கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தாத்தாமாரும் பேரர்களும்  
 

எம். ஏ. நுஃமான்

 

தாத்தாமாரும் பேரர்களும்

எம். ஏ. நுஃமான்

--------------------------------------

எம். ஏ. நுஃமான்

தாத்தாமாரும் பேரர்களும்

நெடுங்கவிதைகள்

----------------------------------------

எம். ஏ. நுஃமான்

தாத்தாமாரும் பேரர்களும்

வாசகர் சங்க வெளியீடு - 8

-----------------------------------------

தாத்தாமாரும் பேரர்களும்
முதலிய ஐந்து நெடுங்கவிதைகள்
ஆசிரியர்: எம். ஏ. நுஃமான்
தமிழ்த்துறை, யாழ்ப்பாண வளாகம்
யாழ்ப்பாணம், இலங்கை
ஓவியம்: எஸ். கே. சௌந்தரராஜன் (சௌ)
வெளியீடு: வாசகர் சங்கம், கல்முனை - 6
அச்சு: கூட்டுறவு அச்சகம், யாழ்ப்பாணம்.
முதற்பதிப்பு: மார்ச், 1977
உரிமைகள் ஆசிரியருக்கு.
விலை ரூ. 5-00

THATHAMARUM PERARKALUM
(Grand-fathers and Grand-sons)
a Collection of longer poems
by M. A. Nuhman
First Edition: March 1977
Copyright with the Author
Illstrations by S. K. Sounderarajan ('Sow')
Published by: Readers' Association,
'Noori Manzil', Kalmunai - 6
Printed at: Co-op Printers, Main St, Jaffna.
Price Rs. 5/-

--------------------------------------------

என் வளர்ச்சிப் பாதையில்
சுவடுகள் பதித்த
மஹாகவிக்கும் நீலாவணனுக்கும்
இந்நூல் சமர்ப்பணம்


இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்து
பல ஆலோசனைகளும் திருத்தங்களும் கூறிய
நண்பர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கும்
அரிய தொரு அறிமுகமும் ஆலோசனைகளும் வழங்கிய
என் மதிப்புக்குரிய நண்பர் முருகையன் அவர்களுக்கும்
தன் ஓவியத் திறமையால் இந்நூலை அலங்கரித்த
இனிய நண்பர் சௌவுக்கும்
அச்சுவேலைகளில் அயராது உதவிய
நண்பர் ஏ. ஜே. கனகரத்தினாவுக்கும்
இந்நூலை உருவாக்கிய அச்சக ஊழியர்களுக்கும்
என் மனங்கனிந்த நன்றிகள்

எம். ஏ. நுஃமான்

-------------------------------------------------------

உள்ளே உள்ளவை

முருகையனின் அறிமுகம்
உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும் 11
அதிமானிடன் 22
கோயிலின் வெளியே 31
நிலம் என்னும் நல்லாள் 41
தாத்தாமரும் பேரர்களும் 59

-------------------------------------------------

முருகையனின் அறிமுகம்

பழங்காலத்திலே செய்யுள் இலக்கியம் ஆட்சி புரிந்த பல் வேறு துறைகளில் இன்று வசன இலக்கியம் ஆட்சி புரிகிறது. சிறுகதையும், நாவலும், நாடகமும் இன்று வசன இலக்கியம் பெரிதும் பயின்று வழங்கும் துறைகளாகும். இக்காலத்தில் வசன இலக்கியம் இவ்வாறெல்லாம் விரிந்து வளர்ச்சியுற்று விட்டமையால், செய்யுள் இலக்கியத்தின் ஆட்சிப் பரப்பு மிகவும் சுருங்கி விட்டது எனலாம். அவ்வாறு சுருங்கி விட்டபோதிலும், சிற்சில இலக்கியப் பணிகளைச் செய்வதற்கு வாய்ப்பான ஊடகமாக, செய்யுள் இன்றும் விளங்குகின்றது என்பதில் ஐயமில்லை. நவீன கவிதை என்பது, செய்யுளாகிய ஊடகத்தினால் வளம் பெறும் பொருத்தப்பாட்டையுடைய இலக்கியப் புலமே என்பது மனங்கொள்ளத் தக்கது.

இன்றைய தமிழகத்திலே கவிதைக் கலை பல வகைப்பட்டுப் பெருகி வருகிறது. மரபுக் கவிதை என்றும் பழம் பாணிக் கவிதை என்றும், புதுக்கவிதை என்றும் வசன கவிதை என்றும் பல தொடர்கள் அடிபடுகின்றன. இவ்வாறு லேபல் ஒட்டிக் கொண்டு வரும் ஆக்கங்களிற் பல சத்தற்ற சொற்கூட்டங்களாகவும், ஓலங்களாகவும், சுலோகங்களாகவும் உள்ளன. இவற்றிடையே கலைச்சீர்மை பொருந்திய கவிதைப் படைப்புகளும் என்றேனும் வருவதுண்டு என்பது மிகவும் ஆறுதல் தரும் செய்தியாகும். அத்தகைய மன ஆறுதலுடன் தொடர்புடைய ஒரு பெயர் எம். ஏ. நுஃமான் என்பது.

நுஃமான் நல்ல கவிதைகளை நமக்குத் தருவாரென்று நாங்கள் நம்பி இருக்கலாம். இது என் சொந்த அநுபவம். அவருடைய கவிதைகளில் மிகவும் தரங்குறைந்தன என எண்ணக்கூடியவை கூட, நமது சராசரி கவிதைகளவிட உயர்ந்தனவாகவே உள்ளன. அவர் எட்டியுள்ள உச்சங்களோ சில வேளைகளில் யாரும் இதுவரை சென்றடையாத உச்சங்களாக உள்ளன. இந்த வகையில் 'தாத்தாமாரும் பேரர்களும்' என்னும் இத்தொகுதி, வளமிக்க கவிதைகளைக் கொண்டதாக, கவிதைப்பிரியர்கள் நுஃமான்பால் வைக்கக்கூடிய எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுப்பனவாக உள்ளன.

இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பற்றிப் பொதுவான சில குறிப்புக்களைக் கூறியபின்னர், ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் எடுத்து நோக்குவோம்.

முதலாவதாக இக்கவிதைகளில் இடம்பெறும் கருத்துக்கள் பற்றிக் கூறலாம். 'முற்போக்கிலக்கியம் என்றால் என்ன?' என்ற வினாவை, அவ்வகை இலக்கியத்தின் எதிரிகள் இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 'முற்போக்கான எண்ணங்களைக் கொண்டு இயல்வதே முற்போக்கிலக்கியம்' என யாரும் கூறினால் 'முற்போக்கான எண்ணங்கள் எப்படிப்பட்டவை?' என்ற இரண்டாவது கேள்வி எழும். அந்த இரண்டாவது கேள்விக்கு உதாரண விளக்கமாக அமைந்துள்ளவை இத்தொகுதிக் கவிதைகளில் வெளிப்பாடு பெற்றுள்ள எண்ணங்கள். அவை வெளிப்பாடு பெற்றுள்ள விதமும் இலக்கியச் செழுமையுடன் அமைந்துள்ளது.

கருத்துக்கள் வெளிப்பாடு பெற்றுள்ள விதத்தை, கவிதையின் உருவம் என நாம் கருதுகிறோம். கவிதைகளுக்கு இரு வேறு உருவங்கள் உண்டு. அவை பொருள் உருவமும், ஓசை உருவமும் ஆகும்.

கவிதையின் பொருளுருவம் பற்றிய சிந்தனை நமது விமரிசன உலகில் இன்னும் நன்றாக வளர்ச்சி பெறவில்லை என்றே கூற வேண்டும். எனவே அதுபற்றி விபரிப்பதற்குத் தேவையான பதங்கள் தானும் இன்னும் சரியாக உருவாகவில்லை. தமிழ்க் கவிதையின் பொருளுருவம் பற்றிய ஆராய்ச்சி விரிந்த முறையிலே வரலாற்று நோக்குடன் மேற்கொள்ளத்தக்க ஒன்றாகும். அத்தகைய ஆராய்ச்சி எதுவும் இல்லாத இன்றைய நிலையிற்கூட, நுஃமான் கவிதையின் பொருளுருவம் பற்றிச் சில வார்த்தைகளை மிகவும் சுருக்கமாகவேனும் இங்கு சொல்லிவைக்க ஆசைப்படுகிறேன்.

நுஃமான் கவிதைகளின் பொருளுருவத்தில் முதன்மை பெற்று நிற்கும் அம்சங்கள் பின்வருவன:

(அ) காட்சி வைப்புகளின் வழியே கருத்துக்களை முன் நிறுத்துவது; மன ஓவியங்களை அல்லது எண்ணப் படங்களை - அதாவது அகக் காட்சிகளை - கவிதையின் மூலகமாகக் கொள்வது.

(ஆ) நிகழ்ச்சிக் கோவைகளின் வழியிலே கருத்துக்களை முன் நிறுத்துவது; 'நிலமென்னும் நல்லாள்' இந்தக் கலையாக்க நெறிக்கு உதாரணமாகும்.

(இ) கவிதையில் எடுத்தாளப்படும் கருத்து, கவிதையின் வளர்ச்சியோடியைந்து வளர்ந்து செல்வது. கட்டியாகி இறுக்கமான கல்லுப்போல அசைவின்றி நிற்பதில்லை நுஃமானின் கவிதைக் கருத்துக்கள். அவை உயிர்ப்பும் அசைவும் கொண்டு வளர்ந்து செல்கின்றன.

(ஈ) கருத்துகள் முனைப்புற்று வெளிக்காட்டி நிற்காமல், உள்ளமைந்து கிடத்தல். சான்றோர் (சங்க) இலக்கியத்தில் உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் எவ்வாறு நுணுக்கமாகக் கையாளப் பட்டனவோ அதே அளவு நுட்பமாகவும் கலை நயத்துடனும் நுஃமானின் எண்ண வெளிப்பாட்டு முறை உள்ளது.

"விழித்தபடி
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத்திருக்கும்"

என்று நுஃமான் கூறுவது எலிகளையும் பூனைகளையும் பற்றி மட்டும் தானா? இல்லை. அச்சொற்களின் பின்னால் உள்ள எண்ண ஓட்டங்களை நாம் தேடி அறிதல் வேண்டும். பொதுவாக, கவிதைகளைப் படிப்பதென்றால் (வெறும் விகடத் துணுக்குப் படிப்பதற்கும் மேலான) ஊன்றிய கவனத்தைச் செலுத்திப் படிப்பது நம் எல்லாருக்கும் வழக்கமே ஆகும். அனால், நுஃமானின் கவிதைகளை இன்னுஞ் சற்று மேலதிக உன்னிப்போடு படித்தல் வேண்டும். மீண்டும் மீண்டும் வாசித்தலும் அவசியமாகலாம். 'நவில்தொறும் நூல் நயம்' என்று வள்ளுவர் சொன்னது இதைத் தானே! (இந்த வகையில், பாரதியையும் பாரதிதாசனையும் ஒரு ருருவத்தில் வைத்தால், நுஃமானை மறுதுருவத்துக்கு அண்மையில் கொண்டு போக வேண்டி வரும். "மஹாகவியும்" நுஃமானுக்குக் கிட்டத்தான் நிற்பார்.)

இதுவரை சொன்னவை நுஃமான் கவிதைகளின் பொருளுருவம் பற்றிய குறிப்புகள். இனி ஓசை உருவத்துக்கு வருவோம். சில புதுக் கவிஞர்கள் நினைப்பது போல, நுஃமான் கவிதைகள் யாப்பிலாப் படையல்கள் அல்ல. அவை அச்சிடப்படும் முறையைக் கண்டு நாம் குழம்பிவிடல் ஆகாது. அகவலும் வெண்பாவும் கலிப்பாட்டுமாய் அமைந்த உருவிலேதான் இத்தொகுதியில் வரும் கவிதைகள் இயல்கின்றன. அந்த வகையிலே மரபுக் கவிஞர் என்ற பிரிவிலே நுஃமானைச் சேர்ப்பதற்குச் சிலர் முன்வரலாம். எந்தப் பிரிவிலே அவரைச் சேர்க்கிறோம் என்பது அவ்வளவு முக்கியம் அன்று. அவரது படைப்புகளின் மதிப்பு யாது? அவற்றின் பெறுமானம் என்ன? இவையே முக்கியமான கேள்விகள். இக்கேள்விகளுக்கு முழுமையான விடை காண வேண்டுமானால் முழு நூலையும் நன்கு பயிலுதல் வேண்டும். அவ்வாறு பயிலுதற்கு வழித்துணையாக, சில அறிமுகக் குறிப்புகளை ஒவ்வொரு கவிதை பற்றியும் இனிக் கூறுவேன்.

'உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்' என்பது முதலாவது கவிதை.காலமும் இடமுமாய் விரிந்து பரந்து கிடக்கும் உலகுக்கும், தனிமனிதன் ஒருவனுக்குமுள்ள தொடர்பு என்ன? இசைவு எப்படிப்பட்டது? இத்தகைய வினாக்களை இக்கவிதை எழுப்புகிறது. கவிதையின் பெரும்பகுதியில், ஐயங்களும், வியப்புகளும், திகைப்புகளுமே காணப்படுகின்றன. ஆனால், கவிதை வளர்ந்து முடிவுறும் தருணத்தில், கவிஞன் வெளிப்படுத்த எண்ணிய கருத்து நன்கு புலப்படுகிறது. தனிமனிதர்கள் தம் மனத்திலே உலகு பற்றிப் பலவாறாக எண்ணிக் கொள்ளலாம்; ஆனால் அந்த எண்ணங்களுக்குப் புறம்பாக, அந்த எண்ணங்களுக்குக் காலாக, யதார்த்தமான புறவுலகு உண்டு என்னும் தெளிவு உதயமாகிறது. இந்த உதயமே அக்கவிதையின் அடிக்கருத்து எனலாம். இக்கவிதையைப் படுக்கும் போது Dylan Thomas என்பார் எழுதிய 'Under Milk Wood' என்ற ஒலி நாடகம் என் நினைவுக்கு வருகிறது. குரல்களுக்கென எழுந்த அந்நாடகம், கடற்கரைப் பட்டினமொன்றில் வாழும் மாந்தர் சிலரின் நடத்தையைச் சித்திரமாக்குகிறது. ஒரு நாள் வைகறைப் பொழுதிலே தொடங்கி மறுநாள் வைகறைப் பொழுதில் நாடகம் முடிகிறது. அந்த நாடகத்தில், இடப்பரப்பு ஒரு குறிப்பிட்ட பட்டினத்தின் எல்லைக்குள் மட்டுப்பட்டு நிற்கிறது. காலப்பரப்போ ஒரு முழுநாள் என்னும் எல்லைக்குள் மட்டுப்பட்டு நிற்கிறது. ஆனால், நுஃமானின் கவிதையில் மேற்படி மட்டுப்பாடுகள் இல்லை. அந்த நாடகத்திலே தோமஸின் நோக்கம் மனித உறவுகளையும் நடத்தைகளையும் படம்பிடிப்பதே ஆகும். இந்தக் கவிதையிலே, நுஃமானின் நோக்கம், உலகுக்கும் மனிதனுக்குமுள்ள உறவுகளை விசாரணை செய்வதே ஆகும். அந்த நாடகமும் இந்தக் கவிதையும் பல வித்தியாசங்களை உடையன. ஆனால் வியக்கத்தக்க ஒற்றுமைகள் சிலவற்றையும் நான் காண்கிறேன்.

'அதிமானுடன்' என்னும் கவிதை, நுஃமானின் படக்காட்சி உத்திக்கு நல்ல உதாரணம். வரலாற்றின் ஓட்டத்திலே பற்பல நூற்றாண்டுகளின் படுவேகமான சுழற்சியை மிகவும் இலாவகமாகக் கையாளுகிறார் கவிஞர். மனித குலத்தின் இரு பாதிகளிடையும் உள்ள உள்முரண், வரலாற்றை நடத்திச் செல்லும் உந்தலாய் அமைவதை இக்கவிதையில் உணர்த்துகிறார் நுஃமான்.

'கோயிலின் வெளியே' நாடகப் பாங்கான அமைப்பு. நான் எழுதிய 'கோபுர வாசல்' என்னும் நாடகத்தின் இறுதிப் பகுதியிற்கூட, நுஃமான் கவிதையின் செல்வாக்குச் சிறிதளவு படிந்திருப்பதை நான் இப்போது உணர்கிறேன்.

அடுத்து 'நிலம் என்னும் நல்லாள்' என்னும் கவிதை வருகிறது. இது கிழக்கிலங்கைக் கமச்செய்கையின் யதார்த்தச் சித்திரமாகும். நம்மவர்களின் சிறுகதைகளும், நாவல்களும் கூட, இக்காட்சிகளை இத்துணை நடப்பியல் நயம் பொருந்த விபரித்துள்ளன எனல் கூடாது. கே. ஜயதிலக என்னும் சிங்கள நாவலாசிரியர் தமது 'சரித துணக்' என்னும் நாவலில், சிங்களக் கிராமத்துக் கமச் செய்கை பற்றியும், சேனைப் பயிர்ச் செய்கை பற்றியும் இயற்றிக் காட்டியுள்ள சொல்லொவியங்கள், நுஃமானின் கவிதைகளைப் படிக்கையில் என் நினைவுக்கு வந்தன.

'தாத்தாம்ரும் பேரர்களும்' என்பது முஸ்லிம் சமுதாய சரித்திர நோக்கு உடையது. ஏற்கனவே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ள இக்கவிதை இனியும் மக்களின் சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலே சொல்லப்பட்டவை வெறும் அறிமுகக் குறிப்புகளே. நுஃமானின் கவிதைகள் விரிவான ஆய்வுக்கு உட்பட வேண்டியவை எனினும் இந்த முன்னுரையில் இக்குறிப்புகளே போதும் என எண்ணுகிறேன்.

ஆயினும் நுஃமானுடைய கலையாக்க நெறியின் மற்றுமோர் அம்சம் பற்றி ஒரு கருத்தை இங்கு தெரிவிப்பது அவசியமாகிறது. அவரது கவிதையில் இடையிடையே வரும் 'கூறியது கூறல்' பற்றிய கருத்தே அது. 'கூறியது கூறல்' என்பது முன் சொல்லிய தொடர்களையோ அடிகளையோ மீட்டும் மீட்டும் கூறுவது ஆகும். சொல்லாற்றல் இல்லாத கவிஞர்கள் நைந்துபோன பழஞ் சொற்கோவைகளைத் தமது ஆக்கங்களில் மீட்டும் மீட்டும் போட்டடிப்பது உண்டு. அவ்வாறு செய்வது அவர்களது கையாலாகாத தனத்தையும் அவர்களை வருத்தும் சொற் பஞ்சத்தையும் காட்டும்.

ஆனால், நுஃமானின் 'கூறியது கூறல்' அப்படிப்பட்டதன்று. அது கவிதையின் பொருளுருவத்தில் ஒரு கூறாக இயல்கிறது. ஒரு கருத்தை நுட்பமாக அழுத்திக் கூறுவதற்கும், கவிதையின் கருத்துக் கூறுகளிடையே புதுத் தொடர்புகளைக் காட்டுவதற்கும், அத்தொடர்பின் வழியிலே கருத்துச் சேர்க்கையை நிகழ்வித்து, புதிய கருத்துக்களைப் பிறப்பிக்கும் பொருட்டுமே நுஃமான் தாம் முன்சொன்ன அடிகளை மீட்டும் மீட்டும் எடுத்துச் சொல்வதுண்டு.

இசை உருப்படிகளிலும் (பல்லவி போன்ற உறுப்புகளில்) 'கூறியது கூறல்' வருவதுண்டு. அங்கு ஓசை நயமும் அதன்வழி உருவாகும் இசைக்கோலமுமே முதன்மை பெறுகின்றன. ஏன் எதுகை மோனை கூட எழுத்தளவில் நேரும் 'கூறியது கூறல்'தானே! இவையும் சாதாரண செய்யுள்களில், ஓசையுருவம் பற்றிய ஒழுங்காக்கமாகவே நின்றுவிடும். ஆனால், உயர் கவிதைகளிலோ ஓசையுரு நிலைப்பட்ட 'கூறியது கூறல்' கூட, கவிதையின் அடிக்கருத்து வலிமை பெறும் வகையிலே இயல்வதை நாம் காணலாம்.

ஆதலால் நுஃமான் கவிதைகளில், ஓசையுருவம் பொருளுருவத்துக்கு இடையூறு செய்வதேயில்லை. அல்லாமலும் அது பொருளுருவத்துக்கு உதவியும் செய்கிறது. இதுவே நுஃமானின் தனிச் சிறப்பு என்பேன்.

இ. முருகையன்
31/1, சிறிபாலம் றோட்,
மவுன்ற் லவினியா,
இலங்கை.

----------------------------------------------------------

உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்...

குளத்தங் கரையில்
குந்தி இருக்கிறேன்
அழகழகாக அந்தி மாலையில்
குளத்து நீருள் கொட்டிய நிறமெலாம்
கரைந்து கரைந்து
கறுப்பாகின்றன.

விரைந்து செல்கின்றன பறவைக் கூட்டம்
எருமைகள் கூட எழுந்து செல்கின்றன
தவளை ஒன்றும் சப்திக் கின்றது.

குளத்தங் கரையின் குளிர்ந்த புற்களைப்
பச்சைக் கம்பளப் படுக்கையாய் நினைத்துச்
சாய்ந்து கிடக்கிறேன்.
சரிவில் மாடுகள்
மேய்ந்து மேய்ந்து வீடு செல்கின்றன.

ஆயினும் நான்இங்கு அமைதியாக
ஓய்வு தேடி உட்கார்ந் திருக்கிறேன்.
யாரோ ஒருவன்
அமைதியாக
ஓய்வுதேடி உட்கார்ந் திருக்கவா
புற்கள் இங்கு புதிதாய் முளைத்தன?

புற்கள் ஊடு புகுந்து திரியும்
சிற்றெறும் பிதனைச் சிந்தனை செய்யுமா
என்பதைப் பற்றி ஏதும் அறியேன்.
ஆயினம் நான் இங்கு அமர்ந்திருக் கின்றேன்.

மேய்ந்து மேய்ந்து வீடுசெல் கின்ற
மாடுகள் பற்றியும்
வயல் வரம்புகளிற்
குந்தி இருக்கும் கொக்குகள் பற்றியும்
சத்த மிட்ட தவளை பற்றியும்
புத்தி போன போக்கில்
எதையோ
நினைந்து நினைந்து
நெடுமூச் செறிகிறேன்.

இனையவை பற்றி நான் எண்ணுதல் போல
இந்த மனிதன் ஏன்இங் கிருக்கிறான்?
இந்த மனிதர் யார்? என இவைகள்
என்னைப் பற்றியும்
எண்ணுதல் கூடுமா?

என்னைப் பற்றி எண்ணா விடினும்
புதியதாய் வளர்ந்த புற்களில் அமர்ந்து
நான்
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் போல
எதைஎதைப் பற்றியோ
இவைகளும் எண்ணிச்
செல்லுதல் கூடுமா?

திரும்பிப் பார்க்கிறேன்.

வீதியில் கார்கள் விரைந்து செல்கின்றன.
வீதியில் மனிதரும் மிகுந்து செல்கின்றனர்.
எங்கெங் கேயோ இவர் செல்கின்றனர்!

எங்கெங் கேயோ ஏகும் இவர்களுள்
இன்ப நினைவுத் தொல்லைகள் உடனும்
இன்ப நினைவின் இனிமைகள் உடனும்
செல்லு கின்றவர்கள் சிலர் இருப்பார்கள்
இல்லை என்று
நான் எப்படிச் சொல்லுவேன்!

அவசரமான ஆயிரம் வேலைகள்
இவர்களுக் கிருக்கலாம்!

ஆயினும் இங்குதான்
இவர்களைப் பற்றி எண்ணுதல் போல
இவர், எனைப் பற்றியும் எண்ணுதல் கூடுமா?
என்பதைப் பற்றியும ஏதும் அறியேன்.

இந்நேரத்தில் எதைஎதைப் பற்றியோ
இங்கிருந்து நான் எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் கூடுமே!

இதோ, என் நாட்டில் இனிய சூரியன்
அஸ்த்தமிக் கின்றது.
ஆயின் இந்நேரம்
வேறொரு நாட்டில் விடிந்து கொண்டிருக்குமே!

இங்கே பறவைகள் இல்லம் செல்கின்றன
அங்கே பறவைகள் அணியணி யாக
இரைதேடற் காய் எழுந்து செல்லுமே!

