கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  காலங்கள்  
 

சாந்தன்

 

காலங்கள்

சாந்தன்

---------------------------------------------------

காலங்கள்

(சிறு கதைத் தொகுதி)

சாந்தன்

வெண்புறா வெளியீடு

-----------------------------------------------------

KAALANGAL
(Collection of Short Stories in Tamil)

By
A. SANTHAN
Publishers:
VENN PURAA Publication

Copyright with The Anthor
1st Edition January - 1994
Pages 56
Cover Design: Variyan

Printed at:
RATHEEP Printers
K.K.S. Road - JAFFNA

PRICE: Rs. 30.00

---------------------------------------------


'.......... அநாயாசமாகப் பொருளை உணர்த்தும் கலைத்திறன் சாந்தனிடத்து அபரிமிதமாய்க் காணப்படுகிறது..... சுயபிரகடனஞ் செய்யாத-ஆனால் கனதியான மூகப் பார்வை ஆசிரியருக்கு இருப்பதனாலேயே இத்தகைய கதைகளை அவரால் எழுத முடிகிறது என்று எண்ணுகிறேன்....... இன்று தமிழில் விதந்து குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதுவோரில் சாந்தனும் ஒருவர் என்பதை, வாதிட்டு நிறுவ வேண்டிய தேவையில்லை.....'

-பேராசிரியர் க. கைலாசபதி
'முளைகள்' முன்னுரை (1982)

'....... இவ்வளவு குறுகிய வடிவத்தில் இவ்வளவு மகத்தான செய்திகளைத் தந்துவிடவும் முடியுமா என்று வியக்கத்தக்க வகையில் சாந்தன் வெற்றியடைந்திருக்கிறார்...... புனை கதையில் இது ஒரு விசேஷச்சாதனை,

அசோகமித்திரன்
'இன்னொரு வெண்ணிரவு' முன்னுரை(1988)

'.......... இந்தச் சிறுகதைகளை ஒரு விஞ்ஞானியின் கலைப்பார்வை என்றோ, ஒரு கலைஞனின் விஞ்ஞானப்பார்வை என்றோ கூடச் சொல்லலாம்.............. இத்தொகுதியைப் போன்ற ஒரு சில கலைமுயற்சிகளினால் தான் ஒருமொழி பிறமொழியினத்தவரிடம் தலை நிமிர்ந்து நிற்கமுடியும்.......'

-நீல. பத்மநாபன்
'கணையாழி'யில் 'ஒரே ஒரு ஊரிலே.....' விமர்சனம் (1975)

-------------------------------------------------------------

உள்ளீடு

11 இருகோடுகள்
14 அந்நியமான உண்மைகள்
19 ஒரு விருந்தின் முடிவு
20 பாத்திரம்
22 சுரண்டல்
23 ரிஷ்கா
25 அஸ்பெஸ்ரஸ்
27 தலைமுறைகள்
30 அதே விதியெனில்
33 எழுதாத கடிதம்
35 நன்றி
36 அவன்
39 உறுத்தல்
42 வீடு
45 காலங்கள்

------------------------------------------------------

முன்னுரை

சாந்தன் கதைகளுக்கென்று சில தனித்தன்மைகள் உண்டு. அவற்றுட் பிரதானமானவை இரண்டு. ஒன்று சுருக்கம். மற்றது குறிப்புணர்த்தல்.

முன்னொரு காலத்திலே இலக்கியங்கள் நெடியனவாய் வளர்ந்து வளர்ந்து செல்வது சிறப்பென்று கருதப்பட்டது. சுலோகம் சுலோகமாக, படலம் படலமாக, காண்டம் காண்டமாகத் தொடர்ந்து விரிந்து கிடப்பவை புராணம். இதிகாசம், காப்பியம் என்பன ஐரோப்பாவில் உதயமான புதிய கதை இலக்கியங்களும் நாவல்கள் என்ற பெயருடன் தொகுதி தொகுதியாக, ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டவையாக வெளி வந்தன. இப்பொழுதும் சிலர் அவ்வாறு நெடிய கதைகளை எழுதுவதுண்டு அத்துடன் எடுத்த எடுப்பிலே தங்குதடையில்லாமல் விரைவாக (பெரும்பாலும் வாய்மொழியாகவே) கதைகளை அல்லது பாட்டுக்களை அல்லது கதைப்பாட்டுகளைச் சொல்லிக்கொண்டு போகும் திறமையும் மலைப்புடனும் வியப்புடனும் மதிக்கப்பட்டது. சிற்சில சமூகங்களிலே இப்பொழுது கூட அவ்வாறு விளையாட்டாய்க் கதைப்பாட்டை விரைந்து சொல்லிச் செல்லும் மரபு இருக்கிறதை நாங்கள் கேள்விப்படுக்றோம்.

ஆனால் உலகெங்கும் ஏற்பட்டுவிட்ட தொழில் நுட்ப விருத்தியின் பேறாக, விரைவும் அவசரமும் நமது இன்றைய வாழ்க்கையின் குணங்களாகவும் குறுகளாவும் அமைந்து விட்டன. அதன் தவிர்க்க முடியாத விளைவாகப் போலும் சுருங்கிய கலைவடிவங்கள் சில இன்று புதியனவாக உருவெடுத்து நடமாடத் தொடங்கிவிட்டன. இந்தச் சுருக்கம் வாழ்நிலையின் தேவை காரணமாக எழுந்தது என்று நாம் நியாயம்காட்டக் கூடுமாயினும் அதனையே ஒரு கலையுத்தியாகப்பயன் படுத்தும் வழக்கம் முற்றிலும் புதியதொன்றல்ல. பழமொழிகள் முழுமையான இலக்கியங்கள் என்று கருதப்படுவதில்லை. ஆயினும் அவற்றிலே கலைப்பண்புகள் பல பொருந்தியிருக்கின்றன. பழமொழிகளின் உயிர்நிலை அவற்றின் சுருக்கமே எனலாம். சுருக்கம் அல்லது குறுமையைக் கலைநயமுள்ளதோர் உத்தியாகக்கையாண்டவர் திருவள்ளுவர். அவருடைய ஆக்கங்களிலே ஒப்ப செப்பமான சொற் பொருத்தப்பாடு இன்றியமையாத ஓர் இயல்பாக அறிவறிந்து கையாளப்பட்டுள்ளது. குறளின் தற்புதுமை அது என்று கூறலாம்.

சாந்தன் கதைகளும் ஒப்பசெப்பமானவை: அல்லல் அளப்பு இல்லாதவை; து}சு தும்புகள் இல்லாமல் துடைத்துக் கழுவித் துப்பரவாக்கப்பட்டவை மெருகேறியவை; நுண்ணுணர்வோடு வடிவமைக்கப் பட்டவை. அவதானமமாக, மிகுந்த பொறுப்போடு ஒவ்வொரு சொல்லும்-ஏன் ஒவ்வோர் எழுத்தும்-தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கதைகள் நம்முடைய சூழலில் அதிகம் எழுதப்படுவதில்லை. மீண்டும் மீண்டும் படிக்கத்து}ண்டும் சில பண்புக் கூறுகள் இந்தக் கதைகளில் உள்ளன என்பது இவற்றின் பெறுமானத்தை மிகுவிக்கின்றன என எண்ணுகிறேன்.
இப்படிச சொல்வதனால் சாந்தன் கதைகள் வசனத்தில் எழுந்த குறள்கள் என்று நான் கூறவரவில்லை வள்ளுவரின் நோக்கம் ஒழுக்க போதனை. சாந்தனுடைய தளம் வேறு. மனித வாழ்க்கையின் விழுமியங்கள் தான் சாந்தன் கதைகளின் உள்ளடக்கம். ஆனால் சாந்தன் போதகராக எங்கள் முன் வரவில்லை. நடப்பியல் மெய்ம்மையிலுள்ள ஒவ்வாமைகள் சில கலைஞர்களின் உள்ளத்தை உறுத்துகின்றன. மனித மனங்களிலே சில அசைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றைப் பார்த்தும் பாராமலிருக்க அந்தக் கலைஞர்கள் விரும்புவதில்லை. அந்த அசைவுகளைப் பிறருடன் கலந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஓர் உந்தல் உண்டாகிறது. அந்த உந்தலின் விளைவே கலையின் பிறப்பு.

ஆனால் 'வாழைப்பழத்தைத் தோலுரித்து ஊட்டி விடுவதைச்' சாந்தன் விரும்புவதில்லை அவர் தமது வாசகர்களை மிகவும் மதிக்கிறார். அவர்களின் சுவைத்திறனை அவர் கௌரவிக்கிறார். அதனால் கதைவாயிலாக அவர் உணர்த்த எண்ணும் செய்திகள் வெளிப்படையாகத் துருத்திக் கொண்டு முழக்கஞ் செய்வதில்லை. பாரதியும் பாரதிதாசனும் ஆவேசங்கொண்டு முழக்கஞ் செய்த கலைஞர்கள். ஆனால் சான்றோர் செய்யுள் எனப்படும் சங்கத் தமிழிலே அவ்வித முழக்கங்கள் இல்லை அவற்றின் செய்திகள் உட்கிடையாகப் புதைந்து கிடக்கின்றன. குறிப்பால் உணர்த்தப் படுகின்றன. அவற்றைத் தேடித்தேடிக் கண்டு கொள்ள வேண்டும். இங்கு இருவேறு விதமான கலைநெறிகளைப் பற்றி நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று உணர்ச்சி மயமான நேரடி வெளிப்பாடு; மற்றது பாத்திரங்களின் ஊடாகவும், நிகழ்வுகளின் ஊடாகவும், உரையாடல் ஊடாகவும் மறைமுகமாக உணர்த்தும் முறை, இந்த நிகழ்வுகளையும் பேசல்களையும் நடத்தைகளையும் கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்து இறுதிப் பெறுபேற்றை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வித ஆக்கங்களிலே ஒரு வகையான 'நாடகத்தன்மை' உண்டு. கலைஞன் தானே முன்வந்து தோன்றுவதில்லை. தன் பாத்திரங்களைக் களத்திலே இறக்கிவிட்டுத் தான் ஒதுங்கிக் கொள்ளுகிறான். அல்லது தானும் ஒரு பாத்திரமாகி விடுகிறான். நேரடி வெளிப்பாட்டு முறை, உள்ளுறை குறிப்பு முறை ஆகிய இரண்டினுள்ளும், பின்னையதையே சாந்தன் விரும்புவதாகத் தெரிகின்றது. உள்ளுறை குறிப்பைத் தேடிக்காணும் செயல் வழியும் கலைநயப்பின் பிரிக்கவியலாத கூறாக அமைதல் வேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாகும்.

எனவே அவர் சொல்ல முயல்வது என்ன என்று பிறர் விளங்கப்படுத்த முற்படுவது மிகையாகும். கதைகளுக்குக் கருத்துரையோ விரிவுரையோ கூறுவது தேவையற்றது. ஒவ்வொரு வாசகரும் இவற்றை நேரடியாக அணுக வேண்டும். அதுவே சரியான வாசிப்பு முறையுமாகும். ஆனால் ஒன்றை மட்டும் இவ்விடத்திலே சொல்லி வைக்கலாம். சாந்தன் 'மண்ணின் புழுதியில் கால்;கள் படிய' வழி நடந்து செல்லுகிறவர். உடனே-அயற் சூழலைக் காண அஞ்சியோ, கூசியோ கண்களை இறுக மூடிக்கொள்ளும் பழக்கம் அவரிடம் இல்லை. செறிவும் கலைநேர்த்தியும் பயனும் நிரம்பிய ஒரு கதைத்தொகுதி உங்கள் கைகளில் உள்ளது. அதனுட்புகுந்து உலாவி அளவளாவி நலந்துய்க்கும் இனிய அலுவல் உங்களுக்காக் காத்திருக்கிறது.

மனநிறைவு தரும் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்ட அன்புக்கு நன்றி.

நீர்வேலி தெற்கு, இ. முருகையன்
நீர்வேலி.
1993-12-31

---------------------------------------

ஒரு வரி.......

உணர்வுந்தல் காரணமாய் அநுபவ மெய்ம்மையுடன் உருவாகும் ஆக்கங்கள், தம்முள் ஏதோ ஒரு இழையையேனும் தொடர்பாகக் கொண்டிருத்தல் இயல் பென்றே படுகிறது. இதனால், கால ஓட்டத்தில் அவ்வப்போது எழுதப்படும் சிறுகதை - தம்முள்ளிருக்கும் பொதுச்சரடு காரணமாய் - நாவலெனும் கோலமொன்றின் புள்ளிகளாய் அமைந்திடுதல் சாத்தியமா?

கடந்த இருபது ஆண்டுகளில் வெளியான என் கதைகளில் பலவற்றை ஒருசேரப் பார்க்கிறபோது இந்த எண்ணம் தோன்றுகிறது.

