கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  உரத்துப் பேச..  
 

ஆழியாள்

 

உரத்துப் பேச..

ஆழியாள்

மறு


-------------------------------------------


நூல் தலைப்பு :உரத்துப் பேச…
ஆசிரியர் :ஆழியாள்.
பொருள் :கவிதை.
முதற்பதிப்பு :2000, ஜூலை
உரிமை :ஆசிரியர்.
பக்கம் :டெமி.
வெளியீடு :மறு
71, முதலாவது பிரதான சாலை,
இந்திரா நகர்,சென்னை - 20.
வடிவமைப்பு :வே. கருணாநிதி.
அச்சாக்கம் :தி பார்க்கர்,
293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை சென்னை - 14, Ph: 8215684.



Book Title :URATHTHUP PESA…

Subject :Poetry

First Edition :2000,July

Copyright :Author

Wrapper :Sajitha

Publisher :MARU

71, First Main Raod, Indira Nagar,

Adyar, Chennai - 600 020.

Author : AAZHIYAAL(Mathubashini)

20 Dulverton Street,

Amaroo,

Canberra ACT 2914

AUSTRALIA.

aazhiyaal@hotmail.com

Price : 35.00.

Printer : The Parkar

293, Ahamed Complex,II Floor,

Rayapettah High Road, Chennai -14

Ph: 8215684, email: theparkar@eth.net





-----------------------------------


மூதூர்க் கிராமத்தில்
இரு மொழிகளை ஊட்டி,
இலக்கியத்தை என்னுள் ஊடுபாவ வைத்த
என் பள்ளி ஆசிரியை,
ஆசிரியர்களுக்கு…
- குறிப்பாக
வண்ணமணி ஐயா,
இக்பால் சேர்,
நிக்கொலஸ் சேர்,
மறைந்த லியோன் மாஸ்டருக்கு.

-------------------------------------


கவிதைகளைப் பிரசுரித்த

மூன்றாவது மனிதன்,
கணையாழி,
சரிநிகர்,
உயிர்நிழல்,
இன்னுமொரு காலடி,
யுகம் மாறுது,
ஆறாம்திணைக்கும்

வே. கருணாநிதி,
சி. அண்ணாமலை,
கஜேந்திரன்,
ரகுபதி,
மதுசூதனன்,
மற்றும்
அட்டை ஓவியம் வரைந்த
சஜித்தாவுக்கும்

மனப்ப+ர்வமான நன்றிகள்

-----------------------------------------------------

உள்ளடக்கம்

தடைதாண்டி 6
கடற்கரை உலா 8
நிலுவை 10
காது கொள்ளாக் காட்சிகள் 12
இயலாமை 14
மன்னம்பேரிகள் 16
பதில் 17
நிஜம் 19
போதையூட்டப்பட்ட மொட்டு 22
பிணைவு 24
புத்தகங்கள் 26
அடிவயிற்று சமிக்ஞைகள் 29
தேவைகள் 30
பாப்பா பாட்டுக்கள் 34
பயணம் 36
விடுதலையின் பெயரால் ............ 39
குற்ற உணர்வு 41
பதிவுத் தபால் 43
பாதுகாப்பு 46
அறிமுகம் 48
ஒரு சிப்பாயின் மனைவி ஓலமிடுகிறாள் 51
கடல் இரகசியங்கள் 53
வெள்ளைச் சேலை 54
மொழிவழிச் செலவும் இருப்பின் அடையாளக் குறிப்புகளும் 57


-------------------------------------------------


தடைதாண்டி

நம் நேற்றைய சந்திப்பு
கடந்த பின்,
நீ,
உன்னை எந்நிமிடமும்
எதிர் கொள்ள
நான் தயாராகவே இருக்கிறேன்.

என் ஆத்துமமும், அறிவும்
முழு உள்ளமும், இந்த ஊனும்
உன்னை நோக்கியபடிக்கு
பனிப்புகையாய் மேலெழுவது
புரிகிறது எனக்கு.
இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை

நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்,
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவெண்டும்.

எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா!

ஒன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்

24.03.1997


---------------------------------------------------


கடற்கரை உலா

உன் கண்களுக்கு
அவை கயிறுகளாய் தெரியவில்லை
ஏன்?
எம்மில் பலருக்கும் அப்படித்தான்,
புரிவதில்லை.
கயிறோ வெள்ளிக் கால்விலங்கோ
எதுவும் கட்டுத்தான் அவர்களுக்கு

உனக்கு
அவர்கள் மனமும், மார்பும்
பீனிக்ஸை அல்லவா நினைவ+ட்டுகின்றன.
எனினும் பாரேன்
அவர்கள் கால்கள் ..............
கடற்கரை மணலில் கட்டுண்டு
கிடக்கின்றனவே

நீ ஒன்றும்
கட்டவிழ்க்க வேண்டாம் மகனே.
இன்னமும் உன் கைவிரல்களில் பக்குவமில்லை
ஆனால் ஒன்று செய்யேன்.

அவர்கள்
அவர்களாய் அவிழும் போதும்
முடிச்சுகளை அவிழ்க்கும் போதும்
கற்பு கால்வழியே போகிறது
எனக் கூவாதே வீணே.

அங்கே பார் தோணி!
அதற்கு கால்களும் இல்லை
கட்டுக்களும் இல்லை.
அப்பிடித்தான் அவர்தம் பேத்திகளும்,
பேத்தி வயிற்று மகள்களும்
சவல் கொண்டு சமுத்திரங்களைக் கடப்பர்.

கயிறுகள், கட்டுக்கள்
வெள்ளிக் கால் விலங்குகள்
மரபெனும் மாயை......
இவற்றொடு இவர்கள்.

புரிகிறதா என் மகனே?
புரிந்து கொள் ஓர் விளையாட்டைப் போல்

07.04.1997


---------------------------------------------------



நிலுவை

நீ திருப்பித் தரலாம்
மணிக்கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை.

உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளி;த்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?

கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக் கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்துச்
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்.

20.10.1995


---------------------------------------------------


காது கொள்ளாக் காட்சிகள்

மழை ஓய்ந்ததும்
ஓட்டுக் கூரைகள்
பளீரெனச் சுத்தமாயக்; கிடந்தன.
வானம் இன்னமும்;
நீலம் பாரிக்காத மனமாய்.
தார் ரோடுகள்
வானவில்லை இடைக்கிடை
நினைவ+ட்ட,
ப+மிப் பரப்பு முழுதினின்றும்
புகையெழுந்து
சாம்பிராணியையும் அகிலையும்
நினைவிருத்த,
மண்வாசனை சுகந்த கீதமாய்
நாசி வருடிப் போயிற்று.

என் எதிரே
வந்த இராணுவ வண்டி
விலத்திப் போகையில்,
பஞ்சு மிட்டாயை கைமாற்றி
வலது விரற் பிஞ்சுகளால்
கையை எக்கி,
உயர வீசி ஆட்டுகிறாள்
ஓர்; சிறுமி.

இனிய வான்கடிதப்
பதிலாக
அதனுள் நின்ற
அவர்களில் பலரும்
அவ்வாறே கைகாட்ட,
வியப்பில் ஒரு நொடி
உறைந்த இரத்தம்
அவசரமாய் ஓடியது
உரத்துக் கேட்டபடி;
“என் நாட்டில் போரா,
யார் சொன்னது?”

24.11.1996

---------------------------------------------------


இயலாமை

இப்போது விலக்காய்ப்போன
இனிய பழைய நாட்கள்.
நினைவலைகள் வந்து மறுபடியுயம்
மறுபடியுயம்
வௌ;வேறு கதியில்
வித வித வடிவில்..........!

மிச்ச சொச்சமாய்
நினைவோரத்து இலையில்
அங்கிங்காய்
ஒட்டிக்கிடக்கும் பருக்கைகளுக்குக்
கவள உருக்கொடுக்கிறேன்.

எங்கே முடிகிறது?

முக்கிய வினாத்தாள் கொடுக்க வேண்டும்
வாசித்த குறையில் நேற்றைய தினசரி
பதில் எழுத வேண்டும்
பாவம் அவர் காத்திருப்பார்
நாளைச் சமையலுக்கு உள்ளி இல்லை
வீட்டுச் சொந்தக்காரியின் புடவைக்கு
ரவிக்கைத் துணி வேறு தேடவேண்டும்.

தப்;பித் தவறி
மனது விரியச் சிரித்தால்
சகாக்களின் விகாரப் பார்வைகள்
புகையிலைப் புழுக்களாய் ..............
எங்கே முடிகிறது ?

26.11.1996

---------------------------------------------------

மன்னம்பேரிகள்

காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.

தந்திக் கம்பத் தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம் மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும் *
அவள் கோணேஸ்வரிக்கும் **
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் - நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையை புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.

10.07.1997

* மன்னம்பேரி(22) 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். 1971 ஏப்பிரல் 16இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்ட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

** கோணேஸ்வரி(33) அம்பாறை சென்றல் கேம் 1ம் கொலனியைச் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியபின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்;.


---------------------------------------------------


பதில்

என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது .

அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங் கொண்ட
ஊழிச்சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்.

என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்துப் பறந்து
தனித்துச் சிதறிக் கொட்டும்.

தனித்து,
அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்.
தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்
தாள லயத்துடன்.

அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என்மொழி.

அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்@
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.

அதுவரை நீ காத்திரு.

16.06.1997


---------------------------------------------------


நிஜம்

எம் உயிரில்;
உரைத்துச் சொன்னாலும்
உம் உதிரத்தில் உறைக்காதா?

எத்தனை தலைமுறைகள் போக்கி;னீர்
எத்தனை விதிமுயைகள் ஆக்கினீர் - இன்னும்
பெண் போகமா உமக்கு?
போக்கிடமே இல்லையா அவளுக்கு?

காதல் என்றால் கலவி என்பீர் - அது
காமம் என்றால் காதல் என்பீர்
வெற்றுப் பைகள் உமக்கு
வீதி சமைத்தது யார்?


எம் உயிரில்;
உரைத்துச் சொன்னாலும்
உம் உதிரத்தில் உறைக்காதா?

ஆளுமை கண்டால் ஆட்டக்காவடி என்பீர்
அஞ்சி ஒடுங்கிவிட்டால் அசல் குத்துவிளக்கு என்பீர் - அந்த
வெள்ளிடிதான் உம்வாயில்
விரைந்தோடி வீழாதோ?

எத்தனை நாகரீகங்கள் கடந்தன?
எத்தனை தேசங்கள் விடிந்தன?
எத்தனை இஸங்கள் போயின வந்தன
எத்தனை வேகம் எத்தனை வேகம் கணணியுகம்.....................................
அதற்கும் மேலே
அண்டவெளி..........................அகவெளி........................
இன்னும் எத்தனை எத்தனை எத்தனை?
இத்தனைக்குப் பின்னும் பெண் போகமா உமக்கு
போக்கிடமே இல்லையா அவளுக்கு?

எம் உயிரில்;
உரைத்துச் சொன்னாலும்
உம் உதிரத்தில் உறைக்காதா?

நிர்வாணமாய்
நிஜத்திலும் நிஜமாய்
உள்நோக்கி உம்மை ஒருகாலும் பார்த்ததே இல்லையா?
முதலில் உம்மை உற்று
உள்நோக்கிப் பாருமய்யா, பாரும்!

19.02.1993

---------------------------------------------------

போதையூட்டப்பட்ட மொட்டு

உங்களது அண்டப்புரட்டல்கள் மூலம்
யுகாந்திரமாய் நான்
சிட்டிகை சிட்டிகையாய்ப்
போதையூட்டப் படுகிறேன்.

பல நூறு ஆண்டுகளாய்
எனக்குத் தரப்பட்டதும், கிடைத்ததும்
இந்த ஹெரோயின் உணர்வுதான்.

முதலில் ஒரு சிட்டிகை
நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாய்
ஆமோதித்தீர்கள் - நான்
பதுமை@ பேரழகுப் பதுமை என
என் சர்வ முயல்தல்களையும்
குறுக்கினீர்கள் !

அடுத்தடுத்த சிட்டிகைகளில்
~தெய்வம்’ என நிலையுயர்த்தப்பட்டதால்
மௌனமாய் ஊமையானேன்.

உங்கள் சுட்டுவிரல் இட்டபடியே
எக்கணமும் நான்
மணமேடையை நினைவிலிருத்தியபடி
நிறைந்த வெட்டித் தங்க அணிகளோடு
நகைக்கடையின் வெளிப்பாடாய்
ஊர்ந்து, குனிந்து, குழைந்து சிவந்து
மௌனமாய் ஊமையாய் ...............................

அப்போதெல்லாம்
மோனச் சொர்க்கத்தில் அல்லவா
திளைத்திருந்தேன்,
சாத்தானின் வேகத்தோடு என்னை
மேன்மைப்படுத்தியது புரியாது
போதைவேலிக்குள் அடக்கி,
என்னைத் தொலைத்து விட்டேன்.

இக்கணத்தில்
மூக்கும் தொண்டையும் வரள
அங்கெங்கோ என் சிற்றிதயம்
அவதியாய்த் துடித்துத் தளர்கிறது.
அத்தனை காக்கைகளும்
கொத்திச் சுவைக்கும் ரணவலி
ஒவ்வோர ;உயிரணுவிலும்.

இத்தனைக்குப் பின்னரும்
இன்னோர் அரைச் சிட்டிகையை
நான் உறிஞ்சத்தான் வேண்டுமா?

இல்லை
இல்லவே இல்லை
இன்னமும் எனக்கென்ற அபிலாஷைகளை
பிடித்துத் தொங்கியபடி - நான்
என்னை, என் சுயத்தை
பராமரிக்கும் தாதியாவேன்

பின் ஏன்
அக்னி மொட்டின் முகிழ்ப்பை
முறங் கொண்டு முடுகிறீர்?

10.02.1993


---------------------------------------------------

பிணைவு

வௌ;வேறாய்
பதியங் கொண்டிருந்தாலும்
உனக்கும் எனக்குமான
பிணைப்பு
ஒட்டுச் செடிக்கு உரித்தான
ஒன்றல்லவா?

அந்த வருடத்தின் கடை இறுதிகளில்
உப்புக் காற்றும் அலைக்கரையும்
அதிகாலை நிர்மலத்தால்
கலங்கள் சிலவற்றை
இழைத்துப் போட்டன.
உயிர்க்காற்றின் ஒலித்தடத்தில்
இழையங்கள்
மெல்லவே மெல்லவே
உரம் பெற்றுத் தேறின.

பின்னுமொரு
சித்திரை பௌர்ணமியில்
உள்ளக் கணுக்கள் நெகிழச்
சட்டென்று விட்டன
சின்னஞ் சிறிய மொட்டுக்கள்
அவற்றிடையே
செம்மையும், இதமும் செழுமையும்
ஒன்றை மிஞ்சிய ஒன்றாய்த்;
ததும்பித் துளித்துக் கிடந்தன.

உன் செவிப்பறைக்கு
என் சொற்கள் புரிகிறதா?
வாழ்வின் உயிர்ப்பை
உயிர்ப்பின் இருப்பை
இருப்பின் தேடலை
புரிந்து கொள்.
அப்போதுதான் மாசிமாதத்து
மஞ்சள் பேராதனை மலர்களாகப்
பூத்துக் குவிந்து கிடப்பது
நமக்கும் சாத்தியமாகும்.

03.05.1997

---------------------------------------------------

புத்தகங்கள்


நீள் அடுக்குக் கல்லறையில்
நிரந்தரத்துயில் கொள்ளும் பிணங்களைத்
தோண்டி எடுத்துப்
பக்கம் புரட்டி வாசிக்கையில்….

வாழ்வின் சூட்சுமங்கள் அனைத்தும்
மௌனத்தின் கனத்;தில்
சிதையாய் பற்றிக் கொழுந்தாகி
ஞானத்தில் உள்ளொளி பரப்பும்.

மரணம் வாழ்வாய்த் தோன்றி - அதுவே
மெய்யாகிப் போம்.

02.02.1998

---------------------------------------------------


தொடர்பாடல்

மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பிறப்பெடுத்த மனிதர் எத்தனையோ
அத்தனையுண்டு அவற்றின் விதங்கள்.

இடதை வலதாயும்
வலதை இடதாயும் புறம் மாற்றி
எட்டத்தைக் கிட்டவாக்கி
கிட்டியதை
எட்டித்தள்ளி வைக்கும் மனக்கண்ணாடிகள்,
மர்மமானவை.
குவிவாடி, குழிவாடி, ரசவாடியாய்
பச்சோந்தித் தோற்றங்கள் பலகாட்டி
பிறர் கண் பீழை உருப்பெருக்கி - அவை
தம் இருப்பை மறந்துவிடும்.
சிதறுவில்லைக் கண்ணாடிகளோ
முடுக்குகளில் இடுங்கிச் சரிந்து
வேற்று நிறங்களாய் வித்தைகள் காட்டும்.

ஆடிகளின் அசைவுக்கேற்ப
ஒளிதெறித்துக்
குவியும் கணத்தில்……
வெளிப்படும் வார்த்தைகளும், வரிகளும்
உருக்களில் பெருத்தும் சிறுத்தும்
கருமாறிக் கிடக்கும்.
உள்ளங்கையில் குழையல் சோறாய்
வெறும் பொய்யும் மெய்யும்
திரண்டு நிற்கும்.

மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பாவனையில் உள்ள
நம் மொழிகளோ மாயையானவை.

04.06.1998


---------------------------------------------------


அடிவயிற்று சமிக்;ஞைகள்

உன் தாயும்
அவள் தாயின்
தாயின், தாயின்
தாயும்,
அவள் தாயும் இல்லாவிடின்
நீயும்
உன் மகள் வழிப் பேத்தியும்
அவள்தன் பேத்தியும்
அவளின் ப+ட்டியும்
எதனூடு கிளைத்திருக்க முடியும்?

சில பொழுது எண்ணிப்பார்.

வானத்தின் வண்ணம் காண்பதற்கும்
வெறும் பெண்ணாய் நீ
மீளப் பிறந்து கற்பதற்கும் - தொப்புள் கொடிகளின்
தொடர் சமிக்ஞைகளுக்கும்
தொடர்பு ஏதும் இல்லையா?

சில பொழுது எண்ணிப்பார்.

ஒருவேளை.......
அடிவயிற்றுக் கொடிவேரின்
ஆரம்பம் நீ என
நினைத்திருந்தால்
அல்லது
நம்முகம் பேண
முன்னோடிகளின் தொடர்ச்சி
எதற்கு என்ற
எண்ணமிருந்தால் .......

