கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  பூசணியாள்  
 

அருள் செல்வநாயகம்

 

பூசணியாள்

அருள் செல்வநாயகம்

--------------------------------------------------------------------

கிராமிய இலக்கியச் செல்வங்கள் 3.
ஊஞ்சற் கவிதை

பூசணியாள்

தொகுப்பாசிரியர்:
அருள் செல்வநாயகம்

சரஸ்வதி புத்தகசாலை
175, செட்டியார் தெரு,
கொழும்பு.

பதிப்புரிமை]
1957
[விலை சதம் 30

-------------------------------------------------

கிராமிய இலக்கியச் செல்வங்கள் 3.
ஊஞ்சற் கவிதை

பூசணியாள்

தொகுப்பாசிரியர்:
அருள் செல்வநாயகம்

சரஸ்வதி புத்தகசாலை
175, செட்டியார் தெரு,
கொழும்பு.

பதிப்புரிமை]
1957
[விலை சதம் 30

---------------------------------------------------------

முன்னுரை

கற்பின் கொழுந்து பூசணியாள்! பெண்ணின் ஆபரணம் கற்பொன்றேயென்று பெருமை கண்டவள் பூசணியாள்! கண்டி மன்னவனான விக்கிரமசிங்கன் தன் மேல் ஆசை ஆசை வைத்து விட்டானேயென்பதை அறிந்தவுடன் கற்பினுக்குக் கழங்கம் வந்து விட்டதெனத் துடித்தாள் பூசணியாள்! அத்தான் ஒருவனுக்கே உரிமையான இந்த உடலை, மன்னவன் நினைத்த போதே கற்புப் பறி போய் விட்டதென்று வருந்தினாள் பூசணியாள்! கற்பினை இழந்த பின் இனி வாழ்வேது எனக்கண்ட பூசணியாள், மாமனான ஏகேலபலைக்குக் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக, இரவோடிரவாக கண்டி கடந்து ஓடினாள். மாமனைக் கண்டு, மன்னவனது மனக்கருத்தை உரைத்த பின்னர் கற்பினைப் பெருமைப் படுத்தும் பொருட்டு ஓடும் கங்கையிலே குதித்து உயிரைத் தியாகம் செய்து பெண்ணினத்தின் பெருந்தகையானாள் பூசணியாள்!

தீண்ட முடியாத குலக்கொடியாள் பூசணியாள்! கற்பின் குலக்கொழுந்து பூசணியாள் என்று பெண்கள் கொண்டாடினார்கள்.

கண்டி நகரக் காவலனான விக்கிரமசிங்கனின் வாழ்விலே ஓர்நாள் பூசணியாள் தோன்றினாள். அவ்வளவுதான்! மன்னவன் மாறாத காதல் கொண்டான். அந்தக் காதலை உதறித் தள்ளினாள் பூசணியாள். அதன் பயனாகத் துன்பங்கள் நேருமெனக் கண்ட பூசணியாள் கண்டி நகரைத் துறந்து ஓடினாள்! தன்னை வாழ விடாத கண்டி நகரம் இனியோர் போதும் தன்னரசுடன் வாழாதெனக்கூறி உயிரைப் பணயம் வைத்தாள்! அவளது உயிர்ப்பணயம் ஏகேலபலைக்கு வஞ்சினத்தை ஏற்படுத்தியது! ஆகவே ஆங்கிலேயருடன், சேர்ந்து கண்டியை அகப்படுத்தியதுடன் மன்னவனையும் பிரித்துக் கொடுத்தான் ஏகேலபலை! பழிக்குப் பழி வாங்க ஏகேலபலை முனைந்ததனால் கண்டி தன்னரசை இழந்தது!

மன்னவனின் மனைவியின் கனவுடன் விரியும் பூசணியாள் சரிதை வாசகர்களுக்குப் புதிதல்ல! "வீரகேசரி" ஞாயிறு இதழிலே தொடர்ந்து வெளிவந்த பூசணியாள் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளாள்! அந்தவகையிலே இன்று சிறுநூலாகப் பூசணியாள் மலர்கிறாள். அவளது மலர்ச்சியினை உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன்.

அருள் செல்வநாயகம்.
குருமண்வெளி
மட்டக்களப்பு.

