கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தியானம்  
 

என். கெ. மகாலிங்கம்

 

தியானம்

என். கெ. மகாலிங்கம்

------------------------------------------------------

தியானம்

என். கெ. மகாலிங்கம்

பூரணி வெளியீடு

-----------------------------------------------------

DHYANAM
short stories in tamil
by n k mahalingam
(c) n k mahalingam
published by
poorani veliyeedu
37, shoe road
colombo-13
Sri lanka
printed at meera foundation press
madras-600 040
first edition october 1982
price:

------------------------------------------------------

சமர்ப்பணம்

மு. தளையசிங்கத்துக்கு

-----------------------------------------------------

நன்றி

இத்தொதியில்
இடம்பெற்றுள்ள என் கதைகளைப்
பிரசுரித்த
இதயம்
மல்லிகை
பூரணி
சஞ்சிகைகளுக்கும்
முகப்போவியம்
வரைந்துதவிய
அச்சுதன் கூடல்லு}ர்
சிறுகதைகளைப் பிரதி செய்துதவிய
த. கருணாகரன்
இதன் பிரசுரிப்பில் உதவிய
இ. பத்மநாபன்
ஆகியோருக்கும்

---------------------------------------------------------------------

கவர் விளக்கு 1
முடிச்சு 8
சிறை 15
கோபம் 28
மலடுகள் 26
தியானம் 33
ஒரு காதல் மலர்கிறது 37
சவாரி 40
மக்களாட்சி 44
இருப்பு 47
விடலைகள் 49
பாPட்ஷை 53
குழந்தைகள் 58
கற்பழிப்பு 62

-------------------------------------------------------------------------

கவர் விளக்கு

இருட்போர்வை உலகை விழுங்கி இருந்தது. அக்பா மண்டப அறைகளில் ஒளி கொடுத்துக் கொண்டிருந்த மின் விளக்குகள் ஒவ்வொரு அறையையும் பெட்டியாகக் காட்டின. ஒரே சீரான பல பெட்டிகள் நேராகவும், மேலாகவும், கீழாகவும், பக்கவாட்டிலும் அடுக்கப்பட்டிருந்தது போலிருந்தன. அவை 'வெசாக்' பந்தர்களையும் அவற்றை அலங்கரித்த கூடுகளையும் ஞாபகமூட்டின. வெசாக் பந்தர்களிலும் பலவர்ணக் கூடுகள். இங்கும் பல வர்ண 'ஷேட்களைக் கொண்ட மேசை வரம்புகள். இவை பல வர்ணங்களாக அறைகளை நிரைப்படுத்தியிருந்தன. அக்பர் விடுதியையும் 'கம்பசை'யும் தொடுக்கும் 'வானவில்' பாலவிளக்குகள் இருட்டில் தோய்ந்து மினுக் மினுக் என்று இப்போ பிறகோ என்ற நிலையில் மங்கிக் கொண்டிருந்தன.

அன்றைய இருள் சாதாரண இருளல்ல. மழை மந்தரகார இருள். எங்கும் ஒரே அந்தகாரம்; சூனியம்; பயங்கரம். தீடீர் தீடீர் என்று எங்கிருந்தோ வெடித்துச் சிதறும் இடிகள் தலைமேல் விழுந்துவிடும் போல ஆர்ப்பரித்தன. மின்னல்கள் கோடுகள் கிழித்துச் சிதறி இலைகளில் ஓடும் நரம்புகள் போல, ஆகாயத்தில் அங்கும் இங்கும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் இடிகளின் வெடிச்சத்தம் சிதறி ஓடும்போது ஏதோ ஒரு பயங்கரத்தை முன்கூட்டியே எச்சரிப்பது போன்ற பயப் பிராந்தியையே மனதில் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. உலகப்பிரளயம் ஏற்படலாம் என்ற அறிகுறியோ....... அல்லது அப்படி ஓர் பிரளயம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை சிறு உருவில் காட்டும் ஒத்திகையோ........ அடிக்கடி இடிகள் வெடிக்கும் போது ஓங்கி உயர்ந்து நின்ற அந்த 'ஜிம்னாசிய' மண்டபமே இடிந்து தலைக்கு மேல் நொருங்கி விழுந்திவிடும் போன்ற பயங்கரம் தான் கமலாவின் நெஞ்சில் ஏற்பட்டது. முதலில் மின்னல் பளிச்சிட்டால் அதைத் தொடர்ந்து இடிகள் நொருங்கிக் கொட்டும் என்று தெரிந்திருந்த கமலா இடிகள் வருமுன்பே கணேசனை இறுகக் கட்டிப் பிடித்து விடுவது, பருத்தைக் கண்ட கோழிக்குஞ்சு தாய்க் கோழியின் சிறகுள் ஒதுங்குவது போல இருந்தது.

கணேசனுடைய இறுகிய அணைப்பு அவளைப் பரவசப்படுத்திய அதே நேரத்தில் பயங்கர எண்ணங்களால் ஏற்படும் குமட்டல் உணர்வுகள் அடிவயிற்றில் கிளறிக் கொண்டிருந்தன. இரு கைகளாலும் வளைத்து, பூனைக்குட்டியை அணைப்பது போல, அவளை நெஞ்சுடன் அணைத்துக் கொண்டிருந்தான். கணேசன். அது தாயின் பரிவும், பாசமும் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணநேரம் அவன் நினைவுகள் உரசிச் சென்றது. விளக்க முடியாத உள் உணர்வு மேலும் அவனை வாட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டான். முழு உலகமும் இடிந்து விழுந்தாலும் உன்னை நான் கைவிடமாட்டேன் என்பதைப் போல இருந்தது அது. வார்த்தைகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளுக்கு ஆட்பட்ட நிலையில் விளங்க முடியாத, பேரின்ப வெறுமையில், இரண்டறக் கலந்த நினைவுகளின் சேர்க்கைக் கூட்டத்தில் இருவரும் கலந்திருந்தனர். உணர்வுகள் யாவற்றையும் வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாத நிலை. கூடவே உணர்வுகளையே இனங்கண்டு கொள்ள முடியாத நிலையும்தான்.

ஜிம்னாசியத்தின், அகன்ற தட்டையான நீண்ட படிக்கட்டுகள், நடுவே அறைகளாகப் பிரிக்கும் இரும்புக் கேடர்கள், பின்புறம் சுவர். இவை வேறு வேறான பல அறைகளுக்கான விசாலத்தையும் அமைப்பையும் கொடுத்தன. பின்புறமுள்ள சுவரில் இருவரும் சாய்ந்து இணைந்து இருந்தனர். அடிக்கடி பளிச்சிடும் மின்னல் கோடுகள் அவர்கள் எப்படி எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்துச் சென்றன. அவர்களில் முன்புறம் செழிப்பாக வளர்ந்திருந்த பூஞ்செடிகளில் மலர்ந்திருந்த வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறப்பூக்கள் மின்னல் வெள்ளத்தில் பகல் நேரத்தில் தெரிவதிலும் மிருதுவாய், செழிப்பாய், அழகாய், பளிச்சென மிதந்தன. மலர்களைத் தத்ரூபமாகத் தரிசிப்பதற்காகத்தான் இறைவன் மின்னல் கீற்றுக்களை அடிக்கடி பாய்ச்சுகிறான் என்ற ஓர் எண்ணம் இடையிடையே கணேசனின் நினைவில் அலைமோதியது.
"கமலா இந்தப் பூக்களின் அழகு எப்படி? பகல் நேரத்தில் இதே பூக்கள் இதே மாதிரி யாருக்காவது தெரியும்?" கமலாவின் மனநிலை மலர்களின் பகல்-இரவு நேரப் பேதங்களைப் பகுத்தறிய முடியாதிருந்தது. அவனின் இரு கன்னங்களையும் தன் இரு கைகளாலும் வருடினாள். பூனைக்குட்டி ஒன்றின் அப்பாவித்தனமான பரிதாபமான பார்வையும் அவளின் பதிலாக இருந்தது. அக்பர் விடுதியின் வானவில் பாலத்திற்குக் கீழாக கரை புரண்டு சீறி ஓடிக் கொண்டிருந்தது மகாவலிங்கை, அன்று பகல் முழுவதும் ஓய்வில்லாமல் பெய்த மழையின் விளைவு அது, சீற்றங் கொண்ட ஆவேசம்; ஓயாத பேரிரைச்சல்.

கணேசன் தன் இரு கைகளாலும் கமலாவின் காதுகள் இரண்டையும் சிறிது நேரம் அடைத்தான்; பின், கைகளை எடுத்துவிட்டு, "இந்த உலகத்தில் உங்காளல் எதைத் தெளிவாகக் கேட்க முடிகிறது?" கமலாவுக்கு கண்ணாமூஞ்சி விளையாடுவது போலிருந்தது. அவன் கேள்வி. "எனக்குப் பயமாயிருக்கிறது" என்றாள். மேலும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். 'என்ன கேட்டான்' என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அவளை நினைத்து ஓர் பெருமூச்செறிந்தான். அவன் இன்னுமொரு முறை அவன் காதுகளைப் பொத்தினான். தன் கைகளை சிறிது நேரத்தில் அகற்றி விட்டு,
"இப்போதாவது உங்களால் ஏதாவது கேட்க முடிகிறதா? என்றான்
"இன்னும் ஒரு கிழமைதானே 'பைனல்' சோதனைக்கு இருக்கு.....இப்பவும் சிறுபிள்ளை போல் விளையாடிக்கொண்டு......"

அவனைச் செல்லமாகத் தள்ளினாள் கமலா. அந்த வார்த்தைகளையும் பொறுத்துக் கொண்டான் கணேசன், "கமலா! ஆற்றின் பேரிரைச்சல்-பிரளயஓலம்-உங்களுக்குக் கேட்கவில்லை? உலகமே ஒரு நிமிடத்தில் உருண்விடும் போலத் தோன்றவில்லையா?"
"சரித்திரத்தில் ஹிட்லரின் எழுச்சிக்குரிய காரணங்களை ஆராயச் சொல்லி இந்த முறை கேள்வி வரலாம்" கமலாவுக்குத் தேர்வின் நினைவு.
"அதைப் பற்றி இப்ப என்ன கவலை? சோதனைக்குப் படிப்பதற்கு இரண்டொரு நாள் போதும்." கணேசனிடமிருந்து அசட்டையாக பதில் விழுந்தது கமலா ஆத்திரப்பட்டாள்.
"சோதனை பெயில் விட்டால்.....எங்கள் கல்யாணம்....?" அவனுடைய கையைப் பற்றித் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். கணேசனின் இதழில் லேசான ஏளன முறுவலிப்பொன்று ஊர்ந்தது. மின்னல் வெட்டுக்கள் அடிக்கடி சிதறிப் பரந்தன. அப்போதுதான் ஆரம்பித்த மழைத் து}ற்றல் மின்னல் வெள்ளத்தில் நு}லிழைகளாகத் தொங்கின. பத்து யார்களுக்கு அப்பால் மகாவலிகங்கையின் கலங்கிய கூழ்நீர் தடிகள், மரங்கள் யாவற்றையும் அள்ளிக் கொண்டு இரசை;சலுடன் ஓடியது.

"கமலா ! ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்தால்......அதன் வேகம்......மலைபோன்ற மரங்களையும் யானைகளையும் அடித்துச் சென்றுவிடும். அதுக்கு அவ்வளவு சக்தி. இதே ஆறு காய்ந்து மணலாகக் கிடக்கும் போது......எங்களால் இதன் சக்தியைப் பற்றி கற்பனை செய்யக்கூட முடியாத!"
"மழை து}றுகிறது: நாங்கள் போவமா?.....ஐந்து மணிக்கு வந்தனாங்க.....இப்ப ஏழு மணி இருக்கும்."
........கமலா எழுந்தபடியே கூறினாள். அடுத்து வந்த மின்னல் வெளிச்சத்தில் தன் கைக்கடி காரத்தைப் பார்த்தாள்.
மணி 6-50
எழுந்து நின்று தனது உடைகளைச் சரி செய்தாள். கைப்பையையும் எடுத்துக் கொண்டாள். கைக்குட்டையை எடுத்துக் கொண்டான் கணேசன், சிறிது நேர மௌனம். இருவரும் ஒருவரையொருவர் விளக்க முடியாத பார்வையை நீளவிட்டனர். உலக இச்சைகளில் உயர்ந்த இச்சையின் பேரின்ப நிலையின் சிறு கீற்றல்கள் அந்த உணர்வுக் கலப்பில் அமிழ்ந்து பொங்கி நிறைவுற்றது.
'ஜிம்னாசி'யத்திற்கு செல்லும் கீழ்-மேல் வீதிகளின் சந்திப்பில் மினுங்கிக் கொண்டிருந்த மின்சார விளக்குகள், இவர்கள் இருவரையும் பார்த்து குறும்பாகக் கண்களைச் சிமிட்டின, கீழ் வீதியில் 'ஹில்டா' விடுதியை நோக்கி நடந்து கொண்டிருப்பது ஒரு குகையுள் நடப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. அந்த வீதயின் கிழக்குப் பக்கத்திலிருந்த கருங்கல் அடுக்கு உயரமான சுவர்தான் அதற்கு அத்தகைய தன்மையைக் கொடுக்கிறது போலும்.

கீழ்வீதியின் கருங்கல் சுவர் மறைந்தவுடன் புதியவோர் உலகத்தில் காலடி எடுத்து வைப்பது போன்ற உணர்வுகள் மோதும். பழைய கடந்த உலகம் அடிமனத்தின் இருட்டறைக்குச் சென்று வந்தது போன்ற ஓருணர்வையும் எண்ணத்தையும்தான் தரும்.
'காதலர் பூங்கா'வின் உள்வட்டத்திலிருக்கும் 'சம்மர் ஹவுஸி'ன் கூம்புமுனையும் அதன் இரண்டு அறைகளும் மின்னல் வெள்ளத்தில் இவர்களைப் பார்த்துச் சிரித்தன.
"எங்க யூனிவேசிடி வாழ்க்கை இன்னும் ஒரு மாசம் தான்....... என்ன கமலா?"
அதன் பிறகுகள் எங்க வாழ்க்கையை நினைக்கத் தான் எனக்குப் பயம்........கணேஷ்......." மழைத்து}ற்றல்கள் மாறி மழையின் வேகம் கூடியது பின்னாலிருந்து வந்த கார், வீதியில் வழிந்தோடிக் கொண்டிருந்த மழை நீரை வாரி எறிந்து, அவர்களின் உடைகளை நனைத்து விட்டு ஓடியது. அதன் பின்புறமுள்ள சிவப்பு விளக்குகள் இவர்களைப் பார்த்து முறைத்தன.
"கமலா! ஏன் இண்டைக்கு 'றெயின் கோட்' கொண்டு வரேல்லை....."
"வருகிறபோது மழை வராது போல இருந்தது.-"
ஹில்டா விடுதியின் வராந்தாவின் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாசலில் இருந்து காவல்காரன் பழக்கமானவர்களைக் கண்டும் தனது வேலைக்கே பொருத்தமான விறைப்புடன் பார்வையை நீளவிட்டுக் கொண்டிருந்தான்.
"சுவிற் நைற் டார்லிங்" என்று கைகளை அசைத்துக் கொண்டே, வராந்தா படிகளில் ஏறினாள் கமலா.
"குட் நைற்" என்று விருப்பு வெறுப்பின்றி பதிலுக்குச் சொன்ன கணேசனின் குரல் அவளுக்கு கேட்காமல் அவன் தொண்டைக்குள்ளேயே முனகி இறந்து கொண்டிருந்தது. அது அவளுக்குக் கேட்க நியாயமில்லை. மழை வேகமாகவும் இறுக்கமாகவும் பெய்து கணேசனை செப்பமாக நனைத்துக் கொண்டிருந்தது. கலை மண்டபத்தின் 'பரபட்' சுவரில் ஏறி இருந்து பக்கத்தில் இருந்த விளக்குகளையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

மனிதனின் பழைய சின்னங்களின் எச்சங்கள் பலவும் அவனுக்கு வியப்பைத் தந்தன. து}ண்களின் தலைகள் இரண்டு கவர்களாகக் கிளை விட்டிருந்தன. அதில் கண்ணாடிப் பெட்டிகள் இரண்டு. அவற்றுள்ளே இரண்டு மின்விளக்குகள் பொருத்தப் பட்டிருந்தன. விளக்குகள் பழங்கால புட்டி விளக்குகள் போலத் தோன்றின. ஆனால் உள்ளிருந்தவை இரண்டு மின்விளக்குகள். மழையால் தலைமயிர் கற்றைகளாக நனைந்தது. மழைத் துளிகள் முகத்தில் கோடுகளாக மூக்கு நீளம் ஓடி வளைந்து ஒரு கணம் ஸ்தம்பித்து, பின் மீண்டும் வலுவுடன் அவனுடைய வாயுள் நுழைந்தது. நாக்கால் நக்கிச் சுவைத்தான் உவர்த்தது. அருவருப்புடன் பக்கத்தில் துப்பினான். மழை விட்டும், குளிரும் விறைப்பும் கணேசனை உதறல் அடிக்கச் செய்தது. வீதியோரத்துக் கவர் விளக்குகள் இவனைப் பார்த்துத் தங்கள் கவலைகளைச் சொல்லி, கம்பத்தில் தொற்றி இருந்து அழுது வடிந்து கொண்டிருந்தன.


