| ஈழநூல் 064 | |
| நூல் |
வீ (பகுதி 1, பகுதி 2) |
| ஆசிரியர்: |
எஸ். பொ. |
| மின்னூலாக்கம் |
இ. பத்மநாப ஐயர் |
| மின்பதிப்பு | ஈழநூல் |
வீ
எஸ்.பொன்னுத்துரை
பகுதி
1
---------------------------------------------------
வீ
எஸ்.பொன்னுத்துரை
---------------------------------------------------
சமர்ப்பணம்
நான்
நானேயான
நானாக
வாழ
உயிரும்,
உணர்வும்,
தன்னம்பிக்கையும்
ஊட்டிய
என் அம்மா
அம்மாக்குட்டி
அவர்களுக்கு
------------------------------------------------------------
பதிப்புரை
தமிழர், திரைகடலோடியும், திரவியம் தேடியது ஒரு காலம்.
தொழிலுக்காக,
வசதி-வாய்புகளுக்காகத் தமிழர் புலம் பெயர்ந்து சென்றமை பிறிதொரு கட்டம்.
இன்று, நிர்பந்தங்கள் காரணமாகவும், காலத்தின் கோலங்களாகவும், உலகின்
பல்வேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள். காரணங்களை விடுங்கள். தமிழ் பேசும் எல்லைகள்
அகலித்துள்ளன என்பது உண்மை. புதிய சூழலிலும் தமிழ் நேசிப்பு உறையவில்லை. புதிய ஆக்க
முனைப்புகளும் அரும்பு வைக்கின்றன. இந்த அரும்புகளின் ஆக்கங்களும் தமிழுக்கு வளமும்
வனப்பும் சேர்க்கும்.
தமிழுக்கு எல்லையில்லை. கலைகளுக்கு எல்லையில்லை.
தமிழின் புதுப் புனைவுகளுக்கு எல்லையில்லை. இவை அனைத்தும் செழித்தல் வேண்டும். புது
நாடுகளிலே வாழும் தமிழர்களுடைய கலை-இலக்கிய நேசிப்புகளும், உணர்வுகளும், ஆக்க
முனைப்புகளும் கௌரவிக்கப்படுதல் வேண்டும். இத்தகைய சிரத்தைகளுடனும்
நிறுவப்பட்டதுதான் மித்ர பப்பிளிகேஷன்ஸ் (MITHRA PUBLICATIONS)
இந்தப்
பதிப்பகம் இளம் எழுத்தாளர்களுடைய படைப்புகளை ஊக்குவிக்கும் பழம் பெரும்
எழுத்தாளர்களுடைய படைப்புகளைக் கௌரவிக்கும். கால ஓட்டத்திலே, சர்வதேச ரீதியாக,
அர்த்தப் பொலிவுடன் செயற்படும் ஒரு பதிப்பகத்தின் முன்னோடியாக இதனைக் கொள்ளினும்
பொருந்தும். 'தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது
பாரதி வாழ்ந்த காலத்திலே ஓர் இலட்சியக் கனவு. ஆனால் இன்று, தமிழ் உயர்ச்சியின்
அவசிய இலக்கு.
வசதிகளையும் தேவையும் கருதி என் அப்பா எஸ்.பொ.வின் நூல்கள்
சில வற்றை துவக்க நூல்களாக வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.
இந்த 'வீ' நூலிலே
இடம் பெற்றுள்ள கதைகள் 1966-ம் ஆண்டு தொகுக்கப்பெற்றவை. அதற்கும் முன்னர் இருபது
ஆண்டுகள் எழுதியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டவை. ஒரு கால் நூற்றாண்டுக்கு முந்
நிலவிய ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வையும் வளத்தையும் தரிசிக்கும் முகமாகவும்,
இன்றைய சந்ததியினர் - ஏன் எழுத்தாளர்களுங்கூட - தரிசன பயன்பெற ஏதுவாகவும் இது
வெளியிடப்படுகின்றது.
அந்நிய நாடுகளைத் தாயகமாக்கி வாழும் எழுத்தாளர்கள்,
இலக்கியச் சுவைஞர்கள், தமிழ் உபாசகர்கள் ஆகியோருடைய ஒத்துழைப்பையும் ஆசியையும்
நாடுகின்றேன்.
அன்புடன்
டாக்டர் பொன். அநுர
சிட்னி -
அவுஸ்ரேலியா
1.11.1992
------------------------------------------------------------------------------------
நன்றி
'மித்ர'வின்
முதல் நூலாக 'வீ'' வெளிவருகின்றது.
இதனை வெளியிட முன்வந்துள்ள என் மகன் பொ.
அநுரவுக்கும்- நூலினைத் தயாரித்தளித்த நண்பனும் சகாவுமான 'இளம்பிறை'
எம்.ஏ.ரஹ்மானுக்கும்-
இதற்கு 'அணிந்துரை' எழுதிய இரசிகமணி கனக-செந்திநாதன்
அவர்களுக்கும் -
இது பற்றிய 'ஒரு மதிப்பீடு' வழங்கிய சாலினி இளந்திரையன்
அவர்களுக்கும் -
இந்நூலுக்குச் சித்திரப் பொலிவு சேர்க்க உதவிய
எஸ்.கே.சௌந்தராஹா(சௌ),
என்.சச்சிதானந்தன் (சச்சி)
எஸ்.சண்முகநாதன்
(சானா)
எம்.செல்வகுருநாதன் (நாதன்),
வி.கனகலிங்க (வீ.கே)
ஆகியோருக்கும் -
அட்டைப்படம் அமைத்த ஜி.சேகர் அவர்களுக்கும்
என் நன்றிகள்
தமிழ்ச்
சுவைஞரின் அன்புக்கும் நன்றி
எஸ்.பொ.
சிட்சி-
அவுஸ்ரேலியா
--------------------------------------------------------------------------
கதைகள்
13
1. தேர் 1
2. கணை 33
3. அணி 45
4. வேலி
57
5. ஈரா 76
6. நெறி 83
7. விலை 88
8. மறு
101
9. வீ 122
10. சுவை 131
11. சிதை 133
12. வீடு
143
13. முள்
189
----------------------------------------------------------------------------
அணிந்துரை
திடீரெனத் தபாற்காரன் ஒரு புத்தகப் 'பார்ச்'லைத் திணித்து மீண்டான்.
பிரித்துப் பார்க்கின்றேன். அதன் பெயர் வீ! 'எஸ்.பொ.'வின் சிறுகதைத் தொகுதி.
'இவ்வளவு காலத்திற்குப் பிறகாவது ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டாரே' என்ற
நிறைவுடன் திறந்து பார்க்கின்றேன். 'இதற்கான அணிந்துரையை உங்களிடம் பெறே
நிச்சயித்தேன். உடனே அனுப்பி உதவுகங்கள் என்ற அன்புக் கட்டளையை அதனுட் கண்டு
திகைக்கின்றேன்.
ஈழத்து சிறுகதைகள் பற்றிய கணக்கெடுப்பில் இருவரும் இருவேறு
துருவங்களில் நின்றவர்கள். அவருடைய எழுத்துக்கள் என் மனத் திரையிலே கோடுகிழித்து
மின்னுகின்றன. அவர் மேனாட்டிலக்கியத்திற் பயிலப்படும் கரு-உரு-உத்தி ஆகியவற்றை
நன்கு ஜ“ரணித்து, அவற்றைத் தமிழிற் புகுத்தியவர், ஆபாசம், பாலுணர்ச்சி, தசைப் பிடு
ஙகள் என்பவற்றைக் கண்டு பயந்தோடாத 'இந்திரிய எழுத்தாளர்!' பாலுணர்ச்சிச் சிக்கல்களை
மையமாக வைத்த, தீ என்ற நாவலை எழுதிப் பரபரப்பு ஏற்படுத்தியவர். ஈழத்து எழுத்துலகின்
'சிம்மசொப்பண'மாகவும் 'பிரச்சினைக்குரிய எழுத்தாள 'ராகவும் விளங்குபவர். அத்தகைய
அவர் கடந்த பரம்பரையின் மரபுச் சு€யுடன், பண்புடனும் எழுதிவரும் என்னிடம் அணிந்துரை
கேட்கின்றாரே! எத்தகைய கதைகள் இருக்கின்றனவோ?' என்ற பயத்துடன் நூலைப் படிக்கத்
தொடங்கினேன். நூலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட பயம் சுவடே தெரியாமல் மறைய, நான்
நூலிலே திளைத்தேன். இந்நூலை ஆற அமர ஒரு முறையல்ல, பலமுறை பார்த்து முடித்தேன்.
1947 ஆம் ஆண்டிலேயே கவிதை மூலம் எழுத்துத் துறைக்குள் வந்த 'எஸ்.பொ.'
இதுவரையிற் சுமார் இருநூறு கதைகள் எழுதியுள்ளார். கதைகளின் எண்ணிக்கையையும், கால
இடைவெளியையும் பார்த்தால், வீ.அவருடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுதியாக வந்திருக்க
வேண்டும். இருப்பினும், ஒரு தொகுதியாவது கிடைத்துவிட்டதே என்பதிலே திருப்தி. நிலவு,
ஒளி, நிழல், மேடை, கடவுள் அடிமையானார் போன்ற அவருடைய நல்ல சிறுகதைகளை இத்தொகுதியிலே
காணாதது முதலில் ஏமாற்றத்தைத் தந்தது. ஆனாலும் கதைக்கேற்ற விதமாக அவர் எவ்வாறு
ந€யைக் கையாளுகின்றார்; அவருக்கு முன்னால் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு கைகட்டிச்
சேவகஞ் செய்கின்றன என்ற ஒருமைப்பாடு கதைக்குக் கதை படர்ந்து காட்டும் முழுத்துவம்
என் ஏமாற்றத்தைப் போக்கியது. தொடக்கம்- உச்சக் கட்டம் முடிவு என்ற வாய்ப்பாட்டில்
அமையும் பத்திரிக்கைக் கதைகளுக்கும் எவ்வளவோ இடம் பெற்றுள்ள சிறுகதைகளுக்கும்,
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளுக்கும் எவ்வளவோ வித்தியாசம். எனவேதான்,
இந்தக் கதைகள் என் மனத்திலே ஏற்படுத்திய உணர்ச்சிகளையும், எழுப்பிய பலிதத்தையும்
விரிவாக எழுதுதல் வேண்டும் என்ற நியாய பூர்வமான அக்கறையும் பிறந்தது. கதைகளுக்குச்
சிறிய தலைப்பிடும மோகத்தை ஈழத்தில் 'எஸ்.பொ.' வே ஏற்படுத்தியவர்.
இத்தொகுதியிலிலுள்ள தலைப்புக்கள் 'வீ' தவிர, இரண்டெழுத்துக்களில் அமைந்துள்ளன. பல
தலைப்புகளைப் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளலாம். இந்த உபாயத்தினால் கதையின்
பூடகமான தொனிப்பொருளையும், வெளிப்படையான சம்பத் தொகுப்பையும் ஒரு சேர 'எஸ்.பொ.'
