| ஈழநூல் 065 | |
| நூல் |
பனியும் ப்னையும் (பகுதி 1, பகுதி 2) |
| ஆசிரியர் |
எஸ். பொ., இந்திரா பார்த்தசாரதி தொகுப்பாளர்கள்) |
| மின்னூலாக்கம் |
இ. பத்மநாப ஐயர் |
| மின்பதிப்பு | ஈழநூல் |
பனியும் பனையும்
தொகுப்பு: இந்திரா
பார்த்தசாரதி, எஸ்.பொ.
பகுதி
1
-----------------------------------------------------------------
பனியும்
பனையும்
தொகுப்பு:
இந்திரா
பார்த்தசாரதி
எஸ்.பொ.
----------------------------------------------
பதிப்புரை
'தமிழுக்கு
எல்லையில்லை. கலைகளுக்கு எல்லையில்லை. தமிழின் புதுப்புனைவுகளுக்கு எல்லையில்லை.
புது நாடுகளிலே வாழும் தமிழர்களுடைய கலை-இலக்கிய நேசிப்புகளும், ஆக்க முனைப்புகளும்
கௌரவிக்கப்படல் வேண்டும்' என்றும், 'இந்தப் பதிப்பகம் இளம் எழுத்தாளர்களுடைய
படைப்புகளைக் கௌரவிக்கும்' என்றும், "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை
செய்தல் வேண்டும்' என்பது பாரதி வாழ்ந்த காலத்தில் ஓர் இலட்சியக் கனவு. ஆனால்,
இன்று தமிழ் உயர்ச்சியின் அவசிய இலக்கு' என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
'மித்ர வெளியீ'டின் முதலாவது நூலுக்குப் பதிப்புரை எழுதும் பொழுது என் ஆசைகளை
வெளிப்படுத்தியிருந்தேன்.
இந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சரியான திசையிலே
நமது இலக்கியப் பயணம் தொடருகின்றது என்பதற்கு 'பனியும் பனையும்' என்னும் இந்த நூல்
சான்று. ஒன்பது நாடுகளைச் சேர்ந்த முப்பத்தொன்பது எழுத்தாளர்களுடைய சிறுகதைகள்
இதில் உண்டு. பலர் புதியவர்கள்.
நமக்காக' கதைக் களஞ்சியங்கள்' தயாரிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதியும் எஸ்.பொ.வும் அவற்றின்
முன்னோட்டமாகவும், தமது பணிக்குச் சர்வதேசியப் படைப்பாளிகளின் ஒத்துழைப்பினை
ஈர்க்கும் முகமாகவும் இதனைத் தொகுத்தமை பாராட்டிற்குரியது.
எதற்கும் ஓர்
ஆரம்பம் உண்டு. ஆரம்பம் முழுமையாக அமைவதும் சாத்தியமில்லை. ஆனால், சத்தியத்தை
மூலதனமாகக் கொண்டுள்ள பணிக்கும், அதன் துவக்கத்துக்கும் தவணையிடலாகாது. இந்த
ஆரம்பத்தில் தவறிப் போயிருக்கக்கூடிய புதிய பார்வைகள், புதிய கோலங்கள். புதிய
சுருதிகள், புதிய படைப்புகள் ஆகியவற்றுடன் ஆரோக்கியமானதும், ஆக்கபூர்வமானதுமான
தொடர்புகளை இந்தத் தொகுதி ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நிச்சயமாக
நம்புகின்றேன்.
புலம் பெயர்ந்த நாடுகளிலோ வாழும் தமிழர்கள், நம்மவர்களுடைய
படைப்புகளைக் காசு கொடுத்து வாங்கி ஆதரித்தல் வேண்டும். இஃது உந்நதமான தமிழ்ச் சேவை
என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்தால், நமது புதிய படைப்பாளிகள் ஊக்கமுடன் படைப்புத்
துறையில் ஈடுபடும் ஆர்வம் பெருகும்.
அன்புடன்,
டாக்டர்
பொன்.அநுர
Eastwood
Australia
14.11.94
நுழைவாயில்-1
1993
ஆகஸ்ட். நான் ஆஸ்த்திரேலியாவிலிருந்து திரும்பி இந்தியாவுக்கு வந்து
கொண்டிருந்தேன். விமானத்தில் என் அருகில் ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளையர்
ஒருவர். அவர் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நானும் என்னை அறிமுகப்
படுத்திக் கொண்டேன். இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்தவன் என்று, தமிழன்
என்று.
அவர் ஆச்சர்யத்துடன் வினவினார்; 'இந்தியாவிலும் தமிழர்கள்
இருக்கின்றார்களா?'
அவர் கேள்வி என்னை ஆச்சர்யத்துள்ளாக்கவில்லை. அந்த
அளவுக்கு, இன்று ஆஸ்த்திரேலியாவில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை அங்கு
அறிவித்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில்
வெளிநாடுகளுக்குப் புலம் பெயரவில்லை. அரசியல் அவர்களை அகதிகளாக அயல் நாடுகளுக்கு
அடித்து விரட்டியுள்ளது. இச்சூழ்நிலையில் அவர்கள் தங்கள் இருக்கையைத் தங்களுக்குத்
தாங்களே புலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகிறது. கலாசாரப் பிரக்ஞைதான்
இதற்கேற்ற 'ஆக்ஸ’ஜன்'. வேற்று முகங்களிடையே, பண்பாட்டுச் சூழலிலேயே அவர்கள்
முகங்களை அவர்களுக்கே அடையாளப்படுத்திக் காட்டும் கண்ணாடி இலக்கியம். இது
அவர்களுக்கு ஒரு வடிகால். கலாசார ஜ“விதப் போராட்டத்தின் உன்னத அறிகுறி. கம்யூனிஸ
அமைப்பைப் புறக்கணித்து, அந்நாடுகளிலிருந்து பலர் வெளிநாடுகளுக்குச் சென்று
தங்களைக் கலை இலக்கிய விற்பன்னர்களாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும் உண்டு.
ஆனால், அவர்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் சென்றவர்கள். இலங்கையிலிருந்து
சென்ற தமிழர்கள் நாங்களாகவே தேர்ந்தெடுத்து இச்சிலுவையைச் சுமக்கவில்லை. அவர்களால்
அகதிகளாய்ச் செவ்வதைத் தவிர்க்க முடியவில்லை. பனையை வேறோடு பறித்து, அதைப் பனி
மண்ணில் வளர்த்தாக வேண்டுமென்று சபிப்பது போல.
அவ்வாறு 'சபிக்கப்பட்டால்',
அது இலக்கியத்துக்கு ஆதாயம் என்பதை இத்தொகுப்பிலுள்ள கதைகள்
உணர்த்தும்.
எஸ்.பொ.வை நான் 1993-ல் ஆஸ்த்திரேலியாவில் சந்தித்தபோதுதான்
'சர்வதேசத் தமிழ்க் கதைத் தொகுப்பு' ஒன்றைப் பல பகுதிகளாக பல்வேறு போக்குகளை
எடுத்துக் காட்டும் வகையில், வரலாற்றுப் பார்வையுடன் வெளிக் கொணர வேண்டுமென்ற
ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது.
எந்தப் பணிக்கும் ஒரு தொடக்கம் வேண்டும்.
அதுவும் குறிப்பிடத்தக்கது நல்லதொரு தொடக்கமாக இருத்தல்
வேண்டும்.
அத்தொடக்கத்தை அறிவிக்கும் வகையில், முதற்கண் இத்தொகுப்பு நூலை,
'பனியும் பனையும்' என்று தலைப்பிட்டு வெளியிடுகிறோம்.
இது முழுக்க முழுக்க
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுடைய படைப்புகளைப் பனி எப்படிப்
பாதித்திருக்கின்றது என்று காட்டும் கலாசார அடையாளங்கள். இதில்
ஆஸ்த்திரேலியாவிலிருந்து 9, ஐரோப்பாவிலிருந்து (பிரிட்டன், ஹாலந்து,
சுவிட்ஸர்லாந்து, நார்வே, ஃப்ரான்ஸ், டென்மார்க் ஜெர்மன் ஆகிய நாடுகள்) 20, வட
அமெரிக்காவிலிருந்து 10, ஆக முப்பத்தொன்பது கதைகள் உள்ளன.
இவர்கள் குடியேறிய
அந்தந்த நாட்டுக்கும் ஒரு கலாசார சரித்திரம் உண்டு. அந்தச் சரித்திரத்துக் கேற்றபடி
நான் அந்தந்த நாட்டின் சமகாலத்தியச் சமுதாயம் அமைந்திருக்க முடியும். புதிதாக
குடியேறுகின்றவர்கள். அச்சமுதாயத்தில் வாழ முற்படும்போது ஏற்படுகின்ற பாதிப்புகள்
நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதற்கான காரணத்தை, இவ்வரலாற்றுப் பார்வையுடன்
அணுகினால்தான் புரிந்து கொள்ள முடியும். இப்பாதிப்புக்கள் மிக அழகாக
இப்படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இக்கதைகள் எல்லாவற்றையும்
இணைக்கும் ஆதார ஸ்ருதி; நேர்மை, எழுத்து நேர்மை. கலாசாரத்தின் பேரில் பலவகையான
தளைகளை தங்களுக்கிட்டுக் கொண்டு காரணமற்ற குற்ற உணர்ச்சியால் கீழை நாடுகளில்
அவதியுறும் இளைஞர்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் இருக்கும் மேற்கத்திய
சமுதாயங்களை நேர்கொள்ளும் போது, அவர்களுக்கேற்படும் அதிர்ச்சிகள், கேள்விகள்,
தயக்கங்கள், மனச்சலனங்கள், உடன்பாடுகள், மறுப்புக்கள் எல்லாமே அழகாகச்
சித்திரிக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பு ஒரு முன்னோட்டம். எங்களுடைய மகத்தான
பணிக்கு ('சர்வதேசத் தமிழ்ச் சிறுகதைத் தொகப்பு') முன் அறிவிப்பு. இது விமர்சன
ரீதியாகவும். வணிக ரீதியாகவும் அடையும் வெற்றிதான் எங்களுடைய žரிய இன்னோர் பணிக்கு
உரிய உற்சாகத்தையும், மனஉறுதியையும் அளிக்க வேண்டுமென்று தொகுப்பாசிரியர்கள் என்ற
முறையில் எஸ்.பொ.வும் நானும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இந்நூலுக்கு,
அவருக்கே உரித்தான அணுகலுடன், மிக நேர்த்தியான ஒரு முன்னுரை வழங்கியுள்ள எழுத்தாளர்
சுஜாதா அவர்களுக்கு எங்கள் நன்றி.
இந்திரா பார்த்தசாரதி
3,
'Ashwarooda0
248-A. T.T.K. Road,
MADRAS-600
018.
8-11-94.
