கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்  
 

கார்த்திகேசு சிவத்தம்பி

 

விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை மட்டக்களப்பு,

சுவாமி விபுலாநந்தர்
நினைவுப் பேருரை - 5

1994-05-03


சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்

கார்த்திகேசு சிவத்தம்பி

தமிழ்ப் பேராசிரியர்
தலைவர் - நுண்கலைத்துறை
யாழ்-பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்.

தொகுப்பு:

காசுபதி நடராசா, B.A.(cey.)
துணைத் செயலாளர்,
விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை,
மட்டக்களப்பு,


மட்டக்களப்பு
விபுலாந்தர் நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர்
திரு, க, தியாகராஜா அவர்களின்
B.A., Dip - in - Ed., SLEAS.

தலைமையுரை,


மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் செயற்திட்டங்களின் ஒன்றான நினைவுப் பேருரை வரிசையில் ஐந்தாவதாக "விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்" எனும் பேருரையினை, அடிகளாரின் 102 ஆவது பிறந்த நாள் விழாவின் போது (03,05,1994) யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறைத் தலைவரும், எனது மதிப்புக்குரிய நண்பருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களைக் கொண்டு சமர்ப்பிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். கிழக்கிலங்கை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய ஒப்புயர்வற்ற தமிழ் துறவி விபுலாநந்தரின் பல்வகை சார்ந்த புகழ் பூத்த பணிகளை இனங்கண்டு அவ்வத்துறைகளில் எம்மிடையேயுள்ள அறிஞர் பெருமக்களைக் கொண்டு ஆராய்ந்து சொற்பொழிவுகளாகச் சமர்ப்பிக்கும் பணியில் எமது நூற்றாண்டு விழாச்சபை ஈடுபட்டுள்ளது. எமக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் அடிகளார் பற்றிய மேலான செய்தி விளக்கத்தினை வழங்குவதில் இம்முயற்சி பெரிதும் பயன்பாடு உடையதாகவிருக்கும் என்பது எனது அபிப்பிராயமாகும். விபுலாநந்த அடிகளாரது சிந்தனைகள் சாலப்பரந்தவை, ஆழமானவை, யதார்த்தபூர்வமானவை, புரட்சிகரமானவை, அக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் மிகவும் வேண்டப்பட்டவை. அடிகளது பரந்துபட்ட பணிகளில் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவிருந்து ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கதாகும். உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியராக தமிழ் நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போதும், இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியராக இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போதும் அடிகளாரால் அப்பேராசிரியப் பதவிகள் பெரிதும் அலங்கரிக்கப்பட்டன என்றே கொள்ள வேண்டும். இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அவரால் ஒரு பரம்பரையே ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழாசான்களின் மதிப்பார்ந்த பரம்பரையில் வழிவந்தவர் இன்றைய நினைவுச் சொற் பொழிவாளர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள். அவர் வாயிலாக பெறவுள்ள அடிகளாரது சிந்தனை நெறிகள் பற்றிய ஆய்வு, எமது சிந்தனைக்குப் பெரும் விருந்தாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

விபுலாநந்த ஆய்வு நூற்றாண்டு விழா முயற்சிகளின் பின் புதிய பரிமாணத்துடன், பரந்துபட்ட நிலையில் மேற்கொள்ளப்படுவதைக் கண்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் இன்று வேண்டுவது அடிகளாரது பல்வேறு பணிகளும் விமர்சன நிலைப்பாடுடைய அணுகுமுறை மூலம் ஆராய்ந்து மதிப்பிடப்பட வேண்டுமென்பதேயாகும். அவரது ஆளுமையைத் தெளிவாக அறிந்து கொள்ள இம்முயற்சிகள் பெரிதும் உதவவல்லன. இதன் மூலமே அவரது ஆராய்ச்சிகளையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். விபுலாநந்தர் பிறந்த மண், அக்கால சமூக கலாசார சூழல், அவரது இளமைப் பராயம், அவரது இளமைக்கல்வி ஆகியவை அவரது சிந்தனைகளில் ஆக்க முயற்சிகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததுன. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'எம்மதமும் சம்மதம்' இவை அடிகளாரது தாரக மந்திரங்கள். ஈழமும் தமிழம் பேசும் மக்களும் அவரது சிந்தனையில் ஒருமைப்பாடுடையதாகவே அமைந்திருந்தன. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மலைநாடு ஆகியவை அடிகளாரது சிந்தனையில் வேறாக இருக்கவில்லை. தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் அவரது சிந்தனைகளில் வேறாக இருக்கவில்லை, ஆயினும் சமூகத் துறையில், அரசியற் துறையில், இலக்கியத் துறையில், அவரது சிந்தனைகள் புதுமையானவையாக, புரட்சிகரமானவையாக அமைந்திருந்தன. சாதிக் கொடுமைகளைச் சாடியுள்ளார். தாழ்ந்தசாதியினருக்கும், வசதிகளற்ற ஏழைச் சிறார்களுக்கும் அன்பார்ந்த அபயகரம் நீட்டியுள்ளார். சைவ ஆதினப் பாணியில் இராமக்கிருஷ்ண சங்க மாணவ இல்லங்களை அமைத்துள்ளார். மரபு இலக்கிய வழி நின்றும் கூட பாரதியின் புதுக்கவிதைக்கு இலக்கிய மகுடம் சூட்டியுள்ளார். இலக்கிய உலகில் இது ஒரு யுக மாற்றத்தையே குறிக்கின்றது. ஒப்பியல் இலக்கிய ஆய்வு, தமிழ் இசை ஆராய்ச்சி, கலைச் சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு ஆகியவை அடிகளாரது புது முயற்சிகள், அவரது சிந்தனையில் வடிவமைப்பப்பட்ட துறைகள் பலப்பல. அவரது வாழ்க்கை அனுபவங்களும் இறைவன் அவருக்குக் கொடுத்த நிறைவான அறிவுத் திறனும், சிந்தனையாற்றலும் இராமக்கிருஷ்ண சங்கத்துறவு நிலையும், தமிழ்ப் பற்றும் அன்னாரை ஒப்புயர்வற்ற சிந்தனையாளராக ஆக்க உதவியிருந்தன. அவர் ஈடுபட்ட துறைகளில் அவர் வகித்த இடம், அவரது பங்கு தெளிவுற ஆராய்து அறியப்பட வேண்டும்.

இன்றைய சொற்பொழிவாளர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் எனது நீண்ட நாளைய நண்பர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமகாலத்தில் பயின்றவர். தமிழ்த்துறையிலும் நாடகத்துறையிலும் அப்பொழுதிருந்தே தனித்துவமான இடத்தைப் பெற்றவர். இன்று இலங்கையிலும் தமிழ் கூறும் தேசங்களிலும் தமிழ் இலக்கியத்துறையில் காத்திரமான ஓர் இடத்தைப் பெற்றுள்ள தமிழ் அறிஞன், பெற்றுள்ள பட்டங்கள், வகித்த பெரும் பதவிகள், எழுதியுள்ள நூல்கள், கலந்து கொண்ட சர்வதேச மன்றுகள் பலப்பல. தமிழ் இலக்கிய உலகில் நெடிது உயர்ந்து நிற்கும் பேராசன் மொழித்துறை மாத்திரமின்றி சமகால சமூக - அரசியல் துறைகளிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கிவரும் பெரியார். எல்லோரது மதிப்பையும், மரியாதையையும் பெற்ற உயர்ந்த மனிதன். இவரது சிறப்புக்களை விரித்துக் கூற பல மணித்தியாலங்கள் எடுக்கும். இத்தகைய சிறப்பும் பொருத்தப்பாடும் உடைய பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை 'விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்' என்னும் பொருளில் இன்றைய நினைவுப் பேருரையினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

க. தியாகராஜா

தலைவர்.

+++++++++++++++

முன்னுரைக் குறிப்பு

3.5.1994 அன்று மட்டக்களப்பு ஆனைப்பந்தி மகளிர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற சுவாமி விபுலாநந்தரின் 102 வது பிறந்ததின விழாவில் நான் ஆற்றிய நினைவுரை இது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவ்வுரை இங்கு எழுத்துருவிலே தரப்படுகிறது. உரையின் "பேச்சோசை"மாற்றப்படாமலே இருக்கின்றது. எழுத்துருவில் சிலவிடங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விபுலாநந்தரின் பிறந்த நூற்றாண்டு நிறைவினையொட்டி நடத்தப்பெற்ற, வெளிவந்துள்ள ஆய்வுகளின் பிற்புலத்தில் வைத்து இவ்வுரை நோக்கப்படல் வேண்டும். விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாறு, அவரது ஆக்கங்கள் பற்றி ஏற்கனவே நிகழ்த்தப்பட்டது. அதன் காரணமாக சுவாமிகளது வாழ்க்கை வரலாற்றுத் தரவுகள் இங்கு தனியே தரப்படவில்லை.

விபுலாநந்தர் வாழ்க்கை வரலாறு, ஆக்கங்கள், ஆய்வுகள் பற்றிய விமர்சன நிலை நின்ற ஓர் அணுகுமுறை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். மெய்கண்டார் எவ்வாறு ஆராயப்பட வேண்டுமென விபுலாநந்தர் விரும்பினாரோ அதே அணுகுமுறை விபுலாநந்தர் பற்றிய ஆய்வுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். விபுலாநந்தரை வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து நேக்குவதுடன் அவரது எழுத்துக்களையும் அவ்வச் சிந்தனைகளின் வளர்ச்சிப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டுவது அவசியமாகுகிறது.

விபுலாநந்தரை நேரடியாகத் தெரிந்த தலைமுறையினர் பெருமுதுமை எய்தியுள்ள இன்றைய காலப்பின்னணியில் அவர் நினைவு போற்றப்படுவதற்கான நெறிமுறைகள் மாற்றப்பட்டு, அவரது சிந்தனைப் பேற்றை முதன்மைப்படுத்துவது அவசியமாகின்றது. நினைவுரையிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளது போன்று, அவர் பற்றிய நினைவு இனிமேல் அவரின் ஈடுபாடுகள் பற்றிய வரன்முறையான ஆராய்ச்சியின் மூலமே பேணப்படல் வேண்டும். அத்துறைகளில் செல்லுமாறு இளம் பட்டப்பின்படிப்பு ஆய்வாளர்கள் ஊக்குவிக்கப் பெற வேண்டும். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தினருக்கு இது ஒரு கடமையாகலாம்.

இந்நினைவுரையில் விபுலாநந்தரது கருத்து நிலைச்சார்புகளை அவரது மதத்தத்துவ நோக்குகள் வழியாக எடுத்துக் கூறியுள்ளேன். இதன் காரணமாகவே வேதாந்தம், சித்தாந்தம் குறிக்கும் சமூக நிலைப்பாடுகள் பற்றிய குறிப்புகள் அவசியமாயின். விபுலானந்தரின் ஆய்வு ஆளுமையைத் தெளிவுப்படுத்திக் கொள்ளாது அவரது ஆராய்ச்சிகளை விளங்கிக் கொள்ள முடியாது.

நினைவுரை நூல் வடிவில் வருவதற்கு உதவியோர் என் மாணவியர் இருவர்:-

செல்விகள் சூரியகுமாரி பஞ்சநாதன், நதிரா மரியசந்தனம். கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்களாக விருக்கும் அவர்கள் ஒலிப்பதிவை எழுத்துருவாக்கித் தந்தனர். அதன் பின்னர் அவ் எழுத்துருவில் நான் செய்த மாற்றங்களின் அடிப்படையில் எழுத்துருவை அச்சுக்கான படியாக்கினர். அவர்கள் இருவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள் உரித்து.

இவர்களை ஊக்கப்படுத்தியவர் கிழக்கிலங்கைக் கலைப்பீடாதிபதி கலாநிதி, சி.மௌனகுரு இம்முறை நான் மேற்கொண்ட மட்டக்களப்புப் பயணத்துக்கே அவர்தான் காரணர். அவருக்கு என் நன்றிகள் உரித்து.

