கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
அம்பா | ||
மு. புஷ்பராஜன் |
அம்பா மு. புஷ்பராஜன் ++++++++++++++++++++++++++++++++ அம்பா மு. புஷ்பராஜன் அலை வெளியீடு - 1 ஐப்பசி 1976 விலை: ரூபா 2-00 ++++++++++++++++++++++++++++++++ AMPA essays on fishermen's folk songs by m. pusparajan 7/3, 4th cross Street water tank, gurunagar, jaffna published by alai literary circle cover by sou printed at bastian press main street, jaffna first edition october 1976 price rupees two ++++++++++++++++++++++++++++++++ சமர்ப்பணம் "அலைவாய்க் கரையெலாம் அம்பாக் குரலெடுத்த கடலின் புதல்வருக்கே!" ++++++++++++++++++++++++++++++++ முன்னுரை i என்னுரை v அம்பா 1 கடவுள் வணக்கம் 5 தொழில் வகைகளும் அதன் பாடுகளும் 12 காதல் உணர்வுகள் 29 வசை பாடல் 38 கதம்பம் 40 ++++++++++++++++++++++++++++++++ முன்னுரை நாட்டார் பாடல்கள், கல்வியறிவற்ற கிராமிய மக்களுக்கு மட்டும் உரியவை என்று கருதிய காலம் போய், அவற்றை ஒரு தேசியச் செல்வமாக மதிக்கும் காலம் இது. வளர்ச்சியடைந்த, வளர்ச்சி குறைந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வித்துறையினரும் ஆய்வறிவுத் துறையினரும் கடந்த சில பத்தாண்டுகளாக நாட்டுப் பாடல்களில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். இலக்கியப் படைப்பாளிகளும், விமர்சகர்களும், இசைத் துறையினரும் கூட நாட்டுப் பாடல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். மேலைத் தேயப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நாட்டார் பாடல்களை உள்ளடக்கிய நாட்டுப் பண்பாட்டியல் (Folk Lore) பற்றிய ஆய்வு, ஒரு தனித் துறையாகவும் இடம் பெற்றுள்ளது. கிராமிய மக்களின் சமூக உறவுகளையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு நாட்டார் பாடல்கள் முக்கியமான ஊற்று மூலமாக இருப்பதும், சமூக அறிவியல் துறைக்கு அவை அதிக தகவல்களையும் தரவுகளையும் தருவதுமே இதற்குரிய முக்கிய காரணங்களாகும். நாட்டார் பாடல்கள் பலவகைப் படுவன. உடல் உழைப்போடு நேரடியான உறவுடையவை என்றும், வாழ்வின் பிற துறைகளோடு தொடர்புடையவை என்றும் அவற்றை நாம் இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். உழைப்பே மனிதவாழ்வின் இயக்கு சக்தியாகும். நாட்டார் பாடல்களில் உடல் உழைப்போடு தொடர்புடையவை அதிகமாக இருப்பதற்கும் இதுவே காரணமாகும். "ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும் கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும், சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்..." என்று பாரதி குறிப்பிடுபவை எல்லாம் உடல் உழைப்போடு நேரடியான உறவுடையவையே. கூட்டு உழைப்பின் ஆர்வப்பெருக்கினால் இத்தகைய பாடல்கள் தோன்றுகின்றன. உழைப்புச் சிரமத்தை மறைத்து உற்சாகம் ஊட்டுவதற்கு இப்பாடல்களின் தாளலயம் உதவுகின்றது. மீனவர் பாடல்களும் இத்தகையனவே. இலங்கையின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் பல்வேறு வகையான, ஏராளமான மீனவர் பாடல்கள் வழங்குகின்றன. கப்பற்பாட்டு, தோணிப்பாட்டு, ஏலேலப் பாட்டு போன்ற வெவ்வேறு பெயர்களில் அவை அழைக்கப்படுகின்றன. அறிவுலகம் அறியாத அத்தகைய அநேகபாடல்கள் ஈழத்துக் கரையோரங்களில் கடற்காற்றில் மிதந்து வருவதை நாம் தினமும் கேட்கலாம். அவ்வகையில் குருநகர் போன்ற யாழ்ப்பாணக் கரையோர மீனவர்களிடையே வழங்கும் 'அம்பா'ப் பாடல்கள் சிலவற்றைத் தேடித் தொகுத்து இந் நூல் மூலம், முதல்முறை அவற்றை அறிவுலகுக்கு அறிமுகப் படுத்துகின்றார் நண்பர் புஷ்பராஜன். கிராமங்கள் நவீன மயமாவதாலும் தொழில்துறைகள் இயந்திரமயமாவதாலும் தமது தலைமுறையில் வழக்கிறந்து மறைந்து வரும் இத்தகைய நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுத்துப் பேணுவதில், ஆர்வம் உடைய இன்னும் ஒருவர் கிடைத்ததில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஈழத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அச்சேற்றும் முயற்சிகள் சில நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய பிரதேசங்களுக்குரிய நாட்டுப் பாடல் தொகுதிகள் சில வெளிவந்துள்ளன. பத்திரிகைகளில் அநேக கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. வானொலிப்பேச்சுக்கள் பலவும் ஒலிபரப்பாகியுள்ளன. இவற்றில் பொதுவாக நாம் இருபோக்குகளைக் காணலாம் கிடைக்கக்கூடிய பாடல்களை எல்லாம் சேகரித்து அவற்றை அச்சிட்டு வெளியிடுவது ஒருபோக்கு. இலக்கியச் சுவையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட பாடல்களைத் தெரிந்து ஒரு கற்பனைக் கதையைப் புனைந்து அதையே உண்மை எனப்பாவித்து அப்பாடல்களை விளக்க முனைவது மற்றது. முதலாவது போக்கு வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை இரண்டாவது போக்கு, தான்தோன்றித் தனமான கற்பனை உலகுள் நாட்டுப் பாடல்களை இழுத்து விடமுனைவதால் ஒதுக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. நண்பர் புஷ்பராஜன் இவ்விருபோக்குகளில் இருந்தும் வேறுபடுவதை நாம் இந்நூலில் காண்கின்றோம். இது வெறுமனே அம்பாப் பாடல்களின் ஒரு தொகுப்பு நூல் அல்ல. அதுபற்றிய ஒரு கற்பனைப் புனைந்துரையும் அல்ல. அந்நூல் மூலம் நமக்கு ஒரு புதிய உலகைத் திறந்து காட்ட அவர்முயன்றுள்ளார். ஒரு குறிப்பிட்ட கிராமிய அல்லது பழங்குடி (Rural or Primitive) மக்கள் தொகுதியின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் சடங்கு சம்பிரதாயங்கள், தொழில் நுணுக்கங்கள் போன்ற கலாசாரக் கூறுகளை ஆராய்ந்து வெளிக்கொண்டு வருவதும், அக்கலாசாரக் கூறுகளோடு தொடர்புடைய மொழியியல் கூறுகளையும் சொற்தொகுதியையும் ஆராய்வதும் கலாசார மானிடவியலாளரினதும் (Cultural Anthropologists) மானிடவியல் மொழியியலாளரினதும் (Anthropologists Linguists) முக்கிய பணியாகும். அத்தகைய ஆய்வு முறைகளில் பரிச்சயம் இல்லாவிடினும் தனது சொந்த முறைகளில் பரிச்சயம் இல்லாவிடினும் தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக அத்தகைய ஆய்வுத் துறையினரின் பணியையே நண்பர் புஷ்பராஜன் இந்நூல்மூலம் செய்திருக்கின்றார். குறிப்பாக கடவுள் வணக்கம், தொழில்வகைகளும் அதன் பாடுகளும் என்னுள் இரண்டு அத்தியாயங்களும் வடபகுதி மீனவர் சமூகத்தின் பிரத்தியேக பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை நுட்பமாக விபரிக்கின்றன. யாழ்ப்பாணக் கிளைமொழியில் சொல்லியல் ஆய்வு (Lexical Study) நடத்த முனையும், ஒரு மொழியியலாளனுக்கு உதவக் கூடிய பயனுடைய தகவல்கள் அநேகம் இந்நூலில் உள்ளன. அறிவுலகுக்குச் சில புதிய நாட்டுப்பாடல்களை மட்டுமன்றி ஒரு புதிய கலாச்சாரத்தையே அறிமுகப் படுத்தும் புஷ்பராஜனின் இம்முயற்சி, பாராட்டி வரவேற்கத்தகுந்த பயனுடைய ஒன்றாகும். இந்நூலாசிரியர் எதிர்காலத்தில் இத்தகைய முயற்சிகளின் மேலும் ஈடுபட்டு, நமக்கு அதிகபேறுகளைப் பெற்றுத்தருவாரென்று நாம் எதிர்பார்க்கலாம். தமிழ் மக்கள் இம் முயற்சியில் அவருக்கு உதவுவார்கள் என்றும், நான் நம்புகின்றேன். எம். ஏ. நுஃமான் தமிழ்த்துறை இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணவளாகம். 16-10-1976 ++++++++++++++++++++++++++++++++ என்னுரை வாழ்வின் அன்றாடத் தேவைகளுக்காய் அலைகடலுடன் நித்தம் போராடும் கடலின் புதல்வர்களின் நானுமொருவனாய் அமைந்த அக்காலங்களில்; சீறிச்சினந்த காற்றுடன், வெண்நுரை சுமந்த கடலடிகளை, அஞ்சாமை கொண்டு ஆர்ப்பரிக்க, அலையோசைகளை மீறியெழுந்த அந்த அம்பாவோசைகள் அடிமனம் தடவ, பின் எழுந்த அலையோசைகள் "எழுதடா எழுது, கடலோடு பிறந்து காற்றோடு மறையும் இக் கவித்துவங்களை எழுதப்படா எழுது" என என்னைச் சுற்றிச்சுற்றிச் சப்தமிட்டதாக உணர்ந்ததன் விளைவே இந் நூல். இந் நூலில் இடம்பெற்ற வசைபாடல்கள், சிலபகுதி மக்களைப் புண்படுத்துமென நினைத்து ஒதுக்கமுனைந்த போது, குறையற்ற கதாநாயகத் தன்மையினால் இவர்களது ஆளுமை சிதைந்துவிடுமென எச்சரிக்கை கொண்டதனால் அப்படியே விட்டுவிட்டேன். ஆயினும், அக்கால மக்கள் பலர், கத்தரிக்காய் விற்றஇடத்தில் - ஒரு கரையூரான் சொன்னானடி பூசணிக்காய் விற்றஇடத்தில் - ஒரு புத்தூரான் சொன்னானடி (கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரி) * * * பொல்லாதவர்க்குப் பொல்லாப்புப் பூட்டுந் திறலினுடனிருப் போர் மல்லாகத்தில் வீரரிவர் மற்றோர் நவாலியூராரே * * * ஆனைக்கோட்டை வேளாளன் ஆறுமுகன் காணென்பாரே (கனகி புராணம்) * * * ஏழாலை இளவாலை கீழால போக புன்னாலைக் கட்டுவன் பூம்பூட்டியாக (கல்லடிவேலன் என்பது பலர்கூற்று) இப்படிக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஊர்ப்பெயர் சொல்லிப் பாடியது கண்டு, மனம்தேறினேன். பிறந்த களத்துக்கு மட்டுமின்றி நாட்டின்ஏனைய மக்களுக்குமுரிய 'புதைபொருளான' இம் மக்கள் பாடல்கள், எத்தனை ஆண்டுகள் என்னோடு செயலற்றிருந்தன என்பது தெரியாதபோதிலும், "ஈழத்தில் இதுவரை யாரும் அக்கறை கொள்ளாத துரைபற்றி அறிமுகம் செய்கிறது" என்ற குறிப்புடன் செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட விவேகியின் இரண்டு இதழ்களின் (28-5-69, 8-11-70) இவற்றில் சில வெளிவந்தமை, இன்னும் நினைவிலுண்டு, இவ் அம்பா நூல் பூரணம் பெற்றிருக்கும் இந்தவேளையில் இவற்றைச் சேகரிக்க என்னோடு ஒத்துழைத்த என் மீவைத் தோழர்களுக்கும்; தன் மரணத்திற்குக் காலாயமைந்த நோயுடனுங்கூட இவற்றைப் படித்துத்தன் அபிப்பிராயங்கள் திருத்தங்களைக்கூறிய அமரர் மு. தளையசிங்கத்திற்கும் அவரின்பின் அதனைத் தொடர்ந்த மு. பொன்னம்பலத்திற்கும்; இவ் அழகிய முகப்பு ஓவியத்தினை வரைந்த சௌவிற்கும்; முன்னுரை வழங்கியவரும், ஈழத்து இலக்கியத் துறையில் நான் மதிக்கிறவர்களில் ஒருவருமாகிய எம்.