காட்டுகின்றார். தமிழ் இல கியத்தில் இது புதிய முறை; புரட்சி முறை. இதனைச் சற்றே
விளக்கும் முகமாக தொகுதியின் முதலாவது கதையாக இடம்பெறும் தேர் என்னுங் கதையை
எடுத்துக் கொள்ளலாம். 'குடும்பமே ஒரு தேர்' என நடைபெறும் நிகழ்ச்சித் தொகுப்பிலே,
இஷ்ட குமாரனைத் தேர்ந்தெடுப்பதையும் பூடகமாக தொனிப் பொருளாக - ஆசிரியர்
காட்டுகிறார். பென்னம்பெரிய படுதாவிலே வர்ணக்கலவைகளை அனாயாசமாக அள்ளி எறிந்து
ஓவியந் தீட்டும் வள்ளாளனைப் போல இக்கதையை 'எஸ்.பொ.' சித்திரித்துள்ளார். எத்தனை
பாத்திரங்கள்! அவற்றை எவ்வாறு நடமாட விடுகின்றார்!! இக்கதையில் ஒரு நாவலுக்குப்
போதுமான பாத்திரங்கள் நடமாடினாலும், சிறுகதையின் இறுக்கம் சற்றேனும் குறையாமல்
எழுதியுள்ளதின் மூலம் ஆசிரியர் நம்மைப் பிரமிக்க வைக்கின்றார். "லா.ச.ராவின் பாற்
கடல், ஜெயகாந்தனின் யுகசந்தி ரி.செல்வராசனின் யுகசங்கமம் ஆகியனவும் தேர்கொண்டுள்ள
கருவைச் சுற்றியுள்ளன, அவற்றிலே காணமுடியாத கலை முழுத்துவத்தைத் 'தேர்'
கொண்டுள்ளது. இந்த நல்லதோர் சிறுகதையைத் தமிழன்னைக்குச் சமர்ப்பித்ததற்காக
எஸ்.பொ.வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பிரபல கவிஞரும், விமர்சகருமான
பேராசிரியர் சாலை இளந்திரியன் ஒரு கடிதத்திற் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொகுதியின் இரண்டாவது கதை கணை. இத்தொகுதியிலே கதைக்கேற்றவாறு பல வகை
நடைகளையும் 'எஸ்.பொ.' கையாண்டிருந்த போதிலும், இந்தக் கதையில் அவருக்கே உரித்தான
முத்திரை நடை வீறுகொண்டு நிற்கின்றது 'மலர் தூவிய மஞ்சத்திலே... அசைவிற்
பார்க்கின்றார்' என்ற வசனம் 'எஸ்.பொ.' வின் வசன நடைக்கு உதாரணம். சாதாரணமாகத் தன்
சுய எழுத்து நடையைக் காட்டுவது போலக் கதையை அமைத்து விட்டு, 'கற்பு தத்துவமுமன்று.
அது வாழும் முறை. வீர மிருக்கும் இடத்தில் அதைப் பயிலலாம்' என்று சோமாதேவியைப் பேச
வைத்து திடீரென நமது சிந்தனையை தூண்டுகின்றார்.
தொழிலாளர் அணியைப் பற்றிய
கதை என்ற வெளிப்படைப் பொருளிலும், அலங்கார வார்த்தை (அணி) என்ற பூடகப் பொருளிலும்
மூன்றாவது கதை அமைந்துள்ளது. இதில் 'எஸ்.பொ.' கையாண்டுள்ள கதை சொல்லும் உபாயமுறை
தமிழுக்குப் புதியது. முன்னே ஒருவனை நிறுத்தி அவனுடன் பேசுவது போன்று இது
அமைந்துள்ளது. ஒரு பாத்திரத்தின் பேச்சுத் தவிர வேறு சொற்கள் வராமல் எழுதும்
இம்முறை சிரமமானது. இச்சிரமப் பணியிலேகூட, எதிரில் உள்ளவனுடன் பேசும் தமிழுக்கும்.
சுயமாகவே அப்பாத்திரம் பேசும் தமிழுக்கும் வேறுபாடு உண்டு என்பதையும் 'எஸ்.பொ.'
கோடு கிழித்துக் காட்டுகின்றார். 'சே, இந்த நானா வரவர வலு மோசம்....' என்பது
அத்தகைய கோடுகளுள் ஒன்று. 'ஜாதி ஒழிப்பு-தொழிலாளர் அணி-செங்கொடி' என்றெல்லாம் வெகு
'முற்போக்கு'க் கதையைப் போல சித்திரித்து வந்து, 'அங்கை படிப்பித்துக் கொண்டிருந்த
டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டு போனவன் எந்தப் பகுதி....' என்ற இடத்திலே
வைத்து, கதை சொல்லும் பாத்திரத்தின் இயல்பு, வாடிக்கைக்காரனின் மனப்போக்கை அறிந்து
இதமாகப் பேசுவதுதான் என்று பூடகமாகக் காட்டிக் கதைக்குத் திடீர்த்
திருப்பங்கொடுக்கும் இடத்திலே நாங்கள் மலைத்து நிற்கிறோம்!
இந்த மூன்று
கதைகளையும் ஒரு சேரக் காட்டி விட்டு, வாசகரை இன்னொரு பகுதிக்கு அழைத்துச்
செல்கின்றார் 'எஸ்.பொ.'
வேலி, ஈரா, விலை, மறு ஆகிய நான்கு கதைகளையும் ஒரு
சேர வைத்துப் பார்ப்பதே சாலச் சிறந்தது. இந்த நான்கு கதைகளும் ஈழத்தின் வெவ்வேறு
பகுதிகளில், வெவேறு தட்டிலுள்ள மக்கள் கையாளும் பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு
பிராந்திய மக்கள் தமிழை உச்சரிக்கும் முறையும், பித்தியேகமாகக் கையாளும் சொற்களும்
ஒரு கலாச்சாரப் பண்பினதும், வாழ்க்கை முறையினதும் நேர்மையான அறுவடை என்பதை
'எஸ்.பொ.' இக்கதைகளில் நயம்படக் காட்டியுள்ளார். பிராந்தியத்தின் ஆன்மா அங்கு
பயிலப்படுஞ் சொற்களிலே எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றது என்பதை அப்பகுதி மக்களுடன்
இரண்டறக் கலந்து வாழ்ந்தாலன்றிச் சித்திரிக்க இயலாது. நான்கு பகுதியிலுள்ள பழகு
தமிழ் வளத்தையும் ஒரே எழுத்தாளனினால் காட்ட முடியுமென்றால், அது 'எஸ்.பொ.' வினால்
மட்டுமே முடியும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அவர் கதைக் களத்தைத்
தேர்ந்தெடுத்து, அக்களத்தில் வாழ் மக்களுடன் இரண்டறக் கலந்து பழகி, கதையைக்
கலாமுழுமையுடன் தரிசிக்கும் இயல்பினர். இத்திறமையை நன்று பெறுவதற்கு எழுத்துத்
திறமைக்கு அப்பாற்பட்ட துணிச்சலும் தேவை. அந்தத் துணிவு என் போன்றோருக்கு வர
மாட்டாது. 'சித்திரிக்கப்படும் பாத்திரம் அதுவாகவே வாழ வேண்டும், அதற்குள்
எழுத்தாளன் தெரிந்தோ தெரியாமலோ, தான் வாழ்ந்து கொண்டிருக்கும் தளத்தின் பண்புகளை
நுழைக்கக்கூடாது' என்று 'எஸ்.பொ.' நம்புபவர். அது சரியானதா என்பது சிந்தனைக்
குரியது. ஆனால், அவருடைய இந்த அழுங்குப் பிடி நம்பிக்கையை ஒரு சந்தர்ப்பத்தில் நான்
அறிந்தேன். விலை என்று இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கதை ஐந்தாண்டுகளுக்கு முன்னர்
ஒரு பத்திரிக்கையிற் பிரசுரமாகியிருந்தது. பின்னர், அவரைச் சந்தித்துப் பேசும்
பொழுது மேற்படிக்கதையைப் பற்றிய பிரஸ்தாபமும் வந்தது. 'இடஞ்சல் வந்து மூண்டு
நாலுநாள்' எனத் தொடங்கி, 'ஒரே துவால' என்று வரும் பகுதி வரை ஆபாசமாக இருப்பதாகக்
குறிப்பிட்டேன். 'நீங்களோ, நானோ வாழும் தளத்திலிருந்து பார்ப்பதினாலேதான் ஆபாசமாகத்
தெரிகின்றது. என் பாத்திரம் வாழும் தளத்திற்கும் களத்திற்கும் வாருங்கள். அப்பொழுது
அவர்களுடைய நினைவுகள் இதிலும் பார்க்கக் கொச்சையாக இருப்பதைக் காணலாம். எஸ்.பொ.
என்ற சுயம் பாத்திரங்களின் சிந்தனைகளை நிர்ணயிக்க வேண்டுமென்றால் கதைகள் எழுதுவதை
விடுத்துக் கட்டுரைகள் எழுதுவது தான் சேமமான காரியம்' என்று அவர் விளக்கினார்.
அவருடைய விளக்கம் சரியேயாயினம், இப்பொழுதும் என் தளத்திலிருந்து அதை வாசிக்கக்
கூச்சமாகத்தான் இருக்கின்றது. இருப்பினும், வெளியுலக நடப்பு என்ற நாரிலே,
கதாபாத்திரத்தின் மன ஓட்டங்களை நேர்த்தியாகப் பின்னி யிருக்கிறார். புதிய விமர்சகர்
கூறும் 'நனவோடை உத்தி' என்னும் கதை சொல்லும் உபாயமுறை கலைமுழுத்துவத்துடன்
'விலை'யிற் கையாளப்பட்டிருக்கின்றது. இக்கதை மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களுடைய
பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளதைப் போல, ஈரா மட்டக்களப்பு வாழ்முஸ்லிம்மக்கள்
மத்தியிற் பயிலப்படும் தமிழிலே எழுதப்பட்டுள்ளது. அரபுச் சொற்களைக் கலந்து பேசும்
முறையையுங் காட்டியுள்ளார். விலையும், ஈராவும் உத்தியில் எழுதப்பட்டுள்ளன. இதன்
மூலம் பிராந்திய உச்சரிப்பு இயல்பினை வெளிக் கொண்டு வருதல் கலைத்துவமானதென
'எஸ்.பொ.' கருதுவதாகத் தெரிகிறது, மறு யாழ்ப்பாணத்துப் பழகு தமிழில்
எழுதப்பட்டுள்ளது. மறு என்பது புனிதத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைக்
குறிக்கின்றதா? சமுதாய அமைப்பை மறுத்து 'நான் மலடியல்லன்' என்று வீரம் பேசுவதைக்
குறிக்கின்றதா? அதுவே கதையின் தரிசன பயன். சாதி சமயம் வார்க்கம் என்று எழுந்த
கதைகள் எல்லாவற்றிற்கும் எதிர்முகமாக, தளர்ந்த வரும் சாதி சமயம் வர்க்கம் என்று
எழுந்தகதைகள் எல்லாவற்றிற்கும் எதிர்முகமாக, தளர்ந்து வரும் சாதி ஆசார அமைப்பை மிக
எதார்த்தமாகக் சித்தரித்துக் காட்டுகின்றார். இந்த நான்குகதைகளிலும் திருகோணமலை
மாவட்டத்திலுள்ள மருதநில வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வேலி என்னுங் கதையே
என்னை மிகவும் கவர்ந்தது. 'தாலி பெண்ணுக்கு வேலி' என்ற சாதாரணக் கருவைக்
கொண்டிருந்தாலும், கலைமெருகில்- வர்ணணை சிறப்பில் உச்சமானது. வயலோடு தொடர்புடைய
சொற்களாலேயே ஆசிரியர் கதையின் வர்ணனை முழுவதையும் எழுதியுள்ளார். 'சூட்டிலே ஏறத்
தயாராகக் காய்த்துவிட்ட பயிரின் தங்கத்திருமேனி மறைந்து விடத்தேடுந் தனபாரங்கள்' என
அவர் கனகி என்னும் பாத்திரத்தை அறிமுகப்டத்தும் விதமே தனியானது. கமக்காரனுடைய மனோ
நிலையை, சித்திரக்காரனொருவன் அனாயாசமாகக் கீறும் இரண்டொரு கோடு போல ஆசிரியர்
காட்டுகின்றார். வயலிலிருந்து வீடுவரை நாமே சித்திர வேலுவுடன் நடக்கும் உணர்ச்சி
ஏற்படுகின்றது. யாரோ மீன்பிடிக்க வைத்த பறி அவனுடைய கால்களிலேயே தட்டுப்படுகின்றது.