------------------------------------------------------------------

தரு
தன தன தந்தோம் தந்தன தான தனந்தோம் தந்தை
தான தனா தனதானதனா தனதனே தந்தோம் தனதனா

1
கயமுகக் குழவிபாதம்
கனவிலும் மறவேன் நானும்
கனவினையகல்தர மனமதிலுலவிய
கணபதி தாள் காப்பாமே

2
மாண்புடன் எங்கள் நாவில்
மகிழ்வுடன் இருப்பாய் நீயும்
மலர் மிசையுறைதரு மலரயன் மனைவி
வாணிவர மீந்தருள்வாய்

3
எழுதவும் அறியேன் பாடல்
இசைதனை அறியேன் நானே
இனியன மொழிபல எனதகமிசை
ஈஸ்வரனே காத்தருள்வாய்

4
அருள துதருவீர் குற்றம்
அதுபொ றுத்தருள்வீர் எங்கள்
ஆண்டவனே தில்லைத்தாண்டவனே எனை
ஆண்டடிமை கொண்டிடுவாய்

5
காத்தருள் செய்யவென்று
கயிலையில் ஈசன்தன்னை
கௌரியை முருகனை கனைகழல்வீரனை
காதலுடன் போற்றி செய்தோம்

6
கண்டியாள் மன்னன் காதை
எண்டிசை பரவவென்றே
கருதிய ஊஞ்சலின் இசைதனிற் பாடவே
காதலுற்றேன் பூதலத்தே

7
பஞ்சணை தன்னில் மன்னன்
பாரியோடுறங்கும் வேளை
பைந்தொடியாள் முனம்வந்திடு சொப்பனம்
பாத்துரைப்பேன் கேட்டருள்வீர்

8
பொழுதது விடியுமுன்னே
பொற்றொடி கனவு கண்டே
பொருவருதிருமகள் புவிதனிலெரிடம்
பூவையள் தானெழுந்தாள்

9
கண்டியில் அரசு செய்து
காவலன் வாழும் போது
காரிகையாகிய பூசணியாளவள்
கற்புநெறி காத்தனளே

பகுதி 2

தரு
தந்தனத்தான தன்னாதன தந்தன தந்தைத்தானானா - தன
தந்தனத்தான தன்னாதன தந்தனத்தானானா தந்தத்தானானா

10
மோதகம் ஏந்திய மூஷிகவாகன
மூலமுதற் பொருளே - ஊஞ்சல்
காதலுடன் நாமும்பாடியே ஆடிட
காத்தருள் ஈயுமையா

11
ஈயுமையா கண்டி நகர்தன்னை
இருந்தரசாண்டு வந்த - அந்த
மாயமதான விக்கிரமசிங்கன்
வரன்முறை கூறலுற்றேன்

12
எங்கும் இளங்கதிரவன் அங்கும்
இசைத் தமுத்தின் கொண்டையும் - நல்ல
சிங்களத் தேசத்தை இங்கிதமாய் ஆண்ட
செய்திதன்னை யுரைப்பேன்

13
ஆலமுறு பொற்கீர்த்திபெறும் எங்கள்
அண்ணல் மனைவியவள் - அந்த
சீலமதாகிய கண்டி அழிந்திடத்
தேவி கனவு கண்டாள்

14
கனவது கண்டுநினைவது கொண்டுமே
காதலன் தன்னிடத்தில் - உற்ற
கனவின் செய்தி தன்னைக்களறுகிறேன் ஐயா
கனிவுடன் கேட்டருள்வீர்

15
உற்றகனவின் விபரம் முழுதும்
உம்முடம் நானுரைப்பேன் - என்றும்
நற்றொடியாள் நானும் சித்திரமானதோர்
தெரிசனம் கண்டறியேன்

16
கப்பல்உருக்கன் கனத்திடும் தோணிகள்
கண்ணிலும் கண்டறியேன் - வெகு
செப்பமாய் உங்களைக் கட்டியே கப்பலில்
ஏற்றக்கனவு கண்டேன்

17
காலி கொழும்புகளிபெறும் மாத்துறை
கண்டி அரசிழந்து - அந்த
காவலனாகிய இங்கிலிசார்வந்து
கண்டிஆளக் கண்டேனே

18
பாத்திபனே கேளும்வாள் சாத்தும்மூலை
பவிசாய் இருக்குதையா - அங்கே
பாத்திடு கத்தாமரத்திலுறை வௌவால்
சேரக்கனவு கண்டேன்

19
கொஞ்சும் பஞ்சவர்ணக் கட்டிலிலே நாமும்
சொகுசாய் இருந்தோமையா - அந்த
காவலனாகிய இங்கிலீசு மன்னவன்
கடுகிவரவுங் கண்டேன்

