ஈழநூல் 85  
நூல் 

திகடசக்கரம்

ஆசிரியர்

அ. முத்துலிங்கம்

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

திகடசக்கரம்

அ. முத்துலிங்கம்

-------------------------------------------

பொருளடக்கம்

பார்வதி 1
குங்கிலியக்கலய நாயனார் 12
பெருச்சாளி 29
மாற்றமா? தடுமாற்றமா? 41
வையன்னா கானா 62
குதம்பேயின் தந்தம் 79
செல்லரம்மான் 100
திகடசக்கரம் 117

------------------------------------------------------------------------------

முன்னுரை

முப்பது வருடங்களுக்கு முன்பு என்னுடைய சிறுகதைத் தொகுதியான 'அக்கா' வெளிவந்தது. அதைப் படித்தவர்கள் பலரும் பாராட்டினார்கள். அதன் பிறகு தொடர்ந்து எழுதும வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும், நான் சென்று வேலை பார்த்த இடங்களில் சந்தித்த மனிதர்களையும், நடந்த சம்பவங்களையும் என் 'சிறுகதைக் கண்களால்' அவ்வப்போது படம் பிடித்து மன அறையில் போட்டு வைத்திருந்தேன், சமயம் வரும் போது எடுத்து வெளியே விடலாம் என்று.

இங்கே எழுதிய கதைகள் எல்லாம் இப்படி பல வருடங்களாக மனதில் ஊறப் போட்டு வைத்தவை தான். ஒரு கதையாகிலும் சடுதியான ஒரு உத்வேகத்தில் பிறந்ததல்ல. இந்தக் கதைகள் வெளிவந்த பிற்பாடு நான் பார்க்கும் போது அவை மனதில் இருந்தபோது இன்னும் பிரமாதமாக இருந்தது போலத்தான் எனக்குப் படுகிறது.

சிறுகதைக்கு இலக்கணம் 'இதுதான்' என்று பலரும் வரையறுத்து கூறி இருக்கிறார்கள். சிறுகதை நாவல் அல்ல; சம்பவங்களையும் பாத்திரங்களையும் விஸ்தாரமாக விவரித்துக் கொண்டே போக முடியாது. சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைக்காமல் நேரே சொல்ல வேண்டியது அவசியம். மையக்கருத்து என்று ஒன்று தேவை; அதைத் தழுவியபடி சொல்லும் நடை முக்கியம். அடுத்தபடி பாத்திரங்களின் வார்ப்பு யதார்த்தமாக இருக்க வேண்டும். பரவலாக இது தான் ஏற்கப்பட்ட விதி.

இது தவிர இன்னொன்றையும் நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனின் சராசரி கவனஈர்ப்பு பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது என்கிறது விஞ்ஞானம். சிறுகதையானது இந்தக் கால நிர்ணயத்துக்குள் முடிந்து விடுவது நல்லது. ஒரு சிறுகதையை நாவலைப்போல தவணை முறையில் படித்து முடிக்கிறது என்பது விரும்பத்தக்க ஒன்றல்ல; ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக அது இருப்பதுதான் கவர்ச்சி.

அப்படியென்றால் விஷயத்தை மையக் கருத்தில் இருந்து நழுவாமல் சுவாரஸ்யமாக நகர்த்திக் கொண்டு போக வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டு வரும் போது சில இடங்களில் வர்ணனை தேவையாக இருக்கலாம்; சில இடங்களில் 'தாவ' வேண்டி வரும். எங்கே, எப்படி என்று நிர்ணயிப்பதில் தான் ஆசிரியரின் திறமை வெளிப்படும். வர்ணனையாயிருந்தாலும் அது கதையின் பிரதான அம்சமாக இருக்க வேண்டும்; அதை நீக்கினால் கதை படுத்து விடும் ஆபத்து உண்டு.

கதைகளில் 'தர்ம உபதேசம்' செய்வது பற்றி பல சர்ச்சைகள் இன்னும் நடந்த படியே இருக்கின்றன. ஒரு ஓவியத்தை ரசிப்பது போல, ஒரு சங்கீதத்தை அனுபவிப்பது போல சிறுகதையை என் ரசிக்க முடியாது என்பதுதான் வாதம்; அவைகள் 'ஈசாப்' கதைகளாக மாறக்கூடாது என்று கூறுவர் சிலர்.

ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது தூரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடு தான் தொடங்குகிறது. இது என்னுடைய சித்தாந்தம்.

இங்கே சொல்லிய சிறுகதைகள் அத்தனையும் உண்மையையும், கற்பனையையும் கலந்து கொடுத்தவை. சிலவற்றில் உண்மை கூடியும் கற்பனை குறைந்தும் இருக்கும்; மற்றவற்றில் கற்பனை கூடியும் உண்மை குறைந்தும் நிற்பதைக் காண்பீர்கள்.

இந்தக் கதைகளில் நான் சந்தித்த மனிதர்களையும், பார்த்த இடங்களையும், அவதானித்த பழக்க வழக்கங்களையும் பின்னணியாக வைத்து எழுதியிருக்கிறேன். எல்லாவற்றிலும் மனித மேம்பாட்டுக்கான ஏதோ ஒன்று மறைந்திருக்கும். இது இந்தக் காலத்தில் அவசியமான ஒன்றாக எனக்குப் பட்டது. போதைப் பாருள் அடிமைத்தனம், சுற்று சூழல் அறிவு, விலங்கினங்கள் பராமரிப்பு இப்படியான சிலவற்றை மறை முகமாக கோடி காட்டிச் சென்றிருக்கிறேன்.

என் மனத்திலே வெகு காலமாகப் போராடிக் கொண்டிருந்த இந்தக் கருத்துக்களை உங்களுடன் இக்கதைகள் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாசகர்களுடைய மதிப்பீட்டை அறிய ஆவலாயிருக்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுதத் தூண்டுகோலாக இருந்த நண்பர் திரு.ரி.சிவானந்தன் அவர்களுக்கும், மெய்ப்புப்பார்த்து, ஆலோசனைகள் வழங்கிய நண்பர் செ.கணேசலிங்கனுக்கும், அழகாக அச்சிட்ட காந்தளகத்தாருக்கும் என் அன்புகூர்ந்த நன்றி.

House No.32 அ. முத்துலிங்கம்
Street 4 சித்திரை - 1995
F 8/3, Islamabad
PAKISTAN


பார்வதி

இந்தத் தலைப்பில் பல கதைகளை நானே படித்திருக்கிறேன். ஆனால் தலைப்பை மாற்றுவதற்கில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இது உண்மையாகவே என் கண்முன்னே நடந்த கதை. எனது பிராயம் ஐந்தில் இருந்து எட்டு வரைக்கும் இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டன. என் பிஞ்சு மனத்தில் ஆணி அடித்தது போல சம்பவங்களும், சம்பாஷணைகளும் நிலைத்து நிற்கின்றன. இங்கே நடந்தது நடந்த படியே கூறியிருக்கிறேன்.

பார்வதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவளுடைய தோசை தான். தோசை என்றால் 'கம்பாஸ்' வைத்து வட்டம் அடித்தது போல இருக்கும். அந்த மணம் நாலு வீடு தள்ளி மணக்கும்; ஆட்களை சுண்டி இழுக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு தான் பார்வதி வீடு. விடியற்காலை பல பலவென்ற விடியும் போது கொழும்பு ரயில் வந்து சேரும். அதுதான் பார்வதி தோசை சுடும் மும்முரமான நேரம்.

முதலில் தோசை மாவை அகப்பையில் எடுத்து தோசைக் கல்லில் ஊற்றுவாள். அதுவே ஒரு தனி அழகு. அது 'உஸ்' என்று சொல்லி வைத்தபடி அப்படியே வட்டமாக உருவெடுக்கும் கொஞ்சம் பொறுத்து தோசைக் கரண்டியால், அது பாதி காயும் போதே, கீழே கொடுத்து 'தெம்மி' மற்றப் பக்கம் பிரட்டுவாள். அது படக்கென்று விழும். பிறகு அவதானித்து பொன்னிறமாக அது மாறும் போது எடுத்து ஓலைப் பெட்டியில் வைப்பாள்; அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் சில பேருடைய தட்டிலே போடுவாள்.

தோசை அப்ப ஆவி பறந்த படி இருக்கும். எடுத்து நேராகப் பார்த்தால் ஊசி ஓட்டைகள் ஒரு நூறாவது பார்க்கலாம். எல்லா தோசையும் அதே மாதிரிதான் அச்சில் வார்த்து போல வரும். அதிலே ஒரு 'விள்ளல்' எடுத்து வாயிலே போட்டால் அது மெத்தென்று புளிப்பு கலந்த ஒரு ருசியாக மாறும்; தேவாமிர்தமாக இருக்கும்; பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரைந்து விடும். சாதாரணமான தோசை மாவுக்கு இப்படி ஒரு மெதுமையையும், மணத்தையும், ருசியையும் சேர்ப்பதென்றால் அது ஒரு பரம ரகஸ்யம் தான். என்னுடைய அம்மாவும், மற்ற ஊர் பெண்டுகளும் அந்த ரகஸ்யத்தை அறிய எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் பலிக்கவில்லை.

இந்த தோசையை அப்படியே சாப்பிடலாம். அதுக்குச் சேர்த்துக் கொள்ள ஒன்றுமே தேவையில்லைதான். ஆனால் பார்வதி அதற்கென்று ஒரு 'சம்பல்' செய்வாள். சம்பல் என்றால் சின்ன வெங்காயம், சிவப்பு தெத்தல் மிளகாய், தேங்காய்ப்பூ, கொஞ்சம் உப்பு, ஒரு சொட்டுப் புளி என்று எல்லாம் போட்டு செய்ததுதான். இதற்கு கறிவேப்பிலையும் சேர்த்து பக்குவமாக தாளித்துப் போடுவாள். அப்ப அதில் இருந்து ஒரு திவ்யமான மணம் வரும். சம்பலை கொஞ்சம் தொட்டு தோசையையும் விண்டு வாயில் போட்டால் அதுவே ஒரு தனி மயக்கம் தான்.

