கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நீலாவணன்  
 

எஸ். பொ. நினைவுகள்

 

நீலாவணன்

எஸ். பொ. நினைவுகள்

-------------------------------------------------

பதிப்புரை

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்கிற பாரதியின் இலட்சியக் கனவினைக் காரிய சாதனையாக்குவதே நமது பணி என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். கனவுகளும், காரிய சாதனைகளும் அடிவானம் போன்று தோன்றினாலும், நமது பயணம் தொடரும்.

இன்று உலகின் பல நாடுகளிலும் பரம்பி வாழும் தமிழர் மத்தியிலே முகிழ்ந்து வரும் தமிழ் உணர்ச்சிகளும் கலை-இலக்கிய நேசிப்புகளும், படைப்பு முனைப்புகளும் கௌரவிக்கப் படுதல் வேண்டும். இவற்றை நாளைய தலைமுறையினருக்கு விட்டுச் செல்லும் மார்க்கங்களுள் ஒன்று, இந்த எத்தனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நூல்களைப் பிரசுரித்தலாகும். இந்தத் துறையில் உருபு வாய்ந்த பக்களிப்புச் செய்ய நிறுவப்பட்டதுதான் மித்ர வெளியீட்டு நிறுவனம்.

இந்த ஆண்டில் நமது பிரசுரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஏற்பாடு செய்துள்ளதுடன், நமது இலக்கிய அக்கறைகளின் பரப்புகளையும் விசாலித்துள்ளமை நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் படைப்பாளிகள் கவிதைத் துறையிலே அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளிலே பொருந்தும் வாழ்க்கை முறைக்கு 'கவிதை' தோதான இலக்கிய வடிவம் என்று கருதுகிறார்களோ நாம் அறியோம். இருப்பினும் இக்கவிஞர்கள் தமது வேரடி மண்ணான ஈழத்திலே கவிதையின் நவீனத்துவம் எவ்வாற நிகழ்ந்தது என்பது பற்றிய அறிவு சகாயமானது. இத்தகைய ஒரு துறைக்கு உபகாரமாய் 'நீலாவணன் எஸ்.பொ. நினைவுகள்' அமைகின்றது.

இந்த நூலை வெளியிடுவதற்குக் 'காலம் வெளியீடு' முந்தி நின்றது. காலம் வெளியீடுவின் இந்த நூலை நாம் மேற்கொண்டுள்ள விரிவாக்கப் பணியின் ஓரம்ஸமாக தமிழ்நாட்டு-ஈழநாட்டு விநியோக பரம்பலை வசதி செய்வதற்காக, காலம் வெளியீட்டுடன் இணைந்து, தமிழ்நாட்டுப் பதிப்பினை நாம் வெளியிடுகின்றோம். புலம் பெயர்ந்த நாடுகளிலே இயங்கும் சிறு பிரசுர வெளியீட்டாளர்கள் வெளியிடும் தரமான நூல்களை அவர்களுடன் இணைந்து வெளியிடுதல் பயனும் அர்த்தமும் உள்ள பணியாகும். இந்த ஏற்பாட்டின் முதலாவது நூலாக இதனை வெளியிடுவதிலே நமக்கு மகிழ்ச்சி. இணைந்து வெளியிடும் இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தினால், புலம் பெயர்ந்த ஈழத்தார் படைப்புகள் விரிந்த வாசகர் வட்டத்தைச் சென்றடையும். அத்துடன், நமது படைப்புகளுக்கு தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பரந்து வாழும் தமிழ் வாசகர் மத்தியிலும் ஓர் அங்கீகாரத்தினை வென்றெடுத்தல் சாத்தியமும் என்று நினைக்கின்றோம்.

இத்தகைய கூட்டு முயற்சிகளுக்கு இத்தால் நேசகரம் நீட்டப்படுகின்றது. இந்த இணைப்புப் பிரசுர முயற்சிக்கு முதலிலே நேசகரம் நீட்டிய கனடாவிலுள்ள காலம் வெளியீட்டினருக்கும் அதன் அதிபர் செல்வம் அவர்களுக்கும் நமது நன்றிகள்.

டாக்டர் பொ. அநுர

1/23 Munro Street,
Eastwood NSW - 2122
AUSTRALIA.

--------------------------------------------------------------------

முன்னீடு

'நண்பர் நீலாவணன் பற்றிய நினைவுக் கட்டுரை இந்த ஞாயிறு இதழில் வெளிவர வேண்டும். அதனை நீங்களே எழுதுதல் வேண்டும்' என்று மின்னாமல் முழங்காமல்' சடுதியாகத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு தினகரன் பொறுப்பாசிரியர் ஆர். சிவகுருநாதன் சொன்னார். கவிஞரின் சடுதியான மறைவு ஏற்படுத்திய சோகங்களை ரணமாக நெஞ்சிலே சுமந்த நேரம்அது. தயக்கம். பின், 'நீளம்?' என்றேன் 'நீலாவணன் பற்றிய உங்கள் நினைவுகளுக்குக் கட்டுப்பாடு கிடையாது' என்று தமக்கே உரிய பாணியிலே சிரித்தார். இவ்வாறு பிரசித்தமான தினகரன் கட்டுரைகளே இந்நூலின் அடித்தளம்.

பிரான்ஸ’ல் என் இலக்கிய இனியன் கலாமோகனின் விருந்தினனாய்த் தங்கியிருந்த காலத்தில், செல்வம் வீட்டில் ஓர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்தது. அதுவே 'பாரீஸ் பகர்வுகள்'. அங்கு ஏற்பட்ட இலக்கிய நட்பு, இன்றும் தொடர்கிறது. ஈழத்தின் தற்காலக் கவிதைப் போக்கிலே ஒரு தாக்கத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய 'மஹாகவி'யை மீளநினைவுறுத்தும் வகையில் 'காலம்' சிறப்பு மலர் சென்ற ஆண்டில் வெளிவந்தது. அதனைப் பாராட்டியதுடன் 'யாழ்ப்பாண இலக்கியப் பங்களிப்பு சமன் ஈழத்து இலக்கிய வளம்' என்கிற பழைய தவறுகளை இயற்றாது. மட்டக்களப்பு மாநிலத்தின் தற்கால எழுத்து எழுச்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் கவிஞர் நீலாவணன் பற்றியும் ஒரு சிறப்பு மலர் வெளியிடும்படியும் கேட்டேன். நீலாவணன் பற்றிய நூல் ஒன்று வெளிவருதல் நன்று என்கிற என் ஆசைக்குச் செல்வம் மசிந்தார். ஈற்றில் இந்நூல் இவ்வாறு சமையலாயிற்று. உக்கிப்போன தினகரன் நறுக்கு ஒன்றிலிருந்து கிடைத்த படத்தை வைத்து நிக் வில்லியம்ஸ் அமைந்துள்ளார்.

இலக்கிய நிகழ்வுகளின் கட்டித்த அக்கறையின் உயிர்ப்பாகத் திகழும் 'ஞானி' யின் நேரடித் தொடர்பு கோவையில் நிகழ்ந்தது. 'கண்டதும் காதல்' இதற்கும் பொருந்தும். நான் அவர் வசப்பட்டேன். அவர் வீட்டிலே விருந்துண்டு, சேர்த்தே இலக்கிய நயம் அருந்திய இனிய பொழுதினை மறவேன். இந்த இலக்கிய பந்தத்தின் பிரசித்தமாகவும் அவருடைய அணிந்துரை இந்நூலுக்குக் கிட்டுதல் வேண்டுமென நான் விரும்பினேன். இலக்கிய நயப்பிலும் நோக்கிலும் கருத்து வேறுபாடுகள் சங்கையானவை. அந்த வேறுபாடுகளைக் கௌரவித்தல் நாகரிகமானது மட்டுமல்ல, இலக்கியம் பற்றி தரிசன அகலத்திற்கு அவசியமானதும். எனவே நான் ஏற்றுக் கொள்ளாத 'ஞானி'யின் கருத்துக்களை என்னால் மதிக்க முடிகிறது. கைலாசபதி-சிவத்தம்பி கூட்டின் புத்தி ஜ“வித சர்வாதிகாரம் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே இயற்றிய அதாப்பியங்கள், இருட்டடிப்புகள், பிறழ்வுகள், தவறான மதிப்பீட்டுத் திணிப்புகள் அநந்தம். இவை நேர் செய்யப்பட்டு உண்மைகள் ஆவணப்படுத்தப் படுதல் வேண்டும். என் நேரம் இதனால் அதம் போகிறது என்பது நிஜம். இலக்கிய சாதனைக்கு மேலானது, உண்மையின் உபாசகனாய் வாழுதல் என்பது என் தளம். அவர்கள்மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் எனக்கு இல்லை. ஆனால் சந்தியத் தேடலிலே ஈடுபட்டுள்ள ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படக்கூடிய உணர்ச்சியே என்று என் ஆவேசத்தினை விளங்கிக் கொள்ளவேண்டும் என்று 'ஞானி'யை மட்டுமல்ல, இலக்கிய நேசர்களையும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

எஸ்.பொ.

---------------------------------------------------------------------

அணிந்துரை

எஸ்.பொ. அவர்களை கோவையிலே நடைபெற்ற 'சுபமங்களா' நாடக விழாவின் போதுதான் (94 ஜூலை 13-17) நான் சந்தித்தேன். 'நனவிடை தோய்தல்' வரையிலான அவரது படைப்புகளைப் படித்திருந்தேன். அவரிடம் எனக்கு ஏற்பட்டிருந்த மரியாதை உணர்வோடு அச்ச உணர்வும் கலந்திருந்தது.

இலங்கையில் முற்போக்கு முகாமிற்கு அவர் ஒரு 'டெர' ராக இருந்தார். கோவையில் அச்சத்தோடு தான் அவரை நெருங்கினேன். அவரோடு நிறையப் பேசினேன். கைலாசபதி முதலியவர்களோடு அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணம் கேட்டு அறிந்தேன். விரிவாகவும் அன்பாகவும் வெளிப்படையாகவும் அவர் உரையாடினார். என்னிடமிருந்த பாடலை நினைத்துக் கொண்டேன். அதியமான் எதிரிகளைப் பொறுத்தவரை மதம் பொருந்திய யானை போன்றவன். ஆனால் அவ்வை போன்றவர்களுக்கு....? நீர்த் துறையில் பாகர், யானையைக் குளிப்பாட்டுகிற பொழுது, அவர்களோடு சேர்ந்து கொள்ளுகிற சிறுவர் யானையின் வெண்கோடுகளைக் கழுவுகின்றனர். சிறுவர்களிடம் யானை அடங்கி நிற்கிறது. அவ்வை போன்றவர்களுக்கு அதியன் இத்தகையவன்.

ஈழத்தின் முற்போக்கு முகாமோடு முரண்பட்டு நின்றவர் எஸ்.பொ. மார்க்சியக் கட்சி சார்ந்தவர்களோடு, எஸ்.என்.நாகராசன் அவர்களை முதல்வராகக் கொண்ட (எஸ்.வி.அர்., நான் போன்ற) எங்களுக்கும் சில அனுபவங்கள் உண்டு. இதன் காரணமாக எஸ்.பொ. தன் மேம்பட்ட படைப்பாற்றல் காரணமாக முற்போக்கு முகாமுக்கு ஈடுகொடுத்து நின்றார்.

கட்சி சார்ந்தவர்கள் தம் அரசியல் காரணமாக தமக்குள் இறுகித்தான் இருக்கின்றனர். அவர்களுடைய கட்சிக் கண்ணோட்டத்திற்குத்தான் அவர்கள் முதன்மை கொடுக்கின்றனர். கலை-இலக்கியத்திற்கும் கட்சி வழிகாட்ட முடியும் என நம்புகின்றனர். படைப்பிலக்கியத்தின் தனித்தன்மை அவர்களுக்குப் புரிவதில்லை, மேற்கட்டின் ஒரு பகுதிதான் கலாச்சாரம் என்ற வாய்ப்பாட்டைத் தொடர்ந்து நம்பியிருப்பதன் மூலம், கலாச்சாரத்தின் உள் ஆழங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. பாட்டாளிய சர்வாதிகாரம் என்று பேசுகிறவர்கள் கட்சிக்குள்ளும், தமக்குள்ளும் அதிகாரத்தை நிறுவிக் கொள்கின்றனர். இந்த அதிகாரம் அவர்கள் பார்வையை அடைத்துக் கொள்கிறது. தம் அதிகாரத்துவ செயல்பாட்டின் மூலம் வெற்றி பெறுவது முதலாளியம் தான் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. சோவியத் யூனியன் தகர்ந்ததை அடுத்து சில அதிர்வுகள் அவர்களுக்குள் ஏற்பட்டது என்பது உண்மைதான். ஆனால் மிக விரைவில் அந்த அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு 'நிமிர்ந்து' நிற்கின்றனர். வரலாற்றில் மீண்டும் இவர்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. மார்க்ஸ’யத்தின் உள்ளுரை ஆற்றல்களை இவர்கள் தப்ப விட்டிருக்கின்றனர். இவர்களுக்குள் செயல்பட்டது 'ஸ்டாலினியம்' என்றுகூட சொல்வதற்கில்லை. மார்க்சியத்தை அதன் படைப்பியல் தன்மையோடு தம் சம கால வரலாற்றுக்கு அதன் தனித் தன்மைகளோடு சேர்த்து பொருத்தி இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக இவர்கள் தம் பெருமையை முன்னிருத்தி மார்க்ஸ’யத்தின் பெருமையை குறைத்திருக்கிறார்கள்! அழித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். சற்றுக் காலம் கடந்து பார்க்கிறபொழுது இவர்கள் நம் அனுதாபத்திற்கு உரியவர்கள் இவர்களைக் கோபித்துப் பயனில்லை.

எஸ்.பொ. அவர்கள் இவர்களிடம் இன்னும் கோபம் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது. அவர் தன் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது என் வேண்டுகோள். கைலாசபதி முதலியவர்களின் சாதனைகளை நாம் குறைத்து மதிப்பிட இயலாது. பேராசிரியர் வையாபுரி அவர்களுக்கு அடுத்த படியாக தமிழின் ஆற்றல் மிக்க ஆய்வாளராக தம்மை நிறுவிக் கொண்டவர் கலாநிதி கைலாசபதி அவர்களும், அவரை அடுத்து பேராசிரியர் சிவத்தம்பி அவர்களும். இங்கு விளக்கம் அவசியமில்லை.

கவிஞர் நீலாவணன் அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை இந்த சிறு நூலில் எஸ்.பொ. தொகுத்துக் கொள்கிறார். சில காலந்தான் கவிஞரோடு எஸ்.பொ. பழயிருக்கிறார். 'மச்சான்' என்று அழைத்து, தன் அன்பால் கவிஞர், எஸ்.பொ வை வென்றிருக்கிறார். அற்பமான ஒரு காரணம் அவர்களைப் பிரித்து வைத்திருந்தது. இதற்காக இப்பொழுது எஸ்.பொ. வருந்துகிறார். கவிஞர் பற்றிய நினைவுகள் இவருக்குள் சோகமாய்க் கொந்தளிக்கிறது. மனம் நெகிழ்ந்து மனம் உடைந்து இறுதியில் எழுதுகிறார். எஸ்.பொ.வும் கவிஞராகிறார். இவருக்குள்ளும் சில தரிசனங்கள் எழுகின்றன. தம் இலக்கிய வாழ்வில் கவிஞரின் பங்களிப்பை எஸ்.பொ. சிறப்பாகக் குறிப்பிடுகிறார். கல்முனையில் இலக்கிய அமைப்பு உருவாகியதைச் சொல்கிறார். முற்போக்கு முகாமுக்கு எதிர் நின்று கிழக் இலங்கை செய்த இலக்கியச் சாதனைகளைச் சொல்கிறார். முற்போக்கு முகாம்தான் ஈழத்தில் நவீன இலக்கியத்திற்கு தொடக்கமாக இருந்தது என்பதை ஆணித்தரமாக எஸ்.பொ. மறுக்கிறார். விபுலானந்தரை பண்டிதச் சிமிழுக்குள் புலவர்கள் அடைத்து வைத்திருப்பதை உடைக்கிறார். ஈழத்தில் நவீன இலக்கியத்திற்கு விபுலானந்தரை முன்னோடியாக்குகிறார். அங்கிருந்து இன்னொரு ஆழ்ந்த உண்மையைக் கண்டெடுக்கிறார். நவீன இலக்கியப் போக்கிற்கு ஆதிமூலம் என நாட்டார் கவிதைகளைச் சொல்கிறார். நாட்டார் கவிதைகள்தான் சங்க இலக்கியத்திற்கும் மூல வடிவம் என்கிறார்.

கவிஞர் நீலாவணன் பற்றிய நினைவுகள் என்று தொடங்கியவர், ஈழத்தின் இலக்கிய வரலாறு சொல்கிறார். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட அல்லது சிலர் ஏற்படுத்தியிருக்கிற தவறுகளை எஸ்.பொ. களைகிறார். இந்த அம்சம்இ இந்தச் சிறு நூலை ஆற்றல்மிக்க ஒரு திறனாய்வு நூலாக உயர்த்துகிறது. எஸ்.பொ. தனித்தன்மை மிக்க திறனாய்வாளர் என்பதற்கு இந்த நூல் நெடுகிலும் ஆதாரங்கள் குவிந்திருக்கின்றன.

கவிஞர் நீலாவணன் பற்றிய நினைவுகளினூடே இன்னும் பலர் பற்றிய நினைவுகளையும் இந்த நூலில் தொடுத்திருக்கிறார் எஸ்.பொ. கவிஞர் அண்ணல், புரட்சிக் கமால் முதலியவர்களின் படைப்புத்திறனை எடுத்துரைக்கிறார். எம்.ஏ. ரஹ்மான் முதலியவர்களோடு தன் தோழமையைச் சொல்லுகிறார். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் கிழக்கு இலங்கையின் இலக்கியத்தை நிறுவினார்கள். ஈழத்து இலக்கியம் என்றாலே யாழ்ப்பாணத்து இலக்கியம் என்ற பொய்மையைத் தகர்த்து கிழக்கு இலங்கையின் இலக்கியச் சாதனையின் தனித்தன்மை சொல்கிறார் எஸ்.பொ.

இந்த இடத்தில் மரபு பற்றி, மண்ணின் மாண்பு பற்றி ஆழ்ந்த ஒரு ஆய்வைச் செய்கிறார் எஸ்.பொ. மண்வாசனை அல்லது மரபு என்பது எத்தனை பரிமாணங்களோடு எத்தனை நெடுங்காலமாய் நம் உணர்வுகளுக்குள் தங்கி நம்மைப் புதுமைப் படுத்துகிறது; பொலிவுற செய்கிறது என்பதைச் சொல்கிறார். 'மூர்த்தி சிறிது ஆயினும் அதன் கீர்த்தி பெரிது, என்ற வாசகத்தை இந்த நூலின் இப்பகதி மெய்ப்பிக்கிறது.

கவிஞர் நீலாவணன் தன் அன்பால் எஸ்.பொ. வை வென்றார் என்பதைக் குறிப்பிட்டேன். இலங்கையர் கோளோடு நீலாவணன் மூலம் தனக்கு ஏற்பட்ட உறவை எஸ்.பொ. குறிப்பிடுகிறார். கண்ணில் உறுத்துகிற சிறு மணல் மாதிரி இங்க நமக்குள் உறுத்தல் ஏற்படுகிறது. தன் தவற்றை ஒப்புக் கொண்டதன் மூலம் இலங்கையர்கோன் நமக்குள் மீண்டும் நிமிர்ந்து நடையிடுகிறார்.

நீலாவணன் அவர்களின் கவிதைகள் பற்றி நிறையச் சொல்லுகிறார் எஸ்.பொ. அவர் கவிதைகளை ஆய்வதோ, மதிப்பிடுவதோ தன் நோக்கம் அல்ல என்று குறிப்பிடுகிறார். இந்தப் பகுதியில் புதுக்கவிதை பற்றிய சர்ச்சையில் கவிஞரைப் போலவே எஸ்.பொ.வுந்தான் ஈடுபடுகிறார். தமிழ்க் கவிதைக்கு-இலக்கியத்துக்கு-பாரதியின் பங்களிப்பை, தனக்கே உரியே தனித்த பார்வையில் சிறப்பாக குறிப்பிடுகிறார் எஸ்.பொ.பாரதியைப் போல பாரதிதாசனிடம் எஸ்.பொ.வுக்கு ஈடுபாடு இல்லை. இங்கு ஒன்றை அவசியம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஈழத்தின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றுக்கும், தமிழகத்தின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு இருப்பதை நாம் இங்கு நினைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இயற்கை, நிலம், நீர் மக்களின் அன்பு, அறம், கலை உணர்வு, காதல், வீரம் என்று எல்லாவற்றையும் தமிழாக, தமிழின் வழியே தனக்குள் செரித்துக் கொண்வர் பாரதிதாசன். அதாவது, மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவன் எப்படியோ, அப்படி பாரதிதாசனுக்கு தமிழ். தமிழகச் சூழலில் ஆரியத்திற் கெதிரான தமிழ் உணர்வின் தேவையை வரலாற்றின் வழியே புரிந்து கொள்ள முடியும். ஈழத்து வரலாற்றில் ஆரியம் இல்லை. ஆகவே பாரதிதாசனை எஸ்.பொ.வால் ஒதுக்கிவைக்க முடிகிறது. எங்களுக்கு இது சாத்தியமில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன் பாரதிதாசனின் ஆளுகைக்கு ஆட்பட்டவராக இருந்திருக்கிறார். பாரதி தாசனைப் போலவே தமிழ் என்றும், இயற்கை என்றும் பாடியிருக்கிறார்.

ஈழத்தின் புதுக்கவிதைக்கு மூலவராக இருந்தார் 'மஹாகவி'. மஹாகவி அவர்களை ஈழத்தில் மார்க்சியர் பாராட்டவில்லை. தமிழகத்தில் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. இதற்கும் வரலாற்று ரீதியாக நாம் காரணம் தேடவேண்டும். எங்களுக்குள் கம்பரும் திருத்தக்க தேவரும்தான் பெருமிதத்தோடு காவியப் பரிமாணத்தில் வீற்றிருக்கிறார்கள். தமிழ்க் கவிஞர்களுக்கு 'வானம் வசப்படும்'. ஆனால் தரையில் கால் பதிவதில்லை. ஈழத்தில் அப்படியில்லை. தரையில் அவர்கள் எல்லாக் களங்களிலும் காலூன்றி மண் வாசனை முகங்களில் தவழ உறுதியோடு நிற்கிறார்கள். மஹாகவி அவர்களின் பேச்சோசையோடு கலந்த யாப்பு மரபின் பேரழகை இப்பொழுது வியந்துரைக்க நமக்கு சொற்கள் இல்லை. கவிஞர் நீலாவணன் மஹாகவி அவர்களைப் போலவே யாப்பின் திறம் குறையாமல் பேச்சோசையில் கவிதைகள் எழுதினார். பாடவும் செய்தார். யாப்பு அற்ற புதுக் கவிதையை கடுமையாகச் சாடினார். புறநாநூற்றுச் செய்யுளுக்கு நிகர்ந்த கவிதைகளை எழுதிக் காண்பித்தார். தமிழகத்திலும் இப்படி சில கவிஞர்கள் புதுக்கவிதை முறையோடு முரண்பட்ட நிலையில் கவிதைகள் செய்தார்கள். நீலாவணன் அவர்களின் 'வழி' கவிதையை எஸ்.பொ. ரசிக்கிற அளவுக்கு என்னால் ரசிக்க முடியவில்லை. 'பாவம் வாத்தியார்' கவிதையில் 'பெட்டிக்கடை நாராயணன்' என்ற ந.பி.யின் கவிதையும் 'துயில்' கவிதையில் புதுமைப் பித்தனையும் கண்டு நாம் ரசிக்கிறோம்.

யாப்பு முறைக் கவிதையா, புதுக்கவிதையா என்ற விவாதத்தில் இன்று தீவிர எதிர்நிலைகளுக்குத் தேவையில்லை. வடிவம் எப்படியாயினும், அது கவிதையாக இருக்கிறதா என்பதுதான் இன்று மேலெழுந்து வருகிற சிந்தனை. நீலாவணன் அவர்கள் தன் 'வேளாண்மை' காவியத்தை முற்றுப் பெறச் செய்யவில்லை. இது தமிழ்க் கவிதைக்கு ஒரு பேரிழப்பு. நீலாவணன் நாம் வியக்கத் தக்க முறையில் கவிதையோடு கவிதையாய் வாழ்ந்திருக்கிறார் என்பதை இச்சிறு நூல் மெய்ப்பிக்கிறது. நீலாவணன் வாழ்க்கை மற்றும் கவிதை குறித்து முழு நூல் வெளிவருதல் வேண்டும். மஹாகவி அவர்கள் பற்றியும் இப்படி நூல் வெளிவர வேண்டும்.

தன் இலக்கிய வாழ்வு பற்றிய முழுமையான நூல் ஒன்றை வெளியிடப் போவதாக எஸ்.பொ. அறிவித்திருக்கிறார். அந்த நூலையும் பெரிதும் நாம் எதிர்பார்க்கிறோம்.

- ஞானி

'நிகழ்'
123 காளீஸ்வரர் நகர்,
காட்டூர், கோவை-641 009
செப்ரெம்பர் 1994

------------------------------------------------------------------------------------

I

இன்னோர் ஆண்டு பிறந்தது. பொங்கல் திருநாளை நோக்கி ஜனவரி மாதம் நகருகின்றது. அது 1975ஆம் ஆண்டு. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்கிற நம்பிக்கையை மனசிலே சுமந்த ஒருத்தியின் வயிற்றிலே பிறந்தவன் நான். எனவே தையின் பூபாளம் என் செயல்களிலே என்னை அறியாமலே ஒட்டிக் கொண்டது.

அன்று சனிக்கிழமை. அன்றைய இரவினை, புதிய ஆண்டிற்கான இலக்கிய முயற்சிகள் பற்றிய சட்டகம் ஒன்றினை இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் உடன்சேர்ந்து உருவாக்குவதற்காக ஒதுக்கியிருந்தேன். கடந்த மூன்ற தசாப்தங்களக்கு மேலாக ரஹ்மான் என் இனிய நண்பனாயும், பரமார்த்த இலக்கிய சகாவாகவும் வாழ்பவர் என்பதை ஈழத்து இலக்கிய உலகம் நன்கறியும். அவருடைய நட்பின் செழுமையும் இணைந்ததுதான் என்னுடைய வாழ்க்கை.

மனித பிரேரிப்புகளும்; ஆண்டவனின் நிராகரிப்புகளும்! அன்றிரவு எங்களுடைய பிரேரிப்புக்குப் பிள்ளையார் சுழிகூடப் போடவில்லை. ரஹ்மானின் தாயார் சென்னையிலே காலமாகிவிட்டார் என்கிற செய்தி கிட்டியது. அவருடைய நெஞ்சமெல்லாம் நீக்கமற அந்த அன்னையின் நேசிப்பு வியாபித்திருந்ததை நான் உணர்வேன். அந்த இழப்பு-மரணக் கிரியைகளிலே கூடக் கலந்து கொள்ள முடியாத சூழலிலே ஏற்பட்ட அந்த இழப்பு- அவரை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை உன்னி நான் தவித்தேன். என் அற்ப ஆற்றலுக்கு எற்ப அவரைத் தேற்றுவதில், சனி இரவு கரைந்தது.

அடுத்த நாள். ஞாயிறு; காலை. சிறிது தேறிய நிலையில், கொழும்பில் வாழும் தன் அத்தானைப் பார்க்கச் செல்கின்றார். (ரஹ்மானின் ஒரே சகோதரியான ஷரீஃபா பீவியின் கணவர்.) அவர் திரும்பி வர மதியமாகலாம்.... செய்வதற்கு எதுவும் இல்லை என்பது போன்ற ஒரு வெறுமை. உடலைச் சோர்வு ஆட்கொண்டது போல ஓர் உணர்வு. அதனை மீண்டும் படுக்கையில் வளர்த்துகின்றேன். விழிகள் மூடிக் கொள்ளுகின்றன. தனிமையில், ரஹ்மானின் தாயார் செய்னம்பு பீவியைப் பற்றிய நினைவுகள். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், அவர் நோயுற்றிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. ரஹ்மான் துடித்துப் போனார். பார்க்க வேண்டும் என்கிற தவிப்பு. ரஹ்மானிடம் கடவுச்சீட்டு இல்லை. விண்ணப்பித்தாலும் அரசு கொடுக்க மாட்டாது. அப்படியான சட்டச் சிக்கல்கள். சொக்கன் என்பவர் 'கள்ளத்தோணி' மார்க்கமாக பயணத்தை ஏற்பாடு செய்வதற்கு முன் வந்தார். தாய்ப் பாசத்துக்கு அஞ்சலியான அந்தப் பயணத்தில் நான் துணை போனேன்... ஊர்க்காவல் துறை, மோட்டார் படகுப் பயணம், குடாக்கரையிலுள்ள ஏதோ ஒரு கிராமத்தில் கரையிறங்குதல், நீண்ட நடை, அதிர்ஷ்டம் கைதர பாசிப்பட்டணம் செல்லும் யாத்தரிகர்களுடன் சங்கமம், தர்காவில் ஓரிரவு, விடியலுக்கு முன் பயணம், சுந்தர பாண்டியன் பட்டணத்திலிருந்து தேவகோட்டைக்குப் பஸ் பயணம், திருவாடானை தரிசனம், திருச்சியில் வயிற்று உபவாதை, சென்னையில் ரஹ்மான் தாயாரின் இல்லம், ஐந்து நாள்கள் தங்குகை, இராமேஸ்வரம் அடைதல், ஏற்பாடு செய்திருந்த மோட்டார் படகு பழுதடைந்திருத்தல் ஏமாற்றம், தங்கச்சி மடத்து மீனவ நண்பன், பாய்மரப் படகில் கச்சதீவுப் பயணம், அந்தோணியார் கல்லூரி மாணவன் மடத்தீன்முத்துவின் சந்திப்பு, கட்டு மரத்தில் நெடுந்தீவு நோக்கிய பயணம், நடுக்கடலில் ரஹ்மான் வாந்தியெடுத்து அவஸ்தை... பல்லாண்டுகள் தாண்டியும் நினைவு 'அல்ப' த்திலே சொருகி வைத்திருந்த அந்த snaps மனசை வலம் வர, நிமிடங்கள் தாண்டிய நிதர்சனத்தில் ரஹ்மானின் விசும்பல் என்னை எழுப்புகின்றது.

அவர் கையில் ஒரு தந்தி. அதனைத் தருகிறார். விரித்துப் பார்க்கிறேன். வாசம்: "கவிஞர் நீலாவணன் காலமானார்!"

ஆம். 11.1.75 சனிக்கிழமை நள்ளிரவில், தமது நாற்பத்து நாலாவது வயதில் நீலாவணன் காலமாகிய அந்த அவலச் செய்தி, அடுத்த நாள் காலையில், இவ்வாறுதான் எனக்குக் கிடைத்தது.

