கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது  
 

வ.அ. இராசரத்தினம்

 

ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது

வ.அ. இராசரத்தினம்

பதிப்புரை

அன்றைக்கு அப்பாவுடன் 1996ஆம் ஆண்டிற்கான மித்ர வெளியீடுகள் பற்றிப் பேசுவதற்கு வசதி கிடைத்தது. அப்பொழுது தமது நீண்ட கால நண்பர் வ.அ. இராசரத்தினம் எழுதியிருந்த கடிதத்தை வாசிக்கத் தந்தார். அதனை வாசித்த பிறகு என் சிறு வயசு நினைவுகள் எல்லாம் மொய்த்துக் கொண்டன. அந்தக் காலத்தில், இலங்கையின் நாலா பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்களும், கலைஞர்களும் வீட்டுக்கு வருவார்கள். விருந்துகளும் விவாதங்களும் என்று வீடே கலகலப்பாக இருக்கும். மட்டக்களப்பு வாவியின் இசையும் தென்றலும் அந்தக் கலகலப்பிலே சேர்ந்தது போலவும். எத்தனைய இனிய அமைதியான சூழலிலே, கருத்து முரண்பாடுகளின் மத்தியிலும், அந்த மண்ணையும் கலைச் செழுமைகளையும் நேசித்து வாழ்ந்தோம்! அந்த அமைதியும், இனிமையும், சுகமும் மீளக்கிடைக்குமா? வந்து மகிழ்ந்து செல்லும் நண்பர்களுடைய கலை-இலக்கியப் பங்களிப்பை அப்பா அக்கறையாகச் சொல்லுவார். அவை பதியும். 'கிழக்கிலங்கையின் சிறுகதை முன்னோடி; பிறந்த மண்ணுக்கு நிறை கௌரவம் தேடித்தந்த கதைஞர்' என்கிற பாராட்டுகளுடன் வ.அ.மாமா என் நெஞ்சிலே பதிந்துள்ளார்.

அவருடைய அச்சகமும், நூலுருப் பெற வேண்டிய அனைத்துக் கதைகளும் பொசுங்கிச் சாம்பலாயின... என் நெஞ்சம் கனத்தது. ஈழத் தமிழ் மக்கள் எத்தனை வழிகளிலெல்லாம் அநாதைகளாக்கப்படுகிறார்கள்!

'நாளைக்கு வ.அ. மாமாவுக்கு எழுதுங்கள். எங்கெல்லாம் தேடி எடுக்க முடியுமோ, அங்கெல்லாம் முனைந்து தேடி அனைத்துச் சிறுகதைகளும் பெற்று அனுப்பும்படி எழுதுங்கள். Don't Worry about cost. கதைகளை எல்லாம் ஒரே தொகுதியாக வெளியிடுவோம்...' என்றேன். என் உணர்ச்சிகளை அப்பா புரிந்து செயற்பட்டார்.

இப்பொழுதுதான் என் மனம் சமாதானம் அடைகின்றது. கிழக்கிலங்கையின் மூத்த கதைஞரின் பங்களிப்புப் பற்றி, இன்றும் நாளையும், பல்கலைக்கழகம் உள்பட எல்லா மட்டங்களிலும் பேசும் வகையில் அவருடைய ஐம்பது கதைகளை இதிலே திரட்டித் தந்துள்ளோம். ஆவணப்படுத்துதலில் இது அரிய சாதனை. சந்தேகமில்லை. அடுத்து 'கிழக்குக் கதைவளம்' வந்து நமது மண்ணுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை.

பழையதிலே காலூன்றிப் புதியன புனைதலே வளர்ச்சி. இந்தக் கதைத் தொகுதி, கிழக்கு மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு நமது பழைய சாதனைகளை நினைவு படுத்தி, புதியன படைப்பதற்கு ஓர் ஆதர்ஷமாகவும் எழுச்சியாகவும் அமையும் என்றே நம்புகின்றேன்.

அன்புடன்
டாக்டர் பொன். அநுர

Mithra Publications,
1/23, Munra Street,
Eastwood 2122
Australia
(02) 868-2567

-------------------------------------------------

முன்னீடு

என் மூத்த மகன் அநுரவின் பலவீனத்தின் அடையாளமாகவும் இந்நூல் அமைகின்றது. தமிழ் நேசிப்புக்கு அப்பால், தமிழீழ மண்ணை, வளம் கொழிக்கும் கிழக்கிழங்கை மண்ணை, தான் பிறந்த மட்டக்களப்பு மண்ணை அழுங்குப்பிடியான பக்தி விசுவாசத்துடன் நேசித்தல் அவனுடைய தலையாய பலவீனம்! அந்த மண்ணின் மகிமைக்கும்-மாண்புக்கும், பெருமைக்கும்-பெருவாழ்வுக்கும் நிச்சயமான பங்களிப்புச் செய்வதின் மூலமே, பிறந்த மண்ணின் ஆராதனைக்கு அர்த்தம் ஏற்றுதல் சாலும் என்கிற தவிப்பும் தாகமும் அவனுக்கு! 'கிழக்கிலங்கைக் கதை வளம்' என்கிற கதைத் தொகை ஒன்றிலே, கிழக்கு மாகாணத்தின் சிறுகதை முயற்சிகள் அனைத்தையும் ஆவணப்படுத்துதல் வேண்டும் என்று எடுக்கப்படும் முயற்சி, அவனுடைய இந்தத் தவிப்பின் ஒரு துகளே அன்புமணி, விரிவுரையாளர் யோகராசா ஆகியோர் இந்த முயற்சியிலே மிகவும் உதவினார்கள். நன்றிகள். அது வரலாற்றினை distorr செய்து விடும். முழுமைக்கான தகவல்களும், தரவுகளும், ஆக்கங்களும் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. 'கிழக்கிலங்கைக் கதைவளம்' முழுமம் பெறுவதற்கு கிழக்கு மண்ணின் பரமார்த்த உபாசகர்களுடைய நிரம்பிய ஒத்துழைப்பு மேலுந் தேவை. கிழக்கின் 'முதிய எழுத்தாளர்கள்' சிலர் தம் மயமான ஒரு கற்பனா லோகத்திலே வாழ்தல் அந்த மண்ணின் கலை-இலக்கிய வளர்ச்சிக்கும் உகந்ததல்ல. அச்சிலே வந்த பக்கங்களை எண்ணிப் பார்த்து, எழுத்து வீரியத்தினை எடை போடுதல் பாமரத்தனமானது. 'மண்ணின் மைந்தர்' என்கிற கோஷம் அரசியலிலே வாக்குகளை வென்றெடுக்க உதவும். மூன்று சதாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்ற அங்கத்தவராயும், ஒரு தசாப்தம் தமிழ்க் கலாசார அமைச்சராகவும் இருந்த செ. இராஜதுரை கிழக்கிலங்கையின் கலை-இலக்கிய வல்லபங்களை ஆவணப்படுத்தும் பணியிலே சுண்டு விரல்தானம் அசைத்துள்ளாரா? அரசியல் மேட்டிமை உதவவில்லை. கோஷங்கள் அபக்குவருக்கு ஒரு thrill, அவ்வளவுதான். அவை இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் உரமுமல்ல. கடந்த அரை நூற்றாண்டு காலத்திலே உலக அரங்கிலும், தமிழிலும், கதைப் படைப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக் கோலங்களையும், உருவப் படிமங்களையும், சங்கதிப் பரிசோதனைகளையும், உருவப் படிமங்களையும், சங்கதிப் பரிசோதனைகளையும் உள்வாங்க மறுத்து, இன்றும் 'கல்கியும்' நா. பார்த்தசாரதியுமே கதைக் கலையின் உச்ச சிகரங்கள்' என்று 'பொச்சடி'த்துப் பேசும் 'முதிய' எழுத்தாளர்களுடைய பதவி முன்னேற்றங்களையோ, 'தவ்வல்' தத்துவங்களையோ பிரீதிப்படுத்துதல், ஒரு மண்ணின் உண்மை வல்லபத்தினை ஆவணப்படுத்துதலும் ஆகாது. கலை-இலக்கியத் துறையிலே மதிப்பீடுகள் மேற்கொள்ளும் பொழுது, பந்த பாச-பக்கச் சாய்வுகளைத் துறக்கும் ஒரு பக்குவந் தேவை. Ego- ஆணவ மலம்-அறல் வேண்டும். சுத்த சுயம்புவான உள்ளொளியையும் ஆன்மாவையும் இடையறாது தேடும் ஈடுபாடும் பக்தியும் அவசியம். பக்குவப்படாத உள்ளங்களிலே பக்தி பற்றிய சலனத்தை ஏற்படுத்தச் சடங்கு உதவும். வ.அ. இராசரத்தினத்தின் இந்தக் கதைக் கோவை அதாகவும் செல்லும். பிறிதொரு பாணியிற் சொல்வதானால், கிழக்கிலங்கைக் கதை வளத்தினை ஆவணப்படுத்தும் பாரிய முயற்சியின் நற்சகுன முன்னோட்டமாகவும், வாஸ்தவ அடித்தளமாகவும் இக்கதைக் கோவை அமைகின்றது. கிழக்கிலங்கைக் கதைஞர் மத்தியிலுள்ள ஐயங்களை அறுக்கவும், தயக்கங்களை நேர் செய்யவும் இது துணை செய்யும் என நம்புகின்றேன். அத்துடன் 'இவரும் அவரும்' அன்னாரும் இன்னாரும்' என்று கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சிறுகதை உச்சங்கள் என்று முற்போக்கு விமர்சகர்கள் நான்கு பெயர்களை வைத்து அம்மானையாடுதல் எத்தகைய அறிவு மோசடி என்கிற ஞானப் பிரகாசம் பெறுவதற்கும் இது சகாயிக்கும்.

கிழக்கிலங்கைச் சிறுகதை வல்லபத்தின் பிதாமகர் இருவர், ஒருவர் மட்டக்களப்பு மைந்தன் 'பித்தன்' என அறியப்பட்ட கே எம்.ஷா அவருடைய சிறு கதைகள் ஒரு தொகுதியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன். சேமம். மற்றவர் வ.அ.இ. 'அரசு வெளியீடு'வின் முதல் நூலாக 'தோணி' என்கிற அவருடைய சிறுகதைத் தொகுதி மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே வெளிவந்தது. அதந் மூலம் கிழக்கு மண்ணுக்கு முதலாவது சாகித்திய பரிசு என்கிற பெருமையை வென்று தந்த உபகாரி. இந்த இரு கதைஞருமே புதுமைப்பித்தனையே துரோணாச்சாரியராக வரித்து ஏகலைவன்களாய் சிறுகதை வித்தை பயின்றார்கள். இதனை அவர்கள் பெருமையுடன் பிரசித்தமுஞ் செய்தார்கள். இருப்பினும், சிறுகதைக் கலையில் கிழக்கிலங்கையில் தனித்துவத்தையும் ஓர்மையையும் நாட்டிய சித்தர்களும் இவர்களே!

புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதைச் சித்தர். அந்த இலக்கிய வடிவத்தை முழுமைப்படுத்தித் தந்த மேதை. சிறுகதைப் படைப்பிலே இவர் ஊன்றிய ஆளுமை பிரமிப்புத் தருவது. தமிழ் இலக்கியத்தின் புதிய சகாப்தம் ஒன்றின் தோற்றுவாயாக அவர் திகழ்ந்தார். பாரதிக்குப் பின் தமிழுக்குக் கிடைத்த அருட்கொடை. இத்தனை மதிப்பு பு.பி.இல் அன்றும் இருந்தது; இன்று உண்டு. ஆனாலும், அவருடைய ஆறுமைக்குள் என்னை ஒப்புக்கொடுத்தலைப் புத்தி பூர்வமாகத் தவிர்த்தேன். சின்ன வயசிலேயே பு.பி-இன் வசதியான தோள்களிலே நின்று, கதைப் படைப்பினை அணுகுதல் வேண்டும் என்கிற பித்தத்தின் வசப்பட்டேன். இத்தகைய நிலையில், சிறுகதைச் சிருஷ்டியில் நான் ஈடுபட்டிருந்த பொழுது, மூதூரிலிருந்து வ.அ.இ இன் முதற் கடிதம் எனக்குக் கிடைத்தது. 'குமிழ்' என்னும் என் கதை பத்திரிகைப் பிரசுரம் நாடி, பத்திரிகைக் காரியாலயங்களை வலம் வந்த காலம். 'குமிழை'க் கையெழுத்துப் பிரதியாக வாசித்த வேகத்தில், அதனைப் பாராட்டி எழுதியிருந்தார். 'புதுமைப்பித்தனின் 'கபாடபுர'த்தின் பின்பு. அதனைப் போன்ற ஓர் உணர்வினை ஏற்படுத்தும் கலா சிருஷ்டி 'குமிழ்' என்பதுபோன்றும் எழுதியிருந்தார். இருப்பினும், மூத்த எழுத்தாளரின் பாராட்டு என்னைச் சொக்கவைத்தது. நல்லவனவற்றை வாசிக்கவும் பாராட்டவும் அவர் முந்தி நிற்பவர். இன்றுந்தான் நல்லூரிலே பிறந்த நானும், மூதூரிலே பிறந்த வ.அ.இ.வும், மட்டக்களப்பு வாவியின் சீதளக் காற்றினைச் சுகித்த என் வீட்டிலே சந்தித்தோம். இது 1958இல் நிகழ்ந்தது என்று நினைவு. அன்றிலிருந்து இன்று வரை, முரண்பாடுகள் மத்தியிலும், சங்கையான இலக்கிய நட்பினைப் பேணி வருகின்றோம். இலக்கிய நட்பு என்பது, வித்துவ முரண்பாடுகள் மத்தியிலும், மற்றவரின் திறனையும் நயத்தையும் தனித்துவத்தையும் இனங் கண்டு மதிக்கும் பண்பு என்று இன்றளவும் விளங்கிக்கொள்ளுகின்றேன். வாழும் மண்-பெற்றபடிப்பு-வரித்த பார்வை-பூண்ட மதம்- ஆராதிக்கும் ஆசாரம்-மோகிக்கும் கொள்கைகள் என முரண்பாட்டிற்கான விளைநிலங்கள் பல. இவற்றை அறுத்து, ஊடுபாவாக ஓடும் ஒற்றுமையை இனங்காணுதலும்வேண்டும். சிருஷ்டி நுணுக்கத்தை வசப்படுத்தும் தேடலிலே சதா ஈடுபடும் எழுத்தாளர் இருவர், பரஸ்பரம் வைத்துக் கொள்ளும் மதிப்புக்கூட நட்புத்தான்!

எனக்கும் வ.அ.இ.வுக்கும் இடையிலுள்ள பிரதான ஒற்றுமை, இருவருமே எழுத்து ஊழியத்தை ஒரு வகையோகமாகவும் தவமாகவும் வரித்து விசுவசித்தல். தவத்திற்கான prerequisite சில துறவுகள். சுய வீம்பும் காமமும் செப்புதலைத் துறத்தல் சுய எழுத்தில் பரமார்த்த வாசகனாய் இருக்கும் பற்றைத் துறத்தல் எழுத்தின் மூலம் புகழ்-பணம்-பதவி உயர்வுகள் - சமூக அந்தஸ்து ஆகியவற்றைச் சம்பாதிக்கலாம் என்கிற லௌகீகங்களைத் துறத்தல். குடும்பத்தின்மீது ஆரவாரமானதும் படாடோபமானதுமான உறவுப் பிரசித்தங்களை ஒதுக்குதல். ஆனால், எழுத்தவத்தன் வேஷதாரியல்லன்! தாடி, ஜடாமுடி அல்லது 'பாகவதர் சிலுப்பா' ஆகிய புற வேஷங்கள் தேவையில்லை. அவன் எவ்வகையிலும் சந்நியாசியுமல்லன். பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி விடமாட்டான். மனித குலம் அனைத்தையும் நேசிக்கும் விசால உறவினைத் தனது துறவுகள் மூலம் சம்பாதித்துக் கொண்டவன். குடும்ப பாசமும் உறவுகளும் இந்த மனிதகுல நேசிப்பின் வண்ணப் புள்ளிகளாக இனங் கண்டு கொள்ளுகிறான். மானுஷ“கம்-மனித நேயம் ஆகியவற்றைச் சதா துருவுதல் இந்தப் புதிய உறவின் அம்ஸம். துருவுதல் என்பது தேடல்தான். இந்தத் தேடலே வாழ்க்கையாகவும், அநுபவ சாராமாகவும், தரிசனமாகவும் இறுகும். இறுகும் பொழுது, நுரைச் சலனங்கள். தோற்றம்-மாயை ஆகியன குமிழ்களாய் உடையும் இறுகுவன சில உறுத்தும். இந்த உறுத்துதல் முற்ற முற்ற ஆக்கினை வசப்படுத்தும். இந்த ஆக்கியையை இறக்கி வைத்து விட வேண்டும் என்கிற அவதி மிகும். பிள்ளைத்தாய்ச்ச தன் வயிற்றுச் சுமையை இறக்கி வைக்க ஆக்கினைப்படுவதுபோல! சுமை இறக்குவதிலுள்ள ஆக்கினை மட்டுமே உவமம். தவநிலையில் எழுத்து நிஷ்காமியமானது. செயலே செயலின்மை போலவும். மாறுதலையாகவும். அப்பொழுது எழுத்து பிற நிர்பந்தங்களாலே நிகழ்வதல்ல. எழுதாமல் இருக்க முடியாது என்கிற அவதியினாலும் ஆக்கினையாலும் எழுதுவது. அப்பொழுது ஏற்படும் சுகநிலை ஆபூர்வமானது; அரியது. அத்தகைய சுக நிலையை நான் மட்டுமல்ல, வ.அ.இ.வும் அனுபவித்திருக்கின்றார் என்பதற்கான படைப்புகள் சில இதில் உள.

மீண்டும் அழுத்தப்படுவது; விரச்சினைகளிலிருந்து ஒதுங்காததவநிலை! இது மகா அபூர்வமானது இதனால் எழுத்துத்தவத்தன் சாத்வீக குணத்தினைத் துறப்பதையும் தன் கடமையாக்கிக் கொள்ளுகிறான். சாத்வீக குணம் வலிமையின்-ஆண்மையின் கோலம் என்கிற சந்நியாச தத்துவத்தை எழுத்துத்தவத்தன் ஏற்கான். சாத்வீககாரன் போரை எவ்வளவுக்கு ஒத்திப் போட முடியுமோ, அதனைச் செய்வான். தர்ம பரிபானத்திற்கு தவணையிடலாகாது என்பது அவன் வசதியாக மறந்து விடுகிறான். அனுக்கு ecompromise கூட ஒருவகை உத்தியே. அதற்கான நியாயம் கற்பிப்பதிலே நேரத்தை அதமாக்குகின்றான். எழுத்துத்தவத்தன் சிற்றின்பந் துறந்த பேரின்பச் சிலிர்ப்பு என்கிற பொற்பமிகு கற்பனைகளிலே மிதப்பவனல்லன். அவனுக்குக் கடமை தத்தின் கூறுபட ஏலாத அங்கம். அவனுக்குத் தெய்வ பீடத்தில் சத்தியமே அமர்ந்திருக்கும். சத்தியத்தின் சேவிப்பும் நாட்டலுமே அவன் ஊழியமும் வாழ்க்கையும். கோஷங்களும் நியாயங்களும் சத்தியத்திற்கு ஈடாக மாட்டா என்பதை உணர்ந்தவன். கோஷ ஓங்காரம் அவனை உசுப்புவதில்லை. எண்ணிக்கையின் இராக்கதம் அச்சந் தருவதில்லை. சத்திய தரிசனம் பெற்ற எழுத்துத் தவத்தன் தன்னந் தனியாகப் போராடச் சதா தயார். சத்தியச் சமரிலே உயிர் துறத்தலும் ஆகும். மானிடத்தின் உந்நதத்தினை ஒளிரச் செய்யும் வேள்வியிலே சகலமும் சகலதும் சகலரும் ஆகுதி ஆகலாம். சிறுமை கண்டு சினத்தல், அநீதி கண்டு கிளர்த்தல், அஞ்ஞானங் கண்டு சீறுதல், அநீதி கண்டு கிளர்த்தல், அஞ்ஞானங் கண்டு சீறுதல், சத்திய பரிபாலனத்திலே மூர்க்கங் கொள்ளுதல் ஆகியன போராளியின் மெய்ப்பாடுகள். போரையே தவமாக வரித்தல் எத்தகைய ஞானநிலை!

ஈழத்தில், முற்போக்கர்களுக்கும் தமக்கும் ஏற்பட்ட முரண்பாடு குறித்தும் வ.அ.இ. 'என்னுரை'யில் பிரஸ்தாபிக்கின்றார். முற்போக்கர்களுக்கு எதிரான குரல் என்றதும், தங்களுக்கு எதிரான குரல் என தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கியவாதிகள் வெகுண்டெழுதல் தப்பு. அவர்களுடைய ஞானப் பிரகாசத்திற்காவும் சில உண்மைகளை இங்கு ஆவணப்படுத்துதல் தகும்.

1956ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றம் இலங்கை முற்போக்குக்காரருக்கு யோகமாக வாய்த்தது. தனிச் சிங்களப் பேரினவாதத்தினை வலியுறுத்தும் பணிகள் நடந்த பொழுது, தமிழர்களுடைய பராக்குகள் முழுவதும் தார்ச்சட்டி ஏந்தி, வீர கோஷங்கள் எழுப்புவதிலே திரும்பியது. தமிழ் கலை-இலக்கிய முயற்சிகளை தமிழின் விமுக்கிதக்கான தமிழர் தலைமைத்துவத்தின் பிடிமானத்திற்குள் சிக்கவில்லை. இதிலுள்ள வெற்றிடம் ஆக்கிரமிக்கப்படலாம் என்பதை கம்யூனிஸ்டுகள் சரியாகவே நிதானித்தனர். அதற்கு ஆவன செய்யும் அரசியல் சகாயம் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த பொன். கந்தையா மூலம் கிட்டியது. அதே சமயம் சோஷலிஸ நாடுகளின் தூதரகங்கள் கொழும்பிலே கடை திறந்தன. அக்கடைகளிலே சிற்றூழியர்களாகும் வாய்ப்பும் 'லோக்கல்' கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைத்தன. கலை-இலக்கிய விவகாரங்கள் மூலம் ஊடுருவல் செய்து வசதியானது என்கிற வியூகம் பிறந்தது. விமர்சனம் என்று 'பெயர்' பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தத்துவப் பேராசான்களாய் நிவேதிக்கப்பட்டார்கள். 'கவிதைக்கு மூனாவே கம்பன்', 'நாவலுக்கு ஈனாவே கோர்க்கி' சிறுகதைக்கு டானாவும் டோனாவும் மன்னர்கள்' என்கிற பிரதிஷ்டைகள் அவசர அவசரமாக நிகழ்ந்தன. பிரசுர களங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. கைலாசபதி உபயம். மின்னாமல் முழுங்காமல், முற்போக்கு தர்பார்' ஈழத்துத் தமிழ் படைப்பாளிகள் மீது திணிக்கப்பட்டது. குருத்துப் படைப்பு முனைப்புகள் அனைத்தும் இந்த இராக்கத்திற்குள் சிக்குண்டு விதையடிக்கப்பட்டன. இந்த அநியாயத்திற்கு எதிரான போர்க் குரலாக 'நற்போக்கு' இலக்கியம் பற்றி பிரஸ்தாபித்துப் பேசுதல் என் தர்மமாக விடிந்தது. படைப்பாளிகளுடைய சுயா தீனத்தினை அங்கீகரித்து, அவர்களுடைய படைப்பு ஓர்மத்தை வளர்த்தெடுப்பதற்கான ஒரு போர்க் குரல்! நற்போக்கு இலக்கியம் மார்க்ஸ’ஸ வேகத்தையோ, கம்யூனிஸ இயக்கத்தையோ, சோஷலிஸ அரசியல் அமைப்பையோ நிராகரிக்கவில்லை. ஆனால், இவற்றின் பெயராலேயே திணிக்கப்பட்ட நிர்ப்பந்தங்களையும், சர்வாதிகாரத்தையும், எதிர்த்தது! முதுகு சொறியல்கள், இருட்டடிப்புகள், வரலாற்றுப் புரட்டுகள் மகா ரஸமட்டமானவை. சிருஷ்டி எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய தனித்துவ தரிசனத்தினை மழுங்கச் செய்யும் ஒருவகை மூளைச் சலவை! இதனை எதிர்த்தல் தர்மம்; சிருஷ்டி தர்மம்! தமிழர் தேசியம் என்கிற பெயரால் சிங்களப் பேரினவாதத்துக்கு 'சிண்' ஆகச் செயற்படுதல், தமிழினத்தின் தனித்துவத்தைப் பாதிப்பதாகும். தமிழ் இலக்கிய வளர்ச்சி புதிதுகளை உள்வாங்கி நிமிர்வு பெறல் வேண்டும். புதிதுகள் படைப்பதிலே மரபுகள் சிலவற்றை மீறவும் நெகிழ்த்தவும் வேண்டும் ஆனால், மரபினை முற்று முழுத்தாக நிராகரித்தல் தமிழின் தனித்துவத்தைச் சிதைக்கும். மரபினை மீறுதல் அரசியல் சித்தாந்தமல்ல அது தனித்துவ சிருஷ்டியாளனி தேவையைப் பொறுத்தது. சிங்களப் பேரினவாதத்துக்கு ஒத்துப் போவதல்ல தேசியம். ஒவ்வோர் இனத்தினதும் தனித்துவத்தையும் கௌரவத்தினையும் அது அங்கீகரித்தல் வேண்டும். தமிழருடைய சிருஷ்டி வல்லபம் என்பது யாழ்ப்பணத்தவர்களுடையதும், கொழும்பில் குடியேறியுள்ள அத்தகைய தமிழர்களடையதுமான அநுபவத் தொகுப்பல்ல. மலைநாடு-திருக்கோணமலை-மட்டக்களப்பு-வன்னிநாடு ஆகியன புதிய இலக்கியங்களின் விளைநிலங்களாக மாறின. அவர்களுடைய பிரச்சினைகள் புதிது. அவர்களுடைய பகைப்புலமும் புதிது. அங்கு நடமாடிய பாத்திரங்களுடைய செயல்களும் சிந்தனைகளும் அந்தத் தனித்துவ மண்களைப் பிரதிபலித்தன. முஸ்லிம்களுடைய தலைவர்கள் அரசியல் ஆதாயங்களை வைத்துச் சிங்கள மொழிக் காதலை வெளிப்படுத்திய போதிலும், முஸ்லிம் இலக்கியப் படைப்பாளிகள் தமிழையே நமது படைப்பு மொழியாக ஓர்மையுடன் பிரகடனப்படுத்தினர். கிழக்கு-மேற்கு-தெற்கு எனத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்து வாழும் அவர்களுடைய இலக்கிய நேசிப்பும் படைப்பு முனைப்புகளும் ஈழத் தமிழுக்கு புதிய வலுமையைக் கொண்டு வந்து சேர்க்க உதவின.

'நூறு பூக்கள் மலரட்டும், நூறு விதச் சிந்தனைகள் முயலட்டும் என்ற கொள்கை, கலைகள் செழித்தோங்குவதை ஊக்கப்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. கலையின் ஒரு குறிப்பிட்ட பாணியையும் அல்லது சிந்தனை வகையையும் வற்புறுத்தி இன்னொரு வகையைத் தடை செய்வதற்க நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படுவது கலையின் வளர்ச்சிக்குக் குந்தகமானது என நாம் நினைக்கின்றோம்... சரியானதா அல்லது தவறானதா என்று தெரிந்து தெளிதலுக்குப் பெரும்பாலும் காலக்கூடு ஒன்று தேவைப்படுகின்றது. சரியானதும் நல்லதுமான பொருள்கள், மணமுள்ள மலர்களை அல்லமல், நச்சுக் களைகளாகவே முதல் தடவையில் அநேகமாக நோக்கப்படுகின்றன... கலைகளிலே சரியான பிழையான பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் ஒரு நிதானமான மனப்பான்மையைக் கையாளுதலும், தாராளமான விவாதத்தினை ஊக்கப்படுத்துதலும் அவசர முடிவுகளைத் தவிர்த்தலும் தக்கது, 'நூறு பூக்கள் மலரட்டும், நூறு விதச் சிந்தனைகள் முயலட்டும்' என்ற கொள்கையை நிறைவேற்றுதல் என்பது, கருத்துவத்துறையில் மார்க்ஸ’ஸத்தைப் பலவீனப்படுத்தாது, அதனுடைய தலைமை நிலையை வலுப்படுத்தவே உதவும்.... What is needed is scientific analysis and fully convincing arguments. Doctrinaire criticism settles nothing.'

சீனப் பெருநிலப்பரப்பிலே மார்க்ஸ’ஸ சிந்தனைகளை சிக்காராக நாட்டிய மா ஓவின் சிந்தனைகளிலே சில இவற்றைக்கூட வாசித்து ஜீரணிக்காது 'முற்போக்கு இலக்கியத்திற்கு கைலாசபதி-சிவத்தம்பி வழிநடத்தும் ஒரேயொரு ராஜ-பாட்டைதான் உள்ளது' என்று சண்டித்தனம் செய்வது பச்சையான பேட்டை ரௌடிஸம். தமிழ் இலக்கியம் சம்பந்தமாக இத்தகைய ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரத்தினைச் சாட்சாத் மார்க்ஸ’ன் கல்லறையிலிருந்து நேரடியாகப் பெற்றுவிட்டதாக அவர்கள் ஆடிய கூத்து அறிவு மோசடியாகவும், மனிதப் பண்பின் பிறழ்வாகவுந் தோன்றியது. இது Neo (நவ) பிரபுத்துவம்! மேலாதிக்கம். அதிகாரதுர்ப்பிரயோகம். கொடிய அடக்குமுறை. சர்வாதிகார மூர்க்கம்! இவற்றுக்கு அடிபணியாது, மாஒவை சாட்சிக்கு இழுத்து, ஜனநாயக ரீதியான அறிவுப் பார்வையை வலியுறுத்தினேன். நிர்ப்பந்தங்களை நிராகரித்து அடக்கு முறைகளைச் சமராடி, சுத்த சுயம்புவான மனிதத்தின் மதிப்பினையும் கௌரவத்தினையும் ஆராதனை செய்யும் மகத்தான உரிமையையே ஜனநாயகம் என அர்த்தப்படுத்திக் கொண்டேன். இந்தப் பின்னணியிலேதான் 'நற்போக்கு இலக்கியம்' என்று எனது இலக்கிய நிலைப் பாட்டினை வெளியிட்டேன். இதனை உருவாக்கும் நிலையில் துணை நின்றவர் என் சகா இளம்பிறை ரஷ்மான். 1964இல் மூதூரிலே நடைபெற்ற தமிழ் விழாவிலே இஃது ஆவணமாகப் பிரசித்தமாயிற்று. அதற்கு உபகாரிகளாய் அமைந்தவர்கள் இருவர். ஒருவர் என் அன்புக்கின்யன்; கிண்ணியா தந்த கவிஞர் அண்ணல். மற்றவர் தமது பிறந்த மண்ணின் நேசிப்பினைத் தமது மதமாகவும் உயர்த்திய வ.அ.இ. இந்திய சஞ்சிகைகளின் இறக்குமதிக்குத் தடை விதிக்கும்படி பிறிதொரு போர்ப் பிரகடனத்தை முற்போக்கர், எழுபதுகளிலே முன்வைத்து சந்நதமாடினர். நிதான புத்தியுள்ள இலக்கியவாதிகள் சார்பில் நான் 'எஸ்.பொ. அறிக்கை'யை முன் வைத்தேன். அதனையும் வ.அ.வும் கவிஞர் அண்ணலுமே மக்கள் மன்றத்திலே சமர்ப்பித்தார்கள். இலக்கிய உலகிலே நிகழ்த்தப்படும் அநியாயங்களுக்க எதிராகத் துணிந்து குரல் கொடுக்கும் ஒருவராகவே வ.அ.இ. வாழ்ந்து வருகின்றார். இதற்காகவே, முற்போக்கருடைய இலக்கிய தர்மகர்த்தாக்கள் வ.அ.இவின் சிருஷ்டிப் பங்களிப்பினை மிதித்தும் ஒதுக்கியும் தங்களுடைய 'விமர்சன யாவார'த்தை நடத்தி வருகிறார்கள். உண்மை ஜெயிக்கணும். இது உண்மையின் பிரசித்தமும்.

இன்றும் ஈழத்தில் வாழும் கதைஞர்களுள் வ.அ.இ.லே மிகவும் மூத்தவர். முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளின் தந்தை. தத்துவங்களைப் போட்டுக் குழப்பாமல், பிறந்த கொட்டியாராப்பற்று மண்ணையும், அதன் இயற்கை லாவண்யங்களையும், அதிலே வாழும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசிப்பவர். இந்த நேசிப்பின் சம்பாவனையாக அந்த மண்ணின் மக்களுடைய வாழ்க்கையிலுள்ள மனித நேய ஒளிக் கீற்றுகளை, தமக்கு வாலாயமான ஒரு நடையிலே கதைகளாகப் பதிவு செய்தவர். அவர்களுடைய கனவுகளையும், ஆசைகளையும், இன்பங்களையும், நிமிர்வுகளையும் பங்கிட்டுக் கொண்ட பரவசத்தினை அவர் கதைகளிலே காணலாம். அவர்களுடைய இழப்புகள், சோகங்கள், சோர்வுகள், துயர்கள் ஆகியன கண்டு அவர் மனசு நெகிழ்ந்து துவளுவதையுங் காணலாம். டால்ஸ்டாய், தாஸ்தவொஸ்கி, மார்ஸ’ம் கோர்க்கி ஆகியோர் ரூஷ’ய மக்களுடைய வாழ்க்கைக் கோலங்களை வலுவாக நேசித்து எழுதினார்கள். சுவைப்போம். ஆனால், அவர்களுடைய சிருஷ்டிகளிலே வரும் பாத்திரங்களுக்கு 'சிலோன் சொக்காய்' மாட்டி, கவில நிறக் கண்களின் அழகிலே சொக்குதல் எத்தகைய வெகுளித்தனம்! அதனைச் செய்யாது, மூதூர் மண்ணின் சில பாத்திரங்களுக்கேனும் தமது சிருஷ்டிகளின் மூலம், ஒரு சர்வதேச அடையாளத்தையும் ஆளுமையையும் தேட முனைதல் எத்தகைய எழுத்து ஒர்மம்!

இதுவரையிலும், இலங்கை எழுத்தாளனின் ஐம்பது சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதி வந்ததில்லை. வர்த்தக நியாயங்களுக்கு மேலானது சத்தியம் என்பது நமதுதளம். ஏனெனில், இத்தொகை ஒரு சுவிசேஷத்தினை பிரசித்தம் செய்து வருகின்றது. மூதூர் மண்ணின் மசுகளுக்க ஒரு சர்வதேச அந்தஸ்தினையும் மதிப்பினையும் வெண்றெடுத்தல் வேண்டும் என்கிற பிரக்ஞையுடன் வ.அ.இ எழுத்து ஊழியம் இயற்றுகிறார். இன்னொன்று, கிழக்கிலங்கை மண்ணின் எழுத்து வல்லபங்களை பதிவு செய்தலை 'மித்ர' தன் தலையாய பணிகளுள் ஒன்றாக வரித்துள்ளது என்பது.

You are the rock. I will build my church on this rock.' (நீ பாறையாய் இருக்கிறாய். இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்? என மத்தேயு சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தேவ வாக்கியம், இதனை எழுதும் பொழுது எனது நினைவுக்கு வருகின்றது. கிழக்கிலங்கை எழுத்தாளர், குழந்தைத் தனமான பொச்சடிப்புகளிலே காலட்சேபம் செய்யாது, இந்தக் கதைக் கோவை என்று பாறையிலே, கிழக்கிலங்கையின் கதை வல்லபங்கள் என்கிற கோயிலை சரியாக நிர்மாணித்து, சர்வதேசக் கதை அரங்கிலே, நமக்குரிய பங்கினையும் கௌரவத்தினையும் தக்க வைக்க வாருங்கள் என்று, என் மகனின் பிறந்த மண் பற்றின் பெயராலே கேட்டுக் கொள்ளுகின்றேன்.

சாதனைகள் நாட்டுவதற்கான மையம் கிழக்குப் பல்கலைக்கழகம். அதற்கும்-தமிழ் பீடத்திற்கும்-மகத்தான மானிடக் கடமை உண்டு. நேற்றைகள் வாரா. இன்றைகள் மடிகின்றன. நாளைகளோ நம்பிக்கை. நேற்று நடந்த மூளைச் சலவையினால் தவசிப்பிள்ளைகளாய் வாழ்வதில் மகிமையில்லை. புதிய தரிசனம், ஆழ்ந்த ஞானம், ஆத்மார்த்த இனப்பற்று-இவை தேவை. அப்பொழுதுதான், உலக இலக்கியம்-உலகத் தமிழ் ஆகியவற்றின் பகைப்புலத்தில் கிழக்கின் தனித்துவ கௌரவத்தினை வென்றெடுத்தல் சாலும். இத்தகு வெற்றிப் பாசறையாகக் கிழக்குப் பல்கலைக்கழகம் மாறுமா? இந்த மாறதலுக்கா, எங்கிருந்தாலும் மானசீகமாகப் பிரார்த்தனை செய்பவன் நான்.

'எந்த ஓர் ஆணின் வெற்றிக்கு பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள்' என்று சொல்லுதல் மகா சம்பிரதாயமானது. ஆனால், வ.அ.இராசரத்தினத்தின் எழுத்துத் தவத்துக்குத் தூண்டுதலாய், திரியாய், நெய்யாய் அவர் மனைவி மேரி வில்லி திரேஸா இராசரத்தினம் என்கிற மாமனுஷ’ வாழ்ந்தார் என்பதற்கு சாட்சியங் கூறுதல் எனக்குக் கிடைத்துள்ள மகா கௌரவமாகும்.

'தோணி' வெளியீட்டு விழா, மூதூரில் (1962) நடந்தது. அப்பொழுது வ.அ.இ. வீட்டிலே தங்கி, அந்த 'வாசுகி' படைத்த விருந்துண்டு மகிழ்ந்தது இன்னமும் பசுமையாக உள்ளது. தன் சமையலின் கை வண்ணம் மட்டுமல்ல. விருந்துண்பவனின் நாக்கின் சுவை நாதமும் இணைதல் வேண்டும் என்கிற விருந்தோம்பலை இந்த மாமனுஷ’ எங்கே கற்றார்? 'வில்லிஅக்கா' என்று அனைவராலும் சீராட்டப்பட்ட அவர், சதா சிரித்த முகத்துடன், தனது கொடிவாக்கு உடம்பிலே அனைத்துச் சுமைகளையும் ஏற்று, வ.அ.இ.வின் எழுத்து வித்தைகளுக்கும் வித்துவங்களுக்கும் சர்வ சுயாதீனம் அளித்த உபகாரி. குடும்பத்தில் மட்டுமல்ல, பாடசாலையிலும் அற்புத நிர்வாகி. மூதூரிலுள்ள அர்ச் அந்தோனியார் பாடசாலை தமிழர்களுக்கான மஹா வித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்ட பொழுது, அதன் புதிய தேவைகளைப் பூர்த்தி செய்யவல்ல அற்புத நிர்வாகி அவரே என்பதை வித்தியாபகுதியார் உணர்ந்து அவரையே முதலாவது அதிபராக நியமித்தார்கள். தகுதி கண்டு அளித்த பதவி. அவர் அதிபராக, அந்த மஹா வித்தியாலயத்திலே ஒழுங்கு செய்த இலக்கிய விழாவிலே நானும் கலந்து கொண்டேன். அவருடைய நிர்வாகத் திறனை மெச்சாதார் இல்லை. 'லில்லி அக்கா இந்தப் பாடசாலையை என் தொகுதியின் முதலாவது பாடசாலையாகக் கட்டி எழுப்புவார்' என்று, மூதூர் முதல்வராயிருந்த ஏ.எல்.ஏ.மஜ“த் என்னிடம் பெருமையாகக் கூறினார்... அந்த அற்புத நிர்வாகி, குடும்பத் தலைவி, மாமனுஷ’ 'லில்லி அக்கா' இவ்வளவு சீக்கிரம் காவியமாவாள் என்று சத்தியமாகவே நான் எதிர்பாத்ததில்லை...

வ.அ. இராசரத்தினம் என்கிற மானிடன் இவ்வாழ்வில் செழிப்பதற்கும், கிழக்கின் முதற் கதைஞராய் நிமிர்வதற்கும், 'லில்லி அக்கா' ஊற்றும் உயிர்ப்புமாய் வாழ்ந்தார். அவர் மறைவு ஏற்படுத்திய சோகமே, 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது'. அவர் நினைவுக்கே சமர்ப்பணமாகும் இக்கோவை அதனை மகுடமாய்ப் புனைதல் பொருந்துவதே. அமரத்துவம் அடைந்த இருபத்தோராவது ஆண்டு நினைவாகவும் இது வெளிவருதல் எத்தகைய அபூர்வ சங்கல்பம்!

இன்றும் எழுதிக் கொண்டிருக்கும் வ.அ.இ. இன்னும் பல்லாண்டுகள் கிழக்கின் இலக்கியத்தை மேன்மேலும் வளப்படுத்துதல் வேண்டுமென மனசார வாழ்த்துகிறேன்.

எஸ்.பொன்னுத்துரை
அவுஸ்ரேலியா
01.10.96

---------------------------------------------

அணிந்துரை

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் அவர்களின் 50 சிறுகதைகள் ஒரு தொகுப்பாகப் பிரசுரம் பெறுவது வரவேற்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாகும்.

1940கள் முதல் எழுதி வரும் இராசரத்தினம் பலநூறு கதைகள் படைத்திருக்கிறார். அவருடைய முதல் கதைத் தொகுதியின் மகுடக்கதையான 'தோணி'யே மிகுந்த கவனிப்பையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அநேக தொகுப்புகளில் அது இடம்பெற்றிருக்கிறது.

அவருடைய ஆரம்பக் கதைகளுள் ஒன்றான 'தோணி'யிலேயே அவரது எழுத்தாற்றலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் யதார்த்த நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் மனித நேயமும், நம்பிக்கை மனோபாவமும் புலனாயின.

கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கை நடத்தும் மீனவன் நித்திய வறுமையிலேயே வாழ வேண்டியிருக்கிறது. காரணம், தோணி அவனுக்கு சொந்தமில்லை. இளைய மீனவன் ஒருவன், சொந்தத் தோணிக்காக ஆசைப்படுகிறான். சொந்தமாகத் தோணி வந்த பிறகே கல்யாணம் செய்து கொள்வது என்று உறுதிபூணுகிறான். அவன் ஆசை நிறைவேறுவதாயில்லை. 'உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை' என்பதை உணர்கிற அவன், தான் காதலித்த பெண் சுகமாக வாழட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் சொந்தத் தோணி உடைய ஒருவனுக்கு அவளை மணம் முடித்து வைக்கிறான்.

'இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பம்தான். எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை சந்தையில் பகிரங்கமாக விற்போம். விற்ற பணத்திற்குச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணம் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும். அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?' இதுவே அந்த மீனவனின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

கலை அழகுடன் யதார்த்த வாழ்வை சித்திரிக்கும் நல்ல கதை 'தோணி'. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றை நயமான கதைகளாக உருவாக்கியிருக்கிறார் இராசரத்தினம்.

பாடுபட்டு, வயலில் விளைச்சல் காண்கிறான் ஒரு விவசாயி அறுவடை பற்றியும் எதிர்காலம் குறித்தும் ஆசைக் கனவுகளோடு, பயிரைப் பாதுகாக்க இரவில் காவல் புரிகிறான். தன்னை அறியாமலேயே தூங்கி விடுகிறான். விடிந்ததும் பார்க்கையில், அறுவடைக்குத் தயாராக நின்ற பயிர்களை காட்டுப் பன்றிகள் நாதம் செய்துவிட்டுப் போயிருப்பது தெரிகிறது. அந்த ஏழை விவசாயியின் வெவ்வேறு மனநிலைகளையும் அருமையாக விவரிக்கிறது 'அறுவடை' என்ற கதை.

இவ்விரம் மனிதரின் பலவித மனநிலைகளை விவரிக்கும் உளஇயல் சித்திரங்களை இராசரத்தினம் திறமையாகப் படைத்திருக்கிறார். சொந்த ஊரில் மனைவியை விட்டுவிட்டு, தூரத்து நகரில் பணிபுரியச் சென்றுள்ள கணவன் பிரிவுத் துயரால்கஷ்ட முற்று, லீவில் அவளைக் காண ஊருக்கு விரைகிறான். அவனுடைய மனநிலையை 'அவசரம்' என்னும் சிறுகதை அழகாக, உணர்ச்சியோடு, விவரிக்கிறது. பள்ளி ஆசிரியர் ஒருவரின் எண்ணங்களைக் கூறும் 'குழப்பம்', தன் கணவன் இளமையில் சகஜமாகப் பேசிப் பழகிய மாமி மகளோடு இப்போதும் இயல்பாகப் பழகுவதைப் பொறாத மனைவியின் மனசை இடம் பிடித்துக் காட்டும் 'பெண்', மலை நாடு சென்ற உல்லாசப் பயணி தன்னை கவனிக்கக்கூடிய, தெரிந்தவர் யாருமில்லை என்ற உணர்வில், கள் மற்றும் பெண் போதை பெறுவதும், உடனேயே அதற்காக வெட்கம் கொள்ளுவதையும் கூறும் 'சரிவு' போன்ற கதைகள் ரசிக்கத் தக்கவை.

வாழ்க்கை முரண்களை பல கதைகள் சுவையாக எடுத்துச் சொல்கின்றன.

செல்லன் என்கிற அழகன் இலட்சியவாதி, ஊரின் அழகான பெண்கள் அவனை விரும்பி, திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவன் கல்யாணமே வேண்டாம் என்பதுபோல் நடந்து கொண்டான். அவன் ஆசைப்பட்ட பெண்ணும், அவன்மீது ஆசை கொண்ட பெண்களும் திருமணமாகிப் பல வருடங்கள் சென்றன. திடீரென அவன் தனது நாற்பதாவது வயதில் அயலூர் பெண் ஒருத்தியை மணம் புரிந்து கொள்கிறான். அவன் விரும்பி மணந்து கொண்ட பெண் அழகியுமில்லை. பின் செல்லன் ஏன் அவளை மணந்து கொண்டான்?

'கல்யாணம் செல்லனுக்கு இன்றியமையாததாகி விட்டதா? அழகையும் மென்மையையும் விரும்பும் இளவயதில் மெல்லிய நினைவான காதல் என்ற சொப்பனாவஸ்தை, அவனுள் திரிந்த உடலின் வேட்கையாக, தசையின் பிடுங்கலாக மாறி விட்டதா? அல்லது எவளோ ஒருத்தியிடமிருந்து பெறும் உடலின்பந்தான் கல்யாணத்தின் முக்கிய நோக்கம் என்று அவன் எண்ணிக் கொண்டானா? அந்த உடலின்பத்தை அழகற்றவனிடம் இருந்தும் பெறலாம் என்றெண்ணும் அபேதவாதியாகி விட்டானா?'

இப்படி எண்ணக் குழப்பம் வளர்க்கிறார் செல்லனின் நண்பர்-கதை சொல்கிறவர். முடிவில் அவர் தெளிவு பெறுகிறார்-

'காதல் என்ற முகாம் பூசிய உறையைக் கிழித்தெறிந்த அபேதவாதியான என் நண்பனை, சீதனம் என்ற ஊன்றுகோலை நம்பியிராத இலட்சியவாத செல்லனை, என் மனமார வாழ்த்தினேன்.'

செல்லன் கதையைக் கூறும் 'அபேதவாதி' சிறப்பாக அமைந்துள்ளது.

மனைவி கட்டுப்பெட்டியாக, நன்கு பேசிப் பழகிச் சிரித்து மகிழ்விப்பவளாக இல்லை என்று மனம் குமையும் ஜபார் என்கிற பள்ளி ஆசிரியர், புதிதாகப் பணிபுரிய வந்த இளம் ஆசிரியையின் அழகிலும் பேசிப் பழகும் இயல்பிலும் மோகம் கொண்டு, தன் மனைவியை விவாகரத்து பண்ண முற்படுகிறான். அவனுக்கு நல்லமுறையில் அறிவூட்டுகிறாள் இளையவள். இதை 'தலாக்' ரசமாக விவரிக்கிறது.

இக்கதையில் ஆசிரியரின் வர்ணிப்புத் திறன் ரசித்துப் பாராட்டப்பட வேண்டிய விதத்தில் காணப்படுகிறது.

'ஜமீலா அழகிதான். அதுவும் கொண்டற் காற்றிற் குருத்துக்களை ஆட்டி விகசிக்கும் தென்னஞ்சோலை நிழல் கட்டிக் காத்து வளர்த்த ஈழநாட்டுக் கீழ்க்கரை அழகி அவள். அலையாடும் தெளிந்த குளத்தின் உள்ளே ஆடி அசையும் நெடுங்கழியின் நிழலைப் போன்ற உருவம் கண்ணைப் பறிக்கும் கார்த்திகைப் பூவைப் போன்ற கொழுந்து விட்டெரியும் நெருப்புச் சுவாலையைப் போன்ற நிறம். அவள் அழகு யாரையும் மயக்காது. ஆனால் வசீகரிக்கும்.'

'பாத்தும்மாவும் அழகிதான். ஆனால் அவள் அழகு களியாட்ட விடுதிகளில் தொங்கும் கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சமல்ல. இருண்ட அறையின் நடுவே, சேவை வைராக்கியத்தோடு அமைதியாகச் சுடர்விடும் குத்துவிளக்கின் ஒளிதான் அவள் அழகு.'

இராசரத்தினத்தின் இத்தகைய வர்ணிப்புத் திறமை அவரது கதைகளில் பல இடங்களில் ஒளிர்கிறது. வர்ணனைத் திறனை வெளிப்படுத்துவதற்காகவே அவர் சில கதைகளை எழுதியிருக்கிறார். அவை பழம் தமிழ்ப் பாடல்களை, புராணத்தை, விவிலியக் கதையை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கின்றன.

சிவன்முடியில் இடம்பெற்றுள்ள கங்கைக்கும் அவர் உடலில் பாதியாக உறைகின்ற பார்வதிக்குமிடையே பூசல் எழ, கங்கை உதறித் தள்ளப்படவும் அவள் உருண்டோடி இலங்கையில் மாவலி கங்கையாக ஓடுவதாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கும் 'பங்கம்'- கணிகையையும் அன்னை மரியாளையும் பற்றிக் கூறும் 'காந்தரி'-காதலனுக்காகக் காத்திருக்கும் பெண்ணையும் நீர் ஓரத்து நாரையையும் இணைத்துக் காட்டும் 'தவம்'-அகநானூற்றுப் பாடலை ஒட்டி எழுதப்பட்ட 'வலை' (பனைமரத்து நாரையை செம்படவச் சிறுவர்கள் பிடித்தது போல, சந்தியாவை, ஆர்மியோ பொடியன்களோ பிடித்து விட்டார்கள் என கூறுவது)- திருவெண்காடர் கதையைக் கூறும் 'பாசம்' முதலியன எடுப்பான நடையையும் வசீகரிக்கும் விவரணைகளும் கொண்டிருக்கின்றன.

வாழ்க்கையின் விபரீத முரணை சுட்டிக்காட்டுகிற மற்றுமொரு கதை 'தையலக்கா'.

ஒரு டீச்சர். தாயுடன் வசித்துப் பணிபுரிகிறாள். அருகாமையில் உள்ள மாணவன் ஒருவன், படிப்பில் அதிக ஆர்வம் உடையவன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோர்ந்தவன் அவனுக்கு அவள் உதவிகள் செய்கிறாள். அவன் படித்து உயர்வடையத் துணை புரிகிறாள். டீச்சருக்குக் கல்யாணம் ஆகவில்லை. பணவசதி இல்லாததால் திருமண வாய்ப்பு தட்டிப் போகிறது. இளைஞனாக வளர்ந்து விட்ட மாணவன் அவளை நேசிக்கிறான். வயதில் மூத்த அவள் அவனை விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். ரசமாக வளர்க்கப்பட்டுள்ள 'தையலக்கா' எனும் இந்தக் கதை சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கிறது. சீர்திருத்த, முற்போக்குத் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

இராசரத்தினம் ஆசியராகப் பணிபுரிந்து அனுபவங்கள் பெற்றவர். அதனால் பலவித இயல்புகளும் நோக்கும் போக்கும் உடைய ஆசிரியர்களை கதை மாந்தராக்க் கொண்டு பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். ஆசிரியர்களது பிரச்சினைகள், வாழ்க்கைச் சிக்கல்கள், குழப்பங்கள், நம்பிக்கைகள், நிலைமைகள் முதலிய பல விஷயங்களை இக்கதைகள் விவரிக்கின்றன.

வேதக் கோயில் மணி, வருடப்பிறப்பு, வருடப் பிறப்பை ஒட்டிக் கொண்டாடப்படுகிற சில நிகழ்ச்சிகள் முதலியன சில கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 'கோயில் மணி ஓசை' 'நத்தார் ஓலம்' ஆகியவை விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.

தனது மனைவி இறந்ததும் அவர் அனுபவித்த உணர்வுகளையும், அவரது மனநிலையையும் உணர்ச்சிகரமான சொற்சித்திரமாக இராசரத்தினம் எழுதியிருக்கிறார். அதுதான் 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது.' சுய சோக அனுபவங்களை உருக்கமாக எடுத்துக் கூறும் இக்கதை வாசகரின் உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளது.

1+1= 1 1-1=2;

a+a=2a ஆயின், கதை+கதை= இருகதைகள் அல்ல.

இப்படி புதுமையான தலைப்புகளைக் கொண்ட இரண்டு கதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. முதலாவது, சிங்களர் தமிழர் உறவு பற்றியது. சிங்களவரின் அகந்தை மனப் பண்பை-'நாங்கள் பெரும்பான்மையினர். நாங்கள் தமிழ் படிக்க வேண்டிய தேவையில்லை. உத்தியோகத்திற்கு வரும் தமிழர்கள்தான் சிங்களம் படிக்க வேணும்' என்ற எண்ணத்தோடு செயல்புரிவதை-அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது கதை, பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலகப் பணியாளர் உத்தியோக இடமாற்றம் சம்பந்தப்பட்டது. புதிய முறையில் சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க்கைப் பிரச்னைகள், மனித இயல்புகள், செயல்கள் பற்றிய இதர கதைகளும் ஆசிரியரது அனுபவத்தையும் வாழ்க்கை நோக்கையும் பிரதிபலிக்கக் கூடியவை.

வ.அ.இராசரத்தினம் புதுமைப்பித்தன் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவர், அவர் கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இராசரத்தினம் கதைகளில், இது பல இடங்களில் புலனாகிறது. புதுமைப்பித்தன் பாணி என்று சொல்லப்படக்கூடிய ஒரு விவரிப்பு முறை இராசரத்தினத்தின் ஆரம்பகாலக் கதைகளில் காணப்படும் என்று சொல்ல இடமிருக்கிறது.

'கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகக் கலந்து வாழும் நாட்டிலே, கல்யாணங்கள் சொர்க்கத்திற் தீர்மானிக்கப்படுகின்றன என்ற வாக்கியத்திற்கு ஏதாவது அர்த்தமிருக்கலாம். ஆனால் வயதான பெண்ணைக் கிடுகு வேலிக்குட் சிறை வைத்து இருக்கும் இந்த நாட்டிலே சமூக பொருளாதாரக் காரணங்கள் பொருந்தாக் கல்யாணங்களைத் தீர்மானித்தாலும், அவைகளும் சொர்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டன என்ற பம்மாத்துப் பண்ண எவருமே தயங்குவதில்லை. விசுவலிங்கச் சாத்திரியார் சொர்க்கத்திற் தீர்மானிக்கப்படும் கல்யாணங்களுக்கு நாள் குறிப்பவள்'- இது ஒரு எடுத்துக்காட்டு.

இராசரத்தினம் கதைகளில் கையாள்கிற உவமைகள் புதமையாகவும் அழகாகவும் நயமாகவும் இருக்கின்றன. உதாரணமாகச் சில-

'கொட்டியாரக் குடாக் கடல் கட்டுக்காவலைமீறி ஓட முயன்றும், குடும்பப் பிணைப்பை விட்டுப் பிரிய மனமில்லாத முத்தற் குமரியைப் போல உள்வாங்கிச் செல்லும்.'

'மோட்டாரின் முன்பக்கக் கண்ணாடியிற் பொருத்தப்பட்டிருக்கும் 'நீரழிப்பான் தண்டை'ப் போல, கிழக்கில் இளங்கதிர்கள் சூழ இருந்த பனிமூட்டத்தைத் துடைத்துக் கொண்டு வந்தன.'

'சித்திரை மாதத்து உச்சி வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அந்த வெய்யிலின் அகோரத்தில் அச்சுறுப்புறம் யாவுமே, நேர்மையற்ற விமர்சனத்தைச் சகித்துக் கொள்ளமாட்டாத எழுத்தாளனின் இதயத்தைப் போல வெந்து புழுங்கிக் கொண்டிருந்தது.'

இந்த விதமாகப பலவகைகளிலும் வாசகரின் ரசனைக்கு விருந்தாக அமைவன வ.அ.இராசரத்தினம் அவர்களின் கதைகள். அவர் எழுதிய கதைகளில் பெரும்பான்மையானவை கிடைக்க வழி இல்லாமல் போனது துக்ககரமானதே. எனினும், படிக்கக் கிடைத்துள்ள கதைகளுக்காக மகிழ்ச்சி அடைவோம். அவற்றை தொகுத்து புத்தகமாகத்தரும் 'மித்ர' வெளியீட்டாளரைப் பாராட்டி வாழ்த்துவோம்.

வல்லிக்கண்ணன்.

----------------------------------------------------------

என்னுரை

வ.வெ.சு.ஐயர் அவர்கதான் நவீன தமிழ்ச் சிறு கதைகளின் பிதாமகர் எனச் சொல்லப்படுகின்றது. ஆனாலும் அவருக்குப் பின்னால் வந்த மணிக்கொடி எழுத்தாளர்களே தமிழ்ச் சிறுகதைகளுக்கு இலக்கிய அந்தஸ்தைத் தேடித் தந்தார்கள்.

மணிக்கொடி எழுத்தாளர்களின் தாக்கத்தினால் ஈழத்திலும் பலர் சிறுகதை முயற்சியில் ஈடுபட்டார்கள். இம்மூவருள்ளும் அ.செ.மு. குறிப்பிடத்தக்கவராவர்.

யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிக்குழு செயற்பட்டுக் கொண்டிருந்த நாற்பதுகளின் இறுதிக் கட்டத்திற்குள், ஈழத்தின் கிழக்குக்கரைக் கிராமம் ஒன்றில் இருந்து கொண்டு நானும் கதைகள் எழுத ஆரம்பித்தேன்.

நான் எழுத ஆரம்பித்த காலத்தில், எனக்கு எந்த 'இசம்'களும் தெரியாது, 'இயல்'களும் தெரியாது. ஆனால், மகாவலிகங்கை கடலோடு கலககும் எனது வட்டாரத்து மக்களின் வாழ்க்கையையும் 'காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளணிந்த ஏரியும் மல்கிய' கொட்டியாபுரப்பற்றின் அழகையும் என் கதைகளிற் கொண்டுவர வேண்டும்' என்ற ஆசை, என்னுள் வெறியாகவே உருவெடுத்திருந்தது. அந்த வெறியோடுதான் எழுதினேன்.

அந்தக்கால கட்டத்திற்தான், இலங்கையார் கோன் அவர்கள் கொட்டியாபுரப் பற்றுப் பகுதிக் காரியாதிகாரியாகக் கடமை ஏற்று மூதூருக்கு வந்தார். அவர் எழுத்துப் பணிக்கு வழிகாட்டியாகவும் குருவாகவும் ஆனார். அது எனக்குக் கிடைத்த பெரும் பேறு!

அந்த நாட்களில் நான் புதுமைப்பித்தனையும் படித்தேன். அவரது திருநெல்வேலி வட்டாரப் பேச்சு வழக்கும் தாமிரவர்ணிக்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரிப்பும் என்னைக் கிறங்க வைத்தன. கடந்த கால நிகழ்வுகளைக் கதையாக்கியபோது அவர் பிரயோகித்த இறுக்கமான, கவர்ச்சிகரமான இலக்கிய நடையும் என்னை ஆட்கொண்டது.

எனது ஊரவர்கள் தாங்கள் திருநெல்வேலி வட்டாரக் கடலோரக் கிராமங்களிலிருந்து வந்தவர்கள் என்று எப்போதுமே பெருமைப்பட்டுக் கொள்வார்கள். புதுமைப்பித்தனைப் படித்துக் கிறங்கிக் கொண்டிருந்த 'சுதி'யில், 'நானம் தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலிச் சீமைக்காரன்தான்' என்ற தலைக்கனத்தோடு வல்லிக்கண்ணன், சிதம்பரரகுநாதன் கு.அழகிரிசாமி முதலான திருநெல்வேலி எழுத்தாளர்களையும் தேடிப் பிடித்து விழுந்து விழுந்து படித்தேன்.

என் ஆசிரியத் தொழிலில் உயர்வு பெறுவதற்காகப் பரீட்சை எழுத வேண்டும், பட்டதாரி ஆகவேண்டும் என்று என் குடும்பத்தினர் கூறியவை எல்லாம், பாரதி பாடியதுபோல 'தேடிச் சோறு நிதம் தின்பதற்காகச் சொல்லும் சின்னஞ் சிறுகதை' களாகவே எனக்குப்பட்டன. எனது ஆசிரியத் தொழிலை இலக்கியம் படிப்பதற்கான கருவியாகத்தான் நான் வரித்தேன். வேறெந்த ஈனக் கவலைகளும் என்னை அண்டாமற் பார்த்துக் கொண்டேன். என் மனைவி எனக்கு அனுசரணையாக இருந்தாள்.

எழுத்து என் தவமானது!
அது என் வேள்வி!
அது என்னுள் கரும யோகமாகவும் சிந்தித்தது!

ஐம்பதுகளின் பிற்கூறுகளில், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆரவாரமாகச் செயல்பட்டார்கள். நான் திருக்கோணமலை வட்டார அமைப்பாளராக அவர்களால் 'நியமிக்கப்' பட்டேன். அந்த நியமனத்தை நான் எதிர்க்கவுமில்லை. ஆமோதிக்கவும் இல்லை. முற்போக்கினர் யதார்த்தம், தேசியம், மண்வாசனை எனக் கோஷங்கள் எழுப்பியபோது, இக்கோஷங்களுக்கெல்லாம் இலக்கணமான கதைகளை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன் என்று அடித்துச் சொன்னேன். முற்போக்கர்களுக்கு இது தோதுப்படவில்லை. அவர்கள் கூறுவதற்கெல்லாம் கட்டுப்படும் 'நல்ல பிள்ளை'யாக நான் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பாத்திருக்கலாம். அப்படியான 'நல்ல பிள்ளைத்தனம்' என்னிடம் என்றைக்குமே இருந்ததில்லை.

இந்த நிலையில், 1954க்கு முன்னர் நான் எழுதிய பதினான்கு சிறுகதைகளைத் தொகுத்துத் 'தோணி' என்ற என் முதலாவது சிறுகதைத் தொகுதியை 1962ல் அரசு வெளியீட்டின் முதலாவது நூலாக என் நண்பர் எம்.ஏ.ரஹ்மான் வெளியிட்டார். அத்தொகுதியிலே, யதார்த்தம், தேசியம், மண் வாசனை என்ற கோஷங்கள் வலுப்பெற்று, இலக்கிய உலகிலே ஓர் புத்துணர்வும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில், என் ஆரம்பகாலக் கதைகளை வெளியிடுவதன் மூலம், தேசியம், யதார்த்தம், மண்வாசனை என்ற கோஷங்கள் எழுவதற்கு முன்னால், ஈழத்துச் சிறுகதை இலக்கியம் இருந்த நிலையைப் பிரதிபலிக்க எண்ணினேன்... இத்தொகுதியைப் படிப்பவர்கள், ஈழத்துப் பூதந் தேவனார் தொட்டு வளர்ந்துவரும் இலக்கிய மரபிற்குக் குறிப்பிட்ட கால கட்டத்தில், விமர்சகர்கள் ஏதேதோ பெயர் சூட்டி ஆரவாரிக்கிறார்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன். ஏனென்றால், நான் ஈழத்துப் பூதந் தேவனாரின் இளைய சகோதரன். எனக்கு முன்னால் வேறெந்த விலாசமும் ஓட்டப்படுவதைவிட அவருக்குத் தம்பி என்று சொல்வதிலேதான் நான் பெருமைப்படுகிறேன்... என குறிப்பிட்டேன். என் பிரகடனம் முற்போக்கு எழுத்தாளர்களுக்குப் பிடிக்கவேயில்லை.

இதற்குப் பின்னால் 1970களில் குமுதம், ஆனந்தவிகடன், கல்கி உட்பட பல தமிழக சஞ்சிகைகளை (முற்போக்கர் மொழியிற் 'குப்பைகளை') தடைசெய்ய வேண்டும் என முற்போக்கர்கள் குரலெழுப்பினர். தமிழகத்திலிருந்து வரும் சில சஞ்சிகைகளைத்தானும் தடைபண்ண வழிவிட்டுக் கொடுத்தால், சிங்களப் பேரினவாதம், தமிழகத்திலிருந்து வரும் எல்லா நூல்களையுமே எதிர்காலத்திற் தடை பண்ணக் கூடும் என நான் எண்ணினேன். தமிழ்ச் சஞ்சிகைகளைத் தடை பண்ண வேண்டும் என்ற கோஷத்தை எதிர்த்துக் கட்டுரைகள் எழுதினேன். அக்கட்டுரைகளுக்கு நாட்டிலே நல்ல வரவேற்பு இருந்தது. கடைசியாய் தடை பண்ணவேண்டும் என்ற முற்போக்கர்களின் கோஷம் பிசுபிசுத்துப் போயிற்று.

இப்படியாக அவர்களோடு முரண்பட்ட நிலையிற்தான் என் எழுத்துத் தவம் தொடர்ந்தது.

முற்போக்கு விமர்சகர்கள் என்னை 'அமுக்க' முயன்றார்கள். ஆனால் நான் பீறிக்கொண்டு கிளம்பினேன்.

கண்டுகொள்ளாமல் இருக்க விழைந்தார்கள்! நான் என் இருப்பைத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன்.

இத்தனைக்கும் அவர்கள் பிரசாரிக்கும் சோஷலிசத்தை நான் நேசிக்கிறேன். என் தாய்நாட்டின் ஒவ்வொரு மணற் குறுணியையும் எந்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் 'கோசு' போகாமல் நேசிக்கிறேன்.

ஈழத்து முற்போக்குவாதிகள் எதை எழுத வேண்டும், எதை எழுதக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாக்ஸ’ம் கோர்க்கியும், மாயா கோவ்ஸ்கியுமே அவர்களுக்குக் குரு. மற்றவர்களைக் கண்டு கொள்ள அவர்கள் விரும்பவுமில்லை. அதன் காரணமாகச் சாதித் திமிரையும், வறுமையின் கொடுமையையும், அதிகார மமதையையும் மட்டுமே எழுத வேண்டும் என்பது அவர்கள் வகுத்துக் கொண்ட விதி; வரம்பு!

இவ்வாறு எழுதுவதால் அழகியல் அந்நியப்படுத்தப்படுகிறது. மென்மையான உணர்வுகள் புறந்தள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனிலும், ஏதோ ஒரு கணமாவது வெளியாகும் மனித நேயத் தெறிப்புக்களை மறுக்கப்படுகின்றன. கலாபூர்வமான சத்தியங்கள் சுருங்கிப் படைப்புக்கள், பிரச்சாரங்களாக மலினப்படுத்தப்படுகின்றன. இதை உணர்ந்த நான் வாசகனிடம் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் திணிக்க விரும்பவில்லை. மாறாக நான் காணும் மக்கள் வாழ்க்கையை வாசகனோடு பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

எனது ஐம்பது வருட இலக்கிய வாழ்க்கையில் நான் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன்! அக்கதைகளைத் தொகுத்தும் வகுத்தும் பத்துத் தொகுதிகளுக்கான 'பைல்களை' வைத்திருந்தேன். அத்தொகுதிகளை என் 'அமுதா' அச்சகத்திலேயே அச்சிட்டுப் புத்தகமாக்கலாம் எனக் கனவு கண்டேன். ஆனால் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன் செயல்கள் காரணமாக, நான் எழுதியிருந்த அத்தனை எழுத்துக்களும், எனது அச்சமும்கூடத் தீக்கிரையாக்கப்பட்டன. அது நடைபெற்ற தொண்ணூறாம் ஆண்டிற்குப் பின்னர் நான் குமைந்து போனேன். விரக்தியும் வேதனையுமே மனதில் மிஞ்சின.

இந்த நிலையிற்தான் என் இலக்கிய நண்பன் 'எஸ்பொ' சுமார் ஐந்நூறு பக்கங்கள் கொண்ட ஆவணமாக உங்கள் சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட வேண்டும். செலவுகளை என் மகன் அநுர ஏற்பான். சிறுகதைத் தொகுதியை வெளியிட வேண்டும் என்று வெகுவாக ஆசிக்கிறான். கதைகளை அனுப்புங்கள் என்று அவுஸ்திரேலியாவிலிருந்து கடிதம் எழுதினார்.

கடிதத்தைக் கண்டு நான் கண்­ணீர் விட்டேன். என் கதைகளை எங்கே தேடுவேன்? தேடி எங்கே போவேன்?

யாழ்ப்பாணம் குரும்பசிட்டி பொன்னையா நினைவு மன்றத்தில் எல்லா ஈழகேசரி இதழ்களும் சேர்த்து வைக்கப்பட்டிருந்ததை நான் அறிவேன். ஆனால் இப்போது குரும்பசிட்டி என்ற ஊரே இல்லை! வேறு நண்பர்களைத் தேடியும் யாழ்ப்பாணம் போக முடியாது!

கொழும்பு தேசீயச் சுவடித் திணைக்களத்திற்குத்தான் போக வேண்டும். மாதக்கணக்காகக் கொழும்பிற் தங்கியிருந்து கதைகளுக்குப் பிரதி எடுக்க வேண்டும். ஆனால் 'யுத்தகால'ச் சூழ்நிலையிற் கொழும்பில் நடமாடுவது சிரமமாகப்பட்டது.

ஆனாலும் என் எழுத்துக்கள் சிலவற்றையாவது ஆவணப்படுத்த வேண்டும். அதைச் செய்யாவிட்டால் நான் என் இருப்பை இழந்து விடுவேன். இலக்கிய உலகிலிருந்து என் முகம் மறைந்து விடும் என்ற உண்மை என்னுள் உறைத்தது. எனவே, பல இலக்கிய நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன்.

ஆரையூர் அமரன், திக்வெல்லை கமால், அன்புமணி, கவிஞர் நீலாவணனின் மனைவியார் திருமதி அழகேஸ்வரி சின்னத்துரை, கவிஞர்கள் கனகசிங்கம், சாருமதி, தொண்டன் ஆசிரியர் மலர்வேந்தன், திருக்கோணமலை அமரசிங்கம் ஆகியோர் தம்மிடமிருந்த கதைகளை அனுப்பி வைத்தார்கள். மட்டக்களப்பில் வாழும் இளம் எழுத்தாளரும் என் உறவினருமான அ.ஜெயராஜ் பாய்வா 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது' என்ற மகுடக்கதையைத் தந்தார். கண்டி தேசீய குருமடத்திலிருந்து என் 'தோணி' தொகுப்பைப் பெற்றேன். திருக்கோணமலை, மூதூர் பொது வாசிக சாலைகளிலிருந்தும் சில கதைகளைப் பெற்றேன்.

'சுமை' என்ற கதையை என் நினைவிலிருந்து மீட்டு எழுதினேன். என் மனசிலே புதிய கதைகளுக்கான கோலங்கள் மனைகோலின. கோயில் மணி ஓசை, ஓர் ஆலமரத்தின் கதை, பெண்ணியம் என்ற கதைகளை இத்தொகுதிக்காகவே எழுதினேன்.

இப்படித் தொகுதிக்காள கதைகள் சேர்ந்தபோது, தோணி சிறுகதைத் தொகுதியில் வெளியான பாலன் பிறந்தான், கலைஞனும் சிருட்டியும், கோகிலா, ஒற்றைப்பனை, நம்பிக்கை, ஏமாற்றம் ஆகிய ஆறு கதைகளையும் இத் தொகுதியிற் சேர்க்காமலே விட்டு விட்டேன். ஆனாலும்,

நூறு ஆடுகளை வைத்திருக்கும் ஒருவன் அவற்றில் ஒன்று காணாமற் போய்விட்டால் மற்றவைகளை அப்படியே விட்டு விட்டுக் காணாமற் போன ஆட்டைத் தேடுவான்.

என்று பைபிலிள் குறிப்பிடுவது போல நானும் காணாமற் போன 'ஆடுகளை'த் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.

பல கதைகள் வெளியான சிற்றேடுகளின் ஆசிரியர் எந்தெந்த நாட்டில் அகதிகளோ?

பெரிய பத்திரிகைகளுக்குக் கதைப்பிரதி கேட்டு எழுதினால் அவர்களிடமிருந்து பதிலே வராது.

சுவடித்திணைக்களத்திற்குப் போக இன்னமும் காலம் கனியவில்லை! இந்த நிலையில் இதில் உள்ள ஐம்பது கதைகளாவது ஆவணமாக மிஞ்சட்டும்!

இத் தொகுதியின் முகப்புக் கதை வெளியானபோது, முனைவர் சாலை இளந்திரையன் அவர்கள், 'சுடரில்' அக்கதையை வெகுவாகப் பாராட்டி விமர்சனஞ் செய்திருந்தார். அதிற் சில வரிகளையாவது நூலட்டையிற் பொறிக்க எண்ணினேன். ஆனாற் சுடரைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

கடைசியாக, கதைகளை எனக்குத் தந்த இலக்கிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நூலின் பதிப்பாசிரியர் பொன் அநுரவிற்கும், முன்னுரை வழங்கிய தமிழக எழுத்தாள பீஷ்மாச்சாரியாரான வல்லிக்கண்ணன் அவர்களுக்கும், முன்னீடு தந்த எஸ்பொவிற்கும், புத்தக அமைப்பை அழகுறச் செய்து தந்த நண்பர் இளம்பிறை எம்.ஏ. ரஹ்மானுக்கும், அட்டை அமைத்துத் தந்த டிராட்ஸ்கி மருதுவுக்கும், என் மனைவியின் படத்தை வரைந்துதந்த சேகருக்கும் என் மனமார்ந்த நன்றி.

உலகத்துச் சிறுகதைகளுக்கு ஈழத்தின் பங்காகச் செலுமை சேர்க்கும் சில கதைகளாவது இத்தொகுதியிலுள்ளன என்பது என் கட்டித்த நம்பிக்கை.

வ.அ.இராசரத்தினம்
திரிகூடம்
மூதூர்
2.9.1996

--------------------------------------------------------------------

பொருளடக்கம்

1. அறுவடை 25
2. பங்கம் 31
3. கோயில் மணி ஓசை 33
4. தோணி 48
5. வென்றிலன் என்ற போதும் 62
6. தோழருக்குத் தெரியாதது 68
7. தலாக் 76
8. அபேதவாதி 84
9. கடலின் அக்கரை போனோரே 92
10. 1+1=1; 1-1=2 100
11. அவசரம் 112
12. நத்தார் ஓலம் 120
13. ஆண்மகள் 127
14. ஓரு தெய்வம் ஆசி வழங்குகிறது 142
15. இரசிகன் 155
16. கலைஞன் துயர் 163
17. தவம் 169
18. உண்ணி 175
19. பிரிபுபசாரம் 178
20. ஒரு பூனைக்கதை 186
21. ஜ“ப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன 188
22. ஒரு காவியம் நிறைவு பெறுகிறது 194
23. சுமை 236
24. பொய் முகங்கள் 246
25. சரிவு 254
26. தர்மம் 261
27. குதிரை 265
28. போர்ப்பறை 272
29. மதிப்பு 280
30. காந்தரி 283
31. பாசம் 288
32. வலை 296
33. வேர்கள் 302
34. மீண்டும் காந்தி பிறப்பார் 310
35. குழப்பம் 320
36. குடிமகன் 328
37. a+a=2a ஆயின்
கதை+கதை= இரண்டு கதைகடல்ல 336
38. மறைப்பு 349
39. தகரவிளக்கு 356
40. பாலை 362
41. தையலக்கா 385
42. வாழ்க சுதந்திரம் 393
43. பிரிவு 395
44. பெண் 404
45. பிறந்த மண் 407
47. ஈட்டிக்காரன் 418
46. பெண்ணியம் 424
48. ஓர் ஆலமரத்தின் கதை 428
49. மனிதன் 439
50 கனி 446

-----------------------------------------------------------

அறுவடை

'தையும் மாசியும் வையகத்துறங்கு' என்ற வாக்கியம் ஆரம்பப் பாடசாலைக்குத் தானும் சென்றிராத அப்துல்லாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஊருக்குள்ளே இருக்கும் தன்குச்சிலே, வழுதி கூடலிற் தங்கிய சத்திமுற்றப்புலவரைப் போலக் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு போர்த்துக் கிடந்தால் இதமாக இருக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவனால் அப்படிப் படுத்துறங்க முடியுமா?

'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற தத்துவத்தைக் கொள்கையளவிற் கூடக் கெள்விப்பட்டிராத 'புண்ணிய பூமி' அந்தப் பிரதேசம். அந்தப் பிரதேசத்திலே கண்காணாத போடியாரான கோணேசர் ஆக்ரமித்துக் கொண்டுவிட்ட பெரும்பங்கைக் கழித்தால், மீதியெல்லாம் தெய்வத்தின் பிரதிநிதிகளான கோயில் வண்ணக்கு கட்கும் மற்றையோருக்கும் அடக்கம். எல்லாம் சேர்த்து 'மானம் பார்த்த' பூமிதான். இந்தப் பூமியின் ஒரு கண்டத்தைத்தான் வருடாவருடம் வாரத்துக்கு எடுத்து வேளாண்மை செய்து வந்தான் அப்துல்லா.

கச்சான் காற்றுச் செத்துச் செத்து வீசி, மதியம் திரும்புகையில் வாடையாகி அசையுமல்லவா? அந்த நாட்களிலே, அதாவது ஆவணி புரட்டாசி மாதங்களிலே அப்துல்லாவுக்கு வயலில் வேலை தொடங்கிவிடும் பாளம் பாளமாய் வெடித்துக், கல்லாய்க் கலட்டியாய்க் கிடக்கும் அந்த வயலில், முதல் மழை விழுந்த உடனேயே அப்துல்ல, வீட்டு மூலைக்குள்ளே மண் சுவரோடு சார்த்திவைக்கப்பட்டிருக்கும் கலப்பையை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு வயலுக்குப்போய் விடுவான். மழை பெய்து பொருமிக்கிடக்கும் நிலத்திலே கலப்பையின் கொழுவை ஊன்றியதும், மாடுகள் உன்னி இழுக்கையில், ஒன்றில் மண் பாளம் பாளமாக வெடித்துப் புரளும். அல்லது கொழுவுக்கு மேலே நுகத்தடியும் ஏரும் பொருந்துமிடம் 'படீர்' என்று தெறிக்கும். இத்தனை கஷ்டத்திற்கு மிடையில் 'ஆடி அரையாறு ஆவணி பேராறு' என்ற பழமொழி பொய்த்துப் போய் மழையே பெய்யாமற் போய்விடும் அப்போதெல்லாம் 'தலையுழவு' எடுத்துக் கொள்ளவில்லையே என்று எண்ணுகையில் அப்துல்லாவின் அடிவயிறு காய்ந்துக் கிடக்கும் நிலத்தைப் போலவே நெருப்பாய் எரியும்.

இ.தொ.kaviyam2 ***
** kaviyam1.mtf தொடர்ச்சி**

இந்த வருடம் அப்துல்லாவிற்கு அந்தச் சங்கடம் தோன்றவில்லை. ஆவணி மாதம் நல்ல மழையே பெய்தது. தலையுழவிலேயே நிலம் புழுதியாகவும் போய் விட்டது.

உழவு மழை முடிந்து, புரட்டாசி மாதக் கடைசியிற் பெய்த தலை மாரியின்போது, அப்துல்லா நிலத்தை மாடு விட்டு நன்றாகச் சேறாக்கிப் பரம்படித்து ஐப்பசி மாத முற்பகதியில் வயலெல்லாம் பயிரேற்றி விட்டான். பருவமழை சௌகரியமாக அமைந்ததைக் கண்டு அப்துல்லா மட்டுமல்ல, எங்களூர் உழவர்கள் எல்லோருமே பூரித்துப் போனார்கள்.

கார் முடிந்தது. கூதிர் போயிற்று. கண்ணுக்கெட்டாத் தொலைவிற்கு பரந்து கிடக்கும் அந்த வயல்வெளியின் மரகதப் பசுமையின் அப்துல்லாவின் கண்ணும் மனமுங் குளிர்ந்தன. வாலைக் குமரி போலத் திமுதிமு என்று வளர்ந்த பயிரின் நெஞ்சம் விம்மிப் பூவாய், பூ நிறைந்த குடலையாய், பாளையாய், காலிற் சதங்கையைக் கட்டிக்கொண்டு ஆடத் தயாராகி நிற்கும் நர்த்தகியைப் போலக் கம்பீரப் பார்வை பார்க்கையில் பனிகாலந் தொடங்கி விட்டது.

அப்துல்லாவிற்கு அதற்குமேல் வீட்டிலே தங்கியிருக்க முடியவில்லை. நாளுக்கு நாள், பூவும் பிஞ்சுமாகிக் கொண்டு வரும் தன் பயிரைக் காவல் காப்பதற்காகத் தன் மனைவியை, குழந்தைகளை, வீட்டையே விட்டுத் தொலைதூரத்திற்கு தன்னந் தனியனாகிக் கொண்டிருந்தான். எப்போதாவது காலையில் வீட்டிற்குப் போய் சாப்பாட்டிற்கு ஏதாவது எடுத்துக்கொண்டு இருட்டு முன் வயலுக்குத் திரும்பிவிட வேண்டும் வீட்டோடு அவன் வைத்துக் கொண்டிருந்த தொடர்பெல்லாம் இதுதான்.

மாசி மாதம் பிறந்து விட்டது. பச்சைப் பசேலென்று இருந்த பயிரின் தாள்கள் நிறம் மாறிவிட்டன. பூவாய்ப் பிஞ்சாய் இருந்த கதிர்களிற் பாலாக இருந்த அன்னம் பருக்கையாக முற்றிக் காற்றிற் கலகலத்துத் தலை வணங்கி நின்றது. அந்த நிலையில் அப்துல்லா இரண்டு வாரமாக வீட்டிற்குப் போகவேயில்லை. வயல் வெளியின் ஒரு கரையில், காட்டோரமாக அவன் 'கண்டம்'இருநததால் காவலும் அதிகமாகவே தேவைப்பட்டது.

அன்றிரவு, அப்துல்லா தன் குடிலில், முட்டிக் கால் கட்டிக்கொண்டு, நாடியை முழங்காலில் வைத்தபடி குந்திக் கொண்டிருந்தான். அமாவாசை இருட்டு. அந்தகார இருளின் மத்தியில், வெறிச்சோடிக் கிடக்கும் வயலின் மேற்பரப்பின் அந்தக் காவற் குடில் கருநீலமாக பரந்து கிடக்கும் ஆழியில் வட்டப்பாய் விரித்து நிற்கும் சின்னஞ் சிறிய படகைப்போல் நின்றது. காளான் குடையைப்போல் விரிந்து குவிந்து நிற்கும் அக்குடிலின் வட்டக் கூரையின் கீழ் பரப்பிக் கட்டியிருந்த வரிச்சுத் தடிகளின் மேலே, இரண்டு தென்னங்கீற்றுகள் எதிர் எதிராகப் போடப்பட்டிருந்தன. அக்கீற்றுக்களின் மேல், உடம்பிற் குளிர் தாவாது என்ற நம்பிக்கையோடு சாக்கு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அதன் வடகரையில் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த இன்னொரு சாக்கு, தலையணை என்ற பெயரைப் பெற்றுக் கொண்டு மரியாதையாக இருந்தது. படுக்கையின் கீழே அரைமுழப் பதிவில், கையெட்டக் கூடிய இன்னோர் தட்டியில் களிமண் பரப்பப்பட்டு அதிலே நெருப்பு எரிந்துகொண்டு இருந்தது.

குளரிலே காலைக் கட்டிக்கொண்டிருந்த அப்துல்லா குனிந்து சாம்பர் பூத்துக்கிடந்த நெருப்பை மூட்டினான். 'சொய்' என்ற அரவத்தோடு கொட்டும் பனியின் சலசலப்பை மீறிக்கொண்டு விறகுகள் சடசடவென்று எரிந்தன. அப்துல்லாவின் குளிரை எங்களாலும் அடக்கமுடியவில்லையே என்று வானை நோக்கி முறையிடுவதுபோலத் தீயின் செந்நாக்குகளை ஆடி அசைந்துமேல் நோக்கிக் கொண்டிருந்தன.

அப்துல்லா தன் இரு கைகளையும் சுவாலையருகிற் பிடித்துக் காய்ச்சி சூடேற்றி, சூடேறிய தன் கைகளால், உடல் முழுவதையும் தடவிக் கொடுத்தான். உடம்பிலே சிறிது தெம்பு வந்ததும், தலையணை என்ற பெயரைத் தரித்துக் கொண்டிருக்கும் சாக்கின் கீழே கையை விட்டுப் புகையிலையை எடுத்தான். பனியிற் தண்­ராகிக் கிடந்த அப்புகையிலையை நெருப்பிலே வாட்டி, ஏற்கனவே நீரில் அவித்து, விரல் நீளத்திற்கு வெட்டி வெட்டி வைக்கப்பட்டிருந்த தென்னங்குருத்துகளில் ஒன்றையும் எடுத்து நடு ஈர்க்கைக் கிழித்துப் புகையிலையை ஓலையிலே வைத்து 'றோக்கை' சுற்றினான். (றோக்கை தமிழ்ச் சொல்லோ என்னவோ எனக்குத் தெரியாது. பாஷா பாண்தர்கள் அதிலே முட்டி மோதித் தலையை உடைத்துக் கொள்ளலாம்). சுற்றின 'றோக்கை'யை வாயிலே வைத்து ஒரு இழுப்பு இழுத்தபோது அவனுக்குக் குளிரின் நடுக்கம் குறைவது போற தோன்றிற்று. வாய் வழியே உள்ளே சென்று, மூக்கால் வெளிப்பட்ட கொட்டியாபுரத்துப் புகையின் கமறல் அவனுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த உற்சாகத்தில் நாற்பது வயதுக்கு மேல், மூன்று பிள்ளைகட்குத் தந்தையாகிவிட்ட அவன் மனத்திற் சிருங்கார நினைவுகள்கூடத் தலைதூக்கின. இந்தக் குளிரில் அவன் மனைவியின் மெல்லிய இதமான ஸ்பரிசம் இருந்தால்....

அந்த எண்ணத்தில் அப்துல்லாவின் நாவில் யாரோ மட்டக்களப்பு எழுத்தறியாக் கவிஞன் பாடிய கவி ஒன்று வந்தது. அப்துல்லா பாடினான்.

கதிரு குடலை மச்சாள்
காய்வணக்கம் ஈக் கறுப்பு
பண்டி நெருக்கம் - கிளியாம்
பாக்க வரக்கூடுதில்ல

அவன் பாடிய பாட்டு அந்தப் பரந்த வயல் வெளியின் அந்தகார இருளிற் தேய்ந்து மடிந்தது. அப்பாட்டிற்கு எதிர்க்குரலாக எங்கோ ஒரு மரத்திலிருந்து கூகைகள் உறுமிய சப்தந்தான் விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பாட்டம் பாடி முடிந்ததும், அப்துல்லா கீழே 'தீவறை'யிற் கிடந்த நீண்ட கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு, வேலியோரமாக வயல் வரப்பின் மீது நடக்கத் தொடங்கினான் காலடியைத் தெளிவிப்பதற்காகக் கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையை வீசிய போது உண்டான தீயின் சுவாலை, அந்தகார இருளின் சடலத்தைக் கத்தியாற் கீறிக் கீறிக் கிழிப்பதுபோல இருந்தது. அப்துல்லா 'ஹால் ஹுய்' என்று பெருஞ் சப்தமிட்டுக் கொண்டே வயல் வரப்புகளில் நடந்தான்.

வரம்பிலே தலைசாயத்துக் கிடந்த நெற்கதிர்களும் தாள்களும் பனியிலே சிதம்பிக் கிடந்த அவன் கால்களை மெல்லிய கூரான கத்தியைப்போலக் கீறி கிழித்தன. பாதங்களின் கீழே நத்தைக் கூடுகள் நறநறவென்று நொறுங்கின. அப்துல்லா தன் பழைய சாரத்தாற் தலையில் முக்காடிட்டு உடல் முழுவதையும் போர்த்தபடி நடந்து கொண்டிருந்தான்!

பாவம்! இந்த வருஷம் மக்கத்துக்குப் போய்வந்த ஹாஜிமார், வைத்திருந்ததைப் போல அவனுக்கும் ஒரு மரினாக் கம்பளி வாங்க ஆசையாகத்தானிருந்தது. அந்த ஹாஜிமாரைப் பார்த்து, அப்துல்லாவைப் போன்ற எத்தனையே உழவர்கள் பனிக்காலத்திற்காகக் கம்பளி வாங்கித்தான் இருந்தார்கள். ஆனால் அப்துல்லாவிடம் கம்பளி வாங்கிக் கொள்ள காசு மிஞ்சவில்லை. போனாற் போகிறது. இந்த வெள்ளாமை வெட்டியதும் வாங்கிக் கொள்ளலாம்... அது மட்டுமா? இந்த வருஷத்தைப்போல என்றைக்குமே அவன் வயல் செழுமையாக இருக்கவில்லை. பயிர் ஒவ்வொன்றும் கரும்பு போலப் பெருத்து ஈர்ப்பீசியது போலக் குலைதள்ளித் தலை சாய்த்து...

இன்னும் ஒரு கிழமை, அட்டமி நவமி கழித்து விட்டாற் கத்தியைப் போட்டு விடலாம். எப்படியும் இம்முறை நாற்பது நாற்பத்தைந்து 'அவணம்' காணும் மாட்டு விசக்களை, விதைநெல்லு, வெட்டுக்கூலி, சில்லறைக் கடன், தலைவாரம் எல்லாம் போனால் எப்படியும் ஏழு, எட்டு அவணம் மிஞ்சும். இப்போதுதான் அவணம் நூற்றியிருபத்தைஞ்சு ரூபாய் விற்கிறதே உடனேயே விற்றுவிட்டு மூத்த மகள் சுபைதாவின் நிக்கா(ஹ்)வை நடத்திவிட வேண்டும். செலவோடு செலவாக இம்முறையே இளைய மகன் காசிமுடைய 'சுன்னத்'தையும் நடத்தி விடவேண்டும்.

இன்ப நினைவுகளில் மிகந்தவனாக வயல் வரப்புகளில் நடந்து கொண்டிருந்த அப்துல்லாவிற்குக் குளிரே தெரியவில்லை. வளைந்து கொண்டூ குடிலுக்கே திரும்பி வந்த போதுதான் அவனுக்குத் தன் நினைவு வந்தது.

குடிலில் ஏறி மறுபடியும் நெருப்பிற் காலகளைக் காய்ச்சினான் அப்துல்லா. 'றோக்கை' சுற்றிக் குடித்துக் கொண்டிருந்தபோது அப்படியே நித்திரையாகி விட்டான்.

* * *

விடிந்தது. மூடுபனியின் வெண்திரையைக் கிழித்துக் கொண்டு ஈட்டிகளாய்ப் பாயும் காலைக்கிரணங்களின் ஒளியில் வயல் முழுவதும் பொற்கதிர்களாக மின்னின. ஆழ்ந்த நித்திரையில் இருந்த அப்துல்ல, "அப்துல்லா அப்துல்லா" என்று தன்னை யாரோ கனவிற் கூப்பிடுவது போன்ற உணர்வோடு கண்களை விழித்துப் பார்த்தான்.

அவன் முன்னால் நின்ற அடுத்த வயற்காரக் கிழவன் வேலாயுதம் "படுபாவி, ஆண்டவன் தந்தையும் இப்படிக் கொள்ளை குடுத்திற்றியே" என்றான் பரிதாபகரமாக.

அப்துல்லா குடிலில் இருந்தவாறே தன் வயலைப் பார்த்தான். அங்கே... ஐயோ! நான் எதை எழுத? கரும்பாய்ப் பெருத்து, ஈர்ப்பீச்சியது போலக் காய்த்துக் கனத்தாற் தலைசாய்த்து நின்ற அப்துல்லாவின் பயிர், ஒரு மந்தை காட்டுப் பன்றிகளால் உழக்கப்பட்டுப் புதிதாய் உழப்பட்ட தரையாய், நெருப்புப் பிடித்த காடாய்... ஐயோ!

அடிவயிறு நெருப்புப் பிடித்து எரிந்த அப்துல்லா தலையிற் கைகளை வைத்துக்கொண்டு "அல்லா" என்று கூவினான்.

அவன் கூக்குரல் அல்லாவிற்குக் கேட்டதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் வேதாந்த சித்தாந்த ரகஸ்யங்களைக் கரை கண்ட வித்தகனல்ல. வெறுங்காதாசிரியன்!

ஈழகேசரி'54

------------------------------------------------------

பங்கம்

உமாதேவிக்கு ஆத்திரம். அர்த்த நாரீஸ்வரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டே கங்கையையும் தன் சடையில் வைத்திருக்கிறாரே என்று. அவளையும் ஒழித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று மனத்துட் கறுவிக்கொண்டு தன் வலக்கையைத் தன் பர்த்தாவின் தலைக்கு மேலே உயர்த்தியபோது, அவள் கையை டக்கென்று பிடித்துக் கொண்டார் சிவபிரான்.

"விடுங்கள் கையை, தங்கள் விளையாட்டை இன்னமும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. கங்கையைத் தொலைத்தாற்தான் என் மனம் சாந்தியடையும்" என்று குமுறினாள் பார்வதி.

அவளது குமுறலைக்கேட்ட கங்காதேவி, தன்னைப் புல்நுனிப் பனித்துளியளவாகச் சுருக்கிக் கொண்டு சிவபெருமானின் கற்றைச் சடையுள் ஒளிந்து கொண்டாள்.

பார்வதி குமுறிக் கொண்டேயிருந்தாள், சிவபிரானும் தன் சக்திக்குப் பயந்து கொண்டார். சக்தி என்னதான் செய்வாளோ என்று பயந்த சிவபிரான், தன் கற்றைச் சடையிலே புல்நுனிப் பனித்துளியளவாகச் சுருங்கி ஒளித்திருந்த கங்காதேவியைத் தம் சுட்டுவிரலால் நிமிண்டி எடுத்துத் தெறித்தார்.

கங்காதேவி, தெற்கே பல யோசனைகளுக்கப்பால் மகா சமுத்திரத்தில் போய் விழுந்தாள். பார்வதியின் கோபமும் தணிந்தது.

மகா சமுத்திரத்தில் விழுந்த கங்காதேவி சமுத்திர நீருடன் கலந்து விடாது, தாமரையிலைத் தண்­ர்த் துளியாய் தன் சுயத்தை இழந்து விடாமல் நிற்று கைலாய நாதரை நோக்கி தவம் செய்தாள்.

'தங்கள் சடாமுடியிற் தங்கியிருக்கப் பேறு பெற்றநான் இந்தச் சமுத்திரத்திலே தனிமையாய்க் கிடந்து தவிக்க தங்கட்கு என்ன குறை செய்தேன்' என்ற அவளது ஓலம், தோடுடைய செவிகளில் விழுந்தது. அவன் மனம் நெகிழ்ந்தது.

கைலாய மலைக்கு இல்லாவிட்டாலும், தன் பாத பங்கயங்கள் பதிந்த சிவனொளிபாத மலைக்கு வருமாறு கங்கைக்கு அனுக்கிரகித்தார்.

பாதபங்கய மலைக்கு வந்த கங்காதேவி அம்மலையுச்சிலிருந்து வடக்கே நோக்கினாள்.

ஆங்கு கைலை. தென்கைலை!

தங்கள் சடைமுடியிற் தங்கியிருக்கும் பாக்கியம் பெற்ற நான், பாதபங்கயங்களை மட்டும் தரிசித்துக் பெற்ற நான், பாதபங்கயங்களை மட்டும் தரிசித்து கொண்டு இங்கேயே இருக்க முடியாது. கைலைக்கு வந்து மீண்டும் தங்கள் சடையிலேயே அமர்ந்து கொள்வேன். பார்வதி என்னை என்னதான் செய்துவிடுவாள் பார்க்கலாம்' என்று ஆக்ரோஷத்தோடு மலையுச்சியிலிருந்து இழிந்து, கல்லில் முட்டி மோதி, நுரைத்து, ஒலியெழுப்பிக் கொண்டு கல்லையும் மண்ணையும் மரத்தையும் நெட்டித்தள்ளும் மாவலியளாய்த் தென்கைலையை நேக்கைத் தலைதெறிக்க ஓடினாள்.

மாவலிகங்கா இன்னமும் ஓடிக்கொண்டுதானிருக்கிறாள்.

இளம்பிறை'67

-----------------------------------------------------

கோயில் மணி ஓசை

அன்று நள்ளிரவிற் வருடம் பிறக்க இருக்கிறது. வீட்டிலிருந்து அண்மையிற்தான் கோயில் இருக்கிறது. புது வருடத்தை எதிர்பார்த்து விழிப்பிரவு ஆராதனையும் அதைத் தொடர்ந்து அர்த்த சாமப்பூசையும் அங்கு நடைபெறும். ஆனால் வேதநாராயகத்தாராற் கோயிலுக்குப் போக முடியவில்லை.

மார்கழி மாதம் முழுவதும் ஒரே மழை. அடைமழை. ஊரிலுள்ள குண்டுகுழிகளில் நீர் நிரம்பி வழிந்தது. வெள்ளக்காடு. வாடைக்காற்று உஸ்ஸென்று வேகமாக ஊதியது. அந்தக் கூதலிலும் கொடுகலிலும் வேதநாயகத்தாரால் வெளியே போகவே முடியவில்லை. மேலே அணிந்திருந்த சுவெற்றருக்கம் உள்ளின் உள்ளே என்புக் குழலட்டைகளையும் உறையச் செய்யும் குளிரில் அவர் விறைத்துக் கொண்டிருந்தார்.

கடந்த மூன்று நாட்கள்தான் வெய்யில் முகத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் இரவிலே பனி மழையாகவே கொட்டுகிறது. ஆமாம், தைப்பனி தொடங்கிவிட்டது.

"அப்பு, நீங்கள் கோயிலுக்குப் போகவில்லையா?"

"என்னால ஏலாது மகள். பொல்லாத பனியுங் குளிரும், நீங்க எல்லாரும் போங்க. நான் வீட்டிலே இருக்கிறன். விடியப் பூசைக்குப் போறன்."

"நீங்க கோயிலுக்குப் போவீங்க என்றுதான் பார்த்தேன். நீங்க போகாட்டி நான் போறேன். பிளாஸ்கில ஒங்களுக்குப் கோப்பி ஊத்தி வச்சிருகன்" என்ற மகள் தன் குடும்பத்தோடு கோயிலுக்கு புறப்பட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

பத்தரைக்கு மேல் மூன்றாம் மணி அடித்தது. பதினொரு மணிக்கு விழிப்பு ஆராதனை தொடங்கி விடும்.

பதினொரு மணி நெருங்கியபோது வேதநாயகத்தார் வீட்டிலே தனித்து விடப்பட்டிருந்தார்.

கட்டிற் தலைமாட்டில் தலையணையை நிமிர்த்தி வைத்து அதிலே சாய்ந்து கொண்டு பைபிளைப் புரட்டத் தொடங்கினார். தலைமாட்டிலிருந்த திருவழிபாட்டுக் காலண்டல் இன்றையப் பூசையில் வாசிக்கப்பட்ட இருக்கும் வேதாகமப் பகுதிகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது.

ஆனால் வேதநாயக வாத்தியாருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது! அன்றைப் புதுவருட முதல் நாள தேவதாயின் திருநாள்-கடன் திருநாள் என்று அதிலே எழுதப்பட்டிருந்தது!

அவர் ஆரம்ப வகுப்பு மாணவனாக இருக்கையில் புதுவருட தினத்தைக் கிறிஸ்து நாதரின் விருத்த சேதனத்திருநாள் என்றுதான் அறிந்திருந்தார். ஆனாலும் விருத்த சேதனத்தைப்பற்றி எவருமே கவலைப்பட்டதில்லை. விருத்த சேதனம் கிறிஸ்தவரிடையே நடைமுறையில் இல்லாதது காரணமாக இருக்கலாம். அத்தினம் புதுவருடப் பிறப்பாகவே கொண்டாடப்பட்டது.

இன்றுங்கூட அந்த வழக்கம் மாறவில்லை. அதை மாற்றவோ மறப்பிக்கச் செய்யவோ எவராலும் முடியவில்லை. ஆனால் விருத்த சேதனத் திருநாள் தேவதர்யாரின் திருநாளாக மாற்றப்பட்டதை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. திருச்சபையின் வழிபாட்டு நடைமுறைகளிற்தான் எத்தனை மாற்றங்கள்! வேதநாயக வாத்தியார் மாற்றங்களோடு ஒத்துப் போக முடியாத ஒது பழமைவாதி. அனாக்ரோணிஸம்.

மனத்துட் குறைப்பட்டுக் கொண்டே வேதநாயக வாத்தியார் பைபிளைப் பிரித்து அன்றைய வழிபாட்டின் முதலாம் வாசகமாகக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தார்.

சபிக்கப்பட்ட தண்­ர் உன் கருப்பையில் விழவே, உன் கருப்பை வீங்கவும், உன் தொடைகள் அழுகவும் கடவன என்று குரு சொல்லும் போது அந்தப் பெண் ஆமென், ஆமென் என்று கூறுக் கடவாள்.

பின்னர் குரு இந்தச் சாப வார்த்தைகளை ஒரு புத்தகத்தில் எழுதி, தம்மாலே சபிக்கப்பட்ட மிகக் கசப்பான தண்­ரால் அவ்வெழுத்தைக் கழுவிக் கலைத்து, அதை அவளுக்குக் குடிக்கக் கொடுப்பார். அவள் குடித்தபின், குரு எரிச்சலின் காணிக்கையை, அந்தப் பெண்ணின் கையில் இருந்து வாங்கி, அதை ஆண்டவருடைய முன்னிலையில் உயர்த்திக் காட்டிய பீடத்தின் மேல் வைக்கப்போகும்போது, முதலிற் பலிபீடத்தின் மேற் தகனிப்பதற்காக அதினின்று ஒருபிடி மாவை எடுத்து வைக்கக் கடவர். அதன்பின் கசப்பான தண்­ரை அப்பெண் குடிக்கும்படி கொடுப்பார். அதை அவள் குடித்தபின்பு தான் உண்மையாகவே தீட்டுப்பட்டுக் கணவனுக்குத் துரோகம் செய்து விபசாரியானவளென்றால் சபிக்கப்பட்ட தண்­ர் மக்களுக்குள்ளே சபிகிகப்பட்டவளாகி எல்லாருக்கும் மாதிரியாக இருப்பாள்.

மோயீசன் காலத்திற் சுத்திகரிப்பு எத்தனை கொடூரமாகவும், கோரமாகவும் இருந்தது என்பதைச் சிந்தித்த வாத்தியார் பதினைந்து ஆண்டுக்குமுன்னே மரணித்த தம் மனைவியை நினைந்து கொண்டார்!

வாழ்க்கையில் அவர் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கலாம் சண்டைக்காரன் என்று பேர் வாங்கியிருக்கலாம். ஆனால் எக்காலத்தும் மோகபாவத்தைக் கட்டிக் கொண்டவரல்ல. கல்யாணமான நாள் தொடக்கம் இன்றுவரை ஏகபத்தினி விரதன் தான் என்ற திருப்தியோடு நாட்காட்டி சொல்லிய சங்கீதங்களைப் படிக்கத் தொடங்கினார்.

இறைவா! மக்களினங்கள் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக.

நீதியோடு மக்களி ஆள்கின்றீர். உலகத்து மக்களினங்களின்மீது ஆட்சி செலுத்துகின்றீர் என்று நாடுகள் அனைத்தும் மகிழ்ந்து கூறட்டும்.

இறைவா! மக்களினங்கள் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக. மக்கள் உம்மைக் கொண்டாடுவார்களாக.

பூமி தன் பலனைத் தந்தது. கடவுள் நமக்கு ஆசி அளித்தார்.

கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக. மாநிலத்தின் கடையெல்லை வரை மக்கள் அவருக்கு அஞ்சுவார்களாக.

இந்தச் சங்கீதங்கள் வேதநாயகததாரின் மனத்தைக் கொள்ளை கொண்டன. மழை, வெள்ளம், புயல்போன்ற இயற்கைக் கொடூரங்களுக்கும், விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல், ஏகே வேட்டு என்ற மனிதக் கொடுமைகளுக்கும் தப்பி, எழுபத்தைந்து நீண்ட ஆண்டுகளாக உலகிலே வாழ்ந்து விட்டார் அவர். அவர் வாழ்வில் இன்னோர் புத்தாண்டு வரப்போகிறது. அந்தப் பெருமிதமான நன்றியுணர்வில் அச்சங்கீதங்கள் மீண்டும் மீண்டும் பாடிப் பரவசமானார். மனம் இலேசாகி அடைக்கலாங் குருவியைப்போலக் காற்றில் ஜிவ்வென்று பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இலகுவாகி விட்ட மனதோடு வேதப் புத்தகத்தைப் புரட்டி அன்றைய இரண்டாம் வாசகத்தைப் படித்தார்.

ஆனாற் காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி, திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக் கொள்ளும்படியாகக், கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார். அந்த ஆவியானவர் அப்பா தந்தாய எனக் கூப்பிடுகிறார். ஆகவே நீ அடிமை அல்ல. மகன்தான். மகளின் உரிமையாளனுமாம். இவை யாவும் கடவுளின் செயலே.

ஆம் நான் கடவுளின் பிள்ளை. கடவுள் எனக்காகவே மனித அவதாரம் எடுத்தார் என்ற பெருமிதத்தோடு எண்ணிக் கொண்டார் வேதநாயகத்தார்.

இந்த வாசகங்களையும் அவற்றின் பொருளையும் எல்லோரும் விளங்கிக் கொள்வார்கள். அதற்கும் மேலாகப் பூசையிடையே குரு அவைகளுக்கு விளக்கங் கொடுப்பார். அப்படியிருந்தும் இந்த வாசகங்கள் ஒவ்வொன்றிற்கும் யாரோ ஒருத்தி வந்து விளக்கங் கொடுப்பாள். இத்தனைக்கும் ஊர் மக்களின் யாருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்களுமல்ல. ஆகவே இந்த வாசக விளக்கங்களும் முன்னுரைகளும் தேவைதானா? என் பிதாவின் கோயிலைக் கள்ளர் குகையாக்க வேண்டாம் என்று கிறிஸ்து நாதர் சொன்னார் அல்லவா? வாசக விளக்கங் கொடுக்கும் இந்தப் பெண்கள் கோயிலை நாட்டிய மேடையாக்குகிறார்கள். வாசக விளக்கம் கொடுக்கும் பெண்களைப் போட்டோ எடுப்பதும், அவள் ஏதோ இமாலய சாதனையைச் சாதித்தது போலப் பெருமைப்பட்டுக் கொள்வதும் எல்லாமே வெறுங் கூத்துத்தான்.

நத்தார்ச் சாமப் பூசையில் அந்தக் கூத்துக்களைக் கண்டு மனம் சலித்துப் போய்ப் பூசை முடிந்ததும் வேதநாயக வாத்தியார் தன் வயதான தன் மைத்துனனிடம் கேட்டார். "நத்தார்ப் பூசை முடிந்துவிட்டது. வருடப் பூசையை அலங்கேலப் படுத்துகிறவர் யார்?

அவரும் சிரித்துக்கொண்டு சொன்னார். "இப்பகாலம் மாறிப் போச்சு. நம்ம காலத்தில பெண்டுகளைப் பீடத்தில் ஏறவே விடமாட்டம். குருவாக அபிஷேகம் பண்ணப்படாத கன்னியர்களும், சகோதரர்களும் சற்பிரசாதங் கொடுக்கிறாங்க. முறமையான குருவினால் பூசைப்படி ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்று நாம பெரிய குறிப்பிடத்தில் படிச்சதெல்லாம் இப்ப நடைமுறையில இல்லை."

"ஆமாம் இதுகளெல்லாம் ஏன் பீடத்தில ஏறுதுகள்? பீடத்தில் சற்பிரசாதம் இருக்கிறதென்று ஒரு மட்டு மரியாதை இல்ல. நாமெல்லாம் கோயிலுக்கு வந்தா முதலில ஒற்றை முழந்தாளிலிருந்து சற்பிரசாதத்தை நமஸ்கரிப்போம். சற்பிரசாதம் வெளியே இருந்தா, இரட்டை முழந்தாளிலிருந்து ஆகாரம் பண்ணுவோம். இப்ப திறந்த வீட்டுக்கு நாய் பூர்ற மாதிரிக் கோயிலுக்க நுழைஞ்சிடிறில் பழகக்குள்ள தலையைக் குனியுற மாதிரி ஒரு வெட்டு. அவ்வளவுதான்!

வேதநாயக வாத்தியாருக்கு ஆத்திரமாயிருந்தது. ஆத்திரம் அடங்கியதும், பைபிளைத் திறந்து அன்றையப் பூசையில் வாசிக்க லூக்காஸ’ன் நற்செய்தியைப் படித்தார்.

இடையர்கள் விரைந்து சென்று மரியாளையும் சூசையையும் முன்னிட்டியிற் கிடத்தியிருந்த குமாரனையும் கண்டனர். கண்ட பின்னர் அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தார்கள். கேட்டவர்கள், தங்களுக்கு இடையர் கூறியதைப் பற்றி வியப்படைந்தார்கள். மரியாளோ உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துவந்தாள். இடையர்கள் தாம் கண்டது கேட்டது எல்லாம் நினைத்துக் கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே திரும்பினர். அவர்களுக்குச் சொல்லியபடியே எல்லாம் நிகழ்ந்திருந்தது.

எட்டாம் நாள் வந்தபோது குழந்தைக்கு விருத்த சேதனம் செய்ய வேண்டியிருந்தது. தாய் சுருத்தரிக்கு முன்பே தூதர் குறிப்பிட்டிருந்தபடி இயேசு என்னும் பெயரை அவருக்குச் சூட்டினார்கள்.

வேதநாயக வாத்தியார் பலதுறை படித்திருந்த வாக்கியங்கள்தான் அவை. ஏன்? ஊரிலே சகலருக்கும் அவ்வரிகள் மனப்பாடம்!

ஆனால் அவர் இளைஞனாக-வாலிபனாக இருந்த காலங்களில் பூசையின்போது சுவாமியார் லத்தீன் மொழியிலேயே இவைகளை வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் கோயில் உபதேசியார் சொன்சால்வெஸ் அடிகளார் எழுதிய சுவிசேஷ விரித்துரையிலிருந்து அச்செய்தியைப் படிப்பார்.

பிரமாதமான வர்ணனைகளோடும், கற்பனாலங்காரத்தோடும் அவ்விரித்துரைப் பகுதிகளை நினைவுபடுத்திப் பார்த்தார். ஞாபகத்துக்கு வரவில்லை.

படுபாவிகள்! வீட்டை எரித்தவர்கள் புத்தகங்களையும் அள்ளிப் போட்டுப் பத்த வைச்சி விட்டாங்கள். இல்லாட்டிச் சுவிசேஷ விரித்துரையை எடுத்துப் படிக்கலாம். இந்தத் தலைமுவறக்குக் கொன்சால்வென் அடிகளார் எழுதிய விரித்துரையே தெரியாது.

கோயிலிருந்து ஒலி பெருக்கியிற் பாட்டு மிதந்து வந்தது.

வேதநாயக வாத்தியாருக்குத் தற்போதைய பாடல்கள் அதிகமாகப் பிடிப்பதில்லை. அதிலும் நல்ல நாட் திருநாட்களில் இசைக்குழு 'றவ்வாணமும்' அடிக்கக் கொண்டு பாடும். அவருக்குக் கட்டோடு அது பிடிப்பதில்லை!

வேதநாயக வாத்தியார் அந்தக் காலத்துப் பாடலகளை நினைத்துக் கொண்டார்.

அவர் காலத்திலே வருடப் பிறப்பன்று இரவு விழிப்பாராதனை இல்லை. அதற்கு முந்திய நான் மாலையில் வழிபாடு நடக்கும். அவ்வழிபாட்டில் நன்றிக் கீதம் பாடுவதுதான் முக்கிய நிகழ்ச்சி.

ஒலிபெருக்கியில் வரும் பாட்டுச் சத்தம் தன் காதுகளில் விழக்கூடாது என்ற வேகத்தோடு அந்த நன்றிப் பாடலை உரத்துப் பாடத் தொடங்கினார்.

`TE DEUM LAUDA MUS
TE DOMINUM CONFITEMUR'

தன் நினைவிலிருந்த வரைக்கும் அந்த நன்றிக் கீதத்தைப் பாடிவிட்டு ஓய்ந்த வேதநாயகத்தார் மேசையிலிருந்த வானொலியின் முள்ளைத் திருகி முடுக்கினார்.

வெள்ளவத்தை மெதடிஸ்த தேவாலயத்திலிருந்து நள்ளிரவு ஆராதனை அஞ்சலாகிக் கொண்டிருந்தது. ஏனோ அது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆங்கில அலைவரிசையைத் திருப்பினார். கறுவாக்காடு பப்டிஸ்த ஆலயத்திலிருந்து ஆராதனைகள் அஞ்சலாகிக் கொண்டிருந்தன.

வேதநாயக வாத்தியார் வானொலியின் கழுத்தைத்திருகி அதைக் கொன்று விட்டுச் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். வருடம் பிறக் இன்னமும் ஐந்தே ஐந்து நிமிடங்கள் இருந்தன. கட்டிலிற் சாய்ந்திருந்த வேதநாயகம் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

அவர் எழுபத்தைந்து வருடப் பிறப்புக்களைச் சந்தித்து விட்டார். ஒரே ஒரு வருடப் பிறப்பை மட்டும் மூன்றாம் வருடம் றாகமவில் தன் மகனோடு சந்தித்தார். இன்றைய வருடப் பிறப்பையும் விட்டால் அவர் நினைவறிந்த நாட்களிலிருந்து தம்மூர்க் கோயிலிற்தான் எல்லா வருடப் பிறப்புக்களையும் சந்தித்திருக்கிறார்! அவர் மட்டுமல்ல. ஊரிலே ஆண்களும் பெண்களுமான பலர் வருடப்பிறப்புக்காகக் கோயிலிலேதான் அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பார்கள். மணிக்கூடு தன் இரு கரங்களையும் கூப்பிப் பன்னிரண்டில் நிறுதிட்டமாகக் கூடுகையிற் புது வருடம் பிறக்கும். வெடிகள் முழங்கும். மேளம் கொட்டும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கோயில் மணி தன் சுநாதத்தால் ஊர் முழுவதையும் நிறைக்கும்.

முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே அரசுரிமைப் போராட்டத்திற் தோல்வி கண்டு தூத்துக்குடியிற் சரணடைந்த கொட்டியாபுரத்து வன்னியனுக்கு அனுசரணையாகத் தூத்துக்குடியிலிருந்து வந்த வேதநாயகத்தின் முன்னோர் தாம் வரும்போதே கோயில் மணியையும் கொண்டு வந்திருப்பார்கள்.

அதற்கும் சில ஆண்டுகளின் பின்னால் சங்கைக்குரியயோசேப் வாஸ் முனிவர் இவ்வூருக்கு வருகை தந்த மூன்று தடவைகளிலும் அக்கோயில் மணி ஒலித்திருக்கும். அதற்கும்பின் யாழ்ப்பாண மேற்றிராணியார் இவ்வூருக்கு வருகைதந்த போதும் அம்மணி ஒலித்திருக்கும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இம்மறை மாவட்டத்தின் முதன் ஆயரான 'சாள்ஸ் லவிஞ்' ஆண்டவர் இவ்வூருக்கு வந்திருந்தபோதும் கோயில் மணி ஒலித்திருக்கும்.

அதற்கும் பின்னால் வந்த ஐந்து ஆயர்கள் ஊருக்கு வருகைதந்த போது மணி ஒலித்ததை வேதநாயகத்தார் தன் காதுகளாற் கேட்டிருக்கிறார்.

அந்தக் கோயில் மணி ஓசை அவர் வாழ்க்கையோடு கலந்து விட்டிருந்தது. இளமைப் பருவத்திற் காலை ஐந்து மணிக்குத் திருந்தாதி மணி ஒலித்ததுமே அவர் தாயார் அவரைப் படுக்கையில் இருந்து எழுப்பிவிடுவார். முகம் கழுவி உடுப்பை மாற்றிக் கொள்கையில் காலை ஆறு மணிப் பூசைக்காகக் கோயில் மணி ஒலிக்கும்.

அம்மணி ஓசையைக் கேட்டவுடன் கோயிலுக்குச் சென்று பூசைப் பரிசாரகனாகப் பணியாற்றுவார். 'சர்வேசுரனுடைய பீடத்தில் பிரவேசிப்பேன்' என்று குருவானவர் கூற, 'என் வாலிபத்தை மகிமைப்படுத்தும் தேவனிடத்திற் பிரவேசிப்பேன்' என்று லத்தீன் மொழியிற் பதிலுரைக்கையில் எத்தனை பூரிப்பு!

பூசை முடிந்து வீடு திரும்பிச் சாப்பாடாகியதும் கோயிலில் முதலாம் மணி அடிக்கும். ஏழு மணிக்கு ஒலிக்கும் அம்மணி ஓசை பாடசாலைக்கான முதலாம் மணி. ஏழரை மணிக்கு இரண்டாம் மணி ஒலிக்கும்.

பாடசாலைக்குப்போன பின்னர் மதியம் பன்னிரண்டு மணிக்குத் திருந்தாதி மணி ஒலிக்கும். பாடசாலையில் எல்லாருமே எழுந்து நின்று. 'ஆண்டவருடைய சம்மனசானவர் மரியாய்க்கு விசேஷஞ் சொல்ல' என்று செபிப்பார்கள்.

சாயந்தர வேளைகளிற் பக்திச் சபைக்கூட்டங்களுக்காகவோ, வணக்கமாதச் செபமாலைக்கோ, கோயிலிற் குடி கொண்டிருப்பவரின் நவநாளுக்காகவோ அம்மணி ஒலிக்கும். கடைசியாய் இரவு ஏழரை மணிக்கு மரித்தவர்களக்குச் செவிப்பதற்காகக் கோயில் மணி ஒலிக்கும். அந்த மணியோடு அன்றைய நாளைக்கு அதன் ஓசை அடங்கும்.

அப்படியிருக்கும் ஒருநாள் அர்த்த ராத்திரியில் கோயில் மணி ஓசை கேட்டது. ஊரவர் எல்லோருக்கும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். வேதநாயக வாத்தியாரும் ஒடினார். கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஓலைவீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஊர்ச் சனங்கள் எல்லோரும் சேர்ந்து தீணை அணைத்தார்கள்!

ஊரிலே மரணம் சம்பவித்தாலும், இளைப்பாற்றி மணி அடித்து அதன் ஓசை அச்சம்பவத்தை ஊர் முழுவதற்கும் அறிவிக்கும். மட்டக்களப்பிலோ, திருக்கோணமலையிலோ சுவாமியார் யாராவது மரணமடைந்தாலும் இளைப்பாற்றி மணி ஒலிக்கும். ஏன் பாப்பரசர்கள், மேற்றிராணியார்களின் மரணத்தைக்கூட அம்மணி ஓசை அறிவித்தது.

அவர் ஞானத் தந்தையும் தாயும் சிறு குழந்தையாக இருந்த அவரைத் தூக்கிக்கொண்டு வந்து கோயிலிலே ஞானஸ்னானம் கொடுத்தபோதும் அம்மணி ஒலித்திருக்கும். அவர் வாலிபனாகித் தன் மனைவியைக் கைப்பிடித்த போதும் அம்மணி ஒலித்தது. அவர் பிள்ளைகளதும் பேரப் பிள்ளைகளதும் திருமுழுக்கின்போதும் அம்மணி ஒலித்தது.

வேதநாயகத்தாருக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. அவருடைய உறவுச் சகோதரி ஒருத்தி அயற்கிராமத்துப் பிறசமயி ஒருவனைக் காதலித்து அவனோடு 'ஓடி' விட்டாள்! அவளுக்கு எப்படியாவது இரு சமய சம்பந்த விவாகம் செய்து கோயிலிற் கைப்பிடித்து மணியடிக்க வேண்டும் என்று அவர் பிரயத்தனப்பட்டார்.

ஆனாற் "கோயிலிற் கைப்பிடிக்க எனக்குச் சம்மதந்தான். எனக்கு எம்மதமும் சம்மதமே. ஆனால் பிள்ளைகளுக்கு ஞானஸ்னானம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பமாட்டேன். பிள்ளைகள் வளர்ந்த பின்னர் விரும்பிய சமயத்தை அவர்கள் கடைப்பிடிக்கட்டும்."

என்று அவள் காதலன் மிக நிதானமாகவும் நேர்மையாகவும் சொன்னார். சுவாமியார் இதற்கு ஒப்பவில்லை. இதனாற் கோயிலுக்குப் புறம்பாகத்தான் அவளுக்குத் திருமணம் நடந்தது.

அவள் அவிசாரியாடவில்லை. மிகக் கண்ணியமாகத்தான் குடும்பம் நடத்தினாள். எப்போதாவது நாட்திருநாட்களில் அவள் கோயிலுக்கு வருவாள். ஆனால் ஊர்ச்சனம் பெருவியாதிகாரியைப் பார்ப்பது போலத்தான் அவளைப் பார்க்கும். அத்தனை அசூயை.

அவள் மரித்தபோது தன் சடலத்தைக் கோயிலுக்குக் கொண்டு போகவேண்டும் என்று அவள் விரும்பியதாக அவள் கணவன் சொன்னார்.

வேதநாயக வாத்தியார் சுவாமியிடம் சென்று கதைத்துப் பார்த்தார். ஆனால் ஊரவர்களின் நெருக்குதலிற் சுவாமியார் அவளுக்கு இளைப்பாற்றி மணியடிக்க மறுத்துவிட்டார். கடைசியாய்க் கோயில் வெளி விறாந்தையில் அவள் சடலத்தை வைத்து குருசுமணியும் கத்திசால்களுமில்லாமல் சேமக்காலைக்குக் கொண்டுபோக வேண்டியதாயிற்று. சவக்காலையிலும் 'வெஞ்சாரிக்கப்படாத' ஒதுக்கிடத்திற்தான் அவள் சடலம் அடக்கம் பண்ணப்பட்டது.

பிரேத ஊர்வலத்தில் சுவாமியார் லத்தீன் மொழியிற்பாட வேண்டிய பாடல்களை வேதநாயகத்தார் தமிழிலேயே பாடினார்.

சாதாரணமான லோக
சாவில் ஏனோக் எலியேசை
சாகாமல் நீர் மீட்டதுபோல - சுவாமி
உந்தமது தாசனான
சொந்த இவள் ஆத்துமத்தை
உத்தமமாய் மீட்டு ரட்சிப்பீரே-சுவாமி

ஏன்! சிவபுராணம் படிக்கிறதுதானே என்று சிலர் விடுப்புக் கதை பேசினார்கள். வேதநாயக வாத்தியாரால் அதைத் தாள முடியவில்லை. இப்போதுங்கூட அவளுக்கு இளைப்பாற்றி மணி அடிக்கவில்லையே என்று அவர் மனம் அழுதது.

ஆனால் இன்று, அன்றைய கட்டுப்பாடுகளில்லை. தம் பிள்ளைகளை மனமுவந்து பிறசமயிகளுக்குக் கையளித்துப் பிறசமயயிகளாகவே வளரும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சிக் குலாவுவர்களும் கோயிற் பங்கு மேய்ப்புப் பணிச் சபையில் முக்கியமான அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். குருவானவரைக் கேட்டால் 'திருச்சபைக்கு வெளியேயும் உண்மையான கிறீஸ்தவர்கள் இருக்கிறார்கள்' என்று தத்துவம் பேசுகிறார் கோயில் மணி அவர்களுக்காகவும் ஒலிக்கிறது.

தினந்தினம் ஒலிக்கும் கோயில் மணி இரு நாட்களில் மட்டும் ஒலிப்பதில்லை.

அவர் வாலிபனாக இருக்கையில் பெரிய வியாழக்கிழமையன்று காலையிற்தான் பூசை, சாந்தூஸ் மணியோடு கோயில் மணி ஒலிக்‘து. மீண்டும் சனிக்கிழமை காலை தண்­ரையும் நெருப்பையும் ஆசீர்வதித்துப் பாஸ்காத்திரியைக் கொளுத்தும்போதுதான் மீண்டும் கோயில் மணி ஒலிக்கும்.

அந்த இரண்டு நாட்களிலும் கோயில் மணியின் இடத்தைத் 'துக்கப் பறைகள்' பிடித்துக் கொள்ளும்.

பாடசாலை மாணவனாக இருக்கையில் வேதநாயக வாத்தியார் குருத் தோலை ஞாயிறன்றே தன் துக்கப்பறையைத் தேடி எடுத்துக் கொள்வார். பெரிய வியாழனும் வெள்ளியும் திருந்தாதி அடிப்பது, பூசை மற்றும் சடங்குகளுக்கான நேரத்தை அறிவிப்பது எல்லாமே மதுக்கப்பறைகள்தான். படை பதைக்கும் சித்திரை வெய்யிலிற் தன்னொத்த இளைஞர்களோடு சேர்ந்து கொண்டு தெருவெல்லாந் திரிந்து துக்கப்பறை சுற்றுவதில் ஒரு குஷ’!

பெரிய வியாழன் இரவும் வெள்ளி இரவும் கொள்சால் வெஸ் அடிகளாரின் வியாகுல பிரசங்கம் கோயிலிற் படிக்கப்பட்டு ஒவ்வொரு பிரசங்கத்தையும் 'துக்கித்த திருமுகத்தை எங்களுக்குக் காண்பியும் சுவாமி' முடிக்கையில், தம் கைகள் அலுத்துச் சோர்ந்து ஊர்ப் பெரியவர்கள் அதட்டி அடக்கும் வரையிற் துக்கப்பறையைச் சுற்றுவதில் ஒர் இன்பம்!

அந்த இளமை இன்பத்தை மனத்துட் சுகித்துக் கொண்டே வேதநாயக வாத்தியார் சுவர் மணிக்கூட்டை நிமிர்ந்து பார்த்தார். மணிக்கூண்டின் ஒரு கரங்களும் பன்னிரண்டு என்ற இலக்கத்திற் கூம்பிக் கொண்டு மெதுவாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.

மாணவப் பருவத்தில் மணிக்கூட்டின் இரு முட்களும் பன்னிரண்டிறகூம்புவதை எதிர்பார்த்து மணிக்கயிற்றை பிடித்தபடி நின்றிருக்கிறார் மணிக் கயிற்றைப் பிடித்துக் கொள்ள மாணவரிடையே பலத்த போட்டி இருக்கும். அவர் ஆயுளில் மூன்றோ நான்கு தடவைகள் தான் மணிக்கயிற்றைம் பிடித்துக் கொள்ளும் பாக்கியம் அவருக்குச் சித்தித்திருக்கிறது. முட்கள் பன்னிரண்டில் ஒன்றை ஒன்று தொட்டதும் மணிக்கயிற்றைப் பிடித்துத் தன் ஆசை தீரமட்டும், தன் கைகள் அலுக்கும் வரையும் இழுத்தடித்திருக்கிறார். பக்கத்திலே பட்டாஸ்கள் வெடித்தன. மேளம் கொட்டியது. ஆனால் மணியடிக்கும் கர்மயோக சாதனையை எந்த முழக்கமும் குழப்பவில்லை!

இப்போதும் மணிக்கூடு பன்னிரண்டு மணியைக் காட்டிக் கொண்டிருக்கிறது. தெருவெங்கும் காவல் நின்ற ஆமிக்காரரதும் பொலிஸ்காரரதும் கைகளிலிருந்த ஏகேக்கள் வேட்டுகளைத் தீர்க்கின்றன. அதைத் தொடர்ந்து மெதடிஸ்த தேவாலயத்தின் மணி ஓசை கேட்கிறது. ஆனால் அவரது புனித அந்தோனியார் கோயிலின் மணி ஓசை கேட்கவேயில்லை!

புதுவருடம் ஏகே வெடியோடுதான் தொடங்கியிருக்கிறது. கோயில் மணி கேட்கவில்லையே, இந்த ஆண்டு ஊருக்கு என்னென்ன அனர்த்தங்கள் ஏற்படப் போகின்றதோ என்ற அங்கலாய்ப்போடு வேதநாயக வாத்தியார் வீட்டிலிருந்து எழுந்தார்.

அவருக்கு வெறிபிடித்து விட்டதா?

போர்த்திருந்த போர்வையைச் சுழற்றி எறிந்துவிட்டு என்புக் குழலிற்குள் இருக்கும் குழலட்டையையும் உறைய வைக்கும் பனியையும் பொருட்படுத்தாது கோயிலை நோக்கி ஓடுகிறார்.

இத்தனை வேகம் அவருக்கு எங்கிருந்து வந்தது?

இதோ கோயில் வளவை அடைந்துவிட்டார். வெளி விறாந்தையில் கால் வைத்து ஏறுகையில் தடக்குண்டு விழுகிறார். சுதாரித்துக் கொண்டு எழுந்தவர் கோயிற் கோபுரத்தின் உச்சியில் உள்ள மணியின் நாக்கிற் கட்டப்பட்டுத் தொங்கும் மணிக்கயிற்றைப் பிடித்துக் கொள்கிறார். இழுத்து அடிக்கிறார்.