எடுத்துப் பார்க்கின்றான். அதற்குள் ஒரு பனையான் மீன் துள்ளிக் கொண்டிருக்கின்றது.
'எந்த ஏழையின்ரை பிழைப்போ' என்று மீண்டும் பறியை நீருக்குள் வைக்கின்றான்.
அவசரத்தில் ஈர வரம்பி மிதித்து விட்டான். உலரவிடப்பட்டிருந்த வயலுக்குள் நீர்
கசிகின்றது. அந்த வயல் அவனுடையதல்ல. இருந்தும், அந்த வரம்பைச் சரிசெய்து விட்டே
நடக்கின்றான். 'வேலி' என்ற நீண்ட கதையில் இவை இரண்டு காட்சிகள்; சிறு கோடுகள்.
வாசிப்போர் அவதானிக்க முடியாத சிறு கோடுகளுந்தான். ஆனால் கமக்காரனின் பெருந்தன்மை
இக்கோடுகளால் உயர்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் கொண்டு வர்ணித்தாலும் இக்
குணசித்திரத்தை இக்கோடுகள் போலக்காட்ட முடியாது. ஆம், அந்தச் சித்திரவேலுவால் தான்
கனகியை மன்னிக்க முடியும். நீலவளம் என்ற நோபல் பரிசுபெற்ற நாவலை வாசித்த
இன்பம்-அதேகாட்சி - இக்கதையில் எனக்குத் தோன்றியது. இந்த நான்கு கதைகளையும்
வாசித்து முடித்த பின்னர், அவற்றிடையே ஒருமைப்பாடான சரடு ஒன்று ஓடியிருப்பதை வாசகர்
நன்குணர்வர். நெறி தவிறிய பாலுணர்ச்சிதான் அது. அதை நான்கு கோணத்திலும் நாலு
மண்வளத்திலும் நின்று ஆசிரியர் அணுகியிருக்கிறார்.
பழகு தமிழில் எழுதப்பட்ட
நான்கு கதைகளின் நடுவிலே நெறி என்ற கதையைச் சாமர்த்தியமாக நுழைத்திருக்கின்றார்.
நெறி தனித் தமிழில், உரையாசிரியர் நடையில் அமைந்துள்ளது. 'நெறி தமிழ் மரபைக்
குறிக்கின்றதா? அல்லது தற்காலத்தைக் கரு ஒன்றைத் தனித் தமிழில் எழுதும்போது
ஏற்படும் நெறி (சுளுக்கு)யைக் குறிக்கின்றதா?' என்று ஆசிரியரைக் கேட்கத்
தோன்றிகிறது. ஆசிரியர் தன் நகைச் சுவையை இக் கதையிலே ஏற்றவாறு
புலப்படுத்தியிருக்கிறார்.
தலைப்புக் கதையான வீயுடன் மூன்றாவது பகுதிக்குள்
நுழைகின்றோம். நான் என்ற ஆணவக் குறிப்புடன் தொடங்கி, வழி என்ற சுய அனுபவ
விஸ்தாரத்துடன் வீ என்ற கதைக்குள் அழைத்து செல்லுகின்றார். மலர் கர்ப்பந் தரித்த
நிலை வீ; பிஞ்சாவதற்கு முதற்படி. சில மேனாட்டு மனவியல் நிபுணர்களம், எழுத்தாளரும்
உண்மையான சமரச சமத்துவம் கலவியிலே கிடைக்கிறது என்று கருதுகிறார்கள். இக் கருத்தைக்
கலை மெருகுடனும், வித்துவச் செருக்குடனும் எழுதியுள்ளார். கதையை வாசித்து
முடிந்ததும்,
'ஆதலினால் காதல் செய்வீர்; உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத்
தலைமையின்பம்
காதலினால் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம். அதனால் மரணம்
பொய்யம்'
என்ற பாரதியாரின் பாடலுக்கான முழுவிளக்கமும் 'வீ' தன்னகத்தே
கொண்டுள்ளது என உணர்கின்றோம். சாவே நித்தியத்தையுஞ் சமத்துவத்தையும் உடையது என்று
வலியுறுத்தும் சிதை, சித்த பரிசுத்தமே நித்தியம் என்பதை வலியுறுத்தும் வீடு,
சர்வேசுவர ராஜ்ஜியமே நித்தியம் என்று கூறும் முள் ஆகிய மூன்று பிரதான மதங்களின்
ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை வைத்து அம்மானை ஆடுவதற்கு, 'வீ' என்ற கதையை
நுழைவாயிலாக வைத்திருப்பது ஒன்றே போதும் 'எஸ்.பொ.' வின் சிந்தனா ஆழத்தை அறிவதற்கு.
'வீ'யின் தத்துவச் சிக்கலிலிருந்து 'வீடு' என்னுங் கதையில் பௌத்த சமயத்தின்
சிக்கலான தத்துவத்திற்குள் இறங்குவதற்குமிடையில் மூச்சு விடுவதற்காகச் சுவை என்னுங்
கதை சேர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது. 'வழி' என்ற சுய அனுபவக் குறிப்பில்,
'வீங்கு சேர் ஏமாப்பின்....' எனத் தொடங்கி, 'மகாநாடு நடத்தப்படுகின்றது' என்று ஒரே
வசனம் 45 வரிகளில் முடிவடைகின்றது. முற்றுப் புள்ளி வந்ததும் பெருமூச்சு
விடுகின்றோம். எவ்வளவு நீண்ட வசனம்! அதற்கு எதிர்த் துருவம் சுவை. எந்த ஒரு வசனமும்
மூன்று நான்கு சொற்களுக்கு மேற்படாதவை. நபிபெருமானாருடைய எளிமை வாழ்க்கை,
ஏழைகளிடத்தில் அவர் கொண்ட பேரிரக்கம், இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம் ஆகிய
பண்புகளை எளிமையான தமிழ் நடையில் 'சுவை' சித்திரிக்கின்றது.
'சுவை'
(இஸ்லாம்), 'சிதை' (சைவம்), 'வீடு' (பௌத்தம்), 'முள்' (கிறிஸ்தவம்) ஆகிய நான்கு
கதைகளுஞ் சமயச் சார்பிலும், தொனிப் பொருளிலும் ஒத்திருக்கின்றன. இவற்றை
அம்மதங்களைச் சார்ந்தவர்களிலும் பார்க்க அழகிய முறையிலும், ஆழமான பார்வையுடனும்
'எஸ்.பொ.' சித்திரித்துள்ளார். 'சிதை' கலைமகளில் வந்த போதே, அதைப் பலரும்
பாராட்டினார்கள். வீடு என்னும் நெடுங் கதை பற்றி, தனியே ஒரு விமர்சனம் நான்
தினகரனில் எழுதியுள்ளேன். '...பென்னம் பெரும் தங்கப் பாளங்களினால்' என்று தொடங்கி.
'....வெகு உள்ளே - நடந்து செல்கின்றேன்.'என்று நந்தபிக்கு žவர ஆடைக்குள்ளிருந்து
கனவு காணும் காட்சியையும், இந்திலோக வர்ணனையையும் 'எஸ்.பொ.' எழுதியுள்ள முறை
எவ்வளவு பாராட்டினாலுந் தகம். ஆறுமுக நாவலரின் திருகைலாய வர்ணனை பெரிய புராண
முகப்பில், 'அநாதி மலமுத்தராய்...' எனத் தொடங்கி, 'வீற்றிருந்தருளினார்.' என
முப்பத்தாறு வரிகளில் ஒரே வசனத்தில் முடிகின்றது. வர்ணனைக்கு எடுத்துக் காட்டு அது.
'எஸ்.பொ.' வின் இந்திரலோகக் காட்சி அதற்குச் சமதையாக நிற்க முயல்கிறது. 'போதி' என்ற
கடைசிப் பகுதி ஒரே வசன கவிதை மயம். ஆம், எனக்கு அப்படித் தான் சொல்ல முடிகிறது.
இந்த வசனத் தொடர்களைப் பாருங்கள். 'மழைகள் அவை வைரத் தகதகப்பில் ஒளிரும் பணிப்
படிகங்களிற் கிரீடங்கள் புனைந்து கோலோச்சுகின்றன. பனிக் கற்களின் ஏகம். நீர்
உறைந்து திடமான ஒரு நிலை. ஒரு ஸ்திதி. ஒரு பிறப்பு....புஷ்பாஞ்சலியிற் சிதறிய அலரி
மலர்களாகப் பனிக்கட்டிகள்....அவை உருகி வெள்ளி நூல்கள் பல இழுத்து பலவும் ஒன்றாகி
குமரிலாவண்யம் பெற்று சிங்கமுகக் காலதரிலும் பென்னம் பரும் பாறையிலிருந்து கீழே
துள்ளிக் குதித்து-அருவியின் இசையும்.... கூத்தும்! தண்மையின் திரிசங்கு சுகத்திற்
சுகிக்கும் அதந் நிலையும்; ஸ்திதியும்...' முள் என்ற கடைசிக் கதையில் இயேசு நாதர்
பேசுவதாக வரும் ஒவ்வொரு வசனமும் புதிய ஏற்பாட்டிலுள்ள வசனங்களே. அந்த வசனங்களை
வைத்து கிறிஸ்துவின் மரண தரிசனத்தை 'எஸ்.பொ.' எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கது.
கிறிஸ்தவர்கள் உபயோகிக்குஞ் சொற்களையே ஆங்காங்கு கையாளுகின்றார். ஈழம், தமிழ்நாடு
ஆகிய இடங்களிலுள்ள எழுத்தாளர்களுள் மார்க்கத் தத்துவங்களை வைத்துக் கதைகள்
படைக்கும் இந்தச் சாதனையை இவர் போல எவரும் செய்யவில்லை என்று துணிந்து கூறலாம்.
'எஸ்.பொ.' வின் கற்பனை வளத்திலும் பார்க்க, நடை வளமே இந்தத் தொகுதிலே
மேலோங்கி நிற்கின்றது. அவருடைய நடையிலே தனிக்கவர்ச்சி உண்டு. அவருடைய இலக்கிய
விரோதிகள் கூடத் தங்களை அறியாமலே அவர் நடையையும், உத்தி முறைகளையும்
பின்பற்றுகிறார்கள். ஈழத்து இலக்கிய உலகில் 'எஸ்.பொ.' பின் நடையைப் போன்று வேறெந்த
எழுத்தாளருடைய நடையும் ஆதிக்கமும்-செல்வாக்கும் செலுத்தியதில்லை. 'எஸ்.பொ.' வின்
கதைத் தொகுதியில் சதைப் பிடுங்கலும், முறை தவறிய காதலும், ஆபாச வர்ணனையுந்தான்
இருக்குமென்று நம்பி, பேசி, முடிவி செய்திருப்பவர்களை அவர் ஏமாற்றிவிட்டார்.
அப்படியான கதைகள் இல்லையா என்றால், ஓரிரண்டு கதைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால்,
அந்தக் கதைகள் கூட இந்தக் கதைத் தொகுதியை முழுமைப் படுத்தவே உதவுகின்றன.