20
ஒட்டியாணம் கிட்டிக்காப்பு சிமிக்கி
உலாவிய கற்தோடு - நல்ல
அட்டியல் மோதிரம் பட்டுறவிக்கை
அழியக் கனவுகண்டேன்

21
சித்திரமானதோர் சீலைஉரிந்து
தீயில் விழுந்துபற்ற - நானும்
புத்திகலங்கியே நித்திரையில் நின்று
பதறியே எழுந்தேன்

22
மந்திரிதான் வந்து மன்னவனைக் கண்டு
வாய்பொத்தி நின்றிடவே - அந்த
சுந்தரமாகிய விக்கிரமசிங்கன்
சொல்லுவான் ஓர் வசனம்

23
சீருற்றவாள் பரிதன்னை அழைத்து
என்சேவகனே வாரும் - நல்ல
ஏருற்ற கண்டி வலமாக இப்போ
ஏகிட வேண்டுமென்றார்

24
கண்டி வலமாக மன்னன்வரவே
கற்புள்ள பூசணியானவள் - தனது
தண்டமிழ்த் தோழிகளோடு சோலைதனிற்
தான்மலர் கொய்தனளே

25
கோதைமலரது கொய்து நிற்கும்போது
கொற்றவன் தான்போக - கண்டு
வேகமதாயந்த பூசணியாள் தானும்
வெட்கி மறைந்தனளே

26
மின்னிமறைந்தது போலவேதான் அந்த
மெல்லியாள் போய்மறைந்தாள் - அந்த
மின்னிடையான அம்மெல்லியளைக் கண்டு
வேந்தன் மயங்கினனே

27
வீழ்ந்து கிடப்பதை மந்திரிகண்டு
தூக்கிநிறுத்தி மன்னவா - நீரும்
தாழ்ந்துகிடப்பது ஏனென்று கேட்க
களறுவான் மன்னவனும்

28
மந்திரியே கேளும் சொல்லுகிறேன் ஓர்
மங்கைபோய் மறைந்தாள் - அவளை
சிந்தனையில்லாமல் என்றனக்கு முன்னே
சேர அருள்புரிவாய்

29
மங்கையவள்தானும் மன்னவரே கேளும்
வார்குழற் பூசணியாள் - அந்த
திங்களணிந்த சிவனார் ஆயினும்
திசை சேரவுமாகாதே

30
அண்ணலின் மூத்ததோ சென்னலில் மூத்ததோ
ஆயிளையாள் பல்லழகு - நல்ல
மாணிக்க ரெத்தினமோ எந்தன் வாயால்
வடுச்சொல்லவும் முடியாதே

31
சந்திரன் என்றும் ஒப்பிடலாம் அந்தத்
தையலின் நெற்றிதன்னை - உயர்
அந்தரத்தேவர் கொண்டாடிடும் ஊர்வசி
மேனகையோ அறியேன்

32
சிமிழ்களோ கெவுளிக் குரும்பைகளோ
சேயிழையாள் தனங்கள் - போத
சிமிழ்களென்றும் செப்பிடலாம் அதற்கென
நாவால் குறைசொல்லக் கூடுதில்லே

33
மந்திரியே நானும் சொல்லுகிறேன் கேளும்
பந்தெனக் கூறிடினும் - அந்த
பூசணியாள் கொண்டைக்கோர் வடுச்சொல்லக்
கூடுமோ கூடாதல்லோ

34
கெண்டைவிளியது செப்பிற் சிறுவரி
வண்டென ஓதிடலாம் - நல்ல
முண்டகப் புஷ்பங்களென் றுரைசொல்லலாம்
மொய்குழல் வாயழகு

35
ஆலப்பிள்ளைக்கு அரிய மருமகள்
ஆயிழை பூசணியாள் - அவளை
தாமதமின்றி மருவிச்சுகித்திடில்
தானுயிர் மீறாமுணர்

36
எப்படியாகுதல் ஆலப்பிள்ளைதன்னை
வேற்றிடம் சேர்த்துவிட்டால் - நான்
செப்பமுடன் வாழும் பூசணிமாதவள்
தன்னிடம் போய்வருவேன்

37
என்றுமே மந்திரிகூறிடவே அந்த
மன்னவன் கடிதம்ஒன்று - சூதாய்
இன்றேகண்டி அழிவதற்கோர்
ஆட்சேபமில்லையென்றே

