கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  விபுலாநந்தக் கவிமலர்  
 

 

 


விபுலாநந்த இலக்கியம்:
தொகுதி: 6










விபுலாநந்தக்
கவிமலர்
















தொகுப்பாசிரியர்:
அருள் செல்வநாயகம்


முதலாம் பதிப்பு 1965.


VIPULANANDA KAVIMALAR

Printed and Published by SRI LANKA BOOK DEPOT & PRINTING WORKS JAFFNA.


பதிப்புரிமை பெறப்பட்டது. இந்தநூலிலுள்ள எந்தக் கவிதையையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றிக் கையாளக் கூடாது.
அருள் செல்வநாயகம்


Copyright Price Rs.
பதிப்புரிமை விலை ரூபா

உள்ளுறை

பக்கம்
அணிந்துரை ... v
மதிப்புரை ... ix
முன்னுரை ... xii
விபுலாநந்த அடிகள் (வாழ்க்கை வரலாறு) ... xvi

பகுதி ஒன்று

1. ஈசனுவக்கும் மலர் ... 3
2. தேவபானி ... 4
3. தேவி வணக்கம் ... 6
4. பராசக்தி ... 7
5. மலர்மாலை ... 8
6. தேவபாணி ... 9
7. பெருந்தேவபாணி ... 10
8. கோயில் ... 12
9. யாழ்நூல் இறைவணக்கம் ... 13
10. மகாலட்சுமி தோத்திரம் ... 15
11. திருவமர் மார்பன் திருக்கோயிற் காட்சி ... 20
12. நாச்சியார் நான்மணிமாலை ... 24

பகுதி இரண்டு

13. விவேகாநந்த பஞ்சகம் ... 29
14. குருசரண தோத்திரம் ... 30
15. அன்பு ... 31
16. நீரர மகளிர் ... 33
17. ஆறுமுக நாவலர் ... 37
18. உற்பத்தி முதல்வன் ... 42
19. இமயமலைச் சாரலில் ... 44
20. கங்கையில் விடுத்த ஓலை ... 45
21. குரு வணக்கம் ... 51
22. வாழ்த்து ... 52

பகுதி மூன்று

23. குருதேவர் வாக்கியம் ... 55
i. கடவுள் வணக்கம்
ii. தன்னை யுணர்தல்
iii. தலைவனது இயல்பு
iஎ. மாயையி னியல்பு
எ. அவதாரபுருஷ ரியல்பு
எi. மக்கள் பல்வேறு படியினரெனல்
எii. குரவர் வகை
எiii. சமயம்.............வாதத்திற்குரியதன்று
iஒ. இல்லறத்தானுக்கு.................

பகுதி நான்கு

23. பூஞ்சோலை காவலன் (தாகூர்) ... 87
24. ஆங்கிலவாணி ... 105
25. மதங்க சூளாமணி ... 116
i. காதல் கைம்மிக்க காவலன்
ii. இராம்மியன் சுசிலை
iii. பெரும் புயல்
iஎ. வணிகதேய வர்த்தகன்
எ. யூலிய சீசர்

அணிந்துரை

இலங்கைக் கல்வி இலாகாப் பாடசாலைப் பரிசோதகர்
(ஐnளிநஉவழச ழக ளுஉhழழடள)

அவர்கள் அளித்தது.

முத்தமிழ் வித்தகரான அருட்டிரு விபுலாநந்த அடிகளார், தம் வாழ்வில் தவத்தை மேற்கொண்டு தமிழ் மொழிக்கும், இந்துசமயத்துக்கும் ஆற்றிய தொண்டுகள் அளவிறந்தன.

வேதாந்தநெறி மேற்கொண்டு, பல சமயங்களிலும் நன்னெறி காணும் இராமகிருணரது கொள்கைகளைத் தழுவினாரெனினும், சித்தாந்த உண்மைகளைத் தமது கவிதைகளினாலும் கட்டுரைகளினாலும் அவ்வப்போதும் வெள்ளிடைமலைபோல் விளக்கியிருக்கிறார்.

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் அருள் செல்வநாயகம் கட்டியெழுப்பிய விபுலாநந்த இலக்கியம் இதுவரை ஐந்து நூல்களாக மலர்ந்துள்ளது. இப்பொழுது அருள் செல்வநாயகம் தமிழ்கூறும் நல்லுலகினுக்கு ஆறாவது தொகுதியாக விபுலாநந்தக் கவிமலரைத் தந்திருக்கின்றார். இதனால் தமிழ் கூறும் நல்லுலகம் ஒப்பற்றவோர் கலைச் செல்வத்தைப் பெற்றுவிட்டது.

கட்டுரை யாசிரியர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், நூலாசிரியர் என்ற பெயர்களுக்கெல்லாம் சிறப்பளித்து, ஈழத்திலே இறவாப் புகழுடன் விளங்கும் அருள் செல்வநாயகம், விபுலாநந்த இலக்கியம் படைத்துத் தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கென ஒரு தலையிடத்தைத் தேடிக் கொண்டு விட்டார்.

‘வெள்ளைநிற மல்லிகையோ......’ என்ற கவிதையுடன் தொடங்கும் விபுலாநந்தக் கவிமலர் நான்கு பகுதிகளாக விரிகின்றது.

ஈசன் உவக்கும் மலரை அடிகளார் மிகமிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இறைவன் உள்ளக் கமலத்தைத்தான் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறாரென்று அழகாகக் கூறிய அடிகளார். கூப்பிய கைக்காந்தள்தான் இறைவனுக்கு அடுத்து வேண்டுவ தென்கிறார். இறுதியாக நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது என்று அடிகளார் அழகாகப் பாடி முடிக்கும்போது நாமும் இறைவனுடன் இரண்டறக்கலந்து நிற்கிறோம்.

உலகத்தின் முதல்வன் இறைவன், அவனை ஆணாகவும் பெண்ணாகவும் இன்னும் பலதோற்ற உருவங்களிலும் நினைந்து மக்கள் வழிபடுகிறார்கள். அந்த வகையிலே முதலாவது பகுதியிலே இறைவனது திருக்கோலங்களைப் பற்றி அடிகளார் வௌ;வேறு வகையான கருத்துச் செறிவிலே பாடுகின்றார். உள்ளத்தை உருக்கிச் செல்லும் அற்புதக் கவிதைகளின் வாயிலாக உலகத்து முதல்வனான இறைவனது பேரருளைக் காணக்கூடியதாக இருக்கிறது. கவிதைகளைப் படிக்குந்தோறும் நாமும் இறைவனுடன் இரண்டறக்கலந்து விடுகிறோம். அற்புதமான வண்ண வண்ணக் கவிதைகள்!

ஈழத்திலே சைவத்தையுந் தமிழையும் வளர்த்தவர் ஆறுமுகநாவலர்! உலக அதிசங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மட்டக்களப்பு நீரரமகளிர்! மனித இனத்தைப் பாசத்திலே இறுகப் பிணைத்துப் பரந்து நிற்கிறது அன்பு! மனித வாழ்வையோ நாள்தோறும் மாற்றிமாற்றி வளர்க்கிறது சூரியனும் சந்திரனும்! வாழ்க்கையிலே பெருகி வியாபிக்கிறது நடம்பு! இவ்வாறான பல்வேறு நிகழ்ச்சிகளை வைத்துப் பாடிய அடிகளாரது கவிதைகளைக் கொண்டு இரண்டாம் பகுதி விரிகின்றது.

இல்வாழ்வினைத் துறந்த அடிகளார் வாழ்க்கையினை இணைக்கும் பல்வேறு பண்புகளைப் பற்றிப் பல்வேறு கோணங்களிலிருந்து பாடிய கவிதைகள் படித்துச் சுவைக்க வேண்டியவைகள். சுவைத்து மகிழத்தக்கவைகள்.

சுவாமி விவேகாநந்தர், குருதேவரான இராமகிருஷ்ண தேவரது சாதனைகளை, கொள்கைகளை உலகினுக்குப் பரப்பினார். கடல்கடந்து அமெரிக்காவினுக்கும் சென்று நிலை நாட்டினார். மேலைநாட்டவர்களும் இராமகிருஷ்ணரது கொள்கைகளை மேற்கொள்வதென்றால் அவரது கொள்கைகள் மனித இனத்தினுக்கு மிகமிக உயர்ந்தனவன்றோ? உலகெங்கும் இராமகிருஷ்ண மடாலயங்களும், கல்விச்சாலைகளும் எழுவதற்கு மூலகாரணமான கொள்கைகளை வகுத்த இராமகிருஷ்ணரைப் பற்றி அடிகளார் பாடுகிறார். அவரது தத்துவக் கோட்பாடுகளை வைத்து உள்ள முருகிப் பாடுகிறார்.

குரவர்வகை என்ற தலைப்பிலே, தூதர் வாயிலாகக் குரவர் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நெறிகளைத் தக்க உவமானங்களுடன் சிறுவர்களும் விளங்கக்கூடிய முறையில் அமைத்துள்ள திறன்வியந்து போற்றப்பட வேண்;டியது. சமயத்தை அனுட்டித்து, அதன் பயனை அனுபவிக்கலாமேயன்றி, வாதத்தில் எதையும் பெறமுடியா தென்பதை அடிகளார் இக்கவிதைகளிலே வெகு அழகாகவே கூறுகின்றார்.

மனிதன் முதலில் தன்னை உணரவேண்டும். தன்னை உணர்ந்தவன்தான் இறைவனை உணர்வான் என்ற பரந்த கொள்கையை நிலைநிறுத்துவது போல் வகை வகையான கவிதைகளாகக் குருதேவர் வாக்கியம் விரிகின்றது. மூன்றாவது பகுதியான இக்குருதேவர் வாக்கியம் அற்புதமான, அபாரதத்துவப் படைப்புக் கவிதைகளாகும். படித்துக்கொண்டே சிந்திக்கத் தூண்டும் பரவசமான கவிதைகள்!

பிறமொழி இலக்கிய நயங்களைத் தமிழிலே மொழி பெயர்த்துக் கொடுக்க முனைந்ததனால் அடிகளார் தமிழினுக்கு மாபெருஞ் சாதனையைச் சாதித்துள்ளார். பிறமொழிக் கவிதைநயம் தமிழிலே மலர்ந்தால் தமிழர்கள் நுகர்ந்து நயங்காண முடியு மென்று கருதிய அடிகளார். ஆங்கிலக் கவிதை நயத்தை அழகாக வடித்துத் தருகிறார். ஷேக்ஸ்பியரின், யூலிய சீசர் எனும் நாடகத்தின் ஒரு சிறுபகுதியை அழகான கவிதையாகத் தருகிறார். மேலும் மில்தனார், உட்வேசுவேத், தெனிசன், ஷெல்லி ஆகிய கவிஞர்களின் கவிதைகளிற் சிலவற்றையும் தமிழிலே தருகிறார்.

வங்கக் கவிஞரான ரவீந்திரநாத தாகூரின் பூஞ்சோலை காவலனையும் வண்ண எழிற் கோலமாக அழகிய தமிழிலே தருகிறார். மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்று சொல்லத் தோன்றாவண்ணம் வெகு அழகாகக் செல்லும் கவிதைகள் நான்காவது பகுதியாகும்.

நான்கு பகுதிகளாக விரிந்து விபுலாநந்தக் கவிமலராக மலரும் இந்தக் கவிதை நூலிலே ஈசன் உவக்கும் மலர் என்ற கவிதை முதலாக இறுதிவரை அமைந்த அத்தனை கவிதைகளும், “பயில்தொறும் நூல்நயம் போலும்” என்ற முதுமொழிக் கிணங்கப் பருவமும் அனுபவமும் முதிர முதிர ஆழ்ந்த கருத்துக்களை அளிக்கும் திறன் படைத்தவைகளாகும்.

சிறுவர் முதல் முதியோர் வரை கற்றுப் பயன்பெறக் கூடிய இக்கவிதை மலர்களை யெல்லாம் ஒருங்கே தொகுத்து நூல் வடிவில் மாலையாக்கித் தமிழ்த் தாய்க்குச் சூட்டுகின்ற அருள் செல்வநாயகத்தி;ன் தன்னலங் கருதாத தொண்டிற்குத் தமிழ்கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது.

ஈழத்திலே சீரியதோர் கவிதைநூல் இல்லாக் குறையை அருள் செல்வநாயகம் விபுலாநந்தக் கவிமலரினால் நிவிர்த்தி செய்து விட்டார். அருள் செல்வநாயகத்தின் தமிழ்த்தொண்டு தமிழ் உள்ளளவும் வாழவேசெய்யும். வருங்காலச் சந்ததியினர் போற்றிப் புகழத்தக்கதான விபுலாநந்தக் கவிமலரைத் தமிழ்கூறும் நல்லுலகம் அன்புடன் வரவேற்குமென்பதில் சிறிதளவும் ஐயமேயில்லை.

24, வைமன் தெரு செ. கனகசபை.
யாழ்ப்பாணம்.

மதிப்புரை

புலவர்மணி
ஏ. பெரியதம்பிப்பிள்ளை
அவர்கள் அளித்தது.

ஒருபொருளைப் பெறுவதினும் பார்க்க, அதனைப் பாதுகாத்தல் மிகவும் மேலானதாகும். பாதுகாப்பதினும் பார்க்க, அதனைத் தானும் அனுபவித்துப் பிறருக்கும் பயன்படச் செய்தல் சாலச் சிறந்ததாகும்.

காலத்துக்குக் காலம் நாடுகளின் நிலைமைக்கேற்ப, அவ்வந்நாடுகளிலே நல்லோர் தோன்றுவதும் நன்மைகள் புரிவதும் சரித்திர காலந்தொட்டே நிகழ்ந்து வருகின்றன.

சமயமும் மொழியும் சமூகத்தின் இரு கண்களாகும். இவ்விரண்டுக்கும் தாழ்வு வரும்போது நம்மை யறியாமலே அருள்வாசத்தால் நல்லோர்கள் அவதரித்து அவற்றை யுயர்த்திச் சமூகத்தைத் தெளிவுபெறச் செய்து மறைந்து விடுகிறார்கள்.

காலந்தந்த இக்கற்பகக் கனிகள் நமக்கு அறிவும் உணர்ச்சியுமூட்டி, நமது உள்ளங்களைத் தளிர்க்கச் செய்து, என்றும் புதுமைகளும் இனிமையும் வாய்ந்து திகழ்கின்றன.

ஈழ நன்னாட்டிலே நாவலர் பெருமானுக்குப் பின்பு தோன்றிய தமிழ்ப் பெருந்தகையார் உயர்திரு விபுலாநந்த அடிகளாவார். இருபதாம் நூற்றாண்டின் ஈழநாட்டுச் சோதியென அன்னாரைச் சிறப்பித்துக் கூறுதல் மிகவும் பொருத்தமானதாகும்.

தமது வாழ்நாள் முழுவதையும் சமயத்துக்கும் தமிழுக்கும் அடியுறை செய்த பன்மொழிப் புலவரும், முத்தமிழ் முனிவருமாகிய அடிகளார், திறந்தமனம், நிறைந்தகுணம், தெளிந்தமொழி, சிறந்தநடை முதலியன வாய்க்கப் பெற்றவராதலினால் சமயத்தையும் மொழியையும் திருத்தி யமைப்பதன் மூலம் சமூகத்தை உயர்நிலை பெறச் செய்யும் வல்லமை பெற்றிருந்தார்.

குருதேவரின் அருட் செல்வத்தைக் கொண்டு அளப்பரிய பணிபுரிந்த அடிகளார் இன்பக்கவியூற்றாகவும், சொற்பெருங் கொண்டலாகவும், இனிய தமிழ்நடை கைவந்த எழுத்தாளராகவும் விளங்கியமை, தமிழகத்தைப் பொதுவாகவும் ஈழநன்னாட்டைச் சிறப்பாகவும் அணிசெய்வதாயிற்று.

அடிகளாரின் உள்ளத்திலிருந்து வெள்ளம் போல் வெளிவந்த கவிதைகளையும், உரைநடைச் செல்வங்களையும் பேணிக் காத்து அனுபவித்து உலகுக்கு உபகரிக்கும் உண்மைத் தொண்டுபுரிவோரைக் காண்பது அடிகளாரின் மாணாக்கர் போன்ற எம்மனோர்க்கு மிக மிக மகிழ்ச்சி தருவதாகும். வெளியுலகில் தூல வடிவத்தில் வாழ்ந்த அடிகளார் நம் முள்ளங் கலந்தபின்னர் அவர்கள் உலகுக்கு அருளிவைத்த கலைச் செல்வங்களை யெல்லாம் தேடித் தேடித் தொகுத்து வெளியிடும் நன்முயற்சியில் ஈடுபட்டு உழைத்தவரும் அருள் செல்வநாயத்தின் தமி;ழ்த் தொண்டினை யான் மனமாரப் பாராட்டுகின்றேன்.

பிரபல எழுத்தாளரான அருள் செல்வநாயகத்தின் ஈடு இணையற்ற முயற்சியின் பயனாக விபுலாநந்த இலக்கியம் பிறந்தது. விபுலாநந்த இலக்கிய வரிசையிலே, விபுலாநந்த அமுதம், விபுலாநந்தத் தேன், விபுலாநந்த வெள்ளம், விபுலாநந்தச் செல்வம், விபுலாநந்த ஆராய்வு என்னும் நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் பெற்றுவிட்டது. இப்பொழுது விபுலாநந்தக் கவிமலர் என்னும் அரியநூலினைப் பெறுவது மிகமிக மகிழ்ச்சிக்குரிய செயலாகும்.

அடிகளாரின் கவிதைகளை யெல்லாம் தொகுத்து விபுலாநந்தக் கவிமலர் என மலரும் இவ்வரிய வெளியீடு அமிழ்தினும் இனியதாகும்.

சிறுவரை நினைந்தும், நண்பரை நினைந்தும், நல்லோரை நினைந்தும், இயற்கையை நினைந்தும், இறைவனை நினைந்தும் அடிகளார் மனமுருகி மெய்ம்மறந்து பாடிய கவிதைகள் பாடுந்தோறும் நம்முள்ளத்தை உருக்கி ஒருமைநிலையை உண்டாக்கும் அமைப்புடையன. இயற்கையாக வெளிவந்த இக்கவிதைகள் அடிகளாரின் நாநலங் கனிந்தவை. தூய்மைக்கும் தெளிவுக்கும் உணர்ச்சிக்கும் உறைவிடமான இக்கவிதைகளைத் தொகுத்துத் தருவதில் ஈடுபட்டுள்ள அருள் செல்வநாயகமும் உயர்ந்த எண்ணங்க ளுடையவ ரென்பது அவரது சேவையால் நமக்குப் புலனாகின்றது.

உயர்ந்த நோக்கம் கொண்ட பிரபல எழுத்தாளர் அருள் செல்வநாயகம் நமது தாயகத்து அடிகளாரின் கவிதைகளை வெளியிடும் தகுதியும் உரிமையும் பூண்டுள்ளார். அன்னாரது சேவை அடிகளார் நமக்கு ஈந்துவைத்த தமிழ்ச் செல்வத்தை அனுபவிக்கும் வாய்ப்பினை அளித்துள்ளது. தமிழ் வழங்கும் நாடுமுழுவதும் அவரது பணியினை வரவேற்பதாக.
ஏ. பெரியதம்பிப்பிள்ளை

குருக்கள்மடம்,
மட்டக்களப்பு.

முன்னுரை

தமிழ் மொழியைப் பேணிக் காத்து வளர்த்தது தமிழகம். பரந்துபட்ட தமிழகத்தின் பாற்பட்டதே ஈழ வளநாடும். ஈழவளநாடு முன்னொரு காலத்தில், தமிழகத்துடன் நிலப்பிரப்பில் இணைந்து ஒன்றாகவே இருந்தது. ஈழத்தையும் தமிழகத்தையும் தாமிரபரணி என்னும் நதிதான் அன்று பிரிந்தது. பயங்கரமாக எழுந்தகடல் கோள்களின் பயனாக, இன்று ஈழத்தைப் பரந்து விரிந்த இந்துமாகடல் நாற்புறமும் பிரிந்து நிற்கின்றது.

தமிழ் வளர்க்கும் தனிநாடகத் துலங்கிய ஈழம், கால வேறுபாட்டினால் சிங்கள மக்களின் உறைவிடமுமாகியது. காலத்தின் விரைவினால் சிங்களமக்கள் பெருகிப் பரவவும் தமிழ் மக்கள் ஈழத்தின் வடக்கையும், கிழக்கையும் தங்கள் தாயகங்களாக்கிக் கொண்டார்கள்.

வடக்கு ஈழமும், கிழக்கு ஈழமும் தமிழர்களின் தாயகங்களாகத் துலங்கினாலும், தமிழர்கள் ஈழமெங்கும் பரந்தே வாழ்கிறார்கள். மத்திய மலைநாட்டிலும் தமிழர்கள் நிலையாகவே வாழ்கிறார்கள்.

ஈழத்துத் தமிழர்கள் தமிழினைப் பேணிக் காப்பதில் என்றுமே பின்நின்றதில்லை. தமிழே தங்களது உயிரெனக் கொண்டு எத்தனையோ அறிஞர்கள் வாழ்ந்து பெருமை ஈட்டியுள்ளார்கள். இந்தவகையிலே அறிஞராகவும், ஆராய்ச்சியாளராகவும், கவிஞராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்து தமிழை அழகுற வளர்த்தவர் அருட்டிரு விபுலாநந்த அடிகளாவார்.

தமிழினுக்குப் பணிபுரிவதே தனது கடமையென வாழ்ந்தவர் அடிகளார். தமிழினை அழகுசெய்வதே பிறந்ததின் பயனென அடிகளார் கருதியதனாற்றான் இல்வாழ்வைத் துறந்து துறவியாகித் தூயவாழ்வு வாழ்ந்து காட்டினார். அதன் பயனாக விபுலாநந்த அடிகளார் என்னும் பெயர் தமிழர்களது மனத்தடத்தில் அணையாத சுடராகியது.

தமிழினுக்காக வாழ்ந்த முத்தமிழ் முனிவரான அடிகளாரின் ஊனுடல் மறைந்து பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், அவரது புகழுடல் இன்றுந் தமிழர்களிடம் சிரஞ்சீவியாக உலாவிக் கொண்டிருக்கிறது.

விபுலாநந்த அடிகளார் அமரராகிவிட்டார். அவர் நமக்கு விட்டுச்சென்ற எழுத்துச் செல்வங்கள் என்றென்றும் அவரை நினைவுகூரத்தக்கனவாக இருக்கின்றன. இருந்தாலும் அடிகளாரின் எழுத்துச் செல்வங்கள் பல்வேறு இதழ்களில் சிதறிக்கிடக்கின்றன. இவ்வாறு இருப்பதனால் தமிழர்களுக்கு இவை எப்படிப் பயன்பட முடியும்? இக்குறைவினை நிறைவு செய்யும் முகமாகவே நாம் விபுலாநந்த இலக்கியத்தைத் தோற்றுவித்தோம்.

விபுலாநந்த இலக்கியத்தைக் கட்டியெழுப்பத் தமிழகத்திலுள்ள பல அறிஞர்களுடன் தொடர்பு கொண்டோம். அதன் பயனாக அடிகளாரின் எழுத்துச் செல்வங்களை யெல்லாம் பெற்றோம். அவைகளை யெல்லாம் படித்துப் பார்த்து, பல்வேறு இலக்கினுக்கமையப் பல தொகுதிகளாகத் தொகுத்தெடுத்து வெளியிட்டோம். அந்த வகையிலே, அடிகளாரது கை எழுத்துப் பிரதியாக இருந்த கட்டுரைகளை யெல்லாம் கோவைசெய்து விபுலாநந்த இலக்கியத்தின் முதலாவது தொகுதி ‘விபுலாநந்த அமுதம்’ எனக் கொழும்பு கலாநிலைய வாயிலாக வெளியிட்டோம்.

அடிகளாரின் தனித்தன்மை பொதிந்த பல்வேறு வகைக் கட்டுரைகளைக் கோவைசெய்து விபுலாநந்த இலக்கியத்தின் மூன்றாவது தொகுதி விபுலாநந்த வெள்ளம் எனச் சென்னையிலுள்ள ஓரியன் லாங்மன்ஸ் கம்பனி மூலமாக வெளியிட்டோம்.

அடிகளார் செந்தமிழ் இதழில் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரைகளை இருபகுதிகளாக வகுத்து விபுலாநந்த இலக்கியத்தின் நான்காவது தொகுதி விபுலாநந்தச் செல்வம், ஐந்தாவது தொகுதி விபுலாநந்த ஆராய்வு என வெளியிட்டோம்.

அடிகளாரது எழுத்துச் செல்வங்களுக்கு உரிமையுடையவர்களாயிருந்த இதழாசிரியர்களுடனும் தமிழ் வளர்க்கும் மன்றங்களுடனும் செய்துகொண்ட உடன்படிக்கை களுக்கிணங்கவே விபுலாநந்த இலக்கியத்தைக் கட்டியெழுப்பிப் பல தொகுதிகளாகத் தமிழ்கூறும் நல்லுலகினுக்கு வழங்கினோம்.

அடிகளார் இசையாராய்ச்சிபற்றி இதழ்களில் எழுதிய கட்டுரைகள் யாழ்நூலில் இடம் பெற்றுள்ளமையினால் தவிர்த்து விட்டோம்’.

அடிகளாரது மதங்கசூளாமணிக் கட்டுரைகளும் தனி நூலாக வெளிவந்தமையினால் அவைகளையும் தவிர்த்து விட்டோம். மதங்கசூளாமணிப் பிரதிகள் கிடைப்பது அரிதாக இருப்பதனால் அதனை மறுபதிப்பாக வெளியிட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

அடிகளாரின் நாநலங்கனிந்த, உணர்ச்சியின் உறைவிடமான, வளமார்ந்த இலக்கியச் சுவைமிக்க கவிதைகளை கோவை செய்து விபுலாநந்த இலக்கியத்தின் ஆறாவது தொகுதியாக விபுலாநந்த கவிமலரை வழங்குகிறோம்.

அடிகளார் ஒப்பற்ற கவிஞர். கலைமகளின் அருளினுக்கு இலக்கான தெய்வீகக் கலைஞர். ஆதலினாற்றான் அடிகளார் பாடினார். உலக முதல்வனான இறைவனைப் பாடினார். தெய்வங்கள் உறையும் கோயில்களைப் பாடினார். பெரியார்களைப் பாடினார். பரமஹம்ஸதேவரின் அருள்வாக்குகளை வைத்து பாடினார். இன்னும் வகை வகையாக வண்ணக் கவிதைகளை யெல்லாம் பாடினார். தமிழ் மக்கள் நயந்து அனுபவிக்கத்தக்கதாகப் பிறமொழிக் கவிதைகளையும் மொழிபெயர்த்துத் தமிழிலே பாடினார்.

அடிகளாரின் கவிதைகளை யெல்லாம் படித்துச் சுவைத்து நயந்ததனால் அவைகளை ஓர் இலக்கினுக்கமைய நான்கு பகுதிகளாக வகுத்து விபுலாநந்தக் கவிமலர் மலர்கின்றது.

படிக்கப் படிக்க இனிக்கும் தௌ;ளமுதமான இக்கவிதைகளை எடுத்தாளுவதற்கு இயைந்த பத்திரிகை யாசிரியர்களுக்கும், அணிந்துரை வழங்கிய திரு. செ. கனகசபை அவர்களுக்கும், மதிப்புரை வழங்கிய புலவர்மணி. ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்களுக்கும் எம் இதயங்கலந்த நன்றியறிதலை உரிமையுடையதாக்குகிறோம்.

இக்கவிமலரைத் தமது வெளியீடாக அச்சிட்டுதவிய யாழ்ப்பாணத்து ஸ்ரீ லங்கா அச்சக அதிபர் திரு. நா. தெய்வேந்திரம் பிள்ளை அவர்களுக்கும், பார்வைப் படிகளை ஒப்பு நோக்கி வேண்டிய திருத்தங்கள் பல செய்துதவிய பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கும் எமது உளங்கலந்த நன்றி உரியதாகுக.

கவிதை நயத்திலே ஒப்பில்லாது சிறந்து விளங்கும் விபுலாநந்தக் கவிமலரைத் தமிழ்த்தாயின் திருமுன்பு அகம்மலரப் படைக்கிறோம். தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுப் போற்றி இன்புறுவதாக.
அருள் செல்வநாயகம்
குருமண்வெளி,
மட்டக்களப்பு.

விபுலாநந்த அடிகள்

(வாழ்க்கை வரலாறு)

இலங்கை வளநாடு முழுவதும் முன்னொரு காலத்தில் தமிழர்களில் தாயகமாகத் துலங்கியது. கால வேறுபாட்டினால் இலங்கைக்கே சொந்தமான தமிழர்கள் வடக்கையும், கிழக்கையும் தங்களது தாயகங்களாகச் சுருக்கிக் கொண்டார்கள். அதன் பயனாக இன்று வடக்கு இலங்கையும், கிழக்கு இலங்கையும் தமிழ்மொழி வழங்கும் மாவட்டங்களாகின.

கிழக்கு இலங்கையின் தலைநகரம் மட்டக்களப்பாகும். இயற்கை எழில் பொழிந்திடும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து தெற்குத் திக்கிலே இருபத்தேழு கல்தொலைவில் காரைதீவு என்னும் கிராமம் இருக்கிறது. காரைதீவின் பழங்குடி வேளாளமரபில் வந்த சாமித்தம்பியார்க்கும் கண்ணம்மையார்க்கும் சுப நாளொன்றிலே இராசகோபாலபிள்ளை அவர்கள் திருமணம் செய்துவைத்தார்.

கணவனும் மனைவியுமான சாமித்தம்பியாரும் கண்ணம்மையாரும் வள்ளுவர் வகுத்த நெறிக்கமைய இல்வாழ்க்கை நடத்திவரும்போது கண்ணம்மையார் தாய்மைப்பேற்றினை எய்தினார். பத்துத் திங்கள் பண்பாக ஓடிய பின்னர், கர ஆண்டு பங்குனித் திங்கள் பதினாறாம் நாள் (27-3-1892) வைகறைப் பொழுதில் கண்ணம்மையார் அறிவிற் சிறந்து விளங்கப்போகும் ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். குழந்தையைத் தூக்கி உச்சிமோந்த சாமித்தம்பியார், மயில்வாகனன் என்னும் அழகிய பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

மயில்வாகனனார் வளர்ந்து பள்ளிப் பருவத்தை எய்தினார். ஆகவே தந்தையார் திருவாளர் நல்லரெத்தினம் அவர்களிடம் அழைத்துச் சென்று வித்தியாரம்பம் செய்து வைத்தார். அத்துடன் திருவாளர் குஞ்சித்தம்பி ஆசிரியர் அவர்களிடமும் கல்வி கற்கச் செய்தார்.

மயில்வாகனனார் திருவாளர் குஞ்சித்தம்பி ஆசிரியரிடம் பாடங் கேட்டதுடன் நிற்காது திருவாளர் வசந்தராசபிள்ளையிடமும், தந்தையாரிடமும் பாடங்கள் கேட்டுப் படித்து வந்தார். காரைதீவுச் சைவப் பாடசாலையின் தலைமையாசிரியராக இருந்த வைத்தியலிங்கதேசிகர் அவர்களிடம் நன்னூல், சூடாமணிநிகண்டு முதலியவைகளையும் வடமொழியையும் இனிது கற்றார்.

