கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சித்திரா பௌர்ணமி  
 

செங்கை ஆழியான்

 

சித்திரா பௌர்ணமி

செங்கை ஆழியான்

-----------------------------------------------------

சித்திரா பௌர்ணமி

குறுநாவல்

'செங்கை ஆழியான்'

ஒரு 'சிரித்திரன் பிரசுரம்'

-----------------------------------------------------

முதலாம் பதிப்பு, மே, 1972
சித்திரா பௌர்ணமி
(C) செங்கை ஆழியான், (க. குணராசா, B. A. Hons, C. A. S.)
அச்சுப்பதிவு: சிறீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம்.
விலை: சதம்" -/80

ஓவியம்: 'கணேஷ்'

ஆசிரியரின் ஏனைய நூல்கள்
(1) ஆச்சி பயணம் போகிறாள் 2-00
(2) நந்திக்கடல் 2-00
(3) சுருட்டுக்கைத்தொழில் 1-00
(4) அலைகடல்தான் ஓயாதோ? 1-25
(5) ஒரு பட்டதாரியும் பல்கலைக்கழகமும் (அச்சில்)

'சிரித்திரன்' பிரசுரம்,
67, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.

-----------------------------------------------------------

1

தேயாமதியோன் கலை நிறைவோடு எழவே, கடலைகள் ஆர்க்கத் தொடங்கி, அமைதியான இரவின் மோன நிலையைக் குலைத்ததோடு, வெண் மணற்றரையிலே தவழ்ந்து, உருக்குலைந்து திரும்பின. நெடுவானம் சித்திரா பௌர்ணமி நிலவின் ஆதிக்கத்தைத் தவிர வேறெவ்வித ஆதிக்கமுமற்றுக் காணப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விண்மீன்கள் கண்சிமிட்டும் அந்நீளிரவில் தன்னந்தனியே, கடற்கரையின் வெண்மணலில் நான் அமர்ந்திருந்தேன்.

என் நினைவுகள் நீண்டன: வரலாற்றுக் காலத்திற்கு முன் இக் கடற்கரையும் இதையுடைய இந்தப் பரந்த நிலப்பரப்பும் நாக மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கும்! எம் முன்னோர்களாகிய அத்தமிழ் மன்னர்களின் ஆட்சியில், மக்களது பண்பாடு, பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்திருக்கும்....?

'கலீர்... கலீர்...' இருந்தாற்போற் சிலம்பொலி என்னைச் சூழ்ந்தெழுந்தது. இதயத்தில் என்னையறியாமல் ஒருவித பயம் உறைவது போன்ற பிரமை; சுற்றுமுற்றும் பார்த்தேன்; அச்சிலம்பொலிக்குரியவர்களைக் காண முடியவில்லை.

வானத்தை அண்ணாந்து பார்த்தேன்; திங்களைச் சுற்றிப் பரிவட்டம் காணப்பட்டது. நேரம் நடுநிசிக்கு மேலாகிவிட்டது என்பதை என்னால் உணர முடிந்தது; 'மதியைச் சுற்றிப் பரிவட்டம் தோன்றில் பேயுலாவும் வேளை என்பார்களே?' இனந்தெரியாத பயம் என்னுள் கிளைவிட்டது; நள்ளிரவு... தனிமை... பரிவட்டம்... இவை யாவும் என்னுள் எதையெதையோ வெல்லாம் எழுப்பிப் பயப்பிராந்தியை ஊட்டின.

'கலீர்... கலீர்... கலீர்...'

எனக்கு வெகு நெருக்கமாகச் சிலம்பொலி மீண்டும் எழுந்தது; மின்னலென எழுந்த நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்; என்னால் ஒன்றையும் காண முடியவில்லை. சிலம்பொலி நின்று விட்டது. 'கலகல'வெனச் சிரிப்பொலி எனக்குக் கேட்டது. என்னுடல் 'வெடவெட'த்தது; என்னையறியாமல் என்வாய், "யார் சிரிப்பது..?" எனக் கேட்டது.

கடற்காற்றின் 'உர்' என்ற இரைச்சலிடையே காற்றில் மிதப்பது போன்று, நிலத்தில் கால பாவாமல் ஓர் இளமங்கை என் முன் நின்றாள்; ஒளிபோலவும், நிழல்போலவும் எனக்கு அவள் தெரிந்தாள். வெள்ளை வெளேரென்ற 'மல்மல்' ஆடை உடுத்து நின்ற அவளை நிலவின் ஒளிக்கதிர்கள் தழுவி நின்றன. அவளுக்குள்ளால் என்னால் கடலி, மணலை எல்லாம் பார்க்க முடிவது போலவும், முடியாதது போலவும் இருந்தது. 'மோகினிப் பேய் என்பார்களே - அது இவளோ...?'

'என்ன வாயடைத்துப்போய் நிற்கிறாய்...?' - மோகினிதான் பேசினாள். நான் பதில் பேசாதது கண்டு அவளே தொடர்ந்தாள்; 'என்னைக் கண்டு பயப்படுகிறாயா...?'

'ஒரு பெண்ணைக் கண்டு நான் பயப்படுவதா...? என்னுள் உணர்வு விழிக்கவே, அவளை நிமிர்ந்து நோக்கினேன். அலைகளின் நெளிவுபோல் அவள் கூந்தல் காற்றிலே தவழ்ந்தது; வானத்து நிலவு, மண்ணிலுள்ள ஒரு நிலவுக்கு ஒளி கொடுப்பதைக் கண்டேன்.

"யார் நீ...?" - நான் கேட்டேன்.

"நான் யார் என்று கூறினால் பயப்பட மாட்டாயே...?"

"நீ இப்படிக் கேட்டு இல்லாத பயத்தை என்னுள் எழுப்புகிறாய்...?"

"அப்படியா...? நான் ஓர் ஆவி...!" என்றாள், அவள். எனக்குள் இதயம் 'படபட'வென நடுங்கியது.

மாப்பசானுக்கு முன் ஓர் ஆவி தோன்றித் தன் கதையைக் கூறிற்றாம்; இப்படிப் பல எழுத்தாளர்களுக்கு இந்த ஆவிகள் கதைகள் கூறியிருக்கின்றன. அதுபோல எனக்கும் இது ஏதாவது தன் கதையை அவிழ்க்கப் போகின்றதோ...?

"ஆவியென்று தெரிகிறது...! நீ யார்...?"

அம்மோகினி பேசாது சற்று நின்றாள்; அவள் தயக்கம் எனக்கேதோ போலத் தோன்றவே, "நீ எனக்கு ஏதாவது கதை கூறப் போகிறாயா...?" என வினவினேன்.

"ஆமாம்! கூறத்தான் போகிறேன்...!" என்றாள்.

"எனக்குக் கூறுவதால் பயனொன்றுமில்லை! உன்னை எழுத்திலிட்டு அமர சிருஷ்டியாக்கக் கூடிய எழுத்தாளனல்ல நான்!"

"நீயொன்றும் எனக்கு அழியாத இடந்தேடித்தர வேண்டாம்! எனக்கு ஏற்கனவே ஒரு கலைஞர் அமரவிடம் பெற்றுத் தந்து விட்டார்...!"

"யார் அவர்...?"

"சாத்தனார் எனக் கேள்விப்பட்டிருக்கிறாயா..?"

"மணிமேகலை ஆசிரியர்தானே? அப்படியானால் நீ... இல்லையில்லை... நிங்கள்... மணிமேகலையா...?"

"அவசரப்படுகிறாயே...? நான் மணிமேகலையல்லள்! பீலிவளை...!" என்றவள், தண்மணலில் மென்மையாக அமர்ந்து கொண்டாள்; நானும் அமர்ந்தேன்.

"தாயே! உன்கதை எனக்குத் தெரியுமே...?"

"தெரியுந்தான்...! ஆனால், என் உண்மை வரலாற்றை அறிய விரும்புகிறாயா?..."

"உண்மை வரலாறா...? அப்படியானால் மணிமேகலையிலுள்ள பீலிவளையின் கதை பொய்யான வரலாறா...?"

"எதுவோ...? முதலில் நான் கூறும் என் கதையைக் கேள்...!"

நிலவின் ஒளியிடையே, கடலின் இரைச்சலிடையே அவ்வாவியுரு மங்கை தன் கதஒயைக் கூறிக்கொண்டே போகிறாள்; நான் மாப்பசனாக முடியாவிட்டாலும் - அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

------------------------------------------------

2

நீ இப்போது அமர்ந்திருக்கிறாயே, இக்கடற்கரை இது இப்போது இருப்பதுபோல முன்பு இருக்கவில்லை; இக்கடற்கரையையுடைய இந்நயினாதீவு முன்பு இப்பெயரால் அழைக்கப்படவுமில்லை; இத்தீவையும், இப்போது யாழ்ப்பாணத்தையடுத்துப் பல சிறுதீவுகள் காணப்படுகின்றனவல்லவா, அத்தீவுகளையும் இணைத்த பரந்த ஒரு தீவாக நாகதீவு விளங்கியது. ஆனால் அக்காலத்தில் நாகதீவு என்ற பெயரால் இன்றைய யாழ்ப்பாணப் பகுதிகளும், வன்னிப் பகுதிகளும் அழைக்கப்பட்டு வந்தன.

இந்நாகதீவை ஆண்டவர் என் தந்தை வளைவணன் ஆவார். என் தந்தைக்கு முன்பே பல நாகமன்னர்கள் இத்தீவைச் சிறப்புற ஆண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் நான் கூறிக்கொண்டே போனால், உனக்குக் கதையின் சுவை கெட்டுவிடும். நாங்கள் தமிழர்; திராவிடர். எனினும் எங்களை நாகர்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டோம். தக்ஷகன் எனும் நாகம் ஒரு மானுடப் பெண்ணை மணந்ததாற் பிறந்த வம்சமே நாகவம்சம் என்று என் 'தாத்தா' அடிக்கடி கூறுவார். சிவனையும், சக்தியையும் வழிபட்ட நாங்கள், இறைவனின் 'குண்டலினி' சக்தியாக நாகத்தை மதித்ததால் அதையும் வழிபட்டோம் - கதையின் போக்கில் இவை யெல்லாவற்றையும் நீ அறிந்தும் கொள்வாய்.