இரவுண வுக்காய் இவர்கள் செல்கையில்
காலைப் பானம் கைகளில் ஏந்தி
அங்கே அவர்கள் அருந்தலாம் அன்றோ?

யாரோ ஒருவன் நீராடற்காய்
நீருட் துள்ளி நீந்தத் தொடங்கலாம்
யாரோ ஒருத்தி தன் மார்புக் கச்சையை
அணிந்து கொள்ள ஆரம் பிக்கலாம்.

இந்நேரத்தில் எதைஎதைப் பற்றியோ
இங்கிருந்து நான் எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் கூடுமே!

இதோ!
நான் கிழக்கில் என்முகம் திருப்பிக்
கிழக்கில் இருண்டு கிடப்பதைக் காண்கிறேன்.
கிழக்குத் திசையின் கிழக்கில் இந்நேரம்
நள்ளிரவாகி நாடுகள் உறங்குமே
வெள்ளிகள் வானில் மினங்கிக் கிடக்குமே
சந்திரன் எழுந்து தண்ணொளி சிந்துமே

சந்திரன் எழுந்து தண்ணொளி சிந்துமா?
அன்றேல் மேகம் அணைத்துக் கிடக்குமா?
என்பதைப் பற்றியும் ஏதும் அறியேன்.

ஆயினும் வீதியில் ஆட்கள் செல்லலாம்.
எங்கோ ஒருவனின் இல்லத் திருந்து
குறட்டைச் சத்தமும் கொஞ்சம் கேட்கலாம்.
எங்கோ ஒருவனின் இல்லத் திருந்து
குழந்தைகளின் அழுகுரல் கேட்கவும் கூடும்.

இனிய உணர்வுடன் எவனோ ஒருவன்
மனைவியை அணைத்து மகிழவும் கூடும்.
இன்னும் ஒருவன் தன் காதலியின்
கன்னம் வருடிக்
கதைக்கவும் கூடும்.

இரவு விடுதியில் எவளோ ஒருத்தி
ஆடை களைந்தே ஆடவும் கூடும்.

வேத நூலை விரித்து வைத்தே
ஓதி ஒருவன் உருகவும் கூடும்.
குடியானவனின் குடிசையில் யாரும்
இருமிக் கொண்டும் இருக்கலாம் அன்றோ?

இந்நேரத்தில் எதைஎதைப் பற்றியோ
இங்கிருந்து நான் எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் கூடுமே!

இதோ, இந்நேரம் எத்தனை பேரோ
மரணவஸ்தையில் வருந்துல் கூடும்
பிரசவ வேதனை கொண்ட பெண்கள்
எத்தனை பேரோ இரங்குதல் கூடும்.
எத்தனை எத்தனை இடத்தில் இந்நேரம்
மரண ஊர்வலங்கள் வருதல் கூடுமோ?

இந் நேரத்தில் இங்கிருந்து நான்
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதை எதைப் பற்றியோ
எண்ணுதல் கூடுமே

இந்த மாதிரி எண்ணிச் செல்கையில்
இந்த உலகுதான் எத்தனை பெரியது!

மேற்கை நோக்கி விரைந்து சென்றால்
மேற்கோ மேற்கிலே விரைந்து செல்கின்றது.
வடக்கை நோக்கி வடக்கே சென்றால்
வடக்கு வடக்கிலே வழிச்செல் கின்றது.

கிழக்கை நோக்கி கிழக்கே சென்றால்
கிழக்கு கிழக் கெனக் கிழக்கே போகிறேன்.
தெற்கை நோக்கித் தெற்கே சென்றால்
தெற்கு தெற்கிலே செல்லக் காண்கிறேன்.

இப்படி யாக
என்னைச் சுற்றிய
இந்த உலகுதான் எத்தனை பெரியது!

என்னைச் சுற்றிய இப்பெரும் உலகைச்
சின்னஞ் சிறியதாய்ச் சிருஷ்டித் திருந்தேன்.

இதோ என் கிழக்கென
எட்டிப் பிடித்தேன்.
இதோ என் மேற் கென
எண்ணிக் கொண்டேன்.

இந்த மாதிரி
எண்ணும் போதில்
இந்த உலகுதான் எத்தனை சிறியது!

மற்றவைகளை மறந்து விட்டு
என்னைப் பற்றியே எண்ணும் போதில்
இந்த உலகுதான்
எத்தனை சிறியது!

குளத்தங் கரையின் குளிர்ந்த புற்களைப்
பச்சைக் கம்பளப் படுக்கையாய் நினைத்து
ஓய்வுக் காகச் சாய்ந்திருக் கின்ற
இந்நேரத்தில்.....
இந்நேரத்தில்.....
இந்த உலகின் சந்தையில் நிகழும்
நிகழ்ச்சிகள் பற்றி நினைத்துப் பார்க்கையில்
அகஉலகத்தின் ஆழத்தே, நான்
எதை உணர்கின்றேன் என்பதைத்
தெளிவாய்
எடுத்துச் சொல்ல இயல வில்லையே!

எறும் பொன்று எனது எழுதும் தாளில்
உலாவி உலாவி
ஊர்ந்து திரிந்தது
ஏன் அவ் எறும்பு என் எழுதும் தாளில்
ஊர்ந்து திரிந்ததோ?

ஒவ்வொன்றாக
என்ன எழுதினேன்
என்பதை அறியவா.........?

சின்ன எறும்பு சொல்லும் வழியிலே
எனது தாளும் எதிர்ப்பட் டதனால்
தனது கால்களால் தாண்டித் தாண்டிச்
செல்லற் காகவே திரிகிற தன்றோ?

இல்லை என்று நான்
எப்படிச் சொல்லுவேன்!

ஒவ்வோர் உயிரும்
ஒவ்வோர் உலகாய்ச்
சுற்றிச் சுற்றிச் சுழல்கிற வழியில்
மற்றவற்றையும் வந்து காண்கின்றன.

தனியே செல்லும் தங்கள் பாதையில்
துணைநிற்பவற்றுடன் துணையாய் நின்றும்
எதிர்த்து நிற்பதை எதிர்த்து நின்றும்
சுற்றிச் சுற்றிச் சுழன்று செல்கின்றன.

சுற்றிச் சுற்றிச் சுழலும் உயிர்களின்
வழியிலே நானும் வந்து நிற்கிறேன்.
இதனை விட்டு நான் எங்குதான் செல்வேன்......!
பாழ் வெளிக் கப்பால்
தனித்த பாதையில்
சுற்றிச் சுற்றி நான் சுழலவும் கூடுமா?

யார் என் நண்பர்?
யார் என் பகைவர்?
எனது சுழற்சியில் இவர்களைக் காண்பேன்.

மற்றவை எனது
வழியிலே வருக!
மற்றவை எனது வழியிலே வருங்கால்
சுற்றலின் முடிவு
சோபன மாகுக!

இருட்டு வந்தெனை எழுப்பி விட்டது.
மரங்கள் அசைந்து மகிழும் படியாய்க்
காற்று வீசிக் கடந்து சென்றது.
மேற்கில் இருந்தோர் வெள்ளி வீழ்ந்தது
குவளை பூத்த குளத்தில் இருந்து
தவளை ஒன்றும் சத்தம் இட்டது.

ஆட்கள் யாரோ
யாரையோ நோக்கிக்
கூக்குரல் இட்டுக் கூப்பிடு கின்றார்.

ஆலையின் இலைகளில்
அணைந்தும் ஒளிர்ந்தும்
மின்மினிப் பூச்சிகள் மினுங்கு கின்றன.

இன்னும் இன்னும்
இப்படி இப்படி
எல்லா உயிர்களும் இயங்கு கின்றன.

போய்க் கொண்டிருக்கும் போதில்
சேய்மை அண்மையில்
செல்வதைக் கண்டேன்.

19. 11. 1966

----------------------------------------

அதிமானிடன்

எங்கும் இருட்டாய் இருந்தது. அந்தக்
கங்குற் பொழுதில் கறுத்த வானிலே
மின்னல் ஒன்று மின்னி மறைந்தது.
மின்னலின் பின்னால் மிகப் பெரிதாக
இடி இடித்துக் குமுறி இரைந்தது.

இடியின் ஒலியில் இருண்டு கிடந்த
கானகம் அதிர்ந்து கலகலத்தது.
யானைகள் பயந்து பிளிறி இரைந்தன.
தாரகை போலத் தணலாய்ச் சிவந்த
கண்களை உடைய புலிகள் உறுமின.

அடர்ந்த அந்தக் காட்டின் இடை ஓர்,
இருட்டுக் குகையுள் இருந்தான் மனிதன்.
பரட்டைத் தலையன். பிறந்த மேனியாய்க்
கையில் தடியுடன் காவல் இருந்தான்.

உள்ளே ஒருபுறம் உலர்ந்த விறகுகள்.
தணலும் சாம்பலும் ஆகக் கிடந்தன.
காலையில் கொன்ற பெரிய பன்றியின்
பச்சை மாமிசம் ஒரு பக்கம் இருந்தது.
சருகுகள் பரப்பிய தரையில், சற்றுத்
தள்ளிக் குழந்தைகள் சயனித் திருந்தன.

பிள்ளைகள் கிடந்த இடத்தில் ஒருபால்
மல்லாந்து கிடந்தனள் மங்கை; அவளின்
இமைகள் மூடி இருந்தன. பெரிய
சுமையாய்த் திரண்ட மார்பின் மீதில் ஓர்
கைகிடந்தது, கழுத்தின் கீழ் மறு
கைகிடந்தது.

காவல் இருந்த
மனிதன் அவளது வதனம் பார்த்தான்
விம்மிக் கிடந்த மார்பை வெறித்தான்
அகன்று கிடந்த கால்களின் இடைஅவன்
கண்கள் மேய்ந்தன.

கல்லில் குந்தி
இருந்தவன் எழுந்தான்; இருள் அருகமர்ந்து
கட்டி அணைத்தான்; கன்னம் முகர்ந்தான்
மார்பினை வருடிஅம் மனிதன் மகிழ்ந்தான்.

வெளியே,
எங்கும் இருட்டாய் இருந்தது; அந்தக்
கங்குற் பொழுதில் கறுத்த வானிலே
மின்னல் ஒன்று மின்னி மறைந்தது.
இடியும் மழையும் இரைந்து கலந்தன.
கானகம் அதிர்ந்து கலகலத்தது.

2

பரந்து கிடந்த பசும்புல் வெளியில்
மாடுகள் மேய்ந்தன. மனிதன் ஓர்புறம்
நின்று கொண்டிருந்தான் ஏதோ நினைவுடன்.
கன்று பசுவைக் கத்தி அழைத்த
சத்தம் கேட்டது. தனித்த ஓர் மாட்டின்
ஏரியில் நின்ற காகம் ஒன்றும்
கத்தியது. அவதன் கைத்தடி கொண்டு
குத்தி நிலத்தில் குழூண்டாக் கினான்.

பரந்து கிடந்த பசும்புல் வெளியில்
புற்கள் குறைந்து போய் இப்போது
நாட்கள் பலப்பல நடந்து விட்டன.
ஆயினும் மனிதன் அவ்விடம் விட்டுப்
போவதற் கின்னும் புறப்பட வில்லை.
எங்கு போகலாம் என்பதைப் பற்றிய
நினைவில் ஆழ்ந்து அவன் நிலத்தைக் கிண்டினான்.
மாடுகள் இளைத்து வாடி இருந்ததைக்
கண்ட போதவன் கண்கள் கலங்கின.

அகன்ற ஓர் மரத்தின் அடியிலே வந்து
குந்தினான் மனிதன். குடிசையில் இருந்து
வந்த அவனின் மனைவி, புதிதாய்ச்
சுட்ட கிழங்கும் சுட்ட இறைச்சியும்
தொட்டுக் கொள்ளத்ச் சொற்ப தேனும்
கொண்டு கொடுத்தாள். அவளும் அவனுடன்
உண்கையில் வழிந்த உதட்டுத் தேனை
நக்கிச் சிறிதே நகைத்தான் மனிதன்.

அவளின்
இடையில் கட்டி இருந்த இலைகள்
வாடி இருப்பதைக் கண்டான். உடனே
ஓடிச் சென்று பெரிய இலைகளாய்
ஆய்ந்து அவளை அணியச் செய்தான்.