நுழைவாயில்-II
நான் நிர்ப்பந்த வசத்தால்
பரதேசியானவன். இதனால் நேர்ந்த இழப்புகள் அனைத்தையும் தமிழ் ஊழியத்தினால் ஈடு
செய்யலாம் என்ற ஞானம் பெற்ற பரதேசி. இந்த ஞானம் போதிமர நீழலின் சகாயமல்ல. படைப்பு
சரஸ். இறக்கும் வரை நான் வசப்படுத்திய சரஸ் ஊறிக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும்
என் தவம். இதனாலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் தமிழ் ஊழியம் தொடர்ந்தது. புலம்
பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் சிறுசஞ்சிகைளின் பரமார்த்த வாசகனும் நான். பல
நாடுகளிலே வாழும் படைப்பாளிகளுடனும் ஞானப் பகிர்வினை யாசிப்பவனும், சிறு சிறு
குழுக்களாய் நமது ரஸனையை எல்லைப்படுத்திக் கொள்ளுதல், நமது படைப்பு வீரியத்தினை
சிதறச் செய்கின்றதோ என்கிற அச்சம் என்னுள் எழுந்தது. 'மறைவாகப் புதுக்கதைகள் பேசி'
மகிழும் ஒரு போக்கு. தமிழின் ஆதாயமாகக் கனியாது என்கிற உண்மையும் உறைக்கலாயிற்று.
நமது படைப்பு முயற்சிகள் ஒரு முகப்படுத்தப்படும் பொழுது புதியன சாதித்தல் சாத்தியம்
என்ற ஞானம் விடிந்தது. இந்த ஞானத்தைச் செயற்படுத்தும் தலைமை ஊழியக்காரனாய் என்னை
நானேநியமித்துக் கொண்டேன். இந்த ஊழியத்தின் நம்பிக்கைப் பேழையாய் இந்த நூல்
அமைகின்றது.
'இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச
மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் ஈழத்தமிழரின் புதிய
படைப்பாற்றல் தலைமை தாங்கும்' என்கிற சுவிசேஷத்தை என் இந்த யாத்ராவில்
முன்வைத்தேன். பல வட்டங்களையும் சேர்ந்த இலக்கிய நேசர்களுடன் இது குறித்தும்
பேசினேன்; விவாதித்தேன். என் கூற்றினை எண்பிக்க, புதிய படைப்பாற்றல்களின்
கோலங்களின் வகையையும் வண்ணத்தையும் முன்வைக்கும் தொகுதிகளை வெளியிடுதல் அவசியம்
என்பதையும் உணர்ந்தேன். இத்தொகுதிகளை வெளியிடும் முயற்சியின் முன்னோட்டமாகவும்
பனியும் பனையும் அமைகிறது.
'பனியும் பனையும்' என்கிற தலைப்பே ஒரு
குறியீடுதான். பனைமர மண்ணின் மணத்தையும், பண்பையும், உறவையும், தியானத்தை மறக்காத
பரதேசிகள் நாங்கள். பனி பெய்யும் அந்நியச் சூழ்நிலைகளிலே, வாழ ஏர்வைப் பட்டுள்ளோம்.
புதிய நாடுகளிலே நமக்கு ஒரு தனித்துவ கலாசார Identity ஐத் தக்க வைக்கும்
வேள்வியாகவும் நமது வாழ்க்கை அமைந்துள்ளது. எனவே, நமது படைப்புகளிலே பனையின் கலாசார
வேர்களும், பனிக்குளிரின் புதிய நிர்ப்பந்தங்களும் சங்கமிக்கின்றன. புலம் பெயர்ந்து
வாழும் ஈழத் தமிழர்களுடைய, சர்வதேசியப் பாங்கான இந்த முதலாவது தொகுதிக்கு இப்பெயர்
நியாயமாகப் பொருந்தும். இத்தொகுதியைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இலக்கியத்தின்
அனைத்துத் துறைகளிலும் நாம் பூண்டுள்ள படைப்பு நேர்த்திகளைப் புலப்படுத்தும்
தொகுதிகள் வெளிவருதல், அடுத்த நூற்றாண்டின் வாசகர்களைப் பதப்படுத்தவும்
வசப்படுத்தவும் உதவும்.
இத்தொகுப்பு வேலைகள் என் படைப்பிலக்கியப் படைப்பு
நேரத்தினை விழுங்கும் என்பது உண்மை. என் சொந்த இழப்புகள், என் இனத்தின்
பெருமையையும் மகிமையையும் உயர்த்துமானால், அஃது இனிதே, ஓர் இனத்தினது கௌரவம் என்
பிரபலத்திலும் பார்க்க மகத்தானது. அந்த இனத்தின் வீறார்ந்த பணியிலே நான்
செயலூக்கமுள்ள ஊழியனாய்ப் பிணைவதினால், இழப்பு என்று சொல்லவும் ஏலாது. இதனாலும்
இனிமை என்றேன்.
என் புகழையும் வித்துவத்தையும் பிரசித்தப்படுத்தும் ஓர்
உபாயமாக, என் இலக்கிய ஊழியத்தை நான் என்றும் தரிசித்ததேயில்லை. என் அனுபவங்களை இளைய
படைப்பாளிகளுடன் பகி‘ந்து கொள்வதை இலக்கிய சகாயத்திற்கு உதவும் ஒரு சல்லாபமாகவும்
மதிக்கின்றேன். இதனை ஒரு போஷகமாகவும் நான் நினைக்கவில்லை. என்னைச் சதா
இளமைப்படுத்துவதற்கு இந்தச் சல்லாபம் ஓர் ஊக்கியும். இதனைப் புதியவர்கள் விளங்கிக்
கொள்ளுதல் என் பேறு.
இத்தொகுதிகள் தனிமனித முயற்சிகளாக அல்லாமல், கூட்டு
முயற்சியாகக் கனிதல் வேண்டும். இதற்குத் தற்பற்றைத் துறக்கும் மனசுந் தேவை. குழு
விசுவாசங்களை நெகிழ்த்தும் இலக்கியப் பக்தி வேணும். ஞானத்தைப் படைப்பதிலும்
பகிர்வதிலும் ஆத்மார்த்த ஈடுபாடு அவசியம். தமிழ் இனத்தின் தனித்துவ முகத்தையும்
அடையாளங்களையும் பேணும் உயர்வேள்வியின் ஆகுதியாக நம் எழுத்து ஏற்றம் பெறல் வேண்டும்
என்கிற பக்குவம் தேவை.
அத்தகைய மனசர்கள், பக்தர்கள், பக்குவர்களுடைய சகல
ஒத்துழைப்பையும் யாசிக்கின்றேன். நமது படைப்பின் வீறையும் விருந்தையும் ஒவ்வொரு
தமிழ்க்குடும்பத்திற்கும் எடுத்துச்
செல்வோம்.
எஸ்.பொ.
9-11-1994
கோபுர
வாயில்
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகளின் மகத்தான
இந்தத் தொகுப்பின் கதைகளைப் படித்து ரசித்தேன். சிறுகதை எழுதுவது மேல்நாட்டில்
குறைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. உலகயுத்தத்திற்குப் பிறகு ப்ரெஞ்சு
எழுத்தாளர்களில் மிகச் சிலரே சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்கள். அதே போல்
குந்தர்ஃக்ராஸ், பீட்டர் ஹாண்கே, மாக்ஸ் ஃப்ரிஷ் போன்ற ஜெர்மானிய
எழுத்தாளர்களுக்கும் கதைத் தொகுப்புக்கள் இல்லை. பிரிட்டிஷ் எழுத்தாளர்களிலும்
சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடுபவர்கள் அரிதே. எல்லோரும் பெரிய பெரிய நாவல்கள்
தான் எழுதுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ப்ரான்சு ஜெர்மனி இங்கிலாந்து ஆஸ்திரேலிய
கனடா நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் மிகப்பெரிய சிறுகதைத் தொகுப்பு
வெளிவருவது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. சிறுகதைக் கலை இறந்து விடவில்லை. இந்த
அவசர யுகத்திலும் நன்றாக எழுதப்பட்ட சிறுகதைகள் ஒரு உணர்ச்சி பூர்வமான, எளிதில்
மறக்க இயலாத அனுபவத்தைத் தருகின்றன.
இலங்கைத் தமிழர்களின்
புலப்பெயர்ச்சிக்கு அந்த நாட்டில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும், மறுக்கப்பட்ட
உரிமைகளும், நேர்ந்த சில சமூக அனியாயங்களும் காரணங்கள் என்பது நமக்குத் தெரியும்.
எந்தப் பிரிவிலும் துக்கம் இருக்கிறது. எந்த இழப்பிலும் தனிமையிலும் கவிதை கலந்த
சோகமும் நல்ல சிறுகதைக் கான விஷயமும் இருக்கிறது. அதை மிகை தவிர்த்து எழுதத்
தெரியவேண்டும். அவ்வளவே. இதில் பலர் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள். சிறுகதை
எழுதிவதில் அனுபவமின்மை சிலரிடம் தென்பட்டாலும் அவர்கள் சொல்லும் ஆதாரக் கருத்தில்,
யோக்கியம் கதைகளைக் காப்பாற்றி வருகிறது.
புலம் பெயர்தல் மட்டுமே
நல்லகதைக்குப் போதுமான கருப்பொருளாகாது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் தான் பலர்
பலவகையில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். படிப்புக்காகவும் உத்தியோகத்துக்காகவும்
மற்றமானிலங்களுக்கும் நாடுகளுக்கும் குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் இந்தத்
தொகுதியில் உள்ளது போன்ற சிறப்பான சிறுகதைகள் (நாஞ்சில் நாடன் போன்ற ஒரு சிலரைத்
தவிர) எழுதவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் விரும்பிச் சென்றவர்கள்; விட்டுச்
சென்றவர்கள். அப்படி விட்டுச்சென்ற தாய்நாட்டின் பால் அவர்களுக்கு ஏக்கமும் அதிகம்
இல்லை. மேலும் தமிழ்நாட்டில் ஈழம் போல உயிர்வாழத் தவிப்புக்களும் சஞ்சலங்களும்
இல்லை. வாழ்க்கையின் திசையை தீர்மானித்துப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு
சென்றவர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்கள். அவர்கள் எழுதும் கதைகளில் எல்லாம் நாட்டுத்
தமிழர்கள். அவர்கள் எழுதும் கதைகளில் எல்லாம் ஒரு விதமான குற்ற உணர்ச்சியும்
திரும்பிவந்து நம்மூர் அவலங்களுடன் சமரசம் செய்து கொள்வதில் உள்ள சங்கடங்களையும்
தான் காண்கிறேன். தீவிரமான தேச நேசம் இல்லை.
ஈழத்தமிழர்கள் அப்படி
இல்லை.
"யாழ்நகரில் அப்படி இல்லை.
கொழும்பில் என்
பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்
நாட்டில என் அம்மா
சுற்றம் ப்ராங்போட்டில்
ஒரு சகோதரியோ ப்ரான்ஸ்
நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்!!"
