நூலகம் திட்டம் (நூலக எண்: 1650)

 
 

மின்னூலாக்கம்: கா. திருஞான சம்பந்தன்

 
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
     
  பாலபாடம் நான்காம் புத்தகம்  
 

ஆறுமுக நாவலர்

 



பாலபாடம்

நான்காம் புத்தகம்

முதற்பிரிவு

--------------------------------------------------------------------------------

கடவுள்


உலகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தொன்றாலும், சடமொன்றாலும், பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினால், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கின்றார் என்பது, நன்றாக நிச்சயிக்கப்படும்.

கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிபவர், அவர் அறியாதது ஒன்றுமில்லை. அவருடைய அறிவு இயற்கையறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவரல்லர். அவர் எல்லாம் வல்லவர், அவரால் இயலாத கருமம் ஒன்றுமில்லை. அவர் அளவிடப்படாத ஆனந்த முடையவர், தம்முடைய அநுபவத்தின் பொருட்டு வேறொன்றையும் வேண்டுபவரல்லர். அவர் தம்வயமுடையவர், பிறர்வயமுடையவரல்லர். அவர் உயர்வும் ஒப்பும் இல்லாதவர்; அவரின் மேலானவரும் இல்லை; அவருக்குச் சமமானவரும் இல்லை. அவர் சகலலோகத்துக்கும் ஒரே நாயகர். அவர் செய்யுந் தொழில்களுள் ஒன்றாயினும் அவருடைய பிரயோசனத்தைக் குறித்த தன்று. எல்லாம் ஆன்மாக்களுடைய பிரயோசனத்தைக் குறித்தவைகள். அவர் ஆன்மாக்களிடத்துள்ள கைமாறில்லாத அளவுகடந்த திருவருளே திருமேனியாக உடையவர்.

கடவுள் ஆன்மாக்கள் பொருட்டு வேதம் ஆகமம் என்னும் முதனூல்களை அருளிச் செய்தார். அவைகளிலே விதிக்கப் பட்டவைகளெல்லாம் புண்ணியங்கள். விலக்கப்பட்டவைகளெல்லாம் பாவங்கள். அவர் புண்ணியத்தைச் செய்த ஆன்மாக்களுக்கு இன்பத்தையும், பாவத்தைச் செய்த ஆன்மாக்களுக்குத் துன்பத்தையும் கொடுப்பார். துன்பத்தைக் கொடுத்தலினால் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்தலும், இருப்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தினாலன்றி வன்கண்மை யினாவல்லவே. அது போலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்லவழியிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினால், அதுவும் கருணையேயாம்.


--------------------------------------------------------------------------------

ஆன்மா

ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய் சேதனமாய், பாசத் தடையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப் பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்துநான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் பிறந்திறந்துழலும்.

நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற்றோன்றுவன. சுவேதசம் வேர்வை யிற்றோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற் றோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசர மென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிரயோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிரயோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிரயோனிபேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினாலும், சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். இப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும்(சுவை) அறியும் ஈரறிவுயிர்கள். கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தத்தையும்(வாசனை) அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும் வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கனோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மனிதர்களும் அவ்வைந்தனோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை தீவினை யென்னும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும், அநுபவிக்கும். அப்படி அநுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சிநின்ற இரு வினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவைகளின் பயன்களாகிய இன்பதுன்ப மிரண்டையும் அநுபவிக்கும். இப்படியே, தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும் காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகளெலாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சிலகாலம் வளர்ந்து அழியினும் அழியும். மூன்று வயசுக்குமேற் பதினாறு வயசு வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயசு வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மையாமே. அழியுங் காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாதுவருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்த சரீரம் உள்ளபொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.


--------------------------------------------------------------------------------

கடவுள் வழிபாடு

கருணாநிதியாகிய கடவுள், புறத்திலே திருக்கோயிலுள்ளிருக்கும் இலிங்கம் முதலிய திருமேனியும், தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்திலே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளவர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

கடவுள் அங்கிங்கெளாதபடி எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரம் தயிரில் நெய்போல விளங்கி நிற்பர். மற்றையிடங்களெல்லாவற்றினும் பாலில் நெய் போல விளங்காது நிற்பர்.

கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளாவன, அவரை மனசினாலே தியானித்தலும், வாக்கினாலே துதித்தலும், கைகளினாலே பூசித்தலும், கால்களினாலே வலம் வருதலும், தலையினாலே வணங்குதலும், செவிகளினாலே அவருடைய புகழைக் கேட்டலும், கண்களினாலே அவருடைய திருமேனியைத் தரிசித்தலுமாம்.

அன்பில்லாத வழிபாடு உயிரில்லாத உடம்பு போலும். அன்பாவது தன்னால் விரும்பப்பட்டவரிடத்தே தோன்றும் உள்ளநெகிழ்ச்சி. கடவுலிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்களாவன, அவருடைய உண்மையை நினைக்குந் தோறும் கேட்குந்தோறும் காணுந்தோறும் தன்வசமழிதலும், மயிர்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும், அவரால் விரும்பப்படுபவைகளைச் செய்தலும், வெறுக்கப்படுபவைகளைச் செய்யாதொழிதலும், அவருடைய மெய்யடியார்களைக் காணும் பொழுது கூசாது வணங்குதலும், பிறவுமாம்.

கடவுளால் விரும்பப் படுபவைகளாவன இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய், தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாம். கடவுளால் வெறுக்கப்படுபவைகளாவன கொலை, புலால் உணல், களவு, கள்ளுணல், வியபிசாரம், பொய், செய்ந்நன்றி மறத்தல் முதலிய தீமைகளாம்.

ஆன்மாக்களாகிய நாம், பிறர்வயமுடையவர்களும், சிற்றறிவு சிறுதொழிலுடையவர்களுமாய், இருத்தலினாலே, நன்மை தீமைகளை உள்ளபடி அறியவும், தீமைகளை ஒழித்து நன்மைகளையே செய்யவும் வல்லே மல்லேம். ஆதலால், தம்வயமுடையவரும் முற்றறிவுமுற்றுத் தொழிலுடையவரும் ஆகிய கடவுளை வணங்கி, அவருடைய திருவருள் வசப்பட்டு ஒழுகுமேயானால், நாம் தீமைகளினின்று நீங்கி நன்மைகளைச் செய்து தம்மை வழிபட்டு உய்யும்படி அவர் நமக்கு அருள் செய்வார்.


--------------------------------------------------------------------------------

ஈசுரத்துரோகம்

கடவுளை நிந்தித்தலும், கடவுளை வழிபடும் முறைமையைப் போதிக்குங் குருவை நிந்தித்தலும், கடவுளுடைய மெய்யடியாரை நிந்தித்தலும், கடவுள் அருளிச் செய்த வேதாகமங்களை நிந்தித்தலும், இந்நிந்தைகளைக் கேட்டுக் கொண்டிருத்தலும், தேவாலயத்துக்கும் மடாலயத்துக்கும் உரிய திரவியங்களை அபகரித்தலும், தேவாலயம் திருமடம் திருக்குளம் திருநந்தனவனம் முதலியவைகளுக்கு அழிவு செய்தலும், ஈசுரத்துரோகங்களாகிய அதி பாதகங்களாம். மடாலயமாவது கடவுளை வழிபடுதற்கும், கடவுளுடைய அன்பர்களுக்கு அன்னங் கொழுத்தற்கும் உரிய தானமாம்.

ஸ்நான முதலிய நியமங்களில்லாமல் திருக்கோயிலினுள்ளே புகுதலும், திருக்கோயிலிலும் திருக்குளத்திலும் திருநந்தவனத்திலும் திருக்கோயில் வீதியிலும் மலசலங் கழித்தலும், எச்சிலுமிழ்தலும், திருக்குளத்திலே செளசஞ் செய்தலும், தந்தசுத்தி செய்தலும், அசுசியொடு ஸ்நானஞ் செய்தலும் ஈசுரத்துரோகங்களாம்.

குடிகளுக்குச் செய்யும் தீமையிலும் மகாராசாவுக்குச் செய்யுந் தீமை மிகக் கொடியது; அதுபோலவே ஆன்மாக்களுக்குச் செய்யுந் துரோகத்தினும் கடவுளுக்குச் செய்யுந் துரோகம் மிகக் கொடியது. குடிகளுக்குச் செய்த தீமை இராசாவினாலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும். இராசாவுக்குச் செய்த தீமையோ பொறுக்கப்படமாட்டாது. அதுபோலவே ஆன்மாக்களுக்குச் செய்த துரோகம் கடவுளாலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும். கடவுளுக்குச் செய்த துரோகமோ பொறுக்கப் படமாட்டாது. எங்கும் வியாபகமாய் இருந்து எல்லாமறியும் இயற்கை இல்லாதவனாதலால், இராசாவுடைய தண்டத்துக்குத் தப்பினும் தப்பலாம்; எங்கும் வியாபகமாய் இருந்து எல்லாமறியும் இயற்கையை உடையவராதலால், கடவுளுடைய தண்டத்துக்கோ தப்ப முடியாது. ஈசுரத்துரோகம் எவ்வகைப்பட்ட பிராயச்சித்தத்தாலுந் தீராது.

ஈசுரத் துரோகிகளுக்கு, நரகத்திலே இயம தூதர்கள் இரத்தவெள்ளுஞ் சிந்தும்படி இருப்புமுளைகளை நெருப்பிலே காய்ச்சி, தலையிலும், கண்களிலும், செவிகளிலும், நாசிகளிலும், வாயிலும், மார்பிலும் அறைந்து, உடம்பு முழுதும் தாமிர முதலிய உலோகங்களை உருக்கிய நீரைச் சொரிவார்கள். மயிர்க்காறோறும் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை அழுத்துவார்கள். அவயவங்கடோறும் இருப்பாப்புக்களை மாட்டுவார்கள். பின்பு நெய் நிறைந்த செப்புக் கடாரத்திலே விழுத்திக் காய்ச்சுவார்கள். ஈசுரத்துரோகிகள் அந்தச் செப்புக் கடார நெய்யிலே சந்திரசூரியர் உள்ளவரையும் குப்புறக் கிடந்து வருந்துவார்கள்.

இப்படி நரகத்துன்பத்தை அனுபவித்தபின், பூமியிலே மலத்திற்கிருமி முதலியவைகளாய்ப் பிறந்திறந்து உழன்று, பின்பு மனிதப்பிறப்பை எடுத்து, வலி, குட்டம், கபம், நீரிழிவு, பெருவியாதி, மூலவியாதி முதலிய மிகக் கொடிய நோய்களினாலும், பசியினாலும் வருந்துவார்கள்.


--------------------------------------------------------------------------------

அருள்

அருளாவது இவை தொடர்புடையவை என்றும் இவை தொடர்பில்லாதவை என்றும் நோக்காது இயல்பாகவே எல்லாவுயிர்கண் மேலுஞ் செல்வதாகிய கருணை, அருளெனினும், கருணையெனினும், இரக்கமெனினும் பொருந்தும். உலகவின்பத்துக்குக் காரணம் பொருளே யாதல்போலத் தருமத்துக்குக் காரணம் அருளேயாம். அருளென்னும் குணம் யாவரிடத்திருக்குமோ, அவரிடத்தே பழி பாவங்களெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். வாய்மையாகிய தகழியிலே பொறுமையாகிய திரியை இட்டு தவமாகிய நெய்யை நிறையப் பெய்து, அருளாகிய விளக்கை ஏற்றினால், அஞ்ஞானமாகிய பேரிருள் ஓட்டெடுப்ப, பதியாகிய மெய்ப்பொருள் வெளிப்படும். மரணபரியந்தம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல் போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப்பவன் யாவன், அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ்செய்பவனாகி, தான் எந்நாளும் இன்பமே வடிவமாக இருப்பன்.

உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமேனிகள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களேயாவர்கள். உயிர்களிடத்து அன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர்கள் போல் ஒழுகுதல் நாடகமாத்திரையேயன்றி உண்மையன்றென்பது தெள்ளிதிற்றுணியப்படும். பிறவுயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்து மாத்திரமா தம்முயிரிடத்தும் இரக்கமில்லாதவரே யாவர். அவர் தமக்குத்தாமே வஞ்சகர்.


--------------------------------------------------------------------------------

கொலை

கொலையாவது உயிர்களை அவைகளுக்கு இடமாகிய உடம்பினின்றும் பிரியச் செய்தல். உயிர்களுக்கு இதஞ் செய்தலே புண்ணியமும் அகிதஞ் செய்தலே பாவமுமாம். கொலையைப் பார்க்கினும் அகிதம் வேறில்லாமையால், கொலையே பாவங்களெல்லாவற்றிற்குந் தலையாயுள்ளது. கொல்லாமையைப் பார்க்கினும் இதம் வேறில்லாமையால், கொல்லாமையே புண்ணியங்களெலாவற்றிற்குந் தலையாயுள்ளது.

கொலையில்லாத ஞானமே ஞானம், கொலையில்லாத தவமே தவம், கொலையில்லாத தருமமே தருமம், கொலையில்லாத செல்வமே செல்வம். ஆதலினாலே, சோர்வினாலும் கொலைப்பாவம் சிறிதும் விளையாவண்ணம் எப்பொழுதும் அருளோடுகூடிச் சாவதானமாக இருத்தல் வேண்டும். கொலை செய்ய ஏவினவரும், கொலை செய்யக் கண்டும் அதனைத் தடுக்காதவரும், ஒருவன் செய்த கொலையை மறைத்து அவனை இராசாவுடைய தண்டத்துக்குத் தப்புவித்தவரும், கொலை செய்தவரோடு பழகினவரும் கொலைப் பாவிகளே யாவர்.

கொலைப் பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பிறந்து, ஈளை, காசம், குட்டம், பெருவியாதி, நெருப்புச்சுரம், கைப்பிளவை முதலிய நோய்களினால் வருந்தி உழல்வார்கள்.

பிறவுயிரைக் கொல்லுதல் போலத் தன்னுயிரைக் கொல்லுதலும் பெருங்கொடும் பாவம். கடவுளை வழிபட்டு உயிர்க்கு உறுதி செய்துகொள்ளும் பொருட்டுக் கிடைத்த கருவி சரீரம். ஆதலால் எவ்வகைப்பட்ட வியாதிகளினாலே வருத்தமுற்றாலும், சரீரத்தைப் பாதுகாத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். கோபத்தினாலும் வியாதி முதலிய பீடைகளினாலும் தம்முயிரை வலிய விட்டவர் கும்பிபாகம் முதலிய நரகங்களிலே அறுபதினாயிரம் வருடங்கிடந்து வருந்தி, பின்பு சக்கிரவாளகிரிக்குப் புறத்தில் உள்ள இருட்பூமியிலே எண்ணில்லாத காலங் கிடப்பார்.


--------------------------------------------------------------------------------

புலாலுண்ணல்

புலாலுண்ணலாவது உயிரின் நீங்கிய ஊனைப் புசித்தல், புலால் கொலையினாலே கிடைத்தலால், புலாலுண்ணல் கொலைப் பாவத்தின் காரியமாகும். புலாலுண்டவன் பின்னும் கொலை வாயிலாகப் புலாலை விரும்புதலால், புலாலுண்ணல் கொலைப் பாவத்துக்குக் காரணமுமாகும். இப்படியே எல்லா விதத்தாலும் புலாலுண்ணல் கொலையோடு தொடர்புடையதாதலால், புலாலுண்பவர் உயிர்களிடத்து அருளில்லாதவரே. ஆதலால் புலாலைப் புசித்துக்கொண்டு உயிர்களிடத்து அருளுடையோம் என்பது நடிப்பு மாத்திரமாமன்றி உண்மையாகாது. உலகத்திலே புலாலுண்பவர் இல்லையாயின், புலாலை விற்றற்பொருட்டு உயிர்க்கொலை செய்பவரும் இல்லை. ஆதலாற் கொலைப் பாவத்தைப் பார்க்கிலும் புலாலுண்ணலே பெருங்கொடும் பாவம்.

தம்மிலும் உயர்ந்த சாதியார் தாழ்ந்த சாதியாரிடத்தே சலபானம் பண்ணினும், அவரும் தாழ்ந்த சாதியார் என்று அவர் வீட்டிலே சலபானமும் பண்ணாத மனிதர்கள், புலையர்களுடைய மலத்தையும் புசிக்கின்ற பன்றி கோழி முதலியவைகளைப் புசிக்கின்றார்களே! அவர்கள் புலையரினும் தாழ்வாகிய புலையராவர்களன்றி உயர்ந்த சாதியாராகார்கள். அயல் வீட்டிலே பிணங்கிடந்தாலும் போசனஞ் செய்தற்குமனம் பொருந்தாத மனிதர்கள் மிருகம் பக்ஷ¢ முதலியவைகளுடைய பிணத்தைக் கலத்திலே படைத்துக்கொண்டு புசிக்கின்றார்களே! அன்னம் பானீயம் முதலியவைகளிலே மயிர், ஈ, எறும்பு முதலியவைகளுள் ஒன்று விழுந்திருக்கக் கண்டாலும், மிக அருவருத்து உண்ட சோற்றையும் கக்கும் மனிதர்கள் மற்ற மாசிசங்களைப் புசிக்கின்றார்களே! ஊறுகாய் முதலியவைகளிலே ஒரு புழுவைக்கண்டால் அருவருத்துச் சரீரங் குலைந்து அவைகளை எடுத்தெறிந்துவிடும் மனிதர்கள் புழுத்த மாமிசங்களை விரும்பிப் புசிக்கின்றார்களே! தங்களெதிரே ஆடுகள் சிந்தத்தெறித்த கோழை தங்களுடம்பிலே படுதலும், பொறாது மனங் குலையும் மனிதர்கள் அவ்வாடுகளின் மாமிசங்களை விரும்பிப் புசிக்கின்றார்களே! தங்களெதிரே ஆடுகள் சிந்தத்தெறிந்த கோழை தங்களுடம்பிலே படுதலும், பொறாது மனங் குலையும் மனிதர்கள் அவ்வாடுகளின் மாமிசத்தை மூளையோடு மனமகிழ்ந்து புசிக்கின்றார்களே! பூமியில் உள்ள சுடுகாடுகள் மனிதர்களுடைய பிணத்துக்குச் சுடுகாடுகளாயிருக்கும்; மிருகங்களுக்கும் பக்ஷ¢களுக்கும் மற்சங்களுக்கும் சுடுகாடுகள் சீவகருணையில்லாத மனிதர்களுடைய வயிறுகளேயாம்.

கொலை செய்தவரும், புலாலை விற்றவரும், புலாலை விலைக்கு வாங்கினவரும், புலாலைப் புசித்தவரும், புலால் புசியாதவரைப் புசிப்பித்தவரும், சிலர் சொல்லுக்கு அஞ்சிப் புலாலைப் புசித்தவருமாகிய எல்லாரும் பாவிகளேயாவர். அப்பாவிகளை நரகத்திலே இயமதூதர்கள் அக்கினி சுவாலிக்கும் முள்ளிலமரத்திலே குப்புறப்போட்டு, இருப்பு முளைகளை நெருங்கக் கடாவிய தண்டத்தினாலே முதுகில் அடிப்பார்கள். அதுவன்றிக் குடாரியினாலே கொத்தி, ஈர்வானினால் அறுப்பார்கள்; இரும்பு முதலிய உலோகங்களை உருக்கி, அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். புலாலுண்ணாமையினாலே தங்கள் உடம்பு மெலிகின்றது என்று உண்ணப்புகும் மனிதர்கள், புலாலுண்டு தங்கள் உடம்பைப் பருக்கச்செய்து நரகத்திலே நெடுங்காலம் துன்பம் அநுபவித்தல் நல்லதோ, புலாலுண்ணாமல் தங்களுடம்பை வாட்டி நித்தியமாகிய முத்தியின்பத்தைப் பெற்று வாழுதல் நல்லதோ இதனைச் சிந்திக்கக்கடவர்கள்.

