ஈழநூல் 064  
நூல் 

வீ (பகுதி 1,  பகுதி 2)

ஆசிரியர்:

எஸ். பொ.

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

வீ

எஸ்.பொன்னுத்துரை

பகுதி 2

---------------------------------------------------

மறு

திருவாளர் சிவக்கொழுந்து கட்டிலிற்படுத்திருந்தார். அதே அறையில், திருமதி புனிதம் சிவக்கொழுந்து தரையில் விரிக்கப்பட்டிருந்த பனையோலைப் பாயிலே சயனித்தாள்.

அவர் உத்தரதேவியில் ஊர் திரும்பியவர். இரவு பதினொரு மணிக்குத்தான் உத்தரதேவி யாழ்ப்பாணம் வந்தது. மூக்கு முட்டிய 'கலை.' வீட்டில் விரதம். சாப்பாடுங் கிட்டவில்லை. பிரயாண அசதியுடன் வெறும் வயிறாக, கால்களைக் கட்டிலின் சட்டங்களில் எறிந்து எறிந்து 'அலட்டி'க் கொண்டு படுத்திருந்த சிவககொழுந்து கண்களை விழித்தார். தாவணிப் போர்வைக்குள் சரக்கட்டையாகச் சுருண்டு கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.

"எணேய்!"

"....ம்.." மறுபக்கம் புரண்டாள்.

"என்னணை புதுநாணமா நித்திரை கொள்ளுறாய். விடிஞ்சல்லே போச்சு."

திருமதி சிவக்கொழுந்துவின் செவிகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விழுந்தன. கோடிப்புறமிருக்கும் நாவல் மரத்தில் 'அடை'யும் கோழிகள் கூவியதும் அவளுக்குக் கேட்டது. அந்நேரத்திலேயே துயிலெழுந்து, தன் வீட்டு அலுவல்களைச் சுறுசுறுப்பாகக் கவனிப்பது அவளுடைய வழக்கம். இன்று அவளால் எழுந்திருக்க இயலவில்லை. தேகமெல்லாம் பச்சைப் புண்ணாக நோகும் அலுப்பு. அவருடைய குரல் காதில் விழுந்த பின்னர், 'ž, மூதேவி வாலாயம் கூடாது' என்ற எண்ணம் உதித்தது.

"ஓமப்பா நித்திரை சரியா அமத்திப் போட்டுது" என்று சமாதானங் கூறியவாறு எழுத்து, சேலையைச் சரி செய்தாள். அவர் தலைமாட்டிற் கிடந்த 'லோட்டா' தண்­ரை முரடு முறிக்குந் தாளத்துடன் முடித்துவிட்டு, மறுபக்கம் புரண்டு கண்களை மூடிக்கொண்டார்.

புனிதத்திற்குத் தலையைச் சுற்றியது. சுமையேற்றப்பட்ட வாக்கிலே தலைப்பாரம். செமியாக் குணக்கோலத்தில் வயிற்றைக் குமட்டிக்கொண்டும் வரும் உணர்வு. இத்தனைக்கும் வெள்ளியும் சனியும் விரதம்; ஒரு நேரச் சாப்பாடு. கிணற்றடிப் பக்கம் விரைந்தாள். வெகு பிரயாசையுடன் சத்தத்தை அடக்கி, எலுமிச்சை மரத்தின் கீழ் வாந்தியெடுத்தாள். கால்களாற் புழுதியை 'எத்தி' மூடினாள். எலுமிச்சைப் பழமொன்றைப் பறித்து மோந்தாள். நிலை சற்றே žரடைந்தது. பற்களில் உமிக்கரி போட்டு மினுக்கி, முகம் கால்கழுவி, கிழக்கு நோக்கி விபூதி பூசி, வீட்டுப் பணியில் ஈடுபட்டாள்.

பானையில் அடைத்திருந்த புளியம் பழமொன்றை உப்பிலே தோய்த்து வாயிலே திணித்துக் கொண்டு, குசினிக் கதவடியில் நின்று வீட்டறைப் பக்கம் பார்த்தாள். திருவாளர் எபந்து வரும் 'சிலமனை'க் காணவில்லை, உலையில் நீர் மலமலத்துக் கொதித்தது....

தேங்காய்ப் பாதியைத் துருவி எடுத்து, பிட்டுக்கும் மாக்குழைத்து முடிந்த பொழுதுதான், கிணற்றடியில் வலு அவதியுடன் ஓங்காளிக்கும் சத்தங் கேட்டது. விரல் நுனிகளிலே தன் உடற் பாரத்தை ஏற்றி, குறுக்கு வேலியால் எட்டிப் பார்த்தாள். சிவக்கொழுந்து விரல்களைத் தொண்டைக்குள் திணித்து, பித்தத்தை இறக்கி முகம் கழுவிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கெதியாக முட்டைக் கோப்பியைக் கலந்தெடுத்தாள்.

"என்னணை, முட்டைக் கோப்பியே? இண்டைக்கும் ஏதேன் விரதம் கிரதமாக்குமெண்டு நினைச்சன்."

"உங்களுக்கு வருஷத்திலை முந்நூற்றறுபத்தைஞ்சு நாளும் பச்சை மீன் வேணும். நேத்துத்தான் புரட்டாசிச் சனி விரதம்."

"விரதத்தோடை ரயில் பயணக்காரனையும் பட்டினி போட்டிட்டாய்."

"உன்னாணை, மத்தவங்களிலை குத்தம் கண்டு பிடிக்கிறதுக்கு உங்களைப் போலை ஆளில்லை. இன்ன நாளைக்கு வாறதெண்டு ஒரு விசளம் எழுத மூண்டுசேம் கிடைக்கேல்லை. பேந்தென்ன? வந்தாக் கண்டு கொள்ளுவம்."

கோப்பையை உதட்டோரம் வைத்துக் கோப்பியில் ஓரு முரடு உறிஞ்சிக் குடித்தவாறே, "எங்கை, கொம்மாவைக் காணம்?" என்றார்.

"எப்பவும் நெக்கு ஊழியம் செய்யுறதெண்டு அவவுக்குத் தலையெழுத்தே? தனிய இருக்கிறதெண்டு துணைக்க இருந்தவ. வீரபத்திரரைக் கண்டதும், ராத்திரியே அவதம்பியோடை அண்ணன் வீட்டுக்குப் போயிட்டா."

"அதுக்கு, நடுச் சாமத்திலையே போறது? அந்தக் கிழடிக்கு என்ர நிழலும் புடிக்காது" என்று சொல்லிக் கோப்பியைக் குடிக்கிறார்.

"மருமேனிலை மாமியாருக்கு அவ்வளவு மரியாதையாக்கும்" - வார்த்தைகளை அரையுங் குறையுமாக விழுங்கிக் கொண்டே குசினிக்குள் நுழைந்தாள்.

நேற்றுத்தான் இளங் கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெழுகப்பட்டிருந்த தரையை, விளக்கு மாற்றினாலே கூட்டி, அடுக்களையை ஒதுக்கினாள். 'துருவலை'க் குற்றியை எடுத்துப் போட்டு அதன் முன்னால் பெரிய பருத்தித்துறைப் பெட்டியொன்றைக் கவிழ்த்து வைத்தாள். அதன் மேல் தலைவாழை இலைத்துண்டு ஒன்றைப் போட்டு, தண்­ர் தெளித்துக்கொண்டே, "பேப்பர் படிச்சது போதும், வாருங்கோவன்" என்று அழைத்தாள்.

கைகளைக் கழுவிக்கொண்டு வந்த சிவக்கொழுந்து குற்றியில் அமர்ந்தார். மூன்று பிட்டுகளை இலையில் வைத்து உதிர்ந்துவிட்டு, முட்டைப் பொரியலையும் எடுத்து வைத்தாள். அவர் சாப்பிடத் தொடங்கினார். திருவாளருக்கும் திருவாட்டியாருக்கு மிடையில், மௌனச் சுவர் எழுந்து நின்றது.

"சோக்கா இருக்கப்பா. இப்பதான் வீட்டுச் சாப்பாடு. சிங்கள சாப்பாட்டிலை நாக்கு மரத்துப் போச்சு."

அவர் நிமிர்ந்து பார்த்தார். அவள் மாட்டுக் கொட்டிற் பக்கம் பார்த்து, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது.

"என்னெணை நீட்டுக் கயித்திலையோசிக்கிறாய்?"

நெஞ்சைக் கூறாக்கிக் கக்கப்பட்ட வெப்பமான நெடுமூச்சு.

"இல்லை, ஐந்து மாசமா மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணப் பக்கம் கோச்சி வவேல்லையாம்."

"கோச்சி வந்ததுதான். எனக்குத்தான் லீவு கிடைக்கேல்லை."

"நான் காத்தைக் குடிச்சுக் கிடப்பன் எண்டு நினைச்சியளாக்கும்."

"எனக்கிருக்கிற கடன்தான் உனக்குத் தெரியுமே?"

"ஆருக்காகப் பட்டனியள். அந்த மாத்தறைச் சிங்களத்திக்காகத்தானே?"

"பேக்கதையள் கதைச்சுக் கோவத்தைக் கிளப்பாதை."

"கோழ்வம் கோழ்வமெண்டு நெடுகப் பேக்காட்டுறதே? உங்களிட்டை வந்த தம்பையா அண்ணேட்டை என்ன சொன்னியள்?"

"அவன் ஒரு கோள்மூட்டி."

"பத்து வருஷமா அவள் என்னத்தைப்பெத்தாள்? அந்த மலடியோடை நான் வாழமாட்டன். காசும் அனுபமாட்டன்,' எண்டு அவரிட்டைச் சொன்னனியளோ, இல்லையோ?"

"சும்மா ஒரு கோவத்திலை சொன்னதை இவ பெரிய இது எண்டு சொல்லுறாள். தம்பையா அண்ணை வரக்கே என்னை வேலையிலை இருந்து நிப்பாட்டி வெச்சாங்களெண்டு தெரியுமல்லே?"

"கங்காணியெண்டால், ஆஸ்பத்திரியிலைகங்காணி வேலையைப் பாக்க வேணும். சிங்களக் கங்காணியளை மேய்ச்சால் விடுவாங்களே? ஒரு சிங்களத் தோறையைக் கிளப்பி வெச்சிருந்தியாம். எப்படிப் பாடு?"

"அவளாலை-அவள் சொன்ன சாட்சியாலை தான்-என்ர உத்தியோகம் திரும்பிக் கிடைச்சுது. உனக்கு ஒண்டுந் தெரியாது."

"அது கிடக்க, அவளுக்கு - என்ர சக்களத்திக்கு எண்டாலும்-புள்ளைப் பூச்சி வெச்சுருக்கோ?"

அவளுடைய ஒவ்வொரு வார்த்தையுந் திருவாளர் சிவக்கொழுந்துவைக் குடைந்தெடுத்தது. நிதானம் தடம் புரண்டது.

"மலட்டுப்..... மலட்டுக் கதையள்தானே வரும்."

"இஞ்ச! உந்தக் கோழ்வத்தைக் கொண்டுபோய் நீர் மேய்க்கிற சிங்களத்தியளிட்டைக் காட்டும். ஆர் மலடி? நான் வேறையொருவனைக் கட்டியிருந்தால், இதுக்கிடையிலை ஐஞ்சாறு பெத்திருப்பன்."

