கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
காகம் கலைத்த கனவு | ||
சோலைக்கிளி |
காகம் கலைத்த கனவு சோலைக்கிளி ---------------------------------------------------- காகம் கலைத்த கனவு - சோலைக்கிளி சுவடுகள் பதிப்பகத்திற்காக வெளியிடுவோர்: Suvadugal Pathippagam, Herslebs GT-43, 0578 Oslo 5, Norway இந்தியாவில் வெளியிடுவோர் : பொன்னி, 25 அருணாசலபுரம் பிரதான சாலை, அடையாறு, சென்னை-20 ---------------------------------------------- பதிப்புரை (எஸ்.வி.ராஜதுரை) எட்டாண்டுகளுக்கு முன் ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவரான சேரனைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் வாய்ப்பு கிட்டியது. இப்போது அதே சேரனின் முன்முயற்சியுடனும், நோர்வே நாட்டில் தமிழ்ப்பணி செய்துவரும் 'சுவடு' பதிப்பகத்தாரின் பேருதவியுடனும் மற்றொரு அற்புதமான ஈழக் கவிஞர் சோலைக்கிளியைத் தமிழ்நாட்டு வாசகரிடையேயும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் வாசகரிடையேயும் அறிமுகம் செய்யும் வாய்ப்பும் பெற்றுள்ளேன். கல்முனையிலுள்ள 'வியூகம்' பதிப்பகத்தார் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட 'எட்டாவது நரகம்' என்ற தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் வேறு கவிதைகளும் சேர்க்கப்பட்டு இத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. கவிஞர் பயன்படுத்தியுள்ள வட்டார வழக்குகள், சமய-பண்பாட்டு வழக்குகள் ஆகியவற்றுக்கான பொருள் விளக்கப்பட்டியலொன்று தரப்பட்டுள்ளது. 'எட்டாவது நரகம்' தொகுப்புக்கு எம்.ஏ.நுஃமான் எழுதிய முன்னுரையும் கவிஞரின் 'என்னுரை'யும் சோலைக்கிளியின் கவியாளுமையைப் புரிந்துகொள்ளப் போதுமானவை. சென்னை: 18-03-1991 எஸ்.வி.ராஜதுரை -------------------------------------------------------------------------------- என்னுரை (சோலைக்கிளி) "உங்கள் கவிதைத் தொகுதி அச்சிலுள்ளது. உடனடியாக உங்கள் 'என்னுரையை' எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு அனுப்பி உதவுங்கள்" என்று எனது தம்பி மூலம் அறிவித்த எனது நேசிப்புக்குரிய கவிஞர் சேரன் அறிவது, உங்கள் தயவால் எனது மூன்றாவது கவிதைத் தொகுதி எனது பொருட்செலவின்றி, இந்திய வாசகர்களுக்காக வெளி வருவதையிட்டுப் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 'கவிதை என்றால் என்ன?' என்ற விளக்கமின்மை இன்னும் எனக்குள் இருக்கிறது. கவிதை ஒரு கடல். அதை எனது ஆயுளுக்குள் தின்று தீர்த்து எனது சிறிய இரைப்பைக்குள் சமிபாடடையச் செய்ய முடியாது என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் உங்களின் தயவையும், எஸ்.வி. ராஜதுரை அவர்களின் உதவியையும் நினைக்கும்போது மெய்யாகவே கூச்சம் வருகிறது. அன்புள்ள சேரன்! உங்கள் அறிவித்தல் கிடைத்த தினத்திலிருந்து சங்கடப்படுகிறேன், 'என்னுரை'யாக எதை எழுதுவது என்று. எனக்கு என்ன தெரியும்? ஏதோ, உணர்வுகள் கொப்பளிக்கும்போது, என்னை மறந்த நிலையில், எனக்குப் பாலூட்டப்பட்ட மொழியில் 'கவிதை' என்ற பெயரில், பல காகிதங்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவுதானே எனக்குத் தெரிந்தது! 'என்னுரை' என்று எதை நான் எழுத? என் வீட்டின் கூரை உடைந்துவிட்டது, ஏதோ ஒன்று வந்து விழுந்து. நான் சின்ன வயதில் கண்டு ரசித்த விரல்சூப்பிய பச்சிளம் காலைப் பொழுதுகளை இப்பொழுது காண முடியவில்லை. ஒவ்வொரு நாளும் தாலி அறுத்த காலைக் கிழவிகள்தான் வருகின்றன. காதலியின் பெயரை நினைத்துப் பாட்டுக்கள் பின்னிய மாலைப் பொழுதுகளும் இப்படித்தான்! நிலவை நிமிர்ந்து பார்த்தார் அதில் நாய் மலம் கழிக்கிறது. நட்சத்திரங்கள் பூமியின் வெப்பம் தாங்காமல் 'கறள்' பிடிக்கின்றன. என் இதய நரம்புகளில் ஜீவித்துக் கொண்டிருக்கும் அந்த "உயிர்தின்னிப் பெண்ணின்" பெயரும் மறக்கின்ற இரவுகள்தான் இப்போது இங்கு வருகின்றன. இந்த அவலங்கள் போதாதென்று, சில 'கவிதை இல்லாத கவிஞர்களின்' கூத்துகளையும் பார்த்துச் சகித்துக் கொள்ள வேண்டியுமிருக்கிறது. இவைகளுக்குள் நான் 'என்னுரையாக' எதை எழுதுவது? பாலர் வகுப்பில் படித்த என் தமிழின் எழுத்துகளை நினைவில் வைத்திருப்பதே மிகக் கஷ்டமாக இருக்கிறது. ஆம், இரத்தத்தில் அவை கலந்திருப்பதால் காப்பாற்றப்படுவதாக உணர்கிறேன். மிருகங்கள் கனவுகண்டு மிரண்டு மோதிக்கொள்வதைப் போல, இப்போது எங்கும் இனச் சண்டைகள் வரத் தொடங்கிவிட்டன. அருமையான மரங்களும், மலர்களும், அருவிகளும் உள்ள ஊர்கள் எரிகின்றன. குருவிகள் அலறுகின்றன. அவற்றின் ஈரல் குலைகளை அவையே தூக்கிப் பறக்கின்றன. முழங்கால்கள் எரிய ஒரு மனிதன் ஓடுவதைப்போல அண்மையில் நான் கனவு கண்டேன். வரவர உலகம் ஒரு 'மாதிரியாகப்' போகிறது. இந்தப் பயத்தில் 'ஆண்' ஆன எனக்கும் தினசரி மாதவிடாய் வருகிறது. அன்புள்ள சேரன்! எனது மண்ணுக்கு மேலிருந்த வானம் பெரும்பாலும் உடைந்து நொறுங்கி விட்டது. இப்பொழுது 'பசை' கொண்டு ஒட்டித்தான் சாதாரண பார்வைக்குச் சோடித்து வைத்திருக்கிறார்கள். அடுத்த மாரிக்கு இங்கு மழை சிவப்புதான். இனி பெண்களின் கூந்தலுக்கு ஒப்பிட ஒரு கருமுகிலைக் காண்பதே எனக்கு சிரமமாக இருக்கும். நீங்களாவது அங்கிருந்து சில கருமுகில்களை எனக்கு அனுப்பாது போனால், நான் பெண்களின் அங்கத்தில் வேறு எதையாவது ஒப்பிட வேண்டி வரும், என் ஊரின் சிவப்பு முகில்களுக்கு. சேரன்! இந்த இக்கட்டுகளுக்குள் எதை நான் எழுதட்டும்? வேண்டுமென்றால், சதாம் ஹுசைனைப் பற்றி ஓரளவு ஞாபகமிருக்கிறது. அவரைப் பற்றி எதையாவது எழுதவா? ஜோர்ஜ் புஷ் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன். இந்த இருவரின் பெயர்களையும் ஏதோ ஒரு நாட்டில், குரங்குகளுக்குச் சூட்டிமகிழ்ந்த சங்கதியும் நான் அறிந்திருக்கிறேன். அதுபற்றியும் என்னால் எழுத முடியும். எழுதவா? சோலைக்கிளி 374, செயிலான் வீதி கல்முனை-04 (கி.மா) இலங்கை 10-04-1991 -------------------------------------------------------------------------------- உள்ளே என்னுரை 4 சோலைக்கிளியின் கவிதைகள் 9 பகுத்தறிவுத் தெருக்கள் 17 நினைவுகள் 19 வெள்ளை இரவு 21 எனது தாய்ப்பால் 23 எட்டாவது நரகம் 25 என் வரிக்குதிரைச் சவாரி 27 உயில் 30 நான் 32 இறகு உதிர்ந்த கிராமம் 34 ஒரு மாரி நோக்காடு 36 பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில் 38 வால் மனிதர்கள் 40 பாலூட்டிகள் 42 கால்மாட்டுச் சுழற்சிகள் 44 கொம்பன் காற்று 46 இதயத்துள் உறைகின்ற மேகம் 48 கவிதை எழுதாத ஒரு கோடைத்தினம் 1986-ல் 50 நவீன இலங்காபுரி 51 பூனைக்கண் வெள்ளி 53 தொப்பி சப்பாத்துச் சிசு 55 தொட்டில் 57 கருக்கல் 59 சிலும்பல்கள் 61 ஒன்றிப்பு 63 செத்த மரமும் சில மைனாக்களும் 65 அந்த வெல்வெட்டுப் பறவை 67 பூமரத்துச் சந்தி 69 வெயிலை விழுங்கும் சிறுக்கி 71 காதற் குதிரையும் அழுக்குக்பொதி சுமக்கும் கழுதைகளும் 73 இறந்த காலத்திற்காய் எழுதிய துயரகீதம் 75 விபத்துக்கள் 77 காகம் கலைத்த கனவு 79 வாசல் 81 ஈர நாள் 82 நான்-பிள்ளை 84 ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றையத் தினம் 85 இனி அவளுக்கு எழுதப்போவது 87 குழம்பிச் சண்டையிட்டு பிறகு புன்னகைத்து... 89 ஓர் உறவு பூத்த பாட்டு 90 வெயில் மழை புழுதி 92 ஓர் அகதிக் கவிஞன் நிலாவைப் பார்த்து 94 எனது நகரத்தின் பைத்தியக்காரி 96 ஒரு கவிதைக்கான நேரத்துக் கோரிக்கை 98 பறவைக்குக் கடிதம் எழுது 100 வானமெல்லாம் திரிதல் 102 என் வேப்பமரப் பெண்டாட்டி 104 ஒரு கவிஞனைப் போன்று திரிகின்ற அற்பனுக்கு 106 நாயோடு சம்பாசித்தல் 108 வட்டார வழக்குகளும் பண்பாட்டு வழக்குகளும் 110 -------------------------------------------------------------------------------- சோலைக்கிளியின் கவிதைகள் (எம்.ஏ.நுஃமான்) சோலைக்கிளி எண்பதுகளில் உருவாகி வளர்ந்து வரும் ஒரு முக்கியமான கவிஞர். 'எட்டாவது நரகம்' இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. சோலைக்கிளியின் முதலாவது தொகுப்பு 'நானும் ஒரு பூனை' வெளிவந்த பொழுதே இவர் ஒரு வித்தியாசமான, தனித்துவம் உள்ள கவிஞர் என்பதை நான் இனங்கண்டேன். 'எட்டாவது நரக'த்தில் உள்ள கவிதைகள் இவரது தனித்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன. சோலைக்கிளியின் தனித்துவத்தின் முக்கியமான அம்சம் இவர் கையாளும் மொழியாகும். கவிதையின் மொழி கணக்கியலின் மொழிபோல் நேரானதல்ல. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல் முற்றிலும் தர்க்கரீதியானதல்ல. அது நெளிவு சுழிவு மிக்கது. கற்பனைத் தளத்தில் படிமச் சேர்க்கையில் இயங்குவது. பாரதி குழந்தை கண்ணம்மாவை 'ஆடிவரும் தேன்' என்று விளிக்கின்றான். இங்கு தேன் ஆடி வருமா என்று நாம் தர்க்கவாதம் புரியமுடியாது. காதலி கண்ணம்மாவை 'உயிர்த்தீயினிலே வளர் சோதி' என்று வியக்கின்றான். இங்கு உயிர் எப்படித் தீயாகும் என்றோ, உயிர்த் தீயில் எப்படி சோதி வளரும் என்றோ நாம் வினவமுடியாது. இத்தகைய வினாக்கள் கவிதைக்குப் புறம்பானவை; கவிஞனின் உணர்வுலகை, அவனது வெளிப்பாட்டுத் தளத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவாதவை. தர்க்கரீதியான மொழிபெயர்ப்பில் பாரதியின் இப்படிமங்கள் வெளிப்படுத்தும் உணர்வு நிலையை நாம் விளங்கிக்கொள்ளவும் முடியாது. அதை விளங்கிக் கொள்வதற்கு அவனது 'பாஷையை' நாம் புரிந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் ஒரு நல்ல கவிதை கூட பொருளற்றதாக, அபத்தமானதாக, ஒரு ஏமாற்று வித்தையாகக் கருதப்படும் ஆபத்து நிகழக்கூடும். இத்தகைய ஆபத்து சோலைக்கிளியின் ஒரு கவிதைக்கும் நிகழ்ந்திருக்கின்றது- முருகையன் 'கடும் கோபத்துடன்' எழுதிய ஒரு கட்டுரையில் (மல்லிகை இருபத்தோராவது ஆண்டு மலர்.) முருகையன் போன்ற முதிர்ந்த கவிஞரைக் கூட சோலைக்கிளியின் 'பாஷை' தடுமாறச் செய்துவிட்டது. சோலைக்கிளியின் கவிதைகள் கருத்து நிலைப்பட்டவையல்ல. ஒரு வெளிப்படையான கருத்தை நாம் அவரது கவிதைகளில் காணமுடியாது. பதிலாக அவை அனுபவ, உணர்வுநிலை வெளிப்பாடுகளாகவே உள்ளன: பெரும்பாலும் அவரது சொந்த அனுபவங்களும் உணர்வுகளும். இது நமது கவிஞர்கள் பலரிடம் அரிதாகக் காணப்படும் ஒரு பண்பாகும். நமது பெரும்பாலான கவிஞர்கள் கவிதையை ஒரு கருத்து வெளிப்பாட்டுச் சாதனமாகவே இன்னும் கருதுகின்றனர். சோலைக்கிளியின் சில கவிதைகளிலும் கூட நாம் ஒரு கருத்தினை இனங்காண முடியும்தான். ஆனால் அது அவர் வெளிப்படுத்தும் அனுபவங்களுள், உணர்வுகளுள் புதையுண்டே கிடக்கின்றது. உதாரணமாக இத்தொகுப்பிலுள்ள 'தொப்பி சப்பாத்துச் சிசு' என்ற கவிதை கருத்து அடிப்படையில் வன்முறைக்கு எதிரானது எனலாம். ஆனால் இவ்வன்முறை-எதிர்ப்பு இன்றைய தொடர் வன்செயல்களின் விளைவாக எழும் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வுள் புதையுண்டு கிடக்கின்றது. கவிதை வெளிப்படுத்துவது இவ்வச்ச உணர்வையே. இது அதிர்ச்சியூட்டும் படிமங்களை அடுக்கிச் செல்வதன் மூலம் புலப்படுத்தப்படுகின்றது: தொப்பி காற்சட்டை, சப்பாத்து, இடுப்பில் ஒரு கத்தி மீசை அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒரு காலம் வரும். என்று தொடங்குகின்றது கவிதை. இது பயங்கரமான அதிர்ச்சியூட்டும் கற்பனை. இத்தகைய படிமங்கள் மூலமே கவிதை தொடர்கின்றது. மனிதர்கள் போலவே பயிர்பச்சைகளும் அக்காலத்தில் இயங்குமாம்: 'சோளம் மீசையுடன் நிற்காது. மனிதனைச் சுட்டுப் புழுப்போல் குவிக்கின்ற துவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்ரு 'பூமரங்கள் கூட ....