அச்சுப் பிரதியினை வாசித்து அச்சுருவாக்கத்துக்கு உதவிய திருமதி. அம்மன்கிளி முருகதாசுக்கும், தி. செ.யோகராசாவுக்கும் எனது நன்றிகள் உரித்து.

விபுலாநந்தரின் நூற்றாண்டு விழாச்சபையின் முக்கியஸ்தர்கள் திருவாளர்கள் க.தியாகராசா அவர்களும், வித்துவான் இ.கமலநாதனும் எனது நீண்டநாள் நண்பர்கள். மட்டக்களப்பில் நான் நின்றபொழுது, அவர்கள் காட்டிய அன்பு என்றும் நெஞ்சில் நிற்கும்.

மட்டக்களப்புப் பயணத்தின் பொழுது எனது நண்பர்கள் பலரையும், பழைய மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டிற்று. சுகுமார், கண்ணம்மா, றூபி, ரங்கன், மகேந்திரன், அருந்ததி எனப் பட்டியல் நீழும்.

அவர்கள் காட்டிய அன்பின் நினைவுகள் நின்று நிலைக்கும்.

நினைவுரையை அச்சிற் பதிப்பிக்கும் சுவாமி, விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையினருக்கு என் மனங்கனிந்த நன்றிகள்.

கார்த்திகேசு சிவத்தம்பி
2/7, 58, 37வது ஒழுங்கை,
கொழும்பு - 6.
18-05-1994.

+++++++++++++++

விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்

பெருமதிப்பிற்குரிய இராமகிருஷ்ண மடத்து சுவாமிஜி அவர்களே! பங்குத்தந்தை அவர்களே! மதிப்பிற்குரிய நண்பர் தலைவர் திரு. தியாகராஜா அவர்களே! எனது நீண்டகால நண்பரும் மிக நெருங்கிய அன்புநேயம் பூண்டவருமாகிய நண்பர் வித்துவான் கமலநாதன் அவர்களே! இசைத்துறையில் தனக்கென ஒரு பெயர் ஈட்டிய திரு.ராஜ“ அவர்களே! இந்த நினைவுநாள் விழாவில் கலந்தது கொள்ள வந்திருக்கின்ற பெரியோர்களே! நண்பர்களே! உங்கள் எல்லோருக்கும் எனது பணிவன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த விழாவில் பங்குபற்றுவதனை எனக்குப் பெருமை தரும் ஒரு விடயமாகக் கருதுகின்றேன். இராமலிங்க சுவாமிகள் கூறுவார்கள் "வாழையடி வாழையென வந்ததிருக்கூட்ட மரபினில் யானொருவன்" என்று அவ்வாறு வாழையடி வாழையென வந்த ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் ஒரு சங்கிலித் தொடர் என்ற வகையில் ஒரு நீண்ட பாரம்பரியத்தினை மற்றவர்களுக்குக் கையளிக்கவேண்டி எங்களுடைய முன்னோர்களை மீட்டுப் பார்க்கின்ற அந்தப் பெரும்பணியில், இறங்குவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புத் தந்தமைக்கு விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையினருக்கு எனது மனம் நிறைந்த, மனம் கனிந்த, அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

விபுலாநந்தரின் 103 வது பிறந்ததின விழாவின் போது அவர் நினைவாக ஒரு பேருரை நிகழ்த்துவது தரும் திருப்தி மட்டற்றது. இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் கமலநாதன் அவர்களுக்கும், நான் இங்கு வருவதற்கும், இங்கு தங்கியிருப்பதற்கும் உதவிகள் செய்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை பண்பாட்டுப்பீடத்திற்கும், குறிப்பாக எனது நண்பரும் மாணவருமாகிய கலாநிதி மௌனகுரு அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். முன்னரே இந்தப் பணியினை நான் ஆற்ற வேண்டுமென்று வித்துவான் அவர்கள் பல தடவைகள் கேட்டிருந்தார்கள். பின் போட்ட தவறு என்னுடையது. என்னைப் பற்றி இனிய வார்த்தைகள் கூறியமைக்காக என்னுடைய நன்றிக் கடப்பாட்டினை அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

'விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்' என்ற தலைப்பில் விபுலாநந்த ஆய்வில் நான் எதிர் கொள்ளும் சில பிரச்சனைகள் பற்றி இங்கு குறிப்பிடலாம் என்று கருதுகின்றேன்.

விபுலாநந்தர் பிறந்த நூற்றாண்டினையொட்டி விழாக்கள் பல நடைபெறும் இந்தக் காலகட்டத்தில் இந்த நூற்றாண்டு விழாவினையொட்டி விபுலாநந்தர் பற்றிய மிக முக்கியமான சில வெளியீடுகள் வெளிவந்துள்ளன. அவை விபுலாநந்த ஆய்வியலுக்குப் பெரிதும் உதவுகின்றனவாக அமைகின்றன. மலர்கள் என்கின்ற வகையில் நூற்றாண்டு விழாச் சபையினரால் வெளியிடப் பெற்ற சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர், யாழ் பல்கலைக்கழகத்துத் தமிழ் மன்றத்தினரால் வெளியிடப் பெற்ற நூற்றாண்டு விழாச் சிறப்பு வெளியீடு, இந்து சமய கலாசார அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட "தமிழறிஞர் விபுலாநந்தர் வாழ்வும் பணியும்" என்ற கட்டுரைத் தொகுதி, திருகோணமலை சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை வெளியிட்ட மலர் போன்றவையும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் சிலவும் மிக முக்கியமானவை. பெ.சு.மணி அவர்கள் எழுதிய 'சுவாமி விபுலாநந்தர்' என்கின்ற நூலும் க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய Vipulananda A Biography A man and achievements எனும் பெயருடைய இந்து கலாசார அமைச்சினால் வெளியிடப்பெற்ற நூலும் நூற்றாண்டு விழாச் சபையினராலேயே வெளியிடப் பெற்றதும் பரந்துபட்ட தகவல்களைத் தருகின்றதுமான திரு. வ. சிவசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய 'விபுலாநந்த தரிசனம்' என்கின்ற நூலும் முக்கியமானவை. இவை யாவற்றுக்கும் மேலாக இராமகிருஷ்ணமடம் Ancient thoughts for modern man என்ற தலைப்பில் அடிகளாருடைய ஆங்கில கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள அந்தத் தொகுதியும் மிக முக்கியமானது. இவை யாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல விபுலாநந்தருடைய பிறந்த தினம் பற்றிக் கண்டெடுக்கப்பட்ட புதிய தகவலும் மிக முக்கியமானது. இவை விபுலாநந்தருடைய வாழ்க்கை அவர்தம் ஆக்கங்கள் பற்றிய பல புதிய தகவல்களை நமக்குத் தந்துள்ளன. இவற்றின் காரணமாக விபுலாநந்த ஆய்வு இப்பொழுது சற்றுப் பரந்துபட்டதாக ஒரு அகண்ட பரிமாணத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது.

'விபுலாநந்தருடைய சிந்தனை நெறிகள்' என்கின்ற பொருள் பற்றிப் பேச முனையும் நான் சுவாமி விபுலாநந்தர் ஒரு தமிழர் என்கின்ற வகையில் நான்கு பரிமாணங்களைக் கொண்ட பெரும் புகழ் ஒன்றினை நிலைநிறுத்தியிருக்கின்றார் என்பதனை முதலில் எடுத்துக் கூறுவது முக்கியம் என்று கருதுகின்றேன்.

முதலாவதாக விபுலாநந்தர் கிழக்கிலங்கையின் மைந்தர். இதனை நாங்கள் வாயுபசாரமாகச் சொல்லவில்லை. விபுலானந்தருடைய வாழ்க்கை நோக்கும் அவர் சில விடங்களை நோக்கிய முறைமையும் அவர் செய்த சில விடயங்களும் அவர் எதிர் நோக்கிய பல பிரச்சனைகளும் அவர் இந்த மண்ணின் சூழலைத் தன்னுடைய வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கை நோக்கோடு இணைத்துக் கொள்கின்ற முறைமை காரணமாக வந்தவையே. இந்த மண்ணின் சூழலினால் அவர் நிரம்பப் பாதிக்கப்பட்டவராவார். அத்துடன் அதன் செல்வாக்குக்குட்பட்டவராகவும் அவர் இருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்களை நோக்கும் பொழுது இந்துமதத்தின் மிக நவீனமான வளர்ச்சியான இராமகிருஷ்ண மடத்தினுடைய சந்நியாசியாக இருக்கின்ற அதே வேளையில் ஆகமச் சார்பற்ற பண்பாடு ஒன்றினுடைய குழந்தையாகவும் அந்தத் தமிழுலகிலே அதன் சூழலிலே வாழுகின்ற ஒருவராகவும் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளமையை நாங்கள் பல விடயங்களிலே காணக் கூடியதாக உள்ளது. எனவே தான் கிழக்கிலங்கையின் மைந்தன் என்பது மிக முக்கியமான ஒரு விடயம் என்பதனை வலியுறுத்த விரும்புகிறேன்.

அடுத்தது - இது மிக முக்கியமானது என்று கருதுகிறேன். ஈழத்து தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டைச் சுட்டுகின்ற சின்னமாகி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு சின்னமாக சுவாமி விபுலாநந்தர் விளங்குகின்றார் என்பதாகும். இவர் மட்டக்களப்புப் புலமை வரலாற்றில் இடம் பெறுகின்ற அளவுக்கு யாழ்ப்பாணத்துப் புலமை வரலாற்றிலும் இடம் பெறுவர். இவர் தமது யாழ்நூலை இருந்து எழுதிய இடங்களில் ஒன்று மலையகத்து ஒரு தோட்டப் பகுதியாகும். அவருடைய நண்பர் ஒருவருடைய தோட்டத்திலிருந்தே அதனைச் செய்தார். தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம்களோடு அவர் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். உதாரணமாக எ.எம்.எ. அஸ“ஸோடு அவருக்கு நிறைந்த ஈடுபாடு இருந்தது. தன்னுடைய குழந்தைகள் இல்லத்திலே எத்தனையோ முஸ்லிம் மாணவர்களுக்கு அவர் இடம் கொடுத்தார். இதனால் ஈழத்துத் தமிழ் பேசும் மக்களுடைய ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுகின்ற மிகப்பெரிய சின்னமாக விபுலாநந்தர் திகழுகின்றார்.

இது மாத்திரமல்ல இவை யாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல தமிழ்நாடு மட்டத்தில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தமிழறிஞராக விபுலாநந்தர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அதனாலேதான் 1930களில் தொடக்கப்படவிருந்த ஒரு புதிய பல்கலைக்கழகம் எங்கே அமைய வேண்டும் என்பது பற்றிய விசாரணைக் குழுவில் விபுலாநந்தர் இடம் பெற முடிந்தது. தமிழினி நவீன மயப்பாட்டிற்கு வேண்டியதாகக் கருதப்பட்ட கலைச் சொல்லாக்கக் குழுவிலே அவரால் சென்னையிலேயே கடமையாற்ற முடிந்தது.

எனவே தமிழ் பேசும் மக்கள் சகலரினதும் பண்பாட்டு வாழ்வில் முக்கியமுள்ள ஒருவராக இந்த நூற்றாண்டில் தனது பெயரைப் பொறித்துக் கொண்டவர் விபுலாநந்த அடிகள். இது பெருமைக்குரிய ஒரு விடயம்.