II

கவிஞர் நீலாவணன் புதிராக நோக்கப்பட்ட மனிதன். மனிதன் நீலாவணன் இறந்து போனான். மரணம் சொந்த விரோத-குரோதங்களை மறந்துவிடச் செய்யும். நீண்ட காலமாகவே, சமகால இலக்கிய விமர்சகர்கள் அவரை உரிய முறையிலே விமர்சிக்கவும் மதிப்பிடவும் தவறினார்கள். அரசியற் கோஷங்களுக்குத் தாஸர்களாகி, அது சார்ந்தே இலக்கியப் போக்குகளை மட்டிட்டு, கொடி பிடிப்பவர்களுக்கும், கிண்ணி தாங்குவோருக்கும் இலக்கியப் பவிசு வழங்குதலையும் இலக்கிய விமர்சனமாகக் காமிப்போர் மத்தியில் அவருடைய கவிதா ஆற்றல்கள் அழிவழக்காடப்பட்டதும் உண்டு. கோஷம் போடும் ஒரு கோஷ்டியைத் தக்க வைத்துக் கொள்ளும் கலை நீலாவணனுக்குக் கைவராத ஒன்று. இதனாலும், அவருடைய திறமை பற்றிய பிரஸ்தாபம் உரிய முறையில் நிகழவில்லை. புறக்கணிப்புகளும், அழிவழக்காடல்களும் அவருடைய மரணம் என்ற தீயிலே பொசுங்குவதாக! என்னுடைய ஒரு கதையை- 'அவா' என்று நினைக்கின்றேன்- 'மரணம் சிருஷ்டிக்கான இன்னொரு ஆரம்பமே' என முடித்ததாக ஞாபகம். இந்த வாசகம் கவிஞர் நீலாவணனின் உண்மையான ஆற்றல்களை பிரகாசிக்க வைப்பதில் புதிய பரிமாணம் கொள்வதாக!

அந்த முயற்சியின் நுழைவாயிலே என்னுடைய இந்த 'நீலாவணன்: எஸ்.பொ. நினைவுகள்.'

அவர் மரணத்துக்கு ஒரு மாமாங்க காலத்துக்கு முன்னர் எனக்கும் நீலாவணனுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது. சிற்றாண்டி முருகன் கோயில் வீதியில் அமைந்த மேடையிலே ஒரு பாரதி விழா. அதற்கு இருவரும் பேச்சாளராய் அழைக்கப்பட்டிருந்தோம். தமிழ் உணர்ச்சியின் ஊற்று பாரதி என்ற சுருதியிலே அவர் பேச்சு அமைந்தது. பாரதியைப் பற்றி அன்றும் இன்றும் என் தரிசனம் வேறு. எனவே, அவருடைய கருத்துக்களை நான் முனைப்பாகச் சாடினேன். மேடையிலே சாடும் பொழுது, சில வேளைகளில், தர்க்க நியாயங்களுக்கு அப்பால், இடுப்புக்குக் கீழே குத்துதல் என் பலவீனங்களுள் ஒன்று என்பதை இப்பொழுது நிதானிக்க முடிகிறது. நான் அவரை மூர்க்கமாகச் சாடிய அந்த அரங்கிலேதான் எங்களுடைய முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது. சாடலுக்கு அப்பால், காதல்-தமிழ் ஆகீய இரண்டு சுருதிகளை நேர்த்தியாகத் தமிழ் செய்யவல்ல ஒரு மன்னர் அவர் என்கிற ஒரு சுவைப்புப் பாந்தம் அவர் மாட்டு எனக்கு ஏலவே ஏற்பட்டும் இருந்தது. அரசியல் மேட்டிமைகளினாலும், போட்டிகளினாலும் இதனை வாயாரப் பாராட்ட அன்று வேளை பொருந்தவில்லை.

சிற்றாண்டிக் கூட்டம் நடந்த சில மாதங்களின் பின்னர் சம்மாந்துறையிலே நடைபெற்ற தமிழ்விழா ஒன்றிலே நீலாவணனும் நானும் பேச்சாளர்களாய்ச் சங்கை செய்யப்பட்டிருந்தோம். சிற்றாண்டியிலே, நான் பேசியவற்றுக்குப் பதிலாகவும் அவருடைய பேச்சின் ஒரு பகுதி அமைந்தது. மனசாரச் சொல்ல வேண்டு மென்றால், அவர் உணர்ச்சிப் பிழம்பாக முழக்கமிட்டார். என் கருத்துக்களை அவர் சாடிய பண்பும் பாங்கமும் கலை நுணுக்கஞ் சார்ந்தன. அந்தக் கலை நுணுக்கம் என்னை அவர் வயப்படுத்தியது.

கலைவிழாவின் சொற்பொழிவுகள் நிறைவுற்று, ஏனைய கலை நிகழ்ச்சிகள் தொடருகின்றன. என்னிடம் பயின்ற பியிலும் ஏராளமான மாணவர்கள் சம்மாந்துறையில் வசிக்கிறார்கள். சம்மாந்துறையிலிருந்து அந்த இரவு நேரத்தில் மட்டக்களப்புக்கு பஸ் கிடைக்காது. எனவே, என் மாணவன் சீனி முஹம்மது வீட்டில் அன்றிரவைக் கழிக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், கவிஞர் நீலாவணன் வீடு திரும்புவதற்கு அவசரங்காட்டினார். எனவே, அவரை வழியனுப்புவதற்காக வீதி ஓரம் நின்ற மருதமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தேன். மேடையின் கருத்து மோதல் வீதிவரை நீளுகின்றது. பேச்சிலே காரத்தின் காங்கை. ஒரு கட்டத்திலே, "மச்சான்! இவற்றை வீதி ஓரத்தில் நின்று சில நிமிஷ நேரங்களிலே பேசித் தீர்த்துவிட முடியாது. என் வீட்டுக்கு வா. சாப்பிட்டு விட்டு ஆறுதலாகப் பேசலாம்" என்று சடுதியாக அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பிலே இருந்த கனிவும், அதே சமயம் அதில் இழையோடிய விருந்தோம்பல் ராங்கியும் என்னை உலுப்பின.

இருவருக்கும் இடையில், அன்றுதான், அப்பொழுது தான், கன்னிப் பேச்சு முகிழ்ந்தது. பேச்சும் பரஸ்பர கருத்து முரண்பாடுகள் தொற்றியது. நேரம் நடுநிசியை நோக்கி ஊர்கின்றது. அழைத்துச் செல்வதற்க அவர் வசம் வாகன வசதியும் இல்லை. இருப்பினும் 'மச்சான்' என்று உறவு பாராட்டி விளித்து, தமது வீட்டிலே விருந்து சுவைக்க அழைக்கின்றானே இந்தக் கவிஞன்! கவிஞனுடைய உணர்ச்சிப் பிழம்பான ஓர் உள்ளத்திலே இருந்துதான் இத்தகைய அழைப்புப் பிறக்கும். அழைப்பினை ஏற்பதா மறுப்பதா என்கிற சங்கட நிலை எனக்கு! காரணப் பிரமேயங்களை நிறுத்தித் தட்டிக் கழிக்கலாம் என்கிற கட்சியின் பக்கமாகவே என் சிரத்தையின் பாரத்தை ஊன்றினேன். இருப்பினும், அந்த அழைப்புச் சம்பிரதாயமானதல்ல; தமது உணர்ச்சி உள்ளத்திலிருந்து கனிந்தது என்பதை நிலைநிறுத்துவதில் கவிஞர் நீலாவணன் தீவிரங் காட்டினார்.

அம்பாறைப் பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த carஐ கைகாட்டி நிறுத்துகிறார். "கல்முனைக்கா?" என்று கவிஞர் கேட்கிறார். "காரைதீவுக்கு..." என்று சாரதியிடமிருந்து பதில். "நாங்களும் வாறம்.... மச்சான் ஏறு!" பதில் சொல்வதற்குக் கூட நேரம் இல்லை. அவருடைய அன்புக்கு முன்னால் குழந்தையாகுகின்றேன். ஒரு நட்பின் பயணம் ஆரம்பமாகின்றது. நானும் காரிலே கல்முனையை அடைகின்றோம். 'இனி, கல்முனையிலிருந்து பெரிய நீலாவணைக்கு எப்படிப் போவது?' என்கிற மலைப்பு எனக்கு. கிகரெட் பக்கற் ஒன்றினை வாங்கித் தருகின்றார். இரவின் அலுப்பினைப் புதைத்தலிலே கரைக்கும் ஒரு சாகஸத்திற்குள் என்னை ஈடுபடுத்துகிறேன்.

"இதில் நின்று கொள்ளுங்கள். ஐந்து நிமிடங்களுள் திரும்புவேன்" என்று கூறுகிறார்; இரவிலே மறைகின்றார். ஐந்து நிமிடங்களுக்கிடையில் ஒரு சைக்கிளை உருட்டியவாறு நிற்கின்றார். அந்த சைக்கிளில் என்னையும் ஏற்றிக் கொள்ளுகின்றார். இருவரும் அவருடைய பிறந்த ஊரான நீலாவணையை அடைகின்றோம். பாதி தூக்கத்தினைப் பயின்று கொண்டிருந்த அவருடைய இல்லாள் எழுப்பப்படுகின்றாள். தொடர்ந்து அடுக்களைப் பக்கம் ஆருவாரம் மலர்கின்றது. அந்த இரவு வேளையிலும் விருந்துக்கான புதிய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இருவரும் பேசுகிறோம். சாப்பிட்டவாறு பேசுகிறோம். சாப்பிட்ட பிறகும் பேசுகிறோம். படுத்தவாறு பேசுகிறோம். பேசியவாறே தூங்கியும் விடுகிறோம். சொல்ல மறந்து போனேன். அன்றும் ஒரு சனிக்கிழமைதான்.

இந்த நிகழ்ச்சியை என்றும் என் நெஞ்சம் மறந்ததில்லை. எதையும் சடுதியாகவும், முனைப்பாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் முடிக்கும் ஒரு தீவிரம் நீலாவணனுடைய இயல்புகளுள் ஒன்றாக நிலைத்து வந்துள்ளது என்பதை எண்பிப்பதற்கு எங்களுடைய இந்த முதலாவது சல்லாப நிகழ்ச்சி ஒன்றே போதுமான அத்தாட்சி!

நீலாவணன் அயலிலிருந்த பாடசாலையிலே பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராய்ப் பணிபுரிந்தார். ஆனால், தமிழ் செய்தலே அவருடைய ஊழியமாய் வாய்த்தது. இறக்கும் வரை தமிழ் இலக்கியத்தின் பரமார்த்த சுவைஞனாயும் மாணாக்களாயுமே தம்மை நியமித்திருந்தார். புதியனவற்றைக் கற்பதிலே அவர் என்றும் சோம்பல் ஓம்பியதில்லை. தமது இலக்கிய மதத்தினை அறிக்கையிடவும், அதற்காக வாதிடவும், அதற்கான முள்முடி சுமக்கவும் அவர் தயங்கியதில்லை. சிறியவட்டத்தினரான உறவினர்களும், சக ஆசிரியர்களுமே அவரைச் சின்னத்துரை என்று அறிவார்கள். ஏனையோர், பரந்துபட்ட தமிழ்ச் சுவைஞர்கள், அவரை நீலாவணன் என்றே அறிந்தார்கள்; பாராட்டினார்கள்.

அவருடைய புனைபெயர் அவருடைய பிறிதோர் இயல்புக்குக் கட்டியங் கூறுவதாக அமைந்தது. பெரிய நீலாவணை பெயரளவிலேதான் பெரியது. விஸ்தீரணம், ஜனத்தொகை ஆகியவற்றைக் கருத்தில் எடுத்தால், அஃது ஒரு சிறிய கிராமம். நீலாவணை என்கிற பெயரில் இரண்டு கிராமங்கள். வாவியின் துறையாக அமைந்தது துறைநீலாவணை. அதிலிருந்து வேறுபடுத்தப்படுவதற்காக நம் கவிஞர் பிறந்த ஊர் பெரிய நீலாவணை எனப் பயிலப்படுகின்றது. எழுவானில் வங்காள விரிகுடாவின் ஓதம். அதன் வடக்கு எல்லை கல்லாறு என்னும் ஊர். தெற்கில் மருதமுனை என்னும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊர் உண்டு. தாம் பிறந்த மண்மீது அவருக்கு அழுங்குப்பிடியான பக்தி இருந்ததை நான் பல சந்தர்ப்பங்களிலும் அறிவேன். தமது கிராமத்தவருடைய மெத்தனமான சோம்பல் வாழ்க்கையை நினைத்து அவர் மனசாரக் கவன்றிருக்கின்றார். "பொன்னு! கல்லாற்றைப் பார். அங்கு வாழ்பவர்களுள் ஏழைகள் கூடப் படித்து முன்னேற வேண்டும் என்று துடிக்கிறார்கள். எத்தனை ஆசிரியர்கள்? எத்தனை பட்டதாரிகள்? இந்தப் பக்கம் மருதமுனையைப் பார்! அவர்கள் உழைப்பாளிகள். ஜனத்தொகைப் பெருக்கத்தினால் நீலாவணைக் கடற்கரை வரையிலும் பரம்பத் துவங்கியுள்ளார்கள். ஆனால், நான் பிறந்த இந்த நீலாவணை? இருக்கும் சொத்துக்களையும் விற்று இங்குள்ள சாராயத் தவறணையின் ஆதாயத்துக்காகக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்குமானால், இந்த ஊரிலே பிறந்தவர்களுக்கு ஒரு பிடி மண்தானும் மிஞ்சாது..." என மனம் மிக நொந்து, பல சந்தர்ப்பங்களிலே வாய் விட்டுச் சொல்லியிருக்கிறார். தன் சொந்தப் பெயரிலும் பார்க்க, தான் பிறந்த மண்ணின் பெயர் துலங்குதல் வேண்டும் என்பதிலே அவருக்கு இருந்த கட்டித்த பக்தியின் உந்துதலாகவே "நீலாவணன்" என்னும் புனைபெயரை அவர் சூட்டிக்கொண்டார். பிறந்த ஊருக்குப் புகழ் தேடித் தருதல் வேண்டும் என்பதற்காகவே அவர் வாழ்ந்தார். உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. கவிஞர் நீலாவணன் மட்டும் பிறந்திலரேல், மட்டக்களப்பு- கல்முனை வீதியிலே சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் நீலாவணையைப் பற்றி இலக்கியவாணரும் இலக்கிய ஆர்வலரும் ஏன் பேசப் போகிறார்கள்? எழுதப் போகிறார்கள்?

பிறந்த மண்மீது அவர் பூண்ட பக்தி எவ்வளவு சத்தியமானதோ, அவ்வளவு சத்தியமானது அவர் தமிழ்மீது கொண்ட காதல். தமிழின் சிறப்புக் குறித்தும், அதன் பண்டைய வளம் குறித்தும், அதந் சமகாலத் தேய்வு பற்றியும், எதிர்காலத்தில் அதன் வளம் தொற்றிய கனவுகள் பெய்தும், அவர் ஏராளமாகப் பாடியிருக்கிறார். அத்தகைய கவிதைகளை வைத்து அவரை தமிழரசுக் கட்சியின் நயமான மேடைக் கவிஞன் என ஆரம்ப காலத்தில் மட்டிட்டிருந்தேன். அவருடன் பழக ஆரம்பித்த பிறகு, என் ஆரம்பக் கணிப்பு எவ்வளவு தவறானது என்பதைத் தெளிந்து கொண்டேன். சமுதாய வாழ்கையில் நீலாவணன் சமதர்ம-சமவுடமை அமைப்பு முறையினைப் பெரிதும் அவாவினார். அந்த நேசிப்பைப் பிரதிபலிக்கும் சமுதாயக் கண்ணோட்டமுள்ள வாழ்க்கையை பயின்றார். அதே சமயம், தமிழ் வெறி அவருடைய இரத்தத்துடன் கலந்த ஒன்றாகவே சமைந்தது. பாரதியாரின் தமிழ் வெறியை வாயாரப் போற்றும் நம் விமர்சகர் பலர், கவிஞர் நீலாவணனின் தமிழ் வெறியை மட்டுமே பெரிது படுத்தி, அவருடைய கலாசத்தியத்தினை உரிய முறைப்படி கணித்துப் பாராட்டத் தவறியமை ஓர் அவலக் கதியாகும். இந்தத் தவறு களையப்படுதல் நீலாவணனுக்குச் செய்யும் ஒரு நன்றிக் கடனல்ல; ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் சத்தியத்திற்குச் செய்யப்படும் தேவையுமாகும். தமிழ் பற்றிய அவருடைய கவிதைகளை அவர் வாசிக்கும் பொழுது கேட்பது ஓர் இனிய அநுபவமாகும். அவர் தமது கவிதைகளை வாசிக்கும் பொழுது, அமரகவி பாரதி தமது பாடல்களைப் பாடிக் காட்டுவது பற்றிய வர்த்தமானம் எழுப்பியுள்ள கற்பனைச் சித்திரம் எப்பொழுதும் என் மனத்திலே நிழலாடும்.

III

சென்ற ஆண்டில் (1974) ஈழத்துக் கவிதை உலகுக்கு- கிழக்கிலங்கைக்கு-கவிஞர் அண்ணல் இன் மறைவினால் பாரிய நஷ்டம் ஏற்பட்டது. கிண்ணியாவில் சாலிஹ் என்ற இயற்பெயருடன் பிறந்த அண்ணல், அன்பினாலும் நட்பினாலும் எனக்கு மிகவும் நெருக்கமானவராயும் இனி யராயும் வாழ்ந்தார். ஈழத்துக் கவிஞர்களுள் அண்ணல் ஆஜானுபாகுவான உடலமைப்புப் பெற்றிருந்தார். சீனடி சிலம்படி-மல்யுத்தம் ஆகிய தற்காப்புக் கலைகளிலும் வித்துவம் பெற்றிருந்தார். 1964 இல் யாழ்ப்பாணத்திலே நடைபெற்ற சாகித்திய விழாவினை முற்போக்கு எழுத்தாளர்கள், கே.டானியல் இன் தலைமையில் முட்டையடி விழாவாக மாற்றி, ரஹ்மானையும் என்னையும் தாக்க இரத்த வெறி கொண்டு யாழ்ப்பாண பஸ்நிலையத்திலே அலைந்த பொழுது, அண்ணல் பயின்றிருந்த அந்த வீர விளையாட்டுகள் நமக்குப் பாதுகாப்பும் அளித்திருக்கின்றன. மூதூர் அரசியலில் அவர் தடந்தோள் தளபதியாகவும் திகழ்ந்தார். ஈழத்து இலக்கிய உலகில், 'காதல் கவிதைக் கோர் அண்ணல்' என்ற கியாதியும் பெற்றிருந்தார். அன்புக்கு இனியர். குழந்தைச் சுபாவத்துடன் பழகுவார். அவருக்கும் எனக்கும் இலக்கியக் கோட்பாடுகளில் ஒத்த போக்கும் இருந்தது. என் இலக்கிய முயற்சிகளிலே அவருடைய அன்பு பாரிய ஆசியாக வந்து பொருந்தியது. அவருடைய மரணம் மகா சடுதியாக திகழ்ந்த கொடுமை.

அவருடைய இரங்கற் கூட்டத்திலே கலந்து கொள்வதற்காக, அப்பொழுது மூதூரின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த ஏ.எல்.ஏ.மஜ“த் தம்முடன் என்னையும் ரஹ்மானையும் கிண்ணியாவுக்கு அழைத்துச் சென்றார். மஜ“த் அண்ணலுக்கு மருமகன் முறையினர். இருப்பினும், மஜ“த் அண்ணலுக்கு மருமகன் முறையினர். இருப்பினும், மஜ“த் அரசியலின் பெயராலே செய்த அதாப்பியங்களை அண்ணல் எதிர்த்தார். இந்த எதிர்ப்பின் விளைவாக அண்ணல் பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டார். இதற்குக் கழுவாயாகவே அண்ணலின் இரங்கற் கூட்டத்தினை மஜ“த் தரிசித்தாரா? ஆனால், ஒரு பந்து மித்திரனுடைய மரணத்திலே கலந்து கொள்ளும் துடிப்பு எனக்கு இருந்தது.

எனக்கும் முன்னரே, கவிஞர் நீலாவணன் தமது இலக்கிய சகாவான மருதூர்க் கொத்தன் உடன் அங்கு சென்று கவிஞர் அண்ணலின் மறைவு ஏற்படுத்திய துக்கத்தைப் பங்கிட்டுச் சென்றதாகக் கிண்ணியாவில் எனக்குச் செய்தி கிடைத்தது. இந்த நிகழ்வு கவிஞர் நீலாவணன் ஓர் உணர்ச்சிப் பிழம்பு என்பதை மீண்டும் எண்பித்தது. இந்த இரண்டு கவிஞர்களுக்குமிடையில், சில காலமாகவே, கவிதைக் கலை சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததை நான் அறிவேன். அந்த வேறுபாடுகளை ஒரு கணத்திலே மறந்து, ஆற்றலைப் போற்ற விரையும் ஒரு பண்பு நீலாவணனின் செம்மனத்திலேதான் விளையும்.

கவிஞர்களுக்குச் சில முன்னுணர்வுகள் ஏற்படும் என்று சொல்வார்கள். இருவேறு மரபுகளினாலும், முறைகளினாலும் கிழக்கிலங்கையின் கவிதா ஆற்றலுக்கு ஒரு மகத்துவம் சம்பாதித்துத் தந்த இவ்விரு கவிஞர்களும் முன்னுணர்வு காரணமாக, மீண்டும் பிணைப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள் என்கிற உண்மையின் தரிசனம் எனக்குப் பிறகுதான் சித்தித்தது.

"விரைவில்....ஒரு நாளில்
நாம் அறியா வண்ண மந்த
நாளும் இளையருளும்
சேமம்..."

நீலாவணன் இவ்வாறு அண்ணலுக்கு எழுதியதும் ஓர் உள்ளுணர்வின் உந்துதலினாலேதானோ? அவர்கள் அறியா வண்ணம் அந்த நாளை இறையருளும் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் இருவரையும் நம்மிடமிருந்து இறைவன் பிரித்துக் கொண்டானா? சமகாலக் கவிஞர் இருவருக்கிடையில், இத்தகைய ஓர் உணர்ச்சி மயமான குழந்தைத்தனமும் புரையோடிய உணர்ச்சிமயமான பிணைப்பும் லிவியிருக்கலாம் என்பதை அண்ணல் விட்டுச் சென்ற கடிதங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் நம்பியும் இருக்கமாட்டேன்.

'இருவருக்குமிடையில் நிலவிய அன்பிலே சிறுகளங்கம் ஏற்படுவதற்கு நானே காரணமாய் இருந்தால், மன்னிக்க உன் நெஞ்சில் இடமில்லையா?' எனக் கவிஞர் நீலாவணன் ஏங்குகிறார். அந்த ஏக்கத்துக்கு அண்ணல் தரும் மருந்து விந்தையானது. சட்டென்று, அண்ணலின் பார்வையின் நீலாவணன் குழந்தையாக மாறி விடுகிறான். அவன் பிள்ளைக் கனியமுதாக மாறியதும், இவன் பணி சுலபமானது. அந்தக் கனியமுதின் கன்னத்தை 'பிடுங்கி' அள்ளிச் சுவைக்கின்றான் அண்ணல்! இதுகாவிய மயமான அன்பு. துல்லிய உணர்ச்சிகள் மண்டிய இரண்டு கவிஞர்களுக்கிடயிலேதான் இத்தகைய காவிய மயமான அன்பு முகிழ்ந்திடுதல் சாத்தியம். கவிஞர்களுடைய படைப்புகளைப் பற்றிக் கொண்டு, சுய சமத்காரங்களை நிலைநாட்ட விழையும் வித்துவ விமர்சகர்களினாலே, அந்த உணர்ச்சிப் பெருக்கை அநுபவிக்கவும் முடியாது; பாராட்டவும் முடியாது.

IV

தற்காலத் தமிழ்க் கவிதையின் பூபாளம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரே. அவனுடைய கவிதா வீச்சும் வீறும் புதியதொரு யுகத்தை எல்லைப்படுத்தி வகுத்தது. மிகக் குறுகிய காலத்திற்குள் அளப்பரியன சாதித்தான் பாரதி.

அவன் தமிழ்க் கவிதைக்குப் புதிய பொலிவினை ஏற்றியதுடன், புதிய பயனும் கற்பித்தான். கவிதை நடையை இலகு படுத்தியதுடன் நிற்கவில்லை; பாமரர்களுடைய பழகு தமிழை காவிய நயம் அனுபவதித்துக் கையாண்டான். அவனுடைய பார்வையும் அக்கறையும் தமிழுக்கும் தமிழோசைக்கும் அப்பாலுக்கு அப்பாலாக வியாபித்தது. அவனுக்குப் பின்னர் தமிழ்க் கவிதை செய்யப் புறப்பட்டவர்கள், அவனுடைய கவிதா வீச்சின் தாக்கத்திற்கு உட்படுதல் நியதியாய் அமைந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாஸன் கூட, தமது புனைபெயர்ப் புனைவினால், இந்த உண்மையை ஏற்றுள்ளார். பாரதியாரின் தேசிய விடுதலை எழுச்சி, மெஞ்ஞான விசாரனை, உலகளாவிய சமுதாயப் பார்வை, சுத்த சுயம்புவான மானுஷ“கத்தின் தேடல் ஆகியன அவருடைய உள்ளத்திலே பொங்கிய தமிழ்க் காதலைக் கரைக்குள் அணையிட்டும் வைத்தன. புதுத் தமிழ்ச் சேவையே இன்தமிழ்ச் சேவிப்பாகவும் அமைந்தது. 'சிறுகதை' இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் பாரதியாருக்கு இருந்தது. அதற்கான இலக்கிய வடிவத்தை மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தயங்கினான். வழக்கில் இருந்த நாட்டார் கதை மரபிலிருந்து அதற்கு ஓர் உருவம் பெற்றுத் தருவதில் சிரத்தை ஊன்றினான். இதில் அவன் வ.வே.சு.ஐயர் உடன் மாறுபாடு கொண்டு தமிழ் ஓர்மத்தை ஊன்றினான். கவிதை நயம் பிழிந்த வசனங்களை எழுதினான். அதனை வசன கவிதை என மருண்டோரும் உளர். அவன் தன்னுடைய வாழ்கையின் இறுதி இரண்டு ஆண்டுகளைக் கவிதைத் தொழிலிலிருந்து ஒதுங்கியும் வாழ்ந்தான். அப்பொழுது வியாஸங்களே எழுதினான். குறுகிய காலத்திற்குள் முழுமம் எய்திய கவியரசன் அவன்!

பாரதிதாஸனின் கவிதை ஊழியம் வேறு வகையில் அமைந்தது. புறநானூறு காலத்துத் தமிழ் வீரத்துக்கு வார்த்தை மலர்கள் சொரிந்து, ஆரிய மாயையின் விமுக்தியாக 'திராவிட மாயை'யை உருவாக்கிக் கொண்டிருந்த திராவிடக்கழகத்தின் ஆஸ்தான கவிஞன் என்ற பீடத்தில் பாரதிதாஸன் அமர்த்தப்பட்டான். திராவிட எழுச்சியும், தமிழ் உணர்ச்சியும் ஒன்றே என்கிற மாரீசத்தனம் திராவிட மாயையின் ஓரம்ஸம். ஓசையிலே தமிழோசைக்கு ஒரு மகத்துவம் கற்பிக்கும் போக்கும் உருவாயிற்று. இந்தப் போக்குகளுக்குத் தமிழ்க் கவிதை உருவம் கொடுக்கும் வாத்திமைப் பணியைப் பாரதிதாஸன் ஏற்றுக் கொண்டார். பாரதியாருடைய காதல் உணர்ச்சிகள் கண்ணன் மீதும் (கண்ணம்மாமீதும்) கொண்ட காதற் பிரவாகங்களாகக் கோலங் காட்டியதினால், அவன் நம் சுவைப்புக்குத் தந்த மானிடக் காதல் உணர்ச்சிகளிலேகூட, ஒரு தெய்வீகப் புனிதமும் குழைந்து காணப்பட்டது. பாரதிதாஸன் எழுப்பிய காதல் உணர்ச்சி நாத்தீகம் என்னும் சல்லடை வழியாகக் கசிந்தது. இதனால், நிதர்சன உலகின் இன்ப லலிதங்களை ஒத்தது போன்ற சாயலைப் பெற்றது. இன்னும் ஒன்று. திராவிடக் கழகத் தொடர்புகள் பாரதிதாஸனுடைய கவிதா வேகத்தினைக் கட்டுப்படுத்தியது. இலங்கையின் தற்காலப் படைப்பு வீறுக்குத் தமிழ் நாட்டிலே அங்கீகாரம் பெற்றுத் தருவதில் முந்தி நின்ற சாலை இளந்திரையன் இந்தச் செய்தியைத் தமது 'சொக்கன் கதை' என்னும் சுயசரிதையில் வருமாறு அக்கறையுடன் குறித்துள்ளார்:

"குறிஞ்சித் திட்டு என்னும் கவிதைக் கதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, "எதை எதையோ இதற்குள்ளே கொட்டிக் குவித்து, காவியத்தின் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் சிதைத்து விட்டீர்கள்" என்று சொக்கன் சொன்னபோது, கவிஞர் கொஞ்சம் கூட வாட்டம் காட்டவில்லை. மாறாக, "ஆமாம், ஆமாம். நீங்கள் சொல்றது சரிதான். என்னைச் சுற்றி நடக்கிற அயோக்கியத்தனங்களைப் பார்த்தேன். என் நெஞ்சு பொறுக்கல்ல. எல்லாத்தையும் இதில கொட்டித் தீர்த்துட்டேன்" என்றார் ஒருவகையான உணர்ச்சிப் பெருக்குடன். அதேபோல், "உங்கள் தொடக்க காலப் படைப்புகளில் உள்ள வேகம் பிந்தியநாள் படைப்புகளில் குறைந்திருப்பது போலத் தோன்றுகிறதே" என்று சொக்கன் கேட்டபோது, "உண்மைதான். முந்திய படைப்புகள் எல்லாம் நமக்குப் பழக்கப்பட்டுள்ள (சமஸ்கிருதச் சொற்கள் கலந்த) நடையில் அமைந்தவை. இயல்பாக இருக்கும். நான் தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தி வருவதால், 'நீ ஏன் கலப்பு தமிழிலே எழுதறே'ன்னு கேக்கிறான். சமஸ்கிருதக் கலப்புச் சொற்களை நீக்கி எழுதும்போது, அந்த வேகம் கொஞ்சம் தடைப்படத்தான் செய்யுது..." என்று பொறுமையாக விளக்கம் சொன்னார் கவிஞர். இப்பண்புகளினால், பாரதி இட்டதடத்திலிருந்து, பாரதிதாஸன் வேறுபடுவதை நாம் அவதானிக்கலாம்.

