நூலகம் திட்டம் (நூலக எண்: 1651)

 
 

மின்னூலாக்கம்: கா. திருஞான சம்பந்தன்

 
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
     
  பெரிய புராண சூசனம்  
 

ஆறுமுக நாவலர்

 

பெரியபுராணம்
என்று வழங்குகின்ற
திருத்தொண்டர் புராணம் சூசனம்

ஆறுமுக நாவலர்

--------------------------------------------------------------------------------

1.உபோற்காதம்

அநாதி மல முத்த பதியாகிய பரசிவன் தமக்கு ஒரு பிரயோசனமுங் குறியாது அநாதிமல பெத்தராகிய ஆன்மாக்களுக்கு மலநீக்கமும் சிவத்துவ விளக்கமும் சித்திக்கும் பொருட்டு, பெருங்கருணையினாலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியம் பண்ணுவர். அவற்றுள், படைத்தலாவது சென்மமுடைய பிராணிகளின் சமுகமாயும், போகோப யோகிகளாகிய பரிகரங்களோடு இயைந்ததாயும் இருக்கின்ற சகத்தை அந்த வந்த நானாவித யோனிகளில் உற்பவிப்பித்தல். காத்தலாவது தனதிச்சையாற் றடுக்கப்பட்ட சர்வலோகத்தையும் தத்தம் விடயத்தில் நியோகிக்க நிறுத்துதல், அழித்தலாவது சகத்தைச் சகத்தியோனியில் ஒடுக்கல், மறைத்தலாவது தத்தம் வாசனைக்குத் தக்க போகத்தின் வழுவாதிருக்கச் செய்தல், அருளலாவது தீக்ஷாகிருத்தியமாகிய அனுக்கிரகம்.

இப்பஞ்சகிருத்திய கருத்தாவாகிய பதிக்கு உரிய முக்கிய குணங்களாவன சருவஞ்ஞதை, திருத்தி, அநாதி போதம், சுவதந்திரதை, அலுப்தசத்தி, அநந்தசத்தி என்னும் ஆறுமாம். இவை தமிழின் முறையே முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கை யுணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல் எனப்படும். எல்லாப் பொருள்களையும் புலப்படக்காணும் அறிவு உள்வழியல்லது எல்லாத் தொழிலும் இயற்றுதல் கூடாமையாயின் முற்றறிவும், தமதனுபவத்தின் பொருட்டுப் பிறிதொன்றனை வேண்டிற் பரிபூரணத்தன்மை யெடுபட்டுக் கடவுட்டன்மை கெட்டுப் போதலின் வரம்பிலின்பமும், முற்றறிவுடையவழியும் அஃதநாதியன்றி அவாந்தரத்தில் வந்ததேற் காரண பூர்வகமாய் வந்ததெனின் வரம்பின்மைக் குற்றமும், காரணமின்றி வந்ததெனிற் காரண காரிய நியமமின்மைக் குற்றமும் அடுக்குமாதலின் இயற்கை யுணர்வும், பிறர் வயமுண்டேற் பாசத்தடையுமுளதாகி வேண்டிய தெய்தாமையும் வேண்டாத தெய்தலுமாகிய குற்றம் பற்றுதலின் தன்வயமும், ஆற்றல் குன்றுமாயின் எக்காலத்தும் எத்தேசத்தும் இளைப்பின்றித் தொழிலியற்றுதல் ஏலாமையிற் குறைவிலாற்றலும், அவ்வாற்றல் வரம்புப்பட்ட பரிமாணமுடையதாயின் வரம்புப்படாத தொழிலியற்றல் கூடாமையின் வரம்பிலாற்றலுமாகிய இவ்வறு குணங்களும் பதிக்கு இன்றியமையாமை காண்க. அப்பதியானவர், அநாதியே உள்ள முற்றறிவு முற்றுத்தொழிலாகிய சிவத்துவம் இயைதலாற்றான், சிவத்துவம் என்னும் அதிசுத்தம் இயைதலாற்றான் ஸி என்னுந்தாது கிடத்தலெனப் பொருள்படுதலின் இறுதிக்காலத்து உலகமெல்லாம் தம்மிடத்து ஒடுங்கிக் கிடத்தலாற்றான், சற்சனங்களுடைய மனங்கள் தம்பாற் கிடத்தலாற்றான், ஸி என்னுந் தாது மெலிவித்தலெனவும் கூருவித்தலெனவும் பொருள்படு மாதலான் ஆன்மாக்களின் பாச சத்தியை மெலிவித்துச் சிற்சத்தியைக் கூருவித்தலாற்றான், காந்திப்பொருடரும் வஸி என்னுஞ்சொல் வர்ண விபரியயமுறுதலாற்றான், சிவனெனப்படுவர்.

அச்சிவனது ஆஞ்ஞையினாலே அவ்வான்மாக்கள் கர்மானுசாரமாக நால்வகைத் தோற்றமும், எழுவகைப் பிறப்பும், எண்பத்துநான்கு நூறாயிர யோனிபேதமும் உடையராய்ப் பிறந்திறந்து உழலுங்காலத்திலே, முன்னர்ப் பெளத்தம் முதலிய புறச்சமயங்களிலே நின்று அவ்வச் சமய நூல்களில் விதிப்படி ஒழுகுவர்கள். அப்புறச்சமயிகளுக்கு, அவரவராலே சொல்லப்பட்ட கர்த்திருகாரணங்களை அதிஷ்டித்துக் கொண்டு அந்தக் கர்த்திருகாரண சொரூபியாய் இருந்து, சிவனே அருள் செய்வர். அது "அறிவினான் மிக்க வறுவகைச் சமயத் தவ்வவர்க் கங்கே யாரருள் புரிந்து - வெறியுமாகட விலங்கையர் கோனைத் துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் - குறிகொள் பாடலினின்னிசை கேட்டுக் கோலவாளொடு நாளது கொடுத்த - செறிவு கண்டு நின்றிரு வடியடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே" என்னுஞ் சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்தாலும் "அறுவகைச் சமயத்தோர்க்கு மவ்வவர் பொருளாய் வேறாங் - குறியது வுடைத்தாய்வேதா கமங்களின் குறியி றந்தங் - கறிவினி லருளான் மன்னி பொருளாய் வேறாங் - குறியது வுடைத்தாய்வேதா கமங்களின் குறியி றந்தங் - கறிவினி லருளான் மன்னி யம்மையோ டப்பனாகிச் - செறிவொழியாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம்" எனவும் "யாதொரு தெய்வங் கொண்டீரத் தெய்வ மாகியாங்கே - மாதொரு பாக னார் தாம் வருவர்மற் றத்தெய்வங்கள் - வேதனைப் படுமிறக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யு மாதலா லிவையிலாதான றிருந்தருள் செய்வனன்றே" எனவும் வருஞ் சிவஞான சித்தித் திருவிருத்தங்களாலும் அறிக.

புறச் சமயங்களிலே நின்று செய்த புண்ணியங்களினாலே, பின் வைதிக மார்க்கத்திலே புகுந்து, வேதத்திலும் அதன் வழிநூலாகிய மிருதி முதலியவற்றிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்துக்கும் பிரமசரிய முதலிய நான்காச்சிரமத்துக்கும் விதித்த பசு புண்ணியங்களைச் செய்து, சுவர்க்கத்திற் சென்று போகந்துய்த்து, மீண்டு பூமியிலே பிறப்பார்கள். அவர்கள் முன்செய்த வைதிக புண்ணிய மிகுதியினாலே சைவாகத்தால் உணர்த்தப்படும் சைவத்திற் பிரவேசித்து, சரியை, கிரியை யோகங்களை முறையே அநுட்டித்து அவற்றின் பலங்களாகிய சாலோக்கிய சாமீப்பிய சாரூப்பிய பதங்களைப் பெறுவார்கள். அவர்களுள், போகத்திலே வைராக்கியம் உற்றவர்கள் திரும்பப் பூமியில் வாராது சிவானுக் கிரகத்தினாலே பரமுத்திமான்க ளாவார்கள். போகத்திலே வைராக்கியம் உறாதவர்கள் திரும்பப் பூமியிலே பிறந்து சிவஞானத்தைப் பொருந்தி, பரமுத்தியாகிய சிவ சாயுச்சியத்தைப் பெறுவார்கள். இதற்குப் பிரமாணம், சிவநெறிப் பிரகாசம். "இப்படி யவத்தை யோரைந் தெய்தியே பிறப்பிறப்பாம் - வெப்புறுங் காலந் தன்னில் வேதத்தின் வழிய தன்றிப் - பொய்ப் பொருட் சமயந் தன்னிற் புரிந்திடுந் தவத்தினாலே - தப்பிலா வேதஞ் சொன்ன சமயத்தைச் சார்ந்து நின்றே. வன்னமோர் நான்கினுக்கு மாசிலாச் சிரமங்கட்குஞ் - சொன்னவா றிடறிலாதே செய்துபின் சுவர்க்கந் துய்த்துப் - பின்னர்மா நிலத்தின் வந்து சிவதன்மை பெரிதென் றெண்ணி - முன்னையா கமங்கள் சொன்ன படிதவ முயல்வமென்றே. எண்ணியோர் குருவைச் சேர்ந்தே யெழில்பெறு சமய தீக்கை - நண்ணியே சரியை தன்னை நவையற வியற்றியத்தாற் - புண்ணிய சிவலோ கத்தைப் பொருந்தியங் குள்ள போக - மண்ணலா ரருளப் பெற்ற தருந்திமே லவனிமீதே, உதித்தருள்செய் குருவாலே விசேட தீக்கை யுற்றுணர்ந்து சிவபூசை யூனமறச் செய்தே - துதித்திடுநற் சாமீபஞ் சிவன்பாற் பெற்றுத் துய்த்திடுவர் பெரும்போகந் தொலைந்தகாலை - நதிச்சடையா னருளாலே புவியினண்ணி நாடரிய சிவயோக மியற்றி நன்றாய்த் - திதிக்கொழிவாங் காலமுறு மளவுமந்தச் சிவனுடைய சாரூபஞ் சேர்ந்துநின்றே. ஆகத்தி லாளசயிலராகிச் சற்று மளவிறந்து மேன்மேலு மடைவதான - போகத்திற் பற்றிலரே யாகிலுல கெல்லாம் பொன்றிடுங்கா விவர்தாமும் பொருந்திடுவர் முத்தி - மோகத்தைத் தவிராதோர் பினைச்சிருட்டி கால முளைத் துலகிற் குருவாலே முத்திபெற மலத்தின் - பாகத்தை யடைந்ததனாற் சத்தி பதிந்திடவே பரஞானத்தான் முத்தி பலிக்குமவர் பாலே" எ-ம். சிவஞான சித்தியார். "தானமியா கந்தீர்த்த மாச்சிரமந் தவங்கள் சாந்திவிர தங்கன்ம யோகங்கள் சரித்தோ - ரீனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப் பளவின் மீள்வ ரீசனியோ கக்கிரியா சரியையினி னின்றோ - ரூனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லா மொடுங்கும் போதரன் முனிலா தொழியினுற்பவித்து - ஞானநெறி யடைந்தடைவர் சிவனையங்கு நாதனே முன்னிற்கினணுகுவர் நற்றாளே" எ-ம் கோயிற் புராணம். "சுருதிவழி யொழுகினர்கள் சுவர்க்கத்தா ராகமநூற் - சரியை கியா யோகர் சாலோக சாமீப - வுருவுவமை யினராக வுதவுது மெம்முடனாகும் - பெருகியஞா னிகளெம்மைப் பெற்றார் போக்கற்றாரே" எ-ம் சிவதருமோத்தரம். "இருவினை யுணர்ந்த புத்த ரவர்முத லிகலும்வாத - தெரிசன மனைத்துஞ் சேர்ந்தார் சிவசமயத்தைச் சேர்வார் - பொருவிலி புகன்ற வாக்கிற் கருமநன் னெறியும் புக்கே - விரவுவர் ஞானயோகம் விடுவர்மெய் யடைவர் மெய்யே, எடுத்ததோ ராக்கைதன்னி லிருண்மல சத்தி தன்னைத் - தடுத்தருள் சைவ நூலின் சாதன மதனைத் தள்ளி - விடுத்துவீ றற்ற நூலின் சாதனம் விரும்பு வார்முன் - னடுத்தவா ரமுதம் விட்டுப் புற்கையா தரிப்பா ரன்றே" எ-ம் வருமாறு காண்க.

இதுகாறுங் கூறியவாற்றால், சைவசித்தாந்தத்தன்றிப் பரமுத்தி சித்தியாது என்பதும், அப்பரமுத்திக்குச் சாதனம் சிவஞானமே என்பதும், அச்சிவஞானத்தைப் பயப்பன சரியை முதலிய மூன்றுமே என்பதும், வேதத்துள் விதித்த வேள்வி முதலியன வெல்லாம் அநித்தியமாகிய காமியங்களைப் பயப்பன என்பதும் பெறப்பட்டன. வேள்வி முதலியன ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றி, தீவினை போல அது நிகழவொட்டாது தடை செய்து நிற்றலும் உடையனவேயாம். ஆதலால், தீவினைகள் இருப்பு விலங்கும், வேதத்துள் விதித்த வேள்வி முதலிய தருமங்களின் பயனாகிய இன்பம் முன் பசித்து உண்டு. பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியால் வரும் இன்பத்தைப் போலும். அவ்வேள்வி முதலியன போல அனுபவ மாத்திரையாற் கெடுதலின்றி மேன்மேல் முறுகி வளர்வனவாகிய சரியை கிரியை யோகங்களால் எய்தப்படும் சிவஞானம் பசித்து உண்டு பின்னும் பசித்தலில்லாத தேவர்களுக்கு அவ்வமுத வுண்டியாலாய பயனைப் போலும் அவ்வமுத வுண்டி நரைதிரை மூப்பின்றி நிலைபெறுதலாகிய பெரும்பயனைத் தருதன்மாத்திரையே யன்றிப் பசிதீர்த்தலாகிய அவாந்தரப் பயனையுந் தருதல் போல, சரியை முதலியனவும் சிவஞானத்தைப் பயத்தல் மாத்திரையே யன்றித் தத்தம் பதமுத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம்.

மேற்கூறிப்போந்த சரியை முதலிய நான்கு பாதங்களுள்ளும், சரியை கிரியை என்னும் இரண்டும் கூடி, சிவத்தருமமென ஒருபெயரான் வழங்கவும் பெறும், அந்தச் சிவதர்மம் மெல்வினை வல்வினை என இருவகைப்படும். அவற்றுள் மெல்வினையாவது சைவாகமத்தின் சரியை கிரியைகளுக்கு விதித்தவழி ஒழுகும் விதி மார்க்கம். வல்வினையாவது அவ்விதிமார்க்கத்தில் வழுவாது நின்று அந்நிலையின் முதிர்ச்சியினாலே பின்னுண்டாகிய பிறப்பின்கண்ணே சிவனிடத்தில் எல்லையன்றி எழுந்து அதிதீவிரமாய் முறுகி வளரும் அன்பின் பெருக்கத்தினாலே உலகநெறி கடந்து ஒழுகும்பத்தி மார்க்கம் இதற்குப்பிரமாணம், திருக்களிற்றுப்படியார். "நல்லசிவ தன்மத்தானல்லசிவ யோகத்தா - னல்லசிவ ஞானத்தா னானழிய - வல்லதனா - லாரேனு மன்புசெயினங்கே தலைப்படுங்கா - ணாரேனுங் காணா வரன்" எ-ம். "மெல்வினையேயென்ன வியனுலகி னார்க்கரிய - வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் - சொல்லிற் - சிவதன்ம மாமதனிற் சென்றதிலே செல்வாய் - பவகன்ம நீங்கும் படி" எ-ம். "ஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே தீதிலறம்பலவுஞ் செய்வனவும் - வேதியனே - நல்வினையாமென்று நமக்குமெளி தானவற்றை - மெல்வினையே யென்றது நாம் வேறு" எ-ம். "வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள் - கரங்களினா லன்றுகறி யாக - விரங்காதே - கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை - வல்வினையே யென்றதுநா மற்று." எ-ம். "பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே - தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் சேதிப்பக் - கண்டீசர் தாமாம் பரிசளத்தார் கண்டாயே - சண்டீசர் தஞ்செயலாற்றான்" எ-ம், "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டியறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதேநாம்" வரும்.

இங்ஙனங் கூறிய சரியை முதலிய நான்கு பாதங்களிலே நின்று முத்திபெற்ற மெய்யடியார்களுட் சிறந்த தனியடியார் அறுபத்துமூவரும் தொகையடியார் ஒன்பதின்மருமாகிய திருத்தொண்டர் எழுபத்திருவருடைய சரித்திரத்தை கனகசபையின் கண்ணே ஆனந்த நிருத்தஞ் செய்தருளும் கருணாநிதியாகிய சிவனது திருவருளினாலே பசுகரண மெல்லாஞ் சிவகரணமாய் நிகழப் பெற்ற சிவாநுபூதிமானாகிய குனறத்தூர்ச் சேக்கிழார் நாயனார், தமிழுலகம் உய்தற் பொருட்டு, திருத்தொண்டர் புராணம் எனப் பெயர் தந்து விரித்தருளிச்செய்தார். இப்புராணம் தன்னை ஓதல் கேட்டல் செய்வார்க்குச் சிவனடியார்களது அத்தியற்புத பத்தித்திறத்தையும் அவர்கட்கு எளிவந்த சிவனது அத்தியற் புதப் பிரசாதத்தையும் உணர்த்தி, அவர் நெஞ்சை அழலிடைப்பட்ட மெழுகுபோலக் கசிந்துருகச் செய்தலிற் றனக்கு உயர்வொப்பின்றி விளங்கும் பெருமையுடைமை பற்றிப் பெரியபுராணம் எனவும் பெயர் பெற்றது. இப்பெரியபுராணம் எனவும் பெயர் பெற்றது. இப்பெரியபுராணம் சைவ சித்தாந்த நூற்கருத்தோடு மாறுபடாத வேதமுடி வாகிய உப நிஷத்துக்களின் தாற்பரியங்களை உள்ளடக்கிய தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் நான்கனோடு கூட்டி, கல்வியறிவொழுக்கங்களான் ஆன்ற மகத்துக்களாலே தொன்று தொட்டு அருட்பா என வழங்கப்படும்.

பிரஞ்ஞையில்லாத சில பிராமணர் இப்பெரியபுராணத்துக்கு அப்பிராமாணியம் பேசுவர், இப்புராணத்துக்கு தில்லைவாழந்தணர் மடபதிகள் முதலிய எண்ணிறந்த அடியார்கள் கேட்கச் சிதம்பர சபாநாதர் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுத்தருளினார் எனவும் இது முற்றிய அநபாயசோழ மகாராஜாவுக்கு, சோழனே சேக்கிழார் நாம் "உலமெலாம்" என்று அடி எடுத்துக் கொடுக்க, நம்முடைய தொண்டர்களது அடிமைத்திறத்தை விரித்துப் புராணம் பாடி முடித்தான். நீ அதைக் கேள், என் யாவரும் கேட்ப அருளிச் செய்தார் எனவும் தில்லை வாழந்தணர்களுள் ஒருவராகிச் சிவானுபூதிமான் எனப் பிரசித்தி பெற்ற உமாபதிசிவாசாரியார் சேக்கிழார் புராணத்துட் கூறுதலானும், பரமசிவன் உமாதேவிக்குச் சதுர்யுக தருமங்களுங் கூறிய பின்னர், இனிக் கலியுகத்திலே அறுபத்துமூன்று தொண்டர்கள் பிறந்து தம்மேற் பத்தி செய்வர்கள் எனவும், அவர்கள் சரித்திரத்தை உபமன்னியு முனிவர் பத்தர் குழாங்கட்குக் கூறுவர் எனவும் கூறி, அச்சரித்திரத்தை முன்னுரைத்தமை பரமேதிகாசமாகிய சிவரகசியத்திலே நவமாம்மிசத்திற் பெறப்படுதலானும், சங்கராச்சாரியர் இப்பெரிய புராணத்துட் கூறப்படும் அறுபத்து மூவருள் சிலரது அடிமைத்திறத்தை "வழியிலும் இடப்பட்ட செருப்பானது பசுபதியின் அங்கத்துக்குக் கூர்ச்சமாகின்றது; வாய்நிறைந்த நீரால் நனைத்தல் புரப்பவருக்குத் திவ்வியாபிஷேகமாகின்றது; சற்றே புசிக்கப்பட்ட மாமிச சேஷத்தின் கவளமானது திவ்வியோபகார மாகின்றது; வனசரன் பத்தச் சேஷ்டனாகின்றான். பத்தி எதைச் செய்கின்றிலது!" எனச் சிவானந்தலகரியினும், "கீரீசரே, மனைவிக்கும் புதல்வனுக்கும் தந்தைக்கும் துரோகஞ் செய்தவர்களுக்குப் பிரசன்னராயினீர். நானோ பிறருக்குத் துரோகஞ் சிறிதும் செய்யவல்லனல்லன். என்னிடத்து நீர் எவ்வாறு பிரீதி செய்வீர்! அறியேன்" எனச் சிவபுசங்கத்திலும் சிறப்பித்துரைத்தலானும், அப்பிராமணர் கூற்றுத் தூரம்போய்த் துச்சமாய் விடும்.

இப்பெரியபுராணமானது, தன்னை உணர்ந்தவர்களுக்கன்றி மற்றவர்களுக்குத் தமிழ்வேதமாகிய தேவாரத்தின் வரலாறும் மகிமையும் ஓரோவிடங்களில் அதன் பொருளும் விளங்குதல் கூடாமையானும், தன்னை அத்தியந்த ஆசையுடன் ஓதுவோர்க்கும் கேட்போர்க்கும் பத்திசைவராக்கிய ஞானங்களைப் பயக்குங் கருவியாய் இருத்தலானும், சிவஞான சித்தியார், திருக்களிற்றுப்படியார் முதலிய சைவசித்தாந்த நூல்களினும் உரைகளினும் சிவானுபவத்துகுத்தான் கூறும் நாயன்மார் பலருடைய சரித்திரங்களில் உதாரணங் காட்டுதலானும், சர்வாதிகாரிகளாகிய ஆதிசைவருக்கும் பிறருக்கும்தான் அதிகரித்த தனியடியார் அறுபத்துமூவரும் தொகையடியார் ஒன்பதின்மரும் ஆகிய திருத்தொண்டர் எழுபத்திருவருடைய சரித்திரங்களையும் உணர்ந்து அவர்கள் மகிமையைத் தெளிந்தாலன்றிச் சிவாலயங்கள் எங்கும் முறையே அவர்களுக்குப் பிரதிட்டை பூசை திருவிழாக்கள் செய்தற் கண்ணும் அவைகளைச் சேவித்தற் கண்ணும் ஊக்கமும் அன்பும் நிகழாமையானும், சைவர்கள் யாவரும் ஒருதலையாகக் கற்றுணரவேண்டும் நூலாம்.


--------------------------------------------------------------------------------

2.சூசனம்

1. சிவனது பரத்துவம்

சிவன் பிரமாண்டத்துள்ளே கைலாச நிலயராகிய ஸ்ரீகண்ட சரீர சரீரியாய் இருந்து, பிரமவிட்டுணு முதலியோர்க்கும் சுவேதர் உபமன்னியு முதலியோர்க்கும் கிருஷ்ணர் அர்ச்சுனர் முதலியோர்க்கும் அறுபத்துமூவர் முதலியோர்க்கும் நிக்கிரகானுக்கிரகங்களைப் பண்ணும் இயல்புடையோர் ஆதலானும், அறுபத்துமூவர் முதலியயோர்க்கும் நிக்கிரகானுக்கிரகங்களைப் பண்ணும் இயல்புடையோர் ஆதலானும், அறுபத்துமூவர் முதலிய திருத்தொண்டரது சரித்திரத்தை விரித்துரைக்கப்புகுந்த ஆசிரியர் முன்னர் அவ்வறுபத்துமூவர்க்கு அருள் செய்த சிவன் கைலாசத்தில் பிரம விட்டுணு முதலியோர் சேவிப்ப வீற்றிருந்தருளும் பெருஞ்சிறப்பைக் கூறுதல் முறைமை யாதலானும், அதனை ஈண்டுச் சுருக்கிக் கூறி, அங்ஙனங் கூறுமுகத்தாற் சிவனே விச்சுவாதிக்கும் விச்சுவசேவியருமாம் என்பது குறிப்பித்தார். பல பிரமாணங்களாலே சிவனே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாமென்பது ஐயமறத் துணிந்த வழியன்றி, அவர்பாற் பத்தி எய்தல் கூடாமையானும், ஒரோவழி எய்தினும், வைணவர் முதலியோர் மறுக்கும்வழி மயக்கமெய்துதல் பற்றி அது குன்றுமாதலானும், அத்ப்பிரபலப் பிரமாணமாகிய அதர்வசிகை முதலிய சுருதிகளால் சிவனே விச்சுவாதிக்கும் விச்சுவ சேவியருமாம் என்பது சிறிது காண்பிப்பாம்.

அதர்வசிகையிலே "அந்தத் தியானம் யாது? அன்றியும் தியானிப்போன் யாவன்? தியானிக்கற்பாலரும் யாவர்?" என்ற உபக்கிரமத்தில் இருந்த வினாக்களுக்கு இசையத் தியானத்தையும் தியானிப்போனையும் நிரூபணஞ் செய்த பின்னர், தியானிக்கற்பாலரை நிச்சயித்தற்குச் சொல்லுமாறு, மிகவுந் "தியானிக்கற்பாலராகிய ஈசானரைத் தியானிக்க, அந்தப் பிரம விஷ்ணு ருத்திரேந்திரர்களாகிய இவரெல்லாம் உற்பத்தியாகின்றனர். எல்லா இந்திரியங்களும் பூதங்களுடனே கூட (உற்பத்தியாகின்றன,) காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோருமாகியவர் (உற்பவித்தல்) இன்று, காரணமும் சருவை சுவரிய சம்பன்னரும் சருவேசுவரரும் சம்புவுமாகியவரே ஆகாச மத்தியத்திலே தியானிக்கற் பாலர்" என்பது தொடங்கி, "மற்றதெல்லாம் விட்டுச் சுகத்தைச் செய்பவராகிய சிவனொருவரே தியானிக்கற்பாலர். அதர்வசிகை முற்றிற்று" என்பது வரையும், இங்கே யோக ரூடியினாற் பரமசிவனிலே வர்த்திக்கும் ஈசானரென்னுஞ் சொல் யோகத்தினாற் சுவாபாவிக நிரதிசயைசுவரிய பரத்தன்மையுடையரென்று பொருள்படுதலானும், ரூடியினாலே பரமசிவனுக்குப் பெயராதலானும், அனைத்தினும் மேலாகிய பயன் வேண்டினோராகிய உயர்ந்தோரால் பரமசிவன் தியானிக்கற் பாலரென்னுங் கருத்துப் பற்றி ஈசான சத்தத்தால் விசேடிய நிர்த்தேசம் பண்ணப்பட்டது "மிகவுந் தியானிக்கற்பாலராகிய" என்று தியானிக்கப்பட தக்கவரென வற்புறுத்தி அதிகமாகத் துதித்தது ஈசானரன்றி மற்றையோர் இப்பெற்றிப் பட்டவ அன்றென்னும் உறுதியைத் தொனிப்பித்தற்கு, தேவ மனுஷாதி ரூபமாகிய சகலப் பிரபஞ்சத்தினும் பிரமா முதலிய நால்வருக்கும் மிக்க தலைமை கூறி, அவர்களது ஐசுவரியங்களும் வரையறைப்பட்டவைகளென்று உணர்தற்கு "பிரம விஷ்ணு" என்பது முதல் "பூதங்களூடனே கூட" என்பது வரையும் பூதம், இந்திரியம் முதலிய வற்றிற்குச் சமமாக அவர்களுக்கு உற்பத்தியுடையை காட்டப்பட்டது. இவ்வுற்பத்தியுடைமை பரமசிவனுக்கு உண்டாயின், அவருக்கும் அது போலத் தியானிக்கப் பாலராந் தன்மையின்றாகுமென்று ஆசங்கித்து "காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோருமாகியவர் உற்பவித்தலின்று" என்று சொல்லப்பட்டது. பிரமாதிகளுக்கு உற்பத்தி கூறுஞ் சொல்லாற்றலால் அவர்களுக்கு அருந்தா பத்தியாற் பெறப்பட்ட காரணம் எதுவோ அந்த ரூபமாகிக் காரணங்களாகிய பிரமா விஷ்ணு ருத்திரர்களையும் மந்திரோப நிடதப் பிரசித்தமான காலமுதலியவற்றையும் படைத்தோராகியும் ஆதிசிருட்டியைச் சங்கற்பித்தோராகியும் இருக்கும் இப்பெற்றிப்பட்ட ஈசானர் யாண்டாயினும் உற்பவித்தல் இன்று என்பது இதன் பொருளாம். இதனால் பிரமாதிகட்குக் காரணம் யாது அது பிறத்தலின்று என்ற இவ்வளவு பொருளுமே பிரசித்தம். ஈசான ரென்றது இல்லையெனின்; அங்ஙனமாயினும், ஈசானருக்குத் தியேயத்துவம் விதித்துப் பிரமாதிகட்குத் தியேயத்துவம் பிரித்து நீக்கும் பொருட்டு அவர்களிடத்திற்றோஷந் தோற்றுவித்தபின்பு, அந்தத் தோஷம் ஈசானருக்கும் உண்டாயின் தியேயத்துவம் இன்றாகுமென்று அவசரத்திற் போந்த சங்கை யகற்றற்கு அவருக்கே அத்தோஷமின்மை கூறவேண்டுதல் அவசியமாதலின், ஆண்டு ஈசானரென வருவித்துப் பொருளுரைப்பதே சால்பு, அங்கே ஆகாசமத்தியத்திலே என்றது உபாசனா ஸ்தானம் கூறியவாறு, அதற்குப் பரமாகாசமாகிய கைலாசமென்னும் பெயருடைய பரசிவலோகமென்பது கருத்து, அதனால் இருதயகமலம் இரவிவிம்ப முதலிய எவ்வெவ் விடங்களிற் சிவனைத் தியானிக்கினும், அவ்வவ்விடங்கள் அனைத்தினும் சோதி மயமாகிய கைலாசத்தை விபாவித்து, அதன் மத்தியத்தில் இருப்பவராகச் சிவனைத் தியானிக்க என்று உணர்த்தப்பட்டது; சருவேசுவரரென்றது சிவனது நாமமாகக் கூறப்பட்டது; "ஓங்காரமாகிய சருவேசுவரரைத் துவாதசாந்தத்திலே (உபாசிக்க)" என்று தாபநீயோப நிடதத்திற் பிரயோகித்தலாலும், புராணங்களில் வழங்கலாலும், அவருக்கு அப்பெயருண்மையாலென்க. அதுவன்றி, சருவைசுவரிய முடையவரென்னும் பொருள்படக் கூறிற் புனருத்தமாதலின், அற்றன்றென்க. அன்றியும், இரவி கிரணத்தால் அனுக்கிரகிக்கப்பட்ட கமலங்களே கமலங்களாகும் என்பதனுள் இரண்டாங் கமலபதம் கமலகுண சமூக மென்னும் பொருள்படுமாறுபோல, முன்னையது ரூடியாகவும் பின்னையது யோகரூடியாகவும் பொருள் பட்டு, சம்பு வானவர் உற்பத்தியின்றிப் பிரமாதிகட்குங் காரணமாயிருத்தன் மாத்திரத்தால் அபரிச்சின்னைசுவரியரென்றதன்று. பின்னும் அசாதாரணமாகிய சருவேசுவர சத்தத்தாற் கூறப்படுதலானும் சருவேசுவரரென்றதென்று கருத்தாகி உபபத்தியுடைய அனுவாதமாகக்கூறியதெனினும் அமையும், இந்த அருத்தத்தையே ஆதரவினாலே கண்டோக்தியினாலும் "சிவனொருவரே தியானிக்கற்பாலர்" என்று சுருதி விளக்குகின்றது. அங்ஙனம் அச்சுருதியின் பொருளை உபவிருங்கணங்கள் தாமே தெளிவுற விளக்குகின்றன. அவற்றுள், சைவபுராணத்திலே சிவனது சர்வோத்கருஷ நிச்சயப்பிரகரணத்திலே (1) "எவரிடத்திலிருந்து பிரம விஷ்ணுருத்திரேந்திர பூர்வமான இஃதனைத்தும் சகலபூதேந்திரியங்களுடனேகூட ஆதியிற்பிறந்தன" (2) காரணங்களைப் படைத்தோரும் கருதினோரும் பரமகாரணமுமாகிய எவர்யாண்டாயினும் எப்போதாயினும் பிறிதொன்றினின்று பிறக்கின்றிலர்" (3) "சருவைசுவரிய பரிபூரணராகியும் தாமே பெயரினாற் சருவேசுவரராகியும் சம்புவாகியுமிருக்கிற அவரே ஆகாசமத்தியத்திலிருப்பவராக முமுட்சுக்களாலே தியானிக்கற்பாலர்" என கூறப்பட்டது. இங்கே "பிரம விஷ்ணு" என்பது முதல் "பூதங்களுடனேகூட" என்பது வரையுமுள்ள சுருதியின் பொருள் முதற்சுலோகத்திற் காட்டப்பட்டது. இதில் "எவரிடத்திலிருந்து" என்னும் நிர்த்தேசவசனமும் இரண்டாஞ்சுலோகத்திலே "எவர்" என்பதும் மூன்றாஞ்சுலோகத்தில் "அவர்" என்னும் பிரதி நிர்த்தேசத்தைக் கொண்டு முடிதலால், பிரமாதிகள் சிவனிற்றோன்றியோர் என்பது தெளிவுறவுணர்த்தப்பட்டது. மூன்றாஞ்சுலோகத்திலே "பெயரினாற் சருவேசுவரர்" என்று அஃது அவர்க்குப் பெயராமாரு காட்டப்பட்டது. அரிவம்மிசம் பிரமாண்ட புராணம் முதலியவற்றினும் இவ்வாறே காட்டப்பட்டது. அங்ஙனமாகச் சுருதியிற்றானே பிரமா முதலிய சகல தேவதைகளினும் வேறுபிரித்துச் சிவனுக்கே சருவேசுவரத்துவம் வியவஸ்த்தாபித்திருக்கவும், அவரினும் அதிகமாகிய பிற தெய்வம் உண்டென்று கற்பித்தல் பேதைமையேயாம்.

அற்றேல், "இரணிய கர்ப்பன் ஆதியிலுள்ளவன்" என்றும் "இந்திரன் சகலத்திலும் மேலான தேவன்" என்றும் "அக்கினியே தேவரனைவர்க்கும் முன்னே தலைவன்" என்றும் இத்தொடக்கத்துச் சுருதிகளிலே பிறதேவதைகட்கும் வரையறைப்படாத தலைமையுண்டென்று கூறியதேதெனின், அது கூறுதும், அநேகருக்கு விகற்பித்துக் கூறினமையால், சருவேசுவரத்துவம் சம்பவியாது; வஸ்துவில் விகற்பங் கூடாமையால், ஒருங்கு சம்பவித்தலும் இன்று; ஒருவர்க்கொருவர் தலைவராதல் உண்மை வருதலால், விகற்ப பேதத்தினாலே சகலருடைய தலைமையும் கால பரிச்சின்னமாதலின் ஒருவருக்கும் தலைமையின்றெனலுங் கூடாது; தோஷம் உண்மையால், ஆதலால், அப்பெற்றிப்பட்ட வசனங்களுட் சில வசனங்கள் பிரதீதமாகிய பொருளுடையன என்றும், சில பிறிதோராற்றாற் பெறப்படும் பொருளுடையன என்றும் எல்லாரும் உடன்பட்டுக் கொள்ளல் வேண்டும். அங்கே இவை இவை பிரதீதமாகிய பொருளுடையன ஏனையவை பிறபொருளுடையன என்று நமது புத்தியாற் கற்பிக்கப்பட்ட நியாயங்களால் வியவஸ்தாபிப்பதிலும், உபவிருங்கணங்கட்கு அனுசாரமாக வியவஸ்தாபித்தலே மேன்மை; ஆன்மாக்களது புத்தியானது நிச்சயமில்லா நிலைமைத்தாதலின் அதனால் ஊக்கிக்கப்பட்ட நியாயங்களினாலே நிச்சயம் சித்தி பெறாமையானும், "வேதமானது அற்பக்கல்வியுடையானுக்கு "என்னையிவன் கடப்பான்" என்று அஞ்சுகின்றது. இதிகாச புராணங்களாலே வேதப் பொருளைத் தெளிந்தறிய வேண்டும். தன்னாலே அறிந்து கொள்ளப்பட்ட வேதப் பொருளிலே அறியாமை உண்டாகும்; ஆயினும் முனிவராலே நிச்சயிக்கப்பட்ட அந்தப் பொருளிலே பெரியோர்க்கு என்ன சங்கை யுண்டாகும்" என்னும் வியாச வசனத்தினாலுமென்க. ஆதலால், அனேக உபவிருங்கணங்களின் வலிமையாலே அதர்வசிகையே பிரதீதார்த்தம் உள்ளதென்றும், அவ்விதமாகிய உபவிருங்கணங்கள் இல்லாதனவாகிப் பிறதேவதைகட்குத் தலைமை கூறும் பிற சுருதிகள் வேறு பிரமாணங்களால் விரோதிக்கப்பட்டு சுருங்கி நிற்கின்ற அவ்வவர் தலைமையைப் பொருளாகவுடையனவென்றும் உடன்படுதலே பொருத்தம். நியாயத்தாற் பலாபலம் விசாரியாது திருப்தியடையாதவரைக் குறித்து, இந்தச் சுருதி மற்றையவற்றினும் மிகுபலம் உடைத்தென்பது நிறுத்துதும், பல சுருதிகள் தம்முள் விரோதம்டைந்தபோது பலமுடையது செம்பொருள்படுதலும் பலமில்லது பிறிதோராற்றாற் பெறப்படுதலுமே நியாயம். அங்ஙனமே சுருதியின் "சாதுர் மாசிய யாகஞ்செய்தவனுக்கு அழிவில்லாத புண்ணியம் உண்டாகின்றது" என்னுஞ் சுருதி "எப்படி இம்மையிற் கன்மங்களாலீட்டிய லோகம் நாசமடையும் அப்படித்தான் மறுமையிற் புண்ணியங்களாலீட்டிய லோகமும் நாசமாம்" என்று பொருட்பலம் பற்றிப் பிறிதொன்றிற் செல்லாமற் கிளர்ந்த பிரபலச்சுருதியால் வாதிதமாகிச் சுருங்கிய பொருட்பட்டு நிற்றலின், அழிவில்லாத என்பதற்கு ஒருகாலாவதியைக் குறித்து அழியாத என்பது பொருளாம். அதுபோலவே, ஈண்டும் சிவனது தலைமை கூறக் கிளர்ந்த கருதி ஏனனத் தேவர்களின் தலலமைகூறக் கிளர்ந்த சுருதிகளைச் சுருங்கிய பொருட்படுத்தும்; ஏனைத் தேவர்கட்குக் குற்றங்கூறி அவர்களினின்றும் பிரித்துச் சிவனது தலைமை கூறலானும், ஏனைச் சுருதிகள் இங்ஙனங்கூறாது ஓரோவிடத்து ஓரொருவர்க்குத் தலைமைமாத்திரம் கூறலானுமென்க. இன்னும் சிவனது தலைமை முமூட்சுக்களால் உபாசிக்கப்படும் பரதேவதையை நிச்சயிக்கத் தொடங்கிய உபநிடதத்தில் உரைக்கப்பட்டது ஏனையோரது தலைமை கர்மதேவதா நிச்சயப்பிரகரணங்களிற் கூறப்பட்டது. அதனாலும் இதற்குப் பிரபலத்துவம். இந்தச் சுருதி சிவனது தலைமையே கூறி, "அதர்வசிகை முற்றிற்று" என்று ஏனையோரினின்றும் பிரித்துச் சிவனது நிரதிசயமாகிய ஐசுவரியம் உணர்த்தி முடிவுபெற்றது. ஏனைச் சுருதிகள் அங்ஙனமல்ல. அதனாலும் இது பிராபல்லியம்.

