கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  பனிமழை  
 

அ. யேசுராசா

 

பனிமழை

அ. யேசுராசா

--------------------------------------------

பனிமழை

அ. யேசுராசா

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அலை வெளியீடு
இல. 1 ஓடக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.

------------------------------------------------------------

அலை வெளியீடு - 8

பனிமழை (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) - அ. யேசுராசா - முதற்பதிப்பு : பங்குனி 2002 - அலை வெளியீடு - முகப்போவியம் : ரமணி - கணினி அச்சுக்கோப்பு : ஜெயந்த் சென்ரர், யாழ்ப்பாணம் - அட்டைப் பதிப்பு : குரு பிறின்ரர்ஸ் - அச்சாக்கம் : புனித வளன் அச்சகம் ,யாழ்ப்பாணம் - விலை : ரூபா 70/=

Panimalzai (a collaection of translated poems in tamil) - a. jesuraja - first edition : march 2002 - alai veliyeedu - cover : ramani - type setting : jeyanth centre, jaffna - cover printed at : guru printers - printers : punita valan achchakam, jaffna - price : rs. 70/=

-------------------------------------------------------

கற்றலும் கேட்டலுமாய
அறிவுத் தேடற் செயற்பாட்டில்
என்வாழ்வில்
கேட்டலின் பயனைப்
பெறவைத்த
மதிப்பு நிறை
ஏ. ஜே. கனகரத்தினா
அவர்களுக்கு ...

-----------------------------------------

உள்ளே ...

முன்னுரை
என்னுரை

1. அய் ஜிங் (சீனா)
படிவு 1
பனிமழை 3
தயானெ எனது செவிலி 7

2. விமல் திசநாயக்க (இலங்கை)
மௌனம் 13

3. வெனோ ரோஃவர் (யூகோஸ்லாவியா)
போராளித் தந்தையின் நினைவாக... 14

4. லாங்ஸ்ரன் ஹியூஸ் (அமெரிக்கா)
கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் 16
முடிவு 17

5. பிளாச் கொனெஸ்கி (யூகோஸ்லாவியா)
பழிவாங்கல் 18

6. ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா (ஸ்பெயின்)
பிரியாவிடை 20
சந்திரன் தோன்றுகின்றது 21
கனவு 22
லோலா 23
மலகுவேனா 24

7. அன்னா அக்மதோவா (ரஷ்யா)
பிரிதல் 25
மாலையில்... 26
காட்டில்... 27
வெற்று இரவு.... 28

8. கமலாதாஸ் (கேரளம் - இந்தியா)
Benson and Hedges 29
நினைவுச் சின்னம் 30
பாலை 31

9. ஜோசப் ஃப்ரொட்ஸ்கி (ரஷ்யா)
நிலை மயக்கம் 32

10. ஜூவான் றேமன் ஜிமெனெஸ் (ஸ்பெயின்)
உதயம் 33

11. றொபேட் ஃவ்றொஸ்ற் (அமெரிக்கா)
பனித்துகள் 34

12. கிறிஸ்தீனா மெனெஹெற்றி (உருகுவே)
நேசிக்கிறேன் 35

13. ஆன் றணசிங்ஹ (இலங்கை)
ஒருவகைக் காதற் கவிதை 36

14. றொபேட் கிறேவ்ஸ் (இங்கிலாந்து)
கண்ணாடியில் தெரியும் முகம் 37

------------------------------------------------

முன்னுரை

"கலாபூர்வமான சிந்தனை பல்லாயிரம் மைல்களால் பிரிக்கப்பட்டிருப்போரையும் ஒன்றுசேர்க்கிறது; மறுபுறம், அருகருகே நிற்பவர்களையும் பிரிந்துபோகச் செய்கிறது.
கலாபூர்வமான சிந்தனையே கவிதை... சிந்தனையை கலாபூர்வமாக வெளிப்படுத்துவதால், பாக்களுக்கு சாசுவதமானதோர் வசீகரம் உண்டு."

- இது சீனத்துக் கவிஞர் அல் ஜிங் 1978இல் தெரிவித்த கருத்து. கலை - குறிப்பாகக் கவிதை - தூரத்தால், இனத்தால், மொழியால் பிரிந்து வாழ்வோரைக் கூட நெருங்கிவரச் செய்ய வல்லது என்பது இக்கூற்றின் பொழிப்பு. பிறநாட்டுப் பாவாணர் கவிதைகளைத் தமிழ் மொழியிற் பெயர்ப்பதற்கு இதுவொன்றே போதிய காரணம் ஆகலாம்.

மொழிபெயர்ப்பு முயற்சிகள் காலங்காலமாக நடைபெற்று வந்துள்ளன. ஹோமர் முதலிய மகாகவிகளுடைய காவியங்கள், ஸொஃபோக்ளீஸ் முதலியோருடைய நாடகங்கள் எல்லாம் கிரேக்கத்திலிருந்து ஆங்கிலம், ஃபிறெஞ் முதலிய மொழிகளுக்கு வந்தன. இந்தியத் துணைக்கண்டத்தில் சமஸ்கிருத இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் ஏனைய இந்திய மொழிகளுக்கு வந்தன. இராமகாதை பாடிய கம்பன் தமிழ்க் கவிஞர்களுள் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டான். காளிதாசன் அனைத்து இந்தியராலும் கொண்டாடப்பட்டான்.

கிரேக்கமும், லத்தீனும் ஒரு காலத்தில் வகித்த இடத்தை 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலமும் ஃபிறெஞ்சும் பிடித்துக் கொண்டன. குடியேற்றவாதிகளாகக் கோலோச்சிய இவ்வினத்தவர்களுடைய கொற்றம் ஒடுங்கினாலும், அவர்கள் பரப்பிய மொழிகளும் - அம்மொழிகள் வாயிலாக அறிமுகமாகிய இலக்கியங்களும் - அன்றும் போற்றப்படுகின்றன. ஆங்கிலம் வழியாக, நாம் ரஷ்ய, சீன, லத்தீன் அமெரிக்க, ஸ்பானிய மொழி இலக்கியங்களை - ஏன் தமிழல்லாத பிற இந்தியமொழி இலக்கியங்களைக்கூட - அறிய, அநுபவிக்க முடிகிறது.

கவிதை, மொழியின் மிகச் செப்பமானதொரு வடிவம். "The best words in the best order" என்பது எளிமைப்படுத்தப்பட்ட வரைவிலக்கணம் ஆயினும், அதில் உண்மையுண்டு. நல்லதொரு கவிதையின் ஒரு சொல்லைத்தானும் மாற்றவோ குறைக்கவோ முடியாது. கவிஞன், செதுக்கிச் செதுக்கித் தன் படைப்புக்கு இறுதிவடிவம் தருகிறான். அவ்வாறு செம்மை (perfect) ஆன ஒன்றை இன்னொரு மொழிக்கு மாற்றும் போது, அதற்கு ஒரு புதுவடிவம் - ம்றுபிறப்பு - தரப்படுகிறது. அவ்வடிவம் அந்த இலக்குமொழியின் செழுமையை - சூக்குமங்களை - பண்பாட்டுப் படிமங்களை - பயன்படுத்தி உருவாவது. மூலமொழியின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொள்வதொடு, இலக்கு மொழியின் மரபோடு பரிச்சயமும் அநாயாசமான மொழியாட்சியும் வாய்ந்தவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்க வேண்டும்.

வேறொரு விதமாகச் சொல்வதானால் மொழிபெயர்ப்பு வெறும் translation ஆக அன்றி transcreation ஆக - மீள் படைப்பாக அமைய வேண்டும். அஃது ஒரு வித்தை; ரஸவாதம், எளிதில் கைவருவதன்று.

கணவன் வீட்டுக்குச் செல்லும் சகுந்தலையை வாழ்த்தி வழியனுப்புகிறார் கண்ணுவர். காளிதாசனின் மூலத்தில் அசரீரியாக வருகிறது ஒரு சுலோகம். "சகுந்தலை செல்லும் வழி நெடுக தாமரைப் பொய்கைகள் நிறைந்து குளிர்மை தருக; நிலமெங்கும் தாமரை மலரின் தாதுக்கள் இறைத்து இதஞ்செய்க; தென்றல் வீசுக" என்பது அதன் பொழிப்பு. பிரசித்தி பெற்ற இச் சுலோகத்தை மறைமலையடிகள், மகாவித்துவான் ரா. ராகவையங்கார், ஈழத்து மஹாலிங்கசிவம் ஆகிய மூவர் மொழிபெயர்த்துள்ளனர். முன்னைய இருவரும் மூலத்தை விட்டு விலகாமல் நிற்க, மஹாலிங்கசிவம், ஒரு புதுக் கற்பனையைப் பொருத்துகிறார்: "சகுந்தலை செல்லும் தூரம் குற்றியலுகரம் போல் குறுகுவதாக!" இது transcreation. தமிழ் வாசகர்கள் மட்டும் சுவைக்கக் கூடியது. மொழிபெயர்ப்பாளர் தரு போனஸ்.