38
எடுத்துமடித்து சுருட்டிக் கடிதத்தை
இன்பமுடன் கொடுத்து - நீரும்
கொடுத்துவா ஆலப்பிள்ளையிடமென்று
கோமான் தானுரைத்தான்

39
கடிதமதைக் கொண்டு மந்திரிபோகவே
காவலன் ஆலப்பிள்ளை - நீயும்
சடுதியால் வந்த காரியமேதென்று
தானவன் கேட்கலுற்றான்

40
கேட்டிடும்போது மந்திரிதானும்
இயம்புவான் தளபதியிடம் - வெகு
நாட்டமுடன் விக்கிரமசிங்கன்
தந்தகடிதமிதோ

41
பாத்திடும்போது ஆலப்பிள்ளைதானும்
பல்லைக் கடித்துநின்று - நாம்
காத்திடும் கண்டியை ஆள்பவன் யாரென்று
காவலன் வகுத்தனனோ

42
வத்துவாகை ஆற்றன்கரையோரம்
வந்தார் இங்கிலிசாரென்று - மிக
உத்தமமான தண்டு படையுடன்
ஓடினான் ஆலப்பிள்ளை

43
யானைகுதிரை தானாதிபதியுடன்
ஆலப்பிள்ளை ஆயத்தமாகி - நல்ல
ஆதியதான பூசணி தன்னிடம்
அவனும் வந்தனனே

44
அம்மான் வருவதைக்கண்டு பூசணியாள்
ஆசனம்தான் போட்டு - வெகு
செம்மையதான என்அம்மான் வருகிற
செய்தியை நானறியேன்

45
வேளமுற்றபுய அம்மானே நானும்
விளம்புவேன் ஓர் வசனம் - இந்த
ஆழமுற்ற ஆறுதன்னில் முதலை
இல்லையென்று சொல்லலாமா

46
செந்நெல்வயலுக்கு வேலியில்லாவிடில்
தின்னாதோ பன்றியது - வெகு
முன்னமே வேதமறையவர் சொன்ன
முதுமொழி பொய்யாமோ

47
என்றவள் கூறவே பின்னவன் சொல்லுவான்
ஏந்திழை பூசணியாளே - வெகு
முன்னமே வேதமறையவர் சொன்ன
முதுமொழி மறையாதே

48
சீருற்றகண்டியை ஆளவந்தார்
சேய்மைசேர் இங்கிலிசார் என்று - பேருற்ற
ஓலையெழுதினான் மன்னவன் நான்
போகிறேன் அஞ்சாதே

49
என்றுமே கூறி ஆலப்பிள்ளை செல்ல
ஏற்றதோர் மந்திரியும் - வந்து
இன்பமதாய்ப் பூசணியாளைக் கண்டு
இசைவுடன் சொல்லுகிறான்

50
மானே மரகதமேமாதே மன்னவனும்
மன்மத வேதனையால் அவன் - தானே
உழல்கிறான் ஆசைதவிர்க்க உன்
சம்மதம் சொல்லுமம்மா

51
அப்போது அரிவைக்கு மெய்நடுங்கி
அறிவில்லா மூடனுக்கு - நாளும்
தப்பிலியாகிய பித்தனுக்குக் காலம்
தானே முடிவாமோ

52
பாவி அவன் கெட்டபாதகன் ஆண்டிப்
பயலுக்கு என்னுரைப்பேன் - நானும்
கண்டி ஆளவைத்தாலோ சம்மதம்
தான்கேட்க முனைந்தான்

53
இப்படிக்கேட்டிடும் ஆண்டிப்பயலுக்கு
என்னென் றுரைப்பேன் - என்றுமே
கைப்பிடிச்செருப்புடன் புல்லும்
கட்டியே அனுப்பினளே

54
விருப்பமில்லையென்று அவள் சொல்ல
மெய்சோர்ந்து வதங்கி - வெகு
செருப்புடன் புல்லைக் கண்டதுமே மன்னன்
சீறிச்சினந்தானே

55
பல்வகைக்கறியுடன் பாங்கான உணவும்
பவிசாய் உண்டுமே - பொழுது
விடியட்டும் பாதகி பூசணி
படும்பாடு பாத்திடுவீர்.