தமிழையும் காதலையும் தமது கவிதைக்கான பொருள்களாகத் தமது துவக்க காலத்தில் வரித்துக் கொண்ட நீலாவணன், பாரதியாருக்குப் பதிலாக பாரதிதாஸனுக்கே தம்மைத் தாஸனாக நியமித்துக் கொண்டாரோ என எண்ணவுந் தோன்றுகின்றது. அவர் கவிதை செய்த கூடத்திலே பாரதிதாஸனுடைய கம்பீரமான படம் ஒன்று அலங்கரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். கவிஞர் நீலாவணனுக்கு பாரதிதாஸனின் அநேகமான பாடல்கள் மனப்பாடமாகவே தெரியும். அவற்றை இனிமையுடன் பாடி, அவற்றின் நயங்களைப் பாராட்டுவதில் அவர் என்றும் சலிப்படைந்ததுமில்லை. அவருடைய நாவிலிருந்து பாரதிதாஸன் கவிதைகள் பிறக்கும் பொழுது அவற்றின் ஓசைநயம் பெற்றன போலவும். பாரதிதாஸன் வாலாயப்படுத்திய ஓசைச் சிறப்புகளைத் தமது கவிதைகளிலே பிழிந்து வைப்பதில் கவிஞர் நீலாவணன் பெருவெற்றியீட்டினார். தமிழ் பற்றியும் காதல் தொற்றியும் அவர் ஆக்கியுள்ள தேனார் கவிதைகளை அவர் பாடக் கேட்டுச் சுவைக்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய அத்தகைய கவிதைகள் சிலவற்றை உங்கள் நயப்புக்குத்தர எனக்குக் கொள்ளை ஆசைதான். நான் பேணிய பத்திரிகை நறுக்குகளுக்குள் அவற்றைத் தேடித் தோற்றுப் போனேன். அவை நூலுருவில் உங்களையும், நாளைய இலக்கியச் சுவைஞர்களையும் சென்றடைதல் வேண்டுமென்பது என் பிரார்த்தனை.

கவிஞர் நீலாவணன் ஒரு புதுமைக்கவிஞர். அவர் போலப் பலரைத்தோற்றுவிக்க ஆதரவாயும், ஆசியாயும், உபகாரமாயும், உந்து விசையாயும் அமைந்த தலைமைக் கவிஞனும்கூட! புதுமை என்ற மோகத்திலே, மரபின் உயிர்ப்பைக்கோட்டைவிட்டு, புதுக் கவிதைச் சொல்லடுக்க வந்த 'முன்னோடிகள்' பாதையிலிருந்து நீலாவணன் விலகி நின்றார். பாரதிதாஸனுக்குப் பின்னர், பாரதி வகுத்த இலகுபடுத்திய செய்யுள் நடை, இரண்டு பாலைகள் வழியாக செல்ல முயன்று, அதன் சரஸை இழக்க நேர்ந்தது போலவும் தோன்றுகின்றது. ஒரு சாரார் கண்ணதாஸனின் சினிமா வெற்றியை ஆதர்ஷமாகக் கொண்டு, சினிமாக்காரரின் தேவைகளுக்குச் சிற்றேவல் செய்யச் சென்று, மெல்லிசைத் தேவைகளுக்கு இணக்கங்கண்டு, கவிதா ஊற்றினைப் பறிகொடுத்தனர். புதிய சமூகப் பிரக்ஞையுடனும், வர்க்க போதத்துடனும் கவிதைத் தொழிலில் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ஆற்றலைக்கூடத் தமிழ்ச் சினிமா உறிஞ்சிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகின்றது. கலாசத்தியத்தினையும், நேர்த்தியான புதுப்புனைவு எழுச்சியையும் விதையடித்துக் கொண்டிருக்கும் பகாசுரனாகவே இன்றளவும் தமிழ்சினிமாவை என்னாலே தரிசிக்க முடிகிறது. பிதொரு சாரார். ந.பிச்சைமூர்த்தியின் வழிச் சுவட்டைப் பின்பற்றி, வசன கவிதை என்கிற யக்ஞத்திலே குதித்தனர். அவர்களுடைய தர்மாவேசமும் வித்துவத்திறனும் மரபினைத் துண்டித்த பாலையிலே பாழாகின்றது என்கிற ஆதங்கம் அவருக்குநிரம்பவே இருந்தது. புதுக்கவிதை என்ற பெயராலே, கவிதையின் என்றுமுள ஒரு கன்னிமை மசுவாதப்படுத்தப்படுதல் கண்டு நீலாவணன் மனங் குமுறினார். அதே சமயம், சிருஷ்டி உணர்வும் உந்துதலுமின்றி, வெறும் யாப்பினை அறிந்து, சொல்லடுக்கும் பண்டித வித்துவத்தின் பக்கலிலும் நீலாவணன் தமது தலையைச் சாய்க்கவில்லை.

"பண்டை வழிகண்டு பொருள்
கொண்ட கரு வொன்றினிலே
நின்றெழுதல் வேண்டும் உயர்
பாட்டு-வெறும்
சண்டை வழிசென்று 'தமிழ்த்
தொண்டு' செயத் தேவையிலை
நன்றுமகி ழாது செவிகேட்டு"

இவ்வாறு நீலாவணன் தமது கவிதா மதத்தினை மிகவும் தெளிவாகப் பிரசித்தஞ் செய்தார்.

"இவ்வாறு நீலாவணன் தமது கவிதா மதத்தினை மிகவும் தெளிவாகப் பிரசித்தஞ் செய்தார்.

"இலக்கணத்தைக் கையாள ஏலார் வசனம்
புதுக்கவிதை யாமோ புகழ்"

எனப் புதுக் 'குறள்' இயற்றி, கவிதை உலகிலே செலாவணிக்குக் கொண்டு வரப்பட்ட கவிதை என்கிற 'லேபள்' ஒட்டப்பட்ட சோரப் படைப்புகளைச் சாடிய போராளியாகவும் அவர் திகழ்ந்தார்.

கவிதைக் கலையிலே, அறவழிப் புலவனாகத் தம்மைத் தாமே தமிழ்த் தாய்க்கு அறிமுகப்படுத்தும் நமது கவிஞரின் கவிதை மேலும் சில சங்கதிகளை நயமாகந் தொட்டுக் காட்டும்.

"சாவதா நீஇப் பொல்லாச்
சகுனிகள் சூதாட்டத்தால்
நோவதா இலக்கியங்கள்
நொய்வதா மரபும் மாண்பும்
காவல்செய் துன்னை யென்றும்
கன்னியாய் வாழச் செய்யும்
ஆவலால் வந்தேன்! என்பேர்
ஆறவழிப் புலவன் அம்மா"

கவிதைத் தொழிலும் கலையிலும் தமக்கு ஓர் இலக்கும் சத்தியமும் இருப்பதை அவர் இவ்வாறு அறிக்கை செய்தார். ஈழத்து இலக்கிய உலகத்திலே விமர்சனம் என்னும் பெயரால், சத்தான கவிதைகளும், சத்தியக் கலைஞர்களுடைய ஆற்றல்களும் மறைக்கப்பட்டு, போலிப் படைப்புகளுடைய புகழ் பேசப்பட்ட காலத்திலேதான் நீலாவணன் இந்தக் கவிதையை இயற்றினார். போலிகளைப் படைப்பவர்களையும், அவற்றைப் பாராட்டும் விமர்சகர்களையுமே அவர் சகுனிகள் எனச் சாடினார் தமிழ் என்றுமுள உயிர்ப்பு அதனால், தமிழ் என்றென்றும் கன்னி. அவளைச் சோராம் போக்காது, அவளை என்றென்றும் கன்னியாகப் பேணுதலே முறைமையும் தமிழும் என்பதிலே நமது கவிஞர் சிரத்தை ஊன்றினார். அவளுடைய கன்னிமையைக் காவல் செய்ய மரபின் மாண்பு துணை நிற்றல் வேண்டும் என்கிற கட்சியிலே நீலாவணன் உடன்பாடு கொண்டிருந்தார். புதுமையின் மலர்ச்சியிலே இந்த மரபு பேணப்படுதல் வேண்டும் என்பதையும் அவர் ஏற்றிருந்தார்.

இந்தக்கட்டத்தில் ஓர் உண்மையைச் சொல்லுதல் வேண்டும். எனக்கும் நீலாவணனுக்கு மிடையில் நிலவிய உறவு தடைப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்கு ஜ“வந்தராய் இருந்த பின்னரே, அவர் காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில், நீலாவணன் புதுக்கவிதைகள் பற்றித் தமது அபிப்பிராயத்தினை மாற்றியிருந்தாரோ நான் அறியேன்.

இன்றைய வளர்ச்சிக் கட்டத்திலே புதுக்கவிதைகளே பெரும்பாலும் 'கவிதைகள்' எனப் பேசப்பட்டு, விஸ்தாரமான விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. யாப்பும் இலக்கணமும் பயிலும் கவிதைகள் 'மரபுக் கவிதைகள்' என்கிற ஒரு வகுப்புக்குள் தள்ளப்படுகின்றன. புதிய படிமங்களையும் புதிய சங்கதிகளையும் சொல்லுவதற்குப் புதிய மொழியும் சொற்களும் தேவைப்படுகின்றன என இக்காலக் கவிஞர்கள் வாதாடுகிறார்கள். இத்தகைய கவிதைப் படைப்புகளினாலே தமிழுக்குப் புதிய வீரியம் சேர்க்கும் கவிஞர்கள் பெருகியுள்ளார்கள். இந்தப்போக்குகளினால், மரபு பேணிக் கவிதை ஊழியம் புரிய வருபவர்கள் 'பத்தாம் பசலிகள்' என நோக்கப்படுவார்களோ என்கிற அச்சமும் எனக்கு உண்டு. எண்ணிக்கை வித்தியாசங்களினாலே மாறிவிட்ட சமன்பாடு என இதனைக் கொள்வதற்கும் இல்லை. இன்றைய அச்சு வசதிகளைத் தினைக் கவிஞர்கள் கைப்பற்றி, கவிதைக் கலையைப் புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் சாங்கங்களைக் காண்கின்றேன். கவிதைப் படைப்பிலே புதிய ஆழமும், புதிய பொலிவும் இவர்களாற் சேர்க்கப்படுகின்றன. இத்தகைய செழிப்பினைச் சேர்க்கும் கவிதைப் படைப்பாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. உண்மை. ஆனால், யாப்பினையும்மரபினையும் நெகிழ்த்திய இந்தக் கவிதா வேகத்தின் வீறினையும் பாங்கினையும் உரிய முறையிலே தரிசிக்கத் தவறும் இளைஞர்கள், சொல்லடுக்கும் ஒரு பொழுதுபோக்காக, வசனத்தைப் புதிய கோலத்திலே அடுக்கும் வித்தையாக இன்று கவிதையை அணுகுதல், இலக்கியத்தின் பரமார்த்த உபாசகன் என்கிற என்கிற என் தளத்தில், சோர்வினையும் வியாகூலத்தினையும் அளிக்கின்றன என்பதும் உண்மையே!

இலக்கிய ஊழியத்திலே, படைப்பின் வடிவமும் பாங்கமும் குறித்து, ஒரு கலைஞன் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொள்ளுதல் சாவான பாவமல்ல. மாறும் உலகத்திலே, மாற்றங்களின் உள்ளர்த்தங்களை விளங்கிக் கொள்ளும் ஒருவன், தன்னையும் மாற்றங்களுக்குள் உட்படுத்திக் கொள்ளுதல் சேமமான நியதியாகவும் அமையும். தமிழரசு மேடைகளிலே, பாரதிதாஸனின் குரலிலே தமிழுணர்ச்சி கக்கிய நீலாவணன், என்னுடைய உறவாலும், சீக்கிரமே இலக்கியத்தின் சமுதாயப் பார்வையிலும், இலக்கியத்தின் யதார்த்த அணுகுமுறையிலும் நம்பிக்கை உடையவராக மாறினார். இந்த மாற்றங்களை அறிக்கையிட அவர் கூச்சப்பட்டதும் இல்லை. தம்முடைய இந்த மாற்றத்தினை அவர் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே பிரசித்தஞ் செய்திருந்தார் என்பதை நிதானிக்க முடிகின்றது.

இதனை எண்பிப்பது போல, 1961ஆம் ஆண்ட டிசம்பர் மாதத்தில் பிரசுரமான என் கட்டுரை ஒன்றிலே, நீலாவணனன் கூற்றினை நான் மேற்கோள் காட்டி இருந்தது என் நினைவுக்கு வருகின்றது. அந்த மேற்கோள் இதுதான்:

"யதார்த்த இலக்கியத்தின் தாற்பரியங்களையும் உண்மைகளையும் அறியாதவர்கள், ஓடுகிற தடங்கள் எல்லாம் அலைந்து, களைத்து, நமது கூடாரத்துக்கு வரத்தான் செய்வார்கள்."

இந்தக் கூற்று நீலாவணனின் நம்பிக்கையையும், இலக்கியம் பற்றிய சிந்தனைத் தெளிவையும் பறை சாற்றுவதாக அமையும். கவிதைத் துறையிலே யதார்த்த இலக்கியப் பார்வையைக் கொள்கையாகப் பிரகடனப்படுத்திப் பயின்ற நீலாவணனின் திறமைகளை மட்டுமல்ல, அவருடைய இலக்கியச் சத்தியத்தினையும் முற்போக்கு இலக்கியக் கூட்டினர் அங்கீகரிக்கத் தவறியமை பரிதாபகரமானது. முற்போக்கு இலக்கியக் கோஷ்டியை அக்காலத்தில் வழிநடத்திய கைலாசபதி-சிவத்தம்பி ஆகிய விமர்சகர்கள், திறமையையும் ஆற்றலையும், படைப்பின் தரத்தையும் சிரத்தையிலே எடுத்து இலக்கிய விமர்சனஞ் செய்வதைப் புத்தி பூர்வமாகத் தவிர்த்தே வந்தனர். படைப்பாளி ஒருவன் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவனாய், அன்றேல் பரமார்த்த அநுதாபியாய் இருந்தால் மட்டுமே, அவனுடைய படைப்புகள் சிலாகிக்கப்படலாம் என்பதை அவர்கள் ஒருவித சட்ட நியதியாகவே கடைப்பிடித்தார்கள். இந்த அம்ஸம் நீலாவணனுக்குப் பொருந்தி வராததினால், அவருடைய அருமையான படைப்புகள் நீண்டகாலம் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்தமை, ஈழத்தின் புதிய கவிதா ஆற்றலுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுள் ஒன்று என்பதை இங்கு பிரசித்தப்படுத்ததல் நிச்சயம் தகும். அத்துடன், சிவத்தம்பி உயிர் வாழும் காலத்திலேயே, இருவரும் (கைலாசபதியும் சிவத்தம்பியும்) இலக்கிய விமர்சனம் என்ற பெயரினால் செய்த ஆதாப்பியங்கள், இப்பொழுது ஈழத்திலே பரவலாக மறுவிசாரணைக்கு உட்படுத்தப்படுதல் நற்சகுனமாகும். அவ்விருவரும் மேற்கொண்ட இலக்கிய விமர்சனம் காரணமாக மார்க்ஸ’ஸவாதிகள் மத்தியில் ஓர்மமான படைப்பாளிகள் தோன்றவில்லை என்று பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளுபவர்களுடைய தொகையும் பெருகி வருகின்றது. அச்சா. சத்தியம் வாழ்க!

ஒரு காலத்தில், மாதத்தில் இரு தடவைகளாவது சந்தித்து இலக்கியச் சங்கதிகளை அளவளாவுதலை கவிஞரும் நானும் வழக்கமாக்கியிருந்தோம். அத்தகைய சந்திப்புகள் பரஸ்பர ஞானப் பகிர்வுகளாகவும் அமைந்தன. ஒரு சமயம் Fig Fruit என்கிற ஆங்கிலக் கவிதை ஒன்றினை அவருடைய ரஸனைக்காக வாசித்துக் காட்டினேன். அதன் பொருட் சிறப்பையும், உவமை நயத்தையும் நீலாவணன் மனசாரப் பாராட்டினார்.

ஒரு நாள் சாயங்காலம். பயண கோலத்திலே கவிஞர் நீலாவணன் என் வீட்டுக்கு வந்தார்.

"துலைக்கோ?"

"இல்லை, பொன்னு! வானொலியினர் நடத்தவிருக்கும் தீபாவளிக் கவியரங்கிலே என்னையும் பங்குபற்றுமாறு அழைத்திருக்கிறார்கள். கொழும்பு செல்ல வேண்டும்."

"இவ்வளவு நேரத்துடன்?"

"அதற்கான கவிதை ஒன்றைக் கிறுக்கியிருக்கிறேன். அதனை ஒரு தடவை உங்களுடன் சேர்ந்து அநுபவிக்கும் ஆசை."

கவிஞர் நீலாவணன் அந்தத் தீபாவளிக் கவியரங்கப் பாடலை எனக்குப் பாடிக்காட்டினார். ஆலம் பழத்தினை அவர் மிக நேர்த்தியான உருவகமாகக் கையாண்டிருந்தார்.

பல்வேறு நாடுகளில் பற்பல சந்தர்ப்பங்களிலே நிகழ்த்தப்பட்ட கவியரங்கங்களைப் பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். கவிஞர் நீலாவணனின் இந்தக் கவிதை முழுவதுமானது. அவ்வாண்டின் வானொலித் தீபாவளிக் கவியரங்கு நீலாவணனின் இந்தக் கவிதையினால் திமிர்த்துத் தலைநிமிர்ந்தது.

அரசாங்கக் கவிதைகளுக்குக் கருத்தினை மேவிய உணர்ச்சியும், அர்த்தத்தை மேவிய ஓசையும் சிறப்புக்கு வழிவகுக்கும் என்பதும் என் சுவை அநுபவம். இவற்றை இழைப்பதற்கு நீலாவணன் தவறுவதில்லை. அரங்கக் கவிதைகளைச் சிரத்தை யூன்றி இயற்றி, பெரு வெற்றியீட்டிய இன்னொரு ஈழத்துக் கவிஞர் வி. கந்தவனம் ஆவர்.

ஈழத்தின் அநேக கவியரங்குகளுக்கு கவிஞர் நீலாவணன் மிக விருப்புடன் அழைக்கப்பட்டார். பல அரங்குகளை அவருடைய அரங்கப்பாடல்கள் அணி செய்து, மனமூட்டின. இவை இன்னமும் அச்சுவாகனம் ஏறிச் சுவைஞர்களைச் சென்றடையவில்லை. அவ்வாறே பத்திரிகைகளிலே முகங்காட்டாத அநேக கவிதைகளை அவர் இயற்றி இருத்தலும் சாத்தியம். இந்த ஆக்கங்கள் எல்லாம் எங்கே துயிர் பயில்கின்றனவோ நான் அறியேன். கவிஞர் நீலாவணனின் இனிய இல்லாளாகிய திருமதி அழகேஸ்வரி சின்னத்துரை அவற்றின் துயிலிடத்தை அறிந்திருத்தல் சாத்தியம்.

நீலாவணனின் மனைவி அழகேஸ்வரி பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். பண்பாளர். இலக்கியச் சுவைப்பிலே பழுத்தவர்; ஆனாலும், குடத்து விளக்கு. உணர்ச்சிப் பிழம்பான நீலாவணன், உணர்ச்சி வசப்படும் பொழுது காரண காரியப் பரிமாணங்களை மறந்து, சிக்கலிலும் அவதிப்படுபவர். அவரை மீண்டும் நிலையுணரச் செய்து, கவிதைத் தொழிலிலே அவருடைய ஆக்க மூச்சாகவும் அவர் திகழ்ந்தார் என்பதையும் நான் அறிவேன். கல்முனை வயலிலே புதிய பல எழுத்தாளர்கள் தோன்றுவதற்கு அவருடைய தாய்மை உணர்வு உதவியிருக்கின்றது என்பதற்கு நான் ஒரு சாட்சி. இதனை எண்பிக்க ஓர் எடுத்துக் காட்டினை, அதுவும் கவிஞர் எம்.ஏ.நுஃமானின் முன்மொழியப்பட்ட ஓர் எடுத்துக் காட்டினை, இங்கு தருதல் பொருந்தும்.

"உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண் விடுக்காத
பூனைக்குட்டி போல்
உலகம் அறியா
ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்"

நுஃமான் முதன் முதலிலே கவிஞர் நீலாவணன் வீட்டிலேதான் எனக்கு அறிமுகமானார். "உனது இசையில், என் கவிதையின் ஆன்மா உயிர் பெற்றெழுந்தது" என்று நுஃமான் ஒரு சத்தியத்தினை அறிக்கையிடும் இடம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இன்று நுஃமான் தமது ஆற்றலுக்கு அங்கீகாரம் பெற்ற ஒருவராய் இலக்கிய உலகில் நிமிர்ந்து நிற்கின்றார். பெருமையாகவும் இருக்கிறது. முதலில் நுஃமானைச் சந்தித்த பொழுது அவரை ஒரு தவசிப்பிள்ளையாகவே நினைத்துக் கொண்டேன். அத்தகைய பவ்வியம். இப்பொழுது, அவர் தமது அன்றைய நிலையை வருணித்த விதம், கவிதா வளத்தினை மீறிய சத்தியாக உயர்ந்து நிற்கின்றது.

நுஃமான் அந்தக் காலத்தில் சிறுசிறு கவிதைகள் எழுதுவதிலேயே முனைப்புக் காட்டினார். அப்பொழுது நீலாவணனின் அக்கறைகள் பல பணிகளிலே சிதறிக்கிடந்தன. இருப்பினும், நுஃமானின் பல பணிகளிலே சிதறிக் கிடந்தன. இருப்பினும், நுஃமானின் கவிதா ஆற்றல் மக்கள் மத்தியிலே திருமதி நீலாவணன் அக்கறை கொண்டார். அவர் காட்டிய ஆர்வங் காரணமாகவும், நண்பா ரஹ்மானின் முயற்சியினாலும் நுஃமானின் கன்னிப்படைப்பு அச்சுவாகனம் ஏறிற்று. இது நிகழ்ந்திருக்காவிட்டாலும் நுஃமானின் ஆற்றல் அங்கீகாரம் பெற்றிருக்கும் என்பது வேறு விஷயம். நுஃமானின் கவிதா ஆற்றலை உரிய முறையிலே பாராட்ட முந்தியவர் திருமதி நீலாவணன் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்த மான்மியத்தைப் பிரஸ்தாபிக்கின்றேன்.

"காதலொருவனைக் கைப்பிடித்தே யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி"

இவ்வாறு பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாக, நீலாவணனின் கவிதைக் காரியங்களிலும் கைகொடுத்த இலக்கியவாதியாகவும் திருமதி நீலாவணன் வாழ்ந்துள்ளார் என்பது நீலாவணனின் நினைவுகளுடன் இணைத்து நினைவில் இருத்திக் கொள்ளத் தக்கது. இத்தகைய நினைவில் இருத்திக் கொள்ளத் தக்கது. இத்தகைய இன்னொரு இல்லானை இரசிகமணி கனக செந்திநாதன் வீட்டிலே சந்தித்ததும் நினைவுக்கு வருகின்றது.

"பிள்ளை, குடும்பம், சுற்றமெனும்
பெரிய மலையைத்தான் சுமந்து
என்னைத் தனியாய் இலக்கியத்தில்
இனிதே உலவ விட்டவளும்...."

என இரசிகமணி கனக செந்திநாதன் தமது மனைவி நாகம்மையைப் பற்றி நன்றிப் பெருக்குடன் எழுதினார். இரசிகமணி நடமாடும் வாசிகசாலையாக வாழ்ந்தார். அவருடைய இத்தகைய உயர்ச்சிக்கு அவருடைய மனைவியின் பங்களிப்பு மகத்தானது என்பதை நான் பல சந்தர்ப்பங்களிலும் உணர்ந்திருக்கின்றேன்.

1961ஆம் ஆண்டில், இரசிகமணி கனக-செந்திநாதன் சமகால இலக்கிய முயற்சிகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பினையும் விசாரணையையும் நடத்தினார். கவிஞர் நீலாவணனுடைய இலக்கியப் பங்களிப்பு நீண்ட காலமாகப் பிரஸ்தாபிக்கப்படாமல் இருந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூர்க்கமான சர்வாதிகாரம் ஈழத்து இலக்கிய உலகின் மென்னியைத் திருகிக் கொண்டிருந்த காலம் அது. இந்தச் சர்வாதிகாரத்திற்கு முற்றிலும் மசியாத ஒரு போக்கினை இரசிகமணி கடைப்பிடிப்பவராய் வாழ்ந்தார். சந்தர்ப்பப் பிசகினாலே போலும், அவர் நீலாவணனின் பெயரைக் கவிஞர்களுடைய பட்டியலிலே சேர்க்காது விட்டிருந்தார். இரசிகமணியும் நானும் ஏலவே நண்பர்கள். ஈழத்து இலக்கியக் குணமாய்வுக் கலைக்கு அவர் ஆற்றியுள்ள சேவையை அன்றம் மதித்தேன்; இன்றும் மதிக்கிறேன். கருத்து வேறுபாடுகள் மத்தியிலும் நட்பினைப் பேணும் அரிய பண்பின் ஊற்றாகவும் அவர் வாழ்ந்தார். இரசிகமணி, மேற்படி கட்டுரையில், கிழக்கிலங்கையின் பங்களிப்பினைக் குறைத்தும் இருட்டடிப்புச் செய்தும் கணித்துள்ளார் என்று கவிஞர் நீலாவணன் குமுறினார். இவ்வாறு உணர்ச்சிவசமாய்க் குமுறுவதும் அவருடைய இயல்பே! நீலாவணனின் குமுறலினால் நானும் உணர்ச்சிவசப்பட்டேன். நீலாவணனின் கவிதா உலகின் சுவையிலே நான் திமிர்ந்து திளைத்திருந்த காலம் அது.

இரசிகமணி கனக-செந்திநாதனுடைய குணமாய்வுக் கட்டுரைக்கு, வெள்ளங்காடு வீ.வியாகேசநேசிகர் என்ற பெயரிலே, நீண்ட பதில் எழுதினேன். நீலாவணனின் கவிதா ஆற்றலைப்பற்றி என் பதிலில் வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

"மலட்டுக் கவியாய் மாளாமல்
மரபுக் கொடியும் தாழாமல்
இலக்கோ டெழுதும் ஓர் கவிஞன்
எங்கள் நிலாவணன் உளமும்
கலக்கிவீட்டீர்! சீச்சீ!
கருத்தை எங்கு கற்றீரோ!
இலைக்குள் கனியை மறையாதீர்!
இவன்றன் பெருமை குறையாது!"

இருட்டடிப்புச் செய்தல் என்கிற இலக்கியத் திருகுதாளங்களிலே இரசிகமணிக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை என்பதை நான் சத்தியமாக அறிவேன். ஈழத்து இலக்கிய வரலாற்றின் நேர்மையைப் பேணுவதற்காக அவர் காலமெல்லாம் உழைத்தவர். அவர் ஒரு யுகசந்தி. அவருடைய எழுத்து ஊழியம் மட்டும் சித்தித்திருக்காவிட்டால், முன்னோடிகளுடைய இலக்கியப் பங்களிப்புகள் அனைத்துமே, முற்போக்கு இலக்கிய வட்டத்தினரின் சர்வாதிகாரத்தினாலே மறைக்கப்பட்டும், மறுதலிக்கப்பட்டும் சிதைந்திருக்கும். நேரிய வரலாறு எழுதப்படுவதற்க இரசிகமணி எழுதியுள்ள குறிப்புகளே காலங்காலமாகப் பயன்படும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே மிகுந்த வாத்ஸல்யத்துடன் நினைவு கூருகின்றேன். ஆனால், அன்று....? கருத்து மோதுதலின் போது உக்கிரம் குவித்துச் சாடுதல் என் பலவீனங்களுள் தலையாயதாக இருந்து வந்துள்ளது என்பதை இப்பொழுது நிதானிக்க முடிகிறது.

மூன்று ஆண்டுகள் கழித்து, இரசிகமணி கனக-செந்திநாதன் தமது 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்னும் நூலிலே நீலாவணனின் ஆற்றலைப் பிரஸ்தாபித்து எழுதத் தவறவில்லை. அவருடைய விமர்சனத்தின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்:

"நீலாவணன்...சிறு கதைகளில் கையாளப்படும் வகையில், ஆரம்ப காலத்தில் உவமைகளைக் கையாண்டார். சமீபகாலத்தில் அவருடைய போக்கு மாறி, தத்துவங்களைக் கொண்ட கவிதைகளை எழுதி வேகமாக முன்னுக்கு வந்தார். வானொலிக் கவியரங்கு ஒன்றிலே, ஆலம்பழத்தை மேனாட்டுக் கவிஞர்களுடைய பாணியிலே உருவகப்படுத்திப் பாடிய கவிதை இரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. 'மரபு' பரிசோதனைக் களத்தில் அவரது 'வழி' என்னுங் கவிதை இடம் பெற்றது. இந்தக் கவிதை ஒன்றால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கலாம்...."

'வழி' என்று இரசிகமணியின் விமர்சனத்திலே ஏத்தப்படும் நீண்ட கவிதை 1962 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், தினகரன் வார வெளியீட்டில் மூன்று வாரங்கள் தொடர்ந்து வெளிவந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கவிஞர் நீலாவணன் கவிதா ஆக்கங்களுக்கு விரிவான பிரசுர களங்களைக் கொடுத்துத் 'தினகரன்' ஆசிரியர் திரு ஆர். சிவகுருநாதன் தன் பங்களிப்பினைச் செய்தார் என்பதும் இதனாற் பெறப்படும்.

இந்த 'வழி'யை அக்காலத்திலே, தினகரனில் வெளிவந்த 'இருவர் நோக்கில்' விமர்சனஞ் செய்த மகாவித்துவான் எஃப் எக்ஸ்.ஸ’. நடராஜா அவர்கள் தமது கட்டுரையை வருமாறு முடித்திருந்தார்:

"கவிஞர் நீலாவணன் அவர்கள் 'வழி' என்ற கவிதையில்... உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார்; முறைதான்; தருமந்தான். அன்னாரின் நடுவு நிலைமையைப் பொன்னே போற் போற்றுவோமாக! போற்றிக் கொண்டு கவிதைக் கலையை வளர்ப்போமாக!!"

பழைமையிலே காலூன்றிக் கவிதை செய்த புதுமை வெறியனாகவே கவிஞர் நீலாவணன் திகழ்ந்தார்.

".............
அவளும் பிறந்த
அது முதலாய்
ஏதேனும், பிள்ளை
பெறுவதில் மாற்றம்
இருந்ததுவோ?
பாதாதி கேசம்
வரையில் படைப்பில்
பழமையலால்
பூத உடலில்
புதுமை எதுவும்
புதுந்த துண்டோ...."

என்று புதுமைப் படைப்பிலேகூட, சடங்குகளும் சாங்கங்களும் பழைமையிலே வேரூன்றி நிற்பவைதாம் என்பதை மிக அச்சாவாக நீலாவணன் கூறுகின்றார்.

அதே சமயம் புதிய உவமைகளைப் புகுத்துவதிலும், புதிய சுருதிகளை மீட்பதிலும் நீலாவணன் தணியாத தாகம் உடையவராய்த் திகழ்ந்தார்.