ஃபிறெஞ் கவிஞர் பொடலெயர் (Baudelaire) உடைய Recueillement என்ற கவிதையை மூவர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளனர். தத்தம் மொழிபெயர்ப்புக்கு வெவ்வேறு தலைப்புக் கொடுத்துள்ளனர். எனக்கு றொபேட் லோவெல் (Robert Lowell) இன் மொழிபெயர்ப்பே பிடித்தது. ஆனாலும் மூன்றையும் வைத்துக் கொண்டு தமிழாக்கம் செய்தது நல்ல அநுபவமாயிருந்தது.

அது போலவே, இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ஜோஸெஃப் ப்றொட்ஸ்கி (Joseph Brodsky) இன் Nature Morte என்ற கவிதை பிரம்மராஜன், சோ.ப., யேசுராசா மூவராலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்புக்கள் மொழியியல் ரீதியாக ஒப்பிட்டு ஆராயத்தக்கவை.

2

மொழிபெயர்ப்பு வாசகனுக்குப் புரியக் கூடியதாக - அவனைச் சிரமப்படுத்தாது, எளிதிற் சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பாளனுடைய சொற்களஞ்சியம், வடிவம், பிரயோகம் முதலியவை வாசகனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யக்கூடாது.

வடமொழியிற் காளிதாச மகாகவி பாடிய இரகுவம்சத்தைத் தமிழிற் பெயர்த்துப் பாடியவர் அரசகேசரி என்ற யாழ்ப்பாணத்தவர். அந்த மொழிபெயர்ப்புப் பற்றி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை சொல்வதைப் பார்ப்போம்.

"பாடல்கள் வெகு கடினமானவை. பண்டிதர்களையே மலையச் செய்பவை ...அர்சகேசரி பெரிய மகாவித்துவான் ...அவரைப் புலவர் வரிசையில் எடுத்துச்சொல்ல நான் விரும்பவில்லை. கவித்துவ சாமர்த்தியம் வாய்ந்த, இனித்த கவிகள் செய்தவர்களையே புலவர் வரிசையில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்."[1]

"யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்விப் பாரம்பரியத்திலே மிக நீண்ட காலமாகப் பாடஞ் சொல்லப்பட்டு வந்த"[2]
நூல் பற்றி - நூலாசிரியர் பற்றி - பண்டிதமணி முன்வைக்கும் இவ்விமர்சனம், மொழி பெயர்ப்பாளர்கள் மீது பெரும் பொறுப்பைச் சுமத்துகிறது.

மூலத்துக்கு விசுவாசமாக இருக்கும் அதேவேளை, வாசகனுக்குப் புரியும் எளிய நடையில் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும்; மொழிபெயர்ப்பைப் படிப்பவன் உள்ளத்தில் மூலத்தைப் படிக்க வேண்டும் என்ற அவாவை உண்டுபண்ண வேண்டும். யேசுராசா இதைச் செய்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.

----
1. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. இலக்கியவழி பக். 46. திருமகள், சுன்னாகம், 1981.
2. சிவலிங்கராசா, எஸ். ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி பக். 57, தனலக்குமி, திருநெல்வேலி, 2001.
----

3

மொழிபெயர்ப்பாளன் எப்படித் தெரிவினை (Selection) மேற்கொள்கிறான்? மூல ஆசிரியனால் - அவன் படைப்பால் - கவரப்பட்டு, அதில் மனம் ஈடுபட்டு, அதைத் தன் வாசகர்களுக்கு வழங்கும் ஆர்வம் காரணமாக இப்பணியில் இறங்குகிறான். இரண்டாவதாக, மூல ஆசிரியனுடைய கருத்தை - நோக்கை - ஏற்றுக்கொண்டே இப்பணியைச் செய்கிறான். இஃது அவசியமான நிபந்தனையாக இல்லாவிடினும், பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வரையறைக்கு உட்படுவது காணலாம். கார்ஸியா லோர்கா வையும் அனா அக்மதோவாவையும் யேசுராசா மொழிபெயர்த்தமைக்குக் காரணம் அவருடைய உணர்வோட்டம். முற்குறிப்பிட்ட அவ்விரு கவிஞர்களுடைய உணர்வோட்டங்களுக்குச் சமாந்தரமாக இருப்பதே என அனுமானிக்கலாம்.

ரஸனை என்ற எல்லைக்கப்பால், கருத்தியல் நிலையில் ஏற்படும் ஒன்றிப்பு மொழிபெயர்ப்பாளனுடைய தெரிவைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1937இல் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரால் தன் தாய்நாடாம் சீனா சின்னாபின்னப்படுவதையும் குவோமின்டாங் கோழைத்தனமாக மண்டியிடுவதையும் கண்டு சீற்றமடைந்த இளங்கவிஞன் அய் ஜிங், "சீனமண்ணில் பனி பொழிகிறது" (பக்.3) என்ற கவிதையை எழுதினான். சீனாவை வாட்டும் பனி ஜப்பானிய ஆக்கிரமிப்பைக் குறியீடாகச் சுட்டுகிறது. யேசுராசா 1979இல் இதை மொழிபெயர்க்கிறார். அவ்வாண்டு Chinese Literature - 6 இல் ஆங்கில வடிவம் வந்தது நேரடிக் காரணமாய் இருந்தாலும், 1977இன் பின் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறை, இன வன்முறை என்பன ஏற்படுத்திய தாக்கம், மொழிபெயர்ப்பாளர் அய் ஜிங்கின் கவிதையை உணர்வுநிலையில் நின்று நோக்க - தமிழ் அநுபவத்தை சீன அநுபவத்தோடு பொருத்திப் பார்க்க - உதவியிருக்கும், மொழிபெயர்க்க உந்தியிருக்கும் என அனுமானித்தல் தவறாகாது.

ஸ்பானியக் கவிஞர் கார்ஸியா லோர்காவின் மகோன்னதமான வாழ்வும் அவலமான முடிவும் யாரைத்தான் உருகவைக்காது? நட்டுப்புறத்தை, மேய்ப்பர்களை, வயல் வெளியை, வானை, தனிமையை நேசித்த இக்கலைஞனை, தன் பிள்ளைப்பருவ நினைவுகளே கவிதா நினைவாகத் தன்னை வழிநடத்துவதாகப் பிரகடனம் செய்த இக்கவிஞனை, கிரேக்க காவியங்கள், ஷேக்ஸ்பியர் தொடக்கம், ப்றெஞ் குறியீட்டுவாதம், நவீனத்துவம் வரை ஈடுபாடு காட்டிய இப்படைப்பாளியை யாருக்குத்தான் பிடிக்காது? அவன் மரணத்தின் சோகம் நம்மைக் கௌவ, 'மலகுவேனா'வைப் (பக்.24) படிக்கிறோம்.

அனா அக்மதோவா (1889-1966)வைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவருடைய பாணி அலங்காரம் குறைந்தது. குறிப்பாக உணர்த்தும் உத்தியை அவர் பெரிதும் பயன்படுத்துகிறார். சொற்களும் படிமங்களும் எளிமையானவை. பெண்ணுடைய எல்லையற்ற - ஆனால் நிறைவுகாணாத - காதல், புரிந்துணர்வையும் அநுதாபத்தையும் நாடும் ஓர் ஆத்மாவின் ஓலம் - இவை அவருடைய கவிதையின் தொனிப் பொருள்கள். 'பிரிதல்', 'வெற்று இரவு' என்ற சிறுகவிதைகள் தன்மையணி (Understatement) என்ற உத்திக்கு நல்ல உதாரணம். இவை இத்தொகுதியிலுள்ள கமலாதாஸின் கவிதைகளோடு ஒப்பிட்டு நயக்கத்தக்கவை. தன் காதலன், தன் தமையனால் கொலை செய்யப்பட்ட கொடுமையை அப்பெண்ணின் வாய்மொழியாகவே தருவது 'காட்டில்' (பக்.27). இக்கவிதை எம்மை உலுக்கி விடுகிறது.

லாங்ஸ்ரன் ஹியூஸ் இன் இரு கவிதைகளும் அற்புதமானவை. 'கறுப்பர்களுக்காய்ப் புலம்பல்' வெளிப்படையாக - ஆனால் கலாபூர்வமாக - சொல்வதை 'முடிவு' மிக இறுக்கமாக - மந்திரம்போல் - சொல்லி விடுகிறது.

இலக்கியம் வாழ்க்கையின் சகல பரிமாணங்களின் தரிசனமாக அமைய வேண்டும். எவ்வளவுதான் நியாயப்பாடு இருந்தாலும் ஒடுக்குமுறைகளைப் பற்றியே பேசி, தனிமனித உணர்வுகளை - உறவுகளை - புறந்தள்ளுவது முறையா? ஆன் ரணசிங்ஹவின் 'ஒருவகைக் காதற் கவிதை' மிக மென்மையான - personal - உணர்வை வெளியிடுவது. இவ்வகைக் கவிதை தேவையில்லை என்று சொல்ல நாம் யார்? 'சீன மண்ணின் மீது பனி பொழிகிறது' என்ற கவிதையை எழுதிய அய் ஜிங் 'தயானெ - என் செவிலி'யையும் எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை, கவிஞருடைய வாழ்க்கையையும் அவருடைய ஏழை வளர்ப்புத் தாயின் வரலாற்றையும், அவள் ஊட்டிய பாலையும், பொழிந்த அன்பையும் மட்டுமா பேசுகிறது? சீனாவின் பிரபுத்துவக் குடும்பங்களின் வாழ்க்கை முறை பற்றி, தயானெயின் குடிகாரக் கணவன் பற்றி, அவள் பிள்ளைகள் பற்றி, போர் பற்றி, (கவிஞர்) சிறையில் வாடுவது பற்றீயெல்லாம் பேசுகிறது. அய் ஜிங் இக்கவிதையை தயானெக்கு, அவள் மகன்களுக்கு, அனைத்து செவிலித்தாயருக்கும் உரிமையாக்குகிறார். இதுதான் நான் சொல்லவந்த தரிசனம்.

