கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கண்மணியாள் காதை  
 

மஹாகவி

 

கண்மணியாள் காதை

மஹாகவி

-------------------------------------------

மஹாகவியின்
கண்மணியாள்
காதை

1968

-------------------------------------------------

உரிமை யாவும் மஹாகவி யுடையன

------------------------------------------------

மஹாகவியின்
கண்மணியாள்
காதை
என்ற
வில்லுப் பாட்டு


வில் குடம் உடுக்கு தெந்தினா மத்தளம் சல்லரி
போன்ற ஊர் இசைக் கருவிக ளோடு
பாடுதற் கேற்ற காவியம்


அன்னை வெளியீட்டகம்
யாழ்ப்பாணம்.

------------------------------------------------------------

எழுதியது: நவம்பர், 1966
முதல் வானொலி பரப்பியது: மே, 1967
முதல் மேடை யேற்றியது: டிசம்பர், 1967
முதல் அச் சேற்றியது: நவம்பர், 1968

வெளியீடு:
அன்னை வெளியீட் டகம்,
89/1, கோவில் வீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

அச்சு:
ஆசீர்வாதம் அச்சகம்,
32, கண்டி வீதி,
யாழ்ப்பாணம்.

விலை: ரூபா 1-50

----------------------------------------------------------------

வில்லுப் பாட்டு

புலவர் பெருந்தகை ஒருவர் புனைந்த
'கப்பல் ஓட்டிய தமிழ'னின் கதையை
வீர மணி தன் வில்லடித் தோத
ஒரு நாட் கேட்டேன்; உடல் சிலிர்ப் படைந்தேன்.

தமிழ்க் கவி இசைக்கப் படுங்கால், கவிதை
சிதைக்கப் படும் ஒரு செய்தியே அறிந்த நான்,
அன்றே கவி - சக - இசையைச் சுவைத்தேன்.
ஊரவர் வில்லிலும் உடுக்கிலும் குடத்திலும்,
ஊரவர் மெட்டிலும் உணர்வுகள் தெறித்ததைக்
கேட்டு, நெஞ்சிற் கிளர்வுகள் கொண்டேன்.

வழுத்துவார் குறைந்து, வரி வரி யாக
எழுத்திலே கிடக்கும் கவிதையை ஓசையாய்ப்
பரிமா றிட ஒரு பழம் முறை தெரிந்தது.
கவிதையை மக்கள் பெரும்பாலர் காணவும்,
கண்டதைப் பாடிப் பாடிக் களிக்கவும்
வைக்க இம்முறை வாய்த்ததென் றுணர்ந்தேன்.

ஆகவே,
நானும் ஓர் வில்லுப் பாட்டினை யாக்கும்
நாட்டம் உடைய நாகி நின்றேன்.
வீர மணியும் வேண்டி நின்றார்.

ஆதலால்,
செல்லையன் என்றோர் சிறுவனைப் படைத்துக்,
'கலட்டி' என்ற காவியம் புரிந்தேன்.
இன்பமாய் முடிந்த இனிய கவி அது.
கனவுப் பாங்கிலே கட்டப்பட்டது.
திட்ட மிட்ட செயல் சில ஆற்றி
வெற்றி அடைந்தவன் வீரக் கதை அது.

ஆயினும்,
துன்ப மாகக் கதையைத் துணித்தும்
வேறொரு பிரதி எழுத விரும்பினேன்;
"திடீர்த் திருப் பங்கள் தேவை" என்ற
சிந்தனை ஒன்றும் வந்து சேர்ந்தது!

இங்ஙனம்-
பொது மக் களிடைப் போவதற் காக
இயன் றள வெளிய தாகவும் இயன்று-
கண்மணி யாளின் காதை எழுந்தது.

கண்மணி யாளின் காதை இன்றிவ்
வீழ மெங்கும் எதிரொலிக் கிறது.
கேட்டவர் யாரும் கிறுகிறுத் திட, அதை
வழங்கிடும் வில்லவர் வாழ்க;
வாழ்க கவிதை; வில்லிசை வாழ்கவே!

"மஹாகவி"

"நீழல்"
அளவெட்டி
இலங்கை
5-11-68

-------------------------------------------------------

மஹாகவியின்
கண்மணியாள் காதை
என்ற இவ் வில்லுப் பாட்டை
கொழும்பு-13,
கன்னாரத் தெரு-67,
நடிகவேள், வில்வேந்தர்
லடிஸ் வீரமணி
அவர்களும்
அவர் குழுவினரும்
இப்பொழுது
இசைத்து வருகிறார்கள்.

----------------------------------------------------------------

முன்னுரை

உழுதனம்; விதைத்த தாலே
உயர்ந்தன பயிரின் கூட்டம்.
தொழிலினை வளர்த்த தாலே,
தொடர்ந்தன பயனின் ஈட்டம்.
விழுதுகள் விடுத்த ஆல் போல்
விண்ணுயர் கோயில் கட்டித்
தொழுதனம்; கலைகள் என்று
தொடக்கினாய் தாயே, வாழி!

மூத்தவர், சான்றோர், யாவும்
முறைமையாய்ப் பயின்றோர், பாக்கள்
யாத்தவர், அளித்தோர், "நாளும்
யாகம் வேறில்லை!" என்று
வேர்த்தவர், உழைப்போர் முன்னே
விசரன் போல் எழுந்து பாடும்
நாத்தடிப் புடையேன்; என்னை
நாடு மன்னிக்கு மாக!

---------------------------------------------------------------

முதலாம் கூறு

வெண்ணிலவு

1

ஈழ நாடே - எழில் சூழும் நாடே!

சங்குகள் மு ழங்கமுத்து
எறிந்திடும் க் டற்கரையில்
நங்கையர் ந டந்தவை
உதைந்திடும் ச தங்கை ஒலி!
பொங்கும் உட லங்கள் தர -
ளங்களில் ந டம்பயிலச்,
செங்கை வளை யல்களோடு
கிண் கிணி கு லுங்குவன!

ஈழ நாடே - எழில் சூழும் நாடே!

காடழித்து நாடெழுப்பி,
மேடுமலை சாடி, நெடு
வீடு, அடுக்கு மாடி, கடை
வீதி, தொழிற் சாலை கட்டிப்
பாடு படும் ஆடவர் தம்
ஈடெடுப்பில் லா துலவி,
ஆடும் இளம் பேடுகளை
ஊடிய பின் கூடிடுவார்!

ஈழ நாடே - எழில் சூழும் நாடே!

தேயிலை செ ழிக்கும் மலை;
தென்னைகள் வி ளைப்பதொடு,
போயிலை த ழைக்கும் நிலம்;
போதிய கி டைக்கும் நகர்;
வாயிலிற் கி டக்கிறது,
வாழை; பல நூறு கலை
தோய, வள ரும் தமிழை
ஆய, விழா வாயிரமே!

ஈழ நாடே - எழில் சூழும் நாடே!

2

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத நால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உய்ர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!

