கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கட்டவிழும் முடிச்சுக்கள்  
 

சுல்பிகா ஆதம்

 

கட்டவிழும் முடிச்சுக்கள்
பெண்கள் தொடர்பான பொய்மைகளும், உண்மைகள்

பதிப்பாசிரியர் : சுல்பிகா ஆதம்

சித்திரங்கள் : ஆலோசனை – சுல்பிகா ஆதம்.
நிர்மாணம் : சரத் தர்மசேன

வெளியீடு : முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி,
செயற்பாட்டு முன்னணி,
17, பார்க் அவனியு,
கொழும்பு – 05

முதற்பதிப்பு : 1996

பதிப்புரிமை : முஸ்லிம் பெண்கள் ஆராய்;ச்சிண,
செயற்பாட்டு முன்னணி.


உள்ளடக்கம்
1) நன்றி

2) முன்னுரை

3) பெண்ணின் குணாதிசயங்கள் பற்றிய பொய்மைகளும் உண்மைகளும். – கௌரி பழனியப்பன்.

4) பெண்ணின் இரண்டாம் தரநிலை அல்லது கீழ்நிலை அந்தஸ்துடன் தொடர்பான பொய்மைகளும் உண்மைகளும். – சுல்பிகா

5) பெண் வெறுப்பும் அவை பற்றிய ஐதிக வெளிப்பாடுகளும்.
- கலாநிதி செல்வி திருச்சந்திரன்

6) குடும்பத்தில் பெண்ணின் நிலை பற்றிய பொய்மைகளும் உண்மைகளும். – சுல்பிகா

7) பின்னிணைப்பு


நன்றி
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி, மகளிர் தொடர்பான மற்றொரு நூலை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றது. அதேவேளை இம்முயற்சி நிறைவேறுவதற்கு பலவகையிலும் உதவிகள் புரிந்த தனிப்பட்ட நபர்களையும் நிறுவனங்களையும் நன்றியுடன் நினைவுகூற வேண்டிய கடப்பாடும் அதற்குண்டு. இவ்வகையில் இந்த ஆக்கமுயற்சிக்கு நிதி உதவியளித்த சீடா நிறுவனத்திற்கு முதற்கண் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இந்நூலாக்கம் முயற்சிக்கு முன்னோடியான திருமதி அன்பேரியா ஹனீபா, கடடுரையாளர்களான கலாநிதி செல்வி திருச்சந்திரன், கௌரி பழனியப்பன், கல்பிகா ஆகியோருக்கும் கட்டுரைகளை வாசித்து திருத்தங்களுக்கான ஆலோசனைகளை வழங்கிய கலாநிதி எம்.ஏ.நுஃமான் அவர்களுக்கும், செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் வேலை அமர்வுகளை செயற்படுத்துவதற்கும் பல வகையிலும் அயராதுழைத்த திருமதி ஆன்ஜப்பார் அவர்களுக்கும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு முன்னணி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நூலாக்கம் தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை பிரசுரித்துதவிய வீரகேசரி, தினகரன் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் விளம்பரத்தில் கேட்கப்பட்டாவாறு, துணுக்குகளையும் பழமொழிகளையும், சமூகக் கருத்தாக்கங்களையும் அனுப்பி வைத்த வாசகர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி,
செயற்பாட்டு முன்னணி.

பெண்கள் தொடர்பான
பொய்மைகளும் உண்மைகளும்

முன்னுரை
1.1 ஆய்வின் பின்னணி
சமூகக் குழுக்கள் தனி மனிதர்களையும், அவர்களது பண்பாட்டுக் கோலங்களையும் கெர்டு கட்டமைக்கப்படுகின்றன. மனிதர்கள் என்ற பதம் இங்கு ஆண் பெண் இருபாலாரையும் உள்ளடக்குகின்றது. பண்பாட்டுக் கோலங்கள் என்பன மனிதர்களது நடத்தை நியமங்கள், சமூக நியதிகள், வாழ்க்கை முறை, ஏற்புடைமைகள், விருப்புக்கள், வெறுப்புக்கள், சமூக உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. சமூகக் குழுக்களில், இவ்வாறான அம்சங்கள் எழுதப்படாத, மற்றும் எழுதப்பட்ட சட்டங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. குறித்த சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களும், நியதிகளும், வேறு சமூகங்களில் ஏற்புடைமையாகும் என்றில்லை. எனினும் பெண்கள், தொடர்பாக உருவாக்கப்பட்ட நியமங்களும், நியதிகளும் பொதுவாக எல்லா சமூகங்களிலும் ஒரே பண்பினைக் கொண்டிருப்பதைக் காணலாம். அதாவது இவை பாரபட்சமான தன்மையையும், பெண்களை இரண்டாம் தரப் பிரஜையாக மதிக்கும் தன்மையையும் பெண்களின் பாலியல் அம்சத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையையும் காட்டுகின்றன. மேலும் இவை தலைமுறைகளுக்கூடாக வாய்மொழியாகவும் தொடர்பு சாதனங்கள் மூலமும் கடத்தப்படுகின்றன. இச் சமூக நியமங்களும், நியதிகளும் பழமொழிகளாகவோ, புனைகதைகளாகவோ, நீதி அறிவுரைகளாகவோ, துணுக்குகளாகவோ, அல்லது கர்ண பரம்பரைக் கதைகளாகவோ, பெரியோர் கூற்றுக்களாகவோ சமூகத்தில் நிலவுகின்றன.

இவை சாதாரண நோக்கில் பெறுமதியற்றனவாகத் தோன்றினாலும் சமூகத்தில் அவை உணர்வற்ற நிலையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகப் பெரியனவாகும்.

எமது கீழைத்தேச கலாச்சாரத்தினை பொறுத்த வரையில் உயர் வகுப்பினர், தாம் வகுப்பினர் என்ற நிலை அல்லது ஆதிக்க வகுப்பினர் அடங்கிச் செல்லும் வகுப்பினர் என்ற நிலை சமூகப் படிநிலை ஒன்றை உருவாக்குகின்றது. இதிலும் ஆண்கள் உயர் ஆதிக்க நிலையையும், பெண்கள் தாழ்ந்து அடங்கும் நிலையையும் கொண்டிருப்பதும் வெளிப்படையான உண்மையாகும். எமது சமூக நியதிகளும் நியமங்களும் இந்நிலையைப் பிரதிபலிப்பனவாகவே உள்ளன. அத்துடன் ஆணினதும் பெண்ணினதும் உடல், உள தொழிற்பாடு, கடமைக்கூறுகள் பற்றி சமூகம் கொண்டுள்ள எண்ணப்பாங்கின் அடிப்படையிலும் இவை உருவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல சமத்துவமற்றனவாயினும் சரி, உண்மையற்றனவாயினும் சரி, காலமாற்றத்துடன் பொருத்தமற்றதாக இருப்பினும் சரி, இவற்றினால் நன்மை பெறும் குழுவினரால் ஏதோ ஒருவகையில் மீளவலியுறுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன.

பல கூற்றுக்களும் கருத்துக்களும் அவை உருவாகிய நிலையில் மிக இயல்பாக குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்பாக கூறப்பட்டனவாகும். எனினும் அதனை உறுதி செய்யவும் நிலைநிறுத்தவும் பிற்காலங்களில் அதற்குப் பல்வேறு மனோதத்துவ, சமூக கலாச்சார அர்த்தங்களும் வழங்கப்பட்டு, சட்டபூர்வமாக்கப்பட்டு சமூக நியமங்களாகவும் நியதிகளாகவும் உலவவிடப்பட்டுள்ளன. அத்துடன் இவை ஒருவர் தாம் விரும்பிய கருத்துக்களை அறுதியிட்டுக் கூறும் ஆதாரங்களாகவும் மேற்கோள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இன்றைய நவீன உலகில், பகுத்தறிவாளர்களைக் கொண்ட குழுவினருக்கு இவ்வகையான நியமங்களையும், நியதிகளையும் உரைத்து உண்மையையுணர வேண்டிய அவசியமேற்படுகின்றது. இவ்வகையில் பார்க்கும் போது பெண்கள் தொடர்பான பல கருத்துக்கள், விஞ்ஞான ரீதியாக உண்மையற்றவையாகவும், சமூக ரீதியாக நீதியற்றவையாகவுமே காணப்படுகின்றன. இதன் காரணமாக இவை “பொய்மைகள்” (ஆலவாள) என எம்மால் குறிக்கப்படுகின்றன.


1.2 ஆய்வின் நோக்கங்கள்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு முன்னணி, பெண்களின் சமூக நீதிக்காக வாதிடும் ஓர் அமைப்பாகும். இதன் அடிப்படையில் பல ஆய்வுகளையும் செயற்பாடுகளையும் இம்முன்னணி மேற்கொண்டு வருகின்றது. இவ்வகையான அடிப்படை நோக்கத்தினை முன்வைத்தே இந்நூலாக்க முயற்சியிலும், எமது முன்னணி ஈடுபட முனைந்தது.

இந்நூல், பெண்களுடன் தொடர்பான சமூக நியதிகளையும் நியமங்களையும் பகுப்பாய்வு செய்வதை நோக்காகக் கொண்டுள்ளது. எனினும் இப்பகுப்பாய்வில் இடம் பெறும் சில எண்ணக்கருக்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக ஒவ்வொரு கட்டுரையிலும் அதில் இடம் பெறும் விடயம் தொடர்பாக சிறிய அறிமுகங்கள் அல்லது பின்னணிகள் வழங்கப்படுகின்றன.

இந்நூலில் இடம்பெறும் சமூக நியதிகளும், நியமங்களும், உண்மையற்றவையாகவும் சமூகப் பொருத்தமற்றவையாகவும் உள்ளபோதிலும் அடிக்கடி பொதுசனத் தொடர்பு சாதனங்கள், அல்லது வாய்வழி தொடர்பாடல்கள் மூலம் மீள வலியுறுத்தப்படுவதால், சமூகம் அதனை அறியாமலேயே உள்வாங்கி செயல் ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. எனவே இவ்வாறான நிலையில், இவை பற்றி மெய்நிலை தேர்வாய்வு செய்தல் ஒரு முக்கிய சமூகத் தேவையான முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு முன்னணியினரால் கருதப்பட்டமையினாலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனவே இம்முயற்சி பின்வரும் நோக்கங்களை நிறைவு செய்ய உதவ வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி விரும்புகின்றது.

(1) அநேகமான பெண்களை இழிவுபடுத்தும் அல்லது கீழ்நிலைப்படுத்தும் இவ்வாறான சமூக நியமங்களையும், நியதிகளையும் விஞ்ஞான உண்மையின் அடிப்படையிலும் சமூக நீதியின் அடிப்படையிலும் ஆய்வு செய்து, உண்மையை பொதுமக்களுக்கு அறிய உதவுதல்.

(2) அதன் மூலம் விடயங்களை பகுத்தாய்ந்து கடைப்பிடிக்கும் உளப்பாங்கினை மக்களிடம் ஏற்படுத்துதல்.

(3) பொதுவாக பத்திரிகைகளிலும் ஏனைய பொதுசன தொடர்பு சாதனங்களான தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றிலும் பெண்களே இவற்றினை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றனர். இவ்வாறான நிலைமையில் அவர்களை உண்மையின்பால் விழிப்புணர்வு பெறச்செய்தல்.

(4) அநேகமாக இவ்வாறு எழுதப்படும் கூற்றுக்கள், துணுக்குகள் ஆகியன எந்தவித விஞ்ஞான ரீதியான ஆய்வு ஆதாரங்களை மேற்கோள் காட்டாது எழுதப்படுகின்றன. இவ்வாறான ஆதாரமற்ற செய்திகளை அடுத்தவர்க்கு தொடர்பாடல் செய்வதிலுள்ள பின்விளைவுகள் பற்றி சிந்திக்கும் மனப்பாங்கினை ஏற்படுத்துதல்.

(5) அரை – குறை உண்மைகளை பொதுமைப்படுத்துவதிலுள்ள தவறுகளை புரிந்து கொள்ள உதவுதல்.

(6) மிகப் பிரதானமாக இவ்வாறான பொய்மைகளில் கட்டுண்டுள்ள இளம் பெண்கள் சமுதாயத்தினரை சிந்திக்கும் பகுத்தறிவாளர்களாகவும், விழிப்புணர்வுடன் செயலாற்றுபவர்களாகவும், அதன் மூலம் தமது நிலையையும் சமூக நிலையையும் உயர்த்திக் கொள்ள முயல்வோராகவும் ஆக்குதல்.

1.3 தரவுகள் சேகரிக்கப்பட்ட முறை.
முதலில் இது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. அதாவது பெண்கள் தொடர்பான பொய்மைகளும், உண்மைகளும் என்ற நூலில், பெண்களுடன் தொடர்பான கூற்றுக்கள், துணுக்குகள், பழமொழிகள் புனைவுகள் பகுப்பாய்வு செய்யப்பட இருப்பதால் அவற்றினை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தோம். நூற்றுக்கணக்கானவர்கள் அனுப்பி வைத்திருந்த துணுக்குகளில் பெண்களை இழிவுபடுத்தும், கீழ்நிலைப்படுத்தும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பொய்மைகள் தெரிவு செய்யப்பட்டு பாகுபடுத்தப்பட்டு ஆய்வுக்கென எடுத்துக்கொள்ளப்பட்டன.

1.4 தரவுகளை பகுத்தாய்தல்.
எழுத்தாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பல வேலை அமர்வுகளில் சேகரிக்கப்பட்ட சமூகக்கூற்றுக்கள், பழமொழிகள், துணுக்குகள் ஆகியன கலந்துரையாடலுக்கு விடப்பட்டு இதன் பின்னணித் தத்துவங்கள், எண்ணக்கருக்கள் ஆகியன விளங்கிக்கொள்ளப்பட்டன. கட்டுரைகள் எழுதப்படுவதற்கும் ஓர் ஆய்வுச்சட்டகம் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நூலாக்க முயற்சியில் ஈடுபட்டோரினது நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவது வாசகர்களினதும், பொது மக்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை நூலாக்கக் குழுவினரும் ஏனையோரும் அறிவர். எனினும் இந்நூல் சிறிது அளவிற்காவது பெண் தொடர்பான பொய்மைகள் பற்றிய உண்மைகளை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு.
கல்பிகா
செயற்றிட்ட இணைப்பாளர்

பெண்ணின் குணாதிசயங்கள் பற்றிய
பொய்மைகளும் உண்மைகளும்.
கௌரி பழனியப்பன்
மானிடர்க்கு எலும்பும் தசையும் எவ்வாறு தோற்றத்தைக் கொடுக்கின்றவோ அதுபோன்று குணாதிசயங்களும் அவரது ஆளுமைக்கும் நடத்தைக்கும் உருக்கொடுக்கும் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. குணாதிசயங்கள் எல்லோர்க்கும் ஒரேமாதிரியனதாக அமைவதில்லை. மனிதர்க்கு மனிதர் குணாதிசயங்கள் வேறுபாடுமாயினும் ஒரு பரந்த மட்டத்தில் நோக்கும்போது பால் அடிப்படையில், அதாவது ஆண்களுக்கென ஒருவித குணாதிசயங்களையும் பெண்களுக்கென வேறுவித குணாதிசயங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன? ஆணுக்கு ஒருவித குணாதிசயங்களும் ஏற்படக் காரணம் என்ன? இவை இயற்கையாக ஏற்பட்டவையா? அல்லது கற்பிக்கப்பட்டவையா? இப்பாகுபாட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பன எம்மை உறுத்திக்கொண்டிருக்கின்ற ஒருசில வினாக்களாகும். இவற்றிற்கு விடைகாண முயலுவது என்பது மானிட சமூக வளர்ச்சியையும் வரலாற்றையும் விஞ்ஞான பூர்வமாகவும் சித்தாந்த ரீதியாகவும் அலசி ஆராய்வதை மட்டுமன்றி இவற்றைத் தற்கால நிதர்சனங்களுடன் உரைத்துப்பார்க்க வேண்டிய ஒரு தேவையையும் முன் வைக்கின்றது.


மனித குணாதிசயங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன?
மனித இயல்புகளும் குணாதிசயங்களும் மனித செயற்பாடுகளுக்கு தோற்றத்தைக் கொடுப்பனவாயினும் இவ்விரண்டினதும் மூலங்களும் ஒன்றல்ல. மனிதர்க்கு இயற்கையாகவே சில இயல்புகள் காணப்படுகின்றன. சமூகவியலாளர் இவற்றை “இயல்பூக்கள்” என்பர். இவை அவரவர் உடற்கூற்றுத் தன்மையைப் பொறுத்தும், இவ்வுடற்கூறுகளுக்கும் சூழலுக்கும் இடையே காலமும் காலமாகும ஏற்பட்டு வருகின்ற தாக்கங்களின் விளைவாகவும் ஏற்படக்கூடியவை. ஆனால் மனித குணாதிசயங்கள் என்பவை பெற்றுக் கொள்ளப்படுபவை. அல்லது கற்றுக் கொள்ளப்படுபவை. குறிப்பாக மனிதன் சமூகமயமாக்கப்படும் போது பெற்றுக் கொள்ளுகின்ற விழுமியங்களே குணாதிசயங்களாக உருப்பெறுகின்றன. ஒருசில குணாதிசயங்கள் பரம்பரை ரீதியாகவும் கடத்தப்படுவதுண்டு. இங்கு இயல்புகளின் தொடர்ச்சியினை பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு என்கின்றோம். குணாதிசயங்களின் தொடர்ச்சியினை பரம்பரைக் கூறுகளின் தாக்கம் என்கின்றோம். எனவே இயல்புகளும் குணாதிசயங்களும் ஒன்று போலத் தோற்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. உதாரணமாகக் கூறின் பசி என்பது இயல்பூக்கம் அச்சம் என்பது குணம்.


மனித இயல்புகளுக்கும் குணாதிசயங்களுக்கும் பால்
வேறுபாடுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
பொதுவாக மனித இயல்புகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆண், பெண் இருபாலாருக்கும் ஒன்றாகவே அமையினும் ஒருசில விடயங்களைப் பொறுத்தவரையில் வேறுபட்ட இயல்புகளும் உண்டு. மனித இயல்புகளின் மூலங்கள் அவரவர் உடற்கூற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில் ஆண் பெண் உடற்கூற்றுத் தன்மையில் உள்ள வேறுபாடுகள் அவர்களில் மாறுபட்ட இயல்புகளை உருவாக்கவும் காரணமாக அமைந்து விடுகின்றன. அதாவது பெண் தன் உடற்கூற்றில் கருப்பையைக் கொண்டவளாக இருப்பதனால்தான் கருத்தரிக்கும் இயல்புடையவளாக இருக்கின்றாள். அதுபோல ஆணின் உடற்கூற்றிற்கு ஏற்ப அவனது இயல்புகளும் அமைகின்றன. எனவே ஆண்பெண் இயல்புகள் என்ற வேறுபாடு இயற்கையாகவே நிர்ணயிக்கப்படுவதைக் காண்கின்றோம்.