மொத்தத்தில், இத்தொகுதி, தமிழ்க் கவிதை ஆர்வலர்களுடைய ரசனைப் பரப்பை விசாலிக்கிறது. ரஷ்ய, சீன ,ஸ்பானிய, இந்தியக் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் தமிழுக்கு அறிமுகமாகின்றனர். பிறமொழிக் கவிதையின் செழுமையை அறியவும் அதனால் ஊட்டமும் உத்வேகமும் பெறவும் இளங்கவிஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.

மொழிபெயர்ப்பாளரைப் பாராட்டுகிறேன்.

கவிஞர் சோ. பத்மநாதன்
'ஏரகம்'
பொற்பதி வீதி,
கொக்குவில்.
2002.02.14

----------------------------------------------------------

என்னுரை

ஒரு வாசகன் என்ற முறையில் மொழிபெயர்ப்புப் படைப்புக்களில் - புனைகதைகளிலும் குறிப்பாகக் கவிதைகளிலும் - எப்போதுமே எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பிறிதோர் இடத்தில் முன்னர் நான் குறிப்பிட்டதை இங்கு தருதல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்:

"அவ்வப்போது பிறமொழிக் கவிதைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கக் கிடைக்கின்றன. நல்ல மொழிபெயர்ப்பாக அமைந்த கவிதைகள் தரும் அனுபவமும், உள்ளக்கிளர்வும் வித்தியாசமானவை. அவற்றில் வெளிப்படும் தற்புதுமையினை நான் விரும்புகிறேன். தமிழில் சுயமாக எழுதப்படும் கவிதைகளில் அத்தகைய அனுபவங்கள் அபூர்வமாய்த்தான் கிடைக்கின்றன. மாறுபட்ட நிலப்பிரதேசங்கள், காலநிலைகள், பண்பாட்டு மரபுகள், அறிவியல்-தத்துவ வளர்ச்சிச் சூழல்களில் வேர்கொண்டு வெளிப்படும் உணர்வுகள் என்பதால், தம்மளவிலேயே ஒரு நூதனத் தன்மையை அவை கொண்டுள்ளன போலும்! நூதனப்பான்மைகள் மட்டுமல்லாது மனிதப் பொதுமைகளும் அவற்றில் அற்புதமாக வெளிப்படுகின்றன."
- தூவானம் (ப்ச்க். 44)

1968இல் படிக்கக் கிடைத்த, கவிஞர் முருகையன் மொழிபெயர்த்த பத்தொன்பது கவிதைகள் கொண்ட ஒரு வரம் (1964) என்ற நூல், முதலில் என்னை மிகக் கவர்ந்தது; என்னைப் போலவே என் நண்பர் சிலருக்கும் அது நன்கு பிடித்துக் கொண்டது. பல கவிதைகளின் வரிகளை அக்காலங்களில் எமது உரையாடல்களின்போது அடிக்கடி கையாண்டது - குறிப்பாக, 'எரிக் மட்டும் தனித்து விட்டேன்' என்ற வரியைக் குறிப்பிடுவது - இன்றும் நினைவில் இருக்கிறது. அடுத்து,

எம். ஏ. நுஃமானைத் தொகுப்பாளராகக் கொண்டு, 1969 பங்குனி - 1970 பங்குனி வரை வெளிவந்த கவிஞன் இதழ்களில் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் - குறிப்பாக, உணர்திறனும் தற்புதுமையும் கொண்டமைந்த சசியின் (சண்முகம் சிவலிங்கம்) மொழிபெயர்ப்புக் கவிதைகள் - என்னை வசீகரித்தன.

பினாட்களில் எழுத்து முதலிய சிற்றேடுகளிலும், தொகுப்பு நூல்களிலும் பிறமொழிக் கவிஞரின் படைப்புக்களைத் தரிசிக்க முடிந்தது. 1976 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நான் இடமாற்றம் பெற்று வந்ததன் பின்னர், ஏ. ஜே. கனகரத்தினா அவர்களுடன் நெருக்கமாகப் பழகும் அரிய வாய்ப்புக் கிடைத்தது; எங்கள் ஊரிற்கு மிகச் சமீபமாக அவரது வீடு மைந்திருந்தமை அதற்கு வசதியாகவும் இருந்தது; ஏறக்குறைய ஒவ்வொரு நாள் மாலையும் அவரைச் சந்திப்பது வழக்கமாகியது. ஏ. ஜே. பல்துறை சார்ந்து பரந்த - தீவிர வாசகர். எப்போதுமவரது கைகளில் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளை (ஆங்கிலத்திலும் தமிழிலும்) காணலாம். இலக்கியம், திரைப்படம், அரசியல், உள்நாட்டு வெளிநாட்டுப் புதினங்கள் பற்றி அவருடன் நானும் மு. புஷ்பராஜன் போன்ற நண்பர்களும் உரையாடுவோம். தான் படித்து இரசித்தவற்றையும் மாற்றுக் கருத்துக்களையும் தெரியப்படுத்துவார்; வாசிக்கும்படி சொல்லி சில நூல்களையோ, சஞ்சிகைகளையோ தருவார். இதனால், இதுவரை அறிந்திராத பலவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எமக்கு ஏற்பட்டது. அந்த நாட்களில்தான் அன்னா அக்மதோவா, கார்ஸியா லோர்கா போன்ற உலகக் கவிஞர்களை அறிய நேர்ந்தது.

எனதூரின் சாதாரண தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படித்தவன் என்ற வகையில், எனது ஆங்கில அறிவு சுமாரானதுதான். ஆங்கிலத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தவற்றில், அவற்றில் நான் புரிந்து கொண்டவற்றில், எனது இரசனைக்கு நெருக்கமானவற்றையே அவ்வப்போது மொழி பெயர்த்திருக்கிறேன்; திட்டமிட்டதொரு செயற்பாடாக இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் அமையவில்லை. தாம் 'விசுவாசிக்கும்' அரசியலை வெளிப்படுத்துபவை மட்டுமே உண்மையான கலை - இலக்கியங்கள் என, 'சிவப்பு பெந்தகோஸ்தேக்கள்' எனத்தகும் இடதுசாரிகள் சிலரைப் போலவே தமிழ்த் தேசியவாதிகள் சிலரும் நம்புகின்றனர். ஆனால் இவ்விடத்தில், மலையாளத்தின் புகழ்பெற்ற மார்க்சியக் கவிஞர் சச்சிதானந்தன் சுட்டும் "கலையின் உலகம் சித்தாந்தத்தின் சதுரங்களுக்குள் அடங்குவதில்லை" என்ற வரிகள் சிந்தனைக்குரியவை. பல பரிமாணங் கொண்டமையும் மானிட வாழ்க்கையில், உணர்திறன் கொண்ட கலைஞனின் முழு மொத்த அனுபவ வெளிப்பாடே கலை என்பதற்கு இயைபுற்ற முறையிலே - தன்னியல்பாக - எனது கவிதைத் தெரிவுகள் அமைந்துள்ளன.

மொழிபெயர்ப்பின்போது எழுந்த சந்தேகங்கள் சிலவற்றை ஏ. ஜே. கனகரத்தினா, கோ. கேதாரநாதன், சு. மகேந்திரன் ஆகியோர் தெளிவுபடுத்தி உதவினர்; அவர்களிற்கு எனது ந்ன்றிகள்.

'Benson & Hedges' என்ற கவிதையைத் தவிர இத்தொகுப்பிலுள்ள ஏனைய கவிதைகள் யாவும் அலை, புதுசு, களனி, திசை, கவிதை, தாயகம் ஆகிய இதழ்களில் வெளிவந்தன; எனது சொந்தப் பெயரிலும் 'கடலோடி', 'ஞெஜசீலன்' ஆகிய புனைபெயர்களிலும் அவை வெளியாகின; இந்த இதழ்களின் ஆசிரியர்களிற்கு எனது நன்றிகள். பல்வேறு வேலைப்பழு மத்தியிலும் சிறப்பான முன்னுரையினைக் கவிஞர் சோ. பத்மநாதன் எழுதியுள்ளதோடு, செய்யப்பட வேண்டிய சில திருத்தங்களையும் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டினார்; அவற்றில் சிலவற்றை ஏற்றுத் திருத்தியுள்ளேன். நட்புடன்கூடிய அவரது ஒத்துழைப்பிற்கு நன்றியுடையேன்.