தேகத்தை உலுப்பி ஆட்கொண்ட கோபாவேசத்துடன், குற்றியை இடறி எழுந்தார். பெட்டி உதையில் நசிந்தோடி, அடுக்களை வாசலில் கிடந்தது. வெளியால், சருவக் குடத்திற்குப் பக்கத்தில், பிட்டு மணிகள் சிதறிக் கிடந்தன. காகங்கள் விழுந்தடித்துக் கொண்டு இரைச்சலுடன் கொறித்தன.

"அதுதானே, அந்த வேசையின்ரை முகத்திலை முழிக்காமல் அங்க நிக்கிறனான்."

ஈச்சேரில் வந்து படுத்தார். புகையிலையைக் கிழித்து, ஒரு சுருட்டுச் சுற்றி எடுத்தார். அதைப் பற்ற வைத்தார். புயலின் புத்திரப் பாக்கியமான நிசப்தம் ஆட்சி செலுத்தியது.

அந்தச் சுருட்டைப் புதைத்து முடிப்பதற்கிடையில், பதினைந்து இருபது நெருப்புக் குச்சிகளைச் செலவழித்தார். சுருட்டுக் குறளை எறிந்தார். வெற்றிலைத் தட்டைச் தேடிப் பிடித்தார். வெற்றிலை வாடிக் கிடந்தது. கறட்டிச் சுண்ணாம்பு. ஒருவகையாகச் சமாளித்து, ஒரு வாய்க்குத் தாம்பூலம் தரித்தார். 'சேட்'டை எடுத்து மாட்டி, சால்வையைத் தோள்களில் எறிந்தார். வெளியே புறப்படும் ஆயத்தம்.

அவரை வழிமறிப்பதைப் போல எதிரில் வந்து நின்றாள் புனிதம். ஆத்திரம்-சினம் ஆகியவற்றின் சுவடுகள் தூர்ந்திருந்தன. முகமும் முகமும் நேராகச் சந்தித்தன. புதிதாகக் காணப்படும் அவளுடைய கவர்ச்சியில் அவருடைய விழிகள் ஒரு கணம் நிலைத்தன. இப்பவும் கல்யாணச் சந்தையில் 'செல்லும்' குமரி. அவளுடைய கழுத்தில் சிவக்கொழுந்து தாலி கட்டிப் பத்து ஆண்டுகளாயினும், சென்ற வைகாசியிலேதான் இருபத்தியெட்டு வயது பூர்த்தியாயிற்று. தனக்கட்டுகள் சதை கூட்டிக் கொழுத்த வாக்கில் நிமிர்ந்து சௌந்தர்யப் பொலிவு காட்டின. குலை தள்ளிய வாழையின் நிறைவுடன், இரத்தம் ஊறிய பாங்கில், முகத்தில் மலர்ச்சி. கன்ன உச்சிக்காரி இப்பொழுது நேர் வகிடுவிட்டு வாரத் தொடங்கியிருந்தாள். இந்த 'உத்தி' முகத்தை உருண்டையாக்கிக் காட்டியது. சிரிக்கும் பாசாங்கில், நாக்கு நுனி உதட்டை நனைத்து மீண்டது.

"நீங்கள் ஆள் சுறுக்கர்தான். துலைக்கே புறப்பட்டுடியள்?"

பதிலில்லை.

"இஞ்சாருங்கப்பா, ஒருக்காச் சின்னக்கடைப்பக்கம் போயிட்டு வாருங்களேன்."

"சின்னக் கடைக்கே? எனத்துக்கு?"

"இண்டைக்கு நாயித்துக்கிழமையல்லே? கட்டைக் காலன்தானே உங்களுக்குப் பிடிக்கும்?" சற்று முன்னர் நடந்த சண்டயின் சாயல் எள்ளளவும் இழையாத இதங் குழைத்துப் பேசி, ஓர் ஐந்து ரூபாய்த் தாளை அவருடைய கைக்குள் வைத்தாள். அவருடைய நாக்கில் கடல் ஆமை இறைச்சியின் சுவை ஊர்ந்தது. கோபமெல்லாம் அடங்கிற்று.

சால்வையை ஈச்சேரின் சட்டத்தில் எறிந்து, மறுபடியும் குந்தினார். "கொஞ்சம் பச்சைத் தண்ணி கொண்டானை."

செம்பிலே தண்­ர் வந்தது. வாயிற் குதப்பப்பட்ட வாடல் வெற்றிலை ஒரு மாதிரியாகக் கசந்தது. வாயை நன்றாக அலம்பிக் கொப்பளித்துத் துப்பிவிட்டு, 'அண்ணாக்காக'த் தண்­ர் குடித்தார். செம்பிற்குள் பார்வை நிலைத்தது.

"இங்க செம்புக்கை வெத்திலை கிடக்கு."

"ஓம். வாடாமல் போட்டு வைச்சனான்."

"அப்ப வெத்திலைத் தட்டையுந்தா. சுண்ணாம்புக் கறண்டீக்கை கொஞ்சம் தண்ணிவிட்டு இழகப்பண்ணு."

புனிதம் மடித்துக்கொடுக்க, பத்திமாகத் தாம்பூலம் தரித்தார். நாக்கும் நன்றாகசி சிவந்தது.

"இஞ்சேருங்கோ, கெதியாப் போனாத்தான் நல்லதாய்க் கிடைக்கும்."

"எனக்குத் தெரியாத சின்னக் கடையே? கொஞ்சம் பொறுத்துப் போவம்."

"நீங்கள் மாத்தறைக்குப் போன ரெண்டுவருஷத்துக்குள்ளை யாழ்ப்பாணம் தலைகீழா மாறீட்டுது."

புனிதமும் வெற்றிலை போட்டுக் கொண்டாள்.

"உனக்கு நல்லா வடிவாச் சிவந்திருக்கணை."

"இதிலை தெரியும் நான் எப்பிடி பட்டவளெண்டு. எப்ப வேலைக்குத் திரும்பிப் போறியள்?"

"நான் ஒரு கிழமை லீவிலை வந்தனான்."

"மழைதான் பெய்யப் போகுது."

தன்னுடைய உத்தேசத்தைத் தெரிவிக்க இதுதான் சமயமெனச் சிவக்கொழுந்து நினைத்தார்.

"எல்லாத்தையும் மறந்திடுவம். உன்னை என்னோடை கூட்டிட்டுப் போகத்தான் லீவுபோட்டு வந்தனான்."

"இவ்வளவு காலமும் இல்லாத கரிசனை இப்பதான் புதிசாய் முளைச்சிருக்கு....ஏன் இப்ப அந்தச் சிங்களத்தி கைவிட்டிட்டாளே?"

"உந்த விண்ணானம் கொட்டுற பொம்புளையளோடை கதைச்சுத் தப்பேலாது. நான் ஒரு சிங்கள வைப்பாட்டி வெச்சிருக்கிறன் எண்டு ஆரோ தட்டுவாணியள் கதை கட்டியிருக்க வேணும்."

"பேந்து கதைப்பம். கெதியாய் கடைக்குப் போயிட்டு வாருங்கோவன்."

அந்தச் சமயம் 'சங்கட'த்தால் சைக்கிளை ஏற்றி, படலையைத் திறந்து கொண்டு, ஒரு வாலிபன் வந்தான். சாக்கினால் உறை போடப்பட்டிருந்த ஒரு பெரிய போத்தல் 'கரி'யரிற் கட்டப்பட்டிருந்தது. பக்குவமாகச் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தினான். சைக்கிள் 'கான்டி'லிலே தொங்கிய பையைக் கையில் எடுத்தான்.

"அது மரஞ்žவுறவன்."

"இப்ப இவங்களுக்குக் காசுமெத்தி, ஊர் பிடிபட்டு, கெப்பர் மிஞ்சிப் போச்சு. அவன் சின்னவன் கத்திக்கூடு கட்டி, முட்டியள், தீட்டுத்தடி எல்லாத்துடனும் உடுப்புப் போட்ட மாதிரித்தான் வருவான். உவன்ரை சோக்கைப் பாருங்கோவன்" என்று வாய்க்குள் புறுபுறுத்தார்.

சேட்டைக் கழற்றி, கொடுக்குக் கட்டி, கத்திக் கூடு மாட்டி, தளைநாரையும் முட்டியையும் கையில் எடுக்கும்வரை, அவனையே அவதானித்தார் சிவக்கொழுந்து. ஈச்சேரில் படுத்துத் தன்னைக் கவனிக்கும் அவரை அவனும் உற்றுப் பார்த்தான்.

"என்ன அப்பிடிப் பாக்கிறாய் செல்லத்தம்பி? இவர்தான் எங்கட இவர்."

"ஐயாவே? அப்படித்தான் நினைச்சன். எப்பிடி ஐயா மாத்தறைப் பக்கம் மழைதண்ணி?" என்று சம்பிரதாயமாகச் சுகபலன் விசாரித்தான். அவர், அவனுடைய நெஞ்சிற் சடைத்திருந்த ரோமத்தையும் உருண்டு திரண்டு கருங்காலிக் குத்தியின் மெருகு பெற்றிருக்குந் தேகக் கட்டையும் 'விடுப்'புப் பார்த்தார். அப்புறந்தான், ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்கிற மரியாதைப் பண்பு ஞாபகத்திற்க வந்தது.

"நீ சின்னவனுக்குச் சொந்தமே."

"ச்சா....நாங்கள் கொட்டடிப் பகுதி" உரையாடலை நீட்டாமல், "அப்ப வாறன் ஐயா, இண்டைக்குப் பாளை தட்டுமுறை" என்று கிணற்றடிப் பக்கம் போக அவசரங் காட்டினான்.

"இந்த வளவிலை எத்தினை மரம் கட்டியிருக்கிறாய்?"

"அஞ்சு"

"எதெது?"

"கிணத்தடிக் கறுப்பிக் கன்றுகள் ரெண்டு, கக்கூசடி உசரியும், வளுக்கலும், கோடிச் சிவப்பி...." சிரத்தையின்றிப் பாடம் ஒப்புவிக்கும் பாவனையிற் சொன்னான்.

"நாவலடிச் சிவப்பியும் நல்லா ஊறுமெண்டு சின்னவன் சொல்லுவான்."

"அது பாளை மாறிப் போச்சுது. ஐயாவுக்கு எங்கடை தொழில் முறையும் நல்லாத் தெரியுதே?" என்று 'பொடி' வைத்துப் பேச்சை முறித்துக்கொண்டு கிணற்றடிக் கறுப்பியை நோக்கி நடந்தான்.

"இந்தக் கோசு ஏன் மரங்களைச் சின்னவனுக்குக் குடுக்கல்லை?" என்று மனைவியை விசாரித்தார்.

"žவிய உருத்து எண்டு சொல்லி அம்மாதான் இவனுக்குக் குடுக்க ஒத்தக்காலிலை நிண்டவ. மரத்துக்கு எழுவது ரூவா மேனி மூன்னூற்றம்பது ரூவா தந்தவன். அந்தக் காசிலை வாங்கிட்ட பசுவாலும், கோழியாலும்தான் பிச்சை எடுக்காமல் மானத்தைக் காப்பாத்தி žவிக்கிறன்."

"இவன் ஐயம்புள்ளை ஆக்களின்ரை பகுதியாக்கும். அவங்கள் காசுக்காரர்."

"ஆனாலுமப்பா, சனியனுக் கெறு. அகராதி பேசுறவன். அண்டைக்கு முத்தத்து மரத்திலை பழுத்திருக்கிற தேங்காய்க் குலையைப் புடுங்கிவிடு எண்டு சொல்ல, 'தேங்காய் ஆயிறவனைப் பாருங்கோ. அவனும் புழைக்க வேணும்' எண்டு சொல்லீற்றுப் போனான்."

