கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வீ  
 

எஸ்.பொன்னுத்துரை

 

வீ

எஸ்.பொன்னுத்துரை

---------------------------------------------------

சமர்ப்பணம்

நான்
நானேயான
நானாக வாழ
உயிரும்,
உணர்வும்,
தன்னம்பிக்கையும்
ஊட்டிய
என் அம்மா
அம்மாக்குட்டி
அவர்களுக்கு

------------------------------------------------------------

பதிப்புரை

தமிழர், திரைகடலோடியும், திரவியம் தேடியது ஒரு காலம்.

தொழிலுக்காக, வசதி-வாய்புகளுக்காகத் தமிழர் புலம் பெயர்ந்து சென்றமை பிறிதொரு கட்டம்.

இன்று, நிர்பந்தங்கள் காரணமாகவும், காலத்தின் கோலங்களாகவும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள். காரணங்களை விடுங்கள். தமிழ் பேசும் எல்லைகள் அகலித்துள்ளன என்பது உண்மை. புதிய சூழலிலும் தமிழ் நேசிப்பு உறையவில்லை. புதிய ஆக்க முனைப்புகளும் அரும்பு வைக்கின்றன. இந்த அரும்புகளின் ஆக்கங்களும் தமிழுக்கு வளமும் வனப்பும் சேர்க்கும்.

தமிழுக்கு எல்லையில்லை. கலைகளுக்கு எல்லையில்லை. தமிழின் புதுப் புனைவுகளுக்கு எல்லையில்லை. இவை அனைத்தும் செழித்தல் வேண்டும். புது நாடுகளிலே வாழும் தமிழர்களுடைய கலை-இலக்கிய நேசிப்புகளும், உணர்வுகளும், ஆக்க முனைப்புகளும் கௌரவிக்கப்படுதல் வேண்டும். இத்தகைய சிரத்தைகளுடனும் நிறுவப்பட்டதுதான் மித்ர பப்பிளிகேஷன்ஸ் (MITHRA PUBLICATIONS)

இந்தப் பதிப்பகம் இளம் எழுத்தாளர்களுடைய படைப்புகளை ஊக்குவிக்கும் பழம் பெரும் எழுத்தாளர்களுடைய படைப்புகளைக் கௌரவிக்கும். கால ஓட்டத்திலே, சர்வதேச ரீதியாக, அர்த்தப் பொலிவுடன் செயற்படும் ஒரு பதிப்பகத்தின் முன்னோடியாக இதனைக் கொள்ளினும் பொருந்தும். 'தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது பாரதி வாழ்ந்த காலத்திலே ஓர் இலட்சியக் கனவு. ஆனால் இன்று, தமிழ் உயர்ச்சியின் அவசிய இலக்கு.

வசதிகளையும் தேவையும் கருதி என் அப்பா எஸ்.பொ.வின் நூல்கள் சில வற்றை துவக்க நூல்களாக வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.

இந்த 'வீ' நூலிலே இடம் பெற்றுள்ள கதைகள் 1966-ம் ஆண்டு தொகுக்கப்பெற்றவை. அதற்கும் முன்னர் இருபது ஆண்டுகள் எழுதியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டவை. ஒரு கால் நூற்றாண்டுக்கு முந் நிலவிய ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வையும் வளத்தையும் தரிசிக்கும் முகமாகவும், இன்றைய சந்ததியினர் - ஏன் எழுத்தாளர்களுங்கூட - தரிசன பயன்பெற ஏதுவாகவும் இது வெளியிடப்படுகின்றது.

அந்நிய நாடுகளைத் தாயகமாக்கி வாழும் எழுத்தாளர்கள், இலக்கியச் சுவைஞர்கள், தமிழ் உபாசகர்கள் ஆகியோருடைய ஒத்துழைப்பையும் ஆசியையும் நாடுகின்றேன்.

அன்புடன்

டாக்டர் பொன். அநுர
சிட்னி - அவுஸ்ரேலியா
1.11.1992

------------------------------------------------------------------------------------

நன்றி

'மித்ர'வின் முதல் நூலாக 'வீ'' வெளிவருகின்றது.

இதனை வெளியிட முன்வந்துள்ள என் மகன் பொ. அநுரவுக்கும்- நூலினைத் தயாரித்தளித்த நண்பனும் சகாவுமான 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுக்கும்-

இதற்கு 'அணிந்துரை' எழுதிய இரசிகமணி கனக-செந்திநாதன் அவர்களுக்கும் -

இது பற்றிய 'ஒரு மதிப்பீடு' வழங்கிய சாலினி இளந்திரையன் அவர்களுக்கும் -

இந்நூலுக்குச் சித்திரப் பொலிவு சேர்க்க உதவிய எஸ்.கே.சௌந்தராஹா(சௌ),
என்.சச்சிதானந்தன் (சச்சி)
எஸ்.சண்முகநாதன் (சானா)
எம்.செல்வகுருநாதன் (நாதன்),
வி.கனகலிங்க (வீ.கே)
ஆகியோருக்கும் -
அட்டைப்படம் அமைத்த ஜி.சேகர் அவர்களுக்கும்
என் நன்றிகள்

தமிழ்ச் சுவைஞரின் அன்புக்கும் நன்றி

எஸ்.பொ.
சிட்சி- அவுஸ்ரேலியா

--------------------------------------------------------------------------

கதைகள் 13

1. தேர் 1

2. கணை 33

3. அணி 45

4. வேலி 57

5. ஈரா 76

6. நெறி 83

7. விலை 88

8. மறு 101

9. வீ 122

10. சுவை 131

11. சிதை 133

12. வீடு 143

13. முள் 189

----------------------------------------------------------------------------

அணிந்துரை

திடீரெனத் தபாற்காரன் ஒரு புத்தகப் 'பார்ச்'லைத் திணித்து மீண்டான். பிரித்துப் பார்க்கின்றேன். அதன் பெயர் வீ! 'எஸ்.பொ.'வின் சிறுகதைத் தொகுதி. 'இவ்வளவு காலத்திற்குப் பிறகாவது ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டாரே' என்ற நிறைவுடன் திறந்து பார்க்கின்றேன். 'இதற்கான அணிந்துரையை உங்களிடம் பெறே நிச்சயித்தேன். உடனே அனுப்பி உதவுகங்கள் என்ற அன்புக் கட்டளையை அதனுட் கண்டு திகைக்கின்றேன்.

ஈழத்து சிறுகதைகள் பற்றிய கணக்கெடுப்பில் இருவரும் இருவேறு துருவங்களில் நின்றவர்கள். அவருடைய எழுத்துக்கள் என் மனத் திரையிலே கோடுகிழித்து மின்னுகின்றன. அவர் மேனாட்டிலக்கியத்திற் பயிலப்படும் கரு-உரு-உத்தி ஆகியவற்றை நன்கு ஜ“ரணித்து, அவற்றைத் தமிழிற் புகுத்தியவர், ஆபாசம், பாலுணர்ச்சி, தசைப் பிடு ஙகள் என்பவற்றைக் கண்டு பயந்தோடாத 'இந்திரிய எழுத்தாளர்!' பாலுணர்ச்சிச் சிக்கல்களை மையமாக வைத்த, தீ என்ற நாவலை எழுதிப் பரபரப்பு ஏற்படுத்தியவர். ஈழத்து எழுத்துலகின் 'சிம்மசொப்பண'மாகவும் 'பிரச்சினைக்குரிய எழுத்தாள 'ராகவும் விளங்குபவர். அத்தகைய அவர் கடந்த பரம்பரையின் மரபுச் சு€யுடன், பண்புடனும் எழுதிவரும் என்னிடம் அணிந்துரை கேட்கின்றாரே! எத்தகைய கதைகள் இருக்கின்றனவோ?' என்ற பயத்துடன் நூலைப் படிக்கத் தொடங்கினேன். நூலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட பயம் சுவடே தெரியாமல் மறைய, நான் நூலிலே திளைத்தேன். இந்நூலை ஆற அமர ஒரு முறையல்ல, பலமுறை பார்த்து முடித்தேன்.

1947 ஆம் ஆண்டிலேயே கவிதை மூலம் எழுத்துத் துறைக்குள் வந்த 'எஸ்.பொ.' இதுவரையிற் சுமார் இருநூறு கதைகள் எழுதியுள்ளார். கதைகளின் எண்ணிக்கையையும், கால இடைவெளியையும் பார்த்தால், வீ.அவருடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுதியாக வந்திருக்க வேண்டும். இருப்பினும், ஒரு தொகுதியாவது கிடைத்துவிட்டதே என்பதிலே திருப்தி. நிலவு, ஒளி, நிழல், மேடை, கடவுள் அடிமையானார் போன்ற அவருடைய நல்ல சிறுகதைகளை இத்தொகுதியிலே காணாதது முதலில் ஏமாற்றத்தைத் தந்தது. ஆனாலும் கதைக்கேற்ற விதமாக அவர் எவ்வாறு ந€யைக் கையாளுகின்றார்; அவருக்கு முன்னால் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு கைகட்டிச் சேவகஞ் செய்கின்றன என்ற ஒருமைப்பாடு கதைக்குக் கதை படர்ந்து காட்டும் முழுத்துவம் என் ஏமாற்றத்தைப் போக்கியது. தொடக்கம்- உச்சக் கட்டம் முடிவு என்ற வாய்ப்பாட்டில் அமையும் பத்திரிக்கைக் கதைகளுக்கும் எவ்வளவோ இடம் பெற்றுள்ள சிறுகதைகளுக்கும், இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளுக்கும் எவ்வளவோ வித்தியாசம். எனவேதான், இந்தக் கதைகள் என் மனத்திலே ஏற்படுத்திய உணர்ச்சிகளையும், எழுப்பிய பலிதத்தையும் விரிவாக எழுதுதல் வேண்டும் என்ற நியாய பூர்வமான அக்கறையும் பிறந்தது. கதைகளுக்குச் சிறிய தலைப்பிடும மோகத்தை ஈழத்தில் 'எஸ்.பொ.' வே ஏற்படுத்தியவர். இத்தொகுதியிலிலுள்ள தலைப்புக்கள் 'வீ' தவிர, இரண்டெழுத்துக்களில் அமைந்துள்ளன. பல தலைப்புகளைப் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளலாம். இந்த உபாயத்தினால் கதையின் பூடகமான தொனிப்பொருளையும், வெளிப்படையான சம்பத் தொகுப்பையும் ஒரு சேர 'எஸ்.பொ.' காட்டுகின்றார். தமிழ் இல கியத்தில் இது புதிய முறை; புரட்சி முறை. இதனைச் சற்றே விளக்கும் முகமாக தொகுதியின் முதலாவது கதையாக இடம்பெறும் தேர் என்னுங் கதையை எடுத்துக் கொள்ளலாம். 'குடும்பமே ஒரு தேர்' என நடைபெறும் நிகழ்ச்சித் தொகுப்பிலே, இஷ்ட குமாரனைத் தேர்ந்தெடுப்பதையும் பூடகமாக தொனிப் பொருளாக - ஆசிரியர் காட்டுகிறார். பென்னம்பெரிய படுதாவிலே வர்ணக்கலவைகளை அனாயாசமாக அள்ளி எறிந்து ஓவியந் தீட்டும் வள்ளாளனைப் போல இக்கதையை 'எஸ்.பொ.' சித்திரித்துள்ளார். எத்தனை பாத்திரங்கள்! அவற்றை எவ்வாறு நடமாட விடுகின்றார்!! இக்கதையில் ஒரு நாவலுக்குப் போதுமான பாத்திரங்கள் நடமாடினாலும், சிறுகதையின் இறுக்கம் சற்றேனும் குறையாமல் எழுதியுள்ளதின் மூலம் ஆசிரியர் நம்மைப் பிரமிக்க வைக்கின்றார். "லா.ச.ராவின் பாற் கடல், ஜெயகாந்தனின் யுகசந்தி ரி.செல்வராசனின் யுகசங்கமம் ஆகியனவும் தேர்கொண்டுள்ள கருவைச் சுற்றியுள்ளன, அவற்றிலே காணமுடியாத கலை முழுத்துவத்தைத் 'தேர்' கொண்டுள்ளது. இந்த நல்லதோர் சிறுகதையைத் தமிழன்னைக்குச் சமர்ப்பித்ததற்காக எஸ்.பொ.வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பிரபல கவிஞரும், விமர்சகருமான பேராசிரியர் சாலை இளந்திரியன் ஒரு கடிதத்திற் குறிப்பிட்டுள்ளார்.

இத்தொகுதியின் இரண்டாவது கதை கணை. இத்தொகுதியிலே கதைக்கேற்றவாறு பல வகை நடைகளையும் 'எஸ்.பொ.' கையாண்டிருந்த போதிலும், இந்தக் கதையில் அவருக்கே உரித்தான முத்திரை நடை வீறுகொண்டு நிற்கின்றது 'மலர் தூவிய மஞ்சத்திலே... அசைவிற் பார்க்கின்றார்' என்ற வசனம் 'எஸ்.பொ.' வின் வசன நடைக்கு உதாரணம். சாதாரணமாகத் தன் சுய எழுத்து நடையைக் காட்டுவது போலக் கதையை அமைத்து விட்டு, 'கற்பு தத்துவமுமன்று. அது வாழும் முறை. வீர மிருக்கும் இடத்தில் அதைப் பயிலலாம்' என்று சோமாதேவியைப் பேச வைத்து திடீரென நமது சிந்தனையை தூண்டுகின்றார்.

தொழிலாளர் அணியைப் பற்றிய கதை என்ற வெளிப்படைப் பொருளிலும், அலங்கார வார்த்தை (அணி) என்ற பூடகப் பொருளிலும் மூன்றாவது கதை அமைந்துள்ளது. இதில் 'எஸ்.பொ.' கையாண்டுள்ள கதை சொல்லும் உபாயமுறை தமிழுக்குப் புதியது. முன்னே ஒருவனை நிறுத்தி அவனுடன் பேசுவது போன்று இது அமைந்துள்ளது. ஒரு பாத்திரத்தின் பேச்சுத் தவிர வேறு சொற்கள் வராமல் எழுதும் இம்முறை சிரமமானது. இச்சிரமப் பணியிலேகூட, எதிரில் உள்ளவனுடன் பேசும் தமிழுக்கும். சுயமாகவே அப்பாத்திரம் பேசும் தமிழுக்கும் வேறுபாடு உண்டு என்பதையும் 'எஸ்.பொ.' கோடு கிழித்துக் காட்டுகின்றார். 'சே, இந்த நானா வரவர வலு மோசம்....' என்பது அத்தகைய கோடுகளுள் ஒன்று. 'ஜாதி ஒழிப்பு-தொழிலாளர் அணி-செங்கொடி' என்றெல்லாம் வெகு 'முற்போக்கு'க் கதையைப் போல சித்திரித்து வந்து, 'அங்கை படிப்பித்துக் கொண்டிருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டு போனவன் எந்தப் பகுதி....' என்ற இடத்திலே வைத்து, கதை சொல்லும் பாத்திரத்தின் இயல்பு, வாடிக்கைக்காரனின் மனப்போக்கை அறிந்து இதமாகப் பேசுவதுதான் என்று பூடகமாகக் காட்டிக் கதைக்குத் திடீர்த் திருப்பங்கொடுக்கும் இடத்திலே நாங்கள் மலைத்து நிற்கிறோம்!

இந்த மூன்று கதைகளையும் ஒரு சேரக் காட்டி விட்டு, வாசகரை இன்னொரு பகுதிக்கு அழைத்துச் செல்கின்றார் 'எஸ்.பொ.'

வேலி, ஈரா, விலை, மறு ஆகிய நான்கு கதைகளையும் ஒரு சேர வைத்துப் பார்ப்பதே சாலச் சிறந்தது. இந்த நான்கு கதைகளும் ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில், வெவேறு தட்டிலுள்ள மக்கள் கையாளும் பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு பிராந்திய மக்கள் தமிழை உச்சரிக்கும் முறையும், பித்தியேகமாகக் கையாளும் சொற்களும் ஒரு கலாச்சாரப் பண்பினதும், வாழ்க்கை முறையினதும் நேர்மையான அறுவடை என்பதை 'எஸ்.பொ.' இக்கதைகளில் நயம்படக் காட்டியுள்ளார். பிராந்தியத்தின் ஆன்மா அங்கு பயிலப்படுஞ் சொற்களிலே எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றது என்பதை அப்பகுதி மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலன்றிச் சித்திரிக்க இயலாது. நான்கு பகுதியிலுள்ள பழகு தமிழ் வளத்தையும் ஒரே எழுத்தாளனினால் காட்ட முடியுமென்றால், அது 'எஸ்.பொ.' வினால் மட்டுமே முடியும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அவர் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, அக்களத்தில் வாழ் மக்களுடன் இரண்டறக் கலந்து பழகி, கதையைக் கலாமுழுமையுடன் தரிசிக்கும் இயல்பினர். இத்திறமையை நன்று பெறுவதற்கு எழுத்துத் திறமைக்கு அப்பாற்பட்ட துணிச்சலும் தேவை. அந்தத் துணிவு என் போன்றோருக்கு வர மாட்டாது. 'சித்திரிக்கப்படும் பாத்திரம் அதுவாகவே வாழ வேண்டும், அதற்குள் எழுத்தாளன் தெரிந்தோ தெரியாமலோ, தான் வாழ்ந்து கொண்டிருக்கும் தளத்தின் பண்புகளை நுழைக்கக்கூடாது' என்று 'எஸ்.பொ.' நம்புபவர். அது சரியானதா என்பது சிந்தனைக் குரியது. ஆனால், அவருடைய இந்த அழுங்குப் பிடி நம்பிக்கையை ஒரு சந்தர்ப்பத்தில் நான் அறிந்தேன். விலை என்று இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கதை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிக்கையிற் பிரசுரமாகியிருந்தது. பின்னர், அவரைச் சந்தித்துப் பேசும் பொழுது மேற்படிக்கதையைப் பற்றிய பிரஸ்தாபமும் வந்தது. 'இடஞ்சல் வந்து மூண்டு நாலுநாள்' எனத் தொடங்கி, 'ஒரே துவால' என்று வரும் பகுதி வரை ஆபாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டேன். 'நீங்களோ, நானோ வாழும் தளத்திலிருந்து பார்ப்பதினாலேதான் ஆபாசமாகத் தெரிகின்றது. என் பாத்திரம் வாழும் தளத்திற்கும் களத்திற்கும் வாருங்கள். அப்பொழுது அவர்களுடைய நினைவுகள் இதிலும் பார்க்கக் கொச்சையாக இருப்பதைக் காணலாம். எஸ்.பொ. என்ற சுயம் பாத்திரங்களின் சிந்தனைகளை நிர்ணயிக்க வேண்டுமென்றால் கதைகள் எழுதுவதை விடுத்துக் கட்டுரைகள் எழுதுவது தான் சேமமான காரியம்' என்று அவர் விளக்கினார். அவருடைய விளக்கம் சரியேயாயினம், இப்பொழுதும் என் தளத்திலிருந்து அதை வாசிக்கக் கூச்சமாகத்தான் இருக்கின்றது. இருப்பினும், வெளியுலக நடப்பு என்ற நாரிலே, கதாபாத்திரத்தின் மன ஓட்டங்களை நேர்த்தியாகப் பின்னி யிருக்கிறார். புதிய விமர்சகர் கூறும் 'நனவோடை உத்தி' என்னும் கதை சொல்லும் உபாயமுறை கலைமுழுத்துவத்துடன் 'விலை'யிற் கையாளப்பட்டிருக்கின்றது. இக்கதை மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களுடைய பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளதைப் போல, ஈரா மட்டக்களப்பு வாழ்முஸ்லிம்மக்கள் மத்தியிற் பயிலப்படும் தமிழிலே எழுதப்பட்டுள்ளது. அரபுச் சொற்களைக் கலந்து பேசும் முறையையுங் காட்டியுள்ளார். விலையும், ஈராவும் உத்தியில் எழுதப்பட்டுள்ளன. இதன் மூலம் பிராந்திய உச்சரிப்பு இயல்பினை வெளிக் கொண்டு வருதல் கலைத்துவமானதென 'எஸ்.பொ.' கருதுவதாகத் தெரிகிறது, மறு யாழ்ப்பாணத்துப் பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளது. மறு என்பது புனிதத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைக் குறிக்கின்றதா? சமுதாய அமைப்பை மறுத்து 'நான் மலடியல்லன்' என்று வீரம் பேசுவதைக் குறிக்கின்றதா? அதுவே கதையின் தரிசன பயன். சாதி சமயம் வார்க்கம் என்று எழுந்த கதைகள் எல்லாவற்றிற்கும் எதிர்முகமாக, தளர்ந்த வரும் சாதி சமயம் வர்க்கம் என்று எழுந்தகதைகள் எல்லாவற்றிற்கும் எதிர்முகமாக, தளர்ந்து வரும் சாதி ஆசார அமைப்பை மிக எதார்த்தமாகக் சித்தரித்துக் காட்டுகின்றார். இந்த நான்குகதைகளிலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மருதநில வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வேலி என்னுங் கதையே என்னை மிகவும் கவர்ந்தது. 'தாலி பெண்ணுக்கு வேலி' என்ற சாதாரணக் கருவைக் கொண்டிருந்தாலும், கலைமெருகில்- வர்ணணை சிறப்பில் உச்சமானது. வயலோடு தொடர்புடைய சொற்களாலேயே ஆசிரியர் கதையின் வர்ணனை முழுவதையும் எழுதியுள்ளார். 'சூட்டிலே ஏறத் தயாராகக் காய்த்துவிட்ட பயிரின் தங்கத்திருமேனி மறைந்து விடத்தேடுந் தனபாரங்கள்' என அவர் கனகி என்னும் பாத்திரத்தை அறிமுகப்டத்தும் விதமே தனியானது. கமக்காரனுடைய மனோ நிலையை, சித்திரக்காரனொருவன் அனாயாசமாகக் கீறும் இரண்டொரு கோடு போல ஆசிரியர் காட்டுகின்றார். வயலிலிருந்து வீடுவரை நாமே சித்திர வேலுவுடன் நடக்கும் உணர்ச்சி ஏற்படுகின்றது. யாரோ மீன்பிடிக்க வைத்த பறி அவனுடைய கால்களிலேயே தட்டுப்படுகின்றது. எடுத்துப் பார்க்கின்றான். அதற்குள் ஒரு பனையான் மீன் துள்ளிக் கொண்டிருக்கின்றது. 'எந்த ஏழையின்ரை பிழைப்போ' என்று மீண்டும் பறியை நீருக்குள் வைக்கின்றான். அவசரத்தில் ஈர வரம்பி மிதித்து விட்டான். உலரவிடப்பட்டிருந்த வயலுக்குள் நீர் கசிகின்றது. அந்த வயல் அவனுடையதல்ல. இருந்தும், அந்த வரம்பைச் சரிசெய்து விட்டே நடக்கின்றான். 'வேலி' என்ற நீண்ட கதையில் இவை இரண்டு காட்சிகள்; சிறு கோடுகள். வாசிப்போர் அவதானிக்க முடியாத சிறு கோடுகளுந்தான். ஆனால் கமக்காரனின் பெருந்தன்மை இக்கோடுகளால் உயர்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் கொண்டு வர்ணித்தாலும் இக் குணசித்திரத்தை இக்கோடுகள் போலக்காட்ட முடியாது. ஆம், அந்தச் சித்திரவேலுவால் தான் கனகியை மன்னிக்க முடியும். நீலவளம் என்ற நோபல் பரிசுபெற்ற நாவலை வாசித்த இன்பம்-அதேகாட்சி - இக்கதையில் எனக்குத் தோன்றியது. இந்த நான்கு கதைகளையும் வாசித்து முடித்த பின்னர், அவற்றிடையே ஒருமைப்பாடான சரடு ஒன்று ஓடியிருப்பதை வாசகர் நன்குணர்வர். நெறி தவிறிய பாலுணர்ச்சிதான் அது. அதை நான்கு கோணத்திலும் நாலு மண்வளத்திலும் நின்று ஆசிரியர் அணுகியிருக்கிறார்.

பழகு தமிழில் எழுதப்பட்ட நான்கு கதைகளின் நடுவிலே நெறி என்ற கதையைச் சாமர்த்தியமாக நுழைத்திருக்கின்றார். நெறி தனித் தமிழில், உரையாசிரியர் நடையில் அமைந்துள்ளது. 'நெறி தமிழ் மரபைக் குறிக்கின்றதா? அல்லது தற்காலத்தைக் கரு ஒன்றைத் தனித் தமிழில் எழுதும்போது ஏற்படும் நெறி (சுளுக்கு)யைக் குறிக்கின்றதா?' என்று ஆசிரியரைக் கேட்கத் தோன்றிகிறது. ஆசிரியர் தன் நகைச் சுவையை இக் கதையிலே ஏற்றவாறு புலப்படுத்தியிருக்கிறார்.

தலைப்புக் கதையான வீயுடன் மூன்றாவது பகுதிக்குள் நுழைகின்றோம். நான் என்ற ஆணவக் குறிப்புடன் தொடங்கி, வழி என்ற சுய அனுபவ விஸ்தாரத்துடன் வீ என்ற கதைக்குள் அழைத்து செல்லுகின்றார். மலர் கர்ப்பந் தரித்த நிலை வீ; பிஞ்சாவதற்கு முதற்படி. சில மேனாட்டு மனவியல் நிபுணர்களம், எழுத்தாளரும் உண்மையான சமரச சமத்துவம் கலவியிலே கிடைக்கிறது என்று கருதுகிறார்கள். இக் கருத்தைக் கலை மெருகுடனும், வித்துவச் செருக்குடனும் எழுதியுள்ளார். கதையை வாசித்து முடிந்ததும்,

'ஆதலினால் காதல் செய்வீர்; உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்
காதலினால் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம். அதனால் மரணம் பொய்யம்'

என்ற பாரதியாரின் பாடலுக்கான முழுவிளக்கமும் 'வீ' தன்னகத்தே கொண்டுள்ளது என உணர்கின்றோம். சாவே நித்தியத்தையுஞ் சமத்துவத்தையும் உடையது என்று வலியுறுத்தும் சிதை, சித்த பரிசுத்தமே நித்தியம் என்பதை வலியுறுத்தும் வீடு, சர்வேசுவர ராஜ்ஜியமே நித்தியம் என்று கூறும் முள் ஆகிய மூன்று பிரதான மதங்களின் ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை வைத்து அம்மானை ஆடுவதற்கு, 'வீ' என்ற கதையை நுழைவாயிலாக வைத்திருப்பது ஒன்றே போதும் 'எஸ்.பொ.' வின் சிந்தனா ஆழத்தை அறிவதற்கு.

'வீ'யின் தத்துவச் சிக்கலிலிருந்து 'வீடு' என்னுங் கதையில் பௌத்த சமயத்தின் சிக்கலான தத்துவத்திற்குள் இறங்குவதற்குமிடையில் மூச்சு விடுவதற்காகச் சுவை என்னுங் கதை சேர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது. 'வழி' என்ற சுய அனுபவக் குறிப்பில், 'வீங்கு சேர் ஏமாப்பின்....' எனத் தொடங்கி, 'மகாநாடு நடத்தப்படுகின்றது' என்று ஒரே வசனம் 45 வரிகளில் முடிவடைகின்றது. முற்றுப் புள்ளி வந்ததும் பெருமூச்சு விடுகின்றோம். எவ்வளவு நீண்ட வசனம்! அதற்கு எதிர்த் துருவம் சுவை. எந்த ஒரு வசனமும் மூன்று நான்கு சொற்களுக்கு மேற்படாதவை. நபிபெருமானாருடைய எளிமை வாழ்க்கை, ஏழைகளிடத்தில் அவர் கொண்ட பேரிரக்கம், இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம் ஆகிய பண்புகளை எளிமையான தமிழ் நடையில் 'சுவை' சித்திரிக்கின்றது.

'சுவை' (இஸ்லாம்), 'சிதை' (சைவம்), 'வீடு' (பௌத்தம்), 'முள்' (கிறிஸ்தவம்) ஆகிய நான்கு கதைகளுஞ் சமயச் சார்பிலும், தொனிப் பொருளிலும் ஒத்திருக்கின்றன. இவற்றை அம்மதங்களைச் சார்ந்தவர்களிலும் பார்க்க அழகிய முறையிலும், ஆழமான பார்வையுடனும் 'எஸ்.பொ.' சித்திரித்துள்ளார். 'சிதை' கலைமகளில் வந்த போதே, அதைப் பலரும் பாராட்டினார்கள். வீடு என்னும் நெடுங் கதை பற்றி, தனியே ஒரு விமர்சனம் நான் தினகரனில் எழுதியுள்ளேன். '...பென்னம் பெரும் தங்கப் பாளங்களினால்' என்று தொடங்கி. '....வெகு உள்ளே - நடந்து செல்கின்றேன்.'என்று நந்தபிக்கு சீவர ஆடைக்குள்ளிருந்து கனவு காணும் காட்சியையும், இந்திலோக வர்ணனையையும் 'எஸ்.பொ.' எழுதியுள்ள முறை எவ்வளவு பாராட்டினாலுந் தகம். ஆறுமுக நாவலரின் திருகைலாய வர்ணனை பெரிய புராண முகப்பில், 'அநாதி மலமுத்தராய்...' எனத் தொடங்கி, 'வீற்றிருந்தருளினார்.' என முப்பத்தாறு வரிகளில் ஒரே வசனத்தில் முடிகின்றது. வர்ணனைக்கு எடுத்துக் காட்டு அது. 'எஸ்.பொ.' வின் இந்திரலோகக் காட்சி அதற்குச் சமதையாக நிற்க முயல்கிறது. 'போதி' என்ற கடைசிப் பகுதி ஒரே வசன கவிதை மயம். ஆம், எனக்கு அப்படித் தான் சொல்ல முடிகிறது. இந்த வசனத் தொடர்களைப் பாருங்கள். 'மழைகள் அவை வைரத் தகதகப்பில் ஒளிரும் பணிப் படிகங்களிற் கிரீடங்கள் புனைந்து கோலோச்சுகின்றன. பனிக் கற்களின் ஏகம். நீர் உறைந்து திடமான ஒரு நிலை. ஒரு ஸ்திதி. ஒரு பிறப்பு....புஷ்பாஞ்சலியிற் சிதறிய அலரி மலர்களாகப் பனிக்கட்டிகள்....அவை உருகி வெள்ளி நூல்கள் பல இழுத்து பலவும் ஒன்றாகி குமரிலாவண்யம் பெற்று சிங்கமுகக் காலதரிலும் பென்னம் பரும் பாறையிலிருந்து கீழே துள்ளிக் குதித்து-அருவியின் இசையும்.... கூத்தும்! தண்மையின் திரிசங்கு சுகத்திற் சுகிக்கும் அதந் நிலையும்; ஸ்திதியும்...' முள் என்ற கடைசிக் கதையில் இயேசு நாதர் பேசுவதாக வரும் ஒவ்வொரு வசனமும் புதிய ஏற்பாட்டிலுள்ள வசனங்களே. அந்த வசனங்களை வைத்து கிறிஸ்துவின் மரண தரிசனத்தை 'எஸ்.பொ.' எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கது. கிறிஸ்தவர்கள் உபயோகிக்குஞ் சொற்களையே ஆங்காங்கு கையாளுகின்றார். ஈழம், தமிழ்நாடு ஆகிய இடங்களிலுள்ள எழுத்தாளர்களுள் மார்க்கத் தத்துவங்களை வைத்துக் கதைகள் படைக்கும் இந்தச் சாதனையை இவர் போல எவரும் செய்யவில்லை என்று துணிந்து கூறலாம்.

'எஸ்.பொ.' வின் கற்பனை வளத்திலும் பார்க்க, நடை வளமே இந்தத் தொகுதிலே மேலோங்கி நிற்கின்றது. அவருடைய நடையிலே தனிக்கவர்ச்சி உண்டு. அவருடைய இலக்கிய விரோதிகள் கூடத் தங்களை அறியாமலே அவர் நடையையும், உத்தி முறைகளையும் பின்பற்றுகிறார்கள். ஈழத்து இலக்கிய உலகில் 'எஸ்.பொ.' பின் நடையைப் போன்று வேறெந்த எழுத்தாளருடைய நடையும் ஆதிக்கமும்-செல்வாக்கும் செலுத்தியதில்லை. 'எஸ்.பொ.' வின் கதைத் தொகுதியில் சதைப் பிடுங்கலும், முறை தவறிய காதலும், ஆபாச வர்ணனையுந்தான் இருக்குமென்று நம்பி, பேசி, முடிவி செய்திருப்பவர்களை அவர் ஏமாற்றிவிட்டார். அப்படியான கதைகள் இல்லையா என்றால், ஓரிரண்டு கதைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அந்தக் கதைகள் கூட இந்தக் கதைத் தொகுதியை முழுமைப் படுத்தவே உதவுகின்றன.

இத்தொகுதியிலே 'எஸ்.பொ.' வின் முழு ஆற்றலையும் நம்மாற் காண முடியவில்லை. காணவும் முடியாது.

நாடகாசி‘யர் - நாவலாசிரியர் - விமர்சகர் - நெருப்புக் கக்குங் கண்டனகாரர் - கட்டுரையாளர் என அவருடைய எழுத்தாற்றல் பரந்து பட்டது. அவை முழுவதையும் ஒரு சிறு கதைத் தொகுதியிலே புலப்படுத்த முடியாது என்பது உண்மை. ஆனால், அவருடைய ஆற்றலின் ஒரு பகுதித் திறமையை இத்தொகுதி பட்டை தீட்டிய வைரமாகப் பிரதிபலிக்கின்றது. ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு, 'வீ'யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பிவைக்கலாம்.

இரசிகமணி கனக.செந்திநாதன்

குரும்பசிட்டி
தெல்லிப்பழை,
யாழ்ப்பாணம்.
இலங்கை.
.............

தேர்


முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுந்து ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப்பாயைப் பக்குவமாகச்சுருட்டிவைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளைவிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழுபடலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் 'சுத்து'ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். 'சுத்தை' நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும். எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டார். கடிகாரத்தைப் பார்க்காது, கடிகாரத்தின் விநாடி முள்ளைப் பார்க்கிலும் நுணுக்கமான நேரக் கணக்கில் இயங்குவது அவருடைய இரத்தத்திலேயே ஊறியிருக்கின்றது. கொல்லையிலே கழிவுக் கருமத்தை முடித்து, அடிக் கழுவி, கிணற்றடிக் கமுக மரத்திலே தொங்கும் குரும்பைப் பாதியிற் கிடக்கும் உமிக்கரியினாற் பற்களைச் சுத்தஞ் செய்து, திண்ணைக்கு மீளுவார். 'இறப்பில்' தொங்கும் வெண் சங்கிலே கதிர்காமத்து பிபூதி இருக்கும். வலக்கை விரல்களுக்குள் எடுத்து, "சிவ..சிவா..." என்று உச்சரிக்கும் பொழுது, நல்லூர்க் கந்தனின் உதயகாலப் பூசை மணி கேட்கும்.

இன்னும் "சிவ...சிவா..." என்று விபூதி பூசும் பொழுது, உதயகாலப் பூசை மணி கேட்கின்றது. கால ஓட்டத்திலே தரிக்காது நடைபெறும் நித்தியகருமங்கள்.

'இன்று வருடப் பிறப்பு....' - முதன் முதலில் இந்த எண்ணந்தான் முகத்தாருக்கு ஏற்படுகின்றது. எத்தனையோ வருடுப் பிறப்புகள் வந்து போய்விட்டன. அவற்றுடன் எத்தனையோ வருடங்களும் ஓடி மறைந்துவிட்டன. பார்வதிப்பிள்ளையைக் கல்யாணஞ் செய்த முதல் வருடம் வந்த வருடப்பிறப்பு; இராமேசுவர நேர்த்திக் கடனுக்குப் பிறகு சுப்பிரமணியனைப் பெற்று, முருகண்டியிலே மயிர்நீக்கக் கடன் செய்த மறுநாள் வந்த வருடப் பிறப்பு; சௌந்தரம் கல்யாணமாகி, மருமகனுடன் வந்த வருடப் பிறப்பு; தகப்பனுக்குத் தலைக்கொள்ளி வைத்து. கோடி கட்டாதே கழிந்த வருடப்பிறப்பு; பார்வதிப்பிள்ளை போய், நாளே காடாகிக் கிடந்த வருடப் பிறப்பு;- இப்படிப் பல. கால ஓட்டம் அவர்தம் உழைப்பை விழுங்கி, உடலைச் சருகாக்கிவிட்டது. முன்னர்போல சுறுசுறுப்பில்லை. நல்லெண்ணெய்யில் வெதுப்பிய கத்தரிக்காயுடன் மூன்று நீற்றுப் பெட்டி பிட்டுச் சாப்பிட்டும். நாலு மரவள்ளிக்கிழங்கைச் சுட்டுப் பச்சைமிளகாய் சகிதம் போட்டுக் கொண்டாற்றான் காலைப் பசி அடங்கும் என்பதை இளைஞப் பருவ நினைவுகள். பிள்ளைகளைப் படிக்க வைத்து உத்தியோகத்தரராக்கியதினால் இரண்டு பாண் துண்டுகளைக் 'கொறி'க்கும் பழக்கம் முகத்தார் வீட்டிலும் பரவி விட்டது. படுத்த படுக்கையாக வைக்கம்படியாக உடம்பிற்கு அப்படியொன்றுமில்லை. முதுமை உணர்வு வலுக்கின்றது. சிறிது வாதக்குணம் போன்ற எண்ணமும் மேலிடுகின்றது. திடீரெனக் குந்தி எழும்பச் சிரமப்படுகின்றார். இதனைப் பிள்ளைகள் அறிந்து கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுகின்றார். கடைக்குட்டி மகளைப் பற்றித்தான் கொஞ்சம் கவலை.

திண்ணையிற் குந்தி, கப்புடன் சாய்ந்து கொள்கின்றார்.

'அவள் பொடிச்சிதான் பாவம். தாயத்தின்னியாப் போயிட்டுது. படிப்பை முடிச்சுப் போட்டு, மூலையிலே கிடந்து பெருமூச்சு விடுகுது. அவளை மேலை படிக்க வைக்கலா மெண்டு மூத்ததுகள் விரும்பினதுதான். வேணுமெண்டால், உதுகளின்ரை பொம்பிளைப் பிள்ளையன் படிச்சு உத்தியோகம் பாக்கட்டும். இளையவனின்ரை பாடு பிழையில்லை. ஒரு மாதிரி ஒரு வேலையிலை கொழுவீட்டான். ஏதோ கொம்பனியிலைதான் நல்லா வரலாமெண்டு மூத்தவனும் மச்சான்மாரும் சொன்னாங்கள். அவள் கடைக்குட்டி எண்டு வீட்டோடை இருந்து சாப்பிட்டுப் பழகியவன். மூண்டு நாலு மாசம் அதுவுமில்லை. கயிற்றப்பட்டு வந்தால்தானே, பேந்து வின்னடிக்குத் தங்கடை பாடுகளைத்தாங்களே பாக்குங்கள். நல்லூரான்ரை புண்ணியத்திலை எல்லாம் தங்கடை சீவியப் பாடுகளைப் பார்க்கக் கூடிய நிலைக்கு வந்துட்டுதுகள். என்ரை கெட்டித்தனம் என்ன இருக்கு? ஆண்டவன் அளந்தபடி நடக்குது விடியப்புறக் கோச்சியிலே மூ ததவள் வருவான். அவள் மறந்தாலும் அலுத்தாலும் அவரை மனுஷ’ கமலா இஞ்சை வராமலிருக்காள். என்னெட்டைக் கைவியளம் வாங்கிறதிலை அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை...ஓம்... அதுகளின்ரை மூத்ததுக்கும்- உந்தப் புது நாணயப்பேர் சட்டெண்டு மனசிலை வாறேல்லை....அவள்தான் அம்சதொனிக்குப் பத்து வயசுக்கு மேலை இருக்க வேணும்.... என்ன பத்து? பதினொண்டுக்கு மேலை. கடுக்கண்ணுற பருவம்....ஓ, இவ போயே நேற்றெண்டாப் போலை இருக்குது.... ஆனா, வருசம் அஞ்சாகுது. அவள் புண்ணியஞ் செய்தவள். எல்லாப் பாரத்தை€யும் என்ரை தலையிலை சுமத்திப்போட்டுப் போயிட்டாள்.'

இடைவெட்டில், மனோகரன் நேற்று எழுதியிருந்த கடிதம் முகத்தாருடைய ஞாபகத்துக்கு வருகின்றது. வருடப்பிறப்பன்றே கொழும்புக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எழுதியிருந்தான்.

'அதுவும் சரிதான். எங்கடை வாகடங்கள் நெடுகச் சரிவருமே? இப்ப தான்போய் வேலையிலை சேந்திருக்கிறான். லீவு கீவு எடுத்துப் பழுதாக்கப்படாது.'

"அப்பனே முருகா"

வீட்டின் சின்ன அறைக்கதவு திறக்கப்படுகின்றது. 'கடைக்குட்டி' பத்மாதான் வருகிறாள்.

'என்னதான் பேரளவிலை பெரிய பிள்ளை எண்டாலும், வீட்டிலே சின்னப்பிள்ளை தானே? சரியா, இவபார்வதிப்பிள்ளையை உரிச்சு வைச்ச மாதிரி இருக்கிறாள். இவளை ஒப்பேத்திப் போட்டனெண்டால், பேந்தென்ன? சிவனே எண்டு கண்ணை மூடலாம். இவன் மனோகரனை இவவின்ரை அண்ணரின்ரை பொடிச்சிக்குத்தான். பெடியங்களின்ரை காரியத்தை நிதானமாச் சொல்லேலா.'

முதற் காரியமாகப் பத்மா வீட்டு முற்றத்தைக் கூட்டி, சாணகத் தண்­ர் தெளித்து முடிக்கின்றாள். வருடப் பிறப்பன்று விடியும் முன்னரே, அன்றைய வழமையான கடமைகளைச் செய்து முடிக்கும் வேட்கை. வருடப் பிறப்பன்று எல்லாக் காரியங்களையும் விக்கனமின்றி உரிய முறைப்படி நிறைவேற்றிவிட்டால், வருடம் முழுவதும் அவ்வாறே அமையுமென்னும் நம்பிக்கையில் ஊறித் திளைத்த மனம். வருடப் பிறப்பன்று பழங்கறிகளுக்கு மதிப்பில்லை. கறிச் சட்டிகளை அடுக்களைக்கு வெளியே, இடப்பக்கமாகவுள்ள செவ்விளநீர்க் கன்றடியிற் பரப்பி வைத்து, சாம்பல் தோய்த்தெடுக்கப்படும் 'பொச்சு' மட்டையாற் தேய்த்துக் கழுவத் தொடங்குகின்றாள். திண்ணையிலே குந்தியிருந்து, சிந்தனையிலாழ்ந்திருக்கும் தந்தையை அவள் கண்கள் கவனிக்கின்றன. மரவள்ளிக்கிழங்க காய்ச்சிய சட்டியில் அடிப்பிடித்திருந்த பாகத்தைப் பொச்ச மட்டையால் நன்றாகச் சுரண்டிக் கொண்டே பேச்சுக் கொடுக்கின்றாள்.

"என்ன அப்பு....இண்டைக்கு காலமைக் கோச்சியிலை மூத்தண்ணர் வருவாரல்லே?"

"ஓம் புள்ளை, சுப்பிரமணியம் வராமல் வருஷம் பிறக்குமே? என்னான் இருந்தாலும் அவன் வருஷத்துக்கு வராமல் இருப்பானே?"

'எப்பிடியும் அவன் வருவான். காதுப் பிடியிலை கமலா கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற் குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத் துவங்கினாலும், நேரத்தோடை ஸ்ரேஷனுக்குப் போயிடலாம். ஆனா, அவனுக்கு உதொண்டும் புடிக்கிறேல்லை. "நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத் தேவையில்லை"எண்டு எத்தினை கோசு கோவிச்சது எனக்கல்லோ தெரியும்?....

"புள்ளை. தேத்தண்ணிக்கு உலை வைக்கல்லையே?"

"வைச்சிட்டன்"

"கொக்கா பரிமளம் இன்னும் எழும்பல்லையே?.... உங்கடை அத்தாரும் வலு நேரஞ்செண்டுதான் வந்தவர். சரியாச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்."

முகத்தாரின் இன்னொரு மகளான பரிமளத்தின் கணவனும் கொபம்பிலேதான் வேலை பார்க்கின்றான். பரிமளம் தைப்பொங்கலுக்குத் தந்தையின் வீட்டிற்கு வந்தவள், திரும்பிப் போகவில்லை. கணவன் சதாசிவம் நேற்றிரவு யாழ்தேவியிலேதான் திரும்பியிருக்கிறான்.

'பாவம். அதுகளுக்கு ஆண்டவன் ஒண்டும் குறை வைக்கேல்லை. இதுக்கிடையிலை முப்பதினாயிரம் கொட்டி புது மோடிலை ஒரு வீடும் கட்டிப் போட்டுதுகள். கதைச் சாங்கத்திலை வைகாசி நாளுக்குத்தான் குடியேறுவினம் போலை கிடக்குது. பேந்தென்ன நெடுகிலும் குடியிருக்கப் போகினமோ? வாடகைக்குத்தான் விடுவினம். காரும் ஒண்டு வாங்கியிருக்கினமாம். அதை இன்னும் ஒருநாளும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரல்லை. அதுகளின்ரை அன்புக்கும் அந்நியோன்யத்துக்கும் ஒரு குழந்தையைத் தான் ஆண்டவன் குடுக்கேல்லை. சாதகத்திலை பின்னடிச் சந்ததி விருத்தி எண்டுதான் இருக்கு. ஏழு வருஷத்துக்குப் புறகுதான் சதாசிவமும் தலைச்சனாப் பிறந்தவனாம். கொழும்பிலை பேர்போன டாக்குத்தரிட்டை எல்லாம் காட்டினவை. அதுகளக்கு ஒரு குறையுமில்லை எண்டுதான் சொன்னவையாம்....,

"கோப்பியை ஆர்றதுக்கிடையிலை குடியுங்கோ அப்பு" என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள்.

"என்ன புள்ளை, முட்டைக்கோப்பி அடிச்சிருக்கிறாய். அத்தாரும் நிக்கிறார். இப்ப சுப்பிரமணியமும் வந்திடுவான்...அவன்ரை அசோகன் முட்டைக் கள்ளனல்லே?"

"இஞ்சை தாராளமா முட்டையள் இருக்குது. புட்டுக்கும் பொரிச்சும் வைக்கலாம்."

முகத்தார் கோப்பியைக் குடிக்கின்றார்.

"மெய்ய புள்ளை....கொக்கா சௌந்தரம் இஞ்சை நேத்து வந்திட்டுப் போனவளல்லே? என்ன சொல்லிப் போட்டுப் போனவள்? மத்தியானச் சாப்பாட்டிற்கு வருவாளாமோ?"

"அத்தான் நேத்துத்தான் வந்தவராம். அவரின்ரை சகோதரி-அவைதான் பறங்கித் தெருவார் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வருவினமாம். பின்னேரம் போலைதான் வரவசதிப்படும் எண்டுசொன்னவை. எதுக்கும் கைவியளத்துக்க முகுந்தனை அனுப்பி வைக்கிறாவாம்."

சௌந்தரம் பெரிய குடும்பக்காரிதான். இருந்தாலும் சீமாட்டி ஒரு சீதேவி. ஆறு பஞ்சானம் குஞ்சுகளையும் ஒரு குறையுமில்லாமல் படிப்பிக்கிறாள். ஏதோ ஆனைசேனையையே சீதனமாகக் குடுத்தனான்? புருஷன் தங்கராசா உண்மையிலை ஒரு தருமராசாதான். புள்ளையளின்ரை படிப்புக்காக குடும்பத்தை ஊரோடை விட்டிட்டுப் போயிட்டான். அங்கை கடைச் சாப்பாட்டோடை வயித்தை வாயைக் கட்டிச் சீவிக்கிறான். அங்கையும் இங்கையுமாக ரெண்டு சிலவுச் சமாளிக்கிறதுக்கு கந்தோர் விட்டாப்புறகு வேற வேலயளையும் பாக்கிறதாம். அந்தந்த வயசிலை ஓடியாடிப் பிரயாசைப் பட்டு உழைச்சு சம்பாரிக்கத்தான் வேணும். அதுக்கு ஏத்த சாப்பாடு வேண்டாமே? நல்ல வேளை...பெட்டையள் கீழ்க்கண்டுகள்தான். அந்த அளவிலை ஒரு ஆறுதல்...வந்தவனுக்கு ரெண்டுவேளை தன்ரை கையாலை சமைச்சுக் குடுக்காமல் இஞ்சை ஒடியாறாளோ? பொம்பிளைப் புள்ளையன்கரை சேருமட்டுந்தான் எங்கடை...'

"என்ரை மடிசஞ்சையும் சால்வையையும் எடுத்துத்தா புள்ளை."

"இவ்வளவு வெள்ளணத்தோடை கடைக்குப் போகப் போறியளே?"

"இல்லை, உந்த முச்சந்திமட்டும் போயிட்டுவாறன். தச்சேலா ஏதேன் அரியது நரியது கிடைச்சால்...'

சாறணை உதறிக் கட்டிக்கொண்டு, 'மடிசஞ்சை' இடுப்பிலே சொருகி, ஏகாவடமிடச் சால்வையை எறிந்து படலையைக் கடக்கிறார்.

ரோஜா இதழ்ப் படுக்கையான மென்மைசேர் நினைவுகளில், ஏதோ ஒரு முள்ளின் உறுத்தல், கால்களின் இயக்கத்திலேயே படரும் நடை. சந்திக்கடைப் பசுபதியின் குரல் அவரைக் கடைப்பக்கம் ஆகர்ஷ’க்கின்றது.

"எப்பிடி அண்ணர்? வருஷம் எத்தினை மணிக்குப் பிறக்குதாம்? கைவியளம், நான்வேலைக்கு நேரம் எப்பிடிப் போட்டிருக்கு?" பத்துப் பேரிடம் கேட்டும் பசுபதிக்குப் பொச்சுந் தீரவில்லை.

"பத்து இருபத்தெட்டுக்குத் தான் வருஷம் பிறக்குது. கைவியளத்துக்கு இண்டைக்கு நாள் போடேல்லை. ஆனா, பொதுநாள். உடனையே குடுத்தாலும் பாகமில்லை."

முகத்தார் பஞ்சாங்கம் பார்த்து வைப்பதில் வெகு ஒழுங்கு. கடிகாரம் பார்க்கும் பழக்கமில்லாத அவர், எந்தச் சுபவேளைளையும் விநாடி தப்பாமற் சொல்லுவார்.

"நான் ஒரு நாளும் இந்த நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்கிறேல்ல.... வருஷப் பிறப்பண்டைக்கே துவங்கீட்டால் சரிதானே? இல்லாட்டில் இழுவல். ரெண்டு மூண்டு நாளைக்கும் நாள் போடமாட்டாங்கள்... அதுக்காகக் கடையைப் பூட்டி வைக்கிறதே?"

"ஓமோம்...எல்லாம் நம்பிக்கையைப் பொறுத்தது தான் பசுபதி" என்ற முகத்தார், "கோச்சி இன்னும் வரேல்லைப்போலை" என வேறு திசையிற் கதையைத் திருப்புகின்றார்.

"நேரமாயிட்டுது...வருஷத்துக்கு இஞ்சினை வாற சனக்கூட்டத்தோடை வாற ரயில் கொஞ்சம் முந்திப் பிந்தித்தான் வந்து சேரும். உங்கடை மற்ற மேன் குமார சாமியும் இண்டைக்கு வாறார்போலை இருக்குது. தம்பியும் இஞ்சாலைப் பக்கம் வந்து வெகுகாலமாகப் போச்சுது."

நெஞ்சிற் குத்திக்கொண்டிருந்த முள், ரோஜா இதழ்ப் படுக்கைக்குள் இனிதாக மறைகின்றது.

குமாரசாமி வருவான் என்பது முகத்தாருக்குத் தெரியாது. அவனை எந்த விசேடத்திற்கும் வீட்டில் யாருமே எதிர் பார்ப்பதில்லை. அவனுடைய போக்கு அப்படி. இருப்பினும், குமாரசாமி வருவது தனக்குப் புதினம் என்பதை முகத்தார் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

"இஞ்சை பாத்தியளே நோட்டீசை. முத்தமிழ் மன்றம் வருஷக் கொண்டாட்டம் நடத்துதாம். நாடகங்களும் நடத்துறாங்களாம். அதுகளக்குத் தலைமை தாங்கு குமாரசாமி வருகுதாம்."

பசுபதி நோட்டீசைக் கொடுக்கின்றான்.

இப்பொழுது முகத்தாருக்குக் கண் கொஞ்சம் வெள்ளெழுத்து. ஆனாலும் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள மகனுடைய பெயரைக் கண்டு பிடிக்கின்றார். மனம் மலர்கின்றது. முகபாவம் மாறாமல் நோட்டீசைத் திருப்பிக் கொடுக்கின்றார்.

"கண்ணும் புகைச்சலாய்க் கிடக்குது."

"நான் வாசிச்சுக் காட்டட்டே?"

"வேண்டாம் பசுபதி. நான் வாறன். மூத்தவன் போறான்போலை இருக்குது காரிலை."

மூத்தவனைச் சொல்லி விடை பெற்றுக் கொண்டாலும் முகத்தாருக்குக் குமாரசாமியைப் பற்றிய எண்ணமே மேலோங்கின்றது. குமாரசாமி முகத்தாரின் இரண்டாவது புத்திரன். சிறுவயதிலேயே படித்து முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.

'அவன்ரை மூளைக்கு அவன் உப்புடியே இருக்க வேணும்? சீமைப்படிப்பெல்லாம் முடிச்சு, ரெண்டு மூண்டு காரும் நாலைஞ்சு பங்களாவும் வைச்சல்லோ வாழவேணும்? அந்தக் காலத்திலை கண்ணூறுபட்டுப் போறாப்போலை சொல்லுவானுகள். சுப்பிரமணியனைச் சாட்டி சௌந்தரத்துக்க மாப்பிள்ளை; குமாரசாமியைக் காட்டி பரிமளத்துக்கு மாப்பிள்ளை...'

அதே நாக்குகள் திசை திரும்பி, அவரை மல்லாத்திக் கிடத்திக் குறி சுட்டபொழுது....

'பிஞ்சிலை பழுத்தவன். தமையன் இருக்கக் கூடியதாக, ரெண்டு குமருகள் வீட்டுக்குள்ளை பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கக் கூடியதாக, இவனுக்குக் கலியாணப் பைத்தியம்...அதுவும் ஊர் பேர் தெரியாத வேதக்காரிச்சியாம்...தூ, இவன்ரை படிப்பு நாக்கு வழிக்கத்தான் உதவும். இவன் தன்ரை படிப்பை தூக்கி எறிஞ்சு போட்டு கக்கூசு வாளியைத் தூக்கித் திரியட்டும்....'

இத்தகைய வார்த்தைகள் மார்பு மயிரைப் பொசுக்கி, இதயக் குலையை வெதுப்பியெடுத்த பொழுது...குறுக்கு இழைகளைத் தறி தலையிலே மின்சார வேகத்தில் இணைக்கின்றன. சின்னத் தலையிடிக்கும், காய்ச்சலுக்குங்கூட சீனிச் சுருளும், தேயிலைச் சரையும், வெற்றிலை பாக்குப் பெட்டியுங் 'காவி'க் கொண்டுவந்தவர்கள், குமாரசாமியின் அவசரக் கலியாணத்தின் பின்னர், முகத்தார் வீட்டுப் படலையைத் திறக்க முகஞ் சுழித்துக் கூசினார்கள். அப்பொழுது சுப்பிரமணியம் எல்லாவற்றிற்கும் ஆறுதலாக இருந்துங்கூட, முகத்தார் இந்தப் பென்னம்பெரிய உலகத்திலே தன்னந் தனியாக விடப்பட்ட உணர்வுகளுடன் தத்தளித்தார்.