'டண்' என்று ஒரு சத்தம்.

மயக்கமாக வருகிறது. மீண்டும் மணியை அடிக்கின்றார்.

டண், டண் என்ற ஓசைகள்!

மயங்கிக் கீழே விழுகிறார்!

புதுவருடம் பிறந்ததுமே யார் இளைப்பாற்றி மணியடிக்கிறார்கள்?

கோயிலுக்குள் இருந்தவர்கள் சிலர் மிரண்டு வெளியே வருகிறார்கள்.

வெளித் தாழ்வாரத்தில், வேதநாயக வாத்தியாரின் கட்டைதான் கிடக்கிறது! அவரது தேவனோடு ஐக்கியமாகிவிட்டது!

பாவம் இன்றோ நாளையோ அவர் பிரேதம் சேமக்காலைக்குக் கொண்டு செல்லப்படுகையில் வழக்கம் போலக் கோயிலில் இளைப்பாற்றி மணி ஒலிக்கும். ஆனால் வேதநாயக வாத்தியாரின் செவிகளில் அந்த மணி ஓசை கேட்காது.

1996

-----------------------------------------------------

தோணி

கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்கு மென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கிறேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு.

எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டிருக்கும். அதிலேதான் தூண்டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பது வழக்கம். அதன் கீழே தென்னை மரத்தினடியிற் பென்னம் பெரிய குடம் ஒன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்­ர் எடுப்பதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக அம்மா அடுத்த குடிசைக்குப் போகும் போதெல்லாம் நானும் கூடப் போயிருக்கிறேன்.

அநேகமாகக் காலை வேளையில் அம்மாவும் அப்பாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்பா கோழி கூவும் போதே எழுந்து கடலுக்குப் போய் விடுவார். அம்மாவிற்கு வெளியே என்ன வேலை இருக்குமோ, என்னால் ஊகித்துக் கொள்ள முடியாது. ஆனால், அம்மா வீட்டிற்கு வரும்போதெல்லாம் பனையோலைப் பெட்டியில் அரிசியும், மரவள்ளிக் கிழங்கும், தேங்காயும் கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். அம்மா வீட்டுக்கு வந்து சிறிது நேரத்திற்கெல்லாம், அப்பாவும் தூண்டிற்கயிறுகளோடும், சவளோடும் மீன்கோவையோடும் வீட்டுக்கு வந்து விடுவார்.

அப்பாவும் அம்மாவும் வீட்டிலில்லாத நேரங்களில் ஒரே குஷ’தான்! ஏறுவெய்யிலின் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைக்ட்கூடாகவும் துள்ளிப் பாய்ந்து நிலத்தில் வெள்ளித் துண்டுகளைப்போல வட்ட வட்டமாக ஒளியைச் சிந்தும். அந்த வட்ட ஒளியை நான் என் கையால் மூட, அந்த ஒளி என் புறங்கையில் விழ, அடுத்த கையால் நான் அதை மறைக்க, அவ்வொளி அடுத்த கையிலும் விழ, நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக்கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். ஆனால் கூரைக்கூடாக ஒளி பாய்ந்துவரும் துவாரம், என்னால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறபடியால் நான் என் விளையாட்டை முடித்துக் கொள்வேன்.

குடிசைக்கு வெளியே வந்தால், அங்கே பக்கத்து வீட்டிலிருந்து என் நண்பன் செல்லனும் வந்திருப்பான். செல்லன் என்னைவிட நோஞ்சான். பாய்மரக் கம்புபோல நீளமாக இருப்பான் இன்னமும் ஐந்தாறு வருடம் சென்றால் அவன் தென்னைமரத்து வட்டைத் தொட்டு விடுவான் என்று என் அம்மாகூட அவனைப் பரிகசிப்பது உண்டு.

செல்லன் வந்ததும், நான் எங்கள் வீட்டுப்படலையை இழுத்துச் சாத்திவிட்டு, அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே ஆற்றங்கரைக்கு ஓடுவேன்.

ஆற்றங்கரை, வீட்டிலிருந்து அதிக தூரத்திலில்லை. வங்காளக் கடல் சிறிது உள்ளே தள்ளிக்கொண்டு வந்து ஒரு சிற்றாறாக எங்கள் கிராமத்திற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. இந்த ஓடையில் பூரணையன்று வெள்ளம் வரும்போது தண்­ர் வீட்டு முற்றத்திற்கே வந்துவிடும்.

அந்த ஆற்றங்கரையின் ஓரமாக, ஆற்றில் நீண்டு வளர்ந்த கோரைப்புற்கள் சடைத்துக் கிடக்கின்றன. அந்தப் புற்களினடியில் நீருக்குள் ஓசைப்படாமல் இருகைகளையும் கூட்டி வைத்து இறால் பிடிப்பதில் எங்கட்குப் பரம திருப்தி; என்றாலும் இந்த விளையாட்டில் எங்கட்கு அலுத்துப் போய்விடும். அதன்பின், நாங்கள் நேரடியாகக் கடற்கரைக்கே போய்விடுவோம்.

கடற்கரையில் கச்சான் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் அந்தக் காற்றில் இராவணன் மீசைகளைத் துரத்திப் பிடித்தபின், அந்த விளையாட்டிலும் எங்கட்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.

அதன்பின்னால், நாங்கள் இருவரும் கடற்கரை வெண்மணலில் மதாளித்துப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகளில்மேல் குந்திக் கொள்வோம். பதைபதைக்கும் வெய்யிலில் அந்த அடம்பன்கொடி மெத்தை எங்களுக்குக் "கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தரு" வாகத்தான் இருக்கும். அந்தப்பட்டு மெத்தையின் மேல் வீற்றிருந்து கொண்டு எதிரே கடவுளைப்போல ஆதியும் அந்தமும் அற்றுப் பரந்துகிடக்கும் கருநீலக் கடலிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாய் விரித்தாடும் பாய்த்தோணிகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். கடற்பரப்பிலே வெள்ளைச்சீலைப் பாய்கள் வட்ட வட்டமாக, வண்ணாத்திப் பூச்சிகளைப் போல அழகாக இருக்கும். அவைகளில் ஏதோ ஒன்றில் தான் என் தகப்பனார் இருப்பார். ஆனால், எதிலே அவர் இருக்கிறார் என்று திட்டமாக எனக்குத் தெரியாது. எனினும் ஏதாவது ஒரு தோணியைக் குறிப்பிட்டு, அதில்தான் அவர் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். அந்த நம்பிக்கையில், முகத்தில் 'சுள்' என்றடிக்கும் சூரியக்கிரணங்களை நெற்றிப் பொட்டில் கைகளை விரித்து மறைத்துக்கொண்டு அந்தத் தோணியையே பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தச் சமாதிநிலையில், என்னுள்ளே இன்பகரமான கனவுகளெல்லாம் எழும். இன்னும் சில நாட்களில் நான் பெரியவனாகி விடுவேன்; அப்போது, அப்பாவிற்குப் போல, எனக்கும் ஒரு தோணி சொந்தமாகக் கிடைத்துவிடும். அந்தத் தோணிக்கு வெள்ளை வேளேரென்று அப்பழுக்கில்லாத ஒரு பாயைப் போட்டுக் கொண்டு நான் கடலிற் செல்வேன்; ஒரு தென்னைமர உயரத்திற்கு எழுந்துவரும் கடல் அலைகளில் என் தோணி தாவித்தாவி ஏறி இறங்கிக்கொண்டே செல்லும். எல்லாத் தோணிகளையும்விட வேகமாக ஓடுவதற்காக என் தோணியின் பாய், பெரியதாக இருக்கம். அந்தப் பாய்க்குள் சோழகக் காற்றுச் சீறியடித்துக் கொண்டிருக்கையில், என் தோணி கடற்பரப்பில் 'விர்'ரென்று பறந்து செல்லும். நான் பின்னணியத்தில் தலைப் பாகைக்கட்டோடு தைரியமாக நின்று சுக்கானைப் பிடித்துக் கொள்வேன்; செல்லன் முன்னணியத்தில் நின்று எனக்குத்திசை காட்டுவான். எங்கள் தோணி முன்னே முன்னே ஏறிச் சென்று, கடைசியாய்க், கடல் வானத்தைத் தொடும் இடத்திற்குப் போய்விடும். அங்கே அம்மா இராத்திரிச் சொன்ன கதையில் வரும் ஏழு தலை நாகத்தைக் காண்பேன்....

தூரத்தே நான் குறித்து வைத்திருந்த தோணி சமீபித்து விட்டது. அதிலே என் தகப்பனார்தான் இருந்தார். தோணி கரையை அடைந்ததும், அவர் பாயைக் கழற்றி வைத்துத் தோணியை ஓடை வழியாக இழுத்துச் சென்றார். நானும் அவரோடு சேர்ந்து கொண்டேன். பிறகு நாங்கள் எங்கள் வீட்டின் முன்னால் தோணியைக் கரையில் கொறகொற என்று இழுத்து வந்தோம். அப்பா தூண்டிற் கயிறுகளை வளையமாக்கி சவளில் போட்டு என்னிடம் கொடுத்தார். தோணிக்குள் இருந்த பழஞ் சோற்றுப் பானையையும், மீன் கோவையையும், நங்கூரத்தையும் எடுத்தத் தோளில் போட்டுக்கொண்டு அப்பா பின்னே வர நான் சவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சப்த சமுத்திரங்களையும் கடந்து வந்த வீரனைப் போல முன்னே நடந்தேன்.

அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை பசித்தவன் விருந்துண்ணத் கனாக் காண்பதுபோல நானும் தோணியைப் பற்றியே கனாக்கண்டேன், எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஓடையில் ஐந்து புத்தகம் புதிய தோணிகள் இருந்தன. நான் முன்னணியம் உயர்ந்து சவாரிக் குதிரைபோல இருந்த தோணியின்மேல் ஏறிக்கொண்டேன். வாடைக் காற்றானபடியால் எல்லோருடைய தோணிகளும் முன்னேற முடியாமல் கரையை நோக்கியே வருகின்றன. என்னுடைய தோணி மட்டும் எரிந்துவிழும் நட்சத்திரம் போலக் கனவேகமாகக் காற்றை எதிர்த்துப் போகிறது. கலங்கரை விளக்கின் ஒளிகூடக் கண்ணுக்குப் படாத அத்தனை தூரத்திற்கு ஆழ்கடலின் நடுமையத்திற்கே என் தோணி போய்விடுகிறது....

நான் திடீரென்று விழித்துக்கொண்டேன். காலையில் எழுந்தபோதுகூட எனக்குத் தோணியின் நினைவு மாறவில்லை. அன்று நான் ஓடைக் கரையில் பழுது பார்க்க இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி ஒன்றைத் தள்ளிக் கொண்டு கடலிற்குப் போவது எனத் தீர்மானித்துக் கொண்டேன். செல்லனைக் கூட்டிக்கொண்டு போய், இருந்த தோணியை எங்கள் பலத்தையெல்லாம் கூட்டித் தள்ளிப் பார்த்தேன். தோணி அசையமாட்டேன் என்றது. அப்படியானால் நான் தோணி விடவே முடியாதா? சப்த சமுத்திரங்களையும் என்னால் தாண்டமுடியாதா?

நான் கவலைப்பட்டுக் கொண்டே யிருக்கையில் ஓடையில் முருக்க மரத்துண்டு ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்டதும் எனக்கு ஒரே சந்தோஷமாகப் போயிற்று. ஆம்; எனக்கென்று ஒரு தோணி கிடைத்து விட்டது! அந்த முருக்கங்கட்டையை முன்னாலும் பின்னாலும் 'கொடுவாக் கத்தி'யினால் செதுக்கி உள்ளே குடைந்து தோணி ஒன்றைச் செய்தேன். பின்னர், அந்தத் தோணியில் செல்லனையும் ஏற்றிக்கொண்டு என் ஆசை தீருமட்டும் ஓடையில் தோணிவிட்டு விளையாடினேன்.

மதியம் திரும்பிவிட்டது. என் தந்தை கடலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தோணிவிட்டு விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கண்டதும், " அடே பயலே! தோணி விடுறியா? அப்படியெண்டா நாளைக்கு என்னோட கடலுக்கு வா" என்றார்.

அதைக் கேட்டதும் எனக்குச் சந்தோஷம் தாங்க முடியாமற் போய்விட்டது. "சரியப்பா, நாளைக்கு நானும் வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டே சவளைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தேன். பெரிய தோணியில் போகப் போகிற ஆனந்தத்தில் என் முருக்கந் தோணியை மறந்து விட்டேன்.

2

அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. தென்னோலைச் சரசரப்பும் சில் வண்டுகளின் கீச்சுக் குரலும் எனக்குக் கேட்டுக்கொண்டே யிருந்தன. படுக்கையிற் புரண்டு கொண்டே ஆனந்தக் கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். கடைசியாய் எங்கோ ஒரு சேவல் கூவிற்று அதைத் தொடர்ந்து எங்கள் கிராமத்துச் சேவல்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கூவின. அம்மா எழுந்து விளக்கைக் கொளுத்திக்கொண்டு சமயல் செய்யத் தொடங்கினாள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குடிசைகளிலிருந்து ஒருவர் மற்றவரைக் கூவியழைக்கும் சப்தம் கேட்டது. கடைசியாய் அப்பாவும் எழுந்து, "தம்பி, டேய்!" என்று என்னை எழுப்பினார். நான் சுட்டபிணம்போல வளைந்து நெளிந்து உட்கார்ந்து கொண்டேன். இரா முழுவதும் தூக்கம் இல்லாததினால் கண்ணிமைகள் கல்லாய்க் கனத்து அழுத்தின. ஆனாலும் உற்சாகத்தோடு எழுந்திருந்தேன். அப்பா சோற்றுப்பானை நிறையத் தண்­ரை ஊற்றி எடுத்துக்கொண்டு நங்கூரம், தூண்டில் கயிறு சகிதம் வெளிக் கிளம்பினார். நானும் சவளைத் தோளில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில் வாடைக் கடுவல் ஊசி குத்துவரைப்போலச் சுளீர் சுளீர் என்று அடித்தது. எனக்கு உடம்பெல்லாம் நடுக்கமெடுத்தது. மேல் துண்டை முகத்தை வளைத்துக் கட்டிக்கொண்டு முன்னால் விறுவிறு என்று நடந்தேன். தூரத்தே கடிசைக்குள் இருந்த அகல் விளக்குகள் இருளைக் 'குத்து குத்' தென்று குத்தின.

ஓடைக் கரையை அடைந்தபோது, ஆறு, பரமார்த்த குருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப்போலத் தூங்கிக் கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப் பொட்டு என்று விழுந்து ஆற்றில் எங்கே போகிறோம் என்ற பிரக்ஞையே அற்ற வண்ணம் போய்க் கொண்டிருந்தன. கோரைப்புற்களின் மேலே சிலந்தி வலைப்போலப் பனிப்படலம் மொய்த்துக் கிடந்தது.

அப்பா கரையில் இருந்த தோணியை ஓடையிலே தள்ளினார். அதற்குள்ளே சோற்றுப் பானையையும் மற்றைய சாமான்களையும் வைத்தார். உடனே தோணியை ஆற்றிலே விட்டுவிட்டுக் கோரைப் புறகளின் அடியில் 'அத்தாங்கை' வீசி இறால் பிடிக்கத் தொடங்கினார். நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின் முன்னணியத்தில் ஒடுங்கிப் போய் குந்திக்கொண்டிருந்தேன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தியைப் போல, வானத்தில் விடிவெள்ளி நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் கீழே கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.

பறி நிறைய இறால் பிடித்ததும் அப்பா வள்ளத்தில் ஏறிக் கொண்டார். வள்ளமும் சமுத்திரத்தை நோக்கி ஓடத் தொடங்கிற்று. பலாரென்று விடிந்தபோது வள்ளம் நடுச் சமுத்திரத்தையே அடைந்து விட்டது. அப்பா நங்கூரத்தைத் தண்ணிரில் எறிந்து விட்டு தூண்டிலில் இறாலைக் குத்திக் கடலில் எறிந்தார். நானும் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். சமுத்திரா தேவி நிர்க்கதியான தன் குழந்தைகளைத் தன் அலைக்கரங்களை எறிந்து எறிந்து தாலாட்டிக் கொண்டு இருந்தாள்.

வெய்யில் ஏறிக்கொண்டே வந்தது. முதுகுத்தோலை உரித்துவிடுவதுபோலச் சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு ஆற்றாமல் அப்பா தன் சட்டையில் கடல் தண்­ரை அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டே யிருந்தார்.

மதியத்தை அண்மியபோது, நாங்கள் ஆளுக்கு ஐந்து "கருங்கண்ணிப் பாரைகள்" பிடித்துவிட்டோம். என் உழைப்பைக் கண்டு எனக்கே திருப்தி ஏற்பட்டு விட்டது. அந்தத் திருப்தியில் பழஞ் சோற்றைக் கரைத்துக் குடித்த தண்­ர் எனக்குத் தேவாமிர்தமாகத்தான் பட்டது. வயிறு நிறைந்ததும், நங்கூரத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கையில் என் உள்ளம் பகல் கனாக் காணத் தொடங்கியது. "இந்தப் பத்துக் கருங்கண்ணிப் பாரைகளைக் கண்டதும் அம்மா சந்தோஷப்படுவா. பக்கத்துப் பட்டினத்துச் சந்தைக்கு அதைக் கொண்டு போனால் பத்து ரூபாய்க்கு விற்கலாம். சந்தையிலே, எதிரே வரும் பொங்கலுக்காகக் கமுகம் பூப்போன்ற பச்கையரிசியும் பாசிப்பயறும், சர்க்கரையும் முட்டி நிறையப் பாலும் வாங்கிக் கொள்ளலாம். 'எங்கள்' வீட்டுத் தென்னை மரத்தின் கீழே புதுப் பானை 'களக் களக்' என்று பொங்கும் போது நான் புது வேட்டியை எடுத்துக் கரும்பைக் கடித்துக்கொண்டு....

வள்ளம் கரையை அண்மிட்டது. கடற்கரையிலே புத்தம் புதிய பைசிக்கிளிற் சாய்ந்தவாறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். சூரிய கிரணங்கள் வைசிக்கிள் தகடுகளின் மேல்பட்டு ஜொலித்தன. அப்பா ஏதோ மந்திர சக்தியால் கட்டுண்டவரைப்போலத் தோணியை அங்கே திருப்பினார்.

தோணி கரையை அடைந்ததும் மீன்களையெல்லாம் பைசிக்கிள் காரரிடம் போட்டுவிட்டுத் திரும்பவும், வீட்டை நோக்கித் தோணியை விட்டார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

தோணி வந்துகொண்டிருக்கையில் நான் கேட்டேன்: "ஏன் அப்பா மீன்களை எல்லாம் அங்கே போட்டுவிட்டு வருகிறீர்கள்?"

அப்பா சொன்னார்: "அவர்தான் நம் முதலாளி, இந்தத் தோணி-எல்லாம் அவருடையதுதான். நாம் மீனைப் பிடித்து அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்."

"நமக்குக் காசு தரமாட்டாரா?"

"நம் கடனிலே கழித்துக் கொள்வார் விலையை. நமக்குச் சாப்பாட்டிற்காக மேலும் கடன் தருவார்."

"அப்படியானால் நாம் ஒரே கடன்காரராகத்தானே இருக்க வேண்டும்?

"என்னமோ அப்பா; நானும் தலை நரைக்கு மட்டும் உழைத்து விட்டேன். கடனை இறுக்க முடியவில்லை. நமக்கென்று புதிதாக ஒரு தோணி வாங்கவும் முடியாது."

"எல்லாத் தோணிகளும அந்த முதலாளியுடையது தானா அப்பா?"

"ஆம், ஓடைக்கரையிலே இழுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லாமே அவருடைய தோணிகள்தான்."

வெள்ளம் ஓடைக்கரையை அடைந்து விட்டது. நாங்கள் தோணியைக் கரையில் இழுத்து வைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தோம். என்னுள்ளே ஒரு பயங்கரமான உண்மை புலனாகியது. இந்தத் தோணி எனக்குச் சொந்தமில்லை. ஆம், தூண்டிற்காரனுக்குத் தோணி சொந்தமில்லை; அப்படியே உழுபவனுக்கு நிலம் சொந்தமில்லை; உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை.

அன்றிலிருந்து தோணி எனக்குக் கனவுப் பொருள் ஆகிவிட்டது. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து ஆகக் குறைந்தது ஒரு தோணியாவது சொந்தமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்பின் மீன் பிடித்தால் சந்தையில் கொண்டுபோய் நம் இஷ்டத்திற்க விற்கலாம். பொங்கலுக்குக் கரும்பும், பாலும், பச்சையரிசியும் சர்க்கரையும் வாங்கலாம்... முதலாளிக்குப் பிடித்த மீனையெல்லாம் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு திரும்பிவரத் தேவையில்லை.

* * *

நாட்கள் கடந்துவிட்டன. நான் பெரியவனாகிவிட்டேன். சொந்தத் தோணி இன்னமும் வெறுங்கனவாகவே இருந்து வந்தது. தகப்பனார் வாழ்ந்துவரும் அதே பாதையிற்றான் என் வாழ்வும் போய்க்கொண்டிருந்தது. இந்த வாழ்வில், எனக்கு நேரகாலத்தில் கல்யாணம் முடித்து வைத்துவிடவேண்டும் என்பதை அம்மாவின் ஆசை.

ஒருநாட் சாயந்திரம் ஓடைக்கரையில் இராட்டினத்தில் நூல் முறுக்கிக்கொண்டிருந்தேன். மேலே நீல நிறமான ஆகாயம் ஓடையின் தெளிந்த தண்­ரிலும் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒடை முகத்துவாரத்தில் இருந்த மணல் தீவில் கடற்புட்கள் கூட்டம் கூட்டமாக வந்து விழுந்து கொண்டிருந்தன.

"தண்­ர் எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்று வீட்டுக்குப் போன அம்மாவை இன்னமும் காணவில்லை. எனக்குத் தாகமாயிருந்தது. வீட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்தேன். கனகம் செம்பிலே தண்­ர் எடுத்துக் கொண்டு வந்தாள்.

கனகம் எங்கள கிராமத்துப் பெண்தான். நீரின் இடைமட்டத்தில் ஆடும் பாசிக்கொடியைப்போல எப்போதும் மென்மையாக ஆடிக்கொண்டுதான் அவன் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீவனப போலச் செக்கச் செவேலென்று அழகாக இருப்பாள். வண்டலிலே மின்னும் கிளிஞ்சல்போல் இருக்கும் அவள் கண்களை இன்றைக்கு முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவள் அருகால் வந்தபோது, "கொஞ்சம் தண்ணி தந்திட்டுப் போறியா?" என்று கேட்டேன் நான்.

கனகம் ஒன்றும் பேசாமல் என்னிடம் செம்பை நீட்டினாள்.

நான் தண்­ரைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும் தண்­ர் எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். அம்மாவைக் கண்டதும், கனகம் ஏதோ செய்யத்தகாத காரியத்தைச் செய்தவள்போல வெட்கப்பட்டுக் கொண்டு போய்விட்டாள்.

அம்மா சொன்னாள்: "என்ன வெட்கமாம் அவளுக்கு. நாளைக்கு அவளைத்தானே நீ கல்யாணம் முடிக்கப் போகிறாய்?"

"போ அம்மா, எனக்கென்று ஒரு தோணி இல்லாமல் எனக்குக் கல்யாணமே வேண்டாம்" என்றேன் நான்.

"ஏண்டா! அவள் அப்பாவிடம் ஒரு தோணி சொந்தமாக இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடுவார் அவர்" என்றாள் அம்மா.

நான் யோசித்தேன். எனக்குக் கல்யாணத்திலோ கனகத்திடமோ அக்கறை இல்லாவிட்டாலும் தோணி கிடைக்கப் போகிறதே! தோணி மட்டும் கிடைத்து விட்டால் என் உழைப்பீன் பயனை நானே அனுபவிக்க முடியும். என் குடும்ப வாழ்வும் இன்பமாகவே இருக்கும்...

அதன் பிறகெல்லாம் நான் கனகத்துடன் தைரியமாக நெருங்கியே பழகினேன். மனோகரமான மாலை வேளைகளில், ஓடைக்கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி மூலையில் குந்திக்கொண்டு நானும் கனகமும் எவ்வளவோ கதைத்திருக்கிறோம்! கனகம் எப்பொழுதுமே தன் தோணியைப்பற்றிப் பெருமைப் பட்டுக்கொள்வாள். அந்தத் தோணி அவள் தகப்பனாரின் சொந்தமாக இருக்கிறபடியாற்றான் கனகம் நல்ல சேலை கட்டியிருக்கிறாளாம். கையில் தங்கக் காப்புப் போட்டிருக்கிறாளாம்! 'அவள் என்றைக்குமே அப்படி இருக்க வேண்டும்' என்று என் மனதுள் எண்ணிக் கொள்வேன்.

ஆனால், இரண்டு வாரத்துள் அந்தத் துக்ககரமான செய்தி கிடைத்தது. கிராமமே பரபரப்படைந்தது. கனகத்தின் தந்தை மீன் பிடிக்கப் போனவர் புயலின் அகப்பட்டு மாண்டு போனார். தோணியும் திரும்பி வரவில்லை.....

என் இருதயத்தில் சம்மட்டியடி விழுந்ததுபோன்றிருந்தது எனக்கு. பாவம்! எனக்குத்தான் சொந்தத் தோணி இல்லையென்றாற் கனகத்திற்குக்கூடவா இல்லாமற் போகவேண்டும்?

இரண்டு மூன்று நாட்கள் கழித்துக் கனகம் கடற்கரைக்கு வந்தபோது அவளை நிமிர்ந்து பார்க்கவே என்னால் முடியவில்லை. அவன் கண்கள் கலங்கியிருந்தன. என்னைக் கண்டதும் அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. விம்மி விம்மி அழத் தொடங்கினாள். என் மடியிற் தலையைப் புதைத்துக்கொண்டு. கனகம் என்னிடம் எதை எதிர்பார்த்தாள?

கனகத்தை மடியில் வைத்துக்கொண்டே நான் எண்ணினேன். என்னிடமோ தோணி கிடையாது. இந்த நிலையில் அவளை நான் சுகமாக வாழ்விக்க முடியாது.

என் தகப்பனாரப்போல நானும் தலை நரைக்கும் வரை உழைத்து, உழைத்துச் சாகவேண்டியதுதான். என்னோடு சேர்ந்து கனகமும் ஏன் சாகவேண்டும்? பாவம் கனகம்...

எனவே கனகத்தை யாராவது சொந்தத் தோணியுள்ள ஒருவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும். என் கண் முன்னால் அவள் அழகான சேலையும், தங்கக் காப்பும் அணிந்துகொண்டு என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழவேண்டும். அவள் வாழ்வுதான் எனக்கும் ஆனந்தம்...

நான் எண்ணியது சரியாகப் போய்விட்டது. அமாவாசையன்றிரவு, புங்கை மரத்தின்கீழே இருந்த வைரவர் கோவிலடியில் கனகத்துக்கும் செல்லனுக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தன்று பேசிப் பார்க்கவோ எனக்குக் கண்­ர் வந்துவிட்டது. என் கையில் இருந்த அரும்பொருள் இன்னொருவனுக்குப் போய் விட்டது... ஆனாலும், என் கண் முன்னால் அவள் ஆனந்தமாகவே வாழ்வாள். செல்லனிடம் ஒரு தோணி இருக்கிறது. அவன் என்னைப் போலக் கடன்காரனல்ல, செல்லனோடு கனகம் என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழட்டும். எனக்கென்று தோணி ஒன்று கிடையாமல் நான் எந்தப் பெண்ணின் வாழ்வையும் பாழாக்கப் போவதில்லை...

ஆனால், இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான், எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லாருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை விற்றுச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணமும் என்னைப்போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும்! அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?

ஈழகேசரி'54

--------------------------------------------------------

வென்றிலன் என்ற போதும்....

ஏழுமணி தாண்டியபோது வேதநாயக வாத்தியார் கங்கைத்துறையைத் தாண்டி விட்டார். இன்னும் ஒரு மைல் தூரம் இருக்கின்றது பாடசலைக்கு. வலப்பக்கமாகக் கொட்டியார்க் குடாக் கடலும் இடப்பக்கம் தென்னந் தோட்டங்களும் பற்றைக்காடுகளுமாகக் கிடந்த அந்தப் பிராந்தியத்தில் மேற்காகச் செல்லும் திருக்கோணமலை வீதியில் சைக்கிளை உருட்டிக் கொண்டு அவர் நடந்தார். மாசி மாதத்துப் பின் பனியில் கடலோரமாக ஊதா நிற அடம்பன் பூக்கள் நனைந்து சோபையற்றத் தோன்றின. தெரு ஓரத்தே காவிகளாய்ப் பற்றைகளிலும் நாகதாளிப் புதர்களிலும் சிலத்திவலையாகப் பனிபடர்ந்திருந்தது.

வீதி வழியே சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த வேதநாயகம் தன் சைக்கிளைக் கட்டை வேலியிற் சார்த்தி வைத்துவிட்டு 'ஏறுகடப்பை' ஏறிக் கடந்து வெண் மணலிற் கால் புரள எதிரே தெரிந்த குடிசையை நோக்கி நடந்தார். மணல் வெளியிலே மணிலாச் செடிகள் மஞ்சள் பூக்களோடு சடைத்துக் கிடந்தன. அதிகமான செடிகள் வாடி அறுவடைக்குத் தயார் என்பதை அறிவித்துக் கொண்டிருந்தன.

குடிசைக்கு முன்னே துண்டொன்றினால் உடல் முழுவதையும் போர்த்துக் கொண்டு சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த சைமன் "வாங்க ஐயா" என்று அவரை வரவேற்றான்.

"மகன் எங்கே. பள்ளிக்கு வரவில்லியா?"

"நாங் போகச் சொன்னது ஐயா. கூட்டிற்றுப் போங்க."

நான்காம் வகுப்பிற் படிக்கும் சில்லெஸ்ரர் தன் தந்தையின் பின்னால் மறுகினான். தந்தையார் "போடா ஐயாவோட" என்று விரட்டியபோது அவன் தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வாத்தியாரின் பின்னால் நடந்தான்.

இருவரும் ஏறுகடப்பைத் தாண்டி வெளியே வந்தனர். ஆசிரியர் தம் சைக்கிளை உருட்டிக்கொர்ணடு பாடசாலையை நோக்கி நடந்தார். வீடு வீடாகச் சென்று கிச்சா, தனுஷ்கோடி, அப்துல்லா, ராணி என்று 'பிள்ளை பிடித்துக் கொண்டு' அவர் நடந்தார்.

மகாவலி கங்கைக்கும் உப்பாற்றுத் துறைக்கும் இடைப்பட்ட மணல் வெளியில் அவர் பாடசாலை இருந்தது. எப்போதோ ஒரு காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார் கட்டிய பாடசாலை. தினவரவு இடாப்பிலே ஐம்பத்திரண்டு பிள்ளைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் வருகை தருபவர்கள் இருபதிற்குள்ளாகத்தான் இருக்கும். வைகாசி மாதம் 'அனுவல்' எடுக்கும்போது நாற்பத்தி ஒன்று எனச் சராசரி வரவு காட்டினாற்தான் அந்தப் பாடசாலைக்கு இன்னோர் ஆசிரியரை அரசாங்கம் நியமிக்கும். இதற்காகத்தான் வேதநாயகத்தார் வீடு வீடாகச் சென்று பிள்ளை பிடிக்கிறார்!

அவர் 'பிடித்து வந்த' பிள்ளைகளோடு பாடசாலையில் பிரவேசிக்கையில் எட்டரை மணியாகி விட்டது! ஏற்கனவே பாடசாலைக்கு வந்த மாணவர்களில் பெண்கள் பாடசாலையில் உட்புறத்துச் சீமெந்துத் தளத்தைக் கூட்டிப் பெருக்கியிருந்தார்கள். ஆண்கள் காய்ந்த தென்னம்பாளைகளால் வெளிப்புறத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பாடசாலையிலே முஸ்லீம் மாணவர்கள் இருந்தார்கள். நெற்றியிலே துலாம்பரமாகத் திருநீறு பூசிய சைவ மாணவர்கள் இருந்தார்கள். கச்சான் காற்றுக் காலத்திலே கங்கை நெத்தலிக்கு கரைவகை விரித்த நீர்கொழும்பு மீனவர் சிலர் சீசன் முடிந்ததும் அங்கேயே தங்கிவிட்ட காரணத்தினால் அவர்களின் பிள்ளைகளான கத்தோலிக்க மாணவர்களும் இருந்தார்கள். இதனாற் பாடசாலையை பிதாவுடையவும், சுதனுடையவும், பரிசுத்த ஆவியுடையவும் நாமத்தினாலே தொடங்குவதா, அல்லது 'மௌலாய சல்லி யலா' என்ற சலவாத்துடன் தொடங்குவதா, அல்லது திருச்சிற்றம்பலம் சொல்லித் தேவாரம் பாடித் தொடங்குவதா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டதில் மாறிப்போனார்! நல்லகாலமாகப் 'புத்தங் சரணங் கச்சாமி' பற்றி அவர் சிந்திக்க வேண்டிய தேவையில்லாதிருந்தது.

வேதநாயக வாத்தியார் தன் சைக்கிளை தாழ்வாரத்திற் சார்த்தி வைத்துவிட்டு, அதிலிருந்த பணிஸ் பையை எடுத்து அறைக்குள் வைத்துவிட்டு இடாப்பு வகையறாக்களை எடுத்துக்கொண்டு தன் யதாஸ்தானமான மேசையடிக்கு வந்தார்.

ஐந்தாம் வகுப்பிலே ஒரே ஒரு மாணவன்தான் அவன் அதிகமாகப் பாடசாலைக்கு வருவதில்லை ஆனால் அன்று வந்திருந்தான். நான்காம் வகுப்பில் நான்கு பேரும் வந்திருந்தார்கள்.

நாலாம் வகுப்புக் கணக்குப் புத்தகத்தை எடுத்து முப்பத்தி நான்காம் பக்கத்திலுள்ள கணக்குகளைச் செய்யும்படி அவ்வகுப்பைப் பணித்துவிட்டு, நான்காம் வாய்ப்பாட்டைக் கரும்பலகையில் எழுதி அதனை மனனம் பண்ணும்படி மூன்றாம் வகுப்பை பணித்து இரண்டாம் வகுப்பு மாணவர்களைப் பிரதி பண்ணும் படி பாடத்தைக் காட்டிவிட்டு 1-ம் வகுப்பு மாணவர்களை தங்களை கற்பலகைகளில் மீன் படம் வரையும்படி கட்டளையிட்டு அரிவரி வகுப்பு மாணவர்களின் அருகே மணலில் அமர்ந்து ஆனா, ஆவன்னா எழுதுவித்தார். பாடசாலை களை கட்டிவிட்டது.

பத்தரை மணிவரையும் பாலர் வகுப்பையும் முதலாம் வகுப்பையும்தான் அவர் கவனிக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு பணிசையும் பாலையும் கொடுத்து அனுப்பிவிட்டுத்தான் மற்ற வகுப்புக்களைக் கவனிக்க வேண்டும். அதுவும் ஒரு மனிவரைதான். இதுதான் அவரது நேர சூசி!

ஆனா ஆவன்னா எழுதி முடிந்த பின்னர் முதலாம் வகுப்பிற்கும் பாலர் வகுப்பிற்கும் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார் வேதநாகம்.

தோட்டத்தில் மே து வெள்ளைப்பசு-அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

ஆசிரிர் பாட அதைக் கேட்டு மாணவர்கள் பாடிக் கொண்டிருக்கும்போது....

"ஐ‘, சில்லி ஓடப்போறானாம் ஐ‘" என்றான் தனுஷ்கோடி.

"இல்லய்யா. இந்தக் கள்ளுக்காறன் பொய் சொல்றது" என்றான் சில்லி என்ற சில்வெஸ்டர். தனுஷ்கோடி கள்ளிறக்கும் நாடாரின் மகன்.

பாட்டுச் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்த ஆசிரியர் தன் வகுப்பை அந்தரத்தில் விட்டுவிட்டு முறைப் பாட்டுக்காரனையும் எதிரியையும் உறுக்கி "வாசிப்புப் புத்தகத்தை எடுத்துப் படியுங்கடா" என்று கட்டளையிட்டுவிட்டு மீண்டும் பாலர் வகுப்புக்கு வந்தார். கைக் கடிகாரம் பத்து மணிக்கு மேலாகி விட்டதைக் காட்டிற்று.

குடாக் கடலில் வெடி கேட்டது. 'டைனமற்' வெடி. வெடி கேட்டதும் சில்லி பாய்ந்து விழுந்து அடம்பன் கொடிகளைத் துவைத்துக் கொண்டு கடலை நோக்கி ஓடினான்.

"ஐயா, சில்லி ஓடிற்றான். நாங்கபோய்ப் பிடிச்சிற்று வாறம் ஐயா.

"போய்ப் பிடிச்சுவாங்க" என்று உத்தரவு கொடுத்ததும் ஐந்தாம் வகுப்புக் காதரும், நாலாம் வகுப்புத் தனுஷ்கோடியும், கிச்சா என்ற கிருஷ்ணபிள்ளையும் அவனைத் துருத்தி ஓடினார்கள்.

ஆசிரியர் பாலர் வகுப்புக்கும் முதலாம் வகுப்புக்கும் பணிசையும் பாலையும் கொடுத்து வீட்டுக்கனுப்பினார். பின்னர் மூன்றாம் வகுப்பிற்கு வாசிப்புப் பாடம் நடத்துகையில் இரண்டாம் வகுப்பினர் கணக்குச் செய்தார்கள். கணக்குப் பாடம் முடிவுற்றதும் இரண்டாம் வகுப்பையும் வீட்டுக்கனுப்பலாம் என்றெண்ணிக் கொண்டார் வேதநாயகம், அவர் கணக்குகளைப் பார்த்துக் கற்பலகையில் வெண்டிகட்டியால் 'பாஸ்' போட்டுக் கொண்டிருக்கையில் துரத்திச் சென்ற மூவரும் சில்லியை இழுத்துக் கொண்டு பாடசாலைக்குள் நுழைந்தனர்.

சில்லி தெப்பமான நின்றிருந்தான். அவன் கையிலே அடம்பன் கொடியிற் கோத்த பென்னம் பெரிய கயல் மீன் ஒன்று இருந்தது.

"ஐயா இவன் வீட்ட ஓடப் போனான். பிடிச்சுக் கொண்டு வந்திற்றம்" என்றார்கள் அவனைப் பிடிக்கச் சென்ற மூன்று மாணவரும்.

"இல்லய்யா. தான் தண்ணிக்க பாஞ்சி மீன எடுத்திற்றுப் பள்ளிக்கதான் வந்தன். இவங்க என்னைப் புடிச்சு இழுத்திற்று வாறாங்க" என்றான் சில்லி.

"சரி எல்லாரும் வகுப்பில போய் இருங்க" என்று கட்டளையிட்ட வேதநாயகம், மீனை வாங்கித் தாழ்வாரத்து வரிச்சுக் கம்பில் தொங்கவிட்டு விட்டு, எல்லாருக்கும் பணிசும் பாலும் கொடுத்தார். சில்லிக்கு இரண்டு பணிஸ் கொடுத்தார்.

பிள்ளைகள் பணிஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஆசிரியர் இடாப்படையாளம் பண்ணினார். அன்று இடாப்பிலே பிள்ளைகளின் வரவு ஐம்பது. சராசரியை நாற்பத்தொன்றாக்க அவர் இந்தத் தகிடுதத்தத்தைச் செய்யவேண்டியிருந்தது!

கறுப்புப் பேனையால் வரவு பதிந்த பின்னர் சிவப்புப் பேனையால் சாப்பாட்டு அடையாளம் பண்ணிக்கொண்டிருக்கையிற் தனுஷ்கோடி கத்தினான். "ஐயா. சில்லி ஓடிற்றான் ஐயா. நான் போய்ப் பிடிச்சிற்று வாறன்"

தனுஷ்கோடி அவனைத்துரத்திக்கொண்டு ஓடினான். கிச்சாவும் காதரும் கூடத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்.

இடாப்படையாளத்தை முடித்துப் பாற்கணக்கையும் பதிந்த பின்னர் ஆசிரியர் வெளியே வந்து பார்த்தார்.

ஓடிப்போன சில்வெஸ்ரர் கால் தடுக்கி மணலிலே முகங்குப்புற விழுந்திருந்தான். அவன் கையிலிருந்த இரண்டு பணிசில் ஒன்றை நாய் கவ்விக் கொண்டு ஓடியது. மற்றதைக் காகங்கள் கொத்திக் கொண்டிருந்தன. துரத்திவந்த மூவரும் சில்லியின் கைகளைப் பிடித்துப் கொண்டிருந்தனர்.

"விடுங்கடா அவனை" ஆசிரியர் பலத்து சத்தமிட்டுக் கொண்டே அவனை நோக்கி நடந்தார். பிடித்திருந்த மூவரும் கையை விட்டதும் சில்லி எழுந்து சிட்டாகப் பறந்தான். 'இனி அவன் பாடசாலைக்கு வரமாட்டான். இன்றைக்கு அவனுக்கு பணிசும் இல்லை. போகும்வழியில் அவனுக்கு பணிஸ் கொடுத்து விட்டுத்தான் போக வேண்டும்' என்று எண்ணிக் கொண்ட ஆசிரியர் மற்ற மூவரோடும் என்று எண்ணிக் சென்றார்.

பாடசாலைத் தாழ்வாரத்து வரிச்சிலே இன்னமும் கயல் மீன் தொங்கிக் கொண்டுதான் இருந்தது. மூதூரில் இது முப்பது ரூபாய்க்கும்மேல் பெறும். இந்த மீன் பழுதாய்ப் போகுமுன்னமே இதை வீட்டுக்குக் கொண்டு போகவேண்டும் என்று எண்ணிய வேதநாயகத்தார், இடாப்புக்கள், லொக் புத்தகம் முதலானவைகளை எடுத்து அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் பாடசாலையை மூடினார்.

சில்லியின் புத்தகங்களையும் இரண்டு பண்சையும் "சில்லியிடம் கொடு" என்று அவன் அயல் வீட்டுக்காரி லட்சுமியிடம் கொடுத்துவிட்டு இறப்பிலே தொங்கிய மீனைச் சைக்கிள் ஹாண்டிவிற் கொழுவிக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டார் வேதநாயகம். அப்போது நேரம் ஒரு மணி!

இளம்பிறை'67

-----------------------------------------------------------------

தோழருக்குத் தெரியாதது

நூலினாற் கட்டப்பட்டிருத் தன் கண்ணாடியைச் சாவதானமாக மாட்டிக்கொண்டு, பஞ்சாங்கத்தைத் துருவி ஆராய்ந்து, ஆவணி மாதத்துப் புள்ளியிடப்படாத கடைசிச் சுபதினத்தை விசுவலிங்கச் சாத்திரியார் யார் யாருக்கோ சொல்லிவிட்டார்.

கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகக் கலந்து வாழும் நாட்டிலே 'கல்யாணங்கள் சொர்க்கத்திற் தீர்மானிக்கப் படுகின்றன' என்ற வாக்கியத்திற்கு ஏதாவது அர்த்தமிருக்கலாம். ஆனால் வயதான பெண்ணைக் கிடுகு வேலிக்குட் சிறைவைத்து இருக்கும் இந்த நாட்டிலே சமூக பொருளாதாரக் காரணங்கள் பொருந்தாக் கல்யாணங்களைத் தீர்மானித்தாலும், அவைகளும் சொர்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டன என்று பம்மாத்துப் பண்ண எவருமே தயங்குவது இல்லை. விசுவலிங்கச் சாத்திரியார் சொர்க்கத்திற் தீர்மானிக்கப்படும் கல்யாணங்களுக்கு நாள் குறிப்பவர்!

அவர் சொல்லிவிட்டார். 'ஆவணி மாதம் இருபத்தோராந்திகதி புதன்கிழமை இரவு பத்து இருபத்தேழிற்கும் பதினொன்று ஐம்பத்தி மூன்றுக்கும் இடைப்பட்ட சுவ முகூர்த்தந்தான் ஆவணி மாதத்திலுள்ள 'புள்ளியில்லாத' கடைசிக் கல்யாண நாள்' என்று யாருக்கோ சொன்ன இந்தச் சேதி பொன்னம்மாவின் காதுகளிலும் பட்டது.

கொட்டியாரக் குடாக் கடல், கட்டுக்காவலை மீறி ஓட முயன்றும், குடும்பப் பிணைப்பை விட்டுப் பிரிய மனமில்லாத முத்தற் குமரியைப்போல உள்வாங்கி ஊரைக் கிழக்கு மேற்காக இரண்டாக்கிக்கொண்டு செல்லு ம ஓடைக்கரையிலே, தளராவளர் தெங்குகள் ஓலைக் குடைகவித்த குளுமையான நிழலிலே, கிடுகு பின்னிக் கொண்டிருந்த பொன்னம்மா திடலிலே இருக்கும் தங்கள் குடிசைக்குப் பின்னால் இராசவள்ளி பயிரிடுவதற்காக நிலத்தைக் கொத்திக் களைத்து வந்த தன் கணவனிடம் சொன்னாள்.

"இருவத்தேழாந்தேதி ஊரில நாலு கலியாணம் நடக்குதாம். கூட்டுறவுச் சங்க மனேஜரின் மகளின்ர கல்யாணத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து மேளம் வருகுதாம்."

பொன்னம்மாவின் பேச்சிலே தேங்கி நின்ற ஆதங்கத்தை உணராமலிருக்ச் சிவசம்பர் மரக்கட்டையல்ல. தன் வீட்டினுள்ளே அவர் மூத்த மகள் இருப்பது இதுவரை பாரமாக இல்லைதான். ஆனால் வைகாசிக்குப் பிறகு அவள் இரும்புக் குண்டாகத்தான் மனத்திற் கனத்து நிற்கிறாள்! ஆயினும் அதனை வெளிக்காட்டாமல்,

"நாமளும் மேளம் பிடிப்பமே" என்று சொல்லித் தமது ஹாஸ்யத்தைத் தாமே இரசித்துச் சிரிக்க முயன்றார்.

"எனக்கென்ன நீங்களாச்சு உங்கள் மகளாச்சு. ஒண்ணுக்கும் அடங்காத தறுதலையாக இளைய மகனை வளத்திருக்கீங்களே...அவன் எல்லாத்தையும் குழப்பியடிச்சுப் போடுவான்" என்று அலுத்துக் கொண்ட பொன்னம்மா பின்னிய கிடுகிற்குத் 'தலைக்கட்டை' அவசர அவசரமாகக் கட்டி முடித்து விட்டு முன்னால் இருந்த குவியலிற் தூக்கி எறிந்தாள். அப்படியும் அவள் கோபம் தணியவில்லைப் போலும்! கத்தியை எடுத்துக்கொண்டு ஓடைக்குச் சென்று நீரில் ஊறிக்கிடக்கும் மட்டைகளை எடுத்துப் பிளக்கத் தொடங்கினாள்.

* * *

தென்னையின் சல்லி வேர்களிற் தலை சாய்த்து, ஓடைக் கரைச் சரிவில் கால் நீட்டி 'தளராவளர் தெங்கு'கள் கவித்த ஓலைக்குட்டை நிழலிலே உடலைச் சாய்த்த சிவசம்பர் ஓடையிலிருந்து வீசிய சீதளக் காற்றால் தாலாட்டப்பட நித்திரையாகி விட்டார்.

எந்த விசாரமுமின்றி அவர் பள்ளி கொண்டதைப் பார்க்கப் பொன்னம்மாவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

ஆமாம். சிவசம்பர் வாழ்க்கையை ஒரு சுமையாகக் கருதியவரல்ல. வாழ்க்கை ஒரு போராட்டம் என்று கற்பித்துக்கொள்ள, அவர் அரசியல் சித்தாந்தங்களையோ, மத தத்துவங்களையோ படித்தவருமல்ல. ஐம்பது வயதைத் தாண்டிய அவர் உடலிலே இன்றைக்கும் வலுவிருந்தது. அவருக்கென்று சீதனமாக வந்த வயல் வாய்க்கால இல்லாவிட்டாலும், இரு போகங்களிலும் அருவி வெட்டும் சூடுமிதிப்பும் நடைபெறுகையில், ஒருமாசக் கட்டத்திற்கு இராப்பகலாக உடம்பை முறித்து அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான சாப்பாட்டு நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து அடுக்கி வைத்து விடுவார். ஓடைக்கரையிலே அவர் நட்டுவளர்த்த தென்னம்பிள்ளைகள் குலைகளைச் சுமந்து நிற்கின்றன. வீட்டுத் தோட்டத்தில் வெண்டியும் காய்க்கின்றன. தென்னை மரத்திலே சார்த்தியிருக்கும் மூங்கிலிற் கட்டப்பட்டிருக்கும் வலையை எடுத்து 'வற்றுக்கணிய'ம் பார்த்து இரண்டு மணலையாவது வீசினால் வலையில்படும். அதுவும் இல்லைஎன்றால் இருட்டியதும் தென்னோலைகளைச் சேர்த்துச் சூள் கட்டிக்கொண்டு ஓடைக்கரையோரமாக நடந்தால் இரண்டு நண்டுகளாவது பிடிக்கலாம்!

இதற்கும் மேலுள்ள தேவைகளைச் சிவசம்பர் சிந்திப்பதேயில்லை. அதற்குமேல் ஏதும் தேவை இருப்பின் பொன்னம்மா அவைகளைக் கவனித்துக் கொள்கிறாள். அவள் கிடுகு பின்னுகிறாள்! கோழி வளர்க்கிறாள்.

ஆனால் இந்த அமைதியான வாழ்வைக் கலைத்துக் கொண்டு பூதாகரமாக எழுந்து நிற்கிறது மகளின் கல்யாணம்!

வைகாசி மாதம்வரை அதுகூட ஒரு பிரச்னையாக இருக்கவில்லை! பெண் சகோதரங்களின்றிப் பிறந்த சிவசம்பருக்கு அக்குறையே தெரியாமல் நிம்மதியளித்த அவரின் ஒன்றுவிட்ட அக்காவிடம் ஒரு சொல்லு சொல்லி விட்டு "வா தம்பி" என்று கூப்பிட்டால், அவள் மகன் வளர்த்த பசு வருவதைப்போலத் தன் பின்னால் வந்து, மகளின் கழுத்திலே தாலியைக் கட்டிவிடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு-ஏன் பொன்னம்மாவிற்குக்கூட இருந்தது. ஆனால் இப்போதும்...?

நேற்றுச் சிவசம்பரோடு அவர் மகன் வேலாயுதமும் சேனைக்காடு வெட்டப் போயிருந்தான். பத்தாம்வகுப்புப் படிக்கும் அவனுக்குப் பாடசாலை விடுமுறை. அவனிடம் சிவசம்பர் கேட்டார்.

"ஏண்டா. நீ அத்தானோட சண்டை பிடிச்சியாமே."

"நானில்லப்பா. அவர்தான் என்னோட வீணாத்தனகினார். நான் சிங்களக் கட்சில சேர்ந்து சோனகனுக்கு எலெக்ஷன் வேல செஞ்சேனாம்."

"அவர் அப்படிச் சொன்னா நமக்கென்னடா? அக்காவக் கட்டப்போற அத்தான் என்று கேட்டிற்றுப் போறதானே"

"ஏன் அவர் அப்படிச் சொல்ல வேணும்? இப்படி வகுப்பு வாதம் பேசிப் பேசி இந்த நாடே குட்டிச் சுவராப்போகுது. நம்ம தொகுதியில இருக்கிற இனத் துவேஷத்தையும் மொழி வெறியையும் மீறிக்கொண்டு கந்தளாய்ச் சீனித் தொழிற்சாலையில் வேல செய்ற சிறிசேனாவும். கிண்ணியா வயற்காட்டில நெஞ்சு முறியிற அப்துல்லாவும், மூதுர்வந்தையில மூட்ட சுமக்கிற செபமாலையும் ஒன்று சேர்ந்த அணியிலதான் நானும் சேர்ந்திருக்கிறன் என்று எண்ணாம, முட்டாள்த்தனமாக அத்தான் பேசிறத நான் கேக்கணுமா அப்பா?"

என்று மிகவும் ஆத்திரத்தோடு கேட்டான் வேலாயுதம். இந்த ரீதியில் அவன் பேசத் தொடங்கி விட்டல் அவனோடு வாதம் பண்ணித் தப்பிக்க முடியாதென்பது சிவசம்பருக்குத் தெரியும். மேலும் அவன் பேசுவதை அவரால் விளங்கிக் கொள்ளவும் முடியாது. அவரைப் பொறுத்த அளவில் 'ஊரோடினா ஒத்தோடு; ஒருவன் ஓடினாக் கேட்டோடு' என்ற பழமொழியை நம்பிக்கொண்டு ஊரவரெல்லாரையும் போலத் 'தமிழ்க் கட்சிக்கு 'வாக்களிப்பதுதான் அவரது அரசியல்' வடக்கே குருக்கள் கங்கைக்கும் தெற்கே வெருகல் கங்கைக்கும் அப்பா நாடு பந்ந்து விரிந்து கிடக்கிறது என அவர் எண்ணிப் பார்த்ததும் தனது மகனாகவே இருந்தாலும் அவனோடு சேர்ந்து தானும் ஓட வேண்டுமா? என்பதை அவர் யாரிடமும் கேட்கவில்லை. இப்போதும் கேட்கவிரும்பாத அவர் "அத்தான் என்னத்தையும் சொல்லட்டும். அவரோட ஏறுக்கு மாறாகக் கதைச்சி அக்காட கல்யாணத்தைக் குழப்பீராத" என்று கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

கல்யாணத்தை இந்த மாசத்திலேயே நடத்திவிட வேண்டும் என அவர் மனம் முடிவு கட்டிக் கொண்டது.

* * *

மேற்கே ஓடைக்கரையில அணிவகுத்து நிற்கும் கண்டல் மரங்களின் பின்னால் சாய்ந்து கொண்டிருந்த சூரியனின் மஞ்சட் கிரணங்கள் முகத்திற்பட்ட போது சிவசம்பர் விழித்துக்கொண்டார். மருமகனுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றி மனத்தாங்கல் ஏற்படும்முன் கல்யாணத்தை நடத்தவேண்டும் என மீண்டும் மனத்துள் எண்ணுகையில்...

வீட்டு மூலைக்குள்ளே ஐந்து சாக்கு நெல் இருக்கிறது. அதில் இரண்டு சாக்கு நெல்லச் சேனைக்காட்டிலே கொத்த வேண்டும். மீதி மூணு சாக்கு நெல்லும் மாவிற்கும் அரிசிக்கும் போதுந்தான்.

ஆனாற் கல்யாணம் என்றால் அவை மட்டுந்தானா? ஆகக் குறைந்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் புதிய உடுப்புக்கள் வாங்க வேண்டும். சில்லறைச் செலவுகள் வேறு உள்ளன.

யோசித்த சிவசம்பர் பெருமூச்சு விட்டார். அந்த மூச்சோடு கிணற்றடிக்குச் சென்று முகம் கழுவிய பின்னர் வீட்டு இறப்பிலே தொங்கிய மழமழவென்ற இளநீர்ச் சிரட்டையில் இருந்த வெருகலான் திருநீற்றை விரல்களால் எடுத்துச் 'சிவசிவா' என்ற உச்சரிப்போடு நெற்றியிற் பூசிக்கொண்டு வெளியில் நடந்தார். பணம் பற்றிய விசாரம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. கால்கள் வழமைபோல் அக்காவின் வீட்டை நோக்கியே நடந்தன.

அக்கா கொடுத்த கோப்பியைக் குடித்துக் கொண்டே நேரடி நடவடிக்கை'யில் இறங்கினார் சிவசம்பர்.

"இருபத்தேழாந்தேதி நாளிருக்கு அக்கா"

"எனக்கென்னடா. இப்ப எண்டான கூட்டிற்றுப் போவன்"

"அப்ப நீயே தம்பீற்றச் சொல்லிரு. நான் எல்லா அடுக்கும் பண்ண வேணும். நேரமில்ல இருக்க. வாறன் அக்கா"

குறுகியதும் நிறைவானதுமான அச்சந்திப்பு முடிந்ததும் சிவசம்பர் நேராகக் கூட்டுறவுச்சங்க மனேஜரிடம் போனார் திரும்புகையில் அவர் மடியில் இருநூறு ரூபா இருந்தது!

அவர் வளவுக்குட் காலடி எடுத்து வைக்கையில் எங்கட அரசாங்கம் செப்டம்பர் மாசம் இருபத்தாறாந்திகதி கூப்பனுக்கு இரண்டு கொத்து அரிசி குடுக்கப் போகுது. அன்றைக்கு மூதூரில எங்க அணியைச் சேர்ந்த தேயழர்கள் ஊர்வலமாகச் சென்று அரிசி வாங்கத் தீர்மானிச்சிருக்காங்க. இங்க ஊர்வலம் நடத்த ஏலாட்டியும் சங்கக்கடைக்கு முன்னால் ஒரு கட்டுச் சீனவெடியாவது கொளுத்திக் கொண்டாட வேண்டும்" என்று உற்சாகத்துடன் தன் அக்காவிற்குச் சொல்லிக் கொண்டிருந்தான் வேலாயுதம். ஆனாற் தந்தையாரின் முகக் கடுப்பைக் கண்டதும் அடங்கிக் கொண்டான்.

* * *

அடுத்த நாட் காலை பொன்னம்மா ஒரு சாக்கு நெல்லைப் புழுக்குவித்தாள். அன்று சாயந்திரம் முற்றத்து வேப்பமர நிழலில் உறவுப் பெண்கள் நெல் குற்றினார்கள்!

மா இடித்தார்கள்!

இரவிலே காய்ந்த எண்ணெய்ச்சட்டியின் சிலுசிலுப்பு கேட்டது!

ஒருவாரத்தின் பின் விசுவலிங்கச் சாத்திரியார் சொன்ன சுபயோக சுபதினத்தில், முணுக்கென்றெரியும் குத்துவிளக்கின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் மடைக்கு முன்னால் பூதாக்கலத்திற் சோறு போட்டாயிற்று!

திருமணம் நடந்தேவிட்டது!

அந்த வைபவத்தின் பின்னர் பஞ்சப்பாட்டு பாடிய தன் சம்பந்தர், இருபத்து நாலு ரூபா கொடுத்து வாங்கிய இரண்டு சீல் போத்தலை எட்டுப் பத்துப் பேர் 'நக்கியதாற்' திருப்தியடையாதவராய், மூதூரிலே இருந்த சாராயத் தவறணையை மூடக்காரணமாக இருந்த 'சன்மார்க்கர்களை' மனமாரத் திட்டிக்கொண்டே ஒடைக்கரைப் பக்கமா 'வடிசாராயத்து'க்குச் சென்றார். பின்னர் அவர் சாப்பிடவே வரவில்லை. கலாட்டா இல்லாமற் கல்யாணமா?

* * *

ஒரு வாரம் கழிந்து விட்டது. சிவசம்பரின் வீட்டிலே இனிக் கூப்பன் எடுத்தாற்தான் அரிசி என்ற நிலை. இரண்டு சாக்கு நெல் குத்திய அறுபது கொத்து அரிசி கல்யாண வீட்டில் எந்த மூலைக்கு? சில்லறைச்செலவுகளுக்காக விதை நெல்லுக்கு வைத்திருந்ததையும் விற்றாயிற்று.

"புழுத்துப் போன கூப்பன் அரிசியையா புதுமணப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆக்கிப் படைப்பது என்று பொன்னம்மா மனம் நோகிறாள்.

கூப்பனுக்கு இரண்டு கொத்து அரிசி கொடுக்க இருக்கும் சுபதினத்தைப் பட்டாஸ் வெடித்தக் கொண்டாடத் திட்டமிடுகிறார் தோழர் வேலாயுதம்!

தன் வீட்டிலுள்ள எல்லாருடைய கூப்பன்களையும் மனேஜரிடம் விற்றுத்தான், தன் மகளின் கல்யாணத்தை ஒப்பேற்றினார் என்ற விவகாரம் பாவம்-அத்தோழருக்குத் தெரியாது.

தமிழமுது'71

-------------------------------------------------------

தலாக்

பாடசாலைக்கு வெளியே, உச்சிப்போதின் கொடுங் கிரணங்களைத் தடுத்து வீழ்த்தும் புனித சேவையோடு, கர்மயோக சாதகஞ் செய்து கொண்டிருந்த வேப்பமரத்தின்கீழே, பிறைச் சந்திரனாக வளைந்து நிற்கும் சின்னஞ் சிறுசுகட்கு மத்தியில் நின்றுகொண்டு ஜமீலா பாடிக் கொண்டிருந்தாள்.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ-மனது
உன்மத்த மாகுதடி

மகாகவி பாரதியாருக்கு இந்தப் பாட்டு ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கும். ஜமீலாவிற்கு ஆத்ம திருப்தியை மட்டுமல்ல வயிற்றுப் பிழைப்புக்கும் வழிகாட்டிற்று. ஆனால் கைப்பிடிச் சுவர் வைத்த பாடசாலைக் கட்டிடத்துள், தன்னை மறந்து, தன் சூழலை மறந்து, அசுணமாச் செவியராகி விட்டிருந்த ஆசிரியர் ஜபாருக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்ததோ என்னவோ அதற்கு மேலாக, புழுதியையும் சருகுகளையும் சுழற்றிக் கிளப்பி அல்லாட வைக்கும் புதுக் கச்சான் காற்றை போல, அந்தப் பாட்டு அவர் மனதில் அடித்தளத்தையே சுழற்றி எண்ணப் புழுதியை-இறந்த காலச் சருகுகளை-அலையவிட்டு வேடிக்கை பார்த்தது.

பாட்டின் நயத்திலும், பாடம் நடத்தும் கடமை உணர்ச்சியிலும் தன்னை மறந்து ஒன்றிவிட்ட ஜமீலா திரும்பத்திரும்ப அந்த அடிகளையே பாடிக்கொண்டு இருந்தாள். அவளைத் தொடர்ந்து 'அரிவரி'ப்பிள்ளைகளும் பாடினார்கள். வைகாசி மாதத்துப் புதுத் தளிர்பரப்பிய வேப்பமரத்தின் அடர்த்தியான கிளைகட் கூடாக, வெள்ளிப் பிரிபோன்று ஒழுகும் சூரிய கிரணங்கள், ஜமீலாவின் வட்டித்து நீண்ட முகத்தில் எறிக்கையில் இயற்கையாகவே பளிச்சென்றிருக்கும். அவள் யௌவன முகத்தில், ஓர் அமைதியான சோபை மின்வெட்டிற்று. ஜமீலா அழகிதான். அதுவும் கொண்டற் காற்றிற் குருத்துக்களை ஆட்டி விகசிக்கும் தென்னஞ்சோலை நிழல் கட்டிக் காத்து வளர்த்த ஈழநாட்டுக் கீழ்க்கரை அழகி அவள். அலையாடும் தெளிந்த குளத்தின் உள்னே ஆடி அசையும் நெடுங்கழியின் நிழலைப்போன்ற உருவம். கண்ணைப் பறிக்கும் கார்த்திகைப் பூவைப் போன்ற கொழுந்து விட்டெரியும் நெருப்புச் சுவாலையைப் போன்ற நிறம். அவள் அழகு யாரையும் மயக்காது. ஆனால் வசீகரிக்கும்.

ஆனால் அவள் அழகு ஆசிரியர் ஜபாரை வசீகரித்ததோ அல்லது மயக்கியதோ! ஆனால் மூன்று மாதங்களுக்கு முன் ஜமீலா முதன் முதலாக அந்தப் பாடசாலைக்கு ஆசிரியையாக வந்தபோது, 'நமது பெண்களும் ஆண்களோடு சரிநிகர் சமானமாக' ஆகிவிட்டார்களே என்ற பெருமிதத்தில் அவர் தன்னையே மறந்துபோனார். அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஜமீலா, வளர்ந்து வரும் முஸ்லிம் பெண்மையின் இலட்சியமாகக் பாடசாலைக்கு வருவாள். பாடம் படிப்பிப்பாள். பாட்டுப்பாடுவாள். அவசியமேற்பட்டால் தலைமை ஆசிரியர் ஜபாரோடு பேசுவாள். பின்னர் எப்படி வந்தாளோ அப்படியே போய்விடுவாள். ஆனாய் அவள் வரவு, புதிதாக வந்த மதயானையின் வரவைப்போல ஜபாரின் மனக்குளத்தைக் கலக்கியது.

இன்றைக்கும் அப்படித்தான். ஜமீலா பாடினாள். ஜபாரின் உள்ளம் கலங்கியது.

ஆனால் இந்தக் கலக்கத்துக்கு ஜமீலா மட்டுந்தான் காரணமா?

* * *

ஜபார் ஆசிரிய கலாசாலையிற் படிக்கையில் எத்தனையோ இலட்சியக் கனவுகளைக் கண்டிருக்கிறான். காதலைப்பற்றி மணித்தியாலக் கணக்கிற் பேசியிருக்கிறான். எத்தனையோ அறிஞர்களின் அடுக்குத் தொடர் வாக்கியங்கள் அவனுக்கு மனனமாகக்கூட இருந்தன. அவன் கல்லூரியைவிட்டு வெளியேறுகையில் யாராவது ஒரு பெண்ணை-அவள் ஏழையாகவே இருந்தாலும்-காதலித்துச் சீதனமில்லாமல் மணந்துகொண்டு வாழவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

ஆனால் அவன் தன் கனவுலகிலிருந்து வெளிப்பட்டுப் பிரத்தியட்ச உலகிலே ஆசிரியராக வாழத் தொடங்கிய போதுதான், தன் கனவுகளின் செயலற்ற தன்மையை விளங்கிக் கொண்டான். அப் பலவீனமான கனவுகளின் விளைவுகளை அவன் அனுபவிக்கவும் வேண்டியிருந்தது. ஆம்; அவன் புத்தகங்களிற் படித்திருந்த கதாநாயகர்களில் ஒருவனைப் போல எவளாவது ஒரு பெண்ணைக் காதலிக்க மட்டக்களப்பு முஸ்லிம் சமுதாயத்தின் சூழ்நிலை இடந்தரவில்லை. எட்டணா அட்டைப் படங்களிலே காதலனும் காதலியும் கடற்கரையிற் சந்திக்காலம். ஆனால் மட்டக்களப்புத் தென் கடற்கரைகளிலே ஜபாருக்கு அப்படியொரு காதலி கிடைக்க முடியுமா?

நாட்டுக் கவிகளில் வரும் காதலைப்போல 'வாய்க் காலில், வயலோரம்-களத்துமேட்டில்' எழுத்தறியாக் கவியரசிகளைக் காதலிக்க ஜபாரின் அந்தஸ்து அவளை விடவில்லை.

முடிபாக ஜபாரினால் எவரையுமே காதலிக்க முடியவில்லை. சாந்தமான மட்டக்களப்பு வாவியிலே தண்ணெற் றெறிக்கும் வெண்ணிலவும், மோனமும் தனிமையும் சேர்ந்து நீட்டி நிற்கும் மாலைவேளைகளும் அவன் மட்டில் எத்தனை பயனுமின்றி அவமே கழிந்தன. இதனால் 'ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே' என்று பாடிய பாரதியைத் 'தீயிற் போடு' என்று சொல்ல ஓர் புது இயக்கமே நடத்தி விடுவானோ என்ற அளவிற்கு ஜபாரின் மனம் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துவிட்டது.

ஆனாலும் அந்த முஸ்லிம் கிராமத்தின் ஒரே ஓர் ஆசிரியர் என்ற முறையில், கலியாணச் சந்தையில் ஜபாருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவன் மட்டும் விரும்பினால் அக்கிராமத்தின் 'பொலிகாளை'யாகவே இருக்கலாம்போல இருந்தது. ஆனால் அவ்வூர் மக்கள் எல்லாரும் 'கல்யாணத்திற்குப் பிறகுதான் காதல் பிறக்கிறது' என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டார்களோ என்னவோ, அவர்கள் ஜபாரைக் கல்யாணத்திற்குக் கேட்டார்களே தவிர எவருமே 'காதல் செய்வதற்கு' வழி செய்து வைக்கவில்லை.

இப்படியே இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

இப்போதெல்லாம் ஜபாரின் மனதிலே, சொல்லிலே சிறை செய்ய முடியாத மெல்லிசை போன்ற இன்ப நினைவுகள் மெல்ல மெல்லத் தேய்ந்துவிட்டன. ஆனால் அம்மென் நினைவுகளே வயது முற்றிய உடலின் வேட்கையாகத் தசையின் பிடுங்கலாய்த் திரிந்து அவனை வருத்தின. இயற்கை உணர்ச்சிக்கு வகை சொல்லவும், தன் தாய் தந்தையரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும் கடைசியாய் அவன்பாத்தும்மாவைக் கல்யாணம் செய்து கொண்டான்.

பாத்தும்மாவும் அழகிதான். ஆனால் அவள் அழகு களியாட்ட விடுதிகளில் தொங்கும் கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சமல்ல. இருண்ட அறையின் நடுவே, சேவை வைராக்கியத்தோடு அமைதியாகச் சுடர்விடும் குத்துவிளக்கின் ஒளிதான் அவள் அழகு. ஆனாலும் ஏமாறி, விரக்தியடைந்து இருளோடிப் போயிருந்த ஜபாரின் மனத்தை அது ஒளி செய்யவில்லை.

இந்த அழகில் குடும்பம் நடந்துகொண்டுதான் இருந்தது.

கெட்டழிந்து திரிபவனுக்குக் கல்யாணஞ் செய்து வைத்தால் அவன் திருந்தி விடுவான் என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் ஜபாரைப் பொறுத்த அளவில் இந்தக் கல்யாணம் அவன் மனதில் குறைந்து கிடந்த ஆசைக் கனவுகட்கு மீண்டும் இயக்கத்தைக் கொடுத்துவிட்டது. அதன் பலன்....

சை! என்ன அறியாயம்! அம்பலவாணனும் அவணொடுதான் கல்லூரியில் படித்தான். அயல் கிராமத்திற்றான் அவனும் இப்போதிருக்கிறான். அவன் எவ்வளவு குதூகலமாய்த் தன் மனைவியோடு பட்டினத்திற்குப் படம் பார்க்கப் போகின்றான்.... கடைக்குப் போகிறாள்.... ஆனால் ஜபார்...?

அவன் மனைவியோடு கூடிக்கொண்டு எங்காவது போக முடியுமா? தன் இன்ப துன்பங்களிலெல்லாம் மனைவியும் பங்குபற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் ஜபாருக்கு இருக்கலாம். தன்னைப் போலத் தன் மனைவிக்கும் எல்லா உரிமைகளும் அளிக்க அவனுக்கு மனதிருக்கலாம். ஆனால் தன் உரிமைகளைக்கூடப் பாத்தும்மா வேண்டாம் என்கிறாளே அது ஏன்?

வீட்டிலேகூட அவளோடு நாலு வார்த்தைகள் இன்பமாகப் பேச முடிகிறதா? 'மனைவி படுக்கையறையில் விபசாரி மாதிரி இருக்கவேண்டும்' என்று யாரோ ஒருவன் எழுதி வைத்திருக்கிறானே. அடடா இந்தப் பாத்தும்மா எப்போதுதான் முக்காட்டைத் திறக்கப்போகிறாளோ.....

பாத்தும்மா-ஏன் முஸ்லிம் பெண்கள் எல்லாரையுமே சித்திரவதை செய்து அந்த வாதையைப் பார்த்துப் பேய்ச் சிரிப்புச் சிரிக்க வேண்டும்போல இருந்தது ஜபாருக்கு.

தன்னைத்தானே சாந்தப்படுத்திக்கொண்டு, எப்போதாவது பாத்துமாவிடம் தன் ஆசைகளை வெளிப்படுத்தினால் அதற்கு மௌனமாகக் கண்­ர் வடிப்பதே அவள் பதிலாக இருந்தது.

ஜபாரின் மனம் அமைதியற்றுத் தவித்தது!

எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி மனம் குழம்பிக் கொண்டபோது ஆயிரங் சங்குகட்கிடையே முழங்கும் பாஞ்ச சன்யச் சங்குபோல அந்த எண்ணம் தலைதூக்கியது: 'இவளைத் தலாக் பண்ணி விட்டால் என்ன?'

இந்த நிலையில் ஜமீலா அவன் பாடசாலைக்கு உதவி ஆசிரியையாக வரவே பாத்தும்மாவைத் தலாக் (விவாகரத்து) பண்ணிவிடும் எண்ணம் அவனுள் நாளுக்கு நாள் வலுவடைந்தது. ஆம்; ஜமீலா அவனோடு எத்தனை சரளமாகப் பழகுகிறாள்! சிரிக்கச் சிரிக்க எப்படியெல்லாம் பழகுகிறாள்! சிரிக்கச் சிரிக்க எப்படியெல்லாம் பேசுகிறாள். படித்த பெண்ணல்லவா? இவள் மட்டும் என் மனைவியாகி விட்டால்... ஜமிலாவைக் கட்டியணைத்து அவள் அழகான கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல இருந்தது ஜபாருக்கு.

பாடசாலை மணியடித்தது. ஜமீலா பாட்ட முடித்தாள். அடுத்ததாக ஓய்வு நேரம்.

மனதில் ஓடி நெளிந்த எண்ணங்களை அறுத்துவிட்ட ஜபார், எதையோ தீர்மானித்தவராய் ஜமீலாவிடம் வந்து நின்றார்.

ஜமீலா மாரியாதைக்காக எழுந்து நின்றாள். "இருக்கலாமே" என்றான் ஜபார்.

"காரியமில்லை."

"நீங்கள் வந்தபின்பு எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது."

"தங்கள் வேலையின் பாரத்தைப் பகிர்ந்து கொண்டதாலிருக்கலாம்."

"நன்றாகப் பேசுகிறீர்களே. தங்களைப் போன்ற ஒருவரைத்தான் நானும் காத்துக் கொண்டிருந்தேன்."

"எதற்கு?"

"ஒன்றிற்குமில்லை. பெண்களும் நன்றாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்."

'அப்படியா? துணிந்து ஆசிரியையாகி விட்டேன், பேசாமலிருப்பது எப்படி? அப்படி இருக்கவும் நீங்கள்விட மாட்டீர்களே."

"பேசியாவது இன்பமாயிருக்கலாமல்லவா?"

"ஐயோ! அப்போது தாங்கள் இப்போது துன்பமாயிருக்கிறீர்களாக்கும்?"

"துன்பப்படாமலிருக்க முடியுமா? முஸ்லிம் பெண்கள் எல்லாருமே தங்களைப்போல் இருந்தால்..."

"ஏன்! அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?" என்று இடைமறித்துக் கேட்டாள் ஜமீலா.

ஜபாரின் சுற்றி வளைத்த பேச்சுக்களின் அர்த்தத்தை ஜமீலா வெகு நாட்களுக்கு முன்னமே விளங்கிக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் அவன் உணர்ச்சிகளைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது அவளுக்கு ஒரு ஓய்வு நேர உபயோகம். ஜமீலா இன்றைக்கும் அப்படித்தான் பேசினாள்.

"எப்படியாயினும் அவர்கள் இருக்கட்டும். ஆனால் அவர்கள் எல்லாரும் தங்களைப் போல இருந்தால் என்னைப் போன்ற பலர் 'தலாக்' பண்ணவேண்டிய அவசியமே இராது" என்றான் ஜபார் நயமாக.

"ஓ! அப்போது 'தலாக்' பண்ண முடிவு செய்து விட்டீர்களா?" என்றாள் ஜமீலா விஷமத்தோடு.

"தாங்கள் மட்டும் இஷ்டப்பட்டால் இன்றைக்கென்றாலும் சரிதான். ஏன் நம் மதமும் அதை அனுமதிக்கின்றதுதானே"

ஜமீலா அடிபட்ட பெண் புலியைப்போல ஜபாரை முறைத்துப் பார்த்தாள். அவள் உதடுகள் துடித்தன. புருவங்கள் விறைத்து நிமிர்ந்தன; பொங்கியெழுந்தன. ஆத்திரத்தையெல்லாம் சேர்த்துத் தன் முன்னால், நியாயவாதியின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் குற்றவாளியைப் போல நிற்கும் ஜபாரைப் பார்த்து "நீரும் ஒரு ஆசிரியரா? நம் சமுதாயத்தையே சீர்திருத்தும் புனிதமான ஆசிரியத் தொழிலைச் செய்யும் நீரா இப்படிப் பேசுகிறீர். பலதார மணத்தையும் விவாகரத்தையும் எத்தனையோ காரணங்களுக்காக மதம் அனுமதித்திருக்கலாம் ஆனால் உங்கள் சௌகரியத்திற்காகப் பழைய சட்டையைக் கழற்றி எறிவதுபோல, நினைத்தவுடனேயே ஒரு பெண்ணைத் தள்ளிவைக்க உன் மனச்சாட்சி இடந்தருகிறதா? சரளமாகப் பேசினால் உடனே நப்பாசை கொள்ளும் உம்மைப் போன்றவர்கள் நம் சமூகத்தில் இருக்கும்வரை முஸ்லிம் பெண்கள் வாய்மூடி ஊமைகளாகவே இருந்து விடட்டும். இனிமேற் பாடசாலை விஷயத்தைத் தவிர வேறு எதையுமே என்னிடம் பேச வேண்டாம். போம், போம்" என்று பொரிந்து தள்ளினாள்.

மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது வகுப்பறை. சூடுகண்ட பூனையாய் நழுவினார் ஜபார்.

இப்போது ஜபார் பாத்தும்மாவைத் தலாக் பண்ணி விட்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அதன்பிறகு அவர் ஜமீலாவிடம் நெருங்கவில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.

ஈழகேசரி வெள்ளி விழா மலர் '56

--------------------------------------------------

அபேதவாதி

மாதா கோயிலின் கோபுர மணி 'க­ர் க­ர்' என்று ஒலித்தது. கோயிலுக்கு வெளியே பட்டாஸ் வெடிகள் முழங்கின. பெற்றோர் ஆனந்தக் கண்­ர் சொரிந்தனர். ஏமாந்த சிலரின் நெடுமூச்சு, பின்பனி காலத்துத் தைக்குளிரையும் வெப்பமாக்கிற்று. அலங்கரிக்கப்பட்ட பலிபீடத்திலே, மெழுகுவர்த்திகள் தம் சடலத்தை உருக்கித் தம்மைத் தியாகம் பண்ணிக் கொண்டு ஒளியை உமிழ்ந்தன. இத்தனை நிகழ்ச்சிகளுக்கிடையே மதகுருவானவர், செல்லன் என்ற லூயிஸ’ன் கையைப் புதுமணப் பெண்ணின் கையோடு சேர்த்துப் பொருத்தி வைத்தார். கல்யாணச் சடங்கு முடிந்துவிட்டது.

கண்ணாற் கண்டு இன்புற வேண்டிய செல்லனின் எதிர்கால வாழ்விற்காகக் கண்காணாத தெய்வத்தைச் சில நிமிடங்கள் மௌனமாகப் பிரார்த்தித்த பின்னர், நான் என் சிந்தனைகளை வழக்கம்போல மேயவிட்டேன்.

பூசை நடந்து கொண்டிருந்தது.

எங்கும் கல்யாண அவசரம் செல்லனின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வைத்த பொருளை எடுக்கப் போகிறவர்களைப்போல வெளியே போவதும் உள்ளே வருவதும்...

அவர்கள் நடையிலே ஒரு அவசரம்... வேகம்... ஆனால் அந்த வேகத்தையும் மீறிக்கொண்டு அத்தனைபேர் முகங்களிலும் ஒரு திருப்தி! அவர்கள் இந்தக் கல்யாணத்திற்காக ஆயிரம் பொய்கள் சொல்லியிருப்பினும், அத்தனை பொய்களின் பாவத்தையும் மறைக்கக் கூடிய ஒரு மனநிறைவு.

அவர்களின் பொலிவான முகங்களிலே மனித வாழ்க்கையின் குறிக்கோளே கல்யாணந்தான் என்று எழுதி ஒட்டியிருப்பது போலத் தோன்றிற்று. இலட்சிய பூர்த்தியின் வெற்றியில், அவர்கள் வெறிபிடித்தவர்கள் போலவே போனார்கள்... வந்தார்கள்..

கோயிலின் தலைவாசல் தூணிலே சாய்ந்து நின்றபடி நான் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தேன்.

மோட்டாரின் முன்பக்கக் கண்ணாடியிற் பொருத்தப்பட்டிருக்கும் 'நீரழிப்பான் தண்டை'ப்போல, கிழக்கில் இளங்கதிர்கள் சூழ இருந்த பனிமூட்டத்தைத் துடைத்துக் கொண்டு வந்தன. சந்தனமுங் குங்குமமுங் கலந்த இளவெளில், கோயில் வெளி முற்றத்தில் எறிக்கையில், 'பொருத்தமான கல்யாண நேரந்தான்' என்று எனக்குள்ளே எண்ணிக் கொண்டேன்.

திடீரென்று செல்லனின் சிற்றப்பா என் முன்னால் வந்து நின்றார். திடகாத்திரத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் மெல்லிய 'சில்க்' சட்டை, பெத்தாபுரம் பட்டு வேஷ்டி, தோளிலே சால்வை, முகத்திலே ஒரு பெருமிதம். தீட்சண்யமான அவர் கண்கள் வெற்றியின் வெறியை உமிழ்ந்து கொண்டிருக்கையில் அவைகளிலே ஒரு கலக்கம்...

எதையோ சொல்ல வேண்டும் என்று அவர் உதடுகள் துடிப்பதை நான் கண்டு கொண்டேன். நான் ஏதாவது கேட்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் நானோ சாய்ந்தபடியே மரம்போல நின்றேன்.

"ஒரு வழியா முடிஞ்சுது மாஸ்டர்" என்றார் அவர். கண்கள் நீரைச் சொட்டின. ஆனந்தக் கண்­ர்!

"என்ன முடிஞ்சுது" என்று கேட்டு, அவரைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நான் நினைத்தபோது எனக்கே சிரிப்பு வந்தது. அவரின் செயற்கரிய செயலைப் பாராட்டு முகமாகத்தான் நான் புன்முறுவல் செய்தேன் என்று அந்த அப்பாவி மனிதர் எண்ணியிருக்க வேண்டும்! அந்த நேரத்தில், அவரின் இளைய மகள் வந்து அவரை அழையாதிருந்தால், அம்மனிதர் தன் 'வீரப்பிரதாபங்களை' என்னிடம் அடுக்கியே இருப்பார்!

"வயது வந்த ஒவ்வொருவரையும், கல்யாணஞ் செய்து கொள்ளும்படி ஏன் ஒவ்வொரு பெரியவரும் நெருக்குகிறார்கள்? பெற்றோருக்குத் தம் மக்களின் கல்யாணமே வாழ்க்கையின் முக்கியப் பிரச்சினையாகி விட்டதே, அது ஏன்?

கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட குழந்தையாய்ச் சனசந்தடியிலிருந்து ஒதுங்கி, நானே வளர்த்து விட்ட கேள்விக் காட்டிற் சிக்கிக்கொண்டு, வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன் நான்.

உள்ளே பூசையும் முடிந்துவிட்டது. தம்பதிகள் இருவரும், சுவாமியாரின் பதிவுப் புத்தகத்திற்கூடக் கைச்சாத்திட்டாய் விட்டது. இல்லாவிட்டால் ஊர்வலம் புறப்பட்டிருக்குமா?

2

பொருள் விளங்காத இலத்தீன் பெயர்களைத் தரித்துக் கொண்டிருந்தாலும், கல்யாணத்திற் கென்று 'வெடிங்சூட்' தைத்துக் கொண்டாலும், பெண்ணின் 'வேல்' என்ற உடைவாலைத் தரையில் விழாதபடி பத்துப் பன்னிரண்டு சிறுமிகள் தூக்கிக் கொண்டிருப்பினும், அக்கிராமத்தவர்கள் இன்னமும் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பதை ஊர்வலம் எடுத்துக் காட்டிற்று. தெருவின் இருகரையும் தென்னோலை, மாவிலைத் தோரணங்கள், கோயிலின் தெருவாயிலேயே குலைவாழைகளை நாட்டி வைத்திருந்தார்கள்.

தெருவாயிலைக் கடந்து ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஊர்வலத்தின் முன்னால் நாதஸ்வரக்காரன் நாட்டைராக ஆலாபனையோடு நடந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால், ஊர்வலம் இரையை விழுங்கிய மலைப்பாம்பைப்போல மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. ஊர்வலத்தின் கடைக்கோடியில் நான் மௌனமாக நடந்து கொண்டிருந்தேன்.

வடக்குத் தெற்காக இரண்டு பர்லாங் தூரத்திற்கு, 'மெயின்றோட்' என்ற விலாசத்தைப் பெருமையாகத் தாங்கிக்கொண்டு, மேடும் பள்ளமுமாக ஓடும் அக்கிராமத்து கிரவல் ரோட்டின், இருபக்கமும் நெருங்கி நிரைத்திருக்கும், ஓட்டு வீடோ, ஓலை வீடோ எதுவாக இருந்தாலும், செல்லனுக்கு ஏதோ ஒரு வகையில் உறவாகத்தான் இருக்கும்! செல்லன் நாற்பதைத் தாண்டிய பிறகு கல்யாணஞ் செய்கிறான் என்றால், ஊர்-அதுவும் கிராமம்-சும்மா இருக்குமா? குசுகுசுப் பேச்சுக்களுக்கு மட்டுமல்ல உபசாரத்திற்கும் குறைச்சலில்லைதான்!

ஒவ்வொரு வீட்டுப் படையிலும் குத்து விளக்குகள்; பூரண கும்பங்கள். ஒவ்வொரு படலையிலும் ஊர்வலம் தரிக்க வேண்டியிருந்தது. தரித்த இடத்தில் புதுத் தம்பதிகளுக்கு ஆராத்தி சற்றித் திலகமிட்டு பின் எத்தனையோ அர்த்தமுள்ளதும் அர்த்தமற்றதுமான சடங்குகள்.

இப்படியே நடந்தால் தெருவில் அந்தத்திலிருக்கும் மணப்பந்தலை அடையப் பன்னிரண்டு மணியாகி விடும் என்று எண்ணமிடுகையில் முதுகுத்தோலை உரித்தெடுப்பது போலக் காலை வெயில் சுள்ளென்றடித்தது. வியர்த்துக் கொட்டும் முகத்தை நான் சால்வையினால் துடைத்துக்கொண்டே நடந்தேன்.

மறுபடியும் நான்காம் படலையில் ஊர்வலம் நின்றது. ஆராத்திக்கு முகங்கொடுத்து நிற்கும் புதுத்தம்பதிகளை அர்த்தாகார வடிவில் வளைத்து, நெரிந்து புழுங்கிக் கொண்டிருக்கும் சனக் கூட்டத்தைக், கௌரவப்படையினர் வியூகத்தைக் களைத்துக் கொண்டு ஊடுருவிச்சென்ற அபிமன்யுவைப்போலத் துளைத்துக்கொண்டு நான் முன்னேறினேன். எனக்கு ஒரு சபலம். செல்லன் நாற்பதாண்டுகள் கல்லுப்பிள்ளையாரைப்போல இருந்துவிட்டு, அவனை அகாரணமாக நம்பிக்கொண்டிருந்த உள்ளூர்ப் பெண்கள் இரண்டொருவரை ஏமாற வைத்துவிட்டு எங்கேயோ தூரந் தொலைவிலிருந்து ஒருத்தியைத் திடீரென்று கொண்டு வந்து இறக்கியிருக்கிறாள். அந்த பெண்ணிடம் என்னத்தைக் கண்டு மயங்கியிருப்பான் என்பதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.

பிடித்துக்கொண்டு வரப்பட்ட காட்டு யானையைப் பார்க்க விரும்பும் பட்டினச் சிறுவனின் வேட்கையோடு, நான் கூட்டத்தை இடித்து நகர்ந்து வழிவகுத்துக் கொண்டு முன்னேறினேன். எப்படியும் முன்னணிக்கு வர முடியாமல் மூன்று தலைகளுக்கு மேலால் எட்டிப் பார்த்த போது...

மணப் பெண்ணை, அவள் முகத்தைப் பார்த்தபோது எனக்கேற்பட்ட உணர்ச்சி வெறுப்பா, ஏமாற்றமா, துக்கமா? எல்லாமே கலந்த ஓர் உணர்ச்சி. மனங்குன்றிப் போய்த் திருப்பிய முகத்தை மறுபடியும் அப்பெண்ணிற் பதித்து....

மணப்பெண்... அவள் முகம்... நிறம்... நடை...

அதமஜாதிப் பெண்ணுக்குரிய அத்தனை இலட்சணங்களும் உருப்பெற்றதாய்...

தடித்த உதடுகள், பரந்த முகம், முன் விரிந்த மூக்கு பெருத்த இடை, யானை நடை, கறுப்பு நிறம்...

ஐயோ! செல்லனுக்கு ஏன் இப்படிப் புத்தி போயிற்று? கூட்டத்தில் வாய்விட்டுக் குழறிவிடுவேனோ என்று எனக்கே பயமாக இருந்தது. எனினும் என் மனக் குமுறல்களை ஒருவாறு அடக்கிக்கொண்டு நடந்தேன்.

செல்லன் அழகன். மேலும் புருஷ லட்சணமான உத்தியோகமும் அவனுக்கு உண்டு. கிராமத்தில் எத்தனையோ பெண்கள்-அவர்கள் நிச்சயமாக அவன் மனைவியை விட அழகிகள்-அவனுக்காகப் போட்டி போட்டிருக்கிறார்கள். இன்னமும் சிலர் நேற்றுவரை அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியெல்லாம் இருக்க ஏன் இப்படி ஒருத்தியை...

"மாஸ்ரர்! நல்ல சீதனங் கிடைச்சிருக்கும்போல இருக்கு" என்றார் பக்கத்தில் வந்த ஒருவர். அவரும் என்னைப் போன்ற மனநிலையில் இருந்தாரோ!

"சச்சா, அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் விதி தம்பி விதி"என்று வெறுப்போடும் துக்கத்தோடும் பதில் சொன்னார் இன்னொரு முதியவர்.

"சீதனங்கூட இல்லாமல் இந்தப் பெண்ணை... முதலிற் கேட்டவர் மேலே தொடாமற் பல்கலைக் கடித்துக் கொண்டபோது நாதஸ்வர இசை நின்றது. ஊர்வலமும் நின்றது. மறுபடியும் ஆலத்தி... ஆலத்தி...

ஆலத்தியின் தீச்சுடர் என் நெஞ்சைச் சுட்டுப் பொசுக்குவதுபோல நான் துடித்தேன்.

3

ஊர்வலம் புறப்பட்டபோது, நாதஸ்வரக்காரன், 'நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி' என்று முழக்கினான்.

எனக்குச் சிரிப்பு வந்தது நெற்றிக் கண் இருந்தால் அம் மணப் பெண்ணையும் நாதஸ்வரக்காரனையும் பொசுக்கியிருப்பேன். இல்லாததினால் சிந்தனைதான் நீண்டது.

'அவளுக்கென்ன? கண் நிறைந்த கணவன் அவளுக்குக் கிடைத்து விட்டான்? ஆயிரம் என்ன? ஆயிர லட்சங்கள் கூடச் செல்லனைப் பற்றிய அளவில் அவளுக்குக் குறைவு தான்!' முன்பின் தெரியாத அந்த அபலைப் பெண்ணை என் மனதாரத் திட்டிக்கொண்டு நான் நடந்தேன்.

செல்லனின் சிற்றப்பா என் அருகாமையில் இப்போது வந்தார். என்னிடம் ஏதாவது பேசாவிட்டால் அவருக்குத் தலைவெடித்து விடுமோ என்னவோ? அவர் உற்சாகத்தோடு பேசினார். "எல்லாத்துக்கும் காலமும் நேரமும் வரவேணும் மாஸ்ரர்."

"இம்" என்றேன் நான் வெறுப்போடு. கல்யாண அவசரத்தில் அவர் கூட்டத்தில் மறைந்து விட்டார்.

ஆனால் அவர் சொன்ன 'காலமும் நேரமும்' என் மனத்தைக் கவ்விக்கொண்டு பூவைக் குடையும் புழுவாய் அரித்தது.

அந்தக் காலமும் நேரமும்... இருபது வருடங்களாக வந்துவிடாத அந்த 'காலமும் நேரமும்' இப்போது இத்தனை கோரத்திலா வரவேண்டும்? அதற்கு ஏதாவது அடிப்படைக் காரணம்....?

நான் யோசித்துக்கொண்டே நடக்கையில் என் அருகாமையில் 'றெக்ஸ்' வந்து கொண்டிருந்தான். அவன் செல்லனின் அலுவலக நண்பன். செல்லனைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். நான் அவனை விசாரித்தேன். அவன் சொன்னான்.

"செல்லனுக்குக் கொஞ்ச நாட்களாகவே மனம் சரியில்லை. யாரையோ மனதில் எண்ணிக்கொண்டு, மற்றப் பெண்களையெல்லாந் தட்டிக் கழித்தான். அவன் நினைத்திருந்த பெண்ணும், மற்றவர்களும் கல்யாணச் சந்தையில் இவனை முந்திக்கொண்டதும் இனிமேல் தனக்குக் கல்யாணமே ஆகாதோ என்று பயந்து விட்டான். வயதும் போய் விட்டதல்லவா? அந்தப் பயத்தில் எப்படிப் பட்ட பெண்ணையாகிலும்..."

அதற்கு மேல் றெக்ஸ் பேசியது என் காதில் விழவில்லை. எனக்கு வேண்டியது அவ்வளவுதான் என்பதினாலோ...!

என் மனம் திரும்பவும் அரிக்கத் தொடங்கிற்று.

"ஆம், கல்யாணம் செல்லனுக்கு இன்றியமையாததாகி விட்டதா? அழகையும், மென்மையையும் விரும்பும் இளவதின் மெல்லிய நினைவான காதல் என்ற சொப்பனாவஸ்தை, அவனுள் திரிந்து உடலின் வேட்கையாகத் தசையின் பிடுங்கலாக மாறிவிட்டதா? அல்லது எவளோ ஒருத்தியிடமிருந்து பெறும் உடலின்பந்தான் கல்யாணத்தின் முக்கிய நோக்கம் என்று அவன் எண்ணிக் கொண்டானா? அந்த உடலின்பத்தை அழகற்றவளிடம் இருந்தும் பெறலாம் என்றெண்ணும் அபேதவாதியாகி விட்டனா?

நான் குழம்பிக் கொண்டே ஊர்வலத்தோடு நடந்தேன். நாதஸ்வரக்காரன் ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்து உதிரப் புனலிலே உண்டை சேர்த்து' என்ற சித்தர் பாடலை உற்சாகத்தோடு இசைத்துக் கொண்டிருந்தான்.

4

இரண்டு மணித் தியாலங்களுக்கு மேல் ஊர்வலம் முடிந்துவிட்டது. என் மனமும் ஒரு அளவிற்குத் தெளிவு பெற்றுவிட்டது.

தம்பதிகள் மணமேடையில் அமர்ந்தபோது, காதல் என்ற முலாம் பூசிய உறையைக் கிழித்தெறிந்த அபேதவாதியான என் நண்பனை, சீதனம் என்ற ஊன்று கோலை நம்பியிராத இலட்சியவாதியான செல்லனை என் மனமார வாழ்த்தினேன்.

'தினகரன்' தமிழ்விழா ஆண்டு மலர்'65

-------------------------------------------------

கடலின் அக்கரை போனோரே....

வீதியைக் குறுக்காகத் தாண்டி, குச்சொழுங்கையில் இறங்கி, முடுக்கிலிருந்த சின்னஞ்சிறு கண்ணகியம்மான் கோயிலைச் செங்கோணமாய் வளைந்து, மீண்டும் குச்சொழுக்கையில் இறங்கிக் கடற்கரையை அடைந்து, 'கடற்கரைப் பிள்ளையார் கோயிற் சுவர் விழுத்தும் நிழலில் அமர்ந்தேன். என்னுடன் வந்த பேரக் குழந்தைகள் கடற்கரை மணலில் இறங்கி விளையாடத் தொடங்கினார்கள். இனி அவர்களின் தொந்தரவு சொற்ப நேரத்துக்கு இல்லை.

பட்டினத்தில் முற்றமேயில்லாத வீடுகளில் முடங்கிக் கிடக்கும் எனக்கு, அந்தக் கடற்கரை சாயந்திர வேலைகளில் நிம்மதியை அளித்தது. நான் இப்போது கடற்கரை மணலில் வெறுமனே அமர்ந்திருக்கவில்லை. வீற்றிருக்கிறேன்; ஒரு அரசனைப் போல.

கடற்கரை மணலில் ஓடி விளையாடும் சிறுவர்களும் கரையில் இழுத்து வைக்கப்பட்டிருந்த தோணிகளின் பக்கலில் அமர்ந்து கொண்டு தம் வலைகளைப் பழுதுபார்க்கும் மீனவர்களும் என் பரிவாரங்கள்.

அந்திவானத்தில் செக்கர் ஒளி கருநீலக் கடலில் படிந்து தகதகத்தது. கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எப்போதுமே எனக்கு ஒரு அலாதியான விருப்பு. தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் கடலோடிகள் என்பதாலா?

கடற்கரையில் வீற்றிருக்கும் என் மனதில் எத்தனையோ அகநானூற்றுக் காட்சிகள் விரிகின்றன. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்தான் கடலோர மக்களின் வாழ்க்கையின் பொருள் என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.

கிழக்கே மலையுச்சியிற் பூசை புனஸ்காரங்களின்றித் தோற்றமளிக்கும் கோணேசர் ஆலயமும், அம்மலைக் குன்று தெற்காய்த் திரும்பிக் கரையைத் தொட, கடற்கரை மணல் மேற்காகப் பரந்து சென்று இரண்டு மைல்களுக்கப்பால் மீண்டும் வடக்கு நோக்கித் கற்பாராய்க் கடலிற் பரந்து முளைத்து நிற்கம் சல்லிக் குன்றுகளுக்குமிடையே குடாவாய்க் கிடக்கும் அந்தக் கடற்கரையில், எரிந்த வீடுகள், கூரையற்ற குட்டிச் சுவர்கள், சிதிலமாகி விட்ட ஓலைக் குடிசைகள், கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணிகள், விசைப் படகுகள். குடாக்கடலிலே நங்கூரமிட்டு நிற்கம் இயந்திரப் படகுகள் எல்லாவற்றிலுமே ஒரு சோகம் தொக்கி நிற்பதாக எனக்குப் படுகிறது.

ஆனாலும் வாழவேண்டும் என்ற ஆசையும் வாழுவேன் என்ற மனத்தெம்பும்...

சற்றுத் தொலைவிலே பிரெடெரிக் கோட்டைப் பக்கமாகக் கரைவலை "வளைக்க" ஆயத்தங்கள் நடக்கின்றன.

தெப்பக் கட்டைகள் கட்டிய வலையையும் கம்பான் கயிறுகளையும் வள்ளத்தில் ஏற்றி, முன் அணியத்தில் கற்பூரம் கொளுத்திச் சாம்பிராணி காட்டித் தேங்காய் உடைத்து...

பூசை நடக்கிறது.

கடற்கரை மணலில் வீற்றிருந்த நான் என்னை அறியாமலே கரங்கூப்பிப் பூசையிற் கலந்து கொள்கிறேன்.

"பிள்ளையாரே!" என்ற ஏகோபித்த குரலோடு வள்ளம் கடலில் தள்ளப்படுகின்றது. நானும் எழுந்து சென்று வள்ளத்தைத் தள்ளுபவர்களோடு சேர்ந்து தள்ளுகிறேன்.

வள்ளம் கடலில் இறங்கியதும் கம்பான் கயிற்றைப் பிடித்தபடி சிலர் கரையில் நிற்கிறார்கள்.

துடுப்பு வலித்து வள்ளத்தைச் செலுத்தி நீண்ட கம்பான கயிறுகளையும் பின்னர் வலையையும் கடலில் இறக்கிக் கரையிலிருந்து ஒரு பெர்லாங் தூரம் சென்று அரைவட்டமாக வளைந்து கரையை அடைந்ததும் வள்ளத்திலிருந்து இறங்கியவர்களும், அடுத்த பக்கத்தில் நின்றவர்களுமாகக் கம்பான் கயிறுகளைப் பிடித்து இழுக்கிறார்கள்.

கரைவலை கரையை அடைந்து வலையையும் கம்பான் கயிறுகளையும் மீண்டும் சுருட்டிப் பத்திரப்படுத்தி, மீன்களைத் தெரிவு செய்து முடிய இருட்டிவிடும். நான் மீண்டும் என் யதாஸ்தானமான கோயிலடிக்கு வருகிறேன். கோயிலடியில் நான் வீற்றிருந்த இடத்திற்க அருகாமையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள்.

நான் நின்ற நிலையிலேயே கடற்கரையைப் பார்க்கிறேன். என் பேரக் குழந்தைகள் கடற்கரையில் மண்தோண்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கெட்டிய தொலைவில்தான் நிற்கிறார்கள் என்ற திருப்தியோடு நான் மூதாட்டியின் பக்கலில் அமர்ந்து கொள்கிறேன்.

பொழுது நன்றாகச் சாய்ந்து விட்டதால், கடற்கரை களைகட்டிவிட்டது. வீடுகளிலும், குடிசைகளிலும் அடைபட்டுக் கிடந்த பெண்களும் கடற்கரை ஓரத்தே தம் குடிசைகளுக்கு முன்னால் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

நான் என் பக்கத்தில் அமர்ந்திருந்த மூதாட்டியைக் கவனித்தேன். உடல் வற்றித் தோல் சுருங்கி நின்ற அம்மூதாட்டி தன் நெற்றிப் பொட்டிற கைவைத்துத் தூரத்தே கடலையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். ரவிக்கை அணியாத அவளது மார்பை, உடுத்தியிருந்த சிகப்புச் சேலையால் போர்த்திருந்தாள். கழுத்திலே மாலை மஞ்சள் வெய்யிலிற் தகதகவென்று ஒளி காலிக் கொண்டிருக்கும் இரட்டை வடத் தங்கச் சங்கிலி. கையிற் பட்டணக் காப்பு இரண்டு சோடி. காதை இழுத்துக்கொண்டு பென்னம் பெரிய தென்பாண்டி நாட்டுப் பாம்படம் தொங்கிக் கொண்டிருந்தது.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் இத்தகைய மூதாட்டிகளைத் திருக்கோணமலை மீன் சந்தையிற் கண்டிருக்கிறேன். இப்போது காலம் மாறிவிட்டது. அங்கே அவர்களைக் காணக்கூடியதாயில்லை. பருத்தித் துறைச்சந்தையில் காணலாம் போலும்.

அவள் நெற்றிப் பொட்டில் கைவைத்தபடி வடக்கே நீலக் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

அவள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? யாருக்காக ஏங்குகிறாள்?

கடலில் இப்போது கீரி மீனும், சூடை மீனும்தான் 'சீஸன்' அம்மீன்களைப் பிடிக்க அதிகாலையில் கடலுக்குச் செல்பவர்கள் காலையில் எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் திரும்பி விடுவார்கள்.

ஆனால் இந்த மூதாட்டி இந்த அந்திநேரத்தில் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? யாருக்காக ஏங்குகிறாள்?

சிலவேளை நேற்றுக் கடலுக்குச் சென்ற அவள் மகன் காலையில் மீண்டு கரைக்கு வரவில்லையோ? என்று நான் எண்ணினேன்.

"இருக்காது. அப்படி எவரும் காணாமற் போனதாகக் கதை இல்லையே" என்று என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்.

ஆனாலும் இம்மூதாட்டி யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? யாருக்காக ஏங்குகிறாள்?

நான் அம்மூதாட்டியைக் கூர்ந்து நோக்கினேன். நீலக் கடலையே பார்த்துக் கொண்டிருந்த அவள் அழுகிறாள். சுருக்கம் விழுந்த அவள் கன்னங்களில் கண்­ர் வழிந்து ஓடுகிறது.

கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே
எதிர்மலர் புரை உன்கண் எவ்வநீர் உகுத்தனவே
என்ற சிலப்பதிகார வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

சே! பொருத்தமில்லாத வரிகள் பிய்த்துக்கொண்டு வந்து விட்டன. நிச்சயமாக இம்மூதாட்டி மாலைக் காலத்தே விரகதாபத்தால் கண்­ர் உகுத்திருக்க மாட்டாள். அப்படியானால் இவள் கண்­ர் வடிக்கக் காரணம் என்ன?

நான் அம்மூதாட்டியை இன்னம் சற்று நெருங்கி, "அம்மா! ஏன் அழுகிறாய்? கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே. யாரைப் பார்க்கிறீர்கள்? யாரும் இப்போது வர மாட்டார்களே" என்று ஆதரத்துடன் கேட்டேன்.

அவள் என் பக்கம் சட்டென்று திரும்பி "ஏண்டா தம்பி வராயினம்? ஒரு மாசத்துக்கு முன்னால் இப்படி அந்திபட்ட நேரத்தில்தான் மாரிமுத்தன் குடும்பத்தோட வந்தான்" என்றாள் சற்று ஆத்திரத்தோடு.

"குடும்பத்தோடயா? எல்லாருமா மீன்பிடிக்கப் போனாங்க?"

"என்னடா தம்பி கேலியா பண்றா? பெண்டுகளும் மீன் பிடிக்கப் போறதே?"

"அப்படியெண்டா அவங்க ஏன் கடலிலே போனாங்க?"

"என்னடா மகனே ஒண்ணும் அறியாதவன் மாதிரிக் கேட்கிறாயே. இந்தக் கலவரத்தில் ஆண், பெண், குழந்தை குஞ்சு எல்லாருந்தான் ஓடினாங்க. நாலு பெட்டைகளுக்கு பிறகு நான் பெத்த ஒரே ஒரு ஆண் குஞ்சு. அவனும் ஓடிற்றான்.

அந்தத் தாய் தன் கண்­ரை தன் முந்தானையால் துடைத்துக் கொண்டாள். நான் மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனித்தேன்.

"அண்டைக்கு ஆனி பிறக்க இன்னமும் ரெண்டு நாள்தான். எல்லா இடத்திலயும் வெடிச் சத்தம் கேட்டது. கந்தசாமி கோயிலடியிலயும், சிவன் கோயிலடியிலயும் வீடெல்லாம் எரியுது. எண்டு சொல்லிச் சனமெல்லாம் ஓடிச்சு. அப்பதான் என்ர மகன், "நீயும் வாம்மா, ஓடித் தப்புவம்" என்று என்னையும் கூப்பிட்டான்."

"எங்க போகக் கூப்பிட்டான்?"

"வேறெங்க போறது. நாங்க எல்லாம் பட்டண்வர் தானே. எங்க இனசனம் எல்லாம் இன்னமும் நாகபட்டணத்தில் இருக்கிறாங்க. அங்க போகத்தான் மகன் கூப்பிட்டான். ஆனா எனக்கு நான் பிறந்த இந்தப் பத்தாம் நம்பர் மண்ணையும் இந்த பிள்ளையாரையும் விட்டிற்றுப் போக விருப்பமில்ல. ஆனா என்ற மகனையும் இங்க வைச்சிருக்க விரும்பல்ல. நான்தான் அவனை வழியனுப்பினேன். 'போட்'டத் தள்ளிக் - கூட வந்தவங்க ஐஞ்சாறு பேரையும் எத்திக் கொண்டு கடலிலே போனான்."

"அப்ப கலவரம் நடக்கக்குள்ள நீங்க இனிய தனியாவா இருந்தீங்க?"

"தனி யெண்டில்லாடா பொடியா. என்னைப் போல ஏழெட்டுப் கிழடு கட்டைகள், இந்தப் பிள்ளையார் கோயிலடியில் அவர்ர நிழலிலதான் தஞ்சமடைஞ்சம். பக்கத்தில் வீடெல்லாம் எரிபட்டுது. உடைபட்டுது. ஆனாப் பிள்ளையார் எங்கட உயிருக்கு ஒண்ணும் நேரவிடவில்லை. மூணு நாலு நாளைக்கு பிறகு போன சனங்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் திரும்பிச்சுது?"

"அப்ப மகன் நாகப்பட்டணம் போய் விசளம் அனுப்பினானா அம்மா?"

"பருத்தித் துறைக்குப் போயிற்றன் என்று விசனம் அனுப்பினான். அங்குக் கொஞ்சக் காலம் தங்கிக் கலவரம் முத்தினால் வாடை "பேர்றதுக் கிடையில" நாகப்பட்டணம் போவேன் என்று செய்தி சொல்லி அனுப்பினான்."

"இந்தியாவிலிருந்து ஏதும் வந்ததா?"

'அங்கிருந்துதான் ஒண்ணும் வரல்ல. ஆனா என்ர மகன் தைரியசாலி. எந்தக் காத்துக்கையும் கடலுக்கையும் தேர் மாதிரி 'போட்'டை ஓட்டுவான். அவன் அங்கப்போய்ச் சேர்ந்திருப்பான். இப்ப போனவங்க திரும்பி வருவாங்கதானே அவனும் திரும்பி வருவான் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறேன்."

"வந்த மாரிமுத்தர் குடும்பம் மகனைப் பற்றி ஏதும் சொல்லவில்லையா?"

"அவங்க நாகப்பட்டணம் போகல்லியாம். ஆனா என்ர மகன் நாகப்பட்டணந்தான் போயிருப்பான். அங்கதானே எங்களுக்கு இனசனம் இருக்கு. எண்பத்தெட்டிலயும் அவன் அங்கதான் போய் வந்தவன். இப்பவும் இண்டைக்கு நாளைக்கு வந்திடுவான்."

"ஆம் அம்மா. இப்ப போனவங்க எல்லாம் திரும்பிக் கொண்டிருக்காங்க. உங்கட மகனும் கட்டாயம் வந்திருவான்."

"ஓமடா மோனை கட்டாயம் வருவான். அவன் வந்ததானே எனக்குக் கொள்ளி வைக்க வேணும். அவன் வந்தாத் தொழில் செய்ய இயத்துக்கள் வாங்க வேணும் என்றுதான் இந்தக் காப்புக்களையும் சங்கிலியையும் பத்திரப்படுத்தி வைச்சிருக்கன். இப்பதையப் பவுன்விலைக்கு எழுபத்தஞ்சாயிரம் பெறும்!"

"கவலைப்படாதேயுங்க ஆச்சி. மகன் சுகமாக வந்து சேருவான்" நான் அம்மூதாட்டிக்கு ஆறுதல் சொன்னேன்.

"எழுபத்தையாயிரத்த என்ர மகன் ஒரு நாளில்கூட உழைப்பான் ஒரு குடியா, சூதா ஒண்ணுமில்ல. அவருஞ் செத்தப்பிறகு தன்னந்தனியனா உழைச்சி நாலு அக்காமாரையும் கட்டிக் கொடுத்தான். அந்தச் செல்ல மகனைப் பாக்காம ஒரே கவலையாயிருக்கு. தின்ர சோறும் உடலில் ஒட்டுதில்ல" அந்தத் தாய் மீண்டும் அழுதாள்.

சிலப்பதிகாரப் பாடலின் மீதியடிகள் என் நினைவுக்கு வந்தன... 'புதுமதி புரை முகத்தாய் போனார் நாட்டுளதாங்கொல்-மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம்மருள் மாலை.'

தோழி! அவர் போயிருக்கும் நாட்டிலும் இந்த மாலைக் காலம் உளதாமோ? என்று கேட்டாளாம் தலைவி. ஆம், தம் தாம் தந்தையரை இன பந்துக்களை சுற்றத்தவர்களை பிரிந்து அக்கரைச் சீமையில் அகதிகளாக வாழ்பவர்களும் இத்தாயைப் போல தம் அன்புக்குரியவர்களை நினைத்து ஏங்குகிறீர்களா? எப்போது ஊருக்கு வருவோம் என்று காத்திருக்கிறார்களா?

கரைவலை கரைக்கு வந்துவிட்டது. இருள் குமைந்து கொண்டு வரத் தெருவிளக்குகள் எரிந்தன. நீராடிய காகங்கள் கூடு நோக்கிப் பறந்தன.

நானும் அம்மூதாட்டியை மகனுக்காகக் காத்திருக்க விட்டு விட்டு என் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குச்சொழுங்கை வழியே நடந்து வருகையில் "மாஸ்ரர்" என்ற அழைப்பைக் கேட்டுத் திரும்பினேன்.

அழைத்த தாமோதரம் மாஸ்ரர் சொன்னார். "நீங்க கதைச்சிக்கொண்டிருந்தது என்ர பெரியம்மாவோடதான் பாவம் அந்த மனுசிக்கு நடந்தது தெரியாது. நாங்களும் சொல்லவில்லை" "என்ன? என்ன நடந்தது? என்று நான் அதிர்ந்து போய்க் கேட்டேன்.

"தம்பி; அவன்தான் எங்கட பெரியம்மாட மகன் ராமதாஸ், இங்கிருந்து போய்ப் பருத்தித்துறையில் நின்றிருக்கிறான், அங்கிருந்து அக்கரைக்குச் செல்பவர்களை அடிக்கடி ஏற்றிக்கொண்டு சென்று வந்திருக்கிறான். கடைசியாய்ப் போன தீபாவளியையொட்டிக்கரைக்குப் போகக்குள்ள வாடைக் கடலிலயும் காத்திலயும் அகப்பட்டு அவன்ரை 'போட்' கடலில் மூழ்கிப் போயிற்றாம் என்று கதைக்கிறாங்க. ஏதும் திட்டமாய்த் தெரியாது. நாங்களும் பெரியம்மாக்கிட்ட ஏதும் சொல்லல. மனுசியும் மகன் வருவான் என்று ஒவ்வொரு நாளும் கடற்கரையில காத்துக் கொண்டிருக்கா..."

"உங்களுக்கும் திட்டமாய்த் தெரியாதுதானே. நானும் என்னவோ உங்கள் பெரியம்மாவைப் போல ராமதாஸ் திரும்பிவருவான் என்றே நம்புகிறேன்" என்று கூறிவிட்டு வழி நடந்தேன்.

முடுக்கிலுள்ள கண்ணகி கோயிலிற் பூசை நடந்து கொண்டிருந்தது. "தாயே, கடலின் அக்கரை போனோரெல்லாரும் தாய்நாடு திரும்பி சமாதானமாக வாழ அருள் செய்வாயாக" என்று அந்தப் பெரிய நாயகியிடம் என் மனம் முறையிட்டது.

வீரகேசரி'98

----------------------------------------------------------

1+1= 1
1-1= 2

பழக்கப்படாத புது இடம். மார்கழி மாதத்து வாடைக்குளிர். நுளம்புக்கடி. எல்லாமாகச் சேர்ந்து எனக்கு விழிப்பு வந்துவிட்டது.

ஆனாலும் எழுந்திருந்து படிக்கவோ எழுதவோ முடியாத சூழ்நிலை. எனக்குப் பக்கத்து மேசைகளில் என் உதவியாளர்கள் துயில்கின்றனர் எதிர்த்த மேசையிலே போலீஸ்காரர் துயின்று கொண்டிருந்தார். அகாலத்தில் எழுந்து விளக்கை ஏற்றி அவர்கள் துயிலைக் கலைக்கதான் விரும்பவில்லை. விழித்துக்கொண்ட படுத்தபடியிருக்கையில் என் மனம் எங்கெங்கோவெல்லாம் ஓடுகின்றது.

இப்படியான விடியற்காலை அறிதுயில் வேளைகளில் என் மனம் எழுதாக் கிளவியாய் எத்தனையோ கதைகளைச் சிருஷ்டித்திருக்கிறது. அவைகள் எல்லாமே உருவம் பெற்றிருப்பின், ஈழத்துப் பிரசுர களங்கள் அத்தனையுமே என் சிருட்டிகளைத் தாங்கிக்கொள்ளப் போதுமானதாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இன்னும் இந்த அறிதுயில் நிலையில் என் மனம் கதை எழுதிக் கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களையும் கதைக்கருவையும் தேடி எங்கும் அலையவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. கடந்த மூன்று நாட்களாகப் புதிய இடத்தில் நான் பெற்ற அனுபவங்களே கதையாக என்னுள் விரிகின்றன.

ஆமாம். க.பொ.த. பரீட்சை நிலையத்தின் இணைப்பதிகாரியாக மூன்று நாட்களின் முன்னர் வந்தேன். எனக்கு உதவியாக இரண்டு ஆசிரியர்கள். எம் மூவரையும், நாம் காவல் பண்ணும் வினாப்பத்திரங்களையும்-ஏன் விடைப்பத்திரங்களையும் பாதுகாக்க ஒரு போலீஸ்காரர், எங்கள் நால்வரைச் சுற்றியும்- அப்படியுமல்ல, நானொழிந்த மற்ற மூவரையும் சுற்றிச் கருள் விரியும் அந்தக் கதை...

இந்த இணைப்பதிகாரி உத்தியோகமே சோம்பேறித் தனமான வேலை. காலையிற் பரீட்சை தொடங்கமுன்னர் சுமார் எட்டு மணியளவில் பரீட்சை மேற்பார்வையாளரிடம் அன்றைக்கான வினாப் பத்திரங்களைக் கொடுக்க வேண்டும். சாயந்தரம் பரீட்சை முடிவடைந்ததும் மேற்பார்வையாளரிடமிருந்து விடைப்பத்திரங்களை வாங்கிக் கொண்டு பற்றுச் சீட்டுக் கொடுக்க வேண்டும். பின்னர் குறிப்பிடப்படாத ஒரு நேரத்தில் வரும் மேலதிகாரி ஒருவரிடம் விடைப்பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். மொத்தமாக அரைமணித்தியால வேலைகூட இருக்காது ஒருநாளில். மற்றையப் பொழுதையெல்லாம் தடுப்புக் காவற் கைதியைப்போல சேம்பேறித்தனமாகக் கழிக்க வேண்டும். அந்தச் சோம்பேறித்தனம் இன்றைக்கு அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது!

நான் 'கை காவலாகக்' கொண்டு வந்த புத்தகங்களை எடுத்துப் படிக்கவும் முடியாத நிலை. மற்றவர்களின் துயிலைக் கலைத்து விளக்கேற்ற என் மனம் ஒருப்படவில்லை. ஆகவேதான் படுத்த படுக்கையிற் கிடக்கிறேன். ஆனால் மனத்திற்குத்தான் சும்மா இருக்கின்ற திறமில்லையே!

வாசகர்களுக்கு என் கதாபாத்திரங்கள் மூவரையும் பற்றி இவ்விடத்திற் சொல்லத்தான் வேண்டும்.

எனது உதவியாளர்களான ஆசிரியர்களிருவரும் 1956ற்குப் பிந்திய பண்டார நாயகா யுகத்தில் தங்கள் கல்வியை ஆரம்பித்து, எமது கிராமத்துப் பாடசாலைகளில் க.பொ.த. சித்தியடைந்து ஆசிரிய நியமனம் பெற்று-அவர்கள் ஆசிரிய நியமனம் பெற்றதே சுவாரஸ்யமான கதையாக அமையலாம்-எழுபதுகளுக்குப் பின்னால் ஆசிரிய பயிற்சியை முடித்துக் கொண்டவர்கள்' இக்கால கட்டங்களைச் சரித்திர ஆசிரியன் போலக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. அந்த இருவருக்கும் ஆங்கிலமோ, சிங்களமோ தெரியவே தெரியாது. ஆமாம். ஐம்பத்தாறாம் ஆண்டுசிங்களம் மட்டும் சட்டம்வந்ததின் பின்னால், தமிழ்ப் பாடசாலைகளில் இருந்த சிங்கள ஆசிரியர்கள் எல்லாருமே போய்விட்டார்கள். ஆசிரியராக இல்லாமற் கிளாக்கராகியிருந்தால் உத்தியோகத்தைக் காப்பாற்றவேண்டிச் சிங்களம் படித்திருக்கலாம்.

ஆம். ஐம்பதாராம் ஆண்டுச் சம்பவங்கள் சிங்களவரையும் தமிழரையும் தத்தமது தாய்மொழியிலேயே எழுதவும் பேசவும் ஊக்கமளித்தன. அதுவரை காலமும் தமது சகோதரர்களது மொழியான சிங்களத்தைத் தாமாகவே விரும்பிக் கற்ற தமிழரிடையே அம்மொழியின் மேலே வெறுப்பையும் துவேஷத்தையும் வளர்த்தன.

சிங்கள மக்களிடையே இது எம் நாடு. சிங்களமே இந்நாட்டின் மொழி; என்ற எண்ணம் துளிர்விட்டது. தமிழைக் கற்பதை அவர்கள் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. இந்தக்கால கட்டத்திற் பிறந்து வளர்ந்தவர்தான் மற்றைய கதாபாத்திரமான போலீஸ்காரர், இருபதைத் தாண்டிய இளைஞரான அவருக்குத் தமிழோ ஆங்கிலமோ கொஞ்சங்கூடத் தெரியாது!

ஐம்பத்தாறாம் ஆண்டில் ஏற்பட்ட விரிசலின் அகண்டமான பிளவை இன்று நான் சந்திக்கிறேன்.

ஐம்பத்தாறுக்கு முன்னே நான் மலைநாட்டில் ஆசிரியராக இருந்ததினால் எனக்குச் சுமாராகச் சிங்களம் பேசவரும். எனது ஆங்கில அறிவிற்கு இவ்விடத்தில் எவ்வேலையும் இருக்கவில்லை. தெரிந்த சிங்களத்தை வைத்துக் கொண்டு எனது உதவியாளர்களான ஆசிரியர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கு மிடையில் 'தர்ஜுமா'த் தொழில் பண்ணும் ரசமான பொழுதுபோக்கு என் தலையில் விடிந்திருந்தது.

நேற்று....

வேறு எந்த வேலையும் இல்லாததினால் என் உதவியாளர்கள் சமையல் செய்வதென்று தீர்மானித்தார்கள். முதல் நாள்வரை கடையிலிருந்து வந்த எடுப்புச் சாப்பாட்டிற்குப் பிரியாவிடை. சொல்லியாயிற்று. ஆசிரியர்கள் இருவரும் சமையலில் மிக உற்சாகமாக ஈடுபட்டார்கள்.

பொலிஸ்காரருக்கு அந்தக் கவலையில்லை. பக்கத்தில் இருக்கும் பொலிஸ் நிலையிலிருந்து அவருக்குச் சாப்பாடு வந்து விடுகின்றது.

"தெருவாற் செல்லும் மீன்காரனை மட்டும் வரவழைப்பது உங்கள் பொறுப்பு" என்று எனக்குச் சொல்லிவிட்டு மற்றைய அலுவல்களை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு கையிற் கம்பராமாயணத்துடன் தெருவையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறேன். சைக்கிள்காரன் "மீன்" எனக் கத்தியதும் நான் அவனை வரவழைத்தேன்.

கடற்கரையோரத்திலிருந்து சற்று உள்ளே விலகியிருக்கும் கிராமமாகையால் மீன் சற்று விலையாகத்தான் இருக்கும் என்று தெளிந்துகொண்ட நான் மீன்காரனுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் 'நெருப்புவிலை' சொல்லிக் கொண்டிருக்கிறான்.

அறைக்குள்ளிருந்து பொலிஸ்காரர் வருகிறார். மீன்காரன் என்ன நினைத்தானோ தெரியாது. 'ஆறு ரூபாய்க்கு ஒரு சதம் குறைத்தாலும் இல்லை' என்று அடம்பிடித்தவன் ஐந்து ரூபாய்க்கே மீனைத் தந்துவிட்டான்!

மீன்காரனின் வருமானத்தில் ஒரு ரூபாயைத் தட்டிப்பறித்த உணர்வு என் மனதிலே மிஞ்சியது. ஆயினும் மீனை வாங்கிக் கொண்டேன்.

பொலிஸ்காரர் மீன்காரனோடு பேசிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களில் ஒருவர் சொன்னார். "பொலிஸ்காரனாலதான் றாத்தல் ஐஞ்சு ரூபாய்க்குத் தந்தான்."

"இந்தச் சிங்களப் பொலிஸ்காரங்க இப்படித்தான் நம்ம மக்களைக் கொள்ளையடிக்கிறாங்க" என்றார் அடுத்தவர்.

"கொள்ளையடிக்கிறதில தமிழன் சிங்களவன் எண்ட வித்தியாசமில்ல. நாமகூட அவன் கேட்ட ஆறு ரூபாயக் குடுக்கத் தயாரில்ல" என்றேன் நான்.

"ஆனாலும் இந்தப் பொலிஸ்காரங்க மிச்சம் மோசம். அதிலயும் சிங்களவங்கள் நம்மமக்களை மிரட்டிப் பிடுங்கிறாங்க." என்றார் முதல் உதவியாளர்.

"ஓமாம். காக்கிச் சட்டைக்கும் மொறட்டுச் சிங்களத்துக்கும் பயந்து நம்ம மக்களும் காசை கொடுக்குதுகள்" என்றார் அடுத்தவர்.

பொலிஸ்காரர் ஆசிரியர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். தன்னைப் பற்றி அவ்விருவரும் ஏதோ குறைவாகக் கதைப்பதாக அவர் எண்ணியிருக்க வேண்டும். என்னிடம் கேட்டார். "என்ன சொல்றாங்க?'

"உங்களைக் கண்டுதான் அஞ்சு ரூபாய்க்கு ஒருறாத்தல் மீன் தந்தாகச் சொல்றாங்க."

என் மொழி பெயர்ப்பிற் திருப்தியடைந்தவர் போலத் தோன்றிய பொலிஸ்காரர் தன் பாட்டிற் சொல்லிக் கொண்டார் "தராட்டா நான் விடன், அவன் யாபாரமே செய்ய முடியாது."

அவர் பேச்சிலே ஒரு அகம்பாவம் தொனித்தது. புதிய தலைமுறையினரான சிங்களவரிடம், அதிலும் ஆயுதப் படையினரிடம் இந்த அகம்பாவம் இருப்பது அனுபவத்திற் கண்டதுதான்!

இதன் காரணந்தான் என்ன? என் மனம் எங்கோ தாவுகிறது.

சுதந்தரோதய காலம். தெற்கு மலை நாட்டிலே, தேயிலைத் தோட்டங்களின் சந்தை நகரத்திலே நான் ஆசிரியர்! என் மனம் நிறையத் தீவிர இடதுசாரித் தத்துவங்கள்.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அந்நகரின் வைத்தியசாலை, தபாற்கந்தோர், பகிரங்க வேலைப்பகுதி, சுகாதாரத் திணைக்களம், புகையிரத நிலையம், ஆங்கிலப் பாடசாலை என்ற அத்தனை அரசாங்கக் காரியாலயங்களிலும் தமிழ் உத்தியோகத்தர்கள்! ஏன்? கடைத் தெருவிலும் தோட்டங்களிலுங்கூடத் தமிழர்களின் ஆதிக்கந்தான்!

இந்த நிலையில் இங்குள்ள சிங்கள மகன் ஒருவன் 'ஏன், இந்த உத்தியோகங்களுக்கெல்லாம் எம்மவர் வரக்கூடாது? என்று நினைப்பானாயின், அவன் எண்ணம் வகுப்புவாதமல்ல என்றுதான் என் இடதுசாரி மனம் சொல்லிக் கொண்டது! எப்போதாவது ஒரு காலத்தில் அந்த நிலமை வரத்தான் போகிறது என்றும் நான் நம்பினேன். ஆனால் அந்த மாற்றம் வந்த முறை...

"நாங்கள் பார்க்க வேண்டிய உத்தியோகங்களை எல்லாம் சுப்பையாவும், கந்தையாவும் பிடித்துக் கொண்டார்கள். தொழில் வாய்ப்புக்களையெல்லாம் 'அந்நியரான' தமிழர் அபகரித்துக் கொண்டார்கள்" என்று தேர்தல் மேடைகளில் இடது சாரிகளின் தந்தை என்று வர்ணிக்கப்பட்டவர்களே முழங்கினார்கள். அந்த முழக்கம் என் காதிலே இப்போதும் தெளிவாகக் கேட்கிறது!

சிங்களம் மட்டும் என்ற சட்டத்திற்கு மூல காரணம் உத்தியோக வேட்கைதானா?

சிங்களம் கற்ற எல்லோருக்கும் உத்தியோகமில்லை என்ற நிலை நாளாவட்டத்தில் ஏற்படுகையில் இந்தத் துவேஷம் மறைந்து விடுமென்றுதான் நான் நம்பினேன்.

ஆனால் நீரினடியிலே வலோத்காரமாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த கடைச்சி, கையை எடுத்ததும் திமிறிக் கொண்டு உத்வேகத்துடன் வெளிவந்ததைப் போல ஒன்றரை நூற்றாண்டு காலமாக அடங்கிக் கிடந்த மக்கள் மக்கள், சிங்களம் மட்டும் கற்றுக்கொண்டு-நாட்டின் மற்றைய தேசிய மொழியை அறிந்து கொள்ள விரும்பாமல்-உத்தியோகத்திற்கு வந்த சிங்கள மக்கள், ஒருவித அகம்பாவத்துடன்தான் கிளம்பியிருக்கிறார்கள். தேசீயமென்ற வார்த்தைக்கே அவர்கள் சிங்களத் தேசியமென்ற நான் அர்த்தப்படுத்துகிறார்கள். தாம் ஆளும் இனம் என்ற உணர்வு எப்படியோ அவர்கள் மனதில் பதிந்து விட்டது.

நடுத்தர, மேற்தட்டு வர்க்கத்தினரிடையே ஊடு மொழியாக இருந்த ஆங்கில அறிவும் குன்றி, ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இப்பிளவு மேலும் விரிவடைந்து விட்டது. சிங்களப் புதிய தலைமுறையினர் மற்றையவர்களைச் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார்கள். மற்றைய சமூகத்தை அடக்கி ஒடுக்குவது தம் புனிதமான கடமை என்றும், அப்படியாக அடக்கி வைத்திராவிட்டால் அவர்கள் எப்போதாவது ஒருநாள் மீண்டும் தம்மீது குதிரை விடுவார்களென்று அவர்கள் எண்ணுகிறார்களா?