இந்நூலில் இடம்பெறும் கவிஞர் பலரின் நிழற்படங்களை மிகுந்த சிரமங்களுடன் சேகரித்துத் தந்த இளம் நண்பன் இராமரூபனுக்கும், சாந்தனுக்கும், க்\மற்றும் அட்டை ஓவியத்தை வரைந்து தந்த ஓவியர் ரமணி, அட்டையை அச்சிட்ட குரு பிறின்ரர்ஸ் நிறுவனத்தினர், பக்கங்களைக் கணினியில் வடிவமைத்த 'ஜெயத் சென்ரர்' உரிமையாளர் கலையார்வன் கு. இராயப்பு, நூலை அச்சிட்ட புனித வளன் அச்சகத்தினர் யாவருக்கும் எனது நன்றிகள்.

அ. யேசுராசா
பங்குனி 2002

இல. 1, ஓடைக்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.

-------------------------------------------------------------

அய் ஜிங்

படிவு

உனதசைவுகளில் எத்தகு நளினத்தோடும்
உனது வலிமையில் எத்தகு உயிர்த் துடிப்போடும்
நுரையில் துள்ளி நீ
கடலில் நீந்தியிருப்பாய்!

துரதிர்ஷ்டவசமாய் ஓர் எரிமலை வெடிப்பு
அல்லதொரு பூமி அதிர்ச்சி
உனது சுதந்திரத்தின் விலையானது,
வண்டலில் நீ புதைபட்டாய்.

பத்துலட்சம் வருடங்களின் பிறகு
ஒரு புவிச்சரிதவியற் குழுவினர்
பாறப் படையினில் உன்னைக் கண்டனர்,
பார்ப்பதற்கு இன்னும்நீ உயிருடனேயே.

ஆனால் இப்பொழுது நீ மௌனம்,
பார்வை கூட இல்லாது.
உனது செதிள்களும் துடுப்புகளும் முழுமையாக
ஆனாலும் உன்னால் அசைய முடியாது.

ஆக முழுமையாய் அசைவற்று,
உலகிற்கு எந்த எதிர்ச் செயலுமற்று.
வானையோ தண்ணீரையோ உன்னால பார்க்க முடியாது,
அலைகளின் ஒலியை உன்னால் கேட்க முடியாது.

இந்தப் படிவினைப் பார்க்கையில்
முட்டாள்கூட அதிகம் கற்கலாம்
'இயக்கம் இன்றி
வாழ்க்கை இல்லை.'

வாழ்விற்காய்ப் போராடுதற்கு
போராட்டத்தில் முன்னணியில் நிற்பதற்கு
மரணங்கூட தவிர்க்க இயலாததாயினும்
சக்தி முழுமையையும் நாங்கள்
பயன் படுத்த வேண்டும்.
- 1978

அலை (ஆடி - புரட்டாதி 1981)

* * *

பனிமழை

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது...

துயர் நிறைந்த கிழவி போல்
காற்று
நெருக்கமாய்ப் பின் தொடர்கிறது
நீட்டிய அவளது நகங்கள்
கடந்து செல்லும் மக்களின்
உடைகளைப் பலமாய் இழுக்கின்றன.
பூமியைப் போல்
பழைமையான அவளது சொற்கள்
இடை விடாது
முறையிடுகின்றன...
காட்டினில் இருந்து
தம் வண்டிகளை ஓட்டியபடி,
சீனாவின் விவசாயிகள்
வருகின்றனர்.
உரோமத் தொப்பிகளை அணிந்தபடி
பனிமழையை எதிர்த்தபடி,
அவர்கள் எங்குசெல்ல விரும்புகின்றனர்?

உனக்குச் சொல்கிறேன்
நான்கூட
விவசாயப் பரம்பரைதான்.
துயரங்கள் ஆழமாய்க்
கோடிட்டுச் செதுக்கிய உன் முகத்திலிருந்து,
சமவெளியில் வசித்த
மக்களின்,
கொடிய ஆண்டுகளை
எனக்குப் புரிகிறது
மிக ஆழமாய்
எனக்குப் புரிகிறது.
இல்லை,
உன்னைவிட நான் ம்கிழ்ச்சியாய் இல்லை.
காலநதியில் மிதந்த என்னை
துயரஅலைகள் அடிக்கடி
முழுமையாயே அமிழ்த்தின.
அலைதலிலும்
சிறை அறைகளிலும்,
பெறுமதியான என் இளமை கழிந்தது.
எனது வாழ்வும்
உனது போலவே,
உலர்ந்தது.

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது...

பனியிரவில் ஆற்றோடு
பழசான கறுப்பு வள்ளத்தில்
சிறிய எண்ணெய் விளக்கு
மெதுவாய்,
இழுபட்டுச் செல்கிறது.
தலையைத் தொங்கவிட்டு,
விளக்கைப் பார்த்தபடி,
அங்கு இருப்பது யார்?

ஓ! நீ
குலைந்த தலையோடும்
அழுக்கு முகத்தோடும்
உள்ள இளம் பெண்ணே
பாதுகாப்பான உனது வீடு,
சூடான, மகிழ்ச்சியான உனது கூடு
ஆக்கிரமிப் பாளரால்
எரிக்கப்பட்டதா?
இதுபோன்ற ஓர் இரவில்
உனது கணவனின், பாதுகாப்பை இழந்தாயா?
எதிரிகளின் துப்பாக்கி முனையில்
மரண பயங்கரத்தில்
சித்திரவதை செய்யப்பட்டு
இழிவு படுத்தப் பட்டாயா?

இதுபோன்ற குளிர்ந்த இரவில்
கணக்கற்ற முதிய தாய்மார்,
நாளையின் சக்கரம் தம்மை
எங்கு எடுத்துச் செல்லும்
என்பதறியாது,
தமக்குச் சொந்தமில்லா வீடுகளில்
அந்நியர் போல்
கூனிக்குறுகி,
ஒடுங்கி இருந்தனர்.
சீனாவின் வீதிகள்
மிகக் கரடு முரடாய்...
சேறு நிறைந்ததாய்...

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது...

நீண்ட இரவில்
பனிபடர்ந்த சமவெளி நிலங்கள்
யுத்த நெருப்பினால்
அழிக்கப்பட்டன.
எண்ணற்ற உழைப்பாளிகள்
தாம் உணவூட்டிய தம் கால் நடைகளை
செழிப்பு நிறைந்த தம் வயல்களை
இழந்து, *
அவநம்பிக்கையின் அழுக்கு ஒழுங்கைகளில்
நெருங்கித் திரண்டனர்.
பசித்த நிலம் நடுங்கும் கரங்களை நீட்டியபடி
இருண்ட வானைப் பார்த்தபடி,
மீட்சிக்காய்
இரந்தது.

சீனாவின் துயரமும் வலியும்,
இப் பனியிரவு போல்
நீண்டு பரந்தது.

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது...

ஓ! சீனா,
விளக்கற்ற இவ் இரவில்,
எனது பலவீன வரிகள்
உனக்குச்
சிறு,
உயிர்ப்பினைத் தருமா?

- இரவில், மார்கழி 28, 1937.

* யப்பானியரால் சீனா ஆக்கிரமிக்கப்பட்டிருக்கையில் இக் கவிதை எழுதப்பட்டது.

களனி (இல. 6, 1979)

* * *

தாயானெ எனது செவிலி

தயானெ, எனது செவிலி
பிறந்த ஊரின் பெயரையே சூடினாள்;
தாயானெ, எனது செவிலி
குழந்தை மணம் புரிந்தாள்.

நிலப் பிரபுவின் மகன்நான்.
ஆனால்,
தயானெயின் பாலில் வளர்ந்தநான்
அவளது மகனுங் கூட.
என்னை வளர்ப்பதால்
தயானெ
தன் குடும்பத்திற்கு உணவூட்டினாள்.
ஓ! தயானெ, எனது செவிலி
உனது மார்பின் பாலினால் நான் வளர்ந்தேன்.

தயானெ,
இன்று பனிமழை பெய்கிறது
நான், உன்னை நினைக்கிறேன்;
புல்மூடிய உனது புதைகுழி பனிமழையில்.
பூட்டிய உனது குடிசையின் தாழ்வாரம்
உலர்ந்த களைகள் படர்ந்தபடி,
உனது சிறுதோட்டம் ஈட்டில்,
அதன் வாசலின் முன்னால் உள்ள கல்வாங்கு
பாசி படிந்து பச்சையாய் உள்ளது.
ஓ! தயானே,
இன்று பனிமழை பெய்கிறது
நான், உன்னை நினைக்கிறேன்.
உனது புஜங்களில் என்னை
உன் நெஞ்சோடு அணைத்தாய்.
வலுவான உன் கரங்கள்
என்னை வருடின.
அடுப்பில் நெருப்பைநீ மூட்டிய பிறகு,
உனது பணித்துறை ஆடையின் சாம்பலைத்
தட்டிய பிறகு,
சோற்றுப் பருக்கையைப் பதம் பார்த்தபிறகு,
ஒருகிண்ணம் கறுப்பு அவரையை
கறுத்த மேசைமேல் வைத்தபிறகு,
மலை முட்களால் கிழிந்த உனது
புதல்வரின் சட்டைகளைத் தைத்த பிறகு,
வெட்டுக்கத்தியால் காயமடைந்த உன்
இளையமகனின் கரத்தில் துணிகட்டிய ஈறகு,
உனது குழந்தைகளின் சட்டைப் பேனை
நசித்த பிறகு,
நாளின் முதல்முட்டையைச் சேர்த்த பிறகு,
உனது புஜங்களில் என்னை எடுத்து
உன் நெஞ்சோடு அணைத்தாய்,
வலுவான உன் கரங்கள்
என்னை வருடின.