"இப்ப இந்த கீழ்சாதியளுக்குத்தானே நடப்பு? என்னோடை அவன் அருளானந்தம்-அவன்தான் கொய்யாத் தோட்டத்து நளவன்- மாத்தறைக்கு வேலை மாறி வந்தான். பேந்து ஒரு மாசத்திலை இஞ்சை திரும்பி வந்துட்டான். நானும் மூண்டு மாசமாப் பிடிக்கா எம்பியளை எல்லாம் பிடிச்சு ஒரு மாறுதலுக்குப் புழுத்திப் பார்த்தனே!"

"என்னப்பா, கதையிலை குந்தீட்டியள். எப்ப இறைச்சி வாறது. எப்ப காய்ச்சிறது, எப்ப சாப்பிடுறது?"

"ஓமப்பா, வெய்யிலும் ஏறீட்டுது. நான், அவன் ராசான்ரை கலையிலை ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு ஓடியாறன். நீ உலையை வெய்யன்."

சிவக்கொழுந்து புறப்படும் பொழுது, கிணற்றடி மரத்திற் பாளை தட்டுஞ் சத்தம் கேட்டது.

சின்னக்கடையிலிருந்து சிவக்கொழுந்து திரும்புவதற் கிடையில் அவரைத் தேடி சரவணமுத்துவும் திருநாவுக்கரசும் வந்திருந்தார்கள். அவர் கடைக்கச் சென்ற சமாசாரத்தைப் புனிதம் தெரிவித்தாள். அவர்களிருவரும் படலைக்கு முன்னால், வீதி திருத்தக் குவித்திருந்தக் கல்லுக்கும்பலுக்கு பக்கத்திற் குந்தியிருந்தார்கள். அப்பொழுதுதான் செல்லத்தம்பியும் 'žவலை' முடித்துக் கொண்டு புறப்பட்டான்.

அவர்களுக்கும் அவனுக்குமிடையில் ஏதோ வாக்குவாதம் நடந்தது.

திருமதி சிவக்கொழுந்து உற்றக் கேட்டாள்.

"இஞ்ச பார் சரவணமுத்து, உன்ரை பெருமாகோயில் சண்டித்தனத்தை எள்ளெண்ணைச் சட்டி எரிக்க வாறதுகளிட்டைக் காட்டு. நான் கொட்டடியான். இனிமேல் என்னட்டைச் சேட்டைவிட்டால், பாளைக் கத்தியாலை உன்ர குடலை எடுத்துப்போட்டுத்தான் வழக்குப் பேசுவன்." செல்லத்தம்பியின் குரல் உரத்துக் கேட்டது.

புனிதம் வேலியால் எட்டிப் பார்த்தாள். அதற்கிடையில் அவன் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான்.

அந்நேரம் சிவக்கொழுந்து அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் அவருடைய காதைக் கடித்து ஏதோ சொன்னார்கள்.

"அப்பிடியே சங்கதி? நான் கறியைக் குடுத்திட்டு வாறன்" என்று படலையைத் திறந்து உள்ளுக்கு வந்தார். புனிதம் ஒரு தேங்காயைக் கொடுவாக்கத்தியின் பிறத்தியால் அதனைப் பாதியாக்குவதற்காக அடித்துக் கொண்டிருந்தாள்.

சிவக்கொழுந்துவின் முகம் கறுத்து வியர்வைக் காட்டில் மிதந்தது. கறி உமலை, அவளுடைய கால்களில் மட்டும் படாமலும் விழ வீசியெறிந்தார். பேசாமல் திரும்பினார்.

"துலைக்கே?"

"கறியைக் காச்சு, வாறென்"

"வெய்யிலுக்கை போட்டு வந்து என்ன அவசரம்? கால் ஆறிப் போகலாமே?"

"கண்கெட்டுப் போவாளே, படலைக்கை சரவண முத்தனம் திருநாவுக்கரசனும் நிற்கிறது தெரியல்லையே? அவங்களேடை ஒரு அலுவர்."

"அப்ப இண்டைக்குச் சாப்பாட்டுக்கும் ஆளில்லையாக்கும். அந்தக் குடிகாரங்களோடை சேத்து குடிகுடியெண்டு குடிச்சுப் போட்டு ராவைக்குத்தான் வாறதாக்கும். இஞ்சையில்லே உங்களுக்கு முட்டியிலை கள்ளு வாங்கி வெச்சிருக்கிறன்."

"ஒவ்வொரு கதைக்கும் நீ மாத்துக் கதை கதைக்காதை. நீ கெதியாக் கதியைக் காச்சு. நான் சுறுக்கா வந்திடுவன்."

படலையை அடித்துச் சாத்திவிட்டு, சிவக்கொழுந்து வெளியேறினார்.

புனிதம் எப்பொழுதும் சமையலிற் சுறுசுறுப்பு. இன்றைக்கு இனந்தெரியாத பதற்றம். கத்தியில் இறைச்சியை அறுத்தாள். 'வார்'களைக் குறுணியாக்க முடியவில்லை. வெடுக்கு மணத்திலே அருவருப்பு. பெரிய துண்டுகளாப் போட்டாள்.

ஆமைக் கொழுப்பையே உருக்கி, கடுகு-žரகம்-கறிவேப்பிலை-அரிந்த வெங்காயம், பச்கைமிளகாய் எல்லாவற்றையும் போட்டுத் தாழித்து, இறைச்சியைப் போட்டு வேகவைத்தாள். உப்பும் மிளகாய்த் தூளும் போட்ட பின்னர், தேங்காயின் முதற்பாலையும் விட்டுக் கொதிக்க வைத்தபோது, பெரிய வேலையொன்றைச் செய்து முடித்த திருப்தி ஏற்பட்டது. இதற்கிடையிலேயே இறாலில் சொதியும் கூட்டி வைத்தாள். குழம்பை இறக்கிவிட்டு சொதியை அடுப்பில் ஏற்ற வேண்டியதுதான். மரக்கறியில்லை.

குழம்பை இறக்கித் திருகாணியில் வைத்து, தேசிக்காய்ப் புளியை ஊற்றிப் பிரட்டிக் சட்டியால் மூடிவிட்டு, சொதிச் சட்டியை அடுப்பில் ஏற்றினாள்.

அப்பொழுது, சிவக்கொழுந்து அடுக்களைக்குள் நுழைந்தார். சாமான் பெட்டிகள், சட்டிகள், விறகு மட்டை முதலியன விரித்தபடியே கிடந்தன. இன்னமும் அவற்றை அடுக்கி ஒதுக்கவில்லை. துருவு பலகைக்குப் பக்கத்திற் கிடந்த சிரட்டை யொன்றை எடுத்துக்கொண்டு, பனை மட்டைக் கிராதித் தட்டி எழுந்து நின்ற அரைக் குந்திலே குந்தினார். 'ஆளுக்கு நல்ல ஏத்தம்.'

"இதிலை கொஞ்சம் இறைச்சி போடடி" என்று சிரட்டையை நீட்டினார்.

"நெக்குத் தெரியுமே அந்தப் பாழ்பட்டு போவாங்களோடை போனால், இப்பிடித்தான் ஆட்டத்திலை திரும்புவியளெண்டு..." அகப்பையாற்கோலி இறைச்சித் துண்டுகளைச் சிரட்டைக்குள் போட்டாள்.

"டீயே வாராத் தெரிந்சு போடு."

"சரி பிடியுங்கோ" என்று சிரட்டையைத் திருப்பிக் கொடுத்தாள்.

தோலை முன்பற்களால் உரித்துத் துப்பிவிட்டு, வாரைச் சப்பினார். பெரிய துண்டு; பல்லுக்குக் கொஞ்சம் கஷ்டம்.

"நான் தானே சொன்னான் இஞ்சை கள்ளு வேண்டி வெச்சிருக் கெண்டு."

இறைச்சித் துண்டு ஒன்றை கொடுப்புப் பற்களுக்கிடையிற் சப்பிக் கொண்டே, "நான் அந்த நளவன் žவிற கள்ளைக் குடிப்பனெண்டு நினைச்சியே" என்றார்.

ஆணிக்குடல் துண்டு ஒன்று, அவருடைய வாயில் ரப்பராக இழுபட்டது.

"இவளுக்கிப்ப சோகை புடிச்சுப் போச்சு. உப்புப்புளிக் கணக்கொண்டும் சரியாத் தெரியுதில்லை."

மடிக்குள் மறைத்திருந்த போத்திலை உருவி வெளியே எடுத்தார். அரைப் போத்தலில், அரைவாசிக்குச் சாராயம் இருந்தது. 'கிளாஸ்' கூடத் தேடாமல், போத்தல் கழுத்தை வாயில் வைத்து ஓரே மடக்காகக் குடித்தார். அஷ்டகோணமாகிப் பிளந்த இதழ்களினால் குழம்புடன் கூடிய இறைச்சியைச் சூப்பி, அதனைச் 'சப்பாமலே' விழுங்கி, ஒருமுறை இருமி, அவஸ்தையைத் தணித்தார்.

"அதுதானே பாத்தனான். கறுப்பன் கையோடை இருக்கேக்கிள்ளை ஏன் கள்ளை?"

"நானும் பாக்கிறன். வேசைக்கு நாக்கு நீண்டு போச்சு. இப்பவே ரெண்டிலை ஒண்டு தெரிய வேணும்."

"என்னத்தைப் பத்தி?"

"நீ என்னோடை மாத்தறைக்கு வாறியோ, இல்லையோ?"

"உன்னாணை அப்பா, புண்ணியம் கிடைக்கும். போய் முழுகீட்டு வந்து சாப்பிடு. எல்லாத்தையும் ராவைக்குக் கதைக்கலாம்."

குந்திலிருந்து எழுந்தார். அவளுடைய முகத்திற்கு எதிராகத் தன் முகத்தை வைத்துக் கொண்டு, "ராவிலை கள்ளப் புருஷனோடை தான் படுக்கிறது. எனக்கு இப்ப பதில் வேணும்."

சாராய நெடியும், கடல் ஆமை இறைச்சி வெடுக்கும் 'பக்'கென்று புனிதத்தின் மூக்கத் துவாரங்களில் ஏறின. அருவருப்பு உணர்வு. வயிற்றைக் குமட்டியது.

அடுப்பில், சொதி கொதித்துத் திரைந்தது, அவளுக்கத் தலையைச் சுற்றியது.

குசினியிலிருந்து முற்றத்திற்கு ஓடி வந்து, பொன்னுருக்கிலன்று நாட்டப்பட்டுத் தழைத்து வளர்ந்திருந்த முன்முருக்கம் மரத்திற் கைகளைத் தாக்குக் கொடுக்குக் குனிந்தாள்.

"வூஓக்....வூஓக்...."- வாந்தியெடுத்தாள், அவதியின் உணர்வு.

"என்னடி மாய்மாலம் கொட்டுறாய்....என்னடி உனக்குச் சத்தியும் வருத்தமும்? சொல்லண்டீ! நீ என்னோடை வாறியா, இல்லையா?"

களைப்புடன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்தாள்.

"என்னடி நான் கேக்கிறன். நீ உன்ர பாட்டுக்கு இருக்கிறாய்?"