மேற்கூறிய பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பன்றி முதலிய இழிந்த பிறப்புக்களாய்ப் பிறந்திறந்து உழன்று, மனிதப் பிறப்பை எடுத்து, பெருவியாதி, கருங்குட்டம், வெண்குட்டம், நீரிழிவு, கண்டமாலை முதலிய வியாதிகளினாலே வருந்துவார்கள்.

கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களெல்லாவற்றினும் ஸ்நானஞ் செய்தானாயினும், கடவுளைப் பூசித்தானாயினும், எண்ணில்கோடி தானஞ்செய்தானாயினும், ஞான சாத்திரங்களை ஓதி உணர்ந்தானாயினும், புலாலைத் தள்ளாது புசித்தவன் நரகத்தை அடைவன்.

அசரமாகிய மரமுதலியவைகளைக் கொன்று புசித்தல் பாவமாயினும், அவைகள் எழுவகைத் தோற்றத்துள்ளும் தாழ்ந்த பருவத்தை உடையவையாதலால் அக்கொலை யாலாகும் பாவம் சிறிதாகும். அசரபதார்த்தங்களை நாடோறும் கடவுள் அக்கினி குரு அதிதிகள் என்னும் நால்வகையோருக்கும் முன்னூட்டிப் பின்னுண்பானாயின் அவ்வசரக் கொலையால் வரும் பாவமும், உழுதல், அலகிடல், மெழுகுதல், நெருப்பு மூட்டல், தண்ணீர், சுவர்தல், நெற்குத்துதல் முதலிய தொழில்களால் வரும் பாவமும் அவ்வக் காலத்திலே நீங்கிவிடும்.


--------------------------------------------------------------------------------

கள்ளுண்ணல்

கள்ளு, அவின், கஞ்சா முதலியவை அறிவை மயக்கும் பொருள்கள். அவைகளை உண்பவர் அறிவையும் நல்லொழுக்கத்தையும் இழந்து, தீயொழுக்கத்தையே அடைவர். கள்ளுண்பவர் தமக்குச் சினேகர் செய்த நன்மையையும் தாங்கற்ற நூற் பொருளையுஞ் சிந்தியார். தம்மைத் தொடர்ந்த பழி பாவங்களையும் அவைகளாலே தமக்கு விளைந்த துன்பத்தையும் அறியார். இவ்வியல் புடையவர் தம்முயிர்க்கு உறுதி செய்துகொள்வது எப்படி! கள்ளுண்பவருக்குக் களிப்பும் மயக்கமுமே இயற்கையாதலால், அவரிடத்துச் சண்டையும், கொலையும், களவும், பொய்யும், வியபிசாரமுமே குடிபுகும்.

கள்ளுண்டவருக்கு மனமொழி மெய்கள் தம் வசப்படாமையால் நாணம் அழியும்; அழியவே, அறிவுடையோர் அவரைக் காணுதற்கும் அஞ்சித் தூரத்தே நீங்குவர். யாது செய்யினும் பொறுக்கும் மாதாவும், கள்ளுண்டு களித்தலைப் பொறுக்க மாட்டாள். ஆனபின், குற்றம் யாதும் பொறாத அறிவுடையோரெதிரே கள்ளுண்டு களித்தல் யாதாய் முடியும்? விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளினாலே அறிவு மயக்கத்தைக் கொள்ளுவோர் எவ்வளவு அறிவீனர்! கள்ளுண்டவர் அநேகர் தஞ்செல்வமெல்லாம் இழந்து, வறியவராகித் தெருத்தோறும் அலைந்து திரிந்து, பின்னரும் பொருள் யாசித்துக் கள்ளுண்டு மயங்கி விழுந்து கிடந்து, பலராலும் பழிக்கப்படுதலைக் கண்டுங் கண்டும், கள்ளுண்டல் எவ்வளவோரறியாமை!

கள்ளுண்டவரும், கள்ளுண்ணாதவரைக் கள்ளுண்பித்தவரும், கள் விற்றவரும், கள்ளுண்டவரோடு பழகினவரும், அளவில்லாத காலம் நரகத்திலே கிடந்து வருந்துவர்கள். இமயதூதர்கள் அவர்களுடைய நாக்கை வாளினாலே சேதித்து, உலோகங்கள் உருக்கிய நீரை அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். அவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்த பின்பு பூமியிலே மலப்புழுவாய்ப் பிறந்து மலத்தை உண்டு இறந்து, மனிதராய்ப் பிறந்து, சொத்தைப் பற்குத்து நோயினாலும், பைத்தியத்தினாலும், வயிற்று நோயினாலும் வருந்துவார்கள்.

அநேகர் வாம மதத்திலே புகுந்து, பிறரையும் தம் வசப்படுத்திக் கெடுத்து, அவரோடு கள்ளுண்டு களிக்கின்றார்கள். வாம மதத்தை அநுட்டித்தவர்கள் பிசாச பதத்தை அடைவார்கள் என்பது நூற்றுணிவு.


--------------------------------------------------------------------------------

களவு

களவாவது பிறருடைமையால் இருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வதுபோலத் தோன்றி, தான் போம் பொழுது பாவத்தையும் பழியையுமே நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன்கொண்டு போய்விடும். களவுசெய்பவர், அப்பொழுது, 'யாவராயினும், காண்பாரே அடிப்பாரோ, கை கால்களைக் குறைப்பாரோ' என்றும், பின்பும் 'இராசா அறிந்து தண்டிப்பானோ' என்றும், பயந்து பயந்து மனந்திடுக்குறுதலினால், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினாலே களவு அப்பொழுது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.

களவு செய்தவர் இம்மையிலே அரசனாலே தண்டிக்கப்பட்டு எல்லாராலும் இகழப்படுவர். அவரை அவர் பகைவர் மாத்திரமா, உறவினரும் சிறிதாயினும் நம்பாது அவமதிப்பார். களவினாலாகிய இகழ்ச்சியைப் பார்க்கினும் மிக்க இகழ்ச்சி பிறிதில்லை. ஒருகாற் களவு செய்தவரென்று அறியப்பட்டவர் சென்ற சென்ற இடங்களினெல்லாம், பிறராலே செய்யப் பட்ட களவும் அவராற் செய்யப்பட்டதாகவே நினைக்கப்படும்.

களவென்னுங் பெருங்குற்றத்தைச் சிறுபருவத்திற்றானே கடிதல் வேண்டும். கடியாதொழிந்தால், அது மேன்மேலும் வளர்ந்து பெருந்துன்பக்கடலில் வீழ்த்தி விடும். ஆதலாற் சிறுவர்களிடத்தே அற்பக்களவு காணப்படினும், உடனே தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டித்துத் திருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாது விட்டால், அப்பிள்ளைகளுக்குப் பின் விளையும் பெருந்துன்பத்துக்குத் தாய் தந்தையர்களே காரணராவார்கள்.

களவு செய்தவரையும், களவுக்கு உபாயஞ் சொன்ன வரையும், களவு செய்தவருக்கு இடங்கொடுத்தவரையும், நரகத்திலே இயமதூதர்கள், அவயங்களெங்கும் இருப்பு முளைகளை அறைந்து, வருந்துவார்கள். பாசத்தினாலே அவயவங்களெல்லாவற்றையுங் கூட்டிக்கட்டி, அக்கினி நரகத்திலே, குப்புறப்ப்போடுவார்கள். அவர்கள் நெடுங்காலம் நரகத் துன்பம் அனுபவித்த பின்பு, பூமியிலே பிறந்து, குட்டம், காசம், வாதம், மூலரோகம் முதலிய நோய்களினாலே வருந்துவார்கள்.


--------------------------------------------------------------------------------

வியபிசாரம்

வியபிசாரமாவது காம மயக்கத்தினாலே தன் மனையாளல்லாத மற்றைப் பெண்களை விரும்புதல். மற்றைப் பெண்கள் என்பது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப் பெண்களையும். பிறன் மனையாளை விரும்புவோரிடத்தே தருமமும் புகழும் சிநேகமும் பெருமையுமாகிய நான்கும் அடையாவாம். அவரிடத்தே குடி புகுவன பாவமும் பழியும் பகையும் அச்சமுமாகிய நான்குமாம். ஒருவன் தன் மனையா¨ளைப் பிறன் விரும்புதலை அறியும் பொழுது தன் மனம் படுந்துயரத்தைச் சிந்திப்பானாயின், தான் பிறன் மனையாளை விரும்புவானா! விரும்பானே.

பிறன் மனையாளை விரும்பாத ஆண்மையே பேராண்மை. பிறராலே 'இவன் பரதாரசகோதரன்' எனப்படுதலே பெரும்புகழ். இப்பேராண்மையையும் பெரும்புகழையும் உடைய மகாவீரனை அவன் பகைவரும் அவன் இருக்குந்திக்கு நோக்கி வணங்குவர். இவ்வாண்மையும் புகழும் இல்லாதவரை, அவருக்குக் கீழ்ப்பட்டோராகிய மனைவியர் பிள்ளைகள் வேலைக்காரர் முதலாயினோரும், நன்கு மதியார். அச்சத்தாலும் பொருளாசையாலும், அவரெதிரே நன்குமதிப்பார் போல நடிப்பினும், தமது உள்ளத்தினும் அவரெதிரல்லாத புறத்தினும் அவமதிப்பே செய்வர். வியபிசாரஞ் செய்வோர் தாமாத்திரமன்றித் தங்கீழுள்ளாரும் வியபிசாரஞ் செய்து கெடுதற்குக் காரணராவர். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் அவரின் மூத்தோரிடத்துஞ் செல்லும். ஒழுக்கமில்லாதார் வாய்ச்சொல் அவரின் இளையோரிடத்துஞ் செல்லாது. ஆதலினால், ஒழுக்கமில்லாதவர் பிறரைத் திருத்துதற்கும் வல்லராகார்.

தூர்த்தர்களோடு பழகுதலும், பெண்களுடைய கீதத்தைக் கேட்டலும், பெண்களுடைய நடனத்தைப் பார்த்தலும், சிற்றின்பப் பாடல்களைப் படித்தல் கேட்டல்களும், பார்க்கத் தகாத படங்களையும் பிரதிமைகளையும் பார்த்தலும், பொதுப் பெண்களுடைய தெருவுக்குப் போதலும், பெண்கள் கூட்டத்திலே தனித்துப் போதலும், பெண்களோடு சூது சதுரங்கம் முதலியவை ஆடுதலும் வியபிசாரத்துக்கு ஏதுக்களாம். உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களைப் படித்தல் படிப்பித்தல் கேட்டல்களிலும், கடவுளுக்குத் திருத்தொண்டுகள் செய்தலிலும், தரும வழியாகப் பொருள் சம்பாதித்தலிலுமே காலத்தைப் போக்கல்வேண்டும். வயசினாலும் நல்லறிவினாலும் நல்லொழுக்கத்தினாலும் முதிர்ந்த பெரியோரோடு கூடல் வேண்டும். சிறிது நேரமாயினும் சோம்பலாய் இருக்கலாகாது. சோம்பேறிக்கு அச்சோம்பல் வழியாகவே, தீச்சிந்தை நுழையும். அத்தீச்சிந்தை வியபிசாரத்துக்கு ஏதுவாகும்.

வியபிசாரமே கொலைகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே களவுகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே அறிவை மயக்கும் பொருள்களாகிய கள்ளு, அவின், கஞ்சா முதலியவைகளெ உண்டற்குக் காரணம். வியபிசாரமே பொய் சொல்லற்குக் காரணம். வியபிசாரமே சண்டைக்குக் காரணம். வியபிசாரமே குடும்ப கலகத்திற்குக் காரணம். வியபிசாரமே வியாதிகளெல்லாவற்றிற்குங் காரணம். வியபிசாரமே திரவிய நாசத்திற்குக் காரணம். வியபிசாரமே சந்ததி நாசத்திற்குக் காரணம்.

பிறன் மனையாளைக் கூடினவர் நரகத்திலே அக்கினி மயமாகிய இருப்புப் பாவையைத் தழுவி வருந்துவர். இயமதூதர்கள் அவரை இருப்புக் குடத்தினுள்ளே புகுத்தி அதன் வாயை அடைத்து, அக்கினிமேல் வைத்து எரிப்பார்கள். அவர் சரீரத்தை உரலிலிட்டு இடிப்பார்கள்; அக்கினி மயமாகிய சிலையிலே சிதறும்படி அறைவார்கள். இருட்கிணற்றிலே விழுத்துவர்கள்; அங்கே இரத்தவெள்ளம் பெருகும்படி கிருமிகள் அவருடம்பைக் குடையும். பின்னும் அவர் அக்கினி நரகத்திலே வீழ்த்தப்பட்டு 'என் செய்தோம் என் செய்தோம்' என்று நினைந்து நினைந்து அழுங்குவர்.

பிறன் மனையாளை இச்சித்துத் தீண்டினவரை, நரகத்திலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்துவர்கள்; அவருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவரை மற்ற நகரங்களினும் விழுத்தி வருந்துவர்கள். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவருக்குக் கண்களிலே அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்தி, முற்கூறிய மற்றைத் துயரங்களையுஞ் செய்வார்கள்.

வியபிசாரஞ் செய்தவர் பிரமேகம், கிரந்தி, பகந்தரம், கல்லடைப்பு, நீரிழிவு முதலிய வியாதிகளினால் வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவர் நேத்திர ரோகங்களினால் வருந்துவர்.


--------------------------------------------------------------------------------

பொய்

பொய்யாவது உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் சொல்லல். பொய் மிக இழிவுள்ளது. ஒரு பொய் சொன்னவன், அதைப் தாபிக்கப்புகின், ஒன்பது பொய் சொல்லல் வேண்டும். 'நான் சொன்ன பொய்யைப் பொறுத்துக் கொல்லல் வேண்டும்' என்பானாயின், ஒன்றுடனொழியும். பொய் சொல்லத் துணிகின்றவன் களவு முதலிய தீமைகளைச் செய்தற்கு அஞ்சான். பொய் சொல்லலாகிய பாவமொன்றை ஒழிப்பின், அதுவே வழியாக மற்றைப் பாவங்களெல்லாம் தாமே ஒழிந்துவிடும். பொய்யன் மெய்யைச் சொல்லுகிற பொழுதும் பிறர் அதனை நம்பார். ஆதலால், விளையாட்டுக்காயினும் பொய் சொல்லலாகாது.

மெய் சொல்லுகிறவனுக்கு அதனால் ஒரு கேடு வந்த தாயினும், அவனுள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாகும். அவன் பகைவர்களும் அவனை நன்கு மதிப்பர்கள். பிறராலே நன்கு மதிக்கப்படவும் தன்காரியம் சித்திபெறவும் விரும்புகின்றவன் எப்பொழுதும் தன்மானத்தோடு பொருந்த மெய்யே பேசல் வேண்டும். ஒருவன் தன் மனம் அறிந்ததொன்றைப் பிறர் அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்கக்கடவன். பொய் சொன்னானாயின், அவன் மனமே அப்பாவத்துக்குச் சாக்ஷ¢யாய் நின்று அவனைச் சுடும்.

உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளையும் மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவன். சத்தியமே, மேலாகிய தானமும் தவமும் தருமமுமாம். எவனுடைய புத்தி சத்தியத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத் தன்மையை அடைவன். சத்தியத்தின் மிக்க தருமமும் அசத்தியத்தின் மிக்க பாவமும் இல்லை.

பொய்ச்சான்று சொன்னவரும், பொய்வழக்குப் பேசின வரும், வழக்கிலே நடுவுநிலைமையின் வழுவித் தீர்ப்புச் செய்தவரும், ஏழுபிறப்பில் ஈட்டிய எல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவராவர். பிரமவதையும் சிசுவதையும் தந்தைவதையும் செய்தவராவர். மிகக் கொடிய ரெளரவ முதலிய நரகங்களை அடைவர். அவரை இயமதூதர்கள் வாயிலே அடித்து, அவருடைய நாக்கையும் அறுத்து, பல துக்கங்களையும் உறுவிப்பார்கள். பின்னும் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக்கை, புழு என்னும் பிறப்புக்களிற் பிறந்து, பின்பு மனிதப் பிறப்பிலே பிறவிக்குருடரும், செவிடரும், குட்டநோயினரும், வாய்ப்புண்ணினரும், ஊமைகளுமாய்ப் பிறப்பர். மிக்க பசிதாகமுடையவராகித் தம் பகைவர் வீட்டிலே தம் மனைவியரோடும் பிச்சையிரந்து உழல்வர்.


--------------------------------------------------------------------------------

அழுக்காறு

அழுக்காறாவது பிறருடைய கல்வி செல்வம் முதலியவற்றைக் கண்டு பொறாமையடைதல். பொறாமை யுடையவன் தன்னுடைய துன்பத்துக்குத் தானே காரணனாகின்றான். அக்கினியினாலே பதர் எரிவதுபோலப் பொறாமையினாலே மனம் எரிகின்றது. ஆதலினாலே பொறாமையுடையவனுக்குக் கேடு விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டாம். அப்பொறாமை ஒன்றே போதும்.

பொறாமையுடையவனுடைய மனசிலே ஒருபோதும் இன்பமும் அமைவும் உண்டாகா. பொறாமையாகிய துர்க்குணம் மனிதனுக்கு இயல்பாகும். அது தோன்றும் பொழுதே அறிவாகிய கருவியினால் அதைக் களைந்துவிடல் வேண்டும்; களைந்துவிட்டால், அவன் மனசிலே துன்பம் நீங்க இன்பம் விளையும். பொறாமையுடையவனிடத்தே சீதேவி நீங்க, மூதேவி குடிபுகுவள். பொறாமையானது தன்னையுடையவனுக்கு இம்மையிலே செல்வத்தையும் புகழையும் கெடுத்து, எல்லாப் பாவங்களையும் விளைவித்து, அவனை மறுமையிலே நரகத்திற் செலுத்திவிடும்.


--------------------------------------------------------------------------------

கோபம்

கோபத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவனிடத்து உண்டாயினும், அதனைச் செய்யலாகாது. கோபந்தோன்றுமாயின், மனக்கலக்கம் உண்டாகும். அது உண்டாகவே அறிவு கெடும். அது கெடவே, உயிர்கண்மேல் அருள் இல்லையாகும். அது இல்லையாகவே, அவைகளுக்குத் துன்பஞ் செய்தல் நேரிடும். ஆகையால், கோபத்தை எந்நாளும் அடக்கல் வேண்டும்.

யாவனொருவன் தம்மை இழிவாகச் சொல்லிய பொழுது தம்மிடத்து அவ்விழிவு உள்ளதாயின், " இது நமக்கு உள்ளதே" என்று தம்மைத் தாமே நொந்து திருத்தமடைதல் வேண்டும். அப்படிச் செய்யாது கோபித்தாராயின், தமது கோபம் அநீதி என்பது தமக்கே தெரியுமாதலால், தம் மனமே தம்மைக் கண்டிக்கும். தம்மிடத்து அவ்விழிவு இல்லையாயின், 'இவன் சொல்லியது பொய்; பொய்யோ நிலைபெறாது' என்று அதனைப் பொறுத்தல் வேண்டும். நாயானது தன்வாயினாற் கடித்த பொழுது மீட்டுத் தம் வாயில் அதனைக் கடிப்பவர் இல்லை. கீழ்மக்கள் தம் வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் அவரை வைவரோ, வையார். தமக்குப் பிறர் தீங்கு செய்தபொழுது தாம் அதனைப் பொறுப்பதேயன்றி 'இவர் நமக்குச் செய்த தீங்கினாலே எரிவாய் நரகத்தில் வீழ்வாரே' என்று இரங்குவதும் அறிவுடையவருக்குக் கடன். தன்னை வெட்டிய குடாரத்துக்கும் தனது நறுமணத்தையே கொடுக்குஞ் சந்தனமரம் போலத் தமக்குத் தீமை செய்தவருக்கும் நன்மையே செய்வது அறிவுடையோருக்கு அழகு.

வலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்யாமையால், அதனைத் தடுத்தவிடத்துந் தருமமில்லை. மெலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்தலால், அதனைத் தடுப்பதே தருமம். வலியார்மேற் செய்யுங்கோபம் இம்மையில் அவராலே துன்பமொன்றையே அடைவித்தலாலும், மெலியோர்மேற் செய்யுங்கோபம் இம்மையிலே பழியையும் மறுமையிலே பாவத்தையும் அடைவித்தலாலும், இதுவே மிகக் கொடியதாகும். ஆகவே, கோபம் ஓரிடத்தும் ஆகாதென்பதே துணிவு.

