ஈழநூல் 87  
நூல் 

வடக்கு வீதி

ஆசிரியர்

அ.முத்துலிங்கம்

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

வடக்கு வீதி

அ.முத்துலிங்கம்

------------------------------------------------

சமர்ப்பணம்

இடருற்று அவதிப்படுவது மனிதர்கள் மாத்திரமல்ல; இந்தப் பூலோகத்தில் அழிவின் எல்லையில் பல விலங்கினங்கள், பறவைகள், ஏன் தாவரங்கள் கூட உண்டு.

மற்ற உயிரினங்களுக்கு தீங்கிழைப்பது வேறு யாருமில்ல; ஆறறிவு படைத்த மனிதன்தான். இந்த மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டு இந்நூலை இடருற்ற உயிரினங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

-------------------------------------------

என்னுரை

சமீபத்தில் நான் எதியோப்பியா நாட்டுக்கு சென்றிருந்தேன். இது பைபிளில் கூறப்படும் ஒரு பழம்பெருமை வாய்ந்த நாடு. யேசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இங்கே நாகரீகம் கொடிகட்டிப் பறந்தது. ஸ“பா என்ற அதிரூபசுந்தரி ராணியாக ஆட்சி புரிந்தது இங்கேதான். இந்த ராணி பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து பூதர்களின் அரசன் சொலமனை தரிசிக்க ஜெரூஸலம் சென்றதும் அவர்களுக்கிடையில் நட்புண்டாகி மெனலிக் எனற ஆண்மகவு பிறந்ததும் சரித்திரம். மெனலிக்கில் தொடங்கிய அந்த அரச பரம்பரை 3000 வருடங்கள் சங்கிலித் தொடர் போல நீண்டு சமீபத்தில் (1974) அரசன் ஹெயிலி செலாஸ’யின் முடியாட்சி பறிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த பாரம்பரியத்தில் எதியோப்பிய பெண்கள் பேரழகு படைத்தவர்கள். இங்கே ஓர் இளம் பெண்ணின் நடனம் பார்த்தேன். நடனம் முழுக்க அந்தப் பெண் தலையை ஒரு பக்கம் சாய்த்து கண்களால் நிலத்தை நோக்கியபடியே ஆடினாள். அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வேலை குறைவு. மார்புகளும், கழுத்தும், தலையும் மாத்திரம் நளினமாக குலுங்கிக் குலுங்கி அசைந்தன. பெண்ணின் முகத்தை மட்டும் கடைசிவரை பார்க்கவே முடியவில்லை. இது என்ன நடனம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். பரத நாட்டியம், கதக, கதகளி, ஒடிசி, மணிப்புரி போன்ற நடனங்களை பார்த்த கண்களுக்கு அப்படித்தான் தோன்றியது.

ஆனால் பிறகு சிந்தித்துப் பார்த்ததில் அந்த நடனத்திலும் ஓர் அழகு இருந்ததாக எனக்குப் பட்டது. அந்த நடனமே திருப்பி திருப்பி மனதிலே வந்தது. அதில் ஒரு நளினமும் மனதைக் கவரும் சக்தியும் இருந்தது புலப்பட்டது. ஒரு நாட்டு மக்களின் அழகுணர்ச்சியையோ, கலை வெளிப்பாட்டையோ சரியாக எடை போடுவதற்கு எனக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்ற எண்ணம் வலுத்தது.

மேற்கு ஆப்பிரிக்காவில் நான் இருந்த சமயம். ஒரு நாள் தமிழ் சினிமாப்படம் ஒன்றை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆப்பிரிக்கர் ஒருத்தர் உள்ளே வந்தார். நன்றாகப் படித்து உயர் பதவியில் இருப்பவர். வீடியோவில் கல்யாணžன் ஒன்று நடந்துகொண்டிருந்தது. மணப்பெண் வழக்கம்போல ஒரு காலை மடித்து வைத்து மற்றக் காலை குத்துக்காலிட்டு நிலம் பார்த்து உட்கார்ந்திருந்தாள். இந்த மனுசன் கண் வெட்டாமல் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு சொல்கிறான், 'இந்தப் பெண் இருக்கும் முறை எவ்வளவு செக்ஸ’யாக இருக்கிறது' என்று. எனக்கு அதிர்ச்சி, அகராதிப்படி அந்தப் பெண் மிகவும் நாணமாக, ஒடுக்கமாக, பவ்யமாக அல்லவா இருந்தாள்!

இன்னும் எத்தனையோ, நாங்கள் மதித்துப் போற்றும் சில விஷயங்கள் பிற நாட்டவருக்கு விநோதமாகப் படுகின்றன. அவர்கள் செய்யும் காரியங்களோ எங்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. கன்னிமை என்பது எவ்வளவு பெரிய விஷயம். கன்னியம் காப்பது என்பது எங்கள் கிராமத்துப் பெண்களுக்கு ஒரு தவம் மாதிரி.

அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பதினாறு வயதுக்கு மேல் கன்னித் தன்மையோடு ஒரு பெண் இருந்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு அவமானம். அவள் பொய்யுக்காவது கன்னி கழிந்துவிட்டது என்று சொல்லவேண்டிய நிர்பந்தம்.

இது மாத்திரமா? அமெரிக்கக்காரனுக்கு எழுந்து மரியாதை செய்து 'சேர்' என்று அழைத்தால் பிடிப்பதில்லை. ஆங்கிலேயனுக்கு கால்களை ஒடுக்கிவைத்து மரியாதை முன்னே தலைகுனிந்து நிற்பது அசிங்கமாகப் படுகிறது. ஜெர்மன்காரனுக்கு கைகட்டி பவ்யமாக நின்றால் போதும், வேறு விளையே வேண்டாம். ஆனால் எங்கள் ஊர்களில் இன்றுகூட ஒரு பெரியவரைக் கண்டதும் தோளில் போட்ட சால்வையை எடுத்து கக்கத்தில் வைப்பது நடந்துகொண்டு தான் வருகிறது.

இப்படித்தான் அப்கானிஸ்தானில் ஒரு நாள் நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆட்டு மயிரில் செய்த கம்பளத்தில் நிரையாக உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். பத்து அடி நீளமான ரொட்டி ஒன்று எங்கள் மடிகளில் மலைப்பாம்பு போல தவழ்ந்து கொண்டிருந்தது. நான் என் மடியில் கிடந்த ரொட்டிப் பகுதியை இழுத்து, பிய்த்து கடித்துக் கொண்டிருந்தேன்.

அங்கேயெல்லாம் மரக்கறி வசதி,அரிது. கோழி, ஆடு, ஒட்டகம் என்று எல்லாம் இறைச்சி மயம்தான். தேநீரில் தோய்த்து ரொட்டியை சாப்பிட்டபடியே நான் அவர்களுக்கு எங்கள் ஊர் நடப்பு ஒன்றை சொன்னேன். அங்கே எப்படி உடும்பு பிடிப்பார்கள் என்றும், அதை உயிருடன் கட்டி தொங்கவிட்டு, தோலை உரித்து என்னமாதிரி சமைப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அவர்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பத்து 'அவ்கானி' காசு கடனுக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல தயங்காதவர்கள், கல்நெஞ்சக்காரர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு உடும்புக்காக இரக்கப்பட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் சிந்தனையில் பிறந்ததுதான் 'உடும்பு' கதை.

அந்தக் காலத்து அரசர்கள் குற்றம் செய்தவர்களை குழுத்தளவு மணலில் புதைத்து வைத்து யானையின் காலால் இடறச் செய்வார்களாம். யானை முதல் முறை ஓடி வரும்போது அநேகமாக மிஸ் பண்ணிவிடும், பாகன் இரண்டாவது தடவையாக திருப்பிக் கொண்டு வருவான். யானை தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்ககும். பிறகும் தவறிவிடும். இப்படியாக நாலைந்து தடவை தவறவிட்டு கடைசியில் யானையின் கால்பட்டு தலை பனங்காய்போல உருண்டோடும். இவ்வளவுக்கும் புதையுண்டவன் மனம் என்ன பாடுபடும். எவ்வளவு கொடுமையான சாவு.

சிலுவையில் அறைவதும், கழுவில் ஏற்றுவதும் கூட இப்படித்தான். பயங்கரமான சாவு. உயிர் உடனே போகாது குற்றவாளி நோவு தாங்காமல் இரவிரவாக அலறிக்கொண்டே இருப்பானாம். இரண்டு மூன்று நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரியும். இப்படி கொடூரமான தண்டனைகள் இப்பவும் சில நாடுகளில் தொடருகிறது. பிரம்படி கொடுப்பதும், தலையை துண்டிப்பதும், கல்லால் அடிப்பதும் இன்றும் சில நாடுகளில் கடைப்பிடிக்கும் தண்டனைகள்தான்.

மேல்நாடுகளில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்லும்போது கூட அவைக்கு நோகாத மாதிரி பார்த்துக் கொள்ளுகிறார்கள். நான் சிறுவனாய் இருந்தபோது ஒரு பாவமும் அறியாத என்னுடைய செல்ல வளர்ப்பு நாயை, ஊரார் விசர் என்று தவறாகக் கணித்து உலக்கையால் அடித்து கொன்றதை கண்ணால் பார்த்தேன். அந்த நினைவில் பிறந்தது தான் 'எலுமிச்சை' கதை.

ஒரு கம்யூட்டர் ஒரு குடும்பத்துக்குள் புகுந்து விடுகிறது. அந்தக்குடும்பத்தினரின் அந்நியோன்யம் சடுதியில் கூடிவிடுகிறது. பேப்பர் விரயம் கம்யூட்டரின் வரவால் எப்படி தடுக்கப்படுகிறது; எவ்வளவு மரங்கள் காப்பாற்றப்படுகின்றன. கம்யூட்டருடன் பிணக்கமும், நட்பும் மாறி மாறி ஏற்படுகிறது. இதுதான் 'கம்யூட்டர்' கதை.

விசா வாங்குவதற்கும் அலைந்து அலைந்து, கால் தேய்ந்து வருடக்கணக்காக வருத்தப்பட்டு, அந்த சோகத்தில் பிறந்தது 'விசா' கதை.

அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் படும் அவதிபற்றி அநேக கதைகள் வெளிவந்துவிட்டன. அந்த அகதிகளின் சிலர் எதிர் நீச்சல் போட்டு உயர்நிலைக்கு வந்தாலும், அவர்கள் தங்கள் கலாசாரத்தில் எவ்வளவுதான் ஊளி ஊளி வளர்ந்தாலும், அந்நிய கலாசாரம் எப்படியும் அவர்கள் வாழ்க்கையில் மெதுவாக புகுந்து விடுகிறது என்பதைக் கூறுவது 'பூமாதேவி' கதை.

இப்படியாக ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிக்கதை உண்டு. எல்லாவற்றையும் நான் கூறுப்போவதில்லை. அநேகமாக கதைகளில் அடிநாதமாக மனிதநேயம், உயிர்நேயம் அல்லது பிரபஞ்சநேயம் இருக்கும். படிக்கும்போது வாசகர்களாகிய நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க்கையின் வடக்குவீதியில் நிற்கும் நான் இந்தத் தொகுதிக்குள் 'வடக்குவீதி' என்று தலைப்பிட்டது பொருத்தமே. இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் கதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டுடே, கிழக்கும் மேற்கும் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை; இன்னும் சில இந்தத் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை. இக்கதைகள் பற்றி வாசகர்களின் கருத்தை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

இந்நூலுக்கு ஓர் அழகான முன்னுரை வழங்கிய பெருமதிப்புக்குரிய நண்பர் அசோகர் மித்திரனுக்கும், எப்போதும் எனக்கு தூண்டுதலாகவும், உதவியாகவும் இருக்கும் அன்பு நண்பர் வி.சுந்தரலிங்கம் (பிபிசி) அவர்களுக்கும், இந்த தொகுதியை உரிய நேரத்தில் வெளிக் கொணர்ந்த மணிமேகலைப் பிரசுரத்தாருக்கும், அடங்கா ஆர்வமும் அன்பும் காட்டிய நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் தக்க அட்டைப்படமும், உள்படங்களும் வரைந்துதவிய ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கும் என் அன்பு உரித்தாகுக.

அ.முத்துலிங்கம்
26, நவம்பர் 1997

--------------------------------------------------------

ஒரு சுருக்கமான முன்னுரை

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு 'வம்சவிருத்தி' நூலை முன்னிட்டுச் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்குச் செல்ல நேர்ந்தது. ஏராளமானோர் வந்திருந்தனர். அங்கு இலங்கைத் தமிழரின் ஒரு மிக முக்கிய படைப்பாளியான எஸ்.பொன்னுத்துரை இருந்தார். கோவி மணிசேகரனும் இருந்தார். கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் இருந்தார். லேனா தமிழ்வாணனும் இருந்தார். பல ருசிகளையுடைய படைப்பாளிகள் அங்கு முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டக் குழுமியிருந்தனர். அன்று நான் அவர் படைப்புகள் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் 'வம்சவிருத்தி' நூலிலுள்ள பதினொரு கதைகளையும் இந்தத் தொகுப்பில் அடங்கப்போகும் இன்னொரு பனிரெண்டு கதைகளையும் படித்த பிறகு முத்துலிங்கம் அவர்கள் ஏராளமான படைப்பாளிகளையும் வாசகர்களையும் கவர்ந்திருப்பதில் காரணம் தெரிந்தது. அவருடைய புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேற ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டிவிடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதே நேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரம் மூலம் விசையூட்டக் கூடியது. அவருடைய மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்; ஆனால் தனித்துவம் உடையவர்கள். அனைவரும் நிஜத்தன்மையோடு உருவாகியிருப்பவர்கள். இதனால் அவர்களுக்கு நேரும் சில அசாதாரண நிகழ்ச்சிகள் கூடப் படிப்போருக்கு இயல்பானதாகவே தோன்றுகின்றன.

முத்துலிங்கத்துடைய உலகத்தில் இயற்கைக்கு நிறைய இடமிருக்கிறது. அது மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடமளிக்கிறது. இன்று சுற்றுக் சூழ்நிலைபற்றி யார் அக்களை காட்டுவது, சில தருணங்களில், நகைப்புக்கிடமாகக்கூட உள்ளது. முத்துலிங்கத்தின் கவனத்தில் மரம் செடிகளும் மிருகங்களும் அவற்றுக்குரிய முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு மரம் வீழ்த்தப்படும்போதோ ஒரு வீட்டுப் பிராணி கொல்லப்படும்போதோ முத்துலிங்கத்துக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் இந்நிகழ்ச்சிகளை விவரிக்கையில் அவர் மிகையுணர்ச்சியையும் பச்சாத்-தாபத்தையும் வெகு இயல்பாகத் தவிர்த்து அந்த நிகழ்ச்சிகளின் தவிர்க்க வியலாமையையும் குறிப்பிட்டு விடுகிறார்.

இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், முத்துலிங்கத்தின் நகைச்சுவையுணர்வு. எல்லா மனிதர்களையும் மிகுந்த பரிவோடு பார்க்கும் ஆசிரியர் அவர்களுடைய நடவடிக்கைகளில் உள்ள சில உம்சங்களையும் கவனித்துப் பதிவு செய்கிறார். ஒரு தகவல், நகைச்சுவை நிறைய உள்ள அவருடைய படைப்புகளில்தான் ஆழ்ந்த சோகமும் உள்ளது.

புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தும் உள்ளடங்கிய அதேநேரத்தில் முத்துலிங்கத்தின் கதைகள் வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு எளிதில் எட்டக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன'. ஒரு நல்ல புனைகதாசிரியர் மனித நேயமும் ஜனநாயக உணர்வும் பெற்றிருப்பது அவருடைய வெளிப்பாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது. முத்துலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்.

சென்னை,
17, டிசம்பர் '97 அசோகமித்திரன்

---------------------------------------------------------------------

பொருளடக்கம்

வடக்கு வீதி ................................ 13

எலுமிச்சை ................................... 28

குந்தியின் தந்திரம்....................... 45

வசியம் ...................................... 56

பூமாதேவி .................................... 76

யதேச்சை ................................. 95

கம்புயூட்டர்.................................. 114

ரி ........................................... 132

உடும்பு ..................................... 149

மனுதர்மம் ................................... 166

விசா......................................... 182

ஒட்டகம் ...................................... 199

-----------------------------------------------------

இந்நூலாசிரியரின் பிற நூல்கள்

1. அக்கா (சிறுகதைத் தொகுப்பு)

2. திகட சக்கரம் (சிறுகதைத் தொகுப்பு)
(வில்லி தேவசிகாமணி விருது பெற்றது)

3. வம்சவிருத்தி (சிறுகதைத் தொகுப்பு)
(தமிழ்நாடு அரசு முதல்பரிசு பெற்றது)

--------------------------------------------------------

வடக்கு வீதி

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும்.

மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக அது நன்றாக வேரூன்றி நின்றுவிட்டது. அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

சோதிநாதன் மாஸ்ரர் பயந்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு கூனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் கச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள்போல கீழும் மேலுமாக ஓடித்திரியும்.

அவருடைய வாடகை அறையில் நாற்பது வருடத்திய பத்திரிகை நறுக்குகள் இடத்தை அடைத்துக்கிடந்தன. அவ்வப்போது வெளியாகிய அவருடைய கட்டுரைகளும் அதில் அடக்கம். இவற்றையெல்லாம் ஒருநாளைக்கு தரம் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும் என்று அவருக்கு ஆசைதான். ஆனால் அந்தச் சிறு அறையில் அது நடக்கிற காரியமா? இவ்வளவு காலமும் சிலந்தியுடனும், கரப்பான் பூச்சியுடனும்,சொடுகுடனும் வாழ்ந்து பழகிவிட்டார். அவற்றைவிட்டுப் பிரிவதும் அவருக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.

அவர் வெக சிரத்தை எடுத்து அந்த அறையை அப்படி அழுக்குப்பட வைத்திருந்தார், என்றாலும்கூட வெளியே போகும்போது நன்றாகக் கஞ்சிபோட்டு சலவை செய்த உடுப்பை அணிந்து கைகளை 15 டிகரி கோணத்தில் விரித்துக் கொண்டுதான் நடப்பார். பார்ப்பவர்களுக்கு உடனே மரியாதை செய்யத்தோன்றும். அப்பழுக்கில்லாத மனிதர் என்றுதான் எல்லோருக்கும் அவரை நினைத்திருந்தார்கள்.

குறையே இல்லாத சோதிநாதன் மாஸ்ரரில் இரண்டே இரண்டு குறைகளை மட்டும் சொல்லலாம். கட்டுரை எழுதத் தொடங்கினால் அவருக்கு நிறுத்தத் தெரியாது. எழுதிக்கொண்டே போவார். பேப்பர் முடியவேண்டும் அல்லது மை முடியவேண்டும். இரண்டாவது, காலையிலே வரும் பேப்பரை யாராவது அபர் படிக்குமுன் கலைத்துவிட்டால் அவருக்கு கெட்ட கோபம் வந்துவிடும். மற்றும்படிக்கு சாந்த சொரூபமானவர்.

இப்படிப்பட்ட சோதிநாதன் மாஸ்ரர் நித்திரை கொள்ள முடியாமல் தவித்தார். காரணம் அவருடைய மனதை ஒரு சிறுபெண் ஆழமாக காலைவிட்டு கலக்கிக் கொண்டிந்தது தான்.

பூமியின முகத்தை மூடி அந்தகாரம் சூழ்ந்திருந்தது. அந்த அதிகாலையிலேயே அவர் எழுந்துவிட்டார். கிணற்றடியில் போய் தண்­ர் பிடித்துவந்து கேத்திலில் சூடாக்கி தேநீர் போட்டு அருந்தினார். நேற்றுவரை மொட்டாக இருந்த நந்தியாவட்டை இன்று பூத்திருந்தது. அதிலே இரண்டு பூவைப் பிடுங்கி வந்து சாமி படத்துக்கு வைத்து அரைமணி நேரம் தியாணம் பண்ணினார். அப்பவும் மனம் அமைதியடையவில்லை.

