கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வள்ளி  
 

மஹாகவி

 

வள்ளி

மஹாகவி

--------------------------------------------

வள்ளி
'மஹாகவி'
கவிதைகள்

அன்பர் 'மஹாகவி'யின் முதலாவது கவிதைத் தொகுதி இது. இதனை வெளியிடுவதால் ஈழநாட்டு எழுத்தாளர் உலகுக்கே ஒரு மதிப்பு உண்டாகும் என்ற எண்ணம், என் நெஞ்சில் ஒரு பெருமிதத்தை உண்டாக்குகின்றது

'மஹாகவி'யின் கவிதைகள் நூற்றுக் கணக்கில் பத்திரிகைகளிலே வெளிவந்துள்ளன. அவற்றுட் சிலவே இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

கவிதைகளின் தரத்தைப் பற்றிப் பலாலி ஆசிரிய கலாசாலைப் பேராசிரியர் திரு. பொ. கிருஷ்ணபிள்ளைப் பண்டிதர் அவர்கள் பாராட்டி எழுதிய உரையையும், அன்பர் 'மஹாகவி'யைப் பற்றி 'கரவைக்கவி கந்தப்பனார்', 'ஈழகேசரி'யில் எழுதிய குறிப்பில் ஒரு சிறு பகுதியையும் இந்நூலில் சேர்க்க முடிந்தது பற்றி எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

சுவைமிக்க இந்த நூல், எனது இனிய குழந்தைகள் செந்தாமரை, தேன்மொழி இருவருக்கும் சமர்ப்பணம்.

- தி. ச. வரதராசன்
'வரதர் வெளியீடு'
யாழ்ப்பாணம்

------------------------------------------------------------

வரதர் வெளியீடு

வள்ளி

மஹாகவி

கவிதைகள்

-------------------------------------------

இந்த நூல்....

"........................................................ பாட்டுப்
பாடுவதும் வேண்டுமடா பாடு - கவிதைப்
பாற் கடலி லேநீச்சல் போடு"

என்று பிள்ளை நீச்சல் போடப், பாற்கடலைக் காட்டுகிறார் மகாகவி. முதற்கண், பிள்ளை நீந்திப் பயிலத் தாமே சிறு சிறு பாடல்களாகிய பாற்குளம் அமைத்து வருகிறார். சிற்றிளம்பிள்ளைக்கு

'தேடித் தூரம் நடக்கத்
தேவையில்லை; உதமிழின்
ஏடுகள் எல் லாம் கவிதைக் காடே!'

எனத் தமிழ்க் கவிதைப் பரப்பைக் காட்டிக் காவிய வெறி ஊட்டுகிறார்.

சின்னஞ்சிறு கவிதைத் தொகுதி யாயினும் இதில் கவிதைக்குரிய பண்புகள் எவைதாமில? உவமைத் திறம் வேண்டுமா? 'காதலியா'ளைப் பாருங்கள். நல்ல கவிக்குளசாயல் அமைந்துள்ள 'இனம் உய்ய வழி உண்டா?' என்பதைப் பாருங்கள்; - ஒழுகோசை நயம் தானாகவே வழிகிறது. இதே பண்பு 'பாதசரம் எங்கே?" என்பதிலும் காணப்படுகிறது. நற்கருத்து வேண்டுமா? 'அழகிலா போட்டி' என்பதில் அதை நன்கு காணலாம்.

'வள்ளி'யின் காலிலும் எழில் காணும் நம் 'மகாகவி'யின் பொன்றாத பச்சை உளம் பொத்து வெடித்துக் கையாய்ப் பூத்து நிறைந்துளதைப் புவி கவனிக்க இந்தச் சிறு கவிதைத் தொகுதியே போதியது.

-பொ. கிருஷ்ணன்
வியாபாரி மூலை,
பருத்தித்துறை.
12-7-55.

----------------------------------------------------------------

சிகரத்தை நான் அமைப்பேன்

நன்றாக இல்லையென நாச்சவுக்கை வீசுகிறார்;
நண்பா, அறிந்திலரா நல்லவையை? சிச்சி! என்
பொன்றாத பச்சைஉளம் பொத்து வெடித் துக்கவியாய்ப்
பூத்து நிறைந்துளதைப் புவி கவனிக் காவிடினும்,
இன்றப் பழங்கம்பன் எம்மிடையே மீண்டுள்ளான்
என்றெழுந்து நின்றாடார் ஏதிலர்கள் என்றாலும்,
என்தாளெ லாம்எழுத்தே! எழுத்துக்கே என் ஆவி!
குன்றாது காண், ஏதெவர் கூறிடினும் என்மூச்சு!

இல்லாத கற்பனையை இங்கிழுத்துக் கொண்டுவந்தே,
இனிக்காது தென்மொழியும் என்றெழுதிக் காட்டி எமைச்
சொல்லால் உறுத்துபவர் சூழ்ந்திருக்கும் உன்னாட்டில்,
சும்மாஇ ருக்கமுடி யாமலொரு சோம்பேறி
கல்லாய்ச் சமைந்த தமிழ்க் கவிதைக் குயிரூட்டிக்
காதைக் கொடுக்காது, கருத்தை வழங்கிடில், ஆம்,
செல்லாது போய்விடுமே! சீ, இதைநான் அறியேனா?
செந்தா மரை மலரைச் சேறறிய மாட்டாதே!

இன்னஇவன் கூறுகிறான்; இதுஇத் தகையதென
இங்கெமது 'சிங்களர்கள்' இன்னும்உண ராவிடினும்,
பொன்னைஇது பொன்னென்று போற்றத் தெரியாதார்
பொய், புகழ்ச்சி யால்என்னைப் போர்த்தாமற் போனாலும்,
என்ன? இவையெல்லாம் இங்கெவர்க்கு வேண்டும், போ!
எழுத்தைப் பிறருக்காய் 'இறக்கிட' என் சிந்தனையைச்
சின்ன மனிதர்க்காய்ச் சிறிதாக்கத் தேவையில்லை!
சிறப்புக் கொருபுதிய சிகரத்தை நான் அமைப்பேன்!