ஒருவனுக்கு அருளினால் உண்டாகும் முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் கொன்று கொண்டெழுகின்ற கோபத்தின் மேற்பட்ட பகை வேறில்லை. ஆதலினாலே, தன்னைத்தான் துன்பமடையாமற் காக்க நினைத்தானாயின், தான் மனத்திலே கோபம் வாராமற் காக்கக்கடவன். காவானாயின், அக்கோபம் அவனையே இருமையினும் கடுந்துன்பங்களை அடைவிக்கும்.


--------------------------------------------------------------------------------

சூது

சூதாவது, கவறு சதுரங் முதலியவற்றால் ஆடுதல். சூது, தருமமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றுக்கும் இடையூறாய் உள்ளது. சூதாட்டத்தில் வென்று பெரும் பொருள், இரையென்று மீன் விழுங்கிய தூண்டின் முள்ளைப் போலச் சூதாடுவோர் நீங்காமைக்கு இட்ட ஒரு தளையாகி மற்றைத்தொழில்களை யெல்லாங் கெடுத்துப் பின்பு துன்பத்தைத் தரும். ஆதலால், ஒருவன் தனக்குச் சூதாடுதலில் வெல்ல வல்லமை யிருந்தாலும் சூதாடலாகாது. சூதாடுவோர் ஒன்றை முன்பெற்று இன்னும் வெல்லுவோமென்னும் கருத்தால் ஆடி நூற்றை இழப்பர். அவர் பொருள் அப்படியே அழிந்து வருதலால், அப்பொருளினால் அடையதக்க தருமமும் இன்பமும் அவருக்கு இல்லை. செல்வத்தைக் கெடுத்து வறுமையைக்கொடுத்தற்றொழிலிலே தவறாமையால் சூதை மூதேவியென்பர் அறிவுடையோர்.

சூதாடலை, விரும்பினவர் வெல்லினும் தோற்பினும் ஒருபொழுதும் அச்சூதைவிடாது தங்காலத்தையும் கருத்தையும் அதிலே தானே போக்குவர். ஆதலால் ஒளியும் கல்வியும் செல்வமும் போசனமும் உடையுமாகிய ஐந்தும் அவரை அடையாவாம். சூதானது தோல்வியினாலே பொருளைக் கெடுத்துக் களவை விளைவித்து, வெற்றி பெறுவதற்காகப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணிய பகையை விளைவித்தலால், அருளைக் கெடுத்து, இம்மை மறுமை இரண்டினுந் துன்பத்தையே அடைவிக்கும். ஆதலினாலே, சூதானது தரித்திரத்துக்குத் தூது, பொய்க்குச் சகோதரம், களவு சண்டை முதலிய கீழ்த் தொழில்களுக்கு மாதா, சத்தியத்துக்குச் சத்துரு என்பர் அறிவுடையோர்.


--------------------------------------------------------------------------------

செய்ந்நன்றியறிதல்

செய்ந்நன்றியறிதலாவது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. காரணமின்றிச் செய்த உதவிக்கும், காலத்தினாற்செய்த உதவிக்கும், பயன் றூக்காது செய்த உதவிக்கும், பூமியையும் சுவர்க்கத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவைக்கு இவை ஈடாகா. காரணமின்றிச் செய்த உதவியாவது தனக்கு முன்னே ஒருதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவி. காலத்தினாற் செய்த உதவியாவது ஒருவனுக்கு இறுதி வந்தபொழுது ஒருவன் செய்த உதவி, பயன் றூக்காது செய்த உதவியாவது இவருக்கு இது செய்தால் இன்ன பிரயோசனங் கிடைக்கும் என்று ஆராயாது செய்த உதவி.

இந்த மூன்றுமல்லாத உதவியும், அறிவொழுக்க முடையவருக்குச் செய்தபோது, அவருடைய தகுதி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாகும். ஆதலினால், அறிவொழுக்கமுடையவர், தமக்குப் பிறர்செய்த உதவி தினையளவினதாயினும், அதனை அவ்வளவினதாக நினையாது பனையளவினதாக நினைப்பர்.

யாவராயினும் தமக்கு நன்றி செய்தவருடைய சிநேகத்தை விடலாகாது. ஒருவன்றானே முன்பு ஒருநன்றி செய்து, பின்பு தீமை செய்வானாயின், அவன் செய்த அவ்விரண்டினுள்ளும் தீமையை அப்பொழுதே மறந்து, நன்றியை எப்பொழுதும் மறவாமற்கொள்வதே மிக மேலாகிய தருமம். தமக்கு ஒரு நன்றி செய்தவர் பின்பு நூறு தீமைகளைச் செய்தாராயினும், மேலோர், அந்நன்றி ஒன்றையுமே உள்ளத்தில் வைத்துத் தீமை நூற்றையும் பொறுப்பர். தமக்கு நூறு நன்றி செய்தவர் பின்பு ஒரு தீமை செய்தாராயினும், கீழோர் அந்நன்றி நூற்றையும் மறந்துவிட்டு, அத்தீமையொன்றின் பொருட்டு அவர்மேல் வைரஞ் சாதிப்பர்.

மகாபாதகங்களைச் செய்தவருக்கும் பிராயச் சித்தத்தினால் உய்வு உண்டாகும்; ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு உய்வு இல்லை. செய்ந்நன்றி மறந்தவர் அளவில்லாத காலம் நரகங்களிலே கிடந்து துன்புற்று, பின்பு பூமியிலே பிறந்து, வரதரோகம், சூலை, மசூரிகை, குட்டம் முதலிய வியாதிகளினால் வருந்துவர்.


--------------------------------------------------------------------------------

பெரியோரைப் பேணல்

பிதா, மாதா, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, தமையன், தமக்கை, தமையன் மனைவி, உபாத்தியாயர், குருமுதலாகிய பெரியோர்களை அச்சத்தோடும் அன்போடும் வழிபடல் வேண்டும். அவர்கள் குற்றஞ் செய்தார்களாயினும், அதனைச் சிறிதும் பாராட்டாது பொறுத்துக் கொள்ளல் வேண்டும். இராசா யாது குற்றஞ் செய்யினும் அவனோடு சிறிதும் எதிர்க்காது அவனுக்கு அடங்கி நடத்தல் போலவே பிதா மாதா முதலாயினோருக்கும் அடங்கி நடத்தல் வேண்டும்.

பிதா மாதா முதலாயினோர் முட்டுப்படாவண்ணம் இயன்றமட்டும் அன்னவாஸ்திர முதலியவை கொடுத்து, அவர்களை எந்நாளும் பாதுகாத்தல் வேண்டும். அவர்களுக்கு வியாதி வந்தால், உடனே மனம் பதைபதைத்துச் சிறந்த வைத்தியரைக் கொண்டு மருந்து செய்வித்தல் வேண்டும். அவர்கள் ஏவிய ஏவல்களைக் கூச்சமின்றிச் செய்தல் வேண்டும். பிள்ளைகள் தங்கள் கல்விக்கும் நல்லொழுக்கத்துக்கும் இடையூறாகப் பிதா மாதாக்கள் சொல்லுஞ் சொற்களை மறுத்தல் பாவமாகாது. "தந்தை தாய் பேண்" என்னும் நீதிமொழியைச் சிந்தியாது, மூடர்கள் அநேகர் தங்களை மிக வருந்திப் பெற்றுவளர்த்த பிதா மாதாக்கள் பசித்திருப்பத் தாமும் தம்முடைய பெண்டிர் பிள்ளைகளும் வயிறு நிறையப் புசித்துக்கொண்டு, தம்மையும் பொருளாக எண்ணி, தமக்கு வரும் பழிபாவங்கட்கு அஞ்சாது திரிகின்றார்கள். பிதா மாதாக்களையும் சுற்றத்தாரையும் வஞ்சித்து அன்னியர்களுக்கு உதவி செய்கின்றார்கள்.

பிதா மாதா முதலாயினோர் இறக்கும்பொழுது அவரைப் பிரியாது உடனிருத்தல் வேண்டும். அவர் மனம் கலங்கும்படி அவரெதிரே அழலாகாது. அவர் மனம் கடவுளுடைய திருவடியிலே அழுந்தும்படி, அறிவொழுக்கமுடையவரைக் கொண்டு அருட்பாக்களை ஓதுவிக்கவும் நல்லறிவைப் போதிப்பிக்கவும் வேண்டும். அவர் இறந்த பின்பு உத்தரக்கிரியைகளை உலோபமின்றித் தம் பொருளளவுக்கு ஏற்ப, விதிப்படி சிரத்தையோடு செய்து முடித்தல் வேண்டும். வருடந்தோறும் அவர் இறந்த திதியிலும் புரட்டாசி மாசத்திலும் சிராத்தம் தவறாமற் செய்தல் வேண்டும். அநேகர் தங்கள் பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக்கும்பொழுது அவர்களை அன்னவஸ்திர முதலியவை கொடுத்துப் பேணாது அவர்களுக்குத் துன்பத்தையே விளைவித்து, அவர்கள் இறந்தபின்பு உத்தரக்கிரியைகளை உலகத்தார் மெச்சும் பொருட்டு வெகு திரவியஞ் செலவிட்டுச் செய்கின்றார்கள். ஐயையோ இது எவ்வளவோரறியாமை! இச்செய்கையால் வரும்பயன் யாது? உத்தரக்கிரியைச் சிறிது பொருள் செலவிட்டும் செய்யலாம், அதற்குச் சிரத்தையே முக்கியம். பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக்கும்பொழுது அவர்களை முட்டுப்படாவண்ணம் அன்னவஸ்திரங் கொடுத்துப் பாதுகாத்தலிலே இயன்றமட்டும் பொருள் செலவிடுதலே ஆவசியகம்.

பிதா மாதா முதலிய பெரியோர்களைக் கடுஞ்சொற் சொல்லிக் கோபித்து உறுக்கிய பாவிகள், நரகத்திலே தங்கள் முகத்தை அட்டைகள் குடைந்து இரத்தங்குடிக்க, அதனாற் பதைத்து விழுவார்கள். பின்பு அவர்கள் சரீரம் நடுங்கி அலறும்படி இயமதூதர்கள் சுடுகின்ற காரநீரையும் உருக்கிய தாமிர நீரையும் அவர் கண்மீது வார்ப்பார்கள். அப்பெரியோர்களுக்கு ஏவல் செய்யக் கூசின பாவிகளுடைய முகத்தை இயமதூதர்கள் குடாரியினாலே கொத்துவார்கள்; அப்பெரியோர்களைக் கோபத்தினாலே கண் சிவந்து ஏறிட்டுப் பார்த்தவர்களுடைய கண்களிலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை உறுத்திக் காரநீரை வார்ப்பார்கள்.

பிதா மாதா முதலாயினோரை நிந்தித்தவர்களையும், அவர்களைப் பேணாது தள்ளிவிட்டவர்களும், பைத்தியத்தினாலும், நாக்குப் புற்றினாலும், நேத்திர ரோகத்தினாலும், காலிற்புண்ணினாலும், சர்வாங்க வாயு ரோகத்தினாலும், பெருவியாதியினாலும் வருந்துவர்கள். பிதா மாதா முதலாயினோரைப் பேணாதவர்களும் உபாத்தியாயருக்குக் கொடுக்கற்பாலதாகிய வேதனத்தைக் கொடாதவர்களும், குருவுக்குக் கொடுக்கற்பாலதாகிய காணிக்கையைக் கொடாதவர்களும், தரித்திரர்களாய்ப் பசியினால் வருந்திப் பெண்டிரும் பிள்ளைகளும் கதற இரக்கத்தகாத இடங்களெல்லாம் பிச்சையிரந்து உழல்வார்கள்.

பிதா மாதாக்களுக்குச் சிராத்தஞ் செய்யாதவர்களும், புரட்டாதி மாசத்திலே மகாளய சிராத்தஞ் செய்யாதவர்களும், சிரோரோகங்களினால் வருந்துவார்கள். புலவர்களாயினும், ஞானிகளாயினும், மூடர்களாயினும், பெண்களாயினும், பிரமசாரிகளாயினும், இறந்த தினச் சிராத்தத்தைச் செய்யாதொழிந்தால், கோடி சனனத்திலே சண்டாளராவார்கள்.

எவன் தன்னுடைய தாய் தந்தை முதலிய பந்துக்கள் வறுமையினால் வருந்தும்போது இம்மையிலே புகழின் பொருட்டு அன்னியர்களுக்குத் தானங்கொடுக்கின்றானோ, அந்தத் தானம் தருமமன்று. அது முன்பு தேன்போல இனிதாயிருப்பினும், பின்பு விஷம் போலத் துன்பப்படுத்தும். பார்க்கும்போது புகழுக்கு ஏதுப்போலத் தோன்றினும் பின்பு நரகத் துன்பத்துக்கே ஏதுவாகும் என்பது கருத்து. எவன் தான் ஆவசியகமாகப் பாதுகாக்க வேண்டிய மனைவி பிள்ளை முதலாயினோரைத் துன்பப்படுத்திப் பரலோகத்தின் பொருட்டுத் தானஞ் செய்கின்றானோ, அந்தத் தானமும் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தையே விளைவிக்கும்.


--------------------------------------------------------------------------------

பசுக்காத்தல்

பசுக்கள் நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை சுமனை என ஐந்து வகைப்படும். அவைகளுள், நந்தை கபில நிறமும் , பத்திரை கருநிறமும், சுரபி வெண்ணிறமும், சுசீலை புகை நிறமும், சுமனை செந்நிறமும் உடையனவாம். பசுக்கள் இம்மை மறுமை இரண்டினும் பயனைத்தரும். பசுக்களுக்கு சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண், ஒடைமண், புற்றுமண், வில்வத்தடிமண், அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்தல் வேண்டும். முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைத்தல் வேண்டும். நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கிச் சுத்தி செய்தல் வேண்டும். கொசுகு வராமல் தூபம் இடல் வேண்டும். தீபங்கள் ஏற்றல் வேண்டும்.

பசுக்களை இயக்குமிடத்து, சிறிதும் வருத்தஞ் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்கல்வேண்டும். இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்பவர் நரகத்தில் வீழ்வர்; பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னுஞ் சொல்லை சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுத்தல் வேண்டும். நோயுற்ற பசுக்களுக்கு வேடறிம் அமைத்து, மருந்து கொடுத்து பேணல் வேண்டும். பசுக்களை வேனிற் காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்த்தல் வேண்டும்.

பசுக்களை வலஞ்செய்து வணங்கித் துதித்துப் புல்லுக் கொடுத்தலும், ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், கடவுளுக்கும் ஆசாரியருக்கும் பசுவைத் தானஞ்செய்தலும். குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைக் கடவுள் சந்நிதிக்குத் தானஞ் செய்தலும், தேவாலயத் திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டு இரங்கித்தாம் வாங்கி வளர்த்தலும் பெரும் புண்ணியங்களாம்.

பசுக்கள் தரும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் கடவுளுக்கு அபிஷேகம் பண்ணுவித்தல் வேண்டும். பாலை, இரண்டுமாசம் செல்லும் வரையும் கன்று பருகும்படி விட்டு, பின் கறந்து கடவுளுக்கு அபிஷேகம் பண்ணுவித்தல் வேண்டும். கன்று பாலுண்டு முலையை விடுத்தபோது சலத்தினாலே முலையைக் கழுவிக் கறத்தல் வேண்டும். ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாது கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து கடும் பசியினாலே வீடுகடோறும் இரப்பன். கபிலையின் பாலைக் கடவுளுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். புலையர்கள் பசுக்களின் சாலையிலே புகுந்தார்களாயின், எண்ணில்லாத காலம் எரிவாய் நரகத்து வீழ்ந்து வருந்துவார்கள்; அவர்களுக்குப் பரிகாரமில்லை. பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், மலட்டுப்பசுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும் பாரம் ஏற்றினவர்களும், இடபத்தில் ஏறினவர்களும் நரகத்தில் வீழ்வார்கள்.


--------------------------------------------------------------------------------

தானம்

தானமாவது தருமநெறியால் வந்த பொருளைச் சற்பாத்திரமாயுள்ளவருக்குச் சிரத்தையோடு கொடுத்தல். பாவத்தால் வந்த பிறன் பொருளைக் கொடுத்தால், தருமம் பொருளுடையார் மேலும், பாவம் பொருள் கொடுத்தார் மேலும், நிற்கும். சிரத்தையெனினும், பிரீதியெனினும், ஆதரவெனிலும், பத்தியெனினும், விசுவாசமெனினும், அன்பெனினும், பற்றெனினும் பொருந்தும்.

பதிசாத்திரத்தை ஓதி அதன் பொருளை அறிந்து பாவங்களை விலக்கித் தருமங்களை அநுட்டித்துக் கடவுளை மெய்யன்போடு வழிபடுவோரும். தம்மைப்போலப் பிறரும் பரகதி பெற்று உய்யவேண்டுமென்று விரும்பி அவருக்கு நன்னெறியைப் போதிப்பவருமாயுள்ளவர் சற்பாத்திரமாவர். இந்த நன்னெறியிலே ஒழுகும் பொருட்டுச் சிரத்தையோடு முயற்சி செய்பவரும் சற்பாத்திரமாவர், குருடர், முடவர், சிறு குழந்தைகள், தரித்திரர், வியாதியாளர், வயோதிகர் என்னும் இவர்களும் தானபாத்திரமாவர். அன்னதான முதலியவற்றை இவர்களுக்குப் பண்ணலே தருமம்.

பதிசாத்திரத்தில் விருப்பமில்லாதோனும், நித்திய கருமத்தை விடுத்தோனும், ஈசுரநிந்தை செய்வோனும், குருநிந்தை செய்வோனும், தேவத்திரவியங் கவர்வோனும், கொலைசெய்வோனும், புலாலுண்போனும், கள்ளுண்போனும், கள்வனும், பிறருடைய மனைவியைப் புணர்வோனும், வேசையைப் புணர்வோனும், தாசியைப் புணர்வோனும், கன்னியரைக் கெடுப்போனும், இருதுமதியைத் தீண்டுவோனும், பொய்ச்சான்று சொல்வோனும், பொய் வழக்குப் பேசுவோனும், பிதாமாதாவைப் பேணாதோனும், சூதாடுவோனும், மித்திரத் துரோகியும், கோள்மூட்டுவோனும், செய்ந்நன்றி மறப்போனும், புறங் கூறுவோனும், சாத்திரத்தில்லாத பொருளைப் புதிதாகப் பாடிய பாட்டினால் ஒப்பிப்போனும், வட்டிக்குக் கொடுப்போனும், தேவபூசையை விற்றுத் திரவியந் தேடுவோனும், பொன்னாசை மிகுந்து தரும வேடங்களைக் காட்டிச் சனங்களை வஞ்சிப்போனும். பொருள் வைத்துக்கொண்டு தரித்திரன்போல நடித்து யாசிப்போனும். தொழில் செய்து சீவனம் பண்ணச் சத்தியிருந்தும் அது செய்யாத சோம்பேறியும், தீச்சிந்தை நிறைந்து பொய்யுபசாரஞ் செய்து பொய் மரியாதை காட்டித் திரிவோனுமாகிய இவர்களெல்லாம் அசற்பாத்திரமாவார்கள். இவர்களுக்குத் தானம் பண்ணல் பாவம். இவர்களுக்கு இன்சொற் சொல்லலும் பாவம். கற்றோணியாலே கடலைக் கடக்க முயன்றவன் அத்தோணியோடும் அழிவதுபோலக் கல்வியறிவொழுக்கம் இல்லாத பாவிக்குத் தானங் கொடுத்தவன் அப்பாவியோடும் அழிந்து போவான்.