மயில்வாகனனார் பத்து வயது வரையும் காரைதீவுத் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்றதுடன் வீட்டிலே ஆங்கில மொழியையும் கற்றுவரலானார். பின்னர் தந்தையார் இவரைக் கல்முனை மெதடிஸ்தமிஷன் பாடசாலையில் ஆங்கிலம் கற்கும்பொருட்டு 1903-ம் ஆண்டு சேர்த்தார். மயில்வாகனனார் நான்காண்டுகள்வரை கல்முனையில் கல்விகற்றார். மேற் கொண்டு தொடர்ந்து கல்விகற்க அங்கு வகுப்புகள் இல்லாமையினால் மட்டக்களப்பிலுள்ள அர்ச் மிக்கேல் கல்லூரியில் சேர்ந்து கற்கலானார். மயில்வாகனனாரின் கல்வித் திறமையைக் கண்ணுற்ற ஆசிரியர்கள் மிகவும் பாராட்டினார்கள். ஆதலினால் ஆசிரியர்கள் அனைவரின் அன்பினுக்குரியவராய் விளங்கினார்.

தமது பதினாறாவது வயதிலே மயில்வாகனனார் ‘கேம்பிரிட்ச்’ பல்கலைக் கழகத்தினரால் நடத்தப்பட்ட தேர்விலே முதன்மையாகத் தேறினார். ஆதலினால் படித்த கல்லூரியிலே ஆசிரியராக நியனம் பெற்றார். மயில்வாகனனார் இரண்டு வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு வந்தகாலையிற்றான் அன்னையார் இறைவன் அடியினை அடைந்தார். ஆகவே மயில்வாகனனார் ஆசிரியர் பதவியினைத் துறந்து இறுதிக் கடன்களைக் கழிக்கக் காரைதீவினுக்கு வந்தார். பின்னர் கல்முனைக் கத்தோலிக்க மிஷன் பாடசாலையிற் சேர்ந்து ஆசிரியராகப் பணியாற்றினார்.

இக்காலையில் ஆங்கில ஆசிரியர் கலாசாலைப் பிரவேச பரீட்சையில் தேறியதின் பயனாக, இரண்டாண்டுகள் பயிற்சிபெறக் கொழும்பிற்குச் சென்றார். மயில்வாகனனார் கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றதுடன் நிற்கானது கொழும்பு நகரில் வசித்துவந்த தமிழ் அறிஞர்களிடம் சென்றுதமிழும் கற்றுவரலானார் அந்த வகையிலே, பண்டிதர் தென்கோவை கந்தையாபிள்ளை, வித்துவான் தாமோதரம்பிள்ளை, வித்துவான் கைலாயபிள்ளை ஆகியவர்களிடம் சங்க இலக்கியங்களை முறையாகப் பயின்றார்.

ஆசிரியராகப் பயிற்றப்பட்டு வெளியேறிய மயில்வாகனனார். 1912ஆம் ஆண்டு அர்ச். மிக்கேல் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தார். பின்னர் 1915-ஆம் ஆண்டு மயில்வாகனனார் பொறியியற் கல்லூரியிற் சேர்ந்து ‘டிப்ளோமா’ பட்டம் பெற்றார். அத்துடன் 1916-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பண்டிதர் தேர்விலும் தேறினார். இலங்கையிலே முதன் முதலாகப் பண்டிதர் தேர்வில் தேறிய பெருமை மயில்வாகனனாரையே சாரும்.

1916-ஆம் ஆண்டு மயில்வாகனனார் அரசினர் பொறியியற் கல்லூரியில் உதவி இரசாயன ஆசிரியராகப் பதவியேற்றார். 1917-ஆம் ஆண்டு அப்பதவியைத் துறந்து யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியின் விஞ்ஞான ஆசிரியராகப் பதவியேற்றார்.

இரண்டு ஆண்டுகளாக மாணவர்களை வளர்த்ததுடன் தம்மையும் புதியதோர் தேர்வினுக்குத் தயார்செய்து கொண்டார். பிறர் உதவியின்றித் தாமாகவே படித்து லண்டன் பல்கலைக் கழகம் நடத்தும் பி. எஸ். ஸி. (டீ. ளுஉ ) தேர்விலே தேறிப் பட்டதாரியானார்.

பண்டிதர் மயில்வாகனனாரின் இரு மொழிப் புலமையை யறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நிர்வாகத்தினர் தலைமையாசிரியர் பதவியினை ஏற்கும்படி வேண்டினார். அதற்கிணைந்த பண்டிதர் மயில்வாகனனார் 1920-ஆம் ஆண்டு இந்துக்கல்லூரியின் தலைமைப் பதவியினைக் கையேற்றார். அங்கு ஆய்வுகூட மொன்றினை நிறுவி விஞ்ஞானக் கல்வியைப் போதித்தார்.

இலங்கையில் தமிழ்மொழியை வளர்க்கவோ, பேணிக் காக்கவோ சிறந்த சாதனங்கள்; இல்லாமையைக் கண்ட மயில்வாகனனார் தமிழ் மொழியை வளர்க்க ஒர் கழகம் நிறுவ முயன்றார். யாழ்ப்பாணத்து அறிஞர் பலரின் துணைகொண்டு தமது தனிமுயற்சியின் பயனாக யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தைக்கட்டி எழுப்பினார்.

பண்டிதர் மயில்வாகனனார் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கவாயிலாக, பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என்ற முத்தரங்கொண்ட மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். பண்டிதத் தேர்வுகள் செம்மையாக நடைபெறும்பொருட்டுத் தாமே தேர்வு முதல்வராகவும் முதன்மையான உறுப்பினராகவும் விளங்கினார். அன்று பண்டிதர் மயில்வாகனனார் தொடக்கிவைத்த சங்கம் இன்றுவரை எத்தனையோ பண்டிதமணிகளை இலங்கைக்;கு அளித்துவிட்டது. இன்னமும் அளித்துக் கொண்டேயிருக்கும்.

உலக வரலாற்றிலே 1914-ஆம் ஆண்டுச் சம்பவம் பயங்கரமான ஒர் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுதான் முதலாவது உலகப் பெரும்போராகும். பணிசெய்வதையே குறிக்கோளாகக் கொண்ட பண்டிதர் மயில்வாகனனார் போர்வீரராகி நாட்டினுக்காக இரத்ததானம் செய்ய முன்வந்தார். அவர் முன்வந்த காலையிலே உலகப் பெரும்போரும் முடிவினுக்கு வந்தது. ஆதலினால் அவரது போர்ப்பணி தேவையற்றதாகவே முடிந்தது.

நாட்டினுக்குச் சேவைசெய்ய வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், நாட்டுமக்களுக்கும், மொழிக்கும், சமயத்துக்கும் பணிசெய்யப் பண்டிதர் மயில்வாகனனார் விரும்பினார். அதன் பயனாக 1922-ஆம் ஆண்டு துறவியாகித் தூய வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்குப் பணி செய்வதற்காகச் சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ண மடாலயத்தினுக்குச் சென்றார். சென்னு மடாலயத்திற் சேர்ந்து, துறவியாவதற்குரிய நியமங்களைக் கைக்கொள்ளலானார். அவருக்கு மடாலயத்தார் பிரபோத சைதன்யர் என்னும் பிரமசரியப் பெயரை வழங்கினார்.

பிரபோத சைதன்யர், மடாலய வாயிலாக வெளிவரும் திங்கள் இதழ்கலான ‘ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம்’ என்னும் தமிழ்ச் சஞ்சிகைக்கும், ‘வேதாந்தகேசரி’ என்னும் ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகிப் பணிபுரியலனார்.

1924-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முழுமதிநாளன்று சுவாமி சிவாநந்தா அவர்கள் பிரபோத சைதன்யருக்கு ஞான உபதேசம் செய்து விபுலாநந்தா என்ற துறவறப் பெயரை வழங்கினார்.

சுவாமி விபுலாநந்தாவாக அடிகளார் வெளியுலகை நோக்கிய வேளையில், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தாரின் ஆண்டு நிறைவு விழாவினுக்குத் தலைமைதாங்கும்படி கோரினார்கள். அடிகளாரும் அதற்கியைந்து மகாநாட்டினுக்குத் தலைமைதாங்கிச் சிறப்பித்தார்.

அடிகளார் துறவியாகத் தம்மை ஆயத்தம் செய்தகாலையிற்றான் அதிகநூல்களை யெல்லாம் கற்கமுடிந்தது@ பல நூல்களை மொழிபெயர்க்கவும் முடிந்தது. அந்த வகையிலே விவேகாநந்த ஞானதீபம், கர்ம யோகம், ஞானயோகம், நம்மவர் நாட்டு ஞானவாழ்க்கை, விவேகாநந்தர் சம்பாஷணைகள் என்னும் நூல்களை அடிகளார் மொழி பெயர்த்தார்.

ஆங்கிலப் பெரும்புலவரான ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிகளார் விரும்பிப் படித்தார். அத்தகைய ஓர் சூழ்நிலையைத் தமிழிலே எற்படுத்துவதற்கு எண்ணங் கொண்டார். 1924ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழாவிற் கலந்து கொள்ளவும், நாடகத்தமிழ் என்னும் பொருள்பற்றிச் சொற்பொழிவாற்றவும் அடிகளார்க்குத் தருணம் கிடைத்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான திரு. டி. சி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், அடிகளாரின் விரிவுரையினை ஓர் நூலாக்கித் தரும்படி கோரினார். அதற்கியைந்த அடிகளார் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் தனஞ்சயரின் தசரூபகத்தையும் மூலக்கருவாகக் கொண்டு சிலப்பதிகாரத்திலுள்ள நாடகநூல் முடிபுகளை ஓரளவு விளக்கிக் காட்டுவதற்கு ஏற்றதாக மதங்க சூளாமணி என்னும் நூலினை எழுதினார். மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் மதங்கசூளாமணியைச் செந்தமிழ் இதழில் தொடர்பாக வெளியிட்டுப் பின்னர் நூலாக வெளியிட்டார்.

சிதம்பரத்திலே பல்கலைக்கழகம் நிறுவும்பொருட்டு இராமநாதபுரத்து அரசர் தலைமையில் ஒரு விசாரணைக்குழு நிறுவப்பட்டது. இக் குழுவின்முன்னர் பல்கலைக்கழகம் அவசியமாக நிறுவப்பட வேண்டுமென்று சான்றுபகரும்படி அடிகளாரைச் சென்னைப் பல்கலைக்கழகத்தார் வேண்டினர். அதற்கியைந்த அடிகளார் பல்கலைக்கழகம் அவசியமாக நிறுவப்பட வேண்டுமென்று முதன்முதலாகச் சான்று பகர்ந்தார்.

பண்டிதர் மயில்வாகனனாராகத் தமிழகம் சென்றவர் 1925-ஆம் ஆண்டு விபுலாநந்த அடிகளாக இலங்கைக்குத் திரும்பினார். ஆதலினால் அடிகளாருக்கு இலங்கையிற் பல இடங்களில் மகத்தான வரவேற்புக் கிடைத்தது.

இலங்கை திரும்பிய அடிகளாருக்கு ஸ்ரீஇராம கிருஷ்ண மடாலயத்தார் கிழக்கிலங்கையிலுள்ள தங்கள் பாடசாலைகளைப் பராமரிக்கும் முகாமையாளர் பதவியினைக் கொடுத்தார்கள்.

முகாமையாளர் பதவியினைக் கையேற்ற அடிகளாரது கவனம் கல்வி வளர்ச்சியிலேயே சென்றது. காரைதீவிற் பெண்களுக்கென்று ஓர் பாடசாலையை நிறுவிச் சாரதா வித்தியாலயம் எனப்பெயர் கொடுத்தார். மட்டக்களப்பினுக்கணித்தாயுள்ள கல்லடி உப்போடை என்னும் ஊரில் ஒர் ஆங்கிலக் கல்லூரியினை நிறுவிச் சிவாநந்த வித்தியாலயம் எனப் பெயர் கொடுத்தார். சிவாநந்த வித்தியாலயம் சிறப்புற நடைபெறும் பொருட்டுத் தலைமையாசிரியர் பதவியினை அடிகளாரே கைக் கொண்டார். பின்பு, திருகோணமலையிலுள்ள இந்துக்கல்லூரியினை வளர்க்கும் பொருட்டு அடிகளார் அங்கு அதிபர் பதவியினைக் கையேற்றார்.

இலங்கைக்குக் காந்தியடிகள் வருகைதந்தபோது, அன்னவரை மாணவர்மகாநாட்டுத் தலைவர் என்றவகையிலே அடிகளார் வரவேற்றார்.

சிதம்பரத்திலே பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது தமிழ்ப் பேராசிரியர் பதவியினை ஏற்கும்பொருட்டு அடிகளாரை, அண்ணாமலைச் செட்டியார் வேண்டினார். ஆகவே அடிகளாரும் அண்ணாலைச் சர்வகலாசாலையில் தமிழ்ப் பேராசிரியர் பதவியினைக் கையேற்றார்.

பல்கலைக்கழகத்திலே பணியாற்றிய அடிகளார் ஓய்வான வேளைகளிலே பழந்தமிழர்கள் கையாண்ட இசைக் கருவிகளைப்பற்றி ஆராயலானார். மறைந்தொழிந்த யாழ்க்கருவிகளைத் திரும்பவும் மீட்டுக்கொடுக்க வேண்டுமென்று உறுதிபூண்டார். இப்பணியினைப் பூரணமாக்க உத்தியோகம் இடையூறாக இருந்தது. ஆகவே அடிகளார் இசையாராய்ச்சியில் இறங்குவதற்கு 1933-ஆம் ஆண்டு பேராசிரியர் பதவியினைத் துறந்தார்.

சமயப்பணியும், தமிழ்ப்பணியும் அடிகளார் செய்துகொண்டு யாழ் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். இக்காலையில் இமயமலைச்சாரலிலுள்ள மாயாவதி ஆச்சிரமத்திலிருந்து வெளிவரும் ‘பிரபுத்த பாரத’ என்னும் ஆங்கிலத் திங்கள் இதழினுக்கு ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதனால் அடிகளார் இமாலயத்தினுக்குச் சென்றார். இமயமலைச் சாரலிலே அடிகளார் வாழ்ந்து கொண்டு இசை ஆராய்ச்சியினைத் தொடர்ந்து நடத்தினார். இசையாராய்ச்சி பூரணத்துவம் பெறுவதற்குத் தென்னாட்டினுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதனால் பத்திரிகாசிரியர் பதவியினைத் துறந்தார்.

தென்னாட்டிலே பல இடங்களுக்குஞ் சென்ற ஆராய்ச்சியிலீடுபட்டுக் கொண்டிருந்த அடிகளாரை இலங்கைப் பல்கலைக்கழகத்தினர், தமிழ்ப் பேராசிரியர் பதவியினை ஏற்கும்படி வேண்டினார்கள். பிறந்தநாட்டின் நலத்தின் பொருட்டு அடிகளார் பேராசிரியர் பதவியினை மேற்கொண்டார். பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியுடன், கல்விப்பகுதிப் பாடநூற்சபை, தேர்வுச்சபை, கல்வி ஆராய்ச்சிச்சபை ஆகியவற்றின் முதன்மையான உறுப்பினராகவும் விளங்கினார்.

இலங்கை அரசாங்கம் இலங்கைப் பாடசாலைகளுக்கான ஒரு கல்வித் திட்டத்தை வகுத்தபோது, அடிகளார் சங்கீத பாடத்தினுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். பாடசாலைகளில் சைவ சமயமும் படிப்பிக்கப் படவேண்;டுமென்ற நியதி ஏற்பட்டபோது அடிகளார் சைவசமயத்தினுக்கான ஒர் பாடத்திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார்.

அடிகளார் பத்தாண்டுகளாக ஆராய்ந்து கண்டுணர்ந்த இசைநூலான யாழ்நூலினைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்து ஆதரவில் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் சர்வசித்து ஆண்டு ஆனித் திங்களில் (20, 21-6-47) அரங்கேற்றினார். அவ்வரங்கேற்று விழாவில் அடிகளார் கண்டுணர்ந்த யாழ்க் கருவிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. விழாவிலே சங்கீதபூஷணம் திரு. க. பொ. சிவானந்தம்பிள்ளை அவர்கள் அந்த யாழ்க்கருவிகளை மீட்டி இன்னிசை பொழிந்தார்.

யாழ்நூல் அரங்கேற்றுவிழாவில் கலந்து கொள்ளப் புறப்படுமுன்னரே. அடிகளாரின் உடல் சோர்வுற்றிருந்தது. அதனைப் பொருட்படுத்தாது பயணஞ் செய்து மீண்ட அடிகளாரை நோய் நன்றாகப் பற்றிக் கொண்டது. ஆகவே கொழும்பு மருத்துவ விடுதியொன்றிலே சிகிச்சை பெறலானார்.

அடிகளாரைப் பரிசோதித்த வைத்தியர் பூரணஒய்வும் அமைதியான சூழ்நிலையும் வேண்டுமெனக் கூறினார். வெள்ளவத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடாலயத்தார் வைத்தியர் கூறிய சூழ்நிலையை ஏற்படுத்தியும் பயன் தராமல் 1947-ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19-ம் நாள் (19-7-1947) சனிக்கிழமை இரவு அடிகளார் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அறிஞர்கள் அழுது புலம்பினார்கள். தமிழ்த்தாய் கண்ணீர் வடித்தாள். தமிழகம் ஒப்பற்ற முத்தமிழ் முனிவரை இழந்தது.

அடிகளாரின் ஊனுடம்பு வெள்ளவத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடாலயத்தில் அன்பர்களின் இறுதிவணக்கத்தினுக்காக வைக்கப்பட்டது. மறுநாள் ஊனுடல் பிறந்த பொன்னாடான மட்டக்களப்பினுக்குப் புகைவண்டி மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊனுடம்பு வைக்கப்பட்ட பேழையை மட்டக்களப்புப் புகைவண்டி நிலையத்திலிருந்து கல்லடி உப்போடை சிவாநந்த வித்தியாலயத்தினுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். இறுதியாகச் சிவாநந்த வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறையிலே அடிகளாரின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு எழிலான சமாதி யொன்று எழுப்பப்பட்டது. அதிலே,

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர்எதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

என்னும் அடிகளாரின் கவிதை பொறிக்கப் பட்டுள்ளது.

விபுலாநந்த அடிகளாரின் சமாதியின் பக்கலிலே விபுலாநந்த மணி மண்டபம் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. அடிகளாருக்கு வணக்கம் செலுத்தச் செல்பவர்கள் அவரது சமாதியிலே எழுதப்பட்டிருக்கும் அவரது கவிதையினைப் படித்துக் கண் கலங்குவார்கள்.

விபுலாநந்த அடிகளார் மறைந்து விட்;டார் அவரது ஊனுடம்பு அழிந்து விட்டது. ஆனால், அவரது புகழுடம்பு தமிழ் உள்ளவரையும் நின்று நிலவவே செய்யும்.

விபுலாநந்த இலக்கியம் மலர்ந்து விட்டது. விபுலாநந்த அடிகளார் என்னும் பெயரும் சிரஞ்சீவியாகிவிட்டது.

இசையிடை நுணுகியாய்ந்து இசைபெற யாழ்நூல் யாத்து
இசைத்தமி ழாசானாகி இன்கலைக் கழகந்தன்னில்
இசைவளர் விபுலாநந்தர் இம்பரினீங்கி வானின்
இசைபொழி யமரராகி என்றென்றும் வாழ்கின்றாரே!

என்று நாமும் நாளும் வாழ்த்துவோமாக.



பிழை திருத்தம்

பக் வரி பிழை திருத்தம்

8 மூன்று பாடல்களிலும் இறுதிச்சீர்கள் யாமலவோ யாமலமோ
16 10 மன்றலர்ந்தார் மன்றலந்தார்
48 230ம் பாட்டில் முதற்சீர் வருந்தித்தாய் வருந்தித்தாங்
62 7 யோதயச் யோதச்

பகுதி ஒன்று

1. ஈசனுவக்கும் மலர்

1

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ள லடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

2

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிளையாய் வந்தவர்க்கு வாய்த்;த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

3

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலிலாக் கற்பகமோ
வாட்ட முறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலிலாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது

2 தேவபாணி

(விநாயகர் திருவடி பரவிய தேவபாணி)

மலையரசன் திருப்பாவை வாணுதலா ளுளமகிழுங்
கலையரசே கற்றோர்கள் காதலிக்குங் கற்பகமே

நல்லறத்தின் தனிமைந்தன் நானிலங்கா ரணமாக
வில்லறத்தின் வழிநின்ற விறற்சரிதங் கிரிப்புறத்தில்

எழுதுகரு ணீகநின திணையடியே புணையாகப்
பழுதில்கலைக் கடலென்னும் பரவையினைக் கடப்பேமால்,

திருநாரை யூர்வாழுந் திருவாளா அருளாளா
பெருநாரை பெருங்குருகு பேரிசையே சிற்றிசையே
உருவாய தமிழகத்தி லுயர்மூவர் தெய்வவிசை
வருமாறு பணித்ததுவும் மன்னியநின் னருளன்றோ

முத்தமிழும் பெருக்கியசீர் முதல்வனார் திருக்குமரா
பத்தியுடன் பணிபவர்க்குப் பலகலையும் பாலிக்கும்
சித்திபுத்தி நாயகனே திருமுறைகள் தமிழகத்தில்
நித்தநிலை பெற்றதுவும் நின்னருளின் றிறனன்றோ

திருக்கிளருஞ் சோழமன்னர் தேவாரத் திருமுறைகள்
இருக்குமிட மெதுவென்ன வியம்புதியென் றுனைப்பணிந்து
வருக்கைநறுந் தேன்கதலி யௌ;ளுண்டை யப்பமவல்
பெருக்கவவர் கருத்துமுற்றப் பெற்றதுநின் னருளன்றோ

எனவாங்கு.

திருந்திய தமிழாற் சேவடி பரவுதும்
தெய்வத் தமிழிசை வையத் துயர்வுறப்
பத்தர் கோடே நரம்பே யாப்பென
வைத்த வுறுப்பு வளம்பெற மன்னி
செம்மை படுமலை செவ்வழி யருமை
கோடி விளரிமேற் செம்பா லையென
ஏழ்பெரும் பாலையு ளியன்ற நல்லிசை
சீரே பாணி தூக்கென நின்ற
முத்திறத் தானமு மெத்திறத் தோரும்
கேட்டுமகிழ் வெய்தப் பாட்டி னியலும்
பண்ணி னியலு மெண்ணியாய்ந் துரைக்கும்
யாழ்நூல் பொலிவுற் றேழிசை பரப்புக
மழைவளஞ் சுரந்த மன்னுயி ரோங்குக
நின்னடி பணிந்த இராமன் சீர்மிக
நல்லோர் அவைக்களம் நாளும் பொலிக
பேரையூர் மன்னிய சீருடைச் செல்வ,
அம்பாள் குளத்தி லணிபெற வமர்ந்த
பொய்யா விநாயக, பூரண, என்றே.

3 தேவி வணக்கம்
1
அன்னையே யருளுருவே யகிலமுமீன்
றளித்தருளு மரசி யேசீர்
மன்னுநிலை யியற்பொருளு மியங்கியலும்
வகைப்பொருளும் வகுத்த வாற்றால்
இன்னலற வெமைப்புரந்த வின்னமுதப்
பெருங்கடலே யிறைவி யேநின்
பொன்னடியை நிதந்துதித்தோங் கடைக்ணித்துக்
கருணைமழை பொழிவா யம்மா!

2

எண்ணுங்கா லுலகினுக்கோ ராதார
மாய்நின்ற வியல்பு நீயே
மண்ணின்சீ ருருவாகி மன்னியவ
ணீயன்றே வாரி யாகி
உண்ணுந்நீ ருருவாய வுத்தமியு
நீயன்றோ வுயர்வொப் பில்லாய்!
விண்ணின்பே ருருவாகி யெவ்விடத்து
நிறைந்துநின்ற விரிவு நீயே.

3

வீயாத பெருவலிமை வைணவியே!
பிரபஞ்ச வித்து மாகித்
தாயாகித் தாரணியைத் தோற்றுவித்த
தனிமுதலே! தவத்தர் வாழ்வே!
மாயாரூ பத்துடனே மருளவிக்கும்
வனப்புடையாய்! மயக்கந் தீர்த்துத்
தீயாத பெருமுத்தித் தடங்கரையிற்
செலுத்துகின்ற செல்வத் தாயே!

4. பராசக்தி

ஆயிரங் கதிரவ ரொருங்குதித் தனரெனப்
பாயிருள் சீக்கும் படிவமப் படிவத்
திலங்கொளி நிறைமதி யேய்ப்பத் துலங்கும்
நுதற்கட் டீட்டிய நுண்சுடர்ச் சுட்டியொடு
கருமுகிற் கூந்த லிடைமிளிர் திருமுகம்
திருமுகத் தொளிர்வது சிறுபுன் முறுவல்@

அதுவே@

அரியே றிவர்ந்து வாட்படை யேந்தி
எருமைப் பேரோ னுரனழி திருநாட்
சுரகுல முதல்வர்க் குவகையும் பரவா
அவுண மாக்கட் கச்சமுங் காட்டிய
நிலைய தாதலி னீள்கடல் வரைப்பினில்
அருள்பெறு வாருக் கருளுங் காட்டும்@
மருள்பெற மவர்க்கு மருட்சியுங் காட்டும்!

அவ்வழி@

திருவிழை மாந்தர் திருமகட் கண்டனர்@
கலைவிழை மாந்தர் கலைமகட் கண்டனர்@
அறநெறிச் செல்வோ ரறத்துமுதல் கண்டனர்@
தவநெறிச் செல்வோர் தவத்துமுதல் கண்டனர்@
சுற்றமுந் தொடர்பு நீங்கிய கொள்கைப்
பற்றறு மாண்பினர் பரவொளி கண்டனர்@
யாயெனக் கண்டனம் யாமு மாதலின்
வேத முதல்வியை மாதவப் பயனை
மலைக்கிறை பயந்த மழலையங் குழவியை
நீல மேனி நெடியோன் றங்கையை
ஆல முண்டவற் கரும்பெருந் துணைவியை
ஒமெனு முருவனை யுவந்தரு ளன்னையைச்
சேயைப் பயந்த செல்வியை யாய்தமிழ்
வளம் பொலி தருகென வழுத்தி
உளங்கொண் டேத்துக முண்மைதேர் பொருட்டே,

5. மலர்மாலை

1

வேலை முகட்டிற் கதிரெழுமுன்
விரைந்து பறித்த புதுமலராற்
கோல முறவே புனைமாலை
யார்க்கோ வெங்கள் குலக்கொழுந்தே!
கோல முறவே புனைமாலைக்
குரியார் யாரென் றறியாயோ?
சீல முறமுன் பெமையாண்ட
செல்வ ருடைமை யாமலவோ?

2

பாரோ ரெழுமுன் பெழுந்திருந்து
பனிமா மலர்கள் பலபறித்துச்
சீரா யமைத்த மலர்மாலை
யார்க்கோ வெங்கள் திருக்கொழுந்தே!
சீரா யமைத்த மலர்மாலைக்
குரியார் யாரென் றறியாயோ?
ஆரா வமுதா யெமையாண்ட
அமல ருடைமை யாமலவோ?

3

வண்டா டாமுன் றெரிந்தெடுத்த
வாச மலராற் றொடுத்தமைத்த
தண்டேன் றுளிக்கு மலர்மாலை
யார்க்கோ வெங்கள் தவக்கொழுந்தே!
தண்டேன் றுளிக்கு மலர்மாலைக்
குரியார் யாரென் றறியாயோ?
பண்டே தொடுத்தெங் குடியாண்ட
பரம ருடைமை யாமலவோ?

6. தேவபாணி

1

ஒளியா ருலகீன் றுயிரனைத்து
மீன்போற் செவ்வி யுறநோக்கி
அளியால் வளர்க்கு மங்கயற்கண்
ணன்னே! கன்னி யன்னமே!
அளியா லிமவான் றிருமகளாய்
ஆவி யன்ன மயில்பூவை
தெளியா மழலைக் கிளிவளர்த்து
விளையாட் டயருஞ் செயலென்னே!

2

அண்டக் குவைவெண் மணற்சிறுசோ
றாக்கித் தனியே விளையாடுங்
கொண்டற் கோதாய்! படியெழுத
லாகா வுருவக் கோகிலமே!
கொண்டற் குடுமி யிமயவரை
யருவி கொழிக்குங் குளிர்முத்தால்
வண்டற் குதலை மகளிரொடும்
விளையாட் டயரும் வனப்பென்னே!

3

வேத முடிமே லானந்த
விளைவாய் நிறைந்து விளையாடும்
மாத ரரசே முத்தநகை
மாதே யிமய மடமயிலே!
மாத ரிமவான் றேவிமணி
வடந்தோய் மார்புந் தடந்தோளும்
பாத மலர்சேப் புறமதித்து
விளையாட் டயரும் பரிசென்னே!

7. பெருந்தேவபாணி

மணிவிளங்கு திருமார்பின் மாமலராள் வீற்றிருப்பப்
பணிதயங்கு நேமியும் பாணிறத்த சுரிசங்கும்
இருசுடர்போ லிருகரத்தி லேந்தியமர் மாயோனும்
பங்கயத்தி லுறைவோனும் பாகத்தோர் பசுங்கொடிசேர்

செந்தழற்கண் ணுதலோனுந் தேருங்கா னீயென்பார்க்
கவரவர்த முள்ளத்து ளவ்வுருவா யல்லாத
பிறவுருவு நீயென்னிற் பிறவுருவு நீயேயாய்
அளப்பிரிய நான்மறையா லுணர்த்துவதற் கரியோனே!

எவ்;வுயிர்க்கு முயிரேயா யிலங்குதனின் றொழிலாகி
அவ்வுயிர்க்க ணடங்கியே யருளாது நிற்றலினால்
வௌ;வினைசெய் தவையிழந்து வெம்பிறவிக் கடல்சூழ்ந்த
அவ்வினையை யகற்றாம னிற்பதுநின் னருளன்றோ?

பல்லுயிரும் படைப்பதுநின் பண்பன்றே? பகலினால்
வல்வினையின் வலைப்பட்டு வருத்தங்கூ ருயிர்தம்மை
நல்வினையே பயில்வித்து நடுக்கஞ்செய் பவைநீக்கி
அல்லல்வா யழுந்தாம லகற்றுவது மருளன்றோ?

அழிப்பதுநின் றொழிலென்றே யறைந்தாலு முயிரெல்லாம்
ஒழித்தவற்றுள் ளுணர்வுகளை யொருவாம லுடனிருத்திப்
பழிப்பின்றிப் பல்காலு மிப்பரிசே பயிற்றதலின்
அழிப்பதுவு மில்லையா லாங்கதுவு மருளன்றோ?