அண்டம் முழுவதும்அளந் தறிவைஎடுத் தூட்ட, அதோ
அந்திச் சுடர்வானை அப்படியே தீட்ட,அயல்
மண்டும் கொடுமைகளை மாய்த்தறமே நாட்ட, ஒரு
மாசற்ற இன்பவெறி மக்களிடை மூட்ட, வரி
வண்டைப் புறங்காண வார்த்தைகளை மீட்டிப்,பல்
வாழும் இலக்கியங்கள் வார்த்துயர்வு காட்ட, மயல்
கொண்டேண்; கொடுக்கின்றேன்; கொள்ளாவிட்டால் என்ன?
கோதைப் பழமென்போர் குறைகள்கண் டால்என்ன?

பிஞ்சுப் புதுநெஞ்சைப் பீறிட்டுப் பொங்கிவரும்
பேச்சில், பிறநாட்டார் பெறாதபெரும் பேற்றில், உயிர்
மிஞ்சித் தெறிக்கின்ற மேம்பாட்டுப் பாட்டில், எனை
மீறிப் பறக்கின்ற மின்சார வீச்சில், அட
கிஞ்சித்து மேஅழகு கிடையாதாம், கேட்டாயா?
கேடுற் றவரிடையே கெட்டழியாதா தென்னிடமே
எஞ்சிக் கிடக்கின்ற இன்தமிழ் இவ் வென்பாக்கள்,
என்றைக் கொருநாளோ எத்திசையை யும்வெல்லும்!

------------------------------------------------

கிராமம்

நாள் முழுதும் பாடுபடு வார்கள்; - ஓயார்;
நன்றுபுரி வார்; இரங்கு வார்கள்;
ஆள் புதியன் ஆனாலும்
ஆதரிப்பர்; போய் உதவு வார்கள் - ஊரார்கள்.

மாரிகளில் ஆறுவழிந் தோடும்; - இம்
மக்களும் மகிழ் வடைதல் கூடும்!
ஏரை எடுப் பார். உழுவார்;
எங்கும் பயிர் காற்றில் அசைந் தாடும்; - பசுமை நீடும்.

நீண்டவய லில்மழைநீர் தேங்கும்;
நெற்பயிர்கள் அங்கதனை வாங்கும்; - நகை
பூண்ட இளம் பாவையர்கள்
போன்று அவை பொற்கதிர்கள் தாங்கும் - எப் பாங்கும்.

தோப்புக்களில் மாமரம்ப ழுக்கும்; - கிளை
தொத்தும் அணில், சிறுவர்கள்,கி ளிக்கும்
சாப்பிட அளிக்கும் அது!
சண்பகப்பூக் காற்றினில்ம ணக்கும் - உயிர்க ளிக்கும்.

ஆட்டிடையன் பாட்டினிமை கூட்டும்;
அந்தஇசை வந்துஅயர்(வு) ஓட்டும் - கால்
நீட்டி அதோ வேப்பமர
நீழலிற் படுத்துறங்கு; பாட்டும் - தா லாட்டும்!

பூமலியும் பொய்கைமகிழ் வாக்கும்; - அங்கு
போ; அருகில் குயில்பாடல் கேட்கும்!
நீ மடிந்த தென்றிருந்த
நின்கவிதை யுணர்வுதலை தூக்கும் - பா ஆக்கும்!

நல்லவர்க ளுக்கிதுதான் நாடு! - பொய்
நாகரிகத் துக்கப்பால் ஓடு!
முல்லை நடு! பக்கத்தில்
மூன்றறைக ளோடுசிறு வீடு - போதும்! எடு எடு!

-------------------------------------------

யாழ்ப்பாணம் செல்வேன்

இந்நா ளெல்லாம் எங்கள் வீட்டுப்
பொன்னொச் சிச்செடி பூத்துச் சொரியும்!
முல்லையும், அருகில் மல்லிகைக் கொடியும்
'கொல்'லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்'கள்'
அல்லவோ? வயல்கள் எல்லாம் பச்சை
நெல்நிறைந் திருக்கும்என் நாட்டில்! பாட்டுப்
பாடாத உழவன் பாடுவான்! துலாக்கள்
ஆடாது நிற்கும் அன்றோ இன்றே!

யாழ்ப்பா ணத்தை யான்அடை யேனோ!
கூழ்ப்பா னையின்முன் கூடிக் குந்தி
இருந்திலை கோலி, இடுப்பில்இட் டூட்டிய
கரம்தெரிந் தூற்றும்அவ் விருந்தருந் திலனேல்,
பட்டினி போக்கா பழம், பால், இவ்வூர்
'ஓட்ட'லின் முட்டை ரொட்டிகள்! அன்னை
பழஞ்சோற் றுண்டி கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால் வாயூ றாதோ?

கடவுளே! உடனே உடுத்திக் கொண்டு,
அடுத்த ரயிலைப் 'பிடித்து'க் கொள்கிறேன்!
யாழ்ப்பாணத்தை யான்அடை வேனே!
தாழ்ப்பாள் இட்டுத் தனிப்பெட் டியிலே
நித்திரை போய்ப்பின் நிமிர்ந்து பார்த்தால்,
அத்தரை அன்றோ! அடடா, அந்தப்
பெற்றபொன் னாட்டைப் பிரிந்தினி மேலே
சற்றுமிக் கொழும்பில் தங்கேன்! இங்கே,

முலைஇளம் முளைகள் முனைந்தெழு வதனைக்
கலைகுறைத் தணியும் கன்னியர் காட்டவும்,
'தலைஇழந் தே'நாம் தடந்தோள் ஒளிக்கும்
சட்டைகள் கைகள் முட்ட இட்டும்
பட்டிகள் கழுத்தை வெட்ட விட்டும்,
கொட்டிடும் வியர்வையிற் குமைவதா? இவற்றை
விட்டெறிந் தெண்சாண் வேட்டி கட்டி
முட்டொழி யலாம்அம் மூதூர் செல்வேன்!