வெளியே வந்து பார்த்தபோது சிவசம்பு வீட்டுப்பகுதி இன்னும் தூக்கத்திலேயே இருந்தது. வழக்கமாக அவர்களும் இந்நேரம் எழும்பி தங்கள் காரியங்களை தொடங்கியிருப்பார்கள். அலமேலுவின் பள்ளிக்கூட ஆரவாரங்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை.

அவளோ மொட்டவிழும் பிராயத்துப் பெண். ஒருவித பிரயத்தனமும் இன்றி இவர் மனதில் புகுந்து இவரை இம்சைப் படுத்தினாள். இந்த வெட்கக்கேட்டை யாரிடம் போய் சொல்லி அழுவார். ஒரு பக்கத்தில் பிறவிப் பயனை அடைந்துவிட்டதுபோல அவருடைய உள்மனது துள்ளியது. அதே சமயத்தில் பரம்பரை பரம்பரையாக சேர்த்துவைத்த கோழைத்தனமும் வெளியே வந்து அவரை வெருட்டியது. சோதிநாதன் மாஸ்ரர் ஒரு முடிவும் எடுக்க முடியாமல் சிறு பிள்ளைபோல தத்தளித்தார்.

கோயில் வீதிகளில் இரவுக்கிரவாகவே புதுக்கடகள் எல்லாம் முளைத்துவிடும். இந்தக் கடைகளை பிரதானமாக மொய்ப்பது பெண்களும், குழந்தைகளும் தான். பெண்களுக்கு பாத்திரக்கடைகள், வளையல் கடைகள் என்று ஏராளமாக இருக்கும். சிறுவர்களுக்கு விளையாட்டு சாமான்கள் வைத்திருக்கும் கடைகளில் தான் மோகம் அதிகம். ஆனால் அவற்றை வாங்கும் பண வசதி எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் ஐந்து சதம், பத்து சதம் என்று கைகளிலே வைத்துக் கொண்டு இங்கம் அங்குமாக அலைவார்கள். கடலை, பம்பாய் மிட்டாய், ஐஸ் பழம் இதில் எதை வாங்குவது, எதை விடுவது. இதுதான் அவர்களது முக்கிய ஏக்கம். அந்த சிறுவர்கள் குழம்பிப்போய் ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் தவித்துப்போய் நிற்பார்கள்.

அந்த வீடு அதி பயங்கரமான பாதுகாப்புகளுடன் இருந்தது. அதந் சொந்தக்காரர்தான் சிவசம்பு. அவருடைய தாத்தா 'கள்ள யாவாரம்' செய்து கட்டிய வீடு. சுற்றிலும் இருக்கும் மதில் சுவர்களில் விதம்விதமான கண்ணாடித் துண்டுகள் பதித்திருந்தன. உள்ளே இரும்புக் கிராதிகள் காரண காரியமில்லாமல் கண்ட இடத்திலும் போடப்பட்டுக் கிடந்தன. நடுநடுவே வலைக் கம்பிகள் வேறு. முழுக்க முழுக்க கள்ளனை மனத்திலே நிறுத்தி கட்டிய வீடு.

கள்ளனுக்கு அடுத்தபடி சூரியன். என்னதான் உக்கிரமாக வெய்யில் எரித்தாலும் ஒரு சின்ன ஒளிக்கீற்றுகூட உள்ளே போக முடியாதபடிக்கு ஒரு தந்திரத்துடனும், சூட்சுமத்துடனும் அது கட்டப்பட்டிருந்தது. நடுப்பகலில்கூட விளக்கை ஏற்றினால்தான் நடமாடமுடியும். இந்த வீட்டிலேதான் ஒரு அறையில் சோதிநாதன் வாடகைக்கு இருந்தார்.

சிவசம்புவுக்கு மாஸ்ரரைப் பிடிக்காது. ஏன் இந்த உலகத்திலேயே சிவசம்பு ஒரு 'கறுவம்' வைத்திருந்தார். கைகளைப் பின்னுக்க் கட்டியபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டுதான் உடப்பார். சிறுநீர் பாயும் தூரத்துக்குகூட அவரை நம்புவதற்கு அந்த ஊரில் ஆள் கிடையாது. அவர் வேலை முடிந்து வீட்டுக்கு பத்தடி தூரத்தில் வரும்போதே சேட்டைக் கழற்றிவிடுவார். அவர் மனைவி வாசலிலே காத்திருப்பாள். கொஞ்சம் வெற்றிலை போட்டு, கொஞ்சம் பவுடர் பூசி, கொஞ்சம் கர்ப்பமாக பிரசாதம் வாங்குவதுபோல மிகவும் பவ்வியமாக அந்த சேட்டைக் கையிலே வாங்கி அவரை அவசரமாக உள்ளே கூட்டிக்கொண்டு போவாள். பார்ப்பவர்கள் மிகவும் அந்யோன்யமான தம்பதிகள் என்றுகூட நினைக்கலாம்.

ஆனால் உள்ளே போன சிறிது நேரத்திலேயே பல விநோதமான ஓசைகள் கிளம்பும். சிவசம்பு தன் மனைவியின் இடுப்பிலே ஓங்கி உதைக்கும் சத்தம் கேட்கும். பிறகு அவளுடைய கர்ப்பப் பிறப்புகளின் ஓலம். அவளுடைய ஓலம். ஊமையர்களின் வருடாந்தக் கூட்டம்போல வசனமில்லாத ஒலிகள். தினம் தினம் இது தவறாமல் நடக்கும். இருந்தாலும் இந்த மனுசி ஒரு நாளாவது வாசலில் நின்று அவரை வரவேற்கத் தவறியது கிடையாது.

அவர்களுடைய மூத்த பிறப்புதான் அலமேலு. வீட்டுச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக அடிக்கடி மாஸ்ரரின் அறைக்கு ஓடி வரத்தொடங்கினாள். அப்படித்தான் அவருக்கும் அவள்மேல் ஒரு பரிவு ஏற்பட்டது. அந்தப் பரிவுதான் இன்று வேறு உருவம் எடுத்து அவரை மிரட்டிக்கொண்டு இருந்தது.

சோதிநாதனுக்கு கணக்குத்தான் பாடம். ஆனால் தமிழிலும் நல்ல புலமை பெற்றவர். அவர் ஓய்வுபெற்ற பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் படிப்பதில் மிக்க ஆர்வமாய் இருந்தார்.

முதன்முதலில் அலமேலு அவரிடம் தமிழ்ப்பாடத்தில் சந்தேகம் கேட்டுத்தான் வந்தாள் அவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் விதம் அவளுக்கு நல்லாகப் பிடித்துக்கொண்டு விட்டது. எந்தப் பாடமாயிருந்தாலும் கதைகளும், உதாரணங்களுமாக உணர்ச்சி வயப்பட்டுவிடுவார். கணக்குப் பாடம் எடுக்கும்போது யாராவது கண்­ர்விட்டு உருகுவார்களா? சோதிநாதன் செய்வார்.

அலமேலுவின் உடம்பு முழுக்க சந்தேகங்கள் பொங்கும். அவளுடைய பல சந்தேகங்களை சோதிநாதன் தீர்த்துவைத்தாலும் பதிலுக்கு அலமேலுவும் அவருடைய ஒரு பெரிய சந்தேகத்தை ஒருநாள் தீர்த்துவைத்தான். ஆனால் அந்த விஷயம் அவளுக்கே தெரியாது.

விளக்கின் ஒளியில் அவள் மேசையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தாள். அவருடைய கைவிரல்கள் குவிந்து போய் பென்சிலை இறுக்கிப்பிடித்திருந்தது. 'கைவழி நயனம்' என்பதுபோல அவளுடைய வாய் கோணியபடி கைபோன பக்கம் இழுத்துக்கொண்டு போனது வெகு சிரமப்பட்டு தன்னுடைய பென்சில் இலகுவில் தர மறுத்த வார்த்தைகளை அவள் பலவந்தமாக பிடுங்கிக் கொண்டிருப்பதுபோல பட்டது.

தமிழ் பாடல்களில் 'பந்தார் விரலி' என்ற தொடர் அடிக்கடி வரும். அதற்கு அர்த்தம் 'பந்துபொருந்திய விரல்கள்' என்று சொல்வார்கள். சோதிநாதனின் மனக்கண்ணில் சங்க காலத்துப் பெண்கள் நிரையாக வந்து போவார்கள். அவர்கள் கைவிரல்கள் எல்லாம் நகச்சுத்து வந்து எலுமிச்சம்பழம் சொருகியதுபோல உருண்டு திரண்டுபோய் இருக்கும்.

அலமேலு கைகளைக் குவித்து எழுதும்போதுதான் அவருக்கு உண்மையான அர்த்தம் புரிந்தது. ஒரு சிறந்த கண்ணாடிப் பந்துபோல அது இருந்தது. பல்லியின் வயிற்றில் குட்டி தெரிவதுபோல அவள் கைவிரல்களில் ஓடும் ரத்தம் கூட அவருக்கு தெரிந்தது. பந்துபோன்ற அந்த கைவிரல் குவியலை எடுத்து முத்தமிடவேண்டும் போல பட்டது.

ஆனால் அப்போதுகூட அவருக்கு அந்த வித்தியாசமான எண்ணம் தோன்றவில்லை.

அவருடைய மனைவி இறந்தபோது அவருக்கு நாப்பத்தைந்து வயது. அந்த மரணம் இடி விழுந்ததுபோல வந்தது. இரண்டு வருடம் கழித்து அவருடைய மகளுக்கு நல்ல இடத்தில் சடங்கு பேசி வந்தார்கள். அது கடவுள் செயல்தான் என்று அவருக்குப் பட்டது. இப்படியான சம்பந்தத்தை அவர் கனவிலும் நினைத்திருக்க முடியாது. பையன் அவுஸ்திரேலியாவில் வதிவிடம் பெற்று நல்ல வேலையில் இருந்தான். இருந்த ஒரே வீட்டையும் விற்று கலியாணத்தை சிறப்பாகச் செய்து மகளை அனுப்பிவைத்தார்.

