கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  காணிக்கை  
 

தா. இராமலிங்கம்

 

காணிக்கை
தா. இராமலிங்கம்


காணிக்கை

கதிர்வீசி முடிமினுங்கும்
கலைக்கோயில் முற்றத்துக்
கண்ணாடிப் பொய்கையொன்றில்
பொன்மீன் குடியிருந்த
அலைகடலில்
வலைவீசித் துழாவுகையில்
ஓட்டில் கதிர்உதிக்கும்
நண்டு கிடைத்துளது.


முன்னீடு

மேனாட்டு இலக்கியத்தில் முகங்காட்டி மறையுஞ் சில இலக்கிய உருவங்களையுந் தொனிப் பொருள்களையும் பெயர்த்தெடுத்து, தமிழில் ஒட்டுவேலை செய்வதையே பரிசோதனை என்றும், புதுமை என்றும் எழுத்தாளர் சிலர் பிழைபடக் கருதி வருகின்றனர். இத்தகைய 'காளான்' பரிசோதனைகள் இலக்கிய வளர்ச்சிக்குக் குந்தகமானவை. மூலவிக்கிரகத்தின் சம்பூரண தரிசனம் பெறப்படாதலால், அவை போலியானவை; சேதன் பூர்வமற்றவை. அவை பத்திரிகைப் பத்திகளிற் சிரசுதயங்காட்டி, பிரசவமாகாமலே சிவபதமடைகின்றன. இதனால், இவற்றின் பிரதிகூலப் பாதிப்புக்களைத் தானும் மதிப்பிட இயலாது போய்விடுகின்றது. 'இலக்யி பரிசோதனை சேதன பூர்வமான முயற்சி; மரபிற் காலூன்றி, அந்த மரபின் எல்லைக் கட்டுக்களை எஃகுலித்து, மீண்டும் விரிவான மரபுநிலையை ஏற்படுத்துங் கிரியை. உள்ளவற்றைச் சங்காரஞ் செய்து மகாமசானம் உருவாக்கும் இரத்தப் புரட்சியன்று ; உள்ளவற்றிலேயே மலர்ச்சியும் வளர்ச்சியுங் காணவேண்டுமென்ற கருத்துக்களின் மௌனப் புரட்சியாகும். பரிசோதனைகள் நூலுருவந்தாங்கி ஏட்டிலே பயிலல் வேண்டும். அப்பொழுதுதான், வருங்கால இலக்கிய விமர்சனனொருவன் இலக்கிய பரிசோதனை என்ற நிலைக்களனினின்றும் அதனைப் பெயர்த்தெடுத்து, இலக்கிய அறுவடையென்ற பிறிதொரு நிலைக்களனில் வைத்து அதனைச் சரியாக மதிப்பீடு செய்யமுடியும்' - இக்கருத்துக்களில் இசைவும், இவற்றைச் செயலாக்கல் வேண்டும் என்ற அக்கறையுமுள்ள ஈழத்து இலக்கியகாரர் பதினைந்து பேர் ஏடு நிறுவனத்தை அமைத்துள்ளனர். இவர்கள் ஒரே இலக்கிய நோக்கமும் பார்வையுமுள்ளவர்களல்லர். தமிழிலக்கிய மரவுநிலை என்கிற உரத்திலேதான் புதிய இலக்கியங்கள் படைக்கப்படல் வேண்டுமெனக் கருதுபவர்களுமிருக்கிறார்கள். ஆனால், இலக்கியப் பரிசோதனையான படைப்பொன்று தரமான இலக்கியமாகத் தேர்ந்துவிட்டால், அதுவே மரபின் மரபம்சமாக மாறிவிடும் என்பதில் இருசாரருக்குங் கருத்தொற்றுமை உண்டு. மரபுநிலை பேணியே எத்தனையோ நவமான இலக்கியப் படைப்புக்களைச் சமைக்கலாம் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கையுண்டு. இத்தகைய கருத்தொற்றுமைகளே இரு சாராரினதும் ஊடுதலாமாகும். மரபு நிலை என்ற ஒரு சக்தி; மரபு நிலையை எஃகுலித்தல் வேண்டும் என்ற எதிர்ச்சக்தி! இவை முதலில் ஒன்றுடன் ஒன்றுமோதி, பின்னர் பிரிக்க முடியாத கூட்டுப்பொருளாக-ஒரே சக்தியாக-புதிய மரபு நிலையாக மாறுகின்றது. இது மனித வாழ்க்கையின் சகல அம்சங்களுக்கும் பொருந்தும்; எனவே, இலக்கியத்திற்கும் பொருந்தும். இலக்கிய மரபுக்காரர், ஆரம்பத்திலே திருக்குறளை நூலென ஏற்றுக்கொள்ள மறுத்தார்களென்று கர்ணபரம்பரைக் கதையொன்று வழங்கிவருகின்றது. நாடக வழக்குச் சார்ந்த இலக்கியம் பயிலப்பட்ட காலத்தில், உலகியல் வாழ்க்கைக்கான ஒழுக்க நெறிகளை, ஈரடி இறுக்கத்திற் சுட்டிக்காட்டுந் தன்மைத்தாகத் திருக்குறள் அமைந்ததினால் இந்த எதிர்ப்புத் தோன்றியது போலும். பின்னர், அதுவே தமிழ் மறையாகவும் உயர்ந்தது. காமச்சுவை நனி சொட்ட எழுந்தது சீவக சிந்தாமணி, தான் சிற்றின்பம் மாந்தாக தூய்மை நிலையை நாட்டத் திருத்தக்கதேவர் பழுக்கக் காய்ச்சிய கோலைத் தாங்க நேர்ந்தது. சீவகசிந்தாமணி விருத்தப் பாக்களிலமைந்த புதிய உருவ முறையையும் அறிமுகப்படுத்திற்று. அதுவும் தமிழ் இலக்கிய மரபின் அங்கமாக மாறியதுமன்றித் தலைமைக் காப்பியமாகவும் உயர்ந்தது. அந்தப் பரிசோதனைக் கருப்பையிலேதான் தமிழின் 'கதி'களுள் ஒன்றாக வைக்கப்படும் கம்பராமாயணம் விளைந்தது. இவ்வாறு பல எடுத்துக் காட்டுக்களை அடுக்கலாம். இவ்வேதுக்கள் தொற்றியே, தமிழ் சீரிளமை குன்றாவாலைக் குமரியாக வாழ்கின்றாள். ஏடு நிறுவனம் சேதன பூர்வமாக நடத்தும் இலக்கியப் பரிசோதனைகள் உருவத்தைப் பொறுத்தனவாகவும் அமையலாம்; தொனிப் பொருளைப் பற்றியனவாகவும் அமையலாம் இவை, ஒரே நாணயத்தின் இரு முகங்களைப் போன்றவை. பரிசோதனை அறுவடைகள் சகலவும் பெற்றி தருவனல்ல; இலக்கியங்களாகத தேர்ந்துவிடுவனவல்ல. சில பிறந்த சுவடுகூடத் தெரியாது மறைந்துவிடலாம். வேறு சில இலக்கியமாக அமைந்து, வேறு பல இலக்கிய ஆக்கங்கள் தோன்றுவதற்கான கருப்பைகளாக அமையலாம். சமகால இலக்கியகாரனொருவன் இவற்றின் வெற்றி-தோல்விகளைச் சரியாக மதிப்பிடுதல் சிரமசாத்தியமானது. இலக்கிய பரிசோதனையின் வெற்றி என்பது உட்சுழிகள் நிறைந்த ஆழ்கடலில் நித்தில வேட்டையில் ஈடுபடுவதற்கு ஒப்பானது. கரையிலே தங்கி நிற்பவர்களுக்கு அந்த நித்திலங் கிட்டாது. சுழியோடத் தெரியாதவர்கள் இறங்கி, சுழிகளின் மரணக் கரங்களக்குட் சிக்கிவிடுகிறார்கள். அச்சிப்பிகளுள்ளும் பல வெற்றுச் சிப்பிகள்; சிலவே நித்திலச் சிப்பிகளாகத் தேறுகின்றன. இலக்கிய பரிசோதனைகளின் பயனாகத் தமிழுக்குக் கிடைக்கும். நித்தில வேட்டைக்கான ஆழ்கடற் களமாகவே ஏடு வெளியீடு அமைகின்றது. ஏடு வெளியீடுகள் காலாட்டைச் சுவடிகளாக வெளிவரும். ஒவ்வொரு சுவடியும் ஒரு குறிப்பிட்ட வகைப் பரிசோதனையையே பிரதிபலிக்கும். இந்த அமைப்பில் முதலாவது சுவடியாக தா.இராமலிங்கம் அவர்கள் இயற்றியுள்ள 'காணிக்கை' வெளிவருகின்றது.

*

ஏடு வெளியீட்டின் முதலாவது சுவடியைப்பற்றி ஒரு சிறு குறிப்புச் சொல்ல விழைகின்றேன். இதிலே கவிதைக் கருத்திற்கான தொனிப்பொருள் குறித்துப் பரிசோதனை நிகழ்ந்துள்ளது. அத்தொனிப் பொருள் சில இடங்களில் மிக அம்மணங்களைப் பற்றியனவாகவும் இருக்கின்றது. இருப்பினும், 'காணிக்கை'யிலே இலக்கியத்திற்கான கனிப்பொருள் உண்டென உய்த்துணருதலே இப்பரிசோதனையின் தரிசன பயனாகும்.

எஸ். பொன்னுத்துரை
அமைப்பாளர்
ஏடு நிறுவனம்.ஆய்வுரை

இது தா.இராமலிங்கத்தின் இரண்டாவது கவிதைத் தொகுதி. புதுமெய்க் கவிதைகள் தொகுதி-இரண்டு அவரது முதலாவது தொகுதியைப் படிக்கும்போது ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட, காலத்தையும் சூழலையும் அவதானித்து அவற்றுக்கேற்ப மொழியிலும் உணர்விலும் முறையிலும் மாற்றந்தேடும் ஓர் கவிஞரைக் கண்டுபிடித்துவிட்ட திருப்திகிடைத்தது. இப்போ இந்த இரண்டாவது தொகுதியைப் படிக்கும்போது அந்தத் திருப்தி நிச்சயமாக நீடித்து நிற்கப்போகிறது. நிரந்தரமான ஒர் வழியை அமைக்கப் போகிறது என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. நிச்சயமாக தா. இராமலிங்கம் தமிழ் இலக்கிய உலகில் நீடித்து நிற்கவே போகிறார்.

புதுக் கவிதைகளின் அவசியத்தைப் பல காரணங்காட்டி விளக்கலாம். "சங்கத் தமிழ் தொட்டு சாயந்தரம் வரை" வளர்ந்துள்ள பழைய யாப்புகள் வெறும் செத்த யந்திரங்களாகவே இன்று மாறிவிட்டிருக்கின்றன; இன்றைய யந்திர உலகில் அவையும் வெறும் உயிரற்ற சொற்களை அடைத்துள்ள தகர டப்பாக்களாகவே பெரும்பாலும் வெளிவருகின்றன; கவிதை என்பது வெறும் தகர டப்பாவல்ல, உயிரற்ற பழைய நிலையை உடைத்துக்கொண்டு காலத்தின் தேவைக்கேற்ப புதிய உருவங்களை அது அமைத்துக்கொள்ளலாம்;இன்று முன்பைப்போல் சத்தம் போட்டுக் கவிதைகள் வாசிக்கப்படுவதில்லை; வாசிக சாலைகளில் மௌனமாய் இருந்து மனதுக்குள்ளேயே வாசிக்கப்படுகின்றன. அதனால் அந்த நிலைக்குரிய உருவமிருந்தால் போதும் என்று பல காரணங்கள் காட்டலாம், காட்டப்படுகின்றன. ஆனால் காரணங்கள் மட்டும் காட்டுவதால் கவிதைகள் பிறந்துவிடுவதில்லை, காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. முதலில் கவிதைகள் பிறக்க வேண்டும். உண்மையான கவிதைகள் பிறந்த பின் அவற்றுக்குரிய காரணங்களைப் பற்றிய விளக்கங்கள்கூட அனாவசியமாகிவிடுகின்றன. காரணம், அவற்றுக்குரிய காரணங்களின் விளக்கங்களாகவும் அந்த உண்மையான கவிதைகளே நின்றுவிடுகின்றன. அதற்குப் பின்பும் பழைய யாப்பு முறை கெட்டுவிட்டதே என்று யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஏதாவது எதிர்ப்பு வந்தால் அது கடைசியில் தோற்றுத்தான் ஆகவேண்டும். தா.இராமலிங்கத்தின் கவிதைகளை வாசிக்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. அவருடைய பெரும்பாலான கவிதைகள் காலத்தின் தேவையை உணர்ந்து பெற்றெடுத்த உண்மையான கவிதைகளாகவே நிற்கின்றன. அதனால் அவையே அவற்றுக்குரிய காரணங்களின் விளக்கங்களாகவும் நிற்கின்றன. அவற்றைப் படிக்கும்போது பழைய யாப்புமுறை கெட்டுவிட்டதே என்ற முறைப்பாடு முன்னால் நிற்க முடியாது தூரத்தே ஓடிவிட்ட சுடுகாட்டுக் குரலாகவே கேட்கிறது. இனி அது ஓய்ந்துவிடும்.