---------------------------------------

காதலியாள்

கன இருட்டைக் கதிர் கிழிக்கக் காலையாக,
கஷ்டமெலாம் மறந்துவிடக், காற்று வாங்கும்
நினைவொடு யான் சென்றிருந்தேன், சோலையூடு;
நீள்நிழல்கள் நிலத்தினிலே கோலங்கீற,
மனமுருகக் குயில்பாட, மயில்களாடும்,
மாமரங்கள் மலர்ந்துமணம் வீசுஞ் சோலை,
எனைமறந்து நடந்துசெல, எந்தன் ஆகம்
ஈர்த்தணைத்தாள் தென்றலவள், அந்த நேரம்;

வளைகின்ற இடையினிலே குடமொன் றேந்தி,
வார்குழலில் வாயவிழும் வனசம் ஏந்தி,
கிளிமொழியாள் என்னுடைய நெஞ்சைக் கிள்ளி,
ஹிருதயத்தி லேபொருத்திச் சென்றாள் மாது!
அளிமொய்க்கும் அலங்காரப் பதுமப் பூப்போல்,
ஆவியெலாம் உருக்குகிற அழகு மார்பைக்
குளிர்கின்ற பூநிலவை முகில்வெண் பட்டுக்
கிழிசலினால் மூடியபோல் மூடிச் சென்றாள்!

'தாசி'யவள் தலையிருந்து தண்ணீர் சொட்டித்
தனக் குவியல் தனில் தவழும்; தரளமாகும்;
வீசுகின்ற காற்றினிலே புரண்டு பொங்கும்;
விளையாடும்; வனப்பினுக்கு வனப்புக் கூட்டும்.
மாசியிலே பனிப்புகார்ப டர்ந்த போது,
மலர்ந்தொளிக்கும் வெயில்போல, மங்கையாளின்
தேசொழும் முகம் பார்த்தால் கண்கள் கூசும்.
தேன்மொழியாள் என் நெஞ்சை அள்ளிவிட்டாள்!

நடையழகில், நவமணிகள் இழைத்த வாயில்,
நயனத்தில், நெளிந்தங்கே நடனமாடும்
இடையழகில், இருதனத்தில், இருளைப் பிய்த்து
இரண்டாக்கி ஓடுகின்ற எழில் வகிட்டில்
படைபடையாய் வந்தின்பம் பாய்ந்த போது
பரிதவித்தேன்! பாடுபட்டேன்! பட்சம்பொங்கக்
கடைவிழியில் கருவண்டைச் செலுத்திக் காதல்
கக்கவிட்டாள் காதலியாள்! கண்டேன் இன்பம்!

-------------------------------------------------

காதலுக்காய் மணக்க வேண்டாம்

எண்ணமெலாம் நானாகி, இரவில் பாதி
இமைதிறந்த படியேநீ இருப்ப தெல்லாம்
பெண்ணரசி, அறிவேன்நான். நான் உனக்காய்ப்
பிறந்திருப்ப தறிவாய் நீ. எனினும் கேள், இம்
மண்ணிலே வளர்கின்ற பயிர்தான் காதல்;
மாறும், கூ டும்,குறையும், மடியக்கூடும்!
விண்ணிவர்ந்த பொருளல்ல, காமமென்ற
வேர்விட்ட தளிர்தானே காதல் கண்ணே!

ஆதலினால் சொல்கின்றேன் எனது கைக்குள்
அகப்பட்ட கிளைக் குயிலே சிந்தித்துப்பார்.
காதலுக்காய் எனைமணக்க வேண்டாம்! பெய்யாய்
கல்யாணம் நடுக்கடலை ஒக்கும்! அங்கே
மோதுகின்ற புயற்பட்டுக் காதல் தோணி
மூழ்கிவிட வும்கூடும். நாங்கள் எந்தப்
போதுமே தனித்தொன்றாய் இருக்கும்போது
'புளித்து'ப்போய் விடக்கூடும் காதல்கூட!

புன்னகை ஒன் றுக்காகக் காத்திருந்து
பூரிப்பேன் கிடைத்திட்டால்; அடியே எங்கள்
இந்நிலை எந் நாளுமே இருக்கும் என்ப(து)
இயல்பில்லை இவ்வுலகத் திற் கில் வாழ்க்கை
உன் அழகை மலிவாக்கும்! எனை உய்விக்கும்
உன் அன்பு கூடத்தான் பழகிப்போகும்,
என்னடிநீ இவற்றை எலாம் யோசித்தாயா?
எனையேன்கைப் பிடிப்பதற்குத் துடிக்கின்றாயே!

ஒருநாளும் எண்ணாதே விவாக மென்றால்
உல்லாசம் தானென்று! நம்மணத்தை
விரும்பாத பெற்றோரின் வெறுப்பைக்கூட
வென்றாலும், தவறாமல் சுற்றிச்சுற்றி
வருகின்ற தொல்லைகளைத் தாண்டினாலும்
வறுமைக்குத் தோற்கத்தான் வேண்டும்!எங்கள்
வருமானம் போதாமற் போனால், அன்பும்
உருமாறிப் போகும்மற் றெதையும்போல!

சற்றேகேள் காமமோ உடலின் வேட்கை;
அதேபோலத் தான்காதல் உளத்தின் வேட்கை!
மற்றொன்றுண்(டு); அதுவேண்டும் மனைக்கு. காதல்
மட்டும்போ தாதென்பேன். மாசில்லாத
கற்பென்ற தது!என்றும் கலங்கிடாத
கல்நெஞ்சு இல்வாழ்வின் உயிர் அதன்றோ!
பொற்பாவாய், புரிந்ததுவா? புரிந்ததென்றால்
புறப்படுவாய்! வா போவோம், வாழ்வில் ஒன்றாய்!