3

காவ லர்கள் ஆண்ட நிலம்;
கவிஞர் கள் பிறந்த புலம்;
நாவலர் நடந்த தரை;
நல்லவர் விளைந்த தறை;
சேவலோ டெழுந்து வயல்
சென்று ழைப்போர் வாழும் அயல்;
'மாவை' என்ற ஊர்ப்புறம் ஓர்
மணவிழா எழுந்த தம்மா!

கை வளையல் தாம் அனுங்க,
கண்க ளில் ம யல் மினுங்க
'ஐய நுண்ணி டை வணங்க',
அன்பனை ஓர் நங்கை கொண்டாள் -
"தெய்வம்!" என்று தான் மதித்தாள்.
"தேவி!" என்ற வன் வரித்தான்.
செய்து வந்த ஓர் தவத்தால்,
சேயிழை உ டல் பருத்தாள்.

பெருத்த பிர மன் பிடித்துப்,
பேதை வயிற் றைப் பிதுக்கி
நெரித்து, விழுத் திப் படுத்தி,
நேர்ந்த உயிர் பிய்த் தெடுக்க,
உரத்து முக்கி நாள், உழன்றாள்;
உடம்பு துடித் துப் பிளந்தாள்;
மருத்து வச்சி கை கொடுத்தாள்;
வாழ்க, செல்லை யன் பிறந்தான்!

4

தடுக்கினிலே செல்லையன் படுத்தி ருந்தான்.
தனிய விட்டோர் நாள் நல்ல தண்ணீர் அள்ள
அடுத்திருக்கும் வளவுக்கே அன்னை சென்றாள்.
அவள் திரும்பி வருகின்ற அந்த வேளை
பொடிப்பயல் ஓர் புறம் புரண்டு, கையை ஊன்றிப்,
"பொறுப்பதற்கோ பொழுதில்லை!" என்பான் போல,
அடுப்படிக்குத் தவழ்ந்து சென்றான். நெருப்பைக் கையால்
அள்ளுதற்கு முன் அவள் வந் தணைத்துக் கொண்டாள்.

நடப்பதற்குத் தொடங்குகிறான் சிறிது நாளில்.
நறுந் தமிழிற் சில சொற்கள் கூற லானான்.
"இடிப்பதற்கு வரும்!" என்ற பயமில் லாமல்,
எருது கட்டி இருக்கின்ற கொட்டில் செல்வான்.
பிடித்திழுப்பான் கொம்புகளை இரு கை யாலே.
பிறகதற்கு வைக்கோலும் கொடுத்து நிற்பான்.
அடித்திருப்பான் தூணுக்குக் கம்பொன் றாலே,
அநியாயம் செய்ததெனக் குற்றம் சாட்டி.

படிப்பதற்குப் போகின்றான் பள்ளி நோக்கி.
பனை வழியிற் திரும்புகையிற், சுண்டு வில்லால்
அடிப்பதற்கு முயல்கின்றான் ஓணான் ஒன்றை.
அது பட்டு விழ, அருகே சென்று பார்த்தான்.
துடிப்பதைக் கண் டவன் தானும் துடித்துப் போனான்!
"தொடத்தகுந்த தில்லை!" என அந்த வில்லை
எடுத்தெறிய நினைக்கின்றான். "மாங்காய் வீழ்த்த
இருக்கட்டும்!" என இடுப்பிற் செருகிக் கொள்வான்.

5

தந்தை யோடு வயலில் உதவினான்.
தனய னே ஒரு தோழனும் ஆயினான்.
முந்தி ஓடித் துலாவினில் ஏறினான்.
முத்தைப் போலும் வியர்த்துளி சிந்தினான்.
வெந்து போக எறிக்கும் வெயிலில், மண்
வெட்டி கொண்டு தறையினைச் சாறினான்.
சிந்தை முற்றும் செயலினில் நாட்டுவான்.
செப்பு தல் சிறி தாகவே செப்புவான்.

கடகம் தன்னில் எருக்கொண்டு கொட்டுவான்.
காய்ந்த தம் நிலம் கொத்திப் புரட்டுவான்.
இடவன் கட்டி அடிக்கவும், பாத்திகள்
இட்டு வாய்க்கால் கிழிக்கவும் ஏகினான்.
நடுகைக் காய் வரும் கண்மணி கையிலே
நாற்றுக் கட்டை எடுத்துக் கொடுக்கையில்,
படுவ துண்டவள் கை சில வேளையில்;
பட்ட போதொரு பற்றை உணர்கிறான்.

இங்கி லீசு படிப்பதற் காய் அவன்
எட்டுக் கட்டை நடந்து திரும்புவான்.
"எங்கு சென்றும் அறிவை வளர்த்திடல்
ஏற்றது" என்று தனக்குள் மொழிகுவான்.
"தங்க மான பொடியன் இவன்!" எனத்
தக்க வர்கள் பலரும் விளம்பவே,
சிங்க மானது போல வளர்ந்து தன்
சின்ன ஊரினில் ஆட்சி செலுத்தினான்.

6

அந்த ஊரிலே அழகி கண்மணி
தென்றலைப் போலவே திரிந்தாள்,
கொன்றிடும் நோக்குக் குளிர்விழி யுடனே!

பெண் ணிருக்கும் அழகை யெல்லாம்
பேணி வைத்த பொற் குடமாம்.
விண்ணவர்க்கும் எட்டாது
விளைந்திருக்கும் நிலத் தமுதாம்.
கண் ணிமிர்த்தி அவள் பார்த்தால்,
கண்டவர்கள் மறப்ப தில்லை.
மண் மிதித்தம் மயில் நடந்தால்,
மண் கூடச் சிலிர்ப்ப துண்டு.

திங்கள் அவள் முகமளவு.
செழுங் கூந்தல் மழை யளவு.
தங்கம் அவள் நிறமளவு.
தயிர் அவளின் மொழியளவு.
கொங்கை இரு செம்பளவு.
கொடி இடையோர் பிடியளவு.
பொங்கும் அவள் அங்கம் ஒரு
பொல்லாத பாம்பளவு!

தாழ்ந்தவர்தம் குலக் கொழுந்தாம்.
தாகத்துக்கு அரு மருந்தாம்.
ஆழ்ந்து சுவை கண்டறிய
ஆனதொரு பெரு விருந்தாம்.
போழ்ந்து விடும் அவ்வணங்கின்
புன்னகை முன் ஆண்மை நெஞ்சு-
வாழ்ந்திருக்கக் கிடைப்பாளேல்,
வானகத்துச் செங்கரும்பு!

அந்த ஊர்த்தெருச் சந்தியில் அமைந்த
கடை முத லாளியோ அவளைத்
தொந்தி தடவித் தொடர்ந்து நோ க்குவரே!

7

செல்லையன் வயலில் நடுகை நடந்தது.
செல்லையன் துலாவினில் நடந்தான்.
கண்மணி குனிந்து நாற்று நட் டாளே.

"நாற்றுப் பிடி எடுத்து
நாற்று நட்டு நான் இருக்க,
நாற்றுப் பிடி பிடியில்
நழுவுவது தான் எதற்கு?"

"சேற்றில் சதிர் மிதித்துச்
சின்ன இடை நீ வளைக்க,
நேற்றுச் சிரித்தபடி
நின்றவள் நி னைப்பெனக்கு!"

