கிரியைகளிலே கூடக் கலந்து கொள்ள முடியாத சூழலிலே ஏற்பட்ட அந்த இழப்பு- அவரை எவ்வளவு
தூரம் பாதிக்கும் என்பதை உன்னி நான் தவித்தேன். என் அற்ப ஆற்றலுக்கு எற்ப அவரைத்
தேற்றுவதில், சனி இரவு கரைந்தது.
அடுத்த நாள். ஞாயிறு; காலை. சிறிது தேறிய
நிலையில், கொழும்பில் வாழும் தன் அத்தானைப் பார்க்கச் செல்கின்றார். (ரஹ்மானின் ஒரே
சகோதரியான ஷரீஃபா பீவியின் கணவர்.) அவர் திரும்பி வர மதியமாகலாம்.... செய்வதற்கு
எதுவும் இல்லை என்பது போன்ற ஒரு வெறுமை. உடலைச் சோர்வு ஆட்கொண்டது போல ஓர் உணர்வு.
அதனை மீண்டும் படுக்கையில் வளர்த்துகின்றேன். விழிகள் மூடிக் கொள்ளுகின்றன.
தனிமையில், ரஹ்மானின் தாயார் செய்னம்பு பீவியைப் பற்றிய நினைவுகள். ஏழு
ஆண்டுகளுக்கு முன்னர், அவர் நோயுற்றிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. ரஹ்மான்
துடித்துப் போனார். பார்க்க வேண்டும் என்கிற தவிப்பு. ரஹ்மானிடம் கடவுச்žட்டு
இல்லை. விண்ணப்பித்தாலும் அரசு கொடுக்க மாட்டாது. அப்படியான சட்டச் சிக்கல்கள்.
சொக்கன் என்பவர் 'கள்ளத்தோணி' மார்க்கமாக பயணத்தை ஏற்பாடு செய்வதற்கு முன் வந்தார்.
தாய்ப் பாசத்துக்கு அஞ்சலியான அந்தப் பயணத்தில் நான் துணை போனேன்... ஊர்க்காவல்
துறை, மோட்டார் படகுப் பயணம், குடாக்கரையிலுள்ள ஏதோ ஒரு கிராமத்தில் கரையிறங்குதல்,
நீண்ட நடை, அதிர்ஷ்டம் கைதர பாசிப்பட்டணம் செல்லும் யாத்தரிகர்களுடன் சங்கமம்,
தர்காவில் ஓரிரவு, விடியலுக்கு முன் பயணம், சுந்தர பாண்டியன் பட்டணத்திலிருந்து
தேவகோட்டைக்குப் பஸ் பயணம், திருவாடானை தரிசனம், திருச்சியில் வயிற்று உபவாதை,
சென்னையில் ரஹ்மான் தாயாரின் இல்லம், ஐந்து நாள்கள் தங்குகை, இராமேஸ்வரம் அடைதல்,
ஏற்பாடு செய்திருந்த மோட்டார் படகு பழுதடைந்திருத்தல் ஏமாற்றம், தங்கச்சி மடத்து
மீனவ நண்பன், பாய்மரப் படகில் கச்சதீவுப் பயணம், அந்தோணியார் கல்லூரி மாணவன்
மடத்தீன்முத்துவின் சந்திப்பு, கட்டு மரத்தில் நெடுந்தீவு நோக்கிய பயணம்,
நடுக்கடலில் ரஹ்மான் வாந்தியெடுத்து அவஸ்தை... பல்லாண்டுகள் தாண்டியும் நினைவு
'அல்ப' த்திலே சொருகி வைத்திருந்த அந்த snaps மனசை வலம் வர, நிமிடங்கள் தாண்டிய
நிதர்சனத்தில் ரஹ்மானின் விசும்பல் என்னை எழுப்புகின்றது.
அவர் கையில் ஒரு
தந்தி. அதனைத் தருகிறார். விரித்துப் பார்க்கிறேன். வாசம்: "கவிஞர் நீலாவணன்
காலமானார்!"
ஆம். 11.1.75 சனிக்கிழமை நள்ளிரவில், தமது நாற்பத்து நாலாவது
வயதில் நீலாவணன் காலமாகிய அந்த அவலச் செய்தி, அடுத்த நாள் காலையில், இவ்வாறுதான்
எனக்குக் கிடைத்தது.
II
கவிஞர் நீலாவணன் புதிராக நோக்கப்பட்ட
மனிதன். மனிதன் நீலாவணன் இறந்து போனான். மரணம் சொந்த விரோத-குரோதங்களை மறந்துவிடச்
செய்யும். நீண்ட காலமாகவே, சமகால இலக்கிய விமர்சகர்கள் அவரை உரிய முறையிலே
விமர்சிக்கவும் மதிப்பிடவும் தவறினார்கள். அரசியற் கோஷங்களுக்குத் தாஸர்களாகி, அது
சார்ந்தே இலக்கியப் போக்குகளை மட்டிட்டு, கொடி பிடிப்பவர்களுக்கும், கிண்ணி
தாங்குவோருக்கும் இலக்கியப் பவிசு வழங்குதலையும் இலக்கிய விமர்சனமாகக் காமிப்போர்
மத்தியில் அவருடைய கவிதா ஆற்றல்கள் அழிவழக்காடப்பட்டதும் உண்டு. கோஷம் போடும் ஒரு
கோஷ்டியைத் தக்க வைத்துக் கொள்ளும் கலை நீலாவணனுக்குக் கைவராத ஒன்று. இதனாலும்,
அவருடைய திறமை பற்றிய பிரஸ்தாபம் உரிய முறையில் நிகழவில்லை. புறக்கணிப்புகளும்,
அழிவழக்காடல்களும் அவருடைய மரணம் என்ற தீயிலே பொசுங்குவதாக! என்னுடைய ஒரு கதையை-
'அவா' என்று நினைக்கின்றேன்- 'மரணம் சிருஷ்டிக்கான இன்னொரு ஆரம்பமே' என முடித்ததாக
ஞாபகம். இந்த வாசகம் கவிஞர் நீலாவணனின் உண்மையான ஆற்றல்களை பிரகாசிக்க வைப்பதில்
புதிய பரிமாணம் கொள்வதாக!
அந்த முயற்சியின் நுழைவாயிலே என்னுடைய இந்த
'நீலாவணன்: எஸ்.பொ. நினைவுகள்.'
அவர் மரணத்துக்கு ஒரு மாமாங்க காலத்துக்கு
முன்னர் எனக்கும் நீலாவணனுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது.
சிற்றாண்டி முருகன் கோயில் வீதியில் அமைந்த மேடையிலே ஒரு பாரதி விழா. அதற்கு
இருவரும் பேச்சாளராய் அழைக்கப்பட்டிருந்தோம். தமிழ் உணர்ச்சியின் ஊற்று பாரதி என்ற
சுருதியிலே அவர் பேச்சு அமைந்தது. பாரதியைப் பற்றி அன்றும் இன்றும் என் தரிசனம்
வேறு. எனவே, அவருடைய கருத்துக்களை நான் முனைப்பாகச் சாடினேன். மேடையிலே சாடும்
பொழுது, சில வேளைகளில், தர்க்க நியாயங்களுக்கு அப்பால், இடுப்புக்குக் கீழே
குத்துதல் என் பலவீனங்களுள் ஒன்று என்பதை இப்பொழுது நிதானிக்க முடிகிறது. நான் அவரை
மூர்க்கமாகச் சாடிய அந்த அரங்கிலேதான் எங்களுடைய முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது.
சாடலுக்கு அப்பால், காதல்-தமிழ் ஆகீய இரண்டு சுருதிகளை நேர்த்தியாகத் தமிழ்
செய்யவல்ல ஒரு மன்னர் அவர் என்கிற ஒரு சுவைப்புப் பாந்தம் அவர் மாட்டு எனக்கு ஏலவே
ஏற்பட்டும் இருந்தது. அரசியல் மேட்டிமைகளினாலும், போட்டிகளினாலும் இதனை வாயாரப்
பாராட்ட அன்று வேளை பொருந்தவில்லை.