சம்பல் இடிக்கும் போது பார்வதி யாருடனும் கதைக்க மாட்டாள். 'நாணமாம்.' முணு முணுவென்று வாய்க்குள்ளே ஏதோ சொல்லுவாள்; மந்திரமோ என்னவோ. நாங்கள் 'குஞ்சு குருமான்' அப்ப அங்கே போய் சத்தம் போட்டு விளையாடுவோம். அவள் ஒன்றுமே பேசமாட்டாள் அந்த நேரத்தில்.

பார்வதிக்க பன்னிரெண்டு வயது நடக்கும் போது கல்யாணம் ஆகி விட்டதாம். சின்னையாபிள்ளைக்குத் தொழில் விவசாயம்தான். அன்னியோன்னியமான அந்த தம்பதிகளுக்கு பிள்ளையே பிறக்கவில்லை. எவ்வளவோ வைத்தியம் பார்த்தார்கள். கோயில்கள் எல்லாத்துக்கம் போய் வந்தார்கள். தவறாமல் விரதம் பிடித்தார்கள். பிள்ளை மாத்திரம் உண்டாகவே இல்ல. பார்வதி உடைந்து போனாள். இப்படியே இருபது வருடம் ஓடியது. நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது.

அப்போது தான் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேடியில் ஒரு சாமியார் "நீ கந்தசஷ்டி விரதம் இரு. உனக்கென்று முருகனே வந்து பிறப்பான்" என்று சொன்னாராம். பார்வதியும் முழு நம்புக்கையுடன் குளித்து, முழுகி ஆறு நாள் விரதம் காத்தாள்; கடுமையான விரதம். அப்படித்தான் அவர்களக்கு பிள்ளை பிறந்தது. எப்படி பேர் வைப்பார்கள்? பார்வதிக்கு பிறந்த பிள்ளையாயிற்றே! 'முருகேசன்' என்று தான் பேர் சூட்டினார்கள். அம்மா சொல்லுவாள், பிள்ளை பிறந்த போது ஊர் முழுக்க அப்படி ஒரே கொண்டாட்டமாக இருந்ததாம்.

ஆனால் விதி வேறு மாதிரி நினைத்திருந்தது. žன்னையாபிள்ளை காலை நாலு மணிக்கே எழும்பி புறப்பட்டு விடுவார் தோட்டத்துக்கு தண்­ர் இறைக்க. நாலு மணியென்றால் 'கூ, கூ' என்று ஒருவரை ஒருவர் கூவி அழைத்துக் கொண்டுதான் புறப்படுவார்கள். தோட்டம் இரண்டு கல் தொலைவில் இருந்தது.

அன்று சின்னையாபிள்ளைக்கு சரியான அலுப்பு. மனைவியோடு இரவிரவாக சல்லாபம். நித்திரை சரியாகத் தூங்கவில்லை. 'துலா' ஏறி மிதித்துக் கொண்டிருந்தார். நித்திரை அசதியோ, வேறு நினைவோ கால் தவறி விட்டார். 'நெம்பு' என்று நினைத்து வெறும்காற்றில் காலை வைத்துத்தான் வினை. பொத்தென்று கீழே விழுந்து தலையிலே பலமான அடி. உயிர் 'பொசுக்' கென்று போய்விட்டது.

முருகேசனுக்கு அப்போது இரண்டு வயது. ஊருக்குள்ளே முருகேசன் பிறந்த வேளை தான் என்று பேசிக்கொண்டார்கள். பார்வதி தளரவில்லை. தோசைக் கடை போட்டாள். பிள்ளையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.

நான் ஐந்து வயதாக இருந்த போது முருகேசன் நெடிதுயர்ந்து வளர்ந்த ஒரு முழு ஆம்பிளைப்பிள்ளை. பார்க்க லட்சணமாக இருப்பான். வெள்ளை வெளேரென்று வேட்டி கட்டி, சட்டையும் போடுவான். செல்லமாக வளர்ந்த பிள்ளையாதலால் ஊரிலே எல்லோருக்கும் அவனிடம் 'பகிடி' பண்ண ஆசை.

புத்தம் புது சைக்கிள் வைத்திருந்தான். அதில் கொம்பு வைத்த ஒரு குதிரை முன் இரண்டு கால்களையும் தூக்கிய படி நின்று கொண்டிருக்கும். சைக்கிள் 'பெல்' மூன்று. இன்னும் வண்ண வண்ணமாக வினோதமான பல அலங்காரப் பொருட்கள் அந்த சைக்கிளில் பூட்டியிருக்கும். நாங்கள் சின்னப் பிள்ளையாக அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தது நினைவிருக்கு.

அப்ப 'பேசாத படம்' ஓடின காலம். முருகேசன் டவுனுக்குப் போய்இந்தப் படங்களைப் பார்த்து விட்டு வருவான். பிறகு அந்தக் கதைகளை விஸ்தாரமாகச் சொல்லுவான். எல்லோரும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பான்.

இந்த நேரம் தான் அவனுக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் என்றால் சாதாரண காய்ச்சல் இல்லை. நெருப்புக் காய்ச்சல். அப்போதெல்லாம் நெருப்புக் காய்ச்சல் வந்து தப்பினவர்கள் வெகு சிலரே.

பார்வதி தோசைக் கடையை மூடிவிட்டாள். மகன் பக்கத்திலேயே பழியாய்க் கிடந்தாள். நெல்லியபடிப் பரியாரி அடிக்கடி வந்து மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஊர் முழுக்க 'என்ன நடக்கப் போகுதோ' என்று பயந்த படியே இருந்தது. நிலைமை ஒரு நாள் மோசமாய் போய்விட்டது. என்னுடைய அப்பா கொழும்புக்கு பயணமாவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அம்மா சொல்கிறாள். "முருகேசன் பாடு நாளைக்குத் தாங்காது போல இருக்கு, நின்று பார்த்திட்டு போங்கோ"

அன்னு பின்னேரம் அம்மா பார்வதியைப் பார்க்க போனாள். நானும் பின்னாலேயே போனேன். ஆனால் என்னைக் 'கிட்ட வர வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். முருகேசன் அடித்துப் போட்ட வாழைத் தண்டு போலக்கிடந்தான். பார்வதி அழுதபடியே பக்கத்தில். அந்த உருக்கமான காட்சி என் மனதை விட்டு நீங்கவே இல்லை.

அம்மா தான் சொன்னாள். பார்வதி அப்போது ஒரு நேர்த்திக்கடன் செய்தாளாம். "அப்பா, நல்லூர்க் கந்தா இது நீ கொடுத்த பிள்ளை. நீயே திருப்பி எடுக்கலாமா? இந்தத் தத்தில் என் பிள்ளை தப்பினால், நூறு நாளைக்கிடையில் அவன் உன்னுடைய கோயில் வெளிப் பிராகாரத்தை பிறதட்டை (அங்கப்பிரதட்சணம்) பண்ணுவான். அப்பா, என்னை கைவிட்டு விடாதே."

எல்லோரும் அதிசயிக்கும்படி முருகேசன் தப்பிப் பிழைத்து விட்டான். பார்வதிக்கு சந்தோஷம். மறுபடியும் ஒரு குமரிப் பெண்ணாகவே காட்சியளித்தாள். அப்படியான ஒரு குதூகலத்தை ஒரு பெண்ணிடம் மிகவும் ரகஸ்யமான நேரங்களிலேதான் காண முடியும்.

நல்லூர்க் கந்தனுக்க கைத்த 'கெடுவோ' நூறு நாட்கள்தான். அப்ப பங்குனி மாதம். கொளுத்தும் வெய்யில். நல்லூர்க் வெளிப் பிரகாரத்தை பிறதட்டை பண்ணுவெதன்றால் லேசுப்பட்ட காரியமா? ஆனாலும் முருகப்பெருமானோடு விளையா முடியுமா?

முருகேசனுக்கு உடம்பு முற்றிலும் தேறவில்லை. காய்ச்சல் களை இன்னமும் இருந்தது. நெருப்புக் காய்ச்சல் அவனை உலுக்கி எடுத்து விட்டது.

பார்வதி 'அடிஅழித்த' படி முன்னுக்குப் போக, முருகேசன் பின்னால் பிறதட்டை செய்தபடியே வருகிறான். சில பந்து சனங்களும் அவர்கள் பின்னால் போகிறார்கள். சிலர் தண்ணி தெளித்தபடி, சிலர் வேப்பம் கொத்தை வீசியபடி.

உள்வீதி என்றாலும் பரவாயில்லை. இது வெளி வீதி. முருகேசனோ சொகுசாக வளர்த்த பிள்ளை. 'முந்திப் பிந்தி' பிரதட்டை செய்த பழக்கமுமில்லை. மேற்கு வீதியில் வந்த போதே அவனுக்கு 'மேல்மூச்சு, கீழ்மூச்சு' வாங்கியது. இனசனம் எல்லோரும் அவனுக்கு 'அரோஹரா' சொல்லி உற்சாக மூட்டினார்கள்.