குணாதிசயங்களை எடுத்து நோக்குவோமாயின், ஆணுக்குரிய குணாதிசயங்கள் என்றும் பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் என்றும் பிரித்தறியப்படுகின்றன. ஆயினும் இப்பாகுபாட்டிற்கு இயற்கை எந்த வகையில் காரணமாக இருக்கின்றது என்ற வினா எழும்புகின்றது. இதற்கு சில நடைமுறை அனுபவங்களே பதில் கூறும். எமது சமூகத்தில், ஆணாகப் பிறந்த ஒருவரை பெண்ணிற்கென விதிக்கப்பட்டுள்ள குணாதிசயங்களைக் கொண்டிருப்பானேயானால் அவன் பெண்ணைப்போல் இருக்கின்றான் எனவும் அதுபோல் பெண்ணாகப் பிறந்த ஒருத்தி ஆணுக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருந்தால் ஆணைப் போன்றவள் என்றும் கூறப்படுவது யாவரும் அறிந்ததே. எனவே ஒரு ஆணோ பெண்ணோ தமது உடற் கூறுகளில் மாற்றமில்லாமலேயே தத்தம் எதிர்ப்பாலுக்குரிய குணங்களைக் கொண்டிருக்க முடியும் என்ற உண்மையானது ஆண் பெண் குணாதிசயப் பகுப்புக்கள் என்பவை பால் வேறுபாடுகளின் இயற்கையான வெளிப்பாடுகள் இல்லை என்பதை நிரூபித்து விடுகின்றது. ஆகவே குணாதிசயங்கள் என்பவை மனிதனால் உருவாக்கப்படுபவை என்பது நிதர்சனமாகின்றது. இவ்வுருவாக்கம் அடிப்படையில் சமூகமயமாக்கல் என்ற செயற்பாட்டின் ஊடாக ஏற்படுத்தப்படுகின்றது. ஒரு சமூகமயமாக்கல் என்ற செயற்பாட்டின் ஊடாக ஏற்படுத்தப்படுகின்றது. ஒரு சமூகத்தில் மூத்த தலைமுறையினர் தமது இளைய தலைமுறையினரைச் சமூகத்தின் ஒரு அங்கமாக பழக்கப்படுத்துதலையே இச் செயல்முறை குறிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்தது முதலே இச் செயற்பாடு தொடங்கி விடுகின்றது. அதாவது குழந்தைகளுக்கு எத்தகைய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கின்றோமோ எத்தகைய விழுமியங்களைக் கற்பிக்கின்றோமோ அதனடியொற்றியே அவர்களது குணங்கள், மனோபாவங்கள், செயல்கள் என்பவை அமைந்து விடுகின்றன. இதன் வழியே அச்சமூகத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள், நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் முதலிய சகல விடயங்களும் இளைய தலைமுறையினர்க்கு ஊட்டப்படுகின்றன.

மேலும் இவை திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படும்போதும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும்போதும் முதலும் முடிவும் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவிற்கு மனித உணர்வுகளுடன் ஒன்றியதாகவும் சமூக கலாச்சாரத்தை பிரதிபலிப்பனவாகவும் ஆகிவிடுகின்றன. பிரசித்தி பெற்ற “ஓநாய்க் குழந்தைகள்” சம்பவம் எமக்கு எதைக் காட்டுகின்றது? வளர்க்கப்பட்ட மனிதக் குழந்தைகள் ஓநாயின் குணங்களைக் கொண்டிருந்தமை கற்றலின் அல்லது பயிற்றுவித்தலின் அதீதசக்தி எந்த அளவிற்குக் குணாதிசய உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதற்கு நல்ல சான்று.

ஆண் பெண் குணாதிசய வேறுபாடுகளும்
அவற்றின் தாற்பரியங்களும்
மனிதர்கள் குணாதிசயங்களைக் கொண்டிருத்தல் தவிர்க்க முடியாத விடயம் என்பதிலும் இத்தகைய குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் சமூகத்திற்குக் கடப்பாடு இருக்கின்றது என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கமுடியாது. மேலும் ஆண் பெண் இருபாலார் மத்தியிலும் இருக்கக்கூடிய இயல்புகளின் மாறுபட்ட தன்மை அவரவர் குணாதிசயங்களிலும் பிரதிபலிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதிலும் உடன்பாடு சாத்தியமானதே. ஆனால் நாம் இன்று காணக்கூடிய பால் அடிப்படையிலான குணாதிசய வேறுபாடுகளின் பின்னணியை மேற்குறிப்பிட்ட இயல்புகளின் மாறுபட்ட தன்மைக்குள் மட்டும் எல்லைப்படுத்தி விட முடிவதில்லை.

மானிட வரலாறு கூறுவதென்ன?
மனித வரலாற்றைச் சற்றுப்புரட்டிப் பார்ப்போமாயின் ஆதிமனிதனுக்கு குழுவாழ்க்கை என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தது. இயற்கையின் சீற்றங்களில் இருந்தும், மிருகங்களின் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கொள்ளவும் தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் இக்குழு வாழ்க்கையே அடிப்படையாக இருந்தது. சுருங்கக்கூறின் அன்று தனிமனிதன் என்ற நிலைப்பாட்டிற்கே இடமில்லாதிருந்தது எனலாம்.

மனிதரது வாழ்க்கையானது அச்சம் மிகுந்ததாக எங்கும் எக்கணமும் உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் மிக்கதாகக் காணப்பட்டது. எனவே மனிதனது வாழ்விற்குரிய இயல்பூக்கமானது குழுவாழ்க்கையில் இரண்டறக் கலந்து போயிருந்தது. குழுவில் அங்கத்தவர் அழிவு மலிந்து போயிருந்ததால் புதிய உயிர்களின் வரவு மிகவும் வேண்டிதாயிற்று. அதாவது மனித அழிவைக் கட்டுப்படுத்திக் கொள்ள ஒருவித உத்தரவாதமும் இல்லாதிருந்ததால் புதிய உயிர்களின் வருகையையும், வளர்ச்சியையும் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் மிகுந்திருந்த காலம் அது. ஆதி மனிதக் குழுவில் பெண் புதிய உயிர்களை உலகிற்குக் கொணரும் இயல்புடையவளாக இருந்தபடியால் அவளைப் பாதுகாத்து, போஷித்து வைத்திருக்க வேண்டிய தேவை. குழுக்களின் நீடிப்பிற்கு அத்தியாவசியமானது வியப்பிற்குரியதல்ல. மேலும் குழுப்புணர்ச்சி முறை மட்டுமே காணப்பட்ட நிலையில் குழு அங்கத்தவரிடையே ஆண் பெண் என்ற பால் வேறுபாட்டிற்கு அப்பால் தாய்பிள்ளைகள் என்ற உறவும் மட்டுமே அறியப்பட்டிருந்தது. எனவே குழுக்கள் பெண்ணை மையமாகக் கொண்டு உருப் பெறவும், தம்மை அடையாளம் கண்டு கொள்ளவும் செய்தன.

குழுவின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பது முழுக் குழு அங்கத்தவர்களது கடமையாக இருந்தபோதும் ஆண் பெண் இயல்புகளுக்கமைய அவரது கடமைகள் பகுக்கப்பட்டன. பெண்களின் முதல்நிலைக் கடமை குழந்தைகளைப் பெற்று வளர்த்துக் குழுவிற்கு அளிப்பதாக அமைய. ஆண்களுக்கு அது, உணவு தேடித் தம் குழுவினரைப் போஷிப்பதாய் அமைந்தது. ஒப்பீட்டு ரீதியில் நோக்கின், பெண்கள் கூடிய பாதுகாப்பான இடங்களிலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் தமது நடமாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டியவர்களாகவும் தமது கவனத்தைப் பெரும்பாலும் காய்கனி சேகரித்தல், பயிர்களை வளர்த்தல், நோய்கள் பற்றி அறிதல், அவற்றிற்கு வைத்தியம் பார்த்தல் போன்ற விடயங்களில் செலுத்துபவர்களாக விளங்கினர். ஆண்களோ இதற்குமாறாக பல இடங்களில் அலைந்து திரிந்து ஆபத்தான நிலைமைகளை எதிர்கொண்டு வேட்டையாட வேண்டியிருந்தது. அதனால் இவர்களது உடல் வலிமை பெருகியது மட்டுமன்றி இவர்களது கவனம் ஆபத்தினைச் சமாளிக்க புதிய உபாயங்களைக் கண்டுபிடிப்பதிலும், மிருகங்களை அழிப்பதற்குத் தந்திரங்களையும் ஆயுதங்களையும் கண்டுபிடிப்பதிலும் சென்றது.

இவ்வளர்ச்சி ஆதிமனிதரைக் காட்டுமிராண்டிகளாக இயற்கைக்கும் மிருகங்களுக்கும் பயந்திருந்த நிலையில் இருந்து மாற்றி தமக்குச் சவலாக இருந்தவற்றை எதிர்க்கவும், முடிந்தால் வாரப்படுத்திக் கொள்ளவும் கூடிய ஒரு நிலைக்கு இட்டுச் சென்றது. இது மனித உயிர்களின் அழிவைக் கட்டுப்படுத்தியதுடன் மட்டுமன்றி, தனிமனிதன் நீண்டகாலம் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூற்றினையும் நீடித்தது. இதற்குப் பின், மனித வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையைக் காண்கின்றோம். அதாவது மனிதன் தனது குழுவாழ்க்கையின் தொடர்ச்சிக்காக, இதுவரைகாலம் இருந்தது போன்று புதியவர்களின் வருகையில் மட்டும் தங்கியிருக்காது தனது எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமும் இதனைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் பெறுவதைக் காண்கின்றோம். இதுவரை ஆணும் பெண்ணும் குழுவின் அங்கத்தவர்களாக குழுவின் தேவைகளை ஒருவகையில் பூர்த்தி செய்ய கடமைப்பட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மத்தியில் ஆண் பெண் கடமைப்பட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மத்தியில் ஆண் பெண் வேறுபாடு என்பது பால் அடிப்படையிலான வேறுபாட்டையும் அதை ஒட்டிய உறவுகளைப் பொறுத்தும் இருந்ததே தவிர உயர்வு தாழ்வு என்ற கருத்திற்கு இடமிருக்கவில்லை. புதிய கண்டுபிடிப்புக்கள். அவரவர் புழங்கிய விடயங்களைப் பொறுத்து, ஆணாலும் மேற்கொள்ளப்பட்டன. பெண்ணாலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை முழுதும் குழுவின் பெயரில் வரவு வைக்கப்பட்டதுடன் குழுவின் சொத்தாகவே மதிக்கவும் பட்டன. ஆண் பெண் இருபாலாரும் ஒருவரில் ஒருவர் தங்கியிருந்தனர். அவர்கள் ஈடுபட்ட தொழில்கள் பரஸ்பரம் அனுசரணையானதாக இருந்ததே தவிர உயர்வு, தாழ்வோ அன்றி கூடிக் குறைந்த முக்கியத்துவமோ கற்பிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் இவர்கள் மத்தியில் இருந்து குழுப்புணர்ச்சி முறையானது இத்தகைய ஒரு குழுக்கட்டுமானத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவியது.

ஆயினும் மனித வரலாறு இத்துடன் நின்று போய் விடவில்லை. மனிதனது புதிய தேவைகளும் புதிய கண்டுபிடிப்புக்களும் அவனை வேட்டையாடி, காய்கனி புசித்து வாழ்ந்து நிலையிலிருந்து மிருகங்களை வளர்த்து உயிர்வாழ்ந்த நாடோடி வாழ்க்கை நிலைக்கு மாற்றி இறுதியில் நிரந்தரமாக ஒரு இடத்தில் குடியேறி வாழும் நிலைக்கு இட்டுச் சென்றது. பயிர்ச்செய்கை முக்கிய ஜீவனோபாயமாயிற்று. நிலம் சொத்துக்களில் ஒன்றாகியது. நிலத்தை பண்படுத்தி பயிர்செய்ய மனிதவளம் தேவையாயிற்று. சொத்துக்களை சுவீகரித்துக் கொள்ளவும் அன்றி அடைந்த சொத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் மனித குழுக்களுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது உடல் வலிமையும் ஆயுத வலிமையும் மிக்க குழு மற்றதை வென்று உடமையைத் தனதாக்கிக்கொண்டது. தோற்றுப் போன குழுவின் உயிர்தப்பிய மனிதர்கள் வென்ற குழுவின் அடிமைகளாயினர். எனவே ஒரு குழுவின் நிச்சயத்தன்மை என்பது அதன் வலிமையில் சொத்துக்களைச் சேர்த்து பராமரிக்கின்ற, எதிரிகளை வெல்லுகின்ற வலிமையில் பெரிதும் தங்கியிருக்கலாயிற்று. குழுக்களில் ஆண்கள் உடல் வலிமை மிக்கோராகவும், எதிரிகளுடன் போராடிப் பழக்கப்பட்டவர்களாகவும் ஆயுத பாவனையில் தேர்ச்சிமிக்கவர்களாகவும் இருந்தமையால் புதிய சமூக அமைப்பில் குழுவின் நீடிப்பினை நிலைநிறுத்தும் பணி அவர்களையே சார்ந்தது. இங்கு குழுவின் மையம் பெண்ணைவிட்டு அகன்று ஆணைச் சூழ்ந்து கொள்வதைக் காண்கின்றோம். மனிதன் நிரந்தர குடியேற்ற நிலைக்கு முன்னேறியதைத் தொடர்ந்து மக்கள் தொகைப்பெருக்கமும் சொத்துக்களின் பெருக்கமும் ஏற்பட்டன. இவற்றைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் அதிகார அமைப்புக்களும் தேவைப்பட்டன. மேலும் இவற்றை அடைய குழு அங்கத்தவரிடையே, அதாவது ஆண்களிடையே போட்டி ஏற்பட்டு பலவான் குழுத்தலைமையையும் சொத்துக்களையும் தனதாக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இது இதுவரை காலமும் இருந்து வந்த குழுப்பிணைப்பில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. நிலம் மிருகங்கள் அடிமைகள் முதலிய இன்னோரன்ன அம்சங்கள் பொதுச் சொத்தாக கருதப்பட்டநிலை மாறி மனிதனிதர்களின் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டன. உடல் வலிமையும் ஆயுதங்களைக் கையாளும் ஆற்றலும் இவற்றைப் பெற்றுத்தரும் அடிப்படைக் காரணிகளாகியபோதும் சொத்துக்களின் பெருக்கம் காலகதியில் வேறு பல அதிகாரங்களையும் ஒருவருக்கு அளித்தது. மனித உறவுகளில் அடிப்படையாகக் கொண்டு சொத்துள்ளவன், சொத்தற்றவன் என்றும் ஆண்டான் அடிமை என்றும் புதிய உறவுகள் பிறந்தன. மனிதர்கள் பரஸ்பரம் தங்கியிருந்த நிலைபோய் பலர் ஒருசிலரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதன் பிரதிபலிப்பு பெண்களைப் பொறுத்த வரை எவ்வாறு அமைந்ததெனப் பார்ப்போம்.

மனித குழுக்கள் தமது குழுநீடிப்பிற்காகவும் குழுப் பாதுகாப்பிற்காகவும் பெண்களில் தங்கியிருந்த நிலை மாறி தற்போது பெண் தன் பாதுகாப்பிற்காகவும், ஜீவனோபாயத்திற்காகவும் ஆணில் தங்கியிருக்க வேண்டியவளானாள். முன்னையது இயற்கையின் விளைவாக இருக்க பின்னையது மனிதரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகியது. ஆண் தன் சொத்துக்களைத் தன் சொந்த வாரிசுக்கு கையளிக்க வேண்டி, குழுப் புணர்ச்சியில் பெண்ணுக்கிருந்த சுதந்திரத்தை மறுத்ததுடன், தனது உரிமையை மட்டும் அவர்களில் நிலைநிறுத்திக்கொண்டான். பெண்ணானவன், சமூகத்திற்கு வாரிசை வழங்கிய கடமையிலிருந்து மாறி தனி மனிதனது வாரிசைப் பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு உடையவளானாள். அவளுக்கும் சமூகத்திற்கும் இருந்த நேரடித் தொடர்பும், பங்களிப்பும் குறுக்கப்பட்டு அல்லது முடக்கப்பட்டு ஆணைச் சார்ந்தவளாக அவனது நலம் பேணுபவளாக எல்லைப்படுத்தப்பட்டாள். இங்கு பெண்மை என்பது தாய்மையின் சின்னமாக இருந்த நிலைமாறி போகத்தின் சின்னமாக்கப்பட்டது. சுருங்கக்கூறின் ஆண் ஆதிக்கமும் ஆண்வழிச் சமூகத் தொடர்ச்சியும் பெண்ணை ஆணின் அடைக்கலப் பொருளாக்கியது. ஆண் ஆதிக்கம் நிலைபெறவே சமூகத்தில் சகல அம்சங்களும் அதாவது வாழ்க்கை முறைகள், தொழிற்பகுப்புக்கள், அதிகார அமைப்பு, ஆட்சிமுறை, பொருளாதார முறை, சொத்துரிமைகள், சட்டங்கள் முதலியன ஆணை முதன்மையாகக் கொண்டே தோற்றம் பெற்றன. இதன் சாராம்சத்தை சமூகத்தின் மேல் கட்டுமானங்களாகிய நம்பிக்கைகள், விழுமியங்கள், நெறிமுறை போன்றவை அப்படியே உள்வாங்கிக்கொண்டன. இவை காலம் காலமாக வலியுறுத்தப்பட்டுப் பேணிப் பாதுகாக்கப்பட்டும் வந்ததன் விளைவாக சமூக கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துபட்டுப் போனமை ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

இவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ஆணும் பெண்ணும் வார்த்தெடுக்கப்பட்டார்கள். ஆண் முதன்மையானவனாக, ஆளும் குணம் உள்ளவனாக, சமூகநலன் பேணுபவனாக, ரட்சிப்பவனாக, போற்றப்பட வேண்டியவனாக, சுகங்களை அநுபவிக்க வேண்டியவனாக சித்திரிக்கப்பட, பெண்ணோ ஆணில் தங்கியிருக்க வேண்டியவளாக, அவனது பாதுகாப்பில் இருக்க வேண்டியவளாக, அவனது சுகம் பேணுபவளாகவும், சிசுரூஷைகள் செய்ய வேண்டியவளாகவும் வடிக்கப்பட்டாள். மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டை செவ்வனே நடைமுறைப்படுத்திக்கொள்ளும் வகையில் அவரவர் குணாதிசயங்களும் ஆற்றுப்படுத்தப்பட்டன.