அவருடைய மகன் கதை வேறு. ஒரு நாள் விடிய எழும்பிப் பார்த்தால் ஆளைக் காணவில்லை. இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஒரு கடிதம் கூட தனக்கு எழுதிவைக்கவில்லையே என்று அவருக்கு கவலை. ஒரு நாளைக்கு அவனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை கனகாலம் இருந்தது. பிறகு அதுவும் போய்விட்டது.

அவுஸ்திரேலியா போன கையோடு மகள் அடிக்கடி கடிதம் போட்டபடி இருந்தாள். பிறகு சில காலமாக வருடத்திற்கு ஒரு கடிதம் என்று ஆகிவிட்டது. தனித்து விடப்பட்ட மரமாய் அடிமண்ணுக்குள் போய் புதைந்துகொண்டார்.

சிகாடா பூச்சிபோல. இந்தப் பூச்சி பதினேழு வருடம் மண்ணுக்கு அடியில் புதையுண்டுபோய் கிடக்கமாம். பதினேழு வருட முடிவில் இது வெளியே வந்து இனச்சேர்க்கையில் ஈடுபட்டு பிறகு இறந்துபோகும். குஞ்சுகள் மீண்டும் மண்ணுக்குள் போய் புதைந்து கொள்ளும். இப்படி பதினேழு வருடங்கள் தவம் செய்தபிறகு இந்தக் குஞ்சுகளும் பெரிசாகி வெளியே வருமாம், சாவைத்தேடி.

அவர் மனைவி இறந்து பதினேழு வருடங்களாக இவர் செய்த தவம் ஒருநாள் திடீரென்று முறிவதற்கு இருந்தது. ஒளித்திருந்து எய்த பாணம்போல இவரைத் தாக்குவதற்கு அது தருணம் பார்த்திருந்தது. ஆனால் இது அவருக்கு அப்ப தெரியவில்லை.

வீட்டை விற்ற நாளில் இருந்து அவர் சிவசம்பு வீட்டில் ஓர் அறையில் வாடகைக்கு இருந்தார். பனங்கட்டிக் குட்டான் போல சின்ன வயசாக இருக்கும்போதே அலமேலு அடிக்கடி தத்திதத்தி அவருடைய அறைக்கு வருவாள். கொஞ்சம் வளர்ந்து கண்கள் மேசைக்குமேல் தெரியும் வயசில் ஓசைப்படாமல் வந்து இவர் எழுதுவதையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பாள். இவர் கதிரையிலே ஏற்றிவிடுவார். சிறிது நேரத்தில் சறுக்கி இறங்கிப் போய்விடுவாள். அவள் வளர வளர அவளில் பல மாற்றங்கள் தென்பட்டன. இவர்தான் அவற்றை கவனிக்கத் தவறிவிட்டார்.

இப்பொழுதெல்லாம் அவள் கிட்ட வரும் சமயங்களில் இரண்டு நாள் தண்­ரில் ஊறுவைத்த பயறுபோல ஒரு விதமான பச்சை வாசனை வருகிறது. அவளுடைய குரல் உடைந்து ரஹஸ்யம் பேசுவதுபோல இருக்கிறது. எவ்வளவுதான் உரத்துப் பேசினாலும் கசகசவென்றுதான் கேட்கிறது.

அவர் அறியாமல் இந்த விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன. நேற்றுப் பார்த்தபோது மொட்டாக இருந்த நந்தியாவட்டை இன்று பூத்துப்போய் கிடக்கிறது. இரவுக்கிரவாகவே சதியாக ஒரு மணமும், அழகும் அதற்கு வந்து சேர்ந்துவிட்டது. ஓர் இரவுக்குள் நடந்த இந்த அதிசயம் போலத்தான் இதுவும் இருந்தது.

சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்' பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் அலமேலுவின் அழகை பூரணமாக கொண்டுவரவில்லை என்று இவருக்குப் பட்டது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முற்றா முகிழ்முலை' என்ற பாடல் வரிகள்தான் அவர் ஞாபகத்துக்கு வரும். ஒரு டீன் ஏஜ் பெண்ணை இந்த சொற்றொடர் முற்றிலும் வர்ணிக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனால் அப்போது கூட அவருக்கு அந்த எண்ணம் வந்தது கிடையாது.

ஒரு நாள் பைதகரஸ் என்ற கிரேக்க ஞானி 2500 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்த சித்தாந்தத்தை அலமேலுவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. கண்களை கையகலத்துக்கு பெரிதாக்கி அவர் சொல்லுவதையே அலமேலு கவனித்துக் கொண்டிருந்தாள்.

முதலில் அந்த மகா ஞானியின் வாழ்க்கையைப் பற்றி சொன்னார். இந்தப் பிரபஞ்சத்தின் சாகசங்கள் எல்லாம் ஓர் ஒழுங்கோடும் எண்ணங்களின் அடிப்படையிலும் நடப்பதை விளக்கினார். பிறகு அந்த ஞானி எப்படி முக்கோணங்களையும், சதுரங்களையும் உபாசித்தார் என்பதையும், அவற்றில் இருந்து அவர் சிருஷ்டித்த சித்தாந்தத்தின் மகிமையையும் கூறினார்.

ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரண்டு பக்கங்களினதும் தனித்தனி வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமமாகும்.

அலமேலு மேற்படி சித்தாந்தத்தை வரி பிசகாமல் திருப்பித் திருப்பி மனனம் செய்தாள். இந்த பழம்பெரும் சித்தாந்தத்தின் அருமையை சோதிநாதன் உற்சாகத்துடன் விளக்கி அதை மூன்று வெவ்வேறு வழிகளில் நிரூபித்துக் காட்டினார்.

அலமேலு வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களின் ரப்பைகள் துடித்தன. இந்த சித்தாந்தத்தை இவ்வளவு எளிதாக, இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக யாரும் இதற்கு முன்பு அவளுக்கு விளக்கியது கிடையாது. சோதிநாதனின் இமையோரத்தில் சில நீர்த்துளிகள் சேர்ந்திருப்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.

மேளக்கச்சேரி என்றால் இங்கே நாதஸ்வரத்துக்கு இரண்டாவது இடம்தான். சுற்றுவட்டார ஊர்களிலிருந்தெல்லாம் தவில் வித்துவான்கள் வந்திருப்பார்கள். இந்த தவில் சமாவைக் கேட்பதற்கு சனங்கள் பொறுமையோடு இடம்பிடித்து மூன்று நான்கு மணித்தியாலங்கள் கூட சலிக்காமல் காத்திருப்பார்கள்.

தனியாவர்த்தனம் வழக்கமாக மேல் நீதியில்தான் நடக்கும் ஐந்து, ஆறு கூட்டம் என்று தவில் வாத்தியக்காரர்கள் சுற்றிவர நின்றுகொண்டே வாசிக்கும்போது பக்தர்கள் தங்களை மறந்து ரஸ’ப்பார்கள். இந்த ஆவர்த்தனம் முதலில் பெரிசாக தொடங்கி ஒவ்வொறு சுற்றும் வரவர சிறுத்துக்கொண்டே போகும். விறுவிறுப்பும் கூடும். கடைசியில் தீர்மானம் வைக்கும்போது சில பேருக்கு ஆவேசம் வந்துவிடும்; சிலருக்கு கண்­ர் வந்துவிடும்.

இருபத்தைந்து நூற்றாண்டுகள் கடந்து கண்கள் கலங்க, திரும்பவும் எண்கள் மயமான இந்த. உலகத்துக்கு வந்தபோதுதான் சோதிநாதன் மறுபடியும் அலமேலுவைக் கண்டார்.

நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக்கொடுத்து அவரையே பார்த்தபடி இருந்தாள், அலமேலு. žரில்லாத பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவரைப் பற்றி இழுத்தது. பதினேழு வருடங்கள் தூங்கிய சிக்காடா பூச்சி அப்போது வெளியே வந்துவிட்டது.

அவளுடைய கன்னங்கள் சதுரமாகவும், அந்த மோவாய் முக்கோணமாகவும் இருந்தது. விடியவிடிய சந்திரவதனத்தை பாடிய தமிழ்ப் புலவர்கள் இந்த அழகைப்பாட மறந்துவிட்டார்கள். சதுரங்களும், முக்கோணமாகவும் பைதகரஸ”க்காகவே படைக்கப்பட்ட இந்த முகம் விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பிரமையாக அவருக்கு தெரிந்தது.

அன்று படுக்கப் போனபோது அவருடைய நித்திரை எதிர்த்திசையில் போய்விட்டது. மறுபடியும் யௌவனமாகி விட்டார். ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பதுபோல குறுகுறுப்பாக மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவரைத்தாக்கின.

அவர் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவர் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்கவேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பதுபோல பட்டது. அவர் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். அலமேலுவை அவரால் மறக்க முடியவில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பதுபோல அவருக்கு பட்டது.

அவள் வாயிலே எச்சில் குமிழ்கள் செய்து ஊதிய காலத்திலே இருந்து அவளை அவருக்கு தெரியும். ஆனால் இதற்குமுன் இப்படி நூதனமான அநுபவம் அவருக்கு ஏற்பட்டதில்லை. அந்தச் சிறு பெண்ணின் மனதில் என்ன இருந்ததென்றும் தெரியவில்லை. இரண்டு பேருக்கும் சேர்த்து அவரிடம் போதிய காதல் இருந்தது. இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திகைத்தார்.

மூன்று நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அழுக்குத் திரைச்žலையும், தண்ணிப்பானையும், வட்டம் வட்டமாக நீர்பட்ட தலையணையுமாக அவர் உள்ளே அடைந்து கிடந்தார். அப்படியாவது அவர் அடிவயிற்றில் மூண்ட ஆசைத்தீயை அடக்கிவிடலாம் என்று எண்ணினார்.