வேள்வி யாற்றி விதிவழி யொழுகிய
தாழ்வி லந்தணர் தம்வினை யாயினை@
வினையி னீங்கி விழுத்தவஞ் செய்யு
முனைவர் தமக்கு முத்தி யாயினை@

இலனென விதந்தோர்க் கிலையுமாயினை@
உளனென வுணர்ந்தோர்க் குளையு மாயினை@
அருவுரு வென்போர்க் கவையு மாயினை@
பொருவற விளங்கிய போத மாயினை.

பானிற வண்ணனீ, பனிமதிக் கடவுணீ,
நீனிற வுருவுநீ, நிறமிகு கனலிநீ,
அறுமுக வொருவநீ, ஆனிழற் கடவுணீ,
பெறுதிரு வுருவுநீ, பெட்பன வுருவுநீ.

மண்ணுநீ விண்ணுநீ, மலையுநீ கடலுநீ,
எண்ணுநீ எழுத்துநீ, இரவுநீ பகலுநீ,
பண்ணுநீ பரவுநீ, பாட்டுநீ தொடருநீ,
அண்ணனீ அமலனீ, அருளுநீ பொருளுநீ.

ஆங்கு,

இனியை யாகிய விறைவநின் னடியிணை
சென்னியின் வாங்கிப் பன்னாள் பரவுதும்
மலர்தலை யுலகின் மன்னுயிர்க் கெல்லாம்
நிலவிய பிறவியை நீத்தல் வேண்டி
முற்றிய பற்றொடு செற்ற நீக்கி
முனிமை யாக்கிய மூவர்முத் திரையை
மயலற விளித்தநின் மலரடி
அரிய வன்னா யுயர்விதிற் பெறவே.

8. கோயில்

1

தங்கமணி மன்றுடையார் தனதன்றன்
திருத்தோழர் தரணி யாள்வார்
எங்கள்சிறு குடிசையினை யெண்ணிவரல்
யாங்ஙனமோ? இயம்பாய் தோழி!
எங்கள்சிறு குடிசையினை யெண்ணிவரற்
கிசையாரோ, ஏத மில்லார்?
துங்கமணி மன்றுவிட்டுச் சுடுகாட்டில்
நடித்திலரோ? சொல்லா யம்மா!

2

செம்பொன்செய் வல்லசித்தர் தென்னவனார்
மருகனார் செகத்தை யாள்வார்
எம்புன்செய்க் குடிசையினை யெண்ணிவரல்
யாங்ஙனமோ? இயம்பாய் தோழி!
எம்புன்செய்க் குடிசையினை யெண்ணிவரற்
கிசையாரோ, ஏக மில்லார்?
உம்பர் தொழத் தென்மதுரைத் தெருவீதி
நின்றிலரோ? உரையா யம்மா!

3

ஆடகமா மலையுடையா ரச்சுதனார்
மைத்துனனா ரவனி யாள்வார்
ஈடிலரெஞ் சிறுகுடிலை யெண்ணிவரல்
யாங்ஙனமோ? இயம்பாய் தோழி!
ஈடிலரெஞ் சிறுகுடிலை யெண்ணிவரற்
கிசையாரோ, ஏத மில்லார்?
காடுமலை நாடுவிட்டு வெறுவெளியில்
நின்றிலரோ? கழறா யம்மா!

9. யாழ்நூல் இறைவணக்கம்

மூத்த பிள்ளையார்

உழையிசை யிபமென வுருவுகொள் பரனை
உமைதிரு வுளநிறை யமிழ்துகு மழலை
மொழியுரை குழவியை யழகறி விளமை
முழுதியல் வரதனை முறைமுறை பணிவாம்
புழைசெறி கழைகுற லிசைபொழி பொதியம்
புகழுற வளருறு புலமகள் பனுவல்
இழையணி தமிழ்மக ளெமதுள முறையும்
இறைமக ளிசையியல் வளமுறு கெனவே.

இளைய பிள்ளையார்.

இளியொன்றி நின்ற விசைதந்த மஞ்ஞை
யெழிலொன்ற வூரு மிளையோன்
கிளியொன்றி நின்ற மழலைக்கு றத்தி
கிழவன் பதங்கள் பணிவாம்
அளியொன்று சோலை வளிநின்ற கூட
லரவிந்த வாவி யுறைவாள்
ஒளியொன்று மேனி யுரவோளெம் மையை
யுரையெங்கு மோசை யுறவே.

நிலங்கடந்த நெடுமுடி யண்ணல்

விளரியிசை யானிரைகள் விழைமுல்லைக்
குழலிசைத்து வில்வீ ரற்குக்
களரியினில் மறையிசைத்த கடல்வண்ணன்
பதவிணையைக் கருத்துள் வைப்பாம்
முளரிமலர்த் தவிசிருத்தி முடிமன்ன
ரடிபணிந்த முறைமை யாலே
வளரிமயம் வரையாணை வகுத்தளித்த
தமிழரசி வாழ்க வென்றே.

திரிபுர மெரித்த விரிசடைக் கடவுள்

தார முய்த்தது பாணற் கருளொடே
தாள மீந்தது காழியர் கோவுக்கே
சீரும் பாணியும் தூக்கு மிசையவே
தெய்வ மாநடங் கொண்டது தில்லையில்
ஓரும் வேதத்தி னுச்சியில் நின்றதா
ளுள்ளி யேத்தி வணங்குதலும் பைந்தமிழ்
பாரி லெங்கும் பரந்திசை சூடியே
பண்டி ருந்ததொர் பண்பினை யெய்தவே.

வெற்றி வெல்போர்க் கொற்றவை

குரலிசைய வண்டுழுத குழற்கோதை சரியக்
கொடியதொழில் வாளவுணர் குலமுதல்வ ரிரிய
உரகமணிக் கச்சசையப் பொற்சிலம்புங் கழலும்
ஒலிக்கமரக் காலாடு மொண்டொடியைப் பணிவாம்
இரவிகுண திசையெழலு மிருளகலு மாபோல்
இதயவிரு ளகலவரு மெழின்முகத்து நங்கை
பரவியுளங் குளிர்கவென மணிமொழியைப் பகர்ந்தாள்
பாரெங்கு மிவள் பெருமை பரந்திடுக வெனவே.

திருவின் செல்வி

துத்தத் திசைபயில் கிளிமொழி மலர்மகள்
பத்தர்க் கருள்புரி பதவிணை பரவுதும்
வித்தைக் கலையினி லுயர்வுறு தமிழ்மொழி
எத்திக் கினுமிய லிசையொடு மருவவே.

இசை மடந்;தை

கைக்கிளை யீறாக் கட்டிய நரம்பிற்
கலந்துநின் றின்னிசை யெழுப்பி
மெய்க்கிளை நட்புப் பகையிணை தெரித்த
மெல்லிய லிணையடி பணிவாம்
புக்கிளை யாத புலமையி னூற்றாய்ப்
பொருந்தினர்க் காரமிழ் தாகி
எக்கிளை ஞரினு மிக்கவன் பளிக்கும்
இருந்தமி ழணங்கினை யுவந்தே.

10 மகாலட்சுமி தோத்;திரம்

(பரிசிற்றுறை தழுவிய பாணிப்பாட்டு)

விண்ணின்ற சோதி விரிகதிர் மண்டிலத்தின்
உண்ணின்ற தெய்வ வுருவமே! – கண்ணின்

ஒளியே யொளிக்கொளியே யொண்பதும மேவும்
அளியே யளிக்குமுத லாயன் - களிகூரும்

பெண்ணரசி யே! நினது பேரெழிலின் றோற்றத்தை
எண்ணி யுரைக்க வியைந்துநின்ற – விண்ணவர்கோன்

எல்லையற்ற பேரருளுக் கெல்லையிடல் யாங்ஙனமென்
றல்லலுற்றா னென்னு மறிஞருரை – மெல்லச்

செவியகத்துச் சேர்தலும்யான் சிந்தைநைந்தே னன்னாய்!
கவியகத்துத் தேர்ந்த கலைஞர் – புவியகத்துப்

பைந்தொடி மெல்லிநல்லார் பாணி யுரைக்குங்காற்
செந்திருநீ ராரென்னச் செப்புவார் – சுந்தரமாந்

தாக்கணங்கே நின்றிருவைச் சாற்றுவதென் றாலடியேன்
ஆக்க மரிப்பிரியை யாயவம்மை – நோக்கில்

தனக்குவமை தானென்பேன் றாயே! சிறியேன்
மனக்கமல பீடம் வதிந்து – நினைக்கரிய

பேரெழிலைக் காட்டுவையேற் பேணுமறி விற்கெட்டுஞ்
சீர்சொலலென் நாவின் செயல்.

வானகத்தும் மண்ணகத்தும் வயங்குசுடர் நீயாயின்
கானகத்தும் பொழிலகத்துங் கருதுமெழில் நீயாயின்
நானகத்துக் கொண்டனநின் னளினமலர்ப் பதமாயின்
தேனகத்த வனசமொன்றோ திருப்பீட மாவதுமே?

கோபாலன் றிருமார்பிற் குலவுமொளி நீயாயின்
பூபாலர் தடந்தோளிற் பொலிவனப்பு நீயாயின்
நாவார வழுத்துவநின் னளினமலர்ப் பதமாயின்
பூவாரும் பதுமமொன்றோ புதுப்பீட மாவதுமே?

பொன்னீர்நெல் மணியணிசீர் புகழிளமை நீயாயின்
மின்னீர விடைமடவார் வியனெழிலு நீயாயின்
நன்னீர ருளத்தினநின் னளினமலர்ப் பதமாயின்
செந்நீர்மைக் கமலமொன்றோ திருப்பீட மாவதுமே?

எனவாங்கு,

மன்றலர்ந்தார்க் குழலமுதை மாக்கடலிற் பிறந்தாளைக்
கன்றெறிந்த விறைமகிழுங் கனங்குழையைப் பணிந்துநின்றேன்

நின்ற வெல்லையு ணீடருள் சுரந்தென்
மனக்கண் காண வலக்கண் டுடிப்ப
உளமெனும் பீடத் துவந்து தோன்றினள்
வளரிள மதிநுதல் வயங்கொளி மலர்மகள்@

ஆங்கு,

பொன்னிறங்கொள் திருமேனி பொலிவுறுதல் லெழில்கண்டேன்
குன்றனைய பயோதரத்திற் குளிர்முத்த வடங்கண்டேன்
அன்றலர்ந்த செங்கமல மங்கைமலர் மிசைக்கண்டேன்
வன்றிறற்கோ லனைச் செற்ற வச்சிரதண் டமுங்கண்டேன்;

வெண்ணிறத்த சுரிசங்கம் விளங்குதிருக் கரங்கண்டேன்
அண்ணலஞ்சீர்த் தனியாழி யமர்ந்தவிறற் கரங்கண்டேன்
புண்ணியச் செங் கருடன் மிசைப் பொருந்து திருவுருக் கண்டேன்
மண்ணகம் விண்ணகம் போற்றும் வைணவியைக்கண் கண்டேன்

கண்டுளங் களிகூர்ந் தண்டரு மவுணரும்
பாற்கடல் கடைந்த காலத் தார்த்தெழு
நஞ்சொடு மமுதொடும் நளிரிளம் பனிமதிப்
பிள்ளைப் பிறையொடு மொள்ளொளி வெள்ளைப்
பரியொடு மரம்பையர் பலரொடுந் தோன்றிய
கிள்ளை மென்மொழிக் கிளரொளி யணங்கே!
வேண்டுவார் வேண்டும் வரமருள் திருவே!
காண்டற் கரிய கமல வல்லீ!
போக மோºம் பொருந்துவிப் பவளே!
யோகசா தனையா லுளத்துதிப் பவளே!
ஆதியீ றில்லா வானந்த நிறைவே!
தூலசூக் குமத்துத் தோன்றிநின் றவளே!
மாலளிப் பவளே மயக்கறுப் பவளே!
ஞாலமே ழுண்ட நாதன் பானிறை
வேலையிற் றுயில விழைவொடு மவன்செய்
வேலையைப் புரியும் விமல வல்லி!
யானறி யளவையிற் றமிழ்புனைந் தேக்கினன்,
கானமர் புரிகுழற் கமலைநின் றிருவடி
வாழ்கென வேத்தி வணங்கிநின் றனனால்@

அவ்வுரை,

ஆழியா னுளங்கவரு மணங்குமருள் வளஞ்சுரந்து
காழியா ரிளங்கோவின் கவிமருவு தமிழ்வாழ்க
ஊழிதோ றூழிதோ றுலவுகநற் றமிழ்நாடு
வாழியசெந் தமிழறிஞர் வாழியவென் றெனைநோக்கி,

செம்மொழிநற் றமிழ்ப்புலவ! செவ்வியுற நீயுரைத்த
செம்மொழிநற் றமிழ்ப்பனுவற் செய்யுள்விலை செப்பென்றாள்
அம்மொழியென் செவிப்படலு மகங்குழைந்து முகமலர்வுற்
றம்மொழியென் செவிப்படுத்த வன்னையடி பணிந்துரைப்பேன்@

வாழி நாரணன் சிரங்கொண் மெல்லடி
வனச வல்லியே யவ்வை பாடலைக்
கூழ ளித்துற வாடி நின்றவோர்
குறவ மாமக ளெளிது கொண்டனள்@

முதிர மால்வரைத் தலைவ னாகிய
முடிவில் சீர்ப்புகழ்க் குமண மன்னவன்
சதுர ழிந்தபின் புலவன் வந்துறத்
தலைவி லைக்கொரு பனுவல் கொண்டனன்@

அதிய னஞ்சிபல் லாண்டு வாழ்வினை
யதிக மென்றெணா னரிய தெய்வீகக்
கரிய நெல்லியின் கனியை யவ்வைசெங்
கைக்கொ டுத்தொரு கவிதை கொண்டனன்@

பனியின் மால்வரை யெல்லை யாதன்முப்
பத்தொ டெட்டியாண் டிறையு மூர்களும்
உனவெ னக்கொடுத் தும்பல் சேர்குமட்
டூரர் செந்தமிழ்ப் பாடல் கொண்டனன்@

எண்ணைந் தொன்றுநூ றாயி ரம்பொனும்
ஏற்ற பாகமும் போற்றி நல்கியே
கண்ணி நார்முடிச் சேரல் காப்பியூர்க்
காப்பி யன்றருங் கவிதை கொண்டனன்@

தோட்டி தழ்த்தொடைச் சேரர் கோமகன்
சோர்வில் மைந்தனை யூரை நல்கியே
பாட்டி தழ்த்தொடைப் பயன ளித்தசீர்ப்
பரணர் பாடிய பனுவல் கொண்டனன்@

மத்த யானையான் வளவர் கோமகன்
மன்னு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டனன்@

இன்னணமுன் னாணடந்த வியல்புசில வெடுத்துரைத்தேன்
கன்னியிளந் தமிழ்கவியெங் கண்ணுதலைக் காரிருளிற்
பொன்னனையார் பாற்றூதாய்ப் போக்குமெனில் விலையுமுண்டோ!
பின்னுரைப்பிற் கொள்வோர்தம் பெருமதிப்பெங் கவிமதிப்பே.

கூழுடையார் கூழளிப்பார் கோமக்கள் பொன்னளிப்பார்
ஆழிமணி முடிவேந்த ரகனிலத்தை யெமக்களிப்பார்
கீழ்மக்கள் வசையளிப்பார் கேள்வியிலார் நகையளிப்பார்
வாழ்வளிப்பார் மாமுனிவர் மறைமுதல்வன் வீடளிப்பான்

நீயளிப்ப தெதுவம்மா நித்திலமும் பொற்குவையும்
சேயொளிசேர் மலர்ப்பதத்தின் சிறுபூழி யாகவே!
வாசவனும் வடதிசையின் மரகதனும் பெறுநிதியம்
தேசுசெறி கால்விரல்சேர் சிறுபீலிக் கிணையாமோ?

கங்கைநீர்க் கரையடைந்தோர் கங்கை டனைநோக்கி
யங்கைநீர்க் கிரந்துநிற்ற லறிவின்பாற் படுவதுவோ?
சங்குசேர் திருக்கரத்தோய் தமியனே னிதயமெனும்
பங்கயத்து ணீயுறையிற் பாரிலொரு குறையுளதோ?

எனவழுத்தி யிறைஞ்சி நின்றே னிகபரத்து வருபொருளைத்
தினைபொறுத்த துணைமதியாச் சிவானந்த வருட்குரவன்
புனிதவடித் தொண்டெனுமெய்ப் பொருள்படைத்த பெருமையினேன்
வனசமலர்ச் செழுந்திருவும் வனப்பிளமை வளம்விளங்க

அணிநிற மதிமுகத் தருணகை யொளிதர
மணிமருள் செவ்வாய் மலரிதழ் விரித்துத்
‘தமிழ்வளம் பொலிக! தமிழ்நாடு வாழ்க!
அமிழ்தன தமிழ்புனை யறிஞநீ வாழ்க!
பனுவல்கேட் டுவந்தனன்! பரிசில் கொண்மதி:
வாழ்கென வொருவரை வாழ்த்துவை யாயின்,
வாழுமன னார்க்கு மலிவள மளிப்பேன்@
வீழ்கென வொருவரை விளம்புவை யாயின்,
வீழுமன் னார்பான் மேவேன் யானெ’னப்
பரிபுர மலர்ப்பதங் காட்டித்
திருவின் செல்வியு மருள்வழங் கினளே

11. திருவமர் மார்பன் திருக்கோயிற் காட்சி

தண்ணிலவின் கதிர்க்கற்றை தனைத்திரட்டி யுருவாக்கி
உண்ணிலவு மமிழ்தத்தை யுகுத்ததென மணிவண்ணன்
கண்ணிலவு துயில்புரியும் கருதரிய திருமனையாம்
பண்ணிலவு பாற்கடலே பாரின்மிசைப் படர்ந்ததென.

வெண்மையும் பொலிவும் விழைதகு வனப்பும்
ஒண்மையும் மரீஇ, உரவோர் மனமெனக்
களங்கமற் றோங்கி விளங்குமிந் நியமம்
பொன்னி னாழி பொருந்திய குடுமி
வெள்ளிக் குன்றென வெண்ணிறச் சலவைக்
கல்லிற் சமைந்த கவினுடைத் தம்ம!
சீரியல் நாரணன் திருவொடும் பொலிந்த
பேரியற் கோவிலிஃ தீரியன் மருங்கும்
உலகு தாங்கிய வொருத்தி கோயிலும்
கலைமதி புனைந்த கண்ணுதல் கோயிலும்
மூவிலைச் சூலம் மேவிய குடுமிக்
குன்றிரண் டிருபால் நின்றதோற் றத்த.

திருவாயி லிருமருங்கும் செழுங்கரத்திற் றண்டேந்தி
ஒருவாத படிமங்க ளோரிரண்டு நின்ற விவை

ஒரிரண்டு மெழில் முகத்தி லுவகையொடு நகையரும்பி
வாருமிவண் வாருமென வலிந்தழைக்கும் நீர்மையவே@

மெருகிட்ட சலவைக்கல் வீதியினை வலம்வந்தே
உருகிட்ட மெழுகென்ன வுளந்ததும்ப வுட்புகுந்தேன்@

உளந்ததும்பப் புகுந்தாங்கே யுலகுபுரந் திடுமொருவன்
வளந்ததும்புந் திருவோடு மன்னியதோற் றங்கண்டேன்:

ஆரணங் கணிந்த தரத்தப் பூந்துகில்@
நாரண னுடீஇயது பீதக வாடை.
இருவர் மார்பினு மிலங்கிய தாமம்
பன்னிற நன்மலர் பயின்று விளங்குவ
இருவர் சிரத்திலு மருமணி மகுடம்@
செம்மலர்ப் பதத்திற் சிலம்புங் கழலும்.
அம்மலர் நோக்கி அகங்குளிர்ந் தப்பால்

வேங்கைவரிப் புறத்தியைந்து
விறல்வாளும் படைக்கலமும்
தாங்கியநல் லெழிலுருவைத்
தாயுருவ மெனக்கண்டேன்@

தாயுருவா யுலகளிக்குந்
தயவுணர்ந்து மனமாசு
தேயவவள் சீறடியைச்
சிந்தையினி லிருத்தியப்பால்

கல்லாலின் புடையமர்ந்து
கருத்தொன்றி யோகுசெய
வல்லான்நல் லருளாளன்
மதிமிலைந்த முடிச்சென்னி

மதிமிலைந்த முடியானை
மனநெகிழ்ந்து வழுத்தியபின்
விதிபுனைந்த மணிவாயில்
விளங்கியவீ ருருக்கண்டேன்.

ஆரழல் மாமக மழிதர வடர்த்த
வீரனும் விண்ணவர் வெந்துய ரகலச்
சூருரங் கிழித்த சுடரிலை நெடுவேல்
ஏரகத் தவனு மிருபா லிலங்கினர்@
கண்ணுதல் வாயிற் காவல ரிவர்க்கண்
டுலகு தாங்கிய வொருத்தி கோயிலில்
நடம்பயில் வைரவர் யோகினி யெனுமிவர்
இடம்பெயர்ந் துறையு மியல்புங் கண்டேன்@
நாரணன் கோயி லேர்புனை வாயிலில்
நாரத முனியும் பாரதிப் பெயர்கொள்
சொல்லின் மடந்தையும் நல்லியல் வீணை
ஏந்திய கரத்தின ரிலங்கக் கண்டேன்.

அப்பால்,

இருபெருஞ் சதுக்க மியைந்தன வவற்றுள்
வேத வியாதனு மிடப தேவனும்
சாங்கியக் கபிலனுந் தன்வந் திரியும்
மன்னிய சதுக்கம் வலப்பா லதுவே.

வையந்தா னுய்யும்வகை
மாமறையை வகுத்துரைத்த
ஐயன்றன் றிருக்கரத்தி
லருஞ்சுவடி பொலிந்ததுவே@

அருஞ்சுவடிப் பொருள்தேரின்
ஆரணநூன் முடிந்தவிடம்
பொருந்துபொரு ளொன்றென்னப்
புலங்கொள்ள வுரைப்பதுவே@

சீரிடப தேவனெனுஞ்
சினனுரைத்த வாசகந்தான்
ஓரினைந்து பெருநோன்பி
னுண்மையினை யுரைப்பதுவே@

உண்மைநிலை கொலைகளவி
னொழிந்தநிலை கொடுங்காமம்
எண்ணுபொரு ணசைநீக்க
லிவைசீல மியமமெனல்,

அறுநான்கு தத்துவமு
மாய்ந்துரைக்குங் கபிலமுனி@
மறுநீங்க வுடலோம்பு
மரபினிற்றன் வந்திரியே.

மரிபினிலை யைந்தாண்டின்
மணமகன்றா னெண்ணிரண்டு
விரவியவள் பாலின்பம்
விழையுமெனு முரைகூறும்.

இடப்பாற் சதுக்கத்து மழுப்படை ராமனும்
சீதை கேள்வனும் யாதவ ரிறையும்
அருளறம் பகர்ந்த பெருவிறற் புத்தனும்
தத்த முயர்மொழி தந்துநின் றனரே.

ஆங்கு,

நெடுநிலை மாடத் தரமிய மேறிச்
சுவரி லெழுதிய சித்திரம் நோக்க
மாமனு வேந்தனும் ரகுவும் போசனும்
தாமவிக் கிரமனுந் தங்கின ரொருபால்@
மாபா ரதத்து மிராமன கதையுளும்
மேவிய தொன்மை விரிந்தன வொருபால்@
திருத்தகு ராம கிருட்டிண தேவனும்
சங்கரா சிரியனும்; சார்ந்தன ரொருபால்:
சந்திர குப்தனும் அசோக மன்னனும்
சுந்தர வுருவிற் றோன்றின ரொருபால்:
இங்கிப் பரிசி னியைந்த வோவிய
நலங்கண் டுவக்கும் நகர மாந்தர்
மாட்சியு மொருபெருங் காட்சியாகும்.

முளையெயிற்றுச் செய்யவாய் முதிராத பசுங்குதலை
இளமகார் தமையேந்து மளிநல்லார் குழுவொருபால்
தண்டூன்றி நடுக்குறூஉந் தளர்நடையும் நரைமுடியுங்
கொண்டேன்ற முதுமகளிர் குழுவொருபாற் குலவுமே.

அலர்கதி ராழியு மந்தண் மதியமும்
நிகர்திருச் சங்கமும் நீள்கரத் தேந்தி
மலர்மக ளொருபால் மருவ மன்னிய
தாமரைக் கண்ணன் சேவடி
மேவிய தில்லி வியநகர் பெரிதே

12 நாச்சியார் நான்மணிமாலை

திருமலி தமிழின் செழுங்கலைத் தொகுதிகள்
பலவே யாயினும் பண்டை யோர்தெரிந்
தியலிசை நாடக மெனுமுத் துறையையுந்
தமிழென வைத்துச் சார்புற வளர்த்தனர்.

அவருள்,

ஒல்காப் பெருந்தவத் தொல்காப் பியரும்
சீரிய லிசையின் றிறத்தினை யுணர்ந்து
நுண்ணிதி னாய்ந்த நுண்மா ணுழைபுல
இசைநுணுக் கங்கண்ட வின்னிசைச் சிகண்டியும்
பரந்த கேள்விப் பலகலை யாசான்
நலந்து வன்னென நவின்ற சீரிசையோன்
பண்டுதமிழ் வளர்த்த பாண்டியர் தோன்றல்
இளம்பெரு வழுதி யென்னு மிசையோன்
பாலை நிலத்து மேவிய வெயினர்
தொல் குடிப்பிறந்த தூயோன் பல்புகழ்
கண்ணிய வாசான் கடுவணிளவெளினன்
பெருமை சால்கரும் பிள்ளைப் பூதன்
எண்ணின் நூலு மிறையருள் கண்ணிய
உண்மை நூலு முணர்ந்தபே ராசான்
கீரந்தை யென்னக் கிளர்ந்த பேரினன்
குன்றப் பூதன் கேசவன் நப்பணன்
நல்லச் சுதன்நல் லழிசிநல் லெழுதி
மையோ டக்கோன் நல்வழு திய்யென
இன்னியல் மாண்டேர்ச்சி யிசைபரி பாடல்
சொன்னமெய்ப் புலவரு மிசைவகுத் தோருட்
கால வாழியிற் கரந்து மறையாது
நாங்காண நின்ற நல்லிசை வாணர்
கண்ணகன் கண்ண னாகன்நந் நாகன்
பித்தா மத்தன் நாகன்நன் னாகன்
பெட்ட னாகனொடு மருத்துவ னல்லோன்
அச்சுத னெனும்பே ரடையநின் றோரும்
மூன்றாஞ் சங்கத்துத் தோன்றி மறைந்த
சிற்றிசை பேரிசை வரியொடு கூத்தெனும்
நூல்வகுத் தோரும் நுண்மா ணுழைபுலம்
எய்திய புலவரு ளிசைவல் லோரும்
இசைசால் சேரர் பெருங்குலத் துதித்தே
அரசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டேன்
றுரைசெய் தவனை யுருத்து நோக்கிச்
சிந்தையுஞ் செல்லாச் சேணெடுந் தூரத்
தந்த மிலின்பத் தரசாள் வேந்தாய்
இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலையாஞ்
சிலம்பின் பாடலைச் செய்து பழந்தமிழ்
இசையி னிலக்கண மென்றும் விளங்கக்
கூத்தி னியலும் யாத்த பாடலுள்
ஐவகை நிலத்தி னடைவே தோன்றும்
வரிப்பாட் டியல்பும் பிறவுந் தெரித்துச்
சங்க மிருந்து தமிழா ராய்ந்த
நல்லிசைப் புலவர்போல் நானில மதிக்குந்
தமிழினை வளர்த்த வுரைசா லடிகளும்
முறுவல் சயந்தங் குணநூல் செயிற்றியம்
இந்திர காளியம் பஞ்ச மரபு
பார்புகழ் பரத சேனா பதியம்
எனநூ லளித்த விசையா சிரியரும்
நாடகத் தமிழ்நூல் நலம்பெற வெழுதிய
மதிவாண னாரெனும் வழுதியும் பழுதில்
காரைக் காலினுங் கயிலைப் பதியினும்
ஆலங் காட்டினுஞ் சிவனடி தொழுத
அலகில் விழுப்புக ழம்மையுந் தம்மை
அழைத்தவர்ப் புரக்கு மருட்பெரு முதல்வனைப்
பண்ணமை வார இசையாற் றொழுத
காழியர் கோவும் நாவினுக் கரசும்
நாவ லூரினி லிறைதடுத் தாண்ட
தொண்டர்சீர் பரவும் நம்பியா ரூரரும்
ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியாம்
சகோட யாழிசை தமிழிசை விரவ
மதங்க சூளா மணியொடும் போந்து
தமிழ்மறை தந்த ஞானபோ னகர்தாள்
பரவிய நீல கண்டயாழ்ப் பாணரும்
வாதவூ ரடிகளுங் கோதிலா னாயரும்
இன்னிசைத் தமிழால் யாவரு மறிய
நாரணன் சீர்ப்புகழ் நானிலத் தோர்பெறப்
பரவிய காரி மாறப் பிரானும்
அண்டர் கோவை யரங்கத் தமுதினைக்
கண்ட கண்கள் காணாமற் றொன்றினை
என்று பாடி யாழினை மீட்டிய
தெய்வப் பாணருந் திருவிசைப் பாவினை
வையத் தோர்பெற வானின் வழங்கிய
மாளிகைத் தேவரும் வண்புகழ்ச் சேந்தனும்
கருவூர் வேந்தருங் கண்டரா தித்தரும்
காடவர் கோனெனும் நம்பியும் வேணாட்
டடிகளுந் திருவாலி யமுதரும் படிபுகழ்
புருடோத் தமருஞ் சேதி ராயரும்
பார்பொய் யென்று பரனடி நாடிய
சீர்மிகு பட்டினத் தடிகளும் பாரில்
திருப்புகழ் பாடி வியத்தகு சீர்பெறு
செம்மலை யெனும்பேர் திருத்தகப் புனைந்த
அருண கிரியெனு மண்ணலுந் தெருளுறும்
தமிழிசைப் புலவர் தாளிணை போற்றக்
குவலயம் போற்றுங் கொள்ளம்பூ தூரில்
அரசுவீற் றிருக்குந் திருவுடைச் செல்வீ
நின்னடி பரவுது மேத்துதும் வாழ்த்துதும்
இன்னு மின்னும்யாம் விரும்புவ திதுவே.

பகுதி இரண்டு

13. விவேகாநந்த பஞ்சகம்

1

வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு!
வையகமே சிறந்ததென வானகத்தோர் வழுத்த
ஆழியிறை யுலகிருந்தோ வரனுலக மிருந்தோ
அருமுனிவ ருலகிருந்தோ வவனிமிசை யடைந்தாய்?

2

அடைந்ததுவு மருட்டிறத்தின் சிறப்பையுரைப் பதற்கோ?
ஆண்மையிது வெனக்காட்டிக் கீழ்மையகற் றுதற்கோ?
முடிந்தமுடி பாகியவே தாந்தத்தின் பொருளை
மொழிந்தவித்தை தனையகற்றி முத்திநிலை தரற்கோ?

