கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நிலக்கிளி  
 

அண்ணாமலை பாலமனோகரன்

 

நிலக்கிளி

அண்ணாமலை பாலமனோகரன்

முதற்பதிப்பு மே 1973.

வெளியீட்டாளர் - வீரகேசரி, கொழும்பு

இரண்டாவது பதிப்பு செப்டெம்பர் 2003

வெளியீட்டாளர் - மல்லிகைப்பந்தல், கொழும்பு

-------------------------------------------------------

முதற் பதிப்புக்கான ஆசிரியர் முன்னுரை

நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களைத்தான் என்னுடைய கதைகளிலே அதிகமாகச் சந்திக்க முடியும்.

என்னுடைய பிறந்த மண்ணையும், அங்குவாழ் மக்களையும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதையும் ஒன்று!

இப்படிக் காதலிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் அவர்களே. அவருக்கும், இந்த நாவலை எழுதுமாறு ஊக்குவித்த உள்ளுர் இலக்கிய நண்பர்களுக்கும் இதைப் புத்தக வடிவில் வெளியிட்டுப் பேருதவி செய்த வீரகேசரி தாபனத்தாருக்கும், விசேடமாக திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்!

அ.பாலமனோகரன்
(இளவழகன்)
02.05.1973

-------------------------------------------------------------

1

கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது.

பதஞ்சலிக்கு முரலிப் பழத்தின் மணம் மிகவும் பிடிக்கும். 'ஐயோ, நிப்பாட்டுங்கோவன்..... உங்கை உந்த முரலியிலை பழம் இலுத்துப்போய்க் கிடக்குது!" வண்டியினுள் எழுந்து நின்றுகொண்டு அவள் ஆசையுடன் குதித்தாள். வண்டியின் பிற்பக்கத்தில் உட்கார்ந்திருந்த உமாபதி, 'அவசரப்படாதையம்மா! இன்னும் சரியான முரலிக் காட்டுக்குள்ளை நாங்கள் வரேல்லை!... ஒரு காக்கட்டை கழிஞ்சதும் பிறகு பாரன் முரலிப் பழத்தை!" என அவர் சொன்னபோது, பதஞ்சலி அதைக் கேட்டாற்தானே!

'அங்கை! அங்கை பாரணையப்பு மான் கிளையை!" அவள் சுட்டிக் காட்டிய திசையில் ஒரு கூட்டம் மான்கள் தாவிப் பாய்ந்தன. பதஞ்சலிக்கு ஓரே குதூகலம்! வண்டியின் கிறாதியைப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதித்தாள்.

உறுதியான அந்த வண்டியை இழுத்துச் சென்ற எருதுகள் தலைகளை நிமிர்த்தியவாறே நடைபோட்டுக் கொண்டிருந்தன.

பலம் வாய்ந்த அந்த எருதுகளை இலாவகமாக நடத்திக் கொண்டிருந்தான் கதிராமன். பதஞ்சலியின் குதிப்பும், கும்மாளமும் அவன் முகத்தில் அடிக்கடி முறுவலை வரவழைத்தன. விழிகள்மட்டும் பாதையின் இருமருங்கும் அடர்ந்திருந்த இருண்ட காட்டைக் கவனித்துக் கொண்டிருந்தன. இளமைத் துடிப்புமிக்க அந்த விழிகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது.

பாதை வளைவில் வண்டி திரும்பியபோது பதஞ்சலி ஆச்சரியத்தினால் திகைத்துப் போனாள்! நெருக்கமாக வளர்ந்திருந்த முரலிமரங்கள் மழைநீரினாலும், கணக்கின்றிக் காணப்பட்ட பழங்களினாலும் சுமைதாங்க முடியாது வளைந்து நின்றன. குரங்குகள் வெருண்டு கிளைகளில் பாய்ந்தபோது பொலுபொலுவென முரலிப்பழங்கள் விழுந்து சிதறின!

வவுனியா மாவட்டக் காடுகளில் ஏராளமாகக் காணப்படும் முரலிமரங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் காய்த்துப் பழுக்கும்! முரலி பழுத்தால் காடே மணக்கும்! தின்னத் தின்னத் தெவிட்டாத பழம்! ஒருமுறை சுவைத்தாற் போதும், பின் நினைக்குந்தோறும் இனிக்கும்!

எருதுகளை அவிழ்த்துக் கட்டிய கதிராமன், கோடரியைத் தோளில் வைத்தவாறே அண்மையில் நின்ற முரலி மரங்களடியில் சென்று நிமிர்ந்து மேலே நோக்கினான். மேலே பார்த்தவன் ஒரு குறிப்பிட்ட மரத்தை நோக்கிச் சென்று அதன் கீழே கிடந்த பழமொன்றை எடுத்துக் கடித்தான். தரம் பிடித்திருக்கவே அந்தப் பழத்துக்குரிய முரலி மரத்தைத் தறிக்கத் தொடங்கினான்.

நெருநெருத்துக்கொண்டு மெல்லச் சாய்ந்த மரம் மளார் என்ற ஓலியுடன் நிலத்தில் விழுந்தது. பொன்னிறப்பழங்கள் நாலாபுறமும் சிதறின. பதஞ்சலி ஓடிவந்து ஆசையுடன் பழங்களைப் பிடுங்கிச் சுவைத்தாள். புத்தம்புதிய, தேன் நிறைந்த பழங்கள்!

உமாபதியார் பழங்களைப் பறித்துச் சாக்குகளில் நிறைக்கத் தொடங்கினார். கதிராமன் கோடரியைத் தோளில் வைத்தபடியே 'நீங்கள் இரண்டுபேரும் பழத்தைப் புடுங்குங்கோ, நான் போய் வேறை நல்ல பழம் கிடக்கோ எண்டு பாக்கிறன்!" என்று சொன்னபோது, 'அப்பு! அப்பு! நானும் போகப்போறன்!" என்று கெஞ்சினாள் பதஞ்சலி. அவள் தன் அழகிய முகத்தைச் சரித்து இவ்வாறு கெஞ்சும்போது உமாபதியாரால் எவ்வாறு மறுக்கமுடியும்? 'சரி பிள்ளை போ" என்று விடையளித்தார்.

பதஞ்சலிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்ட காடுகள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப்பறவைகள் - இவையனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை! பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராய் இருக்கும் பதஞ்சலி, நடந்து திரிவது கிடையாது. சதா மான்குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்!

தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி, அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள்ளும்! அத்தனை கம்பீரம்! கதிராமனுடைய நடையிலும் அதே கம்பீரம் காணப்பட்டது. சிறு வயதுமுதல் பாலுந்தேனும், காட்டு இறைச்சிகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட உடல், கடுமையான உழைப்பினால் உறுதிகொண்ட தசைகள், தகப்பன் வழிவந்த உயர்ந்த, நெடிய தோற்றம், கரியமேனி, சுருண்டகேசம் - இவையத்தனையும் ஒன்றாகத் திரண்டு கதிராமன் என்ற உருவில் நடமாடின! காடு அவனுக்குச் சொந்தம். அவன் காட்டுக்கே சொந்தம். காடடோடு அவன் கொண்டிருந்த உறவு அவனுடைய தோற்றத்தில் நன்கு தெரிந்தது.

கதிராமன் முரலிப்பழத்தைத் தேடிக் காட்டினூடாகச் சென்றுகொண்டிருந்தான். பதஞ்சலி தரித்து நின்று, நிலத்தில் கிடந்த பழங்களைப் பொறுக்குவதும், பின் ஓடி நடப்பதுமாக அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். முரலி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து, முகடுபோலக் கிளைகள் பின்னிக் கிடந்ததனால் காடு இருளடைந்துää ஒரே அமைதியாகவிருந்தது. அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டு திடீரெனக் கிளம்பியது ஒரு பயங்கர உறுமல்!

பதஞ்சலி பயத்தினால் நடுநடுங்கிப் போனாள். கதிராமன் சட்டெனப் பதஞ்சலியைப் பிடித்;திழுத்து தனக்குப் பின்னே மறைத்தபடி சத்தம் வந்த திசையை நோக்கி, காட்டை உன்னிப்பாகக் கவனித்தான். அந்தப் பயங்கர ஒலியைத் தொடர்ந்து ஓர் அசாதரண அமைதி நிலவியது. காட்டுப் பறவைகளும், குரங்குகளும் திகில்கொண்டு அடங்கிப் போய்விட்டன!

மீண்டும் அவர்களுக்கு மிக அண்மையிலே ஓர் ஒற்றை உறுமல் கேட்டது. காடே கலங்கும் வண்ணம் பயங்கரமான குரலில் கர்ச்சித்தபடி, சிறு மரங்களை உலுப்பி அட்டகாசம் செய்தவாறு வெளிவந்தது ஒரு பெரிய கரடி!

பாதையருகே பழம் பிடுங்கிக்கொண்டிருந்த உமாபதியார் காட்டில் எழுந்த ஒலிகளைக் கேட்டதுமே பதஞ்சலியை நினைத்துப் பதைத்துப் போனார். அவருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 'ஆதி ஐயனே!" என வாய்விட்டு வேண்டியவாறே ஒடுங்கிப்போய் நின்றுவிட்டார்.

பதஞ்சலிக்கு நாவெல்லாம் வறண்டு உடல் நடுங்கியது. கதிராமனுடைய சாறத்தை இறுகப் பற்றியவாறே அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள். கதிராமனோ சற்றும் பதட்டமின்றிக் கோடரியுடன் ஆயத்தமாக நின்றான். அவனுடைய முகத்தில் கலக்கத்தின் அறிகுறி இல்லை. ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு காட்டுவிலங்கு எவ்வாறு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றதோ அவ்வாறே அவனுடைய உடலிலும் ஒவ்வொரு தசையும் முறுக்கேறிச் செயலுக்குக் காத்து நின்றன.

----------------------------------------------------------------

2

மண்ணை வாரி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வந்த கரடி, பின்னங்கால் இரண்டிலும் எழுந்து காடே அதிரும்படி அதட்டியது.

இந்தச் சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த கதிராமன், கண் இமைக்கும் பொழுதுக்குள் தனது பலமனைத்தையும் ஒன்றுகூட்டிக் கரடியின் நெற்றிப்பொட்டு வெள்ளையில் கோடரியினால் ஓங்கியடித்தான். அணுவளவும் இலக்குத் தப்பாத அந்த அசுர அடியைத் தாங்கமுடியாமல் கரடி நிலத்தில் சரிந்தது. அவ்வேளையிலும் அது தனது முன்னங்கால்களை நீட்டி இறாஞ்சியபோது, கூரிய நகங்கள் கதிராமனுடைய வலது தோள்பக்கம் ஆழமாகப் பிய்த்துவிட்டன. அதைச் சற்றும் சட்டை செய்யாமல் கதிராமன் சாய்ந்துபோன கரடியின் தலையில் மீண்டும் ஓங்கியடித்தான். அவனுடைய மூன்றாவது அடியை வாங்கிக்கொள்வதற்கு கரடி உயிரோடு இருக்கவில்லை. குப்புற வீழ்நதுவிட்ட அதன் வாயினூடாகக் குருதி கொப்பளித்தது.

காட்டை ஒருதடவை சுற்றி அவதானித்த கதிராமன் பதஞ்சலியின் பக்கம் திரும்பினான். பயத்தினால் விக்கித்துப்போய் விழிகள் பிதுங்க அவள் நின்றுகொண்டிருந்தாள். 'என்ன பதஞ்சலி! பயந்து போனியே?" என்றவாறு அருகில் சென்று அவன் கேட்டதும், பதஞ்சலி அப்படியே அவனுடைய மார்பில் சாய்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். நடுங்கும் அவளுடைய உடலைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு, 'இதுக்கெல்லாம் அழுறதே!" என்று அவளின் முதுகை வருடிக்கொண்டு தேற்றினான் கதிராமன்.

அவனுடைய கைகளின் அணைப்பிலே ஆதரவு நிறைந்த பாதுகாப்பிலே சொல்லமுடியாத ஒரு நிம்மதியையும் சுகத்தையும் கண்டாள் பதஞ்சலி! அவளுடைய அழுகை அடங்கிச் சற்று நேரத்தின் பின்னர்தான் கதிராமனுடைய தோளில் ஏற்பட்ட காயம் அவளின் கண்களில் பட்டது. பதறிப்போய் அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு 'ஐயோ! நல்லாய் விறாண்டிப் போட்டுது! கொஞ்சம் பொறுங்கோ சீலையாலை கட்டிவிடுறன்!" என்றவாறு குனிந்து தன் பாவாடையின் கரையைச் சரேலெனக் கிழித்தாள்.

சற்றுமுன் பயத்தால் துவண்டு குழந்தையைப்போல் வெம்பிய அவளை மறுபடியும் பழைய பதஞ்சலியாகப் பார்க்கையில் கதிராமனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அங்கு நின்ற முடிதும்மைச் செடியைப் பிடுங்கிக் கசக்கி கதிராமனுடைய காயத்தின்மேல் வைத்து பாவாடையில் இருந்து கிழித்த துண்டால் பதஞ்சலி மளமளவென்று கட்டினாள். பம்பரம்போல் சுழன்று காரியம் செய்வதில் அவளுக்கு இணை அவளேதான்!

பதஞ்சலி எட்டு வயதுச் சிறுமியாக உமாபதியாருடன் தண்ணிமுறிப்புக்குக் குடிவந்த காலந்தொட்டு அவள் அடிக்கடி கதிராமன் வீட்டுக்கு வந்து போவாள். அவன் என்றுமே அவளைக் கூர்ந்து கவனிக்கச் சந்தர்ப்பம் எழவில்லை. இன்று இருண்ட காட்டின் நடுவே ஒரு பயங்கர ஆபத்தின் விளிம்பில் அவள் தன்னுடைய மார்பில் முகம் பதித்து வெம்பியபோதுதான் கதிராமனால் பதஞ்சலியைப் பதஞ்சலியாகக் காணமுடிந்தது. தண்மை நிறைந்த அவளுடைய சிவந்த கைகளினால் அந்த முரட்டுக் கரங்களைத் தூக்கிப் பிடித்துக் காயத்துக்குக் கட்டுப் போடுகையில் அவள் அவனுக்கு மிகவும் அண்மையில் இருந்தாள். எருக்கும்பியில் முளைக்கும் தளதளவென்ற செங்கீரையின் குளிர்மை நிறைந்த அவளுடைய ஸ்பரிசம் அவனுக்குப் புதியதோர் அனுபவம்!

பரபரவென்று கட்டைப் போட்டுவிட்டு நிமிர்ந்தவள் தன்னையே ஊன்றி நோக்கும் தீட்சண்யம் நிறைந்த அவனுடைய விழிகளைச் சந்தித்தாள். அவன் முகத்தில் சதா தவழும் அந்த இளமுறுவல்! 'உங்களுக்கு கொஞ்சமெண்டாலும் பயமில்லையே?" என்று வியப்புடன் கேட்ட பதஞ்சலியைப் பார்த்து அவன் கடகடவென்று நகைத்தபோது அவனுடைய கரிய முகத்தில் உறுதியான வெண்பற்கள் பளிச்சிட்டன. 'வாருங்கோ அப்புவிட்டைப் போவம்! அது பாவம் என்னமாதிரிப் பயந்துபோச்சுதோ!" என்று கூறிவிட்டு பாதையை நோக்கி ஓடிய பதஞ்சலியைத் தொடர்ந்தான் கதிராமன். எதற்குமே பரபரப்படையாத அவன்ää நிதானமாக மீண்டும் காட்டைக் கூர்ந்து நோக்கியவாறே நடந்து கொண்டிருந்தான்.பதஞ்சலியைக் கண்ட உமாபதி பாய்ந்துவந்து கட்டிக்கொண்டார்.

----------------------------------------------------------

3

முல்லைத்தீவுக்குத் தென்புறமாகக் கிடக்கும் அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருந்த தண்ணிமுறிப்புக்குளம் மிகவும் பழமையானது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன், அக்ரபோதி என்ற மன்னனினால் வெட்டிக் கட்டப்பட்டிருந்த இக் குளத்தின்கீழ் ஒரு காலத்தில் பலநூறு ஏக்கர் நிலங்கள் வயல்களாகச் செழித்திருந்தன. பெரியதொரு கிராமமே இந்தக் குளத்தையண்டி இருந்தது. காட்டுக் காய்ச்சல் காரணமாகவும், அந்நியர் ஆதிக்கத்தில் குளங்கள் புறக்கணிக்கப்பட்டதனாலும் அந்தக் கிராமம் அழிந்தொழிந்து போயிற்று. முன்பு செந்நெல் கொழித்த வயல்களில் மீண்டும் பாலையும், வீரையும் பலவகை மரங்களும், செடிகளும் மண்டி வளர்ந்தன. காடு மூடிக்கொண்டது. நாளடைவில், சிதைந்துபோன குளக்கட்டைப் பெரியதொரு காட்டாறு முறித்துச் சென்றதனால், தண்ணிமுறிப்பு என்று பெயர்பெற்றுத் தற்போது அழைக்கப்படுகின்றது.

கதிராமனுடைய தந்தையான கோணாமலையரே முதன் முதலில் தண்ணிமுறிப்புக்கு வந்து குடியேறியவர். அச் சமயத்திற்றான் குளத்தைப் புனருத்தாரணம் செய்யும் வேலைகள் ஆரம்பித்திருந்தன. கோணாமலையர் ஒரு முன்கோபி! பிடிவாதக்காரர்! அவருடைய சகோதரர்கள் அவருக்குச் சேரவேண்டிய சொத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்ற ஆத்திரத்தில், வண்டியைக் கட்டிக்கொண்டு கைக்குழந்தையாயிருந்த கதிராமனையும், மனைவி பாலியையும் அழைத்துக்கொண்டு தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டு வந்தவர் அவர்.

சிறந்த உழைப்பாளியான அவருக்குக் காடுவெட்டிக் கழனியாக்கவும், மாடுகட்டிப் பலன்பெறவும் வெகுகாலம் எடுக்கவில்லை. அவருடைய மனைவி பாலி தண்ணீருற்றில் பிறந்தவள். கோணாமலையருடைய ஆக்கேராஷமான முன்கோபத்திற்கு ஈடுகொடுத்து நடக்கும் அவளுடைய ராசியினாற்றான் மலையருக்கு மனைவிமக்கள், மாடுகன்று முதலிய செல்வங்கள் பெருகியதென்பர்.

குளக்கட்டையடுத்த ஒரு மேட்டுநிலத்தில் மலையரின் வீடு அமைந்திருந்தது. மாலும், மாட்டுக் கொட்டகையும், நெல்போடும் கொம்பறையுமாக விளங்கியது அவருடைய மனை. வீட்டைச் சுற்றிச் செழிப்பான தோட்டம். அவருக்கு வேண்டிய புகையிலை முதல் காய்கறிவரை அங்கு தங்கமாக விளையும். தோட்டத்தை ஒட்டியிருந்த இரு வேறு அடைப்புக்களுக்குள் பசுக்கன்றுகளும் எருமைக்கன்றுகளும் துள்ளி விளையாடும்.

பொழுது புலருமுன் மலையர் வீட்டில் மத்தின் ஓசை கேட்கும். பாலியார் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு ஆடை நசிக்கும் அந்த வேளையில் கோணாமலையர் எழுந்து சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கதிராமனுடனும், அவனுக்கு அடுத்தவனான மணியனுடனும் அன்றாட வேலைகளில் இறங்கிவிடுவர். கடைக்குட்டி ராசு காலம் பிந்திப் பிறந்தவன். அவனுக்கு இப்போ ஏழு வயது. இருப்பினும் தகப்பனுக்கும் தமையன்மாருக்கும் உதவியாக இருப்பான்.


000

வளவுக்கு எதிரே பாதையின் மறுபக்கத்தில் இருந்த வயலில் களளை பிடுங்கிக் கொண்டிருந்த கதிராமனின் தம்பி ராசுää வண்டில் வருவதைக் கண்டதும் வரம்பில் ஏறித் துள்ளிக் குதித்துக்கொண்டு, வண்டிலை நோக்கி ஓடினான். வழக்கமாக கும்மாளம் அடித்துக்கொண்டு ராசுவை வம்புக்கு இழுக்கும் பதஞ்சலி அமைதியாகக் காணப்பட்டது அவனுக்குப் புதினமாக இருந்தது. வண்டிலை நெருங்கியதும் கதிராமனுடைய தோளில் போடப்பட்டிருந்த கட்டைக் கண்டான்.

'மூத்தண்ணையின்ரை கையிலை காயம்! கறடி விறாண்டிப் போட்டுதாம்!" என்று உரக்கக் கத்திய ராசுவின் குரல் கேட்டு, பாலியார் படலையைத் திறந்;துகொண்டு, வண்டிலடிக்கு வந்தாள். பின்னால் கோணாமலையரும் நின்றுகொண்டிருந்தார். நிலைமையை அறிந்தபின் இருவரும் ஆறுதலடைந்தனர்.

'ஏதோ குருந்தூர் ஐயன்ரை துணையிலை இண்டைக்குத் தப்பீட்டியள்!" என்று மகிழ்ந்துகொண்ட பாலியார் மறுபடியும் பதஞ்சலியையும், வளர்ச்சியடைந்திருந்த அவளுடைய உடலையும் கவனித்தாள். என்றுமே அவளுக்குப் பதஞ்சலியின்மேல் கொள்ளை ஆசை! தனக்கொரு பெண் இல்லையே என்ற குறையைப் பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின்தான் அவள் மறந்திருந்தாள்.

'உமாபதி! இனிமேல் இவளைக் கண்டபடி காடுவழிய திரியவிடாதை! பக்குவப்படுற வயசிலை அங்கை இஞ்சையெண்டு போகவிடாதை!" என்றாள். பாலியார் கூறியதைக் கேட்ட பதஞ்சலிக்கு முகம் ஓடிச் சிவந்துவிட்டது. ';அப்பு! நான் வளவுக்குப் போறன், நீ வாணை!" எனக் கூறிவிட்டு பதஞ்சலி அங்கிருந்து தன் குடிசையை நோக்கி ஓடினாள்.

உமாபதியார் முரலிப்பழச் சாக்கைத் தலையில் ஏற்றிக்கொண்டே கோணாமலையரிடமும், பாலியாரிடமும் விடைபெற்றுக் கொண்டார். அவருடைய தலையை முரலிப்பழச் சுமை அழுத்தியது. அதைவிடää பாலியார் குறிப்பிட்ட விஷயம் தனக்கிருக்கும் பெருஞ்சுமையை அவருக்கு உணர்த்தியது.

இவ்வளவு காலமும் பதஞ்சலிக்குத் தாயும் தந்தையுமாகவிருந்து வளர்த்துவிட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், எட்டே வயதான பதஞ்சலியுடன் அவர் தண்ணிமுறிப்புக்குக் குடிவந்தார். இப்போ அவளுக்குப் பதின்மூன்று வயது. பதினைந்துக்குரிய மதமதவென்ற வளர்ச்சி! அவளை உரிய பருவம்வரை வளர்த்து, ஒருவனுடைய கையிற் பிடித்துக் கொடுக்கும்வரை தனக்குள்ள பொறுப்பை நினைத்து நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே தலையிற்; சுமையுடன் நடந்தார் உமாபதியர். வயதேறிய காரணத்தினால் உடல் சற்றுத் தளர்ந்திருந்தாலும், அவர் நடையில் உறுதியும்ää வேகமும் இருந்தன. அப்பு! அப்பு! என்று தன்னை வாஞ்சையுடன் சுற்றிவரும் தன் பேத்தி பதஞ்சலியை நினைக்கையில்ää கூடவே அவளுடைய தாயின் ஞாபகமும் ஓடி வந்தது. மகள் முத்தம்மாவையும் அவளுடைய அவச்சாவையும் எண்ணிய அவருடைய விழிகள் கவலையினால் கலங்கின.

-----------------------------------------------------------------

4

முரலி மரங்களில் பழங்கள் முடிந்துவிட்டன. வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராய்க் கிடந்தன. உமாபதியரின் சின்னக் குடிசை, கோணாமலையரின் வீட்டுக்கு வடக்கே குமுளமுனைக்குச் செல்லும் பாதையோரமாக அமைந்திருந்தது. அவர் தன் பேத்தி பதஞ்சலியைக் கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாய்த் தண்ணிமுறிப்புக்கு வந்தபோது, மலையரின் உதவியோடுதான் இந்தக் குடிசையைப் போட்டுக் கொண்டார்.

வேட்டை நாய்களால் துரத்துப்பட்ட குழிமுயல் பற்றைக்குள் ஓடிப் பதுங்கிக் கொள்வதுபோல உமாபதியரும் ஏதோவொன்றால் துரத்தப்பட்டவராகத்தான் தண்ணிமுறிப்புக்கு ஓடிவந்தார்.

அந்தச் சிறு குடிசையையும், வளவையும் மிகவும் துப்பரவாகவும், அழகாகவும் வைத்திருந்தாள் பதஞ்சலி. பாலியாரைப் பார்த்துப் பல நல்ல பண்புகளைப் பழகிக் கொண்டிருந்த அவள், அடிக்கடி அங்கு சென்று வாழைää கத்தரி, மிளகாய்க் கன்றுகளை வாங்கிவந்து குடிசையைச் சுற்றிலும் செழிப்பான தோட்டம் போட்டிருந்தாள். சிறிய வளவாயினும் அவளுடைய அயராத உழைப்பின் பயனாக அங்கு அழகு மிளிர்ந்தது. படலையிலிருந்து குடிசைக்குச் செல்லும் சிறிய நடைபாதையின் ஓரங்களிலே அழகிய பூக்கள் சிரித்தன. பசிய இலைகளைப் பரப்பியவாறே குடிசையின் கூரையில் பூசணிக்கொடி படர்ந்திருந்தது. வெண்மணல் பரப்பப்பட்டிருந்த சிறிய முற்றம் பளிச்சென்று பெருக்கப்பட்டிருந்தது. அழகோடு ஆரோக்கியமும் நிலவிய சூழல்!

கிழக்கு வெளுக்கும் நேரத்தில் பதஞ்சலி முற்றத்தைப் பெருக்கும் ஓசையைக் கேட்டு எழுந்த உமாபதியர், வேலி வேம்பில் குச்சியை முறித்துப் பல்துலக்கியவாறே வளவுக்கும் செம்மண் சாலைக்கும் இடையே சலசலத்தோடும் வாய்க்காலை நோக்கிச் சென்றார். கால்முகங் கழுவித் துண்டால் துடைத்துக் கொண்டு குடிசைப் பத்தியில் கட்டப்பட்டிருந்த சுரைக்குடுவைக்குள் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றி நிறையப் பூசிக்கொண்ட அவரின் விழிகளில் குடத்தடியில் நின்ற செவ்விளை தட்டுப்பட்டது.

அங்கு அவர் குடிவந்த சில நாட்களில் அந்தத் தென்னம்பிள்ளையை நட்டிருந்தார். பதஞ்சலியின் பராமரிப்பில் செழித்து வளர்ந்த அந்தச் செவ்விளை சில நாட்களுக்கு முன்தான் முதற்பாளையைத் தள்ளியிருந்தது. இதுவரை இயற்கையின் இறுக்கத்தில் இருந்த அந்தத் தென்னம் பாளை இன்று வெடித்து மெல்லச் சிரித்து நின்றது. அவ் வெடிப்பினூடாகத் தெரிந்த அழகிய முத்துக்கள் உமாபதிக்கு அவருடைய மகள் முத்தம்மாவின் சிரிப்பை ஞாபகப்படுத்தின. பதஞ்சலியும் முத்தம்மாவையே உரித்துப் பிறந்திருந்தாள். அதே செவ்விளை நிறம்! அதே பாளைச் சிரிப்பு!

முத்தம்மா இறக்கும்போது பதஞ்சலிக்கு மூன்று வயது. முத்தம்மா அந்தச் சின்ன வயதிலேயே இறந்திருக்க வேண்டுமா? இல்லை! அவளைச் சாகடித்துவிட்டனர் அவ்வூர் மக்கள்! கள்ளங் கபடில்லாமலிருந்த முத்தம்மா அநியாயமாகக் கிணற்றில் விழுந்து செத்துப் போனாள். அவளை வெளியே தூக்கிப் போட்டு 'நீ ஏனம்மா இன்னொருவர் கதையைக் கேட்டுச் சாகவேணும்? நான் ஒருத்தன் உனக்கு எண்டைக்குமே துணையாய் இருப்பனே!" என்று கதறியழுதார் உமாபதியார். ஆனால் அவற்றையெல்லாம் கேட்பதற்கு அவளுடைய உடலில் உயிர் இருக்கவில்லை. மூன்றே வயதான பதஞ்சலி எதற்கென்றே தெரியாமல் கோவென்று அழுதாள். இறந்துவிட்ட மகளை எண்ணிப் பாசத்தையெல்லாம் பதஞ்சலிமேல் சொரிந்து வளர்த்தார் உமாபதி. உரிய பருவத்தில் பாடசாலைக்கும் அனுப்பினார். எட்டு வயதுவரைதான் அவள் அங்கு படிக்க முடிந்தது. என்றைக்கு அவளுடைய பிஞ்சு மனம் நொந்துபோய்க் கண்கள் குளமாக, உதடுகள் துடிக்கப் பாடசாலையால் ஓடிவந்து உமாபதியரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாளோ, அன்றே அவளையும் கூட்டிக்கொண்டு தண்ணிமுறிப்புக்குக் குடிவந்தவிட்டார் உமாபதியார்.

கடந்தகால நினைவுகளில் ஆழ்ந்திருந்த உமாபதியாரை பதஞ்சலியின் குரல் இவ்வுலகத்திற்கு இழுத்து வந்தது. குடிசையை ஒட்டியிருந்த சிறிய குசினிக்குள்ளிருந்து கேட்ட அவளுடைய குரலில் வழமையான துடுக்கும், துடிப்பும் காணப்படவில்லை. 'அப்பு! ஒருக்காப் போய்ப் பாலியரம்மாவைக் கூட்டிக்கொண்டு வாணை!" என்று அவள் சஞ்சலத்துடன் கூறியதும் உமாபதியார் கலவரப்பட்டுப் போனார். 'ஏன் மோனை! ஏதும் சுகமில்லையோ?" என்று கேட்டதற்கு 'நீ போய் அவவைக் கூட்டிக்கொண்டு வாவன்!" என்று மீண்டும் பதட்டத்துடன் பதஞ்சலி கூறவே, உமாபதியார் மனம் பதைபதைத்தவராகக் கோணாமலையரின் வளவை நோக்கி வேகமாக நடந்தார்.

அந்தக் காலைப் பொழுதில் உமாபதியாருடன் விரைந்து வந்த பாலியார் வளவுப் படலையைத் திறந்துகொண்டு முன்னே வந்தாள். குசினிக்குள் பதஞ்சலியைக் காணாததால் விடுவிடெனக் குடிசைக்குள் நுழைந்தாள். என்னவோ ஏதோவென்று பயந்து போனவராய் ஏதுமறியாது உமாபதியார் வெளியே நின்றுகொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த பாலியார்ää 'பதஞ்சலி பெரிய மனுசியாய் விட்டாள்!" என்று சொன்னதும் உமாபதியாரின் முகம் உவகையினால் மலர்ந்தது. மறுகணம் அவரின் மனம்ää இந்த மங்கலச் செய்தியைக் கேட்க தனது மகள் முத்தம்மா உயிரோடு இல்லையே என்று நினைத்துப் புழுங்கிக் கொண்டது. இன்பமும் துன்பமும் ஒருங்கே அவருடைய முகத்தில் சுழியிட்டன.

-----------------------------------------------------

5

பாலியார் தனக்கு மகளில்லாத குறையை அடியோடு மறந்துவிட்டாள். அடிக்கடி அங்கு வந்து பதஞ்சலிக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்தாள். பல வகையான உணவுப் பண்டங்களைப் பதஞ்சலிக்கென விசேடமாகத் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள். கண்டிப்பு நிறைந்த கணவனுக்கும் வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டுப் பின், பதஞ்சலி வீட்டுக்கும் வந்து உதவ பாலியார் போன்ற ஒருத்தியாற்றான் முடிந்தது.

அவளுடைய மேற்பார்வையில் ஆகவேண்டியவை யாவும் ஆகிää அன்று பதஞ்சலிக்குப் புனித நீராட்டும் வைபவமும் சிறப்பாக நடந்தது. தண்ணிமுறிப்பில் வாழும் அத்தனைபேருமே அன்று உமாபதியாரின் குடிசை முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலின்கீழ் கூடியிருந்தனர். கோணாமலையரின் குடும்பம், தண்ணிமுறிப்புக் குளத்தை மேற்பார்வைசெய்யும் காடியர்ää உமாபதியாரும் அவருடைய பேத்தி, பதஞ்சலி இவர்கள்தான் அந்தச் சிறிய காட்டுக் கிராமத்தின் குடிமக்கள்.

பாலியார் காலையில் எழுந்த தன்வீட்டுக் காரியங்களை முடித்துக்கொண்டு உமாபதியரின் வளவுக்கு வந்து பதஞ்சலியை நீராட்டிää புடவையுடுத்தி, பின்னர் விருந்துச் சமையலில் ஈடுபட்டிருந்தாள். குடிசைக்குள் ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த பழைய பாயில் அடக்கமாக அமர்ந்திருந்த பதஞ்சலிää அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த மலையர் வீட்டுக் குத்துவிளக்கின் ஒளியில் மங்களகரமாகத் திகழ்ந்தாள். முழுகிவிட்டுத் தலையை ஈரம் உணர்த்திää முடியாது அவிழ்த்து விட்டிருந்தாள். அந்தக் கருங்குழற் காட்டின் பகைப்புலத்தில் அவளுடைய சிவந்த முகம் காலைச் சூரியனைப்போன்று ஒளி வீசியது. உமாபதியார் இவ்வளவு நாட்களாகத் தான் சேமித்ததை எடுத்துச்சென்று தண்ணீருற்றுச் சிவானந்தப் பத்தரிடம் செய்வித்து வந்த இரண்டு பவுண் சங்கிலி அவளுடைய கழுத்தை அலங்கரித்தது. கூடவே அவர் வாங்கிவந்த நீலவண்ணச் சேலை அவளுடைய செவ்விளை நிறத்துக்கு மவுசு கூட்டியது.

குடிசைக்கு வெளியே ஒரே கலகலப்பு! மலையரும், காடியரும்ää உமாபதியரும் சேர்ந்துகொண்டு, முல்லைத்தீவிலிருந்து வாங்கிவந்த சாராயப் போத்தல் சகிதம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

உள்ளே குடிசைக்குள் அமர்ந்திருந்த பதஞ்சலி தன் தங்கச் சங்கிலியையும், புதுச் சேலையையும் அடிக்கடி தொட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டாள். பாலியாரின் கடைக்குட்டி ராசு குடிசைக்குள் வருவதும், அவளை விநோதமாகப் பார்த்து 'ஏன் இண்டைக்குச் சீலை உடுத்திருக்கிறாய்? ஏன் இண்டைக்குச் சங்கிலி போட்டிருக்கிறாய்?" என்பது போன்ற வினாக்களைக் கேட்பதுமாய் விளையாடினான்.

பதஞ்சலிக்குக் கதிராமனுடைய நினைவு வந்தது. அனைவருமே விருந்துக்காக வந்துவிட்டபோது அவன் மட்டும் இன்னமும் வரவில்லை என்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.

'ஏன் ராசு, இன்னும் மூத்தண்ணையைக் காணேல்லை?" என்று அவள் கேட்டதற்கு, 'அவர் விடிய வெள்ளாப்பிலை நாயளையும் கொண்டு குழுமாடு புடிக்கப் போட்டார்! இன்னும் வரேல்லை!" என்று ராசு பதிலளித்தான். 'நேற்று முழுதும் காட்டிலை திரிஞ்சு உடும்பு பிடிச்சுக்கொண்டு இஞ்சை தந்திட்டு அவர் ஏன் இன்னும் வரேல்லை? எல்லாரும் சாப்பிடுற நேரமாய்ப் போச்சுது!" என்று தனக்குள் சொல்லிக் கொண்ட பதஞ்சலிக்குää அன்று முரலிப் பழத்திற்குத் தானும் வருவேனென்று அடம்பிடித்துச் சென்றதும், காட்டில் கரடி வந்ததும் தான் பயந்து நடுங்கியதும் ஞாபகம் வரவே, தனக்குள் மெல்லச் சிரித்துக்கொண்டாள். அவனுடைய வலிமைமிக்க கரங்களின் அரவணைப்பில், அவனுடைய இளம் மார்பில் தனது முகத்தைப் பதித்துக் குழந்தைபோல் தேம்பியழுததை நினைக்கையில் பதஞ்சலிக்கு அடக்கமுடியாத நாணம் கிளர்ந்தெழுந்து உடலெங்கும் பரவியது. நாணமும் புன்னகையும் மாறி மாறிக் கோலமிட்ட பதஞ்சலியின் முகத்தை உற்றுக் கவனித்த சிறுவன் ராசு வியப்புடன்ää 'ஏன் சும்மாய் சிரிக்கிறாய்?" என்று கேட்டதற்கு, 'ஒண்டுமில்லையிடா!" என்று கூறி மீண்டும் மெல்லச் சிரித்தாள் பதஞ்சலி. 'உனக்கென்ன விசரே?" என்று அவன் கேலி செய்தபோதுங்கூட அவள், 'போடா, ஒண்டுமில்லை!" எனக் கூறிவிட்டுச் சிரித்தாள்

---------------------------------------------------

6

அந்த மங்கல நிகழ்ச்சியின் பின்னர் இரண்டு நாள்வரை பதஞ்சலி சற்று அடக்கமாக இருந்தாள். மூன்றாம் நாள் அவளுடைய பழைய துருதுருப்பும் துடுக்குத்தனமும் திரும்பிவிட்டன. பாவாடையை உயர்த்திக் கட்டிக்கொண்டு, கரம்பைக்காய் பிடுங்கவும், சூரைப்பழம் பறிக்கவுமென்று பட்டாம்பூச்சிபோல் இங்குமங்குமாய்ப் பறக்கத்தொடங்கி விட்டாள். உமாபதியார் தடுத்துக் கூறினால் 'சும்மா போணையப்பு!" என்று செல்லமாகக் கூறிவிட்டுத் தன்போக்கில் போய்விடுவாள்.

அவளுக்கு மங்கல நீராட்டு வைபவம் நடந்த அன்று கதிராமன் அவள் வீட்டில் நடந்த விருந்துக்குப் போகவில்லை. அன்று மதியம் திரும்பிய பின்னரே, அவன் காட்டில் குழுவாகத் திரிந்த கடாவைப் பிடித்துத் தங்கள் எருமையுடன் பிணைத்துக்கொண்டு வளவுக்கு வந்திருந்தான். அதன்பின் இரண்டு நாட்கள் பதஞ்சலியும் வெளியே எங்கும் செல்லாததால், அவளை அவனால் காணமுடியவில்லை. மூன்றாம் நாள் கதிராமன் விறகுக்காகக் காட்டுக்குப் போய்விட்டுக் கோடரியும் கையுமாகத் திரும்பும்போதுதான், அவள் குளக்கட்டின்மேல் வந்து நின்றுகொண்டு துருசினூடாகத் தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடன் கூடவந்த நாய்களிரண்டும் பதஞ்சலியைத் தொலைவில் கண்டதும் உற்சாகத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்தன.

பதஞ்சலியைத் தனது நாய்கள் குளக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிடக்கூடும் என்று எண்ணிப் பயந்த கதிராமன் நாய்களை அதட்டினான். அவனுடைய அதட்டலுக்கு அடங்கிய நாய்கள் மீண்டும் அவனிடம் ஓடவே, பதஞ்சலியும் அந்தத் திக்கில் திரும்பினாள்.

இளஞ்சிரிப்புடன் வந்துகொண்டிருந்த கதிராமனின் கரியமேனி மாலை வெய்யிலில் புதியதொரு அழகைக் காட்டியது. அவனை அந்நேரத்தில் பார்த்தபோது பதஞ்சலிக்கு முன்னொரு தடவை, கலிங்கு வெட்டையில் இதேபோன்று ஒரு மாலைநேரம் தான் கண்ட கலைமரையின் ஞாபகம் திடீரென வந்தது. 'இவரும் நெடுகக் காட்டிலை சந்தோசமாய்த் திரியிறார் அந்த மரையைப்போலை' என எண்ணிக் கொண்டவளுக்கு, அவன் அன்று தங்கள் வீட்டுக்குச் சாப்பிட வராததது நினைவுக்கு வந்தது. அவன் அண்மையில் வந்ததும், 'ஏன் அண்டைக்குச் சாப்பிட வரேல்லை?' என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் பதிலளியாது புன்னகை பூக்கவே அவளுக்கும் சிரிப்பு வந்தது. 'நீங்கள் எதுக்கெண்டாலும் சிரிச்சுச் சாமாளிச்சுப் போடுறியள்!' என்ற பதஞ்சலியைச் சமாளிக்கும் நோக்குடன் கதிராமன், 'அண்டைக்கு உன்ரை வீட்டை நான் வாறதெண்டால் உனக்கேதும் கொண்டு வந்திருக்கோணும். என்னட்டை ஒண்டுமில்லை, அதுதான் வரேல்லை!' என்றான். 'அப்ப இனிமேல் வாறதெண்டால் ஏதாவது சாமான் வாங்கிக்கொண்டுதான் வருவியளாக்கும்?' அவள் குறும்பாகக் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் சிரித்தான் கதிராமன். அவளுடைய துடுக்கும் குறும்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

'சரி! இப்ப ஒரு சமான் தரவோ?"
'என்ன, உங்கடை கோடாலியைத் தூக்கித் தரப்போறியளே!'. அவள் அவனைக் கேலி செய்தாள்.

'நீயேன் கனக்கப் பகிடி பண்ணிறாய், என்னோடை கொஞ்சத்தூரம் உந்தக் காட்டுக்கை வா! ஒரு இனிப்பான சாமான் தாறன்!, என்றவாறே அவன் திரும்பிக் குளக்கட்டால் நடந்தான்.

'என்ன? இனிப்பான சாமானோ? என்னது?, என்று ஆர்வத்துடன் கேட்டவாறே துள்ளிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தாள் பதஞ்சலி.

சற்றுத்தூரம் குளக்கட்டுவழியே சென்ற கதிராமன், ஓரிடத்தில் குளக்கட்டின் சரிவால் இறங்கிக் கட்டின்கீழே தெரிந்த காட்டை நோக்கிச் சென்றான். அக் காட்டினுள் நுழைந்தவன் சிறிது தூரம் சென்றதும், பட்டுப்போய் விழுந்துகிடந்த ஒரு சமண்டலை மரத்தடிக்குச் சென்று, அதன் அடிப்பாகத்திலிருந்த பூவாசலைக் கவனித்தான். இதற்குள் பதஞ்சலியும் அவனருகில் நெருங்கி வந்துவிடவே, கொட்டுக்குள் இருந்த தேன்குடி கலைந்து பறந்தது.

பதஞ்சலி குதூகலத்துடன் குதித்தாள்.

'ஆ! எனக்கு இப்பதான் விளங்கிச்சுது!'

'சும்மாய் குதிக்காதை! அங்காலை போய் நில்! இல்லாட்டிப் பூச்சி குத்திப்போடும்!' என்று கதிராமன் கூறிவிட்டுப் பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை இலேசாகத் தட்டிப் பார்த்தபின், மரத்தைத் தறிக்கத் தொடங்கினான். நாய்களிரண்டும் உடும்போ ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. 'கவனம்! பூச்சி குத்திப்போடும்!' என்று பதஞ்சலி கூறியதைக் கவனியாது அவன் குனிந்து, வெட்டப்பட்டிருந்த வெளியினூடாக வாயால் ஊதினான். அவன் ஊதவும் தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல்லக் கையைவிட்டு தேன்வதைகளை எடுத்தவாறே பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவை இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருந்ததில்லை.

'இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது' என்ற கதிராமன், அவளுடைய கைநிறையத் தேன்வதைகளை அடுக்கிவிட்டு, 'போதுமே என்ரை பரிசு?' எனக் கேலியாகக் கேட்டான். அவள் 'ஓ' வென்று தலையை அசைத்துவிட்டு அழகாகச் சிரித்தாள்.

அவள் சிரிக்கையில் அன்றொருநாள் இருண்ட காட்டில் அவனுக்கு மிக நெருக்கத்தில் அவள் இருந்த நினைவு கதிராமனுக்கு வந்தது. அவளுடைய சிவந்த விரல்களையும், செழுமையான முகத்தையும், வண்டுபோன்ற விழிகளையும் பார்க்கையில் அவனுக்குப் புதியதோர் உணர்வும் சுகானுபவமும் ஏற்பட்டன.

'வாருங்கோ குளக்கட்டிலை வைச்சுத் தின்னுவம்!' என்று கூறி அவள் நடக்க, கதிராமன் இரண்டு சமண்டலை இலைகளைப் பறித்துக்கொண்டு, அவள் பின்னால் சென்று குளக்கட்டின் சரிவில் பசுமையாகப் படர்ந்திருந்த புல் தரையில் அமர்ந்து கொண்டான். சமண்டலை இலைகளில் தேன்வதைகளை வைத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் எடுத்துக் கொண்டாள் பதஞ்சலி. அவளுடைய தளிர் விரல்களினால் பிய்த்தெடுக்கப்பட்ட அந்தத் தேன்வதைகள் அவனுக்கு அன்று மிகவும் இனித்தன.

பொழுது சாயும் நேரத்திலே பதஞ்சலி நாய்களுடன் முன்னால் துள்ளிக்கொண்டு ஓட, கோடரியைத் தோளில் தாங்கி கதிராமன் பின்தொடர்ந்தான். பதஞ்சலி ஓடும்போது அவளுடைய நீண்ட பின்னல் கருநாகம்போல் அங்குமிங்கும் துள்ளியசைந்தது. அவளுடைய ஒவ்வொரு அங்க அசைவும், களங்கமும் கவலையுமற்ற கதிராமனின் வாலிப இதயத்தில் மிகமிக ஆழமாகப் பதிந்து கொண்டன.