பகுதி 3

தரு
தந்தனத்தோம் தானானே தனதானானே தனதானானே
தனதந்தனத்தோம் தானானே

56
பாருமென்றும் மன்னவனும் மலர்ப்பஞ்சணை மெத்தையில்
மஞ்சனமாடியே பாவையுடன்தான் துயின்றான்

57
வாருமென்று பூசணியும் மடிமங்கையர் தோழியோடு
கங்கை போகாவண்ணம் மாமனிடம் போவோமென்றாள்

58
போவோமென்ற வார்த்தையைக் கேட்டிடும் தோழியர்
பூசணியைப் பல்லக்கில் ஏற்றியே போகவழி சென்றனரே

59
மான்மரைகளுடன் குயில் அன்னம்வானரம் கொப்பதனில்
மிகத்தாண்டிட மங்கையர்தான் வழிநடந்தனரே

60
ஏகிவழி போகையிலே ஏந்திழை பூசணியாள்
தானடர்ந்திடாதபடி ஏற்றிமனம் தேற்றினரே

61
அச்சம்மெத்தவாகுதடியம்மா ஆயிழை தோழிமார்களே
கேளுங்கள் ஆச்சரியமொன்று கேண்மையாய்ச் சொல்லுகிறேன்

62
சொல்ல வொண்ணாத்துக்க மடியம்மா சோரன்வந்து நம்மை
கேலிகள் பண்ணுவான் சோருகிறனடி மங்கையரே

63
எற்றேயவள் பூசணிசொல்லவும் ஏற்றமாய்விட்டுச்
சொந்தவிடம் தேடிச் சென்றதுவே யானையொன்று

64
யானையைக்கண்டிடவே அந்த ஆயிழை தோழிமார்
பூசணியைத் தனியேவிட்டு ஓடினரே கானகத்தே

65
விட்டகலும் வேளையிலே அந்தமெல்லியள் பூசணிநல்லதென
யானையின் கோபமெல்லாம் தான் தணிந்ததுவே

66
அந்தமொழி கேட்டவுடன்யானை விந்தையதாகவே
சொந்தவனந்தன்னில் ஏகியதுவே குஞ்சரம்

67
குஞ்சரந்தான் சென்றிடவே தோழிகொண்டு நடந்திடும்
தண்டென் பல்லக்கைக் கோதையர்கள் தூக்கிக்கொண்டு

68
அந்தவனம் விட்டகலும்போது ஆயிழைமார்களே
யாழ்நகரத்தூது ஆகாதடி தங்கையரே ஓர்போதும்

69
ஆகாதென்று கூறவேண்டாம் நாளை அண்ணலரசனும்
மண்ணில் மடிந்திட ஆச்சரியம் பாருமம்மா

70
ஆச்சரியம் சொல்லுகிறேன் தோழி ஆதரவாகவே
பேராதரவாய்ச் சொன்னேன் அங்கைகூகைத்துயர்

71
கூகையது கத்துது என்றீரம்மா கோதைபாதகன்காவது
சொல்லுதே, கோழையெல்லாம் விட்டுவிடும்

72
விட்டிடு என்றுசொன்னீரே தோழிவிந்தையாய் அம்மான்
மாளிகை தோணுதுவிரைவுடன் சென்றிடுவோம்.