சிற்றாண்டிக் கூட்டம் நடந்த சில
மாதங்களின் பின்னர் சம்மாந்துறையிலே நடைபெற்ற தமிழ்விழா ஒன்றிலே நீலாவணனும் நானும்
பேச்சாளர்களாய்ச் சங்கை செய்யப்பட்டிருந்தோம். சிற்றாண்டியிலே, நான்
பேசியவற்றுக்குப் பதிலாகவும் அவருடைய பேச்சின் ஒரு பகுதி அமைந்தது. மனசாரச் சொல்ல
வேண்டு மென்றால், அவர் உணர்ச்சிப் பிழம்பாக முழக்கமிட்டார். என் கருத்துக்களை அவர்
சாடிய பண்பும் பாங்கமும் கலை நுணுக்கஞ் சார்ந்தன. அந்தக் கலை நுணுக்கம் என்னை அவர்
வயப்படுத்தியது.
கலைவிழாவின் சொற்பொழிவுகள் நிறைவுற்று, ஏனைய கலை
நிகழ்ச்சிகள் தொடருகின்றன. என்னிடம் பயின்ற பியிலும் ஏராளமான மாணவர்கள்
சம்மாந்துறையில் வசிக்கிறார்கள். சம்மாந்துறையிலிருந்து அந்த இரவு நேரத்தில்
மட்டக்களப்புக்கு பஸ் கிடைக்காது. எனவே, என் மாணவன் žனி முஹம்மது வீட்டில்
அன்றிரவைக் கழிக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், கவிஞர் நீலாவணன்
வீடு திரும்புவதற்கு அவசரங்காட்டினார். எனவே, அவரை வழியனுப்புவதற்காக வீதி ஓரம்
நின்ற மருதமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தேன். மேடையின் கருத்து மோதல்
வீதிவரை நீளுகின்றது. பேச்சிலே காரத்தின் காங்கை. ஒரு கட்டத்திலே, "மச்சான்! இவற்றை
வீதி ஓரத்தில் நின்று சில நிமிஷ நேரங்களிலே பேசித் தீர்த்துவிட முடியாது. என்
வீட்டுக்கு வா. சாப்பிட்டு விட்டு ஆறுதலாகப் பேசலாம்" என்று சடுதியாக அழைப்பு
விடுத்தார். அந்த அழைப்பிலே இருந்த கனிவும், அதே சமயம் அதில் இழையோடிய
விருந்தோம்பல் ராங்கியும் என்னை உலுப்பின.
இருவருக்கும் இடையில்,
அன்றுதான், அப்பொழுது தான், கன்னிப் பேச்சு முகிழ்ந்தது. பேச்சும் பரஸ்பர கருத்து
முரண்பாடுகள் தொற்றியது. நேரம் நடுநிசியை நோக்கி ஊர்கின்றது. அழைத்துச் செல்வதற்க
அவர் வசம் வாகன வசதியும் இல்லை. இருப்பினும் 'மச்சான்' என்று உறவு பாராட்டி
விளித்து, தமது வீட்டிலே விருந்து சுவைக்க அழைக்கின்றானே இந்தக் கவிஞன்! கவிஞனுடைய
உணர்ச்சிப் பிழம்பான ஓர் உள்ளத்திலே இருந்துதான் இத்தகைய அழைப்புப் பிறக்கும்.
அழைப்பினை ஏற்பதா மறுப்பதா என்கிற சங்கட நிலை எனக்கு! காரணப் பிரமேயங்களை
நிறுத்தித் தட்டிக் கழிக்கலாம் என்கிற கட்சியின் பக்கமாகவே என் சிரத்தையின் பாரத்தை
ஊன்றினேன். இருப்பினும், அந்த அழைப்புச் சம்பிரதாயமானதல்ல; தமது உணர்ச்சி
உள்ளத்திலிருந்து கனிந்தது என்பதை நிலைநிறுத்துவதில் கவிஞர் நீலாவணன் தீவிரங்
காட்டினார்.
அம்பாறைப் பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த carஐ கைகாட்டி
நிறுத்துகிறார். "கல்முனைக்கா?" என்று கவிஞர் கேட்கிறார். "காரைதீவுக்கு..." என்று
சாரதியிடமிருந்து பதில். "நாங்களும் வாறம்.... மச்சான் ஏறு!" பதில் சொல்வதற்குக்
கூட நேரம் இல்லை. அவருடைய அன்புக்கு முன்னால் குழந்தையாகுகின்றேன். ஒரு நட்பின்
பயணம் ஆரம்பமாகின்றது. நானும் காரிலே கல்முனையை அடைகின்றோம். 'இனி,
கல்முனையிலிருந்து பெரிய நீலாவணைக்கு எப்படிப் போவது?' என்கிற மலைப்பு எனக்கு.
கிகரெட் பக்கற் ஒன்றினை வாங்கித் தருகின்றார். இரவின் அலுப்பினைப் புதைத்தலிலே
கரைக்கும் ஒரு சாகஸத்திற்குள் என்னை ஈடுபடுத்துகிறேன்.
"இதில் நின்று
கொள்ளுங்கள். ஐந்து நிமிடங்களுள் திரும்புவேன்" என்று கூறுகிறார்; இரவிலே
மறைகின்றார். ஐந்து நிமிடங்களுக்கிடையில் ஒரு சைக்கிளை உருட்டியவாறு நிற்கின்றார்.
அந்த சைக்கிளில் என்னையும் ஏற்றிக் கொள்ளுகின்றார். இருவரும் அவருடைய பிறந்த ஊரான
நீலாவணையை அடைகின்றோம். பாதி தூக்கத்தினைப் பயின்று கொண்டிருந்த அவருடைய இல்லாள்
எழுப்பப்படுகின்றாள். தொடர்ந்து அடுக்களைப் பக்கம் ஆருவாரம் மலர்கின்றது. அந்த இரவு
வேளையிலும் விருந்துக்கான புதிய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இருவரும் பேசுகிறோம்.
சாப்பிட்டவாறு பேசுகிறோம். சாப்பிட்ட பிறகும் பேசுகிறோம். படுத்தவாறு பேசுகிறோம்.
பேசியவாறே தூங்கியும் விடுகிறோம். சொல்ல மறந்து போனேன். அன்றும் ஒரு
சனிக்கிழமைதான்.
இந்த நிகழ்ச்சியை என்றும் என் நெஞ்சம் மறந்ததில்லை.
எதையும் சடுதியாகவும், முனைப்பாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் முடிக்கும் ஒரு
தீவிரம் நீலாவணனுடைய இயல்புகளுள் ஒன்றாக நிலைத்து வந்துள்ளது என்பதை எண்பிப்பதற்கு
எங்களுடைய இந்த முதலாவது சல்லாப நிகழ்ச்சி ஒன்றே போதுமான அத்தாட்சி!
நீலாவணன் அயலிலிருந்த பாடசாலையிலே பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராய்ப்
பணிபுரிந்தார். ஆனால், தமிழ் செய்தலே அவருடைய ஊழியமாய் வாய்த்தது. இறக்கும் வரை
தமிழ் இலக்கியத்தின் பரமார்த்த சுவைஞனாயும் மாணாக்களாயுமே தம்மை நியமித்திருந்தார்.
புதியனவற்றைக் கற்பதிலே அவர் என்றும் சோம்பல் ஓம்பியதில்லை. தமது இலக்கிய மதத்தினை
அறிக்கையிடவும், அதற்காக வாதிடவும், அதற்கான முள்முடி சுமக்கவும் அவர்
தயங்கியதில்லை. சிறியவட்டத்தினரான உறவினர்களும், சக ஆசிரியர்களுமே அவரைச்
சின்னத்துரை என்று அறிவார்கள். ஏனையோர், பரந்துபட்ட தமிழ்ச் சுவைஞர்கள், அவரை
நீலாவணன் என்றே அறிந்தார்கள்; பாராட்டினார்கள்.