கோலத்தை இன்னும் தெளிவுபடுத்தவும் இடையில் இயல்பாகப் பொருந்திக் கொள்ளவும் ஏற்ற புள்ளிகளாய் -ஏனைய தொகுதிகளில் இடம்பெற்ற-எனது வேறு பல கதைகளால் இலகுவாக இயலுமெனினும், இது வரை நு}லுருப் பெற்றிராதவற்றிற்கு இதில் முன்னுரிமை கொடுக்க நேர்ந்தது. முழுமையானதோர் தொகுப்பு இனிமேல் சாத்தியமாகலாம்.

பெருமதிப்பிற்குரிய கவிஞர் இ. முருகையன் அவர்கள்: இக்கதைகளை வெளியிட்ட மல்லிகை, சமர், திசை, உள்ளம் ஈழநாதம், முரசொலி, வெளிச்சம் ஆகிய இதழ்கள்: ரதீப் அச்சக நண்பர் தி. செல்வராசா அவர்கள் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள்.

- ஐ. சாந்தன்
1993.12.28

யாழ்ப்பாணம்

----------------------------------------------

ஆசிரியரின் ஏனைய நு}ல்கள்

பார்வை - சிறுகதைகள்- யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
கடுகு - குறுங்கதைகள் - 1975
ஒரே ஒரு ஊரிலே- சிறு கதைகள் (சாகித்யமண்டலப் பரிசு பெற்றது) 1975
ஒட்டுமா - நாவல்- வாதர் வெளியீடு - 1978
முறைகள் - சிறுகதைகள் - சொன்ன N ஊ டீ ர் வெளியீடு- 1982
கிருஷ்ணன் து}து- சிறுகதைகள் - பாளையங் கோட்டை 'இலக்கியத்தேடல்' வெளியீடு- 1982
ஒளி சிறந்த நாட்டிலே - சோவியத் பயணநு}ல் ஈழமுரசு வெளியீடு 1985
ஆரைகள் - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985
இன்னொரு வெண்ணிரவு- சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு 1988
Thae Sparks - Collection of Short Stories - 1990

---------------------------------------------------------------

இரு கோடுகள்

பஸ் போகிறவேகம் மூர்த்திக்கு மிகவும் பிடித்திருந்தது. கல்கிசையிற் புறப்பட்டு காலிவீதியூடாக பம்பவப்பிட்டி வரைவந்து திரும்பி கறுவாக்காடு கொம்பனித்தெருவெல்லாம் ஊடறுத்து, கோட்டையில் மிதந்து, புறக்கோட்டையைத் தாண்டி மருதானைக்குள் நுழைந்து விட்டிருந்த அந்த ஒற்றைத்தட்டு 'இசுசு'. அங்கொடைக்குப் போயாக வேண்டும். இன்னுந் தாண்டிப்போக எத்தனையோ இடங்கள்....

சாரதிக்கு என்ன அவதியோ, அந்த வேகத்துக்கு.............

அதுதான் இவனுக்கும் பிடித்திருந்தது. மூர்த்தி கிராண்ட் பாசுக்குப்போக வேண்டும். இரவு மெயிலில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அசதி ஆளை வதைத்ததுக்கொண்டிருந்தது. பிந்தி வந்ததில், காலை நேரே அலுவலகத்துக்குப் போய்க் கொஞ்ச நேரம்வேலை பார்த்தான். சரிவரவில்லை அரைநாள் லீவு போட்டுவிட்டுப் புறப்பட்டவன் பஸ் தரிப்பில் முப்பது நிமிடம் தவங்கிடக்க நேரிட்டது.

நேரத்துக்குப் போனால் நிம்மதியாகக் கட்டிலிற் சாயலாம், எவ்வளவு வேளைக்குப் போகிறானோ அவ்வளவுக்கு நல்லது.

தொழில் நுட்பக் கல்லு}ரி நிறுத்தத்தில் நின்று புறப்பட்டதும் கூட்டம் சற்றுக் குறைந்தது போலிருந்தது. படிகளில் நின்று வந்த கொண்டக்டர் இப்போது மேலேறி நின்று கொண்டான், மூர்த்தி இருந்தது கடைசி வரிசை. இவனுக்கு முன்னால் வாசலை ஒட்டி கொண்டக்டர் வந்து நின்றான். வலு ஸ்டையிலாயிருந்தான், தன்னை ஆசுவாசப்படுத்தவோ அலங்கரிக்கவோ கைக்குட்டையில் முகத்தை அடிக்கடி ஒற்றிக்கொண்டான்.

சுருதி மாறிய இயந்திர உறுமல். அதனோடிணைந்த ஒரு உலாஞ்சல். சாரதி கியர் மாற்றி வண்டியை வெட்டி எடுத்திருக்க வேண்டும். தொட்டிலாக ஆடிய பஸ்ஸின் வாசல்வழியே பிடி தளர்ந்து நிலை தடுமாறிய-கொண்டக்டர் து}க்கியெறியப்படுவது மூர்த்தியின் கண்களிற் பட்டபோது மிகவும் பிந்திவிட்டது.

அநேகமாக இது எல்லோருடைய கண்களிலும் பட்டிருக்கும் போலிருக்கிறது. ஆளுக்காள் - பட்டவரை-சமயோசிதமாக ஒவ்வொரு வேலை செய்தார்கள். தொடர்ச்சியாக மணி ஒலித்தது. யாரோ பஸ் உடம்பின் தகரத்தில்கூட படபட வென்றுதட்டினார்கள்.......

ஐயோ, சப்தங்கள்,

நிறுத்தி........., கூவல்கள்............

மூர்த்தி இருக்கையை விட்டெழுந்தபடியே பின் கண்ணாடி வழியாகப் பார்த்தான், விழுந்த மனிதன் நடைபாதையிற் புரண்டு எழும்ப முயற்சிப்பது தெரிந்தது. மூர்த்தி உட்கார்ந்தான்.

வண்டியை நிறுத்தி, சாரதியுட்பட எட்டுப் பத்துப் பேர் இறங்கி, எங்கோகிடந்த டிக்கட்மெஷினை எடுத்து, கொண்டக்டரையும் கைத்தாங்கலாக அழைத்து வந்தபோது'ஆளுக்குக் காயமொன்றுமில்லை என்பதை எல்லோரும் அறிந்து கொண்டார்கள், நல்லகாலம், என்றுபெருமூச்சு விடுவதற்கு இதைவிடவும் இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, அவன் விழுந்த போது பின்னால் ஏதும் வாகனங்கள் வரவில்லை. மற்றது சில்லறைகள் சிதறவில்லை.

பஸ் மெல்லப் புறப்பட்டது. யாரோ நல்ல மனம் படைத்த ஒருவர் -வயதாளி-எழுந்து தன் இடத்தைக் கொண்டக்டருக்குக் கொடுத்தார்.

எல்லோரும்-ஒவ்வொருவரும் -தத்தம் அநுதாபங்களையும் அறிவுரைகளையும் ஓர் அசாதாரணமான பொறுப்புணர்வுடன் கொண்டக்டருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள் இவன் ஒருவனைத் தவிர.

இதனாலும், அந்த வயதானவரின் உணர்வு கூட இவனிடம் இல்லையென்று பட்டதாலும், சில பேருடையபார்வை மூர்த்திமேல் ஒருமாதிரியாக விழுந்தாலுங்கூட அவன் அவற்றைச் சட்டை செய்ய முடியாமலிருந்தான்.

கொண்டக்டர் நடைபாதையில் விழுந்துருண்ட அந்தக் காட்சி ஒரு கொழுக்கியயாக அவன் மனதை இழுத்து வேறெங்கோ போட்டுவிட்டிருந்தது.

இரண்டு கிழமைக்கு முன்புதான் ஒருநாள்- ஜனவரி பத்தாந்தேதி-இரவு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தின் முன் குழுமியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு துளியாய் அவனும் நின்றிருந்தான்.

----------------------------------------

அந்நியமான உண்மைகள்

"இங்கயிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போற முதல்பஸ் எத்தினை மணிக்கு காலமையிலை?" சைக்கிளைக் கையிற் பிடித்தபடி தகரக் கூரையின் கீழ்க்குனிந்து, உள்ளே எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆளிடங்கேட்டான். சிவம்.

அந்த ஆள்-ரைம் கீப்பரோ, யாரோ-இவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வேலையில் மீண்டும் மும்முரமாய் ஈடுபட்டதுபோலக்குனிந்து எழுதலானான். அந்த 'ஷெட்' டுக்குள்-அது வெறும் ஷெட் மட்டுமில்லை, திருகோணமலை பஸ்நிலையக்காரியாலயம், ரைம் கீப்பர் அலுவலகம், புக்கிங்கந்தோர், எல்லாம் அதுதான்-வேறு யாருமில்லை. எட்டடிக்கு எட்டடி சதுரமான அந்தத் தகரக் கொட்டகையின் கூரை விளிம்பு நிழலில் மட்டும் ஐந்தாறு பேர் ஒண்டிக்கொண்டு இந்தப்பதைக்கிற வெய்யிலிலிருந்து தப்புகிறதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிற ஆளைக் குழப்பி விசாரிக்க வேண்டிய அவசரம் சிவத்திற்கில்லை. சைக்கிளை மெல்லத் தள்ளிச் சாத்திவிட்டு வந்து, வலைக்கம்பிக் கருகில் ஆறுதலாக நின்றபடி, உள்ளே எழுதிக் கொண்டிருந்தவன் வேலையை முடிக்குமட்டும் பார்த்திருந்தான்.

நின்ற இடத்திலேயே தலையைத் திருப்பிப் பின்னால் தெரிந்த சந்தைக் கடைகளைப் பார்த்தபோது, கூரைகளுக்கு மேலே, வலு உயரமாய்த் தெரிந்த மணிக்கூட்டுக் கோபுரத்தில்பதினொரு மணியாகிக் கொண்டிருந்து. கைகளைச் சொடுக்கும் ஓசைகேட்டு சிவம் திரும்பினான். உள்ளே இருந்தவன் பேனாவை மூடி மேசையில் வைத்துவிட்டு இவனைப் பார்த்தான்.
"காலமையிலை, யாழ்ப்பாணத்துக்குப் போகிற முதல் பஸ் எத்தினை மணிக்கு?"
அந்த ஆள் சொன்ன பதில் இவனுக்குப் புரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய அந்த ஒரு கணத்திலேயே அவனுள் ஓர் சினமுங் கிளர்ந்தது
மச்சான்காரனின் வீட்டில் வந்து நின்று திருகோணமலையைப் பார்க்க அவன் செலவிட்ட இந்த மூன்று கிழமையிலும் அவன் அவதானிக்க நேர்ந்தவற்றிற்கு ஒரு உச்சம் போல இந்த நிகழ்ச்சி அமைவதாக அவன் உணர்ந்தான். அதுவே இந்தச் சினத்தின் பிறப்புக்குக் காலாகவுமிருந்தது. அதை அடக்கிக் கொண்டு மீண்டும் சொன்னான்:
"விடிய யாழ்ப்பாணத்துக்குப் போற முதல் பஸ்ஸிலை ஒரு சீற் புக் பண்ணவேணும்....."
இவன் சொன்னது புரியாததாக அவன் முகத்திற் கோலங்காட்டினான்.

"உங்களுக்கு தமிழ் தெரியாதா?"
'தெரியாது' என்பது போலத் தலையாடியது. தெரியாமலிருக்கிறதே என்பதற்காக எந்தவித விநாயமும்தென்படாத தற்குப் பதில், ஓர்அலட்சியமே அங்கு மிதந்து நின்றது. ஆத்திரமும் அவதியுமாய்ச் சைக்கிளை எடுத்தான் சிவம்.