நாகதீவின் வடமேற் பாகத்தில் அழகிய ஒரு கடற்கரை இருந்தது; அந்தக் கடற்கரைக்கு மாலை வேளைகளிற் பல்லக்கேறி நானும், என் தோழி குண்டலினியும் வருவோம். கடற்கரையை அடுத்துக் காணப்பட்ட சோலையில் வெயில் படும்வரை பொழுதைப் போக்கி விட்டு, கடற்கரை வெண்மணலிற் கால்கள் ஓயும்வரை ஓடுவோம்.

வீரைமரமும், கொன்றைமரமும், புன்னைமரமும் நிறைந்திருந்த சோலையில், ஆம்பலும், குவளையும், முல்லையும், தாழையும் நிறைந்திருந்த சோலையில், பூம்பந்தலமைத்து நிற்கும் தொண்டைக் கொடிகள் நிறைந்திருந்த சோலையில் - காணாத அதிசயத்தைக் கடற்கரையில் அலைகளின் ஆர்ப்பரிப்பில் நான் கண்டேன்; திரையிலே தவழும் பறவைகள் அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப ஆடி அசைந்து செல்வதையும், சிச்சிலிப் பறவைகள் மீன்களைக் கொத்திக் கொண்டு அம்பென வானில் எழுவதையும் கண்டு கண்டும் என் கண்களின் ஆசை தீரவில்லை; அவற்றைப் பார்த்துக் கொண்டே நிற்பேன்.

என் தோழியும் இயற்கை ரசனி படைத்தவளாதலால், இக் காட்சிகளில் மனதைப் பறிகொடுத்து நிற்பாள்.

அன்று வழக்கம்போல வெண்மணலில் நானும், குண்டலினியும் அமர்ந்திருந்தோம்; விழுகதிரின் வனப்பை என் கண்கள் பருகின.

"தேவி!..." எனக் குண்டலினி அழைத்தாள்.

"என்ன, குண்டலா...?" நான் கேட்டேன்.

"நாளை இதே நேரத்தில் நாம் எங்கிருப்போம், தெரியுமா?..."

"காவரிப்பூம் பட்டினத்தில் இருப்போம்! குண்டலா, காவிரிப் பூம் பட்டினமென்னும் அப்புகார் நகரின் அமைப்பையும், அழகையும் நீ அறிவாயா...? புகார்த் துறையிலே பெரும் பெரும் மரக்கலங்களும், நாவாய்களும் நங்கூரமிட்டு நிற்கும்! வணிகர்கள் நிறைந்திருப்பார்கள்! யவனர் சீனர்கள் போன்றோர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். சுங்கச் சாவடியில் என்றும் கலகலப்பு ஆட்சி புரியும்! மாநாய்க்கர்களிடமிருந்து மாசாத்துவர்கள் சரக்குகளைக் கொள்முதல் செய்து கொண்டிருப்பார்கள்!... சக்கிரவாளக் கோட்டத்தில், சம்பாதி வனத்தில், கழிகானற் சோலையில் - எல்லாம் அழகு கொஞ்சும், குண்டலா! என் தாத்தாவின் மாளிகை பட்டினப்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. பெருநிதிச் செல்வர்களில் முதன்மையானவர் என் தாத்தா. என் தாத்தாவின் பெருமாளிகைக்குச் சற்றுத் தூரத்திற் கழிக்கானற் சோலை அமைந்திருக்கிறது..."

"கழிகானற் சோலையா...? ஓ! உங்கள் தாயார் அடிக்கடி கூறுவாரே அச்சோலையா...?"

"ஆமாம், குண்டலா! என் தாயார் தாத்தாவோடு இருந்தபோது அடிக்கடி அச்சோலைக்குச் செல்வாராம். அங்குதான் இந்திரவிழாவிற்கு வந்திருந்த என் தந்தையைச் சந்தித்து..."

நான் தயங்குவதைக் கண்ட தோழி, "காதலித்து மணந்து கொண்டார்களாம்...! இதைக் கூற ஏன் தயக்கம்!" என்று கூறி விட்டுக் 'கலகல'வெனச் சிரித்தாள்.

காதல், கலியாணம் என்றெல்லாம் கூற நான் வெட்கப்படுவேன்; காரணம் எனக்கே தெரியாது.

'மாலை மறைந்து இரவு படர்ந்துவிட்டது' என்று அறிவிக்கும் ஏத்தொலி முழக்கம் எங்கள் காதுகளில் விழுந்ததால், அரண்மனை செல்ல எழுந்திருந்தோம்; நாழிகை வட்டில்களில் நேரம் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு நாழிகை முடிவையும் அறிவிப்பதற்கென்று அரண்மனையில் நாழிகை வாணர் அமர்வு பெற்றிருந்தனர்.

அரண்மனை செல்ல எழுந்த நாம், தற்செயலாக மேற்குக் கரையோரம் பார்க்க நேர்ந்தது; அங்குதான் நாகதீவின் பிரதான துறையாகிய படகுத்துறை இருந்தது; பெரும் பெருந் தூண்களில் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன; கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நெருப்புக் கொளுத்தியிருந்தார்கள். அங்குமிங்குங் காவலர்கள் பந்தத்துடன் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். எமது துறைமுகம் பிற துறைமுகங்களில் இல்லாத தனிப்பெருமை வாய்ந்தது; கரையை அடுத்து ஆழமாவிருந்ததால் பெரும் மரக்கலங்கள் தங்கு தடையின்றி வந்து, பொருட்களை இறக்கின; ஏற்றின.

நாம் பார்த்தபோது, நாலைந்து பெரும் மரக்கலங்கள் நங்கூரமிட்டிருந்தன; கப்பலின் பாய்கள் சுருட்டிக் கட்டப்பட்டிருந்தன; பாய்மரத்துச்சிகளிற் பறந்து கொண்டிருந்த கொடிகள், அவை என் தாத்தாவின் வணிகக் கலங்கள் என்பதை அறிவித்துக் கொண்டு, கடற்காற்றில் 'படபடத்'துக் கொண்டிருந்தன.

"குண்டலினி!..." என ஆர்வம் பொங்க நான் அழைத்தேன். "தாத்தா சாவக நாட்டிலிருந்து திரும்பி வந்து விட்டார். ஓடி வா...!" என்ற நான் நெடுமணற் குன்றுகளில் மானெனத் தாவியோடினேன்; என்னைத் தொடர்ந்து தோழி ஓடி வந்தாள்.

------------------------------------------------------

3

நாகதீவின் படகுத்துறையிலிருந்து பார்த்தால், தீவின் முக்கிய கோயில்களில் ஒன்றாகிய நாகம்மாள் கோயிலின் விமானத்தைத் தெளிவாகக் காணலாம்; தீவைக் கடந்து செல்லும் வணிகர்கள் படகுதுறையில் இறங்கிச் சக்தி வடிவமான நாகம்மாளைத் தரிசித்துச் செல்வது வழக்கம். வணிகர்களின் கப்பல்களைக் காக்கும் கடல் தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் கோயிலாகவும் நாகம்மாள் கோயிலைச் சிலர் மதித்தனர்.

எனக்கு நன்கு தெரியும், மரக்கலத்தை விட்டிறங்கிய என் தாத்தா நேரே நாகம்மாள் கோயிலுக்குத்தான் வருவார் என்று. அதனால், பல்லக்கை நேரே கோயிலுக்கு விடும்படி கட்டளையிட்டேன்.

என் தாத்தாவைப் பற்றி உனக்கு நான் அதிகம் கூறவில்லை; என் தாத்தா காவிரிப்பூம் பட்டினத்தில் தலைசிறந்த வணிகர்களில் முதன்மையானவர். அவரை பூம்புகாரில் கம்பளச் செட்டி என்றழைப்பார்கள். சோழமாமன்னரால் எட்டிப்பட்டம் வழங்கப்பெற்றுக் கௌரவிக்கப்பட்டவர். என் தாயார் அவருடைய மகள் என்று நான் உனக்குக் கூறத் தேவையில்லை; நீயே புரிந்து கொண்டிருப்பாய்.

கோயிலை நாம் நெருங்கியபோது மாலைப்பூசை முடிந்து விட்டதால், கோயிலினின்றும் தாத்தா வெளியே வந்து கொண்டிருந்தார்; அவரைத் தொடர்ந்து மாலுமிகள் பலர் வந்தனர்; பல்லக்கை விட்டிறங்கிய நான், "தாத்தா!..." என்றழைத்தபடி அவரை நோக்கி ஓடினேன்; நான் ஒரு மங்கை என்பதையோ, ஒரு நாட்டின் இளவரசி என்பதையோ தாத்தாவைக் காணும் போது மறந்து விடுவேன்; அவ்வேளையில் அன்பு மேலோங்கி நிற்குமே தவிர வேறு எண்ணத்திற்கே இடமிராது.

"பீலி!..." என்றழைத்தபடி தாத்தா என்னை அணைத்துக் கொண்டார்.

வயது சென்ற போதிலும் தாத்தாவின் உடல் வயிரம் போன்றது; பத்துப்பேரைத் தனித்து எதிர்க்கக்கூடியவர்.

"சுகமாகவிருக்கிறாயா... பீலி?"

"என்னைப் பார்த்தாற் சுகமில்லாதவள் போலவா இருக்கிறது?"

"குறும்புக்காரி! அரண்மனையில் யாவரும் நலந்தானே...?"

"ஓ...! எல்லாரும் நலமே! என் தந்தை, 'உங்கள் மகள்', என் அண்ணன் எல்லாரும் நலமே!..."

தாத்தா 'கடகட'வெனச் சிரித்தார்; சிரித்தாலும், அமைதியாகத் தாத்தாவைப் போல ஒருவராலும் சிரிக்க முடியாது.