"நீ கேக்கிறகேள்விக்குமறுமொழியுந்தேள்வையே? இந்த வீடு வாசலை, மாடு கண்டை விட்டுவிட்டு, இரவல் புடவையிலை பெரிய கொய்யகம் வெச்சுக்கொண்டு, கூப்பிடிட இடத்துக்கு இவருக்குப் பின்னாலை திரியவேணும். நான் செத்தாலும் இந்தப் படலையைத்தாண்டி உன்னோடை வரமாட்டன்."

"சரவணமுத்துவும் திருநாவுக்கரசும் எழுதினதும், சொன்னதும் எல்லாம் சரிதான்."

"அந்தக் கோள்காவி நாரதங்கள் என்ன சொன்னவங்கள்? இனிமேல் அவங்கள் இந்த வீட்டுப் படலைக்க வரட்டும்."

"இப்ப சண்டித்தனமும் அல்லோகாட்டுறாள்" வலு ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த இறைச்சிச் சிரட்டையை அவள் மீது எறிந்தார். குறி தவறாது அது சரியாக அவள் நெற்றியிற்பட்டது. இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.

"ஐயோ, இந்தப் பாழ்பட்டுப் போவான்-குறுக்காலை தெறிப்பான்-என்னைக் கொல்லுறானே," என்று கூவித் தணிந்தாள்.

அமைதி.

"கடைசியா நான் சொல்லுறன். கேட்டுக் கொள்ளும். இந்த ரெண்டு வருஷமா நீர் உழைச்சுத் தந்ததிலை žவிக்கேல்லை. இது என்ர வீடு வளவு. நீர் உன்ர ஆக்களோடை போகலாம்.

"என்னடி சொல்லுறாய்" என்று கேட்டவண்ணம், துருவலை'ப் பலகையை ஓங்கிக்கொண்டு வந்தார்.

"ஏன் நிக்கிறீர்? அடியுமன். மலடன்களின்ரை சண்டித்தனம் பெண்டுகளிலைதானே?"

"நான் மலடன் எண்டால், நீயும் மலடிதானேடி?"

"நீ தான் மலடன்...நான் மலடியில்லை..."

இந்நேரம் படலையைப் பிடுங்குவது போலத்திறந்து கொண்டு, அவசரமாகத் திருநாவுக்கரசு ஓடி வந்தான்.

"சரவணமுத்துவை முச்சந்தியிலை வெச்சுநளவன் செல்லத்தம்பி அடிச்சுப் போட்டான்" என்று முற்றத்தில் நின்று கத்தினான்.

"இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு. முதலிலை அவனை முடிச்சுப் போட்டுத்தான் இவளின்ரை கணக்கைத் தீர்க்க வேணும்" என்று கொடுவாக்கத்தியை எடுக்கக் குசினிப் பக்கம் பாய்ந்தார். நிதானமற்ற கால்களுடன், குசினிப்படியில் தடக்கப்பட்டு, தடாலென்று கீழே விழுந்தார். துருவு பலகையின் பற்கள் கிழித்துக் கன்னத்திலிருந்து இரத்தம் கோரமாக வடிந்து கொண்டிருந்தது.

"வடுவா! நீங்கள் பிரிச்சு வைச்ச மாதிரி உங்கடை கூட்டாளியைத் தூக்கிக் கொண்டாச்சும் போயிடு. ஆனால் ஒண்டு. இண்டையிலையிருந்து, நீயோ சரவண முத்துவோ என்ரை வீட்டுப் படலையைத் துறந்தால் விளக்கு மாத்தாலைதான் அடிப்பன்" என்று ரௌத்திர காளிபோல புனிதம் கூச்சலிட்டாள்.

..........


நான்

"நான் குரு என்ற ஆணவத்திற் பிரசவமான பிரசவமான அவா தனி! என் வழி தனி... எனக்கு மட்டும் புரிந்த வழி அதனை வார்த்தைகளிலே பரிவர்த்தனை செய்கின்றேன். மற்றவர்கள் புரிந்த வரையிற் புரிந்து கொள்ளட்டும். புரியாத வரையில், ஏதோ விளங்கிக் கொண்டதாக நடிக்கட்டும். 'புரியவில்லை' என்று முகங் கோணுபவர்களைப் பார்த்து, 'அஞ்ஞானிகள்... மூடர்கள்...' என்று எள்ளி நகையாடுவேன். அது என் வழி..."

- அவா..

வழி

வீங்குசேர் ஏமாப்பின் குதிப்பில் நடைபெறும் கூட்டத்திலே, 'வாளிலும் பேனாவே வலிமையுடையது' என்று வாய் கிழியக் கத்தும் எழுத்தாளர் திருக்கூட்டத்தினர் சபையோரமாகத் தூவப்பட்டிருக்க, ஈழத்து எழுத்துலகின் 'இரட்சகர்' எனச் சுயவிருது வரித்தோர் கூட்டத்தை நடத்துஞ் சூத்திரதாரிகளாகச் சுழன்று, கலையென்று சொல்லி, நடுவில் அரசியலிலே தொற்றி, அதயும் மறந்து, இதையுங் குழப்பி, செங்கொடி மர நீழலிற் 'கலங்கிய குளத்திலே மீன் மெத்தப் பிடிக்கலாம்' என்ற ஞான ஒளி பெற்று, சுய நாம விளம்பரத்தையே இலட்சியமாகக் கொண்டு, அந்த அடி மன ஆசா ஏக்கத்தை மறைக்க தத்துவச் சொற்குவியலில் அரண்கட்டி, தங்கள் கலைத் தொண்டால் செஞ் சூரியன் உதிக்கத் தயாராகி விட்டான் என்று தமது அரசியற் பீடாதிபதிகளையும் நம்பச் செய்து, தந்திரோபாயப் பலிதத்திற் சுய உச்சி மோந்து, தமது செயல்களுக்குக் கரகோஷமிட்டு ஆர்ப்பரிக்கச் žடராம் இராம படையுந் திரட்டி வைத்து, எதிர்க்கருத்துக் கொண்டோர் மீது கதிரைகள் முட்டைகள் ஆகியவற்றை ஆயுதங்களாக உபயோகிக்கும் மறத் தொழிலும் இயற்றி, 'முற்போக்கு' என்ற வெற்றச் சொல்லை வேள்விக் குண்டத்தில் ஓதப்படும் யாகமந்திரத்தின் அந்தஸ்திற்க உயர்த்தி, கோஷக்குழப்பம் என்ற வேள்விக் குண்டத்தில் நெய்யூற்றும் பூசாரிகளாகத் தங்களை கற்பித்துக் கொள்ளும் பலருக்கு கலை, வேதம் ஒதியோனாம் வேதமறிந்த அவனுக்கு இந்தப் போலியாகம் வேதனையை அளிப்பதை போன்றே, வேறு பலருக்கும் வேதனை அளிக்கவே, அதனைத் தாங்காது வெளிப்படுத்த, அத்துணிவுக்கு அவனே காரணன் என்ற முனிவின் ஏகத்தில், வேதமறிந்த அவனிடந்தாம் கலை வேதம் கற்கவில்லை யென்ற 'கற்'பை நிலைநாட்டி விட்டால், தாம் தாமாகத் தோன்றித் தவத்தாற் கொடியுயர்த்தியவர்களென்பதை நிறுவி விடலாமென்ற மனத்தவிப்பில், அவன் மீது வசைமாரி பொழிந்தே முற்போக்கு எழுத்தாளர் மகாநாடு நடத்தப்படுகின்றது. அவனுடைய மனத்திலே முனிவுக்குப் பதில், அனுபவ முதுமை மதர்க்கின்றது. 'மடியில் கட்டாரியும், மனத்திலே நயவஞ்சகமும், உதட்டிலே 'தோழா' என்ற நயப்பும் புனைந்து நண்பர்களென வேடமிட்டவர்களைப் பிரிந்து செல்லும் நன்னாள் இன்னாளே' என்ற கணிப்பு வலுப் பெறுகின்றது. பித்தம் தெளிந்த அற்புத நிலை. தனி வழி பிறந்தது. தனி பயணத்தை மேற்கொள்ளுகின்றான். 'படுபிற்போக்குவாதி', 'பூர்ஷ•வாக்களின் கைக்கூலி', 'இந்திரிய எழுத்தாளன்', 'விளங்குதில்லை எழுத்தாளன்', 'தனி நபர் வாதி', 'இயக்கத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி' என்ற வகையிற் கல்லெறிகளும், பொல்லடிகளும்! 'இயக்கம் அவனைத் துலைத்தே தீரும்' என்று சூளுரைத்தார்கள். 'அவன் உதிர்ந்த மலருக்குச் சமம்' என்று ஏளனஞ் செய்தார்கள். இருப்பினும், கலையையேதன் வாழ்க்கையாகவும் இலட்சியமாகவும் வரித்துக் கொண்ட அவன் தீரா வேதனையுடனும், களி பேருவகையுடனும், அவநம்பிக்கையுடனும், அதே சமயம் அதுவே பிரசவித்த நம்பிக்கையுடனும், சிலுவைப் பயணத்தை-அல்ல, இரட்சண்ணிய யாத்திரையை-அவன் மேற்கொண்டான். அவன் அநாமதேயனல்லன். அவனை, அவனும் பிறரும் எஸ்.பொன்னுத்துரை யென அறிவர். அவனுடைய பயணத்திலே ஒரு தரிப்பு. தத்துவஜாலக் கனவென்பது படர்கின்றது.

...........

வீ

வீச்சு நடைபயின்று அளைந்து வருந்தென்றலின் உதைப்பு. இலைப் பரப்பிலே சயனித்த மரகதப் பசுமை முழுவதையுமிழந்து, முதுமையின் பழுப்பை அங்கத்திலே அப்பி, ஓசங் குன்றிய வெப்பியாரத்திற் கயர் உறுஞ்சிய சோபிதத்திலே துயருற, இலைக் காம்புஞ் சரிய, இலையடி பூட்டினை நெகிழ்த்தி மரத்திலே ஒட்டிக் கிடப்பதா, உதிர்ந்த புழுதியிற் புரளுவதா என அவதியுறும் இலையாக, இல்லற ஈரலிப்பு இற்று, பந்த பாசக் காம்பு அடியிலே சரிய, துறவற ஈர்ப்பு அவர் மனத்தினை அலைக்கழிக்கின்றது. கணுவில், இலையடியின் பிணைப்புச் சமைத்த கக்கத்திற் புதிய பிறவியின் சிரசுதயத்தை இனங்கண்ட அமைதியில் இலை சருகாக உதிருகின்றது! துறவற நோன்பியற்றும் வெறி மீதூர, இல்லந் துறந்து தூரந் தூரமாக நடக்கின்றார்.

'வீணிலே மண்ணையும் பொன்னையும், பெண்ணையுஞ் சதமென நம்பினேன். மண்ணாசை சவக் குழியின் இருப்பிடத்தில் முடிவடைகின்றது... பொன்னாசை இதயத்தைக் குழப்பிக் கொண்டே அதன் இறுதித் துடிப்பிலே மரிக்கின்றது.... பெண்ணாசை தசையின் தளச்சியுடன், வாலிபம் பருவத்து எழுச்சியிலே கலவி இன்பமே இன்பங்களின் ஆணிவேர் என்ற மயக்கத்தின் விகசிதத்திலே துயருற்றேன். கலவியிற் கழிந்த நாள்கள் விருதாவில் உதிர்ந்த நாள்களே...'- மனத்திலே சுடர் விட்டுக் குதிக்கும் ஞானக் கருத்துக்களென நூங்கு விளைகின்றது. ஆசைக்கு அழிவேயில்லை; பழைய ஆசைகளின் அழிவிலே புதிய ஆசைகள் பிறக்கின்றன; இல்லற ஆசைகளின் சிதையிலே வீட்டின்பப்பேறடைய வேண்டுமென்ற ஆசை மிக மிக ஆழமாழமாக வேர் பாய்ச்சியுள்ளது; அந்த ஆசையே ஏகமாக நிறைந்து தன்னை எதிரேறுடன் அழைத்துச் செல்வதை அவர் உணரவில்லை. இலக்கும், இலட்சிய மார்க்கமும்! வீட்டின்பமே இலக்கு; அதனை அடையும் இலட்சிய மார்க்கம் துறவற நேதியே என்ற நம்பிக்கையில் அலையலானார்.