அவருடைய புனைபெயர் அவருடைய
பிறிதோர் இயல்புக்குக் கட்டியங் கூறுவதாக அமைந்தது. பெரிய நீலாவணை பெயரளவிலேதான்
பெரியது. விஸ்தீரணம், ஜனத்தொகை ஆகியவற்றைக் கருத்தில் எடுத்தால், அஃது ஒரு சிறிய
கிராமம். நீலாவணை என்கிற பெயரில் இரண்டு கிராமங்கள். வாவியின் துறையாக அமைந்தது
துறைநீலாவணை. அதிலிருந்து வேறுபடுத்தப்படுவதற்காக நம் கவிஞர் பிறந்த ஊர் பெரிய
நீலாவணை எனப் பயிலப்படுகின்றது. எழுவானில் வங்காள விரிகுடாவின் ஓதம். அதன் வடக்கு
எல்லை கல்லாறு என்னும் ஊர். தெற்கில் மருதமுனை என்னும் முஸ்லிம்கள் செறிந்து வாழும்
ஊர் உண்டு. தாம் பிறந்த மண்மீது அவருக்கு அழுங்குப்பிடியான பக்தி இருந்ததை நான் பல
சந்தர்ப்பங்களிலும் அறிவேன். தமது கிராமத்தவருடைய மெத்தனமான சோம்பல் வாழ்க்கையை
நினைத்து அவர் மனசாரக் கவன்றிருக்கின்றார். "பொன்னு! கல்லாற்றைப் பார். அங்கு
வாழ்பவர்களுள் ஏழைகள் கூடப் படித்து முன்னேற வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
எத்தனை ஆசிரியர்கள்? எத்தனை பட்டதாரிகள்? இந்தப் பக்கம் மருதமுனையைப் பார்! அவர்கள்
உழைப்பாளிகள். ஜனத்தொகைப் பெருக்கத்தினால் நீலாவணைக் கடற்கரை வரையிலும் பரம்பத்
துவங்கியுள்ளார்கள். ஆனால், நான் பிறந்த இந்த நீலாவணை? இருக்கும் சொத்துக்களையும்
விற்று இங்குள்ள சாராயத் தவறணையின் ஆதாயத்துக்காகக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் போக்கு நீடிக்குமானால், இந்த ஊரிலே பிறந்தவர்களுக்கு ஒரு பிடி மண்தானும்
மிஞ்சாது..." என மனம் மிக நொந்து, பல சந்தர்ப்பங்களிலே வாய் விட்டுச்
சொல்லியிருக்கிறார். தன் சொந்தப் பெயரிலும் பார்க்க, தான் பிறந்த மண்ணின் பெயர்
துலங்குதல் வேண்டும் என்பதிலே அவருக்கு இருந்த கட்டித்த பக்தியின் உந்துதலாகவே
"நீலாவணன்" என்னும் புனைபெயரை அவர் சூட்டிக்கொண்டார். பிறந்த ஊருக்குப் புகழ்
தேடித் தருதல் வேண்டும் என்பதற்காகவே அவர் வாழ்ந்தார். உண்மை; வெறும்
புகழ்ச்சியில்லை. கவிஞர் நீலாவணன் மட்டும் பிறந்திலரேல், மட்டக்களப்பு- கல்முனை
வீதியிலே சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் நீலாவணையைப் பற்றி இலக்கியவாணரும்
இலக்கிய ஆர்வலரும் ஏன் பேசப் போகிறார்கள்? எழுதப் போகிறார்கள்?
பிறந்த
மண்மீது அவர் பூண்ட பக்தி எவ்வளவு சத்தியமானதோ, அவ்வளவு சத்தியமானது அவர் தமிழ்மீது
கொண்ட காதல். தமிழின் சிறப்புக் குறித்தும், அதன் பண்டைய வளம் குறித்தும், அதந்
சமகாலத் தேய்வு பற்றியும், எதிர்காலத்தில் அதன் வளம் தொற்றிய கனவுகள் பெய்தும்,
அவர் ஏராளமாகப் பாடியிருக்கிறார். அத்தகைய கவிதைகளை வைத்து அவரை தமிழரசுக்
கட்சியின் நயமான மேடைக் கவிஞன் என ஆரம்ப காலத்தில் மட்டிட்டிருந்தேன். அவருடன் பழக
ஆரம்பித்த பிறகு, என் ஆரம்பக் கணிப்பு எவ்வளவு தவறானது என்பதைத் தெளிந்து கொண்டேன்.
சமுதாய வாழ்கையில் நீலாவணன் சமதர்ம-சமவுடமை அமைப்பு முறையினைப் பெரிதும் அவாவினார்.
அந்த நேசிப்பைப் பிரதிபலிக்கும் சமுதாயக் கண்ணோட்டமுள்ள வாழ்க்கையை பயின்றார். அதே
சமயம், தமிழ் வெறி அவருடைய இரத்தத்துடன் கலந்த ஒன்றாகவே சமைந்தது. பாரதியாரின்
தமிழ் வெறியை வாயாரப் போற்றும் நம் விமர்சகர் பலர், கவிஞர் நீலாவணனின் தமிழ் வெறியை
மட்டுமே பெரிது படுத்தி, அவருடைய கலாசத்தியத்தினை உரிய முறைப்படி கணித்துப்
பாராட்டத் தவறியமை ஓர் அவலக் கதியாகும். இந்தத் தவறு களையப்படுதல் நீலாவணனுக்குச்
செய்யும் ஒரு நன்றிக் கடனல்ல; ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் சத்தியத்திற்குச்
செய்யப்படும் தேவையுமாகும். தமிழ் பற்றிய அவருடைய கவிதைகளை அவர் வாசிக்கும் பொழுது
கேட்பது ஓர் இனிய அநுபவமாகும். அவர் தமது கவிதைகளை வாசிக்கும் பொழுது, அமரகவி பாரதி
தமது பாடல்களைப் பாடிக் காட்டுவது பற்றிய வர்த்தமானம் எழுப்பியுள்ள கற்பனைச்
சித்திரம் எப்பொழுதும் என் மனத்திலே நிழலாடும்.
III
சென்ற ஆண்டில்
(1974) ஈழத்துக் கவிதை உலகுக்கு- கிழக்கிலங்கைக்கு-கவிஞர் அண்ணல் இன் மறைவினால்
பாரிய நஷ்டம் ஏற்பட்டது. கிண்ணியாவில் சாலிஹ் என்ற இயற்பெயருடன் பிறந்த அண்ணல்,
அன்பினாலும் நட்பினாலும் எனக்கு மிகவும் நெருக்கமானவராயும் இனி யராயும் வாழ்ந்தார்.
ஈழத்துக் கவிஞர்களுள் அண்ணல் ஆஜானுபாகுவான உடலமைப்புப் பெற்றிருந்தார். žனடி
சிலம்படி-மல்யுத்தம் ஆகிய தற்காப்புக் கலைகளிலும் வித்துவம் பெற்றிருந்தார். 1964
இல் யாழ்ப்பாணத்திலே நடைபெற்ற சாகித்திய விழாவினை முற்போக்கு எழுத்தாளர்கள்,
கே.டானியல் இன் தலைமையில் முட்டையடி விழாவாக மாற்றி, ரஹ்மானையும் என்னையும் தாக்க
இரத்த வெறி கொண்டு யாழ்ப்பாண பஸ்நிலையத்திலே அலைந்த பொழுது, அண்ணல் பயின்றிருந்த
அந்த வீர விளையாட்டுகள் நமக்குப் பாதுகாப்பும் அளித்திருக்கின்றன. மூதூர் அரசியலில்
அவர் தடந்தோள் தளபதியாகவும் திகழ்ந்தார். ஈழத்து இலக்கிய உலகில், 'காதல் கவிதைக்
கோர் அண்ணல்' என்ற கியாதியும் பெற்றிருந்தார். அன்புக்கு இனியர். குழந்தைச்
சுபாவத்துடன் பழகுவார். அவருக்கும் எனக்கும் இலக்கியக் கோட்பாடுகளில் ஒத்த போக்கும்
இருந்தது. என் இலக்கிய முயற்சிகளிலே அவருடைய அன்பு பாரிய ஆசியாக வந்து பொருந்தியது.