"அடி பெண்ணே! உன் தாயார் நலம் என்றால் எனக்குத் தெரியாதா? 'உங்கள் மகள்' நலம் என்கிறாயே? என் மகள் உண் தாயல்லவா?..."

"என் தாய் என்றாலும் உங்கள் மகள் தானே, தாத்தா?"

"உன்னோடு பேசி இந்தக் கிழவனால் ஜயிக்க முடியாது; வா... அரண்மனைக்குப் போய்ப் பேசுவோம்...!"

நான் பல்லக்கில் ஏறிக் கொண்டேன்; ஏறியவுடன் ஏதோ நினைவு வந்தவளாகத் திரையை விலக்கி, "தாத்தா!" என்றழைத்தேன்.

தாத்தா பல்லக்கருகே வந்தார்.

"என்ன, பீலி?"

"நாளைக்கு நாங்கள் புகாருக்குப் போகிறோம் என்பதை நீங்கள் மறக்கவில்லையே...?"

"நல்ல நேரத்தில் நினைவுபடுத்தினாய், அம்மா! இப்போதே என் மாளிகைக்கு நாங்கள் நாளை வருவதாகச் செய்தி அனுப்பி வைக்கிறேன்...!"

"செய்தி ஏன் அனுப்ப வேண்டும்...?"

"நாகநாட்டு இளவரசிக்குத் தக்க வரவேற்பு, இந்தக் கம்பளச் செட்டி அளிக்க வேண்டாமா?...

நான் திரைச்சீலையைப் பொய்க் கோபத்துடன் இழுத்து மூடினேன்; தாத்தா 'கடகட'வெனச் சிரிப்பது எனக்குக் கேட்டது.

-----------------------------------------------------------

4

காவரிப்பூம் பட்டினத்துறையில் மரக்கலத்தினின்றும் நாம் இறங்கியவுடன், எம்மை அழைத்துச் செல்லத் தாத்தாவின் மாளிகையிலிருந்து வந்த இரதம் காத்திருந்தது. பூம்புகாரின் எழிலை இரசித்தபடி நானும், குண்டலினியும், தாத்தாவும் தேரில் ஏறி மாளிகை சென்றோம்.

பட்டினப் பாக்கத்தில் தாத்தாவின் பெருமாளிகை யிருந்தது. பட்டினப் பாக்கத்தில் வானையளாவி எழுந்திருந்த பெரும் பெரும் மாளிகைகளைக் கண்ட குண்டலினி "தேவி! உலகத்தின் செல்வமெல்லாம் இங்குதான் உண்டோ?..." என வியந்தாள்.

'உலகத்தின் செல்வமெல்லாம் ஒன்றாகத் தாத்தாவின் பெருமாளிகையில் இருக்கிறது' என்று நான் கூறவில்லை; அவளே பின்பு உணர்ந்து கொண்டாள். தாத்தாவின் மாளிகை சிற்ப, ஓவியக் களஞ்சியம் மட்டுமல்ல, ஒரு செல்வக் களஞ்சியமுமாகும்.

மாளிகையில் எனக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு நானே அசந்து போனேன்.

"ஒரு தாத்தாவின் மாளிகைக்குப் பேத்தி வந்தால் இப்படியா வரவேற்புக் கொடுப்பது? - ஒருபோதும் வராதவள் வந்தது போல!..."

தாத்தா சிரித்தார்.

"பீலி! இது உன் மாளிகை! இங்கு உன் எண்ணப்படி யாவும் நடக்கும்!.. இந்த மாளிகை, இங்கு நிறைந்து கிடக்கும் செல்வம் எல்லாவற்றையும் உனக்குத்தான் தரப் போகிறேன்! இம்மாளிகையில் உனக்குத் தேவையான எதையும் யார் உத்தரவின்றியும் நீ எடுத்துக் கொள்ளலாம்! ஏனெனில், உத்தரவிட வேண்டியவள் நீ!..."

என்மீது தாத்தாவிற்குள்ள அன்பை நானறிவேன்; எனக்காக அவர் எதையும் செய்வார்.

"தாத்தா!" என்றழைத்த நான் அவரின் கைகளைப் பற்றினேன்; "எனக்குத் தேவையான எதையும் எடுக்கலாமல்லவா?"

தாத்தா தலையசைத்தார்.

"தாத்தா! எனக்குத் தேவையானது நீங்கள், தாத்தா! உங்கள் அன்பு தாத்தா! உங்கள் அன்பு முழுவதும் எனக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், தாத்தா!..."

தாத்தாவால் எதுவுமே பேச முடியவில்லை; அவர் கண்கள் கலங்கியதோடு, வார்த்தைகளுந் தடுமாறின; "பீலி! இந்தக் கிழவன்மேல் உனக்கு இவ்வளவு அன்பா...?" - வேறொன்றும் அவரால் பேச முடியவில்லை.

-------------------------------------------------

5

காவிரிப்பூம் பட்டினத்தில் காலடி வைத்தபோதே என் வாழ்வின் மறு ஏடு புரண்டதை நானறியவில்லை. கழிக்கானற் சோலையில் காலடி வைத்தபோது அது ஊர்ஜிதமாயிற்று; தாத்தாவின் மாளிகையிலிருந்து சற்றுத் தூரத்தில் கழிக்கானற் சோலை அமைந்திருந்தது. அரச குடும்பத்தவர்களும், பெருநிதிச் செல்வர்களும் மாலையில் உலாவும் சோலையாகக் கழிகானற் சோலை விளங்கிற்று.

அச்சோலைக்கு நானும், என் தோழியும் மாலைவேளைகளிற் செல்வோம்; அசோகம், சண்பகம், இலவம், நாவல், தெங்கு, மகிழம், செருந்தி போன்ற மரங்களும், மல்லிகை, முல்லை போன்ற மலர்ச்செடிகளும் நிறைந்த அப்பொழிலில் நான் மனதைப் பறிகொடுத்ததில் வியப்பில்லை. அக்கழிக்கானற் சோலையில் பொய்கைகள் - தாமரை, குவளை, அல்லி, காந்தள் முதலிய மலர்களோடு மென்காற்றில் சிற்றலை வீசிக்கொண்டிருப்பது கண்களுக்குக் குளிர்ச்சியாகவிருந்தன. மலர் மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளோடு அமைந்திருந்தன. கண்களுக்குக் குளிர்ச்சியாக மலர்களும், காதுகளுக்கு இனிமையாகக் குயில், நாகணவாய் போன்ற புட்களின் கானமும் என்னை வசமிழக்கச் செய்தன.

நான் புகாருக்கு வந்து ஒரு வாரம் கடுகி மறைந்தது; இவ்வொரு வாரத்தில் - மாலைவேளைகள் கழிக்கானற் சோலையிலேயே கழிந்தன.

அன்று தோழிக்கு உடல்நலமின்மையால் நான் மட்டுந் தனியனாக சோலைக்கு வந்தேன்; தோழி கூட வரவில்லை - விதி கூட வந்தது.

பார்த்த காட்சிகளைப் பார்த்து இரசித்தபடி சோலையைச் சுற்றி வந்த நான், மலர் மண்டபத் தூணொன்றில் சாய்ந்து, தன்னை மறந்து இயற்கையின் எழிற்கோலத் தழுவலில் வசப்பட்டு, அழகிய ஒரு வாலிபர் அமர்ந்திருப்பதைக் கண்டேன்; கலீர்... கலீர்... என ஒலித்த சிலம்புகள் செயலற்று நின்றன; வைத்த கண் வாங்காது அவரையே பார்த்தேன்.

பரந்த மார்பும், எடுப்பான தோள்களும், வாளிப்பாக உருண்டு திரண்ட கைகளும் அவரை ஒரு வீரனெனப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. சாய்கதிரின் தாக்கம் அவர் முகத்தில் பட்டுத் தெறித்தது. அந்த முகத்தை எங்கேயோ பர்த்தது போன்ற நினைப்பு.

தன்னை நான் பார்த்துக் க்ண்டு நிற்பதை அவர் கண்டு கொண்டார்; மெதுவாக மண்டபத்தை விட்டிறங்கியவர், என்னை நிமிர்ந்து நோக்கினார்.

"நீயா..?" என அவர் உதடுகள் முனகின; நிமிர்ந்து நோக்கினேன் - நெற்றியிலுள்ள அந்தத் தழும்பு எனக்கா அவர் யாரென்பதைக் காட்டி விட்டது. என்னையறியாமல் என்னுதடுகள் "நீங்களா...?" என்று உச்சரித்தபோதிலும், அவரை நாகதீவில் சந்தித்த நாளையும், சந்திக்க நேர்ந்த அச்சம்பவத்தையும் எண்ணிக் கொண்டேன்.

---------------------------------------

6

இளவேனிற் காலத்துப் பௌர்ணமி நாளில், முழுமதி வனத்தில் எழுந்தவுடன் நாகமக்களின் உள்ளமெல்லாம் குதூகலத்தால் பொங்கி வழியும். ஏனெனில் அன்றிரவு 'மணிக்காப்பு விழா' ஆரம்பமாகும்.

நாகர்கள் தொன்றுதொட்டே மணிக்காப்பு விழா எனும் விழாவைக் கொண்டாடி வந்தனர்.மணிக்காப்புகளை அவ்விழாவின் போது, முதிய பெண்கள் இளம் கன்னிகளுக்கு அணிவிப்பார்கள். அக்காப்புக்களை அணிந்திருந்தால் நாகந் தீண்டாது என்று முழுமனதோடு நம்பினர். மணிக்காப்பு விழாவில் அணிவிக்கப்பட்ட காப்புகளை அடுத்த விழா வரும்வரை எக்காரணத்தைக் கொண்டும் பெண்கள் கழற்ற மாட்டார்கள்.

இம்மங்கல விழா நாகநாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படும்; ஆடல், பாடல்களோடு கோயொல்களில் விஷேச பூசைகள் நடைபெறும்; பிறநாடுகளிலிருந்தும் பலர் இவ் விழாவைக் காண வருவார்கள்.