"நேற்றுச் சிரித்துவிட்டு
நின்றவள் நி னைப்பிருந்தால்,
காற்றிற் பறந்து விடும்
கதை விடுதல் தான் எதற்கு?"

"காற்றில் பறந்து வரும்
காவியத்தோ டாவி செல்ல,
ஏற்றத் துலா நடந்தே
இளைக்கும் உடல் இங்கெனக்கு!"

"ஏற்றத் துலாவினிலே
ஏறி நிற்கும் மன்னவர்க்குச்
சேற்றிற் கிடக்கும் ஒரு
சிறிய மலர் ஏன்? எதற்கு?"

"சேற்றிற் கிடைக்கும் அத்
திரு மலரோ இல்லை யென்றால்,
சோற்றைப் பிற கெதற்கு?
சொல்லடி இப் போதெனக்கு!"

கண்மணிப் பெண்ணின் காதலால் நெஞ்சிற்
புண்மிக அடைந்த அப்பொடியன்
எண்ணிய எண்ணம் ஓர் எண்ணாயிரமே.

8

சித்தப்பன், தந்தை காதிற்
செய்தியைக் கூறிப், பின்னர்
சத்தங்கள் போட்டுப் பேசிச்
சண்டைகள் பிடிக்க லானான்.
தத்தம் கா ணிகளை வேறாய்ப்
பிரித்திடல் தக்க தென்று
வைத்ததோர் முடிவி நாலே,
வயல் குறு கிடலா யிற்றாம்.

பாட்டனின் பாட்டன் பாட்டன்
வாங்கிய பங்கைப் பங்கு
போட்டதால், போட்டுப் போட்டு
வந்ததால், புதிய தாக
ஈட்டிய நிலம் வே றில்லை
என்பதால், இவருக் கின்று
மாட்டுக்கோர் தொழுவம் போட
மட்டும் ஓர் குழி எஞ் சிற்றாம்!

"எஞ்சிய குழியைக் கிண்டி
எப்படி நாளை நாங்கள்
கஞ்சியிற் சோறி ருக்கக்
காணல்?" என் றெண்ணிப் பார்த்தான்.
துஞ்சிடும் வேளை கூடக்
கனவிடைத் தொடர்ந்து வந்து
கொஞ்சிய கொள்கை ஒன்றில்
செல்லையன் விழித்துக் கொண்டான்.

9

மாவை என்ற ஊரி னுக்கு
வட பு றத்தில் நெடிய தான
தேவை யற்ற கல டி ருத்தல்
தெரியும் அவ் வூ ரார் எ வர்க்கும்.
சாவை உற்ற பேர்கள் சென்று
சரிவ த்6அற்கே நிலைய மான
தீவை ஒத்த தனி நி லத்தைச்
சென்று சென்று சுற்றி வந்தான்.

காரை சூரை நாக தாளி
கள்ளி முள்ளி ஈச்சை மட்டும்
வேர் வி டுத்து வளர லாகும்
வெட்டை; அந்த வெளியில் எங்கு
பாரை கொண்டு தொட்ட போதும்,
படுவ தொன்று - பாறை என்று!
யாரை அந்த நிலம் அ ழைக்கும்?
அன்பு கொண்ட மனம் நி கர்க்கும்.

10

உயனை எனும் அப் புலத்தில் மனதை ஊன்றி,
உலவு கிறான் செல்லையன் அதிலே சென்று.
வெயிலடிக்கும் நடுப்பகலில், விடியும் வேளை,
மெல்லிய காற் றசைகின்ற மாலை வேளை,
துயிலினிலே ஊர் முழுதும் அயர்ந்து போகத்,
துணிந் தெழுந்து பேய் அலையும் சாமம் எல்லாம்,
"பயனெதனைக் காண்கின்றான் பொடியன்?" என்று
பார்த்தவர்கள் கூற, அவன் திரிகின்றானே!

முகத்தார் என் பவருக்கே உயனைப் பூமி
முழுதும் உரித் தென மாவை முழுதும் கூறும்.
தகப்பன் அன்று காணி எழுத் தெழுதி வந்த
காலத்தில், பிறர் நிலத்தைத் தகுந்த வேளை
அகப்படுத்தித் தம் பெயரில் எழுதிக் கொண்டார்.
ஆயினும் ஆ றடி நிலத்தில் அடங்கிப் போனார்.
மிகப் படித்த மகன் அதனை விற்று விட்டு,
மேல் நாட்டிற் குடி ஏறும் விருப்பம் கொண்டான்.

மாவை நில இளைஞர்களை ஒரு நாள் மாலை
வைரவர் கோ யில் வீதி தனிலே கூட்டித்,
"தேவையுண்டு நம்பணி நம் மூருக்கு" என்று
செல்லையன் சிலசொற்கள் செப்பி நின்றான்.
ஆவலுடன் சங்கம் ஒன்றை ஆரம் பித்தார்.
அவர்வேண்ட, முகத்தார் தம் கலட்டை ஈந்து,
"சேவை பெரிது!" என்னும் ஒரு செய்தி தந்து,
'சிலோன்' விட்டே சில நாளிற் சென்று விட்டார்!

விளைவெதும் இன்றி வீணே கிடந்த
கலட்டியை வழங்கிய முகத்தார்
புகைப் படம் பேப்பரிற் போடப் பட்டதே!

11

காணி கிடைத்தத நால் அவ் விளைஞர்
கழகம் மகிழ்ந்து குதித்ததையா.
வீணிற் கிடந்த நிலத்தை விதைத்து
விளைப்பது நோக்கமாய்க் கொண்டதையா.
தூணிலும் உண்டு, துரும்பிலும் உண்டெனச்
சொல்வர் கட வுளை; நல்விளைவு
காணுதல் உண்டு கலட்டியிலும் என்றொரு
கங்கணம் கொண்டு துடித்ததையா.

ஊரிற் பெரியவர் ஓர் சிலர் வேண்டிய
உற்சாகம் தந்தனர். "வீடு வந்து
சேருவ தில்லை நும் வேளாண்மை!" என்று
சிரிக்கக் கடை முத லாளி நின்றார்.
ஆரும் எத்தனை மொழிந்திடி நும், தங்கள்
ஆண்மையில் நம்பிக்கை வைத்தவராய்,
ஏரினைக் கொண்டோர் புது வர லாற்றை
எழுத இளைஞர் எழுந்து வந்தார்.

12

ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!

"பிக்கான், மண் வெட்டி, கொந் தாலி யொடு
பிள்ளைக ளுக் கென்ன சோலி?" என
நக்கார் சிலர். சிலர் கேலி செய்ய
நாளும் உழைத்தனர் வேளை முழுவதும்-
தக்கார் புகழவும், தாயர் மகிழவும்,
தந்தையர் கண்டு தம் நெஞ்சு நெகிழவும்,
மிக்க அறிவுடை யோர்கள் "உது சரி!
வெல்லுக நும்பணி!" என்று புகழவும்-

ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!