அவருடைய மரணம் மகா சடுதியாக திகழ்ந்த கொடுமை.
அவருடைய இரங்கற் கூட்டத்திலே
கலந்து கொள்வதற்காக, அப்பொழுது மூதூரின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத்
திகழ்ந்த ஏ.எல்.ஏ.மஜ“த் தம்முடன் என்னையும் ரஹ்மானையும் கிண்ணியாவுக்கு அழைத்துச்
சென்றார். மஜ“த் அண்ணலுக்கு மருமகன் முறையினர். இருப்பினும், மஜ“த் அண்ணலுக்கு
மருமகன் முறையினர். இருப்பினும், மஜ“த் அரசியலின் பெயராலே செய்த அதாப்பியங்களை
அண்ணல் எதிர்த்தார். இந்த எதிர்ப்பின் விளைவாக அண்ணல் பல ஊர்களுக்கும்
மாற்றப்பட்டார். இதற்குக் கழுவாயாகவே அண்ணலின் இரங்கற் கூட்டத்தினை மஜ“த்
தரிசித்தாரா? ஆனால், ஒரு பந்து மித்திரனுடைய மரணத்திலே கலந்து கொள்ளும் துடிப்பு
எனக்கு இருந்தது.
எனக்கும் முன்னரே, கவிஞர் நீலாவணன் தமது இலக்கிய சகாவான
மருதூர்க் கொத்தன் உடன் அங்கு சென்று கவிஞர் அண்ணலின் மறைவு ஏற்படுத்திய
துக்கத்தைப் பங்கிட்டுச் சென்றதாகக் கிண்ணியாவில் எனக்குச் செய்தி கிடைத்தது. இந்த
நிகழ்வு கவிஞர் நீலாவணன் ஓர் உணர்ச்சிப் பிழம்பு என்பதை மீண்டும் எண்பித்தது. இந்த
இரண்டு கவிஞர்களுக்குமிடையில், சில காலமாகவே, கவிதைக் கலை சம்பந்தமான கருத்து
வேறுபாடுகள் நிலவி வந்ததை நான் அறிவேன். அந்த வேறுபாடுகளை ஒரு கணத்திலே மறந்து,
ஆற்றலைப் போற்ற விரையும் ஒரு பண்பு நீலாவணனின் செம்மனத்திலேதான் விளையும்.
கவிஞர்களுக்குச் சில முன்னுணர்வுகள் ஏற்படும் என்று சொல்வார்கள். இருவேறு
மரபுகளினாலும், முறைகளினாலும் கிழக்கிலங்கையின் கவிதா ஆற்றலுக்கு ஒரு மகத்துவம்
சம்பாதித்துத் தந்த இவ்விரு கவிஞர்களும் முன்னுணர்வு காரணமாக, மீண்டும் பிணைப்பு
ஏற்படுத்திக் கொண்டார்கள் என்கிற உண்மையின் தரிசனம் எனக்குப் பிறகுதான்
சித்தித்தது.
"விரைவில்....ஒரு நாளில்
நாம் அறியா வண்ண மந்த
நாளும்
இளையருளும்
சேமம்..."
நீலாவணன் இவ்வாறு அண்ணலுக்கு எழுதியதும் ஓர்
உள்ளுணர்வின் உந்துதலினாலேதானோ? அவர்கள் அறியா வண்ணம் அந்த நாளை இறையருளும்
ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் இருவரையும் நம்மிடமிருந்து இறைவன் பிரித்துக்
கொண்டானா? சமகாலக் கவிஞர் இருவருக்கிடையில், இத்தகைய ஓர் உணர்ச்சி மயமான
குழந்தைத்தனமும் புரையோடிய உணர்ச்சிமயமான பிணைப்பும் லிவியிருக்கலாம் என்பதை அண்ணல்
விட்டுச் சென்ற கடிதங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்காவிட்டால்
நம்பியும் இருக்கமாட்டேன்.
'இருவருக்குமிடையில் நிலவிய அன்பிலே சிறுகளங்கம்
ஏற்படுவதற்கு நானே காரணமாய் இருந்தால், மன்னிக்க உன் நெஞ்சில் இடமில்லையா?' எனக்
கவிஞர் நீலாவணன் ஏங்குகிறார். அந்த ஏக்கத்துக்கு அண்ணல் தரும் மருந்து விந்தையானது.
சட்டென்று, அண்ணலின் பார்வையின் நீலாவணன் குழந்தையாக மாறி விடுகிறான். அவன்
பிள்ளைக் கனியமுதாக மாறியதும், இவன் பணி சுலபமானது. அந்தக் கனியமுதின் கன்னத்தை
'பிடுங்கி' அள்ளிச் சுவைக்கின்றான் அண்ணல்! இதுகாவிய மயமான அன்பு. துல்லிய
உணர்ச்சிகள் மண்டிய இரண்டு கவிஞர்களுக்கிடயிலேதான் இத்தகைய காவிய மயமான அன்பு
முகிழ்ந்திடுதல் சாத்தியம். கவிஞர்களுடைய படைப்புகளைப் பற்றிக் கொண்டு, சுய
சமத்காரங்களை நிலைநாட்ட விழையும் வித்துவ விமர்சகர்களினாலே, அந்த உணர்ச்சிப்
பெருக்கை அநுபவிக்கவும் முடியாது; பாராட்டவும் முடியாது.
IV
தற்காலத் தமிழ்க் கவிதையின் பூபாளம் மகாகவி சுப்பிரமணிய
பாரதியாரே. அவனுடைய கவிதா வீச்சும் வீறும் புதியதொரு யுகத்தை எல்லைப்படுத்தி
வகுத்தது. மிகக் குறுகிய காலத்திற்குள் அளப்பரியன சாதித்தான் பாரதி.
அவன்
தமிழ்க் கவிதைக்குப் புதிய பொலிவினை ஏற்றியதுடன், புதிய பயனும் கற்பித்தான். கவிதை
நடையை இலகு படுத்தியதுடன் நிற்கவில்லை; பாமரர்களுடைய பழகு தமிழை காவிய நயம்
அனுபவதித்துக் கையாண்டான். அவனுடைய பார்வையும் அக்கறையும் தமிழுக்கும்
தமிழோசைக்கும் அப்பாலுக்கு அப்பாலாக வியாபித்தது. அவனுக்குப் பின்னர் தமிழ்க் கவிதை
செய்யப் புறப்பட்டவர்கள், அவனுடைய கவிதா வீச்சின் தாக்கத்திற்கு உட்படுதல்
நியதியாய் அமைந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாஸன் கூட, தமது புனைபெயர்ப் புனைவினால்,
இந்த உண்மையை ஏற்றுள்ளார். பாரதியாரின் தேசிய விடுதலை எழுச்சி, மெஞ்ஞான விசாரனை,
உலகளாவிய சமுதாயப் பார்வை, சுத்த சுயம்புவான மானுஷ“கத்தின் தேடல் ஆகியன அவருடைய
உள்ளத்திலே பொங்கிய தமிழ்க் காதலைக் கரைக்குள் அணையிட்டும் வைத்தன. புதுத் தமிழ்ச்
சேவையே இன்தமிழ்ச் சேவிப்பாகவும் அமைந்தது. 'சிறுகதை' இலக்கியம் பற்றிய பிரக்ஞையும்
பாரதியாருக்கு இருந்தது. அதற்கான இலக்கிய வடிவத்தை மேலை நாட்டிலிருந்து இறக்குமதி
செய்யத் தயங்கினான். வழக்கில் இருந்த நாட்டார் கதை மரபிலிருந்து அதற்கு ஓர் உருவம்
பெற்றுத் தருவதில் சிரத்தை ஊன்றினான். இதில் அவன் வ.வே.சு.ஐயர் உடன் மாறுபாடு
கொண்டு தமிழ் ஓர்மத்தை ஊன்றினான். கவிதை நயம் பிழிந்த வசனங்களை எழுதினான். அதனை வசன
கவிதை என மருண்டோரும் உளர். அவன் தன்னுடைய வாழ்கையின் இறுதி இரண்டு ஆண்டுகளைக்
கவிதைத் தொழிலிலிருந்து ஒதுங்கியும் வாழ்ந்தான். அப்பொழுது வியாஸங்களே எழுதினான்.