என்று ஜெயபாலன் சொல்வதுபோல் "காற்றில் விதிக் குரங்கு
கிழித்தெரியும் பஞ்சுத் தலையணைபோல்" உலகெங்கும் சிதற அடிக்கப் பட்டவர்கள். அன்னிய
நாட்டில் வேற்றுமுக வெறுப்புகளின் மத்தியில் இரவும் பகலும் குளிரும் மழையும்
கருதாது ரெஸ்டாரண்டுகளிலும் ரயிலடிகளிலும் உழைத்து இயக்கத்துக்கும்
குடும்பத்துக்கும் பணம் அனுப்பி பெரும்பாலும் தனிமையில் வாழும், அறைக்குவந்து
சேர்ந்தபின் தாய்நாட்டின் பழமரங்கள் நட்டு வைத்த தோப்புக்களை அழியவிட்டுத் தொலை
தூரம் வந்ததை எண்ணி ஏக்கப்படுகிறவர்களிடம் உக்கிரமான கவிதையும் கதையும் பிறப்பதில்
வியப்பில்லை. 'பனியும் பனையும்' என்று தற்செயலாகப் பொருந்தும் தலைப்புக்கு உண்டான
இரண்டு சிறுகதைகளும் சிறந்து விளங்குகின்றன. ஒன்று ஆஸ்திரேலியக் கதை. மற்றது
ஜெர்மனி. ஒன்று கம்ப்யுட்டர் அலுவலகத்தில் நிகழ்வது மற்றது
சிறையில்.
ஆஸ்திரேலியாவில் கம்ப்யுட்டர் திறமை இருந்தும் பொருளாதார
அனிச்சியத்தால் எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படும் அபத்திரத்தில் வாழும் தமிழன்
உடன் பணிபுரியும் போத்துகீசியனின் தைரியமான கருத்துக்களையும் தாய்நாட்டு
ஏக்கத்தையும் வியந்து தன் விதியை எதிர்க்காமல் ஒப்புக்கொள்ள, நண்பன் வேலை இழந்து
நாடு திரும்பும் போது இவன் செய்யக் கூடிய ஒரே ஒரு தீர காரியம் கணிப்பொறி திரையில்
தன் தாய்நாட்டின் பனை மரத்தை வரைந்து பார்ப்பது தான் (சந்திரிகா ரஞ்சன்-'பனையும்').
ஜ“வமுரளியின் 'பனியும்' என்கிற கதை தமிழ் மொழிக்கு இதுவரை பரிச்சயமில்லாத
சூழ்நிலையை அறிமுகப்படுத்துகிறது. ஜெர்மனியில் ஒரு சிறை. அதில் நான்கு ஆப்பிரிக்க
ஒரு இதாலியக் கைதிகளுடன் ஒரு இலங்கைத் தமிழன் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்து
ஐநூறு ஆண்டுகளுக்குப்பின் தாங்கள் ஜெர்மனியை கண்டு பிடித்ததாகக் கடுப்புடன்
தொனிக்கும் இந்தக் கதை அந்த நாட்டின் நாஜி மிச்சங்கள் கருணையற்ற இனவெறி, சமுதாய
அநீதிகள் இவைகளின் எதிரொலிகளை பெரும் சுற்று மதில் கொண்ட இட்லர் காலத்துச் சிறையில்
உணர்கிறார்கள். நேற்றும் இன்றும் நாளையும் உருளைக் கிழங்கு உண்டு தினத்தில்
இருபத்து மூன்று மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். 'நான்
வீட்டுக்குப் போகவேண்டும், நைஜ“ரியா எனதுவீடு' என்று பத்து அத்தியாயங்களில்
சிலதலைப்புக்களை மட்டுமே கொண்ட ஜப்பான் கடவுள், இனவெறி அகதி புத்தகம் எழுதும்
ராஸ்தா போன்ற பாத்திரங்கள் கொண்டு முற்றிலும் புதிய சர்வதேச பரிமாணம் தமிழக்
கதைக்கு கிடைக்கிறது.
"எங்களின் செல்வங்கள் எங்களின் கோதுமை எங்களின் அரிசி
எங்களின் ஆடைகள் எங்களின் உழைப்பு எல்லாம் கொள்ளை கொண்டு மலையாக ஐரோப்பாவில்
குவித்து வைத்த இந்த தேசத்தில்" சிறைக்கைதியின் உக்கிரமான கதை இது. இவ்விதத்தில்
தமிழ் சிறுகதைக்குபுதிய பின்னணிகள் கிடைப்பதுதான் இந்தத் தொகுப்பின் முக்கியமான
சாதனையாகக் கருதுகிறேன். கலா மோகனின் "குளிர்" போன்ற கதைகள் ஐரோப்பாவின்
கடுங்குளிரால் நாசித் துவாரத்து மேற்பரப்பில் முள்ளால் கீறப்படுவதுபோன்ற உணர்வு
ஏற்படுவது தமிழ்க் கதைக்குப் புதிது.
மாத்தளை சோமுவின் ஒரேஇனம் கதையில்
'இவர்கள் அகதிகளாகப் பிறக்கவில்லை. அகதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள்
மத்தியில் மேதைகள் முகிழ்வார்கள்' என்கிற நம்பிக்கை தருபவனும் ஆஸ்திரேலியன் 'These
Fu...Refugees' என்று திட்டுவனும் ஆஸ்ரேலியன்தான்.
'மழை' என்கிற கதையில்
நான்காண்டுகளுக்கு மேலாக புருஷனின் ஸ்பரிசம் இன்றி உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி
வேட்டுகளுக்கும் ஷெல் அடிகளுக்கும் பயந்து கொண்டு தாய்நாட்டில் போராடும் மனைவியை
தக்க சமயத்தில் நினைவு கொண்டு ஆஸ்திரேலிய பெண்ணின் சரசத்தை மறுக்கும் தமிழன்
சொல்லும் காரணம் "என் மனைவியும் அங்கே இந்த சுகத்துக்காக உன்னைப்போல் ஒருவனைத்
தேடிப் போகலாம் இல்லையா" என்பதே. இதுவும் புலம் பெயர்ந்தவர்களுக் குண்டான தனிப்பட்ட
குற்ற உணர்ச்சிதான். யாழ் பாஸ்கரின் ஓய்வு நாள் மெல் போரினில் ஒரு சனிக்கிழமையின்
தனிமையையும் அலுப்பையும் சிறப்பாக சித்தரிக்கிறது.
யோகனின் 'கதையின்
கதை'யில் உறைமழையும் சூழல்காற்றும் என்கிற கதையை எழுதத் துவங்கிய நடா அதைப்பற்றி
ஆத்ம விசாரங்களில் ஈடுபட்டு கடைசியில் கதையை எழுத தான்பட்ட அவஸ்தைகளையே கதையாக
எழுதிவிடுகிறான்.
'விருந்து' ஒரு சிறப்பான நடுத்தர வர்க்கக் கதை.
நண்பர்களும் மனைவியரும் ஒரு விருந்துக்காகக் கூடி ஆஸ்திரேலிய சுகவாசம் கொடுத்த
குடிப்பழக்கம் போன்ற சலுகையில் பேச்சுவாக்கில் நாக்கு தடித்து நட்புடன் பேசிக்
கொண்டிருந்தார்கள் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கி விருந்தின் சந்தோஷம் அத்தனையும்
துறந்து கடமைக்கு சாப்பிட்டு முடித்து விட்டு விளக்கை அணைக்கும் இந்த கதையின்
பின்னணியில் அவர்கள் ஆதாரமான கோபத்தின் காரணம் அவர்கள் இடப் பெயர்ச்சியும்
தாய்நாட்டை விட்டு வந்த சோகமுமே என்பது மிக இயல்பாக
அமைந்திருக்கிறது.
குறிப்பிடத்தக்க மற்றொரு கதை அருட்குமாரனின்
'சபிக்கப்பட்டவர்கள்'. தாலிக்கொடி உட்பட சகல நகைகளையும் விற்று மகளை லண்டனுக்கு
அனுப்பி வைத்த தாய் அவனுக்கு ஊறு விளையாமல் இருக்க பழனிக்கு நேர்ந்து கொண்டது
நிறைவேறாமல் போக இவனை வருஷத்துக்கு ஒரு முறையாவது லண்டனில் கோவிலுக்கு போய் வருமாறு
வேண்டுகிறாள். நாத்திகத்தனமான எக்சிஸ்டென்ஷ’யலிஸ்ட் சோக சிந்தனைகள் உள்ள மகனுக்கு
லண்டன் கோயிலின் முரண்பாடுகள் உறுத்துகின்றன. சேலை யணியாப் பெண்கள். பூணுலுக்கு
மேல் ஸ்வெட்டர் போட்ட ஐயர், ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அபிசேஷகப் பால், அர்ச்சனைக்கு
கார்னேஷன் பூக்களும் ஆப்பிள் பழங்களும் இவ்வாறான வினோதங்களை புரிந்து கொள்ள
முயலாமல் 'பப்'புக்கு போய் பியர் அடிக்கிறான். இரு கலாசார முரண்பாட்டை பின்னணியில்
சிவனை எதிர்த்த நக்கீரனின் சங்கடத்தை அலிகொரியாக கொண்டு சிறப்பாக எழுதப்பட்ட கதை
இது.
இந்தத் தொகுப்பில் உள்ள தமிழர்கள் வசிக்கும் உலகம் தனியானது.
இவர்களுடன் பழகும் வெள்ளைக்காரர்களுக்கு நாம் எல்லோருமே கருப்பாக இருக்கும்போது ஏன்
ஒருவரை ஒருவர் கருப்பு என்று சொல்லிக்கொண்டு வரதட்சிணையை கூடுதலாக கேட்கிறோம்
என்பது புரியவில்லை. மேல்நாட்டு வெளிப்படைக் கலாச்சாரத்துடன் இவர்கள் ஆழ் மனதில்
யுககாந்திரமாக பதிந்திருக்கும் அடையாளங்களின் மோதல் தொகுதியின் பல கதைகளின்
உட்கருத்தாக அமைந்திருக்கிறது.
கனடா தேசத்துக் கதைகளில் 'முகமிழந்த
மனிதர்கள்' (பவான்) குறிப்பிடத்தக்க கதை. வீட்டிலே சாப்பிட்ட கோப்பை கழுவாத அண்ணன்
கனடாவில் டாய்லெட்டுக்களையும் நாய்க்கழிவுகளையும் கழுவும் நிலைமை ஏற்பட்டு நிறையப்
பணம் கிடைத்தாலும் இந்த வேலைக்குப் போனால் நானும் அடிமை வாழ்வுக்குப் பழகிவிடுவேன்
என்று ஏதோ ஒரு ட்ரெயினில் ஏதோ ஒரு திசையை நோக்கி புதியதோர் வாழ்வைத் தேடிப்
புறப்படும் 'முகமிழந்த' தம்பியின் இந்தக் கதை தொகுதியின் சிறப்பான கதைகளில்
ஒன்று.
'பிரசவம்' சுதந்திர ஈழ நாட்டின் பிறப்பையும் ஒரு குழந்தையின்
பிறப்பையும் பிரசவ வலியில் மட்டும் ஒப்பிடும் புதிய உத்திக்கதை.
'க.
குழம்பும் க.வேறுபாடும்' அயல் நாட்டுக்கு வந்தாலும் நம் கருத்து வேறுபாடுகளுக்குள்ள
சகிப்பின் எல்லை மிகக் குறுகலானது என்பதை எளிய கதை மூலம் சொல்கிறது. ஜெயபாலனின்
'செக்குமாடு' ஒரு நாவலின் கதைச் சுருக்கம் போல அத்தனை அடர்த்தியாக இருக்கிறது.