ஏ. நுஃமானுக்கும்; கையெழுத்துப் பிரதியாக வாங்கி இவ் அழகிய அமைப்புடன் கூடிய புத்தகமாக என்னிடம் தந்த, என் இளம் பருவத்துத் தோழன் அ. யேசுராசாவிற்கும் தோழமையுடன் நன்றி கூறுகிறேன். மு. புஷ்பராஜன் குருநகர், யாழ்ப்பாணம். 16-10-1976. ++++++++++++++++++++++++++++++++ அம்பா பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் யாழ் மேற்கு முன்னணிக் கரையில் வாழும் மீனவர்கள் இப்படித் தம்மோடு பிறந்து, மிதந்து வளமூட்டும் இப்பாடல்களை "அம்பா" என அழைக்கின்றார்கள். இவ் அம்பாப் பாடல்கள்; யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய மீன்பிடிப் பகுதிகளிலும், குறிப்பாக பேசாலை, வங்காலை, பள்ளிமுனை. கொக்குளாவா போன்ற பகுதிகளிலும் பாடப்படுகின்றன. இப் பாடல்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு சொந்தமானவையெனக் கூறமுடியாது. பருவக் காற்றின் பெயர்ச்சி காரணமாக மீனவர்கள் இடம் பெயர்ந்து தொழில்கள் செய்வதனால், இவை பரந்துகொண்டே போயிருக்கும். ஆனால் இதில் வரும் அநேக பாடல்கள் குருநகர்-கரையூர், அல்லது குருவூர் என்று அழைக்கப்படும் கடற் பகுதியில் பிறந்தவனவாகும். இவற்றில் வரும் பாடல்களில் சில, ஏனைய மீன்பிடிப் பகுதிகளிலிருந்து இங்கு பரவியதாகவும் இருக்கலாம். இம் மக்கள்; இன்று தமது தொழிலை புதிய சாதனங்களின்மூலம் அதாவது நைலோன்வலை, அறக்கொட்டிவலை போன்ற நவீன பிரிவுகள் மூலம் செய்து வருகிறார்கள். ஆனால் இந் நவீன சாதனங்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந் நவீன சாதனத் துறையில் மீன்பிடித் தொழிலை நினைத்துப் பார்க்கமுடியாத பழைய தலைமுறை மீனவர்கள்; கரைவலைத் தொழிலை எஞ்சின் துணையின்றி, தமது உடல் வலிமையைக் கொண்டு செய்துவந்தார்கள். கரைவலைகள்மூலம் மீன்பிடிப்பது மிகவும் கடினமானதாகும். இன்று சாதாரண பலம் பொருந்தியவர்களெல்லாம் இத்தொழிலைச் செய்கிறார்களென்றால், இதற்குக்காரணம் இயந்திரங்களின் உதவியேயாகும். ஆனால் பல வருடங்களுக்கு முன்னால் இயந்திரங்களின்றி வெறும் பாரிய படகுகளைக்கொண்டு கரைவலைகள்மூலம் மீன்பிடித் தொழிலை மிகவும் பலம் பொருந்தியவர்களே செய்யக் கூடியவர்களாயிருந்தார்கள். வன்கைப்பரதவர் என்ற நற்றிணைப் பாடலின் வரி இதனையே வலியுறுத்துகிறது. காரணம்; பாய்களின்றி படகைச் செலுத்தும்வேளை காற்று வெளிகொண்டு வேகமாக வீசும் இடம்வரை, அப் பாரிய படகை, 'மரக் கோல்கள்" மூலம் தாங்குவார்கள். அவ்வாறு தாங்கும் போது, *அணியத்து மரக்கோல் வைப்பவரும் "கடையால்" மரக்கோல் வைப்பவரும் மிகவும் பலசாலிகளாகவே இருப்பார்கள். குறித்த இலக்கிற்கு காற்றிற்கும், கடலலைகளுக்கும் எதிராகத் தாங்க இவர்களாலேயே முடியும்; "ஆள் இளக்காரம் கண்டால் தோனி மிதந்தலைபாயும்" என்ற முதுமொழி இங்கு நோக்குதற்குரியது. இவ்வாறு தாங்கியும், வலைவளைத்தும், மீன்பிடிப்பதற்கு, தொழிலாளர்கள் ஒருமித்து இயற்கையை எதிர்த்து நின்று போராடினார்கள். இப்போராட்டத்தின் கடினத்தையும், துன்பத்தையும் மறப்பதற்காக தங்கள் கருத்திற்கு இசைந்தவற்றைத் தொகுத்துப் பல இராகங்கள்மூலம் பாடல்கள் பலவற்றைப் பாடினார்கள். "கூட்டாக வேலைசெய்யும்பொழுது உடலசைவின் ஒத்திசைக்கியைந்த பாடல்கள் தோன்றின. இவற்றைத் தொழிற் பாடல்கள் (Labour Songs) என்று கூறுவர். இவ்வாறான பாடல்களையே அம்பா என்று அழைக்கிறார்கள். அம்பா என்பது அழகிய பாடல் (அம்=அழகு பா=பாடல்) என்று பொருள் பெறும். அல்லது அம்பி என்பது தோணியின் மறுபெயராகும். அவ் அம்பி சம்பந்தமாக இப்பாடல்கள் எழுந்தமையினால் "அம்பிப்பாடல்" என்றொரு சொல் உருவாக்கப்பட்டு இச் சொல்லே காலம் செல்லச்செல்ல சிதைந்து, அம்பாவாகவும் மாறியிருக்கலாம். இவ் அம்பா இராகங்களை "லைலா", "றோசா". "அல்லில்லா", "ஞான சௌந்தரி", "ஏலே லோ" எனப்பகுத்துப் பாடுவார்கள். இப்படிப்பட்டவைகளில் பெரும்பான்மையானவைகள் இன்று அழிந்து விட்டன. காரணம், 1950--1953 ம் ___________________________________________________ * "அணியம்" என்பது படகின் முன்பக்கம் * "கடையால்" என்பது படகின் பின்பக்கம் * தமிழ் நாவல் இலக்கியம்--கலாநிதி க. கைலாசபதி பக்.59 ... ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நடைபெற்ற மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின் விளைவாக இப்பகுதி மீனவர்களுக்கு இயந்திரப் படகுகள் அளிக்கப்பட்டன. ஆரம்பத்தில் பலர் விரும்பாதபோதிலும் ஓரிருவர் முன்வந்து இயந்திரப் படகுகளைக் கையேற்று இயந்திரத்தின் உதவிமூலம் மீன்பிடித்தார்கள். காலம் செல்லச்செல்ல இம்முறையைப் பலர் பின்பற்றத் தொடங்க தொழில்கள்யாவும் இயந்திரமயமாக மாறின. இயந்திரங்களின் வருகையினால் தொழிலின் கடினம் கொஞ்சம் கொஞ்சம் மறைய, கடினத்தை மறக்கப் பாடிய அம்பாப் பாடல்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின. ஆயினும் தலமுறை தலைமுறையாய் ஏற்பட்டுவந்த தொடர்பின் காரணமாக இப்பாடல்களில் சிலவற்றைச், சிலர் இன்னும் மறக்காமல் வாய் மொழியாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து சேகரித்தவைகளே இவ் அம்பாப் பாடல்களாகும். --------------------------------------------------------------- கடவுள் வணக்கம் மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி, மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும்படுமே (தொல்: பொருள்: 5) பழந் தமிழர் கடவுள்வழிபாட்டினை தாம் வாழும் நிலத்தின் இயல்பு நிலையோடு பொருந்துவதாகத் தான் செய்தார்கள். கடவுளின் தத்துவ நிலையையும், தாம் வாழும் நிலம், வாழ்வியல் இவைகளுக்கு அமையவே கண்டனர் என்ற உண்மையை தொல்காப்பியர் கூற்றினால் அறியலாம். இவற்றுள் கடலும், கடல்சார்ந்த பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலமக்கள் வருணனைக் கடவுளாக வழிபட்டனர். இந்நிலையைச் சங்க இலக்கியங்களுள் காணக்கூடியதாக இருக்கிறது. மீன்பாடு வளைத்து தொழில் செய்யுங் காலத்தில் அந்நில மக்களாகிய நுளையர்க்கு வலை வளம் தப்பி விட்டால், நுளைச்சியராகிய அந்நிலத்து மகளிர் தம் சுற்றத்தாருடன்கூடி தாம் விரும்பிய பண்டங்களைப் படைத்து வணங்குவார்கள். "சினைச் சுறாவின் கோடுநட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினான்" (பட்டினப்பாலை. 86,87) "கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வநோக்கி" (அகநானூறு: 110) "அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயு மாயமோ டயரும்" (அகநானூறுழ 240) இவ்வாறு பழந்தமிழ் மக்கள் தம் வழிபாட்டை நடாத்தினார்கள்.1 இவ்வூரில் வாழ்ந்த மீனவர்கள் புராதன காலந்தொட்டு இந்து சமயத்தினராய் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் 15 ம் நூற்றாண்டின் முற்பகுதியில், பத்தலோமியடயஸ் என்ற போத்துக்கீச மாலுமி ஏற்படுத்திய கீழைத்தேசக் கடல் மார்க்கங்களுக்குப் பின்னர், 1497 ம் ஆண்டு வாஸ்கொடிகாமா இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்த பின்னர், விரைவில் கீழைத்தேசங்களில் போர்த்துக்கீசர் குடியேறத் தொடங்கினர். இவ்வாறு 1518 ம், 1520ம் ஆண்டுக்கிடையில் போத்துக்கீசர் வர்த்தக நோக்கமாகவோ, அன்றிச் சமய நோக்கமாகவோ, யாழ்ப்பாணக் குடாநாட்டில் நுழைந்தார்கள். போத்துக்கீச அரசின் கட்டளைப்படி போத்துக்கீசத் தளபதிகள் எங்கெங்கு போய்ப் புதுப்புது நாடுகளைக் கண்டு பிடிக்கின்றனரோ, அங்கங்கெல்லாம் தமது மார்க்கமாகிய கத்தோலிக்க மதத்தைப் பரப்பவேண்டும் என்றிருந்தது. இதனால் வர்த்தகத்தின் பொருட்டு அயல் நாடுகள் செல்லும் கப்பல்களிலெல்லாம் வேதபோதகக் குருமாரும் உடன் சென்றனர். ஆதியில் லோறன்ஸ் டீ அல்மேடாவுடன் இலங்கைக்கு வந்த பிரான்சீஸ் சபைக் குருமார்கள் போத்துக்கீசரால் கொழும்பில் கட்டப்பட்ட கோட்டையில் வசிக்கத் தொடங்கி பின்னர் யாழ்ப்பாணக் குடா நாட்டிற்கு வரத் தொடங்கினர்.2 இதன்பின்னர் 1544 ம் ஆண்டு மன்னார் மக்களில் பெரும்பாலோர் கத்தோலிக்க சமயத்தை தழுவலானார்கள். அவ்வாறெனில்: 