சற்பாத்திரமாயுள்ள பெரியோர் தம்வீட்டுக்கு வந்த பொழுது, விரைவினோடு எழுந்திருத்தல், ஓடிச்செல்லல், கண்டவுடனே 'தேவரீர் எழுந்தருளப் பெற்றேனே' என்று கொண்டாடி எதிர்கொள்ளல், ஆசனத்திருத்துதல், பாதத்தை அருச்சித்தல், 'இன்றன்றோ அடியேனுடை கிருகம் சுத்தியாயிற்று' என்று அவரை உயர்த்திப் புகழ்தல், அவர் போம்போது பதினாறடியிற் குறையாமற் சென்று வழிவிடுதல் என்னும் இவை யேழும் தானஞ் செய்வோர் செயல்களாம். இவையில்லாமற் செய்யும் தானம் பயன்படாது.

பாத்திரங்களெல்லாவற்றினும் பரம சற்பாத்திரம் மெய்ஞ்ஞானி. அவர் ஒருவரிடத்தே சென்று 'எனக்கு இந்தப் பொருளைத்ட் ஹா' என்று கேளார். அவர் எழுந்தருளியிருக்கும் இடத்திற்சென்று 'அடியேனுடைய பொருளை ஏற்றருளல் வேண்டும்' என்று பிரார்த்தித்துக் கொடுத்தல் வேண்டும். ஞானியானவர் தமக்குத் தாதாத் தரும்பொருளை அதன் மேல் ஆசையினால் வாங்கார்; தாதாப் பரகதியடைதல் வேண்டும் என்று நினைந்து வாங்குவார். அஞ்ஞானியானவன் தாதாக் கதியடைதல் வேண்டும் என்று விரும்பாது, தன்னுடைய போசனார்த்தத்தையே விரும்பி தானத்தை ஏற்பன்; ஆதலால், அஞ்ஞானி கையிலே கொடுத்தவர் தம்பொருளை அவமே போட்டு இழந்தவராவர்.

தன்னிடத்து வந்த யாசகருக்குக் கொடுத்தற்குப் பொருள் அரிதாயின், அவர் மனத்தை முகமலர்ச்சியினாலும் இன்சொல்லினாலும் குளிர்விக்கலாமே. அவையும் அரியனவோ, அல்லவே தன்னிடத்து வந்து இரந்த தரித்திரனை 'இவன் அற்பன்' என்று தள்ளிவிட்டுச் 'செல்வத்தையுடைய பெரியவன் எங்கே இருக்கின்றான்?' என்று கருதுவோன் தாதாவாகான். இவன் கொடுக்குங் கொடையெல்லாம் அவனிடத்தே தனக்கு ஒரூதியங் கருதிய செட்டாம்.

கொடை, வணக்கம், உறவு, கிருபை, பொறை என்னும் ஐந்துமுடையவனே தாதா. இவையில்லாதவன் அதாதா. அருளும் ஆதரவுமுடையவனாகிய தாதாவின் கையிலே ஏற்றவன் அந்தத் தாதாவினோடும் புண்ணிய லோகத்தை அடைவன்; அருளும் ஆதரவுமில்லாதவனாகிய அதாதாவின் ஏற்றவன் அந்த அதாதாவினோடும் நகரத்தை அடைவன்.

யாவரும் உச்சிக் காலத்திலே பசித்து வந்த ஏழைகளுக்கு இல்லை என்னாமல் முகமலர்ச்சியோடும் இன் சொல்லோடும் தம்மால் இயன்றமட்டும் அன்னபானீயங் கொடுத்துப் புசித்தல் வேண்டும். தாம் புசிக்கும்போது ஒரு பிடியன்னமாயினுங் கொடுத்தல் ஒருவருக்கும் அரியதன்று. இது யாவருக்கும் எளிதாகும். திருமூல நாயனாருடைய அருமைத் திருவாக்கைக் கேளுங்கள்.

திருமந்திரம்

"யாவருக்கு மாமிறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை
யாவர்க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே."

பகற்காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங் கொடாத பாவத்தினும், இராக் காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங்கொடாத பாவம் எட்டு மடங்கதிகம். தயிர், பால், நெய் முதலிய உயர்ந்த பதார்த்தங்களுள் எதை அதிதிக்குப் பரிமாற வில்லையோ அதைத் தாமும் புசிக்கலாகாது. இரவிலே போசன காலத்தில் வந்தாலும், பின்பு வந்தாலும், சமயந் தப்பி போயிற்று என்று, வந்த அதிதியை அன்னங்கொடாமல் அனுப்பலாகாது. அதிதிக்கு அன்னங் கொடுக்கச் சத்தியில்லை யாயினும், படுக்கை இளைப்பாறுமிடம் தாகதீர்த்தம் பிரிய வசனம் என்னும் இவைகளாலாயினும் உபசரித்தல் வேண்டும். அதிதி புறத்திருப்பத் தாம் புசித்தவரும், பந்தி வஞ்சனை செய்தவரும் கண்டாமலை நோயினால் வருந்துவர். சூரியாஸ்தமயன காலத்திலே தம் வீட்டில் வந்து சேர்ந்தவருக்கு இடம் படுக்கை முதலியவை கொடாதவர் நரகத் துன்பத்தை அனுபவித்து, மறுபிறப்பிலே தாம் கைப்பிடித்த மனைவியரை இழந்து துக்கமுற்றுத் திரிவர்.

அதிதியானவன் வேற்றூரினின்றும் வழிப்போக்கனாய் அன்ன முதலிய உதவி பெறும்பொருட்டு வருபவன். அவன் ஒரு நாளிருந்தாற்றான் அதிதி யெனப்படுவன். ஊரிலிருப்பவனையும் வேறொரு நிமித்தத்தினால் வருகிறவனையும் அன்னத்தின் பொருட்டு ஊர்தோறும் திரிகின்றவனையும் அதிதியென்று கொள்ளலாகாது.


--------------------------------------------------------------------------------

கல்வி

மனிதர்களாலே தேடற்பாலனவாகிய பொருள்கள் கல்விபொருள் செல்வப்பொருள் என இரண்டாம். கல்வியாவது கற்றற்குரிய நூல்களைக் கற்றல். கல்வியெனினும் வித்தையெனினும் பொருந்தும். கற்றற்குரிய நூல்களாவன, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை அறிவிக்கும் நூல்களும், அந்நூல்களை அறிதற்குக் கருவிகளாகிய நிகண்டு இலக்கணம் கணக்கு முதலிய நூல்களுமாம். அறமெனினும் தருமமெனினும் பொருந்தும். வீடெனினும், முத்தியெனினும், மோக்ஷமெனினும் பொருந்தும்.

செல்வப்பொருள் பங்காளிகள், கள்வர், வலியவர் அரசர் என்னும் இவர்களாலே கொள்ளப்படும், கல்விப் பொருளோ ஒருவராலும் கொள்ளப்படமாட்டாது. செல்வப்பொருள் வெள்ளத்தாலாயினும் அக்கினியாலாயினும் அழியும்; கல்விப் பொருளோ ஒன்றாலும் அழியமாட்டாது. செல்வப்பொருள் பிறருக்குக் கொடுக்குந்தோறும் குறைந்து கொண்டே வரும்; கல்விப்பொருளோ பிறருக்குக் கொடுக்குந்தோறும், பெருகிக் கொண்டே வரும். செல்வப்பொருள், சம்பாதித்தல், காப்பாற்றல், இழத்தல் என்னும் இவைகளாலே துன்பஞ்செய்து, பலரையும் பகையாக்கும். கல்விப் பொருளுடையவர், இம்மையிலே சொற்சுவை பொருட்சுவைகளை அநுபவித்தலாலும், புகழும் பொருளும் பூசையும் பெறுதலாலும், பின்னே தருமத்தையும் முத்தியையும் அடைதலாலும் இடையறாத இன்பத்தை அநுபவிப்பர். இப்பெரியவரைச் சேர்ந்து அறியாதவைகளையெல்லாம் அறிந்தோம் என்று உலகத்தார் பலரும் அவரிடத்து அன்புடையவராவர். ஆகலினாலே, செல்வப் பொருளினும் கல்விப் பொருளே சிறப்புடையது.

உயர்குலமும் அழகும் செல்வாக்கும் உடையவராயினும், கல்வியில்லாதவர் முருக்கம்பூவுக்குச் சமமாவர். இராசாக்களுக்கு அவர் தேசத்தின் மாத்திரம் சிறப்புண்டாம். கற்றறிந்தவருக்கு அவர் சென்ற சென்ற தேசங்களினெல்லாம் சிறப்புண்டாம். ஆதலின் இராசாக்களினும் கற்றறிந்தவரே சிறப்புடையர். ஆதலினால், யாவரும் கல்வியைச் சிறிதும் அவமதியாது வருந்திக் கற்றல் வேண்டும்.

அழுக்குப்படியாத சீலையிலேசாயம் நன்றாகப் பிடிக்கும்; அழுக்குப் படிந்த சீலையிலே சாயம் நன்றாகப் பிடிக்க மாட்டாது. சிறு பிராயத்திலே கற்ற கல்வி புத்தியிலே நன்றாகப் பதியும். புத்தி சமுசாரத்திலே விழுந்து வருத்தத்தை அடைந்து கொண்டிருக்கின்ற முதிர்ந்த பிராயத்திலே கற்றாலும், கல்வி நன்றாகப் புத்தியிலே பதியமாட்டாது. ஆதலினாலன்றோ ஒளவையார் "இளமையிற் கல்" என்று அருளிச் செய்தார்.

கல்வியை நல்லாசிரியரிடத்தே சந்தேகமும் விபரீதமும் அறக் கற்றல் வேண்டும். சந்தேகமாவது இதுவோ அதுவோ என ஒன்றிலே துணிவு பிறவாது நிற்றல். விபரீதமாவது, ஒன்றை மற்றொன்றாகத் துணிதல். வியாதி வறுமைகள் இல்லாமையும், பொருள், இளமை முதலியவைகள் உண்மையும், கல்வி கற்றற்குச் சிறந்த கருவிகள். மிகச் சிறந்த கருவி ஆசிரியருடைய உள்ளத்திலே அருள் உண்டாகும்படி நடத்தல். ஆதலினாலெ, கல்வி கற்கு மாணாக்கர் ஆசிரியரை விதிப்படி சிரத்தையோடு வழிபட்டே கற்றல் வேண்டும். வழிபாடாவது, இன்சொற் சொல்லல், வணங்குதல், உற்றவிடத்துதவுதல் முதலாயின.

கல்வியிலே தேர்ச்சியடைய வேண்டுமாயின் இடைவிடாது கற்றல் வேண்டும். ஒரு நாள் ஊக்கமாகவும், மற்றொரு நாள் சோம்பலாகவும் இராமல், எப்பொழுதும் தங்கள் தங்கள் சத்திக்கு ஏற்பக் கல்வியிலே பயிலல் வேண்டும். சோர்வு அடையாமல் நாடோறும் சிரமமாகச் சிறிதாயினும் நன்றாகக் கற்கின்றவர் எப்படியும் அறிவுள்ளவராவர். தாம் அதிக சமர்த்தர் என்று நினைத்து ஒவ்வொரு வேளையில் மாத்திரம் கற்கின்றவர் அதிகமாகத் தேர்ச்சி அடையமாட்டார். மணற்கேணியைத் தோண்டுந்தோறும் ஊற்று நீர் சுரந்து பெருகிக் கொண்டே வருதல்போல, கல்வியைக் கற்குந்தோறும் அறிவு வளர்ந்து கொண்டே வரும். ஆதலினால், கல்வியைச் சிறிது கற்றமாத்திரத்தால் அமையாது மேன்மேலும் கற்றல் வேண்டும்.

தாங்கேட்ட பாடங்களை நாடோறும் போற்றலும், தாங்கேட்ட பொருள்களைப் பலதரமுஞ் சிந்தித்தலும், ஆசிரியரை அடுத்து அவைகளைக் குறைவு தீரக் கேட்டலும். ஒருசாலை மாணாக்கர் பலருடனும் பலதரமும் பழகுதலும், தாம் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும், அவர் வினாவியவைகளுக்கு உத்தரங் கொடுத்தலாலும், தாம் கேட்டறிந்ததைப் பிறருக்கு அறிவித்தலும் ஆகிய இவைகளெல்லாம் கல்வி பயிலும் மாணாக்கருக்குக் கடன்களாம்.

நூல்களிலே சிலநாட் பழகினால், விவேகிகளாயினும், சிலவற்றில் வல்லராதலும் அரிது. பலநாட் பழகினால், மந்தர்களாயினும், பலவற்றிலும் வல்லவராவர். நூற் பொருளை விரைவினாலே பார்த்தால், விவேகிகளாயினும், ஒன்றுந் தெரியாது. விரையாது அமைவுடனே பார்த்தால், மந்தர்களாயினும், கருகாது தெரியும்.

பெரும்பாலும் எல்லாருக்கும் கற்பதிற் கருத்திறங்கும், கற்றதிற் கருத்து இறங்காது. அது நன்மையன்று. கருத்தைக் கற்பதிலே மட்டுப்படுத்தி, கற்றதிலே சிந்தாமல் இறக்கல் வேண்டும். வருந்திக் கற்ற நூலை மறக்க விட்டு வேறு நூலைக் கற்றல் கையிலே கிடைத்த பொருளை எறிந்துவிட்டு, வேறு பொருளை அரிப்பரித்துத் தேடல் போலும். பசி முதலிய வருத்தத்தாலாவது, அன்ன முதலியவற்றின்கண் அவாவினாவாவது, யாதாயினும் வேறொரு நிமித்தத்தாலாவது, கருத்து மயங்கினால், அப்பொழுது கல்வியிற் பழகுதலொழிந்து அம்மயக்கந் தீர்ந்த பின்பு பழகல் வேண்டும்.

கல்வியுடையவர் தாங் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும், நன் மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தலும், எல்லாருக்கும் உறுதியைப் போதித்தலுமாகிய இம்மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கொள்ளல் வேண்டும். இவ்வியல்புடையவரே கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர். இம்மூன்றிமில்லாவிடத்துக் கல்வியினாற் பயனில்லை.

சரீரசுகத்துக்கு ஏதுவாகிய அன்னவஸ்திர முதலிய வற்றையும் ஆன்ம சுகத்துக்கு ஏதுவாகிய ஞானத்தையும் கொடுப்பது வித்தையேயாதலின், எல்லாத் தானங்களினும் வித்தியாதானமே சிறந்தது. ஒருவருக்கு அன்ன வஸ்திரங் கொடுத்தால், அவை அவருக்கு மாத்திரமே பயன்படும். பயன்படுவதும் சிறிதுபொழுது மாத்திரமே. ஒரு விளக்கேற்றுதல், அவ்வொருவிளக்கிலே பலவிளக்கும், அப்பல விளக்கினுள்ளும் ஒவ்வொரு விளக்கிலே பற்பல விளக்குமாக, எண்ணில்லாத விளக்கு ஏற்றப்படுதற்கு ஏதுவாதல்போல, ஒருவருக்குக் கல்வி கற்பித்தல், அவ்வொருவரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத்திலே பற்பலருமாக, எண்ணில்லாதவர் கல்வி கற்றுக்கொள்ளுதற்கு, ஏதுவாகும். அவர் கற்ற கல்வியோ அப்பிறப்பினன்றி மற்றைப் பிறப்புக்களிலும் சென்று சென்று உதவும். ஆதலின் வித்தியாதானத்துக்குச் சமமாகிய தருமம் யாதொன்றுமில்லை. தாங்கற்ற கல்வியை நன்மாணாக்கர்களுக்குக் கருணையோடு கற்பியாதவர் காட்டிலே நச்சு மாமரமாவர்.


--------------------------------------------------------------------------------

செல்வம்

செல்வமாவது இரத்தினம் பொன் வெள்ளி நெல் முதலியன. தருமத்துக்கும் இன்பத்துக்கும் துணைக்காரணம் செல்வம். இது பற்றியன்றோ மாணிக்கவாசக சுவாமிகள் "முனிவரு மன்னரு முன்னுவ பொன்னான் முடியும்" என்றும் "வறியாரிருமை யறியார்" என்றும் திருக்கோவையாரில் அருளிச் செய்தார்.

அழியாப் பொருளாகிய கல்வியையும் கல்வித் தேர்ச்சிக்கு உரிய புத்தகங்களையும் கொள்ளுதற்கும், பசி முதலியவைகளினால் வருந்தாது கவலையற்றிருந்து கல்வி கற்றற்கும், கற்ற கல்வியை அழகுசெய்து தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தற்கும் கருவி செல்வமே. கல்வியுடையவரும் வறியவராயின், பசி நோயினாலும் தீராக் கவலைகளினாலும் வறியவராயின், பசி நோயினாலும் தீராக் கவலைகளினாலும் வருந்தி, தாம் முன் கற்ற கல்வியையும் மறந்துவிடுவர். வறியவர் மெய்நூற்பொருளைத் தெளிய அறிந்து போதித்தாராயினும், "நாம் இவர் சொல்லை விரும்பிக் கேட்போமாயின் கண்ணோட்டத்தினால் இவர் குறையை முடித்தல் வேண்டுமே" என்று பயந்து, யாவருங் கேளாதொழிவர். ஆதலின் அவர் வாய்ச்சொல் பயனில் சொல்லாய் முடியும்.

செல்வமில்லாதவர், வறுமைத் துன்பமொன்றினான் மாத்திரமா, அத்துன்பம் மூலமாகச் செல்வர் வீட்டுவாயிலை நோக்கிச் செல்லுதற்றுன்பமும், அவரைக் காணு தற்றுன்பமும், கண்டாலும் அவர் மறுத்தபோது உண்டாகுந் துன்பமும், மறாதவிடத்தும் அவர் கொடுத்ததை வாங்குதற்றுன்பமும் அதனைக் கொண்டுவந்து போசனத்துக்கு வேண்டுமவைகளைக் கூட்டுதற்றுன்பமும் முதலிய பல துன்பங்களாலும் நாடோறும் வருந்துவர்.

எல்லா நன்மையும் உடையவராயினும், பொருளில்லாதவரை அவருடைய தாய் தந்தை மனைவி மைந்தர் முதலாயினவரும் அவமதிப்பர். ஒரு நன்மையும் இல்லாதவராயினும், பொருளுடையவரை அவர் பகைவரும் நன்கு மதிப்பர். வறியவரிடத்தே தாம் கொள்வதில்லாமை யன்றிக் கொடுப்பதுண்டாதலும் உடைமையால், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் கைவிடுவர்.

கல்வியும், தருமமும், இன்பமும், கீர்த்தியும், மனிதருள்ளே பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும், வென்றியுமாகிய எல்லாம் செல்வமுடையவருக்கே உண்டு. செல்வமில்லாதவர் உலகத்திலே நடைப்பிணமாவார். ஆதலினால், யாவரும் செல்வத்தை இடையறா முயற்சி யோடு வருந்திச் சம்பாதித்தல் வேண்டும்.

பொருள் சம்பாதிக்கு நெறிகளாவன; வித்தை கற்பித்தல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களையும் உரைகளையுஞ் செய்து வெளிப்படுத்தல், வேளாண்மை, வாணிகம், இராசசேவை, சிற்பம் முதலியவைகளாம். ஞான நூலை வேதனத்தின் பொருட்டுக் கற்பிக்கலாகாது; கற்பித்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

பொருள் சம்பாதிக்குமிடத்து, தரும நெறியாலே சம்பாதித்தல் வேண்டும். தருமநெறியாலே சம்பாதித்தல் வேண்டும். தருமநெறியால் வந்த பொருளே மேற்சொல்லிய பயன்களெல்லாவற்றையுங் கொடுக்கும். களவு, பொய்ச்சான்று சொல்லல், பொய்வழக்குப் பேசல், பொய்ப்பாத்திரம் பிறப்பித்தல், விசுவாசகாதம், பரிதானம் வாங்கல், சுங்கங்கொடாமை முதலிய பாவ நெறிகளாலே பொருள் சம்பாதிக்கலாகாது. பாவ நெறியால் வந்த பொருள் முன்செய்த புண்ணியத்தையுங் கெடுத்து, இம்மையிலே தீராத வசையையும், சந்ததி நாசத்தையும், இராச தண்டத்தையும், மறுமையிலே நரகத்துன்பத்தையும், பிறவித் துன்பத்தையும் விளைவிக்கும்.