3

நிலையிழிந்த பாரதத்தின் குறையனைத்து நீக்கி
நிலைநிறுத்தும் பொருட்டோவிந் நிலவுலகின் மாந்தர்
கலைமொழிந்த பொருளனைத்துங் கடந்துநின்ற வுண்மைக்
கந்திழியைச் சார்வதற்கோ வந்தனைசீர்க் குருவே?
4

சீர்மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்
தேயத்துட் பாரதமே சிறந்ததென் விசைப்ப
ஈரிருபா னாண்டுறைந்தா யெமதுதவக் குறையோ
இளவயதி லெமைவிடுத்தா யளவிலருட் கடலே?

5

அருட்செல்வஞ் செல்வமென வருந்தமிழ்வள் ளுவனா
ரறைந்தமொழிப் பொருளுணர்ந்தோ யருந்துறவோர்க் கரசே!
பொருட்செல்வம் மனைசுற்றம் புகழ்துறந்த நினக்குப்
புவியனைத்துஞ் சுற்றமே@ புகழனைத்து நினதே@

வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு!

14. குருசரண தோத்திரம்

1

ஈசனருள் மெய்ஞ்ஞான வொளிவிளக்கந் திருத்தி
இழிந்தழன்ற வாருயிரை யிருக்கையினி லிருத்தி
ஆசையெனுங் கனலவித்திவ் வேழையையன் றாண்ட
அணிமலர்ச்செஞ் சேவடியை யனைத்தினையும் விளக்கும்
தேசுசெறி பரிதியென்கோ சஞ்சீவி யென்கோ?
திருவருளின் மழைபொழியுஞ் செழியமுகி லென்கோ?
பாசமொன்றா நீர்மைதரப் பரிந்துவந்தென் சிரத்திற்
படிந்ததிரு வடியிணையை யடைந்ததுமற் புதமே!

2

காரிரும்பு நிகர்மனத்தைப் பொன்னாக்கி யுளத்திற்
கருதியவெல் லாமளித்துக் கரைகாணாப் பிறவி
ஆரிரும்பௌ வங்கடக்க வருள்செய்தே யாண்ட
அணிமலர்ச்செஞ் சேவடியை யனைத்தையும் பொன்னாக்கும்
சீரிலகு மணியென்கோ பதுமநிதி யென்கோ?
தெய்வமுத்திக் கரைசேர்க்குஞ் சிறந்ததெப்ப மென்கோ?
பாரிலொன்று நீர்மையவாய்ப் பரிந்துவந்தென் சிரத்திற்
படிந்ததிரு வடியிணையை யடைந்ததுமற் புதமே!

3

நோவொழிய விளைப்பகற்றி நுவலநின்ற முதுமை
நோய்மரண முறுதலிலாத் தேவர்நிலை பெறுதற்
காவனசெய் தாநந்த நிறைவினையன் றளித்த
அணிமலர்ச்செஞ் சேவடியை யடைந்தவரைப் புரக்குந்
தேவதரு நிழலென்கோ தௌ;ளமுத மென்கோ?
சிவாநந்த நிதிபொதிந்த செழும்;பேழை யென்கோ?
பாவமொன்றா நீர்மைதந்து பரிந்துவந்தென்; சிரத்திற்
படிந்ததிரு வடியிணையை படைந்ததுமற் புதமே.

15. அன்பு

1

குணதிசையிற் பரிதியெழக் கமலமல
ரகநெகிழ்ந்த குறிப்புக் கண்டேன்
மணவணிநாள் விரவிவர மணமகளின்
முககமல மலரக் கண்டேன்
இணையனுக வுவகையினாற் குதுகலிக்கும்
பெண்புறவி னியல்பு கண்டேன்
அணைவர்தனித் துணைவரெனி னகநெகிழ்த
லன்பாமென் றறிந்தேன் யானே.

2
அணியிரவி கடலில்விழ வரவிந்தஞ்
சோர்ந்துவிழு மல்லல் கண்டேன்
இணைபிரிந்த விளம்பறவை சிறையடித்து
நனிவருந்து மின்னல் கண்டேன்
கணவனுடல் பதறிவிழக் கதறியழு
மடமகளின் கவற்சி கண்டேன்
துணைவர்பிரிந் தேகுங்காற் றுயருறுத
லன்பென்னத் துணிந்தேன் யானே.

3

சாபத்தைக் கரத்தேந்திப் போர்க்களத்தி
லிறக்கவெண்ணிச் சார்வார் கண்டேன்
தீபத்தின் மிசைவிழுந்து சிறையெரிந்த
சிறுவிட்டிற் செய்கை கண்டேன்
பாபத்தி னுருவாய விலைமகளைக்
காதலித்தோர் பான்மை கண்டேன்
ஆபத்தை நோக்காம லுட்புகுத
லன்பென்ன வறிந்தேன் யானே!

4

ஈசாநின் றனையல்லாற் பிறவேண்டே
னெனுந்தொண்ட னேற்றங் கண்டேன்
ஆசான்றன் றிருவடிக்கே யனைத்துமெனு
மாணாக்க னாற்றல் கண்டேன்
நேசாவென் பொருளுயிரை நினதெனக்கொ
ளெனுநண்ப னேர்மை கண்டேன்
கூசாம லுடல்பொருளா வியைக்கொடுத்த
லன்பென்னக் குறித்தேன் யானே!

5

வெள்ளநீர் தருமேகம் வேற்றுமையில்
லாதுநல்கும் மேன்மை கண்டேன்
வள்ளலா யிருந்தோர்தாம் வறுமைவந்தும்
பிறர்க்கிரங்கு மாண்பு கண்டேன்
கொள்ளுவீ ரெனிவிளநீர் கொடுக்கின்ற
செழுந்தெங்கின் குறிப்புக் கண்டேன்
உள்ளநேர் விழைவின்றிக் கொடுத்துதவ
லன்பென்ன வுணர்ந்தேன் யானே!

6

தன்மகன்சான் றோனென்ன நனிமகிழ்ந்து
களிகூர்ந்த தாயைக் கண்டேன்
தன்மகனோய் தீர்ப்பதற்காத் துயினீத்துப்
பசிகிடந்த தகவு கண்டேன்
தன்மகனால் வெற்றிபெறத் தவப்பயனை
விரும்பிநல்குந் தன்மை கண்டேன்
மன்னுநீர் வையகத்தி லன்னையன்பு
சிறந்ததென மதித்தேன் யானே!

16. நீரர மகளிர்

தண்ணளியே செங்கோலாய்த் தனியறமே சக்கரமாய்
மண்முழுது மாண்ட புகழ்வாம னடியிணையே
என்றுமழியா திலங்குஞ் சமனொளியுங்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவற்கு
மூவடிமண் ணீந்தளித்து மூவாப் புகழ்படைத்த
மாவலியின் பேரால் வயங்கு மணிநதியும்
காவும் பொழிலுங் கழிமுகமும் புள்ளணிந்த
ஏரியும் மல்கி யிரத்தினத் தீவமென
ஆரியர் போற்று மணிசா லிலங்கையிலே
ஏரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும்
சீரா ரியன்றசெந்நெ லின்சுவைத்தீங் கன்னலொடு
மட்டக் களப்பென்னு மாநாடந் நாட்டினிடைப்
பட்டினப் பாங்கர்ப் பரந்ததோ ணாமுகமாய்
ஐங்கரன் கோயிலமிர்த கழிக்கணித்தாய்ப்
பொங்கு கடலுட் புகுநீர் நிலையொன்று
நீர்நிலையி னுள்ளே நிகழ்ந்த வதிசயத்தைப்
பாரறியக் கூறும் பனுவ லிதுவாகும்:

வேறு

மாசகன்ற மணிவிசும்பில் வயங்குநிறை மதியம்
மலர்க்கிரண வொளிபரப்ப வளரு மிளவேனில்
வீசுதென்ற லொடுங்கூடி விளையாடல் கண்டு
விண்ணகத்தார் மண்ணத்தில் விழைவுகொளும் யாமம்

அஞ்சிறைய புள்ளொலியு மான்கன்றின் கழுத்தில்
அணிமணியி னின்னொலியு மடங்கியபின் நகரார்
பஞ்சியைந்த வணைசேரு மிடையாமப் பொழுதிற்
பாணனொடுந் தோணிமிசைப் படர்ந்தனனோர் புலவன்.

தேனிலவு மலர்ப்பொழிலிற் சிறைவண்டு துயிலச்
செழுந்தரங்கத் தீம்புனலுள் நந்தினங்கள் துயில
மீனலவன் செலவின்றி வெண்ணிலவிற் றுயில
விளங்குமட்டு நீர்நிலையு ளெழுந்ததொரு நாதம்:

வேறு

நீதி – சாச – ரீ நீல வானி லே
நிசரி – காக – மா நிலவு வீச வே
மாம – பாப – தா மாலை வேளை யே
மபத – நீநி – சா மலைவு தீரு வோம்
சாச – ரீரி – கா சால நாடி யே
சரிக – மாம – பா சலதி நீரு ளே
பாப – தாத – நீ பாலை பாடி யே
பதநி – சாச – ரீ பலரொ டாடு வோம்

நீலவானிலே நிலவுவீசவே
மாலைவேளையே மலைவுதீருவோம்
சாலநாடியே சலதிநீருளே
பாலைபாடியே பலரொடாடுவோம்@

நிசரி காக மா மபத நீநி சா
சரிக மாம பா பதநி சாச ரீ
ரிகம பாப தா தநிச ரீரி கா
கமப தாத நீ நிசரி காக மா

நிலவுவீசவே மலைவுதீருவோம்
சலதிநீருளே பலரொடாடுவோம்.

வேறு

என்ன வெழுந்தவந்த வின்னிசைத்தீம் பாடலினைக்
கன்னலெனக் கேட்டுக் களித்த புலவனுந்தன்
அன்பன் முகநோக்கி ‘ஆகாவிவ் வற்புதத்தை
என்னென் றுரைப்பே னிசைநூற் பொருளுணர்ந்தேன்
ஐந்தாம் நரம்பி னமைதியினை யானறிந்தேன்
காந்தாரத் தைந்தாய்க் கனிந்த நிஷாதமெழும்
செய்;ய நிஷாதச் செழுஞ்சுரத்தின் பஞ்சமமே
வையம் புகழ்கின்ற மத்திமமாம் மத்திமத்திற்
கஞ்சாஞ் சுரமா மணிசட்சம் சட்சத்தின்
பஞ்சமமே பஞ்சமமாம் பண்ணும் ரிடபமதற்
கஞ்சாஞ் சுரமா யடையு மணிரிடபத்
தெஞ்சாத பஞ்சமமா யெய்திநிற்குந்தைவதமே
தைவதத்திற் கைந்தாய்த் தனித்தகாந் தாரமெழும்
இவ்வகையே யேழாகி யி;ன்னிசையாழ்த் தீங்குழலில்
நாதமாய்த் தோன்றி நவைதீ ரமிழ்தனைய
கீதமாய் மேவுங் கிளையாய்ப் பகைநட்பாய்
நின்ற முறையை நினையி னிவைகிளையாம்’
என்றபொழுதி லெழுவர் மடநல்லார்
நீரு ளிருந்தெழுந்து நின்றா ரரமகளிர்
ஆதலினால் மூப்பறியா ரந்தீங் குழலொலியும்
ஓதிய யாழி னொலியு மெனமொழிவார்
பைம்புனலின் மேற்படர்ந்த பாசிநிகர் கூந்தலார்
அம்பொன்னின் மேனி யரையின்கீழ் மீன்வடிவம்
செங்கமலம் போற்கரங்கள் திங்கள் மதிமுகத்தின்
பொங்கிய புன்முறுவல் பூத்தார் புலமையார்
கவிமுகத்தை நோக்கிக் கணிந்துரைப்பார் ‘யான்கிளையே
புவியிலெனைத் தாரமென்பார் புதல்வியிவள் பேருழையே
உழையின் மகள்குரற்பே ருற்றா ளிளிதனையே
பிழையி லிளிபாற் பிறந்தாள்பேர் துத்தமே
துத்தம் பயந்த சுதைவிளரிப் பேர்பூண்டாள்
உய்த்த வளரிக் குறுதனயை கைக்கிளையே
பொன்னின் கபாட புரத்துறைவோம் மாவலிநீர்
தன்னிற் படிந்து சமனொளியைக் கும்பிடுவோம்
ஆடுவோம் பாடுவோ மடையாதார் தங்களையாம்
இச்சை யறவே யிழித்துரைக்கும் நீர்மையேம்
உருத்தெழுந்து கோபிப்போ முண்மை யுரைப்போம்
அருந்தி யொடுவீர மறைவோம் வியப்புறுவோம்
திங்கள் நிறைநாளிற் சேர்வோமிந் நீர்நிலையைக்
கங்குல் கழியுமுன்னே கார்படிந்த மைக்கடலைச்
சென்றுயாஞ் சேர்வோமெஞ் செங்கை’ யிதுவென்றார்
ஒன்றாகநீரு ளொளித்தார் தமிழ்ப் புலவன்
சிந்தையை யன்னார்பாற் சேர்த்தி மனைபுகுந்தான்
வந்த விசையின் வரன்முறையு மீங்கிதுவே.

17 ஆறுமுக நாவலர்
1

தொல்லியல் வழுவாச் சைவநூற் புலவர்
தூநெறித் தமிழுரை யாளர்
நல்லியற் புலவ ரிசைதரும் புலவர்
நாடக நவிற்றிய புலவர்
சொல்லியற் றொகைநூல் வானநூ றருக்கந்
தோமறு கணிதநூன் முதலாம்
பல்கலைப் புலவர்க் குறைவிட மாகிப்
பரந்திசை யெய்தும் யாழ்ப் பாணம்.

2

ஆரிய ராழி வேந்தரென் றவனி
புகழ்ந்துரை யளிக்கநல் லூரிற்
சீரிய செங்கோல் செலுத்திய வேந்தர்
சென்றபின் சைவநிந் தனைசெய்
பூரிய ராட்சி புக்கது கண்டு
பொறாதுபுண் ணியத்திசை நடந்த
நேரியன் ஞான விளக்கெனு முனிவன்
நிறைபுகழ் மரபுமேம் படவே

3

தில்லைவாழ் கூத்தன் றிருவரு ளுருவாம்
சீர்ச்சிவ காமசுந் தரியார்
எல்லையில் கருணைக் கொள்கல மாய
எழிற்சிவ காமியார் வயிற்றில்
நல்லைவாழ் கந்த னருளினா னல்லைக்
கந்தர்தந் தவப்பய னாக
வில்லைநேர் நுதலார் கண்வலைப் படாத
மெய்த்தவன் மகவென வுதித்தான்.

4

குலந்தரு செல்வ னறுமுகப் பெயருங்
கோதில்சீ ரொழுக்கமும் மருவி
நலந்தரு கல்வி கேள்வியா னிறைந்து
நற்றமிழ் வடமொழி குடபால்
நிலந்தரு மன்னர் மொழியிவை யுணர்ந்து
நீடுசீர் முருகனே யென்ன
அலந்தவர்க் குதவி நினைந்தது முடிக்கு
மாற்றலும் பெற்றுயர் வடைந்தான்

5

தன்னியல் புணரத் தலைவன தியல்பு
சாற்றிய சைவநூல் பலவும்
மின்னியல் சடையா ரருளினா லச்சில்
மேவுத னலமெனத் துணிந்து
பன்னல மிகுந்த சென்னைமா நகர்க்குப்
படர்தர வெண்ணிநாண் மறைகள்
துன்னிநின் றேத்துந் தொல்பதி தொழுது
தொலைவில்சீ ராவடு துறையில்

6

பாவலர் போற்றும் ஞானதே சிகரைப்
பணிந்தவ ராணையின் வண்ணம்
பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப்
புலமிகு மறியவர்கூட் டுண்ணக்
காவலர் வியப்ப வுரைத்திடல் கேட்டுக்
கருணைகூர் தேசிக ரிவர்க்கு
நாவல ரெனும்பேர் தகுமென வளித்தார்
ஞாலத்தார் தகுந்தகு மென்ன.

7

சொல்லுதல் வல்லான் சோர்வில னஞ்சான்
துணிவு கொள் சிந்தையா னவனை
வெல்லுதல் யார்க்கு மரிதென வுரைத்த
மெய்ம்மறைப் பொருட்கிலக் காகி
நல்லையி லுதித்த நாவலர் பெருமான்
நலந்திகழ் சென்னைமா நகரின்
எல்லையை நண்ணி யியற்கலை பரப்பு
மியந்திரம் வாங்கிய பின்னர்.

8

கருணையே யுருவாய்க் கண்ணுதற் பெருமான்
கழலிணை பதிந்தவுள் ளத்தர்
அருணைமால் வரையின் சாரலிற் சின்னா
ளமர்ந்தனர் திருமடத் ததிபர்
பொருணிறை தமிழின் புலத்துறை முற்றும்
புண்ணியர் தகவினை யெண்ணித்
தெருணிறை யுரவோ யீண்டுநீ வைகச்
சிந்தைசெய் திடனல மென்றார்.

9

தம்மை யீன்றெடுத்த வரசியல் நாட்டிற்
சைவமாஞ் சமயமும் புலவர்
செம்மைசே ருளத்திற் பொலிந்தமுத் தமிழும்
சீருறப் பணிபல புரிதல்
இம்மையிப் பிறவிக் கியைந்தமா தவமென்
றெண்ணியே விடைபெற்று மீண்டார்
எம்மையும் பயந்த வீழமா நாட்டி
னிணையிலாப் பெருநிதி யனையார்.

10

கடிகமழ் கொன்றைத்தாரினா ரழகிற்
காதலுற் றுருகுமெய் யன்பர்
வடியிலை வேற்க ணரம்பையர் வரினும்
மதித்திடா ராதலின் விதித்த
படியினிற் றூய நெறிபுக நினைந்து
படிகலிங் கத்தினிற் றலைவன்
துடிமழுக் கரஞ்சேர் சுந்தர வடிவைத்
தொழுதிட வெண்ணிய தூயோர்.

11

நண்ணினர் வினைகள் நலிவுற வருளும்
நாவலந் தீவினை யடைந்து
புண்ணியந் திரண்ட வுருவியன் ஞான
போதகா சிரியனைத் தொழுது
மண்ணினிற் பிறந்தோர் மனமய லகல
வளரொளிப் பிழம்பென நின்ற
விண்ணவர் முதலைப் ப+சனை புரியும்
விதியினை மதியினிற் றெளிந்தார்.

12

மன்னுமீ ழத்தை யடைந்துதொண் டாற்றி
மாமறைக் காட்டினை மேவித்
தென்னலத் துறைசைச் தருமையம் பதியிற்
றொகைவிரி வுரைபல நவிற்றி
முன்னமே ழிசையாற் செழுந்தமிழ் வளர்த்த
முதல்வரைப் பயந்தசீ காழி
எண்ணுமா நகரி லிறைவர்தா டொழுதா
ரின்றமிழ் வளர்த்தநா வலனார்.

13

உரையுணர் விறந்த தனிமுதல் கருணை
யுருவுகொண் டுலகெலாம் பயந்த
வரைமக ளுவகை விழியினாற் பருக
மாதவர் வாழ்த்தொலி யெடுப்பப்
பரையுரு வாய மாமணி மன்றுட்
பதஞ்சலி யாதுநின் றாடும்
விரைகமழ் கொன்றைத் தாரினா ராடல்
விரும்பிவந் தமரரும் பணிவார்.

14

அத்திற மாய தில்லையம் பதியி
லாகம வளவையாற் சமைந்த
வித்தகக் கோயிற் கோபுரங் கண்டார்
வழிகணீர் பெருகமெய்ம் மறந்தார்
பத்தர்சீர் பரவும் நல்லைநா வலனார்
பாரினிற் பன்முறை விழுந்தார்
அத்தரே யென்றா ரம்மையே யென்றா
ராடினார் பாடினா ரன்பால்.

15

மாமணி மன்றுட் டிருநடந் கண்டார்
மனநெகிழ்ந் துடையவர் பாதம்
பாமணி மாலைப் பனவலாற் பரவிப்
பல்பகல் பிரிந்தகா தலனார்
தாமணி மையிலே வருதல்கண் டுவகை
தழைத்தமெல் லியலெனத் தளர்ந்தார்
பூமணிச் சிலம்பி னொலிசெவிப் படலும்
புதுமைசேர் மருட்கையுற் றெழுந்தார்.

18. உற்பத்தி முதல்வன்

ஆயிரங் கதிராழி யொருபுறந்தோன் றகலத்தான்
மாயிருந்திசைசூழ வருகின்ற வரவுணர்த்த
மனக்கமல மலரினையும் மலர்த்துவான் றானாத
லினக்கமல முணர்த்துவபோன் றெவ்வாயும் வாய்திறப்பக்

குடதிசையின் மறைவதூஉ மறையென்;று கொள்ளாமைக்
கடவுளர்த முறங்காத கண்மலரே கரிபோக
ஆரிருளும் புலப்படுவா னவனேயென் றுலகறியப்
பாருலகத் திருள்பருகும் பரிதியஞ் செல்வகேள்

மண்டலத்தி லிடைநின்று வாங்குவார் வைப்பாராய்
விண்டலத்திற் கடவுளரை வௌ;வேறு வழிபடுவார்
ஓங்குலக முழுதுபொரத் திருவுருவி னொன்றாகி
ஆங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்

மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய்
நின்னுருவத்; தொடுங்குதலா னெடுவிசும்பிற் காணாதா
ரெம்மீனுங் காலைவா யிடைகரந்து மாலைவாய்
அம்மீனை வெளிப்படுப்பாய் நீயேயென் றறியாரால்

தவாமதியந் தொறுநிறையத் தண்கலையக் கலைதேயா
துவாமதிய முன்னொடுவந் தொன்றாகு மென்றுணரார்
தம்மதியி னொளிபுக்கங் கிருளகற்றாத் தவற்றாற்கொல்
அம்மதியம் படைத்தாயு நீயேயென் றறியாரால்

நீராகி நிலம்படைத்தனை – நெருப்பாகி நீர்பயந்தனை
ஊரொழிவிற் காற்றெழுவினை – ஒளிகாட்டி வெளிகாட்டினை

கருவாயினை – விடராயினை – கதியாயினை – விதியாயினை
உருவாயினை – அருவாயினை – ஒன்றாயினை – பலவாயினை

எனவாங்கு,

விரிதிரைப் பெருங்கட லமிழ்தத் தன்ன
ஒருமுதற் கடவு ளிற்பெருந் திருவொடு
சுற்றந் தழீஇக் குற்ற நீங்கித்
துன்பந் தொடரா வின்ப மெய்திக்
கூற்றுத் தலைபணிக்கு மாற்றல் சான்ற
கழிபெருஞ் சிறப்பின் வழிவழி பெருகி
நன்றறி புலவர் நாப்பண்
வென்றியொடு விளங்கி மிகுகம்யா மெனவே.

19. இமயமலைச் சாரலில்

தேவதரு மலர்விரிந்து சிந்தியபூந் தகள் செறிந்து
மேவியபொன் வண்ணத்த வீதியெல்லா மன்னத்தின்
தூவியெனப் பானுரையின் தோற்றமென விமம்வீழத்
தாவில்புகழ் வெள்ளிவெற்பின் றவளநிறம் பெறுவனவே.

நீலநிற விசும்பணவு நெடுங்குடுமி மலைத்தொடர்கள்
மேல்விழுந்த விமமழையால் வெள்ளியெனத் திகழ்வனவால்
காலையினு மாலையினுங் கதிரவனார் வேதிக்க
மாலவனா ராடையென வயங்குவபொன் னறிம்படர்ந்தே.

20. கங்கையில் விடுத்த ஓலை

1
எழுத்தறிந்து கலைபயின்றோ னின்றமிழி னியனூல்
எத்தனையோ வத்தனையு மெண்ணியாழங் கண்டோன்
பழுத்தமிழ்ப் புலமையினோர் பேரவையில் முந்தும்
பணிந்தமொழிப் பெரும்புலவன் கனிந்தகுண நலத்தான்@

2
சொல்வகையுஞ் சொற்றொகையுஞ் சொல்நடையு முணர்ந்தோன்
சொலல்வல்லான் சொற்சோராத் தூயநெறி யாளன்
பல்வகைய நூற்கடலுட் படிந்துண்மை மணிகள்
பலவெடுத்துத் திரட்டிவைத்த பண்டாரம் போல்வான்@

3
மொழித்திறத்தின் முட்டறுத்து முதனூலு முணர்ந்தோன்
மொழிவதற மொழியென்னம் மூதுரையுந் தெளிந்தோன்
அழுக்கறுத்த தூயசிந்தை அந்தண்மை யடக்கம்
அணியிவைதா மெனக் கொண்டோ னறநெறியில் நின்றோன்@

4
மெய்ப்பொருளே பொருளென்ன விளங்கவைத்து முன்னோர்
விரித்துரைத்த வகமேழும் புறமேழும் பயின்றோன்
மெய்ப்பொருளை நச்சுபவர் புறங்கடைநோக் காதோன்
போதுபுனை மாதர்நலந் தீதெனவிட் கன்றோன்@

5
அவநெறியிற் செல்வோர் தாங் கரும்பிருக்க விரும்பை
அயிலுகின்ற மூடரென வறிந்துலகு துறந்து
தவநெறியிற் றலைப்பட்டோ னவாவின்மை யென்னுந்
தனிச்செல்வந்திரட்டி வைத்த தாவில்புக ழாளன்@

6
அன்பாண்ட புலமையினோ ரெந்நாடும் நாடா
அடைந்துவத்தல் முறையெனினு மமலரை சாண்ட
தென்பாண்டி நன்னாட்டிற் சோழவந்தா னூரைச்
சேர்ந்துதிகழ் சைவநெறித் திருமடத்தி லுறைந்தோன்@

7
கந்தசா மிப்பெயரோன் வேட்களத்தி லென்னைக்
கண்டநா ளன்பொன்னுங் கயிறுகொண்டு பிணித்தான்
அந்தநாண் முதலாக நட்புரிமை பூண்டோம்:
அண்மையில்யான் வடநாடு நண்ணியதை யறிந்தே@

8
நம்மடிக ளுறைகின்ற தவப்பள்ளி யாது
நற்றவத்தோர் முகவரியா தெனவினவித் தெரிந்து
செம்மையுறுஞ் செய்திபொதி யோலையொன்று விடுக்கச்
சிந்தைவைத்தா னெனவெனக்கோ ரன்பனறி வித்தான்@

9
அகநெகுமன் பினிலூறு முரைபகரும் பொருட்டோ
ஆய்ந்தசில கலைமுடிபு தேர்ந்துணரும் பொருட்டோ
முகவரிபெற் றோலைவிட முயன்றனன்பே ரன்பன்
மூதறிஞ னெனவெண்ணி யாதரமுற் றிருந்தேன்@

10
ஓரிருநாள் கழியுமுன்னர் மார்படைப்பு நோயால்
ஊனுடலம் பாரில்விழ வானுலகு புகுந்தான்
ஆருயிர்நேர் நண்பனெனு மவலவுரை செவியில்
அனற்பிழிம்பாய்ப் புகுந்துளத்தை யுருக்கி தப்பொழுதில்@

11
பொங்கியெழுந் துயர்க்கனலைப் போக்குவதற்கும் மாயப்
பொய்யுலகி னுண்மையினைப் புலுங்கொளற்குங் கருதி
கங்கையெனுந் தெய்வநதிக் கரைப்புறத்தை யடைந்து
கல்லென்று சொல்லிவிழும் நீர்த்தரங்கங் கண்டேன்@

12
மேற்றிசைவான் ஈமத்தீ போற்சிவக்கப் பாகலோன்
மெலிந்துமறைந் திடல்கண்டேன் நலிந்தவருள் ளம்போல்
காற்றுயிர்த்துப் பனித்திவலை தூற்றுதலைக் கண்டேன்
காரிருளின் கண்மிரிய வானவெளிப் பரப்பில்@

13
ஐயிரண்டு நாள்வளர்ந்த வெண்மதியந் தோன்றி
அன்புசொரிந் திடல்கண்டேன் மன்பதையோர் வாழ்க்கைச்
செய்தியினைத் தேவரறி வாரெனவா லிவர்பால்
தேர்ந்திடுவ னெனமனத்திலோர்ந்தொருபா லிருந்தேன்@

14
அக்கரையிற் காசிப்பூர்ச் சுடுகாட்டு நரிகள்
அழுகுரலி னொலிசெவியை யடைந்ததுநன் னீரின்
இக்கரையி லுதிர்சருகுங் குச்சிகளு மலையால்
எற்றுண்டு செயலொழிந்து கிடந்தனவெம் மருங்கும்@

15
நீர்த்திரையா லிழுப்புண்ட குச்சியொன்று கணமும்
நில்லாது மேலெழுந்துங் கீழ்விழுந்து மலைந்து
சீர்க்கரையி லெற்றுண்டு கிடந்தசெயல் நோக்கிச்
சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கையிது வென்றேன்@
16
இன்பவிளை யாட்டினிடை மேலெழுந்து குதிப்பார்
எமக்குநிக ராரென்பா ரிருகணத்தி னுளத்தில்
துன்பமுற மண்ணில்விழுந் திருகண்ணீர் சொரியச்
சோர்ந்தழுவார் மயக்கமெனுஞ் சுழல்காற்றி லலைவார்@

17
மரணமெனுந்தடங்கரையி லெற்றுண்டு கிடப்பார்
மறுபிறவித் திரைகவர வந்தியையுங் கருவி
கரணமுறு முடலெடுத்து மண்ணுலகி லுழல்வார்
காதலிப்பா ரெண்ணிறந்த வேதனையுட் புகுவார்@

18
என்றினைய சிந்தைசெய்து நீலவிதா னத்தில்
எழின்முகத்தின் சுடர்பரப்பி யெழுமதியை நோக்கி
நன்றறிவார் கலைத்திறத்திற் கிலக்காய மதியே!
நன்மதியே நாதர்சடை முடியுறையுமு; நலத்தோய்@

19
தாழ்வதுவும் மடிவதுந் தரணியில்வந் துதித்தோர்
தாவில்புகழ் நலம்பெருக்கித் தண்ணளிசேர்ந் தனராய்
வாழ்வதுவு மெத்திறத்தால் வந்தனகாண் என்றேன்@
வான்மதிய மெனைநோக்கி ‘மானிடவ கேட்டி@!

20
மாய்தலெனும் பேருண்மை பிறத்தலெனு முண்மை
வந்துதித்தோர் தொல்லுலகில் வளர்தலெனு முண்மை
தேய்தலெனு முண்மையிவை யாருமுளங் கொள்ளச்
சென்றுதேய்ந் திறந்துதித்து நின்றுவளர் கின்றேன்@

21
இன்றுயில்போற் சாக்காடும் இனிதுதுயின் றதன்பின்
எழுவதுபோற் பிறப்புமெனு மியற்புலவ னுரையை
நன்றுணர்தி’ யெனக்கூறுந் தண்மதியை நோக்கி
‘நரகமொடு சுவர்க்கமுந்தான் நண்ணுவதேன்’ என்றேன்.