வடக்கு வீதியும் வந்த விட்டது. அவனுக்கு இதற்க மேல் தாக்குப் பிடிக்க இயலவில்லை. எழுந்து விட்டான். ஒரு கரித்துண்டை எடுத்து கோயில் சுவரிலே கோடு போட்டு விட்டு சொன்னான்;

"ஆச்சி, இனி எனக்கு தாங்காது; மிச்சத்தை வந்து நாளைக்கு முடிக்கிறேன்" என்று விட்டு போய் விட்டான். பார்வதி திகைத்துப் போனாள் என்றாலும் மீதி தூரத்தை அவளே 'அடி அழித்து' முடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அடுத்த நாள் ஊர் முழுக்க இதே பேச்சுத் தான். சும்மா சும்மா முருகேசனைப் பகிடி பண்ணியவர்களுக்கு இது நல்ல சாட்டாகப் போய் விட்டது. அவனால் தலை நிமிர்த்தவே முடியவில்லை. குழந்தைகள் கூட அவன் முகத்துக்கு நேரே கேலி பண்ணத் தொடங்கி விட்டார்கள்.

நமசிவாயம்பிள்ளை தான் கேட்டார். 'நக்கலாகப்' பேசுவதில் எங்கள் ஊரில் 'டிகரி' வாங்கியவர்.

"என்ன முருகேசன்! கரிக்கோடு போட்டியாமே கோயில் சுவரில்? ராத்திரி பெய்த பனியில் எல்லாம் நனைஞ்சு போச்சாமே! அப்ப நாளைக்கு எங்கையிலிருந்து தொடங்கப் போறாய்?

எல்லோரும் 'கெக்கே, கெக்கே' என்று சிரித்தார்கள். முருகேசனுக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. விசுக்கென்று போய் விட்டான்.

இப்படியாகத் தான் முருகேசனுக்கும் நமசிவாயம் பிள்ளைக்கும் ஒரு சின்னப் பகைமை வித்து முளைவிட்டது. அது ஒரு நாள் விஸ்வரூபம் எடுத்ததை நான் என் கண்ணாலேயே பார்த்தேன்.

முருகேசனுக்கு நல்ல நீண்ட மூக்கு; அவன் முகத்துக்கு அது நல்ல பொருத்தம். ஆனால் மூக்குத் துவாரங்களோ பெரிசு; அப்படிப் பெரிசு. எல்லோரும் ஒரு சுருட்டுக் கொட்டகைக்குள் இருந்து சுருட்டு சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். முருகேசனுடைய வெள்ளை வெளேர் என்ற வேட்டி கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவன் மாற்று வேட்டி கட்டிக் கொண்டு வேலையிலேயே கண்ணாயிருக்கிறான்.

அப்ப இலுப்பைப் பூ காலம். 'கமகம' வென்று வாசம். ஒரு காற்று சுழன்று வீசியது. தூசோ தும்போ தெரியவில்லை. முருகேசன் 'அச்சூ' என்று தன் பலம் எல்லாத்தையும் பிரயோகித்து ஒரு தும்மல் தும்மினான். அது ஒரு அதிர வைக்கும் பயங்கரமான தும்மல்.

தொங்கலில் இருந்த நமசிவாயம் பிள்ளைதான் கேட்டார் "என்ன முருகேசன், மூக்குக்குள்ளே யானை பூந்திட்டுதோ?"

அவ்வளவு தான். முருகேசன் ருத்திரனாகவே மாறிவிட்டான். படாரென்று எழும்பினான்; ரீல் கட்டையை நமசிவாயம் பிள்ளையை நோக்கி வீசி எறிந்தான். அவனுடைய வெள்ளை வேட்டியைக் கூட எடுக்கவில்லை. ஒரே மூச்சில் சைக்கிளில் பாய்ந்து ஏறிப் போய் விட்டான். அதுக்குப் பிறகு அவனை யாருமே பார்க்கவில்லை.

பார்வதி பதறிவிட்டாள். வீடு வீடாய்ப் போய்த் தேடினாள். போவோர் வருவோர் எல்லோரிடமும் விசாரித்தாள். பொல பொல வென்று கண்­ர் விட்டு அழுதாள். கடைசியாக நமசிவாயம் பிள்ளை வீட்டு வாசலுக்கே சென்று மண்ணைவாரி, வாரிக் கொட்டித் திட்டினாள். கிராமங்களிலே மண்ணை வாரிக் கொட்டித் திட்டுவது எல்லாம் சாதாரணமான காரியமில்லை. கடைசிக் கட்டத்தில் தான், கிளைமாக்ஸ்.

ஆனால் முருகேசன் போனவன், போனவன் தான். தகவலே இல்லை. கொஞ்ச நாள் ஊர்முபக்க மௌனமாக இருந்தது போல் பட்டது. எல்லோருக்கும் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வு.

கடைசியாக ஒரு நாள் ஒரு தபால் அட்டை வந்தது. பார்வதிக்கு படிக்கத் தெரியாது. அம்மா தான் வாசித்து காட்டினாள். முருகேசன் குருநாகலையில் சுருட்டு கடையில் வேலை செய்கிறானாம்.'எடுபிடி' வேலை. கவலைப்பட வேண்டாம் என்று எழுதியிருந்தான்.

பார்வதிக்கு ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் ஒரே மகன் தன்னை இப்படி விட்டுப் போய் விட்டானே என்ற ஏக்கம். அதற்குப் பிறகு பார்வதி பார்வதியாகவே இல்லை. எப்பவும் அவள் முகத்தில் வேதனை தான் குடி இருக்கும்.

"என் மகன் என்ரை கடைசி காலத்தில் வருவானோ?" என்று கவலைப் படுவாள். ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் வந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு போவது அவளுக்கு வழக்கமாகி விட்டது.

கடிதத்திற்கு மேல் கடிதம் போட்ட படியே இருந்தாள் பார்வதி. ஒரு பதிலும் இல்லை. பார்வதிக்காக பல பேரும் கடிதம் எழுதினார்கள். ஒரு முறை வாத்தியார் எழுதினார்; இன்னொரு முறை அம்மா எழுதினாள். ஒரு நாள் சங்கக் கடை சுப்பிரமணியம், கடைசியில் நமசிவாயம் பிள்ளை கூட எழுதினார். அவர் தன் பங்காகவும் ஒரு வரி சேர்த்திருந்தார்; அது பார்வதிக்குத் தெரியாது. "நான் ஏதோ ஒரு பகிடிக்காகத் தான் அப்பிடிச் சொல்லி விட்டேன். இதைப் பெரிசு படுத்தாதே, தயவு செய்து வந்துவிடு. உன் அம்மாவைப் பார்க்க பெரிய பாவமாக இருக்கிறது" என்று.

முருகேசன் வரவே இல்லை. மூன்று வருடம் ஓடி விட்டது. அப்ப எனக்கு வயது எட்டு. எல்லோரும் முருகேசனை மறந்து விட்டார்கள் என்று தான் சொல் வேண்டும். பார்வதி, அவள் தாயல்லவா? மறப்பாளா?

ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு கொழும்பு ரயில் கொக்குவில் ஸ்டேசனில் வந்து நிற்கும் சத்தம் எங்கள் வீடு வரைக்கும் கேட்கும். பார்வதி வாசலிலே வந்து பழி கிடப்பாள்.

ரயிலிலே இருந்து இறங்கியவர்கள் எங்கள் ஒழுங்கைக்கு வந்து சேத பத்து நிமிடமாவது பிடிக்கும். இவள் தலையில் கை வைத்து பார்த்த படியே நிற்பாள். யாராவது சூட்கேசுடன் தூரத்தில் வந்தால் ஒரு கணம் திடுக்கிட்டு சிறிது தூரம் ஒடிவந்து பார்ப்பாள். பிறகு ஆள் அடையாளம் தெரிந்தவுடன் விரக்தியுடன் திரும்பிப் போய் விடுவாள்.

ஒரு நாள் பின்னேரம் வழக்கம் போல் பார்வதி அழுதபடியே வந்தாள். அன்றைக்கு அம்மாவிடம் போகவில்லை. அப்பாவிடம் தான் நேரே போனாள். அவள் சொன்னாள்:

"முருகேசன் உங்கடை சொல்லுக்கு கட்டுப்பட்டவன்;நான் எத்தினையோ காயிதம் போட்டு விட்டன்; அவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எனக்கு வயித்தைக் கலக்குது என்ரை பிள்ளையைப் பார்க்காமல் செத்து விடுவேனோ என்று பயமாயிருக்கு"

அதற்கு அப்பா பதிலே கூறவில்லை; மாறாக பெட்டியில் இருந்து ஒரு 'போஸ்ட் கார்டை' எடுத்து எழுதினார். வேறு ஒன்றும் இல்லை; ஒரு பாடலைத் தான் எழுதினார். திகதியோ, எழுதியவர் பெயரோ இல்லை. எல்லோர்க்கும் தெரிந்த ஒரு பாடல் தான் அது:

"வற்றாத பொய்கை வளநாடு தந்து
மலைமேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒரு பேரும் இல்லை
உமையாள் தனக்கு மகனே
முத்தாரமாக மடிமீதிருக்கம்
முருகேசன் எந்த உயிரே
வித்தாரமாக ரயில் மீதிலேறி
வரவேணும் எந்தனருகே"

இதை எழுதிவிட்டு அந்த தபால் அட்டையை அப்பா என்கையில் கொடுத்து "ஓடிப் போய் போட்டு விட்டு வா" என்று சொன்னார்.

நான் žவரத்தினம் கடையில் இருக்கும் தபால் பெட்டியை நோக்கி ஓடினேன். அந்தப் பாடலில் 'மயில் மீது' என்று வரும் இடத்தில் அப்பா 'ரயில் மீது' என்று மாற்றி எழுதியிருந்தார். மற்றம்படி பாடல் ஒரிஜினல் பாடலாகத்தான் இருந்தது.