தா. இராமலிங்கத்தின் கவிதைகளைப் படிக்கும்போது கவிஞர் சுய உணர்வுடன் தன் காலத்தையும் சூழலையும் சுற்றிவர வடிவாகப் பார்த்து, அப்படிப் பார்க்கும்போது தவிர்க்க முடியாமல் ஏற்படும் ஓர் திருப்தியின்மையால் உந்தப்பட்டுத் தன் உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுக்க முயல்வதை அவதானிக்க முடிகிறது. அத்தகைய உணர்வையும் திருப்தியின்மையையும் இன்றைய நம் கவிஞர்களிடம் அது மிகமிக அரிது. பழைய இலக்கியங்களாலும் பழைய யாப்புமுறைகளாலும் கவரப்படும் அதே அளவுக்கு தங்கள் காலத்தையும் சூழலையும் பூரணமாக அறியவோ உணரவோ அவர்கள் முயல்வதில்லை. ஆனால் தா. இராமலிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன் காலம், சூழல் பற்றிய உணர்வும் அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தியின்மையும்,அந்தத் திருப்தியின்மை கோரும் மாற்றமுந்தான் முத்திரை பதித்து நிற்கின்றன. மஹாகவியின் "சடங்கு"விலும் முருகையனின் "துழாவிடும் தொண்டு"விலும் வெளிக்காட்டப்படும் அந்தத் திருப்தியின்மையும் மாற்றம் பற்றிய கோரிக்கையும் இராமலிங்கத்தின் கவிதைகளில் அவர் எழுத ஆரம்பித்துள்ள காலத்துக்கு ஏற்றவகையில் தர்க்கரீதியாக வளர்க்கப்பட்டு புரட்சிக்குரல் எழுப்புகின்றன. அவைதான் கவிதைகளின் உள்ளடக்கத்துக்கு மட்டுமல்ல உருவ அமைப்புக்கும் வித்திடுகின்றன. காலமும் சூழலும் அவரிடம் எழுப்பும் தீவிர உணர்வும் திருப்தியின்மையும் கவிதைகளின் உருவ அமைப்பிலும் யாப்பு முறைகளிலும் ஒரு புதிய உடைப்பையும், அதனால் ஒரு புதிய வளர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு அத்தகைய உடைப்பையும் மாற்றங்களையும் தவிர்க்க முடியாதவைகளாகவும் ஆக்கிவிடுகின்றன. படிப்பவர்களிடம் அதை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது. புதுக் கவிதைகள் வெறம் தரமற்ற விடுகதைகளாய் இருக்காமல் தரமான உண்மையான கவிதைகளாய் இருக்க வேண்டுமானால் கவிஞனுக்குத் தன்னையும் தன் சூழலையும் பற்றிய பூரண உணர்வும் அது எழுப்பும் உத்வேகமும் எந்தளவுக்கு அத்தியாவசியமானவை என்பது இராமலிங்கத்தின் கவிதைகள் சிலவற்றைப் படிக்கும்போது தெரிய வருகின்றது. உணர்ச்சி, உள்ளடக்கம், உருவ அமைப்பு எல்லாம் பின்னிப்போய், ஒன்றையொன்று உருவாக்குபவையாய் ஒன்றி நிற்கின்றன. அவருடைய முதல் தொகுதியில் வந்த "ஆசைக்கு சாதியில்லை" இந்தத் தொகுதியில் வரும் "பலி" "தூக்கட்டும் தூக்கட்டும்" "சிலை எழுப்பி என்ன பயன்" "காலன்" என்ற கவிதைகள் அதற்கு முக்கிய உதாரணங்கள்.

முதல் தொகுதியில் வந்த "ஆசைக்கு சாதியில்லை" என்ற கவிதை இராமலிங்கத்தின் பார்வையின் தன்மைக்கும் பார்வையின் ஆழம் எழுப்பும் உத்வேகம் தனக்கேயுரித்தான கலையோடும் தரத்தோடும் பிறப்பிக்கும் கவிதை அமைப்புக்கும் சுவையான ஓர் உதாரணமென்றால் இப்போ இந்தத் தொகுதியில் இடம் பெறும் "பலி" "தூக்கட்டும் தூக்கட்டும்" "சிலை எழுப்பி என்ன பயன்?" என்பவை அதையும் மிஞ்சிக்கொண்டு அதன் தொடர்ச்சியான வளர்ச்சியை இன்னும் விரித்துக் காட்டுபவையாக நிற்கின்றன. இந்தக் கவிதைகளில்தான் அடிப்படையன இராமலிங்கம் எந்த ரகம் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இராமலிங்கம் முழுக்க முழுக்க ஒர் யாழ்ப்பாணத்துக் கவிஞர். அப்படிக் கூறுவதால் அவரிடம் பொதுஉலக உணர்வோ, சர்வதேசப் பார்வையோ இல்லை என்று நான் கூறுவதாகக் கருதக்கூடாது. கிளைகள் எங்கும் பரந்து நின்றாலும் அடிப்படையில் அவர் யாழ்ப்பாணத்தில்தான் வேர்விட்டு நிற்கிறார். பொதுவாக மற்ற யாழ்ப்பாணக் கவிஞர்களும் அப்படித்தான். ஆனால் இவரிடம் அந்தப் பண்பு மிகச் சிறப்புப்பெற்று நிற்கிறது. யாழ்ப்பாணத்தைப்பற்றிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் இராமலிங்கத்தின் கவிதைகள் நிச்சயமாகச் சுவைக்கத்தான் செய்யும். ஆனால் அதேசமயம் அவற்றின் பூரண சுவைப்புக்கு, உள்ளே நிற்கும் உயிரைத் தொடுவதற்கு யாழ்ப்பாணத்தைப்பற்றிய பழக்கம் இல்லாமலும் முடியாது. அவரது கவிதைகளில் கையாளப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பிரதேசத்துக்குரிய சொற்களும் உவமைகளும் எப்படி அவற்றைப்பற்றிய பரிச்சயமுள்ளவர்களை எடுத்த எடுப்பிலேயே சிறைப்பிடித்துவிடக்கூடியவையோ அப்படியே அவர் கையாளும் பிரச்சினைகளும் தங்களுக்கேயுரிய ஓர் இழுப்பை உடையவை. அவற்றுக்கு ஏற்கனவே பழக்கமானவர்களால்தான் அவற்றைப் பூரணமாக உணரலாம். சோமசுந்தரப்புலவரின் "புழுக்கொடியல்", "ஆடிப்பிறப்பு", "ஆடு கதறியது" என்பவைபோல. ஆனால் இராமலிங்கம் சந்திக்கும் பிரச்சினைகளும் அவற்றை அணுகும்போது அவர் காட்டும் பார்வையும் மிக ஆழமானவை. அவை காலத்தின் வித்தியாசங்களால் தவிர்க்க முடியாமல் வந்தவை; அவர் பார்க்கும் யாழ்ப்பாணம் இன்றைய யாழ்ப்பாணம். சாதிப்பிரிவுகளால் பீடிக்கப்பட்டுப் பிளவுபட்ட இன்றைய யாழ்ப்பாணம். போலி ஆசாரங்களால் பூசிமெழுகி வேஷம் போடும் யாழ்ப்பாணம். செத்தையின் மறைவுக்குள் எல்லாக் கூத்துக்களையும் நடத்திக்கொண்டு எல்லாப் பழியையும் ஓர் கோகிலாம்பாளில் கொட்டித்தீர்க்கும் யாழ்ப்பாணம்.1 நிலாவரைக் கிணறுகூட வற்றிப்போகுமோ என்ற ஓர் எல்லையைத் தொட்டுவிட்ட யாழ்ப்பாணம். "சுற்றிலும் புற்று, சுவரெல்லாம் எலிப்பொந்து, எப்படி வேய்ந்தாலும் கூரை ஒழுகு"ம் யாழ்ப்பாணம். "நிலாவரையில் நீர்மட்டம் இறங்கூது!" என்று அவர் வேதனையோடு குரல் கொடுக்கும்போது எத்தனை விசயங்களைக் குத்திக்காட்டிவிடுகறார்! "நிலாவரை"தான் எத்தனை அர்த்தங்கள் நிறைந்த ஆழங்கான வார்த்தைக்கிணறாகிவிடுகிறது! இன்றைய நம் பிரதேசப் பிரச்சினைகளைச் சந்திக்க முயலும் சிறுகதை, நாவல் எழுத்தாளர்களைப்போல் ஓர் கவிரைப் பார்க்கவேண்டுமானால் தா. இராமலிங்கத்தைத்தான் முதலில் பார்க்கவேண்டும் என்று சொல்லலாம். ஆனால் எவ்வளவு தூரம் அவர் நம் எழுத்தாளர்களையும் மிஞ்சிவிடுகிறார். அவருடைய பார்வையும் துணிவும் நம் எழுத்தாளர்களில் மிகச்சிலரிடந்தான் இருக்கின்றன.

முதன் தொகுதியில் வந்த "ஆசைக்குச் சாதியில்லை" என்ற கவிதையில் யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்துக்கும் மேல்சாதிக்காரர்களுக்குமுரிய போலி ஆசாரங்களையும் வெளிவேசங்களையும் கிழித்துக்காட்டியதோடு அதே மேல்சாதிக்காரர்களும் ஆசாரக்காரர்களம் தங்களின் ஆசாரவேலைக்குள்ளேயே அடைபட்டுச் செத்துக்கொண்
_______________________________________________________________________

(1) "உங்கை யாழ்ப்பாணத்துக் கிடுகுவேலியால சங்கைய மறைச்சுக் கொண்டு மனச்சாட்சிக்கு விரோதமாக நடித்துக்கொண்டே, வாழ்பவருக்கு என்ரை போக்கு விளங்காது, என்ரை போக்கு எனக்கு விளங்கும்". - தேர்; எஸ்.பொ.


டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்தும் வீர்யமும் அவர்கள் ஒதுக்கிவைத்துள்ள கீழ்ச்சாதிக்காரர்களிடமேதான் காணக்கிடக்கின்றனவென்பதையும் மிகச்சூட்சுமமாகத் தெரிவித்திருத்தார். "ஆசைக்குச் சாதியில்லை" என்ற கவிதையில்,

மருந்துக்கு நல்லதென்றால்
-கள்
அருந்துவதில் என்ன குற்றம்?

என்று சரிக்கட்டல் செய்யும் மேல்சாதிக்காரன் கள்ளை மட்டும் குடிக்கவில்லை. அவனே ஒதுக்கிவைத்த "பள்ளர் குடிப்பிறந்தாளிடம்" பிச்சைக்காரனைப்போல் "கெஞ்சி இரந்து" இன்பர் நுகர்கிறான். அந்த நிலையில் அவனுக்கு உண்மையாகத் தேவைப்படும் மருந்து என்னவென்பதையும் அது எங்கு இருக்கிறதென்பதையும் அவனை அறியாமலேயே ஒப்புக்கொண்டுவிடுகிறான். ஆனால் அது அவனுக்கு மட்டும் உரிய ஒரு தனிக்குரலல்ல. அவனது கெஞ்சல் குரல், உள்ளே இருந்து தின்னாமல் தின்னும் ஓர் நோயால் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முழுக்கலாசாரத்தினது குரலுமாகும்.2
______________________________________________________________________

(2) "ஆசைக்குச் சாதியில்லை" "தூக்கட்டும் தூக்கட்டும்" என்ற கவிதைகளை எஸ்.பொன்னுத்துரையின் "பங்கம்" என்ற கதையோடு ஒப்பிட்டுப் படித்தால் சுவையாகவும் இருக்கும். இன்னும் விசயத்தை விளங்கிக்கொள்வதாகவும் இருக்கும். "மலடன்களின்ர சண்டித்தனம் பெண்டுகளிலைதானே?.....நீதான் மலடன்...." என்று கூறுகிறாள் மனைவி. யாரிடம் கேளாறு இருக்கிறது என்பதைமட்டுமல்ல, எங்கு வீர்யம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துவிட்டவள் அவள். அவளை யாழ்ப்பாணத்தின் வரப்போகம் புதிய உருவமாய் எடுக்கலாம், யாழ்ப்பாணக் கலாசாரத்தின் வளர்ச்சிக்கும் சந்ததி விருத்திக்கும் தேவையான வீர்யம் எங்கே இருக்கிறது என்பதையும் அவற்றின் பாதுகாவலர்களாக இப்போ நடித்துத் திரியும் மேல்வர்க்க, மேல்சாதி உத்தியோகத்தர்களும் முதலாளிமார்களும் வளர்ச்சிக்கு உதவாத மலடுகள் என்பதை அருமையாகக் காட்டுகிறது "பங்கம்".


ஆனால் நோய் என்ன?

"ஆசைக்கு சாதியில்லை" என்ற கவிதையில் அது முழுமையாகப் படம்பிடிக்கப்படவில்லை. பெரும்பாலும் நம்முடைய யூகத்துக்குமட்டும் விடப்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டாம் தொகுப்பில் அவர் ஓர் சமூகவியல் நிபுணரின் கூர்மையோடு நம் யாழ்ப்பாணச் சமூகத்தின் நோயை வெட்டிப் படம்பிடித்துக் காட்டிவிடுகிறார். அந்தக் கூர்மையும் வெட்டலும் அதேசமயம் அவருடைய கவிதைகளின் உருவ அமைப்புக்கு உதவுவதாயும் அந்த அமைப்பையே கோருவதாயும் நிற்கின்றன. "பலி" "தூக்கட்டும் தூக்கட்டும்" "சிலை எழுப்பி என்ன பயன்?" என்ற கவிதைகள் நம் சமூகத்தின் நோயை வெட்டிக்காட்டும் அதேசமயம் உண்மையான புதுக்கவிதைக்கும் பாதை வெட்டிவிடுகின்றன.