முடிச்சு

"தில்லை என்னை கதிர்காமம் வரச் சொல்லிச் சொல்லி விட்டிருக்கிறான். அடுத்த வீட்டுச் செல்லத்துரையிடம் காசும் இருபத்தஞ்சு ரூபா குடுத்துச் சொல்லி அனுப்பி இருக்கிறான்."
தாய் பொன்னம்மாவின் குரல் என்றுமில்லாத உற்சாகத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணம்மாவிற்குக் கேட்கப் பரவசம் பொங்கியது. "கடைசிக் காலத்திலாவது கிழவியின் ஆசை நிறைவேறப் போகுது" என்ற எண்ணம் அவளுக்குச் சந்தோஷத்தையும் வியப்பையும் ஒருங்கே கொடுத்தது.
"அப்ப செல்லத்துரை எப்ப போகுதாம்?"
-இடது கண்ணம்மாவின் கேள்வி.
"நாளண்டைக்குப் புதன்கிழமை விடியப்புறம் யாழ்தேவிக்குப் போறதாம் என்னை ஆயுத்தமாக இருக்கச் சொல்லிப் போறான்......."
"நான் என்ன செய்யா எண்டுதான் யோசிச்சுக் கொண்டிருக்கிறன்."
"என்ணை கதிர்காமத்துக்குப் போகவேணும் போகவேணும் எண்டு சொல்லிக் கொண்டு இவ்வளவு காலமும் இருந்த, இப்ப அதுக்குள் யோசிக்கிறனெண்டு சொல்ல வெளிக்கிட்டிற்ற......."

தாய் போகாமல் விடப் போகிறாளாக்கும் என்று நினைத்துக் கொண்ட கண்ணம்மா ஓரளவு ஆத்திரத்துடன் கடிந்து கூறுவது போல கூறினான்.
"இல்லையடி என்ர ஆட்டையும் குட்டிகளையும் கோழிகளையும் தான். என்ன செய்யிறதெண்டு யோசிக்கிறன்."
"அப்படி நீ வர்றவரை நாங்க பாக்க மாட்டா? நீ ஒண்டுக்கும் யோசிக்காமப் போ. இந்தச் சந்தர்ப்பம் இனி எப்ப தான் கிடைக்குமோ இருந்தாப் போலகண்ணை மூடிற்றாலும்....."
பலவற்றையும் நினைத்துக் கூறுபவள் போலக் கூறினாள் கண்ணம்மா.
"நேற்று என்னை முருகன் வந்து வா போவம் என்று கனவிலை சொன்னவன். நான் அப்பவே நினைச்சன்.?"
"தன்னை உண்மையில் முருகன் கூப்பிட்டுத்தான் உள்ளான் என்பதை ஊர்ஜிதப்படுத்தினாள் பொன்னம்மாக் கிழவி. பொன்னம்மாக் கிழவிக்கு வயது அறுபத்தைந்து. அவள் சொந்த ஊரை விட்டு வெளி இடங்களுக்கு வெளிக்கிட்டுச் சென்றதே அருமை. இரண்டொரு முறை நல்லு}ருக்கும் மாவிட்ட புரத்திற்கும் செல்வ சந்நிதிக்கும் போய் வந்துள்ளாள். யாழ்ப்பாணத்தை விட்டு வேறொரு இடமாவது கோயில் குளத்திற்கென்று அவள் சென்றதே இல்லை,அவள் போகாததற்கு வறுமை மட்டும் காரணமல்ல. அவளைக் கூட்டிக் கொண்டு போக அவள் மகன் தில்லைநாதனைத் தவிர வேறொவரும் இல்லை என்பதும் உண்மை.

அவனுக்கோ அவன் சம்பளமும் வாழ்க்கைச் செலவும் சமநிலையில்தான் இருந்து வரும். வந்த மாசமாவது சம்பளத்தில் ஏதாவது மிச்சம் வரமானால் அதே நேரத்தில் செலவும் சம்பளத்தைச் சமநிலைப்படுத்த ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தாயைக் கதிர்காமம் கூட்டிச் செல்ல வேண்டும் என்று பல முறை நினைத்துள்ளான். ஆனால் அவனால் செயல்படுத்தத்தான் முடியவில்லை. தகப்பன் இறந்து மூன்று வருடங்களாகி விட்டன. ஒவ்வொரு வருடமும் 'ஆச்சியைக் கதிர்காமம் கூட்டிக் கொண்டு போக வேண்டும்' என்று எண்ணுவான். ஆனால் ஒவ்வொரு தடவையும் ஏதாவது தடைகள் வரவே செய்யும். அதனால் கதிர்காமம் செல்வதும் தடைப்பட்டுவிடும். இந்த முறை எப்படியாவது தாயைக் கூப்பிட எண்ணி அடுத்தவீட்டு செல்லத்துரையிடம் காசு சொல்லயிருந்தான். தன் வாழ்நாளில் தான் சாகுமுன் கதிர்காமத்தானை ஒருக்காவாவது தரிசித்து விடவேண்டும். இது பொன்னம்மாக் கிழவியின் தணியாத ஆசை, தனது கணவர் உயிருடன் இருக்கும் போது அவள் எத்தனையோ முறை கதிர்காமம் போக வேண்டுமென்று மனதிற்குள் நினைத்திருக்கிறான். அதற்குத் கணவனிடம் பணம் இல்லை என்பதும் அவளுக்குத் தெரியாமலில்லை. எனவே அவள் ஆசைகளும் மனதிற்குள்ளேயே அமுங்கி விடும். திரும்பத் திரும்பத் தலைகாட்டும் நினைவுகளுக்கும் அதே நிலைதான்.

அவளுடைய ஒரே மகன் தில்லைநாதன் தான் அவளுடைய உயிர், நம்பிக்கை அத்தனையும் அவனை வைத்துக் கொண்டு கதிர்காமம் மட்டுமல்ல காசிவரையுமே போய் விடலாம். என்ற நம்பிக்கை அவளிடம் ஆரம்பத்தில் இருந்தது என்னவோ உன்மைதான். ஆனால் எதார்த்தமான வாழ்க்கையை அவள் நேருக்கு நேர் பரிபூரணமாகத் தரிசிக்கத் தொடங்கிய பின் காசி என்ன கதிர்காமம் வரை கூட்டிச் செல்வதற்கே தில்லைநாதனின் பொருளாதாரம் வசதி செய்து கொடுக்காது என்பதை படிப்படியாக உணர்ந்து கொண்டாள்.
'சில வேளை கதிர்காமம் கூட்டிப் போவதற்கு ஏதாவது வழி பிறக்கும்' இது அவள் மனதில் அரும்பாமலும் இருந்ததில்லை. அந்த எண்ணத்தை அவள் தன் மனதிலிருந்து எடுத்து விட ஒருபொழுதும் விரும்பியதில்லை. தில்லைநாதன் ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும், 'பொருளாதாரம் இடம் கொடுத்தால்' என்ற ஆசையால் அவனைக் கேட்காமல் கேட்டதுண்டு.

இந்த முறை உண்மையாகவே கதிர்காமம் போய்விட முடியும். அந்தக் காலமும் கைகூடி விட்டது என்பதை நினைக்கும் போது பொன்னம்மாக் கிழவி தான் கனவில் நடப்பதாகவே நினைத்துக் கொண்டாள். கதிர்காமம் போய்வீட்டு வந்து விட்டது போலவும்கூட இடைக்கிடை பிரமை தட்டியது. போகத்தான் போகிறோம் என்பதை நினைக்கும்போது அவளால் அதை நம்ப முடியாமல் யோசித்த இடத்திலேயே நின்று ஆற அமர யோசிக்கவும் தொடங்கி விடுவான். பொன்னம்மாக் கிழவி கதிர்காமம் போகிறாள். அவளுடைய மகன் தில்லைநாதன் வரச்சொல்லிக் காசும் கொடுத்து விட்டிருக்கிறான் என்ற கதை அந்தப் பகுதியில் உள்ளவர்களுடைய காதில் தொங்கிக் கொண்டு விட்டது. பொன்னம்மாக் கிழவியை காண்பவர்கள் "எப்பவணை போற" என்ற கேள்வியைக் கேட்க மறப்பதில்லை. "தீர்த்தமும் முடிச்சு ஆடிவேலையும் பார்த்துக் கொண்டா வருவ?"
-போக ஆசைப்பட்டவர்கள் சிலரின் கேள்வி இது.

"தீத்தம் எடுத்தால் இடும்பன் பூசை கொடுக்க வேணுமே, நாங்க போய் வந்தபோது கொடுத்தனாங்க" என்று தாங்களும் போனவர்கள் என்பதைப் பிரசித்தப்படுத்திக் கொண்டார்கள் இன்னும் சிலர். பொன்னம்மாக் கிழவிக்கு மட்டும் யாவும் கனவில் நடப்பன போலத்தான் இன்னும் தோன்றிக் கொண்டிருந்தன.
"கதிர்காமம் போய் மாணிக்க கங்கையில் முழுகும் போது..........."
"கதிரமலையில் ஏறும்போது வழுக்கி விழுந்திட்டா..........."
"கதிர்காமத்தைச் சுற்றியுள்ள காட்டில சிங்கம், புலி, கரடி இருக்கிறதாமே"
"கன காலத்துக்கு முன்னம் எங்க ஊரான் யாரோ, சன நெரிசலுக்குள்ள தவறுண்டு காணாமல் போய் விட்டானாமே?"

பொன்னம்மாக் கிழவி எல்லாவற்றையும் ஒன்றாகவும் தனித் தனியாகவும் நினைத்துப் பார்க்கிறாள். அவள் மனதில் எல்லா நிகழ்ச்சிகளுமே நீண்டு கொண்டு செல்கின்றன. அவளால் சில வேளை எதையும் நிதானித்துச் சரிவர சிந்திக்க முடியவில்லை. கதிர்காமம் போய்விட்டு வந்துவிட்டோமா என்ற பிரமை சில வேளைகளிலும், போனால் திரும்பி வர முடியுமா என்ற பயம் சில வேளைகளிலும் வந்து அவளுடைய மனதில் அலைமோதிக் கொண்டே இருந்தன. அவள் தன் வீட்டை விட்டு ஏழு எட்டு நாட்கள் கதிர்காமம் போய்த் தங்கி வந்தால்....? அவளுடைய முட்டை இடும் கோழிகள் இரண்டையும் குட்டி போட்டு நிற்கும் ஆட்டையும் யோசித்தாள் பொன்னம்மாக் கிழவி. திரும்ப ஆடு கோழி இரண்டிலுமே அவள் நினைவுகள் சுழன்று திரும்பவும் அதே இடத்திலேயே வந்து மொய்த்துக் கொள்கின்றன. விடியற்புறம் நாலுமணிக்கு வெளிக்கிட்டுக் கொண்டு ஆயத்தமாக வரச் சொல்லிப் போயிருந்தான் செல்லத்துரை. தன்னிடமிருந்த இரண்டு சேலைகளில் ஒற்றைக் கட்டுவதற்காகவும் மற்றதைக் கொண்டுபோவதற்காகவும் எடுத்து வைத்துக்கொண்டாள். மகள் கண்ணம்மாவிடம் நாளை விடியப் போவதாகவும் சொல்லிவிட்டு வந்து படுத்துக் கொண்ட பொன்னம்மாக் கிழவிக்கு முதலாம் சேவல் கூவியும் கூட நித்திரை செய்வது அசாத்தியமாக இருந்தது.
விளக்கைக் கொளுத்தி வைத்துக் கொண்டு தலைமாட்டில் இருந்த சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு படுத்தாள். பலவித எண்ணங்கள் குறுக்கு மறுக்காக ஓடிக் கொண்டிருந்தன. ஒன்றிலும் தெளிவில்லை. ஒவ்வொரு எண்ணமும் கட்டுக்கடங்காமல், சேர்த்துக் கோர்க்க முடியாமல் ஓடிக் கொண்டே இருந்தன. குட்டிபோட்ட ஆடு குழையுமில்லாமல் சுற்றிக் கொண்டு அடுத்த வளவு நீளம் சென்று கொண்டிருக்கிறது. முட்டை இடும் கோழி அடுத்த வீட்டுப் போறணைக்குள் முட்டை இடுகிறது.
"நாளைக்கா கதிர்காமம் போற, எணை தீத்தம் இண்டைக் கெல்லாம்........"
எல்லாம் அவள் முன் காட்சிகளாக விரிந்து கொண்டுஇருந்தன. கதிர்காமக கந்தன் வள்ளி தெய்வானை சகிதம் மயிலில் இருந்து ஊர்வதாகக் கூட ஏதோ ஒரு நினைவு வந்து அலைமோதியது. கண்ணம்மா அரிக்கன் லாம்புடன் தன் வீட்டிலிருந்து வந்து "ஆச்சி ஆச்சி" என்று இரண்டுதரம் கூப்பிட்ட பின் தான் பொன்னம்மாக் கிழவி தன் சுயநினைவை மீட்டுக் கொண்டாள். சுருட்டில் இருந்து உதிர்ந்த சாம்பல் பாயில் நிறைந்து காணப்பட்டது.
"என்ன ஆச்சி என்னம் வெளிக்கிடேல்லையாம் விடிஞ்சு போச்சு. செல்லத்துரை போய் விடப் போறானே?" ஆச்சியினுடைய தீவிரமான யோசனையை உணர்ந்து கொண்டாள் கண்ணம்மா.
"நான் போககேல்ல........"
"ஏன்........?"
"கதிர்காமத்தான் அழைக்கேல்ல......"
"என்னண விசர்க்கதை கதைக்கிற.... அதை விட்டிட்டு எழும்பி வெளிக்கிடு........." துரிதப்படுத்தினாள் கண்ணம்மா.
"நான் போகவில்லை. என்ர ஆட்டையும் கோழியையும் விட்டிட்டு என்னால் போக முடியாது. அதை ஆருபாக்கிறது?"
சாதாரணமாக, ஆனால் பிடிவாதமாகச் கூறினாள் பொன்னமாக் கிழவி.


சிறை

ஆட்டுப் புழுக்கைகளை துவாயால் உதறித் தட்டினார். நிறைந்து காணப்பட்ட புழுக்கைகளும் து}சியும் அவரின் மனம் போல் மேலெழுந்து சிதறி ஓடி சீமெந்துத் தரை விளிம்பால் வழிந்தன. துவாயை விரித்தார். "அப்பனே முருகா".... என்ற வழமையான பல்லவியுடன் தன் உடலை மெதுவாக இருத்திச் சாய்ந்து படுத்துக் கொண்டார். பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. வெயில் வெப்பத்தை இழந்திருந்தது. கதிரவனும் இளைத்து விட்டான் போலும். கொழும்பின் சொகுசான வாழ்க்கையில் திளைத்து வெறுத்துப் போனவர் சம்பந்தர். கண்ணகை அம்மன் கோவில் மடத்தின் இயற்கையான குளிர்ச்சி அவரை அவ்விடத்திற்கு இழுத்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே அவ்விடத்தைத் தொழில் காரணமாக விட்டுச் சென்றவர் கொழும்பிலேயே குடித்தனம் அமைத்துக் கொண்டார்.

கண்ணகை அம்மன் நீலக்கடலின் அருகில் அமைந்திருக்கும் அமைதி-தீர்த்தக் கடலும் சங்கழித்துக் கொள்வது, தீர்த்தக் குளத்திற்கும் கோவிலுக்கும் இடையிலுள்ள யாரோ புண்ணியவாளனால் நேர்த்திக் கடனுக்காகக் கட்டப்பட்ட சுவர்களற்ற மடம், மடத்துள் இதமாக எந்நேரமும் வீசிக் கொண்டிருக்கும் கடற்காற்று; சீமெந்துத் தரையில் துவாய்த்துண்டை விரித்துப் படுத்தால் ஏற்படும் சீமெந்துத் தரையின் குளிர்ச்சி; இதம் கலந்து ஏகாந்தநிலை; சுயத்தை மறந்தநிலையில் சிறிது நேரத் து}க்கம். இவை சொர்க்க சுகானுபவம். இவை அந்த மடத்திற்கும் காற்றுக்கும் உண்டு. தனிமையையும், சுகத்தையும் விரும்பிய போதெல்லாம் இவற்றை நினைத்து ஒரு வெறுமையான இழப்பு உணர்வே அவருள் மேலோங்கும். அதனால் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அந்த மடத்தைத் தரிசித்து அந்தச் சுகங்களை அனுபவிக்கத் தவற மாட்டார். புரண்டு புரண்டு படுத்தார். வியர்வை தோளுக்குள் உருண்டு அருவருப்பைத் தந்தது. காற்றின்றி நிர்ச்சலனமாக இருந்தாலும் வியர்க்காத அவ்விடத்தில் வியர்வை கோடு கிழித்து உப்பிப் போயிருந்த சிறுவயிற்றால் வழிந்தது. கட்டியிருந்த வேட்டியின் வயிற்றுப் பக்கம் நனைந்து விட்டது. சூ...சூ....என்று பிதற்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். இடையில் எங்கிருந்தோ வந்த கொன்னைச்சன் முதுகில் வந்து குந்திற்று. சொகுசாக இருந்து வளர்ந்த அவரின் உடலின் மென்மையான தோலில் கொன்னைச்சனின் ஊசிக்கால்கள் சுளீரென்று தைத்தன. ஓங்கி அறைந்தார். முதுகு விறைத்து உறைத்தது; கொன்னைச்சன் தப்பிவிட்டது. துவாய்த் துண்டை எடுத்து காற்றுக்காக விசுக்கினார். அப்பொழுதும் புழுக்கம் குறையவில்லை. நான்கு நாள் விடுமுறையில் வந்தவர் அன்று மாலையே வெளிக்கிட்டு விடலாமா என்று சிந்தித்தார். அந் நேரம் கோவிலின் மேற்கு வீதியால் மணலாய் இருந்ததால் ஓட முடியாமல் இறங்கி சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார் சோமசுந்தர ஐயர் புதிதாக இழுத்து வைக்கப்பட்டிருந்த திருநீற்றுக் குறிகள் 'ஹாண்டிலி'ல் தொங்கிக் கொண்டிருந்த பூக்கூடை, அதற்குள்ளிருந்து முளித்துக் கொண்டிருந்த மூன்று வாழைப்பழங்கள், மாலை நேரப் பூசைக்குக் கோரியாவடியிலுள்ள ஐயனார் கோவிலுக்கு வெளிக்கிட்டு விட்டார் என்பதைக் காட்டின.