'நானோ, அவனோ என்னத்தைச் செய்யிறது? எல்லாம் அளந்தபடிதான் நடக்கும். அவன்தான் ஒரு புத்தியிலை செய்திட்டான். இனி, விரலை வெட்டியே எறியிறது? வெக்கம் ரோஷத்தை விட்டிட்டு ஒருக்காப்போய் அதுகளைப் பாத்தன், அவள் பொடிச்சி புழையிலைலை. குணவதி எண்டதை முகத்தைப் பார்த்தோடனை சொல்லுவினம். இவன்ரை குணத்துக்கு அவளிலை தான் பச்சம் வைக்கவேணும். வேதக்காரிச்சி எண்டாப்போலை என்ன? சாதி குலம் பாத்துக் கூழ்ப்பானைக்கை விழுந்தவை எத்தனைபோர் இருக்கினம்? இவன் எண்டாப்போலை ஒழுங்காக கோயில் குளம் போறவனே? விபூதி பூசுறவனே? அவள் பொடிச்சியையும் கோயிலுக்குப் போகாமல் மறிச்சுப் போட்டானாம், அவனுக்கு உடம்புமட்டும் பயித்தங்காய் போலை. ஆனா, உடும்பைப் போலைத்தான் பிடிவாதம். இவ பார்வதிப்பிள்ளை எண்டாப்போல குறைஞ்சு பிடிவாதக் காரியோ?...அவன்ரை போக்கு ஒரு தனிப்போக்கு. இஞ்ச ஒருத்தருக்கும் விளங்கிறேல்லை. "உங்கை யாழ்ப்பாணத்துக் கிடுகு வேலியளாலை சங்கையை மறைச்சுக் கொண்டு மனச் சாட்சிக்கு விரோதமாக நடித்துக் கொண்டே வாழ்பவருக்கு என்ரை போக்கு விளங்காது. என்ரை போக்கு எனக்கு விளங்கும்" எண்டு ஒருநாள் உங்கினை சத்தம் போட்டான். இதுகளிலையும் புழையில்லை. ஒட்டி நடக்காதவனோடை என்ன சகவாசம் எண்டு விலகிக் கொண்டுதுகள். புறம்பு காட்டி நடக்கிற உவையளோடை எனக்கென்ன தொடர்சல் எண்டு அவனும் விலகிக் கொண்டான். அவன்ரை மூண்டு பிள்ளையளும் படிப்பிலை வலு விண்ணராம். எனக்கெண்டா அதுகளைப் பார்க்க ஆசைதான். இவவின்ரை ஆண்டுத் திவசத்துக்குத்தான் ஒரு பொடியனைக் கூட்டியந்தான். 'அப்பப்பா' எண்டு அவன் வாழைப் பழத்தோடை என்ரை மடியைவிட்டு இறங்கவும் மாட்டான். பொங்கல்-புதுவருஷம்-தீபாவளி எண்டு மூன்டு கொண்டாட்டம் வருகுது. ஒண்டுக்கும் வாறேல்லை. எப்பவாவது இருந்திட்டு ஒருநாள் தனியா வருவான். புள்ளையளின்ரை சுகபலனைப் பற்றிச் சளப்புவான். குசினிக்கைபோய் தானே ஏதாவது போட்டுத் தின்னுவான். அங்கை கூட்டம் இஞ்சை கூட்டம் எண்டு சொல்லுவான். உடனையே போயிடுவான், பேந்து விசாரிக்கப் பார்த்தால் அண்யை கோச்சிலையே ஊருக்குத் திரும்பீட்டான் எண்டு தெரியவரும்.... மெய்தான். அவன்ரை போக்கு இஞ்சை ஒருத்தருக்கம் விளங்கேல்லை. அதோடை அந்தப் போக்கிலை ஒருத்தருக்கும் விருப்பமுமில்லை. ஒரு மாதிரியான கோபத்தனல் இவையளின்ரை மனங்களிலை இருக்குது. என்ன இருந்தாலும் சகோ தர பாசம் எண்ட சாம்பல் அதுகளை மூடி வைச்சிருக்குது. வீட்டிலை எல்லாரும் அவனைக் குறையாத்தான் பேசுவினம். நான் மட்டுந்தான் அவன்ரை பக்கத்திலை பேசுறது, என்ன இருந்தாலும் அவனும் என்ரை மேன்தானே? இதுகள் இதுகளின்ரை போக்கு. அவன் அவன்ரை போக்கு கையிலே இருக்கிற அஞ்ச விரலும் சமமே? ஒண்டுக் கொண்டு வித்தியாசமில்லையே? வீட்டுக்குள்ளையும் உப்புடித்தான்... உருக்குள்ளை அவனுக்குத்தானே பேரும் நடப்பும்? அவன் இவ்வளவு உதவரங்கெட்டவனெண்டால் ஊரிலை உப்புடிப் பேர் இருக்குமே? இதுகளுக்குப் படிச்சும் புத்தியில்லை, இவங்களைக் குடும்பத்துக்காகப் பெத்தன். குடும்பம் தேர் போலை நடக்குது. அவனை ஊருக்காகப் பெத்தன். அவன் றோட்டளக்கிறான். எண்டு வைச்சுக்கொள்ளுவம். அதுக்காக அவனை நான் மெச்சிக் கதைக்கிறதும் இதுகளுக்குச் சில நேரம் புடிக்கிறதேல்லை. ஓரவஞ்சக மனுஷன் எண்டு கூட நினைக்குதுகள். "நீங்கள் என்னத்தைத்தான் சொன்னாலும், அவனும் என்ரை புள்ளைதான்" எண்டு சொல்லுவன். இதுகளும் பேக்கூத்துத்தான் ஆடுகிறது. ஏதோ நான் அவன்தான் என்ரை புள்ளை எண்டு சொலலிப்போட்டதைப் போலை. தாய் மனம் பித்துத்தான், இவவும் இப்ப இல்லை. என்ரை மனமும் பித்துத்தான். இது ஒண்டை மட்டும் நான் குமாரசாமியைப் பற்றி மாட்டன். இவையள் ஆயிரத்தைச் சொல்லட்டும். சுப்பிரமணியமா இருக்கட்டும்; சவுந்தரம் பரிமளமாக இருக்கட்டும்; மனோகரன்- பத்மாவாக இருக்கட்டும்;- முகத்தார் ஆறுமுகத்தின்ரை புள்ளையளெண்டுதான் உர்தேசத்திலை தெரியும்...ஏன், சதாசிவம் தங்கராசா எண்டாப் போலை என்ன? என்ரை மருமக்கள் எண்டாத்தான் நல்ல விளப்பமாத் தெரியும். ஆனா, கடைத் தெருவிலை எத்தினை பேருக்கு என்னைக் குமாரசாமியின்ரை அப்பனெண்டுதான் தெரியுமெண்டு இவையளுக்குத் தெரியுமே? அண்டைக்கு பஸ்ஸ’லை நான் தெல்லிப் பழைக்குப் போகேக்கிள்ளை ஒரு பொடியன் "நீங்கள் குமாரசாமியின்ரை தகப்பனல்லோ?" எண்டு கேட்டுப் போட்டு, தான் குந்தியிருந்த இடத்தை எனக்குத் தாறான். அந்தப் பொடியனும் பெரிய படிப்புத்தானாக்கும்.'

"என்ன முகத்தார்? என்ன பொடியன் எல்லாம் வந்திட்டினமோ?" ஐயம்பிள்ளை தன்னுடைய படலையில் நின்றபடி குரல் கொடுக்கிறார்.

"கோச்சி அப்பவே வந்திருக்கவேணும்."

"சுப்பிரமணியம் வராமல் நிற்க மாட்டான். மனோகரனும் வாறானாமோ?"

"ஓம். கடுதாசிபோட்டிருந்தான்."

"படலையிலை நிண்டுகதைக்கிறியள்? கடைக்குப் போறதுக்கு முந்திக் கொஞ்சம் பாவிச்சிட்டுப் போகலாமெண்டால்...என்ரை மனுஷ’யைத் தெரியாதே? ஆற்றையேன் சாட்டிலைதான்...உள்ளுக்கை வாருங்கோவன்"

"இப்ப வாதக்குணமாகவும் இருக்குது. ஒத்துக் கொள்ளுதுமில்லை."

"இது நித்தமே முகத்தார்? ஒரு வருஷம் பெரு நாளுக்குத்தானே? உங்களைத் தூரத்திலை கண்டோடனையே, உங்களோடைதான் வருஷத்தைத் துவங்க வேணுமெண்டு ஆசை வந்திட்டுது."

"ஏன்தான் உன்ரை ஆசையையும் கெடுப்பான்?"

முகத்தார் ஐம்பிள்ளையுடன் கொஞ்சம் 'முஸ்பாத்தி' பண்ணி விட்டு, அவருடனேயே கடைக்குச்சென்று, மக்கள்- பேரப்பிள்ளைகள் ஆகிய கசலருக்கும் இதமாகக் கறி-காய்கறி-பழவகைகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது பத்துமணியாகிவிட்டது.

*

வீடு கலகலப்பு நிறைந்து காணப்படுகிறது. சுப்பிரமணியமும் குடும்பமும் வந்தால் சத்தத்திற்குக் குறைவில்லை. பிள்ளைகள் புத்தாடை புனைந்து காணப்படுகின்றார்கள்.

'ஐயம்பிள்ளையோடை மினக்கட்டு நான்தான் நேரம் பிந்தீட்டன் போலை கிடக்குது. சுப்பிரமணியம் எல்லாப் புள்ளைகளுக்கும் ஒரு நிறத்திலைதான் உடுப்புகள் வாங்கியிருக்கிறான்....இஞ்சை பாருங்கோவன் இவன் கடைக்குட்டி தன்ரை சட்டைதான் திறமெண்டு சண்டை பிடிக்கிறதை....ஓ. பரிமளமும் சதாசிவமும் கூட முழுகீட்டினம். உந்த உடுப்புகள் சரியான விலையாம். வருஷப்பிறப்புக்கு நெடுகிலும் உவை உப்புடித்தான் எடுக்கிறவை. கோயிலுக்குப் போகப் உப்பிடித்தான் எடுக்கிறவை. கோயிலுக்குப் போகப் புறப்பட்டு நிற்கினை போலை. நல்லூரானே இதுகளுக்கு ஒரு புள்ளைப்பாக்கியத்தைக் குடு...சே, கண்ணூறு பட்டிடப்பிடாது....பத்மாவுக்கு உந்தச் சீலை வடிவாத்தான் கிடக்குது. சாமத்திய வீட்டுக்குள்ளை சீலையோடு பாத்ததுக்கு இப்பதான் சந்தனக்கலர் நிறத்திலை தனக்கொரு சீலை வாங்கியர வேண்டும் எண்டுமனோகரனும் எழுதினவள். அவன்தான் வாங்கியந்திருக்க வேணும்... இன்னும் சுப்பிரமணியமும் கமலாவும் முழுகி முடிக்கேல்லைப் போலை...உங்கை கிணத்தடியிலை நிக்கினம்.'

"புள்ளை பத்மா! இத்தக் கறி சாமான்களைக் கொண்டுபோய் குசுனீக்கை வை."

"அப்பு காலைச்சாப்பாடும் இல்லாமலே கடைக்குப் போனவர்? நீங்கள் வருவியரெண்டு முட்டையும் பொரிச்சுக் காத்திருந்ததுதான் மிச்சம்."

"அவன் ஐயம்பிள்ளை விடேல்லை. அவனோடை அப்படியே கடைக்குப் போனதும் நல்லதாப் போச்சுது. சவ்வு கிவ்வு இல்லாத நல்ல இறைச்சி கிடைச்சுது. சின்னதுகள் உறைப்புத் தின்னாயினம். பால்கறி வைக்க ஈரல் கிடைச்சுது. கொத்தார் இறைச்சி வகை தின்னாதவர். நல்லொரு பாரை கிடைச்சுது. மிச்சம் பொரியலுக்கும் உதவும். கைவியளத்தை முடிச்சிட்டுப் போயிருந்தால் கடையிலை ஒரு மண்ணும் வாங்கியிருக்கேலாது."

"அப்புவுக்கு இந்த வருஷப்பிறப்பு நல்ல முழுவியளத் தோடை துவங்கியிருக்குது" என்று சொல்லிக் கொண்டே, பெரிய உமலைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அடுக்களைப் பக்கம் பத்மா போகின்றாள்.

"இந்த வேட்டிதான் பெத்தப்பாவுக்கு" என்று கூறிக்கொண்டே 'பீஸ்' வேட்டி ஒன்றை 'ரீப்போ' வில் அசோகன் வைக்கின்றான். "சித்தப்பாவும் அப்பாவுக்குக் கரை போட்ட வேட்டி ஒண்டு வாங்கியந்தவர்" என்பதையும் அறிவிக்கின்றான். எவ்வளவோ தடுத்தும் பரிமளம் கேட்கவில்லை. அவள் நேற்றே 'பரமாஸ்' சோடி ஒன்று எடுத்துக் கொடுத்துவிட்டாள். தான் முன்னர் கொண்டுவந்த வேட்டியுடன் பெத்தப்பாவின் மற்றைய உடுப்புகளையுங் கொண்டு வந்து அடுக்கி "டோய், பெத்தப்பாவுக்கு இந்த முறை நாலு புதுவேட்டி" என்று உரக்கக் கத்தினான்.

"மூன்று வேட்டிதானே? ஒன்று சால்வையல்லோ?' என்று மூலையில் நின்று மூத்தவள் ஹம்ஸதொனி திருத்துகின்றாள்.

"வீண் சிலவு. எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டுதுகள். அதுகளுக்கு ஏதோ செய்யவேணுமெண்ட ஆசை. வீட்டோடை நிக்கேக்கிள்ளை உதெல்லாத்தையும் மனோகரன்தான் உடுத்துக் கிழிப்பான். இப்ப அவருமல்லோ எடுத்துத் தரத் துவங்கியிருக்கிறார். இதுகளை இனி உடுத்துக் கிழிக்கிறதற்கு சௌந்தாத்தின்ரை மூத்தவன் முகுந்தன்தான் இருக்கிறான். அவனும் இந்த மார்கழியிலை சீனியர் சோதினை எடுக்கப் போறானாக்கும்.'

ஈரச் சீலையுடன் கமலா பெரிய அறைக்குள் ஓடுகிறாள். முற்றத்தில் கம்பிக்கொடிக்குப் பக்கத்தில் நின்று தலையைத் துவட்டிக் கொண்டிருந்த சுப்பிரமணியம், "மருத்துநீர் அந்தா கிணத்துக்கட்டிலை இருக்குது. போய்க் குளிச்சிட்டு வாருங்கோ அப்பு" என்கிறான்.

"என்ன அவசரம்? மனோகரனும் முழுகீட்டு விடட்டன். எங்கை அவனைக் காணேல்லை?"

"உதுகள் ஏதோ ஐஸ்கிறீம் வேணும் சீனிச் சித்தப்பா எண்டதுகள், அவன் வாங்கப் போயிட்டான் போலை கிடக்குது. அவன் ஆறுதலாகக் குளிக்கட்டும். நீங்கள் முதலிலை குளியுங்கோ; வருஷம் பிறக்கப் போகுது, குடும்பம் வைக்கல்லோ வேணும்?"

"ஓமோம்." முகத்தார் கிணற்றடிக்குப் போகின்றார். கட்டியிருக்குஞ் சாறத்துடன் குளிப்பது அவருடைய வழக்கம். 'சனி நீராடு' என்று வாரத்திற்கு ஒரு முறை; மூன்று பெருநாள் நீராட்டம் பிரத்தியேகமாக வந்து சேரும். தலையிலே மருத்துநீரை வைத்து நன்றாகத் தப்புகின்றார்.

"சித்தப்பா, சித்தப்பா" என்று அசோகன் ஆர்ப்பரிக்கிறான்.

'குமாரசாமி வந்திட்டாளோ?'

ஆசையுடன் எட்டிப்பார்கிறார். தொட்டாச்சுருங்கி இலைகள் கூம்புகின்றன.

'இல்லை, அவன் மனோகரன்தான். மூண்டு நாலு மாசத்திலை கொஞ்சம் வளந்திருக்கிறான். சொந்தமாச் சம்பாரிக்கத் துவங்கீட்டால் கொஞ்சம் பூரிப்புத்தானே? நல்ல தாராளமாச் சிலவழிக்கிறார். ஓம், போய்க் கொஞ்சமாசந்தானே? இன்னும் கொழும்புப் பழக்கங்கள் நல்லாப் படிபடேல்லைப் போலை...குமார சாமியை இன்னும் காணேல்லை. சிலவேளை, நல்ல நாளும் பெருநாளுமா எல்லாரும் கொண்டாட்டத்திலை நிக்கேக்கிள்ளை நான் ஏன் குழப்புவான் எண்டுபோட்டு நிண்டிடுவானோ?'

இந்த எண்ணம் ஏற்பட, காலையில் இலேசாக உறுத்திய நெஞ்சில் முள் ஆழமாக இறங்ககின்றது. வலிதாங்க மாட்டாது அவஸ்தைப்படுகின்றார். அவஸ்தைப் பரிகார எத்தனத்தில் பெருமூச்சொன்று நீள்கின்றது.... இயந்திர வேகத்தில் கைகள் துலாக் கயிற்றை மேலும் கீழுமாக இழுக்க வாளி வாளியாகத் தண்­ர்தலையிலேயே கொட்டப்படுகின்றது.

"நானும் நல்ல வேளைக்குத்தான் வந்திருக்கிறன். எல்லாரும் மருந்து நீராட்டம் முடித்தாயிற்றுப் போலை....பத்மா இதைப் புள்ளையளுக்குப் பிரிச்சுக் குடு."

'இது நிச்சயமாக் குமாரசாமியின்ரை குரல்தான். உந்த வெண்கலக் கடை யானையின்ரை குரல் அவன்ரைதான்.'

தண்­ர் காதுக்குள் புகுந்து, தன் மனக்குகை நினைவுகளுக்கு உருவங்கொடுத்து. மாரீச ஜாலம் நடைபெறுகின்றதோ என்று கூட ஒரு கணம் நினைக்கின்றார். இருந்தாலும் ஆசை இழுக்கின்றது.

"அப்பு எங்கை?"

"அவர் குளிக்கிறார்....அப்பு! சின்னண்ணர் வந்திருக்கிறார்." என்று பத்மா குரல் வைக்கின்றாள்.

துளிர்க்கும் நம்பிக்கை, பச்சையின் பசுமையை உறிஞ்ச, மறைப்புத் தட்டிக்கு மேலால் எட்டிப் பார்க்கின்றார்.

முற்றத்தில் குமாரசாமி சிரித்தபடி நிற்கிறான். அவன் பக்கத்தில் பத்மா நின்று, அவன் கொடுத்த 'சரை' யிலிருந்து இஞ்சு விசுக்கோத்துகளைப் பங்கிடுகின்றாள். சுப்பிரமணியத்தின் கடைக்குட்டி, வேற்று முகத்தைக் கண்டு பயந்தமாதிரி, கதிரையின் பின்னால் முறைவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. அவனுடைய பயத்தைக் கவனித்த குமாரசாமி, "நானுஞ் சித்தப்பாதான்...ஒருத்தருஞ் சொல்லித் தரேல்லையா?" என்று சொல்லி மீண்டுஞ் சிரிக்கின்றான்.

'அதே சிரிப்பு. இவன்ரை சிரிப்பு ஒரு நாளும் மாறாது... என்னைப் போலை அந்தச் சுருட்டை மயிர் முன் குடு மபி வைச்சது போலை நிக்கிறதும் மாறாது. என்னதான் மனக் கோவங்கள் இருந்தாலும், அவன்ரை அந்தச் சிரிப்பைக் கண்டோடனை ஒருத்தருக்கும் அவனை ஏசப் பேசமனம் வராது. ஆரையும் மருட்டும்.'

"என்ன வாறனெண்டு அறிவிக்க ஒருபோஸ்டு கார்டு கிடைக்காமல் போச்சுது உனக்கு" என்று முகத்தார் கடிந்து கொள்ளுகிறார்.

"எல்லாம் அவசரந்தான், அப்பு...போஸ்ட் காட் என்னத்துக்கு? நான்தான் நேரிலை வந்திட்டனே... அது கிடக்க, பத்மா வருஷத்துக்குச் சீலை கட்டியிருக்கிறாள்...." குமாரசாமி பத்மாவை அந்தக் கோலத்தில் அப்பொழுதுதான் முதன் முறையாகப் பார்க்கின்றான்.

"ஓம். இவன் மனோகரன் தன்ரை முதல் சம்பளத்திலை எடுத்துக் கொண்டந்து குடுத்திருக்கிறான்" - வாளிக் கயிற்றைப் பிடித்துக் கொண்டே முகத்தார் சம்பாஷணையில் ஈடுபடுகின்றார்.

"அத்தான் எங்கை பத்மா? காரிலையே வந்தவர்?"

"இல்லை. ராத்திரி உத்தரதேவியிலை வந்து சேர்ந்தவர். இப்ப அக்காவோடை கோயிலுக்குப் போயிட்டார்" என்று கூறிக்கொண்டே பத்மா அடுக்களைப் பக்கம் போகின்றாள்.

"புதுக் காரொண்டு எடுத்ததெண்டு கேள்விப்பட்டன். என்ன சாதிக் காராம்?"

"எனக்கென்னடா தெரியும்?"

"காரின்ரை விலையளும் இப்ப என்ன மாதிரி ஏறிக்கிடக்குத் தெரியுமே? உங்காலை வீட்டுப் பொடியன்-அவன்தான் ரத்தினகோபால் - காரை வித்து ப போட்டு 'ஸ்கூட்டர்' வாங்கியிருக்கிறானாம்..."

"காரை விக்கேல்லையாம்...இசுக்கூட்டரும் வாங்கினவனாம்.

"இப்ப ஏதும் சாமான் கீமான் வாங்க முடியுமே? அதுதான் வித்துப் போட்டான். அவன்ரை காரை ராசாத்தோட்ட சங்கரப்பிள்ளை தான் வாங்கினதாம்... அவன்ரை கல்யாணப் பேச்சுக்கால் எப்பிடியாம்?"

"அது குழப்பிப்போய்க் கிடக்குதாம்."

"நீங்கள் மானிப்பாய்ப் பகுதியிலை இருந்து வந்த சம்பந்தத்தையல்லோ சொல்லுறியள்? இது இங்காலை கோப்பாய்ப் பகுதியிலையாம்..."

"அதைப் பற்றி நான் கேள்விப்படேல்லை."

தூணுடன் சாய்ந்து கொண்டு நிற்கும் மனோகரனைப் பார்த்து. "தம்பி, உங்கடை கொம்பனியை அரசாங்கம் கெதியா எடுக்கப் போகுது போலை, தென் யூ வில் ஒல்சோ பிக்கம் ஏ கவுண்மென்ட் சேவண்ட்..." என்கிறான்.

"அப்பிடி நடக்காது..."

"நீ இருந்து பாரன் தம்பி...அப்பு! தங்கராசா அத்தானுக்கு அடுத்தமாசம் உத்தியோக உயர்வு கிடைக்கப் போகுதாம். தெரியுமோ?.

"உதுகள் எனக்குத் தெரியுமே?"

"முந்தநாள் அவரை ஸ்டேசனிலை கொண்டாந்து விடேக்கிள்ளை தான் அப்பிடி ஒரு புரமோஷன் கிடைச்சாலும் கிடைக்கும் எண்டு அத்தான் சொன்னவர்." மனோகரன் தனக்குத்தெரிந்த சமாசாரத்தைச் சொல்லுகிறான்.

'இவன் ஊருக்கு வாறதோ அத்திபூத்தாப்போலை. ஆனா, ஊரிலை ஒண்டையும் விடாமல் அறிஞ்சு வைச்சிருக்கிறான்.

முகத்தார் அவசர அவசரமாக மூன்று நான்கு 'பட்டை'களை ஊற்றி, 'முழு'க்கைச் சுபத்துடன் முடிக்கிறார்.'

வந்துகொண்டே, "ஆனைக்கோட்டை வைத்தியரின்ரை பொடிச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டனீயே..." என்கிறார்.

"ஓமோம். நான் கேள்விப்பட்டன். சாதி ஒரு மாதிரி எண்டுதான் இவை கூத்தாடினவை. அவன் நல்ல பொடியன் கெலகதரையிலை படிப்பிக்கிறான்."

"ஓ....என்னவோ உப்பிடித்தான் ஒரு பேர் சொல்லுகினம்..."

தலையைத் துவட்டும்பொழுது, எந்தப் புத்தாடையை அணிவது என்னும் யோசனை அவரை ஆக்கிரமித்துக் கொள்கின்றது. சிறுபிள்ளைத் தனமன்று. பெரிய பிள்ளைகளுக்குள் தன்னுடைய செயலால் மனத்தாங்கள் ஏற்படக்கூடாது என்பதில் அக்கறை.

அதற்கிடையில், "நீங்கள் ஏன் ஈரத்தோடை நிக்கிறியள்? இதைக் கட்டுங்கோ. நீங்கள் விரும்பிக்கட்டுவியளே, நீலக்கட்டம் போட்ட சாறன்" என்றபடி கையில் வைத்திருந்த ஒரு பார்சலை நீட்டுகின்றான்.

குசேலனின் அவல் முடிச்சை அவிழ்த்து உண்ட கண்ணனின் உள்ளத்திலேகூட இவ்வளவு மகிழ்ச்சி தோன்றியிருக்க முடியாது.

விரித்து உடுக்கின்றார்.

சலனமெதுவுமின்றி மற்றவர்களைப் பார்க்கிறார்.

மௌனம்.

"அப்புவுக்கு நல்லாத்தான் இருக்குது..." வெளியே வந்த பத்மா மௌனத்தைக் கலைக்கின்றாள்,

"நீ நிண்ட ஊராலை வந்தனீயே? இரன்; கும்பம் வைக்கப்போகிறன். பொது நாளா இருக்கிறதாலை உடனையே கைவியளம் குடுக்கலாமெண்டிருக்கிறன்."

"இல்லை அப்பு. எனக்கு உதுகளிலை அவ்வளவு நம்பிக்கை இல்லை எண்டது தெரியுந்தானே? அதோடை விடியக் காலமையே கார்க்காரனிட்டைக் கைவியளம் வாங்கீட்டன்."

முகத்தாரின் முகத்தில் மூட்டம்.

"இவன்தான் புது நாணயமாப் புறந்தவன். ஒண்டிலும் நம்பிக்கை இல்லாதவன் டேய்! புத்தகப் படிப்பும், நீ எழுதுற கதையளும் நாடகங்களும் படிப்பில்லை. ஆவது அறிவது அறிவல்ல; வீட்டிலை வேவது அறிவதுதான் அறிவு. ஊரோடை ஒத்து வாழுறதுதான் படிப்பு." - இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சுப்பிரமணியம் சொல்லுகிறான்.

"அதுக்கில்லை அண்ணை. நான் அஞ்சாறு பேரோடை வந்திருக்கிறன். ஊராங்கடை காசிலை அவங்களை இவ்வளவு தூரம் கூட்டியந்தனான். இந்த ஊருக்கு அவங்கள் புதிசு. அவங்களை ஹோட்டலிலை விட்டிட்டு நான் இஞ்சை மினக்கடுறது அவ்வளவு வடிவில்லை எண்டுதான் சொல்ல வந்தானான்...அப்ப நான் வாறன்" பதிலுக்குக் காத்திருக்காமல் திரும்புகின்றான்.

'என்ன இருந்தாலும் மரியாதை தப்பாது, ஆர் சொன்னாலும் தலையைக் கவண்டு கொண்டுதான் கேப்பான். மரியாதைக்காகத்தான். ஆனா, தான் நினைச்சதைத்தான் செய்வா.'

"சின்னண்ணை....இஞ்ச கோப்பி கொண்டந்துட்டன். குடியுங்கோவன்...." என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள். பதிலொன்றும் பேசாமல் அதை வாங்கிக் குடித்து விட்டு, கிளாஸைத் திருப்பிக் கொடுக்கின்றான்.

முற்றத்து மாங்கன்றில், கும்பத்துக்கு மாவிலைகள் ஒடித்துக்கொண்டே, "அப்ப மத்தியானச் சாப்பாட்டுக் கொண்டாலும் வாறியோ?" என்று முகத்தார் கேட்கின்றார். நப்பாசையின் உள்முடிச்சு அவ்வினாவிற் காளத்திரியாட்டமிடுகின்றது.

"அவன்தானே அப்பு சொல்லிப் போட்டான். கூட்டாளியளை விட்டுப் போட்டு வரலாது எண்டு" என்று சுப்பிரமணியம் சொல்லுகின்றான். வழக்கத்தில் மூத்தவன் அதிகம் பேசுவதில்லை.

"அப்ப வாறன்....எல்லாருக்கும் வாறன்" என்று கூறி அவசரமாகப் படலையைத் திறக்கும் குமாரசாமி, ஒரு கணந் தரித்து, "அப்பு, இண்டைக்கு எங்கடை நாடகம் பின்னேரம் முத்தவெளியிலை நடக்கும்....நல்லா இருக்கும்....நேரம் இருந்தா வாருங்கோவன்" என்று குரல் கொடுத்துச் செல்லுகிறான்.

*

கும்பம் வைத்து கைவிசேடம் பரிமாறப்பட்டாகிவிட்டது. விறாந்தையிலுள்ள 'செற்றி'க் கதிரைகளில் அமர்ந்து சுப்பிரமணியமும், சதாசிவமும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பேச்சு சதாசிவம் புதிதாக வாங்கியுள்ள காரைச் சுற்றிச் சுழல்கின்றது. அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில், தூணிலே சாய்ந்தவாறு சௌந்தரத்தின் சார்பாக கைவிசேடவைபவத்திற் கலந்து கொண்ட முகுந்தன் நிற்கிறான்.

'அவன் மூத்த மாமனுக்கு நல்ல மரியாதை.'

கமலா, பரிமளம், பத்மா ஆகிய மூவரும் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஹம்ஸதொனியும் பெரிய மனுஷ’மாதிரிக் கூடமாட வேலை செய்கின்றாள். 'குத்தி'ப் பலகையில் இருந்து கொண்டு, அவர்களுக்கு மனோகரன் தன்னுடைய கொழும்பு அநுபவங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

கறித் தேங்காய்களை யெல்லாம் 'போர்'த் தேங்காய்களாக்கி முற்றத்திலே, போர்த் தேங்காயடி நடை பெறுகின்றது. யாருடன் என்ன விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும், அசோகன் 'குழப்'பாமல் இருக்க மாட்டான். கல்லிலே பட்டுத்தான் தன்னடைய 'கையான்' உடைந்ததாக அவன் சண்டை பிடிக்கிறான்.

புதுவருடத்துக்கு ஏனைய மக்களின் அன்பளிப்பாகக் கிடைத்த புத்தாடைகள் 'ரீப்போ'யில் இருக்கின்றன. அவற்றை முகத்தாரின் கண்கள் மேய்கின்றன.

"புள்ளை பத்மா!"

அவள் கைவேலைகளை விட்டுவிட்டு வருகின்றாள்.

"உந்த உடுப்புகளை எடுத்து வை புள்ளை. பின்னேரம் ஒருக்கா முத்த வெளிக்குப் போகவேணும் நாடகம் பார்க்க. போகேக்கை மூத்தண்ணர் வாங்கித் தந்த வேட்யையும், கொத்தார் வாங்கித் தந்த சால்வையையுந்தான் போட்டுக்கொண்டு போகவேணும்"

"ஐயோ, இளையண்ணர்தான் பாவம்"

"ஓம் தங்கச்சி. எளியவனாப் பிறந்தாலும், இளையவனாப் பிறக்கக் குடாது" என்று மனோகரன் அடுக்களையிலிருந்தபடியே சொல்லுகின்றான்.

இதிலே என்ன நகைச் சுவையைக் கண்டார்களோ? அண்ணரும் அத்தானும் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். மனோகரன் கையில் ஒரு நெரு பபுக் கொள்ளியைத் தூக்கிக்கொண்டு, அடுக்களையின் மறைவான மூலையைப் பார்த்து நகருகின்றான்.

"இப்ப தம்பியும் பெரியாக்களைப் போலை" என்று பரிமளம் குரல் எழுப்புகின்றான்.

"சும்மா சத்தம் போடாததை பரிமளம். இளைவன் எண்டாப்போலை நெடுகிலும் சின்னப்பொடியன் எண்ட நினைப்பே? அவனும் உழைக்கிறான்; சம்பாரிக்கிறான்" என்று மச்சான் சார்பில் கமலா பேசுகின்றாள்.

'மனோகரன் சிகரெட் குடிக்கத் துவங்கீட்டான் போலை. ஓ, உங்கை கிறாதியாலை புகை வருகுது. வளந்தாப் பிறகு, அதுஅது, அதுகளின்ரை விருப்பம்.'

"என்ன மருமகன்? சயன்ஸ் பாடங்கள்தானே? பேத்தனமா இங்கிலீஸை நெக்லட் பண்ணாதை."

"ஹ’ இஸ் குட் இன் இங்லிஸ். கிறடிற் எடுப்பான்" என்று சதாசிவம் முகுந்தனின் சார்பாக உத்தர வாதமளிக்கின்றான்.

"தூண் விழுந்திடப் போகுது. அந்தக் கதிரையிலை இரன்."

"அத்தான், உந்தத் தூண்டியிலை நிண்டு பாத்தால் ஹம்ஸதொனி அடுப்படியிலை இருந்து வேலை செய்யிறது தெரியுதாக்கும்."

"சதாசிவம்....வானதிக்குக் கூடப் பிந்தீட்டியள்.... அசோகனுக் கெண்டாலும் முந்தலாம்,"

சதாசிவத்தின் கண்கள் பரிமளத்தைத் தேடுகின்றன,

வாயைப் பொத்தும்படி சுப்பிரமணியத்திற்குக் கமலா சைகை காட்டுகின்றாள்,

*

விறாந்தை ஓரத்தில் விழுந்து கிடந்த ஓர் இஞ்சி விசுக்கோத்தை எட்டியெடுத்த முகத்தார், குழந்தையின் சுபாவத்துடன் ஒருவருக்குந் தெரியாமல் தன்னுடைய தளர்ந்து போன பற்களுக்கிடையில் நசுக்குகின்றார்.

*

But the king's younger brother named Vattagamini killed the villainous commander and took on himself the government. The little son of his brother, king Khallatanaga, whose name was Mahaculika, he took as his son; and the (child's) mother, Anuladevi, he made his queen... There-upon the Kolambalaka the king was vanquished... He took Anuladevi with him...But, to lighten the car the king gave to Somadevi (his second wife) his splendid diademjewel and let her, with her own consent, descened from the car.... Of the seven Damilas one, fired with passion for the lovely Somadevi, made her his own and forthwith returned again to the further coast.

- The Mahavamsa

Dr. Wilhelm Geiger's Edition.

(மகாவம்சத்தை வரலாற்று நூலெனக் கருதுபர்கள் 'கணை'யை வரலாற்றுச் சிறுகதையெனக்கொள்ளலாம். கதையின் நிகழ்ச்சிக் காலம் கி.மு.44-ஆகும்.)

...............

கணை

அஸால்ஹ பட்சம் பிரசவித்த பூரணை.

வட்டகாமினியை வென்ற ஏழு தமிழ் வீரர்களுள் ஒருவனான குறு நிலவேளின் மாளிகை. மாடத்தில் அமைந்துள்ள சயன மண்டபம். நிலா, பரதம் பயிலும் பாற்கதிர்க் கற்றையைப் பீச்சுகின்றது. பாலாவி நிகர்ந்த திரைச் சேலைகளைத் தழுவி, அவற்றை நாணத்திலாழ்த்திக் களியிற் கெம்பும் மாருதி. வாலிப உடலங்களிற் சடைத்து வளருஞ் தசைப் பிடுங்கல் விரகம் வியாபிக்கும் நிலைக் களனிலும், சோமாதேவியின் சேதநை சுழல் காற்று வாய்ச் சருகாக எற்றுண்டு, அலைக்கழிந்து....

'கணிகைக் காற்று...ஈழம் வாழ் பௌத்தர்களின் சிங்களக் கொடி இறக்கப்பட்டிருக்கும். மகிந்த தேரர் வாழ்ந்து, போதி மாதவரின் புனித நெறி பரப்பிய குன்றிலிருந்து எழுந்து, கடம்பநதிப் பிராந்தியத்திற் சீதள மது பருகும் மந்தமாருதம், சைவத் தமிழர் பறக்க விட்டிருக்கக்கூடிய ஆதிக்கக் கொடியை, இதே அம்மணச் சரசத்துடன் தழுவிச் சுகமனுபவித்துக் கொண்டிருக்கலாம்... போரிலேற்படுந் தோல்வி, உடலிலே நித்தியம் ஊறும் புலால் உணர்ச்சிகளைத் தீய்த்துப் பொசுக்கி விடுகின்றதா? இந்நேரத்தில்.... கடம்ப மலர்க் காட்டில், அனுலாதேவியின் மருங்கில், மன்னர் வட்டகாமினி சித்த பரிசுத்த நோன்பிலா ஆழ்ந்திருப்பார்? அனுலாதேவி கொடுத்து வைத்தவள்; அனுபவிக்கப் பிறந்தவள். அண்ணனின் மஞ்சத்தைப் பங்கிட்டு, அந்தக் கலவிக் களியிற் குழந்தை பெற்றவளை, 'மாடும் கன்று' மாகப் பொறுப்பேற்று, இராணியாக்கி, 'அண்ணனுக்குத் தெரிந்த அதே அந்தப்புரக் கலையில் நானுந் தேர்ந்தவன்' என்பதை வட்டகாமினி மன்னர் நிரூபிக்கவில்லையா? பின்னர், ஏன் என்னைத் தன் இளையாளாய் நாடினார்? அந்த மலரிலே தேன் இற்றுவிட்டது; வண்டு புது மலரை நாடுகின்றது என்று நான் நினைத்தது தவறா? சென்ற மஹா பட்சத்தை மறப்பதா? முதல் முதலில், என் கன்னிகை அழிந்து, பூ நோக, இடை நொந்து, மன்னருடைய தழுவலில், அரண்மனை மஞ்சத்திற் சயனித்த அந்த நாள் மஹா பட்சத்திற் புலர்ந்ததுதான். இரண்டு திங்கள்களுக்கிடையில் நான் தேன் இற்ற மலரானேனா? என் வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா? மதுபாயுந் திரேகிகளான இரண்டு மன்னர்களின் சிற்றின்பத் திருப்திக்குத் தன் உடல் பிழிந்து, கருத்தரித்து, சுமைதூக்கிய அந்தக் கிழவி மட்டும் இன்றும் இனிக்கின்றாளா? இல்லையேல்....? போர்க்களம் விட்டுத்தப்பியோடுந் தேரிலிருந்து ஏன் நான் மட்டும் இறக்கப்பட்டேன்? 'தேர் விரைவாகச் செல்ல வேண்டுமென்றால் ஒருவர் இறங்கவேண்டும்' என்று சொல்லி என்னையே பார்த்தால் என்ன அர்த்தம்? இதில் என் விருப்பம் எங்கே இருக்கின்றது? பூவின் சம்மதங்கேட்டா, அஞ்சலிப் பீடம் அனுப்புகின்றார்கள்? நான் மன்னருக்கு ஊட்டிய கலவிக் களியின் பெறுமானம், இறுதி நேரத்தில் அவர் பரிசாகத் தந்த கிரீடத்து ஆபரணந்தானா?... முத்தும் முத்தமிழும். செந்நெல்லுஞ் செங்கரும்பும் விளையும் இந்நாட்டிலிருந்து வந்த மாவீரனே எல்லாளன். ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், அந்தச் சைவனைத் தோற்கடித்து பௌத்தத்தின் மேன்மையைச் சிங்களத்தில் நிலை நாட்டினார் மாமன்னர் காமினி. ஆண்டுகள் பலவாகி விட்டன. எல்லாளன் மரணத்தைத் தமிழர் மறந்துவிட்டனர் என்று தான் எல்லோரும் நம்பினர். யானையின் ஞாபக சக்தி தமிழருக்கு இருக்கின்றதாம். ஏழு தமிழ் வீரர்கள் சூறாவளியென வந்தார்கள். அவர்களை மகாகமைப் பிராமணன் வெற்றிவாகை சூட்டுவான் என நினைத்த மன்னர் வட்டகாமினியின் பேதமை என்னே! செருக்கள வீரம் ஒருவன் பிறபிபில் அமைகின்றது. ஏழு தமிழர்களுடன் போராட வக்கின்றிதேர் ஊர்ந்து கானகமேகிய பொழுது, அனுலா தேவியை மட்டும் 'மாடும் கன்றுக'ளுமாக அழைத்துச் சென்றது ஏன்? என்வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா? மன்னராயிருந்த தன் அண்ணன் ஹாலதநாகாவைக் கொன்ற சேனாதிபதி மகாராட்டகனை வென்று, மணிமகுடத்தை மட்டுமன்றி, மகா ராணியையும் 'மாடும் கன்று' மாகப் பரிசுபெற்ற, மாமன்னர் சதாதீஸனின் கனிஷ்டகுமாரர் வட்டகாமினி கோழையா? போர்க்களம் விட்டோடும் பேடியே வீரனா? அந்த 'வீரன்' சுவைத்த இந்த உடலை, வேறொருவன் தீண்டா வண்ணம் நான் தன்னந்தனியாகப் போராட வேண்டுமா? எதற்காக? சூரியோதயத்திற் குளித்து மகிழக்காத்திருக்கும்போது, கைவறைக் குறையொளியில் வீயாகக் காய வேண்டுமா? ஏன்? அண்ணன் மனையாளை 'மாடும் கன்று' மாகத் தன் நெஞ்சிற் குடியேற்றியிருக்கும் வட்டகாமினிக்கு இரண்டு திங்கள்கள் இளையாளாக - காமக் கிழத்தியாக - வாழ்ந்தேன் என்பதற்காகவா?'

சிந்தனை ஊஞ்சலின் அலைக் கழிப்பிலிருந்து விடுபடும் வேட்கையுடன், தென் திசையிலே தன் பார்வையை வீசுகிறாள். பாட்டும் - கூத்தும்- யாழின் இசையும் - சதங்கை ஒலியும்! அது கணிகையர் வீதி. பொற்காசுகள் வீசப்படுகின்றன. காமக் குளிப்பு நடைபெறுகின்றது.

'கணிகையரும் பெண்கள். மன்மத கிருகம், கற்பின் மருநிலமா? இன்பத்தின் விளைநிலமா? பூஜை அறையா? அங்காடித் துறையா?'

பாலாவி திகர்ந்த திரைச் சேலைகளைத் தழுவி, அவற்றை நாணத்திலாழ்த்திக் களியிற் கெம்பும் மாருதி. சோமாதேவியின் உள்ளத்தில் இடு காட்டு மோனம்.

*

சிலம்பொலிச் சிதறல், சோமா தேவியின் சென்னி அத்திக்கிலே திரும்புகின்றது. பணிப் பெண்களும் வண்ணமகளும்! மலர்த்தட்டு, பழத்தட்டு, அகிற்றட்டு, மதுத்தட்டு... பரிமள கந்தங்களில் அளையும் மாருதி, ஒரு தட்டில் வழியும் மலர்கள் அவள் கவனத்தை ஈர்க்கின்றன.

'மலர்கள். அற்பு ஆயுசு. ஒரு நாள் வாழ்க்கை. அதற்கிடையில் எத்தனை வண்டுகளுடன் கூடிக் களித்தனவோ?'

அவளுடைய கண்கள் தென்திசையில் மேய்ந்து மீளுகின்றன. கணிகையர் தெரு. உடலின்பத்தில் அங்காடி வணிகம் நடைபெறுகின்றது... வெள்ளப் பெருக்கில் மாயுந் தீயோ? மதநெய் உறிஞ்சி வளருந் தீயோ? 'கற்பு? அது மலருக்குங் கிடையாது; கணிகைக்குங் கிடையாது. அண்ணனுக்குந் தம்பிக்கும் ஒரே உடலில் தசைத் திரள்களைப் படுக்கையாக்கிய அனுலாதேவிக்கு இருக்கின்றதா? ஏன் எனக்கு மட்டும் தேவை?'

"அம்மா!" - பணிப்பெண்களுடன் வந்து, திரும்பிச் செல்லாத வண்ணமகள் வசந்தமாலையின் அழைப்பு; குறுகிய காலத் தொடர்பு; ஆழமான ஈடுபாடு. வழியெறிந்து பார்க்கின்றாள்.

'இந்த வண்ணமகளின் வன்ன முகத்திற் கார் மேகத்தை அள்ளி அப்பியது யார்?'

"ஏன்டீ, உனக்கிந்தக் கலக்கம்? எனக்கிக்லாக் கவலை?"

"நீங்கள் சுந்தரச் சிங்களத்தியாகவும், நான் தமிழச்சியாகவுமிருக்கலாம். ஆனால், இருவரும் பெண்கள். கற்பே பெண்மையின் பெருமை. அதனை நீங்கள் இழந்தாலும் நான் இழந்தாலும், ஒரு பெண் தன்னுடைய கற்பை இழந்தாள் என்னுங் கறையே எஞ்சும்....கற்பைப் பாதுகாக்கும் போராட்டத்திலே உயிரைப் பலியிடுபவளுக்குச் சுவர்க்க பதவி கிட்டுகின்றது என்று என் குலத்தவர்கள் நம்புகிறார்கள்." - அர்த்தச் செறிவைத் தேக்கித் தன் மோதிரத்தைக் காட்டுகிறாள். அந்த மோதிர முகப்பின் கள்ள அறையில் நஞ்சு இருப்பதை ஊகிக்க முடிகின்றது.

'நஞ்சு தரும் சாவு வீரத்தின் பரிசா?'

சோமாதேவி, தொண்டைக்குட் சலங்கை கிலுக்கிச் சிரிக்கிறாள்.

*

"கவலையை மறப்பதற்கு வழி இன்ப மது மாந்துவதுதான். பைத்தியக்காரி! புண்ணைச் சொறிந்து கூட இன்பம் அனுபவிக்கலாம். வண்ணமகளே! உன்கலை வண்ணங்காட்டு என் வாலை வனப்பும் வசீகரமும் எவரையும் கிறுங்கச் செய்யும் விதத்தில் ஒப்பனை செய்.... ஏன் தயக்கம்?... இந்நாட்டில் எப்படியடி, முதலிரவுக்குப் பெண்களைத் தயார் செய்வார்கள்?"

மண்ணாசை துறந்து, போர்க்களத்திலே விழுப்புண் பெற்று விருது புனையும் வீறு போக்கி, சிங்களப் பைங்கிளி சோமாதேவியின் தசையணைப்பே போதுமென்று ஊர் திரும்பிய வீரக்காளை வரும் அரவங் கேட்கின்றது.

'இவனுடைய காதலும்; தமிழர் தம் போக்கும்! பாண்டுகாபய நிருமாணித்த தித்தராமாவின் அயலிற் சிறைப்பட்டேன். இங்கு வருவதற்கிடையில், அவன் என் அருகில் எத்தனை இரவுகளை- மாந்தைத்துறையிலும், நாவாயிலும், மருவூர்ப்பாக்கத்திலும்-கழித்திருக்கின்றன? என் வாலை வனப்பையும் வசீகரத்தையும் விழியாற் பருகினானேயன்றி என்னைத் தீண்டியதில்லை. காவலில்லாத கரும்புத் தோட்டத்தை மதம் பிடித்த யானையால் அழிக்கமுடியாதா? இவன் மலரைச் செடியில் வைத்தே இரசிக்குங் கவிஞனா, கலைஞனா?... இவன் எங்கே? அண்ணனின் உதிரஞ் சேனாதிபதியின் வாளிற் காய்வதற்கு முன்னரே, அண்ணியைத் தன் படுக்கையில் அனுபவித்த வட்ட காமினி எங்கே? 'மணிமுடி வேண்டாம்; சண்டாளப் பெண் அசோகமாலாவின் காதலே வேண்டும்' எனக் காதலை ஒம்பினான் சாலி ராஜகுமாரன். அவன் தம்பி முறையினனான வட்ட காமினி தன் மணிமுடியின் உரிமையைக் காக்க மாடும் கன்றுமாகக் கிடைத்த அந்தக் கிழவியைப் பெரிதாக மதிக்கின்றான். என் வாலை வனப்பும் வசீகரமும் எங்கே?...'

*

வந்தவன் சிலையாக நிற்கின்றான். தலைவிரி கோலமாகஇ கையிற் கட்டாரியுடன், 'என் கற்பைத் தீண்டுவாயோ? என மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னாளை எதிர்பார்த்தே வந்தான். இரும்பை வளைப்பதற்கு முழுப்பலத்தையுந் திரட்டி வந்தவனிடம் குசப்புல் அகப்பட்டால்?

சோமாதேவி தட்டிலிருந்த மலர்களை மஞ்சத்தில் ஒய்யாராமாகத் தூவி, "நிற்கின்றீர்களே?....உங்கள் தேசத்து மது சுவையாக இருக்கின்றது." மது நிரம்பிய கிண்ணத்தை நடன அபிநயத்துடன் நீட்டுகின்றாள். அவளுடைய விரல்கள், அவனுடைய கரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் யாழ்மீட்டித் திரும்புகின்றன.

"சோமா! சிங்களத்திகளின் பண்பு என்னை மிகவுங் கவர்ந்துள்ளது. தமிழச்சிகள் கற்பு என்று வறட்டுத் தத்துவம் பேசி, உணர்ச்சித் தீயைத் தேக்கி, உலர்ந்த விறகுகளாக உக்கிப் போகிறார்கள்...."

"சிங்களத்திகள் தென்திசை வாழ் கணிகையருமன்று; கற்பு தத்துவமுமன்று. அது வாழும் முறை. வீரமிருக்கும் இடத்தில் அதைப் பயிலலாம்."

"நீயும் சாத்திரம் பேசுகின்றாயா?"

"இல்லை. நிதர்சனம் பேசுகின்றேன். கற்பைக் காப்பாற்ற வேண்டிய வட்டகாமினி வீரத்தைச் செருக்களம் போக்கி, கானகம் ஏகி விட்டபின்னர்?..."

பஞ்சணைக்கு வந்து, படுப்பதாக அபநயித்து....

மலர் தூவிய மஞ்சத்திலே குப்புறப்படுத்து, வாலை வாழிப்பில் வீங்குங் கொங்கைகளை முட்டாக வைத்து, அவை பிரியும் மையப்பகுதியின் பிளவைக் கவர்ச்சிக் கோணத்திற் காட்டி, குறுந்தசைக் குவடுகளின் அடிவாரத்திலே உடலை நிமிர்த்தி, கண்களைச் சற்றே மேலிமைக்குள்ளேற்றிய அசைவிற் பார்க்கின்றாள்.

மது அருந்தித் தலை நிமிர்த்திய அவனை அவளுடைய சுந்தர சாகஸ நிலை தன் வசத்தை இழக்கத் தூபமிடுகின்றது.

** சோமாதேவி மலர்தூவிய மஞ்சத்திலே குப்புறப்படுத்து.... படம்**

'இந்த மஞ்சமே என் போர்க்களம். என் அம்மண உடலை அப்பிய அவயங்களே என் ஆயுதங்கள்?'

மதுவிலும் பார்க்க அதிகம் போதையூட்டும் விழிகளில் அம்பு தொடுத்து, மஞ்சத்திலே தூவப்பட்டிருக்கும் மென் மலர்களையும் விஞ்சும் வாக்கில், மது வழியும் கிண்ணத்தில் விளிம்பிலுஞ் சுவை தரும் இதழ்களை விரித்துப் புன்னகை சிந்துகின்றாள்.

மன்மதகிருகம், குப்புறக்கிடக்குமிடத்தைச் சமீபிக்கிறான். வட்டகாமினியின் சிற்றின்ப தூவழியிடத்தையும், துரங்கமக் குதியாட்டமிடுங் கொங்கைகளையும் வான் பார்க்கும் நிலையிற் புரட்டுகிறான்.

"நான் வீரன். வீரத்தின் பரிசாக உன்னை அனுபவிக்கும் உரிமையைப் பெறுகின்றேன்."

"ஆம். வட்டகாமினியைப் போன்ற வீரன். அவர் தன் அண்ணன் மனைவியிடம் தன் வீரியத்தைச் சிந்திக் காட்டுகின்றார். நீங்கள் மாற்றான் மனைவியிடம் உங்கள் வீரியத்தை விதைக்க வந்திருக்கிறீர்கள்...."

"என் உள்ளத்திற் கொழுந்து விட்டெரியும் காதலை நீ அறிவாய்."

"சிறைப்பட்ட ஒருத்தியிடங் காதல் செய்ய வந்துள்ள உங்கள் வீரத்திற்கும், தனக்கு வாழ்க்கைப்பட்டவனின் கற்பைக் காப்பாற்ற வக்கற்ற என் கணவரின் வீரத்திற்கும் என்ன வித்தியாசம்?" - ஒரு கணப் பின்னத்தின் முனிவு சிந்திய காங்கைத் துகள்கள்.

அவனுடைய கண்கள் தீக்குங்குகளை உமிழ்கின்றன.

"நாத்தடித்தவளே! 'விழுப்புண் பெறா நாள் தோன்றா நாளே' என்று விழுப்புண்ணை ஓம்பி வாழும் இத் தமிழனையா கோழையென்றாய்?"

இன்னொரு கிண்ணம் மது அருந்தி நிமிர்கின்றான்.

'இந்த மஞ்சமே என் போர்க்களம். என் அம்மண உடலை அப்பிய அவயங்களே என் ஆயுதங்கள்.

"கோபத்தின் முறுக்கு ஏறும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கின்றீர்கள்?... மது தரவா?"

அவளுடைய மேனிக்குத் தசை ஒத்தனங் கொடுக்கும் நெருக்கத்தில், மஞ்சத்திலே அமருகின்றான்.

மதுக்கிண்ண விளிம்பிற்கும், சோமாதேவியின் கள்ளூறும் இதழ்களுக்கும் வித்தியாசம் மறைகின்றது.

*

சிங்களத்தீவில் கடம்ப மலர்க் காட்டில், அனுலா தேவியுடன் வட்ட காமினி கலவிக் கிளியின் மயக்கத்தில் துயில் கொள்ளும் வேளை!

***

அணி

ஏன் வாசலிலேயே நின்று விட்டீர்கள்? உள்ளுக்கு வாருங்கோ ஐயா. இன்றைக்கு நான் மட்டுந்தான் வேலை செய்யிறன். தம்பிக்கு 'சேவ்'. கையோடு முடிந்துவிடும். இளமட்டங்கள் சில, எங்களுடைய 'ஸ்டை' யிலைப் பார்த்துத்தான் உள்ளே வாருங்கள். 'ஜங்கி ஸ்ட'லில் என்று சொல்லி, நாக்கு வழிப்பதைப் போல அந்தரப்பட்டு, ஒரு படத்தையும் அதில் நடிக்கும் நடிகனின் பெயரையும் சொல்லி, அப்படியே வெட்டிவிடும்படி சில விறுதாக்கள் கேட்கும். அதை ஏன் ஐயா கேட்கிறீர்கள்? மயிரைக் கவனமாகச் சீவி விடவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள, ஒரு மணி நேரம் அவர்கள் கண்ணாடிக்கு முன்னால் சீப்புடன் படும் பாட்டைச் சொல்ல முடியாது. பார்த்தீர்களா? மரியாதை தெரியாமல் நிற்க வைத்தே பேசிக் கொண்டிருக்கிறன். குடையை அந்த மூலையிலை வையுங்கோ. ஓமோம். அந்தப் 'புட்டு' வத்திலை வசதியாக இருக்கலாம். அது நேற்றையப் பேப்பர். இன்றைய்குப் பேப்பர்காரப் பொடியன் இன்னும் வரவில்லை. புழுக்கமாகத்தான் இருக்கிறது. விசிறியைப் போட்டு விடுகின்றன். நீங்கள் இந்த ஊருக்குப் புதிதாக்கும். நான் ஆக்களைப் பாத்துச் சொல்லுறநிலை கெட்டிக்காரன். பார்த்தீர்களா, சரியாகச் சொல்லி விட்டேன். வேலை மாற்றமாகி வந்திருக்கிறீர்களாக்கும். இல்லையா? மட்டக் களப்பிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமிக்கோயில் பார்க்க வந்திருக்கிறீர்களா? இன்றைக்குக் கார்த்திகைத் திருவிழாவாக்கும். ஓம், தம்பி மறந்து போனன். தம்பிக்கு சேவ் மட்டுந்தானே? இருபத்தைந்து சதம். சரி, போயிட்டு வாரு ம....ஐயா, இந்தப் புட்டுவத்திலை வந்து இருங்கோ. இது நாலுபேர் வேலை செய்யிற பெரியகடை தான். எலெக்ஷனுக்கு நாலு நாட்கள் தான் இருக்கின்றன. அது வரைக்கும் நான்தான் கடையைத் தனியாப் பார்க்கவேணும். நான் ஒரு வாய் வெற்றிலை போடுகிறன் ஐயா. அப்பொழுதுதான் கை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

ஏன் சுவர்களைப் அப்படிப் பார்க்கிறீர்கள்? இவை சலூனில் மாட்டத்தக்க படங்களல்ல என்று நினைத்துத் தானே? சினிமா நடிகைகளின் படங்களையும், சீனாக்காரிகளின் கொங்கொங் படங்களையுந்தான் சுவர்களிலை மாட்டலாமென்று பெரும்பாலான சலூன்காரர்கள் நினைக்கிறார்கள். ஒரு காலத்திலை அப்படிப்பட்ட படங்கள்தான் இங்கும் இருந்தன. இவையெல்லாம் விக்டர் செய்த மாற்றங்கள். லிங்கன், காந்தி, பாரதி, லெனின், மாஸேதுங், ஜ“வானந்தன்,... அந்தப் பெயர் தான் மனநிலை நிற்கமாட்டுது. லீயூ-சாவூ-ஸ’ என்று சொன்னீர்களா? ஓம். அதைப்போல தான் ஒரு பெயர். இந்த வரிசையிலை நடுவிலை இருக்கும் படம். அதற்குப் பக்கத்திலிருக்கும் படம் முருகேச வாத்தியாருடையது... சே, இந்த நானா வரவர வலு மோசம். வெற்றிலைக்கு நொங்குப்பாக்கு வைக்கலிலை.

நான் 'ஷ“ட்' எடுக்க உள்ளை சென்ற பொழுது ஏதோ கேட்டீர்களே? நன்றாகப் பின்னுக்கு நகர்ந்து உட்காருங்கோ. ஏன் இந்தப்படங்களைச் சிவப்பு 'லைட்'டுகள் அலங்கரிக்கின்றன என்றா? அதுவும் விக்டரின் ஏற்பாடுதான். இந்தப் படங்களுக்கு நீல 'பல்பு' அழகாக இருக்குமென்று பலர் சொல்லியிருக்கிறார்கள். விக்டர் அடிக்கடி சொல்லுவான். தொழிலாளர் அணியைச் சேர்ந்தவர்களுடைய இரத்தம் சிவப்பாம். ஏன் சிரிக்கிறீர்கள்? விக்டரின் கதையைக் கேட்டீர்களென்றால் சிரிக்க மாட்டீர்கள். கொஞ்சம் இந்தப் பக்கமாகத் தலையைக் குனியுங்கோ.... கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது வேலையும் முடிந்துவிடும்; நேரம் போறதும் தெரியாது. 'இவனிடம் தலையைக் கொடுத்து விட்டோம்; சொல்லுவதை எல்லாம் சொல்லட்டும்' என்று சிலர் நினைப்பினம். நீங்கள் அப்படி இல்லையா? சந்தோஷம்.