என் மனம் 1958லும், 1977லும் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களை எண்ணிப் பார்க்கிறது.

முன்னைய கலவரத்தில் ஆயுதப் படைகள் குண்டர்களை அடக்கின. காரியாலயங்களிற் சிங்கள உத்தியோகத்தர் தமிழ் உத்தியோகத்தர்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்கள்.

பிந்தியதிற் கலகத்தை நடத்தியவர்களே பொலிஸ்காரர்கள்தாமே. துவேஷம் நடுத்தர வகுப்பாரிடமும் பரவிக் காரியாலயங்களில் எந்தத் தமிழருக்குமே பாதுகாப்பு இல்லை.

மாரியம்மன் கோயில் ஒலிபெருக்கி அலறித் திருவெம்பாவை தொடங்கி விட்டதை அறிவிக்கின்றது.

பக்கத்து டெஸ்குகளில் படுத்திருந்த ஆசிரியர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து, கைவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு மார்கழி நீராடப் 'பங்கயப் பூம்புனலை' நோக்கிச் செல்கிறார்கள். கைவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது!

விழித்துக் கொண்ட பொலிஸ்காரர் என்னிடம் கேட்கிறார் "ஏன் ஒலி பெருக்கி சப்திக்கிறது?"

நான் அவருக்குத் திருவெம்பாவைப் பூசை பற்றி விளக்குகிறேன்.

பொறுமையற்றவராக என் விளக்கத்தைக் கேட்டவர் வெளியே சென்று சலம்விட்டு வந்த பின்னர், கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கைவிளக்கைப் படீர் என்று அணைத்துவிட்டுக் கட்டிலிற் சரிகிறார்.

"குளிக்கச் சென்றவர்கள் இங்கு வந்துதான் கோயிலுக்குச் செல்வார்கள்" என்று அவருக்கு விளக்கிய நான், எழுந்து சென்று கதவை வெறுமனே சாத்திவிட்டு வருகிறேன். மீண்டும் படுக்கையிற் சரிவதைத் தவிர வேறு வழியில்லை, விளக்கையும் ஏற்றவில்லை.

மீண்டும் என் நினைவுக் கொடிகள் எங்கெங்கோ படர்கின்றன.

சனத் தொகைக்கு ஏற்பச் சிங்கள மக்களுக்கு அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்படத்தான் வேண்டும். அதற்காக மற்றைய சமூகங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைகளை மறுப்பதுதான் தார்மீகமா? பதவி உயர்வுகள், புதிய நியமனங்கள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் எடுத்துக்காட்டும் புள்ளி விவரங்களை நினைத்துக் கொள்கிறேன். பொலிஸ், இராணுவம் போன்ற ஆயுதப் படையணியினரில் சிறுபான்மையினரான தமிழருக்கு இடமே கிடையாதா? ஏன் நான் பிறந்து வளர்ந்த திருக்கோணமலை வட்டாரத்திற்கு அரசாங்க அதிபராக ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ வர முடியுமா? அரசாங்க அதிபர் ஏன்? எந்தத் திணைக்களத்தை எடுத்துப் பார்த்தாலும் இது தானே கதை. அரசு முன்னெச்சரிக்கையாக எமது மாவட்டத்தை ஒரு 'அல்ஸ்ரர்' ஆக்கிக்கொண்டு வருகிறதா? சிங்கள சமூகம் ஆளப் பிறந்தது என்பதுதான் பொருளா?

வெளியே காலடி ஓசை கேட்கிறது. நான் தலைமாட்டிலிருந்த ரோச்லைற்றை எடுத்துக் கதவுப் பக்கமாக ஒளியைப் பாய்ச்சினேன். நீராடி விட்டு வந்த இருவரும் உள்ளே வந்து மீண்டும் விளக்கை ஏற்றிக் கோயிலுக்கு புறப்பட ஆயத்தமானார்கள்.

"யார் மாஸ்ரர் விளக்கை அணைத்தது?'

"நான்தான் மற்றவருக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதல்லவா?"

எதிரே படுத்திருந்த பொலிஸ்காரர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குப்புறப் படுத்துக்கொண்டார். கடிகாரம் மணி நான்கரை என்று சொல்லிக் கொண்டிருந்தது.

உடையணிந்து கொண்டு என் உதவியாளர் இருவரும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். எனக்கும் கோயிலுக்குப் போக ஆசைதான்! ஆனால் நான் இணைப்பதிகாரி! வினாப் பத்திரங்களைப் பாதுகாக்கும் தலையாய பொறுப்பு என்னுடையது! எனவே எழுந்த உட்கார்ந்துகொண்டு கன்பனைப் புரட்டினேன். வாடைக் காற்று சில்லென்று ஊதிக் கொண்டிருந்தது.

பொலிஸ்காரரும் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தார். வெருகலுக்குப் புறப்படும் முதல் பஸ்ஸ’ன் உறுமல்-தேனீர்க் கடை அலுமீனியக் கரண்டி பித்தளைக் குவளையைத் தட்டும் ஓசை-திருப்பள்ளியெழுச்சிப் பாடலின் சுநாதம்-எல்லா மண்ணுலகத்து நல்லோசைகளும் என் காதை வந்தடைகின்றன.

"மாஸ்ரர் நான் வெளியே போய் வாறன்."

"சரி. போய் வாங்க."

"துலக்கு இருக்கிறது மாஸ்ரர். பார்த்துக் கொள்ளுங்க."

"சரி, பாத்துக்கிறன்."

"எனக்குப் பயமா இருக்கு."

"ஏன்?"

"துவக்கை விட்டுப் போவதற்கு."

"அப்படியானால் கையோட அதையும் எடுத்துக் கொண்டு போங்க."

"உங்களிட்ட எனக்குப் பயம் இல்லை."

"அப்படியானால்..."

"மற்றவர்களிடம்."

"எவருமே அதைத் தொட மாட்டார்கள்."

"இல்லை. அவர்கள் இருவரும் என்னேரமும் என்னைப் பற்றித்தான் கதைக்கிறாங்க."

"அப்படியில்ல. மொழி விளங்காததினால் நீங்க அப்படி நினைக்கிறீங்க." நான் பலமாகச் சிரித்தபடி மீண்டும் சொன்னேன்.

"பொது மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய நீங்கள் தமிழையும் கொஞ்சம் படிக்க வேண்டும்."

"நாங்க ஏன் தமிழ்ப் படிக்க வேணும். நீங்க சிங்களம் படியுங்க."

"சிங்களப் பொது மக்கள் தமிழையும், தமிழ்ப் பொதுமக்கள் சிங்களத்தையும் படிக்கத் தேவையில்லை. ஆனால் அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க உத்தியோகத்தர்கள் இரு மொழிகளையுந் தெரிந்திருப்பது நல்லது."

"இல்லை, நாங்கள் பெரும்பான்மையினர். உத்தியோகத்திற்கு வரும் தமிழர்கள்தான் சிங்களம் படிக்கவேணும். சரி, மாஸ்ரர் நான் வாறன், தேத்தண்ணி குடிக்க வேணும்" என்று கூறிவிட்டு அவர் வெளியே போகிறார்.

என் மனம் மீண்டும் அலைபாய்கிறது. சிங்கள மகன் ஒருவனின் உண்மையான மனோ நிலையே இதுதானா?

பேராசிரியர் ஜெயதேவா ஹெட்டியாராய்ச்சி அவர்களின் ஆய்வு என் மனத்துள் நெளிகிறது.

"நாட்டின் உயர் கல்விப் பீடமான சர்வ கலாசாலைச் சிங்கள மாணவர்களின் மிக மிகக் குறைந்த விகிதத்தினரே தமிழ் மாணவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருக்கின்றனர். இத்தோழமையுணர்வு சிங்கள மாணவர்களை விடத் தமிழ் மாணவர்களிடம் அதிகமாகவுள்ளது."

நம்மிடம் தோழமையுணர்வை வைத்துக் கொள்ள விரும்பாத ஒரு சமூகத்தினரிடம் நான் ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?

"பந்தியிலிருந்து எழும்பு" என்பவர்களிடம் நாம் ஏன் "கல்லை பொத்தல்" என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?

பிரிந்து போவது ஒன்றேதான் நாம் கௌரவமாக இருப்பதற்கு ஒரே வழியா?

1956ல் சிங்களம் மட்டும் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது கலாநிதி கொல்லின் ஆர்.டி.சிக்வா அவர்கள் பேசியது என ஞாபகத்திற்கு வருகிறது.

Parity: Mr.Speaker, we believe is the road to freedom of our nation and the unity of its components. Otherwise two torn little bleeding states may yet arise of one little state, which has compelled by a large section itself to treason.

ஆமாம் ஒரு மொழி இரண்டு நாடு என்று அன்று அவர் சொல்லியது நிறைவேறத்தான் போகிறதா?

கோயிலிருந்து திருவெம்பாவைப் பாடல் கேட்கிறது.

"எம்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க" என்ற அடிகளுக்கு என்னுள்ளே புதிய அர்த்தம் தொனக்கிறது. ஞாயிறு உதயமாகிக் கொண்டு வரும் அடிவானத்திற் செம்மை படர்வதை என் கண்கள் ஜன்னலூடே வெறிக்கின்றன.

அலை'82

----------------------------------------------

அவசரம்

ஆவணி மாதத்து முதலாவது முகூர்த்த நாளிற் கனகசுந்தரம் என்ற சுந்தரத்திற்கு மணவினை முற்றியது. அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில் அது 'மாலை தாழ்சென்னி வயிர மணித் தூணத்து நீலவிதானத்து நித்திலப் பூம்பந்தர்க்கீழ்' நடந்தேறிய சிலப்பதிகாரத் திருமணந்தான். ஏனென்றால் அந்தக் கிராமத்திலேயே சுந்தரம் ஒருவன்தான் கொழும்பிலே பெரிய உத்தியோகமாக இருந்தான்.

இரண்டு வாரங்களின் பின் அவன் தன் மனைவியைப் பிரிய நேரிட்டது.

அப்பிரிவைப் 'பொருள் வயிற் பிரிவு' என்று சங்க இலக்கியக் காரணங் கற்பிக்க அவ்வூரிலே பண்டிதர்கள் இல்லை.

இருப்பினும் அந்தக் காரணத்தைக் கற்பிக்க அவர்களால் முடியாது. ஏனென்றால் 'உடன்போக்கிற்கு' அவர் மனைவிக்கு விருப்பமாகவே இருந்தது. 'தேன் மயங்கு பாலினும் அவர் நாட்டுக் கூவற்கீழ் மானுண்டெஞ்சிய கலிழி நீர் இனிய' என்று சொல்லிய ஐங்குறு நூற்றுக் காதலி போலக் கொழும்பு மாநகரிற் சொட்டிக் கொண்டிருக்கும் குழாய் நீர் தன் கிராமத்துப் 'புள்ளணிந்த ஏரி' நீரைவிட இனியது என்று புதுமணப் பெண் என்ற அந்த நிலையிலும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள நாணமாக இருக்கவில்லை. ஆயின் என்ன செய்வது? உடன்போக்கு நிகழ்த்துவதற்கு சுந்தரத்திற்குக் கொழும்பிலே ஒரு 'கோழிக்கூடு' தானம் கிடைக்கவில்லை. இந்த நிலையிற் சௌந்தரியை விட்டுத் தனிமையாகவே கொழும்புக்குச் செல்ல வேண்டியிருந்தது.

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

இயந்திர கதியில் இயங்கும் கந்தோர்க் கெடுபிடியில் பகற்போது கழிய, மாலை மலரும் நோயை வீடு தேடி அலைவதில் மழுங்கடித்து, அந்த அலைச்சலிற் கட்டிலில் வந்து விழுந்தால் அடித்துப் போட்ட பாம்புதான்! ஆயின் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிடும். இருநூறு மைல்களுக்கப்பால் தன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் புது மனைவியின் சௌந்தர்ய முகம் அவன் நினைவுகளில் நெளிந்து....

ஆஹா! அந்த நினைவுகளில் ஏக்கமும் விரக்தியும் கலந்திருப்பினம் எத்தனை சுகம்!

கூம்பிய இதழ்கள் அவிழ்வது போலக் காலை மலருகையில், புலரிக் காலத்தின் இதமான குளுமையிற் துயில்கொள்ளவும் முடியாமல், ஆனால் அவ்வறையிற் தன்னோடு வதியும் மற்றவர்களுக்க இடைஞ்சலாக எழுந்து நடமாடவும் முடியாமற் படுக்கையில், 'அறிதுயிலிற்' கிடந்தபடியே நினைவுகளை நீள விடுவதிற் தான் எத்தனை சுகம்! வாலிப வெள்ளத்தின் உணர்ச்சிச் சுழிப்பிற் பிணைக்கப்பட்ட தெப்பக்கட்டைகளாய் இரண்டு வாரங்கள் மிதந்து சுகித்த மெய்யுணர்வுகளை விட, இந்தச் சொர்ப்பனா சுகத்தில் எத்தனை கிறக்கம்!

அந்தப் போதை தெளிவடையுமுன், அடுத்த படுக்கையில் இருப்பவர் எழுந்ததும் சுந்தரமும் எழுந்திருந்து கடிதம் எழுதுவான். அது நித்திய கருமம். அடுத்த ஜனவரி பிறக்கமட்டும் தனக்கு ஒரு நாட்கூட லீவு இல்லை என்ற ஆதங்கம் கடிதங்களில் ஊடுபாவாக ஓடும். அதைவிட மற்றையதெல்லாம் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்...நமக்கேன்?

கடிதத்தை முடித்த பின்னர் மீண்டும் கந்தோர்-வீடுதேடல்-வரட்சி-ஏக்கம்-அலைச்சல்-நித்திரை-சொர்ப்பணம்...

ஊரிலே மாரிக்காலம் தொடங்கிவிட்டது. பிள்ளையார் கோயிலின் தலைவாயிலில் அணிவகுத்து நின்ற கொன்றை மரங்கள் பொன்சொரியத் தொடங்கிவிட்டன. அத்தனை கார்த்திகைக் கொடிகளும் எங்கிருந்துதான் பீறிக்கொண்டு கிளம்பினவோ, கிட்ட இருப்பனவற்றையெல்லாம் தழுவிக் கொண்டு சடைத்து, விரல் விரல்களாய்த், தீக்கொழுந்துகளாய்ப் பூத்து 'செங்காந்தள்' என எந்தப் பண்டிதராலும் அழைக்கப்படாமலேயே கருகி வீழ்ந்து கொண்டிருந்தன. கொத்துக் கொத்தாய்த் தோரணங் கட்டியது போலத் தொங்கும். மஞ்சள் வண்ண வாகை மலர்களிற் பொன்வண்டுகள் அணைய, அம்மரங்களின் கீழே நிலத்தோடு ஒட்டிச் சடைத்துக் கிடந்த தும்பை மலர்களில் வண்ணாத்திப் பூச்சிகள் மேய்ந்தன....

வேலையற்ற பகற்பொழுதுகளும் நீண்ட இரவுகளும்... வானம் கண்­ர் வடித்தது சௌந்தரிக்காகவோ?

கடிதத்தைத் தபாற் பெட்டியிற் போட்டுவிட்டு பவானிலே இடியப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த இடை நேரத்தில் சுந்தரம் தன் நாட்குறிப்பைப் புரட்டினான். கடைசிப் பக்கத்திற்கு முந்திய இதழில் அவன் லீவு விபரங்கள் இருந்தன. ஏதோ ஒரு நம்பிக்கையில் லீவு நாட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான் சுந்தரம். சுகவீனலீவு இருபது நாட்களும் சரி. ஆனாற் சமயோசித விடுதலை...?

சுந்தரம் கூட்டினான்.

மீண்டும்....

இருபதே நாட்கள் தான்.

இன்னும் ஒரு நாள் இருக்கிறதே....

பரிசாரகப் பையன் இடியப்பம் கொண்டு வந்து வைக்கிறான். சுந்தரம் மீண்டும் டயரியைப் பார்க்கிறான்.

அன்று காலைச் சாப்பாடு சாப்பிட்டதாகச் சுந்தரத்திற்கு நினைவு இல்லை. ஆயினும் ஐயர் அவன் கணக்கிற் பற்று எழுதிக் கொண்டார்.

கந்தோருக்கு விரைந்தான். கந்தோரிலே லீவு விபரங்களை ஒருதடவைக்கு இருதடவை 'செக்' பண்ணிப் பார்த்தபோது இன்னமும் ஒருநாள் லீவு இருக்கவே இருந்தது.

ஜனவரிக்கு இன்னமும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. அதற்குள் இந்த ஒருநாள் லீவை ஏன் வீணாக்க வேண்டும்?

'அடுத்த போயாவிற்கு வருகிறேன்' என்று, அன்று தன் இரண்டாவது கடிதத்தை எழுதினான் சுந்தரம்.

இடையிலே நந்தியாக நின்ற ஒரு நாளில் சுந்தரம் வீடுதேடி அலையவில்லை. காலையில் அனுபவிக்கும் நினைவின்பத்தை அன்றைய இரவு முழுவதுமே அனுபவித்தான்.

* * *

குழல் விளக்குகளின் ஒளிப் பிரவாகத்திற் பகட்டிக் கொண்டிருந்த கோட்டைப் புகையிரதஸ்தானத்தின் முதலாம் மேடையிற் நின்ற புகையிரகம், கூவென்று நீளக்குரலெடுத்துக் கூவிவிட்டுத் 'தமிழ்கூறும் நல்லுலகை' நோக்கித் தன் நீண்ட பயணத்தைத் தொடங்கிற்று. தன்னை வழியனுப்ப வந்த தன் விடுதி நண்பர்களுக்குக் கைகளை ஆட்டி விடை கொடுத்தனுப்பிய சுந்தரம், தன் இருக்கையில் அமர்ந்துகொண்டு 'கிட்பேக்'கைத் திறந்து பார்த்தான். அதற்குள்ளே சௌந்தரத்திற்கென்று வாங்கிய கைத்தறிச்சேலை பத்திரமாக இருந்தது. பையை மூடிவைத்துவிட்டுச் சுந்தரம் சிகரட் பற்றவைத்துக் கொண்டான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

வண்டி மருதானையைச் சௌந்தரத்தோடு சுகித்த ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாய்...

யுகமே கணமாய், கணமே யுகமாய்...

நினைவுக் கொடிகளைப் படீரென்று அறுத்தெரியும் குலுக்கோடு வண்டி நின்றது.

"எது ஸ்ரேசன் பொல்காவலையா?"

"இல்லை. மரிகம, என்றார் சகபிரயாணி.

"இங்கு நிற்கிறதில்லையே"

"ஒரு மாதமாக இங்கேயும் நிற்கிறது"

புனுகு பூனையின் குறுகுறுப்போடு பாத்ரூமூக்குச் சென்றவன் மீண்டும் வந்து தன் பெட்டிக்கு அப்பாலும் நடக்கிறான்.

போசன சாலை.

சிலர் சாப்பிடுகிறார்கள், சிலர் குடிக்கிறார்கள்.

சுந்தரத்திற்க ஏதாவது செய்ய வேண்டும் போல ஒரு குறுகுறுப்பு.

ஒரு ஜின் வாங்கிக் குடிக்கிறான். புது அனுபவம். நன்றாகவே இருக்கிறது!

ரயில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

அடுத்த 'ஜின்'

தலையை என்னவோ செய்கிறது. தள்ளாடிக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு வந்தவனுக்கு உலகமே தெரியவில்லை.

அதிகாலையிற் புகையிரதம் திருக்கோணமலையை அடைந்தபோது சகபிரயாணி அவனை எழுப்பிவிட வேண்டியிருந்தது.

வாடகை மோட்டாரிற் துறைமுகப் பாலத்திற்கு வந்தபோதும் நன்றாக விடியவில்லை. தெருவிளக்குகள் அழுது வடிந்து, நட்சத்திரங்களே அற்ற மாரிக்கால இருளை விரட்டியடிக்க முனைந்து கொண்டிருந்தன. சில்லென்று ஊதும் வாடைக் கடுவலில் பட்டினம் முழுவதுமே விறைத்து விட்ட பான்மையில் முடங்கிக் கிடந்தது.

ஆறரை மணிக்குத்தான் முதற் படகு.

சுந்தரத்திற்க அலுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. இருநூறு மைல்கள் இலேசாகத் தாண்டியாகி விட்டது. ஆனால் மோட்டார்ப் படகில் போகவேண்டிய இந்து எட்டு மைல்களும்...?

மூதூர் ஜெற்றியிலே சார் இருக்குமோ? மைத்துனன் சங்கரன் சைக்கிளோடு காத்து நிற்பானோ?

துறை முகத்தினுள்ளே அணிவகுத்து நின்ற கப்பல்களில் பகட்டி மினுக்கும் காந்தவிளக்குச் சரங்கள், கடலில் இருந்து முளைத்தெழுந்த மதிற்சுவர் போன்ற மலைகளினால் அரண் செய்யப்பட்டு நிற்கும் வனப்பு மிக்க துறைமுகம், அம்மலையரண்களுக்கு அப்பால் மாவலியின் செம்புலப் பெயர் நீர், கொட்டியாபுரக்குடாவின் கருநீலக் கடலில் சங்கமிக்கையில் ஏற்படும் வண்ணக் கலப்பு.

முன்பெல்லாம் பெருமையாக நினைத்துக்கொண்ட எல்லாமே வெறுப்பாய் எரிச்சலாய்...

கிழக்கு வெளுக்கையில் தேநீர்க் கடைக்காரன் கடையைத் திறந்தான்.

சுந்தரம் கோப்பி குடித்துச் சிகரட்டையும் பற்றவைத்துக் கொண்டான்.

துறைமுகப் பாலத்து மணிக்கூடு ஓடாமலே நிற்கிறதா?

சுந்தரம் செய்வதறியாது பேப்பருக்காக அலைந்தான். காலைப் பத்திரிகையை வாங்கிக்கொண்டு வருகையில் துறைமுகம் கலகலப்படைந்து விட்டது.

சில்லென்று ஊதும் வாடையைக் கிழித்துக்கொண்டு மோட்டார்ப் படகு சென்றது. ஆனாலும் அது அங்குலம் அங்குலமாக நகர்வதுபோல இருந்தது சுந்தரத்திற்கு.

அலைகள் முத்தமிடும் மலை மதிளைத் தாண்டித் துறைமுகத்துக்கு வெளியே வந்ததும், அதே ஊர் கண்ணுக்குத் தெரிகிறது. மகாவலித் தேவி தன் கணவனைத் தழுவி முயங்குமிடம் அதோ கலங்கலாய்....

வாடைக்காற்று ஊதிக் கொண்டேயிருக்கிறது. துறை முகத்தினுள்ளைவிட, வங்காளப் பெருவெளியில் ஓவென்ற இரைச்சலோடு சண்டமாருதமாய் வீசுகையில் தென்னை உயரத்திற்குக் கடல் அலைகள் எழுந்து பதிந்து மோட்டார்ப் படகைத் தாலாட்டியும் ஏற்றிக் கொண்டும் இருக்கிறது.

வினாடிகள் நகருகின்றன.

அதோ ஊர்.

ஆனால் இந்தப் படகு எங்கே போகிறது?

ஆட்டத்தையும் குலுக்கலையும் தவிர்ப்பதற்காகக் 'கடலோடி'யான வல்வெட்டித் துறைத் 'தண்டயல்', காற்றோடு இணைந்து, அது கிளப்பும் பேரலைகளின் பக்கவாட்டில், கழைக் கூத்தாடியின் கமனத்தோடு படகைச் செலுத்துவது சுந்தரத்திற்குப் பழக்கப் படாததா?

ஆயினும் அவனுக்குப் பொறுக்கவில்லை. அவசரம்!

"ஏன் தண்டேல் சுத்தி வளைக்கிறீங்க. குறுக்கால வச்சிப் பிடியுங்களன்"

"வாடைக் கடல் கிளாக்கர். ஒருகால், அரைமணி பிந்தினாலும் பரவாயில்லை. கொஞ்சம் மேல போய்ச் சாச்சி விட்டா ஆட்டம் அலைச்சல் இல்லாமப் போகலாம்."

சுந்தரம் செய்வதறியாமற் பத்திரிகையை எடுத்துப் படிக்கிறான். இல்லைப்படிக்க முயல்கிறான். அதிலே என்னதான் இருக்கிறது?

சிகரட் பற்ற வைக்க வேண்டும் என்ற உணர்வு!

நெருப்புப் பெட்டி இல்லை.

பக்கத்திற் தன்னை மறந்து மாத சஞ்சிகை ஒன்றிற் புதைந்திருந்தவரிடம் பவ்வியமாகத் தீப்பெட்டி கேட்கிறான்.

அவர் சஞ்சிகையை விரித்த படியே நெருப்புப் பெட்டியை எடுக்கிறார்.

அச்சஞ்சிகையிலே கன்னத்தில் கையூன்றியபடி ஒரு பெண், சௌந்தரத்தைப் போல, அடுத்த பக்கத்தில் பாய் புரவித் தேர் ஒன்று அதனடியிற் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.

நூல் நவின்ற தேர்ப்பாக நொவ்விதாச் சென்றிடுக
தேன் நவின்ற கானத்தெழில் நோக்கி-தான் நவின்ற
கற்புத்தாள் போர்த்துக் கவுள் மிசைக் கையூன்றி
நிற்பள் நிலையுணர்க நாம்.

- ஐந்தினை ஐம்பது.

சுந்தரம் சிகரட் பற்ற வைக்கையில் அவன் இதழ்க் கடைகளில் குறுநகை நெளிந்தது. அந்தப் பழைய வெண்பாக்காரன் அவனைக் கேலி பண்ணுகிறானா?

பாடும் மீன்'67

------------------------------------------------------

நத்தார் ஓலம்

வடக்குத் தெற்காக ஓடும் மெயின் வீதியில் அந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. வீதியின் பக்கமாக மோட்சத்தின் திறவுகோலைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் இராயப்பர் கோயில். கோயில் அருகாமையில் பாதையின் இரு பக்கத்திலும் சில மக்கள் குடியிருப்புக்கள்.

கோயிலின் எழுவான் கரைப் பக்கமாக உப்பு நீர்வாலி. வாவிக்கரையில் சிறிய தோணிகளும், கண்ணாடியிழைப் படகுகளும் இழுத்து வைக்கப்பட்டிருக்கும். கோயிலி ன அருகாமையிலுள்ள எல்லா வீடுகளிலும் இரண்டு தென்னை மரங்களை இணைத்துக் கட்டிய நீண்ட கழிகளில் வலைகள் தொங்கும். தோணிகளின் சுக்கானாகிய 'சவள'களும், தோணியைச் செலுத்த உதவும் தண்டு மரங்கள் என்ற துடுப்புகளும் சார்த்தப்பட்டிருக்கும்.

வாலிக்கப்பால் எழுவான் கரையில் வங்காளக் குடாக்கல் குமுறிக் கரையில் மோதிக் கொண்டிருந்தது. கோயிலடியில் நின்று பார்த்தால் கடலின் குமுறல் மிக்க பயங்கரமானதாகத் தோன்றியது.

மார்கழி மழை வஞ்சகமின்றிப் பெய்ததால் வாவி நிரம்பிவிட்டது. வாடைக் காற்றின் அகோரத்தினால்கரை புரண்டடித்தது. கடலலைகளின் தாக்கத்தில் வாவி முகத்துவாரம் திறபட்டு விட்டது. வாவியின் நிறைந்த காட்டுத் தண்­ர் கடலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

முகத்துவாரம் திறபட்டது கோயிலைச் சூழ இருந்த மக்களுக்கு ஒரு சுப செய்தி கடல் நீர் வாவியோடு கலந்ததால் கடல் மீன்களும் இறால்களும் வாவிக்குள் வரும். அடுத்த வருடப் பிழைப்பு அமோகமானதாக இருக்கும் என அம்மக்கள் எல்லாருமே நம்பினார்கள்.

மார்கழி மாதம் பிறந்ததுமே கிராமத்தவர்கள் தங்கள் தொழிலைச் சுருக்கிக் கொண்டார்கள். ஒரே மழை கொட்டிக்கொண்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம், அதற்கும் மேலான காரணம் அவர்களுக்கு நத்தார் பிறக்க இருந்ததே.

முந்தைய நாட்களில் மார்கழி மாதம் முதலாந்திகதியன்றே பட்டாசுகளைக் கொளுத்தி முழக்கி நத்தார் வரப்போவதை அறிவிப்பார்கள். ஆனால் இப்போது அதைச் செய்ய முடியாது. ஏ.கே. வேட்டுக்கும் பட்டாஸ் வெடிக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆமிக்காரன் அவர்கள் வீடுகளை ஆக்ரமித்துக் கொள்வான். மேலும் பட்டாசுகளை எங்கே விற்கிறார்கள்?

பட்டாஸ் இல்லாவிட்டாலும் கிராமத்தவர்களுக்கு நத்தார் பிறந்தே விட்டது. அயற் கிராமத்துச் சேனைக் காடுகளிலிருந்து சோளன் குலைகள் வந்து விட்டன. பத்து ரூபாய்க்குப் பத்துப் பன்னிரண்டு என்று மலிந்தும் விட்டன. காடெல்லாம் வெள்ளக் காடாகி விடத் திடரை நாடி வந்த மான்களையும், மரைகளையும் அடித்தே கொன்றதினால் ஊரிலே இறைச்சியும் மலிந்து விட்டது. இவைகள் எல்லாம் நத்தார் வந்துவிட்டது என்பதை உறுதிப் படுத்தின.

இத்தனைக்கும் மேலாக கோயில் பாடற் குழுவின் தலைவரான பறங்கிக் கிழவர் பீற்றார், ஆர்மோனியத்தை மீட்டுக் குழுவினர்க்கு நத்தாக்கீதம் பழக்கினார்.

கால மாற்றத்திற்கேற்பக் கர்நாடக இசையில் எத்தனையோ தமிழ்ப் பாடல்களும் பஜனைகளும் வந்து விட்டாலும் பீற்றர்க் கிழவருக்க லத்தீன் பாட்டுக்களில் தான் மோகம்! அவர் தன் பால்ய வயதில் லத்தீன் பாடல்களையே பாடியவர். லத்தீன் மொழியிலேயே ஒப்புக் கொடுக்கப்பட்ட பூசைகளுக்குப் பரிசாரகனாக இருந்து லத்தீன் மொழியிலேயே செபித்தவர். இன்றைக்கும் அந்தத் தொடர்பை விட்டுக் கொடுக்காமல், லத்தீன் பாடல்களுக்குத் தமிழுருவம் கொடுத்து அதே இசையில் பாடப்படும் பாடல்களை அவர் கற்றுக் கொடுத்தார்.

வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே பாலனை

என்று அவர் கற்பித்துக் கொண்டிருக்கும் பாடலின் இசை ஊரை நிறைத்தது.

கடைசியாக இருபத்தினான்காந்திகதி வந்துவிட்டது. இன்றைய நள்ளிரவில் கிறீஸ்து பாலன் பிறப்பார்.

ஊர்ச் சிறுவர்கள் கிறீஸ்து நாதர் பிறந்த மாட்டுக் கொட்டிலைக் கட்டினார்கள். கொட்டிலிலே தாம் பத்திரமாக வைத்திருந்த யோசுபாலன், மேரிமாதா, சூசையப்பர், இடையர்கள், மிருகங்கள் ஆகிய உருவங்களை வைத்தார்கள். ஆனால் அக்கொட்டிலுக்கு ஒளியூட்ட பற்றறிகள் கிடையாதது அவர்களுக்க மனவேதனையாக இருந்தது. 'பற்றறி' தடைபண்ணப்பட்ட பொருள்.

தாங்கள் கட்டிய கொட்டிலின் முன்னால் பூக்கலிப்ரஸ் மரக் கிளைகளை வெட்டி நட்டு அதிலே பலூன்களைக் கட்டிக் 'கிறீஸ்மஸ் மரம்' உண்டாக்கினார்கள்.

ஊரின் அந்தத்திலே இருந்த 'ஆமிக்காம்' பின் தளபதி கோயிலிலே நடுச்சாமப் பூசை நடத்த உத்தரவு கொடுத்திருந்தார். அது மக்களுக்குக் குதூகலத்தைக் கொடுத்தது.

* * *

ஆனால் செபமாலைக் கிழவிக்கு மட்டும் அன்று அதிகாலையிலேயே யோசனை பிடித்துக் கொண்டது!

செபமாலைக் கிழவி ஊரில் பிரபலமான புள்ளி. அவளுக்கு அது பிறந்த ஊர் இல்லாவிட்டாலும், ஊரில் எல்லாருமே அவளின் உறவினர். எப்போதோ ஒருகாலத்தில் அவ்வூருக்கு ஆசிரியப் பணி புரியவந்தவள் அவ்வூரவர் ஒருவரையே மணஞ்செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வருகிறாள். வயது எழுபது ஆகிவிட்டாலும் இன்னமும் கூன் விழவில்லை. தலை நரைத்து விட்டாலும் திடகாத்திரமாகவே இருந்தாள்.

விதவையான அவளது இரு ஆண் பிள்ளைகளும் எப்போதோ கனடாவில் குடியேறி விட்டார்கள். இரண்டு பெண்களும் கொழும்பிலே குடியும் குடித்தனமுமாக அமோகமாக வாழ்கிறார்கள். செபமாலைக் கிழவி மட்டும் தன் பென்னம் பெரிய வீட்டில் தன்னந்தனியனாக வாழ்கிறாள். கோயிலோடொட்டிய தொண்டுகளே அவள் பொழுதுபோக்கு. பல பக்திச் சபைகளின் தலைவி.

அந்த ஊரிலே காலங்காலமாக ஒரு வழக்கம் இருந்தது. நந்தாரின் முதல் நாட் சாயந்தரம், சென்ற ஆண்டு நத்தாரின்போது உலகிலே வாழ்ந்து இந்த ஆண்டு நத்தாருக்கிடையில் உலகைவிட்டுப் போனவர்களை நினைத்து, அப்படி இறந்தவர்களின் வீட்டில் ஒரு சில நிமிடங்களுக்கு ஒப்பாரி சொல்லி அழுபதான வழக்கம், எப்போது தொடங்கியதோ? அதற்கான சரித்திரத்தை ஆராய்வதில் எவருமே சிரத்தை எடுக்கவில்லை!

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் செபமாலைக் கிழவிதான் அந்த ஒப்பாரிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினாள்.

நூற்றைம்பது இருநூறு குடும்பங்கள் வாழ்ந்த அந்த ஊரில் இரண்டு மிஞ்சினால் மூன்று வீடுகளில் ஒப்பாரி சொல்லி அழவேண்டியிருக்கும்.

சாயந்தரம் நான்கு மணியளவில் வீட்டை விட்டுக் கிளம்பினால் அவள் வயதொத்த பத்துப் பன்னிரண்டு பெண்களைச் சேர்த்துக் கொண்டு சென்ற நத்தாருக்கும் இந்த நத்தாருக்கிமிடையில் இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, வட்டமாகக் குந்திக்கொண்டு இரண்டு பக்கமும் இருப்பவர்களின் தோள்களில் கைகளை விரித்து அணைத்துக் கொண்டு முகத்தைத் தரையை நோக்கித் தொங்கப் போட்டபடி ஒப்பாரி சொல்லி....

பத்து நிமிடங்களுக்கு ஒப்பாரிச் சப்தம் ஊரை நிறைத்து நிற்கும்!

ஒப்பாரி சொல்லி அழுத கூட்டம், பின்னர் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டு நிமிர்ந்தார்களாயின் அவர்கள் கண்களில் ஒரு சொட்டுக் கண்­ர்கூட இருக்காது. முகத்திற் சோகமே இராது.

ஒப்புக்கு அழுத பெண்கள் வட்டமாகக் கூடியிருந்து கழுத்துறைப் பாக்கையும், கழுதாவளை வெற்றிலையையும் சுவைத்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேச்சில் நத்தார்ப் பலகாரம் தொடக்கம் சாமப்பூசைக்கு உடுத்தும் சேலைவரை பல விஷயங்கள் அடிபடும். அவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்புகையில் இருட்டிவிடும். பட்டாஸ் வெடிகளின் ஓசையூடே, தென்னங்கள்ளை மாந்திய சுதியில்.

ஆதி ஆதாம் செய்த கோதினை நீக்கவே
அற்புதன் வெல்லை மலைஓரம்
ஆடடையும் குடில் மார்கழிக் கூதலில்
ஆண்டவன் வந்து பிறந்தாரே - எம்மை
மீண்டவன் வந்து பிறந்தாரே

கிழடுகள் பாடிக்கொண்டே தள்ளாடித் தள்ளாடி நடப்பார்கள். வலைக்கம்பான்களால் வேப்ப மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல்களில் சிறுவர்கள் தேவன் மானிடனானாரே-சென்று பணிந்திடுவோம் வாரீரே! எனக் கீதம்பாடி ஆடிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த வருடம் எங்கு அழப் போவது? செபமாலைக் கிழவிக்கு விடை தெரியாத வினாவாகவே இது அமைந்து விட்டது!

சென்ற ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கிய போது ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஊர் அமைதியாகவே இருந்தது. சண்டை நடந்த இடங்களிலிருந்தெல்லாம் மக்கள் அகதிகளாக ஓடி இங்கேதான் வந்தார்கள். படிபடிப்படியாக இராணுவம் அவ்விடங்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்ட பின்னர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கடைசியாக இங்கு வந்தார்கள்.

அமைதியாக இருந்த அந்தக் கிராமம் அல்லோல கல்லோலப் பட்டது. வங்காளக் கடலிலிருந்து போர்க்கப்பல்கள் வேட்டுக்களைத் தீர்த்தன. மேலே ஆகாய விமானங்கள் குண்டுமாரிபொழிந்தன. தரைப்படையினர் 'ஷெல்' அடித்து வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டே முன்னேறி வந்தனர்.

இந்த வேட்டுக்களினாற் சிலர் இறந்தார்கள். தரைப்படையினர் ஊரைப் பிடித்துக் கொண்ட பின்னர் நடந்த தேடுதலில் பலர் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று எவருக்குமே தெரியாது. இதற்கும் மேலாகப் படையினர் வந்தபோது, தாங்கள் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இளைஞர்கள் பலர் உரைவிட்டே ஓடிவிட்டார்கள். அவர்களிற் பலர் ஆனையிறவுப் போரிலே இறந்து விட்டதாக ஊரிலே பேசிக்கொள்ளப் படுகிறது.

இப்படியாக ஊரிலே ஒவ்வோர் வீடும் யாரோ ஒருவரை இழந்தேயிருக்கிறது! இந்த லட்சணத்தில் எந்த வீட்டுக்கென்று சென்று அழுவது? யாருக்காக அழுவது? செபமாலைக் கிழவீக்கு இந்த வினாவிற்கு விடை தெரியவேயில்லை.

மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. தன்னுள்ளே யோசித்து மறுகிய செபமாலைக் கிழவி அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று தன் ஒப்பாரிக் குழுவினரை அழைத்துக் கொண்டு நேரடியாகக் கோயிலுக்கே சென்றாள்.

* * *

கோயிற் பீடத்தின் ஒரு பக்கத்தில் சிலர் மாட்டுத் தொழுவதைச் சிருட்டித்துக் கொண்டிருந்தனர். பீற்றர்க் கிழவர் சாமப் பூசைக்கான பாடல்களுக்குக் கடைசியாக ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

செபமாலைக் கிழவி தன் கூட்டத்தினருடன் நடுக்கோயிலிற் கைகளை விரித்து நெடுமுழந்தாளிலிருந்து கொண்டு.

"பூலோகத்தில் நல்ல மனதுள்ளவர்களுக்குச் சமாதானத்தைக் கொண்டு வந்த இரட்சகரே! எங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளும்' என்று உருக்கமாகப் பிரார்த்தித்தாள்.

அவள் கண்கள் உண்மையாகவே கண்­ரைச் சொரிந்தன.

வீரகேசரி'93


ஆண் மகள்

பிரயாண அலுப்புத் தீரும்படி நன்றாகக் குளித்துவிட்டு, காலைச் சாப்பாட்டையும் முடித்த பின்னர் கட்டிலிற் சாய்ந்தேன். கட்டிலுக்குடையவனான சிவலிங்கம் என்னிடம் அறைச் சாவியைக் கொடுத்துவிட்டுக் கந்தோருக்குப் போய் விட்டான். சில வேளை 'சோட் லீவ்' போட்டுவிட்டு வந்தாலும் வருவான்.

பத்மாவும் இப்போது கந்தோருக்குச் சென்றிருப்பான். நாலுமணிக்குப் பின்னர்தான் வீட்டுக்கு வருவாள். அதுவரையும் நான் பொறுத்திருக்க வேண்டும்.

இரவு ரயிலிலே, நல்ல ஜன நெருக்கடி, எத்தனை சன நெரிசலாக இருந்தாலும், மூன்றாம் வகுப்புப் பெட்டியிலே தளத்திற் புதினப் பத்திரிகையை விரித்துவிட்டு, அனந்தசயனத்தில், ஆழ்ந்துவிடும் எனக்கு, இரண்டாம் வகுப்புப் பெட்டியிலே அப்படித் தூங்குவது அந்தஸ்துக் குறைவாகப் படவே நான் இரவு முழுவதும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டேயிருந்தேன். அதனால் இப்போது என் இமைகள் கனத்து அழுத்துகின்றன. ஆயின் நினைவுகளின் எவ்வலில் மனம் எங்கேயோ பறந்து செல்கின்றது. கடந்த கால நினைவுச் சருகுகள் குவிந்த ஒற்றையடிப் பாதையில், ஒவ்வோர் நினைவு அடியும் ஒவ்வோர் கதையாய்....

அக்கதைகள் இன்பம் பயப்பனவா, துன்பம் தருகின்றனவா? என்று எனக்கே விளங்கவில்லை. ஆனாலும் அவை மனத்துக்கு இதமாக இருக்கின்றன.

தலையைத் தலையணையில் வைத்து நீட்டி நிமிர்ந்து மல்லாந்து படுத்திருந்த நான், எழுந்து கட்டிலின் தலைமாட்டில், தலையணையைக் கட்டில் சட்டத்தோடு நீளவாட்டிற் சார்த்தி வைத்து, முதுகைக் கிடத்திகட்டிற் சட்டத்திற் தலையை வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கையில் நினைவலைகள் என்னை எங்கேயே இட்டுச் செல்கின்றன.

'சாதாரணமாக எல்லாருக்கும் அனுப்புவதுபோல அழைப்பிதழ் அனுப்பிவிட்டு நான் இருந்திருக்கலாம். அச்செய்தியை நேரிலேயே தெரிவிக்கக் கொழும்புக்கு வந்திருப்பது தவறு' என்பது என் நண்பன் சிவலிங்கத்தின் அபிப்பிராயம். அவன் காலையிலே சொன்னான்.

"ஒவ்வொரு மனிதனிலும் மறைந்து கிடக்கும் மிருக சுபாவம், ஓரோர் வேளை பீறிக்கொண்டு வெளிப்பட்டு விடுகின்றது. உன் திருமணச் செய்தியைப் பத்மாவிடம் தெரிவிப்பதனால் என்ன பயன் ஏற்படப்போகிறது? அவள் தன் வாழ்வை நினைத்து, மீண்டும் ஒருமுறை பெருமூச்சு விடுவாள். அதை ரசிப்பதை-அதாவது பிறரின் துன்பத்தில் இன்பங்காணும் உன் மிருக சுபாவத்தைத் திருப்தி செய்வதற்காகவே, நீ உன் திருமணச் செய்தியை அவளிடமே நேரிற் சொல்ல வந்திருக்கிறாய்."

எவ்வளவு கொடூரமான வார்த்தைகள்?

இதே சிவலிங்கம்தான் மூன்ற ஆண்டுகளின் முன்னால் என்னிடம் சொன்னான்.

"நீ பத்மாவை உண்மையாகவே நேசிப்பவனாயிருந்தால் அவளை மனைவியாக்கிக் கொள்ளும் எண்ணத்தையே விட்டுவிடு. அவள் தன் குடும்பத்திற்காக வாழும் ஓர் ஆண்மகள். நம் சமுதாயத்தில் புரையோடி விட்ட குறைகள், எத்தனையோ பெண்களின் உணர்ச்சிகளைக் கொன்று அவர்களை ஆண்மகளாகவே வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூகக் கட்டு ககோப்பின் அடிப்படையை மாற்ற முயற்சி செய்யாமல் நீ 'காதல் கூதல்' என்றெல்லாம் உளறுவது முட்டாள்த்தனம். இதனால் உனக்கோ அவளுக்கோ ஏதும் பயனில்லை.

"அதனால் பத்மாவிடம் அன்பு கொள்ளவில்லை என்று எண்ணுகிறாயா?"

"ஏன், அவள்கூட உன்னிடம் அன்பு கொண்டிருக்கலாம். ஆனால் அவள் அன்பைத் திருடுவதன் மூலம் நீ ஓர் ஏழைக் குடும்பத்திற்கே துரோகம் செய்கிறாய். உத்தியோகத்தை எதிர்பார்த்துக் கல்வி, அந்த உத்தியோகத்தின் காரணமாகப் 'பொன் காய்த்த மரமாக' வரும் பெண். அதற்கும் பின்னாற் பிள்ளைகள், குடும்பம் என்கிற தீராச் சுமை...

அதற்கும் பின்னால் அந்தச் சுமையே விசாரமாய்க் காலங்காலமாக விழுந்து விட்ட வழமையான தடத்தில் உன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் அதந் சக்கரங்களில் நசிபட வேண்டியவர்கள் பத்மாவின் குடும்பத்தினர்தான். பேசாமல் ஊருக்குச் சென்று கொழுத்த சீதனத்தோடு எவளையாவது கட்டிக் கொள்வதுதான் உன் வரையிற் புத்திசாலித்தனம்."

சிவலிங்கம் எப்போதுமே இப்படித்தான் வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசுவான். பெரிய பெரிய புத்தகங்களைப் படித்துவிட்டு வாழ்க்கைத் தத்துவங்களை ஆக்ரோஷத்தோடு அவன் பேசினாலும் அவனைப் புத்தகப் பூச்சி என்று ஒதுக்கி விடவும் முடியாது.

இன்று காலையிலும் அவன் அந்தக் கொடூரமான வார்த்தைகளைச் சொல்லிவிட்டுக் கந்தோருக்குப் போய் விட்டான்!

திறந்து கிடந்த ஜன்னலூடாக இரட்டைத் தட்டி பஸ் ஆடீ அசைந்து புகையைக் கக்கிக் கொண்டு செல்வது தெரிந்தது. நிச்சயமாக அது 138ம் இலக்க பஸ். அந்த வண்டி கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ் வழியாக நாரஹேன்பிட்டிக்குச் செல்கிறது.

இந்த பஸ்ஸ’ல்தான் நானும் பத்மாவும் அவரவர் காரியாலயங்களுக்குச் செல்வோம். இன்றைக்கும் இந்த பஸ்ஸ’ல் அவள் பிரயாணம் பண்ணலாம். செக்கச் செவேல் என்ற ஒற்றை நாடியான அவள் சரீரம் தன் செழுமை குன்றாது ஆசனத்திலமர்ந்திருக்கும். நேர்வகிட்டின் கீழே பிறை நெற்றியில் குங்குமத்திலகம் என்றைக்கும் போலப் பளிச்சிடும். ஒற்றை வடச் சங்கிலிகூட இன்றைக்கும் அப்படியே தானிருக்கலாம்.

இன்றைக்கும் அவள் வயதை இருபதும் மதிக்கலாம். இருபத்தெட்டும் மதிக்கலாம். 'காலம் மதித்தற் கரியனளாயினும் கன்னியளாம்' எனப் பாரதி கண்ட பெண்போல வயதேறியதாக அந்தப் புன்னகை. அது கூட அப்படியே இருக்கலாம். அவள் உத்தியோகங்கூட இன்னும் ஒருபடி உயராமல், அவள் அதே 'ரைப்பிஸ்ற்' ஆகவும் இருக்கலாம்.

நான் சிகரட்டைப் பற்ற வைக்கிறேன். அந்தச் சிறிய அறையிலே புகை மூட்டம் சூழ்கிறது. அந்தப் புகை மூட்டத்தின் நடுவே தீக்கொழுந்து போலப் பத்மா நெளிகிறாள்.

139ம் நம்பர் பஸ்ஸ’யிலே ஆறு மாதங்களாக அவள் என் சகோரதப் பயணி. கொழும்பு நெருக்கடியில், காலையில் அவரவர் காரியலாயத்திற்குச் செல்லும் அவசரத்தின் இயந்திர கதியில் எல்லாருமே உணர்ச்சியற்ற சடங்களாய்க் காரியாலயம் என்ற நாழியரிசி விவகாரத்தில் ஏகாக்கிரஹ சிந்தையராய்ப் பயணஞ் செய்கையிற் காதலாவது மண்ணாங்கட்டியாவது?

ஆனால் ஆறாம் மாதத்தில் எனக்கு அந்த விபத்து ஏற்பட்டது!

சம்பள தினம். சக ஊழியராகிய நமசிவாயமும் நானும் சைவக் கிளப்பிலே வழமைக்கு மாறாக ஏதேதோ பட்சணங்களை மேய்ந்து விட்டுக் கோப்பி குடித்து வெளி வருகையில் நமசிவாயம் சொன்னான்.

"நான் கொம்பனித் தெருவுக்குப் போகவேண்டும். உங்களுக்க ஆட்சேபனையில்லை என்றால் நீங்களும் என்னுடன் வரலாம்."

என் 'மடிக்கனம்' அதற்கென்ன என்று சொல்லவைத்தது. இருவரும் பஸ்ஸ’ல் ஏறிக்கொண்டு போனோம்.

மாதா கோயிலடியில் பஸ் விட்டிறங்கியதும் நமசிவாயம் நடக்கத் தொடங்கினார். கொழும்புக்கு வந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அன்றுவரை என் காலடிகள் படாத முடுக்கிலே அவருக்குப் பின்னால் நானும் நடந்து கொண்டிருந்தேன். நடந்து கொண்டிருக்கையில் அவர் சொன்னார்.

"என் தாய் வழியில் ஒன்றுவிட்ட சின்னம்மா ஒருத்தி இங்கே இருக்கிறா. நான் அவவைச் சந்தித்து இரண்டு மாதங்களாகிவிட்டன. அவ நான் போகல்லியே என்று கோவிச்சுக் கொள்ளப் போறா"

"அதற்காகத்தான் என்னைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்தீர்களோ?" என்று கேட்டுச் சிரித்தேன் நான்.

நமசிவாயம் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னார். "எல்லாரும் அவரவர் கஷ்டங்கள் தலைக்குமேலே இருக்கின்றன. இரண்டு மாதங்களாக எனக்கு இங்கே வர நேரமே கிடைக்கவில்லை. விதவையாகி ஐந்து பிள்ளைகளோடு கஸ்ரப்படும் அவவுக்கு என்னால் அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் அடிக்கடி விசாரித்துக் கொள்வது மனத்தெம்பையாவது கொடுக்கும்."

நாங்கள் பேசிக் கொண்டே நடக்கையிற் தெரு விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன. எண்ணெய் வற்றி அணையு முன்பாக எகிறித் துடிக்கும் நெய்விளக்கின் சுடர்போலக் கொழும்பு நகரம் உயிரித் துடிப்போடு அலட்டிக் கொண்டிருந்தது.

விலை சரஸமான கீரையையும், காய்கறிகளையும் சட்டியிற் போடுவதற்குத் தயாராக அரிந்து வைத்துவிலை கூவும் பெட்டிக்காரிகள், சந்தியிலே, 'மாபிள்' விளையாடும் சிறுவர்கள், நெல்லிக்காய், பலாக்கொட்டை மாங்காயத்துண்டு இவைகளை மிளகுப் பொடியோடு விற்கும் சுளகுக்காரிகள்... எல்லாரையும் கடந்து சந்தின் வளைவிலிருந்து வீட்டை அடைந்தோம்.

தெருக்கதவைத் தட்டியதும், ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வந்து கதவைத் திறந்து நமசிவாயத்தை வரவேற்றாள். அவர் குறிப்பிட்ட சின்னம்மாவாகத்தானிருக்கும் என்று எண்ணிக்கொண்டு நமசிவாயத்தின் பின்னால் நான் விறாந்தையில் ஏறினேன்.

பத்தடி நீளமான விறாந்தையில், உள் அறைக்குச் செல்லும் கதவு நிலைக்கு மேலாகப் பாலமுருகனின் படம் தொங்கிற்று. விறாந்தையின் நான்கு மூலைகளிலும் நான்கு கதிரைகள்.

நமசிவாயம் அமரச் சொன்னதும் நான் தெருவைப் பார்த்துக் கொண்டு கதிரையில் அமர்ந்தேன்.

திரைச்சீலையை நீக்கிக்கொண்டு "அண்ணர் வந்திருக்கிறார்" என்று உள்ளே குரல் கொடுத்த சின்னம்மா மூன்றாவது நாற்காலியில் அமர்ந்து கொண்டு "இரண்டு மாசமா இந்தப் பக்கமே உன்னைக் காணவில்லையே தம்பி" என்றாள்.

"நேரமேயில்லைச் சீனியம்மா" என்று நமசிவாயம் சொன்னபோது, அவர் பேச்சில் மன்னிப்புக் கோரும் தோரணை மேலோங்கி நின்றது.

மௌனம்.

திரைச்சீலையைப் பிளந்து கொண்டு அவள் தோன்றினாள். செக்கச் செவேல் என்ற ஒற்றை நாடியான சரீரம், நேர்வகிட்டின் கீழே பிறைநெற்றியிற் குங்குமத்தின் பளிச்! மார்பிலே ஒற்றைவடச் சங்கிலி. உணர்ச்சியற்ற சடமாய்க் காரியாலயம் என்ற நாழியரிசி விவகாரத்தில் ஏகாக்கிரஹ சிந்தையனாய்ப் பஸ்ஸ’ல் பயணம் பண்ணும்போது என்னைக் கவராத அவளது நீண்ட சாட்டைப் பின்னல், இப்போது என் மனதைச் சொடுக்கிற்று.

அவள் என்னைப் பார்த்துப் புன்னகை வேறு புரிந்தாள்!

"என் தங்கை. முனிசிப்பல் காரியாலயத்தில் ரைப்பிஸ்ராக இருக்கிறாள். பெயர் பத்மா" அவளை அறிமுகப் படுத்தி வைத்தார் நமசிவாயம்.

"பஸ்ஸ’லே சந்தித்திருக்கிறேன்" என்றேன் கைகூப்பிக் கொண்டே.

"நானும் நச்தித்திருக்கிறேன்" என்று சொல்லி, மீண்டும் புன்னகை புரிந்தாள் பத்மா.

நமசிவாயம் தன் சின்னம்மாவோடு ஏதேதோ கதைத்தார். காலஞ்சென்றுவிட்ட தன் கணவரின் ஓய்வூதியம் முக்கிய விடயமாக இருந்தது. இடையிலே வீட்டோடு இருக்கும் இரண்டாவது மகள், பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கும் மூன்றாவது புத்திரி, விபரந் தெரியாத சிறுவர்களான இரண்டு புத்திரர்கள்....

நான் திரைக்குள் மறைந்துவிட்ட சௌந்தர்யத்தை என் மனத்திரையிலே வரைந்து கொண்டிருந்தேன்.

மீண்டும் திரையைக் கிழித்துக் கொண்டு பத்மா தோன்றினாள். அவள் கைகளிலே தேநீர்த் தட்டு இருந்தது.

நமசிவாயமும் நானும் தேனீரைக் குடிக்கையிற் பத்மா கதவு நிலையில் ஒருக்கணித்துச் சாய்ந்து கொண்டு நின்றாள். கழுநீர் மலரோடு முதிரா இளைஞர் ஆருயிரையும் திருகிச் செருகப் பெண்களால் முடியுமாயிருந்தால் ஏன் தேனீரோடு அவள் அழகையும் சேர்த்துப் பருக என்னால் முடியாதா?

எட்டு மணிக்கு மேல் நாங்கள் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டோம்.

அன்றையச் சந்திப்பின் பின்னர் பஸ் பயணம் எனக்கு இனித்தது. அது வாழ்க்கைப் பயணமாகவே என்னுள் வளர்ந்தது. பத்மா தன் புன்னகையினாலும் சரளமான பேச்சினாலும் என் நம்பிக்கைக்கு வலுவூட்டினாள்.

ஆனால் மனதுட் கனிந்த ஆசையை விண்டு காட்டிய போதுதான் சிவலிங்கம் சொன்னான்.

"நீ பத்மாவை உண்மையாகவே நேசிப்பதாக இருந்தால், அவளை மனைவியாக்கிக் கொள்ளும் எண்ணத்தையே விட்டுவிடு. அவள் தன் குடும்பத்திற்காக வாழவேண்டிய ஒரு ஆண்மகள். நம் சமுதாயத்திற் புரையோடிவிட்ட குறைகள், எத்தனையோ பெண்களின் மென்மையான உணர்ச்சிகளைக் கொன்ற அவர்களை ஆண்மக்களாகவே வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றன. சமூகக் கட்டுக்கோப்பின் அடிப்படையை மாற்ற முயற்சி செய்யாமல் காதல் கூதல் என்றெல்லாம் உளறித் திரிவது முட்டாள்த்தனம்."

மனித மனத்தின் தனித்துவமான, மென்மையான உணர்வுகளைச் சிவலிங்கம் என்றைக்குமே ரசிப்பதில்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அனுபவிக்காமல், எல்லாரும் இன்புற்று வாழும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பைத்தியக்காரத்தனமான முயற்சியில் தீவிர நம்பிக்கை கொண்டு மனத்தை இரும்பாக்கிக் கொண்டு வாழ்கிறான். அவனும் அவனது இரும்புத் தத்துவமும் வார்த்தைகளிலே வடித்துக் காட்டமுடியாத மெல்லிய நாதஸ்வர இசையாய், நாத ரூபத்தில் என் மனதில் நடத்தும் ஆலாபனையைக் கொன்றுவிடவில்லை.

நான் பத்மாவைக் காதலித்தேன்!

சிவலிங்கம் காதலையே நையாண்டி பண்ணினான்.

நான் அவனது கேலியைப் பரிசோதித்து விட எண்ணினேன்.

அன்று என் காரியாலயத்தை விட்டு ஒரு மணி முன்னதாகவே புறப்பட்டு விட்டேன். அரை மைல் தூரம் சிந்தனையோடு நடந்து நகர மண்டபத்து பஸ் தரிப்பிற் தரித்துப் பத்மாவுக்காகக் காத்துக்கொண்டு நின்றேன்.

முகத்தில் அதே புன்னகையோடு பத்மா வந்தாள் அவளைக் கண்டதும் நான் சொன்னேன். "பத்மா உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்."

"பஸ்ஸ”க்காக இல்லையா?"

"இல்லை. உன்னோடு சில நிமிடங்கள் தனிமையிற் பேச வேண்டும்."

"நிமிடங்கள் என்ன. மணித்தியாலக்கணக்காகவே பேசிக் கொண்டிருக்கலாம்."

"அப்படியாயின் இந்த நடு வீதியில் இல்லாமல் எங்காவது போய் இருந்து பேசுவோம்" என்று சொல்லிக் கொண்டே நான் நடந்தேன். பத்மாவும் ஆட்சேபிக்காமல் என்னோடு வந்தாள்.

என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது? என்றே எனக்குத் தெரியவில்லை. இருவரும் மௌனமாக நடந்து சென்று அருகேயுள்ள முனிசிப்பிற் பூங்காவில் பெஞ்சில் அமர்ந்து கொண்டோம்.

"பேசவேண்டும் என்று அழைத்து வந்து ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?"

எனக்கு உயிர் வந்தது. "பத்மா என்னை விளங்கிக் கொண்டிருப்பாய் என எண்ணுகிறேன்."

"நீங்களும் விளங்கிக்கொண்டிருப்பீர்கள்."

பட்டை தீர்த்த இரத்தினச் சுருக்கமான அவள் பதிலில் என் எதிர்காலக் கனவுகள் ஜாஜ்வல்லியமாக மின்னின. என் கற்பனா சுகத்தில் என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தோன்றவில்லை. உணர்ச்சிப் போதையில் அவள் கையை, தட்டச்சு இயந்திரத்தில் விளையாடும் அவள் மெல்லிய விரல்களைப் பற்றினேன்.

அவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டு நீண்ட பெருமூச்செறிந்தாள்.

"ஏன்?'

"நான் என் குடும்பத்திற்கா-என் தங்கை, தம்பிகளுக்காக வாழவேண்டிய ஆண்மகள்."

"அப்படியானால் எனக்காக...."

"உங்கட்காக எவளே ஒருத்தி பிறந்தேயிருப்பாள். அந்த எவளோ ஒருத்தியாக நான் இருக்கமுடியவில்லையே என்பதுதான் என் வாழ்க்கை."

"ஏன் இருக்கக் கூடாது?"

"இதற்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன்."

"உன் குடும்பத்தினருக்காக மட்டுமல்ல. உனக்காகவும் வாழவேண்டும். அந்த வாழ்கையில் நான் உன்னோடு...."

"தனிப்பட்ட மனிதனின் அல்லது ஜ“வராசியின் உயிர்ப்பாசத்தினால் நிகழும் அவஸ்தைதான் வாழ்க்கை இந்த வாழ்க்கை இந்த ஜன்பத்தில் எனக்குச் சிந்திக்காமலே இருக்கலாம். ஆனால் தோற்றம், நிலைமை, முடிவு என்ற முக்கூறுகளின் இடைப்பட்ட வாழ்வை நான் விரும்பாவிட்டாலும் வாழ்ந்தே ஆகவேண்டும்."

"தத்துவம் பேசுகிறாயா பத்மா?"

"தத்துவம்!" பத்மா வாய் விட்டுச் சிரித்தாள். என்னை-ஏன் இவ்வுலகையே கேலி செய்வதுபோலத் தோன்றிற்று அவள் சிரிப்பு! தன்பாட்டிற் சிரித்து முடித்து விட்டுப் பத்மா சொன்னாள்.

"சாதாரணத் தபாற்காரனின் மூத்த மகளாக நான் பிறந்தேன். இது என் தோற்றம். இரண்டு சகோதரிகளுக்கும், இரண்டு சகோதரர்களுக்கும் விதவைத் தாயாருக்கும் ஒருவேளைச் சோறாவது கொடுக்கும் 'ரைப்பிஸ்ற்' என்ற இயந்திரமாக நான் வாழ்கிறேன். இது என் நிலைமை. மறைவு என்ற மூன்றாங் கூறைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இந்நிலையிற் தனியொருத்தியான என் ஆசாபாசங்கட்கு இடங்கொடுக்கும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். இது இப்போதைக்கு முடியாத காரியம் என்று நான் நினைக்கிறேன்."

"உன் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்க மாட்டேனென்று எண்ணுகிறாயா?"

"அதைப் பற்றிய பேச்சே எழவில்லை. ஆனால் நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்கள். நீங்களும் நானும் நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைப் பற்றி எண்ண நேரமோ, அவகாசமோ, தகுதியோ கிடைக்காமலிருக்கலாம். மனமிருந்தாலும்கூட...."

"உன் உழைப்பிலிருந்து நான் ஒரு சதமும் எதிர்பார்க்க மாட்டேன்."

"நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் வாழ்க்கையை விரும்பும் தாங்கள் எப்போதாவது ஒரு காலத்தில், என்னை மனைவியாக்கிக் கொண்டமைக்காக வருந்துவீர்கள் என்பதையும் திட்டமாகச் சொல்கிறேன்."

"அப்படியானால் உன் முடிவு?"

"ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேனே" என்ற பத்மா, என் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து நின்று "வாருங்கள் நேரமாய்விட்டது. வீட்டுக்குப் போகலாம்" என்றபடியே நடந்தாள்.

நானும் எழுந்து நடைப்பிணமாக அவளைப் பின் தொடர்ந்தேன். ஒரு சில சுவடுகள் வைத்ததும் அவள் திரும்பி நின்று என் வலக்கையைத் தன் இரு கைகளாலும் பொத்திப் பிடித்தபடி "என் இயலாமைக்காக என்னை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவின் காரணமாக நீங்கள் என் வீட்டுக்க வருவதையோ, என்னுடன் பேசுவதையோ நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்றாள். அவள் முகம் கலக்கம் அடைந்திருந்தது. சத்தியங் கேட்கும் தோரணையிலிருந்தது அவள் பேச்சு.

அவள் கோரிக்கையை மறுக்க முடியாதவனாய் "உன் விருப்பப்படியே நடப்பேன்" என்று உறுதியளித்தேன் நான்.

கலக்கமடைந்திருந்த அவள் முகம் என் உறுதியிற் தெளிவடைந்தபோது அம்முகத்தில் ஓர் ஆண்மை படர்வது போன்ற பிரமை தட்டிற்று எனக்கு.

அந்தச் சம்பவத்தின் பின்னர் நான் ஆறு மாதங்கள் தான் கொழும்பிலிருந்தேன். அதே 138ஆம் நம்பர் பஸ். வயதேயில்லாத அவள் புன்னகை. சரளமான பேச்சு.

எனக்குப் பதவி உயர்வு கிடைத்ததைப் பத்மாவுக்குத் தெரிவித்தபோது அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்!

பிரதமலிகிதராக ஊருக்கு மாறிக் கொள்கையில் அவள் வீட்டுக்குச் சென்று பிரியாவிடை சொன்னபோதும் பத்மா புன்னகையுடன் என்னை வழியனுப்பினாள்.

* * *

திடீரென்று அறைக்குள் நுழைந்த சிவலிங்கம் "நித்திரை செய்வாய் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இத்தனை சிகரட்களும் நீ ஊதித் தள்ளியவை தானா? என்ன யோசிக்கிறாய்?" என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.

"என் கதை இருக்கட்டும். கந்தோருக்குச் சென்ற நீ ஏன் இடையிலே வந்தாய்?" என்று எதிர்பாணந் தொடுத்தேன் நான்.

"என்ன இருந்தாலும் நீ என் நண்பன். மூன்று வருடங்களின் பின் மாப்பிள்ளைக் கோலத்தில் வந்திருக்கிறாய்? உன்னைத் தனியாக விடலாமா? என்று எண்ணிய நான் ஒருநாள் லீவு போட்டு விட்டு ஓடிவந்து விட்டேன். வா.வெளியே போகலாம்" என்றான் சிவலிங்கம்.

"போகத்தான் வேண்டும். பத்மாவிடம் நேரிற் சென்று திருமண அழைப்பு விடுவதும் பிழை என்று விட்டாய். வெளியிற் சென்று கந்தோருக்குப் போன் செய்தாவது நான் அவளுக்குத் தெரிவிக்க வேண்டும்."

"முட்டாள்!" சிவலிங்கம் கத்தினன்.

நான் அதிர்ந்து போனேன்.

சில வினாடிகள் கழித்து சிவா சற்று ஆதுரத்தோடு சொன்னான். "ராசா, என்னதான் இருந்தாலும் பத்மா ஒரு பெண். உன்னை நேசித்த - அல்லது உன் பாஷையிற் சொன்னால் உன்னைக் காதலித்த-ஆனால் கல்யாணஞ் செய்ய முடியாத நிலையிலிருந்த ஒரு பெண். உன் திருமணச் செய்தி அவள் இதயத்தில் உணர்ச்சிக் குமுறல்களைக் கிளப்பவே கிளப்பும். பல ஆடவர்களுக்கு இடையே போனில் அவள் தவித்துப் போய் விடுவாள். அதற்காகத்தான் வேண்டாம் என்கிறேன்."

அவன் சொல்லியது எனக்கும் சரியாகவே பட்டது. உடையணிந்து கொண்டு அவனோடு புறப்பட்டேன். எங்கெங்கெல்லாமோ குஷ’யாக அலைந்துவிட்டுப் பகற்காட்சிக்கு ஒலிம்பியா படமாளிகைக்கு வந்து சேர்ந்தோம்.

ரிக்கற்றை எடுத்துக்கொண்டு சிவா சொன்னான். "நீ பார்க்க வேண்டிய படம், ஓஸ்கார் வைல்டின் 'ஒரு லட்சியக் கணவன்' என்ற கதை..."

படம் முடிவடைகையில் ஐந்து மணியாகி விட்டது. பட மாளிகையை விட்டு வெளியே வந்ததும் "நான் எப்படியும் பத்மாவைப் பார்த்துவிட்டே வரவேண்டும்" என்றேன் சிவாவிடம்.

"அப்படியானால் நீ இதுவரை படமே பார்க்கவில்லை. பத்மாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்திருக்கிறாய்" என்று கேலி செய்துகொண்டே "சரி போய்வா. உனக்காகச் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பேன்" என்று கூறி விடை கொடுத்தான் சிவா.

* * *

நான் பத்மாவின் வீட்டையடைந்தபோது பத்மாவும், அவள் இளைய தங்கையும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். என்னைக் கண்டதும் பத்மா-ஏன் அவள் தங்கையும் விழுந்து விழுந்து உபசாரம் பண்ணத் தொடங்கினார்கள்.

தங்கை உள்ளே சென்றபோது நானும் பத்மாவும் மட்டும் விறாந்தையிற் தனித்து விடப்பட்டோம். மூன்று வருடங்களுக்குப் பின்னரும் நான் அவளிடம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. நேர்வகிட்டின் கீழ்ப் பளிச்சென்ற குங்குமம். ஒற்றைவடச் சங்கிலி. முகத்தில் அதே புன்னகை.

"அம்மா எங்கே?"

"கோயிலுக்குப் போயிருக்கிறா. வந்து விடுவா. ஏன்? என்னோடு தனியாய் இருக்கப் பயமாக இருக்கா?" அதே சரளமான பேச்சு.

"இனிமேற் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை."

அவள் என்ன நினைத்தாளோ... தன் வழக்கத்திற்கு மாறாகச் சற்று நேரம் மௌனமாக-மௌனமாகவே இருந்தாள்.

"உன் மூத்த தங்கையும் அம்மாவோடு போய் விட்டாளா?"

"இல்லை. அவளுக்குத் திருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்று விட்டாள்." பத்மாவின் குரலின் முந்திய மிடுக்கு இல்லாமையை என்னால் உணர முடிந்தது. அதை உணர்ந்ததும் நான் நெடுமூச்செறிந்தேன்.

அவள் மீண்டுஞ் சொன்னாள். "அடுத்தவள் தன் படிப்பை முடித்துக் கொண்டு விட்டாள். அவளுக்கு எங்காவது ஒரு உத்தியோகம் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்."

'ஏன்? அவளையும் உன்னைப்போல ஓர் இயந்திரம் ஆக்கி விடவா?"

"இல்லை. இயந்திரமாக இருந்த நான் மனித உணர்ச்சிகளோடு வாழ்வதற்காக. அதாவது வாழ்க்கைக்காக."

எனக்கு இதயத்தில் யாரோ சம்மட்டி கொண்டு அடித்ததைப்போல இருந்தது. பத்மா தொடர்ந்தாள்.

"என் மூத்த தம்பியும் ஏதோ ஒரு கப்பற் கம்பனியில் தனக்கென்று ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டு விட்டான். ஒழுங்காகத் தாய்க்கமைந்த பிள்ளையாக இருக்கிறான். தங்கைக்கும் ஒரு உத்தியோகம் கிடைத்துவிட்டால் அதற்பிறகு நான்..."

பத்மா என் முகத்தை ஆவலோடு நோக்கினாள். அவள் கண்கள் எதற்கோ ஏங்கின.

"காலம் கடந்து விட்டது பத்மா. எனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அச்செய்தியை நேரிற் தெரிவிக்கத்தான் உன்னிடம் வந்தேன்" என்று நான் கூறுகையில் என் கண்கள் பனித்தன. தன் குடும்பத்தினர்க்காக வாழ்ந்த அந்த ஆண்மகளின் கண்­ர் என் ஆண்மையச் சித்திரவதை செய்தது. தாங்கிக்கொள்ள மாட்டாத வகை "நான் வருகிறேன் பத்மா" என்ற சொல்லிவிட்டுத் தெருவிலிறங்கி விரைவாக நடந்தேன். என் மனம், நான் எப்போதோ படித்திருந்த கவிதையடிகளை முணுமுணுத்தது.

புண்பூத்தமேனி புகைபூத்த உளளமடா-அவள்
மண்பூத்த பாவம் நம் மதிபூத்த கோரமடா.

திளபதி ஆண்டு மலர் 1972


தெய்வம் ஆசி வழங்குகிறது

வழக்கம் போல அதிகாலை பஸ்ஸைப் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து சந்தியில் இறங்கிய ஆசிரியர் சுந்தரலிங்கம், ஐப்பசி மாதத்து மழையைத் தாக்குப்பிடித்து ஒருமைல் தூரம் சேற்று வழியில் பதனமாக நடந்து பாடசாலையை அடைந்தபோது, எதிர் வீட்டுக்காரன், நேற்று வந்த கடிதத்தை அவரிடம் நீட்டினான்.

அதிபர் என்ற பொது விலாசத்திற்கு வராமல், அவரது சொந்தப் பெயருக்கு வந்த அரசாங்கக் கடிதம் என்பதனால் ஆசிரியர் அக்கடிதத்தை எடுத்துப் பரபரப்புடன் படித்தார். ஒருமுறைக்கு இரண்டு மூன்றாந் தடவையாக அதைப் படித்தார்.

1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதியுடன் உமக்கு ஐம்பத்தைந்து வயது பூர்த்தியாகி விடுகின்றது. அன்றைய தினமோ அதற்கு முன்னரோ பாடசாலைக்குரிய சகல பொருட்களையும் பிரதம உதவீஆசிரியடமோ அல்லது நாம் குறிப்பிடும் வேறு யாராவது ஒருவரிடமோ ஒப்படைக்க வேண்டும். உமது உபகாரச் சம்பளம் சம்பந்தமாக இத்திணைக்களத்தோடு தொடர்பு கொள்ளவும், சேவை நீடிப்புத் தேவையாயின் ஆறு மாதங்களுக்கு முன்னதாக எமக்கு விண்ணப்பிக்கவும்.

மீண்டும் ஒரு முறை அக்கடிதத்தைப் படித்தார் சுந்தரலிங்கம்.

சேவை நீடிப்பு....!

சுந்தரலிங்கத்தார் தன்னை அறியாமலே புறுபுறுத்துக் கொண்டார்.

"இந்தச் சேவை நீடிப்பு யாருக்கு வேண்டும்? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று பழைய வாக்கியம் இருக்கத்தான் செய்கிறது. "ஆசிரியன் நாட்டின் அச்சானி. அவர்களடைய சேவை மிகமிக மகத்தானது" என்று பேசிக்கொள்ளாத அரசியல்வாதியே கிடையாது தான்.

ஆனால், அந்த மகத்தான சேவையைச் செய்துவரும் "இறைவனுக்கு" நாட்டில் உள்ள அந்தஸ்துதான் என்ன?

ஆசிரியர் சுந்தரத்தின் மனப்பாம்பு. இறந்தக்காலச் சருகுகளில் சரசரவென்று ஊரத்தொடங்கியது.

முப்பத்து மூன்று ஆண்டுகளின் முன்னே, வெள்ளைக்காரனின் ஆட்சி அஸ்தமித்து, இந்த நாடு சுதந்திரோதயத்தைத் தரிசித்துக்கொண்டிருந்த பொற்காலம். அந்தக் காலத்திலேதான் அவர் ஆசிரியப் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறுகிறார்.

மூன்று மாதங்களின் பின்னால் அவருக்குப் புருஷ லட்சணமான உத்தியோகம் கிடைத்தது.

"நான் அழகாகத்தான் இருப்பேன்" என்று அடம்பிடித்துக்கொண்டு நிற்கும் கண்டி நாட்டின் நித்திய சௌந்தர்யம் இருபத்திரண்டு வயது இளைஞரான அவரைச் சொக்குப் பொடி போட்டு மயக்கிற்று. பசுமை போர்த்த மலைகள், மலக்குவடுகளிலிருந்து உருக்கிய வெள்ளியாய் இழிந்துவரும் நீரோடைகள், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் புஷ்பித்துக் கிடக்கும் பள்ளத்தாக்குகள் எல்லாமே அவரைக் கவிஞனாகவே மாற்றிவிட்டன.

ஆனால் இந்நாட்டின் சுதந்திரோதயம் அந்தக் குறிஞ்சி நாட்டு உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறித்தபோது; நாளைக்கு இதுதானே நமக்கும் நடக்கப் போகின்றது என அவர் உள்ளுணர்வு சொல்லிக் கொள்கையில் அவரது கவித்துவம் "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு" நிர்க்கதியாக நிற்கும் அத்தொழிலாள் மக்களுக்காகக் கண்­ர் வடித்தது. அவரது மன உளைச்சல்கள் நிர்க்கதியாகிவிட்ட அச்சமூகத்துக் குழந்தைகளுக்கு ஆகக்குறைந்தது எழுத்தறிவையாவது புகட்டிவிட வேண்டும் என்ற கர்ம யோகமாய் அவருள் விரிந்தன.

ஆ! இந்தத் தொழிலாள வர்க்கத்துக்குத்தான் எழுத்தறிவிக்கும் இறைவன்மேல் எத்தனை மரியாதை!

ஓருநாட் சாயங்கால வேளை.

மலைக்குவடுகளில் வீசியெறியப்பட்ட சாம்பலின் மூட்டமாக மேகம் படர்ந்து கொண்டிருந்தது. சற்று முன்னர் பெய்த ஒரு பாட்டம் மழையில் தலைமுழுகிய தேயிலைச் செடிகளின் குமரியழகைத் தலை நீட்டிய தளிர்களில் தரிசித்தவராக அவர் "சித்தம் போக்கு சிவம் போக்காக" நடந்து கொண்டிருந்தார்.

அருமையான அமைதி...! தூரத்தே தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து வரும் ஓசை, அந்த அமைதியைக் குலைக்கத் திராணியற்றதாய், அந்த அமைதியில் அடங்கிற்று.

சுந்தரம் நடந்து கொண்டேயிருந்தார்.

அவருக்கு எதிராக வந்துகொண்டிருந்த அவரது சக ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.

"மாஸ்டர் கொஞ்சம் கெதியாக நடவுங்கள்."

"ஏன்.....?"

"ஏனா....? பின்னால் திரும்பிப் பாருங்கள். தங்கள் வேலை முடிந்து தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைத் தாண்டி முன்னால் செல்ல முடியாமல்..."

"ஏன் அவர்கள் போவதை நாங்கள் தடுத்தேனா...?"

"தடுப்பது போலத்தான். அவர்கள் உங்களை முந்திக் கொண்டு போகமாட்டார்கள். இது அவர்கள் நமக்குக் காட்டும் மரியாதை...."

சுந்தரம் திரும்பிப் பார்க்கிறார். புல்லுக் கத்திகள், முள்ளுக்கிண்டிகள் சகிதம் பத்துப் பதினைந்து தொழிலாளர்கள். அவர் ஓரமாக ஒதுங்கிக் கொண்டு "நீங்கள் போங்கள்" என்கிறார்.

அத்தொழிலாளர்கள் தோளிலிருந்த ஆயுதங்களைக் கையிலெடுத்தபடி அடக்கமாக அவரைத் தாண்டிச் செல்கின்றனர்.

ஆசிரியருக்கு மெய்சிலிர்க்கிறது! ஏற்கனவே கர்மயோகமாக அவருள் விடிந்துவீட்ட "இறைவன் சேவை" அந்தக்கணமே பக்தியோகமாய், அந்த யோகமே அவருக்கு எல்லாமாய்... கீதோபதேசம் குருசேத்திரத்தில் மட்டுமா நடக்க வேண்டும்?

இதெல்லாம் பழைய...பழைய கதை...

மலையகத்து மக்கள் சிவனாரின் தென்னாட்டில் இருந்து வந்தவர்களின் பரம்பரையினர்தான். ஆனால் அவர்கள் ஐந்தொழில் புரியும் அம்பலவாணராயல்ல; அப்படியிருந்திருந்தால் மதுரை மாறனின் பிரம்படி அந்தக்கணத்திலேயே அண்டசராசரங்களின் மீதும் பட்டது போலச் சுதந்திரோதய காலத்திலேயே அவர்கள் மேலே விழுந்த அடி நம்மீதும் பட்டிருக்கும்.

ஆனால் அந்த அடி ஐம்பத்தாறில் விழுந்தது. அடுத்த அடுத்த ஆண்டுகளில் சுந்தரம் ஊருக்கு மாற்றம் பெற்றார்.

மலைநாட்டுச் சேவைக் காலத்திலேயே அவருக்கு ஊரிலே திருமணமாகியிருந்தது. "ஊரோடு மாற்றம்" என்ற ஜ“வன்முக்தி இப்போது அவருக்குச் சித்தித்திருந்தாலும் ஆண்டுகள் வளரவளரக் குடும்பச் சுமையும் கூடிக் கொண்டுதான் வந்தது. ஆனால், என்றைக்கோ கர்மயோகமாய் விடிந்துவிட்ட அவரது சேவைமனப்பா மை அல்லும் பகலும் பாடசாலை மாணவர்கள் என்றே சிந்திக்க வைத்தது.

அந்தச் சிந்தனை திறமை மிக்க ஆசிரியர் வரிசையில் அவரைச் சேர்த்தது.

ஆனால் திறமையும் சேவை மனமும் இருந்தால் மட்டும் போதுமா...?

அவருக்கு வளைந்து கொடுக்கத் தெரியவில்லை. எவருக்கும் கூழைக்கும்பிடுபோட அவரால் முடியவில்லை. 'காக்காய் படிக்க" மனமில்லை. ஆகவே, அவரோடு-ஏன் அவரு ககுப் பின்னாலும் சேவைக்கு வந்தவர்கள் பலரும் அதிபராக உயர்ந்தபோதும் சுந்தரம் ஆசிரியராகத் தான் இருந்தார்.

"என் சேவை மூப்புக்காக என்னை அதிபராக்கட்டும், அல்லது நிருவாக ரீதியான பரீட்சைப் பேறுகளின் அடிப்படையில் எனக்குப் பதவி உயர்வு தரட்டும். எந்த அரசியல்வாதியினதும் சிபார்சில் எனக்குப் பதவி உயர்வு தேவையில்லை" என்று அவர் நெஞ்சை நிமிர்த்தியதில் அவரிலும் சேவை மூப்புக் குறைந்தவர்களின் கீழ் உதவி ஆசிரியராகச் சேவை செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு அவர் ஆளானார்.

ஆனால் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை:

காலம் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. "உலகத் தொழிலாளர்களே ஒன்று பருங்கள்" என்ற தத்துவார்த்த கோஷத்தில் நம்பிக்கை கொண்ட அவர், தொழிற்சங்க அங்கத்தவராகிக் கொண்டு "பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு மொழி அடிப்படையில் சம்பள வித்தியாசம் இருக்கக் கூடாது. எல்லோருக்குமே சம சம்பளம் வேண்டும். எந்த ஆசிரியரும் கடமையினிமித்தம் கந்தோருக்கோ அல்லது வேறெங்கோ சென்றாலும், ஏனைய அரசாங்க ஊழியருக்குப் போல அவர்களுக்கும் பிரயாணச் செலவும், படிச்செலவும் வழங்கப்படல் வேண்டும்" என்று உரத்துக் குரல் எழுப்பினார்.

அவரது குரலுக்குப் பதில் கிடைக்காமலுமில்லை. சம சம்பளம் என்ற கோரிக்கை வெற்றியடைந்ததாகத் தோன்றியபோது, அவரது மாணவனாக இருந்த ஆசிரியருக்கும் அவருக்கும் ஒரே சம்பளம் கிடைத்தது! ஆகக் குறைந்தது மூன்று வருட சேவைக்கு ஒரு வருடச் சம்பள உயர்வாவது தேவை என்ற கோரிக்கை இன்னமும் கோரிக்கையாகவே இருக்கின்றது.

** இ.தொ. kaviyam6.mtf** வார்த்தை

** kaviyam5.mtf ன் தொடர்ச்சி**


பிரயாணச் செலவு, படிச்செலவு என்பன வார்த்தைகளில் வடிக்க முடியாத வேய்ங் குழலின் இனிய நாதம் போல இன்னமும் நாதரூபமாகவே இருக்கின்றது.

ஆனால் ஆறு ஆண்டுகளின் முன்னால் பரீட்சை ஒன்று எழுதிச் சித்தியடைந்ததில் அவர் அதிபராக உயர்ந்து விட்டார்.

ஆனாலும் அதனால் என்ன பயன்....?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே அவரது மாணவனாக இருந்தவன், எந்த அரசியல்வாதியையோ பிடித்து வங்கி உத்தியோகத்தன் ஆகிக் கொண்டு முப்பத்து மூன்று வருடங்கள் மட்டையடித்த அவரைவிட அதிகமாகச் சம்பளம் பெறுகிறான்.

மகா வித்தியாலயங்களில் பொருட் கணக்கெடுக்க வரும் தமது அலுவலக உத்தியோகத்தர்களோடு ஒரு சில ஆசிரியர்களும் அதே வேலையைச் செய்யப் பணிக்கப்படுவார்கள். கந்தோர் எழுத்தாளர்களுக்குப் பிரயாணச் செலவு. படிச்செலவு வேறு. ஆனால் ஆசிரியர்களுக்கு....?

அரசியல்வாதிகள் "ஆசிரியத் தொழில் மகா புனிதமானது" என்று சொல்லிச் சொல்லியே தமது வர்க்கத்தினரின் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். அவர்களிடம் அரைபட்டது போதும் என்று நாட்டின் அறிவாளிகள் நைஜ“ரியாவிற்கு ஸாம்பியாவிற்கும் செல்கிறார்கள்.

அந்த வசதியற்றவர்கள், ஒய்வு பெறுபதைத் தவிர வேறு வழியேயில்லை.

சுந்தரத்தின் நினைவு இழைகள் படீரென அறுபட்டது போலத் தோன்றிற்று. கண்ந்தான். ஆயினும் தன்னைச் சுற்றி நூலிழை பின்னும் பட்டுப்புழுவின் துரிதத்தோடு மீண்டும் நினைவு இழைகளை அவர் மனம் பின்னிக்கொள்கிறது.

வயிற்றுக்கும் வாய்க்குமே போதாது என்ற நிலையில் தான் அவரது சம்பளம். இந்த லட்சணத்தில் பிள்ளைகளின் "போடிங்" செலவு வேறு! எத்தனைதான் செட்டாகச் சீவித்தாலும் கடன்தான் மிஞ்சுகிறது. இந்த அழகில் மாதாமாதம் கிடைக்கும் வருமானமும் அடுத்த மே மாதத்துடன் நின்றுவிட்டால்....

சுந்தரத்தால் அந் நினைவைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நமது கந்தோர் என்ன நாம் ஒய்வுபெற்ற அடுத்த மாதமே உபகாரச் சம்பளத்தைத் தந்துவிடப் போகிறதா? அதற்குப் பலமாதங்கள் -ஏன் வருடங்கள் கூட ஆகலாம்.... உபகாரச் சம்பளத்தைப் பெறுமட்டும் எப்படித்தான் காலந்தள்ளுவது? சில்லென்றடிக்கும் ஐப்பசி மாதத்து வாடைக் கடுவலிற்கூட அவருக்கு வியர்த்தது.

நேற்றிரவு தன் சகதர்மினியிடம் நடத்திய சம்பாஷணை அவர் ஞாபகத்திற்கு வந்தது. அவள் கேட்டாள்.

"இப்பவே பென்ஷனுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க? அரசாங்கம் அறுபது வயசுவரை சேவை நீடிப்புத் தருகுதாமே..."

"இன்னமும் ஐஞ்சு வருஷமா? என்ர ஐம்பத்தைஞ்சு வருஷ வாழ்க்கையில் நாற்பத்தெட்டு வருஷம் பள்ளிக்குப் போய் அலுத்துப் போச்சு..." என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

அவரது நகைச்சுவையை விளங்கிக்கொள்ளாமல் அவர் மனைவி அலமருகையில் சுந்தரம் அதற்கு விளக்கம் சொன்னார்.

"பிறந்ததிலிருந்து ஐஞ்சு வருஷம் பள்ளிக்குப் போகல்ல. பிறகு எஸ்.எஸ்.சியைப் பாஸ் பண்ணிற்று ரெயினிங் கொலிஜ் போறவரைக்கும் இரண்டு வருஷம் பள்ளிக்குப் போகல்ல. மற்றக் காலமெல்லாம்-சரியா நாப்பத்தெட்டு வருஷம் பள்ளிக்குப் போய்ப் போய் அலுத்துப் போச்சு...."

"என்ன செய்றது, இன்னமும் இரண்டு வருஷமாவது போகத்தான் வேணும். அதுக்குள்ள மூத்த மகளுக்கு ஒரு வழி பிறந்..."

"அந்த வழி நான் உத்தியோகம் பாத்தாத்தான் பிறக்குமாம்...? எனக்கென்னவோ இந்த உத்தியோகமே அலுத்துப் போச்சு. அதிலயும் இப்ப படிப்பிக்கிற பாடசாலையில் படிப்பிக்கிறதே பெரிய வேதனையா இருக்கு. என்ர தரத்துக்கு நான் ஒரு பெரிய பாடசாலையிலே அதிபராக இருக்க வேண்டியவன்."

"இந்தக் கெறுவாலதானே ஏற்கனவே, உங்களுக்கு மூணாந்தர அதிபர் பதவி கிடைக்கல்ல. போய்வந்த இன்ரெ வியுக்கு அது கிடைக்கிற வரைக்கும் நீங்க கொஞ்சம் அமைதியாயிருங்க. அது கெடைச்சாக் கெடைக்கிற பென்ஷன்லயாவது பத்துப் பதினைஞ்சு வரக் கூடாதா?"

"இன்ரெயியூக்குப் போய் மூணு வருஷமாச்சு. அந்தப் பைல் எல்லாம் எந்தக் குப்பையில கிடைக்கதோ! அதுவாற தாயிருந்தாங்கூட நான் இன்னமும் சேவையில் இருக்க விரும்பல்ல. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பகடைக் காயாத் தள்ளப்பட்டு மாற்றம் பெறுபவன் வாத்தியார் மட்டுந்தான். வேற எந்தக் கந்தோர் பியோனைக்கூட மாத்த ஏலாது. ஐம்பத்தைஞ்சுக்குமேல ஒரு நிமிஷமும் நான் வேலை பார்க்கவே மாட்டேன்..."

"வேலையில்லாம என்ன செய்யப் போறீங்க"

"செய்யிறதா? நம்மூர் மகாவித்தியாலயத்திற்கு முன்னால கடலைத்தட்டி வைச்சி யாவாரம் பண்ணுவன். அப்பவாச்சும் தொறக்க வேண்டியவர்கள்ர கண் தொறக்கட்டும்...."

அவர் மனைவி நாடியைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு வேகமாக அடுக்களைக்குள் சென்று விடுகி‘ள்.

தனது தீவிரத்தின் மன உளைச்சல்களோடு சுந்தரம் சாய்கதிரையில் படுத்திருக்கையில் அடுத்த தெருச்செல்லையா அவரைத் தேடிக் கொண்டு வருகிறார்.

"மாஸ்டர், உங்களிட்டைத்தான் வந்தன்...."

"எனக்கிட்டவா? என்ன சங்கதி அண்ணன்....?"

"வேறொன்றுமில்ல மாஸ்டர். என்ர மூத்தமகன்ர வியாதிய இங்க ஒருத்தரும் கண்டுபிடிக்கிறாங்க இல்ல. திருகோணமலைப் பெரியாஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுக்கட்டாம். அங்க இருக்கிற டாக்குத்தர் ராமலிங்கம் உங்கட மாணவன் என்று சொல்வீங்களே, அவருக்கு ஒரு கடிதம் தந்தீங்க என்றா வசதியா இருக்கும்..."

சுந்தரத்தின் மனஉளைவுகள் கீழ் வெளியேறிவிட்ட புண்ணாகச் சற்று இதமடைந்தன.

"இருபது இருபத்திரண்டு வருஷத்துக்கு முன்னால் திருகோணமலைப் பட்டினத்தில அவனுக்குப் படிப்பிச்சன். ஆனாலும் இப்பவும் அவன் என்னை மறக்க மாட்டான்" என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை எழுதிச் செல்லையாவிடம் கொடுத்தார். அவரது சிறுமைகளை, அவரது வீழ்ச்சிகள், அவரது மன உளைவுகள், அவரது வேதனைகள் எல்லாமே அவரை விட்டு அகல. மலையாய் உயர்ந்து நின்ற சுவானுபூதத் தெம்புடன் ஆசிரியர் படுக்கைக்குப் போனார்!

பாடசாலையில் சலசலப்பு அதிகமாயிற்று. ஊதற்காற்றோடு துமித்துக் கொண்டிருந்த மழை நின்று விட்டதும், பாடசாலைக்குப் பிள்ளைகள் வரத்தொடங்கி விட்டார்கள். நேரமும் எட்டரைக்கு மேலாகிவிட்டது.

உதவி ஆசிரியர் வருவாரோ வரமாட்டாரோ! லீவுக்கடிதம் வந்தாலும் வரலாம். அவர் மந்திரியின் ஆள்!

ஆசிரியர் மணியை அடித்துப் பாடசாலையைத் தொடங்குகிறார். பிள்ளைகள் நிரைத்து நிற்க மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் தேவாரம் பாடுகிறான்.

"சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்"

மற்றவர்களை அவனைத் தொடர்கிறார்கள்.

பிரார்த்தனை முடிந்து மாணவர்கள் வகுப்புக்குச் சென்றதும் ஆசிரியர் பரம்பரமாகிறார்.

நான்காம் ஐந்தாம் வகுப்புக்குக் கரும்பலகையில் கணக்குகளை எழுதிவிட்டு மூன்றாம் வகுப்புக்கு மொழிப் பயிற்சியாக எழுத்து வேலை கொடுத்து முதலாம் இரண்டாம் வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்துக் கதை சொல்ல முனைகையில் அவர் மனம் மீண்டும் எங்கோ தாவுகிறது.

அரசாங்கத்தின் சுற்று நிருபப்படி இந்தப் பாடசாலையில் ஐந்து ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான். இந்த நிலைதான் இந்த வட்டாரத்தின் எல்லாப் பாடசாலைகளிலும். ஆனால் நாட்டிலே தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாக அரசாங்கம் நாளாந்தம் சொல்லிக் கொள்கிறது என்ன கணக்கோ? என்ன புள்ளி விபரமோ?

இந்த லட்சணத்தில் தன்னைப் போன்றவர்களும் ஐம்பத்தைந்து வயதிலேயே பென்ஷனுக்குப் போய்விட்டால் இந்தக் குழந்தைகளின் கதி?

அவரது கணநேரச் சிந்தனைக்குள் மாணவரிடையே சலசலப்பு.

"சேப்பிரம் அடிக்கிறான் ஐயா."

"சேப்பிரமா? அப்படிச் சொல்லக்கூடாது: சிவப்பிரகாசம்..." என்று திருத்துகிறார் சுந்தரம்.

தந்திச் சேவகன் வேர்த்துக் களைத்துச் சைக்கிளில் வருகிறான்.

அவன் நீட்டிய அட்டையில் கையெழுத்திட்டு அந்த "எக்ஸ்பிரஸ்" கடிதத்தை வாங்கி உடைத்து....

அடியிலே எழுதினவரின் கையெழுத்தைப் பார்க்கிறார்.

பால-சுகுமார்!

அவர் மனம் மீண்டும் எங்கோ தாவுகிறது.

அவர் இங்கு வர முன்னர் படிப்பித்த மகா வித்தியாலயத்தில் அந்த ஆண்டுதான் சர்வகலாசாலைப் புகுமுக வகுப்புகளைத் தொடங்கினார். அவ் வகுப்புகளில் கற்பிக்கப் போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும் மாதாமாதம் பணத்தைக் கொட்டிப் பட்டினம் சென்று படிக்க முடியாதவர்களின் வசதி ஒன்றை மட்டும் கருத்திற்கொண்ட வகுப்புக்கள் தொடங்கப்பட்டுவிட்டன.

அவ்வகுப்புக்களில் ஒன்றிற்குத் தமிழ் கற்பிக்க வேண்டிய கடமை "கண்டது கற்றுப் பண்டிதரான" சுந்தரத்தின் தலையில் விடிந்தது!

இரவு இரவாக கம்பனையும், வீரமாமுனிவரையும், மாணிக்கவாசகரையும் கற்று, பலணந்தி€யும் செல்வநாயகத்தையும் படித்துப் பகலிலே தம் மாணவர்களுக்கத் தமிழ் செய்தார் சுந்தரம்.

இரண்டு வருடங்களின் பின்னால் அந்தக் கிராமத்து மாணவர்கள், இந்த வட்டாரத்திற்கே பெருமை பெற்றுத் தந்தவர்களாகச் சர்வகலாசாலையில் காலடி எடுத்து வைத்தார்கள்.

அவர்களில் தமிழை விசேட பாடமாக வரித்துக் கொண்ட அவரது மாணவன்தான் கடிதம் எழுதியிருக்கிறான்! தமிழ் "ஓணர்ஸ்" செய்து முதுமானியாகி, கலாநிதியாகித் தன் பெயரைச் சர்வகலாசாலை மட்டும் நிலை நாட்டுவான் என்று தான் கனவு காணும் அந்தக் கிராமத்து மாணவன்....

சுந்தரம் அவன் கடிதத்தைப் படிக்கிறார்.

அன்புள்ள ஆசானுக்கு.

அந்த விளியை வாசித்ததுமே ஆசிரியர் தம் மனதுள் சிரித்துக் கொள்கிறார். வெளி வேலை ஒன்றும் இல்லாவிட்டால் தன் கிராமத்து மாரியம்மன் கும்பத்துக் குடிசைகளில் உடுக்கடிக்காவது சென்றுவிடும் அந்தத் துடிப்புள்ள மாணவன் தன்னை ஆசான் என்று விளிக்காமல் வேறு எப்படித்தான் விளிப்பான்...?

ஆசிரியர் கடிதத்தைத் தொடர்ந்து படிக்கிறார்.

"ஜப்பான் முதலான கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்கு எனக்கு ஸ்கொலர்ஷ’ப் கிடைத்திருக்கிறது. நாளை மறுதினமே கொழும்பிலிருந்து புறப்பட வேண்டும். செய்தி எனக்கு இப்போதுதான் கிடைத்தது. ஆகவே தான் கடுகதித் தபால் எழுதித் தங்கள் ஆசியை விழைகிறேன்."

மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்­ர் விட்டார் சுந்தரம். தன் ஐம்பத்தைந்தாவது வயதிலேயே உபகாரச் சம்பளம் பெறும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்னவோ!

ஆனால் அவரது சிறுமைகள், அவரது வீழ்ச்சிகள், அவரது மளஉளைவுகள், வேதனைகள், எல்லாமே அவரைவிட்டு அந்தக் கணத்திலே அகன்றுவிட அவர் மனம் மட்டும் சேறும் சகதியும் நிறைந்த வயல் வெளிகள் என்ற பசுமைக் காட்சியிடையே கம்பீர்யமாக உயர்ந்து நிற்கும் தம்பலகாமத்துக் கோணேசர் கோயில் விமானம் போல உயர்ந்து புனிதமாய் மிளிர்ந்தது!

நெஞ்சை நிமிர்த்தியபடி காரியாலய அறைக்குள் சென்ற சுந்தரலிங்கம் ஆசிரியர், அலுமாரியைத் திறந்து இலவசப் புகையிரதச் சீட்டுப் புத்தகத்தை எடுத்து, தன் மாணவனுக்கு ஆசிகூறி வழி அனுப்புவதற்காகக் கொழும்புக்குச் செல்வதற்கு "வாரன்ற்" எழுதத் தொடங்கினார்.

வீரகேசரி 1980


இரசிகன்

அழுகிய வெண்காயத்தின் முடை நாற்றம் செத்தல் மிளகாயின் கோரமான நெடி, பதங்கெட்ட காய்கறிகளின் துர்க்கந்தம், எண்ணெய்ப் பசையற்ற தள்ளுவண்டிகளின் 'கிறீச்' ஓசை, உறுமிப் புகைந்து முன்னும் பின்னும் ஒடித்துத் திருப்பப்படும் சரக்கு லொறிகளின் உபத்திரவம், மூட்டை சுபப்பவர்களின் முக்கல் முனகல், கீழே காற்செருப்பின் அடியில் 'சதக்'கென்று மிதிபடும் நீர்த்தேங்கலின் அருவரு பபு, பட்டினத்துச் சாக்கடையின் சகிக்க முடியாத துர்க்கந்தம், இத்தனைக்கும் தாக்குப் பிடித்துக்கொண்டு, நான் புறக்கோட்டை நாலாம் குறுக்குத் தெருவின் குறுகலான சந்து ஒன்றிலே, புகழ் பெற்ற வியாபாரத்தாபனத்தின் முன்னால் நின்று அம்மனிதனையே கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏனென்றால், அது உருவத்தில் மனிதனாக எனக்குப் பட்டாலும், அது ஓர் 'இயந்திர மூளை' என்று என் மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி என் மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி எதையாவது கவனிக்கும் சோம்பேறித் தொழிலில் எனக்க ஒரு குஷ’!

நான் அந்தக் கடையின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக் கொண்டு நிற்கிறேன்.

கடையா அது? ஊரிலே, மிளகாய், மல்லி, சீரகம், வெண்காயம், மிளகு என்று வகை வகையாக அழகாகச் சிறுகக் குவித்து வைத்திருக்கும் மரப் பெட்டிகள். மலிபான் பிஸ்கற், 'லக்ஸ்' சவர்க்காரங்கள், தேயிலைப் பக்கற்றுகள், பாற்தகரங்கள் என்று ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுமாரிகள்... எதையுமே காணோம்.

கடையா அது?

சுமார் பத்து பதினைந்து அடி நீள் சதுரமான முன் பக்கத்தின் மூலையிலே ஓர் எழுதும் மேசை. அம் மேசையின் இரண்டு தொலைபேசிகள், அதே மேசையிற் சின்னஞ் சிறு கிண்ணங்களில் மிளகாய், மல்லி, சீரகம், வெந்தயம் முதலான மளிகைச் சாமான்கள்...

வலது மூலையில் கள்ளிப் பெட்டியினாலான சாதாரண மேசை ஒன்று. அதன் அருகில் ஒருவர் உட்கார்ந்து சதா 'பில்' எழுதிக்கொண்டே இருக்கிறார். இரண்டு மேசைகட்கும் இடைப்பட்ட 'ஒழுங்கையில்' ஆட்கள் போவதும் வருவதும்... இயந்திரகதிதான்!

தொலைபேசி மணி கண்கண் என ஒலிக்கிறது.

வெள்ளை வேஷ்டிக்கு மேலே டெரிலின் சேட் அணிந்து, கையில் நாழிகை வட்டம் பூண்டு, குங்கும தாரியாய் இருந்த அவ்விளைஞர் தொலைபேசியை எடுக்கிறார்.

"யாரு செதம்பரமா? ஆமா.... கப்பல் வந்திரிச்சு. சாயந்திரமே கொடுத்திடுறம். ஆமா, நீங்க லொறி அனுப்புறீங்களா? சௌகரியமாப் போச்சு. கவலைப்படாம அனுப்புங்க... அப்ப வெக்கட்டுமா?"

யாரோ ஒருவன் மூட்டை தூக்கும் 'நாட்டாமை'யாக இருக்கலாம். அவர் முன்னால் வந்து நிற்கிறான்.

"சரக்கு எல்லாம் பறிச்சிறீங்களா? ஆமா, கையில சல்லி எவ்வளவு மிச்சம் இருந்தது. நாலு ரூபாயா? ஐந்து பேர்தானே. சுத்தப் பேமானியா இருக்கீங்களே. அஞ்சு பிளேன்டீ, ஒரு ஒரு மசாலை வடை; ஐம்பது சதந்தானே ஆகி இருக்கும். ஒங்கணக்கில தான் அம்பது சதம் எழுதுவேன். கணக்கப்பிள்ளை, நம்ம நாட்டாமை கணக்கில அம்பது சதம் எழுதிக்கங்க."

"என்னப்பா பாக்கிறே. மூலைக்குள்ள எட்டாவது அட்டியிலே மூணு பருப்பு மூட-மைசூர்தான்-அதவொறியிலே தூக்கிப் போட்டிடு. முதலாளி காத்துக் கொண்டு நிற்கிறார். கணக்கப்பிள்ளை, திருக்கிணாமலை முதலாளி பற்றில அம்பது சதம் எழுதிக்குங்க. ஏப்பா நிக்கிறே. போவியா?..." பத்திரிகைப் பையன் அன்றைய 'சன்' பத்திரிகையை மேசையில் போட்டுவிட்டுச் செல்கிறான். குங்குமதாரி பத்திரிகையின் இரண்டாம் பாகத்தைப் புரட்டிக்கொண்டே, "அட, இவன் ஒரு வெல போட்டிருக்கானே. 'டெயிலி'யில அவன் வேறு வெல போட்டிருக்கான் பாசிப் பயறுக்கு. சானா, மூனாக்குத் தான் டெலிபோன் பண்ணனும்."

தொலைபேசியில் இலக்கங்களைத் திருப்பிக் கொண்டே...

"மொதலாளி வாங்க, இப்பத்தான் வர்றீங்களா? ஏன்? வதுன மெயில் லேற்றா? இவனுகள் என்னமா ரெயில் ஒட்டுறானுங்க? டேய், வேலு! ஐயாவுக்கு வென்னி போடுடா! ராத்திரி தூக்கமில்லாம இருப்பாரு..."

வதுளை 'முதலாளி' உள்ளே செல்கையில், "சானா மூனாவா? நான் தான் ஏ.எஸ்.எம். பேசுறன். 'சண்' பாத்தீங்களா? பாசிப்பயறுக்கு 'கொளச்சிரூபா' கொறைச்சிப் போட்டிருக்கே. 'சாத்தங்கா' ரூபா விட்டிடுமே. உங்களிட்ட ஸ்டாக் தீந்திடுச்சா?.... சரிதான். அப்ப தாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறம்."

"கணக்கப்பிள்ளை. பாசிப்பயறுக்கு இனிமே 'தங்கா' ரூபாதைக்கப் போடுங்க. சானா மூனாவில ஸ்டாக் தீந்திடுச்சு?.... கவனிச்சுக்கங்க."

"வாங்க மொதலாளி. இப்பத்தான் வர்றீங்களா? ஒங்க கணக்கப்பிள்ளைகூட காலையில போனில பேசிக்கிட்டாரு. இருங்க. எங்களுக்குக் கட்டும் எண்டாப் பாத்துக்கிட்டிருப்பமா?" சிறிய கிண்ணத்திலிருந்த கொத்தமல்லியைப் பிசைந்தபடியே.

"சரக்கு அசலுங்க அதனாலதான்..." குட்டையை வெளியே எடுத்து அவர் வையையும், தன் கையையும் மணிக்கட்டுவரை மறைத்துக்கொண்டே என்ன இரகசியமோ? என்ன மொழியோ?

"சரியா? அப்படின்னா ஆறு மூட்டை போட்டிடுறன்."

"என்னமோ செய்யுங்க"

"நீங்க யோசியாதீங்க மொதலாளி. சாயா ரூபாகூட எங்களுக்குத் தக்காது. என்னமோ கஸ்டமர விட்டுறக் கூடாது. அதுக்காகத்தான் பாக்கிறம். கணக்கப்புள்ள, ஆறு மூட்ட மல்லிக்கு பில் போட்டிடுங்க.... பில்லைப் பார்த்து மொதலாளிக்கு ரெண்டு 'கொளச்சி' ரூபா தூக்காகப் போடுங்க... வண்டியிருக்கா? நாங்களே அனுப்பிறட்டுமா? நாட்டாம, ஆறு மூட மல்லி தள்ளுவண்டிக்குப் போடுங்க" தொலைபேசி மணி அடிக்கிறது. அதைக் கையில் எடுத்துக்கொண்டே,

'டம்புள்ளயிலிருந்து பேசுறீங்களா? சரக்குப் போட்டிற்றமே..." தொலைபேசியின் வாயைக் கையாற பொத்திக் கொண்டே,

"ஏய், வேல்சாமி! நாப்பத்திரண்டு எழுபத்திமூணு பொறப்புட்டாச்சா?" மறுபடியும் தொலைபேசியில்,

"லொறி இப்ப குருநாகலைத் தாண்டியிருக்கும். மதியத்துக்குள்ள உங்களுக்குச் சரக்கு மூட வந்திடும். அங்க கேப்ப மூட இருக்க? லொறியத் தாமதிக்காம அனுப்பிச்சுடுங்க..." தொலைபேசியை வைத்துவிட்டு கணக்கப்பிள்ளை வைத்த சிட்டைகளைச் சரி பிழை பார்க்கத் தொடங்கியது, அந்த இயந்திர மூளை. ஒன்று, இரண்டு, மூன்று... அசுர வேகத்தில் சிவப்புப் பென்சில் சிட்டைகளின் மேல் நர்த்தனமாடுகிறது.

நாலாவது சிட்டையிலும் சிவப்புப் பென்சில் குறுக்காகக் கோடு கிழிக்கிறது. அரைச் சதங்கூடத் தவறேயில்லை.

ஐந்தாவது சிட்டையை நோட்டம் பார்க்கையில், எங்கிருந்தோ அந்த வாரத்து 'ஆனந்த விகடன்' மேசையில் விழுகிறது. சிட்டையின் இலக்கங்களைக் கூட்டுகையிலே இடது கை விரல்கள் விகடனின் பக்கங்களைப் புரட்டுகின்றன. பொருளடக்கத்தை, தலையங்கத்தை, கதைத் தலைப்புகளைப் பார்த்துக் கடைசியாய் முத்திரைக் கதையை, அதன் தலைப்பை, ஆசிரியரைப் படிக்கிறார்.

"யாருட சார் இந்த வார முத்திலைக் கதை"-கணக்கப்பிள்ளை ஆவலோடு கேட்கிறார்.

"எனன் எவனோ எழுதறான். ரெண்டு கத கைவந்து மார்க்கட்டைப் புடிச்சிற்றான்னா பின்னாடிப் பணத்துக்காக என்னென்னமோ எழுதிப் பக்கத்த ரொப்புறான். நாப்பத்தைஞ்சு வயது மொகரக்கட்டை மொதலியார, முப்பத்தைஞ்சு வயசுப் பொண்ணு எரக்கப்பட்டுக் காதலிச்சாளாம்! ஏய்யா? மனஸ்தத்துவம் தெரியாதவன் எல்லாம் ஏய்யா கதை எழுதறான்?"

"ஒங்களுக்கு அவரைப் புடிக்கல்ல சார்."

"ஆமய்யா புடிக்கல்லதான். தி.ஜாட. கதையில வார பூவுக்கு, ஒரு 'ஆமருவி'க்கு ஓற போடக் காணுமாய்யா இவனுகள்ர பாத்திரமெல்லாம்..."

"நீங்க தஞ்சாவூர்க்காரரு. அப்படித்தான் சொல்வீங்க."

"ஏன், ஒங்க மெட்ராஸ்காரன் என்னத்தைக் கிழிச்சுடறான்?"-சிட்டையிலே மேலிருந்து கீழோடிய சிவப்புப் பென்சில், ரசித்துச் சாதஞ் சாப்பிடுகையில் கல்லுக் கடிபட்டு ரசனையிழந்தபோல டக்கென்று நின்றது.

"கணக்கப் புள்ள. சன்லைற் சோப்புக்கு 'சா' ரபா கொறைச்சலாயிருக்கே. கவனிச்சீங்களா?"

"சரியாத்தான் போட்டிருக்கேன். கொம்பனிப் புது 'பில்' இப்பத்தான் கிடைச்சுது. வெல கொறைச்சிருக்காங்க உள்நாட்டு உற்பத்தி. கொன்றோல்காரன் கண்ணிவெச்சுத் திரியிறான்."

கணக்கப்பிள்ளை சவர்க்காரக் கொம்பனியின் கடிதத்தையும் பில்லையும் கொண்டு வந்து நீட்டுகிறார் அதைப் பார்த்துக்கெண்டே, எழுதும் மேசையில் விரித்துக் கிடந்த மை ஒற்றுங் கடதாசியில் பென்சிலால் நெடும்பிரித்தற் கணத்திற் செய்து முடித்ததும், 'சரிதான்' என்ற திருப்தியோடு, சிட்டையின் குறுக்காகச் சிவப்புப் பென்சிலாற் கோடு, கிழிக்கையில் தொலைபேசி மணி மறுபடியும் அலறுகிறது.

அதனைக் கையில் எடுத்துக் கொண்டே, "ஹலோ, ஏ.ஏஸ்.எம்.தான் பேசுறன். முதலாளி இல்லியே, இப்பத்தான் புறப்பட்டாரு சச்சச்சா! மதியம் வந்திடுவாரு... அவசரமா... வந்ததும் சொல்றன்..."

திரும்பி, "வாத்தியாரா? வாங்க. வாங்க. ஒங்களுக்கென்ன? வருஷத்தில அரைவாசி நாளைக்கு லீவு. கையில் என்ன தினபதியா? ஒங்கட அமிர்தலிங்கம் அரசாங்க ஊழியர் சிங்களம் படிக்க வேணும் என்று சொல்லிப் போட்டாராமே, தினபதியிலதான் சார் இருக்கு. டேய் வேலு, வாத்தியாருக்கு சோடா கொண்டு வாடா.... மூளையத்த பசங்க. இப்ப சிங்களம் படிக்கச் சொன்னத ஐம்பத்தாறிலேயே சொல்லியிருக்கலாம். முன்யோசனையில்லியே. இருங்க வாத்தியார்..."

ஆசிரியர் அவர் அருகில் அமர்ந்து கொண்டதும். "டேய் வேலு' நம்க ஒஸ்டின் முந்தா நாள் யாழ்ப்பாணந்தானே போச்சு. இன்னைக்கு வந்திருக்கணுமே. வந்தாக் கராச்சில போட்டிடாமே நேரே நாலாம் நம்பர் ஜெற்றிக்க விடச் சொல்லுடா. 'நெஸ்பிரே' வந்திருக்கு போடா. போய்ச் சொல்லிப்பிட்டு வா... பின்ன என்ன வாத்தியார்? கொஞ்சங்கூடச் சுறுசுறுப்பு இல்ல. சோடா கொண்டு வரச் சொன்னா அப்படியே வாய்பாத்திற்று நிக்கிறான். இன்னைக்கே யாழ்ப்பாணம் புறப்பாடா? டியூசன் பீஸ் மொதலாளி தந்தாரு, ஒங்ககிட்டக் கொடுக்கச் சொல்லி. வாங்கிக்கிறீங்களா? சுத்தமான வேலூர்ச் சர்க்கரை, காலையிலதான் வந்தது. கொஞ்சந்தான். கால் அந்தர் போட்டிறட்டுமா? காசப்பத்தி என்னங்க? அடுத்த மாதம் கொடுத்தாப் போச்சு. மொதலாளி மகனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிற வாய்க்கு நாங்க தீபாவளிக்குச் சர்க்கரையாவது போட வேணாமா? டேய் வையா! ஐயாவுக்குக் கால் அந்தர் சர்க்கரை கட்டு. கணக்கப் பிள்ளை, ஐயா கணக்கிலே எழுதிக்கிங்க."

தெலைபேசி மணி மீண்டும் ஒலிக்கிறது.

"உப்பு மூட வந்திடிச்சிங்க" நாட்டாமை குரல் தருகிறான்.

"வந்திற்றா? மூணாம் நம்பர் கிட்டங்கில அடுக்கிறது தானே. எத்தனை, இருநூறு மூடையா?"

"அங்கெல்லாம் பயறு மூட்டைங்க"

தொலைபேசி மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கையில் எடுத்துக்கொண்டே, "ஹலோ! நான் ஏ.எஸ்.எம். தான் பேசிறன். சாரா, வணக்கம் சார். மொலாளி இல்லியே. ஒரு அரைமணி அவருக்குத் தாமதிச்சு வையுங்க. அரைமணி நேரந்தானே சார். மேல்மிச்சமா இல்ல. இப்பவே லொறி அனுப்பிர்றம். இல்லசார். நிச்சயமா அனுப்புறம். சாயந்திரம் இந்தப் பக்கமா வருவீங்களா? வாங்க சார்; மொதலாளியும் வந்திடுவார். சொல்லி வைக்கிறன்."

தொலைபேசியை வைத்துக் கொண்டே, "இந்தக் கஸ்ரம்ஸ்" பயல்கள்ர தொல்லை பெரிய தொல்லையாப் போச்சு வாத்தியார்... சோடா சாப்பிட்டீங்களா? நீங்கதான் சிகரட் பத்த மாட்டீங்களே.... நாட்டாம, நீ ஏன் நிக்கிறே மூணாம் நம்பர் கிட்டங்கில இப்ப நூத்தி எழுபத்தாறு மூட-பழைய சிட்டைகளைப் புரட்டிக் கூட்டிக்கொண்ட-ஆமா, சரியா நூத்தி எழுபத்தாறு மூட, எடுபட்டிருக்குமே. ஐம்பது ஐம்பதா நாலு அட்டிபோட்டு உப்பு மூட்டையை அடுக்கிடு."

"சார் அங்க..."

"போடா நாட்டாம! அங்க எடம் இருக்குங்குறன்.... ஒண்ணுமே தெரியாது வாத்தியார் இவனுகளுக்கு, நேத்து இருந்தா இண்ணைக்கும் அந்த மூடை இருக்கணுமா? நடுத் தெருவில வண்டியை நிறுத்திவிட்டு உப்பு மூட அடுக்க உடமில்லையாம். 'டிராபிக்' பொலிஸ்காரன் வந்தா அது வேற தலைவேதனை. சுத்த அயோக்கியப் பசங்க."

எதிர்த்த தேநீர்க் கடையிலிருந்து வர்த்தக ஒலிபரப்பு அலறுகிறது. "கன்னம் கன்னம் கன்னம் -சந்தனக் கிண்ணம் கிண்ணம் கிண்ணம்." வேலு பாட்டை இரசித்துத் தாளம் தட்டுகிறான்.

"பாட்டு ரசிக்கிறாரு தொர. என்னமோ பெரிசாச் சால்வையைப் போத்திட்டுத் தமிழ் பண்பாட்டப் படம் புடிச் சிரிக்கன் என்று பீத்திக்கிறான். பாட்டப் பாருங்களன் பாட்ட. தமிழ்ப் பண்பாடு சொட்டுது! இந்தப் பாட்டுக்குப் படத்தில ஆடுற நாட்டியம்! இந்தப் பயல்களைப் புடிச்சுச் சமணரைக் கழுவேத்தினது போல ஏத்தணும் வாத்தியார். அப்பதான் தமிழ்ப் பண்பாடு தப்பிப் பிழைக்கும்...."

யாரோ புதியவர்-இல்லை இல்லை-எனக்கும் தெரிந்த பழம் பெரும் தமிழ் எழுத்தாளர் கடைக்குள் நுழைகின்றார்.

"சார் நீங்க...?

எழுத்தாளர் தன் விசிட்டிங் 'கார்டை' நீட்டுகிறார்.

"நீங்கதானா சார்' உங்களைத்தான் சார் காத்துக் கொண்டிருக்கிறன்" என்று எழுந்து கொண்டே, "கணக்கப்பிள்ளை மேசையைச் சத்த கவனிச்சிக்குங்" என்று கூறி விட்டு எழுத்தாளரை முகம் மலர்ந்து தழுவி அணைத்த படியே, "வாங்க சார். உங்களைக் கண்ணால கண்டது என் பாக்கியம் சார்" என்றபடியே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு அம்மனித யந்திரம் எழுத்தாளரை உள்ளே அழைத்துச் செல்லுகிறது.

நான் அந்த 'இரசிக'னைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்.

இளம்பிறை'67


கலைஞன் துயர்

அந்தக் கடிதத்தை-அந்த ஒரே வாக்கியத்தை அவன் மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பிப் படித்தான். "தாங்கள் 'வாழ்க்கைப் போர்' என்ற நாவல் முதற் பரிசுக்குரியதென..."

அவன் கண்கள் பளித்தன. பனித்து நிற்கும் அவன் கண்களுக்கு மேலே இமைகள் சுண்டித் துடித்தன. உடம்பு முழுவதும் உரோமங்கள் குத்திட்டு நிற்கையில், அவன் உள்ளிற் பாய்ந்து பரவிய அந்த ஆனந்த வெளி அவனைப் பைத்தியமாக்கித் திணற அடித்தது. அந்த உணர்ச்சி... ஆனந்தம் முற்றிய நிலையே பைத்தியமா?

தன் படைப்பிற் பெருமையும் திருப்தியுமடைந்த சச்சிதானந்தன் பித்தனாகி விட்டதைப் போல அவனும் உணர்ச்சி வெறியின் உச்ச நிலையிற் தன்னிலையிழந்து நிற்கையில், அவன் கண்கள் மீண்டும் அக்கடிதத்தை, அந்த ஒரே வரியைப் படித்தன. படித்தவன் விரித்த கடிதத்தை மார்பிலணைத்த படியே படுக்கையிற் பொத்தென்று வீழ்ந்தான்.

'வெற்றி-வெற்றி' என்ற அவன் அந்தராத்மாவின் கூக்குரல் அவன் சடலத்தின் ஒவ்வோர் உயிரணுவையும் நிறைத்து நிற்கையில், படுக்கையிற் கிடந்தபடியே அவன் மீண்டும் அடிக்கடிதத்தைப் படித்தான் அந்தக் கடிதத்தில் பென்னம் பெரிய எழுத்துக்களில் மிகத் தெளிவாகத் தான் அந்த வரிகள் எழுதப் பட்டிருந்தன. "தங்களின் "வாழ்க்கைப் போர்' என்ற நாவல் முதற்பரிசுக்குரியதெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது."

அதற்க மேல் அவன் மனம் கடிதத்தைப் படிக்கும் சக்தியையே இழந்து விட்டதோ என்னவோ! நாவலுக்குக் கிடைக்கும் பரிசுத்தொகை கூட அவனுக்கு வேண்டாமோ என்னமோ! அவன் மீண்டும் மீண்டும் அந்த ஒரே வரியைத் தான் படித்தான்.

நிமிஷங்கள் கரைகையில் குத்திட்டு நின்ற அவன் உரோமங்கள் படிந்து, பனித்திரை படிந்த கண்கள் ஓர் புத்தொளி பெற்றுத் தெளிவடைந்தபோது அவன் மனதிலே அவளைப் பற்றிய எண்ணம் வந்தது.

கமலாவின் எண்ணம் வந்ததும் அவன் பரபரப்புடன் எழுந்து-கதவைப் பூட்டினானோ என்னவோ-படைபதைக்கும் வெயிலில் காலிற் செருப்பைக்கூட மாட்ட மறந்தவனாய்த் தெருவீதியில் வேகமாக நடைபோடத் தொடங்கினான்.

இந்தக் கடிதத்தைக் கமலா கண்டதும் எத்தனை ஆனந்தமடைவாள் என்று அவன் எண்ணுகையில் பிறவியின் பயனையே அடைந்துவிட்டது போன்ற ஓர் நிறைவு அவன் மனதை நிறைத்தது. அவன் நடந்து கொண்டிருந்தான்.

எதையோ எண்ணிக் கொண்டவன் கடைக்குச்சென்று 'அல்லி' மாத சஞ்சிகையை வாங்கிக் கொண்டு மேலே நடந்தான். அவன் கையிலே 'அல்லி'...

* * *

'அல்லி'யைத் தான் அன்று கமலாவும் படித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவன் எழுத்துலகிற் பிரவேசித்திருந்தான். தமிழிலக்கியத்தை நாளும் பொழுதும் படித்துக் கொண்டிருக்க மிக்க வசதியேற்படும் என்ற எண்ணத்தினாற் எங்கேயோ காட்டிலாகாவில் உத்தியோகமாயிருந்தவன் அவ்வேலையை உதறித் தள்ளிட்டுப் பாடசாலை உபாத்தியாயராக வந்தான்.

அப்பாடா! அப்போது அவன் தந்தை கொண்ட ஆத்திரம் "உருப்படத் தெரியாத தறுதலை!" என்றல்லவா அவர் திட்டினார்.

இப்போதே தந்தையாரிடம் சென்று 'வெற்றி- வெற்றி' என்று கதற வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆயினும் அவன் தந்தைக்காகவா கதை எழுதினான்? வாழையடி வாழையாக வந்த ரசிகனுக்காக அல்லவா எழுதினான். அந்த ரசிகளைத் தேடி அவன் கால்கள் நடந்து கொண்டிருந்தன.

அந்த ரசிகை...!

அவள் பாட சாலையிற் படிப்பிக்கத் தொடங்கிய முதல் நாள்... அப்பாடசாலையின் ஆசிரியர்கள் எல்லோரையும் இன்னும் அவனுக்குச் சரிவரத் தெரியாது.

அன்று ஒழிந்த நேரத்தில் அவன் ஆசிரியர்கள் தங்கும் அறைக்கு வந்திருந்தான். அங்கே ஓர் மூலையில் யாரோ ஒருத்தி (ஆசிரியையாகத்தான் இருக்கும்) 'அல்லி'யை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள். அவன் வந்ததுகூட அவளுக்குத் தெரியாது. வாசிப்பில் அத்தனைக்கு லயித்திருந்தாள்.

அவனும் இன்னொரு மூலையில் உட்கார்ந்து கொண்டான்.

கதையை வாசித்து முடித்த கமலா அந்தச் சஞ்சிகையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு 'அபாரம், அற்புதம்!' என்று குதித்தாள்.

எதிரே, அவன் இருந்ததைக் கண்டபோது அவள் நாணிக் கொண்டு...

அவன் கேட்டான், "யாருடைய கதையை இப்படிப் புகழ்கிறீர்கள்?"

"ராஜகோபாலன் என்ற ஒருவர் கதை எழுதியிருக்கிறார். எத்தனை அற்புதமான மனித வாழ்வைச் சித்தரித்திருக்கிறார் பாருங்கள்" என்றாள் அவள்.

"ராஜகோபாலனா? புதுப் பெயராக இருக்கிறதே" என்றான் அவன்.

"அதனால் என்ன? இளம் எழுத்தாளராகவே இருக்கலாம். 'ஆரம்பத்தில் மீன் குஞ்சு தவளையைப் போல இருந்தாலும் தவளையின் தன்மைகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பது போல' என்று புதுமைப் பித்தன் சொன்னது போல இவருக்கும் எழுத்தாளனுக்கு வேண்டிய குணங்கள் இருக்கின்றன" என்றாள்.

"அப்படியா?" என்று சாதாரணமாச் சொன்னவன் மனதிலே, என் கதையைப் படித்துப்பாராட்டவும் இந்தத் தமிழ் நாட்டிலே ஒரு ரசிகை இருக்கிறாள் என்று எண்ணுகையில் அவன் உள்ளம் பெருமிதங் கொண்டு விம்மியது.

* * *

மணியடிக்கவே இருவரும் பாடத்துக்கப் போய் விட்டார்கள். இப்போது அவன் அந்த ரசிகையிடம் தன் வெற்றியைத் தெரிவித்துக் கொள்ள வேகமாகச் சென்று கொண்டிருக்கையில், தன் வெற்றியைக் கேள்விப் பட்டதும் அவள் என்ன சொல்லுவாள் என்று எண்ணுகையில்.....

அடுத்த நாள் அவள் சொன்னாள்: "நீங்கள் நேற்று என்னை ஏமாற்றி விட்டீர்கள். நீங்கள்தான் அந்தக் கதையை எழுதிய ராஜகோபாலன் என்று இப்போது எனக்கு நன்றாகத் தெரியும்."

"அப்படியா? என்னை ராஜகோபாலன் என்று தெரிந்து கொண்டுதான் நீங்கள் என் கதையைப் புகழ்ந்ததாக நான் எண்ணினேன்."

"இந்த எழுத்தாளர்களே ஒரு அதிசயப் பிறவிகள். தங்கள் கதையைப் புகழாவிட்டாலும் மனமுடைகிறார்கள், புகழ்ந்தாலும் அது விஷமம் என்கிறார்கள்" என்றாள் அவள்.

"இப்படி எங்களைத் தேவர்கள், அமரர்கள், அதிசயப் பிறவிகள் என்று மற்றவர்கள் எண்ணுவதாற்றான் தமிழ் இலக்கியத்தின் உயிரோட்டம் தடை படுகிறது. நாங்களும் உங்களைப்போல உப்புக்கும் புளிக்கும் கவலைப்படும் மனிதர்கள்தான். உள்ளமும் உணர்ச்சியும் தசையும் என்பும் கொண்ட மனிதர்கள்தான்." அவன் உணர்ச்சியோடு இப்படிச் சொன்னான்.

"தமிழ்நாடு கதை இப்போது அறிந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்தாளனின் நிலையும் மாறிக் கொண்டுதான் வருகிறது. எதற்கும் நம்பிக்கையும் வேண்டும்" என்றாள் அவள் குத்தலாக.

"தங்களைக் கண்ட பிறகு சுத்த நம்பிக்கை எனக்கும் உண்டாகி விட்டது. இனி நான் உங்களுக்காக, ஆமாம், என் சிருட்டிகளை ரசிக்கத் தெரிந்த உங்களுக்காக மட்டும் ஓராயிரம் கதைகள் எழுதுவேன்" என்றான் அவன்.

"கலைஞன் கனவு ரசிகனின் திருப்தி" என்றாள் அவள்.

இப்போதும் அவன் அவளுக்காகவே எழுதினான். அவனுடைய 'வாழ்க்கைப்போர்' என்ற நாவலின் கதாநாயகியே அவள்தான்! இந்த உண்மையை அவளிடம் தெரிவித்து விடுவதற்காக அவன் கால்கள் வேகமாக, மிக வேகமாக நடந்தன.

* * *

புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த கமலா, கதவு 'தட தட' வென்ற தட்டப்படுவதைக் கேட்டதும் எழுந்து சென்ற கதவைத் திறந்தாள்.

சீவாமற் குழம்பிக்கிடந்த வெற்றியின் வெறி. அந்த வெற்றியை வெளிப்படுத்த முனையும் படபடப்பு, வெயர்த்துக் கொட்டும் தேகம்....