1542 ல் போத்துக்கல் தேசத்தில் இருந்த அர்ச். பிரான்சீஸ் சவேரியார் (St. Francis Xavier) என்னும் குருவானவர் இந்தியாவில் வந்திறங்கி, கத்தோலிக்க வேதத்தைப் போதித்தார். அவரின் போதனையால் தூத்துக்குடியில் இருந்த திரளான மீனவர்கள் கத்தோலிக்க வேதத்தைச் சார்ந்து, போத்துக்கீசரின் உதவியால் நாயக்கரின் கொடுங்கோன்மைக்குத்தப்பி மகிழ்ச்சியாக வாழத்தொடங்கினர். இதைக் கேள்வியுற்ற மன்னாரில் உள்ள பரதவரும், கடையரும் தங்கள் மத்தியில் சவேரியார் வந்து தங்களைக் கத்தோலிக்கர்களாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் பிரான்சீஸ் சவேரியாருக்கு இங்கு வரச் சந்தர்ப்பம் இல்லாமையினால் தமது பெயர்கொண்ட ஒரு சுதேசக் குருவானவரை அனுப்பிவைத்தார். இக்குருவின் முயற்சியால் மன்னாரிலுள்ள மக்கள் 500-700 பேருக்கிடையில், ஞானஸ்நானம் பெற்று கத்தோலிக்கர்களாக மாறினார்கள்.3 இதன்பின்னர் புனித சவேரியார் 1545 ல் மன்னாருக்கும், 1548ல் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்தார். இதன் பின்னர் "சங்கிலி" மன்னனது அரசாட்சியின்போது நடந்த வேத கலகங்களுக்கிடையிலும், பின்னரும், மக்களில் அநேகர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவத் தொடங்கினர். இவ்வரலாற்றுச் சூழமைவின்படி இக்குருநகர் பகுதியில் வாழ்ந்த மீனவர்களும் கத்தோலிக்கர்களாக மாறத்தொடங்கினார்கள். "இவர்களது கத்தோலிக்கப் பிரவேசம் 1624 ம் ஆண்டில் நடைபெற்றது. அரச பரம்பரையில் ____________________________________________________ 2. யாழ்ப்பாண வைபவ கௌமுதி. மெஸ் க. வேலுப்பிள்ளை பக்.44 3. யாழ்ப்பாண வைபவ கௌமுதி. மெஸ் க. வேலப்பிள்ளை பக்.46 .... தொடர்புள்ள இருபது குருமார்களும், ஒன்பது கிராமங்களின் பட்டங்கட்டிமாரும் (குருகுலச் சாதித்தலைவர்கள்) 400 குருகுல மக்களும், தேவதாயின் பிறந்த நாளிற்கு முந்தின நாளில் (புரட்டாதி-7 ம் நாள்) ஞானத்தீட்சை பெற்றனர். இந்நிகழ்ச்சி ஆடம்பரமாக 1புதுமைமாதா கோவிலில் நடைபெற்றது. இந்த ஞானஸ்நான வைபவத்தைத் தொடர்ந்து இன்னுமொரு ஞானஸ்நானச் சடங்கு நடை பெற்றது. இதில் 11 வயதுக்குட்பட்ட ஆண், பெண், குழந்தைகள் ஞானத் தீட்சை பெற்றார்கள். இவ் வைபவங்களிலெல்லாம் தளபதி பிலிப் டி ஒலிவேறா மற்றும் பிரதானிகளுடனும் போத்துக்கீசருடனும் சேர்ந்து சமூகமளிப்பார்.2 இவ்வாறு கத்தோலிக்கர்களாக மதம் மாறிய இக் குருநகர் மக்கள், இன்று நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானோர்கள் கத்தோலிக்கர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அன்றும்சரி இன்றும்சரி எக்காரியத்தையும் தொடங்கு முன்னர் இறைவனை வழிபடுவது வழக்கம். இவர்கள் கரைவலைத் தொழிலை உருவாக்கி முதல் முறையாக மீன் பிடிக்கச் செல்லும்பொழுது, குருநகரில் இருந்து தென் கிழக்குத் திசையாக 15 மைல் தூரத்திலிருக்கும் பாலைதீவு என்னும் இடத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இவற்றை இவர்கள் தமது அப்பாப் பாடல்களில்: ஏத்தேத்து லைலா கரவலய ஏசுநாதர் லைலா படிதருவார் பார்த்துத்தான் லைலா வளையுமண்னே பாலதீவு லைலா பாடாகத்தான் _____________________________________________________ 1 பல ஆண்டுகளுக்கு முன் பண்ணைத் துறைப் பக்கத்தில் ஒருசிறு கத்தோலிக்க ஆலயம் இருந்தது. அதனைக் கண்ணாடிப் பாதிரியார் கட்டினார். அது ஒலிவேறா காலத்துப் புதுமை மாதா கோவிலாகவும், அப்பால் கோட்டைக்கு உட்பட்ட ஆலயமாகவும் வந்தது. 2. யாழ்ப்பாணம் சந்தியோகுமையோர் அப்போஸ்தலர் ஆலயத்தின் நூற்றாண்டு நிறைவு மலர், பக்.5 .... என்று பாடுவார்கள். இங்கு "கரைவலை" என்று சொல் திரிந்து கரவலயாகவும், "ஏற்று ஏற்று" என்ற சொல் திரிந்து ஏத்தேத்துவாகவும் மாறியிருப்பதை அவதானிக்கலாம், ஏத்தேத்து என்ற ஒருவரிப்பாடல் ஒருவரால் பாடப்படும்பொழுது, மற்றவர்கள் ஒருமித்து "லைலா" என்று பாடுவார்கள் இப்படியே பாடலின் முழுப் பகுதிகளையும் பாடுவார்கள். இப்பாடல்கள் ஏனைய மீன்பிடிப் பகுதிகளில் பாடும் முறையால் வேறுபடுகிறது. பாடலின் ஒரு வரியை ஒருவர் பாடுவார். அப்பாடலின் இராகம் லைலாவாக இருந்தால் "லைலா" என்றும் றோசாவாக இருந்தால் "றோசா" என்றும் பாடுவார்கள். ஆனால் அடுத்தவரிப் பாடலை முன்பு பாடியவருக்குப் பின்னால் உள்ளவர் பாட வேண்டும் மற்றவர்கள் முன் சொன்னதுபோல் இராகத்தை பாடுவார்கள். இப் பாலைதீவில் புனித அந்தோனியார் ஆலயம் ஒன்று உண்டு இங்கு மீன்பிடிக்கவரும் மீனவர்கள் இத்தீவை ஒரு புனிதத் துவாக மதிக்கிறார்கள். இத் தீவுக்கரையில் பரந்துள்ள வெண்மணற் கரையில் எந்தவொரு அவசரமான அலுவலானாலும் ஓடிச்செல்ல மாட்டார்கள். ஓடிச்சென்றால் அது விளையாட்டு என்பது இவர்களது கருத்தாகும். பாலைதீவில் தொழிலுக்கென்று வந்து விளையாட்டுப் போக்கில் திரிந்தால் மீன் பிடிபடாது என்ற நம்பிக்கை இவர்கள் மத்தியில் உண்டு. இப் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்பவர்கள் செல்லும்பொழுதும், சென்று திரும்பி வரும்பொழுதும், தரையில் பதிந்த காலடிச் சுவடுகளைக் குனிந்து கையால் அழித்துக்கொண்டே வருவார்கள். இப்படி அடி அழிக்காமல் வந்தால் மேற்குறிப்பிட்ட படி மீன் பிடிபடாமலும், மீன் பிடிக்கப் பயன்படும் வலை குறுக்காக வெடித்தும்போகும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்து வந்தது. (தற்பொழுது இவ்வாறு அடி அழிப்பதில்லை) இச்சிறு சம்பிரதாயத்தை இவர்கள்: படியளப்பார் லைலர் என்றுவந்தோம் பாலதீவு லைலா கரையையண்டி அடியழித்து லைலா வந்தேனய்யா ஆதரிப்பீர் லைலா எங்களையும் இங்கு "படியளப்பார் லைலா என்று வந்தோம்" என்றும், "ஆதரிப்பீர் லைலா எங்களையும்" என்று பன்மை சேர்த்து பாடியவர் "அடியழித்து லைலா வந்தேனய்யா" என்று ஒருமையில் பாடுவதை அவதானிக்கலாம். இத்தொழில் செய்வதற்கு பாலைதீவுக் கரையை அண்டியவுடன் தொழிலாளர்கள் கரையில் இறங்கி நிற்க அத்தொழிலாளர்களுள் பக்தி விசுவாசமான ஒருவரை, கோவிலுக்குச் சென்று அதிக மீன் பிடிபட வேண்டுமாறு அனுப்புவார்கள். இவரே சென்று வேண்டுதல்செய்து மீண்டும் வரும்பொழுது அடியழிப்பவராகும். இதனால்தான் "அடியழித்து வந்தேன்" என்று வரி ஒருவர் செயலாவதைக் குறிக்கின்றது. அப்படி அடியழிக்கச் சென்றவர் பாடிய பாடலாகவும் இது இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் மீது அபரிமிதமான பக்தி இருக்கக் காணலாம். இந்துக்களில் சிலருக்கு அழகன் முருகன் மீதும், சிலருக்கு விநாயகர்மீதும் ஒருசிலருக்கு அம்பலத்திலாடும் பெருமான் மீதும் பக்தியிருப்பதைப்போல் கிறீஸ்தவர்களில் சிலருக்கு அர்ச். அந்தோனியார் மீதும் சிலருக்கு தேவதாயார் மீதும் பக்தியிருப்பதைக் காணலாம். இதில் தாம் பக்திகொண்ட தேவதாயாரைப் பற்றிய பாடல்கள்: மாதாநல்ல உதவியுண்டு மாமரியாள் தஞ்சமுண்டு தஞ்சமற்ற பாவியெனை தள்ளிடாதே வல்லவளே மாதாவே அல்லில்லா என்தாயாரே மனதிரக்கம் அல்லில்லா உள்ளவளே மோட்சத்து அல்லில்லா இராக்கினியே மூடிவந்த அல்லில்லா மாந்துகிலே மாமரியே அல்லில்லா தாய்மரியே மைந்தரெமை அல்லில்லா ஆதரியும் * * * செபமாலை றோசா மாதாவே சுகந்தாரும் றோசா மாதாவே இன்னும் யேசுவைக் கறித்து: மள்ளரிரு அல்லில்லா பேர்நடுவில் கசயடிகள் அல்லில்லா பட்டவரே சோதனையால் அல்லில்லா ஆறிரண்டு சீசரையே அல்லில்லா தெரிந்துகொண்டீர் இங்கு "சோதனை" என்ற சொல் யேசுநாதர்þ தாம் தெரிந்துகொண்ட பன்னிரு சீடர்களில் ஒருவனாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதையே குறிப்பிடுகிறது. இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஒருவரின் பாடல். வேலாவுன் அல்லில்லா சன்னதிக்கு கால்நடயா அல்லில்லா நான்வருவேன் நான் கால் நடையாக உன் சன்னதிக்கு வருவேன் நீர் எமக்கு அதிக மீன் பிடித்தலைத் தர வேண்டும் என்பதே இப் பாடலின் தொனிப்பாகும். இவ்வாறு மீனவர்கள் தாம் விரும்பிய தெய்வங்களையெல்லாம் தமது வாழ்வின் நலன்களுக்காக வேண்டிக்கொள்வார்கள். --------------------------------------------------------------------------- தொழில் வகைகளும் அதன் பாடுகளும் அத்த விருப்பைப் பூவினன்ன துய்த்தலை பிறவொடு தொகைமீன் பொறிஇயர் வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர் மரன்மேற் கொண்டு மான்கணந்த கைமார் வெந்திற லிளையவர் வேட்டெழுந் தாங்குத் திமின்மேற் கொண்டு திரைச்சுர நீந்தி வாள்வாய் சுறவொடு வயமீன் கெண்டி நிணம்பெய் தோணிய ரிகுமண லிழிகரும் பெருங்கழிப் பாக்கங்...... [நற்றிணை--] இருப்பைப் பூவைப்போன்று மெல்லிய தலைகளையுடைய இறா மீன்களுடன், ஏனைய திரளான மீன்களையும் பிடிக்குமாறு பொருந்தப்பெற்ற வலைகளையுடைய பரதவர்கள், மரங்களின்மேல் ஏறி மான் இனங்களை வேட்டையாடும் வேட்டுவ இளையவர்போல், தாம் மீன் பிடிக்கும் படகிலேறி அலைகடல்தாண்டி, சுறாமீன்களையும் மற்றும் வலிய மீன்களையும் பிடித்து, தம் படகில் நிரப்பி மீண்டும் காற்றுவீசிப் பரந்த