3

ஆற்றிலே அலைகள் புரண்டன. மெதுவாய்க்
காற்று வீசியது. கரையில் நின்ற
மரங்களில் பூத்த மலர்கள் உதிர்ந்து
ஆற்று நீரின் அலைகளில் மிதந்தன.

பச்சையாய்த் தெரிந்த பயிர் வயல்களிலே
உச்ச மான விளைவை உண்டாக்கப்
பாய்ந்த அந் நீரில் பரிதியின் கதிர்கள்
பட்டுத் தெறித்தன. பல அலங்காரக்
கட்டிடங்கள் காட்சி அளிக்கும் ஓர்
தெருவினை நோக்கி விரைந்ததேரிலே
ஒருபுறம் மனிதன் உட்கார்ந் திருந்தான்.
மடியிலே அவனின் மனைவிக்காக
வாங்கிய ஆடையை மடித்துவைத் திருந்தான்.

ஆடையின் மெதுமையைத் தடவிய போதில்
மாதின் மேனியை வருடுதல் போல
உணர்ந்தான்; உடனே உடல்சிலிர்ப் படைந்தான்.
காட்டுப் பாதையில் மலர்ந்து கமழ்ந்த
பூக்களில் அவளின் புன்னகை கண்டான்
வானிலே அவனது தேரை முந்திப்
பறந்து சென்றஓர் பறாஇயும் கண்டான்.

வாசலில் வருவதும் வந்து பார்த்துப்
பூசலுடனே உட்புறம் போவதும்
ஆக நடந்தும் அலுக்கா அவளின்
பாதம் பழுத்துச் சிவந்துபோம் என்பதை
எண்ணிய போதில் இவன்மிக நொந்தான்.
'பாகா இன்னும் வேகமாகப்
போ' எனச் சொல்லி வெளிப்புறம் பார்த்தான்.
குதிரையின் வாயில் நுரைமிக வழிந்தது
அதைமிக அடித்து விரட்டினான் பாகன்.

4

கறுத்த முகில் வானில் கவிந்தன.
இறுக்கமாகைருள்கையில், காற்றும்
வேகமாக வீசிச் சுழன்றது.

கடலிலே அலைகள் குமுறி எழுந்தன
அலைகளில் மிதந்த அச்சிறு கப்பல்
ஆடி அசைந்தே அமிழப் பார்த்தது.
மூடி இருந்த உட்புற எங்கும்
அலைநீர் புகுந்தது. அதனுள் இருந்த
மனிதன் கப்பலை வளைத்துத் திருப்பினான்
நனைந்தவாறே நல்ல இருட்டில்
பாய்மரக் கம்பம் ஏறிப் பணித்தான்.

அவளும் அவன்போல் நனைந்துபோய் இருந்தாள்.
கூதலும் பயமும் சேர்ந்து கொடுகினாள்.
'என்ன பயமா?' என்றான் மனிதன்.
'இல்லை' என்றாள் இவள். அவன் சிரித்தான்.

'கரைகாண் வரைநான் கப்பல் விடுவேன்
அலையும் புயலும் அடிக்கினும் என்ன
பயப்பட வேண்டாம்' என அவன் பகர்ந்தான்.
கரை தெரியாத கடலிலே, அச்சிறு
கப்பல் சென்றது கடும்புயல் இடையே.

5

வெயில் எறித்தது; வியர்வைத் துளிகளை
மனிதன் விரல்களால் வழித்து நிமிர்ந்தான்.
விழித்த காலைப் பொழுதிலே இருந்து
அழித்த காட்டிடை, அதுவரை அமைத்த
தண்ட வாளத் தொடரின் வழி அவன்
கண்கள் சென்றன; களைப்படைந் திருந்தான்.

தொலைவில் மேகம் துயின்று கிடந்த
மலையினை அந்த மனிதன் பார்த்தான்.
அந்த மலையின் அப்பால் செல்லத்
தண்ட வாளம் சமைக்கும் தனது
திறமையில் ஒருகணம் பெருமிதம் உற்றான்.

மலையினைத் துளைத்து வெடிமருந்துகளை
அடைத்தபின் திரியினை அப்பால் இழுத்துச்
சென்று, திரியினில் தீயினை வைத்தான்.
சீறி எரிந்த திரியினை விட்டும்
தூர ஓடினான். தொலைவிலே உள்ள
மறைவிடம் வந்ததும் மலையினைப் பார்த்தான்.
தொலைவிலே மேகம் துயின்று கிடந்த
மலையிலே வைத்த மருந்து வெடித்தது.
கானும் மலையும் அதிர்ந்த பேரொலியிடை
வானிலே கற்கள் சிதறிப் பறந்தன.

தொலைவில் நின்ற மனிதனின் நெற்றியில்
சிறியதோர் கல்லின் சிதறல் விழுந்தது.
'அம்மா' என்றே அவன் அதைப் பொத்தினான்.

'ஐயோ' என்றே அவள் அவன் அருகே
ஓடி வந்தாள்; ஒருகணம் அவளின்
மெய் சிலிர்த்தது. மேனியில் கிடந்த
துணியினைக் கிழித்து நீரிலே தோய்த்தாள்
பிளந்த நெற்றியில் வழிந்த குருதியைச்
சற்றே துடைத்துச் சுற்றிக் கட்டினாள்
'வலிக்குதா' என்றனள் மங்கை.
'இல்லை' என்றே இவன் நகை செய்தான்.

6

அந்தி சாய்ந்தது; அந்த வீட்டிலே
வானொலி மெதுவாய்ப் பாடுதல் கேட்டது.
குளியல் அறையில் அவன் குதூகலத்துடன்
சவர்க்கா ரத்தைத் தாடியில் பூசினான்.

அடுத்த அறையில் அவள் அவன் பெட்டியில்
ஒவ்வொன் றாக உடுப்பினை வைத்தாள்.
வெவ்வே றாகக் கிடந்த சப்பாத்தினைத்
துடைத்தே ஒருபுறம் தூக்கி வைத்தாள்.
அவன்உள் நுழைந்தான்; ஆடையை அணிந்தான்
கழுத்திலே ரையைக் கட்டிக் கொண்டான்.
தோளிலே கமறா தொங்க விட்டான்.
வாயிலே சிகரட் வைத்த வாறு
வெளியிலே வந்தான். மென்மையான
மணம்பரவியது. அவளும் வந்தாள்.
காரிலே அவன் அவள் கைவிரல் நகத்தைத்
தடவிய போதவள் சற்றே சிலிர்த்தாள்

விமானம் எழுந்து மேலே பறந்தது.
அவன் அவள் இடையை அணைத்துப் பிடித்தான்.
சன்னலின் ஊடே தரையில் தெரிந்த
காட்சியை அவளைக் காணச் செய்தான்.
மேகமண்டல மெத்தையில் உரய்ந்து
சென்ற ஜெட் விமான நீள்புகைக் கோடுகள்
நீல வானில் நெளிந்து தெரிந்தன.

ஏழாம் திகதி இங்கிருந்து போய்
ஆறாம் திகதி அமெரிக்காவின்
பட்டண மொன்றில் பகல் உணவுண்டார்.
ஜப்பான் அரங்கின் நாட்டிய நிகழ்ச்சியை
அமெரிக் காவில் அமர்ந்து அவர் கண்டார்.

7

காலைப் பனியும் குளிரும் கலந்து
விண்மீன் வெளிறி விடிகிற பொழுதில்
வான் வெளிக் கப்பலில் மனிதன் அமர்ந்தான்.

கருவிகள் அனைத்தும் பரிசோதித்தான்.
சரி, இனி எதுவும் தாமதம் இல்லை.
பேரொலி ஒன்று வெடித்துப் பிறந்தது.
தீப் பிழம் பினது திரண்ட புகையிடை
ஏவுகணையின் இயக்கம் நிகழ்ந்தது.
நூறு கோடி டாலரைச் சுமந்து
அப்பலோ பூமியின் அப்பாலாகி
காற்று மண்டலம் கடந்து பறந்தது.

வான் வெளிக் கப்பலுள் மனிதன் இருந்தான்.
பூமியைச் சுற்றிப் புதிய திசையிலே
மேல்கீழ் அற்ற வெளியிலே சென்றான்.
கரிய கம்பளத் திரையிலே பதித்த
ஒளிமுத் துக்களின் இடையிலே ஊர்ந்தான்.
தொலைவிலே நீல மேகம் சூழ்ந்த
மண்ணின் வடிவ வனப்பினைக் கண்டு
உடல் சிலிர்ப் படைந்தான். உடனே தரையில்
இருந்தவளுக்கும் இதனைக் காட்டினான்.

வீட்டின் ஓர் அறையில், மேசைமுன் அமர்ந்து
இரண்டரை இலட்ச மைல்களுக் கப்பால்
சந்திரத் தரையின் சாம்பல் மண்ணிலே
காலடி வைத்த கணவனைக் கண்டாள்.
ஏணிப் படியில் இறங்கிய போது, அவன்
இதயத் துடிப்பை எண்ணிக் கணித்தாள்.
'தந்தையே' என்றவன் தனையன் அழைத்தான்
'மகனே' என்றவன் மறுமொழி சொன்னான்.

8

உலகைக் கையின் ஒருபிடிக் குள்ளே
அடக்கிக் கொண்டு, அதற்கப்பாலே
விண்வெளி கடந்து வெளியிலே உள்ள
கோளங் களிலே வாழ முனையும்
பாதி மனிதனின் மற்றையப் பாதி
வீதி தோறும் அலைந்து திரிந்தான்.
பரட்டைத் தலையும் பசித்த கண்களும்
மெலிந்து தோன்றும் மேனியு மாக
வீதி தோறும் அலைந்து திரிந்தான்.

தொழிற்சாலைகளின் உலைக் களங்களிலே
வெந்து வெந்து மேனியின் வலிமை
அனைத்தையும் யார்க்கோ அர்ப்பணம் செய்தான்.
கழனிச் சேற்றில் வியர்வையைக் கலந்து
பொன்விளைவித்துப் போடிமார்க் களித்தான்.
பழைய கஞ்சியைப் பருகி இருந்தான்.
ஆலயக் கதவுகள் அவன் நுழையாது
மூடிக் கிடந்தன
முடிவிலே மனிதனின்
இரண்டு பாதியும் இருவேறாக
முதிர்ச்சி அடைந்ததால் மோதிக் கொண்டன.

இளைத்த பாதியின் இதயத் துள்ளே
உயிர் வாழ்வதற்கோர் வேட்கை உதித்ததால்
பூமியில் அவன்ஓர் போரிலே குதித்தான்.

தலையிலே பெரிதாய்த் தடிஅடி வீழ்ந்தது.
பிளந்த தலைமிகப் பெரிதாய் வளர்ந்தது
குண்டுகள் உடலைத் துளைத்துச் சென்றன
துளைகளில் இருந்து அசுரர் தோன்றினார்.

இளைத்த பாதியின் இதயத் துள்ளே
உயிர்வாழ் கின்ற வேட்கை உதித்ததால்
அவன் அதிமானிடன் ஆக மாறினான்.

மாறிய அந்த மனிதன்
பூமியில் புரியும் போர்மிகப் பெரிதே.

-----------------------------------------------------------------------

கோயிலின் வெளியே

கோயிலின் வெளியே கூச்சல் கேட்டது
பூட்டிய கதவின் புறமாய் நின்ற
மக்கள் பெரிதாய்ச் சத்தம் இட்டனர்.

இரும்புக் கதவை இழுத்துப் பூட்டிய
குருக்கள்
உள்ளே குத்து விளக்கினை
ஏற்றி வைத்தே இறைவனைத் தொழுதார்.

கோயிலின் வெளியே கூச்சல் கேட்டது
பூட்டிய கதவின் புறமாய் நின்ற
மக்கள் பெரிதாய்ச் சத்தம் இட்டனர்.

குருக்களே நாங்கள் கும்பிட வந்தோம்
கதவைத் திறவும்
கதவைத் திறவும்
கடவுளை நாங்கள் காண வந்தோம்
கதவைத் திறவும்
கதவைத் திறவும்

மக்களின் குரல் அம்மதில்களின் மீதும்
கடவுள் இருந்த கருவறை உள்ளிலும்
மோதி மோதி
முன்புறம் திரும்பிக்
காற்றில் ஏறிக் ககனம் சென்றது.

ஆரவாரம் அதிகரித்ததும் அக்
கோபுரத்தில் நின்ற குருவிகள்
கத்திக் கொண்டு கலைந்து பறந்தன.