இத்தொகுதியிலே 'எஸ்.பொ.' வின் முழு ஆற்றலையும் நம்மாற் காண முடியவில்லை.
காணவும் முடியாது.
நாடகாசி‘யர் - நாவலாசிரியர் - விமர்சகர் - நெருப்புக்
கக்குங் கண்டனகாரர் - கட்டுரையாளர் என அவருடைய எழுத்தாற்றல் பரந்து பட்டது. அவை
முழுவதையும் ஒரு சிறு கதைத் தொகுதியிலே புலப்படுத்த முடியாது என்பது உண்மை. ஆனால்,
அவருடைய ஆற்றலின் ஒரு பகுதித் திறமையை இத்தொகுதி பட்டை தீட்டிய வைரமாகப்
பிரதிபலிக்கின்றது. ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும்
வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு, 'வீ'யைக் கலாசாரத் தூதுவனாக
அனுப்பிவைக்கலாம்.
இரசிகமணி
கனக.செந்திநாதன்
குரும்பசிட்டி
தெல்லிப்பழை,
யாழ்ப்பாணம்.
இலங்கை.
.............
தேர்
முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுந்து ஒரு திருக்காட்சி.
தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப்பாயைப் பக்குவமாகச்சுருட்டிவைப்பது ஒரு
கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளைவிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை
உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழுபடலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில்
நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் 'சுத்து'ம் எப்பொழுதும் தயாராக
இருக்கும். 'சுத்தை' நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப்
பக்கம் நடக்கத் தொடங்கும். எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை
வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி.
அறுபது
ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டார். கடிகாரத்தைப் பார்க்காது, கடிகாரத்தின்
விநாடி முள்ளைப் பார்க்கிலும் நுணுக்கமான நேரக் கணக்கில் இயங்குவது அவருடைய
இரத்தத்திலேயே ஊறியிருக்கின்றது. கொல்லையிலே கழிவுக் கருமத்தை முடித்து, அடிக்
கழுவி, கிணற்றடிக் கமுக மரத்திலே தொங்கும் குரும்பைப் பாதியிற் கிடக்கும்
உமிக்கரியினாற் பற்களைச் சுத்தஞ் செய்து, திண்ணைக்கு மீளுவார். 'இறப்பில்' தொங்கும்
வெண் சங்கிலே கதிர்காமத்து பிபூதி இருக்கும். வலக்கை விரல்களுக்குள் எடுத்து,
"சிவ..சிவா..." என்று உச்சரிக்கும் பொழுது, நல்லூர்க் கந்தனின் உதயகாலப் பூசை மணி
கேட்கும்.
இன்னும் "சிவ...சிவா..." என்று விபூதி பூசும் பொழுது, உதயகாலப்
பூசை மணி கேட்கின்றது. கால ஓட்டத்திலே தரிக்காது நடைபெறும் நித்தியகருமங்கள்.
'இன்று வருடப் பிறப்பு....' - முதன் முதலில் இந்த எண்ணந்தான் முகத்தாருக்கு
ஏற்படுகின்றது. எத்தனையோ வருடுப் பிறப்புகள் வந்து போய்விட்டன. அவற்றுடன் எத்தனையோ
வருடங்களும் ஓடி மறைந்துவிட்டன. பார்வதிப்பிள்ளையைக் கல்யாணஞ் செய்த முதல் வருடம்
வந்த வருடப்பிறப்பு; இராமேசுவர நேர்த்திக் கடனுக்குப் பிறகு சுப்பிரமணியனைப்
பெற்று, முருகண்டியிலே மயிர்நீக்கக் கடன் செய்த மறுநாள் வந்த வருடப் பிறப்பு;
சௌந்தரம் கல்யாணமாகி, மருமகனுடன் வந்த வருடப் பிறப்பு; தகப்பனுக்குத் தலைக்கொள்ளி
வைத்து. கோடி கட்டாதே கழிந்த வருடப்பிறப்பு; பார்வதிப்பிள்ளை போய், நாளே காடாகிக்
கிடந்த வருடப் பிறப்பு;- இப்படிப் பல. கால ஓட்டம் அவர்தம் உழைப்பை விழுங்கி, உடலைச்
சருகாக்கிவிட்டது. முன்னர்போல சுறுசுறுப்பில்லை. நல்லெண்ணெய்யில் வெதுப்பிய
கத்தரிக்காயுடன் மூன்று நீற்றுப் பெட்டி பிட்டுச் சாப்பிட்டும். நாலு
மரவள்ளிக்கிழங்கைச் சுட்டுப் பச்சைமிளகாய் சகிதம் போட்டுக் கொண்டாற்றான் காலைப் பசி
அடங்கும் என்பதை இளைஞப் பருவ நினைவுகள். பிள்ளைகளைப் படிக்க வைத்து
உத்தியோகத்தரராக்கியதினால் இரண்டு பாண் துண்டுகளைக் 'கொறி'க்கும் பழக்கம் முகத்தார்
வீட்டிலும் பரவி விட்டது. படுத்த படுக்கையாக வைக்கம்படியாக உடம்பிற்கு
அப்படியொன்றுமில்லை. முதுமை உணர்வு வலுக்கின்றது. சிறிது வாதக்குணம் போன்ற எண்ணமும்
மேலிடுகின்றது. திடீரெனக் குந்தி எழும்பச் சிரமப்படுகின்றார். இதனைப் பிள்ளைகள்
அறிந்து கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுகின்றார். கடைக்குட்டி மகளைப் பற்றித்தான்
கொஞ்சம் கவலை.
திண்ணையிற் குந்தி, கப்புடன் சாய்ந்து கொள்கின்றார்.
'அவள் பொடிச்சிதான் பாவம். தாயத்தின்னியாப் போயிட்டுது. படிப்பை முடிச்சுப்
போட்டு, மூலையிலே கிடந்து பெருமூச்சு விடுகுது. அவளை மேலை படிக்க வைக்கலா மெண்டு
மூத்ததுகள் விரும்பினதுதான். வேணுமெண்டால், உதுகளின்ரை பொம்பிளைப் பிள்ளையன்
படிச்சு உத்தியோகம் பாக்கட்டும். இளையவனின்ரை பாடு பிழையில்லை. ஒரு மாதிரி ஒரு
வேலையிலை கொழுவீட்டான். ஏதோ கொம்பனியிலைதான் நல்லா வரலாமெண்டு மூத்தவனும்
மச்சான்மாரும் சொன்னாங்கள். அவள் கடைக்குட்டி எண்டு வீட்டோடை இருந்து சாப்பிட்டுப்
பழகியவன். மூண்டு நாலு மாசம் அதுவுமில்லை. கயிற்றப்பட்டு வந்தால்தானே, பேந்து
வின்னடிக்குத் தங்கடை பாடுகளைத்தாங்களே பாக்குங்கள். நல்லூரான்ரை புண்ணியத்திலை
எல்லாம் தங்கடை žவியப் பாடுகளைப் பார்க்கக் கூடிய நிலைக்கு வந்துட்டுதுகள். என்ரை
கெட்டித்தனம் என்ன இருக்கு? ஆண்டவன் அளந்தபடி நடக்குது விடியப்புறக் கோச்சியிலே மூ
ததவள் வருவான். அவள் மறந்தாலும் அலுத்தாலும் அவரை மனுஷ’ கமலா இஞ்சை வராமலிருக்காள்.
என்னெட்டைக் கைவியளம் வாங்கிறதிலை அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை...ஓம்... அதுகளின்ரை
மூத்ததுக்கும்- உந்தப் புது நாணயப்பேர் சட்டெண்டு மனசிலை வாறேல்லை....அவள்தான்
அம்சதொனிக்குப் பத்து வயசுக்கு மேலை இருக்க வேணும்.... என்ன பத்து? பதினொண்டுக்கு
மேலை. கடுக்கண்ணுற பருவம்....ஓ, இவ போயே நேற்றெண்டாப் போலை இருக்குது.... ஆனா,
வருசம் அஞ்சாகுது. அவள் புண்ணியஞ் செய்தவள். எல்லாப் பாரத்தை€யும் என்ரை தலையிலை
சுமத்திப்போட்டுப் போயிட்டாள்.'
இடைவெட்டில், மனோகரன் நேற்று எழுதியிருந்த
கடிதம் முகத்தாருடைய ஞாபகத்துக்கு வருகின்றது. வருடப்பிறப்பன்றே கொழும்புக்குத்
திரும்பிவிட வேண்டுமென்று எழுதியிருந்தான்.
'அதுவும் சரிதான். எங்கடை
வாகடங்கள் நெடுகச் சரிவருமே? இப்ப தான்போய் வேலையிலை சேந்திருக்கிறான். லீவு கீவு
எடுத்துப் பழுதாக்கப்படாது.'
"அப்பனே முருகா"
வீட்டின் சின்ன
அறைக்கதவு திறக்கப்படுகின்றது. 'கடைக்குட்டி' பத்மாதான் வருகிறாள்.
'என்னதான் பேரளவிலை பெரிய பிள்ளை எண்டாலும், வீட்டிலே சின்னப்பிள்ளை தானே?
சரியா, இவபார்வதிப்பிள்ளையை உரிச்சு வைச்ச மாதிரி இருக்கிறாள். இவளை ஒப்பேத்திப்
போட்டனெண்டால், பேந்தென்ன? சிவனே எண்டு கண்ணை மூடலாம். இவன் மனோகரனை இவவின்ரை
அண்ணரின்ரை பொடிச்சிக்குத்தான். பெடியங்களின்ரை காரியத்தை நிதானமாச்
சொல்லேலா.'
முதற் காரியமாகப் பத்மா வீட்டு முற்றத்தைக் கூட்டி, சாணகத்
தண்ர் தெளித்து முடிக்கின்றாள். வருடப் பிறப்பன்று விடியும் முன்னரே, அன்றைய
வழமையான கடமைகளைச் செய்து முடிக்கும் வேட்கை. வருடப் பிறப்பன்று எல்லாக்
காரியங்களையும் விக்கனமின்றி உரிய முறைப்படி நிறைவேற்றிவிட்டால், வருடம் முழுவதும்
அவ்வாறே அமையுமென்னும் நம்பிக்கையில் ஊறித் திளைத்த மனம். வருடப் பிறப்பன்று
பழங்கறிகளுக்கு மதிப்பில்லை. கறிச் சட்டிகளை அடுக்களைக்கு வெளியே, இடப்பக்கமாகவுள்ள
செவ்விளநீர்க் கன்றடியிற் பரப்பி வைத்து, சாம்பல் தோய்த்தெடுக்கப்படும் 'பொச்சு'
மட்டையாற் தேய்த்துக் கழுவத் தொடங்குகின்றாள். திண்ணையிலே குந்தியிருந்து,
சிந்தனையிலாழ்ந்திருக்கும் தந்தையை அவள் கண்கள் கவனிக்கின்றன. மரவள்ளிக்கிழங்க
காய்ச்சிய சட்டியில் அடிப்பிடித்திருந்த பாகத்தைப் பொச்ச மட்டையால் நன்றாகச்
சுரண்டிக் கொண்டே பேச்சுக் கொடுக்கின்றாள்.
"என்ன அப்பு....இண்டைக்கு
காலமைக் கோச்சியிலை மூத்தண்ணர் வருவாரல்லே?"
"ஓம் புள்ளை, சுப்பிரமணியம்
வராமல் வருஷம் பிறக்குமே? என்னான் இருந்தாலும் அவன் வருஷத்துக்கு வராமல்
இருப்பானே?"