"என்ன சம்பந்தர்...........காற்று வேண்டிறிங்களோ........."
"வாங்கையா, பின்னேரப் பூசைக்கு வெளிக்கிட்டாச்சு போல இருக்கு."
-மரியாதையுடன் எழுந்து கொண்டார் சம்பந்தர். "ஐயனார் கோவிலுக்குப் போக வேணும். என்னம் நேரம் இருக்கு. இந்த மணலுக்குள்ள சயிக்கிள் ஓட முடியாது."
"இன்டைக்குத் காத்துமில்லை. ஒரே புழுக்கம்."
-பூணு}லைத் து}க்கிக்கொண்டு தோளில் கிடந்த துண்டால் துடைத்துக் கொள்கிறார்.
"என்னய்யா நம்ம ஊரில்...... அதுவும் இந்த கடக்கரையில காற்றே இல்லாமல் போய் விட்டதே."
சம்பந்தர் தனது துவாயைச் சுழற்றி விசுக்கிக் கொள்கிறார். ஊரும் அவரது மனமும் ஒரு நிலைப்படாது பல சாபங்கள் விளைந்த பூமி போல குழப்பமாக இருந்தன.
"அவ்வளவுக்கு நம்ம ஊர் கெட்டுப் போயிட்டு சம்பந்தர் இது கலிகாலமெல்லவோ, ஊர் கெட்டால் காற்றும் மழையும் இல்லாமத்தானே போம்.......... உமக்கு ஊர் நடப்புத் தெரியுமோ. நம்ம ஊரிலை சில பெடியங்கள்......
படிச்சவங்களா.........சீ..........சீ.......... ஒரே மோசம். அவங்கத்தான் உருப்படாமல் போனாலும் இங்கயுள்ள வால்ப்பெடியளையும் சேத்தண்டு......... என்னவெல்லாமோ செய்யிருங்கள். அப்ப ஊர் கெடாம என்ன செய்யும்."
ஊர் நடப்புக்களை ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார் சமபந்தர் "உங்கட காலத்தில் இந்த ஊரில் இப்படி எல்லாம் நடந்திருக்குமா. இல்லை நடந்திருக்க உங்கப்பர் விட்டிருப்பாரோ. உங்கட அப்பர் விதானையாரா இருந்த காலத்திலை இப்படி யாராவது தலையைக் காட்டேலுமா? காட்டினா அவங்களை ஊரோட வாழவிட்டிருப்பாரா? அவர் கையிலை பொலிசென்ன, எடுபிடி ஆக்களென்ன, இப்படியானங்களை வன்னிக்கும் கிளிநொச்சிக்கும் பிடிச்சு அனுப்பி இருப்பாரே, சும்மாவா விட்டிருப்பார். அவர் நினைச்சதெல்லாம் செய்தாரே.... இப்ப அப்படி எல்லாம் செய்ய ஆர் இருக்கீனம், அப்பிடி யாரால் செய்ய முடியுது........."

தன் தகப்பனார் செய்த அட்டகாசங்கள், ஏற்றுமதிகள் போன்ற கரும வினைகள்தான் தங்களை சீராகச் சிறப்பாக வாழ விடவில்லை என்பதும் இந்தக் கிராமத்தை விட்டே தன்னைக் கலைத்தது என்பதும் சம்பந்தரின் எண்ணம்.
".......இந்தக் காலத்துப் பெடியங்கள் அவர் இருந்தா தலைநீட்டி இருப்பாங்களா. ஊர் பேர் தெரியாதங்கள்..... தாய் தகப்பன் யார் சரியாச் சொல்லத் தெரியாதங்கள்...... ஏதோ படிச்சவங்களாம்........படிச்சதெண்டாப் போல எல்லாம் தெரிந்தவங்களாகப் போயிட்டாங்களா..... ஊரோட ஒத்துப் போகாட்டி படிச்சுதான் என்ன பிரயோசனம்." இங்குள்ள பெரிய மனிதர்கள் எல்லாம் பட்டணம் சென்றவுடன் அனைவருடனும் சமமாகப் பழகுவதால்தான் ஊரோட ஒத்துப் போகிறபடியால்தான்-அவர்கள் கொழும்பிலும் சரி இங்கும் சரி பெரிய மனிதர்களாக வாழுகிறார்கள் என்பதை நினைத்துக் கொள்கிறார் சம்பந்தர்.
"இல்லை சம்பந்தர் இவங்கள் உருப்படுவாங்களா.....இவங்களுக்கு வேற வேல இல்லாட்டி தோட்டம் துவரவாவது செய்யிறதுதானே; நம்ம வாத்தியார் படிப்பிச்சுக் கொண்டு தோட்டம் செய்யேல்லையா. இவங்களுக்கு பிளைக்கிறப் வழி தெரிஞ்சாத்தானே. இவங்கள் என்னடா எண்டா கூட்டம், நாடகம் அப்பிடி இப்படி எண்டு செய்ய வெளிக்கிட்டு பிறகு கூட்டுப் பிரார்த்தனை தியானம் எண்டு செய்தாங்க........ சரி, ஏதோ செய்யிறாங்கள் எண்டு சும்மா இருந்தா கடைசியில ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு மனிசரையுமல்லோ கடிக்க வந்திண்டாங்கள்......

பறையரைக் கோயிவுக்க விடவேணும். பொதுக் கிணறுகளிலை தண்ணி அள்ள விடவேணும் எண்டெல்லோ வெளிக்கிட்டாங்கள். அவங்கள் தெய்வத்தோட மோத வெளிக்கிட்டாங்கள். இப்ப நிண்டு முளிக்கிறாங்கள். தெய்வத்தோட மோதினா அப்படித்தான். முதலில் தங்களோட என்னையும் சேர்த்துக் கொண்டு புத்திசாலித்தனமாக நடக்கிறதாக எண்ணிக் கொண்டாங்கள். நானும் அவயின்ர நோக்கம் தெரியாத மாதிரி நானுங்கூட, நானுங்கூட எண்டு நிண்டன். கடைசியிலை என்னையும் தங்கட கட்சி என்று சொல்லத் தொடங்கீற்றாங்கள். நான் பாத்தன்? வெள்ளாளங்கள் எல்லாம் என்னை 'பேய்ப்பிராமணிக்கும் புத்தி கெட்டுப் போச்சு' எண்டெல்லோ சொல்ல தொடங்கீற்றாங்க. இந்தக் காலத்துப் பெடியளை எதிர்த்துக் கொண்டு ஒண்டும் செய்ய ஏலாது. அவங்களோட ஒட்டித்தான் விழுத்த வேணும் எண்டு நிண்டன். விசயம் பிழைச்சுப் போக, நான் எங்கட கோயில் முதலாளி தங்கரெத்தினத்தைப் பிடிச்சன். அவனும் சும்மா தானே நிக்கிறான். அவனுக்கு இப்பிடியான நேரங்களிலை யாரப் புடிச்சு எப்படிக் கறக்க வேணும் எண்டு நல்லாத் தெரியும். பஞ்சாயத்தாரைப் புடிச்சு கைக்குளைப் போட்டான். பஞ்சாயத்தாரும் தருமசிந்தனை உள்ளவ. கோயில் குளமெண்டா பாத்துப் பாக்காமச் செலவளிப்பினம். எந்தக் காரியத்தைப் பாக்க வெளிக்கிட்டாலும் முன்னுக்குப் பின்னுக்கு யோசிக்க மாட்டாங்க. காசு பணம் எண்டும் பாக்காமைச் செலவளிச்சாங்கள். அவன இவனப் புடிச்சுப் பெரியவங்கள எல்லாம் கண்டினம்........
.....ஒரு வெள்ளிக்கிழமை, பெடியள் பொதுக் கிணறுகளில பறயரைத் தண்ணி அள்ள விடாட்டி காளி கோயிலில உண்ணா விரதம் இருக்கப் போறதா அறிவிச்சாங்க. இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிச்சு பெடியளுக்கு நல்லாப் பளக்க வேணும் எண்டு யோசிச்சாங்க. பணத்தின்ர அரும பெருமகளை இந்தப் பெடியளுக்குத் தெரியுமோ..... பணம் பாதாளம் மட்டும் பாயுமே. காளி கோயிலில உண்ணா விரதம் செய்து கொண்டு படுத்துக் கிடந்தினம். இரவோடிரவாக ஜீப்பிலை வந்து நல்ல அடி கொடுத்து அள்ளிக் கொண்டு போயிட்டாங்க. ரெண்டு பொடியள்தான். அதிலை அவன் மணியத்தின்ரை கடைசிப் பொடியனும் ஒரு ஆள். நல்ல பெடியனாக இருந்தவன் இவங்களோட சேந்து கெட்டே போயிற்றான். நல்லாப் படிச்ச பெடியன். அவன் தேவாரம் படிச்சா பஜனை செய்தா பொம்பளையள் எல்லாம் கண்ணீர் வடிப்பினம். அழுதபிள்ளையும் வாய் மூடும் அவனுக்கு நல்ல அடி. மற்றவர்தான் கண்ணாடிக்காரன்-கண்ணாடியும் உடைஞ்சு போச்சு. நல்லா வாங்கு வாங்கெண்டு வாங்கீற்றாங்க. சும்மா விடுவாங்களா.......காளி கோயிலில இரவு பன்னிரன்டு மணிக்கு அதுவும் இந்த ஊரடங்குச் சட்ட நேரத்தில.....உண்டியல் பெட்டியெல்லாம் இருக்கு.....உடைச்சு எடுக்க வந்திருக்கலாம்தானே. நல்ல வடிவாச் சோடிச்சு ஆக்களைப் புடிச்சு இரவோடிரவாக ஜீப்பிலை ஏத்திக் கொண்டு போயிட்டங்க. வாரப்பாடான அடி.... தலையால ரெத்தமும் ஓடி இருந்தது. காலைமப் பூசைக்குப் போன போதுதான் கண்டன். கோவில் முழுக்க இரத்தம். இவர்கள் செய்த அடாத்துக்கு காளி ரெத்தப் பலி எடுத்திருக்கிறாள். காளிகோயிலை இவள் விசரியைக் கொண்டுதான். கழுவினான்......

.......அப்பத்தான் இந்த முள்ளுவேலியள் எல்லாம் போட்;டது எவ்வளவு செலவு போயிருக்கும் எண்டு நினைக்கிறீங்க. எல்லாம் இந்த பஞ்சாயத்தார செலவுதான். சம்பந்தர் எதுவித பதிலும் சொல்லாமல் நட்ட கட்டையாய் நின்றார். இவங்கள் பறயருக்குத் தண்ணி கொடுக்கச் சொல்லி கேட்டாங்கள். இவ்வளவு காலமும் பறையருக்குத் தண்ணி கொடுக்கேல்லையா. தண்ணி கேட்டாலும் பரவாயில்லை. தண்ணி அள்ளவும் விட வேணுமாம். எப்படி இருக்குது ஞாயம். கவண்மேன்ட் ஏஜண்ட் எல்லாரும் வந்து கேட்டினம் பறையருக்குத் தண்ணி கொடுக்க விட வேணும் எண்டு. நாங்களும் ஓம் தண்ணி அள்ள விடுவம். ஆனால் கோயில் கிணறுகளிலை நாலைந்து கோவில் பூசைக்குப் பாவிக்கிறது. அதிலை தண்ணி எடுக்கேலாது எண்டு சொல்லி அந்தக் கிணறுகளையும் முள் வேலியளால அடச்சுப் போட்டம். கவண்மேன்ட் ஏஜெண்டும் நம்பி சரி எண்டு சொல்லிற்றார். இந்த நேரத்தில நம்ம தனாதிகாரியைத்தான் மெச்ச வேணும். ஒரு காரியத்தைச் செய்ய வெளிக்கிட்டா அவருக்கு நித்திரை வராது. தன்ர காசா கோயில் காசா எண்டும் பாக்காமச் செலவளிப்பார். அவங்கள் இவங்கள் எண்டு புடிச்சு காசைக் காசெண்டு பாராமச் செலவளிச்சபடியால இவங்கள் இவ்வளவுத்தோட அமத்த முடிஞ்சுது. உண்மையில இத்த வெற்றி அவருக்குத்தான். அத்தோடை நம்ம வாத்தியார் நிருவாகம் எல்லாம் நல்லா பாடுபட்டுது. இந்தக் கம்பி வேலி எல்லாம் இவ்வளவு உயரத்தக்கு அடிச்சதும் நல்லாத்தான் போச்சு. இப்ப ஒரு பேய் பிசாசு குஞ்சு குருமான் ஒண்டும் நுளையேலாது.
சம்பந்தருக்கு உலகமே சுற்றியது.

"நானும் நெடுகக் கதைச்சண்டு இருந்திற்றன். நல்லா நேரம் போச்சு. இனி கோரியாவடிக்குப் போக வேணும் அப்பர் சம்பந்தர் எப்ப பயணம்?" சைக்கிளை உருட்டிக் கொண்டே கேட்டார்.
"நாளைக்கு காலம் யாழ்தேவியலை போயிற்றா நல்லது போலத் தெரியுது.........."

இவ்வளவு நேரமும் ஐயர் சொன்ன கதைகளை நின்று கொண்டே கேட்டுக் கொண்டிருந்த சம்பந்தருடைய கால்கள் விறைத்து கால்களை நிலத்தில் பாவ விடாமல் விறைத்து உலுப்பித் தடுமாற்றியது. தலையும் கால்களும் சேர்ந்து விறைத்துக் கொண்டு வருவது போல இருந்தது. தலையைக் தலையைக் கையால் பிடித்துக் கொண்டார். தீர்த்தக் குள மடத்தில் தெற்கு நோக்கி உட்கார்ந்தார். கடல் அவலத்துடன் இரைந்து கொண்டிருந்தது. தீர்த்தக் குளத்துடன் சங்கமித்து வீறு கொண்டு கோபத்துடன் இரைந்தது. கோவிலையும் அதனுள்ளிருக்கும் கடவுளர்களையும் தன்னையும் ஒரு முறை நினைத்துக் கொண்டார். தீடீரென்று உயர்ந்த முள் வேலிகளைப் பார்க்கும் போது சிறைக்குள் இருப்பது போல் தோன்றியது. வயிற்றை வண்டரிப்பது போலத் தோற்றவே முள்ளிப் பற்றைகளை நோக்கிச் சென்றார் இடையில் முள்வேலி தடையாகச் சிறைப்படுத்தியது. எல்லாவற்றையும் உடைத்தெறிந்து சுதந்திரம் பெற அவர் மனம் துடித்தது. எங்கிருந்தோ மீண்டும் வந்து முதுகில் உறைப்பாகக் குத்திய பழைய கொன்னைச்சனை ஓங்கி அடித்தார். கோவில் மணி பின்னால் நாராசமாக ஒலித்தது. மணியின் முன்னைய இனிமையோ ஒலியோ இப்போ இல்லை. அவலமாக ஓங்கி அலறியது.

கோபம்

"இது என்ன நண்டு.....ஒரே நாத்தம். இதை ஏன் வாங்கி வந்தனீங்க..... என்ன விலை?" நண்டுப் பார்சலைப் பிரித்துக் கொண்டே கேட்டாள் லெட்சுமி.
"ரெண்டு ரூபாய்...... அதெல்லாம் உமக்கென்னத்துக்கு......?" கேள்வி ஏன் கேட்கிறாய் என்ற தோரணையில், பதில்-கேள்வி இரண்டையும் விடையாகப் போட்டான் சந்திரன்.