மூன்றாம் இரவு நடுநிசியில் அவருக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. கட்டை அறுத்துக்கொண்டு ஓடித்திரியும் காளைமாட்டை அடக்கி இழுத்துக்கொண்டு வருவதுபோல் மனதை திரும்பவும் இழுத்துப் பிடித்து அடக்கிவிட்டார். வயதுக்கு ஒவ்வாத சிந்தனைகளை நினைத்து நாணமாக வந்தது. ஓவென்று ஓடிய நதி சமநிலைக்கு வந்து அவர் அடிமனதில் ஒரு நிம்மதி பிறந்தது.

கிணற்றடியில் போய் முகம் கழுவிக்கொண்டு தேநீர் வைப்பதற்கு ஒரு வாளி தண்­ர் பிடித்துக்கொண்டிருந்தார். துலாக்கொடி சரசரவென்று வழுக்கிக்கொண்டு வந்தது. அவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாளியை எடுக்கப் போகும்போதுதான் அது நடந்தது.

அலமேலு வந்துகொண்டிருந்தாள். மத்து கடைவதுபோல அசைந்து. அவளுடைய தலைமயிர் கற்றைகள் கலைந்திருந்தன. அவை சூரிய ஓளிபட்டு தங்க நிறத்துடன் ஜொலித்தன. கண்கள் இன்னும் தூக்கம் கலையாமல் அரை மூடியில் இருந்தன. பாவாடையும் சட்டையும் உடுத்தியிருந்தாள். மேற்சட்டை அவசரத்தில் போட்டதுபோல ஒரு பக்கத்துக்கு தூக்கிக்கொண்டு நின்றது. பொங்களுலுக்குப் பிடித்த அடுப்புக்கட்டி போல அவள் புஜங்கள் வழவழவென்றும், இறுக்கமாகவும் இருந்தன. அருகில் வந்ததும் அவளுக்கே உரிய பெண் வாசனை சொட்டு நீலம் தண்­ரில் பரவுவதுபோல மெல்ல பரவியது.

சோதிநாதன் மாஸ்ரர் கவிகள் பாட மறந்த சதுரமான முகத்தையும், முக்கோண வடிவமான தாடைகளையும் பார்த்தார். இன்றுதான் முதல்முதல் பார்ப்பதுபோல அவரால் கண்களை எடுக்க முடியவில்லை. பிறந்த நாளிலிருந்து அவரில் விடுபட்டுபோன ஒரு துண்டு மீண்டும் சேர்ந்து கொண்டது போல ஒர் உணர்வு. இவ்வளவு காலமும் அவர் வாழ்ந்ததின் அர்த்தம் அவர் முன்னே நின்றுகொண்டிருந்தது. அவள் புஜத்தை எட்டி ஒரு கையால் தொட்டு தடவினார்.

அலமேலு பதறிவிட்டாள். ஐயோ! அங்கிள், என்ன செய்யுது? என்று சொல்லியபடி அவரைப்பிடித்து இரண்டு கைகளாலும் அணைத்துக் கொண்டுபோல் துணி துவைக்கும் கல்லிலே உட்கார வைத்தாள். தன்னுடைய இரண்டு கைகளையும் மார்புக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் மூன்றாக மடிந்துபோய் உட்கார்ந்தார். அவருக்கு வசதியாக அவருடைய கால் பெருவிரல்கள் அவருக்கு முன்பாக இருந்தன. அவற்றை முதன்முதல் பார்ப்பதுபோல உற்று பார்த்தபடியே இருந்தார். அந்த நேரத்தில் அப்படி இருப்பதுதான் அவருக்கு சரிபோல பட்டது.

சுவாமி புறப்பாடு ஆரம்பிக்கும்போது இரவு ஒரு மணி ஆகிவிடும். தெற்குவீதி தாண்டி மேல்வீதியில் நீண்ட மேளச்சமா முடித்து வடக்கு வீதிக்கு சுவாமி வரும்போது நாலுமணி ஆகிவிடும். எல்லோருக்கும் நித்திரை கண்ணுக்குள் வந்துவிடும். பக்தர்கள் எல்லாம் மெள்ள மெள்ள கழன்றுவிடுவார்கள். அப்போது எண்ணிப் பதினைந்தே பேர் இருப்பார்கள். அதில் தவில்காரர், நாயனம், பந்தம் பிடிப்பவர், எண்ணெய் ஊற்றுபவர் குருக்கள் என்று எல்லோருமே அடக்கம். இப்படி சுவாமி இருப்பிடத்துக்கு போக முடியாமல் தவியாய் தவிப்பார்.

இதைத் தவிர்க்க ஒரு தந்திரம் செய்வார்கள். கோயில் முன்றலில் சதிராடிய தேவடியாள்கள் இப்ப வந்து வடக்குவீதியில் ஒரு கும்மி அடிப்பார்கள். அவர்கள் தூக்கக் கலக்கத்தில் குனிந்து, குனிந்து உடலை வருத்தி கும்மி அடிப்பார்கள். தலைமயிர் கலைந்திருக்கம்; கண்மை கரைந்திருக்கும். நித்திரையின் மணம் அங்கே நிறைந் திருக்கும். பக்தர்கள் எல்லாம் தங்கள் தங்கள் சயணத்தை தள்ளி வைத்துவிட்டு இந்த நித்திரை கும்மியை ரசிப்பதற்காக நிற்பார்கள். கும்மி முடிந்ததும் கூட்டம் கலையப் பார்க்கும். அதற்குமுன் சுவாமியை தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் இருப்பிடத்தல் சேர்த்துவிடுவார்கள்.

திருவிழா என்றால் வடக்குவீதியைத் தாண்டிவிட்டால் நேராக இருப்பிடம் தான்.

சோதிநாதன் இப்போது வடக்குவீதியில் இருந்தார். நித்திரை கும்மியில் சிறு சபலம் இனிமேல் நேராக இருப்பிடம்தான்.

* * *

எலுமிச்சை

[கதைகளுக்கு முன்னுரை எழுதுவது எனக்குப் பிடிக்காது. அதென்ன கட்டியம் கூறுவதுபோல என்று கிண்டல் செய்வேன். கதையென்றால் சொல்ல வந்த விஷயத்தை கதையிலேயே சொல்லிவிட வேண்டியதுதானே! இது என்ன முன்னுரை? அறிவுரை?

ஆனால் இந்த முன்னுரை எழுதுவதில் ஒரு காரியமிருக்கிறது கு.அழகிரிசாமி எழுதிய 'குமாரபுரம் ஸ்டேஷன்' என்ற கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் ஒரு பாத்திரம் மூலமாக 'நாங்கள் ஒன்றை மனதில் நினைத்து செய்யும் செயல் எப்படி எங்களை அறியாமல் இன்னொரு காரியத்துக்கு உதவுகிறது' என்று சொல்லியிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த இந்த உண்மைச் சம்பவமும் அப்படித்தான். இனி, சற்று தள்ளி நில்லுங்கள். கதை வருகிறது]

செடியாக இருந்த அந்த எலுமிச்சை இப்பொழுது மரமாக வளர்ந்துவிட்டது. அம்மா அதைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். சதிருக்கு வந்த தேவடியாள் கையைக் காலை விசுக்கி ஆடுவதுபோல அந்த மரம் கிளையெல்லாம் வீசி வளர்ந்துவிட்டது. ஆனால் பேச்சுக்கு ஒரு பூ இல்லை; ஒரு காய் கிடையாது. ஓவென்ற மலட்டு மரம்.

அம்மாவும் செய்யாத வித்தையில்லை; பார்க்காத வைத்தியமில்லை. மண்ணை வெட்டி, கொத்தி பசளையெல்லாம் போட்டு அலுத்துவிட்டது. அது அசையவில்லை. வடக்கு வீதிக்கு வந்த மஞ்சவனப்பதி தேர்போல தன்பாட்டுக்கு நின்றது.

இப்படித்தான் முன்பு ஒரு கறிவேப்பிலைச் செடி. அம்மாக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ஒரு சாண் உயரத்துக்கு வளர்ந்த பிறகு ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் செத்துவிட்டது. அம்மாவும் 'விடேன், தொடேன்' என்று ஒன்பது தரம் ஒன்றன்பின் ஒன்றாய் செடிகளை நட்டு தன்கையால் தண்ணி ஊற்றி வளர்த்துப் பார்த்தாள், சரிவரவில்லை. கடைசியில் செல்லாச்சிக் கிழவி சொன்ன மந்திரம்தான் பலித்தது.

சூதகமாய் இருக்கிற நேரம் பார்த்து, பலபலவென்று விடியும் முன் ஒட்டுப்போடாத ஒற்றைத்துணி உடுத்தி, கிழக்குப் பார்த்து செடியை நட்டால் அது பிய்த்துக்கொண்டு வளர்ந்துவிடும் என்பதுதான் அது.

அம்மாவும் அப்படியே செய்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்! பார்த்துக் கொண்டிருக்கம்போதே மரம் வளர்ந்துவிட்டது. வளர்த்தியென்றால் அப்படி ஒரு வளர்த்தி. ஊர்ச்சனம் எல்லாம் கறிவேப்பிலை கேட்டு வரத் தொடங்கி விட்டார்கள். கையாலே பறித்துக் கொடுத்தது போய் கொத்தடி வைத்து ஒடித்துக் கொடுக்க வேண்டி வந்துவிட்டது. அவ்வளவு உயரம்.

காலை, பகல் இரவு என்றுகூட ஆட்கள் கறிவேப்பிலை கேட்டு வரத்தொடங்கினார்கள். அம்மாவும் சலிக்காமல் கொடுத்துவந்தாள். 'இது புண்ணியம் ஆச்சே!' என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

அந்த நேரம் பார்த்துத்தான் நாங்கள் நாய் வளர்க்கத் தொடங்கினோம். 'வீட்டுக்காரர், நாயைப் பிடியுங்கோ' என்று படலையில் இருந்து கூக்குரல் கேட்கத் தொடங்கியது.

நாயென்றால் ஏதோ சந்திரகுலம், சூரியகுலத் தோன்றலில்லை. சாதாரண ஊர் நாய்தான். நான் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது வழியிலே பொறுக்கியது. என்னுடையது கையையும் முகத்தையும் நக்கி என்னை அது ஆட்கொண்டுவிட்டது.