வீடல் நாடி நீண்ட பயணம். முதுமையின் தளர்ச்சி பெற்ற உடலிலே அலைச்சலின் விளைவாஞ்சோர்வு வசதியாகக் கொழுகின்றது. பிரயாணத்தின் தரிப்பு. ஒளி குடித்து, நிழல் கவித்துள்ள மரத்தடியில் உடலை நீட்டிப் படுக்கின்றார். அம்மரத்தின் பசிய இலைகள் சமைத்த கூரையிலே பல பொத்தல்கள். பொத்தல்களினூடே நீலவானின் துணுக்குச் சிதர்கள் தெரிகின்றன. அகண்டகாரமான வானத்தை இவ்வாறு துணுக்குகளாகக் காட்டும் இலைக் கூரையின் இயற்கை அமைப்பிலே மேய்ந்த அவருடைய கண்கள், தந்தத்தின் எழில், முறுவல் சிந்தி, ஒயில் காட்டும் மலர்க் கொத்திலே தரிக்கின்றன. மென்பஞ்சுப் படுக்கைகளாக, அல்லி வட்டங்களை அலர்த்தி மேடைகள் சமைத்துக் கொடுக்கும் மலர்மொய். அமுதம் இருக்கும் இடத்தைக் காட்டும் வழிகாட்டிக் கோடுகளை நிர்வாணமாக உரிந்து, சுகந்தச் சினைப்பில்.... இராக்கதக் காம வெறிகொண்டதேனீ ஒன்று மலர்க்குறிகளை இடித்தும், மகரந்தக் கூடுகளைக் குழைத்தும். இனிப்புப் பிசின் மண்டியதேனை, உறிஞ்சியும்.... பட்டப் பகலிலே வெட்ட வெளியிலே, மலர்கள் கற்பழிக்கப்படுகின்றன! தேனீயின் காமக் கோட்டத்திலே அல்லிகள் உதிருகின்றன; மரகந்த மணிகள் சிந்தப்படுகின்றன; பூக்கள் சில அறந்து விழுகின்றன... கலவி இன்பமே சகலவுமெனத் தன்னையே அழித்துக் கொள்ளும் மலர்மொய்யின் புன்செயலிலே அவருக்கு வெறுப்புப் பிறக்கின்றது. வெறுப்பு முனிவாக முற்றி வெடிக்கின்றது.

"வீணிற் கலவியை மாந்தும் மலர்மொய்யே! அந்தத் தேனீயின் காமக் களியாட்டத்திலே நீ அழிந்து சோரம் போவது உனக்குத் தெரியவில்லையா? உன்பட்டுத் திருமேனியை அந்தத் தேனீயைத் தொட்டும் பார்க்க விடாதே. இறை தியானத்தில் ஈடுபடு. பரமபதம் அடைதல் மூலமே நமக்கு அமரத்துவங் கிட்டுகின்றது."

"வீண் கத்தையே தத்துவம் என்று எண்ணுகிறாய். பேதலித்த புத்தியின் புலம்பல். அஞ்சலி என்ற பெயரில் மலர்களைக் கருங்கல்லிலே வீசியெறிகின்றான் பக்தன். கோயிலைத் துலக்கமாக வைக்கும் ஊழியக்காரன் நம்மைக் குப்பை மேட்டிலே வீசியெறிகிறான். பரமபதம் யாருக்குக் கிடைக்கிறது? பக்தனுக்கா? ஊழியக்காரனுக்கா? அஞ்சலிப் பொருளுக்கா? உன் மூளை சுற்றுகிறதா?... சரி, இந்த ஆழமான தத்துவ விசாரத்திற்குள் நாம் இறங்க வேண்டாம். உன்னையே நீ சுய விசாரணை செய்துபார். நீ மனைவி-மக்களை விட்டு எங்கே ஓடுகின்றாய்? நீ துறந்தது எதை? துறக்க முடியாததெனத் தேடி ஓடுவது எதை? மோட்சத்தில் அமரத்துவ இன்பம் கிடைக்குமென்பது நிச்சயமாகத் தெரியுமா? நீ அலைந்து திரியும் மோட்சத்தின் முகவரியாவது தெரியுமா? இருளிற் கைவிளக்குடன் நடப்பவன் புத்திசாலி. வானத்து விண்மீன் கைவிளக்குக் கிட்டும் என்று காத்திருப்பவன் பைத்தியக்காரன்..." என்று மலர் மொய் மெக்கலியிட்டது.

"வீம்பில் எழுந்த ஏமாப்பு.... நான் இவ்வளவு காலமும் அனுபவித்தது சிற்றின்பம்; அது புன்மையானது; போலியானது. அனுபவத்தில் நான் உண்மையின் தரிசனம் பெற்றவன். சமய குரவரும் ஞானிகளும் ஒரு முகமாக விதந்தேத்தும் நிரந்தர இன்பத்தை நாடிச் செல்கின்றேன்."

"வீறு அழிந்ததும், விந்து ஒழிந்ததும் சலிப்புத் தட்டுகின்றதா? ஏமாற்றங்களை மறைப்பதற்காகப் பட்டுத்திரை கட்டி, படாடோப வார்த்தைகளிலே தத்துவம் பசுகின்றான் மனிதன். பொருளுக்கே வட்டிக் கணக்கு வைக்கும் மனிதன், கலவியின் விளைவும் அதன் பயனும் என்று கணக்குப் பார்க்கின்றான். இலாப நட்டக் கணக்கிலே இன்பமில்லை. கலவியே இன்பம். அதுவே நிலைகளனும், அதுவே இலட்சியமும், அதுவே முயற்சியும், அதுவே பயனும்! கலவியிலே அன்பும், சமத்துவமும், அமுத இன்பமும் பிறப்பதினால், சுயத்தை இழந்த பேரின்பப் பேறு கிடைக்கின்றது. நான் அரும்பாகி, முகையாகி, போதாகி, போகத்திற்குகந்த மலராகும் வரை இன்றைய தினத்திற்காகவும், கலவிக்காவுந் தவமியற்றினேன். பேரின்பப்பேறு மின்னலைப் போன்றே கிடைக்கின்றது. கணநேரக் கலவியேயாயினும், அதிலே என்னையே முற்றாக இழந்து, நானே இல்லையான, ஆனாலும் நானே நானான புது ஜன்மம் எடுத்து விட்டேன். அந்த அழிவுத் தத்துவத்திலேதான் பிறவித் தத்துவமும் இருக்கின்றது. பூவின் அழிவிலே வீயின் தோற்றம். அழிவு போலுந் தோற்றம். புதியதின் பிறப்பு. இனி, என்சூலகம் முற்ற முற்றப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகி அமரத்துவமடைவேன். கனி அழிந்து விடுமென்கிறாயா?... கனியின் விதையிலே மீண்டும் பிறப்புச் சக்கரந் தோன்றுகிறது. தன்னில் தன்னையே அழித்து, தன்னிலேயே தன்னை உருவாக்கிக்கொள்ளும் அற்புதக்கலையே கலவி. கலவியே நான். நானே கலவித் திட்டாந்தம் புரிகிறதா? எனக்கு அழிவேயில்லை..." குதூகல சரஸம் சொட்ட மலர் - அல்ல வீ- பேசிற்று.

வீளையும் ஒடுங்கிய நிசப்தம் விரிகின்றது. அவருள் எழுந்த தெளிவின் குழப்ப நிலை. குழப்பத்தின் தெளிவு நிலை. மரத்தடியிலிருந்து எழுகின்றார். குழம்பிய நிலையிலே தெளிவில்லை. இருப்பினும், தெளிவு ஏற்பட்டதான பிரமை.

வீரத்தை மண்டிய மனத்துடன் மலர்மொய் தொடர்ந்தது, "நானே மலர்; நானே வீ; நானே காய்; நானே கனி; நானே அதன் கொட்டையும்! நானே நானேயான, நானே சகலதுமான ஏமாப்பினை எனக்குக் கலவியே அளித்தது. புரிகின்றதா? இப்பொழுது சொல்; எது இன்பம்? எது நித்தியம்?" எனக் கேட்டது.

வீமம் வளைத்துக்கொள்ள அவன் தலை குனிந்தான்.

"வீட்டின்பம் எங்கே கிடைக்கிறது?" - ஏளனத்துடன் வீ அவன் நாணத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் கேட்கிறது.

"வீட்டிலே..." - ஒரே சொல்லிற் பதிலை முறித்துக் கொண்டு, தன் அமரத்துவத்தை நிலை நாட்டும் தன்னுடைய படைப்புச் சாயல்களைப் பார்க்கும் எழுச்சியுடன் தன்னுடைய குடிசையை நோக்கி நடக்கலானார்.

..........


சுவை

நபிபெருமானார் (ஸல்) வீற்றிருந்தார். தோழர்கள் அருகிலிருந்தார்கள், கிழவி ஒருத்தி வந்தாள். அவளிடம் ஒருகூடை. கூடையிலே பேரீச்சம் பழங்கள். அவற்றைப் பெருமானாருக்கு அர்ப்பணித்தாள். உண்ணும்படி வேண்டினாள். ஏந்தல் இரங்கினார். வேண்டுதலை இயற்ற விழைந்தனர். ஒரு பழத்தைப் புசித்தார். பின்னொன்று. தொடர்ந்து ஒன்று. மீண்டும் ஒன்று.... கூடை வெறுமையாகியது. கிழவி மகிழ்ந்தாள். நிறைவுடன் திரும்பினாள்.

தோழர்களுக்கு வியப்பு. பெருமானாரின் செயல்புரியவில்லை. பெருமானாரின் வழக்கமே வேறு. எதையும் பங்கிட்டே உண்பார். தோழர்களுக்குக் கொடுக்காது புசித்தார். இன்றோ? பழங்களைப் பங்கிடவில்லை. முழுவதையுந் தாமே புசித்தார். 'காரணம் என்ன?' தோழர்களுக்கு எழுந்த ஐயம். விளக்கங் கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் முறுவலித்தார். வருமாறு சாரப்பட மொழிந்தார்:

தோழர்களே! அப்பழங்கள் புளிப்பானவை. உங்களுக்கத் தந்திருப்பேன். சுவைத்துப் பார்த்திருப்பீர்கள். புளிப்பிலே முகங்கள் கோணும். மாற்றத்தை காண்பாள். மனம் புழுங்குவாள். என் முகம் கோணியதா? இல்லை. முழுவதையும் புசித்தேன். எனவே, அவள் மகிழ்ந்தாள். கிழவியின் மனம் நிறைந்தது.

சாந்தி ஒளிர்ந்தது. தோழர்களின் மனங்கள் சிலிர்த்தன.

..........

சிதை

பக்தரது பஞ்சாட்சர உச்சாரணந் தெளிவாகவும், தொடர்ச்சியாகவுந் தோடுடைய செவிகளிலே விழுகின்றது. ஓங்காரநாதம் அணுவும் புக முடியாத இடங்களையும் நிறைந்து வழிகின்றது.