2

இரும்புக் கதவை இழுத்துப் பூட்டிய
குருக்கள்
உள்ளே குத்து விளக்கினை
ஏற்றி வைத்தே இறைவனைத் தொழுதார்.

ஆண்டவா,
இந்தத் தீண்டத் தகாத
பாவிகள் உன்னைப் பார்க்கத் தகுமோ?
இவர்கள் மேனியின் வியர்வை நாற்றமும்
அழுக்கிலே புரண்ட அவர்கள் பாதமும்
தொழத்தகும் உனது தூய்மையான
வாயிலைக் கடந்து வரத் தகுந்ததுவா?

ஐயனே பெரிய அபசாரம் இது
ஐயனே பெரிய அபசாரம் இது!

குருக்கள் தலையிலே
குட்டிக் கொண்டார்
மணியை அடித்தொரு
வாழ்த்திசை பாடினார்

3

வாயிலில் நின்ற மனிதரின் கூச்சல்
கடவுள் இருந்த கருவறை உள்ளில்
மோதி மோதி எதிரொலி செய்தது.
வெளியிலே மெதுவாய் இருள் கவிகிறது
மேற்கிலே சூரியன் விழத் தொடங்கியது
காற்று மெதுவாய் அசைந்ததும் - அங்கே
புழுதிப் படலம் எழுந்து கலைந்தது.

காய்ந்த உடலும் கசங்கிய உடையும்
வியர்வை நாறும் மேனியு மாக
நின்ற அம்மக்கள் நெருங்கி வந்தனர்.

கோயிலின் உள்ளே கூடி நின்ற
தர்மகத் தாக்களும் சத்தம் இட்டனர்
கோப வெறியில் மேனி கொதித்தனர்
கண்கள் சிவந்து கனிந்து கிடந்தன.

நாய்களே
உள்ளே நாங்கள் தொழுகையில்
பேய்கள் போலப் பிதற்றுகின் றீர்களா?
ஒன்றும் அறியாப் பன்றிக் கூட்டம்
அழுக்கிலே புரளும் அற்ப சனங்கள்
நீங்கள் எம்முடன் நிகராய் நிற்பதா?

நாங்கள் வணங்கும் கடவுளின் எதிரே
நீங்கள் வந்து நிற்கவும் தகுமா?
போங்கள் அப்பால்
போங்கள் அப்பால்......

கோயிலின் உள்ளே கூடி நின்ற
தர்மகத்தாக்கள் சத்தம் இட்டனர்.
நீறுபூசிய நெற்றியில் கசிந்த
வியர்வையைப் பட்டுச் சால்வையால் வீசினர்.

பூட்டிய கதவின் புறமாய் நின்ற
மக்கள் பெரிதாய்ச் சத்தம் இட்டனர்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாகக்
கோயிலை எங்கள் குறுக்கே நிறுத்திய
அந்த நாட்கள் அகன்று விட்டன.

உங்கள் வாழ்க்கை உயர்வதற் காக
கோயிலை எங்கள் குறுக்கே நிறுத்திய
அந்த நாட்கள் அகன்று விட்டன.

கலிமுற்றியது, கலிமுற்றியது!
தெய்வ நியதியைப் பொய்யாக் கிடவும்
தெய்வத் தலத்தைத் தீட்டுப் படுத்தவும்
பாபாத் மாக்கள் பயப்பட வில்லை.
அபசாரம் இது
அபசாரம் இது!

குருக்கள் தலையிலே குட்டிக் கொண்டு
வெளியிலே வந்து வீதியை நோக்கினார்.

4

வெளியிலே மெதுவாய்
இருள் கவிகிறது.
மேற்கிலே சூரியன் விழுந்த இடத்தில்
வானச் செம்மை மங்கித் தெரிந்தது.
தூரவானில் தென்னைகள் இடையே
வெள்ளிப் புள்ளிகள்
மெல்ல ஒளிர்ந்தன.

கோயிலின் வெளியே கூச்சல் வலுத்தது
கதவைத் திறவும்
கதவைத் திறவும்
என்ற சத்தம் இரைந்து கலந்தது.

காய்ந்த உடலும்
கசங்கிய உடையும்
வியர்வை நாறும் மேனியுமாக
நின்ற அம்மக்களின்
நெஞ்சும் கரமும்
ஆவேசத்தால் அதிர்ந்து துடித்தன.

அது ஒரு காலம்
அந்த நாளில்
நாங்கள் உம்மெதிர் நாணி நின்றோம்
இறைவனின் முகத்தில் இருந்து தோன்றிய
குருக்களின் எதிரில் வரவும் கூசினோம்
இறைவனின் தோளில் இருந்து தோன்றிய
அரசரை எமது கடவுளாய் ஆக்கினோம்
இறைவனின் வயிற்றில் இருந்த தோன்றிய
வணிகரின் ஏவல் நாய்களாய் வாழ்ந்தோம்
இறைவனின் பாதம் இருந்து தோன்றிய
எமக்குப் புழுதியே ஏற்றெதென் றெண்ணினோம்.
இப்படி நீங்கள்
செப்பிய தெல்லாம்
உண்மை என்றூ ஒப்புதல் செய்தோம்.

அதோரு காலம், அந்த நாளில்
நாங்கள் உம்மெதிர் நாணி நின்றோம்
தீண்டத் தகாத சின்ன மனிதர்
நாங்கள் என்பதை நம்பி வாழ்ந்தோம்.

கதவைத் திறவும்
கதவைத் திறவும்
கடவுளை நாங்கள் காண வந்தோம்
கதவைத் திறவும்
கதவைத் திறவும்

கோயிலின் வெளியே கூச்சல் வலுத்தது
கதவைத் திறவும் கதவைத் திறவும்
என்ற சத்தம் இரைந்து கலந்தது.
காய்ந்த உடலும் கசங்கிய உடையும்
வியர்வை நாறும் மேனியுமாக
நின்ற அம்மக்களின் நெஞ்சும் கரமும்
ஆவேசத்தால் அதிர்ந்து துடித்தன.

5

உங்கள் வாழ்வும்
உங்கள் வளமும்
மேலும் மேலும் விரிவதற் காக
எங்களைப் புழுதியில் எறிந்தீர் என்பதை
நாங்கள் இன்று
நன்குணர்ந் துள்ளோம்.

கடவுளைக் கோயிலின் கருவறை உள்ளே
பூட்டி விட்டு எமைப்
புழுதியில் எறிந்தீர்
என்பதை நாங்கள்
இன்றுணர்ந் துள்ளோம்.

ஆகவே
நாங்கள் அதனை அழிப்போம்
கதவை உடைப்போம்
கதவை உடைப்போம்
கடவுளை நாங்கள் விடுதலை செய்வோம்

விடுதலையான கடவுளைக் கொண்டே
எங்கள் உயர்வை
எங்கும் அறைவோம்
பிறக்கும் போதே பெருக்கிய பாபச்
சுமையுடன் நாங்கள் தோன்றினோம் என்று
செப்பும் கொள்கையைத் தீயிட வைப்போம்.

எமது பிறப்பிலே யாம்மிகப் புனிதர்
எமது தந்தையும்
எமது தாயும்
தங்கள் பிறப்பிலே புனிதமானவர்
என்ற கொள்கையை
இயம்பிடச் செய்வோம்.

கதவை உடைப்போம்
கதவை உடைப்போம்
கடவுளை நாங்கள்
விடுதலை செய்வோம்

பூட்டிய கதவின் புறமாய் நின்ற
மக்கள் பெரிதாய் சத்தம் இட்டனர்
குருக்கள் கோயிலின் உள்ளே புகுந்தார்.
தர்மகத்தாக்கள் தாவிச் சென்றனர்
வெளியே எங்கும் இருளாய் இருந்தது
வானிலே வெள்ளிகள் மலிந்து கிடந்தன.

6

காய்ந்த உடலும் கசங்கிய உடையும்
வேர்வை நாறும் மேனியுமாக
நின்ற அம்மக்களின்
நெஞ்சும் கரமும்
ஆவேசத்தால் அதிர்ந்து துடித்தன.
இரும்புக் கதவை இழுத்தசைத் தார்
புழுதி எழுந்து புரண்டு பறந்தது.

கதவை உடைப்போம்
கதவை உடைப்போம்
கடவுளை நாங்கள் விடுதலை செய்வோம்
எங்கள் உயர்வை
எங்கும் இசைப்போம்
பறையர் எனினும் பார்ப்பனர் எனினும்
வியர்வைத் துளியில்
மேன்மை காண்போம்.

இப்படி மக்கள் இரைச்சல் இட்டனர்
ஆவேசத்தால் ஆர்ப்பரித்தார்கள்
இரும்புக் கதவை இழுத்தசைத் தார்கள்
புழுதி எழுந்து புரண்டு பறந்தது.

தாவிச் சென்ற தர்மகத்தாக்கள்
போலிஸ் வண்டியில் உட்புகுந்தார்கள்.
கோயிலின் வெளியே குழப்படி செய்து
தெய்வத் தலத்தைத் தீட்டுப் படுத்திய
மனிதரின் உள்ளே வந்து பாய்ந்தனர்.

கோயிலா அல்லது கூத்து மடமா?
சந்தியா இது சந்தைக் கடையா?
அற்ப நாய்களே அகன்று போங்கள்
தர்மகத்தாக்கள்
சத்தம் இட்டனர்.

கதவை உடைப்போம்
கதவை உடைப்போம்
கடவுளை நாங்கள் விடுதலை செய்வோம்
பிறப்பிலே நாங்கள்
புனிதர் என்பதை
இறப்பினும் நாங்கள்
இங்கு மொழிவோம்.

இப்படி மக்கள் இரைச்சல் இட்டனர்
இரும்புக் கதவை இழுத்துடைத் தார்கள்
புழுதி எழுந்து புரண்டு பறந்தது.

சடசட என்று தடிஅடி கேட்டது
ஐயோ என்று அலறுதல் கேட்டது
கடவுளே என்று கதறுதல் கேட்டது
சுவரிலே மோதித் துவண்டு விழுந்த
ஓருவனின் மேலால் ஒடினர் மக்கள்.

புழுதி எழுந்து புரண்டு பறந்தது
வானை மூடி மறைத்தது புழுதி
வெள்ளிகள் புழுதியுள் மெல்ல மறைந்தன
சுவரிலே மோதித்
துவண்டு விழுந்த
மனிதன்
கடவுளே என்று புலம்பினான்.

கண்ணீர்ப் புகையால் கலைந்த மக்கள்
தள்ளி நின்று சத்தம் இட்டனர்.
இது ஆரம்பம்
அது ஆரம்பம்
இனியும் தொடர்வோம்
இனியும் தொடர்வோம்
விடிவை நோக்கி
விரைந்து செல்வோம்
கடவுளை நாங்கள்
விடுதலை செய்வோம்
எங்களை நாங்களே விடுதலை செய்வோம்
இருட்டில் தூர இக்குரல் கேட்டது.

இரும்புக் கதவை இழுத்துப் பூட்டிய
குருக்கள் தனது குடுமியை அவிழ்த்துக்
கட்டிக் கொண்டார்; கடவுள்
இருந்த இடத்திலும் இருள் மூடியது.

30.3.1969

---------------------------------------------

நிலம் என்னும் நல்லாள்

அப்போது நான் சிறுவன்
அப்பா வயலுக்குள்
எப்போதும் தன்னோடு
எனைக்கூட்டிச் செல்வதுண்டு.

பள்ளவெளிக் குள்ளே
பதினாலு ஏக்கர் எமக் குள்ளது.
மேலும் ஒரு பத்தேக்கர்ப் பூமியை
ஒத்திக்குச் செய்கின்றோம்.
மும்மாரி, அல்லிமுல்லை,
மாட்டுப் பழைக்குள்ளும்
எம்மாத்திரம் காணி
எங்களுக்குச் சொந்தம் என
ஊரே புகழ் பாடும்.
உண்மையும் தான்; நாங்கள் எல்லாம்
பாரம் பரியப் பணக்காரப் போடிகள்தான்.

சூடடித்த நெல்லைச் சுமந்து வருகின்ற
மாடுகளைக் கண்டால்
வருத்தப் படுவார்கள்.
எப்போதும்
எங்கள் வளவுக்குள் இடம் இன்றி
முப்பதுக்கு மேல் வண்டி
மூட்டை சுமந்து வரும்.