மணற் பரப்பில் இறங்கிடும் பெரிய கழிசூழ்ந்த பாக்கம் என மீனவர்களது தொழில் நிலையை விளக்குகிறது. இவ்வாறாக பண்டைய மீன்பிடித்தொழில், ஒரு கூட்டுறவு அடிப்படையில் நடைபெற்றது என்பதை 'ஏழ் ஊர் பொதுவினைக்கு ஓர்யாத்த உலை' என வரும் குறுந்தொகைப் பாடலால் நாம் அறியலாம். இவ்வாறான கூட்டுறவு முயற்சியே இங்கும் ஆரம்பகாலத்தில் நடைபெற்று வந்தது. பலபேரின் கூட்டுறவு முயற்சியாக ஒரு குறிப்பிட்ட பங்குப் பணங்களைச் சமமாகப் போட்டு ஒரு தொழிலை உருவாக்கி அதன் வருமானம் அதனதன் பங்குக்காரருக்கே சமமாகப் பிரிக்கப்பட்டு வந்தது. ஆயினும் பண பலமுள்ள ஒருவன் எவருதவியுமின்றி தானே தனித்தொழிலை உருவாக்கிய பொழுது, பங்கு கொடுத்துத் தொழிலை உருவாக்கிக் கொள்ள வசதியற்ற ஏழை மீனவர்கள், இத் தொழிலை கூலிக்குச் செய்யத் தொடங்கினார்கள். இதன்படி இத்தொழிலின் வருமானம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரண்டு பகுதி தொழிலின் உரிமையாளனுக்கும், மிகுதி ஒரு பகுதி தொழிலாளர்களுக்கும் பிரிக்கப்பட்டு வந்தது. இக் கரைவலை மிகவும் கடினமானதென ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வலை வளைக்கும்பொழுது, குறிப்பிட்டவொரு "பாட்டில்"1 பல தொழிலாளர்களை கரையில் இறக்கிவிட்டு, ஆழ்கடலை நோக்கி "கம்பான்" கயிற்றைப் போட்டுக்கொண்டு போவார்கள். இவ்வாறு போடப்படும் கம்பான்2 கயிறுகளின் எண்ணிக்கை சராசரி பத்து அல்லது பதினைந்தாகும். இதன் பின்னர் "ஈரவலை" என்று சொல்லப்படும் வலையை அக்கயிற்றின் இறுதியில் முடிந்து கடலுள் இறக்குவார்கள். இவ்வலையின் மோவலை3 யில் மிதக்கும் சக்தி வாய்ந்த "புணை" என்று சொல்லப்படும் ஒருவித மரவேரின் துண்டைப் பெருக்கியிருப்பார்கள்.4 மற்றும் 'மடவலை'யில் கற்களைப் பெருக்கியிருப்பார்கள். _______________________________________________ 1. "பாடு", என்பது வலை வளைப்பதற்கு ஏற்ற ஒரு குறிக்கப்பட்ட கடலின் அளவாகும். 2. ஒரு கம்பான் கயிறின் நீளம் சுமாராக நூறு அடியாகும். 3 "மோவலை" என்பது மேல்வலையின் சிதைவாகும். 4. "பெருக்குவது" என்பது முடிந்து கொள்வதையே குறிக்கிறது: ... இதனால் மோவலை என்ற வலை மிதந்து மட வலை என்று பகுதி கடலின் அடியில் தாழ்ந்து இருக்கும். இத் தன்மையானது, வலை கடலினுள் வேலியைப்போன்று காணப்படும். அதைத் தொடர்ந்து "ஈரவலை", "ஈலக்கண்ணி", "நடுவணி", "மாலக்கண்ணி", "மாரிவலை" போன்ற வலைகளைத் தொடர்ந்து இறக்குவார்கள். இதன்பின்னர் மீன் பிடிப்பதற்கு அத்தியாவசியமான "மடியைப்"5 பிதைந்து இறக்குவார்கள். இதுவரை கரையிலிருந்து ஆழ்கடலை நோக்கி ஓடியபடகு மீண்டும் கரையை நாடி "மாரிவலை", "மாலக்கண்ணி", "நடுவணி", "ஈலக்கண்ணி", "ஈரவலை" போன்றவைகளை இறக்கிக்கொண்டேவரும். இப்படி வலைகளை இறக்கும்பொழுது அழகாக மடக்கெறிந்து படகினுள் இருக்கும் வலையை, ஒருவர் தூக்கி இளக்குவார். இவருக்கு உதவியாக இன்னொருவர் இவருக்கு முன்நின்று வலையைக் கூட்டிப்பிடிப்பார். இவ்வாறு கூட்டிப்பிடிக்கும் வலையை மேலும் இருவர் நின்று ஒருவர் "மோவலை" யாகவும் இன்னொருவர் "மடவலை" தெரிந்து சிக்கற்ற முறையில் கடலினுள் இறக்குவார்கள் இவை மிகவும் கடினமானதாகையால் சில குறிக்கப்பட்ட வாலிபர்களே இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். இத்தனை கடின வேலை செய்தபின்னர் வலையிழுக்கும் பொழுது களைப்பு மேலீடுகாரணமாக இத்தொழிலின் மீதும், இத்தொழிலின் உலிமையாளன் மீதும் இதொழிலின் மீது தாம் போக நேர்ந்ததையும் எண்ணி வருந்துவது இயல்பாகிவிடும். இப்படி உழைத்துக் களைத்த ஒரு தொழிலாளி இதோ பாடுகிறான். _______________________________________________ 5. "மடி" யென்பது நூலால் நெய்யப்பட்டு, பறியின் அமைப்பில் அமைந்துள்ள வலையாகும். ஏனையவை கயிற்றினால் முடிக்கப்பட்டவையாகும். .... சண்டாளன் அல்லில்லா கரவலைக்கு சாகவோ அல்லில்லா இங்குவந்தேன் மாபாவி அல்லில்லா கரவலைக்கு மாளவோ அல்லில்லா இங்குவந்தேன் பெற்றாளே அல்லில்லா பாவியென்னை விட்டாளே அல்லில்லா கரவலைக்கு தன் பெற்ற தாயைக்கூட அவனால் சினக்க முடிகிறது. அப்பொழுது அவனருகில் நின்று வலையிழுக்கும் மற்றத் தொழிலாளி அவனைச் சாந்தப்படுத்துகிறார். இதோ அவர் கரவலையும் அல்லில்லா வேலைதான்ரா கற்றதொரு அல்லில்லா வித்தைதான்ரா வித்தைநல்ல அல்லில்லா பழக்கித்தாறேன் வேண்டியமான் அல்லில்லா எய்துதாறேன் இங்கு "கற்றதொரு அல்லில்லா வித்தைதான்ரா" என்ற வரியில் மிகவும் ஆழமான அர்த்தங்கள் புதைந்திருக்கின்றன. எவ்வாறெனின்; கரைவலைத் தொழிலை யாரும் எடுத்த எடுப்பில் கற்றுக்கொள்ளமுடியாது. அதைப் பூரணமாகக் கற்றுக்கொள்ளப் பல வருடங்களாகும். ஆரம்ப வேலையான கம்பான்கயிறு வளைப்பதிலிருந்து அடுக்காகக் கால் போட்டு வலையிழுப்பது பயின்று, "மேலாவிற்கு" போகும் இறுதிவரைக்குமுள்ள தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளப் பல வருடங்கள் எடுப்பது மாத்திரமல்ல எல்லோராலும் கற்றுக்கொள்ள முடிந்த காரியமுமல்ல. ஆகவே, இதுவும் ஒரு கற்றுத்தேறும் தொழிலாகும். இனி வித்தை என்ற சொல்லினைப் பார்ப்போம். மனிதர்களின் சராசரி வாழ்க்கையில் செய்கின்ற-பார்க்கின்ற ஒரு செயலில் இருந்து மாறுபட்ட மிகவும் அதிசயமான அல்லது நுட்பமான ஒரு செயலை வித்தையென்று குறிப்பிடுவோம். ஆகவே இங்கு வித்தை என்ற சொல்லிற்கு கரைவலைத் தொழிலில் என்ன அபூர்வம் இருக்கிறது எனப் பார்ப்போம். கரைவலை வளைக்கும்பொழுது கடலுள் இறக்கப்படும் வலைகளும், அதன் அளவுகளும் அதன் "அளிகளுமே" மிகமிக முக்கியமாகும். முதலில் இறக்கும் வலைக்கு "ஈரவலை" என்று பெயர். இவற்றின் அளிகள் ஏழுபிணையலும் ஒற்றையுமாகும். இவற்றின் நீளம் மூன்று முழமாகும். இதனையடுத்து "ஈலக்கண்ணி" இறக்கப்படும். இவற்றின் அளிகள் பத்துப் பிணையலும் ஒற்றையுமாகும். இதன் நீளம் இரண்டு முழுமாகும். இதற்கு அடுத்து இறக்கப்படும் "நடுவணி" பதினைந்து பிணையலும் ஒற்றையுமாகும் இதன் நீளம் ஒரு முழமாகும். இதற்கு அடுத்து இறக்கப்படும் "மாலக்கண்ணி" இருபத்தியெட்டு பிணையலாகும். இதன் நீளம் முக்கால் முழமாகும். இறுதி வலையாகிய "மாரிவலை" முப்பத்திரண்டு பிணையலாகும். இதன் நீளம் ஒரு சாண் ஆகும். இவற்றிலிருந்து "மடியை" நெருங்கியிருக்கும் வலைகளின், நீளங்களின் அளவுகள் குறைந்தும், அளிகளின் எண்ணிக்கை கூடியிருப்பதையும் அவதானிக்கலாம். இதனால் "மடி"யை நெருங்கியிருக்கும் இவ்வலைகள் நெருக்கமாயிருந்து வலைக்குள் அகப்பட்ட மீன்களை வெளியில் செல்லவிடாமல் பாதுகாக்கிறது. இன்னும் மீன் பிடிப்பதற்கு அவசியமான "மடி"யின் "மடவலை"யிலும் 'மோவலையிலும்' "பெருங்கக்கயிற்றை"1 பெருக்கியிருப்பார்கள். இப் பெருங்கக்கயிற்றை மையமாக வைத்து வலது புறமும், இடது புறமாக ஒன்றரை முழமும் முக்கால் சாணுமாக அளந்து நூலால் வலிந்து பெருக்கியிருப்பார்கள். இவற்றின் மொத்தநீளம் மூன்று முழமும் ஒன்றரைச் சாணுமாகும். இந்த அளவின் மத்தியிலேயே 'பெருங் கைக்கயிறு' இருக்கும். ___________________________________________ * அளி என்பது ஒரு வலைக்கண் ஈரவலை: 15 அளியாகும்: நீளம் 4 1/2 அடியாகும் ஈலக்கண்ணி: 21 அளியாகும்: நீளம் 3 அடியாகும் நடுவனி:31 அளியாகும்ழ நீளம் 1 1/2 அடியாகும் மாலக்கண்ணி: 56 அளியாகும்: நீளம் 13 1/2 அங்குலம் மாரிவலை: 64 அளியாகும்: நீளம் 9 அங்கலமாகும் 1"பெருங்கக்கயிறு" என்பது பெருங் கைக்கயிறு என்பதன் திரிபாகும். .... இந்த அளவுகள் சற்றுக் கூடியோ குறைந்தோ இருந்தால் மீன்களை இலகுவாகப் பிடிக்க முடியாது. மேலும் மீன் பிடிக்கும்பொழுது மேலாவிற்கு செல்லும் 'மேலாப் பாச்சி' கடலினுள் மூழ்சி வலையுள் அகப்பட்ட மீனின் அளவுகளை குறிப்பெடுத்துவிடுவார். அவ்வாறு குறிப்பெடுத்த மீன்களின் அளவு, மீன் பிடித்த பின்னர் குறைவாகவிருந்தால் அதற்குரிய காரணத்தைச் சொல்வார். எவ்வாறெனில் வலை வளைக்கும்பொழுது மடி அகலயிருக்கையில் (தொலைவில் இருக்கும்பொழுது) மீன் கழிந்து வெளியே போனால் 'மடி' சரியாக இல்லையென்றும் மீன் கரையை வந்து போனால் (வலை இழுப்பவர்களுக்குக் கிட்டவந்து கழிந்துபோனால்) படகு சரியாக இல்லையென்றும் சொல்வார். இவ்வாறு ஏற்படும் குறைகளை நிவர்த்திக்க "அந்த மடியை உருவு1 இந்த மடியைப் பிதை2" என்பார்கள். அவர் கூறுவதன்படி தொழிலாளர்கள் செய்தபின்னர் மேற்சொன்ன குறைகள் இருக்காது. இவர் குறைகள் உள்ள இடத்தை எவ்வாறு கூறுகிறார் என்றால் இதற்கு இவரின் நீடித்த தொழில் அனுபவமே காரணமாகும். இன்னும் "நீர்வகைகள்" என்னும் மகா நுணுக்கம் வாய்ந்தவைகளையெல்லாம் நீண்ட தொழிலனுபவம் வாய்ந்தவர்களால்தான் கூறமுடியும் என்பது மாத்திரமல்ல எல்லோராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. இவ்வாறு பல துறைகளிலும் நுணுக்கங்கள் வாய்ந்திருப்பதனால்தான் 'நுண்வலைப் பரதவர்' என குறுந்தொகை கூறுகிறது. இதனையே மொத்தமாக வித்தையெனக் குறிப்பிடுகின்றார்கள். இன்னும் 'வேண்டிய மான் எய்துதாறேன்' என்பது மிகவும் அழகான ஓர் உவமானமாகும். 