என்னுடைய அண்ணன் டொமினிக் தான் இந்த சலூனைத் திறந்தவர். முப்பது வருஷம் இருக்கும். அப்பொழுது இது தார்றோட்டுமில்லை; கஸ்தூரியார் வீதியுமில்லை. மக்கிபோட்ட றோட்; செம்மாதெரு என்று சொல்லுவார்கள். வின்ஸர் தியேட்டருக்குத் தகரக் கொட்டகை என்றுதான் பெயர். வண்ணாங்குளத்தடி பாபர் சலூன் என்றால் எல்லாருக்கும் தெரியும். நல்ல உழைப்பு. அந்த அண்ணனுடைய மகன்தான் விக்டர். அவனை நன்றாகப் படிப்பித்து உத்தியோக காரனாக்கவேண்டும் என்று அண்ணனுக்கு நல்ல ஆசை, மட்டக்களப்புப் பகுதியிலை சாதி வித்தியாசங்கள் எப்படி என்று தெரியாது. அங்கு அவ்வளவாகச் சாதி பார்ப்பதில்லை என்று சொன்னீர்களா? ஆனால், இங்கு இப்பொழுதுகூடச் சாதி வித்தியாசம் பாராட்டுகிறார்கள். முந்திய காலத்திலை சொல்லத் தேவையில்லை. தேத்தண்ணிக்கடைகளிலை எங்களுக்கெல்லாம் கறல்பேணி, அல்லது சோடாப் போத்தில் தனியாக இருக்கும். நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விக்டிரைச் சம்பத்திரிசியார் கல்லூரியிரை அண்ணர் சேர்த்தார். 'ஏன் உனக்குப் படிப்பு? சவரக்கத்தியை எடுத்துக்கொண்டு சிரைக்கப்போவன்' என்று தன்னை பொடியன்கள் 'பகிடி' பண்ணுகிறார்கள் என்ற எத்தனையோ நாட்கள் விக்டர் அழுதிருக்கிறான். யாழ்ப்யாணத்திலை சாதி வித்தியாசம் வலுபொல்லாது. தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாக... இன்னும் கொஞ்சம்...சரி. நான் எல்லாரிடமும் இப்படிக் கதைப்பதில்லை. விக்டருக்குப் படிப்பு நல்லா வந்தது. ஆனாலும், ஏழாம் வகுப்புடன் அவனுடைய படிப்புத் தடைப்பட்டுப் போச்சுது. என் தம்பிக்காரனொருவன் அகப்பட்ட பணம் முழுவதையும் சுருட்டிக் கொண்டு, யாரோ ஒரு கரையூர் வேசையையும. 'தூக்'கிக்கொண்டு நீர்கொழும்புக்கு ஓடிவிட்டான். அத்துடன் கடையும் சீரழிந்தது. இந்த நேரத்திலை விக்டரும் எங்களுடைய தொழிலுக்கு வந்துவிட்டான். நான் சிகரெட் புகைப்பதில்லை. வெற்றிலைதான் போடுவன். நெருப்புப் பெட்டிதேவையோ? நீங்கள் புகையுங்கோ. எல்லாம் பழக்கந்தானே? ஓமோம். எனக்கும் இப்படித்தான். நெடுநேரம் இல்லாவிட்டால் வாய் புளித்துவிடும். நெருப்புக் குச்சைக் கீழை போடுங்கோ. நான் கூட்டித் தள்ளுவன். தலையை இன்னும் கொஞ்சம் குளியுங்கோ.... எங்கை விட்டனான்? ஆ...விக்டர் சலூனுக்கே வந்துவிட்டான். இங்கை பேப்பர் ஒழுங்காக எடுப்பது வழக்கம். வாடிக்கைக்காரருக்குத் தேவை. சும்மா எவ்வளவு நேரந்தான் படத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது? பின்பு, அவை கடுதாசித் துண்டுகளாகவும் உதவும், விக்டர் பேப்பர்களை ஒழுங்காக வாசிப்பான். ஆனாலும் முருகேச வாத்தியாருடைய சிநேகிதந்தான் அவனுக்கு அரசியல் விஷயங்களிலை ஆசையைக் கொடுத்தது.

ஐயா, இந்தச் சுருள் மயிருக்குக் கொஞ்சம் 'சோட்' டாக வெட்டினால் நல்லது. அப்படியே செய்யட்டுமா?.... ஓம். விக்டரின் படத்திற்குப் பக்கத்திலை இருப்பதுதான் முருகேசு வாத்தியாரின் படம். அவர் பெரும் படிப்புப் படித்த மனுஷன். ஒருநாள் அந்தப் புட்டுவத்திலிருந்து சொன்னார். அவர் எப்பொழுதும் அந்தப் புட்டுவத்திலைதான் உட்காருவார். 'விக்டர்! மனிதன் தானும்-மனைவியும்-தட்டானும் என்று வாழக்கூடாது. மனிதன் உலக சமுதாயத்தின் ஓர் அங்கம். உலகத்திலுள்ள தொழிலாளர்கள் எல்லாரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். அந்த அணியின் பெருமையை நிலை நாட்டும் வர்க்கப் போராட்டத்தில் அவன் ஓர் அங்கமாக மாறவேண்டும்.' அவர் வடிவாகப் பேசுவார். எனக்கு அதிகம் விளங்காது. விக்டருக்கு எல்லாம் விளங்கும்.

இப்பதான் பேப்பர்காரன் வருகிறான். ஏன் தம்பி? இன்றைக்கு றெயின் பிந்திட்டுதோ? கையிலை வேலை. அந்த மேசையிலை வையுங்கோ.... விக்டர் நிறையப் புத்தகங்களும் வாசிப்பான். முருகேசுவாத்தியார் பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார். 'வேலையை ஒழுங்காகக் கவனிப்பதில்லை' என்று நானே எத்தனையோ தடவை அவனை ஏசியிருக்கிறன். 'முருகேசுவாத்தியார் கொம்யூனிஸ்டு. அவருடன் சேர்ந்து கொம்யூனிஸ்டாகக் கூடாது' என்று ஓகஸ்டீன் சுவாமியார் கூடப் புத்திமதி சொல்லியிருக்கிறார். ஓ, நீங்கள் சொல்லுறது சரிதான். நாங்கள் பழங்காலத்து ஆக்கள். இப்பொழுது சரிதான். நாங்கள் பழங்காலத்து ஆக்கள். இப்பொழுது லெனின் படமிருக்கிற இடத்திலை முந்தி தாடிக்கார ஜோர்ஜ் மன்னரின் பெரிய மடமொன்று இருந்தது. நல்ல வடிவான படம். ஒரு நாள் அந்தப் படத்தைக் கழற்றிப் போட்டு இந்தப்படத்தை மாட்டினான். அன்றைக்கு இங்கை பெரிய போரல்லே நடந்தது. தகப்பனுக்கு விசர் வந்தது போலைதான். விக்டருக்கும் தகப்பனுக்குமிடையிலை நல்ல வாக்குவாதம். ஒரு மாதமாக விக்டர் கடைப்பக்கமு ம வரவில்லை விட்டிட்டம். தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாகச் சரியுங்கோ; இன்னும் கொஞ்சம்... ஆ...

இன்னொரு நாள் நடந்த சம்பவத்தையும் கேளுங்கோ. அன்று 'குறப்' வெட்ட முருகேசு வாத்தியார் வந்திருந்தார். அதே சமயம் சாளையாவும் வந்தார். நாகையாவை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? சாதி வேறுபாடுகள் நல்லாப் பாக்கிற மனுஷன். கோயில்கள் சிறுபான்மைத் தமிழருக்குத் திறந்து விடப்பட்ட அக்கிரமத்தைப் பார்க்காது சிவபத மடைந்து விட்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. அவர் முருகேசு வாத்தியாரைக் கண்டதும், நாகத்தை மிதித்தவரைப்போல பதறி, 'இந்த நளம்-பள்ளுகளுக்கு முடிவெட்டும் இவங்களிடம் நான் ஒருநாளும் வெட்டமாட்டன்' என்று முழு நீளத்திலை'பானா சானா' வரிகளிலை 'தேவாரம்' பாடினார். ஓம். 'றிங் கத்திரிக்கை' தான். அடர்த்தியான மயிரைக் கோதி எடுத்தால் வடிவாக இருக்கும். பார்த்தீர்களா, ஐயா. நாங்கள் வெட்டுவதோ அழுக்கு மயிர். பேண்புழுக்கும் இந்த மயிரிலைகூட சாதிவேறுபாடு இருக்கிறதாம்.

நாகையா 'சண்டித்தனம்' செய்கையிலை சலூனில் முருகேசு வாத்தியார் மட்டுந்தானிருந்தார். அவர் நாகையாவிலும் 'மாத்து'க்கூடிய வெள்ளாளன். அவர் வட்டுக்கோட்டைப் பகுதி. நாங்கள் விஷயத்தை அறியாது விழித்தம். வாதிதியாரின் கண்கள் கோவத்திலை சிவந்தன. மலைத்து நின்ற விக்டரைப் பார்த்து அவர் சொன்னார். 'நான் ஒரு சீவல்தொழிலாளியின் கல்யாண வீட்டில் பந்தியிலிருந்து சாப்பிட்டதற்குத்தான் இந்தக் குதிப்பு. பூனை பூனைதான்; நாய் நாய்தான்; மனிதன் மனிதன்தான் வர்க்க ஒற்றுமையைச் சாதியின் பெயராலே சிதைத்து விடலாம் என்று இந்தப் பிற்போக்குவாதிகள் மனப்பால் குடிக்கிறார்கள். உலகெங்கும் தொழிலாளி வர்க்கம், செங்கொடியின்கீழ் அணிதிரண்டு வருவதை அறியாது இந்தக் கிணற்றுத் தவளைகள் சத்தம் போடுகின்றன. இரத்தம் சிவப்பு. அது பச்சையோ, நீலமோ மூவர்ணமோ அல்ல. இரத்தம் செங்கொடியின் நிறமேதான். உலகில் இரண்டே இரண்டு சாதிகள்தான். உலகில் இரத்தம் செங்கொடியின் நிறமேதான். உலகில் இரண்டே இரண்டு சாதிகத்‘ன் இருக்கின்றன. மனித இரத்தத்தைக் குடித்துக் கொழிக்கும் சுரண்டல் வார்க்கம் ஒரு சாதி-ஒரு அணி. உழைத்துத் தொழிலின் கௌரவத்தை நிலைநாட்டும் பாட்டாளி விவசாயிகள் மற்றைய சாதி-மற்றைய அணி. விக்டர்! நீ-தான்-அந்தச் சீவல் தொழிலாளி எல்லோரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ்-ஏங்கல்ஸ்லெனின்-ஸ்டாலின் - மாஹேதுங் வழிவழி வந்த செங்கொடி நம்மை வழிநடத்தும்.' கோபம் வந்தால், அவர் மேடையிலை பேசுவதைப் போலைதான் பேசுவார். கன்னத்திலை அதிக மயிர் குடைந்தெடுக்க வேண்டாமென்று சொன்னீர்களா? கதை கதையாக இருந்தாலும் வேலையும் வேலைதான். சிலிம்பிக் கிடக்கும் மயிர்களைத்தான் லேசாக வெட்டி விடுகிறன். ஐயா கன்னத்திலை 'மெஷ’ன்' போடவிடுவதில்லை என்பது பார்த்தவுடனையே தெரிகின்றது, வாருங்கோதம்பி, வாருங்கோ. ஐயாவுக்கு 'குறப்' மட்டுந்தான். முடியப்போகிறது. அந்தப் புட்டுவத்திலை இருங்கோ இன்றைய பேப்பர்தாள் பார்த்துக் கொண்டிருங்கோ.

ஐயா, கேட்கிறீர்களா? பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே புட்டுவத்திலை-இப்ப தம்பி உட்கார்ந்திருக்கிற அதே புட்டுவத்திலை - அமர்ந்து சொன்னார். அப்பொழுதுதான் யாழ்ப்பாணத்துக்கு இந்த முனிசிப்பசல்பை கிடைத்தது. புதிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. அவர்-அவர்தான் முருகேசு வாத்தியார்-சொன்னார். 'விக்டர்! தன்னலமற்றவர்கள், தியாகம் என்ற அக்கினிக் குண்டத்தில் புடம் போட்டெடுக்கப்பட்ட நாணயஸ்தர்கள். மக்கள் தலைவர்களாக வேண்டும். படிப்பை முன் வைத்துத் தலைவர்களை உருவாக்கி எமாந்தது போதும். உன்னதமான உத்தமத் தலைவர்கள் தொழிலாளர் மத்தியிலேதான் தோன்றுகிறார்கள். அப்படியொரு தலைவன் நீ. இந்த எலக்ஷனில் நீ பதினாலாம் வட்டாரத்திற்கு போட்டியிட வேண்டும். வெற்றி-தோல்வியல்ல முக்கியம். இலட்சியம் என்பது நீண்ட பிரயாணம். தனி ஒருவன் முன்னேறுவான்; மரிப்பான். அவன் விட்ட இடத்தில்இன்னொருவனோ, சிலரோ அணி முன்னேறி வெற்றித் துவஜத்தை அடையும். நீ போட்டியிடுவது ஒரு சலூன் தொழிலாளியும் தேர்தலுக்குநிற்கலாம் என்ற சகஜநிலையை உருவாக்கும். நான் நன்றாகப் பேசுகிறன் என்று சொல்லுகிறீர்களா? ஒரு முறை கேட்டால் எனக்குப் பாடம் வந்துவீடும். அந்தக் காலத்திலை கிடாய் விழுந்தானிலை கூத்துகளும் ஆடி இருக்கிறன். நீங்கள் விக்டர் பேசுவதைக் கேட்டிருக்க வேணும். புயலடிப்பது போலை தான் இருக்கும். அவன் கொழும்பு, காலி எல்லா இடத்திலும் பேசியிருக்கிறான். சுருட்டை மயிர் படியிறது குறைவு. தலைக்குக் கொஞ்சம் தண்­ர் போடட்டுமே?

விக்டர், நாங்கள் யார் சொன்னதையும் கேட்காமல் எலெக்ஷனுக்கு நின்றான். இந்த ஊரே தடம் புரண்டது. 'காலம் கலிகாலம். அம்பட்டனும் தேர்தலு ககு நிற்கிறான். எல்லாம் இரண்டு காசு துள்ளுவதினாலை வந்த வினை' என்று சாதித்தடிப்புக் கொண்ட வாடிக்கைக்காரர் இந்தச் சலூனுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். 'இதை உலகம் ஏற்குமா? அவர்களைப் பகைத்து நாம் தொழில் நடதத முடியுமா?' என்று எதிர்த்துப் போட்டியிட்ட அபேட்சகர் கொடுத்த சாராயம் வேலை செய்ய, எங்கட சாதிக்காரரே விக்டரை எதிர்த்தனர். அதற்கு விக்டர் என்ன சொன்னான் தெரியுமே? 'நாம் முடி வெட்டுவது அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், அவர்களும் நமது தொழிலைக் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கின்றேன்' என்றான். அவன் பகிடியும் விடுவான்.

ஓமோம், பிடரிக்கு மட்டுந்தான் மெஷ’ன் போடுறன். தலையை நன்றாகக் குனியுங்கோ.... நெடுகிலும் நல்லெண்ணெய் வைத்து வந்தால் சொடுகு பிடிக்கும். ஏன்? ஆமணக்கெண்ணெய் தலைக்கு நல்ல குளிராக இருக்குமே. கதையைக் கேட்கிறீர்களா? அந்தத் தடவை விக்டருக்குக் கட்டுக்காசு கூடக் கிடைக்கவில்லை. 'அம்பட்டனுக்கு நல்ல பாடம்' என்று எல்லோருக்கும் நல்ல சந்தோஷம். முருகேசு வாத்தியார் மட்டும், 'செடியை நாட்டிவிட்டோம்; இனி, அதனை வளர்ப்போம்' என்று விக்டரை மேலும் ஊக்கப்படுத்தினார்.

அடுத்த தடவை தேர்தல் வந்தது. விக்டர் மசியல் கள்ளன்; சரியான பிடிவாதக்காரன். அவன் மீண்டும் போட்யிட்டான். முதல் தேர்தலிலை இருத் சலசலப்பு இல்லை. தேர்தலைப் பற்றி வாடிக்கைக்காரர் சலூனிலேகூடப் பேசுவார்கள். அம்முறை கட்டுக்காசு கிடைத்தது. அப்பொழுது முருகேசு வாத்தியார் பூரிப்புடன் சொன்னார். 'நமது அணியின் ஆதரவு நன்றாக வளருகின்றது.' மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் மூன்றாம் எலெக்ஷன் நடந்தது, சரியான போட்டி, ஒருவரும் நம்பவில்லை. விக்டர் இரண்டு வாக்குகளால் வெற்றி பெற்றான்.

மன்னிக்கவேண்டும் ஐயா. இது கண்­ர். அது நினைத்துப் பார்க்க முடியாத சங்கதி. இப்பவும் நெஞ்சு வெடிக்கிறது போலை இருக்குது. ஊர்வலம் புறப்படும் பொழுது, யாரோ வில்லூண்டித் துப்பாக்கிச் சூட்டைப் பற்றியும் சொன்னான். அவன் சரியான கரிநாக்குக்காரன்தான். வெற்றி ஊர்வலத்திலை வந்து கொண்டிருந்த விக்டர் துப்பாக்கிக் குண்டிற்குப் பலியான செய்தியை நீங்கள்? ஓமோம். அதே விக்டரின் கதையைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறன். நாலு பேர் எதிரிகள். இரண்டுபேர் எங்களுடைய சாதிக்காரர்தான். உடன் பிறந்து கொல்லும் வியாதி. ஓம், ஐயா. விக்டருக்குப் பெண்சாதி இருக்கிறாள். கிளிக்குஞ்சு மாதிரி. பாவம், சின்ன வயது. இரண்டு பிள்ளைகள். கொஞ்சம் கஷ்டப்படத்தான் போகுதுகள். நாங்கள் அதுகளை அலைய விட்டிடுவமே?

சாவதற்கு முன்னர்கூட விக்டரின் ஓர்மம் தளரவில்லை. அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும் எனக்கு ஞாபகம் இருக்கிறது 'வெற்றித் துவஜத்தை அடைவதற்கு முன்னர் பலர் பலியாகலாம். நான் முதலில் பலியாவதைவிடச் சிந்த பேறில்லை, இதோ இரத்தம் அது செங்கொடியின் நிறமேதான். இந்த இரத்தத்தின் மீது ஆணையாகச் சொல்லுகிறேன். நமது அணியிலே ஒரு விக்டர் மறையலாம், ஆனால் அந்த இடத்திற்கு ஆயிரம் விக்டர்கள் தோன்றுவிட்டார்கள்.'

மன்னிக்க வேண்டும் ஐயா, மன்னிக்க வேண்டும். கன்னத்து மயிரை ஒதுக்கும் பொழுது, விக்டரின் நினைவில் கை நடுங்கி விட்டது. 'பரவாயில்லை' என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மன்னிக்க வேண்டும் மயிரை நன்றாகத் துடைத்து விட்டிருக்கிறன் குளிக்கத்தானே போகிறீர்கள்?...நல்லது.

'குறப்' மட்டுந்தானே? எழுபத்தைந்து சதம். தம்பி, இந்தப் புட்டுவத்தில் வந்து இங்கோ...இரண்டு ரூபாய்த் தாளா? சில்லறை இருக்கிறது. இந்தாருங்கோ ஒரு ரூபா இருபத்தைந்து சதம். ஓமோம். வெளியே, எதிர்ப் பக்கச் சுவரைப் பாருங்கோ. 'விக்டரின் பணியைத் தொடர டேவிட்டைத் தேர்ந்தெடுங்கள்' என்ற நோட்டீஸை. டேவிட் விக்டரின் மருமகன்...சரி வாருங்கள் ஐயா.

தம்பி சுதுமலையல்லே? அங்க படிப்பித்துக் கொண்டிருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டுபோனவன் எந்தப் பகதியாம்?.... மானிப்பாயோ? இவன் கந்தர்மடமல்லோ?... என்ன வேண்டும் ஐயா? குடையை மறந்து போய் விட்டீர்களா? அந்த மூலையிலைதான் வைத்தீர்கள். ஓம் அதோ இருக்கிறது. சரி, போயிட்டு வாருங்கோ ஐயா.

*

வேலி


அறுவடைக்குப் பின் விதைப்பு. பகலின் அறுவடையும், இரவின் விதைப்பும்.

பூரனையை அண்டிய இரவு. மேகம் கலக்கிய குளம், நிலவுக்குத் துகிலுடுத்தி, மழைத் துளிகளை அடைக்காக்கின்றது.

'மழை வந்தால் அரைக் கரைவாசி நாசம். எல்லாம் சித்திரவேலாயுதசாமி சித்தப்படிதான் நடக்கும்."

களத்து மேட்டிற் சூடுகள் எழுந்து நிற்கின்றன.

'ஒண்டு, ரெண்டு, மூண்டு.... பதினைஞ்சு. காப்பதின அளவு மிச்சம்.'

நல்ல களைப்பு. பசி வயிற்றை உழுகிறது. உப்பட்டி கட்டிய வெள்ளாமை வெட்டுக்காரர் போய் எவ்வளவோ நேரம். காவலுக்காக வயலே தஞ்சமாகக் கிடக்கிறான் சித்திரவேலு.

பசியின் கிள்ளல். அவன் களத்து மேட்டில் ஏறுகிறான். சூட்டடி ஒன்றிலே போடப்பட்டிருந்த உப்பட்டிகட்ட உதவும் வெல்லநார்க் கட்டில் குந்துகிறான். கடுத்த கால்கள் ஓவ்வெடுக்கின்றன.

'ஒரு வாய்க்கு வெத்திலை போட்டால் பசி புடிக்கும்.'

மடிக்குள் பத்திரப்படுத்தியிருந்த 'வெத்திலைக் கடுதாசி'யை வெளியே எடுத்து விரிக்கிறான். பாக்குச் சீவலில் ஒரு சிறங்கையை வாய்க்குள் போட்டு, கொடுப்புப் பற்களால் பொடியாக்கி....

'ஏன் இண்டைக்குக் கனகி இவ்வளவு சுணக்கம்?'

வெற்றிலையில் நரம்பைக் கிள்ளி, சுண்ணாம்பைத் தடவி சுருளாக்குகின்றன விரல்கள், அச்சுருள் பாக்குடன் குதப்பிக் குழைக்கப்படுகிறது. ஒரு துண்டு யாழ்ப்பாணத்துப் புகையிலையைக் கிள்ளியெடுத்து, வெற்றிலைக் காகிதத்தை மடித்து மறுபடியும் மடிக்குள் வைக்கிறான். முன்னிரண்டு பற்களிலும் படிந்திருந்த காவியைப் புகையிலையினால் துடைத்து, அதுவும் அவசியமான அனுமானமாகக் குதப்பப்படுகிறது.

உதடுகளில், கைவிரல்களிரண்டைக் கெவராகப் பிடித்துக்கொண்டு, அதன் நடுவெளியில், வெற்றிலைத் துப்பலைப் 'புளிச்' சென்று பீச்சுகிறான். அது சீறியடித்துச் சுழன்று, மழைத் தூவானமாக அவன் முகத்திலும் பெய்கிறது.

'காத்து எழும்பீட்டுது. இனி பழை வராது. அதுக்கிடையில் என்ர வெள்ளாமை எல்லாம் சூட்டில் ஏறிடும்.'

நம்பிக்கைப் பயிர், சிந்தனை வாய்க்காலிற் புரண்டுவரும் நீருண்டு, கிசுகிசுத்து வளருகிறது. தினவு ஊரும் மனத்துடன் அவன் வயலைப் பார்க்கிறான்.

ஜ“வசிருஷ்டியில்- அதன் விளைவுப் பூரிப்பில்-உப்பிப் பெருத்த வயிற்றை, பிரசவ சமயம் சுமையிறக்கிவிட்ட பிள்ளைத்தாய்ச்சியின் சாயலில், அறுவடையாகிவிட்ட பத்து ஏக்கர் வயல். அந்த விளைச்சல், இப்பொழுது, பதினைந்து சூடுகளாக மமதையுடன் எழுந்து நிற்கின்றன. பக்கத்தில், நாலு ஏக்கரில் கதிர்க்கட்டுகள். அதற்கு இடப் பக்கத்துத் துண்டு நாலு ஏக்கர். வெளாண்மை வெட்டப்பட்டுக் காய்கிறது. நாளை இரவுக்குள் சர்வமும் சூடேறிவிடும்.

வாய்க்காலை மருவியிருக்கும் அரசடித் துண்டுதான் கஷ்டம் தந்துவிட்டது. என்றுமில்லாச் செழிப்பில், இம்முறை நல்ல விளைச்சல். நிறைமாதக் கர்ப்பிணியாகக் கதிர்க்கொத்துக்கள் சரிந்து, வெயிலின் தங்கப் பொலிவு காட்டி மயக்குகின்றன. அறுவடையாகியிருக்க வேண்டும். மூன்றாம் நாள் வாய்க்கால் தண்­ர் அடித்துவிட்டது. மூன்றாம் கொலனியிற் குடியேறியுள்ள சிங்களவரால் வந்த வினை. அவர்கள் குடியேறியுள்ளது மேட்டு நிலம். மாரி வேளாண்மை மட்டுந்தான் வாசி. அவர்களுக்குப் பாயும் தண்­ர், இங்கு பொசிகிறது.

'நாளைக்கு உப்பட்டி எல்லாம் நல்லாக் காய்ஞ்சிடும். அப்பிடியெண்டால் புதன் கிழமை ராவைக்காவது அது சூட்டிலேறும். வியாழன் சூட்டு வேலியும் கட்டி முடிச்சிட்டால், பிறகு என்ன? வெருகலுக்கு போற ஒழுங்குகளப் பார்க்கலாம்.'

நினைவுகள், குடலை தள்ளி அசைந்தாடும் பயிரின் லாவண்யம் காட்டுகின்றன.

சொக்கலிங்கன் சோற்று முடிச்சுடன் களத்து மேட்டில் ஏறி வருகிறான். சோற்றைக் கண்டதும், 'சாப்பிட்டுத்தான் மத்த வேலயளப்பாக்கவேணும்' என்ற எண்ணம் வெகு இயல்பாக முளைவிடுகிறது.

"என்ன தம்பி, இண்டைக்கு நேரம் போயிட்டு. சரி போய குடிக்கிற தண்ணி ஒரு வாளி எடுத்தா."

"இப்பதான் அக்கா சமைச்சுமுடிச்சது" என்று பதில் கொடுத்துக் கொண்டே, வாளியுடன் வாய்க்காலோரம் குடிதண்­ர் எடுப்பதற்கு வெட்டப்படிருக்கும் மடுவுக்குச் சொக்கன் செல்கிறான்.

சொக்கன் அவன் நிழலில் வாழ்பவன். சித்திரவேலுவுக்கு இவன் மீது இனந்தெரியாத பாசமும் இரக்கமும். பாம்பு வயிறு. மூச்சுப் பிடித்து மூன்று கோப்பை சோற்றை ஒரு கை பார்க்கக் கூடியவன். வீட்டில், கூட மாட எதாவது வேலை செய்வான். கமக்காரனாக வேண்டுமென்பதில் கரிசனம் கிடையாது. ஊர்க்கதையும் ஊர்வேலையும் தினசரிப் பகலை விழுங்கிவிடும். இரவு நேரங்களிலும் வீட்டிலே தங்குவது ஒறுப்பு. வீட்டில் அவனைப் 'பொடியன்' என்றழைத்தாலும் வயது அற்ப சொற்பமா? தை பிறந்தால், இருபது வயதுகளை முற்றாக விழுங்கிவிட்டான். குடலை பருவக் காலத்தில், பரணிலிருந்து தகரமடித்து சில்லித்தாராக்களை விரட்டவேண்டும். கிளிப்பருவத்தில் பயிரில் விழும் பச்சைக் கிளியை விரட்டவேண்டும். இவற்றிக்குக்கூட வரமாட்டான். உறவு முறை இல்லை. தோட்டத்துக் குடிசையிற் பிறந்தவன். வேளாவேளையில் தந்தையையும் தாயையும் விழுங்கிவிட்டு, அனாதையாக சித்திரவேலு குடும்பத்துடன் ஒட்டிக்கொண்டான். அவனைத் திருத்துவதற்காகச் சித்திரவேலு கண்டிக்கத் தவறுவதில்லை. ஆனால், அன்னப்பிள்ளை உயிரோடு இருக்கும் மட்டும் அவளும், இப்பொழுது கனகியும் 'செல்லம்' கொடுக்கத் தவறவில்லை.

அவனைப் பற்றிய நினைவு வழிப்பாட்டில் ஊர, அவனே வாளியில் தண்­ருடன் வந்துவிடுகிறான். வெற்றிலை வாயை அலம்பி, கை கால்களைக் கழுவிக் கொண்டு, குடிப்பதற்கு ஓர் ஏனத்தில் தண்­ர் எடுத்து வைத்து, முடிச்சை அவிழ்க்கிறான். கொட்டியாராக் கடலிற் கிடைக்கும் பாரை மீன் குழம்பும், வாகரை முருங்கைக் காய் வெள்ளைக் கறியும். மரவள்ளிக்கிழங்கு ஆணமும் சுவையாக இருக்கின்றன. வஞ்சகமில்லாமல் பசிக்குச் சாப்பிடுகிறான். சாப்பிடும் பொழுது, சொக்கன் கலகலப்பாக ஊர்ப் பேச்சுக் கொடுப்பது வழக்கம். இன்று அதற்கு மாறாக மௌன நிஷ்டையிலிருக்கிறான்.

சாப்பிட்டு, கைகளைக் கழுவித் துண்டில் துடைக்கும்பொழுது, வயிற்றின் நிறைவை எதிரொலித்து ஓர் ஏவறை. வாயிற் சிங்கம் பீடியொன்று ஏற்றப்படுகின்றது. கதைப்பதை மனம் நள்ளுகிறது.

"ஏது கொட்டியார மீன்? மத்தியானமும் இல்லை"

"நான் பின்னேரமா மூதூருக்குப் போயிருந்தன்."

"அக்கா என்னைப் பத்திக் கேக்கலியா?"

"களம் களம், காவல் காவல் எண்டு இந்தாள் உசிரை விடுகுது. இப்பிடி வயலிலேயே படுத்துட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்? வீட்டில நானிருக்கிற எண்டு கூட இந்நாளுக்கு நினப்பில்லப்போல' எண்டு புறுபுறுத்தா. வீட்ட எப்பவாரெண்டு கேட்டாச் சொன்னா."

உதட்டிலிருந்து பீடியைக் கையிலெடுத்து உள்ளே இருந்த புகையை மூக்கினாலும் வாயினாலும் வெளிப்படுத்திக்கொண்டே, "நான் என்னடா செய்யிற? என்ர வாரக்காரன்கள் பாடும் பெரும் கஷ்டம். அந்தக் கங்கு வேலிக் கணபதியனைக் கண்ணாலும் காணல்ல. என்ன கோதாரி வந்துதோ? பள்ளிக்குடியிருப்புக் கதிர் காமன் சோக்கான ஆள்தான். ஆனா, அவன்ர பெண்சாதி இந்த நேரம் பாத்துத்தானா புள்ளப் பெறவேணும்? மூதூர் ஆஸ்பத்திரியில் இருந்து அவளை வீட்டுக்குக் கொண்டந்ததும் வயலுக்கு வந்துடறதாகச் சொல்லி அனுப்பினான். நாளைக்கு வந்தாலும் வருவான். அப்பிடி வந்‘ ஒருதரம் வீட்டுப் பக்கம் வருவனெண்டு சொல்லன். இந்த முருக்கட்டி வெளியில, முன் விதைப்புக்காரங்களின் வேலி இல்லாத மாட்டுத் தொந்தரவு மட்டுந்தானா? கள்ளப் படையள். காளி மனுஷ’ கூட்டத்திலிருந்து தப்ப வேணுமே" என்கிறான்.

"அப்ப நாளைக்குத்தான் வாரண்டு அக்காட்டச் சொல்லுறன்" என்று சொல்லியவண்ணம், அரிக்கன்லாம்பிற்கு அணித்தாக இருந்த சாப்பிட்ட மிச்சமான சோற்று முடிச்சுக்குக் கிட்டச் சொக்கன் செல்கிறான்.

"தம்பி, கொஞ்சம் மிச்சமிருக்கு. சாப்பிட்டன்."

"எனக்குப் பசிக்கல்ல."

வாழை இலைத் துண்டிலிருந்த மிச்சத்தை, களத்துமேட்டின் மேற்குப் புறத்திற் சடைத்திருந்த இலுப்பை மரத்தின் கீழ் வீசுகிறான்.

"இந்த ஊர்க்காரங்களுக்கு பனங்கழி அரிசி திண்டதில அரிசிவிலை தெரியாது. வாய்க்கு வாய்க்கல்லுக் கடிபடும் கூப்பன் அரிசிகூட வேளைக்குக் கிடைக்கல்லை யெண்டு எத்தின சனங்கள் கஷ்டப்படுகுதுகள்" என்று முணுமுணுத்தவாறே கடைசித் 'தம்'மை உறிஞ்சி, பீடிக்குறளை எறிகிறான்.

சோற்று முடிச்சின் சீலைத்துண்டை மடித்தெடுத்துக் கொண்டு, "அப்ப நான் போயிட்டு வாறன்" என்று சொக்கன் புறப்படுகிறான்.

"ஓம். அக்கா பாவம். தனிய இருக்கும். கதவை நல்லாப் பூட்டீட்டுப் படுக்கச் சொல். நீயும் காவலுக்குப் படுக்கிறாய்தானே?"

சொக்கன், சித்திரவேலுவின் பேச்சுக் காதில் விழாதவனைப் போல கிழக்குப் பக்கத்து அரச மரத்தடியில் நித்திய தவத்தில் உறங்கும் பிள்ளையார் விக்கிரகத்தையுந் தாண்டி, வரம்வில் நடந்துசெல்வது முகிலுக்கு ஊடாக வெளிச்சம் போடும் நில வொளியிலே தெரிகிறது. அவன் செல்லுந் திக்கைப் பார்த்தபடியே சித்திரவேலு நார்க்கட்டிலில் உட்காருகிறான்.

தூரத்தில், பெரியவெளிக் கிராமம் நிமைகளில் உறக்கப் போர்வை விரிக்கும் சோபிதத்திற் காட்சி தருகிறது. அதைத் தாண்டினால் மணற்சேனை. அவனுடைய வீட்டில் கனகி இந்நேரம் நித்திரையை வாலாயப்படுத்திக் கொண்டிருப்பாள்.

பயிரில் பால்பிடிக்கிற சமயம், அதனைக் குடிக்கக் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் சில்லித்தாரா வாக்கில் அவனுடைய நினைவுக் குதிர் விரிகின்றது.

*

பத்தர் தற்குறி யென்றாலும், தன் மகன் சித்திரவேலுவைப் படித்தவனாகப் பிரயாசைப்பட்டார். பஸ்ஸ”கள் ஏறி, துறைகள் தாண்டி, புளியந்தீவு 'முத்தவெளிப் பள்ளி'யில் போர்டிங்'கிற் சேர்த்துப் படிப்பித்தார். பெரியவெளிச் சாத்திரியார் சித்திரவேலுவுக்கு கல்வி மத்தியம் என்று கணித்தது உண்மை. தன் மகனைப் பற்றிய ஆசைகள் நெஞ்சில் வெறும் நாற்றுப் பயிராக இருக்கும் பொழுதே, பத்தர் நிலத்தில் மண் கிணற்றுக்குள் வாழ்ந்த தவளை. தன் கணவனின் வயல் நிலங்கள் எந்தத் திக்கில் இருக்கின்றன என்பதைக்கூட அறியாதவள். மகனைப் படிப்பித்துக்கொண்டு, நிலத்தை ஆயத்திற்கு விட்டுச் சுகங்காண முடியவில்லை. நிலத்தை விற்க வேண்டுமென்ற நிலையே வந்தது. அப்பொழுது, சித்திரவேலு புளியந்தீவுப் படிப்பிற்கு ஒரு 'கும்பிடு' போட்டு விட்டு, எட்டுப் 'புணயல்' எருமையுடன் நிலத்தை மதிப்பிக்க வயலுக்குச் சென்றான்.

ஏழு வருடச் சம்பாத்தியம் பிழையில்லை. பழைய வீட்டைவிற்று விட்டு, மணற்சேனையில், கிராமத்து அந்தஸ்திற்குப் பங்களாவாகக்காட்சிதரும் புதுமனையை அமைத்தான். அத்துடன் முருக்கட்டிவெளியில் தன் வயலுக்குப் பக்கத்திலிருந்த ஈச்சிலம்பற்றை வீரக்குட்டியின் நான்கு ஏக்கர் நிலத்தையும் கிரயத்திற்கு வாங்கிக்கொண்டான்.

வாழ்க்கைச் சக்கரம், விக்கனமின்றி, வசதியுடன் நேர்த்தியாகச் சுழன்று கொண்டிருக்கையில் பருவத்திற்கே வந்த மழையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கனகி என்றழைக்கப்படும் கனகம்மாவை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி சந்நிதியிற் கண்டான். தீர்த்தத்தின் போது, வெருகல் கங்கையில் நீர்க் காகமாகத் தலையை மூழ்கி இரண்டு முரடு தண்­ர் வயிற்றுக்குள் புகுந்துவிட்ட அவதியுடன் தலையை நீருக்குமேல் நிமிர்த்தியபொழுது தனக்குச் சற்றுத் தூரத்தல், கரையில் குளித்துக் கொண்டிருந்த கனகி தன்னுடைய திணறலைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டான்.

சூட்டிலே ஏறத் தயாராகக் காய்ந்து விட்ட பயிரின் தங்கத் திருமேனி. கமுகஞ் சம்பா அரிசியை வரிசையாக அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற பற்கள். இரத்த வெறியன் நெல்லின் நிறத்தில், நெளிந்து, நெளிந்து புரளும் இதழ்கள். விளைச்சற் காலத்தில் கதிர் கொய்ய வரும் பச்சைக் கிளிகள் சொண்டினைப் போல சற்றே நிமிர்ந்து வளைந்த மூக்கு. நெற்கதிரின் சுணையாக, நுட்பமாக வளர்ந்திருக்கும் புருவங்கள். வரிக்கனில் மீன் வேட்டைக்கு வரும் கிக்கிலுப்பையின் நீலம் படிந்த விழிகள். அதே சமயம் வரால் மீன்களின் துள்ளல் காட்டுஞ்சாயல். களத்து மேட்டிலிருக்கும் சந்திரகாந்தி மரத்தில் தொங்கும் குரும்பைகளாக உடுத்தாடை முடிச்சிலே திமிறிக்கொண்டு மறைவிடந் தேடுந் தனபாரங்கள்.

தோட்டத்து வெகுளியாக நிலைத்தான்!

அவள் குறும்புக் குஞ்சிரிப்பிற்குப் போர்வையிட்டு, தலையைக் கவிழ்த்து நாணினாள்.

கிளிவெட்டி நெல்லு ஸ்ரோர்மனேஜரும், 'லோயர்' என்ற பட்டப் பெயரின் உரிமையாளருமான வைரமுத்துவும் வெருகலுக்கு வந்திருந்தார். எல்லா விவகாரங்களிலும் ஆள் வெகு சுழியன். பன்னிச்சங்கேணித் துறையடியிலிருந்து, கிண்ணியா வரையுமுள்ள சகலரைப் பற்றியும், சகலவற்றையும் பற்றியும் அறிந்திருக்கும் நடமாடும் கலைக் களஞ்சியம். பிள்ளையார் சிலையிருக்கும் அசரமரத்தடியிற் கும்பிட்டுக் கொண்டிருந்த அவளை வைரமுத்துவுக்குக் காட்டி விசாரித்தான்.

"அறளி நிறச்சீலை கட்டியிருக்கிறதே? ஓம், அவள் கொட்டியாரத்துப் பெட்டை. நல்லா இருந்து கஷ்டப்படுகிற குடும்பம். அந்தோனியார் பள்ளிக்குடத்தில இங்கிலீசும் படிச்சிருக்கு. தாய் தந்தை கிடையாது. தாய்மாமன் தான் தஞ்சம். மாமிக்காரி கொடிசூரி. நல்ல குணம்."

"வைரமுத்தம்மான்! புண்ணியம் இடத்தில - அதுவும் சித்திரவேலாயுத சாமியின் கோயிலடியில-இப்பிடி நேர்ந்தால் அது விதிதான். கடவுள் புண்ணியத்தில எனக்குச் சொத்திருக்கு. சீதேவியப் போல இவ என்ர வீட்டுக்கு வந்தா..."

சித்திரவேலு ஒற்றைக்காலில் நின்றான். வைரமுத்துவும் பூரண ஒத்துழைப்புக் கொடுத்தார். பெண் வீட்டாருடன் எதையும் பேசி முடிக்கக் கூடிய லீயோ மாஸ்டரின் உதவியும் கிடைத்தது. அவர்களிருவரும் 'குழை'யடித்து, அரை மனதில் பிரசவமான தாயின் சம்மதம் பெற்று, பொங்கல் கழித்த தைத்திருநாளுக்கே, வெருகல் சந்நிதியிலேயே கனகியைச் சித்திரவேலுவின் மனைவியாக்கி விட்டனர்.

விவாகச் செலவுகளில் அவன் கஞ்சத்தனங் காட்டவில்லை. இரு போகமும் விளையும் இருபது ஏக்கர் நிலத்தின் கமக்காரன். ஐந்து 'தனிக்கார்' பிடித்து டாம்பீகமாக நடத்தப்பட்டது கல்யாணம். அவளுக்கு மனக்குறை இருக்கக் கூடாது என்பதற்காகத் தன் பணத்தில் அவளை ஒரு நகைக்கடையாக்கினான். கையில் ரொக்கமிருந்ததில்லை. கொட்டியாரத்து வியாபாரி கலந்தரிடமும், வைரமுத்துவிடமும் கடன்பட்டுத் தான் இவ்வளவு விமரிசைகளையுஞ் செய்தான். 'இது ஒரு கடனே? ரெண்டு வருஷம் வெள்ளாமை நல்லா விளைஞ்சா கண்மூடித் திறக்கிறதுக்கிடையில் கடனைக் குடுத்திடலாம்.'

கனகி வந்த வேளையோ என்னவோ முருக்கட்டி வெளிப் பகுதியிற் கோடை வெள்ளாமை நல்ல விளைச்சல். அப்படி எந்தக் காலமும் விளைந்ததில்லை; பொலிந்ததில்லை. பயிரைச் சூட்டில் அடுக்கி வைத்து விட்டுச்சூடடிக்க அவசரப்படாமல், மாரி வெள்ளாமைக்கு மாடு மிதிப்பித்தான். கையோடு விதைப்பும் நடந்தது. கடனைச் சீக்கிரம் அடைத்துவிட வேண்டுமென்ற தன்மான உணர்வு உந்திய வேகம். வயலில், 'ஈஷா'ப் பருவத்துப் பயிர்கள், பச்சைப் பசேலென்று வானைப் பார்த்தன. அவற்றையும், கோபுரம் கோபுரமாக எழுந்து நின்ற சூட்டையும் பார்த்து நெஞ்சங் குளிர்ந்தான்.

'பொங்கலும் அதுவுமாகச் சூடடித்தால், கடனில ஒரு பகுதியைக் குடுத்திட்டுப் பொங்கலையும் சோக்காக் கொண்டாடலாம்.' - இவ்வெண்ணத்திலே சூடடிப்பதற்கு ஏற்பாடு செய்தான். பொங்கலுக்கு மூன்று வாரங்கள் இருந்தன. அதற்கிடையில் மழை தூறிக் கொண்டேயிருந்தது. 'தூற்றல் நிற்கட்டுமே' எனக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல அது நிற்காது, நாளாக நாளாக மழை கனத்து, சரியாக வேதக்காரரின் நத்தார்ப் பண்டிகையன்று பெருவெள்ளம் போட்டது. 'நூறு வருஷத்துக்குள்ள இப்பிடி ஒரு வெள்ளத்தை நாங்க பாத்ததில்லை' என்று தொடுகிழங் 'கட்டைகள்' அபிப்பிராயப்பட்டனர். சித்திர வேலுவின் ஒரு பயிரையாவது விட்டு வைக்காமல். ஒரு சூட்டையாவது மிச்சம் விடாமல் வெள்ளம் கொண்டு போயிற்று. வெள்ளம் வடிந்தது. வெள்ளத்தால் வயல் பாழ்பட்டிருந்தது. வயலிலும் பார்க்க அவனுடைய உள்ளம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆறுதல் செத்தது. வீட்டில் அமைதியில்லை. மாமியார்-மருமகள் சண்டை வலுத்தது. 'இந்த அரிசிப் பல்லுக்காரி கால் வெச்ச முதல் வருஷமே இப்பிடி யெண்டால், இனி என்ன இடி விழக் காத்திருக்கோ?' என்று மாமியார் சீறுவாள். 'என்ர தலைவிதி இப்படியாப் போச்சு. தொட்டதெல்லாம் கரியாகுது' என்று கனகி விசும்பிப் பொருமுவாள்.

'இந்த மூதேவியைக் கொண்டு வந்த கையோட என்ர குடும்பச் செழிப்பு நாசமாய்ப் போச்சு' என்று முணுமுணுத்துக் கொண்டே, அதே 'மூதேவி'யின் கையால் கடைசித் தடவையாகத் 'தெளிவு' பருகி, இக ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அன்னப்பிள்ளை.

அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளும் வெள்ளாண்மை வாய்க்கவில்லை. சித்திரவேலு நாணயமானவன். கனகியின் நகைகளை-தாலியைத் தவிர-ஈடுவைத்துப் பணம் பிரித்துக் கல்யாணக் கடன்களை அவன் அடைந்திருந்தான்.

'அவளுக்குப் பூட்டி வடிவு பாக்கிறவயது. கல்யாணத்துக்குப் புறகு, வெருகலுக்குப் போகேல்ல. நகை நட்டொண்டும் இல்லாமல்...இந்தத் தடவை சித்திர வேலாயுதசாமி கண்களைத் திறந்து அள்ளித் தந்திருக்கிறார். இதைப் பார்த்த அண்டைக்கே கலந்தர் ஆயிரம் தர ஓம் எண்டான். வெள்ளிக்கிழமை காலம காசுகைக்கு வரும். அண்டைக்கே ஈட்டில இருக்கிற நகை எல்லாத்தையும் மீட்டு, அவளுக்குப் போட்டு ப பார்த்து.... ஊரில அவளை மலடி எண்டும் பேசுதுகள். வெருகலானே! நீதான் கண் திறக்க வேணும். ஒரு பூச்சியோ புழுவோ ஏற்பட்டு....'

*

குடலைப் பருவத்திற் கதிர் தள்ளும் பயிரின் வாக்கிற்குதிரும் நினைவுத் தொடரை, "தம்பி! தம்பி!" என ஒலித்த குரல் தடுத்து நிறுத்துகின்றது. எதிரில் பள்ளிக் குடியிருப்புக் கதிர்காமன்.

"மதியத்துக்குப் பிறகுதான் என்ர பெண்சாதியை வீட்டுக்குக் கொண்டு போக டாக்குத்தர் சொன்னார். வீட்டை வந்த பிறகு வஸ் கிடைக்கல்ல. சாப்பிட்டிட்டு நடந்துதான் வாறன். தம்பியும் மூண்டு நாள் காவல். நீ தம்பி வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வாருங்க."

"ஓம் அண்ணை. ஒருங்காப் போயிட்டு வருவம். எப்பிடியும் விடியக்காலமைக்குள்ள வந்துடறன். பாவம், கனகி தனிய. அவளைப் பாத்துட்டு வாறதுதான் நல்லது."

"கணபதி வரல்லயே?"

"அவன் பச்சைக் கள்ளன். மாரி வெள்ளாமைக்கு அவனை வாரக்காரனாகச் சேத்துக் கொள்ளவும் மாட்டன்... புள்ளையும் தாயும் சுகமே?"

"வெருகலான்ர புண்ணியத்தில எல்லாம் சுகம்... இந்தத் தடவை தம்பிக்கு பயிர் விளைஞ்சிருக்கிற மாதிரி, ஒரு குழந்தையும் பிறக்கப்போகுது..."

கருகிக் கிடக்கும் வானம் பார்க்கும் பயிருக்குக் கிடைத்த வான் மழையைப் போன்றிருக்கிறது கதிர்காமனின் பேச்சு. வெற்றிலைக் காகிதத்தை எடுத்து உற்சாகத்துடன் ஒரு 'கொடுப்பு'க்கு வெற்றிலை போடுகிறான். சாறன் உதறிக் கட்டப்படுகிறது. தூக்கணாம் குருவிகள் கூடு கட்டியிருக்கும் விளாத்தி மரத்திலே போட்டிருந்த 'பெனிய'னை உதறிப் போட்டுக்கொண்டு, "அப்ப பாத்துக்க அண்ணை" என்று சொல்லி, நாய் விரட்டுந் தடியுடன் வீட்டுக்குப் புறப்படுகிறான்.

அரசமரத்தடித் துண்டால் இறங்குகிறான். வாய்க்காலில் இன்னும் நீர் வடியவில்லை. அந்த நீரில் நடப்பதில் சிறு பிள்ளைத்தனமான குதூகலம் இருக்கிறது. நடக்கிறவன், எதோ கால்களிலே தட்டுப்பட நிற்கிறான். குளத்து மீன் பிடிக்க யாரோ வைத்த பறி. எடுத்துப் பார்க்கிறான். ஒரு பனையான் மீன் துள்ளிக் கொண்டிருக்கிறது. 'எந்த ஏழையின்ர பிழைப்போ' என்று பறியை மீண்டும் நீருக்குள் அமுக்கிவிடுகிறான்.

மீன் பறிகளிற் கால் தடக்குப் படலா மென்ற நினைப்பில் வரம்பில் நடக்கிறான். 'சளக்' வலக்கால் புதைகிறது. குனிந்து பார்க்கிறான். வக்கடையை மறித்து, நீர் வராமல் எழுப்பப்பட்டிருக்கும் ஈரவரம்பை மிதித்துவிட்டான். வாய்க்கால் நீர் உணர விடப்பட்டிருந்த வயலுக்குள் கசிந்து கொண்டிருக்கிறது. 'பாழாப் போன நிதானம்' என்று முணுமுணுத்துக் கொண்டே, கையினால் சேற்றை அள்ளிவரம்பைச் சரி செய்கிறான். சேறுபட்ட கையை வாய்க்கால் நீரில் அலம்பிக்கொண்டு மறுபடியும் வாய்க்காலில் இறங்கி நடக்கிறான். வாய்க்காலின் இந்தப் பக்கம் நீரில்லை. சேற்று மயம். மேட்டு நிலத்திற்கு வந்து சேற்றை உதறும் பொழுது, பெருவிரற்கெவருக்குள் ஏதோ கடிப்பதை உணர்கிறான். ஒர் அட்டை இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. காற்றிலே சுழன்றடிக்கும் நுனிக் கொம்பராக கால்களை அப்படியும் இப்பிடியும் உதறுகிறான். நல்ல வேளை. அட்டை கழன்று விடுகிறது. வெற்றிலைக் கக்கலைக் கடித்த இடத்தில் இடுகிறான். நடைதிடலிலே தொடர்கின்றது. கம்பிவேலியைத் தாண்டி ஒழுங்கைக்கு வந்து விடுகிறான்.

'இனி நேர்வழி. ரெண்டு கட்டை தூரந்தான். நான் கதவைத் தட்டிக் குரல் குடுத்ததும் கனகி ஆச்சரியத்துடன்....'

மல்லிகைத் தீவுக்கும், தேத்தா அடிச்சேனைக்கும் ஒழுங்கைகளைக் கெவர் விடும் பெரியவெளிச் சந்திக்கு வந்துவிடுகிறான். வீச்சு நடையில், தூரம் கால் எட்டிற்குள் நிற்கிறது. வாசிகசாலை உறங்கவில்லை. ஜனசமூக நிலைய மான்யத்தின் ஆசியுடன் எழும்பிய இரு இரும்புக் கம்பிகளின் மத்தியில் எழுந்து நிற்குஞ் சிறிய கட்டடம் அது. அதன் முகப்பிலே தபாற்பெட்டி யொன்று தூங்கி வழிகின்றது.

வாசிகசாலையின் விறாந்தையில் அமர்ந்து மணியம், இளையதம்பி, கோணாமலை, காசுபதி ஆகியோர் அரசியற் 'சமா' நடத்துகிறார்கள். இலங்கை அரசியலின் மிகச் சிக்கலான மொழிப் பிரச்சினையைக் கந்தப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

'இவங்களுக்கு என்ன? முன் விதைப்பு. சூடுகூட அடிச்சாச்சு!'

சித்திரவேலுவை அடையாளங் கண்டு, "என்னண்ணை, இந்த நேரத்திலே?" என்று மணியம் குரல் கொடுக்கிறான்.

"ஒம், தம்பி களத்திலிருந்து இப்பதான் வீட்டை போறன். வரட்டுமா? என்று சொல்லிக்கொண்டு, பேச்சுச் சள்ளைக்குள் மாட்டிக் கொள்வதிலிருந்து நழுவி, நடையைத் துரிதப் படுத்துகிறான்.

'இதுகளோட நிண்டு பேசினா பியதாசா கடையும் பூட்டீடும். ஜேமீஸ் கடை இந்த நேரத்தில் திறந்திருக்குமெண்டு நம்பத் தேவையில்லை. மூண்டு நாளாப் போகல்ல. ஆசையாப் போற நேரம் ஏதாவது வாங்கிப் போகலாம்!'

பியதாசா கடை வந்துவிடுகிறது. வெற்றிலைக் கடுதாசிக்குள் வைத்திருந்த சில்லறைகளை எடுத்துக் கொடுத்து, இரண்டு மூன்று தொதல் கட்டிகளும், நாலைந்து வாழைப்பழங்களுங் கட்டித்தரச் சொல்லுகிறான். "மல்லி, பக்குவமாக மடிச்சுத் தா."

பொட்டளம் கைக்கு வருகிறது. அதனைக் கக்கத்திற்குள் வைத்துக் கொண்டு நடக்கிற வேகம்....பிரிவில் மதாளித்து வளரும் விரகதாபத்திற்கு எப்பொழுதுமே ஒரு வேக முண்டு....

வீடு நெருங்கி விடுகிறது.

'வோக்கு'க்குக் கீழே வரிக்கன் ஓடாமல், மண் புழுக்கள் நெளியும் வாக்கில் சிற்றலைகளை சுழித்து நகர்கின்றது.

முகிற் கூட்டங்கள் கலைந்து, சந்திரிகை அம்மணப் பொலிவு சிந்துகிறாள். வீட்டின் முகப்பிலுள்ள நசிவித் தெங்கின்பதம் ஓலைகளினூடாக நிலவொளி முற்றத்தில் ஒழுகுகின்றது. சீதளச் சூலுற்ற காற்று. சில்வண்டின் சங்கீதம். மனற்சேனை, இரவு நாயகனின் மார்பிலே தன்னை மறந்து சயனிக்கிறாள்.

'கனகியும் தூங்கிக் கொண்டிருப்பாள். என்ர குரலைக் கேட்டதும்...?'

கடப்பைத் தாண்டுகிறான். அவனைக் கண்டதும் சொக்கன் கொல்லைப்பக்கமாக ஓடுகிறான். 'என்னைக் கண்டு ஏன் ஓடவேணும்? காவலுக்குப் படுக்கச் சொன்னா....'

கதவு இலேசாகத் திறந்து கிடக்கிறது. கனகியின் குரல் கேட்கிறது. சித்திரவேலுவின் உள்ளம் வெள்ளத்திற் கழுவப்படும் பயிராக அலைகின்றது.

"அவர் தான் என்ர புருஷன். ஒரு நாளும் துரோகம் செய்யமாட்டன்."

"இப்ப பத்தினி வேஷம் போடுறியா? மூதூரிலை படிக்கும்பொழுது நீ என்னுடன் வைத்திருந்த தொடர்புகள் எல்லாவற்றையும் சொல்லி உன்னை அவமானப் படுத்துவன். இணங்கு...."

"அந்தக் காலத்தில் நீ என்னைக் கட்டுவாயென்று நினைச்சு நடந்தன். நீ மாஸ்டர். என்னை விட்டிட்டு பெரிய சீதனத்தோடை ஒரு ரீச்சரை முடிச்சாய். ரெண்டு கையையும் எடுத்துக் கும்பிட்டன்...கலியாணங்கட்டி திருகோணமலைக்குத் துலைஞ்சு போன நீ, இஞ்ச இண்டைக்கு எப்பிடி வந்தாய்?"

"கனகி...நான் மல்லிகைத் தீவுப் பாடசாலைக்கு மாறி வந்ததிலிருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்..."

"பாவி!"

"ஏன் சத்தம் போடுகிறாய்? உன்ர புருஷன் இன்றிரவு வரமாட்டான். சொக்கன் சொன்னான். நானும் வந்த காரியத்தை முடிக்காமல் போகவும் மாட்டன்."