இந்தச் சாதனைகளை அவர் ஆற்றிய "நிலை" முக்கியமாகும். அதன் பின்னணி அதை விட முக்கியமானது என்று கருதுகிறேன். அவர் என்ன நிலையில் நின்று இவற்றை ஆற்றினார் என்பது மிக முக்கியம். அப்பொழுது தான் அவரது முழு ஆளுமையையும் நாங்கள் விளங்கக் கூடியதாக இருக்கும். இவை யாவற்றையும் செய்த பொழுது அவர் ராமகிருஷ்ண மடத்து சுவாமியாக இருந்து வந்தார். அதுமாத்திரமல்ல அந்த மடத்தினுடைய சில முக்கியமான புலமை நிலைப் பதவிகளை இளவயதிலேயே அவர் வகித்தார். புரபுத்த பாரதவினுடைய ஆசிரியராக இருந்தமை மிக முக்கியமான ஒரு விடயம்.

இவற்றினோடு நாம் இன்னொன்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இந்தப் பணிகளை அவர் ஆற்றிய பொழுது அவர் தலைசிறந்த ஒரு சமூக சேவையாளராக விளங்கினார். மக்களிடையே காணப்படுகின்ற சமவீனங்களை, அசமத்துவங்களை அகற்றுகின்ற சமூக, சீர்திருத்த வேலைகளிலே அவர் ஈடுபட்டிருந்தார் என்பது மிக மிக முக்கியமான ஒரு உண்மையாகும். அதனை அவர் தன்னுடைய ஒரு மிக முக்கியமான பணியாகக் கொண்டிருந்தார்.

காலஞ்சென்ற நண்பர் க.சி. குலரத்தினம் அவர்கள் சொல்வார்கள் சென்ற் பற்றிக்ஸ் கல்லூரியிலே அடிகளார் படிப்பிக்கின்ற பொழுது, அதற்கருகே உள்ள குருநகரிலே உள்ள மீனவர்களின் வாழ்க்கை சம்பந்தமான முன்னேற்ற விடயங்களிலே அவருக்கு முக்கிய ஈடுபாடு இருந்தது என்று. 'பெரிய கோயில் வாத்தியார்' என்று அவரைச் சொல்வார்களாம்.

அதுமாத்திரமல்ல அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த காலத்தில் திருவேட்களத்திலே தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திலே அவர் எடுத்த நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. திரு. சிவசுப்பிரமணியம் அவர்களுடைய நூலிலே மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகிறது. திருவேட்களத்திலே சுவாமி அவர்கள் செய்த பணிகள் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து நிர்வாகத்துக்குப் பல அசௌகரியங்கள் ஏற்பட்டன. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களே அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளமை திரு. சிவ சுப்பிரமணியத்தின் நூலிலிருந்து தெரியவருகின்றது. அடிகளாருடைய மாணவர்கள் பலர் அந்த உண்மையைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல மட்டக்களப்பிற் சிவபுரியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அன்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தை அவர் நடத்தினார். இதற்கு மேலாக அவரிடத்துச் சமூக நீதிக்காகப் பாடுபடுகிற, சுதேசப் பாரம்பரியத்துக்காகக் குரல் கொடுக்கிற, நாட்டினுடைய பண்பாட்டு முறையிலே வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக வாதிடுகின்ற எடுத்துக் கூறுகின்ற ஒரு சமூக அரசியல் கருத்து நிலைப்பாடும் அவரிடத்தில் காணப்பட்டது. அந்த ஈடுபாடுதான் அவரை யாழ்ப்பாண மாணவர் காங்கிரசின் தலைவராக வைத்திருந்தது. மகாத்மா காந்தி வந்த வருடத்தில் ஐசாக் தம்பையா என்பவர் தலைவராக இருந்தார். அவருக்கும் காங்கிரசின் நிர்வாகக் குழுவுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் பதவியிலிருந்து விலக, எல்லோராலும் ஏகமனதாக அந்த வரவேற்புச் சபையினுடைய தலைவராக சுவாமி விபுலாநந்தர் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

இத்துணைப் பன்முகப்பட்ட ஒருவரது சாதனைகளை நாம் வெறுமனே பட்டியல் போட்டுக் காட்டுவதன் மூலம், அவரது முழு ஆளுமையையும் நாம் விளங்கிக் கொண்டு விடமுடியாது. உண்மையில் வெறும் புகழ்ச்சி என்பது, விபுலாநந்தருக்கு நாம் விதிக்கும் தண்டனையாகவே அமைந்துவிடும். அத்தகைய ஒரு நிலையிலிருந்து விடுபட்டு அவரை முழுமையாக நோக்கும் ஒரு நோக்கு முறைமை வளர்த்தெடுக்கப்படவேண்டும்.

நண்பர் தியாகராஜா அவர்கள் பேசுகிற பொழுது நூற்றாண்டுவிழாச்சபை சுவாமிகளின் எழுத்துக்களை முற்றுமுழுதாகப் பதிப்பிக்கவுள்ளது என்று கூறினார். விபுலாநந்தரது ஆக்கங்களை நாம் இன்னும் தான் கால அடிப்படையில் ஒழுங்குபடுத்தவில்லை. எந்த வருடத்தில் எதை எழுதினார்? எதை முதல் எழுதினார்? எதனைப் பின்னர் எழுதினார்? எது முதல் எழுதப்பட்டுப் பின்னர் அச்சிடப்பெற்றது? அத்தகைய அச்சுப்பதிவு வரலாற்றினைப் பார்க்கின்றபொழுது எழுத்துக்களினூடே ஒரு தொடர்பை நாம் காணக்கூடியதாக இருக்கின்றதா? வெளியீட்டு அடிப்படையில் எது முதல் வந்தது? எது பின்னர் வந்தது? இவ்வாறு வரும் எழுத்து வெளியீட்டு வரலாற்றிலிருந்து நாம் பெறக்கூடிய தெளிவுகள் யாவை? அவை எவ்வாறு விபுலாநந்தரது சிந்தனையின் போக்குகளை எடுத்துக்காட்டுகின்றன என வரும் விடயங்கள் பற்றி நாம் இன்னும் சிந்திக்கவே இல்லையென்றே கூற வேண்டும். அப்படிச் சிந்திக்காவிடில் விபுலாநந்தர் என்கின்ற பேராராய்ச்சியாளனுடைய பார்வை பற்றி நாம் அறிந்து கொள்ள முடியாது. ஆராய்ச்சி உலகில் இவருக்குக் கிடைத்துள்ள ஏற்புடைமையின் தன்மையினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமேனால், அதனுடைய அளவை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நாங்கள் இந்த விடயங்களை மிக ஆழமாகப் பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது என்று நான் கருதுகின்றேன். இது பற்றிப் பின்னரும் எடுத்துக் கூறவேண்டிவரும். எனவே இந்த நேரத்தில், இந்தக் கட்டத்தில் இவ்வளவில் கூறிக்கொண்டு இன்னொரு படிநிலைக்கு நான் செல்ல விரும்புகிறேன்.

அவரது வாழ்க்கை வரலாற்றில் நாம் சில அசாதாரணமான தன்மைகளை அவதானிக்கக் கூடியதாக காணக்கூடியதாக இருக்கிறது. ஒன்று இராமகிருஷ்ண மடத்தின் ஒருமுக்கிய விதியொன்றினை மீறும் உரிமையை அவருக்கு அந்த மடமே வழங்கியது என்பதாகும். அதாவது அவர் இன்னொரு நிறுவனத்தில் கடமையாற்றுவதற்கு வேண்டிய உரிமையை மடம் அவருக்கு வழங்கியது. இது பொதுவாக வழங்கப்படுவதில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் அவற்றின் ஊழியனாகப் பணிபுரிவதற்கான அனுமதியை மடம் வழங்கியிருந்தது. இதற்கான வேண்டுகோளை இவரது நியமனத்தில் ஆர்வங்கொண்டிருந்தோர் ராமகிருஷ்ண மடத்தினிடம் விடுத்தனர். இராமகிருஷ்ண மடம் அதனை நீண்ட ஆரோசனையின் பின்னர் ஏற்றுக் கொண்டது. ஏனென்றால் இது தமிழ் மக்களினுடைய தமிழாராய்ச்சியாளர்களுடைய வேண்டுகோளாக மாத்திரமில்லாமல் றொபேர்ட் மார்ஸ் போன்ற பல்கலைக்கழக அதிபர்களினுடைய வேண்டுகோளாகவும் அமைந்திருந்தது. இது மிக அசாதாரணமான விடயமென்றே நான் கருதுகின்றேன்.

இன்னும் ஒன்று இது அவரது பிற்காலத்தில், குறிப்பாக 40 களில் மட்டக்களப்பில் நிறுவிய தமது தரிப்பிடமாகிய சிவபுரியை அவர் நிர்வகித்துக் கொண்ட முறைமை பற்றியதாகும். அந்த நிறுவனத்தின் தேவைகளுக்கும் தமது விருப்புகளுக்கும் ஏற்றவகையில் அதனை நடத்திக் கொண்டார் என்பது தெரியவருகிறது. அவர் அவ்வாறு உண்டாக்கிக்கொண்டார் என்கின்ற உண்மையைத் திரு. கணபதிப்பிள்ளை அவர்களுடைய நூல் மூலமாக நாம் அறிகிறோம். ஒரு சுவாரஸ்யமான விடயம் இது. மறுதலிக்கப்படாததால் அதனை உண்மை என ஏற்றுக்கொள்கிறேன்.

Vipulananda had no rigid religious Code to follow with the exception of that which he Copied from the Saiva Sannithanams in South India. He Was naturaly drawn to them, since in his early days he had come under the influence of Pu, P.Vaitilinga Desigar. His home inmates at kalladi uppodai was rigid up on the model of the "Pand ara Sannithanams".

பக் 139

இராமகிருஷ்ண மடத்து சந்நியாசி ஒருவர் தாம் நடத்துகின்ற நிறுவனத்தைத் தென்னிந்தியச் சைவ ஆதீனங்கள் நடத்தப்பெறும் முறையில் நடத்தினார் எனும் விடயம் நிச்சயமாக முக்கியத்துவம் பெறும் ஓர் அம்சமாகும். இந்தத் தேவை அவருக்கு எவ்வாறு ஏற்படுகின்றது? இந்தத் தேவையை அவர் செய்கின்ற அதே வேளையில் அவர் எவ்வாறு தொடர்ந்தும் இராமகிருஷ்ண மடத்துச் சுவாமியாக இருந்தார் என்கின்ற வினா மிகவும் முக்கியமானதாகும்.

இராமகிருஷ்ண மடத்தில் ஒழுங்குமுறையைக் கைறேற்று அதேவேளையில் சிவபுரி குழந்தைகள் இல்லத்தின் சிறப்புத் தேவையையும் மனங்கொண்டு தமது ஓழுங்கமைப்பினை ஏற்படுத்திக் கொண்டார் என்று நாங்கள் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது எனக் கருதுகின்றேன். விபுலாநந்தரின் சிவபுரி நிர்வாகம் பற்றிய மதிப்பீட்டில் நாம் சற்றுமுன்னர் கூறிய பின்புலத்தினைத் தெளிவுபடுத்துவது மாத்திரமல்லாமல் அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டுவதும் அவசியம் என்று கருதுகிறேன்.

விபுலாநந்தரது தமிழ் நிலைப்பட்ட பிரதான சாதனைகள் என்று கூறப்படத்தக்கவற்றை நான்காக எடுத்துக் கூறவிரும்புகிறேன். ஒன்று தமிழிசை பற்றிய அவரது ஆராய்ச்சியாகும். அது மிக முக்கியமானது. தமிழிசை பற்றிய ஆய்வு இவராலேயே முதன் முதலில் செய்யப்பட்டதாக இருப்பினும் கருணாமிர்தசாகரம் எனும் ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் ஏற்கனவே இருந்தது. இதற்கு முன் தமிழிசைபற்றிச் சிந்தித்து ஆராய்ந்தோர் பெரும்பாலும் இசையை ஆற்றுபவர்களாகவே இந்த ஆராய்ச்சிக்கு வருகிறார்கள் எனலாம். விபுலாநந்தர் இசையினுடைய தன்மையை அறிய விரும்புகின்ற ஒரு வரலாற்று அறிஞனாக அதில் ஈடுபடுகின்றார். அதுவும் கணித விற்பன்னர் ஒருவர் இசையைப் பார்க்கின்ற முறைமையிலே அவர் வந்து சேருகின்றார். உண்மையில் விபுலாநந்தர் இசையைப் பற்றி எழுதியுள்ள யாவும் இசையின் கணிதவியல் பற்றியனவே (The matheatics of music) அதனை விளங்குவது மிகக் கஷ்டம், குறிப்பாக இலங்கைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சிக் சஞ்சிகையான "University of Ceylon Review" வில் 1947 இல் வெளிவந்த 'The harp a with the thousand Strings' என்று அந்தப்பிரபலமான கட்டுரையில் இந்த உண்மையைக் காணலாம். கணித விற்பன்னர்களல்லாமல் வெறுமனே யாழ் அல்லது இசை பற்றிய ஆர்வம் மாத்திரம் கொண்டிருப்பவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. தமிழிசை பற்றிய ஆராய்ச்சி அவருடைய மிக முக்கியமான ஆராய்ச்சித்துறையாகும்.