"என்ன புக் பண்ணீற்று வந்திட்டியா?"
"என்னத்தைப் பண்ணுறது? அங்கை பஸ் ஸ்ரான்டிலை இருக்கிறவனுக்கு நான் சொல்லுறது விளங்கேல்லை: அவன் சொல்றது எனக்கு விளங்கேல்லை என்னத்தையெண்டு பண்ணிறது?"
"சரி, போகட்டும் நான் பின்னேரம் வரேக்கை புக் பண்ணிக்கொண்டு வாறன்...."
மச்சான் போய்விட்டார்,
'இருபது வயதுக்கு மேலாகியும் இன்னமுந் திருகோணமலை தெரியாமலிருக்கிறேனே'-என்பது வெட்கப்பட வேண்டிய சங்கதியாக சிவத்தை அடிக்கடி உறுத்திக்கொண்டிருந்தது. அதுவும் அவனுடைய சொந்த மச்சான் அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது-போய் நிற்கத் தங்க எல்லா வசதியுமிருந்தும்- தான் ஒரு தரம் அந்த ஊரைப் பார்த்துவிட்டு வராதது முட்டாள்தனம் என்று நினைத்தான் சிவம். அநேகமாக இலங்கையின் மற்றப் பாகங்களுக்குப் போகவேண்டி நேர்கையில் தன்னுள் எழுகிற ஒரு கூச்சமு, ஆற்றாமை உணர்வும் இந்தப் பயணத்தில் நேராது என அவன் நம்பினான். தனக்குத் தமிழை விட வேறுமொழி சரியாகத் தெரியாததும், தான் 'லோங்ஸ்' போடாத ஒருபிராருதி என்பதும் தன்னுள் இந்தத் தாழ்வுச் சிக்கலை வளர்த்திருந்ததை ஆய்ந்தறியக்கூடிய அளவிற்குச்சிவம் படித்திருந்தாலும், இவையெல்லாம் தன்னைத்தானே குறைத்து மதிப்பி-ஏற்ற காரணிகளே அல்ல என அவன் நன்றாக உணர்ந்திருந்தாலும், அதைமீற அவனால் முடிந்ததில்லை. யாழ்ப்பாணத்தில் பிரயாணம் பண்ணுகிற மாதிரியே திருகோணமலைக்கும் போய் வந்துவடலாம் என்று நம்பினான். 'உங்கே, நவராத்திரிக் கடைசி நாளன்று 'மானம்பூ, என்று நடக்கிறதைக் காட்டிலும் விசேஷமாக இங்கே இருக்கும். ஆனபடியால் இந்தமுறை கும்பபூசையை அண்டிஇங்கே வந்து நிற்கமுடியுமானால் தெண்டித்து வரப்பார்........' என்று போன மாதம் மச்சான் எழுதியது சிவத்திற்குத் தோதாய் வாய்த்தது. இங்கே பார்ப்பதற்கு எத்தனையோ இடங்களிருந்தன. ‘இவ்வளவுநாளும் ஒருமுறையாவது இங்கு வராமலிருந்தது என்ன முட்டாள் தனம்’ என்று தோன்றியது. கோணேஸ்வரம், கன்னியாஎங்கும் போனான். துறைமுகம் பார்த்தான். இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவனும் மச்சானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சீனன்குடாவிற்கும் போய் வந்தார்கள். நாக் முறிகிற அந்த ஏற்றங்களில் சைக்கின் உழக்கியது கூட சந்தோஷமாயிருந்தது.

ஆனால் எங்கும் அவன் ஓர் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்க வேண்டியே நேர்ந்தது. அவன், நினைத்து வந்தது போல-திருகோணமலை, யாழ்ப்பாணம் போல இல்லை என்பதுதான் அது. அவன் படித்திருந்தது, கேள்விப்பட்டிருந்தது, இவற்றால் திருகோணமலையைப்பற்றி அவனுள் எந்த ஒரு படம் பதிந்திருந்ததோ அதுகொஞ்சம் கூடப்பொருந்தாமல் இருந்ததை இங்கு வந்தபின் அவனால் அவதானிக்க முடிந்தது. போன இடங்களிலெல்லாம் அவன் அதை உணர்ந்தான். அதைப்பற்றி மச்சானிடங் கேட்டபோது,
“உண்மைதான் ஒரு பத்து பன்னிரண்டு வருஷத்துக்கு முந்திவந்திருந்தால், நீ நினைச்சது போலத்தானிருந்திருக்கும்…… இப்ப இல்லை….. என்றார்.
“என்னெண்டு அப்பிடி மாறிச்சுது?”
“உது பேசினால் அரசியலாய்ப் போகும், பேசாம வா….” என்றார் மச்சான்:
“….அரசாங்கமேதிட்டமிட்டுக் குடியேற்றுமு-பிறகென்ன?”

இன்றைக்கு பஸ் ஸ்ரான்டில் தவித்தது போல, நேற்றைக்கு சந்தையிலும் தவித்துப்போய்விட்டான் அவன், சந்தையிலிருந்து கடைத்தெருவைச் சுற்றிப் பார்த்தபடி நடந்தபோதும், அந்நியமாகிற ஒரு சூழலைக் கடைத்தெரு தந்தது. அங்கேயிருந்த சிலபெயர்ப்பவகைகள், கடைக்காரரின் திமிர்த்தனத்தை உணர்த்தின. கன்னியாவிலிருந்துவருகிற போதும், சீனன் குடாவிற்குப் போகிறபோதுங் கூட அந்தக் தெருக்களின் இரண்டு பக்கங்களும் இந்த மாறுதலின் நிச்சயசாட்சியங்களாய் விளங்கின. அங்கே எழுந்திருந்த வீடுகளெல்லாம் புதுக்கருக்கு அழியாதவை.

தான் நினைத்திருந்தது, தன் மனதில் விழுந்திருந்த படம், எல்லாம், நிதர்சனத்தில் இப்படி மாறி - அல்லது மாற்றப்பட்டு -இருந்தே பெரிய கொடுமையாக அவனுள் பட்டது.

மாலை ஐந்தோமுக்கால் பஸ் ஆறரைக்குத்தான் புறப்பட்டது. நேற்று இவன் போனபோது கொட்டகைக் குள்ளிருந்தவன்தான் இன்றும் ‘புக்’ பண்ணியவர்களைச் சரிபார்த்தான். பஸ் ஒரு முழு வட்டமடித்துத்திரும்பியபோது து}ரத்தில் கோணேசர் கோவில் தெரிந்தது. அதனருகே, மேலே இரவெல்லாம் செம்புள்ளியாகத் தெரிகிற தொலைதொடர்புக் கோபுர விளக்கு அணைத்துபோய்க் கம்பிக் கூண்டு மட்டுமே தெரிந்தது. நகரின் ஒடுங்கிய தெருவில் எதிரே வந்த கார் ஒன்றிற்கு இந்த பஸ் ஒதுங்கி நின்று வழி விட்டபோது. தெருக்கரைச் சுயரொன்றில் பெரிதாக எழதப்பட்டிருந்த வாக்கியம் சிவத்தின் கண்களிற் பட்டது:

‘இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களே, அரபுப் பிரதேசங்களை விட்டு வெளியேறுங்கள்.’


‘மல்லிகை’
ஜனவரி 1975




ஒரு விருந்தின் முடிவு

தில்லைநாதன் அரபுநாட்டுக்குப் போகிறான். வேலையை றிசைன் பண்ணியாயிற்று, பதினாலு வருஷஸேர்விஸ். உதறித்தள்ளி விட்டுப் போகிறான். இங்கே வருஷம் முழுக்க மாரடித்தாலும் கிடைக்காத காசு அங்கே ஒரு மாதத்தில் கிடைக்குமாம். கந்தோரில் ஒருநல்ல பிரியாவிடை ஒழுங்கு செய்தார்கள். தில்லை அதற்கு உரியவன்தான். எல்லோருடனும் நன்றாகப் புழங்கியிருந்தான். நல்ல கலகலப்பானவன். பகடிக்காரன். அவன் பிரிவதில் பலருக்கு வருத்தமிருந்தது.

ஒரு நாள் பின்னேரம்-கந்தோர் முடிந்ததும். பார்ட்டி நடந்தது. அமைதியான பார்ட்டி, தில்லையைப் பாராட்டிப் பேசவும். அவனுக்கு வாழ்த்துகள் கூறவும் பல பேர் முன்வந்தார்கள். சந்திரசிறி, கந்தவனம், றொட்றிகோ- மூன்று பேருக்கும் பேசும்போதே கண்கலங்கிவிட்டது. குளிர்பானங்கள் மட்டுமே பாவிக்கப்பட்ட இந்தப் பார்ட்டியிலேயே அவர்கள் கண்கலங்கினார்கள். பிறகு, ஒரு பேச்சின் சாராம்சம் இப்படி இருக்க நேரிட்டது:

"...... கடந்த கலவரகாலத்திலே, இந்த ஊரிலேகூட எவ்வளவோ நடந்தும் எங்கள் கந்தோரிலேயிருந்த வட பகுதி சகோதரர்களுக்கு ஒன்றும் நடவாமல் விட்டது தில்லைநாதன் போன்ற நண்பர்கள் இங்கிருந்ததை நினைத்துத்தான்..... அப்படிப்பட்டவர் தில்லை......"

அடுத்த ஒரிரண்டு நிமிஷங்களுக்குள்ளேயே, இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டுமென்ற குரல் எழுந்தது "கலவரம் என்றுவந்தால், அடிக்கிறவர்கள், அடிபட வேண்டியவர்களை-அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும்-நியாயம் தேவை இருக்கிறதோ இல்லையோ அடிக்கவேண்டியது ஒரு கடமையா. என்ன?..... இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டும்!"

இதை ஒட்டியும் வெட்டியும் கருத்துக்கள். ஒரே கசமுசா. பார்ட்டி குழம்பிவிட்டது.

சமர்
நவம்பர் 1980

பாத்திரம்

படலை திறந்த சத்தங்கேட்டு நிமிர்ந்தான். ஒரு பெண்-யாரென்று தெரியவில்லை-திண்ணையை நோக்கி விறுவிறென்று வருவது தெரிந்தது. தோளில் ஒரு பிள்ளை. நெருங்கி வரவர, மனுசியின் முகத்தை எங்காவது பார்த்ததில்லை என்பது தெளிவாயிற்று. கிட்ட வந்தவுடன், கையிலிருந்த பேப்பரை மடித்தவாறே எழுந்து,
"ஆரைப் பாக்கிறீங்கள்?..." என்றான்.
அவள் இன்னும் நெருங்கி வந்தாள். படியில் பிள்ளையை இறக்கி விட்டு,
"அம்மன் கோயிலடியிலையிருந்து வாறன்..... " என்றபோது கண்கள் கலங்கின.
".....கலவரத்துக்குள்ளை நாங்கள் தெமட்டக்கொடையிலை இருந்தம்...." -சொல்ல விட்டு லேசாக விம்மத் தொடங்கினாள்.
இவன் உள்ளே திரும்பி.
"அம்மா...." என்றான்.
:எங்கட அவர் அப்ப செத்துப்போனார்...."
"ஆர்?...."
"தகப்பன்...."-அவள் குழந்தைதையைச் சுட்டியவாறே கண்களைத் துடைத்தாள்.
பெடியன் இவனை வடிவாகப் பார்த்துக் கொண்டு நின்றது. ஐந்து வயதிருக்கும். உருண்டைக் கண்கள்;
உருண்டை முகம். அதைப் பார்த்து மெல்லச் சிரித்தான். தாயின் பின்னால் ஒளித்துக்கொண்டது.
"என்னவாம்?...." என்றா, அம்மா. சொன்ன முழுவதையும் மனுசி திருப்பிச் சொன்னது.
"ஐயும், பாவம்...."
இங்கே, ஊரில், வீடில்லை, காணி மட்டுந்தான். அம்மன் கோவிலுக்குக் கிட்ட, அம்பல வத்தியார் வீட்டடியில் -இருக்கிறது. வாத்தியார் சொந்தமில்லை: தெரிந்தவர், ஊரை விட்டுப் போய்க் கனகாலமென்றாலும் அவரை விசாரித்தால் இவர்களைப் பற்றித் தெரியும். உள்ள காணியில் ஒரு கொட்டிலாவது போடக்காசு தேவை... அது தான்....
அம்மா உள்ளே திரும்பினா.
"தெமட்டக்கொடையிலை எங்கே இருந்தனீங்கள்?...."
"வெள்ளவத்தைக்குப் போற றோட்டிலை....."
"என்னது!?....." மீண்டும் கேட்டான்.
"முகாமிலை இருந்த நீங்களா?....."
"ஓம்...." தலையாட்டினாள்.
"எந்த முகாம்?...."
"வியாங்கொடையிலை..."
"இதென்ன சொல்லுறீங்கள்?...."
குழந்தை முன்னால் ஓடிவந்து சிரித்தது.

உள்ளே இருந்து வந்த அம்மா, "இந்தா...." என்று கொடுத்தா. தாளைக் கும்பிட்டு வாங்கினாள். பிள்ளையைத் து}க்கி ஒக்களையில் வைத்தாள். போகப் போக, அது இவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
"ஏன் குடுத்த நீங்கள்?..... சொன்னதெல்லாம் பொய்..."- மெல்லிய எரிச்சலுடன் கேட்டதைச் சொன்னான்,
"சீ, பாவம்.... அவள் வீட்டை விட்டு அதிகம் வெளிக்கிடாமலிருந்திருக்கலாம்...." என்றா அம்மா.

அப்படித்தானிருக்கும்.