துப்பாக்கிச் சன்னத்தை அரும்பி அரும்பி வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும்' 'குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தூங்கும்' 'வற்றாளைக் கொடி நட்டால் அதில் விளையும் நிலக்கண்ணி' அதிர்ச்சியூட்டும் இப்படிமங்கள் மூலம் எதிர்காலம் பற்றிய அச்சத்தை மட்டுமின்றி, தன் வன்முறை-எதிர்ப்பையும் சோலைக்கிளி வெளிப்படுத்துகின்றார். இத்தொகுப்பில் உள்ள நல்ல கவிதைகளுள் இதுவும் ஒன்று. இவரது 'வால் மனிதர்கள்', 'தொட்டில்' ஆகிய கவிதைகளிலும் இத்தகைய படிம அமைப்பை நாம் காணலாம். இவ்வகையில் படிமங்களே இவரது பாஷையாகின்றது. சோலைக்கிளியின் படிமங்கள் அவரது அலாதியான வெளிப்பாட்டுத் திறனைக் காட்டுகின்றன. 'இதயத்துள் உறைகின்ற மேகம்' கவிதையில் மேகம் சுதந்திர வேட்கையின் குறியீடாகிவிடுகின்றது: 'ஒரு சிறகு முளைத்த கவிஞனைப் போல மேகம் சுதந்திரமாய்த் திரிகிறது' என்று தொடங்குகின்றது கவிதை. 'சிறகு முளைத்த கவிஞன்' என்ற படிமம் இங்கு அற்புதமாக விழுந்திருக்கின்றது. "கவிஞனுக்குச் சிறகு முளைக்குமா? இது என்ன அபத்தம்!" என்று கேட்போர் கவிஞனின் 'பாஷை"யைப் புரியாதவர்கள், கவித்துவ ஞானம் அற்றவர்கள். இது தும்பிக்குக் கூட சிறகுகள் நோண்டப்பட்டு வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம். 'மேகம்' அதற்கு வாலும் இல்லை சிறகும் இல்லை வெட்டுதற்கு. அதனால் அது சிறு குழந்தையின் மனம்போல பூக்கிள்ளி முகருவதும் பிறகு கழிப்பதுமாய் வானப் பூந்தோப்பில் மேய்கிறது மேய்ச்சல்... தும்பியைக் கூட அடிமைப்படுத்தும் யுகத்தில் சுதந்திரமாய்த் திரியும் வெண்மேகம் கவிஞனின் ஆதர்சமாகி விடுகின்றது: என் பிரிய வெண்மேகத்தைப் பற்றி இனியாச்சும் நானொரு கவிதை எழுத வேண்டும் மனம் அதிகாலையைப் போல குளிர்ந்து கிடக்கையில் இருக்கின்ற கற்பனை அனைத்தையும் அனைத்தையும் அள்ளித் தெளித்து பஞ்சு மேகத்தைப் பாடி சிம்மாசனமேற்றிப் பார்க்கத்தான் வேண்டும். என்று கவிதை முடிகையில் சோலைக்கிளியின் வெளிப்பாட்டுத் திறன் வியப்பூட்டுவதாய் உள்ளது. இத்தகைய வெளிப்பாட்டுத் திறனுக்கு சோலைக்கிளியின் 'வெல்வெட்டுப் பறவை'யை இன்னும் ஒரு உதாரணமாகக் கூறலாம். இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளுள் இதுவும் ஒன்று. காதல் தோல்வியின் துயரம் இதில் அற்புதமாய் வெளிப்பாடு பெற்றுள்ளது. தான் காதல் கிறுக்கில் மூழ்கிக் கிடந்த நாட்களைக் கவிஞன் இப்படி நினைவு கூருகின்றான்: வால் மினுங்கும் வெல்வெட்டுப் பறவை அது மூக்குத் தொங்கலில் எச்சம் அடித்தாலும் அந்நேரம் மணம்தான் அது ஒரு காலம் காதல் கிறுக்குத் தலையில் இருந்த நாம் பெருவிரலில் நடந்த நேரம். அப்போது வானம் எட்டிப் பிடித்தால் கைக்குப் படுகின்ற ஒரு முழ இருமுழத் தூரத்தில் இருந்தது. ஏன் உனக்குத் தெரியுமே அண்ணாந்து நீ சிரித்தால் நிலவிற்குக் கேட்கும் வானுக்கும் உச்சியெல்லாம் பூப்பூக்கும்! மூக்கு நுனியில்பட்ட பறவையின் எச்சம்கூட மணப்பதும், பெருவிரலில் நடப்பதும், வானம் ஒரு முழ இரு முழ தூரத்தில் இருப்பதும், அவள் சிரிப்பு நிலவுக்குக் கேட்பதும், வானுக்கு உச்சியெல்லாம் பூப்பூப்பதும் காதல் கிறுக்கின் வெற்றிக் களிப்பை உணர்த்தும் நல்ல படிமங்கள். தர்க்கத்துக்கு புறம்பான கவிதைப் பாஷை இது. வேறு வகையில் இவ்வளவு சிறப்பாக இந்த உணர்வு நிலையை வெளிப்படுத்தியிருக்க முடியும் என்ற எனக்குத் தோன்றவில்லை. இக்கவிதையில் வரும் 'தின்ற விதையைக் கக்கித் தரும்' வெல்வெட்டுப் பறவை நிறைவேறாக் காதலின் குறியீடாக உள்ளது. வைத்திருப்பேன் உனது கடிதங்கள் அனைத்தையுமே வைத்திருப்பேன் தைத்துப் பொருத்தி அவற்றை ஆடையாய் உடுத்திக் கொண்டு திரிய என்று கவிதை முடியும்போது மஜ்னூனின் காதல் பித்தை நினைவூட்டுகின்றது. ஆயினும் காதலியின் கடிதங்களை ஆடையாகத் தைத்து உடுத்திக் கொண்டு திரிவதான இப்படிமம் தமிழ் கவிதைக்கு மிகவும் புதியது. காதல் தோல்வியின் கொதிநிலை இவ்விரண்டு வரிகளில் சிறப்பாக வெளிப்பாடு பெற்றுள்ளது. இத்தகைய அலாதியான வெளிப்பாட்டுத் திறன் சோலைக்கிளியிடம் நிறைய உண்டு. சோலைக்கிளியின் வெளிப்பாட்டு முறையை, அவர் எழுப்பும் அலாதியான புதுப்புதுப் படிமங்களைப் புரிந்துகொள்வதன் மூலமே நாம் அவருடைய உணர்வுலகுள் பயணம் செய்ய முடியும். ஆயினும் அவரது 'பாஷை'யின் வேறு சில அம்சங்கள் இந்தப் பயணத்தில் நமக்கு இடையூறாக அமையலாம். இந்த அம்சங்கள் அவரது பிரதேச, சமூகப் பண்பாடு சார்ந்த மொழிக் கூறுகளாகும். மட்டக்களப்புப் பேச்சு வழக்குகளையும்-குறிப்பாக முஸ்லிம் வழக்குகளையும் பிராந்திய மரபுத் தொடர்களையும் -தன் கவிதையில் தாராளமாகக் கையாளபவர் சோலைக்கிளி. இதனால் இப்பிரதேச, சமூக மொழி வழக்குகளுடன் பரிச்சயமற்றவர்களுக்கு இவரது கவிதை சில சமயம் புரியாது போகின்றது. முருகையனுக்கும் இதுவே நிகழ்ந்தது. சோலைக்கிளியின் 'மழைப் பழம்' கவிதையில் ('நானும் ஒரு பூனை' தொகுப்பில்) வரும் 'காற்றுக் கட்டி', 'மழைப் பழம்' போன்ற வழக்குத் தொடர்கள் அவருக்குப் புரியவில்லை. "காற்று கட்டியாய் இருக்குமாமே அது என்ன?", "மழைப் பழமா? அது என்ன?" என்று கேட்கிறார் முருகையன். இது சோலைக்கிளியின் தவறல்ல. முருகையனுக்கு இப்பிராந்திய வழக்கில் பரிச்சயம் இல்லை. அவ்வளவுதான். மட்டக்களப்பில் சிறுவர்களும் இத்தொடர்களைப் பயன்படுத்துவர். கவித்துவம் நிறைந்த மட்டக்களப்புப் பாமரன் உருவாக்கிய மரபுத் தொடர்கள் (Idiom) இவை. காற்றுக் கட்டி என்றால் பாரம் அற்றது என்று பொருள். மழைப்பழம் பெருமழையைக் குறிக்கும். "மழையா இது! மழைப்பழம்" என்பது வழக்கு. இத்தொகுப்பில் உள்ள 'பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில்' என்னும் கவிதைத் தலைப்பும் இத்தகைய ஒரு பிராந்திய வழக்குத்தான். சில சமயம் அந்தி மாலையில் தனி மஞ்சள் நிறத்தில் வெயில் எரிப்பதுண்டு. வெயிலுக்கு இத்தகைய ஒரு நிறம் பேய் நெல்லுக் காயவைப்பதனாலேயே ஏற்படுகின்றது என்பது கிராமிய நம்பிக்கை. இத்தகைய பிராந்திய வழக்குகள் சோலைக்கிளியின் கவிதைகளில் இயல்பாக வந்துவிழுகின்றன. ஆயினும் இவரது முதல் தொகுதியைவிட இரண்டாவது தொகுதியில் ஒப்பீட்டளவில் பிராந்தியம் குறைவு என்றே கூறவேண்டும். இத்தகைய பிராந்திய வழக்குகளுடன் சமயம் சார்ந்த பண்பாட்டு வழக்குகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். 'எட்டாவது நரகம்' என்ற தொடர் இத்தகைய வழக்கின் அடியாகவே உருவாகியுள்ளது. ஏழு வானம், எழு பூமி, ஏழு நரகம் உண்டென்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஏழாம் நரகம் நரகத்தில் மிக மோசமானது. இந்நம்பிக்கை மரபில் நின்று சோலைக்கிளி இவ்வுலகத்தை எட்டாவது நரகமாக உருவகிக்கின்றார். 'உயில்' கவிதையில் மீசான் கட்டை, வெள்ளைக் கொடி, குடை மல்லிகை ஆகிய பிரேத அடக்கக் சடங்கு சார்ந்த சொற் குறியீடுகள் இடம் பெறுகின்றன. முஸ்லிம்களின் மரணச் சடங்கு பற்றிய பரிச்சயம் இக்கவிதையை முற்றிலுமாய் உள்வாங்குவதற்கு அவசியமாகின்றது. இவ்வளவு பரிச்சயங்கள் இருந்தாலும்கூட சோலைக்கிளியின் கவிதைகளுடன் எல்லோருக்கும் ஒரு அத்தியந்த உறவு ஏற்பட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. கவிதை பற்றி நம்மில் பலருக்கு பல முற்கற்பிதங்களும் மனத் தடைகளும் உண்டு. கவிதைகளில் வெளிப்படையான கருத்துக்களையே தேடுவோர் பலர். அவர்களுக்கு சோலைக்கிளியின் கவிதைகளுடன் நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை. அறிவியல் போல் கவிதையிலும் ஒரு ஒற்றைப்பரிமாண மொழியினைத் தேடுவோர்க்கும் சோலைக்கிளியின் கவிதைகளுடன் நல்லுறவு ஏற்பட முடியாது. கவிதை பிற எல்லாக் கலைகளையும் போலவே அடிப்படையில் உணர்வுலகு சார்ந்தது. கற்பனை சேர்ந்து கலைவெளிப்பாடு கொள்வது. அவ்வகையில் சோலைக்கிளியின் கவிதைகள் நம்மிடத்திலும் உணர்திறனையும் கற்பனை வளத்தையும் வேண்டி நிற்கின்றன. அவை நம்மிடமும் இருந்தாலே நாம் அவருடைய கவிதை உலகுள் நுழைய முடியும். இந்நிலை அவரை ஒரு கவிஞனாக உறுதிப்படுத்துகின்றது. இந்த உறுதிப்பாட்டில் நிலை கொண்டு அவர் இன்னும் மேலே போக வேண்டும். அவருடைய உணர்வுலகும் உலகப் பார்வையும் இன்னம் விசாலமடைய வேண்டும். அடையும் என்றே நம்புகின்றேன். இத்தொகுப்பினை அவருடைய முதல் தொகுப்புடன் ஒப்புநோக்குகையில் அவர் துரிதகதியில் பரிணமித்து வருவதைக் காண முடிகிறது. இந்தப் பரிணாமம் எதிர்காலத் தமிழ்க் கவிதையில் அவருக்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே என் நம்பிக்கை. எம்.ஏ.