22
நற்கனவு சுவர்க்கமுளம் நலியவருங் கனவு
நரகமிவை நல்வினையின் தீவினையின் விளைவாய்
உற்றவென வறிதியெனு முரையையுளங் கொண்டேன்
உண்மைநண்பன் றனைநினைந்து பின்னுமுரை பகர்வேன்@

23
‘வருந்தித்தாய் கற்றகல்வி மாய்ந்துமறைந் திடுமோ
மறுமையிலு முதவுமோ வான்மதியே’ யென்றேன்
திருந்துகல்வி யெழுமையுமே மார்ப்புடைத்தென் றுரைத்த
செம்மொழியைத் தேர்தியென வெண்மதியம் விடுக்க@

24
மாணியென வாழ்க்கைமுற்று மிலக்கணநூல் பயின்றோன்
வானகத்து மதுபயில்வா னெனுமுண்மை தெளிந்தேன்
பாணினிதொல் காப்பியன்சீர்ப் பதஞ்சலிவா ழுலகு
படந்தனனென் நண்பனெனும் பான்மையினை யுணர்ந்தேன்@

25
தோற்றுவதும் மறைவதுவும் தொல்லியல்பென் றுணரத்
துயரகன்ற தெனினுமன்புத் தொடரகலா மையினால்
மாற்றமொன்று முரையாது வான்புகுந்தாற் கோலை
வரைவலென அன்புபொதி வாசகங்க ளெழுதி.

26
அறிவற்றங் காக்குமெனு மறவுரையை யெழுதி
அறநெறியா லின்பமெய்து மமைதியையு மெழுதி
உறுநட்பு நிலைபெறுமென் றுறுதிப்பா டெழுதி
ஓதுவிபு லாநந்த னுரையிவையென் றெழுதி.

27
செல்வமலி விண்ணாட்டிற் செழுங்கலைத்தெய் வம்வாழ்
திருநகரிற் றமிழ்வழங்குந் தெருவிலொரு மனையில்
அல்லலின்றி வாழ்கின்ற கந்தசா மிப்பே
ரறிஞனுக்கிவ் வோலையென வடையாளம் பொறித்தேன்@

28
வேலைநீர் வையகத்தோ ரன்னத்தைக் கிளியை
மென்முகிலைத் தூதாக விடுத்தனர் யானெழுதும்
ஒலைகொண்டு விண்புகுந்து நண்பனிடஞ் சேர்க்கு
முதவியினைப் புரியவல்லார் யாவரெனக் கலங்கி,

29
தேவர்புகழ் கங்கையெனுஞ் செல்வநதி நங்கை
செஞ்சடைவா னவனிடத்தா ளிங்குமுறை கின்றாள்
மூவுலகஞ் செலவல்லா ளெவ்வுயிரும் புரக்கும்
முதல்வியிவள் துணைபெறுவ னெனவியந்து துணிந்தே,

வேறு

செம்பவளக் கொம்பினிடைச் சேர்ந்தமுத்து மாலையைப்போல்
எம்பெருமான் செஞ்சடையை யெய்திநின்ற வானதியே!
எம்பெருமான் செஞ்சடைவிட் டிங்குவந்து தண்ணளியால்
வெம்பரிதித் தீயகற்றும் மின்னே! நினைத்தொழுதேன்@

மாற்றுயர்ந்த பொன்மலைமேல் வைத்தவெள்ளிக் கோல்போல்
ஏற்றியல்வோன் பொற்சடையை யெய்திநின்ற வானதியே!
ஏற்றியல்வோன் பொற்சடைவிட் டிங்குவந்து மக்கள்பசி
ஆற்ற வுணவளிக்கு மன்னாய்! நினைத்தொழுதேன்.

சுடர்கதிரைச் சூழந்தொளிருந் தூவெண் முகில்போல
இடர்களைவோன் நீள்சடையை யெய்திநின்ற வானதியே!
இடர்களைவோன் நீள்சடைவிட் டிங்குவந்து பூதலத்தோர்
தொடர் பிறவி வேர்களையுந் தூயோய்! நினைத்தொழுதேன்@

எனவாங்கு,

மும்முறை நினைந்து முறைமையின் வணங்க
அம்மென் சிலம்புநின் றரற்றுஞ் சீறடி
செம்மல ரென்னைத் திகழ வம்மலர்ப்
பாசடை கடுக்கும் பட்டி னியன்ற
தூசு செறியிடை துவள மாசில்
வாண்மதி முகத்திற் புன்னகை தவழ
மகர மீன்மிசை யிவர்ந்து
காரிடைத் தோன்றிய மின்னக் கொடிபோல்
நீரிடைத் தோன்றிய மின்னுக் கொடிபோல்
நீரிடைத் தோன்றி மறைந்தனள் பாரிடைத்
தெண்டனிட் டவளடி வணங்கி யண்டர்
நாட்டிடை வைகும் நண்பன் கையில்
ஈங்கிது சேர்கவென் றிரும்புனல் நீரில்
ஓலையை யிடலு மேந்திய வானதி
வேலையை நோக்கி விரைந்துசென் றதுவே.

21. குரு வணக்கம்

அம்புவியிற் செந்தமிழு மாங்கிலமும்
எனக்குணர்த்தி யறிவு தீட்டி
வம்புசெறி வெண்சலச வல்லியருள்
கூட்டிவைத்த வள்ளல் குஞ்சித்
தம்பியெனும் பெயருடையோன் தண்டமிழின்
கரைகண்ட தகைமை யோன்றன்
செம்பதும மலர்ப்பதத்தைச் சிரத்திருத்தி
எஞ்ஞான்றும் சிந்திப் பேனே.

மெய்யருள்சேர் திருநாட்டிற் பாரதமே
சிறந்ததெனும் மேன்மை யெய்த
மையில்கமார்ப் பகூரென்னும் பழம்பதியில்
மறையவர்தம் மரபில் வந்த
செய்யவருட் சுந்தரமணி தேவியார்
திருவயிற்றிற் சிறுவ னாகி
வையமுய்ய வந்துதித்த மாதவனை
வாயார வாழ்த்து வாமே.

22. வாழ்த்து

ஒருமொழியா லுலகனைத்து முருப்படுமென்
றருஞ்சுருதி யுரைத்த வாற்றால்
வருமறையா கமக்கலையாய்ப் பொருட்டுணிவா
யாவுமாய் வயங்கா நின்ற
திருமொழியைச் சித்தியுத்தி திகழ்மொழியை
யனவரதஞ் சிந்தித் தேத்தும்
பெருமொழியைக் குருமொழியைப் பிறைமுடித்தோன்
பெறுமொழியைப் பேணி வாழ்வாம்.

அந்தணர் வானவ ரானினம் வாழ்க வனைத்துயிருஞ்
சிந்தை துயரற! மாமழை வீழ்க! திருமலிக!
செந்தமி ழாரிய மோங்குக! ஆண்டு சிறப்புறுக!
நந்த மிதயத் தரனடி யார்பதம் நண்ணுகவே.

பகுதி மூன்று

23. குருதேவர் வாக்கியம்

1. கடவுள் வணக்கம்.

1

எழுதொணா வுருவு மின்னவா றென்றிங்
கியம்பொணா வடிவமு மறைகள்
முழுதுமாய்ந் திடினு மறிவொணா வியல்பு
முதலொடு முடிவுமாய் முனிவர்க்
கழிவிலா னந்த வெள்ளமாய் நின்ற
வருளும்யா மறிகில மெனினும்
பழுதிலா வுரைநாண் மலரினா லிறைஞ்சிப்
பத்திசெய் தனுதினம் பணிவாம்.

2

அரிதுணர் பனுவற் றுறைகளாய் மறையாய்
அகண்டமாய்ப் பரவெளி தானாய்
விரவுபல் லுலகும் படைத்தளித் தழிக்கும்
வரிஞ்சன்மா லரன்பணிந் தேத்துந்
தருமதே வதையாய்க் கவுரியா யிமயத்
தனிவரைக் கொருமக வாகி
உரிமையோ டடிய ருளத்திடை வதியும்
உமைபத விணைமலர் பணிவாம்.

3

மண்ணுளார் செய்த மாதவப் பயனாய்
வாரிசூ ழுலகிடை யுதித்து
விண்ணுளார் தாமும் விழையுமெய்ஞ் ஞான
வேதநூன் முடிபினை விளக்கும்
அண்ணலாம் ராம கிருட்டினர் பதத்தை
அன்பொடு துதித்தவ ருரைத்த
எண்ணிலா மொழியு ளொருசில தமிழில்
எழுதுவன் குருபதந் தொழுதே.

ii. தன்னை யுணர்தல்

உன்னைநீ யுணர்வா யுணர்ந்திட விறையை
உணர்குவா யுன்னுள்யா னென்ன
மன்னிய தெதுவோ கால்கர முதிர
மாம்ஸமோ மற்றவ யவமோ
என்னநன் றாகச் சிந்தைசெய் வாயேல்
யானெனப் படுவதொன் றில்லாத்
தன்மையு முணர்வாய் வெறுமையாய் முடியுஞ்
சாற்றவே றொன்றிலாத் தகைமை.

1

தோற்றிய வீர வுள்ளியை யுரிக்கத்
தோல்வரும் விதையிலா தாகும்@
சாற்றிடில் வெட்ட வெளியதாய் முடியும்
யானெனுந் தன்மையு மஃதே@
ஈற்றினின் மிஞ்சுஞ் சுத்தசித் தாகி
இயம்பொணா வாத்தும சொரூபஞ்
சாற்றுநா னிறக்கக் கடவுளுந் தோன்றும்@
சத்திய முணர்ந்துகொள் வாயே,

2

நானெனு முனைப்பு மிருவகைப் படுமால்
நண்ணுமீ தென்னுடை யுறையுள்
ஆனவிம் மனையு மென்னதே யிவனென்
னருமக னெனலபக் கவமாம்@
கோனெனை யாண்ட கடவுள்யா னடிமைக்
குமரன்யா னவற்கந்நாண் முதலாய்
ஈனபந் தத்தில் விடுபட்டே னுணர்வேன்
எனைத்துமென் றிருத்தல்பக் குவமே.

3

‘ஓரொரு மொழியா லடியனே னுண்மை
உணர்ந்திட வுரைத்திநீ’ யென்னச்
சேர்பவன் றனக்கு மறுமொழி யாகச்
செப்புவார் நங்குரு தேவர்:
‘சீரிய பிரம மொன்றுமே யுண்மை
செகத்தென மருவிய தோற்றம்
பேருள வெல்லாம் பொய்யென வுணர்ந்து
பேச்சொழிந் திருத்திநீ’ யெனவே.

4

நானெனு மகந்தை யுடல்விழு மளவு
நைந்திடா தெஞ்சிநின் றிடுமால்@
வானக நிமிர்ந்த தெங்கினிற் பழுத்த
மடல்விழுந் திடமடற் றழும்பு
தானக லாது நிலைபெற மதுபோற்
சாருவ தெனினுமே னிலைக்கண்
ஆனவன் றன்னைத் தளைத்திடா தெஞ்சி
அற்பமா யிருக்குமிவ் வகந்தை.

5

‘மேனிலை யடைந்தீர்! நாடொறுந் தியானம்
வேண்டுமோ?’ எனவெங்கோன் வினவ,
ஞானநந் தத்தோ தாபுரி யதற்கு
‘நாடொறுஞ் சுத்திசெய் திலமேல்
ஈனவெண் கலத்திற் களிம்புறு மதுபோல்
இதயத்து’ மெனக்குரு தேவர்,
‘ஆனபொற் கலம்போன் மாசுரு தியினை
அறிந்தவர் மன’மென வறைந்தார்.

வேறு

காட்டு நியாயங் கருதி லிரண்டுண்டு
மாட்டுந் தொகுத்தல் வகுத்த லெனவிவை@
ஓட்டின தாகும் விதையே யுணருங்கால்
மீட்டுமவ் வோடு விதையின தாமே,

வேறு

7

எனதெனு மெண்ணத் துள்ளே
இன்றெனு முண்மை தோன்றும்:
இனவொளித் தகைமை கண்டோன்
இருளையு முணர்ந்து கொள்வான்:
கனபழி யிதுவென் றோர்வான்
கருத்திற்புண் ணியமுந் தேர்வான்@
மனனிடைச் சரியீ தென்ன
வல்லனே பிழையுங் காண்பான்;.

8

பாதுகை யணிந்து கொள்ளிற்
பரந்தமுண் மேன டந்து
போதலு மெளிது@ ஞான
போதபா துகையைக் கொண்டால்
தீதிலா தெங்குஞ் சென்று
திரியலா மிடர்முண் மிக்க
பூதல வடவி யுள்ளும்
போகலாந் துன்ப மின்றே.

வேறு

9

பண்டொர் நாயொ டுண்ட ஞானி
பக்கு வத்தை யோர்கிலாக்
கண்ட மாக்கள் பித்தெ னக்க
ருத்தி லெண்ணி நக்கனார்@
‘விண்டு வோடு விண்டு வுண்ண
விண்டு வேந கைத்ததேன்?
உண்டு விண்டு வொன்று மென்றவ்
வுண்மை ஞானி யோதினார்.

10

இறைவ னைப்பு றத்து நாட
வெண்ணல் பேதை மைத்தனம்@
உறையு நெஞ்சு ளென்ன வோர்த
லுண்மை ஞான மாகுமால்@
அறிவ னிங்க மர்ந்தி ருப்பி
னங்கு மாகு மம்புய
நறைகொ ணாண்ம லர்ப்ப தத்தை
நண்ணி வாழ லாகுமே.

iii. தலைவனது இயல்பு

1
மன்னுயிருக் குயிராக விறைவனிருந்
திடுமரபை வழுத்தக் கேண்மோ:
பொன்னுடைய புரவலர்தம் மனையினிடைத்
திரைமறைவிற் பொருந்து கின்ற
மின்னனையார் புறந்தோற்றார் யாவரையும்
தாங்காண்பார்@ மேவு மீசன்
அன்னதுபோ லெவ்விடத்து மெவ்வௌர்தம்
அகத்திடையு மமர்ந்து நிற்கும்

2
செய்யவொளி தருந்தீப மதன்றுணையால்
உணவமைப்பர் சிலர்@ சில் லோர்கள்
பொய்ம்மருவு சீட்டமைப்பர்@ பாகவதம்
படிப்பர் சிலர்@ புரையில் தீபத்
தெய்துபிழை யொன்றிலையா மிறைவர்திரு
நாமத்தா லியைவ வீடும்
வையமிசைக் களவுமெனிற் சித்திதரு
மிறைவனுக்கோர் மாசுண் டாமோ?

3
கற்பதகருப் போலீசன்@ கருதியநெல்
லாந்தருவன்: கல்வி கற்று
விற்பனநீ தாசனத்தை விழைத்தடைந்த
வறியவன்சேய் விரும்பு செல்வம்
பெற்றவனென் றுவகையுறி லாமென்னும்@
பின்னவன்றான் பெரிது சிந்தித்
தெற்றெனக்குப் பயன்வந்த தென்செய்தே
னெனிற்செய்த தென்னோ வென்னும்.

4
சுத்தபரப் பிரமமெனச் சொல்லியநிர்க்
குணநிறைவே தோற்ற மாய
சத்தியினின் வேறிலையாற் பரம்பொருளே
தொழிலின்றித் தனியாய் நிற்பின்
சுத்தபரப் பிரமமதாந் தொழில்மேவிப்
படைத்தளித்துத் துடைக்கு மென்னச்
சித்தமிசை நினைக்குங்காற் சத்தியெனும்
பெயரோடு திகழா நிற்கும்.

5
‘இன்னமர பிதுவருமென் றியைந்தமுறை
நடப்பதன்றி யியல்பின் வேறாய்ப்
பின்னுமொரு தொழில்புரித லிறைவருக்கு
மியலாது பெரியோய்!’ என்னச்
சொன்மதுர பாபுமொழி கேட்டிறைவர்க்
கியலாத தொன்றின் றென்ற
மன்னுமெங்கள் குருவே ரிசைத்திடலுஞ்
செவிப்படுத்த மதுர பாபு,

6
‘செம்மலரைத் தரும்பூண்டில் வெண்மலரைத்
தரவலதோ தெய்வ’ மென்ன,
‘அம்மரபி னவர்நினைப்பி னா’மென்று
சின்னாளி லங்கு நின்ற
செம்மலர்ப்பூஞ் செடிவெள்ளைச் செழுமலரைத்
தரவையன் சென்று காட்ட
விம்மிதராய் ‘ஐயநின்னொ டுரையாடேன்’
எனப்பாபு விளம்பி நின்றார்.

7
உருவமில்லா னாவானு முருவமுள்ளா
னாவானு மொருவ னேயாம்@
உருவமில்லா நீரருவ முறைநீரைப்
போற்றிகழ்வ துருவ மாகும்@
உருவமில்லா நீர்தானே யுறையினுறை
நீராகி யுருவ மாகும்@
உருவமில்லா நீராகு முறைநீரும்
உருகியக்கா லுருவம் போமே.

வேறு

8
‘ஐயவதி சயமிதுபா ரெங்கள் பாட்டன்
அட்டவசுக் களிலொருவ னைந்த டக்கி
மெய்யுணர்ந்தும் மாயையினிற் பட்டுக் கண்ணீர்
விடுகின்றா’ னெனநரன்நா ரணற்குச் செப்பப்
பொய்யுரையா வீட்டுமரும் புகல்வார்@ ‘கண்ணா!
புன்மாயை யாலல்ல@ நினது லீலைச்
செய்கையுண ராதழுதே னைவர் துன்பந்
தீர்ந்ததிலை நீதுணையாச் சேர்ந்து மென்னோ?’

9
ஆரணங்கள் புகழ்கின்ற வார ணாசி
யருநகரை மதுரபா புடன டைந்த
பூரணரெங் குருதேவர் திரையி லிங்கப்
புனிதரைக்கண் ‘டிறை யொருவன்: புலமிலாரெக்
காரணத்தாற் பலரென்றார்?’ என்ன, மௌனி
கரத்திலொரு விரல்காட்டிச் சலன மற்றார்,
தேரநின்ற தத்துவநூல் பலவா யோதயச்
சிந்தையடக் கினருணர்வுக் கொன்றா மென்றே.

10
கரைகடந்த நீர்ப்பரப்பா முவரி நாப்பட்
கடுங்குளிரா லுறைந்தநீர்க் கட்டி தோன்றி
வரையெழுந்த வெங்கதிரா லுருகிப் போகும்
மரபினைப்போ லன்பரன்பின் வலிமை யாலே
உரைகடந்த பூரணமாங் கடவுள் பல்வே
றுருவுடனே தோன்றும்@ பின் னுண்மை ஞானப்
பரிதியெழுந் திடவுருவ மறைந்து போகும்@
பார்க்குமிடத் தருவமாம் பரம தாமே.

iஎ. மாயையினியல்பு

1
மைந்த! மாயையின் றன்மையை யுணர்த்தியோ?
மன்னுநீர்க் குளத்தின்மேல்
வந்த பாசியை யகற்றினா லகன்றிடும்@
மறுகணத் தொன்றாகும்@
இந்த நீர்மையே சாதுசங் கத்தினால்
இயன்றநல் விசாரத்தாற்
சிந்தை தூய்மையாங் கணத்தினி லவாவிருட்
டிரைமறைத் திடுமன்றே.

2
பல்லி லேகொடு விடமமைந் திருப்பினும்
பாம்புக்கோர் குறையில்லை@
கொல்லும் நீர்மைய தேனைய வுயிர்க்கிந்தக்
கொள்கைபோற் சகத்தோற்றம்
புல்லு மீசன்பா லென்னினும் புறத்தனாய்ப்
பொருவிலான் றனிநிற்பான்@
சொல்ல நின்றபொய்ச் சகமுள பொருளெனத்
தோற்றுவ தெமக்காமே

3
மாயை யென்பதுந் தயையென மொழிவதும்
வகுத்துரைத் திடின்மாயை
தாயர் தந்தையர் மனைமகார் சோதரர்
தமரெனு மிவர்மீது
போய சிந்தையாம்@ இறையெங்கு முளனெனும்
பொருவில்ஞா னத்தால்வந்
தேயு மெவ்வுயிர் மீதினுஞ் சென்றிடும்
இயல்பது தயையாமே.

4
பேய்பி டித்தவன் றன்னைப்பேய் பிடித்திடும்
பெற்றியை யுணரிற்பேய்
போய கன்றிடு மொருகணப் பொழுதினிற்
புரையுறு மிருவாதை
மேய சீவனு மாயைபற் றியதென
மெய்யுணர் வெய்துங்கால்
மாயை சென்றிடத் தூயனாய் நின்றிடு
மரபுமிங் கிதுபோலும்.

5
அன்னை சானகி யிடைநிற்பி னிலக்குவன்
அண்ணலைக் காணானாம்@
பின்னை யங்கவள் விலகிடிற் காண்பனிப்
பெற்றியிற் சீவான்மா
பன்னு மாயையாந் திரையிடைக் கதுவிடிற்
பரமனைக் காணாதாம்@
முன்னர் நின்றவத் திரையகன் றிட்டபின்
முதல்வனைக் காண்கும்மே.

6
வித்தை மாயையு மவித்தைமா யையுமென
விளம்பிரண் டதில்வித்தை
சித்தத் தால்விடல் விவேகமாய் விமலர்பாற்
சீவனைப் புகுவிக்கும்:
வைத்த காமமே லோபமோ கம்மதம்
வெகுளிமாச் சரியம்மாய்
மித்தை யாமுல கினிற்றளை யவித்தையும்
வித்தையா லகல்வாமே.

7
கலங்க னீரிலே கதிரவன் மதியுருக்
காட்டினுந் தெளிவாகப்
புலங்கொ ளற்கரி தாகிய தன்மைபோற்
புந்தியி னானென்றும்
இலங்கு மிப்பொரு ளெனதென்ற மியம்பிடும்
எண்ணமா கியமாயை
விலங்கு சூழ்ந்திடி லிறையருட் பிரபையாம்
விளக்கமுங் குறைவாமே.

8
பரிதி வானவ னுலகினுக் கொளியினைப்
பரப்புவன்@ சிறுமேகம்
மருவி முன்வரின் மறைபொரு ளாவனிம்
மரபினி லுககெங்கும்
விரவு நீர்மையிற் சச்சிதா நந்தமாய்
விளங்குமெய்ப் பொருளாகிப்
பரனும் புல்லிய மாயையாந் திரையினாற்
பார்க்கரும் பொருளாவான்.

9
குளத்திற் பாசியை யொதுக்கினு லொதுங்கும்பின்
கூடிடுங் கூடாமற்
பிளக்கு மூங்கிலாற் றடைசெயி னிலைக்குமிப்
பெற்றியி னியன்மாயைக்
களக்க நீங்கிடு மீசர்பா லன்பினாற்
கருதுஞா னந்தன்னால்
விளக்க மல்கிய சச்சிதா நந்தமே
வெளியுறப் புலனாகும்.

10
தக்க ணேசுரத் துறைந்தவொ ரருந்தவர்
தபனனை முகின்மேவி
அக்க ணத்தினி லகன்றது கண்டுநக்
கார்த்தனர்@ ‘ஏதையா
நக்க காரணம்?’ என்றலுஞ் ‘சீவனை
நாடுமா யைத்திரையீ
தொக்கு மேயன்றோ கணத்திருள் மறுகணத்
துளதுமுன் னிலை’ யென்றார்.

ஏ அவதார புருஷரியல்பு

1
மருங்காகப் பலமரங்க ளொருங்குபிணைத்
தமைத்ததெப்ப மரபினாலே
இரும்பார மிகத்தாங்கி நூற்றுவரைத்
தன்மேற்கொண்டேளிதாய்ச் செல்லும்:
கருங்காகப் பொறைசுமவாச் சிறதுணிநீ
ரமிழ்த்திடுமால்@ கடவுண் முன்னோர்
வருந்தாது பலருக்குங் கதியளிப்பார்@
தமைக்காக்க வல்லார் சித்தர்.

2
விரைந்தாங்கு வழிச்சென்று நிலையடையு
மதுவன்றி வேறாய் நின்ற
பரந்தாங்கு சகடங்கள் பலவற்றைக்
கொண்டுய்க்கும் பரிசிற் றாய
உரந்தாங்கு மெந்திரநல் வண்டியைப் போற்
பலர்தம்மை யொருங்கு சேரக்
கரந்தாங்கி யிறைவர்திருக் கமலப்போ
தடைந்துநிற்பர் கடவுண் முன்னோர்.

ஏஐ. மக்கள் பல்வேறு படியினரெனல்

1
தலையணை யுறைக்கொப் பாகச்
சாற்றலா மனிதன் றன்னை@
நிலவிய கருமை செம்மை
நிறத்தின வெனினு முள்ளே
இலகுபஞ் சொன்றே@ அன்பன்
எழிலிலா னழகன் றூர்த்தன்
உலகினிற் பலரென் றாலு
முள்ளுறை தெய்வ மொன்றே.

2
முறமுமி தன்னைத் தள்ளி
முழுமணி கொள்ளு மாப்போல்
இறைவனை விரும்பிப் பொன்னை
யிச்சையை யிகழ்வர் மேலோர்@
நிறைபொருள் தம்முள் நல்ல
நீக்குநெய் யரியைப் போல
அறிவனை யௌ;ளிப் பொன்பெண்
ணவாவிற்பட் டுழல்வர் மற்றோர்.

3
சாணத்தை யுருட்டும் வண்டு
தாமரை மலருட் புக்கால்
நாணிப்பின் வாங்கு மாபோல்
நவையுறு முலகிற் பட்டோர்
மாணுற்ற சபையி லீசன்
மகிமையை யுரைத்தல் கேளார்
வீணிற்றம் பொழுதைப் போக்க
விழைந்துவெற் றிடங்கள் செல்வார்.

4
வலைப்படு மீனாட்சில்ல வலையினைக் கிழித்துச் செல்வ@
உலைத்திங்கு மங்கு மோடி யொருசில முயன்று நிற்ப@
நிலைப்படக் கிடப்ப சில்ல@ நீத்தவர் முமுº{த் வத்தோர்
மலத்தினாற் பிணிப்புண் டோர்கள் வகையுமிவ் வகைய தாமே.

5
பூவிலை பகர்வோ னில்லம்
புகுந்தவோர் வலைச்சி யாங்கு
மேவிய நறும ணத்தால்
விழிதுயில் கொள்ளா ளாகித்
தாவுமீன் கூடை யொன்றைத்
தன்னரு கமைத்துத் தூங்கும்@
பூவுல கினிற்பட் டோர்கள்
புன்மையிவ் வகைய தாமே.

6

புறவிளம் பார்ப்பின் றொண்டைப்
புறத்தினைத் தடவி யுள்ளே
உறுமணி யுணர லாகும்:
உலகமை யலிற்பட் டோரைச்
சிறுபொழு தவர்க ளோடு
சேர்தலா லறிய லாகும்@
வெறிதினை விழைவர் சால
விரும்பிடார் ஞான போதம்.

7
உள்ளியை யுண்டோன் றன்னை
உறுமணங் காட்டு மாபோல்
வள்ளல்பாற் பத்தி செய்யு
மரபினர் தம்மைக் காட்டும்
விள்ளுறு ஞான போதம்@
மேதினி மயலிற் பட்டோர்
எள்ளுறு முலகப் பேச்சே
இசைக்குவர்@ பிறிதொன் றோரார்.

8
தேனுணு மீயும் செய்ய
தேனலா லழுக்க டைந்த
ஊனுணு மீயும் போல
ஓரிரு வகைய ரீசன
மேனினை வுள்ளார் வேறு
விரும்பிடார்@ மற்றோர் பொன்பெண்
ஆனவை யுளத்தை யீர்க்க
அரன்கதை மறந்து செல்வார்.

9
ஈசனை யடியர் பாடு
மின்னிசைக் கீதங்; கேளான்
ஆசையா லவற்றைக் கேட்கு
மவர்களைத் தடுத்து நிற்பான்@
பூசரர் தம்மை ஞான
போதத்தை நிந்தை செய்வான்@
மாசுறு முலகின் றீய
மையலில் நனிபட்டானே

10
தடத்துறை முதலை யின்றோல்
தடிப்புள தாத லாலே
படைக்கல மொன்றுஞ் சென்று
பாய்ந்திடாத் தன்மை போல
இடர்ப்படப் பலகாற் சொல்லி
இசைப்பினு முலக மார்க்கம்
நடக்குநெஞ் சத்தர் தம்பால்
ஞானபோ தஞ்செல் லாவே.

11
பரிதியி னொளியோ வெங்கும்
பரம்புங்கண் ணாடி தன்னில்
உரியநன் மினுக்கங் கொண்ட
உலோகத்தி னீரிற் பட்டாற்
பிரதிவிம் பிக்கு மந்தப்
பெற்றியி னுயிர்கள் தோறும்
விரவிய வீசன் றானும்
விழைந்தவ ருளத்தே தோன்றும்.

வேறு

12
தெங்கின் றுருவல் நிறைந்திருப்பத்
தீம்பாற் கட்டி நிறைந்திருப்பப்
பொங்கு முருவ மொன்றாகிப்
பொருந்து மோத கம்போல
அங்க முழுது மொரு பொருளா
வமைந்தே யுருவ மொன்றெனினும்
தங்குஞ் சுபாவ பேதத்தாற்
றரணி மாந்தர் பல்வகையர்.

வேறு

13
கோல நீரெலா நாரண னெனினுமுட்
கொள்ளுதற் கியையாவாம்@
கால லம்புநீர் வாய்கழு நீருண்டு
கைதொடத் தகாநீரும்
ஞால மீதிலுண் டிறைவனெப் பதிக்கணும்
நண்ணினுந் தரிசிக்கச்
சில மாந்தலஞ் சிலவுள@ சேய்மைக்கட்
செல்லவேண் டுவசிலவே.

14
வேங்கை தன்னகத் தெம்மிறை யிருப்பது
மெய்மையே யெனினம்யாம்
பாங்கு சென்றதன் முன்னிற்றல் தகுதியோ?
பாரெங்கு நிறையெம்மான்
தீங்கி ழைத்திடு தீயவ ருளத்தினுஞ்
செறிபவ னென்றாலும்
ஆங்கம் மாக்களைச் சேர்ந்தவர் பாலுற
வாடுத றகவன்றே.

15
‘சீவர் யாவரு நாரணன் றோற்றமாந்
தெரிதிநீ யெனச்சீடற்
காவ லோடொரு குருவறைந் திடுதலு
மம்மொழி பெறுசீடன்
மேவு வீதியி னின்றனன் மதகரி
விரைதலு மதன்பாகன்
‘தாவி நிற்குதி யொருபுறத்’ தெனுமொழி
தன்னையோர் கிலனாகி,

16
யானு நாரணன்@ யானையு நாரணன்@
யான்வழி விட்டேகல்
ஏனெ னாநினைந் தசைந்திலன்@ யானையு
மெடுத்தெறிந் தேகிற்றால்@
ஈச மெய்தியே குரவர்பான் முறையிட
‘என்னரு மகனே! நீ
ஊன முற்றனை பாகநா ராயண
னுரையினைக் கடந்’தென்றார்.

17
நீரில் வரியை நினைத்து வரையினும்
நீரில் வரியே நினைப்பி லழிந்திடும்
பாரிற் பகைமைப் படிறு படியாத
சீரியர் கோபத் திறனு மிதுவே.

18
அந்தணன் புத்திர னந்தணர் சாதியனே@
அந்தண ரானோ ரறிஞர் புரோகிதராய்
வந்த மடையருமாய் வாழ்வார்@ சிலர்வேசி
சொந்த மனைமுன்றிற் றுகளிற் புரளுவரே.