'எப்பிடியும் அவன் வருவான். காதுப் பிடியிலை கமலா
கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற் குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத்
துவங்கினாலும், நேரத்தோடை ஸ்ரேஷனுக்குப் போயிடலாம். ஆனா, அவனுக்கு உதொண்டும்
புடிக்கிறேல்லை. "நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத்
தேவையில்லை"எண்டு எத்தினை கோசு கோவிச்சது எனக்கல்லோ தெரியும்?....
"புள்ளை.
தேத்தண்ணிக்கு உலை வைக்கல்லையே?"
"வைச்சிட்டன்"
"கொக்கா பரிமளம்
இன்னும் எழும்பல்லையே?.... உங்கடை அத்தாரும் வலு நேரஞ்செண்டுதான் வந்தவர். சரியாச்
சாப்பிட்டிருக்கவும் மாட்டார்."
முகத்தாரின் இன்னொரு மகளான பரிமளத்தின்
கணவனும் கொபம்பிலேதான் வேலை பார்க்கின்றான். பரிமளம் தைப்பொங்கலுக்குத் தந்தையின்
வீட்டிற்கு வந்தவள், திரும்பிப் போகவில்லை. கணவன் சதாசிவம் நேற்றிரவு
யாழ்தேவியிலேதான் திரும்பியிருக்கிறான்.
'பாவம். அதுகளுக்கு ஆண்டவன்
ஒண்டும் குறை வைக்கேல்லை. இதுக்கிடையிலை முப்பதினாயிரம் கொட்டி புது மோடிலை ஒரு
வீடும் கட்டிப் போட்டுதுகள். கதைச் சாங்கத்திலை வைகாசி நாளுக்குத்தான்
குடியேறுவினம் போலை கிடக்குது. பேந்தென்ன நெடுகிலும் குடியிருக்கப் போகினமோ?
வாடகைக்குத்தான் விடுவினம். காரும் ஒண்டு வாங்கியிருக்கினமாம். அதை இன்னும்
ஒருநாளும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரல்லை. அதுகளின்ரை அன்புக்கும்
அந்நியோன்யத்துக்கும் ஒரு குழந்தையைத் தான் ஆண்டவன் குடுக்கேல்லை. சாதகத்திலை
பின்னடிச் சந்ததி விருத்தி எண்டுதான் இருக்கு. ஏழு வருஷத்துக்குப் புறகுதான்
சதாசிவமும் தலைச்சனாப் பிறந்தவனாம். கொழும்பிலை பேர்போன டாக்குத்தரிட்டை எல்லாம்
காட்டினவை. அதுகளக்கு ஒரு குறையுமில்லை எண்டுதான்
சொன்னவையாம்....,
"கோப்பியை ஆர்றதுக்கிடையிலை குடியுங்கோ அப்பு" என்று பத்மா
கோப்பி கிளாஸை நீட்டுகிறாள்.
"என்ன புள்ளை, முட்டைக்கோப்பி
அடிச்சிருக்கிறாய். அத்தாரும் நிக்கிறார். இப்ப சுப்பிரமணியமும்
வந்திடுவான்...அவன்ரை அசோகன் முட்டைக் கள்ளனல்லே?"
"இஞ்சை தாராளமா முட்டையள்
இருக்குது. புட்டுக்கும் பொரிச்சும் வைக்கலாம்."
முகத்தார் கோப்பியைக்
குடிக்கின்றார்.
"மெய்ய புள்ளை....கொக்கா சௌந்தரம் இஞ்சை நேத்து
வந்திட்டுப் போனவளல்லே? என்ன சொல்லிப் போட்டுப் போனவள்? மத்தியானச் சாப்பாட்டிற்கு
வருவாளாமோ?"
"அத்தான் நேத்துத்தான் வந்தவராம். அவரின்ரை சகோதரி-அவைதான்
பறங்கித் தெருவார் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வருவினமாம். பின்னேரம்
போலைதான் வரவசதிப்படும் எண்டுசொன்னவை. எதுக்கும் கைவியளத்துக்க முகுந்தனை அனுப்பி
வைக்கிறாவாம்."
சௌந்தரம் பெரிய குடும்பக்காரிதான். இருந்தாலும் žமாட்டி ஒரு
žதேவி. ஆறு பஞ்சானம் குஞ்சுகளையும் ஒரு குறையுமில்லாமல் படிப்பிக்கிறாள். ஏதோ
ஆனைசேனையையே žதனமாகக் குடுத்தனான்? புருஷன் தங்கராசா உண்மையிலை ஒரு தருமராசாதான்.
புள்ளையளின்ரை படிப்புக்காக குடும்பத்தை ஊரோடை விட்டிட்டுப் போயிட்டான். அங்கை
கடைச் சாப்பாட்டோடை வயித்தை வாயைக் கட்டிச் žவிக்கிறான். அங்கையும் இங்கையுமாக
ரெண்டு சிலவுச் சமாளிக்கிறதுக்கு கந்தோர் விட்டாப்புறகு வேற வேலயளையும்
பாக்கிறதாம். அந்தந்த வயசிலை ஓடியாடிப் பிரயாசைப் பட்டு உழைச்சு சம்பாரிக்கத்தான்
வேணும். அதுக்கு ஏத்த சாப்பாடு வேண்டாமே? நல்ல வேளை...பெட்டையள்
கீழ்க்கண்டுகள்தான். அந்த அளவிலை ஒரு ஆறுதல்...வந்தவனுக்கு ரெண்டுவேளை தன்ரை கையாலை
சமைச்சுக் குடுக்காமல் இஞ்சை ஒடியாறாளோ? பொம்பிளைப் புள்ளையன்கரை சேருமட்டுந்தான்
எங்கடை...'
"என்ரை மடிசஞ்சையும் சால்வையையும் எடுத்துத்தா
புள்ளை."
"இவ்வளவு வெள்ளணத்தோடை கடைக்குப் போகப் போறியளே?"
"இல்லை,
உந்த முச்சந்திமட்டும் போயிட்டுவாறன். தச்சேலா ஏதேன் அரியது நரியது
கிடைச்சால்...'
சாறணை உதறிக் கட்டிக்கொண்டு, 'மடிசஞ்சை' இடுப்பிலே சொருகி,
ஏகாவடமிடச் சால்வையை எறிந்து படலையைக் கடக்கிறார்.
ரோஜா இதழ்ப் படுக்கையான
மென்மைசேர் நினைவுகளில், ஏதோ ஒரு முள்ளின் உறுத்தல், கால்களின் இயக்கத்திலேயே
படரும் நடை. சந்திக்கடைப் பசுபதியின் குரல் அவரைக் கடைப்பக்கம் ஆகர்ஷ’க்கின்றது.
"எப்பிடி அண்ணர்? வருஷம் எத்தினை மணிக்குப் பிறக்குதாம்? கைவியளம்,
நான்வேலைக்கு நேரம் எப்பிடிப் போட்டிருக்கு?" பத்துப் பேரிடம் கேட்டும்
பசுபதிக்குப் பொச்சுந் தீரவில்லை.
"பத்து இருபத்தெட்டுக்குத் தான் வருஷம்
பிறக்குது. கைவியளத்துக்கு இண்டைக்கு நாள் போடேல்லை. ஆனா, பொதுநாள். உடனையே
குடுத்தாலும் பாகமில்லை."
முகத்தார் பஞ்சாங்கம் பார்த்து வைப்பதில் வெகு
ஒழுங்கு. கடிகாரம் பார்க்கும் பழக்கமில்லாத அவர், எந்தச் சுபவேளைளையும் விநாடி
தப்பாமற் சொல்லுவார்.
"நான் ஒரு நாளும் இந்த நேரம் காலம் பார்த்துக்
கொண்டிருக்கிறேல்ல.... வருஷப் பிறப்பண்டைக்கே துவங்கீட்டால் சரிதானே? இல்லாட்டில்
இழுவல். ரெண்டு மூண்டு நாளைக்கும் நாள் போடமாட்டாங்கள்... அதுக்காகக் கடையைப்
பூட்டி வைக்கிறதே?"
"ஓமோம்...எல்லாம் நம்பிக்கையைப் பொறுத்தது தான் பசுபதி"
என்ற முகத்தார், "கோச்சி இன்னும் வரேல்லைப்போலை" என வேறு திசையிற் கதையைத்
திருப்புகின்றார்.
"நேரமாயிட்டுது...வருஷத்துக்கு இஞ்சினை வாற
சனக்கூட்டத்தோடை வாற ரயில் கொஞ்சம் முந்திப் பிந்தித்தான் வந்து சேரும். உங்கடை
மற்ற மேன் குமார சாமியும் இண்டைக்கு வாறார்போலை இருக்குது. தம்பியும் இஞ்சாலைப்
பக்கம் வந்து வெகுகாலமாகப் போச்சுது."
நெஞ்சிற் குத்திக்கொண்டிருந்த முள்,
ரோஜா இதழ்ப் படுக்கைக்குள் இனிதாக மறைகின்றது.
குமாரசாமி வருவான் என்பது
முகத்தாருக்குத் தெரியாது. அவனை எந்த விசேடத்திற்கும் வீட்டில் யாருமே எதிர்
பார்ப்பதில்லை. அவனுடைய போக்கு அப்படி. இருப்பினும், குமாரசாமி வருவது தனக்குப்
புதினம் என்பதை முகத்தார் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
"இஞ்சை பாத்தியளே
நோட்டீசை. முத்தமிழ் மன்றம் வருஷக் கொண்டாட்டம் நடத்துதாம். நாடகங்களும்
நடத்துறாங்களாம். அதுகளக்குத் தலைமை தாங்கு குமாரசாமி வருகுதாம்."
பசுபதி
நோட்டீசைக் கொடுக்கின்றான்.
இப்பொழுது முகத்தாருக்குக் கண் கொஞ்சம்
வெள்ளெழுத்து. ஆனாலும் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள மகனுடைய பெயரைக் கண்டு
பிடிக்கின்றார். மனம் மலர்கின்றது. முகபாவம் மாறாமல் நோட்டீசைத் திருப்பிக்
கொடுக்கின்றார்.
"கண்ணும் புகைச்சலாய்க் கிடக்குது."
"நான்
வாசிச்சுக் காட்டட்டே?"
"வேண்டாம் பசுபதி. நான் வாறன். மூத்தவன் போறான்போலை
இருக்குது காரிலை."
மூத்தவனைச் சொல்லி விடை பெற்றுக் கொண்டாலும்
முகத்தாருக்குக் குமாரசாமியைப் பற்றிய எண்ணமே மேலோங்கின்றது. குமாரசாமி முகத்தாரின்
இரண்டாவது புத்திரன். சிறுவயதிலேயே படித்து முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.
'அவன்ரை மூளைக்கு அவன் உப்புடியே இருக்க வேணும்? žமைப்படிப்பெல்லாம்
முடிச்சு, ரெண்டு மூண்டு காரும் நாலைஞ்சு பங்களாவும் வைச்சல்லோ வாழவேணும்? அந்தக்
காலத்திலை கண்ணூறுபட்டுப் போறாப்போலை சொல்லுவானுகள். சுப்பிரமணியனைச் சாட்டி
சௌந்தரத்துக்க மாப்பிள்ளை; குமாரசாமியைக் காட்டி பரிமளத்துக்கு
மாப்பிள்ளை...'
அதே நாக்குகள் திசை திரும்பி, அவரை மல்லாத்திக் கிடத்திக்
குறி சுட்டபொழுது....