ஆண் வீரம் உறுதி ஆகிய குணங்களைக் கொண்டவனாகவும், பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய குணாதிசயங்களைக் கொண்டவளாகவும் விளங்கக் கற்பிக்கப்பட்டனர். இவற்றின் வார்படங்களாக நாளாந்த சமூகமயமாக்கற் செயல் முறைகள் மட்டுமல்ல, மதங்கள், இலக்கியங்கள், சமூக நெறிமுறைகள் மற்றும் சகல சமூக நிறுவனங்களும் தொழிற்படலாயின.

இன்றைய நிதர்சனம் என்ன?
உலகில் எதுவும் ஸ்தம்பிக்கப்பட்டு போவதில்லை. எவையும் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பன. இருப்பினும் இம்மாற்றத்தின் வேகத்திலும், போக்கிலும் தான் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதன்படி மானுட சமூகமானது பல்கிப் பெருகியதுடன் மட்டுமன்றி அதன் சகல அம்சங்களும் ஆழ்ந்து, அகன்று, விரிந்து பரந்த இன்றைய நிலையினை அடைந்துள்ளன. இச்செயல் முறையினூடே பழையன கழிதலும் புதியன புகுதலும் ஈடேறிக்கொண்டு வந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்விதிமுறைக்கு ஆண் பெண் சமூக நிலைப்பாடுகள் விலக்க இல்லை இல்லையாயினும் இவ்விடயம் குறித்த மாற்றங்கள் எத்தகைய போக்கையும், வேகத்தையும் பிரதிபலித்து வந்துள்ளன என்பதினை நோக்க வேண்டியது அவசியமானதொன்றாகும்.

இன்று ஆண் பெண் தொழில் பிரிவில் பாரிய மாற்றங்களைக் காண்கின்றோம். பொருளாதார உற்பத்தியானது குடும்ப மட்டத்திலாயினும், சமூக மட்டத்திலாயினும் ஆண் பெண் இருபாலரது பங்களிப்பையும் வேண்டி நிற்கின்றது. இங்கு பெண்கள் பொருளீட்டலில் ஈடுபடுவது ஆண்களுக்கு கௌரவக் குறைச்சலாகப் போய்விடவில்லை. மாறாக, கல்யாணச் சந்தையில், சம்பாதிக்கும் பெண்ணுக்கு முதலிடம் கொடுக்கப்படுவதும் அல்லது திருமணத்தின் பின் மனைவியை வேலை செய்ய அனுப்புவதும் சகஜமாகி வருவதுடன் இவை நவீன வாழ்க்கைச் செலவை முகம் கொள்வதற்கான நிர்ப்பந்தங்கள் என்றும் சமாதானம் செய்துகொள்ளப்படுகின்றன. அடுத்ததாக பாதுகாப்பு என்பது ஆணையும் பெண்ணையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசு எனும் சமூக நிறுவனத்தின் பொறுப்பாகவுள்ள ஆணின் ஆதிக்க உரிமை பலவீனப்பட்டுப் போயுள்ளது.

இவ்வாறு ஆண் பெண் நிலைப்பாடு குறித்து அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்பட்டும் கூட இவற்றின் நேரடியான பிரதிபலிப்பினை இவைகள் சார்ந்த விழுமியங்களில் காணமுடியாதிருப்பது துர்ப்பாக்கியமே. இதிலும் ஆண் சம்பந்தப்பட்ட விழுமியங்களில் பழக்கவழக்கங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், பெண்கள் விடயத்திலும் பெரிதும் இறுகிப் போய்விடுவதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக எமது சமூகத்தில் “வேட்டி” காற்சட்டையாகவும் குடுமி “குறப்” ஆகவும் மாற்றம் பெறுவதை அத்தியாவசியமாக கொண்டுள்ள சமூகம், சீலை வேற்று உருவம் எடுக்கும்போது கலாச்சாரம் சீரழிவாக கவிபாடிச் சாடுவது விந்தையானதே!.

மேலும் மனித ஏற்றத்தாழ்வுகளை, வர்க்க பேதங்களை மனித வரலாற்றின் சாபக்கேடுகளாக எண்ணிக் களைந்து விட்டு புதிய சமூக பரிமாணத்தை நோக்கிப் புரட்சிக் கொடி நாட்டவோகூட ஆண்பெண் சமத்துவம் என்ற விடயம் வரும்போது அடங்கிப்போய் விடுவதும், சில சந்தர்ப்பங்களில் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கின்ற ஆசாரபூதிகளாகி விடுவதும் நடைமுறை காட்டிய, காட்டி வருகின்ற உண்மைகள். இது மட்டுமன்றி, சத்துக்களையும் அசத்துக்களையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் புத்திஜீவிகள் கூட பெண் நிலைப்பாடு பற்றிய கணிப்பில் பெரும்பாலும் புறம்தள்ளிப் போய்விடுகின்றமையைக் காண்கின்றோம்.

எனவே மனித வாழ்க்கையில் குறிப்பாக மனித விழுமியங்களில் மாற்றங்கள் என்பது பெண்ணைப் பொறுத்தவரையில் பாரபட்சமாகவே நடந்தேறி வந்துள்ளது. இன்றும் கூட, அதாவது ஒரு ஆண் ஆதிக்க சமூகத்தின் ஆணிவேராக இருந்திருக்கக்கூடிய அம்சங்கள் தூர்ந்துவிட்ட நிலையிலும் கூட அவை கொண்டிருந்த விழுமியங்களை விழுதுகளாக வேரூன்ற வைத்துக் கொள்வதன் மூலம் ஆணாதிக்க விருட்சம் இன்றும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வருவதைக் காணலாம். இத்தகைய வேர்களுக்கு நீர் வார்ப்பனவாக விளங்குவன பல. இவற்றுள் மிகவும் எளிமையானதும் ஆனால் வலிமை பொருந்தியதுமான ஒரு சாதனமாகக் கருதப்படக் கூடியது முதுமொழிகள் எனக் கூறப்படும் சமூகக் கூற்றுக்களாகும்.

சமூகக் கூற்றுக்களும் அவற்றின் தாக்கங்களும்.
சமூக விழுமியங்களையும் நெறிமுறைகளைம் வெளிப்படுத்துகின்ற, வற்புறுத்துகின்ற சாதனங்களுள் மிகமிகச் சாதாரணமானதும் நாளாந்த வாழ்க்கைச் சம்பவங்கள் முதற் கொண்டு, பெரும் இலக்கியச் சொற்பொழிவுகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் சமயப் பிரசாரங்கள், நீதி நெறி அறிவுறுத்தல்கள் முதலிய சகல துறைகளிலும் இலகுவாகக் கையாளக்கூடியதாக இருப்பதை சமூகக் கூற்றுக்களாகும். இவை பாமரர், பண்டிதர் வரை பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை மட்டுமல்ல ஒருவர் தனது கருத்தை அறுதியிட்டுக் கூறும் வகையில் கையாளப்படக்கூடியன.

சமூகக் கூற்றுக்கள் என்பவை, ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூறவோ அன்றி எடுத்துக்காட்டாகக் கொள்ளவோ, தொன்று தொட்டு வழங்கப்படுகின்ற சொற்பிரயோகங்கள் ஆகும். இவை யாரால் உருவாக்கப்பட்டன? எப்போது உருவாக்கப்பட்டன? எனக் குறிப்பிட்டுக் கூறமுடியாதவை. இருப்பினும் சமூகத்தில் விடயங்களை தீர்மானித்துக் கொள்ளவோ அன்றி ஊர்ஜிதம் செய்துகொள்ளவோ அல்லது அறிவுறுத்தவோ ஒரு அதிகார பூர்வமான மேற்கோளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்”, “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”, “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” முதலிய கூற்றுக்களைக் கூறலாம். சமூகக் கூற்றுகள் இவ்வாறு மானுடத்துக்குத் தேவையான நீதியினை நெறிமுறையினை, உண்மையினை வலியுறுத்துவனவாக இருக்கும் அதேவேளையில் கருத்துக்களை மக்கள் மத்தியில் பதிய வைப்பதிலும் குணநலன்களை வளர்த்தெடுப்பதிலும் கூட, சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடியனவாக இருக்கின்றன.

இன்று, ஆண்பெண் உறவுமுறைகள், குணாதிசயங்கள், சிறப்பு இயல்புகள் முதலியனவற்றைக் குறிக்கும் எத்தனையோ வகையான கூற்றுக்கள் சமூகத்தில் புழக்கத்தில் இருப்பதைக் காண்கின்றோம். இவை யாவும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது மிகச் சாதாரணமானதாகத் தோற்றமளிப்பினும் அவற்றைப் பயன்படுத்துகின்ற சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து வலிமை மிக்கவையாக தாக்கம் மிக்கவையாக ஆகிவிடுகின்றன என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. ஆக்கபூர்வமான சிந்தனைகள் செயல்கள் என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய கூற்றுக்களின் பிரயோகங்கள் வரவேற்கத்தக்கவையே. ஆனால் அழிவுசார்ந்த கூற்றுக்கள் மறக்கப்பட வேண்டியவை. ஆனால் இவை ஒரு ஆண் ஆதிக்க சமூக விழுமியங்களைக் கட்டுக்காத்துக் கொள்வதற்காக மிகவும் இலாபகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆண்பெண் குணாதிசயங்கள் சம்பந்தப்பட்ட சமூகக் கூற்றுக்களை எடுத்துக் கொள்வோமாயின் இவை ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து அதன் குணச்சித்திரப் பண்புகளையும், உலக கண்ணோட்டத்தையும் நிர்ணயிக்கின்றவையாகி விடுவதைக் கூறும் சந்தர்ப்பங்கள் எத்தனையெத்தனையோ அன்றாம வாழ்வில் நடந்தேறுகின்றன.

குழந்தை பிறந்ததும் ஆணா? பெண்ணா? என்று
அறிந்து கொள்ளும் ஆணவமானது அத்தோடு நின்றுவிடாமல்,
சாண்பிள்ளை யானாலும் ஆண்பிள்ளை என்ற முத்தாய்ப்பை
அல்லவா வைக்கச் சொல்லுகிறது!

உயிர்ப்பிலும் ஜனனிப்பிலும் வேறுபாடு காணாத இரு சிசுக்கள் உலகின் பார்வையில் பேதப்படுத்தப்படுவது இங்குதான் முதல்முதலாக அரங்கேற்றப்படுகிறது. இவ்வாறு பிறப்பில் பெற்றுக்கொண்ட முத்திரைகள் வாழ்நாள் முழுதுமே தொடர்வதைக் காணலாம். வளர்ச்சியின் உன்னதமான காலப்பகுதி, உடல் உள வளர்ச்சி மட்டுமல்ல குழந்தை உலகைப்புரிந்து கொள்வதற்கான அஸ்திவாரமே போடப்படும் காலம் இது. இக்காலத்திலேயே குழந்தையை சமூகமயப்படுத்துவதற்கான முதலடி எடுத்து வைக்கப்படுகின்றது. இக் காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வளர்க்கப்படுகின்றனர்? ஆண்பிள்ளைகளை பயமற்றவர்களாக, வீரம் மிக்கவர்களாக, தன்னம்பிக்கை உடையோராக, சுயமாக இயங்கக்கூடியயோராக வளர்க்கும் அதே வேளையில் பெண்பிள்ளைகள் பயந்தவர்களாக, மற்றவர்களில் சார்ந்து நிற்க வேண்டியோராக, தமது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாக வளர்க்கப்படுகின்றனர். உதாரணமாக உரத்துச் சிரிக்க வேண்டியது நியாயமான சந்தர்ப்பமாக இருத்தலும் கூட.

“பொம்பிள்ளை சிரிச்சால் போச்சு
போயிலை விரிச்சாப் போச்சு”.

என்ற ஒரு வார்த்தையில் ஒரு இனம் புரியாத அச்சத்தையும் குற்ற உணர்வினையும் அந்த இளமனதில் ஊட்டிவிடுகின்றனர். அவளது உணர்வுகளின் இயல்பான வெளிப்பாட்டிற்கு தடைபோட்டு அவளைத் தன்னுள்ளே ஒடுங்கிப்போகச் செய்கின்றனர்.


கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் இன்று எமது நாட்டில் பெண்ணுக்குக் கல்விச் சந்தர்ப்பங்கள் முற்று முழுதாக மறுக்கப்படவில்லையாயினும் இன்றும் கூட ஒரு சில சமூகங்களில்,

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு”

என்ற மனோபாயம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு முளையிலேயே அறிவுக்குத் தடைபோட்டு விடும் சமூகம் பின்பு.

“பெண்புத்தி பின்புத்தி” என்றும்,
“பெண்ணின் அறிவு அகப்பைக் காம்பளவே”

என்றும் ஏளனம் செய்யவும் தவறுவதில்லை. இது உண்மையிலேயே அறிவாற்றல் அற்ற அல்லது குறைந்த பெண்களைக் குறிப்பிட்டாரும் கூட அறிவிலும் ஆற்றலிலும் தீர்க்கமான பெண்பிள்ளைகளைக் கூட சமூகம் அவ்வளவு சுலபமாக அங்கீகரித்து விடுவதுமில்லை. ஏனெனில் ஆணின் அறிவு அதிகாரம், பெண்ணின் அறிவு அகங்காரம் என்ற கண்ணோட்டம் இலைமறைக்காயாக இன்றும் எமது சமூகத்தில் இருக்கத் தான் செய்கின்றது.


சமூகக்கூற்றுக்களின் வகைகள்.
பொதுவாக பெண் குணாதிசயங்கள் குறித்த சமூகக் கூற்றுக்களைப் பல வகையினவாக அடையாளம் காணலாம். பெண்களின் அங்க அமைப்புக்களைக் கொண்டு அவர்களது குணாதிசயங்களை நிர்ணயிப்பவை ஒரு வகை, உதாரணமாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

“கெண்டைக்கால் சிறுத்தவளும் கொண்டை
பெருத்தவளும் கொண்டவனுக்கு ஆகாள்”

நடத்தைகளைக் கூறுவதன் மூலம் அவர்களது குணங்களைக் கோடிட்டுக் காட்டும் கூற்றுக்களும் உண்டு. அவற்றுள் ஒருசில.

கொலையும் செய்வாள் பத்தினி.
பெண்ணின் ஆயுதம் கண்ணீர்.
ஒரு செய்தியை அம்பலப்படுத்த
வேண்டின் பெண்ணிடம் சொல்.
பிடிவாதம் பெண்ணுடன் கூடப் பிறந்தது.
பெண் என்றால் பேயும் இரங்கும்.

ஒரு சில கூற்றுக்கள் ஒப்பிட்டு ரீதியானவை.

சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே.
ஆயிரம் ஆண்கள் ஒற்றுமையாக கூடி வாழமுடியும்@
ஆனால் இரண்டு பெண்களால் முடியாது.
பெண் தீமை செய்தில் ஆண்களை விட அறிவாளி.

சில கூற்றுக்கள் போற்றத் தகுந்த குணங்களைப் பெண்களுக்கு உரிய குணங்களாக முத்திரையிட்டுக் காட்டினாலும், அவற்றின் பயன்பாட்டை நோக்கும் போது அதில் ஒரு சுரண்டல் தன்மை (நுஒpடழவைழசல யெவரசந) பொதிந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக.

பெண் பொறுமையின் சின்னம்.
பெண்ணுக்கு அழகு அடக்கம்.

முதலிய கூற்றுக்களைக் கூறலாம். இத்தகைய அழகான சட்டகற்களில் அவளை அடக்கி விடுவதனால் நியாயமான சந்தர்ப்பங்களில் கூட இவற்றை மீறுவது கஷ்டமான ஒன்றாகிவிடுகின்றது. அவ்வாறு மீறிவிடும் சந்தர்ப்பங்களில் அது ஒரு குற்றமாகவும், நியதிக்கு மீறிய செயலாகவும் கணிக்கப்பட்டு விமர்சிக்கப்படுகின்றன. பெண் குணாதிசயங்கள் குறித்த சமூக கூற்றுக்கள் எமது நாட்டிலும் சமூகங்களிலும் மட்டுமல்ல ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், எல்லா சமூகங்களிலும் புழக்கத்தில் இருப்பதை அறிய முடிகின்றது. இதுமட்டுமன்றி அவை குறித்து நிற்கின்ற அர்த்தங்களும் ஒரேமாதிரியான தன்மை உடையனவாக அமைந்துள்ளன.

பின்வரும் கூற்றுக்கள் இதற்கு நல்ல உதாரணங்கள்.
ஒரு பெண்ணைச் சிந்திக்க வைப்;பதை விட நடமாட வைப்பது சுலபம் (ஹங்கேரி)
பெண் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும். வாத்துக்கள் இருக்கும் இடத்தில் கொக்கரிப்பு இருக்கும் (அயர்லாந்து).
ஆண்கள் இதயத்தால் சிரிப்பர்.
பெண்கள் உதடுகளால் மட்டுமே சிரிப்பர் (அரேபியா)

உண்மையில் இக்கூற்றுக்கள் கூறுவதென்ன? இவை எதனை வலியுறுத்த முயலுகின்றன?