'வரி வலைப் பரதவர்.... மரன்மேற் கொண்டு மான் கணந்தகைமார்' ____________________________________________ 1 "உருவு" அவிழ்த்தல் 2. "பிதை" கோர்த்துக் கட்டுதல் .... என்ற நற்றினைப் பாடலின் வரியில் மீன் மானிற்கு உலமிப்பதைக் காணலாம். இன்னும் தொழிலின் கடினத்தைக் கேலியாக கந்தாவாடா லைலா கரவலைக்கு காய்ச்சல்வரும் லைலா நான்மாட்டேன் எனப்பாடுவார்கள். இவர்கள் வலை இழுக்கும்பொழுது 'பழங்கயிறு' என்று சொல்லப்படும் பல பழங்கயிற்று இழை மடிப்பை இடுப்பில் சுற்றி, அதனால் வலையை இறுகக்கோர்த்து நாரியால் இழுக்கும்பொழுது வலது காலை எல்லோரும் ஒன்றாகவும், இடது காலை ஒன்றாகவும் வைத்து இழுப்பார்கள். இவ்வாறு இழுக்கும்பொழுது இடுப்பில் வலி எடுப்பது திண்ணம் இதை: நோக்குதடா லைலா சந்துக்குள்ளே நோக்காடெல்லாம் லைலா பொந்துக்குள்ளே இன்னும், காச்சல்நல்ல அல்லில்லா உடன்தடுமல் கண்குத்து அல்லில்லா நாரிவலி இடுப்பிலே அல்லில்லா கவுத்தைமாட்டி இழுக்கிறதும் அல்லில்லா வேலைதான்ரா வேளைக்கு அல்லில்லா ஊளியனும் வென்னீரும் அல்லில்லா தாறானில்லை இதில் 'வேளைக்கு அல்லில்லா ஊளியனும் வென்னீரும் அல்லில்லா தாறானில்லை' என்ற பாடலின் வரியைப் பார்ப்போம். கரைவலைகளில் சம்பளக் கரைவலை என்றொரு கரைவலையும் உண்டு. இதற்கும் மற்றைய கரைவலைகளுக்கும் தொழில்முறையில் எவ்வித வேறுபாடும் இல்ல. ஆனால் பங்குப்பணங்களைப் பிரிப்பதில் வித்தியாசம் உண்டு. இச் சம்பளக் கரைவலையில் எவ்வளவுதான் அதிகமான வருவாய் வந்தாலும், அல்லது குறைவான வருமானம் வந்தாலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட சம்பளமே கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கொடுக்கப்படவேண்டும் என்பது அவரவர் தொழிற் திறமைகளைப் பொறுத்துத் தொழில் உரிமையாளனால் குறிக்கப்படும். இத்தொழில் முன்பு இங்கு இருந்தபோதிலும் இன்று முற்றாக மறைந்துவிட்டது. ஆனால் 'கொக்குளாவா' போன்ற பகுதிகளில் இன்றும் இவ்வாறே நடைபெறுகிறது. இத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலின் உரிமையாளனே தேனீர், சாப்பாடு போன்றவற்றிற்கு பொறுப்பானவர். காற்று மாற்றங் காரணமாக இடம் பெயர்ந்து, பெயர்ந்து இத் தொழிலைச் செய்வதனால் தொழிலாளர்கள் வீடு சென்று வரமுடியாது. ஆதலால் இப் பொறுப்புக்கள் தொழில் உரிமையாளனையே சாரும். இவ்வாறு தொழில் செய்யும்பொழுது தேனீர் கொடுப்பது வழக்கம். வழக்கத்துக்குமாறாக தேனீர் வரப் பிந்தியமையால் இவ் வரியைப் பாடியதாகக் கருத இடமுண்டு அம்பாப்பாட்டின் மூலம் தான் தொழில் கடினத்தைமறந்து இவர்கள் கரைவலையை இழுத்தெடுக்கிறார்கள் என்பதற்கு அவர்களது ஒரு அம்பாப் பாடலே சான்று பகர்கிறது. ஏலேலம் லைலா அம்பாப்போட்டு இழுத்துப்பார் லைலா கரவலையை இனி வலைவளைக்கும் 'பாடு'கள் சம்பந்தமாக இவர்களது அம்பாக்களைப் பார்ப்போம். இவர்கள் இத்தொழிலைச் செய்யும்பொழுது, நினைத்த இடத்திலெல்லாம் வலை வளைக்கமுடியாது. வலை வளைப்பதற்கென்றே சில குறிக்கப்பட்ட பாடுகள் உண்டு. பாடு "புட்டி வெள்ளை", "ஆழ்வான்", "ஒழுக்கை", "தாளையுப் பாடு", "குறுங்கரை", "பெரியவேலி", "ஐயங்குடா", "இசங்கம்பார்", "புணையுறுட்டி", "புறவா", "குடாப்புறவா" என அநேகபாடுகள் உண்டு. இப்பாடுகளிலொன்று பள்ளிக்குடாவாகும். இவ்விடத்தின் கரை மிகவும் ஆழமற்றதாக இருக்கும். இதனால் இப்பாட்டை அடக்கி வலை வளைக்கும் மீனவர்கள் வலையை இழுக்கும்பொழுது மிகப் பலமாகச் சரிந்து இழுக்கலாம். எவ்வாறெனில்; இவர்கள் கடலினுள் நின்று வலையிழுக்கும்பொழுது கடல் நீரின் அளவு இவர்களது மார்பை அண்மித்தால் இவர்களால் வலையைப் பொறுப்பாக இழுக்கமுடியாது. வயிற்றிற்கும் வயிற்றிற்குக் கீழும் கடல்நீர் நின்றால் பலமாக சரிந்து இழுக்கலாம். கடல் நீர் ஆழமாக இருந்தால் கடற்கரையின் வெண் மணல்மீது நின்று இழுக்கலாம். 'பள்ளிக்குடா' என்ற இடம் மேற்குறிப்பிட்ட இயல்பை உடையது என அவர்களே பள்ளிக்குடா லைலா பரந்தகரை பலவந்தமா லைலா சாஞ்சிழுப்போம் நாச்சிக்குடா லைலா நல்லகரை காச்சல்வந்தா லைலா காக்காகொத்தும் எனப் பாடுகிறார்கள். இதில் 'பலவந்தமாய்' என்ற சொல்லின்மூலம் கடலில் இறக்கிய வலையை மிகவும் சுலபமாக இழுத்தெடுக்கமுடியாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். 'நாச்சிக்குடா' என்பதும் மீன் பிடிப்பதற்குரிய ஒரு 'பாடா' கும், இவர்கள் வலை இழுக்கும்பொழுது "தலைவலை" வந்தவுடன், "மண்டாடி" எனப்படுபவர் மீன்கள் வலைக்குள் வருகிறதாவெனப்பார்க்க 'மடி'யைத் தேடி நீந்திப் போவார். அவர் அவ்வாறு நீந்திச் செல்லும்பொழுது மீன்கள் தொகையாகக் சேர்ந்து சிவப்புக் கட்டி நின்றால் அல்லது கலக்கெறிந்து (கலக்கெறிதல் என்பது, மீன்கள் பெருந் _________________________________________ *மண்டாடி: இவர் தொழில் நுணுக்கங்களை அறிந்தவர். இவரே மேலாப்பாச்சி எனவும் அழைக்கப்படுவார். *சிவப்புக்கட்டுதல்: மீன்கள் பெருந்தொகை கூட்டமாக நின்றால் கடலின்மேல் அவை ஒரு வித பழுப்பு நிறமாகத் தெரியும். இதை இவர்கள் சிவப்புக் கட்டல் எனக் கூறுவர். தொகையாகச் சேர்ந்து வலையின் நெருக்கங் காரணமாக அங்குமிங்கும் ஓடும்பொழுது ஏற்படும் கடற் சுழிவால் கடலினடியில் காணப்படும் மணல் கடல் மேலெழும். இதையே கலக்கெறிதல் என்பார்கள்) நின்றால் கரையில் நின்று வலையிழுப்பவர்களால் இதனைப் பார்க்க முடியும். மேலாப்பாச்சி எனப்படும் இந்த 'மண்டாடி' மீன்கள் தொகையாக வலைக்குள் அகப்பட்டால் "வலைக்குள் தொகையாகமீன்கள் அகப்பட்டிருக்கின்றன. ஆகவே வலையைப் பலமாக இழுங்கள்" என்பதற்கு அறிகுறியாக தங்களது குறிப்பிட்ட சைகைகள் மூலம் லாவுவது வழக்கம். ஆனால் சில வேளைகளில் வலை இழுப்பவர்கள் 'மீன்களைக் கண்டிருப்பார்கள்தானே ஏன் லாவுவான்' என நினைத்து பேசாமல் வலையைப் பிடித்துக் கொண்டு கிடந்திடுவார். இவ்வாறு இவர் 'லாவாமல்' கிடக்கும்பொழுது வலை இழுப்பவர்கள் தாங்கள் வலைக்குள் பார்த்த மீன்கள் படாத மீன்கள் (இவை வலைக்குள் அகப்பட்டாலும் பிடிபடாமல் வெளியேறிவிடும். ஆரியக் கட்டா போன்றவை இந்த ரகத்தைச் சேர்ந்தவையாகும்) எனச் சலித்து விடுவார்கள். ஆனாலும் அவை என்ன மீன்கள் என அறிய ஆவலுறுவார்கள் அப்பொழுது வலைமீது எந்தச் சைகையுமற்றுக் கிடக்கும் மண்டாடிமீது ஆத்திரம் ஆத்திரமாக வரும். மேலும் வலை இழுக்கும்பொழுது ஒரு பக்கத்தால் அதிகம் இழுத்துவிட்டால் மறுபக்கத்தால் வலை நேரடியாக - அமைப்பாக மடியுடன் வராமல் மாறிவிடும். அவ்வாறு மாறும்பக்கம் கையை உயர்த்தி இழுக்கும்படி 'லாவுவது' மண்டாடியின் வேலை. ஆனால், சில வேலைகளில் வலை மாறியிருந்தர்லும் மடவலை, மோவலை சரியாக வருகிறதாவெனப் பார்க்க மண்டாடி கடலினுள் சுழியோடிப் போய்விடுவார். வலை மாறி வருவதை; வலையுடன் சேர்ந்துவரும் புணைகளைக்கொண்டு கரையில் நிற்பவர்களாலும் அவதானிக்கமுடியும். இதை அவதானித்த இவர்களுக்கு 'லாவா'மல் இருக்கும் மண்டாடியில் எரிச்சல் ஏற்படும் இதை. வருகிதடா லைலா ஒருகிளைமீன் வலைநிறம்ப லைலா கலக்கெறிந்து மாறுதடா லைலா நம்மபக்கம் மதிகெட்ட லைலா மண்டாடி எனப் பாடுவார்கள். சில வேளைகளில் கடலின்மேல் ஒரு திரவப் படர்வினை நாம் காணலாம். இத் திரவப் படர்வினைக் கண்டவுடன் கடலினடியில் மீன்கள் நிற்கின்றன என இவர்கள் அறிந்துவிடுவார்கள். இத்திரவப் படர்வினை இவர்கள் மான்பாடு என அழைக்கிறார்கள். இம் மான்பாட்டை--அது வலை வளைப்பிற்குள் அடங்கக்கூடியது என அறிந்தால் அதனைச் சுற்றி வலையால் மறித்து மீன்பிடிப்பது வழக்கம். இன்னும் 'நகரை' என்று சொல்லப்படும் ஒருவகைச் சிறிய மீன்கள் கரை வலைக்கு தொகையாகப் பிடிபடாத போதிலும், பனை ஓலைகளை அடுக்கடுக்காக வலையுடன் இணைத்து வலையிழுக்கும்பொழுது, இவ் ஓலைகள் கடலினுள் உண்டாக்கும் ஓசையால் இந்நகரை மீன்கள் பயந்து 'மடியைத்' தேடி ஓடிவிடும். இதனால் இம் மீன்கள் 'ஓலைவலைக்கு' அதிகமாகப் பிடிபடும். இன்னும் கடலினுள் உள்ள பலவகையான தாவரங்களுள் 'வாட்டாளை'யும் ஒன்று. இவ் வாட்டாளை' வலை இழுபடும் பொழுது வலைக்கண்களை அடைத்து விடும். இவற்றையெல்லாம். மான்பாட்டு லைலா நேரமண்ணே மறியுங்கடா லைலா வலையதினால் ஓலைக்கு லைலா ஒதுங்குமடா ஒருகந்தா லைலா நகரயடா வாட்டாளை லைலா கொண்டல்லோ வலைகளெலாம் லைலா நெகிழுதில்லை எனப் பாடுவார்கள். இங்கு ஒரு கந்தா என்பது ஒரு குறிக்கப்பட்ட மீன்களின் அளவாகும். இவர்கள் ஒரு 'பாடு'வளைத்து போதிய அளவு மீன்கள் பிடிபடாது போனால், இரண்டாவது 'பாடு' வளைப்பார்கள். சில வேளை தேவையைப் பொறுத்து மூன்று பாடு வளைப்பதுமுண்டு. சில வேளைகளில் தங்கு கடலுக்குச் சென்று, இரவு தங்கி மறு நாள் காலையிலேயே வருவார்கள். இப்படி இவர்கள் வலை இழுக்கும்பொழுது முன்பு பிடிபட்ட மீன்களை நினைத்து ஏக்கமாகப் பாடுவார்கள். போனவருசமண்ணே பொரி கெழுறு பட்டவலை இந்த வருச மண்ணே இளம் பாரை பட்டவலை இன்னும் 'பாலைதீவு' என்ற இடத்தில் 'வழுவாடி' என்று சொல்லப்படும் ஒருவகைத் திருக்கை