எங்கே
ஒருகையால்
உன் ஆத்துமத்தின் உயிர் தொட்டு
மறுகையால் சுட்டிக்காட்டு
நீ சுவைத்த கனியின்
மரத்தை.

ஏவாள் நீயே !


22.12.1998

---------------------------------------------------


தேவைகள்

என் பருத்திச் சுடிதாரும்
ஒரு பவுன் சங்கிலியும்
இரு காது மின்னிகளும்
ஐம்பது ரூபாய் 59 சத செருப்புகளும்
உன் மானத்தை
சொந்த ஊரிலேயே வாங்குவதாயும்
சங்கைக் குலைக்க வந்ததாயும்
ஏனம்மா என்னை கோவித்துக் கொள்கிறாய்?

எதற்காக இப்போ அழுகிறாய்?
எடுத்தற்கெல்லாம்
கண்ணீர் விட்ட பழக்கத்தில்
கொட்டித் தீர்க்கிறாயா? அல்லது
ஏதும் புரிந்துதான்
கரைந்து ஒழுகுகிறாயா?
அழாதே என்னம்மா
என்னைப் பேசவிடு.


ஒற்றைக்கவள உணவுக்காய்
ஓர் பிஞ்சுஉயிர் நான்கு ஐந்தாய்ப் பிரிந்து
பேயாய்த் திரியும் அவலம்
தெரியுமா உனக்கு?


கோணிப்பையால் உடல் மூடி
வீதிக் குளிரில் முடங்கி நடுங்கும் - எம்
குட்டி இளவரசிகளின் சின்னக்கைகளை
அம்மா நீ அறிவாயா ?

தளிர்த்துக் கனியுமுன் வாடிக்கை ஆள் தேடி
தெருவெங்கும் அலையும் - என் பத்துவயதுத் தங்கைகளின்
வெம்பிய உடலங்கள் பற்றி
உனக்கேதும் தெரியுமா ?

தெரியும் என்று ஒற்றைத் தலையசைப்பில்
ஊமைப் பதிலிறுக்காதே.
வார்த்தையின் முழு அர்த்தங்கனிய
தெரியும் என்று
நெஞ்சை அசைத்து நினைவைக் கிளறி
ஓசையை கோர்த்து வார்த்தையாய்
பதில் பகர்.

அத்துடன் நின்றுவிடாதே
என்னம்மா.

குசினித் தேநீர்க் கோப்பைக்குள்
ஊறிப் பருத்துக் கிடக்கும் உன் தலையையும்
அம்மன் கோயிலில் சரணாய்க் கிடக்கும் - உன்
கால்கள் ஒரு சோடியையும்
உடலில் பொருத்தி,
ஊருக்கு வெளியே வந்து பார் -
குட்டி இளவரசிகளின் கண்களை ஒருக்கால்.

அவை மொழிந்து தீர்க்கும்
நம்மில் சிலரின் அடிப்படைத் தேவைகள்
போதும் போதுமென சிறிது அதிகப்படியாகவே
பூர்த்தியாகி விட்டதைப் பற்றி.


19.01.1999


---------------------------------------------------


பாப்பா பாட்டுக்கள்

1

அம்புலி அம்புலி அழகான அம்புலி
அங்கு ஏன் தனியாக நின்று நீ பார்க்கிறாய்?
அம்புலி அம்புலி அழகான அம்புலி
ஒடோடி மேலே வரவா
ஆடி நாங்கள் பாடுவோம்
12.04.1999

2

அங்கே பார் அங்கே பார்
எத்தனை தும்பி பறக்குது பார்.
சின்னத்தும்பி, பெரியதும்பி
கறுப்புதும்பி, சிவப்புதும்பி.

அங்கே பார் அங்கே பார்
எத்தனை தும்பி பறக்குது பார்
அத்தனையும் அம்மாவின்
சேலை போல அழகுதான்.
14.05.1999





3

கடலும் வானும் நீலம்
கரியும் முடியும் கறுப்பு
பூவின் நிறங்கள் அதிகம்
பாலும் சோறும் வெள்ளை.

பூவின் நிறங்கள் அதிகம்
பாலும் சோறும் வெள்ளை
அன்பின் நிறமோ சிரிப்பு
நீருக்கென் றொரு நிறமில்லை.
16.07.1999

4

சின்ன சின்ன வெள்ளியே
வான் வெளியின் கண்கள் நீ
மின்னி ஒளிரும் என் சிரிப்பை
அள்ளித் தந்தது யார் சொல்லு?
29.07.1999


---------------------------------------------------


பயணம்

நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
கூடவே பலரும்.

இடையிடையே புன்னகைகள்
குசல விசாரிப்புகள்.

சிலர் மென்றபடி
சிலர் வாய் பிளந்து தூங்கியபடி
சிலர் வானவெளியில் வளையக்கலங்களைப் புகைத்தனுப்பி
எதை எந்த மண்டலத்தில் இறக்கலாம் என்ற
எண்ணத்தில் மிதந்தபடி,
எதிர்ப்பட்ட மூடிய சேலை முலைகளை
சுவைத்தபடி வேறு சிலர்,
இன்னும் சிலர் பேசத் தொடங்கியிருந்தனர்.

என்னிடமும் சில கேள்விகள்
விண்வெளிக் கற்களைப் போல்
சுழன்று பறந்து விர்ரெனக் குத்திட்டு
நேராய் வந்து விழுந்தபடி கிடந்தன.

நாங்கள் கதைக்கத் தொடங்கினோம்
தாய்மொழி, தேசியமொழி,
உலகமொழி, பழையமொழி
முதல்மொழி, மூன்றாம்மொழி, சைகைமொழி என
பலமொழிகளிலும் கதைத்தோம்.


நான் சொல்வது பொய்யென்று
அவர்கள் அறிந்தார்கள்
அவர்கள் பேச்சு புழுகென்று
நானும் அறிந்தேன்
ஆளை ஆள் அறிந்து கொண்டபோது,
என்கதையெல்லாம் வெற்றுக்குமிழிகள் என
எனக்குள் அறிகிறேன்
அவர்கள் வாக்கு பொய்யென்;று
தமக்குள் அறிவார்களா?


எதுவாய் இருந்தால் என்ன?
நாங்கள் தொடர்ந்து கதைத்தோம்
பறைந்தோம், செப்பினோம்,
உரையாடினோம், திருவாய்மொழிந்தோம், பேசினோம் ........

குமிறும் ஒரு பத்தாயிரத்து எண்பத்து எட்டுக்கோடி அலைகள்
மலையாய் சீறிக் கொந்தளித்து எழுந்து
துளாவி எமை இழுத்துச் சுருட்டி - எங்கோ
அளவறியா ஒற்றைப் பொந்தின் ஆழத்தில்
திணித்துச் செருகி
சுடு மண்படைகளால் அடுக்கி மூடி - மேலே
குறுங்கற்களால் செப்பனிட்டு மேவிக் களையாறி
முறுவலிக்கும் ஆழ்கடலின் மௌனத்தினூடு
உண்மை நீலமாய்க் கசியும் வரை
பேசினோம் பேசினோம்
நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்;.

உயிர்க்காற்றின் வீரிட்ட அலறல்
உடற்குகையின் இருள்வெளியில் அலமலந்து அலமலந்து மோதி
எதிரொலித்தது.

12.07.1999


---------------------------------------------------


விடுதலையின் பெயரால் ............



நாய் மூச்செடுக்கும்
மனிதன் மூச்செடுக்கும்

நாய் குரைக்கும்
மனிதன் கதைக்கும்

நாய் நீந்தும்
மனிதன் நீந்திப் பழகும்

நாய் வீட்டைக்காக்கும்
மனிதன் நாட்டைக் களவெடுக்கும்

நாய் ஸ்ரீ வளர்ப்புப் பிராணி;@ அனைத்து வகையும் அடக்கம்.

{
நாய் கடிக்கும்
புதைத்த பிணங்களை வெளிக்கொணரும்
போதைப் பொதிகளை மோப்பம் பிடிக்கும்.
ஐம்பொறியாய்த் தொழிற்பட்டு
ஆத்மநட்பாய் உயிர்தரும்.
}






மனிதன் ஸ்ரீ போராளி@ அனைத்து குழுவும்; அடக்கம்.
மனிதன் ஸ்ரீ இராணுவம்;@ அரச இயந்திரம் அனைத்தும்; அடக்கம்.
{
மனிதன் கடிக்கும்
கன்னத்தில் அறையும்
தொங்க விட்டுக் கம்பங்களில் கடைசித் தீர்ப்பெழுதும்
தொழுகைளில் தோட்டாக்களைச் சீறிப்பாயவிடும்
காட்டிக் கொடுக்கும்
காசு பிடுங்கும்

இல்லாவிடின்

மனிதன்
சுட்டுத் தள்ளும், மண்குழிகளை நிரப்பும்
சுவரில் அறைந்து சித்திரம் கிறுக்கும்
தொடைகளைப் பொத்தலிடும்
வெட்டித்துண்டாடும்
கருமணிகளை தோண்டி அள்ளும்
சதைகளை உரித்து பிய்க்கும் - பீச்சும்
ரத்தத்தில் வெறித்துச் சிலிர்க்கும்.