என்னைப்பொறுத்தவரையில் "தூக்கட்டும் தூக்கட்டும்" மிக முக்கியமானதாகப்படுகிறது. அங்கே யாழ்ப்பாணத்துக் கலாசாரத்தினதும் சமூகத்தினதும் நோய்மட்டும் படம்பிடிக்கப்படவில்லை. அந்த நோய்க்கு எதிராக ஒருத்தி நடத்திய புரட்சியும் அதன் விளைவும் கூடவே காட்டப்படுகின்றன அதைப் படிக்கும்போது கோகிலாம்பாள் கொலைவழக்கு நடந்த காலத்து யாழ்ப்பாணம் அப்படியே கண்முன் வந்துவிடுகிறது. எத்தனை பத்திரிக்கைகள் அந்தக் கொலை வழக்கையே மூலதனமாக்கித் தங்கள் விற்பனையை வளர்த்தன! எத்தனை பேர்கள் காருக்குள்ளும் பஸ்ஸ”க்குள்ளும் அதைப்பற்றியே ஆத்திரத்தோடு பேசித் தங்கள் கற்பையும் கண்ணியத்தையும் கோகிலாம்பாள்மூலம் நிரூபிக்க முயன்றனர்! ஆனால் உண்மையில் ஒவ்வொருவருக்கும் தன் தன் தனிக் குற்றத்தைக் கோகிலாம்பாளிடம் இடம் மாறிவிட்டுத் திருப்தியோடு ஆத்திரப்பட்டதாகத் தெரியவில்லையா? நம் சமூகத்தின் பொதுக் குற்றத்துக்குப் பலியாக, அதைத்தானே சுமக்க முயன்ற பலிக்கடாவாகக் கோகிலாம்பாள் தெரியவில்லையா? உண்மை, தா.இராமலிங்கம் கோகிலாம்பால் என்ற குறிப்பிட்ட ஓர் பெண்ணுக்காகவோ அல்லது கணவனைக் கொலைசெய்வதை நியாயமாக்கவோ எழுத வில்லைதான். ஆனால் அதற்காக "தூக்கட்டும்! தூக்கட்டும்" என்ற கவிதை உண்மையான கோகிலாம்பாள்மீதும் அவளைப்போன்ற எத்தனையோ கோகிலாம்பாள்கள்மீதும் ஓர் புதுப் பார்வையை பாய்ச்சிவிடுகிறது என்பதை மறுக்கமுடியாது.

கணவனைக் கொன்ற கோகிலாம்பாளும் சரி, பிள்ளையைக் கொன்ற வேறு ஒர் பெண்ணும் சரி, அவர்களைப் போன் அத்தனை தூரம் தீவிரமாக மாறாவிட்டாலும் அதே வகையில் "சோரம்" போய் வாழும் வேறு பெண்களும் சரி யாழ்ப்பாணச் சமூகத்தைப் பீடித்துள்ள அதே நோயின் சின்னங்கள்தான். குடும்பவாழ்க்கையில் திருப்திகாண முடியாவிட்டால், கணவன் ஓர் கையாலாகாதவன் என்றால் சட்டப்படி விவாகரத்துச் செய்துவிட்டு நிம்மதியாக வாழலாந்தானே, ஏன் இந்த அரக்கத்தனம் என்று நம்மில் பலர் கேட்பார்கள். ஆனால் அந்தக் கேள்வியில் யாழ்ப்பாணக் கலாசாரத்தையும் சமூக நிலையையும் வடிவாகப் புரிந்துகொள்ளாத அறியாமைதான் மறைந்து நிற்கிறது. அரக்கத்தனம் நம் சமூகத்திலும் அது திணிக்கும் ஆசாரங்களிலும் மரபுக் கோட்பாடுகளிலுந்தான் நிற்றெது. விவாகரத்துச் செய்தபின் வேறொருவன் கிடைப்பானா என்பதற்கு முதல் விவகாரத்துச் செய்ய முடிகிறதா என்பது முக்கியமானது. சிறு வயதிலிருந்தே கற்பு, கண்ணியம் என்பவற்றைத் திணித்துவிடும் ஒரு சமூகத்தில் திருப்தியின்மை ஏற்படும்போது விவாகரத்துச் செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. எவ்வளவுதான் சிற்றின்பத்தில் திருப்தியின்மை இருப்பினும் கற்பு, கண்ணியம், குடும்பமதிப்பு என்பவை காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஓர் எண்ணம் சின்ன வயதிலிருந்தே வளர்க்கப்படுகிறது, திணிக்கப்படுகிறது. அவற்றை மீறிக் குற்ற உணர்வு ஒன்றும் இல்லாமல், அயலாரின் குறைச் சொல்லுக்கு ஆளாகாமல், அதைப்பற்றிக் கவலைப் படாமல், வாழ எல்லாராலும் முடியாது. முக்கியமாகச் சாதாரண பெண்களால், அதுவும் நடத்தர வகுப்பிலும் மேல்சாதியிலும் பிறந்தவர்களால், அப்படி வாழ்வது மிகமிகக் கஷ்டம். வெளியூரிலுள்ள கணவனுக்குத் தன் விவகாரம் தெரிநிதுவிடப்போகிறதே என்று பயந்து தன் சொந்தப் பிள்ளைளையே வெட்டிக் கொல்லக்கூடிய அரக்கியாக ஒர் பெண் நம் சமூகத்தின் மாறிவிடுகிறாள் என்றால் எவ்வளவுதூரம் அவளிடம் அந்தக் குற்ற உணர்வு வளர்க்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு தூரம் அவள அயலாருக்குப் பயப்படுகிறாள், எவ்வளவு தூரம் அந்தக் கற்பு, குடும்பமதிப்பு, கண்ணியம் என்பவற்றை மீறமுடியாதவளாக மாறிவிட்டிருக்கிறாள் என்பதைத்தான் அது காட்டுகிறது. தன்னிடமும் அதே நல்ல பண்புகள் என்று சொல்லப்படுபவைதான் இருக்கின்றன என்று காட்ட விரும்புகிறாளே ஒழிய அவற்றைத் துச்சமாக மதித்து ஒதுக்கிவிட்டாள் என்பதைக் காட்ட அவள் விரும்புகிறாளில்லை. அதற்கு எதிராக வரும் அத்தாட்சிகளை, அவை தன் சொந்தப் பிள்ளை மூலம் வரினுங்கூட, அவற்றை அழித்துவிடத்தான் அவள் விரும்புகிறாள். அவளைக் கட்டுப்படுத்தும் ஆசாரங்களை அல்ல. அதனால் தன் சொந்தப் பிள்ளையைக் கொல்வதால் ஏற்படும் ஆபத்து, அவமானம், குற்ற உணர்வு எல்லாம் அவற்றைவிடப் பெரியவை என்பதை அவள் உணரத் தவறிவிடுகிறாள். அவளுக்கு நம் ஆசாரங்களைப் பற்றிய கவலைதான் பெரிது. எனவே கடைசியில் அரக்கத்தனம் அப்படிப்பட்ட பெண்களிடம் இல்லை என்பது தெளிவாகிறது. அவர்கள்மீது அவர்களால் தாங்கமுடியாத, அவர்களின் வாழ்க்கைக்கு உதவாத ஆசாரங்களையும் கோட்பாடுகளையும் திணித்த நம் சமூகத்திடந்தான் அந்த அரக்கத்தனம் இருக்கிறது. அந்த ஆசாரங்களைக் காலத்துக்கேற்றவகையில் மாற்றாமல், தளர்த்தாமல் அவற்றை இன்னும் யந்திரமாக இறுக்கும் நம் மேற்சாதிக்காரர்களிடந்தான் இருக்கிறது. அந்த அரக்கத்தனம் கடைசியில் வெளிவேடத்தைத்தான் வளர்க்கிறது. ஆத்சுத்தியையோ ஆத்ம வளர்ச்சியையோவல்ல. அதுதான் நோய். நம் சமூகத்திடம் இருக்கும் அந்த அரக்கத்தனமும் இறுகிய யந்திரமாக, உயிரற்ற கல்லறையாக மாறிவிட்ட அந்த ஆசாரக் கோட்டையுந்தான் நோய்.

ஆனால் "தூக்கட்டும் தூக்கட்டும்" கவிதையில் கவிஞர் காட்டும் பெண் வெளிவேடம் போட விரும்பவில்லை. "பலி"யில் வருபவளைப்போல் எதிர்ப்பின்றிச் சமூகத்தின் போலி ஆசாரங்களுக்கும் வலுவற்ற ஆண்மைக்கும் கொடுக்கப்பட்ட இரையாகவும் பலியாகவும் தன்னை ஆக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. ஆசாரங்கள் வளர்க்கும் குற்ற உணர்வையும் மீறி அவள் புரட்சி செய்கிறாள். தன் புரட்சியை மூடிமறைக்க அவள் விரும்பவில்லை. எதிர்ப்பு வரும்போது அத்தட்சிகளை அழிக்க அவள் முயலவில்லை. மாறாகப் பச்சையாகவே தன் கொள்கைகளைப் பிரகடனப் படுத்திவிடுகிறாள். தனியே போராடவும் செய்கிறாள். அப்படிப்பட்டவர்கள்மீதுதான் சமூகத்துக்கு ஆத்திரம் அதிகம். களவுகளையும் வெளிவேடங்களையும் காணாதது போல் நடிக்கும் சமூகம் சுயஉணர்வுடன் வரும் எதிர்ப்பையும் புரட்சியையையும் மட்டும் தன் முழுச் சக்தியையும் திரட்டி அழித்துவிடுகிறது. அதைப்பற்றிய தன் தீர்ப்பையும் கூறிவிடுகிறது. ஆனால் தீர்ப்பு எவ்வளவு பிழையானது, எவ்வளவு அரக்கத்தனமானது! சமூகத்தைப் பார்த்துக் கவலைப்படாத ஒரு கேலியோடு "தூக்கட்டும்" என்று கூறும் அந்தப் புரட்சிப் பெண்ணின் குரலில் எங்களைப் பார்த்துக் கவிஞர் எழுப்பும் வேதனைக்குரலும் இழைந்து நிற்கிறது. நல்லமுறையில் நீங்களாவது அவளின் நிலையைத் "தூக்கி"ஆராயுங்கள்! நீங்களாவது "தூக்கி" ஆராயுங்கள்!

தூக்கப்படப்போகும் பெண் வாழ்க்கையையும் அவள் வாழும் சமூகத்தையும் அதன் கலாசார மரபையும் மிக ஆழமாகக் கண்முன் கொண்டுவருகிறார் கவிஞர். இரண்டொரு வார்த்தைகளாலேயே பழைய மரபின் ஆழமெல்லாம், கண்முன் வந்துவிடுகின்றன.

கற்புக்கரசியாய்
வாழ் என்று வாழ்த்திச்
சிலப்பதிகாரமும்
சீதனம் தந்தார்!

சிலப்பதிகாரம் என்ற ஒரே ஒரு வார்த்தையாலேயே அவள் வாழும் சமூகத்துக்குப் பின்னணியாய், சீதனமாய் நிற்கும் முழுக் கலாசாரமும் மரபும் காட்டப்படுகின்றன. இதே கவிதையில் இதேவகை வார்த்தைகள் வேறும் வருகின்றன. "யானைத் தீ" என்று கூறும்போது மணிமேகலை நினைவுக்கு வருகிறது. "நிரைமீட்பேன், நிரைமீட்பேன்" என்று கூறும்போது ஆநிரை கவரும் பழைய சங்ககால மன்னர்களின் வரலாறும் மகாபாரதக் கதைகள். ஆனால் முழுக் கலாசார மரபுமே கண்முன் வந்துவிடுகின்றது. சிலப்பதிகாரம் என்பது முக்கியமானது. பழைய மரபையும் கலாசார ஆழத்தையும் காட்டும் அதேசமயம் கவிஞர் அந்தக்காலத்துச் சமூகநிலையோடு இந்தக்காலத்துச் சமூகநிலையை ஒப்பிட்டுப் பார்க்கவும் நம்மைத் தூண்டிவிடுகிறார். கற்புக்கு இலக்கணம் வகுத்த சிலப்பதிகாரக் காலத்திலிருந்த முற்போக்கான சமூக நிலை, அது வைத்திருந்த இறுக்கமற்ற இளகலான சட்ட திட்டங்கள், அவை வளர்த்த விடுதலையும் சுதந்திரமும் இக்காலத்தில் இருக்கின்றனவா? அவற்றை நம் இன்றைய யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ஏற்றுக்கொள்கிறதா? மாதவியின் வாழ்க்கைமுறைக்கு இன்று அங்கு வசதி இருக்கிறதா? கற்பு என்பது மனதைப் பொறுத்த விசயமே ஒழிய உடலைப்பொறுத்த விசயமல்ல என்பதை மறந்துவிட்ட இன்றைய யாழ்ப்பாணத்தில் மாதவி போன்றோர் கற்புள்ளவர்களாய் ஏற்றுக்கொள்ளப்படுவரா? அவை கவிஞர் சிலப்பதிகாரம் என்ற அதே வார்த்தைமூலம் எழுப்பும் சந்தேகங்கள். எப்படி முன்பு பயனுடையவையாய் இருந்த சாதிப்பிரிவுகள் இன்று சமூகத்தின் கொடுமையின் சின்னங்களாக மாற்றப்பட்டிருக்கின்றனவோ அதேபோல் முந்திய தேவைகளுக்கு உதவிய இளகலான ஆசாராங்களும் கோட்பாடுகளும் இன்று அர்த்தமற்று இறுகிய யந்திரங்களாக அல்லது நடைமுறையில் வெறும் போலிப்பூச்சுக்களாக மட்டும் மாற்றப்பட்டிருப்பதையும் கவிஞர் ஒப்பிட்டுப்பார்க்கத் தூண்டுகிறார். பின்பு வரும் "நிரைமீட்பேன், நிரைமீட்பேன்" என்ற அடிகளில் அந்த முரண்பாடும் வேடிக்கையும் மிகத் தெளிவாகக் காட்டப்படுகின்றன. நிரைமீட்ட பழைய காலத்து மன்னர்கள் எங்கே, இப்போ நிரைமீட்க முயலும் இன்றைய கையாலாகாத கணவன் எங்கே! அவர்களுடைய வீரம் என்ன, இவர்களுடைய வீரம் என்ன! பழைய வாழ்க்கை எங்கே, பழைய வாழ்க்கைமுறையின் ஆசாரங்களை யந்திரங்களாக இறுக்கிவிட்டிருக்கும் புதிய வாழ்க்கைமுறை எங்கே!