அதிகமாகப் பிடிபடும். இதை அவர்கள் பட்டதடா லைலா வழுவாகாடி பால தீவு லைலா பாடாகத்தால் இன்னும் ஏத்தி வளையு மண்ணே இலந்த யடிப் பாடாக பாத்து வளையு மண்ணே பால தீவுப் பாடாக இப் பாலைதீவு ஆழ்கடலின் மத்தியில் அமைந்திருப்பதனால் இங்கு அதிகமாக மீன் பிடிபடுவதுண்டு. ஆனால் அர்ச். அந்தோனியார் தங்களது வேண்டுதலின்பேரிலேயே அதிக மீன் பிடிபடச் செய்கிறார் என்பது இவர்கள் நம்பிக்கை. ஆனால் சிலவேளைகளில் எதிர்மாறான நீர் வகைகளினால் வலை இழுபடுவது மிகவும் கடினமாகிவிடும். அப்பொழுது அப்பாட்டை வலை வளைக்கச் சொன்னவரையே கேலி செய்வார்கள். ஆழிகடல் மீனையெல்லாம் அழைத்திடுவார் அந்தோனி அந்தோனி வளைச்சவலை செண்டாலும் குறுகுதில்லை இதில் இரண்டாவது வரியில் வரும் அந்தோனி அர்ச் அந்தோனியாரைக் குறிக்கும். மூன்றாவது வரியில் வரும் அந்தோனி அந்தப்பாட்டை வளைக்கச் சொன்னவரின் பெயராகும். இங்கு செண்டாலும் குறுகுதில்லை என்பது தலைவலை வந்தவுடன் மண்டாடி மடிபார்க்கப் போய்விடுவார் என நான் முன்பு கூறியதையே குறிக்கிறது. இவர்கள் வலை வளைக்கும்பொழுது கடலினுள் கற்பாறைகள் ஏதும் படர்ந்திருந்தால் அக்கல்லில் கடலலைகள் வந்துமோதும்பொழுது வெண்நுரைகள் எழும் கடலினுள் மீன்கள் இரைந்தாலும் இவ்வாறு இவ் வெண்நுரைகள் எழும். இதை கல்லோடு லைலா கல்லிரைய கடலோடு லைலா மீனிரைய நான்கேட்ட மண்டாட்டம் நாலுசுத்து லைலா மீன்படவே நாலு சுத்து லைலா மீன்படவே என்பது மீன்கள் பிடிக்கப் பயன்படும் மடியை ஒவ்வொரு சுற்றாக (ஒரு சுற்று என்பது குறிக்கப்பட் நீள அகலங்களைக் கொண்ட வலையாகும்) பிதைந்து 'மடி' யாக்குவார்கள். மீன் பிடிக்கும்பொழுது நாளொன்றிற்கு ஓரிரு சுற்றுமாலுக்கே மீன்பிடிபடுவது வழக்கம். இங்கு இவர் அதிக உழைப்பைப் பெறவேண்டும் என்ற ஆவலினாலேயே நாலுசுற்று மீன் படவேண்டும் என வேண்டினார். ஒவ்வொரு மீனவர்களுக்கும் தாம் அதிக உழைப்பை--ஊதியத்தைப் பெறவேண்டும் என்ற ஆவல் நிரம்ப இருக்கும். இவர்கள் ஒரு பாடு வளைக்க வேண்டுமாயின் ஒருவர் ஒரு குறிப்பிட்ட 'பாட்டின்' பெயரைச் சொல்லுவார். அப்பாட்டை அத்தொழிலின் பெரும்பான்மையோர்கள் ஒப்புக் கொண்டால் அல்லது அப்படகிலுள்ள தொழிலனுபவமிக்க தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டால் அப் பாட்டை வளைப்பார்கள். அப்படி வளைக்கும் 'பாட்டில்' சில வேளைகளில் மீன் பிடிபடாமலும் போகும். பின்னர் அடுத்த பாடு வளைக்கும்பொழுது முதல் பாடு சொன்னவரையும் அவருக்குப் பக்கத்துணையாக ஒப்புக்கொண்டவரையும் கேலி செய்து பாடுவார்கள். சொன்னவன்பாடு வளைக்க சொன்னானாம் சுப்பிறிந்தன் போதாக் குறைக்கதற்கு பொன்னரும் வந்தேராம் இங்கு சொன்னவன் பாடு என்பது 'பாட்டின்' பெயராகும். சுப்பிறிந்தன் என்பது அப்பாட்டை வளைக்கச் சொன்னவரின் 'பட்டப் பெயராகும்'. அவருக்கத் துணையாக ஒப்புக் கொண்டவரே பொன்னராகும். இவர்கள் மீன்பிடிக்கும்பொழுது சில மீன்கள் 'மடி'யைப் பிய்ப்பதுமுண்டு அவற்றில் 'கொடுவா' எனப்படுவதும் ஒன்று. 'பேத்தை' எனப்படும் மற்றொரு வகை மீன் மடிநூலை நறுக்கும் வல்லமைபடைத்தது. இப் பேத்தை பிடிபட்ட சில நேரங்களின் பின்னர் வயிறு ஊதிப் பெருத்து விடும். இதனை இவர்கள் பிடித்ததும் எறிந்து விடுவார்கள். வலைய பிக்குது கொடுவா' வயிறு பெருத்தது 'பேத்தை எனப் பாடுவார்கள். இவர்கள் வலை இழுக்கும்பொழுது சில வேளைகளில் அருகில் யாராவது 'வீச்சுவலை' காரர் வலை வீசுவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வலை இழுப்பவர்கள் அவருடன் கதைப்பது இயல்பு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எழுந்த பாடல் இதோ: அண்ணே வலைக்காரா ஆத்திலே மீன்பாயுதடா பாச்சலட பண்ணைக்காரா பாக்குக்கொட்ட விலையென்ன இவர்கள் மீன் பிடித்து முடிந்தபின்னர் 'பாய்' இழுத்து ஓடும்பொழுது, காற்றுப்பட்டு 'பாய்' பொறுப்பாக இருக்கும்; இவ்வாறு பாய் இழுக்கும்பொழுது 'பாய்' காற்றின் அமுக்கத்தால் படகைக் கெழியவைக்கும். இவ்வாறான கெழிவிற்கு எதிராகவும், பாய் மரத்திற்குப் பொறுப்பாகவும் பலமான கயிற்றை இறக்கிக் கட்டுவார்கள். இது மிகவும் கவனமாகச் செய்யப்படவேண்டிய செயலாகும். இது சரியான முறையில் கட்டப்படாவிட்டால் 'பாய்மரம்' சரிந்து கடலில் மூழ்க நேரிடும். இதனால் இவர்கள் பாய் இழுக்கும்பொழுது வேகமாக இழுப்பதற்காகப் பின்வரும் பாடலை ஒரு புதுவித வேகம் தொனிக்கப்பாடுவார்கள். பூட்டடா பருமலுப் பாயை பொற் சிரசிலே பொறுக்க நாட்டடா பாய் மரத்தை நாலு பண்ணில பொறுக்க 'பருமலுப்பாய்' என்பது பருமரக்கோல் என்று சொல்லப்படும் பாரிய மரத்துடன் விரித்து இப் பாய் கட்டப் பட்டிருப்பதால் இதற்கு பருமலுப்பாய் எனப் பெயர் வந்தது. (பருமை+மரம்+பாய்) பருமரப் பாய்) பருமரப் பாய் என்பதேசிதைந்து பருமலுப்பாயாகியது. இம் மீன்பிடித்தொழிலில் தொடர்ந்து அதிக நாள் உழைப்புக் கிடைக்காவிட்டால் தொழில் சரியாக இல்லையெனப், படகை இழுத்துவைப்பார்கள் (இழுத்து வைத்தல் என்பது படகைக் கட்டும்துறைக்குக் கொண்டுவந்து கடற்கரை மண்லில் ஏற்றி வைப்பதையே குறிக்கும்). பின்னர் ஒரு நீருக்கு மீண்டும் தள்ளிவிடுவார்கள். இப்படி இவர்கள் படகை மீண்டும் கடலினுள் தள்ளும்பொழுது 'பச்சை மஞ்சள்' அரைத்து, படகின் கொம்பில் பூசுவார்கள். சிலர் 'பாதங்கழுவிய தண்ரால்' (பாதங்கழுவிய தண்ர் என்பது ஒரு போத்தல் நிரப்பிய தண்ரை எடுத்து சிறு பூக்களை அத் தண்ரில் கொட்டி, தமக்கு இஷ்ரமான தெய்வங்களின் பாதத்தடியில் நின்று, மெழுகுதிரி கொழுத்தி அதன் அனலால் உருகும் மெழுகின் மூன்று சொட்டுத் துளியை போத்தலில் உள்ள நீரில் விட்டு, பின் அம்மெழுகை உருத்தி போத்தலினுள் போட்டு பின்னர் ஒரு வெள்ளைச் சீலைத்துண்டால் அந்நீரை நனைத்து, அத் தெய்வத்தின் பாதத்தைக் கழுவி, இதன் மூன்று சொட்டு நீரை போத்தலினுள் விடுவார்கள். இச்சம்பிரதாயம் இடத்திற்கிடம் மாறுபடும்) படகின் 'அணியத்தை'க் கழுவுவார்கள். இப்படிச் செய்தால் அதிக மீன்பிடிபடும் என்பது இவர்கள் நம்பிக்கை. இவ்வாறு கடலிலுள்ள படகை கரையே இழுப்பதற்கும், இழுத்த படகைக் கடலினுள் தள்ளுவதற்கும் ஒரு புதுவகையான இராகமுடைய அம்பாக்கள் உண்டு. இவை பண்டைய நாட்டுக் கூத்துக்களில் வரும் 'கல்வெட்டுக்களின்' இராகத்தை ஒத்திருக்கும். இவ் அம்பாக்களின் பாடலை ஒருவர் பாடத்தொடங்கி அப்பாடலின் கடைசி அடியைப் பாடிமுடிக்கும்பொழுது மற்றவர்கள் எல்லோரும் ஒருமித்து 'ஓ!' எனப் பலத்த சத்தத்துடன் படகைத் தள்ளவோ, இழுக்கவோ செய்வார்கள். அவ்வாறான பாடல்கள் இவை: பண்டலம் புழுதியெழும்ப வவனியார் மாடுசாய்க்க கண்டவன் கைப்பிடிக்க கணவதி காப்புத்தர பொண்டுகள் ஆணம்காச்ச புருஷன்மார் உப்புப்பாக்க ஆரரசு கொபம்பரசு ஆளவந்த பேரரசு பேராத்து வெள்ளமடா பெருங்கடல்போல் முளங்குதடா * * * இடியிடிக்க மழைபொழிய இருகரையும் பெருகிவர பெருகுதடா ராசவெள்ளம் பெருங்கடல்போல் முளங்குதடா * * * ஓவல கரவலை பெண்ணே ஓடியல்லோ வரச் சொன்னே அத்தி மரத்தில தொத்தி அம்பட்டன் கையிலே கத்தி காத்தடி கொம்பு கலங்க கழுத்தில மஞ்சள் துலங்க * * * மழை வருகிது மண்டலம் போடுது வேலன் பொண்டிலை வெள்ளம் கொண்டோடுது "அப்பா", "சுப்பா" எட்டிப்பிடி என உற்சாகமாகப் பாடுவார்கள். ----------------------------------------------------------------------- காதல் உணர்வுகள் நெரித்த திரைகடலில் நின்முகங்கண்டேன் நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன் திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன் சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன் [பாரதி] உலகில் எத்தனையோ அற்புதமான அமர காவியங்களையும், விம்மல்களையும் ஏக்கப் பெருமூச்சுக்களையும் உருவாக்கிய காதல் இம் மீனவர்கள் வாழ்வில் நெரித்த திரை கடலிலும், நீல விசும்பினிடையும், திரித்த நுரையினிடையும், சின்னக் குமிழிகளிடையும் நினைவாகி பரவசப்படுத்தியும், துயர்ப்படுத்தியும் வந்துள்ளது. பொதுவாக ஆண்கள் தமது வீரத்தைப் பெண்கள் முன்னிலையில்தான் காட்டப் பிரியப்படுவார்கள். மாபெரும் ஆற்றல் வாய்ந்த இராவணன் அசோக வனத்திலிருந்து சீதா தேவியிடம் தேவர் தேவியர் சேவடி கைதொழும் தாவின் மூவுல கின்றனி நாயகம் மேவுகின்ற..... எனத் தன் பெருமையைக் கூறுகிறான். பாரதிதாசனோ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம் என்கிறார், இனி இம் மீனவர்கள் அலைகடலை ஆளுகின்ற போது இவர்களின் நெஞ்சில் தோன்றும் காதல் அலைகளைப் பார்ப்போம். வேளாக் கடலில் விளமீன் பிடிப்பேன் வீட்டில வந்தா விளக்கெண்ணெய் எரிப்பாள் சாய்வாள் சரிவாள் சந்தணம் தருவாள் இன்னும், நானெடுப்பன் பருமரக்கல் அவளிருப்பாள் கும்பனிலே கும்பத்து அழகியவள் குணமான செல்லியவள் இங்கு பருமரக்கோல் என்பது பாய் மரத்துடன் பாயைப் பிணைந்திருக்கும் பாரிய மரக்கோலாகும். படகைத் தாங்கும் பொழுது சாதாரண மரக்கோல்கள்மூலம் தாங்குவதே வழக்கம். இங்கு அவன் பருமரக்கோலால் தாங்கமுனைவதும், முதல் பாடலில் வரும் வேளாக் கடலில் விளமீன் பிடிக்க