இல்லாவிடின்

மனிதன்
வார்த்;தைப் பிழம்புகளால் சிலம்பமாடும்.
குண்டுபோட்டு ஷெல்களை எய்யும்
கோடாலியால் நெஞ்சைக் கொத்திப் பிளக்கும்
அகலவிரித்துக் குறிகளைத் திணிக்கும்.
திணித்த குறியுள் கிரனெய்டு விதைக்கும்
வதைத்து சிதைக்கும்.
}

உதவிக்குறிப்பு:

தெரு நாய்களுக்கு மாயாஜால தந்திர மந்திர
சாகஸவித்தைகள் தெரிவதும் இல்லை
மனித வன்முறைகள் புரிவதும் இல்லை.

நுஒpநஉவநன ழுரவிரவ:

ஆகவே மனிதனை மனிதன் என்றே
ஏசிப் பழகுங்கள்,
ஏசுங்கள் - நம் வன்முறையின் பெயரால்.


28.08.1999


---------------------------------------------------

குற்ற உணர்வு


இங்கு
மூச்சைப் பிடித்துக் குதிகளை எம்ப
கிளம்பும் ஒற்றைத் துள்ளலில்
வானத்தின் சாயம் தலைகளை அப்பும் - அந்
நீலத்தின் நிறங்களோ நான்கு.

வசந்தம்;;, வெயில், கார், பனி, காற்று என
எதிர்புதிரான காலப்பருவங்கள்.
விரிந்து பரந்த நிலப்பரப்பு
அடர்ந்தும் ஐதானதுமான ய+க்கலிப்டஸ் மரங்கள்
அகன்ற வீதியை குறுக்கறுத்து உருண்டோடும் குட்டி முள்ளம்பன்றி
அது கடந்து போக காத்திருக்கும் கார்கள்
கறுப்பு, வெள்ளை, சிவப்பு, பிறவுன், மஞ்சள் என
மனிதத் தோல்களை மினுக்கியபடிக்கு நிறமூர்த்தங்கள்
மணலாற்றுக் கம்பிச்சுருள்களில்இ
மடங்கிச் சுருண்டு துளிர்த்ததைப் போல்
உறை குளிரில் விரியும் குறுணிப் ப+க்கள்.
வெயில் ஏற தீப்பிடித்து எரியும் கரும்பச்சை மரங்கள்
பூச்சி பிடிக்கும் பறவைகள்
பெயர் தெரியா வண்டுகளின் கூச்சல்
அமைதியான இரவுகள்
அள்ளமுடியாத நட்சத்திரங்கள்,
மனதில் படியும் சினிமாக்கள்
புரியாத மொழிகளில் தெரியாத சந்தங்களைத் தொட்டு
தத்தியபடி போகும் இசை,
வீதிவளைவில் உட்கார்ந்து இயற்கையை வரையும்
யாரோ ஒரு சித்திரக்காரி
அம்மாவின் பொட்டுப்போல பென்னாம் பெரிய நிலவு
நடு இரவில் மனிதர்களின் கொல்லிய சிரிப்பொலி...............

படுக்கையில் நீண்டு உடலைக் கிடத்தி
கால்களைப் பரப்பியபடி
ஆழத்தூங்க முடிவதென்னவோ கண்களுக்கு
இங்குதான்.......
அன்றைய தினம் *அபோக்கள் ஓருவரைத் தன்னும் காணாத வரையில்.

24.12.1999

* அபோ - அபோரிஜின்- அவுஸ்திரேலிய ஆதிக்குடிகள்


---------------------------------------------------


பதிவுத் தபால்


அன்புள்ள பரமபிதாவுக்கு
புவியை திரட்டி உருட்டிப்
படைத்தது முழுக்க நீர்தான் என
பலரும் சொன்னதை மனதில் வைத்தே
உம்மோடு பேச விழைகிறேன் - இல்;லாவிடின்
உமக்கும் எனக்கும் வேறென்ன
தொடர்பு இருக்கலாம் ?

சரி, நேரே விடயத்துக்கு வரலாம்.

நான் அட்டக் கறுப்பி
அவன் ஆயிரம் பொன்;.

நான் பொட்டை நாய்
அவன் ஆம்பிளைச் சிங்கம்.

நான் வேசை
அவன் சேத்துல மிதிச்சு ஆத்தில துடைக்கலாம்.

நான் மலடி
அவன் சாண்பிள்ளை எண்டாலும் ஆண்பிள்ளை.

நான் ஊரோடி
அவன் சமூகத் தொண்டன்.


என் பேச்சு அரட்டை, நான் வாய்க்காரி;
அவன் பேச்சு சிந்தனை, அவன் பேச்சாளி;.

அத்துடன்

மகன் - மேற்படிப்பு முடிச்சாச்சாம்
நல்ல வேலையில் இருக்காராம்.

அவன் அப்பா - பதவி உயர்வு கிடைச்சாச்சாம்.
குணத்தில் அவர் சிறு குன்றாம்.

தாத்தா - சொன்ன சொல்லை ஊர் தட்டாதாம்
வண்ணக்கர் நேரே சொர்க்கத்துக்காம்.




மகள் - தீ வயித்திலயாம்;
கெதியா கரையேத்தட்டாம்.


நான் அம்மா - குங்குமமும் கொடியும் மங்களமாம்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகாம்
குடும்பச் சமாச்சாரம் சுவர் நாலுக்குள்ளாம்
அப்புறம்
குழந்தை கெட்டது என்னாலாம்.

பாட்டி - சுமங்கலியாப் போனால்
எல்லாம் சரியாயிருமாம்.



ஆதலால் பரமபிதாவே!
நீ வெண்தாடியோ, சடாமுடியோ
அர்த்த நாரீஸ்வரனோ, அருவமோ, உருவமோ
ஆராய் வேண்டிலும் இருந்து விட்டுப் போம்

ஆனால் ஈரேழு உலகங்கள்
அண்டம் ஆகாசம் என்று அறளை பத்தாமல்
அடுத்த தடவை தன்னும்
உருப்படியாய்ப் படையும்
ஒரே ஒரு உலகத்தை.

30.12.1999


---------------------------------------------------



பாதுகாப்பு



உடலில் பட்ட ரணங்கள் ஆறுமுன்னே
ஆழக்கோடுகள் அதன்மேல் கிழித்து
கூராய் செதுக்கிய கதிகால்களை நட
படுநேராய் எழுகின்றன வேலிகள்.

தோல் மினுமினுத்துச் செழிக்க
மார்பின் பருக்கைகள் திரட்சிகளாகும் போது
சோடிக் கண்களால் உன்னை மேய்ந்தபடி
அவை கூடாரம் அமைத்துக் காத்திருக்கின்றன.

பருவகால மாற்றமதில்
மாரித்தவக்கைளும் மயிர்க்கொட்டிகளும்
வந்து போய்க் கொண்டிருக்க,
கொலைஞன் ஒருவனின் கூர்க்கத்தி முனையைப் போல்
வளரும் எட்டு வாரக் கரு உருவில்
வயிற்றின் கொழகொழத்த சதை இடுக்குகளுள்
புகுந்தபடி
சொகுசின் கணச்சூட்டில்
வேலிகள் ஆழமாய்;ப்
புதைந்து பதிகின்றன.


அருகில் ஆங்காங்கே
இன்னமும் வேலிகள்
வெளிர் பச்சையாய் முளைவிட்டுக் கிளம்பியபடி
வழிப்பாதை நெடுகிலும் சாரிசாரியாய்ச்
சாரிசாரியாய் ..................
உன் கண்பாப்பாக்கள் சலித்துக் குறுகி இருளும் வண்ணம்
மனம் எட்டும் பரப்பெங்கும் விரிந்து கிடக்கின்றன.

நீ நினைத்திருக்கலாம் அவை தாண்டுவதற்கென்று.

அவை காத்திருக்கின்றன
தோல்க் கூடாரத்தினுள்.
சிறுகச் சிறுக அரித்து அறியாக்கணத்தில்
உன்னுள் புகுந்து
முழுதாய் விழுங்கி ஏப்பம் விடுவதற்காகவே.

28.09.1999

---------------------------------------------------


அறிமுகம்


கடிகார முட்களின் இடைவெளியில்
இல்லாததும், இருப்பதுமான வர்ணங்களின்
கலவை குழைத்து
வரையத் தெரியாத சித்திரமாய்
உன்னை வரைந்து பார்க்கிறேன்.

நுண்மயிர்க் குழாய்கள் நீலம், சிவப்பாய்
நூலோடிக் கிடக்க - சில சமயங்களில்
வெதுவெதுப்பானதோர் சதைப்பிண்டமாய்
உன்னை வடித்தும், செதுக்கியும்
அழகு பார்க்கிறேன்.

அடைமழை வானில்
நீந்திப் போகும் விமானம் போல
மிக மெலிதாகவே நீ புலப்படுகிறாய்.

எப்படி அறிமுகப்படுத்துவேன்
இந்த உலகை உனக்கு? என்று நினைத்த காலக்கணமொன்றில்
என் ஈரற்குலை குலுங்கி நடுக்கமுற,
சூடாக நனைத்து மனதை சமாதானப் படுத்தியபடி
சிறுநீர் பாதங்களை சுற்றிலும்
ஓடி வந்தது.

ஒப்பாரியாய் குரலொன்று விரிந்து ஒலிக்கத் தொடங்கியது.