மண்டபத்துக் குள்ளேயும்
வாசல் விறாந்தையிலும்
கொண்டுவந்த நெல்லையெல்லாம்
கூரை வரை உயர்ந்த
பட்டடைகள் கட்டி, அவற்றுள்
பவித்திரமாய்க்
கொட்டிவைப்போம்.
பட்டடைகள் கொள்ளாத நெல்லையெல்லாம்
மூட்டைகளாய்க் கட்டி
அறைகள் முழுவதிலும்
மோட்டுயரத் துக்கே அடுக்கி முடித்து வைப்போம்.

வீட்டுக்குள் நெல்வாடை வீசும்
எனக் கென்றால்
தும்மல் பறக்கும் தொடர்ந்து.

விளக்குவைத்துக்
குந்தி இருந்து படிக்கத் தலைகுனிந்தால்
அந்துப் பூச் செல்லாம்
அநேகம் படை எடுத்து
வந்துவந்து மொய்க்கும்
வரியில் முகத்திலெல்லாம்.

தொல்லை தராது
சுவரில் இருந்து வரும்
பல்லி, அவற்றைப் பசியாறிச் செல்வதுண்டு!
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்!

2

அப்போது நான் சிறுவன்
ஆனாலும் எங்களது
அப்பா அழைப்பார்
'அட தம்பி நாளைக்கு
வட்டைக்குப் போகலாம்
நீயும் வா' என்று; எனக்குள்
மட்டுப் படாத மகிழ்ச்சி தலைதூக்கும்.

ஆயினும்
காலை அலர்ந்து வருவதன் முன்
தாய் வந்து நின்றபடி
'தம்பி எழும்பு' என்று
என்னை அரட்டி எழுப்ப முனைகையிலே
கோபம் தான் உண்டாகும்.

கொஞ்சம் பொறுத் தெழுந்து
போவதற் காகப் புறப்படுவேன்...

எங்களப்பா
நல்ல உயரம், நரைத்த சிறுதாடி,
வெள்ளை உடம்பு மினுங்கும்.
மிதியடிதான்
காலில் அணிவார்; கழுத்தை வளைத்து ஒரு
சாலுவை தொங்கும்
சரியாய் அலங்கரித்து
தொப்பி அணிந்து
சுருட்டொன்றை வாயில் வைத்து
அப்பா நடப்பார்
அவர்பின்னால் நான் நடப்பேன்.

அப்பாவின் பின்னால்
அவர்தோளில் தொங்குகிற
அந்தக் குடையின் அசைவில் லயித்தபடி
நான் நடந்து செல்வேன்.
பின் நாங்கள் மெயின் வீதி வந்து
சிறி திருந்து
வஸ் ஏறிப் போய் விடுவோம்.

3

பள்ளவெளி தூரப் பயணம் தான்;
நாம் அங்கே
போகும் பொழுதே பொழுதேறிப் போயிருக்கும்
காலை வெயிலின் கதிர்கள்
மரம் செடிகள்
மேலே விழுந்து, மினுங்கி
வளைந்து வரும்
வாய்க்காலில் கொட்டி
வழி எங்கும் புன்னகைக்கும்.

வாய்க்கால் அருகே
வளர்ந்த மருதையெல்லாம்
காய்த்துக் கிடக்கும்
கிளிகள் கலகலகலப்பாய்க்
கத்திப் பறக்கும்
கிளைகள் சலசலக்கப்
பொத் தென்று வீழ்ந்து ஓடிப்
போகும் குரங்குகள்
சற்றெம்மை நோக்கிப் பின் தம்பாட்டில் ஓடிவிடும்.

புல்நுனிகள் எங்கும்
பனியின் பொழு பொழுப்புத்
தள்ளித் தெரியும்
சரிவில் எருமைசில
நின்று, தலையை நிமிர்த்தி எமைப்பார்க்கும்.

எட்டி அடிவைத்து நடக்கும் இடத்திருந்து
வெட்டுக் கிளிகள் சில
'விர்' என்று பாய்ந்து செல்லும்
கஞ்சான் தகரைகளில்
குந்திக் களித்திருக்கும்
பஞ்சான் எழுந்து பறந்து
திரும்ப வரும்.

அப்போது நான் சிறுவன்.
அந்த வயற் பாதை
இப்போதும் நன்றாய்
நினைவில் இருக்கிறது.

எங்கள் வயல் அருகில் எல்லாம்
மருதமரம்
செங்காய்ப் பருவத்தில்
தின்னவரும் கிளிகள் அத்தனையும் உண்டுதான்;
ஆனாலும் அங்கெல்லாம்
தொட்டாச் சுருங்கி
தொடர்ந்து வளர்ந்திருக்கும்
சட்டென்று காலின்
சதையைக் கிழித்துவிடும்.

வாப்பா நடக்கும் வரம்புகளில்
தொட்டாவைக்
கண்டாலே போதும்
வயற்காரக் காக்காவைக்
கூப்பிட்டுக் காட்டி, ஒரு
கொம்பல் தொடங்கிடுவார்.

4

எங்கள் வயற்காரர்
இஸ்மாயில் காக்கா, ஓர்
தங்க மனிசன்; தலையைக் குனிந்தபடி
மண்வெட்டி கொண்டு
வரம்பை செதுக்கி வைப்பார்
மண்டை உருகும்
வயல் வெளியில் மட்டுமல்ல
வீட்டிலும் கூடஅவர் வேலைபல செய்வதுண்டு

காட்டில் தறித்த பெரும் கட்டைகளை
எங்களுக்காய்க்
கொத்தி அடுக்கிக் கொடுப்பார்.
பழுதான
வேலியினைக் கட்டுவதும்
வீட்டுக் குசினியின் தென்
னோலைக் கிடுகை ஒருக்கால் புதுக்குவதும்
எல்லாம் அவரேதான்.

எங்கள் குடும்பத்தார்
செல்லாத்தா என்று
சிறப்பாய் அழைக்கும் அவர்,
பெண்டாட்டி கூடப்
பெரிதும் உதவி செய்வாள்.

வெண்கலங்கள் எல்லாம்
மினுக்கிப் புதுக்கிடுவாள்
தின்பண்டம் எல்லாம்
தெவிட்டா ருசியோடு
கொண்டாட்ட காலத்தில்
சுட்டுக் கொடுத்திடுவாள்.

உண்டு முடிந்ததன்பின்
மிஞ்சி உளவற்றைக்
கொண்டு செல்வாள் தன்னுடைய
வீட்டுக் குழந்தைகட்கு.

5

எங்கள் வயற்காரர் மேனியிலே
எப்போதும்
பொங்கி வரும் வேர்வை
பொசிந்தபடி இருக்கும்.
உண்டு கொழுத்த உடலல்ல;
வேலைசெய்து
கட்டான தேகம்
வயலின் கரும் கரிபோல்
சுட்டுக் கறுத்திருக்கும் சூரியனின் வெம்மையினால்.

மொட்டைத் தலையில்
முளைத்த சில நரைகள்
மூடுண்டிருக்கும் அவர்
முண்டாசுக் கட்டினுள்ளே
ஓடித் திரிவார் வயலில் ஒருஇடமும்
நில்லாம,
வேலை நிகழ்ந்த படிஇருக்கும்.

எல்லோரும் போல இவரும்
இடுப்பிலே ஒரு
பச்சைவடச் சிறுவால் போட்டு
வழுவாமல்
அச்சிறுவால் மேலால்
அரைஞாணை விட்டிருப்பார்.
கூலிக் குழைக்கின்ற
ஆட்களினைக் கூட்டி வந்து
வேலைசெய் விப்பார்.

அவர்கள் வியர்வையினைக்
கையால் வழித்தெறிந்து விட்டுக்
கடும் வெயிலில்
செய்வார்கள் வேலை தினமும்.

6

அந்நாட்களிலே
மாடுகளைக் கொண்டே வயலை உழுவார்கள்.
பாடிக் குரல் கொடுத்துக் கொண்டு
பதமாக
மண்ணைப் புரட்டி
வயலைத் தயார் செய்வார்.
கண்ணைப் பறிக்கும் படியாய்க்
கசிவுள்ள
மண்ணாக மாற்றி வளப்படுத்தி வைப்பார்கள்.
பின்னர்,
பெரியகைப் பெட்டிகளின் உள்ளே
கொழுக்கிப் புழுப்போலக்
கூர்விழுந் துள்ள
முளையை நிறைத்து
முழங்கால் புதைசேற்றில்
நின்றபடி
கையால் நிலமெங்கும் வீசிடுவார்.

கொன்று விடும்போல் எரிக்கும்
கொடு வெயிலைத்
தாழாமல் அங்கே
சடைத்த மருதமர
நீழலிலே
என்தகப்பன் நிற்பார் குடைபிடித்து

சாலுவையால் வீசிடுவார்
சற்றைக் கொருதரம்
என்னை வெயிலில் இறங்க விடமாட்டார்.
உண்மையும் தான்
நாங்கள் உழைக்கப் பிறந்தவரோ!

7

விதைப்பு முடிந்துவிட்டால்
வெட்டும் வரைக்கும்
வயற்காரர் தான்அவ் வயலின்
முழுப் பொறுப்பும்.
எங்கள் வயலின் நடுவில்
இளைப்பாற,
தங்கி இருக்க,
சமைக்க,
படுக்க, என
வாடிஒன்று கட்டி உள்ளோம்
மண்ணால் சுவர்வைத்து.
வாடி இணக்கியதும்
வயற்காரக் காக்காதான்.

கூரையிலே நாடங் கொடிகள்
படர்ந் திருக்கும்.
பாரமாய்க் காய்கள் படுத்திருக்கும்.
வாடியினைச் சுற்றிவர உள்ள
சொற்ப நிலத்தில்
மரக்கறிகள் -
வெண்டி, வழுதுணங்காய் காய்க்கும்.
குரக்கனும் சோழனும்
கூட வளர்த்திருப்பார்.

வீட்டுக்கு நாங்கள்
திரும்ப விரும்புகையில்
சாக்கிலே கட்டித் தருவார்.
அவைகளினைத்
தூக்க முடியாமல் தூக்கிச் சுமப்பேன் நான்.

8

வாடியிலே காவல் அவரும் மகனும்தான்.
பாடிக் கொண்டே இருப்பான்
அந்தப் பயல். அவனும்
என்னைப்போல் சின்னவன் தான்
என்றாலும் என்னைவிடக்
கெட்டித் தனம் உடையான்
கேலிக் கதைபேசிச்
சட்டி கழுவிச் சமைப்பான் ருசியாக.

ஆற்றுக்குச் செல்வேன் அவனோடு,
நீர்குறைந்த
சேற்றைக் கடந்து, சிறிதுபோய்
அங்குவலை வீசிப் பிடிப்பான்
துடிக்கின்ற மீன்களினை

ஆசைப்படுவேன் அவன்போல் பிடிப்பதற்கு
ஆனாலும் என்னால்
அதைச் செய்ய ஏலாது.
மீனின் துடிப்புகளைப் பார்த்து வியந்திருப்பேன்.

முள்ளிக்காய் ஆய்ந்து தருவான்
முழுவதையும்
அள்ளிவருவேன்; அவனோ தடிபோன்று
சுள்ளி உருவம்,
எனைப்போல் தொடராகப்
பள்ளிக்குச் சென்று படிக்க விடவில்லை.

9

காற்றில் அலையடிக்கும் கம்பளம் போல்
பச்சைவயல்
தோற்றம் கொடுக்கும்.
தொலைவில் படுவானின்
அந்திப் பொழுதின் அழகு
வயலெங்கும்
சிந்திக் கிடக்கும்.
சிறுவன் வரம்புகளில்
வக்கடைகள் கட்டி வருவான் தகப்பனுடன்.

கொக்கும் குருவிகளும்
குறியிடங்கள் நோக்கி அந்திச்
செக்கர்வான் ஊடே பறந்துசெல்லும்.
ராமுழுதும்
உட்கார்ந்த வாறு
வயலை உழக்குதற்குப்
பன்றி வரும் என்று
பார்த்திருப்பார் அவ்விருவர்.

ஒன்றிரண்டு மூலைவெடி
ஓசை எழுப்பிடுவார்.
மூடி இருக்கும் உடம்பு முழுவதையும்,
தேடிக் கடிக்கும் சிறிய நுளம்புகளுக்
காக அவர்கள்
புகையுள் அமர்ந்தபடி
தூங்கா திருப்பார்கள்.