தன் வளவுக்கு எதிரேயுள்ள வயல்வரம்பில் புல்வெட்டிக் கொண்டிருந்த கோணாமலையர் தொலைவில் நாய்கள் ஓடிவரும் அரவம் கேட்டு நிமிர்ந்தார். மாiலை வெய்யிலில் கண்கள் கூசின. விழிகளை இடுக்கிக்கொண்டு பார்த்தபோது கதிராமனும், பதஞ்சலியும் வருவது தெரிந்தது. பார்த்தவர் மீண்டும் குனிந்துகொண்டு பசும்புற்களைப் பரபரவென்று அறுத்துத் தள்ளினார். மிகவும் கூர்மையான அரிவாளினால் பழகிப்போன அவருடைய கரங்கள் மளமளவெனப் புல்லை அரிந்து தள்ளும்போது அவருடைய மனம் மட்டும் வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

சாக்கில் அடைந்து கொண்டுவந்த புல்லை மாட்டுத் தொட்டிலுக்குள் கொட்டிவிட்டு கோணாமலையர் வாய்க்காலில் கால்முகம் கழுவிய பின்னர் வந்து முற்றத்தில் கிடந்த மான்தோலில் உட்கார்ந்து கொண்டார். அவருடைய ஒரு கையில் சீனியையும், மறுகையில் சிரட்டை நிறையத் தேநீரையும் கொடுத்த பாலியார், வெற்றிலைத் தட்டத்துடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

உள்ளங்கையிலிருந்த சீனியை நக்கிக்கொண்டு ஒருவாய் தேநீரை உறிஞ்சிய மலையர் ஏதோ நினைத்தவராய், 'உவன் உமாபதியின்ரை பொட்டை இப்பவும் காடுவழியதானே திரியிறாள்! அவளைக் கண்டபடி வெளியிலை விடவேண்டாமெண்டு அவனுக்குச் சொல்லு!' என்றார். அவர் எதற்காக இதைக் கூறுகின்றார் என எண்ணிய பாலியார், 'அந்த ஆளும் நெடுகச் சொல்லுறதுதான். ஆனால் அவள் கேட்டால்தானே! மான்குட்டி மாதிரி எந்த நேரம் பாத்தாலும் பாய்ச்சலும் பறவையுந்தான்!' எனக் கூறிக் கொண்டாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது பதஞ்சலியின் துடியாட்டத்தைப் பற்றித்தான். ஆனால் மலையர் நினைத்துக் கூறியதற்கும், அவருடைய மனைவி குறிப்பிட்டதற்கும் எவ்வளவோ வேறுபாடு இருந்தது.

தேநீரைக் குடித்துவிட்டுச் சிரட்டையை ஒரு பக்கமாகக் கவிழ்த்து வைத்த மலையர், 'காலமை மம்மது காக்கா என்னட்டை ஒரு விசயம் பறைஞ்சவன். குமுளமுனைச் சிதம்பரியருக்கு ஒரு பொட்டை இருக்குதாம். வீடுவளவோடை சிதம்பரியாற்றை உழவுமெசினும் பொடிச்சிக்குத்தான் குடுக்கிறதாம். எங்கடை கதிராமனுக்கு அந்தப் பொட்டையைச் செய்யிற விருப்பம் சிதம்பரியாருக்கு இருக்காம் எண்டு மம்மது சொன்னான்.... ஆனால் பொட்டைக்குக் கொஞ்சம் வயசு குறைவு... வாறவரியம் மட்டிலை செய்வம் எண்டு கதைச்சவராம்...' என்று கூறி நிறுத்தினார்.

அதற்கு ஒன்றுமே பேசாமல் எழுந்த பாலியார் சிரட்டையை எடுத்துக் கொண்டு குடத்தடிக்குச் சென்று குடத்திலிருந்து தண்ணீரை ஊற்றிச் சிரட்டையை அலம்புகையில், தூரத்தே உமாபதியரின் குடிசையில் பதஞ்சலி விளக்கேற்றுவது தெரிந்தது. '.... என்னமாதிரி பம்பரம்போலை சுழண்டு சுழண்டு வேலை செய்வாள்.... கிளிக்குஞ்சு மாதிரிப் பொட்டை..' எனப் பாலியாரின் மனம் எண்ணிக்கொண்டது.

--------------------------------------------------------

7

பதஞ்சலி பருவமடைந்து விளையாட்டுப்போல் மூன்று வருடங்கள் சென்றுவிட்டன. அந்த மூன்று வருடங்கள் பதஞ்சலியில் மட்டுமன்றி அந்தச் சின்னக் காட்டுக் கிராமத்திலேயும் எத்தனையோ மாறுதல்களை ஏறபடுத்திவிட்டுச் சென்றிருந்தன.

பதினாறு நிறைந்த பதஞ்சலி தண்ணிமுறிப்புக் காடுகளிலே தன்னிச்சையாகத் திரியும் பெண் மான்களைப் போன்று அழகும் நளினமும் நிறைந்தவளாக விளங்கினாள். கிடுகிடுவென வளர்ந்து மதாளித்துக் குலை தள்ளவிருக்கும் வாழையின் செழுமை அவளுடைய உடலில் தெரிந்தது.

வயல்வெளி, அதன் ஓரத்திலே அடர்ந்திருந்த காட்டை வெகு தூரத்திற்குப் பின்னே தள்ளிவிட்டாற் போன்று, விசாலித்திருந்தது. குளத்தினின்று செல்லும் வாய்க்காலும், அதையொட்டி அமைந்திருந்த செம்மண் சாலையும் செப்பனிடப்பட்டுச் சீராகக் காணப்பட்டன. உயர்த்தப்பட்டுக் காணும் குளக்கட்டில் இப்போது ஏறிநின்று பார்த்தால், ஒருபுறம் குளத்தில் நீர் நிறையத் தேங்கி அலையடிப்பதைக் காணலாம். மறுபுறம் குளக்கட்டின் கீழே விசாலித்துக் கிடக்கும் வயல்களில் பச்சைப் பசேலெனப் பயிர்க்கடல் தளும்புவதைப் பார்க்கலாம்.

குளத்துக்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த காடியர் பஙகளா, விரிந்துகொண்டே போகும் வயல்வெளி, அதன் நடுவே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணப்படும் சிறு குடிசைகள், இவை யாவுமே தண்ணிமுறிப்பு இப்போது ஒரு குக்கிராமம் அல்ல, மெல்ல வளரும் ஒரு குடியேற்றத் திட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லி நின்றன.

கோணாமலையர்கூடச் சற்று மாற்றமடைந்தவராகக் காணப்பட்டார். கதிராமனும், மணியனும், ராசுவும் வேலைகள் அத்தனையையும் கச்சிதமாகக் கவனித்துக் கொள்ளவே, அவருக்கு ஓய்வுநேரம் அதிகமிருந்தது. காடியர் மிகவும் குஷியான பேர்வழி! எனவே ஓய்வு நேரங்களில் காடியருடன் பலதையும் பேசிச் சந்தோஷமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டார் மலையர்.

உமாபதியரிடம் முதுமையின் தளர்ச்சி கூடுதலாகத் தென்பட்டது. இருந்தும் வழமைபோலக் கூலிவேலை செய்வதும், கதிராமன் முதலியோருடன் காட்டுக்கு வேட்டைக்குச் செல்வதுமாக அவருடைய காலம் போய்க் கொண்டிருந்தது. பதஞ்சலியின் திருமணம் ஒன்றே அவர் தன்னுடைய வாழ்வில் எதிர்பார்க்கும் முக்கிய விஷயமாக இருந்தது. தன்னை முதுமை முழுமையாகப் பற்றிக் கொள்வதற்கு முன் எப்படியாவது கொஞ்சப் பணத்தைச் சேர்த்து, யாராவது நல்ல உழைப்பாளி ஒருவனுடைய கையில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் அயராது உழைத்தார்.

அன்றும் எங்கோ ஒருவருடைய வயலில் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் வீட்டை நோக்கி உமாபதியார் வந்துகொண்டிருந்தார். அவர் தூரத்திலேயே வரும்போது கண்டுகொண்ட பதஞ்சலி குசினிக்குள் தேநீரை ஆற்றிக் கொண்டிருந்தாள். வாய்க்காலில் உடலைக் கழுவிக்கொண்டு வளவுப் படலையைத் திறக்கும்போது, உமாபதியரின் காலில் திடீரென நெருப்பால் சுட்டது போலிருந்தது. வலியில் ஓவென்று அலறிய அவர் குனிந்து நோக்கியபோது வாய்க்கால் ஓரத்தில் மண்டி வளர்ந்திருந்த புற்களிடையே நாகபாம்பொன்று விரைந்து செல்வதைக் கண்டார். அவருடைய அலறலைக் கேட்டுப் பதறித் துடித்து ஓடிவந்த பதஞ்சலி 'என்னணையப்பு?' எனக் கேட்போது, 'பாம்பு கடிச்சுப் போட்டுதம்மா!' என்றவாறே வலி பொறுக்க முடியாமல் துடித்தார் உமாபதியர். அவருடைய வலது புறங்காலில் நாலு இடங்களில் பொட்டுப்போல இரத்தம் சிறிதாகக் கசிந்து கொண்டிருந்தது.

'ஆதி ஐயனே! நான் என்னணையப்பு செய்வன்!' என்று அரற்றிய பதஞ்சலி, 'இஞ்சைவிடப்பு! நான் வாயாலை கடிச்சு நஞ்சை உறிஞ்சித் துப்பிவிடுறன்!' எனக் கூறி அவருடைய காலை நோக்கிக் குனிந்தாள். 'சீ என்ன மடைவேலை செய்யப் பாக்கிறாய்! இஞ்சைவிடு காலை!' என்று பேத்தியைக் கடிந்து கொண்டவர், சிரமத்துடன் நடந்து சென்று குடிசைத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். 'புள்ளை! அந்த மான் கொடியை எடுத்து இதிலை நல்லாய் இறுக்கி ஒரு கட்டுப் போடு!' என்று அவர் சொன்னதும், பதஞ்சலி கொடியை எடுத்துக் கெண்டைக் காலில் இறுகக் கட்டினாள். அப்போது அவளுடைய விரல்கள் நடுங்கியதைக் கண்ட உமாபதியார், 'பயப்பிடாதை மோனை! எனக்கொண்டும் செய்யாது! நீ ஓடிப்போய் மலையரைக் கூட்டிக்கொண்டு வா!' என்றதும் பதஞ்சலி மலையர் வீட்டை நோக்கி விரைவாக ஓடினாள்.

இரண்டுங்கெட்ட நேரத்தில் பதைபதைக்கப் பதஞ்சலி ஓடி வருவதைக் கண்ட பாலியார் பயந்து போனாள். 'என்ன புள்ளை?' என அவள் கேட்கமுன்பே, 'அப்புவுக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதம்மா!' என்று தேம்பியழத் தொடங்கிவிட்டாள் பதஞ்சலி. பட்டிக்குள் எருமைக் கன்றுகளைக் கட்டிக்கொண்டிருந்த கதிராமன், பதஞ்சலி சொன்ன செய்தியைக் கேட்டு உமாபதியரின் குடிசையை நோக்கிப் பாய்ந்து சென்றான். 'தம்பி மணியம்! ஓடிப்போய்க் கொப்புவைக் கூட்டிக்கொண்டு வா! காடியர் வீட்டிலை இருப்பர்!' என்று பாலியார் மணியனை நோக்கிக் கூறிவிட்டு, பதஞ்சலியுடன் உமாபதியாரின் வீட்டுக்கு வேகமாகப் புறப்பட்டாள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற ராசு பயந்தவனாகப் பதஞ்சலியையும் தாயையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டான்.

உமாபதியாருக்கு நாக்குத் தடிக்க ஆரம்பித்துவிட்டது. அங்கு முதலில் சென்ற கதிராமன், விளக்கை எடுத்துவந்து கடிவாயைக் கவனித்தான். நான்கு பற்களுமே மிக ஆழமாக இறங்கியிருந்ததைக் கண்டதும் அவனுடைய முகம் இருண்டது. 'என்ன பாம்பு?' என்று கேட்டதற்கு, 'சர்ப்பம்!' எனத் திக்குத் திணறிக் கூறினார் உமாபதியார். இதற்குள் பதஞ்சலியும் பாலியாரும் அங்கு வந்துவிட்டனர். பதஞ்சலி வெளிறிய முகத்துடன் கதிராமனை நோக்கினாள். 'ஒண்டுக்கும் பயப்பிடாதை! நான் போய் ஒதியமலை வைத்தியத்தைக் கூட்டிக்கொண்டு வாறன்' என்று அவன் புறப்பட்டதைக் கண்ட பதஞ்சலிக்கு வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது.

காடியரின் வீட்டு விறாந்தையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கோணாமலையரிடம், ஓடிவந்த மணியன் 'உமாபதியருக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதாம்! உங்களை உடனை வரட்டாம்!' என்றதும், 'என்னடா கடுமையாய்க் கடிச்சுப் போட்டுதே? நீ ஓடிப்போய் வீட்டு மாடத்துக்கை பார், புதூர் மருந்து ஒரு சரை கிடக்குது, எடுத்துக்கொண்டு வா!' என மணியனுக்குக் கட்ளை பிறப்பித்துவிட்டு, உமாபதியாரின் குடிசையை நோக்கி விரைந்தார் மலையர்.

அங்கே குடிசைத் திண்ணையில் படுத்திருந்த உமாபதியாரின் தலைமாட்டில் பாலியாரும், காலருகே பதஞ்சலியும் உட்கார்ந்திருந்தனர். பதஞ்சலியின் முகத்தில் களையே இல்லை. எதற்கும் இலகுவில் உணர்ச்சி வசப்பட்டுப்போகும் அவள் உமாபதியாரின் நிலையைக் கண்டு மிகவும் பயந்து போயிருந்தாள். அவருடைய உடலில் வினாடிக்கு வினாடி விஷம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. நிலைமையை அவதானித்த கோணாமலையர், 'கதிராமன் எங்கை?' என்று கேட்டார். 'அவன் வைத்தியத்தைக் கூட்டிக் கொண்டுவர ஒதியமலைக்குப் போட்டான்' என்று பாலியார் சொன்னதும், 'இந்த ரா இருட்டியிலை என்னண்டு உந்தக் காட்டுக்காலை போகப்போறான்.... கையிலை லைற்றுக் கொண்டு போனவனே?' என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மணியன் காகிதப் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தான். குடத்தடிக்குச் சென்று வாயைக் கொப்பளித்துவிட்டுப் பயபக்தியுடன் புதூர் நாகதம்பிரான் கோவிலிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை எடுத்து உமாபதியரின் உச்சியிலும், கடிவாயிலும் பூசிவிட்டு அவரின் வாயினுள்ளும் சிறிது போட்டார்.

பதஞ்சலி உமாபதியரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய முகத்திலே எந்தவிதச் சலனமுமில்லை. விழிகள் மெல்ல மெல்ல மேலே சொருகிக் கொண்டிருந்தன. அவளுக்கு நினைவு தெரிந்த நாள்முதல் மார்பிலும் தோளிலும் அவளையேந்தி அவளுக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்த அவளுடைய அப்பு பேசாமல் கிடப்பதைக் கண்டு அவளின் மனம் வெந்து வெதும்பியது!

உமாபதிக்கு அவர்கள் பேசிக்கொள்பவை எங்கோ வெகு தொலைவில் கேட்பது போலிருந்தது. அவரால் எதையும் தொடர்ச்சியாகக் கவனிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு அந்தகாரம் அவரை வந்து மூடுவது போலிருந்த அந்த வேளையிலும் பதஞ்சலியின் முகம் அவர்முன் தோன்றி 'என்னை விட்டிட்டுப் போகாதை அப்பு! நீயும் போனால் எனக்கு ஆர் இருக்கினம்?' என்று தேம்பியழுவது போலிருந்தது. அவளுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டுமென்று அவர் உன்னியபோதும் எதுவுமே பேசமுடியவில்லை. வாய் நிறைய நாக்குத் தடித்துப்போய்க கிடந்தது.

-------------------------------------------------------------------------------------------

8.

அமாவாசை இருள்....! தண்ணிமுறிப்புக் குளத்துக்கு மேலிருந்த காட்டினூடாகச் செல்லும் வண்டிப்பாதையில் கதிராமன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். மையிருட்டைக் கிழித்துச் சென்றது அவனுடைய கையிலிருந்த ரோச்சின் ஒளி. காட்டு யானைகளும், கரடிகளும் உலவும் அந்தக் காட்டினூடாக இந்த இருட்டிலே தனியே போகும் துணிவு கதிராமன் ஒருவனுக்குத்தான் இருக்கமுடியும். வாழ்நாளெல்லாம் அப் பகுதிக் காடுகளிலே திரிந்த அவனுக்குக் காட்டில் செல்வதென்றால் மீன்குஞ்சு தண்ணீரில் நீந்துவது போன்றதுதான்! அவ்வாறிருந்தும் இப்போ அவனுடைய புலன்களெல்லாம் எந்த நிமிஷமும் ஆபத்தை எதிர்நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தன.

தண்ணிமுறிப்பிலிருந்து ஆறுகல் தொலைவிலிருக்கும் ஒதியமலை என்னும் சிறிய கிராமத்தில் ஒதியமலை வைத்தியம் என்ற பெயர்பெற்ற சேனாதியார் இருந்தார். அவர் மனம் வைத்து வைத்தியம் செய்வதற்கு முன்வந்துவிட்டால் எந்தக் கொடிய விஷமும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்பர். விஷகடி வைத்தியத்தில் அத்தனை திறமைசாலி!

கதிராமனுடைய ரோச் வெளிச்சத்தில் பாதையைக் குறுக்கறுத்துச் செல்லும் காட்டு விலங்குகளின் கண்கள் தீப்பந்தங்கள் போல் ஒளிர்ந்தன. பச்சைப் பளீரென ஒளிவிடும் கண்கள் மான்களுக்குரியவை. பழுப்பு நிறமாக மங்கித் தெரிபவை முயல், மரநாய்களுக்குச் சொந்தம். இவ்வாறு தரம்பிரிக்கப் பழகியவன் கதிராமன்.

ஒதியமலையை நெருங்கும் சமயம் பாதையின் நடுவே நெருப்புத் துண்டங்கள் போன்று இரண்டு விழிகள் சுடர் விட்டபோது, கதிராமன் சட்டென்று நின்று, சூய்! என்று அதட்டினான். பாதையின் நடுவே குந்திக் கொண்டிருந்த ஒரு சிறுத்தைப்புலி எகிறிப் பாய்ந்து காட்டுக்குள் மறைந்தது.

கதிராமன் ஒதியமலைக் கிராமத்தினுள் நுழைந்த வேளை அங்குள்ள மக்கள் நித்திரைக்குச் சென்றிருந்தனர். ஊர் நாய்கள் இவனுடைய வரவு கண்டு இடைவிடாது குரைத்தன. அவன் வைத்தியரின் வளவுக்கு முன்னால் போய் நின்றபோது, அவர் வீட்டு நாயும் பலமாகக் குரைக்க ஆரம்பித்தது. நாய்களின் குரைத்தல் கேட்டு விழித்துக்கொண்ட வைத்தியர் சேனாதியார் விஷயத்தை ஊகித்து அறிந்து கொண்டார். அர்த்தராத்திரியிலும் அவருடைய உதவியை நாடி வேற்றூர் மக்கள் வந்து எழுப்புவது மிகவும் சாதாரண விஷயம்.

எழுந்து விளக்கை ஏற்றிய சேனாதியார், 'ஆர் மோனை அது?' என்று கூப்பிட்டதும், கதிராமன் உள்ளே சென்று திண்ணையில் உட்கார்ந்து கொண்டான். கையில் விளக்கை எடுத்துவந்து அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார் ஒதியமலை வைத்தியர். விஷகடி வைத்தியரிடம் முதலில் எதுவுமே கூறக்கூடாது என்ற வழக்கம் கதிராமனுக்கு நன்கு தெரியும். எனவேதான் அவன் ஒன்றுமே பேசாமலிருந்தான். அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தபின், விளக்கைத் திண்ணையின்மேல் வைத்துவிட்டு ஒரு சுருட்டை எடுத்துப் பற்றிக் கொண்டார் சேனாதியார். நெருப்புக் குச்சியின் சுவாலை ஒளியில் அவருடைய முகத்தைக் கவனித்தான் கதிராமன். அதில் எந்தவிதக் குறிப்பையுமே அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. நன்றாகப் பற்றிக்கொண்ட சுருட்டைக் கையில் எடுத்துக் கொண்டவர் புகையை ஊதிவிட்டு, 'நாலு பல்லும் வாளமாய்ப் பட நாகம் தீண்டிப் போட்டுது! இனி நாமொன்றும் செய்வதிற்கில்லை" என அமைதியாகச் சொன்னபோது, கதிராமன் உள்ளம் குன்றிச் செயலிழந்து போனான்.

ஒதியமலை வைத்தியம் கையை விரித்து விட்டாரேயானால் இனிமேல் ஒன்றும் செய்வதிற்கில்லை என்பது கதிராமனுக்கு நன்கு தெரியும். இருப்பினும், 'நீங்கள் ஒருக்கா வந்து பாருங்கோவன்' என்று கெஞ்சினான்.

'தம்பி! நான் வந்து ஒரு பிரயோசனமும் இல்லையெண்டு உனக்கு நல்லாயத் தெரியும்' என அவர் உறுதியாகக் கூறினார்.

கதிராமன் கையில் லைற்றையும் எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிமுறிப்பை நோக்கி ஏமாற்றத்துடன் நடக்க ஆரம்பித்தான. சற்று ஓய்ந்திருந்த ஊர்நாய்கள் கோஷ்டியாகக் குரைத்து அவனை வழியனுப்பி வைத்தன.

------------------------------------------------------------------

9

வவுனியா மாவட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்திருந்த ஒதியமலை வைத்தியர் சேனாதியாருக்குக் கொக்கிளாய், கொக்குத்தொடுவாயிலிருந்து முறுகண்டியீறாகப் பலபேரைத் தெரியும்.

ஏறக்குறையப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் தண்ணீருற்றில் வைத்தியம் செய்வதற்காக சேனாதியார் சென்றிருந்தபோதுதான், உமாபதியரின் மகள் முத்தம்மா கிணற்றிலே விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்திருந்தது. அந்த ஈமச் சடங்குகளிலே கலந்து கொண்டபோது சேனாதியார் முத்தம்மாவின் கதையைக் கேள்விப்பட்டார்.

முத்தம்மாவுக்குத் தாய் இல்லை. உமாபதியர்தான் அவளுக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து வளர்த்து வந்தார். உமாபதியார் வேலைக்குப் போகும் நேரமெல்லாம் முத்தம்மா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். அந்தத் தனிமையையும், அவளின் பருவத்தையும் பயன்படுத்திக்கொண்டு அவளைக் கெடுத்துவிட்டான் ஒருவன். மலேரியாத் தடுப்புக்கு நுளம்பெண்ணெய் விசிறவரும் ஆட்களை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தன் அவன். அவனுடைய அழகான தோற்றமும், கம்பீர தோரணையும், ஆசை வார்த்தைகளும் கிராமத்துப் பெண்ணான முத்தம்மாவை மிகவும் கவர்ந்தன. அவனோ அவளுடைய பருவத்தைப் பதம் பார்த்துவிட்டு, விஷயம் முற்றியதும் தலைமறைந்துவிட்டான். ஆனால் அவன் முத்தம்மாவின் வயிற்றில் விட்டுச்சென்ற வித்து முளைக்க ஆரம்பித்தது. நடந்ததை அறிந்கொண்ட உமாபதியார் கொதித்தார்,குமுறினார், மகளை நையப்புடைத்தார். ஈற்றில் அவனைத் தேடிப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தார். ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த கல்வியறிவில்லாத உமாபதியாரால் என்னத்தைச் செய்துவிட முடியும்? மனம் சோர்ந்துபோய்த் திரும்பி வந்தார்.

முத்தம்மா அவமானத்தால் குன்றிப் போனாள். அவளையே உரித்துப் படைத்துக்கொண்டு தங்க விக்கிரகம் போன்றதொரு பெண் அவளக்குப் பிறந்தாள். முத்தம்மா தன்னுடைய தாயாரின் பெயரையே அந்தக் குழந்தைக்கு வைக்க வேண்டுமென விரும்பியபோது, உமாபதியார்தான் பதிவுகாரரிடம் சென்று பதஞ்சலி என்ற பெயரைப் பதிந்தார்.

பதஞ்சலி வளர்ந்தாள். அவளடைய தளர்நடை அழகிலும், மழலை மொழியிலும் மனதைப் பறிகொடுத்து நடந்தவற்றை மறக்கப் பழகிக் கொண்டார் உமாபதியார். ஆனால் முத்தம்மாவுக்கு, தன் வாழ்வே அஸ்தமித்துவிட்டது போன்றதொரு உணர்வு.

காலத்தைவிட இவ்வகைப் புண்களை ஆற்றுவதற்குச் சிறந்த மருந்து எதுவுமேயில்லை. சிறிது சிறிதாக மனப்புண் ஆறிக்கொண்டுவர, முத்தம்மாவிடம் இளவயதுக்கேயுரிய வாளிப்புத் திரும்பிவிட்டது. நல்ல அழகியான அவள், சீவிமுடித்துப் பொட்டிட்டுப் புனிதமாக இருந்தது இனத்தவர்க்கும்,அயலவர்க்கும் பொறுக்கவில்லை. ஒருத்தி வாழ்வில் கெடவேண்டி நேரிட்டுவிட்டால், சதா தன் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு, மூலைக்குள் அடைந்து கிடந்து வேதனைப்பட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் முத்தம்மாவோ காலப்போக்கில் தானடைந்த வேதனையை மறந்து மீண்டும் சிரிப்பதற்கு முயன்றபோது அயலவர்கள் தாறுமாறாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே கெடுக்கப்பட்ட ஒரு இளம்பெண்அதுவும் தந்தையைத் தவிர வேறு நாதியற்றவள், சிரித்துச் சந்தோஷமாக இருக்க முற்பட்டபோது, மழைக் காளான்கள் போன்று பல கதைகள் முளைத்தெழுந்து நாற்றம் பரப்பின.

முத்தம்மா இந்த விஷயங்கள் தெரியாமல், குழந்தையையும் தூக்கிக்கொண்டு, குமாரபுரம் சித்திர வேலாயுதர் கோவிற் திருவிழாவுக்குப் போய்விட்டாள். இளமங்கையான அவள், திருவிழாவுக்குப் போக ஆசைப்பட்டது குற்றமா? அல்லது அங்கு போகையில் தன்னை ஏதோ கொஞ்சமாவது அலங்கரித்துக் கொண்டது குற்றமா? ஊர்ப்பெண்கள் வெகுண்டு எழுந்துவிட்டார்கள், ஏதோ தங்களுடைய கற்பே பறிபோனதுபோல்! திருவிழாக் கும்பலில் பெண்கள் மத்தியில் குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாய் இருந்துகொண்டு, வாணவேடிக்கையைப் பார்த்துத் தன் முத்துப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டாள் முத்தம்மா. அவ்வளவுதான்!

ஏற்கெனவே மனம் புழுங்கிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்துப் பெண்கள், 'வம்பிலை ஒண்டு பெத்தது காணாமல், மற்றதுக்கும் ஆள்பிடிக்க அலங்காரி வெளிக்கிட்டிட்டா!" என்று முத்தம்மாவைத் தமது நெருப்புக் கொள்ளிகள் போன்ற நாக்குகளால் சுட்டுத் தீய்த்துவிட்டார்கள். அப் பெண்களின் சொல்லம்புகளின் கொடுமையைத் தாங்கமுடியாது, கண்ணீரும் கம்பலையுமாகத் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டவளை மறுநாள் காலையில் பிணமாகத்தான் கண்டார்கள் அண்டை அயலிலுள்ள பத்தினிப் பெண்டிர்கள்.

அவளுடைய சாவு உமாபதியாரின் நெஞ்சிலே பெரியதொரு இடியாக விழுந்துவிட்டது. அந்தப் பேரிடியைத் தாங்க இயலாது அவரும் அப்பொழுதே போய்விட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் முத்தம்மா விட்டுச்சென்ற அந்த இளங்குருத்து, 'அப்பு! எணையப்பு! அம்மாவை எங்கை கொண்டு போகினம்?" என்று கல்லுங்கரையக் கேட்டபோதுதான் அவர், தான் வாழவேண்டிய அவசியத்தை உணர்ந்தார். வாழ்வில் எத்தனையோ அடிகளைத் தாங்கிக்கொண்ட அவர்ää இதையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டார்.

நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்ட இந்த நேரத்தில் வைத்தியம் சேனாதியார், உமாபதியின் பேத்தி பதஞ்சலியின் நிலை என்னவாகும் என்று யோசித்துக்கொண்டே மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

--------------------------------------------------------------------------

10.

'பதஞ்சலி இனி என்ன செய்யப்போகின்றாள்?" என்ற வினா இன்னொரு நெஞ்சையும் குடைந்து கொண்டிருந்தது. ஒதியமலையிலிருந்து தண்ணிமுறிப்பை நோக்கிச் செல்லும் காட்டுப் பாதையில் நடந்துகொண்டிருந்த நெஞ்சுதான் அது!

பதஞ்சலி இனி என்ன செய்ப் போகிறாள்? அப்பு! அப்பு! என்று சதா வாஞ்சையுடன் சுற்றிவரும் அவள் இனி யாரைத் தன் வாய்நிறைய அப்பு என்று அழைக்கப் போகின்றாள்? என்று அவனுடைய நெஞ்சு வேதனைப்படவே செய்தது. ஆனாலும் அந்த இருளோடு இருளாகக் கலந்து தண்ணிமுறிப்பை நோக்கி விரைந்துகொண்டிருந்த அவனுடைய முகத்தில்மட்டும் எந்த வேதனையும் தெரியவில்லை. அவனுக்குத் தன் வேதனையைக் காட்டிப் பழக்கமேயில்லை. நிலம் தெரியாத அந்த வேளையில் அவன் உமாபதியரின் குடிசையை நெருங்கவும், பதஞ்சலியின் பரிதாபமான ஓலம் உயர்ந்து ஒலிக்கவும் சரியாக இருந்தது.

'என்னை விட்டிட்டுப் போட்டியே என்ரை அப்பு!" என்று அழுத அவளுடைய கதறல் அவனுடைய நெஞ்சை உருக்கியது. படலையைத் திறந்துகொண்டு அவன் உள்ளே போனதுதான் தாமதம், பாலியாரின் அணைப்பில் கதறியழுது கொண்டிருந்த பதஞ்சலி, பாய்ந்து சென்று கதிராமனுடைய காலில் விழுந்து கோவென்று கதறினாள். கதிராமன் திண்ணையில் வளர்த்தியிருந்த உமாபதியாரின் சடலத்தையே அசையாது நோக்கினான். அங்கு வந்த நாள்முதல் அவனுடன் பற்பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்ட அந்த உழைப்பாளியின் உடல் ஓய்ந்துபோய்க் கிடந்தது.

அழுதழுது குரல் கம்மிப் போயிருந்த பதஞ்சலி, மேலும் அழமுடியாமல் சோர்ந்து போனாள். கலைந்த கூந்தலும், சிந்திய மூக்குமாக அவளைப் பார்க்கையில் பாலியாருக்கு வயிறு பற்றியெரிந்தது. 'இனி என்ன மோனை செய்யிறது! நாங்கள் இருக்கிறந்தானே, நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை!" என்று அவள், அடிக்கடி பதஞ்சலியை ஆதரவோடு தேற்றிக்கொண்டாள்.

பிற்பகல் இரண்டு மணிக்கும் மேலாயிற்று. குமுளமுனைக்குச் சென்ற கதிராமனும் பொருட்களுடன் திரும்பிவிட்டான். இழவுச் செய்தி கூறப்போயிருந்த மணியனும் வந்துவிட்டான். 'என்ன உமாபதியின்ரை ஆக்களுக்கெல்லாம் அறிவிச்சியே?" என்று மலையர் கேட்டபோது 'ஓமப்பு! ஆனால் அவையள் வாற நோக்கத்தைக் காணேல்லை!" என்றான் மணியன்.

'ம்ம்... சரி, சரி... அப்ப பிறகேன் நாங்கள் வைச்சுப் பாத்துக் கொண்டிருப்பான்.... பொழுது படக்கிடையிலை எல்லாத்தையும் முடிச்சுப் போடுவம்!" என்று கூறியபடியே அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்தார் மலையர். அவருடைய முடிவைக் கரடியரும் அங்கு கூடியிருந்த மற்றவர்களும் ஆமோதிக்கவே விஷயங்கள் துரிதமாக நிறைவேறின.

பிரேதத்தைத் தூக்கிப் பாடையில் வைக்கும் வேளையில்தான் தண்ணீருற்றிலிருந்து இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் உமாபதியரின் ஒன்றுவிட்ட சகோதரர். மற்றவர் அடிக்கடி அங்கு வந்துபோகும் மம்மதுக் காக்கா.

தகனக் கிரியைகளை முடித்துக்கொண்டு அவர்கள் திரும்பி வருகையில் பொழுது சாய்ந்து விட்டது. இதற்குள் பாலியார் பதஞ்சலியை வாய்க்காலில் முழுகச் செய்து, உடை மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டு, அன்றைய இரவுக்கான உணவைத் தயாரிப்பதற்குத் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். கதிராமனுடைய தம்பி ராசு குடிசைக்குள் பதஞ்சலியுடன் இருந்தான். அவனுடைய சின்ன உள்ளத்தில், தான் அந்நேரம் பதஞ்சலியுடன் இருக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதால் பாயில் அவளுடன் ஒண்டிக் கொண்டிருந்தான். எல்லையற்ற துன்பம் நேர்கையில் யாருடனாவது அணைந்து கொண்டிருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் ஆறுதலாக இருக்கும் என்பதைப்போல், பதஞ்சலியும் ராசுவை அணைத்தவாறே அமர்ந்திருந்தாள். அவளது நினைவுகள் ஒவ்வொன்றும் உமாபதியையே சுற்றி வந்தன. அவர் உபயோகித்த பொருட்கள், அவர் அவளுக்கு ஆசையுடன் வாங்கிக் கொடுத்தவைகள், என்பவற்றைப் பார்க்கையில் மீண்டும் அவளுடைய விழிகள் கண்ணீரினால் நிறைந்தன.

-----------------------------------------------------------

11

வெளியே முற்றத்தில் கோணாமலையர், கரடியர், மம்மதுக் காக்கா மற்றும் உமாபதியின் ஒன்றுவிட்ட சகோதரர் சிவசம்பு முதலியோர் கூடியிருந்து பேசிக்கொண்டிருந்தனர். பலதையும் சுற்றிச் சுழன்ற பேச்சு கடைசியில் பதஞ்சலியில் வந்து நின்றது.

'அவளைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு கலியாணம் முடிச்சு வைச்சிட்டியளே எண்டால் உங்கடை கடமையும் முடிஞ்சுபோடும்!'. மலையர் உமாபதியின் தம்பி சிவசம்புவைப் பார்த்துக் கூறினார். அதற்குப் பதில் எதுவும் கூறாமலே சிவசம்பு வெளியே தெரிந்த இருளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'என்ன ஒண்டும் பறையாமல் இருக்கிறியள்?' என்று மலையர் மீண்டும் கேட்டதும், 'அவரு என்னத்தை மலையர் பறையிறது? அவருதானே இந்தப் புள்ளையைக் கூட்டிக்கின்னு போவணும்! ஆனா அவரு... தம் பொண்டாட்டி என்ன சொல்லுவாவோ எண்டுதான் யோசிக்கிறாப்போலை கிடக்கு!'. மம்மது காக்கா வெற்றிலை பாக்கை உள்ளங்கையில் வைத்துப் பெருவிரலால் கசக்கிவாறே கூறினார். 'எட! நல்ல கதை சொன்னாய் மம்மது! மனிசிக்காறி வேண்டாம் எண்டாப்போலை அவளை இந்தக் காட்டுக்கை விட்டிட்டுப் போறதே!' சிறிது சூடேறிய குரலில் கேட்டார் கோணாமலையர். சிவசம்பு உடனே, அதுக்கில்லை கோணாமலையண்ணை, என்ரை பொண்சாதிக்கும் நான் பொட்டையைக் கூட்டிக்கொண்டு போறது விருப்பந்தான், ஆனா, இவளுக்கு நான் எங்கை மாப்பிளை தேடுறது? இவளை ஆர் முன்னுக்கு வந்து முடிக்கப் போறாங்கள்?.... உங்களுக்கு விசயமெல்லாமம் தெரியுந்தானே!' என இழுத்தவாறே கூறினார். 'அதுக்கென்ன செய்யிறது? இதென்ன ஊர் உலகத்திலை இண்டைக்கு நடக்காத விசயமே!' என்று மலையர் சொல்லவும், கரடியர் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார். கரடியர் யாழ்ப்பாணத்திலிருந்து உத்தியோகம் பார்க்கத் தண்ணிமுறிப்புக்கு வந்தவர். அவருக்கு உமாபதியாரின் குடும்ப விஷயம் எதுவும் தெரியாது. அவருடைய சந்தேகத்தைக் கவனித்த மலையர், குரலைத் தணித்துக்கொண்டு, 'காடியரையா! உமாபதியின்ரை மோள் முத்தம்மாவுக்குத்தான் இந்தப் பொட்டை பிறந்தது.... ஆனல் தேப்பன் ஆரெண்டு தெரியாது' என்று கூறி, 'இதுதான் விசயம்!' என முடித்தார்.

கதிராமனுக்கு இந்தச் செய்தி புதுமையாக இருந்தது. இருபத்திமூன்று வயதைக் கடந்துவிட்ட அவன் இப்போ ஒரு சின்னப் பையன் அல்ல. வாழ்க்கையில் தெரியவேண்டிய விஷயங்கள் சில, எல்லோருக்குமே அந்தந்த வயதில்; எப்படியோ தெரியத்தான் செய்கின்றன. ஆனால் பதஞ்சலியின் தந்தை யாரென்று தெரியாத காரணத்தால் அவளை ஒருவரும் மணக்க முன்வரமாட்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. காட்டிலே வளர்ந்த அவனுக்குத் தெரியவேண்டியவை தெரிந்திருந்தாலும், தெரியக்கூடாத சில நாகரீகங்கள் இன்னமும் தெரியாமலேதான் இருந்தன. அவன் மெல்லத் திரும்பிக் குடிசையைக் கவனித்தான். பதஞ்சலி எந்தவித உணர்வுமின்றிப் பாயில் படுத்திருந்ததைக் கண்டதும், தன் தந்தை கூறிய அந்த விஷயம் அவளுக்குக் கேட்கவில்லை என்பது தெரிந்தது.

அன்று முழுவதும் கதிராமனும் ஒன்றுமே சாப்பிடவில்லை. இரண்டொரு தடவை தேநீர் மட்டுமே குடித்திருந்தான். அவ்வளவுதான்! பதஞ்சலியின் அனாதரவான நிலையும், அவளுடைய சிறிய தகப்பன் அவளை அழைத்துச் செல்ல மனதில்லாதிருப்பதையும் கண்ட கதிராமனுக்குச் சாப்பிடவே மனம் வரவில்லை. எனவே அவன் ஒன்றும் பேசாமல் குசினிக்குள் வந்து, மடிக்குள் வைத்திருந்த புகையிலையை எடுத்துச் சுருட்டு ஒன்றைச் சுற்றத் தொடங்கினான். சிறியதொரு சுருட்டைச் சுற்றி அதை நெருப்புக் கொள்ளியால் பற்ற வைத்துக் கொண்டவன், 'எனக்கும் கொஞ்சம் தேத்தண்ணி தாணை' என்று கேட்டான். அவன் எப்போதுமே அதிகமாகப் பேசாதவன். தான் எண்ணியதையே செய்வான். எனவேதான் பாலியார் அவனை மீண்டும் சாப்பிட வற்புறுத்தாமல் தேநீரை ஆற்றிக் கொடுத்தாள்.

அதேசமயம் பதஞ்சலியும் கதிராமனுடைய குரலைக் கேட்டு எழுந்து குசினிக்குள் வந்தாள். பெருமழையில் அகப்பட்ட செங்கீரைக் கன்றுபோல் அவள் கசங்கிக் காணப்பட்டாள். அடுப்படியில் பாலியாரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவள் கொடுத்த தேநீரை மெல்ல மெல்லக் குடிக்கத் தொடங்கினாள். இடையிடையே தன் அகன்ற விழிகளால் கதிராமனுடைய முகத்தை அளந்தவள், பாலியாரை நோக்கி, 'சிவசம்பர் என்னைக் கூட்டிக்கொண்டு போகவே வந்தவர் அம்மா?' என்று கரகரத்த குரலில் கேட்டாள். 'அப்பிடியெண்டுதான் புள்ளை கதைச்சினம். நீ அவரோடைதானே மோனை போகோணும்!' என்று பாலியார் பதில் கூறியபோது ஒருசில நிடங்கள் மௌனமாக இருந்த பதஞ்சலி, 'எங்கடை சொந்தக்காறரோடை போய் இருக்கிறதிலும் பாக்க எங்கையாவது ஆத்திலை குளத்திலை விழுந்து செத்துப் போறது நல்லது!' என்று குரல் தழுதழுக்கக் கூறினாள்.

அதன்பின்பு அங்கு ஒருவருமே பேசவில்லை. அவளுடைய அந்த வார்த்தைகள் அந்தச் சின்னக் குசினிக்குள் தங்கி நின்று மீண்டும் மீண்டும் ஒலிப்பதுபோல் கதிராமனுக்குத் தோன்றியது. அவன் வெளியே இருளை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவையும் அவன் வாயில் சுருட்டை வைத்து இழுக்கவும், அதன் தணல் பிரகாசமாக ஒளிர்ந்தது. அமைதியாக இருந்து இருளை வெறித்து நோக்கிய கதிராமனையும், தலையைக் குனிந்தவாறே அமர்ந்திருந்த பதஞ்சலியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தேநீரைக் குடித்தாள் பாலியார்.

கதிராமன் தங்களுடைய வீட்டுக்குச் சென்று குசினித் திண்ணையில் மான்தோலைப் போட்டுக்கொண்டு படுத்தான். அவனுக்கு நித்திரையே வரவில்லை. அமைதி நிறைந்த அந்த இரவில் காட்டிலிருந்து பழக்கமான பலவித ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. சில்வண்டுகளின் இடையறாத ரீங்காரம். இடையிடையே மான்கள் குய்யிடும் ஒலி! இவற்றினிடையே இரவு முழுவதும் ஒற்றையாய்க் கூவிக்கொண்டிருந்த இராக்குருவியின் ஓசை, சோகம் நிறைந்ததாக அவனுடைய நெஞ்சை உருக்கியது. அதை அவன் வெகுநேரம் கேட்டுக் கொண்டேயிருந்தான். காட்டில் வாழும் விலங்குகளும், பறவைகளும் தத்தம் இனத்துடன் கூடி வாழும்போது, பதஞ்சலியை மட்டும் ஏன் அவளுடைய இனத்தவர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றார்கள் என அவன் சிந்தித்தான். தான் அவளை முரலிப்பழத்திற்குக் கூட்டிச் சென்றதையும், பின்னொரு நாள் அவள் துடுக்குத்தனமாகப் பரிசொன்று கேட்டதற்குத் தான் தேன் தறித்துக் கொடுத்ததையும், உமாபதியரின் சடலத்தைத் தூக்கிப் பாடைக்குள் வைக்கும்போது அவள் குலுங்கிக் குலுங்கி அழுததையும் எண்ணிக்கொண்டே அவன் உறங்கிப் போனான்.

பாலியாரின் அணைப்பில் படுத்திருந்த பதஞ்சலியின் விழிகள் இருட்டிலும் திறந்திருந்தன. அவள் தண்ணிமுறிப்புக்கு வந்த நாட்தொட்டு இன்பமாய்க் கழிந்த நாட்களையும், அவற்றின் இனிமையையும் நினைத்துக் கொண்டாள். தண்ணீருற்றில் இருக்கும் தன்னுடைய உறவினர்களை எண்ணுகையில் அவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்துபோகாமல் இருந்ததும், தன்னையும்ää உமாபதியாரையும் ஒதுக்கி நடத்தியதும் அவள் நினைவுக்கு வந்தன. அவள் பாடசாலைக்குச் சென்ற நாட்களில், ஒருநாள் யாருடைய புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டாள் என்பதற்காக இவளை, மற்றச் சிறுமி எதுவோ சொல்லி ஏசியதும், மற்றப் பிள்ளைகளெல்லாம் கைகொட்டிச் சிரித்துக் கேலி செய்ய, தான் அழுதுகொண்டே உமாபதியிடம் வந்ததும், அவர், 'நீ இந்தச் சனியன் புடிச்ச ஊரிலை இருக்கக்கூடாதம்மா! கொம்மாவைக் கொண்டதுபோலை இவங்கள் உன்னையும் கொல்லிப் போடுவாங்கள்!' என்று ஆத்திரத்துடன் பேசிவிட்டு மறுநாளே தன்னைத் தண்ணிமுறிப்புக்குக் கூட்டிவந்ததும், மங்கலாக நினைவில் தெரிந்தன. தண்ணிமுறிப்பில் முதலில் அவளைக் கண்ட பாலியார், வாஞ்சையுடன் அவளைக் கூட்டிச்சென்று தேனும், தயிருமாகச் சோறிட்டதையும் அவள் நினைத்துக் கொண்டாள்.

பாலியாரைப்பற்றி எண்ணுகையில் அவளுடைய நெஞ்சில் பாசம் பெருக்கெடுத்தது. நெஞ்சு விம்மியது. பதஞ்சலி இன்னும் நெருக்கமாகப் பாலியாருடன் அணைந்து ஒண்டிக்கொண்டாள். நாள்முழுவதும் பல வேலைகளைச் செய்த அலுப்பில் தூங்கிப்போன பாலியார், அந்த நித்திரையிலுங்கூட, 'அழாதையம்மா!' என்றவாறே பதஞ்சலியை அணைத்துக் கொண்டாள். அந்த அரவணைப்பில் மகளேயில்லாத ஒரு தாயும், தாயே இல்லாத ஒரு மகளும் பரஸ்பரம் நிம்மதியைக் கண்டவர்களாக உறங்கிப் போனார்கள்.