இக்கூற்றுக்களில் குறைந்த பட்சம் இரண்டு யுக்திகள் பொதிந்து இருப்பதைக் காணலாம். ஒன்று சமூகம் எதிர்பார்க்கின்ற ஆண்பெண் குணாதிசய வார்ப்பு வெற்றிகரமாகவும், சுமுகமாகவும் நடந்தேற ஆரம்பம் முதலே அதாவது பிள்ளைப்பராயம் முதலே ஆண்களையும் பெண்களையும் குறிப்பிட்ட குணாதிசய வடிவமைப்புக்குள் வழிப்படுத்தும் வகையிலானவை. இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் “வஞ்சப் புகழ்ச்சி” முறையும் ஆங்காங்கே பயன்படுத்திக் கொள்ளப்படுவதையும் காண்கின்றோம். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஆண்களைவிட பெண்களின் குணாதிசய உருவாக்கத்திலேயே சமூகம் கூடிய அக்கறை காட்டி வந்துள்ளமையாகும். அடுத்த யுக்தியானது மறைமுகமான (iனெசைநஉவ) தாக்கத்தை அளிப்பது. அதாவது சமூகம் முன்வைத்துள்ள குணாதிசய சட்டகத்தை மீறிவிடுகின்ற பட்சத்தில் - சிறப்பாகப் பெண்கள் எச் சந்தர்ப்பத்திலும் மீறி விடாமல் இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவும் இவை பயன்படுகின்றன. இங்கு அவதானிக்கக் கூடிய இன்னுமொரு அம்சம் என்னவெனில், குணாதிசய வார்ப்புக்கள் ஆண்பெண் இருபாலாருக்கும் உரியதாயினும், ஆண் குணாதிசய வலியுறுத்தலைப் பிரதிபலிக்கும் கூற்றுக்கள் ஒப்பிட்டளவில் மிகக் குறைவான எண்ணிக்கையுடையனவாகவும், இவை யாவும் பெரும்பாலும் ஆக்க சார்புடைய பண்பினைக்கொண்டவையாகவும் இருப்பதனைக் காணலாம். மேலும் இவை மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், ஆண்கள் தண்டனைக்கோ, இகழ்ச்சிக்கோ உட்படுத்தப்படுவதில்லை. மாறாக இத்தகைய மீறல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. அல்லது சமாதானப்படுத்தப்படுகின்றன. “சேறு கண்ட இடத்தில் மிதித்தல் தண்ணீர் கண்ட இடத்தில் கழுவிக்கொள்ளல்” ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் அன்றி வேறில்லை. எனவே ஒரு ஆண் ஆதிக்க சமூக விழுமியங்களைக் கட்டிக் காக்கும் குணாதிசயப் பகுப்பைச் சமூகத்தில் தொடர்ந்து தங்கவைத்துக் கொள்வதற்காக மிகவும் சாதுர்யமாகக் கையளிக்கப்படுகின்ற ஆயுதங்களே இத்தகைய கூற்றுக்களின் பிரயோகங்களாகும். ஏற்கனவே கூறியது போல சமூகக் கூற்றுக்கள், மூலம் அறியப்படாதவை ஆயினும் சமூகத்தில் வாழையடி வாழையாக புழங்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்திக் கொள்வோரும் கூடிக் குறிப்பு தேடுவதில்லை. ஆண்கள், பெண்கள், பாமரர்களும் கையாளுகின்றனர். பண்டிதர்களும் கையாளுகின்றார்கள். வெகுஜன சாதனங்களும் தமது பங்கை விட்டு வைக்கவில்லை. இவ்வாறு திரும்பத்திரும்ப பல கோணங்களில் இருந்தும் வலியுறுத்தப்படுவது ஒருபுறம் ஆணை ஒரு ஆக்கபூர்வமான ஆளுமை வளர்ச்சிக்கும் பெண்ணை பலவீனமான, தங்கியிருக்கும் தேவை கொண்ட ஆளுமை வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லுகின்றது. மறுபுறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு போலியான குணாதிசய பிரமையை வலிந்து சுமத்துகின்றது. இன்றைய நவீன யுகத்தின் தேவைகளினதும், நடைமுறைகளினதும் பின்னணியில் நோக்கும் போது மேற்குறித்த குணாதிசய வார்ப்புக்கள் காலத்திற்கு ஒவ்வாதனவாகவும், தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதனவாகவும் போயிருப்பதை இன்று ஆண்களும் பெண்களும் முகம் கொள்ளுகின்ற ஒரு சில உளம்சார் பிரச்சினைகளை கூர்ந்து நோக்கும்போது விளங்கிக்கொள்ளலாம். இதன் தாக்கம் தாம்பத்திய, குடும்ப, சமூக வாழ்க்கை போன்ற சகலவற்றிலும் ஊடுருவி நிற்கின்றன. இந்நிலை மனித குணாதிசய உருவாக்கம், ஆண்பெண் என்ற அடிப்படையிலன்றி, ஒரு புதிய வார்ப்பின் அடிப்படையில் நடந்தேற வேண்டிய அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. ஆனால் இத்தகைய ஒரு முயற்சி ஆணாதிக்க விழுமியங்களின் கீழ் அனுபவிக்கக்கூடிய சுகங்களையும் சலுகைகளையும் பலி கொண்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ இது குறித்த அவதானமும் சிரத்தையும் எமது சமூகத்தில் அருகியே காணப்படுகின்றன. மாறாக பொய்மைக்குப் புத்துயிர் அளிக்கும் போக்கே இன்னும் தொடர்கின்றது.

பெண்களின் இரண்டாம் தரநிலை
அல்லது கீழ்நிலை அந்தஸ்துடன்
தொடர்பான பொய்மைகளும் உண்மைகளும்.
சுல்பிகா
1. அறிமுகம்
முதலில் இரண்டாம் தரநிலை அல்லது கீழ்நிலை அந்தஸ்து என்பதால் குறிப்பிடப்படுவது யாது என விளங்கிக்கொள்வது அவசியமாகும்.

உயிரியல் ரீதியாக ஆண்களும் பெண்களும் சமபெறுமானமுள்ள அந்தஸ்துடையவர்களாகவே காணப்படுகின்றனர். அதாவது உடமைப்பு, உடற்றொழிற்hபடு ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அவ்வேறுபட்ட உடலமைப்பு, உடற்றொழிற்பாடு ஆகியன சம பெறுமானமுடையவை. ஒன்றினது அமைப்பையோ, தொழிற்பாட்டையோ இன்னொன்று ஈடுசெய்ய முடியாது. இந்நிலையில் சமூக நோக்குகள் இவ்விரு வேறுபட்ட நிலைகளையும், சமமற்ற பெறுமானமுடையனவாக எடுத்துரைக்க முயல்கின்றன. அத்துடன் ஆணி; உடலமைப்பும் தொழிற்பாடும் அதனுன் கூடிய பிற அம்சங்களும் உயர்ந்த அந்தஸ்துடையனவாகவும், பெண்களின் உடலமைப்பும், தொழிற்பாடும் அதனுடன் கூடிய பிற அம்சங்களும் குறைவான கணிப்பிற்குரியனவாகவும் எடுத்துரைக்கப்படுகின்றன. இவ்வம்சம் தனிமனிதனின் உயிரியல் அமைப்பு என்ற நிலையிலிருந்து விஸ்தரிக்கப்பட்டு சமூக அம்சங்களிலும் பிரதிபலிக்கப்படுகின்றது.

அதாவது மேற்கூறிய அம்சங்களின் அடிப்படையில் அமைந்த சமூக, பொருளாதார, அரசியல் போன்ற ஆண்களும் பெண்களும் ஈடுபடும் துறைகளிலும் அந்தஸ்து வேறுபாட்டினையும், குறிப்பாக பெண்களுக்கு குறைவான அந்தஸ்து நிலைகளையும் வழங்குகின்றன. எனவே பெண்களுடன் தொடர்பான எல்லா விடயங்களிலும், பெண்களின் கீழ்நிலை அந்தஸ்து பிரதிபலிக்கக்கூடியதாக சமூகக் கருத்தாக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக வீட்டில் பெண்களின் பங்குநிலை, (கடமைக்கூறு) வெளியுறவுநிலை, சுதந்திரமான நடமாட்டம், உடலியல் அம்சங்கள் போன்ற எல்லா அம்சங்களிலும் சமூக நோக்கு இவ்வாறே அமைந்துள்ளது. அடிப்படையில் பெண்களின் உடல் வலிமையின்மையும், இனப்பெருக்கத் தொழிற்பாடும் இதற்கான காரணமாக கூறப்பட்டு நியாயப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான சமூக நோக்கு எவ்வாறு உருவாகியது என்பது பற்றிய அறிவதற்கு பால் நிலைப்பாடு பற்றிய எண்ணக்கருவின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிவது பயனுடையதாகும்.

ஆதிகால மனிதக்குழுக்கள், இடம்விட்டு இடம்பெயர்ந்து அதாவது நாடோடிகளாக வாழ்ந்து வந்தன. இவ்வாறான அவர்களது வாழ்க்கைமுறை உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் காட்டில் வெகுதூரம் அலையும் சந்தர்ப்பங்களை உருவாக்கியது. பெண்களுக்கு இயற்கையான மாதவிலக்கு உபாதை காரணமாகவும் குழந்தைப்பெறு, குழந்தைப் பராமரிப்பு காரணமாகவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பல இடைஞ்சலங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. இதனால் பெண்கள் வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவேண்டியேற்பட்டது. அத்துடன் வீட்டில் உறைவிடங்களில் தங்கும் நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆண்கள் வெளியில் செல்பவர்களாகவும் இக்கால கட்டங்களில் பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாகவும் உணவளிக்க வேண்டியவாகளாகவும் ஆகினர். இந்நிலைமை காரணமாக ஆண்கள் சமூகக் குழுவில் உயர் அந்தஸ்துடைய நிலையைப் பெறத் தொடங்கினர்.

அத்துடன் ஆண்களுக்கு வெளியில் செல்லும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இதனால் அவர்களுக்கு ஏனைய ஆண்களுடன் அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்களும் கிட்டின. இது அறிவை விருத்தி செய்து கொள்ளவும் வழிவகுத்தது. அதேவேளை பெண்கள் வீட்டில் தங்குபவர்களாகவும், உணவு சேமிப்பு, பாதுகாப்பு, பதனிடல் போன்றவற்றில் உதவுபவர்களாகவும் இருந்து குழந்தை பெறுதல், பராமரித்தல், வீட்டு முகாமை போன்றதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் காரணமாக பெண்களுக்கு பொது (சமூக, அரசியல், பொருளாதார) அறிவு குறைவாகக் கிடைத்தது.

இவ்வாறான நிலைமை பெண்களைத் தங்கி வாழ்பவர்களாகவும், ஆண்களை பராமரிப்பு வழிகாட்டுபவர்களாகவும் ஆக்கிற்று. அதாவது பெண்களை பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் ஆண்களில் தங்க வேண்டியவர்களாக்கிற்று. அத்துடன் நுண்ணறிவு வளர்ச்சிக்கு இடமின்மையால் அனுபவ அறிவுக்குறைவு காரணமாக திறமையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஆண்களில் தங்குபவர்களாகவும் மாறினர். இந்நிலைமையே பெண்களுக்கு சமூக ரீதியாக கீழ்நிலை அந்தஸ்து உருவாகக் காரணமாயிற்று.

இக்கருத்தாக்கம் மேல்நிலை அந்தஸ்து பெற்ற குழுவினர்க்கு சாதகமாக அமைந்ததால் அவர்கள் இதனை சட்டபூர்வமாக்க நியதிகளையும் நியமங்களையும் உருவாக்கி, அதன் மூலம் இவற்றனை நிலைப்படுத்தவும் முனைந்தனர். பாலியல் ரீதியான உடலமைப்புக் காரணமாக பெண்கள் பிற ஆண்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலையை உருவாக்கினர். அத்துடன் பெண்கள் உடலமைப்பும், அவர்களது இனப்பெருக்கத் தொழிற்பாடும் கூட கீழ்நிலை அந்தஸ்துக்குரிய அம்சங்களாக கணிப்புப் பெற்றன. அத்துடன் பாலியல் நுகர்ச்சிக்குரிய பண்டமாகவும் பெண்கள் உருவமைக்கப்பட்டனர்.

ஆயினும் சமூக மாற்றம் நாளடைவில் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளிலும் மனிதக்குழுவின் ஒவ்வொரு அங்கத்தவரினதும் முழுமையான பங்குபற்றுதலையும், பங்களிப்பையும் வேண்டிநின்றது. இதன் காரணமாக பெண்கள் சகல சமூக அபிவிருத்தித் துறைகளிலும் ஈடுபட ஆரம்பத்தனர். கல்வி கற்றல், ஊதியம் தரும் உழைப்பு வேலைகளில் ஈடுபடல், ஏனைய சமூக அபிவிருத்தி வேலைகளில் பங்குபற்றுதல், முன்னெடுத்துச் செல்லுதல் போன்றன இவற்றில் முக்கியமானவை.

இவ்வாறான வளர்ச்சிப் போக்கில் பெண்கள் ஆண்களுடன் சரிசமமாக இணைந்து செல்லும் நிலை மீண்டும் இடம் பெறத் தொடங்கியது. இடைக்காலத்தில் ஏற்பட்ட பின்தங்கல் நிலையில், உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்களையும், நியமங்களையும் அதன் காரணமாக நன்மையடைந்த குழுவினர், மீண்டும் வலியுறுத்தத் தொடங்கினர் பெண்களின் புதிய சமூக நிலை ஆண் முதன்மை ஃ ஆண் மேலாதிக்க சமூக அமைப்புக்கு பெரும் சவாலாக மாறியது.

அதேவேளை பெண்களின் புதிய சமூகநிலை அவர்களுக்கு பல்வேறு மேலதிக சுமைகளையும் கடமைக் கூறுகளையும் உருவாக்கிற்கு. பெண்களுக்கு இயற்கையான விஷேடமான குழந்தைபெறும் தாய்மையுடன் வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகள், முதியோர், நோயாளிகள் பராமரிப்பு, வீட்டுச் சமையல் போன்ற வேலைகளும் தொடர்ந்தும் பெண்களுக்கே சுமத்தப்படுகின்றன. அத்துடன் புதிய சமூக தொழில் நிலைகளால் ஏற்படும் சுமைகளும் உண்டு. இவ்வாறான நிபந்தனைகள் பெண்களுக்கு பல வேலைப்பழுவை ஏற்படுத்துகின்றன. எனவே தற்கால நிலையில் அதாவது பெண்களின் தற்போதைய சமூக நிலையில் ஏற்கனவே உருவமைக்கப்பட்ட கருத்துக்கள் எந்தளவுக்கு பொருத்தப்பாடுடையன? அல்லது அவை சமூக நீதிக்கு அமைவானவையா? அல்லது விஞ்ஞான ரீதியாக உண்மையானவையா? அல்லது மனித உரிமைக்கு மறுப்பானவையா? என்பன பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே இவை எடுத்தாளப்படுவது பற்றி நோக்குதல் அவசியமானதாகும்.

பெண்களைக் கீழ்நிலைப்படுத்திக் கூறும் சமூக, நியமங்களையும் நியதிகளையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
(1) தனியாளுடன் தொடர்பானவை.
(2) சமூக அம்சங்கள்ஃநடத்தைகளுடன் தொடர்பானவை.


(1)தனியாளுடன் தொடர்பானவை:-

1.1 உடலமைப்பு ரீதியாக கீழ்நிலை அந்தஸ்துடையவள் என்ற கருத்தினைப் பிரதிபலிக்கும் நில உதாரணங்கள்.
1. பெண் புத்தி பின்புத்தி.
2. பெண்கள் தூய்மையற்றவர்கள்.
3. தொடக்கு தூரத்திருத்தல்.
4. ஒரு பெண்ணை சிந்திக்க வைப்பதைவிட நடமாட வைப்பது இலகு.
5. கப்பலுக்கும் பெண்ணுக்கும் எந்த நேரமும் கோளாறு வந்து கொண்டேயிருக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள கூற்றுக்களில் பெண்களுக்கு மூளையும் புத்திசாலித்தனமும் குறைவானது@ அதனால் அவர்கள் கீழ்நிலை அந்தஸ்துக் குரியவர்கள் என்றும் பெண்களின் உடற்றொழிற்பாடு குறைவான அம்சமாகவும், அதன் காரணமான உபாதைகள் கிண்டலுக்கும் புறக்கணிப்புக்கும் உரிய அம்சமாகவும் எடுத்துக் கூறப்படுகின்றது.

விஞ்ஞான ரீதியாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து, ஒருவரது நுண்ணறிவு, அவரது உளநிலைத்திறன், ஆற்றல் ஆகியன ஆண் பெண் பால்நிலையில் தங்கியிருக்கவில்லை எனத் தெரிய வருகின்றது. அத்துடன் ஒரு பால் அங்கத்தவர்களிடையே காணப்படும் வேறுபாட்டைப் போன்றே இருபால் அங்கத்தவர்களிடையே காணப்படும் வேறுபாடும் இயல்பானதே என்றும் இவ்வாய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

உண்மை இவ்வாறு இருக்க இப்பொய்மைகளை மீண்டும் மீண்டும் எடுத்துரைப்பதிலுள்ள உள்நோக்கம் என்ன என ஆய்வு செய்தல் வேண்டும். தற்கால நிலையில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் கற்றல், வேலைவாய்ப்பு, வளங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் போட்டி நிலைமை காணப்படுகின்றது.

எனவே போட்டியில் பெண்களைப் பின்னடையச் செய்வதற்கான ஓர் இலகுவான கருவியாக இவ்வாறான கூற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை பெண்களே உள்வாங்கி தாமாகவே பின்னடையும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதுவே பாரதூரமான விளைவுங் கூட.

புத்திக்குறைவு, உடற்பலக்குறைவு, நோய் நிலைமை என்பன கிண்டலாகவும் அதேவேளை “பெண்களால் எல்லாவற்றுக்கும் முடியாது” என்ற நிலையை ஏற்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதே இதன் தெளிவான உண்மையாகும்.


1.2. பொருளாதார ரீதியாக கீழ்நிலை அந்தஸ்துக்குரியவள் என்பதைக் காட்டும் கருத்தாக்கங்கள்:-
1. குடும்பத்தின் தலைமை உழைப்பாளி ஆண், பெண்ணின் உழைப்பு துணையானது.

2. பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது.

பெண்கள் சரிசமமான உழைப்பாளிகளாக உள்ள இந்தக்கால கட்டத்திலும் கூட அவர்களது உழைப்பு 2ம் தரமான அல்லது துணையுழைப்பாகவே நோக்கப்படுகின்றது. மேலும் பெண் உழைத்தாலும் அது குடும்பத்தைக் கொண்டு செல்ல உதவாது. அதன் பயன்பாடு குறைவானது என்பதும் மேற்கூறிய கருத்துக்களால் வலியுறுத்தப்படுகின்றன.

யதார்த்த நிலைமையை நோக்கும்போது ஆரம்ப காலங்களில் பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களில் தங்கி வாழ்ந்துள்ளனர். எனினும் சமூக மாற்றம் காரணமாக இந் நிலைமை மாற்றமடைந்து வருகின்றது. எனினும் ஆண்முதன்மைப்போக்கினையும் பொருளாதாரத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், இக்கூற்றுக்கள் மீளவலியுறுத்தப்படுகின்றன. பொருளாதார ரீதியாக கீழ்நிலை அந்தஸ்து ஒன்றை வழங்குவதன் மூலம், பொருளாதார சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டினை பெண்களுக்கு இல்லாமல் செய்வதும், அதுபற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புக்களை இல்லாமல் செய்வதுடன் இதன் மற்றைய பரிமாணங்களாகும்.

1.3 பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் (பாலியல் ரீதியாக) என்பதை கூறும் சமூகக் கருத்தாக்கங்கள்.
1. இளமையில் தந்தையாலும், பருவகாலத்தில் கணவனாலும், முதுமையில் மைந்தர்களாலும் காக்கப்பட வேண்டியவர்கள். ஆதலால் பெண்கள் எக்காலத்திலும் சுதந்திரமாக நடப்பதற்கு இயலாதவர்கள்.

2. பொம்பள சிரிச்சாப் போச்சு, போயில விரிச்சாப்போச்சு.

பெண்கள் பலவீனமானவர்கள்@ அதனால் மற்றையவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்சூ அவர்களின் பாலியல் அம்சங்கள் காரணமாக மற்றைய ஆண்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்களை மேற்குறிப்பிடப்படும் கூற்றுக்கள் எடுத்துக் கூறுகின்றன.