-----------------------------------------------------------

காதலுளம்

கடல்மண்ணைக் குவித்தாற்போ லேயிருக்கும்
கன்முலைக ளைச்செதுக்கும் காலச்சிற்பி
உடல்சோர வருகின்ற முதுமையாலே
அதுவுந்தான் உடைகிறது! முழுதாய்முற்றி,
வடிவாகப் பழுத்தபழக் கன்னமெல்லாம்
வீழ்ந்தழுகித் தான்போகும்! துடியைப்போன்ற,
இடையுந்தான் இப்படியே இருக்கப்போவ(து)
இல்லை!கா மத்திற்கும் உண்டேஎல்லை!

பாற்கடலில் ஆலமாம் கண்ணின்வேல்கள்
பழுதாகும்; பாயுமா, பின்னும்? தென்றற்
காற்றலைக்கும் கருங்கூந்தல் முகிலும்என்றும்
கார்முகிலாய் இருக்கமாட் டாது! வெள்ளிக்
காற்சிலம்பும் கைவளையும் கதைத்துக் கொள்ளக்
கைவீசி வருகின்றாள், காலத்திற்குத்
தோற்றுவிட்டால், நடைதளர்ந்து கையிற்கோலும்
ஏற்றுவிட்டால், காமத்திற் கிடம் அங்கேது?

முத்திருக்கும் பவளத்தின் சிமிளில்மட்டும்
மயங்கிவிட்டால், அவற்றையெல்லாம் காலக்கள்வன்
எத்திவிட்ட பின், ஆசை ஒழிந்துபோகும்!
ஆதலால் அணங்கேயுன் எழில்களெல்லாம்,
பத்தாதில் வாழ்க்கையிலே பயணம்போக.
'பாதையெது வானாலும் கஷ்டப்பட்டும்,
அத்தானும் நானுமாய்ப் போகவேண்டும்'
என்றுசொலும் காதலுளம் அதுவும்வேண்டும்.

----------------------------------------------

அன்பினால் ஒன்றாகி

இரவுக்குப் பாலூட்டும் மதியென்னுந் தய்
அம்மகவைப் பிரிவாளாம்! காலை முற்றும்
சிரித்த மலர் அந்தியிலே வாடிப்ப் போகச்
சென்று விடும் மணமெல்லாம் எங்கோ! வாழ்ந்த
உருவத்தில் எரிமூட்டி உயிரும் போகும்!
உடலால் என் நுடன் ஒன்றாய் இருக்கின்றாயே,
பிரிய மாட் டாயே என் பிரியே, என்றும்?
பிரிக்காவே இனி எம்மை உலகில் ஒன்றும்?

போற்றி வைத்து வளர்த்த மலர், கொடியை விட்டுப்
போகும்! கைப் பிணைப்புந்தான் - இன்பமென்ற
ஊற்றினிலே நன்றாக ஊறி விட்டால்
இறுக்காது பின்னரும்! இந் நாட்டில் தென்றற்
காற்றடிக்கா தெந்நாளும்! புயலும் வீசும்!
காலமெலாம் வசந்த மிலை! ஆதலாலே
ஆற்றொணா முதுமை வந்தால் அதிலுந்தானே
அன்பினால் ஒன்றாகி வாழ்வம் மானே!

-----------------------------------------------------

எட்டாக் கனி

என் னன்பே தோழி, எதையென் றுரைப்பேன் நான்?
கன் னெஞ் சுடையாள் அக் கண்ணம் மாள்
என்னை,
மகிழ்ந்தேன் புதிய மணாளரைக் கொண்டென்(று)
இகழ்ந் தாளாம்! என்ன இது?

அன்புடையார் என்னை அறமறந்தார்; பொல்லாத
வன்புடையார் தந்தை! வகைய றியேன்
இன்புடைய,
என்றோ நினைந்தேன் இயலாத பெண்ணை அவர்
அன்றோ துறந்தார் அடி?

அப்பன் அதட்ட அயலார்கள் தூற்ற, நான்
எப்பாடு பட்டேன் என உணரார்!
அப்படியே,
என்னைத் தனியேவிட் டெங்கோ அவர் மறைந்தால்
என் மீதி லேயே பழி?

காத்திருந்தேன் அன்று கடையாமம் மட்டுமே
பூத்ததுதான் உண்டு புனல் விழிகள்
நீத்தே,
அகன்றா ரிடமென் அவலத்தைச் சற்றே
புகன்று வருவாயா போய்?

தமிழர்க் கிதுதான் தகுமோ எனக்கேள்
அமிழ்தே போ; ஆற்றோரம் நிற்பார்!
தமியாளை,
நட்டாற்றில் விட்டு நகர்ந்தார்க்குச் சொல் இனிமேல்
எட்டாக் கனிநான் என!

-----------------------------------------------------

புதுநாயகி

ஏட்டிற் தமிழில் எழுதப் படுதற்
கெனது ளத்தின்
கூட்டுட் கிடந்து குமுறா(து) அவிழ்ந்த
குழலை முடித்(து)
ஓட்டம் பிடி! இங் கிரண்டொரு நூறாண்(டு)
உனை இனி என்
வீட்டுள் அடுக்க விரும்பேன்! அகல
விலகி இரு!

நீங்காமல் என்றன் நினைவே முழுதும்
நினக் களித்துப்
பாங்கான தென்றெப் பயலும் புகலாத
பாட்டெ ழுதித்
தூங்கா திருக்க இயலா தெனக்(கு); உன்
துணைக் கினிமேல்
ஏங்கா தடிஎன் மனம் ஒரு போதும்;
எழுந்து நட!

ஆளாகி, என்ன அடைந்து விட் டேன் நான்?
அடி! கவிதை
மூளா தினியும்; முடியா தெனெக்(கு)! என்
முழுப் பொழுதும்
வாளாய் விழிகொண்ட வள் ஒருத் திக்கு
வழங்கி விட்டேன்;
தோளால் அகன்ற துகிலே சரிசெய்;
தொலைந்து விடு!

அத்தைக்கு வாய்த்த மகளே இருக்க,
அவளை மறந்(து)
எத்திக்கும் என்னை இகழும் படி உன்-
னிடம் அடைந்து;
கத்திக் களித்தேன்; தமிழ்நாடு கேட்டுக்
களைத்த(து)! இனிப்
புத்திக் கலக்கம் சிறிதேனும் இல்லை!
புறப் படு நீ!