(ஐம்பது வருடத்திற்கு முன்பு ஒரு முறை மட்டும் படித்த இந்தப் பாடலை நினைவில் வைத்து இங்கே கூறியிருக்கிறேன். இதில் பிழையிருந்தால் அது என்னுடையது தான்; மன்னிக்கவும்)

இந்தக் 'கார்டு' போட்டு நாலு நாள் ஒடிவிட்டது. ஐந்தாம் நாள் காலை நாங்கள் எங்கள் வீட்டு ஒழுங்கைப் புழுதியில் விளையாடியபடி இருக்கிறோம். கொழும்பு ரயில் வந்து போகும் சத்தம். பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து தூரத்தில் ஒருவர் நடந்து வருகிறார். உயர்ந்த உருவம், கையிலே சூட்கேஸ், வெள்ளை வெளேர் என்று வேட்டி. முருகேசன் தான்.

முதலில் பார்த்தது பூரணி தான். அவளோ குமரிப் பெண். படலைக்கு அந்தப் பக்கம் வர இயலாது. இருந்தும் பார்த்துவிட்டாள். ஆண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்களின் கண்களுக்கு வேகம் அதிகம் தான்.

'குஞ்சு குருமான்' எல்லாம் 'முருகேசன் வந்திட்டார், முருகேசன் வந்திட்டார்' என்று கூவிய படியே ஒழுங்கையை நிறைத்து விட்டார்கள்.

இந்தக் காட்சி தான் என் மனசில் ஐம்பது வருடமாக அழியாமல் இருக்கிறது. பார்வதி வெளியே வந்து நிற்கிறாள். கையை இடுப்பில் ஊன்றியபடி உற்றுப் பார்க்கிறாள். நாலடி முன்னுக்கு வந்து இன்னொரு முறை பார்க்கிறாள். கைகால்கள் எல்லாம் இப்ப தள்ளாடுது. கண்ணிலே தாரை தாரையாகக் கண்­ர். ஏதோ சொல்ல வாயெடுக்கிறாள்; ஒன்றும் வரவில்லை. நாக்கு தளதளக்குது. நிற்கக்கூட முடியவில்லை.

முருகேசன் சூட்கேஸை பொத்தென்று போட்டு விட்டு ஓடி வந்து தாயைக் கட்டிப் பிடிக்கிறான். 'என்ரை பிள்ளை, என்ரை பிள்ளை' என்று பார்வதி மகனைக் கட்டிக் கொள்கிறாள். தடவித் தடவிப் பார்க்கிறாள். முத்தமிடுகிறாள்; தலையைக் கோதுகிறாள். பிறகு இன்னொரு முறை தடவி விடுகிறாள். மீண்டு முத்தமிடுகிறாள்.

ஒரு நூறு பேர் சேர்ந்து விட்டார்கள். இந்தக்காட்சி நீண்டு கொண்டே போகிறது. தாயும் மகனும் குடிசைக்குள்ளே போனதும் ஆரோ சூட்கேஸை உள்ளே கொண்டு வந்து வைக்கிறார்கள்.

அடுத்த ஒரு கிழமை பார்வதி நிலத்திலே நடக்கவில்லை; ஆகாயத்தில்தான் உலாவினாள். பிறகு பயம் பிடித்துக் கொண்டது அவளுக்கு. முருகேசன் தன்னை விட்டுத் திரும்பி போய் விடுவானோ என்று. ஆனால் நல்லூர்கந்தன் அதற்கும் ஒரு வழி வகுத்திருந்தார்; எங்களுக்குத் தான் அது அப்ப தெரியவில்லை.

பார்வதி ஒரு நாள் படுத்தபடி நித்திரையிலேயே போய் விட்டாள். எங்கள் ஊர் முழுக்க இதே கதைதான். செத்த வீடு மிக விமரிசையாக நடந்து முடிந்தது.

நாலாம் நாள் காரியங்கள் எல்லாம் நிறை வேறியவுடன் முருகேசன் மீண்டும் 'ரயிலேறி' விட்டான்.



குங்கிலியக்கலய நாயனார்

அந்த வாடி வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினாலு வருடம் ரஸ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது. அப்ப கானிஸ்தானிலுள்ள 'ஹெராத்' என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.

'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்டதாடி வைத்திருப்பவர், அறிவுஜ“வி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது (U.N) ஐ.நாவின் போதைப் பழக்கம் தடுப்பு பிரிவில் வேலை பார்க்கிறார்.

'லூனன்பெர்க்' ஜெர்மன்காரர். சதுரமான தாடை அதை எப்பவும் நிமிர்த்தி வைத்துக் தான் கதைப்பார். ஐ.நாவின் அகதிகள் மறுகுடியேற்றத்தில் அவருக்கு வேலை.

மாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கே தான். ஆஹா! இந்தப் பெண்கள் தான் என்ன அழகு! அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத் தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ 'பர்தாவில்' புகுந்து விடுவார்களோ?

நான் தான் தொடங்கினேன். எனக்கு கனடாக் காரரைச் žண்டுவதில் ஒரு தனி இன்பம், "அப்ப, ஹுமெலின் இந்த போதைப் பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன கெய்வதாக உத்தேசம்? உமக்கு வேலை போய் விடுமே?" என்று கேட்டேன்.

அப்கானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப் பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கே தான். இவர் தனியாளாக இதை ஒரித்துக் கட்ட கொடுக்குக் கட்டிக் கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா? மலையை இடித்து மூக்குப் பொடி போட்டு முடிக்கிற கதைதான்.

இதற்கு கனடாக்காரர் பதில் கூறுமுன் ஜெர்மன்காரர் முந்திக் கொண்டு சொன்னார்:

(இங்கே நடந்த சம்பாஷணைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். அதை வாசகர்களுக்காக நான் 'என் தமிழில்' தந்திருக்கிறேன்.)

"பழக்கத்தில் 'நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்' என்று இல்லை; 'விடக்கூடிய பழக்கம்', 'விட முடியாத பழக்கம்' இப்படி இரண்டு தான். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும்; சிலருக்கு சிகரெட் தேவை; இது இல்லாமல் நடுக்காடடில் இவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக் கொண்டு பைத்தியமாகி விடுவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால் தான் கஷ்டம்."

அதற்கு கனடாக்காரர் "எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்கு பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லாவிடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவர் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒரு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால் இதை விட முடியவில்லையே" என்றார்.

நான் சொன்னேன்: " நான் செருப்பு போடும் போது எப்பவும் இடதுகாலைப் போட்டு பிறகு தான் வலகு காலைப் போடுவேன். 'ஷேவ்' எடுக்கும் போது வலகு பக்கம் செய்து பிறகு இடது பக்கம். இதுவும் பழக்கம் தானே?"

ஜெர்மன்காரர் சொன்னார், மிக அவசரப்பட்டு "என் மனைவி எப்போதும் கொண்டையூசி குத்தும் போது இடது பக்கம் குத்தி தான் வலது பக்கம் குத்துவான். நான் அவதானித்துப் பார்த்திருக்கிறேன்."

"வேறு என்னவெல்லாம் உமது மனைவி செய்வதை நீர் அவதானித்து பார்த்திருக்கீர்" என்றார் கனடாக்காரர், கண்களைச் சிமிட்டியபடி.

அதற்கு பிறகு சம்பாஷணை கீழிறங்கி விட்டது. இது அப்படியே கொஞ்ச நேரம் நீடித்தது.

நான் "தயவு செய்து உங்கள் சம்பாஷணையை இடுப்புக்கு மேலே கொண்டு வருகிறீர்களா?" என்று விட்டுத் தொடர்ந்தேன்:

"ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக மாறுகிறது என்பதை கண்டு பிடிக்க முடியுமா?"

ஜெர்மன்காரர் அந்தச் சமயம் பார்த்து தன் பையில் இருந்து ஒரு வளைந்த போத்தலை எடுத்தார். அவர் எப்பவும் அதில் குடிவகை வைத்திருப்பார். எந்தக் காடு, மேடு, மலை, சமுத்திரம் என்றாலும் அதைக் 'கவசகுண்டலம்' போல காவிக் கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறுகுடித்து விட்டு சொன்னார்.

"அது மிகவும் சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி போட வேண்டும். அதற்கு பிறகு ஐந்து ரூபாயை அவன் கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்க ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை."

"எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்பத் திரும்ப சாப்பிடுவேன்; களவெடுத்தும் கூட சாப்பிடுவேன். இதுவும் அடிமைப் பழக்கமா? என்று கேட்டேன்.

அதற்கு கனடாக்காரர் "ச்ž, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும்? நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்கு குமட்டிக் கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. 'போதும்' என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையில் இருக்கும் வரை எடுத்துக் கொண்டே இருப்பாய்; முடிவு என் வசமே இல்லை" என்றார்.

ஜெர்மன்காரர் சொன்னார்: "இது சொல்லித் தெரிவதில்லை. இந்த போதைக் கொடுமையில் விழுந்தவர்களைக் கண்ணால் பார்க்க வேணும். நான் 'பெஷாவாரில்' மூன்று வருடம் வேலை செய்தேன். நாளொன்றுக்கு நாலு, ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்துக் கொண்டிருந்த காலம் அது. என் வீட்டுக்கு காவல் ஒரு பட்டாணி காவல்காரன். மடியிலே ரிவால்வரும், தோளிலே AK47 ஆக வீட்டைச் சுற்றியபடியே இருப்பான்.

"அன்று கிறிஸ்மஸ் இரவு. நானும், மனைவியும் வெளியே போய் விட்டு ஒரு மணி மட்டில் வந்து படுத்து கண்ணயர்ந்திருப்போம். வீட்டின் கீழே கண்ணாடிகள் உடைத்து சலு சலு வென்ற சத்தம். கீழே ஓடி வந்து விளக்கைப் போட்டால் எங்கும் கண்ணாடிச் சில்லுகள்."