19
செம்பொன்னைப் பித்தளையிற் சேர்த்துப் பிரித்துணரிற்
செம்பொன்னைக் காட்டுஞ் சிறந்த வுரைகல்லே@
நம்ப னுரைக்கல்லா னானிலத்தி னல்லவரை
வம்பர் தமைநாமும் வருத்துணர லாகுமே.

20
மானிடரை யாயின் வகையி லிரண்டாவர்@
மானிடரெம் மானிடத்தில் வந்தணையுஞ் சிந்தையரே@
ஆனபொன்பெண் ணாசையினா லல்லலுற்ற புல்லியராம்
ஈசர்களு மானிடரா யெண்ணப் படுவாரே.

21
ஒட்டை வாயி லுதிரந்தா
னொழுக வொழுக முட்களையே
இட்ட மோடு கடித்துநிற்கு
மியல்பி னிழவு பலவரினும்
மட்டி லாசை பிடித்துந்த
மறந்தே யுழல்வ ருலகமயல்
பட்ட பேருக் கறிவுறுத்தல்
பயனில் செய்கை யாய்விடுமே.

22
நீர்போற் பலசொன் மொழிபவனை
நெஞ்சை யொளிக்கும் வஞ்சனைப்
பாரோர் காணத் துளசியணி
பான்மை யோனை நெடிதாகச்
சேர முக்கா டிடுபவளைச்
செருத்தி மறைக்குங் குளநீரை
ஆரத்தீமை விளைப்ப வென
வறிந்தே யகல்வீ ரகல்வீரே.

ஏஐஐ குரவர் வகை.

1
குரவ னொருவன்@ உபகுரவர்
கூறிற் பலரே. தினைத்துணையும்
தருநல் லறிவை யெனினவனைச்
சாரு மாசா னெனவோர்க
அரிதாம் பாக வதக்கதையு
மவதூ தர்க்கு நான்கினொடும்
இருபான் குரவ ரிருந்தாரென்
றிவ்வுண் மையினை யெடுத்தியம்பும்.

2
செய்ய மணக்கோ லம்பூண்டார்
செல்லும் பவனி யதுகாணான்
எய்யு மிலக்கிற் சிந்தையனா
யிருக்கும் வேடன் றனைநோக்கி,
‘ஐய! நீரே யெங்குரவர்@
அடியேன் றியானத் திருக்குங்கால்
மெய்யாய் நுமைப்போற் கருத்தொன்ற
விழைந்தே’ னென்றா ரவதூதர்.

3
அண்ணா விதுவோ வழியென்ற
வவதூ தர்க்கு விடைபகரான்
கண்ணாய்த் தூண்டிற் படுமீனைக்
கரைசேர்த் தையா வேதென்றான்
‘வண்மைக் குருவே! நுமைப்போல
மனத்தி லிட்ட தேவதையை
எண்ணும் போது பிறசெயலற்
றிருப்பே’ னென்றா ரவதூதர்.

4
மீன்பற்றச் செலும் பருந்தைக் காக்கைக் கூட்டம்
விரைந்துகொத்த வதுவிடலும் வேறோர் பாறு
தான்பற்றப் பின்யைதைக் காக்கை கொத்துந்
தன்மையொடு முன்னையது தளர்ச்சி நீக்கு
வான்சுற்று மரக்கிளையி லிருத்தல் கண்டார்
மகிழ்ச்சியுட னவதூதர் வணங்கி, ‘நின்பால்
நான்கற்றே னுபாதியினை விட்டா லன்றி
ஞாலத்தி லுபசாந்த நணுகா’ தென்றார்.

வேறு

5
நாடி யொருமீன் பின்செல்லும்
நாரைச் கொக்குத் தனையெய்யும்
வேட னம்பைக் கருதாத
விதங்கண் டதனைப் பணிந்தெழுந்து
‘கூடுந் தியானத் திருக்குங்காற்
குருவே! நினைப்போற் புறம்பாரா
தீடு படவேண் டின’னென்ன
விசைத்து நின்றா ரவதூதர்.

6
கூர்த்துப் பன்னாள் முயன்றரிதிற்
கூட்டி வைத்த தேன்கூட்டை
ஈர்த்துத் தேனை யொருவனுணு
மியல்பு நோக்கித் தேனீயைப்
பார்த்து நின்ற வவதூதர்
பகர்வார், ‘குருவே! நினையணுகிச்
சேர்த்து வைக்கும் பொருள் செல்லுந்
திறத்தை யறிந்தேன் யா’னெனவே.

7
குரவர் பலருண் டாயிரமாக்
கொள்ளக் கிடைக்கும் பொருள்போல்வார்@
அரிதோர் சற்சீ டனைப்பெறுத
லாமென் றுரைக்கு மூதுரையும்@
மரபி னல்ல மதியுரைக்க
வருவோர் பலரே யம்மதியை
உரிதிற் பின்பற் றிடுபவர்தா
முளரோ வென்னி லொருசிலரே.

8
உண்மை யார்வம் பெருகுதலா
லும்பர் நாதன் றனக்கன்பு
பண்ணு மாறு சாதனைகள்
பயில விரும்பிற் றக்ககுரு
திண்ண மாக விறையருளாற்
சேரு மிதனுக் கொருசிறிதும்
எண்ணம் வேண்டா@ மனத்தார்வ
மெய்து மதுவே பெரிதாகும்.

வேறு

9
மருந்தறிந்த பண்டிதரு மூவகையர்@
நோயாளர் வருத்த நோக்கி
அருந்துமருந் திதுவென்னக் கொடுத்தகல்வார்
கடையாயா ரருந்தும்; வண்ணம்
பொருந்துநல்ல மொழிபுகன்றங் கருந்துவிப்ப
ரிடையாயார்@ போக்கு நீக்கித்
தருந்தமது மருந்தைவலிந் தருந்துவிக்கு
நிலைமையினார் தலையா யாரே.

10
இவ்வழியே குரவருமூ வகையினராம்@
கடைநின்றா ரிதுசெய் வாயென்
றுய்வழியை யுணர்த்தியபின் விட்டகல்வர்@
இடைநின்றா ருரைத்த மாற்றம்
செய்வழியிங் கிதுவென்ன வலிந்துரைப்பார்@
தலநின்றார் சீடன் றன்னைப்
பொய்வழியிற் செலவொட்டா வகைதடுத்து
வலிந்துநெறிப் புகுத்து வாரே.

ஏஐஐஐ. சமயம் அனுட்டிப்புக்குரியது@
வாதத்திற்குரியதன்று.

1
ஆதி யமலன் றிருப்பாதம்
அடையும் வரையு மறிவுதரும்
வேத புராண மிருதிகளை
விரும்பு வீர்@ பின் னிவைவேண்டா@
போதி லமரும் வரைமுரன்று
பொருந்தி யிருந்த பின்னர்நறுஞ்
சீத மதுவுண் டகங்குளிருந்
தேன்வண் டியற்கை தெளிவீரே.

2
‘தொன்னூல் கற்ற முளத்துண்மை
தோற்றா மாந்தர் தொடர்பெதுவோ?
என்ன வினவுங் கேசவருக்
கியம்பு வார்நங் குருதேவர்@
‘கொன்னே யுயரப பறந்திடினுங்
குழிசேர் பிணத்தில் வழிபொருந்த
மன்னும் பருந்தி னியல்பினராய்
வாழ்வார் மயலுற் றவ’ரெனவே.

3
நூலின் முடிபாங் கிரந்தமெலா
நுவலின் முடிப்பா நூல்பலவும்
வேலை யின்றிப் பலநாளாய்
விரும்பி யெழுதிப் படித்தாலுஞ்
சீலத் துறவு விவேகமிலார்
சிந்தை மயலாற் பிணிப்புண்டு
சால வருந்து நிலையுறலாற்
சாற்று நூலு முடிப்பாமே.

4
‘செப்பா நின்ற வொருமொழியாற்
றேரு முண்மை தெரிந்துகொளின்
இப்பால் வருவீர்@ பலமொழிக
ளியம்பிப் பின்ன ருணர்வமெனில்
அப்பாற் சென்று கேசவர்பா
லடைவீ’ ரெனநங் குருதேவர்
ஒப்பாய்த் தம்பா லுறுகுதர்க்க
மோது மொருவர்க் குரைத்தனரே.

5
மொள்ளுங் காலை யபக்கென்னும்
மொண்ட பின்னர் நீர்நிறைவால்
மௌ;ள வடங்குங் குடம்போல
வீண்வா தங்கள் புரிந்தவரும்
தௌ;ளத் தெளிந்த வறிவினராய்த்
திருப்பா தத்தை யடைந்தபி;ன்னர்
உள்ளத் துணர்வா லின்புற்றே
உரையா டாம லடங்குவரே

6
விவேக வைராக் கியமின்றேல்
வீண்கல் வியினாற் பயனில்லை
விவேக நித்யா நித்யத்தின்
விதத்தை யுணர்ந்து நிச்சயித்தல்
விவேக மாகும்@ உடலுயிரின்
வேறென் றுணரு மறிவதுவும்@
விவேகத் தாலே பற்றறுத்தல்
விளம்பின் வைராக் கியமாமே.

7
மழைநன் மரக்கா லிருபதென
வகுக்கும் பஞ்சாங் கந்தன்னைக்
குழையக் கசக்கிப் பிழித்தாலுங்
கூடா தொருநீர்த் துளிதானும்@
மொழியு ஞான சாத்திரங்கள்
முத்தி நெறியை யெனினுமவை
வழிநின் றொழுகி னார்க்கல்லான்
மற்றோர்க் கியாதும் பயனிலையே.

8
இருவ ரொருமா மரத்தோப்புக்
கேகி னார்@பின் னாங்கவருள்
ஒருவன் விடைபெற் றரும்பழத்தை
யுண்ணாப் புகுந்தான்@ மற்றவனோ,
அரிதின் மரத்தைக் கணக்கிட்டான்@
யாரோ பெரியர்? கலைபயின்று
பெருவா திடலி னருளமுதம்
பெற்று மகிழ்தல் பெரிதாமே.

9
கடையிற் புகுமுன் னோவென்ற
கழிபே ரிரைச்சல், புகுந்தபினர்
விடையும் வினாவு மாய்த்தெளியும்
விதம்போற் சமய வுணர்வுசற்றும்
அடையப் பெறாதார் தெரிந்துகொளற்
கரிதா யிருந்த பொருளனைத்துந்
தடையில் லாமற் றெளிவாகுஞ்
சார்ந்து விசாரிப் பவர்தமக்கே.

10
ஆயுங் காலை வேதமுத
லான புராண மிருதியெலாம்
வாய்கொண் டுச்சா ரணஞ்செய்யு
மரபா லெச்சின் மன்னினவாம்@
தூய தாக நிலைத்திருக்குந்
தொன்மைப்பொருளோன் றதுபிரமம்@
மேய வதுவே வாய்மொழியால்
விளம்ப வொண்ணாத் தகைமைத்தே.

11
ஆதி யமலன் றனையணுகி
யடைந்த பேரின் பப்பெருக்கம்
ஈதென் றுலக மயலுற்றோர்க்
கியம்ப லியலாத் தொழிலாகும்@
காத லிருவர்க் கிடைநிறைந்த
கலவி யின்பந் தனைச்சிறுவர்க்
கோத லியலா தாங்கதுபோ
லுற்ற திதுவு முணர்ந்திடினே.

12
தோற்றுஞ் சரிக மபதநிச
சுரமென் றுரைத்த லெளிதாகும்@
ஏற்ற கருவி தனிலிவற்றை
இசைத் லெளிதன் றிம்முறையே
மாற்ற மின்றிச் சமயநெறி
வகுத்த மரபு தனைவாயாற்
சாற்ற லெளிது@ பின்னவற்றைச்
சார்ந்து நிற்ற லரிதாமே.

13
‘பூண்ட தியான முதிர்ச்சியினாற்
புகலுந் தன்னை யறமறந்து
மாண்டா னன்றோ சிவோகமென
வழுத்தற் குரியா னதுவரையும்
ஆண்டா னடிமைத் திறம்பெரி’தென்
றைய னுரைத்த மொழிகேட்டுத்
தூண்டு மதிசே ரொருமாணி
சுவரிற் பொறித்தவ் வழிநின்றான்.

ஐஓ இல்லறத்தானுக்கு இயைந்த சாதனை முறைகள்

1
தேடெனக் கரந்து செலும்விளை யாட்டிற்
செவ்வனே பாட்டியைத் தொட்டோர்
ஆடலிற் கள்வ ராகிடா தெங்கு
மகலலா மாங்கது போல
நாடுமிவ் வுலகி லீசனார் செய்ய
நளினபா தத்தினைப் பிடித்தோர்
வீடுறு மியலா ரிவருழை யுலக
மிகுமயல் துன்பினை விளையா

2
செய்வயின் மூங்கிற் றடியினா லமைத்த
சிறுபறி யழகிதென் றதனுள்
உய்விலா தோடு மீன்படு துன்பம்
உணர்ந்தொரு சிலபுறத் துலவும்@
பொய்மய லுலகிற் புக்கவர் துன்பம்
பொருந்திய வியல்பினை யுணர்ந்து
மெய்யறி மாக்கள் ஈசனார் பதத்தை
விரும்புவார் காமத்தை வெறுத்தே.

3
கனவினி லமைந்த கட்டட மென்னக்
கருதினார் ராமப்ர சாதர்@
எனினுமிவ் வுலக மிறைவனை யுணர்ந்தார்க்
கின்பமா ளிகையென விசையும்@
தினமுமுண் டுடுத்துத் திரிதலு மாகும்@
சிந்தையை யிசர்பாற் செலுத்திச்
சனகரிவ் வுலகி னினிமையுந் துய்த்தார்
சார்ந்தில தவர்க்கொரு குறையே.

4
‘இல்லற வியலோ னிறைவனை யடைதற்
கியலுமோ’ வெனக்குரு தேவர்
சொல்லுவார்@ ‘நம்மூ ரவலெறி மகளிர்
சுதனுக்கு முலைதந்து மவலைக்
கல்லியுங் கதைத்தும்; பலசெய்வ ருலக்கை
கையினைத் தகைந்திடா தாங்குச்
செல்லுநெஞ் சதுபோ லிறைவனை மறவீர்
திரும்பினாற் றீமைவந் தெய்தும்.

5
தலையினிற் பளுவாஞ் சுமையுள தெனினும்
தளர்ந்திடா தீரிரு திசையும்
நிலைபெற நோக்கு மியல்புடைப் பலவான்
நிச்சயந் தவறிடா வகைபோல்
அலகிலா மயல்செய் யுலகிடை வதிந்தும்
அகத்தினைச் சாதனை முறையாற்
கலைவிலா தடக்கும் பெரியனே வீரன்
கடவுளை மறந்திடாத் தகையோன்.

6
ஒன்றின்மே லொன்றாய் நாலைந்து குடத்தை
ஒருமித்துத் தலையினாற் றாங்கிச்
சென்றிடு மகளி ருடன்செல்வா ரோடு
சிறுகதை பேசுவ ரெனினும்
என்றுந்தம் முள்ளங் குடத்தினிற் செல்லு
மியல்பினர்@ வழிமுறை நடப்போன்
குன்றிடா வூக்கத் தோடுநன் னெறியின்
குறிப்பினிற் றவறிடான் மாதோ.

7
இசைவல பாணன் கருவியோ ரிரண்டை
யிசைத்திடு மரபினி னில்லத்
தசைவிலா துறைவோன் புரிவன புரிவா
னாயினு மமலனா மத்தை
நசையொடு மறவா துரைக்குவ னென்னி
னாதர்பாற் சென்றிடு முள்ளம்
வசையிலாக் கருமங் கரங்களே புரியும்
மார்க்கமும் வழுவில தாமே.

8
சோரநா யகனி னெண்ணமே யுளத்திற்
றோன்றிட வவன்வரற் குரிய
ஆரிருட் பொழுதை நோக்கிய கண்ணா
ளலைவிலாள் பலதொழில் புரியும்
நேரமுஞ் சிந்தை யவனையே நினைக்கு
நிலைமையள் நிலைமையை நிகர்ப்ப
ஏருறு மிறைவன் பால்மனஞ் செலுத்தல்
இல்லறத் தார்க்குறு கடனே.

9
‘தோற்றுமிவ் வுலகைத் துறந்திடா நிலையிற்
றொடர்பினை யகற்றுதற் குரிய
மாற்றம தெதுவோ’ வென்றிடிற் பங்க
மச்சம்போல் வாழ்ந்திடல் வேண்டும்@
சேற்றிடை யுறையுஞ் சேறுதன் மீது
செறிந்திடாத் தமைமைய தந்த
ஆற்றினி லவனி யிடைநின்று முள்ளம்
அழுக்குறா தமர்ந்திடல் வேண்டும்.

பகுதி நான்கு

24. பூஞ்சோலை காவலன்

கவி சிரேட்டராகிய ரவீந்திரநாத தாகூர் இயற்றிய பனுவற்றொகுதிகள் பலவுள. அவற்றினுள் ஒன்றாகிய பூஞ்சோலை காவலன் என்னும் நூலானது அன்பும் அறனும் பொருளாக இன்பந்தரு நீர்மையது. உள்ளந்தமைந்த கள்ளக்காதலை யுருக்கமொடுரைக்கும் சிறப்பினவாகிய செய்யுட்கள் பல இந்நூலில் விரவிக்கிடக்கின்றன.

(தன் காற்சிலம்பும். தன் நெஞ்சமும், தன் மார்பிலணிந்த சுடர் விடுமணியும் தனக்கு இடையீடாக விளைந்தனவென்று நாணியுரக்கும் ஒரு தலைவியின் வாய்மொழியாக அமைந்த செய்யுளைத் தாழிசைக் கொச்சகத்தில் மொழி பெயர்த்துத் தருகின்றோம்)

பூஞ்சோலை காவலன் ஒன்பதாஞ் செய்யுள்.

1
மாலைப்பொழுதினினான்
மணமனைக்குப் போம்போது
சீலமுள்ள பறவையொலி
செய்யாது கூடடையும்

2
காற்றுமசை யாதுநிற்குங்
கடிதுசெலுந் தெருமருங்கிற்
றோற்றுநல்ல வீதிகளிற்
றோன்றாதோ ரொலிக்குறிப்பும்.

3
என்காலிற் பொற்சிலம்பே
யெனக்குறுகண் விளைப்பனவாய்
மென்மேலு மொலித்துநிற்கும்
வெட்கமெனக் குண்டாக

4
மாடத்தின் மிசையிருந்து
மணமகனார் வருங்குறிகேட்
டீடுபட நினைக்குங்கா
லிலைதானு மசையாது.

5
நீரருவி தளம்பாது
நித்திரையிற் சிறிதயர்ந்த
போர்வீரன் முழந்தாளிற்
பொருத்திவைத்த வாளெனவே

6
என்னெஞ்சே படபடப்பா
யேங்கித் துடித்துவிடும்
அன்னதனை யமர்த்திவைக்க
வரியவழி யறியேனே.

7
அண்ணலென்பால் வந்திருக்கு
மமயத்தி லடல்ததும்பக்
கண்ணிமைகள் சோர்ந்துவிடுங்
கனத்தவிருள் மூடிவிடும்.

8
தீபத்தைக் காற்றவிக்குந்
திரைபோட்டு மறைத்ததுபோல்
மேகத்தான் மறைந்துவிடும்
விண்ணிலுள்ள மீன்களெல்லாம்.

9
தோன்றுமென்றன் மார்பிலணி
சுடர்மணியொன் றிருளகற்றிக்
கான்றவொளி வீசுமதைக்
காக்கவுமோர் வழியறியேன்.

(பூஞ்சோலை காவலன் இரண்டாஞ் செய்யுளினை ஆசிரியப் பாட்டில் மொழிபெயர்த்துத் தருகின்றோம்;)

புலவ.
மாலைப்பொழுதுஞ் சாலவந் திறுத்தது
நின்,
கருநிறக் குஞ்சி வெண்மை சான்றது
தனிமையி னாய்ந்தனை சாலவு மினிவருங்
கதியி னியல்பு கண்டனை யோவெனப்
புலவன்,
மாலைவந் திறத்தது மெய்யே வேலைப்
பகலவன் மறைந்தனன் பகற்பொழு தகன்ற
தாயினு மயலூர் மேயினர் சிலரென்
பால்வரு வாரெனக் காலொலி யரவம்
கேட்டிருக் கின்றனன் கோட்டமி னெஞ்சினர்
இளமை சான்ற விருவர் மனமலைவுற்
றொருமைப் படுங்கா லுரைசொல நாணி
அவாநிறை கண்ணின ரெனைப்பார்த் திரப்பின்
அவர்வா யுரையே யென்னுரை யாக
அவர்வயி னிறைந்த காதலை யுணர்த்தி
யின்னிசைச் செய்யுள் செய்பவ னானே
அச்செய லொரீஇ,
வாழ்க்கை யென்னும் வான்கரை யிருந்து
சாக்காடு மறுமைத் தகைமையா ராயின்
அவர்;க்கங்
கின்னிசைச் செய்யுள் செய்பவர் யாரோ?

மாலை வெள்ளியு மறைந்தது சேய்மையின்
அடங்கிச் சென்னதிப் பாங்க ரிடங்கொள்
ஈமத் தெழுதீக் குறைந்தணை கின்றது@
தேய்பிறை நிலவுசெல் பாழ்மனை முற்றத்து
நரிக்குலங் குழுமி யொலிக்குறி காட்டின@
இவ்வழி,
மனைதுறந் தலைவோ னொருவன் வந்து
விழித்திருட் குறிப்புணர் விருப்பின னாகச்
சென்னிதாழ்ந் திரப்பி னவன்செவி யகத்து
வாழ்வின் மருமம் வழங்குவார் யாரோ?
யானென்,
கதவ மடைத்துத் தனிமையி னிருந்து
தளைநீங்கு தொழிலென் னுளமேற் கொளினே.

கருமயிர் வெண்ணிற மாயினு மாகுக
இவ்வூர்,
முதியோர்க் கெல்லா முதியோ னானே
இளையோர்க் கெல்லா மிளைஞனு நானே
இனியுபுன் னகையின ரொருசில ரொருசிலர்
மணிநிறக் கண்ணின் மருட்குறிப் பினரே
பகற்கண் ணீர ரொருசில ரொருசிலர்
காணா விரவிற் கண்ணீர் சொரிபவர்
இவர்க்கெலா மின்றி யமையா நின்றோன்
யானே யாகலின் மயிர்வறிது வெளிறிலென்?
இனிவரு கதியின் நிலைமை யாய்தலிற்
பொழுது போக்கேன் கருமயிர் வெளிறிலென்
பலபரு வத்தினர் நிலையின னெனக்கே?

(இனித் தலைமகன் வந்தவழி யௌ;ளி யவன் பிரிந்தவழிக் கலங்கினா ளொருதலைவி தன்நெஞ்சை முன்னிலைப்படுத்திக் கூறியதாகிய நான்காஞ் செய்யுயைக் கலிவெண்பாட்டில் மொழிபெயர்த்துத் தருவாம்)

காதற் கணிகலமே கண்டிறந்து பாரிதுவும்
நீதியோ வென்றென்முன் னின்றானைப் போதிநீ
யென்னக் கொடுஞ்சொல்லா லேசினேன் கேளான்போல்
முன்னின் றகலான் முளரிமலர்க் கையிரண்டும்
பற்றினான் விட்டகல்வாய் பாவியென்றேன் போகானாய்
நெற்றியென்கா திற்சேரு நீர்மையுறக் கிட்டினான்
வெட்கமிது வென்றேன் விலகா னிதழ்பொருந்த
முத்தமிட்டு நின்றான் மொழிகுளறிச் சித்தமிகக்
கூசியே மிஞ்சிநடந் தாயென்னக் கூறினேன்
ஆசைவெட்கந் தன்னை யறியாதாற் பேசானாய்
நின்றானென் பூங்குழலை நீள்கரத்தாற் றொட்டுமலர்
ஒன்றை யணிந்தா னுரையாடான் மன்றன்
மலர்மாலை யொன்றென் மணிக்கழுத்தி னின்று
விலகும் படியெடுத்து மீண்டா னகலவே
ஆராமை மிக்கரற்றி யன்பனினி வன்நெஞ்சே
வாரானோ வென்றேன் வறிது.

(கவிஞர் பெருமான் முன்னிலைக்கட் டேவர்ப்பராய பொருண்மைத்தாகச் செய்த பாணிப் பாட்டொன்றைத் தாழிசை மூன்றடுக்கிய கொச்சக வொருபோகில் மொழிபெயர்த்துத் தருவாம்)

பூஞ்சோலை காவலன் ஐந்தாஞ் செய்யுள்

1
மட்டுக் கடங்காச் சலிப்புற்றேன்
மனமோ மிகுந்த தூரத்தில்
வயங்கும் பொருளை யுறுவதற்கு
வறிது விரும்பித் தவிக்குதையோ!
கட்டுக் கடங்கா வென்னுளமுங்
காதலாகிச் சேய்மைக்கட்
காணும் பொருளைப் பெறவெண்ணிக்
கருதிச் செல்லு மியல்பினதே
எட்டா மரபிற் பெரியோய்நின்
னிதழி னியைந்த குழலோசை
யிசைகேட் டுருகி நிற்கின்றேன்
யாது செய்வேன் பறந்துவரச்
செட்டை யிரண்டெற் கில்லாத
சிறுமை மறந்தே னெவ்விடத்துந்
திரியாப் படியான் கட்டுண்ட
செயலை மறந்தேன் மறந்தேனே.

2
நாடும் விழைவு பெரிதுடையேன்
நாட்டந் துயிலேன் பிறர்க்குரிய
நாடிந் நாடிங் குறைகின்ற
நானு மயனாட் டவனானேன்
கூடுங் கூடாப் பொருளுமெனக்
குறிப்பா லுணர்த்துஞ் சிறுமொழிமேற்
கொண்டே னின்னா வென்னாவாக்
கொள்ளு மென்ற னிதயமையா.
தேடற்கரிய பொருளேநின்
றிருவா யியைந்த குழலோசைச்
சீர்கேட் டுருகித் தியங்குகின்றேன்
செய்வ திதுவென் றறிந்திலனால்
ஆடற் சிறைகொண் டந்தரஞ்செல்
பரியெற் கரிதென் றறமறந்தேன்
ஆங்குச் செல்லும் வழியினையான்
அறியே னெனலு மறந்தேனே.

3

நொந்து திரிந்திங் குழல்கின்றேன்
நோக்கி லிதயத் தலைவுற்று
நுவல வடமொன் றில்லாது
நோவுற் றுடல மயர்கின்றேன்
சிந்துங் கிரண விரவியொளி
சேரு முச்சிப் பொழுதினினின்
செல்வ வுருவோ விசும்புநிறை
சீரார் நீலச் செவ்வியையா
அந்தத் திற்கு முடிவேநின்
னணிவா யியைந்த குழலோசை
யதுகேட் டுருகி நிற்கின்றேன்
யாது செய்வ தெனவறியேன்
சொந்த மாக யான் வாழுந்
தொடக்கா மனையிற் கதவமெலாந்
தொட்டுப் பூட்டி யிருக்கின்ற
துன்ப மறந்தேன் மறந்தேனே.

(இந்நூலுக்குப் “பூஞ்சோலை காவலன்” என்று பெயரிடப்பட்டதற்குக் காரணமிதுவென ஆராயும் பொருட்டு முதற் செய்யுளை மொழிபெயர்த்துத் தருவாம்)

அரசனொருவன் பணியாளன்போற் கோலம்பூண்டு தனது அரசியோடு வார்த்தையாடு மார்க்கத்தான் அவள்மேற் றனக்குள்ள அரும்பெருங் காதலை வெளிப்படுத்தும் இச் செய்யுளைக் கூற்றும் மாற்றமுடைந்து நாற்சீரடியானடந்த உறழ்கலிப்பாட்டில் எழுதுவாம்)

பணியாள்:
பணியாளன் றனக்கிரங்கிப் பார்த்தருள்வா யென்னரசி

அரசி:
அணியவையுங் குலைந்துவிட்ட தனைவருந்தம் மனi புகுந்தார்
தாமதித்திவ் வேளையிலே தனியேநீ வரலேனோ?

பணியாளன்;
போற்றியவர் போனபின்னர்ப் போதனல மென்றிருந்தேன்
ஈற்றினினின் தொண்டனெனக் கிடும்பணிதான் யாதோ சொல்வாய்.

அரசி:
நேரஞ் சென்று வந்தனையா னினக்கென்ன பணியிடுவேன்

பணியாளன்:
ஆரந்தரு பூஞ்சோலை யதைக்காக்க வனுப்பிவைப்பாய்.

அரசி:
பேதைமையிங் கிதுவன்றோ?

பணியாளன்:
யாதும் வெறுத் திதுபுரிவேன்.
தீதுபுரி வாளும்வேலுஞ் சேர்த்துமணன் மீதெறிவேன்;
தூரத்துள்ள வரசர்தம்பாற் றூதாக வனிப்போகேன்
போரிற்சென்று வெற்றிபெறேன் பூஞ்சோலை காத்திடுவேன்.

அரசி:
உன்கடமை யாதாகும்?

பணியாளன்:
உனக்குப்பணி புரிவதாகும்
காலையினி னீயுலவும் பாதையிற்புல் வளர்த்துவைப்பேன்.
பாதம்படும் போது பூக்கள் சாதலுக்கு விழைந்தேத்த
ஏழிலைப்பேர்த் தருவிலூஞ்ச லிட்டுன்னை யதிலிருத்தி
வாழியென்ன வாட்டிடுவேன் வான்மதியம் விழைவாகி
இலையொதுக்கி யீங்குவந்து னின்பநல்கு மாடையினை
யலைவுற்றுச் சிறிதுகொஞ்ச வமைத்துவைப்பே னல்லூஞ்சல்
பள்ளியறைக் குள்ளெரியும் பாங்கான தீபத்திலே
தௌ;ளுநறு மணங்கமழுஞ் சீர்த்தைலஞ் சேர்த்துவைப்பேன்
பாதம்படும் பலகையிலே யேதமிலாச் சந்தனத்தான்
மஞ்சளினா லெழுதிவைப்பேன் வாகான கோலமெல்லாம்

அரசி:
இத்தனையுஞ் செய்வதற்கிங் கென்ன கூலி கேட்பாயோ?

பணியாளன்:
சித்தமிருந் தாலுனது செங்கைமலர்ப் பங்கயத்தைத்
தொட்டதிலோர் மலர்த் தொடையல் சூட்டிவைக்கும் வரம்வேண்டும்
செய்யவசோ கத்திதழைச் சேர்த்துப் பிழிந்தசாற்றைப்
பையவுந்தன் சேவடியிற் பரப்பியந்த மலர்ப்பதத்தில்
மிஞ்சியிருக் குந்துகளைக் கொஞ்சிடவோர் வரம்வேண்டும்.

அரசி:
நாடும் வரங்களெல்லா நானிளித்தேன் பணியாளா
ஏடவிழ்பூஞ் சோலையினை யினிக்காத்து வருவாயே.