அற்றேல், "விசுவத்திற்குத் தலைவனும் ஆன்மாக்களுக்குத் தலைவனுமாகயவனை" என்று நாராயணோபநிடதத்து இருத்தலானும், "தேவர்களுள்ளே அக்கினி கடைப்பட்டவன்; விஷ்ணு சீர்த்தலைவன்; அவர்கட்கிடையே மற்றத் தேவதை களனைத்தும்" என்னும் வெகுவிருசபிரமாணத்திலே சகல தேவதைகளினும் உயர்ந்தவன் என்கையாலும், லோகாட்சி கிருகியத்திலே "அக்நயே பிருதிவ்யதிபதயேசுவாகா" என்பது முதல் "பிரமனே லோகாதிபதயே சுவாகா" என்பது வரையுமுள்ள மந்திரங்களாலே அக்கினி, சோமன், வாயு, சூரியன், இந்திரன், யமன், வருணன், குபேரன், மகாசேனன், உருத்திரன், பிரமன் என்பவர்களுக்குப் பிருதிவி, நட்சத்திர, அந்தரிக்ஷ, தியு, சுர, பிரேத, சலில, யக்ஷ, சேநா, பூத லோகங்களுள் ஒவ்வொன்றற்கு அதிபதியாந்தன்மை காட்டியபின்பு "விஷ்ணுவே சர்வாதிபதயே சுவாகா" என்று சுருக்கப்படாத சர்வாதிபதித்தன்மை காட்டினமையாலும் நாராயணன் தானே நிரதிசயைசுவரியமுடையனெனின் அற்றன்று. "விசுவத்திற்குத் தலைவனும் ஆன்மாக்களுக்குத் தலைவனு மாகியவனை" என்றது "இந்திரன் சகலத்திலும் மேலான தேவன்" என்றற்றொடக்கத்தன போலச் சுருங்கிய பொருட்படும் "முதல்வனான அக்கினியே தேவர்களுக்கு முகம்" "அக்கினிமுன்னே தேவதைகளுக்குத் தலைவன்" "அக்கினி தேவதைகட்குத் தலைவனாகச் செல்லுக" "அக்கினியே சகலதேவதைகளும்" என்றற்றொடக்கத்துச் சுருதிகளாலும், பருவங்களுள் இளவேனில் போலவும் மனிதருள் அந்தணா போலவும் தேவதைகளுள் அக்கினி என்றற் றொடக்கத்து மிருதிகளானும், "அக்கினிமுதலியோர்" என்றற்றொடக்கத்து விஷ்ணுபுராண வசனங்களாலும். "அக்கினியே முக்கியதேவன்" என்னுஞ் சைமினி சூத்திரத்தாலும், அக்கினியின்மேன்மை பிரசித்தமாதலாற் சகலதேவதைகளிலும் அக்கினி கடைப்பட்டோனென்பதே பொருந்தாது. ஆதலிற் காட்டிய சுருதியிலே "அக்கினிகடைப்பட்டவன்" என்றது சில தேவதைகளைக் குறித்தே அக்கினிக்குக் கடைத்தன்மை கூறுதலிற் சுருக்கப்பட்ட பொருளுடையதேயாம். அதற்குச் சமானமான யோக க்ஷேமத்திலே விஷ்ணு தலைவனென்ற வழியும், அப்படிச் சில தேவதைகளைக் குறித்தே தலைவனென்று சுருங்கிய பொருட்படும். லேர்காட்சி கிருகியத்திலே காட்டிய மந்திரங்கள் கிருச்சிராங்கங்களாகிய பன்னிரண்டோமங்களினும் தனியே தனியே விநியோகிக்கப்பட்டவைகளாம். அவை ஒவ்வொரு பொருளைக் கூறுதலி னொவ்வொரு வாக்கியங்களாம். ஆதலின் வேறு வேறு வாக்கியங்கள் கூடி ஒருங்கு முடிந்து பொருட்படாமையால் தனித்தனியே நான்காம் வேற்றுமை யுருபீற்றவாய் முடியும். அந்த வாக்கியங்கள் கூடி அக்கினி முதலியோரினின்றும் பிரித்து விஷ்ணுவினது சருவைசுவரியம் உணர்த்தற்கு வலியுடையனவல்ல. இந்த மந்திரங்களிற் கூறிய உருத்திரனை யொழிந்தோரனைவரும் லோக பாலராதலின் இந்த உருத்திரனும் லோகபாலனென்பது பெறப்படும். லோகபாலருத்திரன் சிவகலை பெற்ற கணநாதருள் ஒருவனென்று கூர்மபுராணத் துரைக்கப்பட்டது. அதனால் இங்கே சிவனினின்றும் பிரித்து விஷ்ணுவினது தலைமை கூறப்பட்டதென்று சங்கித்தற்கு இடமேயில்லை. ஆதலால், அதர்வசிகைப்படியே சிவனது நிரதிசயமான ஐசுவரியஞ் சாதிக்கப்பட்டது; அதர்வ சிகையே எல்லாவற்றிலும் மிகு பலமுடையதாதலால்.

அதர்வசிரசின் முதற்கண்டத்திலே "தேவர்கள் சுவர்க்க லோகத்தை அடைந்தனர். அந்தத் தேவர்கள் உருத்திரரை வினாவினர்" என்று தொடங்கி "நீர் ஆர்" என்று வினாவின தேவர்களுக்கு அவர் கூறினர்; "நானொருவனே ஆதியிலேயிருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்; என்னையன்றி வேறொருவனில்லை; அப்படியே என்னையறிந்தவன் எல்லாமறிவான்" என்பது முதலிய சிவவசனத்தாற் சிவனது சருவாத்துமத்தன்மை காட்டப்பட்டது. பின்னர் "அதன்பின் தேவர்கள் உருத்திரரைக் கண்டிலர்; அந்தத் தேவர்கள் உருத்திரரைத் தியானித்தனர். அதன்பின் தேவர்கள் ஊர்த்துவ்வாகுவை யுடையவரைத் துதித்தனர்" என்று தேவர்களால் உபாசிக்கப்படுந் தன்மையும் துதிக்கப்படுந் தன்மையும் காட்டப்பட்டன. பின்பு இரண்டாங் கண்டத்திலே "எவர் உருத்திரர்; அவர் பகவான்; பூர், புவர், சுவர் (ஆகியவர்) அவரே பிரமாவும்; அவருக்கு வணக்கம் வணக்கம். விஷ்ணுவுமவர்; மகேசருமவர்" என்பது முதலியவற்றால் பிரமா விஷ்ணு ருத்திரன் உமை இலட்சுமி சரசுவதி இந்திரன் முதலியோரும் மகாபூதம் முதலியவும் அவரது விபூதியேயென்று காட்டப்பட்டது. மூன்றாம் நாலாம் கண்டங்களிலே சிவநாமத் தொகுதியை விரித்துரைத்து, அவரது மேன்மை விளக்கப்பட்டது. ஐந்தாங் கண்டத்திலே அவரை உபாசித்தலாற்றான் மோக்ஷமென்று கூறி, உபாசனாப்பிரகாரமாகிய பாசுபத யோகங் காட்டப்பட்டது. இப்படியே அதர்வ சிரசிலுள்ள வசனங்களெல்லாம் பரமசிவனது சர்வோத்கருஷத்தை விளங்கக் கூறும். இதற்கு உபவிருங்கணம், இலிங்கபுராணத்தில் "அதன் பின்பு தேவர்கள் மயங்கி, நீர்யாவரென வினாவினர் அவர் கூறுவார். நானொருவனே புராதனனும் பகவானுமாகிய உருத்திரன். நானே ஆதியிலே யிருந்தேன் இருக்கிறேன் இருப்பேன். தேவர்களே, இந்த உலகத்திலே எனக்கு வேறானவ னொருவனுமில்லை. நான் நித்தியாநித்தியன்; குற்றமற்றவன்; பிரமாவுக்குத் தலைவனாகிய பிரமாநான்." என்று தொடங்கி "தருமாதருமங்களாலே எனது மகிமையாற் சகலத்தையும் பரிபாகம் பண்ணுவேன் என்று சொல்லி, உருத்திரபகவான் அங்கே மறைந்தார். பின்பு தேவர்களவரைக் கண்டிலர்." என்பது முதலாக இரண்டத்தியாயங்களினாலும் அதர்வ சிரசு முற்றுஞ் சிவபரமென்று உணர்த்தப்பட்டது. இப்படியே சூதசங்கிதை வாயுசங்கிதை ஆதித்திய புராணம் என்பவற்றினும் உணர்த்தப்பட்டது.

இப்படியே சுருதிகளும் அவைகளின் உபவிருங்கணங்களும் சிவனே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாமென்பது தெளிவுற விளக்குதலால், விஷ்ணு முதலிய பிறரைச் சிவனினும் அதிகமென்றாயினும் சிவனோடு சமமென்றாயினும் கொள்ளுதல் சிவநிந்தையாகிய அதிபாதகமேயாம். ஆதலால், சிவனே பரம்பொருள் என்று துணிந்து, அவரையே மெய்யன்போடு மனம் வாக்குக் காயங்களினாலே வழிபடுக.


--------------------------------------------------------------------------------

2. திருத்தொண்டர் சரித்திர வரலாறு

பின்னே நிகழும் அடியார்களது சரித்திரத்தை உமாதேவிக்கு முன்னே அருளிச் செய்யப் புகுந்த பரமசிவன் அச்சரித்திரம் உபமன்னியுமுனிவராலே பத்தர்குழாங்களுக்குக் கூறப்படுமெனக் கூறினாரென்று சிவரகசியத்து நவமாம் மிசத்திற் கூறப்பட்டது. அப்படியே திருத்தொண்டர் சரித்திரம் சொன்னவர் உபமன்னியுமுனிவர் என்பது இங்கும் பெறப்பட்டது. உபமன்னியுமுனிவர் கிருஷ்ணருக்குச் சிவதீக்ஷைசெய்தமையால், அவரை "யாதவன் றுவரைக் கிறையாகிய மாதவன்முடிமே லடிவைத்தவன்" என்றார் அச்சரித்திரம் வருமாறு கிருஷ்ணர் புத்திரபாக்கியத்தின் பொருட்டு நெடுங்காலம் சிவபூசை பண்ணியும், சிவன் வெளிப்படாதொழிந்தார். அக்காலத்தில் ஒருநாள் உபமன்னியுமகாமுனிவர் சிவபூசைக்குப் பத்திரபுஷ்பங்களில்லையென்று தமக்கு வின்ணப்பஞ் செய்ததமது சீடனை நோக்கி, கிருஷ்ணர் சிவபூசை செய்து கழித்த பத்திரபுஷ்பங்களைக் கொண்டு வரும் பொருட்டு ஆஞ்ஞாபித்து அவைகளாலே சிவபூசை செய்து முடித்தார் அதை அறிந்த கிருஷ்ணர் வந்து, சங்கைபேச; உபமன்னியுமுனிவர், சைவாகமத்தில் விதித்தபடி சிவதீக்ஷை பெற்று மந்திரக்கிரியா பாவனைகளாலே சிவனைப் பூசித்தாலன்றி இவை நிருமாலியமாகா; சிவனும் வெளிப்படார் என்றார். அது கேட்ட கிருஷ்ணர் அம்முனிவருக்கு ஆளாகி, அவரிடத்தே சிவதீக்ஷை பெற்று சிவபூசை செய்து, தாம் விரும்பிய பயனைப் பெற்றார். கிருஷ்ணர் சிவதீக்ஷை பெற்ற சரித்திரம் வாயுசங்கிதையில் உத்தரகாண்டத்திலும் மகாபாரதத்தில் அனுசானபர்வத்தில் பதினான்காம் அத்தியாயத்திலும் கூர்மபுராணத்திலும் சொல்லப்பட்டது.

இங்கே உபமன்னியு முனிவருக்குக் கொடுக்கப்பட்ட மாதவன் முடிமேலடி வைத்தமையும், அத்தர் தந்த அருட்பாற்கடலுண்டமையும் ஆகிய விசேடணங்களால் இவரது பெருமையும், இவராலே புகழ்ந்துரைக்கப்பட்ட சுந்தரமூர்த்திநாயனாரது பெருமையும், அவராலே திருத்தொண்டத் தொகையிற்றுதிக்கப்பட்ட திருத்தொண்டரது பெருமையும் தொனிக்கின்றன.


--------------------------------------------------------------------------------

3. சிவபுண்ணியம் செய்யும்போது நினைவு வேறாதலாகாதெனல்

சுந்தரமூர்த்திநாயனாரும் அநிந்திதை கமலினி என்னும் பெண்களும் முறையே சிவனுக்கும் உமாதேவிக்கும் புஷ்பங் கொய்யும்போது இச்சைகொண்டமையால், பூமியிலே பிறந்து போகம் அனுபவிக்கும்படி சபிக்கப்பட்டார்கள் என்று சொல்லுகையால்; புஷ்பம் எடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச் செய்யும்போது நினைவு வேறாதலாகாதென்பது துணியப்பட்டது. அது "கொந்தலர் கொய்யும் போது கூர்விழி மைய லாலே - பைந்தொடி மடவார் தம்மைப் பார்த்தலாற் கைலை வெற்பிற் - சுந்தரன்பட்ட காதை யறிதிரோ துணர்மென் போதா - லந்தணர் கீழ்க ளாவா கீழ்களந் தணர்க ளாவார்" என்னும் புட்பவிதி செய்யுளாலுமறிக. கைலாசவாசிகளாய்ச் சிவனை இடைவிடாது சேவிக்கும் அன்பர்களுக்கு இக்குற்றத்தின் பொருட்டு இத்தண்டம் கிடைத்தாயின், ஒன்றுக்கும் பற்றாத சிறியேங்கள் குற்றஞ் செய்யின் எத்துணைப் பெருந்தண்டம் கிடைக்குமோ என்று அஞ்சி நடுங்கி, சிவபுண்ணியங்களைச் செய்யும்போது சிறிதாயினும் மனசைப் பிறிதொன்றிற் செல்ல விடாமற் சிவனுடைய திருவடிகளிலே செலுத்துக.


--------------------------------------------------------------------------------

3.மனுநீதிகண்ட புராண சூசனம்

1. செங்கோன்மைச் சிறப்பு

தன்கீழ் வாழ்வோர் குற்றஞ்செய்யின், அக்குற்றத்தை நாடி, யாவரிடத்தும் கண்ணோட்டம் வையாது நடுவு நிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லப்பட்ட தண்டத்தை ஆராய்ந்து, அவ்வளவினதாகச் செய்வதே அரசனுக்கு முறையாம். அது "ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் - தேர்ந்துசெய் வஃதேமுறை" என்னுந் திருக்குறளால் அறிக. இம்முறையானது ஒரு பக்கத்திலே சாயாமற் செவ்வியகோல்போலுதலில், செங்கோலெனப்படும். இன்னும், பொதுப்பட உயிர்களைக் காத்தல் தரும மாயினும், பசுக்களையும் பெண்களையும் பிராமணரையும் சிவனடியார்களையும் காத்தல் பெருந் தருமமாம். அது "ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் - தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையுங் - காவலன் காப்பவன் காவா தொழிவனேன் - மேவு மறுமைக்கு மீளா நரகமே" என்னுந் திருமந்திரத்தாலும், "வெற்றியின் விழுமி தம்ம வெருவினோர் மேற்செலாமை - மற்றதின் விழுமிதைய வழுநரை நெறியின் மாட்டல் - சொற்றவிவ் விரண்டின் மேலும் விழுமிதுதுகடீர் நல்லா - னற்றவர் மறையோர்க் குற்ற நலிவினை நலிதறானே." "வெடித்தடங்கயற் கண்ணியர் மைந்தர்வேதியர் கோ - நெடிற்கொ டுங்கொலை சூழ்ந்திட நீக்கருந் தீதிற் - படிற்றனாண்மையிற் காப்பது காத்தது பலியா - விடிற்ற னாவியை விடுத்திடா வேந்துமோர் வேந்தோ" என்னும் இரகுவம்மிசச் செய்யுள்களாலும் அறிக.

இப்படியே செங்கோலை முட்டாமற் செலுத்தியவிதம் இந்த மனுசக்கிரவர்த்தியிடத்திற் காணப்பட்டது; இவர், பசுக்கன்றைக்கொன்றவன் தாம் நெடுங்காலம் பெருந்தவஞ் செய்து அரிதிற் பெற்ற ஏகபுத்திரனாயிருப்பவும், பசுக்கொலைக்கு உயிர்த் தண்டமல்லாத பிராயச்சித்தம் ஸ்மிருதியில் விதிக்கப்பட்டமையால், இக்குற்றத்தின் பொருட்டுப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளுதலன்றி, இவனைக் கொலை செய்தல் தகுதியன்றென்று மந்திரிகள் தடுப்பவும், நடுவு நிலைமை சிறிதும் தவறாது அவனைத் தேர்க்காலில் வைத்து ஊர்ந்த பெருந்தன்மையுடையராதலால் என்றறிக. பசுக் கொலை செய்தவர்களுக்கு உயிர்த்தண்டமல்லாத பிராயச்சித்தம், ஸ்மிருதியில் விதிக்கப்பட்டதாயின், இவர் உயிர்த்தண்டஞ் செய்தமை குற்றமன்றோ எனின், இந்தப் பசுவானது, தன்னினம்போலன்றி மனிதருக்கு உரிய அறிவை உடையதாகி, ஆராய்ச்சி மணியை அசைத்தமையால் எல்லையின்றி எழுந்த இரக்கம் பற்றி, அப்பசுவின் கன்றைக் கொன்றமையை மனிதரது குழந்தையைக் கொன்றைமையாகக் கொண்டராதலாலும், சிவனது திருவாரூரிற் பிறந்த உயிரைக் கொன்றமை சிவாபராதமாமெனத் துணிந்தாராலாலும் அது குற்றமாகாது புண்ணியமாயிற்றென்றுணர்க. அது "அவ்வுரையில் வருநெறிக ளவைநிற்க வறநெறியின் - செவ்வியவுண்மைத்திறநீர் சிந்தைசெயா துரைக்கின்றீ - ரெவ்வுலகிலெப் பெற்ற மிப்பெற்றித் தாமிடரால் - வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்." "போற்றி சைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச - வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த் - தோற்றமுடை யுயிர்கொன்றா னாதலி னாற்றுணிபொருடா - னாற்றவு மற்றவற் கொல்லு மதுவேயா மெனநினைமின்." என இவ்வரசர் கூறியவற்றால் அறிக.

பிற உயிர்களுக்கு வருந்துன்பத்தைத் தமக்கு வரும் துன்பத்தைப்போலக் கொண்டு பேணும் இரக்கமுடைமையே அறிவினாலாகும் பெரும் பிரயோசனமாம். எவ்வளவு நூல்களைக் கற்றார்களாயினும், எவ்வளவு தருமங்களைச் செய்தார்களாயினும், இவ்விரக்கமில்லாதவர்கள் நரகத் துன்பம் அடைதல் சத்தியம். இதற்குப் பிரமாணம், சைவ சமயநெறி; "அன்பு மருளு மறிவுக் கடையாள - மென் பருணர்ந்தோர் சிவன்வாக் கீண்டு." எ-ம். திருவள்ளுவர் குறள்: "அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் - தந்நோய்போற் போற்றாக் கடை." எ-ம். பதிபசுபாச விளக்கம்: "கலையெலா முணர்ந்தா னேனுங் கரிசறத் தெளிந்தானேனு - மலையென வுயர்ந்தா னேனு மனமயலகன்றா னேனு - முலகெலாம் புகழப் பல்லோர்க் குதவிய கையனேனு - மிலகிய விரக்க மின்றே லெழுநர கடைவ னன்றே" எ-ம் அருட்பிரகாசம்: "உயிர்நித்தமென்றறிந் தாலுநல் லோர்பல் லுயிரதுற்ற - துயருக் கிரங்கல் புதுமை கொல்லோவருட் டோன்றலந்நாட் - செயிருற்ற தேவர் முறைகேட் டிரங்கித் திருவுளத்தூ - டயர்வுற் றுகுத்தகண் ணீரக்க மாமணி யாயிடினே." எ-ம். வரும். இம்மனுசக்கிரவர்த்தியிடத்து இவ்விரக்கம் உண்மை "அவ்வுரைகேட்ட வேந்த னாவுறு துயர மெய்தி - வெவ்விடத் தலைக்கொண் டாற்போல் வேதனை யகத்து மிக்கிங் - கிவ்வினை விளைந்தவாறென் றிடருறு மிரங்கு மேங்குஞ் - செவ்விதென் செங்கோ லென்னுந் தெருமருந் தெளியுந்தேறான்.", "மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந் தறத்தினீடு - மென்னெறி நன்றா லென்னு மென் செய்தாற் றீருமென்னுந் - தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரு - மந்நிலை யரச னுற்ற துயரமோ ரளவிற்றன்றால்" என்னுந் திருவிருத்தங்களால் அறிக.

இவர் தம்முடைய மகனைத் தேர்க்காலில் வைத்து ஊர்ந்தமையால், அவனிடத்து இரக்கமில்லாதவரென்பது பெறப்படுமன்றோவெனின்; அற்றன்று; பூமியிலே வெளிப்படப் பாவஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அரசனுக்கும் வெளிப்படாமற் பாவஞ் செய்தவர்களையும் வெளிப்படப் பாவஞ் செய்தவர்களுள் அரசனாலே தண்டிக்கப்படாதவர்களையும் மறுமையில் நரகத்திலே தண்டித்தல் இயமனுக்கும், கடனாம் ஆதலாலும்; தாம் செய்த பாவத்தின் பொருட்டு இம்மையில் அரசனாலே தண்டிக்கப்பட்டவர்கள் அப்பாவத்தின் பொருட்டு மறுமையில் நரகத்திலே தண்டிக்கப்படார்கள் ஆதலாலும்; தம்முடைய மகன் பசுக்கொலைக் குற்றத்தின் பொருட்டு மறுமையில் நரகத்துன்பம் அடையா வண்ணம் தாமே இம்மையில் அவனைத் தண்டித்து அப்பாவத்தை ஒழித்தார்; ஆதலால் அவ்வுயிர்த் தண்டத்துக்குக் காரணம் அவனிடத்தில் வைத்த இரக்கமென்றே துணியப்படும். இதற்குப் பிரமாணம், கோயிற் புராணம்; "மண்ணுலகின் முறை புரியா மடவரைநால் வகைத்தண்டம் - பண்ணி璼ெறி நடத்திடவும் பலரறியா வகைபுரிந்த - வெண்ணில்வினை விதி வழியே நுகர்விக்கு மியல்பிற்கும் - திண்ணியரா மிருதருமருளராகச் செய்துமென." "வானவர்கோ னுரைத்திரவி மைந்தர்களி லொருவனுக்கு - ஞானவிழி நல்கிநம னற்பதியுங் கொடுத்தகற்றி - யீனமிலா வொருவனுக்கங் கிலகுமணி முடியளித்துத் - தேனகுதா ரணிவித்துத் தேவர்கடங் கைக் கொடுத்தான்." எ-ம். சிவதருமோத்தரம்: "பிணக்கந் தன்னையும் பெற்றவர் தம்மிடைக் - கணக்கி லாரையுங் கள்வர் கடம்மையும் - வணக்கு வான்மன்னன் மற்றையர் தங்களை - யிணக்கு வானர கத்து ளியமனே." எ-ம். திருமந்திரம்: "தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை - யத்தன் சிவன் சொன்னவாகம நூனெறி - யெத்தண்டமுஞ்செயு மறுமையிலிம்மைக்கே - மெய்த்தண்டஞ் செய்வதவ் 'வேந்தன் கடனே" எ-ம். சிவஞானசித்தியார்: "அரசனுஞ் செய்வ தீச னருள்வழி யரும்பாவங்க - டரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத் - துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர் - நிரயமுஞ் சேரா ரந்த நிரயமுன் னீர்மை யீதாம்." எ-ம். போற்றிப்பஃறொடை; "மண்டெரியிற் - காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய - மீத்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்தநெறி - யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே - நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன் - மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக - நஞ்சனனய சிந்தை நமன்றூதர் - வெஞ் சினத்தத - லல்ல லுறுத்து மருநகரங் கண்டுநிற்க - வல்ல கருணை மறம்போற்றி." எ-ம். வரும். இன்னும், இவர் தம் மகனுக்குச் செய்த இவ்வுயிர்த்தண்டம், இவர் கீழ்வாழும் பிறரெல்லாம் உயிர்களுக்கு இடுக்கண் செய்தற்கு அஞ்சி அஃதொழிந்து உய்தற்கும், அவ்வாறாகவே, உயிர்களெல்லாம் பிறராலிடுக்கணடையாது இனிது வாழ்தற்கும், ஏதுவாமன்றோ! அதனாலும், இவரது சீவகாருண்ணியந் துணியப்படும்.

தம்முடைய மகன் இறந்துவிடில் தமக்குப்பின் உயிர்களைக்காத்தற்கு ஒருவருமில்லாதிருத்தல்கண்டும், அவனைக் கொன்றாராதலின், இவர் அவ்வுயிர்களிடத் திரக்கமில்லாதவரென்பது பெறப்படுமன்றோவெனின்; அற்றன்று; கருணாநிதியாகிய சிவனது விதிப்படி நடுவுநிலைமை சிறிதும் வழுவாது முறைசெலுத்துதல் தமக்குக் கடனாதலால் தாம் அப்படியே முட்டாமல் முறைசெலுத்தில், தமக்குப் பின்னும் தமது பூமியிலுள்ள உயிர்கள் இடுக்கணின்றி இனிது வாழ்தல் வேண்டுமென்னுந் தங்கருத்தை வேண்டுவார் வேண்டியதே யீவாராகிய அச்சிவன் முற்றுவித்தருளுவர் என்னுந்துணிவுடனே அம்மகனைக் கொன்றாரென்பது "ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான் - றருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் - மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்த - னருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்" என்னுந் திருவிருத்தத்தாலே தெளியப்படுதலின்; இவர் எவ்வாற்றானும் இரக்கமுடையவரென்றே துணியப்படும். இவர் நடுவுநிலைமையின் வழுவாமை "என்மகன் செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயவிசைந்தே யன்னியனோ ருயிர்கொன்றா லவனைக்கொல் வேனானாற் - றொன்மனுநூற் றொடைமனுவாற் றுடைப்புண்ட தெனுந் வார்த்தை - மன்னுலகிற் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்" என்பதனால் உணர்க. முட்டாது செங்கோல் செலுத்திய அரசனை அச்செங்கோலே காக்குமென்பது "இறைகாக்கும் வையக மெல்லா மவனை - முறைகாக்கு முட்டாச் செயின்" என்னுந் திருக்குறளால் அறிக.

இதுகாறும் கூறியவற்றால், இரக்கமும் நடுவு நிலைமையும் பெரும்புண்ணியமென்பதும், அவையில்லாமை பெரும்பாவமென்பதும், குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அக்குற்றஞ் செய்தார்க்கும் பிறவுயிர்களுக்கும் நன்மை பயத்தலால் அது இரக்கமாவதன்றி வன்கண்மை யாகாதென்பதும், அத்தண்டஞ் செய்யாதொழிதலே வன்கண்மை யெனப்பட்டுத் தமக்கும் பிறர்க்குந் தீமை பயக்குமென்பதும் பெறப்படும். அன்றியும், பிறர் கொலை களவு முதலிய குற்றங்களைச் செய்யும் போது கண்டவர்கள், நீதி சபையிலே சாட்சிகளாகும்போது, நாம் இங்கே உண்மை சொல்லில் இவர்களுக்கு அரசனாலே துன்பம் நிகழுமே யென்றஞ்சி, தாம் கண்ட உண்மையை மறுத்துச் சொல்லில்; அது அக்குற்றஞ் செய்தார் மறுமையிலே நரகத்தில் எண்ணிறந்த காலம் மிகக் கொடிய துன்பம் அனுபவித்தற்கும்; இவர் குற்றஞ்செய்தும் தண்டத்துக்கு விலகிக் கொண்டமைபோல நாமும் விலகிக் கொள்வோமென்னுங் கருத்துடையராகிப் பிறருங் குற்றஞ்செய்து கெடுதற்கும், இப்படிக் குற்றஞ்செய்வார் உளராகவே, பலவுயிர்கள் அவராலே துன்பம் அனுபவித்தற்கும் ஏதுவாம். ஆதலால், யாவராயினுஞ் சாட்சிகளாகும்போது தாங்கண்ட உண்மையைச் சொல்லுதல் புண்ணியமென்பதும், அதனை மறுத்துச் சொல்லுதல் பாவமென்பதும் பெறப்படும். மெய்ச்சான்றுரைத்தலால் பெறப்படும் இன்பமும், பொய்ச் சான்றுரைத்தலால் பெறப்படுந் துன்பமும், "உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளையும், மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவான்; சத்தியமே மேலான தானமும், தவமும், தருமமுமாம்; தேவர்கள் சத்தியவடிவினர்; மானுடர் அசத்திய வடிவினர். எவனுடைய புத்தி சத்தியத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத்தன்மையை அடைவான். சத்தியத்தின் மேலான தருமமும், அசத்தியத்தின் மேலான பாவமுமில்லை; பாவிகள் நாஞ்செய்யுங் காரியத்தைப் பிறர் அறியாரென்று எண்ணுகின்றார்கள்; தேவர்களும், இந்திரன் முதலான எண்மரும், ஐம்புதங்களும், இரவியும், மதியும், மனமும், அறக்கடவுளும், உலகத்திலுள்ளாரெல்லாரையும் பார்க்கின்றார்கள்; ஆகையால், ஒருவன் செய்த வஞ்சனை வெளிப்படும். பொய்ச்சான்று உரைத்தவன் தன்னுடைய ஏழுமரபினுள்ளாரையும் கீழான நரகத்தில் வீழ்த்துவான்; எழுபிறப்பிலீட்டியவெல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவனாவான்; பிரமவதையும், சிசுவதையும், தந்தைவதையுஞ் செய்தவனாவான்; மிகக் கொடிய ரெளரவ முதலாகிய நரகங்களையும் அடைவான்; பின்னும் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக்கை, புழு என்னும் இப்பிறப்பிற் பிறந்து, பின்பு மானுடப் பிறப்பிலே பிறவிக்குருடன், செவிடன், குட்டநோயினன், ஊமை இவர்களாகியும், மிக்க பசிதாகமுடையவனாகித் தனது பகைவன் வீட்டிற் றன்மனையாளோடும் பிச்சையிரப்பவனாகியும் பிறப்பான், என்னும் மிருதிவசனத்தினாலும், "பொய்யி னைப்புகன்ற புல்லர் வாயினைப் புடைத்து நாக் - கொய்வர் துக்க பேதமுங் கொடுப்பர் தூதர் கோணனா - வெய்யர் முன்பு சொன்ன பொய்வி னைத்திறம்வி ளங்கவே - நைவ ரென்னை செய்வமென்று தீருமாறு நாடியே" "சலமெனும் வாதியாவன் றகைபெறு சமயந் தன்னை - நிலை குலை செய்தான் கள்ள நீசரை நேசஞ் செய்து - கொலைவிலக்கிடுவான் றானுங் கோணிய வழக்குக் கூறும் - புலையனும் பொருந்தி மன்றிற் புந்தியிற் புன்மையாலே" என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுள்களாலும் அறிக.

2. தன்னுயிர் விடுத்தல் இவ்விடத்துப் பாவமும் இவ்விடத்துப் புண்ணியமுமாமெனல்

கோபம், நோய் முதலிய ஏதுக்களாலே தன்னுயிரை விடுத்தவன் அறுபதினாயிரம் வருஷம் நரகத்தில் வருந்துவன்; குருலிங்க சங்கமங்களுக்கு எய்தும் இடையூறு நீங்குதற் பொருட்டு உயிர் விடுத்தவன் சிவபதம் அடைவன். இதற்கு பிரமாணம், சிவதருமோத்தரம்: "கோவத்தானாகத்திற் கொடுநோயான் மற்றுங் குற்றத்தாற் றான் றன்னைக் கொலைபுரிகை குணமோ - பாவத்தான் மிக்காரே தமைத் தாமே வதைக்கும் பதர்மனித ரந்தணர்க்கும் பாங்கல்ல கும்பி - பாகத்திற்பட்ட ழுங்கிச் சீக்குழிக்கும்படிவர் பகர் வருட மறுபதினா யிரமுறவே பாங்கே - சாகத்தாந் துணிந்தழிகை சங்கரனா லயத்திற் றுவறுறினே யவரமலன் புரியதனைச் சார்வார்." எ-ம். சங்கற்ப நிராகரணம்: "விதிதெருளா னோய்க்குமழிந் தாக்கையைத் தான் வீத்தாற் - புதையிருளி னாழ்வன் புகுந்து." எ-ம். "ஆக்கையினை நோய்க்கு மழிந் தந்தணன்றா னீக்கினாற் - சீக்குழிக்கு மாழ்வன் சிறந்து." எ-ம். "அரும்பெரும் பன்னோ யடர்த்தாலு மாற்றிப் - பிரிந்திடச்செய் யாதுடலைப் பேணு." எ-ம். சிவபுண்ணியத் தெளிவு: "குருவிலிங்கசங் கமத்தினைக் குறித்தவற்றிடையூ - றொருவு தற்பொருட் டாற்றம துயிர்விடு முரவோர் - மருவி டும்பல மெமக்குமே வளம்பட வகுப்பா - னருமையென்றன னனைத்தையு முணர்த்துபே ரறிவோன்." எ-ம். வரும். இங்கே மந்திரி, தனக்குச் சோழர் ஆஞ்ஞாபித்தபடியே தான் அவருடைய மகனைக் கொல்வானாயில், அவருக்குப் பின் அரசியற்றுதற்கு ஒருவரும் இல்லாமையால், குரு லிங்க சங்கமங்களுக்கு இடையூறு நிகழுமெனவும், உயிர்களெல்லாம் இடுக்கணின்றி இன்புற்று வாழ்தல் கூடாதெனவும், நினைந்து, சிவபத்தியானுஞ் சீவகாருண்ணியத் தானுந் தன்னுயிரை விடுத்தானாதலின்; அது பாவமாகாது புண்ணியமாயிற்று. ஒருவனிமித்தம் ஒருவன் தன்னுயிரை விடுக்கப்புகில் அவனைத் தடுக்காதவன் அவனனத் தன்கையாற் கொன்றவனாவன். அது "என்றனை நீ புன்மை மொழியிசைப்பாயே யென்று மெனது தனந்தாராதே யேகுவையோ வென்று - நின்றனக்கோ வுரித்திந்த நிலமெனக்குமென்று நின்முன்னே யென்னுயிரை நீக்குவனே யென்றுந் - தன்றன疤யே தான்வதைக்கிற் றடுத்துமுறை புரியாச் சலத்தெதிரி யவன்றன்னைத் தன்னதுகை யாலே - கொன்றவனே யாதலினாற் றடுத்திடுக கொலையைக் கொடுத்திடுக கணக்குளது கொலைக்கஞ்சுங் குணத்தார்" என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுளால் அறிக.


--------------------------------------------------------------------------------

தில்லைவாழந்தணர் புராண சூசனம்
1. சிதம்பரத்தினது மகிமை

சாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.