இருந்தாலும் அந்த உணர்வு பின்பு வரவேண்டிய ஒன்று. "தூக்கட்டும் தூக்கட்டும்" கவிதையில் வரும் புரட்சிப் பெண்ணுக்கு அது பின்புதான் வருகிறது. "கற்புக்கரசியாய் வாழ்" என்று வாழ்த்தி அனுப்பப்படும் அவள் ஆரம்பத்தில் அதற்கேற்ற கனவுகளோடுதான் போகிறாள்.

பாத்தி பிடிப்பார்
அள்ளி இறைப்பார்
பிஞ்சு மாதுளை
வெள்ளை மணிகளில்
இரத்தம் பிடித்திடும்
பொதிந்த ஆசைகள்
முற்றும் பலித்திடும்
என்ற கனவுடன்
கைப்பிடித்தேகினேன்.

அவனின் கனவுகளைக் கூறும் இந்த வரிகள் அழகான படிமங்களாகவும் அதேசமயம் ஆழமான குறியீடுகளாகவும் வருகின்றன. பாத்தி பிடிப்பார், அள்ளி இறைப்பார் என்பவை ஒவ்வொன்றும் திருப்பித்திருப்பிப் படிக்கப்படும்போது பல கருத்துக்களை விரிக்கின்றன. "வெள்ளை மணிகளில் இரத்தம் பிடித்திடும்" என்ற வரிகள் வேறு அர்த்தங்களோடு கூடவே பழைய இலக்கியங்களில் போகத்திளைப்பை கூறவரும் சேயரிக்கண்களுக்குப் புதிய படிமத்தையும் எவ்வளவு அழகாகக் கொடுக்கின்றன!

ஆனால் கனவு பலிக்கவில்லை. கிடைத்தது வேறு. கவிஞர் திரும்பவும் அதே ஆழமான படிமங்களில் கூறுகிறார்.

ஈர விறகு தந்தார்
புகைக்குடித்து அடுப்பூதிப்
புகைச்சூண்ட பால் குடித்தன்.

காரணம் என்ன? பாலைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? யாழ்ப்பாணப் பேச்சில் வழங்கும் ஒரு சாதாரணச் சொற்றொடரைப் பாவித்துகவிஞர் அதை அழகாகவும் கேலியாகவும் கூறுகிறார்.

அரை வெறியில் வந்திடுவார்
சுடுகுது சுடுகுது
மடியைப் பிடி என்பார்
மீன்னுகூது போலிருக்கும்
பாட்டம் ஓய்ந்து
சிலுநீரும் சிந்திவிடும்
போய்விடுவார்.

நிரைமீட்கும் தற்கால யாழ்ப்பாண மத்தியதரவர்க்க மேல்சாதிக்காரத் தலைவர்களின் நிலை அது. "பலி" என்ற இன்னோர் கவிதையில் அதே தலைவனை வேறு கோணத்தில் கவிஞர் காட்டுவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மெய் புகழ்ந்து மெய் தொட்டு
நாணம் உரித்துவிட்டுச்
சுளை தின்னத் தெரியாது,
கசக்கும் என அறியான
தோலோடு சப்பிவிட்டான்.

பூட்டைத் திறப்பதற்குத்
திறப்பினைத் தேர்ந்தெடுக்கான்
இடித்துப் பிளந்துவிட்டான்
இரத்தம் கசிந்ததம்மா.

"சிலை எழுப்பி என்ன பயன்?" என்ற கவிதையில் வேறு அர்த்தத்தில் வரும் வரிகளையும் இங்கு நினைவூட்டுதல் நல்லது.

கொளுத்தக் கொளுத்த
விளக்கும் நூருகுது
பெட்டியிலோ குச்சில்லை
ஆராய்ந்து என்ன பயன்?
கிலுக்கினால்....
வெறும் பெட்டி
தடவினால்....
குறங்குச்சி!

அவளுக்கு வேறு வழியில்லை. எத்தனை நாள் "வாயுள் விரலோட்டி வாந்தி எடுப்பது?" "உலைமூடி என்ன செய்யும்?" எத்தனை நாள் "அகப்பையால் துளாவி அடக்கு"வது? அவள் வரம்பை மீறி வேலி பாய்ந்துவிட்டாள். கற்பு, கண்ணியம் என்று "செத்தசவம்மீது சிலை எழுப்பி என்ன பயன்?" அவளுக்கு உயிர் தேவைப்பட்டது, மருந்து தேவைப்பட்டது. "மூலிகைகள் சேர்த்து இடித்துப் பிழிந்தெடுத்து நாள்தோறும் நள்ளிரவில் நல்ல மருந்து" கொடுக்க ஒருத்தன் கிடைத்தான். ஒருவேளை, "மருந்துக்கு நல்லதென்றால் கள் அருந்துவதில் என்ன குற்றம்?" என்று சரிக்கட்டல் செய்துகொண்டு முன்பொருவன் தேடிப்போன அதே வர்க்கத்திலும் சாதியிலுந்தான் அவளுக்கும் மருந்து கிடைத்திருக்கக்கூடும். அப்படியாயிருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அங்குதான் யாழ்ப்பாணத்தின் உண்மையான துடிப்பான வீரியம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அதை அவளின் கணவன், அவன் பிரதிபலிக்கும் அந்த மேல்சாதிக் கலாசாரம், ஒப்புக்கொள்வதில்லை. அதை ஒப்பு கொள்வதானால் தன் மலட்டுத்தனத்தையும் சேர்த்து ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே அதை மறைக்க அது போர் தொடுக்கிறது. கற்பு என்ன ஆவது என்று சுலோகம் எழுப்புகிறது. ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. எதற்காகக் கவலைப்படவேண்டும்.

இந்த இளம் வயதில்....
குறுக்காலே போய்விட்டால்....

ஓடுகிற இரத்தமெல்லாம்
கெட்டு வெளிறிவிட்டால்

செத்த சவம்மீது
சிலை எழுப்பி என்ன பயன்?

உண்மை உணராமல்....
மூன்றுகுறி பூசி
முணுமுணுத்து ஆவதென்ன?

அவள் சாகாமல் இருக்க மருந்து தேடவேண்டும் என்று உணர்ந்தவள். கள்ள இறைவன் காட்டிய அருளையும் மூலிகைகள் கொடுத்த உயிரையும் அறிந்தவள். வாழ வழி ஒன்று கண்டுபிடித்தவள். கொஞ்சமும் பயமின்றித் தன் கொள்கையைப் பிரகடனப்டுத்துகிறான்.

என்தன் பிணிநீங்க
இறைவன் வழிபட்டுக்
கற்பைக் கொளுத்திவிடக்
கற்பூரமாய் எரிந்து
காணிக்கை ஆனதென்றேன்.

அது ஒரு முழுப்புரட்சி. சிலப்பதிகாரம் என்ற ஒரே ஒரு வார்த்தையால் ஒரு முழுக்கலாசாரப் பின்னணியையும் காட்டிய கவிஞர் இப்போ அதே கலாசாரமும் செத்து விடாமல் காலத்துக்கேற்றவகையில் உயிர் வாழ்வதற்கும் புதுப்பிக்கப்படுவதற்கும் என்னென்ன கொளுத்தப்பட வேண்டியிருக்கிறதோ அவற்றையெல்லாம் "கற்பு" என்ற அந்த ஒரு வார்த்தையாலேயே காட்டிவிடுகிறார்.

ஆனால் கணவன் அதை விரும்பவில்லை. அவன் மலடுதட்டிவிட்ட அந்த வரண்ட கலாசாரத்தின் பிரதிநிதி. அவன் அவளின் கழுத்தை நெரிக்கிறான். அவள் அவதிப்படுவதில் ஆனந்தம் காண்கிறது சமூகம். உதவவரவில்லை. "கற்புக்கரசியாய் வாழ்" என்று வாயால் சொல்லிவிடும் அதே சமயம் ஆபத்து நேரத்தில் எட்டநின்று வேடிக்கை பார்க்கிறது.

ஓடிவந்தயல்
விளக்குப் பிடித்து வேலியால் பார்த்தது
விலக்குப் பிடிக்க எவருமே வந்திலர்.

அந்தநிலையில் அவளுக்கு வேறு வழியில்லை. தன்னைக் கொல்லும் அதே கலாசாரத்தை அவள் தன்னளவில் கொன்றுவிடுகிறாள். "உலக்கை கிடந்தது-வலக்கை துடித்தது-உச்சந்தலை அடி-ஓங்கி ஓரே அடி." அந்தக் கலாசாரம் போட்ட கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிந்துவிடுகிறாள். "அவன் கட்டிய தாலியை அறுத்தெறிந்தேன்"

சமூகம் இப்போ அவளைச் சிறைவைத்துவிட்டது. தன் சட்டத்தைக் காட்டித் தூக்கிலிட முயல்கிறது. ஆனால் அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. நான்கு சுவர் என்ற சிறை பெரியதோர் சிறையல்ல. இதுவரை அவள் வாழ்ந்தது அதைவிடப் பெரியதோர் கொடுஞ் சிறைக்குள்தான். மலட்டுக் கலாசாரம் என்ற கோட்டைச் சிறை. அது இனியாவது உடைபடுமா? அவளின் நிலையை நாம் எப்படித் தூக்கிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது அது. ஆனால் அவளுக்கும் சரி, கவிஞருக்கும் சரி நம்பிக்கை மட்டும் இன்னும் போகவில்லை.

தூக்கட்டும் தூக்கட்டும்
தூய்மை துலங்க- ஒரு
யுகம் பிறக்கும்".

மரபு என்பது ஒரு வழியா அல்லது வேலியா என்ற கேள்வியை நம்மவர் சிலர் அடிக்கடி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்க்கும்போது கேள்வி எழுவதற்கு அங்கு இடமிருக்காது. மரபு என்பது ஒரு வழிதான். ஆனால் அதே சமயம் அப்படிச் சொல்வது முழுக்க முழுக்கச் சரியாகிவிடாது. வழி என்பதை மட்டும் அழுத்துபவர்கள் வெறும் ஏட்டளவிலேயே நின்றுவிடுகிறார்கள். மரபு என்பது ஒவ்வொரு கணமும் உடைபட்டுக்கொண்டுதான் இருக்கிறது, வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உடைப்பையும் வளர்ச்சியையும் பொதுவாக நடைமுறையில் எல்லாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அதோடு ஒவ்வொரு கணமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாய் இருப்பதுமில்லை. சமூகத்தின் மூளையாயுள்ள சிந்தனையாளர்கள் தான் குறிப்பிடத்தக்க பெரிய வளர்ச்சியை மரபில் ஏற்படுத்துபவர்கள். அந்தச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தும் வளர்ச்சியை அவர்களுக்குப் பின்பு வரும் மரபுதாசர்களும் கலாசாரக் காப்பாளர்களும் அதையே இறுக்கி விடுகிறார்கள். சாதாரண பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் பழக்கவழக்கங்களின் கைதிகளாகவே வாழ்கிறார்கள். அதனால் அவர்களும் அந்த யந்திர எல்லைக்குள்ளேயே தங்களை நிறுத்திக்கொண்டு ஓர் தடத்திலேயே சுற்றிச் சுற்றித் தங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அந்நிலையில் காலத்தின் தேவை கோரும் மாற்றத்தை உணர்பவர்களாய் அவர்கள் இருப்பதில்லை. உணர்ந்தாலும் அதை அவர்கள் மறைவாகவே, களவாகவே, கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் பெரும்பாலும் நடைமுறையில் மரபுகாட்டும் இயக்கம். அந்த நிலையில் அது ஒரு வேலியாகவே மாறிவிடுகிறது. திரும்பவும் அதில் ஒரு உடைப்பையும் வளர்ச்சியையும் குறிப்பிடத்தக்க வகையில் ஏற்படுத்துபவர்கள் சிந்தனையாளர்களே. ஆனால் அவர்களும் அதைத்தங்கள் இஷ்டப்படி செய்வதில்லை. காலத்தையும் தாங்கள் வாழும் சமூகத்தின் நிலையையும் உணர்ந்து அவற்றின் காரணமாகத் தூண்டப்பட்டு அதுவரை ஏற்றுக்கொள்ளப்படாமல் மறைவாகவும் களவாகவும் தெரிந்த ஓர் துடிப்பை அவர்கள் இன்னும் வளர்த்துப் பகிரங்கமாப பிரகடனப்படுத்துகிறார்கள். அதுவே புதிய பாதையாகிறது. மரபு வழியில் ஓர் புதிய மைல்கல்லாகிறது.