காலந்தோறும் சம்பாதிக்கபபடும் பொருளை நான்கு பாகமாகப் பகுத்து, அவைகளுள், இரண்டு பாகத்தைத் தமது அநுபவத்துக்கு ஆக்கி, ஒரு பாகத்தை ஆஸ்தியின் பொருட்டுச் சேர்த்து, எஞ்சி நின்ற ஒரு பாகத்தைக் கொண்டே தருமஞ்செய்தல் வேண்டும். ஆஸ்தியின் பொருட்டுச் சேர்க்காது செலவிட்டவர் பின்பு வியாதியினாலேனும் கிழப் பருவத்தினாலேனும் பொருள் சம்பாதிக்கும் திறமை இல்லாத பொழுது, பெண்டிர் பிள்ளைகளோடு வருத்தமடைவர். அக்காலத்திலே பெண்டிர் பிள்ளைகளும் அவரை உபசரியாது கைவிடுவர்.

முதலிற் செலவு சுருங்கினால், பொருள் ஒரு காலத்தும் நீங்காது. முதலிற் செலவு சுருங்கக் கூடாதாயின், முதலுக் கொக்கவாயினும் செலவழித்தல் வேண்டும். எவனுக்கு முதலிற் செலவு மிகுமோ, அவன் வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி மெய்மையால் இல்லையாகிப் பின்பு அத்தோற்றமும் இல்லாமற் கெட்டுவிடும். வரவு செலவு கணக்கெல்லாம் அப்பொழுது அப்பொழுது சிறிதுந் தவறாமல் எழுதிக் கொள்ளல் வேண்டும். கணக்கெழுதாமல் யாதொன்றுஞ் செய்யலாகாது. மாசந்தோறும் வரவு செலவு இருப்புக் கணக்குப் பார்வையிட்டு முடித்தல் வேண்டும்.

சம்பாதிக்கப்பட்ட பொருளிலே, அநுபவத்தின் பொருட்டும் தருமத்தின் பொருட்டும் செலவிட்டதொழிய, எஞ்சி நின்றதைக் கொண்டு, தக்க பிரயோசனத்தைத் தருதற்குரிய விளைநிலம் தோட்ட முதலியவை வேண்டும். அல்லது முதற் பொருளுக்கும் வட்டிக்குங் குறைவு படாத ஈட்டையும் தகுதியாகிய சான்றினையுமுடைய பத்திரத்தையும் பெற்றுக்கொண்டு, வட்டிக்குக் கொடுத்தல் வேண்டும். கடனுடையவன் தம்மிடத்து வைத்த அசைக்கப்படு பொருளாகிய ஈட்டை, அவனுக்குக் கொடுக்குமளவும், கெடுதியும் குறைவும் விகாரமும் பயனின்மையும் உருமாற்றமும் அடையாமற் காத்தல் வேண்டும். அந்த ஈட்டைத் தாம் அநுபவித்தால் வட்டியில்லை. அநியாய வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குதல் பெருங் கொடும்பாவம். பிராமணன் ஒரு காலத்தினும் வட்டி வாங்குதல் கூடாது. ஆபத்துக் காலத்தில் மாத்திரம் வாங்கலாம்.

தந்தை வழியாகவேனும், தாய் வழியாகவேனும் தாயினுடைய தந்தை முதலானவர்களின் வழியாகவேனும் வந்த பொருள் தாயம் எனப்படும். வித்தைக் கற்பித்தல், வேளாண்மை, வாணிகம், சிற்பம், சேவை முதலிய தொழில்களாலும் யாசனத்தாலும் அடையப்பட்ட பொருள் உடைமை எனப்படும். இவ்வுடைமைப் பொருளைத் தமதிச்சைப்படி தான முதலானவைகளாகச் செய்யலாம். பெண்ணின் பொருட்டுத் தந்தை முதலானவர்களாலே கொடுக்கப்பட்ட பொருள் சீதனம் எனப்படும். சீதனப் பொருளைக் கணவனேனும் தந்தையேனும் உடன் பிறந்தாரேனும் கொள்ளுதற்கும் கொடுத்தற்கும் உரியரல்லர்.

இத்தேசங்களிலே, பலவகைத் தொழில்கள் செய்து சீவனஞ்செய்யச் சத்தியுடையவர்களுள், அவை செய்யாது சோம்பேறிகளாய் இருந்து கொண்டு, அநேகர் நாணமின்றிப் பலரிடத்தும் சென்று யாசித்தும், அநேகர் தாயப் பொருளையே கொண்டும், அநேகர் தம்மனைவியர்களுடைய சீதனப் பொருளையே கொண்டும், அநேகர் தாவர சங்கமங்களாகிய தாயத்தையும் சீதனத்தையும் ஈடு வைத்தும், விக்கிரயஞ் செய்தும் சீவனஞ் செய்கின்றார்கள். தாவரம் - அசைக்கப்படாத பொருள். சங்கமம் - அசைக்கப்படுபொருள். அறிவும் ஆண்மையும் மானமும் உடையவர்கள் இப்படிச் செய்வார்களோ, செய்யார்கள். கூழேயாயினும் தமது தொழில் முயற்சியாலே கிடைத்தது அமிர்தமேயாகும். பருப்பு நெய் பாயசம் வடை தயிர் முதலியவற்றோடு கூடிய அன்னமேயாயினும், யாசனத்தினாலாவது, பிறருடைய தொழில் முயற்சியினாலாவது, கிடைத்தாயின், அது விஷமேயாகும். தொழில் முயற்சிகள் சுவதேசத்திலே பலிக்காவிடின், இதர தேசங்களிலாயினும் சென்று, தாமே வருந்திச் சம்பாதித்துச் சீவனஞ் செய்தலே அறிவும் ஆண்மையும் மானமும் உடையவருக்கு அழகு. இத்தேசங்களில் அநேகர் பணம் வைத்துக் கொண்டும் யாசித்துச் சீவனஞ் செய்கின்றார்கள். இவர்களுக்குப் பி¨க்ஷ கொடுப்பவர்கள், உண்மையை ஆராய்ந்தார்களாயின், தங்களைப் பார்க்கினும், இவர்களே செல்வமுடையவர்கள் என்று அறிவார்கள். இவர்கள் நாட்டுவேடர் எனப்படுவர்கள். பொருள் வைத்துக் கொண்டு யாசித்துப் புசித்தவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்து, மறுபிறப்பிலே மாடாய்ப் பிறந்து, அன்னம் போட்டவருக்கு உழைப்பார்கள்.


--------------------------------------------------------------------------------

தருமம்

அடிமையானவன், தன்னிடத்தே தன்னாயகன் ஒப்பித்த பொருளை, அவன் கருத்தறிந்து, அக்கருத்தின் படியே, செலவு செய்தல் வேண்டுமன்றோ. அந்நாயகன் கருத்துக்கு மாறாகச் சேமித்து வைத்துக்கொண்டாலும் தன்னிச்சைப்படி செலவு செய்து அழித்தாலும், அவனாலே தண்டிக்கப்படுவானன்றோ. ஆன்மாக்களெல்லாம் சகல லோக நாயகராகிய கடவுளுக்கு மீளாவடிமைகள் தமக்குத் திருத்தொண்டு செய்து பிழைக்கும் பொருட்டு ஆன்மாக்களுக்கு இவ்வருமையாகிய மனித சரீரத்தைக் கொடுத்தருளினவர் அக்கடவுளே. மனிதர்களிடத்துள்ள பொருளெல்லாம் அவர் கொடுத்து அருளிய பொருளே. பொருள் கொடுத்தருளிய கடவுளுடைய திருவுளக் கருத்து யாது? அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் சரீர சுகத்தின் பொருட்டும் ஆன்ம சுகத்தின் பொருட்டும் செலவு செய்வதும் ஆன்ம சுகத்தின் பொருட்டே என்று தெளிந்து, ஆன்ம சுகத்தையே நாடல் வேண்டும். எல்லோரும் இவ்வுண்மையைத் தெளிய அறிந்து, தமக்குக் கடவுள் அருளிச் செய்த பொருளை அவர் திருவுளக் கருத்தின் படியே செலவு செய்து, சரீர சுகத்தையும் அது நெறியாக ஆன்ம சுகத்தையும் அடைதல் வேண்டும். அப்படிச் செய்யாது கடவுளுடைய திருவுளக் கருத்துக்கு மாறாக வீண் செலவு செய்வோரும், உலோபத்தினாலே, சேமித்து வைப்போரும், அக்கடவுளாலே தண்டிக்கப்படுவர்.

தங்கள் தங்களால் இயன்ற மட்டும் வருந்திப் பொருள் சம்பாதிப்பவர்களுள்ளே சிலர், தாங்கள் உண்ணாதும், உடாதும், தங்கள் பிதாமாதாக்கள் முதலிய பந்துக்களுக்குக் கொடாதும், தருமஞ் செய்யாதும், அப்பொருளைத் தரையிலே புதைத்து வைக்கின்றார்கள். வீட்டுச் சுவரினுள்ளே வைத்துக் கட்டடஞ் செய்கின்றார்கள்; இவர்கள் இறந்தபின் இந்தப் பொருளை அநுபவிப்பவர் யாவரோ! அறியேம்.

சிலர், புத்திர பாக்கியம் இல்லாதவர்களாய் இருந்தும், தங்கள் பொருளைத் தருமத்திலே சிறிதும் செலவிடாது வைத்துவிட்டு, இறக்கின்றார்கள். அந்தப் பொருளெல்லாம் அவர்கள் பந்துக்களுக்குங் கிடையாது. வீண் வழக்குகளிலே செலவாய் விடுகின்றன.

சிலர் தங்கள் பிதா மாதா முதலிய பந்துக்கள் பசியினால் வருந்தத் தாங்களும் தங்கள் பெண்டிர் பிள்ளைகளும் உண்டுடுத்துக் களிப்புற்றிருக்கின்றார்கள். எஞ்சிய பொருளெல்லாம் அநியாய வட்டிக்குக் கொடுத்துப் பிறர்குடியைக் கெடுக்கின்றார்கள்.

சிலர் தங்களை நம்பிய பெண்டிர் பிள்ளைகளையுங் கைவிட்டு, பொதுப் பெண்களை நம்பி, தங்கள் பொருள் எல்லாம் அவர்கள் பொருட்டே செலவு செய்கின்றார்கள்.

சிலர் தங்கள் தாயத்தாரோடு வழக்குத் தொடுத்து, அவ்வழக்கிலே எல்லாம் செலவிட்டு, அவர்களையும் வறியவர்களாக்கித் தாங்களும் வறியவர்களாகின்றார்கள்.

சிலர் தங்கள் பகைவர்கண் மீது வைரஞ்சாதிக்கத் துணிந்து, பொய் வழக்குத் தொடுத்துப் பொய்ச் சாட்சிக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பரிதானங் கொடுத்தலிலே தங்கள் பொருளெல்லாஞ் செலவழிக்கின்றார்கள். பரிதானம் - கைக் கூலி.

சிலர் தாங்கள் உண்ணலும், உடுத்தலும், ஆபரணந் தரித்தலும், வாகன மேறலும், கூத்துப் பார்த்தலும், கீதங் கேட்டலுமே மனிதப் பிறப்பாலாகிய பயனென்று நினைந்து, எல்லாப் பொருளையும் அவைகளின் பொருட்டே செலவு செய்கின்றார்கள்.

சிலர் விவாக முதலிய சடங்குகளிலும் உத்தரக்கிரியைகளிலுமே செலவு செய்து, பெருந்திரளாகிய பொருளையெல்லாம் இரண்டு மூன்று தினத்துள்ளே பாழாக்குகின்றார்கள். தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியிருக்கவும் அது செய்யாத சோம்பேறிகளுக்குத் தங்கள் பொருளெல்லாங் கொடுத்துக் கொடுத்து, அவர்கள் செய்யும் வியபிசாரம் மதுபானம் சூது முதலிய பாவங்களுக்குத் தாங்களே காரணராகின்றார்கள்.

இவர்கள் யாவரும், தாங்கள் நெடுங்காலம் வருந்திச் சம்பாதித்த பொருள்களெலாவற்றையும், நல்லறிவும் நல்லோரிணக்கமும் இல்லாமையினாலே, இப்படி வீணிலே செலவு செய்து, பின் கடன் பட்டும் செலவு செய்கின்றார்கள். இத்தன்மையாகிய செய்கைகளினாலன்றோ, இந்தத் தேசங்களில் அநேகர் ஆன்ம சுகத்தோடு சரீர சுகத்தையும் இழந்து, வறுமையுற்று வருந்துகின்றார்கள்.

பசி தாகங் கொண்டு தங்கள் வீட்டில் வந்த ஏழைகளுக்கு அன்னப் பாலாயினும் சலமாயினும் கொடாத வன்கண்ணர்களாகிய சிலர் 'பூரி கொடுக்கப் போகின்றோம்' என்று சொல்லி இடமுங் காலமும் வரையறுத்துக் கொடிகட்டித் திரளான ஏழைச்சனங்களை ஒருங்கு கூட்டிச் சேவகர்களை வாயிலிலே நிறுத்தி, இரண்டு மூன்று யாமம் வரையும் அடைத்து வைத்து, ஒரு கையிலே கோலையும் மற்றொரு கையிலே பணத்தையும் எடுத்துக்கொண்டு போய், முகமலர்ச்சி காட்டாமலும், இன்சொற்களைச் சொல்லாமலும், காலணா அரையணாக்களை வீசியெறிந்து, மேல் விழுந்தெடுக்கிற ஏழைச் சனங்களைக் கோலினால் அடித்துத் துர் வார்த்தைகளினாலே வைது, கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றார்கள்.

தேவாலயத் திருப்பணிக்கும் நித்திய பூசைக்கும் ஒரு பணமாயினுங் கொடுத்தற்கு உடன்படாதவர்கள் சிலர், உற்சவத்திலே நடனம் கீதம் வாண முதலியவற்றின் பொருட்டு பெருந்தொகைப் பொருளைச் செலவழிக்கின்றார்கள். அப்பொழுதும் அபிஷேகத்தின் பொருட்டு ஒரு ஆழாக்குப் பாலாயினுங் கொடார்கள்.

மகிமை பொருந்திய புராதனாலயங்கள் பல கிலமாயக் கிடப்ப அவைகளைப் புதுக்குவித்தற்கும், அவைகளிலே பூசை உற்சவ முதலியவற்றை விதிப்படி நடத்துவித்தற்கும், மனம் பொருந்தாதவர்கள் சிலர், தெருத்தோறும், நூதானாலயங்களைக் கட்டுவித்துப் பூசை உற்சவ முதலியவற்றை விதியின்றி நேர்ந்தபடி நடத்துவிக்கின்றார்கள்.

சமீபத்திலே பூசையின்றி இருக்கும் புராதனாலயங்களிலே ஒருகாலப் பூசையேனும் செய்வித்தற்கு உடன்படாதவர்கள் சிலர். தூரத்திலே பூசை உற்சவ முதலியவற்றிற்கு முட்டுப்பாடில்லாதவைகளும் எண்ணிறந்த திருவாபரண முதலியவற்றை உடையவைகளுமாய் இருக்குந் தேவாலயங்களுக்குப் பொருளுதவி செய்கின்றார்கள்.

தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியில்லாதவர்களாகிய குருடர் முடவர் சிறு குழந்தைகள் வியாதியாளர்கள் வயோதிகர்கள் என்னும் இவர்களுக்கும், ஆபத்துக் காலத்தில் வந்த அதிதிகளுக்கும் கஞ்சியாயினும் காய்ச்சி வார்ப்பியாது, அவர்களைத் துர் வார்த்தைகளினாலே வைதும், கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், அடித்தும், ஓட்டி விடும் வன்கண்ணர்கள் சிலர், தொழில் செய்து சீவனஞ் செய்ய வல்லவர்களாயும், சரீரபுஷ்டியுடையவர்களாகியும் வியபிசாரம் பொய்ச்சான்று சொல்லல் சூது முதலிய பாதகங்களிலே காலம் போக்குபவர்களாகியும் உள்ள சோம்பேறிகளுக்கு முகமலர்ச்சி காட்டிக் கும்பிட்டு, இன்சொற் சொல்லி, நெய், வடை, பாயசம், தயிர் முதலியவற்றோடு அன்னங்கொடுத்துப் பணமுங்கொடுக்கின்றார்கள்.

சரீரசுகம் ஆன்மசுகம் என்னும் இரண்டுக்கும் ஏதுவாகிய கல்வியிலே மிக்க விருப்பமுள்ள வறிய பிள்ளைகளுக்குக் கவலையற்றிருந்து கற்கும் பொருட்டு அன்ன வஸ்திரம் உதவுதற்கு மனம் பொருந்தாதவர்கள் சிலர், கல்வியிற் சிறிதாயினும் பொழுது போக்காது வியபிசார முதலியவை செய்து பிரமேகம், கிரந்தி, அரையாப்பு, பகந்தரம் முதலிய நோய்களைப் பெற்றுக் கொண்டு திரியும் பிரமசாரிகளுக்கு விவாகத்தின் பொருட்டுப் பொருளுதவி செய்கின்றார்கள்.

புராதனாலயங்களிலே கும்பாபிஷேகம் செய்விக்கத் தலைப்பட்டும், அதனை விதிப்படி செய்வித்தற்கும், அவைகளிலே இடிந்த திருக்கோபுரம் திருமதில் முதலியவைகளைப் புதுக்குவித்தற்கும் அவைகளிலே அரசு முதலியவைகள் முளைக்கும் பொழுதெல்லாம் அவைகளைக் களைந்தெறிந்து விட்டுச் சுண்ணாம்பு பூசும் பொருட்டுக் கூலியாளை நியோகித்தற்கும், மனம் பொருந்தாதவர்கள் சிலர், அதிபாதகிகளும் மகாபாதகிகளுமாய்த் திரியும் எண்ணில்லாத சோம்பேறிகளுக்கு அக்கும்பாபிஷேக காலத்திலே அளவறிந்த திரவியங்களைச் செலவிட்டு விலாப்புடைக்க அன்னங் கொடுக்கின்றார்கள்.

சிலர், சரீர புஷ்டியை யுடைய அளவிறந்த சோம்பேறிகளுக்கு மகோற்சவ காலங்களிலே, சத்திரங்களிலே, ஒவ்வொருவருக்கு கால்ரூபா, அரைரூபா, முக்கால்ரூபா, ஒரு ரூபா வீதமாகச் செலவு செய்து அன்னங் கொடுக்கின்றார்களே! ஐயையோ அவர்கள் நெய்யாறு தயிராறு பெருக அவ்வன்னத்தை விலாப்புடைக்கப் புசித்துவிட்டு, தங்களுக்காயினும் பிறருக்காயினும் யாது நன்மை செய்கின்றார்கள்! அநேகர் தெருத் திண்ணைகளிலே படுத்துத் தூங்குகின்றார்கள். அநேகர் தாசி வீடுகளிலும் தெருத் திண்ணைகளிலும் சூதாடுகின்றார்கள். அநேகர் கேட்கத் தகாத சிற்றின்பப் பாட்டுகளைப் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இச்சோம்பேறிகளுடைய செய்கைகள் இவைகளே யாயும், நம்முடைய செல்வர்கள் இச்சோம்பேறிகளுக்கே அன்னங் கொடுக்கிறவர்களாயும் இருந்தால், இரதம் நிலையில் வாராது சில காலம் தெருவிலே நிற்றல் ஆச்சரியமா! அடுத்தடுத்து இப்படி நடக்குமாயின், நம்மை யாளும் அரசினர் சில காலத்துள்ளே இரதோற்சவம் நடவாவண்ணம் தடை செய்வது ஆச்சரியமா!

இச்சோம்பேறிகளுக்கு அன்னங் கொடுக்கிறவர்கள் "இரதத்தை இழுத்துக் கொண்டு போய் நிலையிலே விடுஞ் சனங்களுக்கு அன்னங் கொடுப்போம்" என்று பறையறை வித்தால், பசியினால் வருந்துகின்ற அளவிறந்த ஏழைச் சனங்கள் முகின் முழக்கங் கேட்ட மயிற் கூட்டங்கள் போலப் பெருமகிழ்ச்சி கொண்டு ஓடிவந்து சேருவார்களே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணா வீதமாகச் செலவு செய்து, இவ்வேழைகளுக்கு அன்னங்கொடுத்தால், இவர்கள் நொடிப் பொழுதினுள்ளே இரதத்தை இழுத்துக் கொண்டு போய், நிலையில் விட்டு விடுவார்களே.