பாறை எதிர்ப்பட வேட்டுப் பல
பற்பல வைத்தது கேட்டு, மிகத்
தூர இருக்கும் தார் றோட்டுக் கடைத்
தொந்தி முதலாளி ஏசத் தொடங்கினார்!
"கூரையி லே சில ஓடு வெடித்தது,
'கொம்பிள யின்று' கொடுப்பன்!" எனச் சொல்லி
நேரே பொலிசுக்குச் செல்ல, அவர்கள் "நெய்!
நெய்!" என்று காட்டித் திருப்பி அனுப்பினர்!

ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!

ஒன்றிரண் டோ மூன்று நாலோ அல்ல;
ஓடின மாதங்கள் ஏழே! "இனி
என்றெம் வியர்வையைப் போலே வரும்
எங்கள் வினைப்பயன்!" என்று நித நிதம்
நின்று நெடுக முயன்றனர் ஆதலின்,
நேர்த்தியு டன் தொழில் பார்த்தனர் ஆதலின்,
கன்று வாய் வைக்கவும் கற்றா சுரக்கும்
கணக்கிற் பா தாளத்தி லே நீர் சுரந்தது!

ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!

13

செல்லை யனை அவன் தந்தை ஒரு நாள்
"நில்லையா!" என்றிவை நிகழ்த்தச்,
சொல்லாடல் ஒன்று தொடர்ந்து நடந்ததே!

"உளறித் திரிவதனால் உண்டாகும் நன்மை என்ன?
ஊருக் குழைத்ததினிப் போதும் தம்பி;
'கிளறிக்கல்' சோதனையாம் கிட்டிண பிள்ளை; நீ 'அப்-
பிளிக்கேசன்' போட்டிடுவாய்!" என்றான் தந்தை.
"கிளறிக்கல் எடுப்பதே எண்ணம் எனக்கெனினும்,
கிட்டிண பிள்ளை சொன்ன வண்ணம் அல்ல!
உளதைப் பயன் படுத்தா தோடி நகர்ப் புறத்தில்
உட்காரல் தக்கதுவோ?" என்றான் பிள்ளை.

"மண்ணைக் கிளறி அது மலரப் பணிபுரிதல்
மட்டற்ற இன்பம்!" என்று சொன்னான் பிள்ளை.
"பண்ணத் தகுந்ததுவோ படித்தவர் அத்தொழிலைப்?
பார்த்தார் சிரிப்பார்!" என்று சொன்னான் தந்தை.
"கண்ணைத் திறப்பதற்கே கல்வி கண் டோம்; இதனைக்
கலட்டிற் செலுத்தலும் நன்று!" என்றான் பிள்ளை.
"உண்ணக் கிடைத்திடலாம்; உலகிற் பெரியவராய்
உலவக் கிடைத்திடுமோ?" என்றான் தந்தை.

"உலகிற் பெரியவராய் ஊர்ந்து திரிபவர்கள்
உண்மையி லே பெரியர் தாமோ?" என்றும்,
"பலகற் றதன்படியே பண்பட்டு நிற்பவர்கள்
பணமற்ற தாற் சிறியர் அன்றே!" என்றும்,
"நிலையற்ற இந் நிலத்திற் பிறருக் குதவுவதே
நிற்கத் தகுந்தது!" என்றுஞ் சொன்னான் பிள்ளை.
"கலகத்தை வீட்டினிலே கண்டேன்!" எனச் சிரித்துக்
"கதை மெத்தச் சரி!" என்று சென்றான் தந்தை.

14

கழகத் திளைஞரது கைவலிமையால்
கலடாய்க் கிடந்த அந்த உயனை வெளி
பழகத் தொடங்கியது. கிணறிருந்த
பகுதிப் பல பரப்புப் பக்குவப்பட்டே
இளகத் தொடங்கியது. வாழைகள் குலை
ஈனத் தொடங்கியன. தென்னை இனங்கள்
அழகுச் சிறை விரித்துத் தோகை மயில் போல்
ஆடத் தொடங்கியன அவ்விடத்திலே!

கத்தரி காய்க்க நிலம் ஏற்றது கண்டார்.
கடகங்க ளாய் நிறைத்து விற்பனை செய்தார்.
வத்தகை தான் செழித்து வந்தது கண்டார்.
வந்து பிறர் விரும்பிக் கொண்டனர், சென்றார்.
சத்து மிகுந்த முட்டைக் கோசு தழைக்கத்
தக்கதம் மண்ணெனவும் சான்றுகள் கண்டார்.
"முத்தை விதைத்திடினும் முத்து விளைதல்
முடியும் இங் கே!" என ஊர் நம்ப மகிழ்ந்தார்.

"முந்திரி கைக் கொடி வளர்கிறதற்கு
முற்றும் தகுந்த நிலம் இந்நிலம்!" என்றும்,
"அந்தப் பயிர் தொடங்க வேண்டும்!" எனவும்
அங்கத் தவர் ஒருவர் முன்மொழிகிறார்!
"எந்திரம் கொண்டு இறைத்தல் ஏற்றது!" எனவும்
ஏகோபித் தோர் முடிவு கொண்ட படியால்,
சிந்தனை யுற்றதவர் செயலவை தான்;
செய்யப் பொருள் வலிமை சேரவில்லையே!

15

செல்லையன் அப்போ தெழுந்தான்.
"அன்பு
சேர்ந்த எனதரும் தோழர்க ளே, நாம்
கல்லைக் களனி செய் திட்டோம்!
இனிக்
காசில்லை என்று களைத்திருப் போமா?
நல்லலிங் கம் நல்ல லிங்கம்;
அவர்
நம்பொரு ளாளர்; அவருக்கெப் போதும்
இல்லை என் கின்றது பாடம்!
எனில்
ஏற்ற வழிகள் பிற உள; தேடும்!

எண்ணம் எனக்குள தொன்றே!
நீவிர்
ஏற்றுக் கொள் வீர்கள் எனில் மிக நன்றே!
உண்ணும் உணவுனைப் போலே
நமக்கு
உற்ற தமிழ்! அதில் நாடகத் தாலே,
திண்ணம், நிதி வந்து சேரும்;
ஒன்றைத்
திட்டமிட் டுச் செய்வம்; யாவரும் வாரும்!
'கண்ணிய மும் கட்டுப் பாடும்
நல்ல
கடமையும் வெல்லும்!' என் றாவன நாடும்!"

"ஓம்!" என் றுரைத்தனர் யாரும்;
"ஓம்,
ஓம்!' என்று கைதட்டி னார் முழுப் பேரும்.
"நாம் என்ன நாடகம் போட்டால்,
மிக
நல்லது?" என்றே சொர்ண லிங்கத்தான் கேட்டான்.
"தீமை ஒழிந்திடத் தக்க
புதுச்
செய்தி உடைய தொன் றாய், அஃ திருக்க!"
-சாமம் வரைக்கும் இருந்தே
அதைச்
சர்ச்சை செய் தார்; பின் சென்றார், துணிந்தே.