அந்திவானத்து அழகினை அனுபவித்து, அநேக கவிஞர்கள் பாடி மகிழ்ந்துள்ளார்கள். 'பாஞ்சலி சபத'த்தில் வரும் சூரிய அஸ்தமனக் காட்சியின் சித்திரச் சுவையிலே மனம் பறிகொடுக்காத தமிழ் நெஞ்சமும் உண்டோ? அந்தி வானில் மயக்கிலே சிந்தை பறிகொடுக்கும் என் மனநிலையை 'அப்பையா காவிய'த்தில் வருமாறு தமிழ் செய்தேன்:

அந்தி வானம் சிந்திய செவ்வொளியில்
பந்தரின் கீழ்நான் சாய்மனை ஒன்றில்
குந்தி நீட்டி நிமிர்கின்றேன். தென்றல்
வந்து சாமரை வீசிச் சிரித்தது!
அணைத்தும் அகன்றும் அலைந்து திரிகையில்
சினைத்தெழும் இன்பச் சிறையினில் கனிந்த
புதுமணப் பெண்போல் பொலிந்த மாலையின்
நெற்றித் திலகமாய் கதிரவன் நிற்கையில்
என்னை இருத்தி இதயம் எழுந்து
விண்ணிலே தாவி விளையாட் டயர்கையில்
வண்ணக் கோலம் வரையும் மேகம்
இளமைப் பொலிவை இருத்திக் கணத்தில்
கலைந்து வேறு கோலம் அடைகையில்
நிலையா வாழ்க்கை நிலைமை புரிகையில்
நீலம்பூசி நெடுவான் வெளித்தது
மாலை மயக்கம் உலகைத் தழுவி
இரும்புப் பிடியில் இறுக்க நினைக்கையில்
அரும்பு விட்டது கிழக்கு வானம்!

ஆனால், அந்திவானின் அழகினை நீலாவணன் தரிசித்த பாங்கம் தனித்துவமானது. அஃது என்றும் அனுபவித்து மகிழ வேண்டிய கவியின்பம். மேல்மலையில் நிற்கின்றான் செங்கதிரோன். படுவானிலே குங்குமப்பொடி கலைந்து கிடக்கின்றது. இந்தக் காட்சியின் உந்துதலிலே, இன்னொரு காட்சி அவன் மனக்கண்ணில் விரிகிறது. காதல் வாழ்க்கையின் அநுபவத்திலே அவன் நெஞ்சிலே தீட்டப் பெற்றிருந்த ஓவியம் ஒன்று துலக்கம் பெறுகிறது என்றுகூடச் சொல்லலாம். பள்ளியறையிலே கலவியின் முற்யிய சுவையை வெட்கமிழந்து மாந்திய பொழுது நெற்றியிலிட்ட குங்குமப் பொட்டு இடம் பெயர்ந்து அதரமெல்லாம் அளைந்தது. பின்? மெல்லிய, இனந் தெரியாத குற்ற உணர்வு. இந்த உணர்வு கள்ளம். அந்தக் கள்ளத்தால் அவள் தலை கவிழ்ந்து நிற்கிறாள். அது விண்ணில்; இது மண்ணில்! விண்ணையும் மண்ணையும் ஏக காலத்தில் இணைத்து நிற்கும் நீலாவணனின் அந்தக் கவிதையை நீங்களும் சுவைத்து அனுபவியுங்கள்.

"பள்ளியறை தனில் கணவன் தன்னோடென்றும்
படித்தறியாக் காவியத்தின் பாயிரத்தை
நள்ளிரவில் அமளிமிசை திரையினுள்ளே
நன்கறிந்து சுவைக்கையிலே நுதலில் கையால்
அள்ளிவிட்ட குங்குமப் பொட்டிடம் பெயர்ந்து
அதரமெலாம் முகமெல்லாம் அளையக்காலை
கள்ளத்தால் தலைகுனிந்து கதவில் நிற்கும்
கன்னியெனச் செங்கதிர்மேல் மலைக்குள் நின்றான்"

விண்ணில், மேல்மலையில் நிற்கும் கதிரவனுக்கும், மண்ணில் கதவிடுக்கில் நிற்கும் பெண்ணுக்கும், மாலைக்கும் காலைக்கும், கற்புக்கும் களவுக்கும் என இந்தக் கவிதையிலே எத்தனை படுமுடிச்சுகளை நெய்திருக்கிறார் கவிஞர் நீலாவணன்!

V

பாரதியாருக்குப் பின்தோன்றிய தமிழ்க் கவிதைக்கலையைச் சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுத்துச் சென்றவர் 'மஹாகவி'. இவருடைய இயற்பெயர் து.உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக-குடும்பச் சூழலிலிருந்து அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து.உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் 'மஹாகவி' கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று, தமிழ்க் கவிதையைப் புதிய பாதையிலே இட்டுச் சென்றார். கவிதையைப் பற்றி, ஒரு கட்டத்திலே, அவர் வருமாறு எழுதினார்:

கவிதை உலகளவு பரந்து
பல்வேறுபட்டது
கடவுளையும் காதலியையும் போற்றுவது
மட்டும் அன்று அதன் பணி.
கட்டித்த சிந்தனை உடைய பண்டிதர்களும்
கோட்பாடுகளை விழுங்கி விட்டுச்
செமித்துக் கொள்ள முடியாதவர்களும்,
மோப்பதற்கும்,
மோந்து முணுமுணுப்பதற்குமாக
எபதப்படுவதன்று கவிதை.
அது சாதாரண மனிதனின்
பழுது படா உள்ளத்திற் பாயப் பிறப்பது.

'மஹாகவி' தெளிந்த ஞானத்துடன், கவிதையை அணுகினார். அவருடைய மனித நேசிப்பு அபூர்வமானது. சகமனிதர்களை ஆழ்ந்து நேசித்தார். அன்றாட நிகழ்ச்சிகள் பற்றிய அவருடைய அவதானம் கூர்மையானது. இவற்றை இயல்பாகக் கவிதையிலே சொல்ல வல்ல உபாயத்தைத் தேடி பயின்றார். சாதாரண மனிதர்களுடைய நிகழ்வுகளைச் சித்திரிப்பதற்கு அவர்கள் மத்தியிலே பயின்ற பேச்சுக் சொற்களை ஆட்சிப்படுத்தினார். இதனைப் பின்னால் வந்த விமர்சகர்கள் 'பேச்சோசை' என்று வித்தாரப்படுத்தினார்கள். யதார்த்த இலக்கியம் படைக்கவல்ல செய்யுள் நடையை வகுப்பதிலும், புதிய கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதிலும், பாரதியார் இலகுபடுத்திய கவிதையை புதிய வளர்ச்சிக் கட்டத்திற்கு எடுத்துச் சென்ற தலைமைக் கவிஞன் 'மஹாகவி!' 'கோட்பாடுகளை விழுங்கிவிட்டுச் செமித்துக் கொள்ள முடியாதவர்களாக' ஈழத்து இலக்கிய விமர்சன உலகினைக் குத்தகைக்கு எடுத்திருந்த விமர்சகர்கள் நீண்ட காலமாகவே 'மஹாகவி'யின் பங்களிப்பைக் கண்டு கொள்ள விரும்பாதவர்களாகவே வாழ்ந்தார்கள். இவற்றைப் பற்றிய சர்ச்கைகளிலே ஈடுபடாமல், படைப்பிலக்கியத்தில் சிரத்தை ஊன்றி நிறை பங்களிப்புச் செய்த பெருமை மஹாகவிக்குரியது. காலத்தால் மட்டுமன்றி, பணியாலும் படைப்பாலும் 'மஹாகவி' தற்கால ஈழத்துக் கவிதையின் தலைமகனாய்த் திகழ்ந்தார். கவிஞர்கள் அண்ணலையும், நீலாவணனையும் முந்திக்கொண்டு, மஹாகவி 1971ஆம் ஆண்டில், மாரடைப்பினாற் காலமானார்.

1965 ஆம் ஆண்டளவிலேதான் 'மஹாகவி'யுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நெருக்கம் ஏற்படுத்திய அந்த நிகழ்ச்சி என்றும் என் நெஞ்சை விட்டு அகலாது. இந்து வாலிபர் சங்கத்தினர், நீர்கொழும்பில், அந்த ஆண்டில், பிரமாண்டமான தமிழ்விழா ஒன்றினை நடத்தினார்கள். அதிலே கவியரங்கமும் இடம் பெற்றது. மேற்படி கவியரங்கிற்கு 'மஹாகவி'யே தலைமை தாங்குவார் என்றே நான் உட்படச் சகலரும் எதிர்பார்த்தார்கள். விழா அமைப்பாளரும் அவரையே தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். 'கவியரங்கிற்குக் கவிஞனே தலைமை தாங்குதல் வேண்டும் என்பது சம்பிரதாயமானது. கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் பாலமாக அமையவல்ல ஒரு நேர்த்தியான சுவைஞன் தலைமை தாங்குவதுதான் நல்லது. புதிய முறையை நாங்கள் அறிமுகம் செய்வோம். எஸ்.பொ. இங்கு இருக்கிறார். அவரே நமது கவியரங்கிற்குத் தலைமை தாங்கப் பொருத்தமானவர். அவர் தலைமை தாங்க, நான் கவிஞனாய்க் கலந்து கொள்வதுதான் எனக்குச் சிறப்பு' என்று பிடிவாதமாகச் சொன்னார். இவ்வாறு அவர் தமது தலைமைப் பதவியை என்மீது 'கட்டியடித்து' மகிழ்ந்தார். 'மஹாகவி'மீது எனக்கிருந்த அபிமானங்காரணமாக, அவருடைய வேண்டுகோளை என்னாலே தட்டிக்கழிக்க முடியவில்லை.

நீர்கொழும்புக் கவியரங்கு நடைபெற்றதிலிருந்து மஹாகவி காலமாகும் வரையிலும் எங்கள் இருவருக்குமி€யில் சங்கையான இலக்கிய நட்பு நிலைத்தே இருந்தது. புதியன படைத்து ஈழத் தமிழ் இலக்கியத்தை மட்டுமின்றி, உலகளாவிய தமிழ்ப் பரப்பினையே நாம் செழுமைப்படுத்துதல் வேண்டும் என்பதிலே ஒத்த கருத்துடையவர்களாக இருந்தோம். முனைப்பாக நமது ஊழியத்தில் ஈடுபட்டோம். அவருடைய துறை கவிதை; என் வழி வசனம். எங்களிருவருடைய பங்களிப்பினையும் இருட்டடிப்புச் செய்திடல் வேண்டும் என்பதிலே முற்போக்கு இலக்கிய வட்டத்தின் தலைமைப்பீடம் சிரத்தை ஊன்றிச் செயற்பட்டும் வந்தது. இத்திருகுதாள வேலைகள் மூலம் தமது வட்டத்தைச் சேர்ந்த 'சக்கை' களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்துச் சம்பாதித்துக் கொடுத்து விடலாம் என்கிற 'பறதி'யும் அதற்கு இருந்தது. திறமை வெல்லும் நிலைக்கும் என்கிற நம்பிக்கை இருவரிடமும் இருந்தது. இருவரும் இலக்கிய உலகில் ஒரே திசையில் யாத்திரை மேற்கொண்டதினால், இருவருக்கும் இடையில் இலக்கிய நட்பு நிலைத்திருத்தல் இயல்பாயிற்று.

மஹாகவியின் கவிதா ஆற்றலிலே எனக்கு ஓர் ஆழமான சுவைப் பிடிப்பினை முதல் முதலில் ஏற்படுத்தியவர் கவிஞர் நீலாவணனே என்பதை நன்றிப் பெருக்குடன் இங்கு நினைவு கூருதல் என்னுடைய கடமை. உண்மைகள் பிரசித்தமாதலும் பயிற்சிக்கு வருதலும் மகா ஆரோக்கியமானது என்பதை நான் இன்றளவும் மதமாகவே பின்பற்றுகிறேன்.

"இன்றைய ஈழத்துக் கவிஞர்களுள் நான் அதிகம் மதிக்கும் கவிஞன் மஹாகவியே" என்று கவிஞர் நீலாவணன் வாய் மணக்கக் கூறுவார். மஹாகவியின் புகைப்படம் ஒன்றினைக் காட்டினார். அதனைப் பொக்கிஷம் போலப் பேணினார். பல சந்தர்ப்பங்களிலே மஹாகவியின் பாடல்களைப் பாடித் தமது ரஹனையை என்னுடன் பங்கிட்டு மகிழ்ந்தார். மஹாகவி தமது கவிதைகளிலே புகுத்திய புதுமைகளையும் கையாண்ட கலைத் திறனையும் இருவருமாக இனங்கண்டு மகிந்தோம். சாமான்ய மக்கள் மத்தியிலே பயிலப்படும் சொற்களையும் பேச்சோசையையும் மஹாகவி தமது கவிதைகளிலே தாராளமாகக் கையாண்டார். வசனத்திலே பயிலப்படும் நிறுத்தக் குறியீடுகளை அவர் கவிதைகளிலே மிகுந்த லாவகத்துடன் கையாண்டார். யதார்த்தமான சிறிய நிகழ்வுகள்கூட மஹாகவியின் கைவண்ணத்திலே கவிதைகளாயின. இந்த உபாயங்கள் கவிதையைச் செழுமைப்படுத்தும் என்பதை நீலாவணன் ஏற்றார். இவை முற்று முழுக்க மட்டக்களப்பு மண்ணுக்குப் புதியனவும் அல்ல. இத்தகு பண்புகள் சிலவேணும் மட்டக்களப்பு மண்ணிலே தவழ்ந்த நாட்டார் பாடல்களிலேயும் பயிலப்பட்டு வந்தன.

மட்டக்களப்பில் எழுத்தறியாப் பாமரர்கள், பிரக்ஞையும் எத்தனமும் இன்றியே, கவிதைக் கலைக்கு வளஞ் சேர்த்தார்கள். மண்ணின் உணர்ச்சிகள், மண்ணிலே தவழ்ந்த வார்த்தைகளிலே பாடல்கள் ஆயின. அவற்றின் கற்பனைகளும் கற்பிதங்களும் அவர்கள் வாழ்க்கையிலிருந்தும், அந்த வாழ்க்கை சமைத்த சமூகத்திலிருந்தும் பெறப்பட்டவை. கவிதை அவர்களுக்கு வித்துவத்தின் வடிகாலல்ல. அஃது அக உணர்ச்சிகளின் வெளிப்பாட்டு வாகனம். உணர்ச்சிகளினதும், ஆசைகளினதும், தேவைகளினதும் ஊடகமாகவே சொற்கள் பயன்பட்டன. 'ஆபாசம்''கொச்சை' 'இழிசனர்' போன்ற வித்தார விசாரணைகளிலே அவர்களுக்கு அக்கறையும் இல்லை. இவற்றிற்கான படிப்பறிவும் அவர்களுக்கு இருந்ததில்லை. கவிதைக்கான கருவையும் உருவையும் உருவாக்க அவர்கள் கற்பனையைக் கசக்கிப் பிழிய வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. வாழ்க்கையே கவிதை; கவிதையே வாழ்கை என்கிற மகத்துவத்தின் இயற்கைக் குழந்தைகளாக வாழ்ந்தார்கள். இந்நிலையில் கவிதை அவர்களுக்கச் சுவாசமாயிற்று!

இந்த மழைக்கும் இனிவாற கூதலுக்கும்-எண்ட
சொந்தப் புருஷ னெண்டா சுணங்குவாரா வட்டையில

இதன் பாடபேதம்;

இந்த மழைக்கும் ஈனேவாற கூதலுக்கும்
சொந்தப் புருஷனென்றால் சுணங்குவாரோ முன்மாரியில்

மட்டக்களப்பு மண்ணிலே பயிலப்படும் நாட்டார் பாடல்களுள் இதுவும் ஒன்று. பாமரப் பெண் ஒருத்தியின் வேட்கையின் ஓசை! இந்த வேட்கையிலே எத்தனை உணர்ச்சிப் பின்னல்கள்? காட்சிகளும் வார்த்தைகளும் மகா இயல்பானவை. கொச்சையாகச் சொன்னால் கனவுச் சுதிதான் அவளுடைய வேட்கை. அவளுடையது புலம்பல். இன்னொருத்தி காரியக்காரி. தன் இச்சா சித்திக்கு வழி எடுத்தும் தருகிறாள்.

அட்டுவத்தின் கீழே
அவரைக் கொடியோரம்
கடப்பெடுத்து வைத்திருப்பேன்
கட்டாயம் வாங்கமச்சான்


'ஈன', 'வட்டை', 'முன்மாரி', 'அட்டுவம்', 'கடப்பு' ஆகிய சொற்கள் மட்டக்களப்பு பாமரர் மத்தியிலே வழங்கும் பேச்சு மொழி. 'சங்க காலத்திலும் களவொழுக்கம் பயிலப்பட்டது. களவொழுக்கம் கற்பொழுக்கத்தின் ஓர் அங்கமாகவும் முன்னோடியாகவும் பயிலப்பட்டது'-இவ்வாறு பென்னம்பெரிய குஞ்சங்கள் கட்டிப் பேராசிரியர்கள் கற்பித்தவை, படிப்பின் வக்கிரம் மண்டிய விளக்கங்களே என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த நாட்டார் பாடல்கள் துணை நிற்கின்றன. இப்படியான பல விஷயங்களை, நீலாவணைக் கடற்கரையில் அமர்ந்து, நேரம் போவதே தெரியாமல் நீலாவணனுடன் பேசி மகிழ்ந்திருக்கிறேன். 'மச்சான்! உண்மையான நாட்டார் பாடல்கள் வெட்கமறியாதன. நேர்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அவற்றை அச்சிலே போடுவதற்கு வெள்ளை வேட்டி கட்டிய நாகரிகம் தடையாக இருக்கும்....' என்று ஒரு சந்தர்ப்பத்திலே கூறிய நீலாவணன், அச்சு வாகனத்துக்கு 'உச்சுக்காட்டி' நிலவும் நாட்டார் பாடல் சிலவற்றைப் பாடியும் காட்டினார். வார்த்தைகளையும் மீறிய உணர்ச்சி, உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி நேர்மையாக வெளியிடும் அப்பட்டமான பாமர மானுஷ“கம் ஆகியவற்றை அந்தப் பாடல்களிலே அனுபவித்தேன். யதார்த்தம், கற்பனை, உணர்ச்சி, கருத்து, உவமைகள், பேச்சோசை என்பவற்றுக்கு அப்பால், பாடலைப் போன்றே கவிதை செவிக்கும் இன்பம் அளிக்கக் கூடியதாக அமைதல் வேண்டும் என்பதிலே சிரத்தை ஊன்றி நீலாவணன் கவிதைத் தொழிலை இயற்றினார்.

களவொழுக்கம் தொடர்பாக இன்னொரு கிளை விசாரணை. சொந்தப் புருஷனை அன்றேல் மனைவியைத் தவிர்த்துப் பெறப்படும் உடலுறவு இன்பத்திற்குப் பெயர் என்ன? இன்றய நாகரிகம் இத்தகைய இன்ப நுகர்ச்சிகளை அழித்தொழித்து விட்டதா? இஃது ஆகுமா, நெறியானதா என்பனசன்மார்க்க விசாரணை. இந்த விசாரணைகள் மண்ணிலே பிறந்த மேனியாகப் பிறக்கும் நாட்டார் பாடல்களுக்குப் பொருந்தா. களவொழுக்கம் ஆத்மார்த்தமானதா? அன்றேல் தேவையின் அநுசரணையா? தேவையின் அநுசரணை என்றால், அதனை அடைவதற்குச் சமூகத்திலே பயிலப்படும் உத்தி வாழ்க்கையின் அம்ஸமே! இதனை 'விபசாரம்' என்கிற சொல்லாலே விளங்கிக் கொண்டாலும் பாதகமில்லை. முறையாக, சமூக அங்கீகாரம் பெற்ற சடங்கு முறைகளினாலே, பிணைக்கப் படாத இருவருக்கிடையில் உடலுறவு நடைபெறுதல் நிதர்சனம். அத்தகைய உறவுகளிலே பணம் பரிமாறப்படாவிட்டால் களவொழுக்கம். அது புனிதம். பணம் பரிமாறப்பட்டால், களவொழுக்கத்தின் புனிதம் சோரம் போய்விடுகிறதாம். அது விபசாரமாகிவிடுகின்றதாம்! உறவுக்கு அப்பாற்பட்ட பிறிதொன்றுதான் சன்மார்க்கத்தின் அளவுகோலாகப் புகுத்தப்படுகின்றது. இந்தக் 'கோக்குமாக்கு' நியாயங்களுக்கு மசியாது பாமரக் கவிஞன் வாழ்ந்தான். காரணம், அவன் பாமரன்!

கொத்து முலைக்காரி எண்டு
கொண்டு வந்தேன் காசுபணம்
சாய்ஞ்ச மொண்ணிக்காரி எண்டா
தந்திடுகா என் பணத்தை!

இந்தப் பாடலைப் பாடியவன் யார்? எத்தகைய சந்தர்ப்பத்திலே பாடினான்? ஒன்றும் தெரியாது. 'அநாம தேயத்'தனம் நாட்டார் இலக்கியத்துக்கு உண்டு. காலமும் களமும் கற்பிக்கக் கதை பண்ணத் தேவையில்லை. 'மொண்ணி' என்ற சொல்லை நீக்கி, 'முலை' என்ற சொல்லைச் சேர்க்க வேண்டாம். நாட்டார் பாடல்களுக்கு அச்சுவாகனம் ஏறிடும் மரியாதை சம்பாதித்து தரவேண்டாம். நாட்டார் பாடல்களை வைத்து மட்டக்களப்பு எழுத்தாளர் சிலர் இலக்கிய 'பிசினஸ்' நடத்துவதையும் நானறிவேன். நாட்டார் பாடல் சிலவற்றின் உயிர் மூச்சினைத் திருகி, 'அச்சுக்கு ஏற்றதாக' உருவாக்குவதற்கு இந்த எழுத்தாளர் தமது கவிதா ஆற்றலையோ அன்றேல் ஆற்றலின்மையையோ 'பெய்து' நடத்தும் மோசடிகள் பலவற்றின் ஞானப்பிரகாசம் எனக்குப் புன்னக்குடாக் கடற்கரையிலேதான் முழுதாகச் சித்தித்தது. இந்த ஞானப்பிரகாசத்திற்கு உபகாரிகளாக வாய்ந்தவர்கள் 'புரட்சிக் கமால்', 'அவைவேந்து' ஆகிய இரண்டு முஸ்லிம் கவிஞர்கள். இவர்களும் கவிஞர் நீலாவணனுடன் ஒரே மேடைகளிலே கவிதைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். நீலாவணனின் நினைவுகளுடன் இணைந்து அவர் காலத்திலே வாழ்ந்த கவிஞர் பற்றிய நினைவுகளும் குதியாட்டமிடுவதைத் தவிர்க்க முடியாதும் இருக்கின்றது...

கவிஞர்கள் அண்ணலுக்கும் நீலாவணனுக்கும் முன்னதாகவே, புரட்சிக் கமாலின் கவிதா ஆற்றல் ஈழத்து இலக்கிய உலகிலே பிரசித்தஞ் செய்யப்பட்டிருந்தது.

"நாளை வருவான் ஒரு மனிதன்
ஞாலத் திசைகள் கோலமிட
நாளை வருவான் ஒரு மனிதன்
...................
சாதி ஒன்றாய் நிறமொன்றாய்
சமயம் ஒன்றாய் மொழியொன்றாய்
நீதி ஒன்றாய் நிலையொன்றாய்
நிறை கண்டாளும் விஞ்ஞானி...

நாளை வருவான் ஒரு மனிதன்
வானக் கூரைப் பந்தலின் கீழ்
வையத்துப் பெருமனையில்
மானிடத்தின் பிள்ளைகளை
மருவி மகவாய் விருந்தோம்ப
நாளை வருவான் ஒரு மனிதன்!

என்று புதிய மனிதனைத் தரிசித்த அவர் முஸ்லிம்கள் மத்தியில், ஒரு புரட்சியாளராகவே மதிக்கப்பட்டார். எதிலும் புதுமை, புரட்சி என்று ஆவேசப்பட்டார். நவீன துருக்கியை நிறுவிய 'அத்தா துர்க்' முஸ்தபா கமால் அவர்கள் இவருக்கு ஆதர்சமாக விளங்கியதில் வியப்பில்லை. 'புரட்சிக் கமால்' என்ற புனை பெயரிலே எம்.எம்.சாலிஹ் என்னம் அவர் இயற்பெயர் மறைந்தது. இளைஞனான கைலாசபதியை கவிதா விமர்சகனாக அங்கீகரித்து, தம்முடைய 'புரட்சிக்காமல் கவிதைகள்' என்னும் தொகுதிக்கு முன்னுரை எழுதும் உரிமையை வழங்கினார். இந்த நன்றிக் கடனுக்காக, தமது ஆரம்பகால இலக்கிய விமர்சனக் கட்டுரைகளிலே, புரட்சிக்கமாலின் கவிதா ஆற்றலைக் குறிப்பிட கைலாசபதி தவறவில்லை. பின்னர், முற்போக்கு இலக்கிய வட்டத்தின் ஆஸ்தான கவிஞராக முருகையன் நிவேதிக்கப்படுதல், ஒடுக்கப்பட்ட மக்களின் பாவலராகப் பசுபதி ஞானஸ்நானம் செய்யப்படுதல் ஆகிய பணிகளிலே கைலாசபதி தம்மைப் பிணைத்துக் கொண்டபொழுது, வசதியாகப் புரட்சிக் கமாலைக் கை கழுவி விட்டார். காலத்தின் கோலமாக, இனவாத அரசியலிலே புரட்சிக் கமால் ஈடுபட்டு, கவிதை எழுதுவதை இவரும் கைநழுவ விட்டதாகவும் தோன்றுகின்றது. இருப்பினும், அவருள் வாழ்ந்த இயல்பான கவிஞனுள்ளம் கவிதா ரஸனையைத்தேடி அலைந்தது. அவர் நாடிய கவிதா ரஸனை மாளிகை புன்னக்குடாவில் எழுவதற்கு அவை வேந்தும் நானும் துணை நின்றோம். வங்காள விரிகுடாவிலிருந்து எழும் ஓதமும், சீதளமும்! கடலோரத்திலே செழுமையான தென்னந்தோப்புகள். இந்த அழகுகளை முடைந்து ஏறாவூருக்கு எழுவானில் புன்னக்குடா அமைந்துள்ளது. அங்கு செல்லும் பொழுது 'சப்ஸ’' அல்லது 'பங்கு' எடுத்துவர 'அவைவேந்து' தவறமாட்டார். 'சப்ஸ’' பாயாசம் போலத்தோன்றும் 'பங்கு' ஊன்பண்டம். இவை இரண்டும் கிழக்கிலங்கை முஸ்லிம் குஷ’னியின் மகத்தான படைப்புகள். இவற்றைச் சாப்பிட்டால் மகா 'மஜா'வாக இருக்கும். மனித உடல்களிலே இறக்கை கட்டி, வானிலே பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். யாழ்ப்பாணச் சுவாமியார் சகவாசத்தினால் பாரதியாரும் இத்தகைய கவிதா பறப்புகளிலே ஈடுபட்டிருந்தாரோ நான் அறியேன். 'சப்ஸ’' அல்லது 'பங்கு' ஆகியவற்றின் துணையுடன் இறக்கை கட்டிக் கொண்டு, அச்சேற முடியாத நாட்டார் பாடல்களைப் பாடுவது அலாதியானது. அதன் சுகமே தனி. அநுபவித்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சுகம் புரியும்.

கவிஞர் நீலாவணன் தன்னுடைய கிராமத்தை மிகவும் நேசித்தார் என்கிற சங்கதியை ஏலவே கூறியுள்ளேன். தமது அயலையும் அயலிலே முகிழ்ந்த இலக்கிய ஆற்றலையும் சேவிப்பதற்கு அவர் எப்படி ஓர் இயக்கவாதியாக உழைத்தார் என்பதைப் பின்னர் பிரஸ்தாபிக்கலாம் என்றிருக்கிறேன்.

பிறருடைய ஆற்றல்களைப் பாராட்டுவதில் நீலாவணன் எல்லைப் பிராந்திய உணர்வுகளை ஊடாடவிட்ட கடுகு மனத்தினரல்லர். 'அடுத்தவன் வீட்டு முற்றத்திலே பூக்கும் முல்லையிலும் பார்க்க, என் வீட்டுக் கொல்லையிலுள்ள எருக்கம்பூ மணமுடையது' என்று அவர் என்றும் அழிவழக்காடினதும் இல்லை. இதற்கு ஓர் உதாரணத்தை இந்தச் சந்தப்பத்திலே கூறுதல் பொருந்தும்.

நீலாவணைக்கு வடபால், அதனை ஒட்டியுள்ள அயற்கிராமம் கல்லாறாகும். ராஜபாரதி என்னும் கவிஞர் கல்லாற்றிலே பிறந்தவர். என்னுடைய கதைகள் 'ஈழகேசரி'யிலே பிரசுரமாகிக் கொண்டிருந்த காலத்தில், ராஜ பாரதியின் கவிதைகள் அதே ஈழகேசரியில் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. அத்துடன், நான் ஆசிரியப் பணி புரிதல் கல்லூரியின் சகோதர நிறுவணமான அரசடிப் பாடசாலையிலே அவர் ஆசிரியராய்க் கடமையாற்றினார். எனவே, இருவருக்கும் இடையில் இயல்பாகவே பழக்கமும் நட்பும் ஏற்படலாயிற்று. இருவரும் பழகிக்கொண்டாலும், இலக்கியக் கோட்பாடுகள் பற்றி உரையாடுவரைக் கூடுமானவரை தவிர்த்தே வந்தோம். இந்த ஒதுக்கத்துக்கான காரணத்தை முடியாதும் இருக்கின்றது. ஒரு சந்தர்ப்பத்திலே ராஜபாரதி 'மண்டைக்கனம் கொண்ட மஹாகவி' என்று வசைபாடி விட்டார். தர்மம் மஹாகவி வசம் நின்றதை நீலாவணன் உணர்ந்தார். கவிஞர் நீலாவணன் மீண்டும் உணர்ச்சிப் பிழம்பானார்.

"பேர்பெற நினைத்துச் செய்யும்
பிண்டமே செய்யும் பித்தர்
பாரதி பெயரை ஏதோ
பட்டத்துப் பின்வால் போலக்
கோரமாகக் கட்டிக் கொண்டு
கொலை செயக் கண்ட...."

இவ்வாறு, அயலூரைச் சேர்ந்த ராஜபாரதியைச் சாட அவர் தயங்கவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்திலே, என் இனிய நண்பர் மண்டூர்க் கவிஞர் சோமசுந்தரம் பிள்ளையும் நீலாவணனிடமிருந்து வகையாகக் கட்டிக் கொண்டார். மண்டூர்க் கீரை குறுமரம் போல வளரும். மட்டக்களப்புத் தமிழகத்தின் குஷ’னியிலே அது 'கியாதி'யும் பெற்றிருந்தது. "மண்டூர்க் கீரையும் பாடுமே கவிதை" என்று ஊரையும் இழுத்துச் சாடினார் நீலாவணன். இவ்வாறான கவிதைகளையும் நீலாவணன் சந்தர்ப்ப வசத்தினால் எழுத நேர்ந்ததினால், 'வசைக்கவிதைகள் பாடுவதில் காலத்தை விரயஞ் செய்து கொண்டிருப்பது வேதனை தருஞ் செயலாகும்' என இரசிகமணி கனக செந்திநாதன் கவன்றதும் உண்டு. உணர்ச்சிகளைத் திரையிட்டு மறைக்காது, மகா பாமரனாகவே நீலாவணன் வாழ்ந்தார்.