இரவை பகலை
நிறங்களின் கதம்பங்களை
மாசுபடும் வானை, கடலை
அருகும் விலங்குகளை பறவைகளைத்
தவிர்த்து
வேறு எதைக் காட்ட முடியும் என்னால்?

ஐயோ, எப்படி அறிமுகப்படுத்துவேன்
இந்த உலகை உனக்கு?

இறுமார்ந்த தேடலில்
தம்மைத் தாம் கபடமாய்ச் சுரண்டி
தம்மை அடக்கித் தாமே ஆண்டு
இரத்தச் சுற்றோட்டமாய் வன்முறையை ஆக்கி
பணமாய்த்தின்று
பகட்டைக் குடித்துக் கொழுத்து
தொந்தி பருத்துப்
பிரண்டு கிடக்கும் இந்த மனிதக்கூட்டமதை
எந்த வார்த்தைகளைக் கூட்டி
அறிமுகம் பண்ணுவேன்? - பின்
என் முகந்தன்னை எங்கு கொண்டு
ஒழித்து வைப்பேன்?

இன்னமும் உருக்கொள்ளாத
கருக்களுக்கும் கூட
இந்த உலகை அறிமுகப்படுத்தும் பிரியம்
இனி எனக்கு என்றென்றும் இல்லை.
11.12.1999


--------------------------------------------------------


ஒரு சிப்பாயின் மனைவி ஓலமிடுகிறாள்



சென்ற சனி விடுப்பு முடிந்து நீ பயணிக்கையில்
வளைந்து மறையுங் கணம் வரை உற்று நின்றேன்.
மனம் மூச்செறியுந் தன்னும் வெகு நேரமாய்ப்
போதிப் புத்தரின் முன் அகலேற்றி வணங்கினேன்.

புதனன்று காய்ந்த கிளையிலே ஒற்றைக் காகங் கரைந்தும்
ஆகாயம் கறுப்பைத் தன்னில் அள்ளிப்ப+சிய போதும்
நான் பயப்படவில்லை ஏனெனில் நானறிவேன், உன் பாதுகாப்பை.
எழுதப்பட்ட உன் ஜாதகத்தில் சங்கடச் சகுனங்களேதுமில்லை.

ஆனால் வியாழனன்று அவர்கள் உன்னை வீட்டுள் தூக்கி வந்தபோது
எனக்குப் புரியவில்லை, எதை நம்புவது, எதை எண்ணுவதென்று
நான் நீள்துயிலினின்றும் விழித்தெழுந்து ஒருங்கே
தெளிவற்ற விம்பங்களாய்ச் சாவையும் வாழ்வையும் கண்டேன்.

அந்தச் சனிதானே கிராமக்கிணற்றில் ஒன்றாய் ஊறிக்குளித்தோம்
நீயோ சிறுவாண்டாய்க் கற்களை வீசினாய் இழிக்குந்தவளைகள் மேல்
அங்கே அவக்குறியாய்ப் பளீரழகோடு பாளை தள்ளிய
பெரும் பனையின் வாசனையை சுவைத்தல்லோ முகர்ந்தோம்.

மீள இரைமீட்கையிலே புலப்படாத வனைத்தும் புரிகிறதிப்போது
நீ பின்னே வந்து என் பின்னலைக் கோதிய விதமும்
தாழ்வாரத்து ஓரக் கதவில் தரித்துச் சாய்ந்து - என்
தேனீச் சுறுசுறுப்பைக் குறுகுறுத்து ரசித்த சுகமுந்தான்.


அவர்கள் உனக்களித்தது ஓர் மாவீரனின் அடக்கத்தையே.
இராணுவ வேட்டு மரியாதைகளோடு
வாத்தியங்களையும் இசைக்கையிலே
உன்னுடல் பல கை மாறித் தவழ்ந்தது.

நான் யாவற்றையும் பனிப்புகாரினூடே நோக்கினேன்
அவர்களின் பேச்சு, முகில் மூட்டத்திNனூடு இரைந்து
தடுமாறிப் பறக்கும் விமானம் போலப் புலனாக,
அவர்கள் அலசினர் வாழ்வினதும் சாவினதும் வழிப்பாதையை.

நான் எண்ணிப் பார்க்கிறேன் கனவிழந்த கட்டாந்தரை வருடங்களை,
நெடியதோர் பாதையாய் வளைகிறது பாலைவனத்தூடு.
எவ்வாறு என்னை ஈடுபாடுடையவளாய் மாற்றுவது எள்பதும்
வரும் நாட்களை ஓட்டுவது என்பதும் எனக்குப் புதிர்களே.

வார இறுதிகளில் எதுவுமே செய்யத் தோன்றா நிலையில்
திருமண வெண்பட்டுச் சேலையை நீளமாய் நிலத்திற் பரப்பி
மணவறையில் என் இடை சுற்றிய நாணத்தோடும் புதுப்பட்டோடும்
பொலிவாய் உன்னோடு நின்ற காட்சி நினைவை அலைக்கிறது.

எத்தனை பெரும்போக்கிரிப் புழுகர்கள் இந்த சாதகச் சாத்திரிகள்?
என்பதையும் இடைக்கிடை எண்ணியபடியே நான் .................

(ஆங்கில மூலம் : கமலா விஜயரத்ன)
28.09.1996

---------------------------------------------------



கடல் இரகசியங்கள்



மூழ்கி மூச்சிழந்த எவராவது கடலை
மாற்றியுள்ளனரா?
கடல் மாற்றியிருக்கிறது, தன்னுள் மூச்சிழந்து
போனவர்களை.

அவர்களது வெம்மையைத் தணித்திருக்கிறது,
உதிரத்தின் உப்பை உறிஞ்சியிருக்கின்றது
அழுது புலம்புபவர்களின் கண்ணீரையுங் கூட.
துக்கம் கொண்டாடிகளின்
மொத்தச் சக்திகளையும் வெற்றுச் சக்கை
களைகளாக்கி,
தன் பாறையிடுக்குகளில் கொடியேற்றிய
இடத்தினின்றும்
அவற்றின் சிதைவுகள் பலகீனமாய்ப்
பரிதவித்துக் கையசைக்கின்றன,
அலைகளின் அலைக்கழிப்பிலும்,
நிலவுக்கண்ணின் காட்டத்திலும்.
அவர்களது என்புகளோ ஆழ்கடலினடியில்
அல்லாடிக்கிடக்கின்றன.

இப்போது மிக அமைதியாய், அசைவற்று
ஆழ்கடல் வெகுளியாய் மௌனித்து ஆறுகிறது,
பச்சை மண்ணாய்த் தன் இமைகள் தாழ்த்தி.

(ஆங்கில மூலம் : ஸ்டெல்லா டெர்னர்)
19.08.1996

---------------------------------------------------

வெள்ளைச் சேலை



ஓரங்கள் கசங்கிச் சுருங்கிய அந்த துண்டுத்துணியைக்
கட்டில் முகப்பரப்பில் உதறி
மார்போடழுத்தி நேராக்கி மடிக்கத் தொடங்குகின்றேன்.
முதலில் இரண்டு நீள் மடிப்புக்கள்
(ஓரங்கள் பல தரம் கை நழுவி விழும்)
பிறகு நான்கு
கடைசியில் இரண்டாக.
பின்னர் ஒரு பாதியை மறுபாதி மேல் வைத்து
அதை ஒரு வெள்ளைச் சதுரமாக்கி
திரும்பவும் அலுமாரியில் அடுக்கி வைக்கிறேன்.

ஆயினும் ஒரு கணம் யோசித்துவிட்டு
அதை உடுப்புக் கொழுக்கியில் கொழுவுவேன்.
மீண்டும் எப்போது அது தேவைப்படும் என்று எனக்குத்
தெரியாது.
கிழமைக்கு மூன்று முறைகளாவது
அலுமாரியிலிருந்து அதை எடுத்து
மார்போடழுத்தி
(மின்னழுத்திக்கு நேரமிருக்காது)
அவசரமாய்ச் சுற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்!

முதலில் அது ஜகத்தில் தான் தொடங்கியது
பிற்பாடு ஹரன்
இன்று அஜித்
அடுத்தது யாரோ நானறியேன்.
ஜகத் இரவுணவுக்குத் தயாரன வேளை
கொல்லப்பட்டான்,
ஹரன் வேலைக்குச் செல்லும் வழியில்,
அஜித் பாலங்கட்டிக் கொண்டிருக்கையில் சுடப்பட்டான்,
அவர்கள்
அனைவருமே இளைஞர்கள்
முழுதாய் முப்பது கூட இல்லை
அவர்களது வருடங்களோ
அவர்கள் முன்னால் வரிசையாய் நின்றன.
எனக்கு நினைவிருக்கிறது
நான் சிறுமியாய் இருந்த போது
சாவு குறித்து என்னமாய் அச்சம் கொண்டிருந்தேன்
எனக்கு நினைவிருக்கிறது
கதறல் கேட்காமலிருப்பதற்காய்
எவ்வாறு என் காதுகளுக்குள்
விரல்களைச் செருகிக் கொள்வேன்......
எவராவது இறந்தால் கூட
அம்மா என்னிடம் சொன்னதில்லை


அவளும் அப்பாவும் வெள்ளையாய் உடுத்திப் போய்க்
கறுத்துச் சிறுத்த முகங்களோடு வருவார்கள்
உச்சந்தலையிலும் உள்ளங்கைகளிலும்,
ஒரு அரைத் தேசிக்காயைத் தேய்க்காமல் -
வீட்டுக்குள் ஓரடியும் வைக்காள் அம்மா
அப்பாவோ நேரடியாய்க் கிணற்றடிக்கே போய் விடுவார்
குளிப்பதற்;கு.
அப்போதெல்லாம்
சாவுக்குத்தான் எத்தனை அசுத்தமும், அபச்சாரமும்.