முனைவதும், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகான நினைவுகளேயாகும். பெண்களை எப்புலவனாவது கவிஞராவது வருணிக்கும் பொழுது, அவளது அழகிய மார்பகங்களைக் குறிப்பிடாமலும், அதற்கு உவமை கூறாமலும் சென்றதுண்டா? இல்லையென்றே சொல்லலாம். "பாகியல் பவளச் செவ்வாய் பனைமுலைப் பரவ அல்குல்" "கொங்கையை நிகர்த்தன கனகக் கும்பமே" எனக் கம்பரும் "செருவிள நீர்பட வெம்முலைச் செவ்விள நீர்படு சேயரிக்..." என சயங்கொண்டாரும் "மங்கையர் முலை குலுங்கினால் மாரன் முடி கலங்குமே" என ஒரு பழம் பாடலாலும் நாம் அறியலாம். இவ்வாறு மங்கையர் முலை குலுங்கும்பொழுது, காதல் தெய்வமான மாரன் முடியே கலங்கும்பொழுது சாதாரண மானிடர் நிலை என்னவாகும். இங்கு ஒரு பெண்ணைப் பற்றிய பாடல். ஏலம்மா இளமறவா இளநீரடா குரும்பமுலை குரும்பமுலை அரும்புமுன்னே கூறிவந்தாள் நேரினிலே இங்கு ஒரு அழகிய காட்சி காதலன் தன் காதலியை சந்தித்து காதலுறவாடுகிறான். உறவாடிய காதல்வேகத்தில் அவனது கை அவளது மார்பில் பட்டுவிடுகிறது. யாராவது பார்த்துவிடப்போகிறார்களே எனப் பிணங்கி தமையன், மாமன் யாராவது வந்தால் என தடுக்கிறாள். காதலனுக்கு உடனே ரோஷம் வருகீறது. ஆண்பிள்ளைச் சிங்கமல்லவா? அண்ணனுக்கும் மாமனுக்கும் தான் பயந்த வனல்ல எனக் காட்ட முனைகிறான். இந் நினைப்பில் இதோ பாடுகிறான். மருகணைய குழல்சரிய மகுடகும்பம் த்மைசய தனத்தை தொட்டா உனக்கென்னடி தமயன் கண்டா வரச்சொல்லடி மார்பை தொட்டா உனக்கென்னடி மாமன் கண்டா வரச்சொல்லடி மீன்பிடிக்கச் செல்லும்பொழுதும், சென்று மீளும் போதும் தற்செயலாக மழை வந்துவிட்டால் 'கூறைப்பாய்' போதும் என்று சொல்லப்படும் ஒரு பாயால் தம்மை மூடிக்கொள்வது வழக்கம். இங்கு வலை இழுத்துக்கொண்டிருக்கும் பொழுது மழை வந்துவிட்டதுபோலிருக்கிறது. அந் நினைப்பில் ஒருவர் பாடுகிறார். கொண்டலிலே லைலா மழைகறுக்க கொண்டுவாடி லைலா கூறப்பாயை இங்கு 'கொண்டல்' என்பது வடகிழக்கு திசையையே குறிக்கும். இப்பாடலைச் சிலர், கொண்டலிலே லைலா மழைகறுக்க குமரிமுலை லைலா தழதழக்க என்றும் பாடுவார்கள். ஏறுமென்று அல்லில்லா சொன்னவுடன் ஏந்திளையாள் அல்லில்லா கண்சிவந்தாள் கண்ணைக்கண்ணை அல்லில்லா காட்டுறாளே காமரதம் அல்லில்லா மூட்டுறாளே இதில் 'ஏறுமென்று அல்லில்லா சொன்னவுடன் ஏந்திளையாள் அல்லில்லா கண் சிவந்தாள்' என்ற வரிபற்றிப் பார்ப்போம். இங்குள்ள மக்கள் பாலைதீவு, சிறுத்தீவு, கச்சதீவு ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களுக்கு கடல்மார்க்கமாகச் சென்று வழிபடுவது வழக்கம். இப்படியான பயணங்களின் போது பெண்கள் படகில் ஏறுவதற்குப் பயந்துகொண்டு நிற்பார்கள். அவ்வேளை படகைச் செலுத்த நிற்கும் வாலிபர்களுக்கு இவர்களது தயக்க நிலை, மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்பொழுது அவர்கள் படகில் ஏற உற்சாகப்படுத்தும்முகமாக "ஏறுங்க'. 'ஏறுங்க" என்று கூற இவர்களும் நாணிக் கண் சிவந்து படகில் ஏறி விடுவார்கள். சில வேளைகளில் பெண்களின் கையைப் பிடித்தும் இறக்கி விடுவார்கள். இதன் பின்னர் படகுப் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமா? அவ்வாறான காதலுணர்வின் உந்தலே மேற்குறிப்பிட்ட பாட்டாகும். ஒவ்வொருவரும் தம்தம் தொழில் முறையோடு ஒத்த பொருட்களை அல்லது செயலை எதற்கும் உவமிப்பது வழக்கம், அவ்வாறான பாடல்கள் பூப்பூவடி புளியம் பூவடி பொன்னம்மா கொண்டையில் தாழம் பூவடி * * * போட்டாளே லைலா மாலையொண்டு வாட்டாளம் லைலா பூத்தொடுத்து காட்டிலோ லைலா மெத்தையுண்டு கால்பிடிக்க லைலா தாதியுண்டு 'வாட்டாளம் பூ' என்பது கடலில் படர்ந்து இருக்கும் வாட்டாளைத் தாவரத்தின் பூவாகும் இனி, காதலில் ஏற்பட்ட தோல்வியால் மணமுடைந்த சில பாடல்களை பார்ப்போம். சொன்னாலும் அல்லில்லா கேக்குதில்லை சோறுபோட்டா அல்லில்லா திங்குதில்லை உண்ணச்சோறு அல்லில்லா இல்லையடி உடுக்கவோ அல்லில்லா உடையுமில்லை நெஞ்சிலோ அல்லில்லா வைத்தேனுன்னை நிலத்திலே அல்லில்லா கிடக்கவிட்டேன். * * * வாறனெண்டு அல்லில்லா சொன்னாயேடி வருவேனெண்டு அல்லில்லா வார்த்தை சொன்னாய் சொன்னசொல்லை அல்லில்லா தட்டாதேடி சுகமுனக்கு அல்லில்லா கிட்டாதடி தேடிய அல்லில்லா காலமெல்லாம் தேன்மொழியே அல்லில்லா எங்குபோனாய் எங்கிருந்து அல்லில்லா எங்குபோனாய் இனி வேறுரகக் காதற் பாடல்களைப் பார்ப்போம். உனக்கோ உடைகுலைப்பேன் அந்தணர்க்கோ பொன்னிடுவேன் பெண்ணிருந்த நாட்டினிலே பிழைவரும்தான் பேதையரே பேதைதான் சுமப்பாளோ பெண்பேதை தாங்குவாளோ * * * காப்புநல்ல அல்லில்லா கலகலன்ன கைவளையல் அல்லில்லா சோதிமின்ன செப்பிலையோ அல்லில்லா சிலையெழுதி சிலைதனிலே அல்லில்லா வடிவெழுதி எழுதினவன் அல்லில்லா கண்கெடுவான் எழுத்தாணி அல்லில்லா கூர்முறிவான் ஆனையொண்டு அல்லில்லா நான்தருவேன் அதுசுமக்கும் அல்லில்லா பொன்தருவேன் பொன்னான அல்லில்லா மேனியெல்லாம் புண்ணாக அல்லில்லா நோகுதடி பொந்துக்குள்ளே அல்லில்லா பூந்தஎலி பூனைகண்டா அல்லில்லா இனிவிடுமா பேயோநல்ல அல்லில்லா பிடித்ததுன்னை விறுமனோ அல்லில்லா ஆட்டுதுன்னை அழைக்கட்டோ அல்லில்லா மந்திரத்தை மந்திரம்தான் அல்லில்லா கற்றநீலி மாய்மால அல்லில்லா ஓ! காறி இப்பாடல்களில் பண்டைய அரசுரிமைக் காலங்களில் இருந்துவந்த வழக்கமுறைகள் தொனிப்பதைக் காணலாம். ஆனை கொடுப்பதும், அது சுமக்கும் பொன் கொடுப்பதும், அந்தணர்க்குப் பொன் தருவதும் அவ்வகை முறைகளேயாகும். மேலும், பேயோ பிடித்ததுன்னை விறுமனோ ஆட்டுதுன்னை என்பதன்மூலம் காரணம் கூறமுடியாத காரியத்தால் பிரிவு ஏற்பட்டிருக்கிறது என அறியலாம். ஏனெனில் திடீரென மனம் மாறியவர்களைப் பார்த்து 'பேயா பிடிச்சது' அல்லது 'விறுமனா ஆட்டுது' என்று இன்றும் கேட்பது வழக்கம். 'அழைக்கட்டோ மந்திரத்தை' என்பதன் மூலம் மனம் மாறுவதற்கு மந்திரங்களின் துணையை நாடியுள்ளார்கள் எனவும், இன்றும் அதன் எச்சகொச்சங்கள் மீந்திருப்பதையும் காணலாம். இனி சிறு வன்மம் கலந்த, சில காதல் பாடல்களைப் பார்ப்போம். என்னஎன்ன றோசா பாக்கிறது எட்டுப்பணம் றோசா கேக்கிறது வேசைபொண்ணே றோசா காசதாடி வேணுமெண்டா றோசா பாயைப்போடு இங்கு 'எட்டுப் பணம்' என்பது கிட்டத்தட்ட ஐம்பது சதத்தைக் குறிப்பதாகும். ஏனெனில் ஒரு பணம் ஆறு சதமாகும். பட்டணத்தார் அல்லில்லா பெற்றகுட்டி பணம்பறிக்க அல்லில்லா வல்லதடி வல்லவன்ரி அல்லில்லா நானுனக்கு மாட்டுவேன்ரி அல்லில்லா மாலைரதம் மாலையேன்ரி அல்லில்லா உனக்குப்பெண்ணே வேலைசெய்தா அல்லில்லா கூலிதான்ரி * * * றோட்டோரம் அல்லில்லா வீட்டுக்காரி றோசாப்பூ அல்லில்லா சேலைக்காரி அண்டைக்கு அல்லில்லா சண்டையிலே அடி டிசசிற்றேன் அல்லில்லா மண்டையிலே மண்டைக்கு அல்லில்லா கோடாலியே மார்புக்கு அல்லில்லா இரும்புலக்கை அம்மிநல்ல அல்லில்லா அரைநிறமாம் அரச்சமஞ்சல் அல்லில்லா பொன்னிறமாம் * * * புதுமைமாதா கோவிலுக்கு புள்ளைகள்போற போக்கைப்பார் புளியடியிலே நிண்டுபார் பொண்டுகள்படும் பாட்டைப்பார் கண்ணடிக்கிற அடிக்யைப்பார் கால்நடக்கிற நடையைப்பார் * * * அண்ணன்தம்பி அஞ்சுபேராம் அஞ்சபேராய் வருகயிலே அருகவாறாள் எனக்கழகி மூண்டுபேராய் வருகயிலே முன்னவாறாள் எனக்கழகி பின்னவாறாள் உனக்கழகி * * * தண்டை வலி தடியை வலி தண்டுகாரன் மகளை வளை * * * அவளையுமாம் துவளையுமாம் அவளரச்ச மஞ்சளுமாம் மஞ்சளிஞ்சி மாதுளையாம் மல்லிரசம் தாமரையாம் தாமரையாள் வாறாளெண்டு தனக்கேற்ற பொய்கையிலே பொய்கைசுற்றிப் போட்டதுண்டு போய் அமரும் வேளையுண்டு * * * அந்தாவாறாள் சிந்தாமணி அவளிருக்கும் நந்தாவனம் நந்தாநல்ல வனமடியே நாலுசத்தும் காட்டியே காட்டுக்குள்ளே நானிருப்பேன் காட்டெருமைப் பால்குடிப்பேன் பாலும்நல்லா புளிக்குதென்பேன் பழையமணம் கொள்ளுதென்பேன் -------------------------------------------------------------------------------- வசை பாடல் சிலரும் பலருங் கடைக்கண் நோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச் (நற்றினை-149) தெருக்களிலுள்ள மாதரில் சிலரும் பலரும் கூடி கடைக்கண்ணால் சுட்டி, வியப்படைந்தவர்போல் மூக்கினில் விரல்வைத்து பழிச்சொல் கூறித் தூற்றினர். ஆதனால், மனித வாழ்வில் சுவாசிப்பது எவ்வளவு இயல்பான காரியமோ, அவ்வாறே வசை பாடலும் இயல்பானதே, இவ்வகையில் கரைவலையின், வசை பாடல் அம்பாக்களைப் பார்ப்போம். ஊறாத்துறையிலே வண்ணான் உப்புக்கும்புளிக்கும் வருவான் தட்டொண்டு தட்டினா விழுவான் * * * நெடுந்தீவாளாம் மேரி நெடுநாள்பட்டவோர் தாசி ஊரார்தனையே ஏசி உழைப்பாளேகை வீசி பார்த்தாலும் பரதேசி பகல்வடிவில் மகராசி * * * மண்டதீவுப் பொண்டுகளா மாணமில்லை உங்களுக்கு * * * பாதி உலமடிக்கு பகட்டுகிறான் பாசோரான் ஓட்டை உலமடிக்கு உசத்துகிறான் பாசோரான் இங்கு 'உலமடி' என்பது 'உலைமூடி' என்பதற் திரிபாகும். காரதீவான் தோணியில் கல்லேத்தக் கூடாது பாசோரான் தோணியில பாசியேத்தக் கூடாது. * * * தாயறிவாள் பிள்ளைகுணம் தயவறிந்து