மஹாகவி, சில ஆண்டுகள், மட்டக்களப்புக் கச்சேரியிலே உயர் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றினார். நான் இருபது ஆண்டு காலமாகக் 'கூப்பன்' இல்லாது வாழ்ந்தவன். இத்தகைய லேவாதேவி விஷயங்களிலே அலட்டிக் கொள்ளாது வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டேன். ஒரு தடவை மஹாகவி என் வீட்டிற்கு வந்திருந்த சமயம் என் அசிரத்தையை என் மனைவி பெரிதாகப் 'பாடி' இருக்க வேண்டும். எனக்கு 'கூப்பன்' கிடைப்பதற்கு மஹாகவி சீக்கிரமே ஏற்பாடு செய்தார். எனக்குக் கூப்பன் கிடைக்க ஏற்பாடு செய்த மஹாகவி, ஓர் ஆண்டுக் கிடையில், தமது கூப்பனைக் கிழித்துக் கொள்வார் என்பது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று!

'சிவப்பு நாடா'வின் அரக்கத்திலே அகப்பட்டு வகையாக அல்லற்பட்ட எத்தனையோ எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் மஹாகவி மனசார உதவியிருக்கிறார் என்பதை நான் அறிவேன். எந்த மஹாகவியைப் பாரதிதாஸனின் அடுத்த ஸ்தானத்தில் வைத்துக் கவிஞர் நீலாவணன் போற்றினாரோ, அதே மஹாகவி மட்டக்களப்பில் உத்தியோகம் பார்த்த காலத்தில், அவருடன் தொடர்புகள் வைத்துக் கொள்ளாது ஒதுங்கியே வாழ்ந்தார். இந்த ஒதுக்கத்துக்கான காரணியை நான் மஹாகவியிடமிருந்து அறிந்து கொள்ள முயன்றதில்லை. இஃது ஒருவகைக்த் தப்புகை உத்திதான். நீலாவணன் மஹாகவியுடன் கூடக் கருத்து வேறுபாடு கொண்டே ஒதுங்கியிருந்தார் என்கிற செய்தி என்னை வருத்தியிருத்தல் கூடும். இன்று இருவரும் இல்லை. இருவருக்கும் இடையில் இறுதிக்காலத்தில் நிலவிய ஒதுக்கத்துக்கான காரணியை நான் அறிந்து கொள்ளாமல் இருத்தல், என்னறத்தில் சேமமானதாகவும் இருக்கின்றது.

மஹாகவி கொழும்பிலுள்ள தம்மொழி அலுவலகத்தில் உதவி ஆணையாளராக பதவி வகித்த காலத்திலேதான் காலமானார். அப்பொழுது அந்த அலுவலகத்தில் மொழி பெயர்ப்பு அத்தியட்சகராய்க் கடமை பார்த்த மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராஜா 'தகுதியான ஆளுக்குத் தகுதியான பதவி' என்று வரவேற்றார். 'கலைக்கோலம்' என்கிற நிகழ்ச்சியைத் தயாரித்தளிக்கும்படி இலங்கை வானொலியினால் அவர் கேட்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை நிறைவாகச் செய்வதற்கு நண்பர் ரஹ்மானையும் என்னையும் உதவும்படி கோரியிருந்தார். அப்பொழுது அவர் வாழ்ந்து கொண்டிருந்த பாமன்கடையிலுள்ள அவர் வீட்டிலே மூவரும் சந்தித்து, மேற்படி நிகழ்ச்சியின் தரத்தினை உயர்த்துதல் குறித்து நிண்ட சூநரம் உரையாடினோம். அப்பொழுது நான் கொழும்பு விவேகானந்த மகாவித்தியாலயத்தில் ஆசிரியனாய்ப் பணிபுரிந்தேன். காலையில், நூல் நிலையத்தில் அமர்ந்து, 'கலைக்கோல'த்தின் புதிய கோலத்துக்கு உதவக்கூடிய குறிப்புகளை எழுதுவதில் ஆழ்ந்திருந்தேன். 'மாஸ்டர், உங்களுக்குச் செய்தி தெரியுமா?' என்று பரபரப்புடன் கேட்ட வண்ணம் மங்களம் டீச்சர் உள்ளே நுழைந்தார். அவர் 'தினபதி' ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகத்தின் துணைவியார். நிமிர்ந்து பார்த்தேன். 'மஹாகவி காலமாகிவிட்டார்!' பூமி பிளந்து உள்ளே அமுங்குவது போன்ற அவதி. நேற்று என்னுடன் பேசிய அந்த மஹாகவி, இப்பொழுது அது! பிறகு, எல்லாமே அந்த அஃறிணையை அளவெட்டிக்கு வழியனுப்பும் சடங்காக, கொழும்பு டீன்ஸ்றோட்டில் அமைந்த Under-Taker கடையொன்றில் நீளுகின்றது.

ஆனாலும், யாழ்ப்பாணம் பேணும் தூலமான ஆசாரச் சடங்குகளுக்கிடையில், வீதி ஓரத்திலே ஒரு வெளிர் இளைஞன், கண்கள் துக்கத்தில் வெம்பிச் சிவக்க, கண்­ர் சரஸ’ன் தலைவாயில் காட்டிச் சிந்த, 'நான் வளர்ந்த கருப்பையை நான் இழந்தேன் காண்...' என மனதுக்குள் ஒப்பாரி வைப்பதின் பிரதிபலிப்பான விசும்பலை அம்மணமாகி நிற்பது என் கவனத்தை ஈர்க்கின்றது. யார் அவன்? அவனுக்கும் மஹாகவிக்கும் என்ன உறவு? அட, இவன் நீலாவணன் பண்ணையிலே விளைந்த கவிஞன் எம்.ஏ.நுஃமானல்லவா? எத்தகைய சோகத்திற்கு எத்தகைய நேர்த்தியான அஞ்சலி!


VI

'இலங்கையர்கோன்' என் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த கதைஞராவர். ஈழத்துச் சிறுகதை முயற்சிகளுக்கு ஒரு கௌரவம் சம்பாதித்துத்தந்த முதல்வர். மணிக்கொடி மரபையும் புதுமைப்பித்தனின் ஆளுமையையும் ஈழத்துக் கதைஞர்களுக்கு அறிமுகஞ்செய்த உபகாரி. மூதூர் மண்ணிலே புதியதொரு புதுமைப்பித்தமாக வ.அ.இராசரத்தினர் வளர்வதற்குக் கிரியா ஊக்கியாகத் திகழ்ந்தவர். அவரைப்பற்றி இராசரத்தினத்திடமிருந்தும், இரசிகமணியிடமிருந்தும் அதிகம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், இலங்கையர்கோனை எனக்கு நேரிலே அறிமுகஞ்செய்து வைத்தவர் கவிஞர் நீலாவணன்தான். அப்பொழுது இலங்கையர்கோன் கல்முனையிலே காரியாதிகாரியாகக் கடமையாற்றினார். அவர் அங்கேயே காலமானார். இலங்கையர்கோனின் இறுதிக்கால இலக்கிய நண்பனாகப் பழகியவர் கவிஞர் நீலாவணனே. நீலாவணனுக்கும் இலங்கையர்கோனுக்கும் இடையில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் சில ஈழத்து இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெரு விருந்தாக அமையும். அவற்றைப் பின்னர் சொல்லலாம் என நினைக்கிறேன்.

இங்கு, என் கைவசமுள்ள நீலாவணனின் கவிதைகள் சிலவற்றால் சமையும் சுவை மாளிகைக்குள் அழைத்துச் செல்லுதல் என் நோக்காக விடிந்தது.

மாவலி வழிந்து மலிவளம் சுரக்கத்
தேயிலை 'றப்பர்' செழிக்கும் வெற்ப!
அயலவர் நின்னையும் தன்னையும் சுட்டி
'லயினெலாம்' தூற்றும் அலர்க்கிவள் அஞ்சாள்
வரைவின் நிவந்த பனிப்புகார் சூழ்ந்து
விரைவினைத் தடுக்கவும் வேயின் பிளந்த
கட்டைகள் காலில் இடறவும் அஞ்சா
'நள்'ளென் யாமம் நஞ்சிருள் புகுந்து
கள்ளன் போலும் கரந்துவந்தனையால்
உயிரினும் இவள்பால் உனக்குறு காமம்
பெரிதே! யாயினும் பேதை
அட்டைக் கடிக்கே அஞ்சுவள் மன்னே!

மரபு வழிக் கவிதைகளிலே கவிஞர் நீலாவணனுக்கு இருந்த ஆழ்ந்த புலமையும், புதிய தொனிப் பொருள்களிலே அவருக்கிருந்த காமமும் ஒருங்கே இந்தக் கவிதைகளிலே பின்னிப் பிணைந்து சுருதி மீட்டுவதை அநுபவித்து மகிழலாம். தற்கால ஈழத்தின் குறிஞ்சி நில மக்களுடைய வாழ்க்கையை, நம் கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார். நம் நாட்டில் குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கையை, மரபு வழி நின்று, வேறெந்தக் கவிஞனும் இவ்வளவு நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியதுமில்லை. காட்சி மிகவும் புதியது. கவிதையின் உருவ அமைதியிலே, சங்க காலப் பண்பு பொலிவுடன் மிளிர்கின்றது. 'தேயிலை' 'றப்பர்' 'லயின்' போன்ற இக்காலச் சொற்களைக் களைந்துவிட்டால், சங்ககாலப் புலவன் ஒருவன் மீளுயிர்ப்புப் பெற்று வந்து பாடினானோ என்கிற மயக்கம் தோன்றும். அவ்வளவு மலிவாகச் சங்கத்திலே பயின்ற சொற்கள் இந்தக் கவிதைகயிலே இசைவுடனும் இயல்புடனும் பொருந்திக் கிடக்கின்றன.

உண்மையான எழுத்தாளன் சமுதாயத்தை ஊடறுத்துப் பார்க்கின்றான். எல்லோரும் பார்க்கும் வெகு சாமான்யக் காட்சிகளிலேகூட கற்பனை வளமுள்ள எழுத்தாளனாலே புதுமை அநுபவம் பெறமுடியும். ஒன்றில் இருப்பதை இல்லாதது போலவும் அவனால் அநுபவிக்க முடியும். இல்லாததை இருப்பது போலவும் அவனால் அநுபவிக்க முடியும். காக்கை இறகினிலே நந்தலா லனைத் தரிசித்தல் அற்வுத சிருஷ்டித் திறனுள்ள ஒரு கலைஞனால் மட்டுமே சாத்தியமாதல் கூடும்!

கவிஞன், தான் கொண்டொழுகும் சத்தியத்தின் உந்துதலினாலே, சமுதாயத்தினை விமர்சனஞ்செய்யும் அதிகாரத்தையும் பெறுகின்றான். மனிதனுடைய ஆரோகண-அவரோகன கதிகள் அவனுடைய செம்மையான நெஞ்சிலே பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்பின் சாங்கங்கள் அவன் கலைப்படைப்பில் பதியும். இந்தச் சாங்கங்களின் வகைகள் பல. நையாண்டி அவற்றுள் ஒன்று. மேதமையுள்ள எழுத்தாளர்கள் நையாண்டி மலிந்த எழுத்துக்களிலும் ஈடுபாடு காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம். வசன எழுத்தாளனுடைய நையாண்டியிலே சங்கதி தூக்கலாகத் தெரியும். நகைச்சுவையைத் தூண்டும். வசனத்தை விடுத்து, கவிதையைத்துணைப் பற்றும் கலைஞன் நையாண்டியில் ஈடுபடும் பொழுது, அதன் பின்னணியிலே ஒருவகைச் சோகச் சுருதியும் இணைந்து வருவதை நாம் அநுபவிக்கலாம். பாரதி, 'நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லை' என்று பாடினான். அந்தப் பாடலிலே தமிழனை-இந்தியனை-மனிதனை-பீடித்துள்ள கோழைத்தனத்தை நையாண்டி செய்தான். அந்தப் பாடலிலே மீண்டும் ஒரு தடவை சஞ்சாரஞ் செய்து பாருங்கள். மனித குலத்தின் சீரழிவினைப் பார்த்துப் பாரதி சோக இசை மீண்டும் சங்கதி இலேசாகப் புலப்படும்! அத்தகைய நையாண்டியில் ஈடுபடும் பொழுது, கவிஞன் தன்னுடைய கற்பனைச் செழுமை என்கிற கர்வத்தினைக் 'கோட்டை'விட்டு, உண்மைகளை ஏராளமாகக் கொட்டி விடுகிறான்.

இந்த அம்சங்களை இணைத்துள்ளதாக நிலாவணனின் 'இரகசியம்' (1962) என்னும் கவிதை அமைந்துள்ளது.

இன்றோர் கவிதை எழுதுதல் கூடும்; ஏனென்றால்
இன்றென் மேசை எழுதுந்தாள், மை இவையெல்லாம்
நன்று படுத்தி வைத்தது ஒன்றும் நானல்லன்!
என்றாலும் தெரியும் இல்லையா? இவள்பின் ஏனிங்கே?

என்றுதான் இந்தக் கவிதை துவங்குகின்றது. எழுவதற்கான ஒரு 'தவனம்' தனக்கு ஏற்படுவதற்குத் தன் மனைவி இயற்றிய பணி ஒன்றுதான் காரணம் என்பதைக்கூறும் கவிஞன், அதற்காக மனைவிக்கு நன்றி கூறவும் கவிஞன், அதற்காக மனைவிக்கு நன்றி கூறுவும் இல்லை. மனைவி என்பவள் நன்றியை எதிர்பார்த்து வாழ்பவளுமல்லள். இதைச் செய்யாவிட்டால், வெட்டிச்செலவாக இவள் ஏன் என் மனையிலே நடமாட வேண்டும் என்கிற அலட்சியமும் கவிஞனுக்கு!

கவிஞனுக்கு கவிதை எழுதும் Mood வந்து விட்டது. அதற்கு ஒரு 'சம்பப விந்து' வேண்டாமா? 'சம்பவ விந்து' Pilot- தேடி அலையும் பல எழுத்தாளர்களை நான் அறிந்து வைத்துள்ளது போலவே, கவிஞர் நீலாவணனும் அறிவார் போலும்! இதனை இலேசாக நக்கல் அடிக்கும் பாணியிலே, கவிதையின் தொடர் நறுக்கு அமைகின்றது.

'சம்பவ விந்து' தேடி நடந்து சருகாகி
வெம்பிய கால்கள் தங்கிய நீரின் களியாக!
தம்படி கூடப்பையில் இல்லை; தனியேதான்;
நம்பி நடந்தால்.... நண்பர்கள் ஒருகால் வரக்கூடும்?

வாழ்க்கையை நடத்துவதற்குத் 'தம்படி' தேவை என்கிற தவிப்புக் கவிஞரை உந்துகிறது. கூடவே 'யாரிடம் கடன் பெறலாம்?' என்கிற கேள்வியும். கவிஞருக்குத் தெரிந்த 'பணக்காரன்' பற்றிய வர்ணனை சுவையானது.

வண்டி நடத்தி வாழ்க்கை நடாத்தும் வடிவேலன்
உண்டு குடித்துத் திரிகின்றானாம் உடையோடும்!
கண்டு கதைத்தால் காரியம் ஏதும் கைகூடும்
என்று.... நினைத்துச் சென்று நிமிர்ந்தேன் அவனில்லம்!

வண்டி ஓட்டி, உண்டு குடித்து, உடையோடு 'உல்லாசமாக' வாழ்க்கையை நடத்தும் வடிவேலனின் வீட்டுக்குக் கவிஞர் வந்து விடுகின்றார். சரி, வந்த காரியம் கவிஞருக்குச் சாதகமாகியதா?

சுக்குத் தண்­ர் வெற்றிலையோடு சுதிபீடி
செக்குப் போலும் செய்வனயாவும் செய்கின்றான்
புக்குப் புக்கென்(று) ஊதும் அடுப்புப் புகை ஏறி
'கக்குக் கக்...கீ' தும்மல் எழுந்தது கதையோடும்

வடிவேலனுடைய வீட்டிலே கவிஞருக்குத் தடல்புடலான வரவேற்புக் கிடைக்கின்றது. சுக்குப் போட்டிடுத்துத் தயாரித்த 'கோப்பித் தண்ணி' மட்டுமல்ல, வெற்றிலையும் சுதிபீடியும் கிடைக்கின்றன! விருந்தோம்பல் என்கிற ஆசையினால், அவன் செக்குப் போலச் செயற்படுகின்றான். வரவேற்பு இருக்கட்டும். வந்த காரியம் கை கூடியதா?

கடைசியில் வந்த அலுவலை
வடிவேல் காதுக்குள் விடவும்,
இடுப்புச் செருகல் அவிழ்த்தான்;
எடடாநீ கொடையில் குமணன்"

கவிஞரின் பவ்வியம் 'நைஸாக'ச் சித்திகரிக்கப்படுகின்றது. விஷயத்தைக் காதுக்குள் விடுகிறார். பரம இரகசியமாகக் கேட்கின்றார். கேட்டவுடன் வடிவேலு இடுப்புச் செருகலை அவிழ்க்கின்றான். 'ஆஹா, எத்தகைய குமணன் அவன்?' என்றுதானே நீங்களும் மனத்துள் நினைத்தீர்கள்? கவிஞர் அப்படித்தான் நினைத்தார். இறந்தக் கவிதையின் உயிரே கவிதையின் கொடுக்கிலேதான் வைக்கப்பட்டிருக்கிறது.

என்றென் மனதுட் கூறும்முன்
அடைவுத் துண்டாம்!
அறுவான்; அதையேன் வெளியாலே?

முடிவு சடுதியாகவும் எதிர்பாராததாகவும் இருக்கின்றது. எங்களை அறியாமலே சிரிப்பு வந்துவிடுகிறது. சிரிப்புக்கு அப்பால்? இந்த நையாண்டிகளுக்கு அப்பால்?... வண்டி நடத்தி வாழ்கையைச் செலுத்தும் வடிவேலுவின் வாழ்க்கைச் சுருதிகள் முழுவதும் இந்தச் சிறிய தனிப்பாடலிலே அச்சாவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. யதார்த்தமான அணுகுமுறை; இயல்பான சொற்பிரயோகம். கவிஞர் நிலாவணனின் கவிதைகளிலே சந்தம் நிமிர்ந்து நிற்கும். இந்த நயம் நீலாவணனுக்கு இயல்பாக அமைந்த கொடை. Smokers Cough 'கக்குக் கக்...கீ' என்கிற ஓசையிலே சிறைப்டுத்தப்படுகின்றது. புதிய உத்தியிலே ஓசைச் சோடிப்பு!

'இரகசியம்' என்னும் நீலாவணனின் கவிதைக்கூடாக உங்களைச் சுற்றுலா அழைத்து வந்த பொழுது, ரஸனை என்ற நினைப்பிலே ஒருவகைத் தரகு வேலையையும் நடத்திவிட்ட குற்றத்தினை இப்பொழுதுதான் உணர்கின்றேன்.

VII

'தரகு' வேலை செய்யும் தத்துவத்தை விமர்சகர் எடுத்துக் கொள்வது, சில சந்தர்ப்பங்களிலே தவிர்க்க முடியாததாகவும் அமைகின்றது. ஆரவாரமின்றி, அமைதியாக இலக்கிய விமர்சனப் பணிபுரிபவர் நண்பர் ஏ.ஜே. கனகரத்னர. தற்பொழுது யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத் துறையிலே பணிபுரிகிறார். என் உடன்சாலை மாணாக்கர் என்று எரிமை பாராட்டுவதில் எனக்குப் பெருமை. குழு நலன் பேணாது இலக்கியத்தின் பரமார்த்த உபாசகராய் வாழ்பவர். ஓர் அசைப்பில் ஆங்கில எழுத்தாளர் டி.எச். லோறன்ஸை போலவும், குறுந்தாடியும், குறுமுனியும். பண்ணைப் பரவைக் கடலைத் தழுவி, அலுப்பாந்தி வழியாக வரும் காற்று மேனியைத் தழுவ. Grand Hotel இல் அமர்ந்து மருவை, சிறு சிறு மிடறுகளாக உறிஞ்சிக் கொண்டே, இலக்கியச் சுவைப்பிலே ஒன்றுதல் மகத்தான சுகாநுபவமாகும். நீலாவணையில், நீலாவணன் வீட்டிலும் இந்தச் சுகாநுபவம் கிட்டியுள்ளது. ஆனால், நாங்கள் மூவரும் அதிக சந்தர்ப்பங்களிலே இத்தகைய இலக்கிய 'சமா'க்களிலே அமர்ந்தது கொட்டாஞ்சேனை ஐம்பெட்டா வீதியில் அமைந்த சிற்றி ரெஸ்ட்ரோரன்டிலேதான் என்கிற நினைவு குறுக்கிழையில் பளிச்சிடுகிறது. இந்தச் சந்திப்புகளிலே நீலாவணன் தமது புதிய படைப்புகளைப் பாடுவதும், அவற்றிலுள்ள நயங்களை ஏ.ஜே.க.வும் நானும் நயப்பதும் வழக்கமாக இருந்தன. தமிழ் ஆக்கங்களை ஆங்கில ஆக்கங்களுடன் ஒப்பிட்டு நயத்தல் ஏ.ஜே.க.வின் சுபாவம்.

கவிதைக்கு உருவகமொழி இன்றியமையாதது என்றும், அதிலிருந்துதான் கவிதை தனது சக்தியைப் பெரும்பாலும் பெறுகின்றது என்றும் கருதும் கனகரத்னா, உவமான உவமேயங்களைக் கையாள்வதிலே நீலாவணன் பயின்ற நுட்பத்தை மனசாரப் பாராட்டு‘ர். ஒரு சமயம், Fancyக்கும் Imaginationக்கும் உள்ள வேறுபாட்டினை ஆங்கிலக் கவிஞர் கோல்ட்றிஜ் சுட்டிக் காட்டியமையை விளக்கினார். இயல்பாகத் தொடர்புகள் அற்றவைகளைத் தற்செயல் பொருத்தம் காரணமாக வலிந்து இணைப்பது 'புனைவு' அல்லது Fancy பொருள்களை உருமாற்றி அவற்றைப் புதிதாகப் படைத்தல் 'கற்பனை' அல்லது Imagination. இந்த நுட்பத்தை உய்த்துணர்ந்த நிலையில் நீலாவணன் தமது கவிதைகளிலே உவமான உவமேயங்களைப் பயின்றார்.

"கோல்ட்றிஞ்சைக் குறிப்பிட்டதும் நீலாவணனின் 'முருங்கைக்காய்' ஞாபகத்திற்கு வருகின்றது. எத்தனையோ நாள்களுக்குப் பின்பு கவிதை சுரக்கின்றது. அதை எழுத முனையும்போது முருங்கைக் காயினைப் பிடுங்கித் தருமாறு மனைவி கூப்பிடவே, அதற்கிசைந்து கவிஞர் முருங்கையில் ஏற, அது முறிந்து அவர் கீழே விழுகின்றார். "அந்தோ! வந்த அருங்கவி இந்த அமளிகண் டெங்கோ மறைந்ததே" என்று நகைச்சுவையுடன் நீலாவணன் கவிதையை முடிக்கின்றார். இதை ஒத்த சம்பவம் கோல்ட்றிஜ்ஜிற்கும் நிகழ்ந்தது. அபினை உண்ட நிலையில் 'குப்பிளாகான்' என்னும் கவிதையை எழுதத் தொடங்கினார். ஒரு சிலவரிகள் எழுதி முடிந்ததும் அவரைக் காண யாரோ வந்ததினால் (The Man from Porlock) கோல்ட்றிஜ் எழுதியதை அப்படியே நிறுத்திவிட்டு அவருடன் உரையாடச் சென்றார். உரையாடல் முடிந்து திரும்பி வந்த அவருக்கு ஒருவரிகூட மேலும் ஓடவில்லை. அரை குறையாகவே இன்னும் அக்கவிதை இருக்கிறது."

தேர்ந்த இலக்கியச் சுவைஞர் ஏ.ஜே.க.வின் பாராட்டுதலுக்கு உள்ளான நீலாவணனின் 'முருங்கைக் காய்' என்கிற கவிதையை நயத்தின்புற உங்களுக்கும் ஆசையாக இருக்கம். ஆகையால், இதோ:

கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது!
கோப்பியொன் றடித்தேன்;
கொப்பியை விரித்தேன்
கூப்பிட்டாள் இவள்?
ஏனோ? என்றேன்.

கறிக்குப்
புளியம் பழம்போல றால்
வாங்கியிருக்கின்றேன்.
அதற்குள் வைத்துக் குழம்பு வைக்க
முருங்கைக் காய்தான் ருசியாய் இருக்கும்!
ஆதலால்,
அதோநம் வாசல் முருங்கையின்
உச்சிக் கந்தில்...
ஒன்று...இரண்டு....மூன்று,
நீண்டு முற்றிய காய்கள்
ஒருக்கால்...ஏறி
உசுப்பி விடுங்கள்; என்றாள்!

மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!
அதற்காய் இசைந்தேன்;
அவள் விருப்பின்படி
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்தேன்!

அந்தோ! வந்த அருங்கவி
இந்த அமளிகண் டெங்கோ மறைந்ததே!

நானானாலென்ன, ஏ.ஜே.க.வானலென்ன, எங்கள் 'கண்கள்' கொண்டுதான் கவிஞர் நீலாவணனின் கவிதைகளைச் சுவைக்க வேண்டுமென்று ஆற்றுப்படுத்துதல் மு€றாயமோ? கவிஞன் ஒருவனுடைய உண்மையான ஆன்மாவை அவனுடைய கவிதைகளிலேதான் தரிசித்தல் சாலும். உங்களுடைய அநுபவம், சுவை ஆகிய தளங்களிலே நின்று அவருடைய கவிதைகளை நுகர உங்களுக்கு உரித்து உண்டு. இந்த உண்மையை சங்கை செய்யும் முகமாக, கவிஞர் நீலாவணனின் கவிதைகள் சிலவற்றின் சில பகுதிகளை இங்கு திரட்டித் தந்துள்ளேன். இந்த நினைவுகள் எல்லைக் கட்டுடைய வியாச முயற்சியும். எனவே, அவருடைய கவிதைகளை முபத்துவமாகத் திரட்டித் தருதல் ஒண்ணா. இருப்பினும், இந்தப் பொறுக்கு மணிகளின் ஊடாக நீங்கள் ஒரு கவிதைச் சுற்றுலாவை மேற் கொள்ளுவதன் மூலம், உங்கள் சுதர்மத்திற்கு ஏற்றவாறு கவிஞர் நிலாவணனைத் தரிசித்துக் கொள்ளுங்கள்.

VIII


1. மண்ணிடை இரவுக்ந கன்னியின் ஆட்சி
இன்னும் தேயிலை-இளம்
தென்னையின் ஓலை பண்ணிய இன்பப்
பாட்டுகள் ஓயவில்லை
என்கடை வாயில் உன்னிதழ் ஊட்டிய
ஈரம் காயவிலை-எழில்
மின்னிடும் என்றன் மென்முலை தானும்
பின்னே சாயவிலை!

குறுமணல் மீது கொண்டல் தவழ்ந்த
சுவடும் மாறவிலை-அங்கு
புறவுகள் வந்து குறுநடை கொண்டு
கோலம் கீறவிலை
இரவின் 'அம்மிக் குருவி'கள் இன்னும்
இல்லம் சேரவிலை-என்னை
இடைவெளி யின்றி இறுக அணைத்த
இதழும் தூரவில்லை!

பருவப் பெண்ணாம் இரவுக்
கன்னி தவறிப் பெற்றபயல்-அந்தப்
பரிதிக் குஞ்சைக் ககனத் தெருவின்
முடிவில் போட, அவன்
உருவப் பொலிவின் உதயத் தொளியில்
உறவை வெட்டுகிறாய்-பொல்லா
உதிரக் கடலின் நடுவில் படகில்
நடையைக் கட்டுகிறாய்!

"விண்ணின் தாரை எண்ணிப் பொழுதை
வீணாக் கிடவல்ல-அணு
விஞ்ஞா னிகள்போல் மண்மேல் உயிர்கள்
நீளுக் கிடக்கவல்ல!
உண்­ர் என்றே மீன்கொடு வந்திங்
வுண்ணா உலகத்தின் -பசி
ஒட்டப் போகின் றேனென் றோசொன்
னாய்" என் உயிரத்தான்!

வேம்புக் குமரி தென்றல் காற்றின்
வெறியைச் சாடுகிறாள்-அந்த
வீம்புக் காரன் விரகப் பேயோ
டவளைக் கூடுகிறாள்!
தேம்பிக் கொண்டே ஆடையை அள்ளி
மார்பை மூடுகிறாள்-உன்னைத்
தேடித் தேடி ஆழிக் கரையில்
ஒரு பெண் வாடுகிறாள்!

(1961இல் இந்தக் கவிதை எழுதப்பட்டது. கவிஞர் நீலாவணன் தாம் பாடிய கவிதைகள் மனப்பாடமாகவே பாடுவார். இந்தக் கவிதை பிரசுரமாவதற்கு முன்னரே, எனக்கு நீலாவணை கடற்கரையில் அமர்ந்து பாடிக்காட்டினார். இயற்கைக்கு மானுஷ“கம் பொருத்திப்பார்க்கும் அவர் கற்பனையை இயற்கையே உருவாக்கியது என்பதை என்னால் உணரவும் முடிந்தது. 'அம்மிக் குருவீ'யைப் பற்றி அவரிடம் கேட்டேன். என்னூரவர் அம்மிக்குருவி என்று தான் அழைப்பார்கள்; அது போதும்' என்றார்.)

2. அழகு நிலா வாழ்க!-நெஞ்சை
அள்ளும் நிலா வாழ்க!
இளமை என்ற ஒளியி னால்என்
இதயம் வென்ற பருவ மங்கை
பழகு கின்ற பொழுது தந்த
பழர சத்தின் குளிர்மை மிஞ்ச-
அழகு நிலா வாழ்க!- நெஞ்சை
அள்ளும் நிலா வாழ்க!

மாங்குயிலே பாடு! - தளிராம்
மதுவையுண்டு பாடு!
மழலை மைந்தர் குழலை யாழை
மலரின் வண்டின் இனிய ஓசைக்
கழக மாகும் குரலினால்என்
கவிதை நெஞ்சம் உருகி வார-
மாங்குயிலே பாடு-தளிராம்
மதுவை யுண்டு பாடு

3. எந்தன் உயிர்த் துளியே
இன்ப எழிலரசி
சிந்தனையில் நான் வரைந்த
சித்திரமே கண்வளராய்!

செந்தமிழ் கொஞ்சும்
சிலம்பே திருக்குறளே!
முந்தைத் தவப்பயனால்
மூப்பின்றி நான் வாழ
வந்துதித்த வானின்
வளர்மதியே! கம்பனது
சிந்தனையில் ஊற்றெடுத்த
தேன்கவியே! மான்கன்றே
கொந்தார் நறுமலரே
கோவைச் செவ்வாயில் நீ
சிந்தும் சிரிப்பெனக்குச்
சீவனடி கண்வளராய்!