இரண்டாவது சாதனையாக எடுத்துப்பேசப்பட வேண்டியது நவீன அறிவியலைத் தமிழின் பாற்படுத்துவதில் அவருக்கு இருந்த அக்கறையாகும். இதன் காரணமாகத்தான் அவர் கலைச் சொல்லாக்க முயற்சிகள் மொழிபெயர்ப்பு முயற்சிகள் ஆகியவற்றிலே ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டது. இவற்றை நாங்கள் "தொண்டுகள்" என்று கொண்டு பட்டியல் போட்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று தனித்தனியே எடுத்துக் கூறுவதிலும் பார்க்க, தமிழின் நவீன அறிவியலைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் பகுதிகளாகவே அவற்றைக் கொள்ள வேண்டும்.

அது மாத்திரமல்ல இவர் இன்னொரு காரியத்தையும் செய்கிறார். தமிழைத் தமிழின் சாதனைகளை அல்லது தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை அனைத்திந்திய, அனைத்துலக நிலையில் வைத்துப் பார்க்கின்ற ஒரு இயல்பு இவரிடத்திலே காணப்படுகின்றது. தமிழ்ப் பண்பாட்டினைத் தன்னுள் முடிந்த முடிபாகக் கருதாமல் அனைத்திந்தியப் பின்னணியில் பார்க்கின்ற இந்தக் காரணத்திற்காக அவர் இரண்டு விடயங்களிலே ஈடுபடவேண்டி வருகின்றது.

1) மொழிபெயர்ப்புத் துறை

மொழிபெயர்ப்புத் துறையோடு கலைச்சொல்லாக்கத்துறை சம்பந்தப்படுகின்றது.

2) ஒப்பியல் இலக்கிய ஆய்வு

அவர் இரண்டு மூன்று இடங்களில் சொல்வார்; அராபியாவில் முகமது நபி வாழ்ந்த காலத்திலே திருநாவுக்கரசு நாயனார் தமிழ்நாட்டிலே தமது பணியைச் செய்கின்றார் என்று. அப்படிச் சொன்ன உடனேயே எங்களுடைய பார்வைப்பரப்பு, அறிகைப் பரப்பு உடனடியாக எத்துணை விசாலப்படுகின்றது என்பதனை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழில் ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்கு நிச்சயமாக அவர் ஆரம்ப புருஷர்களில் ஒருவர்.

இவற்றுடன் விபுலாநந்தரின் முக்கிய தமிழ்ப்பணிகளில் ஒன்றான நான் கருதுவது என்னவென்றால் பாரதியை அவர் மகாகவியாக எற்றுக் கொண்டமையாகும். அவ்வாறு பாரதியை ஒரு மகாகவியாக ஏற்றுக் கொள்ளுகின்ற பொழுதுதான் நாம் தமிழ் இலக்கிய ஓட்டம் மாறி விட்டது என்கின்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுகின்றோம். பாரதியை நிராகரிக்கும் வரையும் பாரதியை ஏற்றுக் கொள்ளாத வரையும் தமிழ் இலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டினிறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும் ஏற்பட்ட அடிப்படையான மாற்றத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ளாதவர்களாகவே இருப்போம். இந்தப் பெருமாற்றத்தை விபுலாநந்தர் என்கின்ற பண்டிதல் - மயில் வாகனத்தைத் தவிர பல பண்டிதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதியை ஒரு மகாகவியாகப், புதுமைக் கவியாக மக்கள் அறிந்திருக்க வேண்டிய கவியாக எற்றுக் கொண்டதன் மூலம் தமிழில் ஏற்பட்டுள்ள ஒரு யுகமாற்றத்தினை விபுலாநந்தர் உணர்ந்திருந்தார்.

இவை - இந்தச் சாதனைகள் - அவரது ஆளுமை வழியாக எவ்வாறு வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ளும் பொழுதுதான் இந்தச் சாதனைகளின் முழுமையையும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அந்த ஆளுமை நிலைப்பாடுகள் யாவை? முதலாவது இவர் ஒரு பண்டிதர். இதில் ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் விஞ்ஞான Diploma பெற்ற அதே வருடத்தில் - 1916ல் இவர் பண்டித பரீட்சையிலும் சித்தியடைந்தார். இந்த இரண்டு போக்கினையும் இணைத்துப் பார்க்கின்ற தன்மை அதாவது உலகப் பொதுவான நவீன வளர்ச்சிகளையும் பாரம்பரியம் பற்றிய ஈடுபாட்டையும் இணைத்துக் கொள்ளுகின்ற தன்மை அவரிடத்தில் காணப்படுகின்றது. 1920 களில் விஞ்ஞானக் கல்வியும் பாரம்பரியக் கல்வியும் எதிரெதிர் நிலைகளாகக் கொள்ளப்பட்டவை. இவ்வாறு வெளிப்படையான முரண்பாடு கொண்டிருந்த இரண்டுக்கும் தமிழ் நிலைப்பட்ட உடன்பாடு காணும் ஓர் ஆளுமை வன்மை இவரிடத்திருந்தது. இந்த "எதிரது தழுவிய" தன்மையினை இன்னுமொன்றிலும் காணலாம். கடேற் (Cadet) பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டிய ஒரு மாணவன் துறவியாக மாறுகின்றான். அனைத்திந்திய மதத்திற்காகப் பேசுகின்ற ஒருவன்தான் தமிழின் இலக்கியப் பாரம்பரியம் பற்றியும் பேசுகின்றான். இந்த இரண்டையும் எவ்வாறு தனது ஆளுமையினூடே இணைத்துக் கொள்ளுகின்றார் என்பது மிக முக்கியமான பிரச்சினை மாத்திரமல்ல பிரச்சினை மையமும் ஆகும் என்று நான் கருதுகின்றேன். அதுபற்றிச் சற்றப் பின்னர் பார்ப்போம்.

தொடர்ந்து அவரது 'எதிரது தழுவிய' நிலைமையை சற்று உன்னிப்பாக நோக்குவோம். அவரது கவிதைகள் தமிழின் செய்யுள் இலக்கண மரபைப் போற்றுவனவாகவும், யாப்புப் பிரயோக அமைப்பு இறுக்கம் காரணமாகவும் அதாவது சுருக்கமாகச் சொன்னால் நவீன காலத்துக்கு முற்பட்டவையென்று கருதப்படுகின்ற யாப்புக்களிலே மிகுந்த சிரத்தையோடு செய்யுள் யாத்த ஒருவர், தமிழின் மிக நவீனமான கவிஞனை இனங்காணுகின்றார். அவனை அந்த நவீனத்துவத்துக்காகப் போற்றுகின்றார். இந்த இருகிளைப்பாடு (Dichotomy) சுவாமியினுடைய வாழ்க்கையின் ஜ“வஸ்வரமாகத் தொழிற்படுகின்றது என்று கருதுகின்றேன். சிலவற்றை ஏற்கனவே பார்த்தோம். மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.

சித்தாந்தச் சூழலில் வாழ்ந்த இவர் சுவாமியாக மாறுவதற்கு வேதாந்த மடத்தைச் சேர்கிறார். வேதாந்த மடத்தைச் சேர்ந்த பின்னர் சைவ சித்தாந்தத்தினுடைய மகத்துவத்தைப் பற்றி எழுதுகின்றார். சற்று முன்னர் வித்துவான் கமலநாதன் அவர்கள் சொன்னார்கள். 1930 முப்பதுகளுக்கு முன்னர் சித்தாந்த மாநாடுகளிலே அவர் கலந்து கொள்ளவில்லையென்றும் அதற்குப் பின்னர்தான் அப்பணியில் இறங்குகின்றார் என்றும், இது எனக்குத் தெரியாத தகவல், ஆனால் எனது எடுகோள் ஒன்று அதனால் நிரூபிக்கப்படுகின்றது. இன்னொன்று அவரது ஆங்கில உரைநடைப் போக்குக்கும் அவர் கையாளும் தமிழ் உரை நடைப் போக்குக்கும் உள்ள வேறுபாடு ஆகும். 'Ancient thoughts of modern man' என்ற நூலை வாசித்துப் பார்த்தால் அதில் காணப்படுகின்ற மிகச் சரளமான ஆங்கில நடை - எம்மைக் கவரும் அந்த நடை, புதுமைப்பித்தன் சொல்லுவது போன்று கருத்தை எடுத்துச் சொல்வதற்காகப் பாய்ந்து செல்லுகின்ற ஒரு நடையாகும். அப்படியான ஒரு ஆங்கில நடை அவருக்குக் கைவந்திருக்கிறது. அவர் "பிரபுத்த பாரத" 'வேதாந்த கேசரிப்' பத்திரிகைகளுக்கு எழுதுகிற பொழுது அந்த நடையைக் கையாளுகிறார். ஆனால் அதே விபுலாந்தர் தமிழில் 'விபுலாநந்த அமுதம்' என்ற நூலிலே தொகுக்கப்பட்ட கட்டுரைகளைத் தவிர மற்றக் கட்டுரைகளிலே மிகவும் செந்நெறிப்பட்ட தொல்சீர்த்தன்மை வாய்ந்த ஓர் உரை மரபைப் போற்றுகின்றார்.

இந்த இருகிளைப்பாட்டுத் தன்மை எவ்வாறு வளர்கிறது? இதனை நான் ஏற்கனவே கூறியது போலக் கவிதைத் துறையிலும் காணலாம். பாரதியாரின் கவிதையோட்டத்திலும் இவரது கவிதை ஓட்டத்திலும் காணப்படுகின்ற நடை வேறுபாடு இவரைப் பற்றிக் கணபதிப்பிள்ளை தனது நூலிலே மிக அழகாகச் சொல்லுகிறார். அந்தப் பகுதியை நீங்கள் வாசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

இவருடைய கவிதைகளிலே காணப்படுகின்ற ஒரு செந்நெறி இறுக்கம் ஒரு Classical Rigidity -கமிழின் சிறப்பு இந்தச் செந்நெறி இறுக்கத்தினை நம்பி இருக்கின்றதென்ற நம்பிக்கை அவரிடத்திலே காணப்பட்டது போலத் தெரிகிறது. இவை பற்றிச் சற்ற விரிவாக, இவற்றில் ஒன்றிரண்டு பற்றியாவது சற்று விரிவாகப் பார்க்க விரும்புகின்றேன்.

விபுலாநந்தரின் கருத்து நிலைப்பாடு - Ideological Stand - பற்றிய முக்கியமான அம்சம் அவர் வேதாந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாகவும் அதேவேளையில் தமிழரது இலக்கிய சிந்தனை பாரம்பரியத்தினூடாக வந்த சித்தாந்தத்தைப் புறந்தள்ளாது இருந்ததுமாகும். அவர் வேதாந்தத்தை எவ்வாறு நோக்குகின்றார் என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஏனெனில் இவர் இராமகிருஷ்ண மடத்தில் சேர விரும்பிய பின்புலமே முக்கியமானது. சுவாமி சிவானந்தர், சுவாமி சர்வானந்தர் ஆகியோர்களுடன் ஏற்பட்ட உறவுகளை வைத்து மாத்திரம் நாம் பார்த்துவிடக் கூடாது. அவை முக்கியமானவை. அவைதான் தீர்மானிக்கின்றன. இறுதியிலே அவைதான் அவரை அங்கு கொண்டு செல்கின்றன. ஆனால் இவர் யாழ்ப்பாணத்துச் சூழலிலே முக்கிய சமூகத் தொண்டராக, கல்விமானாகத் தொழிற்பட்ட போது மடத்திலே சேர்வது பற்றித் தீர்மானிக்கின்றார்.