மல்லிகை
1984

சுரண்டல்

சந்தைக் கட்டிடத்து விறாந்தையோடு மினிபஸ்கள் அணிவகுத்துநிற்கின்றன. ஒரு விதத்தில் வசதிதான் என்றாலும் நன்றாயில்லை. நகர அபிவிருத்தி பற்றியெல்லாம் இப்போ கவலைப் பட முயல்வது ஆட்ம்பரம், பேராசை முட்டாள்தனம்,

சனத்துக்கு வழிவிட்டு து}ணோடு ஒதுங்கி ஒரு பக்கமாகத் திரும்பி நின்று கொண்டான். நீளவாட்டில் எல்லாமே பார்வைக்குள் வருகின்றன-இடப்புறம் கடை வரிசை வலப்பக்கம் பஸ்வரிசை.... பட்டணம் வடிவாய்தானிருக்கிறது இந்தக்கோணத்தில். தன்னுடைய பஸ் எந்த நேரமும் வரலாம்.... "அதுதான் நல்லாருக்கு....."-கிச்சுக்குரல். குழந்தைக் குரல் வலு கிட்டக்கேட்டது. திரும்பினான். கடையின் கண்ணாடிச் சுவருக்கு இந்தப் பக்கத்தில் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நாலுக்குமே பத்து வயதுக்குள் தானிருக்கும். பரட்டைத் தலையும் பேணியுமாய் 'ஐயா ஐயா.....' என்று பஸ்பஸ்ஸாய் ஏறி இறங்குவார்கள். காய்ந்து போய் அழுக்காயிருப்பார்கள்-கண்டிருப்பீhகள்.

"நான் வாங்கினா அதுதான் வாங்குவேன்...."- காட்சியறைக்குள்ளிருந்த இன்னொரு துணியைக் காட்டி மற்றப்பிள்ளை சொன்னது......
'கடவுளே' என்று மனதுக்குள் முனகினான் வேறென்ன செய்யலாம் இப்போதைக்க?

அருமையான கதையாய் வாய்க்கும். ஆனால்.....சே! அந்நாள் எப்பவோ எழுதிவிட்டார். அவர் எழுதிய கதைகளில் முதலில் நினைவுக்கு வருகிறதே இதுதான். இப்படியான கரு அப்போதே அவருக்குக் கொழும்பு நடைபாதையில் சந்திருக்கிறது....சே!
"அண்ணை, வாங்கோ.... , வாங்கோ...." கொண்டக்டர் பெடியன் கத்தினான்.


ரிஷ்கா

அநேகமாக எல்லோரும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிழையான அணுகு முறை இது. அடிப்பமையையே ஆட்டங்காட்டுவது போல. எல்லோருக்கும் உணர்ச்சி இருந்தது - அதற்கென்ன குறை? -அது மட்டும் போதாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற தீவிரம் இருக்கிறது. அதனால்தான் இங்கே இப்படிக் கூடியிருக்கிறார்கள். என்றாலும் ஆதார நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போதுதான் அர்த்தமுமிருக்கும். பழக்கப்பட்டுப் போன சொற்றொடர் என்பதாலா? பழகிவிட்ட செய்முறை என்பதாலா? -ஏன் ஒவ்வொரு பிரதிநிதியும் அப்படித்தவறான பெயரையே பாவிக்கிறார்? தலைமை வகித்த தோழர்களைக் கவனித்தான். அவர்கள் இந்தத் தவறான பிரயோகத்தை அவதானித்திருக்காமல் இருக்கமுடியாது. ஏன் திருத்தவில்லை? பிறகு சொல்லிக் கொள்ளலாமென்று இருக்கிறார்களா? அல்லது எந்தப் பெயரிட்டு அழைத்தாலென்ன, போராட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் சரி என்றிருக்கிறார்களா?

என்றாலும் தன்னால் அப்படி இருக்க முடியவில்லை. இந்த வேற்றுமை-வெறும் சொற்களில்ல-செயற்பாட்டின் அடிப்படையிலேயே தங்கியிருக்கின்றது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். வெகுஜனங்களின் பிரதிநிதிகளான இவர்கள், போராட்ட வடிவையும் பெயரையுங் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். தன்னுடைய முறை வந்தபோது, பேச்சின் ஆரம்பத்திலேயே அதைக் குறிப்பிட்டான்.
"......இங்கே பேசிய பெரும்பாலான பிரதிநிதிகள் இதை ஒரு ஹர்த்தால் என்றும், துக்கதினம் என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் அதுதவறு. நாங்கள் அநுஷ்டிக்கப் போவது எதிர்ப்புதினம். எங்கள் எதிர்ப்பை இனப்படு கொலைக்கெதிரான மக்கள் எதிர்ப்பை-அகில உலகிற்கும் எடுத்துக் காட்டப்போகிற தினம் அது. மக்களைப் போராட்டதிற்காகத் தயார்ப்படுத்துவதன் முதற்படி. ஆகவே, ஜுலை இருப்பத்தைந்தாம் தேதியை துக்கதினமாக-மன்னிக்கவும்- எதிர்ப்பு தினமாகவே நாங்கள் உலகிற்குக்காட்ட வேண்டும்....."

-கூட்டம் முடிந்த பிறகு, விறாந்தையில் யாருடைனோ பேசிக்கொண்டிருந்த போது தணிகாசலம் வந்தார்.
"நீங்கள் சொன்னது சரி....." மெல்லச் சிரித்தார்:
"......எனக்கு அசோகமித்திரனுடைய கதையொன்றுதான் ஞாபகம் வந்தது...."
"ரிக்ஷா ! ?......"
"ஆ ! ரிஷ்கா ! "


அஸ்பெஸ்ரஸ்
பாலாவில் பெரிதாக ஒரு மாற்றமும் தெரியவில்லை. கொஞ்சம் ஊதியிருந்தான்நிறமுங் கொஞ்சம் பெயர்ந்திருந்தது. தமிழை முன்னர் போலவே பேசினான். அவனது மனைவியுந்தான்
"போய்ப் பத்து வருஷமாச்சு..... இப்பதான் வர முடிஞ்சுது...."
"போன செப்ரம்பரிலும் வெளிக்கிட்டு வரமுடியேல்லை...." -வசந்தி சொன்னாள்;
"....அது நல்லதாய்ப் போச்சு."
"நல்லதுதான்.... வந்திருந்தா, வலு கஷ்டப்பட்டிருப்பியள்...." என்றான் சிவாவும்.
"எல்லாம் உடனுக்குடனை அங்கை hP.வி.யிலை பாத்த நாங்கள்...."
'கடவுளே, கடவுளே எண்டு உங்கள் எல்லோருக்குமாகக் கும்பிட்டுக் கொண்டிருந்தை விட வேறென்ன செய்யேலும்?....." -என்றாள் வசந்தி,
சிவா புன்னகைத்தான்.
"ஆனாலும், இப்ப. எங்களுக்கெண்டு ஒரு அடையாளம் வந்திருக்கு..... இலங்கைத் தீவின் தமிழர்கள் எண்டு சொல்றதிலை ஒரு பெருமையும் இருக்கு....".
-பாலா இதை ஆங்கிலத்தில் சொன்னான். அந்த மொழியின் சொந்தச் சூழல் அவன் உச்சரிப்பை மாற்றியிருந்தது இது நல்லது.
"அந்த அடையாளத்திற்கு இங்கே விலை கொடுத்தோம்" -சிவாவும் ஆங்கிலத்திலேயே சொன்னான்.

ஈஸ்வரி தேநீரைக் கொண்டு வந்ததும் அவளை அவர்களுடன் பேசவிட்டுவிட்டு, "எக்கிஸ்யூஸ் மி...." என்று சிவா ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே போனான்.
"இது எப்ப கட்டினது?... எண்பத்திமூண்டா?....."
-வசந்தி, கடிதங்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறாள்.
"ஏதோ, கட்டி முடிச்சாச்சு.... அதுக்குப்பிறகு வெள்ளை கூட அடிக்க முடியேல்லை.... ஒவ்வொரு பிரச்சனையா.."
"அஸ்பெஸ்ரஸே போட்டிருக்கிறியள்?..."
-பாலா குறுக்கிட்டான்.
"ஷெல்லுக்குக் கொங்கிறீற் கூடத் தாங்காது...."
-என்றாள் ஈஸ்வரி.
"அதில்லை. இது ஆக்களுக்குக் கூடாது..... நுரையீரலைப் பழுதாக்கிப்போடும்..... அங்கை இதெல்லாம் எப்பவோ தடைசெய்தாச்சு.....போட்டிருந்த இடங்களிலும் கழட்டி மாத்தியாச்சு...."
"என்னது?....." -என்றபடி சிவா வெளியே வந்தான்.
"என்னடாப்பா, இதைப் போய்ப் போட்டிருக்கிறாய்?"
-பாலா கூரையைக் காட்டித் திரும்பவும் சொன்னான்
"......எவ்வளவு ஆபத்தான விஷயம்!....."

வந்த விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பிரக்ஞைகூட இல்லாதவன் போல, சிவா பலத்துச் சிரிக்க ஆரம்பித்தான்.


தலைமுறைகள்

எதிரிலும் வலத்திலும் கண்ணுக்கெட்டிய து}ரம் வயல்வெளி. வருடத்தில் பாதிநாட்கள் வரண்டுபோய்ப் பாலைவனங்களையும் ஸ்தெப்பிகளையும் கற்பனைபண்ணச் சௌகரியமாய்க் கோலங் காட்டுகிற வெளி. தொலைவில், வயல்நடுவே, பத்திரகாளியம்மன் கோவிலும் பக்கத்தில் தேர்க்கொட்டகையும். இங்கே, இவர்கள் வகுப்பில் செய்கிற மாதிரியுருவங்கள் போல, கோயிலருகே ஓடுகிற தெரு கண்ணிற்படாது, ஆனால் இருந்திந்hவிட்டு அதில் போகிற வாகனங்கள் மட்டும் சவர்க்காரச் செப்புகளாய்த் தெரிகின்றன. வயல்வெளியின்முடிவில், பெருவரம் பாய் மீண்டும் பனைகள்.

கல்லு}ரி மதிலோடு சணைத்துப் படர்ந்திருக்கின்ற வேம்பு, மாடி ஜன்னல் வரை வந்திருக்கிறது. எட்டித் தொடலாம் போலக் கொப்புகள், எப்போதும் காற்றி லசைந்தபடி, காற்று. இங்கே வற்றாது வீசும். எல்லாநாளும் எல்லா வேளையும் ஓயாமல் சிலுசிலுக்கும். வெளிச்சத்திற்குக் கேட்கவேண்டியதேயிலை. எந்த மழை மூடலிலும் மின் விளக்கே தேவைப்படாது-வரைதலுக்குக் கூட. இதெல்லாவற்றிலும் முக்கியமானதும் இருந்தது: அமைதி. காற்றிலசையும் கிளைகளுக்கும் இருந்திருந்து வீட்டு எங்கோ கரையும் காக்கைகளுக்குந் துணையாய் அவன் குரல்தான் அதனைக் குலைக்கும்.............. சூழலோடிசைந்துபோய், அடுத்த வகுப்பிற்கான பாடத்தை இரைமீட்டபடி இருந்தவன், படிகளில்மாணவர் ஏறிவரும் அரலங்கெட்டுத் தயாரானான். முதலாம் ஆண்டுக்கு நிர்மாணத் தொழில்நுட்பம் இப்போது. பேச்சுக்களும் சிரிப்புக்களும் கரைத்து காலடி ஓசைகளே நெருங்கின. வழமையோ ஜெபக்குமாரின் தலை முதலிற் தெரிந்தது..........
"மோணிங் ஸேர்............."
"குட்மோணிங், உள்ள வாங்கோ........."
எல்லோரும் வந்தமரும்வரை காத்திருந்தான்.