கன்னஞ் சிவக்கக் கனிவாய் துடிக்கக்
கவிழ்ந்த படி
சின்னஞ் சிறிய அடியே பெயர்த் தொரு
சிற்றிடை யால்
என்நெஞ்சை முற்றும் இனிஆளு வேன் என்-
றிதோ வரும்அப்
பொன்னின் சிலை என் புதுநா யகி யடி!
போய்விடு நீ!

------------------------------------------------

தாமதம் ஏன்?

கைத்தேனா உங்களுக்கு? கால்நடையில் கூடக்
கந்தோர்விட் டெப்பொழுதோ வந்திருக்கக் கூடும்!
பத்தான தேமணி! அப் பாவருவார் என்று
பார்த்திருந்த கண்மணியாள் போய்த் துயின்று விட்டாள்!
அத்தான், ஏன் வீடுவர இவ்வளவு நேரம்?
ஆவலுடன் உங்களுக்காய்க் காவலிருந் திங்கே
பித்தானேன் நான்; நீங்கள் போயிருந்த தெங்கே?
பேதைஎனை யோமறந்தீர்? தாமதம் ஈ தென்ன?

"பால்மொழியே, நான்உன்றன் பக்கத்தை விட்டப்
பால்நகர மாட்டேன்" என் றெவ்வளவோ சொன்ன
ஆல்விழுதே! என்றன் ஒரே ஆதரவே! அத்தான்!
அந்தரித்துப் போனேன் நான்; அண்டையில் உள்ள
நூல்நிலையம் போய்வரவா இவ்வளவு நேரம்?
நூறுதரம் வாசலிலே வந்துவந்து நின்ற
கால்கடுக்க லாச்செனக்கு! கடைத்தெருவில், என்ன,
கம்பனைக்கண் டோ பேசிக் கொண்டிருந்தீர் அன்பே?

ஓடிவந்து வெண்மணல்மேல் வீழும்;போய் மீளும்;
ஓயாஅந் நீள்அலைக ளோடுவிழி ஒன்றி
நாடியிலே கைகொடுத்துக் கொண்டிருந்தே காற்றில்
நாழிகழித் தீர்களென நம்பிடவா அத்தான்?
தேடிஇங்கே நான்கிடந்து தேம்பிடவும் விட்டுச்
சென்றதுவே றெங்கே?செந் தேன்காதிற் சிந்தி
வீடடைந்தால் மீட்டேனோ வீணையினை? இன்று
வேண்டாமல் போய்விடுமோ பாண்டிய, என் பாட்டும்?

விண்புதிய தொன்றோ? அவ் விண்ணைநிறைக் கின்ற
வெள்ளிகள்என் னும்சிறிய புள்ளியின்கூட் டத்தில்
கண்பதிந்தால் என்நினைவு காற்றோடும் போமோ?
காதல, ஏன் வீடுவரத் தாமதமா யிற்று?
நண்பர்களோ டேகூடி, நாலடிக ளோடு
நாள் ஒன்று போக்குவதும் நன்றோ? அங் கங்கே
உண்பதனைக் கூடமறந் துட்கார்ந்தே என்றன்
உள்ளத்தை வாட்டுவதில் இன்பமுமோ உண்டு?

வந்துவந்து மோதுகிற வார்த்தைகளின் உள்ளே
வாராத வெண்பாவின் ஈற்றடியைத் தேடும்
சிந்தனையோ யாப்பிடையே சிக்கிவிட, "என்ன
சேதி?" எனும் தோழர்க்கும் காதுகொடுக் காது
எந்த ரயில் வண்டியிலே ஏறிவழி மாறி
எங்குவரை போனீர்கள் என்னுடைய அத்தான்?
செந்தமிழை நான்வெறுக்கச் செய்கிறதோ வீடு
சேர்வதற்கும் பிந்துவதோ நான்இருக்கும் போது?

--------------------------------------------------

அற்புதம் ஒன்று

ஐயர் வளர்த்த அப்புகை ஓமத்
தருகே, நீர்
பெய்து மகிழ்ச்சி கண்ணை மறைக்கப்,
பெரியோர்கள்
'உய்க! உயர்க!' என்றுரை ஈய,
உலகின்முன்
கைபிணை பட்ட காலையில் இன்பக்
கடலுட்போய்க்

குப்புற வீழ்ந்த அப்புது நாளிற்
குறை உண்டே!
கைப்புள தேநற் காதலும்! இன்றே
கலையாத
சொப்பனம் இல்வாழ் வென்றறி கின்றேன்!
சுவைகண்டேன்!
அற்புதம் ஒன்றை ஆ, ஒரு தாதி
அறிவித்தாள்!

'உங்கள் அ கத்தாள் ஓர் மக வுற்றாள்'
எனும் இன் சொல்
அங்கவள் தந்தாள்; ஆவி சி லிர்த்தேன்!
அடடா, அச்
செங்கை அ சைத்துச் சின்னம லர்வாய்
அலர்வித்துப்
பொங்கி அ ழக் கேட் கப்பெறு கின்றேன்
புறநின்றேன்!

நொந்து நடந்தாள் நுண்ணிடை; வெள்ளை
நுதலின்மேல்
வந்து விழுந்த கூந்தல் அகற்றா
மதி ஓர் ஈர்
ஐந்து கடந்தென் ஆவலின் எல்லைக்
களவிட்டின்(று)
இந்த இனிக்கும் இன்ப ம ழைக்குள்
எனை விட்டாள்!

இன்றுடன் என்றன் இன்னல் அ கன்றேன்;
இனி அந்தக்
கன்று வி ழித்துக் காலைம டித்துக்
கடைவாயில்
நன்று க டித்துக் கொண்டு மு கிழ்க்கும்
நகைகாட்டக்
கண்டு கி டந்தென் காலமு ழுக்கக்
கழியேனோ?