"ரெண்டு ரூபாய்க்கு இதை என்னத்துக்கு....... ஒரு ரூபாய் கூடப் பெறாது. மினக்கெட்டுப் போய் நாத்தல் நண்டை....... அதுவும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி விந்திருக்கியள்....... நீங்கதான் எல்லாத்தையும் சாப்பிட வேணும்."
நண்டை விரும்பிச் சாப்பிடுபவள் என்று ஆசையுடன் வாங்கி வந்தான். ஏதாவது மதிப்பாகச் சொல்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு, இவ்வளவு அர்ச்சனை கிடைத்ததும் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. சிரமத்துடன் அதனை அடக்கிக் கொண்டான்.
"காலம் ரெண்டு ரூபாக்கு மீனும் வாங்கியிருக்கு..... அதுக்குள்ளை நண்டும்..... எல்லாத்தையும் யார் சாப்பிடுகிறதோ எனக்குத் தெரியாது......"
இன்னுமொரு கறி வைப்பதற்குப் 'பஞ்சி'ப்பட்டோ என்னவோ எரிச்சலுடன் இரைந்து கொண்டு நண்டைக் கழுவத் தொடங்கினாள். திரும்ப ஒரே பல்லவியைப் பாடுவதைக் கேட்ட சந்திரனுக்கு எரிச்சலாக இருந்தது.

"சரி சரி நான் சாப்பிடுறேன். புறுபுறுக்காமக் கழுவும்...."

அவன் கோபத்தை எப்பிடி அடக்குவதென்றே பழகிக் கொள்ளாதவன். கோபம் வந்தால் ஒரே கொட்டாகக் கவிட்டுக் கொட்டுவதையே வழக்கமாக்கிக் கொண்டவன். இது அவனுடைய ஆச்சிக்கு நன்றாகத் தெரிந்த சங்கதி. அதனால் எப்பொழுதாவது அவன் எரிச்சலாக இருந்தால் எதுவும் பேசாமல் இருந்து விடுவாள், ஆச்சி, லெட்சுமியோ அந்தத் தன்மையை இதுவரை - கல்யாணம் முடித்து ஆறுமாதமாகியும் - புரிந்து கொள்ள மறுக்கிறாள். புரிந்து கொண்டாலும் ஏறு மாறாகப் பேசி எரிச்சலைக் கூட்டி விடுகிறாள். ஆரம்பத்தில் தாயுடன் எரிந்து விழுவது போல லெட்சுமியுடனும் எரிந்து விழுந்தான். எவ்வளவு நாள் ஏசுவது. அடித்தாலோ, ஏசினாலோ மனக் கஷ்டம் அவனுக்குத்தான் என்பதைத் தெரிந்து கொண்ட அவன் தனக்குக் கோபம் வருவது நியாயமா? என்ற காரண காரியங்களில் இறங்கிச் சுய விசாரணையில் ஈடுபட்டு விடுகிறான்.
"ஒரே சிதவல். ஒரு சதம் பெறாது. ஏமாந்த சோனகிரியாக வாங்கிக் கொண்டு வந்து....சீ.....சீ.....புழுத்த சவ நாத்தம்." சிதவல் தண்ணீர் அவளின் முகத்தில் தெறிக்கவே அவளுக்குக் கோபம் அதிகரித்தது. கழுவிய நண்டை அப்படியே முற்றத்தில் வைத்துவிட்டு எழுந்து விட்டாள். எல்லாவற்றையும் கவனித்தும் கவனிக்காதது போலப் பேசாமல் இருத்தான் சந்திரன். அவனுக்கு, தான் வாங்கி வந்தது கூடாது என்ற காரணத்தால் இதுவரை பொறுமையாய் இருந்தது நியாயமாகப்பட்டது. இனிமேல் பொறுமையாயிருப்பது நியாயமில்லைபோலத் தோன்றியது.
"அப்ப நண்டை ஊத்த வாளிக்குள் எறியவா?"

முருங்கை மரத்திலிருந்து காவல் காத்துக் கொண்டிருந்தகாகம் ஒரு நண்டை அலாக்காகத் து}க்கிக் கொண்டு சென்றது. சந்திரனுடைய கோபம் எல்லை மீறி பீறிட்டது.
"சீ, சனியனே எவ்வளவு பாடுபட்டு மினக்கெட்டு, மாக்கெற்றுக்குப் போய் நண்டு வாங்கி வந்தா....... இவ்வளவு பேச்சா.... நண்டு நண்டு எண்டு எந்நேரமும் நச்சரிக்கிறது.... வாங்கி வந்தது காகத்திற்கும் நாய்க்கும் போடிறதுக்கா?"
அவன் எரிச்சலுடன் நண்டைக் கொட்டுவதற்காக து}க்கும் பொழுது சட்டியுடன் பறித்துக் கொண்டு உள்ளே போனாள் லெட்சுமி
"நண்டு வேணாம், நாத்தல் எண்டு சொல்லிப் போட்டு...... ஏன் உள்ளுக்க கொண்டு போய் வைக்கிறீர்......"
"எல்லாம் உங்களுக்காகத்தான். எல்லாத்தையும் உங்களுக்கே சமைத்துப் போடுறன். சாப்பிட்டுத் துலையுங்கோ. எனக்கு ஒண்டும் வேணாம்."
நண்டை யார் சாப்பிடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். கோபம் வந்தது. ஆனால் இப்போ அடக்குவதற்கு பழகி இருந்தான் - இல்லை பழக்கப்பட்டு இருந்தான் அவன்.

மலடுகள்

"கலியாணம் கட்டி ரெண்டு வருசமாச்சு..... அதுகளும் தனியனுகளா...... பூச்சி புழுக்கள் ஒண்டும் இல்லாம, பிள்ளையளும் நல்லா மெலிஞ்சு போகுதுகள். அதுகளுக்கு கவலை போல..... நானும் நேராத நேத்தி இல்லை. அவனுக்கும் கடவுள் கிடவுள்ளை நம்பிக்கையும் இல்லாம இருக்கு. ஏதாவது கோயில் குளத்துக்கு கூட்டி எண்டாலும் போறானா....'ஆச்சி...... கடவுள் இருக்கு ...... இல்லை எண்டதிலும் பார்க்க நடக்கிறது தான் நடக்கும்...' எண்டு சொல்லி என்ர வாயைப் பொத்திப் போடுறான். என்னாலை என்னத்தைச் செய்யயேலும். இந்தக் காலத்துப் பொடியள் சொல்வழி கேக்குதுகளே. ம் ம்..... நான் என்னத்த மேனை சொல்ல....... அதுகள் நடக்கிற மாதிரி நடந்திட்டுப் போகுதுகள். எங்களுக்கெல்லோ கவலையாயிருக்கு....."

சந்திரனின் தாயாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமி "எங்கயாவது நல்ல டொக்டரைப் போய்ப் பாத்தா..... நல்ல மருந்து கொடுத்து என்ன விசயம் எண்டு கண்டுபிடிச்சிடு வாங்க. எல்லாம் சரியாய்ப் போய்விடும். அவள் சரோசாவும் இப்படித்தான் ஐஞ்சு வருசமா பிள்ளை குட்டி இல்லாமை இருந்து, யாழ்ப்பாணத்தில இதுக்கெண்டு படிச்சுப் போட்டு வந்த டொக்டரைச் சந்திச்சு..... இப்ப ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்து ஒரு வருசமாகேல்ல, அதுக்குள்ள அடுத்ததும் சனிச் சுப போச்சு."
"ம் ம்.... தங்கச்சி இவனைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனன். நான் ஏதாவது சொன்னா எரிஞ்சு விழறான், சும்மா இராச்சி..... அது ஒண்டு இல்லாததுதான் குறை..... என்கிறான்."
"அதுகளுக்கும் செலவுக்கு கஷ்டம்தான்..... அதுக்காக செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டாமா.... பட்டினி கிடக்கலாம்..... பிள்ளைக்குட்டி இல்லாம இருக்கேலுமா....? இல்லை.... அது நல்லதா. பணம் இண்டைக்கு வரும் நாளைக்கு போகும். இதெல்லாம் இப்படியான பொருளா..... இதைப்பற்றி மருமகளிட்டை சொல்றதுதானே."
"அதிட்டை நான் எப்படிச் சொல்றது.... அதுவும் இவன் சொல்றதுக்கெல்லாம் ஆமாப் போட்டண்டு..... வளத்த நாய் மாதிரி அவனைச் சுத்திச் சுத்தி வருகுது..... இல்லை.... நான் சொல்றதும் ஞாயமோ.... நான் கிழவி சொல்றது அதுகளுக்கு காதிலதான் ஏறுதோ."
"அப்ப நல்ல சந்தர்ப்பம் வரேக்கை அவவிட்ட நான் சொல்லிப் பாக்கிறன். எல்லாம் நடக்கிற மாதிரி நடக்கும்."
"அவள் மாரிமுத்துவின்ரை டாக்குத்தர் பெடியனுக்கே மூண்டு வருசம் கழிச்சுத்தானே ஒரு ஆம்புளைப் புள்ளி பிறந்தது. அதோடை பிள்ளையளே இல்லை. அவனும் இவனும் நல்ல சிநேகிதம். அவனும் இங்கை அடிக்கடி வருவான். அவனிட்டையும் இவனைப் பற்றிச் சொல்லிப் பார்த்தன். இப்ப ஏன் அவசரப்படுறீங்க..... ஒரு அஞ்சாறு வருசம் போகட்டன் எண்டெல்லோ சொல்றான். அதுகள் நினைக்குதுகள் இது கடையில் வாங்கிற சரக்கு எண்டு. எல்லாம் தங்கடை கைக்குள்ளதான் இருக்கெண்டு...."
"எல்லாம் தங்கடை மூப்பில நடக்குதுகள்... நாங்க என்ன செய்யிறது?"
'ம்ம்.....இந்த காலத்தில எங்கட காலத்தப்போலயா.... ஒண்டு இரண்டுக்கு மேலை பெறுகுதுகளா..... அந்தக் காத்திலை ஆரு கூடப் பெறுகுதுகளா அதுகளுக்குத்தான் மதிப்பும் மரியாதையும்.... அவையள்தான் பின்னடிக்கு ஏதும் கஷ்டம் இல்லாம நல்லா இருக்குதுகள்....நாலிலை ஒண்டாவது நல்லா வராதா... ம்ம்..... எல்லாம் அவரை செயல். எல்லாத்துக்கும் பொடிச்சியிட்டைச் சொல்லிப் பார்..... நீ சொன்னா சிலவேளை கேக்கலாம். ஆனா.... அந்தா பொடிச்சி வருகுது. நான் சொன்னதண்டு சொல்லிப் போடாத."

சிந்தனை முகட்டு ஓட்டில் தங்கி, ஓடுகளைப் போல் வரிசையாக ஓடிக் கொண்டிருந்தன. சிவகாமி சொன்னதை நினைத்து மனம் பின்னலிட்டு பின்னி முறுகின் அடிவயிற்றைக் குடைந்து சிந்தனைகள் புரண்டன. வண்ணாத்திப் பூச்சிகள் இளம் சிறகுகளை அடிப்பது போல மனம் குடைந்து தெளிவற்ற சிந்தனைகளின் சின்னாபின்னமடைந்த ஓட்டம். காதல் பண்ணிக் கல்யாணம் செய்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. இலட்சியம் அது இது என்று சொல்கிறவர்களை கல்யாணம் செய்தால் வாழ்க்கையில் நிரந்தரப் போராட்டம் இருந்து கொண்டிருக்கும் என்பதை கதைகளில் வாசித்துள்ளாள். விவாகம் செய்யுமுன் அவன் கூட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதை நேரடியாக அவதானித்துள்ளாள். அவற்றைத் து}ரத்தில் நின்று ரசிக்கும்போது அவள் எய்திய மகிழ்ச்சியும், பிரமிப்பும் பிரமாண்டமானது. நேரே பிரச்சனைகளைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போதுதான் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்று தெரிகின்றது எத்தனை நாட்களுக்குத்தான் பிரச்சனை, பிரச்சனை என்று தலையை உடைக்கிறது. சதா பிரச்சனை... அதுவும் பொருளாதாரப் பிரச்சனை. ஐஸை மடியில் வைத்திருப்பதுபோல், சிலவேளை ஐஸ் இருந்த இடம் மரத்துபோவது போல பிச்சனைகளும் மரத்துப்போய் விடுகின்றன. சிவகாமி சொன்னவை அவள் வாழ்க்கையின் திசையையே திருப்பி விடுவது போல நினைக்கிறாள் அவள். "ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் அர்த்தம் குழந்தை. குழந்தை இல்லாவிட்டால் பெண் என்ற புனித ஸ்தானத்திலிருந்து தரம் இறங்கி விடுகிறாள்."
"ஐந்து வருடங்களுக்குப் பிறகு பிள்ளை பிறந்தால் போதும்."

"பிள்ளை பெறுவது உங்கட அல்லது எங்கட கையிலா இருக்குது. பயிர் முளைக்கிறது தரையைப் பொறுத்தும் இருக்கிறதல்லவா?"
"தரையைச் சீர்படுத்துவதும், களை பிடுங்குவதும், தேவை தானே...... அதுக்கு நல்ல டொக்டரைப் பார்த்தா என்ன. யாழ்ப்பாணத்திலை இப்போ இதுக்கெண்டு படிச்ச, புதிசா ஒரு டொக்டர் வந்திருக்கிறாராம். அவரிட்டைக் கொண்டு போய்க் காட்டுங்களேன்."
"அதுக்கென்ன அவசரம்? இப்ப ஏன் அவசரப்பட வேண்டும்" என்கிறார். சிவகாமியின் வார்த்தைகள் குரிசுகளை வரிசையாக நிறுத்திய மாதிரி அடுக்காக நின்று அவளைப் பார்த்து ஏளனம் செய்தன.
"இண்டைக்கு சிவகாமி அக்கா வந்தா"
"வந்து யாராவது டொக்டரிட்டைப் போய் காட்டிறது தானே..... இப்படியே இருக்கப் போறீங்களா எண்டு கேட்டா......" யாவும் தெரிந்த மாதிரி சந்திரன் சொல்லவே அவள் திடுக்கிட்டாள். இது வழமையான கதை. இப்படித்தான் அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்பது அவனுக்கு ஏலவே தெரியும்.

"அதுகளுக்கு எங்கடை வாழ்க்கைச் செலவு, ஊர் போகிற போக்கு, நாட்டின் நிலவரம் என்ன தெரியப் போகுது? மணியோடரிலை காசு வருகுது எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு சும்மா திரியுதுகள். மணியோடரும் வராமல் விடவேணும், இவையடைபாடு தெரியும். எங்கடை செலவைப் பற்றி எங்களுக்குத்தானே தெரியும். அதைப் பற்றி மற்றவர் ஆர் கவலைப்படப் போகினம். அவையளுக்கு எங்கடை செலவைச் சொன்னால் புரியப் போகுதா? நீங்க ரெண்டு பேர்தானே. ஆளும்....... ஆளும்........ சம்பளம் மிச்சம் எண்டு சொல்லீனம்..... இந்த நேரத்தில ஏதாவது பிள்ளை குட்டியெண்டும் வந்திட்டா..... பணத்துக்கு எங்க போறது.... எங்கட சம்பளத்தை எடுத்து எத்தனையாய் பிரிக்கிறது; இப்பவே சம்பளத்தை எதிர்பார்த்துக் கடன் வாங்கி, கடனைக் கொடுத்துப் பின் கடன் வாங்கி பின் சம்பளத்தைக் கொடுத்து காலத்தை ஓட்ட வேண்டியிருக்கு. பிள்ளை எண்டு வந்திட்டா..... டொக்டரைப் பார்க்கிறதுக்கும், மருந்துக்கும் மாவுக்கும் எங்கை போறது, உங்கட அப்பா, அம்மாவா தரப்போகினம். அவையிட்டைத்தான் இருக்கா.... இப்ப ஏன் நாங்க அவசரப்படுவான்? பிள்ளை வாற காலத்தலை வந்திட்டுப் போகுது. அதுக்காக இப்பவே ஒவ்வொரு டொக்டரிட்டையும் காவடி எடுக்க வேணுமா......?"

அனைத்தையும் கேட்டுக்கொண்டு பேசாமல் சரிந்து படுத்திருந்து, கண்ணை விழித்து முகட்டைப் பார்த்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்தாள், ஏதோ நினைத்துக் கொண்டவள் போல.
"இப்ப பாத்தா, புதிய பிரச்சனைகள் எல்லாம் வருகுது. எங்கட தாம்பத்திய வாழ்வு...... பிள்ளையள் இல்லாட்டி குறையாம். எல்லாத்தையும் விட உங்கடை ஆண்மையிலையும் என்னிலையும் குறை காணுகிற போதுதான்..... எனக்குப் பொறுக்க முடியாம இருக்கு......."
தனது ஆற்றாமையை மூச்சுவிடாமல் கூறினாள். பயங்கரமான அறிகுறிகள் கடுமையடைந்து அவளுடைய முகத்தில் உறைந்திருந்தன.
"என்னுடைய ஆண்மை, உன்னுடைய குறை.... அது உனக்கும் எனக்கும் இடையில் இருக்கிற பரஸ்பர சங்கதி. மற்றவர்கள் அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேணும். என் ஆண்மையைப் பற்றி நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய். அதிலதான் என்னுடைய கவலையும் பிரச்சனையும் தங்கியிருக்கு....மற்றவர்களைப் பற்றி நான் கவலைப்படேல்லை. நீயும் என்னைப் பற்றிக் குறையாக நினைக்கிறாயா? அதுதான் எனக்குத் தேவை....."
"உங்களுக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறன். அதைப் பற்றி நான் எக்காலத்திலையம் சந்தேகப்படேல்லை...... திரும்பத் திரும்ப அதைக் கேட்டு என்னை ஏன் குழப்பறீங்க....."
"அப்படி எண்டா நீ ஏன் கவலைப்பட வேணும்?"