இந்தமட்டத்தில் கற்பிப்பதில் இரண்டு சவால்கள் பாPட்சையே குறியாய் இதுவரை பழகியவர்களுக்கு, சுய சிந்தனையை ஆதாரமாய்க் கொள்ள வேண்டிய பரப்புகளைப் பரிசயம் பண்ணிவைக்க வேண்டியிருக்கிறது மற்றது இவ்வளவு நாளும் உயர்தர வகுப்போ சாதாரணதர வகுப்போ வரை- தாய்மொழி மூலம் படித்திருப்பார்கள். இங்கே, இப்போ ஆங்கிலமொழி மூலம்.
'எங்கள் நாட்களைப் போலில்லை... இருபது வருஷத்தில் எவ்வளவு மாற்றம்!....'
எவ்வளவுதான் முதலில் அறிமுகப்படுத்தி, பின்னர் குளிகைகளாகக் கொடுத்தாலும் மொழியையும் விளங்கி அது சுமந்தவரும் பொருளையும் புரிந்துகொள்வதென்பது இவர்களுக்குக் கொஞ்சம் சிக்கலாய்த்தானிருக்கிறது ஆரம்பத்தில்.
"தொடங்கலாமா?...." எழுந்து முன்னால் வந்தான். இன்று, 'டாம்ப புரூஃபிங்', கட்டிடங்களுக்கும் கட்டிடங்களுக்குள்ளும் ஈரலிப்பு ஏன் பாதகமானது? அது எவ்வௌ;வாறு ஊடுருவும்? எப்படி அவற்றைத் தடுக்கலாம்? முன்று அடிப்படைகளிலும் விளக்கவேண்டும்.
அதற்கு முதல், ஆங்கிலம்.
" 'டாம்ப்-' எண்டா என்ன?"
"அணைக் கட்டு.............."
"அது'டாம்,' இது 'டாம்ப்"..... இரண்டு சொற்களையும் எழுதிக் காட்டினான்.
".... இரண்டாவதுக்கு என்ன அர்த்தம்?"
....... தானே சொல்ல வேண்டி வந்தது:
"ஈரம், ஈரலிப்பு........ சரி, 'புரூஃப்' எண்டா?"
"நிறுவல்...................." கடைசி வரிசையிலிருந்து சுரேஷின்குரல்.
நல்லது, அது ஒரு கருத்து. ஆனா இங்கே வேறு...." -தொடர்ந்தான்:
......."தடை, என்று சொல்லாம்..... தடைகாப்பு..... சரி, அதுக்கொரு உதாரணம்?....."
-கேள்வியுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

பதில்கூட அங்கே இருந்தது. இருக்கிறது. இருக்கும். அநேகமாக எல்லோர் கைகளிலுமே கடிகாரம். நாலு விநாடிகள்.
"ஸேர்?........"
திரும்பினான். தண்ணீரா, அதிர்ச்சியா?,
"புலட் புரூஃப்........."


அதே விதியெனில்......

அங்கு நிலவிய அமைதியும் அவமரைப் போலவே இருந்தது! நிறைந்து, அடங்கி, கம்பீரமாய்....... வீட்டின் முன் கூடத்தில் அவர் அமர்ந்திரந்தார். நாற்காலியில் சாய்ந்து, தலையை லேசாக ஒருக்களித்த படி. பரந்த நெற்றியின் மேல் பளபளத்த வெள்ளி இழைகள். மூடியிருந்த விழிகள் அவரது ஏகாக்கிர சிந்தை நிலையைக் குறிப்பதை அவனறிவான். முதுமையையும் நோயையும் மீறியொளிர்ந்த காந்தி.
ரிஷி.................
அவர் முன் இன்னொரு நாற்காலியில் பணிவும் பவ்வியமுமாக உட்கார்ந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவருடன் சமதையாக உட்கார நேர்கிற வேளைளில் ஏற்படுகிற சங்கடம் இப்போதும் இருந்தது. வசதியாகச் சாய்ந்திருப்பதில் ஒரு மரியாதைக் குறைவு உறுத்தவும், முன்குனிந்து, கைகட்டி, முழங்கால்களில் பொறுத்து உடகார்வதில் ஒரு பணிவும் விநயமும் இருப்பதான திருப்தி வந்து சந்திக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தான். சில விஷயங்கள் பேச வேண்டியிருந்தன. சில தெளிவுகள் தேவைப்பட்டன நாளை நாளை என்றுநாலு நாட்கள். அதற்கிடையில் அவரிடமிருந்தே தகவல் வந்தது ஆளைக் கண்டதும் குழந்தை போல் பரபரத்து வரவேற்றார்.
"என்ன, கனகாலாமாக வராமல் விட்டிட்டியள்?..... முடிகிற நேரங்களிலை வந்தா நல்லது...... எனக்கு முன்னைமாதிரி அடிக்கடி ஒஃபிஸ் பக்கம் வர இப்ப ஏலாது தெரியுந்தானே?..... இருங்கோ......"

சில வேளைகளில் எதையாவது படித்துக் காட்டச் சொல்லுவார். வேறு சிலவேளைகளில் அவர்சொல்வதை எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும். அந்தவேளைகளிலெல்லாம் இப்புல்லுக்கும் ஆங்கே பொசியும். அதைவிட, புல்லுக்கென்றே அவர் இறைப்பதுமுண்டு. அப்பெருக்கில் புல் சிலிhக்கும். இவற்றைவிட சில பொழுது விவாதங்களிலும் கழியும்........
"என்ன விசேஷங்கள்?.......... கேள்விப்பட்டதுகளைச் சொல்லுங்கோ.........."
பட்டவற்றைச் சொன்னான். கேட்டுவிட்டு மௌனித்திருந்தார். அன்பும் அறிவும் பணிவும் பெருந்தன்மையுமென்று அவர் அரசியலைப் பார்த்த விதம் வேறு. அதைக் கடமையாய் யோகமாய் வரித்து......... தனககொரு கௌரவம் சேர்க்கவன்றி, தன்னால் இயக்கத்துக்கே கனம் சேர்த்து...... இடதுசாரிஇயக்கத்தின் இந்தப் பிதாமகர்.................
அவருடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் புல்லரிக்க வைத்திருக்கின்றன. முதன்முதலில, பத்து வருஷங்களுக்கு முன், எந்த அறிமுகமுமில்லாத வேளையில் பத்திரிகைப் படங்களிற் பார்த்த அடையாளத்தை மட்டும் வைத்து, பழுப்பு நிற நஷனலும் வேட்டியுமாய் ஒரு முற்பகல் பொழுதில் கிருவப்பனை பஸ்தரிப்பில் தன்னருகில் நின்றவரிடம் வலிய அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியபோதும் அவர் காட்டிய அந்த நேயம்...... அதன் பிறகு ஊரோடு வந்தபின் நெருங்க நேர்ந்த சந்தர்ப்பங்கள்................. தோழமையும் வாஞ்சையுங் காட்டி அரவணைக்கு அவரைத் 'தோழர்' என்றழைக்கத் தயங்குகிறான். அவர்ருக்கும் சிகரமா, அல்லது அய்யா பெரியய்யாவின் சாயல் இவரிடம் மிக இன்னொரு பெரியய்யாவாக மனதிற் பதிந்திருப்பதாலா?
"சமதான ஒப்பந்தம் வந்து ஆறேழு மாதமாச்சு எப்படி இருக்குதெண்டு நினைக்கிறியள்?..............."
தன் அபிப்பிராயங்களைச் சொன்னான், ஆதங்கங்களை வெளியிட்டான்.
"வடக்குக் கிழக்கு இணைப்பு உத்தியோக மொழி, குடியேற்றம் -இதுகளெல்லாம் வீட்டுக்கொடுக்க முடியாத குறைநதபட்ச விஷயங்கள் தான்." அவர் ஆமோதித்தார்.
"தடுப்புக்காவல்."
கண்களை ஒரு கணந்திறந்து, "ஒ அதுகுத்தான்." என்ற பிறகு கேட்டார்:
"வடக்குக் கிழக்கு இணைப்புத்தொடர சர்வசனவாக்கெடுப்புத்தேவை எண்டு சொல்லுகினம், இல்லையே...."
இதுதான் அந்த நெருடல். இதைப்பற்றித்தான் பேசவேண்டியிருந்தது. ஒமென்றான். அந்த ஒவ்வாமையை -அதன் முழுப்பரிமாணத்தில் -கானுணர்ந்தவாறே விளக்க வார்த்தைகளைத் தேடி அவதியுற்றான்.
"..... அதாவது, வடக்கோட இணைஞ்சிருக்கக் கிழக்குக்கு விருப்பமோ எண்டறிய வாக்கெடுப்பு!..."
தொடர்ந்து பேசினார்.
"ஒ........ "
"அப்பிடிப்பாத்தா, அதுக்கு முதல், இலங்கையோட இணைஞ்சிருக்க விருப்பமோ எண்டறிய வடக்குக் கிழக்கிலையும் வாக்கெடுப்பு நடத்தத்தானே வேணும்?...."
இவன் விதிர்த்து மெய்சிலிர்த்தான்.


எழுதாத கடிதம்

மதிப்பிற்குரிய மனிதருக்கு.
உங்கள் முகம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது- அதை முதலும்கடைசியுமாக ஒரேயொரு தடவைதான் கண்டிருக்கிறேன், என்றலும். உங்களவர்கள் எல்லோரதும் போன்ற ஒரு முகந்தான் ஆனால் முறுக்கிய கூர் மீசைக்குப் பின்னால் ஒரு குழந்தை எட்டிப்பார்த்தது. அதுதான் வித்தியாசம். அதுவே பெரிய வித்தியாசமில்லையா? தொப்பி கழற்றிய தலையின் நரையோடிய நெளி மயிர்கள்நெற்றியில் அழுந்திருந்தன. என்னிலும் பார்க்க ஏழெட்டு வயதாவது கூட இருக்கலாம். உங்களுக்கு.......

உங்களெல்லோரையும் சேர்த்துப் பார்க்கிறபோது முருங்கை மாத்தில் அப்பியிருக்கிற மயிர்க்கொட்டிகளும் சாரியாய் ஊரும்ஒழுக்கெறும்புகளுந்தான் என் நினைவுக்கு வருவன. அன்றைக்கும் அப்படித்தான் போனீர்கள், ஒழுக்கெறும்பு வரிசை போல..... மதிலைத் தாண்டிப் பாய்ந்து, வளவை ஊடறுத்து, வெட்டிவிட்ட பின்வேலிக் கண்டாயத்தால் அடுத்த வளவிற்குள்..... மரத்தடியில் வெறித்தபடி நின்ற என் முகத்தில் எதைக்கண்டீர்கள்? பெரிதாய் எதையோ பிடிக்கப் போகிறவன் போல்பெரும் நடப்பாய்ப் போன அந்த விறைத்த முகத்துத் தலைவன் பின்னால் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி.... , அங்குமிங்குமாய் ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்தியிலும் ஏதோ சொல்லிக் கொண்டு போனவர்களிடை நீங்களும் வந்தீர்கள். என்னருகில் தாண்டும் போது நீங்கள் சொன்னவை;
"நாங்கள் போகத்தான் வேண்டும்....."
-அந்த ஆங்கிலம் சரியாய் இருந்தது. அந்த இரு வரிகளும் ஆயிரங் கதைகள் சொல்லின. நான் புரிந்து கொண்டு நிமிர்வதற்கிடையில் நீங்கள் வேலியடிக்குப் போய் விட்டீர்கள். அந்தக் குரலும் குழந்தை முகமும்...... உங்களைப் போல் இன்னும் வேறு பேர் இருந்திருக்கலாம். ஆனால் எய்யப்பட்ட அம்புகள் நீங்கள்........... இது நடந்து ஒரு வருஷமிருக்கும். இப்போது நீங்கள் சந்தோஷமாய்ப் போயிருக்கலாம்....... எங்கிருந்தாலும் வாழ்க! மிக்க நன்றி எம்மைப் புரிந்து கொண்டமைக்கு.


நன்றி

மணியத்தார் திருப்தியாக ஒரு ஏவறை விட்டார். செம்பில் நாலுமிடறு தண்ணீர் குடித்தார். இலையைத் து}க்கிக் கொண்டு வெளியே வந்த போது பின்முற்றத்தில் நின்ற சிவப்பி கண்களிற் பட்டது.
'இன்னும் இங்க தான் நிக்கிறியோ?.....'
-இலையை எறியாமலே திரும்பி உள்ளே வந்தார்.
சிவப்பி வாலை ஆட்டுவதாக நினைத்து முழு உடம்பையும் ஆட்டிக் கொண்டு சந்தோஷித்தது.
"ஏன் இலையைத்திருப்பிக் கொண்டு வாறியள்?........."
-மனைவியின் கேள்விக்கு மணியத்தார் பதில் சொல்லாமல் முறைத்தார்.
"போய் ஒரு விறகுகட்டை கொண்டாணை........"
"அது பாவம் நிண்டிட்டுப் போகட்டும்......."
"பெட்டைச் சவத்தை வளர்த்துப் போட்டு குட்டிகளைக்காவுறது ஆர்?........"
"தெருவிலை நிண்டதைப் பெட்டை யெண்டும் பாராமல் பிடிச்சுக்கொண்டு வந்தது நீங்கள் தானே?"
மணியத்தாருக்கு அடக்க முடியாமல் கோபம் கிளர்ந்தது மனைவி ஓயவில்லை:
".........பெட்டை யெண்டாலும் அதை நம்பித்தானே இருந்த நாங்கள் இவ்வளவு நாளும்......."
"அது அப்ப.... இப்ப இந்தியன் ஆமி போட்டுது இனிஎன்ன சவத்துக்கிதை?"
-அவர் விறகு கட்டை தேடப் போனார். சிவப்பி இன்னமும் வாலை ஆட்டிக்கொண்டு அண்ணாந்து அடுப்படி வாசலைப் பார்த்தபடி நின்றது.