மூன்றாஞ் செய்யுண் மொழிபெயர்ப்பு வருமாறு:

உலகுதொழு மிளம்பரிதி
மலர்கிரண வகைபரப்பி
வேலை முகட்டி லிருள்கடிந் தெழுந்த
காலைப் பொழுதிற் கடற்புறஞ் சார்ந்தங்
கலைநீர்த் தண்ணகன் பரப்பில்
வலைவீசி வலிந்திழுத்தேன்,
ஆங்கு,
புன்முறுவல் பூத்ததெனக்
கண்ணீர்த்துளி கான்றதெனப்
பெண்ணீர்மைப் பெருவனப்பின்
வண்ணமண மகள்முகத்தின்
உண்ணின் றெழுதரு முவகையீங் கிதுவென
வேறுவே றுருவின் வேறுவேறு பல்பொருள்
காராழி யிருணீத்துச்
சீராருங் கரைசேர்ந்தன@
அவற்றை,
வாரி யெடுத்துத் தோண்மே லிட்டு
மனையக நோக்கி வந்தென் காதற்
கணிகல மாகிய வஞ்சொன் மடமொழி
போதிதழ் கி;ள்ளும் பொழுது போக்கில்
ஏதமற் றிருந்த வினியாண் முன்னர்
ஒருகண மறுகித் துணிவுற் றணியிழை
மெல்லடிப் பாங்கரப் பல்பொருள் வைத்துச்
சொல்லா டாதவள் சொற்பெற நின்றனன்@
நல்லாள்,
கடைக்கணோக் காலென் கையுறை நோக்கிப்
பல்வகைக் கோலச் சில்பொரு ளிவைதாம்
தருபய னெதுவெனச் சாற்றிய மாற்றம்
என்செவிப் படயான்,
நாணத்தாற் றலைவணங்கி
மாணுற்ற வருஞ்சமரிற்
பகைதடிந்து விறல்காட்டிப்
பெறுபொருளிங் கிவையல்ல
பொன்விலை கொடுத்த பொருளு மலவால்,
இன்னுயி ரனையாட்கிவைத காவெனத்
தனிநிசியிற் றுனியுடனே
எடுத்தெடுத்துத் தெருப்புறத்தில்
வீசினன் மறுநாள் விடியலில் வழிச்செல்
வோர்பலர் குழுமி யொவ் வொன் றாயெடுத்
தகனில மருங்கிற் பலவயிற் கிடந்த
சேயதம் மூர்க்குக் கொண்டுசென் றனரே.

நான்காஞ் செய்யுண் மொழிபெயர்ப்பு வருமாறு:
(நான்கடிமேல் ஈரடிவைப்பு)

திருவார் மனையைக் கடைக்கேகுந்
தெருவி லமைத்தா ரெமரையோ
வருவார் போவார் தத்தமது
மனத்தின் வண்ணம் வழிச்சென்றார்
தருவிற் பாரத் தோணியினைத்
தளைந்தார் யானும் பேசாது
மருவி யிருந்தே னென்வாணாள்
வறிது கழிந்து போயதையோ
வறிது கழிந்து போயதென்றன்
வாணா ளையோ வருவோரைத்
திறலீர் வராதீ ரிவணென்னச்
செப்ப வென்னான் முடியாதே
இரவும் பகலுங் காலரவ
மிடுவார் கடைவா யிற்புறத்தில்
விரைவில் வருவார் தமைநோக்கி
வீணே யும்மை யானறியேன்
உரவீ ரென்றேன் புதியரல
ருதிர முயிர்ப்பாற் கனவினால்
விரலின் பரிசத் தாலறிந்தேன்
மேவா தீரென்றுரை யேனால்
மேவா தீரென் றுரையாது
விரும்பி யெவரு மித்திசையே
ஓவா தென்றன் மனைநோக்கி
யுவந்து வருவீ ரெனவழைத்தேன்
காலைப் பொழுதி லாலயத்திற்
கண்ட நாத மெழுஞ்சமயம்
ஒலைக் கூடை கரத்தேந்தி
யுவந்து வந்தா ரடிசிவப்பக்
கோல முகத்திற் செய்யவொளி
கூடவருவார் தமைநோக்கி
சீலத் தீர்நீர் வரலொழிமின்
தேர்ந்தே னலனென் றுரையேனால்
தேர்ந்தே னலனென் றுரையாது
செல்வோர் தம்மை விளித்தெனது
பூந்தோட் டத்தி னுட்புகுந்து
பூக்கள் கொய்ய வம்மினென்றேன்.
மாதே யுச்சிப் பொழுதிலர
மனையில் மணியி னோசையெழ
யாதோ கருதித் தொழில்வெறுத்திவ்
வெல்லை வந்து நிறகின்றார்.
போதார் குழலிற் பூவாடப்
புல்லாங் குழலி னொலிவாட
மீதே வந்தார் தமைநோக்கி
மேவா தீரென் றுரைத்திலனால்
மேவா திரென் றரையாது
விளித்தன் னாரை யென்னரிய
ஆவி யனையீர் மரநீழல்
லணைவோம் வம்மி னெனவழைத்தேன்
சீரார் மாலை வந்தெய்தச்
சில்வண் டொலிசோ லையினெழவே
யாரோ கதவந் தனைமெல்ல
வசைத்து மருங்கு வருகின்றார்
தேரேன் முகத்தைச் சிறிதுகண்டேன்
செப்பா மொழியுந் திசைவானில்
ஆரா வமைதி நிலையுமுற
வயல்வந் துற்றார் விருந்தினரே
அயல்வந் துற்ற விருந்தினரை
யடையீ ரென்னத் தடுக்கறியேன்
இயல்சேர் முகத்தை யிருட்கண்டே
னிரவுங் கனவும் விரைந்தனவே.

ஆறாஞ்செய்யுண் மொழிபெயர்ப்பு வருமாறு:

விதிவசமோ முன்னை வினையின் பயனோ
கதிகவரக் கானகத்தை நீத்துப் - புதியகனி
கொத்தித்தின் னுங்கிள்ளை கூட்டிலுறை மென்மழலைத்
தத்தையினை நாடியது தான்.
அன்பே டவைதா மறைந்த குதலைமொழி
யின்போ டெடுத்துரைப்பாம் யாம்.

காட்டுக்கிளி (கூற்று) :
வாராயென் னன்பே நாம் மணம்விரியுஞ் சோலை செல்வோம்.

கூட்டுக்கிளி (மாற்றம்) :
சீராயிக் கூட்டினுள்ளே சேர்ந்திருந்தா லாகாதோ?

காட்டுக்கிளி (கூற்று) :
சிறையனைய கூட்டினுள்ளே சிறைவிரிக்க விடமுமின்றே?

கூட்டுக்கிளி (மாற்றம்) :
வெறுவெளியி லினிதுறைவேற் றிடமுமுண்டோ சொல்வாய்

காட்டுக்கிளி (கூற்று) :
கொண்;டல்செறி மலர்ச்சோலைக் கோலக்கவி கூறெனன்பே

கூட்டுக்கிளி (மாற்றம்) :
பண்டிதர்க ளுரைமொழிவேன் பக்கம்வந்து கேட்டிருப்பாய்

காட்டுக்கிளி (கூற்று) :
தீஞ்சுவைசேர் கவிநயத்தைச் செப்புவது மெளிதாமோ?

கூட்டுக்கிளி (மாற்றம்) :
மாஞ்சோலைக் கவிவனப்பின் வளத்தினைநா னறியேனே
எனவாங்கு,
அன்புரைகள் பலகூறி யருகணைந்தும் சிறையணவும்
இன்பினைத்தாம் பெறாமையினா லிதயமெலிந் திருந்தனவே@
சிறைசெய்யுங் கோல்கடந்து சிந்தைசெல்ல நொந்தனவால்
முறைநின்றும் நோக்கியைந்தும் முறையறியா திரங்கினவே@
அருகணைவா யென்னன்பே யெனவுரைத்து மார்வத்தால்
வருசிறையை நனியடித்தும் மற்றுமொரு பயனிலையே@
யாதுசெய்வேன் சிறைகடந்து வரவறியே னெனவுரைத்து
மாதுயர மெய்தியதால் வனத்திலுறை பசுங்கிள்ளை@
மனக்கினியாய் வலியிழந்து மடிந்தவிரு சிறையுமையோ!
எனக்கதறி வருந்தியதா லில்லுறையும் பசுங்கிள்ளை.

ஏழாஞ் செய்யுள் மொழிபெயர்ப்பு வருமாறு:

(தலைமகனுலாப் போகுமுன்; மடமகளுக்குரைத்த கூற்று)

திருநிறையு மிளங்குமர ரிவ்வழியே
சிறுபொழுதிற் சேர்வா ரென்ன
முரசெறியு மொலிகேட்டே னெவ்வண்ணம்
பிறதொழிலின் முயல்வே னம்மா
விரைசெறியு மலர்க்கூந்தற் பின்னலிடு
மரபினைநீ விளம்பாய் பொன்னங்
கரைசெறியும் பூந்துகிலோ பிறிதுகிலோ
வணிவரெனக் கருதிச் செல்வாய்.

என்னகருத் தெண்ணியோ மருண்டென்னை
நோக்குகின்றா யியம்பா யன்னாய்
மன்னர்மகன் யானிற்குஞ் சாளரத்தைப்
பாராதிவ் வழியே செல்வார்
மின்னலென விமைப்பொழுதிற் பரிவாரத்
துடனகல வியன்சேய் மைக்கட்
கன்னலெனக் குழலோசை கனிந்துருகிப்
படிந்துவந்தென் காதிற் சேரும்.

ஆனாலு மிளமன்ன ரெம்முன்றிற்
கடைவாயிற் கணிமை யாக
வானோர்தம் மிறைமைந்த னெனச்செல்வா
ரன்னாயவ் வனப்புக் காண்பேன்
கோனாசை மகன்செலவு கணப்பொழுதே
யாயினுமோர் குறையில் லாமல்
யானாடை யணிசேர்த்தி யலங்கரித்துப்
புறநிற்பே னறிவா யன்னாய்,

(தலைமகனுலாப் போந்தபின் மடமகளுரைத்த கூற்று)

திருநிறையு மிளங்குமார ரிவ்வழியே
யுலாப்போந்து சென்றார் செம்மை
விரிகதிரங் கிரணமவர் மணித்தேரின்
மிசைப்படிந்து வீசிற் றம்மா
மருவியென்றன் முகமறைக்கும் பூந்துகிலை
நீக்கினேன் மாணிக் கத்தால்
அரிதிழைத்த மாலையினை யகற்றியவர்
வரும்வழியை யடையச் செய்தேன்.

என்னகருத் தெண்ணியோ மருண்டென்னை
நோக்குகின்றா யியம்பா யன்னாய்
மன்னர்மகன் யானெறிந்த மாலையினை
யெடுத்திலரால் வண்ண மான்றேர்
சென்னெறியி னுருளின்கீழ்ச் சிதைந்தாரஞ்
செந்தூளி சேர்ந்த தன்றிப்
பின்னெவரும் யானவர்க்குக் கொடுத்தகொடை
யிதுவென்னும் பெற்றி தேரார்.

ஆனாலு மிளமன்ன ரென்முன்றிற்
கடைவாயிற் கணிமை யாக
வானோர்தம் மிறைமைந்த னெனச்சென்றா
ரன்னாயவ் வனப்புக் கண்டேன்
கோனாசை மகன்செலவு கணப்பொழுதே
யாயினுமோர் குறையில் லாமல்
பானாக மணிமணியை யவர்வழியி
லெறிந்துநின்றே னறிவா யன்னாய்.

எட்டாஞ் செய்யுண் மொழிபெயர்ப்பு வருமாறு:

புள்ளினங்க ளார்க்கும் புலரிப் பொழுதினிலே
பள்ளி யறைத்தீபம் பதிந்தணைய – மௌ;ள
அமளி துறந்தெழுந்தே னன்றலர்ந்து வாசங்
கமழுமலர் மாலையொன்று கைக்கொண் - டமிழ்தனையாய்
சோர்குழன்மேற் சூட்டினேன் சோர்விலா வான்வளிசேர்
சாளரத்தி னண்டை தனித்திருந்தேன் - கோளில்
இளங்கதிர்ச் செம்மை யியைந்த விடியல்
வளங்கெழு நீள்வழியே வந்தான் - உளங்கவரும்
நீர்மையான் றோள்சிரத்தி னித்திலத்தின் கோவைவெயில்
சாரவொளி வீசுந் தனிமகுடஞ் - சேரவே
பொங்குகின்ற வார்வத்தான் போந்தெங்கண் முன்றினின்றான்
எங்கே யவளென் றியம்பினான் - அங்கவன்றான்
சொன்ன மொழிகேட்டேன் சுடரிழாய் நாணத்தால்
இன்னாமை யுற்றங் கிருந்தேனால் - அன்னாள்
இவளே வழிச்செல் லிளையோய் நீதேடும்
அவளிவளே யென்றே னலேன்.

மாலைப் பொழுதின் மணிவிளக்க மேற்றுகின்ற
காலம் வருமுன் கவலையற்றுக் - கோலக்
குழலைக்கை யாற்கோதிக் கொண்டிருந்தேன் பொன்னங்
கழலோன் வரவினையான் கண்டேன் - அழகுசெறி
செம்பரிதி யின்கிரணஞ் சேருமணித் தேர்பூட்டும்
வெம்பரியின் வாயினுரை மேவவே – அம்பரத்திற்
செங்களப மென்னத் தெருப்பூமி சேரவந்தான்
எங்கே யவளென் றியம்பினான் - அங்கவன்றான்
சொன்ன மொழிகேட்டுச் சுடரிழாய் நாணத்தால்
இன்னாமை யுற்றங் கிருந்தேனால் - அன்னாள்
இவளே வழிச்சென் றிளைத்தோய் நீதேடும்
அவளிவளே யென்றே னலேன்.

வேனி லிரவின் விளக்கு மனைவிளக்க
வானின் மலயமந்த மாருதமே – தேனிமிர்ப்பக்
கீச்சுக்கீச் சென்னுங் கிளிப்பிள்ளை கூண்டினிலே
பேச்சற்றுத் தூங்கும் பெரும்பொழுதில் - வீச்சரவிற்
கென்றும் பகையா மிளமயிலின் வார்கழுத்தே
யொன்று நிறக்கச்சொன் றவந்தணிந்து – மன்றல்
விரிபசும்புல் போன்றதொரு மேலாடை போர்த்து
வருவளிசேர் சாளரத்தை மன்னித் - தெருமுகமாய்ப்
போவார் வருவார் பொருந்தா நடுநிசியில்
ஆவியனை யானையெண்ணி யன்பகத்தில் - மேவுதலால்
தேடிநொந்தோ யீங்கிவளே சிந்தைவைத்து நீவிரும்பி
நாடுமவ ளென்றுரைத்தே னான்.

பத்தாஞ் செய்யுண் மொழிபெயர்ப்பு வருமாறு:

திருவனையாய் செயலொழித்துச் செவிசாயம்மா
செல்வரவர் வந்துநின்ற செய்தி சொல்வேன்
உரிமையுடன் கதவச்சங் கிலியை மெல்லென்
னோசையெழ வசைத்தனரவ் வுண்மைதேராய்
பரிபுரஞ்செம் பாதத்திற் பதறாவண்ணம்
பாவையே வெளிவருவா யவரைக் காண்போம்
திருவனையாய் செயலொழித்துச் செவிசாயம்மா
செல்வரவர் வந்துநின்ற செய்திசொல்வேன்

மணமகளே குலமணியே மாலைக்கால
வளியோவென் றெண்ணிநீ மயங்கவேண்டாம்
அணிமதியம் மணிமுன்றி லிருளைநீக்கி
யணைக்கின்ற விளவேனி லழகிதம்மா
இணைவிழியைப் பூந்துகிலான் மறைத்துக்கொள்வாய்
எழிற்கரத்திற் சிறுவிளக்கொன் றெடுத்துக் கொள்வாய்
மணமகளே குலமணியே மாலைக்கால
வளியோவென் றெண்ணிநீ மயங்கவேண்டாம்.

நாணுற்றா லவரொடுநீ மொழியாடாதே
நாடியொரு புறமாக நண்ணுதங்காய்
பேணித்தா னவருரைக்கும் வார்த்தைகேட்டுப்
பேசாது நிலநோக்கிச் சார்வாயம்மா
ஆணிப்பொன் பதித்தவளை யரற்றாவண்ணம்
அணிவிளக்கங் கரத்தேந்தி யழைத்துள் வாராய்
நாணுற்றா லவரொடுநீ மொழியாடாதே
நாடியொரு புறமாக நண்ணுநங்காய்

வேலையின்னு மொழிந்ததின்றோ மின்னேபொன்னே
விருந்தினரெம் முயிரனையார் மேவிநின்றார்
சாலைவிளக் கேற்றிவைப்பாய் மாலைக்காலச்
சடங்கிற்கு வேண்டுவன தருவாயம்மா
சீலமிகு பூங்குழலை வகிர்ந்து வாசச்
சிந்துரத்தால் வரிதீட்டிச் செல்விசேர்ப்பாய்
வேலையின்னு மொழிந்ததின்றோ மின்னேபொன்னே
விருந்தினரெம் முயிரனையார் மேவிநின்றார்.

(இரவுக்குறியறிந்த தோழி தலைமகளைக் குறியிடத்துய்தற்கு விரையும் பொருண்மையது மேலைச்செய்யுள்.)

25 ஆங்கிலவாணி

மில்தனார் எனப் பெயரிய கவிஞர், யவனபுரத்துக் காவியங்களிலே நன்கு பயின்று அவைதம்முட் பொதிந்த வனப்பு விளங்கச் செய்யுள் செய்தார். அவரியற்றிய பெருங்காப்பியம் ‘சுவர்க்க நீக்கம்’ எனப் பெயரியது. இதரன் ஐந்தாம் பரிச்சேதத்தின் தொடக்கத்திற் சில அடிகளின் மொழிபெயர்ப்பினைத் தருகின்றோம்.

நித்தலத்தை வாரி நிலத்தி லுகுத்ததுபோற்
காலைப் பரிதி கதிர்காலும் வேளையிலே
உள்ளக் கவலையின்றி உணவுடலிற் சேர்தலினால்,
நன்கு துயின்றெழுந்த நல்லோர் புகழ் அத்தன்
இளங்காற் றிசையொலியும் இன்ப விலையொலியும்,
வளஞ்சான்ற நீரருவி வாய்நின் றெழுமொலியும்,
பள்ளி யெழுச்சிப்பண் பாடுகின்ற புள்ளொலியும்
ஆரா வுவகைதர, அன்பிதயத் துள்ðரச்,
சீரார் இளமான், திருமகள் போல் வாள்அவ்வை
காதற் கிளியனைய கட்டழகி, எந்நாளும்
வைகறையில் முன்னெழுவாள் மலர்ச்சயனம் விட்டகலாச்
செய்கையினை நோக்கியவள் செந்தா மரைவதனம்
ஏறச் சிவந்த இயல்பும், மலர்க்கூந்தல்
சீர்சிதைந்து சோர்ந்த செயலுங்கண் டுள்ளுருகி
எழிலார் மடநல்லார் இன்றுயிலுஞ் சீரிதே,
என்னவுளத் தெண்ணி யிளந்தென்றல் மென்மலர்மேற்
சென்று வருடுந் திறமனைய மெல்லொலியில்,
‘என்னா ருயிர்த்துணையே@ ஈச னெனக்களித்த
செல்வ நிதியே! செழுந்துயில்நீத் தேயெழுவாய்,
புத்தமிழ்தே! அன்பே! புலரிப் பொழுதினிலே,
வாச மலர்க்கொடியில் வண்டினங்கள் தேனருந்தும்
விந்தையினைக் காண்போம், விழிதுயில்நீத் தேயெழுவாய்,
வண்ணவண்ணப் பூக்கள் மலர்ந்தனகாண்!’ என்றுரைத்தான்
ஆங்கவளும் இன்றுயில் நீத் தன்பன் முகநோக்கி,
‘மேதகவு செம்மைநெறி மேவியவென் னன்பரே!
காதலரே! நும்முகங் காலை யிளம்பொழுதும்
கண்டேன்@ கவலையற்றேன்@ கங்குற் பொழுதினிலே
கனவோ நனவோநான் கண்டதொரு காட்சியினை
விண்டுரைப்பேன் கேளீரிம் மேதினியில் வந்ததற்பின்,
நாளின்பின் நாள்கழிய நாளையென்ப தொன்றறியாத்
துன்பமறியாத் தொடக்கமறியா வாழ்க்கை துய்த்தேன்@
கடந்த விரலிற் கலக்கமுறுஞ் செய்திகண்டேன்@
நின்குரல்போல் மென்குரலில், ‘நித்திரையோ அவ்வையே!
இனிய நிசிப்பொழுதி லெவ்விடத்தும் மோனநிலை@
வட்ட மதியமுயர் வானின் றொளிகாலும்@
இருள்குவிந்த மென்னிழலா லெங்கெங்குமெப் பொருளும்
கண்ணுக் கினியகண்டாய், காரிகையோ! வானுறையும்
விண்ணவர்நின் பேரழகில் வேட்கையுற்ற நீர்மையராய்க்
கண்ணிமையார் நோக்குதலைக் கண்டிலையோ?’ என்றுரைக்க
எழுந்தெங்கும் நோக்கினேன்@ இன்குரலின் பின்சென்றேன்@
ஞானத் தருவிடத்தை நண்ணினேன்@ ஆங்கொருவன்
வானோர் படிவத்தன் வாய்விட் டுரைபகர்வன்@
‘கண்ணுக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
உண்ணத் தெவிட்டா வுணர்வமிழ்தச் செங்கனிகள்
எண்ணெண் கலைஞான இன்கனிகள் தாங்கிநின்ற
செல்வ மரமே!நின் செழுங்கிளைகள் பாரித்த
தீங்கனியை மானிடருந் தேவர்களு முண்டிலர்காண்@
கல்வி யறிவைக் கடிந்தொதுக்கல் சீரிதோ?
உண்பல்யான்’ என்றா னொருகனியை வாய்மடுத்தான்@
ஆணை கடந்தசெயல் ஆதலினால் நானஞ்சி,
ஒருபா லொதுங்கினேன்@ உரவோன்பின் னும்மொழிவான்@
‘மானிடரித் தீங்கனியை மாந்துவரேல், வானுலக
இன்பம் பெறுவார்@ எழிற்பாவா யவ்வையே!
இக்கனியை யுண்ணுதியேல், எழிலா ரரமகளிர்
தோற்றப் பொலிவுடனே தூயவறி வும்பெறுவாய்
வானத் திவர்ந்துசெல்லும் வல்லமையும் நீபெறுவாய்
நாகநாட் டோர்தம் நலம்பெறுவா’ யென்றுசொல்லி,
ஒர்கனியைத் தந்தா னுயர்மணமுந் தீஞ்சுவையும்,
புலன்வழியென் சிந்தைபுகப் புதுக்கனியை வாய்மடுத்தேன்@
ககனத் தொழுந்தந்தக் கந்தருவன் பின்போனேன்@
மேக மியங்கும் வியன்புலத்தைத் தாண்டியபின்
மேதினியை நோக்கி வியந்தேனவ் வெல்லையிலே,
கந்தருவன் சென்றுவிட்டான்@ கண்டுயின்றேன் காதலரே!
கனவீ தெனவறிந்தேன் கலக்கந்தெளிந்த’ தென்றாள்.

உவேட்சுவேத் எளியநடையிலே, பொதுமக்களுடைய இன்ப துன்பங்களையும், இயற்கை வனப்பையும் பொருளாக வைத்துக் கவியியற்றியவர். அவரது இயற்கையழகு ததும்புங் கவிதை யொன்றின் மொழிபெயர்ப்பு.

முதுவேனிற் பெரும்பொழுதின் முளைத்தெழுந்த பரிதி
முன்னேறி யொளிபரப்ப, மென்னீர வருவி
மதுவாரும் பொழிலகத்துத் தென்றிசையிற் றோன்ற
வடதிசையின் மிகத்தெளிந்த வளிவழங்கும் வெளியில்,

வானகத்தி லசைவின்றி வதியுமுகிற் குலங்கள்
மன்னியநன் னிழல்பரப்ப வந்நிழலி னிடையே,
வேனில்வெயில் கதிர்சொரிய வுளமகிழ்வு விரிய,
மெத்தென்ற பசும்புல்லி லெத்தொழிலு மின்றி,

அஞ்சிறைய புள்ளிசைக்கும் செழும்பாடல் செவிவாய்
அகநுழைய விருள்விரவு மலைமுழையி லயர்ந்து
துஞ்சுதல்போற் றுயிலாது கடைக்கண்ணா லழகு
சுவைத்திடுவா னொருவனவன் சுதக்தினையென் னென்போம்

நோக்கினிய வவ்வெளியி லிருகாலும் சேற்றில்
நொந்தலைய, முகத்தினைச்சூழ்ந் தந்தரமே பெயரும்
ஈக்குலங்கள் தமையோட்டு மிருகரமுஞ் சோர,
இளைப்புடனே வழிநடந்தேன் யானமந்தப் பொழுதில்,

நீண்டுயர்ந்த மரம்பலவும் உடன்பிறந்தார் போன்ற
நிலைத்தொன்றுஞ் சோலையிலே, இலைக்கூரை சிதைய,
ஈண்டிநின்ற சுவர்நான்கா யியைந்தொரு குரம்பை@
இக்குரம்பை தனையடைந்தேன்@ இளைப்பொழிந்தேன்@ ஆங்கு,

நல்லிரும்புப் பூண்செறிந்த தண்டொருபாற் கிடக்க
நன்னிழலிற் பலகையின்மேல் என்னரிய நண்பன்
அல்லலறப் படுத்திருந்தான்@ திண்ணியநல் லுடலம்
அருஞ்சுரங்கள் பலகடந்தும் அசையாத நிலையான்.

1932-ம் ஆண்டு லண்டன் மாநகரிலே கீத்சு இகவாழ்வொருவிய நூற்றாண்டுவிழாக் கொண்டாடினார்கள். இவ்விழாக் கொண்டாட்டத்து நிருவாக சபையாருக்கு யான் எழுதியனுப்பிய செய்யுளை இங்குத் தருகின்றேன். இப்பெருங்கவி வகுத்த காப்பியங்களின் தொகையினை இச்செய்யுள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

திருமலி யழகுடைச் செழும்பொருள் தானே
உவகை நீர்மைய தாங்கவ் வுவகை
பன்னாட் கழியினும கழியா இயல்பிற்
றண்டா வின்பந் தந்துநிற் பதுவே
எனமுதல் நிறீஇய இன்னிசைச் செய்யுள்
மனனுறு மகிழ்வினை வழங்கி யணிமிகும்
செங்சொற் பொதிந்த செவ்விய நடையது@
அஞ்செஞ் சீறடி யரமக ளொருத்தி
சோம னுலகு துறந்து, புவியுற்றுக்
காமனுங் கைதொழுங் கட்டழ கமைந்த
எண்டிமி யோன் எனும் இளவலை விரும்பும்
செய்தி கூறும் சீரிது@ திரைகடல்
அலையி னாப்பணும், அருங்கடி கமழ்தரும்
நறுமலர்பொதுளி யறுஞிமி றார்க்கும்
உவவன மருங்கு முற்ற துரைத்தலின்
விஞ்சைய ருலகின் வயின்றெரிந் துரைப்பது@
யவனநல் லறிஞர் பனுவலி னமைந்த
கவிநய மருவிய காட்சிய தறிஞர்
பெருங்காப் பியமெனப் பேசுதற் குரிய
அருங்காப் பியத்தை யளித்தனை மன்னோ
அதாஅன்று,
மாயா மயக்க வஞ்சமிவ் வுலகம்
குருபர னருளால் மருவுவ தறிவெனும்
உண்மையை யுரைக்கும் வண்மைசால் கவிதை
லாமியா வெனும் பெயர் மேவிய மடவரல்
லீசியஸ் என்னும் இளைஞற் பேணி
இன்னுயிர்க் காதலனாக்கல் வேண்ட
அவனும்,
மங்கல நாணை வழங்கு மெல்லை
அபல்லோ னியன் எனும் அறிஞன் தோன்றித்
கட்புலங் கொண்டவள் கள்ளவஞ் சனையை
ஒழித்த லுரைக்கு முயர்நடைச் செய்யுள்
அளித்தனை மன்னோ@ ஆங்கது வன்றியும்
காதலி னியல்பைக் கருத்துற விளக்கும்
இஸபெல் லாவின் இன்னல்சார் சரிதம்
வசையின் றாகு மாண்பிற் சமைத்தனை@
அதன்கண்,
நித்திலந் தருவ திலங்கைத் தீவென,
வித்தக, உரைத்தனை@ விண்ணாட் டமிழ்தம்
புரையுமெச் சுவைபொதி யுரையுடைச் செய்யுள்
பலவா யமைத்தனை@ நலநா நுகர்ந்தோம்.
பல்லா யிரங்கா வதத்தினுக் கிப்பால்
உள்ளே மாயினு முன்னுரை கேட்டு
மகிழ்ச்சி யெய்தினம்@ மதுவிரி நறுமலர்
அவிழ்ந்து பகற்போ தளிகளுக் குணவும்,
பாங்குசென் றோர்க்குப் பரிமள வாசமுந்
தந்து வீயுந் தன்மையைப் போல
ஐயைந் தாண்டின் அகில நீத்தனை@
நீபோய்,
நூறாண்டு கழிந்தன வெனினும் நின்மொழி
இன்றலர் நறுமலர் என்ன நின்றது@
அதனால்,
ஆங்கில மொழிசெலு மனைத்துநா டர்க்குங்
களங்கமில் களிப்பினைத் தந்து,
கிளர்ந்து விளங்குமாற் கீத்செனும் பெயரே.

ஷெல்லி துன்புற்றோருக் கிரங்கும் தூயவுள்ளம் வாய்;ந்த கவிஞர். இவரது கவிதை விண்ணுலகத்தை மண்ணுலகத்திலே காட்டும் பேரழகுவாய்ந்தது. யாழ் நரம்பினிசையோடு இன்னிசைக் கீதம் பாடிய ஒரு மடவரலை நோக்கிப் பின்வருமாறு கூறுகிறார்:

வளர்வான் மதியி னொளிக்கிரணம்
வயங்கி, மெல்லென் றியங்கியபின்
குளிர்வான் மீனின் கதிர்படிந்த
கொள்கை யென்னக் கூறுவமோ?
தெளியா மழலை யணங்கே! நின்
தேனார் கிளவி யிசையமிழ்தம்
(அளிநேர்) விரல்சேர் யாழ்நரம்பிற்
காவி யாகும் மாண்பினையே.

எங்கும் பரந்த விசைநறுந்தேன்
ஈர்ந்தண் பனிநீ ராயியையக்
கங்குற் பொழுதில், மென்கொடியிற்
கலந்த விலையு மசைந்திலவால்@
திங்கட் புத்தே ளொருகடிகை
செலவு தாழ்ந்து சென்றிடினும்
தங்கு விண்மீ னிமைப்பிலவாய்த்
தரணி நோக்குங் தகைமையவே.