நம்முடைய சத்திரபதிகள், இப்படிச் செய்ய விருப்பமில்லாதவர்களாயினும் பிறிதொன்று செய்யலாமே. சத்திரவாயிலில் வரும் சோம்பேறிகளுக்கெல்லாம் 'இரதம் நிலையிலே சேர்ந்தாலன்றிச் சத்திரத்தில் அன்னம் கொடோம்' என்று வெளிப்படுத்துவார்களாயின், இச்சோம்பேறிகள் 'ஓகோ வந்தது மோசம், புத்தி புத்தி' என்று சொல்லிக்கொண்டு' நொடிப் பொழுதிலே இரதத்தை இழுத்து நிலையிலே சேர்த்துவிட்டு வந்து, போசனஞ் செய்வார்களே.

நம்முடைய தேசத்தார்களுள் அநேகர் உலோபமின்றித் தருமஞ் செய்யப் புகுந்தும், தாங்கள் நெடுங்காலம் வருந்திச் சம்பாதித்த பொருளெல்லாவற்றையும் மேற்சொல்லியபடியே பாழுக்கிறைந்து, குளிக்கப்போய்ச் சேறு பூசிக் கொள்வார் போலப் பாவத்தையே தேடிக் கொள்கின்றார்கள். இவர்கள் ஆன்மசுகத்தை விரும்பாது, தற்காலத்திலே மூடர்களாலே சிறிது பொழுது புகழப்படுதலொன்றையே விரும்புகின்றார்கள். இவர்களாலே எண்ணில்லாத சனங்கள் சோம்பேறிகளாய் மூடர்களாய் பாவிகளாய் எரிவாய் நரகத்துக்கு இரையாகுகின்றார்கள். இவைகளுக்கெல்லாம் காரணம் நல்லறிவில்லாமையேயாம். நல்லறிவு கல்வி வேள்விகளாலன்றி வாராது. ஆதலினாலே, தருமஞ் செய்யப் புகுவோர், தருமங்களையும் தருமஞ் செய்யுங் கிரமங்களையும் கற்றறிந்து கொண்டாயினும், கற்றறிந்தவரிடத்திற் கேட்டறிந்து கொண்டாயினும், விதிப்படி செய்யக்கடவர்கள்.

நல்லோரிணக்கமும் நல்லறிவுமுடையவர்கள், தங்கள் பொருளிலே தங்களுக்கும் தங்கள் பிதாமாதா முதலிய பந்துக்களுக்கும் பெண்டிர் பிள்ளைகளுக்கும் வேண்டும் வரையும் வைத்துக் கொண்டு, மற்றதைத் தங்கள் ஆன்மசுகத்தின் பொருட்டு உத்தம தருமங்களிலே செலவு செய்வார்கள். அப்படிச் செய்பவர்கள் ஆன்ம சுகத்தை மாத்திரமின்றி, தற்காலத்திலும் பிற்காலத்திலும் அறிவுடையோர் வாய்ப்படும் நிலையுள்ள புகழையும் அடைவார்கள்.

பொருளினாலே ஆவசியகமாகச் செயற்பாலனவாகிய உத்தம தருமங்களைச் சொல்லுவோம்:-

1. பூர்வ காலத்திலே ஈசுராநுக்கிரகம் பெற்ற பெரியோர்களாலே செய்யப்பட்ட தேவாலயங்களுள்ளும் புண்ணிய தீர்த்தங்களுள்ளும் கிலமாயுள்ளவைகளை முன்போலச் செய்வித்தல் வேண்டும். அப்படிச் செய்தவர் பெறும் பயன், முன் அவைகளைச் செய்தவர் பெற்ற பயனிலும், ஆயிரமடங்கதிகமாம். அத்தேவாலய முதலியவைகளுள்ளே பழுதடைந்த இடங்களைப் பழுதறப் புதுக்குவித்தல் வேண்டும். அப்படிப் புதுக்குவித்தவர் பெறும் பயன், அவைகளை முன் செய்தவர் பெற்ற பயனிலும் நூறு மடங்கதிகமாம்.

2. பெரியோர்கள் தாபித்த தேவாலயங்களுள்ளே, பூசை உற்சவ முதலிய நடவாத தேவாலயங்களிலே, ஆகம விதிப்படி வழுவறச் சிரத்தையோடு பூசை உற்சவ முதலியவை செய்வித்தல் வேண்டும்.

3. தேவாலயத்துத் திருமதில் திருக்கோபுர முதலியவைகளிலே அரசு முதலியவை முளைத்து அவைகளுக்குச் சேதஞ் செய்யா வண்ணம், கூலியாட்களை நியோகித்து, அவர்கள் காலந்தோறும் பார்வையிட்டு அவ்வரசு முதலியவற்றைக் களைந்தெறிந்து விட்டுச் சுண்ணாம்பு பூசிக் கொண்டு வரும்படி செய்தல் வேண்டும்.

4. தரிசனத்தின் பொருட்டுச் சமீபத்திலே தேவாலயம் இல்லாத இடங்களின் மாத்திரம் நூதனமாகத் தேவாலயம் கட்டுவித்து, இயன்ற மட்டும் பூசை முதலியவைகளை விதிப்படி நடத்துவித்தல் வேண்டும்.

5. கல்வியறிவொழுக்கங்களாலும் ஈசுர பத்தியினாலும் சிறந்து விளங்கும் போதகர்களைக் கொண்டு, தேவாலயங்களிலும், புண்ணிய தீர்த்தக் கரைகளிலும், மடங்களிலும், சனங்களுக்குச் சமயத்தைப் போதிபித்தல் வேண்டும். இதுவே எல்லாத் தருமங்களினும் மிக மேலாகிய தருமம். இத்தருமம் இல்லாவிடத்து மற்றைத் தருமங்கள் பயன்படாவாம். கடவுளுடைய குணங்களையும், மகிமைகளையும், அவரை வழிபடும் முறைமையையும், அவ்வழிப்பாட்டாலே பெறப்படும் பயனையும் அறியாதவர், கடவுளை வழிபட்டு உய்வது எப்படி? அவர்களுக்குத் தேவாலய முதலியவைகளினாலே பயன் யாது?

6. வித்தியாசாலைகளைத் தாபித்து, கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்த உபாத்தியாயர்களை நியோகித்து பிள்ளைகளுக்குக் கருவி நூல்களையும், லெளகிக நூல்களையும், சமய நூல்களையும், படிப்பித்தல் வேண்டும். கல்வியிலே மிக்க விருப்பமும் இடையறா முயற்சியுமுள்ள பிள்ளைகளுள்ளே வறிய பிள்ளைகளுக்கு அன்னமும் வஸ்திரமும் புத்தகமுங் கொடுத்தல் வேண்டும். வருஷந்தோறும் பரீ¨க்ஷ செய்து, சமர்த்தர்களாகிய பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்தல் வேண்டும்.

7. அன்னசாலை இல்லாத இடத்திலே அன்னசாலை தாபித்து, சிரத்தையோடு தலயாத்திரை தீர்த்த யாத்திரை செய்பவர்களுள்ளும் கடவுளுக்கு இடையறாத திருத்தொண்டு செய்பவர்களுள்ளும் வறியவர்களாய் உள்ளவர்களுக்கும், தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியில்லதவர்களாகிய குருடர் முடவர் சிறு குழந்தைகள் வியாதியாளர்கள் வயோதிகர்கள் என்னும் இவர்களுக்கும், அன்னங் கொடுத்தல் வேண்டும். குருடர் முதலானவர்களுக்குச் சரீர சுகத்தின் பொருட்டு அன்னங் கொடுத்தன் மாத்திரத்தால் அமையாது. அவர்களுக்கு ஆன்ம சுகத்தின் பொருட்டுக் கடவுளுடைய குணமகிமைகளைப் போதிப்பித்தலுஞ் செய்ய வேண்டும்.

8. வைத்தியசாலை இல்லாத ஊரிலே வைத்தியசாலை தாபித்து வைத்திய சாஸ்திரத்திலே அதிசமர்த்தர்களும் இரக்க முடையவர்களுமாகிய வைத்தியர்களை நியோகித்து, வியாதியாளர்களுக்கு மருந்து செய்வித்தல் வேண்டும்.

9. ஆன்மார்த்த பூசைக்கும் பரார்த்த பூசைக்கும் உபயோகமாகும் பொருட்டு, விதிப்படி திருநந்தனவனம் வைப்பித்துப் பாதுகாத்தல் வேண்டும். திருநந்தனவனத்துள்ள புஷ்பங்களைக் கடவுட் பூசையினன்றிப் பிற கருமங்களிலே உபயோகித்தல் அதிபாதகம்.

10. குளம் இல்லாத ஊரிலே குளந்தோண்டுவித்தல் வேண்டும். தூர்ந்த குளத்திலே தூர் வாருவித்தல் வேண்டும். படித்துறை யில்லாத குளத்துக்குப் படித்துறை கட்டுவித்தல் வேண்டும். கடவுட் பூசகர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுக் குளக்கரையிலே பூசை மண்டபம் கட்டுவித்தல் வேண்டும். ஸ்நானம் சந்தியாவந்தனம் தீர்த்த பானம் முதலியவைகளுக்கு உபயோகமாகுங் குளங்களை செளசஞ் செய்தல், அழுக்கு வஸ்திரந் தோய்த்தல், இருதுவுடைய பெண்கள் ஸ்நானஞ் செய்தல், இலை முதலியவைகளாலே அசுசி அடையா வண்ணம் காவலாளர்களை நியோகித்துப் பாதுகாத்தல் வேண்டும்.

11. வழிப்போக்கர்களுக்கு நிழலிடும்படி வழிகளிலே மரங்களை வைப்பித்தல் வேண்டும். வழிகளிலும் குளக்கரைகளிலும் ஆவுரிஞ்சுகல் நாட்டல் வேண்டும். வழிகளிலே வேனிற் காலத்திலே தண்ணீர்ப் பந்தர்கள் வைத்தல் வேண்டும்.

12. அநாதப் பிள்ளைகளை வளர்த்துக் கல்வி கற்பித்து விடல் வேண்டும். திக்கற்ற விதவைகளை அன்ன வஸ்திரங் கொடுத்துக் காப்பாற்றல் வேண்டும். விவாகமின்றி இருக்குங் கன்னிகைகளைப் பொருள் செலவிட்டு அவ்வவர் வருணத்திலே விவாகஞ் செய்து கொடுத்தல் வேண்டும். அநாதப் பிணங்களைச் சுடுதல் வேண்டும்.

பொருள் வைத்துக் கொண்டு தங்கள் தங்களால் இயன்ற மட்டும் தருமஞ் செய்யாத உலோபிகளை, நரகத்திலே, இயம தூதர்கள், செக்கிற் போட்டு எள்ளுப் போல அரைப்பார்கள்; அதுவுமின்றி ஆலையிலிட்டுக் கரும்பு போல நருக்குவார்கள்; அதுவுமின்றி நீரிலே கலந்த உப்பு அந்நீரோடு பின்னமின்றி இருத்தல் போல அவர்கள் சரிரத்தை அக்கினியோடு பின்ன மற்றிருக்குபடி அக்கினிச் சுவாலையாகிய நரகத்தின் கண்ணே போடுவார்கள்; அவர்கள் அக்கினிமயமாகிய சூலத்தலையில் ஏற்றுவார்கள்; அவர்களுடைய அவயவங்க ளெல்லாவற்றையும் ஈர்வாளினால் அரிவர்கள்; எலும்புகளை முறிப்பர்கள்; வறுத்த மணலை முகத்திலே போடுவார்கள். கூரிய வாயினை யுடைய இருப்பு முளையை அவர்கள் நெஞ்சினுள்ளே இறங்க அடித்துப் புறம்பே பொருந்திய இருப்பாணி வளையத்திலே சங்கிலியைப் பூட்டி, இரண்டிருப்புத் தூணைநாட்டி, அவைகளின் மேலே உத்திரத்தைப் போட்டு, அவைகளினடுவே நூறு வருஷங் கிடக்கும்படி கட்டித் தூக்கி, காலுங் கையும் இரண்டு புறத்தினும் பறக்கும் வண்ணம் விடுவர்கள். அவர்களுடைய சிரசிலும், நெற்றியிலும், முகத்திலும், வாயிலும், மார்பிலும், கையிலும், காலிலும் அக்கினியிற் காய்ச்சிய இருப்பாணிகளை அறைவர்கள். அவர்களுடைய நாக்கினடுவே துளைத்து, அக்கினியிற் காய்ச்சிய இருப்புச் சங்கிலிகளை மாட்டி, அவைகளிலே அதிபாரமாகிய இருப்புக் குண்டுகள் பலவற்றைக் கட்டித் தூக்குவர்கள். அதன் பின்பு கைகளிலும் இருப்புச் சங்கிலி பூட்டி, நான்கு மடங்கு கனமுள்ள இருப்புக் கட்டிகளைக் கட்டி விடுவர்கள். அவர்கள் சரீரத்தை எள்ளுப் போல அரிந்தரிந்து அதனைத் தின்னச் சொல்லுவார்கள்; அ·தன்றி அக்கினியிற் காய்ச்சிய ஊசியினாலும் அவர்கள் சரீரத்தைக் குடைந்து இரத்ததை ஏற்றுக் குடிக்கவும் சொல்லுவார்கள்; அந்தப் புண்வாயிலே அக்கினிச் சுவாலை போன்ற கார நீரையும் இறைத்துச் செம்பினையும் உருக்கி விடுவர்கள்; அதற்கு பின்பு எண்ணெயினையும் காய்ச்சி விடுவர்கள். அவர்களை ரெளரவம் மகா ரெளரவம் முதலிய நரகங்களெலாவற்றினிம் வீழ்த்தி வருத்துவர்கள்.

இப்பாவிகள் எண்ணில் காலம் நரகத் துன்பத்தை அநுபவித்த பின்பு, பூமியிலே மலந் தின்பவைகளாகிய நாய், பன்றி, காகம் முதலியவைகளாய் எண்ணில்லாத தரம் பிறந்து உழல்வார்கள். அதன் பின், மனிதப் பிறவிகடோறும், இருமல், ஈளை, சோகை, வெப்பு, முதலிய நோய்களினாலும், வறுமையினாலும் வருந்துவர்கள். பெரும் பசியாகிய அக்கினி சுவாலிக்க, ஒரு பிடியன்னமுங் கொடுப்பாரின்றி, கண்டவர்கள் சீச்சீ என்று ஓட்ட நாய் போலத் திரிவர்கள். வறுமை கொடிது! நரகினுங் கொடிது! பூமியில் நரகரெனப்படுவோர் வறுமை நோயினாலே பிடிக்கப் படுவோரன்றி மற்றியாவர்! அடுத்தவர்கள் அடி அடி, என்று அடிக்க, பெண்டிர் பிள்ளைகள் கதற, குலை குலைந்து துன்பக் கடலின் மூழ்குவர்கள். இரக்கத் தகாத இடங்களெல்லாம் இரப்பர்கள். இரக்குந் தொழிலே தங்களுக்குத் தொழிலாக, எரிகின்ற பசிக்கனல் வருத்தக் காற்றுப் போலத் திரிந்து, காகம் போலக் கதறிக் கதறிக் கால் கடுத்தோய வருந்தி 'ஐயையோ சிறிதாயினும் பெலவில்லையே, யாவர் நமக்கு அன்னமிடுவார்கள். ஒருதுணையுமில்லையே' என்று அலறி அலறிக் கால் வீங்கி மரிப்பர்கள். இப்படி மரித்தாலும், தருமஞ் செய்யாப் பாவம் விடுமோ, விடாது. பின்னரும் பல முறை நீசர்களாய்ப் பிறந்து, பார்த்தோரெல்லாம் பி¨க்ஷப் பிசாசு என்று சொல்லும் வண்ணம், சுழன்று திரிந்து வருந்துவர்கள்.

தாங்களே நெடுங்காலம் வருந்தித் தேடிய பொருளைக் கொண்டு தருமஞ் செய்யாத உலோபிகள் படுந் துன்பங்கள் இவைகளேயாயின், 'நாம் தருமஞ் செய்கின்றோம்' என்று சொல்லிப் பொய் வேடங் காட்டி உலகத்தாரை வஞ்சித்து அவர் பொருளைப் பறித்துத் தருமஞ் செய்யாது விடுவோர்களும், தாங்கள் கூறியவாறே தருமஞ் செய்யப் புகுந்தும், அப்பொருளிலே அணுவளவாயினும் அபகரிப்பவர்களும், தங்களைப் பிறர் நம்பி வந்தடுத்துத் தருமஞ் செய்யும் பொருட்டுத் தங்களிடத்து ஒப்பித்த பொருளைத் தருமஞ் செய்யாது அபகரிப்பவர்களும், பிறர் தருமஞ் செய்யும் பொழுது அதனைத் தடுப்பவர்களும், படுந்துன்பங்களை, ஐயையோ! யாவர் சொல்ல வல்லவர்?

பொருளுடையவர்கள், உலோபம் இல்லாமலும், வீண் செலவு செய்யாமலும், தங்கள் தங்களால் இயன்ற மட்டும், மேற்கூறிய தருமங்களையும், அவை போலும் முக்கிய தருமங்களையும், கிரமமறிந்து, விதிப்படி சிரத்தையோடு செய்யக் கடவர்கள். செய்வார்களாயின், இம்மையிலே நிலைபெற்ற கீர்த்தியையும், சந்ததி விருத்தியையும், மறுமையிலே பரகதியையும் அடைவார்கள்.

பொருளில்லாதவர்கள், தருமத்தில் விருப்பமுடைய பிறர் தங்களிடத்து அன்போடு வணங்கித் தந்த பொருளை வாங்கி, அதில் ஓரணுவளவாயினுங் கவராது, தருமங்களை விதிப்படி சிரத்தையோடு செய்து முடிக்கக் கடவர்கள். பொருளுடையவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தித் தருமஞ் செய்யும் பொருட்டு அவர்களை ஏவினவர்கள் பரகதியை அடைவர்கள்.

ஆன்மாக்கள் சரீரத்தை விட்டு நீங்கும் பொழுது, அவர்களுக்கு உண்டாகும் அச்சமும் துன்பமுஞ் சொல்லலாகுமா! அப்பொழுது தங்கள் வீட்டையும் தன தானியங்களையும் நினைத்து நினைத்து 'இனி இவைகளை யாவர் அனுபவிப்பவர்! நாம் உடலை விட்டு பிரியும்பொழுது இவைகளெல்லாம் நமக்கு அன்னியமாகுமே' என்று எல்லையில்லாத மனத்துயரம் மேலிட, இறப்பர்கள். ஆன்மாக்கள் இறக்கும் பொழுது படுந்துன்பம், பாம்பு தன் வாயினாலே பற்றும் பொழுது தவளை படுந் துன்பத்துக்கு சமமாகும். அப்பொழுது பிதா மாதாப் பெண்டிர் பிள்ளைகள் முதலாயினோர் அவர்களைக் காக்க வல்லர்களோ? இல்லை இல்லை! அவர்கள் எண்ணில் காலம் வருந்தித் தேடிய திரவியங்கள் அவர்கள் போம்பொழுது துணையாகுமோ! இல்லை இல்லை! அப்பொழுது அவர்களுக்கு அழியாத் துணையாய் உடன் செல்வது அவர்கள் செய்த புண்ணியமே!

ஆதலினாலே, யாவரும், பேசக்கூடா வண்ணம் நாக்கை அடக்கி விக்கல் எழுவதற்கு முன்னே, இத்துணைச் சிறப்பினதாகிய புண்ணியத்தை விரைந்து செய்தல் வேண்டும். விக்கல் வந்த பொழுது, புண்ணியத்தைச் செய்தலேயன்றி, அங்குள்ளார் பிறரை நோக்கி 'நீங்கள் நம்முடைய பொருளைத் தருமத்திலே செலவிடுங்கள்' என்று சொல்லலும் முடியாதே. அவ்விக்கல்தான் இன்ன பொழுது வருமென்பதுந் தெரியாதே. ஆதலினாலே, இறக்கும் பொழுது செய்வோம் என்று நினையாது புண்ணியத்தை நாடோறும் செய்தல் வேண்டும்.