கொட்டும் அமுது நிறை
கொங்கைகளைக் கச்சுக்குள்
இட்டு மறைத்து
எடுப்பாகத் தூக்கிவிட்டு
பட்டுத் தளிர் மேனிப்
பைங்கிளியே நீயழுங்காற்
புட்டிப்பால் தந்துன்னைப்
போலியன்பு செய்கின்ற
பட்டணத்தில் வாழுமந்தப்
பத்தினிகள் கண்டுள்ளம்
வெட்கித் தலைகுனிய
வெண்மதியே கண்வளராய்!

4. இலங்கையின் திருமுகம், இலட்சியத் தமிழகம்
எழில்தவழ் மாட்டு மாநகர் வாழ்க!
வளம் பல கொழிக்கும் வாவியில், மீன்கள்
முழங்கிடும் இசையும் தமிழும் வாழ்க!
.............

வயல்களில் பொலிமலை! ஆழியில் மீன்கள்!
வளர்செழுந் தெங்கும் உதிர்வதுந் தங்க !
அயல்விருந் தோம்பும் அன்பினில் அன்னை!
அரசியல் பல்கலை அறிஞர்க்கும் அம்மை!

5. கன்னி எழிலொடு தன்னந் தனிமையிற்
பொன்னி வயற்புறம் போவதேன்-எங்கள்
பொன்னி வயற்புறம் போவதேன் - அவள்

கண்ணை இமைப்பது கண்டு குளத்திடை
காவி மலர்க்குலம் சாவதேன்-அந்த
காவி மலர்க்குலம் சாவதேன்!
................

முற்றி விளைந்த நெல்
பற்றைக்கு நாணத்தை
கற்றுக் கொடுத்த பின்
மீளவோ? கரு
விற்புரு வத்தினில்
அற்புதம் செய்தவன்
அன்பு மனத்தினை
ஆளவோ.....?

6. ..................
வாழப் பழகுங்கள் வாத்தியார்! வைகயத்தில்
ஆள்வோர் சிலபேரும் ஆளப் படுவோர்
கோடிக் கணக்கும் குவிந்து, தலை இழந்து,
பேடிகளாய்ப், பேயாய்ப், பிணமாய்க், குருடாகிச்
சாராயத் துள்ளிகளில் சத்தியத்தைப் பூசிப்பார்!
ஆராண்டால் என்ன? அந்த ஆள்வோர் திருப்புகழைப்
பாடி, நான் என்னுடைய பங்கைப் பெறுகின்றேன்.
கூடினால் நல்ல குடி-விருந்து கொண்டாட்டம்!
எல்லாம் கிடைக்கும் எனக்கு! உமக்குமவர்
இல்லையென்றா சொன்னார்கள்?
ஏனிந்தப் பொல்லாப்போ!

ஆராரோ அக்கினியை அள்ளி விழுங்குகிறான்!
ஊரைச், சுளையிருக்க உள்ளால் உறிஞ்சுகிறான்!
காணாமலா ஊரார்? கண்டாலும்...பேசாமல்...
மானமாய் வாழ மனதைப் பழக்கி விட்டார்!
நானும் அவர்வழியில் நாணயமாய்வாழ்பவன்! நீர்
வீணாக வம்மை விலைகொடுத்து வாங்கிவிட்டீர்!

7. ஏரெடுத்தார், இமயத்தோள்
ஏந்தி வயல்
இறங்கினார் இளங்சிங்கங்கள்;
வேர்வையிலே குளித்து நிதம்
விவசாயம் புரிகின்றார்; விளைவோ ஈழம்
சோறுடைய நாடென்றும்
சொர்க்க மென்றும்
பிறர் வியந்து பேசக் கேட்டார்!
பேரெடுத்தார்! விவசாய மன்னரெனப்
பெரும் பட்டம் பெறுகின்றார்கள்!

ஆர்தடுத்தார் உங்களை?
போய் அவர்போல
விவசாயி ஆகி, நீரும்
பேரெடுத்தால் என்ன
அத்தான்? பேய்போல
இராவெல்லாம் விழித்திருந்து
தீர்தளைக்குள் அடிதொடைக்குள்
சிங்கார ரசம் புதைத்துச்
செய்த பாட்டுக் கார்தருவார்
அரைச்சுண்டு அரிசியென்றா?
கண் புதைத்தாய் அன்பே பேசு!

கற்பனையில் ஒருதலையாம்
காமசுகம்
அனுபவித்த கதையை நல்ல
அற்புதமாய் எழுதுகின்றீர்,
ஆர் உமக்கோர்
பன்னாடை அணிந்து பார்த்தார்?
விற்பனமும் தமிழ்க் கவியும்
விழல்! விடுக;
விவசாயம் செய்க! என்ற
உட்கருத்தை உட்புதைத்தோ
ஊடிக்கண் புதைக்கின்றாய்
உயிரே ஓது...

8. கள்ளும் கசந்திடச் சொல்லும் முழலையின்
காவியத் தேன் சுவையை-எழில்
ஓவியத் தாமரையை-ரேசா
முள்ளில் கிடத்தியே உள்ளந் துணிந்திவள்
மூலையில் தூங்குவதா? - மகள்
காலையில் ஏங்குவதா? - எனத்
துள்ளி எழுந்தொரு கிள்ளு விடுத்தனன்
'கீச்'செனவே எழுந்தாள்-உயிர்
போச்செனவே விழுந்தாள்-அங்கு
-ள்ளி அறைதனில் பிள்ளை மொழிவதைக்
கேட்டபின் தான்சிரித்தாள்-மலர்ச்
சேட்டையென்றே உரைத்தாள்!

9. ஏன் கடலே இரைகின்றாய்
இன்றுனக்கும் சம்பளமா?
ஏழை வீட்டில்
தான்நீயும் பிறந்தனையா?
தமிழா நீ கற்றதுவும்
தகாத வார்த்தை!
தேன்கடலாய் ஓடுமெங்கள்
திருநாட்டில் பிறந்தபயன்
தெரிகின்றாயோ?
வான்தந்த வளமிலையோ
வயல்தந்த நிதியிலையோ
வாடாதே நீ....
.................

கல்லூரி மாணவியுள்
மகள்கமலா ஏதேனும்
காகா கேட்டாள்?
அல்லாஹ்போல் அனுதினமும்
சில்லறைக்குக் கடன்தந்த
அலியார் நானா
பொல்லாத வார்த்தையெதும்
புகன்றாரோ? பொருமுகிறாய்
போன ஆண்டு
நில்வைக்கு வரிசையிலே
நின்படலை மட்டுமங்கார்
நிற்கின்றாரோ?

10. ஊரிலே விளைகின்ற இளங்கீரைவகை, தேங்காய்,
உழுந்தரைக்கும் கல்திருகை, உலக்கை, பழவகைகள்
ஈரவெங்காயத்தொடு முள்ளங்கி, மற்றும்
எண்ணிறந்த காய்கறிகள், இடியப்பத்தட்டு
கார் உதிரிப்பாகங்கள், சைக்கிள், திறம் சுருட்டு,
காய வைத்த மூலிவகை, கயிறு, கருவாடு
பாரப்பா சந்தையிலே பரப்பியுள அந்தப்
பண்டங்கள் ஒன்றிரண்டா கண்டவிடமெங்கும்!
..............

கோயிலுக்கு போகவென்று வந்தவர்கள் நாங்கள்,
கொண்டு வரவில்லையொரு காசேனும் கையில்!
ஆயினுமிச் சந்தையினை ஊடறுக்கும் போதில்
ஆசையலை மோதுவதை யார்மறுத்தல் கூடும்;
தாயொருத்தி போகவிங்கு சந்தையிலே வாங்கத்
தக்க பொருள்ஏராளம் காசுமட்டும் இருந்தால்...!
வாயிலெல்லாம் விளம்பரமே வந்து செவிமோதும்,
வாங்குதற்கோ பணமில்லை! வாதம்பி போதும்
..............

* *

கவிஞர் நீலாவணனுடைய சத்தான வேறுஞ் சில கவிதைகளையும் தர எனக்கு ஆசைதான். அத்தகைய கவிதைகளை நீங்கள் தேடிச் சுவைத்து உங்கள் இன்பத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் தக்கது. இங்கு தொகுத்துத் தருதலும் சாலாது.


IX

கவிஞர் நீலாவணன் கவிதைத் துறையில் மட்டுமே ஈடுபாடு காட்டியவரல்லர். அவருடைய சிறுகதையும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்டுள்ளது. 'இரகசியம்' என்ற கவிதையை வாசிக்கும் எவரும், சிறுகதை எழுதுதல் நீலாவணனுக்குக் கைவந்த கலையாக அமையும் என்பதைச்சட்டென்று மட்டிட்டுக் கொள்ளுவர். சிறுகதைத் துறையிலே முனைப்புக்காட்டி இருப்பாரேயானால், அவர் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளராய் முகிழ்ந்திருப்பார் என்பது திண்ணம். கவிதைத் தொழிலுக்கிடையில், சிறுகதை எழுதுவதை அவர் ஒரு பொழுதுபோக்கு முயற்சியாக மேற்கொண்ட காரணத்தால், வேறு சிலர் மட்டக்களப்புத் தமிழகத்தின் கதைஞராய் நிமிர்ந்துள்ளார்கள்.

நாடகத் துறையிலும் கவிஞர் நீலாவணனுக்கு ஈடுபாடு இருந்தது. 'மனக்கண்', 'பட்டமரம்', 'மழைக்கை', 'சிலம்பு' ஆகிய பல நாடகங்களை அவர் இயற்றியுள்ளார். நாடக ஆக்கங்களிலே அவர் கவிதை நடையையே பயின்றார். அவருடைய நாடகப் படைப்புகளிலே 'மழைக்கை' விசேடமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அது கல்முனையிலும் வெற்றிகரமாக மேடை யேற்றப்பட்டது.

மட்டக்களப்பில் 1963ஆம் ஆண்டில், தமிழ்விழா ஒன்று மூன்று நாள்கள் தொடர்ந்து நடைபெற்றதை இலக்கிய உலகம் மறந்திருக்கமாட்டாது. நாட்டின் நாளா பகுதிகளிலிருந்தும் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் இவ்விழாவிலே கலந்து மகிழ்ந்தமை ஒரு சாதனையே! தமிழ் விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அவற்றுள் தயானந்த குணவர்த்தனா படைத்த 'நரிபேனா' என்ற சிங்கள நாட்டிய நாடகமும், கவிஞர் நீலாவணனின் 'மழைக்கை' என்னும் கவிதை நாடகமும் கலாரஸ’கர்களுடைய ஒரு முகமான பாராட்டுதலைப் பெற்றன. 'மழைக்கை' நாடகத்தினை நீலாவணன் எழுதியதுடன், அதனை நெறிப்படுத்தி, அதில் நடிக்கவுஞ் செய்தார். அதில் நடிப்பதற்காக அவருடைய அழகு மீசையையும் மழித்தார்! மழையைப் போன்று கொடுக்கும் கைகளை உடைய கர்ணனை நாயக பாத்திரமாகக் கொண்டு அது புனையப்பட்டது. 'மழைக்கை' நாடகம், விழா நிகழ்ச்சிகளிலே சிறப்பிடம் பெறுதலை விழாவின் அமைப்பாளன் என்கிற வகையிலும் நான் பெரிதும் விரும்பினேன். இதன் மேடையேற்றமே நீலாவணனுக்கும் எனக்கும் இடையில் நிலவிய நெருக்கத்திற்கு எமனாக விடியும் என்பது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று. நடந்தன நடந்துவிட்டன. என் கட்சியின் தளத்தினை எடுத்துரைப்பதற்கு இன்று நீலாவணன் நம் மத்தியில் இல்லை. அதனை ஒரு தீய கனவாக மறப்பதற்கு நீண்ட காலமாக வருந்தினேன் என்பது மட்டும் உண்மை.

கவிஞர் நீலாவணணிட மிருந்த மிக உயர்ந்த பண்பு இலக்கிய முனைப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாகும். இந்த விஷயத்திலே அவர் தீவிர இயக்கவாதியாகவே மாறியிருந்தார். எழுதத் துடிக்கும் ஆற்றல்களை இயக்க ரீதியாக ஒரு முனைப்படுத்துதல் வேண்டும் என்கிற முனைப்பினை அவருக்கு இலங்கையர் கோனுடைய நட்புத்தான் தூண்டியதோ நான் அறியேன். இன்று அவர்கள் இருவருமே இறந்த காலத்திலே சங்கமித்துவிட்டார்கள்.

'இலங்கையர்கோன்' போன்று மூத்த தலைமுறையைச் சேர்ந்த எந்த எழுத்தாளனும், கிழக்கிலங்கையில் புதிய எழுத்து முனைப்புகள் தோன்றுவதற்கு ஆதர்ஷமாகவும் தூண்டுதலாகவும் இருந்ததில்லை. அவர் மூதூர்ப் பகுதியில் ஐம்பதாம் ஆண்டுகளின் துவக்கத்தில் காரியாதிகாரியாகப் பணியாற்றினார். அவருடைய தொடர்பின் காரணமாகவும் நாம் ஒரு கதைஞராய் நிமிர்ந்ததாக வ.அ.இராசரத்தினம் மிகவும் நன்றிப் பெருக்கோடு கூறுவார். அவருடன் ஏற்பட்ட இலக்கிய அநுபவங்கள் பற்றி வ.அ.இ.கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்.

இலங்கையர்கோன் தமது இறுதி மூச்சுவரை நீலாவணனைத் தமது இலக்கிய இனியனாக நேசித்தார். ஒருநாள் மதியம் தாண்டிய வேளை என்று நினைவு. "பொன்னு, வா! இன்றைக்கு இலங்கையர்கோனை உனக்கு அறிமுகஞ் செய்து வைக்கிறேன்" என்று கையிலே பிடித்துக் 'கொற கொற' என்று இழுத்துச் செல்லாத குறையாக, ஒருவித தீவிரத்துடன் அழைத்துச் செல்கின்றார்.

காரியாதிகாரி கந்தோர். அந்த அலுவலகத்தின் தலைமையதிகாரி இலங்கையர்கோனே! தமது வழமையான பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அறைக்குள் இரண்டு மூன்று பேர் நின்றார்கள். அவர்களை இலங்கையர்கோன் சற்றே உரத்த குரலில் அதட்டிக் கொண்டிருந்தார்.

கவிஞர் நீலாவணனைக் கண்டதும், அங்கு வேலை செய்யும் எழுத்தர்கள் தங்களுடைய வாய்களிலே புன்னகைப் பூக்களைச் சூட்டி மரியாதையாக வரவேற்கின்றார்கள். "மாஸ்டர்! நீங்கள் பேசாமல் உள்ளுக்குப் போங்கள்...." என்று ஒருவர் கூறுகின்றார். எல்லோரும் நீலாவணன் 'உள்வீட்டப் பிள்ளை' என்பதை அறிந்து வைத்திருந்தனர் என்பதை நான் தெளிந்து கொண்டேன்.

சலுகையை வலுவந்தமாகப் பிரயோசிக்காமற் காத்திருந்தோம். உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்ததும், நாங்கள் உள்ளே சென்றோம். "அப்ப, இவ்வளவு நேரமும் வெளியாலேயே காத்திருந்தனீர்?" இவ்வாறு அவர் கடிந்து கொள்ளுகிறார்.

என்னைப் பற்றிய அறிமுகப்படலம். கதைஞராக மட்டுமல்லாது, விமர்சகராகவும் என்னைப் பற்றி அறிந்து வைத்திருந்த இலங்கையர்கோன் நட்புப் பாராட்டிப் பேசலானார். அந்த அரசாங்க அலுவலகத்திற்குள் ஒர் இனிய இலக்கிய உலகம் விரிகின்றது. 'இலக்கியம் என்றால் இந்த மனிதர் எல்லாவற்றையும் மறத்துவிடுவார் போலிருக்கின்றதே' என்கிற எண்ணம் அவரைப்பற்றி என் நெஞ்சிலே ஊருகின்றது. அதே சமயம், கவிஞர் நீலாவணனுக்கும் அவருக்குமிடையில் நிலவிய அப்பழுக்கற்ற சங்கையான நட்பின் நாதத்தையும் நான் அனுபவிக்கின்றேன். எங்களுடைய உரையாடல் பல விஷயங்களிலும் தாவித் தாவிப் படர்ந்தது. அவற்றை எல்லாம் இப்பொழுது என் நினைவுக்குக் கொண்டுவர ஏலாமல் இருக்கின்றது.

ஆனால், இலங்கையர்கோனுடைய கடைசிக் காலத்திலே அவரைச் சந்தித்த அந்த நிகழ்ச்சியையும், நடத்திய உரையாடலையும் என்றுமே நான் மறக்க மாட்டேன். அன்று சனிக்கிழமை. மாலை கரைந்து இரவு பூக்கின்றது. பெரிய நீலாவணை; கவிஞரின் வீடு. திருமதி நீலாவணன் 'சுடச்சுட'த் தேநீர் கொண்டு வந்து தருகின்றார். இருவரும் அருந்துகிறோம். "மச்சான், புறப்படு!" என்கிறார் நீலாவணன். நான் தயார். நீலாவணன் சைக்கிளை மிதிக்கிறார். நான் அதில் 'பிலியன்' சவாரி செய்கிறேன்.

நிலவொளியில் இந்தக் கல்முனைக் குமரிதான் எவ்வளவு அழகு சிந்துகிறாள்! இந்த அழகினை மானசீகமாகப் பருகும் எவனுமே கவிஞனாய் மாறுவான். அந்த இயற்கையின் தாவணித் தழுவலிலே என் மனம் தாவிக் குதிக்க, இலங்கையர்கோனின் வீடு சேர்ந்தோம். அந்த வீட்டின் சோபிதத்தை நீலாவணனின் வார்த்தைகளிலே தருதல் பொருந்தும். "தென்னை மரங்களும் மாமரங்களும் நிறைந்து நிழல் பரப்பி, சதா குளுகுளு என்றிருக்கும் வளவு. கூப்பிடு தூரத்தில் கடல். பாரதியாரின் 'காணி நிலம் வேண்டும்' என்ற பாட்டின் யதார்த்த பூர்வமான இந்தச் சூழ்நிலை இலங்கையர் கோனுக்கு மிகவும் பிடித்திருந்தது." இலங்கையர்கோன் தமது அறையில் அமர்ந்து, வானொலிக்கான நாடகப் பிரதி ஒன்றினை எழுதிக் கொண்டிருந்தார். எழுத்துப் பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் அவர், "உங்களைத்தான் எதிர் பார்த்திருக்கிறேன். வாருங்கள்.... இப்படி இருந்து பேசலாம்" என்று வரவேற்கின்றார். அது, நாடகங்களை எழுதுவதிலும் அவற்றை மேடையேற்றுவதிலும் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். "முதல் முழக்கம்" என்ற பெயரில் நான் தயாரித்த நாடகம் மூன்று தடவைகள் மட்டும் மேடையேற்றப்பட்டு பதினோராயிரம் ரூபாய்களை நிகர லாபமாக வசூலித்திருந்தது. இந்தத் தொகை 1957இல் பெரிய காசு! அதே மகுடத்தில் நான் எழுதிய நாடகத்துக்கு இலங்கைக் கலைக்கழகப் பரிசும் கிடைத்திருந்தது. எனவே, எங்களுடைய இலக்கிய பஜனை நாடகக் கலையைச் சுற்றிச் சுழலுதல் இயல்பாயிற்று. சிலப்பதிகாரம், மாதவி மடந்தை, மனோன்மணியம், விதானையார் வீடு, முதல் முழக்கம், ஷேக்ஸ்பியர், விபுலாநந்தர், ஒத்தெல்லோ, ஜூலியஸ் சீஸர், பெர்னாட் ஷா, பிக்மாலியன், லண்டன் கந்தையா, மிஸ்டர் குகதாசன் போன்ற பல பெயர்கள் தாராளமாக உருட்டப்படுகின்றன.

நாடகக் கலை பற்றி எனக்கும் இலங்கையர்கோனுக்கும் இடையில் ஒத்த கருத்து நிலவவில்லை என்ற உண்மை நமது உரையாடல் என்கிற மத்தியிலே நெய்யாகத் திரண்டு வருகின்றது.

"மிஸ்டர் பொன்னுத்துரை!'விதானையார் வீட்டில்' என்ற என் நாடகம் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பொழுது அது ஒரு பரபரப்பினையே ஏற்படுத்தியது. எங்கும் அதுவே பேச்சாக இருந்தது!" என்று இலங்கையர்கோன் பெருமை பேசுகிறார்.

"விதானையார் வீடு என்றுமே ஒரு மேடை நாடக மாகவோ, இலக்கியமாகவோ வெற்றி பெறமாட்டாது. தற்காலிகமான மேலெழுந்த ரஸனையை அது பிரீதி செய்யலாம்...." அவர் ஊதிக் கொண்டிருந்த பெருமை என்ற பலூனை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை.

"என் கந்தோருக்குத் தினமும் எத்தனை பேர் வருகின்றார்கள். தெரியுமா? இரசிகர்களுடைய நாடித் துடிப்பை நேரிலே பேசித் தெரிந்து வைத்திருக்கிறேன்...."

"உங்களுடைய கந்தோருக்கு அடிக்கடி விதானைமார்களே வருகிறார்கள். தங்களுடைய அலுவல்கள் ஆக வேண்டுமே என்பதற்காக 'ஐயா, உங்கள் நாடகத்தைக் கேட்டோம். அது பிரமாதம்!' என்று 'ஐஸ்' வைக்கிறார்கள். அவர்களுடைய அபிப்பிராயத்தை வைத்துக் கொண்டு உங்களுடைய நாடகத்தைத் தரம் உயர்ந்தது என்று கணித்துவிட முடியுமா?"

என்னுடைய சாடலினால் இலங்கையர் கோனுடைய முகம் கோபத்திலே சிவந்து விடுகின்றது. இருப்புக் கொள்ளாத நிலையில், எழுந்து, குறுக்கும் நெடுக்குமாக நடை பயிலுகின்றார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பேச்ச மோதலின் உக்கிரத்தைக் கண்டு நீலாவணன் சங்கடப்படுகின்றார். மௌனம்.

மௌனத்தைக் கலைத்து, தமிழ் விழாவைக் கல்முனையிலே சிறப்பாக நடத்துவது பற்றிய பேச்சினைக் கவிஞர் நீலாவணன் எடுக்கிறார். ஒரு சகஜ நிலை உருவாகின்றது. தமிழ் விழா எப்படி நடத்தப்படுதல் வேண்டும் என்பதைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பேசிக் கொள்ளுகிறோம். பேச்சு, சுற்றி வளைந்து நகருகின்றது. நேரம் நடுநிசி நோக்கி ஊருகின்றது.

'தினகரன்' மலரிலே நான் எழுதியிருந்த 'தினை விதைக்காதவர்கள்' என்ற நாடகத்திலே தாவி, 'நாடகத்திற்கான உயிர்ப்பு என்ன?' என்ற கேள்விக்கான விடை தேடும் வித்துவத்திலே வந்து நிற்கின்றது. "மனித உணர்ச்சிகளின் முரண்பாடுகளையும், நாடகம் performing Art என்கிற பிரக்ஞையில் எழும் ஊடக நேர்த்தியையும் கலாசத்தியத்துடன் பிணைப்பதிலேதான் நாடகத்தின் உயிர்ப்பினைப் பெறலாம்" என்பது என் கட்சி. "கதையைக் கையாளும் முறையும், அதிலே இரசிகனை ஒன்றவைக்கும் கலையுமே நாடகம்" என்பதை இலங்கையர்கோன் தமது கட்சியாக்கிக் கொள்ளுகிறார்.

பேச்சின் உச்சத்திலே, இலங்கையர்கோன் எழுகின்றார். என்னை உற்றுப் பார்க்கின்றார். அதிலே வித்துவ கர்வம் பளிச்சிடுகின்றது. "நான் ஒன்றைச் சொல்லுவேன். நீர் ஷேக்ஸ்பியருடைய ஒரு நாடகத்தின் ஒரு வரியைத்தானும் இற்றைவரை வாசித்ததில்லை!" என்று முகத்தில் அறைவதைப் போலக் கூறினார். நான் ஒரு பட்டதாரி என்பதையும், பட்டப்படிப்பிற்கான ஒரு பாடமாக ஆங்கிலத்தைப் பயின்றிருந்தேன் என்பதையும் அவர் அறிவார். பட்டப்படிப்புக்கு முற்பட்ட இடைநிலை வகுப்புகளிலே கூட ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பாட நூல்களாகப் போதிக்கப்படுவதை அவர் அறியாதவருமல்லர். இந்நிலையில் அவருடைய கூற்றுக்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? நான் எழுகின்றேன். "நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் எந்த நாடக நூலினதும் எந்த ஒரு வரியையாவது இற்றைவரை வாசித்ததில்லை..." என்று கூறிக் கொண்டு வாசலை நோக்கி நடக்கின்றேன்.

"நேரமாகின்றது. இனி, இருவரும் நீலாவணைக்குப் போக வேண்டும். அடுத்த வாரமோ, அதற்கு அடுத்த வாரமோ சாவகாசமாகப் பேசலாம்..." என்று கூறிக் கவிஞரும் விடைபெறுகின்றார்.

கவிஞரும் நானும் வழியில் எதுவுமே பேசவில்லை. அன்றிரவு என் நொந்த மனத்தினைத் துயிர்தேவியிடம் ஒப்படைக்கின்றேன்.

விடிகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல நீலாவணைக் கடற்கரைக்குச் செல்கின்றோம். என்னிலம் பார்க்க, கவிஞரின் நெஞ்சம் அதிகம் நொந்திருந்தது. என்னைக் குழந்தையாகக் கற்பித்து, தம்மைத் தந்தையின் நிலையில் வைத்து என்னைத் தேற்ற முனைந்தார். என் இலக்கிய வாழ்க்கையில் நான் இன்றளவும் ஏற்றுள்ள ஏச்சுகளுடனும் தூஷணைகளுடனும் இதனை ஒப்பிடும் பொழுது, இஃது ஓர் அற்பம். இந்த நிகழ்வின் மறு துருவப் பொற்பத்தைச் சுட்டுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியைச் சற்றே விரிவாகப் பிரஸ்தாபிக்கிறேன்.

அன்று மாலை. மட்டக்களப்புக்குத் திரும்ப வேண்டும் என்று துடிக்கிறேன். அன்றிரவும் தன் வீட்டிலே தங்கிச் செல்லுமாறு கவிஞர் வற்புறுத்துகின்றார்.

"இலங்கையர்கோன் தமது தவறை உணர்ந்தால், என்னைத் தேடி என் வீட்டுக்கு வருவார்!" என்று நீலாவணன் காலையிலேயே கூறியிருந்தார். இலங்கையர்கோனுடைய கார்ச் சாரதியான சண்முகமாவது நம்மைத் தேடிவரக் கூடும் என்று பகலெல்லாம் கவிஞர் எதிர்பார்த்திருந்தார். இப்பொழுது மாலையும் கரைகிறது.

தெருவில், நீலாவணன் வீட்டுக் கடப்பில், கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. "டீ.ஆர்.ஓ.வின் கார்போல இரிக்கி..." என்று திருமதி நீலாவணனின் குரல் விறாந்தையில் கேட்கிறது. நீலாவணன் எழுந்து முற்றத்துக்கு விரைகிறார். அதற்கிடையில், இலங்கையர்கோனும் முற்றத்துக்கு வந்துவிடுகிறார். அறையிலே விரிக்கப்பட்டிருந்த மருதமுனைப் பன்பாயில் அமர்ந்து, இவற்றை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

"பொன்னுத்துரை போய்விட்டாரா?" என்று கேட்டபடி அறைக்குள் இலங்கையர்கோன் நுழைகின்றார். நான் பாயிலிருந்து எழுகின்றேன். அவர் என் கைகளைப் பற்றிக் கொள்ளுகிறார். "நீங்கள் மட்டக்களப்புக்குச் சென்றிருந்தாலும், மாஸ்டரையும் அழைத்துக் கொண்டு உங்களுடைய வீட்டுக்கு வரும் உத்தேசத்துடன்தான் வந்தேன். யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொன்னது தான் சரி."

அன்றுதான் ஓர் உயர்ந்த மனிதனின் உயர்ந்த உள்ளத்தைத் தரிசித்தேன். நேற்று அதிகார மிடுக்குடன் நடந்து கொண்ட அதே இலங்கையர்கோன்தானா, இன்னு ஒரு மாணாக்கரின் குழைவுடன் என் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது? நீலாவணனின் நம்பிக்கை வென்றது போலவே, என் சத்தியமும் வென்றது; இலங்கையர்கோனின் பண்பும் வென்றது! நீலாவணனின் நம்பிக்கை அநுபவத்திலே வேரூன்றியது என்பதை, அவர் இலங்கையர்கோனின் நினைவாக எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். அவர்கள் இருவருக்குமிடையில் நிலவிய உறவினைப் பூரணமாகத் தரிசிப்பதற்காக, கவிஞர் எழுதிய அக்கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.

"கலை விழாவுக்கான திட்டங்கள் எழுத்து வடிவம் பெற்றபின், இருவரும் பகல் விருந்து உண்ணும் போது, கையில் வீரபாண்டியக் கட்டபொம்மன் சினிமா கதை வசனப் புத்தகத்தோடு அப்பு உள்ளே நுழைந்தார்.

"எங்கே அப்பு எந்த வசனத்தை ஒருக்கால் மாஸ்ரருக்குப் பேசிக் காட்டுங்கோவன்' என்று இலங்கையர்கோன் ஆக்ஞாபிக்கவும், 'செம்வள மலைபோல்-செப்புத் தகடடித்துச் செப்பனிட்ட தரை போல்-மாணிக்கக்கரை கட்டி மடை திறந்த நெருப்பாற்றை மத்தியிலே ஓடவிட்ட அழகு போல...' என்று உரத்த குரலிலே பேச ஆரம்பித்து விட்டார் அப்பு.

"அப்பு நிறுத்துங்கோ. மாஸ்ரர் மட்டும் இந்த வசனத்துக்குக் கருத்தைச் சொல்லிப் போடட்டும். பிறகு கதை வேறு....

"ஒரே கருத்து-ஆனால் சினிமாவுக்கு எழுதிய அடுக்கு மொழி. இரத்தம் தோய்ந்த பிணக்குவியல்கள்; இரத்தத்தால் மெழுகிய போர்க்களம். நெருப்பாறு போல இரத்தப் பிரவாகம்! இதுதானே! என்றேன்.

"மாணிக்கக் கரைகட்டி' என்றால் என்ன கருத்து மாஸ்ரர்?" சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இந்த உரையாடல் கொஞ்சம் ரசாபங்கமாகத்தான் இருந்தது. 'இரத்தம் தோய்ந்த தசை(நிணம்) சிவப்பாகத்தானே இருக்கும்? அது கரைகட்டி நிற்க மத்தியில் இரத்தம் பாய்கிறது...'