" 'காக்கா இஸ்மயில், காக்கா இஸ்மயில்' என்று கத்தினோம். இஸ்மயில் கதிரையில் இருந்த படியே AK47 ஐ மடியில் குழந்தை போல அணைத்தவாறு தூக்கத்தில் இருந்தான்."

"பொலீஸ் வந்து எல்லா விபரங்களையும் பதிவு செய்து கொண்டு போனார்கள். கனவு போனது விலையுயர்ந்த கலைப் பொருள்கள். அதற்கு பிறகு பொலீஸ’டம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நானும் மறந்து விட்டேன்."

"ஒரு நாள் என் கந்தோருக்கு பொலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது, என்னை நிலையத்துக்கு உடனே வரும்படி. நானும் மன€வியைக் கூட்டிக் கொண்டு விரைந்து சென்றேன்."

"அங்கே நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ஒரு பையன், 24 வயது இருக்கும். குந்தி முழங்காலைக் கட்டிய படி ஒரு மூலையில் இருக்கிறான். குளிருக்கு நடுங்குவது போல அவன் தேகம் நடுங்குகிறது. நெற்றி, தாடையெங்கும் காயங்கள்; சில காயங்களில் இரத்தம் வழிந்த வண்ணம் இருக்கிறது."

"அன்று காலை அவன் பொலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய சாமான்களை அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என் வீட்டில் களவுபோன பொருட்கள் அங்கே இல்லை. அவை எல்லாம் வேறு வேறு திருடியவை. அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான். அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான், ஆனால் விட்டு விட்டானாம்.

"என் மனைவி அவன் முன்னே முழந்தாளில் உட்கார்ந்தாள். 'உன்னை நான் எப்படியும் வெளியே கொண்டு வந்து விடுவேன். தயவு செய்து என் முகத்தைப் பார். எங்கள் வீட்டில் நீ எடுத்த பொருள்கள் ஆயிரம் டொலர் பெறும். யாரிடம் அவற்றை விற்றாய், சொல்' என்று மன்றாடினாள்."

"அவன் கண்களில் கண்­ர் தான் வந்தது. வாய் குழறியது. அவனால் ஒன்றுமே கதைக்க முடியவில்லை."

"அவன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாம். தாய்க்கு ஒரே பையன். தகப்பன் இல்லை. தங்கை மட்டும் தான். வீட்டிலோ வறுமையிலும் வறுமை. இவன் படிப்பில் எப்பவும் முதல் தான். திறமையாகப் படித்து மருத்துவக் கல்லூரிக்கு செய்யப் பட்டு விட்டான்."

"முதல் வருடம் நன்றாகவே படித்தான். ஆனால் இரண்டாவது வருடம் பிடித்தது சனியன். நண்பர்களுடன் ஒரு நாள் மாலை ஒரு 'சிமிட்டா' பொடி போல் உறிஞ்சிக் கொண்டான். ஒரே ஒரு முறை தான். அடுத்த நாளும் எடுத்தான்; அதற்கு அடுத்த நாளும், இப்படியே போயிற்று. ஒவ்வொரு முறை எடுக்கம் போதும் 'இது தான் கடைசித்தரம்' என்று நினைத்துக் கொள்வான்.

"கல்லூரிக்குப் போவது இப்போது தடைபட்டது. இவன் சிந்தனை எல்லாம் அடுத்த வேலை 'சிமிட்டாவுக்கு' காசு எப்படிச் சம்பாதிப்பது என்பது தான். முதலில் புத்தகங்களை விற்கத் தொடங்கினான். பிறகு வீட்டில் பொருட்கள் திடீர் திடீரென்று காணாமல் போகத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் தங்கையின் தோட்டிலேயே கை வைத்தான். அதை விற்கக் கொண்டு போன இடத்தில் பிடிபட்டு விட்டான்."

"அப்ப தான் முதன் முதலாக தாய்க்கும் தங்கைக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்றால பொலீஸ’ல் இருந்து அவனை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் வீட்டுப்பயம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை. இப்படி தொடங்கி அடிதடி வரையில் போய்விட்டது. ஒரு நாள் தாயாரை அடித்தே விட்டான்."

"அதற்குப் பிறகு அவன் வீட்டிற்கு வருவதே இல்லை. சுருண்டு சுருண்டு போய் ரோட்டு ஓரங்களில் படுத்திருப்பான். போதையின் உத்வேகம் வரும் போது எங்கேயாவது புகுந்து களவெடுத்து விடுவான்."

"நானும் மனைவியும் பெஷாவரை விடும் போது அவனை ஜெயிலில் போய்ப் பார்த்தோம். மனைவி அவனுக்கு ஒரு கம்பளிப் போர்வை கொடுத்தாள். இப்ப கூட அவனுடைய நீளமான கண்கள் என் நினைவில் அடிக்கடி வரும். அவன் இன்னும் இருக்கிறானா இறந்து விட்டானா, தெரியவில்லை."

"இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"

ஹுமெலின் சொன்னார். "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில் தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்கிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட் இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொடங்கி விடும்."

"நான் தீக்குச்சியினால் தான் சிகரெட் பற்ற வைப்பேன். முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும் போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில் தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை."

"ஒருகோடை விடுமுறையாக பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம், ரொரென்டோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."

"என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன் பின் நான் அதை தொடவே இல்லை. நான் பாக்கியசாலி."

"அதற்குப் பிறகு சிகரெட் குடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?"

"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன். சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று . இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே இன்னோரு முறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்த படியே இருக்கிறேன்" என்றார்.

நான் சிறு வயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

"எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று தான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும் போது கூட 'குடிகாரச் சின்னத்தம்பி'என்று சொல்லித் தான் தீத்துவார்கள்.

"ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும் போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்து விட்டு ஆடிக்கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்து விடும். வேட்டியை ஒரு கையால் இழுத்த படியே வருவான் சின்னத்தம்பி."

"சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக்கொண்டு தான் வருவான். அவனுடைய 'மூடைப்' பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி, உலாஞ்சி' தான் வருவான்; இன்னொரு நாளைக்கு நடராசாவை திட்டியபடி வருவான்; ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி; மற்றொரு நாளைக்கு அவன்தாயார், இப்படி.

"எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு ஆரை வைகிறான் என்று வேலி வழியலாலும் பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டி ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்."

"எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் தான். ஆனால் அவன் வீட்டுப் படிலை அடுத்து ஒழுங்கை வழியாகத் தான் இருக்கும். அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்று தான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் அவர்கள் வீட்டுக் கூரை தெரியும்."

"எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர் அக்காவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்த படியே அக்கா அவர் சொல்லிக் கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்ப பதினாறு, பதினேழு வயதிருக்கும்."

"அக்கா பாடும் போது நான் அவள் முகத்தையே பார்த்த படி இருப்பேன். அக்காவுக்கு வட்டமான பெரிய கண்கள். அக்காவின் கைவிரல்கள் வெள்ளைக் கட்டையிலும், கறுப்புக் கட்டையிலும் மாறி மாறி தவழ்ந்து விளையாடும், அவள் குரலும் பாட்டு வாத்தியார் குரலும் சேர்ந்து ஒலிக்கும்."

"கனக சபா....பதி....தரி...சனம்
ஒருநாள்
கண்டால்...கலி...தீ...ரும்
ஆ....."

"அக்கா இந்தப் பாட்டை பாடுகிறாள். என் தகப்பனார் மரக் கட்டிலில் சப்பணம் கட்டிக் கொண்டு இருந்து ரசிக்கிறார்."

"மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி' கனகசபாபதி' என்று ஒரு இளம் பொடியன். சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டியபடி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக் கொண்டிருப்பது தான் அவன் வேலை."

"ஒரு நாள் இந்தக் குடிகாரன் வழக்கம் போல வேட்டியை இழுத்தபடி போறான். சத்தம் போட்டுக் கத்தியபடியே. எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டு விட்டு காது கொடுத்துக்கேட்ட படியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறை போலும், குடிகாரன் சொல்கிறான்:

" 'அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கூத்து, இதைக் கேப்பாரில்லையா?'"

"அதற்குப் பிறகு அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதை நிறுத்தி விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு விட்டார். கொஞ்ச நாள் பிறக பாட்டுக்காரரையும் வேண்டாமென்று விட்டார்."

"இப்படித் தான் ஒரு நாள் நான் ஒரு சின்னச் சருவச் சட்டியோடு எங்கள் படலையடியில் நிற்கிறேன். வழக்கமாக அந்த வழியால் மாணிக்கம் கள் எடுத்துக் கொண்டு போவான். அம்மா சொன்னபடி அப்பத்திற்கு போட ஒரு சொட்டு கள்ளு வாங்க காத்துக் கொண்டிருக்கிறேன்."

"தூரத்திலே குடிகாரச் சின்னத்தம்பி. முதலில் அவன் குரல். பிறகு தான் உருவம் தெரிகிறது. வழக்கம் போலச் சத்தம் போட்டு பேசிய படியே வாறான். நான் சருவச் சட்டியைப் போட்டு விட்டு உள்ளுக்கு ஓடி விட்டேன்."

"அவன் வீட்டுக்கு போனவுடன் சண்டை தொடங்குகிறது. இவன் நாலரை அடி உயரம். ராசக்கா ஆறு அடி. முதலில் வார்த்தையிலே தான் சண்டை. அம்மா குந்தில் ஏறி நின்று பார்க்கிறாள். நாங்கள் அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம்."