இருப்பினும் நாம் எல்லோரும் ஒரு விதத்தில் நம்மைத் துரத்தும் 'பேய்'களை அடையாளம்
தெரிந்து கொள்ளத்தான் முழு வாழ்நாளையும் செலவிடுகிறோம்.
பொதுவாகவே இந்த
எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம்
இருக்கிறது. இதனால் சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில்
சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்து விடுகின்றன. வட்டார வழக்கு கதைக்கு
ஒரு நம்பத் தக்க நிலையை அளிக்க மட்டும் பயன் படுத்த வேண்டும் என்பது என்
கருத்து.
அதிகப்படியான ஆங்கில வாக்கியங்களின் பிரயோகமும் இவர்கள் தங்கள்
கதைகளை சொல்வதில் உள்ள அவசரத்தைக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்
அல்ல; புலம் பெயர்ந்துபுகல் நாடிச் சென்றவர்கள். இவர்கள் முதல் கவலை சம்பாதிப்பதும்
உயிர் பிழைப்பதும்தான். பெரும்பாலும் தனிமையைத் துரத்தவும் தாய் நாடடு ஏக்கத்தை
நீக்கவும் எழுதப்பட்ட கதைகளாதலால் சிறுகதைக் கலைக்குரிய உத்திரீதியான குணாதிசயங்களை
எதிர்பார்ப்பது நியாயமல்ல. இருந்தாலும் அத்தனை கதைகளிலும் உள்ள ஆதார உணர்வுகள் மிக
உண்மையானவை.
இந்த மகத்தான பணியை முடித்து சாதனை படைத்த நண்பர் எஸ்.பொ.
அவர்களுக்கு பாராட்டுக்கள். அவருடைய பணிகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அவர்கள்
உறுதுணையாய் நிற்றல் மகிழ்ச்சிக்குரியது.
சென்னை-18
தீபாவளி நாள்
1994.
சுஜாதா
நண்பர்
தியாகேசன்
அன்னை
திருமதி
ஆறுமுகம் ஆச்சிமுத்து
நினைவுகளுக்கு
அவுஸ்ரேலியக்
கதைகள்
ஒன்பது
__________________________
கதைஞர்
__________________________
சந்திரிகா
ரஞ்சன்
மாத்தளை சோமு
மாவை நித்தியானந்தன்
முருகபூபதி,
லெ
யாழ் பாஸ்கர்
யோகன்
ரதி
வாசுதேவன்,
ச
விஜயராணி,
அருண்
பனையும்
__________________________________________________
சந்திரிகா
ரஞ்சன்
__________________________________________________
அந்தக்
கந்தோரில் நான் ஒருவனே வெள்ளையன் அல்லாதவன். தமிழன். சொந்த நாட்டின் பிரச்சினைகளை
அந்நியர்களுக்குச் சொல்லி அநுதாபம் பெற வேண்டும் என்ற ஏக்கம் எனக்கு ஆரம்ப
நாள்களில் இருந்தது. மற்றவர்களுக்கு என்னைப்பற்றி அறிய ஆர்வம் இல்லை என்பதை
விரைவில் புரிந்து கொண்டேன். இந்த உலகம் வேறு. திங்கள் காலையில் வேலையைத் துவங்கும்
போதே, வெள்ளி மதியத்துக்கு அப்பாலுள்ள ஓய்வையும் களியாட்டங்களையும்
நினைவுப்படுத்திக் கொண்டு வேலையில் ஒன்றி விடுவார்கள். வேலை எது, இவர்கள் எது என்று
பிரித்துப் பார்க்க இயலாத அத்வைதிகள். ஓர் ஆண்டுக்கு முன்னர்தான் சிட்னி வாசியாகிய
நான் விரைவில் இசைவாக்கம் பெற்றேன். மற்றவர்களைப் போலவே நானும் வேலையாக மாறினேன்.
அப்பொழுது தான் ரொனி எங்கள் கந்தோரில் வேலைக்குச்
சேர்ந்தான்.
சிலமாதங்களுக்குப்பின்னர், ரொனியின்வர்த்தமானத்தை றேச்சல் ஒரு
சந்தர்ப்பத்திலே சொல்லக் கேட்டேன்.
1974 இல் போத்துக்கலில் ஏற்பட்ட
புரட்சியினால் பாசிஸ ஆட்சி வீழ்ந்தது. அத்துடன் டி மில்கெய்ராவின் வசந்த காலமும்
அஸ்தமித்தது. லிஸ்பனிலிருந்து ஐநூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள அத்தலயா என்ற
கிராமத்தில் அவருடைய மாளிகை இருந்தது. அங்கு நூற்றுக்கும் அதிகமான அரச
விருந்தினர்கள் ஏக காலத்தில் தங்கிக் களியாட்டங்களில் ஈடுபடுவார்களாம். நானூறு
வருடப் பழம் பெருமை பேசிய அந்த மாளிகை அவர்கள் முன்னாலேயே எரிக்கப்பட்டது. இந்த
இடிபாடுகளின் நிழலிலேயே அவர் படுத்த படுக்கையானார். வக்கிரபுத்தி கொண்ட உறவினர்
மத்தியிலே வாழப் பிடிக்காதவனாய், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அவருடைய மகனான
ரொனி சிட்னியிலே குடியேறினான்.
ரொனி என்னிலும் இளையவன். உருவத்திலும்
சின்னவன். வெள்ளையருக்குரிய சராசரி தோற்றங்கூட இல்லை. ஆடம்பரமான உடைகள் மூலம் அதைச்
சரிக்கட்டிக்கொள்ளலாம் என்று நினைப்பவன். இருப்பினும், அவன் வந்த பிறகுதான்
கொம்பியூட்டரிலும் கொஞ்சம் மனித வாடை வீசத் துவங்கியது. அவனுடைய அடிநாபியிலிருந்து
வரும் ஆங்கில உச்சரிப்பு விளங்காது. ஆனால் ரஸ’க்கக் கூடியதாக
இருக்கும்.
காலையில் வரும்போதே, ஏதாவது ஒன்றைப் பற்றிக் குறைகூறி அலுத்துக்
கொள்ளாவிட்டால், ரொனியால் திருப்தியாக வேலையைத் துவங்க ஏலாது. அப்படி ஒரு வாடிக்கை.
கீழ் unit றில் வசிக்கும் கிழவி, அவுஸ்ரேலியாவின் முன்னாள் நிதி அமைச்சர் போல்
கீற்றிங், பின்னால் வந்த கெரின், போத்துக்கலில் வாழும் உறவினர், இப்படிப் பலர்
அவனிடம் absentee ஆக திட்டு வாங்குவதுண்டு. வளைகுடா யுத்த சமயத்தில் இருக்கும்.
'Good Morning' பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். 'சதாம் ஒரு முட்டாள். இன்னொரு
ஹ’ட்லர். அவன் கொல்லப்பட வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?'
நான் என்ன
நினைப்பது? அப்பொழுதெல்லாம் றேச்சல் தான் தடுத்தாட் கொள்வாள். மூன்றாம்
தலைமுறையைச்சேர்ந்த அவுஸ்ரேலியப் பெற்றோருக்குப் பிறந்தவள். இருபத்திரண்டு வயசு.
சிறுமி போலவும் தோன்றுவாள். அப்படித்தான் சிலவேளைகளில் நடந்துகொள்ளுவாள். ரொனியை
எதிர்த்து, விட்டுக் கொடுக்காமல் வாதாடுவது அவள் மட்டுமே! வளைகுடா யுத்தத்தில்
அவுஸ்ரேலியாவின் ஈடுபாட்டைக் கண்டித்து சிட்னியில் நடந்த சமாதான ஊர்வலங்களில்
முன்னணியில் பங்கு பற்றியிருக்கிறாள். இருவருக்கும் நடக்கும் விவாதங்களில் தனது
பக்க வாத்தியமாக ரொனி என்னை அழைத்துக் கொள்வான். இந்தச் சந்தர்ப்பங்களிலே ரொனிக்கு
'ஆமாம் சாமியாக' இருப்பது புத்திசாலித்தனமானது என்று நான்
நினைப்பதுண்டு.
'சிட்னி žவிக்க முடியாத இடமாகி வருகிறது' என்ற
பிரகடனத்துடன், ஒரு நாள் ரொனி கந்தோருக்குள் நுழைந்தாள்.
'ஏன்? என்ன
விஷயம்?' என்று கேட்டேன். கேட்கா விட்டாலும் சங்கடம்.
' இந்த
வியட்நாமியர்கள் படுமோசம். இன்று காலை கார் எடுக்கப் போனபோது அது தன்னுடைய
இடத்திற்குள் நின்றதாக அவன் குறை கூறுகிறான். இத்தனைக்கும் அவனிடம் கார்கூட
இல்லை.'
'பிறகு?'
'பிறகு என்ன பிறகு? இன்வேறு இடம் பார்க்க
வேண்டியதுதான்! ஒரு வருடத்திற்குள் நாலாவது இடம். நல்ல இடம் என்று இங்கு வந்தால்,
இங்கேயும் வந்து விட்டான்கள்...'
'ஒருவனோடு ஏற்பட்ட பிரச்னைக்கு முழு
இனத்தையும் ஏன் சண்டைக்கு இழுக்கிறாய்?' என்று றேச்சல் சம்பாஷணைக்குள்
நுழைந்தாள்.
'முந்தி ஒரு முறை, கார் ஓட்டத் தெரியாமல், என்காரைப் பின்னால்
அடித்து நொருக்கியவனும் ஒரு வியட்நாமியன்தான். என் நண்பன் ஒருவனின் காரை
அடித்தவங்களும் அவங்கள்தான். உனக்குத் தெரியாது. அவங்கள்
அப்படித்தான்.'
'அவர்கள் எல்லாரும் வியட்நாமியர்கள்தான் என்பதை எப்படி
உன்னால் கண்டு பிடிக்க முடிந்தது? ஏசியர்கள் எல்லோரும் எனக்கு ஒரே மாதிரியாகத்தான்
தோன்றுகிறார்கள்.'
'எனக்குந்தான்...ஆனால் பிரச்சினை தருபவங்கள்
வியட்நாமியன்கள்தான். அது சரி றேச்சல், நீ எப்படித் தான் அந்த இடத்தில்
žவிக்கிறாய்?' என்று ரொனி கேட்டான். பல இனமக்கள் வாழும் ஒரு புறநகர்ப் பகுதியிலே
றேச்சல் வசிக்கிறாள்.
'ஏன்? அது நல்ல இடந்தானே?'
'இடம் நல்லதுதான்.
அயலவர்களை எப்படிச் சமாளிக்கிறாய்?'
'உன்னையே உன் அயலவர்கள்
சமாளிக்கவில்லையா? நல்ல காலம். நான் இருக்கும் அயலில் நீ வாழவில்லை? நல்ல காலம்.
நான் இருக்கும் அயலில் நீ வாழவில்லை' என்று றேச்சல் புன்னகையுடன் சொல்ல,
அவளிடமிருந்து நழுவி, புன்னகையுடன் சொல்ல, அவளிடமிருந்து நழுவி, ரொனி என்னில்
தொற்றினான்.