16

உயனைக் கலட்டிக் கழகத் தவர்கள்
ஒவ்வொன்றா கப் பல தேடினார்.
மயனைப் பழிக்க ஒரு மண் டபத்தைக்
கட்ட மரம் தடிக்கு ஓடினார்.
உயரக் கமுகு தறித்து வண்டியில்
ஏற்றி வந் தொவ்வொன்றாய் நாட்டினார்.
சயனித் தலையும் மறந்து பறந்து
சாதித்த கொட்டகை காட்டினார்.

"இளைஞர் கழக விழவு, வருக!"
-பறை அ றைந்திது சாற்றினார்.
"நுழைவு மிகவும் மலிவு, விரைக!
விரை!" கென் றறிவை ஏற்றினார்.
அழகிய தொரு பெரிய எழுத்தில்
அறிவித் தல்களை ஒட்டினார்.
கிழவர், மறந்து கிடந்த கூத்துக்
கிளம்பிற்று!" எனக் கை கொட்டினார்.

பாடலும் பண்ணும் பரதமும் பயின்ற
நாடகம் நடந்தது - நாடு,
வீடு முழுவதும் வியந்து சுவைக்கவே!

"சோடித்த பந்தலிற் சுடர் வி ளக்குகள்!
சொர்க்கம் இதற் கிணை ஆகுமோ!
வாடிக்கை யாய் இதை வைத்து ந டத்திடில்
வாழும் அன்றிக், கலை சாகுமோ?"
-நாடகம் பார்த்து ந டந்தவர் இப்படி
நாவினைச் சூள் கொட்டிக் கூறினார்.
"கூடும் அச் சூத்திரம் கொள்ளல்!" எ னப் பொருள்
ஆளர் கு தூகலம் ஏறினார்.

17

நாடகத்தைப் பார்த்த பல நல்ல பெண்கள்
"நடத்துவ தேன் வைரவர்க்காய் வேள்வி?" என்றார்.
"மூடருக்கே ஏற்பாம் இம் முறைகேடு!" என்று
முழு நீளத் தாடி, உடை காவி யான
வேடம் எடுத் தவர் சொன்ன துண்மை!" என்று
வெண்டிக்காய் கறிக் கறுத்துக் கதைக்க லானார்.
"ஆடு வெட்ட நீ போதல் கூடாது!" என்றே
அப்பனிடம் கண்மணியாள் ஆணை இட்டாள்.

"அடுத்த சனிக் கிழமை எங்கள் வேள்வி அன்றோ?
அதை நினைத்துக் காடையர்கள் எங்க ளுக்கு
முடித் தெடுத்துக் கொடுத்தார் இந் நாடகத்தை
முன்பிருந்து வருகின்ற வழக்கம் ஒன்றை
எடுத்தெறியச் சொல்கிறதற்கு இவர் யார்?" என்றார்,
எரேஎது கடை முதலாளி. "இங்கி லீசு
படித்ததனால் வந்த பிச கிது காண்!" என்று
பல சொல்லி நிரூபித்தார் பஞ்ச லிங்கர்.

"வாடகைக்குச் சந்தியில் ஓர் கடை எ டுத்து
வைத் திறைச்சி விற்றிடலாம் என்றால், இந்தக்
கேடகலும்!" என அங்கோர் கெட்டிக் காரி
கிளப்பி விட்டாள் ஒரு திட்டம். பொதுவாய் மாவை
ஆடவரே வேள்வியினை ஆத ரித்தார்.
அரிவையரோ அதை முற்றாய் எதிர்த்த தாலே,
சூடு கொண்ட தர்க்கங்கள் தணிந்து போய், ஓர்
சுமுக நிலை பிறந்தது. மங் கயரே வென்றார்!

18

வேள்வியின் கீழ்மையை மிகவும் தெளிவாய்
நாடகம் போட்டவர் நாட்ட,
மாவை வேள்வி மறுத்துச் சிறந்ததே.

ஆண்டு தோறும் தலைமைக் கடாவை
அறுக்கும் சந்திக் கடை முத லாளி
தூண்ட லுற்று முளாசிக் கொதித்தார்.
துணைக்கு வேறு சிலரைப் பிடித்தார்.
"வேண்டு மே பழி வாங்கிடல்!" என்றனர்.
வேக மான தோர் தாகம் அடைந்தார்.
ஆண்ட வன் திருச் சன்னிதி முன்னிலே
ஆணை ஒன்றை எடுத்து நின் றாரே!

மேள தாளங்கள் கூடி முழங்கிடும்.
வேறு நூறு வெடிகள் வெடிக்கும்.
சூழ ஊரவர் சென்று தொடருவர்.
"சொல்லப் பட்ட கடா இது!" என்பர்.
ஆளை ஆள் கண்ட வேளை, "குதிரை போல்
அல்ல வா வளர்ந் துள்ளது!" என் பாரே! -
மாலை சூட்டி நடத்தி, இவற்றிடை
மக்கள் முன்னர் அறுப்பதை அன்றோ -

பட்ட ணத்துக் கசாப்புக் கடையினர்
பார்த்துக் கேட்ட விலை தந்து பெற்றார்!
கெட்ட காலம் புகுந்தது கண்டவர்,
கெம்பி நார் அக் கடை முத லாளி!
"நட்ட மேற்பட்டு விட்டது" என நிலை
நாட்டி நார் பஞ்ச லிங்கர்! என் றாலும்,
கொட்டி ஓர் மழை பெய்து குளிர்ந்துது,
கோடை யிற் சனி நாளன்று தானே!

19

சாத்திரம் புதியவை கண்டவர் எடுத்த
சூத்திரம் பொருத்தினர் கிணற்றில்,
பார்த்தவர் மகிழ்ந்து பல புகழ்ந் திடவே!

மாடிரண் டே சுற்றிச் சுற்றி வர,
மக்களின் முன் அவர் கண்ணெதிரே,
பாடு படாமல் இருக்கையிலே
பாதாளம் சென்று நன் நீர் எடுத்தே,
ஓடிச் சுழன்று திரும்பினவாம்;
வாய்க்காலில் ஒவ்வொன்றாய் ஊற்றினவாம் -
"வேடிக்கை தான் அந்த வாளி!" என்றே
மெச்சினர் கண்டவர் யாவருமே.

வேட்டி களைந் திடைக் கோவணமாய்
மெல்ல நடந்தவன், வாளியின் நீர்
ஊற்றப் படுகிற ஓடையிலே
ஊறிச், செல்லையன் உடல் குளிர்ந்தான்.
ஏட்டில் எழுத ஓர் ஓவியமே
என்ன இருக்கும் அக் கண்மணியாள்
மீட்டும் இருவிழி வண்டை, அவன்
மேனியைச் சுற்றிப் பறக்க விட்டாள்.

20

செல்லை யனை அவன் தந்தை ஒரு நாள்
"நில்லையா!" என்றிவை நிகழ்த்தச்,
சொல்லாடல் ஒன்று தொடர்ந்து நடந்ததே:

"இந்தப் படி நெடுக இருப்பது நல்ல தல்ல;
இங்கே பல இடத்திலும் கேட்கிறார்.
கந்தப்ப பிள்ளை மகள் கறுப்பி என் றாலும், அங்கே
காசு கிடக்கு தென்று பார்க்கிறேன்!
சொந்தத் துள்ளே முடித்தால் தொந்தர வில்லை யன்றோ?
சொல்லு; முகூர்த்தம் இன்றே வைக்கலாம்.
அந்தப் பொடிச்சிக்கும் உன் மேல் ஆசை கொஞ்ச மல்ல!"
என்று செல் லையன் தந்தை கூறினான்!