நுஃமான் 'நூறி மன்ஸில்', கல்முனை-06 சிறிலங்கா 09-02-88. -------------------------------------------------------------------------------- பகுத்தறிவுத் தெருக்கள் இரண்டொருநாள் நாங்கள் பிரிந்திருந்தோம். ஒரு நெடுந்தூரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று எனக்குத் தெரியும். நாங்கள் சந்திக்காத தினங்களில்தான் எமது சமூகங்களுக்கிடையில் திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப! நமது நகரம் மீண்டும் தாலி அறுத்துக் கிடந்தது. எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்! அது பெருவிரலால் நடந்து கண்டபடி தூவியது கதைகளை. நகரத்தில் சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும் அமைதியாய் இருக்க மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால் தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது உணர்ச்சி! இன்று மூன்று தினங்களின் பிறகு உன்னைச் சந்தித்தேன். நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை உன்முகத்தில் கண்டேன். இருந்தாலும் நகரம் இயங்கவில்லை அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம் இன்றும் சரியாகப் பாயவில்லை. நாம் மட்டும் சினேகித்தோம் அந்தப் பொது இடத்தில் நின்றபடி உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி கருத்துகளை வெளியிட்டோம். பழையபடி உன்னோடு நானும் என்னோடு நீயுமென நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று புகவிட்டுக் கதைக்கின்ற, தினமும் கைசூப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற, இடத்திற்க நாம் போக மறியலுண்டு. தெருக்களுக்குத் தெரியும் தூவானம் அடங்கும்வரை அவைகள் தேடாது. 20.04.1994 ....... நினைவுகள் இந்த நெஞ்சைக் கழற்றி நாய்க்குப் போட்டால் நின்று போகலாம். அது இருந்த இடத்தில் களிமண் நிறைத்தால் ஓட்டை மறையலாம். நிமிடத்திற்குள் நிலத்தை வெட்டித் தண்ணீர் காணும், கப்பலில் பறக்கும், கடலில் மூழ்கி முத்தும் குளிக்கும். செத்துப்போனதை செவியில் பிடித்து இழுத்துவந்து கண்முன் வைக்கும். ஆடை உரியும், அலுத்துக் கொண்டு சுருட்டிப் படுத்தால் ஆளை உசுப்பும். சும்மா எனக்கு முதுகில் தட்டும், சுகமாய் இருக்கும். இருந்தாற்போல குணத்தை மாற்றி புழுத்துக் கிடக்கும் பொன்னாங்கண்ணியை கந்தப் பார்க்கும். கொத்தைக் காட்டி ஆட்டைக் கூட்டும் குதியில் தேனைத் திறாவி விட்டு நக்கச் சொல்லும். ஓ.... அவைகளுக்குத்தான் அற்புதம் தெரியும். அவைகளுக்குத்தான் அபார சக்தி. நுரையாகவும், குமிழியாகவும், முட்டையாகவும், நினைவுகள்.... அலையாகவும், சிலநேரம், சீறிக் கொத்தும் பாம்பாகவும் அவைதான்.... 23.04.1985 ....... வெள்ளை இரவு ஒவ்வொரு இரவும் இப்படித்தான், நாய்க்கறுப்பும், நாிக்கறுப்பும். ஒரு குட்டி முயலும் பச்சை இலையிலே வண்ணத்துப் பூச்சிகள் பீச்சிய வெள்ளை எச்சங்கள் சிலவும். நிலவென்றும்... வெள்ளிகளென்றும் ஒரு வெள்ளை இரவு வாராதா இந்த நித்திரைக் கண்களை ஒரு நாளைக்கேனும் மூடாமல் திறந்துவைக்க. இவை மூடிக் கொள்வதால் ஆயிரம் கனவுகள் வருகின்றன. இதுவரை காணாத எத்தனையோ சுகங்களை அந்தக் கனவுகள் விற்பனைக்கு மாதிரிகள் காண்பிப்பதுபோல் காட்டி என்னையும் ஒரு கொள்ளிப்பேய் பைத்தியம் போல கைக்குள் போட்டுக் கொள்வதால்தான் சொல்கிறேன்.... இனிவரும் இரவாச்சும் இந்த மனிதனுக்காய் வெள்ளை பூசிக்கொண்டு வரட்டும். 23.04.1985 .......... எனது தாய்ப்பால் எனது தாய்ப்பால் ஒரு ஈயக் குழம்பாக இருந்திருக்க வேண்டும். எப்படி முடியும் மிகவும் பசுமையாக இன்னொரு முலையும் இல்லையா என்பதைப்போல அந்தப் பாலில் குளிர்மை நிறைந்திருந்தால், இன்று சுற்றி வரவும் அக்கினிக்குள்ளே வாழ்ந்து தொலைக்க? அப்போது நான் மெதுமெதுப்பான முலைகளின் கறுத்தக் காம்புகளைச் சப்பியிருக்க நியாயமில்லை! சூரியனின் மையப் புள்ளியில் வெறும் முரசுடன் கூடிய வாயை வைத்து சூப்பிடும் துணிச்சலைப்போல எதையோ சூப்பியிருக்கவேண்டும்... அதனால்தான் எனது தாயும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்திருக்க முடியாதென்று நம்புகிறேன். அவள் நரகத்து நெருப்புகளின் மொத்த வடிவமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் இல்லையென்றால், இவை எல்லாமே கற்பனையாகி ஒரு சாதாரணப் பெண்ணுக்கே நான் மகனாகப் பிறந்திருந்தால், ஒரு குண்டுவெடிப்பின் பயங்கர வெளிச்சமே என் இரண்டு கண்ணிலும் முதன் முதலாய்த் தெரிந்து தைரியமூட்டி.... எதுவோ நடந்திருக்க வேண்டும் பச்சையுடன் நெருப்புகளைத் தின்ன எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி! 04.05.1985 ....... எட்டாவது நரகம் நீ நரகத்தைப்பற்றியோ அச்சப்படுகிறாய்? அது இலகுவானது. அங்கே மலைப்பாம்புகள் ஆயிரமாய் இருந்தாலும் அஞ்சத் தேவையில்லை அதைப்பற்றி. வேதம் சொல்வதைப் போல சீழிலான ஆறுகளும் செந்தீயில் காய்ச்சிய ஈயக் குழம்புகளும் பாவ ஆத்மாக்களுக்காய்ப் படைக்கப்பட்டிருக்கலாம். செவிட்டு மாலிக் அதன் அதிபதியாகி பலநூறு தடவைகளுக்க ஒரு தடவை "பேசாமல் கிடவுங்கள்" என்று கட்டளை இடலாம். அழு குரல்கள் சொர்க்கத்தில் உள்ளோரை சிரமத்துக்குள்ளாக்கி அவர்களின் கோபத்தையும் சாபத்தையும் சம்பாதித்தும் கொள்ளலாம். நீ நரகத்தைப்பற்றியோ அச்சப்படுகிறாய்? நான் அதைப்பற்றி நினைப்பதே கிடையாது. ஏழு நரகங்கள் உண்டென்று சொல்வார்கள். நாம் கொடுமைகள் நிறைந்த ஏழாவது நரகம்தான் சென்றாலும் பின்னொரு நாளில் மன்னிப்புக் கிடைக்குமாம்... நான் நினைப்பதும் ஒரு பொட்டுப்பூச்சியைப்போல் பயந்து சாவதும் மன்னிப்பே கிடைக்காத எட்டாவது நரகமாம் இந்த உலகத்தைப் பற்றித்தான்! 13.06.1985 ....... என் வரிக்குதிரைச் சவாரி நானும் ஒரு வரிக்குதிரை ஓட்டுகிறேன். என் தலைமுறைகள் ஒரு பெரு வெளியைக் கடக்க இந்த யானைவிழுந்த பள்ளத்துள் இருந்து மீண்டு நிம்மதியாய் மூச்சுவிட, என் ஆசைகள் நிறைவேறப் பிராத்தியுங்கள். ஒரு கோழியின் இறகு உதிர்ந்தால் மறுகோழி கொக்கரிக்குமே அதைப்போல... அண்டி தகராத குஞ்சுக்கும் சிறுதுன்பம் நேர்ந்தால் வேலியெல்லாம் காக்கைகள் கொடிகட்டிக் கதறிடுமே அதைப்போல.... என் ஆசைகள் நிறைவேறப் பிரார்த்தியுங்கள், உங்கள் பிரார்த்தனைகள் ஓடுகின்ற தண்ணியிலே எறியப் பட்டதுவாய் ஒரு போதும் இருக்காது. உங்கள் பிராத்தனைகள் இருதயமே இல்லாத காதலிக்கு வரைந்த மடல்போல ஆகாது. நீங்கள் மனிதர்கள். நானும் உங்களைப்போல நகத்தாலே சுரண்டுபவன். வேதனைகள் வரும்போது அதையேதான் சப்புபவன். நாங்கள் மனிதர்கள். ஒரு பெண்ணோடு சேர்ந்தே பிள்ளை பெறுபவர்கள். அவள் முழுகி முடிந்ததும் மீண்டும் பிணைபவர்கள் என் ஆசைகள் தீரப் பிரார்த்தியுங்கள். அதுவும், உயிரோடு கிளப்பப்பட்ட ஈசா நபி மீண்டும் டமஸ்கஸில் இறங்கும் முன்பாக...முன்பாக... 06.07.1985 ........... உயில் ஒரு மண்ணறையாச்சும் கிடைக்குமென்பார்களே எனக்கு அதுவும் வேண்டாம். இரண்டு மீசான் கட்டைகள் ஓநாய் விரட்டும் வெள்ளைக் கொடி நான் நரகவாதியா இல்லை சொர்க்கவாதியா என்று நிர்ணயிக்க நடும் குடை மல்லிகைக் கிளை எதுவும் எனக்கு இல்லாது போகட்டும். ஒரு குழி குஞ்சிக் கோழிபுதைக்கும் மடு அல்லது, சிறுநீர் பாய்த்து சுருப்பெழும்பிய துளை, இறந்து என்னாவி தென்னோலைக் குருத்தில் தங்கிவிட்ட பிற்பாடு கிடைத்தென்ன? அதுவும் போனால்தான் என்ன. ஒரு சோடி இழந்த குருவி என் மீசான் கட்டையில் குந்தி இளைப்பாறத் தேவையில்லை மயானத்தில் மேய்கின்ற ஆடு எனக்காகக் குத்தப்பட்ட குடை மல்லிகைத் துளிரை வாயில் வைத்து அமர்த்தி கத்திப் புழுக்கையிட வேண்டாம். என் அடக்கஸ்தலத்தைச் சூழவும் புல் பூண்டே முளைத்து தும்பி தொத்தாட்டிக் கவையில்லை, நீங்கள் பாவிக்கும் விதமாக மூலைக்குள் செத்த எலியாய் நிலத்தோடு கிடந்து ஊதி வெடிக்கிறேன். என் மண்ணறையை உங்களுக்கே தாரை வார்க்கிறேன். 08.07.1985 ............ நான் எனது நடை சறுக்குமென்றா நீ நினைத்தாய்....? தாமரையில் தெளித்துவிட்ட தண்ணீரா எனது நடை? தோட்பட்டை நனையும்படி காகம் முக்கிவிட்ட எச்சத்தின் இரு சொட்டா எனது நடை? சொல்லிவிடத் தேவையில்லை! உன் தலைக்குமேல் என்பாதம் பதிவதனை நீயறிவாய். பதிந்து அது உன்னுடைய விதை வரைக்கும் மிக எளிதாய் புதைவதையும் நீயுணர்வாய். என்னுடைய பாதங்கள் இரும்பு கொண்டு செய்ததல்ல. நீ வைத்த நெருப்பினிலே சூடு கண்டு இறுகியது. சுட்டுப்போய், சுட்டுப்போய் அக்கினியைப் பழக்கியது. கல்லென்ன மேடென்ன என்பாதம் நடைபோடும் நீயென்ன தீயென்ன கூசாமல் அடிவைக்கும். ஒரு பூவும் நுனிப்புல்லும் சிறு புள்ளும் சிற்றெறும்பும் செத்ததென்றால் கேளு! இதயத்தைக் கழற்றி எறிந்து விடுகிறேன் அது திராட்சைப் பழம்போல சுருங்கச் செய்கிறேன். 09.09.1985 ............. இறகு உதிர்ந்த கிராமம் ஊரே நெட்டை சொல்லி அடிபட்ட அப்பாவி போல விக்கி முகம் விறைத்தாற்போல் கிடக்கிறது. 'ஊர்' அது என்ன செய்யும்? யானையும் யானையும் மறியேறும்போது சும்மாகிடந்த தகரைப்பற்றை மிதிபடுமே, தகரைப்பற்றை அதைப்போல மிதிபட்டு மிதிபட்டு இறகுதிர்ந்த கோழியைப்போல உருக்குலைந்து தவிக்கிறது. நிலவு ஒழுகுகிறது. வாயில்மண், எதுவும் செஞ்செழிப்பாய்த் தெரியவில்லை. சூத்தை பிடித்து இறந்த பற்களின் இடவு தெரியுமே, இடவு அந்தமாதிரி மனிதர் மிதித்துத் துவைத்த தடங்கள் மிகவும் அசிங்கமாய் மூக்கறை போலவும். இலையான் பூரும் வாயனின் வடிவிலும் தெரியத் தெரிய.... இந்த மனசு தாங்குமா? இல்லை, வாலைக் கட்டி விட்ட தும்பியாய் திரிந்த காற்று வளர்த்த பூனைபோல் காலைக் கட்டிக் கொண்டு திரியுமா? எங்கள் கிராமம் அவியுது! முக்கி முக்கிப் பிள்ளை பெறுகிற மலட்டுச் சாதியாய் பிறந்த நாடு கிடந்து நெருப்பில் உழல்கையில் என்ன புதுமை? என்ன இனிமை? நான் அடையப் போகிறேன். வீணாக இந்த மினக்கட்ட நிலவு இடும்புக்குக் கோர்க்கிறது மாலை! என்னவாம் சிவந்த கோப்பத்தைப் பூச்சிக்கு வந்து விழுகிறது தோளில்....? 12.09.1985 ............. ஒரு மாரி நோக்காடு இருட்டுது இனிப் பெய்யும். பெய்யத்தானே வேண்டும் ஒரு பாரிய மழை பயிர் பச்சை தழைக்க.... பொச்சுப் பொச்செனக் காற்று தலைமயிரைப் பொசுக்கி விட்டதுபோல இடைக்கிடை ஓலையிலே உரசல். அம்மி தகரும். இல்லாட்டி மலடு தட்டிப்போன வானம் முக்கி முக்கி இடி முழக்கத்தை ஈனாது. அதுதானே எத்தனை நாளைக்கு அருங் கோடை! வெறும் உரலைப்போட்டு இடித்தாலும் அவலைக் காணலாம். ஒரு பாட்டம் மழையைக் காண்பதுதான் குருடனக்கக் கட்டெறும்பு போலென்ற கதை மாறி; மழை பெய்யும். இந்தமாதிரி மின்னல் வெட்டினால் ஒரு வானம் என்ன ஏழு வானமும் பாளமாய்ப் பிளந்து கடலைக் கொண்டுவந்து ஊற்றும். பார் நெருப்பில் தீக்குச்சி கொளுத்துவதைப் போல மின்னல். எனக்குத் தெரியும், ஒரு காலத்தைப் புரட்டுவது அவ்வளவு இலக்கல்ல. இங்கே கோடை புரட்டப் படுகிறது. வா குடையைத் தேடுவோம்.... 