குறுகிய காலத்திற்குள் முழுமம் எய்திய கவியரசன் அவன்!
பாரதிதாஸனின் கவிதை
ஊழியம் வேறு வகையில் அமைந்தது. புறநானூறு காலத்துத் தமிழ் வீரத்துக்கு வார்த்தை
மலர்கள் சொரிந்து, ஆரிய மாயையின் விமுக்தியாக 'திராவிட மாயை'யை உருவாக்கிக்
கொண்டிருந்த திராவிடக்கழகத்தின் ஆஸ்தான கவிஞன் என்ற பீடத்தில் பாரதிதாஸன்
அமர்த்தப்பட்டான். திராவிட எழுச்சியும், தமிழ் உணர்ச்சியும் ஒன்றே என்கிற
மாரீசத்தனம் திராவிட மாயையின் ஓரம்ஸம். ஓசையிலே தமிழோசைக்கு ஒரு மகத்துவம்
கற்பிக்கும் போக்கும் உருவாயிற்று. இந்தப் போக்குகளுக்குத் தமிழ்க் கவிதை உருவம்
கொடுக்கும் வாத்திமைப் பணியைப் பாரதிதாஸன் ஏற்றுக் கொண்டார். பாரதியாருடைய காதல்
உணர்ச்சிகள் கண்ணன் மீதும் (கண்ணம்மாமீதும்) கொண்ட காதற் பிரவாகங்களாகக் கோலங்
காட்டியதினால், அவன் நம் சுவைப்புக்குத் தந்த மானிடக் காதல் உணர்ச்சிகளிலேகூட, ஒரு
தெய்வீகப் புனிதமும் குழைந்து காணப்பட்டது. பாரதிதாஸன் எழுப்பிய காதல் உணர்ச்சி
நாத்தீகம் என்னும் சல்லடை வழியாகக் கசிந்தது. இதனால், நிதர்சன உலகின் இன்ப
லலிதங்களை ஒத்தது போன்ற சாயலைப் பெற்றது. இன்னும் ஒன்று. திராவிடக் கழகத்
தொடர்புகள் பாரதிதாஸனுடைய கவிதா வேகத்தினைக் கட்டுப்படுத்தியது. இலங்கையின்
தற்காலப் படைப்பு வீறுக்குத் தமிழ் நாட்டிலே அங்கீகாரம் பெற்றுத் தருவதில் முந்தி
நின்ற சாலை இளந்திரையன் இந்தச் செய்தியைத் தமது 'சொக்கன் கதை' என்னும் சுயசரிதையில்
வருமாறு அக்கறையுடன் குறித்துள்ளார்:
"குறிஞ்சித் திட்டு என்னும் கவிதைக்
கதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, "எதை எதையோ இதற்குள்ளே கொட்டிக் குவித்து,
காவியத்தின் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் சிதைத்து விட்டீர்கள்" என்று சொக்கன்
சொன்னபோது, கவிஞர் கொஞ்சம் கூட வாட்டம் காட்டவில்லை. மாறாக, "ஆமாம், ஆமாம். நீங்கள்
சொல்றது சரிதான். என்னைச் சுற்றி நடக்கிற அயோக்கியத்தனங்களைப் பார்த்தேன். என்
நெஞ்சு பொறுக்கல்ல. எல்லாத்தையும் இதில கொட்டித் தீர்த்துட்டேன்" என்றார் ஒருவகையான
உணர்ச்சிப் பெருக்குடன். அதேபோல், "உங்கள் தொடக்க காலப் படைப்புகளில் உள்ள வேகம்
பிந்தியநாள் படைப்புகளில் குறைந்திருப்பது போலத் தோன்றுகிறதே" என்று சொக்கன்
கேட்டபோது, "உண்மைதான். முந்திய படைப்புகள் எல்லாம் நமக்குப் பழக்கப்பட்டுள்ள
(சமஸ்கிருதச் சொற்கள் கலந்த) நடையில் அமைந்தவை. இயல்பாக இருக்கும். நான்
தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தி வருவதால், 'நீ ஏன் கலப்பு தமிழிலே எழுதறே'ன்னு
கேக்கிறான். சமஸ்கிருதக் கலப்புச் சொற்களை நீக்கி எழுதும்போது, அந்த வேகம் கொஞ்சம்
தடைப்படத்தான் செய்யுது..." என்று பொறுமையாக விளக்கம் சொன்னார் கவிஞர்.
இப்பண்புகளினால், பாரதி இட்டதடத்திலிருந்து, பாரதிதாஸன் வேறுபடுவதை நாம்
அவதானிக்கலாம்.
தமிழையும் காதலையும் தமது கவிதைக்கான பொருள்களாகத் தமது
துவக்க காலத்தில் வரித்துக் கொண்ட நீலாவணன், பாரதியாருக்குப் பதிலாக பாரதிதாஸனுக்கே
தம்மைத் தாஸனாக நியமித்துக் கொண்டாரோ என எண்ணவுந் தோன்றுகின்றது. அவர் கவிதை செய்த
கூடத்திலே பாரதிதாஸனுடைய கம்பீரமான படம் ஒன்று அலங்கரிப்பதை நான்
பார்த்திருக்கிறேன். கவிஞர் நீலாவணனுக்கு பாரதிதாஸனின் அநேகமான பாடல்கள்
மனப்பாடமாகவே தெரியும். அவற்றை இனிமையுடன் பாடி, அவற்றின் நயங்களைப் பாராட்டுவதில்
அவர் என்றும் சலிப்படைந்ததுமில்லை. அவருடைய நாவிலிருந்து பாரதிதாஸன் கவிதைகள்
பிறக்கும் பொழுது அவற்றின் ஓசைநயம் பெற்றன போலவும். பாரதிதாஸன் வாலாயப்படுத்திய
ஓசைச் சிறப்புகளைத் தமது கவிதைகளிலே பிழிந்து வைப்பதில் கவிஞர் நீலாவணன்
பெருவெற்றியீட்டினார். தமிழ் பற்றியும் காதல் தொற்றியும் அவர் ஆக்கியுள்ள தேனார்
கவிதைகளை அவர் பாடக் கேட்டுச் சுவைக்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய
அத்தகைய கவிதைகள் சிலவற்றை உங்கள் நயப்புக்குத்தர எனக்குக் கொள்ளை ஆசைதான். நான்
பேணிய பத்திரிகை நறுக்குகளுக்குள் அவற்றைத் தேடித் தோற்றுப் போனேன். அவை நூலுருவில்
உங்களையும், நாளைய இலக்கியச் சுவைஞர்களையும் சென்றடைதல் வேண்டுமென்பது என்
பிரார்த்தனை.