"மாஸ்டர் பிழை. இதற்குத் திடீரென்று யாரும் பதில் சொல்ல முடியாது. புத்தகங்களிலும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியாது. அனுபவம் வேண்டும். நான் எனது கடமை நேரங்களில் இப்படியான காட்சியைப் பலமுறை கண்டிருக்கிறேன். யாராவது கொலையுண்டு இரத்தப் பிரவாகம் கூடிய இடத்திதைக் கவனித்திருந்தால் இது விளங்கும். பார்த்திருக்கிறீர்களா மாஸ்ரர்? இரத்தம் ஓடிய இருகரையும் காய்ந்து ஒருவித நாவற்பழம் போல நீலம் மினுங்கும். அதைத்தான் இப்படி எழுதியிருக்கிறார்கள். மாணிக்கம் நீல நிறம்தானே?"

"மாணிக்கம் சிவப்பு-அதாவது நெருப்பு நிறம்" என்ற என்னுடைய பேச்சை இலங்கையர்கோன் ஒப்புக் கொள்ளவே இல்லை. விருந்து முடிந்தது.

அந்த இடத்தில் சண்டைபிடித்துக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. வீட்டுக்குப் புறப்பட்டேன். வாசல்வரை என்னை வழியனுப்ப வந்த இலங்கையர்கோன், 'மாஸ்ரர் கவிதை நாடகம் திருப்பி எழுதிவிட்டீர்களா? ஏன், கொண்டுவந்து காட்டவில்லை? என் கவிதையில் கை வைக்க யார் இந்த இலங்கையர்கோன் என்ற எண்ணம்-கர்வம் உங்களிடம் இருந்தால், இன்றோடு மறைந்துபோகும் என்று நினைக்கிறேன்' இப்படிக் கூறிக் கைகூப்பி விடையளித்தார்.

"விருந்தின் சுவை மருந்தாக மாறி மனதை வருத்த 'தான் பிடித்ததே சரியென்று வாதிக்கின்றாரே' என்ற மனச் சுமையோடு வீடு வந்தேன். அன்றிரவு நிகண்டு- அகராதிகள்-கலிங்கத்துப்பரணியில் பாலைக்காட்சி, மேலும் சில இலக்கிய நூல்களைப் புரட்டி மாணிக்கம் சிவப்பு நிறந்தான் என்பதை மேலும் உறுதிப் படுத்திக்கொண்ட பின்னரே உறக்கம் வந்தது.

"அடுத்த சனிக்கிழமை. இலங்கையர்கோனை அவருடைய காரியாலயத்தில் சந்தித்தேன். உரையாடலின்போது, 'மாணிக்கம் சிவப்பு நிறந்தான் ஐயா. இதோ ஆதாரங்கள்' என்று கொண்டுபோன குறிப்பை நீட்டினேன். இலங்கையர்கோன் வாய் விட்டுச் சிரித்தபடியே, 'சரிதான் மாஸ்ரர்; தெரியும். அன்று வேண்டு மென்றுதான் உங்களோடு சண்டை பிடித்தேன். நீங்கள் அதைப் பெரிதாகத் தூக்கிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டீர்கள்' என்று மீண்டும் சிரிக்கத் துவங்கினார்' விருந்து அன்றுதான் சுவைத்தது."

அன்று நீலாவணன் வீட்டிலே மூவரும் நடத்திய உரையாடல் மிகவும் இனிமையாகவும் சுவையாகவும் அமைந்தது. இருவரையும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தமது வீட்டுக்கு வரும்படி இலங்கையர்கோன் அழைக்கின்றார். அதற்கும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையே தோதுப்படும் என்ற அடிப்படையில் அழைப்பு ஏற்றுக்கொள்ளபடுகின்றது.

அடுத்த வாரத்தினைச் சில முக்கிய பணிகளுக்கு ஒதுக்கியிருந்தேன். அந்தப் பணிகளை இயற்றி, நித்திரையில் அயர்கையிலே, 'அடுத்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைகோனைச் சந்திக்க வேண்டும்' என்றும் நினைத்துக் கொள்ளுகிறேன்.

இரண்டு தினங்கள் கழிந்திருக்கும். நேரம் மதியத்தை நோக்கி ஊருகின்றது. அழுது வீங்கிய கண்களுடனும், தோளிலே தொங்கும் 'கிற்' பாக்குடனும் கவிஞர் நீலாவணன் என் முன்னாற் காட்சி தருகின்றார். நான் கேட்பதற்கு முன்னரே, 'மச்சான் பொன்னு! இலங்கையர்கோன் செத்துப் போனார். பிரேதத்தை யாழ்ப்பாணம் கொண்டு போகின்றார்கள். ஈமச் சடங்குகளிலே பங்கு பெற நானும் யாழ்ப்பாணம் போகின்றேன்!' என்றார்.

நீலாவணன் இலங்கையர்கோன் மீது கொண்டிருந்த பாசம் சுடுகாடுவரை நீளுகின்றது....

இலங்கையர்கோனின் ஆசையிலே பிறந்து, கவிஞர் நீலாவணன் ஆர்வத்திலே வளர்க்கப்பட்ட 'கல்முனைக் கலைவிழா' கனவாகவே போய்விட்டது. அதற்கு ஈடுசெய்யும் முகமாகக் கல்முனை எழுத்தாளர் சங்கம் இலங்கையர்கோன் நினைவுவிழா ஒன்றினைப் பாரிய அளவிலே நடத்தியது. கல்முனை எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கிய இயக்கியவாதி கவிஞர் நீலாவணன்தான்! கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்வதற்கு, கல்முனையைச் சேர்ந்த சண்முகம் சிவலிங்கம் 1968ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருதல் பொருத்தமென நினைக்கின்றேன்:

"இங்கு (கல்முனையில்) ஏற்பட்ட இலக்கிய தாகம் சுதந்திரம் பெற்றகாலத்தில் ஏற்பட்ட வேகத்துக்கும், பாரதி-பாரதிதாசனால் ஏற்பட்ட தாகத்திற்கும் ஓரளவு நின்று பிடித்தது. இவைகளினாலும், அவைகளுக்கு முன்னர் தோன்றிய சிலமாற்றங்களினாலும் 1950ஆம் ஆண்டளவில் ஒரு நவீன இலக்கிய உணர்வு இங்கு ஏற்பட்டது. இந்த நவீன காலத்தின் விடிவெள்ளிதான் கவிஞர் நீலாவணன். மீசை கறுக்காத இளைஞனாகப் பெரிய நீலாவணையிலிருந்து அவர் எழுத ஆரம்பித்த நான்கு ஐந்து ஆண்டுகளில் கல்முனைத் தொகுதியின் ஏனைய பகுதிகளிலும் நவீன இலக்கியத்தின் மெய்ப்பாடுகள் பலரிடம் தோன்ற ஆரம்பித்தன.

"இன்று இந்தப் பகுதியிலிருந்து ஈழத்தின் சிறந்த கவிஞர்களாகவும், சிறுகதை ஆசிரியர்களாகவும் விளங்கும் மருதூர்க் கொத்தன், சத்தியநாதன், நுஃமான், சடாட்சரன், மருதூர்க்கனி யாவரும் ஒரே இலக்கியப்பண்ணையில் வளர்ந்தவர்கள். நீலாவணனுக்கு நுஃமானும் சத்தியநாதனும் பாடசாலை மாணவர்களாக அறிமுகமானார்கள். இந்த ஆறு பேரும் தம்முடைய படைப்புகளினால் ஈழத்து இலக்கிய உலகில் ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர்கள்.

"இவர்களுடைய சந்திப்புகள் பெருகப் பெருக இலக்கிய முயற்சியில் அடுத்தடியான இயக்க வளர்ச்சி ஏற்பட்டது. இதன் பலனாக 1962 ஆம் ஆண்டு கல்முனை எழுத்தாளர் சங்கம் உருவாயிற்று. சங்கத்தில் முதல் தலைவராகக் கவிஞர் நீலாவணனும், செயலாளராக மருதூர்க் கொத்தனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்."

இந்தப் பகுதிகளுக்குப் பின்னால் சண்முகம் சிவலிங்கம் கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் சாதனைகள் பற்றிய கணக்கெடுப்பினை நடத்திச் செல்லுகின்றார். இந்தக் கட்டத்தில் ஓர் உண்மையை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

நீலாவணனின் நட்பு வாய்ப்பதற்கு முன்னரே, எனக்கு எம்.எ. ரஹ்மானின் நட்பு கிட்டியது. பிரேம்ஜ“யை நிரந்தரச் செயலாளராய்ப் பிரதிஷ்டை செய்தல், கைலாசபதி-சிவத்தம்பி கூட்டினை இலக்கிய அறங்காவலர்களாக நிவேதித்தல், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை மட்டுமே, ஈழத்துத் தமிழ் சிருஷ்டி கர்த்தாக்களாகப் பிரசித்தமாக்குதல் ஆகியன மட்டுமே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கைகள் என்கிற தெய்வமாடுதல் ஆரம்பமான கட்டத்தில், சத்தியத்திற்குச் சாட்சியாய் என்னை நியமித்து, அந்த இயக்கத்திலிருந்து நான் விலக நேர்ந்தது. என்னைத் தனிமைப்படுத்துதல் மூலம் என்னை எழுத்துலகிலிருந்து விரட்டிவிடவும் 'புதிய திரிமூர்த்திகள்' கங்கணங் கட்டினர். இந்தக் கட்டத்தில், 'ரஹ்மானின் நட்பு கிடைத்தற்கரிய பலமாகவே எனக்கு வந்து வாய்த்தது. அவருடைய பக்க பலத்தினால், என்னால் தனிமனித இயக்கமாகவும் நிமிர்ந்து நிற்க முடிந்தது. என் தோலைக் காப்பாற்றும் அவதியல்ல. தனிச் சிங்கள ஆதிக்கத்திற்கு வாழிபாடி, அதற்கு ஒரு 'சிண்' போல இயங்குவது தேசிய இலக்கியத்திற்கான விமுக்திப் பாதை என்று பிற்காலத்தில் வளர இருந்த ஓர் அநியாயத்திற்கு எதிரணி அமைப்பதில் மகத்தான உபகாரியாய் உதவினார். இது வேறு விவகாரம். ஆனால், நீலாவணன் சம்பந்தமாக இந்த நட்பு எவ்வளவு சகாயமாக அமைந்தது என்பதை இங்க பிரஸ்தாபித்தல் பொருந்தும்.

புதிய திறமைகளைப் பிரகாசித்துக் காட்டுவதில் ரஹ்மானுக்கு எப்பொழுதும் அலாதியான தாகம். அவர், நீலாவணன் மறைந்த காலப்பகுதிக்கிடையில் சுமார் எழுபத்தைந்து நூல்களை வெளியிட்டிருந்தார். இவற்றுள் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை தமது அரசு வெளியீடாகவும், தமது பிற வெளியீட்டுப் பிரசுரங்களாகவும் வெளியிட்டார். இவை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்த மட்டில் இன்றளவும் அரிய சாதனையாகவே நிலைத்து நிற்கின்றது. என் மூலமாகக் கவிஞர் நீலாவணன் ரஹ்மானின் நட்பினைச் சம்பாதித்துக் கொண்டார்.

கல்முனை எழுத்தாளர் சங்கம் இயக்க ரீதியாகச் செயற்படச் செய்வதில் நீலாவணனுக்கு நான் எவ்விதத்திலும் உதவவில்லை. ஆனால், கல்முனை எழுத்தாளர் சங்கத்தினைச் செயலூக்கமும், செயலாக்கமும் நிறைந்த இயக்கமாகச் செயற்படச் செய்வதிலே நீலாவணனுக்கு ரஹ்மான் பெருமளவில் தோள் கொடுத்து உதவியதை நான் அறிவேன். நீலாவணனைச் சுற்றி இயக்க ரீதியாக வளர்ந்த எழுத்தாளர் என்று சண்முகம் சிவலிங்கம் தொகுத்துளள பட்டியலிலே யூ.எல்.ஏ.மஜ“த், எஸ்.ஏ.ஹஸன் மௌலானா ஆகிய இருவருடைய பெயர்களையும் சேர்த்துக் கொள்ளுதல் நியாயம் என்று எண்ணுகின்றேன். அந்தக் காலத்தில் ரஹ்மான் மட்டக்களப்புக்கு வரும் பொழுதெல்லாம் (மாதம் ஒரு முறையாவது வருவது அவர் வழக்கம்) நீலாவணன் வீட்டிலே ஓர் இலக்கியச் சந்திப்பு நடைபெற்றே தீரும். அதிலே கல்முனை எழுத்தாளர் சிரத்தையுடன் கலந்துகொள்ளுவார்கள். அத்தகைய இலக்கியச் சந்திப்புகள் சிலவற்றில் கவிஞர் அண்ணலும், விமர்சகர் ஏ.ஜே.கனகரத்னாவும் கலந்து கொண்டதாகவும் ஞாபகம். அந்த வட்டத்தினரில் இலக்கியப் படைப்புகளுக்குப் பிரசுர களங்களைப் பெற்றுத் தருவதிலே ரஹ்மான் முன்னின்று உழைத்தார்.

பரிசோதனைக் களங்கள் பலவற்றை வகுத்தமைப்பதிலும், பல வட்டங்களிலும் பரந்துபட்டிருக்கும் ஆற்றல்களை ஒன்று சேர்ப்பதிலும் ரஹ்மான் முனைப்பாக ஈடுபட்டிருந்தார். இவற்றின் வெற்றிக்கு என் இலக்கிய ஆற்றலையே அவர் பெரிதும் நம்பியிருந்தார். இந்த முயற்சிகளுக்குத் 'தினகரன்' ஆசிரியர் திரு சிவகுருநாதன் மிகவும் ஒத்தாசையாக இருந்தார் என்பது இங்கு நன்றிப் பெருக்குடன் குறித்து வைக்கத்தக்க ஒன்றாகும்.

மட்டக்களப்புப் பிரதேசத்தில், பல்வேறு எழுத்தாளர் வட்டங்களிலே தண்டிறக்கியிருந்த எழுத்தாளர் சகலருடனும் ரஹ்மான் சுமகமான உறவு வைத்துக் கொள்ளத் தவறியதில்லை. அவர் வகுத்தமைத்த முதலாவது பரிசோதனைக் களம் "கோடை முனைப் பாலத்திலே..." என்பதாகும். மட்டக்களப்பின் இதயத்தை இணைத்து நிற்பத கேட்டை முனைப்பாலம். அந்தப் பாலத்திலே ஓர் எழுத்தாளன் நிற்கின்றான். அவனைச் சுற்றிப் பல நிகழ்வுகள்! அந்த நிகழ்வுகள் எழுத்தாளனுக்கு ஏற்படுத்தும் சலனங்கள் என்ன? இவற்றைப் பொருளாக வைத்து எழுதப்பட்ட ஒன்பது சித்திரங்கள் இதிலே தொகுக்கப்பட்டன. கல்முனை எழுத்து வட்டத்தைச் சேர்ந்த மருதூர்க் கொத்தனும், சத்தியநாதனும் இதிலே பங்கு பற்றினார்கள். பிற்காலத்தில் பத்திரிகை எழுத்தாளராகப் பிரபலம் பெற்ற செழியன் பேரின்ப நாயகத்தின் எழுத்துக்கள் முதல் தடவையாக அச்சுவாகனம் ஏறியதும் இந்தப் பரிசோதனைக் களத்திலே தான்.

அடுத்து, 'மரபு' என்ற பரிசோதனைக் களத்தை வகுத்தமைத்தார். இந்தப் பரிசோதனைக் களத்திலே ஓர் உருவகக் கதை, ஒரு சிறுகதை, ஓர் ஓரங்க நாடகம், ஒரு குறுங்காவியம், ஒரு குறுநாவல் ஆகியன இடம் பெற்றன. இலக்கியத்திலே மரபு நிலை பேணப்படுதல் பற்றிய சிரத்தையை நான் அக்காலத்திலே பிரசித்தப்படுத்திக் கொண்டிருந்தேன். இதனாலும், எனக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினருக்கு மிடையிலே தோன்றிய முரண்பாடு முனைப்புப் பெற்றிருந்தது. எனவே, இது குறித்த ஆக்க இலக்கிய விசாரணை ஒன்று தக்கதெனத் தீர்மானிக்கப்பட்டது. மரபுநிலை பேணுதல் என்ற ஒரே பொருளை, பலகோணங்களிலும், பல இலக்கிய உருவங்களிலும் தரிசிக்கும் ஓர் உபாயத்தை இந்தப் பரிசோதனை பயின்றது. உருவக்கதையை ரஹ்மானும், சிறுகதையை மருதூர்க் கொத்தனும், ஓரங்க நாடகத்தை ஆர்.பாலகிருஷ்ணனும், குறுங்காவியத்தை நீலாவணனும், குறுநாவலை நானும் எழுதினோம். இந்த எழுத்துத் திட்டத்திற்கான கூட்டம் கவிஞர் நீலாவணனுடைய வீட்டில், எம்.ஏ.ரஹ்மானின் தலைமையில் நடைபெற்றது.

எங்களுடைய பணி பாரியது என்பதை நீலாவணனும் நானும் உணர்ந்திருந்தோம். என் குறுநாவல் 'வீடு'. அதனை எழுதுவதற்காக ஏ.பி.குலசிங்ஹ அவர்களிடம் பாளி மொழியின் நுட்பங்கள் சிலவற்றைக் கற்க வேண்டியிருந்தது. நீலாவணனின் குறுங்காவியம் 'வழி'. பண்டைத்தமிழ் இலக்கியங்களிலே அவர் முற்றாக மூழ்கினார். அவற்றின் இலக்கண நெறிகளையும், நுட்பங்களையும் பக்தி சிரத்தையுடன் கற்றார். அக்காலத்தில் நான் நீலாவணனைச் சந்தித்த பொழுதெல்லாம், பழந்தமிழ் இலக்கியச் செழுமை பற்றியும், அவை பயின்ற இலக்கண நெறிகள் பற்றியும் அலுக்காது பேசுவார்! 'வழிக்'க் காகத் தாம் புனையும் கவிதைகள் சிலவற்றைப் பாடி, அவற்றின் யாப்பு அமைதிகள் பற்றி விளக்கவும் தவறியதில்லை. இன்றளவும், இலக்கண மரபுகளைக் கையாண்ட நேர்த்தியில், நீலாவணனின் 'வழி' அற்புத படைப்பாக நிலைத்துள்ளது. இந்தப் படைப்பினால் ஈழத்தின் கவிதா ஆற்றலை அவர் தலை நிமிரச் செய்துள்ளார்.

இந்த ஐந்து சிருஷ்டிகளைப் பற்றிய விமர்சனங்கள் 'இருவர் நோக்கு' என்ற மகுடத்தில் பிரசுரமாயின. ரஹ்மானின் சிந்தனையில் உதித்த இத்திட்டம், சிவகுருநாதனின் உபகாரத்தினாலே செயலாயிற்று. இருவேறுபட்ட இலக்கியக் கொள்கைகள் உடைய இரண்டு விமர்சகர்களுடைய உள்ளங்களிலே ஒரே சிருஷ்டி எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும்? இதற்கு விடையாக ஐந்து சிருஷ்டிகளைப் பற்றிப் பத்து விமர்சகர்கள் எழுதிய பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றன. இவை அனைத்தும் எத்தகைய இலக்கிய நேசிப்புகளின் வெளிப்பாடுகள்!

கவிஞர் நீலாவணனுடைய ஆக்கங்கள் பல்வேறு பத்திரிகைகளிலும் பிரசுதமாகுதல் வேண்டும். அவருடைய ஆக்கங்கள் மக்கள் மத்தியில் பரம்புதல் வேண்டும் என்பதிலே ரஹ்மான் சத்திய சிரத்தை ஊன்றியிருந்ததை நான் அறிவேன். நீலாவணனின் மரணச் செய்தி கிடைத்த அடுத்தடுத்த வாரங்களிலே கூட, நீலாவணனின் கவிதைகள் சிலவற்றை ரஹ்மான் எனக்குப் பாடிக் காட்டியவாறே, "சந்தச் சிறப்புக்குச் சமகாலக் கவிஞர்களுள் நீலாவணனே முதல் மகனாக நிமிர்ந்து நிற்கின்றார்" என உளமார, நாத்தழுதழுக்க விமர்சனஞ் செய்தார்.

நீலாவணனுக்கும் ரஹ்மானுக்கும் இடையில் நிலவிவந்த அந்த வஞ்சக மற்ற நட்பு நீடித்திருக்குமானால், நீலாவணனின் இலக்கிய ஆக்கங்கள், அவர் உயிர்வாழ்ந்த காலத்தில், அவருடைய மேற்பார்வையிலேயே நூலுருப் பெற்றிருக்கம் என்பது திண்ணம். நீலாவணனுடைய உணர்ச்சிகளுக்கு முன்னாலே, அவருடைய இலக்கிய நண்பர்களினால் அதிக காலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமற் போனமை, இப்பொழுது நிதானிக்கும் பொழுது, இலக்கிய நஷ்டமாகச் சமித்துள்ளது என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.

கல்முனை எழுத்தாளர் சங்கத்தினர் இலங்கையர்கோன் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்தினார்கள். அதிலே பரிசு பெற்ற கதைகளைப் பத்திரிகைகளிலே பிரசுரித்து, அவற்றை இலக்கிய உலகிற்குப் பிரசித்தப் படுத்துதல் வேண்டும் என்று நிலாவணன் துடித்தார். அப்பொழுதும் ரஹ்மானே அவருக்கு அபயமளித்தார். தினகரன் ஆசிரியருடன் ஒழுங்கு செய்து, அவை தினகரனிலே பிரசுரமாக ஏற்பாடு செய்தார்.

கவிஞர் நீலாவணனுக்கும், அவர் தலைமை தாங்கிய கல்முனை எழுத்தாளர் சங்கத்திற்கும் நான் ஒரு விஷயத்தில் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். என் இலக்கிய வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு இவை புதிய செய்திகளுமல்ல. நான் எதிர்ப்புகளின் மத்தியிலே வளர்ந்தவன். என்னைப் போன்று மிக அநியாயமாக விரோதிகளை அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டவர்களும் இலர் என்று சொல்லலாம். இலக்கியச் சங்கங்களின்-குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்- மூர்க்கமான தாக்குதல்களும் இலக்காகி இருக்கின்றேன். என்னைப் பற்றிய பிரஸ்தாபமே இருக்கலாகாது என்கிற வெறியுடன் பெரும் பிரசுர களங்களை மறுக்கவும், என் ஆற்றல்களை இருட்டடிப்புச் செய்யவும் பெரும் இயக்கங்களே நடத்தப்பட்டன. என்னைத் தனிப்பட்ட முறையிலே மனசாரப்பாராட்டியவர்கள் கூட, அதனைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள அஞ்சினார்கள். தங்களுடைய இலக்கிய பிரசுர வசதிகள் பாதிக்கப்படலாம் என்பதுதான் இந்த அச்சத்திற்குக் காரணம் என்று கூறிய நண்பர்களும் இருக்கிறார்கள். அந்த நண்பர்களுடைய பெயர்களைக் குறிப்பதற்கு இது தோதான இடமுமல்ல. இன்று காலம் மாறிவிட்டது. என் எதிர்ப்பாளர்கள் பழைய சாதகமாகவும் உபகாரியாகவும் மாறியுள்ளது. எனவே, எனக்குத் தொல்லை தந்தவர்களுடைய நினைவுகளை இந்தச் சந்தர்ப்பத்திலே மறப்போம்; அவர்களை மன்னிப்போம்.

ஆனால், தொல்லைகளின், எதிர்ப்புகளின் மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில், என்னைப் பகிரங்கமாகப் பாராட்டும் திராணியைப் பெற்றது கல்முனை எழுத்தாளர் சங்கந்தான். இந்த ஓர்மத்தை ஏற்படுத்தும் வலிமை நீலாவணனின் உணர்ச்சிகளுக்கு இருந்தது. முதன் முதலில் சிந்தித்த சம்பூரண உடலுறவு மறக்க ஒண்ணாது என்பார்கள். அவ்வாறுதான் இந்தப் பாராட்டு வைபவமும் என் நினைவுகளிலே இன்றளவும் இனிமை பாய்ச்சுகின்றது. எனக்குப் பூமாலைகள் சூட்டி மகிழ்ந்தார்கள்; பாவாரங்கள் சூட்டி மகிழ்ந்தார்கள்; பென்னம் பெரிய பொற்பதக்கம் சூட்டி மகிழ்ந்தார்கள். புகழ் மொழியாலே திணறடித்தார்கள். அன்றிரவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கவிஞர் நீலாவணன் அரிய விருந்தொன்று வைத்து, தன் அன்பிலே என்னைப் பிசைந்தெடுத்தார். அன்று எனக்கு ஏற்பட்ட நன்றி உணர்ச்சியை வார்த்தைகளிலே சொல்ல, இன்றளவும் வார்த்தைகளைத் தேடி அலைகின்றேன். அந்த வார்த்தைகள் எப்பொழுதுதான் என் வசத்திலே சிக்குமோ நான் அறியேன்.


X

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே....'

-இவ்வாறு எங்கேயோ, பாரதியார், கவிதைப் போதையிலேயோ, அன்றேல் போதையின் சுதியிலேயோ எழுதிவைத்தது பலருக்கும் கொண்டாட்டமாகிவிட்டது. ஒலிபெருக்கி வீரர்களான தமிழ் அரசியல்வாதிகளுக்கு 'சுவீப்' விழுந்ததுபோல! இந்த வரிகளை மந்திரம் போன்று உச்சாடனஞ் செய்தே 'சொல்லின் செல்வர்' என்று பெருமை தேடிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். பிறந்த மண்ணின் பெருமை பேசுதல், வாக்கு வேட்டைக்கான உபாயங்களுள் ஒன்றே. இல்லாவிட்டால், கிழக்கிலங்கையின் வளம் 'மண்கொள்ளை' ஆவதற்கும், அதன் பாரம்பரிய விழுமியங்கள் கற்பழிக்கப்படுவதற்கும், கட்சி பேதம் பாராட்டாது, அனைத்து அரசியல்வாதிகளும் துணை போயிருப்பார்களா?

'என் பிறந்த மண்ணின் நேசிப்பு என் தவம். இந்தத் தவ வலிமையுஞ் சேர்ந்ததுதான் என் எழுத்து ஊழியம்' என்று நான் பிரசித்தஞ் செய்ததும் உண்டு. என் எழுத்து ஊழியத்துக்கு ஓர் அர்த்தத்தினையும், ஒரு வலிமையையும், இவற்றினால் ஒரு தனித்துவத்தையும், பிறந்த மண்ணின் அஞ்சலியே எனக்கு அளித்துள்ளதாக நான் சத்தியமாகவே நம்புகின்றேன். பிறந்த மண்ணின் வாசனை என்பது புழுதியின் மணம் அல்ல. அங்கு வாழும் மக்கள் அல்ல. அவர்கள் போற்றிப் பயிலும் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள் அல்ல. அவர்களுடைய உணர்ச்சிகளும் கனவுகளும் அல்ல. இலக்கண முறைமைகளைப் பாராட்டாது அவர்கள் பயிலும் சொற்களும், கலை வடிவங்களம் அல்ல. இவை அனைத்தும் இணைந்ததாகவும், அதேசமயம் அப்பாலானதாகவும், நெஞ்செல்லாம் நிறைந்ததுபோலவும், அதனை விளக்க எத்தனிக்கும் பொழுது வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கித் தவிப்பதுபோலவும் இதன் சாங்கங்களை நான் தரிசிப்பதும் உண்டு. இந்த அனைத்துக்கும் நம்மையும் உரிமைக்காரராய் நியமித்துக் கொள்வதினால் ஏற்படும் கௌரவம் மகத்தானது. இனம்-மொழி-மதம் என்ற அடையாளங்கள் தனித்துவந்தரும் என்பது ஒரு வகைக் கஞ்சா ஞானம் போலவும். கும்பல் சேரவும், இராக்கதம் இயற்றவும் உதவும். மண்வாசனை தான் இந்த அடையாளங்களுக்க ஒரு மகத்துவத்தையும் புனிதத்தையும் இணைக்கின்றது. அப்பொழுது தனித்துவத்துக்கு ஒரு பூரணத்துவம் பொருந்தும். இந்தப் பூரணத்துவத்தை இனங்கண்டு சேவித்தல் பேரின்பம் நிகர்த்தது. இந்தச் சுகத்தினை வார்த்தைகளிலே சொல்ல இயலாது. தத்தளிக்கின்றேன். உணர்ந்தவனுக்கு விளக்கம் தேவையுமில்லை. இந்தச் சுகம்பற்றிய விசாரணையில் நானும் நீலாவணனும் ஈடுபட்ட நாள்கள் மகா பசுமையானவை. இதனை ஒருவன் இன்னொருவனுக்கு ஊட்டமுடியாது. தூண்டுதல் சாலும், இந்தச் சுகத்தினை நீலாவணன் ஆட்சிப்படுத்தியதும், நீலாவணனின் கவிதா ஊழியத்திலே ஓர் ஆழமும், ஒரு செழுமையும், ஒரு வீறும் வந்து பொருந்தின.