02.10.1985 ........... பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில் அடுப்பு நூர்ந்து புகைகிறது. யார் அதற்குள் தண்ணீரைச் சிலாவியது? அல்லது காலால் அடித்துக் கோடிக்குள் ஒற்றியது? வானம் முழுக்கச் சிவப்பு, இளநீலம், பச்சை. பழுப்பு.... இது பொன்னந்தி மாலை. ஒரு கிழவி பொல்லை ஊன்றிக்கொண்டு திரிவதுபோல் மேகம் வேடம் தாித்து மனதை வாலாயப் படுத்துகின்ற நேரம். இங்கே... இப்போது... மரங்களெல்லாம் அரும்பாமல் பூக்கும். வாலறுந்த பட்டம்போல் நுனிவாலில் தொங்கும் துண்டு கிழிந்த நிலவைப் பார்த்து ஆசையினால் கையுதறும் காலுதறும். சிறுவெள்ளி வானத்தை விரலாலே துளைக்கும். பகல் ஆடு கார்ந்த கிறுசலியாச் சிராம்பும் ஊதாமல் குழையெடுத்து மந்திரித்து அடிக்காமல் விஷமிறங்கி இதுவரை செருகிய கண்திறந்து பார்க்கும் மீண்டும் கடியன் நிலத்திலே ஊரும். கொக்குப்போல் வளர்ந்த நெடிய வேப்பையின் துளிருக்குமட்டும் மஞ்சள் வெயில் இளஞ்சூட்டில் கொடுக்கின்ற ஒத்தடத்தைக் கவனித்து பழந்தின்று கொட்டையும் போட்ட நரைப்பூனை தெள்ளுதிர்த்தும் வைப்பு முடிந்து அடைகிடந்த குறுக்கு இரு என்றால் படுக்கம் படுவேசை போல கப்பை அகட்டி மல்லாக்கப் புரளும். பேய் நெல்லுக் காயவைக்கும். 25.10.1985 .............. வால் மனிதர்கள் வெடிக்கும். இன்னமும் குண்டுகள் வெடிக்கும். இங்கிருந்து சுடப்போகும் துப்பாக்கி ரவையினால் வெள்ளிகள் மரணிக்கும். அதனால், பொத்தல் விழுந்து ஆகாயம் தொங்கும் நிலவு சில நேரம் நாளைக்கே... இது விஞ்ஞானகாலம். விரல்சூப்பும் குஞ்சு நோனியும் போர்க்கருவி தயாரிக்க ஆற்றல் பெற்ற நேரம். நீ சொல்லு, சரியா? பிழையா? அந்தக் காலம் போச்சு. நாலு வெற்றிலையை ஒரு அள்ளு பாக்குச் சீவலை போட்டு இடியுரலை மொக்கு மொக்கென குத்தி ஆத்திரத்தை மூத்தப்பா தணித்த அந்த.... காலம் போச்சு. இன்றைக்கு யார்தான் இடியுரலைத் தாக்குவது? ஊரும் கடியன் கடித்து தோற்சிவந்து விட்டாலும் இருக்கிறது குண்டு. எடுத்த எடுப்பினிலே ஒரு அந்தை கெழிக்க இருக்கிறது துப்பாக்கி இது விஞ்ஞான காலம், தொட்டிலுக்குள் பிள்ளை பூப்பார்த்து மகிழாமல் புதிதாக ஏதாச்சும் ஆயுதத்தைத் தயாரிக்க என்ன வழியுண்டு என்று ஆராயும் அளவுக்கு இரத்தவெறி பாலருந்தும் போதே தலைக்கேறி ஆட்டும் அநியாய யுகம். வாப்பாவே! உன் இந்திரியத்தில் பிறந்த எனக்கே ஆபத்து. இரண்டுகை இரண்டுகால் மனிதர்களால்தான், மிகவும் அச்சுறுத்தல். ஆனபடியினால்.... என் இந்திரியத்தில் உயிர்ப்பிக்கும் சிசுவுக்கு யுத்தப் பயிற்சியை கருப்பையுள் நடத்துவதே கால்வாசித் தலைமுறைக்காவது மிக்க உசிதமாய் இருக்கும் அல்லவா? 21.12.1985 ..... பாலூட்டிகள் குழந்தாய்! உனக்கு நான் முலையைத் திறந்து பாலூட்டுவது சங்கடமாய் இருக்கிறது. நீ என் பூவரசம் மொட்டுத்தான் வால்வெள்ளி பார்க்கவென்று நானெழும்பிக் கண்ட நடுச்சாமப் பிறைதான். உயிர்தான் இந்த உடம்பின் ஒவ்வொரு உரோமமும் இன்னும் சொன்னால் என் ஈரல் இளமாங்காய் பித்து எல்லாமே நீதான். என்வயிற்றில் உண்டான காய்தான். அதிலொன்றும் குறையில்லை. என் முகவெட்டை அப்படியே உரித்துக் கொண்டு பிறந்த கிளிதான். அதிலொன்றும் குறையில்லை. என்றாலும் உனக்கு நான் முலையைத் திறந்து பாலூட்டுவது சங்கடமாய் இருக்கிறது. இந்த முலைப்பால் என் இரத்தம் நிறம்மாறி வருகின்ற அமுதம், கோதுடைந்த கோழிக்கு கோழி ஊட்டாத ஒன்று. மரங்களிலே கேருகின்ற எந்தக் குயிற் பேடும் தன் நாக்குச் சிவந்த குஞ்சுக்குப் பிரியமுடன் ஊட்ட விதியற்றுப்போன பொக்கிசம். இந்தப் பாலைத்தான் பத்தியமாய் உனக்குத்தான் ஊட்ட மிகவும் சங்கடமாய் இருக்கிறது. இன்றைக்கு நீ மொட்டு. மனங்குருத்தைப் போல போட்ட இடத்தில் மல்லாக்கக் கிடந்து "உம்மா" என உச்சி குளிர்ந்திட கத்தி விறைக்கின்ற பாலரசி. நாளைக்கு.... இது என்ர திராய்க் குஞ்சு. 25.04.1986. ............ கால்மாட்டுச் சுழற்சிகள் மயிலா நானொரு இறகை உதிர்த்திவிட்டுப் போவதற்கு? கண்ட இடத்திலும் நின்ற இடத்திலும் சூடு சுணையின்றிப் பேட்டோடு புணர்கின்ற பொிய கழிசறை சேவற் கோழியா சூத்தாம் புட்டியில் திறாவிவிட்டுத் திரிய? என்னோடு எத்தனைபேர் மனக்குறுக்குத் தட்டினரோ? இதயத்தை அடவுவைத்து ஈக்கிற் சதையாட வெந்து புழுங்கி காயத்தில் சுடுநீரை ஊற்றிக் கொண்டு ஒப்பாரி வைப்பாரோ? உலகெங்கும் மேல்மண்ணைக் கீழ்மண்ணாய் மாற்றுகின்ற அநியாயம். எழுகின்ற சூரியனைத் துலாக்காலில் கட்டிவைத்து ஈவு இரக்கமின்றி உரிக்கின்ற அக்கிரமம். தாய்க்குப் பிள்ளையில்லை. பிள்ளைக்குத் தாயில்லை. வாங்கும் இருதயத்தைப் பொருத்துகின்ற நவயுகத்தில் கொட்டைப் பாக்கும் துள்ளித்தான் தெறிக்கிறது. சகிக்க முடியுதில்லை கண் மாணிக்கம் பார்க்குதில்லை. பூசி மினுக்கி அலங்காரம் பண்ணுகின்ற முகத்தில் ஒட்டறையைப் படியவிட்டு மானிடர்கள் காலைத்தான் பேணுகின்றார். செருப்பணியும் அதற்குத்தான். சிங்காரம் பண்ணி மருளுவதை யோசித்தால் ஒரு மல்லிப் பேயனைப்போல் மூளை கூழாகிறது. கூசாமல் ஒரு சொட்டுக் கவலையுமே இல்லாமல் சொன்னாலும் சொன்னான் நாற்றவாய் விஞ்ஞானி உலகம் உருண்டையென்று.... 25.4.1986 ......... கொம்பன் காற்று உசும்பு காற்று. ஒருமாதிரி தலையைச் சவட்டி.... கொச்சிக்காய் கடித்த பாலரசிபோல முழிசி மிலாந்தி... பிச்சைக்காரச் சிறுமியின் மயிராய் முடிச்சுக் கட்டிச் சுருண்டு கிடக்கிற பச்சை சிவப்பு குரோட்டன் இலைகளைத் தொட்டுத் தடவி... ஈரும் ஒட்டும் தேடித் தேடி பெண்டுகள் பேன்பார்க்கும் விதத்தை ஒத்ததாய் நீக்கி விலக்கி... இவர் காலம் இல்லாக் காலம் வந்த மனிதர்! என்னவோ எதையோ நினைத்துக்கொண்டு நீண்ட நாட்களாய் மிக நீண்ட நாட்களாய் கோழி திருடிய கள்ளனைப்போல நின்ற இடத்திற்கும் விசளம் சொல்லாமல் மாயமாய் மறைந்த திண்டான் பாஞ்சான். பூவைப் பார்க்கிறார். புல்லைப் பார்க்கிறார். புல்லின் ஓலையில் முட்டையிடுகிற கைக்குச் சிறுத்த வெண்ஈ வரைக்கும் இந்த மனிதர் நினைத்த மாதிரி அழுகவுமில்லை. அழியவுமில்லை. பழுக்கவுமில்லை. புழுக்கவுமில்லை. மனிதர் திகைத்து என்னை நோக்கினார். கரப்பான் பூச்சியை உறுஞ்சிக் குடிக்கிற சீனாக்காரனின் எழுத்தின் தோதாய் வானம் முழுக்க ஒட்டியும் விலகியும் அழகு தருகிற வெள்ளியைப் பார்த்து நான் மருண்டிருந்தேன். நான் மருண்டிருந்தேன். உச்சந் தலையால் நடக்க நினைத்தவர் குப்பற விழுந்தார், எனினும் மீசையில் மண்பட வில்லைபோல் நாலு பூக்களை கிள்ளியெறிந்தார். அவையும் காய்ந்து போன சருகுச் சுக்குகள். 10.06.1986 .............. இதயத்துள் உறைகின்ற மேகம் ஒரு சிறகுமுளைத்த கவிஞனைப்போல மேகம் சுதந்திரமாய்த் திரிகிறது. ஆகா அது வானம். அடியும் முடியும் தெரியவே மாட்டாத திறந்து கிடக்கின்ற சுவனம் அதைப்பார்த்து மயங்குவதா? இல்லை, மேகத்தைப் பார்த்து மனம் ஏங்குவதா? நான் நினைக்கிறேன், இந்த நூற்றாண்டில் வெண்மேகம் மட்டும்தான் பரிபூரணமான சதந்திரத்தை அனுபவிக்கின்ற ஒன்றென்று. இது தும்பிக்குக் கூட சிறகுகள் நோண்டப்பட்டு வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம். 'மேகம்' அதற்கு வாலும் இல்லை சிறகும் இல்லை வெட்டுதற்கு. அதனால்தான் அது சிறு குழந்தையின் மனம்போல பூக்கிள்ளி முகருவதும் பிறகு கழிப்பதுமாய் வானப் பூந்தோப்பில் மேய்கிறது மேய்ச்சல்.... இந்த வகையில்தான் நான் வெண்மேகத்தை விரும்புகிறேன். அதைப்போல நானுமொரு பஞ்சுப் பொதியாகி நினைத்தால் நின்று தேவையென்றால் நடைகட்டி யாரின் கெடுபிடிக்கும் வால்முறுக்க மாட்டாமல் வாழும் நிலையொன்று எனக்கும் கிடைக்குமென்றால் எப்படி இனிக்கும் சுகம்! இன்று மிகவும் சுதந்திரமாய், ஒன்றுக்கு ஒன்று குதிநக்கும் கொடுமைக்கே இடமற்றுக் காற்றுப்போல் திரிகின்ற ஒன்றென்றால், நான் மீண்டும் வலியுறுத்த நேர்கிறது அது வெண்மேகமாகத்தான் இருக்க முடியுமென்று. என்பிரிய வெண்மேகத்தைப் பற்றி இனியாச்சும் நானொரு கவிதை எழுதவேண்டும். மனம் அதிகாலையைப்போல குளிர்ந்து கிடக்கையில் இருக்கின்ற கற்பனை அனைத்தையும் அள்ளித் தெளித்து பஞ்சு மேகத்தைப் பாடி சிம்மாசனமேற்றிப் பார்க்கத்தான் வேண்டும். 11.06.1986 ............... கவிதை எழுதாத ஒரு கோடைத்தினம் 1986-ல் நான் சூரியனைப் பார்த்துத்தான் கொட்டாவி விட்டிருந்தேன். இது சரியான உஷ்ணம். கொடுமைகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போச்சோ? இந்தக் கொதிப்பில் மண்ணுக்குள் நெளிகின்ற நாக்குளியும் கருகும் என்று...மனதுக்குள் புலம்பி.... அப்போது அழகே அழகா விரவியது பாழடைந்த ஒல்லாந்தர் கோட்டையினைப் போல வானம் கிடந்தாலும் கவையில்லை மயிருதிர்த்தி வாலிபத்தை மீண்டும் பெறவிருந்த கிழட்டுக் காகமொன்று அழுத கரகரப்புள் தேனா கசிந்துவரும்? நிச்சயமாய் இனிமையில்லை. நியாயமாய் இருந்தது உஷ்ணம். ஒருவகைப் புழுக்கம். திரும்பும் இடமெல்லாம் வெறுப்பான சூழல். ஆமாம் தெருவின், வேலி ஓரத்தில் ஊர்ந்த சிறு நிழலில் ஊர் பேர் தெரியாத அன்னியப் பரதேசி வயிற்றின் உழைவைச் சமாளித்துக் கொள்ளுதற்காய் குந்தித்தான் போயிருக்கான். இப்போ, நிலவு கிளம்பியும் அடிக்கிறது நாற்றம். 14.06.1986 ............. நவீன இலங்காபுரி (1986 ஆகஸ்ட் 10, கல்முனை இனக்கலவரத்தின் வெறுப்பாக...) சொன்னவர் யார்? கேளு, 'ஆம்ஸ்ரோங்' இன்னும் சந்திரனில் இறங்கவில்லை. இந்த 1986லும் விஞ்ஞானம் தழைத்ததென்று சொன்னவனின் வாய்க்குள் மண்ணள்ளிக் குத்து வாய்த்தையல் போடு பேசாமல் இளித்த வாயனை இருக்கச் சொல்! டேய்! முட்டாளே நம்பு செய்மதியும் மிதக்கவில்லை சத்தியமாய் பிள்ளை குழாய்களிலே பெற்று கொஞ்சவில்லை இரத்தம் பச்சை சிவப்பென்று எத்தனையோ வர்ணத்தில் இருக்குதென்று நினைக்கின்ற யுகத்துக்குள் வாழ்ந்துகொண்டு... சந்திரனின் கற்கள் கொண்டுவந்தானென்று யாரப்பா சொன்னான்? அடி பழசால் வாய்க்கு. இங்கே! கடலுக்குள் ஆய்வு நடத்துவதும் சுத்தப்பொய் பெண்ணுடைய கருப்பைக்குள் உறைகின்ற சதைக் கட்டி குஞ்சாமணியுள்ள குழந்தையா, வேறேதுமா என்றெல்லாம் இவர்கள் அறிகின்ற அளவுக்கு முன்னேற்றம் நடந்திருந்தால்.... இந்த இராவணர்கள் எங்கிருந்து வந்தார்கள்? முகத்தைப் பார்த்தால் மலைவிழுங்கிபோல தெரிகின்ற அளவுக்கு அச்சத்தை உண்டுபண்ணும் மனுக் குலத்தின் துரோகி உருமாறும் அரக்கர் பட்டாளம் எங்கிருந்து கண்முன்னே தோன்றியது? நீ நினைப்பது மாதிரி இது நவயுலகே அல்ல அனுமான் எரித்த இலங்காபுரி, போய்ப்பார், இன்னும் சீதைகள் சிறையிருக்கக் கூடும். 