இந்தக் கோலத்தில் ராஜகோபாலனைக் கண்டதும் கமலா பயந்தே போனாள். ஊரிலிருந்து தந்தி வந்திருக்கும். அவனிடந்தான் பணம் இருக்காதே. அதற்காகத்தான் வந்திருப்பான் என எண்ணினாள்.

"எங்கே இவ்வளவு அவசரமாக?" என்று கேட்டாள் கமலா.

அவனாற் பேச முடியவில்லை. கடிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

கடிதத்தை வாசித்த கமலா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சிலைபோல நின்றான்.

தன்னைமறந்து பாய்ந்து இரு கைகளையும் பிடித்து கொண்டே "அதிர்ஷ்டக்காரர்!" என்றான் அதற்கும்மேல் அவளாலும் பேச முடியவில்லை.

ராஜகோபாலனின் முகம் பேயறைந்தது போல ஆயிற்று.

"மகிழ்ச்சி வெறி துள்ளியாடிய முகத்தில் ஏன் இத்தனை சோகம்?" கம்மிய குரலிலே அவள் கேட்டாள்'

"நான் என்ன அதிர்ஷ்டக்காரனா?"

"பின்னே என்ன? கைமேலே பத்தாயிரம் ரூபாயைப் பெற்ற தாங்கள் அதிர்ஷ்டக்காரன் இல்லை?" கமலா மகிழ்ச்சி பொங்க இப்படிக் கேட்டாள்.

"சரிதான்! நான் வருகிறேன்" என்று எத்தனை வேகமாக வந்தானோ அதற்கும் மிஞ்சிய வேகத்தில் திரும்பிக் கொண்டு நடந்தான்.

கமலா திகைத்துப் போய் நின்றாள்.

* * *

அடுத்த நாள் அவன் பாடசாலைக்கும் வரவில்லை. ஆனால் கமலாவிற்க அவன் எழுதிய ஒரு கடிதம் வந்தது. அன்புள்ள கமலா,

உன்னை முதல் நாள் சந்தித்த அன்றே என் இதயத்தின் நீண்டநாள் தாபம் தீர்ந்தது. என் சிருஷ்டிகளை ரசிக்கவும் ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணத்தில் என் மனவேதனைகளையும் மறந்து எத்தனையோ கதைகளை உனக்காக எழுதினேன். ஆம், உனக்காகக் கதைகள் எழுதி என் மனக் கருவிலிருந்த இலக்கியக் குழந்தையை ஒவ்வொரு தடவையும் பிரசவித்தபோது, அந்தப் பிரசவ வேதனையில் என் ஆயுளே அருகிக் கொண்டு வந்தது. கடைசியாய் என் உள்ளத்தை வருத்தி, உடலைத் தேய்த்து 'வாழ்க்கைப் போரை' எழுதி அந்தக் கதை வெற்றியுள்ளபோது, கேவலம் என்னை நீ 'அதிர்ஷ்டக்காரன்' என்றாய்.

நீ மட்டும் என்ன? வடமொழியையுந் தாய்மொழியையும் பழுதறக் கற்றுத் தன் உலகானுபவத்தாலும் திறமையாலும் நமக்கு ஓர் மாகாவியத்தையே சிருஷ்டித்துத் தந்த கம்பனையே காளியருள் பெற்றுப் பாடினான் என்று சொல்லி அவன் மேதையை இன்னமும் இந்தத் தமிழ்நாடு அவமதித்துக்கொண்டு இருக்கிறது. அப்படியான தமிழகத்திலே என் திறமை புகழப்படும் என்று நான் எண்ணியதே என் மகத்தான மடமைதான்.

ஆனாலும் உனக்கு நான் ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாகத்தான் வேண்டும். ஏனென்றால் உன்னால் தான் நான் 'வாழ்க்கைப் போரை' எழுதினேன்.

உனக்காக நான் எழுதிய என் சிருஷ்டி, காலத்தை வென்று வாழுமாயிருந்தால், எத்தனை தலைமுறைக்கப் பின்னாலாவது ஒர் பிறப்பில் நீயும் இந்த நாடும் என் திறமையை ஒப்புக்கொண்டால், அப்போதுதான் இலக்கிய கர்த்தா இந்நாட்டில் தற்கொலை செய்துகொள்ளாமல் வாழ முடியும்!

இந்தத் தலைமுறையில் நான் போனால் என்ன? என் 'வாழ்க்கைப் போர்' இருக்கவே இருக்கிறது. வணக்கம்.

உன்

ராஜகோபாலன்

சுதந்தரன் 10வது ஆண்டுமலர் 1957

.........

தவம்

'தேடிச் சோறு நிதம் தின்பதற்காக அலுவலகம் சென்று அங்கு கிடைக்கும் ஓய்வுப் போதில் இடமாற்றம், சம்பளப் பற்றாக்குறை வாழ்க்கைச் செலவு என்ற இன்னோரன்ன சின்னஞ்சிறு விஷயங்களை முடிவு காணாமலே பேசித் தீர்த்து விட்டு, மாலை வேளைகளில் மகாலிகங்கை கடலோடு கலக்குஞ் சங்கமத்திட்டின் வெண் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு எதிரே கருநீலமாகப் பரந்து கிடக்கும் கொட்டியாபுரக் குடாக்கடலைப் பார்த்துக் கொண்டேயிருப்பதில் எனக்கு என்றைக்குமே அலுப்பதில்லை.

ஏனென்றால் அந்தக் கருநீலக் கடல் வடக்கே முல்லைத்தீவு தொட்டுத் தெற்கே மட்டக்களப்புவரை மரக்கலஞ் செலுத்தித் தன்னை வெற்றி கொண்ட என் மூதாதையினரின் வீரப்பிரதாபங்களை எத்தனையோ தடவை எனக்குச் சொல்லியிருக்கிறது. 'உங்கள் வாழ்வும் வளமும் எல்லாமே நான்தான்' என்று யேசுபிரானைப்போல அக்கடல் எனக்கு உபதேசஞ் செய்திருக்கிறது. உன் இளைய சந்ததியினருக்கு என் மடியில் மூழ்கி, நான் ஒளித்து வைத்திருக்கும் முத்துக்குவியலை எடுக்கத் திராணியுண்டா? என்று இடித்துக் கேட்டிருக்கிறது. எல்லாமே பென்னம் பெரிய கதைகள்தான்! அன்றும் நான் சங்கமத்திட்டின் மணல் மேட்டிலே உட்கார்ந்திருந்தேன். வெப்பமும் வெதுவெதுப்பும் கொண்ட பங்குனி மாதத்தின் இலையசையாப் பம்மலில் நிச்சலனமாகக் கிடந்த கடாக் கடலிலே மாலைச் செவ்வானத்தின் ஒளிபடர்ந்து, முயங்கிக்கலந்து இரசவாத வித்தை செய்து கொண்டிருந்தது. குடாக் கடலைக் குறுக்காகக் கிழித்துக் கொண்டு திரிகோணமலையிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கும் இயந்திரப் படகுகூட ஓரு ஆட்டமோ அசைவோ இன்றித் தக்கைபோலக் கிடக்கும் பொய்ம்மாயத் தோற்றத்தோடுதான் காட்சியளித்தது. மீன் பிடித்தோணிகள், கட்டுமரங்கள் எல்லாமே அசைவற்று, நேற்று என்ற இறந்தகாலமும் நாளை என்ற எதிர் காலமும் அற்றவிட்ட நித்திய நிகழ்காலமாய்ப் பிரபஞ்சமே செயலற்று நிற்பதுபோலத் தோன்றிற்று.

* * *

அந்த அசமந்தத்தில் லயித்திருந்த என் கண்கள், கடலோரத்தே நின்று கொண்டிருந்த ஒரு நாரையின் மேற்பதிந்தன. அது ஒரு கிழட்டு நாரை, சிறகுகள் உதிர்ந்து பறக்கச் சக்தியின்றிருந்த முதுபெரும் நாரை!

பாவம்! அந்தக் கிழட்டு நாரையால் இனி இரைதேடவே முடியாது போலும்! கரைபுரண்டு அலை அடிக்கையில் அதில் நெளியும் மீன் குஞ்சுகளைக் கொத்தக் காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனாற் பங்குனி மாதத்தில் ஏன் - அடுத்துவர இருக்கும் ஆறு மாதங்களிலும் இந்தக் கரையில் ஏன் அலையடிக்கப்போகின்றது? கிழட்டு நாரை உண்ணா விரதமிருந்தே சாக வேண்டியது தானா?

வாடைக்காற்று ஓவென்று இரையும் மாரிக்காலத்தில் இந்தக் குடாக்கடல் ஆயிரந்தலைகள் கொண்ட ஆதிசேஷனாகத் தலையுயர்த்திப் படம் விரித்துக் குமுறிக் கொண்டு கரையை முட்டி நுரை கொப்புளித்துப் பின் வாங்குகையில், அந்த நாரைக்கு வயிறார உணவு கிடைத்திருக்கலாம். ஆனால் இப்போ இந்தக் கரையில் சலனமே இல்லை; மறுபடியும் வாடைக் காற்று வரும் வரைக்கும் குடாக்கடல் குளமாகக் கிடக்கும். அலையே அடிக்காது, ஆகவே நாரைக்கும் உணவே இராது. அலையடிக்கும் மேற்குக் கரை பக்கம் பறந்து செல்ல அதற்குச் சகதியில்லை.


** இ.தொ.kaviyam7.mtf **

வறித்து நோக்கிக் கொண்டிருந்த என் கண்களில் அதே மனித உருவம் ஒன்று தென்படுகின்றது. நரையை அதன் பாட்டிற் தவஞ் செய்யவிட்டு விட்டு நான் அந்த உருவத்தைக் கூர்ந்து பார்க்கிறேன். ஏற்கனவே எனக்குப் பரிச்சயமான உருவந்தான். சங்கமத்திட்டின் மீனவக் குடிசை ஒன்றிலே வாழும் வாலைப் பெண் அவள். நீலக் கடலில் அந்திச் செம்மை படர்ந்து முயங்கிக் கலக்கையில் நெளியும் காந்திகால் வண்ணத்தள். கடற்பரப்பின் உப்பங் காற்றால் வைரமேறிய உடற்கட்டு ஒவ்வோர் அங்கத்திலும் யௌவனமிடுக்கு திமிர்த்துக் கொண்டிருப்பினு

** kaviyam6.mtf ன் தொடர்ச்சி**


என்னுட் கிளர்ந்த எண்ணங்களோடு நாரையையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த என் கண்களில் அதே மனித உருவம் ஒன்று தென்படுகின்றது. நரையை அதன் பாட்டிற் தவஞ் செய்யவிட்டு விட்டு நான் அந்த உருவத்தைக் கூர்ந்து பார்க்கிறேன். ஏற்கனவே எனக்குப் பரிச்சயமான உருவந்தான். சங்கமத்திட்டின் மீனவக் குடிசை ஒன்றிலே வாழும் வாலைப் பெண் அவள். நீலக் கடலில் அந்திச் செம்மை படர்ந்து முயங்கிக் கலக்கையில் நெளியும் காந்திகால் வண்ணத்தள். கடற்பரப்பின் உப்பங் காற்றால் வைரமேறிய உடற்கட்டு ஒவ்வோர் அங்கத்திலும் யௌவனமிடுக்கு திமிர்த்துக் கொண்டிருப்பினம் அவள் கோந்தாளங் கோது போன்ற கண்களிலே மட்டும் ஒரு சோகம்... ஓர் அவநம்பிக்கை... மேற்குப் பக்கமாகவே அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள்! கிழநாரை உணவுக்காகத் 'தவஞ்' செய்கின்றது!

இந்த வாலைப் பெண் எதற்காகத் தவமிருக்கிறாள்?

என் தவத்தையும் கலைக்க இஷ்டமின்றி, எவர் தவத்தையுமே கலைக்க மனதின்றி நானும் 'மோனத்திருக்கும்' வையகத்தோடு ஒன்றி மௌனியாகவோ இருந்தேன்.

மூவருமே தவமிருந்தோம்!

முழு உலகுமே தவமிருக்கின்றது!

நீண்ட மௌனத்தின்பின் திரிகோணமலைத் துறைமுகத்தின் வெளிவாயில், நடுக்கடலிலே தலைநீட்டி நின்ற கற்பாரின்மேற் குத்திட்டு நின்ற வெளிச்ச வீட்டின் உச்சந்தலையில் பச்சையும் சிவப்புமாக விட்டு விட்டுஒளிரவே அந்தச் சூழ்நிலையில் ஒரு சலனம். ஆற்றங்கரையிலே காக்கைகள் குளித்துக் கொண்டன. புஸ்ஸென்ற காற்று கடற் பரப்பை இலோசாகத் தழுவிக் கரையோரத்தே நின்ற புங்கைமர இலைகளை அசைத்தது. அந்தப் பெண்ணும் பெருமூச்சு விட்டாள். மாலைப் பொழுதின் ஊமை ஓளியில் அவர் அவா மாபுகள் விம்மித் தணிவது தெளிவாக தெரிந்தது. இன்னமும் அவள் கண்களை மேற்கையே வெறித்திருந்தன. அதே சோகம்...அவம்பிக்கை....

அவள் பெருமூச்சின் சலனத்தால் என்னுள்ளே கதை விரிகிறது.

வாடைக்கடல் குமுறியடிக்கும் மாரிக்காலத்தில் இங்குள்ள மீனவர்களால் கடலிலே வலையை விரிக்க முடியாது. தோணிவிடவும் இயலாது. ஆகவே ஆண்கள் எல்லாருமே தொழில் தேடி மேற்குக் கரைக்குப் போய்விட்டார்கள். அப்படிப் போனவர்களோடு 'அந்திரேயா'வும் போய்விட்டான்.

கடற்கரையிலே பள்ளிக்கு ஒழித்துக் கிழிஞ்சல் பொறுக்கிய இளமைப்பருவந் தொட்டு அவனும் அவளும் ஒன்றாகவே பழகியவர்கள். இப்போது 'அந்திரேயா' கட்டான வாலிபன். நங்கூரக்கல் போன்ற அவன் வைரித்த மார்பிலும், துடுப்புத் தண்டு போன்ற வலிமை மிக்க கரங்களிலும் தன்னை இழந்துவிட்ட அந்தக் குமரி இப்போது மேற்கரைக்கச் சென்று விட்ட அவன் வரவிற்காகத் தவமிருக்கிறாள்! மாரிக்கடல் ஓய்ந்து விட்டது. அவன் மீண்டும் வந்துவிடுவான் எனக் காத்திருக்கிறாள். எத்தனை நாட்களாக இப்படியோ? ஏமாற்றத்தினால் அவள் கண்களில் இத்தனை சோகமா?

பாவம்! கிழட்டு நாரையால் உணவுக்காக மேற்குக் கரைக்குப் பறக்கச் சக்தியில்லை. வாலைப் பருவத்தினள் ஆதலினால் இவளாலும் அக்கரைக்குச் செல்ல முடியவில்லை.

இந்த எண்ணங்களிடையே, ஒரு வாரத்திற்கு முன்னால் அவள் தந்தை என்னிடம் பேசிய பேச்சுக்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.

'இந்தக் கடற் தொழிலிலே என்ன சுகத்தைக் கண்டோம் ஐயா. அன்றாடங் காய்ச்சிப் பிழைப்பு. தோணிக்கும் வலைக்கும் அப்பப்போ கடன் வாங்க வேண்டும். நாங்க மீனை வாடிக்கையாகக் கொடுக்கும் 'கந்தர' முதலாளிப் பையன் இல்லாவிட்டால் ஆலாய்ப் பறக்க வேண்டியிருக்கு மகளைக் கட்டி வைச்சாற்கூட நல்லது என்று நினைக்கிறேன். 'அன்றாடங்காய்ச்சி' வாழ்வு என் மகளுக்கும் வேண்டாம்.

அந்த நினைவு முறியில் என் மனம் துணுக்குற்றது. மேற்குக் கரையையே பார்த்தபடி தன் காதலனுக்காகத் தவஞ் செய்யும் அவ்வாலைக் குமரியின் காதல் ஈடேறாதா? அந்திரேயா இக்கரைக்கு வந்து சேருமுன்பே, அப்பெண்ணின் தந்தை தன் மகளுக்கு மீன் முதலாளியைப் பலவந்தமாக மணஞ் செய்து வைத்து விடுவானா? அப்படிப் பலவந்தம் நடந்தால் அப்பெண் கடற்தாயின் மடியிலேயே தன் உயிரை விட்டு விடுவானோ?

நான் நினைவுகளில் மூழ்கியிருக்கையில் அப்பெண் எழுந்து நடந்தான். நான் திடுக்குற்று எழுந்து அவளை நோக்கி நடந்தேன். ஆனால் அவள் கடற் பக்கமாகப் போகவேயில்லை. என் மனம் அமைதியுள்ளது.

ஆனால் அதோ அந்தப் பெண் ஆற்றங்கரைப் பக்கமாக நச்சு மாமரங்களை நோக்கி அல்லவா செல்கிறாள்! அம்மரங்களிலே குலை குலையாகக் காய்கள் தொங்குகின்றன. அதன் விதையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டாலே சில நிமிடங்களில் உயிர் போய் விடுமாம்!

'அவளைத் தடுத்து நிறுத்தி விடவேண்டும்' என்ற வேகத்தோடு நான் நடக்கின்றேன்.

எங்கே ஓடுகிறீர்கள்?

என்னைப்போலக் கடற்கரைக்குப் பொழுது போக்கவந்த நண்பரின் குரல் என்னைத் தடுத்து நிறுத்துகின்றது.

'நேரமாகி விட்டதே, வீட்டிற்குப் போகத்தான்' என்று பொய் சொல்லிவிட்டு நான் அந்த நண்பரோடு நடக்கின்றேன். வெட்கம் என்னைப் பிடுங்குகிறது.

போகும் வழியில்,

குணகடற்திரையது பறை தபு நாரை
திண்தேர்ப் பறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தா அங்குச்
சேயன் அரியோட்படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பாலோமே.

என்று நான் நேற்றுப் படித்த குறுந்தொகைச் செய்யுளை என் வாய் முணுமுணுத்தது.

தமிழழுது 1970

......


உண்ணி

வடிவேலுவிற்குச் சில நாட்களாக வலது காது குத்து குத்தென்று குத்தியது. ஒரே வலி. அந்த வேதனை தாங்க முடியாத அளவிற்கு அகோரமாக இருந்தது.

அவன் தாயார் என்னென்னவோ கைமருந்துகளையெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுமே பலிக்கவில்லை.

காதுக் குத்தோ, பல் வலியோ சகிக்க முடியாமலிருந்தால் ஒரு டிஸ்பிரினை வாயில் போட்டு தற்காலிகமாக நோவைக் கட்டுப்படுத்தக்கூட அந்தக் கிராமத்தில் முடியாது. ஏனென்றால் ஊருக்குள்ளே கொண்டு வரக்கூடாது எனத் தடை செய்யப்பட்ட பொருட்களில் டிஸ்பிரின், அஸ்பிரின் குளிசைகளுமடங்கும். ஆகவே மூதூர் ஆஸ்பத்திரிக்குப் போகமட்டும் வலியைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை!

வடிவேலுவிற்கு மூதூர் வைத்தியசாலைக்குப் போகவும் பயம். ஏனென்றால் அவனுக்கு வயது பத்தொன்பது. வயதுக்கு மீறிய வளர்ச்சி.

ஆகவே உள்ளூர் அனுபவஸ்தர்களின் கைமருந்துகளையே பிரயோகம் பண்ண வேண்டியிருந்தது.

"இது கணச்சூடுதான். நன்றாகக் குளித்து முழுக வேணும்" என்றார் வடிவேலுவின் தாய் வழிப் பாட்டனார்.

வடிவேலுக்கு அந்த வேதனையிலும் சிரிப்புத்தான் வந்தது!

'பத்து வருசத்துக்குப் பின்னால இந்த மாரிக்குத்தான் நல்லா மழை பெய்யுது என்று எல்லாரும் சொல்றாங்க. கார்த்திகை மாதம் முழுக்க ஒரே மழைதான். மழையில நெலமெல்லாம் தன்னூத்துக் கொண்டு ஊரெல்லாம் வெள்ளக்காடு. வெயில் முகத்தையே கணக்கிடக்கல்ல. ஓரே குளிர்! வெடென்று கூதல். இந்த நிலையில் கணச்சூடும் மண்ணாங்கட்டியும்' என்று எண்ணினான் வடிவேலு. காது வலித்தது! அந்த வலி தொடங்கி ஒரு மாதமாகி விட்டது.

தற்போது வலது கன்னம் முழுவதும் வீங்கி வடிவேலு படுக்கையில் வீழ்ந்து விட்டான்.

விதவைத் தாய்க்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பாவம்! அவளது இஷ்ட தெய்வமான வெருகற் சித்திர வேலாயுதர்கூடக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பூசை புனஸ்காரங்களின்றித் தவித்து நிற்கையில் அவளால் வேறு யாரிடந்தான் முறையிட முடியும்?

அவளுக்கு இன்னுமொரு பயம்.

ரோந்து வாற ஆமிக்காரங்க, வேலிக் கம்பிய வெட்டிற்று நடுமுற்றத்தால வரக்க, படுத்துக் கிடக்கிற மகனைப் பிடிச்சுக் கொள்வானுகளே.

தலைக்கோழி கூவிச் சில பொழுதுகள் கழிந்த பின்னர்....

விடிவெள்ளி காலித்துக் கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கையில்,

காகங்கள் கரைவதற்கு சற்று முன்னால்,

நாய்கள் குரைத்து ஊளையிடும் நாயின் ஊளைச் சத்தம் இயமன் வருவதற்கான கட்டியம் என்பது ஐதீகம்! இப்போது யதார்த்தம்!

நாயின் ஊளைச் சத்தம் கேட்டதுமே வடிவேலுவும் அவனொத்த இளைஞர்களும் வீட்டைவிட்டு ஓடிவிடுவார்கள். கிழடு கட்டைகள் மட்டுமே வீட்டிற் தங்கும்.

ஊருக்கருகால் ஓடும் ஆற்றைக் கடந்தாற் கரச்சை. நீர் முள்ளிகளும் கண்டல் மரங்களும் நெருங்கிய காடு.

மீண்டும் ஊர் 'கிளீயர்' ஆகும் வரையும் அந்தக் கரச்சைக் காடுகள்தான் இளைஞர்களின் சரணாலயம்! சுவிஸ்ஸ”ம், பிரான்சும், கடனாவும் அக்கிராமத்து இளைஞர்களுக்கு எட்டாத விவகாரம்!

கன்னம் வீங்கிப் பருத்திருக்கும் வடிவேலுவின் தலைமாட்டில் இருந்தபடி 'ஆமிக்காரன் வந்தால் எப்படி ஓடி ஒளிக்கப் போகிறான்' என்று கலங்கியவாறே குன்றிப் போயிருக்கிறாள் அவன் தாய் வள்ளியம்மை.

"என்னக்கை செய்றா ஊட்டுக்குள்ள" என்ற கேள்வியோடே அவன் தம்பி சிவப்பிரகாசம் வீட்டுக்கள் வருகிறான்.

"காதுக்குத்து இன்னமும் அப்படித்தாண்டா இருக்கு. எந்த மருந்துக்கும் கேக்கல்ல! மூதூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவும் பயமாயிருக்கு ஆமிக்காரனுக்கு எல்லா வாலிபப் புள்ளைகளும் புலிதான்!"

சிவப்பிரகாசம் சற்று யோசித்த பின்னர், தான் கொண்டு வந்த சைக்கிளை வீட்டுக்குள் கொண்டு வந்து, சைக்கிளை ஸ்டாண்டில் நிற்க வைத்துப் பின்னர் சில்லைச் சுழல வைக்க பெடலைப் பிடித்துப் பிடித்துச் சுழற்றும் படி வடிவேலுவின் சின்னத்தம்பிக்கு ஆணையிடுகிறான்.

சக்கரம் சுழல்கிறது. அதன் சுழற்சியில் சைக்கிளின் டைனமோ வேலை செய்ய லைற் எரிகிறது.

வடிவேலுவைத் தூக்கி நிறுத்தி வைத்து அவன் காதுக்குள் லைற்றின் ஒளியைப் பாய்ச்சுகிறான் சிவப்பிரகாசம்.

லைற் ஒளியில் வடிவேலுவின் காதுக் குருத்தில் ஓர் உண்ணி!

இரக்கம் குடித்துப் பருத்துக் கபில நிறமாய்....

லைற் ஒளயிற் துல்லியமாகத் தெரிகிறது. சிவப் பிரகாசம் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் பேன் பிடியாய்ப் பிடித்து ஊசித் துவாரத்துள் ஒட்டகத்தை நுழைத்த கதையாக அவ்விரல்களைக் காது மடலில் நுழைத்து....

"விடுங்க மாமா"

வடிவேலு அலறுகிறான். அவன் அலறுகையிலேயே சிவப்பிரகாசத்தின் பேன்பிடி விரல்கள் உண்ணியோடு வெளிவருகின்றன.

சருகுண்ணி!

எப்படி இவன் காதிற்குள் நுழைந்தது.

வடிவேலுதான் நொடியை அவிழ்க்கிறான்.

"ஒண்ணரை மாசத்துக்கு முன்னால ஆமிக்காரன் வரக்க வெள்ளாப்பிலேயே கரச்சைக்க ஓடினன். அண்டு பகல் முத்திலா தண்ணி வென்னி இல்ல. பசிக்களையில நித்திரை கொண்டிற்றன். பொழுது படத்தான் விட்ட வந்தேன். அன்றயிலிருந்துதான் இந்தக் காதுகுத்து!

"சரி உண்ணியக் கழட்டிற்றன். இனி வலிக்காது" என்றான் சிவப்பிரகாசம்.

நம்ம எல்லாரையும் பிடிச்சிருக்கிற உண்ணி எப்ப கழரப் போகுதோ? செத்த மாட்டில உண்ணி களண்ட மாதிரி எண்டு ஊரில சொல்வாங்க. நம்ம சமூகம் எல்லாம் செத்தாத்தான் உண்ணி கழருமோ? என்று எண்ணிக் கொண்டான் வடிவேலு.

1988


பிரிவுபசாரம்

சித்திரை மாதத்து உச்சி வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. அந்த வெயியிலின் அகோரத்தில் அச்சுற்றுப்புறம் யாவுமே, நேர்மையற்ற விமர்சனத்தைச் சகித்துக்கொள்ள மாட்டாத எழுத்தாளனின் இதயத்தைப் போல வெந்து புழுங்கிக் கொண்டிருந்தது. தெருவிற்சொறி நாய்கூடப் போகவில்லை; காகங்கூட ஆகாயத்திற் பறக்கவில்லை. இந்த மகாமசான அமைதியில் ஊர்க் கோடியிலிருந்த அந்த வீட்டினுள்ளே சுவரோரமாக இருந்த கட்டிலில் செபமாலை கிழவி படுத்துக்கொண்டு இருந்தாள். மூப்புத்தட்டி முதிர்ந்து, பஞ்சுப் பெட்டி போல நரைத்திருந்த அவள் தலையும், காலம் கீறிக் கீறிக் சுருக்கம் விழுந்து ஒட்டிப் போய்க் கிடந்த அவள் கண்ணங்களும், பழஞ்சிலை போலத் துவண்டு கிடந்த அவள் உடலும் அந்தக் கட்டிலுக்குப் பாரமாயிருந்ததோ அல்லது அந்தக் கட்டில்தான் அவளக்குப் பாரமாயிருந்ததோ! எல்லா உபாதைகளையும் படுக்கையிலேயே சாந்திப்படுத்திக்கொண்டு அவள் படுத்துக் கொண்டிருந்தாள்.

அறை முழுவதும் பொருட்கள் இறைந்து கிடந்தன. அரைத்த குளிகை அம்மியிலேயே இருந்தது; பழஞ் சீலைகள் குவிந்து மலையாகக் கிடந்தன. 'சம்மூலத்தோடு' பிடுங்கி வந்த மூலிகைகளெல்லாம் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன. அந்த வீடே காலதூதனின் வருகைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு விட்டதாய் சிருட்டிகளிலெல்லாம் தன்னைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் கலைஞனைப் போல அங்குகிடந்த எல்லாப் பொருட்களுக்கும் மரணத்தை-அதன் வருகையைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

கட்டிலினருகே பால்குடி மறக்கடித்த குழந்தையைப் போல ஏங்கிக்கொண்டு நின்ற அவள் இளைய மகன் அருளப்பா, அம்மாவின் சூம்பிச் செயலிழந்து கிடக்கும் கைகளைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் செல்லாப்பாவின் முகத்தைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கிழவி இன்னமும் வாழவேண்டும் என்பதை அவளே விரும்பவில்லை. அவள் படுக்கையில் விழுந்தும் பத்து நாட்களாகி விட்டன. கணத்துக்குக் கணம் சாவதைத் தான் அவன் விரும்பிக் கொண்டிருந்தாள்! ஏன்? செத்துக் கொண்டுதான் இருந்தாள். சிற்றாடை கட்டிக்கொண்டு கவலையற்ற சிட்டுக்குருவியாய் மண் வீடு கட்டி மகிழ்ந்தும், பதினைந்தாவது வயதிலேயே 'அவரை'க் கைப்பிடித்து இளமை வெள்ளத்தின் உணர்ச்சிச் சுழிப்பில் நிதானம் இழந்த தெப்பமாய்ச் சுழன்றும், பெற்றுப் பெருக்கிக் கட்டிக் கொடுத்துக் களித்துப் பேரப் பிள்ளைகளையும் பூட்டப்பிள்ளைகளையும் கண்டும் அவள் நன்நெடும் பயணத்தின் அந்தத்திற்கே வந்துவிட்டாள்? அந்தப் பயணம் இன்னமும் தொலையாத யாத்திரையாய் இருப்பதில் எவருக்குமே எந்தப் பயனும் இல்லை. ஆனாலும் கிழவி இந்தப் பத்து நாட்களாய்ச் செத்துக்கொண்டுதான் இருந்தாள்!

கிழவியின் உதவிக்காக வருத்தம் பார்க்க வந்திருந்த இனத்தவர்கட்கெல்லாம் அலுத்துப் போய் விட்டது. 'நித்தஞ் சாவாருக்கு நித்தமும் அழ' அவர்களால் முடியவில்லை. அவர்களெல்லாரும் செத்த மாட்டிலிருந்து உண்ணி கழன்றதைப்போல் ஒருவர் பின்னொருவராகப் போய் விட்டார்கள். "என்னத்திற்கும் சாவறுதி காலத்தில் ஓர் பெண்ணடி வேண்டும்" என்ற அனுதாப வார்த்தைகளைச் சொல்லிவிட அவர்களில் எவருமே தவறவில்லை.

கிழவியின் மூத்த மகன் பிலிப்பையாவின் மனைவி அவ்வூரிற்தான் இருந்தாள். அவளுக்கும் கிழவிக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதோ ஒருநாள் நடந்த சண்டையில் 'இந்த நீலி என் கட்டையில்கூட முழிக்கக் கூடாது' என்று கிழவி ஆத்திரமாகச் சொல்லி விட்டாள் இதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவளும் 'அழுகைச் சத்தங் கேட்டாற் போவோமே' என்று பேசாமலே இருந்து விட்டாள்.

கிழவியின் உறவினர்கள் எத்தனையோ பேர் வெளியூர்களில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சென்ற வருடமும் ஓர் முறை கிழவி இப்படித்தான் செத்துக் கொண்டிருந்தபோது அருளப்பா கிடுகிடென்று எல்லாருக்கும் தந்தி அடித்து விட்டான். வந்தவர்கள் எல்லாரும் கிழவியின் சாவிற்காக ஒருவாரம் காத்துக் கொண்டிருந்துவிட்டு, பிரயாணக் கஷ்டம், லீவு எடுத்தது எல்லாவற்றிற்குமாக அருளப்பாவைத் திட்டித் தொலைத்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். எனவே இம்மு€ இரண்டிலொன்று நிச்சயமாகத் தெரிந்தாலொழிய அவர்கட்கெல்லாம் தந்தியடிப்பது இல்லை என்று அருளப்பா எண்ணிக் கொண்டான்.

பத்து நாட்கள் கடந்து விட்டன. வைத்தியர் எதையும் திட்டமாகச் சொல்லவில்லை.

நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டு இருந்த வைத்தியர் செல்லாப்பாவிற்கு தான் ஏகலைவ பக்தியோடு பூசித்து வரும் தனவந்திரியே வந்தாலும், செபமாலை பிழைக்க மாட்டாள் என்ற உண்மை இப்போதுதான் விளங்கிற்று. அவர் அருளப்பாவின் முகத்தைப் பார்க்காமலே "உன் வேதக் கடமைகளைச் செய்து கொள்; நான் பிறக வருகிறேன்" என்று கூறிவிட்டுத் தன் குடையை எடுத்து விரித்துக்கொண்டு வெளியேறினார். அவருக்கென்ன? நேற்றுத்தான் கிழவியின் பேரிலே 'சர்வ சங்காரக் கொதியெண்ணெயை' வடிப்பித்துத் தன் அலுமாரியில் வைத்துக் கொண்டார்! வெந்த வீட்டிற் பிடுங்கியது லாபந்தானே!

அருளப்பாவின் கலங்கிய கண்கள் கண்­ரை வெளியே நெட்டித் தள்ளிவிட்டன! ஒருகணம் செயலற்றுப் போய் நின்றான்! மறுகணம் கோயிலை நோக்கி ஓட்டமாக ஓடினான்.

* * *

அருளப்பா கோயிலுக்குட் சென்ற சற்று நேரத்திற்கு எல்லாம் சுவாமியார் தன் நீண்ட கால்களை அகலமாகத் தூக்கி வைத்துக்கொண்டு அவ்வூரையே இரண்டு கவடுகளிற் கடந்துவிட எண்ணியவர்போல வேகவேகமாக நடந்தார். அவர் பின்னால் அருளப்பா ஓடிக்கொண்டு இருந்தான். கோயிற் கோபுரம் விழுத்தும் குறுகிய நிழலிலே குண்டடித்து விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள், சுவாமியார் சற்பிரசாதம் கொண்டு போகிறார் என்றறிந்து முழந்தாட்படியிட்டு நமஸ்கரித்து நின்றனர். ஓட்டை விழுந்த கீற்று வேலியினூடாகச் சுவாமியார் போவதைக் கண்ட பெண்கள் சிலர், அவர் யாருக்கோ 'அவஸ்தைக்கு'ப் போகிறார் என்று தெரிந்து கொண்டு கைவேலைகளை எல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் பின்னால் எழுந்து ஓடினார்கள்.

* * *

அமைதியாக இருந்த அந்த வீட்டிலே சிறிது கலவரம் உண்டாயிற்று! சுவாமியார் செபமாலையின் பொறிகளிற் பரிசுத்த தைலத்தைப் பூசி அவளுக்காக மௌனமாகப் பிரார்த்திக்கொண்டு போய்விட்டார். கிழவியின் தலைமாட்டிலே ஏற்றி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மெழுகுதிரிகள் மட்டும் மௌனமாக அழுது வடிந்து கொண்டு இருந்தன. நலிந்து சுருங்கிக் கிடந்த கிழவியின் கைகளை மார்பின்மேற் கூப்பி வைத்து அவைகட்கிடையிற் சிலுவை ஒன்றைக் கொடுத்துப் பிடிக்கச் செய்துவிட்டு அறைக்குள்ளே அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்த பொருட்களை எல்லாம் வெளியே தூக்கி வைத்து அறையை ஒழுங்காக்கிய பின்னர், ரணகளத்திலே குற்றுயிராகக் கிடக்கும் போர் வீரனைத் தங்கள் வயிற்றுட் சமாதியாக்கக் கருதிய பிணந்தின்னிக் கழுகுகளைப் போல அவன் படுக்கையைச் சுற்றித் காத்துக்கொண்டு இருந்தனர் அங்கு வந்த பெண்கள். அப்பெண்களில் ஒருத்தி சோகக் குரலெடுத்துச் செவித்தாள். "கருணாம்பர இயேசுவே! இன்று மரிக்கிறவர்கள் இரக்காயிரும்."

அந்தச் செபம் முடியுந்தறுவாயில் இன்னொருத்தி அந்த யாழ்ப்பாணத்துப் புலவரின் பாட்டை இசையோடு பாடினாள்:

நல்ல மரணந் தரவேணும் - அருள்
வல்ல பரனே உந்தன் மனதன்பு கூர்ந்து

அருளப்பா சுவரிற் சாய்ந்தவாறே அறையப்பட்ட சிலைபோல் நின்றுகொண்டு இருந்தான். மடை உடைத்த வெள்ளமாய் அவன் கண்­ர் பெருகிற்று.

* * *

இருட்டி விட்டது. செபமாலை செத்துக்கொண்டு தானிருந்தாள். அங்கு வந்தவர்கட்கும் அலுத்துப் போய் விட்டது. அவர்களெல்லாரும் ஒவ்வொருவராக வீட்டுக்குப் போகத் தொடங்கினார்கள்.

அருளப்பாவும் வெளியூர்களில் இருந்த தன் இனத்தவர்களுக்கு எல்லாம் தந்தி அடித்துவிட்டு அயர்ந்து போய்த் திண்ணையிற் குந்திக்கொண்டு இருந்தான். உள்ளே அவன் அம்மா செத்துக்கொண்டு இருந்தாள்!

விடிந்தது! இன்னமும் கிழவி செத்துக்கொண்டுதான் இருந்தாள். காலை வண்டியிலே கிழவியின் மூத்த மகன் பிலிப்பையாவும் மற்றும் இனத்தவர்களும் வந்துவிட்டார்கள். பிணம் விழுகிற நாளிலே நல்ல காரியத்திற்குப் போகக்கூடாதே என்று எண்ணிய ஊரவர்கள் அன்றைக்கென்றிருந்த கோடைப் போக விதைப்பை ஒத்தி வைத்து விட்டார்கள். ஒருநாட் தண்­ர் இல்லாவிட்டாலும் 'தூங்கிக்கொண்டு சாகும்' வன்பயிரான புகையிலையைப் பயிரிட்டவர்களும், இரண்டாஞ் சாமத்தோடு தண்­ர் இறைப்பை முடித்துவிட்டுக் கிழவியின் மரணத்திற்காகக் காத்துக்கொண்டு இருந்தார்கள். அந்தக் கிராமமே கிழவியின் மரணத்துக்காகக் காத்துக்கொண்டு இருந்தது. ஆனாலும் செபமாலை செத்துக்கொண்டுதான் இருந்தாள்!

அன்று இருட்டியபோதும் செத்துக்கொண்டேயிருந்த போது அந்த ஊரே கிழவியைத் திட்டியது. "செய்த கொடுவினைக்கெல்லாம் கிடந்து உத்தரிக்குது" என்று. கிழவிக்கோ இவைகளைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை! அவள் பிரக்ஞையற்ற நிலையில் செத்துக் கொண்டுதான் இருந்தாள்!

செபமாலையின் மூத்த மகன் பிலிப்பையாவும் மற்றும் நெருங்கிய உறவினர்களும் தான் வீட்டில் இருந்தார்கள். உத்தியோகம் பார்க்கும் மூத்த மகன் என்ற முறையிற் பிலிப்பையா தன் அன்னையின் பிரேத அடக்கத்திற்கான காரியங்களை இரகசியமாகச் செய்து கொண்டிருந்தான். அவன் மனைவி அதனால் வரும் இலாப நட்டத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கிழவியின் பிரேத அடக்கத்திற்கு யாரும் ஒரு சதமும் செலவு செய்யத் தேவையில்லை. கழுத்தோடு கழுத்தாக ஒட்டிக்கொண்டு கிடக்கும் "அவர்" கட்டின தாலிக் கொடியும், புடலங்காய்க்குக் கட்டின கல்லைப் போலக் கழுத்தை நீட்டி இழுத்துக்கொண்டு தொங்கும் பழங்காலத்து 'மேலீடும்' அவளைபோல ஐந்தாறு பேரை அடக்கம் பண்ணப் போதுமானதாக இருந்தன. செலவைத் தாங்களே முன்னின்று நடத்தினால் அவையிரண்டையும் தட்டிக்கொண்டு விடலாம் என்று பிலிப்பையாவின் மனைவி எண்ணிக்கொண்டாள்! கிழவிக்குப் பிரக்ஞை வந்துவிட்டால், குடியிருக்கும் காணியை இளைய மகன் அருளப்பாவிற்கே மரண சாசனமாகக் கொடுத்துவிடுவாளோ என்ற பயமும் அவர்களை உலுப்பிக்கொண்டிருந்தது. இதனால் செபமாலை இப்படியே செத்துவிட மாட்டாளா என்று அவள் ஏங்கிளாள். தூரத்து உறவினர்கட்கும் இதுதான் ஆசையாக இருந்தது. ஏதாவது ஒரு உரித்தைக் கொண்டு வந்து குடியிருக்கும் காணியிற் கூறு கேட்கலாமல்லவா?

இவர்கள் எவரது மனக்குறையையும் அறியாதபடி கிழவி செத்துக் கொண்டுதானிருந்தாள்!

நடுச்சாமமும் ஆகிவிட்டது. அழுகைச் சத்தம் கேட்டால் போக வேண்டும் என்று அந்த ஊரே விழித்துக் கொண்டிருந்தது. அந்த விழிப்பில் ஊர்க் கோடி இலுப்பை மரத்திலிருந்து வந்த இணைக் கூகையின் உறுமலும், சொறி நாயின் ஊளையும் தெளிவாகக் கேட்டன.

வீட்டினுள்ளே கிழவி செபமாலை, ஓடிக் களைத்த பந்தயக் குதிரைபோல விரைவாக - விரைவாக மூச்சு விட்டாள். அந்த மூச்சின் சப்தம் கண்ணை அழுத்திக் கனத்துக் கொண்டிருந்த, நள்ளிரவில் அவ்வவ்விடத்திலேயே நித்திரையாகிவிட்ட எல்லோரையும் எழுப்பிவிட்டது. அவர்கள் எழுந்து பார்க்கும்போது கிழவி தன் சோர்ந்த கைகளால் படுக்கையைப் - பாயைப் பொத்திப் பொத்திப் பிடித்துக்கொண்டு திணறினாள்! அவள் கண்கள் நிலைகுத்தி விட்டன. கால்களும், கைகளும். படுக்கையில் எறிந்த எறிந்த மாதிரியே கிடந்தன. வளவு மூலைக்குள் இருந்த தென்னையிலிருந்து பழுத்த ஓலை ஒன்று சலார் என்ற சப்தத்துடன் விழுந்தது. "அம்மா அம்மா" என்ற இரு அபயக் குரல்கள் உடனே எழுந்தன!

அந்த நள்ளிரவில் ஊரே அங்கு கூடிவிட்டது. அழுகைக்கும் ஒப்பாரிக்கும் குறைச்சலில்லைதான். கிழவி சாகிறாள் இல்லையே என்று குறைப்பட்டுக் கொண்டிருந்தார்கள் எல்லாம், இப்போது அவள் செத்துவிட்டதற்காக ஒப்பாரி சொல்லி அழுதார்கள்!

* * *

முடிந்தது. வெளியூர்களில் உத்தியோகம் பார்க்கும் உறவினர்களின் சௌகரியத்திற்காக காலையிலேயே பிரேத அடக்கம் நடைபெற வேண்டி இருந்தது.

பிரேதத்தைப் பெட்டியில் வைக்குமுன், பிலிப்பையா தன் தாயாரின் கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றினார். மேலீட்டைக் கழற்றும்போது காதுச் சதையுங்கூட வந்து விட்டது.

மாரடித்து அழுது கொண்டிருக்கையிலும், கிழவியின் மருமகள், தன் கணவரிடமிருந்து நகைகளை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டாள்!

கிழவியின் இறுதி யாத்திரை ஆரம்பமாயிற்று.

உபதேசியாரின் செபத்தோடு, ஊர்க் கதைகளும் ஊர்வலத்தில் ஒலித்தன.

புதைக் குழியில் அடையாளத்திற்காக நாட்டவிருந்த மரச்சிலுவையைத் தோளிற் சுமந்தவாறு, அன்று கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்ற புனிதனைப் போல அருளப்பாவும் ஊர்வலத்திற் போய்க்கொண்டு இருந்தான்!

சுதந்திரன்1953


ஒரு பூனைக் கதை

பூனையாருக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.

மிளகாய்த் தூள் கலந்த காரக் கறியை விரும்பியுண்ணும் எசமானரிடம் வளர்ந்தது அந்தப் பூனை. உறைப்புக் கறிக்கும் சோற்றுக்கும் அதன் நா பழக்கப் பட்டுவிட்டது. ஆனாற் கடந்த ஒரு வாரமாக அதற்கு உறைப்புக்கறியே கிடைக்கவில்லை! காரக்கறி இல்லாமல் உள்ளே சென்ற உணவு சமிக்கவில்லை!

பூனையாருக்கு செல்லப் பூனையின் அவஸ்தையைக் கண்டார்! அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவருக்கு.

காரணம் அவருக்குத் தெரிந்ததுதான்!

பூனைக்கு மட்டும் என்ன? மிளகாய் இல்லாத கறியைச் சாப்பிட்டதில் அவருக்கும் வயிற்றிலே கோளாறாகத்தான் இருந்தது.

ஏழெட்டு நாட்களுக்கு முன்னால்...அன்று மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவர் மனைவியிடம் கேட்டார்.

"இன்றைக்குக் குழம்புக் கறியில்லையா?"

"இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? நீங்கள் வோட்டுப் போட்ட அரசாங்கத்திடம் கேளுங்கள்" என்று எரிந்து விழுந்தாள அவர் மனைவி.

"இன்னம் மூன்று மாதங்களிற் பார். ஊரெல்லாம் நம் நாட்டு மிளகாயாகவே இருக்கும்"

"அதுவரைக்கும் வெள்ளைக் கறிதாள். அதுவும் பச்சை மிளகாயும் இல்லாமல், விருப்பமென்றாற் சாப்பிடுங்கள்" என்று மீண்டும் சீறிய மனைவி அன்றிலிருந்து குழம்புக் கறியே சமைக்கவில்லை. அதன் காரணமாகத் தான் பூனையாருக்கு, ஏன் எசமானருக்கும் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகின்றது.

பூனையாரின் சங்கடத்தை அவதானித்த எசமானர் "மித்ரா! பஞ்சதந்திர காலத்திலே உன் முன்னோன் ஒருவன், அவனுக்குப் புகலிடமளித்த கிழக் கழுகை ஏமாற்றிப் பறவைக் குஞ்சுகளைக் குதறினான். அந்தப் பாவத்தின் காரணமாகத்தான் இப்போது உனக்கு உறைப்புக் குழம்பு கிடைக்கவில்லை. ஆனால் அதையிட்டுக் கவலைப்படாதே. சில மாதங்களுக்குப் பொறுத்துக் கொள்! பின்னர் உள்ளூரிலேயே நமக்குத்தேவையான மிளகாய் உற்பத்தியாகி விடும்."

தற்செயலாக அடுக்களையிலிருந்து வெளியே வந்த அவரது மனைவி, தன் கணவரின் உபதேசத்தில் ஆத்திர மடைந்தவளாய் "மீனும் இறைச்சியும் என்ன விலை விக்குது. அதையும் தின்னாமத் தியாகம் பண்ணுங்கள். நாளைக்குப் பருப்புக்கறி மட்டுந்தான். அதையும் எப்ப நிப்பாட்டப் போறாங்களோ?" என்று கர்ண கடூரமாக முழக்கிவிட்டு உள்ளே சென்றாள்.

தன் மனைவியின் பேச்சுக்குப் பதில் சொல்லமுடியாது தவித்த தன் எசமானரைப் பூனை ஆதுரத்தோடு பார்த்தது!

எசமானரும் பூனையை அன்போடு தடவிக் கொடுத்துக் கொண்டே "கேட் டாயா அவள் சொன்னதை? இனி உனக்கு மீனும் இறைச்சியும் கூடத் தர மாட்டாளாம். எப்படித்தான் வாழப் போகிறாயோ? எல்லாம் உன் முன்னோன் செய்த பாவத்தால் வந்த வினை" என்றார் எசமானர்.

பூனை அவரிடம் அமைதியாகக் கேட்டது. "நான் தான் என் முன்னோன் செய்த பாவத்தால் கஷ்டப்படுகிறேன். நீங்கள் யார் செய்த பாவத்திற்காகக் கஷ்டப்பட வேண்டும்? உங்களுக்கும் மீனும், இறைச்சியும் குழம்பும் கிடைக்காது தானே?"

"அதுவா? அதுவும் என் முன்னோன் செய்த பாவந்தான்! மிளகாயையே தெரியாத இந்த நாட்டிலே அதைப் பழக்கி வைத்த என் முன்னோன் செய்த பாவத்தினாற்தான் நான் கஷ்டப்படுகிறேன்" என்றார் எசமானர்.

"இல்லை. உதட்டளவிற் சோஷலிஸம் பேசுபவர்களை நம்பியதுதான் நீங்கள் செய்த பாவம்" என்று வெடுக்கென்று பதில் சொல்லிற்று பூனை!

திகைப்படைந்த எசமானர் சுதாரித்துக் கொண்டு "இதை வெளிப்படையாகச் சொல்ல நானும் உன்னைப் போலப் பூனையாகப் பிறக்கவில்லையே, அதுவும் நான் செய்த பாவந்தான்" என்று பெருமூச்செறிந்தார்.

இளம்பிறை'72

ஜ“ப்புகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன

'மூவிருமுகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள்கள் போற்றி'

எடுப்பான குரலில் மனமுருகப் பாடினார் சொக்கலிங்கம். பக்திப் பிரவாகமாக வெளிக் கிளம்பிய அவரது இசை கோயில் மண்டபத்தை நிறைத்து, உள்ளே வேலும் மயிலுமாக வீற்றிருந்தவரின் சன்னிதானத்தை நிறைத்து, நிர்மானுஷ்யமான அந்தப் பிரதேசத்து மருதமரங்களிடையேயும் எதிரொலித்தது.

மூர்த்திகரம் என்பது கோயிலின் அளவுப் பிரமாணத்தைப் பொறுத்ததல்ல. ஆற்றங்கரையிலே அனாதரவாக விடப்பட்டிருக்கும் அச்சின்னஞ் சிறு கோயிலிற் குடி கொண்டிருக்கும் சித்திர வேலாயுதரின், மூர்த்திகரத்திற்கு ஈடும் இணையும் கிடையாது; என்றெல்லாம் பக்தர்கள் பேசிக் கொள்வதைச் சொக்கலிங்கம் கேள்விப்பட்டுத்தான் இருந்தார்.

புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி கழித்த பின்னர் அம்மூர்த்திக்கு விழா எடுக்கையில் சுற்று வட்டாரத்து ஊர்கள் எல்லாமே அக்கோயிலின் வெளிப்பிரகாரத்திற்கூடிவிடும். அசமந்து கிடந்த அப்பிராந்தியத்தில் பதினெட்டு நாட்களுக்குக் கடையும் கண்ணியும், காரும்' லொறியுமாக அமர்க்களப்படும் என்பதையும் சொக்கலிங்கத்தார் அறிந்துதான் இருந்தார்.

ஆனாலும் தான் திருகோணமலைப் பிராந்தியத்திற்கு மாற்றலாகி வந்த இரண்டு வருட காலத்தில் எந்தத் திருவிழாவிலும் கலந்து கொள்ளும் பாக்கியம் சொக்கலிங்கத்தாருக்குச் சித்திக்கவேயில்லை!

சென்ற மாதந்தான் அக்கோயிலின் திருவிழா நடந்தது. அவரது காரியாலயத்திலிருந்த அத்தனை ஊழியர்களும்-இந்துக்களல்லாத ஊழியருங்கூட அத்திருவிழாவிற்குச் சென்றிருந்தார்கள்.

அவர்கள் தனியாக ஒரு பஸ்ஸை அமர்த்திக் கொண்டு தான் கோயிலுக்குச் சென்றார்கள். அப்படிச் செல்ல எத்தனிக்கையில் காரியாலயப் பிரதமலிகிதர் சோமசுந்தரம் கேட்டார்:'ஐயா எல்லோருமே சித்திர வேலாயுதர் கோயிலுக்குப் புறப்படுகிறோம். வெள்ளிக் கிழமை பின்னேரம் புறப்பட்டுச் சென்று இரண்டு திருவிழாக்களைப் பார்த்துவிட்டு ஞாயிற்றுக் கிழமை திரும்பவிருக்கிறோம், நீங்களும் வாருங்கள்.'

சொக்கலிங்கம் சொன்னார்: 'எனக்கும் அந்தக் கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் எந்தக் கோயிலுக்கும் திருவிழாவின் கோலாகலமான கண்காட்சிகளுக்கிடையே பக்தி பூர்வமாகச் சுவாமி தரிசனம் பண்ண முடியாது. வேடிக்கையிலும் வினோதத்திலுந்தான் மனம் செல்லும்.'

'அப்படியானால் நாங்கள் போய் வருகிறோம்' என்று விடைபெற்றுக் கொண்டே சோமசுந்தரம் மற்றவர்களோடு சென்று விட்டார்.

திருவிழாவிற்குச் சென்ற திரும்பி வந்த கூட்டத்தினர் சுவாமிக்குக் காவடி எடுத்த பக்தர்களின் வைராக்கியத்தையிட்டு வாய் ஓயாமற் பேசினார்கள். தீமிதிப்பு வைபவத்தைப் பற்றிப் பரவசத்தோடு கதைத்தார்கள். கோயிலின் அருகாமையிற் சலசலத்துத் தெளிந்தோடும் புனித கங்கையின் தீர்த்த விசேடத்தையிட்டுப் பூரித்தார்கள்.

'முப்பது ரூபாய்க் காசுக்கு அருமையான பயணம்' என்று சிலாகித்தான் இளைஞனான சந்திரன்.

'இதற்காகத்தான் நான் கூட்டத்தோடு கூட்டமாக எந்தக் கோயிலுக்குமே போறதில்லை' என்று தம் தனித்துவத்தை நிலைநாட்டிய சொக்கலிங்கம், பிரதம விகிதர் மறக்காமற் கொண்டு வந்திருந்த கோயில் திருநீற்றை ஆசாரத்தோடு வாங்கி நெற்றியிற் தரித்துக் கொண்டே 'வேலாயுதர் என்னையும் தன் சந்நிதிக்கு அழைக்காமலா இருக்கப் போகிறார்?' என்று சொல்லிக் கொள்கையில் அவர் கண்கள் பனித்தன. காரியாலயம் முழுமையுமே-சந்திரன் என்ற அந்த இளைஞன் உட்பட - அவரது ஆத்மார்த்தமான பக்தியைக் கண்டு வியந்தது.

மாதங்கள் உருண்டோடி விட்டன. சொக்கலிங்கம் தம் காரியாலயத்து மேசையிலிருந்த கோலிங்பெல்லை அழுத்தினார்.

காரியாலயச் சேவகன் அவர் முன்னால் அடக்க ஒடுக்கமாக வந்து நின்றான்.

'சந்திரனை வரச் சொல்'

சந்திரன் வந்தான். தான் சித்திராவேலாயுதர் கோயிலுக்கு ட்ரிப் போன நாட்தொடக்கம் சொக்கலிங்கத்தார் தன்மேல் ஏதோ கறுவிக் கொண்டிருப்பது சந்தரனுக்குத் தெரியும். கடவுட் பக்தியற்ற கழிசறை என்று தன்னைப் பற்றி அவர் சொன்னதாக பிரதமலிகிதர் மூலம் கேள்விப் பட்டிருக்கிறான். ஆகவே என்னவோ ஏதோ என்ற அச்சத்தோடுதான் சொக்கலிங்கத்தாரிடம் போனான்.

தன் முன்னால் அடக்கஒடுக்கமாக நின்ற சந்திரனிடம் சொக்கலிங்கத்தார் கேட்டார்:

கங்கைக் கரையில் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஆரம்பித்திருக்கும் இளைஞர் விவசாயத் திட்டத்திற்கான பொருட்கள் எல்லாம் அனுப்பப்பட்டாயிற்றா?

'ஆம் ஐயா. விதை வெங்காயம், நீரிறை கருவிகள், பசளை-கிருமிநாசினி மருந்துகள் எல்லாமே அனுப்பப்பட்டாயிற்று. அனுப்பி இரண்டு வாரங்கள் இருக்கும்.'

'அவ்வளவுந்தானா?' சொக்கலிங்கத்தாரின் குரலில் கடுமை கனன்றது.

'காரியாலயப் பாவிப்புக்கான காகிதாதிகள் இன்னும் சில சில்லறைப் பொருட்களை இன்றையத் தபாலில் அனுப்புவேன்.'

'இத்தனை நாளும் ஏன் அவைகளை அனுப்பவில்லை' என்று கர்ச்சித்த சொக்கலிங்கத்தார் 'நாளைக்குச் சனிக்கிழமை. காரியாலய விடுமுறை அங்கே அவர்களுக்கு ஒன்றும் கிடையாது' என்று பொரிந்தார்.

'அவைகளுக்கு உடனடித் தேவையில்லை ஐயா?' என்று இழுத்தான் சந்திரன்.

'ஷடப். இன்றைக்கு அத்திட்டத்தின் மனேஜர் கடிதம் எழுதியிருக்கிறார். போய் எல்லாவற்றையும் எடுத்து வையும்' என்று ஆணையிட்ட சொக்கலிங்கம் 'யூஸ்லெஸ் பகர்' என்று ஆங்கிலத்தில் புறுபுறுத்தார்.

தலைகுனிவோடு தன் இருப்பிடம் சேர்ந்த சுந்திரன் காகிதங்கள், கடித உறை, குண்டுசீகள், பிசின் ஆகிய பொருட்களை ஒரு பெரிய கடித உறையிற் போட்டுக் கட்டினான்.

காரியாலயச் சேவகன் அந்தப் பொதியை எடுத்துச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் காரியால ஜ“ப் வண்டி உறுமிக் கொண்டோடியது. சாரதியின் ஆசனத்துக் கருகாமையில் சொக்கலிங்கத்தார் வீற்றிருந்தார்.

உச்சி வெய்யலின் கொடுங் கிரணங்களைத் தடுத்து நிறுத்தித் தண்ணிழல் பரப்பும் புனித சேவையிற் கர்மயோக சாதகனாக நின்ற மருதமரத்தின் கீழ் ஜ“ப் வண்டி நின்றது.

வண்டியிலிருந்தபடியே தன் மேற்சட்டையைக் கழற்றி அரையில் வேட்டியையும் உடுத்திக் கொண்டு இடுப்பிலே சால்வையையும் கட்டிக்கொண்டு இறங்கினார் சொக்கலிங்கம்.

நேரே ஆற்றுக்குச் சென்று முழங்காலளவு தண்­ரில் இறங்கி முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு அருகே இருந்த பெட்டிக்கடைக்குச் சென்றார்.

அங்கே தேங்காய், பழம், கற்பூரம் வாங்கிக்கொண்டு ஆசாரத்தோடு கோயிலுக்குச் சென்ற சொக்கலிங்கத்தைப் பெட்டிக்கடைக்காரன் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். 'எத்தனை பெரிய உத்தியோகத்தராக இருந்தும் எத்தனை பக்தி. எவ்வளவு ஆசாரம்!' என்று அவன் வாய் முணுமுணுத்தது.

சொக்கலிங்கம் கோயிலுக்குச் சென்ற சமயம் மத்தியானப் பூசை முடிவடைந்திருந்தது. கோயிற் குருக்கல் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

ஆனாலும் சொக்கர் அதைப் பொருட்படுத்தவேயில்லை. மனதிலே நிறைந்திருக்கும் வேலவரைப் பூசை நேரத்திற்தானா கும்பிட வேண்டும்?

ஆகவே அவர் கொடிக் கம்பத்தருகே நின்று, பக்திச் சிரத்தையோடு தலைமேற் கரங்களைக் கூப்பிக்கோயிலி கர்ப்பக்கிரஹத்திடையே மோனத்திலாழ்ந்திருக்கும் வேலவரின் காதுகளிற் படும்படியாக ஏன் கோயில் மண்டபம் முழுமையயும் அதற்கு அப்பால் நிர்மானுஷ்யமான அப்பிராந்தியத்தின் மருதஞ்சோலைகளையுமே நிறைக்கும்படியாக அவர் பாடினார்.

"மூவிரு முகங்கள் போற்றி
முகம்மொழி கருணை போற்றி".

அவரது குரல் கேட்டதாலோ, அல்லது பெட்டிக் கடைக்காரர் சொன்னதினாலோ மீண்டும் அவசர அவசரமாக கோயிலுட் பிரவேசித்த குருக்கல் அந்த அதிகாரிக்காக விசேட பூசை ஒன்றைச் செய்ய ஆயத்தமா இருந்தார்.

'எனக்காகப் பிரத்தியேகமாக ஏதுமே வேண்டாம்' என்று சமிக்ஞை செய்துவிட்டு சொக்கலிங்கத்தார் பாடிக் கொண்டேயிருந்தார்.

குருக்கள் அவசர அவசரமாகச் சந்தனம் அரைத்தார். அரைத்ததை வழித்து எடுத்துக் கொண்டு திருநீற்றையும் சேர்த்துச் சொக்கலிங்கத்திடம் நீட்டினார்.

ஆசாரத்தோடு அவைகளைத் தரித்துக் கொண்டு ஜ“ப்புக்கு மீண்ட சொக்கலிங்கத்தாரைச் சுமந்து கொண்டு அரசாங்க ஜ“ப் வண்டி இளைஞர் விவசாயத் திட்டப் பண்ணையை நோக்கி ஓடிற்று.

தான் கொண்டு வந்த பார்சலைத் திட்டச் செயலாளரிடம் கையளித்து விட்டு மீண்ட சொக்கலிங்கத்தார் 'ஐந்தாண்டுத் திட்டத்திற் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி' என்ற விடயமாக திட்டக்கமிஷனுக்கு அறிக்கை எழுதுவதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் 'அரசாங்க ஜ“ப்புக்கான எரிபொருள், அதந் தேய்மானம், சாரதிக்கும் தலைமை உத்தியோகத்தருக்குமான சப்ஸ’ஸ்ரென்ஸ் இவைகளுக்காக நூற்றுக்கணக்கான ரூபாய்கள் மக்கள் பணம் விரயமாயிற்றே. இந்த லட்சணத்தில் இந்த நாடு எப்படி உருப்படும்?' என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் சந்திரன்!

பாவம்! அவன் கடவுள் பக்தியற்ற கழிசடை!

வீரகேசரி 1976


ஒரு காவியம் நிறைவு பெறுகிறது

பேய்க்காற்றாகச் சுழற்றியடித்த சோளகம், முதுவேனிற் காலத்து வெப்பத்தையும் புழுக்கத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, இலையசையாப் பம்மலிலும் பொருமலிலும் அடங்கிற்று. கடலில் மூழ்கவிரு நத கதிரவனைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்திற் தன்னை இரணகளமாக்கிக் கொண்டிருந்த மேற்கு வானம், தன் போராட்டத்திற் தோல்வி கண்டு கரும்போர்வையை எடுத்து மூடத்தொடங்கிற்று.

சற்று முன்னே வீட்டினுள்ளே வெடித்த அவலக்குரல்கள் பிலாக்கணமாக நீண்டு ஊரையே நிறைக்கிறது.

புதுமைப்பித்தனின் நினைவுப் பாதை என்ற கதையில் வரும் வைரவன் பிள்ளையைப் போல நான் உன்னைத் தோற்றுவிட்டு வெளியே திண்ணைக்குந்தில் அமர்ந்திருக்கிறேன்.

என் நெஞ்சிலே நினைவுகள் சரக்கூடம் அமைக்கின்றது.

இன்றைக்கல்ல; நேற்றே நான் உன்னை இழந்துவிட்டேன்.

நேற்று திங்கட்கிழமை. வழக்கம்போல அதிகாலையிலேயே நான் படுக்கையை விட்டு எழுகிறேன்.

சாப்பாட்டு மேசையிற் கோப்பியை வைத்துக் காத்தபடி, செபப்புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு செபித்தவண்ணம் இருக்கும் உன்னை என் கண்கள் காணவில்லை.

அன்று உன் அம்மாவும் இல்லை. அயற்கிராமத்துச் சாவீடு ஒன்றிற்குப் போனவள் இனிமேற்தான் வரவேண்டும். நான் அவசர அவசரமாக, அறைக்குள்ளே உன் படுக்கையடிக்கு வருகிறேன். என்றைக்குமில்லாதவாறு நீ அந்த அதிகாலையிற் கட்டிலிற் படுத்துக் கொண்டிருக்கிறாய்.

உன் நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறேன். அனலாகக் கொதிக்கிறது.

"அம்மாவும் இனிமேற்தானே வரவேண்டும். நான் லீவு எடுத்துக் கொண்டு நிற்கவா?"

"சும்மா காய்ச்சல்தானே. நீங்கள் பாடசாலைக்குப் போங்கள். கொஞ்ச நேரத்தால அம்மா வந்திருவா" என்கிறாய் நீ.

நீ அதிபராகப் பணியாற்றும் புனித அந்தோனியார் வித்தியாலயத்தைத் தரமுயர்த்துவதற்காகக் கௌரவ கல்வியமைச்சர் வரவிருந்தார். அதன் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களாக உனக்கு ஓய்வு ஒழிச்சலில்லாத வேலை. உடல் சோர்ந்திருந்தது. அமைச்சர் வரமாட்டார் என்று கேள்விப்பட்டதும் உன் உள்ளமும் சோர்ந்து விட்டதா? என்று எண்ணிக் கொண்டே "நீ பாடசாலைக்காக உன்னை மறந்து ஊனும் உறக்கமும், ஓய்வும் ஒழிச்சலும் அற்று, நோயை வரவழைத்துக் கொண்டாய். உனக்கு ஓய்வுதான் இப்போது வேண்டும்" என்று குறைப்பட்டுக் கொள்கிறேன் நான்.

"பாடசாலை வேலையைச் செய்யத்தானேவேண்டும். இப்போது அமைச்சர் வரமாட்டாராமே... இந்த வாரமே நான் லீவு எடுத்துக் கொண்டு சங்கானை அக்காவிடம் போகிறேன். அங்கேதான் எனக்கு ஓய்வு கிடைக்கும்" என்கிறாய் நீ.

நான் மீண்டும் கேட்கிறேன். "இன்றைக்கு நான் லீவு எடுத்துக்கொண்டு நிற்கவா?"

"இல்லை. எனக்கொன்றுமில்லை. நீங்கள் பாடசாலைக்கப் போங்கள்" எனச் சொல்லிக் கொண்டே நீ எழுந்திருக்கிறாய்.

"வேண்டாம் அமைதியாகப் படுத்திரு" என்று விட்டு, நான் என வேலைகளைக் கவனித்துக் கொண்டு அரை மனதுடன் பாடசாலைக்குப் புறப்படுகிறேன்.

"வசந்தி உன்னைக் கவனித்துக் கொள்வாள். அவள் இன்று பாடசாலைக்கு வரவேண்டாம்" என்று கூறி விட்டுப் புறப்பட்ட நான், வழமையைவிடச் சற்று முன்னதாகப்பாடசாலையிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டு வருகிறேன்.

வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் என்னை இடைமறித்த உன் பெறாமகன் ஆனந்தன் சொல்கிறான். "பெரியப்பு. உங்களைச் சிப்பிரியான் ஐயா ஆஸ்பத்திரியடிக்கு வரட்டாம்."

"ஏன்?"

ஆனந்தன் மௌனஞ் சாதிக்கிறான். இருவரது சைக்கிள்களும் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன.

'அப்பாவுக்கா சுகமில்லை? அடிக்கடி 'ஆஸ்த்மா' வியாதியாற் கஷ்டப்படுபவன் அவன் பாப்பா தாசன்' என்றெண்ணிக் கொண்டே நான் மீண்டும் அவனைக் கேட்கிறேன்.

"இல்லை. பெரியம்மாவைத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க" என்று சொல்கையிலேயே அவன் கண்கள் கலங்குகின்றன.

நான் துடித்துப் பதைத்து ஆஸ்பத்திரிக்கு விரைகிறேன். அங்கே நோயாளிகளைச் சந்திக்கும் நேரமாதலால் ஒரே கூட்டமாக இருக்கிறது.

உன் கட்டிலடியிலும் சனத்திரள்!

நான் அவர்களை விலக்கிக் கொண்டு உன் கட்டிலடிக்கு வருகிறேன். என்னைக் கண்டதும் நீ முகம் மலர்ந்து சிரிக்கிறாய்.

ஆனாற் சூழநின்றவர் முகங்களிற் கவலை படர்ந்து அவர்கள் கண்கள் கலங்கியிருப்பதை நான் காண்கிறேன்.

உனக்கு என்ன வந்து விட்டது?

எல்லாருமே மௌனஞ் சாதிக்கிறார்கள். நான் என்னவென்று அறிந்து கொள்வதாக டக்ரரிடம் ஓடுகிறேன்.

ஒடுங்கி நீண்டு கிடக்கும் ஆஸ்பத்திரிக் கொரிடோரிலே ஒரு தூணருகில் நின்று கொண்டிருந்த டகரர் நமது உறவினர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

`It is a matter of time`

சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென என் தலையைக் கண்டதும் திகைக்கிறார். அவர் கண்கள் கலங்குகின்றன.

நான் டக்ரரிடம் ஏதும் கேட்காமலேயே திரும்புகிறேன். அவர் வார்த்தைகள் என் நெஞ்சிற் சம்மட்டியடியாக விழுந்து கொண்டிருக்கின்றன.

It is a matter of time

உனக்கு வந்திருக்கும் வியாதி ஹைட்ரோபோபியா!

"நாட்டுவைத்தியன்தான் செய்யவேண்டும்"
"சிங்கள வைத்தியமே நல்லது"
"மட்டக்களப்புக்குக் கொண்டு போகலாம்"
"ஹபரணையில் நல்ல வைத்தியன் இருக்கிறான்"

என் காதுகளில் வீழ்ந்த பல்வேறு குசுகுசுப்புகளுக்கும் மேலால் என் நெஞ்சிலே சம்மட்டியடியாக வீழ்ந்து கொண்டிருக்கிறது அந்த ஒலி.

It is a matter of time.

மட்டக்களப்பென்ன? ஹபரணையென்ன? இந்த நாட்டின் எந்த மூலைக்கும் உன்னைக் கொண்டு செல்வதற்கு அம்பலவாணரின் கார் அடுத்த வீட்டிலேயே தயாராக நிற்கின்றது. குடும்ப நண்பர்களையெல்லாம் உறவினர்களாகவே ஆக்கி உபசரிப்பதில் நீ எத்தனை சாமர்த்தி!

இரண்டு மூன்று வீடுகளுக்கப்பால் உன் தம்பி ஜ“வரத்தினத்தின் காரும் தயாராகவே நிற்கிறது!

உன்னைக் காரிலே எடுத்துச் செல்கையில் இடை வழியிலே... நடுக்காட்டிலே...

அந்தக் கொடூரமான நினைவு என்னைச் சித்திரவதை செய்ய 'ஐயோ; அப்படி ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாதே' என்று என் இதயம் பிரலாபிக்கிறது. எல்லாமே வல்லவனைக் கெஞ்சுகின்றது.

அந்த முடிவு உனக்கு ஏற்படுவதானாற்கூட, அது நீ கட்டியெழுப்பிய உன் வீட்டிலே, வீடு நிறைந்த பிள்ளைகள் மத்தியிலே, ஊர் நிறைந்த உறவினர்கள் மத்தியில் நாடு நிறைந்த நண்பர்கள் முன்னிலையில் அமைதியாக...

வைத்தியனிடம் உன்னைக் கொண்டு போவதைவிட, வைத்தியனையே இங்கு வரவ€ழைத்தால்...

உதவி வைத்திய அதிகாரி எங்கிருந்தோ அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் "கடித்த நாயின் மூளையைப் பரிசோதித்துக் கொபம்பிலிருந்து வந்த முடிவு negative என்று சொன்னீர்களே. நாம் ஏமாந்து விட்டோமே டக்ரர்" என்று அங்கலாய்க்கிறேன்.

என் இலக்கிய நண்பரான உதவி வைத்திய அதிகாரியும் கண்­ர் வடிக்கிறார்.

அவரை ஆமோதிப்பது போல ஆயுள்வேத வைத்தியனான உன் தம்பி-உன் சித்தப்பாவின் மகன்-தான் வைத்தியன் என்பதையே மறந்து, தம்பியாகவே நின்று என்னைக் கட்டிக்கொண்டு தேம்பி அழுகிறான்.

"மடையா! நீ ஒரு வைத்தியனா? நோயாளியின் முன்னால் இப்படியா அழுவது?" என்று நான் அவனைக் கடிந்து கொள்கிறேன்.

"இந்த டாக்குத்தர்மார் ஒருவரும் நோயைக் கண்டு பிடிக்கல்ல. இது குளிர் சன்னிக் காய்ச்சல்" என்று தீர்மானமாகச் சொல்கிறார் வயோதிபரான அயற் கிராமத்தார் ஒருவர்.

* * *

நான் மீண்டும் கட்டிலை நெருங்குகிறேன்.

உன் கட்டிலடியிலே சுவாமியார் நீளமான நீலப் பட்டியைத் தரித்துக்கொண்டு நிற்கிறார்.

அவஸ்தைப் பூசுதல்.

'அந்தக் கடைசித் தேவதிரவிய அனுமானம், நோயாளிக்கு ஆத்தும நன்மைகளோடு சரீர சுகத்தையும் கொடுக்கக்கூடும்' என எப்போதோ நான் படித்திருந்த ஞானனோபதேசப் பாடம் நினைவுக்கு வருகிறது. மீண்டும் என் மனது எல்லாம் வல்லவனைக் கெஞ்சுகிறது.

சுவாமியார் அந்தச் சடங்கை முடித்துக் கொண்ட போது வெளியே கார் ஒன்று வந்து நிற்கிறது. உன்னை எங்கே கொண்டு போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை நான் உன் கட்டிலை அணுகி உன்னைக் காருக்குக் கொண்டு போக முயல்கிறேன்.

"நீ போ தம்பி" என்று நம் பெரியண்ணா என்னைத் தள்ளிவிட்டு, உன் கொடியுடலைத் தூக்கிக்கொண்டு காருக்குப் போகிறார்.

'உன் கொடியுடல், தூய்மையுடன் மென்மையுமாய் என்னைப் பரவசத்திலாழ்த்திய உன் தளிருடல் இனி உனக்குச் சொந்தமில்லைத் தம்பி' என அவர் எனக்குச் சொல்லாமற் சொல்லி விட்டாரா?

கார் பறக்கிறது.

**இ.தொ.kaviyam8.mtf* நிற்கிறேன். உன்
பி,


** kaviyam7.mtfன் தொடர்ச்சி**

ஆஸ்பத்திரியில் நான் அனாதையாக நிற்கிறேன். உன் தம்பி, அந்த ஆயுள்வேத வைத்தியன் என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அவன் கண்­ர் என் தோளிகளில் விழுந்து சுட்டுக் கொண்டிருக்கிறது.

* * *

வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஒரே சனத்திரன். நாட்டு வைத்தியன் உனக்கு வைத்தியம் செய்கிறான். தண்­ர் மருந்தைக் கூட நீ குடிக்கிறாய்.

என் மனதிலே நம்பிக்கை பிறக்கிறது.

என் நம்பிக்கையை வலுப்படுத்துவதாய் விறாந்தை மூலையில் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்த என் மச்சான் நீக்கொலஸ் பண்டிதரிடம் வைத்தியர் சொல்கிறார். "இது குளிர் சன்னிக் காய்ச்சல். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை."

வீட்டுக்கு வெளியே நின்ற நம் குடும்ப நண்பனும் உறவினனுமாகிய கதிர்காமத்தம்பி சொல்கிறான். "இப்படித்தான் என் மச்சானையும் ஆஸ்பத்திரிக்காரர்கள் நம்பிக்கையிழந்து வீட்டுக்குக் கொண்டு போகச் சொன்னார்கள். இதே வைத்தியரின் மருந்தில் அவர் பிழைத்து ஒரு வீடும் கட்டி முடித்து ஆறு ஆண்டுகளின் பின்னர்தான் அவர் செத்தார்.

ஆனாலும் அந்த நம்பிக்கையின் மேலால் டக்ரரின் கரல் என் நெஞ்சிலே சம்மட்டியடியாக விழுந்து கொண்டிருக்கிறது.

It is a matter of time

அந்த அடியின் உபாதையோடு நான் பெரியண்ணனைக் கூப்பிட்டுச் சொல்கிறேன் "அண்ணா! முதலில் வீட்டுக்குள் இருக்கும் கூட்டத்தை வெளியேற்றுங்கள் அண்ண. உங்களால் முடியாவிட்டால் நான் வெளியேற்றவா?"

என் குரலில் ஆத்திரமும் பதட்டமும் நிறைந்திருப்பதைக் கண்ட லீயோ அண்ணன் "நீ கொஞ்சம் அமைதியாக இரு தம்பி." என்று என்னைச் சாந்தப்படுத்திக் கொண்டே, காலில் விழாக்குறையாகக் கெஞ்சிச் சனக்கூட்டத்தை வெளியேற்ற முயல்கிறார். ஆனால் அது இலகுவான காரியமாக இல்லை.

"உள்ளே செபமாலைக் கிழவி செத்துக் கொண்டிருக்கிறாள்.
போர்க்களத்திலே குற்றுயிராய்க் கிடக்கும் போர் வீரனைத் தங்கள் வயிற்றுட் சமாதியாக்கக் கருதிய பிணந்தின்னிக் கழுகுகளைப் போல, அவள் கட்டிலைச் சுற்றி அவள் செத்தவுடன் அழுவதற்கென்று ஊர்க் கிழவிகள் எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

என்று ஐம்பத்தி மூன்றாம் ஆண்டிலே பிரிவுபசாரம் என்ற கதையில் எழுதினேன் அல்லவா? அந்தக் கழுகுக் கூட்டமாகத்தான் உன் கட்டிலைச் சுற்றி எந்தத் தேவையுமின்றி நிற்பவர்களும் எனக்குத் தோற்றமளிக்கிறார்கள்.

வீட்டுக்கு வெளியே நமக்கு உறவினரே அல்லாத வங்கி முகாமையாளர் சிங்கள வைத்தியனை வரவழைக்கும் முயற்சியில் தன் மோட்டர் சைக்கிளிற் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார். உன் சின்னண்ணா உதவி வைத்திய அதிகாரியான என தம்பியை அழைத்துவரச் சைக்கிளிற் பறக்கிறான்.

வைத்தியர் தியாகராசாவின் வைத்தியத்தில் அபார நம்பிக்கையோடு, பண்டிதர் மிக அமைதியாக விறாந்தை மூலைக் கதிரைக்குள் அமர்ந்து கொண்டிருக்கிறார்.

* * *

எங்கும் இருள் கவிந்து விட்டது.

வீட்டினுள்ளே இருந்த மின்சாரக் குமிழ்களில் மின் கம்பிகளை இணைத்து, அந்த இணைப்பின்மூலம் வீட்டின் வெளிப்புறத்தையும் ஒளிரச் செய்யும் முயற்சியில் முனைந்து கொண்டிருந்தவர்களின் வேலை முடிந்தபோது என் வீட்டு வட்டாரம் முழுமையுமே ஒளிபரவுகிறது.

ஆனால் என் மனதிலே நிரந்தரமாகக் கவிந்து விட்ட இருளை யார் போக்குவார்கள்? எப்படிப் போக்குவார்கள்?

அடுத்த வேளைச் சோற்றுக்கே தன் தந்தையாரை நம்பியிருந்த புதுமைப்பித்தன், தந்தையாருடன் மனக்கசப்புக் கொண்டு இருளிலே வீட்டை விட்டு வெளியேறுகையிற் பாடினானாம்.

செல்லும் வழி இருட்டு
செல்லும் இடம் இருட்டு
சிந்தை தனிலும்
தனி இருட்டு

நானோ அந்திக் கருக்கலில் நீ என்னைக் கைவிட, கைக்கோலை இழந்த குருடனாக என் மன இருளே எனக்குத் துணையாக புதுமைப்பித்தனின் சிருட்டியான வைரவன் பிள்ளையாக வெளித் திண்ணையிலே கால்களை முடக்கிக் கைகளாற் கட்டிக் கொண்டு குந்திக் கொண்டிருக்கிறேன்.

என் மன இருளிலே இறந்த கால நினைவுகள் வெளிச்சம் போடுகின்றன. நிகழ்காலம் குழப்பமாகி, எதிர்காலம் இருட்டாக, இறந்த காலம் ஒன்றே தெளிவாகத் தெரிகின்றது.

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னே, அந்தத் திகதியைக் கூட என்னால் மறக்க முடியுமா? அன்று ஜனவரி மாதம் நான்காந் திகதி.

நத்தாரும் அதனையொட்டிய புதுவருடக் கொண்டாட்டங்களும் ஊரிலே இன்னமும் ஓயவில்லை. சிறுவர்கள் , ஏன் பெரியவர்களும் கூடத் தாயக்கட்டை உருட்டுவதை இன்னமும் நிறுத்தவில்லை. ஆறாந் திகதி மூன்று இராசாக்கள் திருநாளும் கழிந்த பின்னர்தான் அவை ஓயும்.

ஆனால் அதற்குள் அரசாங்கப் பாடசாலைகள் புது வருடத்திற்காக மீண்டும் தொடங்கி விட்டன. நீ உன் ஆசிரியர் தொழிலுக்காகக் கிண்ணியாவிற்குப் போக வேண்டும்.

"இரண்டு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த திங்கட்கிழமை போகலாமே" என்று நீ அழுகிறாய். இருபத்திரண்டு வயது இளங்குமரியான உன் மனதில் என்னென்ன ஆசைகளோ! என்னென்ன கனவுகளோ!

ஆனால் உன் அக்கா தீர்மானமாகச் சொல்கிறாள். "நிச்சயமாக இன்று போகத்தான் வேண்டும். போய்விட்டு ஐந்தாந் திகதி வெள்ளிக் கிழமையே திரும்பிவிடலாம். வருடத் தொடக்கத்தில் லீவு எடுக்கக்கூடாது."

அவள் ஏன் அப்படிச் சொல்கிறாள் என்பது எல்லோருக்கும் தெரியும். எனக்கும் தெரியும்.

கடைசியில் உன் அக்காதான் வெற்றியடைகிறாள். எல்லாருமே கிண்ணியாவிற்குப் போய்விட்டு அடுத்தநாளே வந்ததும் அக்கா என்னைக் கெஞ்சுகிறாள்.

"நீயும் வாடா தம்பி"

நாம் கடைசியாகச் சம்மதிக்கிறேன். எனக்குப் பாடசாலை தொடங்க இன்னமும் பத்து நாட்களுக்கு மேல் இருந்தன.

நான்காந் திகதி அதிகாலையிலேயே உன் அம்மா, அக்கா, தங்கை, உன்னோடு வளர்ந்து கொண்டிருக்கும் உன் மச்சான்-எனக்கும் மச்சான்தானே-மனோகரன், நீ, நான், எல்லாருமே ஒரு காரிற் கிண்ணியாவிற்குச் செல்கிறோம். உன் அப்பா வீட்டிலேயே தங்கிவிடுகிறார்.

மாரிக்காலத்து மழைநீரை எல்லாம் தன்னுள் ஏற்று நுங்கும் நுரையுமாகப் பிரவாஹ’க்கும் மூதூர் ஆற்றையும் மஹாவலி கங்கையையும் தாண்டிக் கார் கிண்ணியாவை அடைந்தபோது காலை ஒன்பது மணியாகிவிட்டது. காரிலிருந்து இறங்கி நீ பாடசாலைக்கு செல்கிறாய். நம்மூரவரான அபூபக்கர் மாஸ்ரர் இன்னமும் உனக்காக இடாப்படையாளம் பண்ணாமல் இருப்பார்!

அம்மா வீட்டைத் துப்புரவு செய்து சமையல் வேலையில் ஈடுபடுகிறாள். நானும் அக்காவும் அயற்கிராமமான ஆலங்கோணிக்குச் செல்கிறோம். அதற்காகத்தானே அக்கா வந்தாள்.

அன்று இராச்சாப்பாடு முடிவடைந்தபோது இரவு ஒன்பது மணிக்குமேல் ஆகிவிட்டது. நீயும் உன் அம்மாவும் மட்டுமே வாழ்வதற்காக எடுத்துக்கொண்ட சிறிய அறையிலே நாம் எல்லோரும் இரவைக் கழிக்கவேண்டும்.

"நான் வெளியிலே படுக்கிறேன்"

"வேண்டாம். இந்தத் தைக்குதலில வெளியில படுக்கிறதா? மழையுந் தூறிக்கொண்டேயிருக்கிறது. இதற்குள்ளேயே சமாளிப்போம்" என்று வற்புறுத்துகிறாள் அக்கா.

எல்லோரும் அந்த அறைக்குள்ளேயே படுக்கிறோம். நான் சுவர் ஓரமாகப் படுக்கிறேன். எனக்குப் பக்கத்தில் மனோகரன். அப்பால் நீ, அக்கா....

பத்து வயதினனான மனோகரன் படுத்ததுமே நித்திரையாகி விட்டான். மற்றவர்களுக்கும் பிரயாணக்களை, விளக்கை அணைத்துவீட்டு எல்லோருமே படுத்துக் கொள்கிறோம்.

வெளியே சிணுசிணுத்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

மழையின் சிணுசிணுப்புக்குப் பகைப்புலமாக என் மனதிலே பேரிரைச்சல்!

செல்லையா அண்ணன் விதைத்த வித்து என் நெஞ்சிலே முளை கொள்ளும் பிரசவ வேதனை...

அந்த விதை...

1948ம் ஆண்டு கனவு காணும் வாலிப வயது. தெற்கு மலை நாட்டின் ஆங்கிலப் பாடசாலை ஒன்றிற்கு ஆசிரியனாகச் செல்கிறேன். பால்ய வயதிற் தந்தையை இழந்து பல கஷ்டங்களை அனுபவித்த என் குடும்பம் இப்போது சற்று வசதியுள்ளதாகவே இருக்கிறது. இளைய தம்பியை மட்டும் படிப்பித்து விட்டாற் போதும். குடும்பத்தில் மூத்த ஆண்மகனான நான் யாரையும் எந்த நேரத்திலும் மணஞ் செய்து கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்க நியாயமே இல்லை.

என் வாலிபக் கனவுகளுக்கேற்ற அழகு, இலக்கியக் கனவுகளுக்கேற்ற இரசிகத்தனம், ஆசிரியத் தொழிலால் வரும் மாதச் சம்பளம் ஆகியவைகளைக் கொண்ட ஒருத்தியை நான் மலைநாட்டிற் சந்திக்கிறேன்.

என் ஒன்றரை வருடப் 'பிளாட்டோனிக் காதலை' ஐம்பதாம் ஆண்டு ஆவணி விடுமுறையின்போது செல்லையா அண்ணனிடம் சொல்கிறேன்.

குருநாகலில் ஆசிரியனாக இருந்த அவன் எனக்குத் தெரியாமலே அவளைச் சந்திக்கிறான். கதைக்கிறான், கடிதங்கள் பல எழுதுகிறான்.

முடிவு! அவள் குழம்பி விட்டாள்! பாடசாலையிலிருந்து மாற்றம் பெற்றுக்கொண்டு சொல்லாமலே சென்று விட்டாள்.

எனக்குச் செல்லையா அண்ணன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. துணைக்கு அழைத்தவன் 'வில்லன்' ஆகிவிட்டானே என்று.

ஆனாற் செல்லையா அண்ணன் அமைதியாகவே சொன்னான். "நீ நாம் பிறந்த மண்ணைவிட்டு வேறிடத்துக்குச் செல்வதை அனுமதிக்கவே முடியாது!"

"நான் விரும்புவதுபோல, நான் தேடுவதுபோல ஊரிலே எவள் இருக்கிறாள்?" நான் ஆத்திரத்தோடு கேட்கிறேன்.

"இருக்கிறாள்"

"யார்?"

"யோசித்துப் பார்!"

"எனக்கு எவருமே தெரியவில்லை."

"பிறகு சொல்கிறேன்" என்கிறான் செல்லையா அண்ணன் அமைதியாக.

இந்த நத்தாரின்போதுதான் மிகுந்த போதையிலிருந்தாலும், வலுத்த போதத்தோடு என் காதோடு காதாகச் சொல்கிறான்.

"லில்லி"

நான் திகைத்தேன்!

"உனக்கென்ன பைத்தியமா அண்ணா! பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவள் அக்காவோடும் உன்னோடும் ஒரே வகுப்பிற் படித்த காலந்தொட்டு நான் அந்த வீட்டிலே ஒட்டிப் பழகுகிறேன். இத்தகைய எண்ணமே எனக்கு ஏற்படவில்லை. உறவு முறையிற்கூட அவள் என் தங்கை. இருவரும் மட்டக்களப்பு ஆசிரிய கலகசாலையிற் படிக்கையில், சக மாணவர்கள் எம் இருவரையும் உடன்பிறந்த சகோதரர்களாகக்கூட எண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

"அண்ணனும் தங்கையும்! உடன்பிறந்த அண்ணன் தங்கை பிள்ளைகளுக்கே கல்யாணம் நடக்கிறது. திருச்சபை தடுக்கும் அந்த முதலாம் கால் இரத்த உறவைவிட இது எவ்வளவோ மேல்."

ஆனாலும் அவன் சொன்னதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் தூய்மையும் பாசமும் கொண்ட அண்ணனாகவே இருந்தேன்.

இப்போது அவன்விதைத்த வித்து முளைவிடும் பிரசவ வேதனையில் என்னுள்ளே ஒரு ஊழிக்கூத்தே நடைபெறுகின்றது.

என்னுடைய முன்னைய காதல் விவகாரங்களைக்கூட நீ நன்கு தெரிந்தவள், எந்த விபரீத எண்ணமுமின்றி என்னோடு பழகியவள் நீ. உன்னை நான் தொட்டால் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நீ நினைப்பாய்!

ஆனால் இந்த ஊழிக் கூத்தின் பிரளய இரைச்சலை மீறிக்கொண்டு என் உடலின் வேட்கையும் தசையின் பிடுங்கலும் வெற்றியடைகின்றன.

செத்த பின்னும், சாகாத புன்னகை தவமும் உன் முகத்தை இருளிலே தடவுகின்றேன்.

சில வினாடிகளில் நீ என் கைகளைப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்து கொண்டாய்.

அந்த அடை மழைக் காலத்து வெடுவெடுக்கும் குளிரிலும் என் சர்வாங்கமுமே வெயர்த்துக் கொட்டுகிறது. என் சடலம் முழுதும் பதைக்கிறது.

என் புறங்கையிலே உன் கண்­ர் விழுந்து தீய்க்கிறது.

நான் உன் கண்களைத் துடைத்துக் கொண்டே "சொல்லத்தகாத ஒரு கனவைக் கண்டதுபோல இதை மறந்துவிடு தங்கம்."

"இனி மேலுமா?"

பின்னர்தான் எனக்குத் தெரிகிறது. செல்லையா அண்ணன் உன்னிடமும் இந்த எண்ணத்தை ஊட்டியிருக்கிறான் என்று. அதை நன்றாக உணர்ந்துகொண்டு நான் சொல்லுகிறேன்.

"அக்கா பாவம். ஆழந் தெரியாமற் காலைவிட்டுக் கொண்டாள். அவளது காரியம் விரைவில் நடக்கும் என எனக்குப் படவில்லை. ஆலங்கேணியில் இருந்து வரும் வரைக்கும் அழுது கொண்டே வந்தாள். அவளது கனவு நனவாகும் வரை-அது எத்தனை வருடங்களானாலும் நம் உள்ளத்தை மறைத்துக் காத்துக் கொண்டிருப்போம்."

"நான் இருப்பேன். ஆனால் நீங்கள் இருப்பீர்களா? உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியுமே..."

உன் நியாயமான சந்தேகத்தை உணர்ந்துகொண்டே உன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நான் உறுதி கூறுகிறேன். "அக்காவின் காரியம் முடியும்வரை நான் காத்திருப்பேன். உனக்காகக் காத்திருப்பேன்."

நீ அமைதி காண்கிறாய். அன்று உள்ளத்தாற் கணவனும் மனைவியுமாக இணைந்த நாம் உடலாற் சகோதரர்களாகவே இருந்தோம்.

நான் அரிச்சந்திர பரம்பரையினன் அல்ல. சாதாரண-உலகின் மிகச் சாமான்யான மனிதன். ஆனாலும் அன்று உனக்குத் தந்த உறுதியுரையை என்றைக்காவது முறனேனா? எல்லாரையும், எல்லாவற்றையும் திரணமாக மதித்துத்தானே தன்னந்தனியாக உன்னிடம் ஏக பத்தினி விரதனாகவும், உடலால் ஏபத்தினி வெளியனாகவுந்தானே உன்னோடு வாழ்ந்தேன். அப்படியிருந்து ம நீ ஏன் என்னைவிட்டுப் போய் விட்டாய்?

வெளிப்படையாக அழுதாற் பிள்ளைகள் கதறுவார்களே என்ற பயத்தில் நான் மௌனமாகக் கண்­ர் வடிக்கிறேன்.

வீட்டு முற்றத்தில் பந்தலுக்குக் 'கிடுகு' பரவிக் கொண்டிருந்த செல்லையா அண்ணன் அல்வேலையை அப்படியே விட்டுவிட்டு என்னிடம் வந்த "தனியே இருந்து போசிக்கதடா. எழும்பு" என்று என் தோளைப் பிடித்தவன் பொறுக்கமாட்டாமல் விம்மி அழுகிறான்.

வீட்டிலுன்ளேயிருந்து சொர்ண்ம் மாமி ஒப்பாரி சொல்கிறாள்.

நாங்கள் சூதில் இழந்துவிட்டோம்-மகளே
உன்னைச் சூதாடித் தோற்று விட்டோம்.

* * *

ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. "மரணச் செய்தியை ஒலிபரப்புகிறார்களா? என்று பக்கத்து வீட்டு ரேடியோவிற் கேட்போம்" என்று என்னை அழைக்கிறான் தாசன். அவனைத் தட்டிக் கழிக்க முடியாதா? இருவரும் எவருக்கும் தெரியாமல் மணமும் முடித்துக் கொண்டோமென்பதைக் கேள்விப்பட்டதும் ஊரிலிருந்து நம்மைச் சந்திக்கச் 'சீருடன்' ந்த முதலாவது உறவினன் அவன்.

நான் அவன் பின்னால் நடக்கிறேன். துரை ரத்தி சிங்கமும் பின்னால் வருகிறான்.

வழமையைவிட நீண்ட செய்திக்குப் பின்னால், செய்தியின் பின்னணி என்ற நீண்ட பொலிஸ் அறிக்கைக்கும் பின்னால் வானொலி உன் இழவுச் செய்தியைச் சொல்கிறது.

மூதூர் புனத அந்தோனியார் வித்தியாலய அதிபரும் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினத்தின் அன்பு மனைவியுமான லில்லி இராசரத்தினம் காலமானார். மரணச் சடங்குகள்...

அந்தச் செய்தியைக் கேட்டதும் நான் துரைரத்தினத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டே கதறுகிறேன். இல்லை அவள் சாகவில்லை. வானா ஆனா என்ற எழுத்தாளன்தான் செத்துப் போனான்."

என்னைச் சமாளிக்க முடியாது துரைரத்தினமும் கதறியழுகிறான். அழாமல் என்ன செய்வான்? எனக்குத் தெரியாத தத்துவங்களையா என் மகன் எனக்குச் சொல்லி விடப் போகிறான்?

என் மனம் எங்கோ படர்கிறது.

நான் எழுத்தாளனாக இருப்பதில் உள்ளூரப்பெருமைப்பட்டவள் நீ! உன் ஒலிச்சலில்லா வேலைகளிடையே 'என் எழுத்துக்களை வரிக்கு வரி படித்து, நான் எதிர்பார்த்திராக நேரத்தில் நறுக்குத் தெறித்தாற் போல விமர்சிப்பவள் நீ! என்னை எழுத்தாளன் ஆக்குவித்தவளே நீதான். எனக்கு தேவையானதெல்லாம், உமர்கயாம் பாடியது போல.

ஒரு கவிதை நூல்
மதுக்கிண்ணம்
நீ!

இந்த மூன்றையும் எனக்குக் குறைவறத் தந்துகொண்டு சீட்டுக்கட்டிப் பணம் சேர்த்து வீட்டைக் கட்டி எழுப்புகிறாய்!

என் மாதச் சம்பளத்தை உன்னிடம் கொடுத்து விடுவதையும், குற்றாலக் குறவஞ்சியின் மேல் உள்ள பற்றுதலால் வீட்டிற்கு (கூனலிளம் பிறை முடித்த வேணியலங்காரர் குற்றல)த் 'திரிகூடம்' என்று பேரிட்டதையும் தவிர வேறு ஏதுமே எனக்குத் தெரியாது! நம் குடு மப நண்பர் செய்யது நானாவிற்கே வீடு கட்டிய கதை தெரியும்.

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னே, நீ படுக்கையில் விழுந்த இதே செப்டம்பர் மாதம் முதலாந்திகதிதான் நாம் திரிகூடத்திற் குடி புகுந்தோம்.

கையிலே நவதானியங்கள், நகைப்பெட்டி, இன்னும் ஏதேதோ பொருட்களை ஒரு தட்டிற் சுமந்துகொண்டு சித்திரப்பதுமையாய் நீ நடக்கிறாய்.

விலை மதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு உன்னோடு என்னையும் போகும்படி 'பெரியவர்கள்' பணிக்கிறார்கள்.

நான் 'விலை மதிப்புள்ள' பொருட்கள் இருக்கும் றாக்கையில் இருந்து அவசர அவசரமாக இரண்டு புத்தகங்களை-சிலப்பதிகாரமும், மு.தளையசிங்கத்தின் 'புதுயுகம் பிறக்கிறது' என்ற சிறுகதைத் தொகுதியுந்தான் என்கையிற் சிக்கின-எடுத்துக் கொண்டு உன்னோடு இணைந்து நடக்கிறேன்.

நான் கொண்டு வரும் 'விலைமதிப்புள்ள' பொருட்களைக் கண்டு நமது உறவினர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

ஆனா நீ மட்டும் அமைதியாகச் சிரிக்கிறாய். சிரித்துக் கொண்டே கேட்கிறாய்.

"உங்கள் பேனையைக் கொண்டு வருகிறீர்களா?'

"அதை விடுவேனா? இதோ என் சட்டப்பையில் இருக்கிறது"

"அதையும் புத்தகங்களோடு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்."

உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நான் பையிலிருந்த பேனையைக் கழற்றித் தட்டிலே புத்தகங்களோடு வைத்துக் கொள்கிறேன்.

நாதஸ்வர இசை முழங்க இருவரும் திரிகூடத்திற் காலடி எடுத்து வைக்கிறோம்.

என் நினைவுகள் முறிந்து வேறோர் நினைவு முறி மனதில் நெளிகிறது.

சென்ற மாதம் பதினோராந் திகதி கலாச்சாரப் பேரவையின், தமிழ் இலக்கியக் கூட்டத்திற்கு வரும்படி எனக்கு அழைப்பு வருகின்றது. பதினைந்தாம் திகதி கூட்டம் நடைபெறும். பதினான்காந்திகதி நான் கொழும்புக்குச் செல்ல வேண்டும்.

நான் கடிதத்தை உன்னிடம் காட்டிவிட்டு, ஏற்கனவே அடிக்கொப்பி எழுதி வைத்திருக்கும் கிரௌஞ்சப் பறவைகள் என்ற சரித்திர நாவலைப் பிரதி எடுக்கிறேன். கொழும்புக்கு அதைக் கையோடு எடுத்துச் செல்லவேண்டும் என்ற வேகத்தோடு என் புத்தக அறையைத் தாளிட்டுக் கொண்டு எழுத்துப்பணியில் மூழ்குகிறேன்.

சில நிமிடங்களில் எனக்குச் சிகரட் பக்கற்றைக் கொண்டு வந்து வைக்கிறாய். கோப்பியும் வருகிறது.

என்னைத் தேடிவந்து என் எழுத்துப் பணியைக் குழப்பும் சின்னவனைக்கூட என் பக்கம் வரவிடாது தடுக்கிறாய். ஏற்கனவே அந்த நாவலைப் படித்துவிட்டு நல்ல நாவல் என்று அபிப்பிராயம் தெரிவித்தாய் அல்லவா?

பிரதி எடுக்கும்போதும் அடிக்கடி சரித்திர நூல்களைப் புரட்ட வேண்டியிருப்பதால் நான் எதிர்பார்த்த வேகத்தில் எழுத்து ஓடவில்லை.

பதினான்காந்திகதியும் எழுத வேண்டியே இருக்கிறது.

அன்று காலை நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நீ சொல்கிறாய் "நீங்கள் குழந்தைப் பிள்ளைமாதிரிப் பிடிச்சாப் பிடிச்சதுதான். இன்றைக்குக் கொழும்புக்கப் போகாட்டா என்ன?"

"போகாட்டியா? கட்டாயம் போக வேண்டியிருக்கு. இன்றைக் கூட்டத்திற்தான் சென்ற ஆண்டு சாஹ’த்யப் பரிசுக்கான நூல்களைத் தெரிவு செய்ய வேண்டும். நம்ம அருள் சுப்பிரமணியத்தின் புத்தகமும் இம்முறை இருக்கு."

"கையில இரு நத காசையெல்லாம் பாடசாலைத் திருத்ததில் விட்டிற்றன். இப்ப கையில ஒரு சதக் காசுமில்ல."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் இன்று போகத்தான் வேண்டும்" என்று நான் சொல்லிவிட்டு எழுந்து, என் அறையைப் பூட்டிக்கொண்டு என் எழுத்துப் பணியில் மூழ்குகிறேன்.

ஒரு மணியாகிவிட்டது. இன்னமும் நீ எனக்குக் காசு தரவில்லை.

"சாப்பிட வாருங்கள்" என்றுதான் அழைக்கிறாய்.

"எனக்கு வேண்டாம்" நான் எரிந்து விழுகிறேன்.

"என்ன எழுத்தாளர் கோவிக்கிறார்." என்று கேலி செய்கிறான் உன் உதவி ஆசிரியனான கவிஞன் கனகசிங்கம். விபுணசேகரமும் அவனை ஆமோதித்துச் சிரிக்கிறான்.

நான் என் அறைக்குள்ளிருந்தபடியே சொல்கிறேன். "இந்த எழுத்தாளர் இன்றைக்குக் கொழும்புக்குப் போகாவிட்டால் மூன்று மணி லாஞ்சிக்கு ஊரைவிட்டே போகிறார்."

"லோஞ்சுக்குக் காசிருக்கா?" கவிஞன் கேட்கிறான்.

"மூணு மணிக்குக் கோப்பரேட்டிவ் லாஞ்சு. அவருக்குக் காசு தேவையில்லை" என்று சிரிக்கிறான். விபுணசேகரம். நீயும் அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே "சாப்பிட வாருங்கள்" என்கிறாய்.

"வேண்டாம்" என்று எரிந்து விழுகிறேன் நான்.

"நீ வெளியே எங்கோ புறப்பட்டுச் செல்வது ஜன்னலூடாக எனக்குத் தெரிகிறது. சற்று நேரத்தில் என்னிடம் வந்து ஐம்பது ரூபாயை நீட்டிக்கொண்டே "வந்து சாப்பிடுங்கள்" என்கிறாய்.

நான் எழுந்து வந்து சாப்பிடுகிறேன். கனகசிங்கம் சிரிக்கிறான்.

நீ என் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாய்.

நான் சாப்பிட்டு முடிந்ததும் மாற்றுடைகளும் சாப்பாட்டுப் பார்சலுமடங்கிய பிரயாணப் பையை எடுத்து என்னிடம் தருகிறாய். நான் என் நாவலையும் எடுத்துக்கொண்டு புறப்படுகிறேன். மூன்று மணி லாஞ்சிற்கு இன்னமும் சொற்ப அவகாசந்தான் இருக்கிறது.

நான் புறப்பட்டுக் கொண்டிருக்கையில் நீ என்னிடம் சொல்கிறாய். "நாளைக்குக் கடன் திருநாள். கொழும்பில இறங்கியதும் பிலிப் நேரியார் கோயிலில பூசையைக் கண்டிற்றுப் போங்க"

"திருக்கரசைப் புராணம் இரண்டு தா. இலட்சுமண ஐயருக்குக் கொடுக்கவேணும்" என்கிறேன்.

நீ அதையும் எடுத்துத் தருகிறாய். நான் அவசர அவசரமாக லாஞ்சைப் பிடிக்க ஓடுகிறேன்.

திருக்கரசைப் புராணம்!

தமிழுணர்வு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்ட கவிஞன் கனகசிங்கம், தன்னூர் இந்து இளைஞர் மன்றத்தைக் கொண்டு அதை வெளியிடத் துடிக்கிறான்.

கட்டை பறிச்சான் இந்து இளைஞர் மன்றம் தம்மிடமிருந்த அறுநூறு ரூபாயை அவனிடம் கொடுத்தது.

பின்னால் எந்த இலக்கிய உணர்வு மற்ற அவர்கள் கையை விரித்து விட்டார்கள்! ஆனாற் கவிஞன் எப்படியோ புராணத்தைவெளிக்கொணர்ந்து விட்டான்.

ஆடி அமாவாசையன்று நூல் வெளியீட்டு விழா. விழாவிங் பேசுவதற்காக முல்லை மணி, அருள்சுரப்பிரமணியம், பண்டிதர் வைரமுத்து ஆகியோர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

சாயந்தரம் நான்கு மணிக்கு நாங்கள் கங்கைக் கரைக்குப் போவதற்காக பஸ்ஸ’ற்குப் புறப்படுகிறோம்.

நீயும் எங்களுடன் வருகிறாய். "நாளைக்காலையில் ஆறாம் வகுப்புகளுக்கு மேல் அரசாங்கத்தின் அரையாண்டுப்பரீட்சை இருக்கிறது. அதற்கு நான் திரும்பிவிட வேண்டும்" என்கிறாய்.

"பஸ் வசதியிராது, இருந்தாலும் கங்கைக்கரையிலிருந்து பஸ்ஸ’ற்கு இரண்டு மைல் தூரம் நடக்கவேணும். நீ திரும்பிப் பரீட்சைக்கு வர முடியாது" என்று சொல்லி உன்னைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறேன்.

கங்கைக்கரைக்கான ஸ்பெஷல் பஸ்சும் வரவில்லை. கடைசியாக நாம் எல்லோருமே கிளிவெட்டி பஸ்ஸ’ல் ஏறிக் கொள்கிறோம்.

கிளிவெட்டியிலிருந்தும் கங்கைக்கரைக்குப் பஸ்ஸைக் காணவில்லை. இரவு பத்து மணியாகி விட்டது!

குமாரதுரையின் கார் வருகிறது. அதில் இன்னம் நால்வர்தான் 'வில்லங்கமாக' ஏறலாம்.

நான் தயங்குகிறேன்.

"வெளியீட்டு விழாவிற்காக உங்களைக் காத்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் போங்கள். நான் என் மாணவன் கேசவராசாவும் மனைவியும் வருகிறார்கள் தானே. அவர்களோடு வந்து கொள்கிறேன்" என வற்புறுத்தி நீ எங்களைக் காரில் அனுப்பி வைக்கிறாய்.

கார் ஓடிக் கொண்டிருக்கையில் நான் உன்னை இடையில் விட்டு வந்ததைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கனகசிங்கம்தான் ஆசிரியர் முல்லை மணியிடம் சொல்லிக் கொள்கிறான். "வில்லி அக்கா இல்லாவிட்டிற் கரைசப் புராணப் பதிப்பே இல்லை."

"ஏன்?" நான் ஆச்சரியத்தோடு கேட்கிறேன்.

"ஏனா? என்னிடம் பணமா இருந்தது? உங்களுக்கென்ன தெரியும்? புத்தகத்துக்குரிய மீதிப் பணமெல்லாம் அவ மாறித் தந்ததுதானே"

நான் சிருட்டி எழுத்தாளனாக மட்டும் இருந்தாற் போதாது. நமக்குப் பிடித்தமான எழுத்தாளன் கு.அழகிரி சாமியைப்போல பதிப்பாசிரியனாகவும் நான் இருக்க வேண்டும் என்று விரும்பினாயா? அதற்குத்தான் எனக்குத் தெரியாமலே கரைசைப் புராணப் பதிப்பிற்குப் பணங் கொடுத்தாயா?

இத்தகைய வசதிகளும் வாய்ப்பும் இந்த ஜன்மத்தில் இனி எனக்குக் கிட்டுமா? அவைகள் கிடைக்காதபோது வானா ஆனா இராசரத்தினம் எழுத்தாளன் சாவதைத் தவிர வேறு வழி!

இந்த ஐம்பது வயதுக் குழந்தையின் அம்மா செத்துப் போய் விட்டாள் என்ற யதார்த்தமான உண்மை மனதிற் கல்லாய்க் கனத்து அழுத்த அந்த மனப்பாரத்தோடு என் குழந்தைகளைத் தேடிச் செல்கிறேன்.

ஒரே வளவிற்குள்ளிருக்கும் அடுத்த வீட்டு விறாந்தையில் என் குழந்தைகளும், தம்பியின் குழந்தைகளும் பிடுங்கிக் கிடத்தப்பட்ட வாழைக் குட்டிகளைப் போல அயர்ந்து கிடக்கிறார்கள்.

இளவாலை என்றியரசர் கல்லூரியிற் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் நம் மகன் ஜெயா மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறான்.

நான் அவன் பக்கத்தில் அமர்கிறேன். உன் 'கஷ்ட' புத்திரன் ஜெயா என்னிடம் சொல்கிறான். "அப்பா சிலர் என்னைக் கட்டிப்பிடித்துக் கத்துகிறார்கள். நான் அவங்களைப் பேசிப் போட்டன். இவங்க எல்லாம் நமக்கு உதவவா போறாங்க?"

"யார்?"

என் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், "அப்பா, நான் இன்னமும் போடிங்கிற்குப் போறதா?" என்று கேட்கிறான் ஜெயா.

"போகத்தானே வேணும். அப்பா இருக்கிறேண்டா" என்று தேம்புகிறேன் நான்.

"உங்கட ஐந்நூறு ரூபாச் சம்பளத்தில ரெண்டு பேருக்கு போடிங்காசு கட்டுவீங்களா? நான் இனி இங்கேயே படிக்கிறன்"

"அந்தக் கவல உனக்கேன். நீ நல்லாய்ப் படிக்க வேணும் என்பதற்காகத்தானே அம்மா உன்னை மட்டும் உன் பெரிய மாமா படிச்ச இளவாலைப் பாடசாலைக்கு அனுப்பியிருக்கிறா. நீ நல்லாப் படிச்சு அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும் மகனே"

"நான் படிப்பேன் அப்பா. ஆனா நீங்க இனிக் குடிக்கக் கூடாது"

"சரிடா கண்ணே. குடிக்க மாட்டேன்ரா"

'ஐம்பது வயது வரையும் எந்தக் கவலையும் இல்லாமல் என்னை வளர்த்த உன் அம்மா இந்தப் பிஞ்சு வயதிலே உன்கைக் கவலைப்பட வைத்து விட்டாளே' என்று அவனை இறுக அணைத்துக் கொண்டு அழுகிறேன்.

அவன் நித்திரையானதும் நான் மீண்டும் வீட்டுக்கு வருகிறேன்.

* * *

நடு நிசிக்கு மேலாகி விட்டது. வீட்டு மண்டபத்திலே நீ அமைதியாக முகத்திற் புன்னகை நெளியத் துயில் கொள்கிறாய். உன்னைச் சூழ இருப்பவர்கள் அழுது தீர்த்துக் களைத்துச் சோர்ந்து கிடக்கிறார்கள். உன் அம்மா மட்டும் தலைமாட்டிற் தன்னையே அழித்து எரிந்து கொண்டிருக்கும் மெழுகு திரியைப்போலக் கண்­ர் வடித்துக் கரைந்து கொண்டிருக்கிறாள்.

நான் மெதுவாக உன்னிடம் வருகிறேன். உன் முகத்தை மூடிக் கிடக்கும் வெண்பட்டு 'நெற்றை' நீக்கி உன் முகத்தையே அதில் நெளிந்தோடும் புன்னகையையே பார்க்கிறேன்.

கண நேரந்தான்!

அதன்பின்பும் என்னைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை.

உன் மகன் ஜெயா கேட்டவைகளையெல்லாம் உன்னிடம் முறையிட்டுப் பைத்தியக்காரனாக உன்மேற் புரண்டு அழுது புலம்புகிறேன். அரைத் தூக்கத்திலிருந்த எல்லோரும் விழித்துக் கொண்டு ஓவென்று புலம்புகிறார்கள்.

அழுது சோர்ந்த என்னைச் செல்லையா அண்ணனும், தாசனும் வெளியிலே கொண்டு வருகிறார்கள். திண்ணைக் குந்தில் மீண்டும் வைரவன் பிள்ளையாக குந்திக் கொள்கிறேன்.

என் பக்கத்திலிருப்பவர்கள் யார் யாருக்குத் தந்தி கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை எனக்குச் சொல்கிறார்கள்.

"யோசப் வாசுக்கு அறிவித்தீர்களா?"

"ஆம். யோனாஸ் சொன்ன விலாசத்திற்குத் தந்தியடித்திருக்கிறோம். சம்லின் போஸ்ற் மாஸ்ரர் இரவோடிரவாக எல்லாத் தந்திகளையும் தானாகவே கொடுத்திருக்கிறார்.

"சங்கானை அக்காவிற்கு நேற்றே போன் பண்ணியிருக்கிறாராம் டி.ஓ." என்கிறான் யோனாஸ்.

சங்கானை அக்கா!

என் மனம் மீண்டும் கிண்ணியாவிற்குத் தாவுகிறது.

உன் அறைக்குப் பக்கத்து அறையில் உன் சக ஆசிரியரான சுன்னாகம் சண்முகம் மாஸ்ரர். அவர் மனைவிதான் உங் சங்கானை அக்கா.

அந்த உறவை இருபத்தினான்கு ஆண்டுகளாக நீ எப்படி வளர்த்துக் கொண்டாய்!

"நானோ எவருக்கும் கடிதங்கூட எழுத மாட்டேன். தெரிந்தவர்களைக் கண்டாற்கூட எங்கேயோ எதனையோ யோசித்துக் கொண்டு பேசாமலே இருந்து விடுவேன்" என்று நீ சொல்வாய்.

நீயோ அறிமுகமாகும் எல்லாரையும் நண்பர்களாக்கிக் கொள்வாய். அந்தத் தொடர்புகளை அறுத்துக் கொள்ள அவர்களால் முடியாமலிருக்கும்.

மூன்று வாரங்களுக்கு முன்னாற்கூட நீ சங்கானை அக்காவின் மருமகளின் கல்யாணத்திற்காகச் சுன்னாகம் சென்றாய்.

என்னையும் வருந்தி அழைத்தாய்.

"இன்னும் சில நாட்களில் நான் கரசைப்புராணத்தை எடுத்துக் கொண்டு வர யாழ்ப்பாணம் போக வேண்டியிருக்கும். அப்போது அங்கு போய்க் கொள்கிறேன். இப்போது நீ போய்வா" என்கிறேன் நான்.

"யாழ்ப்பாணம் போனாலும் நீங்கள் அங்கு போவீர்களோ என்னவோ, போன மாதம் சென்ற போதுகூட நீங்கள் போகவில்லையே!"

"இம்முறை கட்டாயம் போகிறேன். சென்ற தடவை ஒரே ஒரு நாள்தானே யாழ்ப்பாணத்திற் தரிக்க முடிந்தது. நான் அடுத்த வாரம் வருவதாக அவர்களிடம் சொல்!"

"நான் சொல்ல மாட்டேன்" என்று விட்டு நீ மூத்த மகன் ரவியையும் அழைத்துக்கொண்டு கல்யாண வீட்டிறகுச் செல்கிறாய்.

கல்யாண வீட்டிலிருந்து வந்ததும், அங்கு நடந்தவைகளையெல்லாம் கதை கதையாக எனக்குச் சொல்கிறாய்.

"சோதியனுக்குக் கொஞ்சம் சுப்பா. மனைவி இல்லமற் தனியாகத்தான் வந்தான். என்னைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டு 'வில்லி மாமி வந்திற்றா. வில்லி மாமி வந்திற்றா' என்று கொஞ்சினான்" என்று எத்தனை பெருமையோடு குறிப்பிட்டாய்.

அத்தனை பெருமைகளையும் இழந்து விட்டேனே என்ற துயரிலும் பசிக்களையிலும் என் உடல் சோருகிறது. வழக்கமாக எனக்கிருக்கும் வாய்வுச் சேட்டை மேலோங்கும்போலத் தோன்றுகிறது. அதன் சூசகமாக வலது புறத் தோள்மூட்டு இலேசாகக் கடுக்கிறது.

வெளியே இருந்தாற் குளிரில் அது இன்னமும் கூடுதலாகும் என்றெண்ணிய நான், அலங்கோலமாகக் கிடக்கும் என் புத்தக அறைக்குள் மெதுவாகச் சென்று கட்டிலில் உடலைச் சார்த்துகிறேன். எனது சேனையூர் வித்தியாலய உயர்வகுப்பு மாணவர்களான சுகுமார், ரெத்தின சிங்கம் ஆகியோரும் அங்கே கிடக்கிறார்கள்.

வெளியிலே லீயோ அண்ணனும், செல்லையா அண்ணனும் "ரெட்னம் எங்கே?" என்று என்னைத் தேடுகிறார்கள். அது எனக்குக் கேட்டாலும் நான் மௌனமாகவே கிடக்கிறேன்.

ஆனால் அறையைத் திறந்து கொண்டு வந்த பெரியண்ணா லீயோ, "தம்பி, தனிய கிடந்து யோசிக்காத" என்று என் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வருகிறார். முற்றத்துப் பந்தலின் கீழே கதிரை ஒன்றில் என்னை அமர்த்திவிட்டுச் சிகரட்டை நீட்டிக் கொண்டே "இப்படி எல்லோரோடும் இருந்து பேசிக் கொண்டிரு. தனிமையாக இருக்காதே" என்கிறார்.

தனிமை!

கல்யாணமான புதிதில், கல்யாணமாகாத உன் தங்கை, அக்கா என்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கை. பின்னர் வீடு நிறைந்த பிள்ளைகள் ஒரு தலைமுறை வாழ்விலே நாம் என்றைக்குமே ஒரே கூரையின் கீழ்த் தனிமையாக வாழ்ந்ததில்லை.

ஆனால் முந்தா நாட் சனிக்கிழமை.

எனது பாடசாலைக்கும் கௌரவ கல்வி அமைச்சர் வருகை தரவிருக்கிறார் என்ற பிந்திக் கிடந்த செய்தியைக் கேட்டு, அவர் வருகைக்கான ஒழுங்குகளைக் கவனிக்க அன்றும் நான் பாடசாலைக்குச் செல்கிறேன்.

சாயங்காலம் ஐந்து மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்புகிறேன்.

நமது வீட்டிலே உன்னைத் தவிர வேறு எவருமே இல்லை. சின்னவன் மேரியன்கூட இல்லை. "எல்லாருமே அம்மாச்சியுடன் கூடிக்கொண்டு கங்கைத் திருநாளைக்குப் போய்விட்டார்கள்" என்று நீ சொல்கிறாய்.

'பாடசாலை வேலைகளாற் கங்கைத் திருநாளைக்குப் நாம் போவதில்லை என்று சொல்லியிருந்தோமே"

"ஊரே போகும்போது பிள்ளைகள் இருப்பார்களா? எல்லாரும் அம்மாவோடு போய்விட்டார்கள்.

"தாசனும் போய்விட்டானா?

"இல்லை, றீற்றாவும் போகவில்லை. ஆநந்தனும் அம்மாச்சியோடு போய்விட்டான்"

"இன்று நானும் வராமலிருந்தால்....?

"நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்."

"எப்படித் தெரியும்?"

"உங்கள் பாடசாலையில் இன்று கல்விக் கந்தோரிலிருந்து வந்தவர்களுக்கு விருந்து. குறைந்தது நீங்களும் எதிரி சூரியாவுமாவது குடித்திருப்பீர்கள். குடித்தவுடன் என்னைத் தேடி வருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்."

"இல்லை. இன்றைக்குக் குடிக்கவேயில்லை. புதிய டிறெக்டர் எப்படிப்பட்டவரோ என்று எவருக்குமே தெரியாது. அவருக்குப் பயத்தில் எவருமே குடிக்கவில்லை."

"நான் நம்ப மாட்டன், குறைந்தபட்சம் உதவி டிறெக்டர் எதிரி சூரியாவோடு இரகசியமாகவாவது குடித்துவிட்டு, இலக்கியமும் சரித்திரமும் பேசியிருப்பீர்கள்"

"அந்த வாய்ப்பு இன்றைக்குக் கிட்டவில்லை. 'திவ்யாவதான' என்ற நூலைப் பற்றி அவரோடு பேசலாம் என இருந்தேன். முடியாமற் போய்விட்டது" என்ற நான் என் படிப்பறைக்குட் புகுந்து வியத்தகு இந்தியா' (the wonder that was India) என்ற நூலை விட்ட இடத்திலிருந்து ஆழ்ந்து படிக்கத் தொடங்குகிறேன்.

தாசனையும் கூட்டிக்கொண்டு வெளியே போகலாம் என எண்ணினேன். ஆனால் நீ தனியாக இருக்கிறாய் என்பதாற் போகவில்லை.

கோயிலில் ஏழரை மணி அடிக்கிறது. உனக்கு அலுத்துவிட்டது போலும். "சாப்பிட வாருங்கள். நாலு மணிக்குக் கட்டுச் சோற்றுக்காக ஆக்கிய சோறு" என்று அழைக்கிறாய்.

நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்து சோற்றைக் கொறிக்கிறேன். மதியம் பலமான சாப்பாடு. இப்போது சாப்பிடவே முடியவில்லை.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் நான்வந்து செற்றியில் அமர்கிறேன்.

நீ கழுவ வேண்டியவைகளைக் கழுவி வைத்துவிட்டு என் பக்கலில் வந்து அமர்கிறாய். நான் முன் கதவை தாளிட்டுவிட்டு வருகிறேன்.

"முருகேசு மாஸ்ரர் வருவார். கதவு திறந்தே இருக்கட்டும்."

"அவர் வரும்போது திறக்கலாம்" என்றுவிட்டு நான் விறாந்தையின் லைற்றையும் அணைக்கிறேன்.

என் மடியில் நீ கொடியாய்த் துவள்கிறாய்.

ஓவென்ற தனிமை நம்மிருவரையும் இருபது வருடங்கள் பிந்திய இளைஞர்களாகவே ஆக்குகிறது.

என் கண்ணே! எதிரே நீண்டு கிடக்கும் என் வாழ்க்கை முழுவதும் அந்தக் 'கடைசி இரவை' நினைத்து, உன் நினைவோடே நான் வாழவேண்டும் என்றெண்ணித் தான் நீ அந்த 'ஓ'வென்ற தனிமையைச் சிருட்டித்து வைத்தாயா? நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் உனக்கு அத்தனை கரிசனமா? அல்லது 'ஆண் பெண்ணின் முதல் காதலையும், பெண், ஆணின் கடைசிக் காதலையும் விரும்புகிறார்கள்' என ஓஸ்கார் வைல்ட் எழுதியபோல நீயும் என் கடைசிக் காதலை விரும்பி ஏற்றுக் கொள்ளத்தான் அத்தனிமையைச் சிருட்டித்து வைத்தாயா?

கணமே யுகமாக இனித்த அந்த இரவு விடிகிறது.

அன்று விடிந்ததும் நீராடிவிட்டு, ஒரு தேவதைபோல என் முன் நின்று கொண்டு சொல்கிறாய். "கங்கைக்குப் பூசைக்காவது போய்விட்டு வருவோம். நீங்களும் வாருங்கள்.

"சாயந்தரம் இங்கே பூசை இருக்கிறதுதானே. அதற்குள் ஏன் அங்கே போக வேண்டும்?" என்று படுக்கையிலிருந்தபடியே கேட்கிறேன்.

"ஒவ்வொரு வருடமும் அங்கே போனாம். இந்தத் திருநாளைக்கும் போகத்தான் வேணும். வாருங்கள்" என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமலே நீ பக்கத்து வீட்டு றீற்றாவிடம் போகிறாய்.

சற்று நேரத்தில் உன் தாசன் அத்தான் வந்து சொல்கிறான். "இந்த வருஷம் பேதுருவானவரிட்டப் போறல்ல என்றுதான் நானும் நினச்சிருந்தன். ஆனா உங்கட மனுஷ’ வந்து என்ர மனுசியையும் கூட்டிற்றுப் போறா, உங்களையும் எப்படியாவது கூட்டிற்று வரச் சொன்னா, எழும்புங்க போவம்"

"வீட்டில எவரும் இல்லயே"

"வீட்டப் பூட்டிற்றுப் பக்கத்து வீட்டில திறப்பைக் கொடுத்திற்று வரச் சொன்னா" என்கிறான் தாசன்.

நான் என்னதான் மறுத்தாலும் தாசன் விடுவதாயில்லை. அவனோடு கங்கைக் கோயிலுக்குப் புறப்படுகிறேன்.

என் கண்ணே! மோட்சத்தின் திறவுகோலைக் கைக்கொண்டிருக்கும் நம் குல தெய்வமான அந்த மீனவனிடம் "வானுலகக் கதவைத் திறந்து விடு" என்று வேண்டிக் கொள்ளத்தான் நீ உன் வாழ்க்கையிலே கடைசித் தடவையாக கடைசிப் பூசையான அப்பேதுருவின் பூசைக்கு அவசர அவசரமாகப் போனாயா?

"இன்று தொடக்கம் உன்னை மனிதரைப் பிடிக்கிறவனாக்குவேன்" என்று இரட்சகரிடம் வரம் பெற்ற நம்பிதாமதர், தாம் பிடிப்பதற்கான பக்குவத்தை அடைந்துவிட்டாய் நீ என்று எண்ணி, உன்னை அங்கேயே பிடித்துக் கொண்டாரா?

தன் மேய்ப்பன் யூதர் கையிற் பிடிபட அந்த மேய்ப்பனைத் தொடர்ந்து குளிர் காலத்துக் கடைஜாம அந்தலையிலே என்புக்குள்ளிருக்கம் குழலட்டையையும் திடமாக உறையப் பண்ணும் சீதளத்தில் குளிர் காய்ந்து கொண்டு தன் மேய்ப்பனை மறுதலித்ததை எண்ணி மனமுருகி அழுத அந்தப் பிதாமகர் பேதுருவைப் போல, நானும் இந்த அதிகாலையில் உனக்காக மனமுருகி அழுகிறேனே, என் அழுகை அந்தப் பேதுருவிற்குக் கூடக் கேட்க வில்லையா?

கேட்காது! அவர் பெயரே கல். மனமும் கல்லாகி விட்டதோ?

காலைத் திருந்தாதி மணி ஒலிக்கிறது. தொடர்ந்து 'இளைப்பாற்றி' மணியும் கேட்கிறது.

நமது ஒழுங்கை முகப்பிற் 'கார்' ஒன்று வந்துதரிக்கிறது. அதிலிருந்து என் நண்பர்களான எஸ்.பொவும், ரகுவும், உதவி மந்திரி மஜ“தும் இறங்குகிறார்கள்.

போனிற் செய்தி கிடைத்ததும் எஸ்.பொவையும், ரகுமானையும் தன் காரிலேயே ஏற்றிக் கொண்டு இரவோடிரவாகப் புறப்பட்டு வந்திருக்கிறார் உதவி அமைச்சர். யார் யாருக்கோ அவர் பிரதியமைச்சராக இருந்தாலும் எனக்கு நண்பன், மந்திரி சபையில் மாறுதல் நடக்கும் என்று தெரிந்திருந்தும் எதையுமே பொருட்படுத்தாது ஓடோடி வந்திருக்கிறான்.

வந்தவன் என்னை ஏறிட்டுப் பார்க்கவே சகிக்காதவனாக நேரே மண்டபத்துள் இருக்கும் உன்னிடமே வருகிறான். நான் எஸ்.பொவை அணைத்துக் கொண்டு ஓலமிடுகிறேன். "நீ தேடி வந்த எழுத்தாளன் செத்துப்போனான்"

என்றைக்கும், எப்போதும் கலகலப்பாகப் பேசும் எஸ்.பொ.மகாமசான அமைதி சாதிக்கிறான்.

உன்னைப் பார்த்துத் தன் இறுதி மரியாதையைத் தெரிவித்து விட்டு வந்த உதவி அமைச்சர், பந்தலில் ஒரு கதிரையில் அமர்ந்து கொள்கிறார்.

நான் அவன் பக்கலில் அமர்கிறேன்.

"இனி நீ அழக்கூடாது. தைரியமாக இருக்க வேணும்.

"உன் மனைவி வகித்த அதிபர் பதவியை இனி நீரே வகிக்க வேண்டும்."

அவன் சொல்வதெல்லாவற்றையுங்கேட்டுக் கொண்டு ஏதுமே பேசாமல் நான் மௌனமாக இருக்கிறேன்.

என் பக்கலிலிருந் ஹசன் விதானையார் சொல்கிறார். "எல்லாவற்றையும் நாம் செய்வதுதானே. மாஸ்ரரிடம் என்ன சொல்றது இப்ப"

* * *

எட்டு மணியாகிவிட்டது. திருக்கோணமலையிலிருந்து புறப்படும் முதலாவது மோட்டர்ப் படகு மூதூருக்கு வந்துவிட்டது. வெளியூர்களிலிருந்து அயற் கிராமங்களிலிருந்தும் நண்பர்களும், உறவினர்களம் சாரி சாரியாக வந்து கொண்டிருக்கிறார்கள். பிணப்பறை தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

தம்பலகாமத்துச் சித்திரவேலையும், கணேச பிள்ளையையும் கண்டதும், அக்கா, "உன் மச்சான் மாரெல்லாம் வந்திருக்காங்க மகளே" என்று தலையிலடித்துக் கொண்டு ஓவென்று புலம்புகிறாள்.

அப்புலம்பலிடையே அருள் சுப்பிரமணியம் என்னிடம் சொல்கிறார். "பன்னிரண்டு மணி லாஞ்சிற்குக் கல்விக் கந்தோர் முழுமையுமே வருகிறது."