-------------------------------------------------------------

12

பொழுது விடிவதற்கு முன்பாகவே பாலியார் எழுந்து பதஞ்சலியையும் எழுப்பிவிட்டுத் தன் வீட்டுக் காரியங்களைக் கவனிக்கப் புறப்பட்டு விட்டாள். அந்த வைகறைப் பொழுதிலேயே கதிராமன் பல் துலக்கியவாறு வாய்க்கால் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான். பாலியார் அவனைச் சமீபித்ததும் 'இஞ்சை நில்லணை ஒரு கதை' என்றவன் தொடர்ந்து 'பதஞ்சலியை சிவசம்பர் கூட்டிக்கொண்டுபோற எண்ணத்தைக் காணேல்லை. அப்பிடி அவர் கேட்டாலும் இவள் கூடிக்கொண்டு போவாள் எண்டு நான் நினைக்கேல்லை' என அமைதியாகக் கூறி நிறுத்தினான். பாலியாருக்குத் தன் மகனின் மனதில் உள்ளதும் அவன் என்ன சொல்லப் போகின்றான் என்பதும் நன்கு விளங்கின. இருப்பினும் அவள் எதுவும் பேசாது அவனுடைய முகத்தைப் பார்த்தாள். 'நீ என்ன நினைக்கிறாய்' எனக் கதிராமன் தாயைக் கேட்டபோது, 'கொப்பு என்ன சொல்லுறார் எண்டு தெரியாது மோனை! எதுக்கும் நான் அவருக்குச் சொல்லிப் பாக்கிறன்' என்று கூறிவிட்டு, அவள் தன்னுடைய அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். அவள் பதில் கூறிய தோரணையில் பதஞ்சலியைத் தங்கள் வீட்டுக்குக் கூட்டிவரத் தாய்க்கும் விருப்பமிருக்கிறது தெரிந்தது. ஆனால் மலையர்தான் இதையிட்டு என்ன சொல்வாரோ என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. 'முதலில் அம்மா கேக்கட்டும், பிறகு பாப்பம்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் நெஞ்சில், ஒருவேளை பதஞ்சலி எல்லோருடைய வற்புறுத்தல்களுக்கும் இணங்கி, சிவசம்பருடன் இன்றே போய்விடுவாளோ என்று ஒரு இனம்புரியாத ஏக்கமும் பிறந்தது. ஆனால் கடந்த இரவு அவள் கூறிய வார்த்தைகளை மறுபடியும் நினைத்துப் பார்க்கையில், என்னதான் நடந்தாலும் அவள் தண்ணீருற்றுக்குப் போகவே மாட்டாள் என அவனுடைய மனம் ஆறுதல் பட்டுக்கொண்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் இங்கு நடக்கும்போது நான் இங்கிருக்கக் கூடாது என நினைத்துக் கொண்டவனாய் அன்றைக்குக் காட்டுக்குச் செல்வதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டான்.

காலையில் பல அலுவல்களையும், ஓடியோடிச் செய்து கொண்டிருந்த பாலியாரின் நெஞ்சில், கதிராமன் கூறிய விஷயந்தான் மேலோங்கி நின்றது. நல்தொரு சமயமாகப் பார்த்துக் கணவனிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தவளுக்கு மலையரை எண்ணியதும் வயிற்றில் புளியைக் கரைத்தது. எந்த நேரம் எதைச் சொல்வார், எதைச் செய்வார் என்று அவரைப்பற்றி நிச்சயமாகக் கூறமுடியாது. இவ்வளவு காலத் தாம்பத்ய வாழ்க்கையிலும் அவளால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை. கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதும், நாளாந்தக் கருமங்களில் ஈடுபடுவதுமாக இருந்த அவளுக்கு, தனக்கொரு மகளில்லை என்ற கவலையைத் தவிர வேறு பிரச்சனைகளே இருந்ததில்லை. பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின் அதுவும் நீங்கிவிட்டிருந்தது. இப்போதுதான் அவளுக்கென்று ஒரு ஆசை பிறந்திருந்தது. ஆனால் தன் கணவன் என்ன சொல்வாரோ என உள்ளுரப் பயந்துகொண்டே இருந்தாள் பாலியார்.

வேiலைகளை முடித்துக்கொண்டு பதஞ்சலியின் வீட்டுக்குப் பாலியார் சென்றபோது, அங்கு சிவசம்பர், மம்மதுக் காக்கா, மலையர் முதலியோர் அமர்ந்திருக்க, பதஞ்சலி வீடுவாசலைப் பெருக்கிவிட்டு, அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டிருந்தாள். மனைவியைக் கண்ட மலையர், 'கெதியிலை பொட்டையை வெளிக்கிடச் சொல்லன்! சிவசம்புவோடை கூடிக்கொண்டு போகட்டும்!' என்று கூறிவிட்டு, சிவசம்பரைப் பார்த்து, 'என்ன? வண்டிலைப் பூட்டச் சொல்லட்டே?,' என்று கேட்டார்.

இதற்குள் குசினிக்குள்ளிருந்து வெளியே வந்த பதஞ்சலிää 'நான் ஒருதரோடும் போகேல்லையம்மா, இஞ்சை இந்த வளவிலைதான் இருக்கப் போறன்' எனக் கண்கள் கலங்கக் கூறினாள். 'நல்ல விளயாட்டு! ஒரு குமர் தனியச் சீவிக்கிறதெண்டால் முடிஞ்ச காரியமே? விசர்க் கதையை விட்டிட்டு வெளிக்கிடு புள்ளை!' என்று மலையர் கூறவும், பதஞ்சலி விக்கி விக்கி அழத்தொடங்கி விட்டாள். சிவசம்பரும் இதுதான் தருணமென, 'எனக்கு அப்பவே இவளைக் கூட்டிக்கொண்டு போக மனமில்லை. வரமாட்டன் எண்டு நாண்டுகொண்டு நிக்கிறவளை நான் என்னண்டு கூட்டிக்கொண்டு போறது? எல்லாம் உன்னாலை வந்த கரைச்சல்! வரமாட்டன் எண்ட என்னை இழுத்துக்கொண்டு வந்திட்டாய்!' என மம்மதுக் காக்காவைக் காரசாரமாக ஏசியவாறே சிவசம்பர் படலையைத் திறந்துகொண்டு குமுளமுனையை நோக்கி வேகமாக நடந்தார்.

மம்மதுக் காக்காவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மலையர்ää தெருவில் கோபமாகச் செல்லும் சிவசம்புவையும்ää குடிசைத் திண்ணையில் இருந்து அழும் பதஞ்சலியையும் பார்த்தார். பின் எழுந்து நின்றுகொண்டே தன் மனைவியைப் பார்த்துää 'நீதான் இந்தப் பொட்டைக்கு நல்ல புத்தியைச் சொல்லு! நாங்களெண்டாலும் இவளை நாளைக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தண்ணியூத்திலை விட்டிட்டு வருவம்' எனக் கூறிவிட்டு, 'நீயும் போய் சிவசம்பனுக்குச் சொல்லு. இரண்டொரு நாள் கழிச்சுக் கூட்டிக்கொண்டு வாறமெண்டு!' என மலையர் மம்மதுவுக்கு நிதானமாகக் கூறிவிட்டுத் தன் வளவை நோக்கி நடந்தார். மம்மது காக்காவும் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு குமுளமுனையை நோக்கிச் செல்லும் அந்தச் செம்மண் பாதையில் இறங்கினார்.

உமாபதி இறந்தபோது பதஞ்சலி அவரின் பிரிவைத் தாங்கமுடியாது குழறி அழுதாளேயொழியத் தன்னுடைய எதிர்காலம் என்ன? தான் இனி என்ன செய்யப் போகின்றேன்? என்பனவற்றையிட்டு அவள் அவ்வளவு ஆழமாகச் சிந்திக்கவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை தற்போது உடனே பதில்காண வேண்டியதொரு வினாவாக இருக்கவே அவள் மனங் குழம்பிப் போனாள். அவளுக்குத் தன் இனத்தவர்களுடன் போய்த் தங்குவதை எண்ணிப் பார்க்கக்கூட வெறுப்பாக இருந்தது. இந்தச் சின்னக் குடிசையிலேயே தான் வாழ்ந்தால்தான் என்ன? பாலியாரின் துணை அவளுக்கு என்றும் இருக்குமல்லவா? என்றெல்லாம் குழந்தைத்தனமாக எண்ணினாள். மெல்ல மெல்ல அந்தக் குழந்தைத்தனமான நினைவே, ஆதாரம் எதுவுமில்லாமல் தத்தளித்த அவளுக்கு, ஆரம்பத்தில் ஒரு சிறிய பற்றுக்கோடாகிப் பின்னர் அதுவே அவளுடைய தீர்க்கமான முடிவாயும் போயிற்று.

பாலியாரின் நிலையோ பெரிய சங்கடத்துக்கு உள்ளாகிவிட்டது. பதஞ்சலியைத் தன் மருமகளாக்கித் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அவளுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆனால் இந்த ஆசை நிறைவேறுவதற்கு மலையரின் சம்மதம் கிடைக்குமோ என்பது பெரும் சந்தேகமாக இருந்தது. எனவே அவள் தன்னுடைய ஆசையை மனதுள் மூடிவைத்துக்கொண்டு, வயதான ஒரு தாய், இளம் பெண்ணொருத்திக்குச் சொல்லவேண்டிய புத்திமதிகளைப் பதஞ்சலிக்குக் கூறிக்கொண்டிருந்தாள். 'ஒரு குமர்ப்பெண்ää ஒருதற்றை துணையுமில்லாமல் தனிய இந்தக் காட்டுக்கை சீவிக்க முடியாதம்மா! நீ இப்போதைக்குக் கொஞ்ச நாளைக்கெண்டாலும் உன்ரை ஆக்களோடை இருக்கிறதுதான் மோனை நல்லது!' என அன்பொழுக அவள் சொன்னபோதுää 'என்ரை ஆக்களெண்டு ஆரம்மா எனக்கு இருக்கினம்? இஞ்சை இந்த வளவுக்கை நிக்கிற வாழையளும், பயிர் கொடியளுந்தானம்மா எனக்கு இப்ப சொந்தக்காறர்! நான் இஞ்சை இருக்காமல் வேறை எங்கையம்மா போவன்?' எனக் கல்லுங் கனியப் பதஞ்சலி கேட்டபோது, பாலியாருக்குக் கரகரவெனக் கண்ணில் நீர் வந்துவிட்டது. வாழ்க்கை அனுபவத்தை நிறையப் பெற்றிருந்த பாலியார், 'அதுசரி மோனை! நீ உன்ரை வயித்துப்பாட்டுக்கு என்ன செய்வாய்?' என்று பிரச்சனையைக் கிளப்பினாள். இதைக் கேட்ட பதஞ்சலியின் முகத்தில் தானாகவே ஒரு துணிவும், கம்பீரமும் ஏற்பட்டன. 'எங்கடை இந்த வளவுத் தோட்டம் என்ரை தேவைக்குக் காணும்! அதோடை களை புடுங்கவும், அருவி வெட்டவும் எனக்குத் தெரியதெண்டு நினைச்சியளே?'. பதஞ்சலி வீராப்புடன் பேசினாள். உண்மையிலேயே பதஞ்சலி இந்த வேலைகளிலெல்லாம் கெட்டிக்காரிதான். அவள் கைதொட்டது துலங்கும். அறுவடைக்கு வயலில் இறங்கினால் ஆண்களுக்குச் சமமாகவே அறுத்துக் குவிப்பாள். உமாபதியர் அவளை இந்த வேலைகளைச் செய்ய விடுவதில்லை அல்லாது அவளுக்கு இந்த வேலைகள் தெரியாது என்றல்ல. இது பாலியாருக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் தெரிந்த விஷயம்.

இவ்வாறே பாலியார் ஒவ்வொரு காரணத்தைக் கூற, பதஞ்சலி அதற்கு நியாயங்கள் காட்டித் தன் கட்சியைப் பலப்படுத்திக் கொண்டே வந்தாள். பாலியாருடைய மனதில், பதஞ்சலி தண்ணீருற்றுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம் திண்ணமாக இல்லாததால், அவள் பதஞ்சலியிடம் தோற்றுப்போனாள். ஆனால் அவள் இப்போதுங்கூடப் பதஞ்சலியிடம் 'நீ எங்கடை வீட்டிலை வந்திரு மோனை! என்று அழைக்கவில்லை. அவளுக்கு உண்மையிலேயே அந்த விருப்பம் இருந்தும், மலையர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில் அவள் அப்படிக் கேட்கவில்லை. மானஸ்தனான உமாபதி வளர்த்த பெண்ணாகையால், பதஞ்சலியும் தன்னுடைய குடிசையில் வாழவேண்டுமென்று நிளைத்தாளே அன்றி, வேறெங்கும் ஆதரவு தேடிப்போகும் எண்ணமே அவளுடைய இளநெஞ்சில் ஏற்படவில்லை. அவளுடைய முடிவை மாற்ற முடியாதெனக் கண்ட பாலியார், உண்மையில் மனதுக்குள் மகிழ்ச்சி நிறைந்தவளாகத்தான் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இந்நேரம் தண்ணிமுறிப்புக் காட்டில் வெகுதூரம் சென்றுவிட்ட கதிராமன், என்றுமில்லாத வேகத்துடன் செடிகளையும்ää கொடிகளையும் விலக்கியவாறே காடேறிக் கொண்டிருந்தான். அவனுடைய நாய்கள் இரண்டும் மோப்பம் பிடித்தவாறே காடுலாவிச் செனறுகொண்டிருந்தன.

திடீரென்ற நாய்களின் குரைப்பும், ஏதோவொரு மிருகத்தை அவை பிடித்துவிட்ட அமளியும் கேட்கவே, கதிராமன் அந்தத் திக்கை நோக்கிக் கோடரியுடன் ஓடினான். அங்கே அவன் வழக்கத்துக்கு மாறான புதியதொரு காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனான்.

வழக்கத்தில் மான்கள், நாய்கள் வருவதை அறிந்ததும் புகையென மறைந்துவிடும்! ஆனால் இன்றோ ஒரு பெண்மான் ஓட முயற்சிக்காமல், தன் முன்னங்கால்களை மடித்துக் கூர்மையான குளம்புகளால் நாய்களை எதிர்த்துக்கொண்டு நின்றது!

காட்டிலே கரடிகளைக்கூட மடக்கிவிடும் அந்த வேட்டை நாய்களுக்கு இந்தப் பெட்டைமான் எந்த மூலைக்கு? அவனைக் கண்டதும் அவை மீண்டும் ஆவேசத்துடன் மானின்மீது பாய்ந்தன. ஒன்று அதன் கழுத்தைக் கடித்துக் குதற, மற்றது அதன் பின்னங்கால் தொடையைக் கவ்விக் கிழித்தது. இரண்டு நாய்களினதும் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட மானுடைய உடல பிய்ந்து இரத்தம் பெருக்கெடுத்தது. மான் சோர்ந்துகொண்டே போவதை உணர்ந்த நாய்கள் மேலும் வேகுரத்துடன் பாய்ந்தன. மானின் தலையில் கோடரியால் அடித்ததும் அதன் வேதனைகளெல்லாம் சட்டென்று நின்று போனதுபோல் அடங்கி உயிரை விட்டது. அதனருகில் குந்திக்கொண்டு கவனித்தான் கதிராமன். மானுடைய மடி பெரிதாகக் காணப்பட்டது. ஒரு முலைக்காம்பைப் பிடித்துப் பிதுக்கியதும் பால் பீறிட்டு வெளிவந்து அவனுடைய விரல்களை நனைத்தது. 'அட! ஊட்டுக் குட்டிபோலை!" என்று சொல்லிக் கொண்டவன் எழுந்துநின்று நாய்களை, 'இரு பேசாமல்" என்று அதட்டினான்.

நாய்களை அடக்கி இருத்திய கதிராமன், மானுடைய காலடித் தடங்களைப் பின்பற்றிச் சென்றான். அவன் பாடசாலையில் எழுதப் படிக்கக் கற்றதில்லை. ஆனால் காட்டில் காணப்படும் ஒவ்வொரு காலடிச் சுவடும், தடயங்களும் அவனுக்கு அட்சரங்கள், சொற்கள் போன்றவைதான். அவற்றைப் பார்த்ததுமே அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்துவிடும். இங்கே நிற்கும் போதுதான் மான், நாய்கள் வருவதை அறிந்திருந்கின்றது. இந்த இடத்தில்தான் அது நாய்களை நோக்கி ஓடியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டே சென்றவன், சற்றுத் தூரத்தில் தெரிந்த ஒரு அடர்ந்த புதரைக் கவனித்துவிட்டு, சந்தடி எதுவுமின்றிப் பதுங்கி முன்னேறினான். அந்த நிமிஷம் கதிராமனைப் பார்ப்பவர்கள், அவனை ஒரு காட்டு விலங்கு என்றே எண்ணுவார்கள். அவனுடைய கருமையான நிறமும், அங்க அசைவுகளும், அவனைக் காட்டோடு காடாகவே காட்டின. அந்தப் புதர் அருகிற் சென்று மெல்ல எட்டிப் பார்த்தவன், கவனமாகக் கைகளை நீட்டி அந்த மான்குட்டியைப் பிடித்தான்.

மான்குட்டியைக் கதிராமன் தூக்கியதும், வெளியுலகம் சரியாகத் தெரியாத அந்தச் சின்ஞ்சிறு மான்குட்டி, அவனைத் தன் நீண்ட விழிகளால் மருட்சியுடன் பார்த்து மலங்க மலங்க விழித்தது. அதைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கதிராமனுக்கு அதன் நெஞ்சு படபடவென அடித்துக் கொள்வது கேட்டது. அந்தக் குட்டியின் கள்ளமற்ற தன்மையையும், ஆதரவற்ற நிலையையும் கண்ட அவனுக்குப் பதஞ்சலியின் நினைவுதான் சட்டென்று வந்தது. ஏதோ எண்ணியவனாக அதைத் தன் முகத்தோடு சேர்த்தணைத்துக் கொஞ்சினான். இரண்டொரு தடவை அங்குமிங்கும் பார்த்துவிட்டு அந்த மான்குட்டியும் அவனுடைய மார்போடு ஒண்டிக்கொண்டது.

கதிராமனுக்கு அப்போதே போய்ப் பதஞ்சலியைக் காணவேண்டும்ää தாயை இழந்த மான்குட்டியைப் போல நிர்க்கதியாய் நிற்கும் அவளைத் தன் கைக்குள் வைத்து நெஞ்சுடன் சேர்த்தணைத்துக் கொள்ளவேண்டும் என்ற வேகம் ஏற்படவே, மான்குட்டியுடன் புறப்பட்டான். நாய்களிரண்டும் அவனைப் பின்தொடர்ந்தன.

-------------------------------------------------
13

கோணாமலையர் தன் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தவாறே, ஒரு கூர்மையான கத்தியினால் உரோமம் அகற்றிய மான் தோல்களை மெல்லிய நாடாக்களாக வார்ந்து கொண்டிருந்தார். இப்படி வார்ந்தெடுத்த தோல் நாடாக்களைக் கொண்டுதான் குழுமாடு பிடிப்பதற்குப் பயன்படுத்தும் வார்க்கயிற்றைத் திரிப்பார்கள். மலையரின் அனுபவமிக்க கைகள் கச்சிதமாகத் தோலை வார்ந்துகொண்டிருக்க, அவருடைய மனதுமட்டும் வேறு விஷயமொன்றைத் தீர்க்கமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தண்ணிமுறிப்பு இப்போ ஒரு சிறிய காட்டுக் கிராமம் அல்ல. குளக்கட்டு உயர்த்தப்பட்டுத் திருத்தி அமைக்கப்பட்டபோது, அதன் கீழ்க்கிடந்த காடுகள், அந்தக் காரியாதிகாரி பிரிவிலுள்ள கிராமத்தவர்கட்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காடுகள் மறைந்து கழனிகளாகி விட்டிருந்தன. சமுத்திரம்போல் நீரைத் தேக்கிக் கொண்டிருந்த அந்தக் குளத்திலிருந்து இடையறாது தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. வளமான மண்ணும், நீர்வசதியும் நிறைய இருந்ததனால் வயல்களில் பொன் விளைந்திருந்தது. அந்தப் பொன்விளையும் பூமியை நோக்கிப் பலர் வந்தனர். வயல்களில் சதா ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. உழவு, சூடடிப்பு, பலகையடிப்புப் போன்ற பல வேலைகளுக்கும் அதிகமானோர் உழவு இயந்திரங்களையே உபயோகித்தார்கள். மலையரிடம் உழவு முதலிய வேலைகள் எல்லாவற்றுக்கும் உதவும் எருமைக் கடாக்கள் இருந்தாலும், தானும் ஒரு உழவு இயந்திரம் வைத்திருக்க வேண்டுமென்று அவருக்கு வெகுநாட்களாகவே ஆசை ஏற்பட்டிருந்தது. அவரிடம் ஓரளவு மாடுகன்று செல்வம் இருந்தாலும், இப்போது பதினைந்தோ இருபதினாயிரமோ கொடுத்து ஒரு நல்ல உழவுயந்திரத்தை வாங்குவதற்கு அவரால் முடியவில்லை. இந்த ஆசை ஏற்பட்டிருந்த போதுதான் மம்மது காக்கா, குமுளமுனைச் சிதம்பரியரின் மகளைப் பற்றிய பேச்சுக்காலைப்பற்றிக் கூறியிருந்தார். சிதம்பரியரின் பெண்ணைவிட, அவர் சீதணமாகக் கொடுக்கவிருந்த உழவு இயந்திரத்தைத்தான் கோணாமலையர் கூடுதலாக விரும்பினார். கதிராமனுடைய சிறந்த குணங்களும், அயராத உழைப்பும் அக்கம் பக்கமெல்லாம் பரவியிருந்த காரணத்தினாற்றான், கொஞ்சம் பசையுள்ள குமுளமுனைச் சிதம்பரியரும் மலையரைச் சம்பந்தியாக்கிக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

சில நாட்களாகவே கதிராமனுடைய போக்கு மலையருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அதற்குத் தூபம் போடுவது போலவே காடியரும், 'கதிராமனும் அந்தப் பெட்டையும் கண்டபடி காடுவழிய திரியிறது அவ்வளவு வடிவாயில்லை மலையர்' என்று பேச்சுவாக்கில் குறிப்பிட்டிருந்தார். இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல், உமாபதிக்குப் பாம்பு கடித்தபோது, கதிராமன் விழுந்தடித்துக்கொண்டு ஒதியமலைக்கு ஓடியதும், அவன் அங்கிருந்து திரும்பியபோது பதஞ்சலி அவனுடைய காலைப் பிடித்துக்கொண்டு கதறியதும், மலையர் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலை அதிகமாக்கி இருந்தது. அதன் காரணமாகவே மலையர் மிகவும் முயற்சிசெய்து பதஞ்சலியை, சிவசம்பரோடு அனுப்ப முயன்றார். ஆனால் அந்த முயற்சி உடனடியாகப் பலனளிக்காது போகவே, அவருடைய எரிச்சல் சினமாக மாறிக் கொதித்துக் கொண்டிருந்தது.

கோணாமலையர் கோபமடைந்திருந்தால் அவருடைய முகம் விகாரப்பட்டுப் போகும். அவரின் முகம் விகாரம் அடைந்திருந்த ஒரு வேளையில்தான் பதஞ்சலியின் வீட்டில் இருந்து பாலியார் வந்தாள். அவளைக் கண்டதும், 'என்னவாம் சொல்லுறாள் அந்தப் பொட்டை?' என்று சற்றுச் சூடாகவே கேட்டார். பாலியார் மிகவும் வினயமாக, 'அவள் இப்ப அழுதுகொண்டு இருக்கிறாள், பின்னேரமாய்ச் சொல்லிப் பாக்கிறன்' என்று கூறிவிட்டுத் தன்னுடைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். பதஞ்சலியின் பேச்சை எடுப்பதற்கு இந்த நேரத்தைவிடக் கூடாத வேளை வேறெதுவும் இல்லையென்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவளுடைய பதிலைக் கேட்ட மலையர், 'உம்....' என்று உறுமிவிட்டு, மீண்டும் தோலை வாரத் தொடங்கினார்.

-----------------------------------------------------------------

14.

பதஞ்சலியின் குடிசைக்குப் பின்புறமாக இருந்த காட்டினூடாக வந்து வெளிப்பட்ட கதிராமன், வேலியருகில் நின்று அவளின் குடிசையைக் கவனித்தான். அங்கு பதஞ்சலியைக் காணவில்லை. அடுப்புப் புகைகின்ற சிலமனில்லை. பதஞ்சலி தண்ணீருற்றுக்குப் போய்விட்டாளோ என நினைத்தபோது அவனுடைய மனம் சோர்ந்துவிட்டது. மான் குட்டியைக் கையில் அணைத்தவாறே அவன் வேலியை எட்டிக் கடந்து, பதஞ்சலியின் குடிசைக்கு முன்னால் வந்து நின்றான். குடிசையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே நோக்கினான். பதஞ்சலி ஒரு மூலையில் படுத்திருந்ததைக் கண்டதும் அவனுடைய நெஞ்சு குளிர்ந்தது. 'பதஞ்சலி' என்று மெதுவாக அழைத்தான். மான்குட்டிபோல் சதா துள்ளித் திரிந்தவள் இன்று அடங்கிப் போயிருந்ததைக் காண்கையில் அவனுடைய மனம் வேதனைப்பட்டது. 'இந்தா பதஞ்சலி!' என்று தான் கொண்டுவந்த மான்குட்டியை அவளிடம் நீட்டினான். மான்குட்டியைக் கண்ட பதஞ்சலியின் விழிகள் அகன்றன. ஆசையுடன் அதனை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொஞ்சினாள். அவளின் இயல்பே அதுதான். தனக்கு நேரிட்ட பெருந்துன்பத்தையும் மறந்து மான் குட்டியை வருடிக் கொடுத்து, அதனுடன் செல்லமாகப் பேசவும் முற்பட்டாள். அவனுடைய மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த கதிராமன், 'நான் வீட்டை போய் பால் எடுத்துவாறன் மான்குட்டிக்குப் பருக்க' என்று கூறிவிட்டு உற்சாகமாகத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.

-------------------------------------------------------------------------------------

15.

கோணாமலையர் எந்த விஷயத்தையிட்டு மனதில் கொதித்துக் கொண்டிருந்தாரோ, அதற்கு மேலும் தூபமிடுவதுபோலப் பதஞ்சலியின் குடிசையிலிருந்து கதிராமன் வெளியே வருவது, முற்றத்தில் உட்கார்ந்திருந்த அவருக்குத் தெரிந்தது. அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 'காட்டுக்குப் போனவன் நேரே இஞ்சை வாறதுக்கு ஏன் அந்த வம்பிலை பிறந்தவளிட்டைப் போட்டு வாறான்' என்று மலையர் மனம் புழுங்கினார். கதிராமன் எதிரில் வந்ததும், அவனுடைய முகத்திலே அடித்தாற்போல் எரிந்து விழுந்தார். மனதில் பதஞ்சலியைப் பற்றிய இன்ப நினைவுகளுடன் வந்தவனுக்கு, அவர் அவள்மேல் வீண்வசை சொல்லிப் பேசியது அவன் நெஞ்சில் என்றுமில்லாதவாறு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தந்தையை எதிர்த்து எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு வார்த்தை பேசாத கதிராமன், ஒன்றுமே கூறாது தலையைக் குனிந்துகொண்டே வீட்டுப் பக்கமாகப் போனான். 'நான் ஒருத்தன் கேக்கிறன்! அவர் பெரிய துரைமாதிரிப் போறார்! வாடா இஞ்சாலை பொறுக்கி!' என்று சினங் கொப்பளிக்கக் கோணாமலையர் கூறியதும், பாலியாருக்கு வயிற்றைப் பிசைந்தது. இருந்தும், 'விடிய வெள்ளணக் காட்டிலை போனவன் இப்பான் வாறான். அவனை ஏன் பேசிறியள்?' என்று மகன்மேல் சென்ற கோபத்தைத் தன்மேல் திசைதிருப்ப முயன்றாள் பாலியார். 'பொத்தடி வாயை! எனக்குப் படிப்பிக்க வெளிக்கிடுறியோ?' என்று பக்கத்தில் கிடந்த உழவன் கேட்டியையும் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றார் மலையர். சிறிது சிறிதாக மூண்டு தகித்துக்கொண்டிருந்த அவருடைய ஆத்திரம் இப்போது அவருடைய முகத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. நெடிதுயர்ந்த அவருடைய கரிய உடல் ஆத்திரத்தால் படபடத்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டால், யாரையாவது அடித்து நொறுக்கினால்தான் அது அடங்கும். தோளுக்குமேல் வளர்ந்துவிட்ட மகனை அவர் அடிப்பதிலும் தன்னை அடித்து நொறுக்குவது எவ்வளவோ மேல் எனப் பாலியார் நினைத்தாலும், உருத்திரமூர்த்தியாய் நிற்கும் மலையரைக் காண அவளுடைய உடல் பயத்தால் நடுங்கியது. 'தாயும் மோனுமாய்ச் சேர்ந்துகொண்டு குடியைக் கெடுக்கப் பாக்கிறியள் என்ன!' என ஆவேசமாகக் கேட்டவாறு பாலியாரைத் துவரங்கேட்டியால் மூர்க்கத்தனமாக விளாசித் தள்ளிவிட்டார். தன் கண் முன்னாலேயே தாயைக் கொடுமையாக அடிப்பதைக் கதிராமனால் பொறுக்க முடியவில்லை. 'இப்ப அம்மா என்ன செய்ததுக்கு அவவைப் போட்டுக் கொல்லுறியள்?' என அவன் குறுக்கிட்டபோது, அவன்மேல் பாயமுற்பட்டார் மலையர். 'என்னை என்னண்டாலுஞ் செய்யுங்கோ! அவனை அடியாதையுங்கோ!' என்று கணவனுடைய காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள் பாலியார். ஆத்திரத்தில் படபடத்த நிலையில் பாலியாரின் பிடியை விலக்கிக்கொண்டு போகக் கோணமலையரினால் முடியவில்லை. உடல் பதற, இப்பவே இந்த வளவாலை வெளியிலை போடா நாயே! போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக்கொண்டு அவளோடை இருடா பொறுக்கி!' என்று சிங்கம்போலக் கர்ச்சித்தார் மலையர். அவர் இப்படிப் பேசியபோதும் கதிராமன் அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவனுடைய மனதில் ஆத்திரமும் அவமானமும் குமுறிக்கொண்டு எழுந்தன. உணர்ச்சி வசப்பட்டதனால் அவனுடைய விழிகளிரண்டும் இரத்தம்போலச் சிவந்து காணப்பட்டன. நடப்பதையே பேசாமல் பார்த்துக்கொண்டு நின்ற கதிராமனின் முகத்தைக் கவனித்த மலையர், 'என்னடா ஒருமாதிரி முழுசிப் பாக்கிறாய்? இவனை இண்டைக்குக் கொண்டுபோட்டுத்தான் மற்ற வேலை!' என்று ஆக்ரோஷமாகக் கூறியவாறே கையிலிருந்த கேட்டியால், தன் கால்களைப் பற்றியிருந்த பாலியாரின் முதுகில் தாறுமாறாக வீசினார். உக்கிரமாக விழுந்த ஒவ்வொரு அடியையும் தாங்கமுடியாது பாலியார் துடித்துப் போனாள். அந்த நிலையிலும் அவள் தன் மகனைக் கோணாமலையரின் கோபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, 'நீ ஏன்ரா வளவாலை வெளிக்கிடச் சொன்னதுக்குப் பிறகும் இஞ்சை நிக்கிறாய்? போடா வெளியிலை! இந்த வீட்டு முத்தம் நீ ஒருநாளும் மிதிக்கக்கூடாது!' என்று அழுகையும், ஆத்திரமுமாகக் கூவினாள். அவளுடைய வார்த்தைகளைக் கேட்கக் கதிராமனுடைய கண்களில் இரத்தம் வடிந்தது. இன்னமும் ஒரு வினாடி தான் அங்கு தாமதித்தாலும் அவர், தன் தாயைக் கொன்றே விடுவார் என்ற எண்ணத்தில் கதிராமன் அங்கிருந்து புறப்பட்டான்.

'இண்டைக்கு வெளிக்கிட்டவன் செத்துப் போனான் எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ! இந்த வளவிலை உள்ள ஆரெண்டாலும் அவனோடை கதைபேச்சு உறவுகிறவு ஏதும் வைச்சியளோ நான் பிறகு மனிசனாய் இருக்கமாட்டன்!' என்று மலையர் பேசிவிட்டுச் சுருட்டைச் சுற்றவாரம்பித்தார். வெகுநேரம் வரையிலும் அவருடைய படபடப்பும் ஆத்திரமும் தீர்ந்தபாடில்லை.

அடியின் வேதனையால் முற்றத்தில் கிடந்து துடித்துப்போன பாலியார் மெல்ல எழுந்து குசினிக்குள் போய் இருந்துகொண்டாள். எத்தனையோ முறைகளில் சிறு விஷயங்களுக்கெல்லாம் தாறுமாறாகக் கணவனிடம் அடிவாங்கியிருந்த அவளுக்கு இந்த வேதனை புதியதல்ல. ஆனால் இன்று வீட்டைவிட்டுப் போய்விட்ட கதிராமன் மறுபடியும் இந்த வீட்டுமுற்றம் மிதிக்கமாட்டான் என எண்ணுகையில் அவளுடைய பெற்ற வயிறு எரிந்தது.

இங்கே பாலியாரின் நெஞ்சு ஒருவகை வேதனையில் துடிக்கையில்ää அங்கே பதஞ்சலியின் இளநெஞ்சு சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது.

குடிசையினுள் கதிராமன் கொண்டுவந்த மான்குட்டியுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த பதஞ்சலி, பாலியார் வளவில் கூக்குரல் கேட்கவே, பதறியடித்து அங்கே சென்றாள். அவள் வந்ததை யாருமே கவனிக்கவில்லை. தன் பெயர் பேச்சில் அடிபடுவதைக் கேட்டபோது, அவள் தூரத்திலேயே நின்றுவிட்டாள். 'போடா நாயே! போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக்கொண்டு அவளோடை இருடா பொறுக்கி!' என்று கோணாமலையர் பேசியது அவளுடைய செவிகளில் நாராசமாக வீழ்ந்தது. அம்பு துளைத்த புறாப்போல துடிதுடித்து ஓடியவள் நேரே தன் குடிசையை அடைந்து அங்கே பாயில் விழுந்து குமுறியழுதாள். முன்பொரு நாள் அவள் பாடசாலைக்குச் சென்ற காலத்தில் அவள் ஏதோ செய்துவிட்டதற்காக அவளுடன் வகுப்பில் படித்த ஒரு சிறுமி, 'நீ வம்பிலை பிறந்தவள்தானேடி!' என்று பேசியது அவளுடைய நெஞ்சில் புதுக்காயம் போன்று எரிந்தது. உமாபதியிடம் சென்று, 'ஏனப்பு அவள் என்னை அப்பிடிப் பேசினவள்?' என்று கேட்டபோது, அவர் ஒன்றுமே பேசாது தன்னக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கியது இப்போ பதஞ்சலியின் ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால், எதற்காகத் தன்னை இப்படி 'வம்பிலை பிறந்தவள்' என்று பேசுகின்றார்கள் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. எனினும், அது தன் வாழ்விலேற்பட்ட ஏதோ ஒரு கொடிய சங்கதி என்பதுமட்டும் அவளுடைய களங்கமற்ற உள்ளத்திற்கு விளங்கியது. காட்டுப் புறாப்போலக் கட்டுப்பாடின்றி வளர்ந்த அவள், இன்று தன்னைச் சூழ்ந்து நிற்கும் வசை இன்னதென்று அறியாமலே அது விளைத்த வேதனையின் காரணமாகக் கலங்கிக் கொண்டிருந்தாள்.

---------------------------------------------------------------

16

வீட்டைவிட்டு வெளியேறிய கதிராமனின் இதயம், பலவித உணர்ச்சிகளினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தண்ணிமுறிப்பின் இருண்ட காடுகளில் ஆங்காங்கே நீர் நிறைந்து காணப்படும் மடுக்களைப்போல் அமைதியும், ஆழமும, குளிர்ச்சியும் கொண்ட அவன் என்றுமே எல்லைமீறி உணர்ச்சிவசப்பட்டதில்லை. தந்தையின் சீற்றமும், தாயின் வேதனையும், பதஞ்சலியின் பரிதாபமான நிலையும் அவன் நெஞ்சைப் பிளந்தாலும் அவன் நிலை குலையவில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதைக் கவனிப்போம் என்பதுபோல் அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அவனையுமறியாமல் கால்கள் பதஞ்சலியின் குடிசைக்கு அவனை அழைத்துச் சென்றன.

அங்கே பதஞ்சலி பாயில் முகங்குப்புறக் கிடந்து அழுதுகொண்டிருந்தாள். அருகிற் சென்று, 'பதஞ்சலி!' என்று ஆதரவாகக் கதிராமன் கூப்பிட்டான். அவன் குரல் கேட்ட மாத்திரத்தில், தாயின் குரல் கேட்ட கன்றுபோல அவள் எழுந்து, அவனைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழத்தொடங்கினாள். தன்னோடு அவளைச் சேர்த்தணத்துக் கொண்டே பாயில் உட்கார்ந்து கொண்ட கதிராமனின் செவிகளில், 'போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக் கொண்டிரு!' என்று மலையர் ஏசியது திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஆதரவற்று வாடும் பதஞ்சலியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வரவேண்டுமென்று கதிராமன் தாயிடம் கூறியபோதும்ää அவன் மனதில், தான் அவளை மணக்கவேண்டும் என்ற நினைவு தோன்றவில்லை. அவள் தண்ணிமுறிப்பைவிட்டுப் போய்விடக் கூடாதென்ற ஒரு தவிப்பே அவனைப் பாலியரிடம் அப்படிக் கேட்கவைத்தது. காரணமும் நோக்கமும் தெரியாதிருந்த அவன் உணர்ச்சிகளுக்கு இப்போ ஒரு முழுமையான வடிவத்தைக் கோணாமலையரின் வார்த்தைகள் வலியுறுத்தி வளர்த்துக் கொண்டிருந்தன.

கதிராமனுடைய அணைப்பிலே பதஞ்சலிக்குத் தன் துயரமெல்லாம் விலகிவிட்டது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. அவளுடைய அழுகை கொஞ்சங் கொஞ்சமாக அடங்கியது. தன்னை அன்புடன் அணைத்திருந்த அவனுடைய கைகளை அவள் விலக்கவில்லை. அந்த முரட்டுக் கரங்களின் பிடிக்குள்ளேயே அடங்கிப்போய் அமைதியாக இருந்தாள்.

கதிராமன் குனிந்து, அவளுடைய முகத்தை நிமிர்த்தி, 'பதஞ்சலி! உன்னை நான் கலியாணம் முடிக்கப்போறன். இனிமேல் இஞ்சை உனனோடைதான் இருக்கப்போறன்' என்று சொன்னான். பதினாறே வயதான பதஞ்சலிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் அவள் முகத்தில் வெட்கமும், நாணமும் தோன்றவே செய்தன. அவள் ஒன்றுமே பேசாது தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய மௌனத்தை உணர்ந்த கதிராமன், 'என்ன பதஞ்சலி பேசாமலிருக்கிறாய்?' என்று கேட்டபோது, 'ஒண்டுமில்லை!' என்றுமட்டும் அவள் மெல்லச் சொன்னாள். சற்று நேரத்தின்பின் தன் முகத்தை நிமிர்த்திய பதஞ்சலி, அவனை நோக்கி, 'ஏன் என்னை எல்லாரும் வம்பிலை பிறந்தவள் எண்டு பேசுகினம்? அப்பிடி எண்டால் என்ன?' என்று குழந்தையைப் போலக் கேட்டாள். கதிராமன் உடனே அவளுக்குப் பதிலெதுவும் கூறவில்லை. சிறிதுநேர அமைதியின்பின் அவளைப் பார்த்து, 'உவையெல்லாம் சும்மா அப்பிடித்தான் கதைப்பினம்! ஆனா நீ ஒரு கலியாணம் முடிச்சு உனக்கொரு புருசன் வந்ததிட்டால் ஒருத்தரும் அப்பிடிப் பேசமாட்டினம்! அப்பிடிப் பேசுறதுக்கும் நான் விடன்!' என்று ஆதரவும், உறுதியும் நிறைந்த குரலில் கூறினான்.

அவன் கூறிய விளக்கம் தெளிவாக இல்லையென்பது பதஞ்சலிக்குப் தெரிந்தது. ஆனால், அந்த வேளையில் அவனுடைய இதமான அணைப்புத் தந்த பாதுகாப்பும், அவனுடைய உறுதியான மொழிகளும், அவளுடைய வேதனைகளையெல்லாம் போக்கும் அற்புத மருந்தைப் போன்றிருந்தன. அவனுடைய இறுக்கமான அணைப்பினுள் கட்டுண்டு கிடந்த அவளுக்குப் பெண்மையின் உணர்வுகளெல்லாம் மெல்ல விழித்தெழுந்துää விபரிக்க முடியாததொரு இன்பநிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையிலேயே காலமெல்லாம இருக்கவேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.

'ஏன் பதஞ்சலி பேசாமலிருக்கிறாய்?' என்று கதிராமன் திரும்பவும் கேட்டபோதும், அவள் எதுவும் கூறாது அவனுடைய மார்பிலே முகம் பதித்தவளாக இருந்தாள். 'உனக்கு என்னை முடிக்க விருப்பமில்லையோ?' என்று அவன் மீண்டும் கேட்டபோதுää 'சிச்சீ...' என்று சட்டென்று சொல்லிவிட்டு, நாணத்தால் முகம் சிவந்தவளாய் அவனுடைய அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். சற்றுமுன் விம்மியழுத பதஞ்சலியின் முகத்தில், இதுவரை காணாத புத்தம்புதுக் கோலங்களைக் கண்டு வியந்தவனாய்க் கதிராமன் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஏன் என்னை அப்பிடிப் பாக்கிறியள்?' என்று மீண்டும் தலையைக் குனிந்துகொண்ட பதஞ்சலி, அவர்களுக்கருகில் வேடிக்கை பார்த்தவாறே கிடந்த மான்குட்டியை எடுத்து முகத்தோடு முகம் சேர்த்துக் கொஞ்சினாள்.

இதன்பின் அவர்களுக்கிடையில் வெகுநேரம் மௌனம் நிலவியது. வெளியே தில்லம் புறாக்களின் சீட்டியோசை மிக இனிமையாகக் கேட்டது. அவனிடமிருந்து மெல்லத் தன்னை விடுவித்துக் கொண்ட பதஞ்சலிää குடிசை மூலையிலிருந்த ஒரு தகரப்பெட்டியைத் திறந்து ஒரு ஓலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தாள். அற்குள் சில பணநோட்டுக்கள்ää உமாபதி அவளுக்குச் செய்வித்துக் கொடுத்த தங்கச் சங்கிலி முதலியவைகள் இருந்தன. துணியால் சுற்றப்பட்டுப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளை எடுத்து, சுற்றப்பட்டிருந்த துணியை அவிழ்த்தாள். அதனுள் ஒரு தாலி இருந்தது. அதை மிகவும் பயபக்தியுடன் வெளியே எடுத்த பதஞ்சலி, 'இதுதான் அம்மாவின்ரை தாய்க்கு அப்பு கட்டின தாலி! என்ரை அம்மாவுக்குத் தாலி கட்டக் குடுத்து வைக்கேல்லை எண்டு அடிக்கடி அப்பு சொல்லும்.... இந்தத் தாலியை என்ரை சங்கிலியிலை கோத்து எனக்குக் கட்டிவிடுங்கோ!....' என்றாள். அவளின் குரல் தழுதழுத்தது. கண்கள் குளமாகின. தாலியை நீட்டிய அவளுடைய இரு கைகளையும் ஆதரவுடன் பற்றிக்கொண்ட கதிராமன், 'இதைக் கொண்டுபோய் ஐயன் கோயிலடியிலை கட்டுவம்!' என உற்சாகத்துடன் கூறினான். அவள் மீண்டும் ஓலைப்பெட்டியைத் தகரப்பெட்டிக்குள் வைக்கும்போது, அதற்குள்ளிருந்த உமாபதியின் வேட்டி, சால்வை முதலியவற்றை எல்லையற்ற பாசப்பெருக்குடன் கண்களில் ஒற்றிக்கொண்டது, மறைந்துபோன உமாபதியின் கால்களில் விழுந்து மானசீகமாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வது போலிருந்தது.

துருவம் தெரியாத பருவம். எதை எப்படிச் செய்வதென்றே பதஞ்சலிக்குப் புரியவில்லை. கதிராமனும் கலியாணவீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் நடைமுறைகளை அறியமாட்டான். அயல் கிராமங்களில் ஏழைகளின் வீட்டில் நடக்கும் 'சோறு குடுக்கும்' வழக்கம் அவன் நினைவுக்கு வந்தது. கணவனாகப் போகிறவனுக்கு முதன்முதலில் தன்கையால் சோறுபோட்டுக் கொடுத்துவிட்டு, அவன் விடுகின்ற மீதியை மணப்பெண் சாப்பிட்டு விட்டால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய்விட்டனர் என்பது சம்பிரதாயம். இது ஞாபகத்திற்கு வரவேää பதஞ்சலியை நோக்கி, 'கெதியிலை அரிசியைப் போட்டுவைச்சிட்டு ஒரு கறி காய்ச்சு. கோயிலடியிலை போய்த் தாலியைக் கடடிப்போட்டு வந்து சாப்பிடுவம்!' என்று தீர்மானத்துடன் சொன்னான். பதஞ்சலி நாணம் மேலிட்டவளாகக் குசினியை நோக்கிச் சென்றாள்.