30.08.1986 ................. பூனைக்கண் வெள்ளி மூலைக்குள் இருக்கும்போதே எரிச்சல். போதாக் குறைக்கு எழும்பி நிமிர்கின்ற தலைவாசல் தொங்கலிலே வந்திருக்கு சனியன். பூனைக்கண் வெள்ளி! கண்டால் எனக்கு நரிவிரட்டுகின்ற பூனைக்கண் வெள்ளி! வெள்ளியென்றால் ஒரு வடிவு அந்தாசி அசில் வேண்டாமா! நாலும் சேர்ந்திருக்கும், அண்ணார்ந்து பார்த்தால் நக்கரைத்துக் கைதட்டும் குழந்தைகளின் கண்ணுக்கும் ஏதோ போல்தெரியும். பார்த்தாலும் பசியாறிப் போகும். இது எந்தக் காலத்தில் விதைவிழுந்து முளைத்ததுவோ? ஒரு காந்தம் தேய்த்து அதற்குள்ளும் ஆள் கொஞ்சம் எலிகொழுத்தாற்போல கொழுத்துத் தனிமையிலே, தனியேதான் எந்நாளும் குறட்டைமீன் இல்லாத பள்ளத்துப் பொட்டியானாய் திமிரோடு எழுகின்ற இவர் கண்ணில் வீரைக் கொள்ளித் தணலள்ளி நின்றாற்போல் ஏறிய ஆளில்லை, அங்கே.... அடை சாத்து கதவை 19.10.1986 .......... தொப்பி சப்பாத்துச் சிசு தொப்பி காற்சட்டை சப்பாத்து இடுப்பில் ஒரு கத்தி மீசை அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒருகாலம் வரும். அந்த தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில் பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது. எல்லாம் தருணத்தில் ஒத்தோடும். சோளம் மீசையுடன் நிற்காது. மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற துவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும். வெள்ளை சிவப்பு இளநீலம் மஞ்சள் என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்ற பூமரங்கள் கூட சமயத்திற்கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை அரும்பி அரும்பி வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும். குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும் இளநீர் எதற்கு? மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற தலைமுறைக்குள் சீவிக்கும், கொய்யா முள்ளாத்தை எலுமிச்சை அத்தனையும் நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய் இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது. வற்றாளைக் கொடி நட்டால் அதில் விளையும் நிலக்கண்ணி வெண்டி வரைப்பீக்கை நிலக்கடலை தக்காளி எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல், முகர்ந்தால் இறக்கும் நச்சுப் பொருளாக எடுத்தால் அதிரும் தெருக்குண்டு வடிவாக உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த... உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும் மனிதர் எவரிருப்பார்? கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும் ஆட்கள் அன்றிருக்கார்! இவர்கள் பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப் புராதன மனிதர்களாய் போவர். 20.10.1986 ................ தொட்டில் பாப்பாக்கள் இனி விரல் சூப்ப மாட்டார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு யுகமா? விரல் சூப்ப கை நக்க காட்டுப் பீ விட்டுக் கத்த..... றப்பர் பொம்மையிலே உடலுறவு கொண்டு கருக்கட்டும் காலத்துச் சிசுக்கள் வாப்பாவின் பெயரென்ன? அவர்களுக்குத் தெரியும். அவர் வந்த வழியென்ன? அவர்களுக்குப் புரியும். உம்மா 'இசாக்காலம்' புளிமாங்காய் சப்புகையில் உப்புக்கல் வைத்துச் சப்பச் சொல்வார்கள். கருப்பைக்குள் இருக்கையிலே ஆகாரம் விழும்போது ருசிபார்த்து குறைநிறையை தெரிவிக்கும் குழந்தைகள். நம்மைப்போல் கைசூப்பி அண்ணார்ந்து பூப்பார்த்து முலைப்பால் குடிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை விழுந்தாற்போல் அவர்கள் எழும்பி நடப்பார்கள். எழும்பி நடக்கையிலே காலுக்குள் சிக்குகின்ற பொக்கணிக் கொடியையும் கத்தரித்துக் கொள்வார்கள். பாப்பாக்கள் இனி விரல் சூப்ப மாட்டார்கள். இந்தத் தொட்டில் தாலாட்டுப் பாட்டெல்லாம் ஆடவும் பாடவும் 'உருப்படிகள்' கிடையாதே! 23.10.1986 ............ கருக்கல் அந்தப் பெரிய கரிய வாயகன்ற சூட்டு மலைகளுக்குள் பேயுறையும் சூட்டு மலைகளுக்குள் சூரியன் போய் ஒரு சப்பாணி மாதிரி உட்கார்ந்து கொள்ளும். வானமெல்லாம் என்னுடைய இதயத்தைப் பிழிந்த குருதி வியாபித்துக் கிடக்க, இரவுப் பறவைகளில் நாலைந்து புறதானம் காட்டித் திரிந்தாலும்.... தலையாலே நெடுத்த உலக்கை விழுங்கித் தென்னைகளின் மீது இரத்தம் உறைந்து முகம் செத்து காகங்கள் விக்கிவிக்கித் துக்கிக்கும். யார் அந்த மேகத்தைப் பிடித்து ஓடாமல் சும்மா பனியுறைந்த தடம்போல கிடக்கச் சொல்லியது? இடைக்கிடை வீசுகின்ற காற்றில் பூ கழன்று கொட்ட அவளது ஞாபகம், அந்தக் குதிரைவால் கூந்தல் அமசடக்குக்காரி தலையினில் முடிகின்ற சின்ன மலர்களின் சாயல் எல்லாம் மனக்கண்ணில் வந்துவந்து நிற்க, நான் மேலும் பலதடவை வானத்தை ஆராய்வேன்... திசையறி கருவியும் காட்டாத அந்த திசையில் தெரிகின்ற இருண்ட கண்டத்தில் இன்னும் ஒரு வெள்ளி முளைக்கின்ற சாத்தியம் இல்லை. ஏனிந்த இருள்? 24.10.1986 ............... சிலும்பல்கள் உன்வரையில் இந்த அத்திமரம் பூக்கவில்லை சகோதரி. வருந்துகிறேன். நீ வாழ உத்தரிப்பேன். தள்ளி இருந்தேனும் உன் நலத்தில் கண்வைப்பேன். விருப்பமென்றால் தொடர்ந்தும் பழகு. நான் அண்ணன் தம்பி உறவென்று நெசவடித்த நமது உறவெல்லாம் நெடுநாட் பழக்கத்தில் நீண்டதுதான். ஓராண்டா? இல்லை, ஒன்றோடு இன்னும் ஒன்றைக் கூட்டுகின்ற நெடிய காலகட்டம். கிட்டத்தட்ட கழுதைக்கு ஒருவயதைக் கூட்டிக் காட்டுகின்ற எல்லை. நினைத்துப் பார்த்தால் இனிப்பாயும் இருக்கிறது. வசந்தகாலத்து நிழல்வாகைக் கொப்பொன்று பெயர்ந்து விழுந்ததுபோல் உன்னை நினைத்தால்தான் மனச்சோர்வு எழுகிறது. இப்போது கேள். நான் வருவேன், எங்கே? அலுவல் தளத்திற்கு. நீ தலையில் பூச்சூடி இருக்கின்ற சில காலைப் பொழுதுகளில் நான் வருவேன், எனது கடமை நினைப்புக்கு. உனக்கு குண்டுமல்லிகைப் பூவாசம் கொண்டுவந்து நானெங்கே தந்தேன்? காற்றுக்குப் பறக்கும் உனது கொட்டான் கூந்தலிலே ஒருமயிராய் மாறி நானெங்கே சிக்குவைத்தேன்? நீயேன் கற்பனையில் மணங்குடித்தாய் என் ஈரல் கொழுந்தே? இந்தக் கவிஞனுக்கு இப்படியாய் தொல்லைகள் சங்கடங்கள் எல்லாமே உண்டேதான். என்றாலும் உன் பெயரால் இதயம் நோவெடுக்கும். நெருஞ்சி குத்தியதாய் ஒரு சொட்டு கூடித்தான் அதிலே வலியிருக்கும். மடைச்சி! என் பிரிய மடைச்சி! ஈர்க்கும் இல்லாமல் பசையும் இல்லாமல் வெறும் தாள் ஒட்டி நூலில்லாப் பட்டம் நீயேற்ற நினைத்தாலும் அது நடத்தல் சாத்தியமோ? இதோ என்னுடைய உள்ளத்தை எட்டிப்பார். இதற்குள் உன் பிரிவு, நீ அடிக்கடி சொண்டு நீட்டுகின்ற பொய்க் கோபம், எல்லாம் இருக்கின்ற அந்தஸ்தை நோட்டமிடு. என் இரத்தம் தவறுதலாய் தீ வளர்த்துக் கொண்டதையும் மன்னிக்க முடியும்தான். 30.11.1986 ........................... ஒன்றிப்பு ஆனாலும் மழைதான். நீ கூப்பிட்டுக் கத்தியும் எழுந்துவர முடியாமல் கவட்டுக்குள் பூனை மனிதச் சூட்டிற்காய் எப்போதோ வந்து வாடி அடித்ததையும் நீ கூப்பிட்ட சத்தத்தில் பதாலித்து முழித்துத்தான் அறிந்தேன், ஆனாலும் எழுந்துவர முடியவில்லை கவட்டுக்குள் கைவைத்துப் படுப்பேன். நீ வந்து திறந்த கதவின் இடுக்காலே என் கண்பார்வை சென்று தலைவாசல் தங்குகையில் தெரிகிறது அலரி தலை கவிழ்த்து நிற்பதுவும் மல்லிகை சந்திறங்கி அடைமாரித் தாக்கத்தால் கட்டுக்கோப்பே குலைந்து விரித்தவிரல் போலத் தூங்குவதும் அதன் கீழே சில கோழி தோப்புக்கரணம் போட நிற்பதைப்போல் நிற்பதுவும், இன்னும் மண்ணூறிக்கிடப்பதுவும் தெரிகிறது. சிணுசிணுத்த மழைத்தூற்றல் கூடத்தான். காலைப் பொழுது சூரியனோ வரவில்லை. அண்ணாவி இல்லாமல் பொல்லடிக்கும் விதமாக எல்லோரும் பகலென்று எழுந்து செயற்படுதல் மாரிமழைக்கும் உற்சாகம் ஊட்டியதோ? கொட்டைப் பாக்காய் துளியும் பெருக்கிறது. என்றாலும் எனது கவட்டுக்குள் கையிருக்கும், கால்மாட்டில் படுக்கும் பூனைக்கும் எனக்கொரு இணக்கத்தைக் கொண்டுவந்த அடைமழைக்கு எங்களது நிலைப்பாடு தெரியாது. அது அடிக்கும் பலத்த அடி பாலம் உடையும், நடைபாதை துண்டிக்கும். உம்மா! நீ மட்டும் கத்தாமல் போ. 01.02.1986 ............ செத்தமரமும் சில மைனாக்களும் சில மைனாக்கள் வரும். இந்த மரத்தில் உட்கார்ந்து பேனுதிர்த்த இந்த மரத்தின் பூவை கொத்த கோத கொண்டாடிப் பறக்க சின்னதும் பெரிசுமாய் மைனாக்கள் வந்துவந்து சேரும். மரம் ஆணி வேரே அறுந்து நிற்பது கொத்தவரும் கோதவரும் மைனாக்கள் பார்வைகளில் தெரியாது. கட்டிய கன்னி பூக்காமல் உதிர்கின்ற சாபக்கேட்டிற்கு இந்த மரம் ஆளாகி சும்மா இலை சலசலத்து காற்றுக்கும் கொஞ்சம் அசைந்து போலிப் பச்சையினை முகமெல்லாம் பூசி உயிருக்குள் பழுக்கும் இந்த மரத்தின் துயரங்கள் தெரியாமல், "கீச்சென" மைனாக்கள் வரும். ஒன்றாகி இரண்டாகி ஒருகிளையாகிச் சிலவேளை வரும். குந்தும் பூக்களை மூக்காலே கோதும். மரம் சோகத்தைப் புதைத்த சிரிப்புடனே பூவுதிர்த்தும். மைனாக்கள் புறதானம் காட்டிக் களிக்கும்: தொலையாது மீண்டும் நாளையும் மைனாக்கள் வரும். ஆணி வேரே அறுந்து நிற்கின்ற இந்த மரமோ நிம்மதிக்காய் ஒருதடவை சடசடவெனக் கிளைகளை உசுப்பும் மைனாக்கள் வெருண்டு கலையும். 08.12.1986 ........... அந்த வெல்வெட்டுப் பறவை சா..நெடிய முடத்தென்னை அடியில் நானும் நீயும் உட்கார்ந்து விரல்நசித்துக் கதைத்துச் சிரிக்கையில் வருமே, சொல்லிவைத்தாற்போல கள்ளச் சந்திப்பு அனைத்திலும் பங்கெடுத்து நாம் பின்புறத்தைத் தட்டிவிட்டு எழும்வரைக்கும் அந்தக்கால் மாறி இந்தக்கால் இந்தக்கால் மாறி அந்தக்கால் என்று ஒற்றைக் காலில் நின்று நமக்காக ஆட்பார்த்து அறிகுறிகள் சொல்லிடுமே வெல்வெட்டுப் பறவை வால் மினுங்கும் வெல்வெட்டுப் பறவை அது மூக்குத் தொங்கலில் எச்சம் அடித்தாலும் அந்நேரம் மணம்தான். அது ஒரு காலம் காதல் கிறுக்கு தலையில் இருந்த நாம் பெருவிரலில் நடந்த நேரம். அப்போது வானம் எட்டிப் பிடித்தால் கைக்குப் படுகின்ற ஒரு முழ இரு முழத் தூரத்தில் இருந்தது. ஏன் உனக்குத் தெரியுமே அண்ணார்ந்து நீ சிரித்தால் நிலவிற்குக் கேட்கும். வானுக்கும் உச்சியெல்லாம் பூப் பூக்கும். நமக்காக அந்தத் தனியிடம் அமைந்தது ஒரு வரப்பிரசாதம் இல்லையா? அந்த யாருமறியாத இடுவலுக்குள்ளும் நமது கள்ளச் சந்திப்பு நிகழ்வதை அறிந்ததுபார் செங்கண் வெல்வெட்டுப் பறவை. ஞாபகம் இருக்குமே- நீ மண்கிள்ளி எறிந்து "சூய்" என இடைக்கிடை அரட்டுகின்ற வெல்வெட்டுப் பறவை. அதற்கும் அப்போது வால்முளைத்த பருவம் சிறகின் ரெண்டு பொருத்துகளுக்குள்ளும் சதை பிடிக்கும் வயசு. வாலுக்குள் இருந்த தூறல் மயிர்கள் உதிர்ந்ததோ இப்போது உருமாறிப் போனதோ? "கீச்சென" வரும் என்ன... ஆனால் நாம் எழும்பும்வரைக்கு வாய் அசைக்காது. சே...