உன் தம்பி அந்தோணி டக்ரர் அங்கலாய்க்கிறான். "தங்கத்துரையண்ணனுக்குப் போன் பண்ணினன். அவர் நேராகக் கதைக்கவில்லை. அவருக்குச் செய்தி கிடைத்திருக்கமோ என்னவோ."

"தண்ணியாவது குடி தம்பி" என்று யாரோ என் கையைப் பிடித்து இழுக்கிறார்கள்.

* * *

தண்­ர்!

என் நினைவுகள் எங்கோ தாவுகின்றன. திங்கட் கிழமை சாயந்தரம்.

பருத்த உடம்போடு கூடிய வாதக்காரியான உன் அக்கா உன்னைத்தான் நெஞ்சிலே சார்த்தி வைத்துக் கொண்டு கட்டிலின் தலைமாட்டில் இருக்கிறாள். உன் இருபக்கலிலும் ஆயுள் வேத வைத்தியனான உன் தம்பியும், ஆங்கில உதவி வைத்திய அதிகாரியான என் தம்பியும் அமர்ந்திருக்கிறார்கள்.

நீ அவர்களிடம் சொல்கிறாய். "என்னால் ஒண்ணையும் குடிக்க முடியாம இருக்கு. நீங்க ரெண்டு பேரும் ஏதாவது ஊசியைப் போட்டு என் நெஞ்சுக்கு அடைப்பதை எடுத்து விடுங்களன்."

அந்த வேதனைக் குரல் இப்போதும் என் நெஞ்சைப் பிழிகின்றது. நேற்று மத்தியானம் சிங்கள வைத்தியன் மந்திரித்துத் தந்த தண்­ரைக் குடித்தாய் எனக் கேள்விப்பட்டு அசட்டு நம்பிக்கை கொண்டிருந்தேனே. நீ தண்­ரைக் குடித்தாய் என்று எல்லாருமே என்னிடம் பொய் சொன்னார்களா?

நேற்றுச் சாயந்தரம் சின்னஞ்சிறு கரண்டியால் நான் உன் வாயிலிட்ட தண்­ர்கூட உன் குடலுக்குட் சென்று இருக்குமா?

துரைலிங்கம் மாஸ்ரர் என்னிடம் சொல்கிறார், "அக்காவைப் பாடசாலையிற் கொண்டு போய் வைக்க வேணும். எங்கள் மாணவர்களும் பெற்றோர்களும் எத்தனையோ முஸ்லிம் பெண்களும் அவரைப் பார்க்க விரும்புகிறார்கள்."

நான் மௌனமாக இருக்கிறேன்!

பெரியண்ணன் சொல்கிறார். "மூணு மணிக்குக் கோயிலுக்குக் கொண்டு போவோம். அரை மணித்தியாலம் அங்க பூசை நடக்கும், அங்கிருந்து பாடசாலைக்குக் கொண்டு போகலாம். அங்க வைத்திருந்து ஐஞ்சரை மணியளவில் சவக்காலைக்கக் கொண்டு போவம்."

"கடைசி லோஞ்சு வரும் வரையும் ஆறு, ஆறரை மணி மட்டும் பாடசாலையில் வைத்திருக்க வேண்டும்" என்று திருத்தஞ் சொல்கிறான் என் தம்பி ஸ்ரனிஸ்லாஸ்.

மூத்த மகள் வசந்தி என் கையைப் பிடித்து "அப்பா கோப்பியாவது குடிக்க வாருங்கள்"

'என் மகளே! இந்தச் சின்னஞ்சிறு வயதிலே இந்தப் பென்னம் பெரிய குழந்தையை அம்மா உன்னிடம் கையளித்துவிட்டுப் போய்விட்டாளா? நேற்று உன்னிடம் 'நீ அழாதே. நீ அழுதால் அப்பாவும் அழுவார். அப்பாவை அழாமற் பார்த்துக் கொள்!' என்று உன் அம்மா சொன்னாளாமே' என்றெண்ணிக் கொண்டே என் இதயம் அழுது வடிக்கிறது.

ஆனாலும் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். "கோப்பி குடிக்கத்தான் வேணும், சாப்பிடவும் வேணும். உன் அம்மா நான் பட்டினி கிடப்பதை என்றைக்குமே சகித்துக் கொண்டிருக்க மாட்டாள். அத்தோட எனக்கு சட்டையும் வேட்டியும் கொண்டு வா. நான் இப்படி அலங்கோலமாக இருப்பதை உன் அம்மா பொறுக்க மாட்டாள்."

வீட்டினுள்ளே ஓலமும் புலம்பலும் உரத்துக் கேட்கிறது. உன் உடம்பிறவா அக்கா கணேஸ்வரியும் அவள் மச்சாளும் சுன்னாகத்திலிருந்து வந்து விட்டார்கள் என்பது எனக்குத் தெரிகிறது.

"மட்டக்களப்பிலிருந்து ராசேந்திராவும் வந்து விட்டான்" என்கிறான் தாசன். வீட்டிலோ தெருவிலோ எங்கே சந்தித்தாலும் 'எண்ட மச்சாளே" என்று உன்னை அணைத்துக் கொள்வானே. அவன் அழுவது எனக்குக் கேட்கிறது.

* * *

பகல் இரண்டு மணிக்கு உன்னைக் குளிப்பாட்டிக் கூறைச் சேலையும் அணிவித்து மண்டபத்திலே கிடத்தியிருக்கிறார்கள்.

உன்னைக் கோயிலுக்குக் கொண்டு போவதற்காகச் சுவாமியாரும் கோயிலிலிருந்து புறப்பட்டு விட்டாராம்.

பங்கு குரு சொய்சா மட்டும் வருகிறார். அவர் பின்னால் அரச ரத்தினம், காமினி, சந்திரா, ஜோசப் மேரி. இவர்களெல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? எப்போ வந்தார்கள்?

தன் கூட்டாளியான காமினியைக் கண்டதும் உன் அழகு மகனான சின்னஞ்சிறு நோயெல் very good, good morning father என்று தன் கிண்டர்காடின் ஆங்கிலத்தில் வரவேற்கிறான்.

"என் பிரெண்டுக்கு ஏதுமே விளங்காதே" என்று மழலைத் தமிழ் பேசிக் கண்­ர் வடிக்கிறார் காமினி பெர்னாண்டோ அடிகளார்.

"என்னிடம் ஐந்து விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்" என்று வேலிக்கப்பால் நின்று சொன்னால் பத்துப் பேருக்கே விருந்துச் சாப்பாடு அனுப்பி விடுவாவே வில்லி ரீச்சர்" என்று கண்­ர் வடிக்கிறார் அரசரத்தினம் அடிகளார்.

"என்னடாப்பா நடந்தது?" உரிமையோடு என்னை அணைத்து விசாரிக்கிறார் ஜோசப் மேரி அடிகளார்.

உறவினரான சந்திர பெர்னாண்டோ அடிகளார் ஏதுமே பேசாது அமைதியாய்க் கண் கலங்குகிறார்.

* * *
வெளியிலே நின்ற என்னை யார் யாரோ உள்ளே இழுத்துச் செல்கிறார்கள். என் மச்சான் அடைக்கலம் என்னை அசையவிடாமற் பிடித்துக் கொண்டிருக்கிறார். சனக் கூட்டத்தை விலக்கி உன் முன்னால் என்னை நிறுத்துகிறார்கள்.

"தாலியைக் கழற்று தம்பி" லீயோ அண்ணன் அழுகிறார்.

நான்கைந்து கைகள் என் வலக்கையை உன் தாலியருகே இழுத்துச் செல்கின்றன.

என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன செய்தேன் என்பதும் தெரியவில்லை. தலையிலடித்துக்கொண்டு அழும் என் சகோதரர்கள் ஐயரோடும் என் சகோதரியோடும் சேர்ந்து அழத்தான் முடிந்தது. அதுதான் செய்யக் கூடியதாய் இருந்தது.

அந்தச் சடங்கு முடிந்ததும் நான் மீண்டும் வெளியே இழுத்து வரப்படுகின்றேன். குழந்தைப் பருவத்திலிருந்து, நம்மோடு நமது பிள்ளையாகவே வளர்ந்த நம் சகோதரங்களின் மகன் காமலின் "பெரியம்மாவைப் பார்க்கப் போறன்" என்ற வார்த்தைகளையே திருப்பித் திருப்பிச் சொல்லித் திமிறிக் குமுறிக் கொண்டு உன்னிடமே வர முயல்கிறாள்.

சனக் கூட்டத்தை விலக்கி, அவளை உன்னிடம் கொண்டு போகவென்று நானும் முயல்கிறேன். அடைக்கலம் மச்சாள் என்னை இன்னமும் பலமாகத்தான் பிடித்துக்கொண்டு இருக்கிறாள்!

என் மகளே! இந்த நிமிந்தொட்டு உன் பெரியப்பா எதையுமே செய்யத் திராணியற்றவன் என்பதை நீ விளங்கிக் கொண்டாயா?

ஒன்றுக்கும் உதவாதவனாக நான் வீட்டுக்கு வெளியே தள்ளிவிடப் படுகிறேன். வெளியே நிர்க்கதியாக விடப்பட்ட என்னை நான் மகனாகவே நேசிக்கும் துரைரத்தின சிங்கம் இறுகத் தழுவிக்கொண்டு விம்மிவிம்மி, விம்மி விம்மி அழுகிறான்.

இருவரதும் அழுகை ஓய்ந்தபோது என் மனம் எங்கோ தாவுகிறது,

தாலியும் கூறையும்!
நான் உனக்குத் தாலி வாங்கி வந்தேனா?
கூறைவாங்கி வந்தேனா?
கூறைச் சீலையோடு நீ போக,
தாலியை நான் வைத்துக்கொள்ள...

அந்த ஜனவரி மாதம் நான்காந்திகதி, உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த நம் பிணைப்பை எப்படியோ ஊர் தெரிந்து கொள்கிறது.

உன் அக்காவுக்கு ஆத்திரம்! என்னை விரும்பாததால் அல்ல நீ அவளை முந்திக் கொண்டு குடும்பத்திற் குழப்பத்தை உண்டாக்கி விடுவாய் என்று.

ஊரிலேயும் நம்பிணைப்புக்குச் சாதக பாதகமான கருத்துக்கள்.

நானோ எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாகவே இருக்கிறேன்.

நானும் என் எழுத்தும்!

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈழகேசரியில் 'அந்த விருந்து என்ற என் சிறுகதை பிரசுரமாகிறது.

'கொழும்பிலே உத்தியோகம் பார்க்கும் ஒருவர் நத்தாருக்கு நத்தார் உருக்கு வருகிறார். ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது, அவருக்கு மணம் பேசியிருப்பவனின் வீட்டில், அவ்வுத்தியோகத்தருக்கு விருந்து நடக்கிறது. என்னென்னவோ காரணங்களைச் சொல்லி அவர் திருமணத்தைக் கடத்திக்கொண்டு வருகிறார். ஒவ்வொரு விருந்துக்கும் அவர் வந்து போன பின்னால், அப்பெண் அழுகிறாள்.

என்பதாகக் கதை அமைந்திருக்கிறது.

அக்கதையைப் படித்தவர்கள் சிலர் நான் உன் அக்காவைக் கேலி பண்ணவே இக்கதையை எழுதியதாகத் 'திரி' வைக்கிறார்கள். உன் அக்கா எரிமலையாகிறாள்!

அந்த வருடம் வைகாசி மாதம் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. மாதம் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. நம் இருவர் குடும்பத்தினரும் எதிர் எதிர் அணிகளில் நிற்கிறார்கள். இடையிலே உள்ளவர்கள் அவர்களை மேலும் பிளவு படுத்துகிறார்கள்.

"நீ எவருக்காகவும் காத்திருக்க வேண்டாம். வேறு யாரையாவது உடனடியாக மணம் செய்து கொள்" என்று நெருக்குகிறார்கள் என் வீட்டினர்.

ஆவணி மாத விடுமுறையில் நிலைமை மோசமடைகின்றது! நான் அடுத்தாக என்ன செய்யவேண்டும் என்பதை மனதிற் சிந்தித்துக்கொண்டே என் வீட்டார் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலைமை ஆட்டி வைக்கிறேன்.

உனக்கும் எனக்கும் விடுதலைக் காலத்தில் நேரடித் தொடர்பு இல்லாததினால் நீயும் என்னைச் சந்தேகிக்கிறாய். யோசப் வாஸ்தான் உனது சந்தேகத்தைத் தூதனாக நின்று தெளிவிக்க முயல்கிறான்.

விடுதலை முடிவடைந்தபோது, நீ உன் தந்தையும் மனோகரனும் மட்டுமே துணைவரக் கிண்ணியாவிற்குப் போகிறாய. சங்கானை அக்கா இருக்கிறாள் என்ற தைரியம் உனக்கு!

நானும் மொறட்டுவா விற்குப் போகிறேன்.

'மொறட்டுவா'விற்குப் போகும் வழியில் நான் கிண்ணியாவிற்கு வருவேன் என்று நீ எதிர்பார்த்தாய். என் வீட்டாருக்குப் 'பிடி' கொடுத்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டே நான் கிண்ணியாவிற்கு வராமலே மொறட்டுவா விற்குப் போகிறேன். நான் உன்னை மறந்து விட்டேன் என்று என் வீட்டாரும் திருப்தியடைகிறார்கள்.

உன் சந்தேகம் வலுக்கிறது! நீ கிண்ணியாவிலிருந்து உன் பேனாவைக் கண்­ரிற் தோய்த்து எனக்குக் கடிதம் எழுதுகிறாய். தற்கொலை செய்துகொள்வேன் என்று பயமுறுத்துகிறாய்.

அப்போது அகிலனின் 'நெஞ்சின் அலைகள்' என்ற பரிசு பெற்ற நாவல் கலைமகளில் வெளியாகிக் கொண்டு இருந்தது என எண்ணுகிறேன். அந்நாவலின் கதாநாயகன் கூறிய வார்த்தைகளை நான் உனக்கு எழுதுகிறேன்.

இந்த உலகிலே எத்தனையோ நயவஞ்சகர்களும் கயவர்களும் வாழ்கிறார்கள். அயோக்கியர்களும் உலுத்தர்களும் வாழ்கிறார்கள். நீயும் நானுமா வாழக்கூடாது? வாழ முடியாது?

என் வீட்டாருக்குப் பயந்து இதுவரை 'அஞ்ஞாத வாசம்' புரிந்த செல்லையா அண்ணனும் குருநாகலில் இருந்து எனக்கு உருக்கமான கடிதங்கள் எழுதுகிறான்.

உனக்குக் கடிதத்தை எழுதிவிட்டு அந்த வாரக் கடைசியிலேயே நான் உன்னிடம் வந்தேன். அதன் பின்னர் ஏறத்தாழ ஒவ்வொரு வாரமுமே நான் கிண்ணியாவிற்கு வந்தேன்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் உள்ளத்தால் இணைந்த நாம் ஐப்பசி மாதத்து இரண்டாம் சனிக்கிழமை உடலாலும் இணைகிறோம்.

இரகசியமாக மணம் முடிக்க முடிவு செய்து கொள்கிறோம். அதற்கு மூதூரின் பங்குக் குருவரான ஹமில்ரன் அடிகளாரோடு கடிதத் தொடர்பு கொள்கிறேன்.

இரு குடும்பங்களும் ஒற்றுமையில்லாத நிலையில் நீ இங்கும் நான் அங்குமாய் எப்படி வாழ்வது? என்ற கவலையும் என்னைப் பீடிக்கின்றது.

என்னைத் தமிழிற் பேசிக் குழப்பிவிட முடியாது. ஆங்கிலத்திற் பேசித்தான் குழப்ப வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டோ என்னவோ ஒரு பக்க வாதம் பேசும் ஆங்கிலந் தெரிந்தவரும் அடிக்கடி என்னிடம் வருகிறார். அவர் என் 'தொட்டப்பா' (ஞானத் தந்தை).

அவரது ஆங்கிலப் பேச்சையும் என் குழப்பத்தையும் கண்ட, நான் 'போடராக' இருந்த வீட்டுக்காரி ஒல்கா பெர்னாண்டோ தெம்பு சொல்கிறாள்.

"மாஸ்ரர், நீங்க ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். ஊரிலே இல்லாவிட்டாலும் எங்களூரான சிலாபத்துக்குக் கூட்டி வாருங்கள். அங்கேயே மணம் முடிக்கலாம். சிலாப மேற்றிராசனத்திலேயே உங்களிருவரும் ஒரே பாட சாலையிலேயே உத்தியோகம் எடுத்துத் தரவும் என்னால் முடியும்."

ஆனால் அதற்குள் மூதூரிலிருந்து ஹமில்ரன் அடிகளார் எழுதிய கடிதம் எனக்கு வழியைக் காட்டுகிறது. அவர் எழுதியிருந்தார்.

"நீங்கள் இருவரும் வயது வந்தவர்கள். மணம் முடிக்க எந்தத் தடையும் இல்லை. உன் விருப்பப்படி இரகசியமாக மணம் முடிக்க எல்லா ஒழுங்குகளையும் செய்வேன். அத்தோடு மிக விரைவிலேயே உம்மைத் திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரிக்கு மாற்றவும் ஒழுங்குகள் செய்வேன். என் கடிதத்தோடு கொழும்பு அதிமேற்றிராணியாரைச் சந்திக்கவும். என்ன காரணம் பற்றியும் பதிவுத் திருமணம் செய்வதைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டாம்"

அவரது கடிதத்தைக் கண்ட பின்னர் விடயங்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

டிசம்பர் மாதத்து எட்டாந்திகதி, அமலோற்பவத் திருநாளன்று நான் சல்பிட்டி கோறனை விலாகப் பதிவுகாரனிடம் நோட்டீஸ் போடுகிறேன்.

தம்பலகாமத்தில் நீ அதைச் செய்கிறாய். ஆனாலும் கல்யாணம் என்றால் பணம் வேண்டாமா? அது எந்தக் காலத்து ம எனக்குத் தெரியவே தெரியாத ஒரு விடயம்!

என் மாதச் சம்பளத்தில் என் விடுதிச் செலவுகளை செலுத்திவிட்டுச் சில புத்தகங்களையும் வாங்கி விட்டால் என்னிடம் மீந்தியிருப்பது சில ரூபாய்களே.

அதையிட்டு நான் கவலைப்பட்டதும் இல்லை. நிம்மதியாகப் புத்தகங்களில் மூழ்குவேன். அல்லது எழுதுவேன்.

இந்த லட்சணத்தில்தான் டிசம்பர் மாதம் இருபத்தி ரண்டாந்திகதி காலையிற் தம்பலகாமத்தில் புகையிரத்தை விட்டிறங்கிக் கிண்ணியாவுக்கு நடந்தேன்.

என் கையிலே சின்னஞ்சிறிய சூட்கேஸ். இரண்டு சோடி உடுப்புக்கள். சாறன், துவாய் இரண்டு புத்தகங்கள், சல்பிட்டி கோறனை விவாகப் பதிவுக்காரரிடம் இருந்து பெற்றுக் கொண்ட கல்யாண நோட்டீசின் பிரதி, எந்தத் கோயிலும் மணம் முடிப்பதற்காகக் கொழும்பு அதிமேற்றிராணியாரிடமிருந்து பெற்றுக் கொண்ட விசேட அனுமதிக் கடிதம், மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களும் சில்லறைகளும்....

கல்யாணத்திற்கு வரும்போது என்னிடமிருந்த தாவர சங்கமச் சொத்துக்கள் எல்லாமே இவைகள்தான்.

தாலியையும் கூறையையும் பற்றி நான் சிந்திக்கக் கூட இல்லை.

அடுத்த நாட்காலை திருக்கோணமலை மேற்றிராசனக் கோயிலில் ஆடம்பரமான பாடற் பூசையில் எளிமையாகவே நம் திருமணம் நடைபெறுகின்றது.

* * *

இன்று மூதூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் உனக்காகத் து ககப் பூசை பாடப் படுகின்றது.

பூசை முடிவடைந்ததும் உன் சடலம் புனித அந்தோனியார் பாடசாலைக்குக் கொண்டு செல்லப் படுகின்றது.

உன் சடலத்தைச் சுமந்து செல்ல என் உள்ளம் துடிக்கிறது. ஆனால் துரைரத்தினம் என்னைப் பிடித்த பிடியை விடமாட்டேன் என்கிறான்.

ஊர்வலம் வீதியை அடைகின்றது!
ஒரே சனத்ட்ரள்!
அரை மைல் தூரத்திற்குமேல் ஊர்வலம் நீள்கிறது!
நான் பிரமிக்கிறேன்.

என் ஐம்பதாண்டு வாழ்க்கையிலே, திருக்கோண மலை வட்டாரத்திலேயே, நான் கண்டிராத மிகப் பிரமாண்டமான பிரேத ஊர்வலம்!

அக்கூட்டத்தைக் கண்டு, நான் என் துயரங்களை எல்லாம் மறந்து பெருமைப் படுகின்றேன்.

தங்கம்! நீ என் இதயத்தில் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானவரின் இதயங்களிலே நீ ஒரு காவிய நாயகியாகவே இடம் பெற்றாயா?

எழுத்தாளனின் மனைவி என்பதற்காக நீ உள்ளூரப் பெருமைப்பட்டதை நான் அறிவேன். இப்போது ஒரு காவிய நாயகியின் கணவன் என்பதற்கல்லவா நான் பெருமைப்பட வேண்டியிருக்கிறது!

ஊர்ந்து சென்ற பிரேத ஊர்வலம் அந்தோனியர் பாடசாலையை அடைந்ததும், உன் சடலம் அப்பாட சாலையில் நீ கட்டியெழுப்பிய புதிய மண்டபத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றது. மூதூரில் புதிய சரித்திரத்தையே நீ எழுதுவிக்கிறாய்.

சனக் கும்பல் வரிசையாக வந்து உன்னைப் பார்த்துச் செல்கிறது. பெற்றார், பிள்ளைகள், மாணவர்கள், முக்காடிட்ட முஸ்லிம் பெண்கள்....

பார்த்துச் செல்கையிலேயே பலர் கதறியழுகிறார்கள். சாவகச்சேரியிலிருந்து அப்போதுதான் வந்து சேர்ந்த விக்ரர், தன் கைப்பையை எங்கேயோ வீசி எறிந்துவிட்டு விம்மியழுகிறான்.

ஆனால் நான் இப்போது அழவில்லை. அழவும் மாட்டேன். நீ கட்டியெழுப்பிய விஞ்ஞான கூடத்தின் தண்­ர்த் தாங்கியிற் சாய்ந்து கொண்டு பெருமையோடு நிற்கிறேன்!

"வானா ஆனா என்ற எழுத்தாளன் செத்துப் போனான் என்று சொன்னேன் அல்லவா? அவன் சாகவே மாட்டான். ஏனென்றால் ஒரு காவிய நாயகியாக இடம் பெற்ற வில்லியின் கதையை அவன் எழுத வேண்டும்" என்று என் அருகில் நின்ற எஸ்.பொவிடம் சொல்கிறேன்.

ஒரு பகல் முழுக்க மகா மசான அமைதியைக் கடைப்பிடித்த எஸ்.பொ. என் முதுகிற் தட்டிக் கொண்டே "ஆம். அதுதான் சரி. நீ மட்டு ம எழுத்தை மறந்தாயானால் அது உன்னை எழுத்தாளனாக வளர்த்து விட்டவனுக்கு நீ செய்யும் துரோகமாகவே முடியும்" என்கிறான் தன் மௌனத்தைக் கலைத்து.

"இல்லை. மறக்க மாட்டேன். ஒஸ்கார் வைல்டின் வானம்பாடி ரோஜா முட்களிற் தன் இதயத்தை அழுத்திக் கொண்டு சாவிலே பூர்த்தியாகும் காதலையும், சமாதியிலும் சாகாத காதலையும் பாடிற்றாமே. நானும் அவள் 'பிரிவு' கோரமான முட்களில் என் இதயத்தை அழுத்திக் கொண்டு அவள் கதையை எழுதியே தீருவேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கும் தமிழ் இலக்கியத்திலே புலவர்களுக்கும் எழுத்தாளர்கட்கும் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறதே தவிர அவர்களை உருவாக்கிவிட்ட அவர் மனைவியர்கட்குச் சரித்திரமே கிடையாது. தமிழ் இலக்கியத்துக்கே முற்றிலும் புதுமையான அக்கலைப் படைப்பை நான் படைத்தே தீருவேன்!"

என் சிருட்டி காலத்தாற் சாகாது. காலத்தின் ஏலத்தால் மலியாது!

வில்லி சிருட்டித்து விட்ட 'வானா ஆனா' என்ற எழுத்தாளனும் காலம் காலமாய்க் கற்பாந்த காலம் வரை வாழுவான்.

வீரகேசரி 1975

........


சுமை

வேலாயுதத்தை இரண்டு மூன்று நாட்களாக வகுப்பிற் காணவில்லை. ஐந்தாம் தரத்திற் படிக்கிறான் அவன். வகுப்பிலே படுசுட்டி. அசாதாரண விவேகி. ஆனால் அவனது பரிதாபகரமான குடும்ப நிலையும் எனக்குத் தெரியும். அவனுடைய தந்தையார் ஒரு சாதாரணத் தொழிலாளி. அன்றாடக் கூலி. திடீரெனச் செத்துப் போய் விட்டார். தந்தையற்ற குடும்பத்தின் மூத்த மகன்தான் வேலாயுதம். அவனுக்கு இரண்டு தம்பிமாரும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள்.

தந்தை இறந்த பின்னர் தாய் மிகச் சிரமப்பட்டுத்தான் குழந்தைகளை வளர்க்கிறாள். கூலிக்கு நெல் குறறி, பல வீடுகளில் மா இடித்துக்கொடுத்து, வெட்டுக் காலங்களிற் கதிர் பொறுக்கி, ஆற்றிலே கூனி இறால் வடித்து.... என்னென்னவெல்லாமோ செய்து தன்னையும் தன் நான்கு பிள்ளைகளையும் வளர்க்கிறாள் வேலாயுதத்தின் அம்மா.

"வேலாயுதம் வகுப்பிற் படுசுட்டியாக இருக்கிறான். இன்னும் சில காலம் கஸ்டப்பட்டு அவனைப் படிப்பித்தாயானால் அவன் படித்து உன்னையும் உன்மற்றப் பிள்ளைகளையும் காப்பாற்றுவான். பாலன் பஞ்சம் பத்து வருஷம் என்பார்களே" என்று நான் அந்தத் தாய்க்கு ஆறுதல் கூறினேன்.

வேலாயுதமும் தன் தந்தையை இழந்த சோகத்தை ஆற்றிக் கொண்டு பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பேனாபென்சில்-ஆகியவைகளை நான் வாங்கிக் கொடுக்கிறேன். அவன் படிப்பையும் கவனித்துக் கொள்கிறேன்.

அவன் வீட்டிலே பாடசாலை விட்டுப் பாடங்களைச் செய்ய வசதியில்லை. அதனால் மதியம் பாடசாலை முடிந்ததும் அவன் பாடசாலையிலேயே தங்கினான். பாடசாலை வளவுக்குட்தான் என் 'குவாட்டர்ஸ்' என் வீட்டிலே மதிய உணவை உண்டு, சற்றுநேரம் விளையாடி வீட்டுப் பாடங்கள் அத்தனையையும் செய்து முடித்துவிட்டு மாலையிற்தான் தன் வீட்டுக்குப் போவான். கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக இப்படித்தான் அவன் வாழ்கிறான். அவனுக்கு உதவி செய்து அவனைக் கரையேற்றி விடவேண்டும் என்பதில் என் அம்மாவுக்கும் மிக்க ஆசை.

ஆனாற் கடந்த மூன்று நாட்களாக அவன் பாடசாலைக்கு வரவில்லை! நான் அவன் வகுப்பு மாணவர்களிடம் கேட்டேன்: "வேலாயுதம் எங்கே?"

"இனி அவன் பள்ளிக்கு வரமாட்டான் ஐயா, படத்தியேட்டரிலதான் ஒவ்வொரு நாளும் நிக்கான்"

அந்தக் கிராமத்திலே, அப்போதுதான் முதற் தடவையாகப் 'படமாளிகை' ஒன்று வந்திருக்கிறது. 'டூரிங் கொட்டகை'. அந்தப் படங்குப் படமாளிகையில் ஒவ்வொரு நாளும் ஊரே திரண்டு படம் பார்த்தது. பட்டினத்திற்குச் சென்று படம் பார்ப்பதாயின் அந்தக் கிராமத்து மக்கள் பத்து மைல்கள் பஸ்ஸ’ற் பயணிக்க வேண்டும். ஊரிலிருந்து 'மெயின்ரோட்' வரை ஒரு மைல் தூரம் கல்லிலும் கலட்டியிலுமாக நடக்க வேண்டும். இரவுக் காட்சி பார்த்துவீட்டு ஊருக்கு வரச் சில வேளை பஸ் கிடைக்காது. கிடைத்தாலும் மெயின்றோட்டில் இறங்கி ஒற்றையடிப் பாதையில் கல்லிலும் கலட்டியிலுமாக இரவில் நடக்க வேண்டும்.

அத்தனை சிரமங்களையும் அந்த 'டூரிங் டாக்கீஸ்' போக்கியது. ஆனாற் கிராமம் முழுவதுமே திரண்டு இரவு வேளைகளில் 'அந்த டூரிங் டாக்கீஸ’ல்' படம் பார்த்துக் களித்தது. அந்தக் கூட்டத்திலே வேலாயுதமும் சேர்ந்து கொண்டானா?

'இருக்காது. அன்றாடச் சோற்றுக்கே அல்லாடும் அவனிடம் படம் பார்க்கப் பணம ஏது?' என்று எனக்குள் நானே சமாதானஞ் செய்து கொண்டாலும், 'வேலாயுதம் ஏன் பாடசாலைக்கு வராமலிருக்கிறான்?' என்ற வினா என் இதயத்திற் கொக்கியாய் வளைந்து கொழுவி இழுத்துத் துன்பந் தந்து கொண்டிருந்தது. பாடசாலை விட்டதும் அவனைப் போய் விசாரிப்பது என்று என்னுடைய தீர்மானித்துக் கொண்டேன்.

அன்று பாடசாலை மூடியாகி விட்டது. இருநூறு மாணவர்களுள்ள அந்த ஆரம்பப் பாடசாலையில் இன்னும் இரண்டே இரண்டு ஆசிரியர்களோடு மாரடிப்பதில், மதியமானதும் நான் களைத்துப் போவேன். ஆகவே பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விடுவேன். ஆசிரியர் விடுதிக்கு முன்னால் நிற்கும் வேப்பமரம் குளிர் நிழலையும் சீதளக் காற்றையும் தாராளமாகத் தந்து கொண்டிருந்தது. அந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டே நித்திரையாகிவிடுவேன். இந்தப் பாடசாலைக்கு வந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகல் நித்திரை எனக்குப் பழக்கமாகி விட்டது. 'பகலிலே படுத்தா மூதேவி பிடிக்கும்' என்று அம்மா அலட்டிக் கொள்வா. ஆனாற் பகல் நித்திரையில்லாவிட்டாற்தான் எனக்கு மூதேவி பிடித்தமாதிரி இருக்கும்.

அன்றும் பகல் நித்திரையின் பின்னர் எழுந்தபோது சாயந்தரம் நான்கு மணி ஆகிவிட்டது. ஆனாலும் வெளியே வெய்யில் சுட்டுப் பொசுக்கியது. கிராமத்தில் ஒங்கி வளர்ந்து நின்ற தென்னை மரங்கள்கூட தம் ஓலைகளை விகசித்து விரிக்காமற் கூம்பி நிற்பதாகப்பட்டது. தூரத்தே இன்னமு ம கானல் நீர் நெளியும் தோற்றம்!

நான் கிணற்றடிக்குச் சென்று நான்கைந்து வாளித் தண்­ரைத் தோளில் ஊற்றி, உடலைக் கழுவிக் கொண்டேன். அம்மா தந்த தேநீரைக் குடித்துவிட்டு உடையணிந்து கொண்டு வெளிக் கிளம்பினேன். நான் டூரிங் படக் கொட்டகையை அடைந்தபோது ஆறு மணியாகி விட்டது!

முதலாங் காட்சி தொடங்குவதற்கு ஆயத்தமாகப் 'படமாளிகை'யிலிருந்து பாட்டுக்கள் ஒலிபரப்பியில் முழங்கிக் கொண்டிருந்தன. அப்பாடல்களைக் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் வெளியே நின்று கொண்டிருந்தது. அயற்கிராமங்களிலிருந்து படம் பார்ப்பதற்காக மாட்டு வண்டிகளிற் பலர் வந்து கொண்டிருந்தனர். கொட்டகையின் எதிரே இருந்த தென்னந்தோட்டத்தில் மாடுகள் அவிழ்த்துக் கட்டப்பட்டு வண்டிகளின் பக்கத்தே வைக்கோலை அசை போட்டுக் கொண்டு நின்றன. கொட்டகையின் முன் வாசலில் கடலை, கச்சான், வடை, முறுக்கு, தேன்குழல் என்று எதையெதையெல்லாமோ விற்பவர்களின் தூக்குத் தட்டிகள். அத்தட்டிகளின் ஓரத்தே நீண்ட கம்பத்திற் கட்டப்பட்டிருந்த மண்ணெண்ணெய் விளக்குகள். பெற்றோமக்ஸ் விளக்கொளியோடு கூடிய இரண்டு தேநீர் கடை என்ற 'ஹொட்டல்கள்' மூன்றாம் கடையில் கண்ணைப் பற்றிக்கும் மின்சார வெளிச்சம்-அது கொட்டகை நிர்வாகத்தின் செல்லக் குழந்தை.' மொத்தமாக அவ்விடம் திருவிழாக் கோலம் கொண்டிருந்தது.

ஊரிலே அம்மன் கோயில் வருடா வருடம், வைகாசி மாதத்தில் ஒரு திருவிழா நடக்கும்.

ஆனாற்படக் கொட்டகையின் முன்னால் நித்தியத் திருவிழா!

பாடசாலையிற் கல்வி பயிலும் என் மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும், நள்ளிரவிலே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல இருப்பவர்களும், உள்ளூர்க் குமரிகளும், அயற்கிராமத்தவர்கள் பலரும்...

திருவிழாதான்!

அத்திருவிழாக் கூட்டத்தில் என் கண்கள் வேலாயுதத்தைத் தேடின. அவன் சக மாணவர்கள் பொய் சொன்னார்களோ!

இல்லை அவர்கள் உண்மையைத்தான் சொன்னார்கள் என்பதை நிரூபிப்பதைப் போல அதே வேலாயுதம். அவன் தோளிலே ஒரு பெரிய பேசின்!

என்னைக் கண்டதும் அவன் தயங்கினான். ஓடி விடுவானோ எனப் பயந்த நான், சற்று விரைவாகச் சென்று அவனை நெருங்கினேன்.

அவன் தோளிலே வைத்திருந்த தகர பேசினுக்குள் உடைத்து வறுத்த கச்சான் பருப்புக் குவியல். குவியலின் ஓரத்தே சுற்றி வைக்கப்பட்ட கச்சான பருப்புக் கடதாசிச் சுருள்கள் கச்சான் பருப்புக் கும்பத்திற் காலூன்றி, பேசினின் உட்சரிவிற் தலைசாய்த்து, அணிவகுத்து நின்றன. பேசினின் கால்வாசிப் பாகம் தடித்த காட்போட் அட்டையினாற் தடுக்கப்பட்டு அப்பகுதியில் வெற்றிலைக் 'கூறு'கள் இருந்தன. வகுப்பிலே முதல் மாணவனாக இருந்த வேலாயுதத்தை படக் கொட்டகைக்கு முன்னால் நான் வியாபாரியாகக் காண்கிறேன்!

அவனிடம் மிக்க ஆதுரத்துடன் கேட்கிறேன். "இனிப்பாடசாலைக்கு வரமாட்டியா வேலாயுதம்?"

"படிக்க விருப்பந்தான் ஐயா எனக்கு. ஆனாற் பாடசாலைக்கு வர ஏலா"

"ஏன் ஏலாது. இந்த வியாபாரத்தை மாலையிற்தானே செய்கிறாய்? காலையில் வரலாந்தானே."

"வர முடியாதையா. நான் என்ர அம்மாவையும் தம்பிமாரையும், தங்கச்சியையும் காப்பாற்ற வேணும்."

"அதுதான் பகலில பள்ளிக்கு வரலாம் என்றுதானே சொல்றன்."

"ஐயா, இந்தக் கச்சாங் கொட்டைச் சுருள் ஒன்று ரெண்டு ரூபா. வெத்திலைக் கூறு ஒன்று ஒரு ரூபா. ஒரு நாளைக்கு இருபது இருபத்தைஞ்சு கச்சான் சுருளும், இருபது இருபத்தைஞ்சு வெத்திலைக்கூறும்தான் விக்கலாம். எழுபத்தைஞ்சு ரூபாக்கு வித்தாப் பத்துப் பன்னிரெண்டு ரூபா லாபம் வரும். அது எங்க குடும்பத்துக்குக் காணாது. அதனால பகலில கரவல இழுக்கப் போறேன். அவங்க கறிக்கு மீன் தருவாங்க. அதில அரைவாசிய வித்தாப் பத்துப் பன்னிரெண்டு ரூபா வரும். அம்மா மட்டும் உழைச்சிப் போதுமா? என்ர உழைப்போடயும் தான் எங்க குடும்பம் வாழணும். நான் பள்ளிக்கு வந்தா நான் மட்டும் மத்தியானம் உங்களிட்டச் சாப்பிடுவன். ஆனா அம்மாவும் தம்பிமாரும் பட்டினி கிடக்க வேணும்."

வேலாயுதத்தின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். என்னால் அவனுக்குப் பதில் சொல்லவே முடியவில்லை. சிலையாய் நின்றேன்.

"நான் வாறன் ஐயா. மன்னிச்சுக் கொள்ளுங்க" என்று வேலாயுதம் தன் வியாபாரத்தை நாடிப் போய் விட்டான். நானும் நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டுப் பாடசாலையை நோக்கிப் புறப்பட்டேன்.

* * *

மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. கிராமத்து மக்களின் பணத்தை வாரிக்கொண்டு, அவர்களைச் சினிமாக் கனவு மாயையிற் தவிக்க விட்டு விட்டு, டூரிங் கொட்டகை ஊரைவிட்டுப் போய்விட்டது.

அன்று சனிக்கிழமை. பாடசாலை விடுமுறை. 'படக்கொட்டகைதான் போய்விட்டதே. வேலாயுதம் இப்போது என்ன செய்கிறானோ. பாவம்; இன்று அவனைப் போய்ப் பார்க்க வேண்டும்' என்று எண்ணிக் கொண்டிருந்தபோது வேலாயுதம் வந்தான். அவன் தோளிலே ஒரு சாக்கு மூட்டை!

அதிகாலையிலேயே சுமை தூக்கியதினாற் களைத்தவனாகக் காணப்பட்டான்! தோளிலிருந்த தன் சுமையை இறக்கிவிட்டு "இப்ப காய்கறி வியாபாரம் பண்றன் ஐயா. உங்களுக்குத் தேவையான காய்கறி எல்லாம் இனி என்னிட்டயே வாங்குங்க. இப்ப சாக்கில கத்தரிக்காய், பயித்தங்காய், வெண்டிக்காய், பச்ச கொச்சிக்காய் எல்லாம் இருக்கு" என்றான்.

நான் அம்மாவைக் கூப்பிட்டேன்.

அம்மா வந்து அவனிடமிருந்த எல்லாக் காய்கறிகளிலும் அரை அரை இறாத்தல் வாங்கிக்கொண்டு பேரம் பேசாமலேயே அவன் சொன்ன விலையைக் கொடுத்தாள்.

ஆறு மாதங்களாகத் தன்னாலேயே அவனுக்கு மதிய உணவு கொடுத்த வேலாயுதத்திடம் அவளுக்கும் ஒரு பாசம்!

அம்மா போன பிறக நான் வேலாயுதத்திடம் கேட்டேன். "எப்ப இந்த யாபாராத்தைத் தொடங்கினாய்?"

"கொட்டகை போகப் போகுது என்று தெரிஞ்ச உடனே பிறகு என்ன செய்றது என்று தீர்மானிச்சிற்றன். கொட்டகை பிரிக்கிற அன்று, பின்னேரமே கங்கைக் கரைத் தோட்டங்களுக்குப் போய்ய காய்கறி வாங்கினேன். வாங்கினதைச் சுமந்திட்டு வீட்ட வரக்குள்ள இருட்டுப் பட்டிற்று. அடுத்த நாட்காலையிலேயே காய்கறிச் சாக்கைத் தோளிலே சுமந்து ஊரெல்லாம் திரிந்து வீட்டுக்கு வீடு கொண்டுபோய் விக்கிறன். இப்பரெண்டு நாளா இந்தப் பிழைப்புத்தான்"

"அது சரி இதில எவ்வளவு லாபம் கிடைக்கும்."

"விக்கிறதைப் பொறுத்து ஐயா. ஒரு றாத்தலுக்கு ஒரு ரூபா எண்டான கெடைக்கும். ஐம்பது றாத்தல் வித்தா ஐம்பது ரூபா. ஆனா ஐம்பது றாத்தல் விக்கேலா. இருபத்தைஞ்சு முப்பது விக்கலாம்" அடுத்த வாரத்தில மூணு கலியாண வீடு இருக்கு. ஒரு வீட்டில முப்பது நாப்பது கிலோ வேணுமாம். நூறு, நூத்தைம்பதுவரும். ஆனா மூணு கட்டைத் தூரத்தில இருக்குற கங்கைத் தோட்டங்களிலிருந்து சுமந்துவாறதுதான் பொறுப்பு. என்ன செய்றது? சுமக்கத்தான் வேணும்"

சின்னஞ்சிறு வயதிலே தன் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய அவனது பொறுப்புணர்ச்சியைக் கண்டு என் கண்கள் பனித்தன. வேலாயுதம் தன் காய்கறி மூட்டையைச் சுமந்து கொண்டு 'மரக்கறி மரக்கறி' என்று கூவிக் கொண்டே தெருவிலிறங்கி நடந்தான்.

மேலும் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. கீறியடித்த சோழகக் காற்று அசமந்து ஓய்ந்து, மதியம் திரும்புகையில் கொண்டலாய், வாடைக்காற்றாய் அசைந்தது. இரண்டு நாட்களாக வேலாயுதத்தைக் காணவில்லை. அம்மாவும் அவனை விசாரித்தாள். அப்போதுதான் வேலாயுதம் வந்தான். அவன் தோளிலே மரவள்ளிக் கிழங்குச் சாக்கு!

"என்ன வேலாயுதம், காய்கறியாபாரத்தை விட்டிற்றியா?"

"ஓம் ஐயா. விட்டிற்றன். மழை பெஞ்சதால தோட்டத்துக்குப் போற வழியெல்லாம் ஒரே சேறும் சகதியும். மழைக்காலத்தில தோட்டக்காரன்களும் தோட்டத்தை விட்டிற்று ஊருக்கு வந்திடுவாங்க. இப்ப மழை விழுந்ததும் நட்டிருந்த மரவள்ளி எல்லாத்தையும் பிடுங்கிறாங்க. அதில நாப்பது கிலோ வாங்கி வந்தன். சுமக்கிறது கஷ்டம்."

"அப்படியா?" என்று கேட்டு மேலே பேசமுடியாமல் நான் திகைத்தபோது அம்மா ஒரு இறாத்தல் மரவள்ளிக் கிழங்கு வாங்கிக் கொண்டாள்.

"தோட்டம் முடிஞ்சு தோட்டக்காரன் எல்லாம் ஊருக்கு வந்தபிறகு என்ன செய்வாய்?"

"என்னத்த எண்டான செய்யத்‘னே வேணும். இல்லாட்டா அம்மாவையும் சகோதரங்களையும் காப்பாத்த முடியுமா? என்னட்ட ரெண்டு காலுங்கையும் இருக்கையா" என்ற வேலாயுதம் கிழங்குச் சாக்கைத் தூக்கிக் கொண்டு தெருவிலிறங்கி நடந்தான். பென்னம் பெரிய சுமையைச் சுமக்கும் அந்தச் சின்னஞ்சிறிய வீரன் தெருவிலே நடப்பதை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

* * *

மேலும் இரண்டு வாரங்கள் சாயந்தர வேளைகளில் மின்னலும் முழக்கமும் மழையுமாக ஓடிவிட்டன. ஒருநாள் வேலாயுதம் கையில் ஒரு பாலை மீனைத் தூக்கிக்கொண்டு வந்தான் இரண்டு இறாத்தல் இருக்கும். பெரிய மீன்.

அதனை என்னிடம் நீட்டி "இண்டைக்கு எங்கடபாடு பிழையில்லை ஐயா. என் பங்குக்கு மட்டும் இருநூறு ரூபா கெடைச்சுது. அந்தச் சந்தோஷத்தில உங்களுக்கு இந்த மீனைக் கொண்டு வந்தன். எடுத்துக் கொள்ளுங்க ஐயா."

"அப்ப, இப்ப மீனுக்குத்தான் போறியா?"

"ஓம் ஐயா. கடற்தொழில்கள். எல்லாந் தொழில் தானே. இந்தத் தொழிலில நல்லாக் காசு வருது"

"அப்படியா? எப்படியாவது நீ நல்லா இருக்கனும். ஆனா நீ படிக்கல்லியே என்று எனக்குத் துக்கந்தான்."

"எனக்குந்தான் ஐயா. ஆனாப் படிக்க விரும்புபவனும், படிக்கக் கூடியவனும் இந்த நாட்டில படிக்கேலா. காசுள்ளவன்தான் படிக்கலாம்."

"ஓமோம். அதெண்டா உண்மைதான்" என்ற போது அம்மா மீனுக்கு என்ன விலை" என்று கேட்டான்.

"காசு வேணாம் அம்மா இதுக்கு. உங்க கையால எத்தனை நாள் எனக்குச் சோறு போட்டிருப்பீங்க. அதுக்கெல்லாம் நான் நன்றி செய்ய வேணாமா? என்ற வேலாயுதம் "நான் வாறன் ஐயா" என்று விட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான்.

அதன் பின்னர் இடைக்கிடை அவன் தம்பி எனக்கு மீன் கொண்டு வந்து தந்தான். ஒருநாள் மீனை வெட்டிக் கொண்டிருக்கையில் அம்மா சொன்னாள். "இது வெடிப்போட்ட மீன் போல இருக்கு மகன்.'

எனக்குச் சுரீர் என்றது. 'வேலாயுதம் 'டைனமற்' போட்டு மீன் படிக்கிறனா? அது அபாயமான தொழிலாச்சே. இந்த ஊரிலே கால் கை இல்லாமல் இருப்பவர்களெல்லாம் 'டைனமற்' போட்டு மீன் பிடித்தவர்கள் தானாம். எத்தனையோ பேர் செத்தும் இருக்கிறார்களாம். அத்தோட வெடிப்போடக்குள்ள பிடிபட்டால் மறியலுக்கும் போக வேணும். அவனை இந்தத் தொழில் செய்யாமற் புத்தி சொல்லித் தடுக்கவேண்டும். சனிக்கிழமை வரட்டும்' எனத் தீர்மானித்துக் கொண்டேன்.

ஆனால் வெள்ளிக்கிழமையே கேள்விப்பட்டேன். 'வேலாயுதம் வெடிப் போடுகையிற் செத்துப் போனானாம்.'

நான் விழுந்தடித்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினேன். கடற்கரையிலே அடம்பன் கொடிகளின் மேல் வேலாயுதத்தின் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. வலக்கை முழங்கையோடு இல்லை. மார்பிலே தீக்காயம். அவனுடைய தாயும் சகோதரங்களும், ஊரவர்களும் அவன் சடலத்தை வளைத்து நின்று அழுது கொண்டிருந்தார்கள். 'கொறணர்' வந்து விசாரணை நடத்த வேண்டுமாம்!

வேலாயுதத்தைப் பிணமாகக் கண்ட நானும் கண்­ர் விட்டேன். ஆம்; கண்­ர்தான் விட்டேன். தன் தாயையும், சகோதரங்களையும் வாழவைக்கும் சுமையிற் தன் உயிரையே பலியாக்கிவிட்ட அந்தச் சிறிய வீரனுக்கு இந்த நாட்டிற் கோயிலா கட்டிக் கும்பிடப் போகிறோம்? நினைவுச் சிலையா வைக்கப் போகிறோம்?

ஆகவோ கண்­ர்தான் விட்டேன். கண்­ர்....

சுதந்திர 1957
............


பொய் முகங்கள்

சாயங்காலம் ஐந்தரை மணிக்கு மேலாகி விட்டது. அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த நான் என் நாடக ராஜ உடுப்புக்களைக் களைந்து சாரத்தை உடுத்திக் கொண்டு கிணற்றடிக்குச் செல்கிறேன். முகத்தையும் உடல் முழுவதையும் பெரும் போக்காகக் கழுவிக்கொண்டு விலாந்தையிற் சாய்கதிரையில் அமர்ந்தபோது இதமாக இருந்தது! நேற்று வாசிக சாலையில் இருந்து எடுத்து வந்த நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கிறேன்.

புத்தகம் படிப்பதில் நான் ஒரு கிறுக்கு. உலகத்து ஈனக் கவலைகளை எல்லாம் மறக்கப் புத்தகங்களே எனக்குத் துணை புரிந்தன. வாசிப்பு எனக்கு ஒரு 'எஸ் கேப்பிசம்'.

நாவலாசிரியர் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது ஆற்றொழுக்கான தமிழ் நடையும், விவகாரங்களை ஊடுருவி வெளிப்படுத்தும் திறமையும் எனக்கு மிகமிகப் பிடித்திருந்தன. நான் என் வாசிப்பில் ஆழ்ந்துவிட்டேன்.

மனைவி தேநீருடன் வருகிறாள். என் கையில் தேநீர்க் குவளையை கொடுத்துவிட்டு "இஞ்ச பாருங்க. நாளைக்குக் காலையில கோப்பிக்குத் தூள் இல்ல" என்றாள்.

"அதுக்கென்ன வாடிக்கைக் கடையில கோப்பிக் கொட்டை வாங்கி இடிக்கிறதுதானே" என்று சொல்லி விட்டு என் வாசிப்பைத் தொடர்கிறேன்.

"அவன்ர கடையில கோப்பிக் கொட்ட இப்ப இல்லியாம். வேறு கடையில தூள்தான் வாங்க வேணும்."

"சம்பளத்திற்கு இன்னமும் மூணு நாள் இருக்கு. என்ர கைல செப்புக் காசுகூட இல்ல."

"இஞ்சப் பாருங்க. ஒவ்வொருநாளும் நீங்க வாங்கிற தமிழ் இங்கிலீஸ் பேப்பர் எல்லாம் அம்பாரமாய்க் குவுஞ்சிருக்கு. பதினஞ்சு கிலோக்கு மேல தேறும். அந்தக் குப்பையை எல்லாம் விற்பமே"

"ஓஹோ... அதற்குத்தான் இந்தப் பீடிகையா? அந்தப் பேப்பர்களில இருக்க சில கட்டுரைகள் வெட்டிப் பைல் பண்ண வேணும் எண்டிருக்கன் நேரமில்ல. நீயென்னவோ அந்தப் பேப்பர் எல்லாம் உன்ர தலைக்குள்ள இருக்க மாதிரி அலுத்துக் கொள்றியே"

"அந்தப் பேப்பர் எல்லாம் அறை முழுவதையும் அடைச்சிக் கொண்டு கிடக்கு. அறையக் கூட்டக் கூட முடியல்ல. அவைகளைக் கடையில வித்திற்றாக் காசாவும் போயிரும். அறையும் துப்பரவாகும். அதைச் செய்யுங்க முதலில்"

"தலையில வைச்சித் தூக்கிக் கொண்டு என்னைக் கடைக்குக் கொண்டு போகச் சொல்றியா?"

"நீங்க ஏன் சுமக்க வேணும். இங்கின இருக்கிற நாடான் கடையில போய்ச் சொன்னா, அவன் பொடியன அனுப்பிப் பேப்பர வாங்கிக் கொள்றான்" என்று சற்றுச் சூடாகவே சொல்லிவிட்டு அவன் போய் விட்டாள்.

நான் உள்ளூர் அரசாங்க அலுவலகமொன்றிற் தலைமை எழுத்தர். இருபது வருட சேவையின் பின்னர் கூட என் சம்பளம் நான்கு பிள்ளைகள் கொண்ட என் குடும்பச் செலவுக்கு அர்த்தா பத்தியாகத்தான் இன்னமும் இருக்கிறது. வாடிக்கைக் கடையிலே அரிசி பருப்பு என்று வாங்கி விடலாம். ஆனால் மீன், மற்றும் கறி வகைகளை நாளந்தம் கைக்காசு கொடுத்தே வாங்க வேண்டும். மாதக் கடைசி நாட்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டில் முன் கறியே இராது! நாளைக் காலையிற் கோப்பியே இல்லையே என்ற எண்ணத்தைத் தாங்கவேமுடியவில்லை. புத்தகம் வாசிப்பதற்கு அடுத்ததாக உள்ள என் ரசிகத்தனம் கோப்பியிற்தான்!

ஆகவே என் மனைவி கேட்டுக் கொண்டபடி நான் நாடான் கடைக்குப் புறப்பட்டேன்!

நான் தலைமை எழுத்தர்! சாரத்தோடும் துண்டோடும் கடைக்குப் போக முடியுமா?

மீண்டும் அறைக்குட் சென்று காற்சட்டையை மாட்டிச் சேட்டையும் அணிந்து கொண்டு புறப்பட்டேன். என் கையிலே நான் படித்துக் கொண்டிருந்த நாவல்.

இப்போதெல்லாம் எனக்குப் பல விடயங்களில் ஞாபக மறதி! ஆனாலும் கையிற் கொண்டு போகும் நூலை எந்தக் காலத்திலும் மறந்ததில்லை. புத்தகம் வாசித்துவிட்டு, விட்ட இடத்தைத் தொடர்ந்து படிப்பதற்காக அடையாளமோ அல்லது இதழை மடித்தோ வைப்பதும் இல்லை. வாசித்து விட்ட இடம் ஞாபகமாகவே இருக்கும். நான் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்தேன்.

வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரம்தான் நாடான் கடை. ஆனாற் சித்தம் போக்கு சிவம் போக்காக நடந்தேன். நினைவில் நாவலைப் பற்றிய சிந்தனையே ஓடியது.

நாவலின் கதாநாயகி படித்தவள், உத்தியோகப் பார்ப்பவள். இங்குள்ள தரத்தில் கல்விப் பணிப்பாளர் உத்தியோகம் பார்க்கிறாள் தமிழ் நாட்டில், அக்கதா நாயகி, கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைக் காதலிக்கிறாள்.

ஒருநாள் தன் காதலனோடு காட்டுப் புறமுள்ள கோயில் ஒன்றிற்குச் செல்கிறாள். சம்பாஷணையின் போது அவள் பேச்சிற் கோபங்கொண்ட காதலன், காட்டுமரக் கொப்பை முறித்து, அது நார் நாராகக் கிழிந்து போம்வரை அவளை அடிக்கிறான்.

அச்சம்பவம் நடந்த பின்னரும் இருவருக்கும் திருமணமாகிறது. கதாநாயகி தன் முழுச் சம்பளத்தையும் கணவன் கையிற் தருகிறாள். கணவன் அவளுக்குப் 'படியளக்கிறான்.'

ஒரு நாள் இரவு இருவருக்குமிடையே பிணக்கு. கோபங் கொண்ட கணவன் அவளை அடி அடியென்று அடித்து முழு நிர்வாணமாக்கி வீட்டுக்கு வெளியே தெருவிற் தள்ளிவிட்டுக் கதவைப் பூட்டிக் கொள்கிறான். வெளியே நிர்வாணமாக நின்ற கதாநாயகி அடுத்த வீட்டுக்காரி கொடுத்த நூற் புடவையைக் கட்டிக் கொண்டு பிறந்த வீடு செல்கிறாள்.

பெண்ணடிமைத் தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான பிரச்சார நாவலாக இருந்தாலும், அதற்காகக் கதாசிரியர் இத்தகைய குரூரமான கற்பனைகளைப் பண்ண வேண்டுமா? கணவன், மனைவியை நிர்வானமாக்கித் தெருவிலே துரத்தி விடுவதென்பது நடக்கக் கூடியதுதானா; அதிலும் விரிவுரையாளராக உயர்ந்த அந்தஸ்திலுள்ளவன்?

என் மனம் சென்ற வாரம் படித்த சிறுகதை தொகுதி ஒன்றிற் படர்கிறது. அச்சிறுகதைத் தொகுதியின் ஆசிரியரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். மலையாளங் கலந்த தமிழில் அவர் கதை சொல்லும் பாணியே அலாதியானதுதான். ஆனால் இரண்டு கதைகள் என்மனத்தை உறுத்தின.

இரண்டு கதைகளிலும் முஸ்லிம் ஏழைப் பிணங்கள் அடக்கஞ் செய்வாரின்றி நாற்றம் எடுக்கின்றன! இது நடக்கக் கூடியதுதானா?

என் மனம் அலை பாய்கிறது. நான் முஸ்லிம் கிராமத்திற் பிறந்தவள். முஸ்லிம்களோடு வாழ்பவன். எந்த முஸ்லிமின் ஜனசாவும், அவன் எத்தனைதான் ஏழையாக இருந்தாலும் மரித்து ஒரிரு மணித்தியாலங்களுள் அடக்கஞ் செய்யப்பட்டு விடும். ஆறேழு மணித் தியாலங்கள்கூட ஜனாசாக்களை வைப்பதில்லை! ஆனால் ஏழை முஸ்லிமின் பிரேதம், அடக்கஞ்செய்ய எவருமே இல்லாமல் நாற்றம் எடுப்பதாக எழுதியிருப்பது எத்தனை அயோக்கியத்தனமான கற்பனை!

நான் என் நினைவுகளோடு நடந்துகொண்டே இருந்தேன்.

யாரோ மிஸ். மேயோ என்ற ஆங்கில ஆசிரியை 'இந்தியா சாக்கடைப் புழுக்கள் நெளியும் அருவருப்பான தேசம்'என்று எழுதியதற்காக எத்தனையோ இந்திய எழுத்தாளர்கள் கொதித்தெழுந்த கடந்த காலச் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

இப்போதும் கூட என்ன வித்தியாசம் வந்துவிட்டது? மனைவியை நிர்வாணமாக்கித் தெருவிற் தள்ளிவிடும் தமிழ் விரிவுரைளர்களும், செத்த பிணத்தை அடக்கஞ் செய்யாது நாற்றமெடுக்க விடும் முஸ்லிம்களும் வாழும் நாடுதானா தமிழ்நாடு?

அல்லது இத்தகைய சம்பவங்களை எல்லாம் கதாசிரியர்களின் மிகைப்படுத்தப்பட்டகற்பனையா? எது சரி என்று எனக்கு வெளிச்சமாக இல்லை.

நேற்று தொலைக்காட்சியற் பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சண்டைப் படம்!

வேண்டா வெறுப்புடன்தான் அதைப் பார்த்தேன்.

கதாநாயகன் சண்டையிடத் தொடங்கியபோது என்னுள்ளே விசித்திரமான ஒரு ஆசை பிறந்தது. தன் காலால் உதைத்தும், கைமுஷ்டியாற் குத்தியும் எத்தனை பேரைக் கதாநாயகன் வீழ்த்துகிறான் என்பதைக் கணக்கிடத் தொடங்கினேன்.

ஒருவர் பின் ஒருவராகக் கதாநாயகன் சரியாக முப்பத்து மூன்று பேரை வீழ்த்துகிறான்!

அவனது வீரத்தைக் கண்டு ஐந்தாம் ஆண்டிற் படிக்கும் என் மகன் கைதட்டி ரசித்தான்.

அவன் சின்னவன்! பரவாயில்லை.

ஆனால் இருபது வயது இளைஞர்களும் அந்தக் கேலிக் கூத்தை ரசித்து மகிழ்கிறார்களே. அதை என்ன என்பது? இதனாற் தான் இப்போது நான் படம் பார்ப்பதேயில்லை. வானொலியிற் சில சினிமாப் பாடல்களை ரசிப்பதோடு சரி.

சமீபத்தில் 'செங்குருவி செங்குருவி, காரமடைக் செங்குருவி சேலைகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி' என்ற சினிமாப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பாடலின் இசையும் பொருளும் என்னைக் கிறங்க வைத்தன. என் வாய் அப்பாடலை முணுமுணுத்தது.

ஒருநாள் என் மூத்த மகன் சொன்னான்.

"அப்பா, இன்டைக்கு டெக்கிலே போட ஒரு படம் எடுக்க வந்திருக்கன்."

"நான்தான் படம் பார்ப்பதில்லையே!"

"இல்லப்பா, நீங்க புழுகிற 'செங்குருவி' என்ற பாடல் இந்தப் படத்திலதான் இருக்கு"

"அப்படியா? பார்த்தாற் போச்சு" என்றேன்.

படத்தைப் பார்த்தால் எனது அபிமானப் பாடலுக்கு ஒரு கூட்டம் ஆண்களும், பெண்களும் நடனமாடுகிறோம் என்ற நினைப்பிற் தேகப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

என் நினைவுகளோடு நடந்ததில், நான் கடையையும் தாண்டி வெகுதூரம் போய் விட்டேன்.

எதிர்த்த நகைக் கடைக்குள்ளே அவள் நின்ற கொண்டிருந்தாள்!

நான் உற்றுப் பார்க்கிறேன். சந்தேகமில்லை, அவளே தான்!

இருபத்திரண்டு ஆண்டுகளின் முன்னே வண்ணக் கனவுகள் காணும் 'ரீன்' ஏஜ்'ஜில், எதிர் வீடடில் அவளை ஒருநாள் கண்டேன். அதன் பின்னர் மாலையில் நான் கடற்கரைக்குப் போவதை நிறுத்திக் கொண்டேன். முன் விறாந்தையிற் கையிற் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருப்பேன் அல்லது அவளுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். நாளடைவில் வாசிகசாலையில் அவளுக்காகவும் புத்தகங்கள் எடுத்து வருவேன். என் பகற்கனவு மனக்கொடிகள் அவளைச் சுற்றிப் படர்ந்தன.

இரண்டு வருடங்களின் பின்னர், அவள் தந்தையாருக்கு உத்தியோகம் மாற்றலாகியது. அத்தோடு அவளும் போய் விட்டாள் அவள் நினைவுகளும் படிப்படியாக என்னை விட்டுப் போய்விட்டன. இப்போது மீண்டும் அவளைக் காண்கிறேன். தன் நைலெக்ஸ் சாறிக்குள் இப்போதும் அழகாகவே இருக்கிறாள்!

அவள் கடையை விட்டு இறங்கி வந்ததும் நான் அவளை நெருங்கிக் கேட்கிறேன்.

"என்னைத் தெரிகிறதா?"

"தெரியாமல் என்ன?" என்று அவள் கேட்கையில் அழகு கொழிக்கிறது, அப்பேரிளம் பெண்ணிடம்.

"சுகமாயிருக்கிறீர்களா? சௌகரியமாக வாழ்கிறீர்களா?"

"ஓ! நல்ல சுகமாகவும் செழிப்பாகவும் இருக்கிறேன். மூத்த மகளும் அடுத்த பையனும் கனடாவில். அவருக்கும் நல்ல பிஸ்நெஸ். காரை அவர் கொண்டு போய்விட்டார். அதனாற்தான் நடந்து வந்தேன். நீங்கள் சுகமா? வாழ்க்கை எப்படி?"

"ஓ நானா? எனக்கும் ஒரு குறையும் இல்லை. மூத்த மகன் அவுஸ்திரேலியாவில் இருக்கிறான். இரண்டாமவனும் போக இருக்கிறான்."

"அப்படியா! சந்தோஷம். நான் இன்னோர் கடைக்குப் போக வேண்டியிருக்கிறது மன்னியுங்கள். பிறகு சந்திப்போம்" அவள் அவசரப்பட்டாள்.

"இங்கே எங்கேயிருக்கிறீர்கள்? நான் கேட்கிறேன்.

"நீங்கள் பழைய இடத்திலேதானே இருக்கிறீர்கள்?" என்று மட்டும் கேட்டுவிட்டு அவள் அவசர அவசரமாக நடந்து சனக் கூட்டத்துள் மறைந்தாள்.

நான் திகைத்து நின்றேன்.

என் காரியாலயச் சகா, என்னைக் கண்டு, "ஓ... அந்தநாள் ஞாபகமா? பாவம், இப்போது அவள் கணவன் 'இன்ரெடிக்ற்' பண்ணப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறாள். தன் நகைகளை ஒவ்வொன்றாக விற்றுத்தான் வாழ்கையை ஒட்டுகிறாள் ஒரு சிறிய வாடகை வீட்டிலிருக்கிறார்."

நான் அதிர்ந்தேன். என் மகன் அவுஸ்திரேலியாவிலிருப்பது போலத்தான் அவள் மகனும் கனடாவிலிருக்கிறான்! எனக்குச் சிரிப்பு வந்தது!

ஒரு 'கோல்ட்' பிளேக்' பற்ற வைத்தால் இதமாக இருக்கும் போலத் தோன்றியது. சட்டைப்பையைத் துழாவுகிறேன். காசிருந்த தடம் கூட இல்லை.

நான் வீட்டை நோக்கித் திரும்பி நடக்கிறேன். வழியிலே நாடான் கடைக்குச் சென்றேன். அவனிடம் பழைய பேப்பர் விவகாரத்தைச் சொன்னபோது,

"சரி ஐயா, பையனை வீட்டுக்கு அனுப்பி எடுக்கிறன். இறாத்தல் பன்னண்டு ரூபா போடுவான். எத்தன இறாத்தல் இருக்கும் சார்"

"பதினைஞ்சு இறாத்தல் இருக்கும்" என்று விட்டு நடக்கையில், பழைய பேப்பர் விற்று வரும் நூற்றிச் சொச்ச ரூபாவில் நாளைக்குக் கோப்பியுண்டு மீன்கறியும் இருக்கும் என எண்ணிக் கொள்கிறேன்.

கணையாழி 1996
...................

சரிவு

சித்திரை விடுதலையில் நான் மலைநாடு சென்றேன். உல்லாசப் பயணி.

நான் அழகாகத்தான் இருப்பேன் என்று அடம் பிடித்து நிற்கும் மலை நாட்டின் குமரியழகை என்வாலிப வயதில் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். மடிப்பு மடிப்பாய், அலை அலையாய் நெளிந்து செல்லும் மலைத் தொடர்களையும் வேலிக்கு மேலாய் எறியப்பட்ட சாம்பற் புகராத மலையுச்சியிறி படியும் மேகங்களையும், பசுமை படர்ந்து தோன்றும் பள்ளத்தாக்குகளையும், மலையுச்சியிலிருந்து உருக்கிய வெள்ளியாய் ஓடிவரும் மலையருவிகளையும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் மீண்டும் காணப் போகிறேன் என்ற குதூகலத்தோடு பதுளை பஸ்ஸ’ற் பிரயாணஞ் செய்தேன்.

பசறையை அடைந்து மீண்டும் வேறோர் பஸ்பிடித்து மெட்டிகாஹாதென்னைக்குச் சென்றபோது சாயந்தரம் ஐந்து மணியாகிவிட்டது.

அங்கு அரசாங்கம் மருத்துவமனையிற் பணிபுரியும் என் தம்பி என்னை மூன்று மனிக்கே எதிர்பார்த்திருந்தான்.

லுணுகலையில் மத்தியானச் சாப்பாட்டிற்காக முக்கால் மணிக்குமேல் பஸ் தாமதித்து விட்டது. பசறையலிருந்து அடுத்த பஸ் பிடித்து இங்கே வர நேரமாகிவிட்டது' என்று நான் விளக்கங் கொடுத்தேன்.

எனக்குப் பிரயாண அலுப்பே தோன்றவில்லை. கடல் மட்டத்திலிருந்து நாலாயிரம் அடி உயரத்திலிருந்த அவ்வூரின் இதமான குளுமையிலும், தூரத்தே உயர்ந்து தோன்றும் நமுனகல மலைத்தொடரின் அழகிலும், வைத்திய சாலைக் குவார்ட்ர்ஸ”க்கு முன்னால் தன் படுவனாகப் பூத்துக்கிடக்கும் மலர்களின் கொள்ளை வனப்பிலும் நான் பூத்துக்கிடக்கும் மலர்களின் கொள்ளை வனப்பிலும் நான் என்னை யிழந்திருந்தேன்.

அப்போது தோளிலே கவ்வாத்து வெட்டிக் காய்த்து போள தேயிலை மிலாறுகளைச் சுமந்துகொண்டு ஒருவன் வந்தான். அவனுக்கு நாற்பது வயது இருக்கலாம். சற்றுக் குள்ளமான உருவம். வெற்றிலைக் காவியேறிய பல் வரிசை.

என் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த அவன் தேயிலைச் சுள்ளிகளைக் கீழே போட்டுவிட்டு "பெரிய அய்யா வந்திற்றீங்களா? லுணுகலயிலிருந்து வர இம்மாம்புட்டு நேரமா? இந்த றோட்டால ஓசக்கப் போய்ப் பணிய எறங்கினா லுணுகல வந்திரிச்சு. தண்ணிய அடுப்பில வெச்சிற்று சூடாக மின்ன அங்க போய் இனிப்பு வாங்கிற்று வந்திரேலும். கிட்டத்தான் இருக்கு" என்றான்.

என் தம்பியின் குழந்தைகள் இருவரும் அவன் முழங்காலைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு 'பாப்பா பாப்பா' என்று ஆனந்தக் கூத்தாடினார்கள். அவன் ஆள் மாறி ஆளாக அவர்களைத் தூக்கிக் கொண்டான்.

என் தம்பி அவனை எனக்கு அறிமுகப்படுத்தினான். "இங்கேயுள்ள எஸ்ரேற்றில் கூலி. தனிக்கட்டை. ஒரு நாள் குவார்ட்டர்ஸ”க்குப் பக்கத்தில புல்லு வெட்ட வந்தான். என் பிள்ளைகளைக் கண்டு பாப்பா, பாப்பா என்றுகொஞ்சி அவர்களோட நல்லாச் சேந்திட்டான், இப்ப லயத்தில இருக்கிற அவன்ர அக்கா வீட்டுக்கும் போறல்ல. என்னோடதான் இருக்கான். எப்பாவாவது வேலைக்குப் போவான். மத்த நேரத்தில வீட்டில எடுபிடி வேல செய்வான். இவனால எனக்குப் பெரிய உதவி. நான் ஊருக்கு வரக்குள்ள இவனையும் கூட்டிக்கொண்டு வருவன்."

"உன் பேரென்ன?" என்று அவனைக் கேட்டேன்.

"கதிர்வேலுங்க. ஆனா ஐயாவும் அம்மாவும் பாப்பான்னுதான் கூப்பிடுறாக."

"பாப்பா" நல்ல பெயர்தானே. பாரதியாருக்குக் கண்ணன் சேவகனாகக் கிடைத்ததுபோலப் பாப்பா, தம்பிக்குச் சேவகனாகக் கிடைத்திருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே "லுணுகலைக்கு இங்கிருந்து மு பபது மைல்களுக்கு மேலிருக்கும். நீ கிட்டத்தான் இருக்கு என்கிறாய். நாளைக்கு என்னை அங்க கூட்டிக்கொண்டு போறியா" என்று கேட்டேன்.

"சரிங்கய்யா. வெள்ளாப்பில போலம்" என்றான் பாப்பா.

* * *

விடிந்தது, எனக்கு வெளியிலே சென்று குற்றாலத்துத் தேனருவியாகச் சொட்டும் சாரலிற் குளிக்க ஆசை. ஆனாற் தம்பியின் அந்தஸ்து என்னை அதற்கு அனுமதிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகக் குளியலறையைப் பூட்டிக்கொண்டு குளித்தேன். சாப்பாடானதும் பாப்பாவுடன் லுணுகலைக்குப் புறப்பட்டேன்.

மலையுச்சியிலிருந்து கீழே செல்லும் படிகளிலிறங்கி மெயின் வீதியை அடைத்து, வைத்தியசாலைக்கு முன்னாலிருந்த பெட்டிக் கடையில் பாப்பாவுக்கு வெற்றிலை பாக்கு, புகையிலை ஆகியவைகளைத் தாராளமாகவே வாங்கித் தந்தேன். எனக்கு ஒரு பக்கற் சிகரெட்டும் வாங்கினேன். மெயின் வீதி வழியே றோபெரி எஸ்ரேற் பக்கமாகப் பாப்பா என்னை வழிநடத்திச் சென்றான்.

பாதை வளைந்து வளைந்து உயர்ந்து சென்றது. பாதையின் இருமருங்கிலும் மலையகத்துப் பெண்கள் தலையிலிருந்து முதுகுப் பக்கமாகக் கூடையைத் தொங்கவிட்டுக் கொண்டு நிரை நிரையாக நின்று கொழுந்து கிள்ளிக்கொண்டு இருந்தார்கள். இரண்டு இலைகளும் ஒருமுகையுமாகக் கைநிறைந்த கொழுந்துகளைக் கணத்துக்கக் கணம் கூடையிற் போட்டுக்கொண்டே சம்பாஷ’த்தபடி கொழுந்து பறித்துக்கொண்டு இருக்கும் அக்காட்சியில் லயித்தேன். இடைக்கிடை நான் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதாகக் கறுப்புக் கோட்டுடனும் கட்கத்திற் குடையுடனும் நின்ற கங்காணி ஏதோ அதட்டிச் சொல்லிப் பெண்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான். இன்னோர் திக்கிற் சிள் வண்டின் இரைச்சலாய்த் தொனி செய்யும் தெளிப்பான் கருவிகளில் இருந்து தொழிலாளர்கள் தேயிலைச் செடிக்கு மருந்து தெளித்துக் கொண்டு இருந்தார்கள். மலையுச்சியிலே நான்கு மாடிகளைக் கொண்ட தேயிலைத் தொழிற்சாலையின் உறுமல்!

மஞ்சு படிந்த அம்மலை மேட்டிலே சுமார் ஒரு மைல் தூரம் நடந்திருப்போம். பாப்பா அந்த வளைவிலே தரித்து நின்றான்.

அவன் நின்ற இடத்திலே ஒரு பரந்த கல். அக்கல்லிலே மலையகப் பூக்கள் சிவப்பும், வெள்ளையும், ஊதாவுமாகக் குவிந்து இருந்தன. கல்லின் பின்புறத்திற் சூலம் ஒன்றிருந்தது.

அது வைரவர் கோவிலா, சிவன் கோவிலா என்று எனக்குப் பிடிபடவில்லை. பாப்பா தன் மடியிலிருந்த பூக்களை எடுத்துச் சிலவற்றை என்னிடம் தந்துவிட்டு மீதியைக் கல்லிலே வைத்து கும்பிட்டுத் தலையிற் குட்டிக் கொண்டான். நானும் என் கையிலிருந்த பூக்களைக் கல்லில் வைத்துக் கும்பிட்டேன்.

கும்பிட்டு முடிந்ததும் பாப்பா வெற்றிலை போட்டுக் கொண்டான். நான் சிகரட் பற்றவைத்துக் கொண்டேன். நிமிர்ந்து பார்த்தபோது கல்லுக்குச் சில யார்கள் தூரத்தில் அம்புக்குறியோடு 'றோபரி எஸ்ரேற்' என்று ஆங்கில அறிவிப்புப் பலகையைக் கண்டேன்.

**இ.தொ.kaviyam10.mtf**




** kaviyam9.mtf ன் தொடர்ச்சி**

வெற்றிலை போட்டு முடிந்த பாப்பா "வேட்டியை மடிச்சுக் கட்டுங்க ஐயா" என்று கேட்டுக் கொண்டான்.

நான் வேட்டியை முழங்கால்களுக்குமேல் மடித்துக்கட்டிக் கொண்டேன்.

பாப்பா தன் மடியிலிருந்த சவர்க்காரத்தை எடுத்து றோட்டோரத்துப் புல்லிற் படர்ந்திருந்த பனிநீரிற் தொட்டு என் பாதங்களிலிருந்து முழங்கால்வரையும் பூசத் தொடங்கினான். "போற வழியில அட்டங்க இருக்கும். இதப் பூசினாக் கடிக்காதுங்க ஐயா" என்று தன் செய்கைக்கு விளக்கங் கொடுத்துத் தன் பாதங்களிலும் கால்களிலும் சவர்க்காரத்தைப் பூசிக்கொண்டான் பாப்பா.

புல்லட்டைகளுக்குப் பாதுகாப்புத் தேடி முடிந்ததும் பாப்பா தெற்காக மலைச் சரிவிலிறங்கி நடக்கத் தொடங்கினான். அவனை ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தேன்.

மலையுச்சியில் இருந்து கீழிறங்கிச் சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில், ஆளுயரப் பத்தனைப் புற்கள் நெருங்கியிருந்தன. அந்தப் புறகளினூடே பாதை கிடுகிடெனக் கீழிறங்கிக் கொண்டிருந்தது. முன்னாற் சென்ற பாப்பா எந்தச் சிரமமுமின்றி அந்தப் பாதையிற் போய்க் கொண்டிருந்தான். நான் கல்லிலே தடுக்கிச் சுதாரித்து நிமிர்ந்து அவன் பின்னால் ஓடிக்கொண்டு இருந்தேன். இருபக்கமும் நெரு ஙகியிருந்த புற்களின் சொரசொரப்பான இதழ்கள் மேனி முழுதும் உராய்ந்தன. நான் சிரமத்தை வெளிக்காட்டாது பாப்பாவைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

கைக்கடிகாரம் பத்து மணியைக் காட்டியபோது நாங்கள் சமதரைக்கு வந்து விட்டோம்.

பாப்பா சொன்னான். "லுணுகல வந்திட்டுதுங்க. இந்த லெக்கில நடந்து, அந்த முக்கால திரும்பினா லுணுகல தெரியுமுங்க. ஐயாக்குக் களப்பாயிருக்கா?"

"சே! எனக்குக் களைப்பில்லையே" என்று அவனைப் பாராமலே பதில் சொன்ன நான், எதிரே பீலியிற் குளிததுக்கொண்டு இருப்பவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். கருங்கூந்தல் தோளிலே படர்ந்து பிருஷ்ட பாகம் வரை நீண்டு கிடந்து நீர் சொட்ட, நனைந்து உடலோடு ஒட்டிய குறுக்குக் கட்டை மீறிக்கொண்டு இளமைக் குவடுகள் சாயாத கொம்புகளாய்ப் பளிச்சிட, ஜம்புப் பழமாய்ச் சிவந்து ஜ்வலிக்க நீராடிக்கொண்டு நின்ற அந்தப் பெண்ணையே நான் பார்த்துக்கொண்டு இருப்பதை அவதானித்த பாப்பா,

"கள்ளு விக்கற பொண்ணுங்க ஐயா" என்றான்.

"கள்ளா? இங்கு எங்கிரு நது வரும்" என்றேன் நான்.

"கித்துள் கள் ஐயா! நீங்க குடிச்சிருக்கீங்களா?"

"இல்லியே, கித்து ள கள்ளைக் கண்டதேயில்லை"

"குடிப்பீங்களா ஐயா?"

"அதுக்கென்ன குடிச்சுப் பாப்பமே."

"சரி வாங்கையா" என்று சொல்லிக்கொண்டே பாப்பா முன்னால் நடந்தான். நான் பின்னால் போய்க் கொண்டு இருந்தேன்.

பீலியிற் குளித்துக்கொண்டு இருந்த பெண், தன் குளியலை முடித்து உடையணிந்து கொண்டு பள்ளத்தின் ஊடே ஒற்றையடிப் பாதையில் நடந்துகொண்டு இருப்பது என் கண்ணிற் பட்டது.

முன்னே நடந்த பாப்பா ஒரு குடிசையடியிற் தரித்தான். நான் என் சண்டிக் கட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துத் தலையையும் வாரி என்னைச் சீர்ப்படுத்திக் கொண்டேன்.

குடிசைக்குள்ளிருந்து அந்தப் பெண் வந்தாள்.

குளித்துக்கொண்டு இருந்த அதே பெண்.

மலைநாட்டின் சௌந்தர்யம் எல்லாமே ஒன்று திரண்டு, தன் கருங்கூந்தல் தோளிற் புரள அவள் நின்று கொண்டு இருந்தாள். ' அழகானவை என்றுமே ஆனந்தந்தான்' என்ற ஆங்கிலக் கவியின் அடிகளை நினைந்துக் கொண்டே நான் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பாப்பா அவளிடம் கள் தரும்படி கேட்கிறான் சிங்களத்தில்.

அவள் உள்ளே சென்று இரண்டு 'பைந்த்' கிளாசுகளிற் கள்ளை நிரப்பிக்கொண்டு வருகிறாள்.

நான் கிளாசை வாங்குகையில் அவள் விரல்களையும் வேண்டுமென்றே தீண்டுகிறேன்.

சிரிக்கிறாள்!
கொல்லும் சிரிப்பு!
கள் இனித்துக் கிடக்கிறது!
அது என் மனதில் இனிமையா? கள்ளின் இனிமையா?
இரண்டாம் கிளாஸ்.
மூன்றாம் கிளாஸ்,

காசைக் கொடுத்துவிட்டு உல்லாசப் பயணியின் உற்சாகத்தோடு பாப்பாவின் பின்னால் நடக்கிறேன். கில நிமிட நடையின் பின்னால் லுணுகல் கடைத் தெருவை அடைந்து விட்டேன். கித்துள் கள்ளின் கிறக்கத்தில், அதை வளர்த்துத் தந்த அப்சரஸ’யின் மயக்கத்தில் நான் லுணுகல கடைத் தெருவிற் சுற்றுகிறேன்.

திடீரென மட்டக்களப்பு செல்லும் பஸ் கடைவீதியில் வந்து தரிக்கிறது. பஸ்ஸ’லிருந்து ஒருவர் இறங்குகிறார். அவர் என் அயல் வீட்டுக்காரர். ஹாஜியர்! வியாபாரி!

அவரைக் கண்டதுமே என் போதை-சௌந்தரிய போதையுந்தான்-மறைந்தே விட்டது!

என் உடலெங்கும் வெயர்த்துக் கொட்டியது. அவர் என்னைக் காணாதிருக்க வேண்டுமே என்ற தவிப்போடு நான் கடைத் தெருவில் தலைமறைவாகிறேன்.

சுதந்திரன் 1968
...................


தருமம்

பேதுரு ஓர் பிறவிக் குருடன். அவனை நான், முதன் முதல் கிண்ணியாத் துறையிலேதான் சந்தித்தேன்.

அன்று மட்டக் களப்பிலிருந்து திருகோணமலைக்கு வந்துகொண்டு இருந்தேன். பங்குனி மாதமாதலினால் நல்ல வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தது. தென் ஆப்பிரிக்கக் கதையொன்றில் வரும் கதாநாயகன் திடீர் என்று நரகத்திற் போய் நின்றபோது, அங்கு கேட்ட முக்கலும், முனகலும், புழுக்கமும், வேதனையும் பஸ்ஸ’ற்குள்ளும் கேட்டது. இந்த நரக வேதனையைத் தந்து கொண்டு ஓடிய பஸ், கிழக்கு மாகாணத்தின் தனி உரிமையான துறைகளிற் சிறிது நேரம் தாமதிக்க நேர்ந்த போதெல்லாம் சிறிது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

கடைசியாக எங்கள் பஸ் கிண்ணியாத் துறையில் நின்றது. அந்தத் துறையையும் பாலப் பாதைமூலம் கடந்துவிட்டால், அதன்பின் நேராக திருகோணமலைக்குப் போய் விடலாம்.

பஸ்ஸ’ற்குள் இருந்தவர்கள் எல்லோரும் இறங்கினோம். பஸ்ஸ”ம் பாதையில் ஏறிற்று.

வெயில் நல்லார்க்கும் தீயார்க்கும் ஒன்றுபோல எறித்துக்கொண்டுதான் இருந்தது. என்றாலும் ஆளோடு ஆள் முட்டமாற் பாதையில் நின்றுகொண்டு இருப்பது சௌகரியமாகவே இருந்தது.

அப்போது அந்தப்பாட்டுக் காற்றில் மிதந்து வந்தது. 'புதுப் பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' பேதுரு புதுப்புதுச் சினிமாப் பாட்டுக்களைத் தப்பும் தவறுமாகப் பாட எங்குதான் கற்றுக்கொள்கிறானோ! அந்தக் கேள்வியை எல்லாம் கேட்டு நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. பாவம் அவனுக்குக் கண்ணைக் கொடுக்கத்தவறிய இறைவன் இனிய குரலையாவது கொடுத்தானே. ஆறு ஏழு மணித்தியாலங்களாகப் பஸ்ஸ’ற்குள் அடைபட்டுக் கிடந்து அலுத்து வரும் பிரயாணிகட்கு, அந்தத் துறையில் நின்று அவன் 'வழங்கும் ஓசை' வையம் பெறக்கூடியதாகத்தான் இருந்தது.

அந்தக் குரலைக் கேட்டு அவனைத் தெரிந்த, தெரியாத பிரயாணிகள் எல்லாரும் பேதுருவை வளைத்துக்கொண்டு நின்றோம் அவன் வாயிலிருந்து வந்த நாத வெள்ளத்தில் எல்லாரும், எல்லாமும் அப்படியே உருகிச் சிரக்கம்பம் செய்வதுபோலத்தான் தோன்றிற்று.

'பாலப் பாதை' போய்க் கொண்டேயிருந்தது. பேதுரு பாடிக்கொண்டே இருந்தான், நல்லெண்ணெய்க் கறுவல், கட்டுமஸ்தான உடற்கட்டு, வயதும் இருபத்தைந்து அல்லது அதற்குச் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். முகத்திலே உவர் நிலத்தில் முளைத்த புல்லுப் போல மதர்த்துக்கொண்டு நிற்கும் நெருக்க மற்ற தாடி மயிர்; கையில் அந்தக்கோல்; முகத்திற் குடன் என்று எழுதி ஒட்டியதுபோல, கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் தூர்ந்து போன குளம்மாதிரி இரண்டு பெரிய குழிகள்; அக்குழிகட்குமேலே நீட்டிக்கொண்டு நிற்கும் இமைக் கேசங்கள். மொத்தத்தில் சோற்றுக் கவலையே அற்ற ஆசாமியாகத்தான் பேதுரு காணப்பட்டான்.

பேதுரு தடவித் தடவிக்கொண்டே என் அருகில் வந்தான். இன்ன இடத்தில் ஆள் நிற்கிறான் என்பதை எப்படித்தான் கண்டுகொள்கிறானோ! அவன் கைக்கோலுக்குக் கண் இருக்கிறதோ என்னவோ? கோலை ஊன்றிக்கொண்டு முன்னால் வந்து நின்றாற், கையில் வைத்திருக்கும் தகரப் பேணியில் 'நங்' என்று காசு விழுந்தாலல்லாது மேலே நகருவதில்லை.

நானும் ஐந்து சதத்தைப் போட்டுவிட்டுப் பேணியைப் பார்த்தேன். ஐம்பது சதமாவது அதற்குள் இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டபோது எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது.

இதற்கு இடையில் பாட்டு நின்றது. பேருதுவின் அபிமானியான 'பஸ்' சாரதி பேதுருவைக் கதை சொல்லும் படி கேட்டார். பேதுருவும் விக்கிரமாதித்தன் கதையில் வரும் மூன்று பிராமணப் பிள்ளைகள் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

இதற்கிடையில் பாலப்பாதை அடுத்த கரையை அடையவே நாங்கள் எல்லாரும் பஸ்ஸ’ல் ஏறிக்கொண்டு போக வேண்டியதாயிற்று.

* * *

இப்போது என்னை இந்த ஊருக்கு மாற்றி விட்டார்கள். என் உத்தியோகத்தின் பொருட்டு நான் ஒவ்வொரு நாளும் அந்தத் துறையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது கிண்ணியாத் துறையிற் பழைய 'பேதுரு' இல்லை. கழுத்திலே போட்டிருந்த சிலுவையை எடுத்து எங்கே எறிந்தானோ! நெற்றியிலும் மார்பிலும் திருநீற்றைத் துலாம்பரமாகப் பூசிக்கொண்டு 'மறு சமயங்கள் மாளப் பேதகஞ் செய்யும்' பிஞ்ஞகனாய்த் தன் பூர்வாசிரமப் பேரான பஞ்சாட்சரத்தைத் தரித்துக் கொண்டு சிவப்பிழம்பாக நின்றான்! சினிமாப்பாட்டு மாறிப் போயிருக்கலாம். ஆனாற் பழைய விக்கிரமாதித்தன் கதை மட்டும் மாறவில்லை. ஆம், கதைகள் அமரசிருட்டிகள் அல்லவா?

நாள் ஆக ஆக நானும் பேதுருவும் - இல்லை பஞ்சாட்சரமும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். பேதுரு, ஏன் பஞ்சாட்சரமானால் என்ற கவலையெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் என் 'காசுப்பை'யின் கனத்தைப் பொறுத்து அவன் தகரப் பேணியில் ஒரு சதமோ ஐந்து சதமோ நாளாந்தம் விழுந்துகொண்டுதான் இருந்தது.

* * *

அன்று...
என் நண்பர் அருளப்பாவும் என்னோடு பஸ்ஸ’ற் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழக்கம்போலப் பேதுரு என்கிற பஞ்சாட்சரமும்- அல்லது பஞ்சாட்சரம் என்கிற பேதுருவும்-பாதையில் நின்று காணமழையைப் பொழிந்து கொண்டிருந்தான்.

நானும் வழக்கங்போல ஐந்து சதத்தை எடுத்துத் தகரப்பேணியிற் போடப் போனேன். அச்சமயம் பக்கத்தில் நின்ற என் நண்பர் அருளப்பா என் கையைப் பிடித்தார். நான் திரும்பிப் பார்த்தேன். இதற்குள் என் கையில் இருந்த ஐந்து சதம் 'நங்' என்று தகரப் பேணிக்குள் விழுந்துவிட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்ட அருளப்பா சொன்னார். "முன்னெல்லாம் நானுந்தான் இந்தப் பயலுக்கு ஐந்து பத்தென்று கொடுப்பேன். இப்போ கொடுக்கிறதில்லை; கொடுக்கப்படாது" என்றார்.

"ஏன்?" என்று ஆச்சரியத்தோடு கேட்டேன் நான்.

நண்பர் சொன்னார்: "பாருங்க, இவன் முன்னர் எல்லாம் எப்படி இருந்தான். இப்ப கிறுக்குப் பிடித்துச் சாம்பலைப் பூசிக்கொண்டு திரிகிறான்."

"அவன் 'வேதக்காரன்' என்பதற்காக நாம் அவனுக்குக் காசு கொடுக்க வேண்டியதில்லை. குருடன் என்பதற்காகக் கொடுத்தால் என்ன?" என்று வாதாடினேன் நான்.

"அப்படிக் குருடன் என்று இரக்கம் பட்டதாற்தான், இவன் இப்படியெல்லாம் நம்மை அவமானப்படுத்துகிறான் இவனுக்கு ஒரு சதமும் கொடுக்கக்கூடாது" என்று ஆத்திரத்தோடு பேசினார் என் நண்பர்.

பாலப் பாதை அடுத்த கரைக்கு வந்துவிட்டது. பஸ்ஸ’ல் ஏறிக்கொண்டோம். என் மனதில் நண்பரின் வாதம் தான் சுழன்று கொண்டிருந்தது. தருமம் கொடுப்பதற்குக் கூடவா இந்தப் பாகுபாடு?... அட கடவுளே!...

என் மனம் ஒரு நிலைப்படவில்லை என்னென்னவோ எண்ணிக்கொண்டு என்னருகே சிரத்தையோடு படித்துக் கொண்டு இருந்த சக பிரயாணியின் புத்தகத்தைக் கவனித்தேன். அது 'கால் மார்க்ஸ்' எழுதிய புத்தகம்; அதிலே 'மதம் மக்கட்கு அபினி மருந்து' என்று எழுதியிருந்தது!

ஈழகேசரி 1953

................

குதிரை

இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை மண்டபத்தில் ஆசிரியர்களின் விடுமுறைக் கழகம் நடந்துகொண்டு இருந்தது.

'திட்டவட்டமான குறிக்கோளும் கொள்கையும் அற்று, நினைத்தவர் நினைத்த போதெல்லாம் கல்விக் கொள்கையிற் தலையிட்டுத் தாம் முடைந்த தொப்பிக்குத் தக்கதாகத் தலையையே வெட்டிக்கொள்ளும் முயற்சியில், ஆசிரியர்களை, வற்புறுத்துவதற்காக நடைபெறும் நிகழ்ச்சி இது' என்று பல ஆசிரியர்கள் உள்ளூர நினைத்தக் கொண்டாலும், மண்டபம் என்னவோ நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், வாலிபர்கள், தலை நரைத்தவர்கள், பட்டாம் பூச்சியின் வாக்கிற் சுழன்று திரியும் வாலைக் குமரிகள், அவர்களில் மொய்க்கும் இளைஞர்கள்....

எத்தனையோ பேருக்குத் திருக்கோணமலைப் பட்டினத்தில் என்னென்னவோ அலுவல்கள். விடுமுறைக்கழக வகுப்புக்காக 'கடனே' என்று ஐந்து ரூபாவை அழுது தொலைத்துவிட்டு, அந்தச் சாக்கோடு பட்டினத்திற் பல அலுவல்களையும் கவனிக்க வந்த கிராமத்து ஆசிரியர்கள் பலரும், விடுமுறைக் கழகத்தை ஒருபொழுது போக்காகக் கருதித் தம்மை மறந்த களிமயக்கிற் சுகித்து இருந்த இளைஞர்கள் சிலரும் 'சித்திரப் பாவையின் அத்தக அடங்கி' விரிவுரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மேடையிலே பேராசிரியர், கீழ் வகுப்புகளிற் கணிதம் பயிற்றும் முறை பற்றிப் போதனை செய்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்திலும் படித்து இளம் வயதிலேயே பேராசிரியராகி விட்டவர். அவர் பக்கத்திலே தமிழ்ப் பாஷை படிப்பிக்கும் முறை பற்றி அடுத்ததாகப் பேச இருந்த பண்டிதர் நல்லதம்பியும் வீற்றிருந்தார். ஆம்; ஓய்வுச் சம்பளம் பெற்றத் தன் வயதில் முதுமை காரணமாக ஓய்ந்திருந்த நல்லதம்பிப் பண்டிதர், தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கழுத்தைச் சுற்றிய விசிறி மடிப்புச் சால்வை சங்கராபரணச் சர்ப்பமாக நெளிய, தம் தடித்த மூ ககுக் கண்ணாடியினூடாகச் சபையைக் கூர்ந்து கவனித்து கொண்டே, ஆரோகணித்துக் கொண்டு எதிரி படைக்குள் புகத் தயாராக நிற்கும் போர்ப் புரவி போன்ற கம் போன்று கம்பிரமாகக் காட்சியளித்தார்.

நல்லதம்பிப் பண்டிதரைத் தெரியாதவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கவே முடியாது. தனித் தமிழைத் துறைபோகக் கற்றவர் என்ற இறுமாப்பை, நிமிர்த்தி நிற்கும் தன் தடமார்ப்பில் பெருமையாக ஏற்றுக்கொண்டு, எந்நேரமும் போர்க் குதிரை போலப் பின்வாங்குதலின்றியே ஊரை-குறிப்பாக ஆசிரிய வட்டாரத்தை-ஒரு கலக்குக் கலக்கினார் அவர். காற்சட்டை அணிந்த பல்வேறு உத்தியோகத்தர்களும், சிறப்பாக வித்தியா கந்தோரின் அத்தனை மேலதிகாரிகளும், ஏன் அந்த வட்டாரத்தின் முக்காலே மூன்று வீசும் ஆசிரியர்களும், 'வடக்கே'யிருந்து வந்தவர்களென்ற எண்ணத்தை முன்னின் உறுத்தலாக ஏற்றுக்கொண்டு, அந்த உறுத்தலிற்போர் கோலங்கொண்டு, ஆசிரிய கூட்டங்களிலெல்லாம் கதாநாயகனாக விளங்கிய நல்லதம்பிப் பண்டிதர் 'காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்தாத அபூர்வப் பிறவி' என்று சிலர் சொல்லிக் கொண்டாலும். கூட்டம் குழம்புவராகவே பெயெபரடுத்து அந்தப் பகுதியிற் தம்பெயரை நிலை நாட்டியிருந்தார். அந்தப் போர்க் குணந்தான், ஓய்வுச் சம்பளம் பெற்ற பின்னரும் அவரை மேடை ஏற்றியிருக்கிறது. இல்லாவிட்டால், விடுமுறைக் கழகத்தை நடத்தும் வித்தியாதரிசி அவர் பாய்ச்சலின் கீழ் விழுந்து இருக்க மாட்டாரா?

மேடையில் வீற்றிருந்து தன் தடித்த மூ ககுக் கண்ணாடியின் வழியாகச் சபையினரைப் பார்க்கையில் நல்லதம்பிப் பண்டிதருக்கும் பெருமையாக இருந்தது.

முன்பெல்லாம் இதைப் போன்ற ஆசிரியர் கூட்டங்களிற் பெரும்பாலோர்'அன்னியராகவே' இருப்பார்கள். என்னைப்போல ஒரிருவர்தான் இந்நாட்டவர்களாயிருப்பர். ஆனால், இப்போது.... பிரபையோடு உதயமாகும் அறிவுச் சூரியனக்கு இச்சபையிலிருக்கும் இத்தனை 'எழுவான்கரை' ஆசிரியர்களும் நாற்றங்காலாக அமைந்து விட்டார்கள். எல்லாமே என் இடைவிடாத போராட்டத்தின் வெற்றி.

யாழ்ப்பாணத்திலிருந்து சிறப்புப் பேச்சாளராக வந்த கணிதப் பேராசிரியர், தன் பேச்சைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தார்.

"இளம்பிள்ளைகளைக் கிளிப் பிள்ளைப் பாடமாகப் பதினாறாம் வாய்பாடு மட்டும், பதினாறு அலகுகள் வரை மனனம் பண்ணும்படி வற்புறுத்துகிறோம். புதிய கல்வி முறையின்படி இது தேவையற்றது; பிழையான முறை. பெருக்கல் வாய்ப்பாடுகளின் நோக்கமே-ஏன் கல்வியின் நோக்கமே- கற்றதைப் பிரயோகம் பண்ணுவதுதான். வாய்ப்பாட்டைப் பிரயோகித்துப் பெருக்கற் கணக்குகளைச் செய்வதற்குப் பதினாறாம் வாய்பாடு வரையும் மனனம் பண்ணத் தேவையில்லை. மேலும் பதினாறு அலகுகள் வரை வாய்ப்பாட்டை மனனம் பண்ணவும் வேண்டாம். பத்தாம் வாய்பாடு மட்டும் பத்து அலகுகள் வரை தெரிந்தாலே போதுமானது. அதுவும் மனனம் பண்ண வேண்டும் என்ற தேவையும் இல்லை 'லொக்கார்தம்' கணித மட்டைகளை வைத்துக்கொண்டு கணக்குகளைச் செய்வதுபோல, வாய்ப்பாடு மட்டைகளை வைத்துக்கொண்டே கணக்குகளைச் செய்கையிற் காலகதியில் அமை மனதில் பதிந்துவிடும்."

கூட்டத்திலே இருந்த வயதான சம்மதமில்லாமலிருப்பதாகவே தோன்றியது. ஆயினும், எதிர்த்து ஒரு வார்த்தையுமே சொல்லவில்லை.

'அவரை அழைத்த குற்றத்திற்கு அவரும் தன் கடமைக்கு எதையாவது சொல்லிவிட்டு போகட்டும். நாம் போனது ஈரிரண்டு நாலு என்று தொடங்குவது தானே? என்று எண்ணினார்களோ, என்னவோ, பேராசிரியரின் 'தொண தொணப்பு' எப்போது முடியும் என எதிர்பார்த்தவர்களாய், மேடையின் பின்புறச் சுவரில் தொங்கிய கடிகாரத்தை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

இளைஞர்கட்கோ எதுவும் சம்மதம் என்றே தோன்றிற்று! மொத்தத்தில் இந்தப் பேச்சு என்ற யமவாதனை விரைவாக முடிவடையட்டும் என்று எண்ணியவர்களாகச் சபையினர் அசமந்திருந்தனர்.

ஆனால், மேடையில் இருந்த நல்லத்தம்பிப் பண்டிதருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இந்தச் சபையிலே எல்லாருமே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்களே என்று அவருக்கு ஆத்திரமாக இருந்தது.

இன்றைக்கு ஆசிரியர் சமுதாயம் எத்தனை தூரத்திற்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறது? எதற்கும் எல்லாவற்றிற்குமே தலையாட்டி மாடுபோல இருக்கிறார்களே! அதிலும் எல்லாப் பாடசாலைகளையும் அரசாங்கம் சுவீகரித்துக் கொண்டபின், ஆசிரியர்கள் எவருக்குமே சுதந்திரம் இல்லை. 'இதைப் போன்று விவாதத்திற்கிடமான கருத்தை அந்த நாளையிற் சொல்லியிருந்தால் 'மிஷன்' வாத்தியாராயிருந்த நாங்கள் ஆளைத் தொலைத்திருக்க மாட்டோமோ? ஆயினும் இவர்கள் எல்லாராலும் எப்படி வாய்பேசா மௌனியாக இருக்க முடிகிறது?'

இப்படி எண்ணிக் கொண்ட பண்டிதரின் மன ஓட்டத்திலே, அந்த நாளையச் சம்பவம் ஒன்று பளிச்சிட்டது.

அன்றும் இப்படித்தான் ஒரு விடுமுறைக் கழகம் நடந்து கொண்டிருந்தது. காலையில் ஒரு சொற்பொழிவு முடிந்ததும், அடுத்த பத்து நிமிடங்கட்கு ஒய்வு நேரம், ஆனால், விடுமுறைக் கழகத்தை நடத்திய வட்டார வித்தியாதரிசி நிகழ்ச்சி நிரலில் அந்தப் பத்து நிமிடத்தை 'இளைப்பாற்றி' என்ற அச்சிட்டிருந்தார். அந்த 'இளைப்பாற்றி' என்ற சொல் எச்சமா, முற்றா என்ற விவாதத்தை கிளம்பி வட்டார வித்தியாசிதரிசியின் தமிழ் ஞானத்தைத் தலைகுனிய வைக்க, அவர் தமது உத்தியோக அதிகாரத்தைப் பிரயோகிக்க முனைந்தபோது, நான் குறுக்கிட்டு மேலே விடுமுறைக் கழகத்தையே நடக்கமுடியாத படி குழப்ப வட்டார வித்தியாதரிசி அடுத்த மாதமே மாற்றம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்! எல்லாம், அந்தக் காலத்தில் இந்த நல்லதம்பியின் வல்லமை.... ஆனால் இன்று?

பண்டிதரால் பெறுக்கவே முடியவில்லை!

"நீர் சொல்வதெல்லாம் சுத்த அபத்தம்" என்றார் கணிதப் பேராசிரியரைப் பார்த்து.

அவர் அப்படிச் சொன்னது முன் வரிசையில் இருந்தவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது.

கூட்டத்திற் சிறிது சலசலப்பு. ஆயினும், சற்று நேரத்தில் அடங்கி விட்டது!

கணிதப் பேராசிரியரும் தன் பேச்சை முடித்துக் கொண்டீ அமர்ந்தார்.

பண்டிதர் நல்லதம்பி அவர்கள் பேச எழுந்தார். நான் பேச எடுத்துக் கொண்ட கீழ் வகுப்புகளில் தமிழ்ப் பாஷை கற்பித்தர்' என்ற பொருளை அவர் ஆயத்தம் செய்து வந்திருப்பினும், கணிதப் பேராசிரியர் தெரிவித்து இருந்த கருத்துக்கள் அவர் சிந்தனையைக் குழப்பி அவரின் இயல்பான போர் முனைப்பைத் தூண்டிவிட்டிருந்தன. அந்த முனைப்போடு ஒலிபெருக்கியின் முன்னால் வந்து நின்றவர், தம் விஷயத்தை மறந்து, கணிதப் பேராசிரியருக்கு ஒரு 'சூடு' கொடுக்க வேண்டும் என்ற ஒரே ஆத்திரத்தோடு கழுத்தைச் சுற்றிச் சங்கராபரண சர்பமாய்ப் புரளும் தன் விசிறி மடிப்புச் சால்வையைச் சற்று இறக்கித் தம் நிமிர்த்திய தடமார்ப்பிற் புரளவிட்டு, தமது தடித்த மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்தி ஒரு கனைப்புக் கனைத்துச் சபை வணக்கம் தெரிவித்துத் தன் பேச்சைத் தொடங்கினார்.

"எனது கெழுதகை நண்பர் உயர்திரு. சண்முகலிங்கம் பேராசிரியர் அவர்கள், இவண் சிறார்க்கு எண்கணிதம் பயிற்றும் முறை பற்றி முறைகேடாகச் சில செப்பினார். யாமும் ஓர் தமிழாசிரியன் ஆனமையின், நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று நக்கீர நெஞ்சோடு, அவர் கூற்றிலுள்ள பொருந்தாமையை இவண் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். அஃதென்னை எனில், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது ஆன்றோர் வாக்கு. இரண்டுள்ளும் எண்ணை முதலில் நுவலிய தென்னையெனின், அதன் முதன்மை கருதி என்பது வெள்ளிடை மலை. ஆயின் நமது எழுவான் கரையில் அறிவுச் சூரியன் உதயமாவனதைக் கண்டு காழ்ப்புறும் பேராசிரியர் போன்றோர் எண்ணைக் கற்பிக்கும் முறைபற்றிப் பிழையான எண்ணங்களைக் கொடுத்து நம்முடையதும், நம் எதிர்காலச் சந்ததியினரதும் எண் என்ற கண்ணைக் கெடுக்கும் நாசவேலையிற் தற்போது ஈடுபட்டிருக்கிறீர்கள்! பேராசிரியர் போன்றோருக்கு நமது அருட்டிரு விபுலானந்த அடிகளார் கணிதப் பட்டதாரியாகவும் அதே நேரத்தில் இலக்கிய விற்பன்னராகவும் இருந்தமைகூடப் பெரிய ஆற்றாமையாக இருக்கிறது; அடிகளாரைப் போன்ற பலர் நம் இடையே தோன்றுவதைத் தடைசெய்யும் முகத்தான்..."

பேச்சுத் தொடர்ந்தது.

கூட்டத்தில் கசமுசப்பு ஏற்பட்டது. 'இந்தக் கூட்டங் குழப்பிப் பண்டிதருக்கு இன்னமும் குதிரைப் புத்தி போகவில்லையே' என்றார் ஒருவர். இளைஞர்கள் சிரிக்கிறார்கள்!

மேடையிலே பண்டிதர் செந்தமிழிற் பொழிந்து பொழிந்து தள்ளிக் கொண்டேயிருக்கிறார்.

'அரபிக் குதிரையாக இருப்பினும் பிறவிச் சந்தம் போகாதே' என அலுத்துக் கொண்ட வழுக்கைத் தலை ஆசிரியர் ஒருவர், ஒருவாய் வெற்றிலையாவது போடலாம் என்றெண்ணிக் கொண்டே வெளியேறுகிறார்.

'சதுரங்கத்திலே குதிரை மட்டும் விசித்திரமான காய். ஏனைய காய்களைப் போன்றல்லாது, அது பாய்ந்து வெட்டும். அத்துடன் மூன்று கட்டங்கள் பாய்வதானாலும், எத்திசையிலும் நேராக முன்னேறாமல், ஒரு கட்டமோ, இரண்டு கட்டமோ பாய்ந்து செங்காணத்தில் திரும்பும். அந்தப் புத்திதான் இந்தப் பண்டிதருக்கும். 'கீழ் வகுப்புகளிற் தமிழ்ப் பாஷைக்கு கற்பித்தல்' என்ற பொருளைவிட்டு, என்னைத் தாக்க எழுந்த குதிரை, செங்கோணத்திற் திரும்பி எனது நாட்டவர் எல்லோரையும் தாக்குகிறதே...." எனப் பேராசிரியர் சண்முகலிங்கம் நினைத்திருக்கக் கூடும்.

மேடையிலே பண்டிதர் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்!

இளம்பிறை 1968
.........

போர்ப் பறை

பால்ய வயதிலேயே திருக்கொட்டியாபுரப்பற்று மூதூரைச் சேர்ந்த சந்தியாநாதன் இப்படியாகச் சிந்ததிக்கவில்லைதான்.

பாடசாலை மாணவனாக இருந்த அந்த நாட்களில், பல்லைக் கிட்டவைக்கும் மார்கழி வாடைக் கடுவலில் அர்த்த இராத்திரியில் பிறக்கப் போகும் புது வருடத்தை எதிர்பார்த்தபடி சத்தியநாதன் விழித்துக்கொண்டேயிருந்திருக்கிறார். கோயிற் பலிபீடத்தின் இடதுபக்க மூலையில் யேசுபாலன் பிறப்பைச் சித்தரிக்கும் மாட்டுந் தொழுவத்தின் முன்னால், வரவிரு ககும் புத்தாண்டில் தங்களுக்குச் சகல சௌபாக்கியங்களையும் அனுக்கிரகிக்கும்படி பிரார்த்தித்து, வருடப் பிறப்பிற்காகக் காத்துக் கொண்டு இருக்கும் விசுவாசிகளின் கூட்டத்தோடு சத்தியநாதனும் முழந்தாட் படியிட்டு விழித்துக்கொண்டே இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் அவருக்க புதுவருட புத்தாடையைப் பற்றிய எண்ணங்களே மனதில் நிறைந்திருக்கும். அவைகட்கும் மேலாற் கோயிற்சுவர் மணிக்கூடு தன் இரு சரங்களையும் கூப்பி, பன்னிரண்டாம் மணியின் முதல் நாதத்தை எழுப்புகையில் கோயிற் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் மணிக்கயிற்றைப் பிடித்து அடித்து புதுவருடம் பிறந்தமையை ஊரறியச் செய்வதில் தான் அவர் நாட்டமெல்லாம் முழுமையாக இருக்கும். அந்த ஒன்றிற்காகவேதான் சத்தியநாதன் சில்லென்றூதும் வாடைக் கடுவலில் கொட்டுடென்று விழித்துக் கொண்டேயிருப்பார்!

பூமி நடுக்கம் ஏற்பட்ட ஆண்டிலே அதாவது சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே கோயிற் சுவர் மணிக்கூடு இரு கரங்களையும் கூப்பிப் பன்னிரண்டாம் மணியின் முதல் நாதத்தை எழுப்பியபோது, மணிக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்த அதிர்ஷ்டசாலி சத்தியநாதனேதான்! கோயில் முகப்பு வெண்கலமணியில் இருந்து சுநாதத்தை எழுப்பிப் புது வருடம் பிறந்துவிட்டதை ஊர் முழுமைக்கும் அறிவித்த பெருமை அந்த ஆண்டு அவருக்குத்தான் சித்தித்தது.

சத்தியநாதன் மணிக்கயிற்றை இழுத்து மணியில் இருந்து சுநாதத்தை எழுப்பிக்கொண்டு இருக்கையில், ஊர் வாலிபர்கள் தாங்கள் கட்டிவந்த எறிவெடிகளைக் கோயிற்புற மதிலில் எறிந்து முழங்கினார்கள். சப்த ஸ்வரங்களில் பேதமின்றி ஒரே குரலில் நாதத்தை எழுப்பிக் கொண்டு இருந்தான் பறையன். தோளிற் தொங்கிய மத்தளத்தை மற்றப் பறையர்கள் அடித்து முழக்கினார்கள்.

வேட்டுச் சப்தங்களுக்கும், ஊதுகுழல் நாதத்திற்கும் முழவொலிக்கும் மேலாகக் கோயில் மணியின் சுநாதம் ஊரை நிறைத்து நிற்கிறது! ஒன்பது வயதுப் பையனான சத்தியநாதன், மணிக் கயிற்றை இழுத்து இழுத்து நாதத்தை எழுப்பிக்கொண்டே இருந்தார். தன் கைகள் அலுத்துப் போனாலும், பட்டாஸ் வெடிகளின் முழக்கமும் ஊதுகுழல் நாதமும், மத்தளங்களின் ஓசையும் ஓய்ந்து ஒடுங்கும் வரை சத்தியநாதன் மணியை அடித்துக் கொண்டே இருந்தார்.

அந்த வருடத்திற்குப் பின்னால், சத்தியநாதனுக்கு மணியடிக்கும் பாக்கியம் என்றைக்கமே சித்திக்கவில்லை.

அந்த ஆண்டு எல்லா ஓசைகளும் ஒடுங்கி-கோயிலைச் சூழ இருந்த விசுவாசிகளின் வீட்டிற்கேட்ட சீன வெடிச் சப்தங்களும் ஓய்ந்த பின்னர் கோயிலின் உள்ளே யேசுபாலனின் மாட்டுக் கொட்டிலுக்கு முன்னால் மௌனமாகப் பிரார்த்தித்துக் கொண்டு இருந்த விசுவாசிகளின் மத்தியிலிருந்து சத்தியநாதரின் மாமனார் 'அந்தோனிக் கட்டையர்' உரத்த குரலெடுத்து விருத்தம் பாடினார்.

மயிலிட்டிப் புலவர் பாடிய அந்தப் பிள்ளைக்கவியைச் சத்தியநாதன் தன்னுள்ளேயே பாடிக் கொள்கிறார்.

குவலயத்தவரண்ட, கொண்டாட வண்டாடு
குளிர்மலர்ப் பொழில்களாட
கோலமயிலாட வயல்நீடுகுயிலாட நெற்
குலை கலக-லென்றாடிடக்
கவலையற்றிடுமாயர் களியாட இளவாழை
தளிரீடு தளிர்களாட
காராடு மொய்குழலில் நாராடவழகளைய
கழிநீடு தளிர்களாடக்
தவில் முரசமத்தும்பர் சபையாட நவகோடி
சனமாட விளமை கோயிலத்
தண்ணிழல் பரந்தாட விண்மணியொடுங்கிண
தாரகை தயங்கியாடத்
திவலையமுதைப் பருகு தெய்வீக பாலனே
செங்கீரை யாடியருளே
திருவுறு பரமகனி மரியுதவுபாலனே
செங்கீரை யாடியருயே

வெளியே வாடைக் கடுவல் சில்லென்று ஊதிக் கொண்டு இருக்கிறது. பிறக்கப் போகும் புதுவருடத்தை எதிர்பார்த்து அவர் குடும்பத்தினர் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவருடைய மூத்த மகன், கோயில் மணிக்கயிற்றை எல்லோருக்கும் முன்னர் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஏகாக்கிரக சிந்தையோடு எப்போதோ கோயிலுக்குச் சென்று விட்டான். மூத்த மகள் தன் சகோதரர்களின் புத்தாடைகளுக்குப் பொத்தான் தைத்துக் கொண்டிருக்கிறாள். இளைய மகன் மணிக் கேட்டதும் வெடிகொளுத்துவதற்காக வெடித் தட்டும் நெருப்புப் பெட்டியுமாக வாயிலில் நிற்கிறான். அவர் மனைவி எண்ணைச் சட்டியை அடுப்பில் வைத்தபடி காத்துக் கொண்டே இருக்கிறாள்! 'புது வருடம் பிறக்கும் போது எதையாவது எண்ணைச் சட்டியில் இட வேண்டும்' என்று தலைமுறை, தலைமுறையாக அவள் கொண்டு இருக்கும் விசித்திரமான நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்கத் திராணியின்றிச் சத்தியநாதன் சாய்வு நாற்காலியில் அந்தப் பிள்ளைப்பாடலை முணுமுணுத்துக் கொள்கிறார்.

திவலையமுதைப் பருகு தெய்வீகபாலனே
செங்கீரை யாடியருளே
திருமருவு பரமகனி மரியுதவுபாலனே
செங்கீரை யாடியருளே

"வருஷம் பிறக்கப்போகிறது நீங்கள் கோயிலுக்குப் போகவில்லையா?"

அடுக்களைக்குள்ளிலிருந்து வந்த அவர் மனைவியின் குரலில் வெறுப்பைச் சத்தியநாதன் உணர்ந்தார்.

'நமக்கு இது புதுவருடப்பிறப்பா? அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தநாம், அன்னியர்கள் சென்ற பின்பும் அவர்கள் கற்பித்த பழக்க வழக்கங்களை மட்டும் இன்னமும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறோம். கோயிலுக்குப் போகத்தான் வேண்டும். ஆனால் இன்று நமக்கு வருடப்பிறப்பென்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது' என்று சொல்லத்தான் விரும்பினார் சத்தியநாதர். ஆனாற் சொல்லவில்லை.

பழக்கதோசத்தினாலும், அறியாமையினாலும், ஆராயாமைனாலும், விருத்தசேதனம், - ஞானமுழக்கு என்ற புனிதத்துவத்தை மறந்து புதுவருடப் பிறப்பு என்ற புதிய தத்துவத்தைக் கற்பித்து வாழும் சமுதாயத்தின் அங்கமான தன் மனைவியின் நம்பிக்கைக்கு மாறாக எதையும் சொல்லிக் குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தத் திராணியற்றவராய் "போகிறேன்" என்று மட்டும் சொல்லி வைத்தார்.

அடுக்களையிலிருந்து மனைவியின் குரல் அபஸ்வரமாக ஒலித்தது.

குறிப்புணர்ந்த சத்தியநாதன் சாய்கதிரையிலிருந்து எழுந்து மின்விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடந்தார்.

அட்டமி கழித்த வளர்பிறைக் காலமாயிருந்தாலும் வானத்திற் சந்திரணைக் காணவில்லை. ஒரே மழை மூட்டம். வாடைக்கடுவல் முகத்தில் ஊசி குத்துவது போலக் குத்துகிறது. பெருமழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகப் பெய்த மழையில் ஊரே வெள்ளக்காடாய் குண்டு குழிகளில் எல்லாம் நீரிநிரம்பிக் கிடந்தது. மாரித்தவளைகளின் இரைச்சல் காதுகளைக் குடைந்தது.

சூடுதேடித் தார்ரோட்ல் படுத்துக்கிடந்த கட்டாக்காலிகட்கு வழி விலகி, சாணத்திற் காலைவைத்து விடாமற் பதனமாகக் கோயிலை நோக்கி நடந்தார் சத்தியநாதன்!

கோயில் வெளிவிறாந்தையிற் சனக்கூட்டம்! வருடப் பிறப்பைப் பாலனோடு கழிக்க வந்த விசுவாசிகள்! அவருடைய மூத்த மகன் மணிக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு தயாராக நிற்பதைக் கண்டபோது சத்திய நாதனுக்குச் சிரிப்பு வந்தது! அந்தக் கணநேர முறுவல் பறையனையும், அவன் கூட்டத்தினரையும் கண்டபோது ஆத்திரமாக வந்தது.

"ஊரில் வரும் சுபகாரியங்களில் எல்லாம் ஒலிபெரு ககி 'டப்பா' இசையைப் பொழிகின்றது. அதற்கும்மேலால் கிதார் மெலோடிக்கா என்று எதேதோ வாத்தியங்களை எல்லாம் முழக்கித் தமிழ் இசையைக் கொல்லும் இசைக் குழுக்கள் வேறு வந்துவிட்டன. ஆனாற் புதுவருடப் பிறப்பென்று புனிதமாக-ஆனால் முட்டாள்த்தனமாக நம்பும் இன்றையத் தினத்திற்கு மட்டும் பறைமேளம்-சாவீட்டிற்கு கொட்டப்படும் பிணப்பறை-கொட்டப்படுகிறது. ஆனால் இத்தனை காலம் பிணப்பறை கொட்டப்படும் 'புதுவருடப் பிறப்பு' என்று முட்டாள்த்தத்துவம் இன்னமும் சாகவில்லை" என்று மனத்துட் கறுவிக் கொண்டார் சத்தியநாதன்.

நிலத்தை நம்பிச் சுதந்திரமாக வாழும் தன் அயற்கிராமத்து மக்க , பறையர் என்று குலத்தியிற் பிறந்துவிட்ட குற்றத்திற்காக, எவ்விதத் தேவையுமின்றி ஆங்கில வருடப் பிறப்பன்று காலையில் மேளத்தைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக அடிப்பதும் ஒவ்வொரு வீட்டாரும் கொடுக்கும் 'வருடப்படி' என்ற பிச்சையைக் கூனிக் குறுகிக் கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டு வாங்குவதும் அப்படி வாங்குவதன் மூலம் தாங்கள் மற்றவர்களைவிட்த் தாழ்ந்தவர்கள் என்று தாங்களாகவே கற்பித்துக் கொள்ளுவது....

இந்த அசட்டுத்தனத்தை யெல்லாம் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பத்து ஆண்டுகளுக்கே முன்னே தான் முயன்றதை நினைத்தார் சத்தியநாதன்.

அன்றையதினம் ஆங்கில வருடப் பிறப்பன்று கோயிலே பறை முழக்கியவர்கள் விடிந்ததும் 'வரும்படி' வாங்க ஊருக்குக் கிளம்பியபோது சத்தியநாதன் அவர்களிடம் சொன்னர்:

"இந்த வருடம் பங்கு சபைத் தலைவர் வீட்டிற்கு முதலிற் போங்கள்"

சத்தியநாதன் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.

வந்தது வினை!

"சபைத் தலைவரென்ன கொம்பா? அவர் வீட்டிற்கு ஏன் முதலிற் போகவேண்டும்" என்று பலர் குமுறினார்கள்.

ஊர்இரண்டுபட்டது.

பல வீடுகளில் அவர்கட்கு'வரும்படி' கிடைக்கவில்லை.

அந்த ஆண்டோடு அந்த வழக்கமே இல்லாமற் போய்விடும் என்று சத்தியநாதன் நம்பினார்!

ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அடுத்த ஆண்டும் அவர்கள் வந்தார்கள். இப்போதும் வந்திருந்தார்கள்! விருத்தசேதனம்-ஞானமுழக்கு என்ற புனிதத்துவம் மறக்கப்பட்டு, ஆங்கிலப் புது வருடப் பிறப்பு-நமது வருடப் பிறப்பாகக் கற்பிக்கப்பட்டு என்னென்னவெல்லாமோ நடக்கின்றது.

சத்தியநாதனாற் பொறுக்கவே முடியவில்லை.

கோயில் விறாந்தையில் நின்ற கூட்டத்தினரிடம், "இன்றைக்கு நமது வருடப்பிறப்பா? ஆங்கிலேயனின் வருடப்பிறப்பை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?" என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

எவருமே பதில் தரவில்லை.

"தமிழனுக்கு வருடப்பிறப்பு சித்திரையல்லவா?" என்றார் மீண்டும்.

"ஆனாற் பழக்கமாகி விட்டதே, அதை விட்டுவிட முடியுமா" என்றார் முதியவர் ஒருவர்.

"அப்படிப் பழக்கமாகிவிட்டால், கிறீஸ்துநாதர் விருத்தசேதனஞ் செய்யப்பட்டுப் பெயர் சூட்டப்பட்ட இப்புனித தினத்தில் சாவீட்டிற் கொட்டப்படும் பறைமேளத்தை ஏன் அடிக்கவேண்டும்?" என்று ஆத்திரத்தோடு கேட்டார் சத்தியநாதன்.

கூட்டத்தில் எவருமே பதில் சொல்லவில்லை.

பொறுமையிழந்த சத்தியநாதன்,

"மெய்வருந்தி உழைத்துச் சுதந்திரமாகச் சீவிக்கும் நீங்கள், ஏன் இப்படி 'மேளத்'தைத் தூக்கிக்கொண்டு கொட்டி எல்லோருக்கும் கூழைக்கும்பிடு போடுகிறீர்கள்" என்றார் மேளக்கூட்டத்தினரிடம்.

"இது வழமையாச்சே ஐயா" என்று குழைந்தார்கள் அவர்கள்,

"வழக்கம், கண்டறியாத வழக்கம்" என்று உச்ச ஸ்தாயியிற் கத்தினார் சத்தியநாதன்.

சுவர் மணிக்கூடு தன் இருகரங்களையும் கூப்பிப் பண்ணிரண்டாம் மணியின் முதல்நாதத்தை எழுப்பிற்று. அந்த ஒலிப்பிலேயே கோயில் மணியை இழுத்து அடித்து புதுவருடம் பிறந்து விட்டமையை ஊருக்கெல்லாம் அறிவித்துக் கொண்டிருந்தான் சத்தியநாதனின் மூத்த மகன். குழலோசை இழைந்தது. பறைமேளம் ஒலித்தது. வெடிகள் முழங்கின. விசுவாசிகள் எல்லோரும் கோயிலுட் சென்று, யேசுபாலனின் மாட்டுத் தொழுவத்தின் முன்னால் முழந்தாட்படியிட்டு நின்று, தங்கட்குச் சகல சௌபாக்கியங்களையும் அனுக்கிரகிக்கும்படி மௌனமாகப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

ஆத்திரங்கொண்ட சத்தியநாதன் கோயில் விறாந்தையிலிருந்து வெளியேறி இருளிலே நடந்தார்!

திடீரென்று சோனாவாரியாகப் பெய்த மழை அவரை முழுக்காட்டிற்று!

ஆம்! அன்று சத்தியநாதனுக்கு மட்டும் யேசுநாதர் விருத்த சேதனஞ் செய்யப்பட்ட பின்னர் "ஞானமுழுக்கு" என்ற அருட்கொட்டையாகத் திருச்சபை கற்பித்த-புனிதத் திருநாள். அப்புனித நாளிலே அவர் வீட்டில் பறைமேளம் பிணமேளம் அடிக்கப்படவே மாட்டாது.

வீரகேசரி 1961
..................

மதிப்பு

தென்னை மரவாடி தொடக்கம் தேவுந்துறை முனைவரை அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியப் பணி புரிந்துவிட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட விசுவலிங்க வாத்தியார் ஊருக்கு வந்தார்.

அந்த நாட்களில் அவர் ஊரிலே பெரிய கிறுக்கு வாலிபனாக இருந்த அந்த நாட்களில் மனேஜர்மாரின் தகிடு தத்தங்களைத் தன்னந்தனியனாக எதிர்த்து நின்று, தன் உத்தியோகத்தை இராஜினாமாச் செய்துவிட்டுக் 'குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ' என்று கேட்ட கவிஞனின் வாக்கில் அரசாங்கப் பாடசாலையில் உத்தியோகம் பார்க்கத் தெற்கே சென்றார்.

அப்படிச் சென்றவர் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் ஐந்தோ, ஆறு தடவைதான் ஊருக்கு வந்திருக்கிறார். தம் வருகையின் போதெல்லாம் ஊரை ஒரு கலக்குக் கலக்கிவிட்டுத்தான் போவார். போனபின்னர் ஊரும் சில நாட்களுக்கு அவரைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் பின்னர் மறைந்துவிடும்.

இப்போது விசுவலிங்கவாத்தியார் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிட்டார். ஊருக்கெல்லாம் 'வங்கணம்' சொல்லும் கோணாமலைக்கிழவர், ஆயிரமடிக் கம்பத்திலே கூத்தாடினாலும் காசுவாங்கக் கீழேதானே இறங்க வேணும்' அவர் வரவிற்குக் கட்டியங் கூறினார்.

ஆனால் விசுவலிங்க வாத்தியாரிடம் அந்த நாளைய மிடுக்கு இல்லை. அமுசடக்காக இருந்தார். தன் 'கொம்யூற்றட் பென்சனில்' சீதன வீட்டைத் திருத்திக் கொண்டு வாழ்ந்தார்.

காலையில் எழுந்து, கடன்களை முடித்துக் கொண்டு இரண்டு மூன்று தேவாரங்களைத் துரித கதியிலோ மந்த கதியிலோ பாடித் திருச்சிற்றம்பலம் என்று முத்தாய்ப்பு வைத்துப் பிள்ளையார் கோயிலிலே சேவிப்பு. அதன்பின் கங்கைக்கரை நெடும் பிரம்பையும், தன் கரகரத்த தொண்டையையும் சாதனங்களாகக் கொண்டு அயலட்டையிலுள்ள ஊர்ச் சிறுவர்களுக்கு ஆனா, ஆவன்னா கற்பிப்பதான இலவசம் சேவகம். அதற்கும் பின்னர் 'கறி' வாங்கப் பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாற் திரும்பி வரப் பதினாரு மணியாகும். மதியச் சாப்பாட்டின் பின்னர், ஒரு கோழித்தூக்கம் போட்டுவிட்டு எழுந்தாரென்றால் முகங் கழுவித் துடைத்துக் கொண்டு பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலிருக்கும் நிழல்வாகையின் கீழே, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பொருளைக் கண்டுவிட்டவர்போல ஊரவர்களோடு சல்லாபம்.

நிழல்வாகை மரக் கூட்டம் அவர் சொல்வதையெல்லாம் வேத உபநிடத வாக்கியங்களாகக் கேட்டது.

இதற்கான காரணம் அவரின் ஒரே மைந்தன். பேராதனைச் சர்வகலாசாலையிற் பட்டப் படிப்புப் படிக்கிறான் என்பதை ஊரவர் அறிந்திருந்ததுதான். இதனால் எல்லாந் தெரிந்தவராகக் கொள்ளப்பட்ட விசுவலிங்கத்தாரின் பேச்சையெல்லாம் ஊரவர் ரசித்துக் கேட்டார்கள். சிலர் ரசிப்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சிலர் அவரிடம் மகனைத் தட்டிப் பார்த்தபோது, "இந்தக் காலத்துப் பிள்ளை என்னை சொல்லுவானோ. எங்கங்க கண் போட்டிருக்கானோ. காலம் வரட்டும்" என்று அமுசடக்கமாகவே பதில் சொன்னார்.

ஊரிலே அவர் மதிப்பு உயர்ந்தது.

இப்படியிருக்கையில் சர்வகலாசாலையிற் படிக்கும் அவர் மகன் ஊருக்கு வந்தான். மலைநாட்டின் இதமான குளுமையில், ஒரே மகன் என்ற செழுமையோடு சிவப்பாய், அரும்பும் மீசையோடு நெடுநெடுவென்ற வளர்ந்திருந்த அவன், ஊரிலே வாலைப் பெண்களின் கனவாய், லட்சியமாய்....