கதிராமன் வெளியே வந்து குடிசைத் திண்ணையில் மான்குட்டியுடன் உட்கார்ந்துகொண்டு, மடிக்குள் கிடந்த புகையிலையை எடுத்துச் சுருட்டொன்று சுற்றிக் கொண்டான். 'கொஞ்ச நெருப்புக் கொண்டுவா பதஞ்சலி!' என்று அவன் கூப்பிட்டதும், அரிசியைக் களைந்து அடுப்பிலேற்றிய பதஞ்சலி, நெருப்புக் கொள்ளியொன்றைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்துவிட்டு விருட்டென்று குசினிக்குள் நுழைந்துகொண்டாள். அவளுக்கு இப்போ அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே மிகவும் வெட்கமாகவிருந்தது. சுருட்டைப் பற்றிக்கொண்ட கதிராமன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். ஏதோ காலங்காலமாகவே தாங்களிருவரும் கணவனும் மனைவியுமாய் இருந்தது போன்றதொரு நினைவு. காடுகளிலே திரிந்து காட்டு விலங்குகளையே கவனித்தவனுக்கு, உரிய பருவத்தில் தனக்கொரு துணையைத் தேடிக்கொள்வது புதினமாகவோ, விசித்திரமானதாகவோ படவில்லைப்போலும்.

-------------------------------------------------------

17

பதஞ்சலி பம்பரமாகச் சுழன்று வேலை செய்தாள். நொடிப் பொழுதுக்குள் பச்சரிசிச் சோறும், கத்தரிக்காய்க் குழம்பும், சொதியும் தயாராகிவிட்டன. அவனுக்குப் பிடிக்கும் என்றெண்ணி இறைச்சிக் கருவாட்டையும் எருமைநெய்யில் பொரித்திருந்தாள்.

குசினிப் படலை மறைவில் நின்றுகொண்டு 'சமையல் முடிஞ்சுது!" என்று சொன்ன பதஞ்சலியைப் பார்த்துச் சிரித்தான் கதிராமன். அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக் கொண்டாள். அவன் சிரித்துக் கொண்டே, 'மதியம் திரும்பீட்டுது. வாய்காலிலை முழுகிப்போட்டுவந்து கோயிலுக்குப் போவம்! வா!" என்று கூறிக்கொண்டு எழுந்தான். 'கொஞ்சம் பொறுங்கோ! கஞ்சி ஆத்திறன், மான்குட்டிக்குப் பருக்கிப் போட்டுப் போவம்" என்று கூறவும் மான்குட்டியை மறுபடியும் மடிமேல் வைத்துக் கொண்டான் கதிராமன். ஒரு பழந்துணியை எடுத்து, கஞ்சியில் நனைத்து வாயில் வைத்தபோது, முதலில் சுவைக்க மறுத்த மான்குட்டி, பின் ரசித்துக் குடித்தது. 'நீங்கள் இதைப் பருக்குங்கோ, நான் போய் முழுகீட்டு வாறன்" என்ற பதஞ்சலி, கொடியில் கிடந்த உடுத்தாடையை எடுத்துக்கொண்டு வளவை வளைத்துச் சென்ற வாய்க்காலை நோக்கிச் சென்றாள்.

மான்குட்டி கஞ்சியைக் குடித்து முடிக்கவும், பதஞ்சலி முழுகிவிட்டு ஈரப்புடவையுடன் வரவும் சரியாக இருந்தது. ஈரப்புடவையின் சலசலப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்த கதிராமனின் விழிகள் வியப்பால் விரிந்தன. கரும்பச்சை நிறமான அந்த ஈரப்புடவையில் அவளுடைய சந்தணமேனி பளிச்சென்றிருந்தது. புத்தம் புதுரோஜாவின் இதழ்களில் தெளித்த பனித்துளிகள்போல அவளுடைய முகத்தில் நீர்த்திவலைகள் உருண்டு வடிந்தன. இளமையின் பூரிப்பு பூத்துக் குலுங்கும் அவளின் பருவ உடலை ஒளிவு மறைவில்லாத ரசனையுடன் பார்த்தான் கதிராமன். அவனுடைய பார்வையைத் தாங்கமுடியாத பதஞ்சலி, சட்டென்று குடிசைக்குள் நுழைந்து படலையைச் சாத்திக் கொண்டாள். 'நீங்களும் போய் முழுகிப்போட்டு வாருங்கோவன்!" என உள்ளேயிருந்து நாணத்துடன் அவள் கூறியபோது, அவளின் குரலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு, நொடிக்கொரு துடுக்கு வார்த்தை பேசும் இவளா இப்படி வெட்கப்படுகின்றாள் என்று எண்ணி வியந்துகொண்டே வாய்க்காலை நோக்கிச் சென்றான் கதிராமன்.

இதற்குள் பதஞ்சலி தன்னுடைய ஒரேயொரு சேலையை உடுத்திக்கொண்டு தகரப் பெட்டிக்குள்ளிருந்த உமாபதியின் வேட்டியை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தாள். ஈரம் துவட்டியபடி வரும் கதிராமனின் சுருண்ட கேசம் மாலை வெய்யிலில் பளபளத்தது. மழையில் நனைந்த காடுபோன்று அவனுடைய கருமேனி புதுக்கோலம் காட்டியது. வேட்டியை வாங்கி உடுத்திக்கொண்டு, சுரைக் குடுவைக்குள் இருந்த திருநீற்றையும் அள்ளிப் பூசிக்கொண்ட கதிராமன், 'தாலி, கைப்பூரம் எல்லாம் எடுத்துப் போட்டியே!" என்று கேட்டதற்குப் பதஞ்சலி தலையைக் குனிந்தவாறே உம் கொட்டினாள்.

'நட போவம்" என்று கூறிக்கொண்டே நடந்த அவனைத் தொடர்ந்து நிலத்தைப் பார்த்தவாறே நடந்தாள் பதஞ்சலி. தலைநிமிர்ந்து மலையர் வீட்டுப் பக்கம் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. தேகம் இலேசாக நடுங்கியது. கதிராமனும் அவளுடைய தயக்கத்தை உணர்ந்தவன்போல், 'ஒண்டுக்கும் பயப்பிடாதை பதஞ்சலி! எல்லாத்துக்கும் நான் இருக்கிறன்!" என்று புன்னகை நிறைந்த முகத்துடன் அவளைத் தேற்றினான். 'இனிமேல் எல்லாத்துக்கும் என்ன, எல்லாமே நீங்கள்தான்" என்று மனதுக்குள் நினைத்தவாறே அவள், அவன் பின்னே சென்றுகொண்டிருந்தாள்.

முற்றத்தில் மாமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த மலையருக்கு, கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து போகும் காட்சி பளிச்சென்று தெரிந்தது. விழிகளை இடுக்கிக்கொண்டு கூர்ந்து கவனித்தவர், அவர்கள் இருவரும் தேரோடும் வீதியில் திரும்பி, குருந்தூர் ஐயன்கோவில் பக்கம் போவதைக் கண்டார். 'ஓகோ! மாப்பிளை பொம்பிளை ஐயன் கோயிலடிக்குப் போகினம்!" என்று கறுவிக் கொண்டார். இக்காட்சி, அணைந்துகொண்டு போகும் நெருப்பில் நெய்யை வார்த்ததுபோல் அவருடைய சினத்தை மீண்டும் கிளப்பியது. அவருக்கு வந்த ஆத்திரத்தில் கத்தியை எடுத்துக்கொண்டு போய், அவர்களுடைய தலகளைச் சீவி எறிந்திருப்பார். ஆனால் என்னதான் ஆத்திரம் ஏற்பட்டபோதும், அவர்கள் ஐயன் கோவிலுக்குப் போகிறார்கள் என்று அறிந்ததும் அடங்கிப் போனார்.

இந்தக் காட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஐயன் வெறும் காவல் தெய்வம் மட்டுமல்ல, கண்கூடாகக் காட்டும் தெய்வமாகவும் இருந்தது. காட்டில் வினை மிருகங்கள் தாக்க வருகையில், 'ஐயனே!" என்று கூவினால் போதும் அவை தூர விலகிப் போய்விடும். இப்பேர்ப்பட்ட ஐயனுடைய சக்தியில் கோணாமலையருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. எனவேதான் ஐயனிடம் செல்பவர்களுக்கு வில்லங்கம் விளைவிப்பது பாரதூரமானது என அடங்கிப் போனார்.

இருப்பினும் அவருடைய சுயகுணம் அவரைவிட்டு நீங்கிவிடுமா? 'இவையளுக்குப் படிப்பிக்கிறன் நல்லபாடம்!" என்று கறுவிக்கொண்டே, 'இஞ்சை வாடா மணியம்!" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கூப்பிட்டார் மலையர். 'போய் எருமையளைச் சாய்ச்சுக் கொண்டு வாடா!, இண்டைக்கு உமாபதியின்ரை வளவுக்கைதான் பட்டி அடைக்கிறது!" என்று அவர் சீறவும், மணியன் ராசுவையும் கூட்டிக்கொண்ட சென்று, குளக்கட்டின்கீழ் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகளை விரட்டிக்கொண்டு வந்தான்.

அவர்களுடன் கூடவே எழுந்துபோன மலையர், பதஞ்சலி வளவுப் படலையைப் பிடுங்கித் தூர வீசினார். 'நான் வெட்டிக் குடுத்த நிலம்! நான் கட்டிக் குடுத்த வீடு! எனக்குத் துரோகம் செய்யிறவை என்ரை வளவுக்கை இருக்கிறதோ!" என்று சினத்துடன் கர்ஜித்து, எருமைகளை ஓட்டிவந்து பதஞ்சலியின் வளவுக்குள் சாய்த்தார் மலையர். எருமையினம் மாலைவேளையில் மழைமேகம்போல உமாபதியின் வளவுக்குள் புகுந்தன. செழிப்புடன் காய்த்துக் குலுங்கிய, பதஞ்சலியின் அருமையான தோட்டம் எருமைகளின் கால்களின்கீழ் சிக்கித் துவம்சமாகின. மேலும், மலையர் கையில் வைத்திருந்த கேட்டியினால் மாடுகளை ஓங்கியடிக்கவும், அவை ஒன்றையொன்று முண்டியடித்துக் கொண்டு, குடிசையையும் குசினியையும் இடித்து விழுத்திக்கொண்டு இடறுப்பட்டன. அந்தக் குடிசைக்கு நெருப்பு வைப்பதற்குக்கூட மலையருக்கு மனதாயிருந்தும், தன்னுடைய எருமைகள் பாதிக்கப்பட்டு விடுமே என்ற காரணத்தினால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அந்தச் சின்னஞ்சிறு வளவு கணப்பொழுதுக்குள் சூறாவளியில் சிக்கிய சோலையைப் போன்று சிதைந்தது. அதன் பின்னர்தான் மலையரின் சினம் சற்றுத் தணிந்தது. 'இனிப் பாப்பம், மாப்பிளை பொம்பிளையவை என்ன செய்யினமெண்டு!" என்று கூறிக்கொண்டே தன்னுடைய வீட்டுக்குப் போனார்.

---------------------------------------------------------------

18

வண்ணாத்தி மோட்டை என்றழைக்கப்படும் பெரிய நீர்மடுவை வளைத்துச் சென்று, சிறியதொரு குன்றின்மேல் ஏறும் அந்தப் பாதையில், பதஞ்சலி கதிராமனின் அடிகளைப் பின்பற்றிச் சென்றாள்.

குன்றின் மேற்பகுதியில் ஒரு சிறிய வெளி. வெளியின் நடுவே ஒரு சூலம். அதன் முன்னே கற்பூரம் வைத்துக் கொளுத்தும் கல்லொன்று. இதுதான் குருந்தூர் ஐயன் கோவில்.

மடித்துக் கட்டியிருந்த வேட்டியைப் பயபக்தியுடன் அவிழ்த்துவிட்டு, பதஞ்சலியிடம் கற்பூரத்தையும், தீப்பெட்டியையும் வாங்கிய கதிராமன், அந்தக் கல்லின்மேல் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தினான். அடர்ந்த காட்டின் நடுவே கதிராமன் ஏற்றிய கற்பூரம் பிரகாசமாக எரிந்தது. அண்மையிலிருந்த மரங்களிலிருந்து காட்டுப்பறவைகள் பண்ணிசைத்துக் கொண்டிருந்தன. வண்ணாத்தி மோட்டையைத் தழுவிவந்த ஈரக்காற்று அவர்களைத் தழுவிச் செல்கையில் பதஞ்சலிக்கு ரோமங்கள் சிலிர்த்தன.

இரு கைகளினாலும், தாலிகோர்த்திருந்த சங்கிலியைக் கதிராமனிடம் கொடுத்துவிட்டு, கைகளைக் கூப்பித்தொழுத வண்ணம் பதஞ்சலி மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள். விழிகளை மூடித் தொழுதுநின்ற அந்தப் பதினாறு வயதுப் பதஞ்சலி, எப்போதோ இறந்துபோன தன் தாயையும், இரண்டு நாட்களுக்கு முன்புதான் மறைந்துபோன தன்னுடைய அப்புவையும், தன்மேல் பாசத்தைச் சொரிந்த பாலியாரையும் நினைத்துக் கொண்டாள்.

கதிராமன் 'ஐயனே!" என்று மனதுக்குள் நிதானமாக வேண்டிக்கொண்டு, பதஞ்சலியின் அழகான கழுத்தைச் சுற்றி தாலி கோர்த்த சங்கிலியைக் கட்டிவிட்டு, ஒருமுறை கரங்களைக் கூப்பிக் கும்பிட்டுக் கொண்டான். அந்நேரம் மெல்ல எழுந்துகொண்ட பதஞ்சலி, அவனை அணைந்தபடியே, பிரகாசமாக எரியும் கற்பூரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். கதிராமனுடைய கரம் அவளைச் சுற்றி ஆதரவாகப் படர்ந்திருந்தது. புனிதம் நிறைந்த அந்த மாலைப்பொழுதில் இரு இளம் உள்ளங்கள் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து புனிதமான உறவில் திளைத்தன.

'பசிக்குது! வா வீட்டை போவம்!" என்று கதிராமன் அழைத்தபோது, அந்த இடத்தைவிட்டு அகல மனமில்லாதவளாய்ப் பதஞ்சலி அவனைப் பின்தொடர்ந்தாள். திரும்பி வீட்டுக்குப் போகாமலே இப்படியே நடுக்காட்டினுள் போய் ஒரு மடுக்கரையில் குடிசையைக் கடடிக்கொண்டு தானும் கதிராமனும் வாழ்ந்தாலென்ன என்று அவளுடைய பேதை மனம் ஆசைப்பட்டது. அமைதி நிறைந்த அந்தக் காட்டினுள்ளே கதிராமனின் துணையுடன் நிரந்தரமாகத் தங்கிவிடப் பதஞ்சலி விரும்பினாள். வீடு நெருங்க நெருங்க, மலையர் கோபத்தில் தங்களை என்ன செய்வாரோ என்ற பயம் பதஞ்சலியைப் பற்றிக் கொண்டது. அவனுடைய கையைப் பிடித்தவாறே நிலத்தை நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்தவளாய் நடந்து கொண்டிருந்த பதஞ்சலி, தன்னுடன் கூடவே வந்துகொண்டிருந்த கதிராமனின் நடை திடீரென்று நின்றதும் துணுக்குற்றுப் போய் நிமிர்ந்து பார்த்தாள். அங்கு கண்ட காட்சி அவளை அதிரவைத்தது.

அவளும் உமாபதியும் வாழ்ந்த அந்தச் சின்னஞ்சிறு குடிசை சரிந்துபோய்க் கிடந்தது. அவள் ஆசையுடன் நட்டுவைத்த பயிர்கொடிகள் அலங்கோலமாகச் சிதைந்து கிடந்தன. அவள் அழகாகப் பெருக்கிச் சுத்தமாக வைதத்திருந்த வெண்மணல் பரவிய முற்றத்தில் எருமைகள் தாறுமாறாகத் திரிந்தன.

பதஞ்சலியின் கரத்தை விடுவித்துக்கொண்டு முன்னால் சென்ற கதிராமன் ஒருகணப் பொழுதுக்குள்ளே நடந்ததைப் புரிந்துகொண்டான். அந்தக் கிராமத்திலே வேறு எவருக்குமே ஈவிரக்கமின்றி இப்படியானதொரு செயலைச் செய்ய மனம் வராது. துணிவும் இராது. விக்கித்துப்போய் நின்ற பதஞ்சலியைத் திரும்பிப் பார்த்த கதிராமன், 'இதெல்லாம் அபபுவின்ரை அலுவல்தான். எங்களை இந்த ஊரைவிட்டே கலைக்கிறதுக்குத்தான் இந்த வேலை செய்திருக்கிறார்". என்று ஆத்திரத்துடன் கூறியவன், 'நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை பதஞ்சலி! வா உன்ரை சாமான்களை எடுத்துக்கொண்டு போவம்!" என்றவாறு வளவுக்குள் நுழைந்தான். பதஞ்சலி பேச்சு மூச்சற்றுக் கதிராமனைப் பின்தொடர்ந்தாள். குடிசை வாசலில் அவள் கண்ட காட்சி, இதயத்தை விம்ம வைத்தது. அன்று காலையில் காட்டிலிருந்து கொண்டுவந்த மான்குட்டி, எருமைகளின் குளம்புகளின் கீழ் அகப்பட்டு நசுங்கிச் செத்துக் கிடந்தது. பதஞ்சலி விம்மி விம்மி அழத்தொடங்கினாள். அவளுடைய கலங்கிய விழிகளையும், அந்த வளவு கிடந்த அலங்கோல நிலையையும் கண்ட கதிராமனின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தது.

'அழுதுகொண்டு நிண்டு என்ன செய்யிறது பதஞ்சலி? உன்ரை சாமான்களை எடு! நாங்கள் போவம்!" என்றவாறே அங்கு கிடந்த ஒரு சாக்கை எடுத்துக் குசினிக்குள் இருந்த அரிசி, மா, மற்றும் பாத்திரங்கள், போத்தல்கள் முதலியவற்றை அதனுள் அடைந்தான். விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாய, பதஞ்சலியும் சரிந்துகிடந்த குடிசைக்குள் நுழைந்து தன் உடைகளையும், தகரப்பெட்டியையும், பாயையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். கதிராமனின் விழிகளில் ஒரு தீவிரமான உறுதி பளிச்சிட்டது. 'வீடு வளவில்லாமல் செய்துபோட்டால் நாங்கள் செத்துபோவம் எண்டு நினைச்சாராக்கும்! நாளைக்கிடையிலை எங்களுக்கெண்டு ஒரு சின்னக்குடில் எண்டாலும் கட்டி முடிக்காமல் விட்டால் நான் கதிராமன் இல்லை!" என்று சபதஞ் செய்துகொண்ட கதிராமனைப் பார்த்துச் சிலையாய் நின்றாள் பதஞ்சலி. 'ஏன் பதஞ்சலி எல்லாத்துக்கும் பயந்து சாகிறாய்? இப்ப என்ன நடந்து போச்சுது? எங்களுக்கெண்டு ஒரு வீடு வளவு வேணும். அவ்வளவுதானே?" என்று சொல்லிவிட்டு, 'நீ உதுகளை ஒரு பக்கத்திலை வைச்சிட்டுக் குசினிக்கை பார். சோறு, கறியெல்லாம் அப்பிடியே கிடக்குது. அதைக் கவனமாய் ஒரு பாத்திரத்திலை எடு. எப்பிடியும் இண்டைக்கு நீதான் எனக்குச் சோறுபோட்டுத் தரரோணும்" என்று அவன் கூறியதும், பதஞ்சலி ஒன்றுமே பேசாது, விழுந்துகிடந்த அந்தக் குசினிக்குள் புகுந்து, தான் ஆசையோடு சமைத்து வைத்த உணவு வகைகளைப் பார்த்தாள். அவை ஒரு பக்கீஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக இருந்தன. இதற்குள் கதிராமன் உமாபதியின் கத்தி, மண்வெட்டி, கோடரி முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். பதஞ்சலி சாப்பாட்டுப் பெட்டியைத் தலையில் பக்குவமாக வைத்துக்கொண்டு, பாயையும் ஈரமான உடைகளையும் ஒரு கையில் எடுத்துக் கொண்டாள். கதிராமன் 'நட! போவம்!" என்றான். அவன் எங்கு நட என்றாலும் அவள் நடப்பதற்குத் தயாராய் இருந்தாள். எந்த நிலையிலும் கலங்கிப்போகாத அவனுடைய ஆண்மை அவளுக்கு அளவற்ற ஆறுதலை அளித்தது. மிகவும் குறுகிய கால வேளைக்குள் அடுத்தடுத்துப் பல அவலங்களை அனுபவித்திருந்த அவளுக்கு, 'கவலைப்படாதை!" என்று அவன் கடிந்து கூறியத மிகவும் இதமாகவிருந்தது.

--------------------------------------------------------------------

19

எருமைகளை மீண்டும் விலக்கிக் கொண்டு குமுளமுனைக்குச் செல்லும் பாதையில் அவர்கள் இறங்கும்போது, நன்றாக இருண்டு போயிருந்தது. வைகாசிமாத வளர்பிறை நாட்களாதலால் வானம் நிர்மலமாக இருந்தது. ஆங்காங்கு விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

ஏறக்குறைய அரைமைல் தூரம் அவர்கள் நடந்திருப்பார்கள். குளக்கட்டிலிருந்து ஆரம்பிக்கும் அந்தப் பாதையை ஒட்டியவாறே அந்த வாய்க்காலும் சென்றது. அந்த வாய்க்காலின் ஓரமாகச் சென்று, இடதுபுறமிருந்த காட்டைப் பார்த்தான் கதிராமன். வாய்க்காலுக்கும் பாதைக்கும் வலதுபுறத்தே வயல்வெளி விரிந்து கிடந்தது. இடப்பக்கத்தில், இருண்டகாடு வாய்க்காலின் ஓரம்வரை படர்ந்திருந்தது.

எந்த இடம் குடியிருப்புக்குச் சிறந்தது, எது வயலாக்குவதற்கு ஏற்றது என்ற விஷயமெல்லாம் கதிராமனுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அவன் வாய்க்காலைக் கடந்து அப்பால் இருந்த காட்டை நோக்கிச் சென்றான். நிலவு காலித்துவிட்ட அவ்வேளையில் காடு சந்தடியற்றுக் கிடந்தது. வாய்க்காலில் குளத்துநீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. கதிராமன் காடடோரமாக இருந்த ஒரு மேட்டில் ஏறி, பெரியதொரு மரத்தின்கீழ் தலைச்சுமையை இறக்கிவிட்டு, பின்னாலேயே வந்த பதஞ்சலியின் தலைமேல் இருந்த பெட்டியையும் பக்குவமாக இறக்க உதவினான். பின் கைக்கத்தியின் உதவியுடன் அந்த மரத்தின் அருகிலிருந்த சிறு செடிகளையும், அண்மையிலிருந்த சிறு பற்றைகளையும் மளமளவென்று வெட்டி ஒதுக்கினான். பதஞ்சலி பட்டுப்போனதொரு மரக்கிளையை விளக்குமாறாக உபயோகித்து நிலத்திலிருந்த சருகுகளைக் கூட்டிச் சுத்தமாக்கினாள்.

இன்னமும் இரண்டொரு நாட்களில் முழு நிலாவாகப் போகும் வளர்பிறைச் சந்திரன் அந்தப் பிராந்தியத்தின் மேல்வரும் வேளையில், கதிராமன் அந்த மரத்திற்குச் சற்றுத்தள்ளி சுள்ளிகளைக் கொண்டு ஒரு தீவறை மூட்டினான். சடபுடவெனச் சத்தமிட்டுக்கொண்டு வளர்ந்த தீயின் ஒளியில் பதஞ்சலி தான் கூட்டித் துப்பரவுசெய்த இடத்தில் பாயை விரித்துவிட்டு, கொண்டுவந்த பொருட்களை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். நெருப்பை மூட்டிவிட்டு எழுந்து நின்று சுற்றுப்புறத்தை ஒருதடவை கூர்ந்து கவனித்த கதிராமன் திருப்தி அடைந்தவனாக வாய்க்காலுக்குப் போய்க் கைகாலைக் கழுவிக்கொண்டு வந்தான்.

முழுகிய கூந்தலை அள்ளிமுடிந்து அடக்கமாக உட்கார்ந்து பதஞ்சலி தனக்குப் பரிமாறுவதைக் கதிராமன் கண்கொட்டாமல் பார்த்தான். அடிக்கடி நாணத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்த அவளுடைய அகன்ற விழிகளில் அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஒளி பளபளத்தது. நீண்டு வளர்ந்து செழுமையாக இருந்த அவளுடைய விரல்களும், கைகளும் அவள் பரிமாறுகையில் ஏதோ அபிநயம் பிடிப்பதுபோற் தோன்றின. நேரம் ஒரு உணர்ச்சியைப் பிரதிபலித்த அவளுடைய முகத்தை ஆசையுடன் பார்த்திருந்த கதிராமனை நோக்கி, 'சாப்பிடுங்கோவன்!" என்று அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

கதிராமன் ஆசையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் உள்ள சின்ன விஷயங்களையும் சுவைத்து அனுபவிக்கத் தெரிந்த அவன் அந்நிலையிலும் அவள் படைத்த உணவை மிகவும் இரசித்துச் சாப்பிட்டான். அவனுடைய கருமையான கட்டுடலையும், முகத்தில் அரும்பியிருந்த இளந்தாடியையும் கள்ளமாகப் பார்த்தவாறே அவனுக்கு மேலும் பரிமாறினாள் பதஞ்சலி. அவன் சாப்பிட்டு முடிந்ததும்,தண்ணீரை எடுத்து அவன் கைகளுக்கு ஊற்றித் தானே அவன் கைகளைக் கழுவினாள். அவளுடைய மென்மையான விரல்களின் ஸ்பரிசம் அவனுள் புதுமையானதொரு ஒணர்வை ஏற்படுத்தியது. இறுகப்பற்றிய அவனுடைய விரல்களை மெல்ல விடுவித்துக் கொண்ட பதஞ்சலி அவன் சாப்பிட்ட தட்டிலேயே தானும் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.
கதிராமன் கைத்தாங்கலாகப் பாயில் படுத்தபடி பதஞ்சலியையே பார்த்துக் கொண்டிருந்தான். வாய்க்காலில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த அவள் அடிக்கொரு தடவை அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அவர்களிடையே வெகுநேரமாகப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமலிருந்தது. காட்டிலே தன்னிச்சையாக வாழும் மலைப்புறா ஜோடிகளைப்போல் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பார்வையிலேயே ஆயிரம் அர்த்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு வந்த பதஞ்சலி, அவனருகில் உட்கார்ந்து புகையிலையை எடுத்துச் சுருட்டொன்று சுற்றி அவனுக்குக் கொடுத்தாள். இத்தனை பக்குவமான பணிவிடையைக் கதிராமன் என்றுமே அனுபவித்ததில்லை. அவளுடைய கரத்தை அவன் மெல்லப் பிடித்து இழுத்தபோது, அவனுடைய நெஞ்சோடு உரிமையுடன் சாய்ந்து கொண்டாள் பதஞ்சலி.

அவர்களுக்கு மேலே பெருமரம் நிலவுக்குக் குடை பிடித்தது. எங்கேயோ பிறந்த சின்ன நீரோடையொன்று கலகலவென்று சிரித்தபடியே ஆடிவந்து, இருண்ட காட்டின் மத்தியில் ஆழமும் அமைதியுமாய்க் கிடந்ததோர் நீர்மடுவில் விழுந்து தழுவிச் சங்கமித்தது.

-------------------------------------------------------

20

புத்தம் புதிய அனுபவங்களைக் கண்டு வியப்பும், மயக்கமும், மகிழ்ச்சியும் வேதனையும் கலந்ததோர் உணர்ச்சிக் கதம்பமாள் மணம் பரப்பிய பதஞ்சலி, கதிராமனின் அணைப்பிலே பச்சைக் குழந்தையாய் உறங்கிக் கொண்டிருந்தாள். கீழ்வானம் சிவக்கும் வைகறைப் பொழுதிலேயே விழித்துக்கொண்ட கதிராமன் பதஞ்சலியின் அணைப்பிலிருந்து தன்னை மெல்ல விடுவித்துக்கொண்டு எழுந்தான்.

அன்று பகலுக்குள் எத்தனையோ வேலைகளைச் செய்துமுடிக்க வேண்டியிருந்தது. உமாபதியரின் மண்வெட்டி, கோடரி முதலியவற்றை அவன் எடுத்து ஒவ்வொன்றாகக் கவனித்தான். ஆயுதங்கள்தான் ஒரு தொழிலாளியினுடைய உற்ற நண்பர்கள். உறுதியும், கூர்மையுமாய் விளங்கிய ஆயுதங்களைக் கண்டதும் கதிராமனுடைய தேகத்தில் புதுத்தெம்பு பாய்ந்தது.

வாழ்வதற்கு ஒரு குடிசை வேண்டும். அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒரு காய்கறித் தோட்டம் வேண்டும். இவற்றைவிட முக்கியமாக, கமஞ்செய்ய விளைநிலம் வேண்டும்.

அவன் எதிரே அவனைப் பேணிவளர்த்த செவிலித் தாயான முல்லையன்னை, வளமிக்க மண்ணைத் தன்னகத்தே கொண்டவளாய், 'வா! வந்து என்னைப் பயன்படுத்தி வாழ்ந்துகொள்!" என்று அழைப்பது போன்றிருந்தது. கையிலே சிறந்த ஆயுதங்கள், உடலிலே வினைமுடிக்கும் திறமை, நெஞ்சிலே வாழவேண்டுமென்ற வேட்கை என்பனவற்றைக் கொண்டிருந்த கதிராமன் சுருதியாகக் காரியத்தில் இறங்கினான்.

தன்னை மறந்து, அயர்ந்து உறங்கிய பதஞ்சலி, அவன் காட்டிலே வெட்டிய கம்பு தடிகளைச் சுமந்துவந்து நிலத்தில் போட்ட ஓசையில் திடுக்குற்று விழித்துக் கொண்டாள். அதிகாலைப் பொழுதில் தனக்கு முன்னரே எழுந்து வேலையில் மூழ்கிச் சிரித்தபடியே நிற்கும் கணவனைப் பார்த்தபோது பதஞ்சலியை வெட்கம் பிடுங்கித்தின்றது. சரேலென்று எழுந்துகொண்ட அவள் வாய்க்காலண்டைக்கு ஓடினாள். 'இண்டைக்கு விளையாடிக்கொண்டு நிக்க நேரமில்லை! கெதியிலை தேத்தண்ணியை வை! வெய்யில் ஏறமுதல் குடிலைக் கட்டிப்போட்டு குமுளமுனைக்கு கிடுகு வாங்கப் போகோணும்!" என்ற கதிராமன், அந்தச் சுற்றாடலில் வசதியானதொரு மேட்டுநிலத்தைத் தேர்ந்தெடுத்துத் துப்பரவு செய்வதில் முனைந்தான். மண்ணும், மண்வெட்டியும் அவன் எண்ணப்படியெல்லாம் இசைந்து கொடுத்தன. மண்ணைத் தோண்டி ஆழமான குழி பறித்தான். அவற்றில் உறுதியான கப்புக்களை நாட்டினான். அவனருகே தேநீர் கொண்டுவந்த பதஞ்சலியிடம், 'எப்பிடி எங்கடை வீடு?" என்று கூறியபோது, அவள் கண்களில் பெருமை பொங்கி வழிந்தது.

'இதிலைதான் வீடும் தோட்டமும். பங்கை அதிலை பள்ளக் காணியாய்க் கிடக்குது காடு, அதை வெட்டி எரிச்சுத்தான் வயலாக்கப் போறன்!". தேநீரை உறிஞ்சிக் குடித்தவாறே அவன் தன் திட்டங்களைத் தனக்கேயுரிய எளிமையான முறையில் விளக்கிக் கொண்டிருந்தான்.

பதஞ்சலிக்கும் அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அருகே சலசலத்தோடும் வாய்க்கால், அதற்கப்பால் விரிந்து கிடக்கும் வயல்வெளி, இவற்றைச் சூழ்ந்து கிடக்கும் இருண்ட காடு, இவையெல்லாமே அவளுக்குச் சந்தோஷத்தை அளித்தன. இவை எல்லாவற்றிற்கும் மேலாகக் கதிராமன் இனி என்றும் தன்னுடனேயே இருப்பான், அவன் துணையொன்றே தனக்குப் போதும் என்ற எண்ணங்களே அவளுடைய உவகைக்கும் திருப்திக்கும் காரணங்களாய் இருந்தன.

-------------------------------------------------------------------------

21.

எளிமை நிறைந்த வாழ்விலே ஆசைகள் மிகக் குறைவு. மிகச் சிலவான அந்த ஆசைகளும் எளிமையாகவே இருப்பதனால் அவை இலகுவில் நிறைவேறி விடுகின்றன! அவை நிறைவேறிய ஆத்மதிருப்தியுடன் வாழும் எளிமையான மக்களின் மனங்களில் நிராசைகளோ, ஏமாற்றங்களோ நிரந்தரமாகத் தங்கியிருந்து சினம், பொறாமை, கவலை முதலியவற்றைப் பெரிய அளவிலே பிறப்பித்து அவர்களை அலைக்கழிப்பதில்லை.

தண்ணிமுறிப்பு காடாகக் கிடந்த காலத்தில் அங்குவந்து முதலில் குடியேறிய கோணாமலையர் தனக்கும், தன் குடும்பத்துக்கும் வேண்டியவற்றைத் தாமே விளைவித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருந்தார். அப்போதெல்லாம் அவருக்கு அதிகமாக ஆசைப்படத் தெரியவில்லை. ஆனால் கதிராமனும் மணியனும் வளர்ந்து ஆளாகி அவருடைய வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டபோது, அவர் வீட்டில் மாடுகன்று பெருகியது. வயல்வரப்பு விளைந்தது. தேவைக்கு அதிகமாக இச் செல்வங்கள் பெருகியிருந்த காலத்திற்றான் குளம் திருத்தப்பட்டு, அதன் கீழ்க் கிடந்த காணிகள் கழனிகளாக மாறின. அதன் காரணமாக அயற்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அங்கு தம் வயல்களுக்கு அடிக்கடி வந்துபோகத் தொடங்கினர். ஒரு கணிசமான தொகையினர் ஆங்காங்கு தங்கள் வயல்களை அண்டிய இடங்களில் குடியேறவும் செய்தனர்.

கதிராமன், பாலியார் இவர்களை இந்த மாற்றங்கள் அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் மலையரோ காலக்கிரமத்தில் குறிப்பிடக்கூடிய அளவுக்கு மாறிப் போயிருந்தார். உத்தியோக நிமித்தமாக அங்குவந்து குடியேறிய காடியரும், அடிக்கடி வந்துபோகும் மம்மதுக் காக்காவும் இந்த மாற்றத்திற்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள். 'என்ன மலையர், நெடுக எருமையளை வைச்சுக்கொண்டு மாரடிக்கிறியள்? ஒரு உழவு மிசின் எடுத்தாலென்ன?" என்று அடிக்கடி காடியர் சொல்வதும், 'கதிராமனுக்கு உழவு மிசினோடை பொம்பிளை தரக் குமுளமுனைச் சிதம்பரியர் காத்திருக்கிறார்" என்று மம்மதுக் காக்கா கூறுவதையும் கேட்ட கோணாமலையர் மனதில், தன்னிடமும் ஒரு உழவு இயந்திரம் இருந்தால் இன்னும் அதிக அளவில் கமஞ் செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைகள் தளிர் விட்டிருந்தன. அவை மெல்ல மெல்ல வளர்ந்து மனதின் அடித்தளம்வரை வேர்பரப்பி விசாலித்து நின்றன! அவரது ஆசை விருட்சத்தைக் கதிராமனின் செயல் புயலின் வேகத்துடன் உலுப்பிச் சரித்துவிடவே, இதுவரை அதிகம் வேதனைப்பட்டறியாத மலையர் வெகுண்டெழுந்தார். அவருக்கு ஏற்பட்ட அசாத்திய சினத்தில் எதையோவெல்லாம் செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்திருப்பார். ஆனால் உலக அனுபவமும், பேச்சுச் சாதுரியமும் மிக்க காடியரின் முயற்சியினாலேயே ஓரளவு அடங்கிப்போனார். கதிராமன் காடுவெட்டிக் குடிசை போடுகிறான் என்று அறிந்ததுமே மலையர் பொங்கி எழுந்தார். 'உவையள் இரண்டுபேரும் இஞ்சை தண்ணிமுறிப்பிலை இருக்க நான் விடுவனோ?" என்று சீறினார். யாருடைய நல்ல வேளையோ அச்சமயம் காடியரும் மலையரின் பக்கத்தில் இருந்ததால் அவரை ஒருவாறு சாந்தப்படுத்த முடிந்தது. 'இங்கை பாருங்கோ மலையர்! அவன் பொடியன் அவளை முடிச்சுக்கொண்டு போட்டான். இனி நீங்கள் அதுகளை அடிச்சுக் கொல்லுறன், வெட்டிப் புதைக்கிறன் எண்டெல்லாம் வெளிக்கிடுறது அவ்வளவு வடிவாய் இல்லைப் பாருங்கோ! இனி வருங்காலத்திலை உங்களுக்கு நல்ல செல்வாக்கு சீர் எல்லாம் வரப்போகுது. தண்ணிமுறிப்பு இப்ப சின்ன ஊர் இல்லை. இதைச் செம்மலைக் கிராமச் சங்கத்திலை ஒரு வட்டாரமாக்கிறதுக்கு சேமன் பொன்னம்பலம் வேலை செய்யிறாராம். அப்பிடி வந்திட்டுதே எண்டால் இங்கை நீங்கள்தான் போட்டியில்லாமல் மெம்பராய்ப் போவியள்! இப்ப கண்டபடி கிறிமினல் வேலையளிலை இறங்கினியளோ, அது உங்கடை வருங்காலத்துக்குக் கூடாது! அவன் போனவன் போகட்டுமெண்டு தலைமுழுகிப் போட்டு மற்ற விஷயங்களைக் கவனியுங்கோவன்!" என்று அடுக்கிக் கொண்டுபோன காடியர் தொடர்ந்து, 'ஏன் உங்கடை மணியனுக்கு இப்ப என்ன வயசு? இருவத்தொண்டு இருக்குமெல்லே? ஏன் மணியனுக்கு அந்தக் குமுளமுனைச் சம்பந்தத்தைச் செய்தால் என்ன?" என்று வினயமாகப் பேசி மலையரின் மனதை மாற்றிவிட்டார்.

புதியதொரு வழியில் காடியர் மலையரின் மனதைத் திருப்பவே, அத் திட்டத்தின் கவர்ச்சியில் எடுபட்டுப் போய்விட்டார் அவர். எனவே தற்போதைக்குக் கதிராமனையும், பதஞ்சலியையும் வெட்டிப் புதைக்கும் முயற்சியைக் கைவிட்டிருந்தார். இருப்பினும் அடிக்கடி கொதித்துக் குமுறத்தான் செய்தார். அந்தச் சமயங்களில் தன் கோபத்தையெல்லாம் பாலியரின்மேல் கொட்டித் தீர்த்துக்கொள்வது வழக்கமாயப் போயிற்று. ஓசையின்றி, ஒப்பாரியின்றி ஒரு சுமைதாங்கியைப் போல அவருடைய கோபத்தையும், தன்னுடைய கவலைகளையும் சுமந்துகொண்டே வாழ்ந்தாள் பாலியார்.

கதிராமன் புறப்பட்டுப்போன இந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மலையரின் வளவு தன் களையையும், கலகலப்பையும் இழந்திருந்தது. இயல்பாகவே சற்று விளையாட்டுத்தனம் கொண்ட மணியன், கதிராமனுடைய துணையும் மேற்பார்வையும் இல்லாத காரணத்தினால் அசிரத்தையாக இருக்கத் தலைப்பட்டான். கடைக்குட்டி ராசுவிற்கோ இவ்வளவு நாட்களும் பதஞ்சலியைக் காணாதது சப்பென்றிருந்தது. அவனுடன் சண்டைபிடித்து விளயாடுவதற்கு யாருமேயில்லை. பாலியார் நிலையோ வேறு!

பகலெல்லாம் மௌனமாக நின்று பங்குனிமாத வெய்யிலில் வெந்து, இரவின் தனிமையில் நீர்சிந்தி இரங்கும் காட்டு மரங்களைப் போன்று பாலியாரும் பகல்முழுவதும் மனதுக்குள்ளேயே தன் மகனை எண்ணிப் புழுங்கி, இரவெல்லாம் கண்ணீர் நிறைந்த நினைவுகளுடன் காலத்தைக் கழித்து வந்தாள். சற்று வெளிப்படையாகத் தெரியும் வகையில் அவள் எப்போதாவது சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாற் போதும் எரிந்து விழுவார் மலையர். 'என்னடி விடியாத முகத்தோடை திரியிறாய் மூதேவி!" என்று சினப்பார். கவலைப்படுதற்குக்கூடச் சுதந்திரம் இல்லாதவளாக நெஞ்சுக்குள் பொருமிக் கொள்வாள் அவள்.

---------------------------------------------------------------

22

பாலை மரங்கள் சிதறுபழம் பழுக்கும் சித்திரைமாதக் கடைக்கூற்றில் வீட்டைவிட்டு வெளியேறிய கதிராமன் அயராது உழைத்தான். இப்போ பாலை மரங்கள் வாருபழம் பழுக்கும் வைகாசிமாதம். கதிராமனின் குடிசைக்கு மேற்கே கிடந்த காடு இப்போ வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. சித்திரை இருபத்தெட்டுக் குழப்பம் என்று அழைக்கப்படும் சோளகத்தின் பிரசவத்தின் முன்பே அவன் கீழ்க்காடு முழுவதையும் வெட்டியிருந்தான். பின் பெருமரங்களைத் தறித்து வீழ்த்தி, அவற்றின் கிளைகளையும் வெட்டி நெரித்து மட்டப்படுத்தியிருந்தான். சதா கோடரியும் கையுமாக வைகாசிமாத இறுதிவரை பிராயசப்பட்ட அவனுடைய உள்ளங்கைகள், இரத்தம் கன்றிச் சிவந்து கரடுதட்டிப் போயின.

தங்களுடைய வாழ்வில் மலையர் தலையிட்டுத் தீங்கு செய்யாதது பதஞ்சலிக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. நாளடைவில், பழைய குதூகலமான போக்கும் உற்சாகமும் அவளிடம் திரும்பியிருந்தன.

நிலத்தில் பொந்துகள் அமைத்து அவற்றினுள் கூடுகட்டி வாழும் நிலக்கிளிகள் மிகவும் அழகானவை! உற்சாகம் மிகுந்தவை! தண்ணிமுறிப்புப் பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படும் இந்த நிலக்கிளிகள் தாமிருக்கும் வளைகளைவிட்டு அதிக உயரத்துக்கெல்லாம் பறப்பதில்லை. இவை தம் பொந்துகளைவிட்டு அதிக தூரம் செல்வதில்லை. அண்மையிலே கிடைக்கும் பூச்சிபுழுக்களையும், தானியங்களையும் உண்டு வாழும் இந்தப் பறவைகள் தொடர்ந்தாற்போல் ஓரிடத்தில் தரித்திருக்காமல் அடிக்கடி நிலத்தை ஒட்டியவாறே பறக்கும் காட்சி, அவற்றின் அழகையும், குதூகலத்தையும் மேலும் மிகைப்படுத்திக் காட்டும்.

பதஞ்சலியும் ஒரு நிலக்கிளியைப் போலவே தான் வாழ்ந்த சின்னஞ்சிறு குடிசையையும், கதிராமனையுமே தனது உலகமாகக் கொண்டிருந்தாள். வேலையெதுவுமே இல்லாத சமயங்களில், பக்கத்திலே உள்ள பாலைமரங்களின் தாழ்வான கிளைகளிலே ஏறிப் பழங்களைப் பறித்துவந்து கதிராமனுக்குக் கொடுத்து உண்பாள். அவர்களுடைய குடிசையை அண்டிய காட்டுக்குறையிலே மான்கிளை வந்து நிற்கும்போது அவற்றை நோக்கிக் களிப்புடன் ஓடுவாள். பிலக்காட்டில் கதிராமன் பாடுபடுகையில், 'வெய்யிலுக்கை நில்லாதை!" என்று அவன் ஏசினாலும் அதைப் பொருட்படுத்தாது அவனைச் சுற்றிவந்து தன்னாலான வேலைகளைச் செய்வாள்.

நாள்முழுவதும் இடுப்பொடிய வேலை செய்துவிட்டு இரவில் ஒருவரின் அணைப்பில் ஒருவர் ஒண்டிக்கொள்ளும் வேளையில், அவன் தன்னுடைய முரட்டு விரல்களால் பதஞ்சலியின் உள்ளங்கைகளைத் தடவிப் பார்ப்பான். கடுமையான வேலைகளைச் செய்து கன்றிப்போயிருந்த அந்த மென்மையான கைகளைத் தன் முகத்தோடு சேர்த்தணைத்தவாறே அவன் நித்திரையாய்ப் போவான்.

வைகாசி கழிந்து ஆனி வந்தது. நீர் நிலைகளையும், பசுமையையும் வறட்டும் சோளகக் காற்று, கதிராமன் வெட்டியிருந்த காட்டையும் சருகாகக் காய்ச்சியிருந்தது. ஆடி பிறந்ததும் காட்டுக்கு நெருப்பு வைக்க வேண்டுமென எண்ணியிருந்தான். மரங்களையெல்லாம் வெட்டி அப்புறப்படுத்தி, தோட்டப்பயிர் செய்வதற்கு அரை ஏக்கரளவு நிலத்தைத் தயார்ப்படுத்திக் கொண்டான். அவர்களுடைய குடிசையிலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த வாய்க்காலில், வயல்விதைக்கும் காலங்களில்தான் தண்ணீர் பாயும். எனவே அவன் தன்னுடைய புதிய வளவுக்குள்ளேயே ஒரு கிணற்றையும் வெட்ட ஆரம்பித்தான். வெகு சீக்கிரத்தில், வாய்க்காலில் நீர் வற்றுவதற்கு முன்பாகவே அவன் வெட்டிய கிணற்றில் துல்லியமான நீர் சுரக்கத் தொடங்கிவிட்டது. கிணற்றில் நீரைக் கண்டதுமே தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினான் கதிராமன்.