இத்தகரவித்தையை உபாசிக்கும் முறைமை கைவல்லி யோபநிடதத்தில் சிவனது தகரோபாசனாவிதிப்பிரகரணத்திலே "ஏகாந்தஸ்தானங்களிலே சுகாசனத்தில் இருந்து, சுத்தனாகி, நேராகிய கழுத்துத் தலை உடம்புகளை உடையனாய், அத்தியாச்சிரமஸ்தனாய் இந்திரியங்கள் அனைத்தையும் அடக்கி பத்தியால் தனது ஆசிரியரை இறைஞ்சி, இருதய புண்டரீகத்தைத் துகளற்ற சுத்தமாகக் கருதி, அதன் மத்தியத்திலே, தெளிவுடையவராய், சோகம் இல்லாதவராய், எண்ணப்படாதவராய், வெளிப்படாதவராய், அனந்தரூபராய், சிவனாய், அமிர்தராய், பிரமயோனியாய், தத்பதமாய், ஆதிமத்தியாந்தவிகீனராய், ஏகராய், விபுவாய், சிதானந்த ரூபராய், அரூபராய், அற்புதராய், உமாசகாயராய், பரமேசுவரராய், பிரபுவாய், முக்கண்ணராய், நீலகண்டராய், பிரசாந்தராய், பூதயோனியாய், சமஸ்தசாட்சியாய் இருப்பவரைத் தியானித்து, (அதனால்) முனியாகி, இருளின் மேற்போவான். அவர் பிரமா; அவர் சிவன்; அவர் இந்திரன்; அவர் அழிவற்றவர்; மேலானவர்; சுவப்பிரகாசர்; அவரே விஷ்ணு; அவர் பிராணன்; அவர் காலன்; அக்கினி; அவர் சந்திரன்; அவரே இருந்ததும் இருப்பதுமாகிய எல்லாமானவர்; என்றும் உள்ளவர். அவரை அறிந்து, (அதனால்) மிருத்தியுவைக் கடப்பன். முத்திக்கு வேறுவழி இல்லை" என்று கூறப்பட்டது. இதனால் பிரம விஷ்ணு ருத்திரர் கூடிய சகல சகத்தும் சிவனது விபூதியே ஆதலால் சிவனே சருவோற்கிருஷ்டர் என்பது தெளிவுறுத்தப்பட்டமை காண்க. மிருத்தியு என்பது ஆணவமலம்; அது மிருகேந்திரத்திற் கண்டது.

மானவ புராணத்து ஆறாம் அத்தியாயத்தில் "முன்னே சத்திய பராயணனாகிய ஆகவலாயன முனி பகவானும் பரமேஷ்டியுமாகிய செகந்நாதரை அடைந்து" என்றற் றொடக்கத்தால் ஆகவலாயனர் வினாவினமை கூறி, அதற்குப்பரமேஷ்டி விடை கூறினமை சொல்லத் தொடங்கி, "எண்ணப்படாதவராய் வெளிப்படாதவராய்" என்பது முதலாகக் கொண்டு விரிவாகச் சிவத்தியானப் பிரகாரத்தைக் காட்டி; "இப்படி முனியானவன், நேரேசாக்ஷியாய், இருளைக் கடந்தவராய் பூதயோனியாய், புரப்பகைவராய் இருப்பவரைத் தியானித்து, தனது ஆத்துமவித்தையினால் முத்தி அடைவன். தியானிக்கப்படும் பொருளாகியவர் சாம்பசிவன்; சநாதநர்; பிரமா விஷ்ணு முதலிய ரூபங்களாகக் கூறுபட்டாற் போலிருப்பர். அவர் பிரமா, அவர் சிவன் என்று தொடங்கி அவரை அறிந்து மிருத்தியுவைக் கடப்பான். அவரைப் பிரத்திய கான்மாவாக அறியும் அறிவேயன்றி முத்திக்கு வேறுவழி இல்லை" என்னுந் துணையால் இந்தச் சுருதிப் பொருளே காட்டப்பட்டது. பிரம கீதையிலும் இப்பொருளே உணர்த்தப்பட்டது.

தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள இப்பரதகண்டத்திலே இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லையும், கருணாநிதியாகிய சிவன் ஆனந்த நிருத்தஞ் செய்யும் ஸ்தானமாம். அது "வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி - யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாதலாலே - யிலங்கைநே ரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையாநாடி - நலங்கிள ரிமய நேர்போ நடுவுபோஞ் சுழுனை நாடி." "நாடரு நடுவி னாடி நலங்கிளர்தில்லை நேர்போய்க் - கூடுமங் கதனின்மூலக் குறியுள ததற்குத் தென்னர் - மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன்றுண்டங் - காடுது மென்று மென்றா னென்னையாளுடையவையன்" என்னுங் கோயிற் புராணச் செய்யுள்களாலும், "இடம்படு முடம்பின் மூலத் தெழுந்தநற் சுழுனைநாடி - யுடன்கிள ரொளியேயாகி யொளியிலஞ் செழுத்து மொன்றாய் - நெடுங்குழ லோசை யாகி நிலவு மவ்வோசை போயங் - கடங்கிய விடமே யென்று மாடுமம் பலமதாகும்." "எண்டரு பூத மைந்து மெய்திய நாடி மூன்று - மண்டல மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினாலே - பிண்டமு மண்டமாகும் பிரமனோ டைவராகக் - கண்டவர் நின்றவாறு மிரண்டினுங் காணலாகும்.", "ஆதலா லிந்த வண்டத்தறிவரும் பொருளா யென்றுந் - தீதிலா மூல நாடிற் றிகழ் சிவலிங்க மேனி - மீதிலா மந்த நாத வெளியின்மேலொளிமன் றங்குக் - காதலான் மடவாள் காணக் கருத்துற நிருத்தஞ் செய்வோம்" என்னுந் திருவாதவூரடிகள் புராணச் செய்யுள்களாலும் அறிக.

இத்திருநிருத்தமாவது பஞ்சகிருத்தியமேமாம். அது "இருவகை யிவைகடந்த வியல்புநம் மொளியா ஞான - வுருவமா னந்த மான வுயிரியாம் பெயரெமக்குப் - பரபதம் பரம ஞானம் பராற்பர மிலது காத்த - றிருமலி யிச்சை செய்தி திகழ்நட மாகு மன்றே." என்று கோயிற் புராணத்திலும். "அந்தநன் னடமே தென்னி லைந்தொழிடைத்தலாகும் - பந்தம தகற்று மிந்தப் படிவமு மதுவேயாகும் - வந்துலகத்தில் யாருங் காண்பரேல் வழுவா முத்தி - தந்தருளளிக்குந் தெய்வத் தலமுமத் தலமே யாகும்." என்னுந் திருவாதவூரடிகள் புராணத்திலும், "ஐந்து - நலமிகு தொழில்க ளோடு நாடக நடிப்ப னாதன்," என்று சிவஞான சித்தியாரிலும், "தோற்றந் துடியதனிற் றோயுந் திதிய்மைப்பிற் - சாற்றியிடு மங்கியிலே சங்கார - மூற்றமா - யூன்று மலர்ப்பதத்தேயுற்ற திரோதமுத்தி - நான்ற மலர்ப்பதத்தே நாடு." "மாயைதனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ் - சாய வமுக்கியரு டானெடுத்து - நேயத்தா - லானந்தவாரிதியி லான்மாவைத் தானழுத்த - றானெந்தை யார்பரதந் தான்." என்று உண்மை விளக்கத்திலும், "மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க - நின்ற நிருத்த நிலைபோற்றி." என்று போற்றிப்பஃறொடையிலும், "நீங்கலரும் பவத் தொடர்ச்சி நீங்கமன்று ணின்றிமையோர் துதிசெய்ய நிருத்தஞ்செய்யும்." என்று சிவப்பிரகாசத்திலும் கூறியவாற்றாற் காண்க. இந்நிருத்தத்தைத் தரிசித்தலால் விளளயும் ஆனந்தம். "புளிக்கண்டவர்க்குப் புனலூறு மாபோற் - களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க்கெல்லாந் - துளிக்குங்கண்ணீருடன் சோருநெஞ் சத்திரு - ளொளிக்கு மானந்த வமுதூறு முள்ளத்தே." என்னுந் திருமந்திரத் தாலும். "தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே ணுண்ணாதே - நினைந்தொறுங் காண்டொறும் பேசுந் தோறு மெப்போது - மனைத்தெலும் புண்ணெகவானந்தத் தேன்சொரியுங் - குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ." என்னுந் திருவாசகத்தாலும் உணர்க.

2. தில்லைவாழந்தணர்களது மகிமை.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய சிதம்பர ஸ்தலத்தில் வியாக்கிரபாதமுனிவர் பதஞ்சலிமுனிவர் என்பவர்களோடு, இத்தில்லைவாழந்தணர் மூவாயிரரும், பராசத்தியால் அதிட்டிக்கப்பட்ட சுத்தமாயாமயமாகிய கனகசபையின்கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவன் செய்தருளும். ஆனந்த தாண்டவத்தைத் தரிசனஞ் செய்து பேரானந்தம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது; பிரமாவானவர் கங்கா தீரத்தில் உள்ள அந்தர் வேதியிலே தாம் தொடங்கிய யாகத்தின் பொருட்டு, இச்சிதம்பரத்தில் வந்து வியாக்கிரபாத முனிவரது அநுமதியினாலே இவர்களை அழைத்துக் கொண்டு போயினார்; பின்பு அம்முனிவரது ஏவலினாலே, இரணியவன்மச்சக்கிர வர்த்தியானவர் அந்தர்வேதியிற் சென்று, இவ்வந்தணர் மூவாயிரரையும் வணங்கி, தேர்களில் ஏற்றி அழைத்துக் கொண்டு, சிதம்பரத்தை அடைந்தார். உடனே இவர்கள் சிதம்பரத்துக்கு வடமேற்றிசையிலே தேர்களை நிறுத்தி, இப்பாலே வந்து, தங்களை எதிர் கொண்ட வியாக்கிரபாத முனிவருக்குத் தங்களை எண்ணிக் காட்டினார்கள். அப்பொழுது, அம்மூவாயிரர்களுள், ஒருவரைக் காணாமல். இரணியவன்மச் சக்கிரவர்த்தி மனந்திகைத்துநிற்ப; அடியார்க்கெளியராகிய பரமசிவன், தேவர்கள் முதலிய யாவருங் கேட்ப இவ்விருடிகளெல்லாரும் எமக்கு ஒப்பாவர்கள்; நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால், நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். இத்திருவாக்கைக் கேட்ட சக்கிரவர்த்தியானவர், சபாநாதரே இவ்விருடிகளில் நாம் ஒருவரென்று சொல்லத்தக்க பெருமையையுடையவர்கள் இவர்கள் என்று மனம் நடுங்கி, இவர்களை நமஸ்கரித்தார். இவ்வந்தணர்கள் இத்திருவாக்கைக் கேட்டவுடனே, மிக அஞ்சி, பூமியிலே தண்டாகாரமாய் வீழ்ந்து; மீள எழுந்து வாழ்வு பெற்று, உன்மத்தராகி, ஸ்தோத்திரம் பண்ணி, "சுவாமீ! சிறியேங்களை அகத்தடிமைகளாகக் கொண்டருளும்" என்று பிரார்த்தித்து, கூத்தாடினார்கள். இச்சரித்திரம் கோயிற் புராணத்தில் விரித்துரைக்கப்பட்டது.

இவ்வந்தணர்கள் வேதாகமங்களை விதிப்படி ஓதி, அவற்றின் உண்மைப்பொருளை ஐயந்திரிபற உணர்ந்து, அவைகளில் விதித்தவழி வழுவாது ஒழுகும் மெய்யன்பர்கள். ஆதலால் இவர்கள் தம்பால் வைத்த அன்பின் பெருமையையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது பெருங்கருணையையும், சருவான்மாக்களும் தெளிந்து தம்மேலும் தமதன்பர்களாகிய இவர்கள் மேலும் பத்திசெய்து முத்தி பெற்றுய்தற் பொருட்டே, நடேசர் இவ்வாறு அருளிச் செய்தார்.

3. வேதவுணர்ச்சி

வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம். அவற்றுள், இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர் வேதம் நூற்றொரு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும், அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையனவாம். இவை அற்பச்சுருதிவாக்கியம், பிரபலச்சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச்சுருதிவாக்கியம் கர்மானுட்டானக்கிரமங்களைச் சொல்லும். பிரபலச் சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல்லும். இது முப்பத்திரண்டு உபநிஷத்தாய் இருக்கும். வேதம் என்னுஞ்சொல் அறிதற்கருவி எனப் பொருள்படும். இவ்வேதத்துக்கு அங்கங்கள் சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என ஆறாம். அவற்றுள், சிட்சையாவது வேதத்தின் உச்சாரணலக்ஷணத்தை உணர்த்துவதாம். வியாகரணமாவது வேதத்தின் பதலக்ஷணத்தை விவரிப்பதாம். நிருத்தமாவது வேதத்தின் பதங்களுக்கு விவரணங் கூறுவதாம். சோதிடமாவது இலக்கினம், திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் முதலியவற்றால் வைதிக கருமங்களுக்குக் காலம் அறிவிப்பதாம், கற்பமாவது ஆசுவலாயநீயம், போதாயநீயம், ஆபஸ்தம்பம் முதலிய சூத்திர ரூபத்திருந்து, வைதிக கருமங்களைப் பிரயோகிக்கும் முறைமையைக் கற்பிப்பதாம். சந்தோவிசிதியாவது வேதத்தில் உக்தை முதலிய சந்தோபேதங்களுக்கு அக்ஷரசங்கிய கற்பிப்பதாம். இவ்வாறும் உணராக்கால், வேதங்களை ஓதுதலும், அவற்றின் பொருளை உணர்தலும், அவைகளில் விதித்த வழி ஒழுகுதலும் ஏலாவாம். ஆதலால், இவை ஒருதலையாக உணர்தற்பாலனவாம்.

இத்தில்லைவாழந்தணர்கள் இவ்வேத வேதாங்கங்களை ஓதி உணர்ந்தோர்களென்பது இங்கே "அருமறை நான்கினோடா றங்கமும் பயின்று வல்லார்" என்பதனால் உணர்த்தப்பட்டது. வேதங்களை ஓதி உணர்ந்தவழியும், அவற்றுள் விதித்த ஒழுக்கம் இவ்வழிப் பயனில்லை ஆதலால்; இவர்கள் அவ்வொழுக்கத்திற் சிறிதும் வழுவாமை, இங்கே "வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்கத் - தருமமே பொருளாகக் கொண்டு.", "மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம் பூண்டா - ரறுதொ甎ி லாட்சியாலே யருங்கலி நீக்கி யுள்ளார்.", "தானமுந் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தா - ரூனமே லொன்றுமில்லா ருலகெலாம் புகழ்ந்து போற்று - மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்." என்பனவற்றால் உணர்த்தப்பட்டது. திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும் 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே - செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம்" என்று அருளிச் செய்தார். ஒழுக்கம் இல்வழி வேதம் ஓதலாற் பயனில்லையென்பது "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் - பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்." என்னுந் திருக்குறளால் அறிக.

வேதங்களை ஓதியும், முனிவர்களது சாபத்தினாலே அவற்றின் மெய்ப்பொருட்டுணிவு பிறவாமையால், சிவனையும் சிவசின்னங்களாகிய விபூதி ருத்திராக்ஷங்களையும் இகழ்ந்து, பிறரைப் பரம்பொருளெனக் கொண்டு, ஊர்த்துவ புண்டர முதலியன இடுவோரும், விபூதி ருத்திராக்ஷந் தரித்தும், விஷ்ணு முதலிய பசுக்களைப் பசு பதியாகிய சிவனோடு சமமெனக் கொள்வோரும் ஆகிய புல்லறிவாளர் போலாகாமல், இவ்வந்தணர்கள், சிவனொருவரே பரமபதி என்பதும் விபூதி, ருத்திராக்ஷம் தரித்துச் சிவனை வழிபடினன்றி முத்தி சித்தியா தென்பதுமே வேதத்துணிவாமெனத் தெளிந்து, அச்சிவனையே வழிபடும் மெய்யன்பர்களென்றறிக. அது இங்கே "நீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக்குரிய தொண்டாம் - போற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணிவாழு - மாற்றினார் பெருகு மன்பாலடித்தவம் புரிந்து வாழ்வார்." "பொங்கிய திருவினீடும் பொற்புடைப் பணிக ளேந்தி - மங்கலத் தொழில்கள் செய்து மறைகளாற் றுதித்து மற்றுந் - தங்களுக் கேற்ற பண்பிற் றகும்பணித் தலைநின் றுய்த்தே - யங்கணர் கோயி லுள்ளா வகம்படித் தொண்டு செய்வார்", "திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் சிறந்த சீரார்", "உறுவது நீற்றின் செல்வ மெனக்கொளுமுள்ள மிக்கார் - பெறுவது சிவன்பாலன்பாம் பேறெனப் பெருகி வாழ்வார்." என்பனவற்றால் உணர்த்தப்பட்டது.

4. சைவாகமவுணர்ச்சி

ஆகமமானது காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள் மாந்திரமெனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர்பெறும். இவ்விருபத்தெட்டுச் சிவாகமங்களுக்கும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களாம். இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவா யிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதிபசுபாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடும் கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசை செபம் ஓமம் என்பனவற்றையும், சமய விசேஷ நிருவாண ஆசாரியாபிஷேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும் உபதேசிக்கும். ஆகமம் என்பது (பரமாப்தரினின்றும்) வந்தது எனப் பொருள்படும். இன்னும், ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள் படுதலால், ஆகமம் என்பதற்குத் திரிபதார்த்த லக்ஷணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்த பொருளென்க. ஆ என்பது சிவஞானமும், க என்பது மோக்ஷமும், ம என்பது மலநாசமுமாம் ஆதலால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தை உதிப்பித்து, மோக்ஷத்தைக் கொடுத்தல் பற்றி, ஆகமமெனப் பெயராயிற்றென்று கூறுதலும் ஒன்று. இவ்வாகங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழாம்.

இவ்வந்தணர்கள் சிவதீக்ஷை பெற்று, சைவாகமங்களை ஓதி உணர்ந்து, அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். அது இங்கே "ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து மிக்கார்." என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. சிவதீக்ஷை பெற்றமையும் சைவாகமங்களை ஓதி உணர்ந்தமையும் இங்கே பெறப்பட்டில அன்றோவெனின்; அறியாது கூறினாய்; ஞான முதலிய நான்கு பாதப் பகுப்பிலக்கணம் சிவாகமங்களினன்றிப் பெறப்படாமையால் ஞான முதலிய நான்கும் உணர்ந்தோர்கள். எனவே, அவைகளை உணர்த்தும் சைவாகமங்களை ஓதினோர்கள் என்பதும், சிவதீக்ஷை பெற்ற பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே சைவாகமத்துக்கு அதிகாரிகள் என்பதும் சிவாகமம் செப்புதலால், சைவாகமங்களை ஓதினோர்கள். எனவே, அவ்வோதுகைக்குமுன் பெறற்பாலதாகிய சிவதீக்ஷை பெற்றோர்கள் என்பதும், தாமே பெறப்படும். இவர்கள் சிதம்பரலாயத்திற் சிவாகம விதிப்படியே நித்திய பூசை உற்சவம் முதலியன செய்தலானும் பரார்த்தலிங்கப் பிரதிஷ்டை, பரார்த்த பூசை, உற்சவம் முதலியனவற்றை விதிப்பன சிவாகமங்களேயன்றி வேதங்கள் மிருதிகளன்மை யானும், இவர்கள் சிவாகமவுணர்ச்சி யுடையார்களென்பதே சித்தம். சிவதீக்ஷை பெற்றே சிவாகமங்களை ஓதல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம் சுப்பிரபேதம். "இந்தச் சுத்த சைவாகமம் எல்லார்க்கும் கொடுக்கத்தக்கது மன்று. விளக்கத்தக்கதுமன்று; தீக்ஷை பெற்றனவாய், நிலையுடையோனாய், சிவபத்திமானாய் இருப்பவனுக்கே விளக்கத்தக்கது. ஏனையோர்க்கு விளக்கல் குற்றம் எனப்படும்" என்பதாம். அங்ஙனமாயினும், சிவாகமவிதிக்கு மாறுபட்டு, சிவதீக்ஷை பெறாமல் சிவாகமங்களை ஓதினோர்கள் எனக் கொள்ளலாகாதோ எனில்; "தெரிந்து மிக்கார்" என்பது தெரிந்தமையால் மிக்கோர்" எனப் பொருள்பட்டு, உண்டுபசிதீர்ந்தான் என்றாற்போலக் காரணகாரியப் பொருட்டாய் நிற்றலாலும், இவர்கள் சிவாகமவிதிக்கு மறுதலைப்பட்டுச் சிவதீக்ஷையின்றிச் சிவாகமங்களை ஓதி உணர்ந்தார்கள் எனக் கொளில், அவ்வுணர்ச்சியால் இவர்கட்கு மேன்மை கூறுதல் கூடாமையாலும், அது பொருந்தாதென்க. இன்னும், இவர்கள் சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றோர்கள் எனவும், மூலாகமங்களையும், உபாகமங்களையும் ஓதி உணர்ந்தோர்கள் எனவும், சிவரகசியத்து நவமாம்சிசத்தில் இருபத்தைந்தாம் அத்தியாயத்திலும் சிதம்பர மான்மியத்திலும் கூறப்படுதலால், யாம் கூறியதே பொருத்தம். சிவாகமத்தில் கூறிய தீக்ஷையின் உயர்ச்சி, வாயவ்வியசங்கிதையிலே "சைவ நூலிற் கூறப்பட்டதும் பாசம் மூன்றையும் தவிர்ப்பதும் மேலானதுமாகிய தீக்ஷையைத் தவிர வேறு யாதொரு ஆச்சிரமமும் இவ்வுலகத்திலே மாந்தருக்கு மேன்மை அன்று. ஆதலால், தீக்ஷையினாற்றான் மோக்ஷம்; ஆச்சிரமங்களினாலும் மற்றைக் கருமங்களினாலும் மோக்ஷம் இல்லை. அத்துவசுத்தியின்றி முத்தியை விரும்பும் மனிதர் கோலின்றி நடக்கத் தொடங்கிய குருடர் போல்வர்; தோணி இன்றிக் கடலைக் கடக்க விரும்பினவர் போல்வர்" என்று கூறுமாற்றால் அறிக. இனிச் சைவாகமப் பெருமை சிறிது கூறுவாம்.

ஆகமமென்பது ஆப்தவாக்கியம், ஆகமங்கள் லெளகிகம், வைதிகம், அத்தியான்மகம், அதிமார்க்கம், மாந்திரம் என ஐவகைப்படும். தற்காலத்திற் பயன்றருவது லெளகிகம்; காலாந்தரத்திற் பயன்றருவது வைதிகம்; ஆத்தும விசாரவியற்கையது அத்தியான்மகம்; யோகவியற்கையது அதிமார்க்கம்; சிவஞானவியற்கையது, மாந்திரம் எனப்படும். அவற்றுள், மாந்திரம் பிற நூல்களைப் பூருவ பக்ஷமாகக் கீழ்ப்படுத்தி, மேற்பட்டு விளங்கும் காமிகம் முதலிய சைவாகமங்கள், ஆகமாந்தம் என்னும் ஞானபாதப்பகுதி யோக ரூடிநாமமாகிய சித்தாந்தம் என்னும் பெயரை உடையது. அது இரத்தினத்திரயத்திலே "சித்தாந்தமே சித்தாந்தம், அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்." என்றும், காந்தத்திலே "இந்த எல்லையில் சிவன் வெள்ளிமலையாகிய கைலாசத்திலே சனகர் முதலிய முநீந்திரர்களுக்குத் திரிபதார்த்தங்களினாலே சம்மிதமாகியும் இரகசியமாகியும் ஆகமாந்தம் என்னும் பெயர்த்தாகியும் உள்ள சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்" என்றும், காமிகத்திலே "இருக்கும் யசுர், சாமம், அதர்வம் என்பவை சிவனது மற்றை முகங்களிற் பிறந்தன; காமிகம் முதலிய சிவஞானம் ஊர்த்துவச் சுரோதோற்பவங்களாகி, மேன்முகத்திற் பிறந்தன. முன்கூறிய சகல நூல்களையும் பரமசிவன் பூர்வபட்சமாகச் சொன்னார்; அவற்றை எல்லாம் கீழ்ப்படுத்தி, பரமார்த்தமாகத் தவிரற்பாலனவும் கொள்ளற்பாலனவும் ஆகிய பொருள்களை நிச்சயிக்கும் சிவசித்தாந்தத்தைச் சொன்னார். சித்தாந்தமாவது காமிகம் முதலியனவாம். இதில் உயர்ந்தது பிறிதொன்றும் இல்லை. இந்தச் சைவ நூலே மூலமாம். சதுர்வேதங்களும் இதினின்றும் பிறந்தனவாம். சைவமே வைதிகம் எனப்படும்; வைதிகமே சைவம் எனவும் படும். சைவமானது வைதிகத்தில் அடங்கியும் அடங்காமலும் இருக்கும், வைதிகமும் சைவத்திற்றாழ்ந்து; முனிவரே, அற்றாயினும், சைவம் வேதப்பொருளோடு ஒற்றுமையாய் இருத்தலால், வைதிகம் என்றும் வேதசாரம் என்றும் கூறப்படும். சிவப்பிரகாசமாகிய சிவஞானம் பரஞானமாம்; பசுபாசபதார்த்த போதகமாகிய வேதம் முதலியன அபரஞானமாம். இராத்திரியில் மனிதரது கண்ணும் பூனையின் கண்ணும் விலக்ஷணமாய் இருப்பதுபோல, இந்தப் பரஞானமும் அபரஞானமும் விலக்ஷணமாய் இருக்கும்" என்று கூறுமாற்றால், அறிக. லெளகிகம் முதலிய ஐந்து சாஸ்திரங்களும் முறையே ஒன்றற்கொன்று ஏற்றமுடையன. காமிகத்திலே "சித்தாந்தம் மந்திர தந்திரமாகும்; அதிமார்க்கம் அதனிற் றாழ்ந்தது; அத்தியான்மகம் அதனிலுந்தாழ்ந்தது; அதிலும் தாழ்ந்தது வைதிகம்; வைதிகத்திலும் தாழ்ந்தது லெளகிகம்." என்று சொல்லப்பட்டது.

சைவாகமங்கள் வைதிகவாகியம் ஆதலில் அப்பிரமாணங்கள் என்று சில மூடர் கூறுவர். "வேதாந்த நிஷ்டை பெற்றுக் களங்கமற்ற ஞானிகளும், எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நிலை நின்றோரும் ஆகிய இருவகையோரும், பெறற்கரிய சாயுச்சியம் பெறுவர்கள். கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் வேதாகமம் என்று பிரசித்தம் பெற்ற இரண்டு மார்க்கங்களிலும் நில்லாத பாவிகள் சாத்திரத்திற் கூறிய நால்வகைத் தண்டங்களாலும் தண்டிக்கற்பாலர்கள்." என்னும் காந்தசம்பவ சிதம்பரமான்மியத்தில் சிவன் கூறிய பொருளை உடைய வியாசவாக்கியத்தினாலே, அது பேதைமையாம் என மறுக்க.

சைவாகமங்களுக்கு வேதவாகியத் தன்மை எந்த நியாயத்தினாலே கூறியது? வேதப்பொருளுக்கு விருத்தத் தன்மையே வேதவாகியத் தன்மை எனில்; அப்போது வேதத்திலும், கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் பூருவோத்தர காண்டங்கட்கு விருத்தத்தன்மை உண்மையால், அந்தப் பிரசங்கம் உண்டாம். அங்கே இலக்கணையால் தாம் கருதிய பொருளில் முடிவுபெறுமெனில், அது எங்கும் ஒக்கும். வேதத்துக்கு வேறாய் இருக்குந் தன்மையே வாகியத்தன்மை. எனில், அப்போது மிருதிகளும் அப்பிரமாணம் எனக் கொள்ளப்படும். வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை எனில், அப்போது வேதத்துக்கும் வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை உண்மையால், வேதத்துக்கே அப்பிராமாண்ணியப் பிரசங்கம் வரும். ஆதலால், வேதப்பிராமாண்ணியத்திலே நித்தியத்துவமும் வேதத்தை மூலமாக உடைமையாதலும் முடிவல்ல; மற்றென்னெனில், ஆப்தவாக்கியத்துவமேயாம். வேதம் சுத்த சைவ சித்தாந்தம் என்பவை ஒருவாற்றால் ஒவ்வோரிடத்தில் விருத்தப் பொருளை உணர்த்துவனவாயினும், சாமானிய விசேஷத் தன்மையால் ஐக்கம் உள்ளனவாயேயிருக்கும். வியாகரணத்திலே, இகாரம் முதலியவற்றிற்கு ஆதேசமாக உயிர்வருவழி யகார முதலியன வரும் என்று பொதுச் சூத்திரத்தில் விதித்த விதி சிலவிடத்து அகார முதலியவற்றிற்குச் சவர்ணம் வரிற்றீர்க்கமாம் என்று சிறப்புச் சூத்திரத்தால் விதிக்கப்பட்ட விதியினாலே வாதிக்கப்பட்டதாயினும், இரு சூத்திரங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. தருக்க சாஸ்திரத்திலும், பிரமைக்குக்கரணம் பிரமாணம் என்ற சாமானிய வாக்கியத்தாற் பெறப்பட்ட பிரமாணத் தன்மையை உடைய அனுமானம் முதலியன சாக்ஷாற் காரியப் பிரமைக்குக் கரணம் பிரத்தியக்ஷம் என்ற விசேஷ வாக்கியத்தால் வாதிக்கப்பட்டதாயினும், இருவாக்கியங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. ஆதலின், வேதம் பொதுவாகவும் சிவாகமம் சிறப்பாகவும் இருத்தலால், இரண்டும் பிரமாணங்கள் என்றே துணியப்படும். ஆகமம் வேதவிசேஷமாய் இருத்தலால், அதற்கு வேதவாகியத் தன்மையும் இன்று. வேதவிசேஷம் என்று ஆலாசியமான்மியத்தும் சுப்பிரபேதத்தும் சொல்லப்பட்டது. மோக சூரோத்தரத்திலே "புராணம் வேதங்களாலும், வேதங்கள் ஆகமங்களாலும் வாதிக்கப்படும். அவை சாமானியமும் விசேஷமுமாம்; சைவமே மிகுவிசேஷமாம்." என்றும் விருத்தாசலமான்மியத்திலே "பரமசிவனுடைய இந்தத் திருவுருவங்களை விருத்தாசலத்துள்ள ஈசாலயத்தின் மண்டபத்தானங்களிலே வைத்து, சிவாகமத்திற் சொல்லிய விசேஷமார்க்கங்களாலே பூசித்தான்." என்றும், அருணாசல மான்மியத்திலே "சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை. பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுர தருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை." என்றும் வாயவ்வியசங்கிதையிலே "பிற நூல்களிற் கூறப்பட்டதெல்லாம் சிவாகமத்தில் இருக்கின்றது. சிவாகமத்திற் காணப்படாதது பிறிதோர் இடத்திலும் இல்லை" என்றும் சொல்லப்பட்டது.

அற்றேல் வியாகரணம் முதலியன வேதாங்கமாதலின், வேதமே பிரமாணம்; ஆகமம் பிரமாணமன்றெனின்; அற்றன்று. யோகரூடி நாமத்தால் சிவாகமமே நால்வகைப் பிரமாணங்களாலும் முடிந்த ஆகமம் எனப்படுதலாலும், "சித்தாந்தமே சித்தாந்தம்." என்று இரத்தினத்திரயத்திலே கூறப்படுதலாலும் அதுவே பிரமாணம்; வேதம் பிரமாணமன்று. அற்றேல், வேதமும் ஆகமம் சித்தாந்தம் என்னும் சத்தங்களாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமெனின், ஆகமமும் வேதசத்தத்தாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமென்று சமநீதியாமே. ஆதலால் சிவாகமமே முக்கிய விருத்தியால் ஆகமமெனவும் சித்தாந்தமெனவும் படுதலில், சருவோத்கிருஷ்டப் பிரமாணமாமென்று சாதிக்கப்பட்டது. இருக்கு வேதத்திலும், இருக்கு வேதசிரசிலும், யசுர்வேதத்திலும், யசுர்வேதசிரசிலும், சாமவேதத்திலும், சாமவேதசிரசிலும், ஒரோவிடத்தில் அதர்வவேதத்திலும், அதர்வவேதசிரசிலும், லெளகிகநூற்பொருளும், வைதிக நூற் பொருளும், அத்தியான்மக நூற்பொருளும், அதிமார்க்க நூற்பொருளும், யதோசிதமாக எவ்வாற்றானும் சொல்லப்பட்டன; அதர்வசிரசிலே மாந்திர நூற்பொருள் விசேஷித்துச் சொல்லப்பட்டது. செளர சங்கிதையிலே "ஆகமத்தைப் பற்றிக் கொண்டன்றோ சில புராணங்கள் சில சில இடங்களில் பிரத்தியட்சமாக வேதத்துக்கு விருத்தமாகிய பொருளைக் கூறுகின்றன" என்று சொல்லியபடியே சைவாகமம் வேதவிரோதப் பொருள் கூறுதலும், சாமானிய வேதத்தைக் குறித்து விசேஷவேதமாயிருத்தலாலேயாம். விசேஷசாமானியங்கள் சிலவிடத்து விரோதப் பொருள் கூறினாலும், விருத்த சாத்திரமென்னுந் தோஷமும் வாகியத்தன்மையுஞ் சாற்றலாகாது, காமிகத்திலே "வேதம் முதலிய நூல்களெல்லாம் இரெளத்திரங்களாம்; சித்தாந்தமே செளமியமாம்" என்று கூறப்பட்டது. ஞானசித்தி முதலியவற்றிலே, சாமானிய சைவநூல்களும், அவற்றின் உபபேதங்களும் பூருவகாண்டமென்றும் காமிகம் முதலிய சைவசித்தாந்தங்களும் அவற்றின் உபபேதங்களாகிய பெளட்கரம் சருவ ஞானோத்தரம் முதலியனவும் உத்தரகாண்டம் என்றும் உணர்த்தப்பட்டது. சூதசங்கிதையிலே பதினெண் புராணங்களையும் சத்தியவதியின் புத்திரர் செய்தார்; காமிகம் முதலியவற்றைப் பரமசிவனே செய்தார் என்று கூறுதலால் சிவாகமங்களைச் சாக்ஷாத்தாகச் சிவனே செய்தனர் என்று துணியப்பட்டது.

வேதநெறி வழுவிய மாந்தர்க்கே தந்திரங்கள் கூறப்பட்டன எனச் சில நூல்களிற் கூறியதென்னையெனின்; ஆண்டுக் கூறியது வாமசோம லாகுள பைரவ முதலிய தந்திரங்களை அன்றிச் சிவசித்தாந்தத்தை அன்றென்க. அது அப்பதீக்ஷிதர் இயற்றிய சிவதத்துவ விவேக விருத்தியில் பல பிரமாணங் கொண்டு சாதிக்கப்பட்டது. காந்தத்திலே "சிவன் அழிவற்ற தக்ஷிணாமூர்த்தியாய்த் தோன்றி, ஆலமரத்தின் அடியிலே இருந்து, குற்றமில்லாத இவர்களை ஓதுவித்தார். இவர்கள் விதிப்படியே வேதங்களையும் உபநிடதங்களையும் நெடுநாள் வரையும் ஓதியும், சிவனது மாயையினாலே ஞானம் நிலை பெறாதவராயினர். அவர்கள் ஒருங்குகூடி, உமாபதியாகிய சிவனிடத்திற் கேட்க விரும்பி, வெள்ளிமயமாகிய கைலாசத்திற்போய், தவஞ் செய்தார்கள். இந்த எல்லையில் சிவன் வெள்ளியங் கைலாசமலையிலே சனகர் முதலிய முனீந்திரர்களுக்குத் திரிபதார்த்த சம்மிதமும் இரகசியமுமாகிய ஆகமாந்தம் என்னும் பெயரையுடைய சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்" என்றும், சைவ புராணத்திலே " பசு சாத்திரங்களைப் பற்றாதுவிட்டுச் சிவசாத்திரத்தைப் பற்றிப் பயிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே ஆசாரியராவாரென்று புகழப்படுவர். சிவாகமத்திற் கூறப்பட்ட ஞானமே ஞானமென்று சொல்லப்படும். அதுவே சிவனனப் பற்றின பெரியோருக்கு முத்திசாதனம்" என்றும் கூறுதலாலும்; சுவேதர் உபமன்னியு கிருஷ்ணர் அருச்சுனர் முதலியோர் சிவசித்தாந்த மார்க்கச் சிரவணாசரணஞ் செய்தமையாலும், சிவசித்தாந்தம் வேதநெறி வழுவிய மாந்தர்க்குக் கூறியதென்பதே கூடாது. இன்னும், பிரம மீமாஞ்சைக்கு நீலகண்ட சிவாசாரியர் இயற்றிய பாஷ்யத்திலே "வேதசிவாகமங்களுக்குப் பேதங்காண்கின்றிலம், வேதமே சிவாகமம்" என்று கூறப்பட்டது. வேதங்கள் சிலவிடத்துச் சிவசாத்திரப் பொருளைச் சிரசிலே தாங்கி இருத்தலால், "வேதமே சிவாகமம்" என்று உபசரிக்கப்பட்டது. விரோதப்பொருள் மாத்திரமே தள்ளப்படுதலால், இவ்விரண்டற்கும் பெரும்பாலும் ஒற்றுமை உண்டாம். அப்படியே வேதம் முதலிய சகல சாத்திரங்களும் சிவாகமத்துக்கு விரோதமில்லாத வழியே பிரமாணங்களாகும். சிவாகமம் தனது பொருட்டன்மையால், மகாமாயையும் அதனிற்றோன்றிய சிவம் முதற் சுத்தவித்தை ஈறாகிய காரியங்களும், மல மாயா கர்மங்களும், கலைமுதற் பிருதிவி ஈறாயுள்ள காரியங்களும் ஆகிய அமிதார்த்தங்களை விளக்கலால் வியாபகமாம். வேத முதலியன தம் பொருண்மையால், பிரகிருதி முதல் பிருதிவி ஈறாயுள்ள காரியங்கள் மாத்திரமாகிய மிதார்த்தங்களை விளக்கலால் வியாப்பியங்களாம். அது பெளட்கரத்திலே "புருஷ வாக்கியங்களாலே இருஷி வாக்கியமும், இருஷிகளாலே தெய்வ வாக்கியமும், தேவராலே பிரம வாக்கியமும், பிரமாவாலே விஷ்ணு வாக்கியமும், விஷ்ணுவினாலே உருத்திர வாக்கியமும், உருத்திரனாலே சிவவாக்கியமும், வாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், ஒன்றினொன்று மேன்மேலும் சிறந்தனவாம்; மேல் உள்ளனவற்றால் கீழுள்ளவைகளே வாதிக்கப்படல் வேண்டும். சிவ சாஸ்திரத்துக்கு விரோதமில்லாமலே சகல சாஸ்திரங்களும் நிற்கும். ஆனால் மற்றை நூல்களுக்கு விரோதம் இல்லாமல் சிவசாஸ்திரம் இருக்க வேண்டுவதில்லை. ஏனெனில், சிவதந்திரம், வியவஸ்தாபகம், ஏனையன வியவஸ்தாப்பியம். ஆதலில், சிவதந்திரத்தால் வாதிக்கப்பட்டது பிரமாணமன்று" என்றும், மிருகேந்திரத்திலே "மிதார்த்தத்திலும் அமிதார்த்தத்துக்கு மேன்னம (உண்டென்பர் புலவோர்கள்)" என்றும் கூறியவாற்றால் உணர்க. இனியமமயும்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்தில்லை வாழந்தணர் மூவாயிரரும் தமக்குச் சிவகணநாதராய்த் தோன்றக் கண்டு, அத்தன்மையைத் திருநீலகண்டயாழ்ப்பாணருக்குக் காட்டினார் என்று திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் புராணத்திற் சொல்லப்பட்டது. அந்நாயனார் "ஆடி னாய்நறு நெய்யொடு பாறயிர்" என்னுந் திருப்பதிகத்திலே "நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேலுற்ற கண்ணி னார்பற்று - சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் - சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலஞ் சேர்தலாற்கழற் சேவடி கைதொழக் - கோலத் தாயரு ளாயுன காரணங் கூறுதுமே." என்னுந் திருப்பாட்டிலே தாம் இவர்களைக் கண்ட தன்மையைக் கூறி, இவர்கள் " தொழுதேத்து சிற்றம்பலம்" என்று அருளிச் செய்தார். இதனாலும், இவர்களது மகிமை தெளியப்படும். சிவானுபூதிமானாகிய சேக்கிழார் நாயனாரே "இன்றிவர் பெருமையெம்மா லியம்பலா மெல்லைத் தாமோ - தென்றமிழ்ப் பயனா யுள்ள திருத்தொண்டத் தொகை முன்பாட - வன்றுவன் றொண்டர் தம்மை யருளிய வாரூரண்ணன் - முன்றிரு வாக்காற் கோத்த முதற்பொரு ளானா ரென்றால்" என்று திருவாய் மலர்ந்தருளினாராயின்; புழுத்த நாயினுங் கடையனாகிய யானா இம்மகான்களது எண்ணிறந்த பெருமையை விரித்துச் சொல்ல வல்லன்!