நிலப்பிரபுவின் மகனாய் நான் இருந்தேன்,
உனது பாலின் கடைசித் துளியையும்
குடித்தேன்.
பெற்றோரால் திரும்ப நான்
வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டபொழுது
தயானெ,
நீயேன் அழுதாய்?
பெற்றோரின் வீட்டில் நான் புதிய விருந்தாளியானேன்!
மினுக்கிய சிவப்புத் தளபாடங்களை,
பொன்முலாமிட்ட வடிவங்களை நான் தொட்டேன்.
வாயிலின் மேலுள்ள 'குடும்ப மகிழ்ச்சி'
என்ற சொற்களில் கண் மேய்ந்தேன்;
அவற்றை என்னால் வாசிக்க முடியவில்லை.
எனது புதிய பட்டுடைகளையும்
முத்துத் தெறிகளையும் தடவினேன்.
எனக்குத் தெரியாத சிறிய தங்கையை
அம்மாவின் கரங்களில் கண்டேன்.
தணல்தட்டினால் உஷ்ணமாக்கப்பட்ட கட்டிலில்
வர்ண முக்காலியில் அமர்ந்தேன்.
மும்முறை தீட்டிய
நல்ல வெள்ளையரிசிச் சோற்றை உண்டேன்.
ஆனால்
சொகுசிலும் நிறைவற்றே உணர்ந்தேன் -
எனது பெற்றோரின் வீட்டில் நான், புதிய விருந்தாளியானேன்.

தனது பால்முழுவதும் வற்றியபிறகு,
வாழ்வதற்காய்
என்னைச் சுமந்த அக் கரங்களால்
தயானெ, உழைக்கத் தொடங்கினாள்;
புன்னகையோடு எம் உடைகளைக் கழுவினாள்.
கிராமக்குளத்தின் குளிர்ந்த நீரில்
புன்னகையோடு மரக் கறிகளைக் கழுவினாள்.
குளிரில் முறுகலான
சீமைச் சிவப்பு முள்ளங்கிகளைப்
புன்னகையோடு துண்டுகளாக்கினாள்.
புன்னகையோடு, புளித்த தானியங்களைப்
பன்றிகளுக்காய் அவள் கலந்தாள்.
இறைச்சி கொதிக்கும் பாத்திரத்தி நடியில்
புன்னகையோடு நெருப்பினை வீசினாள்.
அவரைகளையும் கோதுமையினையும்
வெயிலுக்காய்ச் சதுக்கத்திற்கு,
தூற்றுக்கூடையில் சுமந்து சென்றாள் -
புன்னகையோடு.
வாழ்வதற்காய்
தனது பால்முழுவதும் வற்றியபிறகு
என்னைச் சுமந்த அக் கரங்களால்
தயானெ, உழைக்கத் தொடங்கினாள்.

தயானெ இந்த வளர்ப்பு மகனை நேசித்தாள்;
தனது பாலையும் ஊட்டினாள்.
புதுவருட விழாவின் போது
வெல்லப்பொங்கலை அவனுக்காய் வெட்டினாள்.
அடிக்கடி அவள்தன் கிராமத்து வீட்டிற்குச்
சென்று திரும்புகையில்,
"அம்மா"வென்றழைத்து அவன் ஓடி வருவான்.
அவன் கிறுக்கிய சித்திரத்தை
அடுப்பிற்கு நேரே அவள் ஒட்டியிருந்தாள்.
வளர்ப்புக் குழந்தைபற்றி
அயலாரிடம்
தயானெ, எவ்வாறு புகழ்ந்தாள்!
ஒருதடவை அவள் கனவொன்று கண்டாள்,
யாருக்குமே அதைச் சொல்ல முடியவில்லை;
கனவில் அவள்
தனது குழந்தையின் திருமணத்தைக் கொடாடச் சென்றாள்.
ஒளிவிடும் மண்டபத்தில்
நிறப்பட்டால் அலங்கரிக்கப்பட்டு அவள் அமர்ந்திருந்தாள்,
அழகிய இளம் மணப்பெண்
"மாமி"யென அன்போடு அவளை அழைத்தாள்...
எவ்வளவு அன்போடு இக் குழந்தையை நேசித்தாள்,
தனது பாலையும் ஊட்டினாள்!

கனவிலிருந்து மீளுமுன் தயானெ இறந்தாள்.
அவளின் மரணவேளை
அவளது குழந்தை அருகில் இருக்கவில்லை;
அடித்துத் துன்புறுத்திய கணவன்
அவள் இறந்தபோது கண்ணீர் விட்டான்,
ஐந்து புதல்வரும் சேர்ந்து அழுதனர்;
இறக்கும் வேளையும் அவள்
வளர்ப்புக் குழந்தையின் பெயரை முணுமுணுத்தாள்.
தயானெ இறந்தாள்;
அவளின் மரணவேளை
அவளது குழந்தை அருகில் இருக்கவில்லை.

தயானெ பிரிந்து சென்றாள்,
கண்களில்,
கண்ணீர்த் துளிகளுடன்.
நாற்பதாண்டுகள் பாரமாய் அழுத்திய
ஆண்கள் உலகின் இழிவு படுத்தல்களோடும்,
அடிமையின் எண்ணற்ற துயர்களோடும்,
நான்கு டொலர்ச் சவப் பெட்டியோடும்
சில கட்டு வைக்கோலோடும்,
தன் சடலம் புதைக்க சிலஅடி மண்ணோடும்,
எரிந்த கடதாசிக்காசின் கைபிடிச் சாம்பலோடும்
தயானெ பிரிந்து சென்றாள்,
கண்களில்,
கண்ணீர்த் துளிகளுடன்.

ஆனால்
தயானெ அறியாத விஷயங்களும் இருந்தன;
அவளது குடிகாரக் கணவன் இறந்தான்,
மூத்த மகன் கொள்ளைக் காரனானான்,
யுத்தநெருப்பில் இரண்டாம் மகன் இறந்தான்,
மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது புதல்வர்
எஜமான்களதும் நிலப்பிரபுக்களதும்
வெறுப்புடன் வாழ்ந்தனர்.
நான் -
இவ்வுலகின் நீதியின்மையைச்
சபித்து எழுதுகிறேன்.
நீண்ட அலைதலின் பிறகு என்
கிராமத்திற்குத் திரும்பிய பொழுது
வயல்களிலும் மலைகளிலும்
என் சோதரரைச் சந்தித்தேன்;
முந்திய ஆண்டுகளைக் காட்டிலும்
ஒருவருக்கொருவர் நாங்கள் நெருங்கினோம்.
அமைதியாய்
உறங்கும் தயானெ,
நீ அறியாதவை இவைதான்.

தயானெ,
நீ முலையூட்டிய உனது குழந்தை
இன்று சிறையில்;
உனக்கு அர்ப்பணிக்கப்பட்ட
கவிதையை, அவன் எழுதுகிறான்.
மஞ்சள் மண்ணின் அடியிலுள்ள
உனது ஆவி உருவிற்கு,
என்னைச் சுமந்த அந்த நீட்டிய கரங்களுக்கு,
என்னை முத்தமிட்ட உதடுகள்ற்கு,
நேசம் நிறைந்த உன் கறுப்பு முகத்திற்கு,
எனக்கு வளமூட்டிய உனது மார்பிற்கு,
உனது புதல்வர்க்கு - எனது சோதரற்கு,
பூமியின் மீதுள்ள எல்லா
வளர்ப்புத் தாயருக்கு, அவர்தம் புதல்வர்க்கு,
எனது தயானெ போன்ற எல்லோர்க்கும்,
சொந்தமகன் போல என்னை நேசித்த
என் தயானெக்கும்.

தயானெ,
நான் உன்னுடைய மகன்,
உனது மார்பு எனக்கு உணவூட்டியது.
உன்னை நான் மிக மதிக்கிறேன்;
உன்னை நேசிக்கிறேன்.

- பனி நிறைந்த காலை, தை 14, 1933.

அலை (ஐப்பசி - கார்த்திகை 1981)

-----------------------------------------------------

விமல் திசநாயக்க

மௌனம்

மௌனம்
ஒரு கொடிய பேய்,
கிராமத்தை அது
கைப்பிடியில் வைத்திருக்கிறது.

அச்சத்தில் அசையாமல் உள்ளன இலைகள்,
பூ மொட்டுக்கள்
மூச்சைப் பிடித்தபடி.

ஒற்றையடிப் பாதைகள்
இருளில் மறைந்து விட்டன,
ஓடக்காரனும்
பயங்கரத்தில் ஓடிப் போனான்.