இப்படிப்பட்ட ஒரு விழாவில்தான் நான் அந்த வாலிபரைச் சந்தித்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - படகு துறையில் நானும், குண்டலினியும், என் அண்ணனும், வீரர்களும் என் தாத்தாவை வரவேற்பதற்காக நின்றிருக்கிறோம்! படகுதுறை புதிய அலங்காரங்களுடன் திகழ்கிறது. நாழிகை கழிகிறது. தாத்தாவின் மரக்கலம் படகு திறைக்குள் நுழைகிறது. மரக்கலந்திலிருந்து பலர் இறங்குகிறார்கள்! தாத்தா மரக்கலத்தின் மேற்றளத்திலிருந்து ஒவ்வொருவராக இறக்கிக் கொண்டிருக்கிறார். பெருநிதிச் செல்வர்களாகவும், பிரபுக்களாகவும் அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்களிடையே நெற்றியில் தழும்புடைய இவ்வழகிய வாலிபரும் இறங்குகிறார்.

எல்லாரும் இறங்கி விட்டார்கள்! இதோ தாத்தாவும் இறங்கப் போகிறார்! எனக்கு ஒரே அவசரம். "தாத்தா!..." என்றழைத்தபடி மரக்கலத்தில் வேகமாம ஏறினேன்; என் காலிடறியது -

"ஐயோ...!"{ என்றலறினேன்; யாரோ என்னை விழாது அணைத்துக் கொண்டார்கள். சுதாகரித்துக் கொண்ட நான், விழாது காப்பாற்றியவரை நிமிர்ந்து பார்த்தேன்.

அதே வாலிபர்! சற்றுமுன் தாத்தாவின் மரக்கலத்தில் இருந்து இறங்கிய அதே வாலிபர்! நெற்றியில் பளிச்சிடும் தழும்புடைய அதே வாலிபர் - என்னை அணைத்தபடி நின்றிருந்தார்; குறும்பு தவழும் அவர் கண்கள் சிரித்தன.

"கவனமாகப் பார்த்து ஏறக்கூடாது...?"

நான் ஒன்றும் பேசாது அவர் பிடியினின்றும் விலகி நின்றேன். என் முகம் வெட்கத்தாற் கவிழ்ந்து விட்டது.

தாத்தா பதறிப்போய் ஓடிவந்தார்.

"என்ன அவசரம்,பீலி!... நல்லவேளை இளவரசர் காப்பாற்றினார்!.."

"இளவரசரா...?"

"ஆமாம்! சோழநாட்டு இளவரசர் கிள்ளிவளவன் இவர்தான்..." என்ற தாத்தா ஏதேதோ பேசினார். எனக்கு ஒன்றுமே நினைவு இல்லை.

'இளவரசர் - கிள்ளிவளவன்' என்ற பெயர்தான் நினைவில் நர்த்தனமிட்டது; அவர் அணைத்தவிடம் எல்லாம் ஏதோ இன்பவேதனை குமிழியிட்டது.

இருவருடங்கள் அதன்பின் ஓடிவிட்டன. முதலில் அவரை மறக்க முடியாது தவித்த நான் காலஓட்டத்தில் அவரை மறந்தே விட்டேன். அதே அவரை இன்று கழிக்கானற் சோலையில் திரும்பவும் சந்தித்தேன். அவர் என்னை மறக்கவில்லை என்பதை, "நீயா...?" என்று அவர் கேட்ட கேள்வியிலிருந்த ஆச்சரியம் கூறியது.

--------------------------------------------------------

7

ஆடைகள் விதம் விதமாக உடுத்து, அணிகள் வகைவகையாக அணிவதிற் பொதுவாகப் பெண்களுக்கு வெகு விருப்பம். செல்வமும், வசதியும் படைத்த நான் அவற்றிற்கு விதிவிலக்காக இல்லாததில் வியப்பில்லை.

என் கூந்தல் மிக நீளமானதோடு, அதிக கருமையுமானது. கூந்தலில் மணநெய்யிட்டு, அகிற்புகையில் உலர்த்தி, நறுநெய் பூசிப் 'பனிச்சை'யாகக் கட்டியிருந்தேன்; பாதங்களுக்கு செம்பஞ்சுக் குழம்பால் செவ்வண்ணம் தோயத் தீட்டியிருந்தேன். கால்களின் சிறுவிரல்களுக்குப் பீலிகள் மாட்டியிருந்தேன்; மணிச்சிலம்புகள் கால்களிற் கொஞ்சின; வலம்புரி, பவள வளையல்கள் கரங்களிற் சலசலத்தன; முழங்கைகளுக்கு மேல் முத்துத்தோள்வளைகள் மின்னின; அரையிலே உயர்ந்த வண்ணப்பட்டு அணிந்திருந்தேன். கச்சையுடுத்த மார்பினை நீலநிற மல்மல் துணியாற் போர்த்தியிருந்தேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்; நான் திகைப்பிலிருந்து விலகவில்லை.

"இளவரசி! என்ன மௌனமாகி விட்டாய்! உன்னை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை....!"

நான் பேசாது நின்றேன்.

"என்னை நீ மறந்தாலும் உன்னை நான் மறக்கவில்லை. உன் தாத்தா மாளிகைக்கா வந்தாய்...?"

இனியும் பேசாது இருப்பது அழகல்ல என்பதால், 'ஆமெ'னத் தலையை ஆட்டினேன்.

"இப்படி அமரலாமே...!" என்று மலர்மண்டபத்தைச் சுட்டிக் காட்டினார்; நான் அமர்ந்தேன். என் பெற்றோர் பற்றியெல்லாம் நலம் விசாரித்தார்; மணிக்காப்பு விழாவில் மரக்கலத்திலிருந்து விழவிருந்த என்னைக் காப்பாற்றியதையெல்லாம் நினைவு படுத்தினார். நானும் அவரைப் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

நாழிகை கழிந்ததே தெரியவில்லை. மங்கற் பொழுது. நான் எழுந்திருந்தேன்.

"இளவரசி...!" எனவழைத்தார்.

"என் பெயர் பீலிவளை!" என்றேன்.

"பீலிவளை! அதோ பார். அப்பொய்கையில் மலர்ந்திருப்பது என்ன மலர்?..." என்று கேட்கவே, நான் அவரை விழித்துப் பார்த்து விட்டுத் "தாமரை!" என்றேன்.

"அதோ அந்த மரம்...?"

"மா!..."

"உனக்குப் பக்கத்தில் நிற்பது?..."

"அசோகம்!..."

"அசோகத்தில் படர்ந்திருப்பது?..."

"முல்லை..."

"அது...?'

"நீலம்...!"

'உங்களுக்கு என்ன பிடித்து விட்டது' என்பதுபோல அவரைப் பார்த்தேன்; அவர் மிகவுந் துணிச்சற்காரர். மெதுவாக என்னருகே வந்து என் கரங்களைப் பற்றினார். நான் தடுக்கவில்லை.

"புரியவில்லையா பீலிவளை? தாமரை, மா, அசோகம், முல்லை, நீலம். இவை காமனின் மலர்ப்பாணம்!" என்றார்.

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

"பீலி! என்னை மறந்துவிட மாட்டேயே.. நாளை வருவாயல்லவா...?"

என்னையறியாமல் எதலை ஆடியது, எனக்கே அதிசயமாகவிருந்தது.

------------------------------------------------

8

காதல் என்ற வார்த்தை வந்துவிட்டாற் போதும், உன்போன்ற இளைஞர்கள் வாயைப் பிளந்து கொண்டு கேட்பார்கள்; அதற்கு நீ மட்டுமென்ன விதிவிலக்கா? நீ கண்களை மலர்த்திக் கொண்டு, கால்களை ஒருபக்கமாகச் சாய்த்து, ஒற்றைத் தொடையில் அமர்ந்திருப்பதைக் காண, என்கதையில் உனக்குச் சுவை தட்டி விட்டது போலிருக்கிறது. உன்மீது பிழையில்லை - வாழ்க்கையின் ஏற்றைறக்கங்களை உணராத பருவம்.

எங்கள் காதலின் வளர்ச்சியை நான் விவரித்துக் கொண்டு போனால் அது ஒரு காதற் காவியமாகிவிடும். அதனாற் சுருக்கமாகவே கூறப்போகிறேன்.

எப்படியோ எங்களுக்குள் காதல் பிறந்துவிட்டது. முன்வினைத் தொடர்பென்று வேண்டுமானால் நீ எண்ணிக் கொள். அவரை நான் கழிக்கானற் சோலையில் அடிக்கடி சந்தித்தேன். அவரைச் சந்திக்கக் குண்டலினி பெருந்துணையாக இருந்தாள்.

நாங்கள் கந்தர்வமணமும் செய்து கொண்டோம். நம்மிடையே அன்பு வளர்ந்தது போல, நம்மிடையே பிணைப்புக் கூடியது போல - என்னுள் வேறொன்றும் வளர்ந்தது; மூன்றாவது உயிரொன்று என்னுள் வளரத் தொடங்கியது. இதை அறிந்த நான் அவர்முன் கண்ணீர் விட்டேன்.

"பீலி, உன்னை மணந்து இச் சோழ நாட்டின் ராணியாக்குவேன்!... கலங்காதே!..." எனத் தேற்றினார்.

என்னால் என் பெற்றோர், தாத்தா, சுற்றம் யாவரும் தலைகுனிய நேரிடுமோ என்ற பயம் என்னைப் பிடித்துக் கொண்டது.

"எனக்குப் பயமாகவிருக்கிறது, பிரபு! விரைவில் என்னை மணந்து கொள்ளுங்கள்!..." என்று கெஞ்சினேன்; சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஒருவேளை நான் அஞ்சியிருக்க மாட்டேன்; நன் ஒரு நாட்டின் இளவரசி!

ஒரு திங்கள் கருகிக் கழிந்தது. என் தந்தை விரைவில் என்னை அனுப்பி வைக்கும்படி ஓலையனுப்பியிருந்தார்; என் தாய் என்னைக் காணத் துடிப்பதாகவும் எழுதியிருந்தார். 'நாளை புறப்படு, பீலி!' என்று தாத்தா கூறியபோது எனக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது.