"நான் கவலைப்படேல்லை, ஆனா.....இந்தச் சமூகம் கவலைப்பட வைக்குது......."
"பிறருடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிற சமூகம் எந்தக் காத்திலையும் இருந்து கொண்டேயிருக்கும். முக்கியமாக கிராமத்திலயும் அந்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அநேகம். கவலைப்படுகிற அந்தச் சமூகத்திற்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் மனத்துன்பத்தை வேண்டிய மட்டும் கொடுக்கத் தெரியும். அதுக்கு அதுதான் தொழில்." தான் பெரிதாக நினைத்த மனைவி கூட சில வேளைகளில் சாதாரண மனிதர்களின் சொற்களைப் பெரிதாக மதித்துக் கவலைப்படுகிறாளே என்பதை நினைத்துத் துக்கப்பட்டான்.
"நீங்க சொல்கிற மாதிரி நடந்து.....கடசியிலே பிள்ளையளே இல்லாட்டி...."
"பிள்ளையளே இல்லாட்டி.... என்ன குறைஞ்சா போயிடுவம். நமக்குப் பிறக்கிற பிள்ளையள்தான் உலகத்தைப் தாங்கிப் பிடித்து நிமிர்த்திவிடுமா? பிள்ளையளே இல்லாட்டி அப்படியே இருந்திட்டுப் போறது"
-ஆத்திரத்துடன் கூறினான். அவளுக்கு உலகம் சுழன்று கொண்டு வந்தது. "அப்படி எண்டா நாங்கள் மலடுகளாகவே இருக்கிறதை நீங்க விரும்புறீங்களா?"
"நாங்க ஒரு வகையில் மலடுகள் தானே. காசில்லாத மலடுகளால். மலடுகளால்தான் எதையும் செய்துவிட முடியாது. அவர்கள்தான் கையாலாகாதவர்கள், ஒரு தகுதியும் அற்றவர்கள். நாங்கள் மலடுகளாகவே இருந்திட்டாலும் பரவாயில்லை....." அவளால் ஏதும் பதில் கூறமுடியவில்லை. ஆனால் புதிய விஞ்ஞானத்தை அவள் திடமாக நம்பினாள். விஞ்ஞான சோஷலிசத்தில் நம்பிக்கையுள்ளவன் விஞ்ஞானியாக, உணர்ச்சிகளை மதிப்பவனாக இல்லையே என்ற கவலை அவளுக்கு இல்லை.

தியானம்

கடந்த மூன்று நாட்களாகச் செறிவான மழை. இரவு பகல் என்ற பேதம் மழைக்கு இருக்கவில்லை. பேய் மழை என்னுமளவுக்குப் பலத்த மழை. நேற்று இரவுதான் அது ஒரு வாறு ஓய்ந்து மறையத் தொடங்கியது. இனிமேல் அப்படிப்பட்ட மழை இல்லை என்பதற்குப் பல அறிகுறிகளும் இருந்தன. விடிந்து ஒரு சில மணிநேரம் கடந்தும் கூட சாதாரணமாக குளிர், உடலின் தண்மைத் தன்மையை இன்னும் குறைக்காமல் வைத்துக் கொண்டிருந்தது. ஓலைக்குடிசை தண்மையைப் போக்காமல் அப்படியே வைத்திருக்கிறது. அதை அவனால்-அவன் பெயர் எங்களுக்கு அவசியமில்லை-இன்னும் முடிகிறது. குடிசையிலும் ஓர் அறை-உள்வீடு-இருக்கிறது. வீடுகளும் மனதைப் போன்றவை போலும். சிலரின் மன அறைகளும் திறக்கப்படாமலே பூட்டிக் கிடப்பன போல பல வீட்டின் அறைகளும் சதா பூட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவனுடைய குடிசை-அது அவனுக்கு வீடு-சாத்திக் கிடக்கிறது. பிறருடைய வீடுகள் சில-அல்லது அறைகளாவது-பூட்டுப் போட்டுப் பூட்டியே கிடக்கும். இவனுடைய வீடு எந்நேரமும் பூட்டப்படுவதில்லை;பூட்டப்படவேண்டும் என்று அவன் நினைப்பதுமில்லை; அவசியமுமில்லை. எதற்கும் திறந்து கிடக்க வேண்டும் என்பதே அவன் நோக்கம்.

குளிர் குறைந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் முற்றாக எடுபடவில்லை. முற்றாக எடுபட்டு விடக்கூடாது என்பது அவன் உள்விருப்பம். இதமான குளிர்ச்சியில் ஏகாந்தமான தனிச் சுகத்தை இவனால் புறம்பாக உணர முடிகிறது. குளிர்ச் சுகத்தை நிரந்தரமாக்கும் நினைவில் கண்களை மூடிச் சிறிது நேரம் அதே உணர்வில் ஒன்றிவிட நினைத்து கண்ணை மூடிக் கொள்கிறான். குளிர் உணர்வுகள் இதமாக ஒத்தடம் கொடுத்து, பல நிமிடநேரம் உணர்வுகளை ஒன்றச்செய்து விடுகின்றன. உணர்வுகளுக்கு அப்படிப்பட்ட சக்தி-உணர்வுக் கம்பிகளின் பிணைப்பு இறுக்கமாகின்றன. மின்சக்தியின் வலிமையினால் ஏற்படும் இறுக்கம். உணர்வுக் கம்பிகளை மேலும் இறுக்கி விடுகின்றன. கம்பிகளின் பிரிக்க முடியாத இறுக்கம்; இதமான உணர்வுகளின் தண்மை இறுக்கம்; இவை இரண்டின் பிணைப்பினாலும் உலகத்தையே மறந்து பல நிமிட நேரம் உணர்வுகளின் கதகதப்பில் திளைக்கிறான். அடுத்த குந்தில் படுத்திருந்த அவன் தாயார்-ஆச்சி-அவனுடைய ஒரே உலகம், குளிருக்காக வாசலில் கட்டியிருந்த சாக்கை மேலே சுருட்டி ஈர்க்கால் கட்டுகிறாள். அதுவரை ஒளித்திருந்த சூரிய ஒளி அவனுடைய பாயில் தெறித்துச் சிதறுகிறது. பாயில் படுத்துக் கண்ணை மூடி மௌன நிலையில் இருந்த அவனுடைய கண்ணைத் திடீரெனக் கூசச் செய்கிறது. கண்ணைத் திறக்காமலே அவன் மறுபக்கம் திரும்பிக் கொள்கிறான். இப்பொழுது அவனுடைய உணர்வுகள் திடீரென சூடேறிக் கொள்கின்றன. அவன் ஆச்சியும் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் விட்டாள். அல்லாவிட்டால் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து தன் கடமைகளை முடித்துக் கொள்பவள் அவள். அன்று விடிந்த பின்னரே எழுந்து சூரியனை வீட்டுக்குள் விட்டு, அவன் வெளியே செல்லுகிறாள். வாழ்க்கையில் பல வருடங்கள் சதா தன்னை இயந்திரமாக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தவளுக்கு சில வேளைகளிலாவது குளிர், பஞ்சி, சோம்பல் என்பனவும் உள்ளன போலும், கடந்த மூன்று நாட்கள் மழை அவளைக்கூடச் சிறிது நேரம் படுக்கையில் சுகம் எடுக்கச் செய்திருக்கிறது.

தாயாரைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்ற நினைவில் இப்போதிருந்தான். அவனுடைய கவலை-நோக்கம்-உணர்வுகளுடைய இதத்திற்கும் சூரிய ஒளியின் தாக்கத்திற்கும் இடையே நடைபெறும் சேர்க்கை மாற்றங்களைப் பற்றியே உள்நோக்கி ஆராய்ந்து கொண்டிருப்பதே. உணர்வுகளை, உணர்வுகளின் துல்லிய மாற்றங்களின் அளவுகளை அணு அணுவாக அளந்து நிறுத்துப் பார்த்துக் கொள்கிறான். மாற்றங்களை நிறுத்தி அவனால் சாவகாசமாக அளக்க முடிகிறது. ஆனால் மாற்றங்கள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒளியின் தாக்கத்தை எதிர்த்தாக்கலுடன் சமாளிக்க முடியாத கதகதப்பான உணர்வுகள் படுவேகத்தில் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. இரு வேறுபட்ட உணர்வுகளின் சங்கமத்தில் பிறக்கும் வேறொரு மாற்ற உணர்வையும் அவனால் சிறிது சிறிது உணர முடிகிறது. உணர்வுகளின் கலவியல் பிரசவிக்கும் வேறோரு பிரிக்க முடியாத உணர்வுக் குழந்தை அது, அவ்வுணர்வுக் குழந்தை உருவத்தை சிறிது சிறிதாக, துல்லியமாக உணர முடிகிறது அந்த உணர்வின் வளர்ச்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். அதன் வளர்ச்சி மாற்றங்கள் - உணர்வுருவ வளர்ச்சிகள்-தங்களை இனங்காட்டிக் கொள்கின்றன. வளர்ச்சியுடன் ஒன்றிக் கொண்டு தன்னை மறந்து தியானத்தில் அவன் இருந்து கொண்டிருக்கிறான்.

அவன் ஆச்சி கோப்பியுடன் வந்து, "தம்பி, தம்பி" என்று கூப்பிட்ட பின்னர்தான் இவ்வுலக உணர்வுகளுக்கு அவனைக் கொண்டு வரமுடிந்தது. ஒருவாறு உணர்வுகளைக் கலைக்க விரும்பாமலே எழுந்த அவன் செம்புக்குள் இருந்த தண்ணீரை வாய்க்குள் ஊற்றிக் கொப்புளித்து, தட்டியை உயாத்தி முற்றத்தில் து}ரத் துப்பிக் கொண்டான். கோப்பிக் கிளாசை வைத்துவிட்டு ஆச்சி அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் கிளாசைக் கையில் து}க்கிய அவன் பார்வை, வெயில் ஏறியவுடன் உள்ளே வாசலு}டாகப் படை எடுத்துக் கொண்டிருந்த அட்டைகளிலே விழுந்தது. அட்டைகள் ஊர்ந்து வரும் இதமான உணர்வுகளை அவன் தன்னுள் உணர்ந்து கொண்டிருந்தான். அதுவரை ஒன்றுமே பேசாமல் நின்ற ஆச்சி அட்டைகளை வீட்டிற்குள் பார்த்துவிட்டு அவற்றைத் து}க்கி எறிவதற்கு ஈர்க்கு எடுக்கப் போய்க் கொண்டிருந்தாள். ஆனால் அவனுக்கு அவை அட்டைகளாகத் தெரியவில்லை. அட்டை ஊர்தலின் உணர்வுகள் யாவற்றையும் இறுக்கிப் பிணைத்து ஒவ்வொரு நரம்பு நாளங்களின் ஊடாகவும் உணர்ந்து கொண்டிருக்கிறான். உணர்வுகளின் ஊற்றுக்களுடன் இன்றும் சங்கமமாகிக் கொண்டிருந்தான் அவன்.

ஒரு காதல் மலர்கிறது.

காதலிக்க வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்ற ஒரு காலத்தில் காதலிக்க முடியாமல் ஒருதலைக்காமமாக முற்றுப் பெற்ற கதைகள் சிவராமனின் காதல் கதைகளின் பல. அவன்-அவள், இருவருமே விரும்பியும் அவன் மனந்திறந்து வாய் விட்டுக் கேட்டும் அவள் இதழ் விரித்துச் சொல்ல முடியாமல் போனதால் அவனே மனம் நொந்து இடையில் விட்டவை எத்தனையேர் அவள் விரும்பியும் அவள் அழகும் குணமும் அவனை ஈர்க்காததால் விரும்பாமல் விட்டவை சில, உண்மைக் காதல் இல்லாமல் காமத்திற்காகச் சிலரை விரும்பி நடுவழியில் அவர்கள் காதலிக்கத் தொடங்கவே அன்றுடனே அந்தக் காதலை நிறுத்திய காதல் கதைகளும் அவன் கதைகளில் இல்லாமல் இல்லை. இவை போன்ற பலதையும் பத்தையும் கற்று, பல்கலைக் கழகத்திற்கு வரும்போது காதலிக்கக் கூடாது என்ற சித்தாhந் தத்துடன்தான் காலடி எடுத்து வைத்தான். ஒருவரையும் காதலிக்கக் கூடாது என்ற சித்தாந்தம் ஒருவரிலும் காமுற்று இன்பம் அனுபவிக்கக் கூடாது என்ற அம்சத்தை உள்ளடக்கி இருக்கவில்லை.

அவனுடைய சித்தாந்தம் பல்கலைக்கழக முதலாம் வருட வாழ்வில் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது- உள்ளடக்கி இருந்த அம்சம் உட்பட காதலிக்கக் கூடாது என்ற இலட்சியம்- பல பெண்களுடன் ஆசையுடன், இச்சையுடன், நெருக்கத்துடன், அன்புடன், சரசமாக ஒருவரையும் பகைத்துக் கொள்ளாமல் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தியது, வசதியாகவும் இருந்தது. அவனுக்குப் பல அனுபவங்களைக் கூட வாரி வழங்கியது. டொன் யுவனைப் போல சில வேளைகளில் அவனால் வாழவும் முடிந்தது. நேரத்தின் முன் அனைவரும் சமம் என்ற சித்தாந்தத்தை அவன் சிறிது காலம் தாழ்ந்துதான் பெண்கள் விசயத்தில் உணர்ந்தான். ஒருவருக்கு அதிக நேரத்தையும் மனத்தையும் அன்பையும் பாசத்தையும் கொடுப்பதால் ஏற்படும் அபாயத்தை காலந் தாழ்த்தியே அவனால் கண்டுபிடிக்க நேர்ந்தது. அவன் செலவழித்த நேரத்தைச் சமமாகப் பங்கிடாமல், சாந்தினியுடன் அதிக நேரத்தைச செலவழித்தான். அதைக் கண்ட சக மாணவ, மாணவிகளுக்கு ஏதோ ஓர் அந்தரங்கமான விசயத்தை அது அம்பலப்படுத்துவது போல் அமையவே அவர்கள் மன நெகிழ்ச்சி கொண்டு ஆசை பற்றி அவர்களைச் சேர்த்து முடிச்சுப் போட, முடிச்சில் இருந்து மீள முடியாமல் அவனும் அவளும் இறுகிக் கொண்டனர். காதலிக்கக் கூடாது என்ற சித்தாந்தமும் காற்றில் கரைந்தது. அவனுக்குச் சாந்தினியிடம் பைத்தியமே இல்லாத காதல். முடிச்சுப் போட்டதால் இறுகிப் போன காதல்.

மூன்றாண்டுப் பல்கலைக்கழக வாழ்வில் இரண்டாண்டு காதல் வாழ்வு. எல்லோரையும் போன்ற இறுக்கமற்ற, ஆனால், நெருங்கித் தொடர்பு கொண்ட காதல் வாழ்வு. காதல் வாழ்வு இறுதித் தேர்வின் முடிவுடன் முடிவடைந்துவிட வேண்டி வந்தால் அவளைக் கைவிட்டு விட்டான், தேர்வில் சிவராமன் தோற்றான், சாந்தினி வென்றாள். அவன் திரும்பவும் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பி வர வேண்டி வந்தது. சிவராமன் மீண்டும் ரஜவத்தை ஒழுங்கைகள், கலைமண்டபம், நு}லகம், கலைமண்டபத் து}ணடகள், செனட் கட்டிடம், மகாவலி கங்கைக்கரை, 'ஜிம்', 'கிஸ்ஸிங் பெனட்', லவர்ஸ் பாhக் ஹில்டா மண்டபம் முதலியவற்றைப் பார்க்கும்போதெல்லாம் மனதுள் பொருமினான்-விம்மினான்-தனக்குள்ளே பலவற்றை வைத்து அமுக்கினான். சாந்தினியின் உறவைத் துண்டித்து கடைசியாக எழுதிய கடிதத்தின் நினைவுகள் அவன் மனதில் இப்போது அடிக்கடி அலைமோதின. அவளும் அந்த முடிவையே மனமுறிவுடன் ஏற்றுக் கொண்டு எழுதிய கடிதம் காதலைத் தொடரவேண்டிய அவசியத்தை வலியுறுத்;தவில்லை. இருந்தாலும், அன்று அவளுடைய விவாக விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்க்க நேரிட்ட நேரம் தொடக்கம் பல்கலைக் கழகக் கட்டிடங்களில் புதிய காட்சிகள் விரிவான போல், பல அர்த்தங்கள் இருப்பன போல் தெரிந்தன. ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே வந்தான். இப்போது தான் அவள் மேல் உண்மையான காதல் மலர்வது போல், அவளுக்காக ஏங்குவது போல 'அவன்' உணர்ந்தான். பல்கலைக் கழகம் அவன் மனம் போல புதிய ஒளியில் இலேசான கவலையில் தோய்ந்து கிடப்பது போல் தெரிந்தது.