திருவள்ளுவர் குறள்

"அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை."

"நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்."


--------------------------------------------------------------------------------

கடன்படல்

சரீர சுகத்தின் பொருட்டாவது, தருமத்தின் பொருட்டாவது, யாவரும் தங்கள் தங்கள் வரவுக்கேற்ப, மட்டாகச் செலவு செய்தல் வேண்டும். வரவுக்கு மேலே செலவு செய்யப் புகுவோர் கடன்படத் தலைப்பட்டு பெருந்துன்பத்தையும் அவமானத்தையும் அடைவர். கடனுடையவருக்கு இம்மை மறுமை இரண்டினும் இன்பமே இல்லை. எத்துணைப் பெருஞ் செல்வராயினும் கடன்படத் தலைப்படுவோர், விரைவிலே தங்கள் செல்வமெல்லாம் இழந்து, தரித்திராவர். இம்மையிலே மனிதர்கள் அநுபவித்துந் துன்பங்களெல்லாவற்றினும், கடனால் உண்டாகுந் துன்பத்தின் மிக்க துன்பம் யாதொன்றும் இல்லை. தனிகனைத் தாயைக் கண்டாற் போலப் பேரானந்தத்தோடு கண்டு அவனிடத்தே கடன்பட்டவர், பின்பு அவன் எதிர்ப்படும்போது அவனைப் பேயைக் கண்டாற் போலப் பெரும் பயத்தோடு கண்டு நடுநடுங்கி ஒளிப்பிடந் தேடி ஓடுவர். தனிகன் - கடன் கொடுக்கிறவன்.

பொருளில்லையானால், கூலித் தொழில் செய்து வயிறு வளர்க்கினும் வளர்க்கலாம்; பிச்சையேற்று உண்ணினும் உண்ணலாம்; பசிநோயால் வருந்தி இறக்கினும் இறக்கலாம். இவைகளெல்லாம் அவமானங்களல்ல. இவைகளினாலே பிறருக்கு யாதொரு கேடும் இல்லை. இவைகளினால் ஒருவருக்கும் அஞ்சவேண்டுவதில்லை. இவைகளாலே துன்பம் உண்டாயினும், அத்துன்பமோ மிகச் சிறிது; அச்சிறு துன்பமும், நல்லறிவோடு அமைந்து சிந்திக்கும் போது, நீங்கிவிடும். கடனோ இப்படிப்பட்டதன்று, பெருவியாதி முதலிய கொடு நோய்களினால் உண்டாகுந் துன்பத்தைப் பொறுக்கினும் பொறுக்கலாம்; கடனால் உண்டாகுந் துன்பத்தைப் பொறுக்கினும் பொறுக்கலாம்; கடனால் உண்டாகுந் துன்பத்தைப் பொறுத்தல் அரிது அரிது.

கடன்படக் கூசாதவர் பொய் சொல்லக் கூசார்; பொய்ப் பத்திரம் பிறப்பிக்கக் கூசார்; பொய் வழக்குப் பேசக் கூசார்; விசுவாசகாதஞ் செய்யக் கூசார்; வழக்குத் தீர்ப்பிலே பரிதானம் வாங்கக் கூசார்; களவு செய்யக் கூசார்; கொலை செய்யக் கூசார். கடன் படல் எல்லாப் பாவங்களையும் வலிந்து கைப் பிடித்தழைக்குந் தூது.

ஒருவனுக்குத் தன் பொருளிற் சிறிது கடனாகக் கொடுத்தவன், அம்முதற்பொருள் வட்டியோடு வரும் வரும் என்று நெடுங் காலம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்; சிலபோது தனக்கு முட்டு வந்துவிடத்துத் தன் முதற் பொருளையும் வட்டியையும் நம்பித் தான் பிறனிடத்தே கடன் படுகின்றான்; தான் கொடுத்த கடன் வாராத பொழுது, தன் பிற முயற்சிகளை விடுத்துக் கடனுடையவனைப் பலநாளும் பலதரமும் தேடித் தேடிதக் கேட்டுக் கேட்டு, அலைந்து திரிகின்றான்; அவன் அக்கடனைத் தீராதபோது அவன் மீது தரும சபையிலே வழக்குத் தொடுத்து, தன் காலத்தையும் தன்னெஞ்சிய பொருளையும் பலவாற்றாலும் அவ்வழக்கிலே போக்குகின்றான்; அவ்வழக்கை நடத்துதற்குத் தன்னெஞ்சிய பொருள்போதாதபோது, பிறனிடத்திலே கடன்படுகின்றான்; நெடுங்காலஞ் சென்றபின், தான் அவ்வழக்கிலே தோல்வி யடையாது வெல்வியடைந்தானாயினும், கடனுடையவனிடத்தே தாவரசங்கமப் பொருள் உண்டோ இல்லையோ என்று பல நாளும் ஆராய்ந்து கொண்டு திரிகின்றான்; தாவர சங்கமப் பொருள் இல்லாதபோது, ஏங்கி வருந்தி மாய்கின்றான். தாவர சங்கமப் பொருள் கண்டு விக்கிரயஞ் செய்தவிடத்தும், அவைகளின் விலை தனக்கு வரற்பாலனவாகிய முதலுக்கும் வட்டிக்கும் வழக்குச் செலவுக்கும் போதாத பொழுது தான் பிறனிடத்தே வாங்கிய கடனனத் தீர்த்து விட்டு 'என் செய்வேன் என் செய்வேன்' என்று பெருமூச்செறிந்து கவலைக்கடலின் மூழ்கித் தன் மனைவி பிள்ளைகளோடு பட்டினியிருந்து மாய்கின்றான். இது இப்படி இருக்க, தன் பொருளனைத்தையும் திருடரால் இழந்தவனோ சில நாண் மாத்திரம் கவலையுற்றுப் பின்பு அக்கவலையை ஒழித்துவிட்டுத் தன்னால் இயன்ற தொழில் செய்து மகிழ்ச்சியோடு சீவனஞ் செய்கின்றான். ஆதலினாலே, ஒருவனுடைய பொருண் முழுதையும் திருடுதலினும், அவன் பொருளிற் சிறிதையேனும் கடனாக வாங்கிக் கொண்டு அதனைத் தீர்க்காமை பெருங் கொடும் பாவம் பாவம்.

நம்முடைய தேசத்தாருள்ளே கடன்படும் வழக்கம் மிகப் பெரிது. கடன்படாதவர் நூற்ருவருள்ளே ஒருவர் கிடைப்பதும் மிக அரிது. அநேகர், சுபாசுப கருமங்களிலே பிறர் செலவு செய்வதைப் பார்த்து, தாங்களும் அப்படியே செலவு செய்யா தொழிந்தால் தங்களுக்கு அவமானமாகும் என்று எண்ணி, கண்ணை மூடிக்கொண்டு, அகப்படு மட்டும் கடன்பட்டுச் செலவு செய்கின்றார்கள். கடன்பட்டு வட்டி வளர்ந்த பின் முன்னுள்ளதும் இழந்து பசிநோயால் வருந்துதலும் கடனைத் தீர்க்க இயலாது. தனிகர் குடியைக் கெடுத்தலும் அவமானமல்லவாம். வரவுக்கேற்ப மட்டாகச் செலவு செய்து முட்டின்றி வாழ்தல் அவமானமாம். ஐயையோ இவர்கள் அறியாமை இருந்தபடி என்னை!

நம்முடைய தேசத்தார்கள் சுபாசுப் கருமங்களிலே செலவிடும் பொருள் பெரும்பாலும் யாவரிடத்தே சேர்கின்றது? தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியுடையவர்களாய் இருந்தும் அது செய்யாத சோம்பேறிகளிடத்தன்றோ? யாசித்துப் பொருள் சம்பாதிக்கும் இச்சோம்பேறிகளுள்ளே அநேகர் உண்டுடுத்து, எஞ்சிய பொருள் கொண்டு ஆபரணஞ் செய்வித்து, வீடுகட்டுவித்து, விளைநிலம் தோட்ட முதலியவை வாங்கி நூற்றுக்கு இரண்டு மூன்று வீதம் வட்டிக்குக் கொடுத்துக் கொண்டு, செல்வர்களாய் இருக்கின்றார்களே. தொழில் செய்து வருந்திச் சம்பாதிப்பவர்களுள்ளே அநேகர் சுபாசுப கருமங்களிலே இவர்களிடத்திலே கடன்பட்டு, இவர்களுக்கே இறைத்துவிட்டு, வட்டி வளர்ந்த பின், இவர்கள் தங்கள் வீட்டு வாயிலில் வந்து சிறிதும் கண்ணோட்டமின்றித் தங்களை வாயில் வந்தபடி பேச, அவமானமடைந்து, தங்கள் தாவர சங்கமப் பொருளை விற்றுக் கொடுத்து விட்டு அன்னத்திற்கு அலைகின்றார்களே.

அநேகர் ஆபரணஞ் செய்வித்தற்கும், பண்டிகுதிரை வாங்குதற்கும், வீடு கட்டுவித்தற்கும், விளைநிலம் தோட்ட முதலியவை வாங்குதற்கும், கடன்படுகின்றார்கள். வட்டி வளர்ந்தபின், கடன் தீர்க்கப் பிறிது வழியின்மையால், அவ்வாபரண முதலியவற்றை விற்கின்றார்கள். அவைகள் வாங்கிய விலைக்கு விலைப்படுதலே அரிது; அப்படியாகவே அவைகளின் விலைப்பொருள் வட்டிக்கும் முதலுக்கும் எப்படிப் போதும்! போதாமையால், தங்களிடத்து முன்னுள்ள தாவர சங்கமப் பொருளையும் விற்றுக் கொடுத்து விட்டு வறியவர்களாய் வருந்துகின்றார்கள்.

கடன்பட்டு ஆபரணந் தரிப்போரும், பண்டிகுதிரை ஏறுவோரும், பவனி வருவோரும், பிறர் பார்த்து இன்ப அனுபவிக்க, தாங்கள் தங்கள் கடனை நினைந்து நினைந்து நெஞ்சந் திடுக்குத் திடுக்கெனப் பெருமூச்செறிந்து, துன்பமே அனுபவிக்கின்றார்கள். தாங்கள் துன்பக் கடலின் மூழ்கியும் பிறருக்கு இன்பத்தைக் கொடுக்கும் இந்த டாம்பிகர்களுடைய சீவகாருணியத்தை யாது சொல்வோம்!

வாணிகஞ் செய்ய விரும்புவோர் இயன்ற மட்டும் தங்கள் கைப்பொருளைக் கொண்டு வாணிகஞ் செய்வதே தகுதி. கைப்பொருளில்லாதவர் கடன் சொல்லிச் சரக்குகளை வாங்கி வாணிகஞ் செய்ய முயன்றால் கடன் கொடுப்பவன் வட்டி வாசிகளை அச்சரக்கின் விலையோடு சேர்த்தே கொடுப்பான். ஆதலினாலே, அவ்வாணிகம் தலைகொடுக்காது.

கைப்பொருள் சிறிதும் இல்லாதவர், நிலத்திற்கென்றும், கலப்பைக்கென்றும், மாட்டுக்கென்றும், விதைக்கென்றும், இறைக்கென்றும், கடன்பட்டுப் பயிர்த் தொழில் செய்கின்றார்கள். கடன் கொடுத்தவர்களெல்லாரும் அறுப்புக் காலத்தில் வந்திருந்து கொண்டு, ஒற்றைக்கு இரட்டையாக அளந்து கொண்டு போக, தாங்கள் போசனத்துக்கு முட்டு பட்டு வருந்துகின்றார்கள்.

கடனில் மூழ்கினவருள்ளே அநேகர், உத்தியோகத்தினாலே சீவிக்கப் புகுந்தும், தங்களுக்குக் கிடைக்கும் வேதனத்தைத் தனிகர்கள் மாசந்தோறும் வந்து வட்டியின் பொருட்டு வாங்கிக் கொண்டு போய்விட, தாங்கள் செலவுக்கு முட்டுப்படுகின்றார்கள். கடன் தீர்க்க வழியில்லாமையால் உத்தியோகத்தை விட்டு ஒளித்துக் கொண்டு திரிவாரும், ஊரை விட்டு ஓடிப் போவாரும், அநேகர், சிலர், இப்படிச் செய்தற்குக் கூடாமையால், மன வருத்தத்தினாலே நாடோறும் சரீர மெலிந்து துயருறுகின்றார்கள்.

கடனுடையவர் சிலர், ஒரு தனிகனுக்குக் கொடுக்க வேண்டிய முதலையும் வட்டியையும் மற்றொரு தனிகனிடத்து வாங்கித் தீர்த்தும், சில காலஞ் சென்றபின் அக்கடனையும் அப்படியே மற்றொரு தனிகனிடத்தில் வாங்கித் தீர்த்தும் வருகின்றார்கள். இப்படியே கடன் விருத்தியாய் விட, முடிவிலே தங்கள் தாவரசங்கமப் பொருள்களெல்லாவற்றையும் விக்கிரயஞ் செய்து கொடுத்துவிட்டு, வருத்தமடைகின்றார்கள். ஆதியிலே, வட்டி வளர்தற்கு முன்னரே, தங்கள் தாவர சங்கமப் பொருள்களிலே சிலவற்றை விற்றுக் கடனைத் தீர்த்துவிட்டு, எஞ்சிய பொருளைக் கொண்டு முட்டின்றிச் சீவிக்கலாமே. ஐயையோ! இவர்கள் பேதைமைக்கு யாது செய்யலாம்! பரிதாபம் பரிதாபம்!

கடன்படத் தலைப்படுவோர், தாம் கடன்படுதற்கு முன்பே 'இப்போது நமக்கு இந்தப் பணத்தொகை ஆவசியகமா? இந்தக் கடனைத் தீர்த்தற்குப் பொருள் வரும் வழி உண்டா? பொருள் விரைவில் வருமா! தாமதத்தில் வருமா? தாமதத்தில் வருமாயின், இதற்கு வட்டி வளர்ந்து விடுமன்றோ? பொருள் வராதவிடத்து இக்கடனைத் தீர்க்கப் பிறிது வழி உண்டா? இப்பொழுது இப்பணத் தொகை ஆவசியகமேயாயினும், கடன்படாது, நம்முடைய தாவர சங்கமப் பொருளிலே சிலவற்றை விற்றே செலவு செய்யலாமே. இப்படிச் செய்தால் வட்டி மிஞ்சுமே! இப்படிச் செய்யா தொழிந்தால், வட்டி வளர்ந்த பின் நம்முடைய தாவரசங்கமப் பொருள் முற்றும் போய்விடுமே! அதன் பின்பு சீவனத்துக்கு யாது செய்யலாம்? என்று இவைகளெல்லாவற்றையும் செவ்வையாக ஆலோசிக்கக்கடவர்.

அநேகர், பலர் குடியைக் கெடுத்துத் தாமே வாழ நினைந்து அவரிடத்தே கடன் வாங்கிக் கொண்டு, அவரை வஞ்சிக்கும் பொருட்டு, எல்லாப் பொருளையும், தங்கள் பந்துக்களுள்ளும் சிநேகருள்ளும் யாரையேனும் நம்பி அவரிடத்தே வைத்துவிட்டு, பின்பு தாம் அவராலே வஞ்சிக்கப்பட்டு யாதொன்றும் பேசமாட்டாது ஏங்கி வருந்துகின்றார்கள். தாம் பிறரை வஞ்சித்தும், தம்மைப் பிறர் வஞ்சி யார் என்று நினைக்கும் பேதமையை யாது சொல்லலாம்! "நாமொன்றெண்ணத் தெய்வமொன்றெண்ணியது" என்னும் பழமொழியின் உண்மையை இவர்களிடத்தே காணலாம்.

அநேகர் தாங்கள் சிறிதும் கடன் படாதவர்களேயாயினும், கடன்படத் தலைப்பட்டுப் பிறர் பொருளை நம்பித் திரிகின்றவர்களோடு சிநேகஞ் செய்து, அவர்கள் பொருட்டுப் பிணை நின்று, தங்கள் தாவர சங்கமப் பொருளெல்லாம் இழந்து, தங்கள் பெண்டிர் பிள்ளைகளாலும் அவமதிக்கப்பட்டுப் பசிநோயால் வருந்துகின்றார்கள்.

நம்முடைய தேசத்தாருள் அநேகர் கடன்பட்டுப் பிறர் குடியைக் கெடுத்துத் தருமஞ் செய்கின்றார்கள். இது தருமமாகுமா? ஆகாது. பொருளினாற் செயப்படுவனவாகிய தருமங்களைப் பொருளுடையார் செய்யாமையே பாவம்; வறியவர் செய்யாமை பாவமன்று. பொருளின்றிச் செய்யப் படுவனவாகிய தருமங்கள் எண்ணில்லாதன உண்டு. அவை கடவுளைச் சிந்தித்தல், துதித்தல், வணங்கல், அவர் குணமகிமைகளைக் கேட்டல், அவைகளைப் பிறருக்குப் போதித்தல், கொல்லாமை, பிறர் பொருளிச்சியாமை, பிறன் மனையாளை விரும்பாமை, வாய்மை, பொறை, இரக்கம் முதலியவைகளாம். பொருளில்லாதவருக்கு இத்தருமங்களே அமையும். பொருளுடையவருக்கோ, பொருளாற் செய்யப்படுந் தருமங்களோடு இத்தருமங்களும் வேண்டும். இத்தருமங்களின்றி அத்தருமங்கள் சிறிதும் பயன்படாவாம்.

கடனுடையவன் தான் வாங்கின கடனைக் கொடாவிடின், அவன் செய்த புண்ணியமெல்லாம் தனிகனைச் சாரும். வாங்கின கடனைத் தீராமல் இறந்துபோன கடனுடையவன், அளவில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்த பின்பு, தனிகன் வீட்டிலே, கூலியாலாகவும், பெண்ணாகவும், அடிமையாகவும், குதிரையாகவும், மாடாகவும், கழுதையாகவும் பிறந்துழைப்பான்.

ஒருவன் தன்னிடத்தே பிறனால் நம்பி வைக்கப்பட்ட பொருளைத் தன் புத்திரனைப் போலக் காத்து, பொருளை வைத்தவன் கேட்கும் பொழுதே கொடுக்கக்கடவன். அப்படிப் பொருளைக் காத்துக் கொடுத்தால், அவன், இரணியதான முதலிய தானங்களைக் கொடுத்தவனுக்கு உண்டாகும் பலத்தையும், அடைக்கலம் புகுந்தவனைக் காத்தவனுக்கு உண்டாகும் பலத்தையும் அடைவான். அந்தப் பொருளைக் கவர்ந்தவன் தன் புத்திரனையும் சினேகன் முதலானவர்களையுங் கொன்ற பாவத்தை அடைவான்.

ஒருவன் வாக்குத் தத்தம் பண்ணின பொருளைக் கொடாது விட்டாலும், கொடுக்கப் பட்டதை மீட்டுங் கொள்ள விரும்பினாலும், அவன் பாவியாவான். ஒருவன் வாக்குத் தத்தம் பண்ணின பொருளைக் கொடாவிடின், அந்தப் பொருள் கடன் பொருளைப் போல அவனை இம்மையினும் மறுமையினுந் தொடரும், அவன் பலவகையாகிய நரகங்களை அடைந்து, நாய்ப்பிறப்பு முதலிய இழிவாகிய பிறப்பையும் அடைவான். தருமந்தப்பி நடக்கின்றவன் பொருட்டு வாக்குத் தத்தம் பண்ணின பொருளைக் கொடாதவன் குற்றமுடையவனல்லன்.