அன்று அவரைக் காவிற் சந்தித்தேன்; கண்கலங்கிய என்னை அவர் அணைத்துத் தேற்றினார்.

"போய்வா பீலி! இன்னும் ஒரு திங்களுள் நிச்சயமாக உன்னை மணம்பேசி முடிப்பேன்! விரைவில் சோழநாட்டுத் தூதுவர்கள் உன்னைப் பெண்கேட்டு மணிபல்லவம் வருவார்கள்!" என்று சத்தியம் செய்தார். "சேட்சென்னி நலங்கிள்ளியின் மகன் ஒரு போது உன்னை ஏமாற்ற மாட்டான்! கரிகாற் பெருவளத்தானின் பேரன் உன்னை என்றும் ஏமாற்ற மாட்டான்!..."

"பிரபு! நீங்கள் ஒரு திங்களுள் வந்து என்னை மணக்கவிடில், என்னை உயிருடன் காணவே மாட்டீர்கள்!' என்ற என் வாயைப் பொத்தினார். என் காதுகளிற் குனிந்து, "பீலி!... என்னை நீ நம்பவில்லையா...?" என்றார்.

"நம்புகிறேன், பிரபு! அந்த நம்பிக்கை தரும் உணர்வால்தான் நான் போகிறேன்...!"

----------------------------------------------------------

9

நாகதீவிற்கு வந்த எனக்கு அரண்மனையிற் பேரிடி ஒன்று காத்திருந்தது. என்ன தெரியுமா...?

நாகர்களில் எயினர், ஒளியர், அருவாளர், பரதவர், மறவர் எனப் பல வகுப்பினர் இருந்தார்கள்; நாங்கள் மறக்குடியைச் சார்ந்தவர்கள்; என் தந்தை நாகதீவைப் பேரரசனாக ஆண்டபோது, சமந்தகூடத்தையும், அடுத்த பகுதிகளையும் அருவாளர் வகுப்பைச் சார்ந்த ஏரிலங்குருவன் என்னும் சிற்றரசன் ஆண்டான். அவன் எங்கள் விருந்தினனாக நாகதீவிற்கு வந்திருந்தான். நான் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அரண்மனைக்குத் தாத்தாவோடு வந்தபோது, ஏரிலங்குருவனோடு என் தந்தையும், தாயும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

"என்ன, பீலி, ஒரு திங்களில் பெரிதும் ஆள் மாறிவிட்டாயே?..." என் என்தாய் கேட்டபோது, எனக்குத் 'திக்'கென்றது.

"மகளே! இவர்தான் சமந்தகூடத்து மன்னர் ஏரிலங்குருவர்!" எனத் தந்தை எனக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்; என்னை அவன் பார்த்த பார்வை ஏதோ போல இருந்தது.

அன்று மாலை என் பெற்றோரும், தாத்தாவும் என்னிடம் வந்தனர்.

"பீலி! உனக்கும் வயதாகி விட்டதம்மா! நாம் கண்மூடுவதற்குள் உனக்கு நல்ல இடத்தில் மணம் செய்து வைக்க விரும்புகிறோம், அம்மா!" என்றார், என் தந்தை.

"பீலி! எனக்கொரு பூட்டனைப் பெற்றுக் கொடு!" என்றார், தாத்தா.

நான் மௌனமாக விருந்தேன்; என் மௌனத்தைத் தங்களுக்குச் சாதகமாக அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

"சமந்தகூட மன்னனை உனக்குப் பிடித்திருக்கிறதா, பீலி...?"

சமந்தகூட மன்னன் விருந்தினனாக வரவில்லை; என்னைப் பெண் கேட்டு வந்திருக்கிறான் என்பதை நானுணர்ந்தபோது என்னிதயமே வெடித்துவிடும் போலிருந்தது.

மூவரையும் நிமிர்ந்து பார்த்தேன்; என்னையறியாமல் என் கண்கள் மாலைமாலையாக நீரைச் சொரிந்தன; மூவரும் பதறிப் போனார்கள்; அரண்மனையில் ஒருவித குறையுந் தெரியாமல் வளர்ந்தவள், நான். நான் அழுததே இல்லை; என்னழுகை மூவரையும் பதற வைத்தது.

"பீலி! இதென்ன...?" என்றபடி எதாய், என்னை அணைத்துக் கொண்டாள்; தாயின் அணைப்பிலிருந்து விடுபட்ட நான் என் பள்ளியறைக்கு ஓடிச் சென்று, மஞ்சத்தில் வீழ்ந்து, 'விம்மி விம்மி' அழுதேன்.

----------------------------------------

10

நான் அவரைச் சந்திக்குமுன் துன்பம் என்பதையே கண்டதில்லை; நான் திரும்பிய பக்கமெல்லாம் அன்பே எனக்காகக் காத்திருந்தது; என்மீது தன்னுயிரையே வைத்திருந்த தந்தை; கண்ணிமை போல என்னைக் காக்குந் தாய்; என்னை எறும்பு கடித்தாலும் பதறிப் போகும் என் தாத்தா; என்மீது தன் அன்பை எல்லாம் சொரியும் என் சகோதரன் - இவர்களெல்லாம் எனக்குத் துன்பமென்பதை என்னவென்று அறிய விடவில்லை. அன்பின் பிடிக்குள் நான் வளர்ந்தேன்; நான் பருவ மங்கையானபோது இன்னொருவரும் அதே அன்பைத் தான் என்மீது வைத்தார்; அந்த அன்பு, வாழ்வில் நான் காணாத இன்பத்தையும் வாழ்வில் நான் அனுபவிக்காத துன்பத்தையுந் தந்தது.

என் தாய் என் கூந்தலை வருடி விட்டாள்.

"அழாதே, பீலி! நீ அழுவதைக் காண என்னாற் பொறுக்க முடியவில்லை!... ஏன் அழுகிறாய், பீலி?..."

தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறு கதறென்று கதறினேன்.

"அம்மா, என்னை மன்னிப்பாயா?..."

"என்ன, பீலி! என்ன கூறுகிறாய்?"

மன்னிப்பு என்ற வார்த்தை என்னைப் பொறுத்த மட்டில் மதிப்பு வாய்ந்ததாக இருந்தது; ஏனெனில், 'மன்னிப்பு' என்ற வார்த்தையை என் தாய் என்னிடமிருந்து ஒருபோதும் கேட்டறியாள்.

எப்படியாவது உண்மையைக் கூறித்தானே ஆகவேண்டும். உண்மையைக் கூறினேன்; கழிக்கானற் சோலையில் அவரைக் கண்டதைக் கூறினேன்; அவரைக் கந்தர்வமணம் செய்து கொண்டதைக் கூறினேன்; இன்னும் ஒன்பது மாதங்களில் தாயாகப் போகும் அச்செய்தியையும் கூறினேன்.

என் தாய் இடிந்தே போனாள்.

"பீலி...!" என்றழைக்க முடிந்ததே தவிர வேறொன்றும் அவளாற் பேச முடியவில்லை; மெதுவாக எழுந்து வெளியே சென்றாள்.

சேதி அறிந்த தந்தை குதித்தார்; துள்ளினார். என் தாத்தாவை ஏசினார். "மாமா! பீலியை அழைத்துச் சென்று நீங்கள் எனக்குத் தேடித்தந்த மானக்கேட்டைப் பார்த்தீர்களா...? நாட்டிற்குள் தலைகாட்டாது செய்து விட்டீர்களே...?"

"பதறாதே வளைவணா! சோழர்கள் சொல் தவறாதவர்கள்! சோழ இளவரசனைப் பீலிக்கு எப்படியாவது மாலையிடச் செய்வேன்!... பீலிமேல் நீ வைத்திருக்கும் அன்பிலும் என் பேத்தி மேல் நான் வைத்திருக்கும் அக்கறை பெரிது...!" என்றார், என் தாத்தா.

"சமந்தகூட மன்னனுக்கு வாக்களித்து விட்டேனே, மாமா? இப்போது அவனுக்கு என்ன சொல்லுவேன்?... அருவாளர்கள் பொதுவாக முன்கோபக்காரர்கள்!... ஏரிலங்குருவனோ எதற்குந் துணிந்தவன்..!"

"உண்மைக் காரணத்தைக் கூறுவதால் நமக்கே அவமானம்... பீலிக்கு விருப்பமில்லை என்று கூறி அனுப்பி வை!"

தந்தை அப்படியே சமந்தகூட மன்னனுக்குக் கூறினார்; ஏரிலங்குருவன் கொதிப்படைந்தான்.

"நாகநாட்டு மன்னரே! என்னை ஏமாற்றிவிட்டீர் என்பது மட்டுமல்ல அவமானப் படுத்தியும் விட்டீர்!... தமக்குக் கிடைக்காத பொருளைப் பிறருக்குக் கிடைக்க விடமாட்டார்கள் அருவாளர்கள் என்பதை நினைவு வைத்திருங்கள்...!" என்று கூறிச் சென்றான்.

----------------------------------------

11

மஞ்சமே சதம் என்று நான் கிடந்தேன்; என்னறையை விட்டு வெளிவருவது மிகவும் குறைவானது; இருந்துவிட்டு எப்போதாவது குண்டலினியுடன் பழைய கடற்கரைக்குச் செல்வேன்; ஆர்க்குமலைகடல் முன்பு எனக்கு இன்பத்தைத் தந்தது; திரை தவழ்பறவைகள் என் கண்களுக்கு முன்பு இன்பத்தைத் தந்தன; நெடுமணற்குன்றுகள் என் கால்களுக்கு முன்பு இதந்தந்தன - இவையெல்லாம் இப்போது எனக்குத் துன்பத்தையே தந்தன.