அகம் முகையவிழ, நிஷ்டை கலைகிறது, இமைக்கபாடங்கள் பூட்டவிழ, நயனங்கள் மலர்கின்றன.

'பக்தர்களின் அஞ்சலி ஆர்ப்பரிப்பு; பக்தி மூச்சினாலே என்னுடன் இரண்டறக் கலக்கும் ஏக்கம்.'

நஞ்சுண்ட அதரங்களிலே குமிண்சிரிப்பு அரும்ப, நெஞ்சிலே அருள் சுரக்க, சக்தியைத் திரும்பிப் பார்க்கின்றான்.

சக்தியின் கோலத்தில், பரமேசுவரனின் மனச்சரிவு. ஈசுவரின் ஓசங்குன்றிட, சினமென்னும் இராகு நிழற்குடை விரித்திருக்கின்றது. குழல் துன்பத்தின் இழைகளாகச் சோர்ந்து புரள, விழிப்புழையிலே சோகச் சாந்தின் கருமை மொய்க்கிறது. இதழ்கள் சுட்டன.

"பக்தியாம் பக்தர்களாம்! கூத்தாடியின் அபிநயம்!" - ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எழுத்தொலியாக உருவாகின்றது. ஒவ்வோர் உச்சரிப்பும் ஏளன உலையிற் புடம் போட்டு வெளிவருகின்றது.

"ச-க்-தீ!"

கைலாசம் ஒரு துகட் பொழுதிலே கோடானு கோடி முறை தடுமாறிச் சுழன்று, மறுகணம் இமயமேயாக நிலைக்கின்றது.

"நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு நான் என்ன பஞ்சபாணனா? அன்றேல், சங்கப் புலவன் நக்கீரனா? ஊமத்தம் பூக்களை மோந்து உன்மத்தந் தலைக்கேறி, பேய்களும் பூதகணங்களும் ஆர்ப்பரிக்கும் நடுநிசியில், சங்கார லீலா விநோதம் புரிவதான எண்ணத்தில், ஊன்பொடிபூசிச் சுடலையாடுவதும்....அந்தப் பித்தனுக்கு ஒரு மனைவியாம் ; அவளுக்கு ஒரு வாழ்க்கையாம்!" ஆளுடைய பிள்ளைக்குப் பாலமுது ஊட்டிய அந்த நித்திய யவ்வனக் கொங்கைகள் குலுங்க ஈசுவரியின் விழிப்புலத்திலே இரு குருத்துக் கங்கைகள், பிரசவ நோக்காட்டிலே சிரசுதயங் காட்டுகின்றன.

"பிரம்மா! உன் படைப்புத் தொழிலுக்கும் போட்டியா? 'இந்த விழி நதிகள் பூலோகத்திற்கும் பாயுமானால், பிரளயந்தான்.

"வாணி பீடுடன் மொழிந்தாளே, அத்தனையும் உண்மை. பூலோகத்தில் வாழும் பக்தரெல்லோரும் நம்மை மறக்கத் தொடங்கி விட்டார்கள். படைப்பிற்கு நான்முகன். அவனுடைய அழகிய கற்பனைகளைத் தானும் பகிர்ந்து வாழ்வதனால் தனக்கு இயல்பாகவே ஆய கலைகள் அறுபத்து நான்கும் அமைந்து விட்டதாக வாணி பெருமை பேசுகிறாள். வெள்ளைக் கலையுடுத்திய அவளையே மக்கள், கலையின் தெய்வமாக வணங்குகிறார்கள். என்னை யார் மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள்? நான் எல்லாவற்றையும் அழித்துத் துவம்ஸம் செய்யும் பித்தனின் மனைவி-பிச்சி! இரத்தவெறி மிகக் கொண்டு மனிதப் புலாலைப் பிழிந்து பச்சை உதிரத்தை குடிப்பவளாக தோன்றுகிறேன். போதும் வாழ்ந்த வாழ்வு!" - சலிப்பின் இளரேகை புரையோட அகிலாண்டேஸ்வரி சொன்னாள்.

"ஓகோ! இது பெண்கள் சண்டையா?" ஈசனின் முகத்திலே விஷமத்தனம் குதித்துத் தவழ்ந்தது.

"பெண்களென்றால் ஏளனமா? கிருபையிடமும், அநுசூயாவிடமும்..." என்று தேவி சொல்ல, உருத்திரதாண்டவ முத்திரையிடும் விரல்களைக் குவித்துச் செவிகளைப் பொத்துகிறான்.

ஈசனின் துன்ப அபிநயம், தேவிக்கு மாரீசக் களிப்பினை அளிக்கிறது. விழிகளிலே சுரக்கும் கங்கைகள் தூர்ந்து விடுகின்றன.

"சக்தி! நீயே சர்வலோகங்களினதும் ஆதியந்தமற்ற, எல்லையற்ற ஜ“வ நதியாகப் பரம்பியிருக்கும் பொழுது, வாணி உகுத்த பகட்டுச் சொற்களிலே மதியிழந்து அழுக்காறு கொள்ளலாமா?"

முகத்திலே சிந்தனை மின்னல்கள் பளிச்சிட்டு மறைய, சக்தி பரமேசுவரனை நோக்குகிறாள்.

"நீயே நான். நானே நீ நாமே நாம். இதுவே தத்துவம்"

"உன்மதத்தப் பிதற்றல். ஆலகாலம் கண்டத்திலே கட்டுண்டது என நினைத்தேன். இல்லை, அது சிரசுவரை ஏறியிருக்கின்றது. இல்லாவிடின் மேன்மையான படைத்தல், காத்தல் ஆகிய தொழில்கள் இருக்க அழித்தலாம் தொழிலினையே மேற் கொண்டிருப்பீர்களா?"

பரமேசுவரனின் இதழ்களிற் பக்தரின் அறியாமையைக் காணும்போது மலரும் சிரிப்பொன்று புரளுகிறது.

"அழித்தலே படைத்தல்; அழித்தல் காத்தல்! படைத்தல் அழித்தலே; காத்தலும் அழித்தலே! படைத்தல்-காத்தல்-அழித்தல்-மறைத்தல்-அருளல் என்னும் ஐந்தொழிலையும் இயற்றாதியற்றியும், அழித்தலையே உரித்தாக வரித்தோம். அழித்தலே நித்தியம். உயர்ந்த சமத்துவ சமசரத் தத்துவத்துடன் நித்தியத்துவத்தை விளக்குந் தொழிலின் மேன்மைக்கு எஃது ஈடாகும்?"

ஏளனத்தின் நறுக்கொன்று அவளுடைய முகத்திலே பளிச்சிட, "என் அண்ணன் கண்ணனைப் போல நீங்களுந் தத்துவம் பேச விழைந்தீர்களா?" எனக் கேட்கிறாள்.

தேவியின் வார்த்தைகள் ஈசனின் நெஞ்சத்திற்கு நேரே சர மழை பொழிகின்றன. அவற்றை வில்வ இலைகளாக ஏற்றுக் கொள்கின்றார்.

"கோகுலவாசியா மகாதத்துவம் பேசுபவன்? வார்த்தைகளிலே உள்முடிச்சுக்கள் பல வைத்து அவன் எதையாவது சொல்வான். பக்தர் அதிலே ஏதோ ஆழ்ந்த நித்திலக் கருத்து இருப்பதான பிரமையில் அந்த முடிச்சுக்களை அவிழ்க்கும் ஓயாத பிரயத்தனத்திலே ஈடுபட்டிருக்கும் பொழுது, அவன் கோபியருடன் லீலா விநோதங்கள் புரியச் சென்று விடுவான். இது தத்துவமா? தந்திரமோ?"

பழுத்த இலையொன்று பூட்டவிழ்ந்து நிலத்தாயை முத்தமிட எடுக்கும் நேரக் கணிப்பிற்குக் கைலாசத்தில் மௌனம் நிலவுகின்றது.

மௌனத்தைக் குடைந்து வாணி எழுப்பும் வீணாகானம் கேட்கிறது. இசையலையிலே தேவியின் மனம் அலைக்கழிக்கப்படுகின்றது.

"வீணையும் அதன் நாதமும் போல அவர்கள் வாழ்கின்றார்கள். பிரமன் இப்பொழுது எதையாவது புதிதாகப் படைத்திருப்பான். அப் புதிய ஆற்றிலில் மதர்க்குங் கற்பனையிலே களிப்புக் கொள்கிறாள் வாணி, அவளுக்குத்தான் என்ன குறை? அவளைக் கணவன் நாக்கிலே வைத்துச் சேவிக்கிறான்."

"தேவி, தர்மம் அழிந்ததா? சுயம் ஒழிந்ததா? நீ உமை. நான் உமையொரு பாகன். எனவே நீயே நான். நானே நீ. நாமே நாம். ஏன் வீண் சஞ்சலம்? பூலோகத்திற்குச் சென்று வெகு காலமாகி விட்டது. நாமே நேரிற் சென்று உண்மைகளை அறிந்து மீளுவோம்." - அன்புப் பசையிலே பிணைக்கப்பட்ட வார்த்தைகள்.

"நமது பூலோக விஜயத்தின் போது நம்முடைய தொழிலின் மேன்மை நிறுவப்பட்டால்....?" ஈசனின் கேள்வி.

"ஈசனின் இஷ்டம் இயற்றப்படும்."

"மண்டலங்கள் கீதம் பாட, மாதவர்கள் தாளம் போட, மாங்குயில்கள் வேதம்பாட, காலாட, துடையாட இடையாட, கழலாட, தோடாட, குழல் சோர, உடையவிழ கொங்கைகள் இரண்டும் பொங்கிக் குலுங்கி ஆட தத்தீம்-தித்தீம்-தகதீம் என்று கூத்தாடி என் தேவி மகிழ்விப்பாள்"

"சம்மதம்"

*

மண்ணுலகின் பொன் பூக்குங் காட்சிகள். சக்தி மெய் மறக்கின்றாள். புள்ளி மாளினந் துள்ளும் காடுகளும், கோல மயிலாடு வனங்களும். தேன் சுவைப் பழஞ்சொரி சோலைகளும், நறுமலர்கமுக்கு காக்களும், மரகதப் பாய் விரிக்கும் கழனிகளும், குதிக்கும் அருவிகளும், அசையும் நதிகளும், பங்கயத் தடாகங்களும், ஓதையுடன் அலை வீசிக் கரை அளையும் நீலத்திரைக் கடலும், புள்ளின இசையும், பூவினச் சுகந்தமும், தென்றலின் பஞ்சுத் தழுவலும் கள்ளின் மயக்கத்தை ஊட்ட....

"அற்புதமான படைப்பு."

"மாயத் தோற்றங்களின் அநித்திய ஜாலங்கள். சக்தி வா, மனித நாகரிகம் கொழுத்து வளரும் நகர மொன்றிற்குச் செல்வோம்."

முகில் தொட்டுக் கர்வஞ் சிந்திப் பல அடுக்கு மாளிகைகள் எழுந்து நிற்கின்றன. கடுகதியில் இயந்திர விசை இசைத்து ஓடும் வாகனங்கள். கண்களைப் பறிக்கும் நியோன் விளக்குகள். விஞ்ஞான அசுரனின் இரைக்கல். அற்ப எறும்புகளாக அலையும் மனிதர்கள்.

சக்தி திகைக்கின்றாள்.