தேனா ரிசையென் னுளங்கவரச்
செயலற் றிருந்தேன் யானெனினும்
மானே யின்னும் இசைநறுந்தேன்
வழங்கல் வேண்டும்@ இளங்குதலை
ஆனா வினிய குரலொலியால்
அகிலம் மறைய மதிக்கதிரும்
வானோ ருலகும் இசையமிழ்தும்
மருவி யொருங்கு வந்தனவே.

இளந் தென்றலின் மெல்லுயிர்ப்பும், மாலைப்பொழுதின் அழகும், எங்கும் நிறைந்த அமைதிநிலையும், வளர்மதியின் ஒள்ளொளியும், விண்மீன்களின் மெல்லொளியும், நீலவிதானம் போன்றமைந்த வானினழகும் மேல்வரும் வெண்பாக்களுட் கூறப்படுகின்றன.

வேனி லிளந்தென்றல் மெல்லுயிர்ப்பு நன்மாலை
மானின் செவிக்கு மருந்தாகி – வானின்
உரைதேர்ந்த மோன வுறுதி குலைக்கும்.
அரிதன்றோ அல்லி னழகு?

மங்குல் பயிலா வளர்மதியி னொள்ளொளியும்
எங்குமியல் மீனொளியு மெய்தியே – கங்குல்
வழிதுயிலும் பூமகட்கு மேலாப்பா யன்பின்
வழியியலும் நீர்மையதிவ் வான்.

விக்டோரியா ராணியினது சமஸதானப் புலவராகப் பெரும் பெயர் பெற்றவரும், ஒழுக்கமே யுருவெடுத்தாற் போன்றவருமான தெனிசன் என்னும் பெருங்கவி இயற்றிய உலீசன் என்னுஞ் செய்யுள் வீரச்சுவை செறிந்தது. அதன் மொழி பெயர்ப்பு வருமாறு:

பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே,
வறிதிங் குறையும் மன்னன் யானே@
விளைவு குன்றிய களர்நிலத் துரிமையும்,
(குய்ப்புகை) யடங்கிய அட்டிலும், மெய்ப்படு
மூப்புவந் தெய்திய இல்லக் கிழத்தியும்,
யாப்புற அமையச் செய்வினை யின்றி,
வறிதிங் குறையும் மன்னன் யானே@
என்னிழல் வாழ்வோர் என்னியல் பறியார்@
உண்பார்@ துயில்வார்@ ஒண்ணிதி குவிப்பார்@
செம்மை நலமிலாச் சிறியோ ரவர்தமக்கு
நடுநிலைமை யில்லா நீதி வழங்கி,
வறிதிங் குறைதல் மாண்போ? பிறபுலம்
செல்லா தமையேன்@ சேரெப் பொழுதினும்
அன்பர் தம்மொடும், அவரிலா நிலையிலும்,
கரையி னகத்தும், திரையெறிந் தார்க்குங்
குரைகடற் புறத்தும்;, பெரிதுபெரி தாகிய
இன்பந் துய்த்தேன் துன்பத் துழன்றேன்@
விழைவுறு மனனோ டலைவுறு நாளில்
அளப்பில கண்டேன்@ அறிந்தன பலவே@
எத்தனை நகரம், எத்தனை மக்கள்,
எத்தனை யொழுக்கம், எத்தனை யவைக்களம்
எத்தனை யரசியல் எவ்வௌ; விடத்தும்
பெரும்பெயர் நிறுவி அரும்புகழ் படைத்தேன்@
வளமலி துரோய வளிவீச புலத்தில்,
அடற்போர் மதுவுண் டகங்களி கூர்ந்தேன்@
கண்டன வனைத்தும் என்னகங் கலந்தன@
வாழ்க்கை வட்டத் தெல்லையி னிகந்த
வேற்றுப் புலங்கள் மிகப்பல வுளவவை
செல்வுழிச் செல்வுழிச் சேணிடை யகல்வன@
உறைப்படு வாளிற் கறைப்படல் தரியேன்@
வாளா வுயிர்த்தல் வாழ்க்கை யாமோ@
(அறிவு நிறைதலும் அருஞசெயல் புரிதலும்
ஒரிரு பிறிவியி லொழியுநீர் மையவோ?)
வாழ்க்கைமேல் வாழ்க்கை வந்து குவியினும்
வேண்டா வென்ன விளம்பலு மாமோ?
யாண்டுபல கழிந்தன, ஈண்டிப் பிறிவியில்
எஞ்சிய நாளொரு சிலவே@ ஆங்கவை
புதுப்பயன் விளைநா ளாகுக@ விதிப்பட
மக்கள் யாத்த எல்லையி னிகந்து
குணகடற் குளி;க்கும் வான்மீன் போல,
அறிவு நிறைதற்கிவ் வலைகடல் கடக்க
நரைமுதி ருள்ளம் நாடிநின் றதுவே.
இவனென் புதல்வன்@ என்செங் கோலும்
தரணி காவலும் தாங்குதற் குரியோன்@
முரணுறு மாக்களைச் சிறிதுசிறி தாக
நலனுறத் திருத்தும் நாட்ட முடையோன்@
ஏதமில் மனத்தன்@ இல்லுறை தேவரின்
பாதம் பரவும் பான்மையன்@ பண்பும்,
சால்பு முடையோன்@ தனக்கென விதித்த
வினைபுரி கின்றான்@ என்வினை பிறவே
ஆங்கது துறைமுகம்@ பாங்கனிற் கப்பல்@
வளிமுகந் தன்ன பாய்கள்@ தெளிவில்
இருள்குவிந் தனையது, திரைபொரு கருங்கடல்,
வம்மின் நண்பீர்! என்னுட னுழன்றீர்,
மழையினும் வெயிலினும்; வன்மைசால் மனத்தீர்,
யானும் நீரும் யாண்டினில் முதிர்ந்தனம்@
மூப்பினும் வினையுள@ ஆக்கமு முளவே@
சாதல் எய்துமுன மேதக வுடைய
செயல்சில புரிகுவம்@ தேவரை மலைந்த
அடல்வலி யுடையோம், அருந்திற லேம்யாம்.
பகலொடு சுருங்கும் பரவையில் ஒளிக்கதிர்@
மெல்லென எழுந்தது விண்ணிடை மதியம்@
பல்குரல் எழீஇயனது பரவையும், வம்மின்
நலனுறு புதுப்புவி நாடியாம் செல்குவம்@
கப்பலைத் தள்ளுமின்@ கவினுற வமர்மின்@
பாய்களை விரிமின்@ பலகதிர்ப் பரிதி
படியும் குணகடற் படர்வோம்@ முடிவில்
வான்மீன் குளிக்கும் வரைப்பினை அடைவோம்@
துஞ்சினர் வதியும் தூயதீ வகத்தை
எஞ்ச லின்றியாம் எய்தலு மாகும்@
அருந்திற லாளன் அகிலே சப்பெயர்க்
காவலன் றன்னைக் காணலு மாகும்@
இரிந்தன பலவெனின், இருப்பவும் பலவே,
விண்ணும் மண்ணும் அதிர மலைந்த
திண்மையிந் நாளிற் சேர்ந்தில தெனினும்
காலமும் விதியும் மேவலி னுடல்வலி
குன்ற வியன்ற் கொள்கைய மெனினும்,
சித்த வலிமை சிறிதும் குறைவிலம்@
ஒத்த நீர்மைய உரனுடை உள்ளம்@
முயன்று தேடிப் பெறுகுவம் இடர்வரின்
அயர்ந்து முதுகிடா ஆண்மையேம் யாமே

றபர்ட் பிறெளணிங் என்னும் புலவரும் தெனிசனைப் போன்று சீரிய ஒழுக்கம் வாய்;ந்தவர்@ ஆன்றமைந் தடங்கிய கொள்கையர். இவரியற்றிய ஆழியும் பனுவலும் என்னும் பெருங்காப்பியம் உயர்ந்த கருத்துடையது. பிறெளணிங் வாழ்க்கையின் நோக்கத்தினை நன்குதெரிந்து நயம்பட உரைத்துள்ளார். ஒரு சிலஅடிகளின் மொழிபெயர்ப்பு வருமாறு:

என்னொடு@
யாண்டு பலவாக நீவிரும் வாழுமின்@
காண்டகு செம்மை ஈண்டுதற் குரிய@
நாள்பல வாக நலம்பல பெறுகுவிர்@
லாணாள்,
பின்னவைக் காக முன்னவை யியைந்தன@
‘அனைத்து மொருபிழம் பதனுள் ளிளமை
ஒருபாற் பயனை உணர்த்துமற் றொருபால்
அமைதியுங் காண்மின்@ அச்ச மகற்றுமின்@
நாதனை நம்புமின், எனவவன் நவின்ற
போத முள, நம் வாணா ளனைத்தும்
அவன்றிருக் கரத்தில் அமைந்தன கண்டீர்.

26 மதங்க சூளாமணி

அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக
வேந்தன் வேள்வியொ டியாண்டுபல வாழ்க
வாணிக ரியநெறி நீணிதி தழைக்க
பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக
அரங்கியற் பொருளுரை நிரம்பிவினை முடிக
வாழ்க நெடுமுடி கூர்கநம் வாய்மொழி
எனயாம்,
மங்கல நல்லுரை வழிமுறை யியம்புதும்
திங்களங் குழவி சேர்த்திய திருமுடி
ஐங்கரன் சித்தி விநாயகன்
செங்கதிர் புரைகழற் சேவடி தொழுதே

மதங்கர் - கூத்தர்@ அன்னாருக்கு ஒரு சிரோத்தினம் போன்றாரை மதங்க சூளாமணியெனல் பொருத்தமாகும். உலகனைத்தும் ஒரு நாடக மேடையாமெனவும், ஆடவரும் பெண்டிரும் அந்நாடக மேடையினுட் புகுந்து நடிக்கின்ற கூத்தரும் கூத்தியருமாவரெனவுங் கூறிய ஒர் ஆங்கிலக் கவிவாணருளர். சிறந்த நாடகக் கவியாகிய இப்பெருந்தகையார் உலக வாழ்க்கை யனைத்தையுமே ஒரு நாடகமாகக் கற்பித்து அதனை மதலைப்பருவம், பாலப்பருவம், வயோதிகப்பருவம், இறுதிப்பருவம் என ஏழங்கமாக்கிக் கூறியது சாலவும் சிறந்தது. அக்கூற்று வருமாறு:

1
அங்கணுல கனைத்தினையு மாடரங்க
மெனலாகு மவனி வாழும்
மங்கையரை யாடவரை நடம்புரியு
மக்களென மதித்தல் வேண்டும்
இங்கிவர்தாம் பலகோல மெய்திநின்ற
நாடகத்தி னியல்பு கூறிற்
பொங்குமங்க மேழாகிப் போக்குவர
விருக்கையொடு பொருந்து மன்றே.

2
முதலங்கத் தியல்புரைப்பின் முலையருந்தி
மணியிதழ்வாய் முகிழ்தி றந்து
குதலைச்சின் மொழிமொழிந்து செவிலித்தாய்
கரதலத்திற்கூத்து மாடித்
திதலைப்பொன் செறிதனத்தார் சேர்த்தணைக்கச்
சிறுநகையிற் சிறப்புக் காட்டும்;
மதலைச்செம் பருவத்தின் வனப்பனைத்தும்
விளங்குகின்ற மார்க்க மாகும்.

3
மணிமருள்வா யிளஞ்செவ்வி மதலையென
நடித்தமகன் வதன நோக்கம்
அணிநிறையு மோரைந்தாண் டடைதலுமே
கணக்காய ரகத்தை நோக்கி
இணைபிரிந்த விளங்சிந்தை பின்னீர்க்க
முன்னேகி யிளஞா யிற்றின்
குணநிறைந்த சிறுபொழுதிற் குறுகிநடந்
துறுகின்ற குறி;ப்பி ரண்டே.

4
எல்லைவந்த மூன்றாகு மங்கத்தின்
குறிப்புரைப்பி னேருஞ் சீரும்
புல்லநின்ற யௌவனமாம் பருவமுற
வேனில்வேள் பொருபோர் வேட்டு
மெல்லிநல்லார் தமைநாடி யன்னவர்தங்
கட்புருவம் வியந்து பாடிச்
சொல்லரிய காமவன லுளம் வெதுப்ப
நெடிதுயிர்க்குந் தோற்ற மாகும்.

5

அடலரியே றெனவார்த்துப் புலிமுகத்த
னிவனென்ன வடுபோர் வேட்டுப்
படுகளத்தி லதிரிடிபோற் படிந்துறுமும்
பீரங்கிப் படைமுன் னாக
மிடல்சிறப்பப் பொருதெனினும் புகழ்பெறுவன்
யானென்ன வீர மேவல்
தொடர்புடைய நான்காகு மங்கத்தின்
குறிப்பென்னச் சொல்ல லாமே.

6
வட்டவுரு வெய்துதரம் வடிவினிற்சற்
றகன்றுநிற்ப மனத்தி னீர்மை
திட்டமுற நயனத்திற் சினக்குறிப்பு
மருட்குறிப்புஞ் சேர்ந்து நிற்பச்
சட்டமுறை யறிந்தெவர்க்குஞ் சமனிலையாய்
நீதிசொலும் சார்பின் மேவி
இட்டமுறும் பெருமகன்ற னியனிலையை
யைந்தென்ன வியம்ப லாமே.

7
முதுமையுற வுடல்தர்ந்து முகஞ்சுருங்கி
யுருக்குலைந்து மூப்பின் றோற்றம்
இதுவெனக்கண் டுளமெலிய விணைவிழியிற்
படிக்கக்கண் ணியைற்து நிற்பக்
கதுமெனவே யிருமல்வரக் காறளர்ந்து
தள்ளாடிக் கருத்து மாறிக்
குதலைமொழிச் சிறுவருரை குலவுகின்ற
கிழப்பருவங் கூறி னாறே.

8
பண்ணியையு மென்மொழிசேர் பாலரொக்குங்
கிழப்பருவம் பயின்ற பின்னர்க்;
கண்ணிணைகள் நோக்கொழியப் பல்லொழியச்
சுவையொழியக் கருத்து நீங்க
உண்ணுமுண வொழித்தனைத்து மொழிந்துமறைந்
துயிர்வாழ்க்கை யொருவுந் தோற்றம்
எண்ணுமிந்த நாடகத்தி னிறுதியென
யாமெடுத்திய கியம்பு வாமே.

இவ்வாறு உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின் மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அஃதன்றி, அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒரவராகநின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரிலர். ஆதலால் ஷேக்ஸ்பியர் என்னும் இயற்யெர்பூண்ட இக்கவிவாணரையாம் மதங்கசூளாமணி யென வழங்குவாம்.

கவிச்சுவை நிறைந்த பாகங்களை இயன்றவரை செய்யு ளுருவமாக மொழிபெயர்த்துத் தருவாம். வேண்டியவிடத்து ஷேக்ஸ்பியர் வழங்கிய ஊர்ப் பெயர், மக்கட் பெயர், தெய்வப் பெயரென்றின்னவற்றைத் தமிழ்மொழி மரபுக்கியைய வேறுபடுத்தி வழங்குவாம்.

கவிதை நயங்கொண்ட நாடகங்களின் கவிதை மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு:

1. காதல் கைம்மிக்க காவலன்:
(டுழஎந’ள டுயடிழரச’ள டுழளவ)

(இருளப்பன் புறத்தே போகும் பொழுது அரசனது தோழருள் ஒருவனாகிய வீரனைச் சந்திக்கின்றான்)

வீரன் (டீசைழn) (இருளப்பனை நோக்கி)

மாலைவந் தடையு முன்னர் மன்னவன் மகளோ டிந்தச்
சோலையுட் பூக்கள் கொய்யத் தோழியர் மூவர் சார்வார்
சாலினி யென்ன நாமந் தரித்தமெல் லியல்பா லிந்த
ஓலையைக் கொடுத்து மீள்த லுன்பெருங் கடமை கண்டாய்

நாதன் (ளுசை யேவாயnநைட)
(காஞ்சனை கொடுத்த நிருபத்தினை படிக்கிறான்)

1
அன்புநிலை யுளங்கவர வாணையினைக்
கடந்தேயா னன்பால் லன்புக்
கின்பமிகு மாணையிட்டே னெழிலணங்கே
நினதுவிழி யிரண்டி னுள்ளே
மன்பதையோர் தேடுகின்ற ஞானமுற்றும்
யான்கண்டேன் மருட்கை கொண்டேன்
நின்படிவம் புகழ்ந்துரைக்கும் நாவேநா
நினையறிவும் நெஞ்சே தஞ்சம்.

2
வேலோன்கைப் படையேபோ லிணைவிழிக
ளெனை வருத்தும் வெகுளின் மின்னே
மேலோங்கு மிடியொலியாய் மென்மொழியு
மிடர்விளைக்கும் விழுமி யோய்நின்
பாலாய வனப்பனைத்துந் தேவகுரு
வகுத்துரைத்தல் பான்மை யாமென்
போலேயோ ரறிவில்லா னுரைப்பதற்குத்
துணிந்தமையைப் பொறுப்பாய் நீயே.

பிரியத்தன் (Pநசனiயென)
(தன் கைப்பத்திரத்தைப் படிக்கிறான்)

1
அரவிந்த மெல்லிதழி னருகணைந்த
பனித்துளியை யருக்கன் போக்கும்
மரபுன்றன் கண்ணொளியென் முகம்படிந்த
கண்ணீரை மாற்றுங் கண்டாய்
வருமந்தி வேளையினிற் கடலெழுந்த
மதியமென வயங்குஞ் சோதி
தருமுன்றன் முகமதிய மெனதுகண்ணீ
ராழியினுட் டங்குங் கண்டாய்.

2
புன்கண்ணீர்த் துளியினுள்ளே நின்படிவந்
தோற்றுதலாற் பொருவி லாய்நீ
என்கண்ணீர்த் துளியனைத்துந் தேராக
வெல்போருக் கேகா நின்றாய்
வன்கண்மை நினதன்றா லென்கண்முன்
வந்துநின்றோர் மாற்றஞ் செப்பாய்
மின்கண்ணே விளங்குகின்ற மெல்லிடையாய்
நின்னெழிலை விளம்பற் பாற்றோ.

ii. இரம்மியன் சுசீலை
(சுழஅநn யனெ துரடநைவ)

இரம்மியன்@ (சுழஅநழ)
(நெஞ்சொடு மொழிகின்றான்)

வாட்புண் பட்ட வடுவறி கில்லார்
நாட்புண் கண்டு நகைப்பினு நகைப்பர்
(வேனில்வே ளைங்கணை மேவுறா மனத்தர்
சோமனா ரிழைக்குந் துயரினை யறியார்).

(சுசீலை சாரளவாயிலில் தோற்றுகிறாள்)

நெஞ்சே! பொறுபொறு@ நீள்குண திசையில்
அஞ்செஞ் சோதி யலர்கதிர் பரப்பிப்
பேரொளி யொன்றுநன் னீர்மையி னெழுந்தது@
அதுவே,
ஆரெழிற் பரிதி பேரோ சுசீலை
இகனிறை மதிதரு மின்னலை யொழிக்கப்
பகலவன் வந்த பான்மையை யுணர்ந்தேன்.
வாராய் நிறையெழில் வயங்கிய சுடரே!
நேரா ரியல்பினெ னெஞ்சினை வாட்டிய
விண்மதி நின்னெழில் விளக்கங் கண்டு,
தண்னொளி மழுங்கித் தாழ்ந்துநின் றனனால்@
நீயே,
இந்துவை வென்ற சுந்தர வதனச்
செந்தரு வாயினை சிறைசெயுங் கன்னி
மாடத் திருத்தன் மரபோ வுரையாய்?
காதன் மடந்தாய்! ஆ!என் னன்பே!
சிறியே னுளநிறை கழிபெருங் காதலை
அறியாய் ஐயோ! பொறுபொறு மன்னே!
அணியெழிற் பாவை மணியிதழ் விரித்து
மொழிசொல முன்னியும் மொழியா தமர்ந்தனள்
வாக்கெழு மாற்றம் வழங்கில ளெனினும்
நோக்கெழு மாற்றம் நோக்கா லுணர்ந்தனன்,
பேதையேற் கன்றம் மாதர்கண் ணோக்கம்;
விண்மீ னொளியென மெல்லொளி பரப்பும்
நோக்கினை மருவின ராக்கமெய் தினரே
செம்மலர் முகத்திற் சேர்ந்தன மெல்விரல்
மெல்விரன் மேலதோர் வியன்பூம் பட்டுடை
பட்டுடை செய்தவம் யான்செய் திலனே.

சுசீலை: (துரடநைவ)
ஆ! ஆ! ஐயோ!

இரம்மியன்: (சுழஅநழ)
மாதோ? அணங்கோ?

அகல்வா னெழுந்து முகிலிடைப் படர்ந்து
கண்டோர் வியக்குங் காமரு காட்சிய
தணங்கே யாத லிணங்குமெல் லணங்கே
விண்ணவ ரமிழ்தினை வென்றநி னின்மொழி
உண்ணுதற் கையோ வுருகுமென் னுள்ளம்

சுசீலை: (துரடநைவ)
(இரம்மியன் சோலையுள் நிற்பதை யறியாது தன்காதலை வெளியிட்டுச் சொல்லுகிறாள்)

இரம்மிய மலைய! இரம்மிய மலைய!
தந்தையை மறந்து தனி;ப்பெயர் துறந்திங்
கென்பால் வருதி யென்னுள நிறைந்த
காதலை யுணர்ந்தெனைக் கைப்பிடிப் பாயேற்
பண்ணன் மகளெனும் பண்டைத் தொடர்பினை
நீக்கிநின் னுடனுறை வாழ்க்கைமே வுவனே.

iii. பெரும் புயல்
(வுhந வுநஅpநளவ)

(பவனவேகன் உருத்தோன்றாவண்ணம் இராச குமாரனது முன்னையிற் போய்நின்று பாடுகிறான்)

பவனவேகன்: (யுசநைட)

மஞ்சட் பரந்தவிந்த மணன்மீதி லென்னுடனே
கொஞ்சிக் குலாவிவிளை யாடுதற்கு வாரீரோ
வாரீரோ நடமிடுவோம் வெளவெளவென நாய்குரைக்கச்
சீராகக் குக்கூவெனுஞ் சேவலொலி கேட்குதையோ.

பிரியவிரதன்: (குநசனiயெனெ)
(அதிசயமுற்று)

வானகத்தோ மண்ணகத்ததோ
மணநிறைக்குமிவ் வினியநல்லிசை
கோனை யெண்ணியே சிந்தைநைந்தியான்
குரைகடந்கரைப் புறமிருக்கையிற்
றேனையொத்தவிவ் விசைதொடர்ந்தெனைச்
சிறைசெய்கின்றதா லுறுவதோர்கிலேன்
யானகத்துளோ ரெண்ணமின்றியே
யிசைவருந்திசைக் கேகுவேனரோ.

(மாலதியை அணுகி வந்து)

இன்னிசைக்குத் தலைவியே யமையவரும்
பணிந்தேத்தும் மெழில ணங்கே
பொன்னுலகத் திருந்திவணீ புகுந்தனையென்
றென்னிதயம் புகலா நிற்கும்
மன்னுமிந்தத் தீவகத்தி லுறைதியோ
வழியெனக்கு வழுத்து வாயோ
கன்னிகையோ பிறன்மனையாங் காரிகையோ
வெனவிரைவிற் கழறு வாயே.

iஎ. வணிகதேய வர்த்தகன்
(வுhந ஆநசஉhயவெ ழக ஏநniஉந)

(குறும்பொறைநாடன் பொற்பேழையைத் திறந்து அதனுள் ஒரு தலையோடும் ஒரு பத்திரமும் இருக்கக்கண்டு பத்திரத்தைப் படிக்கிறான்)

குறும்பொறைநாடன் (வுhந Pசinஉந ழக ஆழசழஉஉழ)

மின்னுவ வெல்லாம் பொன்னா காவெனு
நன்மொழி பன்முறை நவிலக் கேட்டனை
எம்மேற் புறத்தி னெழிலினை நோக்கி
யின்னுயி ரீந்தோ ரியம்பிடிற் பலரே
பிணம்பொதி தாழி யரும்பொன தெனினும்
நிணங்கொளும் புழுவுண் ணிறைதலு மியல்பே
ஆண்மையொ டறிவு கேண்மையுற் றிருப்பின்
விடைபெறா திவணீ மேவுதல் சாலும்
இளையோய் மதியின் முதியையு மல்லை
களைக ணுற்றநின் காதலும் வறிதே
போதி யென்னப் புகல்வதென் கடனே.

கானகநாடன் (வுhந Pசinஉந ழக யுசசயபழn)

(வெள்ளிப் பேழையைத் திறந்து ஆங்கிருந்த ஒரு பத்திரத்தை யெடுத்துப் படிக்கிறான்)

எழுமுறை யெரியிதன் றிண்மை சோதித்த
தெழுமுறை யாய்ந்தோர் பிழைபட லிலரே
விழைபொருள் நிழலெனி னுவகையு மதுவே
நிழலினை யணையு நீர்மைய ருளரே
வெள்ளிப் பூச்சொடு விளங்கிய மூட
ருள்ளார் காணிங் குள்ளாது மதுவே
மெல்லணை மேலெம் மெல்லிய லுறினும்
நல்லோய் நானின் றலையா குவனே
ஆதலின் விரைந்து போதனின் கடனே.

வாசவன் (டீயளளயnழை)

(ஈயப் பேழையைத் திறந்து அதனுள்ளே விஜயையின் சாய லெழுதிய சித்திரம் இருக்கக்கண்டு)

யாதிங் குள்ளதென் னிறைகவ ரணங்கனாள் விஜயை
மாதின் சாயலோ வாள்விழி யசைந்தன மலர்ந்த
போது போன்றன மெல்லித ழுளம்பிணித் திடுமோர்
சூதின் சூழ்ச்சியே சுரிகுழல் சொல்லவே றுளதோ.

(எனக் கூறிப் பேழையினுள் மீட்டும் பார்க்கும்போது ஒரு பத்திரமிருக்கக் கண்டெடுத்து அதனைப் படிக்கிறான்)

மையல்தீர் காட்சியை யாதலி னைய
பொய்யா நீர்மை பொருந்தப் பெற்றனை
பிறிதுவிழை யாதப் பெரும்பொருள் பேணும்
உறுதியை யாயினிற் குரியா டன்னைக்
கைப்பிடித் தென்றுங் காத்தனின் கடனே.

(நீதிமன்றத்தில் சீட்டினின்று அசையமாட்டேன் என்ற கோமுட்டிச் செட்டியாகிய சாபலனை நோக்கி விஜயை அன்பின் பாலதாகிய இரக்கத்தினுயர்வை யெடுத்துக் கூறுகிறாள்)

விஜயை (Pழசவயை)

வன்பொறை மருவா மரபின தாகி
வானின் றிழியும் மழைத்துளி போலக்
கொடுப்போ ரெடுப்போ ரெனுமிரு வோரையும்
அடுத்துக் காப்ப தன்புசா ரிரக்கம்
வலிதினும் வலிதிது மணிமுடி சூடி
யுலகு புரக்கு முரவோற் குரைப்பின்
இலகொளி முடியினு மிரக்கம் பெரிதே
அங்கையிற் பொருந்தி யச்சம் விளைக்குஞ்
செங்கோல் புறத்தது சிந்தைய திரக்கம்
மன்னவர் மனமெனு மணியணி பீடத்
தரசுவீற் றிருக்கு முரைசா லன்பு
தேவ தேவன் றிருக்குணத் தொன்றே
நீதியொ டன்பு நிலைபெறி னீதி
ஆதியங் கடவு ளருளென நிலவும்
இறைபே ரருளிங் கெமக்கிலை யாயின்
நெறிநின் றியாரோ நீடுவாழ் வெய்துநர்
அருளினை விழைந்தே மருட்செயல் புரிதன்
மரபே யாக மதித்தலுங் கடனே.

எ. யூலிய சீசர்
(துரடரைள ஊயநளயச)

(சீசரின் மனைவி கல்பூர்ணியா, தீக்கனாக்கண்டு அச்சமுற்றெழுந்து, புறத்தே நிகழுகின்ற உற்பாதங்களினால் உள்ளம் அவலித்துத் துயிலொழித்திருந்து, காலைப்பொழுது வந்ததும்; கணவனது முன்னிலை யடைந்து கூறுகிறாள்)

கல்பூர்ணியா

பேரிரவில் நடந்தவெலாம் பீழையினை விளைக்கப்
பேதலிக்கு முளச்சிறியேன் பேசுகின்ற மொழிகள்
ஆருயிர்க்குத் தலைவனின் தருட்செவியில் வீழ்க
அகத்திடையின் றிருந்திடுக அவைபுகுத லொழிக.

(கல்பூர்ணியா கூறியதைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து கூறுகிறார்)

சீசர்

அஞ்சினர்க்குச் சதமரண மஞ்சாத நெஞ்சத்
தாடவனுக் கொருமரண மவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந்
துன்மதிமூ டரைக்கண்டாற் புன்னகைசெய் பவன்யான்.

இன்னலும்யா னும்பிறந்த தொருதினத்தி லறிவாய்
இளஞ்சிங்கக் குருளைகள்யாம் யான்மூத்தோ னெனது
பின்வருவ தின்னலெனப் பகைமன்ன ரறிவார்
பேதுறல்பெண் ணணங்கேயான் போய்வருதல் வேண்டும்

(சீசரது அத்தாணி மண்டபத்திலே சிம்பர் என்பவன் முற்பட்டு வந்து முழந்தாட்படியிட்டு நின்று, தனது சகோதரனை மன்னித்தருளுமாறு வேண்டினான். அதற்குச் சீசர் அவனை நோக்கிக் கூறுகிறான்)

சீசர்

தாழ்ந்து மென்மொழி யுரைத்திடேல் தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர் பொய்யுரைக் கிரங்கிய வீணர்
சூழ்ந்து செய்தன துடைத்துப்பின் சோர்வினை யடைவார்
ஆழ்ந்து செய்வன செய்யும்யா னவர்நெறி யனையேன்.

அண்ண னீர்மையேன் பிழைசெயே னணுவள வேனும்
நண்ணு நீதியிற் பிரிந்திடேன் நாயெனக் கதறிக்
கண்ணி னீர்மிக நிலத்தினிற் புரள்வதாற் கருதும்
எண்ண முற்றுறு மென்னநீ யெண்ணுவ திழிவே

(சீசர் தம்மைச் சூழ்ந்துநின்று விண்ணப்பித்தோரை நோக்கி கூறுகிறார்)

சீசர்

இரங்குதி ரென்ன விரக்கு நீர்மையர்
தமைப்பிற ரிரக்கிற் றயைகாட் டுநரே
நும்போல் வேனெனி னும்மொழிக் கிசைவேன்
வானக மிளிரு மீனின மனைத்துந்
தற்சூழ்ந் தசையத் தானசை வின்றி
நிலைபெறு துருவ னிலைமைகண் டிலிரோ
வான்மீ னனையர் மாநில மாந்தர்
துருவ னனைய னொருவனீண் டுளனால்
அவன்றான் யானென வறிகுவிர் புகன்ற
மொழியிற் பிரியேன் பழியொடு படரேன்
மலைவீழ் வெய்தினு மனம்வீழ் விலனே.

முற்றும்.