'பிஞ்சிலை பழுத்தவன். தமையன் இருக்கக் கூடியதாக,
ரெண்டு குமருகள் வீட்டுக்குள்ளை பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கக் கூடியதாக,
இவனுக்குக் கலியாணப் பைத்தியம்...அதுவும் ஊர் பேர் தெரியாத வேதக்காரிச்சியாம்...தூ,
இவன்ரை படிப்பு நாக்கு வழிக்கத்தான் உதவும். இவன் தன்ரை படிப்பை தூக்கி எறிஞ்சு
போட்டு கக்கூசு வாளியைத் தூக்கித் திரியட்டும்....'
இத்தகைய வார்த்தைகள்
மார்பு மயிரைப் பொசுக்கி, இதயக் குலையை வெதுப்பியெடுத்த பொழுது...குறுக்கு இழைகளைத்
தறி தலையிலே மின்சார வேகத்தில் இணைக்கின்றன. சின்னத் தலையிடிக்கும்,
காய்ச்சலுக்குங்கூட žனிச் சுருளும், தேயிலைச் சரையும், வெற்றிலை பாக்குப்
பெட்டியுங் 'காவி'க் கொண்டுவந்தவர்கள், குமாரசாமியின் அவசரக் கலியாணத்தின் பின்னர்,
முகத்தார் வீட்டுப் படலையைத் திறக்க முகஞ் சுழித்துக் கூசினார்கள். அப்பொழுது
சுப்பிரமணியம் எல்லாவற்றிற்கும் ஆறுதலாக இருந்துங்கூட, முகத்தார் இந்தப்
பென்னம்பெரிய உலகத்திலே தன்னந் தனியாக விடப்பட்ட உணர்வுகளுடன் தத்தளித்தார்.
'நானோ, அவனோ என்னத்தைச் செய்யிறது? எல்லாம் அளந்தபடிதான் நடக்கும்.
அவன்தான் ஒரு புத்தியிலை செய்திட்டான். இனி, விரலை வெட்டியே எறியிறது? வெக்கம்
ரோஷத்தை விட்டிட்டு ஒருக்காப்போய் அதுகளைப் பாத்தன், அவள் பொடிச்சி புழையிலைலை.
குணவதி எண்டதை முகத்தைப் பார்த்தோடனை சொல்லுவினம். இவன்ரை குணத்துக்கு அவளிலை தான்
பச்சம் வைக்கவேணும். வேதக்காரிச்சி எண்டாப்போலை என்ன? சாதி குலம் பாத்துக்
கூழ்ப்பானைக்கை விழுந்தவை எத்தனைபோர் இருக்கினம்? இவன் எண்டாப்போலை ஒழுங்காக கோயில்
குளம் போறவனே? விபூதி பூசுறவனே? அவள் பொடிச்சியையும் கோயிலுக்குப் போகாமல்
மறிச்சுப் போட்டானாம், அவனுக்கு உடம்புமட்டும் பயித்தங்காய் போலை. ஆனா, உடும்பைப்
போலைத்தான் பிடிவாதம். இவ பார்வதிப்பிள்ளை எண்டாப்போல குறைஞ்சு பிடிவாதக்
காரியோ?...அவன்ரை போக்கு ஒரு தனிப்போக்கு. இஞ்ச ஒருத்தருக்கும் விளங்கிறேல்லை.
"உங்கை யாழ்ப்பாணத்துக் கிடுகு வேலியளாலை சங்கையை மறைச்சுக் கொண்டு மனச் சாட்சிக்கு
விரோதமாக நடித்துக் கொண்டே வாழ்பவருக்கு என்ரை போக்கு விளங்காது. என்ரை போக்கு
எனக்கு விளங்கும்" எண்டு ஒருநாள் உங்கினை சத்தம் போட்டான். இதுகளிலையும்
புழையில்லை. ஒட்டி நடக்காதவனோடை என்ன சகவாசம் எண்டு விலகிக் கொண்டுதுகள். புறம்பு
காட்டி நடக்கிற உவையளோடை எனக்கென்ன தொடர்சல் எண்டு அவனும் விலகிக் கொண்டான். அவன்ரை
மூண்டு பிள்ளையளும் படிப்பிலை வலு விண்ணராம். எனக்கெண்டா அதுகளைப் பார்க்க ஆசைதான்.
இவவின்ரை ஆண்டுத் திவசத்துக்குத்தான் ஒரு பொடியனைக் கூட்டியந்தான். 'அப்பப்பா'
எண்டு அவன் வாழைப் பழத்தோடை என்ரை மடியைவிட்டு இறங்கவும் மாட்டான்.
பொங்கல்-புதுவருஷம்-தீபாவளி எண்டு மூன்டு கொண்டாட்டம் வருகுது. ஒண்டுக்கும்
வாறேல்லை. எப்பவாவது இருந்திட்டு ஒருநாள் தனியா வருவான். புள்ளையளின்ரை சுகபலனைப்
பற்றிச் சளப்புவான். குசினிக்கைபோய் தானே ஏதாவது போட்டுத் தின்னுவான். அங்கை
கூட்டம் இஞ்சை கூட்டம் எண்டு சொல்லுவான். உடனையே போயிடுவான், பேந்து விசாரிக்கப்
பார்த்தால் அண்யை கோச்சிலையே ஊருக்குத் திரும்பீட்டான் எண்டு தெரியவரும்....
மெய்தான். அவன்ரை போக்கு இஞ்சை ஒருத்தருக்கம் விளங்கேல்லை. அதோடை அந்தப் போக்கிலை
ஒருத்தருக்கும் விருப்பமுமில்லை. ஒரு மாதிரியான கோபத்தனல் இவையளின்ரை மனங்களிலை
இருக்குது. என்ன இருந்தாலும் சகோ தர பாசம் எண்ட சாம்பல் அதுகளை மூடி
வைச்சிருக்குது. வீட்டிலை எல்லாரும் அவனைக் குறையாத்தான் பேசுவினம். நான்
மட்டுந்தான் அவன்ரை பக்கத்திலை பேசுறது, என்ன இருந்தாலும் அவனும் என்ரை மேன்தானே?
இதுகள் இதுகளின்ரை போக்கு. அவன் அவன்ரை போக்கு கையிலே இருக்கிற அஞ்ச விரலும் சமமே?
ஒண்டுக் கொண்டு வித்தியாசமில்லையே? வீட்டுக்குள்ளையும் உப்புடித்தான்...
உருக்குள்ளை அவனுக்குத்தானே பேரும் நடப்பும்? அவன் இவ்வளவு உதவரங்கெட்டவனெண்டால்
ஊரிலை உப்புடிப் பேர் இருக்குமே? இதுகளுக்குப் படிச்சும் புத்தியில்லை, இவங்களைக்
குடும்பத்துக்காகப் பெத்தன். குடும்பம் தேர் போலை நடக்குது. அவனை ஊருக்காகப்
பெத்தன். அவன் றோட்டளக்கிறான். எண்டு வைச்சுக்கொள்ளுவம். அதுக்காக அவனை நான்
மெச்சிக் கதைக்கிறதும் இதுகளுக்குச் சில நேரம் புடிக்கிறதேல்லை. ஓரவஞ்சக மனுஷன்
எண்டு கூட நினைக்குதுகள். "நீங்கள் என்னத்தைத்தான் சொன்னாலும், அவனும் என்ரை
புள்ளைதான்" எண்டு சொல்லுவன். இதுகளும் பேக்கூத்துத்தான் ஆடுகிறது. ஏதோ நான்
அவன்தான் என்ரை புள்ளை எண்டு சொலலிப்போட்டதைப் போலை. தாய் மனம் பித்துத்தான்,
இவவும் இப்ப இல்லை. என்ரை மனமும் பித்துத்தான். இது ஒண்டை மட்டும் நான்
குமாரசாமியைப் பற்றி மாட்டன். இவையள் ஆயிரத்தைச் சொல்லட்டும். சுப்பிரமணியமா
இருக்கட்டும்; சவுந்தரம் பரிமளமாக இருக்கட்டும்; மனோகரன்- பத்மாவாக இருக்கட்டும்;-
முகத்தார் ஆறுமுகத்தின்ரை புள்ளையளெண்டுதான் உர்தேசத்திலை தெரியும்...ஏன், சதாசிவம்
தங்கராசா எண்டாப் போலை என்ன? என்ரை மருமக்கள் எண்டாத்தான் நல்ல விளப்பமாத்
தெரியும். ஆனா, கடைத் தெருவிலை எத்தினை பேருக்கு என்னைக் குமாரசாமியின்ரை
அப்பனெண்டுதான் தெரியுமெண்டு இவையளுக்குத் தெரியுமே? அண்டைக்கு பஸ்ஸ’லை நான்
தெல்லிப் பழைக்குப் போகேக்கிள்ளை ஒரு பொடியன் "நீங்கள் குமாரசாமியின்ரை
தகப்பனல்லோ?" எண்டு கேட்டுப் போட்டு, தான் குந்தியிருந்த இடத்தை எனக்குத் தாறான்.
அந்தப் பொடியனும் பெரிய படிப்புத்தானாக்கும்.'
"என்ன முகத்தார்? என்ன
பொடியன் எல்லாம் வந்திட்டினமோ?" ஐயம்பிள்ளை தன்னுடைய படலையில் நின்றபடி குரல்
கொடுக்கிறார்.
"கோச்சி அப்பவே வந்திருக்கவேணும்."
"சுப்பிரமணியம்
வராமல் நிற்க மாட்டான். மனோகரனும் வாறானாமோ?"
"ஓம்.
கடுதாசிபோட்டிருந்தான்."
"படலையிலை நிண்டுகதைக்கிறியள்? கடைக்குப் போறதுக்கு
முந்திக் கொஞ்சம் பாவிச்சிட்டுப் போகலாமெண்டால்...என்ரை மனுஷ’யைத் தெரியாதே?
ஆற்றையேன் சாட்டிலைதான்...உள்ளுக்கை வாருங்கோவன்"
"இப்ப வாதக்குணமாகவும்
இருக்குது. ஒத்துக் கொள்ளுதுமில்லை."
"இது நித்தமே முகத்தார்? ஒரு வருஷம்
பெரு நாளுக்குத்தானே? உங்களைத் தூரத்திலை கண்டோடனையே, உங்களோடைதான் வருஷத்தைத்
துவங்க வேணுமெண்டு ஆசை வந்திட்டுது."
"ஏன்தான் உன்ரை ஆசையையும்
கெடுப்பான்?"
முகத்தார் ஐம்பிள்ளையுடன் கொஞ்சம் 'முஸ்பாத்தி' பண்ணி விட்டு,
அவருடனேயே கடைக்குச்சென்று, மக்கள்- பேரப்பிள்ளைகள் ஆகிய கசலருக்கும் இதமாகக்
கறி-காய்கறி-பழவகைகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது பத்துமணியாகிவிட்டது.
*
வீடு கலகலப்பு நிறைந்து காணப்படுகிறது. சுப்பிரமணியமும்
குடும்பமும் வந்தால் சத்தத்திற்குக் குறைவில்லை. பிள்ளைகள் புத்தாடை புனைந்து
காணப்படுகின்றார்கள்.