சைவசித்தாந்தச் சூழலில் வாழ்ந்த அவர் ஆறுமுக நாவலரின் சேவைகளை மிகச் சிறப்பாக எடுத்துக் கூற எந்தக்காலத்திலும் தயங்காத அவர் ஆரம்பகாலத்தில் இராமகிருஷ்ண மடத்திற் சேரத்தீர்மானித்த பொழுது சைவசித்தாந்தத்திற் காணாத எதனை வேதாந்தத்திற் கண்டார்? வேதாந்தம் அவரை எவ்வாறு கவர்ந்தது? அவர் எத்தகைய சைவ சித்தாந்தத்தை விரும்பினார்? என்பன போன்ற வினாக்கள் எந்த ஆராய்ச்சி மாணவனாலும் நிச்சயமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியனவை ஆகும். விபுலாநந்தரது கருத்துநிலை நிலைப்பாடு பற்றிய மிக முக்கியமான அம்சம் அவர் முதலில் வேதாந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டவராகவும் அதேவளையில் குறிப்பாக இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போற்றுபவராகவும், அதேவேளையில் பிற்காலத்தில் தமிழரின் இலக்கிய, சிந்தனைப் பாரம்பரியத்தினூடாக வந்த சைவ சித்தாந்தத்தைப் புறந்தள்ளாதிருந்தமையுமாகும். அவர் வேதாந்தத்தை எவ்வாறு நோக்ககிறார் என்பது அவர் 'பிரபுத்த பாரத' 'வேதாந்த கேசரி' கட்டுரைத் தொகுதியான 'Ancient Thoughts for modern man' என்னும் நூலிலிருந்து தெரிய வருகின்றது. அந்தப் புத்தகத்தில் ஒரு சிறு குறைபாடு என்ன வென்றால் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்ற கட்டுரைகள் கால ஒழுங்கமைப்பின்படி எடுத்துக் கூறப்படவில்லை. அவை எந்த வருடங்களில் எழுதப்பட்டன என்ற தகவலும் தரப்படவில்லை. எனவே அவற்றினுடைய கால ஒழுங்கைக்காணுவது சற்றுச் சிரமமாக இருக்கின்றது. 'Spiritual Survival' என்கின்ற கட்டுரையிலே அவர் சொல்லுகின்றார் - நான் இங்கு இருக்கும் அதிகமானோருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் வேணு மென்று மொழிபெயர்ப்புச் செய்து அதிக நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. சற்று மேலோட்டமாகச் சொல்லில் கொண்டு போகின்றேன்.

"Advaita Vedanta, upholding the divinity of man, provides for a rational basis for democracy with its principles of universal tolerance it rises above sects and creeds. It looks upon man as man and has the power of harmonize social differences. If India is to remain within the empire it will be on a basis of equality. Nazi and Fasist ideas of racial superiority will have to go and will go",

பக், 30

வேதாந்தத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைகளைக் காண்கின்றான். பிரம்மம் மனிதனிலே உண்டு என்பதனால் சகல மக்களும் தெய்வங்களாகின்றனர். அல்லது தெய்வங்களாகின்ற வாய்ப்பினைப் பெறுகின்றனர். ஆற்றலைத் தம்முள்ளே கொண்டவர்களாகின்றனர். இது சகல ஜ“வராசிகளுக்கும் பொருந்தும். இது ஒரு ஆன்மீக ஜனநாயகத்திற்கான அடித்தளம்.

அடக்கமைவுச் சமூகத்தில் (Hierarchical Society) நடைமுறையிற் கிடைக்காத ஓர் ஆன்மீக சனநாயத்தை வேதாந்தம் கருத்தளவில் ஒப்புக்கொள்கின்றது. சமூகச் சமத்துவத்தை வேண்டி நின்ற விபுலாநந்தருக்கு இந்தக் கொள்கை ஏற்புடையதாக அமைவதில் ஆச்சரியமில்லை.

'பிரபுத்த பாரத' வின் 45 வது வருடத் தொடக்க இதழில் எழுதிய "On the threshold of a New Era" (புதிய யுகமொன்றில் வாயிலில்) என்ற ஆசிரியத் தலையங்கக் கட்டுரையில் சமயப் பொறுதியுணர்வு பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரின் கூற்று ஒன்றினை (மற்றைய சமயங்களை மரியாதையுடமன் நோக்க வேண்டும்.) மேற்கோளாக எடுத்துக் கூறிவிட்டுத் தொடர்ந்து சொல்வது முக்கியமானதாகும்.

Herein lies the formula for establishing the world's fellowship of faiths, a followship that can bring about "peace among men, justice in human relationship an right order in a troubled world" of the three desirable consummations enumerated above, justice in human relationships occupies, the key position, for when that is established, the other two necessarily follow .........(p.186)

மதங்களிடையே உலகநிலைப்பட்ட நட்புறவு கொண்டுவரப்படுவதற்கு இது (சமயப் பொறுதியுணர்வு) தான் உண்மையான விடை (வாய்பாடு) ஆகும். இந்த முறைமைதான் "மனிதர்களிடையே சமாதானத்தையும், மனித உறவுகளிலே நீதியையும் இன்னலுற்ற உலகுக்கு ஓர் ஒழுங்கமைதியையும் தரும். இவற்றுள்ளும் மனித உறவுகளிலே நீதி, என்பது தான் திறவுகோலாக அமைவது. ஏனெனில் அது ஏற்படுத்தப்பட்டால் மற்றைய இரண்டும் இயல்பாகவே பின் வந்துசேரும். இங்கு அவர் மனித உறவுகளிலே நீதி' யை வற்புறுத்துவதற்கான தமிழ்ச்சமூகப் பின்புலத்தை நாம் மனங்கொள்ளத்தவறக் கூடாது. சாதியமைப்பின் காரணமாக நமது சமூகத்தின் மனித உறவுகளில் ஏற்றத்தாழ்வு உண்டேதவிர நீதியிலில்லை".

இதனைத் தொடர்ந்து அவர் கூறுவதை நோக்குவோம்.

இந்த நிலையை உண்டாக்குவதில், இந்துமதத்தின் பங்களிப்பு யாது என்பதைக் கூறும் பொழுது, "வேதாந்தத்தின் மதமாகிய இந்துமதம்" என்றே கூறுகின்றார்.

"What contribution can Hinduism in its broadest sense, the religion of the vedanta, make towards the common endeavour mentioned above; what constructive ideas can it put forward for giving the world a new lead and a new social order?" P.187.

இவ்வினாவை முன்வைத்துவிட்டு, அதற்கப் பதிலிறுக்கும் முகமாக 'பிரபுத்த பாரத'வின் முதல் இதழில் வெளியான ஆசிரியத் தலையங்கத்திற் கூறியதை மீண்டும் வலியுறுத்துகின்றார்.

வேதாந்தத்தின்படி ஆதர்ச சமூகமென்பது, வரவிருக்கும் ஒரு சுவர்ண, யுகமுமல்ல தேவதைகளின் ஆட்சியுமல்ல, அது உண்மையில் சமயப் பொறுதியுணர்வு, அயலார்க்குத் தர்மம் செய்தல், மிருகங்களைக்கூட அன்பாக நடத்தல் என்பன முதன்மை பெறும் ஒருசமுகமாக கணப் பொழுது சிரத்தைகள் நிரந்தரமான உண்மைக்கு கட்டுப்படுத்தப்பட்டனவாகவும், மனிதன் புறவயப்பாட்டில் ஈடுபடாது தன்னைத் தன் அகத்துடன் மேலும் மேலும் இயைத்துக் கொள்வனாகவும், முழுச்சமூக ஒழுங்கமைப்பும் இயல்பான உந்துதலுடன் கடவுளைநோக்கிச் செல்வதாக அமையும் ஒரு சமூகமாகவே அமையும் என்று கூறுகின்றார்.

The deal society, according ro the vedanta is not a millenium on earth, nor a reign of angels, where there will be nothing but a thorough equality of men and peace and joy-the Vedanta indulges in no such chimeras - but one, where religious toleration, neighbourly charity, and kind-ness even to animals form the leading features, where the fleeting concerns of lift are subordinated to the eternal where man tries not to externalise bujt to internalise himself more and more, and where the whole social organism.

Moves as it were with, a sure instinct towards God. This fairly comprehensive statement made by the Prabuddha Bharata at the very outset of its carrer, holds good today and we make ourselves, bold to say that it will hold good for all time to come.

வேதாந்தம் சுட்டும் இலட்சியபூர்வமான 'மனிதனின் தெய்வம், தெய்வத்தில் மனிதன்' என்ற கொள்கை அவரை வசீகரித்திருந்தது. கல்விக்கும் வேதாந்தத்திற்குமுள்ள உறவு பற்றி அவர் கூறுவது முக்கியமானது.

'The oneness of existence we divinity of man the unity of god, and the harmony of religious are, the four cardial principles on which the Vedanta Philosophy is based of Education ca be the means for the realization of all the above mentioned principles. Thus we see that there is much common between education and Vedanta'

(பக் 195)

இருப்பின் ஒருமை, மனிதனில் தெய்வீகம், தெய்வத்தின் ஒற்றுமை, மதங்களின் இணைவு ஆகியனவே வேதாந்தத்தின் நான்கு பிரதான அம்சங்கள் என்றும் இவற்றை அடைவதற்குக் கல்வி ஒரு நல்ல மார்க்கம் என்றும் விபுலாநந்தர் கூறுகின்றார்.

சிவானந்த வித்தியாலயத்தின் அமைப்பிலும் குறிப்பாக சிவபுரி நிலையத்துக்கான குழந்தைகளைச் சேர்ப்பதிலும் அவர் எத்துணைச் சமரச நோக்கினைக் கடைப்பிடித்தார் என்பது மட்டக்களப்பு வாசிகளுக்குப் புதிய தகவல் அன்று, வேதாந்தம் வழங்கும் மனித சமத்துவம் சகல சீவராசிகளிலும் தெய்வம் உண்டு என்ற கொள்கை அதனால் அவை போற்றப்பட வேண்டும் என்ற நம்பிக்கை மிக முக்கியமானது. அவரே சொல்வது போல் இது ஜனநாயகத்துக்கான இலட்சியவாத முதற்படியாகும்.

மனிதனையும் மனித விமோசனத்தையும் படிநிலைப்படுத்திப் பார்க்கின்ற தன்மை இந்துக் கண்ணோட்டத்தில் இடம் பெறவில்லை. மனித விமோசனத்துக்கான உத்தியைப் படிநிலைப்படுத்திப் பார்க்கிற, சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியம் என்கின்ற முறைப்படி பார்க்கின்ற ஒரு தத்துவத்திற்கும் இதற்கும் அடிப்படையிலே ஒரு வித்தியாசத்தை அவர் காணுவதில் ஆச்சரியமில்லை.

யாழ்ப்பாணத்தில் இறுகிய சமூக அமைப்புக்கும் அங்கு காணப்படுகின்ற - அங்கு நிலவுகின்ற சைவசித்தாந்த சிந்தனைப் போக்கிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனையும் பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன். விபுலாநந்தரின் மேற்கூறிய நோக்கு அதிலிருந்து வேறுபட்டது. இந்த ஆன்மீக சனநாயக நோக்குக் காரணமாகவே திருவேட்களத்திலே தீண்டாதாரிடத்து அவர் போக முடிந்தது. சேரிக் குழந்தைகளைக் குளிப்பாட்ட முடிந்தது. அந்தக் குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள் கொடுக்க முடிந்தது. இதனாலேதான் குருநகரிலுள்ள மீனவரிடத்தே இந்தப் 'பெரிய கோயில் சட்டம்பியார்' சென்று வேலை செய்ய முடிந்தது. இதனாலேதான் துறவியான நிலையிலும் அரசியற் கட்சியான Student congress க்கு தலைமை தாங்க முடிந்தது.