மேய்ச்சல் நிலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.
குழப்பத்தில் ஒன்றாய் நெருங்கிக்
குடிசைக்குள்...
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

-திசை (04.02.1989)

------------------------

வெனோ ரோஃவர்

போராளித் தந்தையின் நினைவாக...

பிரகாசமாய்த் தெளிவான
காலடிகளின்
ஆழ்ந்த நினைவுகளை எம்மில் விட்டு
அவர்கள் போயினர்.

தம் குருதியால் சுட்ட கல்லினை
முதுசமாய் எமக்கு
அவர்கள் தந்தனர் -
எமது புதிய வீட்டுக்காக...

எமது ஆன்மாவில் அந்தக்
கல்லினை நிறுத்தினோம்.

அதனது உயர்ந்த
வெள்ளைச் சுவரருகில்
எம் கனவின் பிணையாளிகள்
வீழ்ந்தனர்.

கடைசிப் பிணையாளியின் 'ரவை'யுடன்
நாங்கள்கூட
வீழ்ந்துபடுவோம்.
விசுவாசமான மரணத்தின்
தூய - கசப்பு மகிழ்வுடன்!

- தாயகம் (வைகாசி 2001)

------------------------

லாங்ஸ்ரன் ஹியூஸ்

கறுப்பர்களுக்காய்ப் புலம்பல்

ஒரு காலத்தில் நான்
சிவப்பு மனிதனாய் இருந்தேன்,
ஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்;
கறுப்பு மனிதனாயும் நான் இருந்தேன்,
ஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்.

காட்டிலிருந்து அவர்கள் என்னைத் துரத்தினர்;
வனங்களிலிருந்து என்னை
அவர்கள் எடுத்துச் சென்றனர்.
எனது மரங்களை நான் இழந்தேன்;
எனது வெள்ளி நிலவுகளையும் இழந்தேன்.

நாகரிகமெனும் காட்சிக் கூண்டில்
அவர்கள் என்னை அடைத்தனர் -
இப்போது,
நாகரிகமெனும் காட்சிக் கூண்டில்
அடைக்கப்பட்ட பலரோடும்
மந்தையானேன் நான்!

வெளிச்சம் (தை - மாசி 1992)

* * *

முடிவு

சுவரின்மீது அங்கே
மணிக்கூடுகள் இல்லை.
காலமும் இல்லை.
காலை தொடங்கி மாலை வரைக்கும்
தரையின் குறுக்கே நகரும்
நிழல்களும் இல்லை.

கதவின் வெளியே
அங்கு,
இருளும் இல்லை;
ஒளியும் இல்லை.

அங்கு கதவே இல்லை!

கவிதை (ஐப்பசி - கார்த்திகை 1994)

----------------------------

பிளாச் கொனெஸ்கி

பழிவாங்கல்

மனிதனை மரம் பழிவாங்கும்
ஒரு 'காலம்' வருகிறது -
எல்லா வெட்டுதலுக்கும் குத்துதலுக்கும்
எல்லாக் குற்றங்களுக்கும்
எல்லாத் துணிக்கைகளுக்கும்,
கவனமில்லாத ஒவ்வொரு சொல்லுக்கும்
நிழலுக்கும் பழத்துக்குமான நன்றியின்மைக்கும்.

பாய்வதற்கு அது காத்திருக்க முடியாது;
தாக்குவோனாய் உன்வழியில் நுழைய முடியாது.
ஆகையால்,

சிலுவையில் அறையுண்ட மனிதனைப் போல
கனவில் அது நுழைகிறது -
உனது தசைநாருள் தனது
குளிர்ந்த வேர்களைப் புக விடுகிறது;
குருதியின் அந்தன் நடுக்கத்தைப் போல -
கனவில் அந்த நிழல்களின் நடனம் போலப்
பயமுறுத்துகிறது.

அது வசீகரிக்கிறது;
சாபங்களைச் சுழற்றி வீசுகிறது...
'கவனம், அழிப்பவனே கவனம் -
மனிதனின் வலிமை குறுகியது!'

கவிதை (ஆவணி - புரட்டாதி 1995)

---------------------------------

ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா

பிரியாவிடை

நான் இறந்து போனால்
பல்கனியை திறந்தபடி விடு.

சிறுவன் தோடம் பழங்களைத் தின்கிறான்
(பல்கனியிலிருந்து அவனைப் பார்க்கிறேன்)
அறுவடையாளன் தானியத்தை அறுக்கிறான்
(பல்கனியிலிருந்து அதைக் கேட்கிறேன்)

நான் இறந்து போனால்
பல்கனியை திறந்தபடி விடு.

புதுசு (2ஆவது இதழ்)

* * *

சந்திரன் தோன்றுகின்றது

சந்திரன் வெளியில் வரும்போது
மணிச் சத்தம் மங்குகிறது,
தெளிவற்ற பாதைகளும் தோன்றுகின்றன.

சந்திரன் வெளியில் வரும்போது
கடல் பூமியை மூடுகிறது;
முடிவற்ற வெளியில்
ஒரு தீவைப்போல இதயம் உணர்கிறது.

முழுநிலவின் கீழே
யாருமே தோடம்பழங்கள் உண்பதில்லை;
பச்சையான குளிர்ந்த பழத்தைத்தான்
யாரும் உண்ண வேண்டும்.

ஒன்று போலான
நூறு முகங்கொண்ட சந்திரன்
வெளியில் வரும்போது,
பையிலுள்ள வெள்ளி நாணயங்கள்
விம்முகின்றன.

புதுசு (2ஆவது இதழ்)

* * *

கனவு

குளிர்ந்த ஊற்றருகில்
என்னிதயம் இளைப்பாறுகிறது.
(சூன்யச் சிலந்தியே,
உன்
இழைகளால் அதைநிரப்பு.)
ஊற்றுநீர் அதற்குத்
தன் பாடல்களை இசைத்தது.
(சூன்யச் சிலந்தியே,
உன்
இழைகளால் அதைநிரப்பு.)
விழிப்புற்ற என் இதயம்
தன் காதலை இசைக்கிறது.
(மௌனச் சிலந்தியே,
உன்
மறைபொருளை நெய்.)
ஊற்றுநீர் துக்கமாய்
உற்றுக் கேட்டது.
(மௌனச் சிலந்தியே,
உன்
மறைபொருளை நெய்.)
குளிர்ந்த ஊற்றினுள்
என் இதயம் வீழ்கிறது.
(வெள்ளைக் கரங்கள்,
வெகுதொலைவில்,
நீரினை நிறுத்தியது.)
களிப்புடன் இசைத்தபடி அதனைத்
தண்ணீர் எடுத்துச் சென்றது.

வெள்ளைக் கரங்கள் வெகுதொலைவில்;
தண்ணீரில் ஒன்றுமே
எஞ்சி இருக்கவில்லை!

திசை (18.02.1990)

* * *

லோலா

தோடை மரத்தின்கீழ் அவள்
பருத்தி மூடுதுணிகளைக்
கழுவுகிறாள்.
அவளது கண்களோ பச்சை
குரலோ ஊதா,
ஆ! காதல்,
தோடை மரத்தின்கீழ் மலர்கிறது!
நீரோடும் பாதை
ஒளியுடன் வழிகிறது;
சிறிய ஒலிவ மரத்தில்
சிறுகுருவியொன்று கீச்சிடுகிறது.
ஆ! காதல்,
தோடை மரத்தின்கீழ் மலர்கிறது!
பிறகு,
முழுச் சவர்க்காரத்தையும் லோலா
முடித்த பிறகு,
இளம்
காளைச் சண்டை வீரர்
வருவர்.
ஆ! காதல்,
தோடை மரத்தின்கீழ் மலர்கிறது!

அலை (வைகாசி 1990)

* * *

மலகுவேனா*

மரணம் தவறணையின்
உட்சென்று, வெளியில் வருகிறது.
'கிற்றாரின்' ஆழ் பாதைகளூடாய்
கறுப்புக் குதிரைகளும், கெட்ட மனிதர்களும்
நகர் கின்றனர்.
கிளர்ச்சியூட்டும்
கடற்கரைக் கிழங்குகளில்
உப்பினதும், பெண்ணின் இரத்தமணமும்
அங்கு.
மரணம் தவறணையின்
உட்சென்று, வெளியில் வருகிறது;
தவறணையின் மரணம் உட்சென்று
வெளியில் வருகிறது.

* பிரபலமானதொரு நடத்தினதும் மெட்டினதும் பெயர்.
அலை (வைகாசி 1990)

---------------------------------

அன்னா அக்மதோவா

பிரிதல்

மாலை,
சரிவான பாதை என்முன்னால்.
நேற்றுத்தான்,
"என்னை மறவாதே" என
காதலோடு அவன், வேண்டினான்.
இன்று வெறுங்காற்றும்,
இடையனின் அழு குரலும்மட்டும்.

தூய ஊற்றினருகில்,
'செடார்' மரங்கள் அலைப்புறு கின்றன.
-1914

அலை (சித்திரை - வைகாசி 1978)

* * *

மாலையில்

தோட்டத்தின் இசையில்
வெளிப்படுத்த முடியாத் துயரம்.
தட்டின்மேல் ஐஸ்கட்டியில்
'மட்டிச்சதை'யின் கூர்மையான கடல் மணம்,
புதுமையுடன் மணக்கிறது.