அவன்

அவனால்தான் நானிந்த நிலைமைக்கு வரமுடிந்த தென்பது எனக்குக் தெரியாததல்ல. நானுமொரு மனிதனென்றாகி, நாலு பேருக்கு என்னையும்: எனக்கு நாலு பேரையும் தெரிய நேர்ந்ததும் அவனால்தான்: என்னுடன் சேர்ந்தே பிறந்து வளர்ந்தவன். ஆனாலும், சின்னவயதில் அம்மாவிடங் கேட்ட கதைகளிலும் ஐயாவும் அப்புவும் வாங்கித்தந்த புத்தகங்களிலும் வரதலிங்க வாத்தியார் வியாசங்களுக்குப் போட்ட 'நன்று' 'மிகநன்று' களிலும் என்னை முந்திக்கொண்டு வளர்ந்தவன் அவன்தான். இதெல்லாம் பிறகுதான் தெரிய வந்தது. அவன் என்னோடிருப்பதை நானறிய நேர்ந்ததே எனது பதின்வயதுகளின் பின்னடியில்தான். தன்னை அவன் இனங்காட்டபோய், அதனால் நான்தான் அடையாளங் கொண்டேன். இருபது ஆண்டுகள் இப்படிப் போயின. இந்த இடையில் தான் எத்தனை நடந்தது!....... ஆள், வலு சுழியன். பலபேர் கண்களிற் படாததெல்லாம் அவன் கண்ணிற்படும். அதையெல்லாம் நான் மற்றவர்களுக்குச் சொல்லப்போய்க் கண்டதென்னவோ கண்டனந்தான் அதிகம். ஆனால், காலம் பிறகு அவனைச் சரியென்று சொன்னது. எதிர்த்தவர்கள் இகழ்ந்தவர்கள் கூட இதை ஏற்க நேர்ந்தது. இவற்றாலெல்லாம் நான் நம்பிக்கை கொண்டேன். பிறகும் அப்படியே தயங்காது அவனை அநுசரித்தேன்.

நிலைமைகள் மாற மாற, எதிர்பாராதது ஏதோ வெல்லாம் நடந்ததில் நான் எச்சரிக்கையானேன். அவனால், அவன் சங்காரத்தால் பிரச்சினை வரும் போல் தெரிந்தது. ஏன் வீண் சிக்கலை? கொஞ்ச நாளைக்கு ஆளைவிட்டு மெல்ல ஒதுங்கியிருக்க முடிவெடுத்தேன். சரியில்லாத வேலைதான்: மனதுக்குக் கஷ்டந்தான். ஆனால் என்ன செய்ய?
இவ்வளவு புரிந்தவனுக்கு இதைப் புரிந்து கொள்வதா, கஷ்டம்?
"எவ்வளவு பயரெடா உனக்கு...." என்று சிரித்து விட்டுப் போனான்.
.....எப்படியிருந்தாலும் அவனால் வந்த அடையாளம் இருக்கவே செய்தது. அவனை விலக்கி விட்டு அவன் தந்த அடையாளத்தை மட்டும் நான் அணிந்திருப்பது சரியில்லை என்றும் உறுத்தும் மனது..... பிரச்சினைக் காலங்களிலும் அவன் பலதடவை சந்தித்தான். பலவற்றைக் காட்டினான். சொன்னான். நான்தான் கண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அவன் சொல்வதெல்லாம் சரி: சத்தியம் என்று புரிந்தது. ஆனால் அவனுக்காக என்னைத் தியாகம் பண்ணும் துணிவு என்னிடமிருக்கவில்லை. இப்படியே அவனைக் கைவிடுவதால் நஷ்டம் எனக்கேயென்பதும் நல்லாய்த் தெரியும். நிலைமை கொஞ்சம் திருந்தட்டும், ஆளை எங்கும் விலக விடாமல் என்னுடனேயே இருக்க வைத்து வட்டியும் முதலுமாக இரட்டிப்பு வேலை வாங்கிட வேண்டும்..... திருந்தியது. ஆனால், அவனைத்தான் கனநாள் காணவில்லை. புறக்கனித்த கோபத்தால் போயிருப்பானோ? போயிருந்தால், எவ்வளவு பெரிய இழப்பு! எனக்கென்று பிறகு என்ன அடையாளம்? பலரைப் போல நானும் பழம்பெருமை பேசித்தான் போக்க வேண்டும் மீதி நாளை!

இல்லை: நல்ல காலம் எதிர்பாராமல் ஒருநாள் தேடிவந்தான், அலுவலகத்திற்கு -ஒரு மத்தியானம். அவன் எப்போது வருவான், எங்கே வருவான் என்பதெல்லாம் சொல்லமுடியாது. சித்தன் போக்கு, சிவம் போக்கு. ஒன்று மட்டும் புரிந்தது- நான் அவனை விட்டாலும் அவன் என்னை விடமாட்டான்! கல்லும் நாயுமாய் அவனும் அவகாசமும் கொஞ்ச நாள் ஒளித்து விளையாடினார்கள். இப்படி நெடுக விடக்கூடாதென்றிருந்தேன். இன்று, பொழுதுபட, இப்படித்தான்-அலைச்சல்கள் அலுவல்கள் எல்லாம் முடித்து, ஆறுதலாக ஒரு புத்தகமும் கையுமாய்ச் சரிந்தபோது.... புத்தகத்தைக் கண்டுவிட்டோ. என்னவோ, அவன் எங்கிருந்தென்றில்லாமல் வந்து சேர்ந்தான். இன்றைக்கு நான் ஆளை விடவில்லை.

உறுத்தல்

சந்தையரின் நாளாந்த செயற்பாடுகள் ஒரு ஒழுங்குக்குட்பட்டவை. காலையில் நாலரைமணிக்கு வைரவர் கோவில் மணி கேட்கும் போது விழித்தாரென்றால், காலைக்கடன் வீட்டுவேலை, மாடு கன்று பார்த்து விட்டுத் தோய்ந்து கோவிலுக்குப் போய் வந்து, பிறகு தோட்டம், சந்தை என்று மத்தியானமாகும். கடைக்குப் போய்விட்டு வரும் போதே அன்றைய பத்திரிகையையும் வாங்கி வந்து விடுவார். ஆனால், வாங்கியவுடனேயே மேலாகப் பார்த்து, வரவர நுனிப்புல் மேய்ந்து.... என்றெல்லாம் கிடையாது.

கடைக்காரர் கொடுத்தவுடனேயே பத்திரமாக மடித்துப் பைக்குள் போட்டு விடுவார்: இடையில் இரவல்காரர் கண்ணிலும் படாமல். வீட்டுக்கு வந்ததும் கூட, அதைப் பிரிக்க மாட்டார். கடையில் வாங்கியவற்றை மனைவியிடங் கொடுத்து வீட்டு, பேப்பரைப் பத்திரமாக மேசையில் வைத்து விடுவார். பிறகு, அந்த இந்தக் தொட்டாட்டு வேலை, குளிப்பு, சாப்பாடு என்று ஒன்றரை மணியாகும். சாப்பிட்டு முடித்த கையோடு, வெளித்திண்ணையிலிருக்கும் சாய் மனைக் கதிரையில் துண்டைப் போட்டுக் கொண்டு பேப்பரும் மூக்குக் கண்ணாடியுமாய்ச் சரிந்து விடுவார். பேப்பர், விரிக்கும் போது, மொறு மொறென்றிருக்க வேண்டும். அவருக்கு கடதாசி மணமும் மை வாசனையும் மூக்கிலடிக்க வேண்டும். பத்திரமாக, ஒன்று விடாமல்-தலைப்புச் செய்தியிலிருந்து மரண அறிவித்தல் வரை-படித்து விட்டு. பேப்பரை மடித்து மனைவியிடங் கொடுத்து விட்டு, அப்படியே ஒரு அரைமணி நேரம் அயர்வார்.......

இந்தப் பேப்பர்ப் படனம் அவரது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. ஒவ்வொரு செய்தியாகப் படித்து. ரசித்து யோசித்து.... அது, அவருக்குப் புது அனுபவங்கள் எல்லாம் தரும். அது ஒரு சுகானுபவம். இப்போ, இரண்டு கிழமையாக, அநேகமானோரின் நாளாந்த செயற்பாடுகள் எவ்வளவோ பாதிக்கப்பட்டுங் கூட, கந்தையரின் இந்த அன்றாட வழக்கங்கள் ஒன்றும் பாதிக்கப்படவில்லை. பேப்பர் கூட, ஓடர்ப் பேப்பர். கதிரவேலு தன் கடையில் பேப்பர் விற்கத் தொடங்கிய நாளிலிருந்து நடைமுறையிலிருக்கிற ஓடர். ஒரு நாளைக்கு எடுக்க முடியாது போனாலுங் கூட அடுத்த நாள் வரை காத்திருக்கும் பேப்பர். இன்றைக்கும் சாய்வு நாற்காலியைத் தட்டித் துண்டை விரித்து விட்டு, மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பேப்பரும் கையுமாய்ச் சரிந்தார்.... இந்தப் பத்து நாளாக வருகிற சங்கடம் இப்போதும் வந்தது. எங்கும் குண்டு வீச்சும் கொலையுமாக.... திருகோணமலையில் சனங்கள் பட்ட கஷ்டம் முல்லைத் தீவுக்கு வரப்பட்டபாடு அங்கிருந்து யாழ்ப்பாணம் வருகை..... கந்தையருக்கு என்னவோ செய்தது.

இதெல்லாம் ரசனைக்குரிய செய்திகளல்ல. இந்தச் சனம் இவ்வளவு பாடுபடுகையில், இருக்க இடமும் உண்ண உணவு, உயிருக்கு உத்தரவாதமும் இல்லாமல் ஓடி வருகையில், அவர்கள் பற்றிய சேதிகளை அவர்கள் படும் அவலங்களைத் தான் இப்படி ஆறுதலாக ஓய்வாகக் கிடந்த படிப்பதே பிழை! அது ஒரு பாபமாகக் கூடப்பட்டது.... கடவுளே! கந்தையர் திடுக்கிட்டு எழுந்தார். "என்ன?... என்னவும்?....." -என்றா, பக்கத்துக் கதிரையில் பாக்கு வெட்டிக் கொண்டிருந்த மனைவி. ஏதோ குத்துது....." என்றார், சுதாரித்துக்கொண்டு.


வீடு

"தேத் தண்ணி ஒண்டும் வேண்டாம்....." சித்தப்பா திடமாகச் சொல்ல விட்டார்-
"....பனங்கட்டியோட எண்டாலும்."

"ஒப்பாசாரம் என்ன, இந்தக் கஷ்ட காலத்திலை?"-
கணேசனும் மறுத்துவிட்டான்.
"வேணுமெண்டா, பச்சைத்தண்ணி கொஞ்சம் கொண்டுவா, நல்ல பாலைத் தண்ணி...."- என்றார் சித்தப்பா, உரிமையுடன் மீண்டும். ஆனந்தம் உள்ளே போனார். அவர், அவனுக்கும் சித்தப்பாவுக்கும் பொதுவான நண்பர்-வௌ;வேறு விதங்களில்: கணேசனும் ஆனந்தமும் மூன்று வருஷங்களாகக் கொழும் ல் ஒரே 'போடிங்' கில் இருந்த பழக்கம்: சித்தப்பா ஆனந்தத்துக்கு அயலவர். குண்டுக்கும் ஷெல்லுக்கும் பயந்து இடம் பெயர்ந்து சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிற இந்த ஒரு மாதத்தில், "இண்டைக்காவது உன்ரை கூட்டாளியைப் பாத்திட்டு வருவம், வா.." என்று சித்தப்பாதான் அவனை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். ஆனந்தத்தை வந்து பாhப்பதில் அவனுக்கொன்றும் ஆட்சேபனை இல்லைத் தான், என்றாலும் இந்த அகதிக் கோலத்தில் இதெல்லாம் ஏன் என்றிருந்தது... ஆனந்தம் வீடு, அழகாய் அடக்கமாய் இருக்கிறது- வீடு! ....... அவனையறியாமல் பெருமூச்சு வந்தது. ......ஆனந்தம். நிறையப் பூமரங்கள் வைத்திருக்கிறார். முன் வாசலடியில், முற்றத்தை மறைத்து நிழல் பரப்பும் மாமரம். அதன் கீழ் வேலியருகே பதுங்குழி. நேற்றே முந்தநாளோதான் வேலை முடிந்திருக்க வேண்டும்- மேலே குவித்த செம்மண்ணிலும், இடையில் தலைநீட்டும் தென்னங்குற்றியின் வெட்டு விளிம்பிலும் இன்னும் ஈரப்பசை..... மாமரத்தின் இந்தப் பக்கம், வீட்டு முன் சுவரை ஒட்டி, உயர்ந்த ஒரு பீடத்தின் துளசிமாடம். அகன்ற அந்தச் சாடியில், அது என்ன கூட, துளசியோடு சேர்ந்து பச்சைப் பசேலென?- திருநீற்றுப்பச்சை!