தா. இராமலிங்கத்தின் கவிதைகளைப் படிக்கும்போது அத்தகைய ஓர் உடைப்பையும் புதுப்பித்தலையும் கோரும் சிந்தனையாளனின் குரல் கேட்கிறது. இன்றைய நிலையின் காரணமாய் ஏற்படும் திருப்தியின்மை சமூகத்தின் அடித்தளம்வரை தொடக்கூடிய ஓர் மாற்றத்தையும் புதுப்பித்தலையுந்தான் கோருகிறது. அதை அவர் உணர்ந்து அதற்குக் கவிதை உருவங்கொடுக்கிறார். அடித்தளம்வரை செல்லும் மாற்றம் பால் விவகாரங்களைத் தொடாமல் இருக்கமுடியாது. இராமலிங்கத்தின் கவிதைகளைப் படிக்கும்போது தூரத்திலுள்ள ஒரு டி.எச் லோரன்ஸைக் காண்பது போலவும் இருக்கலாம். இராமலிங்கத்தின் புரட்சிப்பெண் வழிபடும் "கள்ள இறைவன்" லோரன்ஸ’ன் Dark God ஆக இருக்கமுடியாதா? ஆனால் அதற்காக விமர்சகர்கள் கச்சைகட்டிக்கொண்டு வந்துவிடக்கூடாது. நான் பழகிப் பார்த்த அளவுக்கு தா.இராமலிங்கம் டி.எச். லோரன்ஸை இன்னும் படிக்கவில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். லோரன்ஸ’ன் கொள்கைகளைப்பற்றியும் அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. எலியட்டில் அவருக்கு அக்றை வளர்ந்துகொண்டிருக்கிறது என்பது உண்மையானாலும் அவர் அதிக அக்கறை காட்டிப் படிப்பதும் பார்ப்பதும் பழைய தமிழ் இலக்கியங்களையும் இன்றைய நம் யாழ்ப்பாணத்தையுந்தான். ஏற்கனவே கூறியதுபோல் அவர் ஓர் யாழ்ப்பாணக் கவி. பெரும்பாலும் அவருடைய கவிதைகள் அவருடைய அடிமன உணர்வின் கலை உருவங்களாகவே இருக்கின்றன. அதனால்தான் அவைகாட்டும் உண்மையின் அழுத்தம் அப்படிப் பெரிதாக இருக்கிறது; நம்நாட்டுக்குச் சொந்தமானதாகவும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது அவருடைய கவிதைகள் லோரன்ஸையும் ஞாபகமூட்டுகின்றனவென்றால் அதற்குக் காரணம் இதுதான் பொதுவான உண்மைகள் ஓர் தனிப்பட்ட இடத்துக்கு மட்டும் சொந்தமாக இருப்பதில்லை. அதோடு புதிய கைத்தொழில் புரட்சியும் விஞ்ஞான வளர்ச்சியுந்தான் மனிதனை யந்திரமாக்குவதில்லை. பழம் பெரும் மரபும் கலாசரமும்கூட தொடர்ந்து வளர்க்கப்படாமல் மலட்டுத்தனமடைந்து தேங்கி இறுகிவிடும் நிலையில் மனிதனை யந்திரமாகத்தான் ஆக்கிவிடுகின்றன. அவைதான் முக்கிய காரணங்கள். இங்கு பாலைப்பற்றித் தெளிவாகச் சிந்திக்கவேண்டும்.

அடித்தளம்வரை தொடும் மாற்றம் மேற்பரப்பு வர்க்கமாற்றங்களையும் தாண்டிப் பால் படுகையை மட்டும் தொட்டால் போதாது. பால்படுகை ஆழமானதுதான். ஆனால் அதையும்விட ஆழமான ஒன்றும் இருக்கிறது. தா.இராமலிங்கம் அதையும் தவறவிடவில்லை. உண்மையில் அவர் தேடும் மாற்றங்கள் எல்லாம் அந்த அடிப்படையிலேயே தேடப்படுகின்றன. ஒர் ஆன்மவிசாரம். "பலி", "சிலை எழுப்பி என்ன பயன்?", "தூக்கட்டும் தூக்கட்டும்" என்ற கவிதைகளில் அந்த ஆன்மவிசாரம் பின்னுக்கு மறைந்து நிற்கிறது. "குஞ்சு திரளாதோ?" "தேடல்" "புகை" "திறந்தது" "வேண்டாம் நிறுத்திவிடு" "கலக்கம்" "கோடைவெயில்" "நுகர்ச்சி" "எப்பவிடியும்?" போன்ற கவிதைகளில் மற்றவற்றைவிட அதுதான் முன்னுக்கு அழுத்திக்கொண்டு நிற்கிறது. ஆன்மவிசாரம் சேராத எந்தப் புரட்சியும் பூரணமான முழுப்புரட்சியாக இருக்கமுடியாது. நிரந்தர பலலை அளிக்கக்கூடிய எல்லாவகைப் புதுப்பித்தலும் அந்த ஆன்மவிசாரத்தை அடிப்படையாக வைத்துத்தான் எழவேண்டும். ஆனால் அதே ஆன்மவிசாரம் வெறும் வைதீகப் பார்வையாகவும் மாறிவிடக் கூடாது. அப்படி மாறும்போதுதான் அது "ஆபாசம்" "பாவம்" என்ற சுலோகங்களைமட்டும் எழுப்பும் யந்திரப் பார்வையாகிவிடுகிறது. இராமலிங்கத்தின் ஆன்மவிசாரங்கூட. நான் அவரை நேரில் அறிந்தவரை, அவரே அறியாமல் அடிமனத்தால் நடத்தும் ஓர் தேடலாகவே இருக்கிறது. ஆனால் அதனால்தான் கலப்பற்ற உண்மையான தேடலின் கலை உருவங்களாக அவரது கவிதைகள் தெரிகின்றன.

"எப்பவிடியும்?" என்ற கவிதை அந்த வகையில் மிக அழகான கவிதை. கவிஞர் அதை அறிவுவூர்வமாக எழுதினாரா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் அதன் ஆழமான இழுப்பை அதற்காக ஒதுக்கிவிட முடியாது. அறிவுக்குரிய குறியீடாகவரும் துணைவி அந்தநிலையில் அவித்யமாயையின் உருவமாகக் கிடக்கிறாள். அவனது குரல்தான் கேட்கிறது. உருவம் தெரியவில்லை, பெயரும் சொல்லப்படவில்லை. அதனால் "நெத்தி நெத்தி" என்று கூறப்படும் ஆத்மா, பிரம்மம், நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியாது. அழகான படிமங்களில் அந்தத் துணைவனின் கூற்றும் துணைவியின் துயிலும் வடிக்கப்பட்டிருக்கின்றன.

துணைவி துயில்கின்றாள்!
குயில் இருந்து குரல் வழங்க
இசை பொழிவாள்;
எழும்பாளாம்.

உறக்கம் உள்புகுந்து
குயிலைத் துரத்திவிட்டுக்
குறட்டை கிளப்புகுது.

சட்டியெங்கும்
ஒட்டியுள்ள அமிழ்த்மெல்லாம்
நாய்
நக்கி நக்கி நீர்வடிக்க
ஒறுவாயால் ஒழுகுது!

அவை அருமையான படிமங்கள். ஆழமும் அப்படியே. வித்யா மாயை (குயில்) அவித்யா மாயையாய் (உறக்கம், நாய்) உறங்கிக்கிடக்கிறாள். அது அறியாமையின் நிலை. அந்த நிலையில் அவனை எழுப்புவது கஷ்டந்தான். ஊற்றுக்கண்ணின் பார்வை கிட்டுவதும் அரிதுதான். அறியாமை ஆணவத்தின் காரணம். பார்வையை மறைக்கும் தூக்கம் பாறையாய் வளர்ந்துவிடுகிறது. "திறந்தது" என்ற இன்னோர் கவிதையில் அந்தப் பாறையை இன்று எப்படி உடைக்கவேண்டியிருக்கிறது என்று காட்டுகிறார். படிமங்களும் குறியீடுகளும் காலத்து ககு ஏற்றவை, காலத்தின் தேவையைக் காட்டுபவை. கோயில்களில் தேங்காய் உடைப்பது பழைய காலத்துக்குரியது. அதுவே இன்றைய மலட்டு ஆசாரத்தின் சின்னமாகவும் யந்திர ஆணவத்தின் அறிகுறியாகவும் மாறிவிட்டது. இன்று பாறையை வெடிவைத்து உடைக்கவேண்டும். சமூக மாற்றமும் அப்படியேதான்.

தடுத்துக் கிடந்த பாறையில்
துளை குடைந்து
மருந்தினை இட்டுத்
தரியினில்
நெருப்பு வைத்தனன்!
சிதறிற்று பாறை!
கண்,
திறந்தது ஊற்று!

காலம், சூழல் என்பவை தா.இராமலிங்கத்திடம் எழுப்பும் திருப்தியின்மையையும் அது அவரிடம் பிறப்பிக்கும் பார்வையையும், கோரும் மாற்றத்தையும் புரட்சியையும் எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றில்லை. அது அவரவரின் பார்வையைப் பொறுத்தது. ஆனால் அதற்காக தா. இராமலிங்கம் தன் பார்வைக்கேற்ற உருவ அமைப்பையும் அழகிய படிமங்களையும் குறியீடுகளையும் கொடுத்துக் கலை செறிந்த கவிதைகள் பலவற்றை உருவாக்கியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. பழைய யாப்புமுறைகளில் மாற்றத்தை விரும்பாதவர்ககூட தா.இராமலிங்கத்தின் "புதுமெய்க்கவிதைகள்" வைத்திருக்கும் அழகையும் கவிதைத் தரத்தையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். "காலன்" என்ற ஒரு கவிதையே போதும் அவரின் திறமையைக் காட்டுவதற்கு. உணர்வும் உள்ளடக்கமும் உருவமும் ஒன்று திரண்டு எடுக்கும் மனத்தை முட்டிமோதும் படிமங்களின் உதவியால் காலன் வருவதை அவர் காட்டும்போது, 'அயல்வந்து சேர்ந்துவிட்டான்" என்று அவர் கூறும்போது நாமும் நம்மை அறியாமலே தலையைக் குனிந்து தப்பிவிட முயலும் ஒர் நீலைக்கு மாற்றப்பட்டுவிடுகிறோம். 3டி படம் பார்க்கும் ஓர் நிலை. அடுத்த கணம் "பல்நூறு மைல்களுக்கப்பால் போய்விட்டான்" என்று தெரியும்போது ஒரு பெருமூச்சுத் தன்பாட்டில் எழுகிறது. அதோடு ஆச்சரியத்தோடு அதே மூச்சில்தான் கவிதையும் முடிகிறது என்பதையும் கவனிக்கிறோம் - அப்பாடா.

இராமலிங்கத்தின் பல கவிதைகளில் சங்ககால இலக்கியங்களின் சாயலைக் காணலாம். ஆனால் புதுக்கவிதைகளுக்கு எதிராகச் சிலர் வேண்டுமென்றே கஷ்டமான சொற்களைப் பாவித்துப் பழம் பாடல்களை நினைவூட்டும் நோக்கத்துடன் எழுதும் சாயல் அதில் இல்லை. மாறாகச் சங்ககாலக் கவிதை முறைகளைக் கையாண்டு இக்கால நிலைக்கேற்ப இயல்பாக எழுதும் ஓர் போக்குத்தான் நிற்கிறது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் பழைய இலக்கியங்கள் புதிதாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தபோது புதிய தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் ஓர் பாதிப்பையும் அவை தவிர்க்க முடியாமல் ஏற்படுத்தியிருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே அடையவேண்டியிருக்கிறது. ஏனோ குறிப்பிடத்தக்க வகையில் அப்படி ஒன்றும் ஏற்படவில்லை. மேல்நாட்டில் புதுக்கவிதைகள் எழுதத்தொடங்கிய பின்தான் தமிழிலும் புதுமுறைக் கவிதைகள் எழுந்தன. ஆனால் இராமலிங்கத்தின் கவிதைகள் பழைய இலக்கியங்களே. புதிய காலத்துக்கு ஏற்ற வகையில் அவரைக் கவிதை எழுதத் தூண்டியிருக்கின்றன என்று நினைக்குமளவுக்கு நம் பழைய இலக்கியத்தின் ஆதிச்சக்தியை (Primitive force) கறத்தெடுத்து, திறந்து காட்டி நிற்கின்றன. நம் நாட்டுக்கேயுரிய, நம்மவர்களாலேயேமட்டும் செய்யக்கூடிய ஒன்றுபோல் தனித்தன்மை பெற்றுக் காலத்துக்கேற்ற வகையில் தெரிகின்றன.

பனைமரத்தை
மரங்கொத்தி துளைக்கிறதே!
நேற்றுக் கன்றீன்ற மாடு
மடியினைக்
காகம் கொத்தித்
துவாலை இறைக்கிறது!

பனங்காயை நாம்பன்
பிய்த்துத் தின்னுது!