உண்மையில் ஆண்களிடமிருந்து பெண்கள் பாலியல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டியவர்களாயின பலவீனமானவர்கள் பெண்களா? எனவே பலப்படுத்தப்பட வேண்டியவர்கள் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்கள் யார்? எனினும் பெண்களின் பாலியல் அம்சம் பலவீனர்களால் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு என்ற அம்சத்தின் தேவை எழுமாயின் அது இயல்பானதுதான். எனினும் பாதுகாப்பு வழங்குதல் என்ற அம்சத்தைப் பயன்படுத்தி பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடிமையாகவும் வைத்திருக்கும் நிலை உருவாக்கப்படுதல் இந்த கூற்றுக்களின் பயங்கர விளைவாகவுள்ளது. இந்நிலை மனுநீதியும் சமூக நீதியுமற்ற ஈனச் செயலாகும். அத்துடன் இந்நிலைமையைப் பயன்படுத்தி பெண்கள் கீழ்நிலை அந்தஸ்துக்குரியவர்களாக்கப்படுவது இன்னும் வெறுப்புக்குரிய அம்சமல்லவா?

1.4 கருத்து ரீதியாக கீழ்நிலை அந்தஸ்துக்குரியவர்கள் என்ற கருத்தை பிரதிபலிக்கும் கூற்றுக்கள்.
1. பெண்டிர்க்கழகு பேசாதிருத்தல்.

2. பெண்களுக்கு பெருமை உண்டாக்குவது புருஷர்களின் அபிப்பிராயங்கள்தான்.

3. ஒரு பெண்ணைச் சந்திக்க வைப்பதைவிட நடமாட வைப்பது இலகு.

பொதுவாக இவை பெண்கள் நுண் அறிவுகுறைவானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையாகும். இதன் காரணமாக புத்திபூர்வமாக சிந்திக்கவோ அல்லது திறமையான தீர்மானங்களை எடுக்கவோ முடியாதவர்கள் என்று இதற்கு விளக்கம் கூறப்படுகின்றது. முன்பு இதே கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் இதில் எந்த உடலியல், உளவியல் தொழிற்பாட்டு ரீதியான உண்மையும் இல்லை என்பது தெளிவு. அதேபோல் இக்கூற்றுக்களின் பின்விளைவுகளும் முன்னர் குறிப்பிட்டதை ஒத்ததே. அதாவது தீர்மானம் மேற்கொள்ளும், நிறைவேறும் அதிகாரம் கொண்ட அந்தஸ்து நிலையிலிருந்து கீழ்நிலைப்படுத்துவதற்காகவே இது இடித்துரைக்கப்படுகின்றது. அத்துடன் பெண்களின் நுண்ணறிவை குறைத்து மதிப்பிடுவதோடல்லாது. அவர்களின் நுண்ணறிவின் உச்சப்பயன்பாட்டு உரிமையையும் இது மறுக்கின்றது என்பதையும் நாம் உணர வேண்டும்.


1.5 குணாம்சங்கள் தொடர்பாக கீழ்நிலை அந்தஸ்துக்குரியவர்கள் என்பதைக் காட்டும் கூற்றுக்கள்.
1. இரு பெண்கள் ஒன்றுகூடினால் அங்கு இன்னொரு பெண் இழித்துரைக்கப்படுவாள்.

2. பெண்கள் கணவனின் பர்சில் தான் ஆட்சி செய்கின்றனர்.

3. புகழ்ச்சியைக் கேட்டதும் தயங்குவது பெண்ணின் பலவீனம்.

4. பெண் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும். வாத்து இருக்கும் இடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.

5. பெருமையுள்ள பெண்ணின் ஒரு பாதி அகங்காரம்@ மறுபாதி சிறுமை.

6. பெண்ணால் மறக்க முடியாது அவள் அறியாததை மட்டும் தான்.

7. பெண் ஒரு புதுமை. தேவையின்றித் திறந்தால் தன்னை மட்டுமன்றி உலகையே அழித்துவிடும்.

8. பெண்தீமை செய்வதில் ஆண்களைவிட அறிவாளி.

9. கண்களே பெண்களை நம்பாதே.

10. பெண் ஒரு சந்தேகப்பிராணி.

11. உறுதியான செருப்பு வேண்டுமானால் பெண்ணின் நாக்கினை அடித்தோலாகக் கொண்டு தைக்க வேண்டும்.

கேவலமான, கீழ்த்தரமான உணர்வுகள், இயல்புகள், பண்புகள், அம்சங்கள், பெண்ணுக்குரிய இலட்சணங்களாகவே பொதுவாக சித்திரிக்கப்படுவதை மேற்காட்டிய கூற்றுக்கள் நமக்குக் காட்டுகின்றன. இவ்வாறு கூறப்படுவதன் மூலம் பெண்களின் அந்தஸ்து கீழ்நிலைப்படுத்தப்படுவதை நாம் உணரமுடியும். எல்லா மனிதர்களும் இயற்கையில் எல்லா வகையாக இயல்பூக்கங்களையும், உணர்வுகளையும், பண்புகளையும் கொண்டுள்ளனர். உயிரியல் ரீதியாக எந்த இயல்பூக்கங்களும், இயல்புகளும், உணர்வுகளும் பெண்களுக்கு என்றோ ஆண்களுக்கு என்றோ பிரிக்கப்பட்டில்லை. இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அம்சங்களேயாகும். எனினும் இவை காணப்படும் விகிதம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இது காணப்படும் விகிதம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இது ஆண் பாலாருக்கும் பெண் பாலாருக்கும் பொருந்தும். எனவே இழிவான அம்சங்கள் பெண்களுக்குரியதாக காட்டப்படுவது கீழ்நிலைப்படுத்துதலி; மற்றொரு பரிமாணமாகும்.

இக்கூற்றுக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த மனிதர்கள் தொடர்பாகக் கூறப்பட்டவையாக இருக்கக்கூடும். குணாம்சங்கள் உணர்வுகளுடன் கூடிய விடயங்களாதலால் சந்தர்ப்பங்களுடன் மிக நெருங்கிய தொடர்புடையன. அவற்றினை எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும், எல்லாப் பெண்களுக்கும் பொதுமைப்படுத்துதல் புத்திபூர்வமான ஓர் சமூகத்திற்குப் பொருத்தமானதல்ல.


1.6 பாலியல் அம்சம் தொடர்பாக கீழ்நிலை அந்தஸ்தைக் காட்டும் கூற்றுக்கள்.
1. ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே ஓர் ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே.

2. ஆண் கெட்டால் சம்பவம்
பெண் கெட்டால் சரித்திரம்

3. கோடி ஒரு வெள்ளைக்கு
குமரி ஒரு பிள்ளைக்கு

பாலியல் உணர்வுகளும், ஊக்கங்களும் இயல்பானதும், இருபாலாருக்கும் பொதுவானதுமாகும். இது உயிரியல் ரீதியான உண்மையாகும். எனினும் பெண்ணின் உடலமைப்பு கருவைத்தாங்கி வளர்க்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவர்களது பாலியல் வெளிப்பாட்டுக்கு அது சாட்சியாகி விடுகின்றது. இவ்வாறான நிலையில்லாததால் சம்பவம் உண்மையானாலும் கூட, மறைக்கக்கூடிய ஓர் வாய்ப்பு ஆண்களுக்கு இருப்பதால் சமூகநோக்கில் (கூற்று – 2) ஆணுக்கு இது புறக்கணிக்கத்தக்க ஒரு முக்கியத்துவத்தையும் பெண்ணுக்கு புறக்கணிக்கவே முடியாத ஓர் முக்கியத்துவத்தையும் கொடுக்கின்றது.

ஆனால் உண்மையைத் தெளிவான சிந்தனையுடன் நோக்கும்போது இருவர் தொடர்பாகவும் குறிப்பிட்ட சம்பவம் சம அளவு கணிப்பிற்குரியது தான். உண்மையை மறைக்கக்கூடியதாக இருப்பது ஆணுக்கு மேல் நிலை அந்தஸ்த்தையும், மறைக்க முடியாமல் இருப்பது பெண்களுக்கு கீழ்நிலை அந்தஸ்த்தையையும் கொடுப்பதாக இக்கூற்றுக்கள் காட்டுகின்றன. அதாவது ஒரே குறிப்பிட்ட விடயம் பெண்ணுக்கு வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கும் ஓர் அம்சமாகவும் ஆணுக்கு கருத்திற் கொள்ளவே தேவையற்ற விடயமாகவும் கொள்ளப்படுவது. (கூற்று – 2) சமூக நீதியின்பாற்பட்ட அம்சமாக இருக்கமுடியாதல்லவா?

இவ்வாறு கருவைச் சுமக்கும் பெண்ணின் தன்மை ஒரு கீழ்நிலை அந்தஸ்த்துக்குரியதாக்கப்படுவது மனிதனை உருவாக்கும் அவளது ஆக்க சக்திக்கும் சவாலாக அமைகின்றது. அதனையே ஓர் பலவீனமாகவும் கருதி உற்பத்தியின் பின்னர் இயந்திரங்களை புறத்தொதுக்குவது போன்று மனிதப் பிறவியையும் ஒதுக்கி தரக்குறைவாக நோக்கப்படுவதும் (கூற்று – 3) இங்கு கவனிக்கத்தக்கது சமூக நீதியையும் உயிரியல் உண்மைகளையும் கருத்திற்கொள்ளும் புத்தி ஜீவிகள் இக்கருத்துக்களுக்கு உடன்பாடாக இருக்க முடியுமா?


(2) சமூக அம்சங்கள் ஃ நடத்தைகளுடன் தொடர்பானவை:-

2.1 சமூக ரீதியாக கீழ்நிலை அந்தஸ்த்து என்பதை குறிக்கும் சமூகக் கூற்றுக்கள்.
1. விதவைகள் - சுப மங்களங்களுக்கு தீய சகுனம். பாவப்பட்ட ஜென்மம் பெண் செத்தால் புருஷன்
புது மாப்பிள்ளை.

2. ஆணுக்கு உலகமெல்லாம் வீடு
பெண்ணுக்கு வீடுதான் உலகம்.

3. இவ்வுலகில் பெண்கள் செய்யவேண்டுவனவெல்லாம் ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி, ஒரு
தாய் என்ற நான்கு நிலைகளிலும் உள்ள கடமைகள்தான்.

4. நம் பெண்கள் உயர்ந்த படிப்பாலும் மேன்மையான உத்தியோகத்தாலும் மதிப்புடன் விளங்கினாலும்
அவர்கள் பெண்களுக்குரிய பண்பாட்டினை எப்போதும் மறக்கக்கூடாது.

5. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதுக்கு.

6. ஆணுக்கு அடங்கி நடப்பதே பெண்ணுக்கு அழகு.

மேற்கூறிய கூற்றுக்கள் யாவும் வீடு, சமூகம் தொடர்பாக பெண்களுக்கு சமூகத்தினால் வழங்கப்பட்டுள்ள இரண்டாந்தர சமூக கடமைக் கூறுகளையும் அந்தஸ்த்து நிலைமைகளையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பெண் இரண்டாம் தர அந்தஸ்த்துடையவள் தான்: அந்நிலை சமூகத்தின் சகல அம்சங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலே எல்லாக் கூற்றுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உண்மையை நோக்கும்போது பெண்கள் ஆண்களுடன் சமமான ஆற்றல்களையும் சம உடலியல் பெறுமானங்களையும் கொண்டிருப்பதால் இக்கூற்றுக்கள் காலத்தால் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியனவாகும்.

பெண்களுக்கு இவ்வாறான கீழ்நிலை அந்தஸ்த்தினை மீள வலியுறுத்துவதற்கான உள்நோக்கம் முதலாளித்துவ சமூக அமைப்பில் ஆட்சியாளர்களின் மேலாதிக்கப்போக்கின் அதே தன்மைகளையே கொண்டிருக்கின்றது. அதாவது பெண்களின் உழைப்புச் சக்தியைக் கட்டுப்படுத்தும் உரிமையைக் கொண்டிருத்தல், பெண்களின் நடமாட்டம் மீதான மேலாதிக்கம், சொத்துக்களிலும், ஏனைய பொருளாதார வளங்களிலுமுள்ள உரிமைகளை கட்டுப்படுத்துதல். பெண்களின் இனப்பெருக்கமும், பாலியல் அம்சங்களுடன் தொடர்பான செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் உரிமையைக் கொண்டிருத்தல் போன்ற தந்தைவழி சமூக அமைப்பொன்றின் சித்தாந்தங்களின் தன்மைகள் பெண்ணிற்கு பல்வேறு விடயங்கள் தொடர்பாக கீழ்நிலை அந்தஸ்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்துகின்றன. இதனை மேலாதிக்க சமூக அமைப்பின் போக்குடன் ஒப்பு நோக்க முடியும்.


பெண்மை வெறுப்பும், அவற்றின் ஐதீக வெளிப்பாடுகளும்
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
ஐதீகங்களும் புனைகதைகளும் பெரும்பாரும் ஒரு சமுதாயத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவையாகும். கலாச்சாரப் பண்புகளை மானிடவியலாளர்கள் இருவகையாகப் பிரிக்கின்றனர். பெறாட், றெட்பீல்ட் மில்டன் சிங்கர் போன்றோர் இந்திய கலாச்சாரத்தை சிறுபாரம்பரியம் பெரும் பாரம்பரியம் எனப் பாகுபடுத்துகின்றனர். சமுதாயத்தின் மேல்மட்டத்திலுள்ள உயர் வர்க்கத்தினரிடையே வளர்ந்த கலை, இலக்கியம் போன்றன பெரும் பாரம்பரியம் என்றும், கீழ்மட்டத்திலுள்ளோரால் புனையப்பட்ட கலை, இலக்கிய, நாட்டுக்கூத்து நாட்டுக்கதை போன்றவை செம்மைப்படுத்தப்படாத சிறுபாரம்பரிய கலாச்சாரத்தைச் சார்ந்தன என்றும் வகைப்படுத்துகின்றனர். இப்பாகுபாடு மேலோர், கீழோர் என்ற சாதி ரீதியான வேறுபாடுகளை உறுதிப்படுத்துவையாக அமைகின்றன என இதனை நிராகரிப்போரும் உள்ளனர்.

எனது இந்தக் கட்டுரையின் நோக்கம் பெண்மை. பெரும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பழமொழி போன்றவற்றிலும், பெரும் பாரம்பரியத்தில் அடக்கக்கூடிய சமயகுரவர் வாக்குகளிலும் எவ்வாறு கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வதேயாகும். பெண்மை என்றால் வஞ்சகம், சூழ்ச்சி, வெற்றுநிலை என்பதன் தோற்றமே என இவை கூறுகின்றன. இது தமிழ் இலக்கியத்திற்கு மாத்திரம் புதினமான ஓர் செய்தியல்ல. ஏனைய இலக்கியங்களிலும், இது சர்வசாதாரணமாக இடம் பெறுகின்றது. இது பெண் எல்லாச் சமூகங்களிலும் எல்லாக் கலாச்சாரங்களிலும் இரண்டாம் பட்ச நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறாள் என்பதைக் காட்டுகின்றது.

பெண்மை வெறுப்பு என்ற கோட்பாட்டை இரு வகையாக நாம் ஆய்வு செய்யலாம். ஒன்று உளரீதியான உணர்ச்சிகளின் பாற்பட்ட சின்னத்தனங்கள் அவளுக்குண்டு எனக் கருதி அவர்கள் மீது வெறுப்புக் காட்டும் ஒரு நிலைப்பாட்டைச் சிருஷ்டித்துள்ளனர். இதை வெறுப்புணர்ச்சிக் கருத்தியல் என நாம் கூறலாம். இரண்டாவராக செயல் நிலையில் பெண்களது செய்கைகள் அற்பமானவை அருவருக்கத்தக்கவை@ இவை பெண்களுக்கு இயல்பானவை எனக் கருதி “துர்ச்செயல் பெண்மை” என இழிவுபடுத்துதலாகும்.

இவ்வாறான எண்ணக்கருத்துக்கள் எல்வாறு உருவாகியுள்ளன. எவ்வாறு சமுதாயத்தின் பிரதிபலிப்புக்களாகக் காட்டப்படுகின்றன என்பதை கருத்தியல் ரீதியாக நாம் ஆய்வு செய்ய முடியும். இந்த ஆய்வு பெரும்பாலும் மார்க்சீய சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும். அதாவது உற்பத்தி சக்திகள், உறவுகள் ஆகியன சமூகத்தின் அடிப்படையாக அமைய, இவ்வகையான எண்ணக்கருத்துக்கள் அதன் மேற்கட்டுமானங்களாக அமைகின்றன. அதாவது கலை இலக்கியத்துடன் சார்ந்த இந்த கருத்தியல் அம்சங்கள் மேற்கட்டுமானங்களாகின்றன. மேல் கட்டுமானங்கள் அடிப்படையிலிருந்தே தோன்றுகின்றனவா என்பது கேள்விக்குரியது. அதற்குரிய விடையும் அனுமானங்களாகவே அமைகின்றது.

உற்பத்திச் சக்திகளின் முழுமையான பிரதிபலிப்புக்களாகவே தான் இவ்வாறான எண்ணங்கள் உருவாகின்றன என்ற கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மானிட உணர்ச்சிகளையும் ஏக்கங்களையும் கூட்டு மொத்தமாக ஒரு சமூக அமைப்பின் வெளிப்பாடு எனக் கருதுவது மானிடவியல் அம்சங்களைக் குறைத்து மதிப்புடுவதாக அமைந்துவிடக்கூடும். அதேவேளை சமூகத்தின் அடிப்படைகளும், அதன் பரிமாணங்களும் ஏதோ ஒரு வகையில் எண்ணக்கருத்துக்களினூடு பிரதிபலிக்கக்கூடும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. மேற்கூறிய குறைபாடு மார்க்சீய அணுகுமுறையிலுண்டு. அதனைப் பின்னர் மேலும் விளக்க முயல்வேன்.

பழமொழிகளின் இலக்கிய இயக்க முறையை அமைப்பியல் அணுகுமுறை மூலம் ஆய்வு செய்வது ஒரு புதிய நோக்காக உள்ளது. இது மார்க்சீய அணுகுமுறையை முற்றாக நிராகரிக்காமல், அதனுடன் சார்பாகவே அமைகின்றது. அமைப்பியல் ஆய்வு என்பது ஒரு இலக்கியத்தின் அமைப்பினை அல்லது அதன் பூரண உருவத்தை அலசி ஆய்வு செய்தலையும் அதன் கூறுகளையும் அதன் பரிமாணங்களையும் ஆய்வு செய்வதையும் குறிக்கின்றது.

இவ்வணுகுமுறை இலக்கியத்தின் உணர்வு அம்சங்களையும் கருத்;து வெளிப்பாட்டையும் ஒன்றிணைத்து இலக்கியத்தின் ஆழ்ந்து தரத்தினை எடுத்துக் கூறுகின்றது.

பெண்மைக்கு பல உருவங்கள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் இக்கட்டுரையின் ஆய்வுப் பொருளாக பெண் வெறுப்பு என்ற அம்சத்தினை எடுத்துக் கொண்டுள்ளேன்.