'ஐயம்பிள்ளையோடை மினக்கட்டு நான்தான் நேரம்
பிந்தீட்டன் போலை கிடக்குது. சுப்பிரமணியம் எல்லாப் புள்ளைகளுக்கும் ஒரு
நிறத்திலைதான் உடுப்புகள் வாங்கியிருக்கிறான்....இஞ்சை பாருங்கோவன் இவன்
கடைக்குட்டி தன்ரை சட்டைதான் திறமெண்டு சண்டை பிடிக்கிறதை....ஓ. பரிமளமும்
சதாசிவமும் கூட முழுகீட்டினம். உந்த உடுப்புகள் சரியான விலையாம். வருஷப்பிறப்புக்கு
நெடுகிலும் உவை உப்புடித்தான் எடுக்கிறவை. கோயிலுக்குப் போகப் உப்பிடித்தான்
எடுக்கிறவை. கோயிலுக்குப் போகப் புறப்பட்டு நிற்கினை போலை. நல்லூரானே இதுகளுக்கு
ஒரு புள்ளைப்பாக்கியத்தைக் குடு...சே, கண்ணூறு பட்டிடப்பிடாது....பத்மாவுக்கு
உந்தச் žலை வடிவாத்தான் கிடக்குது. சாமத்திய வீட்டுக்குள்ளை žலையோடு பாத்ததுக்கு
இப்பதான் சந்தனக்கலர் நிறத்திலை தனக்கொரு žலை வாங்கியர வேண்டும் எண்டுமனோகரனும்
எழுதினவள். அவன்தான் வாங்கியந்திருக்க வேணும்... இன்னும் சுப்பிரமணியமும் கமலாவும்
முழுகி முடிக்கேல்லைப் போலை...உங்கை கிணத்தடியிலை நிக்கினம்.'
"புள்ளை
பத்மா! இத்தக் கறி சாமான்களைக் கொண்டுபோய் குசுனீக்கை வை."
"அப்பு
காலைச்சாப்பாடும் இல்லாமலே கடைக்குப் போனவர்? நீங்கள் வருவியரெண்டு முட்டையும்
பொரிச்சுக் காத்திருந்ததுதான் மிச்சம்."
"அவன் ஐயம்பிள்ளை விடேல்லை. அவனோடை
அப்படியே கடைக்குப் போனதும் நல்லதாப் போச்சுது. சவ்வு கிவ்வு இல்லாத நல்ல இறைச்சி
கிடைச்சுது. சின்னதுகள் உறைப்புத் தின்னாயினம். பால்கறி வைக்க ஈரல் கிடைச்சுது.
கொத்தார் இறைச்சி வகை தின்னாதவர். நல்லொரு பாரை கிடைச்சுது. மிச்சம் பொரியலுக்கும்
உதவும். கைவியளத்தை முடிச்சிட்டுப் போயிருந்தால் கடையிலை ஒரு மண்ணும்
வாங்கியிருக்கேலாது."
"அப்புவுக்கு இந்த வருஷப்பிறப்பு நல்ல முழுவியளத் தோடை
துவங்கியிருக்குது" என்று சொல்லிக் கொண்டே, பெரிய உமலைத் தூக்க முடியாமல் தூக்கிக்
கொண்டு அடுக்களைப் பக்கம் பத்மா போகின்றாள்.
"இந்த வேட்டிதான்
பெத்தப்பாவுக்கு" என்று கூறிக்கொண்டே 'பீஸ்' வேட்டி ஒன்றை 'ரீப்போ' வில் அசோகன்
வைக்கின்றான். "சித்தப்பாவும் அப்பாவுக்குக் கரை போட்ட வேட்டி ஒண்டு வாங்கியந்தவர்"
என்பதையும் அறிவிக்கின்றான். எவ்வளவோ தடுத்தும் பரிமளம் கேட்கவில்லை. அவள் நேற்றே
'பரமாஸ்' சோடி ஒன்று எடுத்துக் கொடுத்துவிட்டாள். தான் முன்னர் கொண்டுவந்த
வேட்டியுடன் பெத்தப்பாவின் மற்றைய உடுப்புகளையுங் கொண்டு வந்து அடுக்கி "டோய்,
பெத்தப்பாவுக்கு இந்த முறை நாலு புதுவேட்டி" என்று உரக்கக் கத்தினான்.
"மூன்று வேட்டிதானே? ஒன்று சால்வையல்லோ?' என்று மூலையில் நின்று மூத்தவள்
ஹம்ஸதொனி திருத்துகின்றாள்.
"வீண் சிலவு. எவ்வளவு சொன்னாலும் கேக்க
மாட்டுதுகள். அதுகளுக்கு ஏதோ செய்யவேணுமெண்ட ஆசை. வீட்டோடை நிக்கேக்கிள்ளை
உதெல்லாத்தையும் மனோகரன்தான் உடுத்துக் கிழிப்பான். இப்ப அவருமல்லோ எடுத்துத் தரத்
துவங்கியிருக்கிறார். இதுகளை இனி உடுத்துக் கிழிக்கிறதற்கு சௌந்தாத்தின்ரை மூத்தவன்
முகுந்தன்தான் இருக்கிறான். அவனும் இந்த மார்கழியிலை žனியர் சோதினை எடுக்கப்
போறானாக்கும்.'
ஈரச் žலையுடன் கமலா பெரிய அறைக்குள் ஓடுகிறாள். முற்றத்தில்
கம்பிக்கொடிக்குப் பக்கத்தில் நின்று தலையைத் துவட்டிக் கொண்டிருந்த சுப்பிரமணியம்,
"மருத்துநீர் அந்தா கிணத்துக்கட்டிலை இருக்குது. போய்க் குளிச்சிட்டு வாருங்கோ
அப்பு" என்கிறான்.
"என்ன அவசரம்? மனோகரனும் முழுகீட்டு விடட்டன். எங்கை
அவனைக் காணேல்லை?"
"உதுகள் ஏதோ ஐஸ்கிறீம் வேணும் žனிச் சித்தப்பா எண்டதுகள்,
அவன் வாங்கப் போயிட்டான் போலை கிடக்குது. அவன் ஆறுதலாகக் குளிக்கட்டும். நீங்கள்
முதலிலை குளியுங்கோ; வருஷம் பிறக்கப் போகுது, குடும்பம் வைக்கல்லோ
வேணும்?"
"ஓமோம்." முகத்தார் கிணற்றடிக்குப் போகின்றார். கட்டியிருக்குஞ்
சாறத்துடன் குளிப்பது அவருடைய வழக்கம். 'சனி நீராடு' என்று வாரத்திற்கு ஒரு முறை;
மூன்று பெருநாள் நீராட்டம் பிரத்தியேகமாக வந்து சேரும். தலையிலே மருத்துநீரை வைத்து
நன்றாகத் தப்புகின்றார்.
"சித்தப்பா, சித்தப்பா" என்று அசோகன்
ஆர்ப்பரிக்கிறான்.
'குமாரசாமி வந்திட்டாளோ?'
ஆசையுடன்
எட்டிப்பார்கிறார். தொட்டாச்சுருங்கி இலைகள் கூம்புகின்றன.
'இல்லை, அவன்
மனோகரன்தான். மூண்டு நாலு மாசத்திலை கொஞ்சம் வளந்திருக்கிறான். சொந்தமாச்
சம்பாரிக்கத் துவங்கீட்டால் கொஞ்சம் பூரிப்புத்தானே? நல்ல தாராளமாச்
சிலவழிக்கிறார். ஓம், போய்க் கொஞ்சமாசந்தானே? இன்னும் கொழும்புப் பழக்கங்கள்
நல்லாப் படிபடேல்லைப் போலை...குமார சாமியை இன்னும் காணேல்லை. சிலவேளை, நல்ல நாளும்
பெருநாளுமா எல்லாரும் கொண்டாட்டத்திலை நிக்கேக்கிள்ளை நான் ஏன் குழப்புவான்
எண்டுபோட்டு நிண்டிடுவானோ?'
இந்த எண்ணம் ஏற்பட, காலையில் இலேசாக உறுத்திய
நெஞ்சில் முள் ஆழமாக இறங்ககின்றது. வலிதாங்க மாட்டாது அவஸ்தைப்படுகின்றார்.
அவஸ்தைப் பரிகார எத்தனத்தில் பெருமூச்சொன்று நீள்கின்றது.... இயந்திர வேகத்தில்
கைகள் துலாக் கயிற்றை மேலும் கீழுமாக இழுக்க வாளி வாளியாகத் தண்ர்தலையிலேயே
கொட்டப்படுகின்றது.
"நானும் நல்ல வேளைக்குத்தான் வந்திருக்கிறன். எல்லாரும்
மருந்து நீராட்டம் முடித்தாயிற்றுப் போலை....பத்மா இதைப் புள்ளையளுக்குப்
பிரிச்சுக் குடு."
'இது நிச்சயமாக் குமாரசாமியின்ரை குரல்தான். உந்த
வெண்கலக் கடை யானையின்ரை குரல் அவன்ரைதான்.'
தண்ர் காதுக்குள்
புகுந்து, தன் மனக்குகை நினைவுகளுக்கு உருவங்கொடுத்து. மாரீச ஜாலம் நடைபெறுகின்றதோ
என்று கூட ஒரு கணம் நினைக்கின்றார். இருந்தாலும் ஆசை இழுக்கின்றது.
"அப்பு
எங்கை?"
"அவர் குளிக்கிறார்....அப்பு! சின்னண்ணர் வந்திருக்கிறார்." என்று
பத்மா குரல் வைக்கின்றாள்.
துளிர்க்கும் நம்பிக்கை, பச்சையின் பசுமையை
உறிஞ்ச, மறைப்புத் தட்டிக்கு மேலால் எட்டிப் பார்க்கின்றார்.
முற்றத்தில்
குமாரசாமி சிரித்தபடி நிற்கிறான். அவன் பக்கத்தில் பத்மா நின்று, அவன் கொடுத்த
'சரை' யிலிருந்து இஞ்சு விசுக்கோத்துகளைப் பங்கிடுகின்றாள். சுப்பிரமணியத்தின்
கடைக்குட்டி, வேற்று முகத்தைக் கண்டு பயந்தமாதிரி, கதிரையின் பின்னால் முறைவதை அவன்
கவனிக்கத் தவறவில்லை. அவனுடைய பயத்தைக் கவனித்த குமாரசாமி, "நானுஞ்
சித்தப்பாதான்...ஒருத்தருஞ் சொல்லித் தரேல்லையா?" என்று சொல்லி மீண்டுஞ்
சிரிக்கின்றான்.
'அதே சிரிப்பு. இவன்ரை சிரிப்பு ஒரு நாளும் மாறாது...
என்னைப் போலை அந்தச் சுருட்டை மயிர் முன் குடு மபி வைச்சது போலை நிக்கிறதும்
மாறாது. என்னதான் மனக் கோவங்கள் இருந்தாலும், அவன்ரை அந்தச் சிரிப்பைக் கண்டோடனை
ஒருத்தருக்கும் அவனை ஏசப் பேசமனம் வராது. ஆரையும் மருட்டும்.'
"என்ன
வாறனெண்டு அறிவிக்க ஒருபோஸ்டு கார்டு கிடைக்காமல் போச்சுது உனக்கு" என்று முகத்தார்
கடிந்து கொள்ளுகிறார்.
"எல்லாம் அவசரந்தான், அப்பு...போஸ்ட் காட்
என்னத்துக்கு? நான்தான் நேரிலை வந்திட்டனே... அது கிடக்க, பத்மா வருஷத்துக்குச் žலை
கட்டியிருக்கிறாள்...." குமாரசாமி பத்மாவை அந்தக் கோலத்தில் அப்பொழுதுதான் முதன்
முறையாகப் பார்க்கின்றான்.
"ஓம். இவன் மனோகரன் தன்ரை முதல் சம்பளத்திலை
எடுத்துக் கொண்டந்து குடுத்திருக்கிறான்" - வாளிக் கயிற்றைப் பிடித்துக் கொண்டே
முகத்தார் சம்பாஷணையில் ஈடுபடுகின்றார்.
"அத்தான் எங்கை பத்மா? காரிலையே
வந்தவர்?"
"இல்லை. ராத்திரி உத்தரதேவியிலை வந்து சேர்ந்தவர். இப்ப அக்காவோடை
கோயிலுக்குப் போயிட்டார்" என்று கூறிக்கொண்டே பத்மா அடுக்களைப் பக்கம் போகின்றாள்.