இவைபோன்றவை நம் பழைய தமிழ் இலக்கியங்கள் காட்டும் இறைச்சிப்பொருளுக்குக் கொடுக்கப்படும் புதிய வார்ப்புகள். அதேபோல் கவிதைகளில் கறியீடுகளும் நிரம்பித் தெரிகின்றன. "பிரயாணம்" என்ற ஒருசிறு கவிதை முழுச்சமூகத்தையும் அங்கு நடக்கும் வகுப்புப் போராட்டங்களையும், ஏறுவதையும் இறங்குவதையும் எவ்வளவு அழகாகக் காட்டிவிடுகிறது. புகைவண்டி சமுதாயத்தைக் குறிக்க அருமையாகப் பொருந்தும் ஒர் குறியிடு. முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்பவை புகைவண்டியில் இருப்பதுபோல் சமூகத்தில் இருப்பதும் நினைவுக்கு வரும்போது கவிதை இன்னும் அதிகமாகச் சுவைக்கிறது. "வேண்டாம் நிறுத்திவிடு", "உதிர்வன சிற்சில", "புகை" என்பன வேறு உதாரணங்கள். நினைவோட்ட நடையில் அவர் எழுதியிருக்கும் "பலி" என்ற கவிதை அவருடைய ஒரு தனி வெற்றி. சோமசுந்தரப் புலவரின் "ஆடு கதறியது" காலத்துக்கேற்ற வகையில் உருவமும் குரலும் மாறிக் கதுறுகிறது. அதேபோல் என்ரை, இப்பானே, பார்க்கினம், இறங்கூது என்று வரும் கொச்சைச்சொற்கள் வேண்டுமென்றே சுய உணர்வுடன் அவர்செய்யும் மாற்றத்தைக் காட்டுகின்றன. கலையையும் கூட்டுகிறது. யாழ்ப்பாணத்துக்கேயுரிய சொற்றொடர்களையும் படிமங்களையும் அதிசயிக்கும்வகையில் அவர் கையாள்கிறார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது தன் காலத்தையும் சூழலையும்பற்றி அவருக்கிருக்கும் பார்வைக்கேற்பவே அவருடைய கவிதைகளும் உருவ அமைப்புப் பெறுகின்றன என்பதை உணரமுடியும். திருப்தியின்மையும் அது உருவாக்கும் தேடலும், அதனால் பழைய யாப்பு முறைகள் அத்தனை இருக்கும்போது இப்படி ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி அனாவசியமாகிவிடுகிறது. அவர் எழுதியவை கவிதைகளாக நிற்கின்றனவா? ஆசிரியரின் நோக்கமும் உணர்வும் கவிதைகளாக வடிக்கப்பட்டிருக்கின்றனவா? அப்படி வடிக்க அவர் கையாளும் உருவ அமைப்பு உதவுகிறதா? அவைதான் கேள்விகளாக இருக்கவேண்டும். அவற்றுக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கும்போது அதை பொருட்படுத்தாமல் பழைய யாப்பு முறையைப்பற்றி குரல் எழுப்புவது வெறும் வித்துவச் செருக்கைத்தான் காட்டும். ஆனால் அதற்காகப் புதுக்கவிதைகளின் வெற்றி யாப்புமுறைக் கவிதைகளுக்கு இனி இடமோ தேவையோ இல்லை என்று குறிப்பாகக் கருதக்கூடாது. அதேபோல் எல்லாப் புதுக்கவிதைகளும் இனி வென்றுவிடும் என்று சொல்வதற்குமில்லை. யாப்புமுறைக்கவிதைகளம் சரி, புதுக்கவிதைகளும் சரி வெல்வதும் தோற்பதும் அவை எந்தளவுக்கு உண்மையான கவிதைகளாக நிற்கின்றன என்பதைப் பொறுத்தே இருக்கின்றது. எங்கும் இருப்பதுபோல் தா.இராமலிங்கத்தின் தொகுதியில் தோற்றுவிட்ட கவிதைகளும் உண்டு. "தாலாட்டு" ஓர் உதாரணம். தாலாட்டுப் பாடல்கள் அவற்றின் நோக்கம் காரணமாய் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியவையாய் இருக்கின்றன. எனவே அந்தத்துறையில் புதுக்கவிஞர் ஈடுபடும்போது தன் நோக்கத்துக் கெதிராகப் பேரம் பேசவேண்டியவனாய் மாறிவிடுகிறான். அந்நிலையில் அங்கு தேவைப்படும் கருத்துக்களில் அவன் புரட்சி செய்யவேண்டும். அதை இராமலிங்கம் செய்யவில்லை. பழைய கருத்துக்களையே அவர் கையாள்கிறார். அதனால் கவிதை தோற்றுப்போவதோடு அந்தத்துறையில் பழைய ஓசைமுறை எத்தனை அவசியமானது என்பதையும் காட்டிவிடுகிறது. கவிஞர் தன் புதிய கருத்துக்களைப் புகுத்துவதற்கும் புதிய பரம்பரைக்குப் புரட்சியான கருத்துக்களைப் போதிப்பதற்கும் "தாலாட்டு" என்ற கவிதையை அருமையாகப் பாவித்திருக்கலாம். மாமன், மாமி, சித்தப்பா என்போரைப் புதிய கோணத்தில் காட்டிச் சமூகத்தைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால் அப்படியொன்றும் செய்யாமல் மற்றக்கவிதைகளில் தன் ஆழமான பார்வையைக் காட்டிய கவிஞர் "நீ நானே, நான் நீயே" என்று ஒன்றோடுமட்டும் நிறுத்திவிடுவது ஆச்சரியமாகவே இருக்கிறது. இருந்தாலும் அத்தகைய குறைகள் மிகச்சிலவே. அவற்றைப் பெரிதுபடுத்திப் பார்க்கக்கூடாது. ஒரு கவிஞனின் எல்லாக் கவிதைகளும் வெற்றியளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இயற்கையே அப்படித்தானே? "முதிர்வன சிற்சிலதான்." இராமலிங்கத்தின் கவிதைகளில் உதிர்வனதான் சிற்சில.

கடைசியில் "பொன்மீன்" தேடிப்போக "ஓட்டில் கதிர் உதிக்கும் நண்டு கிடைத்துளது" என்று தன் கவிதைகளைக் காணிக்கையாகத் தரும் தா.இராமலிங்கம் தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லித் தந்தாலும் நாம் எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாகவே தந்துவிடுகிறார். ஒட்டில் கதிர் உதிக்கும் நண்டு வீட்டுக்குள் பேணி வைக்கப்படவேண்டிய ஒன்று. தில்லை நண்டு.

மு.தளையசிங்கம்.
94, வரக்காத்தொட்ட வீதி,
இரத்தினபுரி,
18.7.65காணிக்கை


குஞ்சு திரளாதோ?


சட்டி நிறை கஞ்சி
நக்கி உணல் முடிய
நாயேன் கழிக்கின்ற காலம் மிகப்பெரிது!
முந்நூறை நோக்குகிறேன்
மூன்றில் ஒன்றைப் பாய்ந்திடனோ?
கூழ்முட்டையாகிப் பாழ்பட்டுப்போகாமல்
குஞ்சு திரள்கின்ற மெய்யுடல் ஆக்கேனோ?

உள்ளம் பொழிமழை
உவருடல் தேங்கினால்
உப்பு விளையாமல்
வேறென்ன ஆகும்?

ஒளிகூரக் கூர
சூடேற ஏற
நன்று திறனோடு
குஞ்சு திரளூது!


கடைத்தினி வேண்டாம்

இல்லை சுரக்க
வண்டு துளைக்கும்
முலை பூத்த கன்னி
இதழ் விரித்துச்
செந்நா சுரக்கின்ற
தேனுறிஞ்ச
அரும்பு மீசை கறுகறுக்கும்
பேர்உடலைப் பெற்றிடலாம்
கடைத்தீனி வேண்டாம்
சத்துணவு உட்கொள்வாய்!

அப்படியா?
பால் பழங்கள்
பனாட்டு ஒடியற் பிட்டு
செவ்வரிசிக் கஞ்சி
உயிர்ச் சத்துப் பொருள் யாவும்
உண்டிடுறேன் இன்றுதொட்டு!


பாரச் சுமை

ஒளியூறி இதர்மலர்ந்து
மணம்வீசித் தேன்சுரந்த
கன்னிமலர்
மொய்த்த வண்டின்
பாரச்சுமை ஏறி
ஒடிந்துலர்ந்து போயிற்று!


முதிர்வன சிற்சில!

தென்னம் பாளையுள்
கள்ளுத் தேங்கிய
அடர்த்திய
பல்நூறு பல்நூறு மொட்டுகள்!
மூடிதிறந்தது :
பூவிலே உதிர்ந்தன ஆயிரம்
பிடித்த குரும்பட்டியில்
விட்டன வீழ்ந்தன
குரும்பை திரண்டு
கோதின வீழ்ந்தன
முட்டுக்காய் தப்பி
முதிர்வன சிற்சில!


விளக்குமாறு என்ன செய்யும்?

குடுக்குது! கால் கடுக்குது!
குப்பையில் இருந்த பூச்சி
குத்திப் போட்டுது!

பழுத்த இலைகள்
உதிர்ந்து விழுந்தது
குடிசை முற்றத்தில்
குப்பை நிறைந்தது!
விளக்கு மாறு
உள்ளன உண்மைதான்.
காலையில் ஒருமுறை
கூட்டி ஆயிற்றே
எத்தனை முறையென்று
கூட்டித் துலைப்பது!
ஏணையில் ஒரு குழந்தை
இடுப்பினில் ஒரு குழந்தை
சீலையில் பிடித்துக் கொண்டு
சிணுங்கூது ஒரு குழந்தை!

வேலையில் அமிழ்ந்து போனேன்
விளக்குமா றென்ன செய்யும்?


சிறு வரம்பு

பெய்த மழைவெள்ளம்
சிறுவரம்பு மீறிக்
குளப்பள்ளம் வழிந்தோட
மூளும் வெயிலினிலே
வயலில்,
நீர் காய்ந்து
நிலம் வறண்டு
பயிர் சுருண்டு
சாகிறது!


புகை

கண்ணாடி மூடியெங்கும்
கைவிளக்கின்
எரிசுடர் தள்ளும்
புகை மண்டி
அகமெங்கும்
ஒளி குன்றிப் போயிற்று!


மதிப்பில்லை

முள்ளுத் தோலுக்குள்
குந்துக்குள்
முளைத்த பலாச் சுளைகள்
முற்றிப் பழுத்து
பணம் வீசிக் கமழப்
பறவை வந்து கொந்துகுது!
சந்தையிலே இனி இதற்கு
மதிப்பில்லை! விலை மலிவு!


திறந்தது

ஊற்றினைக் காணத்
தோண்டிடக் கிணறு
தடுத்துக் கிடந்த பாறையில்
துளை குடைந்து
மருந்தினை இட்டுத்
திரியினில்,
நெருப்பு வைத்தனன்!
சிதறிற்றுப் பாறை!
கண்,
திறந்தது ஊற்று!


** இதன் தொடர்ச்சி kanikai1.mtf ல் வருகிறது**


சாம்பல் புதையுண்ட** kanikai1.mtf ன் தொடர்ச்சி**

கலக்கம்

செத்த பகலின்
சடலம் எரிமூட்டி
விட்டகன்றார் விண்வெளியில்!
சாம்பல் புதையுண்ட
செந்தணல்கள்
காற்றில் மினுங்கூது
நள்ளிரவு!
எங்கேயோ போகின்றாய்
கூறு!

கால்போற திக்கில்
வழி போறன்
கலக்கம் ஒழியட்டும் என்று!

பிரயாணம்

புகைவண்டிப் பிரயாணம்
ஏறுகிறார்
இறங்குகிறார்!
முன்னேறி இடம்பிடித்தோர்
கால்நீட்டிப் படுத்துள்ளார்!
பின்னேறிச் சேர்பவரோ
நின்று நெரிகின்றார்!
புகைவண்டிப் பிரயாணம்
இறங்குகிறார்
ஏறுகிறார்!


வேண்டாம்! நிறுத்திவிடு!

முடக்கும் சரிவுகளும்
செறிந்த மலைவழியில்
கண்ணிழந்த கார்இருட்டில்
நெஞ்சிடிக்க ஒட்டுறியே!
வேண்டாம் நிறுத்திவிடு!
உச்சிமலை சேர்வதற்கு
வேற வண்டி
பார்த்திடலாம்
வேண்டாம் நிறுத்திவிடு!


ஏனோ?

அவன் மேனி குத்தும் அம்பு
என் உள்ளம் கிழித்து ஏகும்
நட்பு ஏனோ கருகிப் போச்சு?

மருந்தெனக் கள்ளை ஊட்டத்
தலை
முட்டிய வெறியினாலே
அவன்
கூர் மின்னும் கத்தி கொண்டு
என்
மனதினை ஓங்கிக் குத்த,
வேதனை கொப்புளித்து
வெள்ளம் வழிந்தோட,
வள்ளுவன் தந்துசென்ற
மருந்துகள் இட்டுமாற்ற,
ஆறிய இடத்தில்
ஏனோ
கட்டிற்றுக் குளவி கூடு?
அவன் இடர் கண்­ர் தன்னில்
தேன்
உண்டிடும் விந்தை என்ன?

நுகர்ச்சி

வாசல்,
திரை இட்டு
வழி அடைத்து,
பச்சைப் பகலினிலும்
கொட்டகை இருட்டேற்றித்
திரைப்படம் பார்க்கிறம்!
சரிக்கிறம்! அழுகிறம்!
கொதிக்கிறம்! குமுறுறம்!


தேடல்

மின்னல் இடி ஓய்ந்து
கொள்ளி பூத்த
வெள்ளை இரவில்
கண்ணில் இருள்நீங்க
விண்ணிற் சுழியோடி
அடி தேடுறன்!
அடி தேடுறன்!