வீட்டிலே அம்மா முதலில் அடிபிடியென்று சத்தம் போட்டாள். பிறகு அது பால் குடித்த வேகத்தைப் பார்த்து அவள் மனது மாறிவிட்டது. பலூன் மாதிரி ஊதிப்போன வயிற்றைத் தூக்கிக்கொண்டு அது தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது அம்மாகூடச் சிரித்துவிட்டாள். இப்படித்தான் இந்த நாய்க்குட்டி எங்கள் வீட்டுச் சங்கதியானது.

குட்டியாயிருக்கும்போது அது செய்த வீர சாகஸங்களை வைத்து வீரன் என்று பெயர் வைத்தோம். அதுவும் கறிவேப்பிலை மரம்போல கிடுகிடென்று வளரத்தொடங்கியது. சாப்பாடு என்றால் வீரனுக்கு இதுதான் என்ற வரைமுறை கிடையாது. முருங்கக்காய்ச் சக்கையிலிருந்து சோறு, பருப்பு, பனங்காய் நார் என்று சாதி வித்தியாசம் பாராமல் சாப்பிட்டு பரிபூரண சந்தோசமாக இருந்தது.

என்னுடைய வாய் அசைந்தால் என் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கும் கொடுத்தபடியே சாப்பிட வேண்டும். கடைசியில் வெறும் கையைக்காட்டி, தொடையில் தட்டினால்தான் தன் வழியில் போகும். பள்ளிக்கூடத்து பாணில் இதற்கு ஓர் அளவுகடந்த பாசம். பள்ளி மணி அடித்ததும் காதல் வயப்பட்ட கன்னிப்பெண் போல உள்ளுக்கும், வாசலுக்குமாய் பறந்து திரியும். நான் வந்தேனோ இல்லையோ என் மீது பாய்ந்து பாணையும் சம்பலையும் பறித்துக்கொண்டு போய்விடும்.

வீரனின் முதுகில் நான் சவாரி செய்யும் அளவுக்கு குதிரைபோல வளர்ந்துவீட்டது. நான் அதோடு இருக்கும்போது பெரியவர்கள் கூட பயபத்தியோடு தூரதேசமாய் செல்வார்கள். எனக்கு கர்வம் தலைக்கு மேலேறிவிடும்.

அதற்கு வயசுக்கு வந்தபோது பக்கத்து வீட்டு கண்ணகியைச் சேர்த்துக்கொண்டது. ஒரு நாள் இரவு களவியல் நடத்த கண்ணகி வந்துவிட்டது. கண்ணகி என்றால் கற்பின் திருவுருவம் என்று அவசரப்பட்டு நினைத்துவிடக் கூடாது. எங்கள் ஊரில் அரைவாசி ஆண்நாய்கள் அதற்கு பின்னால்தான். அதனுடைய கருநீலச் சடையையும், மதுரையை எரித்த கண்களையும் வைத்து அப்படிப்பேர் வைத்திருப்பார்கள் போலும். கண்ணகியின் பின்னாலேயே வீரன் ஒடத்தொடங்கியது. குரைத்துக் குரைத்து துரத்தும் ஒலி. பிறகு. பிறகு 'பொதக்' என்று ஒரு சத்தம். அதற்குப்பின் மௌனம் மௌனம் என்றால் ஊயிரம் பேருடைய மௌனம்.

அப்பா அம்மா கூவினாள், 'இஞ்சருங்கோ, நாய் கிணத்துக்கை விழுந்திட்டுது போல கிடக்கு'. நாங்கள் அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அடித்துபிடித்து கிணற்றடிக்கு ஓடினோம். உண்மைதான். கிணற்றுக்குள்ளே இருந்து 'சதக் புதக்' என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. அவசரமாக ஒரு கயிற்றிலே அரிக்கன் விளக்கைக் கட்டி கீழே இறக்கிப் பார்த்தோம். ஒரு மண்ணும் தெரியவில்லை.

இந்தக் கலவரத்தில் ஊர் அரைவாசி கிணற்றடியில் கூடிவிட்டது. பக்கத்துவீட்டு சிவப்பிரகாரசம் பத்து பற்றறிபோட்ட ரோர்ச் லைட்டை கொண்டு வந்தார். பெரிய எழுத்து நல்லதங்காளை தினமும் பெரிய குரலில் படித்து தொண்டையை வளமாக வைத்திருப்பவர். ரோர்ச்சை அடித்துப்பார்த்தால் வீரன்தான் கிணற்றைச் சுற்றி சுற்றி ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தது. அவர் ஒருவரிடமே ரோர்ச் லைட் இருந்த படியாலும், உரத்த குரல் வளத்தில் அவருக்கு நிகர் எவரும் இல்லை என்றபடியாலும் நாய் மீட்பு பணிக்கு அவரே அக்கிராசனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாளியும் கயிறுமாக நாய் எடுப்பதற்கு நாங்கள் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. அடுத்ததாக, பனைநாரில் செய்த பட்டை கிணற்றில் இறக்கப்பட்டது. நாய் இந்த விசித்திரமான ஏற்பாட்டை 'இந்தா, என்று வந்து மணந்து பார்த்துவிட்டு திரும்பிவிடும். பட்டையில் ஏறினால் உயிர் தப்பிவிடலாம் என்று ஒருமுறை அதற்குப் பட்டதுபோலும், ஏறிவிட்டது. நாங்கள் எல்லாம் கூக்குரல் இட்டு அதைப் பதனமாக இழுத்தெடுக்கும்போது அது என்ன நினைத்ததோ மனதை மாற்றிக்கொண்டு மறுபடியும் பாய்ந்துவிட்டது.

கடைசியில் தொட்டில் யோசனையைச் சொன்னது பாவாடை சண்முகம்தான். இவர் படு அப்பாவி. ஒருமுறை கிணற்றடியில் மனைவியின் உள்பாவாடையை தோய்க்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டார். அன்றிலிருந்து அவர் பிரக்கியாதி இப்படி பரவிவிட்டது. இந்த ஒரு குற்றத்தைத் தவிர அவர் அவ்வப்போது அருமையான யோசனைகளை தரவல்லவர்.

எங்கள் ஊரில் எதற்கு குறைவிருந்தாலும் தொட்டிலுக்கு குறைவில்லை. மழையோ, வெய்யிலோ குழந்தை விளைச்சல் அமோகமாக இருக்கும். 'நீ, நான்' என்று தொட்டில்கள் வந்துவிட்டன. நாலு மூலையிலும் கயிறு கட்டி வெகு கவனமாக தொட்டிலை இறக்கினோம். தொட்டில் தண்­ரில் அமுங்கியபடியே இருந்தது. சிவப்பிரகாசம் ரோர்ச் லைட்டை கண்வெட்டாமல் அடித்துக் கொண்டிருந்தார். நாய் தொட்டில் பக்கம் நீந்திவந்தபோது சொல்லி வைச்சதுபோல நாலுபேரும் கயிற்றை இழுத்துவிட்டார்கள். நாய் தொட்டிலில் வசமாய் மாட்டிவிட்டது.

வெளியே வந்ததுதான் தாமதம் நான் அதை ஆசை தீரக் கட்டிப்பிடித்தேன். அது ஒரு சிலுப்புச் சிலுப்பி தண்ணியைச் சிதறடித்தது. பிறகு ஒரே பாய்ச்சல்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வீரன் கண்ணகியை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. எதிர் வீட்டு வண்டார்குழலியிடம் அதற்கு மையல் ஏற்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். (எங்கள் ஊரில் தமிழ்ப்பற்று கரைபுரண்டு ஓடிய காலகட்டம் இது. பற்பன்கூட தன் அணில் குஞ்சுகளுக்கு பரிமேலழகர், லோபாமுத்திரை என்று பெயர் வைத்திருந்ததாக ஞாபகம்)

எங்களுக்கு கணக்குப் பாடம் எடுப்பது கந்தையா வாத்தியார்தான். இவர் ஒரு தீவிரவாதி. இவர் பாடம் நடத்தும் போது நாங்கள் எல்லாம் கைவிரல்களை ஒன்றுகூடத் தவறாமல் மேசைமேலே வைத்திருக்க வேண்டும். மனக்கணிதம் என்றால் மனதால் சொல்லவேண்டும். கையால் சொல்லக்கூடாது என்பது இவருடைய அற்புதமான சித்தாந்தம்.

பதின்நான்கிலிருந்து ஒன்பது போனால் மிச்சம் எவ்வளவு. இதுதான் கேள்வி. நாங்கள் உயிரைக் கொடுத்து இதற்கு விடை தேடிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் வீரன் வந்து என் காலை நக்கியது. அதுமாத்திரமல்ல, விரகதாபக் கதாநாயகியைப் போல கொஞ்சம் முக்கல், முனகலையும் சேர்த்துக்கொண்டது.

கந்தையா வாத்தியார் எவ்வளவுதான் சுத்த வீரர் என்றாலும் அவருக்கும் நாய்க்கும் ஒரு சொந்தம் இருந்தது. அவர் வேட்டியைத் தூக்கினால் கணுக்காலில் இருந்து முழங்கால்வரை எல்லாம் நாய்க்கடி தழும்புகள்தான். இது புன்னாலைக்கட்டுவன் நாய், இது பெரிய கடை நாய், இது சித்தங்கேனி என்று வகைவகையான தழும்புகளை பொறாமைப்படும்படி காட்டுவார்.

நாயைக் கண்டதும் அவர் அஞ்சம் கெட்டு அறிவும் கெட்டு, 'ஆர், ஆர் அந்த நாயைப் பிடி; கொண்டுபோ, கொண்டுபோ, என்று கத்தத் தொடங்கிவிட்டார். ஒரு கால் நிலத்திலும், மறுகால் கதிரையிலுமாக எந்தத் திசையிலும் பாய்வதற்கு ஏதுவாக யுத்த சன்னத்தனாக நின்றார். நானும் இதுதான் சாட்டு என்று நாயை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வாத்தியாரைப் பயங்காட்ட என்னிடம் ஓர் அஸ்திரம் இருக்கிறது என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமுங்கி பள்ளிக்கூடத்திற்கு திரும்பிப்போக வசதியாக மறந்துவிட்டேன்.