சவாரி

ஊய், ஊய்..................ய்............ய்

ஊய், ஊய்.................ய்.........,

திரும்பிப் பார்க்கிறேன். ஒவ்வொரு மாடு பூட்டியுள்ள இரண்டு வண்டிகள். அவற்றின் வேகம் என்னைத் திடுக்கிட வைத்தது. சைக்கிளை 'ஸ்லோ' பண்ணி தெருவின் ஓரத்திற்கே போய் விடுகிறேன்.

ஊய், ஊய்........................................ய்.....

மாட்டு வண்டிகள் இரண்டும் என்னைத் தாண்டிப் படுவேகமாகச் செல்கின்றன. இப்பொழுது வண்டிகளை நன்றாகப் பார்க்கிறேன். இரண்டையும் ஓட்டுபவர்கள் இளைஞர்கள். இரண்டு வண்டிகளின் பின் பக்கமும் திறந்துள்ளன. அருகுப் பக்கங்கள் இரண்டும் பலகைத் தட்டிகளால் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வண்டிக்குள்ளும் மண்வெட்டி, கடகம், சவல் முதலியன கிடக்கின்றன. அது குப்பை வண்டி, நகரத்தில் லொறிகளில் ஊத்தை அள்ளுவதைப் போல மாட்டு வண்டிகளிலும் குப்பை அள்ளுகிறார்கள். வண்டிகளின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் கூடுவது தெரிகிறது. இப்போ இரண்டு வண்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு சமநிலையில் செல்லுகின்றன. சவாரியும் போட்டியும் வண்டி ஓட்டுபவர்களிடையேயா, மாடுகளிடையேயா என்று தெரியாத நிலையில் வண்டிகள் ஓடுகின்றன. என் சைக்கிளும் ஓடிக் கொண்டிருக்கிறது. வேகமாக ஓடாவிட்டாலும் சுமாரான வேகத்திலாவது இப்போ ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி அவர்களின் பின்னால் சீராகச் செல்ல முடிகிறது. என்னை உணர்ந்த நிதானமான பிரக்ஞை என்னிடம் எப்போதும் உள்ளது என்பது இப்போ மிக அழுத்தமாகத் தெரிகிறது. இல்லாவிட்டால் எப்படி அவர்களையும் உணர்ந்து அதே வேளை என்னையும் முடிகிறது.

வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்தோனியார் கோவில், சிவன் கோவில் எல்லாம் பின் நழுவுகின்றன. வண்டி ஓட்டுபவர்களுக்கோ மாடுகளுக்கோ அவை இருப்பதாகக் கூட நினைவில்லை. அவை தங்கள் இருப்பை எனக்குத் தெரிவிக்கின்றன. தெரு நீளம் எந்தவிதத் தடையுமில்லாமல் வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போ ஒரு வண்டிக்கார இளைஞன் எழுந்துநின்று சவாரி வண்டி ஓட்டுவது போலவே நாணயக் கயிற்றைக் கையிலே பிடித்தப்படியே ஓட்ட முனைகிறான். மற்றவனும் எழுந்துவிட்டார்ன். இருவரும் எழுந்துநின்று சவாரி விடுகின்றனர். ஓடுவன மாடுகள் என்பதை மறந்து விட்டார்கள் போலும். ஒருவனுடைய சாரம் அவிழ்ந்து விடவே ஒரு கையால் பிடித்துக் கொள்கிறான். மறுபக்க முனை அவிழ்ந்து தொடை வரை தொங்குகிறது. உள்ளே இருந்த சிவப்புப் களிசான் தலைநீட்டுகிறது. மற்றவன் சாரத்தைத் து}க்கி சண்டிக் கட்டாகக் கட்டியுள்ளான். மேலே தொடை தெரிகிறது. அங்கும் சிவப்புக் களிசான். மனதில், உடையில், சவாரியில், போட்டியில் ஒற்றுமை உடையவர்களிடையே எப்படிப்பட்டதொரு போட்டி என்று நினைத்துக் கொள்கிறேன், அவர்களின் சாட்சியாக மனதையும் கடந்து எட்டி நிற்கிறேன். வழக்கம் போல யாவற்றையும் இரசித்துக் கொள்கிறேன். புதிய வேகத்துடன் நடைபெறும் விளையாட்டை ஆவலுடன் இரசித்துக் கொண்டு நிதானமாக ஓடி வருகிறேன். இரண்டு வண்டிகளும் சம காலத்தில் ஒரே சந்தியால் திரும்புகின்றன. இரைந்து கொண்டு திரும்பிய பஸ்ஸை எப்படித் தான் தாண்டினார்களோ, எனக்கு அதிசயமாக இருந்தது. சில வேளை, நடந்து விடும் என்று கடைசி வரை உறுதியாக நம்பியிருந்தும் நடக்காமல் போவது போல.

அவர்கள் விபத்துக்குள்ளாகவில்லை. தப்பி விட்டார்கள். இன்னும் அதே வேகத்தில்-இதற்கு மேல் மாடுகளால் ஓட முடியாததாலோ-என்னவோ வண்டிகள் ஓடின. இப்போ வண்டிக்காரர்கள் வாய்ச் சவாரியிலும் இறங்கி விடுகிறார்கள் என்பது அவர்களின் இரைச்சலிலிருந்து விளங்குகிறது.
ஏண்டை வண்டி.................. இந்தா..........

ஏண்டை வண்டி..................

பின் விழுந்த சொற்கள் தெளிவாகக் கேட்கவில்லை-கேட்காமலே விளங்கின. போட்டியை-சவாரியை-நேருக்கு நேர் பார்க்கிறேன். அதைவிட அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் கேட்டா தெரிந்து கொள்ள வேண்டும். இப்போ ஒருவன் வண்டியின் பின் புறத்தில் கிடந்த தடியொன்றை ஆக்ரோசத்துடன் எடுத்து மாட்டைப் பைத்தியம் பிடித்தவன் போல ஓங்கி அடிக்கிறான். மற்றவனும் அடிக்கிறான். விசத்திரமாக இருக்கிறது. மாடுகளை மாறி மாறி ஒரே தாளயத்துடன் அடிக்கும் சத்தம் மட்டும்தான் இப்போ என் காதல் விழுகிறது. மாடுகளின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன். உழைப்புக்காக வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் சவாரிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அப்போது.........

ஒருவனின் ஓங்கிய கையிலிருந்து வேகமாகக் கம்பு சீறிப் பாய்ந்து விடுகிறது. அதே வேகத்தில் கம்பை எடுப்பதற்காக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வண்டியிலிருந்து கீழே பாய்கிறான். அவன். அவனின் சாரம் வண்டித் தட்டியில் சிக்கி ஒரு கணநேரம். அவன் இடது சில்லின் முன் பக்கத்தில் தொங்கினான். மறுகணம் வண்டிச் சில் அவன் மேல் ஏறி விழுகிறது. 'அம்மோவ்' என்று அலறுகிறான். மற்ற வண்டியும் இந்த வண்டியுள் போய்ச் சிக்கிக் கொள்கிறது. வண்டிக்காரனுக்கு என்ன நடந்தது என்று அறியுமுன் சனங்கள் மொய்த்து விடுகின்றனர். சவாரியின் தர்க்காPதியான முடிவா இது என்று அங்கலாய்க்கிறேன்.

மக்களாட்சி

வாழ்க்கையில் என்றுமே இல்லாதவாறு பொன்னம்மாக் கிழவிக்கு ஆச்சரியமாக இருந்தது. தபால்காரனின் 'விசில்' தன் பனங்கூடல் வளவுக்குள் கேட்கிறது. முன் வீட்டு இராமலிங்த்திற்குக் காயிதம் வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு பேசாமல் திரும்பவும் இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்துவிட்டாள். திரும்பவும் 'விசில்' நீட்டி ஊதும் சத்தம் மந்தமாகக் கேட்கும் காதுக்கூடாகவும் கேட்கிறது. தபால்காரத் தருமலிங்கமாகத்தான் இருக்க வேண்டும். அவள் எழுந்து உட்காந்து கொள்கிறாள். எழுந்து வெளியே செல்லவே மனமில்லை. அவளுக்குக் கடிதம் போட இந்த உலகில் ஒருவருமே இல்லை என்பது அவளுக்கு மட்டுமல்ல அந்தக் கிராமத்திற்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் அவளும் தயங்கினாள். திண்ணையில் எழுந்து உட்கார்ந்த பொன்னம்மா தன் ஒரே மகள் 'ராசாத்தி' கிளிநொச்சியிலுள்ள ஒருத்தனை முடித்துக்கொண்டு சென்றவள் பிள்ளை பெற முடியாமல் அங்கேயே இறந்து விட்டதை எண்ணினாள். ஒரு முறை அவள் நெஞ்சம் நிலை தடுமாறியது. ஒரே நிமிடத்தில் அந்த நினைவு மயங்கி தெளிவற்றதாகி விடுகிறது. எழுந்து உட்கார்ந்த திண்ணையிலேயே இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அப்படிப்பட்ட நினைவுகள் அற்ற நிலையில்தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

'ஆச்சி ஆச்சி' என்ற குரல் அவளின் மாலுக்கு அருகிலேயே கேட்கிறது. தபால்காரத் தருமலிங்கம் சைக்கிளை ஒரு பனையில் சார்த்தி வைத்துவிட்டு'ஆச்சி' இருக்கிறாளா இல்லையா என்பதை எட்டிப் பார்ப்பதற்காக அவளுடைய மாலுக்கே வந்து கொண்டிருக்கிறான். சிலவேளை இந்தக் கிழவி கண்ணை மூடிவிட்டதோ என்ற சந்தேகம் கூட அவனுக்கு வந்துவிட்டது. வெறுந் திண்ணையிலேயே கிழவி நினைவுகளற்ற நிலையில் குந்தி இருப்பதைக் கண்ட தருமலிங்கம் திரும்பவும் 'ஆச்சி' என்று உரத்துக் கூப்பிட்டான். ஆச்சிக்கு இப்பொழுதுதான் சுய நினைவு வந்தது போலும்.
"அட தருமனா வாடா! இந்தக் கிழவியைத் தேடிக் கொண்டு வாறாய் மோனை" -என்று தொண தொணக்கும் குரலில் கேட்டாள். தருமலிங்கம் ஒரு கடித்தை நீட்டினான். பொன்னம்மாக் கிழவி வாங்காமலே சும்மா இருந்தாள். வாங்க வேண்டும் என்ற நினைப்பின்றி இருந்தாள். தருமலிங்கம் சத்தம் போட்டு, உரத்த குரலில்,
"ஆச்சி ணோய்! உனக்கொரு காயிதம் வந்திருக்கண......"
"எனக்கு ஆரு மேன யாகிதம் போட இருக்கினம்..... நீ மாறிக் கீறிக் கொண்டந்திருப்ப......"
"என்னை ஆச்சி எனக்குத் தெரியாதா உன்ர பேர.....நீதான ஆச்சி பொன்னம்மா நடராசா......."
"என்ர மகராசன் போய் எவ்வளவு காலமாச்சு...... அவரிடை பேரைக் கூட மறந்து போனன். அதார் அவரிட பேர நினைச்சுக் காயிதம் போட்டவங்கள்......... ஒருக்கா வாசிச்சுக் காட்டன்ரா மேனை....... எனக்கென்ன எங்கப்பு கறுப்பாச் செவப்பா ரெண்டெழுத்து படிக்க வைச்சா இருக்கீனம்........"
தருமலிங்கம் கடிதத்தை உடைத்தபோதுதான் அது 'எலெக்ஷன்' கேட்கிற நல்லதம்பியிடம் இருந்து வந்திருக்கிறது என்று தெரிந்தது. அதை வாசிப்போமா விடுவோமா என்று சிறிது நேரம் சிந்தித்தான்.
"என்னடா மேன யோசிக்கிற.... ஆரேன் செத்து கித்துப் போச்சினமே! யோசிக்காமச் சொல்லு."
"இல்ல ஆச்சி இந்த லெச்சன் வருகுதில்லே. அதுக்குத் தான் இந்தக் காயிதம் போட்டிருக்கிறாங்க. உங்கட வோட்டை அவங்களுக்குத் தயவு செய்து போடட்டாம்."
"எனக்கென் மேன இந்த தேவை இல்லாத வேல. அஞ்சப் பத்தைத் தருவாங்களாமே....."
"ஓமாச்சி, காசுக்காறங்கதானே இந்த லெக்சன் கேட்கிறதெல்லாம். ஒரு வோட்டுக்கு பத்து எண்டாலும் தருவாங்க."
"முந்தி ஒருக்கா இப்படித்தான் நம்மட சீதப்புள்ளையின்ர மோன் என்னைக் காரில கூட்டிக் கொண்டு போய் வோட்டு போட்டான். திரும்பியும் காரிலேயே கொண்டு வந்துவிட்டான். நல்ல பிள்ளை. காசும் ஒரு பத்து ரூபா தந்தான்....."
"ஆச்சி நீ பயப்பிடாதை. நான் சொல்லுறன், உனக்கு நான் காசு வாங்கித் தாறன் நான் சொல்றாளுக்கு மட்டும் போட வேணும்...... தெரிஞ்சுதே."
"சரி மோன உனக்குப் போடாட்டி ஆருக்குப்போடுறது.......
அவனுக்கு கிடைக்கிற போத்திலிலும் காசிலும் ஒரு பத்து ரூபா கொடுத்தால் குறைந்து போகுமா என்று அவன் எண்ணம்.
"இந்தக் காலத்தில் பத்து ரூபாய்க் காசு ஆரு மோனே சும்மா தரப்போறாங்க?"
பொன்னம்மாக் கிழவி வாய்விட்டே சொல்லிக் கொள்கிறாள்.

இரும்பு

கடுமையான வெயில். காற்று அவ்வளவாக வீசவிவல்லை. தென்னை மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் தலைகளை அசைக்காமல் சாதாரணமாக நிற்கின்றன. தென்னை மரங்களுக்கிடையில் வீடு. கல் வீடல்ல. பணை ஓலையால் வேய்ந்த பெரியதோ சிறியதோ என்று சொல்ல முடியாத நடுத்தர வீடு. திருவலையில் அவன். முன்னால் கள்ளுப் போத்தலும் ஒரு பூச்சுக் கோப்பையும். கோப்பையில் கள்ளு. அவனுடைய அக்கா மாலுக்குள் இருந்து சமைத்துக் கொண்டிருக்கிறாள். அக்காவின் பிள்ளைகள் பள்ளிக்குப் போய் விட்டார்கள். கள், வெயில், தென்னம் பிள்ளைகள், வீடு, மால், முற்றம்-இவை எல்லாம் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன. அதற்காத்தான் அவன் ஓடோடி வந்தான் இவைதான் அவனின் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் மருந்துகள். ஒரு கிழமை ஊரில் தங்கி விட்டான். காலையும் மாலையும் கள்ளுக் குடித்தான். தெற்குக் கடலில் பிடித்த புது மீன்களைப் போட்டுக் கூழ் காய்ச்சிக் கொடுத்தாள் அவன் தமக்கை ஒடியல் இடித்தாள். தம்பி வந்திட்டானே என்று ஓடி ஓடிச் செய்தாள் குஞ்சி அம்மா வீட்டு வளவில் போட்டிருந்த பாத்தியில் கிழங்கு பிடுங்கிச் சுட்டுக் கொடுத்தாள். நுங்கு மட்டும் சாப்பிடக் கிடைக்கவில்லை. அது நுங்குப் பருவமில்லை. அது பனங்கள்ளுப் பருவம். அதுவும் அப்பா வீட்டுப் பனையில் இருந்து இறக்கிய புதுக் கள். ஊரை வீட்டு வெளிக்கடவே மனமில்லை. இரண்டு நாளில் திரும்பி விடவேண்டும் என்று தான் வந்தான். ஒரு கிழமை ஆகிவிட்டது. இன்னும் போக மனமில்லை.

உடனடியாக வரச்சொல்லிக் கடையிலிருந்து தந்தி வந்த பின் தான் அவன் கள்ளையும், கூழையும், பிட்டையும் பிரிய மனமில்லாமல் பிரிந்தான்.
"இனி ஆரு தம்பி செத்தா வருவை"
-என்று கேட்டாள் தமக்கை.
"ஆராவது செத்தாத்தான் வருவன் எண்ட கட்டாயம் வந்திட்டுது. நானென்ன செய்ய........சீ....சீ... கேடு கெட்ட வாழ்க்கை............கேடு கெட்ட வியாபாரம்..........."
இதை நானாகவே உண்டாக்கிக் கொண்டேனா...... இதிலிருந்து மீள முடியாதா என்று அவன் தன்னைத்தானே நொந்து கொள்வது போலக் கேட்டுக் கொள்கிறான்.