கவிஞர் நீலாவணன் ஒரு புதுமைக்கவிஞர். அவர் போலப்
பலரைத்தோற்றுவிக்க ஆதரவாயும், ஆசியாயும், உபகாரமாயும், உந்து விசையாயும் அமைந்த
தலைமைக் கவிஞனும்கூட! புதுமை என்ற மோகத்திலே, மரபின் உயிர்ப்பைக்கோட்டைவிட்டு,
புதுக் கவிதைச் சொல்லடுக்க வந்த 'முன்னோடிகள்' பாதையிலிருந்து நீலாவணன் விலகி
நின்றார். பாரதிதாஸனுக்குப் பின்னர், பாரதி வகுத்த இலகுபடுத்திய செய்யுள் நடை,
இரண்டு பாலைகள் வழியாக செல்ல முயன்று, அதன் சரஸை இழக்க நேர்ந்தது போலவும்
தோன்றுகின்றது. ஒரு சாரார் கண்ணதாஸனின் சினிமா வெற்றியை ஆதர்ஷமாகக் கொண்டு,
சினிமாக்காரரின் தேவைகளுக்குச் சிற்றேவல் செய்யச் சென்று, மெல்லிசைத் தேவைகளுக்கு
இணக்கங்கண்டு, கவிதா ஊற்றினைப் பறிகொடுத்தனர். புதிய சமூகப் பிரக்ஞையுடனும், வர்க்க
போதத்துடனும் கவிதைத் தொழிலில் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ஆற்றலைக்கூடத் தமிழ்ச் சினிமா உறிஞ்சிவிட்டதாகவே
எனக்குத் தோன்றுகின்றது. கலாசத்தியத்தினையும், நேர்த்தியான புதுப்புனைவு
எழுச்சியையும் விதையடித்துக் கொண்டிருக்கும் பகாசுரனாகவே இன்றளவும் தமிழ்சினிமாவை
என்னாலே தரிசிக்க முடிகிறது. பிதொரு சாரார். ந.பிச்சைமூர்த்தியின் வழிச் சுவட்டைப்
பின்பற்றி, வசன கவிதை என்கிற யக்ஞத்திலே குதித்தனர். அவர்களுடைய தர்மாவேசமும்
வித்துவத்திறனும் மரபினைத் துண்டித்த பாலையிலே பாழாகின்றது என்கிற ஆதங்கம்
அவருக்குநிரம்பவே இருந்தது. புதுக்கவிதை என்ற பெயராலே, கவிதையின் என்றுமுள ஒரு
கன்னிமை மசுவாதப்படுத்தப்படுதல் கண்டு நீலாவணன் மனங் குமுறினார். அதே சமயம்,
சிருஷ்டி உணர்வும் உந்துதலுமின்றி, வெறும் யாப்பினை அறிந்து, சொல்லடுக்கும் பண்டித
வித்துவத்தின் பக்கலிலும் நீலாவணன் தமது தலையைச் சாய்க்கவில்லை.
"பண்டை
வழிகண்டு பொருள்
கொண்ட கரு வொன்றினிலே
நின்றெழுதல் வேண்டும்
உயர்
பாட்டு-வெறும்
சண்டை வழிசென்று 'தமிழ்த்
தொண்டு' செயத்
தேவையிலை
நன்றுமகி ழாது செவிகேட்டு"
இவ்வாறு நீலாவணன் தமது கவிதா
மதத்தினை மிகவும் தெளிவாகப் பிரசித்தஞ் செய்தார்.
"இவ்வாறு நீலாவணன் தமது
கவிதா மதத்தினை மிகவும் தெளிவாகப் பிரசித்தஞ் செய்தார்.
"இலக்கணத்தைக்
கையாள ஏலார் வசனம்
புதுக்கவிதை யாமோ புகழ்"
எனப் புதுக் 'குறள்' இயற்றி,
கவிதை உலகிலே செலாவணிக்குக் கொண்டு வரப்பட்ட கவிதை என்கிற 'லேபள்' ஒட்டப்பட்ட சோரப்
படைப்புகளைச் சாடிய போராளியாகவும் அவர் திகழ்ந்தார்.
கவிதைக் கலையிலே,
அறவழிப் புலவனாகத் தம்மைத் தாமே தமிழ்த் தாய்க்கு அறிமுகப்படுத்தும் நமது கவிஞரின்
கவிதை மேலும் சில சங்கதிகளை நயமாகந் தொட்டுக் காட்டும்.
"சாவதா நீஇப்
பொல்லாச்
சகுனிகள் சூதாட்டத்தால்
நோவதா இலக்கியங்கள்
நொய்வதா மரபும்
மாண்பும்
காவல்செய் துன்னை யென்றும்
கன்னியாய் வாழச் செய்யும்
ஆவலால்
வந்தேன்! என்பேர்
ஆறவழிப் புலவன் அம்மா"
கவிதைத் தொழிலும் கலையிலும்
தமக்கு ஓர் இலக்கும் சத்தியமும் இருப்பதை அவர் இவ்வாறு அறிக்கை செய்தார். ஈழத்து
இலக்கிய உலகத்திலே விமர்சனம் என்னும் பெயரால், சத்தான கவிதைகளும், சத்தியக்
கலைஞர்களுடைய ஆற்றல்களும் மறைக்கப்பட்டு, போலிப் படைப்புகளுடைய புகழ் பேசப்பட்ட
காலத்திலேதான் நீலாவணன் இந்தக் கவிதையை இயற்றினார். போலிகளைப் படைப்பவர்களையும்,
அவற்றைப் பாராட்டும் விமர்சகர்களையுமே அவர் சகுனிகள் எனச் சாடினார் தமிழ் என்றுமுள
உயிர்ப்பு அதனால், தமிழ் என்றென்றும் கன்னி. அவளைச் சோராம் போக்காது, அவளை
என்றென்றும் கன்னியாகப் பேணுதலே முறைமையும் தமிழும் என்பதிலே நமது கவிஞர் சிரத்தை
ஊன்றினார். அவளுடைய கன்னிமையைக் காவல் செய்ய மரபின் மாண்பு துணை நிற்றல் வேண்டும்
என்கிற கட்சியிலே நீலாவணன் உடன்பாடு கொண்டிருந்தார். புதுமையின் மலர்ச்சியிலே இந்த
மரபு பேணப்படுதல் வேண்டும் என்பதையும் அவர் ஏற்றிருந்தார்.
இந்தக்கட்டத்தில் ஓர் உண்மையைச் சொல்லுதல் வேண்டும். எனக்கும் நீலாவணனுக்கு
மிடையில் நிலவிய உறவு தடைப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்கு ஜ“வந்தராய் இருந்த
பின்னரே, அவர் காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில், நீலாவணன் புதுக்கவிதைகள்
பற்றித் தமது அபிப்பிராயத்தினை மாற்றியிருந்தாரோ நான் அறியேன்.
இன்றைய
வளர்ச்சிக் கட்டத்திலே புதுக்கவிதைகளே பெரும்பாலும் 'கவிதைகள்' எனப் பேசப்பட்டு,
விஸ்தாரமான விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. யாப்பும் இலக்கணமும் பயிலும்
கவிதைகள் 'மரபுக் கவிதைகள்' என்கிற ஒரு வகுப்புக்குள் தள்ளப்படுகின்றன. புதிய
படிமங்களையும் புதிய சங்கதிகளையும் சொல்லுவதற்குப் புதிய மொழியும் சொற்களும்
தேவைப்படுகின்றன என இக்காலக் கவிஞர்கள் வாதாடுகிறார்கள். இத்தகைய கவிதைப்
படைப்புகளினாலே தமிழுக்குப் புதிய வீரியம் சேர்க்கும் கவிஞர்கள் பெருகியுள்ளார்கள்.