உமாபதி இறக்கும்போது பதஞ்சலியிடம் அவர் விட்டுச்சென்ற பணம் இருநூறுருபா வரையில் இருந்தது. அதில் ஐம்பது ருபாவுக்குமேல் உமாபதியரின் ஈமச்சடங்குகளுக்குச் செலவாகிவிட்டது. எஞ்சியிருந்த பணத்தில் விதைநெல் வேண்டுவதற்கென எண்பது ருபாய் எடுத்து வைத்திருந்தான். மிகுதிப் பணத்தில் குடிசைக்குத் தேவையான கிடுகு, பதஞ்சலிக்குச் சேலைகள், தனக்குச் சாறம் முதலியவற்றையும், உணவுப் பொருட்களையும் வாங்கியிருந்தான். எனவே வருமானம் எதுவுமில்லாத நாட்களில் அவர்கள் மிகவும் சிக்கனமாக வாழவேண்டியிருந்தது. பிறந்ததுதொட்டுப் பச்சையரிசிச் சோற்றையே உண்டு வளர்ந்த அவர்கள், இப்போ கோதுமை மாவுடனும், மரவள்ளிக் கிழங்குடனும் காலத்தைக் கழித்தனர். பதஞ்சலியின் கைப்பாங்கில் தயார்செய்யப்பட்ட உணவுவகைகள், எளிமையாக இருந்தாலும், சுவையாக இருந்தன. நாள்முழுவதும் வியர்வைசிந்த வேலை, அதனால் ஏற்படும் பசி, அதைத் தொடர்ந்துவரும் நிம்மதி நிறைந்த நித்திரை, இவையெல்லாம் அந்த இளந்தம்பதிகளின் அழகுக்கு மேலும் மெருகையும் ஆரோக்கியத்தையும் அளித்தன.

---------------------------------------------------

23

ஆனிமாதக் கடைசிக்கூற்றில் ஒருநாள் இருட்டும் சமயத்தில் கோணாமலையர், குமுளமுனையிலிருந்து புறப்பட்டுத் தண்ணிமுறிப்பை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார். அத்தி பூத்ததுபோல் குமுளமுனைக்குச் சென்று, இருட்டும் சமயத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மலையரின் முகம் கோபத்தால் விகாரப்பட்டு இருண்டு கிடந்தது.

கதிராமன் அவரைவிட்டுப் பிரிந்து சென்றதன்பின் மலையர் வளவில் இவ்வளவு காலமும் திகழ்ந்த செந்தளிப்பு அழிந்துவிட்டது. எருமைகளை மேய்ப்பாரில்லை. அவை கட்டாக் காலிய்த் திரிந்தன. தோட்டத்தில் முறைப்படி இறைப்பு நடக்காததால் புகையிலைக் கன்றுகள் சேட்டமின்ற நின்றன. இதைப்போலப் பல அன்றாட அலுவல்களிலும் கதிராமன் இல்லாததால் ஏற்பட்ட பாதிப்புத் துலாம்பரமாகத் தெரிந்தது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும். அடுத்துவரும் ஆவணியில் மணியனுக்கு, குமுளமுனைச் சிதம்பரியருடைய மகளைப் பேசி முடிக்கவேண்டும். உழவுயந்திரம் வீட்டுக்கு வந்துவிட்டால் இன்னமும் நான்கு துண்டுக் காணியைக் குத்தகைக்கு எடுத்து விதைக்க வசதிப்படும் என்றெண்ணிய மலையர், ஆனி முடிவதற்குள் திருமணப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் சிதம்பரியரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

மலையர் எண்ணிப்போன விஷயம் கைகூடவில்லை. 'நீங்கள் கோவிக்கக் கூடாது மலையர்! உங்கடை கதிராமனுக்கு என்ரை பொட்டையைச் செய்வம் எண்டுதான் நான் நெடுக விரும்பி இருந்தனான். ஆனால் அதுக்குக் குடுத்து வைக்கேல்லை. உங்கடை மணியனுக்கும் என்ரை பொடிச்சிக்கும் ஒரு வயசுதானே! கடைசி ஒரு மூண்டு நாலு வயதெண்டாலும் வித்தியாசம் இருக்கிறதுதான் நல்லது!" என்று சிரித்துக்கொண்டே சிதம்பரியர் கூறி, தனக்கு இந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை மிகவும் நாசூக்காகத் தெரிவித்துவிட்டார். ஆனால், உண்மையிலேயே மணியன், கதிராமனைப்போல் சிறந்த உழைப்பாளி இல்லை என்பதுதான் அவர் மறுத்ததின் காரணம் என்பதை மலையர் அறிவார். இந்த வயதுப் பிரச்சனையைக் கிளப்பிச் சிதம்பரியர், தனது கடைசி நம்பிக்கையையும் பாழடித்துவிட்டார் என்பது மலையருக்கு நன்கு விளங்கியது.

'அவன்ரை வீட்டு முத்தம் மிதிச்சு நான் போய்க கேட்டதுக்குச் சிதம்பரியான் இப்படிச் சொல்லிப்போட்டான். உழவுமிசின் வைச்சிருக்கிறதாலைதானே இவனுக்கு உவ்வளவு கெப்பேர்!.... சீவனோடை இருந்தால், இந்த விதைப்புக்கு முன்னம் நானும் ஒரு மிசின் எடுக்கவேணும்!... அப்பதான் என்ரை மனம் ஆறும்!" என்று மலையர் அந்த இருட்டில் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, நட்சத்திரங்களின் ஒளியில் தண்ணிமுறிப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

உழவுயந்திரம் வாங்கவேண்டும் என்று இதுவரை மலையர் எண்ணியது கிடையாது. அவரிடம் இருந்தவை மூன்று ஏக்கர் வயலும், எருமை, பசுமாடுகளுந்தான். அவரிடம் பணமாய்ப் பெருந்தொகை இருக்கவில்லை. வருடா வருடம் நெல் விற்கும் வகையில் ஐந்நூறோ ஆயிரமோ கிடைக்கும். அதுவும் துணிமணி, நாள் விசேஷங்கள், அவருடைய குடி முதலியவற்றில் செலவழிந்துவிடும். இப்போதும் கையில் ஒரு ஆயிரம் ருபாவரை பணம் இருந்தது. இச் சிறுதொகை, உழவு இயந்திரம் வாங்குவதற்குப் போதாது. இருபத்தைந்து ஆயிரத்துக்குப் புது இயந்திரம் வாங்கத் தன்னால் முடியாவிடினும், அரைப் பழசாவது மிசின் ஒன்று வாங்கவேண்டுமென்று கணக்குப் போட்டுப் பார்த்தார் மலையர். எப்படியென்றாலும், தன்னுடைய வயலை ஈடு வைத்தாகிலும், அதுவும் போதாவிடில் மாடுகளை விற்றாவது, ஒரு உழவு இயந்திரம் வாங்கியே தீரவேண்டுமெனச் சங்கற்பம் செய்துகொண்ட மலையர், இப்போ தண்ணிமுறிப்பை நெருங்கிக் கொண்டிருந்தார்.

அவர் குமுளமுனையிலிருந்த சிதம்பரியர் வீட்டுக்குச் செல்லும்போது, கதிராமனுடைய குடிசைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையைக் கடந்துதான் சென்றார். ஆனால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்க விரும்பாதவர்போல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டே சென்றார். இப்போது, தான் எண்ணிச்சென்ற நோக்கமும் கைகூடாமல் போகவே, அவருடைய சினம் எல்லை மீறிவிட்டது. 'இந்தப் பொறுக்கியாலைதானே நான் இண்டைக்குப் போகாத இடமெல்லாம் போய் மொக்கயீனப்பட்டுக் கொண்டு வாறன்! என்று உறுமியவாறே கதிராமனுடைய குடிசை இருந்த திசையில் நின்று நிதானித்து நோக்கினார்.

மங்கலான நிலவொளியில் கதிராமன் வெட்டியிருந்த காடு வெளிப்பாகத் தெரிந்தது. 'நான் நினைச்ச காரியங்களுக்கெல்லாம் மண்விழுத்திப்போட்டு, அந்த வம்பிலை பிறந்தவளோடை இவன் இஞ்சை காடுவெட்டி வயல் செய்யவோ?" என்று கோணாமலையரின் நெஞ்சு கொதித்தது. உழவு இயந்திரம், நாலுபேரின் மதிப்பு என்றெல்லாம் மலையர் கட்டியெழுப்பிய ஆசைகளைக் கதிராமன் சிதைத்துவிட்டான். குமுளமுனைச் சிதம்பரியர் வீட்டில் அவர் பட்ட அவமானம், அவருடைய மனதை நிலைகுலையச் செய்துவிட்ட இந்த வேளையிலே, அவருடைய நெஞ்சில் குருரமானதொரு எண்ணம் உதித்தது. 'இவனுக்கு இண்டைக்குச் செய்யிறன் வேலை!" என்று உறுமியவாறே மலையர் தன் மடியைத்தடவினார். அங்கு நெருப்புப்பெட்டி தட்டுப்பட்டது. அதைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த ஒற்றையடித் தடத்தில் இறங்கி, கதிராமன் வெட்டியியிருந்த காட்டை நோக்கி நடந்தார் மலையர்.

காட்டை வெட்டி வீழ்த்தி நெரித்து, அது நன்றாக வெய்யிலிலும், காற்றிலும் காய்ந்து சருகான பின்புதான் நெருப்பு வைப்பார்கள். காட்டுக்குத் தீ வைக்கும்போது மிகவும் பயபக்தியுடன்தான் செய்வார்கள். பங்குனி, சித்திரை மாதங்களில் காட்டை வெட்டினால் அது நன்றாக உலர்ந்து, ஆடி மாதத்தில் நெருப்புக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கும். ஐயனை வேண்டிக்கொண்டு கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து, அந்தக் கற்பூரச் சுடரிலேயே தென்னோலைச் சூழ்களைக் கொளுத்தி, அவற்றைக் கொண்டு காற்றின் திசைக்கேற்ப காட்டுக்குத் தீ வைப்பார்கள். வெட்டிய காடு நன்றாகப் பற்றிப் பிடித்து எரியாமல் ஆங்காங்கு ஊடுபற்றி எரிந்துவிட்டால், சருகுகள் மட்டும் கருகிப்போய் பெருமரங்களும், கிளைகளும் எரியாது எஞ்சிவிடும். பின்னர் அவ்வளவு மரங்களையும், கிளைகளையும் தறித்து அப்புறப் படுத்துவதற்கு மிகவும் செலவாகும். பலரைக் கூலிக்கமர்த்தி வேலைவாங்கப் பணவசதி உள்ளவர்களால்தான் முடியும். எனவேதான் கதிராமனும் ஆடி பிறக்கட்டும், காட்டுக்கு நெருப்பு வைக்கலாம் என்றெண்ணி, அதற்கு வேண்டிய பொருட்களையும் சேகரித்துக் கொண்டு சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.

மகனுடைய எண்ணத்தில் மண்போட வேண்டும், அவன் படுகாடு வெளியாக்க முடியாமல் அவதிப்பட வேண்டும் என்று கறுவிக் கொண்டு, வஞ்சம் தீர்ப்பதற்குக் கோணாமலையர் துணிந்துவிட்டார். வேண்டுமென்றே வெட்டிய காட்டின் மேல்காற்றுப் பக்கமாய்ப் போய் ஓரிடத்தில் குந்திக்கொண்டு, சருகுகளைக் கூட்டிக்குவித்து அதற்கு நெருப்பு வைத்தார். நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கும் கதிராமனும், பதஞ்சலியும் வேளைக்கே நித்திரைக்குச் சென்றிருந்தனர். எனவே மலையர், நிதானமாக நாலைந்து இடங்களில் காடு ஊடுபற்றி எரியும் வகையில் நெருப்பு மூட்டிவிட்டுக் குருரமாகச் சிரித்துக்கொண்டே தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய நெஞ்சில் கொழுந்து விட்டெரிந்த சினமென்னும் தீ, இச் செயலின் பின், பெருமளவு தணிந்து காணப்பட்டது. ஆனால் அவர், கதிராமன் வெட்டிய காட்டுக்கு வைத்த தீ, ஆங்காங்கு வளர்ந்து பற்றிக் கொண்டிருந்தது.

------------------------------------------------------------

24

மலையர் தான் பெற்ற மகனுக்கு வஞ்சனை செய்யதபோதும், அவனை வளர்த்த செவிலித் தாய் முல்லையன்னை அவனை வஞ்சிக்க மனமில்லாதவளாய், வெட்டுக் காட்டிலே மலையர் இட்ட நெருப்பை நன்றாகவே பற்றவைத்துக் கொண்டாள்.

இந்தச் சமயம் காற்றும் விழுந்துவிடவே, உலர்ந்து கிடந்த அந்தக் காட்டில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. தாவியெழுந்த செந்தீயின் நாக்குக்கள் காட்டை நக்கியெடுத்தன. சுள்ளிகள் சடசடவென வெடித்தன. உய்யென்ற இரைச்சலுடன் தீச்சுவாலை உயரே எழுந்தது. அந்தச் சுற்றுவட்டாரத்தையே ஒளிமயமாக்கிக் கொண்டு எரிந்த காடு புகை கக்கியது.

கதிராமன் புகைநெடியை உணர்ந்து விழித்தபோது, எங்கோ நெருப்புப் பிடித்துக்கொண்டது என்பதைப் புரிந்து கொண்டான். சரேலென்று எழுந்தவன், பதஞ்சலியை அப்படியே கையிரண்டிலும் வாரித் தூக்கிக்கொண்டு, குடிசைப் படலையை உதைத்துத் திறந்து வெளியே வந்தான். அவன் நினைத்ததுபோல் குடிசையில் நெருப்புப் பிடித்திருக்கவில்லை. அவன் வெட்டியிருந்த காடு, குடிசையிலிருந்து ஏறக்குறைய நூறு பாகத் தொலைவில் இருந்தபடியால் குடிசைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட இடமிருக்கவில்லை.

இதற்குள் விழித்துக் கொண்ட பதஞ்சலி, 'என்ன காடு எரியுது?" என்று பதறிப்போய்க் கேட்டாள். 'ஆரோ காட்டுக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள் பதஞ்சலி!" என்று அமைதியாகக் கூறிய கதிராமன், மேலே வானத்தையும், சுற்றாடல் காடுகளையும் ஒருதடவை கூர்ந்து கவனித்தான். நெருப்பின் ஒளியில் அவனுடைய முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னகை பிறந்ததைப் பதஞ்சலி கண்டாள். 'ஆரோ வேணுமெண்டுதான் நெருப்பு வைச்சிருக்கினம் பதஞ்சலி! ஆனால் காட்டுக்கு நெருப்பு வைக்கிறதுக்கு இதைவிட நல்லநேரம் தேடினாலும் கிடையாது!... பார்!... காடு என்னமாதிரி எரியுதெண்டு! விடியுமுன்னம் முழுக்க எரிஞ்சுபோடும்!" என்று உற்சாகமாக விஷயத்தை விளக்கினான் அவன். பயம் அகன்ற பதஞ்சலி, எரியும் காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.

கதிராமன் தங்கள் குடிசைக்கு வரும் ஒற்றையடிப் பாதையருகில் சென்று குனிந்து கவனமாகப் பார்த்தான். அந்தப் பாதையில் காணப்பட்ட காலடித்தடங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவற்றைப் பார்த்துவிட்டுப் புன்முறுவலுடன் வந்த கதிராமன், 'நான் நினைச்சதுபோலை அப்புதான் காட்டுக்கு நெருப்பு வைச்சிருக்கிறார். அதுதானே காடு இப்பிடி முளாசி எரியுது!" என்று சிரித்தான்.

முற்கோபக்காரர் மூட்டும் தீ உடனே பற்றி நன்றாக எரியும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே மலையரைவிட இந்த வேலையைச் செய்வதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்தப் பகுதியிலேயே கிடையாது. அதை எண்ணித்தான் கதிராமன் சிரித்துக் கொண்டான். அதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பதஞ்சலியும் உடனே கலகலவெனச் சிரித்துவிட்டாலும், மறுகணம், மலையர் ஏன் காட்டுக்கு நெருப்பு வைக்கவேண்டும் என்பதை நினைத்துக் கலவரப்பட்டுப் போனாள். அதைக் கண்ட கதிராமன், 'எல்லாம் நன்மைக்குத்தான் நடக்குது! வா நாங்கள் படுப்பம்" என்று அவளை அணைத்துக் கொண்டான்.

மலையர் என்ன நினைத்துக் கொண்டு காட்டுக்குத் தீ வைத்தாரோ அதற்கு நேர்மாறாகக் காடு நன்றாகவே எரிந்திருந்தது. அடுத்த நாள் மாலையில் திடீரென வானம் இருண்டு நல்லதொரு மழையும் பெய்யவே கதிராமன்பாடு கொண்டாட்டமாய் விட்டது. ஏனெனில எரிந்த காட்டின் மண்ணின் கீழ்க் கிடக்கும் வேர்கள் நன்றாக வெந்த நிலையில் இருக்கையில், மழைபெய்து அவை திடீரெனக் குளிர்ந்தால், அந்த வேர்களிலிருந்து மீண்டும் தளிர்கள் கிளம்பாது. இது கதிராமனுக்கு எவ்வளவோ நன்மையாக இருந்தது. அவன் மறுநாளே பில வெளியாக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டான்.

------------------------------------------------------

25.

கதிராமனுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தையிட்டுப் பொறமைப் படுவதற்குக்கூட நேரமின்றிக் கோணாமலையர் உழவு இயந்திரம் வாங்குவதற்காகத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். நல்லதொரு நாளிலே முல்லைத்தீவுக்குச் சென்று, அங்கு வாழும் செல்வந்தரான சின்னத்தம்பியரிடம், தன்னுடைய வயலை ஈடாக வைத்து மூவாயிரம் ருபாவைப் பெற்றுக் கொண்டார்.

தண்ணீருற்றில் இருக்கும் மெக்கானிக் நாகராசாவுடன் கலந்து ஆலோசித்ததில் உருப்படியாக ஒரு உழவு இயந்திரமும், கலப்பையும் வாங்குவதற்கு இன்னமும் மூவாயிரம் ருபாய் வேண்டியிருந்தது. எனவே கையோடு நீராவிப்பிட்டி இப்றாகீமைக் கூட்டிக் கொண்டுவந்து தன் எருமை, பசு மாடுகளில் முக்கால் பங்கை விற்று இரண்டாயிரம் ருபாவைப் பெற்றுக் கொண்டார். ஏற்கெனவே கைவசம் வைத்திருந்த ஆயிரம் ருபாவுடன் இப்போ மொத்தமாக ஆறாயிரம் ருபா தேறியது. அதை எடுத்துக் கொண்டு மெக்கானிக் நாகராசாவின் உதவியோடு, முள்ளியவளையிலுள்ள ஒருவரிடம் ஆறாயிரம் ருபாவுக்கு உழவு இயந்திரமும், கலப்பையும் வாங்கிக் கொண்டார் மலையர். அவர் வாங்கிய உழவு இயந்திரம் சற்றுப் பழையதாக இருந்தாலும், அதைப் பார்க்குந்தோறும் கோணாமலையருக்குப் பெருமை பொங்கி வழிந்தது. நாகராசா ஒரு றைவரையும் மலையருடன் கூட அனுப்பி வைத்தான். அவருடைய அறியாமையையும், ஆசையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மெக்கானிக் நாகராசாவுக்கு இந்த பிசினசில் ஒரு கணிசமான தரகுத்தொகை கிடைத்திருந்தது.

தண்ணமுறிப்பை நோக்கிக் கடபுடாச் சத்தங்களுடன் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மட்காட்டைப் பிடித்துக்கொண்டு பெரும் பிரயத்தனத்துடன் பயணம் செய்துகொண்டிருந்தார் மலையர். றைவர் அடிக்கடி பீடி புகைத்துக் கொண்டும், அலட்சியமாக உழவு இயந்திரத்தைச் செலுத்திக்கொண்டு சென்றதும் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. 'மிசின் றைவர்மார் எல்லாரும் இப்பிடித்தானாக்கும்.... கெதியிலை மணியனை மிசின் ஓடப் பழகிக்கிப் போட்டால் பிறகேன் இவனை..." என்று தனக்குள் திட்டம் போட்டுக்கொண்டார்.

குமுளமுனையை நெருங்கியதும், மணியனுக்குப் பெண்தர மறுத்த சிதம்பரியர் வீட்டுக்கு முன்னால் வேண்டுமென்றே உழவுயந்திரத்தைச் செலுத்தச் செய்து அபாரத் திருப்திப்பட்டுக் கொண்டார் மலையர்.

உழவுயந்திரம் கதிராமனுடைய குடிசையிருந்த இடத்தைக் கடந்து செல்கையில், மலையர் அந்தப்பக்கம் திரும்பி ஒரு பெருமிதப் பார்வையைப் படரவிட்டார். தனது ஆசை நிறைவேறிய களிப்பில், கதிராமன்மேல் அவருக்கிருந்த கோபங்கூடச் சற்றுக் குறைந்து விட்டதுபோல் தோன்றியது.

வண்டில் விடுவதற்கெனப் போடப்பட்டிருந்த கொட்டகையினுள் உழவுயந்திரம் பக்குவமாக நிறுத்தப்பட்ட பின்னர்தான் மலையருக்கு நிம்மதி ஏற்பட்டது.

கோணாமலையர் உழவுயந்திரம் வாங்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் பற்றிக் கதிராமன் அறிந்திருந்தான். அதையிட்டு அவன் அதிகம் பொருட்படுத்தாவிடினும், தானும் மணியனும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பெருக்கிய கறவையினத்தை, மலையர் மிசின் வாங்குவதற்காக இறைச்சிக்கு விற்றுவிட்டார் என்பதை அறிந்தபோது ஒருகணம் அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆனால் அடுத்த நிமிடம், உழவுயந்திரம் வாங்கியதன் மூலம், தன் பெற்றோர்களின் வாழ்க்கை சிறப்புற்றால் அதுவும் நல்லதுதானே என எண்ணிக்கொண்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினான் கதிராமன்.

------------------------------------------------------

26

கதிராமனுக்கும் பதஞ்சலிக்கும் இப்போ அந்தப் புதுக்காடுதான் உலகமாக இருந்தது. ஆவணி முடியுமுன்னர் அவர்களுடைய புதுப்பிலவு நிலம் வெளியாக்கப்பட்டு, நாற்புறமும் உறுதியான வெட்டுவேலியுடன் விளங்கியது. சுமார் மூன்று ஏக்கர் பரப்பான அந்தக் கன்னி நிலத்தில் சாம்பர் படிந்த இருவாட்டி மண் பூத்துப்போய்க் கிடந்தது

புரட்டாதி பிறந்ததும் நெல் கொத்தும் வேலைகள் ஆரம்பமாகியது. நல்லதொரு வித்துநாளின் விடிகாலைப் பொழுதிலே கற்பூரம் கொளுத்தி ஐயனை வேண்டிக்கொண்டு விதைநெல்லைச் சிறிது விதைத்தான் கதிராமன். இந்த நெல்லுக் கொத்தும் வேலையில் கதிராமனுக்குச் சமமாகப் பதஞ்சலியும் ஈடுபட்டாள். நெல்லுக்கொத்து பத்து நாட்களுக்குள்ளேயே முடிந்துவிட்டது. புரட்டாதி எறிப்பில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் புழுதி குடித்தவாறே மழையைக் காத்துக் கிடந்தன. இந்நாட்களில் கதிராமன் கடுமையாக உழைத்து அந்தக் காணியைச் சுற்றிக் கிடந்த வெட்டுவேலியின் வெளிப்புறத்தே ஒரு பாகம் அகலத்திற்கு நிலத்தை வெளியாக்கி, சாமம் உலாத்துவதற்கு வசதியும் செய்துகொண்டான். ஆங்காங்கு தீவறைகள் மூட்டுவதற்காகப் பட்ட மரங்களையும், எரிந்த கட்டைகளையும் குவித்து வைத்துக் கொண்டான்.

ஆடி உழவு தேடி உழு என்பார்கள். மலையரின் வயலிலே இந்த வருடந்தான் ஆடி உழவு தவறிவிட்டது. உழவு நடக்க வேண்டிய சமயத்தில் எருமைக் கடாக்களை விற்றுப் பணமாக்கியிருந்தார் மலையர். உழவுயந்திரம் அவருடைய வீட்டுக்கு வருமுன்னரே ஆடி மாதம் ஓடி மறைந்துவிட்டது.

எனவே இப்போது ஈரம் காய்ந்து, நிலம் உலர்ந்துபோன மலையரின் வயலிலே, அவர் வாங்கிய உழவுயந்திரம் புற்களை விறாண்டி வலித்துக் கொண்டிருந்தது. பழைய கலப்பையாதலால், கொழுக்கள் ஆழமாக உழாமல், மண்ணையும் புல்லையும் விறாண்டிக் கொண்டிருந்தன. மணியன் றைவருக்குப் பக்கத்தில் மட்காட்டைப் பிடித்தபடி புட்போட்டில் நின்று கொண்டிருந்தான்.

மலையருக்கு உழவைப் பார்க்கையில் எரிச்சலாக வந்தது. மாடுகட்டி உழுதாலும் இந்நேரம் வயல் முழுவதையும் பாடுபாடக உழுது புரட்டியிருப்பார். அவரது கையிலிருந்த மீதி பணமும், உழவுயந்திரத்துக்கு டீசல் அடிக்கவும், ஒயில் வாங்கவும் கரைந்து கொண்டிருந்தது. அவருடைய உழவுயந்திரமும், கலப்பையும் சரியில்லாததால் வேறு எவரும் கூலிக்கு அவரைக் கேட்கவில்லை. ஏதோ தானும் விதைத்தேன் என்ற சாட்டுக்கு புழுதிவிதைப்புப் போட்டிருந்தார் மலையர்.

இப்போதெல்லாம் மணியனுக்குத் தோட்ட வேலைகளிலோ, வீட்டு வேலைகளிலோ ஈடுபாடில்லை. முன்பெல்லாம் தானுண்டு, தன்பாடுண்டு என்றிருந்தவன், இப்போது முற்றிலும் மாறிப்போயிருந்தான். உழவுயந்திரத்துடன் கூடவே வந்த றைவர், மணியனுடைய நெருங்கிய நண்பனாகவும், மரியாதைக்குரிய குருவாகவும் இருந்தான். உழவுயந்திரத்தை இயக்கும் பாடத்தை மட்டுமல்ல, நாகரீகமடைந்த இளசுகள் விரும்பிப் பயிலும் பல்வேறு பாடங்களையும் இந்தக் குருவிடமே மணியன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டான். இதன் முடிவு, மலையரின் பணம் முற்றாகக் கரைந்து போயிற்று.

------------------------------------------------------

27

ஐப்பசி பிறந்தது. கூடவே முதல்மழையும் பெய்தது. மண்ணில் மறைந்துகிடந்த நெல்மணிகள் முளைவிட்டன. ஈரஞ்சுவறிக் கடுமையாய்க் கிடந்த வளமான மண்ணின் மடியில் பயிர் முனைகள் தோன்றின. கார்த்திகை முற்பகுதிக்குள் கதிராமனின் புதுப்பில இளம்பச்சைப் போர்வையால் தன்னை மூடிக்கொண்டது. திரும்பிய திசையெல்லாம் ஈரம் குளித்த பசுமை! புதுக்காடு செய்யவேண்டும் அல்லது புதையல் எடுக்க வேண்டுமென்பர். இம்முறை அதிக மழை பெய்யாதிருந்துங்கூட புதுக்காடு சேட்டமாகத்தான் இருந்தது. மண்ணின் வளத்தையுண்டு மதர்த்து வளரும் நெற்பயிரின் மத்தியில் கதிராமனும் பதஞ்சலியும் கைகோர்த்துத் திரிந்தனர். கண்ணை இமை காப்பதுபோல் தன் வயலைக் காத்துவந்த கதிராமனின் கைதேர்ந்த பராமரிப்பில் அவன் வயல் செழித்தது. குடலைப் பருவங் கடந்து, பார்த்த கண்ணுக்குக் கதிராகிப், பின் கலங்கல் கதிராக்கி, இறுதியில் ஒரே கதிர்க் காடாகக் காட்சியளித்தது. அத்தனையும் பதரில்லா அசல் நெல்மணிகள்!

கதிராமனுடைய வளவும் வளங்கொழித்தது. தோட்டத்தில் கத்தரியும், கொச்சியும், வெங்காயமும், வெண்டியுமாகத் தளதளவென வளர்ந்து நின்றன. அவை பிஞ்சுபிடித்துக் காய்த்துக் குலுங்கியபோது பதஞ்சலி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

கதிராமனுடைய வயலும் வளவும் எவ்வளவு செழிப்புற்றதோ அதற்கு மாறாக, மலையரின் தோட்டமும், தறையும் வழமையான செழிப்பை இழந்துபோய் ஏதோ கடமைக்கு விளைந்திருந்தன.

இவற்றையெல்லாம் கண்ட மலையர் உற்சாகமிழந்து போனார். அவலநிலைக்குத் தாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சூழலில் துணிவோடு இறங்கி, அவற்றைத் திருத்தும் நோக்கமே இல்லாது, அடிக்கடி கரடியர் வளவுக்குப் போக ஆரம்பித்தார். நல்ல நாள் விசேஷங்களில் குடித்தவர் இப்போ அடிக்கடி சாராயம் வாங்கிவந்து குடிக்கத் தொடங்கினார். போதை மயக்கத்தில், தான் தண்ணிமுறிப்புக் கிராமசபை அங்கத்தினராக வரப்போவதையிட்டுப் பேசி மகிழ்ந்து கொண்டார். கரடியரும் அவருடைய மனதை நன்கு புரிந்து கொண்டவராய் மலையருடைய ஆசைகட்குத் தூபமிட்டுத் தானும் இலவசமாகக் குடித்துக் கொண்டார்.

இந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் பாலியார் கவனித்திருந்தாலும், தன் கருத்தைக் கூறும் தைரியம் அவளுக்கு இயற்கையாகவே இருக்கவில்லை. கதிராமனையும், பதஞ்சலியையும் காணாத கவலை அவளுடைய இதயத்தை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய இயல்பான சுறுசுறுப்பையும் இழந்து, இந்தப் பத்து மாதங்களுள் பத்து வயது கூடியவள்போல் தோற்றமளித்தாள். கதிராமனும் பதஞ்சலியும் எப்படி இருக்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? என்பனவற்றை, மலையர் வீட்டிலில்லாத சமயங்களில், அங்கு வருபவர்களைக் கேட்டு அறிந்து கொள்வதிலேயே பாலியாரின் கவனஞ் சென்றது. அந்தச் செய்திகள் அளித்த தெம்பினாலேயே அவள் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

-------------------------------------------

28.

ஒருபக்கம் அடர்ந்த காட்டையும், மறுபக்கம் செந்நெல் வயல்களையும் கொண்டிருந்த செம்மண் சாலையிலே தண்ணிமுறிப்பை நோக்கிச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். அவனுடைய நெஞ்சில் உற்சாகமிக்க எண்ணங்கள் நிறைந்திருந்தன.

சுந்தரலிங்கத்துக்கும் கதிராமனின் வயதுதான் இருக்கும். சிவந்த நிறமும், மென்மையான உடல்வாகும் கொண்ட அவனுடைய விரல்கள் பெண்களுடையவை போன்று நளினமாகவிருந்தன. கருகருவென்று தடித்து வளர்ந்த புருவங்களின் கீழே, அகன்றிருந்த அவன் விழிகளில் பளிச்சிடும் ஒளவீச்சு!

அவன் தண்ணிமுறிப்பை நெருங்கிய சமயம் பாதையின் வலதுபுறம் சற்றுவிலகித் தெரிந்த கதிராமனின் குடிசை அவனுடைய கண்களில் பட்டது. கோணாமலையரின் வளவு இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு சாலையோரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு, வாய்க்காலில் இறங்கிக் குடிசைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.

பச்சைப் பசேல் என்றிருந்த தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த அந்தக் கட்டுக்கோப்பான குடிசையின் எளிமையான அழகு சுந்தரத்தினுடைய மனதை மிகவுங் கவர்ந்தது. சுற்றிவரப் போடப்பட்டிருந்த வெட்டுவேலியின் முற்புறத்தில் இருந்த ஒரு கவட்டை மரத்திலான கடப்பு வழியாக அவன் அந்த வளவுக்குள் நுழைந்தான். அங்கு ஆளரவம் எதுவுமில்லை. சுத்தமாகப் பெருக்கப்பட்டு, ஓரங்களில் வாடாமல்லிகைச் செடிகள் சூழவிருந்த முற்றத்தில் நின்றுகொண்டு, 'வீட்டுக்காறர்' என்று ஒருதடவை சுந்தரலிங்கம் கூப்பிட்டான். அவன் அழைத்த ஒலிகேட்டு, வேலியின் ஓரத்தே ஓங்கி வளர்ந்திருந்த வீரை மரத்திலிருந்த தில்லம் புறாக்கள் சடசவென இறக்கையடித்துக்கொண்டு கலைந்தன.

குடிசையின் பின்புறமாக வெங்காயப் பாத்தியில் களை பிடுங்கிக் கொண்டிருந்த பதஞ்சலியின் காதிலும் அவன் அழைத்த குரல் விழவே, 'ஆரது?' என்று கேட்டவாறே எழுந்து வந்தாள்.

அடர்த்தியாக வளர்ந்திருந்த கருங்குழலை அலட்சியமாக அள்ளிச் சொருகியிருந்த அவளுடைய செம்பொன் முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. சட்டை அணியாமல் மார்புக்குக் குறுக்காகக் கட்டியிருந்த பச்சைநிறச் சேலை அவளின் மேனிக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. கல்யாணமாகிக் கன்னிமை கழிந்த திருப்தியான வாழ்விலே கிறங்கிப் போயிருந்த பதஞ்சலியின் தேகம் காலை வெய்யிலில் தங்கச்சிலை போன்று காட்சியளித்தது.

'ஆர் நீங்கள்? ஆரிட்டை வந்தனீங்கள்' என்று அவள் கேட்டபோது பதில் எதுவும் உடனே சொல்லாத அளவுக்கு சுந்தரம் அவளின் அழகைக் கண்டு அசந்து போயிருந்தான். அவளைப் போன்றதொரு கட்டழகியை அவன் இதுவரை சினிமாக்களில்கூடப் பார்த்ததில்லை. நாவற்பழங்கள் போலக் கறுத்து ஈரப் பசுமையுடன் விளங்கிய அவளுடைய விழிகளில் வெளிப்பட்ட காந்த ஒளி, அவனை எதுவுமே பேசாமற் செய்துவிட்டது.

பிறமனிதன் தன்னை அப்பிடி உற்றுநோக்குவது பதஞ்சலிக்கு வேடிக்கையாக இருந்தது. 'என்ன அப்பிடிப் பாக்கிறியள்?' என்று கேட்டுவிட்டு அவள் சிரித்தாள். சுந்தரம் மேலும் தடுமாறிப் போய்விட்டான். தன்னுடைய பார்வையை இனங்கண்டு கொண்டாளோ என்ற தவிப்புடன், 'இதுதானே கோணாமலையற்றை வீடு?' என்று சமாளித்துக் கேட்டான்.

கள்ளம் கபடின்றி நேருக்குநேர் பதஞ்சலியின் கண்களை நேருக்குநேர் சந்திக்க அவனால் முடியவில்லை. வளவின் ஒரு பக்கத்தில் பூவும் பிஞ்சுமாகக் குலுங்கிய கத்தரிச் செடிகளின்மேல் தன் பர்வையை மேயவிடட்டான்.

'இல்லை! இது அவற்றை மோன் வீடு!' என்ற பதஞ்சலி, 'நிண்டு கொள்ளுங்கோ, அவர் வயலுக்கை நிக்கிறார், நான் போய் அவரைக் கூட்டிவாறன்!' என்று கூறிவிட்டு வயலை நோக்கித் துள்ளிக் கொண்டு ஓடினாள். அவளின் பின்னழகு சுந்தரத்தின் நெஞ்சைத் தளம்ப வைத்தது.

சுந்தரலிங்கம் படித்தவன்தான். அதிலும் நிறையக் கதைகளும், நாவல்களும் முறையாகப் படித்திருந்தான். அவற்றில் அனேகமானவை காதல் என்ற புனிதமான உறவைப் பற்றியும், அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களையுமிட்டு மிக அழகாகச் சித்தரித்திருந்ததுடன் கற்பு, பண்பு என்பனபற்றியும் உயர்ந்த கருத்துக்களைக் கூறுபவையாக இருந்தன. தானும், தன் படிப்பும் என்றிருந்த அவனுடைய வாலிபநெஞ்சில் இந்தக் கருத்துக்கள் எல்லாம் மிக ஆழமாகப் பதிந்திருந்தன. பெண்ணழகையும், பெண்ணின் உறவையும் கூறும் பல கவிதைகளும் கதைகளும் அவனுடைய வாலிப உணர்வுகளைக் கூர்மைப் படுத்தியிருந்தபோதும், நற்பண்புகள் என அவன் தன் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டிருந்த சில கருத்துக்களின் காரணமாக, எனக்கென்று ஒருத்தி இவ்வுலகில் பிறந்திருப்பாள். அவளைக் காணவேண்டும். கவிதைகளிலும், கதைகளிலும் கண்ட இன்பங்களை அவள் துணையுடன்தான் அனுபவிக்க வேண்டும், என்ற தன் வாலிப ஆசைகட்கு, வரம்பிட்டு வாழ்ந்தவன் அவன்.

எனவே, வேறொருவன் மனைவியாகிய பதஞ்சலியின் கவர்ச்சிமிக்க அழகைக் கண்ட சுந்தரத்தின் உள்ளம் அலைமோதித் தவித்தது. அப்போது பதஞ்சலி கணவனுடன் திரும்பிவரும் காட்சியைக் கண்டான். தான் எங்கோ முன்னர் கண்டு இரசித்த ஒரு ஓவியத்தின் ஞாபகம் அவனுக்குச் சட்டென்று வந்தது.

காட்டுப் புஷ்பங்கள் மலர்ந்து கிடக்கும் ஒரு காட்டாற்றுக் கரை! அங்கே புற்றரையில் வில்லும் கையுமாகச் சாய்ந்திருக்கும் கார்வண்ண நிறங்கொண்ட சிவன்! அருகே அக்கினிக் கொழுந்துபோற் கையில் வேலுடன் முழங்கால்களை மடித்து ஒயிலாக அமர்ந்திருக்கும் உமையவள்! யாரோ ஒரு ஓவியன் தன் கைத்திறமையெல்லாம் ஒன்றுகூட்டி, சிவன் பார்வதியை வேடுவக்கோலத்தில் வரைந்திருந்த அந்தச் சித்திரத்தைச் சுந்தரலிங்கம் மிகவும் இரசித்திருந்தான்.

இதோ கண்ணெதிரே, இருண்ட காட்டைப்போன்ற கரிய நிறத்தவனான கதிராமன், வலிமையான உடலில் தசைகள் அசையக் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் வழமையாகக் காணப்படும் இளமுறுவல், இப்போ பதஞ்சலி ஏதோ கூறக்கேட்டு மலர்ந்திருந்தது. கருங்காலி மரத்தைச் சுற்றிப்படரும் அல்லைக் கொடிபோலப் பதஞ்சலி அவனை அணைந்து கொண்டே வந்தாள். தன்னுடைய அங்கங்களின் அழகும், கவர்ச்சியும் வேற்று மனிதனுடைய மனதில் விபரீதமான உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கக் கூடுமென்று அறியாத காரணத்தினால் அவள் ஓடி ஒளியவுமில்லை, நாணிக் கோணவுமில்லை.

கதிராமன் சுந்தரத்துடன் பேசிக்கொண்டிருக்கப் பதஞ்சலி குடிசையை ஒட்டியிருந்த குசினிக்குள் நுழைந்து தேநீர் தயாரித்தாள். சுந்தரம் தண்ணிமுறிப்புக்கு வந்த நோக்கத்தை அறிந்த கதிராமன், தகப்பனுடைய வளவுக்குச் செல்லும் தேவையான உதவிகளைத் தானும் செய்வதாகக் கூறினான். கதிராமனுடைய அமைதி நிறைந்த பண்பும், கம்பீரமும் சுந்தரத்தின் மனதை மிகவும் கவர்ந்தன. 'இந்தாருங்கோ!' என்று பதஞ்சலி தேநீரை நீட்டிபாது, அவளுடைய விரல்களின் அழகை மிக அண்மையில் சுந்தரம் பார்த்தான். பவளம்போன்ற நகங்களுடன் நீண்டு வளர்ந்திருந்த அந்த விரல்கள் அவன் மனதைக் கொள்ளை கொண்டன.

கதிராமனிடமும், பதஞ்சலியிடமும் விடைபெற்றுக் கொண்டு கோணாமலையர் வீட்டை நோக்கிப் புறப்பட்ட சுந்தரத்தின் நெஞ்சிலிருந்து, மலையேறி இறங்கியவன்போல் பெருமூச்சு வெளிப்பட்டது.

----------------------------------------------------------------------

29

தண்ணீருற்றைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சுந்தரலிங்கம், முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி தேறியிருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தபோதும், அவனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி மேற்கொண்டு படிக்க வைக்கும் அளவுக்கு அவனுடைய தகப்பனாரின் பொருளாதார நிலை இடங்கொடுக்கவில்லை. அவன் வேலைக்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதி, தண்ணிமுறிப்பில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கும்படியாகவும், கூடிய கெதியல் அப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும்படி செய்து, அவனை ஓர் ஆசிரியராக்கி வைப்பதாகவும் உறுதியளித்திருந்தார். இதன் காரணமாகச் சுந்தரலிங்கம், கோணாமலையரைச் சந்தித்து, அவருடைய உதவியுடன் ஒரு பாடசாலையை அமைக்கும் நோக்கத்துடனே தண்ணிமுறிப்புக்கு வந்திருந்தான்.

கோணாமலையரின் வீட்டையடைந்த சுந்தரலிங்கம், அவரிடம் தன் விருப்பத்தைக் கூறியதும், மலையருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. காடியர் அடிக்கடி கூறுவதுபோன்று தண்ணிமுறிப்பும் இப்போ பெரிய இடமாக மாறும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அத்துடன் தானே அந்த இடத்திற்குப் பெரியவன் என்பதை அங்கீகரிப்பதைப்போன்று எம்.பீயும், சுந்தரலிங்கத்தை; தன்னிடம் அனுப்பியிருந்தது மலையருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. வேளாண்மை சீரழிந்ததால் மனம் புழுங்கிக் கொண்டிருந்த அவருக்கு, பள்ளிக்கூடம் அமைக்கும் விஷயம் மிகவும் ஆறுதலைக் கொடுத்தது. பாடசாலை அமைக்கப்பட்டுவிட்டால் தன் கடைசி மகனான ராசுவுக்கும் கல்வி கற்பதற்கு வாய்ப்பு ஏற்படுமென்று எண்ணினார். ஆதலால் வேண்டிய உதவிகளைத் தான் செய்து தருவதாக அவர் வாக்களித்தார்.

சுந்;தரலிங்கம் மறுநாள் கூலியாட்களுடன் வநது பள்ளிக்கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். கோணாமலையர் வீட்டுக்கும், கதிராமனுடைய குடிசையிருந்த இடத்திற்கும் நடுவே சாலையோரமாக ஒரு கொட்டகை போடப்பட்டது. ஒரு கிழமைக்குள்ளாகவே கூரையும் கிடுகுகளினால் வேயப்பட்டு, கொட்டகையின் ஒருபக்கம் சிறியதொரு அறையாகவும் வகுக்கப்பட்டு விட்டது. கிராமத்துவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தனர். கதிராமன் பாடசாலைக்கு அரைச்சுவர் வைக்கும் வேலையில் கூடிய பங்கெடுத்து உதவினான். மலையர் அந்தப் பக்கம் அதிகமாக வரவேயில்லை. ஊருக்குப் பெரிய மனிதனான பின்னர் கண்டபடி இவ்வாறான வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வது தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவு என்று எண்ணினார்.

தை மாதத்தில் ஒரு நல்ல நாளில் தண்ணிமுறிப்பில் வாழும் எட்டுப்பத்துக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழெட்டு மாணவ, மாணவியரை வைத்துக்கொண்டு சுந்தரலிங்கம் பாடசாலையைத் தொடங்கினான. கோணாமலையர், காடியர் சகிதம் ராசுவைக் கூட்டிவந்து பாடசாலையில் சேர்த்துவிட்டுச் சென்றார். சுந்தரம் தன்னுடைய செலவிலேயே பிள்ளைகளுக்குப் புத்தகம், சிலேற்று முதலியவற்றை வாங்கிக் கொடுத்து, தன் உத்தியோகத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளும் துடிப்பில் உற்சாகமாக வேலை செய்தான்.

-------------------------------------------

30.

அறுவடைக் காலம்போல், கமக்காரனுக்கு மகிழ்ச்சி தரும் நாட்கள் வேறில்லை. சிந்திய வியர்வையெல்லாம் செந்நெல்லாக இறைந்து கிடக்கையில், அவர்களுடைய உள்ளங்கள் களிப்பால் நிறைந்திருக்கும்.

அதிகாலையிலேயே அரிவாள் சகிதம் வயலில் இறங்கிவிட்டால் கதிராமனும், பதஞ்சலியும் போட்டி போட்டுக்கொண்டு கதிர்களை அறுத்துக் குவிப்பர். வேகமாக அருவி வெட்டும்போது, பதஞ்சலி எதையாவது கூறிவிட்டுக் கலகலவெனச் சிரிப்பாள். கதிராமன் அவளையும், அவளுடைய குறும்புகளையும் வெகுவாக இரசித்தவனாக அருவி வெட்டிக் கொண்டிருப்பான். தங்குதடையின்றி ஒழுங்கான வேகத்துடன் அவனுடைய கரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்.

நண்பகலில் பாடசாலை முடிந்ததும் சுந்தரத்துக்குப் பொழுது போவதே பெரிய பாடாகவிருந்தது. புத்தகங்களைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு வாசித்தாலும், அவனுடைய மனதில் அடிக்கடி பதஞ்சலியின் அழகிய முகம் தலைகாட்டிக் கொண்டிருக்கும். அவன் எவ்வளவோ தீவிரமாக, அலையும் தன் மனத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டாலும், விஷமம் செய்யும் சிறுவனைப் போன்று அவனுடைய மனம் அடங்கிப்போக மறுத்தது. மனம் முரண்டு பிடிக்கும் நேரங்களில் சுந்தரலிங்கம் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஏகாந்தத்தை நாடி கலிங்குவரை செல்வான். அங்கு குளக்கட்டின்மேல் அமர்ந்துகொண்டு, எதிரே தேங்கிக் கிடக்கும் நீரையும், மரங்களிலிருந்து கீதமிசைக்கும் பறவைகளையும் பார்த்து இரசிப்பான். குளக்கட்டின் கீழே பல சமயங்களில் மான்கள், மரைகள், மயில்கூட்டங்களையும் காண்பான்.