"ராசக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். பூரணம்,அவளுக்கு பதின்மூன்று வயது; பெரிய பிள்ளை ஆனவுடன் படிப்பை நிறுத்தி விட்டாள். மற்றது பற்பன் (பத்மநாபன்) என்னோடு தான் படிக்கிறான். அவன் பள்ளிக்கு வர்றதே 'பாணும், சம்பலும்' வாங்கத்தான். அவன் அரைவாசி சாப்பிட்டு விட்டு மீதியை அக்காவுக்கும், அம்மாவுக்கும் கொண்டு போய் கொடுப்பான்."

" 'என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சப் போட்டுவாறாய்?' "

" 'ஏண்டி, உன்ரை கொப்பற்ற žதனத்தில் குடிக்கிறானே?' இது அவன்."

" 'மூன்று நாள் பிள்ளைகளுக்கு சாப்பாடில்லை; நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?'"

"எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்?"

"இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்குமாத்தைப் பிடுங்கி 'ரப்பிலே' செருகி விட்டாள். இவருக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்க்கிறார்."

" 'எடுத்துக் குடடி, எடுத்துக் குடடி' "

"காலால் அவளை உதைக்கிறார்"

"மனிதனடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்சம் நேரம் அமைதி. ஊர் முழுக்க மூச்சு விடாமல் காதைக் கூர்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது."

"அம்மா தான் முதலில் பார்த்தாள். வீட்டுக் கூரை 'டங்' கென்று ஒரு கணம் ஆடியதை. 'ஐயோ இஞ்சருங்கோ, என்னெண்டு போய் பாருங்கோ' என்று கத்தினாள் அம்மா."

"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும் கிணத்தை தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்னராசு தான் உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்கு போறான், பிறகு அம்மா."

"நாக்கு வெளியே நீண்டு விட்டது. ராசக்கா முகட்டில் இருந்து ஒரு சேலையில் தொங்கி கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்து கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒரு கணம் பிந்தியிருந்தால் மரணம் தான்."

"சின்னத்தம்பிக்கு வெறி முறிந்து விட்டது. தலையில் கைவைத்த படி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துக்கத்தென்று கத்துகிறார்கள்.

"கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்."

" 'ஐயா ஐயா! என்னைக் கொல்லுங்கோ! இந்த சனியனை இனி நான் தொட மாட்டேன். இது சத்தியம்' என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

"முதல் நாள், வேட்டியைக் கட்டிய படியே கீழே பார்த்த படி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத்தம்பி; இரண்டாம் நாளும் அப்படித்தான்; மூன்றாம் நாளும் அதே தான்."

"அம்மா சொன்னாள் 'சின்னத்தம்பி திருத்தி விட்டான்' என்று."

"நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக்கொண்டே வாறான்."

" 'விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது? அவள் என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க?'"

கொஞ்ச நேரம் நாங்கள் எல்லாம் மௌனம். பிறகு கனடாக்காரர் சொன்னார்.

"இந்தப் பழக்கம் உள்ளே வெகு நைஸாகப் புகுந்துவிடும். அது புகுந்ததே தெரியாது. ஆனால் அதை வெளியேற்றுவது தான் மிகவும் சிரமம்.

"அதிலும் 'நோய் விலகும் அறிகுறிகள்' (Withdrawal symptoms) - அதன் பாதிப்போ அவஸ்தையானது. நரக வேதனை தான். இதிலே மீள்வது மிகவும் அரிது என்றார் ஜெர்மன்காரர்.

"அவர்களுக்கான 'புனர்வாழ்வு மையங்கள்' (rehabilitation centres) மேல் நாடுகளில் இருக்கின்றன. ஆனால் பத்திலே ஒருவர் தான் மீண்டு வருவார்கள்."

"எனக்கு அப்படி ஒருவரைத் தெரியும். ஆபிரிக்காவில் நான் வேலை செய்த போது அந்தப் பரிச்சயமேற்பட்டது." என்று நான் கூறினேன்.

"அது மரங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பனி. ஆபிரிக்காவில் சிவப்பு மரங்களுக்கு உலகமெங்கம் நல்ல வரவேற்பு. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்தார்கள். கம்புயூட்டர் பிரிவில் தான் நான். எனக்கு கீழே நாற்பது பேர்.

"அவனுடைய பேர் 'லுங்கே ஒபுக்கு'. நல்ல தேகக் கட்டுடன் இருப்பான். எப்பவும் சிரித்த முகம். வயது இருபத்தியாறு. ஒரு மனைவியும் மகளும் தான்."

"கம்புயூட்டரை அவன் கண்டதேயில்லை. ஆனால் அதைக் கண்ட நாளிலிருந்து அவனுக்கு ஒரு மோகம். அதில் மீன்குஞ்சு நீந்துவது போல இவனும் புகுந்து விளையாடுவான். இயற்கையாகவே அவனுக்கும் கம்புயூட்டருக்கும் ஒரு தொந்தம் இருந்தது. நான் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் தானாகவே பத்து விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுவான்."

"நாங்கள் மாதா மாதம் அமெரிக்காவிலுள்ள தலைமையகத்துக்கு நாற்பது பக்கங்கள் கொண்ட செயலாட்சி அறிக்கையை அனுப்ப வேண்டும், ஆறு மாதத்திலேயே இவனை நான் இது தயாரிப்பதில் ஒரு விற்பன்னனாகத் தயார் செய்து விட்டேன்."

"இரவு பகலாக கம்புயூட்டரே கதி என்று கிடப்பான். என் வேலையானது சுகமாகவும் அவசரமின்றியும் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஒபுக்குவுக்கு இன்னொரு மோகம் பிடித்தது."

*cont...chakram2.mtf** தயை நிற்பாட்டினேன். ஜெர்மன்கார


** chakram1.mtf ன் தொடர்ச்சி **

இந்த இடத்தில் நான் கொஞ்சம் கதையை நிற்பாட்டினேன். ஜெர்மன்காரர் போத்தல் மூடியைத் திறந்து ஒரு மிடறு வாயில் ஊற்றிக் கொண்டார். நான் தொடர்ந்தேன்.

"அங்கே அமெரிக்காவில் இருந்து வந்த 'பீஸ்கோ' ஊழியர்கள் (Volunteers) அநேகம். அதிலும் பெண்களே அதிகம். எல்லாருமே கட்டிளம் கன்னியர். கன்னியர் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அதிலே ஒரு நீலக்கண் அழகி; பெயர் 'கரலைன்'. அவளுக்கு இவன் மேல் மையல்."

"பீஸ்கோவில் இருந்து வரும் பெண்கள் ஒரு ஆணைவலையில் வீழ்த்தி இழுத்துக் கொண்டு போவது அங்கே வழக்கம் தான். பீஸ்கோ பெண்கள் அங்கு வருவதே அதற்காகத் தான் என்று என்னுடைய மேலதிகாரி எனக்கு அடிக்கடி சொல்லுவார்."

"மேற்கு ஆபிரிக்காவில் ஒரு வித குடிவகையை சிறு சிறு 'பொலிதீன்' பைகளில் போட்டு விற்பார்கள். அதில் ஊசியால் ஒரு சிறு ஓட்டை போட்டு வாய்க்குள் அடக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மது வகையோ மிகவும் சக்தி வாய்ந்தது. அது கசிந்த கசிந்து ஒரு மணியளவுக்கு தாக்குப்பிடிக்கும். அது முடிந்தவுடன் இன்னும் கேட்கம். கொடுத்துக் கொண்டே இருக்க வேணும்."

"கரலைன் காதலிக்கு 'பொலிதீன்' மோகம். இவன் சாது. இவனும் பழகிக் கொண்டான். அது பிடரியில் ஏறி இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. இவனுக்கு அதை இறக்கி விட வழியில்லை. அதன் சொற்படி எல்லாம் ஆடத் தொடங்கினான்.

"ஆபிரிக்காவில் ஒரு பழமொழி இருக்கிறது. 'ஆற்றிலே ஆழம் பார்க்க ஒரு காலை மட்டு விடு, இரண்டு காலையும் விடாதே, முட்டாளே' என்று. இவன் இரண்டு காலையும் விட்டு விட்டான்."

"ஒரு நாள் அவன் என்முன்னே நிற்கும் போது கவனித்தேன். நிற்க முடியாமல் திண்டாடினான்; கைகளெல்லாம் நடுக்கம். அடிக்கடி வேலைக்கு வரத் தவறினான். அறிக்கைகள் தயாராக நாட்கள் எடுத்தன. எனக்கு அவனிலே சம்சயம் ஏற்பட்டது."

"ஒரு திங்கள் காலை நான் அலுவலகம் வருகிறேன். என் மேசையில் ஒரு சிறு குறிப்பு இருக்கிறது. அந்த மாதத்தின் 'ப்ரோகிராம் விபரங்கள்; இந்த கம்புயூட்டர் பைல் இந்த 'டைரக்டரியில்' இருக்கிறது; ரகசிய 'கோட்' இது என்று இப்படியான சில குறிப்புகள் தான். எனக்கு அது முழுவதுமாய் விளங்கவில்லை. ஒரு மூலையிலே போட்டு விட்டேன்.

"இரண்டு நாளாக ஒபுக்கு வரவில்லை. மூன்றாம் நாளும் இல்லை. எனக்கு கிலி பிடித்து விட்டது. தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பும் நாள் நெருக்கிக் கொண்டே வந்தது. விசாரித்ததில் அமெரிக்கச் சிட்டுடன் இவன் ஓடி விட்டான் என்றார்கள். 'கரலைன்' இவனைக் கடத்தி விட்டாள். கந்தோரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது; ஆனால் நான் தான் கடைசி."