இதுகாறுங் கூறியவாற்றால், வேதாகங்களையேனும் அவற்றின் வழிநூல் சார்பு நூல்களையேனும் சற்குரு முகமாகக் கற்றல் கேட்டல் செய்யா தொழியில், பசுபதியாகிய சிவனை உணர்ந்து மனம்வாக்குக் காயங்களினால் மெய்யன்போடும் அவரை வழிபட்டுப் பிறவிப்பிணி தீர்த்து உய்தல் கூடாது என்பதும், கற்றல் கேட்டல் செய்தவழியும், சிவனை வழிபடா தொழியிற் பயனில்லை என்பதும் பெறப்படும். இதற்குப் பிரமாணம்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம். "கல்லார் நெஞ்சி - னில்லானீசன் - சொல்லா தாரோ - டல்லோ நாமே. எ-ம்." திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் - "பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்க - டுன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீரவேண்டின் - மன்னுவான் மறைகளோதி வனத்தினுள் விளக்கொன் றேற்றி - யுன்னுவா ருள்ளத் துள்ளா னொற்றியூ ருடையகோவே." எ-ம். திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா: "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை - மற்றவ ரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் - செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத் திருவீழி மிழலை வீற்றிருந்த - கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளங் குளிரவென் கண்குளிர்ந் தனவே." எ-ம் திருக்குறள் - "சுற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ - னற்றா டொழாஅ ரெனின்." எ-ம். வரும்.


--------------------------------------------------------------------------------

திருநீலகண்ட நாயனார் புராண சூசனம்


காமம்

பிறவிப் பிணிதீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணைப் பெரியோர்களாலும் நீக்குதற்கு அரியது. அது நினைப்பினும், காணினும், கேட்பினும் தள்ளினும், விஷமானது தலைக் கொண்டாற் போல எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அது கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்திலே தலைப்படினும்; அவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும், செல்லத் தகாத இடம் இது எனவும், ஆராய விடாது. அது மேலிடம் பொழுது, குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. அக்காமமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாவங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது. ஆதலால் அக்காமமே ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது. இதற்குப் பிரமாணம், கந்தபுராணம். "கண்டதோர் நறவமே காம மேயென - வெண்டருத் தீம்பொரு ளிருமைத் தென்பரா - லுண்டுழி யழிக்குமொன் றுணர்வை யுள்ளமேற் - கொண்டுழி யுயிரையுங் கொல்லு மொன்றரோ" எ-ம். 'உள்ளினுஞ் சுட்டிடு முணர்வு கேள்வியிற் - கொள்ளினுஞ் கட்டிடுங் குறுகி மற்றதைத் - தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற் - கள்ளினுங் கொடியது காமத் தீயதே." எ-ம். "ஈட்டுறும் பிறவியும் வினைகள் யாவையுங் காட்டிய தினையதோர் காம மாதலில் - வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை - வீட்டின ரல்லரோ வீடு சேர்ந்துளார்." எ-ம். "நெஞ்சினு நினைப்பரோ நினைந்து ளார்தமை - யெஞ்சிய துயரிடை யீண்டை யுய்த்துமேல் - விஞ்சிய பவக்கடல் வீழ்த்து மாதலா - னஞ்சி璽ுந் தீயது நலமிலகாமமே." எ-ம். "மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப் - பெண்ண甶சை நீங்க லெளிதோ பெரியோர் தமக்கும்." எ-ம். திருவிளையாடற் புராணம் - "அணங்குநோ யெவர்க்குஞ் செய்யு மனங்கனா லலைப்புண்டாவி - யுணங்கினா ருள்ளஞ் செல்லு மிடனறிந் தோடிச் செல்லா - குணங்குல னொழுக்கங் குன்றல் கொலை பழி பாவம் பாரா - விணங்குமின் னுயிர்க்கு மாங்கே யிறுதிவந் துறுவ தெண்ணா." எ-ம். "கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வ - வெள்ளுண்ட காமம் போல வெண்ணினிற் காணிற் கேட்கிற் - றள்ளுண்ட விடத்தி னஞ்சந் தலைக்கொண்டா லென்ன வாங்கே - யுள்ளுண்ட வுணர்வு போக்கா துண்டபோ தழிக்குங் கள்ளூண்." எ-ம். "காமமே கொலைகட் கெல்லாங் காரணங் கண்ணோ டாத - காமமே களவுங் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சங் - காமமே கள்ளுண் டற்குங் காரண மாதலாலே - காமமே நரகபூமி காணியாக் கொடுப்ப தென்றான்." எ-ம். நாலடியார் - "அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் - வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக் - கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம மவற்றினு மஞ்சப்படும்." எ-ம். "ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு - நீருட் குளித்து முயலாகு - நீருட் - குளிப்பீனுங் காமஞ் சுடுமேகுன் றேறி - யொளிப்பினுங் காமஞ் சுடும்." எ-ம். நீதிசாரம் - "ஊரு ரெனும்வனத்தி லொள்வேற்கண் மாதரெனுங் - கூருர் விடமுட் குழாமுண்டு - சீரூர் - விரத்திவை ராக்கிய விவேகத் தொடுதோ - லுரத்தணியா தேகலெவனோ." எ-ம். வரும். ஆதலால், காமம் மனசிலே சிறிதாயினும் எழ ஒட்டாமல் அடக்கல் வேண்டும். சிறிது எழுங்காலத்து, சிவனடியாரோடு கலத்தல் சிவசாத்திரம் பொருள்களைச் சிந்தித்தல், கேட்டல் முதலிய நற்செய்கைகளாலே, அதனிடத்தே கருத்து இறங்காவண்ணம் காலம் போக்கல் வேண்டும். மனைவியைப் புணர்தல் மாத்திரமே வேதாகமாதிகளில் விதிக்கப்பட்டதாம். மனனவியையும், புத்திரநிமித்தமன்றிப் போக நிமித்தம் புணர்தல் பாவமேயாம்.

சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவராய் இல்லறத்தில் வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், தம்முடைய மனைவி இருப்பவும். தம் மனசிலே தலைப்பட்ட காம மிகுதியினாலே, நூல்களில் விலக்கப்பட்டதாகிய பரத்தைப் புணர்ச்சியைச் செய்தார். செய்தாராயினும், தம்முடைய மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைத் தீண்டும்படி சென்றபொழுது, அவர், "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்டவுடனே, அவரைத் தீண்டாமல், நீங்கினமையாலும்; அதுமாத்திரமன்றி, இவர் எம்மை என்று பன்மையாகச் சொன்னதனால் இவரை மாத்திரமன்று மற்றைப் பெண்களையும் மனசினால் நினைத்தலுஞ் செய்யேன் என்று உறுதி கொண்டமையாலும்; இவருடைய மனசிலே காமந்தலைப்பட்ட போதும் சிவபத்தி அதினும் மிகத் தலைப்பட்டிருந்தது என்பதும், அதனால் அச்சிவபத்தியானது பின் ஒருபோதும் இவர் மனசிலே காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தது என்பதும் துணியப்படும்.

இவ்விருவரும், மிக்க இளமைப் பிராயத்தினராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், தங்களுள்ளே நிகழ்ந்த சபதம் சிறிதாயினும் வழுவாவண்ணம், காமத்தை முற்றும் ஒழித்து வாழ்ந்த பெருந்தகைமையை நினைக்குந்தோறும், இவர்களிடத்துள்ள சிவபத்தியின் வலிமை விளங்குகின்றது. விட்டுணு, சலந்தராசுரன் இறந்துவிட, காம மிகுதியினால் அவனது சரீரத்திலே பிரவேசித்து, அவனுடைய மனைவியைப் பலநாட் புணர்ந்து, பின்பு தம்மை விட்டுணு என்று உணர்ந்த அவளாலே சபிக்கப்பட்டு, வருத்தமுற்றார். பிரமா தம்மாலே படைக்கப்பட்ட திலோத்தமையினது அழகைக் கண்டு மயங்கி, அவளைப் புணரின் மகட்புணர்ச்சிக் குற்றமாம் என்பது பாராமல், அவளைத் தொடர்ந்தார். இந்திரன் கெளதம முனிவருடைய மனைவியாகிய அகலிகையைப் புணர்ந்து தன்னுடம்பிலே ஆயிரம் யோனி உண்டாகும்படி அம்முனிவராலே சபிக்கப்பட்டான். சந்திரன் தன் குருவாகிய வியாழனுடைய மனைவியைப் புணர்ந்து, கயரோகம் அடைந்தான். இன்னும் முனிவர்கள் பலர் உண்டி முதலியவற்றை ஒழித்து, மலைகளினும், காடுகளினும் தவஞ்செய்யும் பொழுதும், தேவப் பெண்களையும் அசுரப் பெண்களையும் இராக்ஷசப் பெண்களையும் கண்டு மயங்கி, பாவம் என்பதும் பழியென்பதும் பாராமல், அவர்களைப் புணர்ந்து, தங்கள் தவத்தை இழந்தார்கள். தருமம் வளர்ந்தோங்கும் முன்னை யுகங்களிலே, தேவர்கள், முனிவர்கள் தாமும், காமமிகுதியினாலே பரஸ்திரீ கமனம் புத்திரிகமனம் குருபன்னிகமனம் முதலிய பெருங்கொடும் பாவங்களைச் செய்தார்களே! இக்கலியுகத்திலே இந்நாயனாரோ, தமது மனைவியார் சிவனைச் சுட்டி இட்ட ஆணைகடத்தல் சிவத்துரோகமாம் என்பது பற்றி, மனைவியைத் தானும் புணராதொழிந்தார்! இதனால் இவரது பத்தி மகிமை எவ்வளவு வியக்கத்தக்கது! இவ்வியப்பு நோக்கி அன்றோ, பட்டணத்துப் பிள்ளையாரும் "மாது சொன்ன சூளா லிளமை துறக்கவல் லேனல்லன்" என்றார்.

கற்புடைய மகளிரும், அழகிற் சிறந்த ஆடவரைக் காணில், அவர் தமக்குத் தந்தையராயினும், சகோதராயினும், புதல்வர்களாயினும், தமது நிலை கலங்கி, அவரையும் நிலைகுலைப்பார்களே! அது "தந்தையாயினும் விழைவிற் றன்னுடனே யொருவயிற்றிற் சார்ந்தாரேனு - மைந்தரா யினு மிகவும் வனப்புடைய ரெனிலவர் மேன் மடநல்லார்தஞ் - சிந்தைநடந் திடுமதனாற் சாம்பன் மலர்க் கணைவேளிற் செவ்வி வாய்ந்தோன் - பைந்தொடியாரினதமரு முவளகத்திற் றனிவருதல் பான்மை யன்றே." என்னுங் காசிகண்டச் செய்யுளால் அறிக. இவ்வாறாகவும், இந்நாயனாரும் மனைவியாரும், மிக்க இளமைப்பருவத்தராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், புணர்ச்சி இன்றிச் சபதத்தைப் பேணினமையால், இவர்களது சிவபத்தியின் பெருமை இவ்வளவு என்று சொல்லத் தக்கதன்று. இந்நாயனார் பரமசிவன் சிவயோகியாராய் வந்து தம்மிடத்துவைத்த ஓட்டைத் தாம் கவராமைக்குத் தமது மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொன்ன வழியும், சபதம் வழுவாமற் காத்தார்.

இவர்கள், தங்களுக்குள்ளே நிகழ்ந்த சபதம் தங்கள் இருவருக்கு மாத்திரமன்றி அயலவருக்கும் வெளிப்படாதிருப்பவும், அதனை வழுவாது காத்தமையாலும்; இவர் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் பண்ணித் தரும்படி சிவயோகியார் நெருக்கியபோதும், தமது செயற்கருஞ்செயலை வெளிப்படுத்தாமையாலும்; இறுதியிலே மிக நெருக்கியபோது, தாம் அதனை வெளிப்படுத்தாதொழியில், அவரது சந்தேகம் தீராதென்பது பற்றியே வெளிப்படுத்தினமையாலும்; இவர்கள் புகழை விரும்பிச் சீவர்களைச் சாட்சியாகக் குறியாமல், உயிர்க்குயிராகிய சிவனுடைய திருவடியையே சாக்ஷியாகக் குறித்து ஒழுகினார்கள் என்பது செவ்விதிற்றுணியப்படும்; இவ்வியப்பு நோக்கியன்றோ, ஆசிரியர் சேக்கிழார் "இளமையின் மிக்குளார்க ளிருவருமறிய நின்ற - வளவில்சீ ராணை போற்றி" என்றும், "அயலறியாத வண்ண மண்ணலாராணை யுய்த்த - மயலில் சீர்த் தொண்டனாரை." என்றும், திருவாய் மலர்ந்தருளினார். சீவர்களைச் சாக்ஷியாகக் குறியாமல் தமது திருவடியே சாக்ஷியாகக் குறித்துப் புண்ணியம் இயற்றும் பெருந்தன்மை உடையோருக்கு, சிவனே வெளிப்பட்டு வந்து, உலகமெங்கும் அவர் புகழை விளக்கி, யாவரும் அவரை வணங்கும்படி இடையறாத பேரின்பத்தைக் கொடுத்தருளுவர், அது, சிவன் இவர்களுக்கு வெளிப்பட்டு, இவர்களது செயற்கருஞ் செய்கையை உலகமெங்கும் அறியும்படி வெளிப்படுத்தி, "வென்றவைம் புலனான்மிக்கீர்" என்று தமது அருமைத் திருவாயினாலே புகழ்ந்து; இவர்களுக்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளினமையால். உணர்க. இக்கருத்து நோக்கியன்றோ, வைராக்கிய சதக நூலாரும் "உன்னுகின்றனை யுனை மணோர் பெரியனென் றுணருமா செயவுன்பான் - மன்னு மீசனே பந்தம்வீ டளிப்பவன் மற்றைய ரறிந்தென்னா - மன்னவன் றிருப் பொன்னடி கரியதா வருந்தவஞ் செய் நெஞ்சே - பின்னை முன்னவ னுலகறிந்திறைஞ்சுமா பெருமைசெய் குவனோரே." என்றார்


--------------------------------------------------------------------------------

இயற்பகைநாயனார் புராண சூசனம்


அடியார் வேண்டியது மறாது கொடுத்தல்

கருணாநிதியாகிய சிவன், தம்மை உணர்ந்து தம்மிடத்து இடையறாத அன்பு செய்யும் மெய்யடியார்களுக்கு, உலகத்துள்ள இனிமையாகிய எப்பொருள்களினும் மிக இனியராய், ஒருகாலும் இடையறாத பேரின்பத்தை ஜனிப்பிப்பார். அது "சுனியினுங் கட்டி பட்ட கரும்பினும் - பனிமலர்க் குழற் பாவைநல் லாரினுந் - தனமுடிகவித்தாளு மரசினு - மினியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே" என அதனை உணர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுமாற்றால் அறிக. ஆதலால், மெய்யுணர்வுடையோர்கள், தமக்கு உரிய மனைவி மைந்தர் முதலிய உயிர்ச்சார்புகளினும், வீடுபொன் முதலிய பொருட்சார்புகளினும், இகபரமும் உயிர்க் குயிராகிய சிவனே தமக்கு மிக இனியர் என்று தெளிந்து, அச்சார்புகளோடு கல்ந்திருப்பினும் தாமரையிலையிற் றண்ணீர்போல அவைகளிடத்தே பற்றுச் சிறிதுமின்றி, அச்சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையர்களாகி, சிவனடியார்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே கண்டு, வழிபட்டு வாழ்வார்கள். சிவன் பகுப்பின்றி எங்கும் வியாபித்திருப்பினும், சிவலிங்கத்தினிடத்தும், சிவனடியாரிடத்தும் தயிரின் நெய்போல விளங்கியும், மற்றையிடங்களிற் பாலின் நெய்போல விளங்காமலும் இருப்பார்.

இவ்வியற்பகை நாயனார், முன்சென்ற பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த அளவிறந்த சிவபுண்ணியங்களினாலே இப்பிறப்பின் கண்ணே யான் எனது அற்றவர் உறவாகிய சிவனே தமக்கு இனியவர் எனத்தெளிந்து, சிவலிங்கத்தையும் சிவனடியார்களையும் சிவன் எனவே கண்டு வழிபடுவாராயினார். ஒரு காமக்கிழத்திமேல் அதிதீவிரமாய் முறுகி வளரும் காமத்தினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய ஒருவன், தனக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவள் அனுபவிக்கக் காண்டலே தனக்கு இன்பமாகக் கொள்ளுதல் போல; தமக்குச் சிவன் எனவே தோன்றும் சிவனடியார்கள்மேலே அதிதீவிரமாய் முறுகிவளரும் அன்பினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவ்வடியார்கள் அனுபவித்தலைக் காண்டலே தமக்கு இன்பமாகக்கொள்ளும் இயல்புடையார். ஆதலாலன்றோ, தம்மிடத்துள்ள பொருள்களுள் அவ்வடியார்கள் கேட்பனயாவையோ அவை எல்லாம் சிறிதாயினும் மறாது, உண்மகிழ்ச்சியோடு கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இவரிடத்துள்ள இம்மெய்யன்பை, சர்வான்மாக்களும் உணர்ந்து உய்யும்படி, உணர்த்துதற்குத் திருவுளங்கொண்ட கிருபா சமுத்திரமாகிய சிவன், ஆன்மாக்களுக்கு உலகத்துப் பொருள்களுள் மனைவியினும் இனிய பொருள் பிறிது இல்லாமையால், சிவனடியார் வேடங்கொண்டு வந்து, இவரிடத்தே இவர் மனைவியையே கேட்க; இவர் கற்பினிற் சிறந்து விளங்கும் அம்மனைவியையும் மறாது பெருமகிழ்ச்சியோடு கொடுத்தார். இதனால் இவர் "பனிமலர்க்குழற் பாவை நல்லாரினும்" சிவனே தமக்கு இனியர் என்று கொண்டார் என்பது, துணியப்படும். அன்றியும், இவர் உயர்க்குடிப் பிறப்பினாலும் பெருஞ்செல்வத்தினாலும் உலகத்தாராலே நன்குமதிக்கப்படுவோராய் இருந்தும், தாம் பிறருக்கு மனைவியைக் கொடுப்பின் உலகத்தாராலே பழிப்புரை உண்டாகுமென்பது நோக்கிற்றிலர். இதனால் இவர் மனசைச் சிவபத்தியே விழுங்கிற்றென்று துணிக; இவர் "நாடவர் பழித்துரை பூணது வாகக்" கொண்டமையும் தேர்க.

இந்நாயனார், பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட பாவம் என்பது நோக்காது தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ எனின், ஆகாது. காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து ஆபரணம் முதலாயின, காமுகரை வசீகரித்து, நினைக்குந்தோறும் காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்குமாறுபோல; விபூதி ருத்திராக்ஷ முதலிய சிவவேடமானது, மெய்யன் புடையாரை வசீகரித்து, நினைக்குந்தோறும், காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்கும், "இது, சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம் - போலும் பொடியணி மார்பிலங்கும்" என்னுந் திருப்பல்லாண்டாலும் அறிக. அவ்வாறே இந்நாயனாரும், விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடத்தைக் கண்டவுடனே அதனால் வசீகரிக்கப்பட்டு, இன்பமேலிடப் பெறுதலால் தம்வயத்தரல்லராவர்; ஆகவே, அச்சிவவேடத்தை உடையாரிடத்துக் குணங்குற்றம் ஆராயும் ஆராய்ச்சி இவருக்கு எப்படிக் கூடும் என்க. அதிதீவிரபத்தி உடையாருக்கு அடியார்களிடத்தில் குணங்குற்றம் ஆராய்தல் கூடாமை "உருப்பொ லாதவ ரிழிகுலத்தவர்நல் லொழுக்க மில்லவரென்று நம்மளவில் - விருப்பி லாதவ ரெனினு மெய்ந்நீறு மிக்க சாதன வேடமுங் கண்டாற் - றரிப்பி லாது சென்றெதிருற வணங்கித் தக்க போனக மளித்தவர்க் கெளிதா - விருப瘍பர் தாமவரடியவர்க் கடியா ரென்பர் யானென தெனஞ்செருக் கறுப்பார்." என்னும் திருவாதவூரடிகள் புராணத்தில் சிவன் கூறிய பொருளை உடைய திருவாக்காற் காண்க. சர்வலோகைக நாயகராகிய பரமசிவனாலே "செயற்கருஞ் செய்கை செய்ததீரனே" என்று வியக்கப்பட்ட இந்நாயனாரது அத்தியற்புத பத்தியின் பெருமையைப் பத்தி என்பது சிறிதும் அறிகிலாச் சிறியேனா விரித்துரைக்கவல்லன்.


--------------------------------------------------------------------------------

இளையான்குடி மாற நாயனார் புராண சூசனம்


மாகேசுர பூசை

புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது. சிவபூசையினும் சிறந்தது மாகேசுரபூசை. மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள். மாகேசுர பூசையாவது மாகேசுரர்களை விதிப்படி பூசித்து, அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம். மாகேசுர பூசைசெய்யு முறைமை கூறுதும். சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே, அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடமே பொருள் எனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக் கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் குவித்தகைகளை உடையராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளம்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து, கைப்பு புளிப்பு தித்திப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுது செய்வித்து, "சரீரம் எடுத்ததனாலே பெறும் பயனை இன்றன்றோ பெற்றேன்" என்று சற்காரவசனம் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப் பின் பதினான்கு அடி போய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவன் எனவே புத்தி பண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம். சிவதருமோத்தரம், "புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச - மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே." எ-ம் பிரமோத்தரகாண்டம், "எள்ளற் படுகீழ் மக்களெனு மிழிந்த குலத்தோ ரானாலும் - வள்ளற் பரமன் றிருநீறு மணியு மணிந்த மாணிபினரை - யுள்ளத் துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே - கொள்ளத்தகைய வறிவினரே பிறவிக் கடலிற் குளியாதார்." எ-ம். சைவசமயநெறி, "தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையு - மீசனென வேயுளத்துளெண்" எ-ம். வரும்.

இம் மாகேசுர பூசையிற் சிறந்த புண்ணியம் பிறிது இல்லை. அது, "அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்து - ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று - ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை - யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்" என்னுந் திருவிளையாடற் புராணத்தினாலும், "படமாடக் கோயிற் பரமற் கொன்றீயி - னடமாடுங் கோயி னம்பற்கங் காகா - நடமாடுங் கோயி னம்பற்கொன் றீயிற் - படமாடுங் கோயிற் பரமற்கங் காமே." எ-ம். "தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந் - துண்டது மூன்று புவனமு முண்டது - கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென் - றெண்டிசை நந்தி யெடுத்திசைத்தானே." எ-ம். "அகர மாயிர மந்தணர்க் கீயிலென் - சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் - பரம யோகி பகலூண் பலத்துக்கு - நிகரில்லை யென்பது நிச்சயந் தானே." எ-ம். "ஆறிடு வேள்வி யருமறை நூலவர் - கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதி - னீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலே - பேறெனி லோர்பிடி பேறது வாகுமே" என்னுந் திருமந்திரத்தினாலும், "மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் - கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா - னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் - கட்டி琻்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்னுந் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும், சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை; பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுரதருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை" என்னும் அருணாசல மான்மியத்தினாலும் அறிக. இல்வாழ்க்கையின் பயன் இம்மாகேசுர பூசையேயாம் அது, "மறமலியுலக வாழ்க்கையே வேண்டும் வந்துநின்னன்பர்தம் பணியா - மறமது கிடைக்கின்" என்னும் தாயுமான சுவாமி வாக்கால் அறிக.

இத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய மாகேசுரபூசையை, எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால், பெருஞ் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். இவர் விதிவழுவாதே மாகேசுரபூசை செய்தனர் என்பது, இங்கே "ஆர மென்பு புனைந்த வையர்த மன்பர்" என்னுந் திருவிருத்தத்தினாலும், "கொண்டு வந்து மனைப்பு குந்து" என்னுந் திருவிருத்தத்தினாலும் உணர்த்தப்பட்டது. இம்மாகேசுர பூசையை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை இவ்வளவு என்று சொல்லக்கூடாத பெரும் வியப்பைத் தருகின்றது! இவருக்கு வந்த வறுமையின் கொடுமையோ மிகப் பெரியது. அது, இங்கே "இன்ன வாறு வளஞ்சு ருங்கவு மெம்பிரானிளை யான்குடி - மன்னன் மாறன் மனஞ்சு ருங்குதலின்றி யுள்ளன மாறியுந் - தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டுபின் - முன்னை மாறி றிருப்பணிக்கண் முதிர்ந்த கொள்கையராயினார்" என்று உணர்த்தப்பட்டது. மாகேசுர பூசை செய்தலினாலே தமது எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து இவ்வளவு மிகக் கொடிய வறுமை வந்து எய்திய பொழுதும், இவர் புண்ணியம் செய்த நமக்குக் கடவுள் இவ்வளவு இடர் செய்தாரே என்று சிவனைச் சிறிதும் நோவாமை எவ்வளவு ஆச்சரியம்! நோவாமை மாத்திரத்தில் நில்லாது நாம் சிவபுண்ணியத்தைச் செல்வம் உள்ளவழிச் செய்யாமையே குற்றம். வறுமை யெய்தியவழி நாம் யாது செய்வோம்! இப்போது செய்யாமை குற்றம் அன்றே என்று, ஒழியாது செய்தமை அதினும் ஆச்சரியமன்றோ! இன்னும், இவரும், இவர் கருத்தோடு சிறிதும் மாறுபாடின்றி ஒழுகும் இவர் மனைவியாரும், தாங்கள் பகல் முழுதும் போசனஞ் செய்யாமையாற் பசி மிகுந்து வருத்தமுறும் நேரத்தினும், பேரிருளென்பதும் பெருமழை யென்பதும் பாராமல் செய்த செயற்கருஞ் செய்கை, அதினும் ஆச்சரியமன்றோ! தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள் புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர் செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், சர்வான் மாக்களும் உணர்ந்து உய்யும்பொருட்டு, பரமசிவன் இவர்களுக்கு வறுமையைக் கொடுத்து, இவர்கள் செயற்கருஞ் செய்கையை வெளிப்படுத்தி, இவர்கட்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையை யாவர் அளக்கவல்லர்! மெய்யுணர்வுடையோர் தமக்கு எத்துணை இடர்வரினும், சிவனிடத்து அன்பு குன்றார் என்பது இதனால் அறிக. காரைக்காலம்மையாரும் "இடர்களை யாரேனு மெனக்கிரங்காரேனும் - படரு நெறிபணியாரேனுஞ் சுடருருவி - லென்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க் - கன்பறா தென்னெஞ் சவர்க்கு." என்று திருவாய் மலர்ந்தருளினார்.


--------------------------------------------------------------------------------

மெயப்பொருணாயனார் புராண சூசனம்


1.சிவாலயங்களை விதி வழுவாது நடாத்தல்

சிவாலயங்களிலே நித்தியமாகிய பூசையும் நைகித்திகமாகிய திருவிழாவும் தவறாது நடத்தற்கு வேண்டும். நிபந்தங்கள் அமைத்து, அவைகளைச் சைவாகமவிதிப்படி சிறிதாயினும் வழுவாது நடத்துவித்தல் அரசனுக்குக் கடனாம். அவ்வாறு செய்யாது ஒழிவனாயின்; அவனுக்கும் அவனால் ஆளப்படும் உலகத்துக்கும் பெருங்கேடு விளையும். இதற்குப் பிரமாணம், திருமந்திரம்; "ஆற்றரு நோய்மிகுமவனி மழைகுன்றும் - போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் - கூற்றுதைத் தான்றிருக் கோயில்களானவை - சாற்றிய பூசைக டப்பிடிற் றானே." எ-ம். "முன்னவனார்கோயிற் பூசைகண் முட்டிடின் - மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங் - கன்னங் களவு - மிகுத்திடுங் காசினிக் - கென்னரு ணந்தி யெடுத்துரைத்தானே", எ-ம் வரும். இச்சிவபுண்ணியத்தைச் சிறிதாயினும் தவறாது நடாத்தினவர் இம்மெய்ப்பொருணாயனார் என்பது, இங்கே "மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங்கோயி - லெங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல் - பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்" என்பதனால் உணர்த்தப்பட்டது.


--------------------------------------------------------------------------------

வீறன்மீண்ட நாயனார் புராண சூசனம்
சங்கமபத்தி முதிர்ச்சி

சிவனிடத்தே இடையறாத அன்பு செய்து, அவருடைய திருவடிகளை அணைய வொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் இயல்பினை உடைய மலசம்பந்தங்களைக் களைந்த மெய்யுணர்வு உடையோர், தம்முடன் இணங்குவோர்களை உயிர்க்கு உயிராகிய சிவனை மறப்பித்துத் தீ நெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் வீழ்த்தித் துயருறுத்தும் அஞ்ஞானிகளுடனே சிறிதும் இணங்காதொழிந்து தம்முடன் இணங்குவோர்களைச் சிவனிடத்தே அன்பை விளைவித்து நன்னெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் நின்றும் எடுத்து வாழ்விக்கும் மெய்ஞ்ஞானிகளாகிய சிவனடியார்களோடுங் கூடி, அவர்கள் திருவேடத்தையும் சிவலிங்கத்தையும் சிவன் என்றே பாவித்து வணங்குவர்கள். இதற்குப் பிரமாணம் சிவஞான போதம். "செம்மலர் நோன்றாள் சேர லொட்டா - வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ - மாலறநேய மலிந்தவர் வேடமு - மாலயந் தானு மரனெனத் தொழுமே." எ-ம். "மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் - சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - யறப்பித்துப் - பத்த ரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரு - மெய்த்தவரை மேவா வினை" எ-ம் வரும்.

இவ்விறன்மிண்ட நாயனார் இவ்வாறே, சிவனுடைய திருவடிகளையே பற்றி நின்று, மலசம்பந்தங்களை ஒழித்து, சிவனடியார்களுடன் இணங்கி, அவர்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே வழிபட்டனர் என்பது, இங்கே "செப்பற்கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி - யெப்ப瓭் றினையு மறவெறியா ரெல்லை தெரிய வொண்ணாதார் - மெய்ப்பத் தர்கள் பாற் பரிவுடையா ரெம்பிரானார் விறன்மிண்டர்." என்பதனாலும், "நதியு மதியும் புனைந்தசடை நம்பர் விரும்பி நலஞ்சிறந்த - பதிகளெங்குங் கும்பிட்டுப் படருங் காதல் வழிச்செல்வார் - முதிர疓 மன்பிற் பெருந்தொண்டர் முறைமை நீடு திருக்கூட்டத் - தெதிர்முன் பரவு மருள்பெற்றே யிறைவர் பாதந் தொழப் பெற்றார்" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.

சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே. சிவனடியாரிடத்து அவமானம் பண்ணிச் சிவலிங்கத்திலே பூசை செய்தலாற் பயன் இல்லை என்பது சிவாகமத் துணிவாதலானும்; சிவபத்தரிடத்து அன்புடையராய் அவர் வழி நிற்பினன்றி, உலகியல்பு மாறிச் சிவானுபூதியுணர்வு மேலிடுதல் கூடாமையானும், இந்நாயனாரது உள்ளமானது சங்கமபத்தியிலே மிக முதிர்ச்சி உற்றது. அதனாலன்றோ, இவர், தேவாசிரியமண்டபத்தில் எழுந்தருளியிருந்த சிவனடியாரை வணங்காது செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரை வலிய ஆண்ட பரசிவனையும், அடியார் திருக்கூட்டத்துக்குப் புறகு என்றும், அச்சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடியபின், அடியார் திருக்கூட்டத்துக்கு உள்ளொன்றும், அருளிச் செய்தார். இவர், அடியார் கூட்டத்தைச் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்காது செல்லக் கண்டமையால் அவரை அத்திருக்கூட்டத்துக்குப் புறகு என்று கூறியது ஒக்கும்; சருவஞ்ஞராகிய சிவனை அவ்வாறு கூறியது குற்றமாகாதோ எனின், ஆகாது. இவர், தற்போதம் சீவித்து நின்றவழி, இவ்வாறு சொன்னாராயில், குற்றம் ஏறும்; இவர், சிவன் பணித்தபடி செய்து, பரம் அற்று, சிவானுபவம் மேலிட்டு, சிவாதீனமாய் நிற்கையால்; இவர் கூறியது சிவன் கூறியதேயாம். அக்கருத்து, இங்கே "வன்றொண்டன் புறகென் றுரைப்பச் சிவனருளாற் - பெருகா நின்ற பெரும் பேறுபெற்றார்" என்பதினும், "பிறைசூடிப் - பூணாரரவம் புனைந்தார்க்கும் புறகென் றுரைக்க மற்றவர் பாற் - கோணாவருளைப் பெற்றார்மற் றினியார் பெருமை கூறுவார்." என்பதினும், அமைந்து கிடந்தமை நுண்ணுணர்வால் உணர்க. காருண்ணிய சமுத்திரமாகிய சிவனே, தமது அடியாரிணக்கம் இல்வழிப் பிறவிப் பிணி தீர்ந்து உய்தல் கூடாமையைச் சருவான்மாக்களும் உணர்ந்து உய்யும் பொருட்டும்; சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு திருத்தொண்டத்தொகை செய்வித்து, சிவனடியார்கள் தம்மிடத்துச்செய்த அன்பின்றிறத்தையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது திருவருட்டிறத்தையும் யாவரும் உணர்ந்து தம்மிடத்து அன்பு செய்து உய்தற்பொருட்டும்; தமது திருவுள்ளத்து முகிழ்த்த பெருங்கருணையினாலே, இந்நாயனாரிடத்து ஆவேசித்து நின்று கூறிய கூற்றாம் இது என்பது தெளிக. சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே என்பது; "ஈசனுக்கன் பில்லாரடியவர்க்கன்பில்லார்" என்னும் சிவஞான சித்தியாரால் உணர்க. மெய்யுணர்வுடையார் சிவனடியார் இணக்கத்தையே பொருளென வேண்டுவர் என்பது "தேவர்கோ வறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்குமற்றை - மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை - யாவர்கோனென்னை யும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ - மேவினோ மவனடியாரடியா ரோடு மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே" "உடையா ளுன்ற னடுவிருக்கு முடையாணடுவு ணீயிருத்தி - யடியே 璽டுவு ளிருவீரு மிருப்ப தானா லடியேனுன் - னடியார் நடுவு ளிருக்கு மருளைப் புரியாய் பொன்னம் பலத்தெம் - முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ண முன்னின்றே" என்னுந் திருவாசகத்தினாலும், "நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே - யல்லாது வேறு நிலையுள தோவக மும்பொருளு - மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு - மெல்லாம் வெளிமயக்கேயிறை வாகச்சி யேகம்பனே." என்னும் பட்டணத்துப் பிள்ளையார் பாடலாலும் காண்க.