பகுதி 4

தரு
தனன தன தனனதன தனனதன தனனே
தனதந்தை தனதந்தை தனதந்தை தனனே

73
வந்தவரலாறு ஓதுவேன் மாமா
சொந்த மாயரசன் செய்வினைக்கேளும்

74
ஆசைபுகழ் மந்திரியைத் தூதுக்கனுப்பி
ஆறுதலில்லாததோர் கோபமதுவாகி

75
வேசியென்றெண்ணியவன் பெண்டுக்கழைக்க
காசினி சிரித்திடவே செருப்புடன் புல்லை

76
சீருடன்கட்டி அனுப்பினேன் பின்பு
பேருறுவன மீதிலேகினேன் அம்மான்

77
கூடாததுற் குறிகண்டு நான் மீண்டேன்
கோடான குஞ்சரம் கொல்லவந்ததுவே

78
வந்தவுடன் தோழியர் பல்லக்கைவிட்டு
பந்தமாய்வன மீதினில் ஏகினரம்மான்

79
யானையது கண்டு வழிநின்று கையூத
ஆதரவு சொல்லி அனுப்பினேன் அம்மான்

80
போனதின் பிற்பாடு தோழியிருபேரும்
போட்டிடும் பல்லக்கைத் தூக்கினரே அம்மான்

81
ஆணவங் கொண்டதொரு விக்கிரமசிங்கன்
அநியாயக்காரனால் வந்தசதி அம்மான்

82
என்றவள் சொல்லி புலம்பித் தவித்து
எனது தலைமீது எழுதினதோ அம்மான்

83
கண்டவன் நின்றுதான் பல்லைக்கடிக்கவே
காசினியில் இந்தவசை வந்ததோ அம்மான்

84
ஆதரவான என்தங்க மருமகளே
அஞ்சாமல் பஞ்சணைக்கு வாராயோ வென்றான்

85
மேவிய பஞ்சணையில் பூசணியாளிருந்து
மேதினியில் நாமிருந்தாலென்ன வென்றே

86
வேசி யென்றெண்ணிச் சிரியாரோமங்கையர்
வேந்தனால் வந்த சதியென்றவள் புலம்பி

87
புலம்பித்தவித்துமே பூசணியும்போய்
பூவையும் கெங்கை அருகினிலே வந்தாள்

88
வந்தவுடனே கெங்கை பூசணியைக்கண்டு
வாகாகவே வந்தவரலாறு கூறும்

89
கூறவென்றால் துன்பம் வந்திடுமேயம்மா
கூசுதே என்மனம் சொல்ல முடியாது

90
ஓசையுடனே கெங்கை அருகாகவே வந்து
ஒன்றொடி விழுந்து இரையோடி யிறந்தாள்

91
தேடியே பார்த்தார்கள் தாதியிருபேரும்
கேடியள் சிற்றினடையாளைக் காணாமல் வந்தனரே

92
தாதியர்கள் சொல்லவே ஆலப்பிள்ளைகேட்டு
சடுதியாக கெங்கையருகாகவே வந்தான்

93
ஆதரவான என் தங்கமருமகளே
ஆதரவு சொல்லாமற் போனாயோ அம்மா

94
என்றுமே சொல்லிப் புலம்பித்தவித்து
நன்றாகத் தன்மனைநாடியே சென்றாள்

95
சென்றுமே மனைவி மக்களைக் காணாது
பின்னமாய் நடந்த செய்தியை யறிந்து

96
மேன்மை சேர் இங்கிலீசு அரசரிடம் சென்று
இன்பமாய்க் கண்டியைப் பிடித்துத் தருவேன்

97
என்று அரசரைக் கூட்டியே வந்து
கொடுத்தனனே அரசுரிமையெல்லாம்

98
அரசு செலுத்தி இருக்கிற வேளையில்
ஆலப்பிள்ளை இருந்தால் தீமைவருமென்று

99
என்றவர் எண்ணியே இங்கிலீசு அரசர்
நன்றாகச் சூத்திரக்கப்பலது செய்தார்

100
ஓடமதிலேறி விளையாடுவோமென்று
பேசியே ஆலப்பிள்ளைதன்னைக் கூட்டிவந்து

101
கப்பல்தன்னில் ஏற்றியே இருபேரும்போக
சூத்திரந்தன்னைத் தட்டியே விட்டனரே

102
தட்டிடவேயந்த ஆலப்பிள்ளைதானும்
பொட்டெனக் கடலில் வீழ்ந்திறந்தான்

103
மாதுவளர் கண்டிநகர் ஊதுவாழ் வாழி
மழைபொழிந்தே பயிர்கள் விளைய வாழி

104
நீதிசெறிகண்டி ராசசிங்கன் வாழி
நீலமயிலேறு கதிர்காம முருகன் வாழி

105
வேதமுடன் ஐந்தெழுத்து ஓதுவோர் வாழி
வெண்ணீறு சிவசமயமும் வாழி

106
கேணிக்கரையிலுறை ஐங்கரனும் வாழி
கிருபை நிறைந்ததோர் கிருஷ்ணனும் வாழி

107
நால் வேதமொடுதேவர்களும் வாழி
வேலவரும் வண்ணத் தெய்வானையும் வாழி

108
மட்டக்களப்பு நகரம் நலமுடன் வாழி
மங்கை கண்ணகிதேவியும் வாழி

109
ஊஞ்சற்கதைபடிக்கும் குருமண்வெளி வாழி
உற்றவரும் கேட்டவரும் பார்த்தவரும் வாழி

110
பாதிமதி சூடும்பரன் பாதம் மறவாமல்
பார்மீதிலே தமிழ்வாழ வாழியவே
வாழ்க! வாழ்க! வாழியவே.

முற்றும்.

கலைமகள் பிரஸ்
வடக்கன்குளம்
நெல்லை ஜில்லா.

--------------------------------------------