'ஏசியர்கள், குறிப்பாக வியட்நாமியர்கள், நாகரீகமற்றவர்கள். மற்ற
இனத்தவர்களுடன் பழகமாட்டார்கள். நீ என்ன சொல்லுகிறாய்?'
'இருக்கலாம். எனக்கு
அவ்வளவாக அனுபவம் இல்லை...' என்று சமாளிக்கப் பார்த்தேன். அவன் விடுவதாக
இல்லை.
'யுவான் உன்னைப் போலவா? ஏன் வேலை போயிற்று? மற்றவர்களை மதிக்க
மாட்டார்கள். தாங்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்கிற இறுமாப்பு.'
இப்படி
அங்கு வேலை செய்பவர்களையும் தனிப்பட்டவர்களையும் ரொனி தாக்கத் துவங்கும்போது,
றேச்சல் தனது வேலையில் நுழைந்து விடுவாள். நான் வழக்கமாக 'ஆமாம் சாமி' தான். யுவான்
தொழில் விஷயத்தில் அநுபவஸ்தன். அவனிடம் நானும் ஒரு தடவை 'வாங்கிக் காட்டிய'தால்,
இந்தச் சந்தர்ப்பத்திலே ஆமாம் போடுவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. அவன்
ஏசியர்களைச் சகட்டுமேனிக்கு ஏசுவது என் மனசைச் சங்கடப்படுத்தியது. இவர்கள் எங்களை
ஏசியர்களாகக் கருதுவதில்லை என்பது உண்மை. சவுத் ஏசியர்கள் எல்லாரும் இவர்களுக்கு
இந்தியர்களே! இருந்தாலும், நான் ஆசியாக்காரன் என்கிற நிதர்சனத்தையும் என்னால் உதற
முடியவில்லை.
தர்க்கத்துக்குரிய விஷயங்களை அவுஸ்ரேலியக் கந்தோர் நண்பர்கள்
எந்தக் காலத்திலும் தவிர்த்துக் கொள்வார்கள். ஆனால், ரொனி எந்த விதத் தயக்கமும்
இன்றித் தனது இனவாதக்கருத்துக்களைச் சொல்லி விடுவான். நானும், அவனுடன் சேர்ந்து
žனர்களின் சின்னத் தனங்களைப் பற்றிக்கதைப்பதன் மூலம் பிழைத்துக் கொள்ளுவேன்.
எதையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பது பற்றிக்கின் சுபாவம். ஒப்பந்த
அடிப்படையில் எங்கள் கந்தோரில் வேலை பார்க்கும் பற்றிக், பத்து ஆண்டுகளுக்கு
முன்னர், இங்கிலாந்திலிருந்து குடியேறியவன். வாயைத் திறக்காமலே பேசும் வல்லமை
இவனுக்கு உண்டு. எந்த விவதங்களிலும் முகத்தில் நிரந்தரமாக ஒடடி வைத்திருக்கும்
அந்தச்சிரிப்பை உதிரவிட்டு, பக்கஞ் சாராத பக்குவவாதியாகத் தன் வேலையில் தியானித்து
விடுவான். நிமிடங்களை அவன் டாலர்களாகவே மதிப்பீடு செய்பவன். விதண்டா வாதங்களிலே அதை
வீணடிக்க முடியாது. வளைகுடா யுத்தத்தில் மட்டும் அவனால் வாயை மூடிக் கொண்டிருக்க
முடியவில்லை. சமாதானத்திற்கான றேச்சலின் கூக்குரல் எவ்வளவு பிற்போக்கானது என்று
நிரூபிக்க ரொனியைப் பார்க்கிலும் பற்றிக்தான் அதிக பிரயாசைப்பட்டதாக
ஞாபகம்.
நாளாவட்டத்தில் ரொனி ஒரு Male Chavinist என கந்தோர் பெண்களாலே
வர்ணிக்கப்பட்டான். அவன் தனது கொம்பியூட்டரை 'This Woman' என்று அழைப்பதும்,
கொம்பியூட்டரில் ஒரு நிர்வாணப் பெண் நடமாடும் தோற்றத்தை வரவழைத்துப் பெண்களுக்குக்
காட்டுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பின்னர் நடந்த ஒரு சம்பவந்தான்
என்னை மிகவும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது. தகவல்களைக் கொம்பியூட்டரில்
ஒழுங்கு படுத்தும் முறை பற்றி இயக்குநருக்கும் ரொனிக்கும் இடையில் கருத்து
வேறுபாடு. நான் ஏற்பாடு செய்த முறையே வழக்கத்தில் இருந்தது.
அதனைப்
பின்பற்றும்படி இயக்குநர் சொன்னதை அவன் ஏற்கவில்லை.
'ஏன்? இப்படியும்
செய்யலாம் தானே? இதில் என்ன தவறு? இலகுவில் விளங்கக் கூடியதாகவும் இருக்கிறது'
என்று தன் கட்சி பேசினான் ரொனி.
'என்றாலும் ஒரே அலுவலகத்தில் இருவேறு
முறைகளைப் பயன்படுதத ஏலாது.'
'அப்படி என்றால் இந்த முறையை
நடைமுறைப்படுத்தலாம். இதில் வேறுபடுத்துவது இலகுவாகும்.'
'எது எப்படி
இருந்தாலும் இங்கு ஏற்கனவே உள்ள முறைப்படியே செய்யும்' என்று இயக்குநர்
விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இயக்குநரின் கருத்திலுள்ள நியாயத்தை நான்
எடுத்துச் சொல்ல எத்தனித்தது வீண்.
'அவர்களுடைய கொம்பனி. எனக்கென்ன? அவர்கள்
சொன்ன மாதிரியே செய்கின்றேன்!' என்று அலுத்துக் கொண்டான்.
பல
சந்தர்ப்பங்களிலே அவனுக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே விவாதங்கள் ஏற்பட்டன. தொழில்
நுட்ப விஷயங்களில் ரொனி அவர்களைப் பார்க்கிலும் அனுபவமுடையவனாகக் காணப்பட்டான்.
அவனே பல விஷயங்களில் சரி போலத் தோன்றியது. சுற்றிச் சுற்றி வந்து கடைசியில் ரொனியே
சரியென்று கண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இந்த நேரங்களில் அவன் கடுஞ்
சினத்திற்குள்ளாவான்.
பற்றிக்கின் ஒப்பந்த காலம் முடிந்தது. பொருளாதாரத்
தேக்கம் கம்பனிக்கு வேலை கிடைக்கவில்லை. அவன் செல்லும்போது ரொனி மிகுந்த
விசனப்பட்டான். பற்றிக் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே இங்கிலாந்து
திரும்புவதாக அவன் முடிவெடுத்திருந்தான். சில நாள்களில் பற்றிக் இங்கிலாந்து சென்று
விட்டதாகத் தகவல் கிடைத்தது.
கையிலிருந்த வேலையை அன்றே முடித்துவிட வேண்டும்
என்ற தேவையினால், மதிய இடைவேளைக்கும் வெளியிற் செல்லாமல் நானும் ரொனியும் வேலையில்
மூழ்கியிருந்தபோது, ரொனியை இயக்குநர் அழைத்தார்.
'இந்த நேரத்தில் இவர் வேறு'
என்று அலுத்துக் கொண்டே சென்றான். சென்றவன் வேறொரு முகத்துடன் மெதுவாக வந்தான்.
அவசரமான நேரங்களில் பாய்ந்து நடக்கும் பழக்கமுள்ள ரொனி ஆறுதலாக வருவது ஆபத்தின்
அடையாளம் என்றுணர்ந்த நான், 'ஏதாவது பிரச்சினையே?' என்றேன்.
'இவங்கள்
எல்லாம் Bastards!'-அவன் வெடித்தான்.
'என்ன நடந்தது?'
'Recession and
retrenchment. இது தானே சாட்டு? இன்னும், ஒரு வாரத்திற்குத்தான் இங்கு எனக்கு
வேலை.'
சென்ற மாதந்தான் நமது கந்தோரில் வேலை செய்த எட்டுப் பேர் வீட்டுக்கு
அனுப்பப்பட்டார்கள். ஏனைய ஊழியர்களுடைய சம்பளத்தில் பத்து வீத வெட்டும்
அமுலாக்கப்பட்டது. இருபது வருஷங்களிலே அவுஸ்ரேலியா அனுபவித்த மிக மோசமான
பொருளாதாரத் தேக்கம் இதற்கு உபயமளித்தது. மிகவும் அவசியமானவர்களே எஞ்சியிருந்தனர்.
இனி, ஆட்குறைப்புக்கு அவசியம் ஏற்படாது என்று உத்தரவாதமும் தரப்பட்டது. ஆனால்
இன்று...
இது ரொனிக்கு ஒரே வருடத்தில் ஏற்பட்ட மூன்றாவது வேலை
வெட்டு!
அடுத்த நாள் வந்த ரொனி, 'நான் போத்துக்கலுக்குப் போகிறேன். உனக்கு
ஒன்று சொல்லுகிறேன். இவர்கள் இனவாதிகள். நீயும் நானுந்தான் எஞ்சியிருந்த
அந்நியர்கள். இப்பொழுது எனக்கு அடுத்தது உனக்கு. இப்பொழுதே வேறு வேலை ஒன்று
தேடு!...' என்றான்.
'நீயும் வேறு வேலைக்கு முயலலாமே!'
'இனிப்போதும்.
என்னால் தாங்கேலாது!'
உழைப்பைப் பண்டமாக விற்று வாங்கும் வர்த்தக உலகத்தில்
மனித நேயத்தை ரொனி எப்படி எதிர் பார்க்க முடியும்? அதை ஏற்கனவே பிறந்த மண்ணிலே
தொலைத்துவிட்டு, இங்கு கிடைக்கும் என்று தேடி வந்தானா?
'போத்துக்கல் போய்
என்ன செய்வாய்? உனக்குத்தான் அங்குள்ளவர்களைப் பிடிக்காது என்று
சொல்வாயே?'
'நான் அத்தலயாவுக்குப் போகவில்லை. விஸ்பனுக்குப் போகிறேன்.
எனக்கு உறவினர்களைப் பிடிக்காது. ஆனால், என் மண் மிகவும் அழகானது, எங்களுடைய
மொழியைப் போலவே!' பெருமையாகப் சொல்லிக் கொண்டான்.
மௌனமாக இருந்த
கொம்பியூட்டரை முடுக்கினேன். 'நொய்' என்ற இரைச்சலுடன் அது உயிர்த்தது. ரொனி
நிர்வாணப் பெண் நடமாடும் தோற்றத்தை வரவழைப்பான். என் மண்ணான காலையடியின்
நிலவளத்தையும், அதன் வளத்தை எடுத்துச் சொல்வது போன்று வான்நோக்கிய உயர்ந்த பனை
மரங்களையும்-அவுஸ்ரேலியாவுக்கு கங்காரு போல, என் மண்ணின் உயிர்ச் சின்னமாக
நிலைத்துள்ள பனைகளையும்--கொம்யூட்டரிலே தோற்றுவிக்க என் மனம் தைரியத்தைத்
தேடுகிறதா?
'என் மண் மிகவும் அழகானது, எங்களுடைய மொழியைப் போலவே' என்று
கொம்யூட்டர் வசனம் பேசுகிறதா? அல்லது பனைகள் பேசுவதான மனக் குறளியா?...வேலையில்
மூழ்கினேன்.