--------------------------------------------------------------------------------

அமர்நீதி நாயனார் புராண சூசனம்


சிவனடியாருக்கு அன்னம் வஸ்திரம் கெளபீனம் கொடுத்தல்

சிவஸ்தலத்திலே மடங்கட்டுவித்து, புண்ணிய காலங்களிலே சிரத்தையோடும் கற்பாத்திரமாகிய சிவனடியார்களை அமுது செய்வித்தலும், அவர்களுக்கு வஸ்திரம் கெளபீனம் முதலியன கொடுத்தலும், பெரும்புண்ணியமாம். அன்னம் வஸ்திரம் கெளபீனம் முதலியன தானஞ் செய்தல் புண்ணியம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்திரம். "திருப்பதி வணங்க வென்று சென்றுறுஞ் சிவநேசர்க்கு - மருத்தியாற் கங்கையாதி யாடிட நாடினார்க்கு - மருத்துக வன்னபான மவரவர்க்குபயோகங்கள் - பொருத்துக வூனைப் போக்கிச் சிவபுரம் புகுவர்தாமே." எ-ம். "பிரம சாரியைப்பேரற மோங்கிடுங் - கிரக சாரியை யூட்டிய கேண்மையர் - விரவியேசிவ லோகம் விரும்பிய - பரம போக மனைத்தும் பயில்வரே." எ-ம். "ஊட்டினார்களுதவிய தேதெனுங் - காட்டு ளாடி கழறங் கருத்தினு - ணாட்டி னாரைத் தமைநலி யும்வினை - யோட்டியே சிவலோக முறைவரே" எ-ம். "மாதவர்க்குறவற்களையீந்தவர் - சீத வாரித வாடையுஞ் சேர்த்தினர் - கோதி ல甶வச னாதியுங்கோல்வளை - மாதொர் பாகன் புரத்தினுள் வாழ்ந்தபின்." எ-ம். சிவபுண்ணியத் தெளிவு; "நாற்ற மாமல ரோனெழி னாரணன் - போற்று சங்கர னன்பர்க்குப் பொங்கிழை - யாற்று கோவண மீந்தவ ராயிரந் - தேற்று கோடி யுகஞ்சிவ லோகரே." எ-ம். வரும். இப்புண்ணியத்தைப் புண்ணியஸ்தானத்திலே. புண்ணிய காலத்திலே சிரத்தையோடும் செய்தல் உத்தமோத்தமம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம்; "சிறந்தநற் றேசந் தன்னிற் றேடருங் காலங்கூட - மறந்திடா விதியினாலே வாய்த்தவாதரவுங் கூர - வறந்தனை யறிந்த வாய்மைப் பாத்திரமாவா னங்கைச் -செறிந்திடச் செய்த வற்ப முலகினும் பெருகுந் திண்ணம்." எ-ம். "ஓங்கிய வதனைச் செய்த வுத்தமர் சிவலோ கத்துட் - டாங்கியே போக பேதம் பிரளய சமயந் தன்னி - னீங்கரும் பொருளைக் கண்டு நிறையுற வொருமை நீடத் - தூங்குவ ரின்பந் தோன்றத் துகண்மலஞ் சோருமன்றே" எ-ம். வரும்.

இவ்வமர்நீதிநாயனார் இந்தச் சிவபுண்ணியத்தின் மிகச் சிறந்தவராகி, சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையராயினார். சிவனிடத்து அன்பில்லாமற் செய்யப்படும் புண்ணியம் உயிர் இல்லாத உடல் போலப் பயன்படாதாம், இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்யப்பட்ட தபோபலத்தினாலே சிவன் அருள் செய்யக் கிடைக்கும். இவ்வன்பு உள்ளவழியே சிவனது திருவருள் உண்டாம். அது உண்டாய வழி, முத்தி உண்டாம் இதற்குப் பிரமாணம், வாயுசங்கிதை; "ஆங்கவ னருளாற் பத்திநன்குண்டாம் பத்தியா லவனருளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கரும மியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தி யாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்." எ-ம். "புரிதலா லிறைவ னல்லருள் புரிவாள் புரிந்திடப் போக்கற நின்ற - விருவினை கழியுங் கழிந்திட முத்தி யெய்தலா மிறைவன்வார் கழலி - லொருவழி சிறிது பத்திசெய்வோரு மொருமூன்று பிறப்பின்மேற் பிறப்பின் - மருவிடா ரங்கத் தொடுமனுச் செபித்தன் மாசறு பத்தியாமென்பர்." எ-ம். வரும். இவ்வமர்நீதி நாயனார் மெய்யன்பிற் குறைபடாதவர் என்பது, பிரமசாரி வடிவங் கொண்டு வந்த பரமசிவனது கெளபீனம் இட்டதட்டுக்கு இவர் தம்மிடத்து உள்ள கெளபீனங்கள் வஸ்திரங்கள் பட்டுக்கள் பொன் வெள்ளி முதலிய உலோகங்கள் நவரத்தினங்கள் முதலிய அனைத்தையும் இட்டதட்டு ஒவ்வாது மேலெழுந்து, பின்பு தாமும் தம்முடைய மனைவியும் புத்திரனும், நாம் அன்பினோடு சிவனது திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோமாயின் இத்தட்டு மற்றதனோடு நேர்நிற்க என்று சொல்லி ஏறியவுடனே, அதனோடு ஒத்து நின்றமையாலே தெளியப்படும். அன்பின் திறம் கண்ணப்ப நாயனார் புராணத்துச் சூசனத்தில் விரித்து உரைக்கப்படும் ஆதலால் இங்கே விரித்திலம்.


--------------------------------------------------------------------------------



எறிபத்த நாயனார் புராண சூசனம்

சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லல்

சைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்பநிராகரணம்; "தேசிகர்க்குத் தீங்குசெயுந் தீம்பரைவெல் லல்லதுநீ - சாசமுறு சேர்வாய் நலம்," எ-ம். "அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ்செய் நீசெறியாய் தீங்கு." எ-ம் வரும். களவு, கொலை முதலியன சமயத்தாராலும் உலகத்தாராலும் குற்றம் என்று விலக்கப்பட்டன அன்றோ; அவற்றுல் ஒன்றாகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்னை எனின், அறியாது கூறினாய்; களவு என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கொலை என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கூடாவாம். அவை நல்லனவாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத் தாரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவார் இல்லாத போது உண்ண நினைந்து நின்றவழி; இரக்கமுடையவன் ஒருவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவா வண்ணம் கொண்டு போய் உகுப்பேன் என்று, அவள் காணாமே கொண்டு போய் உகுத்தான். அவள் சனநீக்கத்தின் கண்ணே நஞ்சுண்டு சாம்படி சென்று, அதனைக் காணாமையால், மரணம் நீங்கினாள். அவன் அக்களவினாலே அவளை உய்வித்தமையால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றோ; அது போலவே, இக்கொலையும் நன்மை பயக்கும். சிவனடியார்களுக்கு இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்; இவ்வாறு இடர் செய்வாரைக் கண்டு பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம்வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத்தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால், இக்கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக.

இச்சிவபுண்ணியத்திலே மிகச் சிறப்புற்றவர் இவ்வெறிபத்த நாயனார். இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்திலே வெளிப்பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டுதலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமியாண்டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய யானை அரசனது பட்ட யானையென்பது பாராமல், அதனையும் அது தீங்கு செய்த பொழுது விலக்காத பாகர்களையும் கொன்றமையாலும், என்க. இன்னும், சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச்சோழநாயனாரது பத்தி மிகுதியக் கண்டவுடனே, மிக அஞ்சி, தமது யானையும் பாகரும் இறந்து போகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என்று அவ்வாளைத் தமது கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும்.



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

ஏனாதிநாத நாயனார் புராண சூசனம்

விபூதி மேற் பத்தி மிகுதி

சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது "கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை - மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகிற் - றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி - சிங்காரமான சிவனடி சேர்விரே" என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர். அது "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி - யுவராதே யுவரரைக் கண்ட போது வுகந்தடிமைத் திறநினைந்திங் குவந்து நோக்கி - யிவர்தேவரிவர் தேவ ரென்று சொல்லி - யிரண் டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் - கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறிக.

இவ்விபூதியில் எல்லையின்றி மிகுத்த பத்தியாற் சிறந்தவர் இவ்வேனாதிநாத நாயனார் என்பது, இவர் வாள் வித்தை பயிற்றலினாலே தமக்கு வரும் வளங்கள் எல்லாம் விபூதி இட்ட அடியார்களுக்கே ஆக்கினமையாலும், தமது பகைவன் நீதி இன்றி ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்லப் புகுந்தபோது, தாம் அதனைத் தடுத்து அவனைக் கொல்லுதற்கு வல்லராய் இருந்தும், அவனது நெற்றியில் விபூதியை நோக்கி, அவன் கருத்தே முற்றும்படி நின்று பெருந்தகைமையாலும் தெளியப்படும்.

சிவதருமோத்திரத்திலே "படைபிடித்துத் தங்கையிற் பற்றாரைச் சமரிற் பாழ்படுக்கப் போர் புரியும் பார்ப்பாரைப் பற்றா - ருடலிறுத்தா ரேலவர்க்குப் பிரமகத்திபாவமொன்றுவதன் றெனவுணர்க." எனக் கூறுதலானும், அதிசூரன் விபூதி யிட்டவனாயினும் ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்ல வந்தமையானும், அவனைக் கொல்லுதல் பாவமாகாதே எனின், சத்தியம் நீ சொல்லியது ஆயின், இவர் தமக்கு அவன் தீது செய்யினும் தாம் அவனைக் கொல்லில் தமக்கு மறுமைக்கண் நரகத்துன்பம் வருமென்னும் அச்சத்தால் ஒழித்தவரல்லர்; சிவனடியார் யாதுசெய்யினும் அதுவே தமக்கு இனிமையாம் என்னும் ஆர்வமிகுதியால் ஒழித்தவர் என்க. தன் உயிரை விடுத்தல் பாவம் என்றும் தன்னுயிரைக் காத்தலினும் வேறாகிய புண்ணியம் ஒன்றும் இல்லை என்றும், சிவசாத்திரங்கள் கூறவும், இவர் தமது பகைவன் தம்மைக் கொல்லப் புகுந்த போது அக்கொலையைத் தடுத்துத் தம்முயிரைக் காக்கவல்லராய் இருந்தும், அது செய்யாமை பாவமன்றோ எனின், கருணாநிதியாகிய சிவன் பெறுதற்கரிய இம்மானுட சரீரத்தை எமக்குத் தந்தது தம்மேலே பத்தி செய்து முத்தி பெறுதற் பொருட்டாதலானும், இச்சரீரம் இல்வழி அது கூடாமையானும், அவருக்குத் திருத்தொண்டு செய்தற் பொருட்டு இச்சரீரத்தைக் காத்தல் புண்ணியமும், அதனைச் சிறிதும் நோக்காது கோபம் நோய் முதலிய ஏதுக்களாலே இதனைப் போக்குதல் பாவமும் ஆயின, இந்நாயனார் தமது சரீரத்தை இங்கே பேணாது நின்றமைக்கு ஏது, சிவன்பாலுள்ள பத்தியேயாதலால், அது இத்துணைத்தென்று கூறலாகாத பெரும் புண்ணியமாதல் காண்க; இக்கருத்து நோக்கி அன்றோ, குருலிங்க சங்கமங்களுக்கு இடையூறு வரும் வழிப் பத்தி மிகுதியாலே தன்னுயிர் விடுத்தல் புண்ணியமாம் என்று சிவாகமங்கள் கூறியதூஉமென்க.

முத்திநாதனும் அதிசூரனும் யாண்டுப் புக்கார்கள் எனின், மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்ற பெரும் பாதகத்தால் நரகத்தில் வீழ்ந்தார்கள் என்றே கொள்ளப்படும், அவர்கள் சிவவேடம் தரித்தமையால் பயன் இல்லையோ எனின், அரசனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவனுக்கு உரிய அடையாளங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அவ்வடையாளம் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப்பெருந்தண்டத்தை அவ்வரசனாலே பெற்று வருந்துவர் அன்றோ. அது போலவே, சிவனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவருக்கு உரிய சின்னங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அச்சின்னங்கள் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப் பெருந்தண்டத்தை அச்சிவனாலே பெற்று வருந்துவர் என்பது தெள்ளிதிற்றுணியப்படும். ஆதலால், பெரும் பாதகர்களாகிய அவ்விருவரும் சிவவேடத்தாற் சிறிதும் பயன் பெறாது மிகக் கொடிய நரகத்தில் வீழ்ந்தார்கள் என்பது சத்தியம். சிவன் விதித்தவழி ஒழுகாதவர்க்கு வேடத்தாற் பயன் இல்லை என்பது, "வேடநெறிநில்லார் வேடம்பூண்டென் பயன் - வேட நெறி நிற் போர் வேட மெய் வேடமே - வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் - வேட நெறி செய்தால் வீடதுவாகுமே" எ-ம். "தவமிக்கவரே தலையான வேட - ரவமிக் கவரே யதிகொலை வேட - ரவமிக் கவர்வேடத் தகாதவர்வேடந் - தவமிக் கவர்க்கன்றித் தாங்க வொண்ணாதே" எ-ம். திருமந்திரத்திற் கூறுமாற்றாற் காண்க. எங்ஙனமாயினும், அவர்கள் சிவவேடம் தரித்தவர்கள் அன்றோ; அது நோக்காது நீர் அவர்களைப் பாதகர்கள் என்று இகழ்ந்தது என்னை எனின், "மாதவ வேடங் கொண்ட வன்கணான்" என்றும் "முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்" என்றும் ஆசிரியர் சேக்கிழார் நாயனார் இகழ்ந்தமையின், யாமும் இகழ்ந்தோம் என்க. அவர் இகழ்ந்தமை குற்றமாகாதோ எனின், ஆகாது. மெய்ப்பொருணாயனாரும் ஏனாதிநாத நாயனாரும் பிறிதொன்றும் நோக்காது இவர் சிவனடியார் என்பது நோக்கி அவர்கள் கருத்தின் வழி நின்றமைக்குச் சிவபத்தியே ஏதுவாயினமை போல, சேக்கிழார் நாயனார் அப்பாதகர்கள் இம்மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்றார்களே என்பது நோக்கி இகழ்ந்தமைக்கும் சிவபத்தியே ஏதுவாயினமையால் என்க.

திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

கண்ணப்ப நாயனார் புராண சூசனம்

அன்புடைமை

எமக்கு இனியரென்று எம்மாலே தெளியப்பட்டவர் யாவரோ அவரிடத்தே எமக்கு விருப்பம் நிகழும். எமக்கு யாவரிடத்து விருப்பம் நிகழுமோ அவரிடத்தே எமக்கு அன்பு நிகழும். அன்பாவது தன்னால் விரும்பப்படவரிடத்தே தோன்றும் உள்ள நிகழ்ச்சி. ஆதலால், நாம் நமக்கு இனியவர் யாவரென்று ஆராய்ந்து, நிச்சயிப்பேம். தந்தை தாய் மனைவி மைந்தர் முதலிய உறவினரே எமக்கு இனியரெனக் கொள்வமெனின், இவருக்கும் எமக்கும் உளதாகிய தொடர்ச்சி நீர்க்குமிழிபோல நிலைமில்லாததாகிய இவ்வுடம்பினால் ஆயதாதலானும்; இவ்வுடம்பு ஒழியவே இதனாலாகிய தொடர்ச்சியும் ஒழிதவானும்; உடம்பினாலே தொடர்ச்சி உள்ளபோதும், நாம் தீவினைப் பயனை அனுபவிக்கும்வழி இவ்வுறவினரே பகைவராகவும், நல்வினைப் பயனை அனுபவிக்கும் வழி இவரல்லாத பகைவரும் உறவராகவும், காண்டலானும்; இவர் உறவராய் நின்றவழியும், எமக்கு இதம் செய்தல் தம் பயன் கருதியன்றி எம் பயன் கருதியன்மையானும், இவர் எமக்கு இனியரென்று கொள்ளுதல் ஒருவாற்றானும் கூடாது. நாமோ நம்மை ஒருகாலும் பகைத்தலின்மையானும், எந்நாளும் துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தை அனுபவித்தல் வேண்டுமென்னும் கருத்தே நமக்கு உண்மையானும், நமக்கு நாமே இனியமெனக் கொள்வமெனின், கேவலாவத்தையிலே ஆணவமல மறைப்பினாலே அறிவும் தொழிலும் சிறிதும் விளங்காமையானும், சகலாவத்தையிலே அறிவும் தொழிலும் உள்வழியும், அவை சிற்றறிவும் சிறுதொழிலுமன்றி முற்றறிவும் முற்றுத்தொழிலும் அன்மையானும், அதனால் எமக்கு இது துன்பம் இது துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் பெறும் நெறி இது என உள்ளபடி அறிந்து துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுதல் கூடாமையானும், எமக்கு நாமே இனியமெனக் கொள்ளுதலும் கூடாது. முற்றறிவு முற்றுத் தொழில் உடையராகி, தம் பயன் குறியாது மலபெத்தராகிய ஆன்மாக்கள் மேல் வைத்த பெருங்கருணையினாலே, அவர்களுக்குத் தனுகரணங்களைக் கொடுத்து, ஆணவமல சத்தியைச் சிறிது நீக்கி, அறிவை விளக்கிப் போகங்களைப் புசிப்பித்து, மலபரிபாகமும் இருவினையொப்பும் சத்திநிபாதமும் வருவித்து, பாச நீக்கமும் சிவத்துவவிளக்கமும் செய்யும் பரமபதி ஒருவர் உண்மையானும், அவர் சிவனே ஆதலானும், அவரே எமக்கு இனியரெனக் கொள்ளல் வேண்டும். இக்கருத்தனைத்தும் நோக்கி அன்றோ, "என்னில் பிரரு மெனக்கினி யாரிலை - யென்னி லும்மினி யானொரு வன்னுள - னென்னுளே யுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் - கென்னு ளெநிற்கு மின்னம்ப ரீசனே" என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநாவுக்கரசுநாயனார் என்க. ஆதலால், அச்சிவனையே நாமெல்லாம் விரும்பி, அவரிடத்து இடையறாத மெய்யன்பு செய்தல் வேண்டும். அன்பு பத்தி என்பன ஒரு பொருட் சொற்கள்.

அன்பானது, குடத்துள் விளக்கும் உறையுள் வாளும் போல, ஒருவர் காட்டக் காணற்பாலதன்று; அவ்வன்புடைமையால் வெளிப்படும். செயல்களைக் கண்டவழி, இவை உண்மையால், இங்கே அன்பு உண்டென்று அநுமிதித்துக் கொள்ளற்பாலதாம். அது "அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் - புன்கணீர் பூச றரும்" என்னும் திருக்குறளானும், "சுரந்த திருமுலைக்கே துய்யதிருஞானஞ் - சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த தனமுடையா டென்பாண்டி மாதேவி தாழ்ந்த - மனமுடையா ளன்பிருந்த வாறு" என்னும் திருக்களிற்றுப்படியாரானும் உணர்க. சிவனிடத்து அன்புடைமைக்கு அடையாளம் அச்சிவனுடைய உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்த பொழுதே தன்வசம் அழிதலும், மயிர்க்கால்தோறும் திவலை உண்டாகப் புளகம் கொள்ளலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரை தடுமாறலும், ஆடலும், பாடலும், அவர் உவப்பன செய்தலும், வெறுப்பன ஒழிதலும் பிறவுமாம்.

இவ்வன்பு இல்வழிச் சிவனை அடைதல் ஒருவாற்றானும் கூடாது. அது "உள்ள முள்கலந் தேத்தவல்லார்க்கலாற் - கள்ள முள்ளவ ருக்கருள் வானலன் - வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை - வள்ள லாகிய வான்மியூ ரீசனே." "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே - புக்கு நிற்கும் பொன் னார் சடைப் புண்ணியன் - பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு - நக்கு நிற்ப னவர் தம்மை நாணியே" என வரும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், "தேவ தேவன்மெய்ச் சேவகன் றென்பே ருந்துறை நாயகன் - மூவ ராலு மறியொ ணாமுதலாய வானந்த மூர்த்தியான் - யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான் - றூய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே" என்னும் திருவாசகத்தானும், "என்பே விறகா விறைச்சி யறுத்திட்டுப் - பொன்போ லெரியிற் பொரிய வறுப்பினு - மன்போ டுருகி யகங்குழைந் தார்க்கன்றி - யென்போன் மணியினை யெய்தவொண் ணாதே" என்னும் திருமந்திரத்தானும், "அன்பேயென் னன்பேயென் றன்பாவழைத் தழைத்திட் - டன்பேயன் பாக வறிவழியு - மன்பன்றித் தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமது - சாத்தும் பழமன்றே தான்" என்னும் திருக்களிற்றுப்படியாரானும், "கருமமா தவஞ்செ பஞ்சொல் காசறு சமாதி ஞானம் - புரிபவர் வசம தாகிப் பொருந்திடேம் புரை யொன்றின்றித் - திரிவறு மன்பு செய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போ - முரைசெய்வோ மலர்மு னெய்தி யவருளத் துறைவோ மென்றும்." என்னும் வாயுசங்கிதையானும் அறிக. இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவன் அருளிச் செய்ய வரும். சிவன் அருளின்றி இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. அது "ஆங்கவ னருளாற் பத்திநன் குண்டாம் பத்தியா லவனரு ளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கருமமியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தியாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்." எ-ம். "அற்றுமன் றறியச் சுருங்கயா னுரைப்ப னாயிழை பாகன்வார் கழலிற் - றெற்றன வறிவாற் பத்திமை யெய்தல் வேண்டுமாற் சிறந்தபத் திமையான் - மற்றிணையில்லா முத்தியெய் திடுமான் மாசிலா தாயபத் திமையு - முற்றிழைபாக னருளினா லெய்தல் வேண்டுமான் மொழிந்திடுங்காலே" எ-ம். வாயுசங்கிதையிற் கூறுமாற்றால் உணர்க.

இடையறாது முறுகி வளரும் அன்பின் முதிர்ச்சியிலே சிவம் விளங்கும். ஆதலால் அன்பும் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும். அன்பு முதிர்ச்சியிலே சிவம் விளங்கும் என்பதற்குப் பிரமாணம், திருவாசகம்; "பத்தி வலையிற் படுவோன் காண்க." எ-ம். "அம்மையே யப்பா வொப்பிலா மணியே யன்பினில் விளைந்தவா ரமுதே - பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் - செம்மையே யாய சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே - யிம்மையே முன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே" எ-ம்; திருக்களிற்றுப்படியார். "ஆரேனு மன்பு செயி னங்கே த்லைப்படுங்கா - ணாரேனுங் காணா வரன்." எ-ம். வரும். அன்பும் சிவமும் அபேதமாம் என்பதற்குப் பிரமாணம், திருமந்திரம்; "அன்பு சிவமிரண் டென்பரறிவிலா - ரன்பே சிவமாவ தாரு மறிகில - ரன்பே 瑊ிவமாவ தாரு மறிந்தபி - னன்பே சிவமா யமர்ந்திருப்பாரே." எ-ம். திருவாசகம்; "மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே - யூறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி யுள்ளவா காணவந் - தருளாய் - தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே - யீறிலாப் பதங்களி யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே." எ-ம் வரும்.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய இவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பின்றி விளங்கிய பெருந்தகைமையினர் இக்கண்ணப்ப நாயனார், இவர் வேதாகமங்களைக் கற்றல் கேட்டல் சிறிதும் இல்லா வேட்டுவச் சாதியிற் பிறந்தும், சிவனிடத்து மெய்யன்புடையராயினதற்குக் காரணம் என்னை எனின், முற்பிறப்பிலே வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவனைத் தமது மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் உபாசித்தமையேயாம். இவர் முற்பிறப்பிற் செய்த தவமே இப்பிறப்பில் எல்லையின்றி முறுகி வளர்ந்த இவ்வன்புக்குக் காரணமாயிற்றென்பது இங்கே "முன்பு செய் தவத்தினீட்ட முடிவிலா வின்பமான - வன்பினை யெடுத்துக்காட்ட" என்பதனால் உணர்த்தப்பட்டது. இவர் முற்பிறப்பிலே பஞ்சபாண்டவருள் ஒருவராகிய அருச்சுனர் என்றுணர்க. பாசுபதாஸ்திரம் பெறவேண்டிப் பெருந்தவஞ் செய்த அருச்சுனரோடு கருணாநிதியாகிய பரமசிவன் வேட்டுவ வடிவங்கொண்டு வந்து, விற்போர் செய்து, அவரது வில்லினால் அடிபட்டு, பின்பு அவரைத் தீண்டி மற்போர் செய்து, பின்னர்த் தமது வடிவத்தைக் காட்ட, அது கண்ட அருச்சுனர் சிவனை வணங்கி, தமக்கு முத்தி தந்தருளும் பொருட்டு விண்ணப்பம் பண்ணினார். அதுகேட்ட பரமசிவன், 'நீ பகைவரைக் கொல்லுதற்பொருட்டுப் பாசுபதாஸ்திரம் பெற நினைந்து, தவம் செய்தாய்; ஆதலால், இப்பொழுது பாசுபதாஸ்திரமே தருவோம்" என்று கொடுத்தருளி, "நீ என்னை வேடன் என்று இகழ்ந்தமையால் வேட்டுவராசனாய்ப் பிறந்து, தக்ஷிணகைலாசமாகிய காளத்தி மலையை அடைந்து அன்புருக்கொண்டு, நம்மைப் பூசித்து, பன்றி முதலிய விலங்குகளைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை எமக்கு நிவேதிப்பாய்; அந்நாளிலே உனக்கு மோக்ஷம் தந்தருளுவோம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இச்சரித்திரம் திருக்காளத்திப் புராணத்திற் கூறப்பட்டது.

நாயகி நாயகனது பெயர் கேட்டவுடனே வசமழிதல் தலையன்பும், அவனைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவனைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். அவ்வாறே பக்குவமான்மா சிவனது பெயர் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவரைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவரைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். நாயகனது பெயர் கேட்டவுடன் வசமழியும் தலையன்பையுடைய நாயகிக்கு, அக்கேட்டலோடு காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளரும் அன்பின் பெருக்கம் இத்துணைத்தென்று கூறுதல் கூடாதன்றோ! அது போலவே! "இந்தச் - சேணுயர் திருக்காளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே - கோணமில் குடுமித்தேவ ரிருப்பர்கும் பிடலாம்" என்று நாணன் கூறினமை கேட்டவுடன் வசமழிந்த தலையன்பையுடைய இந்நாயனாருக்கு, அக்கேட்டலோடு சிவலிங்கப்பெருமானைக் காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளர்ந்த அதிதீவிரமாகிய அன்பின் பெருக்கத்தை இத்துணைத்தென்று கூறுதல் கூடாது.

இவர் சிவனது சட்சுதீக்ஷையினாலே பசுத்துவம் நீங்கி, சிவத்துவம் பெற்றார். அது இங்கே "திங்கள்சேர்சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே - யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்தித் - தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் - பொங்கிய வொளியி னீழற் பொருவிலன் புருவமானார்." என்பதனாலும் "முன்புதிருக் காளத்தி முதல்வனா ரருணோக்கி - னின்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல் யாக்கைத் - தன்பரிகம் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற - வன்புபிழம் பாய்த்திரிவா ரவர்கருத்தினளவினரோ" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.

பத்தியானது மந்தகரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்படும். அரக்கானது வெய்யிலின் முன் இருந்து வெதும்புதல் போல்வது மந்ததரபத்தி. மெழுகானது வெய்யிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போல்வது மந்தபத்தி. நெய்யானது சூட்டுக்கு இளகுதல் போல்வது தீவிரபத்தி. தைலதாரையானது சிறிதும் இடையறாது ஒழுகுதல் போல்வது தீவிரதரபத்தி. இந்நாயனாரது பத்தி தீவிரதரமேயாம் என்பது சிவலிங்கப்பெருமானைக் கண்டவுடனே நிகழ்ந்த இவர் செயல்களாலே தெளியப்படும். அச்செயல்கள் "மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள - வேகநா யகரைக் கண்டா ரெழுந்தபேருவகை யன்பின் - வேகமா னது மேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு - மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்" "நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கா றோறும் - வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கணீ ரருவி பாய - வடியனேற் கிவர்தா மிங்கே யகப் பட்டா ரச்சோ வென்று - படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற" என்னும் திருவிருத்தங்களால் உணர்க.

இந்நாயனார் சுவாமியைக் கண்டவழி வணங்குதல் பயின்றறியாதவராதலானும், தாய் தந்தையர் தங்களுக்கு இனிய பிள்ளையைக் கண்டவுடன் பேராசையினால் மிக விரைந்து ஓடிப் போய், தழுவி மோத்தல் உலகியற்கை ஆதலானும், தமக்கு இனியராகிய சுவாமியைக் கண்டவுடனே அதிமோகமாய் விரைந்து ஓடிச் சென்று தழுவி மோந்தார் என்க. இவர் தம்மினும் சிவனே தமக்கு இனியராக அது பற்றியெழுந்து முறுகி வளர்ந்த அன்பே வடிவமாயினார். அது, இவர் திருக்காளத்தி மலையை அணுகுமுன் பெரும்பசியால் வருத்தமுற்றும், சிவலிங்கப்பெருமானைக் கண்டபின் இவருக்கு அவ்வருத்தமென்பது சிறிதாயினும் தோன்றாமையானும், சிவபெருமான் துட்ட மிருகங்கள் திரியும் காட்டிலே தனித்திருத்தலால் அவரைத் தாம் பிரியமாட்டாமையையும், அவருக்கு அமுது செய்ய இறைச்சி இன்மையால் அதன் பொருட்டுத் தாம் பிரிதல் வேண்டினமையையும், குறித்து இவருக்கு எழுந்த பதைப்பு மிகுதியினாலும் தெளிக. அப்பதைப்பும் அதனால் நிகழ்ந்த செயல்களும் இங்கே "வெம்மறக் குலத்து வந்த" என்பது முதல் "முன்புநின் றரிதினீங்கி" என்பது இறுதியாய் உள்ள எட்டுத் திருவித்தங்களாலும் உணர்த்தப்பட்டன. இன்னும், இவர் சிவபெருமானைக் கண்ட நாள் முதல் ஆறு நாளும் பசி நித்திரை யென்பன இவருக்குச் சிறிதும் தோன்றாமையானும், காடன் தம்மோடு பேசினமையும், அவனும் நாணனும் தம்மை விட்டு போயினமையும், தந்தையாகிய நாகன் முதலியோர் வந்து தம்மோடு பேசினமையும், தம்மைப் பிரிந்தமையும் பிறவும் இவருக்குச் சிறிதும் விளங்காமையானும், இவர் இடையறாது ஒழுகும் தைலதாரைபோல ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகும் அன்புருவமே ஆயினார் என்பது ஐயம் திரிபு அற உணரப்படும்.

சிவன் உவப்பன செய்தலும் வெறுப்பன ஒழிதலும் அவரிடத்து அன்புடைமைக்கு அடையாளம் என்றீர். சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் நிவேதித்தலும், வாயிற் கொண்டு வரும் நீரால் அபிஷேகம் செய்தலும், காற்செருப்பினாலே திருமுடியில் நிருமாலியம் கழித்தலும், தலையிற் சூட்டிய பூக்களைச் சாத்தலும் ஆகிய இவைகள் நினைப்பினும் எண்ணிறந்த காலம் மிகக் கொடிய நரகத் துன்பம் பயக்குமன்றோ? அங்ஙனமாக, இவர் இவற்றைச் செய்தமை என்னையெனின், இவர் இப்பிறப்பில் ஓர் ஆசாரியரை அடைந்து, இது புண்ணியம் இது பாவம் இது செயற்பாலது இது ஒழிதற்பாலது என்று ஒருகாலும் கேட்டும் அறிந்தவர் அல்லர். முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியினாலே தாம் சிவலிங்கப் பெருமானைத் தரிசித்த பொழுது திருமுடியிலே நீர் வார்த்து மலர் இட்டு இருத்தல் கண்டமையானும், ஒரு பார்ப்பான் யாதையோ கொண்டு வந்து ஊட்டினான் என்று கேட்டமையானும், அவர் மாட்டு முறுகி வளர்ந்த அன்பினாலே இவையே சுவாமிக்கு உவப்பாவன என்று துணிந்து, அவ்வாறு செய்ய நினைந்து, தமக்கு முன் இனியதாய் உள்ளது மாமிசமே ஆதலால் அதுவே சவாமிக்கும் இனியதாம் என்று மாமிசத்தை வாயில் அதுக்கிச் சுவை பார்த்து இனியனவற்றைப் படைத்தலும், பாத்திரம் இன்மையால் அபிஷேகத்திற்கு ஜலம் வாயில் எடுத்துக் கொள்ளுதலும், ஒரு கையில் தேனொடு கலந்த மாமிசம் பொருந்திய கல்லையும் மற்றக் கையில் அம்புவில்லும் இருத்தலால் புஷ்பங்களைத் தலையில் வைத்தலும், திருமுடியில் நிருமாலியத்தைக் காற்செருப்பினால் கழித்தலும் செய்தனர். இன்னும், தாம் மாமிசம் உண்டல் போலச் சுவாமியும் உண்பரென்று நினைத்து "கொழுவிய தசைகளெல்லாங் கோலினிற் றெரிந்து கோத்தங் - கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற் பழகிய வினிமை பார்த்துப் படைத்தலில் விறைச்சி சால - வழகிது நாய னீரே யமுதுசெய் தருளும்" என்று வேண்டிக்கோடலும், சிவன் முடிவில்லாத ஆற்றலுடையவரென்பது நோக்காமல், 'நீர் துணையின்றித் தனித்து இருக்கின்றீரே' என்று நித்திரை இன்றி இரா முழுதும் எதிர் நின்று காத்தலும் செய்தனர். இவையெல்லாம் முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியால் சிவன்மாட்டு எழுந்து இடையறாது மேன்மேலும் முறுகி வளர்ந்த அன்பின் பெருக்கத்தினாலே செய்யப்பட்டமையால், அவருக்கு மிக உவப்பாயின. இது சிவகோசரியாருக்குச் சிவன் திருவாய்மலர்ந்தருளிய பொருளையுடைய, "அவனுடைய வடிவெல்லாம்" என்பது முதல் "உனக்கவன்றன் செயல்காட்ட" என்பது இறுதியாய் உள்ள ஏழு திருவிருத்தங்களாலும் உணர்க. "பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் - செருப瘃புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம் - விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தல் - கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ" என்னும் திருவாசகத்தானும் காண்க. பேய்பிடியுண்டாரது செயலெல்லாம் பேயின் செயலாதல்போல, பசுபோதம் அற்றுச் சிவபோதம் உற்ற இந்நாயனாரது செயலெல்லாம் சிவன் செயலேயாம் என்பது தெளிக.

சிவலிங்கப்பெருமானது திருக்கண்ணில் உதிரநீர் பாயக் கண்டபொழுது இந்நாயனாருக்கு உண்டாகிய பதைப்பு மிகுதியும், தமது கண்ணைத் தாமே இடக்கும்போதும் இவருக்குச் சிறிதாயினும் வருத்தம் தோன்றாமையும், அக்கண்ணைச் சிவனுடைய கண்ணில் அப்பினவுடனே உதிரநீர் நிற்கக் கண்டமையால் எழுந்த ஆனந்த மிகுதியும், சிவனது மற்றக் கண்ணிலும் உதிரநீர் பாயக் கண்டு தமது மற்றக் கண்ணை இடக்கும் போதும் சுவாமி கண்ணில் உதிரநீர் நிற்கும் என்னும் துணிவினாற் பிறந்த விருப்பமும், இவருக்குச் சிவன்மாட்டுள்ள அன்பே இன்பமாம் என்பதைத் தெளிவுற விளக்குகின்றன. அன்பே இன்பம் என்பது "அன்பினா லடியே னாவியோ டாக்கை, யானந்த மாய்க்கசிந் துருக" என்று திருவாசகத்திலும், "முடிவிலா வின்பமான வன்பினை யெடுத்துக் காட்ட" என்று இப்புராணத்தினும், "இறவாத வின்ப வன்பு வேண்டி" என்று காரைக்காலம்மையார் புராணத்திலும், கூறுமாற்றானும் அனுபவத்தானும் உணர்க.

இந்நாயனாரது உயர்வொப்பில்லாத பேரன்பை, எம்போலிகளும் உணர்ந்து தம்மாட்டன்பு செய்து உய்தற் பொருட்டு, சிவகோசரியாருக்கு வெளிப்படுத்தப் புகுந்த பரம கருணாநிதியாகிய சிவன், இவர் தமது மற்றக் கண்ணையும் இடக்கும் பொருட்டு அம்பை ஊன்றும்போது, தரிக்க லாற்றாதவராகிய, தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத் திற்றோன்றிய திருக்கையினாலே இவர் கையை அம்போடும் பிடித்துக்கொண்டு, "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப வென் னன்புடைத்தோன்ற னில்லு கண்ணப்ப" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனால் இந்நாயனாரது அன்பிற்கும், சிவனது திருவருட்கும் உயர்வொப்பின்மை தெளிக. இவ்வாறு மும்முறை அருளிச்செய்தார் என்பது நக்கிரதேவர் அருளிச்செய்த கண்ணப்பதேவர் திருமறத்தில் "மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தது - நில்லு கண்ணப்ப நில்லுகண் ணப்பவென் - னன்புடைத் தோன்ற னில்லுகண் ணப்பவென் - றின்னுரையதனொடு மெழிற் சிவலிங்கந் - தன்னிடைப் பிறந்த தடமலர்க்கையா - லன்னவன் றன்கை யம்பொடு மகப்படப் பிடித் - தருளினன்" என்பதனாலும், இங்கே "மூன்றடுக்கு - நாக கங்கண ரமுதவாக்குக் கண்ணப்ப நிற்க வென்ற" எனக் கூறியவாற்றாலும், உணர்க.

இதுகாறுங் கூறியவாற்றால், சிவன்மாட்டுள்ள அன்பே பேரின்பம் என்பதும், அவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பில்லாதவர் இக்கண்ணப்பநாயனாரே யென்பதும், செவ்விதிற்றுணியப்படும். அது "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபி - னென்னப்ப னென்னொப்பி லென்னையுமாட் கொண்டருளி - வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் - சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ" என்று திருவாசகத்தும், "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற் - கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக் - கண்ணப்பர் - தாமறிதல் காளத்தியாரறித லல்லதுமற் - றாரறிவு மன்பன் றது" என்று திருக்களிற்றுப்படியாரினும், கூறுமாற்றானும் தெளிக.

திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

குங்குலியக்கலயநாயனார் புராண சூசனம்

சிவசந்நிதானத்திலே தூபம் இடுதல்

திருக்கோயில்களிலே சிவசந்நிதானத்தில் மெய்யன்போடு சுகந்ததூபம் இடுதல் சிவபுண்ணியமாம். அது "பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி - யரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து - விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல்லார்க்குக் - கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தான் அறிக. தூபம் ஐவகைப்படும்; அவற்றை "ஐவகைய தூபங்களாவனதாங் குந்துருகந் - துய்யபெருங் கருப்பூரந் துன்னியகா ரகில்வெண்மை - யெய்தியசந் தனமினிய குக்குலுவு மெனவறிக - நெய்யதனாற் றிருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே!" என்னும் சிவதருமோத்தரச் செய்யுளிற் காண்க.

இச்சிவபுண்ணியத்தினால் மிகச் சிறப்புற்றவர் இக்குங்குலியக்கலய நாயனார் என்பது இவர் தமக்குச் செல்வம் உள்ள பொழுதன்றி மிகுத்த வறுமை எய்தியபொழுதும் இத்திருத்தொண்டைத் தவறாது செய்தமையாலே தெளியப்படும். இவர் தமது மனைவியார் இரண்டுநாள் போசனம் இன்றி வருந்தும் புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, நெல்லுக் கொள்ளும் பொருட்டுத் தம்மிடத்திலே தந்த தாலியைக் கொண்டு போம்பொழுது, குங்குலியப் பொதியைக் கண்டு, தம்மையும் தமது மனைவி முதலியோரையும் வருத்தும் பெரும்பசியைச் சிறிதும் நோக்காமல், அத்தாலியைக் கொடுத்துக் குங்குலியப் பொதியை வாங்கி, பெருமகிழ்ச்சி உற்றமையே இவர் இப்புண்ணியத்தை இடையறாத மெய்யன்போடு செய்தனர் என்பதற்குச் சான்றாம். அக்குங்குலியப் பொதி சிவபெருமானது பண்டாரத்திற் சேர்ந்தவுடன், அதனால் இவருக்கு உளதாகிய ஆனந்தம் முன்னை நிகழ்ச்சிகளை மறப்பித்து மேன்மேலும் வளர்ந்த பெரும் வியப்பை "ஒருவர்தம் பண்டாரத்தி - லடைவுற வொடுக்கி யெல்லா மயர்த்தெழு மன்பு பொங்கச் - சடையவர் மலர்த்தாள் போற்றி யிருந்தனர் தமக்கொப் பில்லார்" என்பதனாற் காண்க. இன்னும், இவரது மெய்யன்பின் முதிர்ச்சி, திருப்பனந்தாளிலே இராஜா யானைகள் எல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தும் நிமிராத சிவலிங்கம் இவரால் நிமிர்ந்தமையானும் தெளியப்படும். இத்துணைச் சிறப்பினதாகிய மெய்யன்பினாலன்றோ, சமயகுரவர்களாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் என்பவர்கட்குத் திருவமுது செய்வித்த பெரும்பேறும் பெற்றனர்.



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

மானக்கஞ்சாறநாயனார் புராண சூசனம்

சிவனடியார்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுத்தல்

சிவனடியார்கள் விரும்பியது யாதாயினும், அதனை அவர் கேட்குமுன் அவர் குறிப்பறிந்து கொடுத்தல் மிகச் சிறந்த சிவபுண்ணியமாம். இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மானக்கஞ்சாற நாயனார். இவர் மாவிரதி வடிவங்கொண்டு வந்த பரமசிவன் தம்முடைய புதல்வியினது கூந்தலை நோக்கி, இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்காம் என்று அருளிச் செய்தவுடனே, அப்பெண்ணோ தாம் அருந்தவஞ் செய்து பெற்ற ஏகபுத்திரி என்பதும், அத்தினமோ அவளுக்கு விவாகம் நிகழும் தினம் என்பதும், நோக்காமல் பெருமகிழ்ச்சியோடும் அவளது கூந்தலை அடியில் அரிந்து நீட்டிய பெருந்தகைமையே இவரது சங்கமபத்திக்குச் சான்றாம். குடும்பத்தோடு கூடியிருந்தும் வாசனைமாண்டு நின்ற இந்நாயனாரது மெய்யன்பை எம்போலிகளும் உணர்ந்து தம்மிடத்து அன்புசெய்து உய்தற் பொருட்டு அன்றோ! கருணாநிதியாகிய சிவன் இவரது செயற்கருஞ் செயலை யாவர்க்கும் வெளிப்படுத்தி யருளினார். மாவிரதம் உட்சமயம் ஆறனுள் ஒன்று. இச்சமயிகள் சிவனை என்புமாலை தரித்த மூர்த்தியாகத் தியானிப்பர்; தமது சாஸ்திரத்திற் கூறிய முறையே தீக்ஷை பெற்று, எலும்பணிதல் முதலிய சரியைகளை அனுட்டிப்பர். பஞ்ச வடியாவது மயிரினாலே அகலமாகச் செய்யப்பட்டு மார்பிலே பூணூலாகத் தரிக்கப்படும் வடமாம். வடம் எனினும் வடி எனினும் ஒக்கும். பஞ்சம் என்பது விரிவு.



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

அரிவாட்டாயநாயனார் புராண சூசனம்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல் மிக்க மேலாகிய சிவபுண்ணியமாம். அது, "அருத்திய வவிழி னேக மமலனை முதலோர்க் கன்பா - லிருத்திடுஞ் சிவலோ கத்தில் வருடமா யிரமு மேயப் - பொருந瘍தியவன்பர் தம்மைப் பொருந்திடிற் பருப்பு நெய்யு - முரைத்த வவ் வருடந் தன்னிற் றசகுண மோங்கு மாங்கே", "பொறித்தநற் கறியும் புல்கிற் றசதச குணிதம் போனந் - தரித்தசாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் - பரித்தநற் கந்த பந்தஞ் சதசத குணமும்பற்று - மிரத்தநற் சாலி யன்ன மயுதமே யெண்ணி லென்றும்." "சாலியின் விசிட்ட ராச சாலியாற் சமைத்த வன்ன - மேலைய பலத்தின் மிக்க தசகுணம் விளைக்கு மீண்டுங் - கோலிய பலங்களேறுங் கொழுவிய நெய்யுங் கூடி - லேலவே கறியுங் கூடிலேற்றமுன் னிசைத்த வாறாம்" என்று சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால் அறிக.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வ மெல்லாம் இழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும்; கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் சீவனம் செய்து வரும் நாளிலே; அச்சிவனது திருவருளினாலே கார்நெற் கிடையாது செந்நெல்லே கிடைப்ப, இது அடியேன் செய்த புண்ணியம் என்று, அவை எல்லாம் சிவனுக்கே அமுது செய்விப்பாராகி, தாம் இலைக்கறி உண்டு கொண்டு இருந்த பெருந்தகைமை, நினையுந்தோறும் எவ்வளவு ஆச்சரியத்தைத் தருகின்றது! இவ்விலைக் கறியும் அற்றுப்போக; ஜலபானமாத்திரம் செய்து கொண்டு இச்சிவபுண்ணியத்தை விடாது செய்தமை அதினும் மிக ஆச்சரியம் அன்றோ! இவர்தாம் சிவனுக்கு அமுது செய்விக்கும் பொருட்டுச் சுமந்து செல்லும் செந்நெல்வரிசி முதலியன தாம் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழுந்தபொழுது கமரிலே சிந்தக் கண்டு, இவற்றை எம்பெருமான் அமுது செய்தருளும் பேற்றைப் பெற்றிலேனே என்று அரிவாளினாலே தமது ஊட்டியை அரிதலுற்ற ஆச்சரியம் யாவராலே சொல்லற்பாலது! இவர்தாம் இன்ப துன்பம் அடைதல், தமக்கு இச்சிவபுண்ணியம் செய்யக் கிடைத்தல் கிடையாமைகளாலன்றி, செல்வ வறுமைகளால் அன்று என்பது ஈண்டும் கூறியவாற்றாற் காண்க.

இந்நாயனார் குடும்பத்தோடு கூடி இருந்தும், தமக்கு உறவு சிவனே என்னும் மெய்யுணர்வு உடையராகி அவரது திருவடிக்கணன்றித் தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி வாசனை மாண்டு நின்ற பெருந்தன்மையினர் என்பது ஈண்டுக் கூறிய இவரது செயற்கருஞ் செய்கையினாலே பொள்ளெனப் புலப்படுகின்றது. இப்பெருந்தன்மை, "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டி யறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதே நாம்'.' எ-ம். "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் - வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லி - லகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்காணையா - சகமார்க்கத் தாலன்றே தான்". எ-ம். திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இவரது இடையறாத இம்மெய்யன்பினால் அன்றோ, பிரம விட்டுணுக்களும் காண்டற்கரிய பரமசிவன் கமரினின்றும் இவரது அரிவாள் பிடித்த கையைத் தடுத்தற்பொருட்டு உயர வீசிய தமது திருக்கரத்தையும் இவரது வியாகுலத்தை ஒழித்தற் பொருட்டுத் தாம் அமுது செய்தலால் ஆகும் ஓசையையும் தோற்றுவித்து, பின்னர் இடபாரூடராய் வெளிப்பட்டு, இவருக்கும், எத்துணை வறுமை எய்திய வழியும் சிறிதும் மாறுபடாது இவர் கருத்தின்வழி நின்ற மனைவியாருக்கும், முத்தி கொடுத்தருளினார். ஆதலால், சிவனது வியத்தி ஸ்தானங்களாகிய குரு லிங்க சங்கமங்களுக்கு வறுமையினும் தம்மால் இயன்றது சிறிதேனும் அன்போடு கொடுத்தல் புண்ணியமும், கொடாமை பாவமுமாம் என்பது துணிக. ஒன்றும் கிடையாதாயினும்; பச்சிலையாயினும் கிடையாததா! அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ! அரிது அன்றே! இது "பரமன் றிருமுன் னழன்முன்னும் பரம குரவன்றிரு முன்னு - மொருமை யுறவே வறுமையினு முதவா தவருஞ் சிறிதேது - மரிது பொருடான் பச்சிலையு மரிதோ வஃது மரிதாயிற் - றிருண மதனைத் திருமுன்னே மாற்ற லரிதோ செயலாலே" எனச் சிவதருமோத்தரத்தில் கூறுமாற்றால் உணர்க.



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

ஆனாயநாயனார் புராண சூசனம்

ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்தல்

அநாதி தொடங்கித் தம்மை வருத்தும் பிறவி நோயினின்றும் நீங்கி உய்ய விரும்புவோர்க்கு, அந்நோயை நீக்க வல்ல பரம வைத்தியராகிய சிவனை, உணர்த்தும் மந்திரம் ஸ்ரீபஞ்சாக்ஷரமேயாம். ஆதலால், இப்பஞ்சாக்ஷரத்தை, சிவன்மாட்டு இடையறாது வளரும் மெய்யன்பினால் மனம் கசிந்து ஓதுவோர் முத்தி பெறுவர். "காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி - யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது - வேத நான்கினு மெய்ப்பொருளாவது - நாத னாம நமச்சிவாயவே" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

சிவநாமத்தை வாளா ஓதலினும், இசை நூற்பயிற்சியின் மிக வல்லராகி, ஏழிசைகளின் முறை வழுவாது முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்தினோடும் வேய்ங்குழலால் வாசித்தல், தமக்கும் அதனைக் கேட்கும் பிறர்க்கும் சிவன்மாட்டு அன்பை வளரச் செய்யும். இதனாலன்றோ, சிவநாமம் கீதத்தோடு கூடுமாயின், சிவன் மிகப் பிரீதியுற்று எல்லையில்லாத திருவருளைச் சுரப்பர் என்க. அது "விளக்கினார் பெற்ற வின்பமெழுக்கினாற் பதிற்றி - யாகுந் - துளக்கினன் மலர் தொடுத்தாற் றூயவிண் ணேற லாகும் - விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகு - மளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே" "இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி - யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை - மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த - நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணர்க.

சிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் இவ்வானாயநாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குக் கருவி கீதத்தின் மிக்கது பிறிது இன்று என்னுங் கருத்தால் அன்றோ, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலால் வாசித்தலே தொழிலாகக் கொண்டனர். அது இங்கே "தம்பெரு மானடி யன்புறு கானத்தின் - மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேல் கொண்டார்" என்பதனால் உணர்த்தப்பட்டது. இவர் "உருகி - யொன்றியசிந்தையிலன்பை யுடையவர்" ஆகி, வாசித்த இவ்வேய்ங்குழல் வாசனையானது எவ்வுயிர்களையும் இசைமயமாக்கி, கசிந்து உருகச் செய்த பெருவியப்பை இங்கே ஆசிரியர் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த அருமைத் திருவாக்குக்களே எம்போலிகளுடைய கன்னெஞ்சையும் கசியச் செய்யுமாயின்; அவ்வாசனையின் பெருமையை யாமா கூறவல்லம்? இந்நாயனார் தமக்கு மாத்திரமன்றி எவ்வுயிர்க்கும் பயன்படுவதாய், நினைப்பினும் கேட்பினும் இனிமை பயக்கும் இத்திருத்தொண்டைச் சிவன்மாட்டு இடையறாது முறுகி வளரும் மெய்யன்போடு செய்தமையால் அன்றோ. "பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்" சிவன் இவருக்கு வெளிப்பட்டு, "எப்பொழுதுஞ் - செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க - விந்நின்ற நிலையேநம் பாலணைவாய்" என்று திருவாய்மலர்ந் தருளினார்.



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

மூர்த்தி நாயனார் புராண சூசனம்

1. சிவனுக்குச் சந்தனக்காப்புக் கொடுத்தல்.

சிவபெருமானுக்குச் சாத்தும் பொருட்டுச் சந்தனக் காப்புக் கொடுத்தல் உத்தம சிவபுண்ணியமாம். சந்தனக் குழம்போடு பனிநீர் குங்குமப்பூ கோரோசனை கஸ்தூரி பச்சைக்கர்ப்பூரம் என்பன கலந்து சாத்தல் உத்தமோத்தமம். சிவனுக்குச் செயற்பாலனவாகிய உபசாரங்கள் எல்லாவற்றுள்ளும் கந்தம் சாத்தலே சிறந்தது என்று சிவாகமம் - செப்ப甹ம். "சாத்துக சாந்துபனி நீர்பளிதங் குங்குமமுஞ் - சேர்த்தியுளத் தாதரவு செய்து." எ-ம். "கூட்டுவித்தா ரும்பளிதங் குங்குமஞ்சாந் தம்பனிநீர் - தீட்டும் விதி தன்னைத் தேர்ந்து." எ-ம் சோமவார விரத கற்பத்தினும், "சுகந்த கந்தஞ் சுலவிய லேபன - முகந்தலிங்கத் தொருதினஞ் சாத்தினோ - ரிகந்து பாவ மிமையவர் கோடியாண் - டகந்தெ ளிந்தங் கரன்பதி நண்ணுவார்." எனச் சிவபுண்ணியத்தெளிவினும் கூறுதல் காண்க.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மூர்த்தி நாயனார் என்பது. இவர் தாம் நாடோறும் தவறாது செய்யச் சங்கற்பித்த இத்திருத்தொண்டை, அது பற்றி அரசன் தமக்குச் செய்த இடுக்கண் மிகுதி கண்டும் தவறாது செய்தமையானும், சந்தனக் கட்டைக்கு முட்டுவந்த பொழுது தமது முழங்கையைச் சந்தனக் கல்லிலே தேய்த்த பெருந்தன்மையானும், தாம் உலகாளும் அரசராய வழியும் செருக்கு உறாது இப்பணியைத் தாமே செய்தமையானும், தெளியப்படும். இவர் தமது சரீரத்திற் சிறிதும் பற்றின்றி, சிவனே தமக்கு இனியர் என்று துணிந்து, அவரையே இடைவிடாது பற்றி நின்று மெய்யன்பர் என்பது இச்செயற்கருஞ் செயலால் உணர்க.

2. சிவனடியாருக்குத் தீங்கு செய்தலால் பெறப்படும் பயன்

சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தோர் நரகத்து வீழ்ந்து வருந்துவர். அது "காட்டுமுள் ளொளியைக் கண்ட கண்ணனைக் கயந்து சொல்லக் - கேட்டவர் கேட்பித்தார்கள் கெழுமின ருடன்பட் டார்முன் - மூட்டின ரென்ற வைத்து மூடருங் கூடிமூழ்கி - மீட்டிடு வாருமின்றி யெரிநிர யத்துள் வேவார்" "மனத்தினால் வடிவு தன்னால் வழுக்கிய சழக்கர் தாமு - மினத்தொடு மிணங்கி வேவ ரெரிநிர யத்தை யெய்தி - யெனைத்துள காலந் தானு மென்றுளத் தேங்கி யெய்ப்பர் - தனக்கய லுறவி லானைத் தவறுவ ரென்னோ தாமே." "மற்றைய நரக பேத மனைத்தினு மயங்கி மூவேழ் - சுற்றமுஞ் சுழலத் தாமுங் கூடியே துயங்கி வீழ்வ - ரெற்றுவ ரியம தூத ரெமக்குற வாருமில்லை - யுற்றவித் துயரந் தன்னை யொழிக்கவென்றழிவருள்ளம்" எனச் சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால், உணர்க. சிவனடியாருக்கு இடுக்கண் செய்த இக்கருணாடராசனும் இவ்வாறே நரகத்து வீழ்ந்தமை தெளிக. ஆதலால், சிவனடியார்களுக்கு மறந்தும் தீங்கு நினையற்க.

3. சைவம் தழைக்க அரசியற்றல்

அரசன் வேதாகமங்களால் உணர்த்தப்படும் சற்சமயமாகிய சைவத்தின் வழி வழுவாது ஒழுகுவானாயின்; அவன் கீழ்வாழும் குடிகளும் இவ்வரசன் தான் ஒழுகியவாறே ஒழுகாதாரைத் தண்டிப்பன் என்னும் அச்சத்தாலும், பத்தியாலும், இயல்பாலும் சைவ சமயத்தின் வழி தவறாது ஒழுகி, போகம் மோக்ஷம் என்னும் இருபயனையும் பெறுவர்கள். இதுபற்றியன்றோ; அரசனைச் சைவ மார்க்கத்தில் நிறுத்திய ஆசாரியர் உலகத்துக்கெல்லாம் ஆசாரியர் என்று சிவாகமம் கூறியதூஉம் என்க. "ஐயமற விபரீத மதுவு மீச னருண்மொழியை யாராய்ந்த வநக னாசான் - வையகமு முய்யவுனிச் சைவ தன்ம மன்னவனுக் களிக்கவவன் மருவு நீதி - யெய்தியிடு முலகச்ச மெய்தலானு மெல்லோரு மிருபயனு மெய்த லாலே - சைவநெறி தனையரசற் களித்த வாசான் சகத்தினுக்குந் தேசிகனே சாற்றுங்காலே" என்று சிவதருகோத்தரத்தில் கூறுமாற்றானும் உணர்க. அரசன் ஆருகத சமயி ஆகி, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்தால்; அவன்கீழ் வாழும் குடிகள் அப்பரமதப் படுகுழியில் வீழ்ந்து எரிவாய் நரகத்துக்கு இரையாதலையும், சைவத்து நிற்பாரும் அரசனால் வரும் இடுக்கண் மிகுதி பற்றி அச்சத்தினாலே சிவபுண்ணியங்கள் செய்யாது வாளா கெடுதலையும், கண்டு இரங்கி யன்றோ; அதிபாதகனாகிய இவ்வரசன் இறப்ப, இப்பாண்டிநாடு சைவ மன்னரைச் சார்வது எக்காலம் என்று இம்மூர்த்தி நாயனார் வருந்துவாராயினார். இதனால், இவரது இரக்கமுடைமை தெளிக. மெய்யுணர்வு உடையார்க்குத் தாம் பெற்ற பேறு உலகம் பெறுதல் வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கை என்க. "நான் பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்" என்றார் திருமூலநாயனாரும்.

இம்மூர்த்தி நாயனார் தாம் அரசர் வாழ்வைச் சிறிதாயினும் நன்கு மதித்து விரும்பினவர் அல்லர். பிறர் பயன் நோக்கினாராயினும், தாமே அரசாள நினைந்தவரும் அல்லர். உயிர்கள்மாட்டு எழுந்த பெருங்கருணையினாலே பாண்டி நாடு சைவமன்னரைச் சார்தல் வேண்டும் என்னும் கருத்தொன்றே உடையராயினார். "அடியவர் குறைவு தீர்த்தாண்டருள்வதே விரதம்பூண்ட" கருணாநிதியாகிய சிவன் தம்மாட்டு உள்ளவாறு எழுந்த பேரன்பினாலாகிய இக்கருத்தை முடித்தருளத் திருவுளங்கொண்டு, பரசமயங்கள் பாறச் சைவசமயம் தழைக்க அரசியற்றவல்லார் இவர் அன்றிப் பிறர் இலர் ஆதலால், இவரையே அந்நாட்டிற்கு அரசராக்கினார். இதனால், சிவன் தமது அடியார் கருத்தை முற்றுவித்தருளும் பெருங்கருணையினர் என்று துணிந்து, யாவருக்கும் அஞ்சாது அவரையே நம்பி வழிபடுக. "தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய் - காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய் - வேண்டுவார் வேண்டியதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லா - மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன்றானே" என்றார் திருநாவுக்கரசு நாயனார். "இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்றோற்றி - யிறைவனே யீண்டிறக்கஞ் - செய்வா - னிறைவனே - யெந்தா யெனவிரங்கு மெங்கண் மேல் வெந்துயரம் - வந்தா லதுமாற்றுவான்" என்றார் காரைக்காலம்மையார்.

இம்மூர்த்திநாயனார் அரசர் வாழ்விற் சிறிதும் பற்றிலர் ஆயினும்; சிவனது ஆஞ்ஞை உண்மையானும், அவரது திருவருள் வழிப்பட்டு நிற்கும் தமது ஆளுமையால் உலகம் உய்யும் என்னும் கருத்தானுமே, அதற்கு இசைந் தருளினார். அது, இவர் மந்திரிகளை நோக்கி, சமண சமயம் நீங்கச் சைவ சமயம் ஓங்குமாயின் அரசாள்வேன் என்றமையானும் விபூதியே அபிஷேகத் திரவியமும் உருத்திராக்ஷமே ஆபரணமும் சடா முடியே கிரீடமும் ஆகக்கொண்டே அரசாண்டமையானும், பெண்ணாசை சிறிதும் இன்றி ஐம்புலன்களை அடக்கி நின்ற பெருந் துறவுடைமையானும் துணியப்படும். இதனால், மெய்யுணர்வு உடையோர் அண்டமனைத்தும் ஒருங்கு ஆளப் பெறினும், அதனை ஒரு பொருளெனக் கருதாது, சிவனது திருவருள்வழி நின்றே அவருக்குத் திருத்தொண்டு செய்தலில் தவறார் என்பது துணிக. "கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனே - லண்டம் பெறினு மதுவேண்டேன் - றுண்டஞ்சேர் - விண்ணாளுந் திங்களாய் மீக்குலக மேழினுக்குங் - கண்ணாளா வீதென் கருத்து" என்றார் காரைக்காலம்மையார். "அருடரு சீர்த்தில்லை யம்பலத் தான்ற னருளினன்றிப் - பொருடருவானத் தரசாதலிற் புழு வாதனன்றாஞ் - சுருடரு செஞ்சடை யோனரு ளேற்றுற விக்கு நன்றா - மிருடரு கீழேழ் நரகத்து வீழு மிருஞ்சிறையே" என்றார் நம்பியாண்டார் நம்பி. மெய்யுணர்வு உடையார்க்கு விபூதியே சாந்தமும், உருத்திராக்ஷமே ஆபரணமுமாம் என்பது "ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த - பாரெல்லாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை - சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி - நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்டவன்றே" என்னும் திருவிளையாடற்புராணச் செய்யுளால் உணர்க. சடைமுடி தரித்தல் புண்ணியம் என்பது, "பத்தர் நூன்முறை வேணி பரித்திடி - லொத்த வற்றுறு வேணியொவ் வொன்றிற்கு - மெத்து மச்சுவ மேத பலத்தினைச் - சத்தி யம்மவர் நாடொறுஞ் சார்தலே" என்னும் சிவபுண்ணியத் தெளிவினால் காண்க. கூடாவொழுக்கம் உள்வழி இவ்வேடம் தமக்கும் பிறர்க்கும் தீமை பயக்கும் என்பது ஏனாதிநாதநாயனார் புராணத்துச் சூசனத்திற் கூறினம்.

திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

முருக நாயனார் புராண சூசனம்

பூக் கொய்து மாலைதொடுத்துச் சிவனுக்குச் சாத்தல்

சிவனுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பல வகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், ஸ்ரீபஞ்சாக்ஷரம் செபித்தலும் மிகச் சிறந்த புண்ணியமாம்." "நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் - புலர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் - தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று - மலை புனல்சேர் செஞ்சடையெம் மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே." "பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் - நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா - ராக்கைக் கேயிரை தேடி யலமந்து - காக்கைக் கேயிரையாகிக் கழிவரே" என்னுந் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களாலும், "முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் - பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் - சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ - ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே" என்னுந் திருவாசகத்தானும், "நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற் பவித்த போதெவையும் - புலத்தி னழுந்தாவன் பினொடும் போதா னந்தன் கழற்க ணிந்தோர் - மலத்த男 னநாதி முத்தன்மல வயிரி யுறையுஞ் சிவலோகத் - தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்" என்னும் சிவபுண்ணியத் தெளிவானும் உணர்க.

இத்திருப்பணி செய்ய விரும்புவோர், நாடோறும் சூரியன் உதிக்குமுன் எழுந்து, ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரம் தரித்து, சந்தியா வந்தனம் முடித்துக் கொண்டு, சுத்தி செய்யப்பட்டு நாபியின் கீழ்ச் செல்லாது மேலே உயர்ந்த கைகளை உடையவராய், திருப்பூங் கூடையை எடுத்துக் கொண்டு, சிவனது திருவடிக்கணன்றிப் பிறிதொன்றினும் சிறிதும் இறங்காத சிந்தையோடு மெளனம் பொருந்தி, சென்று, பத்திர புஷ்பங்கள் கொய்து, திருப்பூங்கூடையில் இட்டுக்கொண்டு வந்து, சுத்தி செய்யப்பட்ட காலினையுடையராய், புஷ்பமண்டபத்திற் புகுந்து, விதிப்படி சுத்தி செய்யப்பட்ட பூக்குறட்டில் வைத்து, இண்டை முதலிய திருமாலைகளைச் செய்க, சிவலிங்கத்தைத் தீண்டற்கு உரியார் தாமே சாத்துக. அல்லாதார் அதற்கு உரியாரைக் கொண்டு சாத்துவிக்க., திருப்பூங்கூடையை நாபிக்குக் கீழே பிடியாது ஒரு தண்டின் நுனியிலே கட்டி உயரப் பிடித்துக் கொண்டு வருக. அன்றேல், நாபிக்கு மேலே உயர்ந்த கையினாற் பிடித்துக் கொண்டு வருக. பத்திரபுஷ்பம் கொய்யும் போது மெளனம் வேண்டும் என்பது, "வைகறை யெழுந்து போந்து புனன்மூழ்கி வாயுங்கட்டி - மொய்ம்மலர் நெருங்கு வாசநந்தன வனத்து முன்னி" என எறிபத்த நாயனார் புராணத்தில் கூறியவாற்றால் உணர்க. மனம் வேறுபடலாகாது என்பது திருமலைச்சிறப்புச் சூசனத்திற் காண்க. தீக்ஷையில்லாதான், இழிகுலத்தான், மிகுநோயாளன், தூர்த்தன், ஆசாரமில்லாதான், ஆசெளசமுடையான் என்னும் இவர்கள் கொண்டுவரும்பூ, எடுத்து வைத்து அலர்ந்தபூ, பழம்பூ, உதிர்ந்தபூ, காற்றில் அடிபட்டபூ, கையிலேனும் உடுத்த புடைவையிலேனும் எருக்கிலை ஆமணக்கிலைகளிலேனும் வைத்தபூ, அரையின் கீழே பிடித்தபூ, புழுக்கடி எச்சம் சிலந்திநூல் மயிர் என்னும் இவற்றோடு கூடியபூ, ஸ்நானம் பண்ணாமல் எடுத்தபூ பொல்லா நிலம் மயானசமீபம் சண்டாளர் வசிக்கும் இடம் முதலிய அசுத்த ஸ்தானங்களில் உண்டாகியபூ, இரவில் எடுத்தபூ, இவை முதலாயின சிவனுக்குச் சாத்தலாகாது. "எடுத்துவைத்தே யலர்ந்த மலர் பழம்பூக்கண் மற்ற வெருக்கிலையா மணக்கிலையி னிற்பொதிந்த பூக்க - ளுடுத்தபுடை வையிற் கரத்தி ளடைத்த நறும் பூக்க ளுதிர்ந்திடுபூ வரையின்கீ ழுற்றவிரைப் பூக்களடுத்த புழுக் கடியெச்சஞ் சிலந்திமயி ருறுத லங்கை யில்வைத் தங்கைகுவித் திடுதல்கங்குறனிலே - யெடுத்தமலர் நீரமிழ்த்தல் புறங்காட்டி லெய்த லெச்சில்குளி யாதெடுத்த லிழிபெனுமா கமமே." என ஞானப்பிரகாசதேசிகர் புஷ்ப விதியினும்; "மடியினிற் பறித்தி டும்பூ மலர்ந்துகீழ் விழும்பூ முன்னா - ளெடுபடு மலரி ளம்பூ விரவினி லெடுத்தி டும்பூ - தொடர் நோயன் றீக்கை யில்லான் றூர்த்தனா சார மற்றோன் - கொடுவரும் பூவ னைத்துங் குழகனுக் காகா வன்றே." எனப் பிறிது புஷ்ப விதியினும் கூறுமாற்றால், உணர்க.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்முருகநாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையால் அன்றோ, பரசமய கோளரியாகிய திருஞானசம்ப்ந்த மூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றும், அவராலே, "தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் பகையுங் - கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலங் - கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் - வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே." எ-ம். "ஈசனேறமர் கடவுளின்னமிர் தெந்தையெம் பெருமான் - பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரின் - மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் - வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத்தாரே." எ-ம். புகழப்பட்டும், அவருடைய திருமணத்திலே சிவனது திருவடி நிழலை அடைந்தார். "ஏந்துமுலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப் - பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக் - காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய் - வேந்தின் றுயர் தவிர்த் தானையெப் போதும் விரும்புமினே" என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவந்தாதியிற் கூறினார் நம்பியாண்டார்நம்பி என்க.

2. சிவனடியாருக்குத் தீங்கு செய்தலால் பெறப்படும் பயன்

சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தோர் நரகத்து வீழ்ந்து வருந்துவர். அது "காட்டுமுள் ளொளியைக் கண்ட கண்ணனைக் கயந்து சொல்லக் - கேட்டவர் கேட்பித்தார்கள் கெழுமின ருடன்பட் டார்முன் - மூட்டின ரென்ற வைத்து மூடருங் கூடிமூழ்கி - மீட்டிடு வாருமின்றி யெரிநிர யத்துள் வேவார்" "மனத்தினால் வடிவு தன்னால் வழுக்கிய சழக்கர் தாமு - மினத்தொடு மிணங்கி வேவ ரெரிநிர யத்தை யெய்தி - யெனைத்துள காலந் தானு மென்றுளத் தேங்கி யெய்ப்பர் - தனக்கய லுறவி லானைத் தவறுவ ரென்னோ தாமே." "மற்றைய நரக பேத மனைத்தினு மயங்கி மூவேழ் - சுற்றமுஞ் சுழலத் தாமுங் கூடியே துயங்கி வீழ்வ - ரெற்றுவ ரியம தூத ரெமக்குற வாருமில்லை - யுற்றவித் துயரந் தன்னை யொழிக்கவென்றழிவருள்ளம்" எனச் சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால், உணர்க. சிவனடியாருக்கு இடுக்கண் செய்த இக்கருணாடராசனும் இவ்வாறே நரகத்து வீழ்ந்தமை தெளிக. ஆதலால், சிவனடியார்களுக்கு மறந்தும் தீங்கு நினையற்க.

3. சைவம் தழைக்க அரசியற்றல்

அரசன் வேதாகமங்களால் உணர்த்தப்படும் சற்சமயமாகிய சைவத்தின் வழி வழுவாது ஒழுகுவானாயின்; அவன் கீழ்வாழும் குடிகளும் இவ்வரசன் தான் ஒழுகியவாறே ஒழுகாதாரைத் தண்டிப்பன் என்னும் அச்சத்தாலும், பத்தியாலும், இயல்பாலும் சைவ சமயத்தின் வழி தவறாது ஒழுகி, போகம் மோக்ஷம் என்னும் இருபயனையும் பெறுவர்கள். இதுபற்றியன்றோ; அரசனைச் சைவ மார்க்கத்தில் நிறுத்திய ஆசாரியர் உலகத்துக்கெல்லாம் ஆசாரியர் என்று சிவாகமம் கூறியதூஉம் என்க. "ஐயமற விபரீத மதுவு மீச னருண்மொழியை யாராய்ந்த வநக னாசான் - வையகமு முய்யவுனிச் சைவ தன்ம மன்னவனுக் களிக்கவவன் மருவு நீதி - யெய்தியிடு முலகச்ச மெய்தலானு மெல்லோரு மிருபயனு மெய்த லாலே - சைவநெறி தனையரசற் களித்த வாசான் சகத்தினுக்குந் தேசிகனே சாற்றுங்காலே" என்று சிவதருகோத்தரத்தில் கூறுமாற்றானும் உணர்க. அரசன் ஆருகத சமயி ஆகி, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்தால்; அவன்கீழ் வாழும் குடிகள் அப்பரமதப் படுகுழியில் வீழ்ந்து எரிவாய் நரகத்துக்கு இரையாதலையும், சைவத்து நிற்பாரும் அரசனால் வரும் இடுக்கண் மிகுதி பற்றி அச்சத்தினாலே சிவபுண்ணியங்கள் செய்யாது வாளா கெடுதலையும், கண்டு இரங்கி யன்றோ; அதிபாதகனாகிய இவ்வரசன் இறப்ப, இப்பாண்டிநாடு சைவ மன்னரைச் சார்வது எக்காலம் என்று இம்மூர்த்தி நாயனார் வருந்துவாராயினார். இதனால், இவரது இரக்கமுடைமை தெளிக. மெய்யுணர்வு உடையார்க்குத் தாம் பெற்ற பேறு உலகம் பெறுதல் வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கை என்க. "நான் பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்" என்றார் திருமூலநாயனாரும்.

இம்மூர்த்தி நாயனார் தாம் அரசர் வாழ்வைச் சிறிதாயினும் நன்கு மதித்து விரும்பினவர் அல்லர். பிறர் பயன் நோக்கினாராயினும், தாமே அரசாள நினைந்தவரும் அல்லர். உயிர்கள்மாட்டு எழுந்த பெருங்கருணையினாலே பாண்டி நாடு சைவமன்னரைச் சார்தல் வேண்டும் என்னும் கருத்தொன்றே உடையராயினார். "அடியவர் குறைவு தீர்த்தாண்டருள்வதே விரதம்பூண்ட" கருணாநிதியாகிய சிவன் தம்மாட்டு உள்ளவாறு எழுந்த பேரன்பினாலாகிய இக்கருத்தை முடித்தருளத் திருவுளங்கொண்டு, பரசமயங்கள் பாறச் சைவசமயம் தழைக்க அரசியற்றவல்லார் இவர் அன்றிப் பிறர் இலர் ஆதலால், இவரையே அந்நாட்டிற்கு அரசராக்கினார். இதனால், சிவன் தமது அடியார் கருத்தை முற்றுவித்தருளும் பெருங்கருணையினர் என்று துணிந்து, யாவருக்கும் அஞ்சாது அவரையே நம்பி வழிபடுக. "தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய் - காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய் - வேண்டுவார் வேண்டியதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லா - மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன்றானே" என்றார் திருநாவுக்கரசு நாயனார். "இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்றோற்றி - யிறைவனே யீண்டிறக்கஞ் - செய்வா - னிறைவனே - யெந்தா யெனவிரங்கு மெங்கண் மேல் வெந்துயரம் - வந்தா லதுமாற்றுவான்" என்றார் காரைக்காலம்மையார்.

இம்மூர்த்திநாயனார் அரசர் வாழ்விற் சிறிதும் பற்றிலர் ஆயினும்; சிவனது ஆஞ்ஞை உண்மையானும், அவரது திருவருள் வழிப்பட்டு நிற்கும் தமது ஆளுமையால் உலகம் உய்யும் என்னும் கருத்தானுமே, அதற்கு இசைந் தருளினார். அது, இவர் மந்திரிகளை நோக்கி, சமண சமயம் நீங்கச் சைவ சமயம் ஓங்குமாயின் அரசாள்வேன் என்றமையானும் விபூதியே அபிஷேகத் திரவியமும் உருத்திராக்ஷமே ஆபரணமும் சடா முடியே கிரீடமும் ஆகக்கொண்டே அரசாண்டமையானும், பெண்ணாசை சிறிதும் இன்றி ஐம்புலன்களை அடக்கி நின்ற பெருந் துறவுடைமையானும் துணியப்படும். இதனால், மெய்யுணர்வு உடையோர் அண்டமனைத்தும் ஒருங்கு ஆளப் பெறினும், அதனை ஒரு பொருளெனக் கருதாது, சிவனது திருவருள்வழி நின்றே அவருக்குத் திருத்தொண்டு செய்தலில் தவறார் என்பது துணிக. "கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனே - லண்டம் பெறினு மதுவேண்டேன் - றுண்டஞ்சேர் - விண்ணாளுந் திங்களாய் மீக்குலக மேழினுக்குங் - கண்ணாளா வீதென் கருத்து" என்றார் காரைக்காலம்மையார். "அருடரு சீர்த்தில்லை யம்பலத் தான்ற னருளினன்றிப் - பொருடருவானத் தரசாதலிற் புழு வாதனன்றாஞ் - சுருடரு செஞ்சடை யோனரு ளேற்றுற விக்கு நன்றா - மிருடரு கீழேழ் நரகத்து வீழு மிருஞ்சிறையே" என்றார் நம்பியாண்டார் நம்பி. மெய்யுணர்வு உடையார்க்கு விபூதியே சாந்தமும், உருத்திராக்ஷமே ஆபரணமுமாம் என்பது "ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த - பாரெல்லாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை - சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி - நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்டவன்றே" என்னும் திருவிளையாடற்புராணச் செய்யுளால் உணர்க. சடைமுடி தரித்தல் புண்ணியம் என்பது, "பத்தர் நூன்முறை வேணி பரித்திடி - லொத்த வற்றுறு வேணியொவ் வொன்றிற்கு - மெத்து மச்சுவ மேத பலத்தினைச் - சத்தி யம்மவர் நாடொறுஞ் சார்தலே" என்னும் சிவபுண்ணியத் தெளிவினால் காண்க. கூடாவொழுக்கம் உள்வழி இவ்வேடம் தமக்கும் பிறர்க்கும் தீமை பயக்கும் என்பது ஏனாதிநாதநாயனார் புராணத்துச் சூசனத்திற் கூறினம்.

திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

உருத்திரபசுபதி நாயனார் புராண சூசனம்

ஸ்ரீ உருத்திரம் ஓதல்

வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது; வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது; இவ்வாறு சிவதத்துவ விவேக விருத்தியிற் கூறப்பட்டது. வேதபுருஷனுக்கு இந்த உருத்திரம் கண்ணும், இதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியுமாம். இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்திற் காண்க. இவ்வுருத்திரத்தில் பகுப்பின்றி உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்தோதி வழிபாடு கூறுதல் ஏற்றுக்கெனின்; எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க. தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி - யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் - பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி - நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே" என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் காண்க. சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர். இவ்வுருத்திரத்தை, தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய ஜலத்திலே நின்றுகொண்டு, ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். ஆதலால், இவ்வுருத்திரத்துக்கு உரியவர், தமது வாணாளை வீணாளாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும், இதனை நியமமாக ஓதுக.



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------



¾¢ÕüÈõÀÄõ

திருநாளைப்போவார் நாயனார் புராண சூசனம்

1. தத்தம் சாதிநெறி கடவாது சிவனை வழிபடுதல்

யாவராயினும், தங்கள் தங்கள் சாதிக்கு விதித்த விதிகடவாது நின்று சிவனை வழிபடின் முத்தி பெறுவர். அவ்விதி கடந்தோர் பயன் பெறார். இத்திருநாளைப்போவார் நாயனார் தாம் முற்பிறப்பில் செய்த புண்ணிய மிகுதியினாலே சிவனிடத்து மெய்யன்பு உடையராகி, தாம் இழிவாகிய புலையர் குலத்திற் பிறந்தமையால் அதற்கு ஏற்பச் சிவனுக்குத் தொண்டு செய்தலே முறைமையாம் என்று சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய ஒருமுகக் கருவிகளுக்கும் மிருதங்கம் முதலிய இருமுகக் கருவிகளுக்கும் தோலும், வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுத்தலும், ஆலயங்களின் திருவாயிற் புறத்திலே நின்றுகொண்டு ஆனந்த மிகுதியினாலே கூத்தாடிப் பாடுதலும் செய்தனர். வாத்தியங்கள் கொடுத்தல் புண்ணியம் என்பது "பொங்குபேரி பொருமுர சம்மிரு - தங்கமோடு திமில்பட காதியுஞ் - சங்கு தாளந் தகுமிசைக் காகளம் - விங்கு சீரொலி வேணுவும் வீணையும்." "சொன்ன வின்னவை சோதிநிலா வணி - மன்ன வற்கு வழங்கிய மாதவ - ரன்ன வன்றனை யொத்தயு தந்தருந் - துன்னுகற்ப மவன்பதி தோய்வரால்" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க. ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது "நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும் - விரித்த பானு வயுதம் விரிகதிர் - பொருந்து தேரிற் புலவ ரரம்பையர் - கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி." "துதியுங் கீதமுஞ் சோதிமுன் பத்தியாற் - கெதியி னோதிடக் கேட்டவர் தாவர - மதியில் கீடங் கிருமி வரன்பதி - வதியு மோதினர்க் கென்கொல் வகுப்பதே" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க. இவை எல்லாம் தம்மிடத்து இடையறாத மெய்யன்போடு செய்தமையால் அன்றோ; சிவன் திருப்புன்கூரிலே இவர் விரும்பியபடியே தமக்குமுன் உள்ள இடபதேவரை விலகச் செய்து இவருக்குக் காட்சி கொடுத்தருளினார்.

2. சிதம்பர தரிசனம்

சிவஸ்தலங்கள் எல்லா வற்றுள்ளும் சிதம்பரமே மேலானது. அது தில்லைவாழந்தணர் புராணத்துச் சூசனத்தில் விரித்துரைக்கப்பட்டது. இந்த ஸ்தலத்டிற் கனகசபையின் கண்ணே கருணாநிதியாகிய சபாநாயகர் செய்தருளும் ஆனந்த நிருத்தத்தை மெய்யன்போடு தரிசித்தவர் முத்தி பெறுவர்.

அது, "மெய்மைநற் சரியை பத்தி விளங்கிய ஞான மேவா - வெம்மையொப் பவர்க்கு முத்தி யிறையிலி யாகவிட்ட - மும்மைநற் பதிகடம்மின் முளைத்தவர் முடிந்தோர் மூவாச் - செம்மலர்க் கழல்கண்டோர்கள் சிவத்தினைச் சேர்வ ரன்றே. பிறந்தில மாரூர் தன்னிற் பேசிய காசி மேவி - யிறந்தில மிரண்டு முத்தி யின்பமும் பின்ப தாநா - முறைந்திடுந் தில்லை ஞான யோகமார் தான மாமாற் - செறிந்தடி காணச் சீவன் முத்தராய்த் திரியலாமே. தேசமார் மன்ற கன்று சிவகதி தேடியுற்றார் - காசியி லில்லை தில்லை கதிதரு மென்ற ணைந்தாற் - பாசமதகல முத்தி பணித்திடு மென்றா ரென்றா - லீசன தருளிரக்கத் தெல்லையார் சொல்லுவாரே. கன்றம ரன்பாலான்பால் கவர்தருங் கால மேனும் - வென்றிகொ ளம்பு வீழும் வேலையா யினுமி மைப்பிற் - சென்ற疓று மமையமேனுந் திருவடி தெளிய நோக்கி - நின்றவர் காண நின்றார் நீள்பவ நீங்கி னாரே. ஆரண வுருவார் தில்லை யம்பல மெய்தப் பெற்றோ - ரோருணர் வாவ ரென்று மொன்றல ரொன்றா ரல்லர் - காரண ராகா ரொத்த கருத்திலர் நிருத்த வின்பப் - பூரண ரவர்கள் வாழும் புவனமும் பொதுவா மன்றே" என்னும் கோயிற் புராணத்து வியாக்கிர பாதமகா முனிவர் இரணியவன்ம சக்கிரவர்த்திக்கு உபதேசித்த பொருளையுடைய திருவிருத்தங்களானும், "பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தா - லுரை யுணர்வுக் கெட்டா வொருவன் - வரைமகடான் - காணும் படியே கருணையுருக் கொண்டாடல் - பேணுபவர்க் குண்டோ பிறப்பு." என்னும் உண்மை விளக்கத் திருவெண்பாவானும் உணர்க.

பல சிவஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்தலே தொழிலாகக் கொண்ட இந்நாயனாருக்குச் சிதம்பர தரிசனத்திலே வேட்கை மிக்குற்றது. இவ்வேட்கையின் மிகுதி, அது விளைந்த அன்றிரவு இவருக்கு நித்திரை இன்மையானும்; மற்ற நாள் இவர் தாம் தில்லைக்குச் செல்லில் கோயிலுனுள்ளே புகுதல் தமது சாதிக்கு இயையாது என்பதை நினைந்து, போகாதொழிந்தாராயினும், அவ்வாசை குன்றாது மேன்மேலும் வளர்தல் பற்றி நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று பல நாள் கழித்து, ஆசையை அடக்கல் கூடாமையால் பின் தில்லையின் எல்லையை அடைந்தமையானும்; தெளியப்படும் இவ்வாறு மிக்க ஆசையுடன் சென்றும்; தில்லையினுள்ளே வேதவிதிப்படி ஓமம் செய்யப்படுதலைக் கண்டு, உட்புகாதொழிந்து, இரவு பகல் திருவெல்லையை வலஞ் செய்து வணங்கினமையால், வேதாகம விதிக்கு அஞ்சி, சாதிநெறி கடவாது நின்ற இவரது பெருந்தன்மை துணியப்படும். பின்னும் இவருக்குச் சிதம்பர தரிசனத்தில் ஆசை குன்றாது மேன்மேலும் வளர்ந்தமை பெருவியப்பாமே! இவ்வாறே சிவனிடத்து இடையறாது மேன்மேலும் பெருகும் மெய்யன்பினால் வளர்ந்தோங்கிய ஆசையினாலன்றோ; கருணாநிதியாகிய நடேசர் இவர் கருத்தை முற்றுவித்தருளத் திருவுளங் கொண்டு, தில்லை மூவாயிரரைக் கொண்டு திருமதிற்புறத்த்லே திருவாயிலுக்கு முன் அக்கினி வளர்ப்பித்து, இந்நாயனாரை அதிலே புகுவித்து, இவர் புலை உடம்பை ஒழித்துப் பிராமண முனிவடிவங் கொண்டு எழுந்து, கனகசபையிற் புகுந்து தமது திருவடிகளை வணங்கிக் கொண்டிருக்கும் பொருட்டு அருள் செய்தார். இதனால், சிவன் தம்மை வழிபடும் அடியார்கள் கருத்தை முடித்தருளுவர் என்பது துணியப்படும். "வாயானை மனத்தானை மனத்து ணின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத் - தூயானைத் தூவெள்ளை யேற்றான் றன்னைச் சுடர்த் திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற - தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ் - சேயானைத்ட் தென்கூடற் றிருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேனானே" என்றார் திருநாவுக்கரசுநாயனார். ஆதலால், சிவ புண்ணியங்களை நாம் செய்வது அருமை என்று விரும்பாதொழிதல் குற்றம் என்பதும், இடைவிடாது விரும்பின், சிவனது திருவருளினால் அது முற்றும் என்பதும், இப்பிறப்பின் முற்றாதாயினும் மறுபிறப்பின் முற்றுதல் ஒருதலை என்பதும், தெளிக. "நொந்தபங்கயனை நோக்கி நுடங்குட லளவே யன்றோ - வந்தம畽ல்காலஞ் சேய்த்தன்றதுவுமென் றயரக் கண்டு - மிந்தநீ யிறந்தாற் பேறிங்கென்னென வனந்த னின்றென் - சிந்தையிங் கிதுவாச் செத்துந் திருநடங் காண்பே னென்றான்" எனக் கோயிற் புராணத்திற் கூறியவாற்றானும் உணர்க.



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராண சூசனம்

சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தல்

பசுபதியாகிய சிவனே தமக்கு உறவு எனத் துணிந்த மெய்யுணர்வுடையோர் குடும்பத்தோடு கூடி இருப்பினும் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளினும் சரீரத்தினும் சிறிதும், பற்றுவையாது, சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையவராகி, தமது மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றும் அவருக்குத் திருத்தொண்டு செய்தற்பொருட்டே கிடைத்தமையால், அம்மூன்றையும் அவரது தொண்டிற்கே ஆக்கி ஒழுகுவர். ஆசை அற்றாரே முத்தி பெறுவர் என்பது "மண்ணினுந் தனத்தினு மனைக்கு வாய்த்தநர் - பெண்ணினு மகவினும் பெரிய பேரினுந் - துண்ணென விழைவினைத் துறந்த தூயரே - விண்ண男னு மின்புடன் விளங்கி மேவுவார்." "ஆக்கையிற் றுயர்பெரி தற்ப மின்பமென் - றாக்க疤யை யறவெறுத் தார்வங் கூர்வரே - லாக்கையினநாதியே முத்தனுக்கவ - னாக்கையுந் துயரமு மறுப்பனாணையால்" என்னும் சிவதருமோத்தரச் செய்யுள்களால் உணர்க. மனம் முதலிய மூன்றும் சிவனுக்குத் தொண்டு செய்தற் பொருட்டே கிடைத்தன என்பது "வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சுந் - தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் - சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே - வீழ்த்த வாவினையே னெடுங் காலமே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தான் அறிக. இவ்வாறு ஒழுகும் பெருந்தன்மையினர் சிவனடியாரைச் சிவன் எனவே கண்டு, வணங்கி, அவர் குறிப்பறிந்து, அவருக்குத் தம்மால் இயலும் தொண்டை வழுவாது செய்தலே தமக்குச் செல்வம் எனக் கொள்வர். "சிவநேசர் பாதம் வணங்கிச் சிறக்க - வவரேவல் செய்க வறிந்து" என்னும் சைவசமயநெறித் திருக்குறளானும் உணர்க.

இவ்வாறு பிரபஞ்ச வைராக்கியமும் சிவபத்தியும் உடையராய், சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தமையான் மிகச் சிறப்புற்றவர் இத்திருக்குறிப்புத் தொண்டநாயனார். இவர் மனம் முதலிய மூன்றும் சிவன் பணிக்கே ஆக்கினார் என்பது "மண்ணின் மிசை வந்ததற் பின் மனமுதலா யினமூன்று - மண்ணலார் சேவடியின் சார்வாக வணைவிப்பார்" என்பதனாலும், சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தார் என்பது "புண்ணிய மெய்த்தொண்டர்திருக் குறிப்பறிந்து போற்று நிலைத் - திண்மையினாற் றிருக்குறிப்புத் தொண்டரெனுஞ் சிறப்பினார்" என்பதனாலும், இங்கே உணர்த்தப்பட்டன. இந்நாயனார், தாம் ஏகாலியராதலின், சிவனடியார்களுக்குச் சிரத்தையோடு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்தலே முக்கியத் தொண்டாகக் கொண்டனர். இவர் இத்தொண்டைச் சிரத்தையோடு செய்தார் என்பதும், குடும்பத்தோடு கூடியிருந்தும் வாசனை மாண்டு நின்றார் என்பதும், இவர் அடியார் வேடங் கொண்டு வந்த பரமசிவனுக்குத் தாம் குறித்த காலத்தில் கந்தை ஒலித்து உலர்த்திக் கொடுக்க இயலாமையாற் பதைப்புற்று, வஸ்திரங்களைப் புடைக்கும் கற்பாறையிலே தமது தலையை எற்றினமையாலே, செவ்விதிற்றுணியப்படும். இவரது மெய்யன்பினாலாகிய இச்செயற்கருஞ் செயலைத் தரிக்கலாற்றாமையனன்றோ, கிருபா சமுத்திரமாகிய சிவன் அக்கற்பாறையின் பக்கத்திலே தமது திருக்கரத்தைத் தோற்றுவித்து, இவரைப் பிடித்தருளி, பின் இவருக்கு இடபாரூடராய் வெளிப்பட்டு,

முத்தி கொடுத்தருளினார். சர்வான்மாக்களும் தம்மாட்டு மெய்யன்பு செய்து உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினாலன்றோ, சிவன் இவரது அன்பின் செயலை மூவுலகத்திற்கும் அறிவித்தார், ஐயையோ! இது கண்டும், சிவனிடத்தே சிறிதும் அன்பு செய்யாது வாணாளை வீணாளாகப் போக்கும் எம்போலிகளது அறியாமை இருந்தபடி என்னை!



திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

சண்டேசுர நாயனார் புராண சூசனம்

1. பசு ஓம்பல்

சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, கமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன.

இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.

இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக. இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். புலையர்கள் பசுக்களின் சாலையிலே புகுந்தார்களாயின், எண்ணில்லாத காலம் எரிவாய் நரகத்தில் வீழ்ந்து வருந்துவார்கள்; அவர்களுக்கு பரிகாரம் இல்லை, மலட்டுப்பழுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற் கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.

இப்பசுமேய்த்தலாகிய உத்தம புண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இச்சண்டேசுர நாயனார். அது, இவர் தாம் ஒரு நாள் இடையன் பசு நிரையினுள்ளே ஒரு பசுவைக் கோலினால் அடிக்கக் கண்டபோது, இரக்கமிகுதியினாலே கோபித்து விலக்கி, பசுக்களின் பெருமையை உள்ளபடி சிந்தித்து உணர்ந்து, அவைகளை அவைகளின் கருத்துக்கு இசைய மேய்த்தலிற் சிறந்த புண்ணியம் இல்லை எனவும் சிவனை வழிபடும் நெறியும் அதுவே எனவும் துணிந்து, அவ்விடையனை அகற்றி, அன்று தொடங்கித் தாமே அந்நிரையை மெய்யன்போடு விதிப்படி மேய்த்தமையாலே தெளியப்படும்.

2. சிவபூசை

ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமல காரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என நால்வகைப்படும். அவற்றுள், அண்டசம் முட்டையிற் றோன்றுவன. சுவேதசம் வேர்வையிற்றோன்றுவன. உற்பிச்சம் வித்துக்களை மேற் பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற் றோன்றுவன. இவைகளின்விரி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதமாம். இவ்வாறுள்ள யோனிகளுள், மற்றையோனிகள் எல்லாவற்றையும் போகத்தினாலும் பிராயச்சித்தம் முதலியவற்றினாலும் நீக்கி, மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரை ஏறுதல் போலாம். இத்தன்மைத் தாகிய மனிதப் பிறப்பை எடுப்பினும், சாத்திர மணமும் வீசாத மலைகளிலும் வனங்களிலும் குறவர் மறவர்களாய்ப் பிறவாமல், சாத்திரம் வழங்கும் தேசங்களிலும் பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் ஆரியதேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், ஈனசாதிகளாய்ப் பிறவாமல் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாராய்ப் பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், பரசமயங்களில் செல்லாமல் சிவனே பரமபதி என்று தெளிந்து வழிபடும் சைவ சமயத்தைச் சார்தல் இத்துணைத் தென்று கூறலாற்றாத பெரும் புண்ணியமாம். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார். "அண்டசஞ் சுவேத சங்க ளுற்பிச்சஞ் சராயு சத்தோ - டெண்டரு நாலெண் பத்து நான்குநூறாயிரத்தா - லுண்டுபல்யோனி யெல்லா மொழித்து மானுடத்து தித்தல் கண்டிடிற் கடலைக் கையா னீந்தினன் காரி யங்காண். நரர்பயி றேயந் தன்னினான்மறை பயிலா நாட்டில் - விரவுத லொழிந்து தோன்றன் மிக்க புண் ணியந்தா னாகுந் - தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து பரசம யங்கட் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே. வாழ்வெனுமையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் - தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ்சாரு - மூழ்பெறலரிது சால வுயர் சிவ ஞானத்தாலே - போழிள மதியினானைப் போற்றுவா ரருள் பெற்றாரே." எனவரும்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. பசுபதியாகிய சிவனை, மனசிலே நினைத்தற்கும், வாக்கினாலே துதித்தற்கும், கைகளினாலே பூசித்தற்கும், கால்களினாலே வலம் வருதற்கும், தலையினாலே வணங்குதற்கும், செவிகளினாலே அவரது புகழைக் கேட்டற்கும், கண்களினாலே அவரது திருமேனியைத் தரிசித்தற்குமாம். மேலுலகத்துள்ள பிரமா விட்டுணு இந்திரன் முதலியோரும் இப்பூமியின் கண்ணே வந்து சிவனைப் பூசிப்பார்கள். ஆதலால் இம்மனித சரீரம் கிடைத்தற்கு அரியது. இச்சரீரம் உள்ளபொழுதே சிவபூசையைப் பண்ணி, மோக்ஷத்தைப் பெறாதொழியில், பின்பு மோக்ஷம் கிடைத்தல் அரிது அரிது! ஆன்மாக்கள் தாம் நல்ல சரீரம் எடுத்தும், இவையெல்லாம் சிறிதும் ஆராயாமல், ஐயையோ! வீணாகத் திரிந்து காலங்கழிக்கும் அறியாமை இருந்தபடி என்னை! "மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காய - மானிடத் தைந்து மாடு, மரன் பணிக்காக வன்றோ - வானிடத் தவரு மண்மேல் வந்த ரன்றனையர்ச் சிப்ப - ரூனெடுத் துழலு மூம ரொன்றையு முணரா ரந்தோ" எனச் சிவஞான சித்தியாரிலும், "கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள் கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள் - பெண்னொருபா களைப் பணியுந் தலைகளே தலைகள் பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள் - பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னாப் பரன் சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிக - ளண்ணல் பொலங் கழனினைக்கு நெஞ்சமே நெஞ்ச மவனடிக்கீ ழடிமைபுகு மடிமையே யடிமை" எனப் பிரமோத்தர காண்டத்தினும், கூறு மாற்றானும் உணர்க.

சிவபூசையாவது, புட்பம், திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு, ஆத்துமசுத்தி தானசுத்தி திரவியசுத்தி, மந்திரசுத்தி இலிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளும் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாதி சத்தி பரியந்த பதுமமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே வித்தியாதேகமாகிய மூர்த்தியை நியாசஞ் செய்து, அவ்வித்தியாதேகத்துக்குச் சீவனாய் உள்ள நிஷ்களரூபமும் ஞானானந்தமயரும் சருவகர்த்தாவும் சர்வ வியாபகருமாகும் பரமசிவனாகிய மூர்த்திமானைத் துவாத சாந்தத்தின் மேலே தியானித்து, முன்னே நியாசஞ் செய்து வித்தியாதேகத்தில் ஆவாகித்து, "சுவாமீ, சருவ சகத்துக்கும் நாதரே; பூசையின் முடிவு எதுவரையுமோ அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்திலே சாந்நித்தியராய் இரும்." என்று விண்ணப்பம் செய்து, பூசித்து ஸ்தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலாம். லிங்க என்னும் தாது சித்திரித்தல் என்னும் பொருட்டாதலால், படைத்தல், காத்தல் முதலியவற்றால் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசுவரப் பிரபாவமேலிங்கம் எனப்படும். அவ்விலிங்கத்தின் வியத்திஸ்தானமாகிய சைலம் ஸ்பாடிகம் க்ஷணிகம் லோஹஜம் என்பனவும் உபசாரத்தாலே இலிங்கம் எனப்படும். வித்தியாதேகமாவது பஞ்ச கிருத்தியங்களை அதிட்டிக்கும் சத்தியேயாம். மூலமலம் முதலியன இன்மையால், சிவனுக்கு வைந்தவம் முதலிய சரீரம் இன்றிச் சத்தி சரீரம் உண்டாம். அச்சரீரம் பஞ்ச கிருத்திய உபயோகிகளாகிய ஈசானம் முதலிய பஞ்ச மந்திரங்களாலே சிரம் முதலாகக் கற்பிக்கப்படும். சிவன் நிராகார வஸ்துவாகிய தம்மை ஆன்மாக்கள் தியானித்தல் பூசித்தல் கூடாமையால், பத்தர் அனுக்கிரகத்தின் பொருட்டே இச்சத்தி காரியமாகிய கற்பனாசரீரம் கொண்டார் என்க.

இவ்வாறு அன்போடு பூசை செய்யப்படில், கருணாநிதியாகிய சிவன் இலிங்கத்தில் நின்று அப்பூசையை ஏற்று, அதுசெய்தார்க்கு அருள் செய்வர். அது "தாபரசங்க மங்களென்றிரண் டுருவி னின்று - மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளைவைப்ப - னீபரன் றன்னை நெஞ்சி வினைவை யேனிறைந்தபூசை - யாய் பரம்பொருளை நாளு மர்ச்சிநீ யன்பு செய்தே" என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் உணர்க அன்பின்றிச் செய்யப்படும் பூசை பயன்படாமை "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுகளே - புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் - போக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு - நக்கு நிற்ப னவர் தம்மை நாணியே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், "கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன் றெண்ணப் - பொய்யொன்று வஞ்சக தாவொன்று பேசப் புலால் கமழு - மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும் புமியான் - செய்கின்ற பூசை யெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே." என்னும் பட்டணத்துப் பிள்ளையார் வாக்கானும் உணர்க.

இச்சண்டேசுர நாயனார் முற்பிறப்பில் வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவபூசையை விதிவழுவாது செய்தமையாலன்றோ, இப்பிறப்பில் மிகுந்த இளைமைப் பிராயத்திற்றானே சகல சாத்திரப் பொருள்களையும் எளிதின் உணர்ந்து, சிவனே எம்மை உடையவர் என்னும் மெய்யுணர் வினாலே, சிவன்மாட்டு இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் அத்தியற்புதமாகிய மெய்யன்பே வடிவமாயினார். இவருக்கு வேதாகமங்கள் எல்லாம் முற்பிறப்பின் அறிவுத் தொடர்ச்சியினால் எளிதின் விளங்கின என்பது இங்கே "ஐந்து வருட மலர்க்கணைய வங்க மாறு முடனிறைந்த - சத்த மறைகளுட்படமுன் றலைவர் மொழிந்த வாக மங்கண் - முந்தை யறிவின் றொடர்ச்சியினன் முகைக்கு மலரின் வாசம்போற் - சிந்தை மலர வுடன்மலருஞ் செவ்வியுணர்வு சிறந்ததால்" என்பதனாலும், "குலவு மறையும் பலகலையுங் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த - நிலவு முணர்வின் றிறங்கண்டு நிறுவு மறையோ ரதிசயித்தார்" என்பதனாலும் உணர்த்தப்பட்டது. ஒருபிறப்பிற் கற்ற கல்வி மறுபிறப்புக்களினும் பயன்படும் என்பது ஒருமைக்கட் டான்கற்ற கல்வியொருவற் - கெழுமையுமேமாப் புடைத்து" என்னும் திருக்குறளானும் உணர்க. இவர் முற்பிறப்பிலே சிவபூசை செய்தவர் என்பது, இங்கே "அங்கண் முன்னை யர்ச்சனையினளவின் றொடர்ச்சி விளையாட்டாப் - பொங்கு மன்பால்" என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. இவரது அன்பின் முதிர்ச்சி "நடமே புரியுஞ் சேவடியார் நன்மை யுடையா ரெனுமெய்மை - யுடனே தோன்று முணர்வின்க ணொழியா தூறும் வழியின்பின் - கடனே யியல்பாய் முயற்றிவருங் காதன் மேன்மே லெழுங்கருத்தின் - றிடநேர் நிற்குஞ் செம்மலார் திகழுநாளி லாங்கொரு நாள்" என்பதனால் உணர்த்தப்பட்டது. ஆன்மா சிவன் உடைமை என்பது "அநாதி சிவனுடைமை யாலெவையு மாங்கே - யநாதியெனப் பெற்ற வணுவை - யநாதியே - யார்த்ததுயரகல வம்பிகையோ டெவ்விடத்துங் - காத்த வைன்க டனே காண்" என்னும் திருக்களிற்றுப் படியாரானும் உணர்க. இவர் முற்பிறப்பில் விதிவழுவாது செய்த பூசையின் றொடர்ச்சியினாற்றானே, இப்பிறப்பில் மிகுந்த இளமைப் பிராயத்திலே, பசுப்பால் சிவனுக்குத் திருமஞ்சனமாந்தகுதி உடைமையை நினைந்தவுடனே சிவபூசையில் மிக்க ஆசையுடையராய், அதனைச் செய்வாராயினார். அப்பூசை பிறருக்கு விளையாட்டாகத் தோன்றியதாயினும், இடையறாத மெய்யன்பினாலே செய்யப்பட்டமையானன்றோ, உயிர்க்குயிராகிய சிவனுக்கு மிக உவப்பாயிற்று.

இந்நாயனார் சிவனது உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்த பொழுதே கரையிழந்து அன்பினாலே ஒரு பயனும் கருதாது அவ்வன்புதானே தமக்கு இன்பமாகத் தம்மை மறந்து நின்றார் என்பது, இவர் சிவபூசை செய்யும் பொழுது தந்தையாகிய எச்சதத்தன் முதுகிலே பலமுறை அடித்துக் கொடுமொழிகளைக் கூறவும், தாம் அவற்றைச் சிறிதும் அறிந்திலாமையானும், அவன் பாற்குடத்தைக் காலால் இடறிச் சிந்தக் கண்டபோது அவன் தமது தந்தை என்று கண்டும், தமது பரமபிதாவாகிய சிவனுக்கு அபராதம் செய்தமை பற்றி அவன் கால்களைத் துணிந்து, முன் போலவே பூசிக்கப் புகுந்தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இப்பத்தி யோகத்தால் அன்றோ, உடனே கருணாநிதியாகிய சிவன் இடபாரூடராய் வெளிப்பட்டு, தமது, அருமைத் திருக்கரங்களால் இவரை எடுத்து, "நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா" என்று அருளிச் செய்து இவரை அணைத்து, இவருடைய சரீரத்தைத் தடவி உச்சிமோந்து, இவருக்கு அந்தச் சரீரத்திலே தானே தமது சாரூப்பியத்தைக் கொடுத்து, தொண்டர்களுக்கெல்லாம் தலைமையாகிய சண்டேசுர பதத்தில் இருத்தியருளினார். இவர் அச்சரீரத்திற்றானே சிவசாரூப்பியம் பெற்றமை இங்கே "செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனா - ரங்கண் மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்ப் - பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமே லயன் முதலாந் - துங்கவமரர் துதிசெய்யச் சூழ்ந்த வொளியிற் றோன்றினார்" என்பதனாலும், "வந்து மிகை செய் தாதைதாண் மழுவாற் றுணித்த மறைச்சிறுவ - ரந்த வுடம்பு தன்னுடனேயரனார் மகனா ராயினார்" என்பதனாலும் உணர்த்தப்பட்டது. சிவஞான சித்தியாருரையிலே "அந்தத் தேகத்திலே தானே சிவசாரூப்பியத்தைப் பெற்றார்" என்றார் சிவாக்கிரயோகிகளும்.

இந்நாயனார், பிராமணனும் தமக்குப் பிதாவும் குருவுமாகிய எச்சதத்தனை மழுவினால் வெட்டியும் பிரமகத்தி பிதிர்கத்தி குருகத்தி என்னும் தோஷங்கள் பொருந்தாது, சிவசாரூப்பியம் பெற்றமை யாது காரணத்தாலெனின்; சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இன்மையானும், இவர் செய்யும் சிவபூசைக்கு எச்சதத்தன் இடையூறு செய்தமை சிவாபராதமாதலானும், இவர் பரமபிதாவும் பரமகுருவுமாகிய சிவனிடத்து உள்ள அன்பு மிகுதியினால் அவர் நிமித்தமே அவ்வெச்சதத்தனை வெட்டினமையானும், தஞ்செயலற்றுச் சிவாதீனமாய் நிற்போர் செய்தது பாதகமாயினும் அதனைச் சிவன் தமது பணியாகவே பண்ணிவிடுவராதலானும் என்க. "அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறமதாகும் - பரனடிக்கன்பி லாதார் புண்ணியம் பாவமாகும் - வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி - நரரின畽ற் பாலன் செய்த பாதக நன்மையாய்த்தே." எ-ம். "இவனுலகி லிதமகிதஞ் செய்த வெல்லா மிதமகித மிவனுக்குச் செய்தார்பா லிசையு - மவனிவனாய் நின்றமுறை யேகனாகி யரன் பணியி னின்றிடவு மகலுங் குற்றஞ் - சிவனுமிவன் செய்தி யெல்லா மென்செய்தி யென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் - பவமகல வுடனாகி நின்று கொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கிவிடுமே." எ-ம். சிவஞானசித்தியாரில் கூறுமாற்றானும் உணர்க. இன்னும், இந்நாயனாரால் இம்மையிலே தண்டிக்கப் பட்டமையால் அன்றோ, எச்சதத்தன் சிவத்துரோகத்தால் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்தாது, தன் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தான். அகத்திய முனிவருக்கும் இராமருக்கும், தமக்கும் பிறர்க்கும் பெருந் தீங்கு செய்த வில்வலன் வாதாவியையும் இராவணனையும் கொன்றமையாலாகிய பிரம கத்தியைச் சிவபூசையே ஒழித்தமையானும், இச்சண்டேசுர நாயனார் தமது சிவபூசைக்கு இடையூறு செய்தலாகிய சிவாபராதம் கண்ட வழிச் செய்த பிரமகத்தி முதலியன சிவசாரூப்பியம் பயந்தமையானும், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெளிக.

இச்சண்டேசுரநாயனாரது பெருந்தன்மை "பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் றாதை - வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் றனக்குத் - தாரடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்த தென்னே - சீரடைந்த கோயின் மல்கு சேய்ஞலூர் மேயவனே." எ-ம். "கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல - படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு - முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி - யடி சேர்ந்த வண்ண மறிவார் சொலக் கேட்டு மன்றே." எ-ம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராலும், "தழைத்ததோ ராத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி - யழைத்தங்கே யாவின் பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு - பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் - குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டனாரே" எனத் திருநாவுக்கரசு நாயனார்ராலும், "ஏத நன்னில மீரறு வேலி யேயர் கோனுற்ற விரும்பிணி தவிர்த்துக் - கோதனங்களின் பால்கறந்தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற - தாதை தாளற வெறிந்தசண் டிக்குன் சடைமி சைமலரருள் செயக்கண்டு - பூதவாளிநின் பொன்னடி யடைந்தேன் பூம்பொழிற்றிருப் புன்கூரு ளானே" எனச் சுந்தரமூர்த்தி நாயனாராலும், "தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் - சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப வீசன் றிருவருளாற் றேவர்தொழப் - பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" என மாணிக்கவாசக சுவாமிகளாலும், "தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத்தொடுமுடனே - பூதலத் தோர்கள் வணங்கப் பொற் கோயிலும் போனக மும்மருளிச் - சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும் - பாதகத்துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே" எனச் சேந்தனாராலும், "பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே - தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் சேதிப்பக் - கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தஞ்செயலாற் றான்" என உய்யவந்த தேவ நாயனாராலும் புகழப்பட்டமை காண்க. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்திலே திருமுகப் பாசுரத்தின் றாற்பரியம் கூறுமிடத்து "கருதுங் கடிசேர்ந்த வெனுந் திருப் பாட்டி லீசர் - மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறன் முத்தி - தருதன் மையதாதல் சண்டீசர்தஞ்செய்கை தக்கோர் - பெரிதுஞ் சொலக்கேட்டன மென்றனர் பிள்ளை யார்தாம்" என்றார் சேக்கிழார் நாயனார்.

சண்டேசுரர் சிவபூசையின் இறுதியிலே பூசிக்கப்பட்டு, சிவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அன்னம் பானீயம் முதலியனவும் தாம்பூலம் மாலை சந்தனமும் ஆகிய நிருமாலியங்களை ஏற்று, சிவபூசாபலத்தைக் கொடுக்கும் அதிகாரம் உடையவர், இச்சண்டேசுர பூசை செய்யாவழிச் சிவபூசையாற் பயன் இல்லை. அது "சண்டனையர்ச் சித்தவரே சம்புவையர்ச் சித்தபலம் - கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்" என்னும் சைவ சமயநெறித் திருக்குறளான் உணர்க. சிலர் ஆன்மார்த்த பூசையிலே சண்டேசுர பூசையை வேண்டாது விலக்குகின்றனர். சைவ சித்தாந்தத்திலே சண்டேசுரரை எவ்விடத்தும் எப்போதும் பூசிக்க என்னும் நியமம் உளது; சண்டேசுர பூசை விலக்கு வாமதந்திரத்தும் தக்ஷிணதந்திரத்துமாம். இது காலோத் தராகமத்திற் கூறப்பட்டது. சிருட்டிகாலத்திற்றோன்றிய சிவாகமங்களிலே சண்டேசுர பூசை விதிக்கப்பட்டதாயின் இந்நாயனாருக்கு முன்னும் சண்டேசுரர் உளர் என்பது பெறப்படுமன்றோவெனின்; சத்தியம் நீ சொல்லியது அட்டவித்தியேசுரர் முதலியோருள் ஒருவர் பரமுத்தியையேனும் தமது பதத்தின் மேலாகிய பதத்தையேனும் அடைய மற்றொருவர் அப்பதத்தை அடைதல் போலவே, இவ்விசாரசருமர் முன்னுள்ள சண்டேசுரரது பதத்தை அடைந்தார் எனக் கொள்கை.

இதுகாறும் கூறியவற்றால், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவத்துரோகத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெள்ளிதிற் பெறப்பட்டது. ஆதலால், இச்சரீரம் உள்ளபொழுதே சிவலிங்கார்ச்சனைக்கு உரியோர்கள் சைவாசாரியரை அடைந்து, சிவதீக்ஷை பெற்று, விதி வழுவாது மெய்யன்போடு சிவபூசை பண்ணுக. சிவலிங்கார்ச்சனைக்கு உரியரல்லாதவர் ஆசாரியரை யடைந்து, தங்கள் தங்கள் அதிகாரானுகுணமாகிய தீக்ஷையைப் பெற்றுக்கொண்டு, தூல லிங்கமாகிய கோபுரத்தையும் தூபியையும் பத்திர புஷ்பங்களாலே பூசித்து, துதித்து, வலஞ் செய்து வணங்குக. அது "உயர்ந்தகுலத் தோருட் பழுதுறுப்பி னோரு - முயர்ந்தாரை யல்லாதாரும். குறித்து மறுமை குரவன் பதத்தைக் - குறித்த வன்செய் தீக்கைதகக் கொண்டு குறித்துச் சிவனெனக் கோபுரத்தைப் பூவும் - பறித்தருச்சித் தேத்து கபாங் கால்" எனச் சைவ சமயநெறியினும், தூபியினைக் கோபுரத்தை யீசனெனக் கண்டுதொழு - பாபமறும் வாய்த்துறுமின் பம்" என வருத்தமறவுய்யும் வழியினும், கூறுமாற்றானும் உணர்க. தங்கள் தங்கள் வருணத்திற்கு அருகமாகிய ஓருருவினிடத்தே உயிர்க்குறவாகிய சிவனைப் பூசை செய்யாதவர்களுக்கு ஒரு துணையும் இல்லை. அது "தமக்கருக மோருருவிற் பூசை சமையார் - தமக்க疓த் துணையாதோ தான்" என்னும் சைவ சமயநெறித் திருக்குறளால் அறிக. சிவபூசை பண்ணாதார் இழிவு "திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீறணியாத திருவி லூரும் - பருக்珗ோடிப் பத்திமையாற் பாடாவூரும் பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும் - விருப்பொடு வெண்சங்க மூதாவூரும் விதானமும் வெண் கொடியு மில்லாவூரு - மருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரு மவையெல்லா மூரல்ல வடவி காடே" "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகிற் றீவண்ணர் திறமொருகாற் பேசாராகி - லொருகாலுந் திருக்கோயில் சூழா ராகி லுண்பதன் முன் மலர்பறித்திட்டுண்ணா ராகி - லருநோய்கள் கெடவெண்ணீ றணியாராகி லியற்றார் பிறந்தவாறேதோ வென்னிற் - பெருநோய்கண் மிகநலியப் பேர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களால் உணர்க.