--------------------------------------------------------------------------------

வீட்டுக்கொல்லை

அழுகின பதார்த்தங்களும் மலமூத்திரங்களும் துர்க்கந்தத்கை வீசும். துர்க்கந்தம் அளாவிய காற்றைப் பூரித்தாலும், அந்தக் காற்று உடம்பிலே பட்டாலும், மலமூத்திரங்களை மிதித்தாலும், மலமூத்திர பூமியிலே உண்டாகிய பதார்த்தங்களைப் புசித்தாலும், மலமூத்திர வழுக்குச் சேர்ந்த சலத்தை உபயோகித்தாலும், பலவித நோய்கள் உண்டாகி, மனிதருக்குச் சடிதியிலே மரணத்தை விளைவிக்கும். ஆதலினாலே, மனிதர் சஞ்சரிக்கும் இடமெல்லாம் சுசியுடையதாய் இருக்கும்படி பாதுகாத்தல் பெருந் தருமம்.

வீட்டுக்குச் சமீபத்திலே மலமூத்திரங்களை விடுதலும், எச்சிலிலைகளையும் குப்பைகளையும் போடலும், எச்சில் உமிழ்தலும், கை கால் கழுவலும், ஆகாவாம்.

வீட்டைச் சேர்ந்த கொல்லையெங்கும் மலமூத்திரங்களினாலும், எச்சிலினாலும், குப்பையினாலும் அசுசி அடையா வண்ணம் அந்தக் கொல்லையிலே, வீட்டுக்குத் தூரத்திலே, மலகூடமும், எச்சிலிலைக்குழியும் குப்பைக் குழியும் அமைப்பித்தல் வேண்டும். இப்படிச் செய்தால் கொல்லையும் வீடும் அசுசியடையாமல், சுசியுடையவைகளாயே இருக்கும்.

வீட்டுக்குச் சமீபத்தில் சிறுகுழிகள் உண்டானால் அவைகளைத் தூர்த்துப் போடல் வேண்டும். அப்படிச் செய்யாதொழிந்தால், அவைகளிற் சென்ற தண்ணீர் அங்கே தங்கிச் சேறாகித் துர்க்கந்தத்தை வீசும்; அந்தச் சேற்றிலே புழு முதலிய செந்துக்கள் உண்டாகும். அந்தத் துர்க்கந்தத்தினாலே சுர முதலிய வியாதிகள் வரும்.

கொல்லையில் உதிர்ந்த இலைகளையும் சருகுகளையும் நாடோறும் பெருக்கி, குப்பைக் குழியிலே கொட்டல் வேண்டும். கொல்லையிலே முளைத்த பயன்படாத செடி களெல்லாவற்றையும் காலந்தோறும் களைந்து, குப்பையுடனே போடல் வேண்டும். இப்படிச் சேர்க்கின்ற திரளான குப்பை பயிர்களுக்கு நல்ல எருவாகும்.

யாவரும் தங்கள் தங்கன் வீட்டுக் கொல்லைகளிலே உபயோகமாகும் பயிர்களையும், சிறந்த மரங்களையும், அழகிய புஷ்பச் செடிகளையும் வைத்து, அந்தக் கொல்லைகளை மிகச் சிறப்பித்தல் வேண்டும். இத்தன்மையுடைய கொல்லைகளிலே உண்டாகும் நல்ல காற்று அரோக்கியத்தை விளைவிக்கும். பனை மரங்களையும், தென்னை மரங்களையும் வீட்டுக்குச் சமீபத்தில் வைக்கலாகாது.

கிணற்றினுள்ளே இலைகள் உதிர்ந்து அழுகினாலும், சூரிய கிரணம் படாதொழிந்தாலும் ஜலங்கெட்டுப்போம்; அதலினாலே, கிணற்றுக்குச் சமீபத்திலே பெருமரங்களை வைக்கலாகாது. பழஞ்சலமும், தூர் அதிகமாக உள்ள சலமும், வியாதியை உண்டாக்கும். ஆதலினாலே கிணற்றுச் சலத்தைக் காலந்தோறும் முழுதும் இறைத்துத் தூர் வாரிச் சுத்தி செய்வித்தல் வேண்டும். இரண்டு மூன்று நாளுக்கொரு தரம் கிணற்றுச்சலம் முழுதையும் இறைப்பித்து வந்தால் கொல்லையிலுள்ள மரங்களுக்கும், செடிகளுக்கும், பயிர்களுக்கும் உபயோகப்படும்; அதுமட்டோ, ஜலம் நன்றாயிருக்கும். புதிது புதிதாக ஊறுஞ் சலம் நல்ல சுவையுடையதாயும், வியாதியை விளைக்காததாயும் இருக்கும்.

சுசியுடைமை சரீரத்துக்கு ஆரோக்சியத்தையும் மனசுக்குச் செளக்கியத்தையும் கொடுக்கும். இவ்வுண்மை அவிவேகமுள்ள ஏழைச் சனங்களுக்குத் தெரியாது. ஆதலினாலே பக்கத்திலுள்ள விவேகிகள் இதை அவர்களுக்கு நன்றாகத் தெரியும்படி சொல்லல் வேண்டும்.


--------------------------------------------------------------------------------

தேவாலயம்

தேவாலயமாவது எங்கும் வியாபகராய் மறைந்திருக்குங் கடவுள். தம்மை ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும்பொருட்டுச் சாந்நித்தியராய் எழுந்தருளியிருக்கும் இடமாம்.

தேவாலயத்திலே செயற்யானவாகிய பிரதிட்டை பூசை உற்சவ முதலிய கிரியைகளெல்லாவற்றையும் விதிக்கு நூல்கள் ஆகமங்கள். சிவாலயக் கிரியைகள் சைவாகமங்களிலும், விஷ்ணுவாலயக் கிரியைகள் வைஷ்ண்வாகமங்களிலும், விதிக்கப்படும் ஆகமங்களை ஓதியுணர்ந்தவர்களே தேவாலயக் கிரியைகளை விதிப்படி செய்ய வல்லவர்கள். தீட்சை பெற்றவர்களே ஆகமங்களை ஓதியுணர்தற்கு யோக்கியர்கள். பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்பவர்களாய் ஈசுர பத்தியும் குரு பத்தியும் அடியார் பத்தியும் உடையவர்களாய், தீட்சை பெற்றவர்களாய், ஆகமங்களைக் குருமுகமாக ஓதியுணர்ந்தவர்களாய் ஆகமக் கிரியைகளை மந்திரத்தோடும் பாவனையோடும் விதிப்படி செய்யப் பயின்றவர்களாய் உள்ளவர்களே தேவாலயக் கிரியைகளைச் செய்தற்கு யோக்கியர்கள். தீட்சையும் ஆகமவுணர்ச்சியும் உடையவர்களாயினும், நல்லொழுக்கமும் பத்தியுமில்லாதவர்களாயின், அவர்களாற் செய்யப்படுங் கிரியைகளினாலே கடவுள் சாந்நித்தியராகார் என்பது ஆகம நூற்றுணிவு.

தேவாலயக் கிரியைகள் காலந்தோறும் தவறாமற் சிரத்தையோடு விதிப்படி செய்யப்படுமாயின், உலகத்திலே காலந்தோறும் மழை தவறாமற் பெய்யும். நெல் முதலாகிய வளங்கள் பெருகும். ஆரோக்கியம் உண்டாகும். அரசநீதி நடக்கும். கல்வியறிவொழுக்கமுஞ் சமயபத்தியுந் தழைத்து ஓங்கும். தேவாலயக் கிரியைகள் சிரத்தையோடு விதிப்படி செய்யப்படாதொழியின், உலகத்திலே மழையின்மையும், பஞ்சமும், மசூரிகை, விஷுசி முதலிய கொடு நோய்களும், கன்னம் களவு கொலை முதலிய தீத்தொழில்களுமே விருத்தியாகும். ஆதலினாலே, கோயிலதிகாரிகள் தேவாலயங்களைச் சிரத்தையோடு விதிப்படி சாவதானமாக நடத்தல் வேண்டும்.

திருமந்திரம்

ஆற்றரு நோய்மிகு மவனி மழைகுன்றும்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்றிருக் கோயில்களானவை
சாற்றிய பூசைக டப்பிடிற் றானே.

முன்னவ னார்கோயிற் பூசைகண் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினிக்
கென்னரு ணந்தி யெடுத்துரைத் தானே.

தேவாலயந்தோறும் வித்தியாசாலை தாபித்து, அதிலே பிள்ளைகளுக்குக் கருவிநூல்களையும் வேதம் ஆகமம் முதலிய நூல்களையும் கிரமப்படியே கற்பித்தல் வேண்டும். கற்ற பிள்ளைகளைப் பரட்சித்து, அவர்களுள்ளே அதிசமர்த்தர்களாயும் நல்லொழுக்கமும் பத்தியும் உடையவர்களாயும் உள்ளவர்களையே தேவாலயத்துக்கு ஆசாரியர் முதலாயினோராக நியோகித்தல் வேண்டும். அவர்களுக்கு அன்ன வஸ்திர முதலியவற்றின் பொருட்டு முட்டுப்பாடு இல்லாமற் பொருளுதவி செய்து, அவர்களைக் கொண்டு தேவாலயக் கிரியைகளைக் காலந்தோறும் தவறாமல் விதிப்படியே செய்து கொண்டு வரல் வேண்டும். அவர்கள் தங்களுக்கு உரிய நல்லொழுக்கத்திலும் தேவாலயக் கிரியைகைகளினும் வழுவினார்களாயின், அவர்களைக் கண்டித்துத் திருத்தல் வேண்டும்; திருத்தமுறாதவர்களை நீக்கிவிடல் வேண்டும்.

கடவுளுடைய குணமகிமைகளையும், புண்ணிய பாவங்களையும், அப்புண்ணிய பாவங்களின் பயனாகிய சுகதுக்கங்களையும், கடவுளை வழிபடும் முறைமையையும், அவ்வழிபாட்டினாலே பெறப்படும் முத்தியின்பத்தையும் அறியும் அறிவு இல்லாதபோது, தேவாலயத்தினாலே சனங்களுக்குச் சிறிதும் பயனில்லை. இவ்வறிவில்லாதவர்கள் தேவாய சேவை செய்யப் புகினும், குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளுவோர் போலப் பாவத்தையே சம்பாதித்துக் கொள்வார்கள். ஆதலினாலேயே, நல்லொழுக்கமும் பத்தியும் சமயசாத்திரவுணர்ச்சியுமுடைய பெரியோர்களைச் சமய போதகர்களாக நியோகித்து, தேவாலயத்திலே காலந்தோறுஞ் சனங்களுக்குச் சமயநெறியைப் போதித்தல் வேண்டும்.

சனங்களுக்குப் பத்தி வளர்ந்தோங்கும் பொருட்டு, தேவாலயமெங்கும் வேதவொலியும் தமிழ் வேதவொலியுமே தழைத்தோங்கும்படி செய்தல் வேண்டும் சைவர்களுக்குத் தமிழ் வேதம் தேவார திருவாசகங்கள்; வைஷ்ணவருக்குத் தமிழ்வேதம் நாலாயிரப் பிரபந்தம், சைவ மரபிற் பிறந்தவரேயானும், தேவார திருவாசகங்களை ஓதாதவர் சைவராமாட்டார். வைஷ்ணவமரபிற் பிறந்தவரேயாயினும், நாலாயிரப் பிரபந்தத்தை ஓதாதவர் வைஷ்ணவராக மாட்டார். ஈசுர பத்தி வளர்தற்கு ஏதுவாகிய வாக்குக்களும் செயல்களுமே யன்றி, மற்றை வாக்குக்களும் செயல்களும் தேவாலயத்திலே சிறிதும் நிகழாவண்ணம் சாவதானமாகப் பாதுகாத்தல் வேண்டும்.

நல்லொழுக்கமும் பத்தியும் ஆகமவுணர்ச்சியும் உடைய பெரியோர்கள் கோயிலதிகாரிகளாய் இருப்பார்களாயின், அவர்கள், பழிபாவங்களுக்குப் பயந்து, தேவாலயத்தைச் சிரத்தையோடு விதிப்படி நடாத்திச் சமயபத்தியை வளர்ப்பார்கள். இவ்வியல்பில்லாதவர்கள் கோயிலதிகாரிகளாய் இருப்பார்களாயின், அவர்கள் தேவத்திரவியங்களைப் பெரும்பான்மையும் இடம்பத்தின் பொருட்டும், தங்கள் குடும்பப் பாதுகாப்பின்பொருட்டும். பொதுப்பெண்களின் பொருட்டும், வழக்கின் பொருட்டும், அதிகாரிகளை உபசரித்தற் பொருட்டும், அவர்களுக்குக் கொடுக்கும் பரிதானத்தின் பொருட்டுமே செலவு செய்வார்கள். தேவாலயத்தை ஈசுர பத்தி வளர்தற்குச் சிறிதும் இடமாக்காது, காமம் குரோதம் மதம் மாற்சரியம் சண்டை கொலை முதலியவை வளர்தற்கே இடமாக்கிவிடுவார்கள்; அவர்கள் தேவத்திரவியத்தைச் சிறுபான்மை தேவாலயக் கிரியைகளிற் செலவு செய்யினும், அக்கிரியைகள் இவையென்பதும், அவைகளைச் செய்தற்கு யோக்கியராவார் இவர் என்பதும், அவைகளைச் செய்யுமுறைமை இது என்பதும், அம்முறைமைப்படி செய்யாதொழியின் விளையுங் கேடு இது என்பதும், அறியும் அறிவு இல்லாமையினாலே, அவைகளைக்கிரமப்படி செய்விக்கமாட்டார்கள். ஆகையால் அச்செலவினாற் சிறிதும் பயனே இல்லை. ஆதலினாலே தேவாலயங்களை நல்லொழுக்கமும், பத்தியும், ஆகம வுணர்ச்சியுமுடைய பெரியோர்களிடத்தையே ஒப்பித்தல் வேண்டும்.

கோயிலதிகாரிகள் தங்களுக்கு உரிய கடமையிலே தவறினார்களாயின், அரசன் அவர்களைத் தண்டித்து நீக்கி விடல் வேண்டும். அரசன் அப்படிச் செய்யாவிடத்து, உலகத்தார் பலரும் ஒற்றுமையுடையவர்களாய்த் திரண்டு, அரசனுக்கு விண்ணப்பஞ்செய்து, அவ்வதிகாரிகளை நீக்குவிக்க முயலல்வேண்டும். இப்படிச் செய்யாதவர்கள் எரிவாய் நரகத்துக்கு இரையாகி, எண்ணில் காலம் வருந்துவார்கள்.


--------------------------------------------------------------------------------

சத்திரம்

சத்திரமாவது, ஞானிகள் துறவிகள் முதலிய பெரியோர்களுக்கும், தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியில்லாதவர்களாகிய குருடர், முடவர், வியாதியாளர், வயோதிகர், சிறுபிள்ளைகள் என்பவர்களுக்கும், அன்னதானம் நடத்தற்கும், வழிப்போக்கர்கள் தங்குதற்கும் உரிய இடமாம்.

கல்வியறிவும் நற்குண நற்செய்கைகளும் ஈசுரபத்தி அடியார் பத்திகளும் உடையவர்களைச் சத்திரத்துக்கு அதிகாரிகளாக நியோகித்தால், சத்திரம் நன்றாக நடக்கும். பேராசையும், வன்கண்மையும், பொறாமையும், துரபீமானமும் உடையவர்களைச் சத்திரத்துக்கு அதிகாரிகளாக நியோகித்தால், சத்திரம் நன்றாக நடவாது, ஆதலினாலே, சத்திரங் கட்டுவித்தவர் சத்திரத்துக்கு யோக்கியர்களையே அதிகாரிகளாக நியோகித்து, சத்திர தருமங்களைச் சிரத்தையோடு விதிப்படி நடத்துவிக்கவும், காலந்தோறும் தாம் பிறிது வேடந்தரித்துக்கொண்டு சென்று அச்சத்திர தருமங்களை ஆராய்ச்சி செய்யவும் வேண்டும்.

பசிதாகங்கள் எல்லாச் சாதியாருக்கும் உள்ளனவேயாகவும், பிராமணருக்கு அன்னதானஞ் செய்வதே தருமமென்றும், மற்றைச் சாதியாருக்கு அன்னதானஞ் செய்வது தருமமன்றென்றும் நம்மவர்கள் பெரும்பான்மையும் எண்ணுகின்றார்கள். இவ்விபரீத சிந்தனத்தினாலன்றோ, நம்மவர்கள் பெரும்பான்மையும் சத்திரத்திலே பிராமணருக்கு மாத்திரமே அன்னதானஞ் செய்கின்றார்கள்.

வறியவருக்குக் கொடுப்பதே தருமம்; செல்வருக்குக் கொடுப்பது தருமமன்று; "வறியார்க்கொன் றீவதே யீகை" என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார். வறியவருள்ளும், நல்லொழுக்கமுடையவருக்குந் தொழில் செய்வது சீவனஞ்செய்யச் சக்தியுல்லாதவருக்குங் கொடுப்பதே தருமம்; தீயொழுக்கமுடையவருக்குந் தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியுடையவருக்குங் கொடுப்பது தருமமன்று. பிராமணரெல்லாரும் வறியவருமல்லர், மற்றைச் சாதியாரெல்லாருஞ் செல்வருமல்லர்; பிராமணரெல்லாரும் நல்லொழுக்க முடையவருமல்லர்; மற்றைச் சாதியாரெல்லாருந் தீயொழுக்க முடையவருமல்லர்; பிராமணரெல்லாருந் தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியில்லாதவருமல்லர்; மற்றைச் சாதியாரெல்லாருந் தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியுடையவருமல்லர். வறுமை செல்வங்களும், நல்லொழுக்கந் தீயொழுக்கங்களும், தொழில் செய்யுஞ் சத்தியினது இன்மை உண்மைகளும் எல்லாச் சாதியாரிடத்தும் உண்டு. இப்படியிருக்க பிராமணருக்கு மாத்திரங் கொடுப்பது தருமமென்றும் மற்றைச் சாதியாருக்குக் கொடுப்பது தருமமன்றென்றுங் கொள்வது பேதைமையே.

பிராமணர்கள் விளைநிலந் தோட்ட முதலியவை உடையவர்களேயாயினும், வட்டிக்குப் பணம் கொடுத்திருப்பவர்களேயாயினும், வேளாண்மை வாணிகம் இராசசேவை முதலிய தொழில்கள் செய்பவர்களேயாயினும், சத்திரங்களில் நம்மவர்கள் அவர்களுக்கே மிக்க உபசாரத்தோடு அன்னங் கொடுக்கின்றார்கள். மற்றைச் சாதியார்களோ வறியவர்களாயும் தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியில்லாதவர்களாயும் இருப்பினும், அவர்கள் பசியினாலே மிக வருந்திச் சத்திரத்து வாயிலிலே வந்தபோது, நம்மவர்கள் அவர்களுக்குக் கஞ்சியாயினுங் கொடாது, அவர்களை வன்கண்மையோடும் துர்வார்த்தைகளினாலே வைதும், பீடர் பிடித்துத் தள்ளியும் ஓட்டி விடுகின்றார்கள்.

ஈசுரத் துரோகம், சந்தியாவந்தனம் செய்யாமை, கொலை, களவு, மதுபானம், மாமிசபஷணம், வியபிசாரம், பொய்ச்சன்று சொல்லல், பொய்வழக்குப் பேசல், சூதாடல் முதலிய பாவங்களையே செய்பவர்களாயினும், பிராமண வருணத்தார்களேயாயின், சத்திரங்களில், அவர்களுக்கு நெய், தயிர், பாயசம், வடை முதலியவற்றோடு விலாப் புடைக்க அன்னங் கிடைக்கின்றது. இப்பாவங்கள் இல்லாதவர்களாய் அறிவொழுக்கங்களினாற் சிறப்புற்றவர்களேயாயினும், பிராமணரல்லாத மற்றைச் சாதியார்களாயினும், பிராமணரல்லாத மற்றைச் சாதியார்களாயின், அவர்களுக்குச் சத்திரத்திலே ரசமுஞ் சாதமுமாயினும் கிடைப்பது அரிதரிது.

சிவதருமோத்தரம்

புலையரே யெனினு மீசன்பொலங் கழலடியிற்புந்தி
நிலையரேலவர்க்குப் பூசை நிகழ்த்துத னெறிய

மின்னூல் வடிவம் : கா. திருஞான சம்பந்தன் (2008)
அண்மைய மாற்றம் : 22.05.2008