ஒரே
இனம்
_____________________________________________________________
மாத்தளை
சோமு
_____________________________________________________________
ரயில்
வந்து நின்றதும், காந்தன் அவசரமாக ஏறிக் கொண்டான். அவுஸ்ரேலியாவில் அகதிகளாகக்
குடியேறியுள்ள ஈழத் தமிழர்களுள் அவனும் ஒருவன்.
இதற்காக
பெரியப்பாவுக்குத்தான் அவன் நன்றி சொல்ல வேண்டும். என்ஜினியரான அவர் கைநிறையச்
சம்பளத்துடன் கொழும்பில் வேலை பார்த்தார். விதியோ, அன்றேல் தரகர் கணபதிப்பிள்ளையின்
திருவிளையாடலோ? கொழுத்த žதனத்துடன் 'டமிள்' பேசும் பணக்காரியை மணம் முடித்து,
அவரையும் 'கொழும்பானா'க மாறிவிட்டார். 1983 ஆம் ஆண்டின் இனப் படுகொலையின் போதுகூட,
அதிட்ட தேவதை அவர் பக்கலிலே நின்றாள். இழப்புகள் எதுவும் இல்லை. 'கொழும்பான்' என்று
கொக்கரிக்க முடியாத அவதி மட்டுமே! மனைவியின் அண்ணன் அவுஸ்ரேலியாவில் குடியேறி
வாழ்ந்தார். அவருடைய தூண்டுதலினாலும் Sponsor-ship இனாலும், குடும்பத்துடனும்
'மூட்டை முடிச்சு' களுடனும் குடியேறி, மெல்பனில் வாழத் தலைப்பட்டார். வசதி
வழிந்தது. பெரியப்பாவுக்கு உடம்பெல்லாம் மச்சம் என்று சொல்வார்கள்!
அவனுடைய
அப்பா பல்கலைக் கழக புகுமுக வகுப்பு மாணாக்கனாய் இருந்த காலத்திலேயே, செங்கொடி
தூக்கி சமத்துவ-சமதர்மக் கொள்கைகள் பேசத் துவங்கியவர். கொள்கைகளை வாழ்ந்து காட்ட
வேண்டும் என்ற வெறியுடன் கலப்புத் திருமணஞ் செய்து, புரட்சி கண்டவர்! சொந்த உறவுகள்
அறுந்த தனிவழி! மிடிமை கண்டு சிரித்தார். வீரம் மிகுந்த மேடைப் பேச்சுகள்
தொடர்ந்தன. தமிழ் ஈழ அரசியலில் மேடைப் பேச்சுகள் குறைந்து, 'துப்பாக்கிகள்' பேசத்
துவங்கின. காந்தனின் அண்ணன்மார் இருவர் ஒருநாள் 'காணாமற்' போய் விட்டார்கள்.
'அப்பாவின் வழியில், அவருடைய புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், தமிழ்
இனத்தின் விடுதலையைக் காண்பதற்காகவும் போராளிகளாகி விட்டோம்' என்று கடிதம் வந்தது.
அம்மா அழுது பிரலாபித்தாள். அப்பா அழவும் இல்லை; சிரிக்கவும் இல்லை. 'அவங்கள் என்ரை
பிள்ளைகள்' என்று மட்டும் சொன்னார். ஒரு நாள் அப்பா ராணுவ 'ஜ“ப்'பில்
ஏற்றப்பட்டார். அவர் அதுவாக, உடல் வீடு வந்து சேர்ந்தது. உண்மையை சொல்ல மறுத்துத்
தற்கொலை செய்து கொண்டார்' என்று விளக்கம் தரப்பட்டது. சிங்கள ஆதிக்க வெறியின்
சூக்குமங்களை அறியாத காந்தனின் தாய், கைம் பெண்ணாக, அவனையும் அவன்தங்கையையும்
கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்க்கத் தலைப்பட்டாள். அவர்கள் படும் கஷ்டங்களினால்,
'மழுவராயர் பரம்பரையின் மானம் கப்பலேறுவதாக அவதிப்பட்ட உறவை புதுப்பித்துக்
கொடுத்தார். பெரியப்பாவின் சகாயத்தினால், காந்தனின் குடும்பம் அவுஸ்ரேலியாவில்
அகதிகளாகக் குடியேறி, நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்றுக்
கொண்டது.
'டமிள்' பேசும் பெரியம்மாவுக்கும், 'புறோக்கின் இங்கிலீசு' பேசும்
அம்மாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை. காந்தன் குடும்பத்தின் 'தமிழ்'
பழக்க வழக்கங்களினால், தன் பிள்ளைகளின் aussie வளர்ப்புச் சோரம் போவதாகப் பெரியம்மா
நச்சரிப்பாள். பெரியப்பாவுக்கு உயர் ஜாதி வேளாள 'அரிப்பு' எப்பவும் உண்டு. குடும்ப
முரண்பாடுகளுக்குத் தீர்வு கஷ்டமானதல்ல. காந்தன் குடும்பம் சிட்டினியில்
குடியேறியது. 'டோல்' பணத்துடனும், 'இரண்டு பேரும் உழைக்கும்' தமிழ்க்
குடும்பங்களின் 'ஈழத்துணவு'ப் பரிமாறல்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் லேதிக
வருமானத்துடனும் காந்தனின் குடும்ப காலட்சேபம் நடக்கின்றது. பெரியப்பாவும்
யோக்கியன்! மாதத்திற்கு ஒரு முறையாவது தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, இவர்களுடைய சேம
லாபங்களை விசாரித்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்? 'என்ரை ராசா, நீ
ஊக்கமாக படிச்சாத்தான் எங்கடை குடும்பமும் விளங்கும்!'--இதுதான் அம்மாவின்
அழுகை--கெஞ்சல்--பிரார்த்தனை சகலமுமாக இருந்தது.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது.
பௌதிக புத்தகத்தைப் புரட்டினான். படிப்பில் மனம் ஒன்றவில்லை. பார்வையை ரயிலுக்கு
வெளியே எறிந்தான். கரையிலே குத்திட்டு நின்ற மின்சாரக் கம்பங்களும், உயரிய பைன்
மரங்களும், ஏனைய கறாளை மரங்களும் நெடிதும்-குள்ளமுமான கட்டடங்களும், தெருக்களும்,
அவற்றிலே விரைவு பயிலும் வாகனங்களும் எதிர்த் திசையிலே ஓடுவது போன்ற
ஜாலம்.
நேற்றைய சம்பவங்கள்--எதிர்த் திசையில் ஓடுவனவற்றைப்
போன்று--காந்தனின் மனத்திலே வலம் வந்தன.
காந்தனும், அவன் நண்பன் வான் அங்
ஹோவும், விளையாட்டுத் திடலுக்குக் குடை விரித்த மரம் ஒன்றின் கீழ் நின்று பேசிக்
கொண்டிருந்தார்கள். ஹோ ஒரு வகுப்பு மூப்பு; பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறான்.
இருவரும் அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள். பேச்சிலும் பார்க்க,
மௌனமான பார்வைகள் இருவருக்குமிடையில் நட்பை வளர்த்திருந்தது. அந்த நேரத்தில் அஹமட்
அங்கு வந்தான். அவன் லெபனானைச் சேர்ந்தவன். எப்பொழுதும் சத்தம் போட்டுப் பேசுவான்.
பிரின்சிபலோடும் அதே உரத்த குரல்தான். அது அவனுடைய ஆயுதம். அவனுக்கு நாற்று நட்டது
போல மீசை. வயசையும் மீறிய வாலிய உணர்ச்சிகளுடன் நடந்து கொள்வதும் அவன்
சுபாவம்.
பிரின்சிபல் கந்தோரில் 'கிளார்க்' ஆக இருக்கும் ஜூலி என்கிற
வெள்ளைக்காரி அந்தப் பக்கமாக வந்தாள். அதீத ஒப்பனைகள் அவள் வயதினை விழுங்கும். இளமை
'டாட்டா' காட்டுவதற்கிடையில், இன்னொரு 'கணவ'னை இழுத்துவிட வேண்டும் என்பது போல அலை
பாயும் பார்வை. வளைவுகளை மேலும் வளைவாக்கி, தசைப் பிரதேசங்களிலே இளமைத் துள்ளலைச்
செயற்கையாக அப்பிக் கொண்டு நடப்பாள். அவளுடைய 'ஒயி'லில் அஹமட் 'கிக்' பெற்றிருக்க
வேண்டும். அவன் விரசமாக விசிலடைத்து வரவேற்றான்!
காந்தனின் மனம் அடித்துக்
கொண்டது. ஹோ முகத்தைச் சுழித்தான். ஜூலி திரும்பிப் பார்த்து முறைத்தாள். இருவரும்
மெல்ல நழுவினார்கள். You guys are silly என்று சொல்லிச் சிரித்த அஹமட், வேறு
பக்கமாகத் திரும்பி நின்றான்!
எதிரிலே புயல் போன்று வந்த ஹரிஸன், வெள்ளைத்
தோலின் பெருமையைப் பாதுகாக்கும் தத்துவக்காரன் என்ற மிடுக்குடன், நடந்து
கொண்டிருந்த காந்தனையும் ஹோவையும் வழி மறித்தான். 'you dirty biacks...You want to
rape a white women' என்று கத்திக்கொண்டே, ஹரிஸன் காந்தனின் சேட்டைப்
பற்றினான்.
ஹோவுக்குக் கோபம் வந்தது. அதனை அடக்கிக் கொண்டு சொன்னான்: Learn
to talk nicely There is a saying: Give respect and get respect...'
'You
Asian worm. Are you trying to teach me?' என்று ஆக்கிரோஷத்துடன் கூறிய ஹரிஸன்,
காந்தனை விலத்தி, ஹோ மீது பாய்ந்து, தன் பலம் முழுவதையும் முஷ்டியில் ஏற்றி, அவன்
தாடையில் இரண்டு குத்துகள் விட்டான். தாடையில் இரத்தம்...
அவன் சிந்தனை
அறுந்தது. எதிரில் அமர்ந்திருந்த இரண்டு žனப் பெண்கள், உலகை மறந்து குறிப்பிட்ட ஒரு
பதார்த்தஞ் செய்வது பற்றி žன மொழியில் 'தாளித்து'க்
கொண்டிருந்தார்கள்.
தனக்காகப்பேசி அடிபட்டு நின்றஹோவுக்கு உதவிக்குப் போகாது
மௌனியாக நின்ற அந்தக் கோழை நிலை அவனுடைய உள்ளத்தை அரித்தது...'ஹோ, நீ எவ்வளவு
இனிமையானவன்...சோகத்திலும் இனிமை சிந்தும் மலர் நீ...' ஹோவைப் பற்றிய நினைவுகள்
அவன் மனதைப் பிசைந்தது...அந்தப் பிசைதலிலே, ஹோ தொட்டம் தொட்டமாகச் சொன்னவை, ஒரு
வரலாறாக முகிழ்ந்தது.