"அப்பு, கந் தப் பம்மானின் அவளோ அழகுடையாள்.
ஆயினும் என் மனம் அங் கில்லையே!"
"சுப்பர் மகன் செல்லப்பர் பெட்டை சுகுணவதி
சுந்தரி; ஓ மென்று சொல்; செய்யலாம்!"-
"இப்போ தவசரமோ? இன்னொரு நாள் உரைப்பேன்"-
"இல்லை, அதற்கென்ன சொல், என்னிடம்!
ஒப்புத் தருவை யென்றால் இந்த உலகினிலே
உள்ள சிறந்தவள் உன் காலிலே!"-

"குப்பையி லும் கிடைக்கும் குன்றி மணிகள், என்பார்"-
"கூறி விடு வெளியாய்க்; குற்றமா?
தப்புத் தவ்று செய் தி ருந்தால் சரிப்ப டுத்தித்,
தக்க இடத்தினிலே கட்டலாம்!"-
'அப்போதே கண்மணிக் கென் ஆணை கொடுத்து விட்டேன்!'-
"ஐயோ, இதென்ன, தம்பி?" - அப்பனின்
ஒப்பா இரந்து நின்றான் பிள்ளை; தகப்பன் உணர்ந்து
"ஓம்" எனும் வேளை குரல் கம்மினான்.

21

கலட்டி இளைஞர் கழகம் ஓர் இரவு
பொதுச்சபை கூடிய போது,
செல்லையன் எழுந்தான்; செப்புகின் றானே:

"பாலையே நிகர்த்த பசிய தண் ணீராற்
பலப்பல அதிசயம் விளைத்தோம்.
சாலவும் சிறந்த கூட்டுழைப் பளித்த
தருக்கிலும் செருக்கிலும் திளைத்தோம்.
மேலும், ஓர் சங்கக் கடையினை அமைத்தோம்.
மேம்பட லாயினோம் நாங்கள்.
காலையும் பகலும் மாலையும் களைத்தோம்.
கலட்டியைத் திருத்தினம், களித்தோம்.

"இருபது பேர்கள் நாங்கள்; எங் களுக் கேன்
இத்தனை விசாலமாய்க் கிடக்கும்
பெரு நிலம்? இதில் ஓர் பகுதியைப் பிற பேர்
பெறுவௌ தகுமென ஒரு நாள்
இரவிலே துயிலா திருக்கையில் நினைத்தேன்;
எப்படி நும் கருத்து? உரைப்பீர்!
அருகிலே வதியும் சில குடி களுக் கோர்
அங்குல நில மில்லை, நினைப்பீர்!

"உருகும் ஓர் இதயம் கொண்டவர் மனிதர்;
உங்களுக் கிதைச் சமர்ப் பித்தேன்.
தருக, நம் புலத்தில் ஒரு பகு தியினைத்
தாழ்த்தப்பட் டுள்ளவர் தமக்கே!
பெருமை உண் டிதனால் என்பதற் காகப்
பேசிட வில்லை நான் இதனை;
அருகதை உடையார் அவர்கள்! நாம் அளித்தால்,
அறமும் நம் பயிர் எனத் தழைக்கும்!"

-நிறைந்த பே ரவையில் நிமிர்ந்து நின்றிவை
அறைந்தனன் செல்லையன், அமர்ந்தான்.
"சிறந்தது!" என் றேற்று அவை செயல் முடித் ததுவே!

22

தாழ்த்தப் பட்டோர் குடிசைகள் கலட்டியில்
எழுந்தன; குடி புகுந் திருந்தார்-
விடிவினை நோக்கி விரைந்து போ யினரே!

வெள்ளி நிலவு நெடு வான வழியில்
மெல்ல நடை நடந்து வந்த தொரு நாள்-
புள்ளி அனைய பல வெள்ளி மலர்கள்
பூத்துச் சொரிந்தன அவ் வானில் ஒரு நாள்-
மெள்ள அயலினிலே சென்று, இளைஞரை
மேனி வருடியது தென்றல் ஒரு நாள்-
நள்ளிர வானமையி நால், உலகமே
நன்று துயில்கிறது! நல்ல ஒரு நாள்:

"முல்லை விரிகிறது வேலியில்!" என
முந்தி மொழியும் ஒரு வாசகம் உளது.
'வல்லை' வெளியில் அன்று திருவிழவு;
மழலை மொழி குழலில் வருகிறது.
கல்லில் அமர்ந் தினிய காட்சிகளிலும்
காதில் விழுகிற அவ் வோசைகளிலும்
செல்லும் மனதில் ஒரு சிலிர்ப் படைந்து
செல்லையன் என்ற அவன் வீற் றிருக்கிறான்.

காட்டை அழித்த செயல் தன்னை நினைந்தான்.
கழனி கடை அமைத்த செய்கை நினைந்தான்.
ஆட்டை அறுக்கிறது நின்ற தெண்ணினான்.
அண்டிப் பிழைத்த சிலர் ஆறி இருக்க
வீட்டை அவர்க் களித்த வெற்றி நினைந்தான்.
வேறும் பல நினைவு பாய இருந்தான்.
"நாட்டை உயர்த்துவது நல்ல செயலே;
நம்மால் எது முடியும்?" என்று குனிந்தான்.

23

கண்மணி தனது கலட்டிக் குடிசையிற்
படுத்திருக் கின்றனள், புரண்டு;
பாடல் ஒன்று பண்ணோடு கேட்டதே:

மண்ணெண்ணெய் விளக் கருகில்
மணி போலே சிறுத் தெரிய,
விண் ணல்ல, புவியினில் ஓர் மின்னலே!
வீழ்ந்து துயில் புரிகிறதோ, தையலே?
பெண் ணல்ல, பெரும் அழகின்
பிறப்பிடம் என் பது தெரிய,
கண் ணல்ல, கயல் இரண் டேன் மூடினாய்?
காதலுக்கு வழி அடைத் தேன் வாடினாய்?

வெண்ணிலா வெறு வெளியில்
வெறிக்கிற தன் மது சொரிய,
புண்ணெல்லாம் உளத் திருக்கும் போதிலே
புரளுகிற தோ சிறுபாய் மீதிலே?
"உண்ணலாம்! உடல் துவள
உறங்கிடலாம்!" என உனக்கோர்
எண்ணமாம் எனில், இது நன் றாகுமோ?
எங்கும் ஒரு வனை அணைந்தால், நோகுமோ?

வெண்ணெய் போல் உடல் உனக்கு.
வெளி உலகு துயில் கிடக்கு.
தண்ணியோ கிணற்றீலே! தாகமோ,
தனிமையிடை போய்த் துயின்றால், போகுமோ?
எண்ணெயோ முடிகிறதே!
எரி விளக்கோ அணைகிறதே!
புண்ணியம் - பழி அறிவாய்; போ, அம்மா!
புள் எழுப்பி நின்றனன்; போய்த் தாவம்மா!