ஊரிலே அவர் மதிப்பு இன்னமும் உயர்ந்தது. ஆனாலும் "காலம் வரட்டும் பார்ப்போம்" என்றுதான் கேட்டவர்களுக்கு விசுவலிங்கத்தார் சொன்னார்.

ஒரு வருடம் ஓடி மறைந்தது.

விசுவலிங்கவாத்தியார் மனைவியையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்றார். சர்வகலாசாலைப் படிப்பை முடித்துக் கொண்ட தன் மகனின் 'சரவை'களையெல்லாம் முடித்துக் கொண்டு அவனை ஊருக்கழைத்து வரத்தான் போயிருக்கிறார் என்று ஊர் நம்பிக்கொண்டு அவர் வருகைக்காகக் காத்திருந்தது.

இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. வாத்தியார் ஊர் திரும்பவில்லை.

மூன்றாம் வாரமும் கழிந்தது. வாத்தியார் திரும்பவில்லை.

அவர் எங்கே போய்விட்டார் என்பதைப் பெண்ணைப் பெற்றவர்கள் சிரத்தையோடு விசாரித்தனர்.

'அவர் மகன் படித்த இடத்திலேயே ஒரு யாழ்ப்பாணத்தாளைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டான். கல்யாணத்திற்குத்தான் வாத்தியார் போயிருக்கிறார்' என்பதைக் கடைசியாக ஊர் தெரிந்து கொண்டது.

'அப்பன் ஊரை மறந்து இருந்தவன்தானே. அவனைப் போலத்தானே மகனும் இருப்பான்' என்று காத்திருந்த சிலர் திராட்டைப் பழ நரிக்கதை பேசிக் கொண்டிருக்கையில் வாத்தியார் ஊருக்கு மீண்டார்.

இப்போது விசுவலிங்க வாத்தியார் எல்லாந் தெரிந்த வரவல்ல. அவர் சொல்வதை வேத உபநிடதங்களாகக் கேட்டுக் கொண்டிருக்க ஊரிலே எவரும் இல்லை.

ஏனென்றால் ஒரு பொருளின் தேவையைப் பொறுத்துத்தான் அதன் மதிப்பு என்ற விலை-அல்லது விலை என்ற மதிப்பு- இருக்கும் என்ற பொருளாதார அரிச்சுவடி, பொருளாதாரம் கற்காத ஊரவர்களுக்கெல்லாம் தெரிந்தே இருந்தது.

தமிழின்பம் 1962

காந்தரி
.............

காந்தரி

அந்தி மாலைப் பொழுது. மேற்கே செம்பஞ்சுக் குழம்படைந்து கிடந்த மேகத்திரளின் பின்னாற் சரிந்து கொண்டிருந்த கதிரவனின் செம்பொற் கிரணங்கள், பூமியைத் தொட்ட இடமெல்லாம் பொன்னாக்கி இரசவாத வித்தை புரிந்து கொண்டிருந்தன.

செசாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு குடிசனக் கணக்கெடுக்கையிற் ஜனன பூமியில் இருக்கவேண்டும் என்பதற்காக நாட்கணக்காக வழிநடந்து வந்த அந்த இருவரும் 'கொம்பினார் குயில்' கூவும் சோலைகளையும், மஞ்ஞைகள் ஆடும் மலைகளையும் கடந்து தம் ஜனன பூமியை அண்டமித்துவிட்டார்கள். இளைத்துக் களைத்த அவர்களின் நடையைக்கண்டு இதுதான் அன்னநடையோ என ஓதிமங்கள் மயங்கின.

பாவம்! அவளோ நிறை மாதச் சூலி! முதற் குழந்தையை வயிற்றிற் தரித்திருக்கும் எந்தப் பெண்ணும் அழகாகத்தான் இருப்பாள் என்று சொல்லுகிறார்கள். ஆனாற் 'தூயனம் நாண' நடை பயின்று வரும் அந்தப் பெண்ணோ உலகின் நித்திய சௌந்தர்யம்! பெண்ணழகு என்பதன் இலக்கணமே அந்தப் பெண்ணைக் கண்ட பின்னர்தான், கவிஞன் ஒருவனால் வரையறுக்கப்பட்டிருக்கும். அத்தனை பேரழகி அவள்! அம்மாதரசியின் முக காந்தியிற் சந்திரனின் தன்மை நிலவுகிறதா? அல்லாற் கண்ணைப் பறிக்கும் சூரியப் பிரகாசமே விடிந்தாற் தோன்ற வேண்டும் என்ற ஆதங்கத்தோடு அவள் முகத்திற் குடிகொண்டுவிட்டதா? இல்லை;'நான் ஒளியாயிருக்கிறேன்' என்றவரின் ஒளிதான் அவள் முககாந்தியா? தெயிவீக சௌந்தர்யம்தான் அது!

சொற்கடந்த அந்தச் சந்தரியோடு அவள் பத்தாவும் மூட்டை மடிச்சுகளுடன் வந்து கொண்டிருக்கிறார். 'வேள்வி மந்திரத் தீக்கொழுந்து போல நெடிதுயர்ந்து வேதமே உருவினனாக அவர் நடந்து வருகிறார். 'அவனைப் போல ஞானி பிறந்ததுமில்லை; பிறக்கப் போவதுமில்லை' எனப் புகழப்பட்ட சலமோனின் ஞானமும், பென்னம் பெரிய இராக்கதனைத் தன்னந் தனியனாய் எதிர்த்து நின்ற தாவீதின் காம்பீர்யமும் அத்தனை ஏழ்மைக் கோலத்திலும் அவர் முகத்திற் பளிச்சிடுகின்றன.

இராஜ கட்டளைக்குப் பணிந்து, குடிசனக் கணக்கெடுக்கப் படுக்கையில் தம் ஜன்ம பூமியில் இருப்பதற்காக அவர்கள் இருவரும் அலுத்துக் களைத்து நடந்து வருகிறார்கள். எனினும் வழி நடந்த களைப்போ சிரமமோ அவ்விருவரதும் முக காந்தியை மாற்றுக் குறையச் செய்வதற்குத் திராணியற்றிருந்தன. அவர்கள் உள்ளத்தின் உள்ளொளி, ஒளி மங்கிய அம்மாலைப் போதில், அவர்கள் முகத்தில் ஒளிர்ந்து கொண்டேயிருந்தது. தெய்வீக ஒளி!

வழிநடந்த அவ்விருவரும் இப்போது ஊருக்குள் வந்துவிட்டார்கள். பாலையையும் சோலையையும் சிரமத்தோடு கடந்தாயிற்று! சொந்த ஊரிற் கால் வைத்து விட்டார்கள். ஊர்தான் எனினும் பிரிந்து சென்று எத்தனை காலமாயிற்று! இனபந்துக்கள் எங்கிருக்கிறார்களோ? இருப்பினும் ஓர் ஏழைத் தச்சனையும், அவன் மனைவியையும் எங்கள் இன்பந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள எவனக்கப் பைத்தியம் பிடித்திருக்கிறது? இருட்டு முன்னர், தங்குவதற்கு எங்காவது இடம் தேடிக் கொள்ளவேண்டும்!

தளர்ந்து சோர்ந்த அவர்கள் நடையிலே ஒரு வேகம்... ஒரு விரைவு...

இன்னமும் வீடுகளிலே விளக்கேற்றப்படவில்லை.

அவர்கள் நடக்கிறார்கள்!

வந்து கொண்டிருக்கும் இரவை மகிழ்வோடு களிப்பதற்காகப் பிற்பகற் சோம்பேறித் தூக்கத்துக்குப் பின்னால் நீர் குடைந்தாடிப் பீதாம்பரம் பூண்டு, வாசனைத் சாந்துகள் பரிமளிக்க, 'வாழ்க்கை சுகிப்பதற்கே' என்ற வைராக்கியம் படைத்தவர்களாய் வரும் வாலிப முறுக்கேறிய கூட்டம் வீதிகளிற் பவனி வரத் தொடங்கியது.

தம் நீண்ட பயணத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் அத்தம்பதிகள் இருவரும் இராப்பொழுதை எங்கே கழிப்பது? என்ற கேள்விக் குறியோடு நடந்து, வானை முட்டும் மாடங்கள் நிமிர்ந்து நின்ற வீதிக்குவந்து விட்டார்கள்.

உப்பரிகை ஒன்றிலே மெல்லென்றரற்றும் மெட்டிகளின் ஒலி கேட்கிறது!

நீர் குடைந்தாடி, பீதாம்பரம் பூண்டு, வாசனைச் சாந்துகள் பரிமளிக்க, வாழ்க்கை சுகிப்பதற்கே என்ற வைராக்கியம் படைத்தவர்களாய் வந்த பாலிப முறுக்கேறிய கூட்டம் அங்கே கூடுகிறது.

மேலே உப்பரிகையில் மெலென்றரற்றும் சிலம் பணிந்த இடக்காலின் மேல் வலது காதத்தை வைத்து, ஒருக்களித்த நிலையிலே பொற்றூணிற் சாய்ந்தபடி அவள் நின்றாள்!

காந்தரி நின்றாள்!

** இ.தொ. kaviya11.mtf**
மணம் பரப்பும் கத்


** kaviya10.mtf.ன் தொடர்ச்சி **

புகையன்ன மென்துகில் உடுத்து காத தூரம் மணம் பரப்பும் புத்தம் புது மலர் மாலைகளைப் பூண்டு, களபச்ஙாந்தணிந்து, பொன் நகைகளால் அணி செய்யப் பெற்ற பொம்மையாய்க் கூற்றன் ஏந்திய வாட் கண்ணினளாய்க், கடற் பவளத்தின் நீண்ட துறைகளிலே முத்துக்களைக் கோத்தது போலத் தன் வெண் பற்களைக் காட்டிக் கொண்டு காந்தரி நின்றாள்!

அவள் கண்களிலே ஒரு தாபம்... ஓர் அழைப்பு....

அவள் கணிகை! நாட்டியக்காரி! பரத்தை!

அமிர்தம் பூசிய விஷம் என்பதை அறிய மாட்டாத வாலிபர்கள் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றனர்.

மெல்லென்றரற்றும் சிலம்பணிந்த இடது பாதத்தின் மேல், வலக்காலை வைத்து. ஒருக்களித்த நிலையின் பொற்றூணிற் சாய்ந்து கொண்டு, கண்களிலே ஓர் அழைப்போடும், இதழ்க் கடைகளிலே ஒரு தாபத்தோடும் கண்டோர் எவரையுமே தன் குறுநகையில் கொக்கி போட்டிழுத்துக் கொண்டு காந்தரி ஆடத் தொடங்கினாள்.

மலையின்மீது மயில்போல, அகிற்புகையில் தோய்ந்த தன் மென் துகிலை விரித்து அங்கங்களின் குழைவையும் திரட்சியையும் வெளிக் காட்டி தாள லயந்தவறாது அவள் ஆடினாள்!

விரித்த மேகக் கூந்தலிடையே மின் வெட்டும் முகத்தை இப்படியும் அப்படியும் வெட்டி, கண்களிற் காமத் தீயைக் கூட்டி, அகிற்புகையின் கம்மென்ற சுகந்தத்தை, அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கும் காமுகர்களுக்குத் தூதாக்கி அவள் ஆடிளாள்!

கோலமிட்ட அவள் முகமும், அங்கங்களும் அவளது அகவிருளை மறைத்து ஒளிசெய்யக் காந்தரி ஆடிக் கொண்டேயிருந்தாள்!

வண்டாய்ச் சுழலும் அவள் கண்களிற்தான் எத்தனை தாபம்! ஓர் நோக்கிலே அவற்றில் காமத் தீ எழும்! அடுத்த நோக்கில் சினம் பொங்கி அச்சுறுத்தும்! திரண்ட மார்பும், குழைந்த புஜங்களும், ஒல்கிய இடையும் எல்லாமே கண்டோரைக் கிறங்க வைக்கக் காந்தரி ஆடிக் கொண்டேயிருந்தாள்!

* * *

வழி நடத்து இளைத்து வந்த அவ்விருவரும் அவள் ஆட்டத்தைக் கண்டு நெட்டுயிர்த்து நின்றனர். மேகத்தினால் மூடப்பட்ட சூரியனைப் போலத் தன் தரித்திரக் கோலத்திலும் காந்தியுமிகழ்ந்து கொண்டு இருந்த உலக நாயகி, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாய், அமிர்தம் பூசிய விஷமாய், அழகு மிக்க எட்டிக் கனியாய்க் கண்டோரை மயக்குவிக்கும் லளிதத்தோடும், லாவண்யத்தோடும் நர்த்தனஞ் செய்து கொண்டிருக்கும் காந்தரியை ஆதுரத்தோடும் அனுதாபத்தோடும் பார்த்தாள்!

ஆட்டத்தின் சுழற்சியில் எங்கெல்லாமே கண்களை ஓடவிட்ட காந்தரியும் 'சொற்கடந்த சுந்தரி'யின் பார்வையைச் சந்தித்தாள்!

ஒரு கணந்தான்!

மனுக் குலத்தின் மீட்பவரை தன் உதிரத்திற் தாங்கிய தேவியின் அருள் நோக்கிற் காந்தரியின் பாவங்கள் கரைந்தன!

கடற்பவளத்தின் நீண்ட துறையிலே வெண் முத்துக்களை கோத்தது போலத் தன் பவள இதழ்களிடையே வெண்பற்கள் மின்னச் சிரித்துக்கொண்டு இருந்த கணிகை இப்போது சிரிக்கவில்லை!

அழுதாள்!

அவளது கண்­ரில் அவள் பாவங்கள் கரைந்து கொண்டு இருந்தன. ஞான சூரியனைக் கண்டதினால் அவள் மனதில் அந்தகாரம் விலகிக்கொண்டு இருந்தது.

அந்த விலகலிற் காந்தரி, கண்டோரை மயக்கும்படி தான் அணிந்திருந்த பொன் அணிகளைக் கழற்றி எறிந்தாள். பூமாலைகளைப் பிய்த்து வீசினாள் இசைமிழற்றிக் கொண்டிருந்த வீணையையும் தாளலயங் கொட்டிக் கொண்டு இருந்த முழவையும் சிதைத்தாள். அடுத்த கணம் மேகத்துட் புகுந்துயர்ந்த தன் மாடத்துட் புகுந்து, தன் பஞ்ச புலன்களும் செய்த பாவங்களை எண்ணி அழுது கொண்டெயிருந்தாள். பெத்லேகம் நகரிலே இராத்தங்குவது எங்கே? என்ற கேள்விக் குறியோடு மரியன்னையும் மாமுனி சூசையும் தம்வழியில் மீண்டும் நடந்தார்கள்!

சிந்தாமணி 1969
...............

பாசம்

ஆயிரந் தலைகளையும் உயர்த்திக்கொண்டு சீறி வரும் நாகேந்திரனைப் போலக் கடல் பொங்கி குமுறியடித்துக் கொண்டு இருந்தது. அநாதியான கடவுளைப் போல ஓயாது குமுறியடித்துக் கொண்டு இருக்கும் பொங்குமாங் கடலின் இரைச்சலோடு போட்டியிட்டுக் கொண்டு, மரக்கலந் தரும் செல்வப்பொருட்டால் தாம் பிறந்த நிலத்தை விட்டுப் போந்த பரதேசிகள் பலரின் குரலும் சேர்ந்து ஒலித்தது. பொன்னும் மணியும், தூதுந் துகிரும், பூவும் புகையும், சுண்ணமுஞ் சாந்தமும் விற்பவர்கள் வீதியைப் பரப்பிக்கொண்டு வெகு வேகமாகப் போய்க் கொண்டும், வந்துகொண்டும் இருந்தனர். யவனர், துலக்சர், மிலேச்சர், தமிழர்...அப்பப்பா! எத்தனை சாதிகள்!! எத்னை குரல்கள்....

ஆனால் பொறிக் கெட்டுகின்ற இத்தனை இரைச்சலுக்கும் மேலாக, பரதேசி ஒருவன் சொல்லிய அந்த வரிகள், அவர் புலனைத் தொட்டு, அவர் அந்தராத்மாவில் எதிரொலித்துக் கொண்டு இருந்தன. 'காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே' என்று, அந்த ஒலிப்பிலேயே, வீதியின் இரு மருங்கிலும் வெள்ளம்போல வழிந்துகொண்டு இருக்கும் ஜனக் கும்பலினூடாகத் தண்­ரில் மிதக்கும் எண்ணெயைப் போலச் சென்று கொண்டு இருந்தார் செட்டியார். பொருளைப் பொன்னாக மாற்றுவதற்காகத் தொண்டை வரளக் கத்திக் கொண்டிருந்த அங்காடிக்காரரிகளிடம் அவருக்கு ஓர் அனுதாபம், ஒர் பரிவு ஏற்பட்டது. இவர்கள் ஏன் இப்படிக் கத்திக்கொண்டிருக்கிறார்கள்? யாருக்காகச் சம்பாதிக்கிறார்கள்? ஏன் சம்பாதிக்க வேண்டும்? என்ற கேள்விகள் அவர் உள்ளின் உள்ளே ஒன்றன்பின் ஒன்றாய் சங்கிலிக் கோவையாய், அந்தமே இல்லாத சூக்கும தத்துவமாய் எழுந்து கொண்டேயிருந்தன. அந்தக் கேள்விகளாற் குட்டை குழம்பிய அவர் மனதிலே, சேற்றிலே பட்டும் படாமலும் வேர்விட்டு, நீர்க் கீழ்ப்பரப்பில் அசைந்தாடிக் கொண்டு இருக்கும் பாசித் திரையைப் போல அந்தப் பரதேசியின் வார்த்தைகள் அசைந்தாடிக் கொண்டு இருந்தன. 'காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே'.

இந்த வேதாந்த நடையிலேயே செட்டியார் சத்தமும் சந்தடியும் நிறைந்த அங்காடி வீதியை விட்டு வைசியர் வதியும் வீதிக்க வந்து விட்டார். அஸ்தமனச் சூரியனின் செங்கிரணங்கள் வீதியின் இருமருங்கும் நிறைந்து நின்ற வேயாமாடங்கள் மீதும், மாளிகைகளின் மீதும், மான்கண்கள் போலக் கோலஞ் செய்த சாளரங்களினூடே தோன்றும் சந்திரவதனங்கள் மீதும் பட்டு, அக்காவிரிப் பூம்பட்டினமே பசந்து பொன்னிற மூட்டப்பட்டதாய் அழகாகத் தோன்றிற்று' நேற்றுவரை செட்டியாருக்கு மாலைச் செவ்வானம் தன் இளம் மனைவியின் நாணிய முகத்தைத்தான் நினைவூட்டிற்று. அதே செவ்வானம் இன்று கொழுந்து விட்டெரியும் சிதைத் தீயாய், மனிதனின் ஆசாபாசங்களைச் சட்டெரிக்க வல்ல நியமத் தீயாய், எப்படியெல்லாமோ அவருக்குப் பட்டது. ஆனாலும் தன்னைத் தானே பொசுக்கிக் கொள்ள மாட்டாத தீயைப்போல அவர் மனதிற் தோன்றிய விசாரங்களே ஒரு பேராசையாய், கட்டுக்குள் சிக்கிவராத சித்து விளையாட்டாய், எவ்வி எவ்விக் குதித்து அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. நேற்று இருந்த மண அமைதி இன்றைக்கில்லை. நித்திய மோனத்தை, மகா சாந்தியை அடைந்துவிட அவர் மனது பண்ணும் சேஷ்டைகளில் அவருக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது. பேரமைதிக்கு முன் சீறியடிக்கும் பெரும்புயலா இது? ஒன்றுமே விளங்கவில்லை. செட்டியார் நடந்துகொண்டே இருந்தார்.

'வீட்டிலே தலை வாயிலே' 'அவள்' காத்துக் கொண்டு நிற்பாள். அவள் அன்பு என்னை இடைமறிக்கும்.... சை! அன்பாவது மண்ணாவது; எல்லாம் வெறுஞ் சாகசம்... அவர் மனம் வெறுத்துக் கொண்டது. மறுபடியும்....

பெற்று வளர்த்துப் பேராகிவிட்ட அன்னை, அவள் கண்­ர் என் லட்சியத்திற்குக் குறுக்கே நிற்கும்? தங்கை... அவள் பிள்ளைகள்... வேண்டாம் சம்சார பந்தத்தில் அல்லாடும் மனிதனுக்கு அவை வேறு இரட்டை தாழ்ப்பாள்கள்! எல்லாம் மாயை. ஒன்றுமே சதமல்ல... திரும்பவும் அவர் உள்ளச் சுவரிலே அந்த வரிமோதி எதிரொலித்தது. 'காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.'

நடந்துகொண்டே வந்த செட்டியார் வீட்டுவாயிலை அடைந்து விட்டார். தலைவாயிலிலே அவர் மனைவி பூசி மினுக்கிய குத்துவிளக்கைப் போல அவர் வரவைக் காத்து நின்று கொண்டிருந்தாள். ஆனால் செட்டியாரின் 'ஞானக் கண்களில்' புழு நெளியுந் தசைக் கூட்டம் ஒன்று தான் பட்டது!

செட்டியாரின் குறாவிய முகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மையார் வியப்போடு கேட்டாள்: "மரக்கலங்கள் இன்னும் வரவில்லையா?"

"ஏன் வர வேண்டும்? இந்தப் பொன்னும் மணியும்யாருக்கு வேண்டும்?" என்று விரக்தியோடு பதிலளித்துவிட்டு மான் தோலிற் சம்மணங்கூட்டிக் கொண்டு இருந்தார் செட்டியார்.

அவர் எதிர்பாராத போக்கைக் கண்ட மனைவி "ஏன் இப்படிக் கீழே இருந்து விட்டீர்கள். கட்டிலில் இருங்கள். காலைப் பிடித்து விடுகிறேன்" என்றாள் பணிவோடு.

"கட்டிலும் பஞ்சணையும் ஏன்? இந்த ஊத்தைச் சரீரத்தைக் கிடத்துவதற்குக் கட்டாந்தரையே போதும். நீ போ; முன்னால் நிற்காதே; போ" என்று சீறி விழுந்தார் செட்டியார்.

உரிமையோடு, ஊரறிய, ஒரே தலையணையில் தலைவைத்துப் படுக்க அனுமதி பெற்ற ஜ“வனுக்குத்தான் அன்று தொடங்கிய வாழ்வு எந்தக் கதியில் போகம் என்ற உண்மை தெரிந்திருக்குமாம். அது எந்தக் கதியில் போனாலும், இந்தக் கதிக்குப் போகுமென்று செட்டியாரின் மனைவி கனவுகூடக் காணவில்லை. இன்று அவர் போக்கைக் கண்டபோது அவள் தவியாய்த் தவித்தாள்.

செட்டியாரின் தங்கை ஒரு சந்தேகப் பிராணி. அண்ணனுக்குச் சித்தம் சுவாதீனத்தில் இல்லை என்றே தீர்மானித்து விட்டாள். காலங் காலமாக அரும்பாடுபட்டுத் தேடிய திரவியமனைத்தையும், பிச்சைக்காரர் கட்கும், கோயில்கட்கும், பக்தர்கட்கும் அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருப்பதை அவளாற் தாழ முடியவில்லை. அநியாயமாக அள்ளிக் கொடுத்தது போக மீதிப் பொருளையாவது காப்பாற்ற அண்ணனைக் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட முயன்ற நாட்களும் உண்டு.

மகனின் போக்கு அன்னையின் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டியதுபோல இருந்தது. 'பொன் போகட்டும். குடும்பத்தில் கௌரவமே தொலையட்டும்; ஆனால் மகன் மட்டும் 'அந்தரத்தியானமாகி' விடாமல் வீட்டோடு இருந்து விட்டால் அது ஒன்றே போதும், என்றிருந்தது அவளுக்கு.

ஆனால்....

* * *

இப்பொழுது செட்டியார், காவிரிப்பூம்பட்டினத்திலே வைசியருக்குள்ளேயே பெரிய கையாய், லகாரம் பொன்னுக்கதிபதியாய்,திரைகடலெல்லாம் கப்பலோட்டும் வணிகர் அல்ல. அவர், மனைவி, அன்னை, உற்றார் சுற்றம் எல்லாவற்றையுமே உதறித் தள்ளிவிட்டுச் சட்டை கழற்றிய பாம்பைப் போலக் கிளம்பியும் வருடமாகி விட்டது! நாலுமுழத் துண்டோடு, கையிலே கப்பறையை ஏந்திக்கொண்டு கிடைத்ததைத் தின்று, மடத்துக்கு மடம் கொடுங் கைக்குக் கீழ் தலையை வைத்துத் தூங்கும் 'கட்டையாக' மாறிப் போனார். இந்த சூக்குமமான காரியம் இவ்வளவு சுலபத்தில் எப்படிக் மைகூடிற்று என்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. சீனத்துப் பட்டையும், ஈழத்து முகத்தையும், யவனத்துப் பளிங்கையும், தமிழ்நாட்டுப் பொன்னுக்கு மாற்றுவதை எண்ணிக் கனத்துப் போயிருந்த அவர் நெஞ்சு, காற்றைக் கிழித்துக் கொண்டு 'ஜிவ்'வென்று பறக்கும் அடைக்கலாங் குருவீயைப் போல இலேசாகச் சுதந்திரமாகப் போய் விட்டதே என்ற ஓர் ஆத்ம திருப்தி அவருக்கு.

ஆனாலும் பிரம்மச்சாரியின் மனதே தசமக்கடமாம். செட்டியார் பிரமச்சாரிகூட இல்லை. இளமையிலே பெண்ணின்பத்தை நுகர்ந்தவர். ஆறு உட்பகையையும் கடிந்து நிர்மலனாகி விட்டதா எண்ணிக் கொண்டாலும் அவர் ஐம்புலங்காளலும் அனுபவித்த பெண்ணாசை, வைக்கோற் போருக்குள் மறைத்து கிடந்த நெல்மணியில் முளைபோலப் பீறிக்கொண்டு தோன்றத்தான் செய்தது. அந்த ஆசையை முளையிலேயே கிள்ளிவிட அந்தக் கட்டை பட்ட கஷ்டங்கள்...அப்பாடா!

யாக்கை, அதன் நிலையாமை, தன்னையறியாமலே கன்னில் வளரும் மூப்பு, அதன் தொடர்ச்சியாகக் 'கதும்மென' வரும் மரணம் என்றெல்லாம் தத்துவங்களை உள்ளே எழுப்ப வேண்டியிருந்தது. உலகின் இயற்கையாய், இயற்கையின் நாளாந்த விளையாட்டாய் அந்த விளங்கிக்கொள்ள முடியாத சூட்சுமமாய் மாறி மாறி வரும் மரணதத்துவத்தில் தன்னையிழந்து, மூண்டெழும் காமத் தீயை அடக்க எதிராறு நீக்கினார் செட்டியார். தோல்வி மனப்பான்மை, பெண்ணைப் பற்றி விபரீத தத்துவங்களை எல்லாம் சிருட்டித்தது. 'பெண் பேய், மணிதனைப் பாசவலையிற் பிணித்து, அவனை நேரே நரகக் குழிக்கு இட்டுச் செல்லவந்த அவனை நேரே நரகக் குழிக்கு இட்டுச் செல்வந்த பைசாசத் தூதன்' என்றெல்லாம் அவர் மனம் ஆற்றாமையாற் குமுறியது. ஆனாலும் அவருக்குத் தான் வெள்ளி பெற்றுவிட்டதாகவே நினைப்பு. நினைவிலிருந்து பெண் ஆசையை நீக்கி விட்டேன் என்ற கர்வம்! எல்லா கழியது காமுறும் ஈயைப் போலப் பேய் என்று வெறுத்துத் தள்ளிய் பெண்ணையே இச்சிக்கும் அவர் மனத்தில் செய்கையை மறைத்துக்கொள்ள, அவர் இதயம் எழுப்பிய ஆற்றாமையின் எதிரொலி. இந்த எதிரொலிகட்கு இடைய ஆயிரஞ் சங்குகட்கிடையே முழங்கும் பாஞ்சசன்யத சங்குபோல அந்தக் குரல் கேட்டது "அப்பா; போறியாடா மகனே" என்று.

உள்ளத்தில் அந்தக் குரல் ஒலித்ததும் அந்தக் 'கட்டை' முடக்கிக் கொண்டு கிடத்தியிருந்த தன் கட்டையை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்தது. ஒன்றையும் காணவில்லை! "அம்மாவாவது என்னை அழைப்பதாவது? என்னைத்தானே அம்மையப்பன் அழைத்துக் கொண்டானே. அவனழைப்பை விடவா? எல்லாம் வெறும் வெளுமை, 'மாயை" என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டது 'கட்டை'.

மடத்தின் எதிர்த்த மூலையில் தூணில் சாய்ந்து கொண்டு 'சிவமூலிகை'ப் பிரயோகம் செய்துக் கொண்டு இருந்த இன்னொரு கட்டை, "ஆமாம் என்னமோ பேசிக் கொண்டிருந்தீர்களே யாரோடு?" என்று கேட்டது "சிலிம்பியைக் கையிலெடுத்துக்கொண்டு.

"யாரோடுமில்லையே" என்று வெட்கந் தேய்ந்த குரலில் பதிலளித்தார் செட்டியார்.

"ஓகோ"; பஞ்சத்துக்காண்டியா? சம்சாரத்தோடு கோவிச்சுக் கொண்டு வந்ததோ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டது இரண்டாவது கட்டை.

செட்டியாரின் மனத்திற்குள் திக்கென்றது. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்றார்.

"எல்லாம் சரியாய்ப் போயிடும். இதில் ஒரு 'தம்'பிடி" என்று சிலிம்பியை நீட்டியது பரம்பரைச் சாமி!

"சை! பாசபந்தங்களில் உழலும் மனதை ஒரு நிலைப்படுத்தி மோன நிலையை அடைவதற்கு இது ஒரு வழியா?" என்று சொல்லிக்கொண்டே வெறுப்போடு எழுந்து நடந்தார் -ச்ட்டியார். அவர் மனது சாந்தி பெறவில்லை.

* * *

குடமுடைத்து, கொள்ளிவைத்துப் பிதிர்க்கடனை நிறைவேற்றி, தன் குலத்தையே விளங்க வைக்க வந்த பிள்ளை கண்காணாமற் போய்விட்டானே என்ற ஏக்கம் கிழவியைப் படுக்கையில் கிடத்துவிட்டது. முதுமையினால் தளர்ச்சியடைந்திருந்த அவள் பேரிடி போன்ற இந்தச் செய்தியில் எமனையே எதிர்கொண்டழைக்கத் துணிந்து விட்டாள்! சத்திரங்கள், சாவடிகள் தோறும் ஆள்விட்டுத் தேடித் தேடி அலுத்துப் போன அவள், அன்று செத்தே போய்விட்டாளா!! அவள் மகனை எங்கு இருந்து எப்படிக் கொண்டு வந்து அவளுக்குக் கொள்ளிவைப்பது என்ற கவலை கிழவியின் இனத்தவர்களை எல்லாம் வாட்டி வதைத்தது. மூன்று வருடங்களாக அகப்படாதவன் இன்றைக்கா வந்துவிடப் போகிறான்? ஆனாலும் கிழவிக்கு அதிர்ஷ்டமிருந்தால்...?

தேடிக்கொண்டீ வந்தவர்கள் அந்தச் சத்திரத்தில் இருந்த கட்டையைக் கண்டு மயங்கி நின்றனர். குழிவிழுந்த கண்கள், விலாவெலும்பெடுத்துப் போயிருந்த உடல், சில நரை மயிர்களோடு கூடிப் பன்றிமுள்ளைப் போலச் சிலிர்த்துக் கொண்டு இருந்த கறுத்தத் தாடி, கொம்பன் புளியங்காயைப் போலச் சடையடித்துப் போய்க் கிடந்த தலை, எல்லாமே ஆளை உருக்குலைத்து வைத்திருந்தன. ஆனாலும் இவன்தான் அவன் என்று அவர்கள் மனம் காரணமற்றக் கூறியது. பேரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்!

வந்தவர்கள் இன்னார் என்று தெரிந்து கொண்ட கட்டைக்கு ஏனோ அழவேண்டும் என்றிருந்தது. சிரிக்க வேண்டும் போலவும் தோன்றியது. ஆனாலும் தன்னை வெளிக்காட்டினால் பந்தத்திலுழல வேண்டுமே என்ற நினைப்பு மேலிடவே "எனக்கு அப்படியெல்லாம் பேர் இல்லை. சும்மா கட்டை என்றே சொல்லுங்கள் அப்பா" என்றது.

குரல் செட்டியாரைக் காட்டிக் கொடுத்து விட்டது! வந்தவர்கள் இரு மணிக்கட்டுகளையும் பிடித்துக்கொண்டார்கள் பலமாக. செட்டியார் திமிறினார்.

"உன் அம்மா செத்துப் போயிட்டா. நீ கொள்ளி வச்சிட்டு போறமாதிரிப் போ" என்றார்கள் பிடித்திருந்தவர்கள்.

"ஆ! உண்மையாகவா?" என்று தன்னை மறந்து அலறியது கட்டை. 'அம்மா செத்துப் போய் விட்டாள்' என்ற அந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மூன்றாண்டுகளாக அசாத்திய சாதனையோடும் துணிச்சலோடும், போராட்டத்தோடும், அறுத்தெரிந்த எல்லாப் பாசங்களும் அந்தக் கட்டையிற் தொத்திக் கொண்டன! கண்களில் நீரை வழிய விட்டபடியே முன்னே ஓடிப் போனார் செட்டியார். இப்போது 'காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே' எனற் பரதேசிக் குரல் அவர் உள்ளத்தில் ஒலிக்கவில்லை. தான் முன்னறிந்து பின் மறந்த தெய்வமான அன்னை செத்துப் போய்விட்டாள் என்ற யதார்த்த உண்மைதான் அவர் மனதில் நிறைந்திருந்தது. வேகமாக வேகமாகவே நடந்தார் செட்டியார்.

* * *

அடுக்கப்பட்ட சிரையிலே அன்னை கிடத்தப்பட்டு இருந்தாள். அந்தக் குறுகிய உருவத்தைப் பார்த்து ஆறாகக் கண்­ர் வடித்துக் கொண்டு இருந்தார் செட்டியார். 'முகத்தோடு முகத்தைப் பொருத்தி, மகனே என்றழைத்த இந்த வாய்க்கா அரிசியிடப் போகிறேன்? இந்த உடலுக்கா கொள்ளி வைக்கப் போகிறேன். ஐயோ...!'

எல்லாச் சடங்குகளும் முடிந்து விட்டன! கடைசியாய்ச் சிதையிலே கொள்ளி வைத்துக்கொண்டே அவர் பாடினார்:

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கை கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ மூள்க மூள்கவே!

ஆம்; திருவெண்காடர் இட்ட தீ அவர் அன்னையின் சடலத்தைச் சுட்டெரித்தது. ஆனால் அவர் அன்னையிட்ட தீ, அவருக்குள் எதைச் சுட்டெரித்ததோ?

சுதந்திரன் 1953
..................


வலை

குடாக்குடல் உள்வாங்கி நெடுந்தூரம் ஒடி உப்பங்கழியாய்ப் பரந்துகிடந்தது. அந்த உப்பங்கழியின் சங்கமத்திட்டில், மணல் மேடையில் நான் நின்று கொண்டிருந்தேன்.

உப்பங்கழியில் வீச்சுவலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காலை நேரத்து வெய்யில் முதுகுத் தோலை உரித்து விடுவது போலச் சுள்ளென்றடித்துக் கொண்டிருந்தது. சூரிய கிரணங்களைத் தன்னுட் பிரதிபலித்துக் குடாக்கடல் தகதகத்து மின்னிக் கொண்டிருந்தது. தூரத்தே தெரிந்த வள்ளங்களும் விசைப்படகுகளம் தங்கள் மீன் பிடியை முடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.

இன்னுஞ்சற்று நேரத்தில் அந்தச் சங்கமத்திடல் மணற்றிட்டுகளை கட்டிவிடும். மீன் வாங்குவதற்க ஆயத்தமாகச் சைக்கிளிற் பெட்டிகளைக் கட்டிக்கொண்டு மீன் வியாபாரிகள் வந்துவிட்டார்கள். மணற்றிட்டின் பின்னாற் பசுமையாய்ப் பரந்து கிடந்த அடம்பன் கொடிகளில் ஊதா நிறப்பூக்கள் மின்னிக் கொண்டிருந்தன. அந்த அடம்பன் கொடிப்பசுமைக்கு அப்பால் நீண்டு நிமிர்ந்து குடைவிரித்திருந்த தென்னை மரங்களின் நடுவே கீற்றுக் கொட்டகையிலிருந்து தேநீர் தயாரிக்கும் ஓசை கடகடவென்று கேட்டுக் கொண்டிருந்தது. கொட்டகைக்கு முன்னே நீண்டு கிடந்த தென்னங்குத்திகளில் குந்திக் கொண்டு பணிசைக் கடித்துத் தேநீரைச் சுவைத்துக் கொண்டிருந்தனர் மீன் வியாபாரிகள்.

நான் உப்பங் கழிப் பக்கமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். கொழும்பிலிருந்து வந்த என் மகனுக்க நண்டு வேண்டுமாம். நண்டுக் கூட்டுக்காரர்கள் கரைக்குவர இன்னும் சற்று நேரம் ஆகுமாம். அதுவரை நான் தரித்திருக்க வேண்டும். நான் உப்பங்கழிப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தேன். காலை வெய்யில் முதுகுத்தோலை உரித்துக் கொண்டிருந்தது.

எதிரேயிருந்த தென்னந்தோப்புக்குள் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்த குடிசைகள் ஒன்றிலிருந்து இரண்டு சிறுவர்கள் உப்பங்கழியின் கரையோரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒருவனது கழுத்தைச் சுற்றி வலைத்துக்கொண்டு ஒன்று சால்வையாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

நான் அச்சிறுவர்களைக் கவனித்தேன். பத்துப் பதினொரு வயதிருக்கும். அகநானூறு கூறும் நெய்தல் நிலத்துப் புன்தலைச் சிறுவர்கள். தங்கள் சாரத்தை மடித்துக் கொடுக்குக் கட்டியிருந்தார்கள். உடம்பிலே சட்டையில்லை. வலைத்துண்டுதான் மார்பிற் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த வலைத்துண்டும் கண்ணறுத்த பழைய வலை. இந்த வலைத்துண்டைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? எனக்கு விளங்கவில்லை.

நான் அந்தச் சிறுவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் உப்பங் கழியின் கரையோரமாக யமன் திக்கான தென்திசையை நோக்கி யமகிங்கரர்களைப் போலப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை சென்ற அந்த யமகிங்காரர்கள் உப்பங்கழியின் கரையிலே கரை கட்டி வளர்ந்திருந்த ஆற்றுக்கோரைகளின் ஓரமாகத் தங்கள் வலையை விரித்து விட்டுச் சற்றுத் தூரமாகச் சென்று மேட்டிலேறித் தென்னை மரங்களின் பின்னாற் பதுங்கிக் கொண்டார்கள்.

அந்தச் சிறுவர்கள் எதைப் பிடிக்க வலை கட்டியிருக்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. நிச்சயமாக மீன் பிடிப்பதற்காக அல்ல. மீன் பிடிப்பதாயின் ஆற்றுக்குள் அல்லவா வலையைக் கட்டவேண்டும். ஆனால் இவர்கள் கரையிலே வலையைக் கட்டியிருக்கிறார்கள்.

எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போமே என்ற எண்ணத்துடன் நானும் அடம்பன் கொடிகளைத் தாண்டிக் கரையிலிருந்த தேநீர்க் கடையையும் தாண்டி தென்னந்தோப்பினுள் நுழைந்து, தென்னை ஒன்றிற் சார்ந்து நின்றுகொண்டு சிறுவர்களையும் அவர்கள் விரித்துள்ள வலையையும், நான் வந்த காரியத்தைக்கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சார்ந்து கொண்டு நின்ற தென்னை மரத்திற்குத் தெற்காக, வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த ஒரு பனைமரம். அந்த ஒற்றைப் பனைமரத்தில் ஒரு பறவைக்கூடு.

அந்தக் கூட்டை நான் கூர்ந்து பார்த்தேன். கடல் நாரை ஒன்றின் கூடு அது. சுள்ளிகளையும், அலம்பல்களையும் அடுக்கிக் கோத்த அந்தக்கூடு பனை உச்சியில் வட்டினிடையே இருந்தது. படைமட்டையில் ஆணும் பெண்ணுமாக இரு சின்னஞ்சிறிய நாரைகள், ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

கூட்டினுள்ளே அவைகளின் குஞ்சுகள் இருந்தன. அவைகளின் 'கீச்கீச்' என்ற சத்தம் என் காதுகளில் விழுந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை!

நான் அந்தக் கூட்டையும் நாரைகளையும் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென ஆண் நாரை உயர எழுந்து தெற்குப் பக்கமாகப் பறந்து சென்றது. தன் பேடைக்கும் குஞ்சுகளக்கும் இரைதேடச் செல்கின்றதோ, அது யமன்திக்கான தென்திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பறந்து சென்ற நாரை கண்ணுக்கு மறைந்ததும், நான் மீண்டும் உப்பங்கழியை நோக்குகிறேன். வீச்சுக்குப் போன மீனவர்கள் எல்லாம் உப்பங்கழியை விட்டு வெளியேறிவிட்டார்கள். அவர்கள் தத்தம் பறிகளிற் கொண்டு வந்த காரல், திரளி, மணலை போன்ற மீன்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. கடலுக்குச் சென்ற வள்ளங்கள், விசைப்படகுகளிற் சிலவும் கரைக்கு வந்துவிட்டன. சீலாவும் பாரையும் சுறாவும் அலைகளிலிருந்து இறக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருந்தன. நண்டுக்கூட்டுக்காரர்கள் இன்னமும் வரவில்லை. நான் இன்னமும் தாமதிக்க வேண்டும்!

தாமதித்தேன்.

ஒரு மணித்தியாலம் சென்று விட்டது! நான் நண்டுக் கூட்டுக்காரர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் அசந்து இருக்கையில் நான் ஏற்கனவே கண்ட இரு மீனவச் சிறுவர்களும் தங்கள் வலைகளோடு குதூகலமாக வந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவனின் கைகளில் நாரை ஒன்று இருந்தது!

அவர்கள் எதற்கு வலை விரித்தார்கள் என்பது இப்போது எனக்கு விளங்கிவிட்டது. பனைமரத்திலிருந்து தெற்கு நோக்கிப் பறந்த நாரைதான் இப்போது அவர்கள் கைகளிற் சிக்கிக் கொண்டிருக்கிறது! அது தன் சிறகுகளை அடித்துத் தன்னை விடுவீத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தது.

நான் பனைமரத்தை நிமிர்ந்து பார்க்கிறேன், பனை மரத்திலிருந்த பெண் நாரை மரத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு மாரடித்துக் கதறும் பெண்ணைப் போலச் சிறகுகளை அடித்துக் கதறிக் கொண்டிருந்தது. கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுகளும் அபயக் குரலெடுத்துக் கதறிக் கொண்டிருப்பதாக என் பிரமை!

ஐயோ! அந்தக் குஞ்சுகளுக்கும் தாய்க்கும் யார் இனி இரை தேடிக் கொடுப்பார்கள்? அவைகள் எப்படி வாழப் போகின்றன?

என் மனம் அழுகிறது. இதயத்தை தகித்து நின்ற ஏக்கத்தின் சுவாலையாய் நெடுமூச்செறிந்தேன். நான் குமைந்து போனேன்.

சைக்கிள் ஹாண்டிலில் நண்டுப்பையைக் கொளுவிக் கொண்டு, நான் சைக்கிளை உருட்டியபடியே தென்னஞ் சோலையினூடே, மனிதர் நடந்தது விழுத்திய தடத்தினூடே சென்று கொண்டிருந்தேன். ஒரு பெர்லாங் தூரம் நடந்தாற்தான் மெயின்ரோட்டை அடையலாம். அதுவரை சைக்கிளை உருட்டித்தான் செல்லவேண்டும்!

தென்னை மரங்களினூடே அங்குமிங்குமாக மீனவக் குடிசைகள், குடிசைகளின் முன்னால் இரு தென்னை மரங்களைத் தொடுத்துக் கட்டிய கம்புகளின் வலைகள் காய்ந்து கொண்டிருந்தன. வலைகளின் பக்கலில் தோணிகளின் சுக்கானான சவளும், துடுப்பு வலிக்க உதவும் தண்டு மரங்களும் (தெண்டு மரங்கள் இலக்கணப் பிரயோகமாயிருக்கலாம்) சார்த்தப்பட்டிருந்தன.

நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் தென்னை மரங்கள் குடை கவித்துச் சூரியக் கதிர்களை மறைத்திருந்தன. மெதுவாக அசையும் சோழகத்தில் கருவாட்டு மிதந்து வந்து கொண்டிருந்தது.

நான் சைக்கிளை உருட்டியபடி நடந்து கொண்டிருந்தேன்.

தூரத்தே ஒரு குடிசையிலிருந்து அவலச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அக்குடிசையின் முன்னால் மக்கள் குழுமி நின்றனர்.

குழுமி நின்ற மக்களின் கசமுசச் சப்தங்களுக்கு மேலாக 'என்ர நாலு குஞ்சுகளையும் எப்படிக் காப்பாத்தப் போறன் ஐயா' என்ற பெண்ணின் அவலக் குரல் காற்றில் மிதந்து வந்து என் இதயத்தைத் தொட்டது.

நான் என் சைக்கிளைத் தென்னை மரம் ஒன்றிற் சார்த்தி வைத்துவிட்டு அக்குடிசையை நோக்கி நடந்தேன். குடிசையை நெருங்க நெருங்க அவலக் குரலும் ஒப்பாரியும் அதிகரித்துத் தெளிவாக என் காதுகளில் விழுந்தது.

குடிசையை அண்மித்து விட்டேன்.

எனக்கு நன்கு தெரிந்த சந்தியாகுவின் குடிசைதான். மீனவனுக்கே உரித்தான வைரித்த கரங்களும், பரந்த மார்பும், திடகாத்திரமான உருவ அமைப்புங்கொண்ட சந்தியாகுவின் குடிசை!

குடிசைக்குள்ளே மார்பிலும் தலையிலும் அடித்து அவன் மனைவி மார்த்தா குமுறி அழுது கொண்டிருந்தாள். ஒன்பது வயதுள்ள அவள் மூத்த மகளம் தாயை அணைத்தபடி அழுது கொண்டிருந்தாள். மற்றைய மூவரும் திகைப்பூண்டை மிதித்தவர்கள் போலப் பக்கத்தில் அமைந்து நின்று கொண்டிருந்தார்கள். நான் முற்றத்திற் குழுமிநின்றவர்களில் வயதடைந்த ஒருவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன்.

"விடியப்புறம் மூணு மணிக்கு எல்லாரையும் போலச் சந்தியாவும் கழிக்குள்ள வீசப்போனான் ஆனாத் திரும்பிவரல்ல. யாரோ பிடிச்சிற்றுப் போனாங்க எண்டு அவனோட போனவங்க சொன்னாங்க"

"யார் பிடிச்சிற்றுப் போனது?"

"யாரெண்டு தெரியும்? எல்லாரிட்டையும் துவக்கு இருக்கு. ஆமிக்காரனும் வச்சிருக்கான். பெடியங்களும் வச்சிருக்காங்க. மறைச்சட்டையும் எல்லாரிட்டயும் இருக்கு."

பனைமரத்து நாரையைச் செம்பளவச் சிறுவர்கள் பிடித்தது போலச் சந்தியாகுவையும் பிடித்துவிட்டார்கள் என்று எனக்கு விளங்கியது.

பனைமரத்தின் உச்சியிலே தன் கூட்டிலிருக்கும் குஞ்சுகளை யார் காப்பாற்றுவார்கள் என்று பெண் நாரைக் கதறிக் கொண்டிருக்கிறது.

இங்கே தென்னை மரத்தின் கீழுள்ள ஓலைக்குடிசையில், தன் நான்கு பிள்ளைகளையும் யார் காப்பாற்றுவார்கள் என்று, மார்த்‘ விம்மி வெடித்துக் கதறுகிறாள்.

(இக்கதையைப் படித்தவர்கள் வாய்ப்பிருந்தால் அகநாநூற்றின் 230ம் பாடலையும் படியுங்கள்)

வீரகேசரி'92
..............

வேர்கள்

விசுவவங்கத்தார் கொழும்புக்குப் போனார். அவர் கொழும்புக்குப் புதியவரல்ல. எண்பத்தி மூன்றாம் ஆண்டு வரையுள்ள இருபத்தைந்து ஆண்டுகள் கொழும்பிலே வாழ்ந்தவர். பிந்திய காலப்பகுதியில் அவர் ஒரு அரசாங்கத் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் என்ற உயர் பதவி வகித்தார்.

ஆனால் எல்லார்க்கும் பெய்த மழையாய்க் கொழும்பிலே தமிழர்களுக்கு அடி விழுந்தபோது அவரது நான்கு புத்திரர்களும் எப்படியோ ஒப்பிண்விசாவில் அகதிகளாக வெளிநாடு சென்று விட்டனர். விசுவலிங்கத்தார் தம் ஒரே மகளோடு தமது ஜனாதிபதியான யாழ்ப்பாணம் சென்றார்.

கொழும்பிலே உள்ளது உடையது எல்லாம் போய்விட்டாலும் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் அனுப்பின பணத்தில் தன் தயாதிக்காணியில் வீடுகட்டிக் கொண்டார். கோயில் குளம் என்று திரிந்தும், தன்னைப் போலொத்த ஓய்வூதியகாரரோடு அரசியல் பேசியும் அவர் பொழுது இன்பமாகவே போய்க் கொண்டிருந்தது. மகளுக்கு மாப்பிள்ளை தேடவேண்டிய ஒரே கவலைதான் என்றாலும் அதற்கு நான்கு அண்ணன்மார் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் அடிக்கடி நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சுக்களும் ஷெல் தாக்குதலும் உணவுப் பொருள் பற்றாக குறையும் மின்சாரமின்மையும் அவரை மீண்டும் கொழும்புக்குப் போக வைத்தன. மகளையும் அழைத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாகத்தான் கொழும்பு சென்றார்.

சில மாதங்கள் உறவினர் வீடுகளிலும் லொட்ஜுகளிலும் தங்கியவர் தனக்கென ஒரு பிளாட்டை தேடிக் கொண்டார். 'லிப்ற்'றேயில்லாத அந்த நான்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் அவரது பிளாட். முன்னால் அந்த மாடியில் இருப்பவர்கள் அத்தனை பேருக்குமே நடைபாதையாக விளங்கும் 'கொரிடோர்'. அதற்குப் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட தடுப்புச் சுவர் நீளமான அந்த அறையின் முன்பக்கம் பலகைகளாற் தடுக்கப்பட்டு ஒரு 'சிற்றிங்றூம்'. அதற்குப் பின்னால் படுக்கையறை, அதற்கும் பின்னால் சமையலறையும், பாத்றூமும், சிற்றிங்றூமிலிருந்து பாத்றூம் வரை செல்ல நீண்ட ஆனால் குறுகலான சாலை.

தந்தைக்கும் மகளுக்கும் அந்த பிளாட் போதுமானது தான்! முன்பக்க சிற்றிங்றூமிலே சோபாக்கள், சாய்வு நாற்காளி, வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, டெக்....

படுக்கையறையில் இரண்டு கட்டில்கள்.

பின்னாலுள்ள சமையலறையில் காஷ் குக்கர், குளிர்சாதனப் பெட்டி, சமையலறைக்கான உபகரணங்கள். அதற்கும் பின்னால் பாத்றூம், ஷவரில் எப்போதுமே தண்­ர் வரும்.

ஆனால் எழுபதைத் தாண்டிவிட்ட விஸ்வலிங்கத்தாரால் படிகளில் ஏறி இறங்கிக் கீழே வர முடியவில்லை. மூன்றாம் மாடிக் கொரிடோரின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம் வரை நடை. பல தடவைகள் நடந்து அலுப்பு ஏற்பட்டால் கொரிடோரின் ஓரமாக வந்து யன்னவைப் பிடித்துக் கொண்டு கீழே (காரோடும், பஸ்ஸோடும், காணலோடும்) கொழும்புத் தெருக்களைப் பார்ப்பார். அதில் அலுப்புத் தட்டினால் தூரத்தே உயர்ந்து தோன்றும் சிலிங்கோ கட்டிடத்தையும் தென் பக்கமாகத் தோன்றும் புனித லூசியா கோயிற் கோபுரத்தையும் பார்ப்பார். அப்படியும் அலுப்பு ஏற்பட்டால் சய்கதிரையிற் சாய்ந்து கொண்டு பத்திரிகை படிப்பார்; படித்து முடித்தால் சாய்கதிரையிலேயே அறிதுயில்! பின்னர் உணவு, நித்திரை இவைகள் தான் விசுவலிங்கத்தாரது நாளாந்த வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்!

பக்கத்து ப போர்ஷனிலிருந்த புறோக்கரிடம் ரெலிபோன் இருந்தது. அவர் ரெலிபோனை உபகோகிப்பதற்கு விசுவலிங்கத்தாருக்குப் பூரண அனுமதி தந்திருந்தார். அழைப்பு வரும் போதெல்லாம் வெளிநாட்டிலுள்ள தன் பிள்ளைகளோடு பேசுவதும் எப்போதாவது சனி ஞாயிறுகளின் தன்னைச் சந்திக்க வரும் தன் பழைய காரியாலய நண்பர்களோடு பேசுவதும்தான் அலுத்துப்போன தினசரி வாழ்க்கையின் இன்பமான பொழுதுகள்.

கனடாவிலிருந்து அவரது மூத்த மகன் பேசும்போது ஒருநாள் சொன்னான். 'அப்பா பத்மாவுக்கு கனடாவிலேயே மாப்பிள்ளை ஒழுங்கு பண்ணி விட்டேன். அவள் படத்தைக் காட்டிச் சம்மதமும் பெற்றாயிற்று, விரைவில் அவளை 'ஸ்பொன்சர்' பண்ணிக் கனடாவிற்கு அழைத்து இங்கேயே திருமணத்தையும் நடத்துவேன்'.

விசுவலிங்கத்தார் மகிழ்ந்து போனார் என்றாலும் ஒரே துணையாக இருக்கும் மகளையும் பிரிவதா?...

காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் கொழும்பிலே ஆசிரியராகப் பணிபுரியும் பத்மநாதன் அவரைத் தேடிக்கொண்டு வந்தான்.

பத்மநாதன் அவர் ஊரைச் சேர்ந்தவன். தூரத்து உறவினன். வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் வெளிநாடு போகத்தான் அவனுக்கும் ஆசை.

ஆமாம்; இந்த இனப்பிரச்சினையில் மூண்டபோர் எத்தனையோ பேரின் வாழ்க்கையை எப்படி எப்படியெல்லாமோ மாற்றியிருக்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் கூட அகதிகளாக வெளிநாடு சென்று லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள். இங்கு படித்த இளைஞர்களும் வெளிநாடு போக வக்கற்றதால் வாழ்க்கையையே வக்கரித்துக் கொண்டு நெஞ்சில் வேதனையோடும், விரக்கியோடும் வாழ்கிறார்கள்! அவர்களின் வேதனத்தால் வெளிநாட்டுப் பணத்தோடு போட்டி போட முடியவில்லை!

அன்றிலிருந்து பத்மநாதன் ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்தான் பின் ஞாயிற்றுக்கிழமைகளிலும், வாரநாட்களிற் சாயந்தரங்களிலும் வந்தான். அவனோடு பேசிக் கொண்டிருப்பதில் விசுவலிங்கத்தாரும் இன்பம் கண்டார்! பத்மாவுக்கும் அவன் பேச்சுத்துணை இன்பத்தைக் கொடுத்தது.

ஒரு சனிக்கிழமை வந்தவன் படச்சுருள் ஒன்றை நீட்டி "பொண்டாட்டி சொன்னாக் கேட்கணும்" என்ற புதிய படம் வெளியாகியிருக்கிறது. டெக்கில போட்டுப் பார்க்கலாம் என்று வாடகைக்கு எடுத்திற்று வந்தன்" என்றான்.

"நல்லதாப் போச்சு. எனக்கும் பொழுது போகல்ல. படம் போட்டுப் பார்ப்போம்" என்றான் பத்மா.

மதிய உணவின் பின் நடைபாதையின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம் வரைக்கும் நடந்து கடைத்த விசுவலிங்கத்தார் களைத்துப் போய் சாய்குதிரையில் துயின்று கொண்டிருந்தார். அவரைக் குழப்பாமல் எப்படிப் படம் போடுவதென்று பத்மநாதன் யோசித்தான்.

சாய்கதிரையிற் துயில்வதுபோலக் கிடந்த விசுவலிங்கத்தார் சற்று அசைந்து கொடுத்து "என்ர நெஞ்க்கவலிக்குது மகள்" என்று முனகினார்.

பத்மா பயந்து போனாள். தன் தந்தையாருக்கு என்னவோ ஏதோ என்று பதறினாள். இந்த அத்துவானத்திலே இவர் வந்ததும் நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணிக் கொண்டே, சமையலறைக்குள் சென்று ஹ’ற்றரில் நீர் சுட வைத்தாள். பத்மநாதன் விசுவலிங்கத்தாரின் நெஞ்சை இதமாக வருடிக் கொண்டிருந்தான்.

சமையலறைக்குள் இருந்து பத்மா கோப்பியோடு வந்தாள். பத்மநாதன் அவரைத் தூக்கி நிறுத்திக் கோப்பியை கடிக்க செய்தான். பத்மாவிடம் திரும்பி "பயப்படாதே பத்மா! எதற்கும் அப்பாவைக் கொஸ்பிற்றலுக்குக் கொண்டு போவது நல்லது" என்று கொண்டே பக்கத்துப் போஷன்களிற் குடியிருப்பவர்களின் துணையோடு விசுவலிங்கத்தாரை ஏறத்தாழத் தூக்கிக் கொண்டு கீழே வந்து ரக்ஸ’யில் வைத்திய சாலைக்குக் கொண்டு போனான்.

தந்தையைக் கீழே இறக்கி வரும்போதும் ரக்ஸ’யில் ஏற்றும் போதும் பத்மாவைத் தீண்டுமின்பத்தை அவன் அனுபவித்தான்.

* * *

பிரசித்தி பெற்ற பிரத்தியேக வைத்திய சாலையில் விசுவலிங்கத்தார் சேர்க்கப்பட்டார். வைத்தியம் நடந்து கொண்டுருந்தது பத்மநாதன், பத்மாவிடம் கேட்டு கொழும்பிலுள்ள உறவினர்களின் விலாசங்களையும் வெளிநாடுகளிலுள்ள அவளின் சகோதரர்களது விலாசங்களையும் பெற்றுக் கொண்டான்.

வெளியே சென்றவன் கொழும்பிலுள்ள உறவினர்களுக்கெல்லாம் போன் செய்தான். கனடாவிலும், இங்கிலந்திலும் பிரான்சிலுமிருந்த பத்மாவின் சகோதரர்களோடும் தொலைத் தொடர்பு கொண்டான்.

அப்படியாகத் தெரிவித்து விட்டு விடியற்காலை வைத்தியசாலையை அடைந்தபோது பத்மாவின் அழுது வீங்கிய கன்னங்களின் மேலே கண்களை கலங்கிச் சிவந்திருந்தன. படுக்கையிலே கிடந்த விசுவலிங்கத்தார் ஓடிக்களைத்த பந்தய்க் குதிரைபோல வேகமாக-வேகமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். கண்கள் பஞ்சடைந்திருந்தன. வாக்குத் தப்பிவிட்டது.

அவசர அவசரமாக வந்து பரிசோதித்தார் வைத்தியர். ஏதும் பேசாமலே அவர் திரும்பிச் செல்கையில் விசுவலிங்கத்தாரின் ஆவி பிரிந்து விட்டது! பத்மா தலையிலடித்துக் கொண்டு பென்னம் பெருஞ் சத்தமாய் ஓவென்றழுதாள்.

அவளை அணைத்துக் கொண்டே "பத்மா அழாதே. இது நம்மூரல்ல. கொழும்பு. இங்கு அழுவதற்குக்கூட நம்மால் முடியாது. இந்த நேரத்திலே நீ அழவே கூடாது. உன் தந்தையாரின் இறுதிக் கிரியைகளை நடத்த நீ தைரியமாக இருக்கவேண்டும்" என்று கூறி அவளைத் தேற்றினான்.

தேற்றியவன் துரித கதியில் மேற்கொண்டு அலுவல்களைப் பார்த்தான். விசுவலிங்கத்தாரின் பூதவுடல் 'எம்பாம்' பண்ணப்பட்டு மலர்ச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆறு மணி மாலைச் செய்தியில் 'சாவகச்சேரி சங்கத்தானையைச் சேந்தவரும், குண பூசணியின் அருமைக் கணவரும், முன்னாட் கொழும்புக் கல்வித்திணைக்களப் பிரதம கணக்காளரும் ஆன விசுவலிங்கம் அவர்கள் இன்று கொழும்பிற் காலமானார். அன்னார் ஞழனலிங்கம், காலஞ் சென்ற பரமலிங்கம் ஆகியோரது இளைய சகோதரரும் சுந்தரலிங்கம் கனடா, நல்லலிங்கம் கனடா, நாகலிங்கம் லண்டன், ஞானலிங்கம் பிரான்ஸ், பத்மராணி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவர். பூதவுடல் ஜெயரத்ன பாளரில் வைக்கப்பட்டுள்ளது. ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்" என்று இலங்கை வானொலி அறிவித்தது.

அந்த அறிவித்தல் தொடர்ந்து அன்று மதியமும், மாலையும் ஒலிபரப்பப்பட்டது.

பத்மா தன் தந்தையாரின் சடலத்தருகே சோகமே உருவாக இருந்தாள் ஊராக இருந்தால் அல்லும் அயலும், இனமும் சனமும் வந்து குழுமிவிடும். அழுகையும் ஒப்பாரியும் ஊரையே நிறைக்கும். பறைமேளம் கொட்டும். இழவுச் செய்தி சொல்லக் கோவியப் பிள்ளை கிராமம் கிராமமாப் போயிரு பபான். முற்றத்து மாமரத்தின் கீழேபாடை கட்டிக்கொண்டிருப்பார்கள். பறையன், நாவிதன், வண்ணான் என்ற குடிமக்களுக்குக் கொடுக்கச் சில்லறையாக மாற்றிய தூக்குப்பையைச் சுமந்து கொண்டே பெரியப்பா வளைய வந்துகொண்டிருப்பார் என்று அவள் எண்ணினாளோ, அல்லது வெளிநாடுகளிலிருக்கும் தன் நான்கு சகோதரர்களையும் நினைத்தரளோ, அல்லது அவளால் எதையுமே நினைக்க முடியவில்லையோ! அவள் கல்லாக இருந்தாள்.

துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களுக்கு கொழும்பு அவசரம்!

பத்மநாதன் தான் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்!

செவ்வாய்க்கிழமையும் வந்து விட்டது. வெளிநாட்டில் இங்கும் பிள்ளைகளிடமிருந்து செய்திகள் கிடைத்தன. அவர்கள் வரமுடியாதாம். இங்கு வந்தால் மீண்டும் அங்கே போக முடியாதாம்.

இச்செய்தியை பத்மநாதன் சொன்னபோது பத்மா தலையிலடித்துக் கொண்டு மீண்டும் கதறினாள்.

பத்மநாதன் உரிமையோடு அவளை அதட்டி அடக்கினான். அடக்கி விட்டு வெளியே சென்றவன் ரக்ஸ’யில் ஐயரோடு வந்தான்.

அன்று மதியம் இலங்கை வானொலி செய்திக்குப் பின்னர் 'சங்கத்தானை சாவகச்சேரியைச் சேர்ந்த விசுபலிங்கம் அவர்களது ஈடக்கிரியைகள் கொழும்பு ஜயரத்னபாளரில் நடைபெற்றுப் பூதவுடல் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு கணத்தை மயானத்திற் தகனம் செய்யப்படும்' என்று சுருக்கமாக அறிவித்தது.

ஈமக்கிரியைகளுக்கான பொருட்களை ரக்ஸ’யிலேயே கொண்டு வந்தான். இது 'ரெடிமேற்' யுகமல்லவா?

கிரியைகள் நடந்த பின்னர் பூதவுடல் மோட்டாரில் கணத்தைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே பிடிசாம்பரானது!

* * *

அன்றிரவு தன் மூத்த சகோதரனுடன் கனடாவுக்குத் தொலைபேசியிற் தொடர்பு கொண்ட பத்மா ஆக்ரோசத்தோடு சொன்னாள்.

'அண்ணா! நீங்கள் எனக்குப் பேசிய கல்யாணத்தை உடனடியாக நிறுத்துங்கள். நான் வெளியூர் வரவிரும்பவில்லை. நான் இங்கே நம்மூர்ப் பத்மநாதனை மணம் முடிக்கத் தீர்மானித்து விட்டேன். என் வேர்கள் இங்கேதான் ஊன்றியிருக்கின்றன.'

சொன்னதும் டக்கென்று போனை வைத்துவிட்டாள்.

பச்சிலம்பற்றை பாடசாலை மலர் 93
.......

மீண்டும் காந்தி பிறப்பார்!

வழமை போற் தேவநாயக வாத்தியார் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாலும் இன்னமும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. புரட்டாசி மாதத்துத் தலை மழை பெய்து தரை நனைந்ததும், நனையாததுமாகத் தன் வீட்டுத் தோட்டத்தை நேற்றுச் சாயந்தரம் முழுமையுமே கொத்திப் புரட்டியதில் உடம்பெல்லாம் அலுப்பாக இருந்தது அவருக்கு. மூப்படைந்து விட்ட வாழைப் பாத்திகளை எல்லாம் அழித்து இம்முறை அந்நிலத்திலே நிலக்கடலை பயிரிட வேண்டும் என்பது அவரது திட்டம். அதை மனதில் எண்ணிக் கொண்டே ஆசிரியர் படுக்கையிற் புரண்டு கொண்டிருந்தார்.

விடியற் கருக்களில் எழுந்து கடலுக்குச் செல்லும் மீன் பிடி வள்ளங்களின் தண்டுகள் வலிப்படுகையில், ஏற்படும் 'மறார் மறார்' என்ற ஓசை, சாமக்கோழிகளின் கூவலோடு அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு நாய் குலைக்கும் சப்தம். தொடர்ந்து பெரிய பள்ளி வாசலில் பாங்கு ஓதப்படும் நீட்டோசை.

இந்த மண்ணுலகத்து நல்லோசைகளை எல்லாம் கேட்டுக் கொண்டே அலுப்போடு படுத்திருந்தார் ஆசிரியர். உடல் முழுவதும் அடித்துப் போட்டது போல வலி!

அந்தோனியார் கோயிலின் 'திருந்தாதி' மணி ஓசை இப்போது அவர் செவிகளில் விழுகிறது. தொடர்ந்து சுவர் மணிக்கூடு ஐந்து அடித்து ஓய்ந்தது.

என்னதான் அலுப்பாக இருந்தாலும் இன்னமும் படுக்கையில் இருப்பதென்பது அவரால் முடியாத காரியம். "யேசுவே" என்ற முனகலோடு எழுந்து படுக்கையைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு, மெதுவாக வெளிக் கதவைத் திறந்துகொண்டு கிணற்றடிப் பக்கம் போனார்.

புரட்டாசி மாதத்துக் கருக்கிருட்டைத் தேய்பிறைத் துண்டு ஒளி செய்ய முயன்றுகொண்டு இருக்கின்றது. அந்த மங்கலான ஒளியில் பழக்க வாசனையின் காரணமாகச் சிரமம் ஏதுமே இன்றித் துலாக் கொடியைக் கிணற்றுள் ஆழ்த்தி நீர் மொண்டு, வாய் கொப்பளித்து முகம் கழுவி விட்டு அடுக்களைப் பக்கமாக வந்தார். வந்தவர் அடுக்களைக் கதவைத் திறந்து இரண்டு வாளிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் கிணற்றடிக்கு வந்தார். சமீபத்தில் மழை பெய்திருந்ததினாற் பயிர் பச்சைகட்குத் தண்­ர் ஊற்ற வேண்டிய வேலை இன்றைக்கு இல்லைதான். ஆயின் குடங்களில், சட்டி பானைகளில் எல்லாம் நீர் மொண்டு வைக்க வேண்டிய நித்திய கருமம் அவருக்கு இருக்கவே இருக்கிறது!

அந்த வேலை முடிந்ததும், தேவநாயகம் மீண்டும் கிணற்றடிக்கு வந்து அங்கே கிடந்த இரண்டு தகரப்பீப்பாக்களிலும் நீரை நிறைத்து வைத்த பின்னர் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு நிலத்தைக் கொத்தத் தொடங்கினார்.

அதிகாலை நேரத்தில் வேலை சுறு சுறுப்பாகவே ஓடியது. வீட்டோடு சேர்ந்திருந்த அந்த இரண்டு பரப்புக்காணியை அவர் எத்தனையோ தடவைகளிற் கொத்தியிருக்கிறார். பென்னம் பெரிய 'முதலை மார்க்' மண்வெட்டியால் ஆழக் கொத்தி, ஒவ்வொரு வேராய், ஒவ்வொரு கிழங்காக அரித்து எத்தனைதான் சிரமப்பட்டாலும், வெட்ட வெட்டத் தழைக்கும் அசுரன்போல வளர்ந்து வரும் முத்தக்காசிக் கிழங்கையும் கோரைப்புல்லையும் அவரால் அழிக்கவே முடியவில்லை. 'நிழல் இருந்தால் அவை வளராது' என்று யாரோ சொல்லியதைக் கேட்டு ஒரு முறை அந்த நிலத்திலே மரவள்ளிக் நட்டிருக்கிறார். அவர் பின்னால் வாழைத்தோட்டம் போட்டார். என்னதான் செய்தாலும் மனத்திலே கிளர்ந்தெழும் தீய எண்ணங்கள் போல, அவை வளரத்தான் செய்தன. அந்த ஆத்திரத்தில் வேதநாயக வாத்தியார், மண்வெட்டியை ஓங்கி எறிந்து பூமாதேவியே அதிரும்படியாகக் கொத்திப் புரட்டிக் கொண்டேயிருந்தார்.

சமையறகட்டியே எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கொளி, பிள்ளைப் பேறுகளினால் ஒல்லியாய் இளைத்து விட்ட அவர் மனைவியும் வேலை செய்யத் தொடங்கி விட்டார் என்பதை அவருக்கு அறிவித்துக் கொண்டேயிருந்தது. எல்லாரும் கோப்பி போட்டு, ஒன்றரைக் கொத்து மாவிற் காலைப் பலகாரஞ் செய்து, அதற்கு வியஞ்சனமாக எதெதையோ படைத்து.... ஆமாம் அவளுக்கு என்றைக்குமே ஓய்வே இல்லை.

தேவநாயக வாத்தியார் கொதித்க் கொண்டேயிருந்தார்.

ஆலய மணி ஓசை நீளமாக ஒலித்துக் காலைப் பூசையை நினைவூட்டிற்று.

ஆசிரியரைப் பொறுத்த அளவிற் தினப் பூசைக்குச் சென்று எவ்வளவோ காலமாகிவிட்டது. மனமில்லாததினால் அல்ல. நேரந்தான் கிடைக்கவில்லை. காலைப் பூசைக்கு அழைக்கும் கோயில் மணி, அவரைப் பொறுத்தமட்டிற் பாடசாலையில் அடுத்த பாடத்துக்கு அடிக்கப்படும் மணி ஓசையைப் போல ஒரு வெறும் அறிவித்தலாக மட்டுமே அமைந்திருந்தது.

**இ.தொ.kaviyam12.mtf**


** kaviya11.mtfன் தொடர்ச்சி**

அந்த அறிவித்தல் கிடைத்ததும் மண்வெட்டியைத் தோளில் வைத்தபடி வீட்டினுள்ளே சென்று ஒரு மூலையில் அதைச் சார்த்தி வைத்துவிட்டு, மண்டபத்திலே கிடத்தப்பட்ட வாழைக் குட்டிகளைப் போல அணி அணியாகப் படுத்திருக்கும் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக எழுப்பத் தொடங்கினார். முணகலோடும், சிணுங்கலோடும், அழுகையோடும், ஒவ்வொருவராக அவர்கள் எழுந்ததும், எல்லாரையும் அழைத்துக் கொண்டு கிணற்றடிப் பக்கம் போனார். போகுமுன்னர், வானொலிப் பெட்டியைத் திறந்து அதன் முள்ளைச் சென்னை நிலையத்திற்குத் திருப்பி வைக்கும் வழமையான பணியைச் செய்ய அவர் மறக்கவேயில்லை!

அதிகாலையிற் கிணற்றடியில் அவர் ஒரு போரே நடத்த வேண்டியிருக்கும். மூத்த குழந்தைகளை மொண்டு வைத்திருக்கும் நீரில் ஒவ்வொருவராகக் குளிப்பாட்டி, இன்னமும் அழுதபடியே இருக்கும் 'சின்னதுகளை' முகம் கழுவித் துடைத்து, வீட்டுக்குள் எங்கெங்கெல்லாமோ கிடக்கும் அவர்கள் உடைகளைத் தேடி ஒவ்வொருவருக்கும் அணிவித்து அவர்கள் எல்லாரையும் காலைப் பூசைக்கு அனுப்பி வைப்பது அவருக்கு ஒரு வில்லங்கமான சடங்கு!

அன்றும் அவரது அபிமான புத்திரன், ஐந்து வயதுத் 'தவா' என்ற தவநாயகம் அடம்பிடித்துக் கடைசி ஆளாகப் பூசைக்குப் புறப்பட்டபோது சென்னை வானொலியிற் தோத்திரப்பாடல் முடிவடைந்து யாரோ உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்.

வானொலியின் உபதேசங்களையோ, அல்லது நெக்குருக வைக்கும், அதன் தோத்திரப் பாடல்களையோ ஆசிரியர் என்றைக்குமே இரசித்துக் கேட்டவரல்ல. காலை நேரங்களில் அவ்வானொலிப் பெட்டி அவருக்கு ஒரு கடிகாரத்தின் சேவையைத்தான் பிரதிப்பயன் கருதாது செய்து கொண்டிருந்தது. தோத்திரப் பாடல்கள் முடிந்தால் மணி ஆறரை. பின்னர் ஆறு முப்பத்தைந்து வரை நிகழ்ச்சிக் குறிப்பு. மறை வழி என்ற உபதேசம் ஆறு நாற்பது வரை. அதற்கும் பின்னால் ஐந்து நிமிடங்கட்கு ஆங்கிலச் செய்தி. இந்த நேர அட்டவணை வானொலிக்காரை விட வாத்தியாருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

வீட்டைத் தட்டிக் கூட்டிக் கொண்டிருந்த ஆசிரியர், வானொலியைச் சென்னையிலிருந்து கொழும்புக்குத் திருப்பி வைத்தார். அங்கே இஸ்லாமிய நற்சிந்தனை நடந்து கொண்டிருந்தது.

நற்சிந்தனை என்பதிலேயே இஸ்லாம்-கிறீஸ்தவம்-சைவம் என்ற பாகுபாடு! இதெல்லாம் சுத்த அபத்தம் என்பது ஆசிரியரின் கொள்கை. ஆனாற் காலைப் போதில் வானொலி அவருக்கு ஒரு கடிகாரம் மட்டுமே. இஸ்லாமிய நற்சிந்தனையோ-அல்லது கிறீஸ்தவ நற்சிந்தனையோ முடிந்தால் நேரம் ஆறே முக்கால் மணி ஆகிறது என்பதில் மட்டுமே அவர் கண்!

இஸ்லாமிய நற்சிந்தனை முடிந்து இலங்கை வானொலி செய்திகளை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. ஆசிரியர் வீட்டைப் பெருக்கி முடித்துக் கொண்டிருக்கையிற் செய்திகள் முடிவடைந்து அறிவிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மரண அறிவிப்புக்கள்.... காலை வேளையிலே அபசகுணம் போல....

ஆசிரியர் வானொலியின் கழத்தைத் திருகி அதைக் கொன்று, மீண்டும் அதற்கு உயிரூட்டிச் சென்னைக்குத் திரும்பினார். சென்னை நாதஸ்வர கானத்தைப் பொழிந்து கொண்டிருந்தது.

வீட்டிலே இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும் தூங்கிக் கொண்டேயிருந்த அவர் மூத்த மகன் ஜோசப், அப்போதுதான் எழுந்து வந்து முன் விறாந்தையிற் கிடந்த சாய்கதிரையிற் சார்ந்து கொண்டே, கையோடு கொண்டு வந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான். அவன் கோப்பியை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பா தும்புக்கட்டும் கையுமாக நிற்பது, அவன் அடுக்களைக்குட் செல்வதையோ, அதிகாரஞ் செய்வதையோ தடுத்து நிறுத்தியிருக்கக் கூடும்.

தேவநாயக வாத்தியார் மகனின் கையிலிருந்த புத்தகத்தை ஒரு நோட்ட விட்டார்! அவர் மனதிலே ஒரு நிறைவு... ஆமாம். எச்.எஸ்.சி. சோதனை எடுத்துவிட்டுச் சர்வகலா சாலைக்குப் போக முடியாத வகையில் அப்பரீட்சையிற் சித்தியடைந்து வீட்டுக்கு வந்திருந்த ஜோசப், எந்தவிதத்திலும் உடம்பை வளைக்காது, குடும்பத்திற்குப் பாரமாய், நாளும் பொழுதும் கார்ல்மாக்ஸ’ன் 'கந்த தத்துவ' நூல்களையே படித்துக் கொண்டிருந்தான். ஆயின் இப்போது அவன் கையில் வைத்துக் கொண்டிருந்த நூல் மகாத்மாவின் சுயசரிதம்; சத்திய சோதனை...

'எந்தத் தொழில் செய்வதிலும் இழிவில்லை' என்ற தத்துவத்தை அந்த நூலாவது அவனுக்கு விளக்குமா? என்ற ஆசையோடு வீட்டைக் கூட்டி வெளியிற் தள்ளி, ஈர்க்கு விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு முற்றத்தைக் கூட்டத் தொடங்கினார். அப்படிப் பெருக்கிக் கொண்டிருக்கையில் அவர் மனம் மட்டும், இறந்த காலச் சருகுகளைப் பெருக்கிக் கொண்டிருந்தது.

இருபத்தொரு ஆண்டுகளின் முன்னே... அப்போது அவருக்குத் திருமணம் நடந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. அப்போதுதான் அந்தச் செய்தி உலகையே அதிர வைத்தது.

தழதழக்கும் குரலிலே மனிதருள் மாணிக்கமான ஜவகர்லால் வானொலியிற் பேசினார்.

'நண்பர்களே! தோழர்களே! ஒளி அணைந்து விட்டது'

ஆட்டுப் பாலையும் மொச்சைக் கொட்டையையும் சாப்பிட்டு உலக வரலாற்றிலே விந்தை புரிந்த அந்த வாமனர், வெறியனின் குண்டுக்கு இரையாகிச் செத்த அந்தச் சேதியைக் கேட்டு உலகமே கண்­ர் வடித்தது.

அந்த அருட்டுணர்வின் காரணமாகத்தான் தேவநாயகமும் மகாத்மா காந்தி பற்றிய நூல்களை எல்லாம் படித்தார். அம் மகாத்மாவின் பிரதம சீடர்களில் ஒருவரான ஜோசப் கொர் நீலியஸ் குமரப்பா எழுதிய கிராமப் பொருளாதாரம் என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கையிலேதான் அவர் மூத்த மகனும் பிறந்தான். அவர் தாயார் எத்தனையோ தடுத்தும், தேவநாயக வாத்தியார், தன் குழந்தைக்குத் தன் தந்தையின் பெயரைச் சூட்டாது, ஜோசப் கொர் நீலியஸ் என்று பெயரிட்டார்!

இப்போது இருபது ஆண்டுகள் கழிந்து விட்டன. மகாத்மாவே 'வலிந்து' கைக்கொண்ட பிரமச்சாரியத்தைக் கைக் கொள்ளத் தவறியதினால் இன்று ஏழு குழந்தைகட்கு அவர் தந்தையாகி விட்டார். ஆசிரியத் தொழிலின் அற்ப ஊதியத்தினிடையே தன் மூத்த மகனை எங்கெல்லாமோ அனுப்பிப் படிக்க வைத்தார். இன்று அவன் படித்து விட்டு, அந்தப் படிப்பினால் உடலுழைப்பே அவமானம் என்ற எண்ணத்தோடு வீட்டிற் குந்திக் கொண்டிருக்கிறான். கார்ல் மாக்ஸ’ன் 'கபந்த தத்துவம்' அவனை ஆட்கொண்டிருக்கிறது. தான் ஆசையோடு சூட்டிய பெயருக்கே ஹானி விளைவிப்பனாய், 'துப்பாக்கிக் குண்டுகளிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது' என்று வாதிக்கிறான். கூட்டங்களிற் பேசுகிறான். நண்பர்களைக் கூட்டுகிறான். உலகத் தொழிலாளர்கட்காகப் பரிந்து பேசும் அவனால் உழைத்து ஓடாகிக் கொண்டிருக்கும் அவன் தாய்க்க ஒரு வாளித் தண்­ர் அள்ளிக் கொடுக்க மட்டும் முடியவில்லை!

நேற்றுப் பாடசாலைக்குப் புறப்படுகையில் அவர், ஜோசப்பிடம் சொல்லிவிட்டுப் போனார்.

'தம்பி நம் வயலிலே அறுவடை நடக்கின்றது. மத்தியானச் சாப்பாட்டிற்கு அறுவடை செய்பவர்கட்கு அரிசி சாமான்களைக்கொண்டு போய்க்கொடு.'

ஆனால் அவர் போகவே இல்லை. புத்தகம் படித்துக் கொண்டே சோம்பேறித்தனமாக இருந்துவிட்டான்.

அதை நினைக்கவே ஆசிரியருக்கு ஆத்திரமாக இருந்தது. காந்தியை மஹாத்மா ஆக்கிய முடிவுமட்டும் (Unto the last) என்ற நூலைப் படித்துவிட்டுக் காந்தியடிகள் குறிப்பிட்டது அவர் ஞாபகத்திற்கு வந்தது.

'எல்லாரும் தத்தமது தொழிலைச் செய்ய உரிமை இருப்பதால், ஒரு வழக்கறிஞன் தொழிலும் ஒரு நாவிதன் தொழிலும் ஒரே மதிப்புடையவை. உழைப்பின் பாற்பட்ட வாழ்க்கைதான்-அதாவது வேளாண்மை செய்யும் உழவனின், கைத்தொழில் செய்யும் உழைப்பாளியின் வாழ்க்கை தான் வாழ்வதற்கே ஏற்றது.

தன் மைந்தனைப் பொறுத்தவரையிற் தொழில் செய்வதையே அவன் இழிவாகக் கருதுகிறான். தோட்டத்தைக் கொத்துவதையோ, வயலில் வேலை செய்வதையோ, ஏன் புழுதியில் விளையாடி அலங்கோலமாக இருக்கும் தன் உடன்பிறப்புக்களைக் கழுவித் துடைப்பதுகூட அவனுக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த நிலையில் அவன் 'சோஷலிஸம்' பேசுவதில் மட்டும் சலிப்படையாது இருக்கிறான். 'உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என அடித்துப் பேசுகிறான். செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று குமுறுகிறான். அவனைப் போன்று உழைக்கவே முடியாத, சோம்பேறித்தனம் படைத்தவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட வறுமையைப் பகிர்ந்தளிப்பது தான் சோஷலிஸமா?

நாதஸ்வர கானம் பொழிந்து கொண்டிருந்த வானொலி, செய்தி அறிக்கையை ஒலிபரப்பத் தொடங்கிற்று.

ஏழேகால் மணியாகிவிட்டதைத் தெரிந்து கொண்ட ஆசிரியர் அவசர அவசரமாக முற்றம் பெருக்குவதை முடித்துக் கொண்டு, கிணற்றடிக்குச் சென்று தலையில் மளமளவென்று இரண்டுவாளி தண்­ரை ஊற்றித் தன் குளிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

செய்தி அறிக்கை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஜோசப்பிற்குத் தன் வாசிப்பில் இரசனை ஏற்படவில்லை என்பதை அவன் முகம் காட்டிற்று. சத்திய சோதனையாவது மண்ணாவது! விறுவிறுப்போவேகமோ இன்றி ஒரே 'வழா வழா' என்று வேகமே இல்லாமல் அந்நூல் இருப்பதாக அவன் எண்ணினான்.

'இந்த இயந்திர யுகத்திலே இராட்டையிலே நூல் நூற்பதும், ஆட்சியாளரின் தடியடிக்கு எதிராகக் கையைக் கூட உயர்த்தாமல் ராமநாம ஜபம் பண்ணிக் கொண்டு அமர்ந்திருப்பதும், பிறர் செய்த குற்றங்கட்காக உண்ணாவிரதமிருப்பதும்-எல்லாமே வேடிக்கையான வாதங்களாகத்தான் இருக்கின்றன' என்று எண்ணிக் கொண்டே வெறுப்போடு புத்தகத்தை மூடினான் ஜோசப். மூடியவன் அப்போது தான் பூசை முடித்து வீட்டுக்கு வந்திருந்த தம்பியைப் பார்த்து "போய்க் கோப்பி கொண்டுவாடா" என்று விரட்டினான்.

'உழைக்காத உனக்குச் சாப்பிட மட்டும் என்ன உரிமை இருக்கிறது' என்று கேட்க விழைந்தார் ஆசிரியர். ஆனால் வானொலி செய்தியை முடித்துக் கொண்டதை உணர்ந்ததும் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அவசர அவசரமாகத் தன் காலை ஆகாரத்தைக் கொறிக்கத் தொடங்கினார்.

செய்திகளை முடித்துக் கொண்ட வானொலி மகாத்மாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பொன்மொழிகளை ஒலிபரப்பத் தொடங்கிற்று.

'தான் வெற்றி பெறும் ஆற்றல் ஏதுமே இல்லாத சாதாரணமான மனிதப் பிறவி. நான் செய்யமுடியும் ஒன்றை ஏன் எல்லோரும் செய்ய முடியாது? சாதாரண மனிதப் பிறவியாகிய நான், என் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்துவதைவிட மற்றவர்கள் மிக எளிதில், அல்லது என்னளவுக்காவது நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.'

இதனைக் கேட்டதும் ஆசிரியருக்கு மகாத்மா காந்தியைப் பற்றி வின்சன்ற் ஷ“ன் என்பவர் எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வந்தன.

'இவ்வாக்கியங்களிலுள்ள முரண்பாடுதான் தென் ஆபிரிக்கா, இந்தியா, உலகம் ஆகியவற்றில் அவர் கண்ட தோல்விக்கு அளவுகோல். தான் செய்ததை மற்றவர்களும் செய்ய முடியும் என அவர் நம்பினார். காந்தியடிகள் இழைத்த இம்மாபெரும் தவறுதான் மனித வரலாற்றில் மகத்தான தோல்வி கண்ட சாக்ரட்டீஸ், புத்தர், யேசு ஆகிய மூவரின் வரிசையில் அவரைச் சேர்க்கிறது. இவர்கள் எல்லாரும் தாங்கள் செய்ததை எல்லாம் ஏனையோரும் செய்ய முடியும் என நம்பினார். அவர்கள் தவறு செய்தனர். அதுபோலவே காந்தியடிகளும் செய்து விட்டார்'

மனக்கலக்கமடைந்த ஆசிரியர், எதிரே மாட்டப்பட்டிருந்த சேசுபிரானின் படத்தைப் பார்த்தபடி 'ஆண்டவரே உடலுழைப்பு அவமானத்துக்குரியதல்ல' என்று என் மகனுக்குப் புத்தி தருவித்து காந்தியடிகளைத் தவறு செய்யாதவராக ஆக்கிவிடும்' என்று மனமுருகப் பிரார்த்தித்த வண்ணம் தன் பாடசாலையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.

காந்தி நூற்றாண்டுக் கதைகள் 1962.
........

குழப்பம்

அடுத்த வீட்டுக் சேவலுக்கு எப்போதுமே அவசரம். நேரகாலத்தோடு கூவி விட்டது. அதன் கூவலைக் கேட்டு வேதநாயக வாத்தியார் துயில் நீங்கி விட்டார். இனிமேற் படுக்கையிற் கிடக்கவும் முடியாது.... படுக்கையிலிருந்து எழுந்து சுவிச்சைத் தட்டி ஒளியேற்றினார். நேற்று வாசிக சாலையிலிருந்து கொண்டுவந்த சரத்சந்திரரின் 'கமலாவின் கணவன்' என்ற நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார். விட்ட இடத்தை மறந்து விடாமல் இருக்க புத்தகத்தின் பக்கத்தை மடித்து வைக்கும் பழக்கம் ஆசிரியரிடம் கிடையவே கிடையாது. அக்பர் சக்கரவர்த்திக்குத் தன் படையின் ஒவ்வொரு குதிரையும் எந்த இடத்திற் கட்டப்பட்டிருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியுமாம். வேதநாயக வாத்தியாருக்கும் புத்தகத்தை எந்த இடத்தில் விட்டேன் என்பது பக்கத்தை மடித்து வைக்காவிட்டாலும் துல்லியமாகத் தெரியுமம். புத்தகத்தைப் பிரித்து ஒற்றைகளைத் தட்டியவர் தான் விட்டிருந்த எழுபத்தெட்டாம் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினார்.

இலக்கியத்திற் பழையதும் விஞ்ஞானத்திற் புதியதும் என்று வாக்கியம் சொல்வார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் கமலா என்ற பாத்திரம் அற்புதமாக வளர்க்கப்பட்டிருந்தது. ஆசிரியர் அப்பாத்திரத்தில் லயித்து வாசித்துக் கொண்டிருந்தார்.

வெளியே பறவைகளின் காலைக் கீதம். பட்டினத்திற் பறவைகள்கூட அர்த்தாபத்திதான். தான் ஒரு காலத்தில் ஆசிரிய சேவை செய்த மல்லிகைத்தீவுக் கிராமத்தின் காலைப் பொழுதுகளை நினைத்துக் கொண்டார். வயல் வெளியின் நட்ட நடுவிலே எட்டே எட்டு ஏக்கரில் இருந்த அக்கிராமத்தின் தென்னை மரங்களிலும் இலுப்பை மரங்களிலும் எத்தனை விதமான பறவைகள்! அதிகாலையில் அவைகள் எல்லாமே விழித்துக் கொண்டு இசைக்கும் அற்புதமான கீதங்கள்! இப்படியான கிராமத்தின் காலைப் பொழுதுகளை இரசித்துத்தான் பாரதியார் 'மண்ணுலகத்து நல்லோசைகள் காறறெண்ணும் வானவன் கொண்டுவந்தான்' என்று பாடியிருக்க வேண்டும் இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கையில் தூரத்தேயிருந்த சோனக வாடிப் பள்ளி வாசலிலிருந்து 'பாங்கொலி' கேட்டது. அதிகாலை வேளையிற் கேட்கும் அந்த ஒலியும் வேதநாயக வாத்தியாரின் மனதைக் கவர்ந்தது தான். அதிகாலை வேளையில் 'அல்லாஹு அக்பர்' இறைவன் மேலானவன் என்று முழக்கிச் சொல்லுவது எத்தனை நயமானது. நம்பிக்கையானது.

அந்த 'பாங்கொலி'யைத் தொடர்ந்து பெரிய மாதா கோயிலின் திருந்தாதி மணியின் சுநாதம் காற்றில் மிதந்துவந்தது. தொடர்ந்து ஒலி பெருக்கியிற் பிரார்த்தனை 'அருள் நிறைந்த மரியே வாழ்க'. ஆசிரியர் புத்தகத்தை மூடிவிட்டு ஒலிபெருக்கியோடு சேர்ந்து செபித்தார். செபம் முடிந்தபின் எழுந்து வெளியே வந்தார்.

உள்நாட்டுப் போரின் காரணமாகக் கிராமத்தைத் துறந்து பட்டினத்திற்கு குடியேறிய பின்னர், அதிகாலையிலே குழாயடிக்குச் சென்று குடிதண்­ர் கொண்டுவருவது ஆசிரியரின் நித்திய கடமைகளில் ஒன்றாகியிருந்தது. ஆசிரியர் பிளாஸ்ரிக் 'கானை' எடுத்துக் கொண்டு, துவிச்சக்கரவண்டியைத் தள்ளிக் கொண்டு தெருவிலிறங்கினார்.

தெருவிலே இன்னமும் சன நடமாட்டம் நன்கு தொடங்கவில்லை. ஆனால் வால வயதினரான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் துவிச்சக்கரவண்டிகளிலும் நடந்து அணி அணியாகவும் கூட்டங் கூட்டமாகவும் போய்க் கொண்டிருந்தனர். அதிகாலையின் இதமான குளுமையும் மெதுவாக அசையும் புரட்டாசிக் கச்சான் காற்றின் மெல்லிய வருடலும் அவர் உடலுக்கு உவப்பானதாக இருந்தாலும் ரியூசனுக்குச் செல்லும் அக்கூட்டம் அவர் மனதை உறுத்தத் தொடங்கியது.

அவர் பேரக் குழந்தைகள் இருவர் மூன்றாம் ஆண்டிலும், முதலாம் ஆண்டிலும் படிக்கின்றனர். அவர்களுக்க அவர்தான் ரியூட்டர். ஆனால் அவர் மகள் சொல்வாள். "அப்பு உங்கட செல்லத்தில இதுகள் உங்களிட்ட படிக்காதுகள். இதுகளை ரியூசனுக்கு அனுப்ப வேணும்"

வேதநாயகத்தார் தன் மகளை மூர்க்கமாக எதிர்த்தார். "இவர்கள் பாடசாலையிற் படிப்பதே போதுமானது. காலையிலும், மாலையிலும் 'ரியூசன்' என்று அவர்களைத் தொந்தரவு பண்ணினால் அவர்கள் பிஞ்சு மனதிற் படிப்பிலேயே ஒரு வெறுப்பு ஏற்படும்" என்பது அவர் வாதம். தன் வேரக் குழந்தைகளை ரியூசனுக்கனுப்ப அவர் விடவேயில்லை.

அவர் மனம் இறந்த காலத்திற் சஞ்சரிக்கத் தொடங்கியது. வெண்மணல் பரந்த தாமரையில் கிராமம். சாயந்திர வேளைகளில் ஆசிரியராக இருந்த அவரது தன்தையார் முருங்கை மர நிழலில் அமர்ந்து கொண்டு வெண்மணலில் ஆனா ஆவன்னா எழுதுவித்ததை நினைவு கூர்ந்தார். பாட்டும் கதையுமாகச் சொல்லிக் கொண்டே மூன்றாம் ஆண்டில் சூடாமணி நிகண்டின் ககரவெதுகை தொடக்கம் னகரவெதுகை வரை மனனம் பண்ணிவித்து விட்டார்.

நான் என்ன ரியூசனுக்கா போனேன்? ரியூசன் என்றால் என்ன?

மல்லிகைத்தீவு கிராமத்திலே மூன்றாம் வகுப்பிற்கும் நான்காம் வகுப்பிற்கும் நானே ஆசிரியர். இரண்டு வகுப்புகளிலும் சேர்ந்து ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள். எல்லோரையும் வகுப்பிலே தனித்தனியாகக் கவனிப்பது சிரமமானதாக இருந்தது. இதனாற் சில மாணவர்கள் வகுப்பிலே பின்தங்கிவிட்டார்கள். அப்படியாகப் பின்தங்கிய மாணவர்களை மட்டும் சாயந்தர வேளைகளில் வரச்சொல்லிப் படிப்பித்தேன். அதற்காகக் காசா, பணமா....சை...

அது வித்தியாதானம். கிராமத்து மக்கள் அளித்த மரியாதை தான் அதன் விலை! எல்லா ஆசிரியர்களும் அந்தக் காலத்தில் இதைத்தான் செய்தார்கள்! பின்தங்கிய மாணவர்களுக்கு பின்னேரே வகுப்பு. பாடத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி மேலதிக வகுப்பு. பரீட்சை நெருங்கினால் விசேட வகுப்பு.

அந்த வகுப்புக்களை நடத்திய ஒவ்வொரு ஆசிரியருக்கும் 'கூழுடையார் கூழளிபர், கோமக்கள் வாழ்வளிப்பர். ஆழி மணி முடிவேந்தர் அதன் நிலத்தை எமக்களிப்பர்' என லட்சுமிதேவியையே புறக்கணித்த விபுலானந்தரின் பெருமிதம் இருந்தது.

ஆனால் இன்று...?

பல்வேறு சமூக சேவை நிறுவனங்களின் உதவியாற் பட்டி தொட்டியெங்கும் பாலர் பாடசாலைகள், க.பொ.த. சாதாரண வகுப்பில் இரண்டு மூன்று பாடங்கள் சித்தியடைந்ததையே தகுதியாகக் கொண்டு நான்கு வயதுப் பாலர்களக்கு தங்களுக்கே சரிவரத் தெரியாத ஆங்கிலம் படிப்பித்துப் பணம் பண்ணும் ஆசிரியர்கள்! மொண்டிசோரி அம்மையார் உயிருடனிருந்தால் இந்த அநியாயத்தைக் காணச் சகியாமற் தற்கொலையே செய்து கொண்டிருப்பார்!

இந்த அபத்தம் பாலர் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகம் வரை தொடர்கிறது. பின் தங்கிய மாணவர்களுக்கே பிரத்தியேக வகுப்பு என்ற நிலை மாறிச் சகல மாணவர்களுக்குமே ரியூசன்! அது இப்போது ஒரு 'பேஷன்' அது நாகரிகமாகிவிட்டது. தமது பிள்ளைகள் ரியூசனுக்குப் போகாவிட்டால் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்களாகி விடுவோம் என ஒவ்வோர் பெற்றோரும் எண்ணும் அளவிற்க இந்த ரியூசன் சமூகத்திற் புரையோடி விட்டது.

துவிச்சக்கரவண்டியில் ஏறுவதையே மறந்தவராக வேதநாயக வாத்தியார் தன் சிந்தனைகளிற் தன்றைப் புதைத்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியை உருட்டியபடியே நடந்தார். எதிரே தெரு முழுவதையும் நிறைத்துக் கொண்டு நான்கு பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி சொன்னாள்: "ஆறு மணிக்குதான் சயன்ஸ் பாடம் முடியும். பிறகு வேலுப்பிள்ளை மாஸ்ரரிட்ட 'மாத்ஸ்' பாடத்துக்கப் போக வேணும்" இன்னொருத்தி சொன்னாள்: எனக்குக் கெமிஸ்ரி, பிசிக்ஸ் இரண்டு முடிய ஏழேகாலாய் போயிரும் பின்னேரத்தில் 'பொட்டணி'யும் 'சூ'வும்... அக்கூட்டம் பேசிக் கொண்டே ஆசிரியரைத் தாண்டிச் சென்று விட்டது.

'இந்த ரியூசன்களை எல்லாம் முடித்துவிட்டு வந்துதான் காலைச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுப் பாடசாலைக்குச் செல்ல வேண்டும். பாடசாலை விட்டு வந்தால் அதன் பிறக மாலையிலும் ரியூசன். இந்தப் பிள்ளைகள் நாளாந்தம் குளிக்கவாவது நேரம் கிடைக்குமோ என்னவோ' என்று எண்ணினார் வேதநாயகம்.

இந்த ரியூசன்களால் பாடசாலையிற் படிப்பிற்கும் நல்லாசிரியர்கள் கூட "இவர்கள் எல்லாரும் ரியூசன் கிளாசிற் படிக்கிறவர்கள்தானே" என்ற எண்ணத்தில் வகுப்பில் அசமந்தமாகவே இருந்து விடுகிறார்கள்!

அதிகாலையிலும் மாலையிலும் நீண்ட நேரம் ரியூசன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தை ஓய்வுநேரமாக்கிக் கொள்கிறார்கள்! இதன் காரணமாகப் பாடசாலையில் ஆசிரியர்கள் படிப்பிப்பதேயில்லை. ரியூசனுக்கு அனுப்பாவிட்டாற் பிள்ளைகள் உருப்படவே மாட்டார்கள் என்ற எண்ணம் பெற்றோருக்கு ஏற்பட்டு ஆசிரியர்கள் மதிப்பிழந்தவர்களாகிறார்கள்.

சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த வேதநாயக வாத்தியார் குழாயடியை அண்மித்தபோது அங்கே தண்­ர் பிடிப்பதற்காகப் பலர் கியூ வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். ஆசிரியரும் தண் வண்டியை விளக்குக் கம்பத்திற் சாத்தி வைத்துவிட்டுக் கேனுடன் கியூவில் நின்றார். அவர் கண்கள் எதிரே இருந்த சுவரில் பதிந்தன.

சுவரிலே பல வர்ணங்களிலான பட விளம்பரங்கள். ரஜனிகாந்தும் கார்த்திருக்கும், ராதிகாவும், நிரோஷாவும் வர்ணப் படங்களில் கண்ணைப் பறித்தார்கள். தியேட்டரில் ஓடும் இந்தப் பட விளம்பரங்களிடையோ 'டெக்ரீவி'யில் ஓடும் பட விளம்பரங்கள் கோழிச் சாயக் கோல எழுத்துக்களில் சில எழுத்துப் பிழைகளுடன் பல்லிளித்தன. இவைகட்குச் சரிநிகர் சமானமாக 9ஆம் ஆண்டிற்கான ஏ.எல். வகுப்புக்களுக்கான ரியூசன் விளம்பரம். சங்கர்-கணிதம், ஜெயம்-பிஸ’க்ஸ், டேமியன்-ஹெமிஸ்றீ, சாஸ்திரி-பயோ, சாள்ஸ்-பொட்டணி.

கொட்டை எழுத்துக்களில் கோழிச் சாயத்தில் மிளிர்ந்தன ஆசிரியரின் பெயர்கள். படக் கதாநாயகர்களுக்குத்தான் நாட்டிலே 'மவுசு' என்று யார் சொன்னது? ஆசிரியர்களுக்குக்கூட அவர்களுக்கொத்த விளம்பரம் வந்து விட்டதே. இனி வரும் காலத்தில் ஆசிரியர்களின் பென்னம் பெரிய 'கட்அவுட்' கள் சந்திக்குக் சந்தி காட்சி அளிக்கும் என்று நினைத்துக்கொண்ட வேதநாயக வாத்தியார் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

இந்த விளம்பரங்களுக்கெல்லாம் மூலமான காரணிகள் என்ன? 'சேவித்தும் சென்றிரந்தும்..' என்று தொடங்கும் பழைய வெண்பா ஞாபகம் வந்தது வேத நாயகத்தாருக்கு.

ஆனால் இப்போது நாழியரிசிக்காக மட்டுமல்ல, நாகரிக வாழ்க்கையின் காரணமாகத் தேவைகள் அதிகரித்து விட்டன. அவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் வேண்டும். ஆம். எல்லா விளம்பரங்களுக்கும் காரணம் பணம். பணமேதான்!

வேதநாயக வாத்தியார் அந்தக் கால ஆசிரியர்களின் வேதனத்தை நினைத்துப் பார்த்தார். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பதே பழமொழி. ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே அரசாங்க உத்தியோகஸ்தர்களில் சம்பளத்தில் இளைத்தவன் ஆசிரியன்' ஆனாலும் அவனக்குச் சமூகத்தில் ஒரு அந்தஸ்து இருந்தது. அதன் காரணமாக வேறு உத்தியோகத்திற்கு போகக்கூடிய வசதிகள் இருந்தும், ஆசிரியப் பணியையே ஆத்ம திருப்திக்காக ஏற்றவர்கள் பலர். சம்பளக் குறைவு அவர்களின் பலவீனமே. அதுவே அவர்களின் பலமாகவும் இருந்தது.

வேதநாயக வாத்தியாருக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. 1943ஆம் ஆண்டு மட்டக்களப்புக் கல்லடிப்பாலந் தொட்டு வடக்கே தென்னமரவடி வரை நீண்டு விசாலித்த தேர்தல் தொகுதியில் இடைத் தேர்தல். பணபலம் மிக்க வண்ணிமைகளும், நியாயதுரந்தாரர்களும் தேர்தல் களத்தில் இறங்கினார்கள். அவர்களோடு பணபலமற்ற ஆசிரியர் ஒருவரும் தேர்தலில் குதித்தார்.

தேர்தல் களத்திலே பணம் தண்­ராய் ஓடிற்று. மது ஆறாகப் பெருகிற்று. ஆனால் ஆசிரியர் இவைகள் எதையுமே இறைக்க வக்கற்றவராக இருந்தார். ஆனாலும் எந்தக் குக்கிராமத்திலும் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பின்னால் மக்கள் திரண்டு ஆசிரியரை வெற்றித் தம்பத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதே கதைதானே ஐம்பத்தாறாம் ஆண்டிலும் இந்நாட்டில் நடந்தது. பணபலமும் பிரசாரபலமும் மிக்க கட்சியை ஏழை ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தோற்கடித்தனர்.

ஆனால் ஆசிரியன் இன்று ஏழை அல்ல. ஏனைய அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குச் சரியாக-ஏன் அதற்கும் கூடுதலாக அவனுக்கு வேதனம் கிடைக்கிறது. ஆயினும் அவனுக்குத் திருப்தியில்லை. செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு என்பதை மறந்தவர்களாய் பணம் பண்ணுவதையே ஒரே சிந்தனையாகக் கொண்டு எழுத்தறிவித்த இறைவன் என்ற அந்தஸ்திலிருந்து இறங்கி....

குழாயிற் தண்­ர் பிடிக்க வேண்டிய முறை வந்து விட்டது. வேதநாயகத்தாருக்கு. கானைக் குழாயில் வைத்தார்.

ஆசிரியர்கள்தான் இப்படி என்றால் பகிரங்கப் பரீட்சைகளிற் சித்தியடைந்து வாழும் வழியைத் தேடிக் கொள்வதொன்று மட்டுமே பிள்ளைகளதும் பெற்றோரதும் ஒரே நோக்கமாகி விட்டது. குறுக்கு வழியில் பரீட்சைகளிற் சித்தி அடைய ரியூசன்தான் ஒரே வழி என்றாகி விட்டது. இந்தக் குறுக்கு வழியினால் ஆசிரியத் தொழிலின் புனிதத்துவமும் கல்வியின் நோக்கமும் பிறழ்ந்து விட்டதா?

தண்­ர்ப் பாத்திரம் நிறைந்து விட்டது. அதைத் தூக்கி காரியரில் வைத்து வீட்டை நோக்கிச் செல்கையில், வேதநாயகத்தாரின் எண்ணங்கள் மேலும் தொடர்கின்றன.

அன்று முறையாகக் கற்றவர்கள்தான் வெளிநாடு சென்றனர் அல்லது கற்பதற்காகப் பிறநாடு சென்றனர் அப்படிச் சென்றவர்களிடையேதான் இந்தியாவில் ஒரு கனக சுந்தரம் பிள்ளையும், இங்கிலாந்தில் அழகு சுப்பிரமணியமும், அமெரிக்காவில் ஒரு தம்பிமுத்துவும் தோன்றி நம் நாட்டிற்குப் புகழ் சேர்ந்தார்கள்.

ஆனால் இன்று....?

எதிரே வந்து கொண்டிருக்கும் ரியூசன் இளைஞர்கள் அவரைக் கடந்துசென்றனர். இந்த இளைஞர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் கல்வியை முடிக்காமற்கூட வெளுநாடு சென்று விடுவார்கள் என்று நினைத்தார் வேதநாயகம். எத்தனையோ ரியூசன் கல்வி நிலையங்கள் இந்நாட்டிலிருந்தாலும் ஒரு கல்வியறிவற்ற கூட்டம் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டின் கௌரவத்தை பாழடிக்கின்றது. இதன் காரணந்தான் என்ன? ஆசிரியர்கள் தம் புனிதத் தன்மையைக் கைவிட்டமையா? அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழிவா?

தமிழ்நாட்டில் தயாராகும் புதுப் படங்களைப் பார்த்தால் கதை மாந்தரின் உடைகளும் செயல்களும் இக்கதை தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்தக் காலத்து ஆசிரியர்களும்... ஐயோ! ஆசிரியத் தொழிலும் மற்றத் தொழில்களைப் போல ஒரு தொழில் தான். இதிலே புனிதமும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. ஆசியருக்கென்று 'டிரேட்மாக்'காக ஒரு வெள்ளுடையும் அவசியமில்லை' என்கிறான் பட்டதாரி ஆசிரியரான ஓர் இளைஞன்.

வேதநாயகத்தார் வெள்ளைக் கலையுடுத்த அந்தக்கால ஆசிரியர்களை நினைத்துக் கொள்கிறார். அவருக்க எல்லாமே குழப்பமாக இருக்கிறது. அந்தக் குழப்பத்தில் அவரது துவிச்சக்கர வண்டி அலமந்து செல்கிறது.

வீரகேசரி 1994
..........

குடிமகன்

தம்பலகாமம் இரண்டு விஷயங்களுக்குப் பெயர் பெற்றிருந்தது. முதலாவதாகக் கல்வெட்டுடைய தென்கைலைநாதனான பிறவாத பெம்மான் கோயில் கொண்டது அங்கு. இரண்டாவதாகக் குளக்கோட்டன் கட்டிய கந்தளாய்க் குளத்து நீர் பாய்வதும் அந்தப் பகுதியிற் தான். இந்தப் பெருமைகளைக் கொண்ட தம்பலகாமம் இவ்விரண்டு பெருமைகளிலும் மெய்மறந்து போய் வெகுகாலம் தூங்கிற்று. குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பறங்கி பிடித்து, அதன்பின் அது பூனைக் கண்ணன் புலிக்கண்ணன் கைக்கு மாறிய விஷயங்கள்கூடத் தெரியாது. அத்தனை நெடுந்தூக்கம். ஊருக்கு மேற்கே ஒன்றே முக்கால் மைல் தூரத்தில் ஓடும் வெள்ளைக்காரன் புகை வண்டியின் ஓவென்ற இரைச்சலும் தம்பலகாமத்தின் தூக்கத்தைக் கலைக்கவில்லை.

இந்த ஆழ்ந்த தூக்கத்திடையே மட்டக்களப்பில் இருந்து கண்ணப்பர் அங்கு வந்தது ஓர் விசேட சம்பவம் என்றுதான் சொல்லணும். ஏனென்றால் கண்ணப்பனார் மட்டக்களப்பிலிருந்து புறப்படுகையில், அவர் தம்பல காமத்திற்குப் போகப் போகிறேன் என்று கனவுகூடக் கண்டவரல்ல! அவர் திருகோணமலைக்கு வர வேண்டும் என்றுதான் புறப்பட்டார்.

கண்ணப்பர் மட்டக்களப்பிலிருந்து புறப்படுகையில் கோணேசப் பெருமானை முகமாகத் தரிசித்து முத்தியடையப் போகிறேன் என்ற ஆத்மார்த்த நம்பிக்கையும் அவருக்கிருக்கவில்லை. யுத்த கேந்திர ஸ்தான திருகோண மலைக்குப் போய் அங்கே வெள்ளைக்காரனுக்குத் "தொண்டு" செய்தவன் மூலம் வளர்ந்துவரும் பாசிசப் பேயை விரட்டியடிக்க உதவப் போகிறோம் என்ற லௌகீக லட்சியமும் அவருக்கிருக்கவில்லை. அவருக்கிருந்த ஒரே ஆசை அல்லது லட்சியமெல்லாம், தன் கையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இரண்டு கும்பிகளின் கொதிப்பை அடக்க வேண்டும் என்பதுதான். இதற்காகத் தான் அவர் தன் தாவர சங்கமச் சொத்துக்களான கத்தியையும் தோலையும் இரண்டு பழத் துண்டுகளையும் எடுத்து அவற்றைச் சாயம் பூசப்பெற்ற மட்டக்களப்புப் பன் உமலிரண்டினுள் அடக்கி அவ்வுமல்களைப் பிணைத்துத் தோளிற் போட்டுக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகக் கிளம்பினார். ஆனால் பாவம்! மட்டக்களப்புப் புகைரத ஸ்தானத்திலே வேட்டித் தலைப்பிற் சாவதானமாக முடிந்து வைத்திருந்த பணத்தை அவிழ்த்துக் கொடுத்துத் திருகோணமலைக்குப் போக வரம் கேட்ட போதுதான் அந்த "ஆட்டிப் படைக்கும் பொன்னப்பன்" அவருக்கு தம்பலகாமத்திற்கு மட்டும் 'ரிக்கற்' என்ற வரத்தைக் கொடுத்தான்!

விடியற்காலையில் தம்பலகாமத்தில் வந்து இறங்கினார் கண்ணப்பர். பிரயாணச் சோர்வும், பசிக் களையும் மேலிட்டுத் தள்ளாடிக் கொண்டு இறங்கிய அவருக்கு ஸ்டேசனுக்கு எதிரில் ஊர் இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றத்€தைக் கொடுத்தது. அங்கு இரண்டு நிமிடம் தாமதித்த வண்டியும் 'குப்'வென்று ஒருமுறை ஊதிவிட்டு நிர்விசாரத்தோடு போய்விட்டது. கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட குழந்தையைப் போலப் பரிதவித்த கண்ணப்பர் ஸ்டேசனுக்கு எதிராக மாட்டு வண்டிற் போக்குவரத்தினால் தடம் விழுந்து போய்க் கிடந்த காட்டுப் பாதையினூடாகச் சித்தம் போக்கு சிவம் போக்காக நடந்தார். வழி இரு மருங்கிலும் பாலைமரங்கள் உயர்ந்து நின்றன. அந்நீண்ட மரங்களின் கீழே சடைத்துப் படர்ந்திருந்த பற்றைகளைக் கடித்துக்கொண்டு இருந்த வெள்ளாடுகளைக் கண்டபோதுதான் அவருக்கு அருகிலே ஊர் இருக்கிறதென்ற நம்பிக்கை ஏற்பட்டது மேலே நடந்தார்.

ஒரு மைல் தூரம் போயிருப்பார். கண்ணப்பரின் கண்ணெதிரில் தென்னை மரங்கள் தென்பட்டன. முதுகுப் புறமாகக் காடு கழிய, மருதநிலம் காலுக்குக் கீழ் மிதிப்பட்டது. ஆர்வத்தோடு அங்குமிங்கும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தொலைவுக்க பரந்துகிடக்கும் வயல் வெளியினூடே, அங்குமிங்கும் திட்டுத் திட்டாக மக்கள் குடியிருக்கும் திட்டிகள் தோன்றின. எந்தத் திட்டை நோக்கி நடப்போம் எனற யோசனையோடு கண்ணப்பர் நடந்துகொண்டு இருந்தார்.

"யாரது? மட்டக்களப்புப் போல இருக்கே" என்ற குரல் கேட்டபோதுதான் திரும்பிப் பார்த்தார். எதிரே வாய்க்காலருகிலே முளைத்திருந்த வல்லாரல் கீரையைப் பிடுங்கிக்கொண்டு இருந்தார் ஒருவர்.

"ஆமாம் பாருங்க; மட்டக்களப்புதான்" என்று அடக்க ஒடுக்கமாகப் பதில் கொடுத்தார் கண்ணப்பர்.

"இங்கே யாரைப் பார்க்கப் போறீங்க?"

"ஒருத்தரையும் பார்த்து கொண்டல்ல. தொழிலுக்காகத்தான்..."

"அப்போ மந்திரம், வைத்தியம் எல்லாம் உங்கட்குத் தெரியவேணும்."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை ஐயா. நான் எளிய சாதி. அம்பட்டன்..." என்றிழுத்தார் கண்ணப்பர். தோளிற்கிடந்த துண்டு தானாகவே நழுவி முழங்கைக்கு வந்து விட்டிருந்தது.

"அப்படியா; வா, வா எங்க பூச்சிநாகன் திடலிலேயே நீ பிழைக்கலாம் வா என்னோடு" என்று கூறிக் கொண்டே அந்த மனிதர் தான் பிடுங்கியிருந்த கீரையை அவசரமாக மடியிற் கட்டிக்கொண்டு முன்னே நடந்தார். தனக்குக் கிடைத்த எதிர்பாராத வரவேற்பைக் கண்டு ஆச்சரியப்பட்டவராகப் பின்னே நடந்தார் கண்ணப்பர்.

* * *

இப்போது எல்லாம் கண்ணப்பர் வேளாளர் வதியும் பூச்சிநாகன் திடல் என்ற திவ்வியப் பிரதேசத்தில் எல்லோர்க்கும் அதாவது வேளாளர் எல்லோர்க்கும் வேண்டிய ஒரு மனிதர். சீனத்துச் சிங்காரிகளின் படத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கும் பெரிய "சலூன்" இல்லாவிட்டால் அதனால் என்ன குறைந்து விட்டது? அவருக்கென்று குடியிருக்க ஓர் கூரை வீடு இருக்கிறது. "தொழில் செய்யவும்" ஒரு கொட்டில் இருக்கிறது. கொட்டிலுக்குள்ளே விரிக்கப்பட்டிருந்த ஓலைப்பாயில் சம்மணங்கட்டி இருக்கிறவர் இருந்தால் கண்ணப்பர் தன் தொழிலை ஒரு 'பாக்கு வெட்டுற' நேரத்தில் முடித்துவிடுவார். இத்தனைக்கும் அவரிடம் தொழிலுக்கு தேவையான உபகரணங்களும் அதிகமாக இல்லை. அவைகளை வாங்க வேண்டுமே என்ற கவலையும் ஏறக்குறைய கண்ணப்பருக்கு இல்லை. ஏன்? வாழ்க்கையிலேயே அவருக்கு ஒரு கவலையும் இல்லாமற்தானிருந்தது. பூச்சிநாகன் திடல் வேளாளரிடையே குடிமகன் என்ற விருது அவருக்கு. ஊரிலே நல்லதும் பொல்லாததுமான காரியங்கள் அவர் போகாவிட்டால் நடவா. இரு போகமும் அருவி வெட்டும் காலங்களில் களத்திற்குக் களம் குடிமகனுக்கென்று ஒரு கட்டு இருக்கும். இதனாற் கோடைப் போகத்தின்போது கண்ணப்பரும் ஒரு 'போடியார்' அளவு நெல் சேர்த்து விடுவார். வருடத்திற்கு இருமுறை வரும் கல்யாண சீசன்களிலும், திருவிழா காலங்களிலும், அசுப தினங்களிலும் அவர் தன்னை மறந்த நிலையில் குடித்துக் களிக்கவும் வசதியிருந்தது! வேறென்ன வேண்டும் அவருக்கு?

* * *

ஊர் வேளாளரும் கண்ணப்பர் வரவினால் ஒரு வரிசை உயர்ந்தே விட்டனர். 'இந்தக் கரையாரப் பயல்கட்கு அம்பட்டன் கிடையாதே' என்று அவர்கள் பெருமைப்பட்டு கொள்ளாத நாளே கிடையாது. 'கரையாரப் பயல்கட்கு' இல்லாத குடிமகன் என்ற காரணத்தினால் மற்றக் குடிமகன்களைவிட்க் கண்ணப்பருக்கு அவர்கள் ஒரு தனி மரியாதையைக் கொடுத்தனர். இந்த மதிப்பினால் நிலாக்காலங்களிலே கண்ணப்பர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையைச் சத்தத்தோடு வாசிப்பதையும், மட்டக்களப்பு கிராமியக் கவிகளை இசையோடு பாடுவதையும் ஊரவர் தேவார திருவாசங்களைக் கேட்பதுபோல ஆனந்தத்தோடு கேட்டனர். வெள்ளாள சமூகத்தின் ஆனந்தமும் பெருமையும் எதிரே முருகுத்திடல் என்ற திட்டியிலிருந்த கரையார சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கிற்று!

'வெள்ளாளன் என்னதான் உயர்ந்த சாதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும் அவனுகட்குப் பதினேழு வரிசைதானே. ஏன் கோயிலிலுங்கூட நமக்குத் தானே முதலிடமும் அதிகாரமும். வெள்ளாளப் பயல்கள் எடுபிடி வேலை செய்ய வேண்டியவர்கள் என்றுதானே கல்வெட்டு சொல்கிறது. இப்போ அவர்கள் ஒரு அம்பட்டனைக் கொண்டு வந்து சேர்த்திட்டு நம்மோட போட்டி போட்டுப் பதினெட்டு வரிசைக்காரனாகப் பாக்கிறங்களே' என்று முருகுத் திடலிலிருந்த பெரிய மனிதர்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

உடனேயே மட்டக்களப்புக்கு ஆளனுப்பி ஒரு புதுக்குடிமகன் கொண்டு வரவேண்டும் என்று ஏற்பாடு ஆயிற்று அவர்களிடையே. கண்ணப்பரின் ஊர்ப் பெயர் தெரிந்திருந்ததால் அந்த ஊருக்கே போய்ச் சேர்ந்தார்கள்.

* * *

ஐந்து நாட்களிற் கரையார சமூகத்திற்கென்று ஒரு புதுக் குடிமகன் வந்து விட்டான். ஆனால் முருகையா- அதுதான் அவன் பெயர்-கண்ணப்பரைப் போலத் தன்னந் தனியனாகப் போக்கிடமின்றி இங்கு வரவில்லை. மட்டக்களப்பிலிருந்து தம்பலகாமம் வரையும் மெய்க்காப்பாளரோடு வந்த முருகையா, ஸ்டேசனிலிருந்து ஊர்வரையும் ராஜோபசாரத்தோடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டார். அவரைக் கொண்டு வந்து சேர்த்ததில், கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தபோது, பகீரதனுக்கு ஏற்பட்ட பெருமை, கரையார சமூகத்துக்கு ஏற்பட்டது.

முருகையாவின் வரவு வெள்ளாளருக்கு மட்டும் ஒரு எரிச்சலை, மனமடிவைக் கொடுத்தது. ஆனால் அவர்கள் குடிமகனான கண்ணப்பருக்கு மட்டும் சந்தோஷம். ஏனென்றால் முருகையா அவரின் உடன்பிறந்த தம்பி!

தங்கட்கேற்பட்ட மானக் கேட்டைப் போக்கிக் கொள்வதற்காகக் கண்ணப்பர் மூலமாக முருகையாவை ஊரு ககுத் திருப்பியனப்பிவிட முயன்றார்கள் கண்ணப்பரின் 'நயினார்கள்!' அம்முயற்சி பலிக்காமற் போகவே அவர்கள் தங்கள் ஆத்திரத்தை எல்லாம் கண்ணப்பர்மேல் திருப்பி "கரையாரப் பயலுக்குச் சிரைக்க வந்தவனோட நீ இனி ஒரு தொடர்பும் வச்சிக்கக் கூடாது. அவன் வீட்டின் பச்சைத் தண்­ர்கூடக் குடிக்கக்கூடாது. அவன் வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வச்சா உடம்பை மொளி மொளியாப் பேத்து விடுவோம்" என்று தங்கள் வீரத்தைக் காட்டினார்கள்.

கண்ணப்பர் திகைத்தார்! பாலம். அத்தனைப் பிசாசுகளின் முன் அவர் என்ன செய்வார்? தன் சதையின் சதையான ரத்தத்தின் ரத்தமான முருகையாவோடு எந்தத் தொடர்புமே இல்லாதவாறு மூன்று மாதங்கள் அவருக்குத் தெரியாமலே கழிந்து விட்டன.

அன்று....

இடமாற்றத்தின் காரணமோ என்னவோ முருகையா ஒரு வாரமாகப் பாயும் படுக்கையுமாகக் கிடக்கிறான் என்ற செய்தி தெரிய வந்தது கண்ணப்பருக்கு. ஆட்பேரற்ற அந்த ஊரிலே, தம்பி தன்னந்தனியனாய் நிராதரவாகக் கிடக்கிறானே என்பதைக் கேள்விப்பட்டபோது கண்ணப்பரின் உதிரம் துடித்தது. நெஞ்சம் படபடத்தது. ஆனாலும் அவனைப் போய்ப் பார்ப்பதற்குப் பயம். தான் போனாற் தன் நயினார்கள் விட்டு வைப்பார்களா?

யோசித்து யோசித்துக் குழம்பியவாறே மனஞ்சாம்வியவராகிக் கண்ணப்பர் சவரஞ் செய்துகொண்டு இருந்தார் மாணிக்கம்பிள்ளைக்கு.

பூச்சிநாகன் திடலிலேயே மாணிக்கம்பிள்ளை நடப்பான மனிதர். அவர் விரலை அசைத்தால் அந்த ஊரே நிலைபெயர்ந்து ஆடும். அவரிடம் சொல்லித் தம்பியைப் பார்க்க அனுமதி பெற்றுக் கொண்டால்...?

நம்பிக்கை யாரை விட்டது?

"நயினார்; முருகையா சாகக் கிடக்கிறானாம். அவனைப் போய்ப் பார்த்துவிட்டு..."

ஆமையாய் அடக்கிக் கிடந்த மாணிக்கம்பிள்ளை விறுக்கென்று எழுந்து "என்னது! அவன் எக்கேடு கெட்டாலும் உனக்கென்னடா? கரையாரப்பயல்ர மகன் சாகட்டும். நீ போகக்கூடாது அங்கு. போனாப் பிறகு தெரியுமே..." என்று சீறி விழுந்தார் கண்ணப்பர் மீது.

கண்ணப்பர் பயந்து ஒடுங்கினார் ஒரு கணம்! நம்பிக்கை தவிடு பொடியாய் விட்ட நிலையில் கண்ணப்பருக்கு எங்கிருந்தோ ஒரு வரட்டுத் தைரியம் பிறந்தது. அந்தத் தைரியத்தில் "உங்கட்கு உங்களோட கோபம் எண்டா முருகையா என் ரத்தம். நான் அவனைப் பார்க்கப் போகத்தான் வேண்டும்" என்றார் கண்ணப்பர்.

"அம்பட்ட நாயே! எதிர்த்தா பேசுறா" என்று உறுமிக் கொண்டே கண்ணப்பரின் முகத்தில் அறைந்தார் மாணிக்கம் பிள்ளை.

அடியை வாங்கிக் கொண்ட கண்ணப்பர் வலது கண்ணைக் கையாற் பொத்தியபடி அழுது கொண்டே "இது பிரிட்டிஷ்காரன் ராச்சியம், எங்க இஷ்டம்போல மனுஷனை வதைக்க முடியாது" என்றார்.

அதன் பிறகு...?

கண்ணப்பருக்கு உலகமே தெரியவில்லை! உடம்பெங்கும் புளியம் விளார்கள் கொஞ்சியதால் ஏற்பட்ட இரத்தம் உறைந்த நீண்ட கோடுகள் - வீக்கம். ஊரே சேர்ந்து அடித்தால் அவர் என்னதான் செய்திருப்பார்?

மாலையானபோதுதான் முக்கிமுனகி எழுந்திருக்க முயன்றார் கண்ணப்பர். உள்ளத்திலே தம்பியைப் பற்றிய ஏக்கம், அவனைப் பார்க்கவேண்டுமே என்ற ஆசை, ஆனால் எழுந்து நடக்க முடியவில்லை. படுத்தபடியே தான் இருந்தார்.

காற்றுவாக்கில் அந்தக் கதை அவர் காதில் விழுந்தது. 'முருகையா செத்து ப போனானாம், அவனைப் புதைத்தாய் விட்டதாம்...'

எங்கிருந்தோ ஒரு அசுரபலம், ஒரு வெறி வந்தது கண்ணப்பருக்கு. எழுந்து கத்திக்கொண்டே ஓடினார்.

"தம்பி முருகையா...

செத்துப் போன தம்பி திரும்பி வருவானா?

தேம்பித் தேம்பியழுத கண்ணப்பர் கோணோசரை நோக்கி ஒரு பிடிச் சேற்றை அள்ளி எறிந்து "கோணேசா! இந்தக் கொடுமையை எல்லாம் பார்த்துக் கொண்டு நீ இருக்கியா?" என்று திட்டிவிட்டு ஸ்டேசன் ரோட்டிலே நடந்தார்.

சுதந்திரன் 1953

...........

a+a=2a ஆயின் கதை+கதை= இரு கதைகளல்ல

'பொறி காணலவனொடு மீனமுங் குறையாச், செறிமாண் கழிசூழ் புளியந்துருத்தி மட்டக்களப்பு' எனப் புலவராற் பாடப் பெற்ற மட்டக்களப்பின் அவாசிக் கண்ணதாய கல்முனையிலே பகுதிக் காரியாதிகாரி கந்தோரில் எழுத்தராகக் கடமையாற்றிய சிவஞானம் அவர்கட்கு அதே புலவரால் 'நிரை கழலரவ நிறைமொழி பெறீஇக் கோணா தோங்கிய கோணமாமலை' எனப் பாடப்பெற்ற திரிகோணமலையின் குணதிசைக் கண்ணதான தம்பலகாமம் பகுதிக் காரியாதிகாரி கந்தோருக்கு மாற்றம் கிடைத்தது.

இந்த மாற்றம் அவர் எதிர்பார்த்ததே. கல்முனையைச் சேர்ந்த பாண்டிருப்பை, சிவஞானம் ஜனனபதியாகக் கொண்டிருந்தாலும் ஊரிலே அவர் ஆறாண்டுகட்குமேல்- அதாவது பொதுவிதியை மீறி இரண்டாண்டுகள்- உத்தியோகம் பார்த்துவிட்டார். ஆகவே அடுத்த வருடத் தொடக்கத்தில் அவர் மாற்றப்படுவது தவிர்க்க முடியாததொன்று ஆகவே மூன்று மாதங்கட்கு முன்னால் அவர் மாற்றம் பெறுபவராகக் குறிப்பிடப்பட்டபோது. தான் அங்கத்தவராகவுள்ள தொழிற் சங்கத்தை நாடி அதந் துணையோடு தம்பலகாமத்திற்கு மாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளைச் செய்திருந்தார். ஏனென்றாற் கொழும்பு போன்ற பெரிய பட்டினங்களின் வீட்டுக் கஷ்டம் ஏற்கனவே அவர் அனுபவித்த ஒன்று. தம்பலகாமத்துப் பச்சைப் பெருமாள் அரிசியின் சவையையும் கோணசரின் மகிமையும் அவர் மனைவி கேள்விப்பட்டிருக்கிறாள். மலை நாட்டுக் குளிர் அவரது தொய்வு நோய்க்கு ஒத்து வராது என்பது அவரது கிழட்டுத் தாயாரின் வைத்திய சாஸ்திரம். எல்லாஞ் சேர்ந்து தம்பலகாமத்தை அவர் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களாக அமைந்தன.