அழகான குழந்தைகள், மலர்கள், விலங்குகள், பறவைகள் அவை யாருக்குச் சொந்தமாக இருந்தாலும் நாம் பார்த்து இரசிக்கத்தானே செய்கின்றோம்? பதஞ்சலி இன்னொருவன் மனைவியாய் இருந்தாற்கூட அவளின் அழகை, தான் கண்நிறையப் பார்த்து இரசிப்பதில் என்ன தவறு என்று தன்னையே கேட்டுக்கொள்வான். ஆனால் அவன் இதுவரை மனதில் வளர்த்த சில கொள்கைகள், அவ்வாறு செய்வது தவறு என்று அறிவுரை கூறும்.

இவ்வாறான போராட்டங்களை நடத்திய அவன் மனது ஆசை வயப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். நான் என்ன பதஞ்சலியையா பார்க்கப் போகிறேன்? இந்தக் காட்டு ஊரில் என்னுடன் பழகுவதற்கு வேறு யார் இருக்கின்றார்கள். கதிராமனைச் சந்தித்தாலாவது பொழுதுபோகும் என்று நினைத்து, அதன்படி அவனைச் சந்திக்கச் சென்றான்.

----------------------------------------------------------

31

சுந்தரலிங்கம் இரண்டாவது தடவையாகக் கதிராமனுடைய வளவுக்குச் சென்றபோது அறுவடை முடிந்திருந்தது. சாயங்கால நேரம், நெற்கதிர்களைச் சூடு வைப்பதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.

சுந்தரம் அங்குபோய், அவர்களுடைய வேலையில் பங்குகொள்ள முயன்றபோது, 'என்ன வாத்தியார், நீங்கள் இந்த வேலையெல்லாம் செய்யிறதே!... பேசாமல் நிழலுக்கை நில்லுங்கோ.... நாங்கள் செய்வம்!' என்று கதிராமன் அவனைத் தடுத்தான். சுந்தரத்திற்கு வயல் வேலைகளைச் செய்து பழக்கமில்லை. அவன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவனுடைய படிப்புக் கெட்டுவிடுமென அவனுடைய தகப்பனார் அவனை எந்த வேலைக்கும் அழைப்பதில்லை. இருப்பினும் சுந்தரம், கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து செய்த அந்த வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான்.

வெட்டிய கதிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கயிற்றினால் கட்டி அதைப் பதஞ்சலியின் தலையில் ஏற்றிவிடுவான் சுந்தரம். அவள் தன் கைகளை உயர்த்தித் தலையிலிருக்கும் கதிர்க்கட்டைப் பிடித்தவாறே சூட்டுக்களத்தை நோக்கி நடக்கையில், செப்புச் சிலையொன்று உயிர்பெற்று நடப்பதைப் போன்றிருக்கும். மாவக்கைகளைச் சேர்த்து வைக்கும்போதும், கதிர்க்கட்டைத் தலைக்குத் தூக்கிவிடும்போதும், இடையிடையே பதஞ்சலியினுடைய விரல்களின் ஸ்பரிசம் அவனுக்குக் கிட்டியது. அவளுடைய களங்கமற்ற முகத்தில் ததும்பிய அழகும், ஆரோக்கியமும் சுந்தரத்தினுடைய வாலிப உணர்வுகளையெல்லாம் மீட்டி நாதம் இசைக்கச் செய்துகொண்டிருந்தன.

பொழுது சாய்ந்துவிட்டபோது, சூடுவைக்கும் வேலை முடிந்த திருப்தி நிறைந்த உள்ளங்களுடன் அவர்கள் குடிசைக்குச் சென்றார்கள். கதிராமனும் சுந்தரமும் வாய்க்காலில் இறங்கிக் குளித்துவிட்டு வருவதற்கிடையில், பதஞ்சலி கிணற்றில் குளித்துவிட்டு, சுடச்சுட தேநீரை வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் மினுக்கிவிட்ட குத்துவிளக்கைப் போன்று பளிச்சென்றிருந்தது. பகல் முழுவதும் வயலில் கடுமையாக உழைத்திருந்தாலும் பதஞ்சலியின் உடலில் சோர்வென்பதே இல்லை. குசினிக்கு முன்னால் ஒரு சாக்கை விரித்து உட்கார்ந்துகொண்டு இரவுச் சமையலுக்கான ஏற்பாடுகளை மளமளவென்று செய்த பதஞ்சலி, முற்றத்தில் அமர்ந்திருந்த கதிராமன், சுந்தரம் ஆகியோரின் சம்பாஷணையில் உற்சாகமாகக் கலந்துகொண்டாள்.

காட்டோரங்களில் படர்ந்து காய்க்கும் குருவித்தலைப் பாகற்காயோடு, இறைச்சிக்கருவாடு, கொச்சிக்காய் சேர்த்துப் பதஞ்சலி ஆக்கியிருந்த கறியும், பச்சையரிசிச் சோறும், வேலைசெய்து களைத்துப் போயிருந்த சுந்தரத்துக்கு மிகவும் ருசித்தது. தண்ணிமுறிப்புக்கு வந்த நாள்தொட்டு, அவன் தானேதான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சமையற்பாகம் கைவராததால் அரைகுறை வேக்காட்டில் இறக்கிய சோற்றையும், உப்புப்புளி சரிவரப் போடாத கறிகளையும் சாப்பிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவனுக்குப் பதஞ்சலியின் பாகற்காய் தேவாமிர்தமாக இருந்தது. அதை எப்படிச் சமைத்தாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், 'இந்தப் பாவக்காய்க் கறி சோக்காயிருக்குது! இதை என்னண்டு சமைக்கறது?" என்று சுந்தரம் கேட்டதும், பதஞ்சலியை முந்திக்கொண்ட கதிராமன், 'வாத்தியார்!... உந்தச் சமையல் வேலையெல்லாம் விட்டுப்போட்டு இஞ்சை எங்களோடை சாப்பிடுங்கோ!... இனிச் சூடும் அடிச்சுப்போட்டால் நெல்லு தாராளமாய் இருக்கும்!" என்று உரிமையோடு சொன்னதும், 'அதுதான் சரி! நான் கேக்கோணும் எண்டு நினைச்சனான்! இஞ்சை நான் ஒருத்தி சமைக்க, நீங்கள் ஒரு தனி ஆள் ஏன் கஷ்டப்படோணும்?" என்று கதிராமனின் கருத்தை ஆமோதித்தாள் பதஞ்சலி. இதைக் கேட்ட சுந்தரத்தின் இதயம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஒருபுறம் வேளக்கு வேளை சுவையான வீட்டுச்சாப்பாடு, மறுபுறம் பதஞ்சலியை அடிக்கடி காணும் வாய்ப்பு என்று எண்ணி அவனுடைய மனம் குதூகலித்தது.

அதன்பிறகு சுந்தரலிங்கம் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்குக் கதிராமன் வீட்டுக்கு வந்துபோகத் தொடங்கினான். சுந்தரம் இயற்கையாகவே கவர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் பேசக்கூடியவன். ஆண்மயில் பேடுகளைக் கண்டதும் தன் வண்ணத் தோகையை விரித்துத் தன் அழகையெல்லாம் காட்டுவதுபோன்று, சுந்தரமும் பதஞ்சலியின் அருகில் இருக்கையில் புதியதொரு மனிதனாகவே மாறிவிடுவான். சுந்தரலிங்கத்தினுடைய அந்தஸ்தும், நேர்த்தியான உடைகளும், சுவையான பேச்சும், கதிராமன் பதஞ்சலி இருவரின் மனங்களிலுமே அவனைப்பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தன. காட்டின் மத்தியிலே தனிமையில் வாழ்ந்த அவர்களுக்கு, சுந்தரத்தைப்பற்றி வேறு எந்த வகையிலும் எண்ணத் தோன்றவில்லை.

எனவே சுந்தரம் தங்களுடைய குடிசைக்கு வரும் சமயங்களிலெல்லாம் பதஞ்சலி விழுந்து விழுந்து உபசரிப்பாள். விளாம்பழங்களை உடைத்துத் தேன்விட்டுக் கொடுப்பாள். அதை உருசித்தவாறே, அவன் பல்வேறு நாடுகளைப் பற்றியும் உருசிகரமாகக் கூறுவான். அவன் கூறுவதைக் கதிராமன் மிக அமைதியாக ஒரு மாணவனைப் போலிருந்து அக்கறையோடு கேட்பான். பதஞ்சலியோ கதைகளின் தன்மைக்கேற்ப வியப்பைக் காட்டுவதும், கலகலவெனச் சிரிப்பதுமாக இருப்பாள்.

மலையர் வளவில் நிலைமை வேறுவிதமாக இருந்தது. மெசின் பழுது பார்ப்பதற்கும், சாராயத்துக்குமெனப் பணம் செலவழிந்து கொண்டேயிருந்தது. மணியம் உழவுயந்திரத்தை இயக்கப் பழகிக்கொண்டதன் பின், அவனுடைய குரு சச்சிதானந்தம் தன்னுடைய ஊருக்குப் போய்விட்டான். ஆனால் மணியனோ தன் குருவை மிஞ்சும் அளவுக்கு இப்போ பல விஷயங்களிலும் முன்னேறியிருந்தான். இதன் காரணமாக, ஆங்காங்கு சில்லறையாகப் பெற்ற கடன்களை மலையர் தன் நெல் முழுவதையும் விற்றுக் கொடுத்தும் அவை தீரவில்லை. விரைவில் தான் கிராமசபை அங்கத்தவராகி, இதுவரை பட்ட கடன்களையெல்லாம் ஒரு கொந்துறாத்து வேலையிலேயே சம்பாதித்து, தீர்த்துவிடலாம் என்று மலையர் தீவிரமாக நம்பினார்.

------------------------------------

32.

சுந்தரலிங்கம் சாப்பாட்டுக்கான பணத்தைக் கதிராமனிடம் கொடுக்க முயன்றபோது, கதிராமன் அதை பெற்றுக்கொள்ள அடியோடு மறுத்துவிட்டதால், சுந்தரலிங்கம் ஒவ்வொரு வார இறுதியிலும், தன்னுடைய வீட்டுக்குச் சென்று திரும்புகையில், சீனி, கோப்பிக் கொட்டை போன்ற பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பான்.

அன்றும், அவன் தன் கிராமத்திற்குச் சென்று திரும்பி வந்தபோது ஒரு பலாப்பழத்தையும் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்திருந்தான். தண்ணீருற்றுப் பலாப்பழங்கள் சுவைக்குப் பெயர்பெற்றவை. பலாப்பழத்தைக் கண்ட பதஞ்சலி, குதூகலத்துடன் ஓடோடிவந்து அதைப் பெற்றுக் கொண்டதுடன், உடனடியாக அதைப் பிளந்து கீலங்களாக வெட்டவும் ஆரம்பித்தாள்.

குடிசையின் பக்கத்தேயிருந்த மாலுக்குள் உட்கார்ந்து, கதிராமனுக்கென வாங்கிவந்த பீடிக்கட்டு இரண்டையும் அவனிடம் கொடுக்கையில், பதஞ்சலி பலாப்பழப் கீற்றுக்களுடனும், தேங்காய் எண்ணெய்ப் போத்தலுடனும் உள்ளே வந்தாள். பலாப்பழக் கட்டிகளை அவர்கள்முன் வைத்துவிட்டுத் தன் கையில் தேங்காயெண்ணையை விட்டுக்கொண்டு, அதைக் கதிராமனுடைய உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பதஞ்சலி பூசினாள். அவள் கணவனுக்குச் செய்யும் பணியின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். கதிராமனுக்கு எண்ணெய் பூசி முடிந்ததும், சுந்தரத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்ட பதஞ்சலி, அவனுடைய கைகளைப் பிடித்து எண்ணெய் பூச ஆரம்பித்தாள். அவள் இவ்வாறு செய்வாளென்று சுந்தரலிங்கம் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. செம்பஞ்சு போன்ற அவளுடைய சிவந்த குளிர்மையான விரல்கள் தன்னுடைய உள்ளங்கைகளைத் தொட்டுத் தடவியபோது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவனுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. முகம் குப்பென்று ஓடி வியர்த்தது. ஆனால் பதஞ்சலியின் உடலிலோ, உள்ளத்திலோ ஏதொரு பதட்டமும் இல்லை. ஒரு குழந்தையின் கள்ளங்கபடற்ற வெள்ளை மனதோடு, தன் சகோதரனின் கைகளில் சாதாரணமாகப் பூசி விடுவதுபோல் அவள் ஆறுதலாக எண்ணையைப் பூசிக்கோண்டே, 'நல்லாய் எண்ணை பூசோணும்! இல்லாட்டில் பிலாப்பால் ஒட்டிப் பிடிச்சுக் கொள்ளும்!" என்று கூறிச் சிரித்துவிட்டுத் தன்னுடைய பங்கையெடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

இந்த நிகழ்ச்சியினால் வெகுவாகப் பரபரப்படைந்திருந்த சுந்தரம், உள்ளத் தவிப்புடன் கதிராமனைக் கூர்ந்து கவனித்தான். அவனும் அவள் செய்கையை மிகவும் இயல்பானதொன்றாகக் கருதியவன்போல், பலாப்பழச் சுளைகளைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தான். பல நூல்களைப் படித்து, பண்பாடு, நாகரீகம் முதலியவற்றைத் தெரிந்;துகொண்ட சுந்தரத்தின் படபடப்பு அடங்க வெகுநேரமாயிற்று.

அன்றிரவு கதிராமன் வீட்டில் உணவருந்திவிட்டுச் சென்ற சுந்தரத்திற்கு உறக்கம் வரவில்லை. வெளியே சென்று உலாவினால் நல்லதுபோற் தோன்றியது. பாடசாலை அறையைவிட்டு வெளியே வந்து, வாய்க்காலோரத்தில் விழுந்துகிடந்த ஒரு பட்ட மரத்தில் அமர்ந்து கொண்டான். வானவெளியெங்கும் ஒரே நட்சத்திரக் கூட்டமாக இருந்தது. அந்த விண்மீன்களில் பல மெல்லப் பறந்துவந்து அந்தக் காட்டுக் கிராமத்தின்மேல் இறங்கியதைப் போன்று, ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கு ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தன.

சுந்தரம் தன் உள்ளங்கைகளை ஒருதடவை பார்த்துக் கொண்டான். உள்ளத்தைக் கிளறச் செய்யும் அந்த மென்மையும் கதகதப்பும் நிறைந்த ஸ்பரிசம் தன்மேல் படர்வது போன்றதொரு உணர்வு! அந்த உணர்வு அவனுடைய உணர்ச்சிகளையெல்லாம் அலைக்கழித்தது. மேலே சட்டை அணியாமல், பூரித்திருக்கும் இளமார்புக்கு மேலே குறுக்குக் கட்டாகச் சேலையை உடுத்திக்கொண்டு, பதஞ்சலி தன் கைகளைப் பிடித்து எண்ணெய் பூசிய அனுபவம் மீண்டும் அவன் நெஞ்சில் ஒரு நிகழ்ச்சியாகத் தெரிந்தது. பலாப்பழத்தின் இனிமை கலந்த நறுமணம் காற்றில் வந்து பரவுவது போன்றொரு பிரமை. இனிமேல் ஆயுட்காலம் முழுவதுமே எப்போதாவது பலாப்பழத்தை நுகரநேர்ந்தால் அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் தன் நெஞ்சில் இனிக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

தூரத்தே இராக் குருவியின் குரல் ஒன்று ஒலிக்கத் தொடங்கியது. விட்விட்டு இசைக்கும் அந்த ஓசை ஏறத்தாழக் குயிலினது போலவே இருந்தாலும், அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அந்த ஒற்றைக்குரல் எல்லையற்றதொரு சோகத்தைச் சுமந்துகொண்டு, மின்மினிகள் ஒளிசிந்தும் அந்த இரவிலே அலைகளாய்ப் பரவுவது போன்றிருந்தது. 'அந்த இராக்குருவியின் கீதம் ஏன் இவ்வளவு சோகம் ததும்புவதாய் இருக்கின்றது? அதன் துணைதான் எங்கே?"

'எனக்கென்று ஒருத்தி இந்த உலகில் எங்கோ பிறந்திருப்பாள். அவளை ஒருநாள் நான் நிச்சயம் கண்டுகொள்வேன். கவிதைகளிலும், கதைகளிலும் சுவைத்த இன்பப் பொருளை, அவை எழுப்பிய நளினமான கனவுகளை, அவள் துணையுடன் நனவாக்கிச் சுவைக்க வேண்டும்.... அந்த வேளை எப்போது வரும்?" என ஏங்கியிருந்த சுந்தரம், இன்று பதஞ்சலியைக் கண்டபின், 'தனக்கென்றே பிறந்தவள் இன்று பிறனொருவன் மனைவியாய் இருக்கும் நிலையிலா தன் வாழ்வில் வந்து குறுக்கிட வேண்டும்?" என்று வெகுவாக வேதனைப்பட்டுக் கொண்டான். இராக் குருவியின் சோகீதம் கேட்கும் அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அவனுடைய கண்கள் கலங்கிக் கொண்டன.

'என்னுடைய விதி!" என்று தன்னையே நொந்துகொண்ட சுந்தரத்திற்குத் தான் படித்த கதைகளிலும், பார்த்த சினிமாப் படங்களிலும், காதல் கைகூடாத காதலனோ காதலியோ, தாம் காதலித்தவர் வேறு ஒருவரை மணமுடிக்கும் சந்தர்ப்பத்தில், 'இனி அவள் என் தங்கை" என்றோ, அல்லது 'இனி அவர் எனக்கு அண்ணன்" என்றோ காதலைச் சகோதர பாசமாக்கிக் கொள்ளும் கட்டங்கள் நினைவுக்கு வந்தன. ஆம்! ஏன் அவ்வாறே நானும் அவளை என் தங்கையாக்கி என் மனதைக் கட்டுப்படுத்திப் பழகக் கூடாது?.... எனக்குச் சகோதரிகள் எவரும் இல்லைத்தானே! பதஞ்சலியை என் சொந்தத் தங்கையாகவே நான் எண்ணவேண்டும். அவள் தன் அண்ணனுக்குப் பணிவிடை செய்வதுபோல் எனக்குச் செய்வதில்லையா? அவளால் அது முடியும்போது, கதிராமனால் அவள் அப்படிப் பழகுவதை இயல்பாக ஏற்க முடிந்தபோது, என்னாலும் அது நிச்சயமாக முடியும். ஆம்! பதஞ்சலி என் தங்கை! மீண்டும் மீண்டும் அந்தச் சொற்றொடரை வாய்விட்டுக் கூறிக்கொண்டு எழுந்த சுந்தரம், பாடசாலை அறைக்குட் கிடந்த தன் படுக்கையை நோக்கிச்சென்றான்.

விளக்கை அணைத்துவிட்டுப் படுத்த அவனுக்கு உறக்கம் வரவேயில்லை. இருளில் விழிகளைத் திறந்து கொண்டிருந்தவனுக்கு மீண்டும் பலாப்பழத்தின் இனிய மணம் வீசுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்மையின் மென்மையும் கதகதப்பும் நிறைந்த பதஞ்சலியின் விரல்களின் ஸ்பரிசம் அவன் கைகளுக்குள் குறுகுறுப்பதைப் போன்றதொரு பிரமை! விருட்டென்று எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு, தன் கைகளை ஓங்கி மீண்டும் மீண்டும் ஆவேசமாக நிலத்தில் அறைந்து கொண்டான். 'பதஞ்சலி என் தங்கை, பதஞ்சலி என் தங்கை!" என்று உரத்த குரலில் கூறியும், அந்தச் சொற்றொடர் அவன் உள்ளத்திற்குள் புகுந்துகொள்ளப் பிடிவாதமாக மறுத்தது.

----------------------------------------------------------

33

இந்தச் சம்பவத்திற்குப் பின் சுந்தரலிங்கம், பதஞ்சலி வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாலும் முன்போல் அங்கு அதிகம் தங்குவதில்லை. சிலவேளைகளில் அந்தச் சமயங்களில் கதிராமன் அங்கு இருக்கமாட்டான். பதஞ்சலி வழமைபோலவே அந்த நேரங்கிளலும் சுந்தரத்தை அன்போடு வரவேற்று உணவைப் பரிமாறுவாள். அவன் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவ வேண்டுமென்று பறிப்பாள். காட்டின் அமைதியான சூழலில் அந்தச் சின்னக் குசினிக்குள் அவனுக்கு மிக அண்மையிலிருந்து பதஞ்சலி உணவளிக்கையில் அவனுடைய மனம் அலையாய ஆரம்பித்துவிடும். அவளை நிமிர்ந்து பார்க்காமல், அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வந்துவிடுவான். படித்து நாலுபேருடன் பழகி நாகரீகமடைந்திருந்த சுந்தரத்திற்குத் தன்மீதே நம்பிக்கை இருக்கவில்லை. 'ஏன் வாத்தியர் சாப்பிட்ட உடனை ஓடுறியள்?" என்று அவள் தடுத்தாலும் நிற்காமல் வந்துவிடுவான். 'வாத்தியார் கனக்கப் படிச்சவர். படிச்ச ஆக்கள் இப்பிடித்தானாக்கும், நெடுக யோசிச்சுக்கொண்டு திரிவினம்!" என்று பதஞ்சலி தனக்குள் நினைத்துக் கொள்வாள். தண்ணீருற்றில் அவள் படித்த சைவப்பாடசாலையின் பெரியவாத்தியார் அப்படித்தான் எந்தநேரமும் சிந்தனை வாய்ப்பட்டிருப்பார்.

பொழுதும் போகாமல் புத்தகங்களிலும் சிரத்தை செல்லாமல் மனப்போராட்டங்களில் சதா உழன்றுகொண்டிருந்த சுந்தரம், இப்படியான சமயங்களில் கோணாமலையரின் வீட்டுக்குச் செல்வான். பாலியார் சுந்தரத்தைத் தன் மகனாகவே எண்ணிப் பாசங்காட்டினாள். தினம் கதிராமன் வீட்டிற்குச் சாப்பாட்டுக்குச் சென்றுவரும் சுந்தரத்தைப் பார்ப்பதே, கதிராமனையும் பதஞ்சலியையும் காண்பது போலிருந்தது பாலியாருக்கு. மலையர் அங்கு இல்லாத சமயங்களில் சுந்தரம் அங்கு வந்தால், இன்றைக்கு என்ன கறி? என்பது தொட்டுப் பதஞ்சலி முழுகாமல் கொள்ளாமல் இருக்கிறாளா என்பது வரையில் துருவித்துருவி அறிந்துகொள்வாள். எல்லையற்ற பிரிவுத்துயரில் ஆழ்ந்திருந்த அவளுக்குச் சுந்தரத்தின் வருகை மிகவும் ஆறுதலையளித்தது.


34.

நாட்கள் கழிந்தன. வயலிலே வேலையில்லை. கதிராமன் அடிக்கடி காட்டுக்கு நாய்களையும் கூட்டிச் சென்று உடும்பு, தேன் முதலியவற்றைக் கொண்டு வருவான். இன்றும் அவன் மத்தியானம் சாப்பிட்டுவிட்டுக் காட்டுக்குப் புறப்படும் சமயம் சுந்தரமும் பாடசாலைவிட்டு சாப்பாட்டுக்காக வந்திருந்தான். சுந்தரத்தின் கையில் மாதசஞ்சிகை ஒன்று காணப்பட்டது. அதைக் கண்ட பதஞ்சலி ஆவலுடன் வாங்கிப் பார்த்தாள். வழவழப்பான அதன் அழகிய அட்டைப்படத்தைப் பார்த்தவள், வாய்க்குள் எழுத்துக்கூட்டி அந்தச் சஞ்சிகையின் பெயரை வாசித்தாள். அதைக் கண்ட சுந்தரம், 'பதஞ்சலிக்குப் புத்தகம் வாசிக்கத் தெரியுமே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, 'ஓ! அவள் நாலாம் வகுப்புப் படிச்சவள்!" என்று கதிராமன் பெருமையோடு பதில் கூறினான்.

கதிராமனின பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே, 'நீ படிக்கேல்லையோ கதிராமு?" என்று சுந்தரம் கேட்டான். 'நான் கைக்குழந்தையாய் இருக்கேக்கை அப்பு, அம்மா இஞ்சை வந்திட்டினம். இஞ்சை எங்காலை பள்ளிக்குடம்! இந்தத் தண்ணிமுறிப்புக் காடுதான் என்ரை பள்ளிக்குடம்!" என்று சிரித்தபடியே பதில் சொல்லிய கதிராமனை ஏறிட்டுப் பார்த்தான் சுந்தரம். கள்ளமில்லாத உள்ளம். அமைதியான குணம். ஆரோக்கியம் ததும்பும் தேகம். தன்னம்பிக்கையுடன் ஒளிவீசும் கண்கள். எந்தப் பல்கலைக்கழகமுமே இவற்றையெல்லாம் ஒருவனுக்குக் கற்றுத்தர முடியாது. இந்த இருண்ட காடுகள்தானா இவனுக்கு இத்தனை சிறப்புக்களையும் வழங்கியிருக்கின்றன என்று ஒருகணம் வியந்துபோனான் சுந்தரம்.

'வாத்தியார்! சாப்பிட்டிட்டுப் பதஞ்சலிக்கு உந்தப் புத்தகத்தை வாசிக்கக் காட்டிக் குடுங்கோ! அவளெண்டாலும் வடிவாய் எழுத, வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறது நல்லதுதானே!" என்ற கதிராமன், 'சரி எனக்கு நேரமாகுது! நான் காட்டுக்குப் போறன்!" என்று விடைபெற்றுக் கொண்டான்.

சுந்தரத்திற்கு சோறு பரிமாறும் வேளையிற்கூடப் பதஞ்சலி அந்தச் சஞ்சிகையை வைத்துக்கொண்டு, படங்களைப் பார்ப்பதும் எழுத்துக்கூட்டிப் படிப்பதுமாக இருந்தாள். புதியதொரு விளையாட்டுப் பொம்மையைக் கண்ட குதூகலம் அவள் முகத்தில் தெரிந்தது. சாப்பிட்டானதும் மால் திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டான் சுந்தரம். மண்போட்டு உயர்த்தி, பசுஞ்சாணமும் முருக்கமிலைச் சாறும் கலந்து மெழுகப் பெற்றிருந்த அந்தத் திண்ணை தண்ணென்றிருந்தது.

சட்டிபானையை மூடிக் குசினியைச் சுத்தப்படுத்திக் கைகளை அலம்பிக்கொண்டு, மாலுக்கு வந்த பதஞ்சலி, திண்ணையின் கீழே அமர்ந்துகொண்டாள். மிகவும் ஆர்வத்துடனும் பயபக்தியுடனும் புத்தகத்தைத் திண்ணையின்மேல் வைத்து விரித்த அவளைக் கூர்ந்து கவனித்தான் சுந்தரம். தற்போதுதான் கழுவப்பட்ட அவளுடைய சிவந்த கைகள், கரும்பச்சை நிறமான திண்ணையின்மேல் செந்தாமரை மலர்களைப் போன்று விரிந்திருந்தன. படங்களைப் பார்த்த பதஞ்சலி, 'என்ன வாத்தியார் இது பாடப்புத்தகமே?" என்று சந்தேகத்துடன் கேட்டாள். 'இல்லை பதஞ்சலி! இது கதைப் புத்தகம். சின்னக் கதையளும், வேறை, பாட்டுக்கள், கட்டுரையளும் உதிலை கிடக்கு!" என்று சுந்தரம் சொன்னதும், ' ஆ! கதைப் புத்தகமே! எனக்கு ஒரு கதையை வாசிக்கக் காட்டித் தாருங்கோ வாத்தியார்! கதை கேக்கிறதெண்டால் எனக்குச் சரியான விருப்பம்!" என்று களிப்புடன் கூவினாள் பதஞ்சலி.

சுந்தரம் அந்தச் சஞ்சிகையை வாங்கி அதில் இருந்த ஒரு கதையைக் காட்டி, 'எங்கை இதை வாசி பாப்பம்!" என்றான். அவளுக்கு மிகவும் அருகே, வாழைத்தண்டு போன்றிருந்த அவளுடைய உடலின் இளமை மணத்தை நுகரும் அளவுக்கு நெருக்கமாக இருந்த சுந்தரலிங்கம், தான் மனனம்செய்து மனதில் பதிக்கமுயன்ற 'பதஞ்சலி என் தங்கை!" என்ற சொற்றொடரை அறவே மறந்துபோனான்.

அவள் மனதுக்குள் எழுத்துக்கூட்டிக் கதையின் தலைப்பைப் படித்தாள். 'இரண்டு உள்ளங்கள்" என்று ஒருதரம் சொல்லிப் பார்த்தவள், 'அதென்ன வாத்தியார் உள்ளங்கள்?" என்று வினவினாள். 'எங்கடை மனம் இருக்கெல்லே! அதுக்கு இன்னொரு பேர்தான் உள்ளம்!" என்று சுந்தரம் விளக்கியதும், அவள் மேலே தொடர்ந்து எழுத்துக்கூட்டி உரத்து வாசிக்க ஆரம்பித்தாள். சுந்தரம் அவள் வாசிப்பதையே கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தான். இளமை கொழிக்கும் அவள் முகத்தின் வண்டுபோன்ற கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்த அழகு அவன் மனதை ஈர்த்தது.

கதையின் முற்பகுதி எளிமையான சொற்களால் ஆக்கப்பட்டிருந்ததால், வசனங்களைப் படிக்கையிலேயே அவள் ஒரளவுக்கு அர்த்தங்களைப் புரிந்துகொண்டாள். இரண்டாவது பந்தியில் காதல் என்ற வார்த்தை வந்தபோது, அவள் நிமிர்ந்து சுந்தரத்தைப் பார்த்து, 'காதலெண்டால்?" என்று கேட்டாள். அவனுக்குச் சட்டென்று பதில் கூறத் தொயவில்லை. அவனையே பார்த்த அவள், அவனுடைய பதில் வரத் தாமதமானதும், 'என்ன? வாத்தியாருக்கே தெரியாதோ!" என்ற கேலியாகச் சிரித்தாள். 'காதல் எண்டால் கலியாணம் முடிக்கமுதல் ஆம்பிளையும் பொம்பிளையும் ஒருதரை ஒருதர் விரும்பியிருக்கிறதுதான்!" என்று சுந்தரம் விளக்கியபோது, 'எல்லாரும் கலியாணம் முடிக்கமுதல் ஒருதரை ஒருதர் விரும்புகினமே?" என்று சந்தேகம் நிறைந்தவளாய்க் கேட்டாள் பதஞ்சலி. தண்ணிமுறிப்புக்கு வந்தபின் பாலியார் மூலமாகக் கதிராமன் பதஞ்சலியினுடைய கதையை அறிந்திருந்த சுந்தரலிங்கம், ' ஏன்? நீயும் கதிராமனும் கலியாணம் முடிக்கமுதல் ஒருத்தரையொருதர் விரும்பியிருக்கேல்லையே! அதைத்தான் காதல் எண்டு சொல்லுறது!" என்று கூறியபோது, அவனுடைய குரல் சற்றுக் கம்மிப் போயிருந்தது. இப்படி அவன் சொன்னதும் அருவிபோலக் கலகவென்று சிரித்தாள் பதஞ்சலி! 'இல்லை வாத்தியார்! நாங்கள் கலியாணம் முடிக்கமுதல் இப்ப உங்களோடை கதைக்கிறது, சிரிக்கிறது போலைதான் அவரோடையும் கதைக்கிறனான்.... பின்னை அவரைக் கலியாணம் முடிக்கோணும் எண்டு நினைச்சுப் பழகேல்லை!" என்று கூறிவிட்டு, மீண்டும் சிரித்தாள் பதஞ்சலி. அவளுக்குத் தான் கதிராமனைத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் அவனோடு பழகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் சிரிப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது. இவளுடைய வெட்கம் கலந்த சிரிப்பு சுந்தரத்திற்குப் பெரிய புதிராக இருந்தது. அப்படியென்றால் பதஞ்சலி கதிராமனை முதலிலேயே விரும்பியிருக்கவில்லையா என்று எண்ணியவன், 'அப்ப உனக்குக் கதிராமனிலை விருப்பம் இல்லாமலே அவனை முடிச்சனி?" என்று கேட்டதற்கு, 'இல்லை வாத்தியார்! எனக்கு அவரிலை விருப்பம், விருப்பமில்லை எண்டில்லை.... அவர் வந்து தன்னை முடிக்க விருப்பமோ எண்டு கேட்டார். நான் ஒண்டும் பேசாமல் நிண்டன்.... பிறகு கலியாணம் முடிஞ்சுது!" என்று பதிலளித்த பதஞ்சலியின் முகம் நாணம் கலந்த மகிழ்ச்சியால் சிவந்திருந்தது. காட்டிலே புதையல் அகப்பட்டது போன்று கதிராமனுக்குப் பதஞ்சலி கிடைத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில், சுந்தரம் பெருமூச்சு விட்டுக்கொண்டான். பதஞ்சலி இவனுடைய நிலைமையைக் கவனிக்காது குதூகலம் நிறைந்த குறும்புடன் சட்டெனக் கேட்டாள். 'வாத்தியார்! நீங்கள் இன்னும் கலியாணம் முடிக்கேல்லைத்தானே? நீங்களும் ஆரோ ஒரு பொம்பிளையை இப்ப விரும்பிக் கொண்டிருக்கிறியளே?" எனப் பதஞ்சலி தன்னுடைய அகன்ற விழிகளை மலர்த்திக்; கேட்டபோது, சுந்தரத்தின் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவனுடைய கண்கள் சட்டெனக் குளமாகிவிட்டன. அதைக் கண்ட பதஞ்சலி கலங்கிப் போனாள். 'என்ன வாத்தியார் அழுறியள்?" என்று அவள் ஆதரவாகக் கேட்டபோது தன் உணர்ச்சிகளை மறைக்கப் பிரயத்தனப்பட்ட சுந்தரம் கரகரத்த குரலில், 'ஓம் பதஞ்சலி! நானும் ஒருத்தியை விரும்பிறன்தான்.... அது அவளுக்குத் தெரியாது..." என்று கூறிவிட்டு, வயல்வெளிக்கு அப்பால் தெரிந்த இருண்ட காட்டை நோக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கலங்கிய கண்களையும், கவலை தோய்ந்த முகத்தையும் கண்ட பதஞ்சலியின் விழிகளும் கலங்கிவிட்டிருந்தன. இயற்கையாகவே குதூகலமும், உற்சாகமும் நிறைந்தவளாய்ப் பதஞ்சலி இருந்தாலும், அவள் மிகவும் இளகிய இதயம் படைத்தவள். தன்னுடன் பழகும் எவர்மீதும் பாசத்தைச் சொரியும் அவள், அவர்களுடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அழுதுவிடக் கூடியவளாக இருந்தாள்.

சில நிமிடங்களுக்குள்ளேயே தன் உணர்ச்சிகளைச் சாதுரியமாக மறைத்துக்கொண்ட சுந்தரம், அவளுடைய கலங்கிய விழிகளைக் கவனித்துவிட்டு, 'இதென்ன பதஞ்சலி குழந்தைமாதிரி!" என்று சிரித்தான். அவனுடைய முகத்தில் சிரிப்பைக் கண்டபின்தான் அவளுடைய துயரம் அகன்றது. 'ஒண்டுக்கும் கவலைப்படக்கூடாது, பயப்பிடக்கூடாது எண்டு அவர் எப்போதும் சொல்லுவார்... நீங்கள் ஏன் வாத்தியார் கவலைப்படுறியள்?" என்று பதஞ்சலி தனக்குத் தெரிந்தவரை ஆறுதல் கூறவும், 'சிச்சீ! எனக்கென்ன கவலை! ... நாளைக்கு மிச்சக் கதையை வாசிக்கக் காட்டித் தாறன்.... இப்ப எனக்கு வேறை வேலை இருக்குது ... நான் போறன்" என்று கூறிவிட்டு அவன் சென்ற பின்பும், 'வாத்தியார் ஏன் அழுதவர்?" என்று தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டாள் பதஞ்சலி. தன்னுடைய சின்னஞ்சிறு உலகத்தைவிட வெளியுலக விஷயங்களை அறிந்திராத பதஞ்சலியின் வினாவுக்கு விடையெதுவும் கிடைக்கவேயில்;லை. அதன்பின் அவள் அந்த நிகழ்ச்சியை மறந்துபோய்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, எழுத்துக்கூட்டிப் படிப்பதில் உற்சாகமாக ஆழ்ந்து போனாள்.

---------------------------------------------------

35

வார இறுதியில் சனிஞாயிறு விடுமுறைக்கு வழக்கமாகத் தன் வீட்டுக்குச் செல்லும் சுந்தரலிங்கம், இம்முறை போகவில்லை. அன்று காலையில் கதிராமனுடன் கூடிக்கொண்டு காட்டுக்கு வேட்டைக்குச் சென்று, மாலையில் வீடு திரும்பும் வேளையில் மழைபிடித்துக் கொள்ளவே இருவரும் தெப்பமாக நனைந்துவிட்டனர். கிராமத்தை நெருங்கியதும், 'நீ வீட்டை போ, நான் சாறத்தை மாத்திக்கொண்டு வாறன்" என்று கதிராமனை அனுப்பிவிட்டுத் தன் இருப்பிடத்திற்குச் சென்ற சுந்தரத்திற்குத் தேகம் ஒரே அலுப்பாகவிருந்தது.

பகல் முழுவதும் வெய்யிலிலும் மழையிலும் அலைக்கழிந்த அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான். அன்றிரவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தவன், அடுத்தநாள் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியவில்லை. பேசாமற் படுத்திருந்த அவனைத் தேடிவந்த கதிராமன், அவனுடைய உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனான். அனலாகக் கொதித்தது சுந்தரத்தினுடைய உடம்பு. 'இஞ்சை தனியக் கிடந்து என்ன செய்யப் போறியள்?... வாருங்;;;;கோ வீட்டை போவம்!" என்று அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான் கதிராமன்.

மாலுக்குள் படுக்கையைப் போட்டு அவனைப் படுக்கவைக்க உதவிசெய்த பதஞ்சலி, அவனுடைய நெற்றியைத் தொட்டுப் பார்த்தபோது நெருப்பாகத் தகித்தது. அவள் தயாரித்த கொத்தமல்லிக் குடிநீரை வாங்கிக் குடிக்கும்போது சுந்தரத்தின் விரல்கள் குளிரால் நடுங்கின. தன்னுடைய சேலையொன்றைக் கொண்டுவந்து அவனுக்குப் போர்த்திவிட்டு, பதஞ்சலி வீட்டுவேலையைக் கவனிக்கச் சென்றாள். கதிராமன் அன்று முழுவதும் எங்கும் செல்லாமல் சுந்தரத்துடனேயே இருந்து அவனைக் கவனித்துக் கொண்டான்.

சுந்தரத்திற்குக் காய்ச்சல் விடவேயில்லை. எனவே இருட்டும் சமயத்தில் கதிராமன் லைற்றையும் எடுத்துக்கொண்டு குமுளமுனைச் செல்லையாப் பரியாரியிடம் மருந்து வாங்கி வருவதற்காகப் புறப்பட்டான். 'கோடை மழை பெய்தது, காலடியைக் கவனமாய்ப் பாத்துப் போங்கோ!" என்று அவனை வழியனுப்பிவிட்டு, காய்ச்சலில் முனகிக்கொண்டு கிடக்கும் சுந்தரத்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் பதஞ்சலி.

காய்ச்சலின் வேகுரத்தில் தன்னை மறந்து கிடந்த சுந்தரம், மறுபடியும் கண்களைத் திறந்தபோது, தன்னருகிலே இருக்கும் பதஞ்சலியைக் கைவிளக்கின் ஒளியிலே கண்டான். அவன் விழிகளைத் திறந்து பார்த்ததைக் கண்ட பதஞ்சலி, அவன் முகத்துக்கு நேரே குனிந்து, 'என்ன வாத்தியார் செய்யுது?" என்று கவலையோடு கேட்டபோது, சுந்தரம் அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.

அவளைத் தன்னருகிலே காண்கையில், துயரம் நிறைந்த அவளுடைய விழிகளைப் பார்க்கையில், காலங்கள்தோறும் தன்னுடன் அவள் தொடர்பு கொண்டவள்போல் அவனுக்குத் தோன்றியது. ஏழு பிறவிகளிலும் என்னைத் தொடர்ந்து வரவேண்டியவள், ஏன் இன்று இன்னொருவன் மனைவியாக என்னைச் சந்தித்தாள்? இந்தச் சந்திப்பு ஏன்தான் என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது? என்று மிகவும் வேதனைப்பட்டான் சுந்தரம். வேதனை முகத்தில் நிறைந்து விழிகள் கலங்கியபோது, பதஞ்சலி இரக்கத்தால் உந்தப்பட்டவளாக அவனுடைய நெற்றியை மெதுவாக வருடிக் கொடுத்தாள். அவளின் குளிர்ந்த ஸ்பரிசம் தன் நெற்றியின்மேல் தவழும் அந்தப் பொழுதிலேயே தன்னுடைய உயிர் போய்விடக் கூடாதா என்று அவன் ஏங்கினான். ஏக்கத்தின் விளைவாகச் சுரம் அதிகமாகிக் குலைப்பன் வந்து உடல் வெடுவெடென்று நடுங்கியது. தூக்கித்தூக்கிப் போடும் அவனுடைய உடலை எப்படியாவது அழுத்திப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற தீவிரத்தில், பதஞ்சலி அவனுடைய உடலை நடுங்கவிடாது அப்படியே தன்னுடனயே சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள். சுந்தம் சுரவேகத்தில், 'பதஞ்சலி! பதஞ்சலி!" என்று வாயோயாமல் பிதற்றிக் கொண்டிருந்தான்.

குமுளமுனையிலிருந்து திரும்பிவந்த கதிராமன் வாங்கிவந்த குளிசையைக் கரைத்துக் கொடுத்ததும் ஒருதரம் வாந்தியெடுத்த சுந்தரத்தின் காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து, காலையில் முற்றிலும் விட்டிருந்தது.

அவனுக்கு மிகவும் பரிவோடு பணிவிடை செய்த கதிராமனையும் பதஞ்சலியையும் பார்க்கையில், சுந்தரத்தினுடைய மனம் நெகிழ்ந்தது. இந்தக் காலத்திலே இப்படியும் ஒரு பிறவிகளா? காட்டின் நடுவே மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தும் இவர்களுடைய உள்ளங்கள்தாம் எத்தனை தூய்மையானவை! பாசத்தையும், பரிவையும் தவிர வேறெதையுமே காட்டத் தெரியாத இவர்கள் சாதாரண மனிதர்களல்ல! இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்! இன்றைய உலகின் சாதாரண மக்கள் மத்தியில் பிறந்து, அவர்களிடையே வளர்ந்து, கறைபடிந்த உள்ளங் கொண்டவனாகிய நான், எதற்காக இந்த இளந்தம்பதிகளின் வாழ்விலே வந்து குறுக்கிடடேன்? என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்த சுந்தரலிங்கம், அவர்கள் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், தன்னுடைய அறையிலேயே அன்றிரவு போய்ப் படுத்துக்கொண்டான்.

-------------------------------------------------

36.

ஒருவார விடுமுறையில் வீட்டுக்குச் சென்று உடலைத் தேற்றிக்கொண்ட சுந்தரலிங்கம், ஞாயிறன்று காலையிலேயே தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டுவிட்டான். 'இன்று லீவுதானே! நாளைக் காலையில் போகிலாமே!" என்று அவனுடைய தாய் தடுத்தபோதும், அவன் ஏதோ சாக்குப்போக்குச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.

காலை பத்துமணிபோல் தண்ணிமுறிப்பை வந்தடைந்தவன் நேரே கதிராமன் வீட்டுக்குச் சென்றான். முழுகிவிட்டுத் தன் கூந்தலை ஆற்றிக்கொண்டிருந்த பதஞ்சலி இவனைக் கண்டதுமே, 'எப்பிடி வாத்தியார் இப்ப சுகமே!... இண்டு முழுக்கக் காகம் கத்திக்கொண்டிருந்தது... நீங்கள்தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும்!" என்று மகிழ்ச்சியுடன் கூறி அவனை வரவேற்றாள்.

வீட்டில் நின்ற விடுமுறை நாட்களில் சுந்தரலிங்கம் தினந்தோறும் ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, 'இறைவா! என்னுடைய உள்ளத்திலிருந்து இந்தக் கீழ்த்தரமான நினைவுகளையெல்லாம் நீக்கிவிடு!" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தான். ஒருவாரம் பதஞ்சலியைக் காணாமல் இருந்ததனால் அவனுடைய உணர்வுகள் ஓரளவு தணிந்துபோய் இருந்தன. ஆனால் இன்று, பதஞ்சலி தன் நீண்ட கருங்கூந்தலைத் தோகைபோல் விரித்து, முகமெல்லாம் மலர அவனை அன்புடன் வரவேற்றபோது, ஊற்றங்கரை வினாயகர் அவனை முழுமுழுக்கக் கைவிட்டுவிட்டார்.

கதிராமன் காட்டுக்குப் போயிருந்தான். திண்ணையில் அமர்ந்து பதஞ்சல தன் கூந்தலை ஆற்றும் அழகையே கண்கொட்டாமல் பார்த்தான் சுந்தரம். அவனுடைய பார்வையைக் கவனித்த பதஞ்சலி, 'என்ன வாத்தியார் அப்பிடிப் பாக்கிறியள்?" என்று குழந்தைபோலக் கேட்டதற்கு, 'உன்ரை தலைமயிர் எவ்வளவு நீளமாய், வடிவாய் இருக்குது தெரியுமே!" என்று மனந்திறந்து சுந்தரம் கூறியபோது, ஒரு பள்ளிச் சிறுமியைப்போல் பதஞ்சலி வெட்கப்பட்டுச் சிரித்தாள். அவளுடைய கள்ளமில்லாத புன்னகையைக் கண்ட சுந்தரம், தான் அப்படிச் சொன்னதற்காகத் தன்னையே நொந்து கொண்டான். இன்று துணிந்து அவளுடைய அழகைப் பாராட்டியவன் நாளைக்கு என்னென்ன செய்வேனோ என்ற தவிப்பில் பேச்சை வேண்டுமென்றே வேறுதிசைக்கு மாற்றினான்.