"அப்பதான் அந்தக் குறிப்பு நினைவுக்கு வந்தது. அதைப் பார்த்து இரவு பகல் வேலை செய்து தலைமையகத்துக்கு அறிக்கையை கெடு முடிவதற்கிடையில் அனுப்பிவைத்தேன். எனக்கு அவன் மீது அன்பு தான் சுரந்தது. கோபம்வரவில்லை. அவன் எவ்வளவு ஒரு இக்கட்டில் மாட்டி தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் துறந்து ஓடினாலும் என்னை நட்டாற்றில் விட்டுப் போக விரும்பவில்லை. அவனுடைய குறிப்புகள் என் வேலையைக் காப்பாற்றின."

"நான் ஒப்புக்குவை மறந்தே விட்டேன். ஆனால் ஒரு வருடம் கழித்து எனக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது."

ஐயா.

உங்களை நான் மறப்பேனா? உங்களிடம் படித்த கம்புயூட்டர் தான் இன்று சோறு போடுகிறது.

நான் போதைக்கு ஆளாகிப் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாதம் கிடந்தேன். அதனிலும் பார்க்க நரகம் வேறு ஒன்றும் இல்லை. இந்நோயின் 'விலகும் அறிகுறிகள்' என்னைச் சித்திரவதை செய்து விட்டன. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இறுதியில் தப்பிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கரலைனும் தன் அன்பைத் தெரிவிக்கிறான்.

ஒபுக்கு.

இதை நான் சொல்லி முடிக்கவும் சமையல்காரன் 'டிங்டிங்' என்று மணியடித்து 'டின்னர்ரெடி' என்று சொல்லவும் சரியாகவிருந்தது.

ஜெர்மன்காரர் போத்தலை உருவினார். மூடியைத் திறந்து கொஞ்சம் வாயிலே ஊற்றி விட்டு மறுபடியும் போத்தலை பையிலே வைத்தார்.

"இது என்ன? நாங்கள் இவ்வளவு கதைத்த பிறகும் இப்படி செய்கிறீரே? இதை இன்றே தலையைச் சுத்தி வீசிவிடும்" என்றேன்.

ஜெர்மன்காரர் "ஆமாம், இன்று இதுதான் கடைசித்தடவை - நாளை விடியும் வரை" என்றார்.

* * *

மேற்படி கதையைப் படித்துவிட்டு நண்பனொருவன் "என்ன கதை எழுதிறாய் நீ? தலையுமில்லை. வாலுமில்லை! குங்கிலியக்கலய நாயனார் என்று தலைப்பு வேறு கொடுத்திருக்கிறாயே" என்று கேட்டான்.

"உனக்கு குங்கிலியக்கலய நாயனார் கதை தெரியுமா?" என்று கேட்டேன்.

"என்ன தெரிய வேணும். அறுபத்தி மூன்று நாயன்மாகளில் அவரும் ஒருவர்" என்றான்.

"திருக்கடவூரிலே சுவாமிக்கு தினமும் குங்கிலியம் தூபம் இடுவதே இவர் தொழில். எப்பேர்ப்பட்ட வறுமையில் வாடினாலும் தினமும் இதைச் செய்யத் தவற மாட்டார். கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்து குங்கிலியம் வாங்கி சுவாமிக்குத் தூபம் போட்ட படியே இருப்பார். இப்படியே வீட்டிலே இருக்கும் பொருள்களையெல்லாம் விற்று விற்று குங்கிலியம் வாங்குவார்.

"ஒரு நாள் வீட்டிலே மனைவியும் பிள்ளைகளும் பட்டினி. விற்பதற்கு இனி ஒன்றுமே இல்லை. அப்பொழுது அந்த மனைவி தன் தாலியை கழற்றிக் கொடுத்து அதை எப்படியாவது விற்று நெல் வாங்கி வரச் சொல்கிறாள், பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்கு. இவரும் 'அப்படியே' என்று போனார். ஆனால் வழியில் ஒருவன் ஒரு பொதி குங்கிலியம் கொண்டு வரக் கண்டு அதிலே மனதைப் பறி கொடுத்தார்.

"தன் வயமிழந்து மதிமயங்கி, தாரை தாரையாக கண்­ர் சொரிய அவன் காலி விழுந்து தாலியைக் கொடுத்து குங்கிலியப் பொதியை பெற்றுக் கொண்டார். அதை நேரே கொண்டு போய் கோயிலிலே வைத்து தூபம் போடலானார். பசிறை மறந்தார்; மனைவியை மறந்தார், பிள்ளைகளையும் மறந்தார்."

"இது என்னத்தைக் காட்டுகிறது?" என்றேன்.

"அவருடைய பக்தியைத் தான்" என்றான் நண்பன்.

"இல்லை, இதுவும் ஒரு வித அடிக்ஷன் (addiction) தான்" என்றேன் நான்.

....................

பெருச்சாளி

அதற்குப் பேர் 'கட்டிங்கிராஸ்' மேற்று ஆபிரிக்காவில் பெருகிக்கிடக்கம் ஒரு வகை பெருச்சாளி இனம். ஒரு பெரிய முயல் குட்டி அளவுக்கு வளரும். இதில் விசேஷம் என்னவென்றால் இது ஒரு தோட்டத்தில் வாய் வைத்துவிட்டால் என்றால் தோட்டக்காரன் கதி அதோ கதிதான். மண்ணைப் பிராண்டி உள்ளே போய் கிழங்கு வகை எல்லவற்றையும் நாசமாக்கி விடும்.

மேலுக்குப் பார்த்தால் பயிர்கள் 'ஓகோ' வென்று இருக்கும். ஆனால் உள்ளுக்குள்ளே கிழங்கையும் வேர்களையும் ஒட்டச் சாப்பிட்டிருக்கும். பார்ப்பவர்களக்கு விஷயமே தெரியாது. கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கும் பயிர் செத்துப் போகும்.

சில வைரஸ் இருக்குதான். அது ஆட்களை முற்றிலும் கொல்லாது. ஆள் செத்தால் அதுவும் செத்து விடுமல்லவா, ஆகையால், மெள்ள, மெள்ள ஆளைச் சாப்பிட்டுக் கொண்டே வருமாம், தன் உயிரை நீடிப்பதற்கு.

கட்டிங்கிராஸ•ம் அந்த வகை தான். வள்ளிக் கிழங்கு என்றால் அதற்கு உயிர். நாலு கிழங்க இருந்தால் மூன்றைச் சாப்பிட்டு விட்டு ஒன்றை விட்டுவிடும். உங்களில் கரிசனப் பட்டு அல்ல. பயிர் மடிந்தால் அதுவும் மடிந்துவிடுமே.

கட்டிங்கிராஸ் இப்படியாக மனிதனுக்கு ஏற்பட்ட உணவைச் சாப்பிட, மேற்கு ஆபிரிக்க மனிதனோ கட்டிங்கிராஸையே சாப்பிடலானான். மிகப் பிரியமாகச் சுவைத்து சாப்பிடுவான். சுட்டுச் சாப்பிடுவான்; பொரிச்சு சாப்பிடுவான்; கறி வைச்சும் சாப்பிடுவான்.

கட்டிங்கிராஸ் மனித இனத்தை ஒழிக்க பாடுபட மனிதனோ கட்டிங்கிராஸை வேரோடு கறுவறுக்க வழிகள் தேடிக் கொண்டிருந்தான். எழுத்தில் இல்லாத ஒப்பந்தம் இது. ஒரு உயிர் வாழ் இனச்சூழல் சமனம் (Ecological balance) இங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. யாருக்கும் தெரியாது.

* * *

நான் அப்போது உலக வங்கிக்காக மேற்க ஆபிரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கே தான் எனக்கு முதன் முதல் கட்டிங்கிராஸ”டன் பரிச்சயமேற்பட்டது. 'ம்மயம்பா' என்ற ஊருக்குக் காரில் பயணம். பென்ஸ் கார். அங்கே இதெல்லாம் சர்வசாதாரணம். நடுத்தர வர்க்கம் இல்லாத நாடு; மிதமிஞ்சிய பணக்காரனாக இருப்பான் ஒருவன், அல்லது பரம ஏழை. இடையில் ஒன்றும் இல்லை. வாகனமும் அது மாதிரிதான். பென்ஸ்கார் தான் வீதியெல்லாம். கொஞ்சம் முட்டுப்பட்ட பணக்காரன் என்றால் peugeot அல்லது Toyata வைத்திருப்பான் அல்லது நடைதான். வண்டி, குதிரை, ரிக்ஷா, ஓட்டோ என்றெல்லாம் இல்லை. தள்ளு வண்டி, சைக்கில் கூடக்கிடையாது. மோட்டார் சைக்கிளை மட்டும் அதிசயமாகக் காணலாம். சனங்கள் பொடா பொடாவில் (பஸ்ஸ’ல்) போய்க் கொள்வார்கள். அதன் சத்தத்தை வைத்து அப்படிப் பேர் வந்ததும்.

காரைச் சாரதி நூறு மைல் வேகத்தல் ஓட்டிக் கொண்டிருந்தான். இதுவும் சர்வசாதாரணம் தான். அவன் பேர் 'க்காணு'. அவனுடைய வாய் எப்பவும் கோலா நட்டை (பாக்குப் போன்ற துவர்ப்பாய் இருக்கம் ஒரு காய்) மென்று கொண்டே இருக்கும். வாய் சிவப்பாகும். பசியே எடுக்காது 'ஹ’ ஹ’' என்று அடிக்கடி சிரிப்பான். சிவப்பு முரசு பளிச்சென்னும். சிரிக்காத வேளையில் நன்றாக கார் ஓட்டுவான்.