இந்தப்போக்குகளினால், மரபு பேணிக் கவிதை ஊழியம் புரிய வருபவர்கள் 'பத்தாம் பசலிகள்'
என நோக்கப்படுவார்களோ என்கிற அச்சமும் எனக்கு உண்டு. எண்ணிக்கை வித்தியாசங்களினாலே
மாறிவிட்ட சமன்பாடு என இதனைக் கொள்வதற்கும் இல்லை. இன்றைய அச்சு வசதிகளைத் தினைக்
கவிஞர்கள் கைப்பற்றி, கவிதைக் கலையைப் புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும்
சாங்கங்களைக் காண்கின்றேன். கவிதைப் படைப்பிலே புதிய ஆழமும், புதிய பொலிவும்
இவர்களாற் சேர்க்கப்படுகின்றன. இத்தகைய செழிப்பினைச் சேர்க்கும் கவிதைப்
படைப்பாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. உண்மை. ஆனால், யாப்பினையும்மரபினையும்
நெகிழ்த்திய இந்தக் கவிதா வேகத்தின் வீறினையும் பாங்கினையும் உரிய முறையிலே
தரிசிக்கத் தவறும் இளைஞர்கள், சொல்லடுக்கும் ஒரு பொழுதுபோக்காக, வசனத்தைப் புதிய
கோலத்திலே அடுக்கும் வித்தையாக இன்று கவிதையை அணுகுதல், இலக்கியத்தின் பரமார்த்த
உபாசகன் என்கிற என்கிற என் தளத்தில், சோர்வினையும் வியாகூலத்தினையும் அளிக்கின்றன
என்பதும் உண்மையே!
இலக்கிய ஊழியத்திலே, படைப்பின் வடிவமும் பாங்கமும்
குறித்து, ஒரு கலைஞன் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொள்ளுதல் சாவான பாவமல்ல. மாறும்
உலகத்திலே, மாற்றங்களின் உள்ளர்த்தங்களை விளங்கிக் கொள்ளும் ஒருவன், தன்னையும்
மாற்றங்களுக்குள் உட்படுத்திக் கொள்ளுதல் சேமமான நியதியாகவும் அமையும். தமிழரசு
மேடைகளிலே, பாரதிதாஸனின் குரலிலே தமிழுணர்ச்சி கக்கிய நீலாவணன், என்னுடைய உறவாலும்,
žக்கிரமே இலக்கியத்தின் சமுதாயப் பார்வையிலும், இலக்கியத்தின் யதார்த்த
அணுகுமுறையிலும் நம்பிக்கை உடையவராக மாறினார். இந்த மாற்றங்களை அறிக்கையிட அவர்
கூச்சப்பட்டதும் இல்லை. தம்முடைய இந்த மாற்றத்தினை அவர் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே
பிரசித்தஞ் செய்திருந்தார் என்பதை நிதானிக்க முடிகின்றது.
இதனை எண்பிப்பது
போல, 1961ஆம் ஆண்ட டிசம்பர் மாதத்தில் பிரசுரமான என் கட்டுரை ஒன்றிலே, நீலாவணனன்
கூற்றினை நான் மேற்கோள் காட்டி இருந்தது என் நினைவுக்கு வருகின்றது. அந்த மேற்கோள்
இதுதான்:
"யதார்த்த இலக்கியத்தின் தாற்பரியங்களையும் உண்மைகளையும்
அறியாதவர்கள், ஓடுகிற தடங்கள் எல்லாம் அலைந்து, களைத்து, நமது கூடாரத்துக்கு
வரத்தான் செய்வார்கள்."
இந்தக் கூற்று நீலாவணனின் நம்பிக்கையையும்,
இலக்கியம் பற்றிய சிந்தனைத் தெளிவையும் பறை சாற்றுவதாக அமையும். கவிதைத் துறையிலே
யதார்த்த இலக்கியப் பார்வையைக் கொள்கையாகப் பிரகடனப்படுத்திப் பயின்ற நீலாவணனின்
திறமைகளை மட்டுமல்ல, அவருடைய இலக்கியச் சத்தியத்தினையும் முற்போக்கு இலக்கியக்
கூட்டினர் அங்கீகரிக்கத் தவறியமை பரிதாபகரமானது. முற்போக்கு இலக்கியக் கோஷ்டியை
அக்காலத்தில் வழிநடத்திய கைலாசபதி-சிவத்தம்பி ஆகிய விமர்சகர்கள், திறமையையும்
ஆற்றலையும், படைப்பின் தரத்தையும் சிரத்தையிலே எடுத்து இலக்கிய விமர்சனஞ் செய்வதைப்
புத்தி பூர்வமாகத் தவிர்த்தே வந்தனர். படைப்பாளி ஒருவன் கம்யூனிஸ்ட் கட்சி
அங்கத்தவனாய், அன்றேல் பரமார்த்த அநுதாபியாய் இருந்தால் மட்டுமே, அவனுடைய
படைப்புகள் சிலாகிக்கப்படலாம் என்பதை அவர்கள் ஒருவித சட்ட நியதியாகவே
கடைப்பிடித்தார்கள். இந்த அம்ஸம் நீலாவணனுக்குப் பொருந்தி வராததினால், அவருடைய
அருமையான படைப்புகள் நீண்டகாலம் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்தமை, ஈழத்தின்
புதிய கவிதா ஆற்றலுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுள் ஒன்று என்பதை இங்கு
பிரசித்தப்படுத்ததல் நிச்சயம் தகும். அத்துடன், சிவத்தம்பி உயிர் வாழும்
காலத்திலேயே, இருவரும் (கைலாசபதியும் சிவத்தம்பியும்) இலக்கிய விமர்சனம் என்ற
பெயரினால் செய்த ஆதாப்பியங்கள், இப்பொழுது ஈழத்திலே பரவலாக மறுவிசாரணைக்கு
உட்படுத்தப்படுதல் நற்சகுனமாகும். அவ்விருவரும் மேற்கொண்ட இலக்கிய விமர்சனம்
காரணமாக மார்க்ஸ’ஸவாதிகள் மத்தியில் ஓர்மமான படைப்பாளிகள் தோன்றவில்லை என்று
பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளுபவர்களுடைய தொகையும் பெருகி வருகின்றது. அச்சா. சத்தியம்
வாழ்க!
ஒரு காலத்தில், மாதத்தில் இரு தடவைகளாவது சந்தித்து இலக்கியச்
சங்கதிகளை அளவளாவுதலை கவிஞரும் நானும் வழக்கமாக்கியிருந்தோம். அத்தகைய சந்திப்புகள்
பரஸ்பர ஞானப் பகிர்வுகளாகவும் அமைந்தன. ஒரு சமயம் Fig Fruit என்கிற ஆங்கிலக் கவிதை
ஒன்றினை அவருடைய ரஸனைக்காக வாசித்துக் காட்டினேன். அதன் பொருட் சிறப்பையும், உவமை
நயத்தையும் நீலாவணன் மனசாரப் பாராட்டினார்.
ஒரு நாள் சாயங்காலம். பயண
கோலத்திலே கவிஞர் நீலாவணன் என் வீட்டுக்கு வந்தார்.
"துலைக்கோ?"
"இல்லை, பொன்னு! வானொலியினர் நடத்தவிருக்கும் தீபாவளிக்
கவியரங்கிலே என்னையும் பங்குபற்றுமாறு அழைத்திருக்கிறார்கள். கொழும்பு செல்ல
வேண்டும்."
"இவ்வளவு நேரத்துடன்?"
"அதற்கான கவிதை ஒன்றைக்
கிறுக்கியிருக்கிறேன். அதனை ஒரு தடவை உங்களுடன் சேர்ந்து அநுபவிக்கும் ஆசை."
கவிஞர் நீலாவணன் அந்தத் தீபாவளிக் கவியரங்கப் பாடலை எனக்குப்
பாடிக்காட்டினார். ஆலம் பழத்தினை அவர் மிக நேர்த்தியான உருவகமாகக்
கையாண்டிருந்தார்.
பல்வேறு நாடுகளில் பற்பல சந்தர்ப்பங்களிலே
நிகழ்த்தப்பட்ட கவியரங்கங்களைப் பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். கவிஞர்
நீலாவணனின் இந்தக் கவிதை முழுவதுமானது. அவ்வாண்டின் வானொலித் தீபாவளிக் கவியரங்கு
நீலாவணனின் இந்தக் கவிதையினால் திமிர்த்துத் தலைநிமிர்ந்தது.