24

சேலை ஒன்று சரசரப் புற்றது.
திறப்பும் பூட்டும் கறகறப் புற்றன.
வேலி யோ கறை யான் படர்ந் துள்ளது;
மெல்ல வே அந்த மண் உதிர் வுற்றது.
வாழை நட்டுள பாத்தியில் ஈரமோ?
வைத்த காலிற் சளசளப் புற்றது.
மூலை ஒன்றினில் ஓலைக் கிடுகினை
முன் வி ரிக்க, அது நெரி வுற்றது.

பேசு கின்ற இரு குரல் கேட்டன.
பிறகு கொஞ்சும் சிரிப்பொலி கேட்டது.
"யோசி யுங்கள்" எனும் சொல் மிதந்தது.
"யோகம் இன்று!" எனும் சொற்கள் தொடர்ந்தன.
"வாசி யுங்கள்!" என ஒரு யாழினை
வைக்கத், தந்தி அதிர்ந்தது போலவும்,
ஆசை ஒன்று அலு வற்படல் போலவும்,
அங்கு சிற்சில ஓசை விளைந்தன.

மெய்யி லே சிலிர்ப் பொன்று நடுங்கவும்,
வேறுபட்ட நிலை சென் றொடுங்கவும்,
"தையி லே சடங்கு!" என்று புகன்றவன்
தாகம் ஒன்று தணித்தல் தொடங்கினான்;
கையி லே வளை யல்கள் அனுங்கவும்,
கண்ணி லே பெருங் காதல் மினுங்கவும்,
'ஐய நுண்ணிடை சென்று வணங்கவும்',
அன்ப நோ டொரு நங்கை இணங்கினாள்


இரண்டாம் கூறு

காரிருள்

25

வானத்து வெண்ணிலவை ஓடிப் பி டித்து
வைத்துக் கடித்தது க றுத்த முகில் ஒன்று.
கோணற் கொடுங் குரல் கொ டுத்த தொரு கோட்டான்.
குருவிக் குலம் சிதற மூசியது காற்று.
பானைக் கடைக் கெருமை புக்கது நி கர்க்கப்
பாரே அதிர்ந்தது; பிதிர்ந்தது க லட்டி.
தேனொத் தினித்த இதழ் உண்டு புரள் கின்றோர்
திடுக்கிட்ட நர். மா திறுக்கிப் பிடித்தாள்.

இருட்டுக்கும் எத்தனை இ ருந்தன கரங்கள்,
இழுத்துச் சிவப்புப் பொடிச்சியை எ டுக்க!
முரட்டுக் கரங்கள் ஒரு கோடரி உ யர்த்தி
மோதத், தெறித்தது செல் லையனின் இ ரத்தம்.
"ஐயோ!" எனக் குளறி அச்சிறுமி கூவ,
ஆகாய மே நடு ந டுங்கியது. நீசக்
கையால் அவள் சுவை உ டல் மலர் சு மந்து
கையாட்கள் ஓர் சிலர் ப றந்தனர்; மறைந்தார்!

26

கூந்தல் குலைந்து நின் றாளே;
கண்மணி ஒரு
குடிலிற் சிறை கிடந் தாளே!

தாழ்ந்தார் குலத்தவரே
தன்னுடல் க வர்ந்த தெண்ணி
வீழ்ந்தாள். எழுந்தனள்.
விசும்பினள். வி திர் விதிர்த்துச்
சோர்ந்தாள். சுருண்டனள்.
சுணை மிகுந்த மெய் சுருங்கித்
தேய்ந்தாள். திணறினள்.
திருந்திழை உ டை கலைந்து-

கூந்தல் குலைந்து நின் றாளே;
கண்மணி ஒரு
குடிலிற் சிறை கிடந் தாளே!

வந்தாராம் சந்திக் கடையார்;
தொந்தி சரிய
வந்தாராம் சந்திக் கடையார்!

"இந்தா, பொடிச்சி! உன்னை
எத்தனை நாட் பார்த் திருந்தேன்!
சிந்தா குலம் எதற்கு? உன்
சிற்றிடை கற் கண்டு! முத்தம்
தந்தால், உயிர் பிழைக்கும்;
தாடி!" என்று தாவி, அவள்
பந்தாய் உருண்ட முலை
பற்றினர், விலக்கினள்-

உருத்தாள், சிறுமி உயிர்த்தாள்;
கடையவர்
இளித்தார்; முகத்தில் உமிழ்ந்தாள்.

விழித்தார், வெறித்தனர்,
வெருட்டினர்; பழித்தனள்.
அடித்தார்; தடுத்தனள்.
பிடித்தனர்; கடித்தனள்.
இடித்தாள்; புடைத்தனள்.
இளைத்தனர்; விழுத்தினர்,
உதைத்தாள், மிதித்தனள்,
துவைத்தனள், சிரித் திரண்டு-

கண்ணீர் வழிந்து நின் றாளே;
திறந்த வழி
கண்டாள், பறந்து சென் றாளே!

27

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
சேலையின் முன்றானை காற்றினிலே
செல்ல, இடை மின் நுடங்க,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
பால் முகத்தின் மேல் வியர்வை
பாய, விழி நீர் பெருக,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...

மாரியம்மன் வாசல் வழி
வந்தாளே கண்மணியாள்.
ஊரின் ஒரு புறத்தே
உறங்கினையோ மாரியம்மா?
நல்லான் ஓர் நல்லவளை
நாடுவது நாத்திகமோ?
எல்லாரும் ஒத்த குலம்
என்று சொன்னால் ஏற்காதோ?

ஏழை இருக்க நிலம்
ஈதலும் ஓர் ஏமாற்றோ?
வேள்வி மறுப்பதுவும்
வேண்டாத வெஞ் செயலோ?
பாழை விளைத்திடுதல்
பாதகமோ, பேசடியே!
கூடி உழைத்தல்
கொடுமை என்றோ கூறுகிறாய்?

ஏடி, முத்து மாரியம்மா,
எடுத்தொரு சொல் சொல்லடியோ!
'மெல்லியலார்' வாழ
விடாயோ பெருமாட்டி?
சொல்லடியே என் தாயே,
சுறுக்காகச் சொல்லடியோ!
புல் லிதழே பிய்ந்து
புயற் காற்றிற் போனது போல்-

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...

28

காதலனைக் கண்டு கொண் டாளே!
முலை
மீ த றைந்தாள்; நிலம் மீ து ருண்டாள்.
சிறு
மாது கண் செந் நீர் வழிந் தாளே!
ஒரு
சேதி, கீழ்ப் புற வானில் ஞாயிறு
நீதி காண எழுந்ததே!
இருள்
சாதி போலே போய் ஒ ழிந்ததே!
"ஒளி
வாழ்க!" என்றும், "இருள் வீழ்க!" என்றும்,
கிளை
மீது சேவல் கூவு கின்றதே!