ஹோ ஒரு கம்போடியன். பெற்றோர்களைப் பற்றி அவனுக்கு
மங்கலான நினைவுதான் உண்டு. அவர்கள் அரசியல் பற்றி அறியாதவர்களாக வாழ்ந்த
விவசாயிகள். 'நீங்கள் ஏகாதிபத்தியத்தின் கைக் கூலிகள்; வாழத் தகுதியற்றவர்கள்'
என்று கூறிக் கொன்று விட்டார்கள். சாவு பிள்ளைகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய
சமிக்ஞையுமாம்! மூன்று மகன்களை தம்முடன் அழைத்துச் சென்றார்கள். அண்ணன் இருவரும்
அவர்கள் நடத்திய வேலை முகாம்களில் அரைகுறை வயிற்றுடன் உழைத்தும்...செத்துப்
போனார்கள். அந்தக் குடும்பத்தில் மிஞ்சியது வான் அங் ஹோ மட்டுமே. கம்போடியாவில் பல
போராட்டக் குழுக்கள் எது எதற்காகப் போராடுகின்றது என்கிற நியாயங்களையே மறந்து
விட்டனவாம். சாவு அவனைப் பலசந்தர்ப்பங்களிலே பயமுறுத்தியது. எப்படியும் சாவுதான்
என்கிற தைரியத்தில் தாய்லாந்துக்குத் தப்பியோடிய ஒரு சிறிய குழுவுடன் ஒட்டிக்
கொண்டான். தாய்லாந்து, அகதி முகாமிலே மூன்று ஆண்டுகள் வாழ்ந்து, அவனுடைய மாமா
ஒருத்தர் அவுஸ்ரேலியாவில் இருப்பது தெரிய வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு
வந்து சேர்ந்தான்.
மாமாவின் தையல் கடையிலே அவன் ஓயாது உழைக்க வேண்டும்.
பாடசாலையிலே கொடுக்கப்படும் வீட்டு வேலைகளைச் செய்வதற்குக்கூட நேரம் கிடைக்காது.
ரயில் பயணத்தின் போது, லஞ்ச் நேர ஓய்வின் போது என்று அவன் எப்படியோ படித்துக்
கொண்டிருந்தான். மரத்தடிக் கற்கையின் போதுதான் ஹோ காந்தனுக்கு அறிமுகமாகி
நண்பனுமானான். 'எனக்கு இருக்கும் ஒரேயொரு உறவினரையும் என் எதிரியாக்கிக் கொள்ள நான்
விரும்பவில்லை. அவரை விட்டுப் போனால் என் குடும்பத்திற்கு நான் அவமானந் தேடித்
தந்தவனாவேன்' என்று சொல்லுவான். சோகங்களின் மத்தியிலும் பண்பை பாதுகாக்கப் பழகிக்
கொண்டான். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுக்குள், தூரத்தில், யன்னல் ஓரத்தில், ஒருத்தி
அமர்ந்திருந்தாள். அவள் சுடிதார் அணிந்திருந்தாள். நெற்றியில் திலகம். அவள் ஓர்
இந்தியப் பெண்ணாக இருக்கவேண்டும். இங்குள்ள ஈழத் தமிழச்சிகள் பொட்டைத் துறந்து,
'ஸ்கேட்' 'பாண்ட்' ஆகிய புறக் கிருத்தியங்களால் விரைவாக 'ஓஸ’' களாகும்
பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மயிலை நினைத்துச் சொந்தப் பாவனையையும்
இழந்துவிட்ட வான்கோழிகள்! அந்தத் திலகம் இரத்த நிறத்தில்...
தாடையில்
இரத்தம் வழிய நின்ற ஹோவின் உருவம் மீண்டும் காந்தனின் மனதில் எழுந்தது.
குறுக்கிழையில் அப்பா-அண்ணன்மார்களின் உருவங்களும் வலம் வந்தன. 'நான் மட்டும்
எப்படிக் கோழையானேன்?' காந்தனின் மனம் புழுங்கியது. ஆனால், ஹோ...? அவன் தன் சுள்ளி
உடம்பிலே உம்பாரப் பலம் சுமந்தான். அகதி முகாமிலே அவன் 'கராத்தே'
கற்றவனாம்.
தாடையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, 'If you
understand only the language of violence, then come...' என்று ஹோ தயாரானான்.
இந்தப் பிரதிபலிப்பை ஹரிஸன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
யாரும்
எதிர்பார்க்காத சடுதியில் மத்யு இடையிலே புகுந்தான். அவனுடைய தந்தை அகதிகள்
புனர்வாழ்வுப்பணியிலே பெரிதும் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர். மத்யு இன-நிற
வேறுபாடுகள் பாராட்டாதவன், மனித நேயத்தின் பக்தன். இதனாலும், இனங்களுக்கு
அப்பாற்படவும், அவன் எல்லா மாணவர்களுடைய மரியாதையையும்
சம்பாதித்தவன்.
'Harison, see sense...' என்று அவனைப் பிடித்து உலுக்கிய
மத்யு 'கடகட' வென்று பேசினான்: 'வன் முறை வன்முறையைத்தான் பெருக்கும். இது
'அபோக்கள்' என்றழைக்கப்படும் பூர்வீக இனமான கறுப்பர்களின் நாடு. அவர்களுடைய
உரிமைகளை அநியாயமாகப் பறித்துத்தான் நாங்கள் இந்த நாட்டிலே ஒரு வெள்ளை
அவுஸ்ரேலியாவை உருவாக்கினோம்...நமது மூதாதையர் செய்தபாவங்களுக்கு பிராயச்சித்தம்
தேடுவதற்கு ஆண்டவன் நமக்கு ஒரு சந்தர்ப்பம் தந்திருக்கிறான்...அதனை நழுவ
விடாதே...'
'These fu...are refugees' என்று ஹரிஸன் வெடித்தான். அவன் வெறி
இன்னமும் தணியவில்லை. மத்யு தன் நிதானத்தை இழக்கத் தயார் இல்லை. பொறுமையாக ஒவ்வொரு
சொல்லையும் அழுத்தி உச்சரித்தான்: 'இவர்கள் அகதிகளாகப் பிறக்கவில்லை...பிறருடைய
ஆதிக்க ஆசைகளினால் அகதிகளாக்கப்பட்டவர்கள். இதில் வெட்கப் படுவதற்கு எதுவும் இல்லை.
அகதிகள் மலையனைய இடர்களைத் தாங்கும் வீரர்கள். இவர்கள் மத்தியில் மேதைகள்
முகிழ்வார்கள். இந்த நூற்றாண்டின் சிந்தனைகளை மாற்றி அமைத்த விஞ்ஞான மேதை
ஈன்ஸ்டீன்கூட ஓர் அகதி என்பதை மறக்காதே, எங்களுடைய மூதாதையர்களைப் பார்த்து
விக்டோரியா மகாராணி காலத்து ஆங்கிலேயர்கள் எப்படி அழைத்தார்கள் தெரியுமா? சிறைப்
பறவைகள் என்று...சிறைப் பறவைகள்!' சமர் நிலத்திலே கீதோபதேசம் வித்தப்பட்டதைப் போன்ற
ஒரு சுகம்...
'நான் நம்புகின்றேன். சிறைப் பறவைகளின் வாரிசுகள் என்பதிலும்
பார்க்க, அகதிகள் என்று அழைக்கப்படுவது கௌரவமானது...' என்று அமைதியாகவும், ஆழ்ந்த
விசுவாசத்துடனும் மத்யு சொன்ன இறுதி வார்த்தைகள், காந்தனின் நெஞ்சக் குகையிலே
எதிரொலித்தன.
ஹரிஸனை உருவாக்கிய அதே சமூகத்தினால் எப்படி மத்யுவையும்
உருவாக்க முடியும்? 'ஏசு பிறந்த இனத்திலேதான் யூதாஸ”ம் பிறந்தான்; காந்தியும்
கோட்சேயும் ஒரே மண்ணின் அவதாரங்கள்' என்றெல்லாம் பிரசங்கித்தவருடைய மகனான
காந்தனுடைய புத்தியின் பிடிமானத்திற்குள் இந்த வினாவுக்கான விடை சிக்குப்
படவில்லை.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது...கரையிலே குத்திட்டு நின்ற மின்சாரக்
கம்பங்களும், உயரிய பைன் மரங்களும் ஏனைய கறாளை மரங்களும், நெடிதும் குள்ளமுமான
கட்டடங்களும், தெருக்களும், அவற்றிலே விரைவுபயிலும் வாகனங்களும் எதிர்த் திசையிலே
ஓடுவது போன்ற ஜாலம்...
ரயிலுக்கு சேர்விடம் உண்டு. இடையில் தரிக்கும்
ஸ்ரேசன்களும் உண்டு.
அகதிகளுக்கு...
அடுத்த தரிப்பிலே காந்தன் இறங்க
வேண்டும். ஹோவும், மத்யுவும் மட்டுமல்ல, ஹரிஸன்களும் அவனுக்காகக்
காத்திருக்கலாம்...புத்தகங்களை மீண்டும் அடுக்கி, தன் 'ஸ்கூல் பேக்'கைக் காந்தன்
சரி செய்து கொண்டான்.!
சுப்பர்
மார்க்கெட்
__________________________________________
மாவை
நித்தியானந்தன்
__________________________________________
'சுப்பர்
மார்க்கெட்' என்றதும் சந்திரசேகரத்தின் மனதில் படமாகத் தோன்றுவது தண்ர்ப்
போத்தல் தான்.
சந்திரசேகரம் கொழும்பில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த
காலத்தில் தான், அங்கு முதன்முதலில் இரண்டு சுப்பர் மார்க்கெட்டுகள்
திறந்தன.
பொருட்காட்சி, கார்ணிவல், சினிமாப்படம் எதையும் முதலாம் நாளே
போய்ப் பார்த்துவிடும் வழக்கமுள்ள அவன், அதுபோலவே சுப்பர் மார்க்கெட்டுக்கும்
போனான்.
எல்லாம் கவர்ச்சியாகத்தான் இருந்தன. அவன் žவியத்திலேயே கண்டிராத வகை
வகையான வெளிநாட்டு உணவுப் பொருட்கள்-அழகான பெட்டிகளில், தகரங்களில்,
போத்தல்களில்...ஒரு பொருட்காட்சியைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொண்டு வந்தான்.
மனைவியையும் கூட்டிக் கொண்டுவந்து காட்டவேணுமென்று யோசித்தான்.
கடைசியில்
அமேரிக்காவிலிருந்து இறக்குமதியாகி, தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
தண்ர்ப் போத்தல்களைக் கண்டதும் ஆச்சரியத்தால் கொஞ்ச நேரம் அவனுக்கு மூளையே
வேலை செய்யவில்லை. அது உண்மையில் 'பச்சைத் தண்ர்த்தான்' என்பதை அங்கிருந்த ஒரு
உதவியாளரிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட பின்னர் அவனால் அங்கு நிற்கவே முடியவில்லை.
உடனே ஓடிப்போய் இந்த அதிசயத்தை மனைவிக்கும், காணுகிற எல்லாருக்கும் சொல்லிவிட
வேணுமென்று ஒரு ஆசைத் துடிப்பு...இந்தத் துடிப்பாலும், ஆச்சரியத்தாலும்
திக்குமுக்காடிக் கொண்டு சந்திரசேகரம் வெளியே நடையைக் கட்டினான்.