'நான் உண்மையான நண்பன்' என
அவன் எனக்குச் சொன்னான்;
எனது உடைகளையும் தொட்டான்
அவனது கரங்களில்
எந்த, உணர்ச்சியுமில்லை.

அது, பூனையையோ ஒரு பறவையையோ
தொடுவதனைப் போல...
செம்மையாய் அமைந்த குதிரையின் முதுகில்,
சவாரி செய்வோனைப் பார்ப்பதனைப் போல...
மெல்லிய பொன்னிற இமையின் கீழே,
அவனது
கண்களில் மட்டும் ஒளி.

பரவும் புகையின்மேல்
வயலினின் துயர இசை, எழும்புகிறது:
கடவுளுகு நன்றிசொல்;
முதல் தடவையாக
உன்,
காதலுடன் நீ தனியாக.
-1913

அலை (மார்கழி 1988)

* * *

காட்டில்...

நான்கு வைரங்கள் - நான்கு கண்கள்
இரண்டு ஆந்தையினுடையது, மற்றையவை எனது.
எனது காதலன்
இறந்த
கதையின் முடிவி கொடூர மானது.

ஈரலிப்பான, அடர்ந்த புற்றரையில்
நான் படுத்திருந்தேன்;
அர்த்தமற்றெனது சொற்கள் ஒலித்தன.
நானே பெரிய ஆள்போல் பார்த்தபடி
அவதானமாய்,
ஆந்தை அவற்றைக் கேட்டது.
ஃவேர்மரக்கூட்டம் எமைச்சூழ்ந் திருந்தது.
கறுப்புச்சதுரமாய் வானம் எமக்குமேலே;
உனக்குத்தெரியும் உனக்குத்தெரியும்
அவர்கள் அவரைக் கொன்றார்கள் -
எனது அண்ணன், அவரைக் கொன்றான்.

தனித்ததோர் சண்டையிலல்ல;
யுத்த களத்திலும், சமரிலுமல்ல.
ஆனால்
வெறிதான காட்டுப்பாதையில்,
எனதுகாதலன் என்னிடம் வருகையில்...

அவர்கள் அவரைக் கொன்றார்கள் -
எனது அண்ணன், அவரைக் கொன்றான்.
-1911

அலை (சித்திரை-வைகாசி 1978)

* * *

வெற்று இரவு...

மகிழ்ச்சியிலும் துயரிலுமான என்
குரலுக்கு,
அந்த இதயம் இனி
பதில் தராது;
எல்லாம் முடிந்தது.
நீ இல்லாமற் போன
அந்த வெற்று இரவுக்குள்,
எனது பாடல்
ஒலித்தபடி செல்லும்!

கவிதை (ஐப்பசி - கார்த்திகை 1994)

-------------------------

கமலா தாஸ்

Benson and Hedges

விறாந்தையில் ஒரு சிகரெட் துண்டு -
நேற்று அவரிருந்த
கதிரைக்குப் பக்கத்தில்.

ஃவில்ரருடன் இன்னோர் அங்குலத்துண்டு
எரியாது கிடந்தது -
B & H எழுத்துக்களுடன்.

அதைநான் எடுக்கவா?
அல்லது,
நியாயமான பொறாமையுடன்
காலடியில் அதை
நசுக்கவா?

* * *

நினைவுச் சின்னம்

ஓடும் தண்ணீரில்,
மாறும் வானத்தில்,
அல்லதுனது துயரக் கனவுகளில்
இப்போது எனக்கு,
ஒரு
நினைவுச்சின்னம் அமை -
இனியும் உன்னுடன் நான்,
இல்லை என்பதற்காய்.
பெருமை நிறைந்த காதலனே!
அரசனைப்போல் உனக்கு முடிசூட்டிய
பழைய நாட்களைப்போல,
இனியும் நான்
உன்னுடையவள் அல்ல!

அலை (மார்கழி 1988)

* * *

பாலை

ஒருதடவை நினைத்தேன்
தந்தைக்கும் தாய்க்கும்,
கணவனுக்கும் சோதரிக்கும்
உரிமையானவள் நான் என்று.
பின்னர் நினைத்தேன் நான்,
எனது காதலனுக்கென்று.
வளர்ந்தபிறகு
நிச்சயமாய் அறிந்தேன்
என் வாசகருக்கு மட்டுமே,
வேண்டப்படுவதாய்.
இன்று எல்லாம் இழக்கப்பட்டுவிட்டது;
யாருக்காகிலும் முழுமையாய்
நான் வேண்டப்படுவது சந்தேகம்.
இக் கடதாசி வெண்ணிறப் பாலை;
எனது அழுகையும் ஒலிகளற்றது.
இங்கு யாருமே என்னோடு இல்லை;
நான்
'கமலா'வென அவர்கள்
முன்பு,
அழைத்த ஒருத்தி.

அலை (வைகாசி 1990)

-------------------------------

ஜோசப் ஃப்ரொட்ஸ்கி

நிலை மயக்கம்

மேரி இப்பொழுது
கிறீஸ்துவிற்குச் சொல்கிறாள்:
"நீர் கடவுளா அல்லதென் மகனா?
சிலுவையில்
ஆணிகளால் அறையப்பட்டீர்.
நான் வீடுசெல்லும் பாதை
எங்கே அமைந்திருக்கிறது?

அறிந்து கொள்ளாமல்,
என் கதவைக் கடந்து நான்
போக முடியுமா?
நீர் இறந்தீரா அல்லது உயிருடனா?
நீர் கடவுளா அல்லது என் மகனா?"

பதிலாக,
கிறீஸ்து அவளிற்குச் சொல்கிறார்:
"இறந்தேனோ இல்லை உயிருடனோ
பெண்ணே,
எல்லாம் ஒன்றுதான்;
மகனோ அல்லது கடவுளோ,
நான் உன்னுடையவன்!"

திசை (25.02.1989)

--------------------------------

ஜூவான் றேமன் ஜிமெனெஸ்

உதயம்

யாருக்கும் சொந்தமில்லா
ரயில் நிலையத்தை ரயில்
அடையும்போது
தோன்றும் துக்கத்தை உதயம்
கொண்டு வருகிறது.

எவ்வளவு பலமாய்க் குரல்கள் ஒலிக்கின்றன!
யாரும் அறியும்
இந்த நாளின் குரல்கள்
நிலையற்றவை -
ஓ... என்னரும் வாழ்க்கையே!

அங்கே இப்போ,
உதயத்தின் வருகையோடு
ஒரு
குழந்தையின் அழுகுரல்....

கவிதை (தை 1995)

----------------------------------

றொபேட் ஃவ்றொஸ்ற்

பனித்துகள்

ஹெம்லொக்* மரக் காக்கை
என்மீது
பனித்துகள் உதறிய
தோற்றம்,
மாற்றியது என்
மன நிலையை;
துயரிற் கழியாதும்
காத்தது -
எஞ்சி இருந்த நாளை!

*ஒருவகை நச்சுமரம்

கவிதை (ஆவணி - புரட்டாதி 1994)

--------------------------------

கிறிஸ்தீனா மெனெஹெற்றி

நேசிக்கிறேன்...

இங்கு இப்போது
நீயெனக்கு வேண்டும்
எல்லாத் தன்முனைப்போடும் உன்னை
நேசிக்கிறேன்...
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
சொல்வதைக் கேள் -
பைத்தியத்தனமாய் நான்
சிலதைச் சொல்ல வேண்டும்;
அதை உனக்குநான் விளக்க வேண்டும்...
இன்று,
எனது முகத்தின் இன்னொரு துண்டு,
உடைந்து போனது!

கவிதை (ஆவணி - புரட்டாதி 1995)

------------------------------

ஆன் றணசிங்ஹ

ஒருவகைக் காதற் கவிதை

மகன் சொல்கிறான்
நான்,
அறிவியல்பூர்வமாக இல்லை;
மகள் சொல்கிறாள்
நான்,
தர்க்கபூர்வமாய் இல்லை;
மருமகன் சொல்கிறான்
நான்,
அதிகார தோரணையில் இல்லை.
என் கணவரோ
ஒன்றுமே சொல்லவில்லை -
புன்னகைக்கிறார்...
என் கரத்தைப் பற்றிக்கொண்டு,
உறங்குவதைப் போல அவர்!

கவிதை (ஐப்பசி - கார்த்திகை 1994)

--------------------------------

றொபேட் கிறேவ்ஸ்

கண்ணாடியில் தெரியும் முகம்

சவரக்கத்தி கையில் ஆயத்தமாக இருக்க
கண்ணாடியில் தெரியும் மனிதனை,
ஏளனமாய் நான் பார்க்கிறேன்.
அவரது தாடி எனது கவனத்தைக் கோருகிறது;
நான்,
மீண்டும் ஒருமுறை அவரைக் கேட்கிறேன்:
'உயரத்திலுள்ள பட்டுப் பவிலியனிலமர்ந்த
மகாராணியை
வசியப் படுத்த,
இளைஞனின் முட்டாள் துணிச்சலுடன்
இன்னுமேன் நீ காத்து நிற்கிறாய்?'