இன்பமும் துன்பமும்

அரும்புமொழிக் குழந்தை
தாய் மடியில் வீற்றிருந்து
மார்பைப்
பிஞ்சுவிரலாற் பினைஞ்சு
பால் பருக,
வயிறு முட்டி
வாய் வழிய,
பல்முனையால்
முலைக்காம்பு சப்பிவிட,
மிகநொந்து
சுட்டு விரல்
கன்னம்
சுண்ட எழ,
பால் தோய்ஞ்ச பழச் சிரிப்பைக்
குழந்தை
தாய் நோக்கி வழங்கிவிட,
கை அடங்கித்
தாய்,
பொழிகின்ற முத்தத்தில்
முக்குளிச்சுக்
குழந்தை அழும்!


கருணை!

கடல்சூழ்ந்த வயற்பரப்பு!
நிறைமாதக் குடலையுடன்
நீர் காய்ந்து
நா வறண்ட
கன்னியர்கள்!

வானம் வழங்காட்டில்
இன்னும் சிலநாளில்
உடல் வெந்து போவார்கள்?
பொன் மகவு ஈண்டு
பொன் மகவு ஈன்று
பொன் மேனி வரப்பெற்ற
புகழ் வாழ்வும் கிட்டாது!

கருணை கொண்டு
கடற்பரப்புப் பொங்கியது
வெண்பல் வரிசை எலாம்
முற்றும் வெளிக் காட்டிச்
சிரிக்க முக்தோடு
வயலெல்லாம் தாவியது!

அடுத்தநாள், கன்னியர்கள்
பிள்ளை வயிற்றோடு
பிணமாய்க் கிடந்தார்கள்!


எப்ப விடியும்?

துணைவி துயில்கின்றாள்!

குயில் இருந்து குரல் வழங்க
இசை பொழிவாள்;
எழும்பாளாம்!

உறக்கம் உள்ப்புகுந்து
குயிலைத் துரத்திவிட்டுக்
குறட்டை கிளப்புகுது!


பொழுதும்
போகாதாம்!

சட்டியெங்கும்
ஒட்டியுள்ள அமிழ்தமெல்லாம்
நான்
நக்கிநக்கி நீர்வடிக்க
ஒறுவாயால் ஒழுகூது!

நாறுகுதே!

எழுப்பினேன்
என்ன? என்றாள்.

துயில் புகுந்து
நக்கியது!
எழும்பு! கழுவு! என்றேன்.

விடியட்டும்
விடுங்கள் என்றாள்.

எப்ப விடியும்?
இப்பானே
முதற்கோழி கூவுகுது?


அனுபவம்

மாடு செத்தது
உண்ணிகள் கழன்றன
வீடு வெளிஎலாம்
ஓடி இருண்டது!

கும்பிட்ட கைகள்
அதட்டிக் குறிகாட்ட
வாயுள் துணி திணித்துக்
கால்கை வரிந்துகட்டி
மூலையில் போட்டுவிட்டார்!

பெட்டிதான் போட்டென்ன?
தொட்டமாய்க் சாயம் போக்கி
இழைஎலாம் இற்றுப் போச்சு!

இருளட்டும்! இருளட்டும்!
இருண்டாற்தான்
வானத்து வெள்ளிகளை
ஊனக்கண் கண்டுகொள்ளும்
மூன்றாம்பிறை முகத்தில்
ஒளிஏற்றி உடம்மாய
மூடிய திருக்குறள்
முழுதும் விரியுது
மூடிய திருக்குறள்
முழுதும் விரியுது!
பெட்டி போடுதல் - உடை மினுக்குதல்.


கழுவுவார் எவருமில்லை

போக்கு வரத்து
மிகுந்த பெருந்தெருவில்
எழுப்பிவிட,
நிலைக்கிறது நெடுங்கல்லாய்
நினைவுச் சின்னம்!
பொறித்த பூவெழுத்தெலாம்
பாசியிலும் தூசியிலும்
மறைந்துளதே!
கல்லோடு கல்லாய்க்
கணிக்காது நோக்குகிறார்
மிகச் சிலரே
கழுவுவார் எவருமில்லை!


செந்தா பொரிக்கிறது!

சிந்தையொடு
காமம் புணர்ந்து
கருவுறும் செந்தா
நொடிக்கு நொடி
நூறாயிரம் குஞ்சு பொரிக்கிறது

தினந் தேடிப்
பிணந் தின்னும்
காக்கைதான் இடமெங்கும்!

இடா தீர
இசை பாடும்
குயிற் கூட்டம்
கொஞ்சந்தான்!


காலன்!

அய்யய்யோ
காற்றடிக்கிறதே!
பல்நூறு மைல்க்கப்பால்
காலன் கடுகதியில்
தேர்ஒட்டி வருகின்றான்
பனைமரத்தை
மரங்கொத்தி துளைக்கிறதே!

புயல் வந்து மோதுகுது
அயல் வந்து சேர்ந்துவிட்டான்!
அயல் வந்து சேர்ந்துவீட்டான்!
அய்யய்யோ
பனைமரத்தை
மரங்கொத்தி துளைக்கிறதே!
பனைமரத்தை
மரங்கொத்தி துளைக்கிறதே!

இமைகளை அடித்துச் சாத்தி
மூச்சுப்பேச்சு ஒடுங்கி நின்று
இடைநீக்கி எட்டிப் பார்க்க.......

காற்றடிக்கிறது!
காலன் கடுகதியில்
பல்நூறு மைல்க்கப்பால்
போய்விட்டான்
அப்-பா-டா!


கேட்டிலோ பற்று?

பாட்டனார் கட்டினார்; இன்று பழங்குடிசை;
சுற்றிலும் புற்று; சுவரெல்லாம் எலிப்பொந்து;
எப்படி வேய்ந்தாலும் கூரை ஒழுகூது;
குந்தி இருந்து நைந்து நடுங்கிறன்!

என்ன மடமை!
பொல்லாப்புப் பூசி மெழுகுவது ஆபத்து!
கேட்டிலோ பற்று? இதிலோ குடியிருப்பு?
கட்டிடு புதியது!
விட்டிடு பழையது!


பரிதாபம்

குடத்து நீரிலே
முகத்தைப் பார்க்கினம்
பரிதாபம்
என உளைத்து
உணர்வு அகழ்ந்தெடுத்த
உணர்ந்தவைக் கனிப்பொருள் கொண்டு
கண்ணாடி ஆக்கினன்!

"வேசி ஒருத்தியை ஆயினும்
கூட'ணும்" எனத்
துடிச்ச ஓர் வாலிபன்
கண்டனன்.

பாசி படர்ந்து
வீழ்நீர்
நூல் விடுகின்ற
தன்
பற்களைக் கண்டு
பதைத்தனன்!

கண்ணாடியுள்
வேறொருவன்
என வெருண்டனன்
தூக்கி எறிந்தனன்! துப்பினன்!

துடிப்புடன்
வேசியைக் கண்டு சிரிச்சவன்

காசினை அள்ளிக் கொடுத்தனன்
பற்களைக் கண்டு விலகியே
பணத்தினை,
முகத்தினில் வீசி எறிந்தனள்
வெளியினில் அவனை விரட்டியே
கதவினைச் சட்டெனச் சாத்தினள்!


தாலாட்டு

நான்நீயே நீநானே
நீதானே நான்நீயே!
பேந்தேன் அழுகின்றாய்!
பிச்சை அருளாயோ?
பல்லாண்டு இராப்பகலாய்
நினைந்துருகிப் பெற்றமல்லோ!
பசியால்உன் வாய்அசைந்தால்
என்
பாசம் உருகிப்
பாலாய்க் கசியுமல்லோ!
ஐயா உனை அள்ளி
நெஞ்சின் அருவியிலே
அணைத்து
உவந்தாட்டிக்
குஞ்சு உறுப்பெல்லாம்
கொஞ்சி மகிழ்வரல்லோ!
சின்ன அழுகை ஒன்று
சிந்தி விடுவாயேல்
சிரித்துக் கதை சொல்லச்
சிற்றன்னையார் சூழ்ந்து நிற்பர்.
பூச்சிபுழுக் கண்டால்
கீச்சிட்டு விட்டாயேல்
தடிகொண்டு மாமன்மார்
ஓடோடி வந்திடுவார்.

பேர்த்திமார் உள்ளார்கள்
வெறும்பாச்சி காட்டி உன்னை
ஏமாற்றிச் சிரிப்பாரேல்
பேரன் இருக்கின்றார்
கண்டித்துப் பேசிடுவார்.
கெஞ்சி இரக்கின்றேன்
கொஞ்சம் உறங்கிடுவாய்!
உனைவிட்டு நான் அகலேன்
நம்பி உறங்காயோ?

நான்நீயே நீதானே
நீதானே நான்நீயே!


விளைநிலம்

முழங்கால்வரை மறைக்கும்
வரம்புண்டு
நிலவு பொழிவதெல்லாம்
உறிஞ்சி உறைந்துளது
உவர்ப்பு நிலம்!

பச்சை தலைகாட்டாப்
பாழ் நிலம்
என வெறுத்து
விதைத்தவனோ விட்டுவிட்டான்.

புழுதி பறக்க
உழுது,
நிறக்க
எருவுமிட்டு
விளை நிலம் ஆக்க
இனி வழி இலையோ?

விதைப்பதற்கு
வேறொருவன் மனம் வைத்தான்
உமிகொட்டி
எந்திரக் கலப்பையாலே
உழுது பண்படுத்தி
விதைக்கலானான்
பயிர் முளைத்துக்
கருகிப் போச்சு!

சூழ்ந்துள்ள வயல்களிலே
சிரிக்கின்ற பச்சை பார்த்துப்
பொருமுகுது வெறுநிலமோ!
உடல் கழன்று
உவர்நீர் வழிந்தோட
உழைக்கலானான்
பயிர் முளைத்து
அடி பெருத்துச்
சிரித்துச் செழிக்கிறதே!


கோடை வெயில்

அடிபட்டுப் பாம்பு
அரைய முடியவில்லை
கொத்தச் சீறுகுது!
ஏனோ? ஏனோ?
என்ரை உடம்பென்ன
இரும்பாலே ஆனதுவோ?
நாளைக்கு,
நானும் நடுத்தெருவில்
மாந்தர் மனங்குமுற
மணிஇலையான் மொத்துவிழச்
செத்துக் கிடப்பன்!
இரத்தக் கொழுப்பில்
எவ்வளவு,
அநியாயம் செய்திருப்பன்!
கோமைவெயில் உச்சிஎய்தின்
அடிமிரிக்க முடிந்திடுமோ?
வேர்த்து விரைந்தோடி
உயிர்உறிஞ்சி உயிர்வாழும்
சாவின் நிழலினிலே
ஒதுங்கி இருப்பதுவோ?
பயம் வந்து
முன்கழுத்துச் சட்டையிலே
அழுங்குப் பிடி பிடித்து
ஒரு உலுக்கு உலுப்பிவிட
உதறுகுது உடம்பெல்லாம்!
உதறுகுது உடம்பெல்லாம்!

குடிப்பது கடக்கணக்குப்
புகைப்பது கட்டுக்கட்டுச்
சாக்கடை உணர்ச்சி தேங்கிப்
புழுக்குது புதுக்கிருமி!

அமாவாசை இருட்டெய்தி
மனிதகுலம் அருகிவிட
அணுக்குண்டு தேவையில்லை
அணுக்குண்டு தேவையில்லை!

விடுகாலியாய்த் திரிந்து
கரையுது கொழுத்த மாடு!
எடு கயிறு!
தடம்போட்டுப் பிடித்தடக்கு!
நலம் புதுக்கு!
நாணம் குத்து!
நுகம்பூட்டி வழிப்படுத்து!
சமுதாயம் நன்மையுற
நிலம்உழுது பண்படுத்து!


தேவலோகம் சேரவேண்டும்!

சிந்தை விரைகிறது
நிற்கின்ற நிகழ்காலம்
எதிர்நோக்கி ஓடுகுது!
வண்டி விரைகிறது
நிற்கின்ற மரவரிசை
எதிர்நோக்கிப் பறக்கிறது!

தேவலோகம்!
அங்கு காமதேனு,
பிணிகள் விரட்டும்
அமுதசுரபி!

அங்கு கற்பகதரு
கணம் ஓயா!
ஆய ஆயக்
கனிகள் குவியும்!

நித்திரையில்
கடைவாயில் குறைச்சுருட்டு!
தினந்தோறும்
வயிறுமுட்டக் கள்ளுவாப்பு!
* * *

கன்னி வயிற்றில்
கள்ளப் பிள்ளை
கரைத்தற்குக் காசில்லை.
பிறக்கிறது பெண்குழந்தை
பேந்துமென்ன?
அரையினிலே ஆடையினை
வரிந்துகட்டி
அன்னையும் கன்னியுமாய்
அடுப்புத் தின்ன......
உள் உளுத்துப் போனோம்
பச்சை உடம்பெல்லாம்
உயிரோடு வைத்துத்
தீமூட்டி வதைக்கின்றோம்.

வலிச்சல் மாடு!
வாலை முறுக்கி என்ன?
பிரச்சினை மேல்மேலாய்
மேற்பாராம் கட்டிவிட்டோம்
புதைமணலில் சில்லெடுத்து
மேனி இளைத்துவிட்டோம்
நின்ற நிகழ்காலம்
சற்றும் பெயரவில்லை
இந்த லோகம்
நீங்க வேண்டும்!