தின்ற விதையை கக்கித் தரும் வஞ்சகமே இல்லாத பட்சி. நம் காதலுக்கு அது ஒரு ஜீவன் போல, யோசித்துப் பார்த்தால் நெருப்பு நெருப்பாக வருகிறது. ஒரு செங்கண் குருவிகூட அங்கீகரித்த நமது காதலை இவர்களேன் பழமாகவும் கொட்டையாகவும் பிரித்துச் சிதைத்தனர்? வைத்திருப்பேன்- உனது கடிதங்கள் அனைத்தையுமே வைத்திருப்பேன். தைத்துப் பொருத்தி அவற்றை ஆடையாய் உடுத்துக்கொண்டு திரிய.... 13.03.1987 .............. பூமரத்துச் சந்தி சந்தியோ பெரும்சந்தி ஒரு சாதிப் பொடியன்கள் சுற்றுகின்ற வட்டாரம் நாலுபக்கம் கண்ணெறிந்து துணிச்சலுடன் பார்த்தால் வேலிக்குள் ஆளுசும்பும் பகுதி. சந்தி முழுநாளும் இருளுறையக் காரணமாய் நிற்கிறது வாகை, பேய்ச்சி பூஅள்ளித் தலையில் வைத்ததுபோல் ஊத்தை நிழல் வாகை பூக்க, ஓராயிரம் இல்லை ஒன்பதினாயிரம் இல்லை பதினையாயிரம் காகங்கள் கூடும் பின் கலையும் கொப்புகளில் கூட்டம் நடத்தும் கைதட்டும் ஒரு சிலது தலைகீழாய்க் கூடப் பறக்கும். சந்தியோ பெரும் சந்தி. நாலு வாகனங்கள் பெயர்ந்து பிரியுமிடம். வாகை பூத்துத் தெருவெல்லாம் பூப்பரவ அப்பக் கிழவிக்கும் ஓராசை, பித்தம் வெடித்து தோற் சுருங்கிப் பொருக்குப் பறந்த கால்களைத் தூக்கிவைத்துப் பூப்பூவாய் கிளிப்பிள்ளை போல நடக்க. ஆசையைப் பார் ஆசை வாலுசத்திப் பின்புறத்தைப் பணித்துப் புழுக்கையிடும் மணியாட்டுப் பெட்டைக்கும் இப்பொழுது பூத் தேவை. பள்ளிக்குப் போகின்ற சரக்குகளைக் கண்டு உறுமி இளைக்கின்ற சொறி நாய்க்கும் கூடத்தான். நிழல்வாகைப் பூப்பொறுக்க பிள்ளைகளும் வரும். பள்ளிக்கூடம் இல்லாத நாள்பார்த்து உருவி உதிர்த்தி பூப்பொறுக்கி விளையாடும். சந்தியோ பெரும்சந்தி ஒரு சாதிப் பொடியன்கள் சைக்கிள்விட்டு சைக்கிள்விட்டு பள்ளம் விழுந்த இவ்விடத்தில் இன்னுமொரு 'கொளுகல்' கதைக்கும் கண்மூக்கு முளைக்கிறது. 15.05.1987 ............ வெயிலை விழுங்கும் சிறுக்கி நிறைமதியம் கூட இவளுக்கு விலக்கில்லை கள்ளச் சிறுக்கி கூந்தலுக்கு எண்ணெய்வைத்து மாதக்கணக்கிருக்கும். முள்முருக்கம் மிலாற்றைப்போல் மயிர்கள். கோரிக் கட்டி உச்சியிலே கொண்டை இருந்தாலும் கைக்குள் அடங்காது பன்கூடை போல கிளம்பியும் இந்தக் காப்பிலிச் சாதிக்கு சூடில்லை, சுணையில்லை, மின்னிச் சுரை சுழன்று இருந்தாலும் இறுக்க நேரமில்லை, நாள்முழுக்க கடப்புக்குள் நின்று கிறுக்கத்தான் பொடிச்சிக்குப் பகல் காணும். சும்மா மூக்கோடித் திரிந்த பெட்டை நான் பள்ளிக்குப் போகும் காலத்தில் இவள் தொடையில் ஒரு கிள்ளுப் போட்டுவிட்டுப் போவேன். அரையில் ஒரு தழும்பு இவளுக்கு உண்டு. கீரைப் பாம்பு விளைந்த வயிற்றோடு தெரிவாள். இன்னும் நான் கலியாணம் செய்யாத கட்டை இவளைப் பார்! பெண்பிள்ளை வளர்த்தி யாழ்ப்பாண முருங்கைக்கு ஒத்ததுதான். என்னைக் கண்டாலும் இவளுக்கோர் சிலிர்ப்பு. பேய்ப் பெட்டை ஆளறிந்து கொள்ளாத முன்சூத்தைப் பல்லீ. முகம் கொஞ்சம் வெளிப்புத்தான். இடித்த மாவைப் போல இல்லாமல் சந்தனத்தை உரைத்த நிறம் உதட்டில் எவன் கடித்தான் ஒரு வெடிப்பு? இவளுக்கு மூத்தவள் அவளுக்கும் மூத்தவள் ஒருத்தியுமே இவள்போல இல்லை. கடப்புக்குள் இவள் நின்று எடுக்கின்ற நளினம் எவன் மனதைச் சுண்டா? கூசாமல் பார்ப்பாள். நாம் குனிந்து போனால் இன்னும் ஓருபடிக்கு ஏற இறங்க நோக்கி விடுப்பெடுப்பாள். பெட்டை உண்டான காலம்தான் சோற்றுக்கும் பஞ்சம். 'வாப்பா' அவருமொரு வாப்பா; தொந்தி வயிறன் வீட்டுக்குள் கிடப்பான் மகள் நின்று தெருவில் எடுக்கின்றாள் நெருப்பு. 06.08.1987 .............. காதற் குதிரையும் அழுக்குப் பொதிசுமக்கும் கழுதைகளும் நாணல்கள் எரிந்தனதான் நாம் விட்ட பெருமூச்சு காடுகளும் எரிய தீயாகிக் கொண்டதுதான், என் தேவீ! என் இதயப் பசுந்தரையில் மேய்ந்த சிறுகுருவி! வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம். உன் நுனிமூக்கில் தெரிகின்ற செந்நிறத்து மூக்குத்தி இனியெந்த மதன்முகத்தைக் கிழிக்கும்? என் கன்னத்தை அது கிழிக்கும் காயங்கள் அதால் தோன்றும். காயத்தை உனது விரல் தடவும், உடனடியாய் ஆறும் என்றெல்லாம் இரவுகளில்தான் நினைத்தேன். அந்தச் செந்நிறத்து மூக்குத்தி என் முகத்தைக் கிழிப்பதற்கு உன் மூக்கும் தவிக்கையிலே முயற்சி பிழைத்தது பார். இது நுனிநாக்குக் காதலல்ல. குட்டி நாக்கிலுமே சொற்பிறந்து சரசங்கள் பொழிந்த காதல்தான், பிறை நெற்றி கண் மீன்கள் என்று வர்ணிக்கத் தெரியாத கவிஞனிவன், உன் மனதை வர்ணித்தேன் மாளிகையை நானமைத்தேன் ஒரு புறா வந்து உறங்காமல் துப்பரவாய் கவனித்தேன் பார் வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம். உன் செந்நிறத்து மூக்குத்தி, குதியுயர்ந்த செருப்பு ஆங்கில வார்த்தைகள் "வெரிநைஸ்" உங்கள் கவி என்ற பாராட்டு அத்தனையும் உயிர்பெற்று இப்பொழுது என் பின்னால் வரவர கனவுகளில் பாம்பு கடிக்கிறது, வெள்ளியுமே கருகி என்மீது விழுகிறது, நீ.... காதற் குதிரையிலிருந்தும் விழுந்தோம். நம் பெயரால் அழுக்குப் பொதிசுமந்து மனிதக் கழுதைகள் திரிகிறதே கண்ணே! 06.08.1987 .......... இறந்த காலத்திற்காய் எழுதிய துயரகீதம் (01.10.1987ல் நிகழ்ந்த எனது இடமாற்றத்தின் நினைவாக) இன்னும் தூர வருகின்றேன். இருந்த இடமும் தூரம்தான்; ஆனாலும் இடம்மாறி இன்னும் தூர வருகின்றேன். நானே என்னைவிட்டும் தூரித்த பிறகு இந்த நிலமென்ன? நானிருந்த பழைய இடமென்ன? என்றும் காட்டு மல்லிகைப் பூவாசம் வீசும் என்மனதில் இந்தப் பயணத்தில் காரணமோ தீத் தழும்பாய் விழுந்ததுதான். இன்னும் உலகம் விடியவில்லை. நேற்று ராத்திரிகூட கூவிய சேவலின் தொண்டையை அதன் கொண்டையை, காதைக் கிள்ளி எறியுங்கள் இன்னும் உலகம் விடியவில்லை. விடிந்திருந்தால் எனைப் பிரித்து தனிமையிலே துவேஷித்த 'அயலூரான்' பேதம் ஜீவிக்க நியாயமில்லை. இருந்தாலும் எனக்குள் காட்டு மல்லிகைப் பூவாசம் வீசும். அயலூரான் என்ற தீத்தழும்பு இதயத்தின் ஓர் மூலையில் விழுந்தாலும் நான் துள்ளி விளையாடிய அந்த மாமரம்... என்னைப் புரிந்து நடந்து பூனைபோல் தனக்குப் பணியவைத்த அன்புள்ள சகோதரி.... ஒரு நாள் அவர் கிள்ளித் தந்த முட்டையின் மஞ்சள் கரு.... நாங்கள் இருவரும் ஒரு மாதம் வரை பேசாமலிருந்த கொடிய துயரம் சமையலறையில் நான் உணவும் பழப்புளி... எனது சப்பாத்தின் 'பிசுக்பிசிக்' சத்தத்தில் தலையுசத்தும் சொறிநாய்... பிரியங்களைத் தந்த முகங்கள்... நினைத்துப் பார்ப்பதற்கும் சக்தி குன்றிப் போகிறது. என் மெல்லிதயம் புறாநடக்கும் தரை. சிறு பூவிழுந்தால்கூட சுள்ளென்று வலிக்கின்ற வெண்பஞ்சுப் பொதி. நினைத்துப் பார்த்தாலும் சக்தியின்றிப் போகிறது. போகட்டும் எனக்கு மீசை முளைத்த அந்த வசந்தகாலத்துக் கட்டங்கள் ஒரு எரி தழும்போடு பிரியாவிடை கூறட்டும் பொறுப்பேன். இரண்டு சொட்டுக் கண்ணீர் வடித்துவிடாமல் ஆறும். ஒன்றுதான், மிகப்பெருங் கவலை ஒன்றுதான்: சகோதரி தருவதாய்ச் சொன்ன எனக்குப் பிடித்த உலுவாக் கொட்டைக் கறிசோறு அங்கிருக்கும் காலத்தில் தின்னக் கிடைக்கவில்லை. 25.08.1987 ............ விபத்துக்கள் என் தோட்டத்தில் இருந்த ரோஜாவில் நேற்று விழுந்த பூ இரவு வந்து என்னைத் தழுவி சுகமா என்று குசலம் விசாரித்த தென்றல் காற்று ஜன்னல் இடவால் என்னைப் பார்த்து சிரித்த நிலவு நிலவோடு சேர்ந்த வெள்ளி எல்லாமே என்னுடைய காதலியின் நினைவுகளைக் கொண்டு வந்ததைப் போல இன்று கந்தோரிலும் நீ வந்து மனங்கிள்ளிப் போனாய் கிழவி.... நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன் ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும் அள்ளி அணைத்து விளையாடக் காத்திருந்து ஏமாந்து போன உயிர் இந்தக் காதலியை இழந்த கோடை காலத்தில் நான் வரண்டு கிடந்தாலும் மாரியிலே செழித்திருந்த பயல். கொஞ்சம் வானம் இருண்டாலே எனக்கு வரும் பழைய வெள்ளத்தின் ஞாபகங்கள். நீயேன் என் கரம் பிடித்து அழுதாய்? எதற்கோ நீ அழுதாய்; எனக்குள்ளே நூறு குயில்கள் ஒன்றாகச் செத்தனவே! அவளும் இப்படித்தான் என் கரம் பிடித்து அழுதாள். அந்த வண்ணத்துப் பூச்சி இறகுதிர்ந்தபோது தென்னைக்கு மறைவில் அதன் உச்சிக் குலை அதிரும் சத்தத்தில் இப்படித்தான் என் கரத்தைப் பிடித்து மடக்கி அழுதாள்! கிழவி இன்றேன் நீயழுதாய்? நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன். ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும் அள்ளி அணைத்து விளையாட காத்திருந்து ஏமாந்து போன உயிர். எதற்கோ நீ அழுதாய்? காரணத்தை அறிவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை; ஆறேழு புகையிரதம் எனக்குள்ளே மோதினவே! 18.10.1987 ............... காகம் கலைத்த கனவு கைவேறு கால்வேறாய் அங்கங்கள் பொருத்திப் பொருத்தி மனிதர்கள் தயாரிக்கப்படுவதை நேற்று என் கனவில் கண்டேன். கண்கள் இருந்தன ஒரு பைக்குள் மூக்கும் இருந்தது இன்னொன்றில் முழங்கால் பின் மூட்டு விலா குதி எல்லாமே ஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க- தம்பதியார் வந்தார்கள் புரட்டிப் புரட்டிச் சிலதைப் பார்த்தார்கள் பின்னர் விரும்பியதை எடுத்தார்கள் கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள். வானம் புடவையாய் வெட்டுண்டு கிடந்தது வீதியாய் நான் நின்ற பாதை. ஒருவன் வந்தான் துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப் பார்த்துப் புன்னகைத்தான் அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்து காலில் இருந்த இருதயத்தைக் கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான். வெயிலோ கொடுமை எரிச்சல் தாங்கவில்லை அவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்த பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள். இரவு! உடனே சூரியன் மறைந்தது நிலவு! நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால் ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்து தன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள் மனிசி! காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லை எங்கியிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம் கத்தியது இடையில் நின்று முக்கியது கா.....கா.... 