ஆனால் இன்றோ
அதே வெள்ளையில் வாரத்துக்கு மும்முறை நான்
அந்த இளவட்ட முகங்களை வெறிக்கிறேன்,
ஆழ்ந்த துயரத்துடன்
சாவின் மீது அவை குற்றம் சாட்டுகின்றன.
எம் மீதும்,
தமக்கு மறுக்கப்பட்ட வாழ்வை
அவர்களை ஏமாற்றி விட்டு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும்
வயோதிபர்கள் மீதும்
அவை குற்றம் சாட்டுகின்றன.

கண்களை நுனிச்சேலையால் பொத்திக் கொள்கிறேன்
தொண்டை வரள, நான் புதையுண்டு போகிறேன்;;;;;@
அத் தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாது.
சம்பிரதாய வார்த்தைகளுடன்



கைகளை கூப்பி, அத்தகப்பனாருக்கு தலை தாழ்த்தி விட்டு
அச் சா வீட்டிலிருந்து வெளியே வருகிறேன்.

இல்லை, நான் இந்தச் சேலையை
அலுமாரித் தட்டில் அடுக்கப் போவதில்லை.
அதை உடுப்புக் கொக்கியில் தான் போடுவேன்.
ஏனென்றால்,
எப்போது அது மீண்டும் தேவைப்படும் என்பது
எனக்கே தெரியாது!

(ஆங்கில மூலம் : கமலா விஜயரத்ன)
08.07.1996


---------------------------------------------------


ஓர் இடையீடு:

மொழிவழிச் செலவும் இருப்பின் அடையாளக் குறிப்புகளும்

தெ.மதுசூதனன்

விடியலில்
கருக்கல் கலைகிற பொழுதில்
எனக்குக் கிடைத்த
தற்காலிக அமைதியில்
நான் உறங்கும் போது,
ஒரு முரட்டுத் தனமான
கதவுத் தட்டலுக்குச் செவிகள்
விழிக்கும்
ஊர்வசி -

நாம் முன்னர் போல் இல்லை. பல்வேறு புதிய பிரச்சனைப் பாடுகளின் மத்தியில் கேள்விமேல் கேள்விகள் மேற்கிளம்பிய வண்ணம் நாம் நமக்குள் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையின் பல்வேறு பரிமாணத் தன்மைகள் துலங்கலாகத் தெரிவதற்கு முன்னே அல்லது கண்டு பிடிப்பதற்கு முன்னே நம்மை மிக மோசமான ஒடுக்குமுறைக் கரங்கள் அழுத்திக் கொண்டிருக்கின்றன. நமது வாழ்க்கை நம்மிடமிருந்து பறிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. நமது அடையாளம் சரி பிழைக்கு அப்பால் அழித்து வாழவேண்டிய நிர்ப்பந்தம்.

நாம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது இருப்பின் அர்த்தம் தேடிய ~உயிர்ப்பு’ சதாகாலமும் தனக்குள்ளும் தனக்கு அப்பாலும் முரண்டு களைத்துச் சோர்ந்து, தனது அறிவுச் சேகரப் பிடிமானத்தில் தட்டுத்தடுமாறி நிலைகுலைந்து தொப்பென வீழ்தலும் வீழ்ந்த மறுகணம் நிமிர்தலும் என ஒரு சுழற்சிக்குள் நீந்திக் கொண்டிருக்கின்றோம்.

விடுதலை, இலட்சியம், கொள்கை, புரட்சி என யாவும் மனித விடுதலை, மனித வாழ்கை இவற்றின் அடியொற்றி யாவற்றையும் புரட்டிப் போட்டுப்


பார்க்க வேண்டிய நிலைமைக்குள் வைக்கப் பட்டுள்ளோம். விடுதலையின் விரிதளங்கள் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைய நிலையில் தமிழ் அடையாளம் என்பது ஒரு சமூக முழு உண்மை. இதுவும் குறிப்பான அரசியல் விளைவுகளுக்குரியது. ~தமிழர்’ எனும் ஒரே ஒரு தகுதிப்பாட்டின் விளைவாகவே, அதிகத் துன்பங்களைச் சுமக்க வேண்டியவர்களாகிறோம். இதனால் ஈழத்தில் தமிழ் அடையாளம் ~தமிழ்பேசும் மக்கள்’ எனும் அடை மொழியுடன் கூடிய அரசியல் கருத்தாக்கமாகவும் வளர்ந்துள்ளது.

ஆக தமிழர் எனும் அடையாளம் எம்மீது திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. நாமும் அதனை விடமுடியாது பிணைக்கப்பட்டுள்ளோம். ஆனால் அதற்காச் சாராம்சமான பண்புகளுடன் மூடிய முழு அடையாளங்களைக் கட்டமுடியாது. இங்கே நாம் எமது விமரிசனங்கள முன்வைத்தேயாக வேண்டும்.

நாம் மாற்றிக் கொள்ளத்தக்க பன்மைத்துவ அடையாளங்களை வலியுறுத்தும்வேளை, சில அடையாளங்கள் குறித்த அரசியல் முக்கியத்துவமும் உண்டு என்பதையும் மறுத்துவிடக் கூடாது. துமிழராக இருப்பவருக்கு வேறு அடையாளங்களும் சாத்தியம். தமிழர் என்பதற்கு எந்தளவு அரசியல் முக்கியத்துவம் உண்டோ, அந்வளவிற்கு சூழலைப் பொறுத்து சில சந்தர்ப்பங்களில் கூடுதலாகவும் கூட, பிற பண்பாட்டு அடையாளங்களுக்கும் அரசியல் முக்கியத்துவம் இருக்கும்.

சாதி, வர்க்கம், பால், இனம், பிரதேசம்…எனத் தனித் தனியான அடையாளங்களால் பிரிந்து இருக்கும் அதேநேரம், குறிப்பான நோக்கங்களுக்கான ஒன்றினைப்புகள் எப்போதும் சாத்தியமாகிக் கொண்டிருக்கும். இந்த அவசியப்பாடு சமகால ஓட்டத்தின் இயங்கு புள்ளியாக - நகரும் இலக்காக - இழையோடிக் கொண்டிருக்கும்.

இதுவரையிலான ஈழத்தின் அனுபவத்தளங்கள், சிந்தனைகள் எம்மை புதிய வகையிலான சிந்தனை முறைமைக்கும் செயற்பாட்டுத் தளத்திற்கும் எம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

ஈழத்தின் வரலாறு கொடூரமான இராணுவ அடக்குமுறைகளயும் அதன் உச்சங்களையும் அவற்றுக்கெதிரான பல்வேறு வடிவங்களாலான போராட்டங்களையும் தினம் தினம் முகங்கொடுத்தேயாக வேண்டிய சூழலமைவை நமக்கு தந்து கொண்டிருக்கிறது.



அதேநேரம் விடுதலையின் பெயரால் போராட்டத்தில் உள்நுழைந்துவிட்ட அராஜகப் போக்குகளும் சனநாயக மறுப்புகளும் எந்த வடிவில் யார் மூலம் வெளிப்பட்டாலும் அதனையும் எதிர்க்க வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் உணர்த்திச் செல்லும் காலத்திலேயே உள்ளோம்.

எமது தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்பற்ற காலத்தில் இருந்து இற்றைவரைக்குமான கால வெளியை கடக்கும் கலை இலக்கியப் பத்திகைள் நமக்குள் ஏராளம்; குறிப்பாக நமது தமிழ்க் கலாச்சார மரபில் கவிதை எப்போதும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நீண்ட செழிப்பான கவிதைப் பாரம்பரியம் இன்றைய சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்குகளுக்கு, தக்க தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபின் தனித்துவம், தொடர்ச்சி அதன் இன்றைய புதிய பரிமாணங்கள் யாவும் அனைத்துலகத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் புதிய பரிணாமத்தை ஈட்டியுள்ளன.

எத்தகைய நெருக்கடிகள், இன்னல்கள், வாழ்க்கை முறைகள் யாவற்றுக்குள்ளும் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம். வாழ்வின் சகல பரிநாமங்களினூடு சந்திக்கும் முரண்களையும் அவரவர்தம் இயல்புக்கேற்ப முகங் கொள்கிறோம். சிலர் தம் அனுபத்தளத்திற்கும் அப்பால் சென்று, தமது அறிவுச் சேகரத் தீவிரத்தையும் உள்வாங்கிக்கொண்டு அதன் நிமிர்வில் சவால்கள எதிர் கொள்கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராகத் தேசிய விடுதலைப் போராட்டம் கிளர்ந்தெழுகையில் அக்கிளர்ச்சி தேசத்தின் பல்வேறு அம்சஙளையும் தழுவியாதாகவே இருக்கும். நாமும் இத்தகையதொரு வரலாற்றுச் சூழமைவிலேயே உள்ளோம்.