இவற்றுக்கு மேலாக சிவானந்த வித்தியாலயத்தை அவர் அமைத்த முறைமை அதை அவர் கருக்கொண்ட முறைமை இந்த மனித சமத்துவ உணர்வு, இன சமத்துவ உணர்வு எவ்வாறு தொழிற்பட்டது. என்பதனை எடுத்துக் காட்டுவதாகும். இதனைச் சொல்லுகின்ற பொழுது அவருக்கு சைவசித்தாந்தத்தின் பால் ஈடுபாடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. கணபதிப்பிள்ளை அவர்கள் தனது நூலிலே சொல்வார் அவர் பிற்பகுதிகளில் சைவசித்தாந்தத்தின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார் என்று. அது உண்மை. அது ஏன் என்பதனை பின்னர் சற்றுப் பார்ப்போம். ஆனால் அவர் எந்தவிதமான சைவசித்தாந்தத்தினைக் காணவிரும்புகிறார் என்பது நமக்குத் தெரியவேண்டும். அதனை, அதுபற்றிய எழுத்து ஒன்றினை 'தமிழ்மொழியின் தற்கால நிலைமையும் தமிழரின் கடமையும் என்ற கட்டுரையில் ஒரு பகுதியை வாசித்துக் காட்ட விரும்புகின்றேன். சென்னை சர்வகலாசாலைக்குரிய சிறப்பியல்பு மேற்றிசை நூலில் மாத்திரம் பயிற்சியுடையோர் மேற்காட்டிய கொள்கைக்கு உடன்பாடு கூறுவாரேனம் கொள்கையளவில் நாம் மேனாட்டாருக்க ஆசிரியராயிருத்தல் ஒரு போதும் கூடாதென்று சொல்லுதலுங் கூடும். பன்னூறு வருடங்களுக்கு அடிமைத்தனத்தில் வாழ்ந்தோருக்குச் சுதந்திரம் என்பதொன்றுண்டு என்னும் எண்ணந்தானும் இல்லாமலிருப்பது இயல்புதான். அங்ஙனமாயினும் அகழ்ந்தாராய்வார்க்கு நம்மிடம் மேற்றிசையோர் வைத்திருக்கம் பொருள் இல்லையாயினும் அதனினுஞ் சிறந்த பிறிதொரு பொருள் உண்டென்பது நன்கு புலப்படும். உதாரணமாகச் சைவ சித்தாந்த உண்மைகளை எடுத்துக் கொள்வோம். தமிழணங்குக்கு அருங்கலம் போன்றிருக்கின்ற சிறந்த இத்தத்துவ நூலை (சிவஞானபோதம்) முறைப்படி ஆராய்ந்துவிருத்தி செய்வோமாயின். கொன்பியூசியஸ், புத்தர், ஸதுஷ்டிரர் முதலியோருடைய நூல்களைத் துருவித்துருவி ஆராய்கிற மேற்றிசையறிஞர் மெய்கண்டானை உவப்புடனேற்றுப் பீடத்திருத்திப் பணிந்து நிற்பர். இதுவரையில் மேற்றிசையோர் மெய்கண்டானை மதியாமலிருப்பது ஏனென்றால், தமிழ்நாட்டுக்குரிய தாம் மெய்கண்டானுடைய அரிய நூலை முறைப்படி ஆராயாமையினாலென்போம். முறைப்படி ஆராய்தல் என்றால் பிழைபொதிந்த ஒரு விருத்தி உரையையோ தப்பும் தவறுமான ஒரு ஆங்கிலமொழி பெயர்ப்பையோ எழுதி விட்டிருப்பதல்ல. சிவஞான சுவாமிகள் செய்தது போல இலக்கண, தருக்க, பாண்டிட்ததியங் காட்டிக் கற்ற நூற் பொருளனைத்தையும் பொதித்து ஒரு மாபாடியம் எழுதி விடுவதுமல்ல. இனித் திராவிடக் கொள்கை நிறுவி உலகிலுள்ள ஏனையோரெல்லாம் எமக்கிணையல்லரென்று சொல்லும் ஒரு சாராரைப்போல மெய்கண்டான் முற்றொடர்பில்லாது ஆகாயத்தில் முளைத்த பூவென்று சொல்லி விடுவதல்ல. முன்னிருந்த ஆசிரியருக்கும் சிவஞானபோத ஆசிரியருக்குமுள்ள பொதுவியல்வு, மெய்கண்டானுடைய சிறப்பியல்பு, பிறநாட்டு ஆசிரியருக்கும் மெய்கண்டானுக்குமுள்ள ஒற்றுமை, விகற்பம், மெய்கண்டான் உதித்தற்கு முன் தமிழ்நாட்டுச் சமநிலை, ஆசிரியரது காலம், முதனூல், வழிநூல், வரலாறு பிற்பட்ட ஆராய்ச்சியினால் மெய்கண்டானது நூலிற் காணப்படும் வழுக்கள், வழுவமைதி என்றின்னோரன்னவற்றையெல்லாம் பிற நூலுதவி, பிறமொழி நூலுதவி கொண்டு ஆராயின் அவ்வாராய்ச்சி உலகத்திற்குப் பயன்படுவதாகும். உலகு அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ...........

(விபுலாநந்த வெள்ளம் - 1961 பக் - 110)

சைவ சித்தாந்தத்தை எவ்வாறு பார்க்க வேண்டுமென்பதற்கு, இதிலே ஒரு வழிகாட்டப்படுகிறது. அந்த வழி என்ன என்றால், அனைத்திந்தியப் பின்னணியில் சைவ சித்தாந்தத்தை நோக்குவது, சைவ சித்தாந்திகளே சொல்வார்கள் "சுத்தாத்து விதமான சைவ சித்தாத்தம்"என்று. அத்வைத கோட்பாடுகள் பற்றிய சகல தத்துவங்களின் பின்னணியிலும் இதனையும் ஒன்றாக வைத்து ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து அந்த முறையில் மெய்கண்டானுடைய முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பது தான். விபுலாநந்தருடைய கொள்கை அது மாத்திரமல்லாது பௌத்தம் முதலாம் மதங்களுடன் ஒப்பு நோக்கிப் பார்த்து சைவசித்தாந்தத்தின் நிறைகுறைகளை நிறுவ வேண்டுமென்கின்றார் மெய்கண்டாரை ஒரு புதிய மதத் தத்துவத்தின் ஊற்றுக் காலாகவே காண்கின்றார். அதை விட்டு இது தமிழருடைய தனிச் சொத்து என்றோ அல்லது இரண்டு விருத்தியுரைகளை எழுதி விட்டோ அல்லது சில ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் செய்து விட்டோ இல்லை இவை விபுலாநந்தர் காலத்தில் நடந்தவை.

சைவ சித்தாந்தத்தை ஒரு குறுகிய வட்டத்தில் நின்று பேசுவோரை அவர் வழக்கத்திற்கு மாறான, முறையில் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

இந்த முறையில் நாம் காணக்கூடியதாக இருக்கும் இருநிலைப்பாட்டை நாம் ஏற்கனவே அவரது உரைநடையிலும் கவிதையிலும் கண்டுள்ளோம். இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது தான் பிரதானமான கேள்வி என்று நான் கருதுகிறேன். இதற்கான விடையை விபுலாநந்தரது தமிழுணர்வு வளர்ச்சியில் கண்டு கொள்ள வேண்டும். அல்லது கண்டுகொள்ளலாம். கண்டு கொள்வதற்கான தடயங்கள் இருக்கின்றன என்று நான் கருதுகின்றேன். சமநிலைப்பட்ட ஒரு கல்விக்குப் பின்னர் (அறிவியல்-விஞ்ஞானம்) (B.Sc பண்டிதர்) 1922ற்குப் பின் அவர் இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்ததன் பின்னர், சேர்ந்து அதன் உச்சப்புலமை மேல் ஏறிச் சென்ற பின்னர் அனைத்திந்தியப் பின் புலத்தில் தமிழின் இடத்தை அறிய வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு அவர் தள்ளப்படுகிறார். இது ஒரு சுவாரஸ்யமான உண்மை.

இதே இராமகிருஷ்ண மடம் தான் "The Cultual Heritage of India" என்கின்ற தொகுப்பு நூல்களையும் வெளியிட்டது. இந்தியாவின் பண்பாட்டுப் பேறு என்பது என்ன என்று பார்க்கவேண்டிய தேவை விபுலாநந்தருக்கும் வருகிறது. அந்தப் பெருமுயற்சிக்கு அனைத்திந்திய அமைப்பினுள் தமிழ் பெறும் இடத்தினைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு தேவை அவருக்கு எற்படுகிறது. இதே நேரத்தில், அவர் தமிழின் நவீன மயப்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொள்கிறார்.

இந்தக்கட்டத்தில், ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாரதி தமிழை நோக்கிய முறைமைக்கும் பிபுலாநந்தர் நோக்கிய முறைமைக்கும் சில விடயங்களில், சில இடங்களில் ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு பேருமே தமிழனுடைய மேன்மையை மிக வன்மையாக வற்புறுத்தியவர்கள். விபுலாநந்தர் அனைத்திந்திய அடிப்படையில் தமிழின் நவீன மயப்பாட்டிற்கு உழைத்ததை இரண்டு விடயங்களிலே காணலாம். ஒன்று, தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற குழுவிலே அவர் கடமையாற்றியபோது, மற்றது தமிழிலே கலைச் சொற்கள் இடம் பெற வேண்டும் என்பது பற்றி அவர் பேசிய பொழுது, அனைத்திந்திய அமைப்பினுள் தமிழின் தனித்துவம் மறக்கப்படுவதற்கான தன்மைகள் காணப்பட இவர் தமிழின் அனைத்திந்திய முக்கியத்துவத்தை வற்புறுத்தத் தலைப்படுகிறார்.

இவ்வாறு சிந்திப்பதற்கான ஒரு சூழல் திரு. கமலநாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று 1930களிலே தான் வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் முதல் தடவையாக இந்தி எதிர்ப்பு தென்னாட்டில் வருகிறது. அவர் மயிலை சீனிவேங்கடசாமிக்கு எழுதுகின்ற கடிதத்தில் எழுதுகிறார்.

"இப்பொழுது தமிழ் நிதியத்தை வெளிநாட்டாருக்கு ஆங்கில மொழிமூலமாக அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேற்கொண்டு, நாலாயிர திவ்விய பிரபந்தத்திலிருந்து மொழிபெயர்ப்புக்கள் செய்து கொண்டு இருக்கிறேன். தமிழ் நாட்டிலே தமிழ் மொழிப்பற்று நிரம்பியிருப்பதை கேட்டு மகிழ்கின்றேன். இங்கிருந்து என்னால் இயன்ற தொண்டு செய்ய என்றும் ஆயத்தமாக இருக்கின்றேன். தமிழ்ப்பழமையைக் குறித்து வடமொழி, மேனாட்டு மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதைப் பொருளாகக் கொண்டு சில வியாசங்கள் எழுதலாம் என யோசிக்கின்றேன்."