பெண் வெறுப்பு என்பது மேற்கத்தைய கருதியலாகும் என்பதும் விந்தைக்குரிய விடயமாகும். இதனைக் குறிக்கும் கிரேக்கமொழிச் சொல் பெண் (பலநெ) என்ற சொல்லை அடியாகக் கொண்டுள்ளது. இது பெண்ணின் உறுப்புக்களைப் பற்றியது என அகராதி கூறுவது நோக்கத்தக்கது. அதாவது பலநெ என்பது. பெண்ணுறுப்புக்களை அல்லது அங்கங்களை கொண்டிருக்கும் நிலையாகும். (பெண்வெறுப்புக் கருத்தாக்கங்கள், பெண் உறுப்புக்களை ஒரு அறிமுகமாக இச்சொல் விளக்கத்தை முன்வைத்துள்ளேன்.)

ஐதீகங்கள், பழமொழிகள் சிலவற்றின் பெண்மை வெறுப்புப் பரிமாணங்கள்.
பெரும்பாலும் ஐதீகங்களையும், பழமொழிகளையும் தோற்றுவித்தவர்கள், தங்கள் கருத்துப்படி சரியெனத் தோன்றியவற்றையும் சில சித்தாந்தங்களையும் தமது கூற்றுக்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவற்றில் பல காலங்கடந்த தத்துவக்கருத்துகள் நாளாந்த பேச்சுகளிலும் இலக்கியங்களிலும் எடுத்தாளப்படும் சொற்கோர்வைகளேயாகும்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்”
இக்கூற்று சாதாரண வழக்குகளை கடந்து மனோதத்துவ உண்மைகளை காட்டுவதாகவும் விளக்கமளிக்கப்படக்கூடும். அத்துடன் அறிவும் அனுபவமும் உள்ள ஒருவர் இதனை சிறந்த சொற்பிரயோகங்களினால் வெளிப்படுத்தியுள்ளார் என்று கொள்ளவும் முடியும். ஆனால் இவை உருவான காலகட்டங்களில் மனோதத்துவ உண்மைகளை அறிந்து யுகமாக இருக்கவில்லை என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். பெண்புத்தி பின்புத்தி எனக் கூறுபவர்கள் அவர்களது குதர்க்கத்தையும் அறியாமையையும் வெளிப்படுத்துகின்றனர் என்றும் கூற முடியுமல்லவா?

இவ்வாறான “நிக்கியு” ஐதீகக் கதை ஒன்றை நோக்குவோம். பல்லாண்டுகளுக்கு முன் பெண்களே அரசாட்சி செய்து வந்தனர். ஆனால் காலக்கிரமத்தில் அவர்களது ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாக மாறிவிட்டது. ஆண்களை அடிமைகளாக்கி விவசாயத்தில் ஈடுபடுத்தியும் மாட்டுமந்தைகளை மேய்க்கப் பண்ணியும் விட்டனர். சகல வீட்டு வேலையும், குழந்தைப் பராமரிப்பும் கூட அவர்களது தலையில் சுமத்தப்பட்டன. இந்தக் கொடுங்கோன்மையையும் அடிமை வாழ்வையும் விரும்பாத ஆண்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். பெண்கள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் கர்ப்பந்தரிக்க வைத்தனர். அந்தக் கட்டத்தில் அவர்களது இயலாமையைப் பயன்படுத்தி ஆண்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். அன்று தொடக்கம் அந்நாட்டில் அன்பும் ஐக்கியமும் சாந்தியும் நிலவத் தொடங்கியது.

இக்கதையில் பல தாற்பரியங்கள் அடங்கி இருப்பதாக எனக்குப்படுகிறது. தாய்வழிச் சமுதாயத்தின் எச்சசொச்சங்களாக பெண்கள் உரிமைகள் பல உடையவர்களாவும் ஆண்களும்பெண்களும் ஏறக்குறைய சமத்துவ நிலையிலிருந்து ஒரு காலகட்டம் இருந்துள்ளது. அது எப்படி மாறி ஆண் உரிமைச் சமுதாயமாகவும் ஆண் வழிச் சமுதாயமாகவும் மாறிற்று என்பதைக் கருவாகக் கொண்ட கதையாக இது இருக்கலாம். நடந்து கொண்டிருந்த ஒரு சமுதாய மாற்றம் பற்றி வாய்மொழியாக கூறப்பட்ட வந்த வரையாற்றிச் செய்தி ஆண்கள் வாயிலாக பெண்களது கொடுங்கோன்மை என மாற்றப்பட்டு விட்டது என்பதை எடுத்துக் கூறுகின்றது.

சகல ஆதிக்கங்களையும் உரிமைகளையும் கொண்ட காலத்தில் முன்னைய நிலை கொடுங்கோன்மை எனக் கொள்ளப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் பெண்களுக்கு அரசாட்சி செய்யத் தெரியாது. ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் பெண்களால் நிர்வகிக்க முடியாது. அவற்றை அவர்கள் துஷ்பிரயோகம் செய்து விடுவர் என்பன போன்ற கருத்தியல்களின் தோற்றவாயாகவும் இக்கதை அமைந்து விட்டதை நாம் அவதானிக்கலாம்.

இன்னுமொரு முக்கிய செய்தி அது பாலியல் சம்பந்தப்பட்டது. பெண்களது உடலுறுப்பை ஒட்டிய பெண்மை அவளுக்கு முட்டுக்கட்டையாகி இரண்டாந்தர நிலைக்கு அவளை தள்ளி விடுகிறது என்பது பெண் நிலைவாதிகளின் அங்கலாய்ப்பு. கருப்பந்தரிக்க வைக்கும் அவளது பெண் உறுப்புக்கள் இங்கு பெண்மையாக பரிணமித்து இயலாமை, பலவீனம், தாய்மை, வீட்டுக்குரியவள் போன்ற பலவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது அவளது விதி அது நிவர்த்தி செய்ய இயலாத குறைபாடு, அதற்கு விமோசனமில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே இந்த உடலுறுப்பு வேறுபாடு எப்போதுமே அவளை இரண்டாந்தரப் பிரஜையாக, ஆணிலிருந்து வேறுபட்டவளாக ஆணுக்குக் குறைந்தவளாக ஆணுக்கு பணிந்தவளாக, இருக்கவே செய்யும். இவ்வாறான எண்ணக்கருத்தும் பெண் நிலைவாதத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. இக்கதையும் கூட இக்கருத்துக்களைத் தொட்டு நிற்பதை நாம் காணலாம். அவளது விதியாகிய தாய்மை நிலை எப்படி அவளை பலமிழக்கச் செய்து விட்டது. அதை எப்படி ஆண்கள் பயன்படுத்தினர்@ எப்படி சூழ்ச்சியால் அவளைக் கர்ப்பந்தரிக்க வைத்தனர். கர்ப்பம் தரிக்கும் ஏகபோக குறைபாட்டை உடையவள் பெண். பெண்மை ஸ்ரீ உடல்கூறு ஸ்ரீ கர்க்கம் ஸ்ரீ தாய்மை ஸ்ரீ பலவீனம் என்ற சமன்பாட்டை வலியுறுத்தி நியாயப்படுத்துவதாகவும் இக்கதை அமைகிறது. இந்தப் பெண்மையின் உறுப்பை முன்கூறிய பலநெ என்ற சொற்பதத்துடன் தொடர்புபடுத்தி அவளது உடல் எப்படி ஒரு கருத்தியலுக்கு அத்திவாரமிட்டு விட்டது என்பது புலப்படும்.

தெசொக்கதை ஒன்று பெண்ணின் அகங்காரத்தையும் நைஜீரியக்கதை ஒன்று பெண்ணினது பேராசையையும் கூறுவதாக அமைகின்றன. நிலம் தன்னைத்தானே விவசாயம் செய்து மானிடருக்கு உணவு கொடுத்ததாக ஒரு காலமிருந்தது. புதிதாக மணம் புரிந்த பெண் தனக்குத் தோண்டத் தெரியும் என தனது திறமையை ஏனையோருக்கு விளம்பரப்படுத்தப் போக கோபங் கொண்ட நிலம் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டது. அதன் பின்னர்தான் மானிடர் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆக பெண்ணொருத்தியின் விளம்பர நோக்கும் சின்னத்தனமும் மானிடருக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து விட்டது. பெண்ணினது தன்னடக்கமின்மையும் விளம்பர மனப்பான்மையையும் எப்படி அழிவைத் தேடித்தந்து விட்டது என்பது கதைக் கருவாக அமைய தன்னடக்கம் பெண்ணுக்கு இன்றியமையாத குணாம்சமாக இருக்கவேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லி வலியுறுத்துகிறது.

பசிக்கும் மானிடருக்கு ஆகாயம் ஒரு காலத்தில் வரப்பிரசாதமாக இருந்தது. பசியைத் தணிக்க ஆகாயத்தில் ஒரு துண்டை வெட்டித்தின்று பசியாறினர். மக்களுக்கு எட்டக்கூடிய தூரத்தில் ஆகாயமிருந்தது என்பது முக்கியமான செய்தியாக இருந்தது. ஆனால் ஆகாயம் ஒரு நிபந்தனை விதித்தது. பேராசையினால் தேவைக்கதிகமானதை வெட்டக்கூடாது என்பதே அந்நிபந்தனை. ஆனால் பெண் என்ற ரூபத்தில் வந்தது பேராசை. அவாவினால் தேவைக்கதிகமானதை வெட்டி எடுத்த ஒரு பெண் பேதை அதனை உண்ண முடியாமல் குப்பை மேட்டில் எறிந்து விட்டாள். அதைக் கண்ட ஆகாயம் உயர உயர எழுந்து எட்டாத தூரத்திற்குச் சென்று விட்டது. மானிடமும் எளிதில் கிடைத்த உணவு மலையை இழந்து விட்டது. அன்று தொடக்கம் ஆண்கள் வேலை செய்தால்தான் உணவு என்ற நிலை தோன்ற, பெண்ணின் பேராசை பெருநட்டமாக வந்ததை விளக்கும் ஒரு கதையாக இது அமைந்துவிட்டது. பேராசை பெருநட்டம் என்பது தமிழ்ப் பழமொழியாக இருக்க பெண்ணின் பேராசை பெருநட்டமானதை நைஜீரியப் பழமொழி விளக்கி வைத்துள்ளது. பெண்களுக்கு பேராசை அதிகம் என்ற பெண் வெறுப்புக் கருத்தும் இதில் இழையோடுவதைக் காணலாம். மேலே கூறிய கதைகள் பெண்ணினத்தை வெறுத்தொதுக்கும் ஒரு மனப்பான்மையின் வெளிப்பாடுகளே. இதற்குக் காரணம் யாது என்பது பெரும்பாலும் மேலேழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது புரியாத புதிராகவே இருக்கும். ஆனாலும் சில காரணங்களை நாம் விளக்கலாம்.

வானம் உணவாகத் தன்னை ஈய்ந்ததும் நிலம் தன்னைத்தானே விவசாயம் செய்ததும் எப்படி உண்மைக்குப் புறம்பான சம்பவங்களாக இருக்கின்றனவோ அதே அளவு பொய்மை நிறைந்தனவாகவே, பெண் வெறுப்புக் கருத்துக்களும் உள்ளன. ஆடம்பரம், அவையடக்கமி;மை, பேராசை போன்ற குணாம்சங்கள் உடற்கூறுகளை அடிப்படையாக வைத்து எழுவன அல்ல. பால் ரீதியிலோ, சாதி ரீதியிலோ, வர்க்க ரீதியிலோ, இன ரீதியிலோ குணங்களும் இயல்புகளும் பிரிக்கப்பட்டு சாதிப்புத்தி என்றோ இழிகுலத்தோர் என்றோ கூறுவது அநாகரிக செயலாக மமதை நிறைந்த செயற்பாடாக இன்று கணிக்கப்படுகிறது.

பெண் வெறுப்பின் பல்வேறு கூறுகள்.
பெண் வெறுப்பை வெளிப்படுத்திய சமயக் குரவர், பாமரமக்கள், சித்தர் போன்றோர் சில பல குணங்களைத் திரும்பத் திரும்பக் கூறி உள்ளனர். இவற்றுள் முக்கியமானவற்றை வரிசைப்படுத்தினால் ஒன்று பெண்களின் குணாம்சங்கள் என்ற ரீதியில் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் மற்றது உடல் உறுப்புக்களையோ அல்லது செய்கையினையோ அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதை நாம் காணலாம். பெண்களுக்கு என்று பிரத்தியேகமான கீழ்த்தர உணர்ச்சிகளும் மனோநிலைகளும் உண்டு என்று கூறும் பெண்வெறுப்பு நிலை, பெண்ணைக் கன்னியாகவும், மனைவியாகவும் வைத்தே அவ்வுணர்ச்சிகளின் இருப்பிடம் அவள் என்றும் கூறுகிறது. அதே பெண்ணைத் தாயாகப் பார்க்கும் போது அவளைத் தெய்வத்துக்குச் சமமாக உணர்த்துவதும் ஒரு முரண்பட்ட உண்மை.

உணர்ச்சி நிலையில் அவளது குணாம்சங்கள், நீலித்தனம், வஞ்சகம், ஆடம்பரம், பொய்மை, சண்டை, சச்சரவின் தோற்றம் காரணம் பொறாமை, அகங்காரம், மாயை போன்றவற்றில் அடக்கப்படும். கீழ்வரும் கூற்றுக்கள் பெண்களின் தீய குணாம்சங்களுக்கு உதாரணமாக அமையும்.

பெண் தீமையின் வடிவம் என்பதைக் கூறும் பழமொழிகளை முதலில் குறித்துக்கொள்வோம். இந்தத் தீமை என்பதை பொய்மை நாசசக்தி உள்ளவள், பயங்கரமானவள் பொறாமை உள்ளவள் என வகுத்து அந்தக் கருத்தை புலப்படுத்தும் பழமொழிகளைக் கீழே தருகிறேன்.

பெண் பேய்க்குச் சமன்.
பேயை நம்பினாலும் பெண்ணை நம்பாதே. (பயங்கரமானவள் நாசசக்தியுடையவள்)
ஒரு பெண் இன்னொரு பெண்ணை எப்போதும் புகழ்வதில்லை. (பொறாமை)
ஒரு பெண் வாழ இன்னொரு பெண் பொறுக்க மாட்டாள்.
இரு பெண் கூடினால் அங்கு இன்னொரு பெண் இழித்துரைக்கப்படுவாள். (பொறாமை)
பெண் சண்டைக்காரி, வாய்க்காரி, வம்புபேசுபவள், அசட்டை, ஊர்க்கதை பேசுபவள் என்பன போன்ற குணங்கள் அவளது இயல்பான சுபாவம் எனக் கூறும் வேறு சில பழமொழிகளுக்கு உதாரணமாக கீழே வரும் பழமொழிகள் அமையும்.
பெண்ணின் ஓரடி நாக்கு ஆறடி மனிதனைக் கூட கொன்றுவிடும். (அதிகம் பேசுபவள் வாய்க்காரி)
பெண்கள் கூடினால் சண்டைகள் பெருகும். (சண்டைக்காரி)

பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும். வாத்து இருக்கும் இடத்தில் கொக்கரிப்பு இருக்கும். (அவளது பேச்சு கொக்கரிப்புக்குச் சமம் அல்பமானது.)

ஊருக்குள் நடக்கிய விடயம் யாருக்குத் தெரியும். உள்ளே இருக்கும் குமருக்குத் தெரியும். வம்பளப்பவள் எல்லாவற்றையும் (தீயவற்றை) அறிய விரும்புபவள்.

உறுதியான செருப்பு வேண்டுமானால் ஒரு பெண்ணின் நாக்கை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும். அது ஒருபோதும் தேயாது என்பது ஒரு பிரான்ஸ் நாட்டுப் பழமொழி.

ஆண்பிள்ளை ஆயிரம்பேர் ஆனாலும் ஒத்திருப்பர். பெண்பிள்ளை அக்கா தங்கச்சி ஆனாலும் ஒத்திரார்.
(சண்டைக்காரி, சச்சரவின் காரணம்)

பெண் நயவஞ்சகி, நீலி, கபடி, ஏமாற்றுக்காரி, இயற்கையிலே அவள் இப்படியான குணங்களை கொண்டவள் எனக் கூறும் பழமொழிகள் பல இருந்தாலும் சிலவற்றை உதாரணமாகத் தருகிறேன்.

கள்ளிக்குத் தண்ணீர் கண்ணிலே நீலிக்கு கண்ணீர் இமையிலே.

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டுமே சிரிப்பார்கள் என்பது ஒரு அரேபியப் பழமொழி. நல்ல திராட்சை மதுவைப் போல பெண்களும் இனிமையான விஷம்.

சீறும் பாம்பை நம்பலாம், சிரிக்கும் பெண்ணை நம்பாதே.
பெண்ணின் ஆயுதம் கண்ணீர்.
கொலையும் செய்வாள் பத்தினி.
பெண் மனிதரின் குழப்பம்.
பெண் ஒரு தேவையான தீமை.
மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பாதே.
அடுத்தும் கெடுப்பாள், கபடம் கொடுத்துக் கெடுப்பாள்.
மார்வாடி தொடுத்துக் கெடுப்பார் மடத்தை.
செல்வமுள்ள கைம்பெண் ஒரு கண்ணால் அழுவாள், ஒரு கண்ணால் சிரிப்பாள்.
பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள், பெண்சாதி மடியைப் பார்ப்பாள்.

பெண்ணின் வெற்றுத்தன்மை, வீண்ஜம்பம், ஆடம்பரம், அகங்காரம், அலங்காரம் ஆழமற்ற சலசலப்புத் தன்மை போன்ற குணங்களை விளக்கும் பழமொழிகள் சில பெண் வெறுப்பை மிக அழகாகச் சித்திரிக்கின்றனர்.

இரவல் புடவையில் நல்லதொரு கொய்யகமாம்.
குடல் கூழுக்கழுகிறதாம் கொண்டை பூவிற்கு அழுகிறதாம்.
நல்லவளாக இருப்பதைவிட பெண் அழகியாக இருப்பதை விரும்புகிறாள்.
எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொன்னதில்லை.
அழகான பெண் ஆனந்தப்பட ஆரம்பித்தால் பணப்பை கண்ணீர் விட ஆரம்பிக்கும்.
ஒரு பெண்ணை அழகானவள் என்று சொன்னால் அவள் பத்து முறை சிரிப்பாள்.
பெண்களில் இரண்டு பிரிவுண்டு ஒன்று அழகானவர்கள், மற்றொன்று அழகானவள் என
நம்பிக்கொண்டிருப்பவர்கள்.
பெண்ணால் காப்பற்றக்கூடிய ஒரு ரகசியம் அவளது வயது.