-----------------------------------------------------

இப்பொழுதே தூங்கிவிடு

ஆற்றின் படுகை யெலாம்
ஆற்றுமணல் தான், தண்ணீர்
ஊற்றுக் கிடையாது,
உங்கள் தமிழ் நாட்டினிலே!

மாரிகளில் ஓர் சிறிது
மழையுண்(டு); அதற்காய் இவ்
ஊர், உளவர், ஆறு, குளம்
ஏரியெலாம் காத்திருக்கும்!

பச்சை மரம் காணாமல்
பல காதம் போய் வருதல்
இச்செந் தமிழ் நாட்டில்
இயலுமடா என் மகனே!

பஞ்சுத் துணியில்லை;
பசி பஞ்சம் உண்டோ! நெல்
கொஞ்சம் விளைகிறது;
கொடுநோய்கள் தான் அதிகம்.

இந்த நிலையினையே
சிந்தித்துக் கொண்டோ என்
மைந்த, துயிலா(து) அம்
மா வென் றலறுகிறாய்.

தூங் கென் குல விளக்கே
தூங்காயோ? தூங்காயோ?
நீங்காத தொல்லை
நிறைந்த தமிழ் நாட்டினிலே.

இப்பொழுதே தூங்கிவிடு!
இல்லையெனில் பின்னாளில்
எப்பொழுதும் நேரம்
கிடைக்குமென எண்ணாதே.

இத்தேச முன்னேற்றம்
இனி உன் பொறுப்பாகின்
எத்தனையோ காரியங்கள்
இங்குள நீ சாதிக்க!

தூங்கா உன(து) உழைப்புத்
தேவைவரும், தூங்கு; அந்நாள்
தூங்கில் எனது மனம்
துன்பப் படும்மகனே!

ஆதலினால் இப்பொழுதே
ஆந்தைவிழி மூடி ஒரு
போது சிறிது துயில்
போகாயோ, கண்மணியே!

-----------------------------------------------------------------

பாடு

கோட்டையைப் பிடித்தவன்போல்
கும்மாளம் கொட்டுகிற
நாட்டரச நே, இங்கே வாடா! - தம்பீ
நான் சொல்வ தைக் கேட்டுப் போடா!

பாட்டுரக்கப் பாடு! அந்தப்
பாட்டில் நிறைந்த சுவைத்
தேட்டத்தி லே மனதைத் தேக்கு! - கவிதைத்
தேன் உணல் இன் பப் பொழுதுபோக்கு.

பெற்றவள் அளித்தது நீ
பேசுகிற நம் தமிழில்
நற்கவிதை என்கிறகற் கண்டு - பாடி
நாவலுத்துப் போகும்அள வுண்டு.

கற்றிட நினைந்திடுவாய்!
கம்பன்எழு தித்தந்த
பொற்குவிய லுக்கு விரைந்தோடு - உயர்
பாரதியின் பாட்டுகளைப் பாடு!

தேடித்தூ ரம் நடக்கத்
தேவையில்லை; உன் தமிழின்
ஏடுகள் எல் லாம் கவிதைக் காடே! - பெருமை
எய்தியத னால்தான்எம் நாடே!

கூடியிளம் நண்பரொடு
கூத்தாடல் போல், பாட்டுப்
பாடுவதும் வேண்டுமடா, பாடு! - கவிதைப்
பாற்கடலி லேநீச்சல் போடு!

---------------------------------------------

பாதசரம் எங்கே?

கட்டிளமை சொட்டுகின்ற
கன்னியர்கள் அன்று
மொட்டனைய கொங்கை இணை
முந்திவர, நொந்து
பட்டழிய வஞ்சி இடை,
பஞ்சடிபெ யர்க்கின்
மெட்டிஇசை கொட்டும்; அதில்
மெய் புளகம் எய்தும்!

ஆடுகையி லேஅவைகள்
கூடஇசை பாடும்;
ஓடுகையி லேயும்அவை
ஒத்தலறும்; மாடி
வீடிழியும் அப்படிகள்
மீதினிலும், முன்றில்,
கூடம்இவை எங்கும்அவை
கூப்பிடுதல் கேட்கும்!

கூசிடுவ தேன்நமது
கோதையர்கள், அன்றைக்
கோசைஅழ கால்அழகை
ஓர் படிஉ யர்த்தி
ஆசைகிள றும்வகையில்
அள்ளிநகை சிந்திப்
பேசிடுச தங்கைதரு
பின்னணியை இந்நாள்?

பொட்டழகு, பூச்சழகு,
போர்த்திஉள மென்மைப்
பட்டழகு வெல்லுவது
பார்வையினை! நெஞ்சைத்
தொட்டளையும் இன்னொலிகள்
தோன்றிடஅ திர்ந்து
"கிட்டஉளன்!" என்பவைஅக்
கிண்கிணிகள் அன்றோ?

ஆர்த்திடும்,அ ரற்றிடும், அ-
னுங்கிடும், உ ளத்தை
ஈர்த்திட, இ ழுத்திட, இ-
ளங்குமரி காலில்,
போர்த்தொழில் அ நங்கனது
பூக்களில் வி ழுத்தப்
பார்த்திடும்! இன் றவ்வினிய
பாதசரம் எங்கே?

-----------------------------------------------------------

அழகிலா போட்டி?

செவ்வியநெறி எதென்றே அவர் தெரிகிலார்;
சீர் இறங்கிட இழி செய்கையே புரிகிறார்;
எவ்வழிச் செலினும்ஏ றுகளுடன் நிகரென,
எத்திசை தனிலும் முன் ஏறுதல் விட்டு, நம்
'மவ்வழ' வொத்திடும் மழலையின் இனிமையை
மாந்திமாந் தித்தவ மகவுடன் மகிழ்தல்விட்(டு)
இவ்விழிப் புற்றபெண் இனம் இதோ உடைகளைந்(து)
'எடையிடும் வடிவை'என் றெமதுமுன் வருகிறார்!