"அவனுக்குப் போட்ட சோத்தை ஒரு நாய்க்குப் போட்டு வளத்திருந்தாலும் உன்னை இப்ப கடிச்சுத் துரத்தியிருக்கும். சித்திரவேலாயுதர் சாமியறியச் சொல்லுறன். கையைத் தொடாதை விடு."

"இணங்கா விட்டால், நீ எனக்கு எழுதியிருக்கிற கடிதத்தை எல்லாம் உன்ர புருஷனுக்குக் காட்டி, உன்னை விலக்கி வைக்கச் செய்வேன்...."

"செய். உன்னோட கூடீட்டுச் சின்னத்தனம் படமாட்டன்."

'ஈப்பூச்சி பயிரில் விழுந்து பாலைக் குடிச்சால் அது பதராகும். சூடமடித்து, தூற்றும் பொழுதுதான் அது அகற்றப்படும்... ஆனால் கனகி?'

சிந்தனையில் நின்ற சித்திரவேலு சுய உணர்வு பெறுகின்றான். தொண்டையைக் கனைத்து, "கனகி!" என்று குரல் கொடுக்கிறான்.

*

இத்தா "உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் 4 மாதம் 10 நாட்கள் எதிர்பாத்திருக்கவும். (இதற்கு 'மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய ('இத்தா'வின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறு விவாகஞ் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றிக் குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்."

(குர்ஆன்: 2:234)

'இத்தா' என்ற சொல் 'ஈரா' என மருவி. கிழக்கிலங்கையில் வழங்கப்படுகின்றது. 'ஈரா' என்னுங் கதை மட்டக்களப்புத் தென் பகுதிவாழ் முஸ்லிம் மக்களுடைய பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

................

ஈரா

"இண்ட ஒரு பொழுதும் இரிக்கி. நாளக்கி பஜறு வெளிச்ச ஓடன செற கழியுது."

அவுத்துக் கனி மாமட மகள். அலிமா நாச்சி ஒலகம் தெரிஞ்சவ. அவவும் என்னப்போல ஈரா இரிந்தவ. நான் வாண்ட வரிசந்தான். அவட புரிசனார். மகுத்தானார். நேத்தெண்டாப் போல இரிக்கி. மூணு வரிசம் எவ்வளவு சுறுக்கா ஓடிப்பிறிஞ்சி போச்சி. ஈரா இரிக்க எண்டா லேசுப்பட்ட காரியமா? தலக்கி எண்ண பூசாம, சர்வாங்கத்தில பூணாராம் போடாம, வெள்ளப் பொடவ உடுத்தி, ஆம்புளர மொகம் பாக்காம இரிக்க வேணும். ஈரா எண்டா அரிமாநாச்சி சொல்லுக மாதிரி செறவாசந்தான். நாலு மாசம் பந்தரப் பொழுதுக்கு ஊர் ஒலகம் தெரியாம இரிக்க தெண்டால் எவ்வளவு கரச்சல்? அலிமாநாச்சி ஈரா இரிக்க நான் மணவற போகப்போற புதுப்பெண். அவக்கு ஈரா கட்ட நான் பச்சக்கிடுக எளச்சு சுறுக்கக் கண்டு கூடி இரிந்த எல்லாளும் எரிச்சல் பட்டுக் கதச்சி, கண்ணும் வெச்சுப் போட்டாளுகள். அதுக்குப் பொறகு எனக்குக் கை சுறுக்கில்ல. வாழுகத்துக்கு முந்திக்கூட இரிந்து பாயௌக்கும் தொழில். மத்தப் பொண்டுகள் ஒரு பாயௌக்கிறதுக்கெயில, நான் ஒரு பாயத் தலக்கட்டிப் போட்டு, அடுத்த பாய அடிப்போட்டு, ரெண்டு குத்துக் குத்திப் போட்டிறுவன். மூணு குத்துக் குத்தினா ஒரு பாய்.

"என்ர சீதேவிக் காக்காக்கு நாளயோட சொவர்க்கத்து வாசல் தொற பட்டுறும். ஹுர்லீன் பெண்டுகள் கனிவர்க்க மெல்லாம் கொடுப்பாங்க."

ஈன கதக்கவ என்ர மூத்த மதினிக்காரி. அவர்றய ஒடப்பொற்ப்பு. கள்ள அல்லாக்கு மத்திக்கமா நடக்கிறவள்... நான் ஈராவில இரிந்து வெளியான ஓடன அவருக்கு பிரிதவுசு கெடச்சிரும். பெண்டாட்டிமார் ஈரா இரிந்தா புரிசன்மார்றபாவ தோஷம் கொறயுமாம். சொவர்க்கம் கெடக்காட்டியும் அதாபு குறையுமாம்.

"அப்பிடி இல்லகா புள்ள. ஈரா இரிக்கத்தால ஆம்புளயளுக்கு அங்கிந்து வழியில ஒரு நன்மையுமில்ல. புரிசன் மகுத்தான ஒடனயே வேற புரிசனுக்கு வாழ்க்கைப் படலாம். முந்தின புரிசன் மகுத்தான அண்டைக்கோ, அதுக்கு முந்தியோ ஊடு கூடி புள்ளத் தரிச்சிந்தா அந்தப்புள்ள அவர்றய, இவர்றய எண்டு அறிய ஏலாது. நாலு மாசத்தாலதான் ஒருத்தி புள்ளத்தாச்சி எண்டத மத்தவங்க பாத்து அறிஞ்சிக்கலாம். பொண்டாளக் கூடிய ஆம்புளயளக் காணாம வெலகி இரிக்கத்தான் ஈரா வெக்கிறாங்க,"

என்ர சுபகானல்லா! இப்பிடி சங்கதி! ஆசியத்து முத்தம்மா ஈமானிஸ்லாம் தெரிஞ்சவ. ஒரு ஒகுத்து தொழுகயும் விடமாட்டா. மிரிவடிக்கால்லதான் நடப்பா. பள்ளிக்கொடம் வெச்சி புள்ளயளுக்கு குர்ஆன் ஓதிக்கொடுக்கிறா. அவ சொன்னாச் செரிதான். நான் எண்ணிக் கிருந்ததெல்லாம் அவருக்கு ஆகிற சமானிலே நல்ல வாழ்ச்சியம் கெடக்கும் எண்டுதான். சாச்சா, காக்கா, தம்பி எல்லாம் என்ன வந்து வந்து பார்பாங்க. வேற ஆம்புளயள்தான் ஒருவரும் வாறதில்ல. புள்ளத்தாச்சிமாரும் வரப்படா.

"அங்குத்து நாளயில நீதான் ஒம்புரிசனுக்குப் பெண்டாட்டி. அவர் தான் ஒனக்குச் சோடு. அந்தத் தட்டுவாணியள் மூணுபேரும் அவன வேணா எண்டு சொல்லி தலாக்குச் சொல்ல வெச்சிற்றாளுகள். அடங்காமாரியள்."

நான்தான் அவருக்கு ஆகிறத்தில சோடியாம். பாவம் மூத்தம்மாவுக்கு என்ன தெரியும்? என்ர கல்பு சொல்லுது நான் அவருக்குச் சோடியில்ல எண்டு. எனக்கு முந்தி, ஒருதி பின்னால் ஒருத்தியாக மூணு பேர? முடிச்சார். அவளுகளும் ரெண்டொரு வரிசம் பாத்துப்போட்டு வேணாம் வேணாம் எண்டிட்டாளுகள். பாவம் அவளுகள் தான் என்ன செய்வாளுகள்? அவருக்குத்தான் என்ன கொற? காணி பூமிக்கிக் கொறச்சலா? மாடு கண்டுக்குக் கொறச்சலா? நகநட்டு இல்லயா? றிஸ’க்கு கொடுக்கல்லயா?...இதுகளுக்காக மட்டுந்தானா வாழுக? நானும் பொறுத்துப் பொறுத்து மனப்பூங்காரம் தாங்க ஏலாமத்தானே மையதீன் மச்சானோட தொடுப்பு வெச்சன்.

என்னோட வெளயாடினவளுகளெல்லாம் கையில் ஒண்டும் கக்கத்தில் ஒண்டுமாகத் தூக்கிக்கிட்டுத் திரியிறதப் பாத்து வெப்புசாரம் தாங்க ஏலாம, ஒருதரும் இல்லாத நேரத்தில எத்தினதரம் அழுது இரிக்கிறன்? உம்மாதான் என்ன செய்வா? அவவும் தாலியறுத்த கைம்பெண்டாட்டி. எனக்கு மாப்புள எடுக்க அவவால தௌலத்து காணும? இப்பிடி இரிக்கத்தான் மையதீன் மச்சான் பாய் வாங்க வந்தார். நல்ல எளந்தாரி. மொட்டத்தல இல்லாம, சோக்கும் கீக்குமா இரிந்தார். என்ன ஒரு சாதியாப் பாக்க.... நானும் அவர ஆனக்கிடுகால பாக்க....

ஆனா, இந்த நேரத்தில தான் என்ர அவர் மூணாம் பொண்டாட்டிய திலாக்கு சொல்லிப் போட்டு என்ன வந்து முடிச்சார். அவருக்கு எங்கட சாச்சாட வயசிரிக்கும். ஒரு நாளக்காவது புரிசன் பொண்டாட்டியா இரிக்காட்டி வாண்டதில என்ன புறசனம்?

"முந்தின தொளுப்புறிகள் செய்யாத பாக்கிசத்த நீ செஞ்சரிக்காய். அவளுகலிட வகுத்தில ஆண்டவன் ஒரு காயக் குடுக்கல்ல. ஒண்ட வகுத்திலதான் காச்சிரிக்கி. ஆறு மாச மெண்டாத் துடிக்கும்."

இப்ப நாலஞ்சி நாளாத் துடிப்புத்தான். புள்ளக்கி உசிர் வந்தாத்தான் துடிக்குமாக்கும். எனக்கு இதுக தெரியாது. இதுதான் தலப்புள்ள. "சோட்டைக்காவது எங்காக்காக்கு ஒரு புள்ளக் கிணாட்ட இல்ல எண்டு எவ்வளவு கக்கிசப்பட்டம். அந்த நாயகன் ஒரு புள்ளயக் குடுத்திற்று, காக்காவ அழச்சிட்டான். நாகூர் மீராசாய்பு ஆண்டவர்களே, ஆலிசமில்லாம அந்தப்புள்ளக் குஞ்சயாவது குடுத்திரிங்க. காக்கா சொத்துக்கெல்லாம் அதுதானே உரித்தாளி." வல்ல பெரிய நாயகனே, பூப்போல என்ற வகுத்துச் சொமயக் கழத்தி, நோய் நொடியில்லாம என்ர உசுப் பிராணிய வளத்துத் தந்திர வேணும். அவரிக்கு வாண்ட சங்கைக்காக என்ர புள்ளக்கித்தானே அவர்ற ஆதனமெல்லாம் சேர வேணும். எனக்கு அவரோட எரக்கந்தான். என்ர உசிரக் குடுத்துத்தானே அவரிக்கு அணிவிட பணிவிட எல்லாம் செய்தன். அவர வாப்பாவப் போலவே கவனிச்சி வந்தன். இப்புடி எல்லாம் கஷ்டப்பட்ட என்ர கல்புக்கு மையதீன் மச்சானக் கண்டாத்தான் குளுமை. மகுத்தாகுரத்துக்கு ரெண்டு மாசத்து முந்தி அவருக்கு இரிமல் வரித்தம் ஒரத்திற்று. புளியந்தீவு ஆஸ”வத்திரிக்கிக் கொண்டு போனதுக்குப் பொறகு ஊட்டில நான் தனிய. நல்ல முன்னிருட்டு க காலமும். ஒருவர்ற கண்ணிலயும் படாம மையதீன் மச்சான் வந்து போவார். புரிசன் இல்லாதவங்களோட ஊடு கூடுகது சனா. சனா செய்யுறது ஹறாம்தான்.

"நான் போய் நாளக்கி செவகு தொழுதாப்போல வாறன் மச்சாள்."

ஆசியத்து மூத்தம்மா போறா. ஈராவில இரிந்து வெட்டக்கு எறங்க அவதான் பாத்தியா ஓதுவா. வாழப்பழம், பிசுக்கோத்து, சாம்புறாணி எல்லாம் வாங்கி வெக்கவேணும். அதுக்கு உம்மா வந்திடுவாக.

.............

நெறி

நீர் வளமும் நிலவளனுங் கொண்டு நாலரணுமணி செய்யும் மாஞ்சோலைச் சிற்றூரிலிரு மரபுஞ் சிறப்புறவமைந்த தமிழ்ப் பெருங்குடியிற் பிறந்து, ஓங்கு புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்குஞ் சான்றாண்மை மிக்கக் குணக்குன்றென முருகவேளனார் வாழும் பெற்றியரெனப் போற்றுதல் மிகைப்படு கூற்றின்வாய்ப் படுவதாக அமையமாட்டாது. என்னையெனில், அவர் அறம் மரீ இய ஒழுக்கத்தையும் அருள் தழீஇய நெஞ்சத்தையும் பெற்றதினாலென்க. அன்றியும், இல்லறமும் நல்லற மாண்புடன் அமைந்தது. கற்புநெறி பிறழாத அவர்தம் இல்லக்கிழத்தி இருள் அழிக்கும் குத்துவிளக்கன்ன மனையறமோம்பும் தகைமையள். நிறைவிற் சிறப்புற்ற அவர்தம் செம்மை சேருள்ளத்தைக் கயவர கத்தினழுக்காறு போன்ற குறையொன்று மண்டி ஊறுசெய்து வருதலை அவரறிவார். அஃதென்னை யெனில், தென்னவன் மொழியாம் செந்தமிழின் தீஞ்சுவை தனிற்றிளைத்துப் பாவியற்றுந் திறமைமிகு ஆற்றல் பெற்று உயர்கம்பனையும் விஞ்சுஞ் செந்நாப்பாவலனாக இலக்கியப் பணியியற்றுதலை வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டு கற்றோரும் மற்றோரும் போற்றும் பீடுடைய விழுமிய வாழ்க்கையை நெறிப்படுத்திப் பயிலுதல் வேண்டுமென்னும் பெருவிருப்பிற் கொவ்வாது அவர்தம் ஊழ் அமைத்ததனாலென்க. பண்டிதர்பட்டம் பெறுவான் வேண்டிக் கற்றாராயினுந் தேர்விற்குத் தோற்றினாரல்லர். ஏனோவெனின், அதற்கிடையிற் பொருளீட்டற் றேவைகள் பிடர்பிடித்துந்தினதாலென்க. கலம்வழி வந்து நம்நாடு கொண்டு ஆட்சி செய்த ஆங்கிலேயாதம் மொழிகற்றோர். பெரும் பொருளீட்டிப் பெருவாழ்வு வாழ்தலைக் கண்ணுற்றும் அழுக்காறு கொள்ளாது, மாவடிப்பள்ளியிற்றமிழ் கற்பிக்குந் தொழிலை மேற் கொள்வாராயினர். பசிநோக்காது கண்துஞ்சாது கடமையையே கண்ணாக இயற்றும் பெற்றியர். கற்பிக்கு மோரையொழிய மற்றையப் போழ்துகளிற் பாவின்பத்திற் றுய்த்தலைத்தலைக்கொள்ளலானார். இல்லக்கிழத்தியின் இல்லப் பணிகளிலுங் கைகொடுத்துதவு மியல்பினராயினும், அவற்றிற்குத் தக்க நெறிகளைக் கற்பியாநின்றார். வைகறையிற் றுயிலெழுந்து முன்றிலின்கண் சேர்ந்த கூழங்களை அகற்றுதல் அவர் தம் உடற்பயிற்சியா யமைந்தது. இறை மாட்சியாரின் மிகு கொடையிற் காலூன்றி நின்ற கூட்டுறவுப்பண்ட கூடத்திற்கு இல்லாளின் இனிய வேண்டுதலை நிறைவேற்றுவான் வேண்டிச் செல்வதுமுண்டு. திங்களிறுதியிலுழைப்பீட்டத்தை இல்லக்கிழத்தியிடம் முழுமையாக ஒப்படைத்தலைக் கடமைகளிற்றலையானதாகக் கொண்டொழுகுபவர். இல்லத்தேரை இல்லாளின் துணைகொண்டு செவ்வனே செலுத்தினாரென்க. அவரை நாம் கையில் நூலுடன் வீட்டுத் திண்ணையிற் காண்போமாயின் அவர் இலக்கியச் சவையிற்றிளைத்தின் புறுகின்றாரெனக் கொள்ளுதல் தகும். அவர் கற்பான் புகுவனயாவும் இலக்கிய நூல்களேயாம். பறம்பு மலையையுங் கொடையாக வழங்கிப் பாரி மாண்டுவிட அங்கவை சங்கவை பட்ட இடரை நேரிற் கண்டவர்களின் முன்னோர்களே மாஞ்சோலைச் சிற்றூரிற் குடியேறினார்களென்னும் வரலாற்றுண்மையை ஆலடிமுருகன் கோயிற்செப்பேடு உறுதிப்படுத்துகின்றது. பொரட் பெறுதியறிந்து செலவு செய்யும் மாஞ்சோலைப் பண்பிற்கு முருகவேளனார் பிறழாதவர். இல்லாள்வழி நிற்றல் வேண்டிக் கூட்டுறவுப் பண்ட கூடத்திற்குச் செல்லும் வழியிற் பாணர் நின்று ஆற்றுப்படுத்தாது விடினுந் தென்னவன் நூற்பண்ணை யெனுமேடு கொள் கடையில் ஒரு நாழிகை போழ்து தங்கிச் செல்லுதல் அவர்தம் பெரு வழக்கா யமையும். நூற்பண்ணையில் முருகவேளனார் தணிகை செய்யுங் காலை யாதேனுமொரு நூலில் அவர் தம் விழிகள் நிலைத்துவிட்ட தெனின் வினைகொளற் றொடங்கி விட்டதெனப் பொருள்கொளல் பொருந்துவதாயமையும். பிற்றை, பண்டகூடத்திற்கொள்ளும் பொருள்களின் இனமும் எடையுங் குறைவுறும். கையிலுள்ள நூலைக் கொண்ட இவ்வினையினை இல்லக்கிழத்தியும் அறிவாள். அப்போழ்து அவளிடத் தேலோதோலெனப் பொருதும் மறம் பிறக்கும் நாவின் கோடையிடி ஒலித்து மடிந்து இணக்கந் தோன்ற பனி அரும்பிப் பைதல் கொள் மாலையாகிவிடும். இவ்வெகுளலை அவர் புன்றொழிலென எண்ணினும், மாஞ்சோலைக் குடிகள் இதனை அகத்திணை மருவிய இன்ப நிகழ்ச்சியாகக்களிப்பர். களிப்பேனோவெனில், ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பங் கூடிமுயங்கப்பெறின் என்னும் வள்ளுவர் வாய்மொழி பயின்றதினாலென்க. இஃதிவ்வாது நிற்க, முருகவேளானார் இயற்றிய பாக்கள் சில திங்களேடுகளில் வெளிவருதலு முண்டு. அற்றை ஞான்று அவர் வாழ்வது இஞ்ஞாலத் திலில்லை. தைத்திங்கட் கடைநாளில் வந்துள்ள இற்றை ஞான்று அடிசிற்கினியவனின் இன்மொழியை நிறை வேற்றுவான் வேண்டி அவர் கூட்டுறவுப் பண்டகூடத்திற்குப் புறப்படலாயினர். பொங்கல் விழாவிற் பொருள் பெரிதுஞ் செலவாயிற்றென்றும், தலையாய பண்டங்கள் கொள்ளவே பொருளுண்டென்றும், தென்னவன் நூற்பண்ணைப் பக்கல் மறந்துஞ் செல்லல் வேண்டாமென்றும் பலவாறு ஆற்றுப்படுத்திக் கையிருப்புக் கொடுத்துக் கொழுநனை அவரில்லக்கிழத்தி போக்கிவைத்தனள். இல்லா ளியம்பிய இன்சொற்களைத் தலைமேற் கொண்டியற்றும் உறுதியுடன் வந்தாராயினும் பழக்கப்பண்பினாற் றென்னவன் நூற்பண்ணை மருங்கிற்றங்கலானார். நூல்விற்போன் முறுவலித்து நல்லுரை கூறி வரவேற்று அவர்தம் பாவென்று பொறிக்கப்பட்டிருக்குந் திங்களேட்டினைக் காட்டுவானாயினன். கருப்பஞ்சாற்றிடற் பனஞ்சாறும் நன்றெனத் தெளிந்து எண்ணித் துணிந்து அவ்வேட்டினை வாங்கித் தமது பாவிற் றிலைத்தின்புறத் தொடங்கினார். அவ்வோரை பிறிதொரு பாவாணரும் ஆண்டு வந்துற்றனர். உரையாடலின்போது தாம் பெரிதுவந்து சுவைக்கும் பாக்களை யாத்த பாவாணரே அவரென யறிந்த முருகவேளனார் மகிழ்ச்சிக் கடலை மாந்தலானார். முழுமுதலிறையை நேரிற் கண்டவனாக மருளும் முருகவேளனாரைத் தமது புதிய பாக்கோவை ஏடொன்றைப் பெற்றுச் சுவையெய்துமாறு பாவாணர் ஆற்றுப்படுத்த விழைந்தனர். கழகப் பருவப் புரவலர்த்தகைமையர் அருகிவரும் இற்றை ஞான்று முருகவேளனார் போன்றோரின் இலக்கியப் பற்றின்கண்பற்றியே புதிய இலக்கியங்கள் வளம்பெறு கின்றதெனவும் பாவாணர் நயம்படவுரைத்தார். நெஞ்சமிளகச் செஞ்சொற் பாவாணரின் பாக்கோவைப் படியொன்றினை வாங்கிய முருகவேளனார் தாம் பாவலராகவும் புரவலராகவும் உயர்ந்து நிற்பதை நினைத்தின் புற்றனர். பிற்றை, கூட்டுறவுப் பண்டத்திற்குச் செல்லாமலே இல்லம் மீண்டமை பொருளின் மையாலென்க. அவற்றை ஞான்று வீட்டின் அடுக்களையிற் இற்புலி படுத்துறங்குங் காட்சியை நெஞ்சுருகப் பாடத் தாம் சத்தி முற்றத்துப் பாவலராகயில்லையேயென்ற குறை எழ ஆறில்லையென்பதை யறிக. ஏனோ வெனில், முருக வேளனார் திளைத்தின் புற்றுக்கொண்டிருக்கும் ஞாலம் இல்லக்கிழத்தியின் கோடையிடிக் குரல்களங் கேட்காத பாவாணர் மட்டு முய்த்துணரும் வேறொரு ஞாலமென்பதினாலென்க.

............

விலை

"கிலைட்டி ஸ’யாமினி சோமநாதர்." - வழக்காளியச் சத்தம் போட்டுக் கூப்பிடுகிறாங்க. வாய்க்குள்ள நுழயாட்டிலும் வடிவானபேர். என்ர பேர் பாக்கியம். சிவபாக்கியம், தவபாக்கியம் எண்டு வடிவாக் கூப்பிட்டா நல்லா இரிக்கிம் எண்டு சிலவேளை யோசிப்பன். மாங்காட்டுப் பள்ளிக்குடத்தில் ரெண்டு எழுத்துப் படிக்க அப்பன் அனுப்பேக்கிள்ள, வெத்திலத் தோட்டத்துக்கிள்ள கள்ளமொளிச்ச எனக்கு இந்தப் பேருகாணாதா?

"வயது?" - பேர்போன அப்புக்காத்தரய்யா கூட்டுக்க நிக்கிற, எடுப்பாச் சோடிச்சி வந்திருக்கிற அம்மாவைக் கேக்கிறார். இம்பிட்டுப் பெரிய திருகணிக் கொண்டக்காரி.

"வருகிற மாசியில் முப்பத்தொரு வயது முடியும்." நேற்றுத்தான் சமஞ்ச பொடிச்சியாட்டம் இருக்கி. அதுக்கு இத்தின வயசா?

அப்புக்காத்தர்களம் பொரக்கிலாசிகளும் கேக்கிற கேள்வியளுக்கு ஆருக்கு பதில் தெரியும்? யப்பான்காரன் இந்தப் பக்கத்தில குண்டு போட்ட வருசந்தான் நான் புறந்தனானாம். என்ர அம்மைக்கு இது ஒண்டும் தெரியா. அது வெறும் கிணாந்தி. அப்பனுக்கு ஒண்டும் நினைப்பில்ல. அவரு படிச்சவரு இளயாம்பி கடைக்குப் பேப்பர் படிக்கிற கேக்கப் போவார். அந்தத் தரும ராசா கதயெல்லாத்தயும் நெஞ்சில வைச்சிருக்கிற மனுஷனுக்கு இதுகள் தெரியா. ஆனா, விதானயார் மெய்யாக் கனக்கப்படிச்ச ஆள்தான். ஊரில உள்ள எல்லார்ற புறப்பு வளப்பெல்லாம் அப்பிடியே சொல்லுவார். தோம்பர் அறளபுடிச்ச கிழவன்.

"காதல் திருமணந்தானே?" - இப்பிடிக் குறுக்கால கேப்பாங்க எண்டு அன்னம்மா மச்சாள் சொன்னாள். காசி வாங்கிப் பேசிற அப்புக்காத்தரல்லுவா? சும்மா உடுவாரா?

"ஓம்." - கூச்சப்படாமல், வெக்கப் படாமல் ஒத்துக் கொள்ளுறாள். போன்கிழம் அந்தத் தேத்தாதீவுப் பள்ளியில படிக்கிற ஆரோக்கியம் - சமஞ்சு இப்ப மண்டு மாசம் தானாம்- ஆரோடயோ ஓடீட்டாளாம். இதுகும் எந்த பள்ளியில படிக்கேக்கிள்ள ஓடிப் போச்சுதோ? விதானயார்ட மோதாவிலதான் என்னப் புளியந்தீவு மாப்புளை கணபதிக்குக் கட்டிக்குடுத்த. முன்னும் பின்னும் இவரத் தெரியவும் மாட்டுது. ஒரு நாள் எங்கட ஊருக்கு விதானயார்தான் கூட்டிக்கு வந்தார். அப்ப அப்பன் உசிரோட இரிக்கி. இவர் ஆள் நல்ல சிவலயும்; களிக்குத்தி மாதிரி. சோக்கான உடுப்புத்தான். அப்பன் ஒருநாளும் சேட்டுப் போடமாட்டுது.

"என்னைப் பார்த்துச் சொல்லும்" - அப்புக்காத்தர் உறுக்கிறார்.

அண்டைக்கு இவர் வெச்ச கண்வாங்காமல் என்னப் பார்க்கிறார். என்ன எல்லாச் சனங்களும் கொத்துக்க இரிக்கிற மாம்பழமெண்டுதான் சொல்லுவாங்க. புளியந்தீவில ஓடாவி வேல செய்து நல்லாச் சம்பாரிக்கிறாரெண்டு விதானயார் சொன்னார். எல்லாருக்கும் புடிச்சிப் போச்சு. எனக்கும் புடிச்சிட்டு.

முத்தவெளிப் பக்கமாக இருக்கிற வாக மரத்தடியில வந்து குந்துறன். என்ர மகள் என்ர அம்மையோட சண்டைக்கு நிக்கி. அது என்னத்தக் கொட்டித் தள்ளுது. கடலக் கொட்டை கேட்டு அது புடிக்கிற சண்டயப் பாக்க ஒண்ணா, ஒரு காசிக்கு வேண்டிக் குடுக்கிறன். அம்மையும் நானும் ஒரு வாய்க்கி வெத்தில போடுறம். வெத்தில போட்டால் என்ர வாய் எப்பவும் சிவக்கும். வாய்சிவந்தால் புருஷன் சீவன வச்சுப் பிரியமா இருக்குமாம்.

எங்கட ஊடு, வெட்டுக்காட்டுத் துண்டில, புதிசாக் கட்டின பெரிய ஊட்டுகளுக்கடிட்டத்தான் இரிக்கி. ஆனா, அயலட்டையில கூப்பிட்ட குரலுக்கு உதவியில்ல. என்ர இவருக்கு ஓடாவி வேல வசுக் கொம்பனியில தான். இண்டைக்கு வெள்ளிக்கிழமயளில ஆன் கூப்பிடுறாங்க. இவர் நாயித்துக் கிழமயிலதான் வீட்டில நிப்பார். கொஞ்சம் பூசீட்டா அடுப்படிய விட்டு உசும்ப மாட்டுது மனுஷன். சனியில் ஒரு தியால வேலை தான். அண்டைக்குத் தவறணப் பக்கம் போச்சுது எண்டால் கருக்கலுக்க ஆன் வரும். எழுவான் பக்கம் இந்தாள் போனாலே எனக்கி நெஞ்சுக்க இடிஆன். அவர் வேலக்கிப் போணா, மகளத் தூக்கிக் கொண்டு காணிக்கை மாதா கொயிலடிக்கு வந்து கறியப் புளிய வாங்கிறனான். ஓடியாடிச் சமச்சுட்டா பொடிச்சிர முஸ்பாத்தியில இரிக்கிலாம். மாங்காட்டில இரிக்கேக்கில் பக்கத்து உட்டிலயெல்லாம் போய்க்கதப்பன். இஞ்ச அயலட்டயில பேச்சுத்துணை இல்லாம வாய் புளிச்சுப்போகம். அம்மை இஞ்ச ஆசை அருமயா வந்த உண்டு. ஆனா, அதுவும் வந்து ரெண்டு மூண்டு நாள் தங்கினா இவர்ற முகம் கறுத்துப் போகும். நான் என்னத்தக் கண்டன். குளுதாவளயான்ர புண்ணியத்திலதான் அந்த நோனாக்கா வந்து சேந்தாளெண்டு முதலில நினச்சன்.

இவர் சாட்சி ஊட்டியில நிண்டு விதானயாரோட பேசுறார். பாவியப்போல நிக்கி. உடம்பும் இளச்சுப் போச்சு. ஆனா, இந்த மனுஷன் எனக்குச் செய்த வேலய நினைச்சுப் பாத்தா...வில்லியம் வாஸ் கொஞ்சம் கிழவன்தான். வஸ் கொம்பனியிலஆன் அவருக்கும் ஓடாவி வேல. தல பஞ்சுப் பொட்டிதான். ஏதோ பேச்சில தன்ர பொஞ்சாதிய இஞ்ச கூட்டிக்கு வந்து இருக்கிறதுக்கு வீடில்ல எண்டு சொன்னதாம். மனுஷ’யும் நல்லது, தனக்குத் தெரியுமெண்டு இவர் சொன்னார். எனக்குப் பாவம் போல இருந்துது. இவரே நாங்க இருக்கிற வெட்டயில ஒரு குடில் போட்டுக் குடுத்திட்டார். சண்டாளி, அவள் இப்பிடிப் புருஷன் கொள்ளி எண்டு நான் எப்பிடிக் கண்டன்? மாங்காட்டில் இருக்கேகிள்ள களுவாஞ்சிக்குடி வக்கர்ற பொஞ்சாதிய எனக்குத் தெரியும் வதுளைச் சிங்களத்தி. தமிழ் பேசிற கிளி போலதான். ஆனா, இந்தத் தட்டுவாணி கூட என்ன வடிவாத் தமிழில கொட்டுது.

"டியே, புள்ள! வழ ககுக் கூப்பிட்டாலும், நீ இஞ்ச நிக்கிறாய்?" என்ர அம்மை சும்மா இருக்கா. எப்பவும் அவசரந்தான்.

பொம்பிள வழக்காளியன் நிக்கிற பக்கம் போறன்.

அப்புக்காத்தரய்யா நல்லாத்தான் கழத்துறார்.

"உம் புருஷன் வேலைக்காரியுடன் தொடர்பு கொண்டதைநீர்நேரில் கண்ணால் பார்த்திருக்கிறீரா?"

"இல்லை. தானும் என் கணவரும் தொடுப்பென்று வேலைக்காரியே என்னிடம் சொன்னாள்."

எதிரே எதிரியா நிக்கிற துரை பாவம். பெரிய உத்தியோகமாக்கும். மிரிச்ச இடத்துப் புல்லுக் கூடச் சாகாது.

"ஏன் உன் வேலைக்காரி உன்னிடம் ஒரு பொய்யைச் சொல்லியிருக்கக்வடாது?"

என்ர மச்சாள் அன்னம்மா சொன்னது மெய்தான். அவளுக்குக் கோடு- கச்சேரி எல்லாம் ஏறிப் பழக்கம். ரெண்டு தரமல்ல தாவரிப்பு வழக்குப் பேசியிரிக்காள். உடுப்பில பாத்தாப் படிச்ச மனுஷ’யப் போல இருக்கி. மெய்யாப் பேய் மனஷ’தான். தன்ர புருஷன் வேலக்காரியோட தொடுப்பெண்டால், அவள ஊட்டவுட்டு விரசிப் போட்டுப் புருஷனோட இருக்கிறத விட்டு... இதுக்கெல்லாம் கோடேறிச் சங்கை குறயிறதா?

இந்தக் கண்மாணிக்கத்தான நான் ஒருநாளும் நினைக்கல்ல, வாஸ’ன்ர பொஞ்சாதியோட இவர் தெழடப்பெண்டு. ரெண்டு பேரும் சரசமா, சளசண்டியாப் பேசுங்கள். அந்த மனுஷ’யுமோ இவருக்கு மூப்பு. நீண்டன் பல்லும், குரங்காட்டம். இவரத் தம்பி எண்டு கூப்பிடும். கன்னத்து மசிர்கூட ஐஞ்சாறு நரச்சுப்போச்சு. போயும் போயும் அவளோட... நான் கறிபுளி வேண்ட காணிக்க மாதா கொயிலடிக்குப் போனா, வேரூண்டி நின்றிடுவன். அவள் தான் தாண்டவன் வெளியாள் கனகம்மா வந்தாளென்டால் கேக்குவா வேணும்? நல்லவள். ஊர்க்கதயெல்லாம் வரும். நான் காணிக்கமாதா கொயிலடிக்குப் போகேக்கிள்ள இவர் வஸ் கொம்பனிக்கு முன்னால இரிக்கிற தெயிலக்கடயில ஆன் நிப்பார். இந்நாளுக்குத் தெயிலைப் பைத்தியமும்.

அண்டைக்கு வரக்கிள்ள மகளும் பிரளி எடுத்துட்டாள். பொட்டிக்காரனிட்ட மலிவாச் சள்ளமீன் கோருவ கிடைச்சுது. சந்தியடிக்குப் போகாம சட்டுப்பிட்டென்று திரும்பீட்டன்.

பக்கூசுக்கதவு ஒள்ளம் கெழுஞ் சிரிந்துது. கோழிகிழி வீட்டுக்குள்ள போய் எடுத்துவெச்ச கூப்பன் அரிசியக் குடிக்கெண்டுஆன் நினச்சன். 'சூ' எண்டு விரசிக் கொண்டு உள்ளுக்க பாஞ்சு போனா எனக்கி நெஞ்சுக்க உலக்கயால இடிச்ச போலான் இருந்து. நான் இவரோட படுத்துத்தான் இந்தப் பொடிச்சியம் பெத்தனான். புருஷனோட படுக்க என்ன வெட்கம்? ஆனா, இந்தக் கிழட்டுக் கூதி பட்டப் பகலில உரிஞ்சி போட்டு என்ற புருஷனோட...அவளுக்குத்தான் அமர் எண்டால், இந்தக் கண் அவிஞ்சு போவானுக்கி என்ன மதி? எனக்குச் சரியாத்தான் பத்தி வந்திச்சு. எனக்கிக் கோவம் வந்து தெண்டால் அடக்கேலா. அப்பன் சாகிறவரைக்கிம் என்னக் கோவக்காரி எண்டுதான் கூப்பிடும். வந்த விசரில பொடிச்சிய மூலையிலபோட்டுட்டு, வாருவக்கட்டு எடுத்து நோனாக்கு நல்லாக் குடுத்தன். இது ஒரு ரோஷம் கெட்ட மனுஷன். "டியே, மாங்காட்டில குளத்துச் செல்வன் மீனக் கண்ட உன்னக் கூட்டிக்கு வந்து, நேரந்தியாலம் தப்பாமல் தீனிபோட்ட கொழுப்பா? பறவேசை! இண்டைக்கி இப்பவே கொம்மையிட்டப் போயிடு" எண்டு ஊரெக்கக் கத்தினான் பாவி. இவர் வாயத் துறந்தால் புடயன் பாம்பு வாயத் துறந்தாப் போலான்.

இழவெடுத்த கோட்டடிக்கு வந்தால் தூங்க வேணும். அன்னம்மா நாலும் அறிஞ்சவன். விளக்கத்துக்கு எடுத்த அந்த வழக்குத்தான் நடக்குது. என்ன கணக்காட்டில நான் பட்டிட்டன்டாப்பா.

ஒரு சுதியில பேசீட்டுப் போறார், மறுகாச் சரியாப் போயிடு மெண்டு ஆன் நான் சமச்சுக் கிமச்சு வெச்சன். பொழுதுபட்டு ராவாப் போச்சுது. ராக்கண் முழிப்புத் தானாக்கும் பொடிச்சியோட ராக்கண் முழிச்சது போக, இப்ப இந்த மனுஷனின்ர மதத்துக்கு. ராவுபோல நல்லாக் குடிச்சிட்டு வந்தார். மனுஷன் குடிக்கிற ஆன்; வெறிக்கிற ஆன். குடிச்சால் இப்பிடியா தலைகால் தெரியாம நிதானம் போயிடும்? இந்தச் சோக்கில அந்தச் சிங்கள நோனாவயும் கூட்டிக்கு வந்தார். அவளும் குடிச்சிருக்கவேணும். இல்லாட்டி சட்டைக்கு மேலால காட்டிக்கொண்டு வருவாளா? மொங்கு மொங்கெண்டு கட்டயில போறகையால அடிச்சான் பாவி. ராத்திரி இவர் அவளக் கட்டிப் புடிச்சுக் கொண்டு படுக்க, நானும் பொடிச்சியும் அடுப்படியில் படுத்துக் கொடுகீட்டுக் கிடந்தம். இந்த மனுஷன் என்ன மாடா? ராலெல்லாம் பொடிச்சி ஊரெடுக்கக் கத்தினது காதில் உழேல்லையா? அந்த ஆள் கொள்ளி வந்தாப் புறகு எனக்கென்ன வேலை? நான் மாங்காட்டுக்குப் போயிட்டன். அப்பன் செத்துப் போனாலும், அம்மை உடவா போறா?

மாணிக்கனுக்கு நெடுகயும் என்னில ஒருகண்தான். போகக்கிள்ள வரக்கிள்ள குறுக்கறுத்துப் பாப்பான் இப்பிடித்தான். பூமணி - அவளான் புதுக்குடியிருப்பானுக்கி வாழ்க்கப்பட்ட பூமணி - புருஷனோட கோவிச்சுக் கொண்டு வந்து மாங்காட்டில இரிந்தாள். மறுகா என்ன புதினமெண்டா வைரனுக்கி வாழ்க்கப்பட்டு, அவனுக்கும் ஒரு புள்ள பெத்தாள். ஊர்தேசமடிச்சி சொந்தப் புருஷன் திரும்பிவந்து கூப்பிடக்கிள்ள அவன்ர புதுக்காசில மயங்கி, இவனவிட்டு அவனோட ஓடிட்டாள். இதென்ன சீர்கெட்ட வாழ்க்கை? ஒவ்வொரு புருஷனுக்கி ஒவ்வொரு புள்ளயப் பெத்தா சீவிக்கிற?

"உன் கணவன் யோக்யமானவன். அன்புத் தந்தையாகவும் ஆசைக் கணவனாகவும் வாழ்ந்திருக்கிறார். மீண்டும் ஒரு தடவை ஏன் அவருடன் வாழ்ந்து பார்க்கக் வடாது?" - நீதவான் நல்ல மனுஷன். அப்பனப்போல புத்தி சொல்லுறார்.

"நான் மாட்டேன். எனக்கு இவர் இனி வேண்டாம். மனுஷ’ ஒத்தக் காலில நிக்கி.

"அப்படியானால் தாபரிப்புத் தொகையை அடுத்த தவணையில் நிர்ணயிக்கிறேன். அடுத்த தவணை...."

"மகேஸ்வரி காசுபதி... மகேஸ்வரி காசுபதி..."

என்ர வழக்கை எப்ப எடுக்கப் போறாங்களோ? நான், அம்மையும் பொடிச்சியும் குந்தியிரிக்கிற இடத்துக்கு வாறன். சோனகர்ற பள்ளி வாசலுக்குக்கிட்ட கூட்டமாயிரிக்கி. கந்தூரிக்கி வந்த கூட்டமாக்கும். இதுவும் ஒரு கூட்டமா? மாமாங்கத் தாண்ட தீத்தக்கரைக்கி 'சே சே' எண்டுதான் சனம். அண்டைக்கி என்னக் கும்பிடவும் உடல்ல. ஆளுக்கி நல்ல தண்ணி. குடிச்சா இப்பிடித்தான். வீண் கணகாட்டு ஏன் எண்டு யோசிச்சி திரும்பினன். வரக்கிள்ள என்ன நடுறோட்டில நிப்பாட்டீட்டுப் போய்த் தவறணயிலும் குடிச்சிட்டு வந்துது. இடஞ்சல் வந்து மூண்டு நாலு நாள்.... கொயிலுக்கிப் போறதுக்காக முழுகினனான். பொடிச்சியப் பெத்தபுறகு வந்த முதல் இடஞ்சல். கலங்கலாப் பட்டுக் கொண்டே இருந்துது. சொன்னாக் கேக்கிதா மனுஷன்? ஒரு கட்டுமட்டு இல்லயா? நெடுக நெடுக எண்டால் நான் ஒண்டுக்கிம் ஒள்ளப்பமும் மறுக்கிறல்ல. அண்டைக்கி இடுப்பே அடிச்சிப்போட்ட போல ஆன். பாவாடையெல்லாம் ஒரே துவால. வெத்திலத் துப்பல மிரிச்சுட்டன். புல்லில மரிச்சுத் துடைக்கிறன்.

கைகால் இரிக்கி புழச்சுத் தின்னலாம் எண்டு நினச்சன். என்ர சின்னம்மைக்காரி கோட்டமுனையில இரிக்கிற மில்லிலா ஆன் வேல. அண்டைக்கு மத்தியானம் வயித்துக்க எக்கச்சக்கம். காட்டுக்குப் போய் இரிந்திட்டு, தோட்டப் புட்டிக்கிப் பக்கத்தில் இரிக்கிற மடுவுக்கிள்ளஅடிக்கழுவலா மெண்டு எட்டிப்பார்த்தா, அங்க என்ர சின்னம்மையும் பொம்புளக் கந்தன் சிவலைப் போடியும்...தூ, கோழி மிதிற போல...மறுகா சின்னம்மையோட கதபேச்சில்ல. ஒரு மாசம் மில்லில வேல பாத்திட்டு ஓடியந்த கிட்டிணன்ர தங்கைக்காரி சொன்னது சரிதான். மில்லில வேலசெய்யிறவள் ஆர் ஆன் யோக்கியம்? பொழுது கிறிகீட்டால் காசிக்கிக் கடப்புத் தூக்கிறவளுகள்தான். நான் இனி எப்பிடிப் போனாலும், இந்தப் பொடிச்சியத் தாவரிக்கிற ஆர்? ஒரு பொழுதுக்கு-ஒரு தியாலத்துக்குத் தேவையெண்டா ஒம்ப புருஷனும் பிடிக்கலாம். ஆனா, சாகுமட்டும் பொடிச்சியயும் வெச்சுத் தாவரிக்கிறதுக்கு... மனிஷன்ர சீவியம் சொல்லிக்கிடக்கா? விதானயார் லேசான ஆளில்ல. அவர் ஆனே தாவரிப்பு வழக்குவைக்கப் புத்தி சொன்னவர். 'இவங்களைச் சும்மா விடப்படா. ஒரு பொடிச்சியக் கடசி மட்டும் காப்பாத்துறன் எண்டு சொல்லிக் கட்டுறது. அவளுக்கு ஒரு புள்ளயக் குடுத்திட்டு இன்னொருத்தியோட ஓடுற. உனக்கில்லாட்டியும், அந்தப் பொடிச்சியின்ர தாவரிப்புக்கு அப்பன் ஏதாச்சும் குடுக்கவலுவா வேணும்? பேசாம நான் சொல்லுற கணக்காத் தாவரிப்பு வழக்குவை. அப்பான் அந்தச் சிங்களப் பலகாரத்தின்ர இனிப்பில போனவன் திருந்துவான்' எண்டு விதான யார் விடாப்புடியாச் சொன்னார். இண்டைக்குத்தான் வழக்க விசாரணைக்கு எடுப்பாங்களாம். நசமத்துப் போனவங்கள் எப்ப எடுப்பாங்களோ?

இப்பவும் நான் குமரப் போலான் இரிக்கன். செட்டிபாளயத்து மாணிக்கனப் பாத்துச் சிரிச்சாப் போதும். அவன் என்ன ஓடாவி வேலயா? சொந்தப் பூமி வைச்சி வெள்ளாம செய்யிறவன். ராசாத்தியப் போலதான் என்ன வைச்சிருப்பான். அவண்ட மனத ஆர் கண்ட? செல்லன்ர அக்கை தாலியறுத்து மூண்டு வரிஷம். இப்ப புள்ள பெத்து இரிக்கிறாள். இந்த ஆம்புளயள்ற குணம் இதுதான், ஒண்டோட அடங்கிறல்ல. நான் எப்பவும் அலுப்புச் சலுப்புச் சொல்லிறதில்ல. எந்த வெறியில வந்து உடம்ப முறிச்சாலும் உடுவன். இவர் சொல்லுறபடி எல்லாம் ஆடுவன். இதுக்குத்தானே ஒரு பொம்புளய ஒரு ஆம்புள இச்சம் பட்டு எடுக்கிற எண்டு நினப்பன். ஆனா, கடசியில அந்தச் சிங்களத்திதான் இனிச்சாள்.

"பாக்கியம்!" எண்டு விதானயார் என்ர பொரக் கிலாசிக்கிக் கிட்ட வந்து நிண்டு கூப்பிடுறார். அவருக்குப் புறகுக்கு இவரும் நிக்கார். பொரக்கிலாசி ஐயாவுக்கு அம்மை தன்ர தோட்ட ஈடுவெச்சுத்தான் காசிகுடுத்தவ. நாயம் தெரிஞ்ச மனுஷனாம்.

"கணபதி உன்னைத் திருப்பி ஏத்துக் கொள்ளுறானாம். இனிக் கைவிட மாட்டானாம்..."

"அந்தச் சிங்களத்தியோட என்னயும் ரெண்டு மாடா வெச்சுக் சாய்க்கப் போறாரா?"

இப்பன் வாய் துறக்கிறார். நான் வெட்டுக்காட்டில இரிந்து போய் ஒரு வருஷம் இரிக்கிம். இரண்டு தவணைக்கி வந்து முகத்த நிமிந்து பாக்கல்ல. இண்டைக்கி ஆன் தூரத்தில நிக்கேக்கிள்ள பாத்தன். இப்ப பாக்க இரக்கமாக் கிடக்கி.

"என்ர கிளியான்ர அரிமை தெரியாம நஞ்சு நினச்சுட்டன். அந்தத் தட்டுவாணியின்ர மயக்கம் தெளிஞ்சிட்டு. இனி அவள் ஒண்ணா. அவளோட நான் பெரிய கணகாட்டுப் பட்டுட்டன். அவளுக்கு சவுக்காரத்திக்கும் பவுடரிக்கும் என்னால உழக்கேலா. உன்ர இந்த தாவரிப்பு வழக்கு நோட்டீஸ் வந்த அடுத்த நாளே அவள் ஏறாவூர் தங்கவேலனோட ஓடீட்டாள். இப்ப அந்தப் புருஷனக்கொள்ளி காளவாச்சேனயில இரிக்காளாம்."

அம்மையும் பொடிச்சியெத் தூக்கிக் கொண்டு நாங்க பேசிற இடத்திக்கி வறாவு.

வழக்குப் பேசின இம்புட்டுப் பெரிய திருகணிக் கொண்டக்காரி தன்ர பொரக்கிலாசியோட பேசிக் கொண்டிரிக்காள்.

"கசாது அழிக்கக்கூடாது. அவர்ற சம்பளத்திற்கு இருநூறு ரூபாவாவது தாபரிப்புக் கிடைக்கும். அதை வைச்சுக்கொண்டு நான் சோக்குப் பண்ணுவன்."

"அது உங்கள் இஷ்டம். வாங்கின பணத்துக்கு நான் வழக்குப் பேசுகிறேன்."

அதுக்கிடையில என்ர பொடிச்சி அப்பனில இறாஞ்சித் தாவுது.

"அவரும் கண்ண மூடீட்டார். இனி ஒரிக்காலும் என்ர மகளக் கைவிட மாட்டனெண்டு களுதாவளயான்ர கொயிலில கப்பூரம் அடிச்சுச் சத்தியம் பண்ணித் தந்தாத் தான் என்ர மகள மருமகனோட அனுப்புவன். என்ர தோட்டயும் ஈடெடுத்துத் தரவேணும்" எண்டு அம்மை விதானயாரிட்டச் சொல்லுது.

"என்ன கணபதி?"

இவர் தலயாட்டுறார்.

"சத்தியமா?"

"சத்தியமா களுதாவளப் புள்ளயாரறியச் சத்தியம். என்ற புள்ளயறியச் சத்தியம்."

"இவ்வளவு காலமும் இல்லாத இரக்கம் இப்பான் மகளில புறந்திரிக்கி" எண்டு நான் முகத்தச் சுழிக்கிறன்.

"அப்ப வழக்கு?"

"சமாதானமாகப் போறனெண்டு பாக்கியம் கோட்டில சொன்னாப் போதும்."

பொடிச்சி-கள்ளப் பொட்ட அவர் வாங்கிக்குடுத்த கடலக் கொட்டயக் கொறிக்கிறாள். அம்மை பாவம். வெத்திலயச் சப்புது.

"அக்கினேஸ் செபஸ்தியான் பிள்ளை." - அடுத்த வழக்கை விசாரணைக்கு எடுக்குறாங்க.

மச்சாள் சொன்னது சரி ஆன். என்ர வழக்கு எப்பான் எடுக்கப் போறாங்களோ? வெட்டுக் காட்டுக்கு ஆனே? நடந்தும் போயிடலாம்.

.....


மறு

திருவாளர் சிவக்கொழுந்து கட்டிலிற்படுத்திருந்தார். அதே அறையில், திருமதி புனிதம் சிவக்கொழுந்து தரையில் விரிக்கப்பட்டிருந்த பனையோலைப் பாயிலே சயனித்தாள்.

அவர் உத்தரதேவியில் ஊர் திரும்பியவர். இரவு பதினொரு மணிக்குத்தான் உத்தரதேவி யாழ்ப்பாணம் வந்தது. மூக்கு முட்டிய 'கலை.' வீட்டில் விரதம். சாப்பாடுங் கிட்டவில்லை. பிரயாண அசதியுடன் வெறும் வயிறாக, கால்களைக் கட்டிலின் சட்டங்களில் எறிந்து எறிந்து 'அலட்டி'க் கொண்டு படுத்திருந்த சிவககொழுந்து கண்களை விழித்தார். தாவணிப் போர்வைக்குள் சரக்கட்டையாகச் சுருண்டு கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.

"எணேய்!"

"....ம்.." மறுபக்கம் புரண்டாள்.

"என்னணை புதுநாணமா நித்திரை கொள்ளுறாய். விடிஞ்சல்லே போச்சு."

திருமதி சிவக்கொழுந்துவின் செவிகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விழுந்தன. கோடிப்புறமிருக்கும் நாவல் மரத்தில் 'அடை'யும் கோழிகள் கூவியதும் அவளுக்குக் கேட்டது. அந்நேரத்திலேயே துயிலெழுந்து, தன் வீட்டு அலுவல்களைச் சுறுசுறுப்பாகக் கவனிப்பது அவளுடைய வழக்கம். இன்று அவளால் எழுந்திருக்க இயலவில்லை. தேகமெல்லாம் பச்சைப் புண்ணாக நோகும் அலுப்பு. அவருடைய குரல் காதில் விழுந்த பின்னர், 'சீ, மூதேவி வாலாயம் கூடாது' என்ற எண்ணம் உதித்தது.

"ஓமப்பா நித்திரை சரியா அமத்திப் போட்டுது" என்று சமாதானங் கூறியவாறு எழுத்து, சேலையைச் சரி செய்தாள். அவர் தலைமாட்டிற் கிடந்த 'லோட்டா' தண்­ரை முரடு முறிக்குந் தாளத்துடன் முடித்துவிட்டு, மறுபக்கம் புரண்டு கண்களை மூடிக்கொண்டார்.

புனிதத்திற்குத் தலையைச் சுற்றியது. சுமையேற்றப்பட்ட வாக்கிலே தலைப்பாரம். செமியாக் குணக்கோலத்தில் வயிற்றைக் குமட்டிக்கொண்டும் வரும் உணர்வு. இத்தனைக்கும் வெள்ளியும் சனியும் விரதம்; ஒரு நேரச் சாப்பாடு. கிணற்றடிப் பக்கம் விரைந்தாள். வெகு பிரயாசையுடன் சத்தத்தை அடக்கி, எலுமிச்சை மரத்தின் கீழ் வாந்தியெடுத்தாள். கால்களாற் புழுதியை 'எத்தி' மூடினாள். எலுமிச்சைப் பழமொன்றைப் பறித்து மோந்தாள். நிலை சற்றே சீரடைந்தது. பற்களில் உமிக்கரி போட்டு மினுக்கி, முகம் கால்கழுவி, கிழக்கு நோக்கி விபூதி பூசி, வீட்டுப் பணியில் ஈடுபட்டாள்.

பானையில் அடைத்திருந்த புளியம் பழமொன்றை உப்பிலே தோய்த்து வாயிலே திணித்துக் கொண்டு, குசினிக் கதவடியில் நின்று வீட்டறைப் பக்கம் பார்த்தாள். திருவாளர் எபந்து வரும் 'சிலமனை'க் காணவில்லை, உலையில் நீர் மலமலத்துக் கொதித்தது....

தேங்காய்ப் பாதியைத் துருவி எடுத்து, பிட்டுக்கும் மாக்குழைத்து முடிந்த பொழுதுதான், கிணற்றடியில் வலு அவதியுடன் ஓங்காளிக்கும் சத்தங் கேட்டது. விரல் நுனிகளிலே தன் உடற் பாரத்தை ஏற்றி, குறுக்கு வேலியால் எட்டிப் பார்த்தாள். சிவக்கொழுந்து விரல்களைத் தொண்டைக்குள் திணித்து, பித்தத்தை இறக்கி முகம் கழுவிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கெதியாக முட்டைக் கோப்பியைக் கலந்தெடுத்தாள்.

"என்னணை, முட்டைக் கோப்பியே? இண்டைக்கும் ஏதேன் விரதம் கிரதமாக்குமெண்டு நினைச்சன்."

"உங்களுக்கு வருஷத்திலை முந்நூற்றறுபத்தைஞ்சு நாளும் பச்சை மீன் வேணும். நேத்துத்தான் புரட்டாசிச் சனி விரதம்."

"விரதத்தோடை ரயில் பயணக்காரனையும் பட்டினி போட்டிட்டாய்."

"உன்னாணை, மத்தவங்களிலை குத்தம் கண்டு பிடிக்கிறதுக்கு உங்களைப் போலை ஆளில்லை. இன்ன நாளைக்கு வாறதெண்டு ஒரு விசளம் எழுத மூண்டுசேம் கிடைக்கேல்லை. பேந்தென்ன? வந்தாக் கண்டு கொள்ளுவம்."

கோப்பையை உதட்டோரம் வைத்துக் கோப்பியில் ஓரு முரடு உறிஞ்சிக் குடித்தவாறே, "எங்கை, கொம்மாவைக் காணம்?" என்றார்.

"எப்பவும் நெக்கு ஊழியம் செய்யுறதெண்டு அவவுக்குத் தலையெழுத்தே? தனிய இருக்கிறதெண்டு துணைக்க இருந்தவ. வீரபத்திரரைக் கண்டதும், ராத்திரியே அவதம்பியோடை அண்ணன் வீட்டுக்குப் போயிட்டா."

"அதுக்கு, நடுச் சாமத்திலையே போறது? அந்தக் கிழடிக்கு என்ர நிழலும் புடிக்காது" என்று சொல்லிக் கோப்பியைக் குடிக்கிறார்.

"மருமேனிலை மாமியாருக்கு அவ்வளவு மரியாதையாக்கும்" - வார்த்தைகளை அரையுங் குறையுமாக விழுங்கிக் கொண்டே குசினிக்குள் நுழைந்தாள்.

நேற்றுத்தான் இளங் கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெழுகப்பட்டிருந்த தரையை, விளக்கு மாற்றினாலே கூட்டி, அடுக்களையை ஒதுக்கினாள். 'துருவலை'க் குற்றியை எடுத்துப் போட்டு அதன் முன்னால் பெரிய பருத்தித்துறைப் பெட்டியொன்றைக் கவிழ்த்து வைத்தாள். அதன் மேல் தலைவாழை இலைத்துண்டு ஒன்றைப் போட்டு, தண்­ர் தெளித்துக்கொண்டே, "பேப்பர் படிச்சது போதும், வாருங்கோவன்" என்று அழைத்தாள்.

கைகளைக் கழுவிக்கொண்டு வந்த சிவக்கொழுந்து குற்றியில் அமர்ந்தார். மூன்று பிட்டுகளை இலையில் வைத்து உதிர்ந்துவிட்டு, முட்டைப் பொரியலையும் எடுத்து வைத்தாள். அவர் சாப்பிடத் தொடங்கினார். திருவாளருக்கும் திருவாட்டியாருக்கு மிடையில், மௌனச் சுவர் எழுந்து நின்றது.