முதலில்
தனியான ஒரு இடத்தில் போய் நின்று வேண்டிய மட்டும் வயிறு குலுங்கக் குலுங்கச்
சிரிக்கவேண்டும் போலிருந்தது. சுற்றிவர ஆட்கள்.
இதற்குப் பிறகு சுப்பர்
மார்க்கெட் என்றவுடன் எப்பொழுதும் தண்ர்ப் போத்தல்தான் அவனுக்கு ஞாபகம்
வரும்.
சந்திரசேகரம் வெளிநாட்டுக்குக் குடிவந்தபிறகு, முதன் முதலாக சுப்பர்
மார்க்கெட்டுக்குப் புறப்பட்ட போதும், அந்தத் தண்ர்ப் போத்தல்தான் முன்னால்
வந்து நின்றது. நாகரிகமான புது உலகத்துக்கு வந்துவிட்ட பிறகு இப்படித் தண்ர்ப்
போத்தலை நினைத்துச் சிரிப்பது அசிங்கமென்று தன்னைத்தானே ஒருமுறை கடிந்து
கொண்டான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, கொழும்பு சுப்பர் மார்க்கெட்டும்,
இதுவும் எலிக்குஞ்சும் யானையும் போலிருந்தன. சங்கிலியால் கோர்த்திருக்கும் தள்ளு
வண்டில்களை மற்றவர்கள் நாணயம் போட்டு எடுக்கும் விநோதத்தை ஒரு பக்கமாக நின்று
கொஞ்சநேரம் அவதானித்தபிறகு, தானும் அதுபோலவே ஒரு நாணயத்தைப் போட்டு வண்டிலை
எடுத்துத் தள்ளிக்கொண்டு கம்பீரமாக நடந்தான்.
மனைவி எழுதிக் கொடுத்த
பொருட்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தான். முதலாவது பொருள் கோப்பி என்றிருந்தது.
கோப்பி எந்தப் பக்கத்தில் இருக்குமென்று தெரியவில்லை. ஒரு திசையில் நடந்து
பார்த்தான். எவ்வளவோ நேரம் தேடியும் கோப்பியை இன்னும் கண்டபாடில்லை. எரிச்சல் ஏற,
ஓரிடத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்றபோது, விரக்தியால் கண்கள் ஒருமுறை மூடின.
மீண்டும் அவை திறந்தபோது, என்ன ஆச்சரியம்! கோப்பிப் போத்தல்கள் நேரெதிரே தட்டில்
மின்னலடித்தன. "எட, பாரன். முன்னாலை நின்றுகொண்டு தேடுறன்" என்று சொல்லித் தனக்குள்
ஒருமுறை சிரித்துக் கொண்டான் சத்திரசேகரம். அமெரிக்காவைக் கண்டுபிடிக்க கொலம்பஸ்
எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்ற யோசனையும் ஒருமுறை வந்துபோனது.
கோப்பி
இருந்த தட்டை ஆராயத் தொடங்கினான். இதுவரை அவனுக்கு 'நெஸ்கபே' யைத்தான் தெரியும்.
இங்கு எத்தனையோ விதமான பெயர்களில் கோப்பி இருந்தது. எதை எடுப்பது? எதை விடுவது?
பெரிய சிக்கல்.
அரசாங்கம் தரும் உதவிப் பணத்தில் வாழ்க்கை நடாத்த வேண்டியது
நினைவுக்கு வந்தவுடன், சிக்கல் தானாகத் தீர்ந்துவிட்டது. விலை குறைந்த கோப்பி
எதுவென்று தேடத் தலைப்பட்டான். ஒவ்வொரு போத்தலும் ஒவ்வொரு நிறையிலும், ஒவ்வொரு
விலையிலும் இருந்தது. 500 கிராம், 250 கிராம், 175 கிராம்... மீண்டும்
சிக்கல்.
ஒவ்வொரு கோப்பியிலும் ஒரு கிராம் என்ன விலை என்பதைக் கணக்குப்
பார்ப்பதென்று தீர்மானமெடத்தான். 'ஒருமைக்குக்கண்டு பன்மைக்குப் பெருக்கென்று'
அடிச்சடிச்சுப் படிப்பிச்ச மணியம் மாஸ்டரும் ஒருமுறை 'பளிச்'செனத் தோன்றி
மறைந்தார்.
எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கணக்குப் பார்ப்பது இயலாத
காரியம். மனைவி பட்டியல் எழுதிக் கொடுத்த குட்டிக்கடதாசியில் சொட்டு இடமும் இல்லை.
பக்கத்திலிருந்த தேயிலைப் பக்கற்றை எடுத்து, பின் பக்கத்தில் எழுதிக் கணக்குப்
பார்த்தான். 500 கிராமுக்குப் பார்ப்பது சுகமாக இருந்தது. 175 கிராமுக்கு நெடும்
பிரித்தல் செய்ய வேண்டியிருந்தது.
கடைசியில், கோப்பிக்குக் கோப்பி இருக்கும்
பெரிய விலை வித்தியாசம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாயிற்று. 'ஹ!' என்றான் ஒருவித
இறுமாப்புடன். தெரிந்தெடுத்த போத்தலைத் தள்ளுவண்டிலுக்குள் தூக்கிப் போட்டான்.
ஆனால் இது இந்த அளவில் முடிகிற சங்கதியல்ல என்பது புலப்பட அவனுக்கு அதிக நேரம்
எடுக்கவில்லை. பற்பசை வகைகளைத் தேடிப்பிடித்த போது, மீண்டும் அதே
பிரச்சனை.
ஒரு 'கல்குலேற்றர்' இல்லாமல் இது சரிக்கட்டக்கூடிய விஷயமில்லை
என்று பட்டது. அன்றே ஒரு 'பொக்கெற் கல்குலேற்றர்' வாங்கிவிட வேண்டுமென்று
தீர்மானித்துக்கொண்டான். கல்குலேற்றரின் விலைக்கு மேலால் சுப்பர் மார்க்கெட்டில்
மிச்சப்படுத்தும் பணமே வந்துவிடுமென்று பொருளாதார ரீதியில் செலவை
நியாயப்படுத்தினான்.
மனைவி எழுதிக் கொடுத்த பட்டியலில் இருந்த ஒழுங்கின்படி
ஒவ்வொரு சாமானமாகத் தேடிக்கொண்டு திரிந்ததில் கால்கள் வலித்தன. சுப்பர்
மார்க்கெட்டின் ஒவ்வொரு ஓடைக்குள்ளாலும் இதுவரை குறைந்தது பத்துப் பதினைந்து
தடவைகளாவது நடந்து முடித்திருப்பான் சந்திரசேகரம். எதிர்காலத்தில் மேலும் நன்கு
திட்டமிட்டுச் செயற்பட வேண்டுமென நினைத்தான்.
சிவப்பு வெளிச்சமொன்றைச்
சுற்றி ஆட்கள் குவிந்து நிற்பதைக் கண்டு அங்கே ஓடினான். Expiry date நெருங்கிவிட்ட
ஜாம் போத்தல்களும், பிஸ்கட் பக்கற்றுகளும் குவித்திருந்தன. எல்லாம் அரைவிலை. சந்திர
சேகரம் ஒரு கணம் யோசித்தான். "எங்கடை ஊரிலை வாங்கித் திண்டதெல்லாம் என்ன? Expiry
date முடியாத சாமான்களே? அங்கை date முடிஞ்சாலும் சொல்லான்", என்றபடியே நாலு
ஜாம்போத்தல்களையும், நாலு பிஸ்கற் பக்கற்றுகளையும் தூக்கி வண்டிலுக்குள் போட்டுக்
கொண்டான்.
மனைவி தந்த பட்டியலின்படி எல்லாம் வாங்கி ஆயிற்று சந்திரசேகரம்
வந்து க்யூவில் நின்றான். கவுன்ரரில் ஒரு அழகான பெண் சுறுசுறுப்பாக இயங்கிக்
கொண்டிருந்தாள். அவனுடைய முறை வந்ததும், "ஹவ் ஆர் யூ ருடே?" என்று கேட்டு ஒரு
புன்னகையையும் உதிர்த்தாள். கடையில் இப்படி அறியாத ஒருத்தி சுகம் விசாரிப்பாள்
என்று அவன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. "ஐ ஆம் வெரி வெல், தாங்க் யூ. அண்ட்
யூ?" என்று நண்பன் நவரத்தினம் சொல்லிக் கொடுத்த வாசகங்களைக் கச்சிதமாக
ஒப்புவித்தான். இறுதியில் பல 'தாங்க் யூ' பரிமாற்றங்கள்.
காலை ஒன்பது
மணிக்கு உள்ளேபோன சந்திரசேகரம் வெளியே வந்தபோது நேரம் ஒரு மணியைக் கடந்தாகி
விட்டது. கால்கள் இயந்திர கதியில் இயங்க ஆரம்பித்தன.
வீட்டை வந்தடைந்தபோது,
மனைவி வாசலில் காத்துக் கொண்டு நின்றாள். "சமையலுக்குச் சாமானுக்குச் சொல்லிவிட,
எங்கை போய்க் கிடந்திட்டு வாறியள்?" அவளுடைய குரல் தூரத்திலேயே
கேட்டது.
சந்திரசேகரம் தன்னுடைய திறமைகளையும், பணம் மீதப்படுத்திய
விதங்களையும் ஆரவாரமாகச் சொல்லிய படியே, சாமான்களைப் பைகளிலிருந்து ஒவ்வொன்றாக
எடுத்து வெளியே அடுக்கினான்.
திடீரென்று, தேள் கொட்டியவளைப் போல் மனைவி
துள்ளி எழும்பினாள். "உதென்ன பேய் வேலை செய்திருக்கிறியள்? உந்த 'நோ நேம்', 'ஹோம்
பிராண்ட் சாமான்களெல்லாத்தையும் அள்ளிக் கொண்டந்திருக்கிறியள்.
"ஏன்,
அதுக்கு இப்ப என்ன?"
"உதெல்லாம் குப்பையெண்டு தெரியாதே? மிசிஸ் நவரத்தினம்
சொன்னவ, தான் ஒருநாளும் உந்தப் பேரில்லாத சாமான்களை
வாங்கிறேல்லையெண்டு."
'வெள்ளைகாரரெல்லாம் உதுகளைத்தான் வாங்கிக் கொண்டு
போறாங்கள். பாத்திட்டுத்தான் வாங்கினான்."
"எங்கை வாங்கிறாங்கள்? கொண்டு
போங்கோ. போய்க் குடுத்திட்டு வாங்கோ. இஞ்சை வைக்க விடன்" என்று இரைந்தாள்
மனைவி.
இப்படி ஆரம்பித்த சுப்பர் மார்க்கெட்விஜயங்கள் சந்திர சேகரத்துக்கு
மிகவும் 'இன்ரறேஸ்டிங்க்' ஆகவே இருந்தன. மனைவி எத்தனை முறை கேட்டாலும், முகம்
சுளிக்காமல் போய்ச் சாமான் வாங்கி வந்தான்--புதிதாகச் சைக்கிள் ஓடப்பழகிய சிறுவன்
போல.
பண