அதற்கு பிறகுதான் அம்மா வீரனை பள்ளிநாட்களில் நான் திரும்பி வரும்வரை கட்டி வைக்கத் தொடங்கினாள். ஆனால் இரவு நேரங்களில் வீட்டைக் காக்கும் DUTY இருப்பதால் அது சுதந்திரமாக உலாவந்து காவல் வேலைகளைக் கவனித்தது.

அன்று சனிக்கிழமை, தலை முழுக வார்க்கும் நாள். வீடு முழுக்க தடபுடல் பட்டது. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து என்னைத் தயார்நிலையில் வைத்திருந்தார்கள். அடுத்த கட்டம் அரைத்து களியாக்கிய žயக்காயைப் பிரட்டுவதுதான்.

அம்மா அலுமிச்சை மரத்தை பார்த்தபடியே நின்றாள். அம்மாவின் முகத்துக்கு கவலை தோதுப்படாது. அவளுடைய கண்களில் என்றுமில்லாத சோகம் கப்பியிருந்தது. ஐந்து சதத்திற்கு பத்து எலுமிச்சம்பழம் சந்தையிலே விற்ற காலமது. ஆனாலும் அம்மாவுக்கு அந்த மரத்தில் அப்படி ஒரு மோகம். அதை எப்படியும் காய்க்க வைத்துவிட வேண்டும் என்ற பிடிவாதம்.

அதற்கு முதல் நாள்தான் செம்பட்டையன் வந்து மண்ணைப் பிரட்டிக் கொத்தி, தண்ணியும் பாய்ச்சி விட்டிருந்தான். மலட்டு மரங்களுக்கே உரித்தான ஒருவித அலட்டலோடு அது நின்றுகொண்டிருந்தது. அம்மாவுக்கு சலிப்பாக வந்தது. இடுப்பிலே கையை வைத்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் நிறமே எலுமிச்சம்பழ நிறந்தான். அவள் அப்படி அண்ணாந்து பார்க்கும்போது நெற்றியில் இட்ட குங்குமத்தின் ஒரு துளி மூக்கிலே ஒட்டிக்கொண்டு இருந்தது. அது ஒரு சிவப்புக்கல் மூக்குத்திபோல அழகாகத் தெரிந்தது. அம்மா அந்தக் கணம் என்ன நினைத்தானோ, கனத்த பெருமூச்சொன்று வெளியே வந்தது.

அம்மா அப்படி கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை அந்த மரத்தின் விதியை மாற்றப் போகும் ஒரு சம்பவம் žக்கிரமே அங்கே நடப்பதற்கு இருந்தது. அப்போது அது அம்மாவுக்கும் தெரியவில்லை; எனக்கும் தெரியவில்லை; மரத்துக்கம் தெரியவில்லை.

எனக்கு கண்ணில் எண்ணெய் வழிந்து எரிந்துகொண்டிருந்தது. நான் அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தபடியே இருந்தேன். அம்மா இருந்த இடத்ரைவிட்டு அரைசயவில்லை; அந்த மரத்தைப் பார்த்தபடியே இருந்தாள்.

அப்போதுதான் அது நடந்தது. எங்கள் வேலைக்காரப் பெட்டை இளைக்க இளைக்க ஓடி வந்தாள். 'அம்மா, வாருங்கோ, வாருங்கோ; சுறுக்கா வாருங்கோ. விதானை யாரை நாய் கடிச்சிட்டுது' என்று கூக்குரலிட்டாள்.

எங்கள் ஊரில் நாய் கடிப்பது என்பது சர்வ சாதாரணம். நுளம்புக்கடி, மூட்டைக்கடி போலத்தான் இதுவும். எனக்கு எட்டு வயது முடிவதற்கிடையில் நான் மூன்றாம்தரம் நாயிடம் கடி வாங்கியிருக்கிறேன். ஆனால் இதை எங்கள் வகுப்பில் சொல்லுவதற்கு வெட்கம். என்னோடு படிக்கும் கூட்டாளிகள் பற்பனும், கிட்ணனும் இரணை வாழைப்பழம்போல ஒட்டிக்கொண்டு திரிவார்கள். பற்பன் கறுத்து மெலிந்துபோய் இருப்பான்; கிட்ணனோ இரண்டு ஆட்டில் ஊட்டிய குட்டிபோல தளதளவென்று இருப்பான். இந்த கிட்ணனுக்கு எட்டு தடவையும், பற்பனுக்கு பதினாலு தடவையும் நாய் கடிச்சிருக்கு. நாங்கள் எங்கள் விழுப்புண்களை ஆளுக்கு ஆள் காட்டி மகிழ்ந்திருக்கிறோம்.

நாய்க்கடிக்கு வைத்தியமும் அப்படித்தான். நவசியரிடம் தான் போவோம். அவர் மந்திரித்துக்கொண்டே பச்சிலைச் சாறை தலையிலே தேய்த்து நடு உச்சி மயிரையும் மூன்றுதரம் இழுத்துவிட்டு, பச்சிலையையும் கடிவாயில் கட்டிவிடுவார், அவ்வளவுதான்.

என்னைப்போல ஒரு மகாசாது உலகத்தைப் பிரட்டிப் போட்டாலும் கிடைக்காது. மற்றவர் சோலிக்கு போனதில்லை. அப்படிப்பட்ட என்னை மடக்க கண்ணகி ஒரு தந்திரம் செய்தது.

** இதன் தொடர்ச்சி VADAKKU2.MTF ல் வருகிறது.
பால் வாங்கிவர கிளம்பினேன். அழகம்மாக்கா வீட்டுக்குத்தான் முதலில் போனேன். அங்கே பால் தீர்ந்துவிட்டது. உடனே வடிவக்கா வீட்டுக்குத் திரும்பினேன். அது வற்றாத ஊற்று. இருபத்து மணி நேரமும் பால் பொங்கிய படி இருக்கும். என் தலையை தூரத்தில்

** VADAKKU1.MTF ன் தொடர்ச்சி **

வழக்கம்போல மருந்துச் சிரட்டையை எடுத்துக்கொண்டு முலைப்பால் வாங்கிவர கிளம்பினேன். அழகம்மாக்கா வீட்டுக்குத்தான் முதலில் போனேன். அங்கே பால் தீர்ந்துவிட்டது. உடனே வடிவக்கா வீட்டுக்குத் திரும்பினேன். அது வற்றாத ஊற்று. இருபத்து மணி நேரமும் பால் பொங்கிய படி இருக்கும். என் தலையை தூரத்தில் கண்டவுடனேயே ரவிக்கையை தளர்த்தி வாசலுக்கு வந்துவிட்டா, வடிவக்கா.

சிரட்டை நிறைய சுடு பால் தளும்ப ஏந்திக்கொண்டு மெள்ளத் திரும்பும்போது கண்ணகி கண்டுவிட்டது. ஒருவித புளகாங்கிதத்தோடு என்னைத் துரத்தத் தொடங்கியது.

கண்ணகிக்கு சிறுவர்களின் பிருட்டச் சதையில் அப்படி ஓர் ஈடுபாடு. அதுவும் எனக்காக இவ்வளவு நாளும் விரதம் காத்திருந்தது. நான் சிரட்டையை கடாசிவிட்டு ஓடிப்போய் வேலியில் பாய்ந்து ஏறுமுன் எட்டிக் கடித்துவிட்டது. நான் அழுதுகொண்டே அம்மாவிடம் ஓடிப்போனேன். அம்மா களிசானை இழுத்துப் பார்த்துவிட்டு 'ஐயோ! மூன்று பல்லு பதிஞ்சிருக்கு' என்று ஓலமிட்டாள். நான் பட்ட அவஸ்தையெல்லாம் அந்தக்கணம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. மூன்று பல் என்றதும் பற்பனைப் பார்த்து புளுகுவதற்கு என்னிடம் ஒரு அபூர்வ விஷயம் கிடைத்ததென்பதில் என்மனம் குதிபோட்டது.

வீரன் கிராமத்து நாய்க்குரிய சகல லட்சணங்களையும் கொண்டிருந்தது. கிடைத்ததைச் சாப்பிட்டு, தானுண்டு தன் வாசலுண்டு என்று கிடக்கும். தூங்குகிற நேரத்தில் தூங்கி விழிக்கிற நேரத்தில் விழித்து காவல் கடமைகளைச் சரிவரச் செய்யும் தன் குல ஆசாரம் தவறாமல் அவ்வப்போது தெருச் சண்டைகளில் கலந்துகொள்ளும் மற்றும்படி, ஆட்களைக் கடித்ததென்பது அதன் பயோடேட்டாவில் கிடையாது.

இப்படிப்பட்ட வீரன் விதானையாரைப் போய் கடித்துவிட்டது. இப்ப இரண்டு நாளாய் அது சுரத்தில்லாமல்தான் இருந்தது. சம்மாட்டுத் துணிபோல சுருண்டு சுருண்டுபோய் கிடந்தது. மயிலை நிறக் கண்கள் மஞ்சளாகிவிட்டன. பெரிய சிரமத்தோடு தன் பாரிய உடம்பை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டுதான் அது நடந்தது.

பள்ளிக்கூடத்தில் என் யோசனை முழுக்க வீரனைப் பற்றியே இருந்தது. ரத்தினேஸ்வரி அக்காவுக்கு அது தெரியாது. ஒரு சதக்காக போல வட்டமான முகம். அவ என்றால் இடைத்தொடர் குற்றியலுகரம் பற்றி இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருந்தார். 'என் சொல்லை ஒருபோதும் தட்டாதே! என் வாசக்கட்டி! எதற்காக விதானையாரைப் போய் கடித்தது. அதற்கு ஏதாவது நடந்துவிடுமோ?' என்று ஒரே பயமாக இருந்தது. அப்பொழுதே ஓடிப்போய் வீரனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும்போல பட்டது.