"சோக்கா இருக்கப்பா. இப்பதான் வீட்டுச் சாப்பாடு. சிங்கள சாப்பாட்டிலை நாக்கு மரத்துப் போச்சு."

அவர் நிமிர்ந்து பார்த்தார். அவள் மாட்டுக் கொட்டிற் பக்கம் பார்த்து, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது.

"என்னெணை நீட்டுக் கயித்திலையோசிக்கிறாய்?"

நெஞ்சைக் கூறாக்கிக் கக்கப்பட்ட வெப்பமான நெடுமூச்சு.

"இல்லை, ஐந்து மாசமா மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணப் பக்கம் கோச்சி வவேல்லையாம்."

"கோச்சி வந்ததுதான். எனக்குத்தான் லீவு கிடைக்கேல்லை."

"நான் காத்தைக் குடிச்சுக் கிடப்பன் எண்டு நினைச்சியளாக்கும்."

"எனக்கிருக்கிற கடன்தான் உனக்குத் தெரியுமே?"

"ஆருக்காகப் பட்டனியள். அந்த மாத்தறைச் சிங்களத்திக்காகத்தானே?"

"பேக்கதையள் கதைச்சுக் கோவத்தைக் கிளப்பாதை."

"கோழ்வம் கோழ்வமெண்டு நெடுகப் பேக்காட்டுறதே? உங்களிட்டை வந்த தம்பையா அண்ணேட்டை என்ன சொன்னியள்?"

"அவன் ஒரு கோள்மூட்டி."

"பத்து வருஷமா அவள் என்னத்தைப்பெத்தாள்? அந்த மலடியோடை நான் வாழமாட்டன். காசும் அனுபமாட்டன்,' எண்டு அவரிட்டைச் சொன்னனியளோ, இல்லையோ?"

"சும்மா ஒரு கோவத்திலை சொன்னதை இவ பெரிய இது எண்டு சொல்லுறாள். தம்பையா அண்ணை வரக்கே என்னை வேலையிலை இருந்து நிப்பாட்டி வெச்சாங்களெண்டு தெரியுமல்லே?"

"கங்காணியெண்டால், ஆஸ்பத்திரியிலைகங்காணி வேலையைப் பாக்க வேணும். சிங்களக் கங்காணியளை மேய்ச்சால் விடுவாங்களே? ஒரு சிங்களத் தோறையைக் கிளப்பி வெச்சிருந்தியாம். எப்படிப் பாடு?"

"அவளாலை-அவள் சொன்ன சாட்சியாலை தான்-என்ர உத்தியோகம் திரும்பிக் கிடைச்சுது. உனக்கு ஒண்டுந் தெரியாது."

"அது கிடக்க, அவளுக்கு - என்ர சக்களத்திக்கு எண்டாலும்-புள்ளைப் பூச்சி வெச்சுருக்கோ?"

அவளுடைய ஒவ்வொரு வார்த்தையுந் திருவாளர் சிவக்கொழுந்துவைக் குடைந்தெடுத்தது. நிதானம் தடம் புரண்டது.

"மலட்டுப்..... மலட்டுக் கதையள்தானே வரும்."

"இஞ்ச! உந்தக் கோழ்வத்தைக் கொண்டுபோய் நீர் மேய்க்கிற சிங்களத்தியளிட்டைக் காட்டும். ஆர் மலடி? நான் வேறையொருவனைக் கட்டியிருந்தால், இதுக்கிடையிலை ஐஞ்சாறு பெத்திருப்பன்."

தேகத்தை உலுப்பி ஆட்கொண்ட கோபாவேசத்துடன், குற்றியை இடறி எழுந்தார். பெட்டி உதையில் நசிந்தோடி, அடுக்களை வாசலில் கிடந்தது. வெளியால், சருவக் குடத்திற்குப் பக்கத்தில், பிட்டு மணிகள் சிதறிக் கிடந்தன. காகங்கள் விழுந்தடித்துக் கொண்டு இரைச்சலுடன் கொறித்தன.

"அதுதானே, அந்த வேசையின்ரை முகத்திலை முழிக்காமல் அங்க நிக்கிறனான்."

ஈச்சேரில் வந்து படுத்தார். புகையிலையைக் கிழித்து, ஒரு சுருட்டுச் சுற்றி எடுத்தார். அதைப் பற்ற வைத்தார். புயலின் புத்திரப் பாக்கியமான நிசப்தம் ஆட்சி செலுத்தியது.

அந்தச் சுருட்டைப் புதைத்து முடிப்பதற்கிடையில், பதினைந்து இருபது நெருப்புக் குச்சிகளைச் செலவழித்தார். சுருட்டுக் குறளை எறிந்தார். வெற்றிலைத் தட்டைச் தேடிப் பிடித்தார். வெற்றிலை வாடிக் கிடந்தது. கறட்டிச் சுண்ணாம்பு. ஒருவகையாகச் சமாளித்து, ஒரு வாய்க்குத் தாம்பூலம் தரித்தார். 'சேட்'டை எடுத்து மாட்டி, சால்வையைத் தோள்களில் எறிந்தார். வெளியே புறப்படும் ஆயத்தம்.

அவரை வழிமறிப்பதைப் போல எதிரில் வந்து நின்றாள் புனிதம். ஆத்திரம்-சினம் ஆகியவற்றின் சுவடுகள் தூர்ந்திருந்தன. முகமும் முகமும் நேராகச் சந்தித்தன. புதிதாகக் காணப்படும் அவளுடைய கவர்ச்சியில் அவருடைய விழிகள் ஒரு கணம் நிலைத்தன. இப்பவும் கல்யாணச் சந்தையில் 'செல்லும்' குமரி. அவளுடைய கழுத்தில் சிவக்கொழுந்து தாலி கட்டிப் பத்து ஆண்டுகளாயினும், சென்ற வைகாசியிலேதான் இருபத்தியெட்டு வயது பூர்த்தியாயிற்று. தனக்கட்டுகள் சதை கூட்டிக் கொழுத்த வாக்கில் நிமிர்ந்து சௌந்தர்யப் பொலிவு காட்டின. குலை தள்ளிய வாழையின் நிறைவுடன், இரத்தம் ஊறிய பாங்கில், முகத்தில் மலர்ச்சி. கன்ன உச்சிக்காரி இப்பொழுது நேர் வகிடுவிட்டு வாரத் தொடங்கியிருந்தாள். இந்த 'உத்தி' முகத்தை உருண்டையாக்கிக் காட்டியது. சிரிக்கும் பாசாங்கில், நாக்கு நுனி உதட்டை நனைத்து மீண்டது.

"நீங்கள் ஆள் சுறுக்கர்தான். துலைக்கே புறப்பட்டுடியள்?"

பதிலில்லை.

"இஞ்சாருங்கப்பா, ஒருக்காச் சின்னக்கடைப்பக்கம் போயிட்டு வாருங்களேன்."

"சின்னக் கடைக்கே? எனத்துக்கு?"

"இண்டைக்கு நாயித்துக்கிழமையல்லே? கட்டைக் காலன்தானே உங்களுக்குப் பிடிக்கும்?" சற்று முன்னர் நடந்த சண்டயின் சாயல் எள்ளளவும் இழையாத இதங் குழைத்துப் பேசி, ஓர் ஐந்து ரூபாய்த் தாளை அவருடைய கைக்குள் வைத்தாள். அவருடைய நாக்கில் கடல் ஆமை இறைச்சியின் சுவை ஊர்ந்தது. கோபமெல்லாம் அடங்கிற்று.

சால்வையை ஈச்சேரின் சட்டத்தில் எறிந்து, மறுபடியும் குந்தினார். "கொஞ்சம் பச்சைத் தண்ணி கொண்டானை."

செம்பிலே தண்­ர் வந்தது. வாயிற் குதப்பப்பட்ட வாடல் வெற்றிலை ஒரு மாதிரியாகக் கசந்தது. வாயை நன்றாக அலம்பிக் கொப்பளித்துத் துப்பிவிட்டு, 'அண்ணாக்காக'த் தண்­ர் குடித்தார். செம்பிற்குள் பார்வை நிலைத்தது.

"இங்க செம்புக்கை வெத்திலை கிடக்கு."

"ஓம். வாடாமல் போட்டு வைச்சனான்."

"அப்ப வெத்திலைத் தட்டையுந்தா. சுண்ணாம்புக் கறண்டீக்கை கொஞ்சம் தண்ணிவிட்டு இழகப்பண்ணு."

புனிதம் மடித்துக்கொடுக்க, பத்திமாகத் தாம்பூலம் தரித்தார். நாக்கும் நன்றாகசி சிவந்தது.

"இஞ்சேருங்கோ, கெதியாப் போனாத்தான் நல்லதாய்க் கிடைக்கும்."

"எனக்குத் தெரியாத சின்னக் கடையே? கொஞ்சம் பொறுத்துப் போவம்."

"நீங்கள் மாத்தறைக்குப் போன ரெண்டுவருஷத்துக்குள்ளை யாழ்ப்பாணம் தலைகீழா மாறீட்டுது."

புனிதமும் வெற்றிலை போட்டுக் கொண்டாள்.

"உனக்கு நல்லா வடிவாச் சிவந்திருக்கணை."

"இதிலை தெரியும் நான் எப்பிடி பட்டவளெண்டு. எப்ப வேலைக்குத் திரும்பிப் போறியள்?"

"நான் ஒரு கிழமை லீவிலை வந்தனான்."

"மழைதான் பெய்யப் போகுது."

தன்னுடைய உத்தேசத்தைத் தெரிவிக்க இதுதான் சமயமெனச் சிவக்கொழுந்து நினைத்தார்.

"எல்லாத்தையும் மறந்திடுவம். உன்னை என்னோடை கூட்டிட்டுப் போகத்தான் லீவுபோட்டு வந்தனான்."

"இவ்வளவு காலமும் இல்லாத கரிசனை இப்பதான் புதிசாய் முளைச்சிருக்கு....ஏன் இப்ப அந்தச் சிங்களத்தி கைவிட்டிட்டாளே?"

"உந்த விண்ணானம் கொட்டுற பொம்புளையளோடை கதைச்சுத் தப்பேலாது. நான் ஒரு சிங்கள வைப்பாட்டி வெச்சிருக்கிறன் எண்டு ஆரோ தட்டுவாணியள் கதை கட்டியிருக்க வேணும்."

"பேந்து கதைப்பம். கெதியாய் கடைக்குப் போயிட்டு வாருங்கோவன்."

அந்தச் சமயம் 'சங்கட'த்தால் சைக்கிளை ஏற்றி, படலையைத் திறந்து கொண்டு, ஒரு வாலிபன் வந்தான். சாக்கினால் உறை போடப்பட்டிருந்த ஒரு பெரிய போத்தல் 'கரி'யரிற் கட்டப்பட்டிருந்தது. பக்குவமாகச் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தினான். சைக்கிள் 'கான்டி'லிலே தொங்கிய பையைக் கையில் எடுத்தான்.

"அது மரஞ்சீவுறவன்."

"இப்ப இவங்களுக்குக் காசுமெத்தி, ஊர் பிடிபட்டு, கெப்பர் மிஞ்சிப் போச்சு. அவன் சின்னவன் கத்திக்கூடு கட்டி, முட்டியள், தீட்டுத்தடி எல்லாத்துடனும் உடுப்புப் போட்ட மாதிரித்தான் வருவான். உவன்ரை சோக்கைப் பாருங்கோவன்" என்று வாய்க்குள் புறுபுறுத்தார்.

சேட்டைக் கழற்றி, கொடுக்குக் கட்டி, கத்திக் கூடு மாட்டி, தளைநாரையும் முட்டியையும் கையில் எடுக்கும்வரை, அவனையே அவதானித்தார் சிவக்கொழுந்து. ஈச்சேரில் படுத்துத் தன்னைக் கவனிக்கும் அவரை அவனும் உற்றுப் பார்த்தான்.

"என்ன அப்பிடிப் பாக்கிறாய் செல்லத்தம்பி? இவர்தான் எங்கட இவர்."

"ஐயாவே? அப்படித்தான் நினைச்சன். எப்பிடி ஐயா மாத்தறைப் பக்கம் மழைதண்ணி?" என்று சம்பிரதாயமாகச் சுகபலன் விசாரித்தான். அவர், அவனுடைய நெஞ்சிற் சடைத்திருந்த ரோமத்தையும் உருண்டு திரண்டு கருங்காலிக் குத்தியின் மெருகு பெற்றிருக்குந் தேகக் கட்டையும் 'விடுப்'புப் பார்த்தார். அப்புறந்தான், ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்கிற மரியாதைப் பண்பு ஞாபகத்திற்க வந்தது.

"நீ சின்னவனுக்குச் சொந்தமே."

"ச்சா....நாங்கள் கொட்டடிப் பகுதி" உரையாடலை நீட்டாமல், "அப்ப வாறன் ஐயா, இண்டைக்குப் பாளை தட்டுமுறை" என்று கிணற்றடிப் பக்கம் போக அவசரங் காட்டினான்.

"இந்த வளவிலை எத்தினை மரம் கட்டியிருக்கிறாய்?"

"அஞ்சு"

"எதெது?"

"கிணத்தடிக் கறுப்பிக் கன்றுகள் ரெண்டு, கக்கூசடி உசரியும், வளுக்கலும், கோடிச் சிவப்பி...." சிரத்தையின்றிப் பாடம் ஒப்புவிக்கும் பாவனையிற் சொன்னான்.

"நாவலடிச் சிவப்பியும் நல்லா ஊறுமெண்டு சின்னவன் சொல்லுவான்."

"அது பாளை மாறிப் போச்சுது. ஐயாவுக்கு எங்கடை தொழில் முறையும் நல்லாத் தெரியுதே?" என்று 'பொடி' வைத்துப் பேச்சை முறித்துக்கொண்டு கிணற்றடிக் கறுப்பியை நோக்கி நடந்தான்.

"இந்தக் கோசு ஏன் மரங்களைச் சின்னவனுக்குக் குடுக்கல்லை?" என்று மனைவியை விசாரித்தார்.

"சீவிய உருத்து எண்டு சொல்லி அம்மாதான் இவனுக்குக் குடுக்க ஒத்தக்காலிலை நிண்டவ. மரத்துக்கு எழுவது ரூவா மேனி மூன்னூற்றம்பது ரூவா தந்தவன். அந்தக் காசிலை வாங்கிட்ட பசுவாலும், கோழியாலும்தான் பிச்சை எடுக்காமல் மானத்தைக் காப்பாத்தி சீவிக்கிறன்."

"இவன் ஐயம்புள்ளை ஆக்களின்ரை பகுதியாக்கும். அவங்கள் காசுக்காரர்."

"ஆனாலுமப்பா, சனியனுக் கெறு. அகராதி பேசுறவன். அண்டைக்கு முத்தத்து மரத்திலை பழுத்திருக்கிற தேங்காய்க் குலையைப் புடுங்கிவிடு எண்டு சொல்ல, 'தேங்காய் ஆயிறவனைப் பாருங்கோ. அவனும் புழைக்க வேணும்' எண்டு சொல்லீற்றுப் போனான்."

"இப்ப இந்த கீழ்சாதியளுக்குத்தானே நடப்பு? என்னோடை அவன் அருளானந்தம்-அவன்தான் கொய்யாத் தோட்டத்து நளவன்- மாத்தறைக்கு வேலை மாறி வந்தான். பேந்து ஒரு மாசத்திலை இஞ்சை திரும்பி வந்துட்டான். நானும் மூண்டு மாசமாப் பிடிக்கா எம்பியளை எல்லாம் பிடிச்சு ஒரு மாறுதலுக்குப் புழுத்திப் பார்த்தனே!"

"என்னப்பா, கதையிலை குந்தீட்டியள். எப்ப இறைச்சி வாறது. எப்ப காய்ச்சிறது, எப்ப சாப்பிடுறது?"

"ஓமப்பா, வெய்யிலும் ஏறீட்டுது. நான், அவன் ராசான்ரை கலையிலை ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு ஓடியாறன். நீ உலையை வெய்யன்."

சிவக்கொழுந்து புறப்படும் பொழுது, கிணற்றடி மரத்திற் பாளை தட்டுஞ் சத்தம் கேட்டது.

சின்னக்கடையிலிருந்து சிவக்கொழுந்து திரும்புவதற் கிடையில் அவரைத் தேடி சரவணமுத்துவும் திருநாவுக்கரசும் வந்திருந்தார்கள். அவர் கடைக்கச் சென்ற சமாசாரத்தைப் புனிதம் தெரிவித்தாள். அவர்களிருவரும் படலைக்கு முன்னால், வீதி திருத்தக் குவித்திருந்தக் கல்லுக்கும்பலுக்கு பக்கத்திற் குந்தியிருந்தார்கள். அப்பொழுதுதான் செல்லத்தம்பியும் 'சீவலை' முடித்துக் கொண்டு புறப்பட்டான்.

அவர்களுக்கும் அவனுக்குமிடையில் ஏதோ வாக்குவாதம் நடந்தது.

திருமதி சிவக்கொழுந்து உற்றக் கேட்டாள்.

"இஞ்ச பார் சரவணமுத்து, உன்ரை பெருமாகோயில் சண்டித்தனத்தை எள்ளெண்ணைச் சட்டி எரிக்க வாறதுகளிட்டைக் காட்டு. நான் கொட்டடியான். இனிமேல் என்னட்டைச் சேட்டைவிட்டால், பாளைக் கத்தியாலை உன்ர குடலை எடுத்துப்போட்டுத்தான் வழக்குப் பேசுவன்." செல்லத்தம்பியின் குரல் உரத்துக் கேட்டது.

புனிதம் வேலியால் எட்டிப் பார்த்தாள். அதற்கிடையில் அவன் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான்.

அந்நேரம் சிவக்கொழுந்து அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் அவருடைய காதைக் கடித்து ஏதோ சொன்னார்கள்.

"அப்பிடியே சங்கதி? நான் கறியைக் குடுத்திட்டு வாறன்" என்று படலையைத் திறந்து உள்ளுக்கு வந்தார். புனிதம் ஒரு தேங்காயைக் கொடுவாக்கத்தியின் பிறத்தியால் அதனைப் பாதியாக்குவதற்காக அடித்துக் கொண்டிருந்தாள்.

சிவக்கொழுந்துவின் முகம் கறுத்து வியர்வைக் காட்டில் மிதந்தது. கறி உமலை, அவளுடைய கால்களில் மட்டும் படாமலும் விழ வீசியெறிந்தார். பேசாமல் திரும்பினார்.

"துலைக்கே?"

"கறியைக் காச்சு, வாறென்"

"வெய்யிலுக்கை போட்டு வந்து என்ன அவசரம்? கால் ஆறிப் போகலாமே?"

"கண்கெட்டுப் போவாளே, படலைக்கை சரவண முத்தனம் திருநாவுக்கரசனும் நிற்கிறது தெரியல்லையே? அவங்களேடை ஒரு அலுவர்."

"அப்ப இண்டைக்குச் சாப்பாட்டுக்கும் ஆளில்லையாக்கும். அந்தக் குடிகாரங்களோடை சேத்து குடிகுடியெண்டு குடிச்சுப் போட்டு ராவைக்குத்தான் வாறதாக்கும். இஞ்சையில்லே உங்களுக்கு முட்டியிலை கள்ளு வாங்கி வெச்சிருக்கிறன்."

"ஒவ்வொரு கதைக்கும் நீ மாத்துக் கதை கதைக்காதை. நீ கெதியாக் கதியைக் காச்சு. நான் சுறுக்கா வந்திடுவன்."

படலையை அடித்துச் சாத்திவிட்டு, சிவக்கொழுந்து வெளியேறினார்.

புனிதம் எப்பொழுதும் சமையலிற் சுறுசுறுப்பு. இன்றைக்கு இனந்தெரியாத பதற்றம். கத்தியில் இறைச்சியை அறுத்தாள். 'வார்'களைக் குறுணியாக்க முடியவில்லை. வெடுக்கு மணத்திலே அருவருப்பு. பெரிய துண்டுகளாப் போட்டாள்.

ஆமைக் கொழுப்பையே உருக்கி, கடுகு-சீரகம்-கறிவேப்பிலை-அரிந்த வெங்காயம், பச்கைமிளகாய் எல்லாவற்றையும் போட்டுத் தாழித்து, இறைச்சியைப் போட்டு வேகவைத்தாள். உப்பும் மிளகாய்த் தூளும் போட்ட பின்னர், தேங்காயின் முதற்பாலையும் விட்டுக் கொதிக்க வைத்தபோது, பெரிய வேலையொன்றைச் செய்து முடித்த திருப்தி ஏற்பட்டது. இதற்கிடையிலேயே இறாலில் சொதியும் கூட்டி வைத்தாள். குழம்பை இறக்கிவிட்டு சொதியை அடுப்பில் ஏற்ற வேண்டியதுதான். மரக்கறியில்லை.

குழம்பை இறக்கித் திருகாணியில் வைத்து, தேசிக்காய்ப் புளியை ஊற்றிப் பிரட்டிக் சட்டியால் மூடிவிட்டு, சொதிச் சட்டியை அடுப்பில் ஏற்றினாள்.

அப்பொழுது, சிவக்கொழுந்து அடுக்களைக்குள் நுழைந்தார். சாமான் பெட்டிகள், சட்டிகள், விறகு மட்டை முதலியன விரித்தபடியே கிடந்தன. இன்னமும் அவற்றை அடுக்கி ஒதுக்கவில்லை. துருவு பலகைக்குப் பக்கத்திற் கிடந்த சிரட்டை யொன்றை எடுத்துக்கொண்டு, பனை மட்டைக் கிராதித் தட்டி எழுந்து நின்ற அரைக் குந்திலே குந்தினார். 'ஆளுக்கு நல்ல ஏத்தம்.'

"இதிலை கொஞ்சம் இறைச்சி போடடி" என்று சிரட்டையை நீட்டினார்.

"நெக்குத் தெரியுமே அந்தப் பாழ்பட்டு போவாங்களோடை போனால், இப்பிடித்தான் ஆட்டத்திலை திரும்புவியளெண்டு..." அகப்பையாற்கோலி இறைச்சித் துண்டுகளைச் சிரட்டைக்குள் போட்டாள்.

"டீயே வாராத் தெரிந்சு போடு."

"சரி பிடியுங்கோ" என்று சிரட்டையைத் திருப்பிக் கொடுத்தாள்.

தோலை முன்பற்களால் உரித்துத் துப்பிவிட்டு, வாரைச் சப்பினார். பெரிய துண்டு; பல்லுக்குக் கொஞ்சம் கஷ்டம்.

"நான் தானே சொன்னான் இஞ்சை கள்ளு வேண்டி வெச்சிருக் கெண்டு."

இறைச்சித் துண்டு ஒன்றை கொடுப்புப் பற்களுக்கிடையிற் சப்பிக் கொண்டே, "நான் அந்த நளவன் சீவிற கள்ளைக் குடிப்பனெண்டு நினைச்சியே" என்றார்.

ஆணிக்குடல் துண்டு ஒன்று, அவருடைய வாயில் ரப்பராக இழுபட்டது.

"இவளுக்கிப்ப சோகை புடிச்சுப் போச்சு. உப்புப்புளிக் கணக்கொண்டும் சரியாத் தெரியுதில்லை."

மடிக்குள் மறைத்திருந்த போத்திலை உருவி வெளியே எடுத்தார். அரைப் போத்தலில், அரைவாசிக்குச் சாராயம் இருந்தது. 'கிளாஸ்' கூடத் தேடாமல், போத்தல் கழுத்தை வாயில் வைத்து ஓரே மடக்காகக் குடித்தார். அஷ்டகோணமாகிப் பிளந்த இதழ்களினால் குழம்புடன் கூடிய இறைச்சியைச் சூப்பி, அதனைச் 'சப்பாமலே' விழுங்கி, ஒருமுறை இருமி, அவஸ்தையைத் தணித்தார்.

"அதுதானே பாத்தனான். கறுப்பன் கையோடை இருக்கேக்கிள்ளை ஏன் கள்ளை?"

"நானும் பாக்கிறன். வேசைக்கு நாக்கு நீண்டு போச்சு. இப்பவே ரெண்டிலை ஒண்டு தெரிய வேணும்."

"என்னத்தைப் பத்தி?"

"நீ என்னோடை மாத்தறைக்கு வாறியோ, இல்லையோ?"

"உன்னாணை அப்பா, புண்ணியம் கிடைக்கும். போய் முழுகீட்டு வந்து சாப்பிடு. எல்லாத்தையும் ராவைக்குக் கதைக்கலாம்."

குந்திலிருந்து எழுந்தார். அவளுடைய முகத்திற்கு எதிராகத் தன் முகத்தை வைத்துக் கொண்டு, "ராவிலை கள்ளப் புருஷனோடை தான் படுக்கிறது. எனக்கு இப்ப பதில் வேணும்."

சாராய நெடியும், கடல் ஆமை இறைச்சி வெடுக்கும் 'பக்'கென்று புனிதத்தின் மூக்கத் துவாரங்களில் ஏறின. அருவருப்பு உணர்வு. வயிற்றைக் குமட்டியது.

அடுப்பில், சொதி கொதித்துத் திரைந்தது, அவளுக்கத் தலையைச் சுற்றியது.

குசினியிலிருந்து முற்றத்திற்கு ஓடி வந்து, பொன்னுருக்கிலன்று நாட்டப்பட்டுத் தழைத்து வளர்ந்திருந்த முன்முருக்கம் மரத்திற் கைகளைத் தாக்குக் கொடுக்குக் குனிந்தாள்.

"வூஓக்....வூஓக்...."- வாந்தியெடுத்தாள், அவதியின் உணர்வு.

"என்னடி மாய்மாலம் கொட்டுறாய்....என்னடி உனக்குச் சத்தியும் வருத்தமும்? சொல்லண்டீ! நீ என்னோடை வாறியா, இல்லையா?"

களைப்புடன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்தாள்.

"என்னடி நான் கேக்கிறன். நீ உன்ர பாட்டுக்கு இருக்கிறாய்?"

"நீ கேக்கிறகேள்விக்குமறுமொழியுந்தேள்வையே? இந்த வீடு வாசலை, மாடு கண்டை விட்டுவிட்டு, இரவல் புடவையிலை பெரிய கொய்யகம் வெச்சுக்கொண்டு, கூப்பிடிட இடத்துக்கு இவருக்குப் பின்னாலை திரியவேணும். நான் செத்தாலும் இந்தப் படலையைத்தாண்டி உன்னோடை வரமாட்டன்."

"சரவணமுத்துவும் திருநாவுக்கரசும் எழுதினதும், சொன்னதும் எல்லாம் சரிதான்."

"அந்தக் கோள்காவி நாரதங்கள் என்ன சொன்னவங்கள்? இனிமேல் அவங்கள் இந்த வீட்டுப் படலைக்க வரட்டும்."

"இப்ப சண்டித்தனமும் அல்லோகாட்டுறாள்" வலு ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த இறைச்சிச் சிரட்டையை அவள் மீது எறிந்தார். குறி தவறாது அது சரியாக அவள் நெற்றியிற்பட்டது. இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.

"ஐயோ, இந்தப் பாழ்பட்டுப் போவான்-குறுக்காலை தெறிப்பான்-என்னைக் கொல்லுறானே," என்று கூவித் தணிந்தாள்.

அமைதி.

"கடைசியா நான் சொல்லுறன். கேட்டுக் கொள்ளும். இந்த ரெண்டு வருஷமா நீர் உழைச்சுத் தந்ததிலை சீவிக்கேல்லை. இது என்ர வீடு வளவு. நீர் உன்ர ஆக்களோடை போகலாம்.

"என்னடி சொல்லுறாய்" என்று கேட்டவண்ணம், துருவலை'ப் பலகையை ஓங்கிக்கொண்டு வந்தார்.

"ஏன் நிக்கிறீர்? அடியுமன். மலடன்களின்ரை சண்டித்தனம் பெண்டுகளிலைதானே?"

"நான் மலடன் எண்டால், நீயும் மலடிதானேடி?"

"நீ தான் மலடன்...நான் மலடியில்லை..."

இந்நேரம் படலையைப் பிடுங்குவது போலத்திறந்து கொண்டு, அவசரமாகத் திருநாவுக்கரசு ஓடி வந்தான்.

"சரவணமுத்துவை முச்சந்தியிலை வெச்சுநளவன் செல்லத்தம்பி அடிச்சுப் போட்டான்" என்று முற்றத்தில் நின்று கத்தினான்.

"இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு. முதலிலை அவனை முடிச்சுப் போட்டுத்தான் இவளின்ரை கணக்கைத் தீர்க்க வேணும்" என்று கொடுவாக்கத்தியை எடுக்கக் குசினிப் பக்கம் பாய்ந்தார். நிதானமற்ற கால்களுடன், குசினிப்படியில் தடக்கப்பட்டு, தடாலென்று கீழே விழுந்தார். துருவு பலகையின் பற்கள் கிழித்துக் கன்னத்திலிருந்து இரத்தம் கோரமாக வடிந்து கொண்டிருந்தது.

"வடுவா! நீங்கள் பிரிச்சு வைச்ச மாதிரி உங்கடை கூட்டாளியைத் தூக்கிக் கொண்டாச்சும் போயிடு. ஆனால் ஒண்டு. இண்டையிலையிருந்து, நீயோ சரவண முத்துவோ என்ரை வீட்டுப் படலையைத் துறந்தால் விளக்கு மாத்தாலைதான் அடிப்பன்" என்று ரௌத்திர காளிபோல புனிதம் கூச்சலிட்டாள்.

..........


நான்

"நான் குரு என்ற ஆணவத்திற் பிரசவமான பிரசவமான அவா தனி! என் வழி தனி... எனக்கு மட்டும் புரிந்த வழி அதனை வார்த்தைகளிலே பரிவர்த்தனை செய்கின்றேன். மற்றவர்கள் புரிந்த வரையிற் புரிந்து கொள்ளட்டும். புரியாத வரையில், ஏதோ விளங்கிக் கொண்டதாக நடிக்கட்டும். 'புரியவில்லை' என்று முகங் கோணுபவர்களைப் பார்த்து, 'அஞ்ஞானிகள்... மூடர்கள்...' என்று எள்ளி நகையாடுவேன். அது என் வழி..."

- அவா..

வழி

வீங்குசேர் ஏமாப்பின் குதிப்பில் நடைபெறும் கூட்டத்திலே, 'வாளிலும் பேனாவே வலிமையுடையது' என்று வாய் கிழியக் கத்தும் எழுத்தாளர் திருக்கூட்டத்தினர் சபையோரமாகத் தூவப்பட்டிருக்க, ஈழத்து எழுத்துலகின் 'இரட்சகர்' எனச் சுயவிருது வரித்தோர் கூட்டத்தை நடத்துஞ் சூத்திரதாரிகளாகச் சுழன்று, கலையென்று சொல்லி, நடுவில் அரசியலிலே தொற்றி, அதயும் மறந்து, இதையுங் குழப்பி, செங்கொடி மர நீழலிற் 'கலங்கிய குளத்திலே மீன் மெத்தப் பிடிக்கலாம்' என்ற ஞான ஒளி பெற்று, சுய நாம விளம்பரத்தையே இலட்சியமாகக் கொண்டு, அந்த அடி மன ஆசா ஏக்கத்தை மறைக்க தத்துவச் சொற்குவியலில் அரண்கட்டி, தங்கள் கலைத் தொண்டால் செஞ் சூரியன் உதிக்கத் தயாராகி விட்டான் என்று தமது அரசியற் பீடாதிபதிகளையும் நம்பச் செய்து, தந்திரோபாயப் பலிதத்திற் சுய உச்சி மோந்து, தமது செயல்களுக்குக் கரகோஷமிட்டு ஆர்ப்பரிக்கச் சீடராம் இராம படையுந் திரட்டி வைத்து, எதிர்க்கருத்துக் கொண்டோர் மீது கதிரைகள் முட்டைகள் ஆகியவற்றை ஆயுதங்களாக உபயோகிக்கும் மறத் தொழிலும் இயற்றி, 'முற்போக்கு' என்ற வெற்றச் சொல்லை வேள்விக் குண்டத்தில் ஓதப்படும் யாகமந்திரத்தின் அந்தஸ்திற்க உயர்த்தி, கோஷக்குழப்பம் என்ற வேள்விக் குண்டத்தில் நெய்யூற்றும் பூசாரிகளாகத் தங்களை கற்பித்துக் கொள்ளும் பலருக்கு கலை, வேதம் ஒதியோனாம் வேதமறிந்த அவனுக்கு இந்தப் போலியாகம் வேதனையை அளிப்பதை போன்றே, வேறு பலருக்கும் வேதனை அளிக்கவே, அதனைத் தாங்காது வெளிப்படுத்த, அத்துணிவுக்கு அவனே காரணன் என்ற முனிவின் ஏகத்தில், வேதமறிந்த அவனிடந்தாம் கலை வேதம் கற்கவில்லை யென்ற 'கற்'பை நிலைநாட்டி விட்டால், தாம் தாமாகத் தோன்றித் தவத்தாற் கொடியுயர்த்தியவர்களென்பதை நிறுவி விடலாமென்ற மனத்தவிப்பில், அவன் மீது வசைமாரி பொழிந்தே முற்போக்கு எழுத்தாளர் மகாநாடு நடத்தப்படுகின்றது. அவனுடைய மனத்திலே முனிவுக்குப் பதில், அனுபவ முதுமை மதர்க்கின்றது. 'மடியில் கட்டாரியும், மனத்திலே நயவஞ்சகமும், உதட்டிலே 'தோழா' என்ற நயப்பும் புனைந்து நண்பர்களென வேடமிட்டவர்களைப் பிரிந்து செல்லும் நன்னாள் இன்னாளே' என்ற கணிப்பு வலுப் பெறுகின்றது. பித்தம் தெளிந்த அற்புத நிலை. தனி வழி பிறந்தது. தனி பயணத்தை மேற்கொள்ளுகின்றான். 'படுபிற்போக்குவாதி', 'பூர்ஷ•வாக்களின் கைக்கூலி', 'இந்திரிய எழுத்தாளன்', 'விளங்குதில்லை எழுத்தாளன்', 'தனி நபர் வாதி', 'இயக்கத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி' என்ற வகையிற் கல்லெறிகளும், பொல்லடிகளும்! 'இயக்கம் அவனைத் துலைத்தே தீரும்' என்று சூளுரைத்தார்கள். 'அவன் உதிர்ந்த மலருக்குச் சமம்' என்று ஏளனஞ் செய்தார்கள். இருப்பினும், கலையையேதன் வாழ்க்கையாகவும் இலட்சியமாகவும் வரித்துக் கொண்ட அவன் தீரா வேதனையுடனும், களி பேருவகையுடனும், அவநம்பிக்கையுடனும், அதே சமயம் அதுவே பிரசவித்த நம்பிக்கையுடனும், சிலுவைப் பயணத்தை-அல்ல, இரட்சண்ணிய யாத்திரையை-அவன் மேற்கொண்டான். அவன் அநாமதேயனல்லன். அவனை, அவனும் பிறரும் எஸ்.பொன்னுத்துரை யென அறிவர். அவனுடைய பயணத்திலே ஒரு தரிப்பு. தத்துவஜாலக் கனவென்பது படர்கின்றது.

...........

வீ

வீச்சு நடைபயின்று அளைந்து வருந்தென்றலின் உதைப்பு. இலைப் பரப்பிலே சயனித்த மரகதப் பசுமை முழுவதையுமிழந்து, முதுமையின் பழுப்பை அங்கத்திலே அப்பி, ஓசங் குன்றிய வெப்பியாரத்திற் கயர் உறுஞ்சிய சோபிதத்திலே துயருற, இலைக் காம்புஞ் சரிய, இலையடி பூட்டினை நெகிழ்த்தி மரத்திலே ஒட்டிக் கிடப்பதா, உதிர்ந்த புழுதியிற் புரளுவதா என அவதியுறும் இலையாக, இல்லற ஈரலிப்பு இற்று, பந்த பாசக் காம்பு அடியிலே சரிய, துறவற ஈர்ப்பு அவர் மனத்தினை அலைக்கழிக்கின்றது. கணுவில், இலையடியின் பிணைப்புச் சமைத்த கக்கத்திற் புதிய பிறவியின் சிரசுதயத்தை இனங்கண்ட அமைதியில் இலை சருகாக உதிருகின்றது! துறவற நோன்பியற்றும் வெறி மீதூர, இல்லந் துறந்து தூரந் தூரமாக நடக்கின்றார்.

'வீணிலே மண்ணையும் பொன்னையும், பெண்ணையுஞ் சதமென நம்பினேன். மண்ணாசை சவக் குழியின் இருப்பிடத்தில் முடிவடைகின்றது... பொன்னாசை இதயத்தைக் குழப்பிக் கொண்டே அதன் இறுதித் துடிப்பிலே மரிக்கின்றது.... பெண்ணாசை தசையின் தளச்சியுடன், வாலிபம் பருவத்து எழுச்சியிலே கலவி இன்பமே இன்பங்களின் ஆணிவேர் என்ற மயக்கத்தின் விகசிதத்திலே துயருற்றேன். கலவியிற் கழிந்த நாள்கள் விருதாவில் உதிர்ந்த நாள்களே...'- மனத்திலே சுடர் விட்டுக் குதிக்கும் ஞானக் கருத்துக்களென நூங்கு விளைகின்றது. ஆசைக்கு அழிவேயில்லை; பழைய ஆசைகளின் அழிவிலே புதிய ஆசைகள் பிறக்கின்றன; இல்லற ஆசைகளின் சிதையிலே வீட்டின்பப்பேறடைய வேண்டுமென்ற ஆசை மிக மிக ஆழமாழமாக வேர் பாய்ச்சியுள்ளது; அந்த ஆசையே ஏகமாக நிறைந்து தன்னை எதிரேறுடன் அழைத்துச் செல்வதை அவர் உணரவில்லை. இலக்கும், இலட்சிய மார்க்கமும்! வீட்டின்பமே இலக்கு; அதனை அடையும் இலட்சிய மார்க்கம் துறவற நேதியே என்ற நம்பிக்கையில் அலையலானார்.

வீடல் நாடி நீண்ட பயணம். முதுமையின் தளர்ச்சி பெற்ற உடலிலே அலைச்சலின் விளைவாஞ்சோர்வு வசதியாகக் கொழுகின்றது. பிரயாணத்தின் தரிப்பு. ஒளி குடித்து, நிழல் கவித்துள்ள மரத்தடியில் உடலை நீட்டிப் படுக்கின்றார். அம்மரத்தின் பசிய இலைகள் சமைத்த கூரையிலே பல பொத்தல்கள். பொத்தல்களினூடே நீலவானின் துணுக்குச் சிதர்கள் தெரிகின்றன. அகண்டகாரமான வானத்தை இவ்வாறு துணுக்குகளாகக் காட்டும் இலைக் கூரையின் இயற்கை அமைப்பிலே மேய்ந்த அவருடைய கண்கள், தந்தத்தின் எழில், முறுவல் சிந்தி, ஒயில் காட்டும் மலர்க் கொத்திலே தரிக்கின்றன. மென்பஞ்சுப் படுக்கைகளாக, அல்லி வட்டங்களை அலர்த்தி மேடைகள் சமைத்துக் கொடுக்கும் மலர்மொய். அமுதம் இருக்கும் இடத்தைக் காட்டும் வழிகாட்டிக் கோடுகளை நிர்வாணமாக உரிந்து, சுகந்தச் சினைப்பில்.... இராக்கதக் காம வெறிகொண்டதேனீ ஒன்று மலர்க்குறிகளை இடித்தும், மகரந்தக் கூடுகளைக் குழைத்தும். இனிப்புப் பிசின் மண்டியதேனை, உறிஞ்சியும்.... பட்டப் பகலிலே வெட்ட வெளியிலே, மலர்கள் கற்பழிக்கப்படுகின்றன! தேனீயின் காமக் கோட்டத்திலே அல்லிகள் உதிருகின்றன; மரகந்த மணிகள் சிந்தப்படுகின்றன; பூக்கள் சில அறந்து விழுகின்றன... கலவி இன்பமே சகலவுமெனத் தன்னையே அழித்துக் கொள்ளும் மலர்மொய்யின் புன்செயலிலே அவருக்கு வெறுப்புப் பிறக்கின்றது. வெறுப்பு முனிவாக முற்றி வெடிக்கின்றது.

"வீணிற் கலவியை மாந்தும் மலர்மொய்யே! அந்தத் தேனீயின் காமக் களியாட்டத்திலே நீ அழிந்து சோரம் போவது உனக்குத் தெரியவில்லையா? உன்பட்டுத் திருமேனியை அந்தத் தேனீயைத் தொட்டும் பார்க்க விடாதே. இறை தியானத்தில் ஈடுபடு. பரமபதம் அடைதல் மூலமே நமக்கு அமரத்துவங் கிட்டுகின்றது."

"வீண் கத்தையே தத்துவம் என்று எண்ணுகிறாய். பேதலித்த புத்தியின் புலம்பல். அஞ்சலி என்ற பெயரில் மலர்களைக் கருங்கல்லிலே வீசியெறிகின்றான் பக்தன். கோயிலைத் துலக்கமாக வைக்கும் ஊழியக்காரன் நம்மைக் குப்பை மேட்டிலே வீசியெறிகிறான். பரமபதம் யாருக்குக் கிடைக்கிறது? பக்தனுக்கா? ஊழியக்காரனுக்கா? அஞ்சலிப் பொருளுக்கா? உன் மூளை சுற்றுகிறதா?... சரி, இந்த ஆழமான தத்துவ விசாரத்திற்குள் நாம் இறங்க வேண்டாம். உன்னையே நீ சுய விசாரணை செய்துபார். நீ மனைவி-மக்களை விட்டு எங்கே ஓடுகின்றாய்? நீ துறந்தது எதை? துறக்க முடியாததெனத் தேடி ஓடுவது எதை? மோட்சத்தில் அமரத்துவ இன்பம் கிடைக்குமென்பது நிச்சயமாகத் தெரியுமா? நீ அலைந்து திரியும் மோட்சத்தின் முகவரியாவது தெரியுமா? இருளிற் கைவிளக்குடன் நடப்பவன் புத்திசாலி. வானத்து விண்மீன் கைவிளக்குக் கிட்டும் என்று காத்திருப்பவன் பைத்தியக்காரன்..." என்று மலர் மொய் மெக்கலியிட்டது.

"வீம்பில் எழுந்த ஏமாப்பு.... நான் இவ்வளவு காலமும் அனுபவித்தது சிற்றின்பம்; அது புன்மையானது; போலியானது. அனுபவத்தில் நான் உண்மையின் தரிசனம் பெற்றவன். சமய குரவரும் ஞானிகளும் ஒரு முகமாக விதந்தேத்தும் நிரந்தர இன்பத்தை நாடிச் செல்கின்றேன்."

"வீறு அழிந்ததும், விந்து ஒழிந்ததும் சலிப்புத் தட்டுகின்றதா? ஏமாற்றங்களை மறைப்பதற்காகப் பட்டுத்திரை கட்டி, படாடோப வார்த்தைகளிலே தத்துவம் பசுகின்றான் மனிதன். பொருளுக்கே வட்டிக் கணக்கு வைக்கும் மனிதன், கலவியின் விளைவும் அதன் பயனும் என்று கணக்குப் பார்க்கின்றான். இலாப நட்டக் கணக்கிலே இன்பமில்லை. கலவியே இன்பம். அதுவே நிலைகளனும், அதுவே இலட்சியமும், அதுவே முயற்சியும், அதுவே பயனும்! கலவியிலே அன்பும், சமத்துவமும், அமுத இன்பமும் பிறப்பதினால், சுயத்தை இழந்த பேரின்பப் பேறு கிடைக்கின்றது. நான் அரும்பாகி, முகையாகி, போதாகி, போகத்திற்குகந்த மலராகும் வரை இன்றைய தினத்திற்காகவும், கலவிக்காவுந் தவமியற்றினேன். பேரின்பப்பேறு மின்னலைப் போன்றே கிடைக்கின்றது. கணநேரக் கலவியேயாயினும், அதிலே என்னையே முற்றாக இழந்து, நானே இல்லையான, ஆனாலும் நானே நானான புது ஜன்மம் எடுத்து விட்டேன். அந்த அழிவுத் தத்துவத்திலேதான் பிறவித் தத்துவமும் இருக்கின்றது. பூவின் அழிவிலே வீயின் தோற்றம். அழிவு போலுந் தோற்றம். புதியதின் பிறப்பு. இனி, என்சூலகம் முற்ற முற்றப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகி அமரத்துவமடைவேன். கனி அழிந்து விடுமென்கிறாயா?... கனியின் விதையிலே மீண்டும் பிறப்புச் சக்கரந் தோன்றுகிறது. தன்னில் தன்னையே அழித்து, தன்னிலேயே தன்னை உருவாக்கிக்கொள்ளும் அற்புதக்கலையே கலவி. கலவியே நான். நானே கலவித் திட்டாந்தம் புரிகிறதா? எனக்கு அழிவேயில்லை..." குதூகல சரஸம் சொட்ட மலர் - அல்ல வீ- பேசிற்று.

வீளையும் ஒடுங்கிய நிசப்தம் விரிகின்றது. அவருள் எழுந்த தெளிவின் குழப்ப நிலை. குழப்பத்தின் தெளிவு நிலை. மரத்தடியிலிருந்து எழுகின்றார். குழம்பிய நிலையிலே தெளிவில்லை. இருப்பினும், தெளிவு ஏற்பட்டதான பிரமை.

வீரத்தை மண்டிய மனத்துடன் மலர்மொய் தொடர்ந்தது, "நானே மலர்; நானே வீ; நானே காய்; நானே கனி; நானே அதன் கொட்டையும்! நானே நானேயான, நானே சகலதுமான ஏமாப்பினை எனக்குக் கலவியே அளித்தது. புரிகின்றதா? இப்பொழுது சொல்; எது இன்பம்? எது நித்தியம்?" எனக் கேட்டது.

வீமம் வளைத்துக்கொள்ள அவன் தலை குனிந்தான்.

"வீட்டின்பம் எங்கே கிடைக்கிறது?" - ஏளனத்துடன் வீ அவன் நாணத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் கேட்கிறது.

"வீட்டிலே..." - ஒரே சொல்லிற் பதிலை முறித்துக் கொண்டு, தன் அமரத்துவத்தை நிலை நாட்டும் தன்னுடைய படைப்புச் சாயல்களைப் பார்க்கும் எழுச்சியுடன் தன்னுடைய குடிசையை நோக்கி நடக்கலானார்.

..........


சுவை

நபிபெருமானார் (ஸல்) வீற்றிருந்தார். தோழர்கள் அருகிலிருந்தார்கள், கிழவி ஒருத்தி வந்தாள். அவளிடம் ஒருகூடை. கூடையிலே பேரீச்சம் பழங்கள். அவற்றைப் பெருமானாருக்கு அர்ப்பணித்தாள். உண்ணும்படி வேண்டினாள். ஏந்தல் இரங்கினார். வேண்டுதலை இயற்ற விழைந்தனர். ஒரு பழத்தைப் புசித்தார். பின்னொன்று. தொடர்ந்து ஒன்று. மீண்டும் ஒன்று.... கூடை வெறுமையாகியது. கிழவி மகிழ்ந்தாள். நிறைவுடன் திரும்பினாள்.

தோழர்களுக்கு வியப்பு. பெருமானாரின் செயல்புரியவில்லை. பெருமானாரின் வழக்கமே வேறு. எதையும் பங்கிட்டே உண்பார். தோழர்களுக்குக் கொடுக்காது புசித்தார். இன்றோ? பழங்களைப் பங்கிடவில்லை. முழுவதையுந் தாமே புசித்தார். 'காரணம் என்ன?' தோழர்களுக்கு எழுந்த ஐயம். விளக்கங் கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் முறுவலித்தார். வருமாறு சாரப்பட மொழிந்தார்:

தோழர்களே! அப்பழங்கள் புளிப்பானவை. உங்களுக்கத் தந்திருப்பேன். சுவைத்துப் பார்த்திருப்பீர்கள். புளிப்பிலே முகங்கள் கோணும். மாற்றத்தை காண்பாள். மனம் புழுங்குவாள். என் முகம் கோணியதா? இல்லை. முழுவதையும் புசித்தேன். எனவே, அவள் மகிழ்ந்தாள். கிழவியின் மனம் நிறைந்தது.

சாந்தி ஒளிர்ந்தது. தோழர்களின் மனங்கள் சிலிர்த்தன.

..........

சிதை

பக்தரது பஞ்சாட்சர உச்சாரணந் தெளிவாகவும், தொடர்ச்சியாகவுந் தோடுடைய செவிகளிலே விழுகின்றது. ஓங்காரநாதம் அணுவும் புக முடியாத இடங்களையும் நிறைந்து வழிகின்றது.

அகம் முகையவிழ, நிஷ்டை கலைகிறது, இமைக்கபாடங்கள் பூட்டவிழ, நயனங்கள் மலர்கின்றன.

'பக்தர்களின் அஞ்சலி ஆர்ப்பரிப்பு; பக்தி மூச்சினாலே என்னுடன் இரண்டறக் கலக்கும் ஏக்கம்.'

நஞ்சுண்ட அதரங்களிலே குமிண்சிரிப்பு அரும்ப, நெஞ்சிலே அருள் சுரக்க, சக்தியைத் திரும்பிப் பார்க்கின்றான்.

சக்தியின் கோலத்தில், பரமேசுவரனின் மனச்சரிவு. ஈசுவரின் ஓசங்குன்றிட, சினமென்னும் இராகு நிழற்குடை விரித்திருக்கின்றது. குழல் துன்பத்தின் இழைகளாகச் சோர்ந்து புரள, விழிப்புழையிலே சோகச் சாந்தின் கருமை மொய்க்கிறது. இதழ்கள் சுட்டன.

"பக்தியாம் பக்தர்களாம்! கூத்தாடியின் அபிநயம்!" - ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எழுத்தொலியாக உருவாகின்றது. ஒவ்வோர் உச்சரிப்பும் ஏளன உலையிற் புடம் போட்டு வெளிவருகின்றது.

"ச-க்-தீ!"

கைலாசம் ஒரு துகட் பொழுதிலே கோடானு கோடி முறை தடுமாறிச் சுழன்று, மறுகணம் இமயமேயாக நிலைக்கின்றது.

"நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு நான் என்ன பஞ்சபாணனா? அன்றேல், சங்கப் புலவன் நக்கீரனா? ஊமத்தம் பூக்களை மோந்து உன்மத்தந் தலைக்கேறி, பேய்களும் பூதகணங்களும் ஆர்ப்பரிக்கும் நடுநிசியில், சங்கார லீலா விநோதம் புரிவதான எண்ணத்தில், ஊன்பொடிபூசிச் சுடலையாடுவதும்....அந்தப் பித்தனுக்கு ஒரு மனைவியாம் ; அவளுக்கு ஒரு வாழ்க்கையாம்!" ஆளுடைய பிள்ளைக்குப் பாலமுது ஊட்டிய அந்த நித்திய யவ்வனக் கொங்கைகள் குலுங்க ஈசுவரியின் விழிப்புலத்திலே இரு குருத்துக் கங்கைகள், பிரசவ நோக்காட்டிலே சிரசுதயங் காட்டுகின்றன.

"பிரம்மா! உன் படைப்புத் தொழிலுக்கும் போட்டியா? 'இந்த விழி நதிகள் பூலோகத்திற்கும் பாயுமானால், பிரளயந்தான்.

"வாணி பீடுடன் மொழிந்தாளே, அத்தனையும் உண்மை. பூலோகத்தில் வாழும் பக்தரெல்லோரும் நம்மை மறக்கத் தொடங்கி விட்டார்கள். படைப்பிற்கு நான்முகன். அவனுடைய அழகிய கற்பனைகளைத் தானும் பகிர்ந்து வாழ்வதனால் தனக்கு இயல்பாகவே ஆய கலைகள் அறுபத்து நான்கும் அமைந்து விட்டதாக வாணி பெருமை பேசுகிறாள். வெள்ளைக் கலையுடுத்திய அவளையே மக்கள், கலையின் தெய்வமாக வணங்குகிறார்கள். என்னை யார் மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள்? நான் எல்லாவற்றையும் அழித்துத் துவம்ஸம் செய்யும் பித்தனின் மனைவி-பிச்சி! இரத்தவெறி மிகக் கொண்டு மனிதப் புலாலைப் பிழிந்து பச்சை உதிரத்தை குடிப்பவளாக தோன்றுகிறேன். போதும் வாழ்ந்த வாழ்வு!" - சலிப்பின் இளரேகை புரையோட அகிலாண்டேஸ்வரி சொன்னாள்.

"ஓகோ! இது பெண்கள் சண்டையா?" ஈசனின் முகத்திலே விஷமத்தனம் குதித்துத் தவழ்ந்தது.

"பெண்களென்றால் ஏளனமா? கிருபையிடமும், அநுசூயாவிடமும்..." என்று தேவி சொல்ல, உருத்திரதாண்டவ முத்திரையிடும் விரல்களைக் குவித்துச் செவிகளைப் பொத்துகிறான்.

ஈசனின் துன்ப அபிநயம், தேவிக்கு மாரீசக் களிப்பினை அளிக்கிறது. விழிகளிலே சுரக்கும் கங்கைகள் தூர்ந்து விடுகின்றன.

"சக்தி! நீயே சர்வலோகங்களினதும் ஆதியந்தமற்ற, எல்லையற்ற ஜ“வ நதியாகப் பரம்பியிருக்கும் பொழுது, வாணி உகுத்த பகட்டுச் சொற்களிலே மதியிழந்து அழுக்காறு கொள்ளலாமா?"

முகத்திலே சிந்தனை மின்னல்கள் பளிச்சிட்டு மறைய, சக்தி பரமேசுவரனை நோக்குகிறாள்.

"நீயே நான். நானே நீ நாமே நாம். இதுவே தத்துவம்"

"உன்மதத்தப் பிதற்றல். ஆலகாலம் கண்டத்திலே கட்டுண்டது என நினைத்தேன். இல்லை, அது சிரசுவரை ஏறியிருக்கின்றது. இல்லாவிடின் மேன்மையான படைத்தல், காத்தல் ஆகிய தொழில்கள் இருக்க அழித்தலாம் தொழிலினையே மேற் கொண்டிருப்பீர்களா?"

பரமேசுவரனின் இதழ்களிற் பக்தரின் அறியாமையைக் காணும்போது மலரும் சிரிப்பொன்று புரளுகிறது.

"அழித்தலே படைத்தல்; அழித்தல் காத்தல்! படைத்தல் அழித்தலே; காத்தலும் அழித்தலே! படைத்தல்-காத்தல்-அழித்தல்-மறைத்தல்-அருளல் என்னும் ஐந்தொழிலையும் இயற்றாதியற்றியும், அழித்தலையே உரித்தாக வரித்தோம். அழித்தலே நித்தியம். உயர்ந்த சமத்துவ சமசரத் தத்துவத்துடன் நித்தியத்துவத்தை விளக்குந் தொழிலின் மேன்மைக்கு எஃது ஈடாகும்?"

ஏளனத்தின் நறுக்கொன்று அவளுடைய முகத்திலே பளிச்சிட, "என் அண்ணன் கண்ணனைப் போல நீங்களுந் தத்துவம் பேச விழைந்தீர்களா?" எனக் கேட்கிறாள்.

தேவியின் வார்த்தைகள் ஈசனின் நெஞ்சத்திற்கு நேரே சர மழை பொழிகின்றன. அவற்றை வில்வ இலைகளாக ஏற்றுக் கொள்கின்றார்.

"கோகுலவாசியா மகாதத்துவம் பேசுபவன்? வார்த்தைகளிலே உள்முடிச்சுக்கள் பல வைத்து அவன் எதையாவது சொல்வான். பக்தர் அதிலே ஏதோ ஆழ்ந்த நித்திலக் கருத்து இருப்பதான பிரமையில் அந்த முடிச்சுக்களை அவிழ்க்கும் ஓயாத பிரயத்தனத்திலே ஈடுபட்டிருக்கும் பொழுது, அவன் கோபியருடன் லீலா விநோதங்கள் புரியச் சென்று விடுவான். இது தத்துவமா? தந்திரமோ?"

பழுத்த இலையொன்று பூட்டவிழ்ந்து நிலத்தாயை முத்தமிட எடுக்கும் நேரக் கணிப்பிற்குக் கைலாசத்தில் மௌனம் நிலவுகின்றது.

மௌனத்தைக் குடைந்து வாணி எழுப்பும் வீணாகானம் கேட்கிறது. இசையலையிலே தேவியின் மனம் அலைக்கழிக்கப்படுகின்றது.

"வீணையும் அதன் நாதமும் போல அவர்கள் வாழ்கின்றார்கள். பிரமன் இப்பொழுது எதையாவது புதிதாகப் படைத்திருப்பான். அப் புதிய ஆற்றிலில் மதர்க்குங் கற்பனையிலே களிப்புக் கொள்கிறாள் வாணி, அவளுக்குத்தான் என்ன குறை? அவளைக் கணவன் நாக்கிலே வைத்துச் சேவிக்கிறான்."

"தேவி, தர்மம் அழிந்ததா? சுயம் ஒழிந்ததா? நீ உமை. நான் உமையொரு பாகன். எனவே நீயே நான். நானே நீ. நாமே நாம். ஏன் வீண் சஞ்சலம்? பூலோகத்திற்குச் சென்று வெகு காலமாகி விட்டது. நாமே நேரிற் சென்று உண்மைகளை அறிந்து மீளுவோம்." - அன்புப் பசையிலே பிணைக்கப்பட்ட வார்த்தைகள்.