"களவுளின் படைப்புக்குக் கடவுளின் படைப்பேயான மானிடன் விடுக்குஞ் சவால். அந்த இமயம் நிகர்ந்த கட்டடங்கள் மனிதன் கட்டியவை. ஓடும் நதியைப் பிளந்தெடுத்தது அந்த மின்னொளி. பணமும் விஞ்ஞானமும் சர்வ வல்லமை பெற்றுச் சகலவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன." - ஈசனின் விமர்சனம். தேவியின் மௌனம்.

"வா, படைப்பின் விசித்திரங்களைப் பார்ப்போம்."

பேச்சுக்கள் இற்று விடுகின்றன. சூக்கும இயக்கம்.

"இது மருத்துவனை. பேச முடியாதவர்கள்; பார்க்க முடியாதவர்கள்; நடக்க முடியாதவர்கள்; வாழ முடியாதவர்கள்.... அதோ, பெரு வியாதிக்காரகள்! குணப்படுத்தப்பட இயலா நோய்களின் ஆக்கிணைக்குள் அழுந்தி அணு அணுவாகச் சாகிறவர்கள்..."

மருத்துவனை வாசிகளின் அவலக் குரல்களுக்குச் செவி சாய்க்கிறார்கள்.

'ஐயோ தயாநிதி! சித்திரவரை செய்யாமல் என் உயிரை எடுத்துக் கொள்.'

'கண்களும் கால்களும் அற்றுப் பிறந்த இது செத்தே பிறந்திருக்கக் கூடாதா?'

'சனியன் செத்துத் தொலைக்காமல் கட்டிலில் இழுபட்டுக் கிடக்குது.'

'பிள்ளை, அப்பாவுக்குக் கிட்டப் போகாதே. அது தொற்று வியாதி.'

'அம்மாவுக்கு ஆபத்து. உடன் இரத்தந் தேவை'

தேவி திருச்செவிகளைப் பொத்துகின்றாள்.

"நரக வேதனை. வாருங்கள், போய்விடுவோம்."

"படைப்புத் தொழிலின் மேன்மைகளை யதார்த்தமாகப் பார்த்தாயா?"

ஈசனின் கேள்விக்குத் தேவி பதில் உத்தரஞ் சொல்ல வேயில்லை.

பட்டினத்தின் வேறு பகுதியில் நடக்கத் தொடங்கினார்கள்.

ஒரு பெரிய கட்டடம். தனி அறை. ஒருவன் பல வேலையாள்களுக்கு இரகசியம் பேசுங் குரலிற் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்றான்.

"இவன் கள்ளக் கடத்தல் வியாபாரி. தான் உயிர் வாழ்வதற்காகத்தான் இத்தகைய அரசாங்க விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளதாக இவன் நம்புகின்றான்."

பெரிய ஆலையொன்றிலே, தோலைப் பொசுக்கும் வெப்பத்தைக் கக்கும் உலைக்கு முன்னால், தன் உடலைக் கயிறாக முறுக்கி ஒருவன் வேலை செய்கின்றான்.

"இவன் ஒரு தொழிலாளி. தான் உயிர் வாழ்வதற்காகத் தன் உடலை இப்படிக் கசக்கிப் பிழிகின்றான்."

மாமிச மலையான ஒருவன் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான்.

"இவன் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதற்கே!"

சாலையின் ஓரத்திலே, பிட்சாபாத்திரம் ஏந்தி, வருவோர் போவோரிடம் பற்களைக் காட்டி ஒருவன் பிட்சை கேட்கின்றான்.

"இவன் பிட்சை எடுப்பது தன்னுடைய உயிரைக் காப்பாற்றவே!"

ஒருத்தி தன்னுடைய கற்பைப் பேரம் பேசுகின்றாள். விலை சம்மதம். ஓர் அறைக்குட் சென்று, கூச்சமின்றி அந்த அந்நிய ஆடவனுடன்....

இவ்வளவு நேரமும் நகரத்தின் காட்சிகளையும், ஈசனின் விமர்சனங்களையுங் கேட்டுக் கொண்டு வந்த சக்தி திகைக்கின்றாள்.

"ஐயோ, கற்பு..." என்று சக்தி கதறுகின்றாள்.

"அவளுடைய செயல், தசை இன்பங்களின் பாற்பட்டதன்று. உயிர் வாழ்வதற்காக தன்னுடைய உடலை வாடகைக்கு விடுகின்றாள். அவளைப் படைத்தவன் பிரம்மா. அவளைக் காப்பவன் திருமால்!"

தோல்வி மனத்தை அலைக்கழிக்க, நாணம் மீதூரத் தேவியின் தலை கவிழ்கின்றது.

"போதும் ஈஸ்வரா. கைலாசத்திற்கு மீளுவோம்."

"தேவி, என்னுடன் வா." மறுப்பு எதுவுமில்லை, பின் தொடர்கின்றாள்.

சுடலை. ஆனந்த மிகுதியால் ஈசன் ஆர்ப்பரிக்கின்றான்...

"இங்கே இந்நாட்டின் சர்வாதிகாரிக்குச் சிதை. இது வணிகனுக்கு. இது தொழிலாளிக்கு. இஃது ஒரு கற்புக்கரசிக்கு. இஃது ஒரு விபசாரிக்கு. இது பணக்காரனுக்கு. இஃது ஏழைக்கு. படைப்பிலும் வாழ்விலும் எவ்வாறிருப்பினும், ஈற்றில் இச்சுடலைக்கு வந்து சமமாகிச் சங்கமிக்கின்றார்கள். சாவு நித்தியம். என் தொழிலேந்தும் சமத்துவ சமசரத் தத்துவம் நித்தியம். எல்லாமே அழிந்து, எல்லாமே ஒன்றாகி, எல்லாமே நானாகி, என்னிற் கலந்து நீயாவது நிச்சயம். நீ சக்தி!"

ஈசன் வெற்றிக் களிப்புடன் உடலெல்லாம் சுடலைப் பொடி பூசி ஆடுகின்றான்.

*

கைலாசத்திலே காலாட, துடையாட, இடையாட, கழலாட தேவி இயற்றும் ஆடலின் நாதம் தோடுடைய செவிகளிலே விழுகின்றது.

...............

'வீடு எழுதப்படுவதற்குக் கழைக் கூத்தாடியின் நிதானந் தேவை. மூலத்தை நீட்டவோ மழிக்கவோ கூடாது. புத்த போதனைகளுங் கோட்பாடுகளம் அசலாகவே இருத்தல் வேண்டும். கதையென்றாலுங் கதையேதான்.

ஒருப்பாகவேனுங் சில பாளிச் சொற்கள் இக்கதையிலே வருகின்றன. பௌத்த மதக் கோட்பாடுகளை விளக்க அவை அவசியமே என்று காணப்படும் இடங்களிலே மட்டுங் கையாளப்பட்டுள்ளன. அவற்றிற்குச் சமஸ்கிருத அர்த்தங்கள் ஏற்ற வேண்டாம்.

வீடு
வினை

புத்தர் மௌனத்தின் மோனத்திலே எழுந்தார். இதழ்கள் பூட்டே அவிழாது ஒன்றின் மேல் ஒன்றாகச் சயனித்தன. முகம் சிலையாக, பாவம் சித்திரமாக அமைந்தது. அமைதியான அமைதி; நிறைவான நிறைவு. எதிரிலே பாத்திரத்துடன் நின்ற இளவரசன் நந்தகுமாரனின் கண்களைக் கருணா மூர்த்தியின் விழிகள் ஒரே கணத்தின் சிதறலிலே துழாவின. நடக்கத் தொடங்கினார். அவனோ தானத்தைப் பெற்றுக் கொள்ளாது செல்லும் புத்தரைப் பின் தொடர்ந்தான். சாக்கிய வேந்தர் சுத்þ‘தணன் திகைத்து நின்றார். ஸப்த ஸ்வரங்களை இனிதாகக் குழத்துப் பொழிந்த வீணையின் தந்திகள் தெறித்து எழுந்த அபஸ்வரத்தைத் தொடர்ந்து சோகம் முளைவிடுகிறது.

கபிலவஸ்துவிலே புதிதாக நிர்மாணிக்கப் பட்டிருந்த அரண்மனையில், அன்று மூன்று வைபவங்கள். அரண்மனைக் கிரஹப் பிரவேசம்; நந்தகுமாரனின் முடிசூட்டு விழா; அவனுக்கும் ஜனபதகல்யாணிக்குங் கல்யாணம். சித்தாத்தர் தனது லௌகீகக் கனவுகளை நொருக்கிக் கடற்கரைக் கருத்து மணலாக்கி பின்னர், மன்னர் சத்தோதணன், தன் இளைய மனைவி பிரஜாபதி கௌதமி மூலம் பெற்ற நந்தகுமாரன் சாக்கிய மன்னனாக வீற்றிருப்பான் என்ற நம்பிக்கை வேர்களை ஆ‘ம் ஆழமாக ஊன்றி, வாழ்க்கைக் கிளைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார். இன்றைய-இந்தப் போழ்திற்காக சாம்பரிற் குளித்த தணலாக எத்தனை காலந் தவித்திருக்கின்றார்? எல்லாமே மங்கலாக நடக்கின்றது என்ற நினைவுப் போது மலர, தானத்தைப் பெற்றுக் கொள்ளாது புத்தர் நடக்கிறார். காந்தத்தினால் ஈர்க்கப்படுங் கருந்தாதுத் துணுக்காக நந்தகுமாரன் பின் தொடருகின்றான்.

மகனைத் தடுத்து நிறுத்த இயலாததை உணர்ந்து, மின்னலை விழுங்கிய கருமுகிற் குன்றென முகம் வாடி நின்றார். அவர் தம்முடைய நம்பிக்கை வேர்கள் ஒவ்வொன்றாக அறும் அவ்வேளையிலும், வாய் திறந்து எதுவுமே சொல்லவில்லை.

கீழே இறங்குவதற்கு முன்னர், புத்தர் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் வைத்தாவது தானத்தை ஏற்றுக் கொள்வார் என்ற அவாத் தாரகை எரிநட்சத்திரமாக, இருட்காடே மனவிசும்பில் விரிகிறது. சரியாக உச்சிக்கு வந்து கதிர்ச் சரங்கள் விழ இரு நாழிகை நேரமிருக்கும். அதற்கிடையிற் சோர்க்காது போனால், தானம் வீண்; விழா பாழ்.

ஒவ்வொரு படிக்கட்டிலும் மிக நிதானமாகவும், அமைதியாகவும் புத்தர் இறங்கினார். தானப் பாத்திரத்துடன் நந்தகமாரன் பின்தொடர்ந்தான். ஒவ்வொரு கணமும் மெதுவாகக் கழன்று கழன்று உதிருகின்றது. கீழ் மண்டபத்தை அடைந்ததும் புத்தரின் சென்னி திரும்பிற்று. அப்பொழுதும் நம்பிக்கையின் மெல்லிய நூலில் அவன்வலிக்கப்பட்டான். பிரிகள் சிலிம்பி நூல் அறுந்தது.

புத்தர் விஹாரத்தை நோக்கி நடந்தார். மௌனப் போர்வை. உள்ளத்திலே பல சிந்தனைகள் குறுக்கும் நெடுக்குமாகக் குதித்துக் கூத்தாட, நியாயப்பிரமாணங்களுக்குங் காரண ஏதுகளுக்குங் குதிராத நிர்ச்சிந்தைச் சூன்யத்தில் நந்தகுமாரன் பின் தொடர்ந்தான்....