விடலைகள்

மத்தியானம் பிள்ளைகள் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடம் விட இன்னும் நேரமிருக்கிறது. அன்று பாடசாலைக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரவில்லை. பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம். சிவலிங்கமும் கனகலிங்கமும் புத்தகங்களைச் சொக்கனிடம் கொடுத்து விட்டு குட்டிச் சுவரால் ஏறிக் குதித்து, குனிந்து குனிந்து ஓடுகிறார்கள். இவர்கள் கடைசி வாங்கில் இருந்தவர்கள். ஆனபடியால் இவர்கள் ஓடுவதை ஒரு சில ஐந்தாம் வகுப்புபட பிள்ளைகளைத் தவிர வேறெவரும் கவனிக்கவில்லை. கவனித்தவர்கள் யாரிடமாவது சொன்னால் யார் சொன்னவர்கள் என்று சொக்கன் இவர்களிடம் சொல்லி விடுவான். அவர்களுக்கு வழியில் வைத்து நல்ல அடி நடக்கும். இவர்கள் எங்கே போகிறார்கள் என்பதைச் சொக்கனிடம் மட்டும்தான் சொல்லி இருப்பார்கள். சில வேளை சொக்கனுக்குக்கூட ஒன்றைச் சொல்லி விட்டு வேறெங்கோ போய் விடுவார்கள். வாத்தியாரின் அடி தாங்க முடியாமல் சில வேளை சொக்கன் கூட சொல்லிவிட்டதால் இதைச் செய்தார்கள். அம்மன் கோயில் தெற்குக் கேணியில் மேல் படியில் நின்று கச்சையுமில்லாமல் குதித்து நீந்தி விளையாடுவார்கள். இது மாரிக்காலத்தில் நடக்கும் வழக்கமான கூத்து. அம்மன் கோவில் திருவிழா ஆரம்பமாகி விட்டாலோ இவர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து விடும். புதிதாக ஓலைகளால் தற்காலிகமாகப் போடப்பட்டிருக்கும் கடைகளுக்கு முன்னால் எந்நேரமும் திரிந்து கொண்டிருப்பார்கள். கடலைக்காரியிடம் பழைய செல்லாக் காசைக் கொடுத்து ஏமாற்றிக் கடலை வாங்குவார்கள். கடலைப் பெட்டிக்கு மேல் லேஞ்சியைப் போட்டு, லேஞ்சியுடன் கீழுள்ள கடலையையும் அள்ளிக் கொண்டு செல்வார்கள். கூட்டமாக வந்து மண்ணைக் கிளறி விடுவார்கள். அந்நேரம் இவர்களின் தோழர்கள் கடலைப் பெட்டியைக் கூடத் து}க்கிக் கொண்டு சென்று விடுவதுண்டு.

கொடிமரத்திற்கு வார்த்த இளனிகளை உள்வீதியில் முருகன் கோவில் மூலையில் போட்டிருப்பார்கள். சிவலிங்கம் அவற்றை உள்ளே நின்று சுவரால் வெளிவீதிக்கு எறிய அவற்றைத் து}க்கிக்கொண்டு தெற்கேயுள்ள வடலிக் கூடலுக்குள் ஒழித்து வைப்பான் கனகலி ங்கம். பின்னர் வேறு சிலரையும் கூட்டிக் கொண்டு சென்று கல்லால் குத்தி இளனி குடிப்பர். கோடை காலங்களில் மரங்களில் ஏறி குருவிக்குஞ்சு புறாக்குஞ்சு தேடுவர். பட்ட தென்னம் பிள்ளைகளிலும் பனைமரங்களிலும் ஏறிக் கிளிக்குஞ்சு பிடித்து கூடுகட்டி விளையாடுவர். இவை எல்லாவற்றையும் சிவலிங்கமும் கனகலிங்கமும் சேர்ந்து தான் செய்வார்கள். அம்மன் கோவிலின் மேற்கே உள்ளது சோமர் தோட்டம் அது ஒரு தென்னந்தோட்டம், நாற்பது அல்லது ஐம்பது தென்னைகள் வளர்ந்து, குலைகளுடன் காட்சி அளிக்கின்றன. தோட்டத்துச் சொந்தக்காரி எந்த வேளையும் வருவாள்; அண்ணாந்து பார்ப்பாள்; எதிலாவது பழுத்த அல்லது ஓரளவு முற்றிய தேங்காய்களைக் கண்டால் யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து பிடுங்கி வண்டிலில் அல்லது கடகத்தில் போட்டுக் கொண்டு போய்விடுவாள். சில நாட்களாக சில மரங்களில் இளனிகள் குறைவன போலத் தெரிந்தன. யார் அவற்றைப் பிடுங்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்து, கட்டிப்போட்டுத் தோலை உரிக்க வேண்டும் என்று கோபம் அவளுக்கு.

சிவலிங்கம் தென்னை மரங்களில் 'தளநார்' இல்லாமல் கூட ஏறக் கூடியவன். அன்றைக்குச் சோமர் தோட்டம்தான் அவர்களுடைய இலக்கு. நேராக அங்கே சென்றார்கள். எந்த மரத்தில் நல்ல இளனிகள் இருக்கின்றன என்பதை ஏற்கெனவே கனகலிங்கம் பார்த்து வைத்திருந்தான். நேராக தென்மேற்கு மூலையில் வடலிக் கூடலுக்குத் தெற்கேயுள்ள மரத்திற்குக் கடற்கரை ஓரமாகச் சென்றார்கள். சிவலிங்கம் அன்று பழைய கயிறொன்றையும், சேலைத்துண்டுகளையும் சேர்த்து முடிந்து தளநார் செய்து ஆயத்தமாக வைத்திருந்தான். இளனிகளை முறுக்கித் தரையில் போடுவது, அவற்றை எடுததுக் கொண்டு போய் வடலிகளுக்குள் ஒழித்து வைப்பது; இவை தான் அவர்களின் இரகசியமான ஏற்பாடு. அவர்கள் இப்படிப்பட்ட ஏற்பாட்டைக்கூட எதுவித பலத்த ஆட்சேபணைகளோ, வாதங்களோ இல்லாமலே தீர்மானித்துக் கொள்வர். தளநாரை ஒற்றைக் காலில் மாட்டி மறகாலை அதற்குள் லாவகமாகக் கோர்த்துக் கொண்டு நாடார் ஏறுவதுபோல ஒரு கையை மேலும் மறு கையைக் கீழும் பிடித்துக் கொண்டு ஏறப்பழகி இருந்தான் சிவலிங்கம். இலகுவாகவும் லாவகமாகவும் நிபுணன் போல சிவலிங்கம் ஏறுவதை கனகலிங்கம் வியப்புடன் ஒளித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு 'பெடியன்' மரத்தில் ஏறுவதைச் சோமர் தோட்டச் சொந்தக்காரியும் அந்நேரம் பார்த்துவிட்டான். அவள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அணில் பிள்ளையைப் போல பாய்ந்து பாய்ந்து வட்டுக்கு ஏறிவிட்டான் அவன். அவள் கிட்ட வருவதைக் கண்ட கனகலிங்கம் வடலிக்கூடலுக்குள் நுழைந்து விட்டான்.

"ஆரடா அவன். மாயாதையாய் இறங்கி விடு" என்று தலையை உயர்த்திக் கத்தினாள் அவள். சிவலிங்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வட்டுக்குள் ஓலை மட்டைகளுடன் படுத்திக் கொண்டான். யாரென்று தன்னைக் கண்டு பிடித்து விட்டாளா என்பதே அவனுடைய அப்போதைய பிரச்சனை. அவள் குரல் உயர்ந்தது. து}ஷணை வார்த்தைகளும் தாராளமாகப் பாய்ந்து வந்தன. ஓலையின் மேல் படுத்துக் கிடந்தவன் இடது கையால் ஓர் இளனியைத் திருகினான். இதைக் கண்ட தோட்டக்காரிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது; கூக்குரல் போட்டாள். அதைக் கேட்ட சிவலிங்கம் தன்னுடைய களிசானை கழற்றி தன் தலையில் போட்டுக் கொண்டான். இளனிக் காம்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டான். மரம் நீளம் இறங்கிய அவன் தோட்டக்காரியையும் தள்ளிக் கொண்டு, இளனியை அவளிடம் எறிந்துவிட்டு வடலி;கூடலை நோக்கி ஒரே ஓட்டமாகத் தலை தெறிக்க நிர்வாணமாக ஓடினான். தோட்டக்காரியால் அவனை யார் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளுக்கு ஆத்திரமும் சிரிப்பும் மாறி மாறி வந்தன. அவள் கூக்குரல்கூட தானாகவே நின்று விட்டது. நின்றவள் ஒரு கையால் இளனியை எடுத்துக் கொண்டு நடக்க வெளிக்கிட்டாள்.
பாPட்ஷை

அடுத்த கிழமை பாPட்ஷை. அவன் பி. ஏ. கடைசி ஆண்டு. பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் பாPட்ஷை. இரண்டாம் ஆண்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமில்லை.

இப்பொழுதுதான் அவளைக் கொண்டுபோய் ஹில்டா ஒபயசேகரா மண்டபத்தில் விட்டு வருகிறான். இரவு எட்டு மணியாகிறது. மகாவலி கங்கைக் கரையோரங்களில் சல்லாபித்து விட்டு, இப்பொழுதுதான் அவள் போகிறாள். 'அக்பர்' மண்டபத்துக்கு ஆற்றைக் கடந்து பாலத்தில் வந்து கொண்டிருந்தவனுக்கு அக்பர் மண்டப அறைகளில் தெரிந்த மேசை லாம்புகளின் வெளிச்சம் வெசாக் கூடுகளையே ஞாபகப்படுத்தின. அடுத்த கிழமை பாPட்ஷையை நினைக்கையில் வயிற்றை ஏதோ கிண்டியது. இன்றைக்குக் கட்டாயம் பன்னிரெண்டு மணி வரையாவது படித்துவிட்டுத்தான் படுக்கைக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அறைக்கு வந்து கதவைத் தட்டியபோது விஜேயின் லாம்பு எரிந்து கொண்டிருந்தது. விடிய காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, எழுந்த வேகத்தில் முகத்தைக் கழுவியும் கழுவாமலும் படிப்பான். காலைச் சாப்பாடு முடிந்தவுடன் நு}லகத்திற்கு ஓடிப் போய்ப் படித்துவிட்டு, மதிய உணவுக்கு ஓடி வந்து சாப்பிட்டு விட்டு உடனடியாகத் திரும்பவும் நு}லகத்திற்குச் சென்று மாலை ஏழுமணிக்குச் சாப்பாட்டிற்குத் திரும்பி வந்து உண்ட பின்னும் படித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் படிப்பு சரியாகப் பன்னிரெண்டு மணிவரை தொடரும். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்துவிடுவான்.

இவனுக்கு இப்படிப் படிப்பதற்கு என்னதான் விசயம் இருக்கோ என்று யோசித்து இவன் சிரிப்பதுண்டு. படிப்பு உலகத்தைத் தவிர வேறு உலகங்கள் இருப்பதே அவனுக்குத் தெரியாது போதும். உடுப்பை மாற்றாமலே முகத்தைக் கழுவிக் கொண்டு சாப்பாட்டு அறையை நோக்கிச் சென்றான். அவனைப் போலவே இன்னும் சிலர் கோப்பைகளை ஏந்திக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து சமையல்காரரை ஏதோ ஏதோ கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் அக்பர் மண்டபப் பக்கமிருந்து கடார் கட கட கட என வாளி படிகளில் உருளும் சத்தம் கேட்கிறது. படித்த அலுப்புத் தீர மற்றவர்களைத் தொந்தரவு செய்ய தண்ணீர் வாளிகளை எடுத்து மேல் மாடியிலிருந்து உருட்டி விட்டிருக்கிறார்கள். படித்து அலுத்தவர்கள் தங்கள் அலுப்புக்களை வெளியேற்றும் வடிகால் அதுவென்று நினைத்துக் கொள்கிறான். தனக்கு ஏன் இப்படிப்பட்ட வடிகால்கள் அவசியமாவதில்லை என்று ஆராய்ந்து கொள்கிறான். தான் படிப்பதே மிகக் குறைவு. அதற்கு மேலாக அவனுக்குத் தேவையான வடி காலின் அளவுக்கு மிஞ்சி அவன் தன் சிநேகிதியுடனும், சிநேகிதர்களுடனும், பிற விசயங்களிலும் காலத்தைக் கழித்து விடுகிறானே. அதற்குப் பின்னும் எப்படி அவனுக்கு வடிகால் பிரச்சனை வரும்.

சாப்பிட்டுவிட்டு அறைக்குப் போனவனுக்கு எதைப் படிக்கலாம் என்ற சிந்தனையே அரைமணி நேரம் பிடித்தது. படிக்கத் தேவையான குறிப்புக்களே அவனிடம் அதிகம் இல்லை. உள்ள குறிப்புக்கள் கூட அங்கொரு கொப்பியிலும் இங்கொரு கொப்பியிலும் அலங்கோலமாக சீர்படுத்தப்படாமல் ஒழுங்கின்றிக் கிடந்தன. அவற்றையெல்லாம் தொகுத்துப் படிக்கத் தொடங்குமுன் பாPட்சையும் முடிந்து விடும் என்று தோன்றியது.
"விஜே நீ இப்போ படிக்காத குறிப்பொன்றைத் தருகிறாயா?"
-என்று கேட்டு வாங்கிக் கொண்டான். விஜேயின் குறிப்புக் கொப்பிகளில் சிவத்த மையால் கீறப்பட்ட அடையாளங்களையும், எல்லைகளின் மறுபுறத்தில் எழுதப்பட்ட சிறு குறிப்புக்களையும் பார்க்கையிலே அவன் எப்படி எத்தனைதரம் ஆழமாகப் படித்திருக்கிறான் என்பது விளங்கியது. அந்தக் குறிப்பை ஒரு தரமாவது வாசிக்க இயலுமா என்பதை யோசிக்கையில் அவன் மனது அடித்துக் கொண்டது. அனைத்தையும் படிக்காமல் தெரிந்து படிக்கலாம் என எண்ணிக் கொண்டான். திரும்பவும் குறிப்பைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். எதைப் படிப்பது, எதை விடுவது என்ற பிரச்சனையையே அவனால் தீர்க்க முடியாதிருந்தது. விஜேயைக் கேட்கலாம் என்றாலும், அவனைக் குழப்பக் கூடாது என்று ஏற்கெனவே அவனுடைய நிபந்தனை வேறு இருக்கிறது. அதை நினைத்துக் கொண்டு பேசாமல் இருந்தான். திரும்பவும் அவனுடைய மனது அடித்துக் கொண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பாPட்சித்த கேள்விக்களை எடுத்து அவற்றில் விட வேண்டியவற்றை விட்டு தெரிய வேண்டியதைத் தெரிந்து படித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்கிறான். அதற்கும் தன்னிடம் பழைய கேள்வித் தாள்களோ அதன் பிரதிகளோ இல்லை. விஜேயிடம்தான் எல்லாம் ஒழுங்காக இருக்குமே, அவனிடம் கேட்கலாம் என்றால் அவனைத் திரும்ப குழப்ப விரும்பவில்லை. குழப்புவதாக அவனும் எண்ணிவிடுவானே என்ற பயம் வேறு.
மெதுவாகத் தயக்கத்துடன் கேட்கிறான். விஜேயும் ஒன்றும் பேசாமல் கேள்விகள் எழுதி இருந்த கொப்பியை எடுத்துக் கொக்கிறான். இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பரோபகாரச் சிந்தனை விஜேக்கு வந்தது உண்மையில் இவனில் ஏற்பட்ட இரக்க உணர்வா? அல்லது இவன் கொடுத்தாலும் எங்கே பண்ணப் போகின்றான் என்ற நினைவோ? விஜேக்கு பெரிய நன்றி ஒன்றை உண்மையிலே மனந் திறந்து சொன்னான். விஜே திரும்ப கொப்பியை வாங்கிச் சில கேள்விகளைக் காட்டி அவற்றை மட்டும் படித்தால் போதும்; அவை நிச்சயம் பாPட்சைக்கு வரும் என்று கூறுகிறான். இன்றைக்கு இவனுக்கு இத்தனை து}ரம் இரக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற மனோபாவம் எப்படி வந்தது என்று வியந்து கொள்கிறான். உண்மையிலே நல்லவன் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.
"நான் நிச்சயம் பாஸ் பண்ணுவேன். கடவுள் கொடுப்பது போலல்லவா இவன் கொடுக்கிறான். ஏதோ காலம் தான் எனக்கு வரப் போகிறது" என்று தன் அதிர்ஷ்டத்தை நினைத்துக் கொண்டான்.