எழுந்து போய், இலையைத் தொட்டு முகர வேண்டும் போலக குறுகுறுப்பு.... எத்தனை நாள், எங்கெல்லாம் தேடிய மூலிகை! அலுவலகத்தில் அவனோடு கூட வேலை செய்த அரியராஜ், ஒவ்வொரு மாதமும் செல்வசசந்நிதியில் அர்ச்சனை செய்வித்துக் கொண்டு வரும் பிரசாதப் பொட்டலத்தை அவிழ்க்க முன்பே புல்லரிக்க வைக்கும் புனிதம்..... திருநீற்றோடு, சம்புடத்தில் வைத்தால் வீடெல்லாம் வீசும் வாசம்..... கணேசனுக்கு இப்போதும் மேலெல்லாம் சிலிர்த்தது. ஒரு செடியேனும் உண்டாக்கிவிட வேண்டுமென்று எத்தனை நாள் தேடித் திரிந்திருக்கிறான்! 'வலு பவித்திரமாக வளர்க்க வேண்டிய செடி....' -என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனந்தம்; வழி கண்டிருக்கிறார்- துளசியோடு, கவனமாக. செம்பும் இரண்டு பேணியுமாக வந்தவரிடம் கேட்டான்.
"அது, திருநீற்றுப் பச்சைதானே?"
"ஓமோம்...." என்றார், பெருமையாக.
"-அதைத்தேடி நான் உண்டாக்கப்பட்ட பாடு!"
தண்ணீரை வார்த்து, சித்தப்பாவிடம் கொடுத்து விட்டு, அவன் முன்னால் வந்த ஆனந்தம் கேட்டார்.
"உனக்கு வேணுமா?..... மூண்டு, நாலு கண்டு முளைச்சு நிக்கு..... தாறான்...."
வலித்தது.




காலங்கள்
1

இருந்தாற்போலக் குளிhகாற்று முகத்திலடித்தது. ஒரு வெளியில் நுழைந்திருந்தார்கள். வெட்டவெளி, பென்னாம் பெரிது. சுற்றிவா, வானம் முழுவதும் வெள்ளிகள் மின்னின. எங்காவது வீடோ, கடைகளோ தெரிவதாயில்லை. காரின் வெளிச்சம் மட்டும் இருளை வெட்டியபடி முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது......
"இந்த இடம் எதெண்டு தெரியுமோ?......."
அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
".......கல்லுண்டாய்" - அப்பு சொன்னார். அந்தப் பெயர் கண்ணனுக்கு விசித்திரமாகப்பட்டது. ஒருமுறை சொல்லிப் பார்த்தான்.

வெளி போய்க்கொண்டே இருந்தது. காற்றும் வெள்ளிகளும் இடைக்கிடை ஓடும் பற்றைகளும். எதிரில் ஒரு வண்டில், தட்டின் அடியில் கட்டியிருக்கிற அரிக்கன் லாம்பு ஆடஆட வருகிறது. வண்டில் நெருங்ககார் விளக்குப் பட்டு மாடுகளில் கண்கள் நீலமாய் மின்னுகின்றன. கார், இடது புறம் ஒதுங்கி நின்று பெரிய விளக்குகளை நு}ர்த்து, வண்டிலுக்கு வழிவிட்டது. தடக்படக்கென்று சில்லுகள் மாட்டு வாடையும், புதுநெல்லின் சுணை மணமுங் சேர்ந்து வீசின. அப்போது தான் கண்ணன் அதைக் கவனித்தான், "நெல்லு மூட்டைக்கு மேலை ஒரு ஆள் படுத்திருக்கு...." அவன் கத்தியவிதத்தில் தம்பியும் சின்னண்ணையும் நந்தனும் பின் கண்ணாடி வழியாக அவசரமாகப் பார்த்தார்கள்.
"கண்ணா குழப்படி பண்ணாதை....." அப்பு சொன்னார் கார் ஓடத் தொடங்கியதும், மீண்டும் குளிர்காற்று உள்ளே வீசியது. சுகமாயிருந்தது. கடல் மணம் அடித்தது'
"கடல்வருகுது...." -பெடியன்களுக்கு உற்சாகமாயிருந்தது. "அங்கை அதென்ன விளக்குகள், கடலிலை?...."
து}ர, வலப்பக்கம், தெல்லுத் தெல்லாக ஒளிப்பொட்டுகள் "மீன் பிடித்தோணிகள்...."
எத்தனை என்று எண்ண ஆரம்பித்தார்கள்...... நேரே முன்னால் இன்னுந் தொலைவில், இன்னும் வெளிச்சப் புள்ளிகள். கனக்க, வரிசையாக மின்னி மின்னி மறைவது மாதிரி....
"அதுகளும் தோணிகளே?-"
"அதுதான் பட்டணம்..... பட்டணத்து வெளிச்சம் தெரியுது எவ்வளவு வடிவாக இருக்கு, பார்த்தீங்களா?" என்றா அப்பு." இன்னும் பத்து நிமிஷத்திலை அங்கே போயிருக்கலாம்."
இன்னும் பத்து நிமிஷந்தானா?-கண்ணுக்கு ஏமாறமாயிருந்தது இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.......

2
"பாத்தீங்களா?.... சொன்னன்....." -என்றான் நிமலன், பெருமையாக. ஒழுங்கை இலேசாக வளைகிற இடத்துடன் வளவுகள் முடிந்தன, வெளி, விரிந்து கிடந்தது.
"சோக்கான இடம்...." என்றான் கண்ணன், தன்னையறியாமல். வலது பக்கம் ஒரு மடம், பழையது. பொளிகல்லு. அதற்கெதிரில் ஒழுங்கையின் இடதுபுறம் அதேவயதில் ஒரு கேணி, இந்த வெய்யிலிலும் தண்ணீர்.
"எப்படி?....." என்றான் நிமலன், மீண்டும்.
"ஸ்ஸ்......" என்று வியந்தார்கள், இவர்கள்.
"இவ்வளவு மரத்திலும் தேவையான ஸ்பெஸிமன் எடுக்கலாம்..." என்றான் குகன், முன்னால் காட்டி. சாம்பல் பூத்த தடித்த இலைகளும் நீலப்பூக்களுமாய் ஒழுங்கையின் இரு புறமும் வரிசையாய் கண்ணுக்கெட்டிய து}ரம் வரை வேலி மாதிரி அடர்ந்திருந்தது எருக்கலை.

பதினொரு மணி வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. காற்றிலும் வெக்கை வந்தது, எருக்கம்பால் மணத்துடன், அந்த வரிசைகளுக்கு அப்பாலும் இப்பாலுமாய் அரிவுவெட்க்கு ஆயத்தமாக வயல்கள் விரிந்து கிடந்தன. சைக்கிள்களை பூவரசடியில் விட்டுப் பூட்டிவிட்டு ஒவ்வொரு செடியாகப் பார்க்கத் தொடங்கினார்கள். மெல்லக் கொப்புகளை விலக்கி, இலை இலையாய் அடிப்பாகங்களைத் துருவத் தொடங்கினார்கள்.
"பயோலஜி படிக்கிறதுக்கு இந்தக் கல்லுண்டாய் ஒரு பக்கா இடம் எண்டு சுந்தரராமன் மாஸ்ரர் சொல்லியிருக்கிறார்..."
"உண்மைதான்.... நீங்கள் மாரியிலை வந்து பார்க்க வேணும்..." -நிமலன் சொன்னான்.
"இந்த வயலெல்லாம் நிரம்பி வழியும்..... அப்ப. தவளைகூடச் செய்யலாம்..."
"இப்ப முதல்ல வண்ணாத்திப்பூச்சியை முடி. பிறகு தவளையைப் பார்க்கலாம்..." குகன் இடைவெட்டினான்.
"இப்ப, அராலிப் பாலத்தடியிலை மீன் இராதோ?"
"இருக்கும், ஆனா அது கலப்பு நீரெல்லோ.... வளர்க்க ஏலாது..."
"போவமா, அங்கை?"

"இதை முடிச்சிட்டு அங்கை போவம்...." குகன் வெளியின் விளிம்பில் தெரிந்த தென்னந்தோப்பைக் காட்டினான்.
".....இளநி அடிக்கேலுமெண்டா அடிச்சிட்டு நேரே..... ராலிப் பாலம், பிறகு உப்பளம்..... சரியா?"
"மச்சான் ஓடியா.... ஓடியா..." கண்ணன் கத்தினான். ஓடினார்கள்
"இலங்கை பார்..." மிக மெதுவாக ஒரு இலையை விலக்கிக் காட்டினான். பொன்னுருண்டை போல ஒரு கூட்டுப்புழு.

3

"பயமாயிருக்கா?..." வசந்தபுரம் சந்தி திரும்பும் பொது கண்ணன் கேட்டான்.
"சீ... இதென்ன? இவ்வளவும் கண்டாச்சு..... இனிஎன்ன?"-சீலன் உசாராகச்சொன்னான்.
"நீங்கள் கூடவாறியள் -இவ்வளவு சனம் போய்வருகுது..."
"இதுகள் இருக்குது" கண்ணன், இரண்டு சைக்கிள்களிலும் முன்னால் சொருகியிருந்த வெள்ளைக் கொடிகளைக் காட்டிச் சிரித்தான். கசந்து. மெல்ல மிதித்தார்கள். "உதிலை இரண்டாவது இருக்கு..." -சீலன் சொல்லும் போதே,
"ஓ.... மணக்குது..." என்றான்கண்ணன். வீதிப் பரிசோதனை நடக்கிற இடம் இங்கிலுந்தே தெரிந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து வருபவர்கள் சைக்கிளில் ஏறிக் கொண்டிருக்கிற அதே இடத்தருகில் இவர்களுக்கு முன்னால் போகிறவர்கள் இறங்கி உருட்டத் தொடங்கினார்கள்....
"ஐஸி ஆயத்தமா?...." சட்டைப் பைக்குள் பார்த்தபடி "ஓ..." என்றான்கண்ணன். வேகத்தைக் குறைத்து மெல்ல இறங்கி முன்பின்னாக நேஞ்சு படபடக்க. தெருவின் அகலத்தில் முக்கால் வாசியைத் தடுத்துப் போட்டிருந்த பீப்பாய்களைத் தாண்டி.... அடுத்து அதேமாதிரி எதிர்ப்பக்கம் கிடந்த மரத்தைத் தாண்டி.... இந்தநடை பாதை ஒரு இழுபட்ட 'எஸ்' ஸாக இருக்க.... வரிசையைத் தொடர்ந்து அவர்களை அணுகினார்கள். வரிசை நகர்ந்தது-அடையாள அட்டையைக் கையில் எடுத்துக்கொண்ட போது, எத்தனை தரந்தான் என்றாலும் பயம் போகாது போலிந்தது. கூர்மீசையும் கூர்முழிகளுமாய் நின்ற சிப்பாய், கண்ணனின் சைக்கிள் கூடையைத் திறந்து வடிவாகப்பார்த்தான்.
'இதை இனிக் கழற்றிவைத்து விடவேண்டும்.' என்று தீர்மானித்தான் கண்ணன். பொக்கற்றுகளைத்தட்டும் போது, கனகாசு கொண்டு போகாதையுங்கோ......' என்று யாரோ சொல்லியிருந்தது நினைவு வந்தது.
"ப்போ "-சிப்பாய், கண்ணனை விட்டு சீலனிடம் போனான். கண்ணன், தன் முன்னே நின்ற மற்றவனிடம் போனான். நீட்டிய கையில் ஐ.சி.யை வைத்தான். மறித்து வைத்திருந்த ஏழெட்டு அப்பாவிகளை -சற்றுத்தள்ளி- இரண்டு சிப்பாய்கள் காவல்பார்த்தபடி நின்றார்கள். நிலத்தில் குந்தியிருந்த மனிதர்களில் ஒரு பெடியன் அறிமுகமானவன். மீன்வியாபாரி. அவனைப் பார்த்துத் தலையசைக்கக் கூட திராணி வராத தன்னில் வெறுப்பாயுமிருந்தது... என்னையும் மறிப்பான்களோ?
"ஸர்விஸ்?..... அட்டையைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனிடமிருந்து கேள்வி வந்தது. "நோ..hPச்சர்"
இவனுடைய மீசையும் முதலாவது ஆளுடையதை போலவே இருக்கிறது... இன்னும் முரடனாகத் தெரிகிறான்..... சிப்பாய், கண்ணனை ஏறிட்டுப் பார்த்தான். பார்வை சந்தேகத்தில் தோய்ந் திருந்தது. கண்ணனுக்கு வேர்த்தது. "கோ..."
'கடவுளே...' என்று மூச்சு விட்டான். அடையாள அட்டையை வாங்கிப் பத்திரமாகச் சட்டைப் பையில் வைத்தபடி சைக்கிளை உருட்டலானான். பின்னால் சீலன் வருகிறானா? புற்றீசல் போல இவர்கள் இப்படி மொய்த்திருக்க இடையில் தாங்கள்...... நினைக்க மயிர்க்கூச்செறிந்தது. திரும்பி வரும்போது மீண்டும் ஒரு தடவை இவர்களையெல்லாம் தாண்டவேண்டும். இந்தக் கல்லுண்டாய் இப்படியாதமென்று.....
"இரண்டாவது கண்டமுந் தாண்டியாச்சு......" சீலனின் குரல் பின்னாலிருந்து வந்தது. சைக்கிளில் ஏறுகிற இடம்வந்ததும் ஏறினார்கள்.
"அடுத்ததும் கூப்பிடு தொலை தானாம்..... தென்னந்தோப்பு..."
"இன்னும் எத்தினை....... நாலு இடமோ?"
"போய் வாறதெண்டால், குறைஞ்சது பத்து இடத்திலை செக்கிங்- இருபது கிலோமீற்றர் கூட இல்லை....."