"நமது பூலோக விஜயத்தின் போது நம்முடைய தொழிலின் மேன்மை நிறுவப்பட்டால்....?" ஈசனின் கேள்வி.

"ஈசனின் இஷ்டம் இயற்றப்படும்."

"மண்டலங்கள் கீதம் பாட, மாதவர்கள் தாளம் போட, மாங்குயில்கள் வேதம்பாட, காலாட, துடையாட இடையாட, கழலாட, தோடாட, குழல் சோர, உடையவிழ கொங்கைகள் இரண்டும் பொங்கிக் குலுங்கி ஆட தத்தீம்-தித்தீம்-தகதீம் என்று கூத்தாடி என் தேவி மகிழ்விப்பாள்"

"சம்மதம்"

*

மண்ணுலகின் பொன் பூக்குங் காட்சிகள். சக்தி மெய் மறக்கின்றாள். புள்ளி மாளினந் துள்ளும் காடுகளும், கோல மயிலாடு வனங்களும். தேன் சுவைப் பழஞ்சொரி சோலைகளும், நறுமலர்கமுக்கு காக்களும், மரகதப் பாய் விரிக்கும் கழனிகளும், குதிக்கும் அருவிகளும், அசையும் நதிகளும், பங்கயத் தடாகங்களும், ஓதையுடன் அலை வீசிக் கரை அளையும் நீலத்திரைக் கடலும், புள்ளின இசையும், பூவினச் சுகந்தமும், தென்றலின் பஞ்சுத் தழுவலும் கள்ளின் மயக்கத்தை ஊட்ட....

"அற்புதமான படைப்பு."

"மாயத் தோற்றங்களின் அநித்திய ஜாலங்கள். சக்தி வா, மனித நாகரிகம் கொழுத்து வளரும் நகர மொன்றிற்குச் செல்வோம்."

முகில் தொட்டுக் கர்வஞ் சிந்திப் பல அடுக்கு மாளிகைகள் எழுந்து நிற்கின்றன. கடுகதியில் இயந்திர விசை இசைத்து ஓடும் வாகனங்கள். கண்களைப் பறிக்கும் நியோன் விளக்குகள். விஞ்ஞான அசுரனின் இரைக்கல். அற்ப எறும்புகளாக அலையும் மனிதர்கள்.

சக்தி திகைக்கின்றாள்.

"களவுளின் படைப்புக்குக் கடவுளின் படைப்பேயான மானிடன் விடுக்குஞ் சவால். அந்த இமயம் நிகர்ந்த கட்டடங்கள் மனிதன் கட்டியவை. ஓடும் நதியைப் பிளந்தெடுத்தது அந்த மின்னொளி. பணமும் விஞ்ஞானமும் சர்வ வல்லமை பெற்றுச் சகலவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன." - ஈசனின் விமர்சனம். தேவியின் மௌனம்.

"வா, படைப்பின் விசித்திரங்களைப் பார்ப்போம்."

பேச்சுக்கள் இற்று விடுகின்றன. சூக்கும இயக்கம்.

"இது மருத்துவனை. பேச முடியாதவர்கள்; பார்க்க முடியாதவர்கள்; நடக்க முடியாதவர்கள்; வாழ முடியாதவர்கள்.... அதோ, பெரு வியாதிக்காரகள்! குணப்படுத்தப்பட இயலா நோய்களின் ஆக்கிணைக்குள் அழுந்தி அணு அணுவாகச் சாகிறவர்கள்..."

மருத்துவனை வாசிகளின் அவலக் குரல்களுக்குச் செவி சாய்க்கிறார்கள்.

'ஐயோ தயாநிதி! சித்திரவரை செய்யாமல் என் உயிரை எடுத்துக் கொள்.'

'கண்களும் கால்களும் அற்றுப் பிறந்த இது செத்தே பிறந்திருக்கக் கூடாதா?'

'சனியன் செத்துத் தொலைக்காமல் கட்டிலில் இழுபட்டுக் கிடக்குது.'

'பிள்ளை, அப்பாவுக்குக் கிட்டப் போகாதே. அது தொற்று வியாதி.'

'அம்மாவுக்கு ஆபத்து. உடன் இரத்தந் தேவை'

தேவி திருச்செவிகளைப் பொத்துகின்றாள்.

"நரக வேதனை. வாருங்கள், போய்விடுவோம்."

"படைப்புத் தொழிலின் மேன்மைகளை யதார்த்தமாகப் பார்த்தாயா?"

ஈசனின் கேள்விக்குத் தேவி பதில் உத்தரஞ் சொல்ல வேயில்லை.

பட்டினத்தின் வேறு பகுதியில் நடக்கத் தொடங்கினார்கள்.

ஒரு பெரிய கட்டடம். தனி அறை. ஒருவன் பல வேலையாள்களுக்கு இரகசியம் பேசுங் குரலிற் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்றான்.

"இவன் கள்ளக் கடத்தல் வியாபாரி. தான் உயிர் வாழ்வதற்காகத்தான் இத்தகைய அரசாங்க விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளதாக இவன் நம்புகின்றான்."

பெரிய ஆலையொன்றிலே, தோலைப் பொசுக்கும் வெப்பத்தைக் கக்கும் உலைக்கு முன்னால், தன் உடலைக் கயிறாக முறுக்கி ஒருவன் வேலை செய்கின்றான்.

"இவன் ஒரு தொழிலாளி. தான் உயிர் வாழ்வதற்காகத் தன் உடலை இப்படிக் கசக்கிப் பிழிகின்றான்."

மாமிச மலையான ஒருவன் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான்.

"இவன் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதற்கே!"

சாலையின் ஓரத்திலே, பிட்சாபாத்திரம் ஏந்தி, வருவோர் போவோரிடம் பற்களைக் காட்டி ஒருவன் பிட்சை கேட்கின்றான்.

"இவன் பிட்சை எடுப்பது தன்னுடைய உயிரைக் காப்பாற்றவே!"

ஒருத்தி தன்னுடைய கற்பைப் பேரம் பேசுகின்றாள். விலை சம்மதம். ஓர் அறைக்குட் சென்று, கூச்சமின்றி அந்த அந்நிய ஆடவனுடன்....

இவ்வளவு நேரமும் நகரத்தின் காட்சிகளையும், ஈசனின் விமர்சனங்களையுங் கேட்டுக் கொண்டு வந்த சக்தி திகைக்கின்றாள்.

"ஐயோ, கற்பு..." என்று சக்தி கதறுகின்றாள்.

"அவளுடைய செயல், தசை இன்பங்களின் பாற்பட்டதன்று. உயிர் வாழ்வதற்காக தன்னுடைய உடலை வாடகைக்கு விடுகின்றாள். அவளைப் படைத்தவன் பிரம்மா. அவளைக் காப்பவன் திருமால்!"

தோல்வி மனத்தை அலைக்கழிக்க, நாணம் மீதூரத் தேவியின் தலை கவிழ்கின்றது.

"போதும் ஈஸ்வரா. கைலாசத்திற்கு மீளுவோம்."

"தேவி, என்னுடன் வா." மறுப்பு எதுவுமில்லை, பின் தொடர்கின்றாள்.

சுடலை. ஆனந்த மிகுதியால் ஈசன் ஆர்ப்பரிக்கின்றான்...

"இங்கே இந்நாட்டின் சர்வாதிகாரிக்குச் சிதை. இது வணிகனுக்கு. இது தொழிலாளிக்கு. இஃது ஒரு கற்புக்கரசிக்கு. இஃது ஒரு விபசாரிக்கு. இது பணக்காரனுக்கு. இஃது ஏழைக்கு. படைப்பிலும் வாழ்விலும் எவ்வாறிருப்பினும், ஈற்றில் இச்சுடலைக்கு வந்து சமமாகிச் சங்கமிக்கின்றார்கள். சாவு நித்தியம். என் தொழிலேந்தும் சமத்துவ சமசரத் தத்துவம் நித்தியம். எல்லாமே அழிந்து, எல்லாமே ஒன்றாகி, எல்லாமே நானாகி, என்னிற் கலந்து நீயாவது நிச்சயம். நீ சக்தி!"

ஈசன் வெற்றிக் களிப்புடன் உடலெல்லாம் சுடலைப் பொடி பூசி ஆடுகின்றான்.

*

கைலாசத்திலே காலாட, துடையாட, இடையாட, கழலாட தேவி இயற்றும் ஆடலின் நாதம் தோடுடைய செவிகளிலே விழுகின்றது.

...............

'வீடு எழுதப்படுவதற்குக் கழைக் கூத்தாடியின் நிதானந் தேவை. மூலத்தை நீட்டவோ மழிக்கவோ கூடாது. புத்த போதனைகளுங் கோட்பாடுகளம் அசலாகவே இருத்தல் வேண்டும். கதையென்றாலுங் கதையேதான்.

ஒருப்பாகவேனுங் சில பாளிச் சொற்கள் இக்கதையிலே வருகின்றன. பௌத்த மதக் கோட்பாடுகளை விளக்க அவை அவசியமே என்று காணப்படும் இடங்களிலே மட்டுங் கையாளப்பட்டுள்ளன. அவற்றிற்குச் சமஸ்கிருத அர்த்தங்கள் ஏற்ற வேண்டாம்.

வீடு
வினை

புத்தர் மௌனத்தின் மோனத்திலே எழுந்தார். இதழ்கள் பூட்டே அவிழாது ஒன்றின் மேல் ஒன்றாகச் சயனித்தன. முகம் சிலையாக, பாவம் சித்திரமாக அமைந்தது. அமைதியான அமைதி; நிறைவான நிறைவு. எதிரிலே பாத்திரத்துடன் நின்ற இளவரசன் நந்தகுமாரனின் கண்களைக் கருணா மூர்த்தியின் விழிகள் ஒரே கணத்தின் சிதறலிலே துழாவின. நடக்கத் தொடங்கினார். அவனோ தானத்தைப் பெற்றுக் கொள்ளாது செல்லும் புத்தரைப் பின் தொடர்ந்தான். சாக்கிய வேந்தர் சுத்þ‘தணன் திகைத்து நின்றார். ஸப்த ஸ்வரங்களை இனிதாகக் குழத்துப் பொழிந்த வீணையின் தந்திகள் தெறித்து எழுந்த அபஸ்வரத்தைத் தொடர்ந்து சோகம் முளைவிடுகிறது.

கபிலவஸ்துவிலே புதிதாக நிர்மாணிக்கப் பட்டிருந்த அரண்மனையில், அன்று மூன்று வைபவங்கள். அரண்மனைக் கிரஹப் பிரவேசம்; நந்தகுமாரனின் முடிசூட்டு விழா; அவனுக்கும் ஜனபதகல்யாணிக்குங் கல்யாணம். சித்தாத்தர் தனது லௌகீகக் கனவுகளை நொருக்கிக் கடற்கரைக் கருத்து மணலாக்கி பின்னர், மன்னர் சத்தோதணன், தன் இளைய மனைவி பிரஜாபதி கௌதமி மூலம் பெற்ற நந்தகுமாரன் சாக்கிய மன்னனாக வீற்றிருப்பான் என்ற நம்பிக்கை வேர்களை ஆ‘ம் ஆழமாக ஊன்றி, வாழ்க்கைக் கிளைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார். இன்றைய-இந்தப் போழ்திற்காக சாம்பரிற் குளித்த தணலாக எத்தனை காலந் தவித்திருக்கின்றார்? எல்லாமே மங்கலாக நடக்கின்றது என்ற நினைவுப் போது மலர, தானத்தைப் பெற்றுக் கொள்ளாது புத்தர் நடக்கிறார். காந்தத்தினால் ஈர்க்கப்படுங் கருந்தாதுத் துணுக்காக நந்தகுமாரன் பின் தொடருகின்றான்.

மகனைத் தடுத்து நிறுத்த இயலாததை உணர்ந்து, மின்னலை விழுங்கிய கருமுகிற் குன்றென முகம் வாடி நின்றார். அவர் தம்முடைய நம்பிக்கை வேர்கள் ஒவ்வொன்றாக அறும் அவ்வேளையிலும், வாய் திறந்து எதுவுமே சொல்லவில்லை.

கீழே இறங்குவதற்கு முன்னர், புத்தர் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் வைத்தாவது தானத்தை ஏற்றுக் கொள்வார் என்ற அவாத் தாரகை எரிநட்சத்திரமாக, இருட்காடே மனவிசும்பில் விரிகிறது. சரியாக உச்சிக்கு வந்து கதிர்ச் சரங்கள் விழ இரு நாழிகை நேரமிருக்கும். அதற்கிடையிற் சோர்க்காது போனால், தானம் வீண்; விழா பாழ்.

ஒவ்வொரு படிக்கட்டிலும் மிக நிதானமாகவும், அமைதியாகவும் புத்தர் இறங்கினார். தானப் பாத்திரத்துடன் நந்தகமாரன் பின்தொடர்ந்தான். ஒவ்வொரு கணமும் மெதுவாகக் கழன்று கழன்று உதிருகின்றது. கீழ் மண்டபத்தை அடைந்ததும் புத்தரின் சென்னி திரும்பிற்று. அப்பொழுதும் நம்பிக்கையின் மெல்லிய நூலில் அவன்வலிக்கப்பட்டான். பிரிகள் சிலிம்பி நூல் அறுந்தது.

புத்தர் விஹாரத்தை நோக்கி நடந்தார். மௌனப் போர்வை. உள்ளத்திலே பல சிந்தனைகள் குறுக்கும் நெடுக்குமாகக் குதித்துக் கூத்தாட, நியாயப்பிரமாணங்களுக்குங் காரண ஏதுகளுக்குங் குதிராத நிர்ச்சிந்தைச் சூன்யத்தில் நந்தகுமாரன் பின் தொடர்ந்தான்....

இருள் வானிலே சட்டென்று பூத்துக் கண்களைக் கூசச் செய்யும் நட்சத்திர மொன்று அக்காலதரிலே தோன்றிற்று. சாக்கியப் பெண்களின் எழில்ராணி ஜனபதகல்யாணி மணப் பெண் கோலத்தின் எழில் ஏந்தி தன் காதலனை நோக்கினாள்.

சிங்கத்தின் வாயொன்று கர்ஜிக்கும் பொழுது சிக்காராகத் திறந்தது போன்ற அமைப்பிலிருந்தது அந்தக் காலதர். காங்கையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்குஞ் சூரியக் கதிர் முற்றிச் சரிந்த நெற்கதிர் வண்ண வித்தை எழுப்பி முகத்தின் விமலத்தைத் துல்லியமாகக் காட்டிற்று.

கூன் நுதல்; கூர் மூக்கு; கட்டித் தயிரிற் சிக்கிய இரு நாவற்பழக் கண்கள்; எலும்புகள் எதுவும் தெரியாது குங்குமச் சதை நிறைந்த முகம். கருமேகத்தின் சமுத்திர அலைகளை நிகர்த்த அளகபாரத்தில் ஜொலித்த நகைகளெல்லாம் விண் மீன்களை நாயச் செய்தன. பருவத்தின் திரட்சி மேடாய் முன் தள்ளும் மார்புகளின் பாரத்தைக் காலதரின் கீழ் விளிம்பிலே சாத்திய பாவத்தின் ஒயிலே சௌந்தர்யத் திலகமாகத் திகழ்ந்தது.

நந்தகுமாரன் நின்றான்.

அவளுடைய அந்த அகலிய நயனங்கள் இமைத்திரைக்குப் பின்னால் கண்ணாமூஞ்சியாடின. பின்னர் கூச்சந் தெளிய, வெளிவந்து, இமை வாய் விரித்துச் சிரிப்பில் அலர்ந்தன.

விழிகளைப் பருகும் விழிகள். நொடிப்பொழுது நேரத்தில், யுக யுகாந்திரத்து இரகசியங்கள் பின்னிப் பிணைந்து சங்கமித்துக் கலந்தன.

"விஹாரத்திற்குச் சென்று திரும்புவேன்!"

"சீவர ஆடைக்குள்ளே சிற்றின்ப நினைவுகளைப் புதைத்து விட்டவர்களுடைய இருப்பிடத்திற்கா? என் மனம் சுடரைச் சுற்றும் விட்டிலா நடுங்குகின்றது."

"உன் எழிலோவியம் தீட்டப் பெற்ற மனத்திற்குள் துறவறத் தத்துவம் நுழைய மாட்டாது."

"முகூர்த்த வேளை சமீபிக்கின்றது."

"கடிதில் நான் திரும்புவேன்."

"நான் என் விழிகளை நீங்கள் வரும் வழியிற் புதைத்துக் காத்திருப்பேன்."

இக் காட்சியினைக் கண்டுங் காணாதவராக, சலனமற்ற மனத்துடன், புத்தர் விஹாரத்தைநோக்கி நடந்து கொண்டிருந்தார்.


வழி

புத்தர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். நியாய வரையறைக்குள் அடங்காது பிதுங்கும் பக்தியுடன் நந்தகுமாரன் நின்றான். அவ்விடத்தில் ஏதேனொரு பூந்தடியை நாட்டியிருந்தால், அடி வேரூன்றி நுனி தளிர் தள்ளியிருக்கும்.

நண்பகல் கால் நாழிகை ஓட்டத்திலே தொங்கிக் கொண்டிருந்தது. அந்த விரற்கட்டை நேரந் தவறினால், தானம் கொடுப்பதுமில்லை; கொள்வதுமில்லை.

கண்களைத் திறக்காமலே, "நன்த, நான் தானத்தை ஏற்றுக் கொள்ளுகின்றேன்" என இரு கைகளையும் புத்தர் நீட்டினார்.

அஞ்சலியில் உடலைப் பாதியாகச் சுருக்கிக் கொண்டு, தானத்தை அளித்தான். வயிற்றுச் சுமையை இறக்கியவனின் நெற்றியிலே துளிர்க்கும் நித்திலத் துளிகளை நினைவூட்டும் வியர்வை மணிகள்.

புத்தம் புதிய குவளை மலர்களாகப் புத்தரின் கண்கள் மலர்ந்தன. தானத்தை ஏற்றார்.

நந்தகுமாரனின் முகத்திற் கேள்வியொன்று கொக்கு நிஷ்டையிட்டிருப்பதை அவதானித்தார்.

"நந்த, என்ன யோசனை? எனக்கு அவகாச முண்டு."

"திரிகால முணர்ந்த திலோகமூர்த்தி நீங்கள். மதக்கோட்பாடுகளின் முடிச்சுகளைப் பிரித்துப் பார்க்கும் அவகாசத்துடனா நான் வந்திருக்கிறேன்? மூத்தவர், முதல்வர், புனிதர், புண்ணியர்! உங்களுடைய ஆசிபெற விழைந்தேன். சண்டாளர்களிடங்கூடத் தானம் ஏற்கும் நீங்கள், ஏன் என் தானத்தை அரண்மனையில் ஏற்க மறுத்துவிட்டீர்களென்பதை அறியாதே என் மனம் குழம்புகின்றது."

சுபாவத்திற்கு எதிராக உணர்ச்சியில் வெந்த நந்தகுமாரனின் வார்த்தைகளிலேகாங்கை கொழுத்துக் கிடந்ததை உணர்ந்தார். விழிப்புலன் அவனுடைய முகத்தை மேய்ந்தது.

உலகின் துன்பங்கள் தாக்காத பால்முகம். இருப்பினம், பாலுணர்ச்சி அலைமோதல்களிற் குதிர்ந்து இச்சாபங்க முற்றிருந்த ஒரு மனக்குறையின் சுவடு அவனுடைய முகத்தில் முத்திரையிட்டிருந்ததை அனுமானித்தார்.

அவருடைய பார்வையிலிருந்து நழுவுந் தப்புவகை எண்ணம் குருத்துத் தள்ளுகின்றது.

'விடை தாருங்கள்." குரலில் அவசரங் கொப்பளித்தது.

"அவசரமா? எதற்கு இவ்வவசரம்? நாம் மூப்பினையும், சாவினையும் நோக்கி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணராது, அற்பங்களுக்காக - மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் மிக மிக அற்பங்களுக்காக-நாம் அவசரப்படுகின்றோம்."

"முகூர்த்த வேளைக்கு முன்னர் நான் திரும்பி விடவேண்டும். நானேகும் வழியைப் பார்த்தே ஜனபத கல்யாணி கால் கடுக்க நிற்பாள்."

"வேளை-முகூர்த்தம்-நேரம்! நந்த, இந்தக் கல்யாண முகூர்த்தந் தவறினால், இந்தப் பூவுலகில் எதிர்காலத்தில், கல்யாணங்களே நடைபெறாதிருக்கப் போகின்றனவா? எத்தனையோ முகூர்த்தங்கள் மரித்த பின்னர், இம்முகூர்த்தம் வந்திருக்கின்றது. இந்த முகூர்த்தம் இறந்த பின்னரும், எத்தனையோ முகூர்த்தங்கள் விளையக் காத்திருக்கின்றன. இம்முகூர்த்தத்திலிருந்து இன்னொரு முகூர்த்தம் வரும்வரை காத்திருப்பதற்கிடையில், நீ மண வாழ்விற்குத் தேவையான இளமையை இழந்து விடுவாயா? வேளையைப் பற்றியும், முகூர்த்தத்தைப் பற்றியுங் கவலைப்படும் நீ, இவற்றின் ஓட்டத்தினாலேற்படும் மூப்பினைப் பற்றிச் சிந்தியாதிருப்பது ஏனோ? வேளைக்கும் சித்தத்திற்கும் சம்பந்த முண்டு என்ற உண்மையை மறக்காதே. அனந்தமென்ற இறந்தகாலத்திலிருந்து அனந்தமென்ற எதிர்காலத்தை நோக்கி இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. இறந்தகாலம்-எதிர்காலம் என்ற இரண்டு போழ்துகளைப் பிரிக்கும் இமைப்பொழுதுதான் இந்த நிகழ்காலம். அதனை நீ வேளையென்றோ முகூர்த்தமென்றோ அழைக்கலாம். உலகில் எல்லோரையும் துன்பத்திற்குள்ளாக்கும் பிணி-மூப்பு-சாக்காடு ஆகிய உண்மைகளைப் பற்றி உன்னுடன் நான் பேசும் முகூர்த்தம் இதுதானென்று வைத்துக் கொள்."

அர்த்தங்களின் அடி முடி எதுவுமே அறிவுக்கரங்களுக்குட் சிக்காது-ஆனாலும், அதற்குள் அனந்தகோடி அர்த்தங்கள் விரிவதான ஒரு மயக்கத்தை அந்த வார்த்தைகள் பாய்ச்சகின்றன. இருள் முகிலின் கரும்வயிற்றைப் பிளந்து திடீரெனப் பிரசவமாகும் மின்னலைப் போன்று ஏதோ ஒரு பிரகாசந் தோன்றி.... மறுகணமே இருட் சாந்து வியாபித்து விரிகின்றது.

யாரிடமுங் காண இயலாத ஓர் அமானுஷ்ய காந்த சக்தி புத்தரிடந் துலங்குகின்றது. அதன் ஈர்ப்பிற்குக் கட்டுப்பட்டு அமருகின்றான்.

"தானத்தை விஹாரத்தில் வைத்து ஏற்றுக் கொண்டதற்குச் சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?"

"உன் மொழியில், அதற்கான முகூர்த்தம் இப்பொழுதுதான் வந்தஎனவும் வைத்துக் கொள்ளலாம்."

"தூய நெறிகளைக் கடைப் பிடித்துத் துல்லியர்களாக வாழும் புத்தருக்கும், பிக்குகளுக்குந் தானம் வழங்கவே தகுதியற்ற பாவியென்று அரண்மனையிலுள்ளோர் இகழ மாட்டார்களா? நீங்கள் துறவறம் நாடியதால் வெறுமையாக இருக்கும் மன்னர் வார்சுதார் பதவியை நான் நிரப்பல் வேண்டுமென்பது எந்தையின் விருப்பம்."

அஞ்ஞான மருள் சூழ எழும் ஐயத்திற் பிறந்த கேள்வியல்ல என்ற உண்மையிற் காலப் புழுதி படியவில்லை.

"மன்னன்-செல்வாக்கு-அந்தஸ்து! இவை எதனால் உண்டாகின்றன? பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும், இல்லை, அதற்குப் பின்னரும்-சம்சாரச் சக்கரம் ஓயாமல், தரிக்காமற் சுழல்கின்றது. நமது ஊழ் இதனைச் சுழற்றுகின்றது. நீ சென்ற வாழ்க்கையில் என்னவாக இருந்தாய்? அடுத்த வாழ்க்கையில் என்னவாகப் பிறப்பாய்? இன்றிருக்கும் நிலை, நாளையுஞ் சாசுவதமானதா? இதனை அறியும் மார்க்கத்தினைப் புரிந்து கொள்ள உன் சித்தத்தினைப் பழக்கியெடுக்க முனைந்ததுண்டா? சீலமே தானமளிக்கும் ஸ்திதியினை நிச்சயிக்கின்றது."

"சீலமா? நீங்கள் மனிதரை வாட்டும் பிணியென்ற துன்பத்தைத் துடைக்கவும், எங்களால் இன்பமென்று கொள்ளப்படும் சகலவற்றையுந் துறந்தீர்கள். பிணிபரப்புந் தொழிலில் ஈடுபட்டு, பல ஆடவருக்குத் தன் உடலைச் சிற்றின்பப் பொருளாக விருந்து படைத்து, அவர்களது சீலநெறியைச் சோரப்படுத்தி, அவர்களது பணத்தைக் கவர்ந்து வாழும் நகர சோபினியிடம் என்ன சீலத்தைக் கண்டீர்கள்? கர்ம வினையாற் சண்டாளனாகவே பிறந்தவனிடம் என்ன சீலத்தைக் கண்டீர்கள்?" பிறப்பிலேற்பட்ட லௌகீக வசதிகளில் முளை கொண்ட செருக்கே உபரியாக வார்த்தைகளில் வெடித்துச் சிதறின.

"தொழிலினைக் கொண்டே மக்களின் உயர்வு தாழ்வுகளை மதிக்கும் ஜாதி முறை, பிராமணியச் சனாதனக் கோட்பாடுகளின் அறுவடை. நீ உன் முன்னைய பிறவிகளெல்லாவற்றிலும் மனிதனாகவும் மன்னனாகவும் பிறந்தாயா?...ஜாதிக் கோட்பாடுகளை வேருடன் கல்லியெறிய விரும்புபவன் நான். நகர சோபினி பரத்தைத் தொழிலை மேற்கொண்டமைக்குக் காரணம் என்ன? ஊழா? இம்மைப் பிறப்பா? அல்லது, அவளுடைய அழகில் பித்தராகிய சீமான்களெல்லாருஞ் சேர்ந்து அவளை நகர சோபினியாக்கிய ஏற்பாட்டினாலா? அவளுடைய உடல் அழுக்குப் படிந்ததாக இருக்கலாம். இருப்பினும், சித்தம் அன்னபுள்ளன்னத் தூய்மையாக இருக்கின்றதே... நந்த, ஒருவன் பிராமணனாகப் பிறப்பதுமில்லை; சண்டாளனாகப் பிறப்பதுமில்லை. ஒருவனுடைய செய்கைகள்தாம் அவனைப் பிராமணனாகவுஞ் சண்டாளனாகவும் ஆக்குகின்றன."

கல் வீசப்பட்ட குளத்தில் எழும்பும் அலைகளன்ன ஹேது வட்டம் விரிந்து கரைதட்டி, மோதி மடிந்து....

"இந்தப் பிரபஞ்சத்தில் நமது வாழ்க்கை இல்லாததொன்று; அது கானல் நீர்-கனவு. இறந்த காலத்தை மறந்து விட்டோம்; அஃது ஒரு மறைந்த கனவு. எதிர்காலம் ஒரு சூதாட்டம்; அது நிச்சயமற்ற கனவாக விரைவாகவுந் தொடர்பாகவும் ஓடிக்கொண்டிருக்கின்றது. மற்றவர்களைப் பற்றி ஏன் பேச்சு? நீ சுயமாக அதிகமாகவே நேசிக்கும் உன்னையே நினைத்துப்பார். சற்று நேரம் சிந்தையை ஒருங்கு குவித்து யோசித்துப்பார்."

புத்தர் மீண்டுந் தியானத்திலே ஆழ்ந்தார்.

நந்த குமாரனின் பார்வை, விஹாரத்தின் சூழலில் அலைக்கழிக்கின்றது.

வெள்ளரசமங் குடை விரித்து நின்கின்றது. உச்சி வெயிலின் காங்கையிலே காற்றுச் சாக, அதன் வெளிர் இலைகள் தியான மோனத்தில், சிருஷ்டியின் ஆதார, விக்கிரகங்களை விளக்குகின்றன. தூரத்தில், செழுங்கிளை பரப்பிக் கொழுத்திருக்கும் ஆலமரம். அதன் கிளைகளிற் புறவுக் கூட்டம் 'குறுகுறு'ப்பதை மறந்து அமர்ந்திருக்கின்றன. விஹாரத்திற்க வேலியிட்டது போல வரிசையாக நிற்கும் அலரி மரங்கள். முகைகளையும் மலர்களையும் கொத்துக் கொத்தாகத் தூக்கி நிற்கின்றன. இப்பால் கனி தரும் மாதுளை மரம். கோணல் மாணலான சுள்ளிக் கிளைகளைப் பரப்பிச் சடைத்திருக்கின்றது. செம்புகளைக் கட்டித் தொங்க விட்டதைப் போன்ற பழங்கள். அப்பழங்கள், சிங்கமுகக் காலதரிற் செழுங் கொங்கை சாத்தி நிற்கும் ஜனபத கல்யாணியைப் பற்றிய ஆயிரம் எண்ணங்களை மனதில் எழுப்பிச் சிலந்தி வலை பின்னுகின்றன. சுயத்தைப் பற்றி நினைக்க அளிக்கப்பட்ட அவகாசம், மாம்ஸத்தில் ஊறும் உணர்ச்சிகளின் கரங்களில் அம்மானை ஆடப்படுகின்றது.

புத்தரின் விழிகள் நிஷ்டையிலிருந்து விழித் தலர்ந்தன. நந்தகுமாரனின் புலன்கள் அலைக் கழிவதை உணர்ந்தார்.

"நந்த, உன் மனம் ஆற்று நீராக அலைக்கழிந்தே ஓடுகிறது. இன்னிசை மீட்டுவதாக அது பறைசாற்றி ஓடினாலும், ஈற்றிலே கடலிற் சங்கமிக்கின்றது. ஆறாக ஓடும் மனித வாழ்க்கை-சிற்றின்பம் என்கிற இசை-துன்பமென்ற கடல்....அவ்வரச மரத்திலிருந்து இப்பொழுது ஓரிலை பழுத்து விழுந்தது. இதே சமயம் புதுத்தளிரும் முளைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் வேர்கள் உணவும் ஈரலிப்பும் நாடி நிலத்திற்குள் ஆழமாகச் செல்கின்றன. இவ்விதத்தில் அந்த மரம் ஒரே நிலையிலிருந்து கொண்டே இயங்ககின்றது. நம்மைப் பற்றி அறியச் சித்தத்தின் இயக்கந் தேவை. அதன் இயக்கத்தினை நிறம்-சுவை-மணம்-ஒலி-தழுவல் என்ற புலனறிந்த வழிகளினால் அறிய முடியாது. நீ உன்னையே காப்பாற்றவும், உண்மையை அறியவும் உன் சித்தமே தேவை, அஃதே உன் இரட்சகர்."

"நீங்கள் போதிக்கின்றீர்கள். போதனை கூட அகம்பாவத்தின் ஒரு வழிபாடுதான் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், நான் இயற்கையையும் அதனழகையும் அனுபவிப்பதில் இன்பம் நுகரப் பிறந்தவன். அதோ, அதிலே காய்த்துத் தொங்கும் அந்த மாதுளம் பழங்கள் சிங்கவாய்க் காலதரில் என் வருகைக்காகக் கால் கடுக்கக் காத்து நிற்கும் ஜனபத கல்யாணியைத்தான் எனக்கு ஞாபகப் படுத்துகின்றன."

"அதனைப் பிளந்ததும் தெரியும் பரல்கள் எதனை உனக்கு ஞாபகப்படுத்தும்?"

"மாணிக்கப் பரல்களை. மாணிக்க நிறம் ஜனபத கல்யாணியின் யௌவன இதழ்களை எனக்கு ஞாபகப்படுத்தும்."

"என் சிந்தையில் அது மனிதரை வாட்டிடும் புண்களின் சே படர்ந்த முகங்களை ஞாபகப்படுத்தலாம். அழகும் விகாரமும் மனோ கற்பிதங்கள். சித்தப்படியல்லாது, புலன்களினால் வழி நடாத்தப்படும் பலஹ“னனே அழகைப் பற்றிச் சிந்திக்கின்றான். குருடனுக்கு நிறமும், செவிடனுக்கு இசையும் என்ன சுகத்தை அளிக்கும்? மதி குலைந்த பித்தனுக்கு? நந்த! எது அழகு? அதனை யாரால் விளக்க முடியும்?"

"ஜனபதகல்யாணி எழில்மிகுராணி எனச் சாக்கிய குலத்தவர் சகலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவள். பத்துப்பேர் ஒரு பொருளைப் பார்த்துப் பத்துவித அபிப்பிராயங்கள் சொல்லுவார்கள். ஒருவனே ஒரு பொருளைப் பத்துத் தடவைகள் பார்த்தும் பத்துவிதமான அபிப்பிராயங்களைச் சொல்லக்கூடும். ஆனால் ஜனபதகல்யாணியின் அழகு மட்டும் விதிவிலக்கு. சகலருடைய நிரந்தர முடிவே அவள் அபூர்வ அழகி என்பது தான்."

"நந்த, கவிஞனுக்கும் காதல் வசப்பட்டவனுக்கும் நிறைந்த கற்பனாசக்தியுண்டு. கற்பனையை விரித்துப்பார், முகமெல்லாம் சுருக்கங்கள் மொய்க்க, யௌவன தசைக் கோளங்களெல்லாம் முதுமையினாற் சுருங்கியும் தொங்கியும், பிணியினாலும், மூப்பினாலும் அவதிப்படும் எழுபது வயதுக் கிழவியான ஜனபத கல்யாணியைக் கற்பனை செய்து பார்."

மின்னற் பாய்ச்சலில் அவ்வாறு எழுந்த கற்பனையை, சிங்கவாய்க் காலதரிற் காத்து நிற்கும் லாவண்ய உருவத்தின் திவ்விய விபங்கித் தென்பினை ஊட்டிற்று.

"உங்களிடம் வருபவர்கள் மலர்களைக் காணிக்€காயகக் கொண்டு வருகிறார்கள். மலர்களின் அழகில் உங்களுக்குப் பிரீதி உண்டல்லவா?"

"நந்த, இந்தப் பழக்கம் என்னாலே போதித்தப்பட்டதல்ல. மூத்தோரையும் இனியவர்களையுந்தரிசிக்கச் செல்லுகையில் ஏதாவது கையுறை கொண்டு செல்லுதல் பண்டு தொட்டு வழக்கிலுண்டு. காணிக்கை, மலராக இருப்பது விரும்பத்தக்கது. எவ்வித மனக்குறையுமின்றி, எந்த அந்தஸ்திலுள்ளவர்களாலும் மென்மலர்களைக் கொண்டு வருதல் முடியும். மலர்கள் தூய்மை-மென்மை-நேர்மை ஆகியவற்றின் உருவங்களாகத் திகழ்கின்றன. அதே சமயம், அவை அநித்திய வாழ்கையின் அடி முடிச்சுகளை மிகச் செப்பமாக விளக்குகின்றன. அதோ, அந்த அலரி மலர்களைப்பார். பாலாடையை அதியற்புதச் சிற்பியொருவன் செதுக்கியெடுத்து, அதன் மையத்திலே தங்கத் திலகம் இட்டிருக்குஞ் சௌந்தர்யம். ஓரிரும் தினங்களிற் அதே மலர்கள் கயர்த்தழும்பு ஏறி, எறுத்துக் கருகி உதிர்ந்து விடுகின்றன. மலர்களின் அழகு ஓரிரு தினங்களுக்கு. கல்யாணியின் அழகு பல தினங்களுக்கு... அழகின் வயது என்ன? அழகினை ஏன் மூப்பு வந்தடைதல் வேண்ம்?"

அலரி மலர்கள் தத்துவத் திரிகையில் அரைந்து பொடியாக, மரத்திலே தொங்கும் இரு மாதுளங்களின் அமைப்பே நந்தகமாரனின் மனம் எல்லாம் விரிகின்றது. தன் பக்கமே தன்னை முற்றாக இழுக்கும் நினைவுத் தளைகளை அறுக்க அவன் புத்தரின் பக்கம் திரும்பினான்.

"புனிதரே! என் உள்ளத்தில் ஊறுஞ் சி எண்ணங்களைச் சொல்லலாமா?"

"தாரளமாகக் கூறலாம்."

"நட்சத்திரத் தோடாகக வனப்புக் காட்டும் மாதுளம் மலர்கள் இயற்கைசால் அன்பு வாழ்க்கையின் பெறு பேறாகப் பரற்சினைகளைச் சுமந்து, முற்றிக் கனிகளாககின்றன...நீங்கள் ஆயிரம் வார்த்தைகளில் அன்பைப் பற்ற விளக்கந் தருகின்றீ‘கள். விளக்கி விட்டதாக நீங்கள் திருப்தி கொள்ளும் போதுகூட, என் போன்ற சாமான்யனக்கு அதில் ஒரு பின்னந்தானும் விளங்காதிருக்கலாம். ஆணும்-பெண்ணும் மனங்கலந்து, இல்லற இன்பங்களிலே தோய்ந்து, ஒரு குழந்தையைச் சிருஷ்டித்தால், அக்குழந்தை உன்னத அன்பின் உயர்ந்த சின்னமாகத் திகழ்கின்றது. அத்தகைய அன்பினை விளக்க வார்த்தைகளே தேவையில்லை."

"அழகாகப் பேசுகிறாய். சாக்கிய மன்னர் தர்க்க சாஸ்திரிகளை அமர்த்தி, இல்லறத்திலே துய்க்க வைப்பதற்கான நியாயப் பிரமாணங்களைக் கற்பித்திருக்கிறார். சித்தத்தின் மூலம் நான் அறிவதுதான் பேருண்மை இருப்பினும், உன் பேச்சு மிகவுஞ் சுவாரஸ்யமாக இருக்கின்றது."

"உணர்ச்சி அலைகளிலே சுரக்கும் இச்சை உடலிலே படருகின்றது. எனவே, இச்சையில் நிச்சயம் மனிதப் பலஹ“னங்களும் படிந்திருக்கும். இருப்பினும், இவற்றின் இச்சா பூர்த்தியில் மலர்வது அன்பு; பங்கத்திற் குதிர்வது விரோதம். நீங்கள் போதிக்கும் துறவற நிலையிற் சித்தத்தை ஒரு நிலைப்படுத்துதல் என்பது, மாம்ஸ இச்சைகளை மறுத்து, வறுத்துத் துவள்வு செய்யும் இராக்கத முயற்சி. அறிவின் செருக்கிற்கு முதலிடங் கொடுத்து, சித்தத்தின் செம்€ என்ற தீ ஜ்வாலைகளில் உணர்ச்சிகளைப் பொசுக்கிய பின்னர், மனிதனின் ஆசாபாசங்களக்கும், பிதேமைகளுக்கும் புதிய விளக்கங் கொடுப்பது மிகமிகச் செயற்கையானது. இயற்கையிலே குறைபாடுகளிருக்கின்றன என்றால், அந்தக் குறைபாடுகளே நமது வாழ்க்கையின் பயனும் பலமுமாம். செயற்கை அறிவின் ஆணவ வழி; நாம் இயற்கையின் செல்வங்கள். நாங்கள் சந்ததி பெருக்கி வாழப் பிறந்தவர்கள்."

"நந்த! சித்தத்தை உணர்வது ஆணவமென்றால் உண்மையைச் சொல்வது செருக்க என்றால், நீ மெய்யென வரித்திருக்கும் பிரமேயங்களில் ஏதோ தவறு இருக்கவே செய்கிறது. சித்தத்தைச் செயற்படுத்தாதவள் லோப-துவேச-மோக (இச்சை-அழுக்காறு-அஞ்ஞானம்) ஆகிய பலஹ“னங்களுக்குத் தன்னைத் தானே ஒப்புக் கொடுக்கின்றான். அலோப-அதுவேச-அமோக (அருள்-காருண்யம்-ஞானம்) ஆகிய நற்குணங்கள் சித்தத்தைச் சுத்தப்படுத்தியவனுக்கே ஏற்படுகின்றன. அஞ்ஞானத்தில் உலைபவனிடஞ் செருக்கும் ஆணவமுமே வந்தடைகின்றன."

"நான் மனிதர்களைப் பற்றிப் பேசுகின்றேன். நீங்கள் புத்த நிலை அடைந்தவர்களைப் பற்றிப் பேசுகின்ளீர்கள்.

"உன் இச்சைகள் உன் சித்தத்தினைத் திரையிட்டு மறைந்துள்ளன. காலப்போக்கில் உனக்கு உண்மை தெரியத்தான் போகின்றது. தர்க்கக் கலையின் மூலம் நீ பெற்ற கல்வியால் யாது பயன்? கல்வியின் பயன் நல்லதையும் கெட்டதையும் இனங்கண்டு கொள்வது மட்டுமல்ல. அவை எக் காரணங்களினால் நல்லவை கெட்டவை என்பதைக் கல்வி உணர்த்துதல் வேண்டும்."

நந்தகுமாரனின் முகத்திலே சிந்தனை மேகங்கள் படிவதைப் புத்தர் அவதானித்தார்.

"நந்த, சந்ததி பெருக்குவதுதான் இயற்கையா, அல்லது வாழ்க்கையா? சந்தான விருத்திதான் வாழ்வின் இலட்சியமா? ஆண் சிலந்தி சந்தான விருத்திக் கலையிலே தன்னையே அழித்துக் கொள்ளுகிறது. எந்தப் பெண் சிலந்தி மீது மோகித்துச் சேருகின்றதோ, அதற்கே ஆண் சிலந்தி இரையாவது உனக்குத் தெரியாதா? இச்சைகளைப் பூர்த்தியாக்குவதுதான் இயற்கை வாழ்க்கையா? மதுவினை அருந்த அருந்த, கட்குடியன் அதிகம் அதிகமாகவேஇ மேன் மேலும் மதுவினை நாடுவான். மனிதருடைய புலாலிச்சைகளும் மதுச்சுவையைப் போன்றவை."

புத்தர் சேதந பூர்வமாகப் பேச்சை இடையில் முறித்து நிறுத்தினார். இடைவேளை மௌனத்திற்குப்பின்னர் மீண்டுந் தொடர்ந்தார்.

"அந்த ஆலமரத்தைப் பார்த்தாயா? அதிலே எத்தனை ஆலம் பழங்கள் தொங்குகின்றன? அந்தப் பழங்கள் எத்தனை கோடி விதைகளை வைத்திருக்கின்றன. இந்த உலகத்திலுள்ள அத்தனை ஆலமரங்களிலுந் தோன்றும் அனந்த கோடி விதைகளனைத்தும் சந்ததி பெருக்குதலையே இயற்கையாகக் கொண்டு முளைக்கத் தொடங்கினால்.... கண்களை மூடிக் கற்பனை செய்துபார். சந்ததி பரப்பும் உன் விவாதஞ் சரி வருமா?"

பரிதியுருண்டை படுவானிற் சரிந்து கொண்டிருந்தது. கதிர்த் தெறிப்புக்கள் வெள்ளரசம் இலைகளைத் தகதகக்கச் செய்தன. பிரக்ஞை தெளிந்த தென்றல் சுகமாக வீசத் தொடங்கிற்று. ஆலங்கிளைகளிலிருந்த புறவுக் கூட்டம் கீழே இறங்கிக் 'குறு குறு' த்தது.

ஒன்றுமே புரியவில்லை; என்றாலும், ஏதோவெல்லாம் புரிகிறதாகவும் படுகின்றது. தெளிவான சூனியம்.

"நந்த, என்ன யோசனை?"

"என் உணர்ச்சிகள் உங்களுடைய தத்துவத்தை மறுக்கின்றன. ஆனால், எதிர் நியாயமொன்றுங் கற்பிக்க இயலாது தத்தளிக்கின்றேன். எல்லாமே குழப்பம்... முகூர்த்தந் தவறியதினால், மூன்று விழாக்களுந் தவறிவிட்டன. அரண்மனையில் மகாமசானச் சூனியம் வியாபித்திருக்கும். அந்தச் சூனியத்தைப் பற்றிய நினைவுகள் என் மனத்திலே பய உணர்ச்சிகளைப் பாய்ச்சுகின்றன."

"பயத்தை வெல்வது அன்பு. அன்பு என்பது தண்­ரென்று வைத்துக் கொள். நமது விழிப்புலத்திற்குத் தென்படும் ஆற்று நீரும் குளத்து நீரும் எவ்வளவுதான் சுத்தமானதாகத் தோற்றினாலும், அவற்றில் எவ்வளவோ அசுத்தங்கள் படிந்திருக்கின்றன. நமக்கு மேலே மேலே பறந்து செல்லும் முகிற் கூட்டங்களிற் கண்களுக்குப் புலப்படாத துல்லிய நீர் இருக்கின்றது. அமோக மனத்தில், அத்தகைய நீர்தான் நிறைந்து நிற்கும். அடுத்த முகூர்த்தம் வரும் வரக்கும் இங்கு தங்கி பிக்குகளின் சீல வாழ்க்கை நெறியை அனுஷ்டித்துப்பார். இது வெறும் பரீட்சணமாகத்தான். அடுத்த முகூர்த்தம் வரும் பொழுதும் ஜனபதகல்யாணியின் மீதுள்ள காதல் இச்சைதான் ஏகமாக இருந்தால், நீ அரண்மனைக்கே மீளலாம்."

பகவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் அர்த்தம் தோன்றுகின்றது. இருப்பினும், புத்தரின் சித்தத்திற்கு மறுப்புச் சொல்ல இயலவில்லை. அருவியின் பிரவாகத் துளி நீரும் உருட்டப்படுகின்றது,

"சம்மதந்தானே?"

"ஆம்"- எப்படி அந்த வார்த்தை நாக்கிலிருந்து நழுவியது என்பது அவனுக்கே தெரியாது.

விதிகளின்படி சடங்கு நடத்தப்பட்டு அவனுக்குச் சீவர ஆடை புனையப்படுகின்றது.

இளவரசன் நந்தகுமாரனின் 'அவன்' மறைந்து, நந்ததேரரின் 'அவர்' தோன்றலானார்.

*

ஊமை

புலரிக் காலத்துத் தெளிவு, வானத்து இருளைச் சுருடடி விழுங்குகின்றது. நிலமடந்தை சீதளச் சுகத்திலிருந்து துயிலெழுந்தும், பாயின் கதகதப்பிற் படுத்திருக்கும் ஒரு கோலம். புத்தரும் அரஹத் பிக்குகளும், சித்தத்தின் தூய்மையில், துன்பமே தீண்டாத புனித நிலையில், தியானத்திற் சங்கமித்தனர்.

சீவர ஆடைக்குட் புகுந்தும், உடலில் மதர்க்கும் மாம்ஸ ஆக்கினைகளிலிருந்து விடுபடாது, துயிலெழுந்துந் துயிலெழா நிலையில், பிரதக் ஜன பிக்குகள் தவிக்கின்றனர். நந்த பிக்குவின் செவிகளில், துயிலெழுந்த புள்ளினத்தின் இன்னிசை விழத்தான் செய்தது. ஆனால், இரவிலே தோன்றிய அந்தக் கனவின் பிடியிலிருந்து மனம் விடுபடவேயில்லை. கற்பனையோ அல்லது நினைவு ஜரிகை இழையோ எதுவுமின்றி, இல்லாத- ஆனால், இருக்கின்ற என்ற தோற்றத்தைத் தருஞ் சோபிதத்தில்- சில இழைகள் குறுக்கும் நெடுக்குமாக, கனவுச் சிலந்தியின் வாயிலிருந்து கக்கப்பட்டு வலை பின்னுகின்றன. ஒரு சமயம் அவ்வலையிற் சிக்குப்பட்டதைப் போலவும், அடுத்த கணம் ஒரேயொரு இழையில் அந்தரத்தில் தொங்குவது போலவும் அவஸ்தை.

பென்னம் பெரிய தங்கப்பாளங்களினால் நிருமாணிக்கப்பட்ட அரண்மனை. அடித்தள ஆதாரம் எதுவுமின்றி, இறக்கை முளைத்த பாயாக மிதக்கும் முகிற்கூட்டத்தின் மீது அவ்வரண்மனை மிதக்கின்றது. அந்த அரண்மனை பூராகவும் ஆயிரம் சிங்கமுகக் காலதர்கள் ஓட்டையிட்டிருக்கின்றன. ஒவ்வொரு சிங்க முகக் காலதரும் இராட்சதமானது. ஒரு பெரிய சதுரங்க சேனையே ஒன்றினூடாக உட்புகுந்து வெளிவரலாம். அதற்குள்ளே புகுந்த என்னைப் பார்க்கும் பொழுது, சின்னொரு சுண்டெலி நுழைந்ததைப் போல! அதன் உள்ளே மேலும் வியப்பிலாழ்த்துஞ் ஸ்த்திர விசித்திர நுணுக்கம். ஒரு பூம்பொழில் அடர்ந்து வளர்ந்த செடிகளுங் கொடிகளும். பச்சையின், பிரகாசம் பிராந்திய மெல்லாம் விரிந்து சிந்துகின்றது. சகல இலைகளுந் தகதகக்கும் மரகதக் கற்களாலானவை. கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் ஆகியவற்றாலான அதி விநோதப் பூக்கள். அந்தப் பூக்கள் வாடுவதுமில்லை; இலைகள் பழுத்து விழுவதுமில்லை. ஊமை ஒளி ஜாலக்கலவையின் கவர்ச்சியைத் தவிர, நறுமணமேயிலலை; மணமேயற்ற பிராந்தியம். ஏதாவது மோப்பத்தைப் பிடிப்பதில் என் மூக்குத் துவாரங்கள், துருத்தியாக உப்பிக் கொள்கின்றன. நிலம் அசலாகத் தங்கந்தான். ஆனால், வைக்கோல் பரப்பியிருப்பதைப் போல, கால்கள் புதைகின்றன. உள்னே-வெகுவெகு உள்ளே -நடநது செல்கின்றேன். நறுமணநாற்றம் குப்பென்று மூக்கினை நிறைத்து உடலெல்லாம் பரவுகின்றது. அகிற்புகையும் பன்னீரும் இந்த மணத்திற்கு இலட்சத்தில் ஒன்று என்ற பின்ன வாக்கிலும் ஈடு செய்யமாட்டாது. என்னை அந்த மணம் வசீகரித்து, கால்களில் இயக்கமின்றியே தன் பாலிழுக்கின்றது. ஒரு கட்டிலில், மதுபோதையிலே சுயமின்றி, ஆடைகள் அவிழ்ந்தும், விலகியும் உடற்கவர்ச்சி ஸ்தானங்களை மறைக்காமலே மறைக்கும் பாங்கில் ஒருத்தி படுத்துக் கிடக்கின்றாள். அந்தக் கந்தம் அவளுடைய மேனியிலிருந்து வீசியதுதான். ஒரு கணத்தின் கீற்றில் அவள் ஜனபத கல்யாணியின் உருவ அச்சில் வார்க்கப்பட்டவள் போல! என் கண்களிற் படிந்திருந்த வியப்பு ஒட்டடைகளைத் துடைத்துப் பார்க்கின்றேன். சந்தேகம், மீண்டும் உன்னிப்பாகப் பார்க்கின்றேன். அவள் ஜனபதகல்யாணி அல்லள் என்பதிலே துளியுஞ் சந்தேகமில்லை. அவளைப் பார்த்தும் என்னுடைய தோற்றத்தைப் பற்றிய உட்பிரக்ஞை விழித்துக் கொள்கின்றது. மழித்த தலை; மஞ்சளிலே தோய்ந்த சீவர ஆடை; கையிலே பிட்சைப் பாத்திரம். இவற்றைத் தவிர வேறெதுவுமற்ற பிக்ஷாண்டி. என் மனம் சமிழ்ப்பிற் சவுங்க, சென்னி கழுத்துப் பூட்டில் முறித்து தொங்கிக் கொள்ளுகின்றது. 'உங்களை நான் சாதுக்களென்று அழைப்பதா; அல்லது, என் இனியவரே என்று அழைப்பதா?' - வீணையின் தந்தியை மீட்டும் இசை; ஈட்டியின் பாய்ச்சலில் ஏளனம்! நாக்கரவம் வாய்ப்புற்றுக்குள் அடங்கியொடுங்கி விட்டது. பரிவும் பாசமும் சுரக்கும் சுனையில்... அவளாக வந்து, எனது சீவர ஆடையைக் களைந்தெறிந்து, நிலவின் பாலைத் துகிலாகச் சாத்துகிறாள், பிட்சைப்பாத்திரம் கீழே வீசப்படுகின்றது. ஆனால், அதுவோ இறக்கை முளைத்ததுவாக மேலேமேலே செல்லுகின்றது. கண்ணுக்கு எட்டாத விண்தூரத்தில், ஒரு கரும் புள்ளி காட்டி மறைகின்றது.... அவள் என்னைத் தழுவி, என்னுடலில் வெறியேற்றி, தன் கட்டிலுக்கு அழைத்துச் செல்கின்றாள்... அரண்மனையா? சிங்கமுகக் காலதரா? அழகியா? கட்டிலா?...ஒன்றுமேயில்லை. கானல் நீர் மாதிரி, இல்லாத ஒன்று இருக்கும் ஒன்றாக மயக்கியிருக்கிறது. தோற்றமுமல்ல, மனப்பிராந்திவாக்கில், சூனியத்திலே திகைக்கின்றேன்.... நான் ஒரு சிலந்திக் கூட்டிற்குள் அகப்பட்டுத் தத்தளிப்பதை உணர முடிகின்றது. ஒரு பெண்ணின் உருவப் பிரமாணத்தில் தோன்றும் ஓர் இராட்சதச் சிலந்தி. நானம் ஒர் ஆண் சிலந்தி. இந்தச் சிலந்திக்கூட்டிற்குள் நான் எப்படிச் சிக்கினேன்? பெண் சிலந்தி, அதனைக் கூடிக்கலவிய குற்றத்திற்காக, என்னைக் குற்றுயிராகவே புசித்துக் கொண்டிருக்கிறது... ஆகாய அரண்மனையா? அல்லது, சிலந்திக்கூடா?... மூட்டமிட்ட வானில் தோற்றிய வானவில்லா?... சுத்தமாக விளங்குகின்றது. நான் நானேதான்; சாக்கிய இளவரசன் நந்தகுமாரன். அவள் ஜனபதகல்யாணியேதான். அவள் சிங்கமுகக் காலதரிற் கொங்கை சாத்தி நிற்கின்றாள். 'இத்தனை காலமாக - அந்தக் காலந்தான் எத்தனை யுகங்கள்-இந்தக் காலதரடியில், வழிமேல் விழிகள் புதைத்துக் கால் கடுக்க நான் நிற்கின்றேன். வாருங்கள், உள்ளே.' அவளுடைய இந்த அழைப்பு என் நரம்புகளையே தோலுக்கு வெளியாலும் இழுத்து வீணாகானம் பொழிகின்றது. நான், 'கல்யாணி, கல்யாணி' என உச்சஸ்தாயியில் ஜபித்துக் கொண்டே அவளைத் தழுவி அனுபவிக்க ஓடுகின்றேன்...

கனவினை, நினைவில் அசைபோடும் உன்மத்தத்தில், சுயத்தை மறந்து "கல்யாணி, கல்யாணி" என்று நந்தரின் உதடுகள் பிதற்றிக் கொண்டிருக்கின்றன.

புத்தர் போதித்த தத்தவங்களின் உட்தாற்பரியங்களை உணராது, சீவர ஆடைக்குட் புகுந்த நந்த பிக்குவைப் போன்றே வாழும் பிரதக்ஜன பிக்குகளிருவர், அவர் சயனிக்குமிடத்திற்கு வந்தார்கள்.

அந்த அரவத்தில் அவருடைய கண்கள் திறந்து கொண்டன.

"பிக்குவே! பகற்கனவு காண்கின்றீர்களா? மனத்தினை ஒரு நிலைப்படுத்த வந்துள்ள விஹாரத்திலும், உங்களுடைய சகல புலன்களும் ஜனபதக்ல்யாணியைச் சுற்றியே சுழல்கின்றன. துறவற வாழ்க்யையில் மனம் ஒன்றாத தங்களுக்குச் சீவர ஆடைகளைத் தத்ததனால் புத்தருக்கு யாது இலாபம்? உங்களுடைய இன்பங்கள் உங்களுடையவையே. புதிதாம் அரண்மனை-அரச பதவி-சாக்கிய எழிலரசி, இத்தனை பேறுகளையும் நீங்கள் புத்தர் ஒருவருக்காகத் தானே இழக்கத் துணிந்தீர்கள்." - இந்த வகையில் ஒருவர் பேச்சினை விநயமாகத் தொடங்கினார்.