இருள் வானிலே சட்டென்று பூத்துக் கண்களைக் கூசச் செய்யும் நட்சத்திர மொன்று அக்காலதரிலே தோன்றிற்று. சாக்கியப் பெண்களின் எழில்ராணி ஜனபதகல்யாணி மணப் பெண் கோலத்தின் எழில் ஏந்தி தன் காதலனை நோக்கினாள்.

சிங்கத்தின் வாயொன்று கர்ஜிக்கும் பொழுது சிக்காராகத் திறந்தது போன்ற அமைப்பிலிருந்தது அந்தக் காலதர். காங்கையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்குஞ் சூரியக் கதிர் முற்றிச் சரிந்த நெற்கதிர் வண்ண வித்தை எழுப்பி முகத்தின் விமலத்தைத் துல்லியமாகக் காட்டிற்று.

கூன் நுதல்; கூர் மூக்கு; கட்டித் தயிரிற் சிக்கிய இரு நாவற்பழக் கண்கள்; எலும்புகள் எதுவும் தெரியாது குங்குமச் சதை நிறைந்த முகம். கருமேகத்தின் சமுத்திர அலைகளை நிகர்த்த அளகபாரத்தில் ஜொலித்த நகைகளெல்லாம் விண் மீன்களை நாயச் செய்தன. பருவத்தின் திரட்சி மேடாய் முன் தள்ளும் மார்புகளின் பாரத்தைக் காலதரின் கீழ் விளிம்பிலே சாத்திய பாவத்தின் ஒயிலே சௌந்தர்யத் திலகமாகத் திகழ்ந்தது.

நந்தகுமாரன் நின்றான்.

அவளுடைய அந்த அகலிய நயனங்கள் இமைத்திரைக்குப் பின்னால் கண்ணாமூஞ்சியாடின. பின்னர் கூச்சந் தெளிய, வெளிவந்து, இமை வாய் விரித்துச் சிரிப்பில் அலர்ந்தன.

விழிகளைப் பருகும் விழிகள். நொடிப்பொழுது நேரத்தில், யுக யுகாந்திரத்து இரகசியங்கள் பின்னிப் பிணைந்து சங்கமித்துக் கலந்தன.

"விஹாரத்திற்குச் சென்று திரும்புவேன்!"

"žவர ஆடைக்குள்ளே சிற்றின்ப நினைவுகளைப் புதைத்து விட்டவர்களுடைய இருப்பிடத்திற்கா? என் மனம் சுடரைச் சுற்றும் விட்டிலா நடுங்குகின்றது."

"உன் எழிலோவியம் தீட்டப் பெற்ற மனத்திற்குள் துறவறத் தத்துவம் நுழைய மாட்டாது."

"முகூர்த்த வேளை சமீபிக்கின்றது."

"கடிதில் நான் திரும்புவேன்."

"நான் என் விழிகளை நீங்கள் வரும் வழியிற் புதைத்துக் காத்திருப்பேன்."

இக் காட்சியினைக் கண்டுங் காணாதவராக, சலனமற்ற மனத்துடன், புத்தர் விஹாரத்தைநோக்கி நடந்து கொண்டிருந்தார்.


வழி

புத்தர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். நியாய வரையறைக்குள் அடங்காது பிதுங்கும் பக்தியுடன் நந்தகுமாரன் நின்றான். அவ்விடத்தில் ஏதேனொரு பூந்தடியை நாட்டியிருந்தால், அடி வேரூன்றி நுனி தளிர் தள்ளியிருக்கும்.

நண்பகல் கால் நாழிகை ஓட்டத்திலே தொங்கிக் கொண்டிருந்தது. அந்த விரற்கட்டை நேரந் தவறினால், தானம் கொடுப்பதுமில்லை; கொள்வதுமில்லை.

கண்களைத் திறக்காமலே, "நன்த, நான் தானத்தை ஏற்றுக் கொள்ளுகின்றேன்" என இரு கைகளையும் புத்தர் நீட்டினார்.

அஞ்சலியில் உடலைப் பாதியாகச் சுருக்கிக் கொண்டு, தானத்தை அளித்தான். வயிற்றுச் சுமையை இறக்கியவனின் நெற்றியிலே துளிர்க்கும் நித்திலத் துளிகளை நினைவூட்டும் வியர்வை மணிகள்.

புத்தம் புதிய குவளை மலர்களாகப் புத்தரின் கண்கள் மலர்ந்தன. தானத்தை ஏற்றார்.

நந்தகுமாரனின் முகத்திற் கேள்வியொன்று கொக்கு நிஷ்டையிட்டிருப்பதை அவதானித்தார்.

"நந்த, என்ன யோசனை? எனக்கு அவகாச முண்டு."

"திரிகால முணர்ந்த திலோகமூர்த்தி நீங்கள். மதக்கோட்பாடுகளின் முடிச்சுகளைப் பிரித்துப் பார்க்கும் அவகாசத்துடனா நான் வந்திருக்கிறேன்? மூத்தவர், முதல்வர், புனிதர், புண்ணியர்! உங்களுடைய ஆசிபெற விழைந்தேன். சண்டாளர்களிடங்கூடத் தானம் ஏற்கும் நீங்கள், ஏன் என் தானத்தை அரண்மனையில் ஏற்க மறுத்துவிட்டீர்களென்பதை அறியாதே என் மனம் குழம்புகின்றது."

சுபாவத்திற்கு எதிராக உணர்ச்சியில் வெந்த நந்தகுமாரனின் வார்த்தைகளிலேகாங்கை கொழுத்துக் கிடந்ததை உணர்ந்தார். விழிப்புலன் அவனுடைய முகத்தை மேய்ந்தது.

உலகின் துன்பங்கள் தாக்காத பால்முகம். இருப்பினம், பாலுணர்ச்சி அலைமோதல்களிற் குதிர்ந்து இச்சாபங்க முற்றிருந்த ஒரு மனக்குறையின் சுவடு அவனுடைய முகத்தில் முத்திரையிட்டிருந்ததை அனுமானித்தார்.

அவருடைய பார்வையிலிருந்து நழுவுந் தப்புவகை எண்ணம் குருத்துத் தள்ளுகின்றது.

'விடை தாருங்கள்." குரலில் அவசரங் கொப்பளித்தது.

"அவசரமா? எதற்கு இவ்வவசரம்? நாம் மூப்பினையும், சாவினையும் நோக்கி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணராது, அற்பங்களுக்காக - மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் மிக மிக அற்பங்களுக்காக-நாம் அவசரப்படுகின்றோம்."

"முகூர்த்த வேளைக்கு முன்னர் நான் திரும்பி விடவேண்டும். நானேகும் வழியைப் பார்த்தே ஜனபத கல்யாணி கால் கடுக்க நிற்பாள்."

"வேளை-முகூர்த்தம்-நேரம்! நந்த, இந்தக் கல்யாண முகூர்த்தந் தவறினால், இந்தப் பூவுலகில் எதிர்காலத்தில், கல்யாணங்களே நடைபெறாதிருக்கப் போகின்றனவா? எத்தனையோ முகூர்த்தங்கள் மரித்த பின்னர், இம்முகூர்த்தம் வந்திருக்கின்றது. இந்த முகூர்த்தம் இறந்த பின்னரும், எத்தனையோ முகூர்த்தங்கள் விளையக் காத்திருக்கின்றன. இம்முகூர்த்தத்திலிருந்து இன்னொரு முகூர்த்தம் வரும்வரை காத்திருப்பதற்கிடையில், நீ மண வாழ்விற்குத் தேவையான இளமையை இழந்து விடுவாயா? வேளையைப் பற்றியும், முகூர்த்தத்தைப் பற்றியுங் கவலைப்படும் நீ, இவற்றின் ஓட்டத்தினாலேற்படும் மூப்பினைப் பற்றிச் சிந்தியாதிருப்பது ஏனோ? வேளைக்கும் சித்தத்திற்கும் சம்பந்த முண்டு என்ற உண்மையை மறக்காதே. அனந்தமென்ற இறந்தகாலத்திலிருந்து அனந்தமென்ற எதிர்காலத்தை நோக்கி இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. இறந்தகாலம்-எதிர்காலம் என்ற இரண்டு போழ்துகளைப் பிரிக்கும் இமைப்பொழுதுதான் இந்த நிகழ்காலம். அதனை நீ வேளையென்றோ முகூர்த்தமென்றோ அழைக்கலாம். உலகில் எல்லோரையும் துன்பத்திற்குள்ளாக்கும் பிணி-மூப்பு-சாக்காடு ஆகிய உண்மைகளைப் பற்றி உன்னுடன் நான் பேசும் முகூர்த்தம் இதுதானென்று வைத்துக் கொள்."

அர்த்தங்களின் அடி முடி எதுவுமே அறிவுக்கரங்களுக்குட் சிக்காது-ஆனாலும், அதற்குள் அனந்தகோடி அர்த்தங்கள் விரிவதான ஒரு மயக்கத்தை அந்த வார்த்தைகள் பாய்ச்சகின்றன. இருள் முகிலின் கரும்வயிற்றைப் பிளந்து திடீரெனப் பிரசவமாகும் மின்னலைப் போன்று ஏதோ ஒரு பிரகாசந் தோன்றி.... மறுகணமே இருட் சாந்து வியாபித்து விரிகின்றது.

யாரிடமுங் காண இயலாத ஓர் அமானுஷ்ய காந்த சக்தி புத்தரிடந் துலங்குகின்றது. அதன் ஈர்ப்பிற்குக் கட்டுப்பட்டு அமருகின்றான்.

"தானத்தை விஹாரத்தில் வைத்து ஏற்றுக் கொண்டதற்குச் சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?"

"உன் மொழியில், அதற்கான முகூர்த்தம் இப்பொழுதுதான் வந்தஎனவும் வைத்துக் கொள்ளலாம்."

"தூய நெறிகளைக் கடைப் பிடித்துத் துல்லியர்களாக வாழும் புத்தருக்கும், பிக்குகளுக்குந் தானம் வழங்கவே தகுதியற்ற பாவியென்று அரண்மனையிலுள்ளோர் இகழ மாட்டார்களா? நீங்கள் துறவறம் நாடியதால் வெறுமையாக இருக்கும் மன்னர் வார்சுதார் பதவியை நான் நிரப்பல் வேண்டுமென்பது எந்தையின் விருப்பம்."

அஞ்ஞான மருள் சூழ எழும் ஐயத்திற் பிறந்த கேள்வியல்ல என்ற உண்மையிற் காலப் புழுதி படியவில்லை.

"மன்னன்-செல்வாக்கு-அந்தஸ்து! இவை எதனால் உண்டாகின்றன? பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும், இல்லை, அதற்குப் பின்னரும்-சம்சாரச் சக்கரம் ஓயாமல், தரிக்காமற் சுழல்கின்றது. நமது ஊழ் இதனைச் சுழற்றுகின்றது. நீ சென்ற வாழ்க்கையில் என்னவாக இருந்தாய்? அடுத்த வாழ்க்கையில் என்னவாகப் பிறப்பாய்? இன்றிருக்கும் நிலை, நாளையுஞ் சாசுவதமானதா? இதனை அறியும் மார்க்கத்தினைப் புரிந்து கொள்ள உன் சித்தத்தினைப் பழக்கியெடுக்க முனைந்ததுண்டா? žலமே தானமளிக்கும் ஸ்திதியினை நிச்சயிக்கின்றது."

"žலமா? நீங்கள் மனிதரை