இதனால் தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் முக்கியமான தளமாற்றங்கள் ஏற்பட்டன. இக்காலத்தில் உருவான எழுத்துகள் ~அரசியல் கவிதைகள்’ என அடையாளம் காணும் விதத்தில் அமைந்தன. குவிதைச் செயற்பாட்டில் புதிய விழப்புணர்வுடன் ~அரசியல் கவிதைகள்’ தோற்றம் பெற்றன. இவை ஈழத்துதுத் தமிழ்க் கவிதையின் சமகால அரசியல் முக்கியத்துவம் உள்ள கவிதைகளாகவே பிரிநிலைப்படுத்திப் பார்க்கும் தேவையை இயல்பாக்கிக் கொண்டன.


இப்போ கவிதைச் செயற்பாட்டில் ஒரே வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்த போக்குகளுடள் புதுப் பிரக்ஞையுடன் பீறிட்டுக் கிழம்பும் பெண்களின் குரல்கள் எண்பதுகளின் பின்னர் அதிகமாகத் தமிழ்க் கவிதையில் மேற்கிளம்பின.

தமிழ்த் தேசியப் போராட்டம் பல்வேறு முரண்களைத் தன்னகத்தே கொண்டு வந்தாலும் தமக்குள் பல்வேறு முரண்களைத் தன்னகத்தே கொண்டு வந்தாலும் தமக்குள் பல்வேறு பரிமாணங்களையும் உள்வாங்கிக் கொண்டுதான் உள்ளது. இதனால் இக்காலகட்ட கவிஞர்கள் யாவரும் ஒரே வார்ப்பில் ஒற்றைக்குரலில் மட்டும் ஒலிப்பர்கள் அல்ல. அவர்களும் பல்வேறு குரல்களில் தமது கவிதை கவிதையாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அரசியல் கவிதை, போராட்டக் கவிதை இன்னும் விரிந்த தளங்களில் நீட்சி கொள்கிறது.
¦¦¦

என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல்
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை.
- சிவரமணி -

எண்பதுகளின் பின்னர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் முனைப்பும் அதனால் உருவான விழிப்பும் பிரக்ஞையும் கவனிப்புக்குரியது. இதன் முக்கியத் தளமாற்றம் பெண்கள் அரசியல் ஈடுபாட்டிலும் இலக்கிய வெளிப்பாட்டிலும் நிகழ்ந்தது.

தேசிய விடுதலை இயக்கங்களில் பெண்கள் அதிகமாகத் தங்களை இனைக்கத் தொடங்கினர். தேசிய விடுதலையின் விரித்தளச் சிந்தனை பன்முகப்பட்டதாயிற்று. சாதியம், பால்நிலை கடந்த விடுதலைக்கான வித்துக்கள் மேற்கிளம்பின. பல்வேறு பெண் அமைப்புகள் தோற்றம் பெற்றன.

தேசிய விடுதைலைப் போராட்டம் குறித்த அரசியல் கோட்பாட்டு ரீதியான சிந்தனைகள் தாங்கிய பத்திரிகைள், சஞ்சிகைள் வெளிப்பட்டன. பெண்களுக்கென்று தனித்த இதழ்கள’ வெளி வந்தன. கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நாடகம் என கலை இலக்கியத்தளங்களில் பெண்கள் அதிக நாட்டம் கொண்டு ஈடுபடத் தொடங்கினர். வாசிப்பும் எழுத்தும் (பெண்கள் சார்ந்த) சமூகச் செயற்பாட்டு ரீதியிலும் அதிகம் வெளிப்படத் தொடங்கின.



இப்பின்புலத்தில் தான் 1986களில் பெண்கள் ஆய்வு வட்டம் ~சொல்லாத சேதிகள்’ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுப்பின் வருகை, பெண் எழுத்தாளர்களின் தனித்துவத்திறன் வெளிப்பாதும் போக்கையும் பெண்மொழி சார்ந்த படைப்புகளின் வருகையையும் தமிழுக்கு வழங்கிச் செல்லும் தேவையையும் உணர்த்திற்று.

~சொல்லாத சேதிகள்’ வெளிப்பட்ட காலத்தின் பின்னர் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பல்வேறு தளமாற்றங்கள் உருவாயின. அவற்றினூடும் பெண்கள் எவ்வாறு அவற்றை முகங் கொடுத்துள்ளனர் என்பதற்கு இக்காலத்தின் பின்னர் வந்த கவிதைகளே சாட்சி. இது இத்துடன் நிற்கவில்லை. இன்னும் பல்வேறு புதிய புதிய பெண் எழுத்தாளர்களையும் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

இந்த வகையில் தொன்னூறுகளில் புதிய பெண் எழுத்தாளார்கள் பலர் தோற்றம் கொண்டனர். இவர்களது கவிதை வெளிப்பாடடுப் பாங்கும் கவிதையின் மொழி ஆக்கத் தேர்வும் புதிதாக அமைந்தன. பெண்ணிலைவாதம் குறித்த சிந்னைத் தெளிவும் கோட்பாட்டுப் புரிதலும் வாய்க்கப்பெற்ற காலகட்டத்தில் இவர்களது எழுத்துக்கள் அமைந்தமை தனிச்சிறப்பு.

இன்றைய சமூகம் என்பது ஆணாதிக்கச் சமூகமே என்பது வெளிப்படை. இவ்வகையில் இந்த ஆணாதிக்கச் சமூகத்தினுடைய யதார்த்த நிலை, நடைமுறை ஆகியவை மொழியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சொற்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கூட இதன்வழியே உற்பத்தி செய்கின்றன. இச் சொற்களும் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கூட இதன் வழியே உற்பத்தி செய்கின்றன. இச் சொற்றொடர்களும் அடங்கிய மொழியானது பால்வாதத்தை வெளிப்பாட்டுத்துவதாகவும் அதனை நிலைநிறுத்தும் சாதனமாகவும் அமைகிறது.

இது மாத்திரமன்றி இன்றைய ஆணாதிக்கம், தந்தை வழிச் சமூகத்தின் மொழியின் இலக்கணங்கள், சமூகத்தின் மொழியின் இலக்கணங்கள், சமூகத்தில் அதிகாரம் பெற்றிருந்த ஆண்களாலேயே உருவாக்கப்பட்டிருந்தன. மொழி பற்றிய சிந்தனைகள் பேரகராதிகள், சொற்கழஞ்சியங்கள் யாவும் அதிகாரம் பெற்றிருந்தோராலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடை பார்வையும் நோக்கும் கிரகிப்பும் புரிதலுமே மொழியில் முதலிடம் பெற்றன. இவ்வகையில் ஆண் நிலைப்பட்ட ஒன்றாகவே மொழி உருவாகி வளர்ந்துள்ளது. அவ்வாறே அது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஆணாதிக்க மொழிப் பரப்பில் பெண்கள் குறிக்கீடு செய்து, தமக்கான கவிதை மொழியாக, தம்மை வெளிப்படுத்தும் மொழியாக ஆக்கிச் செயற்படுவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் பெண் மொழி சார்ந்த படைப்பு முயற்சியில் ஈடுபட வேண்டிய சமூக நிர்ப்பந்தத்தை ஈழம் பெண்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.

யுத்தம் அனைத்துச் சுமைகளையும் பெண்கள் மீதே சுமத்தி விட்டுள்ளது. ஆயினும் பெண்கள் தேசிய அரசியலில் ஈடுபடுகின்றனர். யுத்த களத்தில் நின்று போராடுகின்றனர். தங்களைத் தனித்து அடையாளப்படுத்தும் அரசியலையும் தக்கவாறு வெளிப்படுத்தத் தொடங்கினர். கவிதையாகச் செயற்பாட்டில் மொழி வழி முழுமையாக வெளிப்படுத்தத் தொடங்கினர்;.

இன்றைய போராட்ட காலத்தில் கூட, “தாய்நாடு”, “தாய் மொழி” என பரவலாகக் கூறப்படுகிறது. தாய்மொழி என ஒருவருடைய சொந்த மொழியைக் குறிப்பிட்டாலும் மொழியைப் பெண்ணாக உருவகம் செய்தாலும் நடைமொழியில் மொழி தந்தையார் மொழியாக - ஆண்மொழியாக - அமைவது எமது கவனிப்புக்குரியது. ஏன்! தேசம் என்பது கூட தந்தையார் தேசமாகவுமே கட்டமைக்கப்படுகிறது.

பொதுவில் மொழி, ஆள்பவர்களின் அரசியல் தத்துவார்த்த ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இதனால் நாம் புழக்கத்தில் இருக்கும் சொற்களை அப்படியே ஏற்க முடியாது. ஆச் சொற்களின் அர்த்தங்களை மாற்றிய பின்பே அவற்றைக் கையிலெடுக்க வேண்டும்;. இதனாலேயே “நாம் மொழியைப் பேசுகிறோம் என்பதைவிட மொழி நம்மைப் பேசுகிறது” என்பர். ஆக மொழியைப் பெண்கள் தங்களைப் பேசக்கூடிய மொழியாக மாற்றியமைக்கும் பாரிய முயற்சியில் ஈடுபடவேண்டியுள்ளது.