மேலே கூறிய பெண் வெறுப்புக்கள் பாமரராலும் படித்தோராலும் கூறப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. என்றாலுங் கூட இவை சிறு பாரம்பரியம் என்னும் கலாசாரப் பகுப்புக்குள் வாய் மொழி மரபு என்ற ரீதியில் அடக்கப்படும். இலக்கணச் சுத்தமின்றி கொச்சைத் தமிழிலும் பேச்சுத்தமிழிலும் தோன்றிய இப்பழமொழிகள் சில காலக்கிரமத்தில் கற்றோரால் செம்மைப்படுத்தப்பட்டிருக்கலாம் என நாம் நம்பலாம்.

இதே கருத்துக்கள் சமயாசிரியர்களாலும் பண்டிதர்களாலும் எதுகை, மோனை, லயம் ததும்ப கவிதை வடிவத்திலும் தோன்றியிருப்பதும் ஈண்டு கவனிக்கற்பாலது. இங்கு பாமரப் பரம்பரைக்கும். செம்மை நெறிப் பரம்பரைக்கும் பெண் வெறுப்பு என்ற ரீதியில் ஒரு தொடர்ச்சியிருப்பதக் காணலாம். இத்தொடர்ச்சியின் முக்கியம் இங்கு வலியுறுத்தப்படுவதற்கு ஒரு காரணமுண்டு.

பெண்ணடிமைத்தனமும் ஆண்மேலாதிக்கமும் சமய, வர்க்க இனரீதியாகப் பிரிக்கப்பட்ட மானிடப் பகுப்புக்களில் எங்கும் எப்போதும் மேலோங்கி இருந்தன, இருக்கின்றன, என்பது பெண் நிலைவாத மானிடவியலாளரின் கருத்து. நாம் மேலே கூறிய தொடர்ச்சியும் இக்கருத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.

சமயக் குரவரின் பெண் வெறுப்புக் கருத்துக்கள்
பெண் தீங்கானவள் என்ற ஒரு கருத்தியலின் வளர்ச்சி தமிழர் வரலாற்றில் சங்க காலத்தில் முதன்முதலில் தோன்றியது எனலாம்.

சங்க காலத்தில் தனது கருவள ஆற்றலுக்காகப் போற்றப்பட்ட பெண் தற்போது சமூகத்தின் தீய சக்தி கருதப்பட்டாள். பௌத்தர்களாலும், சமணர்களாலும் முன்னெடுக்கப்பட்ட துறவு மார்க்கம் வீடு, உறவு ஆசைகள் யாவற்றையும் துறப்பதை வலியுறுத்தியது. இதைச்சாதிப்பதற்கு பாலியல் விருப்பின்மை பெரிதும் அவசியம் எனக் கருதப்பட்டது. பாலியல் விருப்பின்மை பெரிதும் அவசியம் எனக் கருதப்பட்டது. அனேக துறவிகளுக்கு தமது பால்மையைத் துறத்தல் அதிக சிரமமானதாக இருந்தது. ஆசையைத் துறந்த உறுதியான தவமுனிவர்களின் தவத்தைத் தம் கவர்ச்சியால் கலைத்த கன்னியர் பற்றிய கதைகள் இந்து மரபில் ஏராளமாக உள்ளன. குடும்பத்தளை, பால் உணர்ச்சி, உலக இச்சை ஆகியவற்றுக்குப் பெண்கள் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டனர். பெண்ணின் பால்மையுடன் தொடர்புடைய இவை அனைத்தும் துறவு மார்க்கத்தினரால் தீவிரமாகத் தாக்கப்பட்டன. புத்தரும், சமணசமயத்தின் தாபகரான மகாவீரரும் பெண்களைப் பொறுத்தவரை அவர்களை சீடர்களாகக் கொள்ளவும் பெண் துறவியர் மடத்தில் அவர்கள் தங்கவும் அனுமதித்தனர். ஆனாலும் பெண்களின் பால்மையை வெறுத்தொதுக்கும் மனப்பான்மையை அவர்கள் கைவிடவில்லை. பெண்கள் துறவு மார்க்கத்தில் இருக்கும் வரை அவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை. துறவின் எல்லைக்கு வெளியே அவர்கள் ஒரு தடையாகவும் அச்சுறுத்தலாகவுமே விளங்கினர்.

தீட்டானது, தீங்கானது, மாயையானது, பிசாசுத் தன்மை உடையது என்றெல்லாம் விபரிக்கப்பட்ட பெண்மை மானுட இலட்சியத்தின் அழிவுக்கான மூல காரணமாகவும் கருதப்பட்டது. வளர்க்கப்பட்ட தமிழ் பௌத்த இலக்கியங்களில் பெண்கள் ஒருமுகமாகத் தூற்றிக் கண்டிக்கப்பட்டனர். இதற்கு மேலும் பல உதாரணங்கள் தரலாம். பெண்கள் மரணத்துடன் ஒப்பிடப்பட்டனர். அவர்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என ஆண்கள் போதிக்கப்பட்டனர். (நான்மணிக்கடிகை 82) மது, பொய்மை, கொலை, களவு என்பன பாலியலுடன் ஒப்பிடப்பட்டன. பொதுவாக பாலியல் பெண்மையோடு இனங் காணப்பட்டு அதற்குச் சமதையாக்கப்பட்டது (மணிமேகலை 3056 – 59) நாலடியாரில் வரும் பின்வரும் பாடல் பெண்மையின் ஆபத்துப் பற்றிய கருத்தியலுக்கு நல்ல உதாரணமாகும்.

எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் அதிகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி – அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை (363)

கணவனை எதிர்த்து நிற்பவள், (எமன்) அதிகாலையில் சமையலறைக்குப் போய் சமைக்காதவள், (பெருநோய்), சமைத்த உணவை நேரத்தில் உண்பதற்கு உதவாதவள் (வீட்டில் வாழும் பேய்), இம் மூவரும் தன்னைக் கொண்ட கணவனைக் கொல்லும் கருவிகள் ஆவர் என்பது இதன் பொருள். கீழ்ப்படியாத மனைவியை எமனாகவும் நோயாகவும் பேயாகவும் உருவகம் செய்கிறது. இப்பாடல் உருவத்தில் உள்ளிருக்கும் கருத்தியல் இங்கு கவனிக்கத்தக்கது. பௌத்த சிந்தனையில் பெண்கள் உடல் இச்சையோடு சம்பந்தப்பட்டவர்களாயினர். அவர்கள் ஒரு நோய்போல் அழிக்கும் குறியீடாக உள்ளனர்.

பெண்களின் மதிநுட்பம் பற்றியும் இதேபோக்கு கடைபிடிக்கப்பட்டது. பெண்கள சமய ஞானத்தை பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்பதை பௌத்தம் ஏற்றுக்கொண்ட போதிலும் பௌத்த காவியமான மணிமேகலையில் கூட இதன் செல்வாக்கைக் காணலாம். காவியத்தலைவி பின்வருமாறு கூறுகிறாள். “இளையவள் வளையோள் என்றுனக்கு யாரும் விளைபொருள் உரையார்” (மணிமேகலை 3462:63) இளமையாகவும் பெண்ணாகவும் இருப்பதனால் உனக்கு யாரும் தருமத்தைச் சொல்லித் தரமாட்டார்கள் என்பது இதன் பொருள். அரசகுமாரனுக்கு அறிவுரை கூற முனைந்த அவனுடைய தோழி அவனிடம் பின்வருமாறு கூறுகிறாள். “உரவோன் மருகற்கு அறிவும், சான்றும், அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ?” (மணிமேகலை – 426-428) அறிவு, மானுட இயல்பு, அரசியல் திறம் என்பன பற்றி பெண்கள் அறிவுரை கூற முடியுமா? என்பது அவளுடைய வினா. உண்மையில் இவை அந்த யுகத்தின் பிரதிபலிப்புக்களே. சங்ககாலத்தில் பெண் புரோகிதர்களும் புலவர்களும் அரசர்களுக்கு ஆலோசனை கூறிய நிலையுடன் இதனை ஒப்பிட முடியாது.

இக்கால கட்டத்துக்குரிய பொதுவான மனப்பாங்கு திருக்குறளில் பெண்வழிச்சேறல் என்ற அதிகாரத்தில் நன்கு பிரதிபலிக்கின்றது. பெண்களின் பேச்சைக் கேட்டும் அல்லது அவர்களின் விருப்பத்துக்கேற்ப நடக்கும் ஆண்களதும் கணவன்மாரதும் துயரம் பற்றி இதில் எச்சரிக்கப்படுகின்றது. (குறள் 90. 902) மனைவிக்கு (பெண்ணுக்கு) பணிவிடை செய்து ஒழுகுவதை ஒரு ஆணுக்கு அவமானம்@ அத்தகைய ஆணை விட நாணமுடைய பெண்ணே பெருமை உடையவள் என வள்ளுவர் கருதுகிறார்.

பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மையில் நாணுடைப்
பெண்ணே பெருமை தரும் என்பது குறள்.

இந்தப் பகுதிக்கு ஒரு முடிவுரையாக லிக்கொக் (1981:28) இன் அதே கேள்வியை நாமும் இங்கு கேட்கலாம். “பெண் ஓர் உடன்பாடான கருவினைக் குறியீடு என்ற நிலையில் இருந்து அவள் ஒரு தீவினைக்கான தூண்டல் என்ற நிலைமாற்றம் எப்போது நிகழ்ந்தது?


குடும்பத்தில் பெண்ணின் நிலை பற்றிய
உண்மைகளும் பொய்மைகளும்.
சுல்பிகா
இக்கட்டுரையின் நோக்கம் குடும்பத்தில் குறிப்பாக, கருக் குடும்பத்தில் பெண்ணின் அந்தஸ்து நிலை பற்றிய சமூகக் கருத்தாக்கங்களை ஆய்வு செய்வதாகும். எனவே இலங்கையின் இன்றைய சமூக அமைப்பில், குடும்பம், அதன் அங்கத்தவர்களின் நடத்தை நியமங்கள், (கடமைக்கூறுகள்) அந்தஸ்த்து நிலை பற்றி விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் குடும்ப அமைப்பின் தன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஆணும், பெண்ணும் உயிரியல் ரீதியான இயல்பூக்கத்தின் அடிப்படையில் இணைந்து குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். இவ்வுயிரியல் பாலூக்கம் இயல்பாகவே குடும்பத்தில் சில உயிரியல் நடத்தைகளுக்கு ஏதுவாகின்றன. அதாவது, பாலியல் ஊக்கம், இனப்பெருக்கத் தொழிற்பாடு, குழந்தைக் காலப் பராமரிப்பு ஆகிய நடத்தைகளாக இவை காண்பிக்கப்படுகின்றன. இவை தனி மனித உடலியல், உளவியல் தேவைகளின் அடிப்படையில் எழுபவை@ இடம் பெறுபவை, இத் தொழிற்பாடுகளிலும் நடத்தைகளிலும், குறிப்பிட்ட இரு தனியன்களுக்கும் (ஆண், பெண்) உரிய பங்களிப்புகள், சமமானவை@ சமபெறுமானம் உடையவை. இவையே உயிரியல் ரீதியான குடும்ப நடத்தைகளுக்குரிய அடிப்படையாகும். எனவே உயிரியல் அடிப்படையில் நோக்கும்போது குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய பொறுப்புகள், பங்களிப்புக்கள், அதிகாரங்கள், அந்தஸ்த்து நிலை ஆகியன குடும்பம் சார்பாக சமமானதாக இருத்தல் வேண்டும். இதுவே குடும்பச் சித்தாந்தத்தின் உயிரியல் அடிப்படையாகவும் அமைதல் வேண்டும்.

எனினும் குடும்பம் என்பது ஓர் உயிரியல் கூட்டு அமைப்பு மாத்திரமல்ல@ சமூகவியல் அலகாகவும் தொழிற்படுகின்றது. இந்நிலையில், குடும்பத்தின் முதன்மை நடத்தைகள் (உயிரியல் நடத்தைகள்) சமூகவியல் காரணிகளின் இடைத்தாக்கத்திற்கு உட்பட நேரிடுகின்றது. இந்தச் சிக்கலான (சமூக – உயிரியல்) இடைத் தாக்கத்தின் போது, குடும்பத்தின் நடத்தைகள் விரிவாக்கப்பட்டு சமூக நடத்தை நியமங்களாக மாற்றமடைகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் சமூக நடத்தை நியமங்களே கடமைக் கூறுகளாகவும் பொறுப்புக்களாகவும் அமைகின்றன. சமூக நீதியின் அடிப்படையில் இவை சமனான பெறுமானமுள்ளதாகவும், சம பங்கீட்டு அடிப்படையிலும், அமைய வேண்டும். எனினும் யதார்த்தத்தில் இவை சமமற்ற வகையில் பங்கீடு செய்யப்படுவதையும் சமமற்ற பெறுமானங்களைக் கொண்டிருப்பதையும் காணலாம்.

மற்றொரு வகையில் கூறினால் யதார்த்தத்தில் குடும்பச் சித்தாந்தம் உயிரியல் ரீதியான பாலியல் அம்சத்துடன் கலாச்சார, சமய, பொருளாதார அம்சங்களுடன் இணைந்து சமமற்ற தன்மைகளை எடுத்துக் காட்டுகின்றன. அதாவது குடும்பத்தில் ஆணினதும் பெண்ணினதும் பாலியல் தொழிற்பாடுகளிலிருந்து ஏனைய சமூகத் தொழிற்பாடுகள் வரை சமமற்றவை என்றும் கொள்ளப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானதாகும். இதுவே குடும்பத்தில் கணவன் மனைவி அந்தஸ்த்து நிலைகளில் சமமற்ற தன்மைகளைத் தோற்றுவிப்பதையும் நாம் காணலாம்.

இலங்கையின் சமூக அமைப்பைப் பொறுத்தவரை இச்சமமற்ற தன்மை என்பது எப்பொழுதும் பெண்களின் நிலையை குறைவானதாகக் காட்டுகின்றது எனக் கூறுவதற்குமில்லை. யதார்த்த நிலைமைகளைத் தெளிவாக விளங்கிக்கொள்ள இலங்கையின் குடும்ப அமைப்பு பற்றி சிறிது நோக்குவோம்.

கீழைத்தேய நாடுகளின் சமூக அமைப்பில் குடும்பம் ஓர் முக்கியமான அடிப்படை சமூகவியல் அலகாகும். அத்துடன் மேலைத்தேய குடும்ப அமைப்பினைப் போலல்லாது குடும்பம் இரு நிலைகளைக் கொண்டது.

(1) கருக்குடும்பம் ஃ தனிக்குடும்பம்
(2) கூட்டுக்குடும்பம்

இலங்கையின் சமூக அமைப்பில் கருக்குடும்பத்தை மாத்திரம் கொண்ட தனிக் குடும்ப அமைப்பு நகரங்களிற்குரிய ஓர் சமூகவியல் அம்சமாகவும், கருக்குடும்பத்தையும் கற்றயல் குடும்பத்தையும் கொண்ட கூட்டுக் குடும்ப அமைப்பு கிராமிய சமூகத்திற்குரிய அம்சமாகவும் இனங்காணக்கூடிய தாகவுள்ளது. (கருக்குடும்பம் என்பது கணவன், மனைவி, மக்கள், ஆகியோரைக்கொண்ட குடும்பத்தையும், கற்றயல் குடும்பம் என்பது தாயின் உறவினர், தகப்பனின் உறவினர்களையும் உள்ளடக்கிய குடும்பத்தையும் குறிக்கின்றது) தனிக்குடும்ப அமைப்பு அல்லது கூட்டுக் குடும்ப அமைப்பு இனக்குழுக்களுக்கும், சமயக்குழுக்களுக்கும் ஏற்ப வேறுபடுகின்றன. ஒவ்வொரு சமூகக் குழுவுக்கும் தனித்துவமான குடும்ப அமைப்பு மாதிரிகளும், காணப்படுகின்றன. உதாரணமாக கொழும்பு முஸ்லிங்களினதும், சிங்கள பௌத்தர்களினதும் குடும்ப மாதிரிகள் கூட்டுக் குடும்ப அமைப்பு@ ஆணின் குடும்பத்துடன் இணைப்பைக் கொண்டதாக அமைக்கப்படுகின்றன. கிழக்கு முஸ்லிம்களின் கிராமிய பகுதிகளில் பெண்ணின் குடும்பத்துடன் இணைப்பைக் கொண்ட கூட்டுக் குடும்ப அமைப்புக் காணப்படுகின்றது.

குடும்ப மாதிரிகள் எவ்வாறாயினும் ஓர் குடும்பத்தில் பெண்ணின் நிலை பல வகைப்பட்டது. எனவே கடமைக்கூறுகளும் பல்வகைப்பட்டன. அதாவது ஒரே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு பல உறவு நிலைகளும், பல கடமைக் கூறுகளும், பொறுப்புக்களும், அதன் காரணமாக பல்வேறு அந்தஸ்த்து நிலைகளும் காணப்படுகின்றன. குறிப்பாக மனைவி, தாய், சகோதரி, மாமி, தாயின்தாய், தகப்பனின் தாய் எனப் பல உறவு நிலைகள் உண்டு. இந்நிலைகளில் அவர்களது அந்தஸ்த்து நிலை சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகின்றது. உதாரணமாக பௌத்த சமூக அமைப்பில் உள்ள தகப்பனின் தாய்க்கும், கொழும்பு வாழ் முஸ்லிம் சமூக அமைப்பில் காணப்படும் தகப்பனின் தாய்க்கும் உள்ள அதிகாரம் ஒப்பீட்டளவில் ஏனைய சமூக அமைப்பிலுள்ள தகப்பனின் தாயை விடக் கூடுதலானதாகும்.

அத்துடன் “பெண் எடுக்கும்” மரபுள்ள சமூகங்களில், மனைவிக்குள்ள அதிகாரம் “மாப்பிள்ளை எடுக்கும்” சமூகங்களில் மனைவிக்குள்ள அதிகாரத்தைவிட குறைவானதாகும். எனவே பெண்ணின் அந்தஸ்த்து நிலையை தீர்மானிக்கின்ற அதிகாரமுள்ள நிலை, சுயாதீனமாக இயங்கவுள்ள வாய்ப்புக்கள், தானே தீர்மானங்களை மேற்கொள்ளும் சுதந்திரம் ஆகியன சமூகத்திற்கு சமூகம், பெண்ணின் பாத்திரத்திற்கு பாத்திரம் (உறவு நிலைக்கேற்ப) வேறுபடுவதை விளங்கிக்கொள்ளலாம். எனவே அதிகாரத்தை கொண்டிருக்கும் நிலை, குறித்த சமூகத்தின் சித்தாந்தத்தின் அடிப்படையிலும், பெண்ணின் பொருளாதார நிலையிலும் தங்கியுள்ளது. உதாரணமாக சொத்துக்களை விட கூடிய அதிகாரத்தை கொண்டுள்ளாள். இருந்த போதிலும் சொத்துடைமை இல்லாத கீழ்நிலைச் சமூக வகுப்புப் பெண்களும், தொழிலாளர் வகுப்புப் பெண்களும், சற்று உயர்வான அல்லது ஆண்களுக்குச் சமமான அந்தஸ்த்து நிலையைக் கொண்டிருப்பதைக் காணலாம். பொருளாதார சுதந்திரம் உள்ளமையே இதற்கு காரணமாகும்.