என் பெற்றோர் என்னாற் பெரிதும் கவன்றனர். எதாய் என்னைத் தேற்றுவாள்; என் தந்தையோ என்னுடன் பேசுவதேயில்லை; தமையனோ என்னை அருவருப்புடன் பார்த்தான்; தாத்தா எனக்காக இரக்கப்பட்டார்; தாத்தாவின் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது தீர்ப்பேன் - எடுத்ததெற்கெல்லாம் அழவேண்டும் போலிருந்தது.

நல்ல நாள் பார்த்து என் தாத்தாவும், சில தூதுவர்களும் சோழநாட்டிற்குச் சென்றனர்; சென்ற கையோடு திரும்பியும் வந்தனர்; சோழ நாட்டைப் போர்க்கால மேகங்கள் சூழ்ந்து விட்டனவாம். பாண்டியரும், சேரரும் ஒன்றாகக் கூடிச் சோழநாட்டை ஏப்பம் விடக் காத்திருந்தனர். அதனால், மணவினைப் பேச்சை ஆரம்பிக்க சோழமாமன்னர் சேட்சென்னி நலங்கிள்ளி தயாராகவில்லை; போர் முடிந்ததும் மணவினைப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று கூறி விட்டாராம். நானும், சோழ இளவரசரும் காதலர்கள் என்பதைச் சோழமன்னர் அறியார்; அதைத் தாத்தாவும் கூறவில்லை. மேலும், காரியாற்றுப் போர்க்களத்திற்குப் படை நடத்தி என் இளவரசர், பாண்டியரை எதிர்க்கச் சென்று விட்டதாயும் அறிந்தேன்.

இவற்றை அறிந்த நான் 'குலுங்கிக்குலுங்கி' அழுதேன்; என் நிலை கண்டு பலர் கண்ணீர் வடித்தனர்; 'நானேன் பிறந்தேன்?' எனவும் சில தடவைகள் எண்ணிக் கொண்டேன்.

'சோழ இளவரசர் போர்க்களத்திற்குச் சென்றதால் என்னையும் மறந்து விடுவாரோ' என்று என்னுள் எண்ணம் கிளைவிட்டது; ஏனெனில், பாண்டியர்மேல் அவர் வைத்திருந்த வன்மத்தைப் பல தடவைகள் நான் உணர்ந்திருக்கிறேன்.

ஒரு நாள் -

"பீலி! உன் குரல் யாழினும் இனியது!" என்றார்.

"மகரயாழை விடவா...?" என்றேன், நான். இதைக்கேட்ட அவர்முகம் திடீரெனக் கறுத்தது.

"பீலி! எனக்குப் பேரியாழின் இசை பிடிக்கும்! சகோட யாழின் நாதத்தில் மயங்கிப் போவேன்! செங்கோட்டியாழின் நரம்பிலே நானே இசை மீட்டுவேன்...! ஆனால், மகரயாழை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது...!"

'ஏன்' என்பது போல அவரைப் பார்த்தேன்; அவர் தொடர்வார்; "மகரம் பாண்டியரின் சின்னம்! என் பரமவைரியாகப் பாண்டியரைக் கருதுகிறேன்!... தமிழராக அவர்கள் இருந்தாலும், அவர்களை அழிக்கக் கங்கணம் தீட்டியுள்ளேன்!... பீலி! உனக்குத் தெரியுமா? என் சிறிய தந்தை நெடுங்கிள்ளியைப் போர்க்களத்தில் வஞ்சகமாகக் கொன்றவர்கள், இந்த மகரக் கொடியோர்!"...

"அதனால், கலையின் மீதும் வெறுப்பா?..."

அவர் பேசவில்லை; நானும் பேசவில்லை.

என் விரலில் மகரவாய் மோதிரம் ஒன்று அணிந்திருந்தேன்; அவருக்காக அதையும் கழற்றி எறிந்தேன்.

'இத்தகைய வஞ்சினம் கொண்டுள்ள அவர் பாண்டியரை முறியடிப்பதில் தான் கருத்தாகவிருப்பார்; என்னை மறந்து போயிருப்பார். ஒரு திங்களுள் வந்து மணம் முடிப்பதாகக் கூறினாரே...?"

இரவில் நான் துயின்றதில்லை. அப்படித் துயின்றாலும் பல துர்க்கனவுகள் கண்டு துடித்துப் பதைத்து எழும்புவேன்; அவர் களத்தில் போராடுவது போலவும், குதிரையினின்றும் கீழே வீழ்ந்தது போலவும், மார்பிலே வேல் பாய்ந்து துடிப்பது போலவும் கனவுகள் கண்டேன்.

என் தாத்தா பல தடவைகள் சோழநாடு சென்று வந்தார்; போர் முடிந்ததாயில்லை.

ஒரு திங்கள் கழிந்தது. "ஒரு திங்களுள் வந்து என்னை மணக்காவிடில், என்னை உயிரோடு காண மாட்டீர்கள்!" என்று நான் கழிக்கானற் சோலையில் கூறிவந்ததை எண்ணினேன்; சொன்ன சொல்லைச் செயலாக்கவும் முயன்றேன். ஊராரின் அலர் மொழிகேட்டும் நான் ஏன் உயிர் வாழ வேண்டும்.

'கோமுகிப் பொய்கையில் வீழ்ந்து தற்கொலை செய்யலாமா?' எனவும் எண்ணினேன். ஒருநாள் வேதனை தாளமாட்டாது, விஷமருந்த முயன்றபோது, அதை எப்படியோ அறிந்த குண்டலினி சமயத்தில் வந்து தடுத்தாள்.

"என்னைச் சாகவிடு, குண்டலா! வேதனையால் நான் அணுவணுவாகச் சாவதிலும், ஒரேயடியாக என்னைச் சாகவிடு, தோழி!"

"தேவி! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்?... அவர் சொல் தவறாதவர்! போர்க்களத்திற்கு அவர் செல்லாதிருந்தால் நிச்சயம் இங்கு வந்திருப்பார்!... போர் முடியும்வரை காத்திருங்கள்!..." என்று கெஞ்சினாள்.

எனக்கும் ஒரு நப்பாசை - போர் முடிந்ததும் அவர் என்னைத் தேடி வந்தால்...?

-----------------------------------------------------

12

இளவேனிலைத் தொடர்ந்து, முதுவேனில், கார், கூதல், முன்பனி, பின்பனி எனும் பருவங்கள் மறைந்தன; இளவேனில் மறுபடியும் புத்திளமையுடன் மலர்ந்தது; என் வாழ்வு மலரவில்லை. கைகளிலே ஒரு அழகுமதலை தவழ்ந்தான். 'கண்ணே! உன் தந்தைக்காகக் காத்திருக்கிறேன்!... நீ உலகின் அழகெல்லாம் இணைந்து பிறந்திருக்கிறாய்.." என வாய்விட்டுக் கூறி ஏங்குவேன்.

"பாண்டியர்கள் முறியடிக்கப்பட்டார்கள்" என்ற செய்தி என் காதுகளில் தேவாமிர்தமாகப் பாய்ந்தினித்தது; காத்திருந்ததற்குப் பலன் கிடைக்கப் போகிறது. அவர் இனி என்னைத்தேடி வருவார்" என மகிழ்ந்தேன்.

ஆனால்...?

இவ்வளவு நேரமும் தன் கதையைக் கூறிவந்த அந்த ஆவியுரு மங்கை, கூறிய கதையை நிறுத்திவிட்டு, அழத் தொடங்கினாள்; அவள் குரலில் பிரிவின் சோகமெல்லாம் ஒலித்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; வானத்தை அண்ணாந்து பார்த்தேன்; வெள்ளிகளின் கண்சிமிட்டலிடையே மதியோன் அடிவானத்திற் சாய்ந்திருந்தான். தண்கதிர்கள் அவள் கண்களில் விழுந்ததால், கண்ணீர் முத்தென ஒளிர்ந்தது. அம்மங்கை அழுவதை நிறுத்தவில்லை.

"தாயே! நீ அழுவதைக் காண என் கண்கள் கலங்குகின்றன. போர் முடிந்ததின் பின் சோழ இளவரசன் கிள்ளிவளவன் உன்னை நாடி வரவில்லையா...?"

அவள் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"அவர் வரவில்லை!... காத்திருந்து காத்திருந்து நான் ஏமாந்தேன்!... அது மட்டுமல்ல அவர் வேறெரு பெண்ணை மணந்து கொண்டதாகவும் கேள்விப் பட்டேன் இதைக் கேள்விப்பட்ட என் தாத்தா கொதித்தெழுந்தார். என் தந்தை படை திரட்டினார். நான் அவர்களைச் சாந்தப்படுத்தினேன்...! ஆனால் என்னை என்னாற் சாந்தப்படுத்த முடியவேயில்லை...!"

"கிள்ளிவளவன் ஒரு துரோகி!..." என்று நான் கூறினேன்.

இதைக் கேட்ட அவள் என்னை விழித்துப் பார்த்தாள்; கண்களில் கோபத்தின் சாயல் படர்ந்தது.

இந்தத் தமிழ்ப்பெண்களே இப்படித்தான்; என்னதான் அவர்தம் அன்புக்குரியவர் ஏமாற்றினாலும் பிறர் குறை கூறுவதை விரும்ப மாட்டார்கள்.

"அவர் மிகவும் நல்லவர். போர்முடிந்ததும் அவர் என்னிடம் வந்திருப்பார்... ஆனால், சமந்தகூட மன்னன் ஏரிலங்குருவன் திரும்பவும் என் வாழ்விற் குறுக்கிட்டான்...!"

"எப்படித்தாயே...?"

அவள் தன் கதையைத் தொடர்ந்து கூறுவாள்.

-----------------------------------------

13

சமந்தகூட மன்னன் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றானல்லவா...? அவன் சும்மாயிருக்கவில்லை; அவன் தன்னைப்பற்றி பெரிதாக எண்ணியிருக்க வேண்டும்; தான் அழகனென்றும், வீரனென்றும் எந்தப் பெண்ணும் தன்னை மணக்க மறுக்கமாட்டாள் என்றும் அவன் திடமாக நம்பியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நான் அவனை மணக்க மறுத்ததன் மூலம் உடைக்க முடியவில்லை. நான் அவனை மணக்க மறுத்ததற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்றெண்ணி, என் நாட்டிற்குள் ஒற்றர்களை அனுப்பி அவன் ஆராயத் தலைப்பட்டான். மக்களிடையே என் விடயம் ஓரளவு பரவியிருந்ததால், அவனுக்கு உண்மைக் காரணந் தெரிய அதிக நாளாகவில்லை.