அலை (புரட்டாதி 1986)

--------------------------------

கவிஞர் பற்றிய குறிப்புகள்

1. அய் ஜிங்
சீனாவிலுள்ள ஜியாங் ஹைச்செங்கில், நிலப்பிரபுக் குடும்பமொன்றில் 1910ஆம் ஆண்டு பிறந்தார்; பெற்றோருக்குத் தீங்கு விளையுமென ஒரு சோதிடன் கூறியதால், வளர்க்கப்படுவதற்காகத் தொலைவிலுள்ள விவசாயப் பெண்ணொருத்தியிடம் சேர்க்கப்பட்டார்.
1929இல், ஓவியம் கற்கப் பிரான்ஸ் சென்று சீனா திரும்பிய பின், 1932இல் தேசபக்த நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1936இல் சிறையிலிருந்து வெளியே வந்ததும் முதலாவது கவிதைத் தொகுப்பை -'தயானெ'- வெளியிட்டார்.
1957-58களில் வலதுசாரிகளுக்கெதிரான இயக்கத்தின்போது "வலதுசாரி"யென லேபலிடப்பட்டு, இவரும் இவரது கவிதைகளும் பொதுவாழ்விலிருந்து பீன்னொதுக்கப்பட்டன. 1978இல் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவராய் மீண்டும் பொதுவாழ்விலும் இலக்கியத் துறையிலும் தோன்றினார்; சீன எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவருமானார்.
இந்த நீண்ட இடைக்காலத்திலான தனது நிலையையே குறியீடாக 'படிவு' (Fossil) கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

2. விமல் திசநாயக்க
இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர். சிங்களத்தில் கவிதைகள் எழுதுகிறார். 'காலந்தவறிய மழை' (அகல் வஸ்ஸ), 'ஒலிகளும் எதிரொலிகளும்' (றவ் பிலிறவ்) முதலிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
சிங்கள இலக்கியம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஹவாயிலுள்ள 'கலாசாரத்திற்கும் தொடர்பாடலிற்குமான நிறுவனத்தில்' துணைப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

3. வெனோ ரோஃவர்
யூகோஸ்லாவியா நாட்டைச் சேர்ந்த கவிஞர்.

4. லாங்ஸ்ரன் ஹியூஸ்
அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902இல் பிறந்த கறுப்பினத்தவர். "இரவைப் போன்று கறுப்பானவன். / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்" என்பவை அவரது வரிகள்.
ஆங்கிலத்தில் எழுதியவர்.
'கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள்', 'ஒரு புதிய பாடல்', 'அன்புக்குரிய அழகிய மரணம்' முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன.
புனைகதை, நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார்.
1967இல் மரணமானார்.

5. பிளாச் கொனெஸ்கி
யூகோஸ்லாவியா நாட்டைச் சேர்ந்த கவிஞர்.

6. ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா
ஸ்பெயினில் 1898இல் பிறந்தவர்; ஸ்பானிய மொழியில் எழுதினார். கிராமிய வாழ்வு இவரது படைப்புக்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளை அழுத்தமாக வாசித்துக் காட்டுவதில் திறமைமிக்கவர். 'நியூயோர்க்கில் கவிஞன்' என்ற நெடுங்கவிதை இவரது முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும்.
'ஃபேர்னாடா அல்பாவின் வீடு', 'இரத்தத் திருமணம்', 'யேர்மா' முதலிய புகழ்பெற்ற நாடகங்களையும் எழுதியுள்ளார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது சர்வாதிகாரி ஃவிரங்கோவின் கையாள்களால் 1936 இல் கொல்லப்பட்டார்.

7. அன்னா அக்மதோவா
1889இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து, 1910இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1912இல் முதலாவது கவிதை நூலான 'மாலைப்பொழுது' வெளிவந்தது; 1914 இல் 'மணிகள்' என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது.
1935 - 40 ஆம் ஆண்டுகளில் - ஸ்டாலினின் 'களையெடுப்புக்' காலகட்டத்தில் - எழுதப்பட்ட 'இரங்கற்பா' நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும்.
ஸ்டாலினின் இலக்கியக் கொமிஸாரான "ஸ்தனோவ்', 'பாதி கன்னியாஸ்திரி; பாதி வேசி' என அக்மதோவாவை இழித்துரைத்தார்.
'யுனெஸ்கோ' நிறுவனம், 1989ஆம் ஆண்டினை 'அக்மதோவா ஆண்டு' எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார்.
1966 இல் மரணமடைந்தார்.

8. கமலாதாஸ்
1934இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறப்பு.
ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதுகிறவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்'(1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
ஆங்கிலக் கவிதைக்காக 'இந்திய சாஹித்திய அக்கடமி' விருதினை 1981இல் பெற்றார்.
'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதிவருகிறார்.

9. ஜோசப் ஃப்ரொட்ஸ்கி
1940இல் சோவியத் ர்ஷ்யாவில் யூதக்குடும்பமொன்றில் பிறந்தவர். ரஷ்ய மொழியில் இவர் கவிதைகள் எழுதினார். புரட்சிக் கருத்துக்கள் கொண்ட தனது கவிதைகள் காரணமாக, 1960 இல் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். 1972இல் சோவியத் ரஷ்யா இவரை நாடுகடத்தியதன் பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்கிறார்.
இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களாக வந்துள்ளன. 'தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்'(1973), 'இருபதாம் நூற்றாண்டின் வரலாறு'(1977) முதலிய நூல்கள் வெளிவந்துள்ளன.
1987இல் - தனது 47 ஆவது வயதில் - இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார்.

10. ஜூவான் றேமன் ஜிமெனெஸ்
1881 இல், ஸ்பெயினிலுள்ள 'மொகியர்' என்ற நகரத்தில் பிறந்தவர்.
தனது பதினேழாவது வயதில் 'மட்றிட் றிவியூ' இதழில் வெளியான கவிதைகள் மூலம் இலக்கிய வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றார்.
'தூரத்துப் பூங்கா' (1905), 'சமீபத்தில் மணமான ஒரு கவிஞனின் நாட்குறிப்பு' (1917), 'பாதாளத்தில் ஒரு விலங்கு' முதலிய நூல்கள் புகழ் பெற்றவை.
1956இல், இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
1958 இல் மரணமானார்.

11. றொபேட் ஃவ்றொஸ்ற்
அமெரிக்காவிலுள்ள 'சன் பிறான்சிஸ்கோ'வில் 1874 இல் பிறந்தார். ஆங்கிலத்தில் எழுதினார்.
முதல் நூலான 'ஒரு சிறுவனின் தீர்மானம்' 1913 இல் வெளிவந்தது. 'பொஸ்ரனின் வடபுறம்' (1914), 'மலை இடைவெளி' (1916) முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
1963 இல் மரணமானார்.

12. கிறிஸ்தீனா மெனெஹெற்றி
உருகுவே நாட்டைச் சேர்ந்த கவிஞர்.

13. ஆன் றணசிங்ஹ
ஜேர்மனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, 'நாசி' இன வெறியர்களின் 'இனப் படுகொலை'யிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, 'தாதி'யாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்து தற்போது கொழும்பில் வாழ்கிறார்.
ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். 'கவிதைகள்' (1971), 'சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம்' (1972), அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக' (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

14. றொபேட் கிறேவ்ஸ்
1895 இல் இலண்டனில் பிறப்பு. ஆங்கிலத்தில் எழுதியவர். 'கவிதைகள்' (1953), 'படிகள்' (1958), 'திரட்டிய கவிதைகள்' (1959) முதலிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. உமர்கய்யாமின் 'ருபையாத்' காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
1961இல் ஒக்ஸ்ஃவோட் பல்கலைக்கழகத்தில் 'கவிதைப் பேராசிரியராகத்' தேர்ந்நெடுக்கப்பட்டார்.
வரலாற்று நாவல்களையும், இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார்; ஆயினும், 'தான் அடிப்படையில் ஒரு கவிஞன்' என்றே அவர் தன்னைக் கருதிக்கொண்டார்.
1985 இல் மரணமானார்.

-----------------------------------

ஆசிரியரின் ஏனைய நூல்கள்

1. தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
(சிறுகதைத் தொகுப்பு)
முதற்பதிப்பு: மார்கழி 1974
குருநகர், யாழ்ப்பாணம்.

இரண்டாம் பதிப்பு: மார்கழி 1989
பூரணி வெளியீடு
சென்னை.

2. அறியப்படாதவர்கள் நினைவாக....!
(கவிதைத் தொகுப்பு)
முதற்பதிப்பு: கார்த்திகை 1984
க்ரியா
சென்னை.

3. தூவானம்
(பத்தி எழுத்துக்கள்)
முதற்பதிப்பு: ஆனி 2001
மூன்றாவது மனிதன் பதிப்பகம்
37/14, வ்க்ஸ்ஹோல் ஒழுங்கை,
கொழும்பு - 02

-------------------------------------------