4

"உங்கட மோட்டார் சைக்கிள்தானா இப்பிடி ஓடுது?...." பின்னால் உட்கார்ந்திருந்த ரேகா ப கடி விட்டாள்".... காத்தாய்ப்பறக்கிற சைக்கிள், இப்ப காத்துப்போனது மாதிரி......"
"ரேகா, இந்த இடத்திலை இறங்கி நடந்து போகவும் நான் தயார்: எங்கட நிலத்தின்ரை அழகுக்கு, அதின்ரை செழிப்புக்கு, அதையெல்லாம் பயன்படுத்தாம விட்டிருக்கிற எங்கட முட்டாள் தனத்துக்கு- அல்லது அதைச் செய்ய முடியாத எங்கட நிலைமைக்கு எல்லாம் இது நல்ல உதாரணம்... இந்த இடத்தை எனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு உனக்குத் தெரியுமா?......" என்றான் கண்ணன்
"உங்கட விருப்பத்துக்கேத்தபடிதான் இப்ப ஒவ்வொரு நாளும் இந்தக்கல்லுண்டாய் வெளியாலை இரண்டுதரம் தாண்டக்கிடைச்சிருக்கே...." -அவள் சிரித்தாள்.
"..... நாங்கள் மனசார விரும்புகிறதெல்லாம் எப்படியோ ஒருநாள் கிடைச்சே தீரும், எனக்கு அதிலை நம்பிக்கை இருக்கு......"
கண்களில் குறும்பும் நாணமும் கலந்து ஒளிர்ந்தன.

5

"இந்தக் சைக்கிளைக் கண்டு பிடிச்சவனுக்கு ஒரு சிலை வைக்க வேணும்...." என்றார், சொலமன்.
"மெய்தான்....." என்றார் மூர்த்தி.
"-இதில்லாட்டி எங்கட கதியென்ன, இப்படி?"
"முந்தி இப்பிடி ஓடியிருப்பமா, எப்பாலும்?"
"பொறுங்கோ..... ஏதோ இரையிற மாதிரிக்கிடக்கு" கண்ணன் இடைமறித்தான்.
"சீ, அது காத்து..."
இல்லை.... அந்தா..." -அவன் காட்டிய திசையில், து}ர சின்னதாக இரண்டு பொம்மர்கள் வழுகிவருவது தெரிகிறது. இந்த இடத்தில் இவர்களுக்கு மேலே மந்தாரம் போட்டிருக்கிறது. ஆனால் பொம்மார்கள் தெரிகிற இடத்தில் மெல்லிய நீலமான வானம் தெரிந்தது. வெய்யிலில் விமானங்கள் மினுங்கின.
"பலாலியிலையிருந்து வாறான்... கோட்டைக்குத்தானே"
என்ற சொலமன் சொன்னார்:
"உம்மட காது இதுகளுக்கு நல்லாயப் பழகிவிட்டுது, இப்ப.... விமான இரைச்சல், இவர்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்களுக்கும் கேட்டிருக்கவேண்டும், அவர்கள் சைக்கிள்களும் வேகங் குறைந்து குழம்புவது தெரிகிறது..... எதிர்ப்பக்கமிருந்து வந்த சைக்கிள்காரர்கள் வேகத்தை அதிகரிக்கிறார்கள்..... சத்தம் இப்போது தெளிவாகவே கேட்கிறது. இரண்டல்ல, மூன்று .....
"கோட்டைக்குத்தான்....."
"மாட்டொழுங்கையாலை திரும்புவமா?....."
"எங்க மூண்டு பேருக்கும் ஒரு குண்டை வீணாக்கமாட்டான்..... பயப்பிடாம வாரும்....."
"ஹெலி, கிலி வந்தா?.... இந்தக் கல்லுண்டாயிலை ஒதுங்க ஒரு இடமில்லை..."
"வாறதாத் தெரியேல்லை அதுக்கிடையிலை நாங்கள் தாண்டி விடலாம், வாங்கோ...."

விமானங்கள் கோட்டையைச் சுற்றி வட்டமிடுவது வடிவாகத் தெரிகிறது. "நாளாந்த நிகழ்ச்சியாய்ப்போட்டுது. இது, எங்களுக்கு...."
"என்ன வாழ்க்கை இது? இப்பிடி ஒவ்வொரு நாளும்....." -மூர்த்தி சலித்தார். "..... இதுவும் ஒரு வாழ்க்கையா?"
"இதுதான் வாழ்க்கை. மெய்யான வாழ்க்கை இதுதான் வாழ்க்கை என்கிறதுக்கு இப்பதான் அர்த்தமிருக்கு..." கண்ணன் சொன்னான். நான்தான் இதைச் சொன்னேனா என்றிருந்தது.
"அந்தா, அந்தா..... போடப் போறான்... போட்டிட்டான்..." மூர்த்தி பதறினார். குத்திப்பதித்த விமானமொன்று மேலெழுவது தெரிகிறது. அது வட்டத்தைத் தொடரும்போது வட்டமிட்டுக் கொண்டிருந்த இன்னொன்று கீழே சறுகி...... குண்டுகள் வெடிக்கின்றன... இங்கேவே அதிர்கிறது.... படம்பார்ப்பது போல இருக்கிறது. ஆனால் இது மெய். தினசரி வேலைக்குப் போய்வரும் போதெல்லாம் இப்படிக் காண எத்தனை பேருக்குக் கொடுத்து வைத்திருக்கிறது உலகில்?

"பாத்தீங்களா இது என்ன சீவியம்?"
என்றார் மூர்த்தி, மீண்டும்.
"மூர்த்தி, நீங்கள் கடவுளை நம்புறது உண்மையெண்டால் உப்பிடியெல்லாம் பேசக்கூடாது....." என்றார் சொலமன், உரிமையுடனும், உறுதியுடனும்.


6

வசந்தபுரம் விளையாட்டு அரங்கிலிருந்து கரவொலிகளும் உற்சாகக் கூச்சல்களும் கேட்கின்றன.
"ஏஷியா 2003' போட்டிகள் நடக்குதெல்லே...."
அதுதான்தெருவிலும் இவ்வளவு சனம் "காரின் வேகத்தைக் குறைக்கவேண்டி இருந்தது. கூட்டத்தில் வெளிநாட்டவர்கள் கணிசமாகவே தெரிந்தார்கள். ஸ்ரேடியத்திற்குஎதிர்ப்புறம், தெருவுக்குத் தெற்கே கடலேரிபரந்து கிடக்கிறது. இடதுபக்கம் நாவாந்துறையிலும் வலதுபக்கம் காக்கைதீவிலுமாக மீன் பிடித்துறைமுகங்கள், எதையோ பிடிக்கிற பெருவிரலும் சுண்டுவிரலும்போல கடலுக்குள் நீட்டிக் கொண்டிருப்பது தெரிகிறது.
"கொஞ்சம் ஆழமாக்கிவிட, இந்தக்கடல் எப்பிடியிருக்கு!"
கரையின் து}ய வெண்மணற்பரப்பிடை, பூம்பாத்திகளும், பூவரசமரங்களின் கீழ் சீமேந்து இருக்கைகளும் மாறி மாறி...
"முத்தி, இவடத்திலை மூக்கைப்பிடிச்சுக் கொண்டு போற நாங்கள்.... நினைவிருக்கா?"
"குப்பை கூழம் நாத்தமெல்லாம் பழங்கதை..."
வீதி முன்னரைப்போல் மூன்று பங்கு அகலமாக மாறியிருக்கிறது. வழுவழுவென்று சுத்தமாக. தார்ப்பாயை விரித்தது போல் நீளமாக. தெருத் தீவுகளிலும் கரையோர நடைபாதைகளிலும் புளியும், வாகையும், மலைவேம்பும் ஒங்கிக் கிளை பரப்பத்துடிக்கின்றன.... காக்கைதீவுச் சந்தியில் கடைகள் களைபட்டியிருக்கின்றன. கடைத்தெருவின் பின்னால் ஒரு நவீன குடியிருப்பும், அதை அண்டி-ஆனால் இந்தப் பரபரப்புகளிலிருந்து விடுபட்டு தென்னந்தோப்பும், அடர்ந்து கிடக்கிறது. தோப்பிடை இருந்து அம்மன்கோவில் மாலைப்பூசை மணியோசை கேட்கிறது. வலப்புறம் வயல்களும் இடப்புறம் தென்னஞ்சோலைகளும். கூடுதல் அடர்த்தியும் அழகும், பசுமையும் கடைகளும் கட்டிடங்களும் அடுத்த சந்தியைக் குறிக்கின்றன. முந்திய மாட்டொழுங்கை எவ்வளவு மாறிவிட்டது...... தெற்குப்பக்கம், தென்னந்தோப்பைச் சுற்றிவந்த கடல், இப்போ இங்கே தெருவிலிருந்து கூப்பிடு தொலைக்குள் வந்திருக்கிறது.....' படகுக்கழகம்' என்ற பெயரும் மண்டபத்தைத் தாண்டி அலங்காரப் படகுகளும் தெரிகின்றன. அது தாண்டியதும் கடற்கரை மீண்டும் விரிகிறது. தெருவோடு கூடவே வருகிறது. வண்ணக் குடைகளும், விற்பனை வண்டிகளும், காற்றுவாங்க வந்தவர்களுமாய் அந்த இடம்கலகலவென்று.... இறங்கி வலப்பக்கம் நடந்தார்கள். ஒரு நீள இரட்டை வட மணி மாலை போலத்தெரு..... கோவிலின் பின்புறம் சற்றுத் தள்ளியிருந்த மேட்டில் ஏறினார்கள். மேலே வந்ததும் ஏரி தெரிந்தது. இது நன்நீர் ஏரி. குட்டிக்கடல் பேர்ல. நடுவில் பச்சைப்பசே லென ஒரு குட்டித்தீவு.

"பாலம் வரை போகுது ஏரி..... வழுக்கையாத்துத் தண்ணி இப்ப கடலுக்குள்ளை வீணா ஓடுறதில்லை..."
பாலம் இங்கிருந்து வடிவாகத் தெரிந்தது. தெற்கே, சற்றுத் தள்ளி, புது உப்பளம் கட்டிடங்களும். செவ்வானம் பூத்திருந்த பின்னணியில் இவை நிழலுருக்களாய்... ஏரிக்கரையில் நடந்தார்கள். அது ஒரு தெரு அகலமிருந்தது. ஆனால் நடைபாதை மட்டும். உடற்பயிற்சிக்காக விரை நடைநடப்பவர்கள்..... கல்லு}ரி மாணவர் குழுவொன்று சிரிப்பும் கும்மாளமுமாய் வருகிறது.... வெறுமையாயிருந்த சீமெந்து வாங்கொன்றில் போய் அமர்ந்தார்கள். நீப்பரப்பில் மின் விளக்குகளின் ஒளிக்கோடுகள் நெளிகின்றன. தெருவில் போக்குவரத்து அமளியாக இருக்கிறது, என்றாலும் இந்த இடம் சற்றுத்தள்ளி. காற்று இப்போது நல்லாகவே வீச ஆரம்பித்தது. வானில் ஒவ்வொன்றாக வெள்ளிகள் சிமிட்டத் தொடங்கின,

வெளிச்சம்
ஐப்பசி 1991