அடிகளார் படிவமலரிலே இந்தக் கடிதம் தரப்பட்டுள்ளது. அப்போது விபுலாநந்தருக்கு வேதாந்தியாகத் தன்னுடைய சமூக, ஆன்மீகக் கொள்கைகள் காரணமாக அதில் சேர்ந்து கொண்டு உழைக்கின்ற பொழுது அனைத்திந்தியச் சூழலின் காரணமாகத்தான் தமிழன் என்கின்ற அந்த தனித்துவத்தையும் உணர்கின்ற ஒரு தன்மை ஏற்படுகின்றது. இந்தப் பின்புலம் காரணமாக அவர் தமிழினுடைய மேன்மையைத் தமிழின் புகழை ஆராய தொடங்குகின்றார். அனைத்திந்தியாவிற்குப் பொதுவான ஒருவர் இதில் இறங்குகிறார். இவ்வாறு தமிழின் அனைத்திந்திய முதன்மையை ஆராயமுற்படுகின்ற பொழுது, இவர் மதத்துறையில் ஈடுபட்டவர் என்கின்ற காரணத்தினால் கர்மயோகத்தை முக்கியப்படுத்துகின்ற ஒரு மட்டத்திலே உள்ளவர். Religious revival in medieval India (இடைக்கால இந்தியாவின் மத மறுமலர்ச்சி) என்ற தமது கட்டுரையிலே பக்தி அம்சத்தை மிக முக்கியப்படுத்திக் கூறுகின்றார். அதனுடைய தமிழ் வடிவம் தான் "தென்நாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வடநாட்டில் பரவிய வன்முறை" தமிழ் நாட்டில் வாழ்ந்த சகல சமூக மட்டங்களிலும் உள்ளவர்களையும் உள்ளடக்கிய இயக்கம் பக்தி இயக்கம், வட இந்திய மரவையும் தென்னிந்திய மரபையும் இணைக்கின்ற இயக்கம், அது தமிழ் நாட்டில் உள்ள பொழுதல்ல - அது மேலே வடக்கு நோக்கிப் போகின்ற பொழுது, மகாராஷ்டிரத்துக்குப் போகிற பொழுது - சைதன்யரிடத்துப் போகிற பொழுது, அந்த முழு வரலாற்றையும் சீக்கிய கிரந்தத்தின் முடிவுவரை கபிர்வரை ஏற்படும் பக்தி நிலை ஒருமைப்பாட்டை இந்தக் கட்டுரையிலே எடுத்துக் கூறுகின்றனர். தமிழ் நாட்டில் தொடங்கி இந்தியா முழுவதையும் ஆகர்ஷ’த்துக் கொண்ட பக்தி இயக்கம் பற்றிய அக்கட்டுரையில் வரும் குறிப்புகள் மிக முக்கியமானவை.

ஓரிடத்தில் அவர் பக்தி இயக்கம் ஏற்படுத்திய சன சமத்துவத்தை வற்புறுத்துகிறார். நாயன்மார், ஆழ்வார்களுடைய பாடல்கள் இந்து மதத்தைச் சனநாயகமயப்படுத்தின வென்றும், இவை பார்ப்பாரிடத்தும் பறையரிடத்தும் ஒரு சகோதரத்துவ உணர்வை ஏற்படுத்தி, கைப்பற்ற வந்தவர்களின் மதத்திற்கெதிராக நிற்கும் வலிமையை அளித்தன என்பார்.

"The new outlook in national life provided by the lives and teachings of Alvars, the Nayanmars and their successors democratized Hindu religion, established the brotherhood of the Brahmin and the pariah and created a solidarity that helped Hindu Society to withstand successfully the onslaught of the new religion that came with the conquerors of the country"

Anclent thoughts For Modern Man (P.137)

பக்தி இயக்கத்தின் அனைத்திந்திய முக்கியத்துவத்தை அவர் பின்வருமாறு எடுத்துரைப்பார்.

".........From the Himalayas to the Cape Comorin, the whole country pulsated with new life. The Aryan culture of the North was synthesized with Dravidian culture of the South. The unity of Indian culture was thus established"

(P.146)

பக்தி இயக்கத்தினால் வடக்கின் ஆரியப் பண்பாடும், தெற்கின் திராவிடப் பண்பாடும் கலந்து இணைந்தன வென்றும் இதனால் இந்தியப் பண்பாட்டின் ஒருமைப்பாடு நிறுவப்பட்டதென்றும் கூறுகின்றார்.

இந்தத் தமிழார்வம், பின்னர் படிப்படியாக ஆழமாகின்றது அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சேவை அதற்கான ஒரு படியாகும். அதன் பின்னர் இங்கே கிழக்கு மாகாணத்திற்கு வந்த பொழுது அது மேலும் ஆழப்படுகிறது. இலங்கைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியத் தவிசினைப் பெற்றுக் கொள்கின்ற பொழுது அது அவரது முழுநேர ஆராய்ச்சியாக முகிழ்கின்றது. இந்தப் பிந்திய கால கட்டத்திலேதான் அவர் இராமகிருஷ்ண மடத்தின் பிரதான நீரோட்டத்திலிருந்து விலகியிருந்தார் என்றே கூற வேண்டும். இராமகிருஷ்ண மடத்தின் முக்கியமான செயல் வீரர் என்ற நிலையிலிருந்து தமிழறிஞர் என்கிற நிலைக்கு வருகிறார்.

இவ்வாறு வரும் பொழுது தான் நாம் கணபதிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம் ஆயியோர் தத்தம் நூல்களிற் சொல்கின்ற சைவ சித்தாந்த ஈடுபாடு ஏற்படுகின்றது. தமிழ்பற்றிய ஆர்வம், பக்தி பற்றிய ஆர்வம், தமிழ் இசை பற்றிய ஆர்வங்கள் யாவும் இணைந்து சித்தாந்தத்தையும், சைவ மதப் பாரம்பரியத்தையும் போற்றுகின்ற தன்மைக்கு அவரை இட்டுச் செல்கின்றன.

1930 களின் பிற்கூற்றிலும் நாற்பதுகளிலும் அவர் முற்றுமுழுதான் தமிழாராய்சியாளராகவே மேற்கிளம்புகின்றார். தமிழிசை பற்றிய ஆராய்ச்சி அவரைச் சைவப் பாரம்பரியத்தினுள் கொண்டு வந்து விடுகிறது. மட்டக்களப்பில் சிவானந்தா வித்தியாலயத்தின் நிர்வாகமும் சிவபுரி இல்லத்தின் நிவாகமும் இந்த உணர்வுகளுக்கு ஊட்டமளிப்பனவாக விருத்தல் வேண்டும்.

இவை காரணமாக விபுலானந்தரின் கருத்து நிலையில் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்குகின்றது. அவர் படிப்படியாக தாம் வாழும் நாட்டின், பிரதேசத்தின் பாரம்பரியங்களால் கவரப்படுகின்றார் என்றே கொள்ள வேண்டும்.

இக்காலத்தில் இராமகிருஷ்ண மடத்தோடிருந்த உறவுகள் எத்தன்மையானவையாயிருந்தன என்பன நுணுகி ஆராயப்படல் வேண்டும். இராமகிருஷ்ண அமைப்பு எனும் பெரும் அமைப்பினுள்ளிருந்து கொள்ளும் அதேவேளை நடைமுறைத் தேவைகள் வரும் போது சூழ்நிலைத் தேவைகளுக்கேற்ப சில முறைமைகளை அவர் வகுத்துக் கொண்டார் என்று கொள்வதே பொருத்தமானதாகும்.

இந்த மாற்ற நிலையினையே கணபதிப்பிள்ளையும் சிவசுப்பிரணியமும் தங்களது நூல்களிலே பொறித்துள்ளனர் எனலாம்.

விபுலாநந்தரின் ஆளுமைப் பரிணாமத்தில் இது ஒரு முக்கிய கட்டம் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

அடுத்து நாம் இதுவரை எடுத்துப்பேசிய விபுலாநந்தக் கருத்துநிலை அடிப்படையில் அவரது ஆராய்ச்சி நூல்களை ஒரு சிறிதேனும் நோக்குவது அவசியமாகின்றது.

தமிழை அனைத்திந்திய அடிப்படையிலும் இந்திய மரபின் அடிப்படையில் உலகப் படைப்புக்களையும் பார்க்கும் போக்கு முடிவுகளைத் தந்தது என்று கூறிவிட முடியாது. இதற்கு "மதங்கசூளாமணி" ஓர் நல்ல உதாரணம்.

பதங்கசூளாமணி அவரது கணிப்பின் படி ஒரு வெற்றிகரமான நூலாக அமையவில்லை. அதை அவரே சொல்கிறார் முகவுரையில்.

"வடமொழி ஆசிரியராகிய தனஞ்செயனாரும் ஆங்கில மகாகவியாகிய ஜெகசிற்பியாரும் செவ்விதினுரைத்த நுண்பொருண் முடிவுகளை நிரைபட வகுத்து முறை பெறக்கூறுவதற்கு முயன்றேனாயினும், ஆங்கம் முயற்சிக்கு வேண்டிய ஓய்வு ஏற்படாமையினால் இந்நூல் இவ்வுருவத்தில் முடிவுபெற நேரிட்டது. மேனாளில் ஓய்வு ஏற்படுமாயின் வழுக்களைந்து புதுக்கி, விரிவுற எழுதி உலகுக்களித்தல் என்கடனாகும்."

என எடுத்துக் கூறுகின்றார்.

அடியார்க்கு நல்லார் உரையை விளக்க முனையும் அவர் அவ்வுரையிற் பேசப்பெறும் தனஞ்சயனாரிடத்துச் செல்கின்றார். இவர் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தசரூபகம் என்ற நூலை எழுதியவர்.

அவர் நாடகத்தின் அமைப்பு "முளை (முகம்), நாற்று பிரதிமுகம்), கருப்பம் விளைவு (அவமர்சம்), துய்த்தல் உபசங்கிருதி நிர்வஹணம்) என ஐந்து சந்திகளைக் கொண்டது என்று கொள்வார். விபுலாநந்தர் இந்த அடிப்படையில் ஷேக்ஸ்பியரினுடைய Loves Labours Lost, King Lear Tinonyarhens, the tempest, macbeth the Merchant of Venice முதலாம் நாடகங்களை ஆராய்கின்றார். அந்த நாடகங்களில் மேற்கூறிய சந்திகளைக் காண முயல்கின்றார். அங்கம், காட்சி என்பன ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்குண்டு என்ற எடுகோளின் பேரில் இவ்வாய்வு நடைபெறுகின்றது. மேலும் இந்த நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோ இரண்டோ 'ரஸ'ங்கள் முக்கியப்பட்டு நிற்கின்றவையாகவுள்ளன என்றும் கூறிச் செல்வர்.

இந்த அணுகுமுறை ஷேக்ஸ்பியரை விளங்கிக் கொள்ள உதவாது.

முதலாவதாக அங்கம், காட்சி என்ற பிரிவு ஷேக்ஸ்பியர் நாடகப் பதிப்புகளிற் பின்னரே இடம் பெறுகின்றன. முதலில் திரட்டிய ஷேக்ஸ்பியர் நாடகங்களில் அவை இல்லை என்பது ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பதிப்பித்துள்ளவர்கள் எடுத்துக் கூறும் முடிவாகும்.