"எங்களது சிந்தைக்குப் புலப்படாதவையாகவோ, அன்றேல் இல்லாதவனாகவோ தோன்றும் உண்மைகளைப் புத்தர் அறிந்தவராக இருக்கலாம். நமக்குத் தெரிய ஒரேயொரு புத்தர் தான்-சாக்கியமுனிவர்தான் வாழ்கிறார். அவர் ஒருவராக இருப்பதினாலேதான் அவருடைய மதிப்பும் உயர்ந்துள்ளது. அவர் புத்தராவதற்காகவேகூடப் பிறந்திருக்கலாம். அவருடைய ஊழும், தங்களுடைய ஊழும் ஒன்றா? ஒரு வேளை, நீங்கள் நமது மன்னராகவும், ஜனபதகல்யாணியின் அன்புக் கணவராகவும், வாழ்வதற்காகவே பிறந்திருக்கலாம். கோழைகளே மற்றவர்களடைய எண்ணங்களுக்குத் தலை சாய்த்து வாழ்வார்கள்" என்று மற்றவர் அவருடைய இகலோக இச்சை யென்ற தீயில் நெய்யூற்றிப் பேசினார்.

இருள் விரிந்ததும், இரைதேட விழித்துக் கொள்ளும் வெளவாலாக, அஞ்ஞானப் பேச்சுக்களின் அது சரணையிலே சிற்றின்ப இச்சைகள் புது வேகத்துடன் சிறகடித்தன. தான் சீவர ஆடையைத் துறந்து, ஜனபதகல்யாணியின் காதலை ஏற்று, இல்லறத்தில் ஈடுபடல் வேண்டுமென்ற நிதர்சனத்தைச் சொல்லி விடல் வேண்டுமென்ற எல்லை மட்டும் அது பறக்கின்றது.

"இதனை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டோம். நாளை மறுதினம் நல்லதொரு கல்யாண முகூர்த்த முண்டு எதையும் பருவத்திற் பயிர் செய்தல் வேண்டும். உங்களுடைய வயதில், புத்தர் சித்தார்த்த கௌதமராக, யசோதரையின் கணவராக, கபிலவஸ்து அரண்மனையில் வாழ்ந்து கொண்டிருந்தவரென்பதை மறந்து விட்டீர்களா?"

"நீங்கள் சென்று வாருங்கள். இப்பொழுதே புத்தரைக் கண்டு உண்மையைச் சொல்வேன். இன்றே நான் அரண்மனைக்கு மீள்வேன்" என நந்த சூளுரைத்தார்.

நெறி தவறி, மனத்தினை அலைமோதவிட்ட, அந்தப் பிக்குகளிருவரும் அகமகிழ்ந்தார்கள்.

*

ஊகை

புத்தர் புன்னகை பூத்தார். "வா நந்த, வா! நீ என்னைப் பார்க்கவும் வரலாமென்று இப்பொழுததான் நினைத்தேன். நாளை மறுதினம் கல்யாண முகூர்த்தமொன்று உண்டு என்ற செய்தியைச் சாடையாக நினைவுபடுத்தத்தானே வந்தாய்?"

எதிர்பார்க்காத அவ்வினா பிக்குவைச் சவலையாக்கிற்று. சங்கோசத்துடன், 'ஆம்' என்பதற்கு அறிகுறியாகத் தலை ஆட்டினார்.

"ஏதோ சொப்பணம் கண்டு விழித்தவனைப் போன்று வாட்டமுற்றிருக்கின்றது உன்முகம். துராசைகள் துர்க்கனவுகளை விளைவிக்கும்.

"கனவொன்று கண்டது உண்மை முகம் வைத்த புண் கீழ் உடைத்து, என்றோ ஏறிய சிராயைக் கக்குவதைப் போன்று, ஜனபகல்யாணியைக் கனவிற் கண்டேன்."

"கல்யாணியின் மீது நீ கொண்டுள்ள இச்சைகளைப் பற்றியும், சந்ததி பரப்பி வாழும் உன் ஏடை பற்றியும் உன் மனத்தினைக் கடலலைகளாக்கி உலைய விடுகின்றாய்... ஆண்மையும் பெண்மையும் ஒரே சரீரத்திலுண்டு. ஒன்றின் வளர்ச்சியை மற்றையது விழுங்கி, பின்னதே கொழுத்து ஏகமாக வியாபிக்கின்றது. பாலுணர்ச்சியென்பது, புலால் வேட்கையின் உபரியே. அக்நியின் தீ நாக்குகளை, இரு பால்களின் கூட்டுறவாலே தணித்து விடலாமென்பது ஊமத்தஞ்சாறு குடித்தவனின் உன்மத்தக் கற்பனை. அதற்கு மாறாக. அவ்வுடற் புணர்ச்சி மேற்படி தகிப்பினை நெய்யூற்றி வளர்க்கவே மிகவும் உதவுகின்றது என்பது தான் உண்மை. சந்ததி பெருக்கும் விவகார மென்பது பிரக்ஞை பூர்வமாக அல்லாது, தற்செயலாகவே நடை பெறுகின்றது. அப்பொழுதுங்கூட, பெற்றோர் ஒரு குழந்தைக்கு அதன் சரீர உருவத்தை மட்டுமே அளிக்கின்றனர். தாயோ, தந்தையோ, அல்லது இருவருங் கூட்டாகச் சேர்ந்தோ அப்புதிய ஜ“வனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சித்தத்தை அளிக்க முடியாது. எதற்கு ஆரம்ப முண்டா, அதற்கு அழிவுமுண்டு. சித்தத்தினை எவராலும் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அதற்கு அழிவுமில்லை."

"நான் எவ்வளவுதான் முயன்றும், நீங்கள் சித்தத்தைப் பற்றிச் சொல்லும் எதனையுங் கிரகித்துக் கொள்ள முடியவில்லை."

"உடலிச்சை ஈர்ப்பிலே உன் புலன்கள் அலையும் பொழுது, சித்த பரிசுத்தத்தை எவ்வாறு எய்த முடியும்? உன்னையே நீ உணர். நீ, நீ யென்று நினைக்கும் உன் யாக்கைதான் என்ன? கேசம்-உரோமம்-நகர்-தந்தம்-தோல்-இரத்தம்-மாமிசம்-என்பு-நரம்பு-குழலட்டை-எச்சில்-பித்தம்-சிலேற்பனம்-சலம்-மலம் என வரும் முப்பத்திரண்டு அழுக்குப் பொருள்களினாலானதே அது! இந்தப் புழுதி படிந்த புல்லிய இச்சைகளினாலே தான் சம்சார சக்கரமென்ற பிறவிப் பெருங்கடலின் அலைகளில் ஏற்றுண்டு, அலைக்கழிந்து, துன்பத்தின் இருப்பிடமாக வாழ வேண்டியிருக்கின்றது."

"நீங்கள் கட்டி வளர்க்குஞ் சங்கம் மிகப் பெரியது; அதன் நோக்கமும் வெகு வெகு புனிதமானது. அரண்மனைச் சுகத்திற் சுகித்த காலத்திலேயே தாமரையிரைத் தண்­ராக வாழ்ந்து விட்டீர்கள். அவ்வுந்நத நிலைக்கு என்னை-சேற்றுடன் இரண்டறக் கலந்துவிட்ட நீரையும்-உயர்த்தப் பார்க்கின்றீர்கள், மன்னித்தருளல் வேண்டும். நான் புல்லியன். நீங்கள் இவ்வளவு போதனை செய்தும் என் மனம் ஜனபதகல்யாணியையே நாடுகின்றது."

ஒரு நிமைப் பொழுது நேரம் புத்தர் யோசனையிலாழ்ந்தார்.

"உன் விருப்பம் அதுவே யானால், நான் தடை சொல்லவில்லை. உனக்கு இஷ்டமிருப்பின், நாளைக்கே நீ அரண்மனை திரும்பலாம்." - இந்த வார்த்தைகள் பனித்துளிகள் மீது படும் சூரியக் கதிர்களாக, அவனுடைய உள்ளத்தில் மண்டிக் கிடந்த துன்பச் சாயல்களைக் காய்ச்சி எடுத்தன.

திரிலோக திலகம் தியானத்திலாழ்ந்தார்.

ஆலமரத்தில் வாழும் புறவுக்கூட்டம் கீழே இறங்கி, குருத்துக் குறு மணலிற் செம்பவளப் பாதங்களால்-இல்லை, புறப்பாதங்களின் நிறமேதனி; அது அதுவே-கோலமிட்டுக் கொண்டிருந்தன. அந்தக் காட்சியில் மேய்ந்த கண்கள், புத்தரின் பக்கம் திரும்பின. தியான வேளையில், புத்தருடைய முகத்தில் ஏற்படும் ஜோதிப் பிழம்பான எழிலிலே தரித்தன.

நெடுநேரத் தியானத்தின் பின்னர் விழிகளைத் திறந்த புத்தர், தன் எதிரே அதிசயத்துடன் அமர்ந்திருக்கும் நந்த பிக்குவைக் கண்டார்.

"அரண்மனைக்குச் செல்லத் தீர்மானித்து விட்டாய். அதற்கிடையில் ஒரு தடவை இந்திர சபையைப் பார்க்க உனக்கு ஆசையாக இல்லையா? நான் இன்று இந்திர சபைக்குச் செல்வதாக இருக்கின்றேன். நீயும் என்னுடன் வருகின்றாயா?"

"நானா? இந்திரசபைக்கா? நீங்கள் மிக உயர்ந்த புத்த நிலையை அடைந்தவர்கள். நான் அரஹத்பிக்கு நிலைக்குத்தானும் உயராதவன். ஆகாய மார்க்கத்திற் பறக்குஞ் சக்தியற்றவன்."

"அந்தக் கவலையே உனக்கு வேண்டாம். ஆகாய மார்க்கத்தில் நான் அழைத்துச் செல்கின்றேன். வருகிறாயா"

"யாருக்குத்தான் இந்திர சபையைப்பார்த்தின்புற அசையிரக்காது? நான் வருகின்றேன்"

கனவு காணும் குழந்தையின் வதனத்திலே படரும் நகையொன்று புத்தருடைய முகத்தில் விரிந்தது.

*
ஊளை

புரந்தரன் அரண்மனை நோக்கி, ஆகாயப் பயணம். அகண்டாகாரமான ஆகாய வெளி. உடற்கொட்டின் சுமை அருகி, இற்று, பஞ்சுத் துரும்பாக மிதக்கின்றது. கண்களுக்குப் புலப்படாத எழிலித்திரள்கள் மேனியை மொத்தி ஒத்தடத் தழுவல் கொடுக்கின்றன. தண்மையின் இதம் சர்வமும் வியாபித்திருக்கின்றது. அந்தகரத்திலே தொங்கும் காட்சிகள் வியப்பின் மூலவிக்கிரகத்திற்கு முன்னால் நிறுத்துகின்றன. கபிலவஸ்து அரண்மனையில், இல்லற இன்பங்களின் தத்துவங்களைத் தர்க்கரீதியாகப் போதித்த ஆசிரியர்களுடைய தர்க்க பிரமேயங்கள் இந்தக் காற்றிலும் பார்க்க மிக இலேசாக, ஏமந்தருதுவின் பனிச் சிதறல்கள் மறையும் விந்தையில், நழுவுவதான ஓர் எண்ணம். வாலிபம் கால ஓட்டத்தில், எதிர்நீச்சலடித்து முன்னேற, பிஞ்சாகிப் பிஞ்சாகிக் குழந்தையாகின்றார். பல பொம்மைகளுக்கு நடுவில் விடப்பட்ட குழந்தை எந்தப் பொம்மையைத் தேர்ந்தெடுப்பது என்று தயங்கித் தவிப்பதைப் போல, நந்த பிக்குவின் மனத்திலே ஒரே குழப்பம். குழப்பத்தில் ஓர் இன்பக் கதகதப்பும் சாயத் தீட்டுகின்றது. மின்வெட்டிலே குழப்பமில்லாத ஒரு தெளிவுந் தோன்றுகின்றது.

ஆகாய வெளியிற் பிரயாணஞ் சுகமாகத் தொடர்கின்றது.

"நந்த, பிரயாணம் சௌகரியமாக இருக்கின்றதா?"

"எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இது மனித சக்தியின்பாற் பட்டதுதானா? நம்பிக்கையான ஓர் அவநம்பிக்கை என் மனதில் அடிவானில் மூட்டம் போடுகின்றது."

"சித்தத்தைச் சுத்தப் டுத்தி மோட்ச வாழ்வினை எய்த விழைபவனுக்கு முடியாத காரியம் எதுவுமேயில்லை. அதோ, அவ்விடத்திற் புகையும் புலவும் எழுந்து வருகின்றதே என்னவென்று பார்."

"புனிதரே, எத்திசையில்?"

"உன் வலப்பக்கத்தில்."

இலேசான புகைப்படலம்; பாழ் மண்டபங்களில் தொங்கும் சிலந்திக்கூடுகள் மாதிரி! சிதையா? அல்ல, அதனை மருவிய பொட்டல் நிலமும் கருகி வெந்து கிடந்தது. அக்கினியின் தணியாப் பசி, பசுமை முழுவதையும் உறிஞ்சிவிட்டது. பற்றைகள் பூராவாக எரிந்து, வேர்கள் கருகி, ஆயிரக்கணக்கான காகக் கால்களை நாட்டி வைத்திருக்கின்றன. நிலத்தை அசுத்தப்படுத்துங் கறுப்புத் திட்டிகள் சிந்திக்கிடக்கின்றன. மரங்களின் பெரும் பகுதி எரிந்து அநித்தியத்தின் வித்தார விளக்கமாகச் சாம்பர் கொட்டி நிற்க, நீறு பூத்த தணல், எஞ்சிய பச்சைப் பகுதிகளைத் தாக்குகின்றது. அப்பிராந்தியத்தை எரித்து நிர்த்தூளியாக்கிய பெருநெருப்பிலிருந்து வெளியேற முடியாது, அதில் அகப்பட்டு, கருகிச் செத்துப் புழுத்துக் கொண்டிருக்கும் மிருகச் சவங்களிலிருந்து குப்பெனக் குவிந்து வருந் துர்நாற்றம். தீயின் கோரம் சாம்பல் பெருக்கி ஊளையிட்டது. அருவருப்பின் ஏகத்துவம். அத்துர்நாற்றம் உடலை வெட்டிப் பிளக்கின்றது. சுவையின் சுளுக்கு... பீபத்ஸத்தின் சதுர். குடர் குரல் வளைக்குள் ஏறிக் குமட்டுவதான அசுகி. பாண்டலின் கோரம். ஒரு மரம் ஒண்டியாகத் தெரிகிறது. அடிமரம் எரியாமல், இலைகளெல்லாம் பொசுங்கி, கருகிய கவர்கள் ஒறுப்பாகக் கரம் நீட்ட, நெடிதுயர்ந்து நிற்கின்றது, அதன் கிளையொன்றில், ஒரு மந்திமயிர் பொசுங்கித் தொங்கிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் அசினமும் எரிந்து, சப்பாத்திப்பூவன்னச்சே நிணம் பிதுங்கித் தொங்குகின்றது. கருகிய உரோமமும்-வெளியே தெரியும் மாமிசமும்! குற்றுயிரான அந்த அருவருப்புக் கோலத்தின் சிரசாகவே அது காட்சியளித்தது. மனம் அருவரு பபின் ஆழி அலை களிற் பயப் பிராந்தியுடன் அலைக்கழிக்கின்றது. பட்டிலும் பஞ்சிலும்- அழகிலும் இன்பத்திலும் வளர்க்கப்பட்ட நந்த பிக்கு கண்களை மூடிக்காண்டார்.

"நந்த, ஆகாய மார்க்கப் பயணத்தில் எவ்வளவோ பார்க்க இருக்கும் பொழுது, ஏன் கண்களை மூடிக்கொண்டாய்?"

"பாதி கருகி, அருவருப்பின் உருவாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தக் குரங்கைப் பார்த்தீர்களா?"

"பார்த்தேன்"

"இப்படியொரு அவலட்சணத்தை நான் என் வாழ்நாளிற் கண்டதில்லை."

"மனிதன் பிணியாலும், மூப்பாலுந் தாக்கப்பட்டு அந்தக் குரங்கைப் பார்க்கிலும் விகாரமாகக் காட்சியளிக்கலாம்."

பிக்கு சிந்தனைக் கல்லைகளில் ஏற்றப்பட்டார்.

புத்தரின் முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. புதுமையின் முகம்போல, கூம்பாமல் மலராமலிருந்தது.

"நாம் இந்திரலோகத்திற்கு வந்து விட்டோம்."

அந்த அந்தரலோகத்தைக் கண்டு நந்த பிக்கு பிரமித்தார்.

*

கள்

புலன்களுக்குச் சாமான்யமாகச் சிக்காத இந்திரலோகக் காட்சி விரிகின்றது.... இந்திரலோகமென்ற அந்தச் சுந்தரலோகம். சர்வமும் சௌந்தர்யஞ் சொட்டச் சொட்ட நயமொழுகி வழிகின்றது. முற்றாது-வெகு வெகு பிஞ்சான-உள்ளங்களுடன் சுரர்கள் வாழும் இந்திரலோகத்தில், இன்பக்களிப்பேகோலோச்சுகின்றது. அழகும்-களிப்பும், வறிக் கள்ளும்-கூத்தும் பிரிகளாக இணைந்த அவர்களுடைய வாழ்க்கையில் காலத்தைப் பற்றிய கவலையேயில்லை. நரவருடங்கள் பல புணர்ந்தே அந்த உலகத்தின் ஒரு நாள் அசையிட்டுச் சுழலுகின்றது...

நந்த பிக்குவின் விழிகள், இமைகளை அகட்டிப் பிதுங்குகின்றன. இன்பச் சகதியின் நடுவே பூத்த பங்கயமாக-இருப்பினும், சுவர்ண நிறத்தின் ஒளி ஜாலஞ்சிந்தி-குன்றின் மமதையுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது புருகூதன் மாளிகை. துர்நாற்றம் அங்கு இல்லாததொன்று. கனவில் விரிந்த அந்தச் சுகந்த கந்தம் மட்டுமே, அள்ளு கொள்ளையாக வீசப்பட்டிருக்கும் பாரி ஜாத மலர்களிலிருந்து அட்ட திக்குகளிலுங் கலக்கின்றது. அந்தரத்திலே, பொன் ஜரிகை நாடாக்கள் மின்னி மறைந்து மீண்டும் பிரகாசிக்கின்றன. மாளிகைக்குள் நடக்கும் போழ்து நீரின் மேற்பரப்பில் நடக்கும் பிரமையே ஏற்படுகின்றது. நிலத்தின் வழுவழுப்பு மெருகு சகலவற்றின் சுந்தரத்தையும் பிம்பங் காட்டிச் சுப்பிர ஜாலம் இயற்றுகின்றது.

சுரபானம் சுவைத்து, அப்சரஸ”கள் வீசும் வெண் சாமரங்களிலிருந்து பிறக்கும் சீதளக் காற்றிற் குளித்து, பாட்டும் - கூத்தும்- பரவசமும் அளைய....

புத்தரைக் கண்டதும், இந்திரன் தனது பண்டு கம்பள ஸைலாசனத்திலிருந்து எழுந்து வந்து, அஞ்சலி செய்து, எதிர் கொண்டழைத்தான். புத்தருக்குப் பக்கத்திலே வியப்பின் வியூகத்திற்குள் விழுந்து விழிக்கும் நந்தபிக்குவைக் குறித்து ஊமை வினாவை விழியிலே தொடுத்து இந்திரன் விடுக்கின்றான்.

"இந்திரா! இவர் நந்த பிக்கு. உன்னுடைய லோகத்தின் அற்புதங்களை ஒரு தடவை பார்த்து மீள வந்திருக்கிறார்."

"அப்படியா? அவருக்கு இங்கு தகுந்த உபசரணைகள் நடக்கும். நீங்கள் இந்திர இருக்கையில் அமருதல் வேண்டும்."

"உனக்கு தர்மோபதேசங் கேட்க ஆவலா?"

"ஆம். தங்களுடைய வருகைக்காக வெகு காலங் காத்திருந்தேன்."

"உன் இஷ்டம்...."

புத்தர் அமைதியாக நடந்து, இந்திரனுடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். இன்பங்களின் அதிபதி, உண்மையின் நிர்மலத்தில் மனம் புதைத்து, தர்மோபதேசங்க கேட்கத் தொடங்கினான்.

கிளை பிரிந்து, வழி தப்பிய மானாக நின்ற நந்த பிக்குவை அப்ஸரஸ் ஒருத்தி ஓர் ஆசனத்தில் அமரச் செய்தாள். அவ்விருக்கை, மயிற்பீலிகள் உள்ளே வைக்கப்பட்டு, அணில் வால்போல மிருதுவாக இருந்தது. அதிலமர்ந்ததும் இடுப்பளவிற்குப் புதைந்து போனார். 'என்ன சுகமான இருக்கை'- மனத்தினைக் கொட்டும் இன்பத் தினவுகள். இன்னொருத்தி வந்து, வெண்சாமரம் வீசிக் குளிர் காற்றை இறைத்தாள்.

எதிரில் நடன அரங்கம் விரிகின்றது....

தங்கத்தின் நயங்காட்டும் அத்தரையில், பனிப்படிகத்திலே துரிதமாகச் சறுக்குஞ் சாகசம் புரிந்தவாறே, திவ்விய கன்னியர் அறுவர் தோன்றினர். தரையிற் பட்டும் படாமலும், ஓரிடத்தில் நிமைப் பொழுதுந் தரிக்காது, அசைந்தாடும் பாதங்கள். அப்பாதங்களின் திவ்விய சுந்தர எழிலிற் பிக்குவின் நயனங்கள் நிலைத்தன.

வியப்புப் போதையிற் சுழன்ற கற்பனை, கவிஞனாக இயங்குகின்றது.

குருத்துக் குறுமணற் பரப்பில், புறாக் கூட்டம் கோலந் தீட்டய அந்தக் காட்சி... புறாப் பாதங்களின் நிறத்திற் பெண்களா? இந்த அழகின் ஒரு துளிதானும் பூலோகத்திற் கிடையாது என எழுந்த எண்ணப்பிந்தின் தடத்தில், கண்கள் தரித்து, பாதங்களை மட்டுமே பருகின. பின்னர் மெல்ல மெல்ல அவர்களுடைய மேனியழகினைப் பருகிடும் அவாவை மாந்தி, மேலே மேலே எழுந்தன.

தென்றல் வீசுகின்றது.

மயில் ஆடுகின்றது.

சீதளக் காற்றிலே சுடர் நடுங்குகின்றது.

அலைகள் ஒன்றின் பின் ஒன்றாக, இசை எழுப்பி நீந்துகின்றன.

புள்ளிமான் மருளுகின்றது.

அரவம் படம் விரிக்கின்றது.

அன்னப்புள் நடக்கின்றது.

இவையனைத்தும் திவ்விய கன்னியரேயாகி, அவர்களே சகலமுமாக, பிக்குவின் என்பின் குழட்டையைக் கூட உலுப்பி ஆடுகின்றார்கள். இன்பப் புஷ்பாஞ்சலி வர்ஷ’க்கப் படுகின்றது.

அவர்களுடைய நர்த்தனம் ஏற்படுத்திய சுழற்சியில்,

அரங்கமே ஆட,

அந்தர லோகமே ஆட,

பிக்குவின் மனமும் துரும்பாக ஆட,

புளகாங்கிதப் புனல் கொட்டுகின்றது!

புறாப்பாத எழில் நிறங் காட்டும் மேனியை மறைக்காதே அணியப் பட்டிருந்த பாலாவி உடைகள் கூட அவிழ்ந்து விழ, பிறப்புக் கோலத்தின் சுயலோகஞ் சிந்தும் விழிநிறைந்த வனப்பைச் சுவைத்து, தேன்குடத்தில் விழுந்த ஈயாகத் தத்தளிக்கிறார். திவ்விய கன்னியரின் பாந்தத்திற் பிணிக்கப்படுகிறார்.

இந்திரனுக்குத் தர்மோபதேசஞ் செய்து திரும்பிப் பார்த்த புத்தர், பிக்கு அரம்பையரின் சுந்தரச் சதுரிற் சுயமிழந்து சொக்கியிருப்பதை அவதானிக்கவுந் தவறவில்லை.

மறுகணம்--

கன்னியர் அறுவரும் காற்றுடன் காற்றாகக் கலந்து மறைந்தனர்.

சுந்தரக் கனவிலிருந்து சட்டென்று விழித்த ஓர் ஏமாற்ற உணர்வு நந்த பிக்கு மனத்தினைப் பிறாண்டியது.

நினைக்க நினைக்கப் பிரளயமாகப் பெருகும் அழகுச் சுவை நெஞ்சில் அலைமோத, ஒன்றுமே பேசாது புத்தரைப் பின்தொடர்ந்தார்.

*

நெறி

புத்தர் மௌனத்தைக் கலைத்தார். பூலோகம் சமீபித்துக் கொண்டிருந்தது. "நந்த, இந்திரலோகத்தில் பார்த்த திவ்விய கன்னியரைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?"

சிந்தனையின் ஒவ்வோர் அரவத் தலையின் நெளிவிலும், அவர்களது உருவங்களே துலங்க, ஊமை உலகின் இன்பத்திலே துய்த்த பிக்கு, கனவிற் பிதற்றும் பித்தனாக "ஒரு திவ்விய கன்னியின் அழகிற்கு இந்தப் பூலோகம் முழுவதும் ஈடாக மாட்டாது. ஒருத்தியுடன் ஒருகணம் சேர்ந்து வாழுஞ் சுகத்திற்காக எனது இராச்சியத்தையே அவள் காலடியிற் காணிக்கையாகச் சேர்க்கவுந் தயங்க மாட்டேன்" என்றார்.

"ஜனபதகல்யாணி வாழும் இந்தப் பூலோகத்தைவிட ஒரு திவ்வியகன்னி அவ்வளவு உயர்ந்தவளா?"

"என் அறியாமை என்னுடையதே. திவ்விய கன்னி ஒருத்தியினுடைய காற் தூசியின் அழகுக்குத் தானும் ஈடாக மாட்டாள் ஜனபத கல்யாணி. ஆகாய மார்க்கத்திற் பாதி எரிந்து, புலவு வீசத் தொங்கிய மந்தியைப் பார்த்தோமே, அதனைப் பார்க்கிலும் விகாரமானவள் ஜனபதகல்யாணி." - சுயத்தை இச்சைவிழுங்கிய பித்த நிலையிற் பேசினார்.

"அப்படியா?" என்று புத்தர் கேட்பதற்கும் இருவரும் பூலோகத்திற் பாதம் மிதிப்பதற்கும் சரியாக இருந்தது.

குஞ்சிரிப்பே முகமாக, புத்தர் வெள்ளரசமரத்தை நோக்கி நடந்தார். திவ்விய கன்னியரின் நினைவே மனமெல்லாம் நிறைந்து நிற்க, நந்த பிக்கு பின் தொடர்ந்தார்.

"நந்த! உன் மனம் உண்மையிலேயே திவ்விய கன்னியாற் படிந்திருக்குமேயானால், ஏன் அவர்களுள் ஒருத்தியை மணந்து இல்லற வாழ்கையிற் ஈடு படலாகாது?"

"மனித ஆசைகளுக்கு ஓர் எல்லையுண்டு. நான் திவ்வியகன்னி ஒருத்தியை மணக்க விரும்புவது, அம்புலியைப் பிடித்து விளையாட ஆசை கொள்ளும் சவலையின் கற்பனை நிகர்த்ததாகத் தானிருக்கும். இந்திர லோகத்திற்குப் பறந்து செல்லவோ, திவ்விய கன்னியை என்பால் ஆகர்ஷ’த்து இழுக்கவோ சக்தியற்றவன் நான்."

"சாக்கிய சிம்மாசனமும், ஜனபத கல்யாணியும் திவ்விய கன்னியின் அழகிற்கு முன்னால் மிகமிக அற்பமாகப்படுகின்றதல்லவா? மனத்தினை ஒரு நிலைப்படுத்தி, நீ சித்தத்தைச் சுத்தப் படுத்துவாயே யாகில், உன் இறுதி மனோரதம் ஈடேறும் சித்தம் ஆதியந்தமற்றது. அதனாற் சாதிக்க இயலாதது ஒன்றுமில்லை. சித்தத் தூய்மையில், நான் ஆகாய மார்க்கத்திற் பயணஞ் செய்ய முடியுமேயானால், ஏன் உன்னால் மட்டும் இயலாது?"

சிந்தனையே அவராக, மௌனத்திலாழ்ந்தார் நந்த பிக்கு. திடீரென ஒளி பெற்றவர் போல, "நீங்கள் துறவற நெறியைப் போதிப்பவர்கள். சிற்றின்ப விவகாரம் என்ற உடலிச்சையை வென்றவர்கள். என்னுடைய ஆசைகளை வெறும் மாம்ஸ இச்சை யென்று இகழ்வீர்கள். அத்தகைய தாங்கள், நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதை எவ்வாறு ஆசீர்வதிப்பீர்கள்?" எனக் கேட்டார்.

"வெவ்வேறு தளத்தின் சீவராசிகளின் அவாக்கள் வெவ்வேறானவை. ஒழுங்கற்ற சீவன்களின் ஆசைகள் ஒழுங்கற்றவை. பக்குவமடைந்த சீவன்களின் ஆசைகள் பக்குவடைந்தவை. பக்குவடைந்த மனிதர்களின் ஆசைகள், பக்குவடையாத மனிதரின் ஆசைகளைப் பார்க்கிலுஞ் செம்மையானவை. நிற்க, உன்னுடைய பக்குவ நிலையில், திவ்விய கன்னியுடன் நடத்தும் அதியற்புத மாய வாழ்க்கையை நாட நிற்கின்றாய். உன் இச்சா பூர்த்திக்கு நான் தடையாக நில்லாமல், உன் வெற்றிக்கு மேறொரு வழியில் உதவுவதுதான் பொருந்தும். உன் இஷ்டம் நிறைவேற உன் சித்தமே உனக்குத் துணை செய்தல் வேண்டும். சித்த மார்க்கத்தின் அற்புத உண்மையை உணர்ந்து, அதன்படி சித்தத்தினை நெறிப்படுத்தல் வேண்டும்...."

"புனிதரே! இதற்கிடையில் நான் தங்களுடைய போதனைகளை மறந்து விட வில்லை. துக்க-சமுதாய-நிரோத-மார்க்க ஆகிய சதுராதிய சத்தியங்கள்."

"கிளிப்பிள்ளையாகச் சில அடிப்படை உண்மைகளை, வெளிப்படையாக உதடுகளில் உச்சரிப்பதால் யாது பயன்? உண்மைகளின் உண்மையினை உணரல் வேண்டும். இவ்வுலகிலே துன்பங்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் ஏற்படும் துக்க நிலை. சமுதய என்பது துன்பங்களை ஏற்படுத்தும் ஹேதுக்கள் எவை என்பதை உணர்தல். துன்பத்தைத் தரும் ஹேது இச்சையேதான். ஓரிச்சையைத் திருப்பி செய்ய முயல, புதிய இச்சைகளும் ஊறுகின்றன. ஈற்றில், இவ்விச்சைகள் முடிவடையாது, இச்சைகளே எஞ்சுகின்றன. இச்சைகளை அழித்தோ, அல்லது அவற்றை விரோதித்தோ விலகுலே நிரோத. இச்சைகளை அழிப்பதற்கான வழியை உணர்தல்மார்க்க. நான் போதித்த ஆரிய அஷ்டாங்க மார்க்கம் நினைவிலிருக்கிற தல்லவா?"

"ஆம், நற்காட்சி-நல்லூற்றம்-நல்வாய்மை-நற்செய்கை-நல்வாழ்க்கை-நல்லூக்கம்-நற்கடைப்பிடி-நல்லமைதி ஆகிய எட்டுமே ஆரிய அஷ்டாங்க மார்க்கமாம்."

"நன்று. தியானத்தில் நல்லமைதி பெற்று, சித்தத்தை உணர். வழி தானாகவே பிறக்கும்."

நந்த பிக்கு வணங்கினார்.

புத்தர் பிரகாசமாகப் புன்னகை பூத்தார்.

*

ஒளி

புத்தர் வாழ் விஹாரத்திலே ஏனையோருக்குப் புலப்படாத ஒரு மாற்றம். தன்னந்தனியாக நந்தபிக்குவினுள் ஏற்பட்டு வரும் மாற்றம். சங்கத்திற் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப் பட்டிருந்த அத்தனை சீல விதிகளையும் ஊக்கமாகவும் கெட்டியாகவும் கடைப்பிடித்தார். சித்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கத்தில் மிகுந்த பிரயாசையுடன் தியானத்தில் மூழ்கத் தொடங்கினார். அவரிலே காணப்படும் புற மாற்றங்கள் பிரதக்ஜன பிக்குகள் சிலரைப் பேராச்சரியத்திலே திக்கித் திணறச் செய்தன. நந்த பிக்குவுக்குத் திவ்விய கன்னியொருத்தியை விவாகஞ் செய்து வைக்கப் புத்தர் சம்மதந் தெரிவித்த அந்தச் செய்தி, அவர்களை வியப்பு ஆழியின் அலைகளில் அலைக் கழித்தது. அழக்காற்றில் நுகும்பு விட்ட அஞ்ஞானம் வெடித்து வந்து சிற்றின்ப விவகாரங்களைப் பற்றியும், திவ்விய கன்னியரின் திவ்விய அழகினைப் பற்றியும், பிக்குவிடம் பிரஸ்தாபித்தார்கள். ஆரம்பத்தில், அவர்களுடைய அத்தகைய பேச்சுக்கள், அவருடைய செவிகளிலே தேன்மழையை வருஷ’த்தன. அந்நேரங்களிற் புறாப்பாத நிறமுள்ள எழில் மிகு திவ்வியகன்னி ஒருத்தி, பாலாவி உடை போர்த்தி, மின்னும் அளகபாரத்திலே பாரிஜாத மலர் சூட்டி, கரத்தில் வெண் சாமரமேந்தி, ஆகாய மார்க்கத்திற் கீழே இறங்கிக் கொண்டிருப்பதான மாயாஜாலக் காட்சிகள் விரியும். இந்தக் காட்சிகளை, சித்தத்தை ஒரு நிலைப்படுத்தித் தன் காரியத்தைச் சாதித்தல் வேண்டு மென்ற வெறி விழுங்கி விடும். வெறியின் அணங்காடல்... அவரே சீலத்தினதும், சித்தத்தைச் சுத்தப் படுத்துவதினதும் உருவாக மாறத்தொடங்கினார். ஜனபத கல்யாணி ஏதோ பல பிறவிகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியின் சாயலாக மறக்கப் பட்டே போனாள். பிக்குவின் உள்ளத்திற் பழையன கழிந்து, புதியன புகத் தொடங்கின. ஒவ்வோர் அணுவும் சாகாமலே செத்து, புதிய அணுக்கள் பிறக்காமலே பிறந்து, புதுக் கோலங்கள் கொள்ளுகின்றது. சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தித் தியானத்தில் ஆழ ஆழ, அதிலேயே ஏற்படும் சுகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் விநோத இன்பங் குதிருகின்றது. அந்நிலையில், வேறு எந்த நினைவுகளும், இச்சைகளும் இல்லையேயான ஒரு வெறுமை. வெறுமையென்றாலும், நிறைவின் நிறைவான வெறுமை. எந்த இலட்சியத்திற்காகக் கடின நோன்புகளை மேற்கொண்டோமென்ற நினைவுகளே இதழ் இதழாக ஒடிந்து கழர, உடலின் இச்சைகள் துளி துளியாக மரிக்க, உடலிச்சை எழுச்சிகள் தழுவ முடியவே முடியாத புதிய வீரமொன்று அதன் சிதையிலே துளிர்த்து வளர, சீலமும்-தியானமும்-சித்தமுமே இலட்சியமாக, அதற்கு அப்பாலும் அப்பாலும் வேறெதுவுமே இல்லையாக, ஊழின் பல பிறவிகளென்ற எல்லைகளின் அந்தரங்க முடிச்சுகளைச் சிக்கவிழ்த்த திவ்விய நிலை வெகுவாக வெகுவாக வளர்ந்து வரும் நாளில்-

நந்தபிக்கு அரஹத் நிலை எய்தினார்.

*

போதி

புத்திபூர்வமாக இழையும் சில நினைவுகள். பின்னியும்-பின்னாமலும், சேர்ந்ததும்-தனித்தும், எல்லையிட்ட வேலியைத் தகர்த்து வழி தேடுகின்றன. பாதங்களின் இயக்கமும் அலைவுமின்றி, இந்தப் பூமியை-அல்லது, அதற் வாழ்க்கைச் சக்கரத்தை- வலம் வருவதிற் சேரும் அனுபவம்... ஆகாய மார்க்கத்தில், இந்திரசபைக்கு அன்று சென்றதிலும் பார்க்க மிக மிக எளிதாக இயங்க முடிகின்றது.

கபிலவஸ்து அரண்மனையிலும் பார்க்க நெடிது நெடிதாக, எழிலிக் கூரையைக் கிழித்து வளர்ந்திருக்கும் மலைகள். மலைகள்... அவை, வைரத்தகதகப்பில் ஒளிரும் பனிப் படிகங்களிற் கிரீடங்கள் புனைந்து கோலோச்சுகின்றன. ஆண்டான் யார்? அவன் அடிமைகள் யார்? பனிக் கற்களின் ஏகம். நீர், உறைந்து திடமான ஒரு நிலை; ஒரு ஸ்திதி; ஒருபிறப்பு... புஷ்பாஞ்சலியிற் திறிய அலரி மலர்களாகப் பனிக் கட்டிகள். அவை உருகி, வெள்ளி நூல்கள் பல இழுத்து, பலவும் ஒன்றாகி, குமரி லாவண்யம் பெற்று, சிங்கமுகக் காலதரிலும் பென்னம் பெரும் பாறையிலிருந்து கீழே துள்ளிக் குதித்து... அருவியின் இசையும்-கூத்தும்! தண்மையின் திரிசங்கு சுகததிற் சுகிக்கும் அதன் நிலையும் அதன் ஸ்திதியும்...

விஹாரத்திலுள்ள, புறவுக் கூட்டத்தின் வசிப்பிடமாம் ஆலமரம், தளிரிலை தூக்கும் வெள்ளரச மரம் இத்தகைய பல நூறு இலட்சம் மரங்கள் செறிந்த காட்டின் வழியாக, மூப்பிலேமுற்றாமலும், இளமையிலே துள்ளாமலும், ஆறு ஓடுகின்றது. அதனையே தனது வண்ணமாக்கிக் கொண்ட ஒரு கோலம். பழுத்துக் கழன்ற இலைகள்; உதிர்ந்து விழுந்த பூக்கள்; ஒடிந்து விழுந்த கிளைகள்... வழியெல்லாம் தன்னை வந்தடையும் எதனையும் கழிக்காது, தன்னுடைய இழுத்துச் செல்லும் மண்மிசை வாழ்க்கை. முல்லைப் பயணம் மேற்கொண்டுள்ள ஆறு, எங்கே ஓடுகின்றது? கழனி நிலத்திற்கா? அல்லது, அப்பாலும் அப்பாலுமாகக் கடலுக்கா?

மரகதப் போர்வையிட்ட மருத நில வெளி. புழுதி வாழ்க்கையில் மண்ணைக் கிளறி, பாடுபட்டே வாழ்க்கை நடத்தும் மனிதப் பிரயாசையின் குடலை விளைச்சல்... அதன், நடுவில் நீல விதானத்தைப் பிம்பங்காட்டியவாறே, நிஷ்டையிலே தோன்றுங் குளம். தடாகத்தடியிலே உறைந்து கிடக்குஞ் சேற்றினை, அமைதியான தன் நீருடையால் மறைத்து வைத்திருக்கின்றது. கூந்தலுக்கு அழகு செய்யும் வண்ணம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதழ் சிரிக்குந் தாமரைப் பூக்கள். முட்காம்புகளிற் குடை விரித்திருக்கும் தாமரை இலைகளில் ஒறுப்பாகச் சிந்திக் கிடக்கும் நீர்த்திவலைகள். தினகரன் கதிரில் நித்தில ஜாலம் காட்டும் அவை குளத்து நீரே!... அவற்றின் நிலை; ஸ்திதி....

நரன் வழி தோன்றும் இச்சைகளிலும் பார்க்க எத்தனையோ கோடானு கோடி அலைகளைச் சுழித்து உருட்டும் சமுத்திரம். இராட்சத ஒதையெழுப்பி, அலைகளைக் கரைகளுக்க உதைத்து, பால் நுரைதல் கக்கும் ஆழியின் எல்லைகள் எவை? விழிப் புலத்திற்குச் சற்றுஞ்சிக்குப் படாது, அடிவானத்திற்கு அப்பாலும் அப்பாலும் விரிந்து பரந்து கிடக்கின்றது. விழிப் புலத்திற்கும் எட்டாத இடத்தில் உருவாகும் இவ்வலைகள் கரைதட்டியதும் மரிக்கின்றனவா? அழிவு உண்டானால் பிறப்புமுண்டு... இத்தனை அனந்தகோடி அலைகள் ஏன் பிறக்க வேண்டும்?... கடல் நீரின் நிலை; ஸ்திதி... பாலை வனத்தை வஞ்சித்த நீர் இங்கே உபரியாகவும் எல்லையற்றதாகவுங் கிடந்தும்; குடிப்பதற்கு உதவாது, உப்புக் கரித்து....

பனிக் கட்டிகள்;

அருவி;

குளம்;

கடல்;

எல்லாம் நீரே....

ஒன்றென்றாலும் ஒன்றல்ல, பலவென்றாலும் பலவல்ல...

நீரின் வாழ்க்கைச் சக்கரம் புத்தி பூர்வமாகப் பிடிமானத்திற்குள்ளே சிக்குப்படுகின்றது,

திவ்வியகன்னியராக விண்வெளியில் உலவும் முகிற் கூட்டங்கள். கண்ணுக்குப் புலப்படாமல், காற்றிலும் இலேசாக, வாயுவாக உலையும் நீர். நிர்மலமான நீர்....

முகில், நீரே! ஆனால் வாயு.

அருவி நீரே! ஆனால் திரவம்....

பனிக்கட்டி நீரே! ஆனால் திடம்....

எல்லாமே ஒன்று. ஆனாலும், ஒன்றல்ல.

இருப்பினும் எல்லாமே நீர்; நீருடைய வாழ்க்கைச் சக்கரத்தின் சில ஸ்திதிகள்...

ஒரு நீர்த்துளி இப்பொழுதிருக்கும் நிலை சாசுவதமானதா? இல்லையென்றால்... அதன் முந்திய ஸ்திதி என்ன? அடுத்த ஸ்திதி என்ன? எது பழைய நிலை; எது புதிய நிலை? மழைத் திவலைகளாக மண்ணிற்கத்திரும்பும் நீரா? அல்லது, நீராவியாக விண்ணேகும் நீரா? எது கழிகின்றது? எது புகுகின்றது? எது மரபு? எது வேலி? எது வழி? போயாதினத் தத்துவமா... சித்தத்தை உணராது சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தின் அனந்தகோடி பற்களுள் ஒன்று...

புரியாதன யாவுமே புரிகின்றன.

சித்த பரிசுத்தம் பெற்று, சீல வாழ்க்கை தழுவி, சங்கத்தின் பூரண அங்கத்துவமே நிறைத்து, அரஹத் நிலையடைந்த நந்தபிக்கு நிறைவின் நிறைவுடன் நடந்து கொண்டிருக்கின்றார். புரிந்தும்-புரியாமலும், சத்தும்-அசத்துமாக, ஓயாமலும் தரிக்காமலுஞ் சுழலுஞ் சம்சாரச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்றவராக, அதன் நிறைவே வியாபிக்க, துன்பமே அற்ற தூய நிலையில் நடக்கின்றார்... அவருக் கென்றிருக்கும் இச்சா பந்தமும், லௌகீகச் சொத்தும் சீவர ஆடையும், ஒரு பிக்ஷ‘ பாத்திரமுமே...

நந்த பிக்ஷ”, தானமேற்றக் கொள்வதற்காகப் பிக்ஷ‘பாத்திரத்துடன் நடந்து கொண்டேயிருக்கின்றார்.

*

சுவிசேஷம்

சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியன நால்வரும் தனித்தனிய எழுதின நான்கு சுவிசேஷங்கள் புதிய ஏற்பாட்டிற் காணப்படுகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று பல இடங்களில் ஒத்தும், சில இடங்களில் மாறுபட்டுங் காணப்படுகின்றன. நான்கினையும் ஒப்பு நோக்கிப் படித்து, 'முள்' கதைக்கு இறுக்கந் தரக்கூடிய பகுதிகளை நான்கு சுவிசேஷங்களிலுமிருந்து எடுத்து இணைத்துள்ளேன். தடித்த எழுத்துக்களிலும், பெரிய எழுத்துக்களிலும் இடம் பெரும் பகுதிகள் சுவிசேஷங்களிலிருந்து நேரடியாக எடுத்தவை. வேறு இடங்களிலும் அவசியங் கருதி சுவிசேஷ வசனங்கள் சில கையாளப்பட்டுள்ளன.


முள்

நள்ளிரவை எகத்தாளித்தும், இழுபட்டு ஊரும் நீளிரவு, பிரதான ஆசாரியரும-வேதபாரகரும்-மூப்பரும் அமிழ்ந்து கிடக்கும் அஞ்ஞானத்தையே உறையிடுங் காரிருள். திக்குத் திசையெல்லாஞ் சங்கமமாகிய அந்த நிசியின் இருள் வனத்தில், சீமோன் பேதுரு பசை உலராத ஒரு நம்பிக்கையில் ஒட்டுண்டு நடக்கின்றான். 'மெய்யாகவே, மேய்ப்போன் நம்மை விட்டுப் பிரியும் காலம் வந்து விட்டதா?' என்ற கடாவிற்கருத் தரித்து, நிமை அசைப்பு நேரத்தில் விளைந்து, பிரசவமான அமானுஷ்ய சக்தி அவனை இயக்குகின்றது. பாதங்களை விறைக்கச் செய்யுங் குளிரும், விரல்களைப் பொசுக்கிடும் சுடுமணற் காடும் அவனுக்கு அந்நியமல்ல. ஆயனின் விசுவாசக் கதகதப்பும், உபதேசத் திருநீழலும் அளிக்கும் அரணைக் கெட்டியாகவே நம்பியதினால், வெட்ப தட்ப உபாதித்தல்ளென்ற மாம்ஸ ஆக்கினைகள் அவனைத் தாக்கியதில்லை. நிந்தையிலும் விந்தையாக, இன்று மட்டுமே மனப் புழுதியில், உலைவுகள் சல்லிவேர் தள்ளி முளைக்க ஏகுவென்ன? அநிசமாக நீண்டு மதர்த்து, பஸ்காவைப் புசித்த இரவு இடறல்களின் செங்குத்து மலையாக உயர்கின்றதா? பேதுருவின் மனச் சரிவுகளில் அலை விளிம்பு சுழற்றும் எண்ணச் சுழிகள்... இருப்பினும், உலகினை இரட்சிக்கத் தோன்றிய அருள் ஜோதி வழி நடத்துகின்றது என்ற பின்னமற்ற நம்பிக்கை உந்தி இயக்க. பேதுருவின் கால்கள், உடற் பாரத்தின் சுமையை இழுத்துச் செல்கின்றன.

நயனத்தின் கதவுகளாம் இமைகளை அகல விரித்து, கருவிழிகளை அதன் நிலையத்திற் பொறித்துப் பார்க்கும் பொழுதுதான் இரட்சகர் இயேசு கைதாகிச் செல்வது மங்கலாகத் தெரிகின்றது. கொள்ளைக் கூட்டம் ஒன்றின் நடமாட்டச் சாயலை நியாயமாகக் கற்பிக்குந் தீவர்த்திகளிலிருந்து சிதறும் ஒளிச் சிதர்கள். பிரதான ஆசாரியர்-பரிசேயர் என்பவரால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரும் போர்ச் சேவகரும் வெற்றி மமதையின் உபரியிலே எழுப்பும் அகங்காரக் கூக்குரல் பேதுருவின் செவிப் பறைகளை மோதிக் குடைகின்றது.

கர்த்தரின் கருணையை அறியாத அந்தக் கர்விகள் மொய் பிரதான ஆசாரியரின் வீட்டிற்குள் நுழைகின்றது.

அலைச் சென்னிகளால் அள்ளி எற்றப்படும் மீன்படகாக, சீமோனின் உள்ளம் கடந்த கால நினைவுக் கல்லைகளில் அலைக்கழிக்கப்படுகின்றது.

முதலாம் நினைவு முறி

கலிலேயாக் கடல், மீன்பிடித்தலே அவன் ஜ“வனம். அன்றும், என்றும் போலவே தன் சகோதரனான அந்திரேயாவுடன் கடலில் வலைபோட்டு, அதிலே மீன்படும்வரை அவன் காத்திருந்தான். அப்பொழுது சர்வேசுவர சுதனின் அழைப்புக் கிட்டியது.

'என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.'

குரல் வந்த திக்கிற் சென்னி திருப்பிப் பார்த்தான். தசை ஒறுப்பில் மெலிந்த உருவம்; கடற் காற்றில் அசைந்து தோள்களிற் புரளும் கேசம்; எளிமையின் சமாசமான குறுந்தாடி; அருளை உமிழும் அக்கண்களில், மனித மனங்களைத் தன் வயப்படுத்துங் காந்தப் பொறிகள்; தேவ வாக்குகளை உச்சரித்துக் கவர்ச்சி பெற்ற உதடுகள்... அக்கணமே. அவரால் அவன் வசீகரிக்கப்பட்டான். அன்று அங்கேயே அவரின் சீடராகப் பின் தொடர்ந்த பேதுரு இன்று வரை...


இரண்டாம் நினைவு முறி

பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பார்த்தலமேயு, மத்தேயு, தோமாசு, சின்ன யாக்கோபு, செலோத்தே சீமோன் தயேயு, இஸ்காரியோத் யூதாஸ் ஆகிய பன்னிரு சீடர்களுடன் அமர்ந்து, இயேசு தான் ஏற்கனவே தேர்ந்தெடுத்த இல்லத்தில், புளிப் பில்லா அப்பப் பண்டிகையான பஸ்காவைக் கொண்டாடினார். தேவ குமாரன் தீர்க்கதரிசனத்தினாலே தன் ஊழினை அறிந்தார். தேவனுடைய இராஜ்ஜியம் வருமளவும் புசிக்கவோ, பானம் பண்ணவோ, மாட்டே னென்று மெய்யுரைத்து, அப்பத்தைப்பிட்டுத் தனது சரீரமாகவும், பாத்திரத்திலிருந்த பானத்தைத் தனது உதிரமாகவும் சீஷரிடம் பங்கிட்டார். அவ்வேளையில், இயேசுவின் கண்கள் தீப காந்தியுடன் ஒளிர்ந்தன. அவர் தெளிவாகவும்-மெய்யாகவும்-உறுதியாகவும் அறுதியிட்டார்:

'என்னைக் காட்டிக் கொடுக்கிறவனுடைய கை என்னுடனே கூடப் பந்தியிலிருக்கிறது.'

யூதாஸ் அப்பொழுது இயேசு கிறிஸ்துவுக்கே தெரிந்திருந்த உண்மை....


மூன்றாம் நினைவு முறி

ஒலிவமலையும், கெதரோன் ஆறும் இயேசு பெருமான் அமைதியுடன் சஞ்சரிக்கும் இடங்கள், கெதரோன் மருங்கிலுள்ள ஒரு தோட்டத்தை அடைந்தார். அதனை அடைந்ததும் தன் கூடவந்திருந்த சீஷரை நோக்கிச் சொன்னார்;

'நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்.'

அவர்களை அங்கு விடுத்து, கல்லெறி தூரம் அப்புறம் போய், முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணினார்:

'பிதாவே! உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும் படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல; உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது.'

அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாகத் தரையில் விழுந்தது.

ஜெபம் முடிந்ததும் சீஷரிடத்தில் வந்தார். அவர்கள் துக்கத்தினால் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு கேட்டார்:

'நீங்கள் நித்திரை பண்ணுகிறதென்னை.? எழுந்து ஜெபம் பண்ணுங்கள்?'

அவ்வாறு தேவ குமாரன் பேசுகையில், ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரு சீஷரும் ஒருவனான யூதாஸ் என்பவன் முன்னே வந்து, இயேசுவை, முத்தஞ் செய்யும்படி அவரிடத்திற் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கிக் கேட்டார்:

'யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷ குமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?'

பின்பு இயேசு தனக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும், தேவாலயத்துச் சேனைத் தலைவர்களையும், மூப்பர்களையும் நோக்கி உசாவினார்:

'ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்படுவருகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே?'

அக்கேள்வியிலே கூட தேவனினால் அளிக்கப்பட்ட அதிகாரந் தொனித்தது.

*

சிந்தனைக் கல்லைகளில் அலைத்துலைக்கப்பட்டே நடந்த பேதுரு பிரதான ஆசாரியருடைய வீட்டுவாசலை அடைந்து விட்டதை உணர்கின்றான்.

'நான் உம்மோடே மரிக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன்' என்று கொடுத்த பிரதியுத்தரத்தை நிறைவேற்றும் ஆவேசம் பொங்க, ஆபத்தின் பயப் பிராந்தியை அரவச் செட்டையாகக் களைந்து, கெட்டியான உறுதியில் விளைந்த வைராக்கியத்துடன் அவன் வாசலைத் தாண்டுகின்றான். தலைப்பாகையின் விளிம்பு முக்காடன்ன முகத்தின் ஓரங்களை மறைத்திருந்தாலும், வாசல் காத்து நிற் þலைக்காரி பேதுருவை அடையாளங் கண்டவளாக, 'நீயும் அந்த மனுஷதனுடைய சீஷரில் ஒருவனல்லவா?' என்று கேட்கிறாள். ஏனையோரின் அவதானம் தன்மீது திரும்புவதற்கு முன்னர், 'நான் அல்ல' என்ற வார்த்தைகளை உதிர விட்டு. மக்களுக்காகப் பாடுபட்டு, ஆக்கினைக்குள்ளாயிருக்கிற இயேசு நாதரின் திவ்விய தரிசனம் பெறுவதைத் தவிர, வேறெவ்வித சிந்தையுமற்றவனாக அவளைக் கடந்து செல்கின்றான்.

அது, குளிர்காலத்தின் கடை ஜாம அந்தலை. என்புக் குள்ளிருக்குங் குழட்டையையுந் திடமாக உறைக்குஞ் சீதளம், களிப்பின் எக்காளம் கலகலக்க, ஊழியக்காரரும், சேவகரும் கரி நெருப்பு உண்டாக்கிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அக்கூட்டத்தினருடன் ஒருவனாக, தன்னை இனங்காட்டிக் கொள்ளாது, பேதுரு கலந்து கொள்ளுகின்றான். இங்கிருந்து இயேசுவைப் பார்க்க அவனால் ஏலும். என்றுமில்லாத பொலிவுடனும், தேஜஸ”டதும் இரட்சகரின் முகம் பிரகாசிக்கின்றது. பேதுருவின் மனத்தில் நிறைவு.

'ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப் பட்டவர்.'

அகம்பாவத்தினதும், அஞ்ஞானத்தினதும் உறைவிடமான பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக் குறித்தும், போதகத்தைக் குறித்துங் கடூரங் கொப்பளிக்குங் குரலில் உசுப்புகிறான். அந்த மூர்க்கனுடைய கேள்விக்கு மொழியும் பிரதியுத்தரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் பேதுரு உன்னிப்பாகவே, சீஷ விசுவாசத்துடன் கேட்டுக் கொள்ளுகிறான்.

'நான் வெளியரங்கமாய் உலகத்துடன் பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்களெல்லாருங் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்தில் நான் ஒன்றும் பேசியதில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே!'

அவ்வார்த்தைகளில் ஆணவம் கவியவில்லை; தெளிவு துலங்கிற்று; பரிகாசம் அணுவுமில்லை; பரிசுத்தம் நிறைந்திருந்தது. இவற்றிற்கும் மேலாக, தன்னைச் சருவேசுவரனின் பிரியங்களுக்கு ஒப்புக் கொடுத்த கெட்டியான உறுதியைக் குழைத்துத் தொனிக்கிறது. அவருடைய மகிமையை உணராது, அண்மையில் நின்ற மொழுக்கான சேவகனொருவன், அஞ்ஞானத் தடத்தில் மூர்க்கம் மிக்கவனாய், 'இப்படியா உத்திரவு சொல்லுகிறது?' என்று இயேசுவின் கன்னத்தில் ஓர் அறை அறைகிறான்.

'உமது கொடி உடல் எவ்வளவு வைராக்கியத்துடன் அதனைத் தாங்கிக் கொண்டது!'

அக்கொடியவனை நோக்கி இயேசு சொன்னார்;

'நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?'

இந்த பதிலின் ஒவ்வொரு வார்த்தையையும் நழுவவிடாது கிரகிக்கும் பேதுருவின் மனம் மலைவு கொள்ளுகிறது. சிக்கலின் அந்தலையைக் காண இயலாத சிக்கலின் சிக்கல்கள்! ஒன்றின் தொடராக இன்னொன்று...ஒவ்வொன்றும் நிகழ்ந்ததா, மனப் பிராந்தியா என்று தெளிவடையும் அவகாசந் தராத துகட்பொழுது நேரத்திற்குள் மின்னற் புழுக்களன்ன மறைகின்றன.... சித்திர விசித்திர நிகழ்ச்சிகள்... சிக்கலான உவமைகளைப் புரிந்து கொண்ட சீமோனால்... மலைப் பிரசங்கத்தின்போது இயேசு கிறிஸ்துநாதர் செய்த போதனைகளுள் ஒன்று, குகைக்குள் அகப்பட்ட ஒலியாக எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது....

'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.'

'இந்த அரிய நற்போதனையை நல்கியவர், ஏன் சேவகனுக்கு-அந்த அஞ்ஞான மூர்க்கனுக்கு-நியாயங் கற்பிக்கிறார்? அவன் தீமையல்ல, தீமையின் கருவி என்பதினாலா?'