பால்கொடுப்பாள் பாலும்கொடாள் அண்ணன்தேவி படிகள்செய்வாள் சண்டாளி * * * கட்டை வெட்டிச் சுட்டாலும் கள்ளி நெஞ்சு வெகுதில்லை வெட்டி வெட்டிச் சுட்டாலும் வேசை நெஞ்சு வேகுதில்லை * * * சிங்களத்தி சிவத்தப்பொண்ணே தேங்காயெண்ணெய் மணமென்ன இவ்வாறான வசைபாடல்களை, பலவித நோக்கில் - பல வித தொனிகளில் பாடினார்கள். -------------------------------------------------------------------------------------- கதம்பம் "பூமழை புனம்மழை புதுமென் சுண்ணத்தில் தூமழை தரளத்தின் தோமில் வெண்மழை தாமிழை நெரிதலிற் றகர்ந்த பொன்மழை" (கம்பராமாயணம் மந்தரையின் சூழ்ச்சி படலம்-36) இதுவரை நாம்பார்த்த அம்பாப் பாடல்களெல்லாம் இனம் பிரிக்கப்பட்டு, அவையவைகளுக்குரிய பகுதிகளாக துண்டாடி, விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இத்தொழிலைச் செய்யும்பொழுது நாம் முன்பு பார்த்ததுபோல், துண்டுதுண்டாக எந்தத் தொழிலாளியும் பாடமாட்டான். வலை வளைத்து மீன் பிடிக்கும்வரை இவ் அம்பாப் பாக்களில் பலவற்றைத் தமது, சுயவிச்சாப் போக்கிற்கு தொடர்ச்சியாகப் பாடுவார்கள். இதற்கு உதாரணமாக பின்வரும் பாடலை நாம் அவதானிக்கலாம். இது ஞானசவுந்தரி கையை வெட்டிக் காட்டில் விட்டதாக, சரித்திரம் கூறுகிறது. இதனால்தான் இப்பாடலின் இறுதி அடியில் 'கை எங்கே ஞர்ன சவுந்தரி' என வருகிறது. ஏலம்மா ஏலேதண்டு கை எங்கே ஞானசவுந்தரி ஓவலம்மா ஏலேதண்டு கை எங்கே ஞானசவுந்தரி வருகுதடா கப்பலொண்டு கை எங்கே ஞானசவுந்தரி வாழக்காய் பாரமேத்தி கை எங்கே ஞானசவுந்தரி ஐயோமச்சான் கையைவிடு கை எங்கே ஞானசவுந்தரி ஆச்சிகண்டா அடிக்கப்போறா கை எங்கே ஞானசவுந்தரி எடுக்கிறேன்பார் கத்தியொண்டு கை எங்கே ஞானசவுந்தரி குத்திறேன்பார் நெஞ்சினிலே கை எங்கே ஞானசவுந்தரி அண்ணேவா திண்ணயிலே கை எங்கே ஞானசவுந்தரி அரசன்வா மூலையிலே கை எங்கே ஞானசவுந்தரி கள்ளனடா யாக்கோப்பன் கை எங்கே ஞானசவுந்தரி கதவருகே நிக்கிறான்ரா கை எங்கே ஞானசவுந்தரி நிலவு படுந்தனையும் கை எங்கே ஞானசவுந்தரி நின்றாரடி வாசலிலே கை எங்கே ஞானசவுந்தரி இழுக்கிறேன்பார் என்ரபக்க கை எங்கே ஞானசவுந்தரி எடுக்கிறேன்பார் ரண்டுசோடா கை எங்கே ஞானசவுந்தரி இன்னும் சில பாடல்கள் சில காவிய நாயகர்கள் நாயகிகளின் பெயர்களை வைத்துப் பாடப்பட்டுள்ளன. ஆனால் இவ் அம்பாக்களுக்கும் இதில்வரும் பெயர்களுக்கும், எவ்வித சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவைகள் பாடல்களுடன் சேர்ந்து ஒத்திசையாக வருகிறது. கட்டும்பட்டேன் அடியும்பட்டேன் கள்ளனெண்ட பேரும்கேட்டேன் பேராலே பெரியவன்ரி பேருலகில் உள்ளவன்ரி உள்ளதொரு பிள்ளையும்தான் உலகாளாக் கோவலனாம் கோவலனும் மாதவியும் குடுகையிலே சோறுதிண்டு சோறுதிண்டு கைகழுவ சோதிவெள்ளி போய்மறைய போகட்டா தாயாரே போய்வரட்டா கப்பலிலே கப்பலிலே ஒப்பமுண்டு கடதாசி மையுமுண்டு இப் பாடலின் இறுதியில்வரும் வரிகளை சிலர், இப்படியும் பாடுவார்கள். போகட்டா தாயாரே போய்வரட்டா கப்பலிலே கப்பலிலே அப்பமுண்டு கடதாசி சிப்பமுண்டு இன்னும் சீனம்கண்டேன் நகரம்கண்டேன் சித்திரப்பூ மேடைகண்டேன் ஞானமுள்ள பேரைச்சொல்லி நதிகளெல்லாம் வணங்கக்கண்டேன் வணங்கநல்ல பெரியகோனோ மாவிலங்கை வேந்தனுமோ வாசலுக்கு மந்திரியோ மந்திரியும் மார்த்தாண்டனோ * * * மாடெண்டா அல்லில்லா மாட்டைப்பாரு மயிலெண்டா அல்லில்லா ஓட்டிப்பாரு சொல்லக்கேள் அல்லில்லா மெல்லஉரை சேமகுல அல்லில்லா பாண்டியரை பாண்டியெண்டா அல்லில்லா பல்லுடைப்பன் பறஞ்சியெண்டா அல்லில்லா நாக்கறுப்பன் நாக்குடனே அல்லில்லா மூக்கரிந்து நாய்க்கிரையாய் அல்லில்லா ஆக்கிடுவேன் ஆக்கினது அல்லில்லா பெண்ணல்லோடா ஏழுபிள்ளை அல்லில்லா நல்லதங்காள் இங்குவர அல்லில்லா கண்டதுண்டோ ஏறபொழுது அல்லில்லா ஆகுதடி சோறுவர அல்லில்லா காணேனடி திண்டதெல்லாம் அல்லில்லா போதுமடி செப்பமுடன் அல்லில்லா தண்ணிகொண்டா மக்களையே அல்லில்லா பெற்றவளே மனதிரக்கம் அல்லில்லா தீர்த்தவளே மாறாத அல்லில்லா நோயைத்தந்து மன்னவனை அல்லில்லா போகவிட்டு தீராத அல்லில்லா நோயைத்தந்து திரும்பியெனை அல்லில்லா போகவிட்டு விட்டுவிட்டு அல்லில்லா வீட்டபோடா வெக்கங்கெட்ட அல்லில்லா சலங்கைக்காரா இங்கு 'ஏறுபொழுது' என்பது, காலை சூரியன் எதித்து நண்பகல் பன்னிரண்டு மணி வரையுமாகும். அதற்குப் பிற்பட்ட நேரங்களை 'இறங்குபொழுது' என்பார்கள். மாங்காய்க்கு அல்லில்லா எறிந்தகல்லு மாமரத்தே அல்லில்லா பட்டதென்ன மையன்கையில் அல்லில்லா வாளிருக்கு வாளாலே அல்லில்லா அரக்கன்பட்டான் வல்லரக்கன் அல்லில்லா சீனன்மாண்டான் ஆண்டசிறை அல்லில்லா அழித்தோமய்யா சில பாடல்களில், ஒருவித கதைப்போக்குத் தொனிப்பதை அவதானிக்கலாம். ஆனால், அவை எவை என்று, தெளிவாகாமல் கட்டுக் கோப்பற்றிருக்கிறது. அவை தேனுமநல்ல அல்லில்லா தினைமாவும் தின்பீரோ அல்லில்லா பண்டாச்சாமி சாமியோடு அல்லில்லா நெருங்காதேடா சக்கரங்கள் அல்லில்லா பொல்லாதடா பொல்லாத அல்லில்லா காட்டிலேநான் உல்லாச அல்லில்லா வேட்டையாட வேட்டைக்கு அல்லில்லா சென்றமன்னன் வீடுவர அல்லில்லா காணோமின்னும் காதை அல்லில்லா ஊரும்கண்டேன் காரிழையாள் அல்லில்லா நெருப்புங்கண்டேன் தோப்பிற்குள் அல்லில்லா வேசையோடு சூழ்ந்திருப்பான் அல்லில்லா லோப்பறங்கி பறங்கிக்கு அல்லில்லா மீளானோடி இவற்றைப் பார்க்கும்பொழுது, பழைய கால பாட்டிக் கதைகளின் போக்கு தெரிகிறது. ஆகவே ஞாபகத்தில் இருந்த பாட்டிக் கதைப்போக்குச் சம்பவங்களைப் பாடியிருக்கிறார்களென்றே நாம், கொள்ள இடமுண்டு. ஆனைக்கு அல்லில்லா தீன்போடு அரசனுக்கு அல்லில்லா பாய்போடு ஆரம்மா அல்லில்லா வண்டியிலே றோசாப்பூ அல்லில்லா கொண்டயிலே ஆசமச்சா அல்லில்லா ஆசானுமே அருளிவச்சா அல்லில்லா ஆசானுமே கொண்டைக்கு அல்லில்லா அல்லாகாது இனி இன்னதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத பாடல்கள் சிலவற்றைப், பார்ப்போம். ஓவலைக்கு செல்லவேண்டும். ஒருகலஞ்சோறு உண்ணவேண்டும் உண்ணாத மாமியாரே உனக்களிப்பேன் மோதிரங்கள் மோதிரங்கள் இப்பகையோ மொளிகள்புண்ணாய் நோகுதடி நோகுதடி சந்துக்குள்ளே நோக்காடெல்லாம் பொந்து ககுள்ளே பொந்துக்குள்ளே பூந்தஎலி பூனைகண்டா இனிவிடுமா இனி என்ன மூலைகுடடி இருக்கிறது எனக்கிடடி * * * செட்டிநல்ல அல்லில்லா தன்னையும்தான் தட்டியல்லோ அல்லில்லா பூப்பறித்தான் காட்டிற்கு அல்லில்லா அலங்காரம் கலைமானும் அல்லில்லா குட்டிகளும் வீட்டிற்கு அல்லில்லா அலங்காரம் விடிவிளக்கும் அல்லில்லா பிள்ளைகளும் செட்டிக்கு அல்லில்லா காச்சலடி சிறுக்கிக்கு அல்லில்லா பொண்டிலுக்கு குண்டியெல்லாம் அல்லில்லா பெருஞ்சிரங்கு 'அரையாப்பு' என்பது இடைக்குக் கீழ்வரும் ஒருவித சொறிதேமல் நோயாகும். வட்டவட்ட நிலவெறிக்க வைகுழலாள் ஓதிக்கட்ட கிட்டஇருந்த என்மனைவி என்னைப்பார்த் தெழுந்தோட * * * இணங்கடி தேவி ஊருக்குப்போக ஊரும் பதியும் உசந்தகாடும் நாட்டிற்குப்போக நல்விடைதாடி * * * அடர்ந்த 'பாலை'யிலேறி தொடர்ந்து வருகிறதாம் 'முசுறு' கொப்பில 'பாலை'யிலேறி தொடர்ந்து வருகிறதாம் 'முசுறு' * * * ஓராமீனடி ஒடியல்புட்டடி வாளைமீனடி வரகுசோறடி தின்னடி உனக்கென்னடி * * * வெள்ளைக் வெள்ளைச் சட்டைகளாம் வெள்ளைக் கோழி முட்டைகளாம் முட்டை இட்டுக் குஞ்சுபொரி முத்த மெங்கும் கொண்டுதிரி கொண்டுதிரி மொழுகுதிரி கோயிலெங்கும் கொழுத்துமதிரி * * * எடியடியே மரியமுத்து உன்னையொருவன் தேடுறான்ரி கறுவலோடி சிவலையோடி கன்னமீசைக் காறனோடி இன்று நாகரீகமான கன்னமீசை, அன்றும் வழக்கத்திலிருந்தது போலும்!. * * முற்றும் * * ஆசிரியர் குறிப்பு _____________ புஷ்பராஜனைப் பற்றி.... பாடசாலை நாள்தொட்டே உதைபந்தாட்டத்திலும், கிறிக்கற்றிலும் அறிமுகங் கொண்டு இலக்கியத்தினால் மேலும் நெருக்கங்கொண்ட நண்பனைப்பற்றி உரிமையுடன் சொல்ல இயலும். கலாசாரத்துறையில் வறண்ட பகுதியெனத் 'தூரத்து மனிதர்களால்' பிழையாகக் குறிக்கப்படும் குருநகரிலிருந்து வெளித் தெரியவருபவர்களில், இவரும் ஒருவர். பெரும்பாலான ஆக்கஇலக்கியக்காரரைப்போலவே முதலில் கவிதைத்துறையில் (தினபதி கவிதா மண்டலத்திற் கூடாய் 1967ல்) கால்பதித்தவராயினும் பின்னர் சிறுகதை, கட்டுரைத் துறைகளுக்கும் அகலித்துக் கொண்டார். இவருடைய சிறுகதைகளில், குருநகர் மக்களின் வாழ்வியக்கம் முனைப்பாக வெளிப்பாட்டைவதனை அவதானிக்கலாம். விவேகி, இதயம், மல்லிகை, பூரணி, வீரகேசரி, அலை ஆகியவற்றில் இவரது பல்வேறு ஆக்கங்களும் வெளிவந்துள்ளன. 1970 ல் இவர் தொகுத்த 'நெய்தல் 4 வது ஆண்டுமலர்', பலரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் 'அலை' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்துள்ளார். 1947 ல் பிறந்த புஷ்பராஜன் 1968 ல் திருமணம் செய்து கொண்டார்: மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் உள்ளார். தற்போது மன்னார் இ.போ. ச.வில் நடாத்துனராகக் கடமையாற்றுகிறார். அ. யேசுராசா 17-10-1976. |