பதஞ்சலி கொண்டவந்த கோப்பியை வாங்கிப் பருகியவன், 'கதை வாசிக்கிறது இப்ப எந்த அளவிலை இருக்குது?" என்று ஆவலுடன் வினவினான். 'இரண்டு மூண்டு கதை வாசிச்சுப் பாத்தன், ஆனால் சில சொல்லுகள் விளங்கேல்லை வாத்தியார்!" என்றாள் பதஞ்சலி. அவன், 'அதென்ன சொல்லுகள்?" என்று கேட்டபோது, பதஞ்சலி தலையை ஆற்றுவதை நிறுத்தி அச் சொற்களை நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தாள். விழிகளைத் தூரத்தே செலுத்தி அப்படித் தீவிரமாகச் சிந்திக்கையில் அவளுடைய முகம் கனவு காண்பதுபோல் மிக அழகாக இருந்தது. திடீரென்று அந்த அழகிய முகத்திலே ஓரு சலனம்! 'கற்பு எண்டு புத்தகத்திலை எழுதிக் கிடக்குது... அப்பிடியெண்டால் என்ன வாத்தியார்?" என்று கேட்டாள் பதஞ்சலி. முன்பொரு நாள் அவள் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டபோது, தான் பெரும் பிரயத்தனப்பட்டு அதை அவளுக்கு விளக்கியது ஞாபகம் வந்தது. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறியதுபோன்று, கற்பு என்பதற்கு, அதுவும் ஒரு இளம்பெண்ணுக்கு விளக்குவது அவனுக்குப் பெரிய சங்கடமாக இருந்தது.

சில நிமிடங்கள் ஆழ்ந்து சிந்தித்தவன், 'கற்பு எண்டு சொன்னால்.... ஒரு பொம்பிளை தனக்குச் சொந்தமில்லாத வேளை ஆம்பிளையோடை நெருங்கிப் பழகினால்... அவளுக்குக் கற்பில்லையெண்ட சொல்லுவினம்... அப்பிடி நடக்காத பொம்பிளைதான் கற்புடையவள்.." என்று சுந்தரம் இழுத்து இழுத்துக் கூறியபோது, பதஞ்சலியின் முகத்தில் சந்தேகம் கோடிட்டது. மௌனமாக ஆழ்ந்து யோசித்த அவள், 'ஏன் வாத்தியார்.... நீங்கள் எனக்கு ஒரு பிறத்தி ஆம்பிளைதானை... உங்களோடை நான் நெருங்கிப் பழகிறன்தானே! .... அப்பிடியெண்டால் நான் கற்பில்லாதவளே?" என்று கேட்டதும் சுந்தரம் பதறிப்போய், 'சிச்சீ! அப்பிடி இல்லை பதஞ்சலி!.. அன்பாய்க் கதைச்சு உன்னைப்போலை நெருங்கிப் பழகிறதைக் கற்பில்லை எண்டு சொல்ல முடியாது!.... தொட்டுப்பழகி நடந்தால்தான் வித்தியாசமாய்க் கதைப்பினம்!" என்று கூறினான். அப்பொழுங்கூட பதஞ்சலியின் முகத்திலிருந்த சந்தேகமூட்டம் அகலவேயில்லை. 'ஏன்.... நான் உங்களைத் தொட்டுப் புழங்கியிருக்கிறன்தானே!.... நீங்கள் குலைப்பன் காய்ச்சலோடை கிடக்கேக்கை நான் உங்களைப் பிடிச்சுக்கொண்டு பக்கத்திலை இருந்தனான்தானே?" என்று குழந்தைத்தனமாகக் கேட்டாள். அவளுக்குப் பதில் சொல்ல இயலாது தவித்தான் சுந்தரலிங்கம். 'ஏன் வாத்தியார் அப்பிடிப் புழங்கினால் என்ன? பொம்பிளையளுக்குக் கட்டாயம் கற்பு இருக்கத்தான் வேணுமே?" என்று சந்தேகம் தீராது பதஞ்சலி பல வினாக்களைத் தொடுத்தபோது சுந்தரம், கற்பின் வரைவிலக்கணத்தை, அதிகம் படித்திராத பதஞ்சலிக்கு எப்படி விளங்க வைப்பதென்று புரியாமல் திகைத்துப் போனான். 'பதஞ்சலி! கற்புடைய பொம்பிளை ஒருத்தி, ஒரு ஆம்பிளையைத்தான் தன்ரை புருசனாய் நினைப்பாள்.... அவனுக்குத்தான் அவள் பெண்சாதியாய் இருப்பாள்.... வேறை ஆம்பிளையோடை அப்பிடியெல்லாம் பழகமாட்டாள்..." என்று ஒருவாறு விளக்கிபோது, பதஞ்சலிக்கு அது புரிந்தும் புரியாததுபோல் இருந்தது. எனவே மீண்டும் அவனைப் பார்த்து, 'அப்பிடித்தானை வாத்தியார் எல்லாப் பெண்சாதிமாரும் நடப்பினம்!" என்றபோது, 'ஓ அப்பிடித்தான்!... ஆனால் சில பொம்பிளையள் அப்பிடி நடக்கிறேல்லை.." என்று விடை கூறினான் சுந்தரம். இதைக் கேட்டு மேலும் குழம்பிக்கொண்ட பதஞ்சலி, 'ஏன் வாத்தியார் அந்தப் பொம்பிளையள் அப்பிடி நடக்கினம்?" என்று மீண்டும் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

இதுவரை அவன் தன்னால் முடிந்தமட்டுக்கு பதஞ்சலியின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவகையில் கற்பு என்ற வார்த்தைக்குக் கருத்துக் கூறிக்கொண்டு வந்தான். ஆனால் ஒரு பெண் ஏன் கற்புத் தவறுகின்றாள்? அல்லது ஏன் ஒரு ஆண் ஒரு பெண்ணின் கற்பு கெடுவதற்குக் காரணமாயிருக்கிறான்? என்ற ரீதியில் பதஞ்சலியிடமிருந்து கேள்விகள் கிளம்பவே அவன் தடுமாறிப் போய்விட்டான். அவனுக்கே அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை. எனவே அவன், 'நீயேன் இப்ப இதுக்கெல்லாம் கடுமையாய் யோசிக்கிறாய்?... நான் இன்னும் வேறை புத்தகங்கள் தாறன்... அதுகளை வாசிச்சால் எல்லாம் தன்ரைபாட்டிலை விளங்கும்!" என்று பேச்சை மாற்றியபோது, அவள் ஓரளவு சமாதானம் அடைந்ததுபோல் காணப்பட்டாள்.

ஆனால் கல்வி, நாகரீகம், பண்பாடு என்ற விஷயங்களையெல்லாம் அறியாது, அமைதியான நீர்நிலை போன்றிருந்த அவளுடைய களங்கமற்ற உள்ளத்திலே, கற்பு என்ற சொல், ஒரு சிறிய கல்லைப்போல் விழுந்தபோது, அங்கு மெல்லிய அலைகள் எழுந்து, விரிந்து, பரந்து பின் மெதுவாக அடங்கிப்போயின. ஆனால் அந்தக் கல் அவளுடைய அந்தரங்கத்தின் அடியிலே மெல்ல இறங்கித் தங்கிக்கொண்டது.

------------------------------------------------------

37

என்று சுந்தரம், பதஞ்சலிக்குக் கற்பு என்ற வார்த்தைக்குத் தன்னால் இயன்றவரை விளக்கம் கொடுத்தானோ, அன்றிலிருந்து அவனும் வெகுவாக மாறிப் போனான். ஒரு பெண் எதற்காகக் கற்பிழக்கின்றாள்? அவளை ஏன் ஒரு ஆண் கற்பிழக்கச் செய்கின்றான்? என்ற வினாக்களெல்லாம் அவன் நெஞ்சைக் குடைந்தபோது, அவற்றையிட்டுப் பல நாட்களாக அவன் சிந்தித்திருந்தான்.

என்னுடைய மனம் எதற்காகப் பதஞ்சலியையே சுற்றிச் சுற்றி வரவேண்டும்? அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் உடலிலும், உள்ளத்திலும் பொல்லாத உணர்வுகள் கிளர்ந்து ஏன் என் மனதை கலைக்கின்றன? கள்ளமற்ற வெள்ளையுள்ளம் கொண்ட கதிராமனின் மனைவி அவள் என்றறிந்தும் ஏன் நான் அவளுடைய குரலைக் கேட்டுப் பரவசமடைகின்றேன்? என்றெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் சுந்தரம். அவன் எவ்வளவுதான் ஆழமாகச் சிந்தித்தாலும், தான் ஏன் இந்த உணர்வுகளுக்கெல்லாம் ஆட்படுகின்றேன் என்பதற்குத் தெளிவானதாகவும், ஏற்கக் கூடியதாகவும் விடையெதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தன் மனம் எதற்காகத்தான் அவளை விரும்பியபோதும், அவளை அப்படி விரும்புவதற்கோ அல்லது ஆற்றொழுக்குப்போல் போய்க்கொண்டிருக்கும் அவர்களுடைய அமைதியான வாழ்வில் தலையிடுவதற்கோ தனக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்ற ஒன்றைமட்டும் அவன் எந்தவிதச் சந்தேகத்துக்கும் இடமின்றிப் புரிந்துகொண்டான்.

இயல்பாகவே விவேகமான அவனுடைய மனம், 'இனிமேல் நீ அங்குபோய் பதஞ்சலியுடன் பழகுவது முறையல்ல!" என்று எச்சரித்தது. 'பதஞ்சலியை உன் தங்கைபோல் எண்ணி உன்னால் பழகமுடியாது! உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே! ஆதலால் அங்கு போவதை அடியோடு நிறுத்திவிடு! அவசியமானல் இந்தக் கிராமத்தையே விட்டு எங்காவது போய்விடு! அழகியதொரு கவிதையைப் போன்று இனிக்கும் அந்த இளந்தம்பதிகளின் இன்பவாழ்வைச் சிதைத்து விடாதே!" என்றெல்லாம் அவனுக்கு எடுத்துக் கூறியது. ஆனால் நுண்ணிய உணர்வுகளைக் கொண்ட அவனுடைய இதயம், 'பதஞ்சலி இந்தப் பிறப்பில்தான் இன்னொருவனின் மனைவியாகிவிட்டாள். காலங்காலமாக அவள் உன்னுடையவளாகத்தான் இருந்திருக்கின்றாள். இல்லையேல் இதுவரை கோடுபோட்டு வாழ்ந்த நீ எதற்காக அவளைக் கண்டதுமே உன் இதயத்தைப் பறிகொடுத்து விட்டாய்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தண்ணிமுறிப்பில் இருக்கப் போகின்றாய்? ஆசிரியர் கலாசாலைப் பரீட்சைக்குத் தோற்றிய நீ நிச்சயமாக அதில் தேறிவிடுவாய்! அப்படியானால் இந்த வருட இறுதிவரைதானே நீ இங்கிருப்பாய்! இந்த இரண்டு மாதங்களில் நீ அங்கு போய்வருவதில் என்னதான் கெட்டுப்போகும்? இந்தச் சில நாட்களுக்காவது உன்னைப் பிறவிகள்தோறும் தொடர்ந்துவரும் பதஞ்சலியின் அருகிலேயே இருந்துவிடு!" என்று கெஞ்சியது.

சுந்தரலிங்கத்தின் விவேகம் நிறைந்த மனச்சாட்சியும், ஆசைகளில் ஊறிய இதயமும் தர்க்கித்துக் கொண்டபோது, இறுதியில் வெற்றியடைந்தது அவனுடைய இதயமேதான்!

ஒவ்வொரு நாளும் துடிக்கும் நெஞ்சுடன் பதஞ்சலியின் விட்டுக்குச் செல்வான். அவள் பரிமாறும் சோற்றின் ஒவ்வொரு பருக்கையையும் உருசித்துச் சாப்பிடுவான். அவன் கொடுத்த புத்தகங்களை அவள் கொஞ்சங் கொஞ்சமாக வாசித்து விளங்கிக் கொண்டபோது அவளுடைய திறமையைக் கண்டு மகிழ்ந்தான். அவள் அங்குமிங்கும் தங்கத்தேர் போன்று அசைந்து நடக்கையில், மனங்கொண்ட மட்டும் அந்தத் தெய்வீக அழகைத் தன் இதயத்தில் நிறைத்துக் கொண்டான்.

இந்த இரண்டு மாதங்களில் பதஞ்சலியும் அவளையறியாமலே ஒரு மெல்லிய மாற்றத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்தாள். அவள் எழுத்துக்கூட்டிப் படித்த புத்தகங்கள், அவளை மெல்ல மெல்ல ஒரு புதிய உலகின் வாசல்களுக்கு அவளை அழைத்துச்செல்ல ஆரம்பித்திருந்தன. அந்தப் புதிய உலகத்தின் நடவடிக்கைகளும், நிகழ்ச்சிகளும் அவளுக்கு மிகவும் புதுமையாகவும், ஏதோ சில உணர்வுகளைக் கிளறிவிடுபவையாகவும் இருந்தன. பூட்டியிருக்கும் ஒரு அறையைப் பார்க்கக் கூடாதென்று உத்தரவிடப்பட்டிருந்த ஒரு குழந்தையின் முன், அந்த அறையின் கதவுகள் திடீரெனத் திறந்துகொண்டது போன்ற உணர்வு. அதற்குள் என்னதான் இருக்கின்றது பார்க்க ஆசைப்படும் ஒருவகை ஆவல்! அப்படி இரண்டொரு தடவை எட்டிப் பார்த்தபோதும், அங்கு கண்டவற்றை இனங்கண்டு கொள்ளமுடியாத ஒரு தவிப்பு! இத்தகைய அனுபவங்களைத்தான் அந்தப் புத்தகங்கள் அவளுக்கு ஏற்படுத்தியிருந்தன.

நிலக்கிளியைப் போன்று, தன் இருப்பிடத்தையும், கதிராமனையும் மட்டுமே இதுவரை சுற்றிப் பறந்த பதஞ்சலியின் களங்கமற்ற உள்ளத்தை, அந்தச் சின்ன வாழ்க்கை வட்டத்திற்கு வெளியேயும் இடையிடை பறப்பதற்குத் தூண்டின அந்தப் புத்தகங்கள். ஆனால் இந்த எல்லைமீறுதல்கள் யாவும் தெளிவற்றவையாக, ஒருசில நிமிடங்களுக்கு நீடிப்பவையாகத்தான் இருந்தன. இதன் காரணமாகப் பதஞ்சலி தன் வழமையான குறும்பையும், குதூகலத்தையும் ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கிவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்துபோவாள். ஆனால் மறுகணம் தன் சொந்த வாழ்க்கை வட்டத்துக்குள் சிறகடித்துப் பறப்பவளாக, பழைய பதஞ்சலியாக மாறிவிடுவாள்.

---------------------------------------------------------------

38.

அன்று சுந்தரத்துக்கு நல்லூர் ஆசிரியர் கலாசாலையிலிருந்து கடிதம் வந்திருந்தது. பிரவேசப் பரீட்சையில் அவன் தேறியிருப்பதாகவும், தைமாதம் ஒரு குறிப்பிட்ட திகதியில் அவனை அங்கு வரும்படியாகவும் கூறியது அந்தக் கடிதம்.

அந்தக் கடிதத்தைக் கண்டதுமே, எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது, தானும் இனி ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியன், தனக்கும் நிரந்தரமானதொரு தொழில் கிடைத்துவிட்டது என மகிழ்ந்துபோனான் சுந்தரம். மறுகணம் பதஞ்சலியைப் பிரிந்து போகவேண்டுமே என்று அவன் மனம் வேதனைப்பட்டுக் கொண்டது. அன்று மத்தியானம் சாப்பிடச் சென்றபோது அவன் விஷயத்தைச் சொன்னதும், கதிராமனும் பதஞ்சலியும் அச் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. 'என்ன வாத்தியார், நீங்கள் இஞ்சை வந்து ஒரு வரியமாகேல்லை. அதுக்கிடையிலை போக வெளிக்கிடுறியள்!" என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். அவன் விஷயத்தை மேலும் தெளிவாக விளக்கியபோது, 'அப்பிடியே சங்கதி! இரண்டு வரியம் படிச்சு முடிஞ்சதும பெரியவாத்தியாராய் இஞ்சை வருவியள்தானே!" என்று பதஞ்சலி ஆறுதல்பட்டுக் கொள்கையில் சுந்தரத்துக்கு நெஞ்சை எதுவோ செய்தது.

அவன் எந்த முடிவுக்குக் காத்திருந்தானோ அந்த முடிவு வந்துவிட்டது. பதஞ்சலியின் சின்னக் குடிசையைச் சுற்றிப் படர்ந்திருக்கும் தன் ஆசைக் கொடிகளை இனிமேல் அறுத்துக்கொண்டு போகவேண்டுமே என அவன் இதயம் வேதனைப் பட்டது. ஆனால் அவன் மனம், 'இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இனிமேலும் அது நிகழாமலிருப்பதற்கு இதைவிட வேறு வாய்ப்பும் இல்லை! எனவே வேதனைப்படாதே!" என்று தேறுதல் கூறியது.

அடுத்த நாள் மாலையில் சுந்தரலிங்கம் தான் தண்ணிமுறிப்பை விட்டுச் செல்லும் விஷயத்தை மலையரிடம் தெரிவப்பதற்காக அங்கு சென்றிருந்தான். அங்கே மலையர் முற்றத்தில் மான்தோலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரு போத்தல் சாராயம் இருந்தது. தை மாதத்தில் அவன் தண்ணிமுறிப்புக்கு முதலில் வந்தபோது கண்ட மலையருக்கும் இன்று காணும் மலையருக்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தான். மழை தண்ணியின்றி வரண்டிருந்த அவருடைய வளவைப் போன்றே அவரும் உடற்கட்டிழந்து உருக்குலைந்து போயிருந்தார். சுந்தரம் செய்தியைச் சொன்னதும், அவர் பெரியமனுஷத் தோரணையில் 'அது நல்லதுதானே தம்பி! ஆனால் எம்பியிட்டைச் சொல்லிப் பள்ளிக்கூடத்துக்கு வேறை ஆளைப் போடோணும். நான் அவரிட்டை ஒருக்காப் போகத்தான் வேணும்!" என்று கூறிக்கொண்டார். விஷயத்தை அறிந்த பாலியாரின் மனம் விழுந்துவிட்டது. துயரினால் ஆரோக்கியம் குன்றியிருந்த அவள், 'இனிமேல் ஆர் எனக்கு என்ரை புள்ளையைப்பற்றி அடிக்கடி வந்து சொல்லப்போகினம்!" என்று மனதுக்குள் வேதனைப் பட்டுக்கொண்டாள். இருப்பினும் அதை வெளிப்படையாகக் கூற இயலாமல், 'இவ்வளவு நாளும் தம்பி ராசு நல்ல விருப்பமாயப் படிச்சான். இனி ஆரார் வருகினமோ?" என்று பெருமூச்செறிந்து கொண்டாள். அவர்களிடமிருந்து சுந்தரலிங்கம் விடை பெற்றுக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அவனெதிரே ராசு வந்துகொண்டிருந்தான்.

அவனுடைய கைப்பிடியிலே ஒரு நிலக்கிளி காணப்பட்டது. மரகதப் பச்சை நிறமான அதன் இறகுகள் மாலை வெய்யிலில் பளபளத்தன. சுந்தரம் அந்த நிலக்கிளியை ராசுவிடமிருந்து கையில் வாங்கிப் பார்க்கையில், அது மனிதக் கரங்கள் தன்மீது பட்டுவிட்டனவே என்ற துடிப்பில் படபடவெனச் சிறகுகளை அடித்துக்கொண்டது. தன் குண்டுமணிக் கண்களை மலங்க மலங்க விழித்துக்கொண்டே அது அவனைப் பரிதாபமாப் பார்த்தது. 'இதை என்னண்டு ராசு புடிச்சனீ" என்று சுந்தரம் கேட்போது, 'இதுகளைப் புடிக்கிறது வெகு சுகம் வாத்தியார்! இதுகள் தங்கடை நிலப் பொந்துகளுக்குக் கிட்டத்தான் எப்பவும் இருக்குங்கள்! பொந்து வாசலிலை சுருக்கு வைச்சால் சுகமாய்ப பிடிபட்டுப்போடுங்கள்!" என்று ராசு பெருமையடன் கூறினான்.

பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. காட்டுக் கிராமங்களில் வாழ்பவர்கள் இருண்டு சற்று நேரத்திற்குள்ளாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு நித்திரைக்குச் சென்றுவிடுவது வழக்கம். சுந்தரமும் இரவு ஏழுமணிக்கே பதஞ்சலி வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அறைக்கு வந்துவிடுவான். இன்றும் அவ்வாறு சாப்பிட்டுவிட்டு வரவேண்டுமென்ற எண்ணத்தில் அவன் அங்கு சென்றபோது, கதிராமன் இரவு வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

காடியரிடம் துவக்கை வாங்கிக்கொண்டு அவன் இரவு வேட்டைக்குப் போவது வழக்கம். அவன் சென்றபின் பதஞ்சலி குடிசைக்குள் அரிக்கன் லாம்பைக் கொளுத்தி வைத்துக்கொண்டு தூங்கிப் போவாள். அவளுக்குத் தனியே படுப்பதில் பயமெதுவுமில்லை. இன்றும் கதிராமனுக்கும், சுந்தரலிங்கத்துக்கும் சாப்பாட்டைக் கொடுத்து வழியனுப்பிவிட்டுத் தானும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

கதிராமன் பள்ளிக்கூடத்தைக் கடந்துதான் காடியர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமாதலால் சுந்தரத்துடன் சேர்ந்தே சென்றான். அவன் பாடசாலை வாசலடியில் சற்றுத் தாமதித்தபோது, செம்மண்சாலைக்கு மேற்கே கிடந்த காடுகளைத் தழுவிக்கொண்டு குளிர் சில்லென்று வீசியது. 'என்ன இண்டைக்கு காத்து ஒருமாதிரி அடிக்குது?" என்று கூறிக்கொண்டே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். பாதி நிலவின் ஒளியில் மேகங்கள் என்றுமில்லாத வேகத்துடன் மேற்கிலிருந்து கிழக்கே விரைவதைக் கண்டான். என்ன? இன்று ஒருநாளும் இல்லாதவாறு என்று தனக்குள்ளே வியந்துகொண்டவன், 'நீங்கள் போய்ப் படுங்கோ வாத்தியார், நான் வாறன்!" என்று சொல்லிவிட்டுக் காடியரிடத்தில் போய்த் துவக்கையும் வாங்கிக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தான்.

-------------------------------------------------

39

முன்னிரவு கடந்தபோது, கதிராமன் கூளாமோட்டையை அடைந்தான். அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நின்ற ஒரு பாலை மரத்தில் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டபோது, இதுவரை இலேசாக வீசிக்கொண்டிருந்த கச்சான் காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. இடையிடையே வந்துவிழுந்த ஓரிரண்டு மழைத்துளிகள் ஈயக்குண்டுகள் போன்று, வேகத்துடன் வீழ்ந்தன. மழை பலமாகப் பெய்யும்போல் தோன்றியதால் கதிராமன் மரத்திலிருந்து இறங்கி, அந்தப் பெரிய பாலைமரத்தின் அடிப்பாகத்திலிருந்த கொட்டுக்குள் ஒதுங்கிக் கொண்டான். ஒரு ஆள் குந்தியிருக்கப் போதுமான அந்த மரக்கொட்டுக்குள் வசதியாக உட்கார்ந்துகொண்டு எதிரே தெரிந்த கூளாமோட்டையையும், அதைச் சுற்றிநின்ற மரங்களையும் கவனித்தான் கதிராமன். கச்சான் காற்று உக்கிரமாக வீசத்தொடங்கியது. மோட்டையின் கரைகளில் நின்ற வீரைமரங்கள் காற்றில் கிளைகளைச் சிலுப்பிக்கொண்டு பயங்கரமாக ஆடின. பாலைமரக் கொட்டுக்குள் இருளோடு இருளாகப் பதுங்கியிருந்த கதிராமன், 'சூறாவளியுக்கையல்லோ அம்பிட்டுக்கொண்டன்!" என்று எண்ணிக்கொண்டான்.

பாடசாலை அறையினுள் படுத்து நித்திரையாயிருந்த சுந்தரலிங்கம் சட்டென்று விழித்துக் கொண்டபோது, வெளியே சூறாவளிக் காற்றுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டே வீசியது. அவன் எழுந்து அறைக் கதவைத் திறந்தபோது, மழைச்சாரலும், இலைச்சருகுகளும் அவன் முகத்தில் பறந்துவந்து மோதின. வெளியே சென்று பார்க்கமுயன்ற அவனைக் காற்று தள்ளி வீழ்த்திவிடுவது போன்று வேகமாக வீசியது. கதவை இறுகப் பற்றிக்கொண்டு அவன் வெளியே பார்த்தபோது, மங்கிய நிலவில் புயலின் கோரப்பிடியில் அகப்பட்டுக் காட்டு மரங்களெல்லாம் தலைவிரி கோலமாகப் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. மரக்கிளைகள் சடசடவென முறிந்து புயலோடு அள்ளுண்டு பறந்தன. மரங்களும் மரங்களும் மோதிக்கொள்ளும் ஓசை! இலைகளும் கிளைகளும் காற்றிலகப்பட்டு எழுப்பும் ஓலம்! இவையெல்லாம், உய்யென்று கூவிய புயலின் கூச்சலுடன் சேர்ந்து, அந்தப் பிரதேசத்தையே கலக்கின. ஒரே பேய்க்காற்று!

சுந்தரம் தன் வாழ்க்கையிலே இப்படியொரு பயங்கரப் புயலைக் கண்டதில்லை. உலகத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்ட ஊழிக்காற்று இதுதானோ என்று அவன் பீதியடைந்து நின்றபோது, ஆங்காரத்தடன் வீசிய புயலில் பாடசாலையின் பாதிக்கூரை பிய்த்துக்கொண்டு பறந்தது. பாடசாலை மேற்கோப்பியம் காற்றின் வேகத்தைத் தாங்கமுடியாமல் கிறீச்சிட்டது. எங்கே பாடசாலைக் கட்டிடம் விழுந்துவிடுமோ என்று பயந்த அவன் மனதில் சட்டென்று வந்தது பதஞ்சலியின் நினைவு!

இந்தப் பயங்கரப் புயலில் அவள் எவ்வாறுதான் அந்தச் சின்னக் குடிசைக்குள் இருக்கிறாளோ? கதிராமனும் அவளுடன் இல்லையே! இந்நேரம் குடிசையின் கூரை பிடுங்கி எறியப்பட்டிருக்குமே! என்று எண்ணித் தவித்த சுந்தரம், ஆவேசம் வந்தவன்போல் அந்த இருளிலும், புயலிலும் பதஞ்சலியின் குடிசையை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினான்.

எலும்பின் நிணக்கலங்களையும் உறைய வைக்கும் கடுங்குளிர்! பாதை தெரியாதவாறு மரக்கிளைகள் ஒடிந்து விழுந்து சாலையெங்கும் இறைந்து கிடந்தன. இடையிடையே காற்றின் வேகம் தணியும்போது விழுந்துகிடக்கும் மரங்களிலே மோதிக்கொண்டு ஓடினான் சுந்தரம். மறுபடியும் காற்று பேய்க்கூச்சலுடன் மரங்களைப் பிடுங்கி எறிகையில், சாய்ந்துவிழுந்த மரங்களோடு ஒண்டிக்கொள்வான். சுமார் கால்மைல் தொலைவிலிருந்த பதஞ்சலியின் குடிசையை அடைவதற்குள் அவன் பட்ட பிரயத்தனம் கொஞ்சமல்ல. ஒருவாறு குடிசையை அவன் சென்றடைந்தபோது, முற்றத்தில் இருந்த மால் சரிந்து கிடப்பதைக் கண்டான். குடிசை உயரமில்லாததாலும் உறுதியாகவும் இருந்ததால் ஒருவாறு புயலை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நின்றது.

ஆவேசத்துடன் வீசிய காற்று சற்றுத் தணிந்தபோது அவன் ஓடிச்சென்று குடிசையின் படலையடியில் நின்று, 'பதஞ்சலி! பதஞ்சலி!" என்று கத்தினான். புயலின் பயங்கர இரைச்சலில் அவன் அழைத்தது அவளுக்குக் கேட்டிருக்க முடியாது. எனவே படலையைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே சென்றான். அங்கே அச்சத்தால் அகன்ற விழிகளுடன் பதஞ்சலி குடிசையின் ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருப்பது அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.

சுந்தரத்தைக் கண்டதும், பயத்தாலும் குளிராலும் நடுங்கிக் கொண்டிருந்த அவள் எழுந்து நின்றுகொண்டே, 'நான் நல்லாய்ப் பயந்துபோனன் வாத்தியார்!" என்று கூறுகையில், திறந்திருந்த படலையின் வழியே காற்று குடிசையின் உள்ளும் வேகமாக வீசியது. 'வெளியிலை ஒரே பேய்க் காத்தாய்க் கிடக்கு! இண்டைக்கு உலகம் அழியப் போகுதுபோலை!" என்று சுந்தரம் சொன்போது, 'படலையைச் சாத்துங்கோ வாத்தியார்! காத்து விளக்கை அணைச்சுப்போடும்!" என்றாள் பதஞ்சலி.

அவன் படலையைக் கயிற்றால் கட்டினான். அவனுடைய தலைமயிர் மழையில் நனைந்திருந்ததைக் கண்ட பதஞ்சலி, என்ன வாத்தியார் நல்லாய் நனைஞ்சு போனியள்! முந்தியும் மழையிலை நனைஞ்சுதான் குலைப்பன் காச்சல் வந்தது.. இஞ்சைவிடுங்கோ, நான் இதாலை துடைச்சுவிடுறன்" என்று கூறிக்கொண்டே கொடியில் தொங்கிய தன்னுடைய சேலையை எடுத்துக்கொண்டு அவனருகில் சென்றான். எடுத்த எடுப்பிலே அச் சேலையால் அவனுடைய தலையைத் தானே துவட்டிவிட எண்ணியவள், சட்டென்று ஏதோ நினைத்தவளாய் சேலையை அவனிடமே நீட்டினாள்.

அதை வாங்கிக்கொண்ட சுந்தரத்தின் விழிகள் பதஞ்சலியின் கண்களை ஒருதடவை சந்தித்துக் கொண்டன. ஒருவகைக் கலக்கத்துடன் மிதந்த அவள் விழிகள் சட்டெனத் தாழ்ந்துகொண்டன. அந்தக் கணப்பொழுதுக்குள் அவளில் ஏற்பட்டிருந்த ஒரு மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனான் சுந்தரம். நேர்கொண்ட பார்வையும், சுடர்விடும் ஒளியும் கொண்ட அவளுடைய கண்கள் ஏனிப்படித் தன்னுடைய பார்வையைச் சந்திக்க முடியாமல் குனிந்து கொள்ளவேண்டும் என்று சுந்தரம் குழம்பிப்போனான்.

அவளுடைய சேலையை வாங்கித் தலையைத் துவட்டிக் கொண்ளும்பொழுது, சுந்தரத்துக்கு அந்தச் சேலையில் அவளுடைய உடலின் சுகந்தம் மணத்தது. இதுவரையில் சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் பதஞ்சலிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைத் தவிர, அவனுடைய பிற உணர்வுகளெல்லாம் உறங்கிப் போயிருந்தன. ஆனால் அவளுடைய சேலையால் முகத்தைத் துடைக்கும்போது, அதன் ஸ்பரிசம் அவனுடைய உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிட்டன. அன்றொருநாள் பலாப்பழம் சாப்பிடுகையில் பதஞ்சலி, தன்னுடைய கரங்களையும் பிடித்து எண்ணெய் பூசியது நினைவுக்கு வந்தது. கூடவே அவளுடைய விரல்களின் மென்மையும், கதகதப்பும் நிறைந்த அந்த ஸபரிசம் மீண்டும் அவனுடைய கைகளுக்குள் படர்வது போன்றதொரு உணர்வும் ஏற்பட்டது.

குடிசைக்கு வெளியே புயல் ஓலமிட்டது. தன் கரங்களை உயர்த்தி மேலே கட்டியிருந்த கொடியில் சேலையை விரித்தபோது, பதஞ்சலியின் கட்டுடல் மங்கலான விளக்கொளியில் அற்புதமாகப் பிரகாசிப்பதைச் சுந்தரம் கண்டான். பெண்மையின் பூரிப்பு அத்தனையும் நிறைந்து விளங்கும் அவளின் உடலைப் பார்க்கையில், அவனுடைய நெஞ்சில் எழுந்த உணர்வலைகள் மெல்ல மெல்லப் படர்ந்து உடலெங்கும் வியாபித்தன.

எங்கோ ஒரு மரம் முறிந்துவிழும் மளார் என்ற ஓசை பயங்கரமாக ஒலித்தது. சுந்தரம் சட்டென்று உணர்ச்சிகளை அடக்கி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு, இதற்குமேலும் இந்தச் சின்னக் குடிசைக்குள் நான் இவளுடன் தரித்திருப்பது நல்லதல்ல என்று எண்ணியவனாய், 'நீ இதுக்கை படுத்திரு பதஞ்சலி! நான் வெளியிலை மாலுக்கை போய்ப் படுக்கிறன்" என்று கூறினான். உணர்ச்சிகளை அடக்கியதால் அவனுடைய குரல் கம்மிப் போயிருந்தது. 'என்னை விட்டிட்டுப் போகாதையுங்கோ வாத்தியார்! எனக்குப் பயமாய்க் கிடக்கு... அப்பிடியெண்டால் நானும் வாறன்!" என்று துடித்துக்கொண்டு புறப்பட முயன்றாள் பதஞ்சலி.

உக்கிரமாக வீசும் இந்தப் புயலில் எப்படித்தான் அவளை அவன் வெளியே கூட்டிக் கொண்டுபோக முடியும்? புயலில் சரிந்துபோய் நிற்கும் அந்த மால் எந்தநேரமும் விழுந்துவிடக்கூடும் என்றெல்லாம் சிந்தித்த சுந்தரம், அந்தச் சின்னக் குடிசையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொண்டான். எனவே தன் மன எழுச்சிகளை ஓரளவு அடக்கிக்கொண்டு, 'பதஞ்சலி! நீ அந்த மூலையிலை படு! நான் இந்தப் பக்கத்திலை படுக்கிறன்" என்று கூறியபோது, பதஞ்சலி தனது பாயில் போய்ப் படுத்துக்கொண்டாள்.

வெளியே புயல் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. ஒருசமயம் சோவென்று மெல்லிய இரைச்சலுடனும், மறுகணம் காதைச் செவிடாக்கும் பயங்கர ஒலியுடனும், மாறி மாறிக் காற்று சுழன்று சுழன்று அடித்தது.

குடிசையின் ஒரு மூலையில் படுத்திருந்த சுந்தரலிங்கத்தின் உள்ளத்திலும் புயல் வீசியது. பொல்லாத மென்மை உணர்வுகள் ஒருசமயம் புயலைப்போன்று கிளர்ந்தெழுந்து அலைக்கழிப்பதும், மறுசமயம் அடங்கிப் போவதுமாக இருந்தது. அவன் பதஞ்சலி படுத்திருக்கும் பக்கம் திரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக்கொண்டான்.

உணர்வுகளுடன் போராடிக்கொண்டு மெல்ல அயர்ந்து கொண்டுபோகும் சமயத்தில், உக்கிரமாக வீசிய புயற்காற்று, குடிசையின் கூரையிலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்துக்கொண்டு போயிற்று. அந்தத் துவாரத்தினூடாக உள்ளே நுழைந்து சுழன்றடித்த காற்றில் அரிக்கன் லாம்பு திடீரென அணைந்தது. கண்களைக் குருடாக்கி விடுவதுபோல் பளிச்சென்று ஒளிவீசிய ஒரு மின்னலைத் தொடர்ந்து, காதைக் கிழிக்கும் ஓசையுடன் அண்மையில் எங்கோ இடி விழுந்தது.

இடியோசை கேட்டு துணுக்குற்று விழித்துக்கொண்ட பதஞ்சலி, விளக்கு அணைந்துபோய் இருள் சூழ்ந்திருந்ததால் திகிலடைந்தவளாய், வீரிட்டு அலறிக்கொண்டு ஓடிச்சென்று சுந்தரத்தின் மேலே விழுந்து அவனை இறுகப் பற்றிக் கொண்டாள். பிய்ந்துபோன கூரையின் வழியாகச் சீறிக்கொண்டு நுழையும் சூறாவளியின் பேய்க்கூச்சலும், இடிமுழக்கத்தின் அதிர்வேட்டும் அவளைப் பயத்தால் நடுங்கச் செய்தன. அவள் சுந்தரத்தை இன்னமும் நெருக்கமாகக் கடடிக்கொண்டாள்.

இதுவரையும் சுந்தரலிங்கம் எந்த உணர்ச்சிகளை மறக்கவும், மறைக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தானோ, அந்த உணர்ச்சிகளெல்லாம் பதஞ்சலியின் நெருக்கமான அணைப்பிலே கட்டவிழ்த்துக்கொண்டு கிளம்பிவிட்டன. சட்டை அணியாது, மார்புக்குக் குறுக்கே சேலைமட்டும் கட்டியிருந்த அவளுடைய வளவளப்பான தோள்களும், அங்கங்களும் அவனுடைய மேனியில் நெருக்கமாக இணைந்தபோது, அவன் தன்னை ஒருகணம் மறந்தே போனான். உள்ளத்தின் விழைவை இதுவரை கட்டுப்படுத்தியிருந்தவன், இப்போது தன் உடலின் விழைவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.

அந்தக் கொடிய இருளிலே நடுங்கும் தன் கரங்களால் பதஞ்சலியைத் தன்னுடன் கூடச் சேர்த்தணைத்துக் கொண்டபோது அவன் இந்த உலகத்தை மறந்தான். அங்கு உக்கிரமாக வீசிக்கொண்டிருந்த புயலை மறந்தான். தான் யார் என்பதை மறந்தான். பதஞ்சலி யாரென்பதையும் அறவே மறந்துபோனான். காலங்காலமாகப் பிறவிகள்தோறும் தன்னைத் தொட்டும், தொடர்ந்தும் வந்த அதே பதஞ்சலிதான் தன்னுடனே சங்கமித்துவிட்டாள் என்று அவனுடைய இதயம் சொல்லிக் கொண்டது. இவள் என்னுடைய பதஞ்சலிதான்!... என்று அவன் வாய் முணுமுணுத்தது. அவன் அவளைத் தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டான்.

பதஞசலியின் நிலையோ வேறு. பயத்தின் காரணமாகவே அவள் சுந்தரத்தைச் சென்று கட்டிக்கொண்டாள். கரைகடந்த துயரம் அல்லது உள்ளத்தைக் கலங்கச் செய்யும் பீதி என்பவை ஏற்படும்போது, அவளுக்கு யாருடனாவது ஒண்டிக் கொண்டால்தான் நிம்மதியாக இருக்கும். அந்த உணர்வின் உந்துதலால்தான் அவள் குழந்தை மனதோடு விகற்பமின்றிச் சுந்தரத்திடம் போய் அணைந்துகொண்டாள்.

ஆனால் அந்த இருளிலே சுந்தரம் தன்னைச் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டபோது, அந்த அணைப்பையும், அதன் தீவிரத்தையும் அவள் இனங்கண்டு கொண்டாள். அந்தக் கணத்திலேயே அவள் இதுவரை அறியாத ஒரு உண்மையையும் புரிந்துகொண்டாள். அவன் யாரை விரும்புகின்றான்... அவன் விழிகளிலே தான் இதுவரை காலமும் அடிக்கடி கண்ட அந்தப் பார்வை..... என்பவையெல்லாம் அவளுக்குச் சட்டென்று வெளிப்படையாகப் புலனாகியது. இருப்பினும் அவளால் அந்த அணைப்பிலிருந்து தன்னைச் சட்டென்று விடுவித்துக்கொண்ள முடியவில்லை. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத ஒரு தவிப்பு.... அந்தத் தவிப்பைத் தொடர்ந்து அவள் மேற்கொண்டு எதையுமே தீர்க்கமாகச் சிந்திக்க முடியாமல் அப்படியே சோர்ந்துபோய் நினறுவிட்ட வேளையில்....

இதுவரை தான் படித்த புத்தகங்கள்மூலம் இடையிடை கண்டுணர்ந்த அந்தப் புதிய உலகத்தின் வாசல்கள் மீண்டும் திறப்பது போலவும், அந்தப் புதிய வாசலின் படிகளில் தான் ஒவ்வொன்றாய் ஏறியேறி மேலே வெகு உயரத்துக்குப் போவது போலவும் அவளுக்குத் தோன்றியது. வெளியே வீசும் கொடிய புயலின் ஓலம் அவளுக்கு எங்கோ வெகுதொலைவில் கேட்பது போலிருந்தது..... ஒரே இரைச்சல்.... ஒரே மயக்கம்.... அவள் தனக்கே உரித்தான சிறிய வாழ்க்கை வட்டத்தை விட்டுவிலகி, வெகுதூரம் பறந்து கொண்டிருந்தாள். எதற்காகத் தான் இப்படிப் பறக்கின்றேன் என்பதையெல்லாம் அவள் சிந்திக்கவேயில்லை. பறப்பதிலே ஒரு சுகம்! ஒரு இன்பம்! அவள் தன்னை மறந்து, பறப்பதற்காகவே பறந்து கொண்டிருந்தாள்.

இரவு மூன்று மணிபோல் கொண்டல் காற்று எழுந்து வீசிக் கச்சான் காற்றை அடங்கிய பின்னர் புயல் ஓய்ந்தது. அந்தக் கொடிய சூறாவளி அந்த இரவிற்குள் தண்ணிமுறிப்புப் பிரதேசத்தை அடியோடு கலக்கிச் சிதைத்திருந்தது.

வெளியே வீசிய புயல் அடங்கிய வேளையில்தான் உள்ளத்திலேயும், உடலிலேயும் கொந்தளித்துக் குமுறிய புயல் அடங்கியவனாய் சுந்தரம் சுயநினைவுக்குத் திரும்பி வந்தான். எங்கேயோ தொலைவில் வானவெளியில் இதுவரை சஞ்சரித்தவன், திடீரெனப் பூமிக்குத் தூக்கி எறியப்பட்டவன்போல் திகைத்துப்போனான். எது நடக்காது, நடக்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அது உண்மையில் நடந்துவிட்டது. அதன் உண்மையை உணர்ந்தபோது அவனுடைய இதயம் வெடித்துவிடும் போன்றிருந்தது. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த பதஞ்சலியின் கரங்களில் இருந்து தன்னை மெல்ல விடுவித்துக்கொண்டு, அவன் குடிசையைவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே ஒரே ஓட்டமாக ஓடி, அந்த இருளுக்குள் சென்று மறைந்தான்.

தன்னந் தனியனாகப் பாலைமரக் கொட்டுக்குள் புயலடங்கும்வரை பதுங்கியிருந்த கதிராமன், புயலின் கோரத்தைக் கண்டு திகைத்துப் போனான். இரவெல்லாம் பதஞ்சலி என்ன செய்திருப்பாளோ என்றெண்ணி ஏங்கியவன், தங்களுடைய குடிசையின்மேல் விழக்கூடிய மரம் எதுவுமில்லை என ஆறுதல்பட்டுக் கொண்டான். விடியும் வேளையில் புயல் அடங்கியதுமே வீட்டை நோக்கிப் புறப்பட்டான். வழியெங்குமே மரங்கள் முறிந்து காடே சிதைக்கப்பட்டிருந்ததால் அவனால் வழக்கம்போல் வேகமாகச் செல்லமுடியவில்லை. தண்ணிமுறிப்பை அவன் அடைந்தபோது, பொழுது நன்றாக விடிந்துவிட்டது.

பகலின் ஒளியில்தான் புயலின் விளைவுகள் தெளிவாகத் தெரிந்தன. மரங்கள் முறிந்து மொட்டையாக நின்றன. வழியெங்கும் காட்டுக் கோழிகளும், வேறு பறவைகளும் புயலில் அடிபட்டுச் சிறகொடிந்தவையாய் இறந்துபோய்க் கிடந்தன. அவற்றைப் பார்த்தவாறே கதிராமன் சென்று கொண்டிருக்கையில், சுந்தரலிங்கம் அவசரமாகத் தன் பெட்டியையும் எடுத்துக்கொண்டு பாடசாலை வளவுக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தான்.

கதிராமன் அவனைக் கண்டதுமே, 'வாத்தியார், பாத்தியளே சூறாவளியை! எவ்வளவு மோசமாய் எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டுது!" என்று கூற, சுந்தரம், 'ஓம்! எல்லாம் நாசமாக்கித்தான் போட்டுது!" என்று ஏதோ நினைத்தவனாய்ப் பதிலளித்தான். அவனுக்குக் கதிராமனுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தைரியமில்லை.

சுந்தரத்தின் கையில் பெட்டியைக் கண்ட கதிராமன், 'என்ன வாத்தியார் வீட்டை போறியளே?" என்று கேட்டான். சுந்தரம், 'ஓம், அங்கை தண்ணியூத்திலை என்ன பாடோ தெரியேல்லை" என்று சுரத்தில்லாமல் பதிலளிக்க, 'சரி வாத்தியார் நடவுங்கோ, உங்கை பதஞ்சலி என்ன செய்தாளோ தெரியேல்லை!" என்று கூறிவிட்டு வேகமாகத் தன்னுடைய வளவை நோக்கி நடந்தான்.