ஈழத்துப் பெண் கவிஞர்கள் இவற்றில் உந்துதல் பெற்றவர்களாகவே உள்ளனர். கவிதையாக்கச் செயற்பாட்டில் தமது அனுபவத் திரட்சியையும் உணர்வுகளையும் மனவுழைச்சல்களையும் சிந்தனைகளையும் கேள்விகளையும் வெளிப்படுத்தத் தொடங்கினர். இதற்கான புதிய சொற்களின் தேர்வுக்குரிய உழைப்பில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினர். இப்போக்கின் தொடக்கக் குறியீடாகவே ~சொல்லாத சேதி’ களை நோக்கலாம்.

தமிழ் போன்ற நீண்ட பாரம்பரியம் உடைய மொழியில் எத்தனை சுமைகள், திணிப்புக்கள். ஆனாலும் காலாதி காலமாகப் பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு மாற்றாக, மொழியில் மாற்றங்களைக் கோருவது, புதிய சொற்களை உருவாக்குவது அவ்வளவு இலகுவானது அல்ல.



எனவே ஆணாதிக்கம் நிறுவியுள்ள மொழிக் குறியீட்டு அமைப்பு முறையில் இருந்து பெண் வெளியே வர, மொழி உலகம் உருவாவதற்கு முன்பு இருந்த இயற்கையான - உண்மையான - ஆதிப் பெண்ணாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இனி என்ன செய்ய வேண்டும் என்னும் வினா மேற் கிளம்புகிறது.

இப்போது பெண்கள் தங்களது எழுத்தைத் தாங்களே எழுதுதல் எனும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆதிகார ஆதிக்க மமதைகளுக்கு எதிராகக் கொப்பளிக்கும் கோபங்களும் வெடித்துக்கிளம்பும் அழுகைகளும் தங்களுக்கான மொழியைக் கண்டுபிடிக்கும் அவஸ்தையும் மௌனத்துக்குள் ஆழ்ந்து போக… என பன்முக மனநிலைகளில் - ஊடுபாவு கொண்ட எழுத்துக்கள் வெளி வரத்தொடங்கியுள்ளன.

மொழியின் அமைப்பாக்கத்தைச் சிதைத்து, மொழிக் களத்தில் புதிய மொழியை உருவாக்கும் செயற்பாட்டில் பிரக்ஞை ப+ர்வமாக ஈடுபடக்கூடிய போக்கு மேற்கிளம்பியாகி விட்டது. இதன் அறிகுறியாக-வரவாக-~உரத்துப் பேச…’ அமைகிறது.

கவிதையைக் கவிதையாக மட்டும் எழுதாமல் இதுவரையிலான புழக்கத்தில் உள்ள மொழியிலிருந்தும் புதியதொரு அமைப்பாக்கத்தை உருவாக்கித்தர முற்பட்டதன் விளைவுதான் ~உரத்துப் பேச…’

அதாவது ஆணின் மொழியாக வெளிப்பட்ட ஆண் கற்பித்துள்ள அர்த்தத்தை மாற்றி, பெண் தன் நோக்கில் அர்த்தங்களைக் கற்பிக்க முயன்றதன் விளைவே இக்கவிதைகள்


¦¦¦


அடி தங்காய்
முறிவு கொள்ளாதே
மேலும் மேலும் நம்பு
வாழ்வு பற்றி
உன் இருப்பு பற்றி
அதன் அர்த்தம் பற்றி
இன்னும் வலுவாய்
- ஆகர்ஷியா -

~உரத்துப் பேச…’ - ஆழியாளின் கவிதைகள்வழி வாசிப்புச் செய்யும் பொழுது நாம் எதிர்கொள்ளக்கூடிய அவஸ்தைகள், அதிர்ச்சிகள் ஏராளம். புல மௌனங்கள் உடைக்கப்பட்டுப் பேசு பொருளாக்கப்படுகின்றன.

ஒரு பெண் ஓர் ஆணுடன் சகஜமாகப் பழகும் பொழுது அவள் பற்றிய படிமங்கள் அவன் மனதில் எவ்வாறு நிழலாடும் என்பதை ஆண் நிலையில் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதன் புரிதலை இவள் நமக்கு வேறொரு தளத்தில் நகர்த்திச் செல்கிறாள்.

நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்,
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவெண்டும்.

எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என் புரிதலோடு
வா!

ஓன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்

என தனது புரிதலைச் கூறிச் செல்கிறாள்.

‘நிலுவை’ எனும் கவிதை எமக்குள் தோற்றுவிக்கும் உணர்வு நமக்குள் ஒருகணம் அற்பப்படும் மனநிலையைத் தோற்றுவித்துச் செல்வதாக இருக்கிறது. அவள் கேட்கும் கேள்விகள், பலரும் தமக்குள் மட்டும் மௌனமாகவே கேட்டுக்கொள்ளும் கேள்விகளையே - சிந்தனைகளையே - தம்முள் பேசுகிறாள். குவிதையில் இழைபோடும் உணர்ச்சியும் அதன் தார்மீகக் கோபமும் கவிதை உருவாக்கத்துக்குப் பல்வேறு பரிமாணங்களைத் தருகிறது.

யுத்தச் சூழல் வழியே ஆழியாளுக்கு காதுகொள்ளாக் காட்சிகள் பல திரண்டு வருகிறது. “என் நாட்டில் போரா?ஃ யார் சொன்னது?” இவ்வாறு உரத்துக் கேட்கக் கூடியளவுற்கு உந்துதலின் இயக்கம் எத்தகையது என்பது வாசிப்பின்போதே சாத்தியமாகும்.




மன்னம்பேரிக்கும் கோணேஸ்வரிக்கும் புரிந்த வன் மொழியின் கொடூரம் எத்தகையது என்பது இதன் வரலாறு புரிந்தோருக்கு நன்கு விளங்கும். ஆனால் கவிஞரோ இதனை கவிதையாக்கியிருக்கும் பாங்கு, அதன் மொழி நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

ஆழியாளின் ஒவ்வொரு கவிதையின் வழியே விரியும் ~வெளி’ நமக்குள் ஏற்படுத்தும் அர்த்தப் புரிதல்கள் ஏராளம். அவை பன்முகத் தன்மை கொண்டவை.

~விடுதலையின் பெயரால்’ என்னும் கவிதை கட்டமைத்துச் செல்லும் வழியில் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி, கேள்வி, சிந்தனை அவரவர் அனுபவத் தளத்துக்கேற்ப விரிவு கொண்டவை. இதன் மொழிதல் புதுமையாகவும் விரைவுத் தன்மை கொண்டதாகவுமே உள்ளது. கணணிச் செயற்பாட்டின் இயக்கமும் வேகமும் கொண்ட ஒரு நவீன உணர்தலின் பெறுமான நிலைப்பட்ட கவிதை அது.

மொழி பெயர்ப்புக் கவிதைகளின் தேர்வு, அதன் அரசியல், தொகுப்புக்கு ஒரு முழுமையைக் கொடுக்கிறது. பெண்களின் அனுபவத்திரட்சியின் பல்வேறு முகங்கள், பெண் மொழி சார்ந்த தேடலில் அகப்படுவது இத்தொகுப்பின் தனிச்சிறப்பு. சமூக அனுபவங்கள் மாறுபட, மாறுபட சொற்றொடர் அமைப்பு மாற்றங்களை அவாவி நிற்கும். ஆழியாளின் எடுத்துரைப்பு முறைமை வேறுபட்டவை. இவை நீண்ட சொற்றொடர்கள் மூலமும் பேசுகின்றன.

நமது தினசரிச் சொற்கள் படைப்பில் அழுத்திக் காட்டும் பாங்கால், அவற்றைப் பயன்படுத்தும் தன்மையால் நாம் இது வரை பெறாத புதிய அனுபவம் எமக்குக் கிடைக்கிறது. ஓவ்வொரு கவிதையும், தனக்கான இயங்கு தன்மையுடன் புதிய சொற்களை உற்பவித்து நிற்கிறது.

ஆழியாளின் கவிதைகள் நுண்ணிய உணர்திறனையும் கவிதையாக்கலையும் கருத்துநிலைச் செம்மையினையும் தன்னளவில் நன்கு வெளிப்படுத்துகிறது.

நமது கலாசாரத்தில் மௌனப்படுத்தப்பட்டவை கவிதையாக்கத்தில் பேசப்படுகின்றன. வரலாற்றுச் சாத்தியப்பாடுகளுடன் கவிதையைத் தொடர்புபடுத்தி வாசிப்புச் செய்யும் பொழுதே பன்முக அர்த்தப்பாடுகள் சாத்தியப்படும். அப்போதுதான் அவை உரத்துப் பேச முற்படும். இவ்வகையில் இக்கவிதைகள் பார்க்கப்பட வேண்டும்@ வாசிக்கப்பட வேண்டும்.


ஓவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அர்த்தப்படுத்தல்களின் விரிவுத்தன்மை கொண்டவை. எவை எவை மௌனப்படுத்தப்பட்டனவோ அவை இங்கே பேச வைக்கப்படுகின்றன. இப்பேச்சு, மொழியின் உள்ளுமையை - ஆளுமையைப் - பேச வைக்கும் முயற்சியின் பாற்பட்டது. இதில் ஆழியாள் எவ்வளவு தூரம் முன்னோக்கி நகர்ந்துள்ளார் என்பதை வாசகர்களின் வாசிப்புக்கு விட்டுவிடுவோம்.



¦¦¦


அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என்மொழி.

அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்;;@
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.

அதுவரை நீ காத்திரு.
- ஆழியாள் -

26.06.2000
சென்னை

---