அச்சமும் மடமுமே துச்சமென் றழியவிட்(டு), -
அழகெனும் அழுகும் அப் பழம் நிலைப் பொருள் என,
சிச்சி, ஓர் சிறுதுணிக் கச்சுடன், புற எழில்
சிந்தி, வண் சிறகறுந் திடுபசுங் கிளிகள்போல்,
'இச்சைபட் டுலைக'என் றிங்கு மொய்த் தவரிடை
இளையமங் கையர் ஒயில் நடை இயல் பயில்கிறார்!
பச்சையாய்ப் பவனிவ்ந் திடுபுலை வெறி இதைப்
பார்த்துநம் பழைய பண்பா பதுங் கிடுவது?

தொட்டிலில் எட்டுநா ளுக்குளே தொய்ந்து தம்
கட்டவிழ்ந் திடுபுதுக் காரிகை மார்,கடா
முட்டமுன் வருவபோல் மோதிடும் முலைமயல்
மூட்டுவெற் றழகிலா போட்டியிட் டிடல்?இமை
வெட்டி வெவ்வலையிலே வீழ்த்தி மெய் விற்றிடும்
வேற்றுழைப் பற்றலை வேசியும் கூசிடத்
'தட்டுவா ணிகள்' இடைத் தர(கு)ஒழித் திடவுமா
தசைநெடுந் தொடை இணை தமை வெளிக் கொணர்கிறார்?

சிற்பியின் அற்புதச் சிலையைவென் றிடுதுடிச்
சிற்றிடைச் சிறுமையைச், சீ-மறைக் காது, தம்
பொற்பிழந் தே,உயர் பெண்மை போ கப்பெரும்
போதையே என்னும் ஓர் புன்மை எண் ணத்தினர்,
கற்பைஉண் டிடஇரு கண்எறிந் திடுமொழிக்
காமியர் முன்உடற் காட்சிதந் திடுகிறார்!
சொற்கிடைக் காதிதைச் சொல்லவும் கூட! இச்
சுவைகெடும் நிலைஎமைச் சூழவிட் டிடுவதா?

மைப்பொரு விழியின் ஓர் மாசறு நோக்கேனும்
மண்சிலிர்த் திடவரும் மாமழை - மின்னினால்,
கப்பெனும் படிவளர் காளையர் நெஞ்சின் அக்
கல்லுடைத் துட்புகும் கன்னியர் கன்னமே
'குப்'பெனப் போய்ச்சிவந் திடஉறும் நாணம்இன்
றெப்புறத் தே?பிற நாட்டவர் கீழ்மையைக்
கப்பலிட் டேநடுக் கடலிடைத் தமிழகக்
கரையைவிட் டோட்டிடக் கங்கணங் கட்டடி!

--------------------------------------------------------

மடிகிறோம்

காட்டிலே முரட்டுக் கரடிகள் புலிகள்
காலிலே மிதிபடும் பாம்புக்
கூட்டமே உறவாய்க் குழைகளே உடையாய்க்
குடிப்பதோ அருவியின் நீராய்
ஈட்டியி லேபட் டிறந்தவை உணவாய்
இருந்தனர் இரந்திடா(து)! இன்பத்
தோட்டமே தொழிலாய்த் திரிந்தடா தன்று
திருந்திய குடித்தனம் புரிந்தார்.

வானையே சுமக்க நிமிர்ந்தகட் டிடத்தில்
வசித்திலர்; யன்னல்கள் அறியார்;
ஆனையோர் கோடி அமர்த்தினாற் போல
அழுத்திடும் விசையினில் ஓடி
ஏனையோர் கள்வந் துதவினாற் போல
எந்திரத் துதவிபெற் றிலர். மட்
பானையே வனையத் தெரிந்திலர்! எனினும்
பழையமுன் னோர்களும் வாழ்ந்தார்.

கொம்பிலே குதித்துத் தவறிவீழ்ந் துருண்ட
குறுவிழி அணில்இணை எழுமுன்
அம்பிலே கொலைகொண் டலைகையி லேகண்(டு)
அவைகளை எடுத்(து) அவை அஞ்சி
வெம்பநெஞ் சிளகி விடுத்(து) அயல்வெம்பி
வீழ்ந்துள கனிகளைப் புசித்த
நம்பழை யவர்கள் வழியிலே உதித்தும்
நாகரீ கத்தினை இழந்தோம்!

உடைப்பெருஞ் செல்வர் ஊரினுக் கொருவர்;
உறிஞ்சிடப் படுபவர் பலபேர்!
நடப்பது குறைவே, வண்டியில் விரைவோம்.
நகைப்பது மிகக்குறை(வு)! ஒற்றை
நொடிப்பொழு துக்குள் எதனையும் முடிப்போம்.
நூல்சில உள்ளன எனினும்
கிடைத்ததா அமைதி? இல்லையே! கேட்டுக்
கிடங்கிடை விழுந்துணர் வழிந்தோம்!

குரங்கிலே பிறந்து கொலையையே பயின்று
கொடியராய்க் குருடராய் இன்று
கரங்களில் ரத்தக் கறைவிழ அணுவின்
கடையுகக் கனலெழும் யுத்தத்(து)
அரங்கிடைப் பூமி உருண்டையைப் பிளக்க
அடுக்குகள் எடுக்கிறோம்! முன்பு
மரங்களில் வாழ்ந்தும் மகிழ்ந்தநம் இனத்தை
மாய்க்கிறோம்! மடிகிறோம் மனிதர்!

------------------------------------------------------------

இனம் உய்ய வழி உண்டா?

நெல்உள; நிதிஉண்டு; நிறைவுள பொருளுண்டு,
கல்இள முலைமாதர் கடைவிழி மொழிமீதில்!
சொல்லள வினிலேனும் சுகம்உள தென,மண்ணில்
நல்லழ கொழுகும்பா நாதரு வனஉண்டே!

வீதிகள் உள; ஆங்கே விரைபவை உள;தூரச்
சேதிக ளொடுநம்மைச் சேரிதழ் உள;வெட்கிப்
போ(து) அழ, வெறுவாயே பூத்திடும் மகவுக்குத்
தாதியும் உளள்,புட்டிப் பால்வகை தருதற்கு!