29

ஒத்துழைத்தால், ஒன்று பட்டால்,
உயர்வு பல காட்டி நின்றால்,
ஒத்தவர் தாம் யாரும் என்றே
ஒருத்தியின் மேல் அன்பு வைத்தால்,
பித்தரின் கைக் கோடரி போய்ப்
பிளந் தெறிய, நல்லவர்கள்
செத்திடத் தான் வேண்டுவதோ?
செக முடையோர், செப்புவிரே!

பின்னுரை

கற்பனை கொண்டு செய்த
கதை இது; இதிலே நூறு
சொற் பிழை இருத்தல் கூடும்.
சுவை பல குறைதல் கூடும்.
"அற்புதம்!" என்று சொல்லும்
அளவிலா திருக்கு மேனும்,
"நற் பயன் விளைத்தல் கூடும்!"
என்று நான் நம்பித் தந்தேன்.

செல்லையன் என்ற இந்தச்
சிறு கவிக் குரியோன் நம் மூர்
எல்லையுட் பிறந்து வாழும்
எவனும் போல் ஒருவன் ஆவான்.
புல்லல்ல; வளர விட்டாற்,
புது நெல்லாய்ப் பொலிவான்; அல்ல,
நெல்லல்ல - நெல்லி னுள்ளே
நிறைகின்ற உயிரே என்க.

---------------------------------------------------

அன்னை வெளியீடு

'மஹாகவி' அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகிற்கு மிகப் பழையவர். அவர்தம் கவிதைகளும் சிந்தனைகளும் புதுமையானவை. அவரது படைப்புக்கள் காலத்தாற் சாகாதவை.

அரசாங்க உயர் அதிகாரியாகப் பணிபுரியும் மஹாகவி அவர்கள், மிகச் சிறு வயதிலேயே கவிதைகள் புனைவதில் ஈடுபட்டார். இவரது முதலாவது கவிதை நூல் 'வள்ளி' 1955-ம் ஆண்டு வரதர் வெளியீடாக வெளிவந்தது. 1966-ம் ஆண்டு வரையிலான நீண்ட பதினொரு வருடகால இடைவெளியில் மஹாகவி அவர்களது நூல்கள் எதுவும் வெளிவராதிருந்தது, தமிழிலக்கிய உலகம் செய்த துரதிர்ஷ்டமே. தமிழுக்கே முற்றும் புதுமையான மஹாகவியின் நூறு குறும்பாக்களை அரசு நிறுவனத்தார் 66-ம் வருடம் வெளியிட்டுத் தமிழிலும் இத்தகைய கவிதைகளை எழுத முடியுமென்ற பெருமையினைப் பறைசாற்றினார். இரண்டாண்டுகள் கழித்து 'மஹாகவியின் கண்மணியாள் காதை' என்ற வில்லுப்பாட்டுக் காவியத்தை வெளியிட்டு வாசகப் பெருமக்களுக்கு அளிக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக அன்னை வெளியீட்டகம் பெருமை கொள்கின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'விவேகி' மாத சஞ்சிகையில் 'கலட்டி'யாக வெளியான காவியமே சில மாற்றங்களுடன் 'கண்மணியாள் காதை' ஆயிற்று. இலங்கை வானொலியிலும் இது அரங்கேற்றப்பட்டது.

ஈழத்திலே வில்லுப்பாட்டுக் கச்சேரி செய்வதில் சிறந்து விளங்குபவரான திரு. லடிஸ் வீரமணி அவர்கள் இக் காவியத்தை மேடைகள் தோறும் கச்சேரி செய்து வருகின்றார். யாழ்ப்பாணத்திலே முதன் முதலில் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி மண்டபத்தில் லடிஸ் அவர்கள் 'கண்மணியாள் காதை'யைக் கச்சேரி செய்த போது, மஹாகவியின் அழைப்பை ஏற்று நண்பர் சிறீ ரங்கனுடன் சென்று பார்த்தேன். அந்த வாரமே நண்பர், 'தேனீ' என்ற பெயரில் அந்தக் கச்சேரியை விமர்சித்து 'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் 'ஈழநாடு' வாரமலரில் கட்டுரை வெளியிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்ததாவது:-

'மஹாகவியின் கண்மணியாள் காதை'யைக் கொழும்பு லடிஸ் வீரமணி குழுவினர் வில்லுப்பாட்டாய்ப் பாடியதைப் பார்க்கவும் கேட்கவும் ஒரு வாய்ப்பு சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்வதை விட, பெரும் பேறு பெற்றேன் என்றே சொல்ல வேண்டும்....."

நண்பர் எழுதியது முற்றிலும் உண்மை. மஹாகவியின் கவி நயத்திலும் லடிஸ் அவர்கள் கச்சேரி செய்கின்ற முறையிலும் அன்று என்னை முழுதாக இழந்திருந்தேன். கச்சேரி முடிவடைந்ததும், இத்தகைய காவியங்கள் நிச்சயம் நூலாக்கம் பெற வேண்டுமென மஹாகவியிடம் நான் அபிப்பிராயம் தெரிவித்த போது, "கவிதை பாடுவது தான் கவிஞன் பணி. புத்தகம் போடுவது வெளியீட்டாளர்கள் பொறுப்பல்லவா?" என மிக அலட்சியமாகச் சொன்னார். அவர் அப்போது கூறிய வார்த்தைகளே அன்னை வெளியீட்டகத்தின் தோற்றத்திற்கு அத்திபாரமாக அமைந்தன.

மஹாகவியின் கண்மணியாள் காதையைப் புத்தகமாக்க வேண்டுமென்ற ஆசை வலுவுற்று விரிவடைந்தது. அவரது கவி ஆற்றலுக்கும் நுண்ணறிவுக்கும் அளவு கோலாகத் திகழும் அவரது பிற படைப்புக்களான 'ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்', 'சடங்கு', 'கல்லழகி', 'கந்தப்ப சபதம்' முதலிய காவியங்களையும், 'திருவிழா', 'கோலம்', 'பொய்ம்மை', 'கோடை', 'முற்றிற்று' முதலிய நாடகங்களையும், சிறு கவிதைகளையும், மற்றும் ஈழத்து எழுத்தாளர்களின் சிறந்த படைபுகளையும் நூலாக்கி வெளியிட வேண்டுமென்று தீர்மானமெடுத்துக் கொண்டேன்.

எனது இலட்சியத்தின் வெற்றியெல்லாம் என் அன்பான வாசகரிலேயே தங்கியுள்ளதென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

வாசக அன்பர்கள் ஒவ்வொருவரும் எனது பணிக்கு ஆதரவளித்து ஊக்கம் தருவார்களெனப் பரிபூரண நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.

சசிபாரதி
அன்னை வெளியீட்டகம்,
யாழ்ப்பாணம்.
24-11-1968

----------------------------------------------------------------

கண்மணியாள் காதையை
எழுதும்படி என்னைத் தூண்டி,
அதனை நான் படிக்கக் கேட்டு
மகிழ்ந்தாலும்,
வில்லோ டிசைக்கக் கேளாது
மறைந்த
அன்பனும் அறிஞனும் கவிஞனுமாகிய

அ. ந. கந்தசாமிக்கு

இந்நூல் அஞ்சலி.

"மஹாகவி"

----------------------------------------------------------------