14.03.1998 ............... வாசல் ஒரு காகம் மீன் தலை போட்டது. இன்னொன்று எச்சமடித்துப் பறந்தது எனது காதலி எழுதிய கடிதத்தில். நான் நிலாக்காலம் வந்தால் மகிழ்கின்ற இடம் அழகிற்குப் பூமரம் தோகை வளர்ந்து காற்று சுற்றித் திரிய வசதியான வாசலுக்கு என் காதலி அனுப்பிய கடிதத்தை ஒப்பிடுவேன் வடிவு மிகுந்த அவளது கடிதமும் எனது வாசலும் ஒன்றெனச் சொல்வேன். இந்தக் காக்கைக்குக் கோபம் பழுத்த பாக்கை உரித்துக் காயவைத்தால் தெரிகின்ற தோற்றத்தில் இருக்கின்ற கிழட்டுக் குருவிக்கும் மன எரிச்சல். என் வாசலை நானும் இடைக்கிடை கெடுப்பதுண்டு இருந்தாலும் அது என்னுடைய வாசல். நான் காலையில் எழுந்ததும் துப்புவேன். சிலவேளை மூக்கைச் சீறியும் எறிவேன். அன்புள்ள நண்பனே! நீயும் எனக்குச் சிறகு முளைக்கின்ற இடத்திற்கு வா. 12.07.1988 ................. ஓர் ஈர நாள் வானம் வயிறூதித் தூங்கும் கூன் கிழவி நாலுகாலில் நடந்து வீதியைக் கடப்பாள் மழை, மொட்டைத் தலைகள் உடையும் கொட்டைப் பாக்குகள் விழும் மழை. மரங்கள் பூக்களை உதிர்த்தும் வாசலில். ஒரு மின்னல் சரிபிழை பார்த்துவிட்டுப் போகும். கடலின் மூலைக்குள் இருந்து யாரோ வானத்தைப் பிளக்கின்ற சத்தம் இடி. நேற்றுப் பொரித்த குருவியின் குஞ்சொன்று அதிர்ச்சியில் மரிக்க துக்கத்தால் தாய்ப்பறவை வாய்விட்டுக் கத்தும். நான்- கப்பல் விட்ட நாட்களை நினைத்திருப்பேன். நாய் நனைந்து என் முன்னால் ஓடும் அதன் இடுப்புப் புறத்தில் இருந்த சாம்பல் கரைந்து ஒழுக. பைத்தியம், இந்த நேரத்தில் கற்பனையில் இருக்கின்ற படுபேயன் என்றெண்ணி காற்று இலைகுழையைப் பிய்த்து வீசும் என் முகத்தில் உம்மா ஜன்னலைச் சாத்திவிட்டுப் போக... இவை மழைநாளின் சம்பவங்கள், பிறகு வாசலைக் கோழி கிழைக்கின்ற தினமொன்றின் புதினங்கள். வானம் சிறுபிள்ளை மாதிரிச் சிணுங்கும். கொண்டுவா அந்தக் கிலுக்கியையும் சூப்பியையும் அழுகையை நிறுத்தென்று கொடுக்க. 14.08.1988 ............... நான் - பிள்ளை திடீரென வானம் விழுந்தது. நாலு தென்னைகளும் ஆறேழு பனையும் தலையாலே முறிந்து தொங்கின. ஒரு கோழி வீறிட்டுக் கத்தியது. எனது பிள்ளை விளையாடிக் கொண்டிருந்தான். வாசல் முழுக்க நட்சத்திரங்கள் உடைந்து நொறுங்கிக் கிடந்தன. ஒரு முகிலை எடுத்து அளைந்துவிட்டு முத்தமிட்டான். பின்னர் எழுந்து அங்கே சிதறிக் கிடந்த நிலவின் துண்டுகளை ஒட்டிப் பார்த்தான். பிறகு எறிந்தான் இன்னொரு நிலவைச் செய்யலாம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தான். நான் வீட்டுக்குள் இருந்தேன். என் சின்ன வயதில் இந்த நிலவிற்காய் அழுத அழுகைகளை நினைத்தேன். ஒரு நட்சத்திரம்கூட என்னால் அந்த நாட்களில் பிடித்துப் பார்க்க முடியாமல் போயிற்று. வானம் என்னைவிட வெகு தொலைவில் இருந்தது. என் தலைமுறைக்குள் இப்படியொரு பெரிய மாறுதல்! மாங்காய்க்குக் கல்லை எறிவதுபோல் வானுக்கு எறிந்து நிலத்தில் கிடக்கின்ற பிள்ளை! இப்போது அவன் வானத்தை மீண்டும் சரிசெய்துவிட்டு நடக்கிறான். 25.3.1989 .............. ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றைய தினம் அன்றையக் காலை கல்விழுந்த குளம்போன்ற முகத்தோடுதான் விடிந்தது. தெருவெங்கும் வாகனங்கள் சிறகுகட்டிப் பறந்தன. சில சில்லாட்டு வண்டிகளும் குடல் தெறிக்க இருந்த வேகத்தை எல்லாமே ஒன்றுசேர்ந்து ஓடித் தொலைந்தன புழுதியுடன் புழுதியைப்போல். நான் மட்டும் அந்தக் கடையடியில் காத்திருந்தேன். முன்னர் கொடுத்த வாக்குறுதி மீறாது எனக்குள்ளும் இதயம் அரிசி அரைக்கின்ற இயந்திரத்தைப் போன்று சத்தமிட்டு என்னை அச்சப் படுத்தியும் சொன்னபடி அந்த மனிதன் வருவான் என்ற நினைப்பில் சந்தியிலே மேய்கின்ற மாடுகளும் ஓடிய அன்றைய தினத்தில் என் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன். மனிதர்கள் காலாலே பறந்தார்கள். எல்லோர்க்கும் பிடரியிலே குதி பட்டது. சில கிழவிகள் அன்றுதான் வேகமாய் நடந்ததை நான் கண்டேன். அன்று ஆமை கூடப் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கும். அந்த அளவுக்கு பயங்கரமாய் இருந்தது நகரம். நானோ கடையடியில் அவனைக் காத்தபடி. பால்மணம் மாறாத சூரியன் கடலுக்குள் இருந்து நடைபழகி வருவதற்குள் எனது நகரம் கறுத்தது. இருந்தும் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன். எனது நினைவில் வரும்போது உம்மா பழுக்காத மாங்காய்மாதிரி விறைந்த முகத்தோடு இன்னொரு தரமும் அகதியாய் போவதற்கு ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்த காட்சிகள் வந்து போயின. அந்த மனிதன் வந்தானோ போனானோ நானறியேன்! காற்று மட்டும் பொய்யையும் மெய்யையும் கலந்து எதையோ சொல்லிக்கொண்டு போனது காதில் விழுந்தது. 19.04.1989 .............. இனி அவளுக்கு எழுதப்போவது அநேகமாய் ஒவ்வொரு நாளும் துக்கம். தீன் பொறுத்த கோழி மாதிரி விக்கும் அளவுக்கு எறிந்துவிட்டேன் சிரிப்பை; போய், ரோஜாப் பூவாய் மலர்க அல்லது மல்லிகையில் கன்னிகட்டு என்று. நான் கண்ணவிந்த குரங்கு. சிரிப்பை எறியாமல் பிறகென்ன செய்வேன்? கனவில்கூட அநீதியும் பயங்கரமும் வாற்பூட்டி என்னை வதைப்பதனால். தானாக எனது முகம் 'ஐஸ்' அடித்த மீன் சதையைப்போல விறைத்து உதடு பிரியுதில்லை. என் சிரிப்பை அவள் இடைக்கிடை கேட்டுக் கடிதம் எழுதுவாள். வெள்ளியைப் பார்த்துத் திருப்தியுறு. முடிந்தால், வெங்காயத் தொலிகளைப் போட்டாவது பழைய காற்றுகளை வாசலுக்கு கூட்டிக் காது கொடு, நான் வரவில்லை. வேண்டுமென்றால் என் முப்பத்திரெண்டு பற்களையும் முரசுகளையும் அனுப்புகிறேன் என்று. 20.04.1986 ............. குழம்பிச் சண்டையிட்டு பிறகு புன்னகைத்து... முட்டைகளை விட்டு வெளியேறிய குஞ்சுகள் மாதிரி மனிதர்கள் மீண்டும் நகருக்கு வந்தார்கள். மரத்தை மரம் கிள்ளியது. மண்ணோடு மண் உரஞ்சியது. பொதுக் கட்டடங்களில் கூரைக்குப் பாரம் வைத்திருந்த காகங்கள் கண்கெழித்துப் பார்த்தன. இவர்களும், இவர்களுடைய கூத்தும் என்று நினைத்தது தெருநாய். பல நாள் அடைப்பட்ட மனிதன்- கோடுகளைப் போட்டுச் சீரழிந்த சாதி- வருகின்றான் என்று மாடு கத்தியது சாணம் விழ. இவர்கள் பழையபடி சிரித்தார்கள். எதுவுமே நடக்காத மாதிரி ஆடை உடுத்துத் திரிந்தார்கள். அந்த ஆடைக்குள் இருந்தது மானம். காக்கைக்கும் நாய்க்கும் ஆடைகள் இல்லை. 21.04.1989 ................. ஓர் உறவு பூத்த பாட்டு மிக நீண்ட நாட்கள் இந்தப் பூமிக்கும் வானுக்கும் இடையில் நிலவுகின்ற தூரத்தின் அளவுக்கு உனக்கும் எனக்கும் பிரிவு இருந்தது நட்பில்லை. இருந்தாலும் நாம் புறாக்களைச் சாகடித்தல் கிடையாது. நாம் நடந்த பாதைகளில் கிடந்த புழுக்கள் நசிபட்டுச் செத்ததாய் வரலாறு இல்லை. நாம் சந்திக்கும் வேளைகளில் உன் முகத்தில் சந்திரன் உதிக்கவில்லை. என் முகத்தில் ரோஜா மலரவில்லை. அவ்வளவே! நீயும் நானும் அண்மையில்தான் இருந்தோம். நம் உறவுதான் நான் முன்னர் சொன்னதைப்போல் பூமிக்கும் வானுக்கும் இடைப்பட்ட தூரமாய் நெருங்க முடியாமல் தினசரியும் நீண்டது. இன்று தற்செயலாய் நெருங்கிவிட்டோம். வானமும் பூமியும் ஒட்டினால் உலகம் இருக்காது அதைப்போல நமக்குள்ளும் இருந்த உறவில்லாத் தன்மை சிதறியது! நீ சந்திரனை மட்டுமல்ல இரவு பூத்த வெள்ளிகளையும் உன் முகத்தில் சுமந்து கொண்டு சிரித்தாய்! நான் நமக்குத் தெரியாமல் ஏற்பட்ட மனிதாபிமானத்தின் பாரிய இணைப்புபற்றி வியந்தபடி ரோஜாக்களுக்குப் பாத்திகட்டி நீர்விட்டேன்! உன் பற்கள் இன்னும் கறள்பிடிக்கவில்லைதான்! 22.04.1989 ........... வெயில் மழை புழுதி சில நாளில் முன்பு எனக்குள்ளே ஒருவன் இருந்தான். அவனுக்கும் கண்கள் இருந்தன. காதுகளும் உண்டு. இதயம் மட்டும் மற்றவர் போல் இல்லாமல் மென்மையாய் இருந்ததனால் அவன் இந்த உலகத்தைப் பார்த்து அழுதான். அதுதான் மழை! அவன் இங்குள்ள கொடுமைகள் தாங்காமல் விட்ட பெருமூச்சு இப்போது மரங்களிலே படிந்துள்ள புழுதி! அவன் எப்போதுமே குறைகளைத் தேடிக்கொண்டிருந்தான். பறவைகளுக்கு இரு சிறகுகள் போதாது நான்கு சிறகு தேவையென்று நினைத்தான்! இந்தச் சூரியனையும் அதைக் கண்டு பயருகின்ற நிலவையும் சேர்த்துவைத்துச் சந்தோஷம் பார்க்க ஒரு பாலம் போடத் துணிந்தான். மனிதர்கள் சிரித்தார்கள். தம் பலங்கள் தெரியாமல்தான் அவர்கள் நகைத்தார்கள். எல்லாரும் ஒன்றுபட்டால் பூமியின் சுழற்சியையும் நிறுத்த முடியுமென்று அவர்களுக்கு விளங்கவில்லை எரிச்சல் பட்ட அவன்தான் வானத்தின் இரவுகளில் வெள்ளியைப்போல் ஓடுபவன். அவனது கோபம்தான் வெயில்! 22.09.1989 ................ ஓர் அகதிக் கவிஞன் நிலாவைப் பார்த்து நிலாவே! இன்று நான் பாடல் எழுதமாட்டேன் ஒரு தற்காலிக வீட்டில் சொந்தமாய் வாசலில்லை உரிமையோடு பூப்பறித்து முகர ஒரு மரமில்லை. நீகூட எனக்கு ஓர் அந்நிய நிலவுதான். எனது வாசலில் விழுகின்ற உன்னுடைய வெளிச்சமும் இந்த அந்நிய வாசல் ஒளியும் எனக்குள்ளே பேதத்தைக் கிளப்பி மனநிலையைக் கெடுக்கிறது. நான் மூன்று தினங்களாய் அகதி. இந்த உயிரையும், அதற்குள்ளே ஊறுகின்ற கவிதையையும் காப்பாற்றி வெற்றிகண்ட ஒருவன். என் வீட்டைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள் அது மூக்குடைந்து விட்டதாய். நான் நேசித்து வளர்த்த பூமரங்கள் எல்லாம் மாட்டின் மலக் குடலில் தங்கிப் பின்னர் வெளியேறி விட்டதென்றும் அறிகிறேன். இங்கே- சொந்த வானமில்லை. நான் சுவாசிக்கின்ற காற்றுக்கூட இன்னொரு வீட்டாரின் உடைமைபோல் இருக்கிறது. எப்படிப் பாடல் எழுதுவேன் நிலவே? தொண்ணூறாயிரம் வெள்ளிகளையும், உன்னையும் வானத்தையும் தொலைத்த நிலையில், என் வண்ணத்துப் பூச்சியையும் கட்டிலின் இடவில் வாழ்ந்த பல்லியையும் இழந்த நிலையில்? நீ மேகத்தை எடுத்து முகத்தை மூடிக்கொள் கவிஞன் பெருமூச்சு விட்டால் குளிர் தென்றலும் கருகும். 27.11.1989 ............. எனது நகரத்தின் பைத்தியக்காரி இன்றும் எனது நகரம் கையையும் வாயையும் பொத்தி மௌனித்திருக்கிறது. இடைக்கிடை இப்படித்தான் விரதம் அனுஷ்டிக்கும் எனது நகரம் இன்றும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் நோன்பிருக்கிறது. பாதைகள் சூரியன் பட்டுப் பொசுங்கின. முதுகு சொறிந்து ஆறுதல் சொல்ல ஒரு மனிதனின் காலடி இல்லை. அவள், அந்தப் பைத்தியக்காரி எந்த மூலையில் ஒரு கேள்விக்குறி மாதிரிக் கிடப்பாள்? அந்த ஊத்தைக் கூடாரம் இன்று நடமாடித் திரியாது. அவள் எனது நகரத்தின் சின்னம். தெருப் பசுக்களையும் வெற்றுத் தகரங்களையும் கூட நேசிக்கத் தெரிந்த ஒருத்தி. இன்று நகரமே இல்லை! விடிந்திருந்தும், நடமாடப் போகிற வெளிச்சம் குவிந்திருந்தும் குதிவெட்டப் பட்டவர்கள் போல மனிதர்கள் ஊரடங்கிக் கிடப்பதால். அவள் இன்னும் ஆடைகளை உரிந்து எறிந்திருப்பாள். இந்த நகருக்குச் சின்னமாய்த் திகழ இஷ்டமில்லை எனக்கு, ஒரு மந்தியை வையுங்கள் என்பதனைப் போல.... 8.12.1989 ................ ஒரு கவிதைக்கான நேரத்துக் கோரிக்கை பொங்கட்டும் கவிதை பொங்கி வழியட்டும் பூமரத்தின் அடியெல்லாம் நனையட்டும். அந்தப் பூமரத்தை வண்டு முகரட்டும் கன்னியிலும் குருத்திலும் எனது பெயர் கண்டு வியக்கட்டும். நீ விளக்கை அணை நிலவு வருகிறது ஜன்னலுக்குள். நேற்றுத்தான் பக்குவப்பட்ட காற்றும் ஓடி வருகிறது. உம்மா! கொஞ்சம் வா இந்தப் பூச்சியைத் தட்டு. இது புதுமை உலகம். அதிலும் கவிதைக்கு வாழ்வை ஒப்படைத்த எனது உலகம் மிகவும் புதுமை. இங்குதான் இதயம் கால் முளைத்து நடக்கிறது. நான் அசிங்கத்தைப் பழித்துக் காறித் துப்பிய துப்பல்கள்கூட வெள்ளியாய் முளைக்கிறது. நீ என் உலகத்துள் நுழையாதே சிறகு சிலிர்த்த பலநூறு பறவை கலைந்துவிடும் போய் மேகத்தைக் கவனி. இனிப் பெய்யும் மழை எனது கவிதை. நான்தான் தலைமாரிக்குத் தலைவன். 10.12.1989 ............. பறவைக்கும் கடிதம் எழுது கண் கழன்று விழுகிறது. இங்குள்ள அக்கிரமம் தாங்கொண்ணா மனம் சிதறி வெடிக்கிறது. வா! எங்காவது தூரத்திற்கு ஓடுவோம். மாலைக் கருக்கலில் வானத்தில் மூலைக்கு உள்ளால் ஒரு பறவை பறக்குமே அதனிடம் கேட்டு நிம்மதியான ஒரு இடத்தைத் தெரிவுசெய்து கொள்ளலாம். வா! மூட்டை முடிச்சுகளைக் கட்டு இங்கிருந்தால் உணர்ச்சி நரம்புகளில் வெடிப்புக் கூடிவிடும். சதை நார்கள்கூடக் கிழியும். அந்தப் பறவைக்கு நீ ஒரு கடிதம் எழுதியாவது போடு. உன் வாலில் தொங்குகிறோம் என்று சொல். மூளை அடைக்கோழியின் முட்டைபோல் இப்போது இருக்கிறது. அதில் பதிவு செய்யப்பட்ட அவளது நினைவுகளும் ஞாபக மறதியாய்ப் போகின்ற அளவுக்கு ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு சூரியனாய் நிலம் கொதிக்கிறது. பறவையைக் கூப்பிடு அதோ செக்கலுக்குள் வருகிறது. காற்றில் மிதந்து வருகின்ற அதற்கு நமது பெருமூச்சுகளைத் தூதனுப்பு. அதற்கென்ன இறக்கையெல்லாம் சுதந்திரத்தின் சிரிப்பு! தனை மறந்த பாட்டு! காற்று மெத்தையிலே பயணம்! பறவையைக் கூப்பிடு! உன் காலில் தொங்குகிறோம் என்றாவது சொல். அதன் நகம் கிழிந்து நமக்கு முடை வராது. உயிரைச் சீலைக்குள் முடிந்து வாழுதல் கடினம். 10.12.1989 ............... வானமெல்லாம் திரிதல் சரி, கட்டிலில் பறப்போமா நீ என் நினைவுகளுக்குள் வா! என் உச்சியில் இப்போது கொம்பு முளைக்கிறது. சந்தோசம் மிகுந்த இரவில் நிலாவைவிட என் கண்கள் பிரகாசமாய் இருக்கின்றன. வா! என் நினைவுகளுக்குள் விரைந்து. காற்றைவிடக் கட்டில் பாரம் குறைகிறது. எங்கிருந்து வந்து இரவுப் பறவைகள் கட்டிலை மொய்த்தன! அவைகளின் இறகுகளில் என் கட்டில் மிதக்கிறது! உன் நீண்ட கருங்கூந்தல் பின்னி முடியாது. அவசரமாய் ஒரு கொண்டை போடு. முக்கியமாய் உன் விரல்களின் நகங்களைக் கழற்றி வைத்துவிட்டு வரவேண்டும். நட்சத்திரங்கள் ஒளிமங்கும் வேறொன்றுமில்லை. என் கட்டில் அசைவதனால் மரங்கள் திடீரெனத் துளிர்விட்டு வியர்க்கின்றன. வா! வானமெல்லாம் திரிவோம். ஐயோ இன்னும் வரவில்லை ஏன்? ஓ.... உன் நினைவுகளுக்குள் நானா, இன்னொரு கட்டில் பறக்கிறதே! பூக்களால் சோடித்து... பறவைகள் தாங்க... 24.02.1990 ............. என் வேப்பமரப் பெண்டாட்டி என் வேப்பமரப் பெண்டாட்டியின் தலை புழுத்துப் போச்சு. காகமே! நீ வா என் சம்பளமில்லாத ஊழியனாக நீ மாறு. பிறகு கவனிப்பேன். நான் தொழிலுக்கு வரும்போது புன்னகைக்கும் பெண்டாட்டி என் கந்தோரின் அருகே சிரித்திருந்து காற்றைத் தீன்போட்டு வளர்த்து என் அறைக்குள்ளே துரத்தும் பிரியமுள்ள மனைவி தலை புழுத்துப் போனாள்! காய் பழுத்து நிலம் விழுந்தால் கூட பழைய அழகில்லை, பார்ப்பதற்கு சொறி ஆடு கழித்து விட்டதைப்போல் அசிங்கம். வா! என் மனைவிக்குப் பேன் பாரு. பெட்டைக் குயில் கத்திப் பீச்சத்தான் வருகிறது மனது தாங்குதில்லை. நான் தாவணியும் ரவிக்கைகளும் வாங்கிக் கொடுத்த மரம். இளம் பெண்ணுக்குப் பிறந்த அழகுள்ள வேம்புக்கு பூச்சேலை வாங்கத்தான் நானிருந்தேன். அம்மை! தலை முழுக்கப் புழு! நோய், என் பெண்ணுக்கு தீரும் நோய் காகமே வா. உன் குஞ்சு இப்போது தத்திப் பறக்கிறது. இந்தக் கிராமத்து அதிகாரி என் முன்னால் குழந்தைகளின் உணவைப் பறிக்கிறது. காகமே! இரையூட்டத் தேவையில்லை. என் பெண்ணுக்குப் புழுவடுத்து, புழுப் பறந்து அவள் பொலிந்தால் உன் கைக்குக் காப்பு, அவளுக்குக் குதிச் செருப்பு. வா! 23.11.1990 .......... ஒரு கவிஞனைப் போன்று திரிகின்ற அற்பனுக்கு ஆயிரம் மரங்களை உன்னால் உருவாக்க முடியுமா? கேவலம் ஒரு புல்லை? ஏன், ஒரு சிறு பூச்சியை? பிறகு, உன் கால்கள் அந்தரத்தில் நிற்பது ஏன்? மலை போல உனது தலை வீங்கி வெடிப்பது ஏன்? நேற்று என் உடையில் ஒரு குருவி எச்சமிட்டுப் போனது. அதுவாய்த்தான் நான் உன்னை நினைக்கிறேன். என் கட்டிலின் ஓரத்தில் குடித்தனம் நிகழ்த்தும் வாலறுந்த பல்லியாய்த்தான் உன் தகுதியைக் கணிக்கிறேன். அற்பனே! என் இரக்கத்திற்குரிய அற்பனே! உனக்கு வால் உண்டென்று நினைப்பதுதான் வெட்கம். உன் வால் மிகவும் சிறியது. அதில் சிறு குழந்தையின் உரோமத்தின் அளவிற்காவது உரோமங்கள் இல்லை. எப்படி உன் வால் ஆரோக்கியமானது என்று கருதுவாய்? சிறு கடதாசு சுமக்க பலமற்ற உன் வாலால் எப்படி என்னைப் பார்த்து முறுக்கி வீரத்தைக் காண்பிப்பாய்? நீ குப்பை கூளத்துள் கைவிட்டுத் தேடு என் கவிதையின் மலம் கிடக்கும். புசி, உன் மூளைக்கும் போஷாக்கு திமிருக்கும் மருந்து. அற்பனே! என் இரக்கத்திற்குரிய கொட்டைவால் அற்பனே! எனக்குத் திமிரில்லை, உனக்காய் வாய் விரித்தேன். பொறு, மன்னி, இல்லையென்றால் மீண்டும் வால்முறுக்கித் தோற்றுப்போ, திரும்பவும் கவிதையின் மலம் தருவேன். புசிக்க. 27.11.1990 ........... நாயோடு சம்பாசித்தல் இன்னும் வண்டி வரவில்லை நிற்கிறேன் நிற்கிறேன் நிற்கிறேன் தெருவில். கண்ணெதிரே ஒரு மரம் நான் பார்த்திருக்கத் துளிர்விட்டது. அதன் கன்னி பூவாக மலர்ந்தது. இனி காய்க்கலாம் பழுக்கலாம் பழத்தின் விதையும் நிலத்தில் விழுந்து இன்னொரு மரமும் முளைக்கலாம், முளைக்கிறது- எனக்கான வண்டி இன்னும் இல்லை. நான் நிற்கும் இடத்தில் எனது குதிகாலில் வேர் எழுகிறது இனி நானும் தளைக்க. நாயே! நான் நிற்கின்ற இடத்திற்கு பக்கத்தில் படுக்கின்ற அநாதரவான பிராணியே! நான் நடக்க முடியாது தளைத்தால் நீ காவல் செய். சிலநேரம் என்னில் ஒருவிதப் பூப்பூக்கும் நீயே பறித்து முகர்ந்துகொள் என் காயை அது முதிர்ந்து கனியை நீயே புசி. இந்த மனிதன் தினமும் தொழிலுக்காய்ப் பயணித்த பிறவி வாகனம் காத்து நின்று தளைத்தான் என்பதை நீ குரைத்தாவது ஊருக்கு விளக்கு. இனி மக்கள் கால்களுக்கு சக்கரம் பூட்டிப் பயணிக்கும் தலைமுறையும் வந்துவிடும், என் வண்டிதான் வராது. எந்த மலையோடு மோதிப் புரண்டதோ? கண்கெட்ட பாதை விழுங்கி மலமாகத் தள்ளியதோ? என் தலையில் குருத்து. நிலத்தில் ஆணிவேர். 14.12.1990 ........... வட்டார வழக்குகளும் பண்பாட்டு வழக்குகளும் நினைவுகள் கந்தப்பார்க்கும் : கிள்ளி எடுக்கப்பார்க்கும் குதி : குதிகால் திறாவி விட்டு : தடவி விட்டு என் வரிக் குதிரைச் சவாரி ஈசாநபி : ஏசுநாதர் உயில் மீசான் கட்டைகள் : முஸ்லிம்கள் புதைகுழியின் இரு முனைகளிலும் நடும் மரத்துண்டுகள் சுருப்பெழும்பிய : நுரை எழுந்த இறகு உதிர்ந்த கிராமம் நெட்டை சொல்லி அடித்தல் : மந்திரித்து அடித்தல் இறந்த பற்கள் : பழுதுபட்ட பற்கள் அடையப் போகிறேன் : முடங்கப் போகிறேன் பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில் சிலாவியது : தெளித்தது கோடிக்குள் ஒற்றியது : வீட்டின் பின்புறத்திற்குத் தள்ளியது ஆடுகார்ந்த : ஆடு கடித்த கிறுசலியாச் சிராம்பு : வேலி மரப் பட்டை வாலாயப்படுத்துகின்ற நேரம் : (தன்) வயப்படுத்துகின்ற நேரம் கடியன் : எறும்பு வைப்பு : கோழி முட்டையிடும் ஒரு தொடர் குறுக்கு : ஒரு தொடர் முடிந்து மறு தொடர் வரைக்கும் இடைப்பட்ட காலம் வால் மனிதர்கள் குஞ்சு நோனி : சிறுபிள்ளை அந்தை கொழிக்க : ஒரு வரிசையை அழிக்க பாலூட்டிகள் கோதுடைத்த : முட்டை ஓடு உடைத்த திராய்க் குஞ்சு : செல்லமாய்ப் பிள்ளைகளைக் குறிப்பிடுவது கால்மாட்டுச் சுழற்சிகள் என்னோடு எத்தனைபேர் மனக்குறுக்குத் தட்டினரோ: எத்தனை பேர் மனத்தில் என்னைப் பற்றிய ஆசை உண்டாயிற்றோ? மல்லிப்பேயன் : முழுப்பைத்தியக்காரன் கொம்பன் காற்று உசும்புது : மெல்ல அடிக்கிறது சவட்டி : சாய்த்து கொச்சிக்காய் : மிளகாய் விசளம் : செய்தி திண்டான் பாஞ்சான் : நின்றாற்போல் மறைபவன் இதயத்துள் உறைகின்ற மேகம் சுவனம் : சொர்க்கம் குதிநக்குதல் : காக்காய் பிடித்து இழிவாதல் கவிதை எழுதாத ஒரு கோடைத் தினம் 1986இல் நாக்குளி : மண்புழு கவையில்லை : பரவாயில்லை நியாயமாய் : அதிகமாய் ஒல்லாந்தர் கோட்டை : டச்சுக் கோட்டை நவீன இலங்காபுரி ஆம்ஸ்ரோங் : சந்திரனில் இறங்கிய முதல் மனிதர் பூனைக்கண் வெள்ளி நரிவிரட்டுகின்ற : பயமேற்படுகின்ற அந்தாசி அசில் : ஒழுங்கான கட்டுக்கோப்பு நக்கரைத்து : கேலி செய்து பொட்டியான் : சிறிய நன்னீர் மீனினம் தொப்பி சப்பாத்துச் சிசு உலுவா : வெந்தயம் பொக்கணிக் கொடி : கொப்பூழ்க் கொடி தொட்டில் காட்டுப்பீ : பிறந்து முதன்முதலாய்க் கழிக்கின்ற கறுப்பு மலம் இசாக்காலம் : மசக்கைக்காலம் கருக்கல் புறாதானம் : பெருமை அமசடக்குக்காரி : எல்லாவற்றையும் மூடி மறைக்கிறவள் சிலும்பல்கள் உத்தரிப்பேன் : வாழ்த்துகிறேன் கொட்டான் கூந்தல் : கட்டையான கூந்தல் ஒன்றிப்பு கவட்டுக்குள் : தொடை இடுக்குக்குள் வாடி அடித்தல் : இடம் பிடித்தல் பதாலித்து முழித்தல் : திடுக்கிட்டு விழித்தெழுதல் அண்ணாவி : கூத்தை இயக்குபவர் பொல்லடிக்கும் : கோலடிக்கும் பூமரத்துச் சந்தி ஒரு சாதிப் பொடியன்கள்: ஒரு விதமான பொடியன்கள் சரக்குகள் : பெட்டைகள் கொளுகல் கதை : வம்புக் கதை வெயிலை விழுங்கும் சிறுக்கி காப்பிலிச் சாதி : கறுத்த மேனியராய், சிக்குப்பிடித்த முடியுடன் அழுக்குப் பிடித்துத் திரிபவர். காகம் கலைத்த கனவு குடும்பி : குடுமி ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றையத் தினம் சில்லாட்டு வண்டிகள் : மாட்டு வண்டிகள் இனி அவளுக்கு எழுதப் போவது தீன் பொறுத்த கோழி : தொண்டைக் குழியில் தீனி உள்ள கோழி -------------------------------------------------------------------------------- |