* * *

சிந்தை விரையட்டும்!
நிற்கின்ற நிகழ்காலம்
எதிர்நோக்கி ஓடட்டும்!
தேவ லோகம்
சேர வேண்டும்!
வண்டி விரையட்டும்
நிற்கின்ற மரவரிசை
எதிர்நோக்கிப் பறக்கட்டும்!


1. பலி

*

2. தூக்கட்டும் தூக்கட்டு ம!

*

3. சிலை எழுப்பி என்ன பயன்?


பலி

நேற்றுக் கன்றீன்ற மாடு!
மடியினைக்
காகம் கொத்தித்
துவாலை இறைக்கிறது!
பாவம்!
வாயில்லாச் சீவன்
சுற்றிவரக் காகம்.
எழும்பு!
ஒன்று பிடி! கொல்லு!
செட்டை உரி! தூக்கிவிடு!
பால் கறக்க முடியாமல்
பாழ்பட்ட காகம்
அநியாயம் பண்ணுகுது!

யார் உதவி எங்களுக்கு?

தாலிதான் பேருக்குக்
கழுத்திலே தொங்குகுது
பெற்ற பொழுதே, மகளே,
உன் தகப்பன்
விட்டுவிட்டு ப போய்விட்டான்?

நான் பட்ட பாடு!

கொதித்துப்
பொங்கி எழும் பாலை
உலைமூடி என்ன செய்யும்?
அகப்பையாற் துழாவி
அடக்கி நான் ஆறிவந்தன்.

வயிறுகட்டி வாய்கட்டி
ஆடியாடி அச்சுலக்கை
ஈடாடிப் போச்சு!
குப்பை மயிர் கொட்டுண்டு
குரும்பட்டி என் குடும்பி!

நான் பட்ட பாடு!

பெரியபிள்ளை ஆனாய் நி!
ஆபத்து நெருப்பு என்றார்.
ஓலைக்குடிசை!
பொறிபட்டால் போதும்,
கோடை வெயிலில்
மிளாசி எரியுமென்றார்.

ஓர்இரவு நள்யாமம்:
வீட்டுக் கோடியிலே
மெதுவாய் அடிவைத்தல்
கேட்டுநான் போய்ப் பார்க்க,
பனங்காயை நாம்பன்
பிய்த்துத் தின்னுகுது!

இனிக் காவோலை காற்றில்
சல சலத்தாலும்
கண்ணுறங்க முடியாமல்
கலங்கி யெழல் வேண்டுமெனப்
பெருமூச் செறிந்து

சுருங்க வழியில்,
வரன் தேடிக்
குறுக்குவழி நடந்துவிட்டன்;
இறந்துவிட்டாய்!
என் மகளே,
சாகும்போது என்னைச்
சபித்துப் புலம்பினையோ?

முதல் இரவு:
மெய்ப்புகழ்ந்து மெய்தொட்டு
நாணம் உரித்துவிட்டுச்
சுளை தின்னத் தெரியாது,
கசக்கும் என அறியான்
தோலோடு சப்பிவிட்டான்!

பூட்டைத் திறப்பதற்குத்
திறப்பினைத் தேர்ந்தெடுக்கான்
இடித்துப் பிளந்துவிட்டான்
இரத்தம் கசிந்ததம்மா!

மறு இரவும்
முதல் இரவின் துன்பியல்தான்
தொடர்ந்து நடந்ததுவே!

என்ன அநியாயம்!
கொத்திய புண்மீது
மீண்டும்,
கொத்துவதோ காகம்!
எழும்பு!
ஒன்று பிடி! செட்டை உரி!

அய்யோ!
துடி துடித்தாள்!
பெரும்பாடு இறைக்காதோ எனப்
புலம்பித் தவங் கிடந்தாள்.
ஓமக் கிடங்கில் தீ
சுவாலைவிட்(டு) எரிகிறதே!
ஓமக் கிடங்கில் தீ
சுவாலைவிட்(டு) எரிகிறதே!

சீலையிலே படிந்த
இரத்தக் கறை சாட்டாய்ச்
சூதகம் எனக் கூறி
மூலையிலே,
கரிக்கோடு கீறித்
தனக்கு
வேலி அடைத்தனளே!

மூன்றாம் நாள்:
மூடு பனி! எடு போர்வை! என்ன,
படு ஈரம்! உதவாது! என்ன,
முறுக்கிப் பிழி! சற்று விரி!
உலர்ந்துவிடும்! என்ன,

சம்மதிக்கவில்லை மகள்;
சண்டை தொடங்கிற்று!
என் மகளே,
சாகும்போது என்னைச்
சபித்துப் புலம்பினையோ?
புழுக் குத்தாப் பொன் மேனி
அணுவணுவாய்ப்
பிய்த்துப் பிடுங்குவதோ?

துள்ளாற் கன்றென்றும் பாராது
கடிநாய்,
விட்டுத் துரத்திப்
போட்டுப் பிடுங்குகுதே
சிக்! அடி நாயை!!

எங்களுக்கு யார் உதவி?

உயிர்வாழ முடியாமல்
இப்படியும்
அநியாயம் பண்ணிறதோ?


தூக்கட்டும்! தூக்கட்டும்

தூக்கட்டும்! தூக்கட்டும்
தூய்மை துலங்க - ஒரு
யுகம் பிறக்கும்!

கற்புக்கரசியாய்
வாழ் என்று வாழ்த்திச்
சிலப்பதிகாரமும்
சீதனம் தந்தார்!

பாத்தி பிடிப்பார்
அள்ளி இறைப்பார்
பிஞ்சு மாதுளை
வெள்ளை மணிகளில்
இரத்தம் பிடித்திடும்
பொதிந்த ஆசைகள்
முற்றும் பலித்திடும்
என்ற கனவுடன்
கைப்பிடித்தேகினேன்!

புகுந்து புதுமனையில்
கறந்த மனப்பாலைக்
காச்சி உறிஞ்சுதற்கு
ஈர விறகு தந்தார்.
புகைக்குடித்து உடுப்பூதிப்
புகைச்சூண்ட பால் குடித்தனன்!

காலம் கழிந்ததன்றிக்
கனவு பலிக்கவில்லை.
அரை வெறியில் வந்திடுவார்.
சுடுகுது சுடுகுது
மடியைப் பிடி என்பார்!
மின்னுவது போலிருக்கும்
பாட்டம் ஓய்ந்து
சிலுநீரும் சிந்திவிடும்
போய்விடுவார்!

பித்தம் மிகுந்துநான்
வாயுள் விரலோட்டி
வாந்தி எடுப்பமென்றால்
வீ­ர் வடிவதன்றி
வெப்பம் தணிவதில்லை.

யானைத்தீ நோய் போக்கப்
படலை பல திறந்தன்
மூலிகைகள் சேர்த்து
இடித்துப் பிழிந்தெடுத்து
நாள்தோறும் நள்ளிரவில்
நல்லமருந்து தந்தான்.
கள்ளப் புரியன் என்றார்!

கணவன் அறிந்துவிட்டான்!
மீசை துடித்துநின்றான்
கற்பெங்கே என்று
கஞ்சி வடிக்கலுற்றான்!

என்தன் பிணிநீங்க
இறைவன் வழிபட்டுக்
கற்பைக் கொளுத்திவிடக்
கற்பூரமாய் எரிந்து
காணிக்கை ஆனதென்றேன்?

வாய் முழுதும்
தணல் கொட்டி
அடைந்திடுவேன்!
ஊன் கொழுப்பு
அடக்கிடுவேன்!
என்று இரைந்தெழும்பக்
கள்ள இறைவனிடம்
காணாமல் ஓடிவிட்டன்.

நிரைமீட்பேன்! நிரைமீட்பேன்!
குறிசுட்ட மாட்டைக்
கொண்டேகப் பார்க்கிறியோ?
மடிவிட்டால் நாளை
பராமரிப்பு யார் பொறுப்பு?
என்று
உறுமி வந்தான்
ஓங்கிய கத்தியொடு!

ஓங்கிய கத்தியை உருவி எறிந்ததும்
திருகிய கைகளை முறுக்கி விலக்கியும்
முகத்தில் அறைந்து நிலத்தினில் வீழ்த்தி
நெஞ்சில் இருந்து நெரிக்க முயல்கையில்

ஓலமிட்டேன் நான்!
ஓலமிட்டேன் நான்!
ஓடிவந்தயல்
விளக்குப் பிடித்து வேலியால் பார்த்தது.
விலக்குப் பிடிக்க எவருமே வந்திலர்.
உலக்கை கிடந்தது!
வலக்கை துடித்தது!
உச்சந்தலை அடி
ஓங்கி ஓரே அடி!

விளக்கு உடைந்தது........
வெள்ளம் பாய்ந்தது......
ஊடுபத்தியே ஒளியும் அணைந்தது!
நாய்கள் படலையில் கூடிக் குலைத்தன
நெஞ்சில் மணிக்கூடு வேகமாய் ஓடிற்று!

அவன் கட்டிய தாலியை அறுத்தெறிந்தேன்
என் காதலன் மடியினில் கிடந்தழுதேன்
நீடிய சிறையினில் பட்ட துன்பம்
ஈடுசெய் இன்பம் தந்து விட்டான்

உயிரோடு ஊறியது
வாசம்
குடிபோக மாட்டாது

தூக்கட்டும் ! தூக்கட்டும்!

இந்தப் புண்ணிய பூமியைக்
கைகூப்பி விடை பெறுறன்!

* * *

சிலுநீர்: மழை ஓய்ந்தபின் மரஞ்செடி முதலியவற்றில் தங்கிநின்று சிந்துகின்ற சில்நீர்.
ஊடுபத்துதல்: 1. எண்ணை அற்ற நிலையில் நெருப்பு, திரிஎங்கும் ஓடிப் பிடித்தல்
2. எண்ணை அற்ற நிலையில், திரியில் நெருப்புக்கட்டிகள் தோன்றுதல்.


சிலை எழுப்பி என்ன பயன்?

மோதூது புயல்!
மூசி மூசி
மோதூது புயல்!

கொளுத்தக் கொளுத்த
விளக்கும் நூருகுது!

பெட்டியிலோ குச்சில்லை!

ஆராய்ந்து என்ன பயன்?
கிலுக்கினால்..........
வெறும் பெட்டி!
தடவினால்.......
குறங்குச்சி!

* * *

ஓடியுது! முறியுது!
நிலத்தோடு பாறுகுது!
ஒதுங்க இடமில்லை
ஓட வழியில்லை.
கோழி மூலைக்குள்
ஓடிப் பதுங்கூது
குஞ்சு செட்டைக்குள்
ஒடுங்கி நடுங்கூது!

* * *

கூடலாய்க் கொப்பெறிஞ்சு
பச்சைப்
பந்தலிட்ட ஆலமரம்
குறுக்காலே முறிஞ்சுபோச்சு!
அடிவாழ்ந்த குடும்பங்கள்
குடிபெயர்ந்து போயிற்று!

குடிபெயர்ந்து போயிற்றே!

* * *

II

தோட்டம் பயிரிட்டோம்
உள்ளதெல்லாம் அள்ளிஅள்ளி
இறைத்து வருந்துகிறோம்!

விளைந்ததென்ன?

வயிற்றிலே வளர்வதெல்லாம்
கூன் குருடு செவிடு முடம்
கனவிலே காண்பதெல்லாம்
சாப்பிள்ளை சவப்பெட்டி!

வலுவிழந்து போனோமே!

ஓடுகிற இரத்தமெல்லாம்
கெட்டு வெளிறிவிட்டால்.....

செத்த சவம்மீது
சிலைஎழுப்பி என்னபயன்?

III

வறளூது! வறளூது!
பாலைவனம் ஆகிறது!
குளப்பள்ள நிலமெல்லாம்
பிளந்து கிடக்கிறது!
நிலாவரையில் நீர்மட்டம்
இறங்கூது! இறங்கூது!
சுடலைக் குருவி
முகட்டில் அழுகிறது
நெஞ்சிலே பல்லி
அடித்துச் சொல்லுகுது!

* * *

மூக்கும் முழியுமாய்
வலிச்ச எலும்புருவம்
சுருண்டு மடிந்தனவே!

வெயில்வெந்து பனங்கூடல்
வட்டுதிர்ந்து போயினவே!

கறையானின் கடுமுயற்சியாலே
நிலம்எழுந்த கோபுரமோ
முடிஉடைந்தும் அடிபிளந்தும்
உருக்குலைந்து கிடக்குதுவே!

இனி என்ன? செத்த சவம்!
சிலை எழுப்பி என்னபயன்?

IV

உண்மை உணராமல்
உள்ளதெல்லாம் வாரி
உறிஞ்சியெழ விட்டிட்டு
மூன்றுகுறி பூசி
முணுமுணுத்து ஆவதென்ன?

யாழில் நரம்பு தொய்ந்தால்
இசை நாதம் எழும்பாது
கூடி இருக்கும் அவை
குலைந்து மறைந்து விடும்

இந்த இளம்வயதில்
குறுக்காலே போய்விட்டால்.....

செத்த சவம்மீது
சிலை எழுப்பி என்ன பயன்?

தூரவிடக் கூடாது
துரவுகளைத் தோண்டிடுவோம்
மண்ணை வளப்படுத்திச்
சத்துப் பயிர் விளைப்போம்

சத்துப் பயிர் விளைப்போம்
நெத்துப் பரப்பிடுவோம்!

* * *

நிலாவரை - ஒரு வற்றாத நீர் ஊற்று.