வழியெல்லாம் மரங்கள் முறிந்துபோய்க் கிடந்தன. சிதைக்கப்பட்டுக் கிடந்த வளவை அவன் சென்றடைந்தபோது பதஞ்சலியை வெளியே காணவில்லை. குடிசையின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே ஒரு மூலையில் படுத்திருந்த பதஞ்சலி, கதிராமனைக் கண்டதும் ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கதறியழத் தொடங்கிவிட்டாள். 'என்ன பதஞ்சலி, நல்லாய்ப் பயந்து போனியே!" என்று அவன் ஆதரவாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, அவளின் முதுகை வருடியபோது, பதஞ்சலி எதற்காகவோ கதறிக்கதறி அழுதாள். 'ஏன் என்னை விட்டிட்டுப் போனனீங்கள்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டு அரற்றிக்கொண்டே அழுத அவளை அணைத்திருந்த கதிராமன், 'நான் இனிமேல் உன்னை ஒருநாளும் விட்டிட்டுப் போகமாட்டன்!" என்று அன்புடன் கூறியபோது, அவள் அவனைத் தன்னடன் சேர்த்து இறுகக் கட்டிக்கொண்டாள். அந்த வேளையில், தான் எவ்வளவு தூரம் கதிராமனைக் காதலிக்கிறேன் என்பதைப் பதஞ்சலி தீர்க்கமாகப் புரிந்துகொண்டாள்.

இவ்வளவு காலமும் கள்ளமில்லாத உள்ளத்துடன் குழந்தையாகத் திரிந்த பதஞ்சலிக்கு இன்று எல்லாமே புரிந்துவிட்டது. சுவைக்கக் கூடாதென்ற கனியை உண்ட ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நேர்ந்த கதி இன்று பதஞ்சலிக்கும் நிகழ்ந்து விட்டிருந்தது. கற்பு என்றால் என்ன? தொட்டுப் பழகினால் என்ன? எல்லாப் பெண்களுக்கும் கற்பென்ற ஒன்று இருக்கவேண்டுமா? என்றெல்லாம் கேட்ட பதஞ்சலிக்கு, இன்று இந்தப் பயங்கரப் புயல் வீசிய இரவின் பின்னர், எல்லா வினாக்களுக்குமே விடை தெளிவாகத் தெரிந்துவிட்டது. தொட்டுப் பர்த்துச் சுட்டுக்கொண்ட குழந்தையொன்று நெருப்புச் சுடும் என்று அனுபவப்பட்டுக் கொள்வதுபோன்று, அவளும் தன்னைச் சுட்டுக்கொண்ட பின்தான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலைப் புரிந்துகொண்டாள். இப்போ அந்த விடைகள் தனக்குத் தெரிந்து விட்டனவே என்று அவள் குமுறியழுதாள். கதிராமன் எவ்வளவோ சொல்லித் தேற்றியபின்தான் அவளுடைய அழுகை ஒருவாறு அடங்கியது.

அதற்குமேல் அழுவதற்கு அவளால் முடியவில்லை. ஆனால் அதன்பின் பதஞ்சலி குழந்தையுள்ளத்தோடு சிரிக்கவும் மறந்து போனாள்.

-----------------------------------------------------------

40

மாதமொன்று கழிந்தது. புயலின் அழிவுச் சின்னங்கள் இன்றும் மொட்டை மரங்களாக நின்றன. குசினிக்குள் அமர்ந்திருந்த பதஞ்சலி சுற்றாடலை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் இதற்குமுன் ஒருபோதும் இப்படிச் சோம்பியிருந்தது கிடையாது. இப்பொழுதெல்லாம் குதூகலமும் உற்சாகமும் அவளைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டன. உல்லாசமாகப் பறக்கும் நிலக்கிளிகளைப் போன்று முன்னர் தன் சின்னக் குடிசையையும் கதிராமனையும் சுற்றிவந்த அவள், தன்னுடைய அந்தச் சின்ன வாழ்க்கை வட்டத்தைவிட்டு விலகி வெளியே வெகுதூரம் பறந்தபோது, கொடியதொரு புயலில் சிக்கி இறகொடிந்தவளாய் விழுந்து போனாள்.

அவ்வளவு தூரம் அவள் மனம் குன்றிப்போனதன் காரணத்தைக் கதிராமன் புரிந்து கொள்ளவில்லை. பதஞ்சலிக்கு மட்டும் அது நன்றாகவே தெரிந்திருந்தது. அவள் எண்ணம் முழுவதையும் அது ஆக்கிரமித்தது. அவளுடைய நினவுகள் சதா அந்த விஷயத்தையே சுற்றிவந்தன. பசுக்கன்றுகளையும், நாய்க்குட்டிகளையும் நாளெல்லாம் கட்டியணைத்துக் கொஞ்சுபவள், இன்று தன் வயிற்றிலே உருவாகும் அந்த உயிரை நினைக்கையிலே கலங்கிப்போனாள். ஒரு இரவில் தன்னை மறந்திருந்த வேளையில், தன்னைத் தீண்டிய அந்தத் தீ, தன்னசை; சுட்டுக்கொண்ட அந்த நெருப்பு, ஏன் நிரந்தரமாக வயிற்றில் தங்கிவிட வேண்டும்? மாதங்கள் பத்தும் நான் அந்த நெருப்பைச் சுமக்கத்தான் வேண்டுமா? பத்து மாதங்கள் மட்டுமன்று, என்னுடைய வாழ்நாள் முழுவதுமல்லவா அந்த நெருப்பு என்னைச் சுட்டுக் கொண்டேயிருக்கப் போகின்றது!, என்று மனதுக்குள் பொருமியழுதாள் பதஞ்சலி.

பதஞ்சலி தங்களின் வளவை ஒருமுறை சுற்றிக் கவனித்தாள். சரிந்துவிட்ட மாலை மீண்டும் கதிராமன் சீர் பண்ணியிருந்தான். சிதைந்துவிட்ட தோட்டத்தை ஒருவாறு திருத்தி அமைத்திருந்தான். ஆனால் அவன் எவ்வளவுதான் முயன்றபோதும், பதஞ்சலியின் பழைய குதூகலத்தையும், குறும்பையும் அவனால் மீண்டும் கொண்டுவர முடியவில்லை.

அவளுடைய மனதின் மாற்றத்தைக் கண்டு கதிராமன் அதிகம் தன் மனதை அலட்டிக் கொள்ளவில்லை. எந்தவித மாற்றமுமின்றி அவள்மேல் அன்பைச் சொரிந்தான். தொடர்ந்து பல மாதங்களாக மழையில்லாமல் தண்ணிமுறிப்புப் பிரதேசமே தன் இயற்கை வனப்பையெல்லாம் இழந்துவிட்டபோதும் கதிராமன் மாறவேயில்லை. அமைதியான சுபாவம், எதற்குமே கலங்காத நெஞ்சுறுதி என்பவை அவனைவிட்ட விலகவில்லை.

இந்நாட்களில் பதஞ்சலியின் உடலில் தாய்மையின் கோலம் வெளிப்படையாகத் தெரிந்தது. கதிராமன் களிப்பில் துள்ளிக் குதித்தான். 'இவ்வளவு நாளும் எனக்கேன் சொல்லேல்லை நீ?" என்று ஆசையுடன் அவளைக் கடிந்துகொண்டான். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவளுடைய உடலிலே ஏற்பட்ட மாற்ங்களைக் கண்டு மகிழ்ந்தான். இரவின் தனிமையில் குடிசையினுள் பதஞ்சலியுடன் இருக்கும்போது அவளுடைய வயிற்றை ஆசையுடன் தடவிப் பார்ப்பான். வயிற்றிலிருக்கும் குழந்தை அங்குமிங்கும் புரள்வது தெரிகையில், 'எனக்குப் பிறக்கப்போறது பொடியன்தான் பதஞ்சலி! இப்பவே பாரன் அவன்ரை துடியாட்டத்தை!" என்று கதிராமன் குதூகலித்துக் கொள்ளும் ஒவ்வொரு சமயமும் பதஞ்சலி தலையைக் குனிந்து கொள்வாள். 'தெய்வமே! இப்படியும் ஓரு வேதனையா? என் வயிற்றிலிருப்பது இவருடைய குழந்தையல்லவே, இன்னொருவன் கொடுத்த நெருப்பல்லவா இது!" என்று அமைதியாக இரத்தக் கண்ணீர் வடிப்பாள் பதஞ்சலி. அந்தக் குழந்தை அசையும் போதெல்லாம் அவளுக்குத் தன் வயிற்றில் தணலைக் கட்டிக் கொண்டிருப்பதுபோல் தகிக்கும். தான் படித்த கதையொன்றில், பிரசவத்தின்போது இறந்துவிட்ட பெண்ணொருத்தியைப் பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அப்படித் தனக்கும் நிகழ்ந்துவிடக் கூடாதா? இந்த நெருப்பைப் பிறப்பித்து, அதனுடைய தகிப்பைத் தன் வாழ்நாளெல்லாம் அனுபவித்து வேதனைப்படுவதைவிட, அது இந்தப் பூமியில் விழும்போதே தன்னையும் ஒரேயடியாகச் சுட்டெரித்து விடக்கூடாதா என்றெல்லாம் ஏங்கினாள் பதஞ்சலி. பேறுகாலம் நெருங்கிவர இன்னுமின்னும் மனங் குன்றியவளாய் பதஞ்சலி ஒடுங்கிப் போனாள்.

கதிராமனோ அவளுடைய பிரசவத்திற்குத் தேவையான பொருட்களையெல்லாம் தானே ஆர்வத்தோடு சேகரித்து வைத்துக்கொண்டான். தேனுக்காகக் காடெல்லாம் அலைந்தான். கடந்த ஏழெட்டு மாதங்களாகவே அவனுடைய கண்ணில் ஒரு தேன்குடியாவது தட்டுப்படவில்லை. புயலின் பின்னர் தேனீக்களெல்லாம் அந்தப் பிரதேசத்தைவிட்டு அகன்று எங்கோ சென்றுவிட்டன. காட்டிலே தேனுக்கென்று சென்று திரும்பும் கதிராமன், ' ஒரு தேன்குடியும் காட்டிலை இல்லை பதஞ்சலி! பூக்கள் உள்ள இடத்திலைதான் தேன்பூச்சி இருக்கும். இப்ப ஒரேயடியாய் அதுகள் இல்லாமல் போனபடியால் இனிமேல் இந்தக் காடுகளிலை பூக்கள் இருக்காது. மழை பெய்தால்தானே காட்டுமரங்கள் பூக்கும்!" என்று விரக்தியுடன் பேசிக்கொள்வான்.

----------------------------------------------------------------

41.

பதஞ்சலிக்கு இப்போ ஆறுமாதம்! வைகாசி மாதத்துச் சோளகக் காற்று நீர்நிலைகளையும், பயிர்பச்சைகளையும் வறட்டி எடுத்திருந்தது. சென்ற வருடமே மழை அதிகம் பெய்யவில்லை. கடந்த கார்த்திகையில் சூறாவளியோடு வந்த சிறுமழை எந்த மூலைக்குப் போதும்? அதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் ஒரு துளி மழைகூடப் பெய்யவில்லை.

மரங்களிலெல்லாம் இலைகளில்லை. பட்டுப்போன கிளைகள் வானத்தைச் சுட்டிக்காட்டி நின்றன. தொடர்ந்து எறித்த உக்கிரமான வெய்யிலின் கானல், பசுமையை உறிஞ்சிக் குடித்துவிட்டுத் தாகம் அடங்காமல் பிசாசுபோல் அந்தப் பிரதேசமெங்கும் அலைந்தது. குளத்தில் நீர் வற்றி அது பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்தது. நீருக்கு ஆசைப்பட்டுக் காட்டு விலங்குகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஓடிவந்தன. காட்டு மடுக்களையெல்லாம் உறிஞ்சி இழுத்தும் விடாய் அடங்காத யானைகள் குளத்தருகுக் காட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டன. காய்ந்து சருகான இலைகளினூடாகக் காற்று இரவில் ஊளையிடும்போது யானைகள் கோடையின் வெம்மை தாங்hது பிளிறின. மான்களும் மரைகளும் பஞ்சடைந்த விழிகளுடனும், பயிர்பச்சையைக் காணாத பசியுடனும் வந்து, குளத்தின் நடுவே எஞ்சியிருக்கும் நீருடன் சேற்றையும் உறிஞ்சிக் குடித்தன. குரங்குகள் தம் குட்டிகளை அணைத்தவாறு ஏக்கத்தோடு குளக்கட்டில் ஆங்காங்கு குந்திக்கொண்டிருந்தன.

திரும்பிய திசையெல்hம் ஒரே வரட்சி! ஏன்தான் பருவமழை ஒரு வருடத்திற்கு மேலாகியும் பெய்யவில்லை? இனிமேல் மழையே பெய்யாதா? கருகிப்போய்க் கிடக்கும் இந்தப் புற்களும், கொடிகளும் மீண்டும் பசுமையைப் பெறமுடியாதா? இலைகளை உதிர்த்து நிற்கும் மரங்களும், செடிகளும் மீண்டும் துளிர்க்காதா? என்ற கேள்விகளெல்லாம் பதஞ்சலியின் நெஞ்சில் எழுந்தபோது, அவள் எண்ணத்தில் என்றோ ஒருநாள் படித்த ஒருசில வாசகங்கள் மின்னல் கீற்றுக்கள்போல் பளிச்சென்று தோன்றி மறைந்தன.

'மங்கையர் தம் கற்பை இழந்தால் மழை பொய்க்கும், வளம் குன்றும்"

இந்த வசனங்களை அவள் மீண்டும் நினைத்துப் பார்க்கையில், அவள் மனம் என்னும் பொய்கையில் சிறியதொரு கல்லாக விழுந்து மெல்லிய சலனங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவளுடைய மனதின் அந்தரங்கங்களிலே தங்கிவிட்ட அந்தக் 'கற்பு" என்ற சொல், இப்போது அவளின் நெஞ்சிலே முள்போல் தைத்து உறுத்தியது. அன்று மனதின் ஆழத்திலே தங்கிவிட்ட அந்தச் சிறிய கல்லின்மேல், புத்தகங்கள் மூலமாக அறிந்திருந்த உலகத்துக் குப்பைகளும், அழுக்கும் சுற்றிப் படர்ந்துகொண்டதால் அது அவளின் நெஞ்சை நிறைத்துக் குமட்டியது! அந்த வேதனையிலும், அருவருப்பிலும், 'இனிமேல் மழையே பெய்யாது! மரங்கள் துளிர்க்காது..... பாவத்தின் பாரத்தைச் சுமந்து நிற்கும் நானொருத்தி இந்த உலகில் இருக்குமட்டும் வறட்சி நீங்காது! கோடை முடியாது!" என்றெண்ணிக் கண்ணீர் பெருக்கிக் கொண்டாள்.

------------------------------------------------

42

காய்ந்துபோன தன் வளவுக்குள், மனதிலும் வரட்சி நிறைய, பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்தார் மலையர். வேளாண்மையில் ஒரு சதமேனும் மிஞ்சவில்லை. எருதுகளையும், வண்டிலையும், எஞ்சியிருந்த மாடுகன்றையும் விற்றுப் பணமாக்கியபோதும், மலையாக வளர்ந்திருந்த கடனில் ஓரு பகுதியைத்தானும் அவரால் தீர்க்க முடியவில்லை.

போதாதற்கு அவர் கேள்விப்பட்ட அந்தச் செய்தி! அவருடைய பழைய உழவுயந்திரத்தின் பெயரிங் உடைந்துவிட்டது. ஒரு வாரத்துக்குமுன் வீட்டிலிருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மெசினைப் பழுதுபார்க்கச் சென்றிருந்த மணியன் திரும்பவில்லை. தண்ணிமுறிப்புக்கு வந்த நெடுங்கேணிவாசி ஒருவரிடம் விசாரித்தபோது, மணியன் மிசினை யாருக்கோ விற்றுவிட்டுப் பணத்துடன் எங்கோ ஓடிவிட்டானாம்! என்று கிடைத்த செய்தி அவருடைய மனதைப் பேரிடியாகத் தாக்கியிருந்தது.

மணியன் உழவுயந்திரத்தை விற்றுவிட்டுப் பணத்துடன் ஓடிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டபின் மலையர் யாருடனும் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். பித்துப் பிடித்தவர்போல் குளக்கட்டைப் பார்த்தவாறே சதா உட்கார்ந்திருப்பார். அவருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்று பாலியாருக்குத் புரியவில்லை. அவளுக்கு இந்தக் கடன்காரியங்கள், மிசின் விஷயங்கள் ஒன்றுமே விளங்குவதில்லை. வீட்டு வேலைகளைச் செய்வாள். அந்த வேலைகள் இல்லாத சமயங்களில் கதிராமனை நினைத்துக்கொண்டு கண்ணீர் விடுவாள். இவற்றைத் தவிர அவள் எதுவுமே செய்வதில்லை. நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

சிந்தனையில் ஆழ்ந்தபடி முற்றத்திலிருந்த மலையர், தன் வளவுக்கு முன்னால் ஒரு ஜீப் வந்துநின்ற சத்தத்தைக் கேட்டு, கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தார். ஜீப்பில் வந்து இறங்கியவர்கள் அவருடைய வயலைக் காட்டி எதுவோ பேசிக்கொள்வது கேட்டது. என்ன விஷயமென்று தெரிந்து கொள்வதற்காக மலையர் எழுந்து தனது வளவுப் படலையடிக்குச் சென்றார். அவர் வருவதைக் கண்டதும், ஜீப்பில் வந்திருந்த ஒரு பெரிய மனிதர், மலையரை நோக்கி வந்தார்.

தன்னை நோக்கி வருபவரை யாரெனக் கண்டுகொண்டார் மலையர். முல்லைத்தீவுச் செந்திப்போல் சம்மாட்டியாரை அந்தப் பகுதியிலேயே தெரியாதவர்கள் இருக்கமுடியாது. முல்லைத்தீவுக் கடற்கரையிலேயே அதி செல்வந்தர் அவர்தான். அவரிடம் பல கரைவலைகளும், வள்ளங்களும், வாகனங்களும் இருந்தன. சம்மாட்டியார் ஏன் இஞ்சை வந்தவர்? என்று மலையர் யோசித்தபோது, 'நீங்கள்தானே கோணாமலையர்?" என்று கேட்டார் சம்மாட்டியார். 'ஓ! என்ன சங்கதி?" என்று வினவிய மலையரைப் பார்த்து, தான் கூறவந்ததைக் கூறச் சற்றுத் தயங்கினர் சம்மாட்டியார். அவரின் தயக்கம் மலையருக்குப் புரியவில்லை. 'என்ன சம்மாட்டியார் யோசிக்கிறியள்? சொல்லுங்கோவன்!" என்று மலையர் தூண்டியதும், 'உங்கடை வயல் காணியை நான்தான் சின்னத்தம்பியரிட்டை இருந்து இப்ப வாங்கியிருக்கிறன். அதுதான் உங்களிட்டைச் சொல்லிப்போட்டு இந்தமுறை விதைப்பம்" என்று கூறிய சம்மாட்டியார், மலையரின் முகம் அடைந்த மாற்றத்தைக் கண்டு பயந்துபோனார். காட்டு வயிரவன்போல் கறுத்து நெடுத்திருந்த மலையரின் விழிகள் கோவைப்பழமாகச் சிவந்துவிட்டன. 'நான் வெட்டின காடு, நான் திருத்தின பூமி! ஆருக்கிடா துணிவிருக்கு இண்டைக்கு என்ரை காணிக்கை இறங்க?" என்ற ஆவேசமான வார்த்தைகள் மலையரின் குமுறும் நெஞ்சினுள் பிறந்து தொண்டைவரைக்கும் வந்துவிட்டபோது, சம்ட்டியால் சட்டென்று தலையிலடித்தது போன்று மலையருக்குத் தன் நிலைமை விளங்கியது. வாய்மட்டும் வந்த அந்தச் சொற்கள் வெளியே வரவில்லை. அவை நெஞ்சிலிருந்து புறப்பட்ட வேகத்துடனேயே மீண்டும் திரும்பி நெஞ்சுக்குள் அமுங்கிக் கொண்டன. நெஞ்சைக் கையால் அழுத்திப் பிடித்தபடியே திகைத்துப்போய் நின்றுவிட்டார் மலையர்.

சின்த்தம்பியர் மிகவும் கண்டிப்பான பேர்வழி. ஆனால் தனக்கும் இப்படிச் சின்னத்தம்பியர் செய்வாரென்று மலையர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஒருதடவை முல்லைத்தீவுக்குச் சென்று அவருடன் பேசி, அடுத்த வருடத்திலாவது கடனைத் திருப்பிவிடுகிறேன் என்று தவணை கேட்டுவர வேண்டுமென்று எண்ணியிருந்த மலையருக்கு, சின்னத்தம்பியா வயலை விற்றுவிட்டார் என்ற செய்தி இதயத்தில் பேரிடியாக விழுந்தது. நாணலைப் போன்று வளைந்து கொடுக்காமல், கருங்காலி மரத்தைப்போல் உறுதியாக நிமிர்ந்து நின்றே இதுவரை வாழ்ந்திருந்த மலையர், இன்றும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முயற்சித்தபோது, அவரால் அது முடியவேயில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மனதில் பல அடிகள் விழுந்து அவரைப் பலவீனப்படுத்தி இருந்தன. இறுதியாக விழுந்த இந்த அடியையும் தாங்கிக் கொள்ள முயல்கையில் அவர் படீரென முறிந்துபோனார்.

படலையைப் பிடித்துக்கொண்டு திகைத்துப் போய்நின்ற மலையருடைய முகத்தில் முதலில் தோன்றிய சினத்தையும், பின் அது பொக்கென்று அடங்கி வேதனையாக மாறியதையும் கவனித்த செந்திப்போல் சம்மாட்டியாருக்கு மலையரைப் பார்க்கையில் மிகவும் பரிதாபமாக இருந்தது. 'நான் என்னத்தை மலையர் செய்யிறது..." என்று அவர் ஆறுதல்கூற முற்பட்டபோதுகூட, மலையர் அதைக் கவனிக்கவில்லை. 'உங்களிட்டை எதுக்கும் ஒருகதை சொல்லிப்போட்டுச் செய்வம்..." என்று மீண்டும் சம்மாட்டியார் கூறியபோதுதான் மலையர், 'அதுசரி சம்மாட்டியார்... எல்லாம் என்ரை விதி!" என்று மெல்லக் கூறிவிட்டுத் திரும்பிப்போய் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டார். சற்றுநேரம் படலையடியில் நின்ற செந்திப்போல் சம்மாட்டியார் திரும்பிச் சென்று தன் ஜீப்பில் ஏறிக்கொண்டார். செம்மண் படலத்தைக் கிளப்பிக்கொண்டே ஜீப் விரைந்து சென்று மறைந்தது.

-------------------------------------------------

43.

புரட்டாதி முடியச் சில நாட்களே இருந்தன. இன்னும் மழையின் அறிகுறி இல்லை. இதுவரை தொடர்ந்து வீசிய சோளகம் அன்று வீழ்ந்திருந்தது. வெப்பத்தில் வேகும் அந்தப் பிரதேசமெங்கும் ஒரே அந்தகாரம்.

கொடிய வெம்மையும் அந்தகாரமும் தன் உள்ளத்தில் மட்டுமன்று உடலிலும் ஏற்படுவதை அன்று பகல் முழுவதும் உணர்ந்தாள் பதஞ்சலி. அன்று மாலை குசினிக்குள் எதுவோ எடுப்பதற்குச் சென்றவள், திடீரென அடிவயிற்றில் ஏற்பட்ட வலியில் துடித்துப்போனாள். வயிற்றில் வளர்ந்த தீ கொழுந்துவிட்டு எரியும் சமயம் வந்துவிட்டது. தான் விரும்பியது போலவே அந்தக் களங்கக் கனல் பிறந்து வெளிவருகையிலேயே தன்னையும் சுட்டெரித்து அழிக்கத்தான் போகின்றது. அத்துடன் தான் இதுவரை அனுபவித்த கொடிய வேதனையெல்லாம் அடங்கிப்போகும் என்று எண்ணியவளாய்ப் பதஞ்சலி குடிசைக்குள் போய்ப் படுத்துக்கோண்டாள்.

ஏதோ அலுவலாக வெளியே சென்றிருந்த கதிராமன் திரும்பி வந்தபோது வெளியே பதஞ்சலியைக் காணாதவனாகக் குடிசைக்குள் நுழைந்தபோது, அங்கு அவள் ஒரு பாயில் கிடந்து துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

'என்ன பதஞ்சலி?" என்று அவன் விரைந்து, அவளருகே சென்று அமர்ந்தான். அவள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு, வேதனையில் சுருண்டாள். விஷயத்தைப் புரிந்துகொண்ட அவன், 'ஒண்டுக்கும் பயப்பிடாதையம்மா!... எல்லாம் சுகமாய் நடக்கும், நான் ஓடிப்போய் ஒரு பொம்பிளையைக் கூட்டிக்கொண்ட வாறன்!" என்று கூறி, அவளுடைய கரங்களை ஆதரவாக வருடினான். அவனுடைய விழிகளிலே வழிந்த பாசத்தைக் கண்டு மனங்கசிந்து அழுதாள் பதஞ்சலி. அவனுடைய கரங்களை இறுகப் பற்றியவண்ணமே, 'நீங்கள் என்னை விட்டிட்டு ஒரிடமும் போகவேண்டாம்! இஞ்சை இதிலை என்னோடையே இருங்கோ!" என்று அழுது கெஞ்சும்போது அவள், மறுபடியும் அலையாக உடலில் பரவிய வலியில் துடிதுடித்துப் போனாள். நிச்சயமாக பிரசவத்தின்போது நான் இறந்துவிடப் போகின்றேன். இந்த உலகைப் பிரியும் இந்த வேளையிலும் கதிராமனுடைய கரங்களைப் பிடித்துக்கொண்டே உயிரை விடவேண்டும்! என்று ஆபை;பட்டாள் அந்தப் பேதை! மேலும், உதவிக்குப் பெண்கள் யாராவது வந்தால், போகவிருக்கும் என்னுயிரை அவர்கள் தடுத்து நிறுத்திவிடுவார்கள், நான் மேலும் உயிருடன் இருந்து மனங்குமைந்து வேதனைப்பட வேண்டும்! அந்த நிலை எனக்கு வேண்டவே வேண்டாம்! அவருடைய அன்புக் கரங்களின் அணைப்பிலேயே என்னுயிர் பிரியவேண்டும் என்ற தவிப்பில் அவள் மேலும் தீவிரமாகக் கதிராமனுடைய கைகளை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

அவளுக்கு மறுபடியும் வலி ஏற்பட்டபொழுது, வெளியே இருள் நன்றாகக் கப்பிக்கொண்டது. வேதைனை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த பதஞ்சலியின் பிடியை மிகவும் பிரயத்தனப்பட்டு விலக்கிக்கொண்ட கதிராமன், எழுந்து அரிக்கன் லாம்பைக் குடிசையினுள் ஏற்றி வைத்துவிட்டு, யாராவது ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று எண்ணியவாறு குடிசைப் படலையை மெல்லத் திறந்தான். பக்கத்துக் காடுகளைத் தழுவிவந்த ஒரு குளிர்காற்று அவனுடைய உடலை வருடிச் சென்றது. கதிராமன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். மேற்கே பரந்து கிடந்த காடுகளின்மேல் கருமேகக் கூட்டங்கள்! மயிலைப்போன்று அவன் உள்ளம் சட்டென மகிழ்ந்தது. மறுகணம், 'ஐயோ! என்ரை ஆச்சி!" என்ற பதஞ்சலியின் வேதனை தோய்ந்த ஓலம், அவன் நெஞ்சிலே முள்ளாகத் தைத்தது. பாய்ந்து உள்ளே சென்றவனுடைய கைகளை ஆவேசமாக இழுத்துப் பற்றிக்கொண்ட பதஞ்சலி, 'ஐயனாணை என்னை விட்டிட்டுப் போகாதையுங்கோ!" என்று வலியில் புழுவாக நெளிந்துகொண்டே கெஞ்சினாள். அவளுடைய உடலில் சட்டென எழுந்து, பின் மெல்ல அடங்கிக் கொண்டே போகும் வலிகளிடையே இருந்த அவகாசம் வரவரக் குறைந்துகொண்டே வந்தது.

வெளியே வானத்தில் சூல்கொண்ட மேகங்கள் வேதனையால் முழங்கிக் கொண்டிருந்தன. சில்லென்ற சீதளக்காற்று அந்தப் பிரதேசமெங்கும் வீசியது!

மால் திண்ணையில் படுத்திருந்த மலையர், தன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டே, 'மனுசி! இஞ்சை ஓடிவா! எனக்கு நெஞ்சுக்கை ஏதோ செய்யுது!" என்று வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அவரது குரல் கேட்டுப் பதறிப்போய் ஓடிவந்த பாலியாருக்குத் தேகமெல்லாம் உதறியது. 'ஆதி ஐயனே!" என்று புலம்பியவாறே மலையரிடம் ஓடிச்சென்றவள், அவரை மெல்லத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, 'என்ன? உங்களுக்கு என்ன செய்யுது?" என்று கலங்கியபோது, 'நெஞ்சுக்கை.. நெஞ்சுக்கை.." என்று திக்கித்திணறிய மலையர் மூச்செடுக்க முடியாமல் தவித்தார். அவருடைய நெஞ்சைப் பிடித்து நீவிவிட்ட பாலியாரியின் கரங்கள் நடுங்கின. குப்பென்று வீசிய குளிர்காற்றில் அவளுடைய மெலிந்த உடல் சிலிர்த்தது. கடைக்குட்டி ராசு, 'அப்புவுக்கு என்னணை?" என்று பயந்துபோய்க் கேட்டவனாய் அழத் தொடங்கிவிட்டான்.

மேற்கே எழுந்த கருமேகங்கள் தண்ணிமுறிப்பை மூடிவிடுவதுபோல் வானமெங்கும் கவிந்து கொண்டிருந்தன. மந்திகள் கிளைகளின்மேல் பாய்ந்து தனுப்போடும் ஒலியும், தொலைவில் எங்கோ ஒரு மயில் அகவும் ஓசையும், முழக்கத்தின் மத்தியில் கேட்டன.

கதிராமன் குடிசையினுள் பதஞ்சலியின் அருகே இருந்தவாறு தன்னால் ஆனவற்றைச் செய்துகொண்டிருந்தான். இளமையிலிருந்தே எருமைக்கும், பசுவுக்கும் மருத்துவம் பார்த்து, எத்தனையோ இளங்கன்றுகளை சுகமாகப் பிரசவிக்கச் செய்தவன், இன்று பதஞ்சலிக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு சிறந்த மருத்துவிச்சிக்கே உரிய அமைதியும், திறமையுங் கொண்ட அவன், கலங்காமல் அவளை நிதானமாகக் கவனித்துக்கொண்டான்.

வேதனையின் உச்சக் கட்டத்தில் இதழ்களை இறுகக் கடித்துக்கொண்டு பதஞ்சலி மௌனமாக வலியைத் தாங்கிக் கொண்டிருந்தாள். இதோ! அடுத்த நிமிடத்திலேயே தன்னுயிர் போய்விடப் போகின்றது.. அதற்குமுன் எங்கே ஒருதடவை.. .. தன்னை முரலிக்காட்டுக்கு அழைத்துச் சென்றவனை.. .. ஆசையோடு அன்றொருநாள் தேன் எடுத்துத் தந்தவனை.. .. இருள்பரவும் வேளையிலே, கற்பூரத் தீபத்தின் ஒளியில், தன் கழுத்தைத் தொட்டுத் தாலி கட்டியவனை.. .. ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை.. பார்த்துவிட்டாற் போதும்! அந்த அன்பு முகத்தையும், பாசந்ததும்பும் விழிகளையும் ஆசைதீரப் பார்த்துவிட்டாற் போதும் என்று விழிகளைத் திறந்தவள், 'அம்மா!" என்று வீரிட்டுக் கத்தினாள்.

கருக்கொண்ட மேகங்கள் பிரசவித்த மழைத்துளிகள் குடிசைக் கூரையின்மேல் ஒன்றிரண்டாக விழுந்தன. சிறிது நேரத்திற்குள்ளாகவே பேரிரைச்சலுடன் பெருமழை சோனாவாரியாகப் பெய்தது. இத்தனை காலமும் வறண்டு, புழுதி பறக்கக் கிடந்த நிலம், ஆவலுடன் மழைநீரை உறிஞ்சியது. மண் மணத்தது. புதுவெள்ளம் பாய்ந்துது.

புதுமழை பூமியன்மேல் விழும் அந்த வேளையில் ஒரு புதுக்குரல், பெருமழையின் இரைச்சலையும் மீறிக்கொண்டு உயிர்த்துடிப்புடன் கூவியது. பச்சை இரத்தம் மணக்கும் அந்தக் குடிசை மண்ணில் ஒரு புத்தம் புதிய முகம்! உயிரொன்று இன்னொன்றைப் பிறப்பித்த வேதனையில் ஓய்ந்துபோய்க் கிடந்தது. மகனைக் கண்ட கதிராமனின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.

இங்கே தந்தையாகிவிட்டேன் என்று கதிராமன் மனம் பூரிக்கும் அதே வேளையில், அங்கே அவன் தாய் பாலியார் விதவையாகி விட்டேனே என நெஞ்சு வெடிக்கக் கோணாமலையரின் சடலத்தின்மேல் விழுந்து, கோவென்று கதறிக் கொண்டிருந்தாள். இவற்றையெல்லாம் அடக்கிக்கொண்டு, சோவென்ற இரைச்சலுடன் மழை கொட்டிக் கொண்டிருந்தது.

இரவுமுழுவதும் பெய்த மழை விடியற்காலை ஓய்ந்தபோது, மழையில் ஆசைதீர முழுகிய தண்ணிமுறிப்புக் காடுகள் சூரியோதயத்தில் சிலிர்த்துக் கொண்டன.

குடிசைக்குள் பகலவனின் மங்கலான ஒளி பரவும் அந்த வைகறைப் பொழுதில், இதுவரை மயக்கத்தில் ஆழந்துpருந்த பதஞ்சலியின் விழிகள் மெல்லத் திறந்தன. கடந்த பல மாதங்களாக அங்கு நிலவிய வெம்மை, அந்தகாரம் யாவுமே மறைந்து, தண்ணென்ற காலைத் தென்றல் அந்தச் சின்னக் குடிசைக்குள் புகுந்து பரவியது. சுய நினைவுக்குத் திரும்பிய பதஞ்சலி வெம்பி வெம்பியழுதாள். தான் எதிர்பார்த்திருந்த அந்த விடுதலை, நிச்சயமாகக் கிடைத்துவிடுமென்று காத்திருந்த அந்த நிரந்தரத் தூக்கம், தன் கறைகளையெல்லாம் சுட்டெரித்துவிடும் என்று நம்பியிருந்த சாவு.. .. தனக்குக் கிடைக்கவில்லையே என்று அவள் அழுதாள். தனக்குப் பிறந்த அந்தக் குழந்தையைக்கூடப் பார்க்க விரும்பாது அழுதுகொண்டிருந்தாள்.

வெளியே ஏதோ வேலையாக இருந்த கதிராமன் அவளுடைய விம்மல் ஒலியைக் கேட்டுக் குடிசைக்குள் நுழைந்தான். அவனுடைய மகிழ்ச்சி கொப்பளிக்கும் விழிகளைச் சந்திக்க முடியாமல், பதஞ்சலி கண்ணீர் பெருகும் தன் விழிகளை மூடிக்கொண்டாள். நெருப்பை விழுங்கி வளர்த்து, இன்று அதனைக் கக்கிவிட்டு இன்னமும் செத்துப் போகாமலிருக்கும் தன் விதியை நினைத்து நெஞ்சு கொதித்தவளாய்ப் பதஞ்சலி தேம்பிக்கொண்டிருந்த வேளையில், அவள் கதருகே அந்தக் குரல் கேட்டது. தாயின் பாசத்தோடும், தந்தையின் பரிவோடும் அழைக்கும் ஆதரவு ததும்பும் குரல்.., 'பதஞ்சலி! பதஞ்சலி! இஞ்சை கண்ணைத் துறந்து பாரன் உன்ரை மோனை!" அக் குரலின் கனிவு அவளுடைய இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. மூடியிருந்த இமைகளின் கீழாகக் கண்ணீர் பெருக்கெடுத்தது. 'ஓம், என்ரை மோன்தான்.. ஐயோ! உங்கடை சொத்தைப் பெத்துத் தரவேண்டிய நான், எரியிற கொள்ளியை அல்லோ உங்கடை நெஞ்சிலை செருகியிருக்கிறன்!" என்று மனதிற்குள் ஓலமிட்டுக்கொண்டு மௌனமாக அழுதாள். 'பதஞ்சலி பேந்தும் ஏனம்மா மான்போலை கதறுறாய்? கண்ணைத் துறந்து பாரன் இவன்ரை வடிவை!" என்று கதிராமன் ஆசையோடு அவளை அழைத்தபோது, 'பழியைச் செய்தனான்.. அதை உத்தரிக்கவும் வேணுந்தானே!" என்று வேதனைப்பட்டவளாய், தன் விழிகளைத் திறந்தாள்.

அங்கே.. கன்னங்கரேலென்று .. தலைகொள்ளாமல் காடாயக் கிடக்கும் சுருண்ட கூந்தலோடு.. கதிராமனை உரித்துக் கொண்டல்லவா அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது! பதஞ்சலி திரையாக மூடிய கண்ணீரை இரண்டு கைகளினாலும் அவசரமாக வழித்தெறிந்துவிட்டு, மீண்டும் குழந்தையைப் பார்த்தபோது, அமைதியாகத் துயிலும் அந்தச் சின்னக் கதிராமனின் முகத்தில் அமைதியான புன்னகை! ஆமாம்! சின்னக் கதிராமனேதான்! கதிராமனைப் போலவே கரியமேனி.. சுருண்ட மயிர்!..

உடல் நோவையும் பொருட்படுத்தாது வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்த பதஞ்சலி, வெறிகொண்டவளாகக் குழந்தையைப் பறித்தெடுத்துத் தன் முகத்தோடும் மார்போடும் அணைத்தவளாய் முத்தமாரி பொழிந்தாள். ஆறாய்ப் பெருகிய ஆனந்தக் கண்ணீரில் நனைந்த சின்னக் கதிராமன் தூக்கம் கலைந்து வீரிட்டு அழுதான்.

அந்தக் குரலைத் தொடர்ந்து இன்னுமோர் அழுகுரல் கதிராமனின் குடிசை முற்றத்தில் கேட்கவும், அவன் திகைத்துப்போய் வெளியே வந்தான். அங்கு விம்மி வெடித்தவனாய் ராசு நின்றுகொண்டிருந்தான். வெளியே வந்த தமையனைக் கண்டதுமே, 'அப்பு செத்துப் போனார் மூத்தண்ணை!" என்று கூவியழுது கதிராமனுடைய காலடியில் வீழ்ந்தான். அவனை அள்ளியெடுத்துத் தன்னுடன் அணைத்துக்கொண்ட கதிராமன், ஒரு கணம் தகப்பன் இறந்துபோன செய்தி கேட்டு அதிர்ந்து போனான். குடிசையின் உள்ளே உணர்ச்சிக் கடலாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த பதஞ்சலியின் காதில் மாமனார் இறந்த செய்தி விழுந்ததும் அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். சற்று நேரத்துக்குள் தன்னைச் சமாளித்துக்கொண்ட கதிராமன், 'பதஞ்சலி! இருந்துகொள்.. நான் வீட்டைபோட்டு வாறன்!" என்று கூறிவிட்டு, ராசுவையும் அழைத்துக்கொண்டு தாயினிடத்திற்கு ஓடினான்.

--------------------------------------------------

44.

மலையர் மறைந்து ஒரு மாதம் கழிந்துவிட்டது. முப்பத்தோராம்நாள் சடங்குகளுக்காக, இதுவரை கதிராமன் குடிசையில் வாழ்ந்த பாலியாரும், ராசுவும், கதிராமன் பதஞ்சலி சகிதம் மீண்டும் தங்கள் வளவுக்கு வந்திருந்தனர்.

மீண்டும் பசுமையுடன் விளங்கிய மலையர் வளவு முற்றத்தில் பேரனை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் பாலியார். அவளுடைய மனதில் பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்து விழிகளைக் கலங்க வைத்தன. அந்தக் குழந்தையின் கரிய நிறத்திலும், சுடர்விடும் கண்களிலும் தன் அருமைக் கணவரை அவள் கண்டாள். அவளுடைய நெஞ்சு தகித்துக் கனிந்தது.. குழந்தை சிரிக்கிறான்.. இல்லை.. மலையரே அவளைப் பார்த்துச் சிரிக்கிறார்.. 'நான்தான் விசர்த்தனமாய் கதிராமனை அண்டாமல் ஒதுக்கி வைச்சிட்டன்.. நான் எண்டைக்கு எனக்கிருந்த மாடுகணடு, நெல்லுப்புல்லுக் காணாதெண்டு மிசினுக்கும், மெம்பர் வேலைக்கும் ஆசைப்பட்டனோ.. அண்டைக்குப் புடிச்சுpட்டுது எங்களைச் சனியன்!.. உன்னை விட்டிட்டு நான் ஒரிடமும் போகமாட்டன்!.. நான் சாகேல்லை.. நான்தான் உன்ரை மடியிலை இப்ப படுத்திருக்கிறன்!". பாலியார் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டவாறே பேரனைத் தன் முகத்தோடு சேர்த்துக் கொஞ்சினாள்.

வேள்வித் தீயில் வெந்து, புடமிடப்பட்ட தங்கத்தைப் போன்று ஜொலிக்கும் அழகுடன், பதஞ்சலி குடத்தடியில் அமர்ந்து மலையர் வீட்டுக் குத்துவிளக்கை மினுக்கிக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு காலமும் எரிமலையாய்க் குமுறிக் கொந்தளித்த அவளுடைய உள்ளம் பிரசவத்தன்று வெடித்து, இதுவரை உள்ளேயிருந்து உறுத்திய குப்பைகளையெல்லாம் வெளியே தள்ளிவிட்டிருந்தது. வெகுகாலமாகச் சீழ்ப்பிடித்துக் கொதித்துக் கொண்டிருந்த கட்டுப்புண் ஒன்று, தானே உடைந்து, உள்ளேயிருந்த அழுக்கையெல்லாம் வெளியேற்றிய பின் ஏற்படும் ஒரு இதமான சுகம் அவளுக்கு இப்போ சொந்தமாகவிருந்தது. பிரசவப் படுக்கையால் எழுந்தவுடன் அவள் செய்த முதற்காரியம், தனக்கு உலகரீதியான நாகரீகம், பண்பாடு என்ற பலவற்றைக் கூறிப் பலவீனமடையச் செய்த கதைப் புத்தகங்களை அடுப்பில் போட்டுக் கொளுத்தியதுதான்! அவை கொழுந்து விட்டெரிந்து சாம்பராவதற்கு முன்பே, அவள் அவற்றையும், அவை தனக்குக் காட்டிய புதிய உலகத்தையும், அதன் புதிய வாசல்களையும் அறவே மறந்து போனாள்.

தேங்காயப் பொச்சை வைத்துக்கொண்டு, பழப்புளியும் மண்ணும் சேர்த்து உரஞ்சித் தேய்கையில், செழிம்பு பிடித்துக்கிடந்த அந்தக் குத்துவிளக்கிலுள்ள அழுக்கெல்லாம் இருந்த சுவடுகூடத் தெரியாமல் அகன்றுவிடுகின்றன. தெளிந்த நீரில் அலம்பப்பட்ட அந்தக் குத்துவிளக்கு காலை வெய்யிலில் பளீரென்று ஒளி வீசுகின்றது. அதை எடுத்துச் சென்று நெய்யிட்டுத் திரியிட்டு மலையர் வீட்டு மாலுக்குள் வைத்து ஒளியேற்றிக் கொண்டிருந்த பதஞ்சலியைப் பார்க்கையில், பாலியார் மனதிற்குள் பலவகை உணர்வுகள் குப்பென்று கிளம்பிக் கண்ணில் நீரை நிறைக்கின்றன.

விளக்கை ஏற்றிவிட்டுக் கிணற்றடிப் பக்கம் சென்ற பதஞ்சலி, ஒரு தடவை எதிரே தெரிந்த குளக்கட்டையும், அதை வளைத்துக் கிடக்கும் இருண்ட காடுகளையும் பார்க்கின்றாள். வரண்டுபோய்க் கிடந்த குளத்தில் புதுவெள்ளம் அலைமோதுகின்றது. பட்டுப்போய்விடும் என்ற நிலையிலிருந்த மரஞ்செடிகளெல்லாம் மீண்டும் பசுமையைப் போhத்தவாறு சிரிக்கின்றன.

.. மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன.. மீண்டும் தளிர்ப்பதற்காக!.. மான்மரைகள் கொம்புகளை விழுத்துகின்றன.. மறுபடியும் முளைப்பதற்கு!.. பறவைகள் இறகை உதிர்க்கின்றன.. மீண்டும் புதிய இறகுகள் பெறுவதற்கு!..

அவளுடைய பார்வை தொலைவிலிருந்து மீண்டபோது, தனக்கு வெகு அருகில் வேலிக் கட்டைகளின்மீது அமர்ந்திருந்த இரண்டு நிலக்கிளிகள்மேல் சென்று நிலைத்தது. இளங்காலைப் பொழுதில் மரகதப் பசுமை நிறமான அவற்றின் உடல்கள் அழகாகப் பளபளத்தன. வாலிறகை அடிக்கடி ஆட்டியவாறே ஜீவத்துடிப்புடன் இருந்த அவற்றை அவள் 'சூய்!" என்று கூவி, கைகொட்டிக் கலைத்தபோது அவை உல்லாசமாகப் பறந்தன!

அவள் குதித்துக்கோண்டே வீட்டை நோக்கிக் குதூகலத்தடன் ஓடியபோது, 'என்ன பதஞ்சலி! பச்சை உடம்போடை பாய்ஞ்சு திரியிறாய்!" என்று பாசத்துடன் கடிந்துகொண்டார் பாலியார். தோட்டத்தில் வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த கதிராமன், பாலியார் கூறியதைக் கேட்டு மெல்லச் சிரித்துக்கொண்டான்.

நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவைதான்! உயரே பறக்க விரும்பாதவைதான்! இலகுவில் பிறரிடம் அகப்பட்டுக் கொள்பவைதான்! ஆனால் அவை எளிமையானவை! அழகானவை! தம் சின்ன, சொந்த, வாழ்க்கை வட்டத்தினுள்ளே உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையானது!

--------------------------------------