விரல்பட முதுவீணை களிவெறி, விளைவித்து
முரலுவ துளதே! யாழ், முழவொடு குழலுண்டே!
குரலின்இ நிமைகூட்டிக் குமரிகள் இடைவாட்டிப்
புரிகின்ற நடனத்துப் புதுமையும் உளதன்றோ?

தொட்டதும் இருள்தீய்க்கும் சுடர்உள; நெடுமாடிக்
கட்டிடம் உள;கோடி கருவிகள் உள; காசு
வட்டமும் உளதே! - தன் வழிகெட அதனோடே,
பட்டண உலகத்தைப் பார், சுழல் கிறதம்மா!

பாயிரம் உரையோடும் பனுவல்கள் பலவுண்டு;
கோயில்கள் குளமுண்டு; கோபுரம் உயர்வானைப்
போய்அடை வதும்உண்டு; போதனை மிகஉண்டே!
ஆயினும் அகிலத்தில் அமைதியை எவர்கண்டார்?

மஞ்சிடை வருதற்கும் வாகனம் உள; விண்ணும்
அஞ்சிட எரிகக்கும் ஆயுதம் உள;மக்கட்
பிஞ்சுகள் உயிர்வாழப் பிறிதொரு நிலமின்றேல்,
எஞ்சி, நம் இனம்உய்ய இங்கொரு வழிஉண்டா?

------------------------------------------------------

வள்ளி

வெள்ளை வெய்யில் இம் மாலை வேளையில்
கொள்ளை கொள்ளும் ஓர் மஞ்சள் - நிறம்
கொண்டிருக்குது; கொஞ்சும்
கிள்ளை கள் அதோ கிளை அ டைந்தன;
வள்ளி வீடுசெல் கின்றாள்! - வயல்
வரப்பி பேநடக் கின்றாள்.

ஆடு முன்செல, அந்த மான் தொடர்ந்(து)
ஓடு கின்றனள்; ஓட - சிலம்(பு)
ஓசை கேட்குது கூட!
மாடு கொண்(டு) 'அவன்' மனைதி ரும்புமுன்
வீடு கூட்டுவ தற்கோ - அவதி?
விளக்கு வைத்திடு தற்கோ?

நில்ல டி! மிக நேரம் ஆனதோ?
'மெல்ல வேநடக் காயோ? - கொடி
மேனி ஏன் களைப் பாயோ?
சொல்ல டி; சிறு கல்லும் முள்ளும் உன்
மெல்ல டி உறுத் தாவோ, - என, அம்
மின்னல் ஏன் சிரித் தாளோ!

'வார்த்தை யோடுதான் வாழும் தோழ, நான்
பூத்த மல்லிகை அல்ல; - பாதம்
புதிய பூவிதழ் அல்ல;
வேர்த் தெந் நாளுமே வேலை செய்பவள்
காய்த்த தோல் எனக்(கு)!' என்றாள்; - அவளோ
காலி லும் எழில் கொண்டாள்!

நெல்லி டிக்குமாம்; நீர் இ றைக்குமாம்;
புல்செ துக்குமாம் கைகள்; - அதனால்
பொலிவு பெற்ற அ வைகள்!
கல்லொ(டு) ஒத்தது காரி கை உடல்!
வல்லி டை இடை; எனினும் - அது
வருத்தக் கண்(டு) உளம் உழையும்!

-----------------------------------------------------

வள்ளி
'மஹாகவி'
கவிதைகள்

முதற்பதிப்பு:
ஆடி 1955

அச்சு:
ஆனந்தா அச்சகம்

விலை: சதம் 60

விற்பனையாளர்:
ஆனந்தா அச்சகம்
226, காங்கேசன் துறை வீதி
யாழ்ப்பாணம்.

பதிப்புரிமை:
வரதர் வெளியீடு.

--------------------------------------------------

"கொண்டேன்; கொடுக்கின்றேன்; கொள்ளாவிட்டால் என்ன? கோதைப் பழமென்போர் குறைகள் கண்டாலென்ன?" என்று கவிக்குரிய காம்பீரியத்தோடு கவிதையின் சிகரத்தை எட்டிப் பிடிக்க எக்காளமிடும் இளங் கவிஞர்தான் உருத்திரமூர்த்தி எனும் பெயர் கொண்ட 'மஹாகவி'

'கிராம ஊழியன்' பண்ணையிலே முளை கொண்டு, 'ஈழகேசரி', 'மறுமலர்ச்சி' இவற்றில் வளர்ச்சி பெற்று, ஈழத்திலே தனக்கென ஓர் இடத்தைத் தன் முயற்சியால் ஆக்கிக்கொண்ட இவர், கிராமத்தைச் சூழ் நிலையாகக் கொண்ட - சாதாரண மனிதனின் இன்ப துன்பங்களை அடிப்படையாகக் கொண்ட - கவிதைகளை ஆக்கி அழியாப் புகழ் பெற்றவராகி விட்டார்.

எத்தனையோ மேதாவிகளையும், சிந்தனைச் சிற்பிகளையும், எழுத்தாளர்களையும் தந்து யாழ்ப்பாணத்தின் புகழை நானாதிசையும் பரப்பிய அளவெட்டிதான் அவருடைய கிராமம். துரையப்பாபிள்ளை என்ற கவிதாசிரேட்டரால் தொடங்கப் பெற்று, சின்னப்பாபிள்ளை என்ற 'கவிஞர்' அதிபராக இருந்து நடாத்திய தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அளித்த மும்மணிகளில் மஹாகவி ஒருவர். இப்போது இயந்திரம் போல் மனிதனை ஆக்கிவிடும் 'குமாஸ்தா' உத்தியோகம் பார்க்கிறார். எனினும் அவரது கவிதைகள் இப்பொழுதுதான் புடமிட்ட தங்கம்போல் ஒளிவீசுகின்றன....."

- ஈழகேசரியில் 'கரவைக் கவி கந்தப்பனார்'

-------------------------------------------------