--------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசுநாயனார் புராண சூசனம்


1.கற்பு நிலை வழுவாது சிவனை வழிபடல்

கற்பாவது நாயகனிற் சிறந்த தெய்வம் இல்லை எனவும் அவனை வழிபடும் முறைமை இது எனவும் தந்தை தாயரும், பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் ஆசாரியரிடத்தும் கடவுளைச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் இப்படி என நாயகனும் கற்பித்த வழி நிற்றலாம். ஆதலால், சுமங்கலிக்கு, தன் கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் செய்தலே மேலாகிய தருமமாம் ஏவல் செய்து வரும் பொழுது, பரமபதியாகிய சிவனை வழிபடல் வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகில், தனக்கெனச் சுதந்தரம் இல்லாமையால், கணவனது அனுமதியைப் பெற்று, ஆசாரியரை அடைந்து சிவதீக்ஷை பெற்று, கணவனுக்குச் செயற்பாலதாகிய ஏவலின் வழுவாது நின்றே சிவனை விதிப்படி வழிபடுக. கணவன் இறந்துவிடில், ஆபரணங்கள் அணியா தொழிதலும், வெற்றிலை பாக்கை ஒழித்தலும், ஒரு பொழுது பகலிலே உண்டலும், பாயல் வேண்டாது தரையிலே நித்திரை செய்தலும், ஐம்புலன்களை அடக்கலும், சிவ புண்ணியங்களை விதிவழுவாது செய்தலும் வேண்டும். இதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம். "ஏந்திசைக்குப் பதியேவ லியற்றுதலே நியதி யீசனிணைத் தாளணைய வேசறவு பெருகிற் - காந்தனனு மதிபெற்றுக் கைக்கொள்க பூசை கலித்திடினே யிருதுசுலுழ்ந்தொரு மூன்று நாளும் - வாய்ந்திடச் செய் துடற்சுத்தி மற்றையர்நீர் தரவே மானதபூ சனைபுரிக மற்றையநாட் புனலுட் - டோய்ந் தருந்திக் கவ்வியத்தைச் சூட்டுகபோ தரற்குக் சூதகமுன் பெரு நோய்முன் சூட்டுவிக்க பிறரால்" எ-ம்: வாயுசங்கிதை, கருநெறிக் கூந்தலார்க்குக் கணவரை வணங்க றானே - யுரியநற் றரும மாகுமொண்டிறற் கணவர் சொல்லாற் - பருவரை பயந்த நங்காய் பணிந்துநம் - பாதம் போற்றிப் - புரிய甭ிழ் மலர்கடூவிப் பூசனை புரிதலாமால். கணவர்தமேவல் பூண்டு கற்பினி லொழுகிடா தார் - நணுகருங் கொடிய வெய்ய நரகினு ளழுந்து வாராற் - பணிவுறு கணவர் தம்மை யிகழ்ந்துநற் பான்மை யின்றி - யணிகலன் றுறந்த மாதர் தன்மையை யறைகுவாமே. தரையினிற் கிடத்த றான நல்கிட றயங்கு நீரி - லரியவெண் ணீற்றின் மூழ்க லன்பொடு நமைப்பூ சித்த - லொருபசு லுண்டு வைக லட்டமி பதினான்கோடு - மருவுபூ ரணையி லுண்டி யொழிந்திடல் வழக்க தாமே" எ-ம்.: காசிகாண்டம், "மருவுகாதலன் மாய்ந்திடின் மங்கைய - ரொருப கற்பொழு துண்டரும் பாகிலை - விரியும் பாயல் வெறுத்துமண் மேற்றுஞ்சி - யரிய நோன்புக ளாற்றிட வேண்டுமால், சுடர்செய் பொற்கல னீத்திடுந் தோகையர் - கடவுள் பூசனை காதலி னாற்றியு - முடல மாசுண வுள்ளுயிர் நீத்திடா - தடகு மூல மருந்திட வேண்டுமால்" எ-ம். வரும்.

இப்புராணத்திலே சுட்டப்பட்ட திலகவதியார், தம்மைக் கலிப்பகையார் விவாகம் செய்திலர் ஆயினும், அவர் இறந்தமை கேட்டவுடனே, 'என்னுடைய தந்தை தாயர்கள் என்னை அவருக்கு மணம் செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால், இவ்வுயிர் அவருக்கே உரியது; ஆதலால், இவ்வுயிரை அவருயிரோ டிசைவிப்பேன்' என்று சாவத்துணிந்தமையாலும், தம்பியாராகிய மருணீக்கியார் பொருட்டு அக்கருத்தை ஒழித்து உயிர்தாங்கிய பின்னும், இளமைப்பருவத்தராய் இருந்தும் விவாகம் செய்து கொள்ளாமல், தமது வீட்டிற்றானே தவஞ்செய்து கொண்டிருந்து, பின்னர்த் திருவதிகை வீரட்டானத்திற் சென்று, சிவ சின்னங்களைத் தரித்துக் கொண்டு, திருக்கோயிலிலே திருவலகிடுதல் திருமெழுக்கிடுதல் பூக்கள் கொய்து திருமாலைகள் தொடுத்தல் முதலிய திருப்பணிகள் பலவற்றை நாடோறும் விதிவழுவாது சிவன்மாட்டுள்ள மெய்யன்போடு செய்தமையாலும், இவரது கற்பின் பெருமையும் ஐம்புலன்களை அடக்கி நின்ற அருமையும் சிவபத்தி முதிர்ச்சியும் செவ்விதிற் றெளியப்படும். இவர் இத்திருப்பணிகளை மெய்யன்போடு செய்தனர் என்பது, இவர் புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்த தமது தம்பியாராகிய மருணீக்கியாரை அதில் நின்றும் தூக்கி ஆளும்பொருட்டுச் செய்த வேண்டுகோளுக்கு இசைந்து, கருணாநிதியாகிய சிவன் அவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டருளினமையாலே துணியப்படும்.


--------------------------------------------------------------------------------

2. சிவனது திருவருள் இல்வழி உண்மைநெறி கூடாதெனல்

உலகத்திலே, சமயங்களும், அந்த அந்தச் சமய சாத்திரங்களும் அந்தச் சாத்திரங்களிலே சொல்லப்படும் பொருள்களும், ஒன்றொடொன்று ஒவ்வாது பலதிறத்தனவாய் இருக்கும். இவைகள் எல்லாவற்றுள்ளும், மேலாகிய சமயம் யாது? சாத்திரம் யாது? பொருள் யாது? எனில், இச்சமயப் பொருள்கள் எல்லாம், இது ஆகும் அது அன்று என்னும் பிணக்கு இன்றி, தன்னிடத்தே காண நிற்பது எந்தச் சமயமோ அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரமே சாத்திரம்; அந்தச் சாத்திரத்திற் சொல்லப்படும் பொருளே பொருள். இப்படி எல்லாச் சமயப் பொருள்களையும் தன்னிடத்து அடக்கி நிற்கும் சற்சமயம் சைவ சித்தாந்தமேயாம். ஆதலால், அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரங்களாகிய வேத சிவாகமங்களே சாத்திரம்; அந்தச் சாத்திரங்களிற் சொல்லப்படும் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களுமே மெய்ப்பொருள்கள். அது "ஓதுசம யங்கள்பொரு ளுணரு நூல்க ளொன்றோ டொன்றொவ்வாம உளபலவு மிவற்றுள் - யாதுசமயம் பொருணூல் யாதிங் கென்னி லிதுவாகு மதுவல்ல வெனும் பிணக்க தின்றி - நீதியினா லிவையெல்லா மோரிடத்தே காண நிற்பதியா தொரு சமய மதுசமயம் பொருணூ - லாதலினா லிவையெல்லா மருமறையா கமத்தே யடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும்" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க.

சமய சாத்திரங்கள் எல்லாம் வேதாகமங்களிலே சுருக்கிக் கூறப்பட்டிருக்கும். அவைகளைச் சமுத்திரகலச நியாயமாக உருத்திரர்களும் தேவர்களும் இருடிகளும் தத்தம் அறிவளவாகத் தனித்தனி விரித்து உட்சமய புறச் சமய சாத்திரங்களாகப் பண்ணினார்கள். ஒன்றோடொன் றொவ்வாத சாருவாகம் முதலிய பல சமயப் பொருள்களை வேதாகமங்களில் சிவன் கூறுதல் என்னை ஏனின், ஆன்மாக்களது அதிகார பேதம் பற்றி என்க. முன்னர் அதிதாமதர்களாய், மந்த மதிகளாய், லெளகிக சுகத்தையே பரமபுருஷார்த்தம் எனவும், புறமாகிய புத்திராதிகளையே ஆன்மா எனவும் அபிமானிக்கும் அதிகாரிகளைக் குறித்து, துக்கம் முதலியவற்றோடு உடன் விரவி இருத்தலால் லெளகிக சுகம் பரம புருஷார்த்தம் அன்று எனவும், புத்திராதிகள் ஆன்மா அல்ல எனவும் உணர்த்தி, அவர்களுக்குப் புத்தி ஸ்திரமாதற் பொருட்டு நுண்பொருள் உணரும் வன்மை இன்மையால், தூலதேகத்தையே ஆன்மா என்றும் அதனழிவையே பரம புருஷார்த்தம் என்றும் உபதேசிக்கின்றனர். பின்னர், அதிற்கூறிய தருமானுட்டானத்தினாலே சிறிது பிரசாதம் பெற்றுச் சற்றே சித்த சுத்தி அடைந்து தேகான்மா முதலியவற்றில் பச்சாத்தாபம் உதிக்கப்பெற்ற அதிகாரிகளைக் குறித்து, தேகாதிகளில் ஏற்றிய ஆன்மத்தன்மையை மறுத்தற்குப் புத்த சாத்திரம் உபதேசிக்கின்றனர். இவ்வாறே மேலும் சோபானக்கிரமமாக உபதேசித்தலால், விரோதம் இன்மை தெளிக. முன்முன் உள்ள சமயங்கள் பின்பின் உள்ள சமயங்களால் வாதிக்கப்படும். வாதிக்கப்படுவது பூருவபக்ஷமும், வாதிப்பது சித்தாந்தமுமாம். சைவ சித்தாந்தம் மற்ற எச்சமயங்களையும் பூருவபக்ஷம் பண்ணி நிற்றலானும், அதனைப் பூருவபக்ஷம் பண்ணுதற்கு ஒரு சமயமும் இன்மையானும், அதுவே சித்தாந்தம் எனப்படும். "சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்" என்று இரத்தினத்திரயத்திற் கூறப்பட்டது.

இச்சைவசித்தாந்த நூல்களை, பசுக்களாகிய நாம் பரதந்திரர்களாதலால் ஒன்றனை உள்ளவாறு உணர்தலும், அதன் வழி நிற்றலும் இயலாவாம் எனத் தெளிந்து, சுவதந்திரராகிய சிவனை மறவாது அவரது திருவருளையே முன்னிட்டு நின்று, விதிப்படி கற்றுணர்தல் வேண்டும். இவ்வாறே திருவருளை முன்னிடாது எத்துணை நூல்களைக் கற்பினும், எத்துணைத் தருமங்களைச் செய்யினும், சைவ சித்தாந்தமே உண்மைநெறி என்று ஐயந்திரிபறத் துணிதலும், அந்நெறியின் வழுவாது நிற்றலும் கூடாவாம். திருவருளே கண்ணாகக் காண்டல் வேண்டும் என்பதும், அஃது இல்வழி உண்மை நெறியை உணர்ந்து சிவனை அடைதல் கூடாது என்பதும், "உயிரா வணமிருந் துற்றுநோக்கி யுள்ளக்கிழியி னுருவெழுதி - யுயிரா வணஞ் செய்திட் டுன்கைத் தந்தா லுணரப் படுவாரோ டொட்டி வாழ்தி - யயிரா வணமேறா தானே றேறி யமரர்நா டாளாதே யாரூராண்ட - வயிரா வணமேயென் னம்மா னேநின் னருட் கண்ணா னோக்காதா ரல்லாதாரே." - ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே யடங்குவித்தா லாரொருவ ரடங்காதாரே - யோட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே யுருகுவித்தா லாரொருவ ருருகா தாரே - பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே பணிவித்தா லாரொருவர் பணியாதாரே - காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்னும் தேவாரங்களானும், "அவனருளாலே யவன்றாள் வணங்கி" என்னும் திருவாசகத்தானும் உணர்க.

இம்மருணீக்கியார், யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து பல தருமங்களைச் செய்தும், பிரபஞ்ச வாழ்வினது அநித்தியத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தும், சைவ நூல்களை ஓதி உணர்ந்தும், எவ்வுயிர்க்கும் முதல்வராகிய சிவனது திருவருள் இன்மையாலன்றோ! சமணர்களது துர்ப் போதனையினாலே மயங்கி, அவர்களது ஆருகத சமயமே உண்மை நெறி என்று துணிந்து, அதிலே பிரவேசித்தார். சிவனன்றி முதல் இல்லை என்பது "சிவமுதலே யன்றி முதலில்லை யென்றுஞ் - சிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன - தென்செயல தாகின்ற தென்று மிவை யிற்றைத் - தன்செயலாக் கொள்ளாமை தான்" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானுங் காண்க. இவர் சைவ நூல்களை ஓதி உணர்த்தும் சிவனது திருவருள் இன்மையால் சைவமே உண்மைநெறி என்னும் உணர்ச்சி இவருக்குப் பிறந்திலது என்பது, இங்கே "நில்லாத வுலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை - யில்லேனென் றறத் துறந்து சமயங்க ளானவற்றி - னல்லாறு தெரிந்துணர்ந்து நம்பரரு ளாமையினாற் - கொல்லாமை மறைந்துறையு மமண்சமயங் குறுகுவார்" என்னும் திருவிருத்தத்தால் உணர்த்தப்பட்டது. இத் திருவருள் தன்னைப் பெறல் வேண்டும் என்னும் ஆசையோடு பெருந்தவம் செய்த வழி யன்றிக் கிடையாது. இந்நாயனார் சிவனை அடைதற் பொருட்டு முற்பிறப்பிலே பெருந்தவம் செய்தாராயினும், அத்தவத்திலே சிறிது வழுவுற்றமையாலன்றோ, இப்பிறப்பிலே நெடுநாள் பெய்ந்நெறியாகிய பரமத்தை அனுட்டித்தனர். கருணாநிதியாகிய சிவன் அச்சிறுகுற்றத்தின் பொருட்டு. இவரை இப்பிறப்பிலே தண்டித்தும், பின்னர் இவர் முன் செய்த தவத்தினாலன்றோ, இவரைக் கை விடாது வலிந்தாட்கொள்ளத் திருவுளங்கொண்டு, சூலை நோயினால் வருத்தி, உண்மை நெறியாகிய தமது சைவ சமயத்திலே புகும்படி, திருவருள் சுரந்தனர். சிவபுண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒரோவழித் தீது செய்யினும், அவர்களைக் கைவிடாது காக்கும் பெருங் கருணையினர் சிவனே என்பது, இதனாலே துணியப்படும். "இன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ் - சென்று தொடருமவன் சென்றிடத்தே - யென்றுந்தான் - றீதொருவ னானாற் சிவபதிதான் கைவிடுமோ - மாதொருகூ றல்லனோ மற்று" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் காண்க. புறச்சமயங்கள் பொய்ந்நெறிகள் என்பது "இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை - நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் - தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு - மவப்பெருந் தாப நீங்கா தசைந்தன" எனத் திருவாசகத்தினும், "சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குநின் - றாவி யறாதேயென் றுந்தீ பற - வவ்வு用ை கேளாதே யுந்தீபற" எனத் திருவுந்தியாரினும் கூறுமாற்றால் அறிக. சிவன் இவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டமையால், அவர் ஆன்மாக்களைத் தண்டிப்பதெல்லாம் அவர்கள் குற்றத்தினின்றும் நீங்கித் தம்மை அடைந்து பேரின்பம் பெற்று உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினாலே யாம் என்பது தெளியப்படும். அது "தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சொ வாற்றின் - வந்திடா விடினுறுக்கி வளாரினா லடித்துத் தீய - பந்தமு மிடுவரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகு - மிந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தானும் உணர்க.


--------------------------------------------------------------------------------

3. சீவன் முத்தி நிலை

ஆன்மாவுக்கு ஆணவ மல பரிபாகத்தினாலே தீவிரதர சத்திநிபாதம் உண்டானபோது, கருணாநிதியாகிய சிவன், தமது திருவருளினாலே சிவஞானத்தை உதிப்பித்து, சிவானந்தம் அனுபவிப்பித்து, மேல்வரும் பிறப்புக்கு ஏதுவாகிய சஞ்சித ஆகாமியங்களைக் கெடுத்து எடுத்த சரிரத்திலே பிராரத்துவம் புசிக்கும்படி சீவன் முத்தனாக வைத்து, தேகாந்தத்திலே பரமுத்தியைக் கொடுத்தருளுவார். அது "சித்தாந்த தேசிவன்றன் றிருக்க்டைக்கண் சேர்த்திச் சென்னமொன்றிலே சீவன் முத்த ராக - வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும் பிறப்பை யறுத்து - முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவு முகலரெல்லா மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங் குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க. சத்திநிபாதமாவது திரோதான சத்தி நீங்க அனுக்கிரக சத்தி பதிதலாம். இத்திருநாவுக்கரசு நாயனார் தீவிரதர சத்திநிபாதமுடையராய், சிவனது திருவருளினாலே மலவிருள் நீங்கிச் சிவத்துவம் விளங்கப் பெற்று, சிவானந்தம் மேலிட்டு, சீவன் முத்தராய் இருந்தார். சிவானந்த விளக்கத்துக்கு அடையாளம் ஆனந்த அருவியும், புளகமும், விம்மலும், தழுதழுத்தலும், பரவசமும் இடையறாது எழும் அத்தியற்புத சின்மயமாகிய பாடலுமாம். இந்நாயனார் தமது தமக்கையாராலே விபூதி அணியப் பெற்று சிவசந்நிதியை அடைந்தவுடனே, சிவனது திருவருளினாலே மலநீக்கமும், சிவத்துவ விளக்கமும் இவருக்கு உண்டாயின என்பதும், சிவானந்தம் வெளிப்பட விளங்கியது என்பதும், இங்கே "நீறணித்தா ரகத்திருளும்" என்பது முதல் "அங்கங்களடங்க" என்பது இறுதியாய் உள்ள ஐந்து திருவிருத்தங்களால் உணர்த்தப்பட்டன. சிவானந்தம் வெளிப்பட விளங்கினமை, இன்னும் இப்புராணத்திற் பல விடங்களில் விரித்துக் கூறியவாற்றால் உணர்க. இவரது சிவானந்த விளக்கம், இவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களினாலே மெய்யுணர்வு உடையோர்க்கு, தெள்ளிதின் விளங்கும்.

சீவன் முத்தராவார் அளத்திற்பட்ட புற்போலச் சிவப்பிரகாசத்தினாலே போக சாதனமாயுள்ள உட்கரணங்களும் புறக்கரணங்களும் ஆகிய பசு கரணங்கள் எல்லாம் சிவகரணமாய் நிகழப் பெற்று, சகல கருவிகளோடும் கூடியிருக்கும் சாக்கிராவத்தையிலே நிருமல துரியாதீதத்தைப் பொருந்தினோர்களாய், பூமியின்கணுள்ள ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டுச் சஞ்சரிக்கும் இயல்புடையோராம், அது "இநிலைதா னில்லையே வெல்லா மீச னிடத்தனினு மீசனெல்லா விடத்தினினு நின்ற - வந்நிலையை யறிந்தந்தக் கரணங்க ளடக்கி யறிவதொரு குறிகுருவி னருளினா லறிந்து - மன்னு甒ிவன் றனையடைந்து நின்றவன்ற னாலே மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத் - துன்னியசாக்கிரமதனிற் றுரியா தீதந் தோன்றமுயல் சிவானுபவஞ் கவானுபூ திகமாம்". "சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்களுலகிற் சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்களிவர்கள் - பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ - வாக்க甹முடி கவித்தரசாண் டவர்களரி வையரோ டனுபவித்தங் கிருந்திடினு மகப்பற்றற் றிருப்பர் - நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு நுழைவர் பிறப் பினில்வினைகணுங்கிடாவே" என்னுஞ் சிவஞானசித்தித் திருவித்தங்களானும், "காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப் - பேணு மடியார் பிறப்பகலக் - காணும் - பெரியானை நெஞ்சே பெருந்துறையி லென்றும் - பிரியானை வாயாரப் பேசு" என்னும் திருவாசகத்தானும் உணர்க. இத்திருநாவுக்கரசு நாயனாரும் அவ்வியல்பினையுடையரே. ஆதலால், இவர் அருளிச் செய்த தமிழ்வேதமாகிய தேவாரம் சிவவாக்கியம் என்றே ஐயந்திரிபறத் துணியப்படும். இவ்வாறன்றி, பசுவாக்கியம் என்று நினைப்பினும், அந்நினைவு அதிபாதகமாகிய சிவத்துரோகமாகி, எரிவாய் நரகம் பயந்தே விடும். இவர் வாக்கியம் சிவவாக்கியம் என்றே துணிந்து, சருவான்மாக்களும் அதனை ஓதி உணர்ந்து முத்தி பெற்றுய்தற் பொருட்டன்றோ, கிருபா சமுத்தரமாகிய சிவன், யாவரும் கேட்ப, இவருக்கு நாவுக்கரசு என்ப பெயர் கொடுத்தருளினார்.

சிவஞானிகள் சரியை முதலியன செய்யவேண்டுவதின்றன்றோ, அங்ஙனமாக, இத்திருநாவுக்கரசு நாயனார் சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சிவனைத் தரிசித்து வலம் வந்து வணங்கித் துதித்தல்களும், திருக்கோயிற் பிராகாரங்களினும் திருவீதிகளினும் புற்செதுக்குதலும் (திருகோயிற் பிராகாரங்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல்லைச் செதுக்குதல் சிவபுண்ணியம் என்பது 'சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக் கிடுதல் - புனன்மு கந்தெமை யாட்டுவித் தெமக்கெனப் புரித - றின்னு மாலயத் தகவையி னெழுந்தபுற் சீத்த - னனைந றுந்துணர் நாண்மல ரெடுத்துட னல்கல்" என்னும் உபதேச காண்டச் செய்யுளானும் அறிக.), பிறவும் செய்தமை என்னையெனின்; இவர் பசுத்துவம் நீங்கித் தஞ்செயலற்றுச் சிவனேயாய் நின்றமையால், இவை எல்லாம் இவர் செயலாகாது சிவன் செயலேயாய் நிகழ்ந்தன என்க. அது "நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன் - றன்செய றானேயென் றுந்தீ பற - தன்னையே தந்தானென் றுந்தீ பற" என்னும் திருவுந்தியாரானும் உணர்க. இங்ஙனம் இவையெல்லாம் சிவன்செயலாய் நிகழ்தல் எற்றுக்கெனின், ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை உய்வித்தற் பொருட்டென்க. அது சிவன் தக்ஷிணாமூர்த்தியாய், திருக்கையிற் செபமாலை கொண்டு செபம் பண்ணுதல் உயிர்களுக்கு உய்யுநெறி காட்டுதற் பொருட்டாதல் போலும் என்க. இந்நாயனார் செயலெல்லாம் உயிர்கள் பொருட்டே நிகழ்ந்தன என்பது, "அன்ன தன்மையர் கயிலையை யணைவதற் கருளார் - மன்னு தீந்தமிழ் புவியின் மேற் பின்னையும் வழுத்த - நன்னெ டும்புனற் றடமு மொன்றுடகொடு நடந்தார் - பன்ன கம்புனை பரமரோர் முனிவராம் படியால்" என இங்கும் குறிப்பிக்கப் பட்டமை காண்க. சிவஞானிகள் சரியை கிரியை முதலியவற்றைத் தாங்களாக வேண்டா என்று விடுவதும் இல்லை; செய்து வரல்வேண்டும் என்று சங்கற்பித்துச் செய்வதும் இல்லை; நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவரறியாது தானே போதல் போல, சிவஞானிகளுக்குச் சரியை கிரியை முதலியன வெல்லாம் தாமே நீங்கும். இவ்வாறன்றி, தாங்களே இவற்றைச் செய்யாதொழிந்தோர் நரகத்து வீழ்வர். அது "குறிப்பிடங் காலந்திக்கா சனங்கொள்கை குலங் குணஞ்சீர் - சிறப்புறு விரதஞ் சீலந் தவஞ்செபந் தியான மெல்லா - மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி - யுறக்குறு பவர் போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே" எனச் சிவப்பிரகாசத்தினும், "ஞாலநீதியு நான்மறை நீதியும் - பாலருன் மத்தர் பிசாசரி லெனவு - முறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந் - தானே தவிரா தானாற் புரியா - தொழிந்திடி னிரயட் தழுந்துத றிடமே" எனச் சங்கற்ப நிராகரணத்தினும் கூறுமாற்றாற் தெளிக.

இந்நாயனார் இவ்வுண்மை நிலையைப் பொருந்திய பெருந்தகைமையினர் என்பது, சமணர்கள் இவரை மிக்க சூட்டினை உடைய நீற்றறையில் ஏழுநாள் இருத்தியும், நஞ்சு கலந்த பாலும் அன்னமும் உண்பித்தும், இவரைக் கொல்லும் பொருட்டு யானையை ஏவியும், இவரைக் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலிலே தள்ளியும், அவைகள் சிறிதாயினும் இவரை வாதிக்காமையானும், தமது வேண்டுகோளின்படி சிவனது திருவருளினாலே தமது தோளிலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பட்டமையானும், அப்பூதியடிகணாயனாரது புத்திரர் விஷத்தினால் இறந்தபோது அவரை உயிர்ப்பித்தமையானும், திருவீழிமிழலையிலே சிவனடியார்களை அமுது செய்வித்தற் பொருட்டுச் சிவனிடத்தே படிக்காசு பெற்றமையானும், வேதாரணியத்திலே வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினமையானும், திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியிலே சிவனிடத்தே பொதிசோறு பெற்றமையானும், திருவையாற்றிலே கைலாசந் தரிசித் தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இவை எல்லாம் இவ்வுண்மை நிலையில்லாதாரால் இயலா என்பது "துரியங்கடந்தசுடர்த் தோகையுட னென்றும் - பிரியாதே நிற்கின்ற பெம்மான் - றுரியத்தைச் - சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யுந் தன்மைகளு - மாக்கிடும்வந் தன்பர்க் கவன்", "கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலைதவிர்த்தல் - கல்லே மிதப்பாக் கடனீந்த - னல்ல - மருவார் மறைக்காட்டில் வாயிறிறப் பித்த - றிருவாமு ராளி செயல்" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இன்னும் இவர் சிவனது ஆஞ்ஞையினாலே தமது உழவாரம் நுழைந்த இடங்களெங்கும் பொன்னும் நவரத்தினங்களும் கிடக்கக் கண்டும், அவைகளைப் பருக்கைக் கற்களோடு சமமாக எண்ணி, உழவாரத்த்ல் ஏந்திக் குளத்தில் விழ எறிந்து விட்டமையானும், அரம்பையர்கள் தம்முன் நின்று தம்மை மோகிப்பிக்கும் பொருட்டுப் பல முயற்சிகள் செய்தும், தமது சித்தநிலை சிறிதும் வேறுபடாது தாம் செய்யும் திருப்பணியிலேயே உறுதிகொண்டு நின்றமையானும், இவரது பெருமை தெளியப்படும். இவ்வருமை "ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்", "ஏந்திழையார் தஞ்சயனத் தெய்தித்தம் மெய்தொடினுங் - காய்ந் துவர்த்த லேதுறவு காண்" என்னும் திருவாக்குகளால் அறிக. இவர் பரமுத்தி பெற்றமை இங்கே, புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே னெனப்புகன்று - நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி யண்ணலார் சேவடிக்கீழாண்ட வர செய்தினார் என்பதனால் உணர்த்தப்பட்டது.

இதுகாறும் கூறியவாற்றால், இந்நாயனார், ஆன்மாக்கள் புறச்சமயப் படுகுழியில் வீழாது சைவமே சற்சமயம் என்று தெளிந்து, அதன்வழி நின்று சிவனை வழிபட்டு உய்யும் பொருட்டு, தமது செயல்களாலும், திருவாக்குகளானும், மெய்யறிவுச் சுடர் கொளுத்திய சமயகுரவராயினார் என்பது, தெள்ளிதிற் பெறப்படும். ஆதலால் பரசமயங்களிற் புகாது சிவனே பரமபதி எனத் துணிந்து, இந்நாயனார் காட்டியவாறே விபூதி உருத்திராக்ஷம் என்னும் சிவசின்னங்கள் தரித்து, சிவனை இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் மெய்யன்பினோடு மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் வழிபட்டு உய்தலே நாம் அருமையாகப் பெற்ற இச்சரீரத்தினால் பெறப்படும் பயன் என்பது கருங்கன் மனமும் கரைந்துருகச் செய்யும் பெருஞ்சிறப்பினதாகியும், காமுகருக்கு இளம் பெண்களுடைய வசனம் போலச் சிவனுக்குப் பிரீதியைச் செய்யும் இயல்பினதாகியும் விளங்கும் இந்நாயனாரது தேவாரத்தைச் சித்தசமாதானத் தோடும் மெய்யன்போடும் விதிப்படி ஓதி உணர்க.


--------------------------------------------------------------------------------

குலச்சிறை நாயனார் புராண சூசனம்

1. சிவனடியார் பத்தி

சிவன் சுவதந்திரர் நாம் பரதந்திரர். சிவனுக்கும் சிவபத்தர்களுக்கும் நாம் அடிமை என்று தெளிந்த மெய்யுணர்வு உடையோர், தாம் எத்துணைச் செல்வத்தோடும் எத்துணை அதிகாரத்தோடும் கூடி யிருப்பினும், சிறிதாயினும் அவைகளாலே அகங்காரம் கொள்ளாமல், சிவனடியார்களைக் கண்டால், அவர்கள் எக்குலத்தர்களாயினும், அவர்களைச் சிவன் எனவே பாவித்து, எதிர்கொண்டு வணங்கித் துதித்து, விதிப்படி அமுது செய்விப்பர். இப்படிச் சிவனடியாரிடத்து அன்புடையவரே சிவனிடத்து அன்புடையர் என்று தெளியப்படுவர். அகங்காரம் முதலியன உடையோர் சிவனது திருவருளை அடையார்கள். அது "ஒருமையுடனீசனரு ளோங்கி யென்றுந் தூங்க - லருமை யருமை யருமை - பெருமையிடும் - பாங்காரங் கோப மபிமான மாசையிவை - நீங்காத போது தானே" என்னும் சிவபோகசார வெண்பாவால் அறிக. இக்குலச்சிறை நாயனார், தாம் பெருஞ் செல்வரும் பாண்டியனுக்கு முதன்மந்திரியாருமாய் இருந்தும், சிறிதும் செருக்கு உறாது, இச்சிவபுண்ணியத்தைச் செய்தமையால், சிவனிடத்தே மெய்யன்புடையர் என்பது தெள்ளிதிற் றுணியப்படும். இவரது பத்தித்திறம் "வெற்றவேயடியா ரடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங் - கொற்றவன் றனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவிநின்றேத்து - மொற்றைவெள் விடைய னும்பரார் தலைவனுலகினி லியற் கையை யொழிந்திட - டற்றவர்க் கற்ற சிவனுறைகின்ற வாலவா யாவது மிதுவே; கணங்களாய்வரினுந் தமியராய் வரினு மடியவர் தங்களைக் கண்டாற் - குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயின் - மணங்கமிழ் கொன்றை வாளராமதியம் வன்னிவண் கூவிள மாலை - யணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே, நலமில ராக நலமதுண்டாக நாடவர் நாடறி கின்ற - குலமில ராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங் - கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரிபுரி மூடிய கண்ட - னலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே; நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங் - கோவணம் பூதிசாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற - வேவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வுன்றி - யாவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே; தொண்டராயுள்ளார் திசைதிசைதோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக் - கண்டுநா டோறு மின்புறுகின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக் - குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கணெறி யிடைவாரா - வண்டர்நா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே" எனத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராற் புகழப்பட்டமை காண்க.

2. சைவ சமயத்தை வளர்க்க விரும்பல்

புறச்சமயிகளுடைய துர்ப்போதனையினாலே ஆன்மாக்கள் சற்சமயமாகிய சைவத்தை விட்டு அவர்களது சமயப் படுகுழியிலே விழுந்து கெடுதலைக் காணின், மிக இரங்கிக் கவலை கொண்டு, அப்புறச்சமயங்களை ஒழித்து, சைவத்தை வளர்த்தற்கு வேண்டும் முயற்சியைச் சிரத்தையோடு செய்தல் மிக மேலாகிய சிவபுண்ணியமாம்; அது செய்யாமை மிகக் கொடிய பாதகமாம். அம்முயற்சி சிரத்தையோடு செய்யப்படுமாயின், வேண்டுவார் வேண்டியதே ஈவாராகிய சிவன் அதனை முற்றுவித்தருளுவர். இக்குலச்சிறை நாயனார் இச்சிவபுண்ணியத்தான் மிகச் சிறப்புற்றவர் என்பது, சமணர்களுடைய பொய்ச் சமயத்தைக் கெடுத்துப் பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டுத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கினமையாலும், வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்றுவித்தமையாலும், செவ்விதிற்றெளியப்படும். இவர் இவ்வாறு செய்தபின்பு, பாண்டி நாடெங்கும் புறச்சமயமாகிய இருள் கெடச் சைவ சமயமாகிய பேரொளி தழைத்து ஓங்கியதன்றோ? ஆதலால், இதனின் மிக்க புண்ணியம் வேறு இல்லை எனத் தெளிந்து, சைவத்தை வளர்த்தற்குச் சிவனது திருவருளையே முன்னிட்டுக் கொண்டு இடைவிடாது பெருமுயற்சி செய்க.

திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

பெருமிழலைக்குறும்ப நாயனார் புராண சூசனம்

குருபத்தி முதிர்ச்சி

கண்மணியானது இது நன்று இது தீது என்று காட்டுதல் போலச் சற்குருவானவர் இது நன்னெறி இது தீநெறி என்று உணர்ந்து வோராதலால், அவரைச் சிவபெருமான் எனவே பாவித்து, நியமமாக மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் வழிபடுவோர் சித்தி முத்திகளைப் பெறுவர். அது "சிவனே சிவஞானி யாதலாற் சுத்த - சிவனே யெனவடி சேரவல் லார்க்கு - நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் - பவமான தின்றிப் பரலோக மாமே; தெளிவு குருவின் றிருமேனி காண்ட - றெளிவு குருவின்றிருவார்த்தை கேட்ட - றெளிவு குருவின் றிருநாமஞ் செப்ப - றெளிவு குருரூபஞ் சிந்தித்த றானே" எனத் திருமந்திரத்திற் கூறுமாற்றால் அறிக. இப்பெருமிழலைக் குறும்பநாயனார் உலகம் உய்யும் பொருட்டுத் திருத்தொண்டத்தொகை அருளிச் செய்த சமயகுரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நியமமாகச் சிரத்தையோடு சிந்தித்துத் துதித்து வணங்கினமையாலன்றோ, அணிமா முதலிய அட்டசித்திகளையும் பெற்று, ஸ்ரீ பஞ்சாக்ஷரமே தமக்குச் சுற்றமும் பொருளும் உணர்வும் எனக் கொண்டார். இவரது குருபத்தி முதிர்ச்சி, சுந்தரமூர்த்தி நாயனார் உத்தர கைலாசத்தை அடைவதை முன்னுணர்ந்து, தாம் அவரைப் பிரிதலாற்றாமையால் முதனாள் யோக முயற்சியினாலே பிரமரந்திர வழியால் உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தை அடைந்தமையாலே செவ்விதிற்றெளியப்படும்.

திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------

காரைக்காலம்மையார் புராண சூசனம்

இக்காரைக்காலம்மையார் புராணத்தால் அறிதற்பாலனவாகிய விஷயங்கள் மாகேசுர பூசையும் அன்புமாம். மாகேசுர பூசை இளையான்குடி மாறநாயனார் புராணத்துச் சூசனத்தினும், அன்பு கண்ணப்ப நாயனார் சூசனத்தினும் உணர்த்தப்பட்டன. இவ்வம்மையார் பெருமை இவரைப் பரமபதியாகிய சிவபெருமான் "அம்மையே" என்று அழைத்தருளினமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அஞ்சி யருளினமையானும் அறிக.

திருச்சிற்றம்பலம்


-------------------------------------------------------------------------------

மின்னூல் வடிவம் : கா. திருஞான சம்பந்தன் (2008)
அண்மைய மாற்றம் : 22.05.2008