நாகநாட்டின்மீது சமந்தகூட மன்னர்களுக்குப் பொறாமை இருந்தது; திறைசெலுத்தும் நாடாகத் தங்கள் நாடு இருப்பதை அவர்கள் வெறுத்தனர்; அப் பொறாமையும் கையாலாகாத் தனமும் சேரவே, என் வாழ்க்கையைக் கெடுக்குந் திட்டம் ஒன்றை வகுத்தான், ஏரிலங்குருவன்.

போர் முடிந்ததும் என்னிடம் சோழ இளவரசர் வருவார், என்பதை அவன் நன்கு அறிவானாகையால் போர் முடிந்ததாகக் கேள்விப்பட்டதும் சோழநாடு சென்றான்.

நாகர்கள் பொய்வேடம் போடுவதில் கெட்டிக்காரர்கள்; கிருத்திரகூட மன்னன் கிருத்திரமவேடம் பூண்டான்; ஒரு சாரணனாக வடிவைத் தாங்கிய ஏரிலங்குருவன் சோழ இளவரசனைச் சந்தித்தான்; தவசிகளுக்கு பெருமதிப்பளிப்பவர்கள் சோழர்கள்.

"சுவாமி! தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்..." என்று அவர் கேட்டார்.

"அடியேன் நாகதீவிலிருந்து வருகிறேன், அப்பனே...!" என்றான் அவ்வஞ்சகன்.

"மணிபல்லவத்தில் இருந்தா?... அவ்விடம் ஏதாவது விசேடங்கள் உண்டா... சுவாமி?"

"கூறத்தக்கதாக ஒன்றுமில்லை! ஓ... ஒன்றுண்டு! அதை நீ அறிந்திருப்பாய் தானே?..."

"எதைச் சுவாமி?..."

"சமந்தகூட மன்னனை நாகதீவு இளவரசி பீலிவளை மணந்து கொண்டதை!..."

என் இளவரசர் இதை உண்மையென்று நம்பினார்; சாரணர் ஒருக்காலும் பொய் சொல்ல மாட்டார்கள் என்று திடமாக நம்பினார்; நான் தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி, அவ் வெண்ணந்தந்த வேகத்தால் இன்னொருத்தியை மணந்து கொண்டார்.

என்னை அவர் ஏமாற்றி விட்டதாக நான் எண்ணிக் கலங்கினேன்; சமந்தகூட மன்னனின் சூதினை நானறியவில்லை; அப்படியானால் இது எனக்கு எப்படித் தெரியும் என நீ கேட்கலாம்; இது தேவையற்ற கேள்வி. ஆவியுலகிலே ஏரிலங்குருவனே இதை என்னிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இன்னும் என் வரலாற்றிற் சிறு பகுதியுண்டு; அதையும் கேள்.

'அவர் வருவார், வந்து எனக்கு மாலையிடுவார்' என்று காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்தன; மாலைவேளைகளில் கடற்கரையில் நின்று சோழநாட்டின் திக்கை நோக்கிக் கண்ணீர் வடிப்பேன்.

"பிரபு! பேதையென்னை ஏமாற்றிக் கண்ணீர்க்கடலில் தள்ளி விட்டீர்களே?..."

அவர் வேறொரு பெண்ணை மணந்து கொண்டதாக நானறிந்த போது என்னிதயமே வெடித்துவிடும் போலாகி விட்டது; என் மனதின் கடைசி நம்பிக்கையும் அணைந்து, இருண்டது. இனி நான் வாழ்ந்து பயனில்லை என எண்ணினே; அப்படியானால் என் குழந்தை...?

அது அவர் குழந்தை; எப்படியும் அவரிடம் குழந்தையைச் சேர்த்துவிட்டு நானழியத் தயாரானேன்; குழந்தையை எப்படி அவரிடம் சேர்ப்பது என்றெண்ணியபோது என் தாத்தாவின் நினைவு வந்தது. தாத்தாவை அழைப்பித்தேன்.

தாத்தா சிறு குழந்தை போல 'விம்மி விம்மி' அழுதார்.

"அழாதீர்கள் தாத்தா!..." என நான் தேற்ற முயன்றேன். என்னால் முடியவில்லை.

"பீலி...!"

என்னிதயம் வெடித்தது; "தாத்தா! நல்ல ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, உங்களை என்னோடுகூட இருத்தி வைத்து, எல்லாப் பணிவிடைகளையும் உங்களுக்கு நான் செய்ய வேண்டும் ர்ன்று கனவு கண்டேன். தாத்தா...!" - நான் விம்மினேன்.

"பீலி...! உன் விதி இப்படியா ஆக வேண்டும்?..."

"வருந்தாதீர்கள், தாத்தா. நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்! ஆனா, எனக்கு ஒரே ஒரு குறை...?"

"என்ன, பீலி?..."

"என் குழந்தையை அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும்!..."

"யார் அந்தத் துரோகியிடமா..?"

"அவரை ஏசாதீர்கள் தாத்தா! என்ன விருந்தாலும் என் கரம் பற்றியவர்!... உங்கள் அன்பெல்லாம் எனக்கொருத்திக்குத்தான் என்று சொன்னீர்களே? அந்த அன்பின் மீது ஆணையிட்டுக் கேட்கிறேன், என் செல்வனை அவரிடம் சேர்ப்பித்து விடுங்கள், தாத்தா!..."

"சேர்ப்பிக்கிறேன், பீலி! நீயும் கூடவே வா! உன்னையும் அவரிடம் சேர்ப்பிக்கிறேன்!..."

நான் துடித்தெழுந்தேன்.

"நாகதீவு இளவரசி அவ்வளவு தூரம் மானங் கெட்டவள் அல்லள்!... என்னை ஏமாற்றியவரிடம் நான் வருவதா?". என் பிடிவாதத்தைத் தாத்தா நன்கறிவார்.

"நீ வரவேண்டாம்! அவரை இங்கு நானே அழைத்து வருகின்றேன்...!"

நான் வரட்டுச் சிரிப்புச் சிரித்தேன்.

தாத்தா என் குழந்தையுடன் மரக்கலத்தில் ஏறினார்; பாய் விரித்து மரக்கலம் சோழநாடு நோக்கி - காவிரிப்பூம்பட்டினம் நோக்கி விரைந்த அதே நேரத்தில், நாகதீவின் மேற்குக்கடல் அலைகளுக்கிடையே நான் மிதந்து கொண்டிருந்தேன். என் வேதனைக்கு முடிவைக் கடல் அன்னை எனக்களித்தாள்.

-----------------------------------------------------------

15

ஆவியுரு மங்கை எழுந்திருந்தாள்; அவளை நான் உற்றுப் பார்த்தேன்; கண்கள் கூசின; அவளே பேசினாள்.

"என் கதையைக் கேட்டாயல்லவா?... உனக்கு ஏதாவது சந்தேகமுண்டா?..."

"உண்டு... உன் செல்வன் சோழ இளவரசனிடம் சேர்ந்தானா?"

அவள் என் கேள்விக்குப் பதிலளிக்காது தொடர்வாள்:

"நான் உயிரற்ற பிணமாகக் கடலில் தெற்கு நோக்கி மிதந்து கொண்டிருந்த அதே வேளையில் இதே போன்ற சித்திரா பௌர்ணமியில் என் குழந்தை என் தாத்தாவோடு தன் தந்தையைக் காண வேண்டி மரக்கலத்தில் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். - அந்தோ... இருந்தாற் போலக் கடல் அன்னை குமுறி எழுந்தாள். அவளின் குமுறலுக்குக் காற்றரசன் கைகொடுத்தான். சூறாவளி சுழன்றடித்தது. அப்பயங்கரச் சூறாவளியிலே மரக்கலம் உடைந்தது! மரக்கலத்தினின்று விழுந்த தெப்பமொன்றில் என் குழந்தை தெய்வாதீனமாமத் தூக்கி எறியப்பட்டான்!... தெப்பத்தில் கிடந்த என் செல்வனைக் கடலன்னை எடுத்துச் சென்றாள்!... கடலின் குமுறலிடையே, காற்றைத் துளைத்துக் கொண்டு ஒரு குரல், 'பீலி!' என்று ஒலித்துத் தேய்ந்து ஒடுங்கியது!..." என்று கூறிய அவள் நடக்கத் தொடங்கினாள்; கால் நிலத்திற் பாவாமல் நடந்தாள்.

'கலீர்... கலீர்...' சிலம்பு ஒலித்தது; அதனிடையே, "நில்!..." என்று நான் கத்தினேன். "தெப்பத்தில் மிதந்த உன் செல்வன் என்னவானான்...?"

அவள் பதில் கூறவில்லை; காற்றோடு காற்றாக மறைந்தே போனாள்.

'கலீர்... கலீர்...!'

என் கனவும் கலைந்தது.

--------

(ஈழநாடு - 1964)
(விஷ்ணு)

---------------------------------------------------

குட்டிக் கதைகள்

1
குளிரும் சூடும்

முற்றுந் துறந்த துறை ஒருவர், தனது சிஷ்யனொருவனோடு வழி நடந்தார். பற்றுக்களை விட்ட நிலையோடு, பற்றுக்களை விட முயலும் நிலை நடந்தது.

காட்டு வழியே இருவரும் விரைந்தார்கள். இருந்தாற் போல மழை மேகங்கள் வானில் நிறைந்தன. சோனாவாரியாக மழை பொழிந்தது.

"சுவாமி, எங்கேயாவது ஒதுங்குவோமா?" என்று வினவினான், சிஷ்யன்.

"ஒதுங்குவதற்குத்தான் போகின்றோம்" என்றார் துறவி.

மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து போனார்கள். குளிரோ உடலைக் கிடுகிடுக்க வைத்தது.

"சுவாமி, குளிரினால் தேகம் நடுங்குகிறது" என்றான் சிஷ்யன்.

"நடந்துவா, மகனே! குளிரவைத்தவனே சூடாக்குவான்."

இருவரும் நடந்தார்கள். மழை மேகங்கள் கலைந்தன. சூரியன் தன் கதிர்களை வேகமாகப் பரப்பினான்.

சிஷ்யன் தலை குனிந்தபடி நடந்தான். துறவி மெல்லச் சிரித்துக் கொண்டார்.

----------------------------------------------

2
வாழ்க்கை

சிவந்து கனிந்த மாம்பழங்கள் இரண்டு இருவருக்கும் கிடைத்தன. ஆவலோடு இருவரும் மாங்கனிகளைக் கடித்துச் சுவைத்தனர்.

வண்டுகள் இரண்டு மாம்பழங்களின் வித்துகளில் இருந்து தலைகளை நீட்டின.

"சீ.. சீச்சீ..." என்றபடி கையிலிருந்த மாம்பழத்தைத் தூர வீசி எறிந்துவிட்டுக் காறி உமிழ்ந்தான் ஒருவன்.

மற்றவன் தலைநீட்டிய வண்டை மெதுவாக விரலாற் சுண்டிவிட்டு, மாம்பழத்தைச் சுவைத்துத் தின்றான்.

--------------------------------------------

3
துரதிஷ்டம்

ஓயாது பெய்த மழையினால் குளம் ஒன்று நீர் நிறைந்து தளும்பியது. குளத்தையும் நிர்ச்சலமான நீரையும் பார்த்த பரதேசி ஒருவன், குளிக்க விரும்பினான்.

குளத்தில் இறங்கியவன் நீர் குளிர்ந்ததால் நாளை குளிப்போம் என்று திரும்பி விட்டான்.

மறுநாளும் நீர் குளிர்ந்தது.

அவன் குளிக்கவில்லை.

மறுநாள்... மறுநாள்...

உடல் சுகமில்லாமல் ஒருவாரம் படுக்கையில் கிடந்த பரதேசி, சுகமானதும் ஆவலோடு குளத்தை நோக்கி ஓடி வந்தான், குளிப்பதற்காக.

- குளம் வரண்டு கிடந்தது!

----------------------------------------------

4
நியதி

சூரியனுக்கு இருந்தாற்போல ஓர் ஆசை தோன்றியது.

"சந்திரா, இனிமேல் நீ பகல் வேளைகளில் உதயமாகு! நான் இரவு வேளைகளில் உதயமாகின்றேன்..."

சந்திரனும் மகிழ்வோடு ஒப்புக் கொண்டான். விழித்திருக்கும் உலகைக் காணச் சந்திரன் விழைந்தான்.

தூங்கும் உலகைக் காண ஆதவன் விரைந்தான்.

உலகமோ -

"பகலில்" தூங்கி, "இரவில்" விழித்திருந்தது.

----------------------------------------------

5
பசி

மதிசாய்ந்த வேளையிலே இரு நரிகள் வேட்டைக்குப் புறப்பட்டன. காட்டின் இரு திக்குகளில் அவை தமது உணவைத் தேடி விரைந்தன.

ஒரு நரிக்கு இலகுவில் கொழுத்த வேட்டை அகப்பட்டுவிட்டது. ஆட்டுக் குட்டிகள் இரண்டு பக்கத்துக் கிராமத்தில் எளிதாக அந்நரியிடம் சிக்கிக் கொண்டன. அவற்றைக் கடித்துக் கொன்று தன்னிடத்திற்கு இழுத்து வந்தது.

ஆசைதீர, பசிதீரத் தின்றது. ஒரு ஆட்டுக் குட்டிக்கு மேல் அதனால் சாப்பிட முடியவில்லை. வயிறோ நிறைந்து விட்டது.

- மற்ற நரியோ உணவைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.

- இந்நரியோ பசியைத் தேடிக் காத்திருந்தது.

--------------------------------------------------------

6
அற்பம்

தையல் ஊசி ஒன்று கேட்பாரற்று நடுவீதி ஒன்றில் நிமிர்ந்து நின்றது. மனிதன் ஒருவன் சைக்கிளில் வேகமாக வந்தான். 'சதக்'கென்று ஊசி, முன் ரயரில் ஏறிக் கொண்டது. முன் சில்லுக் காற்று யாவும் வெளியேறி விட்டது. அவன் இறங்கி, ரயரைத் தடவிப் பார்த்தான்.

கையில் தையல் ஊசி தட்டுப்பட்டது.

"சீ... அற்ப ஊசி..." என்றபடி ஊசியைத் தூர வீசி எறிந்தான்.

"நான் அற்பமா?" என்று ஏங்கிக் கிடந்தது ஊசி.

அவ்வழியே தையற்காரன் ஒருவன் வேகமாக வந்தான். அவன் காலில் ஊசி குத்தியது. 'ஆ' என்றபடி காலைத் தூக்கிப் பார்த்தான். ஊசியைப் பிடுங்கித் தூர எறியப்போனவன் ஒருகணம் தரித்தான்.

"இது தைக்க உதவும்" என்று கூறியபடி நடந்தான்.

ஊசியின் ஏக்கம் தீர்ந்தது.

-----------------------------------------------------

7
முடிச்சு

கணவனும் மனைவியும் சிறு மனஸ்தாபம் ஒன்று காரணமாகப் பிரிந்து விட்டார்கள்.

"உன் கண்ணில் இனிமேல் முழிப்பதில்லை" என்று சபதம் செய்தான், கணவன்.

"உன்னோடு இனிமேல் வாழ்வதில்லை" என்று கூறி விட்டுத் தாய்வீடு சென்றாள் மனைவி.

சிலநாட் கழித்துக் கணவனிடமே திரும்பி வந்து விட்டாள்.

- துவைத்த துணிகளைக் காயப்போட உதவும் கொடிக்கயிறு அறுந்து போனது. அறுந்த கயிறுகளை முடிந்தாள். ஆனால், முடிச்சு அதில் இருப்பது தெரிந்தது. திரும்பவும் தாய்வீடு போய் விட்டாள்.

---------------------------------------------------

8
நிர்ணயம்

காட்டுவழி நீள்கிறது. குருவும் சிஷ்யர்கள் சிலரும் காட்டுவழியே சென்று கொண்டிருந்தார்கள். கொடிய விலங்குகள் வாழ்கின்ற காடது. சிங்கத்தின் கர்ச்சனையும் புலியின் உறுமலும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தன.

வழியில் சில காட்சிகள். புலியின் வாயில் அகப்பட்டுத் துடிக்கும் மான்; சிங்கத்தின் கர்ச்சனையால் சிதறி ஓடும் விலங்கினங்கள்.

"ஆண்டவன் மிகவும் கொடியவன்" என்றான் ஒரு சிஷ்யன்; "இவற்றை ஏன் படைத்தான்!"

குரு சிரித்தபடி நடந்தார்.

கிராமம் ஒன்று குறுக்கிட்டது. பருந்து ஒன்று தாழப் பறந்து, கோழிக்குஞ்சு ஒன்றைத் தூக்கிச் சென்றது.

"நல்லவேளை... நம்மை அது தூக்காது" என்றான் ஒரு சிஷ்யன்.

"சிங்கத்துக்கும் புலிக்கும் சிறகுகள் இருந்தால் அவையும் நடக்கும்" என்றார் குரு.

ஒருகணம் மௌனம் நிலவியது.

"ஆண்டவன் கொடியவனல்லன்" என்றனர் சிஷ்யர்கள்.

---------------------------------------------------

9
விதி

அகன்ற நதி ஒன்றின் இரு பக்கக் கரைகளிலும் இரு மரங்கள் வளர்ந்திருந்தன. ஒன்று இலைகளை உதிர்த்து, நீர்மை இழந்து கொண்டிருந்தது. வண்டுகள் வேறு அதன் அடியைத் துளையிட்டுச் சிதைத்திருந்தன.

பட்டமரம் அது.

மற்ற மரமோ பசுமை செழிக்கும் இளமரம். கொம்பர்களை நாலாபக்கமும் வீசி, செழித்து நின்றது.

பச்சை மரமது.

நீண்ட ஓர் இரவு கழிந்து காலை என்றும் போல ஒரு நாள் மலர்ந்தது. இரவு தூங்கியவாறு அசைந்து கொண்டிருந்த நதி கண்களைத் திறந்து பார்த்த போது, பச்சை மரம் நிலத்திற் சாய்ந்து கிடக்கக் கண்டது.

பட்டமரமோ வனத்தை நோக்கி எலும்புகூடாக நின்றது. வண்டுகள் அடிமரத்தைத் துளைத்தபடி இருந்தன.

------------------------------------

10
ஆதாரம்

வட்டு இழந்த தென்னைமரம் ஒன்று வானத்தைப் பார்த்தபடி உயர்ந்து நின்றது. அதன் தொண்டைக்குழியில் கிளிக்குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது.

சிறகுகள் ஒன்று பொந்துக்கு வெளியே தலை நீட்டி வானத்தைப் பார்த்தது. நீலம் போர்த்த எழில் வானம் அதனைக் கவர்ந்தது.

"அம்மா, எனக்கு இந்த மண் பிடிக்கவில்லை... நான் வானத்திலேயே சஞ்சரிக்கப் போகின்றேன்... நிலத்திற்கு வரவே மாட்டேன்" என்று கூறியபடி வானில் 'விர்'ரென்று பறந்தது.

தாய்க்கிளி சிரித்துக் கொண்டது.

வானவெளி அழகானதுதான்!

இறகுகள் வலி கண்டன; பசி வேறு!

குஞ்சுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. கூட்டிற்குத் திரும்பி வந்தது. தாய்க்கிளி அப்போதும் சிரித்துக் கொண்டது.

---

(சிந்தாமணி - 1968)

----------------------------------------------------------------------