"புதுக் காரொண்டு எடுத்ததெண்டு கேள்விப்பட்டன். என்ன சாதிக்
காராம்?"
"எனக்கென்னடா தெரியும்?"
"காரின்ரை விலையளும் இப்ப என்ன
மாதிரி ஏறிக்கிடக்குத் தெரியுமே? உங்காலை வீட்டுப் பொடியன்-அவன்தான் ரத்தினகோபால் -
காரை வித்து ப போட்டு 'ஸ்கூட்டர்' வாங்கியிருக்கிறானாம்..."
"காரை
விக்கேல்லையாம்...இசுக்கூட்டரும் வாங்கினவனாம்.
"இப்ப ஏதும் சாமான் கீமான்
வாங்க முடியுமே? அதுதான் வித்துப் போட்டான். அவன்ரை காரை ராசாத்தோட்ட சங்கரப்பிள்ளை
தான் வாங்கினதாம்... அவன்ரை கல்யாணப் பேச்சுக்கால் எப்பிடியாம்?"
"அது
குழப்பிப்போய்க் கிடக்குதாம்."
"நீங்கள் மானிப்பாய்ப் பகுதியிலை இருந்து
வந்த சம்பந்தத்தையல்லோ சொல்லுறியள்? இது இங்காலை கோப்பாய்ப்
பகுதியிலையாம்..."
"அதைப் பற்றி நான் கேள்விப்படேல்லை."
தூணுடன்
சாய்ந்து கொண்டு நிற்கும் மனோகரனைப் பார்த்து. "தம்பி, உங்கடை கொம்பனியை அரசாங்கம்
கெதியா எடுக்கப் போகுது போலை, தென் யூ வில் ஒல்சோ பிக்கம் ஏ கவுண்மென்ட்
சேவண்ட்..." என்கிறான்.
"அப்பிடி நடக்காது..."
"நீ இருந்து பாரன்
தம்பி...அப்பு! தங்கராசா அத்தானுக்கு அடுத்தமாசம் உத்தியோக உயர்வு கிடைக்கப்
போகுதாம். தெரியுமோ?.
"உதுகள் எனக்குத் தெரியுமே?"
"முந்தநாள் அவரை
ஸ்டேசனிலை கொண்டாந்து விடேக்கிள்ளை தான் அப்பிடி ஒரு புரமோஷன் கிடைச்சாலும்
கிடைக்கும் எண்டு அத்தான் சொன்னவர்." மனோகரன் தனக்குத்தெரிந்த சமாசாரத்தைச்
சொல்லுகிறான்.
'இவன் ஊருக்கு வாறதோ அத்திபூத்தாப்போலை. ஆனா, ஊரிலை
ஒண்டையும் விடாமல் அறிஞ்சு வைச்சிருக்கிறான்.
முகத்தார் அவசர அவசரமாக
மூன்று நான்கு 'பட்டை'களை ஊற்றி, 'முழு'க்கைச் சுபத்துடன்
முடிக்கிறார்.'
வந்துகொண்டே, "ஆனைக்கோட்டை வைத்தியரின்ரை பொடிச்சியைப்
பற்றிக் கேள்விப்பட்டனீயே..." என்கிறார்.
"ஓமோம். நான் கேள்விப்பட்டன்.
சாதி ஒரு மாதிரி எண்டுதான் இவை கூத்தாடினவை. அவன் நல்ல பொடியன் கெலகதரையிலை
படிப்பிக்கிறான்."
"ஓ....என்னவோ உப்பிடித்தான் ஒரு பேர்
சொல்லுகினம்..."
தலையைத் துவட்டும்பொழுது, எந்தப் புத்தாடையை அணிவது என்னும்
யோசனை அவரை ஆக்கிரமித்துக் கொள்கின்றது. சிறுபிள்ளைத் தனமன்று. பெரிய
பிள்ளைகளுக்குள் தன்னுடைய செயலால் மனத்தாங்கள் ஏற்படக்கூடாது என்பதில் அக்கறை.
அதற்கிடையில், "நீங்கள் ஏன் ஈரத்தோடை நிக்கிறியள்? இதைக் கட்டுங்கோ.
நீங்கள் விரும்பிக்கட்டுவியளே, நீலக்கட்டம் போட்ட சாறன்" என்றபடி கையில்
வைத்திருந்த ஒரு பார்சலை நீட்டுகின்றான்.
குசேலனின் அவல் முடிச்சை
அவிழ்த்து உண்ட கண்ணனின் உள்ளத்திலேகூட இவ்வளவு மகிழ்ச்சி தோன்றியிருக்க முடியாது.
விரித்து உடுக்கின்றார்.
சலனமெதுவுமின்றி மற்றவர்களைப்
பார்க்கிறார்.
மௌனம்.
"அப்புவுக்கு நல்லாத்தான் இருக்குது..."
வெளியே வந்த பத்மா மௌனத்தைக் கலைக்கின்றாள்,
"நீ நிண்ட ஊராலை வந்தனீயே?
இரன்; கும்பம் வைக்கப்போகிறன். பொது நாளா இருக்கிறதாலை உடனையே கைவியளம்
குடுக்கலாமெண்டிருக்கிறன்."
"இல்லை அப்பு. எனக்கு உதுகளிலை அவ்வளவு
நம்பிக்கை இல்லை எண்டது தெரியுந்தானே? அதோடை விடியக் காலமையே கார்க்காரனிட்டைக்
கைவியளம் வாங்கீட்டன்."
முகத்தாரின் முகத்தில் மூட்டம்.
"இவன்தான்
புது நாணயமாப் புறந்தவன். ஒண்டிலும் நம்பிக்கை இல்லாதவன் டேய்! புத்தகப் படிப்பும்,
நீ எழுதுற கதையளும் நாடகங்களும் படிப்பில்லை. ஆவது அறிவது அறிவல்ல; வீட்டிலை வேவது
அறிவதுதான் அறிவு. ஊரோடை ஒத்து வாழுறதுதான் படிப்பு." - இவ்வளவு நேரமும் அமைதியாக
இருந்த சுப்பிரமணியம் சொல்லுகிறான்.
"அதுக்கில்லை அண்ணை. நான் அஞ்சாறு
பேரோடை வந்திருக்கிறன். ஊராங்கடை காசிலை அவங்களை இவ்வளவு தூரம் கூட்டியந்தனான்.
இந்த ஊருக்கு அவங்கள் புதிசு. அவங்களை ஹோட்டலிலை விட்டிட்டு நான் இஞ்சை மினக்கடுறது
அவ்வளவு வடிவில்லை எண்டுதான் சொல்ல வந்தானான்...அப்ப நான் வாறன்" பதிலுக்குக்
காத்திருக்காமல் திரும்புகின்றான்.
'என்ன இருந்தாலும் மரியாதை தப்பாது, ஆர்
சொன்னாலும் தலையைக் கவண்டு கொண்டுதான் கேப்பான். மரியாதைக்காகத்தான். ஆனா, தான்
நினைச்சதைத்தான் செய்வா.'
"சின்னண்ணை....இஞ்ச கோப்பி கொண்டந்துட்டன்.
குடியுங்கோவன்...." என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள். பதிலொன்றும் பேசாமல்
அதை வாங்கிக் குடித்து விட்டு, கிளாஸைத் திருப்பிக் கொடுக்கின்றான்.
முற்றத்து மாங்கன்றில், கும்பத்துக்கு மாவிலைகள் ஒடித்துக்கொண்டே, "அப்ப
மத்தியானச் சாப்பாட்டுக் கொண்டாலும் வாறியோ?" என்று முகத்தார் கேட்கின்றார்.
நப்பாசையின் உள்முடிச்சு அவ்வினாவிற் காளத்திரியாட்டமிடுகின்றது.
"அவன்தானே
அப்பு சொல்லிப் போட்டான். கூட்டாளியளை விட்டுப் போட்டு வரலாது எண்டு" என்று
சுப்பிரமணியம் சொல்லுகின்றான். வழக்கத்தில் மூத்தவன் அதிகம் பேசுவதில்லை.
"அப்ப வாறன்....எல்லாருக்கும் வாறன்" என்று கூறி அவசரமாகப் படலையைத்
திறக்கும் குமாரசாமி, ஒரு கணந் தரித்து, "அப்பு, இண்டைக்கு எங்கடை நாடகம் பின்னேரம்
முத்தவெளியிலை நடக்கும்....நல்லா இருக்கும்....நேரம் இருந்தா வாருங்கோவன்" என்று
குரல் கொடுத்துச் செல்லுகிறான்.
*
கும்பம் வைத்து கைவிசேடம்
பரிமாறப்பட்டாகிவிட்டது. விறாந்தையிலுள்ள 'செற்றி'க் கதிரைகளில் அமர்ந்து
சுப்பிரமணியமும், சதாசிவமும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பேச்சு
சதாசிவம் புதிதாக வாங்கியுள்ள காரைச் சுற்றிச் சுழல்கின்றது. அவர்களுக்குச் சற்றுத்
தூரத்தில், தூணிலே சாய்ந்தவாறு சௌந்தரத்தின் சார்பாக கைவிசேடவைபவத்திற் கலந்து
கொண்ட முகுந்தன் நிற்கிறான்.
'அவன் மூத்த மாமனுக்கு நல்ல
மரியாதை.'
கமலா, பரிமளம், பத்மா ஆகிய மூவரும் சமையல் வேலையில் மும்முரமாக
ஈடுபட்டிருக்கின்றார்கள். ஹம்ஸதொனியும் பெரிய மனுஷ’மாதிரிக் கூடமாட வேலை
செய்கின்றாள். 'குத்தி'ப் பலகையில் இருந்து கொண்டு, அவர்களுக்கு மனோகரன் தன்னுடைய
கொழும்பு அநுபவங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
கறித் தேங்காய்களை
யெல்லாம் 'போர்'த் தேங்காய்களாக்கி முற்றத்திலே, போர்த் தேங்காயடி நடை பெறுகின்றது.
யாருடன் என்ன விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும், அசோகன் 'குழப்'பாமல் இருக்க
மாட்டான். கல்லிலே பட்டுத்தான் தன்னடைய 'கையான்' உடைந்ததாக அவன் சண்டை
பிடிக்கிறான்.
புதுவருடத்துக்கு ஏனைய மக்களின் அன்பளிப்பாகக் கிடைத்த
புத்தாடைகள் 'ரீப்போ'யில் இருக்கின்றன. அவற்றை முகத்தாரின் கண்கள் மேய்கின்றன.
"புள்ளை பத்மா!"
அவள் கைவேலைகளை விட்டுவிட்டு வருகின்றாள்.
"உந்த உடுப்புகளை எடுத்து வை புள்ளை. பின்னேரம் ஒருக்கா முத்த வெளிக்குப்
போகவேணும் நாடகம் பார்க்க. போகேக்கை மூத்தண்ணர் வாங்கித் தந்த வேட்யையும், கொத்தார்
வாங்கித் தந்த சால்வையையுந்தான் போட்டுக்கொண்டு போகவேணும்"
"ஐயோ,
இளையண்ணர்தான் பாவம்"
"ஓம் தங்கச்சி. எளியவனாப் பிறந்தாலும், இளையவனாப்
பிறக்கக் குடாது" என்று மனோகரன் அடுக்களையிலிருந்தபடியே சொல்லுகின்றான்.
இதிலே என்ன நகைச் சுவையைக் கண்டார்களோ? அண்ணரும் அத்தானும் விழுந்து
விழுந்து சிரிக்கின்றார்