நான் பயப்பட்டது சரிதான். நான் திரும்பி வந்தபோது எங்கள் வீட்டுப் படலையில் ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது எனக்கு துணுக்கென்றது. எங்களுடைய ஐயா, நவசியர், சிவப்பிரகாசம், வல்லியர், சிவக்கொழுந்து என்று முக்கியமானவர்கள் எல்லாம் சேர்ந்துவிட்டார்கள். அம்மா காத்திருந்து என்னுடைய கையைப் பிடித்து திண்ணைக் குந்தில் தூக்கிவிட்டாள்.

நாய்க்கு விசர் பிடித்துவிட்டதாம். அது கடித்தால் ஆட்கள் சாவது நிச்சயமாம். என்னைக் கிட்டப் போக வேண்டாம் என்று அச்சுறுத்தி வைத்தார்கள்.

அப்போதுதான் நான் வீரனைப் பார்த்தேன். அது வேலியோரத்தில் நின்றுகொண்டிருந்தது. தலை தோறுக்குக் கீழே தொங்கியது. இரைத்து, இரைத்து குலைத்தது. வால் கால்களுக்கிடையில் சுருண்டுவிட்டது. நாக்கைத் தொங்கப் போட்டபடி நிலை குத்தாமல் பார்த்தது. வீரன் போலவே இல்லை. நாலு நாளில் குருக்கடித்த வாழைபோல உருத்தெரியாமல் மாறிவிட்டது.

ஊர் முழுக்க இந்தப் புதினம் பரவிவிட்டது. அப்பொழுது பறவைக்காவடி எடுத்ததுபோல பறந்துவந்தார் பற்பனின் அப்பா. இவர் பாட்டு வாத்தியார். சங்கீத ஞானம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வீட்டுக்கு வீடு 'வரவீணாவை' பிரபலப்படுத்தி வரலாறு படைத்தவர். ஆரபி ராகத்தில் அளவில்லாத பக்தி. எப்பவும் அதை வெளியே விடாமல் வாய்க்குள் வைத்து முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். ஏகப்பட்ட குஷ’ பிறந்துவிட்டால் மட்டும் வாயால் பாடுவார். சொல்லாமல் கொள்ளாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் அங்கேயே நின்று அவஸ்தைப் படுவார். கீழே இறங்கமாட்டார்.

இவ்வளவு கீர்த்தி இருந்தாலும் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். 'நாய்க்கு விசரில்லை; பாவம், ஏதோ வருத்தம்' என்று முதன்முதலாக துணிந்து நாயின் கட்சியைப் பேசியவர் இவர்தான்.

இப்ப கூட்டம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்தன. நாயைக் கொன்றுவிட வேண்டுமென்பது ஒரு கட்சி. இன்னும் கொஞ்சநாள் வைத்துப் பார்க்க வேண்டுமென்பது அடுத்த கட்சி. ஒருவரும் விட்டுக் கொடுப்பதாயில்லை. அந்தக்காலத்தில் நாங்கள் மூன்றாவது அம்பயருக்கு எங்கே போவது?

அப்பொழுதுதான் எடுப்பான குரலில் நவசியர் பேசத் தொடங்கினார். இப்படியான சங்கதிகளில் எங்கள் ஊருக்கு அவர்தான் 'வேதநூலறிந்த மேதகு முனிவர்'. திருப்பித் திருப்பி ஒத்திகை பார்த்த பட்டாளத்து வீரர் நடைபோல அவருடைய சொற்கள் ஒரு நிதானத்துடன் தாளம் தவறாமல் வந்து விழுந்து கொண்டிருந்தன.

'இஞ்ச கேளுங்கோ! நான் சொல்லுறதை வடிவாய்க் கேளுங்கோ! நாய் தண்ணியைக் காட்டினால் குலைத்தபடியே இருக்கு; குடிக்குதில்லை. நாக்கு தொங்கிப்போயிருக்கு; தண்ணி கொட்டினபடியே கிடக்கு. நாய்க்கு விசர்தான்; ஐமிச்சமே இல்லை!' என்று அடித்துக் கூறிவிட்டார். விசாரணைக் கூட்டம் முடிவு பெற்றது. மன்னர் பேச்சுக்கு மறு பேச்சுண்டோ?

இப்படியாக எங்கள் வீட்டு நாயின் எதிர்காலத்தை நாயை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தீர்மானித்தது எனக்கு தர்மமாகப் படவில்லை.

வேலைக்காரப் பெட்டை தோன்றினாள். அவள் அப்படித்தான் சாமி வரம் தர வருவதுபோல திடுதிப்பென்று தோன்றுவாள். தன் கன்னத்தில் விரலை வைத்து தலையை சிறு அசைப்பு அசைத்து என்னைப் பார்த்தாள். 'நாயை அடிக்க செல்லத்தம்பி வரப்போறான்' என்று மொய் அறிவிப்பு செய்வது போலச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள் பாதகத்தி.

கிராமங்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பேர் வந்துவிடுகிறது. இது எப்படி என்ற பூர்விகம் யாருக்கு தெரியாது. மாட்டுக்குச் சரி, குதிரைக்குச் சரி லாடம் அடிப்பதென்றால் சின்னையன்தான்; தென்னை மரத்திலேறி பருவம் தாண்டாத ஆட்டுச்செவிப் பதம் இளநீர் வெட்டுவதென்றால் அதற்கு மாணிக்கன்தான். அந்தக் கலையில் அவனை மிஞ்ச ஆள் இல்லை. விசர் நாயை அடிப்பது என்றால் அது செல்லத்தம்பிதான். அவனுக்கு அப்படி ஒரு கீர்த்தி.

இவர்கள் எல்லாம் எந்தப் பயிற்சி மையத்தில் கற்றுத் தேர்ந்தார்கள். நான் அடிப்பதில் ஒருவன் கியாதி பெறுவதென்றால் எத்தனை நாயைக் கொண்றிருக்கவேண்டும்?

செல்லத்தம்பி பின்னுக்கு கைகளைக் கட்டியபடி நிலம் அதிராமல் நடந்துவந்தான். அவன் புஜத்தின் தசைகள் திரண்டு திரண்டு கிடந்தன. தோளிலே போட்ட துண்டு முதுகிலே இருந்த வாள் வெட்டுக் காயத்தை முற்றிலும் மறைக்க முடியாமல் கிடந்தது.

வீரனை இப்ப பிடித்துக் கட்டிவிட்டார்கள். கழுத்திலே இரண்டு சுருக்கு கயிறு; ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மற்றது ஒரு வேலிக் கதியாலில். வீரன் கால்களைப் பரப்பிக்கொண்டு நடுவிலே அசையமுடியாமல் நின்றது. ஏதோ அனர்த்தம் நடக்கப் போகிறது என்று அதன் உள்ளுணர்வுக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒரு சத்தம் இல்லை; முனகல் இல்லை. சுற்றியிருந்த அந்த முகங்களில் ஒரு சிநேகமான முகத்தை அது தேடியிருக்கவேண்டும். மஞ்சள் பழுத்த அந்தக் கண்கள் பரிதாபகரமாக என்னை ஒரு கணம் பார்த்து மீண்டன.

சுயம்வரத்துக்கு ஆள்விட்டு அழைத்ததுபோல கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் இளந்தாரிகள் எல்லாம் நெருக்கி அடித்தார்கள். நாய் அடி என்பது ஒவ்வொரு நாளும் பார்க்கக் கிடைக்கிற சங்கதியா? செல்லத்தம்பி மேல் துண்டை ஒரு மரக்கிளையில் மாட்டிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டினான். இரும்புப் பூண்போட்ட உலக்கையை யாரோ அவன் கையில் கொடுத்தார்கள். அதை ஒற்றைக் கையால் பின்னால் பிடித்தபடி வியூகத்தை உடைத்துக்கொண்டு நாய் இருந்த திக்கில் பராக்குப் பார்த்தபடி மெள்ள அடிவைத்து நடந்தான்.

எனக்கு அந்த நேரம் பச்சாத்தாப உணர்விலும் பார்க்க இந்த நாய் அடி எப்படி இருக்கும் என்ற ஆவல் ஒரு கணம் தோன்றியதை நினைத்து வெட்கமாக இருந்தது.

கிட்டவந்த செல்லத்தம்பி காலை அகட்டி வைத்து வாகாக நின்றுகொண்டு கண் இமைக்கும் நேரத்தில் உலக்கையைச் சுழற்றி நாயின் மண்டையில் ஒரு போடு போட்டான். 'ங்கா' என்ற ஈனமான கதறல் ஊ‘ முழுவதும் கேட்டது. நாய் சுருண்டுபோய் விழுந்தது.

நான் கொஞ்சம் கிட்டவந்து பார்த்தபோது அதன் தலையிலே ஒரு சொட்டு ரத்தம் சிந்தியிருந்தது. கபாலம் வெடித்து வெள்ளைக் களிபோல மூளை ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் அகலமாகத் திறந்துபோய் கிடந்தன. நாயின் பற்கள் ஆவென்று என்னைப்பார்த்து சிரித்தன. என்னுடைய இருதயம் மெதுவாகக் கிளம்பி தொண்டைக் குழியை வந்து அடைத்துக் கொண்டது.

செல்லத்தம்பி நாய் அடித்த கதை அட்ட திக்குகளிலும் பரவிவிட்டது. அந்தப் பரிதாபத்தையே எல்லோரும் கதைத்தார்கள். அவன் உலக்கையை எடுத்த விதத்தையும், விசுக்கியதையும், ஒரேயடியில் நாயை வீழ்த்தியதையும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள்.

ஆட்கள் எல்லாம் போன பிறகு அம்மாவைப் பார்த்து ஐயா 'என்ன செய்வம்? என்று கேட்டார். அம்மா கண்ணைத் துடைத்தபடி,'அந்த எலுமிச்சை மரத்தடியில் தாட்டு விடுங்கோ' என்றாள்.

நாயை அடித்துக் கொன்றுவிட்டாலும் ஊரில் விதானை யாருக்க என்ன நடக்குமோ என்ற பயம் இருந்துகொண்டுதானிருந்தது. ஊர்ச்சனங்கள் எல்லாம் அடிக்கடி போய் 'இன்னும் இருக்கிறாரா' என்று நோட்டம் பார்த்து வந்தார்கள். விசர் பிடிக்க பதினாலு நாள் ஆகும் என்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். விதானையர் என்னவென