அரசாங்கக்
கவிதைகளுக்குக் கருத்தினை மேவிய உணர்ச்சியும், அர்த்தத்தை மேவிய ஓசையும்
சிறப்புக்கு வழிவகுக்கும் என்பதும் என் சுவை அநுபவம். இவற்றை இழைப்பதற்கு நீலாவணன்
தவறுவதில்லை. அரங்கக் கவிதைகளைச் சிரத்தை யூன்றி இயற்றி, பெரு வெற்றியீட்டிய
இன்னொரு ஈழத்துக் கவிஞர் வி. கந்தவனம் ஆவர்.
ஈழத்தின் அநேக
கவியரங்குகளுக்கு கவிஞர் நீலாவணன் மிக விருப்புடன் அழைக்கப்பட்டார். பல அரங்குகளை
அவருடைய அரங்கப்பாடல்கள் அணி செய்து, மனமூட்டின. இவை இன்னமும் அச்சுவாகனம் ஏறிச்
சுவைஞர்களைச் சென்றடையவில்லை. அவ்வாறே பத்திரிகைகளிலே முகங்காட்டாத அநேக கவிதைகளை
அவர் இயற்றி இருத்தலும் சாத்தியம். இந்த ஆக்கங்கள் எல்லாம் எங்கே துயிர்
பயில்கின்றனவோ நான் அறியேன். கவிஞர் நீலாவணனின் இனிய இல்லாளாகிய திருமதி அழகேஸ்வரி
சின்னத்துரை அவற்றின் துயிலிடத்தை அறிந்திருத்தல் சாத்தியம்.
நீலாவணனின்
மனைவி அழகேஸ்வரி பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். பண்பாளர். இலக்கியச் சுவைப்பிலே
பழுத்தவர்; ஆனாலும், குடத்து விளக்கு. உணர்ச்சிப் பிழம்பான நீலாவணன், உணர்ச்சி
வசப்படும் பொழுது காரண காரியப் பரிமாணங்களை மறந்து, சிக்கலிலும் அவதிப்படுபவர்.
அவரை மீண்டும் நிலையுணரச் செய்து, கவிதைத் தொழிலிலே அவருடைய ஆக்க மூச்சாகவும் அவர்
திகழ்ந்தார் என்பதையும் நான் அறிவேன். கல்முனை வயலிலே புதிய பல எழுத்தாளர்கள்
தோன்றுவதற்கு அவருடைய தாய்மை உணர்வு உதவியிருக்கின்றது என்பதற்கு நான் ஒரு சாட்சி.
இதனை எண்பிக்க ஓர் எடுத்துக் காட்டினை, அதுவும் கவிஞர் எம்.ஏ.நுஃமானின்
முன்மொழியப்பட்ட ஓர் எடுத்துக் காட்டினை, இங்கு தருதல்
பொருந்தும்.
"உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண்
விடுக்காத
பூனைக்குட்டி போல்
உலகம் அறியா
ஒரு பாலகனாய்
உன்னிடம்
வந்தேன்"
நுஃமான் முதன் முதலிலே கவிஞர் நீலாவணன் வீட்டிலேதான் எனக்கு
அறிமுகமானார். "உனது இசையில், என் கவிதையின் ஆன்மா உயிர் பெற்றெழுந்தது" என்று
நுஃமான் ஒரு சத்தியத்தினை அறிக்கையிடும் இடம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இன்று
நுஃமான் தமது ஆற்றலுக்கு அங்கீகாரம் பெற்ற ஒருவராய் இலக்கிய உலகில் நிமிர்ந்து
நிற்கின்றார். பெருமையாகவும் இருக்கிறது. முதலில் நுஃமானைச் சந்தித்த பொழுது அவரை
ஒரு தவசிப்பிள்ளையாகவே நினைத்துக் கொண்டேன். அத்தகைய பவ்வியம். இப்பொழுது, அவர்
தமது அன்றைய நிலையை வருணித்த விதம், கவிதா வளத்தினை மீறிய சத்தியாக உயர்ந்து
நிற்கின்றது.
நுஃமான் அந்தக் காலத்தில் சிறுசிறு கவிதைகள் எழுதுவதிலேயே
முனைப்புக் காட்டினார். அப்பொழுது நீலாவணனின் அக்கறைகள் பல பணிகளிலே
சிதறிக்கிடந்தன. இருப்பினும், நுஃமானின் பல பணிகளிலே சிதறிக் கிடந்தன. இருப்பினும்,
நுஃமானின் கவிதா ஆற்றல் மக்கள் மத்தியிலே திருமதி நீலாவணன் அக்கறை கொண்டார். அவர்
காட்டிய ஆர்வங் காரணமாகவும், நண்பா ரஹ்மானின் முயற்சியினாலும் நுஃமானின்
கன்னிப்படைப்பு அச்சுவாகனம் ஏறிற்று. இது நிகழ்ந்திருக்காவிட்டாலும் நுஃமானின்
ஆற்றல் அங்கீகாரம் பெற்றிருக்கும் என்பது வேறு விஷயம். நுஃமானின் கவிதா ஆற்றலை உரிய
முறையிலே பாராட்ட முந்தியவர் திருமதி நீலாவணன் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்த
மான்மியத்தைப் பிரஸ்தாபிக்கின்றேன்.
"காதலொருவனைக் கைப்பிடித்தே
யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி
பெறச் செய்து வாழ்வமடி"
இவ்வாறு பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாக,
நீலாவணனின் கவிதைக் காரியங்களிலும் கைகொடுத்த இலக்கியவாதியாகவும் திருமதி நீலாவணன்
வாழ்ந்துள்ளார் என்பது நீலாவணனின் நினைவுகளுடன் இணைத்து நினைவில் இருத்திக் கொள்ளத்
தக்கது. இத்தகைய நினைவில் இருத்திக் கொள்ளத் தக்கது. இத்தகைய இன்னொரு இல்லானை
இரசிகமணி கனக செந்திநாதன் வீட்டிலே சந்தித்ததும் நினைவுக்கு வருகின்றது.
"பிள்ளை, குடும்பம், சுற்றமெனும்
பெரிய மலையைத்தான் சுமந்து
என்னைத்
தனியாய் இலக்கியத்தில்
இனிதே உலவ விட்டவளும்...."
என இரசிகமணி கனக
செந்திநாதன் தமது மனைவி நாகம்மையைப் பற்றி நன்றிப் பெருக்குடன் எழுதினார். இரசிகமணி
நடமாடும் வாசிகசாலையாக வாழ்ந்தார். அவருடைய இத்தகைய உயர்ச்சிக்கு அவருடைய மனைவியின்
பங்களிப்பு மகத்தானது என்பதை நான் பல சந்தர்ப்பங்களிலும் உணர்ந்திருக்கின்றேன்.
1961ஆம் ஆண்டில், இரசிகமணி கனக-செந்திநாதன் சமகால இலக்கிய முயற்சிகள்
பற்றிய ஒரு கணக்கெடுப்பினையும் விசாரணையையும் நடத்தினார். கவிஞர் நீலாவணனுடைய
இலக்கியப் பங்களிப்பு நீண்ட காலமாகப் பிரஸ்தாபிக்கப்படாமல் இருந்தது. முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் மூர்க்கமான சர்வாதிகாரம் ஈழத்து இலக்கிய உலகின் மென்னியைத்
திருகிக் கொண்டிருந்த காலம் அது. இந்தச் சர்வாதிகாரத்திற்கு முற்றிலும் மசியாத ஒரு
போக்கினை இரசிகமணி கடைப்பிடிப்பவராய் வாழ்ந்தார். சந்தர்ப்பப் பிசகினாலே போலும்,
அவர் நீலாவணனின் பெயரைக் கவிஞர்களுடைய பட்டியலிலே சேர்க்காது விட்டிருந்தார்.
இரசிகமணியும் நானும் ஏலவே நண்பர்கள். ஈழத்து இலக்கியக் குணமாய்வுக் கலைக்கு அவர்
ஆற்றியுள்ள சேவையை அன்றம் மதித்தேன்