அடுத்து 'ரசக்' கொள்கையினடிப்படையில் ஷேக்ஸ்பியருடைய நாடகங்களை விளங்கிக் கொள்ளலாமா என்பது முக்கியமான ஒரு வினாவாகும். 'ரச' என்பது இந்திய நாடக ஆற்றுகை மரபில் அடிப்படையான இடத்தைப் பெறுவது - மேனாட்டு இலக்கியங்கள் நாடகங்களிற் சித்தரிக்கப்படும் உணர்ச்சிகளை ஒன்றுக் கொன்றாய் ஒப்பிடும் பொழுது ரசங்களை இனங்காணலாமே தவிர ரசங்களின் அடிப்படையில் அவற்றைப் பார்த்தல் முடியாது. ஷேக்ஸ்பியர் நாடகப்பதிப்புக்கள் திறஜெடி, கொமெடி, வரலாறுகள் எனவரும் முறைமையிலேயே அவரது நாடகங்களை வகுக்கின்றன.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மேலோங்கி நிற்கும் உணர்ச்சி நிலை கொண்டே திறஜெடி கொமெடி பகுப்பு வருகிறது. திறஜெடி என்றும் நாடக வகை நீண்ட வரலாற்றைக் கொண்டது. மனிதனின் வாழ்க்கை, இருப்புப் பற்றிய 'காத்திரமான கவிதை' எனும் கிரேக்க கால நிலையிலிருந்து அது ஷேக்ஸ்பியர் காலத்துக்கு வரும் பொழுது தனது அழுத்தத்திலே சில மாற்றங்களைக் காண்கின்றது. ஷேக்ஸ்பியரின் திறஜெடிகளினூடே காணப்படும் பொதுப்பண்பு யாது என்பது பற்றி ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சியாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. பிறாட்லி (Bradley) என்பார். திறஜெடி என்பது நல்லவற்றை இழப்பதிலுள்ள சோகம் (Tragedy is the waste of good) என்பார். அது வெறுமனே துன்பியல் என்பதல்ல, அந்தத் துன்ப முடிவினுள் ஒரு நல்லதன் இழப்புக் காணப்பட வேண்டும். அதேபோன்று கொமெடி என்பதனையும் வெறுமனே இன்பியல் என்றோ அன்றேல் விபுலாநந்தர் கூறுவது போன்று சில ரசங்களின் அடிப்படையிலோ பார்த்துவிடக் கூடாது. இவ்வகை நாடகங்களில் சமூகத்தின் இலட்சிய எடுகோள்களும் நடைமுறைகளும் முரணுறக் காட்டப்படுகின்றன. சிரிப்பிலும் பார்க்கச் சிரிப்புக்கிடமாக்கப்படுவது முக்கியம். இதற்கு ஒரு எடுகோள் அவசியம். இயற்கை விதிகள் அங்கு தலைகீழாகக் காட்டப்படும்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழ்ப்படுத்தும் பொழுது பெயர்களைத் தமிழ்மொழி மரபுக்கியையத் தருகின்றார்:

Macbeth பகபதி

Lear ஆகுலவர்மன்

புதல்வியர் பெயர் - மாணிக்கமாலை

கனகமாலை

குணமாலை

Juliet சுசிலை

Romeo இரம்மியன்

இவ்வாறு பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் பொழுது நாடகங்களின் கதைப்பின்னல் (Plot) ( அது மேனாட்டுப் பாரம்பரியத்தினுள் அந்தச் சமூகங்களின் விழுமியங்களுள் நிற்பது) நம்பிக்கை வலுவற்றதாகப் போய் நிற்கின்றது.

விபுலாநந்தரின் முதல் ஆக்கங்களுள் ஒன்று மதங்கசூளாமணி. அதனை அவரே வழுக்களைந்து புதுக்கிய மைக்கவேண்டுமெனக் கருதியிருந்தார்.

இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கும் பொழுதுதான். விபுலாநந்தர் எழுதிய முக்கியமானவற்றை முக்கியமல்லாதவற்றிலிருந்து பிரித்தறிந்து கொள்ளலாம்.

விபுலாநந்தர் நினைவை அவர் பிறந்த 102 வருடங்களின் பின்னர், இறந்த 47 வருடங்களின் பின்னர் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியம் உண்டு. அது தமிழ் ஆராய்ச்சி உலகில் அவருடைய இடம் யாது என்பதனை ஆராய்ச்சி பூர்வமாக நிறுவுவதுதான். அதற்கு நாம் ஒன்று செய்ய வேண்டும். அதன் பின்னர் அவர் ஆராய்ச்சி செய்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றவர்கள் யார்? அவர்கள் எடுகோள்களாகக் கொண்டவை, யாவை? அவற்றிலே விபுலாநந்தருடைய எடுகோள்கள் எவை? விபுலாநந்தருடைய எடுகோள்கள் எத்தனை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியிருக்கிறது? எவ்வளவுக்கு உதவவில்லை? ஆராய்ச்சி வளர்ச்சியில் விபுலாநந்தருடைய பங்களிப்பு என்ன? என்பதனை நாங்கள் திட்டவட்டமாகப் பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்காமல் மீட்டும் மீட்டும் விபுலாநந்தர் அந்த நூலை எழுதினார். இந்த நூலை எழுதினார். அதில் இத்தனை அத்தியாயம் இருக்கிறது. அதில் பாயிரவியலில் இது. தேவாரவியலில் இது என்று சொல்வதின் மூலம் நாங்கள் விபுலாநந்தருக்கு வேண்டிய மரியாதையைச் செலுத்தி விடுகின்றோம் என்று நான் நம்பவில்லை. உதாரணமாக ஒன்றைச் சொல்லி என்னுடைய உரையை முடிக்கலாம் என்று கருதுகின்றேன்,


*இதன் தொடர்ச்சி nerigal 2 *ராய்ச்சியை எடுத்துக் கொள்வோம். விபுலாநந்தரின் பின்னர் பலர் தமிழிசை பற்றி எழுதியிருக்கிறார்கள். சின்னச்சாமி முதலியார். சுப்பராம தீட்சிதர், ஆபிரகாம் பண்டிதர், கோதண்ட பாணிப்பிள்ளை போன்ற பலர் எழுதியிருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் தனபாண்டியன், மு.அருணாசலம் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களிற் சிலர் விபுலாநந்தருக்கு முந்தியவர்கள் சின்னச்சாமி முதலியார், சுப்பராம தீட்சிதர் ஆபிரகாம் பண்டிதர் ஆகியோர். அண்மைக் காலத்தில் பலர் விபுலாநந்தர் பெயரைக் கூறுவதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். தனபாண்டியன் சற்று மேற்சென்று தன்னுடைய அண்மைய நூலொன்றில் விபுலாநந்தர் இனங்கண்ட ஒரு குறிப்பிட்ட இராகம் பிழை. அது வேறொரு இராகமாக இருக்க வேண்டுமென்று சொல்லுகிறார். விபுலாநந்த ஆய்வில் நாங்கள் உண்மையிலேயே ஈடுபட வேண்டுமேயானால் இந்த ஆய்வுப் பிரச்னையில், அந்த ஆய்வுச் சர்ச்சைகளில், நாங்களும் ஈடுபடவேண்டும். அப்படிப் பார்க்கிற பொழுது தான் நாம் விபுலாநந்தர் வழியைத் தொடர்வதாகவிருக்கும். யாழ்நூல் ஒரு மிகவும் சிக்கலான ஒரு பாடம். (Difficult Text) அதனை முதல் தடவை வாசித்து விளங்கி விட்டேன் . அல்லது அதனை நன்றாக விளங்கிக் கொண்டு விட்டேன் என்று யாராவது சொன்னால் அதனை உடனடியாக நாங்கள் நம்புவதில் சற்றுத் தயக்கம் காட்ட வேண்டும். ஏனென்றால் நான் முதலிலே கூறியது போல அது கணிதத்தின் அடிப்படையில் கருக்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு. ஆற்றுகையின் அடிப்படையில் தோன்றியது அல்ல. அந்த ஆற்றுகையைச் சிவானந்தம்பிள்ளை செய்ய வேண்டி இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதற்கான ஒலிப்பதிவைக் கூட நாங்கள் எடுக்காமல் விட்டுவிட்டோம். இவ்வாறு இவற்றையெல்லாம் சொல்லுகின்ற அதே வேளையில் விபுலாநந்தருடைய ஆராய்ச்சிகள் தமிழுலகுக்குப் புதிய சிந்தனைகளை, புதிய விடயங்களை, புதிய பரிமாணங்களை புதிய திசைகளைத் திறந்து வைத்தன என்பதை நாம் மறந்து விட முடியாது. அவருடைய நினைவைப் பேணுவதற்கு நாம் அவர் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுவதும், ஈடுபடுத்துவதும் ஈடுபடுவோரை ஆதரிப்பதும் முக்கியமாகும்.

அவர் பெயரைப் போற்ற ஒரு சிறந்த வழியுண்டு.

* nerigal - 1 ன் தொடர்ச்சி *

அதாவது இந்தத் தமிழிசையைப் பற்றிய ஆராய்ச்சியை எடுத்துக் கொள்வோம். விபுலாநந்தரின் பின்னர் பலர் தமிழிசை பற்றி எழுதியிருக்கிறார்கள். சின்னச்சாமி முதலியார். சுப்பராம தீட்சிதர், ஆபிரகாம் பண்டிதர், கோதண்ட பாணிப்பிள்ளை போன்ற பலர் எழுதியிருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் தனபாண்டியன், மு.அருணாசலம் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களிற் சிலர் விபுலாநந்தருக்கு முந்தியவர்கள் சின்னச்சாமி முதலியார், சுப்பராம தீட்சிதர் ஆபிரகாம் பண்டிதர் ஆகியோர். அண்மைக் காலத்தில் பலர் விபுலாநந்தர் பெயரைக் கூறுவதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். தனபாண்டியன் சற்று மேற்சென்று தன்னுடைய அண்மைய நூலொன்றில் விபுலாநந்தர் இனங்கண்ட ஒரு குறிப்பிட்ட இராகம் பிழை. அது வேறொரு இராகமாக இருக்க வேண்டுமென்று சொல்லுகிறார். விபுலாநந்த ஆய்வில் நாங்கள் உண்மையிலேயே ஈடுபட வேண்டுமேயானால் இந்த ஆய்வுப் பிரச்னையில், அந்த ஆய்வுச் சர்ச்சைகளில், நாங்களும் ஈடுபடவேண்டும். அப்படிப் பார்க்கிற பொழுது தான் நாம் விபுலாநந்தர் வழியைத் தொடர்வதாகவிருக்கும். யாழ்நூல் ஒரு மிகவும் சிக்கலான ஒரு பாடம். (Difficult Text) அதனை முதல் தடவை வாசித்து விளங்கி விட்டேன் . அல்லது அதனை நன்றாக விளங்கிக் கொண்டு விட்டேன் என்று யாராவது சொன்னால் அதனை உடனடியாக நாங்கள் நம்புவதில் சற்றுத் தயக்கம் காட்ட வேண்டும். ஏனென்றால் நான் முதலிலே கூறியது போல அது கணிதத்தின் அடிப்படையில் கருக்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு. ஆற்றுகையின் அடிப்படையில் தோன்றியது அல்ல. அந்த ஆற்றுகையைச் சிவானந்தம்பிள்ளை செய்ய வேண்டி இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதற்கான ஒலிப்பதிவைக் கூட நாங்கள் எடுக்காமல் விட்டுவிட்டோம். இவ்வாறு இவற்றையெல்லாம் சொல்லுகின்ற அதே வேளையில் விபுலாநந்தருடைய ஆராய்ச்சிகள் தமிழுலகுக்குப் புதிய சிந்தனைகளை, புதிய விடயங்களை, புதிய பரிமாணங்களை புதிய திசைகளைத் திறந்து வைத்தன என்பதை நாம் மறந்து விட முடியாது. அவருடைய நினைவைப் பேணுவதற்கு நாம் அவர் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுவதும், ஈடுபடுத்துவதும் ஈடுபடுவோரை ஆதரிப்பதும் முக்கியமாகும்.

அவர் பெயரைப் போற்ற ஒரு சிறந்த வழியுண்டு. இங்கு நிறுவப்பட்டுள்ள கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இவற்றை ஊக்குவிப்பதுடன் இங்கு நடைபெறும் பட்டப் பின் படிப்பு முயற்சிகளை நிறுவன ரீதியாக ஒழுங்குபடுத்தி அந்த நிறுவனத்துக்கு 'விபுலா நந்தர் பட்டப்பின் படிப்பு ஆய்வு நிறுவனம்' Vipulanantha institure of Post graduate Studies எனப் பெயரிடலாம். இது பற்றிச் சிந்திக்க வேண்டிய கடமை கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்துக்கும் கிழக்கிலங்கை மக்களுக்கு உண்டு என்று கூறி இவ்வுரையை நிறைவு செய்கின்றேன்.

* * * * முற்றும் * * * *