நெற்காய் தொடங்கியதும்
ஆங்கு வருமே
குருவிகள் ஓர் ஆயிரம்!
ஆம்
பாட்டமாய் வந்து
கதிரிற் படுத் தெழுந்தால்
எல்லாம் பதர்தான்.

இவர்கள் விடிந் தெழுந்து
வெய்யோன் சரிந்து விழுந்து விடும் வரையும்
"டய்யா...! டய்யா....!!" என்றே
சத்தம் எழுப்பிடுவார்.

கஞ்சான் தகடுகளைக் கட்டி அசைப்பார்கள்.
நெஞ்சைப் பிடித்தபடி
நீண்ட குரல் கொடுப்பார்.
கல்லைத் தகரத்துள் கட்டி அடிப்பார்கள்.

10

எல்லாம் முடிந்தால்
இனி வெட்டும் காலம்தான்
சூடடித்த நெல்வேறாய்த்
தூற்றி எடுக்கும் வரை
பாடு படுவார்கள் அவர்கள்
பதர்வேறாய்
கூட்டி எடுத்தே அளந்து குவிப்பார்கள்.

எல்லாம் விளைந்திருந்தால்
எண்பதுக்கு மேல் அவணம்
கொள்ளும்.
பிறகு செலவுக் குறிப்பேட்டை
எங்கள் தகப்பன் எடுத்துக்
கணக்குகளைக்
கூட்டிக் கணிப்பார்.
மறந்த குறைகளையும்
போட்டுக் கணித்தால் செலவு புலப்படும்.

எல்லாச் செலவும் கழித்தால்
இறுதியில்
உள்ள வற்றில் நான்கில் ஒருபங்கைக்
கொண்டு செல்வர்
எங்கள் வயற்காரர்
இஸ்மாயில் காக்கா - ஓர்
பத்தவணம் தேறும் அவருடைய பங்கு;
அதில்
அத்தனை நாளும் அவர் எங்கள் தந்தையிடம்
பெற்ற கடனைக் கழித்துப், பின்
மிஞ்சியதை
விற்றால் அவருடைய வேலைபல முடியும்.

வீட்டுக்குக் கூரைகட்டி
வேலி திருத்திடுவார்.
மூத்த குமர்ப் பெண்கள் மூவருக்கும்
ஏதேனும்
சீத்தைப் பிடவை சிலதை எடுத்தளிப்பார்.

சின்னவனின் கையில்
சிலரூபாய்த் தாள் கொடுப்பார்.
இன்னும் கடன்கள் இருக்கும்
இறுத்து - மறு
கன்னை வரைக்கும்
கடன்வாங்கிக் காத்திருப்பார்.

11

வீட்டில் குமர்கள்
பெருமூச்சு விட்டபடி
உட்கார்ந் திருப்பதனை உன்னி
உருகுவதும்
எந்நாளும் உண்டு.

ஒருநாள் என்தந்தையிடம்
'என்ன தம்பிசெய்யிறது
இப்பிடியே நாளெல்லாம்
போகுதே. இந்தப் பொடிச்சிகளுக்
கேதேனும்
ஆகுதும் இல்லை' என
அழுதார் அவர்; அதற்குப்

'பாப்பமே காக்கா
படைச்சவன் ஆரையெனும்
சேக்காமலா விடுவான்'
என்றார் எனதப்பா.

அப்போது நான் சிறுவன்.
அந்த நினை வென்னுள்
இப்போதும் நன்றாய் இருக்கிறது.

பின் ஒருநாள்
மூத்த குமரை முடித்துக் கொடுத்தார்கள்
காத்தான் குடியில்
கலியாணம் செய்து - பின்
விட்ட ஒருவனுக்கு.

வேலைகளில் ஒன்று முடி
வுற்றதனால் போலும் - ஒருநாள் அவர்படுத்து
விட்டார்
ஆட்கள் சிலபேர் அழுதார்கள்;
இஸ்மாயில்
காக்கா இறந்து கனகாலம் ஆகிறது.

காக்காவின் மற்றக் குமருள்
கடைசி மகள்
இன்னும் சும்மாதான் இருக்கின்றாள்.
மற்றவளைப்
பின்னர் ஒருநாள்
பிழைப்பதற்கு வந்த ஒரு
அத்தர் வியாபாரி அடைந்தான்.

சிலகாலம்
ஒத்திருந்து விட்டு
பிறகெங்கோ ஓடிவிட்டான்.

அந்தக் குடும்பம்
அலைக்கழிந்து போயிற்று.

'காக்கா குடும்பம் க்ஸ்டப் படுகிறதே
ஏன்?' என்று கேட்பேன் நான்.
'எல்லாம் அவர்கள் விதி'
என்பார் தகப்பன்.
இருக்கும் என நினைப்பேன்
அப்போது நான் சிறுவன்.

12

ஆனால்
அவர் உழைப்பால்
எப்போதும் எங்கள் வளவுக்குள் இடமின்றி
முப்பதுக்குமேல் வண்டி
மூட்டை சுமந்து வரும்.

மண்டபத்துக் குள்ளேயும்
வாசல் விறாந்தையிலும்
கொண்டுவந்த நெல்லையெல்லாம்
கூரை வரை உயர்ந்த
பட்டடைகள் கட்டி
அவற்றுள் பவித்திரமாய்க்
கொட்டிவைப் போம்.

பட்டடைகள் கொள்ளாத நெல்லை எல்லாம்
மூட்டைகளாய்க் கட்டி
அறைகள் முழுவதிலும்
மோட்டுயரத் துக்கே
அடுக்கி முடித்து வைப்போம்.

வீட்டுக்குள் நெல்வாடை வீசும்
எனக் கென்றால்
தும்மல் பறக்கும் தொடர்ந்து.

விழித்தபடி
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்.

-------------------------------------------------

தாத்தாமாரும் பேரர்களும்

இருந்தது;
எங்கள் தாத்தாவுக்கோர்
யானை இருந்தது
கொம்பன் யானை....

தெரியுமா?
இந்தச் செய்தி உமக்குத்
தெரியுமா காணும்?
தெரியாதாயின்
இன்று தெரிந்து கொள்.
எங்கள் தாத்தா
அன்றே பெரிய கொம்பன் யானை
வைத்திருந்ததை இவ்வையகம் அறியும்....

அத்திலாந்திக் கரைவரை எங்கள்
தாத்தா யானையில் சவாரி செய்தார்.
அந்தலூசின் சமவெளி யூடே
எங்கள் தாத்தா யானையில் சென்றார்.
இந்தியாவில் எண்ணூறு ஆண்டுகள்
எங்கள் தாத்தா யானையில் இருந்தார்.
சீனா வரையும் சென்று வந்ததாம்
அவரது யானை;
கொம்பன் யானை....

யானைவைத் தாண்ட பரம்பரை நாங்கள்
உலகின் பாதியை ஆண்டவர் நாங்கள்
உலகம் எங்கும் அறிவொளி பரப்பி
வைத்தவர் நாங்கள்;
பல் கலை ஞான
எழுச்சி எங்கள் பின்னால் வந்தது.

அந்தலூசின் சமவெளி இடையே
இன்றும் நீங்கள் இதனைக் காணலாம்
பாக்தாத் நகரில் படிக்க வந்த
ஐரோப்பியரிடம் அதனைக் கேட்கலாம்....

தெரியுமா?
இந்தச் செய்தி உமக்குத்
தெரியுமா காணும்?
தெரியாதாயின்
இன்று தெரிந்து கொள்!
எங்கள் தாத்தா

அன்றே பெரிய கொம்பன் யானை
வைத்திருந்ததை இவ்வையகம் அறியும்

இருந்தது;
எங்கள் தாத்தா வுக்கோர்
யானை இருந்தது;
கொம்பன் யானை...

2

இருந்ததா?
உங்கள் தாத்தாவுக் கோர்
யானை இருந்ததா?
கொம்பன யானையா?

எங்கே அந்த யானை இப்போது?
எங்கே அந்தக் கொம்பன் யானை?
யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
எங்கே உங்கள் கொம்பன் யானை?

கால்நடையாக வந்து நிற்கிறாய்
அழுக்குத் துணியை அணிந்து நிற்கிறாய்
உன்னைப் பார்த்தால் அப்படி ஒன்றும்
யானைக் காரரின் பேரப் பிள்ளையாய்த்
தெரிய வில்லையே,
தெரியவே இல்லையே!

இருந்ததா?
உங்கள் தாத்தாவுக் கோர்
யானை இருந்ததா?
கொம்பன் யானையா?

எங்கே அந்த யானை இப்போது?
எங்கே அந்தக் கொம்பன் யானை?
யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
எங்கே உங்கள் கொம்பன் யானை?

3

எங்கே எங்கள் கொம்பன் யானை?
எங்கே அந்தக் கொம்பன் யானை?

எம்மை படைத்த இறைவனுக் காக
எம்மைப் படைத்த இறைவனின் ஆட்சியை
நிறுவுதற் காகக்
குருதியும் சொரிந்த
நாங்கள்,

அந்த நன்னெறி விட்டும்
நீங்கி விட்டதால்...
நீங்கியே விட்டதால்...
எங்கள் இறைவன் எமக்கு வகுத்த
வீதியை விட்டும் விலகி விட்டதால்...

உருகி உருகி ஒவ்வொரு பொழுதும்
தொழுது நிற்பதைத் துறந்து விட்டதால்...
வாய்மை நெறியை மறந்து விட்டதால்...
ஆன்ம வலிமையை அகற்றி விட்டதால்...
நாங்கள் எங்கள் யானையை இழந்தோம்
என்றே இன்று கேள்விப் படுகிறோம்.

இருந்தது;
எங்கள் தாத்தாவுக் கோர்
யானை இருந்தது
கொம்பன் யானை

4

இளைய தலைமுறையின்
ஏழ்மைக் குரலே
பழைய செய்தியைத் திருப்பிச் சொல்கிறாய்.
இக்பால் என்ற கவிஞனிடத்துக்
கடனாய்ப் பெற்ற பழைய சொற்களைத்
திரும்பவும் வந்து என்னிடம் சொல்கிறாய்...

ஆனால் சந்றே ஆழ்ந்து கவனி
யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
சற்றே கவனி, சற்றே கவனி!

உமையாக்களின் உருவிய வாளில்
இரத்த வாடை இருக்குதா என்று
சற்றே கவனி சற்றே கவனி....

அப்பாசியர்களின் அரண்மனை எங்கும்
இரத்த வாடை இருக்குதா என்று
சற்றே கவனி சற்றே கவனி....

சுல்தான் அணிந்த தொப்பியின் உள்ளே
இரத்த வாடை இருக்குதா என்று
சற்றே கவனி சற்றே கவனி.....

இரத்த வாடையை இனங்கண்டனையா?
அந்த வாடை யாருக் குரியது?
செங்கடலாகத் திரண்டு கிடப்பதில்
பாதி இரத்தம் யாருக் குரியது?

ஓ! அது உங்கள் தாத்தா வுடையதா?
ஆமாம், உங்கள் தாத்தா மார்கள்
அதிகாரத்துக் காகத் தமக்குள்
பொருதிக் கொண்ட போது வடிந்த
இரத்த மணம்தான் இங்கு மணப்பது.

அதிகா ரத்துக்காக அவர்கள்
பொருதிக் கொண்ட போதெலாம்
நீங்கள்
யானையின் கீழே நசிந்து மடிந்தீர்
யானையின் பின்னால் நடந்து திரிந்தீர்
அம்பாரி மீதில் அவர்கள் இருக்கப்
பார்த்து மகிழும் பாக்கியம் பெற்றீர்.

இரத்தினக் கற்கள் இழைத்துப் பண்ணிய
சிம்மாசனத்தில் அவர்கள் இருக்க
கொம்பன் யானையை எண்ணிக் கொண்டே
பழம்பாய் மீதில் படுத்துக் கிடந்தீர்.
அவர்கள் வசித்த அரண்மனை யுள்ளே
தொங்கிய பட்டுத் துணிகளுக்காக
நீண்ட நேரம் நீங்கள் உழைத்தீர்.

அவர்கள் வசித்த அரண்மனை உள்ளே
அந்தப் புரத்தில்,
அரிவையர் துயின்ற
மெத்தையை மேலும் மென்மைப் படுத்த
நித்திரையின்றி நீங்கள் உழைத்தீர்.