பஸ்கா இரவினைப் போலவே, பேதுருவின் ஐயங்களும் நீண்டு....

அப்பொழுது அவனுக்குச் சமீபமாகச் குளிர் காய்ந்து கொண்டிருந்த சிலர், பேதுருவின் மௌனத்தையுஞ் சிந்தனையையும் அவதானித்து, 'நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா?' எனக் கேட்கிறார்கள்.

சிந்தனை சங்கிலி அற, 'நான் அல்ல' என்று பேதுரு மறுதலிக்கிறான். இயேசு என்ற நித்திய ஆண்டவர் மனித யாக்கையுடன் அல்லற்படும் போராட்டத்தில் நிலை குத்திய ஏக சிந்தையனாய், தன்னையே மறக்கிறான்....

இன்னொருவன் பேதுருவை மிகவும் உன்னிப்பாகப் பார்க்கிறான். இவன் பேதுருவாற் காதறுக்கப்பட்ட மல்குஸ் என்பானின் இனத்தவனாவன். அவனுடைய விழிகளிலே கொலை ஆவேசம் துளிர்கின்றது. 'நீயும் அவர்களுள் ஒருவன்' என்கிறான்.

இயேசு கிறிஸ்துவைக் கட்டிப் பிணைத்து, பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அனுப்புவது தெரிகிறது... யோசிக்கும் அவகாசமில்லை. 'மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன்' என்கிறான் பேதுரு.

சேவல் கூவுகிறது!

அப்போது, கர்த்தர் பேதுருவைத் திரும்பிப் பார்க்கிறார்.

பேதுருவுக்கு ஞான விழிப்பு ஏற்படுகின்றது.

'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் ஆறுதடைவார்கள்.'

-இவ்வாறு போதித்த நசரேயன் கேவலமாக இழுத்துச் செல்லப்படுங் காட்சி பேதுருவின் நெஞ்சைப் பிளக்கின்றது.

*

இன்னொரு நினைவு முறி

இதே பஸ்கா இரவு. பன்னிரு சீஷரும் ஒலிவமலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்:

'மேய்ப்பனை வெட்டுவேன்,ஆடுகள் சிதறடிக்கபடும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.'

பேதுரு அவருக்குப் பிரத்தியுத்தரமாக, 'உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன்' என்றான்.

இயேசு அவனை நோக்கிச் சொன்னார்:

'பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்.'

*

இன்றைக்குச்சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்...

இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்....

இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்....

அட்ட திக்குகளிலுமிருந்து இந்த வாக்கியத்தின் பூதாகாரமான எதிரொலிகள் பேதுருவின் கழுத்தினை நெருக்குகின்றன. வெறும் ஒலியலைகள் உயிரின் மூச்சினையே திருகும் பிரணாவஸ்தை.

மனம் மெழுகாக உருகி நெகிழ அழுகின்றான்.

கறை பகுவப்படும்வரை சீமோன் பேதுரு விசும்பி விசும்பி அழுகின்றான்.

கறை கழுவப்படும்வரை சீமோம் பேதுரு விசும்பி விசும்பி அழுகின்றான்.

குளிரிற் சீதளித்த அவ் வைகறையை நடுங்க வைக்கும் அழு குரல்.

'ஆண்டவரே! நான் பாவி...பாவி! என்னை மன்னித் தருளும் கர்த்தரே! மாயமாகிய பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னீர்களே! உங்களுடைய உவமையை நான் புரிந்து கொள்ளவில்லையா? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கின்றவன், தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான் என்று சொன்னீர்களே! மனுஷரின் முன்பாக மட்டுமல்ல, தங்களின் முன்பாகவும் நான் ஆண்டவரை மறுதலித்த பாவி...!' என்று மனந் திறந்து அழுது பிரலாபிக்கலானான்.

விழியூற்றுகளிலிருந்து பிரளயகாலத்து வெள்ளம். தன் மாம்ஸப் பலவீனத்தின் மீது எழுந்த வெறுப்பு, தன்மீதே அகண்டிதமான வெறுப்பினை வளர்க்கின்றது. மறைவாகக் கிடந்த பட்டயத்தை உருவுகிறான் பேதுரு....

அதன் விளிமிபிலுள்ள இலேசான இரத்தக் கறை மனத்தைத் தாக்குகிறது.

இந்த இரத்தக் கறைமீது மோதிச் சிதறும் நினைவு முறி ஒன்று, கடைசிச் சொட்டு நெய்யை உறிஞ்சும் வேகத்துடன்...


அந்த நினைவு முறி

பிரதான ஆசாரியர்களுடனும் வேதபாரகருடனும், தேவாலயச் சேனைத் தலைவர்களுடனும் வந்த ஜனங்களைக் கண்டதும், பேதுரு பட்டயத்தை உருவி, ஒருவனுடைய காதினை அறுத்த பொழுது இயேசு சொன்னார்:

'அதனை உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் மன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடம் அனுப்ப மாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால் இவ்விதமாகச் சம்பவிக்க வேண்டும் என்கிற தேவ வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?'

*

'வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?'

'வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?'

'வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?'


ஒவ்வொரு தடவையும் பேதுருவின் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த முட்களைப் பிடுங்கி, இயேசு கிறிஸ்து தம்முடைய முன் முடியிலே சூட்டிக் கொண்டதைப் போன்ற சுமைக் குறை.

'சேவல் கூவுவதற்கு முன்பு, மூன்று தரம் பேதுருவாகிய நான், இயேசுவை மறுலிக்க வேண்டும் என்பது கர்த்தர் வாக்கு. நான் மறுதலித்தேனா? அவருடைய வாக்கு நிறைவேறிற்று! கர்த்தரின் வாக்கு நிறைவேறிற்று...'

புலரிக் காலத்துக் கீழ்வானில் ஊமை ஒளி படருகிறது...

சீமோன் பேதுருவின் உள்ளத்திலே தெளிவும் அமைதியும் விரிகின்றன...

*
.........

ஒரு மதிப்பீடு

- முனைவர் சாலினி இளந்திரையன்

தமிழ் மொழியின் எழுத்திலக்கியம் சுமார் 3000 ஆண்டு வரலாறு உடையது. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வரலாறோ ஒரு நூறு ஆண்டுக்கும் குறைவு. ஆனாலும் தமிழ்ச் சிறுகதை மிகுந்த வளமும் தரமும் பெற்று விளங்குகிறது. தமிழில் வெளிவந்துள்ள பல நூறு சிறுகதைத் தொகுதிகளுள் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு கதையாவது,ஏதாவது ஒரு வகையில் சிறப்புடையதாகவே இருக்கிறது. இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றிலே, இந்திய நாட்டின் புதுமைப்பித்தனும் ஈழநாட்டின் எஸ்.பொன்னுத்துரையும் தனித்து ஓங்கி நிற்கிறார்கள். முன்பு இல்லாத ஓர் ஆழத்தையும் புதுமையையும் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்குத் தந்தவர் புதுமைப்பித்தன் என்றால், அந்த இலக்கியத்துக்கு ஒரு கனிவான செறிவையும் மெருகையும் தந்தவர் 'எஸ்.பொ' என்று சொல்லவேண்டும்.

வீழாத வீ

சிறு கதை, நாவல், திறனாய்வு, நாடகம், உரை வீச்சு முதலான பல துறைகளில் திறம்பட எழுதியுள்ள பொன்னுத்துரை, இருநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருப்பினும் அவருடைய கதைகளின் தொகுதி ("வீ" என்னும்) ஒன்றே ஒன்றுதான் இதுவரை வெளிவந்துள்ளது. இந்தக் தொகுப்பில் தேர்கணை, அணி, வேலி, ஈரா, நெறி, விலை, மறு, வீ, சுவை, சிதை, வீடு, முள் என்னும் பதின்மூன்று கதைகள் இடம் பெற்றுள்ளன-இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் தமிழ்மொழியின் இலக்கிய ஆற்றலை வெவ்வேறு கோணத்தில் புலப்படுத்துகின்றன. அதன் மூலம், இந்தக் தொகுதிக்குத் தமிழ்ச் சிறுகதைப் புத்தகங்களுக்குள்ளேயே ஒரு தலைமையான இடம் கிடைத்துள்ளது.

இந்தச் சிறுகதைத் தொகுதியை மதிப்பீடு செய்த திறனாய்வாளர், இரசிகமணி கனகசெந்திநாதன், "ஈழத்தில் நடைபெறும்சிறுகத இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்பும் தென்னகத்தாருக்கு "வீ" யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பி வைக்கலாம்" என்கிறார். இதிலுள்ள பல கதைகளை நயந்து பாராட்டும் முனைவர் சாலை இளந்திரையன், பொன்னுத்துரையின் 'தேர்' என்னும் கதைக்கு இணையான ஒரு சிறுகதை இதுவரை தமிழில் எழுதப்படவில்லை என்று விதந்து ஓதுகிறார்.

பல முறை படித்துப் படித்து மகிழத்தக்க சிறு கதைகள் தமிழிலே இல்லாமல் இல்லை. ஆனால், பதின்மூன்றே கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் அப்படிப் பட்ட கதைகள் பெரும்பான்மையாக இருக்கின்றன என்பதே பொன்னுத்துரையின் பெரிய இலக்கிய வெற்றி. குறிப்பாக, தேர், மறு, வேலி, விலை என்னும் கதைகள், படிக்கும் தோறும், புதுப் புதிய பொருட் கருத்துக்களை விரிக்கின்றன.

புத்தகம் என்பது புத்தம் புதிய
போதுதொறும் புதிதாகும்-அதை
எத்தனையோ தரம் நீபடித் திட்டபின்
இத்தரமும் புதிதாகும்!

என்னும் புத்தக இலக்கணத்து ககு, இதில் உள்ள ஒவ்வொரு கதையும் சீரிய இலக்கியமாக விளங்குகிறது.


பின்புலச் சித்திரம்

எந்த இலக்கியமும் மனித வாழ்க்கையைத்தான் சித்திரிக்கிறது; சிறுகதை இலக்கியம், தனக்கே உரிய கலை வரம்புகளுக்கு உட்பட்டு நின்று அதைச் சித்திரிக்கிறது. 'வீ' யில் உள்ள எந்த ஒரு கதையைப் படிக்கும் போதும், "இவ்வளவு துல்லியமாக, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் ஒரு சிறு கதைக்குள் இவரால் எப்படிக் கொண்டுவர முடிந்தது?" என்கிற வியப்பே நமக்கு உண்டாகிறது. அவ்வளவு சீராக அளந்து கதைப் பொருளையும் சுற்றுச் சூழலையும் கையாள்கிறார் பொன்னுத்துரை.

கல்வியே யாழ்ப்பாணத் தமிழர்களின் முதன்மையான தொழில். படித்துப் பட்டம் பெற்றுக் கொழும்பு சென்று அரசு அலுவல் பார்ப்பதுதான் அவர்களுடைய வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சி. இந்தச் சமுதாய உண்மையைப் பின்னணியாக்கியே தேர் என்னும் கதை படைக்கப்படுகிறது. எனவே, யாழ்ப்பாணம், கொழும்பு என்னும் இடங்களும் இவைகளை இணைக்கும் யாழ் தேவி, உத்தரதேவி என்னும் இரண்டுரெயில்வண்டிளும் கதையில் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவைகளின் ஊடே யாழ்ப்பாணத்துத் தமிழர் வீட்டுப் பழக்கவழக்கங்கள் சித்திரிக்கப்படுகின்றன. திருமணத்துக்குத் தயாராக இருக்கும் பத்மா, காலையில் முதற்காரியமாக வீட்டு முற்றத்தைக் கூ டி, சாணகத் தண்­ர் தெளித்து முடிக்கின்றான்... கறிச் சட்டிகளை அடுக்களைக்கு வெளியே, இடப் பக்கமாக உள்ளே செவ்விளநீர்க் கன்றடியிற் பரப்பி வைத்து, பொச்சு மட்டையால் அவள் அவைகளை கழுவுவது கூட ஆசிரியரின் பேனாவுக்குத் தப்பவில்லை....!

வருடப் பிறப்பன்று காலையில் கடைக்குப் புறப்பட்ட ஆறுமுகம், வழியிலே ஒரு டீக் கடைக்காரனையும் அய்யம்பிள்ளை என்பவரையும் சந்திக்கிறார். இவர்கள் இருவரும் கதைப்பண்புக்குத் துணை செய்வதோடு, கதை நடைபெறும் களமாகிய யாழ்ப்பாணத்து வாழ்க்கையையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.

'வேலி' என்னும் கதை ஒரு விவசாயியைப் பற்றிய தாகையால், வயல்வெளி, பயிரேற்றம், அறுவடை, வெள்ளச்சேதம் முதலிய செய்திகளால் இக்கதை நிரப்பப்பட்டுள்ளது. துணைப் பாத்திரங்கள் கூட, அந்த வாழ்வோடு தொடர்புடைய இயல்புகளோடு படைக்கப்படுகிறார்கள். இதிலே வரும் நன்றி கெட்டவனான சொக்கனின் பாத்திரம், ஓரளவு வசதியும் நல்லுள்ளமும் கொண்ட விவசாயிகளின் வீட்டில் ஒண்டிக் கொள்ளும் அநாதைகளின் வரலாற்றைச் சொல்லுகிறது. "அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றவர் பற்றிலர்,-நாணார் பழி!" என்னும் குறளையும் நினைவூட்டுகிறது. இவனைக் கதையில் இணைத்ததன் மூலம், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வு முழுமையாகச் சித்திரிக்கப்பட்ட ஒரு பொலிவு இந்தக் கதைக்குக் கிடைக்கிறது.

'முள்' என்னும் கதை இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் நடந்த, ஒரு நிகழ்ச்சியைச் சித்திரம் செய்கிறது. ஒரே வரவில் தன் போதகராகிய இயேசுவுக்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்று மூன்று முறை மறுதலிக்கிறான் சீடருள் ஒருவனான பேதுரு. மும்முறை மறுதலித்த பின்பே, "சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்" என்று இயேசு சொன்னது அவன் நெஞ்சில் படுகிறது. உடனேயே அவனுடைய உள்ளம் அவனைக் குற்றம் சாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது.

இயேசுவுக்கு மிக உண்மையான சீடன் அவன், அவனுடைய உள்ளத்தில் தைத்த இந்த வேதனை முள் எவ்வாறு மெல்ல அசைத்து வெளியே எடுக்கப்படுகிறது என்பதை விவரிப்பதே 'முள்'.

இந்தக் கதை முழுவதும், ஆசிரியரின் குரலையும் மிஞ்சிக் கொண்டு பைபிளில் உள்ள வசனங்களே இடம் பெறுகின்றன. அவைகள், பேதுருவின் உள்ளத்தில் எழுந்து எழுந்து விரிவரைக் காட்டுவது போல, ஒவ்வொன்றும், ஒன்றைவிட ஒன்று பெரிதான மூன்று வேறு வேறு அளவுகளிலான எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன. இவைகளைப் படிக்கப் படிக்க, பார்க்கப் பார்க்க, இந்தக் கதையே பைபிளின் பக்கங்களில் நுழைந்து நுழைந்து வருவது போன்ற ஓர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகிறது.

இவைகளைப் போலவே,-சிவனையும் பார்வதியையும் பற்றிப் படரும் "சிதை" ஏற்கனவே நமக்குக் கற்பித்துச் சொல்லப்பட்டுள்ள கயிலையங்கிரியைத் தத்ரூபமாக எழுத்துக்களிலே நிர்மாணித்துக் காட்டுகிறது. இதயத் தூய்மையே மெய்ம்மையான விடுதலை என்னும் கருத்தைத் துலக்கும் வீடு என்னும் கதை, புத்தபிரானின் புனிதத் தோற்றத்தையும் பவுத்த ஏடுகளில் படர்ந்து கிடக்கும் சிந்தனை விரிவுகளையும் பின்புலமாக்கி நடை போடுகிறது.

ஓர் இலக்கியம் எந்த அளவுக்குக் காலம், களம் என்னும் இரண்டோடும் இரண்டறக் கலந்து நிற்கிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமைகிறது. அந்த இரண்டினோடும், தனது கதை நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் பொருத்தி இணைத்து விடுகிற ஆசிரியனுக்கே அந்த வெற்றி கிடைக்கிறது. இதிலுள்ள கதைகள் அனைத்திலுமே இந்த வெற்றியைப் பெறுகிறார் பொன்னுத்துரை. இந்த வெற்றியைப் பெறுதற்கு அவர் கையாளும் வகை வகையான உத்திகளால், - இந்தப் புத்தகத்தின் எந்த ஓர் இடத்திலும் படிப்போ தளர்வோ இரட்டிப்போ தோன்றவில்லை.

கதைகளின் அளவிலேகூட இந்த வகைமைப் பாடு உள்ளது. ஒரு குடும்பத்தின் பன்முகத் தன்மையை விளக்கி, அதன் ஒரே ஒரு பாத்திரத்தை இலட்சியப் பாத்திரமாகச் சுட்டிக் காட்டும் தேர் 32 பக்க அளவில் விரிகிறது; முகம்மது நபியின் ஒரு பெரிய பண்பை விளக்கும் சுவை என்னும் கதை இரண்டே இரண்டு பக்கங்களில் முடிந்து விடுகிறது. இந்தப் பெரிய அளவு வேறுபாடு இருப்பினும் தேரிலே மிகை எதுவும் தோன்றவில்லை; சுவையிலே குறை எதுவும் தோன்றவில்லை.


நம்பிக்கை மலர்கள்

இலக்கியம் என்பது வாழ்க்கையிலே நம்பிக்கையைத் தரவேண்டும்; அதை ஒரு நளினமான முறையிலே தரவேண்டும். 'வீ' யின் கதைகளிலே இந்த இலக்கிய நலம் இனிமையாக ஊடாடுகிறது.

வேலி என்னும் கதையில் மூன்று பேர் முக்கியப் பாத்திரங்கள்; சித்திரவேலு என்னும் விவசாயி, அவனுடைய இளம் மனைவி கனகி, அவளுடைய பழைய காதலன் என்னும் இவர்களைக் கொண்டே கதை நடக்கிறது. கனகியை மணந்து கொண்ட போது, அவளுக்கும் அவளுடைய ஆசிரியராக இருந்த ஒருவனுக்கும் (காதல்) கடிதப் போக்குவரத்து இருந்தது என்பது சித்திரவேலுவுக்குத் தெரியாது. வயலில் இரவு தங்குவதாக இருந்த அவன் எதிர்பாராமல் வீட்டுக்கு வருகிறான். அங்கே, காவலுக்கு இருந்த சொக்கனின் ஒத்துழைப்புடன் அவளுடைய பழைய காதலன் அவளிடம் தவறாக நடக்க முற்படுகிறான்:

"கதவு இலேசாகத் திறந்து கிடக்கிறது. கனகியின் குரல் கேட்கிறது. சித்திரவேலுவின் உள்ளம் வெள்ளத்திற் கழுவப்படும் பயிராக அலைகின்றது."

"அவர்தான் என்ற புருஷன். ஒரு நாளும் துரோகம் செய்ய மாட்டன்"

"இப்ப பத்தினி வேஷம் போடுறியா? முதுநிலை படிக்கும் பொழுது நீ என்னுடன் வைத்திருந்த தொடர்புகள் எல்லாவற்றையும் சொல்லி உன்னை அவமானப்படுத்துவன். இணங்கு!"

"அந்தக் காலத்தில் நீ என்னைக் கட்டுவாயென்று நினைச்சு நடந்தன். நீ மாஸ்டர். என்னை விட்டிட்டு, பெரிய சீதனத்தோடை ஒரு ரீச்சரை முடிச்சாய். ரெண்டு கையையும் எடுத்துக் கும்பிட்டன்... கலியாணங் கட்டித் திருகோணமலைக்குத் துலைஞ்சு போன நீ இஞ்ச இண்டைக்கு எப்பிடி வந்தாய்?..."

"கனகி...நான் மல்லிகைத் தீவுப் பாடசாலைக்கு மாறி வந்ததிலிருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்..."

"பாவி!"

"ஏன் சத்தம் போடுகிறாய்? உன்ர புருஷன் இன்றிரவு வர மாட்டான். சொக்கன் சொன்னான். நானும் வந்த காரியத்தை முடிக்காமல் போகவும் மாட்டன்."

"அவனுக்குப் போட்ட சோத்தை ஒரு நாய்க்குப் போட்டு வளத்திருந்தாலும் உன்னை இப்பக் கடிச்சுத் துரத்தியிருக்கும். சித்திரவேலாயுதச் சாமி யறியச் சொல்லுறன். கையைத் தொடாதை விடு."

"இணங்காவிட்டால், நீ எனக்கு எழுதியிருக்கிற கடிதத்தை எல்லாம் உன்ர புருஷனுக்குக் காட்டி, உன்னை விலக்கி வைக்கச் செய்வேன்..."

"செய். உன்னோட கூடிட்டுச் சின்னத்தனம் பட மாட்டன்."

ஈப்பூச்சி பயிரில் விழுந்து பாலைக் குடிச்சால் அது பதராகும். சூடடித்து தூற்றும் பொழுதுதான் அது அகற்றப்படும். ஆனால் கனகி?

"சிந்தனையில் நின்ற சித்திரவேலு சுய உணர்வு பெறுகின்றான். தொண்டையைக் கனைத்து, "கனகி" என்று குரல் கொடுக்கிறான்."

இங்கே நாம் சந்திக்கும் கனகி இன்றையச் சமுதாயத்தின் ஒரு சாதாரணப் பெண்; அவளிடம் வெறும் தசை ஆசை மட்டுமே கொண்ட ஆசிரியனும், நாம் பரவலாகக் காணும் பாத்திரமே. ஏற்கனவே இவர்களுக்குள் தொடர்பு இருந்தது என்பதைத் திடீரென்று அறியவரும் சித்திரவேலுதான் சற்றே லட்சிய வண்ணம் ஏறிய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான். சித்திரவேலு அவளுடைய பழைய தவறுகளை மறந்து அவளை ஏற்றுக்கொள்ளக் கூடியவறே என்பதை உறுதிப்படுத்தவே, கதை நெடுக, அவனடைய பாத்திரம் மிகுந்த மனிதாபிமானப் பொறுப்புணர்ச்சி உள்ள பாத்திரமாக வளர்த்து வரப்படுகிறது.

வயலில் காவலிருந்த சித்திரவேலு, மாற்று ஆள் வந்துவிட்டதால், இரவில் கனகியை நினைத்தவனாக வீட்டுக்குப் புறப்படுகிறான். வழியிலே...

"அரச மரத்தடித் துண்டால் இறங்குகிறான். வாய்க்காலில் இன்னும் நீர் வடியவில்லை. அந்த நீரில் நடப்பதில் சிறு பிள்ளைத்தனமான குதூகலம் இருக்கிறது. நடக்கிறவன், ஏதோ கால்களிலே தட்டுப்பட நிற்கிறான். குளத்து மீன் பிடிக்க யாரோ வைத்த பறி. எடுத்துப் பார்க்கிறான். ஒரு பானையான் மீன்துள்ளிக் கொண்டிருக்கிறது. 'எந்த ஏழையின்ற பிழைப்போ?' என்று பறியை மீண்டும் நீருக்குள் அமுக்கி விடுகிறான்."

"மீன் பறிகளில் கால் தடக்குப்படலாமென்ற நினைப்பில் வரம்பில் நடக்கிறான். 'சளக்'. வலக்கால் புதைகிறது. குனிந்து பாக்கிறான். வக்கடையை மறித்து, நீர் வராமல் எழுப்பப்பட்டிருக்கும் ஈரவரம்பை மிதித்து விட்டான். வாய்க்கால் நீர் உணர விடப்பட்டிருந்த வயலுக்குள் கசிந்து கொண்டிருக்கிறது. 'பாழாப் போன நிதானம்' என்று முணுமுணுத்துக் கொண்டே, கையினால் சேற்றை அள்ளி வரம்பைச் சரிசெய்கிறான். சேறுபட்ட கையை வாய்க்கால் நீரில் அலம்பிக் கெண்டு மறுபடியும் வாய்க்காலில் இறங்கி நடக்கிறான்."

அன்றைக்குச் சந்திக்க முடியாது என்று நினைத்திருந்த மனைவியைச் சந்திக்கக் கிடைத்த எதிர்பாராத வாய்ப்பினால் ஆர்வம் துள்ள விரையும்போது கூட, சித்திரவேலு, தன் பொறுப்புணர்ச்சியில் சற்றும் குறைவுபடவில்லை. அரசமாதேவியின் ஊடல் தீர்க்கப்போன அவசரத்தில் பாண்டியன் தவறான ஆணை பிறப்பித்து விட்டான் என்று (சிலப்பதிகாரத்திலே) படித்திருக்கிற நமக்கு, - எழும்பிய மீன் பறியைக் கீழே அமுக்கி வைத்தும் சிதைத்த வரம்பைச் சீர்செய்து விட்டுமே மனைவியை நோக்கி விரையும் சித்திரவேலுவின் பண்பாடு புதியதோர் மகிழ்ச்சியைத் தருகிறது. "ஒரு மனிதன் இவ்வளவு பொறுப் புணர்ச்சியோடாவது இருக்க வேண்டாமா?" என்று நயந்து ஏற்கிறோம். இங்கே அவனை இப்படிப் பார்த்திருப்பதாலேதான், பிறன் ஒருவனோடு பழந்தொடர்புடைய கனகியை அவன் ஏற்றுக் கொள்ளும் போது, நாம், வியப்போ அதிர்ச்சியோ அடையவில்லை.

ஒழுக்கம் தவறிப்போன அகல்யையை மன்னித்த கவுதம் முனிவனைப் புதுமைப் பித்தனின் 'அகல்யை'யிலே சந்திக்கிறோம்; அந்தக் கடைசி முடிவுக்கு ஏற்ற விதமாகவே, கவுதமன் பாத்திரம், அங்கே தொடக்கம் முதல் ஓர் உயர்ந்த தளத்தில் வளர்த்து வரப்படுகிறது. ஆனாலும், அதிலே இல்லாத ஓர் எதார்த்தத்தை - நடப்பியலுக்கு ஒத்தபோக்கை இந்தக் கதையிலே இழைய விடுகிறார் பொன்னுத்துரை. அது கனகியின் பாத்திரப்படைப்பிலே மிளிர்கிறது.

ஒருமுறை (ஆசிரியக் காதலனிடம்) ஏமாந்த கனகி இப்போது அவனிடம் ஏமாறத் தயாராக இல்லை; அவனுடைய அச்சுறுத்தல்களிலே ஆட்டம் கண்டு இழிவிலே சாய்ந்து விடவும் இல்லை. அவளுடைய இந்த உறுதிப்பாடே கணவனின் மன்னிப்பையும் அன்பையும் பெறத் தக்க தகுதிப் பாட்டை அவளுக்கு வழங்குகிறது. அதுமட்டுமல்ல; ஒருமுறை ஏதோ சூழ்நிலையால் தவறிவிட்ட பெண், அதன் காரணமாகவே, தொடர்ந்த தவறுகளுக்கு ஆளாக வேண்டியதில்லை என்னும் நம்பிக்கையையும் இந்தக் கதை வழங்குகிறது. தவறு செய்தவர்கள், நிதானத்துக்கு வந்து, திருந்திவாழ முடிவுசெய்து விட்டால் அவர்களுக்கு வாழ்வு உண்டு என்னும் பெரிய நம்பிக்கையே இந்தக் கதையில் தனிச் சிறப்பு.


நயமிக்க நடப்பியல்

இதே போல், - வாழ்க்கையின் வேறொரு தளத்தில் மணவிலக்கு என்னும் எல்லைக்குப் போய்விட்ட குடும்பப் பிளவு எப்படி இணங்கிப் பொருந்திப் போகிறது என்பதை "விலை" என்னும் கதை விளக்குகிறது.

'வேலி'யில் ஓரளவு வாய்ப்புள்ள நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சந்திக்க நாம், 'விலை'யில் அன்றாடக் கூலி வேலை செய்து பிழைக்கும் கடைத்தட்டுக் குடும்பம் ஒன்றைச் சந்திக்கிறோம். தனபாக்கியத்தை மணந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகியிருந்த கணபதி, தன் மனைவியின் கண்ணெதிரிலேயே ஒழுக்கக் கேடியான, ஒரு சிங்களப் பெண்ணுடன் தொடர்பு கொள்ளுகிறான். அதைக் கண்டித்த மனைவியைத் தாய்வீட்டுக்கு விரட்டி விடுகிறான்.

பிரிந்து போன இரண்டு பேரின் வாழ்விலும் ஏற்படும் அனுபவங்கள் அவர்களை மறுசிந்தனைக்குத் தூண்டுகின்றன. இந்தச் சமயத்தில், இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த பெரியவர், கணபதியின் மீது தனபாக்கியம் தாவரிப்பு (ஜ“வனாம்ச) வழக்குத் தொடுக்குமாறு செய்கிறார். தாவரிப்பு வழக்குகளுக்கே உரிய அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கப் பார்க்க, "அவன் ஒழிந்து போகட்டும்" என்று பிடிவாதமாக இருந்த பாக்கியத்தின் நெஞ்சம் நெகிழ்கிறது; கூலிவேலை செய்யும் இடங்களில் பெண்களின் ஒழுக்கத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்கிற எதார்த்த நிலையும் அவளை இளக்கி இணக்கத்துக்குத் திருப்புகிறது. தன் மகளின் எதிர் காலத்தைப் பற்றிய நினைவும் அவளைப் புதிய தடத்தில் சிந்திக்கச் செய்கிறது: "நான் இனி எப்படிப் போனாலும், இந்தப் பொடிச்சியத் தாவரிக்கிற ஆர்? ஒரு பொழுதுக்கு ஒரு தியாலத்துக்குத் தேவை யெண்டா ஓம்ப புருஷனும் பிடிக்கலாம், ஆனா, சாகு மட்டும் பொடிச்சியயும் வெச்சுத் தாவரிக்கிறதுக்கு... மனிஷன்ர சீவியம் சொல்லிக் கிடக்கா?" அதே சமயம், தன் கள்ளக் காதலியால் பட்ட வேதனையும் அவமானத்தையும் நினைந்து குன்றிப்போன கணபதி, கழிந்ததற்கு இரங்கிக் கண்­ர் மல்க நிற்கின்றான். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பெரியவர், அவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்து வைக்கிறார்.

முதலாளித்துவச் சமுதாய அமைப்பில் கடைத் தட்டு மக்களின் வாழ்விலே வீசும் அன்றாடப் புயலை அடிப்படையாகக் கொண்டு தனபாக்கியம்-கணபதி கதை இயங்குகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் குடும்ப வாழ்க்கை என்பது வேதனை நிறைந்த ஒரு படகோட்டமே. என்றாலும், அதிலிருந்து கீழே தாவி விட்டால், பெண்களின் வாழ்வு,-ஒன்றில், ஒழுக்கமில்லாத அழுக்காகிப் போகிறது; அல்லது பசிக்கும் பிணிக்குமே நிலைக்களனாகிப் போகிறது! இந்தச் சமுதாய அமைப்பு மாற்றப்படாத வரையில், தனபாக்கியங்கள், ஆடவர் உலகின் கெடுநடைகளுக்கு ஓரளவில் ஈடுகொடுத்துத்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த இரண்டு கதைகளிலுமே ஓர் இயல்பான தன்மை நிரம்பி வழிகிறது; பாத்திரங்களின் பொருளாதாரப் பின்னணியும் சமுதாய நிலையும் அவர்களை இயக்குவதும் தெளிவாகத் தெரிகிறது. முன் நிகழ்ச்சிகளை நோக்க, இரண்டு கதைகளின் முடிவும் எதிர் பாராததாகவே உள்ளது. ஆனால், அங்கே சித்திர வேலுவும் இங்கே தனபாக்கியமும் மேற்கொள்ளும் முடிவு பொறுப்புணர்ந்த விநய நடையினரான அவர்களின் இயல்புக்கு ஒத்ததாகவே உள்ளது. அதனாலேயே, இந்தக் கதைகள் உடன்காலச் சமுதாயத்தின் சில கூறுகளை அப்பட்டமாகச் சொல்லோவியம் செய்கின்றன என்னும் மனநிறைவு நமக்கு ஏற்படுகிறது.


இருவேறு நிமிர்வுகள்

இவைகளினின்று சிறிது மாறுபட்ட நிலையில் நடைபெறுகிறது "மறு" என்னும் கதை. வேலியில் புண்படுத்தப்பட்ட கனகி, கொடியவனின் அச்சுறுத்தலுக்குப் பணியாமல் கனகி, கொடியவனின் அச்சுறுத்தலுக்குப் பணியாமல் நிமிர்ந்து நிற்கிறாள்; விலையில் புண்படுத்தப்பட்ட தனபாக்கியம், தன் மகளின் எதிர் காலத்தையும் தறிகெட்ட கணவனின் திருந்துமுகத்தையும் கருதிப், பழையவற்றை மறந்து இணங்கிப் போகிறாள். மறுவிலோ, பழித்துப் புண்படுத்தப்பட்ட புனிதம், அடிபட்ட புலியாக எழுந்து சீறுகிறாள்.

மனைவியை யாழ்ப்பாணத்தில் தனியே விட்டுத் தென்னிலங்கைக்கு, வேலைக்குப் போனான் சிவக்கொழுந்து. போன இடத்தில் தனக்கு ஒரு வைப்பாட்டியைத் தேடிக் கொண்டான். புனிதம் இருக்கிறாளா செத்தாளா என்று கூட அவன் இரண்டு வருடங்களாகக் கவலைப் பட்டதில்லை. யாரோ எழுதிய கோள்க் கடிதத்தை நம்பி, தன் மனைவி நடத்தை கெட்டவள் என்ற முடிவுக்கு வந்த அவன், திடீரென்று ஒரு வார விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்கு வருகிறான். இவன் பால் வளர்ந்து நின்ற சந்தேகமும் அவள்பால் வளர்ந்து நின்ற புறக்கணிப்புப் பொருமலும் மோதிக் கொள்ளுகின்றன. வார்த்தை தடித்து, சிவக்கொழுந்து மலடன் என்கிற உண்மை அவன் முகத்துக்கு எதிரேயே எழுந்து நிற்கிறது. பொறுப்பின்மை, கையாலாகாத்தனம் என்பவைகளின் மொத்த வடிவமான சிவக்கொழுந்து தனக்கு வைப்பாட்டி தேடிக்கொண்ட குற்றத்தை மறந்து அவன் மீது பாயவே, புனிதம் கொதித்து எழுகிறாள். அந்தக் கொதிப்பிலே, பெண்களுக்கு உரிமை மறுப்பு என்னும் விலங்கை மாட்டியுள்ள சமுதாய அமைப்பே கிடுகிடுத்து நடுங்குகிறது.

இலங்கை நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்ட "கணை" என்னும் கதை புறக்கணித்து அவமதிக்கப்படும் பெண்ணுடைய உணர்ச்சி வெளிப்பாட்டின் மற்றொரு முகத்தைச் சித்திரிக்கிறது.

தன் அண்ணனின் மனைவியான அனுலா தேவியைத் தன் மனைவியாக்கிக் கொண்ட வட்ட காமினி பழம்பகை தீர்க்கப் போரெடுத்து வந்த தமிழக வீரர்களிடம் தோற்று ஓடும் போது, தன் இரண்டாவது மனைவியான சோமாதேவியை நட்ட நடுக்காட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுகிறான். தமிழ் வீரர்களிடம் சிறைப்பட்ட சோமா, தன் கணவர் முதல் மனைவியை வைத்துக் கொண்டு தன்னை மட்டும் விட்டுச் சென்ற கொடுமையை நினைத்துக் குமுறுகிறாள். அந்தக் கோபக் குமுறலிலே, தனது கணவனின் எதிரியான தமிழ் வீரனின் படுக்கையறைப் பாவையாக மாறிவிடுகிறாள்:

"கற்பு? அது மலருக்குங் கிடையாது; கணிகைக்குங் கிடையாது. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே உடலின் தசைத் திரள்களைப் படுக்கையாக்கிய அனுலாதேவிக்கு இருக்கின்றதா? ஏன் எனக்கு மட்டும் தேவை?"

"அம்மா" - பணிப்பெண்களுடன் வந்து, திரும்பிச் செல்லாத வண்ணமகள் வசந்தமாலையின் அழைப்பு. குறுகிய காலத்தொடர்ப்பு; ஆழமான ஈடுபாடு. விழியெறிந்து பார்க்கின்றாள்.

இந்த வண்ணமகளின் வண்ண முகத்தில் கார் மேகத்தை அள்ளி அப்பியது யார்?

"ஏண்டி, எனக்கிந்த கலக்கம்? எனக்கில்லாக் கவலை?"

"நீங்கள் சுந்தரச் சிங்களத்தியாகவும் நான் தமிழச்சியாகவுமிருக்கலாம். ஆனால் இருவரும் பெண்கள். கற்பே பெண்ணின் பெருமை. அதனை நீங்கள் இழந்தாலும் நான் இழந்தாலும், ஒரு பெண் தன்னுடைய கற்பை இழந்தாள் என்னுங் கறையே எஞ்சும்...கற்பை பாதுகாக்கும் போராட்டத்திலே உயிரைப் பலியிடுபவருக்கு சுவர்க்க பதவி கிட்டுகின்றது என்று என் குலத்தவர்கள் நம்புகிறார்கள்." - அந்தச் செறிவைத் தேக்கித் தன் மோதிரத்தைக் காட்டுகிறாள். அந்த மோதிர முகப்பின் கள்ள அறையில் நஞ்சு இருப்பதை ஊகிக்க முடிகின்றது.

"நஞ்சு தரும் சாவு வீரத்தின் பரிசா?"

சோமாதேவி தொண்டைக்குள் சலங்கை கிலுக்கிச் சிரிக்கிறாள்.

"கவலையை மறப்பதற்கு வழி இன்ப மது மாந்துவது தான். பைத்தியக்காரி. புண்ணைச் சொறிந்து கூட இன்பம் அனுபவிக்கலாம். வண்ணமகளே உன் கலைவண்ணம் காட்டு, என் வாலை வனப்பும் வசீகரமும் எவரையுங் கிறங்கச் செய்யும் விதத்தில் ஒப்பனை செய். ஏன் தயக்கம்? இந்நாட்டில் எப்படியடி, முதலிரவுக்குப் பெண்களைத் தயார் செய்வார்கள்?"

பெண்களையே மையமாகக் கொண்ட இந்த நாலு கதைகளிலும், வழக்கமான, மொத்தமான லட்சியப் பெண்மை பேசப்படவில்லை. அவளவளுக்கும் வாய்த்த சூழ்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் எப்படி எப்படி நடந்து கொள்கிறாள் என்பதே விளக்கப்படுகிறது. ஆனாலும், எந்த ஒரு கதையிலும், பெண் குனிந்து விட்டதாகவோ நலிந்துவிட்டதாகவோ ஆசிரியர் காட்டவில்லை. பெண், விட்டுக் கொடுத்தாலும், மற்றவர்களின் நலனுக்காகவே விட்டுக் கொடுப்பாள்; பற்றுக்கோடு கிடைக்கும்போது தனது அழிவையும் பொருட்படுத்தாமல் உயர்வைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வாள்;- தன் தூய்மைக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டால் நெருப்பாக எழுந்து சீறுவாள்;- தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் தூக்கி எறிபவர்களின் சட்டதிட்டங்களுக்குத் தன்னை பலியிட்டுக் கொள்ள மாட்டாள். இவைகளே பெண்களைப் பற்றி ஆசிரியர் தந்துள்ள சித்திரங்கள்.


தேரின் அழகு

இந்தச் சிறுகதைத் தொகுதிக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கும் தனிப் பெருமை தருவதாக இதிலுள்ள 'தேர்' என்னும் கதை அமைந்துள்ளது. ஆண்களும் பெண்களுமாகப் பல குழந்தைகளைப் பெற்று, அவர்களில் பலரின் மக்களை அள்ளிக் கொஞ்சும் வயதினரான (ஆறுமுகம் என்னும்) ஒருவரின் மனவோட்டமாக இந்தக் கதை நடைபெறுகிறது. ஆசிரியரும் இடையிடையே தோன்றிக் கதையை நடத்துகிறார்.

சமுதாயத்திலே சாதி, மதம் என்னும் அமைப்புகளுக்கு எதிரானகுரல் கேட்கத்தொடங்கிய ஒரு காலக் கட்டத்தில் இந்தக் கதை (யாழ்ப்பாணத்தில்) நடைபெறுகிறது. ஆறுமுகத்தாரின் மக்களிலே பலபேர் வழக்கமான யாழ்ப்பாண இந்துக் கலாசார நடைமுறைகளை அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பவர்கள். அவருடைய மகன்களில் ஒருவனான குமாரசாமி அந்தப் பழம்போக்கை மீறி வேறு சாதியையும் வேறு மதத்தையும் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து கொள்ளுகிறான். இதனால் அவனுக்கும் குடும்பத்து மற்றவர்களுக்குமிடையே பெரியதொரு பிளவுச்சுவர் எழுந்து விடுகிறது.

இப்படி வளர்ந்து வரும் கதை, குடும்பத் தலைவரின் நினைவோட்டமாக விரிவதால். "இரண்டு சாராரையும் பற்றி அவர் என்ன நினைக்கிறார்?" என்பதே கதைரயின் இயக்கு சக்தியாக நிலைக்கிறது. இந்தக் கேள்விக்கு ஆசிரியர் கொடுக்கும் பதிலே இந்தக் கதையை ஓர் இலக்கியக் கதையின் தளத்துக்கு உயர்த்துகிறது.

"அவன்ரை (குமாரசாமியினுடைய) போக்கு ஒருதனிப் போக்கு இஞ்சை ஒருத்தருக்கும் விளங்கிறேல்லை. 'உங்கை யாழ்ப்பாணத்துக் கிடுகு வேலியளாலை சங்கையை மறைச்சுக் கொண்டு மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொண்டே வாழ்பவருக்கு என்ரை போக்கு எனக்கு விளங்கும்' என்று ஒரு நாள் உங்கினை சத்தம் போட்டான். இதுகளிலையும் புழையில்லை. ஒட்டி நடக்காதவனோடு என்ன சகவாசம் என்று விலகிக் கொண்டுதுகள். புறம்பு காட்டி நடக்கிற உவையளோடை எனக்கென்ன தொடர்சல் என்று அவனும் விலகிக் கொண்டான்...

மெய்தான். அவனுடைய போக்கு யாருக்கும் விளங்கலை. அதோட அந்தப் போக்கிலை ஒருத்தருக்கும் விருப்பமுமில்லை. ஒரு மாதிரியான கோபத்தனல் இவையளின்னரை மனங்களிலை இருக்குது. என்ன இருந்தாலும் சகோதர பாசம் எண்ட சாம்பல் அதுகளை மூடிவைச்சிருக்குது. வீட்டிலை எல்லோரும் அவனைக் குறையாகத்தான் பேசுவினம். நான் மட்டுந்தான் அவன்ரை பக்கத்திலை பேசுறது. என்ன இருந்தாலும் அவனும் என்ற மேன்தானே?"

இப்படி, கயிற்றின் மேல் நடப்பது போன்ற நிதானத்தோடு நிலைமையை விளக்கிவரும் ஆறுமுகத்தார், புதுக்காலப் புது புதுப்போக்கின் பிரதிநிதியான குமாரசாமியையே விரும்புகிறார் என்பது நினைவோட்டத்திலேயே உறுதிப்பட்டு விடுகிறது.

இவையள் ஆயிரத்தைச் சொல்லட்டும்; சவுந்தரம் பரிமளமாக இருக்கட்டும்; சுப்பிரமணியமா இருக்கட்டும்; மனோகரன் பத்மாவாக இருக்கட்டும். முகத்தார் ஆறுமுகத்தின்ரை புள்ளையளெண்டுதான் ஊர் தேசத்திலை தெரியும். ஏன், சதாசிவம் தங்கராசா எண்டோப் போலை என்ன? என்ரை மருமக்கள் எண்டாத்தான் நல்லா விளப்பமாத் தெரியும். ஆனா கடைத்தெருவிலை எத்தினை பேருக்கு என்னைக் குமாரசாமியின்ரை அப்பனெண்டுதான் தெரியுமெண்டு இவையளுக்குத் தெரியுமே? அண்டைக்கு பஸ்ஸ’லேநான் தெல்லிப்பளைக்குப் போகேக்கிள்ளை ஒரு பொடியன் "நீங்கள் குமாரசாமியின்ரை தகப்பனில்லோ?" எண்டு கேட்டுப் போட்டு தான் குந்தியிருந்த இடத்தை எனக்குத் தாறான். அந்தப் பொடியனும் பெரிய படிப்புத் தானாக்கும்!

ஒரு தந்தை என்ற முறையில், ஓரவஞ்சனை இல்லாமல் எல்லாப் பிள்ளைகளிடமும் அன்பு காட்டுகிறார் ஆறுமுகம்; அவருடைய இளைய மகன் குமாரசாமியின் போக்கு. குடும்பத்திலும் ஊரிலும் வெறுக்கப்படுகிறது. ஆனாலும், வாழ்வின் நேரிய அனுபவங்களால் வாழ்வின் உள்ளோட்டத்தை அறிந்தவர் என்கிற முறையில், குமாசாமியின் புதுப்போக்கையே அவர் விரும்புகிறார் என்பது. கதைக்கு ஒரு பெரிய திருப்பத்தையும் சமுதாயதுக்கு ஒரு சரியான செய்தியையும் வழங்குகிறது. எனவேதான் இந்தக் கதையானது காலமும் களமும் அளாவிய கருத்தையும், அதனைத் திறம்படச் சித்திரித்த நுட்பத்தையும், இவைகளால் தொனித்துத் தெரியும் ஒர் வாழ்க்கை நோக்கையும் கொண்ட சிறந்த படைப்பாக மிளிர்கிறது.


சீரிய இலக்கியம்

ஒரு யானையை எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும், அதன் எந்த ஓர் உறுப்பைப் பார்த்தாலும், அது யானை என்கிற அடையாளம் அப்பட்டமாகத் தெரிவது போல,- எந்த நோக்கிலே பார்த்தாலும் இனிமை கொழிப்பதே சீரிய இலக்கியம். "தேர்" என்னும் இந்தச் சிறுகதை அத்தகையதோர் இலக்கியமாக விளங்குவதோடு, ஒரு லட்சியச் சிறுகதைக்கு இலக்கணமாகவும் அமைகிறது.

இந்த ஒரு கதையை மட்டும் பலமுறை படித்தே, நாம் யாழ்ப்பாணத் தமிழ் வாழ்வின் எல்லா அம்சங்களையும் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது; கதையின் மூலப் பாத்திரங்களான முகத்தாரும் குமாரசாமியும் மட்டுமல்லாமல்,-குமாரசாமியின் வருகையைப்பற்றி முகத்தாரிடம் தெரிவிக்கும் தேநீர்க் கடைக்காரனும் அவரோடு சேர்ந்து மது அருந்தும் அய்யமபிள்ளையும் கூட யாழ்ப்பாணக் கலா சாரத்தையும் கதையின் கருவையும் விளக்குவதில் முழுமையாகப் பயன்படுகிறார்கள்.

மிகப் பலவான பாத்திரங்களைக் கொண்டு நடைபெறும் இந்தச் சிறுகதை, அந்தப் பாத்திரங்களில் பலபேரை இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலைப் பாத்திரங்களாக்கி,- அவர்களை ஆறுமுகத்தாரோடு அல்லது அவருடைய நினைவோட்டத்தோடு தொடர்பு படுத்தி, - அவர்களின் முதன்மையையே ஒடுக்கிவிடுகிறது; கதை முழுவதும் ஆறுமுகத்தார் இல்லாமல் அந்தப் பாத்திரங்களில் ஒன்றுக்குக் கூட தனிநிலை இல்லவே இல்லை என்பதை நாம் உணர வேண்டும். இதனாலேதான், கதை, எந்த இடத்திலும் மூலப் பாத்திரத்திலிருந்து விலகாமலும், அது எடுத்து விளக்கும் கருத்திலிருந்து விறழாமலும் இயங்ககிறது.

ஒரு சிறுகதைக்கு உரிய தளத்திலெ நின்று, ஒரு சமுதாயத்தின் பல நிலைகளையும் விளக்கி வைப்பது என்பது எளிதான காரியமல்ல; அப்படிச் செய்ய முயலும் போது, சிறுகதையின் கரையே அழிந்துவிடுவதற்கு மிகப்பல வாய்ப்புகள் உண்டு. ஆயினும், அடிமரத்தை மிஞ்சாத விழுதுகளும், அதன் பலத்திலேயே படர்ந்துவிரியும் கிளைகளுமாகத்துணை நிகழ்ச்சிகளையும் துணைப் பாத்திரங்களையும் படைத்துவிடுகிறார் பொன்னுத்துரை. அதன் காரணமாக, எந்த இடத்திலும், முகத்தார் எடுத்து விளக்க அனுபவப்பிழிவான கருத்திலிருந்து விலகாமலே நடக்கிறது கதை.

ஒரு வீட்டை மய்யமாக்கி, ஒரு சமுதாயத்தின் அனைத்து அம்சங்களையும் அதிலே குவித்து பேசச் செய்த திறம், இந்தக் கதைக்குத் தனித்த தலைமையைக் கொடுப்பதோடு அதன் ஆசிரியருக்கு, மாபெரும் கலைஞன் என்ற புகழ்ப் பட்டயத்தையும் தேடித் தந்துவிடுகிறது.


ஒன்றிக் கலந்து....

ஒரே ஒரு கருத்து. ஒரே ஒரு உணர்ச்சி அல்லது ஒரே ஒரு நினைவுக் கூறுதான் சிறுகதைக்குரிய ஆட்சி எல்லை. இந்த ஒருமைத் தன்மையைச் சிதையாமல் காப்பதே ஆசிரியயனின் திறமை. பொன்னுத்துரையின் கதைகளைப் படிக்கும்போது, அவைகளின் ஒவ்வொரு வாக்கியமும், அந்த ஒரே கருத்து அல்லது உணர்ச்சியின் மயமாக நிற்பது போன்ற பிரமை நமக்கு உண்டாகிவிடுகிறது. அந்த அளவுக்குத் தம்முடைய கதையின் மயமாகி நின்று அதை நமக்குச் சொல்லுகிறார் பொன்னுத்துரை.

கணை என்னும் கதை புறக்கணிக்கப்பட்ட சோமா தேவியின் குமுறலையும் அதன் விளைவான முடிவையும் உணர்த்துகிறது; இந்தக் குமுறல் கதையின் ஒவ்வோரிடத்திலும் அவளுடைய மனவோட்டமாக வெளிப்பட்டு வந்து கதையின் முடிவுக்குச் சரியான அரணாக நிற்கிறது.

மன்னன், மூத்தாளையும் மகனையும் தேரில் வைத்துக்கொண்ட தன்னைக் காட்டு வழியில் இறக்கி விட்ட நிகழ்ச்சியே அவளுடைய மனத்தை ஆள்கிறது. அவள் நினைக்கிறாள்:

"இரண்டு திங்கள்களுக்கிடையில் நான், தேன் இற்ற மலரானேனா? என் வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா?... அந்தக் கிழவி மட்டும் இன்னும் இனிக்கிறாளா? இல்லையேல்?... போர்க்களம் விட்டுத் தப்பியோடும் தேரிலிருந்து ஏன், நான் மட்டும் இறக்கப்பட்டேன்?..."

அவள் மேல் மோகங் கொண்டு சிறைப்பிடித்து வந்த தமிழ்வீரன், தனக்கு அவள் மீது தணியாக் காதல் என்கிறான். அங்கேயும் தன் மனக் குமுறலையே பதிலாக்குகிறாள் சோமாதேவி;

"சிறைப்பட்ட ஒருத்தியிடம் காதல் செய்ய வந்துள்ள உங்கள் வீரத்திற்கம், தனக்கு வாழ்க்கைப் பட்டவளின் கற்பைக் காப்பாற்ற வக்கற்ற என் கணவரின் வீரத்திற்கும் என்ன வித்தியாசம்?" இது போன்ற குமுறலைக் கதை முழுதும் விதைப்பதன் மூலம், புண்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் இதயக் குமுறலே கதையின் அடிநாதம் என்பதை அழுத்தமாக நிலை நாட்டுகிறார் ஆசிரியர்.

"அணி" என்னும் கதை, முடிதிருத்தும் தொழிலாளி ஒருவன், வாடிக்கையாளரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அலுப்பில்லாமல் தொழில் புரியம் பான்மையை விளக்குகிறது. ஓரளவு அனுபவம் பெற்ற முடிதிருத்தும் தொழிலாளிகள், முடி வெட்டிக் கொள்ள வருகிறவர்கள் சுவைத்துக் கேட்கும் விதமாக ஏதாவது பேசிக்கொண்டே வேலை செய்வார்கள். அந்த நடைமுறை இந்தக் கதையில் அழகாகச் சொல்லப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சாதி வெறி தாண்டவமாடுவது, அங்கேயே முடிதிருத்தும் தொழிலாளியான விக்டர் அந்த வெறியை எதிர்த்து நின்றது என்பவைகளைச் சொல்லிவரும் அவன், குறுக்கே முடிவெட்டிக் கொள்ள வந்தவரின் தலைப்பொடுகுக்கு மருந்து சொல்லுகிறான்! அவரை வழியனுப்பி அடுத்த இளைஞனை வரவேற்பதற்குள்ளாகவே, அவன் சொல்லி வந்த விக்டரின் இரத்தக்கறை படிந்த அவலக்கதை அவனுக்கு மறந்து போகிறது: "சுதுமலையிலே படிப்பித்துக் கொண்டிருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டு போனவன் எந்தப் பகுதி?" என்று அவனிடம் கேள்வி போடுகிறான், வருகிறர்களின் வயதுக்கும் மனநிலைக்கும் ஏற்பக் கதை பேசுகிறவன் இந்தத் தொழிலாளி என்பது இங்கே முற்ற முழுதாக உறுதியாகி விடுகிறது.

இந்தத் தொகுதியின் முதல் கதையான தேர், குடும்பத் தலைவராகிய ஆறுமுகத்தின் மனவோட்டமாக நடைபெறுகிறது; தமது குடும்பமே ஒர் இனியதேர் போல நடக்கிறது என்பது மகிழ்ச்சி பொங்குகிறார் ஆறுமுகம். பெற்றுப் பெருகி வாழ்ந்த ஒருவரின் சிந்தனையும் நினைவுகளுமே இந்த கதையாதலால், இதிலே நாலு வரிக்கு ஒரு முறை குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பற்றிய பேச்சே (நினைவே) வருகிறது. மகன்கள், மகள்கள், மருமக்கள்மார், பேரன் பேத்திகள் என்று ஒவ்வொருவரையும் நினைவிற் கொண்டு வந்து, அவர்களை ஆறுமுகத் தலைவர் மதிப்பீடு செய்வதே கதையாக நீளுகிறது; அக்கம்பக்கம் உள்ளவர்களும் தொடர்புபட்டவர்களும் அங்கங்கே தலை நீட்டுகிறார்கள். எனவே, கதையின் எந்த இடத்தைப் படிக்கும் போதும் குடும்பத்தேரின் ஒரு தட்டிலே நின்று கொண்டு இருப்பது போன்ற உணர்வே நமக்கு உண்டாகிறது.

அதிசயிக்கத் தக்க இந்தக் கதை ஒருமைப்பாடே எஸ்.பொன்னுத்துரையின் தனிச் சிறந்த ஆற்றல். இந்த ஆற்றலே, கதையைப் படிக்கிறோம் என்ற நினைப்பையே வாசகர் நெஞ்சிலிருந்து அகற்றி விட்டு அங்கே கதை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுகிறது. இதனால் கதையின் பாத்திரங்கள் அப்பட்டமான தசையும் குருதியோட்டமும் உடைய மனிதர்களாக வாசகர்களின் நெஞ்சோடு உறவாடுகிறார்கள். உண்மையில், பொன்னுத்துரையின் ஒரு கதையைப் படித்த பிறகு, அதை மீண்டும் படித்து அதிலே வரும் பாத்திரங்களோடு மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற ஓர் ஆசையே உண்டாகிவிடுகிறது; ஏதோ கதையைப் படித்தோம்-மறப்போம் என்று நினைக்கவே முடியவில்லை!


சில குறைகள்

நெல்லுக்கு உமியும், நீருக்கு நுரையும், பூவுக்குப் புல்லிதழும் போல, இந்த இனிய கதைக் கோவையில் சில சிறிய குறைகளும் உள்ளன; கணை என்னும் கதை, தன்னையும் தன் எழிலையும் தன்னால் தரக்கூடிய இன்பத்தையும் அவமதித்த தன் கணவன் மீது ஏற்பட்ட சீற்றத்தால் மாற்றானின் பஞ்சணைப் பாவையாகிப்போன ஒரு பெண்ணைச் சித்திரிக்கிறது. ஆனாலும், இதிலே, தேவைக்கும் சற்று அதிகமாகவே காமவாடை வீசுகிறது; அந்தச் சொற்களுக்கு ஆசிரியர் ஆடை கட்டியிருக்கவேண்டும். விலை என்னும் கதையிலும் இந்த நெடி சற்று அதிகமாகத் தான் வீசுகிறது....


ஆனாலும் நிறைவு

ஆனாலும், இந்தச் சிறிய ஆபாசச் சிற்பங்களால் பொன்னுத்துரையின் கலாமண்டபமாகிய "வீ" பெருமளவு பாதிக்கப்படவில்லை. இவைகளையும் மீறி, அதன் அழகு நிமிர்ந்தே நிற்கிறது

..........

முற்றும்....