நான் சாடையாகக் கண்ணயர்ந்திருக்க வேணும். திடீரென்று கார் 150 மைல் வேகத்தில் துள்ளிப் பாய்ந்து திசை மாறி ஓடியது. 'டபார்' என்று ஒரு சத்தம். திடுக்கிட்டு "என்ன? என்ன?" என்றேன். அவன் காரை திடுமென்று நிற்பாட்டி இறங்கி காட்டுக்குள் ஓடினான்.. நான் கத்துவதைக் கூடப் பொருட்படுத்தவில்லை. செடிகளின் சலசலப்பு. ஆனால் இவனைக் காணவில்லை. ஒரு நிமிடம் கழித்து மெள்ள எட்டிப் பார்த்தான். பல் எல்லாம் தெரிய 'ஹ’ ஹ’' என்று சிரித்து "மாஸ்ட, மாஸ்ட கட்ங்கிராஸ்" என்றான்.

என்ன இளவு இவனுடன் என்று இறங்கிப் பார்த்தேன். குற்றுயிரும் கொலையுயிருமாக அதுகிடந்தது. அசல் பெருச்சாளி தான்.

"மாஸ்ட! மாஸ்ட! கட்டிங்கிராஸ் சொப் பைன் பொக்கு ஸ்வீட்டோ" என்றான். ஐயா! இது அருமையான சாப்பாடு எடுத்து வரவா?" என்று கேட்டான். கண்டிப்பாக "முடியாது" என்று விட்டேன். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே வந்தான்.

அதற்குப் பிறகு தான் எனக்குத் தெரியும் அந்தப் பெருச்சாளியை யார் ரோட்டிலே பார்த்தாலும் காரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள் என்பது. பிறகு விரும்பிய மாதிரி அதைச் சுட்டோ, கறி வைத்தோ சாப்பிடுவார்களாம்.

க்காணு மூன்று நாளாக முகம் நிமித்த வில்லை. அருமையான 'சொப்' மூதேவியால அநியாயமாய் போய் விட்டது என்ற ஆதங்கம் அவனுக்கு. "மாஸ்ட, சொப்பைன், சொன் பைன்" என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவனால் அந்தத் துக்கத்தை தாள முடியவில்லை. போறவர், வாறவர் எல்லாரிடமும் அதைப் பற்றி பிரலாபித்தான். நான் அந்த ஊரை விடும் வரை அவன் என்னை மன்னித்ததாகவே தெரியவில்லை.

* * *

உலக வங்கி இன்னொரு பத்து மில்லியன் டொலர் கடன் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இன்னேரம் பார்த்து புகார் கடிதங்கள் அறம்பிறமாகப் பறந்தன. ஊழல், லஞ்சம், பணவிரயம் என்று பல விதமான குற்றச் சாட்டுகள். வங்கி கடன் தர மறுத்து விடக்கூடுமோ என்ற ஒரு அவலமாக நிலைமை.

மந்திரி ஒரு விசாரணைக் குழு அமைத்தார். அவர்தான் தலைவர். குழுவில் அவர் தவிர நானும் இன்னும் மூன்று பேரும். விசாரணைக் குழு தீர விசாரணை செய்து ஒரு அறிக்கை சமர்ப்பிப்பதாக ஏற்பாடு.

ஒரு நல்ல நாள் பார்த்து மக்கெனி என்ற ஊருக்கு வெளிக்கிட்டோம். நல்ல நாள் என்றால் அட்டமி, நவமி, மரணயோகம் பார்த்து அல்ல. மக்கெனி 200 மைல் தள்ளி இருக்கும் சிறு ஊர். சனி, ஞாயிறு என்றால் அங்கு பீர் தீர்ந்து விடும். திங்கள் தான் பீர் வரும் நாள். ஆகையால் கணக்குப்பார்த்து செவ்வாயே வெளிக்கிட்டோம்.

மந்திரி ஆள் படையோடு மூன்று வாகனங்களில் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார். நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நல்ல ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு பின்னே ஒரு கார் விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே, "பாம், பாம்" என்று சத்தம் போட்டபடியே. அங்கே எல்லாம் பின்னால் வரும் வாகனத்துக்கு வழிவிட மாட்டார்கள். 'இவனுக்கென்ன நான் வழி விடுவது' என்ற மனப்பாங்குதான். மானப்பிரச்சினை. வழி கேட்டு வழி விடாமல் பெரிய சண்டைகள் எல்லாம் நான் பின்னாலே பார்த்திருக்கிறேன்.

க்காணு தன் பாட்டுக்கு ஓட்டிக் கொண்டே இருக்கிறான். வழிவிடக் காணோம். பின்னால் வாறவனோ "பாம், பாம்" என்று சத்தம் கொடுத்தபடியே வாறான்.

"க்காணு, கிவ்ரோட்பா".

"வழிவிடப்பா அவனுக்கு" என்றேன். க்காணு என்னைக் கண்ணாடியிலே பார்க்கிறான். ஆனால் வழி விடவே இல்லை.

"வழி விடு, வழி விடு" என்னு நான் சத்தம் போட்டதும் க்காணுவின் முகம் சுருங்கி விட்டது. வேண்டா வெறுப்பாக ஒதுங்கினான். அப்ப பின்கார் விரைந்து முன்னாலே போய்விட்டது.

வழி நெடுக சிவப்பான மண்மலைகள், திடீரென்று தோன்றும் கல் பாறைகள். 'கொலபஸ்' என்று சொல்லப்படும் ஒரு சாதிக் குரங்கு காட்டும்விளையாட்டுகள், இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வருகிறேன். நல்ல இளம் வெய்யில், எண்ணெய்க் கறுப்பான பெண்கள் விதம் விதமான கலர் லப்பாத் துணிகள் அணிந்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சில தாய்மார்கள் முதுகிலே கட்டியபடி குழந்தைகள். அவர்கள் அங்கு மிங்கும் அசையும் போது குழந்தைகளும் ஒவ்வொரு பக்கமாகச் சாய்ந்து அதை ஒரு விளையாட்டுப் போல அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

சடுதியில் க்காணு "மாஸ்ட, மாஸ்ட லுக்" என்றான். அப்படிப் சொல்லி விட்டு வாயைத் திறந்து சிரிக்கத் தொடங்னி‘ன். எங்களை இருபது நிமிடம் முந்தி ஓவர்டேக் பண்ணி போன கார் ஒரு வளைவில் ஒரு லொறியுடன் மோதி நொறுங்கிப் போய் இருந்தது. அதில் போன சாரதியும், பயணியும் இறந்து போக லொறி குப்புறக் கிடந்தது. பொலீஸ் வானும், ஒரு சிறு கூட்டமும் சுற்றி வர. காரைக் கொஞ்சம் ஸ்லோ பண்ணி முழு விபரத்தையும் கண்களால் சேகரித்துக் கொண்டு மறுபடியும் காரை முடுக்கி விட்டான். "மாஸ்ட, மாஸ்ட டொண், டொண்". "அவர்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது" என்று சொல்லி விட்டு மறுபடியும் பலமாக 'ஹ’ ஹ’' என்று திரும்பி பார்த்த படியே சிரித்தான்.

எனக்கு மனதை என்னவோ செய்தது, அவர்களுடைய சாவு என் தலையில் விடிந்தது போல. என் நாக்கிலே ஏதோ சனியிருந்திருக்க வேண்டும். நான் க்காணுவை 'வழி விடு' என்று சொல்லாமலே இருந்திருக்கலாம். அல்லது அரை செகண்ட் முந்தி சொல்லியிருப்பார்கள். அப்படியென்றாலும் அவர்கள் தப்பியிருப்பார்கள். அரை செகண்ட் பிந்தி சொல்லியிருக்கலாம். அப்படியும் தப்பியிருப்பார்கள். என்னத்திற்கு சரி கரெக்டாக அந்த நேரம் பார்த்துச் சொன்னேன். அவர்களுடைய சாவு என்னுடைய எந்த ஒரு சொல்லினால்தான் ஏற்பட்டது என்று எனக்கு நிச்சயமாகப்பட்டது.

நாங்கள் மக்கெனி போய் இறங்கியதும் இது பற்றி யாரிடமாவது கதைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் என்னுடன் வந்தவர்களோ, மற்றவர்களோ இதைச் சட்டை செய்யவே இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று விபத்துக்கள் நடப்பதும் செத்த உடல்கள் சிதறிக் கவனிப்பாரற்றுக் கிடப்பதும் போகப் போக பின்னால் எனக்கு பழகி விட்டது. ஆனால் அப்ப தெரியவில்லை.

மந்திரி இறங்கியவுடன் முதல் கேட்ட கேள்வி "பீர் இருக்கிறதா" என்று தான். "இல்லை ஐயா, ஆனால் கெதியில் வந்து விடும்" என்றான் எங்களை வரவேற்ற ஊர் அதிகாரி. மந்திரி நாங்கள் வந்த வேலையை ஒரு கூட்டம் கூட்டி விளக்கி விட்டு விசாரனைணைத் தொடங்கினார்.

அந்த விசாரணையை விஸ்தரித்தால் மூன்று புத்தகங்கள் எழுதி விடலாம். எங்கள் ஊரில் சொல்வார்கள். "அம்பட்டன் வீட்டுக் குப்பையைக் கிளற மயிர்" என்று. அது போலத்தான். விசாரிக்க விசாரிக்க குப்பைதான் வந்தது. அந்தக் குப்பையை வைத்து ஒரு குப்பையும் கொட்ட ஏலாது. "சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லை" என்பது போல விசாரணை திசை தெரியாமல் போய்க் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட விசாரணையில் ஒரு சங்கடம். வழக்கமாக பொய்களும், உண்மைகளும் கலந்து கலந்து வரும். பொய்களைக் களைந்து விட்டால் உண்மை வெளிப்படும். அப்படி சிம்பிள். ஆனால் மேற்கு ஆபிரிக்காவில் விஷயமே வேறு. அங்கே பொய்க்கு மேல் பொய் வரும். சின்னப் பொய்,