அவர்கள் தங்கள் அந்தப் புரத்து
அரிவையர்க் காக அமைத்துத் தந்த
தாஜ்மஹாலின் சலவைக் கற்களை
வியர்வைத் துளிகளால் மினுக்கித் துடைத்தீர்.
தங்கக் குவளையில் தாத்தா பருகினார்
உங்கள் அடுப்பில் பூனை துயின்றது.

5

தெரிந்ததா?
இந்தச் செய்தி தெரிந்ததா?
நீங்களும் உங்கள் தாத்தாமாரும்
எந்த உறவில் இணைப்புண் டுள்ளீர்
என்ற செய்தி இன்று புரிந்ததா?

தாத்தா மார்கள் ஆட்சியாளர்
பேரப் பிள்ளைகள் ஆளப் பட்டோர்.

நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை
இழக்க எதுவும் இருக்கவும் இல்லை.

ஆட்சியாளரே யானையை இழந்தார்
அவர்களே தங்கள் அரண்மனை இழந்தார்
ஐரோப்பாவில் அரும்பி வளர்ந்த
புயலில் அவர்கள் புரண்டு போயினர்.

அன்று வீசிய அந்தப் புயலில்
அவர்கள் தங்கள் அரண்மனை இழந்தார்
இரத்தினக் கற்கள் இழைத்துப் பண்ணிய
சிம்மா சனத்தைத் தீடிரென் நிழத்தார்
தாத்தாமார் தம் சிம்மா சனத்தில்
ஐரோப் பியர்கள் அமரக் கண்டார்.

அவர்கள் வளர்த்த கொம்பன் யானை
ஆடி அடங்கிக் கிடக்கக் கண்டார்.
நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை
இழக்க எதுவும் இருக்கவும் இல்லை.

6

இழந்ததை மீண்டும்
எப்படிப் பெறலாம்?
தாத்தா மாரின் தத்துவ ஞானிகள்
எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம்
எழுந்து வந்தனர்.
இழக்க எதுவும் இல்லா திருந்த
பேரப் பிள்ளையின் பிடரி பற்றினர்...

எழுந்திரு பிள்ளாய் எழுந்திரு...
உங்கள்
விழுமிய செல்வம் விழுங்கப் பட்டது
யானைவைத் தாண்ட பரம்பரை நீங்கள்
உலகின் பாதியை ஆண்டவர் நீங்கள்
உலகை உய்விக்க வந்தவர் நீங்கள்
இன்று நீங்களேன் எல்லாம் இழந்து
ஒன்று மற்றவர் ஆகி யுள்ளீர்....?
எழுந்திரு பிள்ளாய் எழுந்திரு.

விழிக்க வேண்டிய வேளையும் வந்தது
தாத்தா மாரின் தத்துவ ஞானிகள்
எழுத்தாளர்கள் கவிஞர்கள் எல்லாம்
எழுந்து வந்துமை எழுப்பி விட்டனர்.

ஆட்சி யாளர் தாத்தா வாகினர்
ஆளப் பட்டோர் பேரர் ஆகினர்.
ஆடி அடக்கிக் கிடந்த அந்தக்
கொம்பன் யானை உணர்ச்சி கொண்டது.

7

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும்
தேசிய எழுச்சிகள் திரண்டு கிளர்ந்தன
இரத்த வாடை எங்கும் நிறைந்தது.

ஐரோப் பாவின் ஆட்சி யாளர்
திருப்பி அளித்த சிம்மாசனத்தில்
மீண்டும் உங்கள் தாத்தா அமர்ந்தார்.
ஆமாம்,
நீங்கள் மீண்டும் அந்த
அம்பாரி மீதில் அவர்கள் இருக்கப்
பார்த்து மகிழும் பாக்கியம் பெற்றீர்.

தெரியுமா?
இந்தச் செய்தி தெரியுமா?
நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை
இழக்க எதுவும் இருக்கவும் இல்லை.

8

பிறைக் கொடி பறக்கும்
இடங்களில் எல்லாம்
நேற்று நடந்த நிகழ்ச்சிகள் என்ன?

யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
சற்றே கவனி, சற்றே கவனி
இந்தோனேசிய மண்ணிலே சிதறிச்
சிந்திய குருதியைச் சற்றே கவனி.

ஜோர்த்தான் நாட்டின் ஆற்றங் கரையில்
பெருகி ஓடிய குருதியைக் கவனி.
வங்க தேசக் கங்கைக் கரையின்
இரத்தச் சகதியை இன்னும் கவனி.

இந்தக் குருதியைச்
சிந்தியோர் யாவர்?
இந்தக் குருதியைச் சிந்திய மக்களின்
நெஞ்சைப் பிளந்த
தோட்டா யாரது?

உனக்கும் அவர்க்கும் ஆண்டவன் ஒன்றே
உனக்கும் அவர்க்கும் வேதமும் ஒன்றே
நீங்கள் உங்கள் வாழ்கையை மீண்டும்
கேட்கும் வரைக்கும்
கேட்கும் வரைக்குமே
பள்ளி வாயிலில் ஒன்றாய்த் தொழலாம்
சகோத ரத்துவச் சரடு திரிக்கலாம்...

யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
கண்விழித் தெழுக
கண்விழித் தெழுக!
அவர்கள் உனது தாத்தா அல்லர்
அவர்கள் உனது உறவினர் அல்லர்
அவர்கள் உன்னைச் சுரண்டிக் கொழுத்தோர்

மீண்டும் மீண்டும்
சுரண்டுதற் காகச்
சகோத ரத்துவச் சரடு திரிப்போர்...

பிறைக் கொடி பறக்கும்
இடங்கள் தோறும்
உலகில் உள்ள மூலைகள் தோறும்
மஞ்சத் தோடும்
மாளிகை யோடும்
ஆட்சி யோடும்
ஆணவத் தோடும்
வாழ்வோ ரெலலாம் மற்றொரு சாரார்...

பஞ்சத் தோடும்
பட்டினி யோடும்
வெஞ்சத் தோடும்
வேதனை யோடும்
வாழ்வோ ரெல்லாம் மற்றொரு சாரார்....

யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
கண்விழித் தெழுக
கண்விழித் தெழுக

சகோதரத்துவச் சாம்பலில் இருந்து
வர்க்க உணர்வுடன் நீவிழித் தெழுக!

முதல் பிரதி: 23.9.1971
இறுதிப் பிரதி: 11.3.1974.

-------------------------------------------------

சில குறிப்புக்கள்

இத்தொகுப்பில் உள்ள உலகப்பரப்பின் ஒவ்வொருகணமும் தவிர்ந்த ஏனைய கவிதைகள் அவ்வப்போது கவியரங்குகளின் தேவை கருதி எழுதப்பட்டன. அதிமானிடன் 1968-ல் சரவணையில் நடைபெற்ற தமிழ் விழா ஒன்றில் திங்களைச் சுற்றுதும் என்ற தலைப்பிலும், கோயிலின் வெளியே 1969 ல் கொழும்பு, லும்பினி கலாமண்டபத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மகாநாட்டில் விடிவை நோக்கி என்ற தலைப்பிலும், நிலம் என்னும் நல்லாள் 1968ல் ஹட்டனில் நடைபெற்ற தமிழ் விழாக் கவியரங்கு ஒன்றிலும், தாத்தாமாரும் பேரர்களும் 1971ல் வானொலிக் கவியரங்கு ஒன்றிலும் முதன்முதலில் படிக்கப்பட்டன.

நிலம் என்னும் நல்லாள் தவிர்ந்த ஏனைய கவிதைகள், பூரணி, கவிஞன், மல்லிகை, புதுமை இலக்கியம் ஆகிய சஞ்சிகைகளிலும் பின்னர் பிரசுரிக்கப்பட்டன.

உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும், கோயிலின் வெளியே ஆகிய கவிதைகள் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட வடிவத்தில் அன்றி சிற்சில பகுதிகள் நீக்கப்பட்டும், திருத்தப்பட்டும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

2. நிலம் என்னும் நல்லாள்: இலம் என்றசையி இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் என்றார் வள்ளுவனார்; நிலம் எங்கும் வேர்வையினை நெய்யாகப் பெய்தும் இலம் என்றிருப்பாரே எங்கும் நிறைந்துள்ளார் என்பதை விளக்கும் இக்கவிதையில் இடம் பெறும் கிழக்கிலங்கை விவசாயிகளின் வழக்குச் சொற்கள் சிலவற்றுக்கான பொருள் விளக்கம் கீழே தரப்படுகின்றது.

1. பள்ளவெளி, அல்லிமுல்லை, மும்மாரி, மாட்டுப்பளை: (பக்.41) இவை அம்பாரை மாவட்டத்தில் உள்ள சில வயல் நிலங்களின் பெயர்கள்.
2. ஒத்திக்குச் செய்கின்றோம்: (பக்.41) ஒத்தி பிடித்தல் என்பது ஒரு தொகைப் பணத்தைக் கடனாகக் கொடுத்து விட்டு பணம் திருப்பித் தரப்படும் வரை பணம் பெற்றவனின் காணியை பணத்துக்கு வட்டியாக சொந்தமாகப் பயன்படுத்தல்.
3. போடி, போடியார் (பக். 41) நிலச் சொந்தக்காரன்.
4. வட்டை (பக்:43) வயல்
5. வயற்காரன் (பக்:46) போடியாரின் வயலில் அவரது முதலீட்டோடு முழுப்பொறுப்பும் ஏற்று வேளாண்மை செய்பவன்.
6. சிறுவால் (பக்:48) உழவர் அணியும் காற்சட்டை.
7. வாடி (பக்:50) வயற்காவல் இல்லம்
8. வக்கடை (பக்:52) வயலில் ஒரு பிரிவில் இருந்து மறு பிரிவுக்கு நீர் பாய்வதற்காக வரம்புகளில் வெட்டிவிடப்படும் பகுதி
9. அவணம் (பக்:54) ஒரு அவணம் ஏழரை புசல்.
10. மறுகன்னை (பக்:55) மறுபோகம்

3. பிரசித்தி பெற்ற மலையாள எழுத்தாளர் வைகம் முகம்மது பஷீர் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதி உள்ளார். அத்தலைப்பையே தாத்தாமாரும் பேரர்களும் கவிதையின் முதல் அடியாக எடுத்தாண்டுள்ள்ளேன். அது தவிர நாவலுக்கும் இக்கவிதைக்கும் நேரடி உறவுகள் இல்லை.

தாத்தாமாரும் பேரர்களும் கவிதையில் இடம்பெறும்
இக்பால் என்ற கவிஞனிடத்து
கடனாய்ப் பெற்ற பழைய சொற்களைத்
திரும்பவும் வந்து என்னிடம் சொல்கிறாய்

என்ற வரிகள் (பக்:63) மகாகவி அல்லமா இக்பாலின் முறையீடும் மறுமொழியும் என்ற நூலைக் குறிக்கும். முஸ்லீம்களின் உலகளாவிய வீழ்ச்சிக்கு இஸ்லாமிய தர்மத்தை அவர்கள் கைவிட்டதே காரணம் என்பதும் முஸ்லீம்கள் அதைத் திரும்பக் கடைப்பிடிப்பதன் மூலமே ப்ழைய மேன்மையை அடையமுடியும் என்பதும் அந்நூலின் சாரமாகும். இக்பாலின் இந்த வரலாற்றுக் கருத்து முதல்வாதநோக்குக்கு இக்கவிதை ஒருவகையில் பதிலாக அமைகிறது.

+++++++++++++

இம்மா நிலத்தின் எழில்யாவும்
]எழுதத் தகுந்த பொருள்யாவும்
எடுத்துத் தொடுத்தோர் தொடையாக
இதோஎன், றெமக்குத் தருதற்கு

பெம்மா நார்கள், புலவர்கள்,
பெரியோர், அறிஞர், கற்றோர்கள்
பெரிதும் முயன்று பார்த்தாலும்
அரிதே பிறக்கும் தமிழ்ப்பாட்டை

சும்மா இரண்டு சொல்எடுத்துச்
சொல்லிக் காட்டும் சீராளா
சுடரும் கவியைப் பிரளயம்போல்
சூழ எழுப்பும் பேராளா,

எம். ஏ. நுஃமான் தமிழ்செய்யும்,
இனிய நண்பா எழுகவே
எழுந்திவ் எமது சபையோருக்கு
இசை உன் கவியை வருகவே

மஹாகவி
1968, சரவணைக் கவியரங்கில்

***********