எனவே ஒரே பெண்ணுக்கு அவளது பல்வேறு உறவு நிலைகளுக்கும் சமூக, பொருளாதார நிலைகளுக்கும் ஏற்ப அந்தஸ்த்து நிலை வேறுபடுவதையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும். இக்கட்டுரையி; சிறப்பு நோக்கம் கருக்கும்பத்தில் மனைவிக்கு உள்ள அந்தஸ்து நிலை என்ன என்பதை ஆய்வு செய்வதாகும்.

தற்கால சமூக, பொருளாதார நியமங்கள் பெண்கள் மரபு ரீதியான கடமைக் கூறுகளையே ஆற்ற வேண்டும் என்ற பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பெண்கள் வேலைக்குச் செல்கின்ற நிலைமை இதில் பெரும் பங்களிக்கின்றது. குறிப்பிடக் கூடியளவு பொருளாதார சுதந்திரம், பெண்களின் நோக்குகளில் ஏற்பட்ட விரிவு (கல்வி அறிவு) போன்றன பெண்களுக்கு ஓரளவு தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களையும் அதிகாரத்தையும் வழங்குகின்றன. இதன் காரணமாக பெண்ணின் அந்தஸ்த்து, மனைவியின் அந்தஸ்த்து நிலைகளில் குடும்பத்திலும் சமூகத்திலும் ஓரளவு சாதகமான நிலை ஏற்பட வாய்ப்புக்கள் உருவாகி வருகின்றன.

எனினும் மரபு ரீதியான பண்பாடுப் பெறுமானங்களைக்கொண்ட சகூக அமைப்பினுள் பெண்களும், ஏனையோரும் சிக்குண்டுள்ளதால் அவை கணவன் மனைவியின் குடும்பம்சார் அதிகாரம், பொறுப்பு, கடமைக்கூறு போன்றவற்றில் ஏற்படும் சாதகமான மாற்றங்களை தாமதப்படுத்துகின்றன.

மரபுரீதியான கணவன் - மனைவியின் உயிரியல் - சமூகம் தொடர்பான நிலைப்பாடுகள் சமமற்ற தன்மைகளையும், மனைவிக்கு கீழ்நிலை அந்தஸ்த்தையும் வலியுறுத்துவனவாகவும். இந்நிலைப்பாடுகள் செல்வாக்குச் செலுத்துவதால் கணவன் - மனைவிக்கிடையே உருவாகும் சமூக உறவுநிலைகள் பின்வருமாறு வகைப்படுத்தக்கூடியனவாயுள்ளன.

(1) மனைவியின் முழு செயற்பாடுகளின் (பாலியல் அம்சம் உட்பட) மீதான கணவனின் மேலாதிக்கம்.
(2) கணவன் - மனைவிக்கிடையில் சமனற்ற வேலைப்பழு.
(3) மனைவியின் குடும்பத் தியாகம்.
(4) கணவனின் நலன்களுக்காகவே மனைவி.
(5) கணவனின் நுகர்ச்சிப் பொருள்.
(6) பெண் பிள்ளை பெறும் இயந்திரம்.

சமூக, பொருளாதார மாற்றங்களுடன் இந்நிலைகள் மந்த கதியிலேனும் மாற்றமடைகின்ற போதும், இவற்றினை வலியுறுத்தும் பழைய சமூக, கருத்துக்கள் மீள முன்வைக்கப்படுகின்றன. கீழ்வருவன இவ்வகையிலமைந்த சில கருத்துக்களாகும்.

(1) அடுப்பே திருப்பதி அகமுடையானே கைலாசம்.
(2) கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
(3) பானை பிடித்தவள் பாக்கியசாலி.
(4) வேண்டாப் பொண்டாட்டியின் கால்பட்டாலும் குத்தம், கைபட்டலும் குத்தம்.
(5) தாரமும் குருவும் தலைவிதிப்படி.
(6) கைம் பெண் வளர்த்த கழிசறை.
(7) கணவனே கண்கண்ட தெய்வம்.
(8) ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே. ஒரு ஆதிக்கநாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே.
(9) ராசா மகளானாலும் கொண்ட கணவனுக்குப் பொண்ணுதான்.

பெண் அடையக்கூடிய பெரும் பாக்கியம் கணவன்தான்@ அத்துடன் மனைவியின் கடமைக்கூறு. சமையலும் அதனோடு இணைந்து வீட்டு வேலைகளும் தான். அவற்றினை திருப்தியாக நிறைவேற்றுவது திருப்பதி செய்து முக்தி அடைவதற்கு சமனான பேறேயாகும் என்பதையே முதலாவது கருத்து முன்வைக்கின்றது. அதாவது பெண்ணின் பேறு, திருப்தி ஆகியவற்றினை கணவன், வீடு என்ற எல்லைக்குள்ளே அடக்கிவிடுவதை இது வலியுறுத்துகிறது. மனைவியும் ஓர் மனிதப்பிறவி: அவளுக்கும் வேறு வகையான திருப்திகளும், பெறுபேறுகளும் இருக்க முடியும் என்ற பிறப்புரிமையை இக்கூற்று மறுக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் பெண்ணுக்கு கணவன் - வீடு என்பதிலுள்ள திருப்தியையும் பேற்றினையும் போல ஆணுக்கும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாது விடுவதன் மூலம் இக்கருத்து ஒருதலைப் பட்சமாக இருப்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள கூற்றுக்களில் மனைவிக்க ஓர் கீழ்நிலை அந்தஸ்த்து வழங்கப்படுவதையும், புருஷன் குணம் எவ்வகையாயினும் சிரமேற் கொண்டு பணிபுரிவதே பெண்கள் கடமை என்பதையும் இது வலியுறுத்துகின்றது. அதாவது சமூக ரீதியாக கணவன் மனைவிக்கிடையிலான உறவில் சமமற்ற தன்மையை இவை வலியுறுத்துகின்றன.

கைம்பெண் வளர்த்த கழிசறை என்னும் கூற்று பெண்ணின் மனைவி என்ற நிலையிலுள்ள இரு அந்தஸ்த்து நிலைகளைக் காட்டுகின்றது. ஒன்று மனைவி கணவனுடன் இருக்கும்போது ஒருவிதமான அந்தஸ்த்துக்குரியவளாகவும் கணவனை இழந்து விட்டால் அதனைவிட மிகக் குறைவான அந்தஸ்த்துக்கு தள்ளப்படுவதையும் காட்டுகின்றது.

அடுப்பே திருப்தி அகமுடையானே கைலாயம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற பழமொழிகள் கணவன் மனைவிக்கு வேறுபட்ட நிலைகளுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. அதாவது கணவன் உயர்தானத்திலுள்ளவன், மனைவி அவன் இயல்பில் எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டிய அடிமை என்று போதிக்கின்றன.

“ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே ஓர் ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே”. இக்கூற்று ஆரம்ப காலங்களிலிருந்து கூறப்பட்டு வருகின்ற “ஆணுக்காக அல்லது ஆண்களின் நலனுக்காகவே பெண் படைக்கப்பட்டுள்ளாள்” என்ற கருத்தினை உட்கிடையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சினிமாப்பாடலின் வரிகளாகும். இது சமூகத்தில் திரைப்பட ஊடகத்தினூடாக எவ்வாறு ஆணாதிக்க கருத்துக்கள் மிக லாவகமாக முன்வைக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றது. இது பாலியல் மேலாதிக்கத்தினை குறிப்பாக சுட்டிக்காட்டுவதை இங்கு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

ஆதிகால குழு அமைப்பில் குழுவுக்கு வாரிசை வழங்கிய பெண் சொத்துடமை நிலை ஏற்பட்டபின் தனி மனிதனுக்கு வாரிசைப் பெற்றுத் தரும் கடப்பாடுடையவளானாளண். இதனால் பெண்ணின் வாழ்வு நிலையின் எல்லை ஆணைச் சுற்றியும் குடும்ப அமைப்புக்குள்ளும் மட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பெண்களுக்குரிய அந்தஸ்த்து நிலை பின்வரும் இயங்குநிலைக்கூடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்மை – தாய்மை என்ற நிலையிலிருந்து ஆணின் நலம் பேணுதல் - ஆணின் சுகபோகப் பொருள் என உருமாற்றமடைந்துள்ளது. இவ்வாறான நிலைமாற்றம் முன்னர் கூறியபடி உயிரியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண் கொண்டுள்ள சமத்துவ நிலைக்கு சவாலாக உள்ளன. அதாவது குடும்பத்தில் ஆணும் பெண்ணும் உயிரியல் ரீதியாக உறவுநிலையில் சமமான தன்மையை கொண்டுள்ளனர். எனவே உயிரியல் ரீதியான சம அந்தஸ்தைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறே சமூக ரீதியான உறவிலும் சமமான தன்மையைக் கொண்டிருப்பதால் குடும்பத்தில் பெண்களில் சமூக அந்தஸ்த்து நிலையும் சமமாக இருத்தல் வேண்டும். எனவே சமூக – உயிரியல் ரீதியான அந்தஸ்த்து நிலைகள் சமமானதாக அமைதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் இவற்றிற்கு புறம்பானவையாக இருப்பதால் இவை காலத்தால் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும்.


பின்னிணைப்பு
பெண்கள் பற்றிய பழமொழிகள்
சமூகக் கூற்றுக்களில் மிகவும் வலிமை வாய்ந்ததும், ஏறக்குறைய எழுதப்படாத சட்டங்களாக அல்லது வரையறைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றதும், அடித்துச் சொல்லும் அதிகாரம் கொண்டதுமான சமூக நியதிகள் பழமொழிகளாகும்.

இவை கற்றோராலும் கூட அறுதியிட்டுக் கூறும் சந்தர்ப்பங்களில் ஆதாரங்களாக எடுத்துக் காட்டப்படுகின்றன. சமூக நீதியும், விஞ்ஞான உண்மையுமற்ற, பெண்கள் பற்றிய பழமொழிகள் சில இப் பின்னிணைப்பில் தரப்படுகின்றன. இவற்றில் பல சமூக ஏற்புடைய இலக்கியங்களிலும் இடம் பெறுகின்றன.

இப்பழமொழிகள், ஹேமன் ஜென்சன் பாதிரியாரால் 1897ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யு ஊடயளளகைநைன ஊழடடநஉவழைn ழக வுயஅடை Pசழஎநசள என்ற நூலில் இருந்து தொகுத்துத் தரப்படுகின்றன. இப்பழமொழிகளை இந்நூலுக்காகத் தொகுத்து வழங்கியவர் கலாநிதி எம்.ஏ.நுஃமான் அவர்கள்.

(1) அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது.
ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால்
ஆறாம் குடித்தனம் நிறாய்விடும்.
(2) ஐந்தாவதும் பெண்ணாய்ப் பிறந்hல் ஆணின் குடித்தனம் பாழாகி விடும்.
(3) குமரியாய் இருக்கையில் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கையில் திண்டாட்டம்.
(4) சக்கிலிப் பெண்ணும் சாமைக்கதிரும் பக்குவத்தில் பார்த்தால் அழகு.
(5) அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்.
(6) ஐந்து வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால்முடக்க வேண்டும் (பிள்ளை ஸ்ரீ ஆண்)
(7) பெண்ணுக்குக் குணம்தான் சீதனம்.
(8) பெண் என்று பிறந்தபோதே புருஷன் பிறந்திருப்பான்.
(9) பெண் சமர்த்து அடுப்பங்கரை வரையில் தான்.
(10) பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்.
(11) ராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்தான்.
(12) இடுப்புச் சுருங்குகிறது பெண்டுகளுக்கு அழகு.
(13) கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி
வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி.
(14) சேலைமேல் சேலைகட்டும் தேவரம்பை ஆனாலும்
ஓலைமேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.
(15) பூவுள்ள மங்கையாம் பொன்கொடியாம் போன இடம் எல்லாம் செரும்படியாம்
(16) பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
(17) பெண்ணுக்குப் போய் பொன்னுக்குப் பின்வாங்கலாமா,
(18) பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார்
சுவருக்கு மண் இட்டுப்பார்.
(19) பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
(20) ராசாவும், பொண்ணும், கொடியும் கிட்ட இருப்பதைத் தழுவிக் கொள்வார்கள்.
(21) ஆணுக்கு அவக்கேடு செய்தாலும்
பெண்ணுக்குப் பிழைக்கேடு செய்யப்படாது.
(22) ஆணை அடித்து வளர். பெண்ணைப் போற்றி வளர்.
(23) பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும்
(24) பெண் என்றால் பேயும் இரங்கும்.
(25) மண்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.
(26) இருமனது மங்கையோடு இணங்கினது அவம்.
(27) எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும்
பெண்புத்தி பின்புத்தியே.
(28) சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவன் பட்டபாடு போல.
(29) அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் ஆயிரம்
பொன்னை அரைக்காக ஆக்குகிறவளும் பொண்சாதி.
(30) பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம்.
(31) பெண்கள் சோற்றுக்குத் தெண்டமில்லை.
(32) மனைக்கொடியில்லாத மனைபாழ்.
(33) மனைவியில்லாத புருஷன் அரைமனிதன்.
(34) இந்திரனை சந்திரனை இலையாலே மறைப்பாள்
எமதிரு ராஜனைக் கையாலே மறைப்பாள்.
(35) எத்திலே பிள்ளைப் பெற்று இரவலிலே தாலாட்டுகிறது
(36) கட்டில் உள்ள இடத்தில் பிள்ளைப் பெற்று
சுக்குக்கண்ட இடத்தில் காயம் தின்பாள்.
(37) விலைமோரிலே வெண்ணை எடுத்து
தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவாள்.
(38) அறுதலி மகளுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை.
(39) ஆருமில்லாத பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப்பிள்ளையாம்.
(40) ஆளனில்லாத துக்கம் அழுதாலும் தீராது.
(41) ஆளனில்லாத பெண்ணுக்கு வாழ்வில்லை.
(42) இல்லாதவன் பொண்சாதி எல்லாருக்கும் தோழியா?
(43) இளைத்தவன் பொண்சாதி எல்லாருக்கும் மைத்துனி.
(44) வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள்குளி ஏண்டி.
(45) கிழமானாலும் கெட்டனாலும், கட்டிக் கொண்டவள் பிழைப்பாள்.
(46) கிழவனுக்கு வாழ்க்கைப் படுகிறதை விட,
கிணற்றிலே விழுகிறது மேல்.
(47) கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு
பாத்திரம் அறிந்து பிச்சைப்போடு.
(48) சும்மா இருந்த பெண்ணுக்கு அரைப்பணத்துத் தாலி போதாதா?
(49) பத்துக்கு மேலே ஒரு பறையனுக்காவது தள்ளவேணும்.
(50) பெண்வளர்த்தயோ பீவளர்தாயோ?
(51) வேலைக்காரி என்று வேண்டியபேர் கேட்பார்கள்.
குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

(52) அயல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு
ஆம்படையானை அடித்தாளாம்.
(53) அடங்காத பெண்சாதியாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
(54) அறக்காத்தான் பெண்டு இழந்தான், ஆறுகாதவழி சுமந்து அழுதான்.
(55) ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
தொண்ணூறு நாள் போனால் துடைப்பக்கட்டை.
(56) ஆபத்துக்கு உதவாத பெண்சாதி அழகுக்கா வந்திருக்கிறது?
(57) ஆபத்துக்கு உதவுவானா அவசாரி ஆம்படையான்.
(58) இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை எதற்கு?
(59) இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்.
(60) கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
(61) குதிரை இருப்பு அறியும்
கொண்ட பெண்சாதி குணம் அறிவாள்.
(62) கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.
(63) கை நிறைந்த பொன்னைப் பார்க்கிலும்
கண் நிறைந்த கணவன் மேல்.
(64) கோழி தட்டிக் கூவுமா? (பெட்டைக்கோழி கூவி பொழுது விடியுமா?)
(65) தனக்கென்று ஒருத்தி இருந்தால்
தலைமாட்டில் குந்தி அழுவாள்.
(66) தன் பெண்சாதியைத் தான் அடிக்க
தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதா?
(67) ஆயிரம் பேரிடத்தில் சிநேகம் பண்ணினாலும்
ஆம்பிளைக்கு என்ன?
(68) இடவசதி இல்லாத பதிவிரதை.
(69) இடம் அகப்படாத தோஷம் மெத்தப் பதிவிரதை.
(70) இத்தனை பெரியவன் கையைப் படித்தால், எப்படி மாட்டேன் என்பது போல்.
(71) ஊரிலேயும் போவாள் சொன்னால் அழுவாள்.
(72) ஏழு அறை கட்டி அதில் வைத்தாலும் ஒரு தாழறையில் சோரம் போவாள்.
(73) கற்பில்லாத அழகு வாசனையில்லாத பூ.
(74) பெண்கள் முக்குமணி பாலைக் குடித்தலும் பட்டைக் கட்டினாலும் பட்டணத்துப் பெண்கள்
தாட்டுவாணி.
(75) சிரித்தாயோ சேலை அவிழ்த்தாயோ?
(76) சிரித்தாயோ சீரைக் குலைத்தாயோ.
(77) பட்டப்பகலில் போகிறவளுக்கு தட்டுக்கூடை மறைப்பா?
(78) முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால்
குலத்துக்கு ஈனம்.
(79) எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தவள்.
(80) ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு
நாலுபிள்ளை பெற்றவனுக்கு நடுத்தெருவிலே ஓடு.
(81) ஒருவனுக்குத் தாரம், மற்றவனுக்குத் தாய்.
(82) தாயில்லாத பிள்ளை தறுதலை.
(83) தாய் அறியாத சூல் உண்டா?
(84) தாய் பொறுக்காததை ஊர் பொறுக்குமா?
(85) தாய் முகம் காணாத பிள்ளையும், மழைமுகம் காணாத பயிரும் உருப்படாது.
(86) தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயில் சீலை.
(87) தாய்க்குப் பின் தாரம்.
(88) பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள்.
(89) பெண்சாதி மடியைப் பார்ப்பாள்.
(90) பேய்யானாலும் தாய் வார்த்தை தட்டலாமா?
(91) பேய் பிள்ளையானாலும் தாய்தள்ளி விடுவாளா?
(92) மாதா மனம் எரிய, வாழாள் ஒருபோதும்.
(93) முலை கொடுத்து வளர்த்தவள் மூதேவி.
(94) முன்தானை போட்டவள் சீதேவி.
(95) ராஜானாலும் தன் தாய்க்கு மகனே.
(96) அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாரும் கிடைக்குமா?
(97) ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரி ஆகமாட்டாள்.