ஆகவே தம்பலகாமத்திற்கு மாற்றக் கட்டளை கிடைத்தபோது சிவஞானம் அதிர்ச்சியோ, ஆனந்தமோ அடையவில்லை. 'என் கடன் பணி செய்து கிடைப்பதே' என்ற வாக்கை யுணர்ந்த கர்மயோகி போலப் புதிய இடத்திற்கு போவதற்கு அவர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகப்பிற் படித்துக் கொண்டிருந்த தன் மூத்த மகனை மட்டக் களப்புப் பட்டினத்தின் விடுதிப் பாடசாலையிற் சேர்ப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார். அடுத்த மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் தம்பலகாமம் கொண்டு செல்வது அவரது திட்டம். ஏற்கனவே தம்பகாமம் சென்று குடியிருக்க வீடும் எடுத்திருந்தார். இப்போது அம்மி தொடக்கம் அலுமாரி வரையுள்ள தன் பொருட்களையெல்லாம் கட்டி ஏற்றிப் புது இடத்திற்குக் கொண்டு போவதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தார். ஊரை விட்டுப் போக இன்னமும் ஒரு வாரமே இருந்தது.

சிவஞானத்தின் அயல்வீட்டுக்காரரும், இனத்தவருமான ஆசிரியர் சிவசேகரத்திற்குத் தம்பலகாமம் சுள்ளிமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு மாற்றக் கட்டளை கிடைத்தது. ஆசிரியர் தனக்கு மாற்றம் வருமென எதிர்பார்க்கவேயில்லை. ஏனென்றால் அவ எம்.பி.யின் கையாள்!

எனவே மாற்றக் கட்டளையினால் அதிர்ச்சியடைந்த சிவசேகரம் கட்டளையைக் கையில் எடுத்துக் கொண்டு நேரே எம்.பி.யிடம் சென்றார். எம்.பி.சொன்னார், "பத்து ஆண்டகட்குமேல் உள்ளூரிற் கடமையாற்றிய, நாற்பது வயதுக்கட்பட்ட ஆசிரியர்களை எல்லாம் வெளி மாகாணங்கட்கு மாற்ற வேண்டும் என்ற கொள்கையை அரசாங்கம் மிகக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றது. நான் உங்களுக்காக எவ்வளவோ வாதாடினேன். கடைசியாய் மலை நாட்டிற்கத் 'தூக்கி எறியப்பட' இருந்த உங்களுக்குத் திரிகோணமலைப் பகுதிக்கு மாற்றச் செய்தேன். எதற்கும் சில நாட்கள் அங்கே போங்கள். நான் வேறு வழி பார்க்கிறேன்."

வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம், அவரைப் போலவே மாற்றம் பெற்ற இன்னோர் ஆசிரியர் "தன்னுடைய ஆட்களை எல்லாம் உள்ளுக்கெடுக்கத்தான் எங்களைத் தூக்கி எறிந்திருக்கிறான்" என்று வத்தி வைத்தார். "நான் இந்த மாற்றத்தைப் 'புறொட்டெஸ்ற்' பண்ணத்தான் போகிறேன்" என்று ஆக்ரோஷமாக வேறு சொல்லி வைத்தார். அவரது பேச்சில் 'எடுபட்ட' சிவசேகரம் ஆத்திரத்தோடும் கோபத்தோடும் பஸ்ஸ’ல் இருந்து இறங்கினார்.

கிளாக்கர் சிவஞானம் தன் வீட்டு விறாந்தையில் தன் வீட்டுப் பாவனைப் பொருட்களையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் வைக்கோற் பிரிகளினாற் சுற்றியும் கடதாசிகளைத் திணித்தும் சிக்காராகக் கட்டிக் கொண்டு இருந்தார். அந்த வேலையில் காரியாலயப் பீயோன் அவருக்கு உதவி செய்து கொண்டு இருந்தான். இங்கிருந்து மட்டக் களப்பிற்குப் பொருட்களை லொறியில் கொண்டு சென்று, அங்கு இறக்கி மீண்டும் ரெயிலில் ஏற்றுவது சிரமமாகவும், பொருட்கட்குச் சேதம் விளைவிப்பதாகவும் இருக்கும் என்பதை உணர்ந்திருந்த சிவஞானம், இங்கு இருந்து லொறி மூலமே நேரடியாக அவைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதியைத் தன் கந்தோர் மேலதிகாரிகளிடமிருந்து பெற்றிருந்தார். நாளைக்காலை சாமான்களை ஏற்ற லொறி வந்துவிடும்.

பஸ்ஸ’லிருந்து இறங்கிய ஆசிரிய தன் வீட்டிற்குச் செல்லாமல் படலையைத் திறந்து கொண்டு நேரே சிவஞானத்தின் வீட்டிற்கு வந்தார். நிர்விசாரமாகத் தன் பொருட்களைக் கட்டிக்கொண்டு இருந்த கிளாக்கரைப் பார்க்க அவருக்கு எரிச்சலாகவும், ஆத்திரமாகவும் இருந்தது. "வாங்க மாஸ்ரர்" என்று வரவேற்ற சிவஞானத்திடம் "எனக்கும் தம்பலகாமத்திற்கு மாற்றம் வந்திருக்கிறது" என்று ஆற்றாமையோடு சொன்னார்.

"அப்படியா! மெத்தச் சந்தோஷம் இங்கேயும் அடுத்த வீட்டுக்காரராக வாழ்ந்தது போல அங்கேயும் வாழ்ந்து விடலாம். எப்போ புறப்படுகிறீர்கள்?" என்று ஆனந்தமாகவே கேட்டார் சிவஞானம்.

"நான் போகப் போவதில்லை. மினிஸ்ரர் வரை சென்று 'புறெட்டெஸ்ற்' பண்ணுவேன்" என்று ஆத்திரத்தோடு சொன்னார் சிவசேகரம்.

"அது உங்க விருப்பம் மாஸ்ரர். ஆனால் நாட்டின் எந்தப் பகுதியிலும் சேவை செய்யத் தயார் என்று நாம் எல்லோரும் உத்தியோகம் கிடைத்தபோது ஒப்புக் கொண்டிருக்கிறோம்."

"அது நீங்கள்தான். அதற்காகத்தான் நாங்கள் அரசாங்கச் சலுகைகளை எல்லாம் இழந்து மிஷன் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தோம். இப்போ பாடசாலைகளையெல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொண்டதினால் எங்களை கண்டபடி, இஷ்டம் போலத் தூக்கி எறியப் பார்க்கிறார்கள். தானும் ஒரு கை பார்க்கிறேன்" என்று ஆக்ரோஷ்த்தோடு பேசிவிட்டு ஆசிரியர் தன் வீட்டை நோக்கி நடந்தார்.

அன்றிரவு மாற்றலாகிச் செல்லும் கிளாக்கருக்கு அவருடைய காரியாலய உத்தியோகஸ்தர்கள் கல்முனைவாடி வீட்டிலே பிரியாவிடை விருந்தளித்துக் கௌரவித்தார்கள். காரியாதிகாரியும் அவரது கந்தோர்ச் சேவகனும், எழுத்தர்களும், காணிவிருத்தி ஓவசியர்களும் 'எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை' என்ற பாரதியின் சமத்துவத்தை நுரை பொங்கும் பீயர் கிளாசுகளின் கிளர்ச்சியிற் பெற்றார்கள். சொற்பொழிவுகள்-பாட்டுக்கள்-ஆட்டங்கள் சுவையான விருந்து.... வாந்தி... சிலருக்குத் தலைக் கோழி கூவியபோதும் "இரவு இன்னமும் இளமையாகவே இருக்கிறது" என்ற நினைவு. கேளிக்கை!

அன்றிரவு ஆசிரியர் சிவசேகரத்துக்கு நித்திரையே வரவில்லை. நினைவுகளும் கற்பனைகளும் அவரைக் குடைந்தன.

வீட்டை விட்டுப் போனாற் கரவாகு வெட்டையிற் பயிராக இருக்கும் நாலு ஏக்கர் வேளாண்மையை யார் கவனிப்பது?

மனைவியையும் பிள்ளைகள் நாள்வரையும் தம்பல காமத்திற்கே கூட்டிக்கொண்டு இங்குள்ள வீடுவாசல் 'அலக்கழிந்து' விடாதா? அருமையாக நட்டுப் பாடுபட்டு வளர்த்த பத்துக் கறுத்தக் கொழும்பானும் அடுத்த வருடம் காய்க்குமே. அவைகளின் கதி என்ன?

எம்.பி.சொல்லுகிறபடி அங்கு போய் வேலையை ஒப்புக்கொண்டு விட்டாற் திரும்பிவர எத்தனை வருடங்களாகுமோ?

எங்கட்கென்று முறையான மாற்றத் திட்டம் இருக்கிறதா? தப்பித் தவறிக் கஷ்டமான இடத்துக்குப் போய் விட்டாற் பிறகு 'அகப்பட்டவனுக்கு அட்டமத்துச் சனி' என்பதுதானே வாத்தியாரின் கதை, பொலநறுவைப் பகுதிக்குச் சென்ற புண்ணியமூர்த்தி பத்து ஆண்டுகளாக அங்கே தானே மட்டையடிக்கிறான்?

என்றெல்லாம் அவர் நினைத்துக்கொண்டேயிருந்தார். ஒரு கட்டுச் சொக்கலால் பீடியை ஊதித் தள்ளிய பின்னரும் ஒரு முடிவுக்கும் வர அவரால் முடியவில்லை.

கோழி கூவிய போதுதான் 'முதலில் ஒரு மாதம் நோட்டீஸ் தரவில்லை' என்ற காரணத்தைக் காட்டிப் 'புறொட்டெஸ்ற்' பண்ண வேண்டும். போயா கழிந்த அடுத்த நாள் 'புறொட்டெஸ்ற்' கடிதத்தோடு மட்டக்களப்புக் கல்விக் கந்தோருக்குப் போக வேண்டும்' என்று தீர்மானித்தார்.

அத்தோடு கொழும்பிலே தொழிற்திணைக்களத்தில் வேலையாக இருக்கும் தன் ஒன்றுவிட்ட 'கொழும்பு தெரிந்த' மைத்துனத்துக்குத் தன் மாற்றம் சம்பந்தமாக ஒரு நீண்ட கடிதமும் எபதி முடிக்கையில் மணி மூன்றரை அடித்தது.

போயா தினம் கழித்த மறுநாள் சாயந்திரம் கிளாக்கர் கட்டி வைத்திருந்த பொருட்களை எல்லாம் உற்சாகத்தோடு லொறியில் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த லொறியிலேயே அவரது வேலைக்காரப் பையனும் செல்வதாக ஏற்பாடு. அடுத்த நாள் மாலையில் அவரும் குடும்பத்தினரும் ரயில் மூலம் தம்பலகாமல் செல்ல இருந்தனர் பக்கத்து வீட்டுக்காரருக்கும் உறவினருக்கும் பிரியா விடை சொல்லியாகி விட்டது.

அன்று காலையில் ஆசிரியர் சிவசேகரம் வித்தியா கந்தோருக்குச் சென்றிருந்தார். பவ்வியமாக ஒடுங்கிச் 'சப்ஜெக்ற்' கிளாக்கருக்கு ஐயா போட்டு தன் குறையை வெளியிட்டார். கிளாக்கர் வித்தியாதிபதியிடம் கதையுங்கள் என்று வழி விட்டார்.

வித்தியாதிபதி இரக்கமுள்ளவர், நல்லவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர்தான். ஆசிரியர் சொன்னதையெல்லாம் மிக்க அனுதாபத்தோடு கேட்டுவிட்டுச் சொன்னார். "என்னால் ஏதுமே செய்ய முடியாது. பத்து வருடம் ஊரில் சேவை செய்தவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்பது அரசாங்கத்தின் கண்டிப்பான உத்தரவு. வேண்டுமானால் இரண்டு வாரங்கட்கு மாற்றத்தை ஒத்திப் போடுகிறேன். அதற்குமேல் என்னால் ஏதுமே செய்ய முடியாது" என்று கையை விரித்தார்.

ஆசிரியர் மேலே ஒன்றும் பேச முடியாதவராகச் சற்று நேரம் மௌனமாகவே நின்றார். பின்னர் "ஏதோ இரக்கப்பட்டுப் பார்த்துச் செய்யுங்கள் ஐயா" என்று கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு மீண்டார். வழியிலே சிவஞானம் கிளாக்கரின் சாமான் லொறியைக் கண்டார். வீட்டிலே உடனடியாகக் கொழும்புக்குப் புறப்பட்டு வரும்படி அவர் மைத்துனன் கொடுத்திருந்த தந்தி அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் நாளைக்கு கொழும்புக்குப் போகக் காசு 'புரட்டுவதை'யிட்டு அவர் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

அடுத்த நாள், படுக்கை வசதிகளோடு கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டியில் சிவஞானம் தன் குடும்பத்தாரோடு தம்பலகாமத்திற்க பயணமாகிக் கொண்டிருந்தார். அவரை வழியனுப்பி வைக்க மட்டக்களப்புப் புகையிரத ஸ்தானத்திற்குக் கல்முனையிலிருந்து ஒரு 'வான்' நிறைய நண்பர்களும் சக உத்தியோகத்தர்களும் வந்திருந்தனர். கூவென்று நீளக் கரலெடுத்துக் கூவிவிட்டு ரயில் ஓடத் தொடங்கிற்று. கைகளை ஆட்டி நண்பர்களைப் பிரிந்த பின்னரும் சிவஞானத்தின் பிள்ளைகள் யன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வெண்மணற் பரப்பினிடையே குண்டுகளிலும் குழிகளிலும் தேங்கியிருந்த மழைத் தண்­ரையும், மார்கழி மழையிற் தலை முழுகி நிற்கும் நாவற் புதர்களையும் 'புதினம்' பார்த்துக் கொண்டிருந்தார்கள். சித்தாண்டியைக் கடந்த பின்னர் சிவஞானத்தின் மனைவி சோற்றுப் பொட்டலத்தை அவிழ்க்கத் தொடங்கினாள். அதைத் தெரிந்த கிளாக்கர் 'பூபே'ப் பக்கமாகப் போய்விட்டு வந்தார். மட்டக்களப்பு வாவியின் ஒட்டி மீன் குழம்பும், மட்டு இறால் பொரியலும் அன்று அவருக்குத் தேவாமிர்தமாக இருந்தன. பாசம் யாரை விட்டது! ஆயின் சாப்பாடானதும் குறட்டை விட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிட்டார்.

கொழும்புப் பெட்டியில் பிரயாணஞ் செய்து கொண்டிருந்த சிவசேகரம் இலாக்காவில் வேலை பார்க்கும் தன் மைத்துனன் தன் 'கக்கிசங்கட்கு' ஏதாவது வழி செய்வான் என்று நம்பினார். ஆயின் அந்த நம்பிக்கையையே தன்னுள் நம்பிக்கை யீனமாக்கிக் கொண்டு மறுகினார். மனத்திலே சாந்தியில்லை. உணவைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் ஆசனத்திற் கொட்டுக் கொட்டென்று விடியுமட்டும் விழித்துக் கொண்டேயிருந்தார்!

விடிந்தது. அந்த அதிகாலையிலேயே ரயில் தம்பலகாமத்தை அடைந்து விட்டது. புகையிரத நிலையத்திலே சிவஞானத்தின் வேலைக்காரப் பையன் காத்துக் கொண்டிருந்தான். ரயிலிலிருந்து இறங்கியதும் எல்லாரும் வாடகை கொடுத்திருந்த வீட்டிற்குச் சென்றார்கள். லொறியிற் கொண்டு வந்திருந்த பொருட்களில் முக்கியமானவற்றை பிரித்து ஏற்கனவே வேலைக்காரப் பையன் வீட்டை ஓரளவுக்கு ஒழுங்கு பண்ணியிருந்தான். கிளாக்கரது மனைவி உடனடியாக அடுக்களையை ஒழுங்கு பண்ணத் தொடங்கினாள். அவளுக்குச் சற்று நேரம் உதவி செய்த சிவஞானம் பிரயாண அலுப்பினாற் கட்டிலில் விழுந்து படுத்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்துத்தான் அவர் வேலைக்குப் போக வேண்டும்.

கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்திலே சிவசேகரத்தை அவர் மைத்துனன் வழி பார்த்திருந்தான். அவரைக் கண்டதுமே, அவரது விஷயத்திற்காகத் தான் இரண்டு நாள் விடுமுறை பெற்றிருப்பதாகச் சொன்னான்.

இருவரும் அவனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றியதும் கல்விக் கந்தோருக்குச் சென்றனர். அலுவலகத்திலே வாசலில் வாத்தியார் நிற்க மைத்துனன் மட்டும் உள்ளே சென்றான்.

திரும்பியவன் வெள்ளவத்தையிலே ஒருவரைக் காண வேண்டும் என்று ஆசிரியரை அங்கிட்டுச் சென்றான். வாடகைக் காரின் மீற்றரை வாசித்தபோது ஆசிரியருக்குப் பகீரென்றது.

அன்று மாலையில் இருவரும் கொடடாஞ்சேனையில் ஒரு கிளாக்கரை வீட்டிற் சந்தித்தனர். இரவு பத்து மணியாகும் வரை மூவரும் மேல் நாட்டுக் குடிவகைகள் பரிமாறப்பட்டும் ஒரு ஹோட்டலில்...

சிவசேகரம் பில்லுக்குப் பணங் கொடுத்தார்!

இப்படியாக மூன்று நாட்கள் எங்கெங்கோ சென்றனர் எவர் எவரையோ கண்டனர் கையிலிருந்த பணம் முழுவதும் கரைந்தது. இனி மேலும் கட்டி வராதெனக் கண்ட சிவசேகரம் ஊருக்குத் திரும்பினார். கோட்டைப் புகையிரத நிலையத்தில் அவரை வழியனுப்புகையில் 'ஒரு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஸ்பெசலிஸ்ரிடம் மெடிக்கல் ரெஸ்ற் பண்ணியதாக மெடிக்கல் சேட்டிபிக்கற் எடுத்து அந்தக் கிரவுண்டில் மாற்றம் எடுக்கலாம்' என்ற புதிய உத்தியைச் சொன்னான்.

ஆங்கிலப் புது வருடத்துக்க அடுத்த நாள் கிளாக்கர் சிவஞானம் கந்தோருக்கு சென்று வேலை பாரம் எடுத்துக் கொண்டார்! கந்தோர்ச் சேவகன் அவருக்கு வாடிக்கையாகப் பால், மீன், அரிசி எல்லாமே கொடுப்பதற்கு வியாபாரிகளைப் பிடித்துக் கொடுத்தான். மூன்று பிள்ளைகளும் மஹா வித்யாலயத்திற் சேர்க்கப்பட்டார்கள். வீடு-கந்தோர்-விளையாட்டு-பிள்ளைகள்-குடும்பம் எனச் சிவஞானத்தார் தம்பலகாமத்திலே தம் வாழ்கையை அமைத்துக் கொண்டு விட்டார்.

கொடும்பிலிருந்து ஊருக்குமீண்ட சிவசேகரத்திற்கு உள்ளூர்ப் பாடசாலைக்குப் போவதற்கே வெட்கமாக இருந்தது. கொழும்பிலே நடந்த வேலைகளைப் பற்றித் துளைத்துக் கேட்கும் ஆசிரியர்கட்கு என்ன பதில் சொல்வது? என்று அவருக்க விளங்கவில்லை. ஆகவே இந்த வாரம் பாடசாலைக்குப் போவதில்லை எனத் தீர்மானித்துக் கொண்டவராய்க் 'கசுவல் லீவிற்கு' விண்ணப்பித்துக் கொண்டார்!

நாலாந் திகதி அவரது மாற்றம் பதினைந்து நாள்பின் போடப்பட்டதாகத் தெரியப்படுத்திய 'டிபெமென்ற்' கட்டளை கிடைத்த போதுதான். தனது பெயர் எந்தப் பாடசாலைச் சம்பளப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டிராது என்ற உண்மை அவருக்குத் தெரிந்தது. 'சப்ஜெக்ற்' கிளாக் விளையாடியிருக்கிறான் என்று புறு புறுததுக் கொண்டார்!

எடுத்த பணத்தையும் கொழும்பிற் பாழாக்கியாயிற்று. இந்த மாதச் சம்பளமும் வராதே எனக் கவலைப்பட்ட சிவசேகரம் அடுத்த வாரமும் பாடசாலைக்குப் போகவில்லை!

எப்படியோ பொங்கல் கழிந்தது!

மாட்டுப் பொங்கலன்று, கரவாகுவெட்டை வயல், கறுத்தக் கொழும்பான் மாமரங்கள், வீடுவாசல், பிள்ளைகளின் படிப்பு இவற்றிற்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் தடவைகள் கருத்தான கருத்துக்களை உதிர்த்து விட்டுத் தன் வீட்டை விட்டுப் பிரிகையில் உண்மையாகவே அவர் அழுது விட்டார். சுதந்திரத் தினத்தையொட்டிய 'போயா'வில் மீண்டும் வீட்டுக்கு வருவதாக கண்­ரோடு மனைவியிடம் கூறினார்.

அவரை ஏற்றிக் கொண்டு வந்த ரயில் அதிகாலையில் தம்பலகாமத்தை அடைந்தது. புகையிரத நிலையத்திலிருந்த பெட்டிக் கடையில் ஒரு கிளாஸ் தண்­ர் வாங்கி முகங் கழுவி வாய் கொப்பளித்துப் 'பிளேன் ரீ' வாங்கிக் குடித்துவிட்டுப் பாடசாலையை நோக்கி நடந்தார். பாடசாலையை அடைந்தபோது ஏழரையாகி விட்டது!

சற்று நேரத்தில் ஊரவரான பாடசாலைத் தலைமை ஆசிரியரும் பாடசாலைக்கு வந்துவிட்டார். அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது பாடசாலை அறையிலேயே தங்கலாம் எனவும், பக்கத்தேயுள்ள தலைமை ஆசிரியர் அபயம் அளித்தார். பாடசாலை வளவிற்குச் சம்பளமற்ற காவற்காரன் கிடைத்து விட்டான் எனத் தலைமை ஆசிரியர் நினைத்திருக்க வேண்டும்!

எட்டு மணி. பாடசாலை தொடங்கியது. முதல் வகுப்பு மாணவர்கள் 'புது ஐயா புது ஐயா' என்று உத்சாகத்தோடு அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆயின் சிவசேகரத்தால் அவர்களோடு ஒட்ட முடியவில்லை! தன் தொழிலோடும் ஒன்ற முடியவேயில்லை! அவர் மனதிலே கரவாகு வெட்டை வயல்... கறுத்தக் கொழும்பான் மாங்கன்றுகள் மனைவி... பிள்ளைகள்...சீட்டுக் காசு வசூலிப்பு எத்தனை எத்தனையோ!

பாடசாலை முடிந்தது! வெளியிலிருந்து உத்தியோகம் பார்க்க அங்கே வருபவர்கட் கெல்லாம் அன்னதாதாவாக இருந்த ராமன் நாயரின் கடையிலே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டார் வேறு வழியே இல்லாததினால்!

சாப்பாடானதும் பாடசாலைக்க வந்து ஆசிரியர் மேசையோடு மாணவர் டெஸ்கை இணைத்து தலைப்பக்கத்து உயரமாக்கிக் கொண்டு படுத்தவர் பிரயாணக் களைப்பினாலும் மனச் சோர்வினாலும் நித்திரையாகி விட்டார்.

அவர் எழுந்தபோது பறங்கிகளால் இட மாற்றம் பெற்று, மாறிவந்த இடத்தையே தன் சொந்தமாக்கிக் கொண்ட கோணேசரின் கொண்டல் சேர் கோபுரம் தென்னை மரங்கட்கு மேலாற் தூரத்தே காம்பீரித்தது. அந்திச் செம்மையின் பொன்னொளி கோபுரக் கலசங்களிற் தெறித்து இரவாச வித்தை புரிந்து கொண்டிருந்தது. சோம்பர் முறித்தபடி கிணற்றடிக்குச் சென்று முகம் கழுவித் துண்டனாற் துடைத்தபடி பாடசாலையின் தெருப்படலைக்கு வந்தார் சிவசேகரம்.

கந்தோரிலிருந்து வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டு, கிளப்பிற்கு விளையாடச் சென்று கொண்டிருந்த சிவஞானம் ஆசிரியரைத் தெருவிலே சந்தித்ததும், "மாஸ்ரர் எப்போ வந்தீர்கள், வாங்க வீட்டுக்குப் போகலாம்" என்றார்.

"இன்றைக்குத்தான் வந்தேன். இன்று வியாழக்கிழமை வேண்டாம். இன்னொரு நாளைக்கு வருகிறேன்."

"அப்படியா, உங்கள் இஷ்டம். எல்லாம் வசதிதானே? நான் மீண்டும் சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு நடந்தார் சிவஞானம்.

ஆசிரியர் மீண்டும் பாடசாலைக்கு வந்து தான் காலையிற் கொண்டுவந்த தினசரியைப் புரட்டத் தொடங்கினார். அதிற் படிப்பதற்கு இன்னமும் என்னதான் இருக்கின்றதோ!

அதற்குள் இருட்டிவிட்டது.

மாணவன் ஒருவன் தலைமையாசிரியர் கொடுத்தனுப்பிய குப்பி விளக்கை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

ஆசிரியர் தீக்குச்சியைக் கிழித்து விளக்கை ஏற்றினார். ஆயின் மன இருளை விலக்க முடியவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த கலண்டரில் போயாவோடு ஒட்டிவரும் விடுதலைத் தினங்கள்தான் நினைவில் ஒறியேற்றுகின்றன!

துண்டை விரித்து மீண்டும் சாய்கிறார். தூரத்தே கூவிக் கொண்டோடும் ரயில் சப்தம் நெஞ்சைப் பிளக்கிறது. அந்த ரயிலில் ஏறிக் கொண்டு அவ்வூரையே தலை முழுகி விட்டுத் தன் ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் சுபதினத்தை எண்ணிப் பார்க்கிறார்.

அடுத்த வீட்டுச் சிவஞானம் கிளாக்கரின் ரேடியோவில் 'தமிழர் சால்பு' பற்றிப் பேராசிரியர் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முழங்குவது ஆசிரியர் காதுகளிற் கேட்டதோ என்னவோ அது எனக்குத் தெரியாது.

இளம்பிறை 1970
........


மறைப்பு

தென்னை மரத்தோடு சார்த்தி வைக்கப்பட்டு இருந்த படுதாவில் மைக்கல் சித்திரம் வரைந்து கொண்டு இருந்தான். கடந்த ஒரு வார காலமாக அவனுக்குச் சரியான ஊண் இல்லை, உறக்கம் இல்லை. வண்ணங்களைச் சேர்ப்பதும் வரைவதுமாகவே இருந்தான்.

அவன் இயல்பே அப்படித்தான். சித்திரக்கலையிற் தன்னை மறந்து மூழ்கிவிடும் இயல்பினாற் தன் உயர் கல்வியையே குழப்பிக் கொண்டவன் மைக்கல். ஆனாலும் அவனது கல்லூரி அதிபர் ஒரு காலத்தில் இவன் தன் பெயருக்கேற்ப 'மைக்கல் ஆஞ்சலோ'வைப் போலச் சித்திரக்காரனாவான் என்றுதான் எண்ணினார்.

ஆனால் அவன் ஒன்றும் அப்படியாக ஆகிவிடவும் இல்லை! தற்போது தன் கிராமத்தவர் செய்யும் மீன்பிடித் தொழிலையே 'நூத்தோடு நூத்தொன்றாகச்' செய்து கொண்டு இருக்கிறான். ஆனாலும் அவனது கலைத்துவத்தைத் தெரிந்து கொண்ட ஊரவர்கள் யாராவது அவனிடம் சித்திரம், சோடனை என்று ஏதாவது வேலையை ஒப்படைத்து விட்டால்...

அதன் பின்னர் அவனுக்கு ஊண் தேவையில்லை. உறக்கம் வேண்டியிராது.

சென்ற ஞாயிற்றுகிழவைதான் ஊருக்கு முதன்முறையாக வரவிருக்கும் புதிய ஆயரை வரவேற்க ஊரின் தலைவாயிலில் அமைக்க இருக்கும் அலங்கார வளைவிற்கான சித்திர வேலைப்பாடுகளைச் செய்யும் பொறுப்பை ஊரவர்கள் மைக்கலிடம் கையளித்திருந்தார்கள்.

அன்றிலிருந்து மைக்கல் தன் தந்தையாரோடு கடலுக்குச் செல்லவில்லை. அவன் வரவே மாட்டான் என்பது அவனது தந்தையாருக்கம் தெரியும். ஆகவே அவரும் அவனை வற்புறுத்தவில்லை. 'வாழத் தெரியாதவன்' என்று தம் மனதுள் நொந்து கொண்டே பெருமூச்சு விட்டார். அவனுக்குக் கீழே உள்ள இன்னமும் ஐந்து பிள்ளைகளுக்கு உணவு தேடவேண்டிய மகத்தான பொறுப்பை அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லை. ஆகவே தன்னந்தனியாகவே அவர் கடலுக்குச் சென்றார்.

மைக்கல் தன் குடிசைக்கு முன்னாற் தென்னை மரத்தோடு சார்த்தி வைக்கப்பட்டிருந்த படுதாவில் சித்திரம் வரைந்து கொண்டிருந்தான்!

அலங்கார வளைவை அமைத்துத் தரும்படி தான் கேட்கப்பட்ட முதல் நாளிரவே அவ்வளவு எப்படி அமையவேண்டும் என்பதைக் கற்பனை பண்ணி, அக்கற்பனை உருவைத் தன் மனதிலே வரைந்து கொண்டான் மைக்கல். தன் மனதிலே உள்ள உருவைத்தான் இப்போது வரைந்து கொண்டு இருக்கிறான்.

ஊரவர்கள் எவரும் அவனது கற்பனையைக் குழப்பவில்லை. அவனுடைய சுதந்திரத்தில் தலையிடவும் இல்லை. தலையிட்டால் நூற்றுக்கணக்கில் செலவாகும் என்ற சூக்குமம் அவர்கள் எல்லோருக்கும் தெரியும்! மைக்கலைப் போல வேறு யாராவது இதைச் 'சும்மா' செய்வார்களா?

ஊரைக் கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டு செல்லும் பிரதான வீதியை அடைத்து, வெள்ளி மீன் ஒன்று ஓடும் நிலையில் வாலை வளைத்தபடி நிற்க வேண்டும். அதன் செதில்களில் 'நல்வரவு' என்ற எழுத்துக்கள் தங்கமாய் தகதகக வேண்டும். அவ்வெள்ளி மீனைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றில்

'அவர் கலியோக் கடலோரமாகப் போகையில் சீமோனும் அவருடைய சகோதரர் பெலவேந்திரமும் கடலில் வலைவீசிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஏனெனில் அவர்கள் மீன் பிடிப்போர். இயேசு அவர்களைப் பார்த்து "என் பின்னே வாருங்கள் உங்களை மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவர்பின் சென்றனர்.

என்ற நற்செய்திக் காட்சிகளும், இரண்டாவது தூணில் தன் சொந்த ஊர்க் கடலோரக் காட்சிகளும் சித்தரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்து இருந்தான் மைக்கல். அக்காட்சிகளை வரைவதிற் தன்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது.

* * *

வங்காளப் பெருங்கடல் கரையைக் குடைந்து உள்வாங்கி நீண்டு நெளிந்தோடும் உப்பங்கழியருகே நீண்டு நிமிர்ந்து ஓலைக்குடை கவித்து நிற்கும் தென்னை மரங்களிடையே அவ்வூர் அமைந்துள்ளது. ஊரின் நடுவே இராயப்பர் தேவாலயம் வீற்றிருக்கிறது! ஆமாம்; ஒரு பேரரசனைப் போன்ற இறுமாப்புடன் இராயப்பர் கோயில் வீற்றே இருக்கிறது.

கோயிலுக்கு முன்னால் நிற்கும் பென்னம் பெரிய வேப்பமரத்தின் கிளையிலே தொங்கும் மணியின் சுநாதம் கேட்கும் வட்டத்து எல்லையுள் இருக்கும் சில ஒட்டு வீடுகளும் பல ஓலைவிடுகளும் கோயில் என்ற அப்பேரரசனின் பிரதானிகள், படை குடிகள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் உப்பங்கழியின் மணல் மேட்டிலே தோணிகளும் கட்டு மரங்களும் விசைப் படகுகளும் இழுத்து வைக்கப்பட்டிருந்தன. வீட்டுக்கு முன்னால் தென்னை மரங்களை இணைத்துக் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த தடிகளில் லைலோன் வலைகளும் கம்பான் கயிறுகளும் 'அசமந்து' தொங்கிக் கொண்டு இருந்தன. இலையசையா இறுக்கமும் வெதுவெதுப்பும் கொண்ட பங்குனி மாதமாகையால் கோயிலின் பின்னாற் கிடந்த உப்பங்கழியும் ஏன் அதற்கும் அப்பால் கண்வைத்த தொலைவிற்குக் கருநீலமாகப் பரந்து கிடந்த வங்காளப் பெருங் கடலுங்கூடச் சோம்பித்தான் கிடந்தன.

வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்து ஆலய மணியின் சுநாதத்தால் அழைக்கப்பட்ட ஊர் மக்கள் கோயிலில் திரண்டதும் பூசை ஆரம்பமாயிற்று. பூசையின் இறுதிக் கட்டத்தில்தான் சுவாமியார் அந்த அறிவித்தலைப் பிரகடனஞ் செய்தார்.

'எதிர்வரும் பத்தாந்திகதி சனிக்கிழமை பிற்பகல் புதிய ஆயர் அவர்கள் நம் ஊருக்கு வருகை தருகிறார். அவரை நாம் முறையாக வரவேற்க வேண்டும்.

வங்காளக் கடல் அசமந்து சோம்பிக் கிடக்கும் கோடை காலத்தில் ஆழ்கடலிலும், அக்கடல் அலையெற்றி நுரைகக்கிக் கரையிலே ஆர்ப்பரித்து மோதும் மாரியில் உப்பங்கழியிலும், மீன் பிடிக்கும் அதே தொழிலை, அதற்கென்றே அமைந்துவீட்ட மாறுதலில்லாக் கோட்பாடுகளுடன் செய்து கொண்டிருக்கும் அவ்வூரவர்களுக்கு, அடைமாரியில் வரும் நத்தாரும், அருங்கோடையில் வரும் இராயப்பர் திருநாளும், அவர்களின் நித்திய சலிப்பை மாற்றி வாழ்க்கையில் ஓர் பிடிப்பைக் கொடுக்கும் சுபதினங்கள்! இவ்வருடம் ஆயரின் வரவேற்பு விழாவும் அவைகளுடன் சேர்ந்து கொண்டன. அவ்வரவேற்பு வைபவத்திற்காக அந்தக் கணத்திலிருந்தே அவ்வூர் தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தது.

கூட்டங் கூடினார்கள். ஆலோசித்தார்கள். ஆயருக்கு 'மகத்தான' வரவேற்பளிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அலங்கார வளைவைச் சித்தரிக்கும் பணியை மைக்கலிடம் ஒப்படைப்பது என்பதும் ஊரின் முடிவு!

மைக்கல் மட்டுமா? பங்குச் சுவாமியாரைத் திருப்திப் படுத்துவதற்காகவென்றே, கிறீஸ்துநாதர் சொன்னது போலத் "தங்கள் கற்பனைப் பட்டலங்களை அகலமாக்கி, வஸ்திரங்களின் தொங்கல்களை பெரிதாக்கிக் கொண்டு" தினந்தினம் கோயிலுக்குக் சென்று வரும் பக்திச் சபையினரும், மோட்சத்தின் திறவு கோலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் இராயப்பரைத் திருப்தி பண்ணினால் மோட்ச வீடு தங்களுக்கும் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கையோடு அவர் திருநாளென்று மட்டுமாவது கோயிலுக்கச் செல்லும் கடல் மறவர்களும் 'அவர்களை என்னிடம் வரவிடுங்கள்' என்று கிறீஸ்து நாதர் அன்போடு அழைத்த குழந்தைகளும், தாயரும் கன்னியரும் எவரும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அவ்வரவேற்பு வைபவத்தில் பங்குகொள்ள ஆயத்தமானார்கள்.

* * *

இரண்டு வாரங்கள் உருண்டோடி விட்டன.

நேற்றே தோணிகளும் கட்டுமரங்களும் விசைப்படகுகளும் உப்பங்கழியின் மணல் மேட்டில் இழுத்து வைக்கப்பட்டுவிட்டன. தென்னை மரங்களின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடிகளில் கம்பாங்கயிறுகளும் நைலோன் வலைகளும் அசமந்து தொங்கின.

பதைபதைக்கும் சித்திரை மாதத்து வெயிலிலே ஊரைக் கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டு செல்லும் பிரசித்த பாதையின் இருமருங்கிலும் சுடுமணலிற் குழிபறித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், அக்குழிகளிற் தோணி வலிக்கஉதவும் துடுப்புக் கம்புகளை நட்டார்கள்.

'மதியஞ் சறுகியபோது தெருவின் இருகரையிலும் குருத்தோலைத் தோரணங்கள் மாவிவைகள் அவைகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்ற கம்பங்களில் செக்கச் சிவந்த தாளம் பழங்களையும் சுமந்து கொண்டு நின்றன. சரக்கொன்றை என்ற இலக்கியப் பெயரை நழுவவிட்டு 'ஈயவாகை' என்று இழிசனர் வழக்காய் அழைக்கப்பட்ட நீளமான மஞ்சட் பூங்கொத்துகள் புதிய தோணரங்களிடையே கண்ணைப் பறித்தன. தோரணங்களுக்குக் கீழே பச்சையும் நீலமுமான நைலோன் வலைகள் தலைத்து தொங்கின.

பெருந்தெருவின் இருமருங்கும் அமைந்திருந்த வீடுகளின் தலைவாயிலில் குலைவாழைகள், அவற்றிடையே இரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்ட மேசையிற் பூரண கும்பங்கள் பூசி மினுக்கிய சந்தனப் பேழைகள், குங்குமச் சிமிழ்கள், ஊதுவத்தித் தண்டுகள், பூ மாலைகள், பன்னீர் கும்பாக்கள்.

தெருவோரத்து மரங்களிலே கட்டித் தொங்கவிடப்பட்ட பட்டாசுச் சரங்கள்!

மூன்று மணியாகி விட்டது. ஆனாலும் இன்னமும் முகப்பு அலங்கார வளைவைக் காணோம்!

ஆனாலும் ஊரவர்களுக்கு அனுபவம்! மைக்கல் கடைசி நேரத்தில்தான் அதைக் கொண்டு வந்து கட்டுவான் என்பது அவர்களுக்குத் தெரியும்!

சரியாக நான்கு மணிக்குத்தான் மைக்கல் கம்பங்களை நட்டு அதன்மேற் தன சித்திரத் தூண்களையும், தூண்களுக்கு மேலாகத் தெருவை அடைத்துத்தான் நல்வரவு எழுதிய மீளையும் கட்டினான்.

தங்கள் கல்யாணக் கூறையின் பாரத்தைச் சுமக்க மாட்டாது தள்ளாடி நடந்த பேரிளம் பெண்கள், வெள்ளைச் சேலையுடுத்த விருத்தாப்பியப் பெண்கள், பட்டும் பீதாம்பரமும் அணிந்து நடைபயிலும் வயது வந்த ஆண்கள், கற்பனைப் 'பட்டயங்களை அகலமாக்கி வஸ்திரங்களின் தொங்கல்களையும் பெரிதாக்கிக் கொள்ளும் பக்திச் சபையினர், காற்சட்டை அணிவது நிலங்கூட்டற்கே என்ற வைராக்கியத்துடன் தங்கள் யானைக்கால் (சட்டை)களை இழுத்துக் கொண்டு வரும் இளைஞர்கள், வண்ணச் சேலைகளைத் தரித்துக் கொண்டு பட்டாம் பூச்சியாய்த் திரியும் மங்கையர்கள், பாடசாலைச் சீரூடை அணிந்த பெதும்பையர்கள், மரங்களிற் கட்டித் தொங்கவிடப்பட்ட பட்டாசுச் சரங்களுக்குத் தீமூட்டக் கையில் வைத்திருந்த நெருப்புக் கொள்ளிகளை ஊதியபடி ஆயத்தமாக நின்ற சிறுவர்கள், பாடுவதற்கு ஆயத்தமாக நின்ற அரிவையர், இத்தனை சிங்காரிப்புகளுக்கு மத்தியிலும் வேறு எதையெதையோ கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் என்று திரண்டிருந்த ஊரே அச்சித்திரத் தூண்களை முண்டியடித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மாலைச் சூரியனின் பொன்னொயில் அத்தூண்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன!

கூட்டத்தின் மத்தியில் விலை சரஸமான நாட்டுச் சாராயத்தை மாந்திய சந்தியாக் கிழவர் பாடினார்.

வாழைகமுகுகள் நாட்டுங்கோ-நல்ல
மாவிலைத் தோரணங் கட்டுங்கோ

அந்த நாட்டுக் கூத்துப் பாடலைப் பாடி முடித்த கிழவர் ஆக்ரோஷத்துடன் சொன்னார்.

"குலைவாழை கட்டாமல் என்ன வரவேற்பு? அதிலும் நம்ம புது ஆண்டவர் அசல் தமிழன். முன்னையப் போல வெள்ளைக்காரனுமல்ல. அவருக்கேன் இந்தச் சித்திரமெல்லாம்? சித்திரமாம் சித்திரம். சிலுக்க மலுக்கக் கொத்தினாற் சித்திரந்தான். இந்த இழவை எல்லாம் விட்டிற்றுக் குலை வாழை கொண்டு வந்து கட்டுங்கோ."

கூட்டத்திற் சிலர் அவரை ஆதரித்தனர். ஆதரித்தவர்கள் எங்கிருந்தோ குலைவாழைகளைக் கொண்டு வந்து சித்திரத் தூண்களுக்கு முன்னால் நட்டார்கள்.

நடப்பட்ட அவ்வாழைகளின் பின்னாற் சித்திரத் தூண்கள் மறைந்து அலங்கோலமாய்...

மைக்கலின் இதயமே வெடித்து விடும் போல இருந்தது. அவன் கண் முன்னால் சூரியன் இருண்டது. சந்திரன் ஒளி குன்றியது. வானமண்டலத்தின் சத்துவங்கள் அசைக்கப்பட்டு யுகாந்த காலத்தின் ஊழிக கூத்து அவன் இதயத்திலே நடைபெற்றுக்கொண்டிருந்தது!

ஆயர் வந்திறங்கியதோ, அவருக்கு மாலையணிவித்ததோ பாடசாலைச் சீருடை அணிந்த மாணவிகள் வரவேற்புப் பாடலிசைத்தோ, மரங்களிற் கட்டப்பட்டிருந்த பட்டாசுச் சரங்களின் இடைவிடா முழக்கத்திற் புகைமூட்டத்தூடே ஆயர் ஊர்வலமாகக் கோயிலை நோக்கிச் சென்றதோ, கோயிலை அடைந்ததும் "நாடு இன்றிருக்கும் பரிதாபகரமான சூழலில் எனக்கு இத்தகைய வரவேற்பு தேவையற்தென்று" என அவர் ஊரவர்களைக் கடிந்துகொண்டதோ ஏதுமே அக்கலைஞனுக்குத் தெரியாது!

தன் முன்னால் நீண்டு வளைந்து கிடந்த உப்பங்கழியை வெறித்தபடி அவன் பார்த்துக் கொண்டே நின்றான். 'பன்றிகளின் முன்னால் முத்துக்களை வீச வேண்டாம்' என்ற நற்செய்தி வாக்கியத்தை அவன் மனம் முணுமுணுத்துக் கொண்டது.

தொண்டன் 89
.......

தகர விளக்கு

அறையினுள்ளே புழுக்கமாக இருந்தது. நித்திரை வரவில்லை. ஓசைப்படாமல் எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

வெளியே நிலவு பால்போல் எடுத்துக் கொண்டிருந்தது. ஆயிரம் ஆயிரம் மின்விளக்குகள் தெருவிலே பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் பூரணமதி ஒளியின் அழகே தனிதான்! இந்தத் தண்ணிலவை இரசிக்கத் திராணியில்லாமல், அறைக்குள்ளே அடைந்து கொண்டிருக்கும் மனிதப் பிராணிகளின்மேல் எனக்கு இரக்கம் பிறந்தது. பட்டினத்து நாகரீகம் மனிதனின் ரசனை உணர்வை எத்தனை தூரம் கொன்றுவிட்டது என எண்ணிக் கொண்டேன். இப்படி எத்தனையோ எண்ணங்கள் பிறந்தன; தேய்ந்தன. நிலவிலே அவளைப் பற்றியும் எண்ணினேன்.

அவள் என்றால் என் மனைவி அல்ல. கல்யாணமாகிக் குழந்தைகளுக்குத் தந்தையுமாகி விட்ட என் மனதிலே அவளைப் பற்றிய எண்ணம் உண்டாவதே மன்னிக்க முடியாத குற்றம் என்று நீங்கள் எல்லோரும் சொல்வீர்கள். அது நம் பண்பாட்டிற்கு விரோதமானதென்ற தீர்ப்பளித்தும் விடுவீர்கள்....

ஆனாலும் நான் அவளைப் பற்றி எண்ணினேன். பெருமூச்சுக்கூட விட்டேன். கடைசியில் ஒரு கதை எழுதுவது என்று தீர்மானிததுக் கொண்டு எழுந்தேன்.

"மறுபடியும் காதற் கதைதானா எழுதப் போகிறாய்?"

யாரோ என்னைக் கேட்டார்கள்.

'எழுதினால் என்ன? காதல் உலகின் நித்யத்துவமான மனித உணர்ச்சி. அதைப் பற்றி எத்தனை கதைகள் காவியங்கள் வேண்டுமானாலும் எழுதலாம்' என்றேன் நான்.

'எல்லோரும் அதைத்தானே எழுதுகிறார்கள். அதை விட்டால் எழுதுவதற்கு வேறே விஷயமே இல்லையா? செத்த பாம்பை அடிப்பதுபோல அந்தக் காதலை வைத்துக் கொண்டுதான் கதைகள் எழுத வேண்டுமா? இந்த அசட்டுத் தனத்தை விட்டுவிட்டு வேறேவேலையைப் பார்!'

காதற் கதை எழுத வேண்டும் என்ற உள்ளுணர்வு என்னுள்ளே செத்துவிட்டது. ஆனாலும் உடலோடு ஒட்டிவிட்ட வியாதி போன்ற உள்ளுணர்வு-எழுத்துப் பைத்தியம்-எதையாவது எழுதித் தானாக வேண்டும் என்று என்னைத் தூண்டிற்று.

மறுபடியும் ஓசைப்படாமல் அறைக்குள்ளே வந்தேன். விடுதியறையிலே என்னோடு பாகஸ்தராக இருக்கும் என் நண்பர் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

அவர் நித்திரையைக் குழப்பாமல் இருப்பதற்காக நான் மேசையின் மேலிருந்த தகர விளக்கைக் கொளுத்தினேன். அந்த மங்கிய வெளிச்சத்தில் இருந்து எழுதத் தொடங்கினேன்.

2

முழுமதி என்ற என் கவிதையின் முதலாம் பாட்டை- நான்கு வரிகள்-எழுதிவிட்டு அடுத்த வரியை எழுதத் தொடங்கினேன்.

"கவிதையா எழுதுகிறாய்?"

நான் நிமிர்ந்து பார்த்தேன். கேட்டது யார் எனத் தெரியவில்லை. குனிந்து மீண்டும் எழுதத் தொடங்கினேன்.

"உன்னைத்தான் கேட்கிறேன். கவிதையா எழுதுகிறாய்? நீ பெரிய கவிஞன் என்று எண்ணமா?"

நான் மறுபடியும் நிமிர்ந்து பார்த்தேன். எதிரே நண்பர் குறட்டை விட்டுத் துயில்கிறார். வேறு எவருமே கிடையாது. நான் மறுபடியும் குனிந்து எழுதத் தொடங்குகிறேன்.

"கவிதையா எழுதுகிறாய்? அதுவும் சந்திரனையா?"

குரல் அதிகாரத் தொனியில் இருக்கவே நான் பேனையைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அப்போதும் எதிரே குறட்டைவிட்டுத் தூங்கும் நண்பரைத் தவிர வேறு எவரையுமே காணவில்லை. நான் மிரண்டு விழித்தேன்.

யாரோ என் முன்னால் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எனக்குப் பயமாகவும் இருந்தது.

"ஏன் பயப்படுகிறாய்? நான், உன் முன்னால் இருக்கும் தகர விளக்குத்தான் கேட்கிறேன். சந்திரனைப் பற்றியா கவிதை எழுதுகிறாய்?"

"ஆம்; எழுதினால் என்ன?" என்றேன் தைரியத்தோடு.

"நீ கலைஞன்தானே?"

"அதிலே உனக்கேன் சந்தேகம்?"

"இல்லை; சந்திரனைப் பற்றிக் கவிதை எழுதுகிறாயே. அதனாற்தான் கேட்டேன்."

'ஏன்; சந்திரனைப் பற்றி எழுதக் கூடாதா?"

"ஏன் எழுத வேண்டும்?

"இது என்ன முட்டாள்த்தனமான கேள்வி. தன் உள்ளத்திற் சலனத்தையும் கிளுகிளுப்பையும் உண்டாக்கும் ஏதோ ஒன்றைப் பாடுபவன்தானே கவிஞன்?"

"கலைகளும் உன் மனதைக் குஷ’ப்படுத்துகின்றன. சிரிக்கவும் அழவும் வைக்கின்றன அல்லவா?"

"ஆம் அப்படிச் செய்யாவிட்டால் அவைகள் கலைகளே அல்ல"

"அப்படியா? அப்படியானாற் சந்திரனும் உன்னைக் குஷ’ப்படுத்துகின்றான். ஆகவே சந்திரன் ஒரு கலைப் பொருள், அதாவது நீ இயற்கையைத்தான் கலை என்கிறாய்."

"நீயாகவே முடிவு கட்டிக் கொண்டாய். மனதைக் குஷ’ப்படுத்துவது கலை என்று."

"கலை மனதைக் குஷ’ப்படுத்துமேயன்றி, மனதைக் குஷ’ப்படுத்துவதெல்லாம் கலையாகி விட முடியாது. பூரண நிலவு கலையென்று நான் சொல்ல மாட்டேன். 'மாசகன்ற மணி விசும்பில் வயங்கு நிறைமதியம், மலர்க் கிரண ஒளிபரப்ப' என்று எங்கள் சுவாமி விபுலாநந்தர் பாடியிருக்கிறாரே, அது கலை. அதைப் போன்ற ஒரு கலா சிருஷ்டியிற்தான் நானும் ஈடுபட்டிருந்தேன். அதை நீ இடையிற் குழப்பி விட்டாய்?"

என் படபடப்பைக் கண்ட தகர விளக்கு மறுபடியும் பேசத் தொடங்கியபோதே அதன் குரலிற் சிறிது சோகம் தொனித்தது. அது கேட்டது. "என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"என்ன நினைப்பது? நீ ஒரு தகர விளக்கு. ஒரு தண்டிலே எண்ணெய் கொள்ளும்படியான வட்டக் கூம்பு. உள்ளே எண்ணெய் இருக்கும் வரை நீ வெளிச்சம் கொடுப்பாய்!"

"இவ்வளவுதானா? உன் மனதிலே நான் எந்தவிதமான சலனத்தையும் உண்டாக்கவில்லையா?"

அக்கேள்விக்கு விடை சொல்ல நான் தயங்கினேன். தகர விளக்கு மறுபடியும் பேசிற்று.

"ஏன் தயங்குகிறாய்? இல்லை என்பதுதானே உன் பதில். இருக்கட்டும். என்னால் உனக்கு எவ்வித பயனுமே இல்லையா?"

"யார் அப்படிச் சொன்னார்கள்? உன்னுடைய ஒளியிற்தானே நான் கவிதை எழுதுகிறேன்."

"சந்திரனின் ஒளியில் எழுத முடியாது. அப்படித்தானே. ஆனாலும் நீ சந்திரனைப் பற்றித்தான் கவிதை எழுதுவாய். என் உழைப்பைப் பயன்படுத்தி, என் உழைப்பிற் பிறரைப் புகழ்வது நீதியானதென்று உனக்குப் படுகிறதா?"

எனக்குக் கோபம் வந்தது. "ஏன் இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்? என்னைப் பற்றிக் கவிதை எழுது என்று வெளிப்படையாகக் கேட்பதுதானே?"

"வேண்டாம்; வேண்டாம். கேவலம் நான் ஓர் தகர விளக்கு. ஒரு தண்டிலே எண்ணெய் இருக்கும்படியான வட்டக் கூம்பு. அதன்மேல் சீலைத் திரியைத் திணிக்கும் படியான காய். உள்ளே எண்ணெய் இருக்கும்வரை நான் வெளிச்சம் கொடுப்பேன்; என்னைப் பற்றிக் கவிதை எழுதுவதாவது. சீ; கேவலம்" என்று எகத்தாளமாகப் பேசிற்று தகர விளக்கு.

என் பேச்சையே அது என்னிடம் திருப்பியடிக்கையில் எனக்கு அவமானமாக இருந்தது. ஆத்திரம் வந்தது. பிடி கொடாமற் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு யோசித்தேன். தகர விளக்கு மீண்டும் பேசிற்று.

"என்னைப்பற்றி எழுதும்படி கேட்க என்னை அத்தனை சுயநலமி என்று எண்ணினாயா? என்னைப் பார்த்தால் வேறு எதைப் பற்றியும் வேறு யாரைப் பற்றியும் உனக்குத் தோன்றவில்லையா?"

"யாரைப் பற்றித் தோன்ற வேண்டும்?" நான் ஆத்திரத்தோடு கேட்டேன்.

"மலேயாவிற் தகரச் சுரங்கத்தில் வேலை செய்பவனைப் பற்றித் தோன்றாவிட்டாலும், வேறு எவரைப் பற்றியுமே உனக்குத் தோன்றவில்லையா? சரி நானே சொல்கிறேன்."

கவிதை எழுதிய கடாதாசிகளை நகர்த்தி ஒருபுறம் தள்ளி வைத்து, மேசையின் மேற் கைகளை ஊன்றிய படியே "சரி சொல்" என்றேன்.

தகர விளக்குச் சொல்லிற்று.

"முகம்மது உசேனைப் பற்றி உனக்குத் தெரியமா? எப்படித் தெரியப் போகிறது? இந்தப் பட்டினத்திலே கருங்காலி ஒழுங்கை என்ற இருண்ட சந்திலே அவன் இருக்கிறான். இப்போதெல்லாம் தன் ஓலைக் குடிசையிலே அவன் பட்டினியால் முனகிக்கொண்டு இருப்பான்.

"இரண்டாவது உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவன் திருக்கோணமலைப் பட்டினத்திற்குத் தன் சொந்த ஊரான ஒட்ட மாவடியிலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்தான். கடற்படைத்தளத்திலே அவனுக்கு வேலை கிடைத்தது.

"பாஸ’சப் பேயை அழித்துவிட்டு மகாயுத்தம் நின்றதும் அவனுக்கு வேலை போய் விட்டது. அதன் பின்னர் தான் என்னைப் போன்ற தகர விளக்குகளைச் சிருட்டிப்பதில் அவன் ஈடுபட்டான். ஒருநாளைக்கு என்னைப்போல இருபது உருப்படிகளைச் செய்து விடுவான். கடைகளுக்குக் கொண்டு போய் கொடுத்தால் கடைக்காரன் விற்று முடிந்ததும் பணம் தருவான். உசேனைவிடக் கடைக்காரனுக்குத்தான் இதில் இலாபம். கடைக்காரனுக்கு முதலில்லாத வியாபாரம், உசைனுக்கு மனவேதனை...பட்டினி...

"இப்படியே உசைன் தன் மனைவியோடும் மூன்று குழந்தைகளோடும் வாழவேண்டி இருக்கிறது. என்ன கேட்கிறாயா?"

"ஆம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். மேலே சொல்."

"இனி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? நீதான் கலைஞன் என்றாயே. இந்தக் கதைக்க மெருகு கொடுத்து எழுதேன்" என்ற விளக்க அத்துடன் மௌனம் சாதித்து அணைந்தே விட்டது!

நானும் தகர விறக்குக் சொன்ன கதைக்கு நகாஸ் வேலை செய்து உங்களுக்குத் தரவில்லை. ஏனென்றால் என்னிடம் தகர விளக்குப் பேசியதே ஒரு கதையளப்புத் தான்!

கலைவாணி 1953
.............

பாலை

விண்ணாங்குப் பற்றைகளும், காவிளாய்ச் செடிகளும் சுண்டம் புதர்களம் மண்டிப் பரட்டைக் காடாய்க் கிடந்த அந்தப் பிராந்தியத்திலே, அந்தப் பாலை மரம் மட்டும். மொட்டை வெளியில் தலைநிமிர்ந்து தோன்றும் இராஜகோபுரம் போல் ஆழத்தில் வேரோட விட்ட இறுமாப்பில் சடைத்துக் கிளை பரப்பி நின்றது. வரண்ட கச்சான் காற்றுச் சுழற்றியடித்து சுற்றுப்புறத்தையே சருகாய் உலர்த்திக் கலகலக்க வைத்துச் சுள்ளிகள் உராயத்தித்தோன்றம் அருங்கோடையில்கூட, அந்தப் பாலை மரம் மட்டும் 'கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய்' ஊருக்குள்ளே தலை நிமிர்ந்து பச்சை ஓலைகளை விரித்து தென்னை மரங்களின் பசுமைக்கப் போட்டியாக அப்பாலை மரம் மட்டுமே அப்பிராந்தியத்தில் காம்பீரித்தது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னே....

உள்ளுர் மிஷன் பாடசாலையிலே ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டு இருந்த சிவஞானத்திற்கு அன்று சித்திரை விடுதலை. சித்திரை வருடப் பிறப்பிற்காக வீட்டு முற்றங்களில் பரப்பப்பட்டு இருந்த குருத்து மண் இன்னமும் கோலம் மங்கவில்லை. சிறியவர்களும் பெரியவர்களம் உடுத்த புத்தாடைகள் இன்னமும் புதிது மங்கி வண்ணான் சலவைக்குப் போகவில்லை. ஏன்? புது வருடப் பிறப்பன்று விலைமலிவான வடிசாராயத்தை மாந்திய சிலரால் ஊருக்குள்ளே 'கரமுச' என்று ஏற்பட்ட பூசல்களின் 'நிலையற்ற தன்மை' கூட இன்னமும் செத்துவிடவில்லை. ஆனால் அதற்குள் 'இளக்கந்தை வெளி' விளைந்து அறுவடைக்குத் தயாராகிவிட்டது. சிவஞானத்தின் தந்தையாரும் அந்த வெளியில் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தையும் செய்கை பண்ணி இருந்தார்!

'ஆமாம்! தென்கைலை நாதரான கோணேசரின் பூசனைக்காகச் சந்தனக் கட்டைகளைக் கடல் வழிக்கொண்டு கொடுப்பதற்காக அக்கிராமத்தார் அங்கு குடியேற்றப்பட்டார்கள்' என்று கல்வெட்டுக் கூறலாம். ஆனால் குளக்கோட்டன் மூட்டிய திருப்பணியைப் பறங்கி பிடித்து, அதற்குப் பின்னால் அதுபூனைக் கண்ணன், புலிக்கண்ணன் கைக்கு மாறிய பிறகு, சந்தனக் கட்டை விவகாரம் பொய்யாப் பழங்கதையாய்ப் போயிற்று. புராண காலத்தின் பிரக்ஞையே அற்றுப் போய் விட்ட இடைக்காலத்தில் 'நாங்கள் எல்லோருமே வல்வெட்டித் துறையிலிருந்து வந்த குருகுலத்தவர்' எனப் பெருமை பேசிக்கொண்டு சிவபெருமான் மீனுக்கு வலை வீசிய படலத்தைப் பாராயணம் செய்பதில் ஊரவர்கள் எல்லாருக்குமே ஒரு திருப்தி. ஆயின் அந்த வல்வெட்டித் துறைத்தொடர்பும் சீவிய காலத்தில் ஒரு தடவையோ, மிஞ்சினால் இரண்டு முறையோ செல்வச் சந்நிதியானைத் தரிசிப்பதோடு மட்டும் நின்று இப்போதெல்லாம் உள்ளூர் வருண குலப் பிள்ளையாருக்கு ஆடித் திருவிழா எடுக்கையில் 'சின்ன மேளம்' என்ற நாட்டியக்காரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து வரவழைத்து ஆட்டுவிப்பதோடு மட்டும் இருக்கின்றது. இப்படிப் புராண, இடைக் காலக் குருகுலப் பெருமை பேசுவதைத் தவிர, கிராமவாசிகள் அத்தனை பேருமே மண்ணை நம்பி வாழும் விவசாயிகள்! ஆகவே வேளாளர்கள்!

அவர்கள் கொட்டியாபுரக் குடலையடுத்த மணல் மேட்டிலே குடியேறி இருந்தாலும், காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளணிந்த ஏரியும் மல்கிய கொட்டியாபுரப் பற்றிலே, மாவலித்தேவி செவிலியாய்ப் புரக்கும் கழனிகளிலே கணிசமான பகுதிக்குச் சொந்தக்காரராக இருந்தார்கள். அக்காணிச் சொந்தக்காரர்களின் வீட்டு முற்றத்திலே 'நெற்பட்டறை' இருக்கும்! இப்பெரிய புள்ளிகளை விட்டுவிட்டால் மற்றவர்க்கெல்லாம் கிராமத்தைச் சூழவிருந்த காடுகளும், அக்காடுகளைத் திருத்திய 'மானம் பார்த்த' பூமிகளம் பிதிராஜிதம்!

இளக்கந்தை வெளி அந்த இரண்டிலும் அடங்காத 'இரண்டுங் கெட்டான்'பூமி. மாவலித் தேவி மகவாய்ப் புரக்கும் தாயாகிய தண்ணளியை, கட்டைபறிச்சான் கிராமத்தின் தெற்கு எல்லையாய் குடாக் கடலிலிருந்து உள்வாங்கி நீண்டு நெளியும் உப்பங்கழிக்கு அப்பால் செய்து கொண்டு இருக்கையில், கிராமமும் அதன் வடபகுதியும் கங்காதேவியின் கருணைக் கரங்கட்கு அப்பாற்பட்டதாய் வரண்டே இருந்தது. வரண்டு கிடந்த அந்தக் காட்டிலே, ஊரிலிருந்து பத்து மைலுக்கு அப்பால் எப்போதோ கட்டப்பட்ட அணைகளின் நடுவே குளம் என்ற பேரில் ஓர் பள்ளம். ஆவணி மாதத்திற் பிலமாய் வெடித்து வான்மழைக்காக ஆவென்று வாயைப் பிளந்து கொண்டே இருக்கும். வாடை யூதத் தொடங்கி மழை பெய்கையில் மார்கழி மாதத்தில் அப்பள்ளம் குளம் என்ற அந்தஸ்தைப் பெற்று நீர் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். அந்த நீரை நம்பிக் குளத்தின் அயலிலே இருக்கும் ஐம்பது ஏக்கர் வெளியில் தைமாதம் விதைப்புத் தொடங்கிவிடும்! குளம் நிரம்பாவிட்டால் 'மேற்கே பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்தில் ஓடும் கங்கையில் இருந்து வாய்க்கால் எடுத்து இந்தக் குளத்தை நிரப்ப எந்தப் பகீரதன் பிறக்கப்போகிறான்? என்ற பெருமூச்சோடு குளக்கட்டின் மேலே கோயில் கொண்டிருக்கும் குளக்கட்டின் மேலே கோயில் கொண்டிருக்கும் அம்மனுக்குப் பட்டுச் சார்த்துவதோடு, அந்நிலத்தை நம்பி வாழ்பவர்கள் திருப்தி அடைய வேண்டி இருக்கிறது.

சென்ற வருடம் வானம் பொய்க்கவில்லை. இளக்கந்தைக் குளம் நிரம்பியது, வழிந்தது. சிவஞானத்தின் தந்தையாரும் மற்றவர்களும், இளக்கந்தை வெளியைச் செய்கை பண்ணினார்கள். இப்போது அறுவடைக்குத் தயாராகி விட்டது.

* * *

வெள்ளை மாடுகள் பூட்டப்பட்ட கோணாமலையின் வண்டி கிராமத்தின் மணல் ஒழுங்கைக் கூடாகப் போய்க் கொண்டிருந்தது. வண்டிக்குள்ளே சமைப்பதற்கும் தண்­ர் எடுப்பதற்குமான பாத்திரங்கள், ஒரு பையிலே கறிக்கான காய் வகைகள், உப்பு-புளி அடுத்தது அரிசிச் சாக்கு' வண்டியோட்டிச் செல்லும் தன் தந்தையாருக்குப் பக்கத்திலே, அரிசிச் சாக்கின் மேலே சிவஞானம் தூக்கக் கலக்கத்தோடு குந்திக் கொண்டிருந்தான்.

சித்திரை மாதமானதால் இலை அசையவில்லை. காற்றாடவில்லை. அட்டமி கழிந்த தேய்பிறையின் திராணியற்ற ஒளி கிழக்கு வானத்தின் வெளுப்பிற்குப் போட்டியாக அப்பிராந்தியத்தையே அமுதப்பிரவாகமாக்க முயன்ற தோல்வியடைந்து கொண்டிருந்தது. வண்டி மாடுகளின் சதங்கை ஒலிக்குப் போட்டியாக ஊர்ச் சேவல்கள் நீளக் குரலெடுத்துக் கூவிக்கொண்டிருந்தன. பாலைமரத்திலே அப்போதுதான் துயிலுணர்ந்த காகம் ஒன்று மெதுவாகக் கரையத் தொடங்கிற்று.

ஊரின் எல்லையைத் தாண்டிப் பழக்கப்பட்ட பாலையின் வழியே நடந்து, வண்டி பாலைமரத்தடியை அடைந்தபோது கோணாமலை காளைகளின் மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்து அதை நிறுத்தினார். சிவஞானம் அதற்கான காரணத்தை அறியாதவனாய் வண்டிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தான். வைகறையின் மங்கலான ஒளியில் விண்ணாங்குப்பறைகளும் காலியாய்ச் செடிகளம் சுண்டம் புதர் கரும் பூதங்களாகக் காட்சியளித்தன. இடையிடையே காட்டுக் கிழங்க கல்லிய குழிகளிலிருந்து பறிக்கப்பட்ட குருத்து மண்வெண்மை கலந்த நிறத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.

'அருவி வெட்ட என்று வர இருப்பவர்கள், சொந்தக்காரராகவே இருப்பினும் கூலிக்கே வருபவர்கள். அப்படி வருபவர்கள் நாம் என்னதான் அவசரப்பட்டாலும், தங்கள் 'சித்தந் திரும்பி' ஆறுதலாகப் பொழுது நன்றாக விடிந்த பின்னர்தான் வீட்டிலிருந்து கிளம்புவார்கள்' என்ற நடைமுறை உண்மை கோணாமலைக்க நன்கு தெரியும் ஆயினும் நேற்று வருகிறேன் என்றவர்கள், இன்று வராமலே இருந்து விடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்குக் கிளம்பவே. தான் புறப்பட்டு விட்டதை அவர்கட்கு அறிவிக்கும் முகமாகத் தன் இருகைகளையும் கூட்டிப் பாம்பு விரல்களின் நுனியை மூக்கடியிற் சேர்த்து கூவென்று நீளக் குரலெடுத்துக் கூவினார். அவர் கூச்சந்தம் அந்தப் பிராந்தியம் முழுவதையுமே நிறைத்து எதிரொலித்தது.

அவர் கூவலைக் கேட்டதும் சிவஞானத்துக்கு அவனுடைய அம்மா 'பாலைமரத்திலே இரவிலே போய் கூப்போடுது' என்று தன்னைப் பயமுறுத்தியது ஞாபகத்திற்க வந்தது.

'ஆம்; சென்ற ஆண்டு வைகாசி மாதத்திற் பாலைமரம் பழுத்திருந்தது. மஞ்சள் மஞ்சளாய்க், கொத்துக் கொத்தாய்க் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்த பழங்களைப் பறிக்க சிவஞானமும் அவன் தோழர்களும் வந்திருந்தார்கள். ஒரு பெரிய ஆள் உயரத்திற்குக் கப்பும் கவரும் இன்றி நெடுத்து மேலே கிளை பரப்பி நிற்கும் பாலை மரத்திற் வேலிக்கதியாற் தடிகளாற் கட்டிய ஏணியைச் சார்த்திக் கந்துகளில் ஏறிக் கொண்ட விசுவம் கிளைகளை ஒடித்து ஒடித்துக் கீழே போடச் சிவஞானமும் மற்றவர்களம் பழங்களை ஆய்ந்து வயிறு கொள்ளுமட்டும் சாப்பிட்டார்கள். பழத்தின் பால் உதடுகளிற் பசையாக ஒட்டிக் கொண்டது. வயிறு முட்டி விக்கல் எடுத்தது. தண்­ர்த் தாகம் நாவை வரட்டியது. அந்தக் கோலத்தில் வீடு போய்ச் சேர்ந்தபோதுதான் அம்மா சொன்னா.

"பாலை மரத்துக்காடா போனா, அங்கே பேய்நின்று இரவிலே கூப்போடுது இனிமேற் போகாதடா" அம்மாவின் பேச்சுக்குப் பின்னால் அவனுக்குப் பாலை மரத்துப் பக்கம் வரவே பயமாக இருந்தது. ஆனால் விசுவலிங்கம் துணிச்சற்காரன்!

தந்தையாரின் கூச் சப்தத்திற்குப் பதிலாக ஊருக்குள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் கேட்டன.

சிவஞானம் எண்ணிக் கொண்டான்.

அம்மா சொன்னது போல பாலைமரத்திலே இரவிலே பேய்கள் கூப் போடுவதில்லை. தந் தந்தையாரைப் போன்ற வழிப்போக்கர்கள்தான் கூச் சத்தம் போடுகிறார்கள்.

தன் குரலுக்கு எதிர்க் குரல்கள் கேட்டதும், "அவர்கள் வெளிக்கிட்டு விட்டார்கள். நாம நேரத்தோட போய் எல்லாத்தையும் அடுக்குப் பண்ணவேணும்" என்று தன் பாட்டிற் சொல்லிக் கொண்டே காளைகளைத் தட்டிவிட்டார்கள் கோணாமலை.

சதங்கைகள் ஒலிக்க காளைகள் நகரத் தொடங்கின. கிழக்கே வான் வெளுப்பிற் செம்மை படரத் தொடங்கிற்று.

காம்பீரித்து நின்ற பாலைமரத்தைக்கடந்து அதற்கும் அப்பால் உள்ள புதர்களினூடே மணற் தடத்தில் இறங்கி அதற்கும் அப்பால் உள்ள சதுப்பு நிலத்திற் சளசளவென்று பாய்ந்து மேட்டிலேறி, வீரையும் முதிரையுமாக நெருங்கி நின்றகாட்டுமரங்களினூடே கல்லிலும் மரவேர்களிலும் ஏறி விழுந்து, சுதாரித்து நிமிர்ந்து சவாரி செய்த வண்டி, காலைச் சூரியன் கிழக்கு வானத்திலே இரண்டு பாகங்கட்கு ஏறித் தன் ஊசிக்கிரணங்களை முகத்திற் சுள்ளென்று குத்துகையில் இளக்கந்தைக் குளக்கட்டை அடைந்து விட்டது.

கோணாமலை வண்டியை விட்டிறங்கி, மாடுகளை அவிழ்த்து அவைகளை ஒரு வீரை மரத்திலே கட்டி வைற்கோற் கற்றைகளைப் பிரித்து அவைகட்கு முன்னால் விசிறிப்போட்டபின், அரிசிச் சாக்கைத் தலையிலே வைத்தவாறு, சட்டிபானைகள் அடுக்கப்பட்டிருந்த வாளியைக் கையில் எடுத்துக் கொண்டு தன் வயலின்குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினார். முழங்காலின் கீழே குதிரைச்சதை முறுக்கேறிக் கிடக்கம் வலிமை மிக்க தன் கால்களை கல்லிலும் கலட்டியிலும் அனாயாசமாய்த் தூக்கி, கருங்காலியாய் உருண்டு திரண்டிருக்கும் தன் ஆகிருதியின் கனத்தில் நிலமடைந்தையே அதிரவைத்துக் கொண்டு நடக்கும் தன் தந்தையரின் பின்னாற் சிவஞானம், அவர் நடைக்கு ஈடு கொடுக்க மாட்டாதவனாய் காய்கறிகள் இருந்த பையைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியிருந்தது.

அப்படி ஓடுகையில், குளக்கட்டிலே மாட்டுக் குளம்புகள் பட்டுப் பிதுங்கிப் பிதிர்ந்து காய்ந்திருந்த மண் பொருக்குகள் அவன் உள்ளங்கால்களைப் பதம் பார்த்தன. எனினும் தன் ஆற்றாமையை வெளிக்காட்டாதவனாய்ச் சிவஞானம் தன் தந்தையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

குளக்கட்டிற் சிறிது தூரம் சென்றபின் செங்குத்தாய்க் கீழிறங்கி பசும் புற்களூடே மலடடித்துப் போய்க்கிடந்த ஒற்றையடித் தடத்தில் இறங்கிச் சில சுவடுகள் வைத்தபின்னர் வயல் வேலியின் 'ஏறு கடப்பு'த் தென்பட்டது. சேற்றிலே நடப்பட்டிருந்த வேலிக்கதியாலை இடக்கையாற் பிடித்து, வேலியின் இந்தப் பக்கத்திலே நிலத்தில் ஊன்றப் பெற்று இடுப்பளவு உயரத்திலே வேலிக்கதியாலோடு சார்த்தப்பட்டுக் கட்டப்பட்டிருந்த கலர்க்கம்பிலே வலக்காலை ஊன்றி, இடக்காலை முட்கம்பிக்கு மேலாக வேலியின் உட்பக்கத்தில் இருக்கம் கம்பிற் தூக்கி வைத்து வேலியைக் கடந்து, வலக்காலை நடை வரம்பிலே ஊன்றி இறங்கி வயல் வரம்பிலே நடக்கத் தொடங்கினார் கோணாமலை. தந்தையார் நொடிப் பொழுதிலே இலாவகமாகச் செய்த இந்தக் கடத்தலை சிவஞானம் வெகு சிரமப்பட்டுச் செய்து நடைவரம்பிலே இறங்கியபோது கோணாமலை நடை வரம்பிலே வெகுதூரம் சென்று விட்டார். சிவஞானம் தன் தந்தையைப் பிடித்து விடுவதற்காக வயல் வரம்புகளிலே வேகமாக-மிகவும் வேகமா நடக்கையில் வரம்பிலே தலைசாய்த்துப் படுத்திருந்த நெற்குலைகள் அவன் கால்களிற் சர சரலென்று உராய்ந்தன. புது வேளாண்மையின் 'சொர சொர'த்த தாள்கள் காலிற்பட்டு முழங்கால்வரை சுணைத்து அரிக்கத் தொடங்கியது. சிவஞானம் நடந்து கொண்டேயிருந்தான்.

முன்னே சென்ற அவன் தந்தையார் சற்றுத் தரித்துநின்றார். தன் வருகைக்காகத்தான் அவர் காத்து நிற்கிறார் என்றெண்ணிய சிவஞானம் தன் நடையை இன்னமும் வேகமாக்கி ஓடினான். ஆனாற் கோணாமலையோ வயல் வரம்பிலே நின்று கொண்டு, தாள் பழுத்துச் சரிந்து, நிலத்திலே வீழ்ந்து அலை அலையாகப் படிந்து, கொத்துக் கொத்தான தன் குலைகளைக் காலைச் சூரியனின் மஞ்சட் கிரணங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும் தன் வயலை-அதன் விளைச்சலை நெஞ்சம் பெருமிதமடையப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

இந்தமுறை அம்மன் கண்பார்த்தே விட்டாள். புதிதாக வந்த 'கம இன்ஸ்பெக்டர்' விதைக்கும்படி வற்புறுத்திக் கூறிய 'முருங்கைக்காயன்' நன்றாகத்தான் குலை தள்ளியிருக்கிறது. எந்தக் குலையிலும் இல்லாமல் அத்தனையும் கலீர் கலீர் என்னும் தங்கக் கட்டிகளாய்....

'விதைநெல், மாட்டு 'விசக்களை' வெட்டுக்கூலி, கூடடிப்புக் கூலி, சில்லறைச் செலவுகள் எல்லாம் போகப் பத்து அவணமாவது மிஞ்சும்.'

என்ற அவர் சிந்தனை ஓட்டத்தின் முடிவிலே "தாயே கந்திலும் களத்திலுமாக இருப்பது நல்லபடியாக வீடு வந்து சேர்ந்து விடவேண்டும்" எனப் பிரார்த்தித்துக் கொண்டார். அவர் கைகள் அவரை அறியாமலே கூம்பிக் கொள்ள கண்கள் பரவசநிலையிற் கண்­ருகுத்தன.

தந்தையாரின் மோனப் பிரார்த்தனை முடிவடைகையில் சிவஞானமும் அருகே வந்து சேர்ந்து விட்டான். கோணாமலை தன் மகனைக் கையிற் பிடித்தபடி வயல் நடுவே களத்து மேட்டிலே சடைத்து வளர்ந்திருந்த ஆத்தி மரத்தின் கீழிருந்த குடிசையை நோக்கி நடந்தார்.

* * *

குடிசையை அடைந்த தந்தையும் மைந்தனும் தலைச் சுமையைக் கீழே இறக்கி வைத்தனர். கோணாமலை அடுப்பிலே கள்ளிகளைக் கூட்டி இடையே தேங்காய்த் தும்பைச் செருகி, மடியில் இருந்த தீப்பெட்டியைத் தட்டி நெருப்பு மூட்டினார். காலையாக இருப்பினும் சித்திரை மாதத்து இலையசையாப் பம்மலினும் பொருமலிலும், பிரயாணத்தின் அலுப்பினால் வேர்த்துக கொட்டத் தொடங்கியது. சிவஞானம் தலையிலே கட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே குடிசைக் கப்பிற் சார்ந்து கொண்டாள். நெருப்பை மூட்டித் தண்­ர் கொதிக்க வைத்த கோணாமலை சுடச்சடத் தேநீர் தயாரித்து முடித்தபோது குறுக்கு வழியாக வந்த வெட்டுக்காரர்களின் தலை€க்கறுப்பு ஏறு கடப்பிலே காணப்பட்டது.

அவர்கள் எல்லாரும் வந்துசேர்ந்ததும் சிரட்டைகளில் ஊத்தப்பட்டிருந்த தேநீரை இரசித்துக் குடித்தார்கள். குடித்து முடிந்ததும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு அருவி வெட்டுவதற்காக வயலிலே இறங்கினார்கள். சிவஞானமும் அவர்களோடு சேர்நது 'தாள்க்கத்தி'யுடன் வயல் 'வரவை'க்குள் இறங்கினான்.

"நீயும் வெள்ளாம வெட்டப் போறியா?" என்ற தந்தையின் கேள்விக்குச் சிவஞானம் சிரிப்பை பதிலாகச் சிந்துகையில், வேளாண்மை வெட்ட வந்தவர்களில் ஒருவரான சிவராசா சொன்னான்.

'என்ன அத்தான் இப்படிக் கேக்கிறீங்க, இந்த வேலையெல்லாம் இப்பவே, நம்மோட இருந்து பழகாட்டாத் தம்பி எப்ப பழகப் போறான்'

கோணாமலை இதற்குப் பதிலே சொல்லவில்லை. வெட்டுக்காரர்கள் எட்டுப்பேருடனும் சேர்ந்து சிவஞானமும் அருவி வெட்ட ஆயத்தமானான்.

வயலில் இறங்கிய எல்லோரும் நெற்கதிர்களை இருகைகளாலும் தொட்டு மானசீகமாக நமஸ்கரித்துவிட்டு கிறு கிறென அரிவாளை வீசத் தொடங்கினார்கள். கிழக்கிலே சூரியக்கோளம் கிறு கிறென மேலேறித் தன் கொடுங்கிரணங்களால் அவர்களின் கன்னங்களைப் பொசுக்கியது. புது வேளாண்மையின் கோரமான சுணைக்குப் பாதுகாப்பாக அவர்கள் எல்லாருமே தரித்திருந்த பழைய முழுக்கைக் காக்கிச் சட்டைக்குள்ளே, அவர்கள் உடல்கள் சித்திரைப் புழுக்கத்தில் உருகிக் கொண்டிருந்தன. சற்று நேரத்திலேயே அவர்கள் அணிந்திருந்த சட்டைகள் தெப்பமாக நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டு விட்டன. சுணையையும் தினவெடுத்துச் சொறியச் சொல்லும் அரிப்பையும் சட்டை செய்யாமல் குனிந்த குனிவில் கத்தியின் வளைவுக்குட் கதிர்த்தாள்களைக் கோதி, சக்திக்குள் அடங்கிய தாள்களை இடக்கையின் பிடிக்குட் சிக்க வைத்து ஒவ்வொரு பிடியும் நிரம்பியதும் கத்தியோடு அதை அணைத்துப் பின்னால் திரும்பிக் கதிர்த் தாள்களை 'உப்பட்டி'யாகப் போட்டவாறு. அணிஅணியாய் அருவி வெட்டிக் கொண்டு அவர்கள் முன்னேறினர்.

'வெட்டும் வெட்டை மதியம் திரும்புவதற்குள் வெட்டிவிட வேண்டும். மதியந் திரும்பிச் சாப்பிட்டுவிட்டால் அதன்பின் வேலை ஓடாது'

என்ற எண்ணத்தில் அவர்கள் மூசுமூசு என்று வெட்டிக் கொண்டேயிருந்தார்கள். கதிர்த் தாள்கள் அறுபடும் 'கறார் கறார்' என்ற ஓசையைத் தவிர அந்த வயல் வெளியிலே வேறு எந்த ஒசையும் இல்லை. வெதுவெதுப்பும், இறுக்கமுமான சித்திரையின் நிச்சலனம் மதியந் திரும்பினால் கொண்டலின் அசைவில் சற்று இளகலாம். அதுவரை ஒரே வெப்பம்...புழுக்கம்.

கதிர் அறுத்துக் கொண்டிருந்த சிவஞானம், திடீரெனக் கையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு 'ஐயோ' என அலறினான். இடக்கை உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் சின்னி விரலுக்குக் கீழுள்ள சதை மேட்டில் கருக்கரிவாள் வெட்டியதினால் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தது. வேளாண்மைச் சுணையின் அரிச்சலோடும், சித்திரைப் புழுக்கத்தின் அகோரத்தோடும் வெட்டுக்காயம் ஏற்படுத்திய எரிச்சலில் சிவஞானம் துடிதுடிப்பதைக் கண்ட அவன் தந்தையார், தன் சமையலைப் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு வயலுக்குள் ஓடி வந்தார்.

சிவஞானத்தின் கையைத் தூக்கிப் பார்த்துக் "கள்ள வெட்டுக் காயம் அத்தான்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன சிவராசா, விரைந்து சென்று நீர்க்கரையிலே செழித்து வளர்ந்திருந்த 'கையறுப்பான்' என்ற தொடக்கறுத்தான் இலைகளைப் பிடுங்கி வந்து சொட்டுத் தண்­ர்விட்டுக் கசக்கிக் காயத்தில் வைத்துக் கட்டிக் கொண்டே "இதுதானா இளந்தாரிர கெட்டித்தனம்" என்று கேட்டபோது சிவஞானம் அவமானத்தாற்குன்றிப் போனான். ஆயினும் அதற்குமேல் அவனால் வேலை செய்ய முடியவில்லை. மெதுவாகத் தந்தையோடு வயலை விட்டுக்கரையேறிக் குடிசையை அடைந்தபோது கோணாமலை சொன்னார்.

"இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாகப் படி. நாங்க இந்தக் காட்டிலயும் கரம்பிலயும் கஷ்டப்பட்டு என்ன சுகத்தைக் கண்டம். நீயெண்டான படிச்சு ஒரு வாத்தியாரா வந்திரு."

வெட்டுக்காயத்தின் வேதனையோடு சிவஞானம் தன் தந்தையார் சொன்னதைக் கேட்டபோது, நான்கு மாதங்கட்கு முன்னால் நடந்தவைகள் ஞாபகத்திற்கு வந்தன.

'தை மாதம் பிறக்கப் போகின்றது. பொங்கலுக்கு இன்னமும் ஏழே ஏழு நாட்கள்தான் இருந்தன. இளக்கந்தைக்குளம் நிரம்பி வான்போடத் தொடங்கி விட்டது. அக்குளத்தை நம்பிப் பயிரிடத் தயாராக இருந்த கமக்காரர்கள் எல்லாரும் கடாப்பிணையல்களோடு 'வயல் அடிக்க' வந்து விட்டார்கள். பொங்கலுக்கு முன்னாற் வெருமிதியாவது மிதித்து விடவேண்டும் என்ற அவசரம்.

சிவஞானமும் தன் தந்தையாரோடுகூட வயலுக்கு வந்திருந்தான். கூலியாட்கள் வேறு மூன்து பேர்!

ஒவ்வொரு வரவைக்குள்ளும் படம் புதைய நீரைக் கட்டி வைத்து, அந்தச் 'சிலுவு' தண்­ரில் கடாப்பிணையல்களை விட்டு வயலை உழக்கத் தொடங்கினார்கள். பழக்கப்பட்ட கடாக்கள் வயலைச் சேறாக்கும் முகமாக ஹேஹே என்ற கட்டைக் குரலுக்கு முன்னே நடந்து, 'ஹோஹோஹோ' என்ற நீளக் குரலுக்குப் வலம்வளைந்து வேடிக்கையாகவும் இருந்தது. ஓரோர் நாளையில் தனக்குப் பாடம் நன்கு விளங்காவிட்டால் 'கிடா மாடு' என்று தன்னைத் திட்டும் மிஷன் பாடசாலை ஞானமுத்து வாத்தியாரின் உலக அநுபவத்தையிட்டு அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. இந்த மாடுகட்கா அவர் அறிவில்லை என்கிறார்!

ஆனால் உற்சாகத்தோடு மாடு வளைத்துக் கொண்டு இருந்த சிவஞானத்திற்குச் சில மணி நேரத்துள் அலுப்புத்தட்டத் தொடங்கிற்று. கட்டிய நீரின் அடியிலே தரையோடு தரையாகப் படர்ந்திருந்த தொட்டாச் சிணுங்கியின் முட்கள் அவன் கால்களை நன்றாகப் பதம் பார்த்துவிட்டன. கீறிக் கிழிபட்ட அக்கால்களைத் தூக்கி மேலே ஒரு அடிகூட வைக்க அவனால் முடியவில்லை. எனவே மாடு வளைப்பதை விட்டுவிட்டு வெளியேறினான். ஆனால் அவன் தந்தையாரும் மற்ற இருவரும் எவ்விதச் சிரமமுன்றி மாட்டைவளைத்துக் கொண்டேயிருந்தனர். காட்டிலே இராமரின் பாதங்கள் பட்டபோது "காயெரிகனலுங் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்" குழைந்து தோன்றிற்றாம் என்று அவன் 'இராமர் கதை' என்ற கதை நூலிலே படித்திருந்தான். அதைப் போலவே 'விவசாய ராமர்களின்' கால்பட்டதும் தொட்டாச் சிணிங்கி முட்கள் பூக்களாகி விடுகின்றனவா? என்று எண்ணியபடியே வயல்வரப்பில் இருந்து கொண்டு முட்கள் கீறிக் கிழித்த தன் பாதங்களைத் தடவிக் கொண்டிருந்தான். அப்போதும் தந்தையார் சொன்னார்.

'இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாப்படி. நாங்க எல்லாம் மாடெண்டும் வயலெண்டும் திரிஞ்சு என்ன சுகத்தைக் கண்டிற்றம். நீயெண்டான நல்லாப் படிச்சு ஒரு வாத்தியாரா வந்திடு'

ஆம்; அப்பாவின் வாழ்க்கை இலட்சியமே நான் நன்றாகப் படித்து ஒரு வாத்தியாராக வந்து விட வேண்டும் என்பதுதானா? என்று எண்ணிக் கொண்ட சிவஞானம் அலுப்பிலும், வேதனையிலும் அப்படியே அரிசிச் சாககிற் தலைவைத்துப் படுத்தபடியே நித்திரையாகிவிட்டான். மதியச் சாப்பாட்டிற்கு அவனை எழுப்பச் சிரமப்பட வேண்டியிருந்தது.

* * *

நாட்கள் உருண்டன. பிரபஞ்சத்தை நிறைத்து நின்ற இலையசையாப் பம்மலும் பொருமலும் திரிந்து தலைக்கச்சான் வீசத் தொடங்கையில் மழையும் பெய்தது. ஆயினும் அந்த வருடம் பாலை மரம் பழுக்கவில்லை. இரண்டு ஆண்டுகட்கொரு தடவை முறை வைத்துத்தான் பழுக்கும் என்ற விவகாரம் சின்னவனான விசுவத்துக்கும் தெரிந்திருந்தால் அம்மரத்திற் பழம் பிடுங்கவோ, அல்லது பழந்தின்ன வரும் புறாக்களைச் சுண்டு வில்லாற் குறிவைத்துத் தெறித்துக் கொல்லவோ சிறுவர்கள் எவரும் பாலைமரத்துப் பக்கம் வரவில்லை. ஆயின் கச்சான் காற்று அனற்காற்றாய் முற்றி அங்கிருந்த பற்றைகளும் பறுகுகளும் சருகாக உலர்ந்து காயத் தொடங்கியபோது அப்பாலை மரம் மட்டுமே ஊர்ரவர்க்கெல்லாம் கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவாய் கம்பீரித்தது. விறகு பொறுக்கிய பெண்கள் அதன் நிழலிலே பொறுக்கிய விறகுகளை ஒன்று சேர்த்துக் கட்டினார்கள். வயலிற்கும் காட்டிற்கும் சென்ற ஆண்கள் அம்மரத்தின் குளிர் நிழலிலே இளைப்பாறிச் சென்றார்கள் பக்கத்திலே காவலின்றி இருந்த தென்னந் தோட்டங்களில் திருட்டுத்தனமாக இளநீர் பிடுங்கிய சிறுவர்கள், விலாலிப் பற்றை மறவிலே இளநீர்களைக் குடித்துவீட்டுப் பாலைமர நிழலிலே சுவாவபூதியாகப் படுத்துறங்கினார்கள். இளக்கந்தை வயலிலிருந்து நெல் ஏற்றி வைத்த கோணாமலையும் அம்மரத்தின் கீழே வண்டியை நிறுத்தித் தன் வெள்ளை மாடுகளை ஆதுரத்தோடு முதுகில் தட்டிக் கொடுத்தார்!

அந்த ஆண்டு இளக்கந்தை வயல் நன்றாகவே விளைந்திருந்தது. அதன் பலனாக, இரண்டு அறைகளோடு விசாலமான முன் மண்டபமும் கொண்டிருந்த கோணாமலையின் வீடு, வெளிப்புறத்திலும் நீறு பூசி வெள்ளையடிக்கப்பட்டது. அவரது பழைய வண்டி செப்பனிடப் பட்டுப் புத்தம் புதியதே போலத் திருத்தப்பட்டது. அது மட்டுமல்ல. மாவலி நீர் பாயும் "இறையால் தீவு" வெளியிலே அவர் குத்தகைக்குக் கொடுத்திருந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் கடன் படாமலே விதைக்க முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாகக் கந்தசாமி கோவிலின் ஆடி உற்சவகத்தில் அவரதும் அவரது சகோதரர்களதும் உபயமான நாலாந் திருவிழாவில் வல் வெட்டித் துறையிலிருந்து சின்ன மேளம் எடுப்பித்த செலவையும் வாண வேடிக்கை காட்டிய செலவையும் தன்னந்தனியனாக அவராற் பொறுப்பேற்க முடிந்தது! இதுவரை கோணாமலையாக இருந்த தன் தந்தையார், அந்தத் திருவிழாவின் பின் கோணுமலையார் ஆகிவிட்ட பெருமையைச் சிவஞானத்தால் உணர முடிந்தது!

அடுத்த வருடம் தை மாதம் சிவஞானம் இளக்கந்தை வயலுக்குப் போகவில்லை. ஏழாம்வகுப்புச் சித்தியடைந்த அவன் பக்கத்துப் பட்டினமான மூதூர்ப் பாடசாலை ஒன்றிலே சேர்ந்து எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்தான். காலையில் எழுந்து மூன்று மைல் தூரம் நடந்து பாடசாலைக்குச் சென்று மதியந் திரும்ப மீண்டும் ஆயாசத்தோடு. வீட்டுக்கு மீளும் தன் மைந்தனின் சிரமத்தை உணர்ந்த கோணுமலையார் சிவஞானத்திற்கு 'இரண்டாங்கையான்' துவிச் சக்கர வண்டி ஒன்று வாங்கிக்கொடுத்தார். சிவஞானமும் மாப்பிள்ளைபோலத் துவிச்சக்கர வண்டியிற் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

அவன் அப்படிச் சென்று கொண்டிருந்தது ஊரவர் பலருக்கு எரிச்சலாக இருந்தது. அருவருப்பாகவும் இருந்தது. கோணாமலையின் நெருங்கிய உறவினனான சிவராசா.

"என்னத்தான்! உனக்கு இவன் மட்டுந்தானா ஒரே ஒரு பிள்ளை? இவனுக்குக் கீழ நாளைக்கக் குமராப் போறதுகளே இரண்டு இருக்கு. கைக்குதவியான பயலை இப்படிச் செல்லங் கொடுத்து வளர்த்தால் எப்படி உருப்படப் போறாய்? நாம என்ன படிச்சு ஏசுண்டு வேலையா பாக்கப் போறம். பயலத் தன் போக்கில விடாமல், பிடிச்சு உன்னோட காலக் கைய ஆட்டப் பழக்கு." என்று உரிமையோடு ஆனால் மனத்துள் சூயையோடு கடிந்து கொண்டான்.

'இவன் படிச்சிக் கிழிக்கத்தான் போறான்' வேறு சிலர் ஏளனமாகப் பேசி கொண்டார்கள். செய்யத்தகாத ஒன்றைக் கோணாமலையார் வலிந்து செய்வதாக ஊரிலே எல்லாருமே குறைபட்டுக் கொண்டார்கள்.

ஆனால் தன்னில் உக்கிரமாக மோதும் அலைகளைத் தன் மடியிலே வாஞ்சையோடு ஏற்றும், பின் தள்ளியும் கலங்காமலும் கரையாமலும் நிற்கும் கடற்கரையைப் போலக் கோணாமலையாரும் ஊரவர் கருத்தை ஏற்றும் ஏற்காததுமாய்த் தன் போக்கிலே நிலை கொண்டு இருந்தார்.

கால ஓட்டத்தில் சிவஞானம் கிணற்றங்கரையில் நிமிர்ந்து வளர்ந்து புதுப் பாளையை வீசத் தயாராக இருக்கும் இளங்கமுகைப் போல நெடுத்து வளர்ந்து விட்டான். வேஷ்டியைச் சண்டிக்கட்டுக் கொண்டு தெம்மாங்கு பாடியபடி மாடுபிடிக்கச் செல்லும் கிராமத்துப் பையனாக இல்லாமல் நாகரீகமாக உடுக்கவும், தனக்கு வயதில் மூத்தவர்களோடு மரியாதையாகப் பேசவும்-ஏன் தர்க்கம் செய்யவும் தெரிந்திருந்தான். கிராமத்தில் நடக்கும் நல்லதும் கெட்டதுமான காரியங்களில் கலந்துகொண்டு தேவாரமும் திருவாசகமும் பாடிய போது அவன் மதிப்பு உயரத்தான் செய்தது. அவ்வப்போது அரசாங்கக் காரியாலயங்களிலிருந்து வரும் கடிதங்களைப் படித்துச் சொல்லவும் அதற்குப் பதில் எழுதவும் ஊரவர் பலருக்கு அவன் உதவி தேவையாக இருந்தது. இந்த நிலையிலே பெருமையும் பெருமிதமும் கொண்டிருந்த கோணாமலையார், நான்காம் வருடத் தொடக்கத்தில், சிவஞானம் "நான் எஸ்.எஸ்.ஸ’. சித்தியடைந்து விட்டேன்" என்ற செய்தியைத் தெரிவித்தபோது செயற்கரிய செயலைத் சாதித்து விட்ட பெருமிதத்தில் ஆனந்தக் கண்­ரோடு தன் மைந்தனை அணைத்துக் கொண்டார். அன்றைய தினத்தைப் பெருவிழாவாகவே தன் வீட்டிற் கொண்டாடினார்.

அன்று உள்ளூர் மிஷன் பாடசாலைத் தலைமை ஆசிரியரும் கோணாமலையாரின் வீட்டுக்கு வந்திருந்தார். பால்ய வகுப்புகளில் தன்னிடம் கல்விகற்ற சிவஞானத்திற்குத் தன் வாழ்த்துதல்களைத் தெரிவித்த ஞானமுத்து வாத்தியார் நான் ஆசிரியரானதன் பயனையே அடைந்துவிட்டதைப் போலப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆமாம் மட்டக் களப்பிலிருந்து வந்து, கடந்த பத்து 'வருடக் காலமாக அந்தக் கிராமத்தையே தன் சொந்த ஊர் போல ஆக்கிக்கொண்டு வாழும் அவர் பாடசாலைக்கும் கிராமத்திற்குமாகச் சாதித்துவிட்ட சாதனைதான் என்ன? கிராமத்தவர் பலருக்கு அவர் எழுத்தறிவித்த இறைவனாக இருக்கலாம் ஆனால் அவரிடம் படித்த எவனாவது அந்தக் கிராமத்திலோ அல்லது வெளியிலோ ஒரு சின்ன உத்தியோகதிற்கூட இல்லையே என்பது அவர் மனதில் நீண்ட நாளாகவே இருந்து கொண்டிருந்தது. இன்றைக்குத்தான் அந்த ஊரிலே அவர் மாணவன் என்று சொல்லக்கூடிய ஒருவன் எஸ்.எஸ்சி. சித்தியடைந்து கொண்டிருக்கிறான்!

அந்தப் பெருமையில் திளைத்திருந்த ஞானமுத்து வாத்தியார் கோணாமலையாரிடம் சொன்னார்.

"நம்ம பாடசாலையிலும் இந்த மாதத்தில் 'அனுவல்' நடக்கும். அதிலே இன்னும் ஒருவருக்குச் சராசரி வரும். அந்த இடத்துக்குச் சிவஞானத்தைத்தான் எடுக்க வேணும். நான் ஒரு கடிதம் தருவேன். அதை கொண்டுபோய் மட்டக்களப்பில் மானேஜரிடம் கொடுத்தால் அவர் உடனேயே உங்க மகனுக்கு உத்தியோகம் கொடுப்பார்."

கோணாமலையாருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. தன் மைந்தன் அப்பழுக்கற்ற வெள்ளை வேட்டியும் நீளக்கைச் சட்டையும் அணிந்து, காற் செருப்புக்கள் தாளமிசைத்துக் கட்டியங் கூறப் புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு கிராமத்துக் கிரவல் ரோட்டிலே தன் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வது போன்ற பொய்ம்மாயத் தோற்றத்தை மனதிலே கற்பித்துக் கொண்டார். ஊரவர்கள் எல்லாரும்-வயது முதிர்ந்தவர்கள்கூடத் தெருவாற் தன் மகன் நடந்து செல்கையில் தோளிலிருந்த சால்வையைக் கையில் எடுத்துக்கொண்டு மரியாதையாக ஒதுங்கி நடப்பது அவர் மனக்கண்ணில் பளிச்சிட்டது. அரிவரி வகுப்பு மாணவர்கள் தன் மகனைச் சூழ்ந்து கொண்டு 'புது ஐயா' என்று கத்துவது மானசீகமாக அவர் காதுகளிற் கேட்டது. அந்தச் சொர்ப்பனா சுகத்தை அவரை அனுபவிக்கும்படி விட்டுவிட்டு ஞானமுத்து வாத்தியார் போய்விட்டார்.

ஆயினும் அவர் அவ்விஷயத்தை மறந்தே விடவில்லை. பாடசாலையின் வருடாந்தத் திரட்டு முடிந்த அடுத்த நாளே, இப்பாடசாலையில் இன்னும் ஒரு ஆசிரியருக்குச் சராசரி இருக்கிறதெனவும், அவ்விடத்திற்கு உள்ளூரிலேயே எஸ்.எஸ்.சி சித்தியடைந்திருக்கும் சிவஞானத்தை நியமித்து பாடசாலையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியம் எனவும் மானேஜருக்குக் கடிதம் எழுதி, அக்கடிதத்தைக் கொண்டு போய்க் கோணாமலையாரிடம் கொடுத்து, உடனே சிவஞானத்தை மட்டக்களப்பிற்கு அனுப்பி மானேஜரிடம் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

சிவஞானமும் கடிதத்தை எடுத்துக்கொண்டு மனதிலே இன்பக் கனவுகளோடு அடுத்த நாள்காலையிலேயே மட்டக்களப்பிற்குப் புறப்பட்டான்.

* * *

யமன் திக்கான தென் திசையை நோக்கிச் 'சிவனே' என்றோடிய 'ஈஸ்ரண்பஸ்' தன் கடகடப்பையும் தட தடப்பையும் நிறுத்தித் தன் பயணத்தை முடித்துக் கொண்டபோது மட்டக்களப்பு நகரின் தெருவிளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன! சரிக மாமபா, மபத நீ நிசா எனப் பாடசாலைப் பாடும் நீரர மகளிர் வாழ்வதாக விபுலானந்த அடிகள் குறிப்பிடும் மட்டக்களப்பு வாலியின் நிர்ச்சலனமான நீர்ப்பரப்பில் மின்விளக்குகளின் ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

பஸ்ஸ’லிருந்து இறங்கிய சிவஞானம் வாவிக்கரை ஓரமாகக் கண்வைத்த தொலைவுக்குத் தொடர்ந்து செல்லும் மின் விளக்குகளின் வரிசையையே வைத்த கண்வாங்காமற் பார்த்துக் கொண்டிருந்தான்!

** இ.தொ.kaviya14.mtf**
‘க்கியம் என்ன காரணத்திற்காக



** kaviya13.mtfன் தொடர்ச்சி**

'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்ற வாக்கியம் என்ன காரணத்திற்காக வழங்கி வருகின்றதோ, ஆனால் பெரு நிலத்திலிருந்து புளியந் தீவைப் பிரித்து ஆலவாயை வளைத்த அரவமாய் வளைந்து கிடக்கும் வாலி மட்டக் களப்புப் பட்டினத்தை அழகு செய்ய அந்த அழகே அதன் சுயமாய், அந்தக் கீழைக்கரைத் தலை நகர் அந்தி மயக்கத்தின் மஞ்சள் ஒளியில் காவிய காலத்துப் பூம்புகார் அப்படினத்தை முதன் முறையாகத் தரிசித்த சிவஞானத்தின் கண்களிற் தோற்றமளித்தது அந்த அழகு மயக்கில் சிவநேரம் தன் கண்களை லயிக்கவிட்டிருந்த சிவஞானம் தீவையும் பெரு நிலத்தையும் இணைத்த பாலத்தைப் பார்த்தான். பாலத்தின் மதகுகளில் திரைப்பட விளம்பரங்கள் ஒட்டப்பெற்றிருந்தன. சிவஞானம் விளம்பரங்களைப் படித்தான்.

'காலம் மாறிப் போச்சு' என்ற படம் இம்பீரியல் பட மாளிகையில் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு விளம்பரம் சொல்லிற்று!

அவ்விளம்பரத்தைக் கண்டதும் மூதூர்ப் பாடசாலையிலே அவனுக்குச் சரித்திர பாடங் கற்பித்த பொன்னம்பலம் மாஸ்ரரின் ஞாபகம் வந்தது. அவர் ஒருநாள் ஆவேசத்தோடு சொன்னார்.

"பொருளற்ற புராணக் குப்பைகளைப் படமாக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாக்காரர்கள், அதன் பின்னால் சரித்திரப் படங்கள் என்ற நினைப்பில் சரித்திரமும் அல்லாத புராணமும் அற்ற இரண்டுங் கெட்டான் கதைகளைத் தயாரித்து அக்கதைகளிடையே கனகவிசயன் தலையிலே கல் சுமத்திய கதையையும், இமயத்திலே மீன் 'பொரித்த' கதையையும் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பேச வைத்துத் தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமைதேடிக் கொண்டு விட்டதாகச் சுயதிருப்தி பெருமை தேடிக் கொண்டு விட்டதாகச் சுயதிருப்தி கொள்கிறார்கள். இன்னும் சிலர் 'கோட்'டிலி அர்த்தமற்ற அடுக்குத் தொடர்களைப் பொழிந்து தள்ளுவதுதான் சமூகக் கதை என்று எண்ணித் தம்மைத தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிலையிற் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை-அவ்வளர்ச்சி மூலம் அடைய வேண்டிய சமுதாய மாற்றத்தை விளக்குவதாய், 'காதல் கூதல்' என்று தமிழ்ப் படத்திற்கே மட்டும் சொந்தமான அசட்டுத்தனங்கள் ஏதுமின்றி ஓர் தெலுங்குக் கதையைச் துணிச்சலோடு படமாக்கியிருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தாற் 'காலம் மாறிப் போச்சு' என்ற அந்தப் படத்தை நீங்கள் எல்லாரும் பார்க்க வேண்டும்."

அவர் பேச்சு ஞாபகம் வரவே மானேஜரிடம் சென்று தான் வந்த வேலையை முடித்துக்கொண்டது இரண்டாங் காட்சிக்காவது படம் பார்க்கச் செல்ல வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனாக, ஞானமுத்து வாத்தியார் கற்பித்திருந்த குறிப்புகளின் பிரகாரம் மானேஜரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

புளியந்தீவுப் பாலத்தின் இரு கரைகளிலும் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் இருந்த பலர் 'காற்று வாங்குவதற்காக'க் கூடி நின்றார்கள். இளைஞர்களான சிலர் பாலத்தின் கம்பிகளிற் பிருஷ்டகாலை ஊன்றி தங்கள் நிலையைச் சமனப்படுத்திக் கொள்வதற்காக முதுகைக் கூனாக்கி முன்வளைந்து சர்க்கஸ் வித்தை செய்து கொண்டிருந்தார்கள். அந்திக் கருமை படர விழித்துக் கொண்டு விடும் பட்டினத்து அழகு, முகப்பூச்சுகளின் இலவச விளம்பரமாய் பாலத்துக் கம்பிகளிற் குந்திக் கொண்டிருக்கும் இளைஞர்களை அருவருத்து ஒதுங்கிக்கொண்டு பாலத்தின் இரு கரைகளிலும் வழிந்து கொண்டிருந்தது.

சிவஞானம் நடந்து கொண்டேயிருந்தான். சற்று முன்னே பூம்புகாராகக் காட்சியளித்த மட்டக்களப்பு நகரின் துர்க்கந்தம் அவன் மூக்கைத் துளைக்கத் தொடங்கியது. நகருக்கு அழகூட்டுப் இந்த வாவிக் கரையா, நகரின் குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாகவும் அமைய வேண்டும்? என்று மனம் வெதும்பியவனாய் நடந்த சிவஞானத்திற்கு பாலத்திலே வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து நிற்கும் பலர் உடையிலே மட்டும் அல்ல; பாலையும் நீரையும் பிரித்துப் பாலையே குடிக்கும் அன்னத்தைப்போல குப்பைக் குழியிலே இருந்து வரும் காற்றைப் பிரித்து வாவி நீர்ப் பரப்பிலிருந்து வரும் சுத்தக் காற்றை மட்டுமே சுவாசிக்கும் அமானுஷய சாதனைபடைத்தவர்கள் என்றெண்ணிக் கொண்டே அந்த எண்ணம் அவனுக்கே சிரிப்பைத் தர மானேஜர் வீட்டை நோக்கி நடந்தான். அவன் மானேஜரின் இருப்பிடத்தைத் தேடிப்பிடித்த போது, மாதா கோயிலிலே செத்தவர்களை நினைத்து பிரார்த்திப்பதற்காக அடிக்கப்படும் இளைப்பாற்றி மணி ஒலித்தது.

* * *

அவன் மானேஜர் வீட்டை அடைந்தபோது செத்தவர்களை நினைந்து பிரார்த்திப்பதற்காக ஒலிக்கும் இளைப்பாற்றி மணிவிட்டு விட்டு ஒலித்தது!

அந்த ஒலி அடங்கியபோது, தன் அறையின் முன்னாற் தாழ்வாரத்திலே கையிற் செபப் புத்தகத்தோடு உலாவிக் கொண்டிருந்த சுவாமியாரிடம், சிவஞானம் அடக்க ஒடுக்கமாக ஞானமுத்து வாத்தியார் கொடுத்த கடிதத்தை நீட்டினான். சிவஞானத்தை ஏற இறங்கப்பார்த்த பாதிரியார் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.

சிவஞானத்தின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று.

கடிதத்தைப் படித்த பாதிரியாரின் முகத்தில் எந்தச் சலனமுமே ஏற்படவில்லை. நியம நிஷ்டைகளால் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட பற்றற்ற தன்மையே!

சிவஞானம் ஆவலோடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கடைசியாகப் பாதிரியார் சொன்னார்.

"தம்பி விஷயம் பிந்திப் போய் விட்டது. நான் அந்த இடத்திற்கு ஏற்கனவே ஒருவருக்கு வாக்குப் பண்ணிவிட்டேன், இப்போது ஏதும் செய்ய முடியாது."

அவர் கூறிய வார்த்தைகள் சிவஞானத்தைக் கல்லாய்ச் சமைத்து விட்டனவோ! அவன் உள்ளுணர்வுகள். மனத்துடிப்புகள் எல்லாவற்றையுமே ஸ்தம்பிக்கச் செய்து விட்டனவோ! சிவஞானம் அடித்து வைத்த சிலையாக அப்படியே நின்றான்!

இருவரும் நின்றனர்.

அறைக்குள்ளே மேசை மணிக்கூட்டிலிருந்து வந்த டிக்டிக் என்ற சப்தம் மட்டும் அவர்கள் இருவரது மௌனத்திற்குப் பகைப் புலமாக மோனத்திருந்த அந்த நிமிடங்களை வினாடித் துண்டுகளாக வெட்டி வெட்டிவைத்துக் கொண்டிருந்தது. அம்மௌனத்தைக் கலைத்த பாதிரியார் மீண்டும் சொன்னார்.

"தம்பி ஏன் நிக்கிறாய்? இப்போது ஒன்றுமே செய்ய முடியாது. இன்னமும் இரண்டு மூன்று மாதங்களில் திரிகோணமலைப் பகுதியிலே வேறு பாடசாலைகளில் புதிய இடங்கள் வரலாம். அப்போது உம்மைக் கவனித்துக் கொள்கிறேன். இப்போது நீர் போகலாம்."

இப்படிச் சொன்ன பாதிரியார் மீண்டும் தன் செபப் புத்தகத்தை விரித்துக்கொண்டு உலாவத் தொடங்கினார். உலகக் கவலைகளிலிருந்து விடுபட்டு நினைத்த மாத்திரத்தில் கடவுளோடு உறவாடவும் பேசவும் அவர் பயிற்சி அளிக்கப்பட்டவர்!

ஆனால் அவர் வார்த்தைகளினால், ஓங்கி உயர்ந்து நின்ற கோயில் கோபுரம் அப்படியே வீழ்ந்து நசுங்கி விட்டது போலவும், காலடியிலே நிலம் பிளந்து அப்படியே தன்னை விழுங்கிவிட்டது போலவும் இருந்தது சிவஞானத்திற்கு. மனக்கோட்டைகள் நொறுங்கி வீழ்ந்த அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்ற பிரக்ஞையே அற்றவனாக மீண்டும் வந்த வழியில் நடக்கத் தொடங்கினான். மின்சார விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் முக்குளித்துக் கொண்டிருந்த பட்டினத்துத் தெருக்களில் அவன் சென்ற வழி மட்டும் இருட்டாகவே இருந்தது. செல்லும் இடமும் இருட்டாகவே இருந்தது. சிந்தையே இருண்டு விட்டதே.

* * *

தைலக்கா

சித்திரை மாதம், ஊரே இலை அசையாப் பம்மலிலும் பொருமலுமாகக் கிடந்தது. காலையிலே வியர்த்துக் கொட்டியது.

வெளித் திண்ணையில் குந்தியபடி மண் சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு படித்தது எனக்குச் சிரமத்தைத் தந்தது. தாள முடியவில்லை. புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

முற்றத்துப் பலாமரத்தின் மொக்குந் தக்குமாக இருந்த முடிச்சுகளில் பலா காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இன்னும் சில நாள்களில் பலாப் பழங்களின் சுகந்தம் ஊரையே பரிமளித்து நிரப்பும். பட்டித்திடல் பலாப் பழங்கள், திருகோணமலை வட்டாரத்திலேயே புகழ் பெற்றவை.

முற்றத்தைக் கடந்து வேலிப் படலையைத் திறந்து தெருவிற்கு வந்தேன். மட்டக்களப்பு மெயின் வீதிக்கு அப்பால் தெருவிற்குச் சமாந்தரமாக மாவலியின் செம்புலப் பெயல் நீர் வாய்க்கால் கரையில் உயர்ந்து நிழல் கவித்த மருத மரத்தினடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

மருதமரத்தின் பழுத்த இலைகள் பூட்டவிழுந்து வாய்க்காலில் வீழ்ந்து எங்கு போகிறோம் என்ற பிரக்ஞையே இன்றிப் போய்க் கொண்டிருந்தன. தூரத்தே கோடைப்போக விதைப்புக்காக, வயலைச் சேறாக்கக் கடாப் பிணையல்களை வளைப்பவர்கள் ஓகோகோ... என்று அவைகளை விரட்டும் சப்தம் சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

மெயின் றோட்டில் எப்போதாவது ஓடிக் கொண்டிருக்கும் துவிச்சக்கர வண்டிச் சில்லுகளில் காலைச் சூரியனின் ஒளி பிரதிபலித்து மினுக்கிக் கொண்டிருந்தது. புழுக்கமும் இருளும் மண்டிய என் மண் குடிசையை விட, அம்மருமரத்து நிழலின் குளுமையும் அம்மரத்தின் சடைத்த இலைகளைப் பீறிட்டுக் கொண்டு பாயும் சூரிய ஒளியும் இதமாகத்தான் இருந்தன.

ஆனாலும் மரத்தின் வேர் முட்டிற் குந்தியபடி மரத்திற் சாய்ந்து கொண்டு படிப்பது சிரமமாகத்தான் இருந்தது. பாடசாலைக்குச் சென்றால் அங்கு கதிரையும் மேசையும் இருக்கும். படிப்பதும் சௌகரியமாகத்தான் இருக்கும். ஆனால் அங்கு போக மனம் ஒப்பவில்லை. ஆனாலும் எதிரேயிருந்த பாடசாலையை எட்டிப் பார்க்கிறேன்.

அங்கே, அப்போதுதான் தலைமுழுகி விட்டு வந்திருந்த, ரீச்சர், விரிந்த கூந்தலில் நீர் சொட்டத் தான் தோய்த்து வந்திருந்த புடவைகளைக் கொடியிற் காயப்போட்டுக் கொண்டிருக்கிறாள். ஈரப்புடைவைக்குள் திமிறிய அவளின் பிருஷ்டபாகம் அவளின் முப்பத்தைந்து வயதை அனாயசமாக மறைத்துக் காட்டுகின்றது.

நான் நான்காம் வகுப்புப் படிக்கையிலேயே அவள் எங்களூர்ப் பாடசாலைக்கு ஆசிரியையாக வந்தாள். அப்போது பாடசாலையிற் தலைமை வாத்தியாரோடு இன்னும் ஒரு உதவி ஆசிரியரும் இருந்தார். மூன்றாம் ஆளாக வந்த ஆசிரியை எங்களூரில் எல்லாராலும் தையலக்கா என்றே அழைக்கப்பட்டாள். அப்போது ரீச்சர் என்ற வார்த்தை ஊரில் எவருக்குமே தெரியாது!

தலைமை வாத்தியாரும் மற்றவரும் பாடசாலை முடிந்ததும் துவிசக்கர வண்டியில் மூதூருக்குப் போய் விடுவார்கள். அவர்களுக்க எங்களூரிற் குடியிருக்க விருப்பமில்லை.

ஆனால் தையலக்கா மட்டும் பாடசாலையிலிருந்த அதிபரின் குவாட்டர்ஸ’லேயே தன் தாயோடு குடியிருந்தாள். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் அங்கேதான் இருக்கிறாள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த இளமைச் சௌந்தர்யம் இன்றும் இல்லை எனச் சொல்ல முடியாது. ஆனாலும் மலடடித்துக் கிடக்கும் கலட்டித்தரையில் தீய்ந்து கருகிக் கிடக்கும் கோரைப் புல்லை மேயும் வெள்ளாட்டின் கண்களில் தெரியும் சோகம் அவள் கண்களிலும் தேங்கிக் கிடக்கும்.

அச்சோகம் கப்பிய கண்கள் என்னைக் கண்டுவிடுமோ என்ற பயத்தில் நான் மெதுவாக அரக்கி அரக்கி நகர்ந்து மரத்தின் மறுபக்கமாக அமர்ந்து கொள்கிறேன்.

ரீச்சரிடம் எனக்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் நன்றியறிதலுங்கூட இருக்கின்றது. நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் அவள்தான் என்னை ஸ்கொலர்ஷ’ப் பரீட்சைக்கு ஆயத்தம் பண்ணினாள். நான் பரீட்சை சித்தியடைந்ததும் என் தந்தையாரிடம் ஆர்வத்தோடு சிபார்சு செய்து வந்தாறுமூலை மகாவித்தியாலயத்திற்கு என்னை மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தாள். ஒவ்வொரு விடுமுறைக்கும் நான் ஊருக்கு வந்ததும், என் படிப்பைப் பற்றி அக்கறையோடு விசாரித்து என்னை ஊக்கப்படுத்தினாள். அவளது ஊக்குவிப்பினாற்தான் நான் இன்று பேராதனைச் சர்வகலாசாலை மாணவனாக இருக்கிறேன்.

நான் இங்கே மருதமரத்தின் கீழ் இருந்து படிப்பதைப் பார்த்தால், அவள் நிச்சயமாக அதை அனுமதிக்க மாட்டாள். ஆனால் பாடசாலையில் எத்தனை சௌகரியம் இருப்பினும் எனக்கு அங்கு போவது விருப்பமில்லாமலிருக்கிறது.

நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் ஒரு சாயந்தரவேளை தையலக்கா என்னை ஸ்கொலர்ஷ’ப் பரீட்சைக்குப் படிப்பித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த அவள் அம்மா சொன்னாள்.

எடியே! இந்தப் பறப்பயலுக்கு எதுக்குப் படிப்பு உவன் படிச்சுச் சக்கிடத்தார் ஆகப் போகிறானே.

எனக்கு நெஞ்சிலே ஈச்சம் முள்ளுக் குத்தியதுபோல இருந்தது. அந்த வேதனையோடு நான் "அக்கா நான் வீட்ட போறேன். இனிப் படிக்க வரல்ல" என்று சொல்லி எழுந்தபோது தைலக்கா சொன்னாள். அம்மா கிடக்கிறாவிடு. அவ பழைய கிழடு. அது அப்படித்தான் சொல்லும். அது சொல்றதக் காதில விழுத்தாட்டாம நீ படி.

அந்தக் கிழவி சொல்றதுக்காகவாவது நான் படிக்கத்தான் வேண்டும். ஆனாலும் தையலக்கா என்னதான் ஆறுதல் சொன்னாலும் அந்தக் கிழவி அழிச்சாட்டியம் பிடித்தவளாகத்தான் இருந்தாள். அந்தக் கிழவி அவ்வூருக்கு வரும் வரையும் பாடசாலைக் கிணற்றிலே பிள்ளைகள் எல்லாரும் தங்கள் இஷ்டம் போல தண்­ர் அள்ளினார்கள்; குடித்தார்கள். பாடசாலையின் அயலிலுள்ள ஊர் மக்களம் கிணற்றில் தண்­ர் அள்ளினார்கள்.

ஆனால் அந்தக் கிழவி தான் புழங்கிற கிணற்றில் இந்த எளிய சாதிகள் தண்­ர் அள்ளக்கூடாதென்று அடம்பிடத்தாள். தலைமை வாத்தியாரும் எங்களைப் பாடசாலைக் கிணற்றிலே தண்­ர் அள்ளவேண்டாம் எனப் பணித்தார்.

காலையிற் பாடசாலை வாளிகளில் எல்லாம் அந்தக் கிழவியே தண்­ர் நிரப்பி வைத்துவிடுவாள். நாங்கள் அத்தண்­ரைச் சிரட்டையால் அள்ளி வாய் வைக்காமல் கை மண்டையில் இன்னொருவர் ஊற்றக் குடிக்கவேண்டும்.

பாடசாலைப் பிள்ளைகள் எல்லோருமே அக்கிழவிக்குக் குற்றவேல் செய்யவேண்டும் ஏன் பெரியவர்கள் கூடச் செய்யவேண்டும். பெண்கள் அவருக்கு நெல் குத்திக் கொடுப்பார்கள். ஆண்கள் விறகு கொத்திக் கொடுக்க வேண்டும்.

ஆனாலும் ஊரவர்கள் இவைகளையெல்லாம் குருவிற்குச் செய்யும் பணியாகவே கருதினார்கள். அந்தக்கிழவி பெரியவர்களைகூட வாடா போடா என்று அழைப்பதைக்கூட அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னே அப்போதுதான் நான் சர்வகலாசாலையிற் பிரவேசித்திருந்தேன். ஆவணி விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது அக்கா நீண்டநாள்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போக இருப்பதாக அறிந்தேன். தையலக்காவிடமே நான் விசாரித்தபோது அவள் நாணிக் கொண்டு சொன்னாள்.

எனக்குக் கல்யாணம் ஒழுங்காகியிருப்பதாக சித்தப்பா கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் போகிறேன்.

அப்படியா, மெத்த சந்தோஷம் ரீச்சர், கல்யாணமானால் இங்கு வரவே மாட்டீர்களா?

அதெப்படி சொல்ல முடியும்?

நான் மேற்கொண்டு கதைப்பதற்கு முன்னே அந்தக்கிழவி என்னைக் கூப்பிட்டாள். டேய் பொடி. இங்கே வாடா...

நான் கிழவிக்கு இரண்டு கிழி கிழிப்போமா? என மனதில் எண்ணிக்கொண்டே என்ன அலுவல், சொல்லுங்க என்றேன் சற்று விறைப்பாக.

இந்தா. இந்த மூட்டையெல்லாம் பஸ் ஸ்ராண்டில கொண்டு வையடா.

அம்மா. பஸ்ஸ’ற்கு இன்னம் நேரம் இருக்குதணை என்ற தையலக்கா நீங்க போங்க தம்பி. சாமான் தூக்க நான் வேறு யாரையும் பார்க்கிறன் என்றாள் என்னிடம்.

பரவாயில்லை ரீச்சர். நான் உங்களுக்கு இந்த உதவியாவது செய்யக்கூடாதா? பஸ்ராண்டிற்கு நானே உங்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிவாறன் என்று சொல்லிக்கொண்டே பாடசாலையைத் தாண்டி குவாட்டர்ஸ”க்குப் போனேன்.

அங்கே அரிசி மூட்டை, மா மூட்டை அவல் மூட்டை! பழமும் கூட விசேஷம். மலிவுங்கூட அவைகளையும் கொண்டுபோகலாமே என்றேன் நான் நக்கலாக.

யாழ்ப்பாணத்தில்லில்லாத பலாப்பழமும் வாழைப் பழமுமே என்றாள் கிழவி.

நான் ஒவ்வொரு மூட்டையாக பஸ்ராண்டுக்குச் சுமந்து சென்றபின், ரீச்சரையும் தாயையும் அழைத்துக் கொண்டு பஸ்ராண்டை அடைந்தேன். பஸ்பிடித்து மூதூருக்கு வந்து இருவரையும் லோஞ்சில் ஏற்றித் திருக்கோணமலைக்கு வழியனுப்பினேன்.

ஆனால் யாழ்ப்பாணம் போன மகளும் தாயும் பத்துநாள்களுக்குள் மீண்டும் ஊருக்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

நான் ஓடோடிச் சென்று ரீச்சர், நீங்கள் மாலையும் கழுத்துமாக வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்றேன்.

அந்தக் கதையைவிடும் தம்பி என்று ரீச்சர் சொல்கையில் அவள் கண்களில் ஏமாற்றம் ததும்பி நின்றது.

என்ன நடந்தது ரீச்சர்?

தம்பி! நீர் யாழ்ப்பாணத்து நிலைகளைக் கேள்விப் பட்டிருப்பீர். ஆனநலும் நிதர்சனமாக உமக்குத் தெரியாது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

எனக்குச் சீதனம் கொடுக்க நான் இன்னமும் பத்து வருடங்கள் உழைத்துச் சேமிக்க வேண்டும்.

அதற்குள்....

கிழவீயாகிவிடுவேன் என்று சொல்லப் போகிறீர்கள். அம்மா இரைந்தாள், வந்ததும் வராததுமா அவனோடு என்னடி கதை? வாடி இங்க...

ரீச்சர் போகும்போது அவள் கண்களில் நீர் சொட்டிற்று.

சீதனப்பணம் போதாததால் அவள் கல்யாணம் தடைபட்டுவிட்டதே என்று எண்ணியபோது என் கண்களும் பனித்தன.

புத்தகம் விரிந்தபடியேதான் இருந்தது. என் மனதில் பழைய சம்பவங்கள் நிழலாடுகையில்....

தம்பி! இங்கேயா இருந்து படிக்கிறீர். வாரும் பாடசாலையில் இருந்து படிக்கலாம்....அங்கே சௌகரியமாக இருக்கும்.

வேண்டாம் இங்கே சௌகரியமாகத் தானிருக்கிறது.

இப்படி மரத்தோடு சாய்ந்து கொண்டிருந்தால் முதுகு கூனிப்போகும்.

அங்கே வந்தால் மனம் கூனிக்குறுகும்.
தைரியமிருந்தால் கூனிக்குறுக நேராது
தைரியமிருக்கிறது. ஆனால் உங்கள் அம்மாவிடம் வீண்வம்பை விலைக்கு வாங்க விரும்பவில்லை.

ரீச்சர் என்னை மிக மிக அண்மித்து விட்டாள். இன்னமும் இருந்தால் என் கையைப்பிடித்து எழுப்பி இழுத்துக் கொண்டே போய்விடுவாள் போலத் தோன்றியது. நான் எழுந்து முன்னால் நடந்தேன். ரீச்சர் என் பின்னால் வந்தாள். இருவரும் பாடசாலையை அடைந்தோம்.

ஆசிரியர் மேசைக்கருகில் கதிரையை இழுத்துவைத்து இதில இருந்து படியும் என்று சொல்லிக் கொண்டே ரீச்சர் குவாட்டர்ஸ் பக்கம் போனாள்.

நான் கதிரையில் அமர்ந்துகொண்டு புத்தகத்தைப் புரட்டினேன். ஆமாம் வெறுமனே புரட்டினேன். படிக்க முடியவில்லை.

சில நிமிடங்களில் ரீச்சர் தேநீரோடு வந்தாள். ஆவி பறக்கும் தேநீரை மேசையில் வைத்துவிட்டு இன்னோர் கதிரையை வைத்துக்கொண்டு என் எதிரே அமர்ந்தாள்.

தேநீரைக் குடியுங்கள்.

கப் அன்ட் சோசரில் எனக்குத் தேநீர் தந்ததைக் கண்டாலே உங்கள் தாயார் குமுறுவாளே. ஏன் மூக்குப்பேணி இல்லையா?

நான் அம்மா காலத்தவளல்ல.

ஆனாலும் அந்தக் கட்டுக்கோப்பில் வளர்ந்தவர்.

அது என் குற்றமல்ல அதை விட்டுவிட்டு தேநீரைக் குடியுங்கள் என்ற ரீச்சர் என் புத்தகத்தை இழுத்தெடுத்துப் பார்த்தாள். அது கால் மாக்ஸ’ன் மூலதனம்.

இதையா படிக்கிறீர்கள்? நான் பாடப்புத்தகம் என்றிருந்தேன்.

சில சமூக அநீதிகளை எதிர்க்கப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தாற் போதாது. இத்தகைய புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

அப்படியா கால்மாக்ஸ’ன் தத்துவங்கள் இப்போது அழிந்து கொண்டு வருகின்றன.

இல்லை. அவர் தத்துவங்கள் என்றைக்குமே அழியாது.

ஓ! கால்மாக்ஸைப்பற்றி நன்கு தெரியுமோ?
ஓரளவு தெரியும்.
அவர் மனைவி அவரை விட வயதிற்கூடியவள்.

தெரியுமே. அவர் மட்டுமல்ல. முகம்மது நபி. ஷேக்ஸ்பியர் போன் பெரியோர்களின் மனைவிமாரும் அவர்களைவிட வயசில் மூத்தவர்கள்தான்.

ஆனால் அவர்களக்கிருந்த தைரியம் எல்லாருக்கும் வராது.

உள்ளேயிருந்து தாயின் முழக்கம் என்னடி அந்த எளிய சாதியோட கதை?

நான் உக்கிர கோபத்தோடு கதிரையைப் பின் தள்ளி விட்டு தடாரென்று எழுந்து நின்றேன். ரீச்சர் என் கையைப் பிடித்தவாறு என் மார்பில் அணைகிறாள்!

ஆ! எத்தனை மென்மையான ஸ்பரிசம்!

எனக்குத் தைரியம் வந்துவிட்டது!

வீரகேசரி 1995
..............

வாழ்க சுதந்திரம்

வானொலி அறிவித்தலைக் கேட்கக் கேட்க அவரு கக எரிச்சலாக இருந்தது!

ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு இன்னமும் தான் பெற்ற சுதந்திரத்தின் பெறுமதியை உணர்ந்து கொள்ளவில்லையா? வேறு எந்த நாட்டிலாவது சுதந்திர தினத்திற்காகத் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்று இடைவிடாது அறிவிக்கின்றார்களா? இந்த நாட்டில் மட்டும் ஏன் அப்படி நடக்கின்றது? என்ற வினாக்கள் அவர் மனதிற் கொக்கியாக எழுந்து நின்று குத்தின.

சுதந்திர தினத்திற்காகத் தேசியக் கொடியை ஏற்றுங்களென்று இடைவிடாது அறிவிப்பதன் மூலம் எம்நாட்டு மக்கள் தமது தேசிய சுதந்திரத்தையும் தேசியக் கொடியையும் மதிக்கவில்லை என்ற ஏளனமான எண்ணம் அயல் நாடுகளில் ஏற்படாதா? என்றெல்லாம் எண்ணினர் அவர்.

கடந்த காலச் சம்பவங்கள் அவர் நினைவுக்கு வந்தன. நாட்டில் தேசியக்கொடி எல்லா மக்களுக்கும் பொருத்தமானதில்லையென்று சுந்தரலிங்கம் போன்றார் கருதினார்கள். அதையொட்டி இடைத் தேர்தலும் நடந்தது.

பல வருடங்களாகச் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டனர். அதன் பிரதிபலிப்பாக வன்முறைகள் நடந்தன. உயிரிழப்புகளும் நேர்ந்தன.

இன்று எல்லா இடங்களிலும் தேசியக் கொடி பறக்க விடப்படுகின்றது. இது பயத்தினாலா? அல்லது தேசபக்தியினாலா? என்பது அவரு ககுப் புரியாததா இருந்தது!

சரித்திர காலத்திற்கு அவர் மனம் தாவியது.

நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். வெள்ளையர் ஆட்சி இந்நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டுமென்ற வன்னிநாட்டின் பண்டாரவன்னியன் போர்க் கொடிதூக்கினான்.

அதே உணர்வுகளோடுதான் ஊவாவின் கெப்பெற்றிக் பொலதிசால போர்முரசு கொட்டினான். கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரமராச சிங்கனின் உறவினனான துரைச்சாமி அவனுக்கு ஆதரவாக நின்றான்.

இந்த மாவீரர்கள் அப்போராட்டத்தில் தங்கள் உயிரையே கொடுத்தார்கள்.

அவர்களின் வாரிசுகளாகிய நாம் சதந்திர தினத்தன்று சுதந்திரக் கொடியை ஏற்றி வைக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றோம். இந்த நிலை ஏன் என்று கவலைப்பட்டார் அவர்.

'எந்த நாட்டிலும் சுதந்திரத்தின் விலை இரத்தம் தான்' என்று யாரோ சொல்லிய கோட்பாடு அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இந்தியா சுதந்திரமடைந்த பின்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளை இன்னமும் தன்பிடியில் வைத்திருக்க முடியாதென்ற எண்ணத்தில் பிரிட்டிஷ்காரன் இலங்கைக்குச் சுதந்திரத்தைக் கொடுத்து விட்டுப் போனான். போராடிப் பெறாத சுதந்திரம் நம்மிடையே பெறுமதியற்றதாகி விட்டதா?

ஆனால் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தாத நாம் சமீப காலத்தில் எவ்வளவு இரத்தம் சிந்தியிருப்போம். சிங்கனவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எல்லாரது இரத்தமுமே அவமாகச் சிந்தப்படுகின்றது. இந்த உதிர ஆறு நம் சுதந்திரத்திற்கு விலை இல்லையா?

ஆம். இலங்கை மக்களாகிய நாம் முன்னர் கொடுக்காவிட்டாலும், சுதந்திரத்தின் விலையான இரத்தத்தை இன்று அளவுக்கதிகமாகவே கொடுத்து விட்டோம். அதன் பெறுமதியை உணர்ந்து கொண்ட நாம், வரும் காலத்திலாவது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி இலங்கையர் என்ற உணர்வோடு சுபீட்சமாக வாழுவோம் என்று பிரார்த்தித்தபடியே தன் வீட்டுக்கு முன்னால் உயர்ந்த கம்பத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார் அவர்.

வாழ்க தாய்த் திருநாடு என்று அவர் மனம் உணர்வு பொங்கக் கூறியது. தாய்த் திருநாடு வாழ சமாதானம் பிறக்கட்டும் என்று அவர் உள்ளம் பிராத்தித்தது.

சுதந்திர தினமலர் 93
.....................

பிரிவு

பெருந் தெருவிலிருந்து பிரிந்து வயல்வெளியினூடே செல்லும் மண்பாதையில் அந்தத் துவிசக்கரவண்டி சென்று கொண்டிருந்தது. பாரவண்டிச் சிற்களின் இரும்புவளைய அமுக்கத்தில் நொறுங்கி,சீமெந்துத் தூள் போல மெத்தென்றிருக்கும் மண்ணிலே, துவிச்சக்கர வண்டிச சில்லுகள் புதையக் கூடாதே என்ற சிரத்தையோ, வண்டித் தடங்களில் மத்தியில் ஓணான் முதுகாக மேடிட்டுக் கிடந்த கலட்டித் தரையில், குழியில் விழுந்தும் மேட்டில் மிதந்தும் அசமந்தமாகச் சென்று கொண்டிருந்தது அத்துவிசக்கரவண்டி!

அதில் சவாரி செய்பவர் கிழடு தட்டியவராக இருக்கலாம். ஆனால் துவிசக்கர வண்டியோ புத்தம் புதியது. கைப்பிடியிலே 'க­ர் க­ர்' சப்திக்கும் மணி, இரவிலே ஒளியை உமிழ்ந்து பாதையை விளக்கம் செய்வதற்கான லைற், பின்னால் பொருட்களை வைப்பதற்கான சுமை தாங்கி, அதன்கீழே பாதுகாப்பிற்கான பூட்டு, ஏன்? காற்றடிக்கும் குழாய்கூடச் செருகப்பட்டிருந்தது. புதுமை மெருகு குலையாத அவ்வண்டியின் 'சேறுதாங்கி'களில் சூரிய கிரணங்கள் பட்டு ஜொலிக்கையில் அதன் புதுமை மெருகு மேலும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

கலட்டியிலே இன்னமும் இரண்டு மைல்கள் ஓடவேண்டும். இந்த நேரத்தில் சென்றாற் பாடசாலையை அடைவதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலமாவது என்பதையிட்டு கனகசபை கவலைப்படவில்லை. சித்தம்போக்குச் சிவம்போக்காய் வண்டி குழியில் விழுந்து மேட்டில் மிதந்து சென்று கொண்டேயிருந்தது.

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் போற்றத் தக்கது இந்தத் துவிசக்கர வண்டிதான். மாடு தேவையில்லை. எரிபொருள் தேவையில்லை. எந்தப் புறச் சக்தியுமில்லாமல், மனிதனின் சொந்தச் சக்தியிலேயே, ஆனாற் சொந்தச் சக்திக்கும் மேலான வேகத்திற் செல்லக்கூடிய அற்புதமான வாகனந்தான் துவிசக்கரவண்டி, இரண்டு சக்கரங்களும் ஒன்றாக உருளும்போது, அவை தாங்கி நிற்கும் வாகனம் சரிந்து விடாமல் ஓடிக் கொண்டிருக்கும் என்பதை கண்டுபிடித்தவன் மேதையாகத்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் கனகசபை எண்ணிக் கொள்ளவில்லை. மாறாக அவரது மனது கடந்த கால நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

காலையில் அவர் வீட்டைவிட்டுப் புறப்படுகையில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் அவர் மகன் கேட்டான்.

"ஏன் அப்பா! இந்தச் சைக்கிளைத் தராவிட்டால் என்ன?"

"இது நம்மட இல்லியே. தரத்தான் வேண்டும்."

"எப்ப புதுச் சைக்கிள் வாங்குவீங்க?"

"பென்சன் எடுத்து வாங்கலாம்."

அவருடைய பதிலில் அவர் மகனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லைப் போலும். ஏன்? அவர் சொன்னதில் அவருக்கே நம்பிக்கையில்லை. இப்போதுள்ள விலைவாசியில் தானாவது புதுச் சைக்கிள் வாங்குவதாவது? காலையில் மகன் சொன்னது மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது.

"சைக்கிள் வாங்காட்டி மில்லுக்கு நெல்லுக் குத்தப் போக மாட்டான். கொச்சிக்காய் அரைக்கவும் போக மாட்டான்."

அவன் குறிப்பிட்ட இரண்டு வேலைகளையும் இனித்தாமே செய்யவேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டார் கனகசபை. துவிசக்கர வண்டி மட்டும் இருக்குமானால் அந்த வேலைகளை மட்டுமென்ன, சைக்கிள் சவாரி செல்லும் சுகிப்பில் எல்லா வேலைகளையும் அவனே செய்வான். சந்தைக்கு, லொண்டரிக்கு, பால்வாங்க-எல்லா வேலைகளையும் அவனே செய்வான்.

கனகசபை தான் சைக்கிள் ஓட்டப் பழகியதோடு தன் மகன் பழகியதை ஒப்பிட்டார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே, அப்போது அவர் எஸ்.எஸ்.சி, படித்துக்கொண்டிருந்தார். அப்போது நான் அவருக்கச் சைக்கிள் பாலபாடம் தொடங்கியது.

நிலாக்குடம் பாலைக் கொட்டிக் கொண்டிருந்த பங்குனி மாதத்து இரவு. அவரை வண்டியில் ஏற்றி, இருக்கையில் அமர்த்தி, கைப்பிடியைப் பிடிக்கச் செய்து பின்னால் அமர்த்தி, கைப்பிடியைப் பிடிக்கச் செய்து பின்னால் ஒருவரும், இரு பக்கங்களிலும் ஒவ்வொருவராக இன்னும் இருவரும் அவர் அமர்ந்திருந்த துவிச்சக்கர வண்டியை உருட்டி ஓட்டினார்கள். குண்டும் குழியுமாகக் கிடந்த கொட்டியாபுரத்து வீதிகளில் வேகமாக கதவைத் தள்ளிக்கொண்டு வந்தவர்கள் "கீழே பார்க்காதே. முன்னே பார்" என்ற எச்சரிக்கைகளோடு திடீரென கைவிட்ட போது அவர் ஏறி ஓடிக்கொண்டிருந்த வண்டி குழியில் விழுந்து....

முழங்கைகளிலும் கால்களிலும் இரத்தம் பொசியும் சிராய்ப்புக் காயங்கள்...

சுதாரித்துக் கொண்டு எழுந்தபோது நண்பர்கள் மீண்டும் அவரை வண்டியில் ஏற்றி உருட்டித் தள்ளி ஓட்டித் தனியே அவரை ஓடவிட்டு....

மூன்றாம் இரவுதான் அவரு ககத் துவிசக்கர வண்டியோட்டும் கலை கைவந்தது. அக்கலையைக் கற்றுத் தந்த ஆசான்களுக்கு மூன்றாம் நாள் அவர் வீட்டிலே விருந்து... பிட்டும் கோழிக்கறியும்...

ஆனால் எந்தக் குருநாதரும் தம் மகனுக்கு அக்கலையைக் கற்றுத் தரவில்லை. தான் வண்டியைக் கொண்டு வந்து வைத்ததும். அதை எடுத்துக்கொண்டு வீட்டுச் சுவரையோ வேலிக் கதியால்களையோ பிடித்துக்கொண்டு, தானாகவே அக்கலையைக் கற்றுக் கொண்டான். இப்போதெல்லாம் துவிசக்கர வண்டியில் ஏறிக்கொண்டு சிட்டாகப் பறக்கிறான்.

அந்தக் காலத்திலே நான்கூட அப்படித்தான். பாடசாலைக்கு மட்டுமல்ல; வடக்கே தம்பலகாமத்துக் கோணேசர் திருவிழாவா, ஏன் தொலைவிலுள் மட்டக்களப்பு மாமாங்கத்திற்குக் கூடச் சைக்கிளிற் சென்றிருக்கிறேன். எனது சொந்த வண்டி! ஆம் அந்த வருடம் கோடை வேளாண்மை வெட்டியதும், என் தந்தையார் எனக்கொரு புத்தம் புதிய சைக்கிள் வாங்கிக் தந்தார். றலி சைக்கிள், அது எனக்குச் சத்ரபதி சிவாஜியின் குதிரையைப்போல...

அந்த றலி சைக்கிளைத்தான் நான் எவ்வளவு கவனமாகப் பாதுகாத்தேன். அதன் கைப்பிடிப் பகுதியில் முகம்பார்க்கும் வட்டக் கண்ணாடி. கைப்பிடியின் மையத்தில் டைனமோ லைற்றுக்கு மேலாகப் பறக்கும் பாவனையில் அமைந்த கழுகு. கைப்பிடியின் இரு அந்தங்களிலும் க­ர் என்று ஒலிக்கும் மணிகள். சைக்கிளின் முன் சட்டமாக அமைந்த குழாயில் அழுக்குப் படியக் கூடாதே என்ற சிரத்தையோடு, ஜப்பானிய நீச்சலுடை அழகி, சில்லின் அச்சுகளிற் புழுதிபடியா வண்ணம் தானாகவே துடைத்துக் கொள்ளும் பட்டுக் குஞ்சம். இருக்கையை மூடி மெத்தென்றிருக்கும் முயற் தோலுறை...

இதோ இந்த வண்டியிலுங்கூட இந்தச் சாதனங்களெல்லாம் அமைந்துள்ளன. 'பாவம்! அவன் தனக்குக் கிடைக்கும் சில்லறைகளை எல்லாம் இந்த வண்டியைச் சிங்காரிப்பதற்கே செலவிடுகிறான்.' என்று எண்ணிக் கொண்டே கனகசபை எதிரே கிடந்த சாணிக்குவியலைத் தன் வண்டிச் சக்கரங்கள் தீண்டாதவாறு, ஒடித்துத் திருப்பி, கட்டைவண்டித் தடத்துப் பட்டு மண்ணிற்சிறிது ஓடவிட்டு, மீண்டும் மேட்டிலே ஏறிக் கொண்டபோது, பட்டுக்குஞ்சங்கள் சக்கரத்திலே ஒட்டிய புழுதிமண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தன.

* * *

நான் பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்ட போது, எனக்கு எங்கோ தொலைதூரத்தில் உத்தியோகம் கிடைத்தது. அதனால் அப்பா வாங்கித் தந்த வண்டியும் பயனற்றதாகிவிட்டது. அதை என் தம்பி எடுத்துக் கொண்டான்.

நீண்ட காலத்தின்பின் ஊருக்கு மாற்றலாகி வந்தபோதுகூட எனக்குச் சைக்கிள் வண்டி அத்தனை அவசியமானதாகத் தோற்றவில்லை.

ஆனால் நீண்ட காலத்துக்குப்பின் விழித்துக்கொண்ட அரபு நாடுகள், தம்பலத்தை உணர்ந்து கொண்ட யானைகளாக எண்ணெய் விலைகளை உயர்த்திய போதுதான், ஒவ்வொரு நாளும் போக்குவரத்திற்காக ஆறு ரூபாய் அழவேண்டியிருக்கிறதே என்று ஏங்கிச் சைக்கிள் வண்டியைப் பற்றிச் சிந்தித்தேன்.

ஆனாற் சம்பளத்தில் முழுதாக ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடிக்க முடியுமா? அந்தச் செப்படி வித்தையைச் செய்ய எந்தக் குருநாதரும் உபதேசிக்கவில்லையே.

கடன் சபைக்கு விண்ணப்பித்தேன். கந்தோருக்கு நான்கு தடவைகள் சென்று, கடன்சபைக் காரியதரிசியைப் பிடித்துச் செய்யவேண்டிய சடங்கையெல்லாம் செய்து முடித்துக் கடைசியாய்க் கையில் எழுநூற்றைம்பது ரூபய்க் காசோலை கிடைத்தபோது வருடம் மூன்று ஓடிவிட்டது!

ஆனால் எழுநூற்றைம்பது ரூபாய்க்குப் புதுச்சைக்கிள் வாங்க முடியுமா? ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மகன் அரியம் ஆயிரம் ரூபாய்க்குக் குறைய எந்தச் சைக்கிளுமே வாங்க முடியாது என்று அறுதியிட்டுச் சொன்னான்'

இந்த ஞானம் ஏன் கடன் சபையினருக்குத் தெரியவில்லை! மீதிக்காசைச் சேகரித்து ஒரு சைக்கிள் வாங்கிவிடவேண்டும் என்று துடித்தேன்.

ஆனால் அந்த எழுநூற்றைம்பது ரூபா சந்திக்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்புக்களை என் மனைவி அடுக்கினாள்.

இரண்டாந் தடவை எஸ்.எஸ்.சி. பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மூத்த மகனுக்கு நூறுரூபா அப்பிஸ’க் கேஷனுக்கு வேணும்!

வங்கியில் அடைமானமாக இருக்கும் மூத்த மகளின் வளையலை மீட்க ஐந்நூறு ரூபா வேண்டும்'

தனக்கு ஒரு நூல் சேலையாவது வாங்க வேண்டும்!

முடிவாகச் சைக்கிள் வாங்கும் எண்ணத்தையே கைவிட வேண்டியதாயிற்று.

இம்முடிவினாற் பாதிக்கப்பட்டவன் சின்ன மகன் அரியந்தான்! புதுச் சைக்கிள் சொந்தக்காரனாகி விடலாம் என்ற ஆசையில் மண் விழுந்ததை அவனாற் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நானும் நாளாந்தம் போக்குவரத்திற்கு ஆறு ரூபாய் அழ வேண்டியிருக்கிறதே என நொந்தேன். இதை நிவர்த்தி செய்ய என்னால் எடுக்கக் கூடிய லீவு முழுவதையும் எடுத்தேன். அதைத் தவிர வேறெந்த வழியும் எனக்குத் தெரியவில்லை.

காலம் ஓடிக்கொண்டேயிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 'யூனிசெப்' நிறுவனம் அவருடைய பாடசாலைக்கு ஒரு சைக்கிள் வண்டி தருவதாகக் கந்தோரிலிருந்து அவரு ககுக் கடிதம் வந்தது!

நான் மகிழ்வுடன் கந்தோருக்கச் சென்றேன். கந்தோரிலே கையெழுத்திட வேண்டிய பத்திரங்களிலெல்லாம் ஒப்பமிட்டுப் புத்தம் புதிய சைக்கிளைக் கையேற்றபோது சாயந்தரம் ஐந்து மணியாகி விட்டது!

காலையிலே பட்டிணத்திற்குப் புறப்பட்டு வந்தபோது பையிலே இருபது ரூபாய் இருந்தது. மதிய உணவு, தேநீர் என்ற அது கரைந்த பின்னர் பையிலே சில ரூபாய்கள்தான் பல்லிளித்தன. ஆனால் அதையிட்டுக் கவலைப்படவில்லை. மகனின் இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதியைப் போலச் சைக்கிளிலே ஆரோகணித்து இருபது மைல்களை அனாயாசமாகக் கடந்து வீட்டையடைந்தபோது இரவும் இன்னமும் இளமையாகவே இருந்தது!

அதிகாலையில் எழுந்தபோது, பஸ்ஸ’ற்கு ஆறு ரூபாய் வேண்டுமே என்ற நித்திய விசாரம் இல்லை. பஸ்ஸ’ற்குக் காத்திருக்க வேண்டியதில்லை. மெயின்றோட்டிலிருந்து பாடசாலை வரை ஒரு மைல் நடக்க வேண்டியதில்லை. மீண்டும் இரண்டே கால்மணி பஸ்சைப் பிடிக்கப் பாடசாலையிலிருந்து மெயின்றோட் வரையும் நடக்கத் தேவையில்லை.

ஆம்; எத்தனையோ பிரச்னைகளை அச் சைக்கிள் வண்டி தீர்த்து வைத்தது. அவரைப் பொறுத்த அளவில் அந்தச் சைக்கிள் குருடனுக்குக் கிடைத்த கோல்!

"இந்த மாதிரிச் சைக்கிள் ஊரிலே ஒருத்தரிட்டையும் இல்ல. 'ஏவண்' கொம்பனிதான் இந்த 'பியூக்'கையும் செய்திருக்கு. ரயர்கூட இந்தியன் ரயர். நம்மட 'லோட்டஸ்' மாதிரி இல்ல. நல்லாப் பாவிக்கும்." என்று வண்டியின் ரிஷ’ மூலத்தையே கண்டுபிடித்துச் சொன்னான் அரியம்.

சைக்கிள் சில வளையத்தோடு ஒட்டிக்கொண்டு தூசு துடைக்கும் பட்டுக் குஞ்சம், சில்லுகளின் அச்சிலே சுழலும் துடைப்பான் சரிகை, இருக்கையையும் கைப்பிடியையும் இணைக்கும் இரும்புக்குழாயிற் சுற்றப்பட்டிருக்கும் நைலோண் நார், ஆசனத்தில் மெத்தென்றிருக்கும் றப்பர்க் கவசம், எல்லாமே அவன் பூட்டிய அணிகலன்கள் தான்!

குழிகளில் இறங்கி, திட்டிகளில் ஏறி வண்டி ஓடிக் கொண்டு-இல்லை நடந்து கொண்டிருந்தது. சென்ற ஆண்டு நடந்த மகளின் திருமணத்தின் உறவினர்களோ, நண்பர்களோ செய்யாத வேலையை இந்தத் துவிசக்கர வண்டி செய்திருக்கிறது! அதன் கைப்பிடிகளைப் பற்றிக் கொண்டு அவர் ஓடிக் கொண்டிருந்தார்!

ஆம்; அந்தத் திருமணத்தின்போது அயற்கிராமங்களிலிருந்த உறவினர்களுக்கெல்லாம் திருமண ஓலைகொண்டு சென்றது. வாழைக்குலைகளையும், தாமரை இலைகளையும் சுமந்து வந்தது. மணவறைச் சோடனைப் பொருட்களைச் சுமந்து வந்தது. எல்லாக் கருமங்களையும் அது கர்ம யோகியாய்ச் செய்திருக்கிறது.

இன்னமும் சில நாழிகைகளில் அதனைப் பிரியப்போகிறோமே என்ற எண்ணம் ஆசிரியரின் கண்களிற் கண்­ரையே வரவைத்துவிட்டது.

பாடசாலையை அடைந்த ஆசிரியர் கலங்கிய கண்களைச் சால்வையாற் துடைத்துக் கொண்டார். சைக்கிளை உருட்டிக்கொண்டு தெருப்படலையைத் தாண்ட நடந்தார்.

அவரின் பிரதம உதவி ஆசிரியரான விஸ்வலிங்கம் நான்கு வகுப்புக்களோடு மாரடிப்பதில் தம்மையே மறந்தவராகக் கரும் பலகையில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

பாடசாலைக் கட்டிடத்திற்கு வெளியே சடைத்துநின்ற ஆத்தி மரத்தின் குளிர் நிழவிலே வெண்மணலில் வீற்றிருந்த சிறுவர்களுக்கு ஆசிரியை பாட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சிறந்த நல்ல சைக்கிள் வண்டி
சீமையிலே செய்த வண்டி

'ஆஹா! தமிழாசிரியரான கவிமணிக்கும் என்னைப் போல ஒரு அனுபவமா? என்றெண்ணிக் கொண்ட கனக சபை சைக்கிளை ஸ்ராண்டில் நிறுத்தியபோது விசுவலிங்கம் திரும்பிப் பார்த்தார்.

"பெரியையா வாறார்" என்ற மாணவர்களின் ஆர்ப்பரிப்புக்கிடையில், விசுவலிங்கம் சொன்னார்:

"நீங்கள் இன்றைக்கே வருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை."

"எப்படி வராமலிருப்பது? சைக்கிளைத் தர வேண்டாமா?"

"அதற்காகவா வந்தீர்கள்?"

"நேற்றே நான் இதைத் தந்திருக்க வேண்டும். ஆனால் பிரியாவிடை பைவங்கள் எல்லாம் முடிய நன்றாக இருட்டி விட்டது. அதன் பிறகு பஸ்ஸ”ம் இல்லை. அதனாற்தான் சைக்கிளைக் கொண்டு போனேன். இதற்கான உரிமை நேற்றோடு எனக்கில்லை. சரி மாஸ்ரர் இந்தாருங்கள் சைக்கிள் திறப்பு"

திறப்பை நீட்டிய ஆசிரியர் சால்வையாற் கண்களை ஒத்திக் கொள்கிறார்.

"ஏன் மாஸ்ரர் அவசரம். இருங்கள் தண்ணி குடிச்சிற்றுப் போகலாம்."

"இல்ல மாஸ்ரர். எனக்கு வேல கிடக்கு. இப்ப சந்திக்கு நடந்தாற்தான் பத்து மணி பஸ்ஸைப் பிடிக்கலாம்."

விசுவலிங்கம் திறப்பை வாங்கிக் கொள்கிறார். கைக்கோலை இழந்துவிட்ட குருடன் போல, ஓய்வு பெற்ற ஆசிரியர் பாடசாலை வளவைத் தாண்டித் தெருவிலிறங்கிப் பிரதான வீதியை நோக்கி நடக்கையில் அவர் கண்கள் பனித்திருந்தன.

தினகரன் 1982
.................

பெண்

ஆனந்தனுக்கும் திலகத்துக்கும் கல்யாணமாகி இரண்டு மாதங்கள்கூட ஆகியிருக்காது, ஆதர்ச தம்பதிகளென்று சொல்லுவார்களே அந்தச் சொற்றொடருக்குப் பொருளாகவும் விளக்கம்போலவும் அவர்கள் வாழ்ந்தார்கள். 'கல்யாணமானதும் காதல் கருகி விடுகிறது' என்று குறும்புத்தனமாகவோ அல்லது அர்த்தத்தோடோ எழுதும் இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் சிலர் வெட்கப்படும்படியாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது. அக்கம் பக்கத்துப் பெண்கள்'அவள் என்ன சொக்குப் பொடி போட்டாளோ?' என்றுகூட குசுகுசுத்தனர். இதனை அவர்கள் அறிந்தார்களோ என்னவோ அவர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள்.

அன்று... மத்தியானச் சாப்பாடாகிவிட்டது.

உண்ட மயக்கத்தில் ஆநந்தன் தன் கட்டிலிலிருந்த தலையணையில் முதுகைச் சாய்த்துக்கொண்டு கிடக்கிறான். கையிலே நித்திரையை வருவிப்பதற்காகவோ அல்லது தடுப்பதற்காகவோ ஒரு புத்தகம்.

திலகம் சமையலறை ஒழுங்குகளைச் செய்துவிட்டு வருகிறாள். அறைக்குள்ளே கிடந்த அடுத்த கட்டிலில் அவளும் படுத்திருக்கலாம். ஆனால் அவள் அதை விரும்பவில்லை.

அவன் நித்திரையாகி விடுவான் என்ற பயமோ என்னவோ அவள் கதிரையை எடுத்துப் போட்டுக் கொண்டு அவன் முன்னால் உட்காருகிறாள். ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக அவள் கையில் ஒரு மெருமிதம் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அவள் தைத்துக் கொண்டிருக்கிறாள். இடையிடையே என்னென்னவோ கேட்டு வாசிப்பைத் தடுத்து, நித்திரையைக் கலைத்து...

நித்திரை மயக்கில் அவன் பேச்சுக் கொடுக்கத் தவறும் போது அப்பாடா அவள் படும்பாடு! காலம் ஊர்ந்து கொண்டேயிருக்கிறது. திலகம் தைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனந்தன் படித்துக் கொண்டிருக்கிறான்.

அப்போதுதான் கனகம் அறைக்குள்ளே வருகிறாள். அன்றைக்குத்தான் அவள் பட்டினத்திலிருந்து வந்திருக்கிறாள்.

கனகம், ஆனந்தனுக்கு மாமி மகள். ஒரு காலத்தில் அவள் தனக்கு மனைவியாகலாம் என்று ஆனந்தன் எண்ணியதுண்டு. கனகமும் எதிர்பார்த்ததுண்டு. ஆனால் இப்போது ஏதோ காரணத்தினால் கனகம் பிறந்த கிராமத்தைவிட்டுப் போய்ப் பட்டினத்திற் படிக்கலானாள். 'நாணம், மடம், அச்சம் நாய்கட்கு வேண்டும்' என்று பாரதியாரின் கனவுப் பெண் சொன்னாளல்லவா? அந்தப் புதுமைப் பெண்ணின் பிரத்தியட்ச ரூபமாய் இருப்பாள் கனகம். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக வாயையும் உதடுகளையும் சதவக்கிரமமாக்கிக் கொண்டு 'அத்தான்' என்றழைக்கும்போது ஆநந்தனுக்கு அவள் தன்னை இன்னோர் முறை அப்படிக் கூப்பிட மாட்டாளா என்றிருக்கும். கனகத்துக்கும் ஆநந்தன் மேல் ஒரு பாசம்! கனகம் அறைக்குள்ளே வருகிறாள். ஒருக்கணித்துச் சாத்தப்பட்டிருந்த கதவால் நுழையும்போது எதிரேயிருந்த திலகந்தான் அவன் கண்களிற் படக்கூடியதாயிருக்கிறது.

அத்தான் வீடு என்ற உரிமையோடு தடபுடலாக நுழைந்த கனகம் கட்டில் விளிம்பில் இருந்துகொண்டு திலகத்துடன் பேச்சுக் கொடுக்கிறாள். ஆனந்தன் படுத்திருப்பது அவளுக்குத் தெரியாது. சத்தங்கேட்ட ஆனந்தன் கையிற் பிடித்திருந்த புத்தகத்தை மார்பிற் கவிழ்த்து வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறான்.

ஒழுங்காக வாரிவிடப்பட்டுத் தலையில் ஒட்டி நெளிந்தோடும் கேசமும், பின்னல் முடிந்தவிடத்தில் வண்ணாத்திப் பூச்சியைப்போலத் தொத்திக் கொண்டிருந்த நீலநிற 'றிபனும்' அதற்குக்கீழ் விரிந்து பறந்து கொண்டிருந்த நீண்ட கூந்தலும், பேச்சுக்குரலும், அவள் கனகந்தான் என்பதை அவனுக்கு அறிவுறுத்துகின்றன.

ஒருகாலத்தில் அவளோடு பண்ணிய குறும்புத் தனத்தின் மெல்லிய நினைவுகள், அவள் படபடத்த வாயைக் கிளப்பி வேடிக்கை பார்க்கவேண்டுமென்ற ஆசையை அவன் மனதில் மூட்டுகின்றன. அவள் கூந்தலைக் கிள்ளிப்பிடித்து வெடுக்கென்று இழுக்கிறான் ஆனந்தன்.

கனகம் தடாரெண்டு திரும்பிப் பார்க்கிறாள். ஆனந்தனும் பார்த்துச் சிரிக்கிறான். கனகமும் ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டுச் சிரிக்கிறாள். இருவருக்கமிடையில் குறும்புத்தனமான சம்வாதம் நீண்டுகொண்டே போகின்றது. சிரிப்பும் கும்மாளமும் அறைச் சுவர்களில் மோதி எதிரொலிக்கின்றன.

எதிரே கதிரையிலிருந்து திலகம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள். இத்தனை நேரமாக அவன் தன்மீது கொண்டிருந்த அலட்சியம், அதனால் ஏற்பட்ட நிராசை, தன் முன்னிலையிலேயே அன் கனகத்தோடு கொஞ்சுந் தாராளம், அதனால் ஏற்பட்ட பொறாமை எல்லாம் அவள் இதயத்தை முறுக்கிப் பிழிகின்றன. அவனை வெற்றிகொண்ட வெறி ஓடியிருந்த அவள் கண்களில் ஏமாற்றத்தின் அவநம்பிக்கையும், தோல்வியின் நமைச்சலும் கண்­ரைப் பொழிய வைக்கின்றன.

திலகம் எழுந்து வெளியே நடக்கிறாள். அறைக்குள்ளே சிரிப்பினொலி கேட்டுக் கொண்டேயிருக்கின்றது!

நிமிஷங்கள் கரைகின்றன. எதையோ உணர்ந்து கொண்டவன் போல ஆனந்தனும் எழுந்து வெளியே போகின்றான்.

வீட்டுத் தாழ்வாரத்திற் திலகம் சேலைத் தலைப்பை முறுக்கிகொண்டு நிற்கிறாள். அவள் கன்னத்தில் கண்ணாடியில் விழுந்த மழைத்தாரையைப் போலக் கண்­ர் கோடிழுத்துக் கொண்டு ஓடுகிறது.

ஆனந்தன் அவளை நெருங்குகிறான். "ஏன் அழுகிறாய்?"

"............."

ஆனந்தன் விஷயத்தை விளங்கிக்கொண்டு "பைத்தியம் இதற்காகவா அழுகிறாய்?" என்கிறான்.

திலகம் பேசவேயில்லை. அவள் மௌனம் ஆனந்தனின் மனஇரைச்சலுக்குப் பகைப்புலமாக நிற்கிறது.

ஆனந்தன் பெருமூச்சு விட்டுக் கொண்டே மறுபடியும் அறைக்குள் போவதற்காகத் திரும்புகிறான். திலகம் தடாரென்று பாய்ந்து அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மிப் பொரும அழுகிறாள்.

ஆம், பரந்தை வீட்டுக்குப் போக விரும்பிய தொழுநோய் பிடித்த கணவனைத் தன் தலையாலேயே சுமந்து சென்றவனைக் கற்புக்கரசியென்று கையேந்தும் இந்த நாட்டில் அவள் அழாமல் வேறு என்ன செய்வாள்?

ஏனென்றால் அவள் பெண்!

ஈழகேசரி 1952
..................

பிறந்த மண்

மணித்தியாலக் கணக்காக "பிரிட்டிஷாரின் கீழ் இலங்கை" என்ற சரித்திர நூலில் மூழ்கிக் கிடந்த வேதநாயகம் தலையை நிமிர்த்திச் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் ஐந்து மணிக்கு மேலாகியிருந்தது. நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இங்கே இருந்திருக்கிறேன் என்று எண்ணிக் கொண்ட ஆசிரியர் மெதுவாக எழுந்து ஓசை படாமல் அந்த வாசிக சாலையை விட்டு வெளியேறினார்.

இப்போதெல்லாம் அந்த வாசிகசாலை ஒன்றுதான் அவருக்குப் புகலிடமாக இருக்கின்றது. வீட்டை இழந்து, தான் தேனீயைப் போல ஒவ்வொன்றாகச் சேர்த்த தன் புத்தகங்களை இழந்து, இந்த உலகிற்குத் தான் விட்டுச் செல்லும் ஒரே சொத்தென எண்ணிக் கொண்டு எழுதிக்குவித்த தன் எழுத்துக்களை இழந்து, அனாதையாய் "பட்டினப் பிரவேசம்" செய்த அவருக்கு இந்த வாசிக சாலை ஒரு சரணாலயம். அந்த வாசிகசாலையின் நூல்களுக்குள் மூழ்கிக் கிடப்பது ஒரு ஆத்ம திருப்தி.

அலுத்துக் கொண்டு அக்கட்டிடத்தைவிட்டு வெளியேறியவரின் முகத்தில் கடற் காற்றுப் பட்டபோது சற்றுத் தெம்பாயிருந்தது. வாசிகசாலை முன்றலிலுள்ள பூந்தோட்டத்தைக் கடந்து தெருவை நெருங்கியபோது பென்னம் பெரிய வாகனம் ஒன்று கோட்டைப் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தது. அவ்வாகனம் தன்னைக் கடந்து செல்லும் வரை, சற்றுத் தரித்து நின்ற பின்னர் வீதியைக் கடந்து புற் தரையில் இறங்கி கடற்கரையை நோக்கி நடந்தார். புற் தரையைக் கடந்து கடலரிப்பைத் தடுத்து நிறுத்தக் கட்டிய "சீனப் யெருஞ் சுவரை"யும் தாண்டியவர். வெண் மணலிற் கால்களை நீட்டி உட்கார்ந்து, இரு கைகளையும் பின்னால் ஊன்றிக் கொண்டு சாய்ந்தார்.

அவர் கண்ணெதிரே கண் வைத்த தொலைவுக்குக் கருநீலக் கடல் பரந்து கிடந்தது. செத்துச் செத்து வீசும் வாடைக் காற்றில் மெதுவாகச் சயனிக்கும் அக்கடற்பரப்பில் மேற்கு வானச் சரிவில் தோன்றிய செம்மஞ்சள் பிரதிபலித்துத் தக தகத்தது. அவர் இருந்த இடத்துக்குக் கிழக்காக இராசாமலை வரை வளைந்து கிடந்த குடாவின் வெண் மணற் பரப்பிற் திருகோணமலை நகரம் முழுமையுமே திரண்டு வந்துவிட்டதோ என்றெண்ணும் படியாகச் சனத்திரள். சிறுவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், குமரிகள், பெரியவர்கள்....

கடற் காற்றை ரசித்துச் சுகங்காணும் மனிதப் பிறவிகள்!

"சும்மா கிடக்கின்ற திறம் பெற்றிராத" ஆசிரியரின் மனது, எதிரே வாடைக்காற்றிற் சலனமடையும் கடலைப்போலச் சலனமடையத் தொடங்கிற்று.

"நாட்டின் பல்வேறு இடங்களில், வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் எத்தனையோ இடங்களிற் கொலை, மரணம், குழப்பம் என்ற செய்திகளை வானொலி இன்று கூடச் சொன்னது. பத்திரிகைகளிலும் அதே செய்திகள். ஆனால் இங்கே இந்தக் திருகோணமலைப் பட்டினத்தில் மட்டும் அமைதி!

கடற்காற்றை ரசிக்க வரும் மக்கள் கூட்டம்!

வேதநாயகம் ஆசிரியர் கண்களில், டொக்யாட் வீதிக்கு அப்பால் சமூக சேவை நிலையம் என்ற பேரைத்தரித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் மாடிக் கட்டிடம் தென்படுகின்றது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கட்டிடம் இருக்கவில்லை. மாறாக மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு ஒன்று இருந்தது, அந்த வீட்டிலே பிரம்மச்சாரிகளான ஆசிரியர்களோடு தானும்...

மத்தியான வெய்யில் மனிதரை வறுத்துக்கொட்டி, மாலை இறுக்கம் புழுங்கிக் கொண்டிருக்கும் பங்குனி, சித்திரை மாதங்களில் இரவுகளில் இந்தக் கடற்கரை மணலிலேதான் அவரும் அவர் நண்பர்களும் பள்ளி கொண்டு விடிகாலைப் பனிக் குளுமை உடலைத் தீண்டுகையிற்தான் மீண்டும் அறைக்குச் செல்வார்கள். ஆனால் இன்றைக்கு அப்படிச் செய்ய முடியுமா? ஏழு மணிக்கு முன்னரே, (தற்போது றம்ஸான் நோம்புக்காகத் தளர்த்தப்பட்டதால்) ஒன்பது மணிக்கு முன்னரே சென்றுவிட வேண்டும். இந்த நிலையை, அமைதி, பூரண அமைதி என்று சொல்லிவிட முடியுமா?

ஆனாலும் இந்தப் பட்டினத்திலே பயமின்றிக் கடற்கரையில் கூடும் அளவுக்காவது அமைதி நிலவுகிறதே!

மணியை ஆட்டிக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்காரன் இந்த மனிதரிடம் செல்லாக்காசு கூட இருக்காது என்று எண்ணினானோ என்னவோ, அலட்சியமாக அவரைக் கடந்து சென்றான். இன்று அமைதியாக இருக்கும் இந்த நகரம் என்றும் அமைதியாகவா இருந்தது? என்று எண்ணினார் ஆசிரியர்!

மாணவனாக இருந்த காலம். இந்தக் கடற்கரையிலிருந்து படுவான்கரைப் பக்கம் நோக்கினால் சின்னக்கடைச் சந்தி வரை வெறிச்சென்று நீண்டு கிடந்த முற்றவெளி. நகரசபைக் கட்டிடமோ, மெக்கெய்ஸர் விளையாட்டுத் திடலோ தோன்றவில்லை. ஒரே பொட்டல் வெளி!

அந்தப் பொட்டல் வெளியில் எங்கெங்கோ இருந்தெல்லாம் படை வீரர்கள் வந்து குழுமினர். ஆங்கிலேயர், அமெரிக்கர், ஆபிரிக்கர், அவுஸ்திரேலியர், இந்தியர், கனடியர்....

இரண்டாவது உலக மகா யுத்தம்!

சிங்கப்பூர், யப்பானியரிடம் வீழ்ச்சியடைந்து விட்டது. யப்பானியர் கிழக்கின் உதயம் என்று அர்த்தப்படும் 'ஷோனான்" என்று அந்நகரத்திற்குப் போரிட்டு ஆசியா முழுவதையுமே தம் அடிப்படுத்த எண்ணிக் கொண்டிருந்த காலம்....

திருகோணமலைக்குச் சர்வதேச முக்கியத்துவம் வந்துவிட்டது; நேர தேசப் படைகள் எல்லாமே இங்கு குழுமிக் கொண்டன. ஆகாய விமானங்கள் உறுமின. "ஹொவிட்ஸர்" பீரங்கிகள் முழங்கின. போர்க் கப்பல்கள் துறைமுகத்தை நிறைத்தன. தெருவெல்லாம் படை வீரர்கள்! அவர்களது வாகனங்கள்!

ஆனாலும் அவைகள் பொது மக்களுக்கு மரண பயத்தைக் கொடுக்கவில்லை!

ஆனால் அந்த நாள் அவருக்கச் சற்று நடுக்கத்தைக் கொடுத்தபடியே ஞாபகத்திற்கு வந்தது. அன்றும் இதேபோல் ஏப்ரல் மாதம். ஆனால் ஒன்பதாம் நாள். 42ஆம் ஆண்டு.

அன்று அதிகாலை மூன்று மணிக்கே அபாயச் சங்கு ஊளையிட்டது. யமனைக் கண்டு நாய்கள் ஊளையிடும் எனச் சொல்வார்களோ, அதே மாதிரி நாய் ஊளைதான் பயங்கரமான ஊளைச் சப்தம்'

ஆனால் ஏதோ ஒத்திகை வழமைபோல நடக்கிறது என்றுதான் மக்கள் எண்ணிக் கொண்டார்கள். ஆகவே வெள்ளுடை அணிந்த ஏ.ஆர். பிக்காரர்கள் சொன்னதை மக்கள் சட்டை செய்யவில்லை. ஆனால் சில நிமிட நேரங்களில் அபாயம் நீங்கி விட்டதை அறிவிப்பதற்கான சங்கு ஒரே சீராய் நீளமாக ஒலித்தது.

மக்கள் மீண்டும் தம் கடமைகளில் ஈடுபட்டார்கள்.

ஆனால் அபாயச் சங்கு மீண்டும் ஏழு மணியளவில் ஊளையிட்டது! ஆமாம். இரண்டாவது உலக மகாயுத்தம் இலங்கையின் தலைவாசலுக்கே வந்து விட்டது. யப்பானிய விமானங்கள் இராணுவ இலக்குகளை எதிர்பார்த்துக் குண்டுகளை வீசின. தரையிலிருந்த பீரங்கிகளும் கப்பலிலிருந்த பீரங்கிகளும் அவைகளைக் குறிபார்த்துச் சுட்டன. போர் விமானங்கள் அவைகளைத் துரத்தின.

பெரிய மாதா கோயிலின் முற்றத்தில் அமைந்திருந்த பதுங்கு குழியில் வாயிற் கம்பைக் கடித்துக் கொண்டிருந்த அவருக்குக் கர்ண கடூரமான முழக்கங்கள்தான் கேட்டன. சங்கு மீண்டும் நீளமாய், ஒரே சீராய் ஒலித்து, அபாயம் நீங்கிவிட்டதென அறிவித்த பின்னர், பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்து பார்த்தால் துறைமுகத்தில் நின்ற பல கப்பல்கள் எரிந்து கொண்டிருந்தன. சீனன்வாடி எண்ணெய்க் குதங்கள் தீயை உமிழ்ந்து கொண்டிருந்தன. டொக்யாட்டிலிருந்த கட்டிடங்கள் பல புகைந்து கொண்டிருந்தன!

நகரில் ஒரே பரபரப்பு! அல்லோல கல்லோலம்! ஊர் முழுதும் வலசை வாங்கி எங்கே போகிறோம் என்ற இலக்கின்றி எங்கேயோ போய்க் கொண்டிருந்தது.

** இ.தொ. kaviya15.mtf**


** kaviya14.mtf ன் தொடர்ச்சி**

புதுமைப் பித்தனின் "பரபரப்பு" என்ற கதையில் வரும் வரிகளை ஆசிரியர் நினைத்துக் கொண்டார்.

(மதராஸ்) சனங்கள் பார்த்தசாரதியை நம்பினார்கள். பக்கத்து வட்டாரக் கடவுளர்களை நம்பினார்கள். இறுதியிற் தங்கள் கால்களையே நம்பத் தொடங்கி விட்டார்கள்!

ஆமாம். எந்த வாகனத்தையுமே எதிர்பாராமல் மக்கள் கால் நடையாகவே நடந்து செல்லத் தொடங்கினார்கள். சீனன்வாடி எண்ணெய்க் குதங்கள் குண்டுத் தாக்கதலால் எரிமலையாகிக் தீக் கங்குகளைக் கக்கிக் கொண்டிருக்கையில் தானும் கண்டி வீதி மார்க்கமாகத் தம்பலகாமம் போய், அங்கிருந்து ஊருக்கு மீண்டதை எண்ணிக் கொண்டார்.

ஆயினும் ஒரு சில மாதங்களில் வலசை வாங்கிச் சென்ற எல்லாருமே மீண்டும் திருகோணமலைக்கு வந்து விட்டார்கள். இந்தச் சர்வதேச நகரத்தின் யுத்த காலச் செல்வச் செழிப்பு ஓடிச் சென்ற மக்களைக் கொக்கி போட்டிழுத்தது! படை வீரர்களின் "கன்ரீனில்" ஐம்பது சதம் கொடுத்து பாதிச் செங்கல் அளவினதான "சொக்கிளேற" வாங்கித்தின்ற போதிருந்த சுவையை ஆசிரியர் அனுபவித்தார்.

"கடலை கச்சாங்கொட்டை"

நடை வியாபாரி சப்தமிட்டபடி அவரைக் கடந்து சென்றான்.

தேச நாடுகள் யுத்தத்தில் வெற்றி பெற்றன. நாடும் சுதந்திரம் பெற்றது. சோல்பரி அரசியற் திட்டத்தை ஆதரித்த பாரம்பரிய தலைவர்களை அரசியலிலிருந்து விரட்டியடித்த "தமிழுணர்வு" திருகோணமலையிலும் வெற்றியீட்டியது.

அந்த உணர்வு, தொடர்ந்து இன்னும் இரண்டு பாராளுமன்ற வெற்றிகளைக் கண்ட பின்னர், தனிச் சிங்கள மசோதா!

அந்தச் சட்டத்தின் பின்னர் இன்று அமைதியாகக் காணப்படும் இந்நகரம் ஒரே போர்க்களந்தான். நாடு பெற்ற சுதந்திரத்தில் எமக்குப் பங்கில்லை என்ற எண்ணம் மனதை வேதனை செய்ய, ஒவ்வொரு சுதந்திர ஞாபகார்த்த தினமும் இந்நகரம் ஒரு குருஷேத்திரம்!

சிங்கக் கொடி!

கறுப்புக் கொடி!

அவர்கள் அதைக் கட்ட, இவர்கள் இதைக் கட்ட, இருவரும் ஒவ்வொருவரது கொடியை அறுக்க...

குருஷேத்திரந்தான்!

ஆமாம், நாடளாவிய இனக் கலவரம் ஐம்பத்தெட்டாம் ஆண்டில் நடைபெற முன்னரேயே திருகோணமலை போர்க்களமாகிவிட்டது!

அடிக்கடி குண்டுச் சப்தம் கேட்கும். தொடர்ந்து துப்பாக்கி வேட்டுச் சப்தம் காதில் விழும். தனது ஆசிரியர் விடுதியிலிருந்து பார்த்தால் காளிகோவிற் தீர்த்தக் கடற்கரை தொடக்கம் திருக்கடலூர் வரையுள்ள கடற்கரையில், கொழுந்துவிட்டு எரியும், "வீரகாவியம்" படைத்துவிட்டதாக அரசியல்வாதிகளின் கெக்கலிக்குப் பின்னால், தங்கள் வள்ளங்களையும் வலைகளையும் தீக்குத் தீனியாக்கி விட்ட கடல் மறவர்களின் சோக்க் கதைகள்....

வேதநாயகம் ஆசிரியரின் கண்கள் பனித்தன. சிறுவர்கள் சிலர் மணலிற் குதித்து ஓடுகையில் தெறித்த மணற் குறுணிகன் அவர் கண்ணிற் பட்டதாலா? அல்லது அந்தக் கடல் மறவரின் சோகக் கதைகளாலா! துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்ட ஆசிரியர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

தமிழினம் தன் பழம்பதியிலே போர்ப் பிரகடனஞ் செய்த அந்த நாள் அவருக்கு நினைவுக்கு வந்தது!

எம் உரிமைகளை வென்றே தீருவோம் என்ற வைராக்கியத்தோடு தெற்கே திருக்கோயிலிலிருந்தும் வடக்கே பருத்தித் துறையிலிருந்தும், மேற்கே மன்னாரிலிருந்தும் தமிழ்க் குலம் முதுழுமே

"திருமலைக்குச் செல்லுவோம்
சிறுமை யடிமை வெல்லுவோம்"

என்ற இளமுருகனாரின் பாடலைப் பாடிக்கொண்டே பாத யாத்திரையாக வந்து திருகோணமலையில் குழுமியது. தம்மைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த காளி மாதாவின் முன்னால் "உரிமைகள் ஓராண்டுக்குள் வழங்கப்படாவிட்டாற் போராட்டம்" என்று முழங்கியது. அம் முழக்கத்தைப் "பெரிய நாயகி"யும் மௌனித்து ஆமோதித்தாள்!

அம்முழக்கம் கேட்டு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று தொடக்கம் இந்நகரம் போர்க்களந்தான். கடந்த சில மாதங்களாகத்தான் அமைதியாக இருக்கிறது.

இந்த அமைதிதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என் ஊரான மூதூரிலும் இருந்தது. எல்லாத் தரப்பினராலும் தாக்கப்பட்ட திருகோணமலை மக்கள் மூதூர் மார்க்கமாகத்தான் மட்டக்களப்பிற்கு தப்பியோடினார்கள். அந்த அளவுக்கு மூதூர் அமைதியாகத்தான் இருந்தது; ஐம்பத்தெட்டாம் ஆண்டைத் தொடர்ந்து இந்நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் ஏற்பட்ட எந்தக் கலவரமும் மூதூரின் அமைதியைக் குலைக்கவில்லை.

அடிக்கடி தான் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் வார்த்தைகள் ஆசிரியர் மனதில் ரீங்கரித்தன.

என் அறுபதாண்டு கால வாழ்வின் என்னூர் மக்கள், அவர் தமிழரோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் கொலைக் குற்றத்திற் சிக்குண்டு சுப்ரீம் கோட்டுக்குப் போனதையே நான் காணவுமில்லை; கேட்கவுமில்லை.

சற்றுச் சுதாரித்துக் கொண்டபோது அவர் மனம் "பொறுத்தருளுங் கர்த்தாவே உமது சனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும்" என்று மௌனமாகப் பிரார்த்தித்துக் கொண்டது.

வானம் நன்றாக இருண்டு கொண்டது. மேற்கு வானச் சரிவில் இளம்பிறைத்துண்டு கருமேகங்களிடையே தொங்கிக் கொண்டு தன் ஊமை ஒளியைப் பாய்ச்சி இருளைக் கடிய முயற்சித்துக் கொண்டிருந்தது. தெருவிளக்குகள் ஏற்றப்பட்டுக் கண் சிமிட்டின. பெரிய மாதா கோவிலிலிருந்து திருந்தாதி மணி ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து ஒலி பெருக்கியிற் திரிகாலச் செபம் ஒலித்தது.

"பரலோகத்திற்கு இராக்கினியே மனங்களிகூடும்"

"அல்லே லூயா"

அந்த மணி ஓசை மீண்டும் அவரைத்தான் பிறந்த மூதூருக்கே அழைத்துச் சென்றது.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னே, கொங்கணப் பிராமணரான யோசப் வாஸ் அடிகளார் தம் ஊரு ககு விஜயம் செய்தபோதும், ஏன் அதற்கு முன்னரும் கூட அந்தோனியார் கோயில் மணி அடித்து, அதன் சநாதம் ஊரை நிறைந்திருக்கும். ஆனால் காலங் காலமாகக் கேட்ட அந்த மணிஓசை இப்போது கேட்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னே அந்த மணி விரிசல் கண்டு உடைந்து விட்டது.

அதனை ஒரு துர்ச் சகுனம் என்றே ஊரவர்கள் கருதினார்கள். அந்த மணியோசை நின்றுபோன பின்னர்தான் ஊரில் அத்தனை அனர்த்தமும், அந்த மணி ஓசை கேட்கும் சற்று வட்டாரத்தில் அதற்கு முன்னர் எந்த அசம்பாவிதமுமே நடக்கவில்லை.

ஆனால் அயற் கிராமங்களிலே கடந்த மூன்ற ஆண்டுகளாக ஒரே அமர்க்களம். தமிழ்க் கிராமங்கள் ஒவ்வொன்றாக அழிந்தபோது. தென் பகுதிக் கிராமங்களிலிருந்த மக்கள் மட்டக்களப்பை நோக்கிக் குடிபெயர்ந்தார்கள். பெரும்பான்மையினரான மக்கள் மூதாரை நோக்கித்தான் ஓடி வந்தார்கள்.

மூதூரிலும் தோப்பூரிலும் இருந்த முஸ்லிம் மக்கள் அகதிகளாக ஓடிவந்த தமிழ்ச் சகோதரர்களை அன்போடு தான் வரவேற்றார்கள்!

தான் அகதியாகத் திருகோணமலைக்கு வந்த நினைவு ஆசிரியர் மனதில் இடை வெட்டிற்று.

உபகாரச் சம்பளத்தை மட்டும் நம்பி திருகோண மலைக்கு வந்தபோது, குடியிருக்க ஒரு குச்சிலைக் கண்டு பிடிப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. ஐயாயிரம், பத்தாயிரம் என்று முற்பணம் கேட்டார்கள்.

அத்தகைய முஸ்லிம் மக்களை எதிரிகளாக்கிக் கொண்டது யார்?

ஆசிரியரின் மனது மீண்டும் அரசியலுக்குத் தாவியது.

கடற்கரையில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. வானம் இருண்டு மழை வரும்போல இருந்தது.

ஆமாம். அசாதாரணமான விஷயங்கள்தான் நடைபெறுகின்றன. இந்த வருடம் சித்திரை மாதம் மார்கழி மாசம்போல இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் மழை. இன்றும் மழை வரலாம்.

ஆசிரியர் எழுந்து நடக்கின்றார்.
எதிரே வந்தவர் கேட்கிறார்.
"மாஸ்ரர் சுகமா?
நிமிர்ந்து பார்க்கிறார்.
முஸ்தபா மாஸ்ரர்!

இருவர் கண்களும் சந்திக்கின்றன! இருவருக்கும் அழ வேண்டும் போலிருக்கின்றது. சிரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இருவரும் ஆளை ஆள் கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இருவர் கண்களும் பணிக்கின்றன. ஆறு மாதங்களின் பின்னால் ஏற்பட்ட சந்திப்பு!

"எங்கே மாஸ்ரர் இந்தப் பக்கம்?"
"பாங்கிற்குச் சம்பளம் மாற்றவென்று வந்தனான்?"
"இப்போது எங்கே...?
"கிண்ணியாவில் தான்."
"ஊருக்குப் போகவில்லையா?"
"நீங்கள் போகவில்லையாஈ?"
"போகத்தான் வேண்டும். எத்தனை நாட்கள்தான் இங்கேயிருப்பது"

"நானும் போகத்தான் விரும்புகிறேன்! ஆனால் தமிழ் மக்கள் எல்லாரும் அகதி முகாமை விட்டு வீடுகளக்குச் சென்றால் நாங்களும் எல்லாரும் போகலாம் என்றிருக்கிறோம். எத்தனை நாளுக்கத்தான் நாங்களும் அல்லாடிக் கொண்டு திரிவது, அது சரி, உங்கள் வீடு"

"வீடு இருந்த இடம் இருக்கிறது! நிலத்தையும் நீரையும் கொண்டுபோக முடியாதல்லவா?"

"ஆமாம் மாஸ்ரர். அந்த மண் இருக்கும்பரை நமக்குள் பாசமும் நிலைக்கும். மாதம் முடிந்து பாடசாலை தொடங்கும்போது மூதூருக்குப் போகத்தான் நாங்கள் பலபேர் தீர்மானித்திருக்கிறோம்"

"அப்படியா? எனக்கும் அலுத்து விட்டது. நானும் எவ்வளவு விரைவில் போக முடியுமோ அத்தனை விரைவாக ஊருக்கப் போகத்தான் விரும்புகிறேன்."

இருவர் கருத்தையும் ஆமோதிப்பதுபோல பெரிய கடைப் பள்ளி வாசலிலிருந்து தொழுகைக்கான அழைப்பொலி கேட்கின்றது.

வீரகேசரி 1988
...................

ஈட்டிக்காரன்

அவன் குருடன். பிறவிக் குருடனல்ல, குருடானவன். மக்கள் எவருமே அவனைச் சீண்டுவதில்லை. நகர வீதிகளிற் கையில் ஈட்டியோடு அவன் தன்னிஷ்டம்போல அலைந்தான். மக்கள் எல்லாரும் பயங்கலந்த அனுதாபத்தோடு அவனுக்கு வழிவிட்டு விலகி நடந்தனர்.

அவனும் எவரையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவன் வாய் மட்டும் "மாசற்ற செம்மறியை வதைத்துக் கொன்றவர்களுக்க நானும் துணை நின்றேன். என் கண்கள் குருடானது அதற்கேற்ற தண்டனை தான்" என்று சதா முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும்!

இருக்காதா பின்னே! அந்தக் கொடூரமான வெள்ளிக் கிழமை மதியந் திரும்பிய பின்னர், வானத்திற் பிரபையோடு எறித்துக் கொண்டிருந்த கதிரவன், தன் கிரணங்களை மடக்கிக் கொண்டுவிடத் திடீரென எங்கும் இருள் கவிந்தது. கோயிற் தினாச்சீலை இரண்டாகக் கழிந்தது. பூமி அதிர்ந்தது. கல்லறைகள் திடீரெனத் திறந்து கொண்டன.

இந்த உற்பாதங்கள் உல்லாம் குற்றமேதுமே அற்ற அந்தப் போதகரை இராஜத்துரோகி எனக் குற்றஞ்சாட்டி அனியாயமாகக் கொன்றுவிட்டோம் என்ற குற்ற உணர்வை நகர மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த இரத்தப் பழி தங்களுக்கு என்னென்ன கெடுதிகளைத் கொண்டு வருமே என்று ஜெருசலேம் மக்கள் எல்லோருமே பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தனர்.

ஆனாற் தங்கள் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளவும் அவர்களுக்கப் பயம். ரோமச் சக்கரவர்த்தியின் அரசாங்கம் தங்களையும் அந்த இராஜத்துரோகிக்கு உடந்தை என்று தண்டிக்கலாம் அல்லவா?

பயத்தினால் அந்தப் போதகரின் சீடர்களும் அவருடைய தாயாரும் பூட்டப்பட்ட கதவுகளின் பின்னால் நான்கு சுவர்களுக்கிடையே அஞ்ஞாத வாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த ஈட்டிக்காரன் மட்டும் எவருக்குமே பயப்படவில்லை. சக்கரவர்த்திக்கோ அவரின் பிரதிநிதியான ஆளுநர்க்கோ, அவருக்கும் கீழான அதிகாரிகளுக்கோ அவன் பயப்படவில்லை! இராஜத்துரோகியாக, சமூகத் துரோகியாக, புரட்சிக்காரனாகக் குற்றஞ்சாட்டி அதிகாரிகளிடமும் ஆளுநரிடமும் சிலுவையிலறைந்து கொல்ல வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக் கொண்ட ஆசாரியர்களுக்குக்கூட, எவருக்குமே அவன் பயப்படவில்லை. "எந்தக் குற்றமுமே அற்றவரான அந்தப் போதகரை வதைத்துக் கொன்றவர்களுக்க நானும் உடந்தையாயிருந்தேன். குருவே! என்னை மன்னியுங்கள்" என்று மனம் உருகிப் புலம்பியபடியே அவன் ஜெருசலேம் நகர வீதிகளிற் தன் ஈட்டியுடன் திரிந்தான்.

கிறீஸ்து நாதரை இராஜத்துரோகி என்று குற்றஞ் சாட்டிய குருக்களம் ஆசாரியர்களும் அவனைக் கண்டு பயந்தார்கள். கிறீஸ்துவின் இரத்தப்பழி என்மேலில்லை எனக் கைகழுவிக் கொண்ட பிலாத்துகூட, அந்த ஈட்டிக்காரனுக்கு ஏதுமே செய்ய வேண்டாம் என்று தன் கீழுத்தியோகத்தர்களிடமும் வீரர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆம்! எல்லாருமே அந்த ஈட்டிக்காரனைக் கண்டு பயந்தார்கள். ஆனால் அந்த ஈட்டிக்காரனோ, "குற்றமற்றவரைக் காட்டிக் கொடுத்து விட்டேன் என் கண்கள் குருடாகிவிட்ட தண்டனை அதற்க நியாயமானதுதான்" என்று புலம்பிக்கொண்டே நகர வீதிகளில் அலைந்து கொண்டிருந்தான்.

* * *

அந்த ஈட்டிக்காரனுக்கு இருபத்திரண்டு வயதுதான். இளம் வயதிலேயே துருதுர என்றிருந்தான். தன் தந்தையாரோடு சேர்ந்து கோதுமை வயலிலே உழுதான். விதைத்தான் அறுவடை செய்தான். அவன் பெயர் லோஞ்சினூஸ்.

அவன் தன்தை வயல் விதைப்புக்காக பால்பஸ் என்பானிடம் ஓர் தடவை கடன் வாங்கினார்.

தந்தையும் தானும் வயலிலே எத்தனை பிரயாசைப்பட்டாலும் அந்த வருடம் வயல் நன்கு விளையவில்லை. அதனாற் கடனைத் தீர்க்க முடியவில்லை.

தந்தை பால்பஸ்ஸ’டம் மீண்டும் கடன் வாங்கினார். பால்பஸ் கொஞ்சங் கொஞ்சமாகப் பணம் கொடுத்து அதற்கு வட்டிமேல் வட்டி போட்டு ஐந்து ஆண்டுகளிற் தந்தையின் நிலத்தையே பறித்துக் கொண்டுவிட்டான். நிலத்தைப் பறிகொடுத்த லொஞ்சினூசின் தந்தை அந்த ஏக்கத்தாலே மரணத்தைத் தழுவிக் கொண்டார். லொஞ்சினூஸ் நிராதரவானான்!

நிராதரவாகி விட்ட லொஞ்சினூஸ் செபப் கூட்டங்களிலும் கோயில்களிலும் பிரார்த்தனை பண்ணும் குருக்களை வெறுத்தால் ஆசாரியர்களை வெறுத்தான். தான் பிறந்த யூத சமூகத்தையே வெறுத்தான். அவன் மனம் பேதலித்துக் கடினமாகிவிட்டது. இஸ்ராயேலரின் நாட்டிலே அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்த ரோமப் போர்வீரர்களின் கைக்வலியாக மாறினான். அவர்களுக்கு உளவு சொல்வது, ரோமானியப் பேரரசுக்கு எதிராகப் பேசுபவர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது ஆகியவைகளே அவன் தொழிலாகிவிட்டது.

இந்நிலையிற்தான் நசரேத்து ஊரானாகிய இயேசுரோச் சக்கராதிபதியத்திற்கு எதிராகப் பேசுகிறான் என்ற செய்தி உரோம அதிகாரிகளின் காதில் விழுந்தது. குருக்களும் ஆசாரியர்களும் அவ்வாறு குற்றஞ்சாட்டி அவரைப் பிடித்து விசாரிக்கும்படி அதிகாரிகளைத் தூண்டினார்கள். லொஞ்சினூஸ் ரோமானியப் போர் வீரர்களை அழைத்துக் கொண்டு அவரைப் பிடிக்கச் சென்றான்.

யேசுவைப் பிடித்தவர்கள் அவரைக் கைபா என்ற அதிகாரியிடம் கொண்டு சென்றார்கள். பின்னர் பிலாத்து என்ற மேலதிகாரியிடம் கொண்டு சென்றார்கள்.

பிலாத்துவினால் இயேசுவிற் குற்றங் கண்டுபிடிக்க முடியவில்லை அவரை விடுவிக்க விரும்பினான்.

ஆனாற் பிரதான ஆசாரியரும் குருக்களும் மக்களும் இயேசுவைச் சிலுவையிற் அறைந்து கொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பிலாத்து, " இந்த இரத்தப் பழி என் மேல வராதிருக்கட்டும்" என்று தன் கைகளைக் கழுவி, அவர்கள் விரும்பியபடியே இயேசுவைச் சிலுவை மரணத்திற்கத் தீர்ப்பிட்டான்.

யூதர்கள் இயேசுவைக் கற்றூணிற் கட்டி கசையால் அடித்தார்கள். அவருக்க முள் முடி சூட்டிப் பரிகசித்தார்கள். கடைசியாய்க் கழுமரமான சிலுவையைச் சுமக்கச் செய்து அச்சிலுவையிலே அவரை அறைந்து கொன்றார்கள்.

இந்தச் சித்திர வதைகள் யாவற்றிலுமே லொஞ்சினூஸ் பங்கேற்றான். தனது தந்தையார் வஞ்சிக்கப்பட்டதால் அவன் மனசில் ஏற்பட்ட குரோதம் அவனை மிருகமாக்கியிருந்தது. சமுதாயத்தைத் திருத்துபவர்கள் எனச் சொல்லப்படுகிறவர்களையும், போதிப்பவர்களையும் அவன் அறவே வெறுத்தான். சமுதாயம் முழுமையிலுமே ஏற்பட்ட குரோதம் இயேசுவைச் சித்திரவதை செய்ததிற் திருப்தி கண்டது.

ஆனால் இயேசு, சிலுவையில் மரணித்தபோது ஏற்பட்ட உற்பாதங்களினால் லொஞ்சினூஸ் அதிர்ச்சியடைந்தான். ஆயினும் குரோதமும், வன்மமும் இன்னம் அவனை விட்டுப் போகவில்லை.

வெள்ளிக்கிழமை பிற்பகல் கடந்து நாழிகைகள் ஆகிவிட்டன. ஓய்வு நாள் சமீபத்து விட்டதால் யூதர்கள் சிலுவையிற் பிணத்தை வைத்திருக்க விரும்பவில்லை. ஆனால் இயேசு உண்மையாகவே மரணித்து விட்டாரா என்பதைப் பரிசோதிக்க விரும்பினர். உற்பாதங்களினால் அதிர்ச்சியடைந்திருந்த லொஞ்சினூஸ் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அந்தப் பரிசோதனையை நடத்த முன்வந்தான். அவன் எழுந்து நின்று, சிலுவையில் மரணித்துத் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவின் விலாவில் ஈட்டியாற் குத்தினான்.

அவன் அண்ணாந்து ஈட்டியாற் குத்தியபோது, குத்திய காயத்திலிருந்து வழிந்த தண்­ர் கலந்த இரத்தத்துளி அவன் கண்களிற் பட்டது. அந்தக் கணமே அவன் கண்கள் குருடாகின.

ஆனால் லொஞ்சினூஸ’ன் மனக்கன் திறந்துவிட்டது. 'குற்றமற்றவரைக் கொன்றுவிட்டேன்' என்ற உணர்வு பொறி தட்டியதும், அவன் 'கொல்கொத்தா' மலையிலிருந்து இறங்கி யெருசலேம் நகர வீதிகளிற் புலம்பிக்கொண்டே ஓடினான். சில நாட்களாக 'மாசற்ற செம்மறியைக் கொன்றுவிட்டேன்' என்று புலம்பிக் கொண்டே தன் ஈட்டியோடு நகர வீதிகளில் அலைகிறான்.

* * *

ஊரெல்லாம் அதிசயமாகப் பேசிற்று. இயேசு இறந்ததும் எங்கேயோ சென்று ஒளித்திருந்த அவரின் சீடர்கள் திடீரென வெளிவந்து தங்கள் குருநாதரின் போதனைகளைப் போதிக்கிறார்களாம் ரோமப் பேரரசுக்கோ, அல்லது பிரதான குருக்களுக்கோ, ஆசாரியர்களுக்கோ எவருக்குமே பயப்படாமற் போதிக்கிறார்களாம்.

லொஞ்சினூஸ’ன் காதுகளிலும் இச் செய்திகள் விழுந்தன.

"குற்றமற்றவரைக் கொன்றுவிட்டேன்" என்று மனம் புழுங்கிப் புலம்பிக் கொண்டிருந்த லொஞ்சினூஸ் அச்செய்தியைக் கேட்டதும் ஓட்ட ஓட்டமாகச் செபக் கூடத்தை நோக்கி ஓடினான்.

அங்கே இயேசுவின் பிரதம சீடரான சீமோன் என்கிற பேதுரு பேசிக் கொண்டிருந்தார்.

லொஞ்சினூஸ் தன் ஈட்டியுடன் சனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறுகிறான். சனக்கூட்டம் அவனுக்கு வழிவிட்டுக் கொடுக்கிறது.

முன்னேறிய லொஞ்சினூஸ் பிரசங்கித்துக் கொண்டிருந்த பேதுருவின் கால்களில் விழுந்து, "குருவே; குற்றமற்ற உங்கள் குருநாதரைக் காட்டிக் கொடுத்து, அவரைச் சித்திரவரை செய்து, சிலுவையிலறைந்து கொன்ற இந்தப் பாவியை மன்னியுங்கள் குருவே" என்று ஓலமிட்டு அழுதான்.

பேதுரு தன் பிரசங்கத்தை இடைநிறுத்தி தன் காலடியில் விழுந்து கிடந்த லொஞ்சினூசினின் தலையிற் தன் வலக்கையை வைத்து "எழுந்திரு. பரமபிதாவின் குமாரரான கிறீஸ்துவின் பேரால் நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்" என்றார்.

லொஞ்சினூஸ் எழுந்து நின்றான். எழுந்து நின்றபோது அவன் குருடனல்ல.

[ஆதாரம்: சென்னை மறை மாவட்டக் குரு முதல்வர் அருட்திரு ஆ.ஜோ. அடைக்கலம் அடிகளார் எழுதிய பலஸ்தீனப் பயணங்கள் என்ற நூல்]

வீரகேசரி 1992
.....................

பெண்ணியம்

வடபழனியில் இலக்கிய நண்பரைச் சந்தித்து உரையாடிய பின்னர் வீட்டிற்குப் புறப்பட்டேன். நண்பர், "நேராக பஸ் டிப்போ சென்று 128 பஸ்ஸ’ல் ஏறி 'லிபேட்டி'க்கு ரிக்கற் எடுத்து இறங்கும். பக்கத்திலேதான் உம் அச்சகம்" என்று என்னை ஆற்றுப்படுத்தி விட்டார் நண்பர்!

அவர் வழிகாட்டியபடி நான் வடபழனி பஸ் டிப்போவிற்கு வந்து அங்கு நின்ற 12பி பஸ்ஸ’ல் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

எல்லா இருக்கைகளுமே நிறைந்து விட்டன. சாரதியும் இல்லை நடத்துனரும் வரவில்லை. பஸ் நகர்வதாகக் காணோம். ஆனாலும் நாங்கள் எல்லோரும் பஸ்ஸ’லேயே இருந்தோம், அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு.

நேரம் கடந்து கொண்டிருந்தது. கால்மணித் தியாலங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நடத்துனரும் வரவில்லை. சாரதியும் வரவில்லை. ஆயினும் நாங்கள் அமர்ந்தேயிருந்தோம்.

நேரம் ஒடிக் கொண்டேயிருந்தது!

திடீரென பஸ்ஸ’ல் இருந்தவர்கள் இறங்கி ஓடுகிறார்கள். 'ஊரோடினால் ஒத்தோடு' என்ற நானும் இறங்கி அவர்களின் பின்னால் ஓடினேன். ஓடியவர்கள் எல்லாரும் வேறோர் பஸ்ஸ’ல் ஏறினார்கள். நானும் ஏறினேன் ஆனால் இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன. ஆனாலும் சாரதியின் இருக்கைக்குப் பின்னால் இருந்த ஆசனத்தன் எதிராக இருந்த ஆசனம் மட்டும் காலியாக இருந்தது. பெண்கள் இருக்கையாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டு அவ்வாசனத்தின் பக்கம் எல்லா இடங்களிலும் நோட்டம் விட்டேன். எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை. நான் அவ்விருக்€யில் அமர்ந்து கொண்டேன். என் பக்கலில் ஒரு பையனும் அமர்ந்து கொண்டான்.

பஸ் நின்று கொண்டே யுள்ளது.

ஓரிரு நிமிடங்களின் பின்னால் இரு பெண்கள் ஏறுகிறார்கள். தாயும் மகளுமாக இருக்கலாம். பெண்ணிற்குப் பதினெட்டு வயது இருக்கலாம். தாய்க்கு நாற்பது மதித்தேன்.

ஏறிய அந்தப் பெண் சற்று விறைப்பாக "எந்திரிங்க சார். இது லேடீஸ் சீட். போய் ஜென்ஸ் சீடடில் உட்காருங்க சார்" என்றாள். கோபத்திலும் அவள் அழகாகவே இருந்தாள்!

"லேடீஸ் சீற் என்று எங்கும் எழுதியிருக்கவில்லையே" என்றேன் நானும் விறைப்பாக.

"எழுதாட்டி என்ன சார். இது லேடீஸ் சீட்தான். ஏந்திரிங்க." அப்பெண் என் கையைப் பிடித்து இழுத்து எறிவாள் போல இருந்தது. ஆனாலும் நான் கல்லாக உட்கார்ந்திருந்தேன்.

"என்ன சார் சொல்லச் சொல்ல உக்காந்துட்டேயிருக்கீங்க. ஏந்திரிங்க சார்" என்றாள் மிக்க றாங்கியோடு.

"லேடீஸ் சீற் என்று எழுதப்பட்டிருக்கவில்லை. நானும் எழும்ப மாட்டன்" என்றேன் நான் அவளைவிட றாங்கியோடு.

"அப்படியா எந்திரிக்க மாட்டியா? நான் கண்டக்கரிட்ட கேக்கிறேன். எழும்புவியா இல்லை எண்ணூபாப்பம்."

"யாரிட்ட எண்டான கேள். நான் எழும்ப மாட்டன்" என்றேன்.

அந்தக் குமரி என்னை முறைத்துப் பார்த்தாள். கோபத்திலும் அவள் அழகாக-மிக்க அழகாகவே இருந்தாள். அவள் மீண்டும் மிகக் கோபத்துடன் "எந்திரிங்க சார்" என்றாள்.

என் இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருத்தி, "ஏண்டி அந்தப் பெரியவர எழுப்புறே. லேடீஸ் சீற் என்று எழுதல்ல எங்கிறார் அவர். நீ குமரி நின்னுகிட்டு வருவியா" என்றாள்.

அந்தக் குமரி என்னை விட்டுவிட்டு அந்த முதியவளிடம் வாய் கொடுத்தாள். "நீ எந்திரிச்சு அவாளுக்குச் சீட் கொடு. நா ஏன் நின்னுகிட்டு வரனும்?"

அம்முதியவளும் விடவில்லை. " நீ ஏந்திரிக்காத சார்" என்று எனக்கு அபயந் தந்துவீட்டு அந்தக் குமரியோடு போர் தொடுத்தாள். வாய்போர்தான்.

கிழவிக்கும் குமரிக்குமிடையே துவந்த யுத்தம் 'மசிர்' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் சூடாக வெளிவந்தன. மதறாஸ் தமிழின் செம்பாகம் எனக்கு அர்த்தமாகவில்லை. ஆனாலும் அவர்களிருவரதும் சண்டையை ரசித்துக் கொண்டு மேலே பார்த்தேன். என் இருக்கைக்கு மேலே 'முதியவர்களுக்கு அங்கவீனர்களுக்கம் 'என்று எழுதப்பட்டிருந்தது!

ஆத்திரத்தோடு பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கும் மகளிடம் தாப் ஏதோ சொன்னாள். அது நிச்சயமாகத் தமிழ் மொழியல்ல. கன்னடமாக இருக்க வேண்டும்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு நான் அந்தப் பெண்ணிடம் மேலே எழுதியிருப்பதைக் கையாற் காட்டினேன். அவளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ என்னவோ!

"அங்கென்னய்யா காட்றா. காண்டக்டர் வரட்டும். நா பாத்துக்கிறன்" என்று முறைத்தாள்.

"என்னடி பாத்துக்குவே" என்று மீண்டும் ஆரம்பித்தாள் அந்த மூதாட்டி.

மீண்டும் அவரிகளிருவருக்குமிடையில் வாய்ப்போர்!

மகாபாரதக் கதையில் வரும் 'யயாதி' மன்னனுக்குப் போல எனக்கும் யாராவது தம் இளமையைத் தத்தம் பண்ணினால் நானும் எழுந்திருந்த அப்பெண்ணிற்கு இடங்கொடுத்து, அவள் முறுவலைச் சன்மானித்து, அவளருகிலே நின்று உரசற் சுகத்தை இரசித்திருப்பேன். அத்தனை அழகி அந்தப் பெண். ஆனால் நான் அந்த எண்ணத்தை விட்டுவிட்டு, ஒரு குமரியும் முதியவளும் தங்கள் தங்கள் பாட்டில் 'பெண்ணியம்' நடத்திக் கொண்டிருப்பதை இரசித்துக் கொண்டிருந்தேன்.

திடீரெனச் சாரதி வந்து இருக்கையில் அமர்ந்தார். நடத்துனர் விசிலடித்தார். பஸ் நகர்ந்தது. பெண்ணுக்கும் முதியவளுக்கமிடையிற் போர் நடந்து கொண்டேயிருந்தது.

நடத்துனரிடம் நான் 'லிபேட்டி'க்கு ரிக்கற் வாங்கிக் கொண்டேன். அப்பெண் நடத்துனரிடம் இரண்டு ரிக்கற்றுகள் பெற்றுக் கொண்டாள். நடத்துனரிடம் ஏதுமே முறையிடவில்லை. அவளுக்கு தமிழ் வாசிக்கத் தெரியும் போலும்!

'லிபேட்டி' தரிப்பிடத்தில் நான் இறங்குகையில், "இருந்துக்க பொண்ணு" என அவளை சீண்டினேன்'

"எனக்கு இருக்கத் தெரியும். நான் வலசு குறைஞ்சவளுமில்ல. வயோதிபனும் இல்ல. நீ உம் பாட்டில போய்யா" என்றாள் கோபமாக.

நான் சிரித்துக் கொண்டே பஸ்ஸை விட்டிறங்கி ஆர்க்காட் வீதியில் மசூதியை நோக்கி நடந்தேன்.

...........

ஓர் ஆலமரத்தின் கதை


தலைக்கு மேலே ஹெலிகள் உறுமுது. ஆகாசத்திலிருந்து வெடிகள் பறக்குது. காம்பிலிருந்து ஷெல்கள் வருகுது. கடலில கண்போட்டிலிருந்து பீரங்கிச் சத்தம் கேக்குது. என்னமோ ஏதோ என்று பயமாயிருக்கு.

மூணு கெழமையா றோட்டில சென்றி நின்ற பொடியன்கள் பின்வாங்கிப் போறாங்க. கடலாட வந்திறங்கின ஆமி, இங்க ஆமிக்காம்பில உள்ளவனோட சேர்ந்திற்றாங்களாம. இருட்டுற வேளையில சத்தம் ஒண்ணையும் காணம். அமைதி!

விடிஞ்சு பாத்தா ஊர ஆமி கைப்பத்திற்று. எல்லாத் தெருவிலயும் அவங்க போறதக் காணுறன்.

ஆமிக்காரன் ஊரக் 'கிளீயர்' பண்ணத் தொடங்கீற்றான். கிளீயர் பண்ற தெண்டாத் துப்புரவாக்கிறது.

எங்கட வீட்டுச் சுவரிலயும் நிலயிலயும் சிங்களத்தில் 'முஸ்லீம் வீடு' என்று அவசர அவசரமாக எழுதிறம்.

ஆமிக்காரன் எல்லாத் தமிழர் வீட்டையும் ஓடச்சித் துறந்து, ஆளில்லாத வீட்டில இருக்கிற சாமான் எல்லாத்தையும் எடுக்கிறான். கதவு யன்னலக்கூடக் கழட்டுறான். ரேடியோ, ரீவி, டெக் எல்லாத்தையும் எடுக்கிறான். மற்றதையெல்லாம் அள்ளிக் குமிச்சி நெருப்பு வைக்கிறான். நெருப்பு எல்லாத்தையும் கிளீயர் பண்ணுது.

போர் தொடங்கின அன்று நான் ஆலமரத்தடியில் குந்திக் கொண்டிருக்கன். வேதநாயக வாத்தியார் தன் புத்தகங்கள் சிலதையும் பேரப் பயலையும் தூக்கிக்கொண்டு இந்த வழியால போறார். எல்லாத் தமிழ்ச் சனங்களும் சூட்கேசையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக் கொண்டு ஊரைவிட்டு ஓடுதுகள். குஞ்சுகுறுமான் கூட ஓடுது. பாத்தாப் பாவமா இருக்கு.

போய்க் கொண்டிருந்த வாத்தியார் என்னிட்டச் சொன்னார். 'எழுபது வருஷம் வாழ்ந்திட்டன். இனிச்சாகிறதப் பத்திக் கவலப்படல்ல. ஆனா என் பேரப்பிள்ளைகளைக் காப்பாத்த வேணும். அதுகள்ர அம்மாவும் மட்டக்களப்பு றெயினிங் கொலிச்சில. என்னட்ட உள்ள சொத்து என் பேரப்பிள்ளைகளும் என்ர புத்தகங்களுந்தான். உன்னால முடிஞ்சா என்ர புத்தகங்களைக் காப்பாற்று."

அவருக்குப் புத்தகப் பைத்தியம். மாதா மாதம் சம்பளம் எடுத்ததும் ஏதாவது புத்தகம் வாங்காட்டா அவருக்குச் சாப்பாடு உடலில ஒட்டாது. ஐம்பது ஆண்டாச் சேத்த புத்தகங்கள் அவரிட்ட இருக்கு. தமிழ், ஆங்கிலம் எல்லாப் புத்தகத்தையும் ஒழுங்காக அடுக்கிவைப்பார்.

ஏழைக் கமக்காரன் தன் துண்டு நிலத்தைக் காப்பாத்துவது போலத் தன்ர நாட்டைக் காத்தானாம் தசரதன் என்று கம்பன்ர பாட்டில படிச்சிருக்கன். வேதநாயக வாத்தியாரும் தன் புத்தகங்களை அப்படித்தான் காப்பாற்றினார். எந்த நேரம் போனாலும் அவர் தன் புத்தக அறையில சாய்மனைக் கதிரையில இருந்து கொண்டு வாசிச்சிக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு விஷயத்தக் கேக்கப் போனால், அது இன்ன புத்தகத்தில் இத்தனையாம் பக்கத்தில இருக்க என்று சொல்லி எடுத்துத் தருவார். பேசக்குள்ள சொல்வார். "நான் வாத்தியாராப் போன புதிசில நூத்தைம்பது ரூபாதான் சம்பளம். அதில பத்துப் பதினைஞ்சு ரூபாய்க்கு அஞ்சு ஆறு நல்ல புத்தகம் வாங்குவன். இப்ப மூவாயிரத்துக்கு மேலே பென்சன். ஆனா முப்பது ரூபாய்க்குப் புத்தகம் வாங்கேலா. அவ்வளவு செலவு.

அவர் என்னிடம் புத்தகங்களைக் காப்பாற்றும்படி சொன்ன அடுத்தநாள் நான் அவர் வீட்டுப் பக்கம் போனேன். தெருவில பொடியன்கள் சென்றி நிற்கிறாங்க. அறுபத்தினாலுக்கும் பச்சனூருக்கும் போன சனம், ஒவ்வொருவராக வந்து தங்கள் வீடுகளிலே எடுக்கக்கூடியதை எடுக்குதுகள்.

ஆனா வேதநாயகத்தார்ர வீட்டுக்க நான் எப்படிப் போறது? தமிழன் வீட்டுக்க, சோனவன் பூந்து களவெடுக்கிறான் என்று சனம் கூச்சல் போட்டால் வீண் கரச்சல். நான் மனமடிவோட திரும்பி வாறன். அவர்ர புத்தகங்களப் பற்றி எனக்கும் கவலதான்.

இப்ப அவர்ர புத்தகங்கள் ஒன்றும்இல்ல. களவெடுத்தவனும் கொள்ளையடிச்சவனும் அத எடுத்திருக்க மாட்டான். நாய்க்கு ஏன் தோல்த் தேங்காய்? நெருப்புத்தான் வெச்சிருப்பான்கள். யாழ்ப்பாண வாசிக சாலைக்கு நெருப்பு வெச்சவங்கதானே. நெருப்பு எல்லாத்தையும் கிளீயர் பண்ணியிருக்கும்!

கலவரத்துக்குள்ள நானும் ஆலிம் சேனையிலிருந்து ஊருக்கு வந்திற்றன். பச்சனூருக்கும் அறுபத்தினாலக்கும் ஓடிப்போன சனத்தை ஆமிக்காரன் பிடிச்சு வந்து, இப்ப எல்லாச் சனமும் ரெண்டு வேதக் கோயிலிலயும் அகதியா இருக்கு. நான்கூட என்ர தம்பீர வீட்டில் அகதிதான். வீட்டுக்க இருக்கேலா. செய்றதுக்கு வேலயும் இல்லே. வெளிக்கிட்டுக் குளத்தடித் தெருவால வந்து ஆலமரத்தடிக்கு வாறன்.

ஆலமரத்தடியில நின்று பாத்தா வடக்குப் பக்கமாத் தமிழர் தெரு. வீடெல்லாம் ஓடஞ்சி கெடக்கு சுவர் மட்டும் சில இடத்திலே இருக்கு. புள்ளயார் கோயிலும் ஓடஞ்சுதான் கெடக்கு.

மேற்குப் பக்கமா இருந்த முஸ்லீம் கடைகளும் ஓடஞ்சிதான் கெடக்கு. ஆனா இது சண்டைக்க ஒடயல்ல. இந்திய ஆமிக்காரன் வர முதல் ஒருநாள் ராத்திரி குண்டுச் சத்தமும் துவக்கு வெடியும் கேக்குது. ஆமிக்காரன்தான் சுடுறான் என்றெண்ணிக் கொண்டு சாமத்தோடு சாமமா நீக்கிலா வாத்தியார் எங்க தம்பி வீட்ட பாதுகாப்புக்கு வந்திருக்கிறார். சத்தமெல்லாம் அடங்கினப் பொறகு பாத்தா முஸ்லீம் கடையெல்லாம் எரியுது. புவிதான் பத்த வச்சிருக்கு. புலி போனப் பொறகு விடியச்சாமத்தில பொறகும் சத்தம் கேக்குது. முஸ்லீம்கள் தமிழ் வீடுகளுக்கு நெருப்பு வைக்கிறாங்க, ஆனால் அடைக்கலம் தேடி வந்த நீக்கிலா வாத்தியார் தம்பி வீட்டிலதான் இருக்கார். நல்ல விடிஞ்சதும் தம்பி அவரைப் பத்திரமாகக் கூட்டிக் கொண்டுபோய் வேதக் கோயிலடியில விட்டிற்று வந்தான். நீக்கிலா வாத்தியார் இப்பவும் சொல்வார். "இந்த ஊரில இன்னமும் மனுசத் தன்மை சாகல்ல."

குளத்தடித் தெரு தொடங்கிற எடத்திலயும் வீடெல்லாம் ஒடஞ்சுதான் கெடக்கு. ஆனாச் சந்தியில நிக்கிற ஆலமரம் மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு.

இந்த ஆலமரம் பெரிய மரமில்ல. தன்படுவனாக்கொட்ட விழுந்து முளைச்சாப் பெரிசாயிருக்குமோ என்னவோ!

முப்பது நாப்பது வருசத்துக்கு முன்னே P.W.D. ஓவசியர் இந்த ஆலங்கன்றை எங்கிருந்தோ பிடுங்கிக் கொண்டு வந்து இங்க நாட்டினாராம். தண்ணி ஊத்தி வளத்தாராம். பிறகு ஆலங்கன்றைச் சுற்றிச் சுவர் எழுப்பினாராம். டிப்பர்ல மண் கொண்டு வந்துதான். விழுதும் விட்டுத்தான் இருக்கு. ஆனா ஒரு விழுதும் தரையைத் தொடல்ல. தொட மனுசன் விட்டாத் தானே!

ஆலமர நிழலில நாற்படையும் தங்கும்படியாக இருக்கும் என்று இரண்டாம் வகுப்பில ஒரு பாட்டுப் படிச்சிருக்கன். ஆனா இந்த ஆலமரம் ஜப்பான்காரன் தொட்டியில வச்சி வளக்கிற 'போன்சாய்' மரமாட்டந்தான் இன்னம் இருக்கு.

கலவரத்துக்கு முன்ன ஆலமரத்துச் சுவர்க் கட்டில தமிழன் சோனவன் எல்லாரும் நெருக்கிக் கொண்டு இருப்பம். மரத்துக்கு விலாவில குளத்தடித் தெருப்பக்கமா மூணுகார் நிற்கும். அவசரமா ஆஸ்பத்திரிக்கோ வேறெங்கோ போறவங்க இங்கதான் கார் தேடி வருவாங்க. ஆலமரத்தடியிலதான் கடைத் தெருவும். மேற்குப் பக்கம் புடைவைக் கடைகள், நகைக் கடைகள், மணிக்கடைகள். தெற்குப் பக்கமாப் பலசரக்குக் கடைகள், வடக்குப் பக்கமா ராசய்யா அண்ணன்ர சோத்துக் கடை.

அந்தக் காலத்திலே சோத்துக்கடையில சோறு தின்ன யார் போவான்? கடைத்தெருவுக்க வாற நாட்டுச் சனங்கள் சிலர் கடையில சாப்பிடுவாங்க. கடையில உழுந்து வடையும் தோசையும் எப்பவும் இருக்கும். நாங்க உழுந்து வடை தின்னக் கடைக்குப் போவம். ராசய்யா அண்ணன் கேலியாகச் சொல்வார். 'உழுந்தோட நண்டுக்கால் சதையும் பிசைந்துதான் வட சுட்டிருக்கன். அதுதான் ருசியாயிருக்க தின்ரா பொடியா. நண்டு 'ஹறாம்' இல்ல. 'மக்கூறு' தான்!

ராசய்யா அண்ணனுக்குப் பிறக அந்த இடத்தில யாழ்ப்பாணி கடை நடத்துறான். காரதீவான்!

ஒருநாள் வேதநாயக வாத்தியாரக் கூட்டிக் கொண்டு கொழும்புக்குப் போனன். சிராவஸ்தி போய் எம்பியைக் கையோட கொண்டுபோய்க் கல்விக்கந்தோர் வேலய முடிச்சன் வேதநாயக வாத்தியார் இல்லாட்டி எம்பியைக் கிளப்பேலா. அவர் எம்பியோட நல்ல வாரப்பாடு.

மலே வீதியிலிருந்து பஸ் ஏறி அஞ்சுலாம்புச் சந்திக்க வந்தபோது ஓருமணிக்கு மேலாச்சு. கதிரேசன் வீதிவழியா வாறம் வீதியின் இரண்டு பக்கமும் சோத்துக்கடை, வேதநாயக வாத்தியார் ஒரு கடைவாசலில் என்னை நிக்கச் சொல்லிற்று உள்ளே போறார். சத்து நேரத்தில சால்வையால உதட்டையும் வாயையும் துடைச்சிக் கொண்டுவந்தார். "சாப்பிடப் பழைய சோனகத் தெருவுக்குப் போக வேணும்" என்கிறார்.

எனக்குப் பசி வயதைக் கிள்ளுது. "ஏன் இங்கயே சாப்பிடுவமே" என்கிறன்.

"வேணாம். இங்க எல்லாக் கடையிலயும் நண்டு கறியும் இருக்கும். உனக்குப் பக்கத்தில சாப்பிடுறவன் நண்டுக் காலக் கடிப்பான் உனக்கு அது அருவருப்பாயிருக்கும்" என்று நடந்தார்.

நடக்கும்போது சொன்னர்: "இந்தத் தெருவில கடவைச்சிருக்கவன் எல்லாரும் தீவான்கள். எல்லாச்சோத்துக் கடையிலயும் பின்னால சாராயமும் இருக்கு."

ஆனாச் சம்பூர்ல பிறந்த ராசய்யா அண்ணன் எப்படி நம்மூரில சோத்துக் கடை வைச்சார் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமாயிருக்கு!

அந்தக் காலத்தில வயலில வெள்ளாம வெட்டக்க வெட்டுக்காரங்களுக்கு வீட்டில சமைச்சித்தான் வாப்பா சோறு கொண்டு போவார். தமிழ் ஆக்கள் வேளாம வெட்டினா, மாட்டிறைச்சி ஆக்கமாட்டார். இப்ப எல்லாத் தமிழனும் மாடு தின்றான். வீட்டில சமைக்கிறது கஸ்டம் என்று சோத்துக் கடையில் தலைக்கொரு சோத்துப் பார்சல் எடுத்திற்றுப் போறாங்க. பொலித்தீனில சோத்தப் போட்டுச் சுத்தி, அத நியூஸ் பேப்பரால பார்சல் பண்ணினா அந்தச் சோத்தில என்ன ருசியிருக்கு? ஆனாலும் ராசய்யா அண்ணன்ர ஒரே ஒரு சோத்துக்கடை இருந்த ஆலமரத்தடியில செகநாதர்ர வயல் மேட்டில இப்ப ஐஞ்சாறு சோத்துக்கடை இருக்கு. தமிழன்ர கடையிலயும் மாட்டிறைச்சிக் கொத்துப் போடுறான்.

ஆலமரத்துக்கு மேற்குப் பக்கமாக் கொச்சிக் காக்காட பீடிக்கிட்டங்கி. அதுக்குப் பக்கத்தில நாயர்ர சாயாக்கடை.

விடிஞ்சா ஏழுமணிக்கே ஆலமரத்தடிச் சந்தில சனங்கூடிரும். தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், சம்பூர்-எல்லா பஸ்ஸ”ம் ஆலமரத்தடியில நிக்கும். சனம் ஏறும், இறங்கும். லொஹர் தொழுகை மட்டும் கடைத்தெருவில சனக் கூட்டந்தான். பிறகு ஊருக்க இருக்க சனந்தான் கடைக்கு வரும். நாட்டுச் சனம் எல்லாம் போயிரும். ஊர்ச்சனம் கடையில என்னத்த வாங்கப் போவுது?

நாட்டுச் சனம் போனபிறகு ஆலுமிசாட நகைக்கடயில வேல செய்யிற கூனித் தீவுக் கம்மாளன் தன்ர பட்டறையில சின்னச் சுத்தியலால டொக் டொக்கென்று தட்ற சின்னச் சத்தமும் கேட்கும். பள்ளிக்கூடம் முடிஞ்சி வாத்திக் கூட்டமும் வந்து ஆலமரத்துக் கட்டில குந்தும். எலெக்சன் வந்தா நீலக் கச்சிக்காரனுக்கும், பச்சைக் கச்சிக்காரனுக்குப் சொற்போர்? ஆம் வெறும் வாய்ப்போர்தான்! அதுதான் இந்தக் கொட்டியாரத்தாண்ட நல்ல குணம். அடி, குத்து, வெட்டுக் கிடையாது. கோடேறியதும் இல்ல. வாய்வீச்சு மட்டுந்தான்.

தமிழ் ஆக்கள் இந்த வாய் வெட்டில சேர்ரதில்ல. அவங்க எல்லாம் பொத்தினாப்போல தமிழரசுக் கட்சிக்கு வோட்டப் போட்டிற்றுக் கம்மென்றிருப்பாங்க. ஆனா வேதநாயக வாத்தி மட்டும் எப்பவும் நீலக்கட்சி ஆலமரத்தடியில் எப்பவும் அவர் குரல் உரக்கக் கேட்கும்.

ஆனாக் கடைசியா வந்த எலக்ஷன்ல அவர் சிக்குப்பட்டுக் கொண்டார். நீலக் கட்சியில முஸ்லீம் தமிழன் எவனும் கேட்கல்ல. நீலக் கட்சிக்காரனான முஸ்லீம், முஸ்லீம் காங்கிரஸ’லேயே நிக்க வேண்டியிருந்தது.

ஊர்க் கொழுப்பத்துக்கு முஸ்லீம் காங்கிரஸதான் காரணம் என்று தமிழருக்கு ஒரு கத. அந்தக் கட்சிக்காரனுக்காகப் பேசினாத் தன் இனசனமே தன்னைத் திட்டும் என்ற பயம் வேதநாயகத்தாருக்கு. யோசிச்சி யோசிச்சுச் சும்மா இருந்தார். அவரால இருக்கவும் முடியல்ல. கடைசியாகக் காங்கிரஸ்காரன்ர மேடையில ஏறிப் பேசினார். எப்படியும் அவர்ர நீலக்கட்சி வெல்லவேண்டும் என்பது அவர்ர நோக்கம்.

"நீங்க ஏன் அவன்கட மேடையில ஏறிப் பேசினீங்க" என்று கேட்ட தமிழ் ஆக்களுக்கு, "ஆண்டவன் நம்ம இந்த ஊரில முஸ்லீம் ஆக்களோட சேத்துப் படைச்சிற்றான். அவனுகளோட சேராட்டி நமக்கு வாழ்வில்ல. நம்மோட சேராட்டி அவனுகளுக்கும் வாழ்வில்ல"

எவருக்கும் பாதகமில்லாம எல்லாக் கட்சியும் ஆளுக்கொரு எம்பியாப் பிச்செடுத்திற்றாங்க.

இந்தியாக்காரண்ட காலத்திலதான் ஆலமரத்தடியில நல்ல முசுப்பாத்தி. ஆலமரத்தடியில எப்பவும் துவக்கோட நாலு பேர் சென்றிநிப்பானுகள். நாங்களும் வந்து குந்திக் கொள்வம். இந்தியாக்காரண்ட இங்கிலிஸ் தான் ஆகச் சிரிப்பு. போக வேண்டாம் என்றால் 'நோ கோ'. போ என்றால் 'கோ' என்பான். சென்றில நாலு பேர் நின்றா, கடைத் தெருவில நாப்பது பேர் நின்று சாமான் வாங்குவாங்க. சின்னக்குடை, ரோச்லைற், தேங்காயயெண்ணெய், ரேப் றெக்கோடர், கெசற் ரீவி.... இந்தியாவில இதுக்கெல்லாம் நல்ல மதிப்பாம். கொண்டு போறதுக்கு இவனுகளுக்குத் தீர்வையும் இல்ல.

அவனுகள் ஊரைவிட்டுப் போயும் மூணு வருசமாச்சு நேற்றுத்தான் கதிர்காமத்தம்பி மாஸ்ரர் திருக்கிணாமலயிலிருந்து தன் வீட்டைப் பார்க்க வந்தார். நான் ஆலமரத்தடிக் குந்தில இருக்கன்.

அவரிட்ட "போனவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்திற்றாங்க. நீங்க வாற இல்லியா? வீட்டைத் திருத்திற தில்லியா?" என்று கேக்கிறன்.

பொறந்த ஊருக்கு வராம எத்தன நாளைக்குத்தான் திருக்கிணாமயில இருக்கிற. கெதியா வந்திருவன், தயவுசெய்து இந்த வீட்டிலயும் ஒரு கண் வைச்சிக் கொள்ளுங்க" என்கிறார்.

"பாதிரி கோயிலில அகதி முகாம் இருக்கமட்டும், அங்கிருந்தவங்க இங்கிருந்த வீட்ட எல்லாம் ஹறவாக்கினாங்க. இப்ப அதுகள் போயிட்டுது இந்தப் பக்கம் ஒருத்தரும் வாறல்ல."

"எதுக்கும் என்ர வீட்டையும் ஒருக்காப் பாத்துக் கொள்ளுங்க. நான் அடுத்த கிழமை வீட்டைத் திருத்தவாறன்" என்றுவிட்டு அவர் போய்விட்டார்.

நான் அவர் வீட்டை நிமிர்ந்து பாக்கிறன். கூரையே கிடையாது. குட்டிச்சுவர்தான் நிக்குது. அதிலயும் அங்கங்க வெடிப்பு. கூரையில தொங்கிய கைமரங்களையும் விறகுக்காகச் சனம் கொண்டு போயிற்று. முன்னாற் தெருவோரமாக இருந்த தகரக் கதவு சாத்தினாப் போல இருக்கு. அதுக்கு மேலால பாத்தா முற்றத்தில நிக்கிற 'வெலாட்' காய்த்துக் குலுங்கி நிக்குது.

இருந்தாற் போலிருந்த அந்த மரத்தில குழை அசையுது நான் தகரக் கேற்றுக்கு மேலால பாக்கிறன், மரத்தில ஒரு சின்னப் பயல் காயும் பிஞ்சுமா ஆயிறான்.

"டேய் யாரா அவன்?" என்று சத்தம் போட்டு விரட்டி மாமரத்தடியில ஒரு கல்லப் பொத்தென்று போடுறன்.

மரத்திலிருந்த பையன் டக்கென்று கீழ குதிச்சு ஓடுறான். ஆனா மரத்தின் கீழே அழுகைச் சத்தம் கேட்குது.

நான் தகரக் கதவால எட்டிப்பாக்கிறன். மரத்தடியில ஒரு சின்னப்பயல். ஆறு ஏழு வயசிருக்கும். அவன்ர தலையில இரத்தம் ஓடுது. அழுறான்.

நான் தகரத்துக்கு மேலால ஏறிக் குதித்துச் சிறுவனை தூக்கிக் கொண்டு, "உம் பேரென்ன?" என்று கேக்கிறன், பையன் அழறான்.

"அப்பாட பேரென்ன?"

பையன் பேசாமல் அழுறான். நான் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே வாறன்.

அவன்ர அப்பா வாறார். வேலுப்பிள்ளையண்ணன்!

"விடுங்க மாஸ்ரர். நான் வீட்ட கூட்டிற்றுப் போறன். தலயில லேசான சிராய்ப்புத்தான்" என்கிறார் அவர்.

'சோனவன் தமிழனுக்கு அடிச்சுப் போட்டான்' எனப் புரளி கிளப்புவர்களுக்கு எனக்குப் பயம்'

வேலுப்பிள்ளையண்ணன் தைரியம் சொல்கிறார். நான் பையனின் சட்டையைக் கழற்றிக் காயத்தைத் துடைத்து, "ஆஸ்பத்திரிக்குக்கொண்டு போவமண்ணே" என்கிறன்.

"நீங்க போங்க மாஸ்ரர். நான் கொண்டு போறன்"

அவரை மறுதலித்துப் பையனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறன். வேலுப்பிள்ளை யண்ணனும் வாறார்.

மருந்து கட்டி வெளிய வந்ததும் நான் ஒரு ரீசேட்டும் லீலா போத்தலும் வாங்கிப் பையன் கையில குடுக்கிறன்.

"ஏன் மாஸ்ரர் இதெல்லாம்"

"இருக்கட்டுமண்ணே. பையன் நல்லாப் பயந்திற்றான்."

இருவரும் பேசிக்கொண்டே ஆலமரத்தடிக்கு வருகிறோம்.

ஆலமரத்தடி வெறிச்சோடிக் கிடக்கிறது.
..........

மனிதன்!

அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. அவளுடைய மேனி புடம் போட்ட தங்கம் போல இருந்ததினாலும், சௌகரியத்திற்காகவும் நான் அவளைத் தங்கம் என்றே அழைக்கிறேன். தங்கம் அவனை இராசா என்றழைத்த காரணத்தினால் நானும் அவனை இராசா என்றே எழுதுகிறேன்.

இராசாவுக்கு எங்கே என்ன வேலை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் வாழ்க்கையை உற்றுக் கவனித்ததில் அவன் எங்கோ ஓர் தொழிற்சாலையில் நெஞ்சு முறிய, வியர்வை சொட்ட, வேலை செய்கிறான்; வாழ்க்கைக்குப் போதாத வருமானம் என்பது தெரிந்தது.

2

அன்றும், என்றும் போல அவன் நன்றாக இருட்டிய பிறகு தன் வீட்டிற்கு வருகிறான்.

ஆனால் அவனிடம் வேலைசெய்த அலுப்போ, களைப்போ காணப்படவில்லை. தலை மயிர் எல்லாம் தொழிற்சாலைத் தூசு படிந்து திக்குக்கொரு புறமாய் முறைத்துக்கொண்டு நிற்கின்றன. கண்கள் கொவ்வைப் பழம்போற் சிவந்திருக்கின்றன. எங்கள் கிராமத்துக் கிரவல் றோட்டில் ஊர்ந்து வரும் கோயிற் தேர் போலத் தள்ளாடிக் கொண்டே வரும் அவன் நடையும், அழுக்குப் படிந்து சடையடித்துப்போய்க் கிழிந்து கிடக்கும் அவன் உடையும் எவருக்கும் ஓர் பயங்கலந்த அநுதாபத்தைக் கொடுக்கும் என்பதை அவன் உணர்ந்தானோ என்னவோ, அவன் வந்தவண்ண மேயிருந்தான்.

வாசற்படியிற் கால்வைத்து ஏறுகிறான்.

உச்சந்தலையிற் கதவு நிலை 'நக்'கென்று அடித்துவிடுகிறது. நொந்ததோ என்னவோ உள்ளே போகிறான்.

போதையின் மயக்கத்திலே தீப்பந்தமாயுருளும் தன் கண்களைச் சுழற்றி வீட்டங்கலும் ஒருமுறை பார்க்கிறான். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பாய் உடல் முழுவதும் துடிக்கிறது. மீசை மயிர்கள்கூடக் குத்திட்டு நிற்கின்றன.

"தங்கம்...! தங்கம்...!!"

அந்த அசுரத்தொனியை எதிரொலித்து அந்தச் சூழலிலுள்ள எல்லாமே அலறுகின்றன.

தங்கம்...தங்கம்...

மறுபடியும் கத்துகிறான்.

தங்கம் முகத்தை விகாரமாக வைத்துக்கொண்டு பிற்புறத்துக் கதவால் பயந்து பயந்து உள்ளே வருகிறாள்.

"எங்கே போனாவோ மகாராணி?"

அவன் வாயிலிருந்து வந்த புளித்த கள்ளின் கோரமான நெடியில் அவளுக்குக் குமட்டல் எடுத்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு "ஐயோ; இன்றைக்குமா குடிச்சீங்க?" என்கிறாள். அச்சத்தால் மிரளும் அவள் விழிகளின் கடையிலிருந்து இரண்டு சொட்டுக் கண்­ர்கள் உதிர்ந்தன.

"ஏனாம் உன் அப்பன் வீட்டுக்காசோ?"

"அப்பன் வீட்டுக் காசானால் இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பேனாக்கும்?" புருஷன்தானே என்ற உரிமை அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்ததோ என்னவோ அவள் இப்படிச் சொல்லியே விட்டாள்.

"அட; வாயைப்பார்" இந்தச் சொற்கள் வாயிலிருந்து விழுமுன்னமே உதை, சரியாக அந்த மிருகத்தின் வாரிசைச் சுமந்து கொண்டிருக்கும் அவள் வயிற்றில் விழுகிறது.

தங்கம் அடியற்ற மரம்போலக் கீழே சரிந்து வீழ்கிறாள். வலியும் வேதனையும் அவளால் தாங்க முடியவில்லை. அவள் கண்ணிலே உலகம் உருண்டு கொண்டிருப்பது பிரத்தியட்சமாகத் தெரிந்தது.

அவன் பேய்ச் சிரிப்பொன்றைச் சிரித்துவிட்டு அப்படியே நிற்கிறான்.

சந்தேகமேயில்லை; மிருகந்தான்!

வரண்ட மூளைக்குள்ளே சிக்கிக்கொண்டு, முன்னே ஓடத்தெரியாத கற்பனை போலக் காலம் ஊர்ந்து செல்லுகின்றது.

தங்கம் தரையிலே கிடக்கிறாள். முக்கலும் முணகலும் உயிர் போய்விடவில்லை என்பதை உணர்த்துகின்றன.

அந்த மிருகம் அவளருகில் அமர்கிறது. அவளை மெதுவாகத் தடவிக் கொண்டே 'நோகுதா தங்கம்'

ஆம் மனிதன் பேசினான்.

...........

கனி

அன்று சுற்றாடல் பாட நேரத்தில், ஆசிரியர் வாழை மரத்தைப் பற்றிப் பாடம் நடத்தினார். முதலில் இரண்டடி நீளம், இரண்டடி அகலம், இரண்டடி ஆழமான குழி வெட்ட வேண்டும். அந்தக் குழியிலே குப்பை கூளங்களைப் போட்டு எரித்துத் தொற்று நீக்க வேண்டும். அதன்பின் ஒருவாரம் முன்னாற் பிடுங்கப்பட்டு நிழலில் வதங்கவிடப்பட்டிருந்த வாழைக் குட்டியைக் குழியில் நட்டுக் குழியிலே உக்கிய மாட்டெரு காய்ந்த சருகுகள் ஆகியவற்றை இட்டுக் குழியை மூடவேண்டும். நட்டு இரண்டு வாரங்களுக்குத் தண்­ர்விடத் தேவையில்லை. இரண்டு வாரங்களில் வாழைக்குட்டி குருத்துவிட்டு வளரும் அதன்பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். நட்டுப் பத்துப் பன்னிரண்டு மாதங்களில் வாழை குலை ஈனும். குலை தள்ளுமுன்னர் கட்டைக்குருத்து ஒன்று தோன்றும். அதன் பின்னரே மொத்தி தள்ளும். அதன் இதழ்கள் ஒவ்வொன்றாய் விழ அதனிடையே சீப்புச் சீப்பாய்க் காய்கள் தோன்றும்.

வாழையில் மொந்தன், கதலி, இதரை, கப்பல் எனப் பல இனங்கள் உண்டு. மொந்தன் வாழைக்காய் கறிசமைக்க உதவும். மற்ற இனங்களைப் பழமாக்கச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உயிர்ச்சத்துகள் நிறைய உண்டு. எல்லாருமே அதைச் சாப்பிடலாம். அது முக்கனிகளில் ஒன்று.

எனப் பாடம் நடத்திய ஆசிரியர், நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுத் தோட்டத்திலே ஒரு வாழை மரமாவது வளர்ப்பீர்களா?" என ஐந்தாம் வகுப்பு மாணவர்களைக் கேட்டார்.

மாணவர்கள் எல்லாருமே "ஆம் ஐயா" என்று ஒரு சேரப் பதிலளித்தார்கள்.

பாவம்! அந்த மாணவர்கள் எல்லோருமே தொண்ணுறாம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக தம் ஊரைவிட்டு அகதிகளாக ஓடி வந்தவர்கள். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அந்த வேதக் கோயில் அருகாமையிற்தான் அகதிகளாகத் தம் பெற்றாரோடு வாழ்கிறார்கள். அந்தக் குடிசைகளின் ஒருபுறமாகத்தான் அவர்களது ஓலைக் கொட்டகைப் பாடசாலையும் இறால்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை' என்ற பழைய விலாசத்தோடு நடந்து கொண்டிருக்கின்றது!

அந்தக் கோயிலருகிலே அகதிகளாகவிருந்த பல்வேற கிராமத்து மக்கள் எல்லாருமே தத்தம் கிராமங்களில் மீண்டும் குடியேறிவிட்டார்கள். ஆனால் இறால்குழி மக்கள் மட்டும் இன்னமும் தங்கள் ஊருக்குப் போகவில்லை!

மகாவலி கங்கையும் அதன் கிளை ஒன்றும் கடலோடு கலக்கும் ஆற்றிடை மேட்டுக் கிராமந்தான் இறால் குழி. வெறும் மணல் வெளி. அம்மணல் வெளியில் முருங்கை மரங்களும் மர முந்திரிகையும் சேழிப்பாக வளரும். கிணற்றடியில் மட்டும் ஒரிரண்டு வாழை மரங்கள் நட்டிருப்பார்கள்!

இரண்டு மைல்களுக்கப்பால் கங்கைக்கரையின் செழுமையான இருவாட்டி மண்ணில் ஊரவர்கள் எல்லாருமே புகையிலையும், மிளகாயும் பயிரிடுவார்கள்.

அவர்களது தோட்டங்களுக்கு அப்பால் அடர்ந்த சோலைக்காடுகள். அந்தக் காடுகளிற்தான் போராளிகள் பதுங்கியிருப்பதாக அரச படையினர் நம்புகிறார்கள். அக்காடுகளைக் 'கிளீயர்' பண்ணும் வரை இறால் குழி மக்கள் தம் ஊரிற் குடியேற முடியாதென அரசாங்கம் சொல்கிறது. அதனால் இறால்குழி மக்கள் இன்னமும் அகதிகளே. அவர்களுக்கு வீடாவது? வீட்டுத்தோட்டமாவது?

கோயிலின் பக்கமாக அமைந்துள்ள சிறுசிறு ஓலைக் குடிசைகளில் வாழ்கிறார்கள் அம்மக்கள். ஓலைகள் இற்று, ஈர்க்குகள் மட்டுமே நீட்டிக் கொண்டிருக்கும் அக்குடிசைகளில் கோடைக் காலத்தில் எப்படியோ வாழ்ந்து விடலாம். ஆனால் மாரியிற் குடிசைகள் தாக்குப் பிடிக்காது. மழைத்தண்­ர் குடிசைக்குள்ளே வெள்ளமாய் நிற்கும். பின்னர் அக்கலட்டித் தரை சேறும் சகதியுமாய் விடும். அப்போதெல்லாம் மழை பெய்து ஓய்ந்த அடுத்த கணத்திலேயே மழைத் தண்­ர்ரை மாயம் போல உறிஞ்சி குடித்துவிடும் தம் வெண் மணற் கிராமத்தை எண்ணி ஏங்குவார்கள்.

பாடசாலை முடிநது தன் குடிசைக்கு வந்த குமார் தன் தாயிடம் சொன்னான். "அம்மா நான் ஒரு வாழை மரம் நாட்ட வேணும்"

"சரிதான் மனிசன் நிக்கவே இஞ்ச இடங்காணாது. இதுக்குள்ள வாழய எங்க நாட்றது?

"வீட்டுக்குள்ளவா அம்மா வாழய நாட்டப்போறன். குடம் வைக்கிற இடத்தில நாட்டலாம் அம்மா"

"சரிதான், கோடையடிச்சித் தரை காய்ந்திருக்கிற காச்சலுக்கு இந்த நாய்க்கழித் தரையில உன்னால ஒரு குழிதோண்ட முடியுமா? மண்வெட்டிய ஓங்கித் தரையில கொத்தினாத் தரை 'கிண்ணரம் பாடும். ஒரு கட்டி மண் பெயராது. எப்படிக் குழி வெட்டுமா? சும்மா மெணக்கிடாம வேறு வேலயப் பார்" என்றாள் அம்மா.

ஆனாற் குமார் வாழை மரம் நடும் தன் எண்ணத்தை விட்டு விடவில்லை. குடம் வைத்திருந்த இடத்திலே மண்வெட்டியாற் கொத்திப் பார்த்தான். அம்மா சொன்னதுபோல மண்வெட்டி 'கிண்ணரம்' பாடவில்லை. மாறாகக் கணிமண் மசைபோல மண்வெட்டியில் ஒட்டிக்கொண்டு வந்தது. இரண்டடி நீளம் இரண்டடி அகலம் வெட்டினான். ஆனால் அரை அடி ஆழத்திற்கப்பால் மண்வெட்டி இறங்க மாட்டேன் என்றது. ஓங்கிக் கொத்தினால் களிமண் சிராய் சிராயாகப் பெயர்ந்தது. வெட்டவே முடியவில்லை. குமார் தான் வெட்டிய குழிக்குள்ளே குடத்துத் தண்­ரைச் சரித்து ஊற்றினான். குழியிற் தண்­ர் தேங்கி நின்றது. அத்தண்­ர் வற்ற ஒரு இரவு சென்றது. அடுத்த நாட் காலையில் எழுந்ததும் குமார் குழியை மீண்டும் ஆழமாக்கினான். மேலும் அரை அடியே வெட்ட முடிந்தது. இப்படியாகக் குழியிற் தண்­ர் ஊற்றி, ஊற்றி இரண்டு அடி ஆழக் குழியை குமார் ஐந்து நாட்களில் வெட்டி முடித்தான். பாடசாலை அடிமட்டத்தால குழியின் நீளம், அகலம் ஆழத்தை எல்லாம் அளந்து திருப்திப்பட்டுக் கொண்டான்.

அந்தக் கோயிலைச் சுற்றி இருந்த ஊர் அடங்கலும் வாழைத் தோட்டந்தான். மாரியில் மதர்த்துக் கோடையில் வதங்கி அவை வளர்ந்தன. அவ்வூரவனான அமலனுடன் வாய்க்காலிற் குளிக்கையில் குமார் வாழைக்குட்டி ஒன்று கேட்டிருந்தான். அமலன் வாக்களித்தபடி குமாருக்கு ஒரு கதலி வாழைக்குட்டி கொடுத்திருந்தான். இலைகள் எல்லாம் வெட்டப்பட்ட அந்த வாழைக்குட்டி முகாமுக்கு முன்னால் நின்ற இலுப்பை மரத்திற் சார்த்தப்பட்டிருந்தது.

குமார் அந்த வாழைக் குட்டியைத் தூக்கி வந்து குழியில் நட்டு அது சரிந்து விழுந்து விடாமல் இருக்க, வாழையைக் கையாற் பிடித்துக் கொண்டு, காலாற் குழியடியில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த களி மண்ணைத் தள்ளினான். வாழைக் குட்டி நிறு திட்டமாக நின்றதும் கூடையை எடுத்துக் காய்ந்த சாணி பொறுக்கிக் கொண்டு வந்து குழியிலே போட்டான். இலுப்பை மரத்துச் சருகுகளையும் வேறு சருகுகளையும் பொறுக்கி வந்து குழியை நிறைத்தான். அம்மா அடுப்புச் சாம்பலையும் குழியிற் கொட்டினால் வாழைக்குட்டிக்கு நோய் வராது என அவள் சொன்னாள். குமார் மண்வெட்டியால் மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். வாழைமரத்தடியில் மண்ணைக் குவித்து மேடாக்கினான்.

** இ.தொ.kaviya16.mtf**


** kaviya15.mtfதொடர்ச்சி**

வாழை நட்டாய் விட்டது' குமார் தண்­ர்க் குடத்தைத் தூரமாகக் கொண்டு போய் வைத்தான். அதன் பின்னர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் குமார் தன் வாழைக்குட்டியையே பார்த்தான்.

இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. வெட்டாது விடப்படிருந்த வாழைக்குட்டியின் குருந்து சிறிது நீண்டிருப்பதைக் குமார் அவதானித்தான். அடுத்த நாள் காலையில் அக்குருத்து இன்னும் சற்று நீண்டிருந்தது. ஆனந்தமடைந்த வாழையினடியில் வைத்தான்.

குடத்து நீரின் ஈரக்கசிவிற் குமாரின் வாழை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருந்தது. இதற்குள் மழைக் காலம் வந்து விட்டது. சோவென்று கொட்டிய மழை அகதி முகாமை வெள்ளக் காடாக்கியது. அகதி முகாம் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிய மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் தொடங்கி மீண்டும் கோடை வந்தது. இவை எதனையுமே கண்டு கொள்ளாமல் குமாரின் வாழைக்குட்டி வாழை மரமாகியது. வாழை மரத்தின் காய்ந்த சருகுகளைக் குமார் வெட்டிவிட்டான். மரத்தடியின் கொடிய வெப்பத்திலும் குமாரின் வாழை மரம் குடத்து நீரின் ஈரக்கசிவில் மதாளித்து வளர்ந்தது. ஒருநாட் காலையில் எழுந்து பார்த்தபோது வாழை மரத்தினடியிலே நிலம் பிளவுபட்டிருப்பதைக் குமார் அவதானித்தான். குமார் அதைக் கிண்டிப் பார்த்தான். அம்மா சத்தம் போட்டுச் சொன்னாள். "சும்மா விடு குமார். வாழை குட்டி விடப் போகுது"

அம்மா சொன்னதைப் போல அடுத்த நாட் காலை குட்டியின் ஊசிமுனை வெளியே எட்டிப் பார்த்தது. நாளுக்கு நாள் அக்குட்டி வளர்ந்து மூன்றடி உயரமான போது அதன் எதிர்ப்பக்கமாக இன்னோர் குட்டி தோன்றியது.

அதைப் பார்த்துவிட்டு அம்மா சொன்னாள். "இனி வாழை கெதியாய்க் குலை போடும்."

"குலை போடுமுன் கட்டைக் குருத்து பின்னால வர்ற குருத்து, கட்டைக் குருத்தாத்தான் இருக்கும்" என்றாள் அம்மா.

அன்று தொடக்கம் காலையில் எழுந்ததும் குமார் கட்டைக் குருத்து வந்துவிட்டதா என்று பார்க்கத் தொடங்கினான். இரண்டு வாரங்களின் பின்னால் வந்த குருத்து இரண்டு முழங்களுக்கு மேல் வரவில்லை.

ஆம் அது கட்டைக் குருத்து!

குமார் துள்ளிக்குதித்து, "அம்மா கட்டைக்குருத்து வந்திற்றம்மா. இனி வாழை குலை போடும்" என்று ஆனந்தத்தோடு கத்தினான்.

சில நாட்களில் கட்டைக் குருத்திலையின் தண்டுக்கிடையில் வாழைப் பொத்தி கருஞ்செம்மையாய்த் தோன்றிற்று. அது நாளுக்கு நாள் வளர்ந்து தரையை நோக்கி வளைந்து தொங்கியது. பின்னர் அப்பொத்தியின் மடல் ஒன்று விரிந்து தரையில் விழுந்தது. குமார் பொத்தியின் வளர்ச்சியைக் குதூகலத்துடனும், ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியுடனும் கவனித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாளும் பொத்தியின் மடல் ஒன்று கீழே விழுந்தது. குமார் வாழைக்குலையின் முதற்சீப்பைக் கண்டான். அதிகாலையில் அண்ணாந்து பார்த்துக் குமார் அச்சீப்பிலுள்ள காய்களை எண்ணினான். பதினான்கு காய்கள்!

அதற்கடுத்த நாள் மேலும் இரண்டு சீப்புகள் தெரிந்தன. அண்ணாந்தபடி அதன் காய்களை எண்ண முடியாதிருந்தது குமாருக்கு. ஆனால் ஒவ்வொரு நாட்காலையிலும் புதிய புதிய சீப்புகள் தென்பட்டன. எல்லாமாகப் பதினான்கு சீப்புகள் வந்ததும், அதன் பின்னால் வாழைக்குலையின் நடுத்தண்டு மட்டுந்தான் நீண்டு வளர்ந்தது. அந்தத் தண்டு சாண் நீளத்திற்கு மேலே வளர்ந்தபோது அம்மா உரலிலே ஏறி நின்று பொத்தியை நீளமான கத்தியால் வெட்டி விட்டாள். பொத்தி தரையிலே விழுந்தது. வாழைக் குலையின் தண்டிலிருந்து பிசின்போல நீர் சொட்டிற்று.

அம்மா அன்று வாழைப் பொத்தியைச் சுண்டிக் கறி சமைத்திருந்தாள். குமார் வாழைப்பொத்திச் சுண்டலை ரசித்துச் சாப்பிடுகையில் அம்மா சொன்னாள் "இன்னும் மூணு மாசத்தில வாழைக்குலை முற்றிவிடும். தீபாவளிக்கு வெட்டிப் புகை ஊதிப் பழுக்க வைக்கலாம்."

"காயில வெட்டிப் புகையடிக்கப்படாதம்மா. புகை யூதின பழம் ருசியாயிருக்காது. மரத்தோட இருந்து பழுத்தாத்தான் தேன் போல இனிக்கும் என அமலன் சொன்னான்" என்றான் குமார்.

"சரி, சரி மரத்தோட இருந்தே பழுக்கட்டும்."

"ஓம் அம்மா, நம்ம நாலு பேரும் பத்து நாளைக்கு ஆளுக்கு நாலஞ்சு பழமாச் சாப்பிடலாம்" என்றான் குமார்.

மீண்டும் மழைக்காலம் தொடங்கி விட்டது. தீபாவளிக்கு இன்னமும் ஒரு மாசந்தான் இருந்தது. தனக்கில்லாவிட்டாலும் தன் இரண்டு மகன்களுக்கும் இளைய மகளுக்கும் தீபாவளிக்குப் புது உடுப்புகள் வாங்க வேண்டுமே என்ற கவலை தாய்க்குப் பிடித்துக் கொண்டது!

அவள் கணவன் மட்டும் இருந்திருந்தால், கோடைப் போக அருவி வெட்டிலும், மாரிப்போக விதைப்பிலும் கூலிக்குப் போய் உழைத்திருப்பான் ஆனால் ஊருக்குள்ளே ஆமிக்காரன் வர முன்னர் ஷெல் அடித்ததில் அவன் உயிரிழந்து விட்டான். கணவனைப் பிறந்த இறால் குழி மண்ணில் புதைத்து விட்டுத்தான் அவள் ஊரவர்களோடும் இங்கு அகதியாக இங்கு வந்தாள். அரசாங்கம் கொழ்க்கும் நிவாரணமான அரிசியையும் சீனிப்யையும் நம்பியே வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையிற் புது உடுப்புகளுக்கு எங்கே போவது?

தீபாவளிக்கு இன்னமும் ஐந்து நாட்களே இருந்தன. இனித் துணி வாங்கினாலும் தைக்க முடியாது. தைச்சு விக்கிற சட்டைதான் வாங்கவேணும், ரேஷனுக்கு எடுத்த அரிசியையும் சர்க்கரையையும் விற்று....

தாய் யோசித்துக் கொண்டிருக்கையிற் பாடசாலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த குமார் சொன்னான். "தீபாவளிக்கு என்ர வாழைக்குலை பழுத்திரும் என்று சொன்னீங்களே அம்ம. அது பழுக்கல்லியே. நீங்க அவசரப்பட்டு வாழைக்குலையை வெட்டீராதீங்க அம்மா."

குமார் பாடசாலைக்குப் போய்விட்டான். 'எப்பவும் இவனுக்கு வாழைக்குலையிர கதைதான்" என்று அம்மா அலுத்துக் கொண்டே அடுத்த குடிசையில் இருக்கும் செல்லப்பாக் கிழவரிடம் சொன்னாள். "தீபாவளிக்குப் பிள்ளைகளுக்கு உடுப்பு ஒண்ணும் வாங்கல்ல சித்தப்பா. ரேஷன் அரிசியை வித்துப் போட்டு வாங்கலாம் என்று யோசிக்கிறன்."

கிழவர் ஆத்திரப்பட்டு "என்னடி புள்ள மடக் கதகதைக்கிறா. அரிசிய வித்துப் போட்டு நல்ல நாள் திருநாளில அடுப்பு மூட்டாமல் இருக்கிறதா? அடுத்த மாதம் ரேஷன் தரமட்டும் பட்டினி கிடப்பியா? அந்த எண்ணத்த விட்டிற்று வேற வேலையைப் பார்" என்றார்.

"வேற எங்க நாள் பாப்பன் சித்தப்பா?"

சற்று யோசித்த கிழவர் வாழை மரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு, இந்த வாழைக்குலை நல்லா முற்றிற்றுப்புள்ள. கள்ளன் கையில குடுத்தாலும் இருநூறு ரூபாத் தருவான். இதவெட்டி வித்தா தீபாவளிப்பாட்டுக்கு உதவு" என்றார்.

"இது என்ர மூத்த மகன் ஆசையோடு நாட்டி வளர்த்த மரம் சித்தப்பா. மரத்தோட பழுத்த பிறகுதான் வெட்டிச் சாப்பிட வேணும் என்று காலயிலும் சொல்லிற்றுப் பள்ளிக்குப் போறான்.

"அவன் கெடக்கிறான் வெளையாட்டுப்புள்ள. நம்மெல்லாம் வாழப்பழம் தின்ற நெலபரத்தில்யா இருக்கம்? வெட்டி வித்தாக் காச நீயா எடுக்க போற. புள்ளைகளுக்குத்தானே வாங்கப்போறா. நான் கையோட போய் வியாபாரியக் கூட்டிவாறன்" என்று சொல்லிவிட்டுத் தெருவைப் பார்த்து நடந்தார்.

செல்லம்மா யோசித்துக் கொண்டேயிருந்தாள்.

வெளியே சென்ற கிழவர், கூட்டிவந்த வியாபாரி வாழைக்குலையை நிமிர்ந்து பார்த்து "இருநூறு ரூபா தாறன்" என்றதும், செல்லம்மா தயங்கினாள்!

அவள் தயக்கத்தைக் கண்ட வியாபாரி "சரி, இன்னும் பத்து ரூபா மேல தாறன். குலையை வெட்றன்"

செல்லம்மா ஏதுமே பேசாமல் நின்றாள்!

வியாபாரி வாழைக்குலையை பாய்ந்து பிடித்து வாழை மரத்தை வளைத்துத் தான் கொண்டு வந்து கத்தியால் வாழைக்குலையை வெட்டினான். செல்லம்மா மௌனமாகவே நின்றாள்!

குலையை வெட்டிக் கொண்ட வியாபாரி செல்லம்மாவிடம் இரண்டு நூறு ரூபா நோட்டுக்களையும் ஒரு பத்து ரூபா நோட்டையும் நீட்டினான்.

அந்த நோட்டுக்களை வாங்கிக் கொண்டபோது செல்லம்மாவின் கண்­ர் அந்நோட்டுக்களில் விழுந்து சிதறியது. பாடசாலை மூடுவதற்கான மணி ஓசை அவள் காதுகளிற் கேட்டது.


** முற்றும் **