வரப்போகிற கேள்விகள் எல்லாவற்றையும் வேறொரு கொப்பியில் எழுதி வைத்துக் கொள்ளுவோமா அல்லது அவற்றை வாசித்து விட்டு மனதில் பதித்துவிட்டுக் கொடுத்து விடுவோமா என்று நினைத்துக் கொண்டிருக்கையில் முன் அறையில் இருந்து புல்லாங்குழல் இசை தொடங்குகிறது. இப்ராகிம் புல்லாங்குழல் இசை வாசிக்க வெளிக் கிட்டு விட்டான். அவனும் தன் பாடங்களை முடித்துவிட்டு இசையை வடி காலாக்குகிறான் போலும். விஜேக்கு கோபம் வந்து விட்டது என்பதை செருப்பை அவசரமாகப் போட்டுக் கொண்டு 'பாத்ரூமு'க்கு ஓடிப் போவதிலிருந்து அறிந்து கொள்கிறான். கேள்விகளை வாசித்து விளங்கிக் கொள்ளப் பாhக்கிறான். கேள்விகளோ விளங்குவதாக இல்லை. விசயம் ஓரளவாவது தெரிந்தால்தானே கேள்விகள் விளங்குவதற்கு? எல்லாக் கேள்விகளையும் பிரதிபண்ணி விடலாம் என்று பேனையைத் தேடுகிறான். வேறெங்கோ இருந்து வாளி உருளும் சத்தம் கட கட கட வென்று கேட்கத் தொடங்குகின்றது. அதே வேளை மறு பக்கதிலிருந்தும் இன்னொரு வாளி பயங்கரமான சத்தத்துடன் உருளுவது தொடர்ந்து பல வாளிகள் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு எல்லா இடங்களிலும் இடைவிடாமல் கேட்கிறது. அவ்வேளை பல இடங்களிலிருந்து வரும் ஊளைச் சத்தமும் நீண்டொலிக்கிறது. விஜேயின் மணிக்கூண்டிலிருந்து அலாரம் க்hPங்...... என்று விடாமல் அடிக்கிறது. விஜே புத்தங்களை தடார்புடார் என்று மூடிவிட்டு போர்வையை எடுத்துக்கொண்டு கால் தலை ஏதுவும் தெரியாமல் மூடிக் கொண்டு படுத்துக் கொள்கிறான். இவனும் தன் பேனையை மூடி வைத்து விட்டுக் கட்டிலை நோக்கிச் செல்கிறான்.

குழந்தைகள்

அவர் முகத்தை உற்றுப் பார்க்கிறேன். எங்கோ எப்போ பார்த்ததாக ஞாபகம். மீண்டும் உற்றுப் பார்க்கிறேன்.
"இந்த நாட்டிற்கு நீங்கள் முன்பு எப்பொழுதாவது வந்துள்ளீர்களா?"
"இல்லவே இல்லை."
"உங்களுடைய புகைப்படம் எங்காவது பத்திரிகைகளில் அல்லது புத்தகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா?"
"நான் ஒரு அநாமதேயம் பிரபல்யமில்லாதவன் என்னுடைய படம்..........நான் சேர்ச்சில் விவாகம் செய்த. போது மட்டும் மனைவியுடன் உறவினருடனும் சேர்த்துப் படமெடுத்துள்ளேன். அதை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்"

சிரித்துக் கொண்டே தோள்களை உதறிக் கொள்கிறார் பிரெஞ்சுக்காரரைப் போல. ஒவ்வொருவருடைய முகங்களும் ஏதோவொரு மிருகத்தினுடைய முகத்தை ஒத்திருப்பது போலவும், அவர்களுடைய முகங்களுக்கும் மிருகங்களுடைய முகங்களுக்கும், உடலமைப்பை விட அதிகத் தொடர்புகள் இருக்கின்றன போலவும் எனக்குப் புலப்பட்டது.
"நிங்கள் பிரெஞ்சுக்காரர் அல்லவே?"
"நாங்கள் ஆங்கிலேயன். அதுவும் பொதுப்பாடசாலையில் கல்வி கற்றவன் என்பதை என்னுடைய உச்சரிப்பு முறையிலிருந்தே கண்டு பிடித்தீர்கள் என்று நீங்களே முன்பு கூறினீர்கள். இப்பொழுது நீங்கள் முரணாக பிரெஞ்சுக்காரனா என்று கேட்கின்றீர்கள். அது முரணில்லையா?" மடக்கி விட்டது போன்ற குழந்தையின் சிரிப்புடன் கேட்கிறார்.
"பிரெஞ்சுக்காரர்தான் தோள்களை அசைத்துக் கதைத்துக் கொள்வார்கள். அது உங்களிடம் எப்படித் தொற்றிக் கொண்டது என்பதே என் சந்தேகம். வேறு எந்த முரணுமல்ல."
"இப்பொழுது எல்லாம் ஐரோப்பிய பொதுச் சந்தையில் நம் நாடு அங்கம் வகிக்கின்றதல்லவா?"
என்ன சொல்லப் போகின்றார் என்பதை ஊகித்துக் கொள்கிறேன். இருப்பினும் அவரின் நகைச்சுவை உணர்வு எப்படிப்பட்டது என்பதை இரசிப்பதற்கும், எவ்வளவு ஆழமான குழந்தை முகபாவமும் ஆங்கில உச்சரிப்பும் இருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு இடைமறிக்காமல் அவரைப் பேசவிட்டு விடுகிறேன்.
"..............நம் நாட்டுக் கொள்கைகளுக்குப் பொதுச் சந்தை நாடுகளிலும் அந் நாட்டுப் பொருட்களுக்கு எங்கள் நாட்டிலும் வரி அறவிடப்படுவதில்லை. அதே போல......."
"அதே போல.........."

பிரெஞ்சுக்காரருடைய பண்பாடுகளை நாமும், எங்களுடையதை அவர்களும் வரிகளின்றிப் பரிமாறிக் கொள்கின்றோம். அதில் ஒன்றுதான் இதுவும்."
"நான் இதை வேறு விதமாகச் சொல்லுவதை அனுமதிப்பீர்களா" என்ற ஆங்கிலப் பீடிகையுடன்-எனக்கு அது அர்த்தம் இல்லாததாகவும் சில வேளை போலியாகவும் கூடப் படுவதுண்டு: ஆனால் எம் நாட்டவருடன் ஆங்கிலத்தில் கதைக்கும் பொழுது அம் மரபை-பீடிகையை-போடுவதில்லை; இவர் அப் பீடிகையை எதிர்பார்க்கலாம், விரும்பலாம். என்னை முரடன் என்று நினைக்கக்கூடாது என்பதற்காக அப்பீடிகையை மிகத் தாழ்மையுடன் உபயோகித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர் அதிகளவு தனித் தன்மை இல்லாதவர்கள். அதனால் நீங்கள் வேறு நாட்டவரிடமிருந்து பலவற்றையும் கடன் வாங்குகிறீர்கள். சில வேளை உங்கள் பண்பாட்டைக் கூட. இதைச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுமென்று திரும்பவும் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். அவருடன் முரட்டுத் தனமாகக் கதைத்திருக்கலாம் என்ற நினைவில். அதே குழந்தைச் சிரிப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பிரமித்துப் போகிறேன். என் நாட்டவரை இப்படிச் சொல்லியிருந்தால் இப்படித் தாங்கிக் கொண்டு இவ்வளவு அமைதியாக இருந்து குழந்தையாகச் சிரித்து இருப்பேனா? நாங்கள் மிகமிக உணர்ச்சிவசப்படும் சமூகம், குறைந்தது மேற்போக்காகவாவது என்பது என் அபிப்பிராயம்,
"நீங்கள் ஏன் அப்படிக் கூறுகிறீர்கள். எங்கள் நாட்டுக் கவிஞாகளை, தத்துவ ஞானிகளை வாசித்திருப்பீர்களே. குறைந்தது சேக்ஸ்பியரையாவது நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?"

"உண்மை, சேக்ஸ்பியர் போன்ற ஒரு சிலர் மிகப்பெரிய சிருஷ்டயாளர்கள்தான். ஆனால் அவர்களும் ஒரு சிலர்தான். சேக்ஸ்பியரை எடுத்துக் கொள்வோமானால் அவர் தன் சொந்தக் கற்பனையில் எந்தக் கதையையுமே உருவாக்கவில்லை. அனைத்தும் பிற ஆசிரியர்களின் கதைகள் தான். அவற்றைத் தனது கலைத்துவத்தால் கலைக்கோயில்களாக ஆக்கியுள்ளார். அதுவுமில்லாமல் எந்தவித அடிப்படைத் தத்துவங்களையும் அவர் கொண்டிருக்கவில்லை. எலிசபெத் காலத்திலிருந்த சார்பான, மாற்றக்கூடிய, ஒழுக்கக் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு பல தனிப்பட்டவர்களின் மனநிலைகளை மிகப் பிரமாதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். சேக்ஸ்பியர் போன்ற மேதைகள் கூட தொகையில் வேறு ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்கள் போல அதிகமில்லையே, இலக்கியத்திலோ, சங்கீதத்திலோ, தத்துவத்திலோ எதிலும். ஆனால் நீங்கள் மிகத் திறமை வாய்ந்த வியாபாரிகள். அதுவும் சிரித்துக் கொண்டே, விட்டுக் கொடுத்துக் கொண்டே தந்திரமாக வியாபாரம் செய்யக் கூடியவர்கள்."

இவ்விடத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் குரலை உயர்த்தி நான் பேசுவதாக உணர்ந்ததால் பேச்சை நிறுத்திவிட்டு அவர் முகத்தைப் பார்க்கிறேன். மிக அமைதியாகக் குழந்தையாகப் புன்னகை புரிந்தார். அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. இதுவும் வியாபாரத் தந்திரமா? ஆழ்ந்த தன்மையா? இயல்பான குழந்தைத்தனமா? என்ற சந்தேகம் வரவே அதன்மேல் அவருடன் கதைக்க விரும்பவில்லை, சொல்லிக் கொண்டு விடை பெற்றேன்.

கற்பழிப்பு

மெலிந்த உருவம். கிசு கிசு என்று கிட்டத்தட்ட ஆறடிவரை வளர்ந்து விட்டான். மீசையில் இப்பொழுதுதான் கருமை படர்கிறது. பல வருடங்களாக வீட்டிற்கு வந்து போகின்றான். பக்கத்துவீடு. இப்பொழுதெல்லாம் அவன் நடையில், உடையில், பார்வையில் பல வித்தியாசங்கள். நேராகப் பார்க்கக் கூசுகிறான். ஆரம்பத்தில் களங்கமில்லாமல், 'hPச்சர் hPச்சர்' என்று குழைவாக என்னைத் தொட்டுப் பார்த்து எவ்வளவு மிருதுவாக பூனைக்குட்டி போல கைகள் என்று என்னை சொல்லியவனா இன்று என்னைப் பார்க்கவே கூசுகிறான். தயங்கித் தயங்கிப் பேசுகின்றான். புரிய வைக்க முடியாதவையைப் புரிய வைக்க முயற்சிப்பது போலத் திணறுகிறான். ஏன் இந்த மாற்றம் என்னில் என்ன புதுமையையும் வேறுபாட்டையும் கண்டு விட்டான். அன்று இருந்ததைப் போலவே நான் இன்றும் சில இளமையின் பசுமைகள் குறைந்து கூட இருக்கலாம். ஒன்றிரண்டு தலைமயிர்கள் நரைத்திருக்கின்றன. மார்பகங்கள் கூட இளமையைக் கடந்து விட்டன. அப்படியிருந்தும் என்னைப் பார்க்க ஏன் கூச்சப்படுகின்றான். அவனைப் பார்க்க எனக்குக் கூச்சமாக இருக்கின்றது. அவனுக்குப் பக்கத்தில் போகும்போது சில வேளைகளில் பின்னால் பார்க்கிறவர்கள் ஒரு ஜோடி போகிறது என்றல்லவா நினைப்பார்கள். நான் தயங்குகிறேன். எவ்வளவு சரசமாக ஆசிரியை-மாணவன் என்ற முறையிலும் தம்பியைப் போன்றும் பழகிய எனக்கு ஏன் இந்தச் சறுக்குப் புத்தி. என் மனநிலைகளைத்தானா அவனில் ஏற்றிப் பார்க்கிறேன். அல்லது இருவர் மனதிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவா? மனம் நிலையாக ஸ்திரமாக வைத்திருக்க முடியாத ஒன்றா? எவ்வளவு கீழான மனம்.

ஒரு நாள் பாடசாலையை விட்டு வந்து சாப்பிட்டதும் அயர்ந்து து}ங்கிக் கொண்டிருக்கும் போது.............. அவன் என்னை இறுகித் தழுவுவது போலவும் அதை நான் எவ்வித எதிர்ப்பு மில்லாமல் ஏற்றுக் கொள்வது போலவும்............. சீ சீ எவ்வளவு கெட்ட கனவு.......... இப்படியெல்லாம் சின்னத்தனமாக.............. சிறுபிள்ளையாக........ கேவலம் என்னுடைய புத்தியை சிலிப்பரால் அடிக்க வேண்டும். சில வேளை கனவில் கண்ட மாதிரியே அவன் என்னை ஏதாவது செய்து விட்டால்........ அப்படியே ஸ்தம்பித்து எந்தவித எதிர்ப்புமில்லாமலும் இருந்து விடுவேனா. என்து உடலை உணர்ச்சியை என்னாலேயே வெல்ல முடியாத கேவலமான பிறவியா ?.............. நான் பெண்தான் இருந்தாலும்...... தகுதியற்று, என்நிலை தாழ்ந்து கண்ட கண்டவர்களுடன் எந்தவித எதிர்ப்பும் இன்றிபடுத்தெழும்ப நினைக்கும் விபச்சாரியா? அப்படிப்பட்ட பலவீனமானவளா? சிறுபிள்ளை....... தன்னிடம் ஆரம்ப காலத்திலிருந்து படித்து இன்று உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் என் மாணவனுனேயே கட்டித் தழுவும்......... சீ.....சீ கேவலம்.

..........தன் மனதைத் திடப்படுத்த முடியாத, ஒருநிலைப்படுத்த முடியாத பெண்ணா...... பெண்ணாகப் பிறந்தாலே இவ்வளவு கேவலப்படவேண்டுமா? என்னை விரும்பி என் கைகளைப் பிடித்து பிசைந்து என்னைத் தழுவியவன் என்னைக் கைவிட்டு வேறொருத்தியை மணம் முடித்து இன்று பிள்ளை குட்டிகளுடன் வாழுகின்றான். அவன் கூட என் நினைவில், கனவில் இப்போ வருவதில்லையே. இவன் எனது கனவில் நினைவில் ஏன் இப்படி என்னை வருத்துகிறான். அவனின் ஓங்காரமான வளர்ச்சி என்னை உணர்ச்சிகளை கிளறி விட்டனவா? அல்லது அவனின் பார்வையில் எனது அர்த்தங்களை காண்கின்றேனா? உணர்ச்சிகள் மனநிலையை பார்வையை எல்லாம் அப்படியே வக்கிரமாக மாற்றி விடுகின்றனவா? அவன் நினைவும் வரவும் நாளுக்கு நாள் உன்னை இழுக்கச் செய்து விடுகின்றனவே. நேற்று அவன் இங்கு வந்தான். தயங்கித் தயங்கித் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை. அவன் சிறிது நேரம் விக்கி விக்கி விட்டு திடீரென கேற்றைத் திறந்து கொண்டு போய் விட்டான். என்னால் எதையும் கொள்ள முடியவில்லை. அவன் ஏன் என்னைப் பார்த்தவுடன் தயங்கினான்? என் முகத்தில் என் மனம் - வக்கரித்த-மனம்-தெரிந்ததா? அல்லது அவன் வந்தவுடன் அவன் தைரியத்தை இழக்கச் செய்து விட்டேனா? என் உணர்ச்சிகள் அவனில் ஏறி அவன் உணர்ச்சி வசப்பட்டு விட்டானா? இந்த உணாச்சிகளை என்னால் வெல்லவே முடியாதா?

இன்று அவனின் வீட்டிற்குப் போயிருந்தேன். அவன் அவன் தாய் வெளியே போயிருந்தாள். அவன் தனியே வெளிவிறாந்தையில் புத்தகமும் கையுமாக வெறும் சாரத்துடன் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டதும் என்னால் உள்ளே செல்ல முடியாமல் போய் விட்டது. அவன் என்னைக் கண்டவுடன் எழுந்து நின்றான். அவனின் மார்பில்தான் என் கண்கள் நிலைத்தன, மயிர்கள் நெஞ்சின் நடுவில் அரும்பிக் கறுத்திருந்தன. என் கண்களை அதிலிருந்து எடுக்கவே முடியவில்லை. அதைப் பார்த்து விட்ட அவன் தலையைக் குனிந்து கொண்டு நின்றதைப் பின்னால்தான் அவதானித்தேன். அவனால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் உள்ளே சென்றவன் சேட் போட்டுக் கொண்டுதான் வெளியே வந்தான் பே சாமல் திரும்பி விட்டேன். நானே அவனை 'றேப்' பண்ணிவிடுவேன் போன்ற பயம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்தச் சந்தர்ப்பம் வராமல் விட்டால் எவ்வளவு நல்லது என்னை பற்றி அவன் என்ன நினைப்பான். கண்ட கண்டவர்களை எல்லாம் வலிய இழுத்துத் தழுவிப் புணரும் வே........ அவனுக்கு விருப்பம் இருந்தும் என்னை உதறிவிடலாம். தன் நண்பர்களிடமெல்லாம் என்னைப் பற்றி நான் செய்ததைப் பற்றிச் சொல்லிபீத்தலாம். என் மரியாதை மானம் அந்தஸ்து காற்றில்............. ஐயோ................