அவர் இந்தச் சத்திய தரிசனம் பெற்ற பெற்றியன் என்பதற்குத் தக்க சான்றாய் அமைவது 'வேளாண்மை' என்னும் அவருடைய காவியமாகும். தென் மட்டக்களப்பு மண்ணின் தனித்துவத்தையும், பாரம்பரிய கோலங்களின் அழகையும், படைப்புச் சத்தியத்தையும், 'வேளாண்மை' நிகர்த்து, வெறெந்தக் கவிதை ஆக்கமும், இற்றைவரை முன்வைத்ததில்லை என்பது உண்மை. கிழக்கிலங்கைக் கவிதா ஆற்றலின் தலைமகன் விபுலாநந்த அடிகளாரே என்கிற மெய்ம்மையை மனசிலிருந்திய பிறகும், இந்த உண்மையை மறுப்பதற்கில்லை. மண்பற்றுக் காரணமாக அடிகளார் நடாத்திய வேள்வி வேறு வகைத்து. ஈழத் தமிழ் வித்துவத்தின் ஏகபோகம் தமதே என்று யாழ்ப்பாணப் பண்டிதவர்க்கம் மமதை கொண்டிருந்த காலத்திலே, அடிகளார், பண்டிதர் மயில்வாகனன் என்னம் பெயரில், மட்டக்களப்பு மண்ணில் வித்துவத்துக்கு ஓர் அங்கீகாரமும் கௌரவமும் சம்பாதிக்கப் புறப்பட்டார். கதிரையம்பதி கணேசதோத்திரப் பஞ்சகம், கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிய சுவாமி இரட்டை மணிமாலை, கோதண்ட நியாயபுரிக்குமரவேண மணிமாலை ஆகிய நூல்கள் காரேறு மூதூர் சாமிதாச மயில்வாகனன் என்னும் பெயரிலே ஆக்கிப் பதிப்பித்தார். சுன்னைக் குமாரசுவாமிப் புலவரின் பின் சோடைபற்றிக் கிடந்த காவியப் பாடசாலைக்குப் புத்துயிர் அளித்தார். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராய் கல்விப்பணி செய்தார். வாலிபர் காங்கிரஸாருடைய மாநாட்டுக்குத் தலைமை தாங்கி, யாழ்ப்பாண அரசியல் எழுச்சிக்கு அங்கீகாரம் அளித்தார். இருப்பினும், யாழ்ப்பாண வைதீகம் மட்டக்களப்பு மண்ணின் வித்துவத்தை அங்கீகரிக்க மறுத்தது. இந்தியா சென்று, துறவியாகியும்,தமது வித்துவப் பயணத்தினை விபுலாநந்த அடிகளாராகத் தொடர்ந்தார். நாவலருக்குப் பின்னர், அவருடைய தமிழ் ஆண்மையை இந்திய மண் அங்கீகரித்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேரரசான் ஆனார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் அவருடைய 'மதங்க சூளாமணி'யைப் பிரசுரித்துக் கௌரவித்தது. தமிழ் இசை வளர்ச்சியில் சிரத்தை ஊன்றினார். சிலப்பத்திகாரத்தின் பக்கங்களிலே நீள்துயில் பயின்ற யாழ் என்னும் இசைக் கருவியை மீட்டு, யாழ் நூலாக வாழவைத்தார். அதனை வெளியிட்டுக் கௌரவஞ் சம்பாதிப்பதிலே மதுரைத் தமிழ்ச்சங்கம் முந்தி நின்றது. இடையிலே, பாரதித் தமிழின் இனிமையைப் போற்றுவதிலும் முந்தி நின்றார். அவருடைய தமிழ்ச் சேவையை அங்கீகரிப்பதுபோல, அவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் எத்தகைய ஒரு கௌரவத்தினை மட்டக்களப்பு மண்ணின் வித்துவத்துக்குச் சம்பாதித்துத் தந்தார்! அதுவும் மண்பற்றே. அது மண்பற்றின் ஒரு ஸ்திதி. அவருடைய தமிழ்ப்பணியினால் முகிழ்ந்த வித்துவக் கூட்டம், விபுலாநந்த நிழலில்தமது வித்துவத்துக்கு ஓர் அங்கீகாரஞ் சம்பாதித்தல் என்று தமது பணியைச் சுருக்கிக் கொண்டமை, மட்டக்களப்புத் தமிழுக்கு நிகழ்ந்த அநியாயமாகும்! விபுலாநந்தர் பரம்பரை என்று உரிமை பாராட்ட வந்தவர்கள். பண்டிதத்தனம் மருவிய வித்துவம் சமன் தமிழ் ஊழியம் என்கிற தவறான பிரமேயத்தைக் கற்பித்துக் காமித்ததினால், மட்டக்களப்பின் ஆக்க இலக்கிய ஊழியத்தில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்தத் தேக்க நிலையை உடைத்தெறியும் கவிதா முயற்சியாகவும் நீலாவணனின் 'வேளாண்மை' அமைகின்றது.

'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறியக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்' என்று தமது 'பாஞ்சாலி சபதம்' என்னும் காவியத்துக்கு முன்னுரை எழுதியதுடன், அதனைத் 'தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப்பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும்'சமர்ப்பணஞ் செய்தார். பாரதியார் நூற்றாண்டு விழாவினை ஒட்டி, பாரதி வழி நின்று பழகு தமிழிலே காவியமாக அமைந்த 'வேளாண்மை'யை வெளியிடுதல் பொருத்தமானது என அதனை வெளியிட்ட வ.அ.இராசரத்தினம் பிரசித்தஞ் செய்தார்.

அத்துடன், அதற்குப் பாயிரம் எழுவது போல, '....தான் 'ஆசை பற்றி அறைய' வந்ததை நீலாவணன் கம்ப காம்பீர்யத்தோடு விருத்தப் பாக்களாற் பாடியிருக்கிறார். மட்டக்களப்பின் பழகு தமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்துக்குக் கைகட்டிச் சேவகம் புரிந்து, இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. ஏடறியாப் பெண்களும் 'கவி' இசைக்கும் தெற்கு மட்டக்களப்பின் கவி வளம், இக்காவியத்தில் இலக்கணக் கரைகளுக்குளடங்கிச் சான்றோர் கவியென கிடந்த கோதாவரியாகப் பாய்கிறது...' என அதன் குணங்குறித்து வ.அ.இ. விதந்தேத்துகிறார்.

இவை 'வேளாண்மை' வகுத்துக் கொண்ட உருவம் பற்றிய பொச்சடிப்புகளாகவே எனக்குப் படுகின்றன. வ.அ.இ.யின் தரிசனத்தில் பிழை காண்பது அல்ல என் நோக்கம். அவர் கிழக்கிலங்கையின் மூத்த கதைஞர். புதுமைப் பித்தனின் கதை சொல்லும் கலையைக் காம்பீரியத்துடன் ஈழத்தமிழுக்கு நிறைவாக அறிமுகப்படுத்தியவர். ஆனால், 'வேளாண்மை'யைத் தமிழ் ஊழியத்துக்குள் மட்டும் அடக்க முனைதல், 'வேளாண்மை'யின் நேரிய தரிசனத்துக்குத் தடையாக அமைந்து விடுமோ என்பதுதான் என் தவிப்பு.

நீலாவணன் தமது குடும்பஞ் சுழ வாழ்வதற்குக் கட்டிய வீட்டுக்கு 'வேளாண்மை'என்றே பெயர் வைத்தார். 'விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தன்மையை' மானுஷ“கத்தின் ஓர் அற்புத குணமாகப் போற்றிப் பயின்று வாழ்ந்தார். இதற்கு நான் உயிர் வாழும் சாட்சி என்பதில் எனக்கு மகிழ்ச்சியும். இந்த வேளாண்தன்மையே மட்டக்களப்பு மண்ணின் உயிர்ப்பு என அவர் நம்பினார். இதனைப் பிரசித்தப் படுத்தியும் அவர் வாழ்ந்தார். மேடைகளிலே சர்வதேசியம் பற்றியும், மானுஷ“கம் பற்றியும் பேசிவிட்டு, வீடு வந்து, படலையைப் பூட்டி, போக உணவுண்டு வாழ்ந்த போலிகளைப் பார்த்துக் குமுறினார். அவர்களைச் சாடினார். மட்டக்களப்பு மண்மீது சிங்களப் பேரின வாதத்தினாலே திட்டமிடப்பட்ட 'மண் கொள்ளை'க் குடியேற்றங்களைக் கண்டு மனம் வெதும்பி உக்கினார். எரியுண்ட வீரமுனைக்காகக் கண்­ர் சிந்தினார். முஸ்லிம்களுடன் சௌஜன்ய உறவுகள் பாராட்டிய போதிலும், முதலியார் காரியப்பரின் தலைமையில் தமிழருடைய பாரம்பரிய மண் பறிக்கப்படுவது கண்டு சினந்தார். மட்டக்களப்பு வேளாண்மையின் புனிதம் வர்த்தக மயமாக்கப் படுதலினால் சோரம் போவதைப் பார்த்து மனம் புழுங்கினார். மட்டக்களப்பு மண் பாரம்பரியமாகப் போற்றிய விழுமியங்களும், ஆசாரங்களும், சம்பிரதாயங்களும், சடங்கு முறைமைகளும் தனித்துவமானவை மட்டுமல்ல, அர்த்தஞ் செறிந்தவையும் என அவர் நம்பினார். மானுஷ“கத்தின் மிக உந்நத பண்புகளை மட்டக்களப்பின் வேளாண்மைக்காரர் காத்து வருவதாக அவர் வாய் மணக்கச் சொல்லுவார். அவருடைய தமிழ் நேசிப்புக்கூட, மண் பற்றின் வீறார்ந்த கிளைதான் என்பதை எத்தனையோ சந்தர்ப்பங்களிலே இனங்கண்டு நான் இன்புற்றிருக்கின்றேன்.

எனவே, 'வேளாண்மை' காவியம் நீலாவணனுடைய ஆழ்ந்த மண் பற்றுக்கான சாஸனமாகவே எனக்குத் தோன்றுகின்றது. மண் பற்று என்னும் உயிரைச் சத்தியமாகச் சேவிக்க முனைந்த பொழுது, அந்த உயிரைத் தாங்கிய தமிழ் என்னும் உடலும் வாகு பெற்றது! இந்த அற்புதத்தினை நீலாவணனின் 'வேளாண்மை' சாதித்துள்ளது. இந்தத் தளத்திலே நின்று நோக்கும் பொழுது மட்டக்களப்பு மண்ணுக்கு 'வேளாண்மை' நிகர்த்த ஓர் இலக்கிய முதுசொம் கிடைத்திலது என்கிற உண்மையின் தரிசனம் உதயமாகும்.

மட்டக்களப்பு மாநிலத்தின் அவலக் கதியினால், 'வேளாண்மை' முழுமை பெறாத வடிவத்திலேயே நமக்குக் கிடைத்துள்ளது. அதுகூட இன்னோர் இலக்கியவாதி குவித்த அக்கறையினால்! வ.அ.இராசரத்தினம் பொருள் வசதி மிக்கவரல்லவர். புரவலர் அல்லர். பிரசுரகர்த்தா என்கிற வசதிக்கு உரிமை பாராட்ட ஏலாதவர். இலக்கிய ஆசையினாலும் ஒரு சிறிய அச்சகம் வைத்திருந்தவர். 'வேளாண்மை'யின் அற்புதத்தினைத் தரிசித்ததும், கிடைத்துள்ள பகுதிகளை மட்டுமேனும் நூலுருவிற் பாதுகாக்கப்படுத்தல் வேண்டும் என விஸ்வரூபம் எடுத்த ஓர் ஆசையின் செயற்பாடாகவே 'வேளாண்மை' நமக்குக் கிடைத்துள்ளது.

ஈழத்து எழுத்தாளர்களுடைய ஆக்கங்கள், அவர்கள் உயிர் வாழும் காலத்திலேயே, நூலுருப் பெறாமல் இருப்பதற்கான அனைத்துக் காரணங்களையும் பட்டிமன்றம் வைத்தும் விவாதிக்கலாம். செமியாக் குணக்காரருக்கு ஏற்ற பொழுதுபோக்கும்! கைப்பூனுக்குக் கண்ணாடி தேவையில்லை. புலம்பெயர்ந்த நாடுகளிலே கலாசாரப் பாரம்பரிய வேர்கள் பட்டுப்போகாது பாது காக்கவேண்டிய அவலங்களுக்கு மத்தியிலே வாழ்பவர்கள்கூட, பொருள் வசதிகள் இருந்தும், தமிழ்ச் சினிமா உலகின் மூன்றாந்தர நடிகைகளின் குண்டி நெளிப்புக்குப் பொன்மாலை சூட்டத் தவிக்கிறார்களே ஒழிய, ஈழத்துப்படைப்பாளிகளின் நூல்களைக் காசு கொடுத்து வாங்குவோம் என்கிற உணர்ச்சி அற்ற ஜடங்களாக வாழ்வதிலே பெரும்பாலும் திருப்திப்படும் அநியாய கோலத்தைப் பார்க்கின்றோம். இத்தகைய அசட்டையும், பஞ்சிப்பாடும் நிலைத்திருக்கும் வரையிலும் ஈழத்து இலக்கியகாரனின் படைப்புகளை நூலுருவிலே பேணும் ஆசை, ஓர் இனிய கனவாகவே கரைந்துபடும். இலவச கூப்பன் அரிசி நுகர்ந்து மகிழ்ந்த கூட்டத்தினருடைய சந்ததியினர். கலை-இலக்கிய ரஸனை€ 'ஓசி'யில் பெறும் 'பொழுது போக்குப் பண்டம்'என்று கருதுதல் மகா அவலப் பேறாகும். இந்த ஓசி ரஸனையைத் துறக்காத வரையிலும் இனிய கனவே! இதனைத் தெளிவாக உணர்ந்த இன்னொரு படைப்பாளி மஹாகவி. அவர் தமது 'குறும்பா' என்னும் கவிதைத் தொகையை, 'காசு கொடுத்து இக்கவித் தொகையை வாங்கினோர் ஆசைக்க நன்றி. அவர்க்கே இது படைப்பு' என்று சமர்ப்பணஞ் செய்தார். நம் தமிழர் கூட்டம், நமது கலை-இலக்கியவாணர்களுடைய ஆக்கங்களைக் காசு கொடுத்து நுகரும் செப்பத்தைப்பயிலாத வரையிலும், மஹாகவியும் நீலாவணனும் வளமூட்டிய கவிதைக்கலை உரிய கௌரவம் பெறாது போய்விடுதல் கூடும் என்கிற விசாரம் என் நெஞ்சை அடைக்கின்றது...

நீலாவணனின் ஆக்கங்கள் முழுவதும் இன்றைவரை நூலுருப் பெறவில்லை. இந்நிலையில் தமிழ் இலக்கிய மாணாக்கர் அவருடைய பங்களிப்பினை உரிய முறையிலே மதித்ததும் தரிசித்தலும் சாலாது. அவர் இறந்த ஓர் ஆண்டின் பின்னர், அவருடைய இலக்கிய அன்பர்களின் முயற்சியினால் 'வழி' என்ற மகுடத்தில், அவருடைய குறுங்காவியமும், பொறுக்கு மணிகளான சில கவிதைகளும் அடங்கிய தொகுதி ஒன்று நூலுருப்பெற்றது. பின்னர் ஏழாண்டுகள் கழித்து, 'வேளாண்மை' என்னும் அவருடைய காவியம் வெளிவந்தது.

நீலாவணனின் மூத்த மகன் எழில்வேந்தனை எனக்கு மூன்று வயதுப் பாலகனாய்த் தெரியும். அவர் இப்பொழுது ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பணி புரிகின்றார். கனடாவிலிருந்து 'காலம்' என்னும் இலக்கிய சஞ்சிகையைக் கடந்த சில ஆண்டுகளாகக் கரிசனையுடன் வெளியிடும் என் இலக்கிய நண்பர் செல்வத்தின் நெருக்குவாரங்களின் காரணமாக இந்த நூலை முழுமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டபொழுது வேந்தனுடன் தொடர்ப்பு கொண்டேன். தொலைபேசியிலே பல பயனுள்ள தகவல்களை அவர் தந்து, தமது தந்தையாரின் ஆக்கங்கள் பலவற்றை அனுப்பி உதவியதுடன், ஓரு நீண்ட கடிதமும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி பிரசித்தத்திற்கு உகந்தது.

"....'வேளாண்மை' காவியம் முற்றுப் பெறவில்லை. அதற்குப் பின்னர் (நூலுறுப் பெற்ற பகுதியின் பின்னர் எஸ்.பொ.) வரவேண்டிய பகுதிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.... அதன் கதைப் போக்கினை நான் அறிவேன். என்னிடம் அதைக் கூறியுள்ளார். செல்லையாவின் திருமணம், பார்வதிப் பாட்டி மரணம், செல்லையனுக்குக் குழந்தை பிறப்பது, மருங்கைச் சடங்கு, இடையில் தீப்பள்ளயம் (பெரிய நீலாவணைக்குத் தென்பால் அமைந்துள்ள பாண்டிருப்பில் நடைபெறும் தீப்பள்ளயம் மகா பிரசித்தமானது-எஸ்.பொ) என்பவை கதையிலே இடம்பெறும் ஏனைய சம்பவங்கள். மட்டக்களப்பு மக்களின் பாரம்பரியச் சடங்குகளை வெளிக்காட்டுவதே அவருடைய நோக்காக இருந்தது." தமது நோக்கத்தினைப் பூரணப்படுத்தாது நீலாவணன் காலன் வசப்பட்டார். ஈழத் தமிழருக்கும், மட்டக்களப்பு மண்ணின் மாண்புக்கும் ஈடுகட்ட முடியாத நட்டம்.

நீலாவணன் நோக்கத்தை இணைத்து, 'வேளாண்மை'யைப் பூர்த்தி செய்யவல்ல இன்னொரு நீலாவணன் பிறப்பானா?.... மட்டக்களப்பு மாநிலமே இன்னொரு வீரமுனையாக மாறிக் கொண்டிருக்கின்றதா?


XI

கவிஞர் நீலாவணன் உருவச் சாயலிலே, ஓர் அசைப்பில், ஓரளவு என்னை ஒத்திருந்தார். மீசையும் ஒத்த பரிமாணம். நிறத்தில் என்னிலும் ஒரு நூல் நயம். என்னிலும் பார்க்க சுமார் முன்னூற்று நாற்பது நாள்கள் மூத்தவர். 30.6.31 தான் அவர் பிறந்த தினம் என்கிற தகவல் அண்மையில் கிட்டிற்று.

அவருடைய தந்தையாரான பத்தப்போடி கேசகப்பிள்ளையைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை. குடும்பத்தைப் பற்றி அகலப் பிரஸ்தாபிப்பதை நீலாவணன் தவிர்த்தார். தவிர்த்தார் என்றும் சொல்ல முடியாது. நாங்கள் சந்தித்த பொழுதெல்லம் பேசுவதற்கு உம்பாரமான இலக்கிய விஷயங்கள் இருந்தன. எனவே, குடும்பக் குசலங்களில் ஈடுபட நேரம் வாய்த்ததில்லை. கேசகப்பிள்ளை ஒரு சித்த வைத்தியர் என்றும், மந்திரங்களிலே வல்லவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். நீலாவணனின் நட்புக் கிட்டுவதற்கு முன்னர், அக்கரைப்பற்று பனங்காட்டிலுள்ள வெள்ளையன் மூப்பனின் சேவையை நாடிய பொழுது ஏற்பட்ட கேள்விஞானம். மலையாள மாந்திரீக மரபுகளை அடியொற்றி மட்டக்களப்பு மாந்த்ரீகம் நிலவுவதான நம்பிக்கை, அக்கால யாழ்ப்பாணத்தவர்களுக்க நிறைவாகவே இருந்தது. மாந்திரீகத்தின் சக்தியினால் மாப்பிள்ளையைப் பாயுடன் ஒட்டவைத்து விடுவார்கள் என்று பயங்காட்டுவார்கள். மட்டக்களப்பிலே நான் பாயுடன் ஒட்டியவன் என்று என் இன சன பந்துக்கள் சிலர் இகழ்ந்ததும் உண்டு. 'வேளாண்மை' காவியத்திலே மட்டக்களப்பு மண்ணின் இயல்புகள் பற்றிச் சொல்லும்பொழுது, பண்டைய நம்பிக்கையைப் பூசி மெழுகி, நாகரீகப்படுத்தும் போலியை இயற்ற நீலாவணன் ஒப்பியதில்லை.

".............பச்சைப்
பாம்போடு கன்னிக்கோழி
முட்டை தென்னையிலே ஆக
முதல் முதல் பறித்த தேங்காய்
கொட்டைகள், கோழி ரத்தம்
கொடி வகை, பித்து, மூலி
எட்டுறாம் போத்தல் மூன்று!
இப்படி ஒன்றா? ரண்டா?


இவ்வாறு பட்டோலை போட்டு, பொருள்கள் சேர்த்து, 'மடை வைத்து மந்திரித்து, வாசமாய் வீசிய எண்ணெய் வார் பண்ணி, மனைக்கப்பால் தீட்டாகாத இடமாக மடுவில் வைத்து, ஏற்றதோர் சமயம் பார்த்து, வலதுகால் விரலில் ரத்தம் வடித்து, (வசிய) எண்ணையோடு கூட்டி' வசியப்படுத்த வேண்டிய ஆளுக்குப் பூசிவிடும் 'சேத்தி' மருந்து பற்றி நீலாவணன், புழங்குமோர் முறையை விவரமாகச் சித்ரிரிப்பதற்குத் தந்தை கேசகப் பிள்ளையின் ஆளுமையும் உதவியதோ நான் அறியேன். நீலாவணனின் விழிகள் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும். வஞ்சகமற்ற சிரிப்பு. எதையும் அடி நுனியாகத் துருவும் இயல்பு. எல்லாவற்றையும் மேவி நிற்கும் ஓர் ஆவேசம். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத நேர்மையின் பிறிதொரு வடிவாகவும் இந்த ஆவேசம் அமைந்தது. சோஷலிச யதார்த்தவாதம், ஆற்றல் குறைந்தோர் தஞ்சம் புகுந்த ஒரு சந்தர்ப்பவாதம் என்பதை அவர் சரியாகவே மட்டிட்டிருந்தார். 'முதுகு சொறி' விமர்சனங்களின் மூலம் இலக்கியத் திருத்தவிசில் இடம் பிடிக்க எத்தனிக்கும் திருகுதாளங்களை அவர் வெறுத்தார். இதனால், அவர் மார்க்ஸ’ணு சித்தாந்தத்தை வெறுத்தார் என்கிற பிழையான முடிவுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். ஏழைகளுக்காக, பஞ்சைகளுக்காக, வாழ்க்கையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவர் வாதாடினார்; போராடிடவும் தயங்கியதில்லை.

நீலாவணனின் தாயான தங்கம்மா 'அம்மா'வை அடிக்கடி நீலாவணன் வீட்டிலேயே பார்த்திருக்கிறேன். சேவுகராயும், சட்டம்பியாகவும், சோதிடராகவும் சமூகத்திலே அந்தஸ்துப் பெற்றிருந்த சின்னத்தம்பியின் மகளாகப் பிறந்த அவருக்குப் பண்டைய இலக்கியங்களிலே பரிச்சயம் இருந்தது. இதனாலும், தமது மகனுடைய இலக்கிய ஆற்றல் குறித்தும், அவர் சாதித்துக் கொண்டிருந்த வெற்றிகள் குறித்தும் நியாயமான பெருமையும் கர்வமும் இருந்தது. கவிஞர் வீட்டிலே இலக்கியகாரருக்கு விருந்து என்று கேள்விப்பட்டால், விருந்து உரிய முறையிலே நடைபெறுதல் வேண்டும் என்கிற அக்கறையிலேயே, அந்த அம்மா குஷ’னிப் பக்கம் அடிக்கடி சிரத்தை செலுத்துபவராக நடமாடியதையும் நான் அறிவேன். அப்பொழுதுதான் அவர் கவிஞரை நடராசா என்ற பெயராலே குறிப்பதை அறிந்தேன். சின்னத்துரை என்று சக ஆசிரிய வட்டத்திலே அறியப்பட்ட அவரை, உறவுகளும் ஊராரும் நடராசா என்றே அழைத்தார்கள்.

அவர் தமது இளமைக்காலத்துக் கல்வியை நீலாவணையின் தென்பால் அமைந்துள்ள மருதமுனை என்னும் முஸ்லிம் கிராமத்திலேயே பெற்றார். கல்முனை வீதியில் அமைந்த இப்பாடசாலை, பிற்காலத்தில் அல்மனார் மகாவித்தியாலயமாக உயர்ந்ததுடன், அநேக தமிழ்-இஸ்லாமிய விழாக்கள் நடைபெறுவதற்கான மேடையாகவும் திகழ்ந்தது. அந்தப் பாடசாலையிலேதான், நபிமொழி நாற்பது என்னும் சுவையான வெண்பா நூலையும் இயற்றித் தந்துள்ள புலவர்மணி ஆ.மு.ஷரீபுத்தீன் ஹாஜியார் தமது கல்பிப் பணியையும் இலக்கியப் பணியையும் துவங்கினார். அவரிடம் தமிழ் பயின்ற நல்மாணாக்கருள் முதல் மாணாக்கனாய் நீலாவணன் நிமிர்ந்தார். இளவயதிலே நீலாவணனுக்கு ஏற்பட்ட கவிதை மயக்கத்துக்குப் புலவர்மணியின் ஆளுமையும் ஒரு தூண்டுதலாய் அமைந்ததோ நான் அறியேன்.

கவிதை மூலம் எழுத்துலகப் பிரவேசம் செய்த நான் கதைஞனாய் நிலைத்துள்ளேன். ஆனால், 1952 இல், 'பிராயச்சித்தம்' என்னும் சிறுகதை மூலம் எழுத்துலகப் பிரவேசம் செய்த நீலாவணன், சீக்கிரமே ஒரு கவிஞராய்த் தமது பெயரை நிலைநாட்டினார். 'ஓடி வருவதென்னேரம்மா?' என்பதுதான் அச்சிலே வந்த அவருடைய முதலாவது கவிதை. அது 1953இல் பிரசுரமாயிற்று. மட்டக்களப்புவாவியிலுள்ள 'பாடுமீன்' பற்றி விபுலாநந்த அடிகளார். 'பாடும் மீன்' என்கிற கருத்து மட்டக்களப்பின் இயல்பான அம்ஸமாக நிலைக்கலாயிற்று. மட்டக்களப்பு மண்ணுக்கும் தமிழுக்கும் ஏற்புடைய அங்கீகாரஞ் சம்பாதித்தல் வேண்டும் என்கிற வெறியுடன் செயற்பட்ட நீலாவணன், 'பாடும் மீன்' என்ற பெயரிலே ஒரு சஞ்சிகையை வெளியிட்டார். இரண்டு இதழ்கள் மட்டுமே பிரசுரமாயின. இருப்பினும், மட்டக்களப்பு மண்ணும் தமிழும் எவ்வாறெலாம் சேவிக்கப்படுதல் வேண்டும் என்று நீலாவணன் கண்ட கனவுகளின் நுழைவாயிலாக அவை அமைந்தன. கதைக்கலையின் பிறிதொரு கிளையான உருவகக் கதைகள் எழுதுவதில் அவர் கணிசமான வெற்றி சாதித்தார். பல்வேறு பிரச்சினைகள் தொற்றிக் கட்டுரைகள் எழுதினார். சமூகத்தின் குறைபாடுகளையும் அவலங்களையும் போலிகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கும் அவர் தமிழைக் கருவியாய்ப் பயன்படுத்தினார். அவருடைய சமுதாய-இலக்கிய அக்கறைகள் பரந்துபட்டனவாக இருந்தன. இந்த அக்கறைகள் அனைத்தையும் பிரசித்தப்படுத்துவதற்குப் பல்வேறு புனைபெயர்களிலேயும் புகுந்து விளையாடினர். நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவு துறட்டி, வேதாந்தி ஆகிய புனைபெயர்களிலும் அவர் எழுதியதை நான் அறிவேன். ஒரு சமயம், கவிஞர் திமிலைத் துமிலன் அரசியற் குரோதம் காரணமாகவும், தனது கவிதை ஒன்றிலே என்னைச் சீண்டினார். எழுத்துலகில் மகா கோபக்காரனாக நான் வாழ்ந்த காலம் அது! தக்க பதில் ஒன்று கவிதையிலே எழுதப்பட்டது. அதனை நீலாவணனிடம காட்டிச் செப்பமும் பார்த்தேன். அதனை ஒரு புதிய புனைபெயரிலே வெளியிட விரும்பினேன். சொல்லோசையிலே சிலம்பம் செய்ய விழைந்த திமிலைத் துமிலனுக்கம் குழப்பத்தை ஏற்படுத்தும் சித்தமும் என்வசத்து. இதனால், அக்கவிதை 'துமிலைத் திமிலன்' என்கிற பெயரிலே தினகரனில் பிரசுரமாயிற்று. பிறகு அந்தப் புனைபெயரை மறந்தும் போனேன். இவ்வாறு, நீலாவணனின் நினைவிலே பிசகியிருக்கக் கூடிய வேறு பல புனைபெயர்களும் அவருக்கும் இருந்திருத்தல் சாத்தியம்.

அவருடையது காதல் திருமணம். இதனை அவர் பிரஸ்தாபித்ததும் நினைவிருக்கின்றது. அந்த மண வாழ்க்கையின் செழிப்பாக வேந்தன், விநோதன், எழிலரசி, ஊர்மிளா, கௌரி ஆகிய குழந்தைச் செல்வங்கள் பிறந்தன.

நீலாவணனுடைய குடும்பத்துடன் இணைந்து பண்டிதர் வீரகத்தியின் நினைவும் வருகின்றது. எழுத்துலகில் அவர் ஒரு புதினமானவர். கந்தமுருகேசனார் வழி நின்று இலக்கண நுட்பங்களைத் தெளிந்து முன் வைத்தார். அவருடைய இலக்கண அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உரை விளக்கங்களும் எழுதியுள்ளார். கவிதை நூல்களும் தந்துள்ளார். 'கவீ' என்ற புனைபெயரிலே அவர் 1960இல் வெயியிட்ட 'தங்கக் கடையல்'என்பது அவருடைய முதலாவது கவிதை நூல் என்று நினைவு. கணியன் பூங்குன்றன் செப்பிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்துகிறார். இலட்சியக் கனவுகளிலே சஞ்சரிக்கும் 'கவீ'யும் மண்பித்து மிக்கவரான நீலாவணனும் ஓர் இனிய நட்பினை உருவாக்கிச் சுகிந்து மகிழ்ந்ததை நான் அறிவேன். 'ஓருலகம்' நோக்கிய யாத்திரையில் யாழ்ப்பாண மண்ணுடன் மட்டக்களப்பு மனங்களையும் தழுவிக்கொள்ளுதல் வேண்டும் என்பதை 'கவீ' உணர்ந்திருந்தார். நீலாவணனின் மரணத்தின் பின்னரும் அந்த நட்பினை உறவாக்கித் தக்க வைத்துக்கொள்வதில் 'கவீ' தீவிரமாக இருந்தார். நீலாவணனின் மகள் எழிலரசியைத் தனது மகனுக்குத் திருமணஞ் செய்துவைத்துச் சம்பந்தியாகிக் கொண்டார். யாழ்ப்பாணப் கலட்டிச் சந்தியை ஒட்டினாற்போல அமைந்த வீட்டிலே வீரகத்தி வாழ்ந்த காலத்தில், நான் அங்கு குடும்ப சமேதரராய்ச் சென்று விருந்துண்டு மகிழ்ந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்பொழுது நீலாவணனின் மகள் வீரகத்தி வீட்டின் குடும்ப விளக்கமாய் நடமாடியதைக் கண்டேன்.

நீலாவணனின் பிறிதொரு இயல்பு மானம் பாராட்டி வாழ்ந்தமை. மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமானை நான் கண்டதில்லை. அந்த இயல்பினை நீலாவணனிடம் நான் கொள்ளையாகக் கண்டேன். அவர் எதிலும் ஒரு தீவிரவாதி. அன்பின் தீவிரத்தினாலே ஒரு மனிதனைத் திணறடிக்கும் கலையை நீலாவணனிடமேம கற்றுக்கொள்ளலாம். ஒரு கொள்கையிற் பிரிந்தவருடன், தமக்கு எவ்வளவு இழப்பு நேரலாம் என்ற போதிலும், ஒதுங்கி வாழ்வதிலும் அவர் தீவிரமே காட்டினார்.

அவர் காலமாவதற்கு முன்னர், அவர் கடைசியாகக் கலந்து கொண்ட வானொலிக் கவியரங்கு பற்யிவர்த்தமானத்தை, அதந் சாட்சியாய் இருந்த வி.ஏ.சிவஞானம் சொல்லியிருக்கிறார். மேற்படி அரங்கிற் பாடுவதற்காக நீலாவணன் சத்தான கவிதை ஒன்றினை எழுதிவந்தார். அதிலே சில பகுதிகளை வெட்டி நீக்கும்படி ஆலோசனை கூறப்பட்டதாம். சொல்லிலும் பொருளிலும் வழுவற்ற அப்பகுதிகளை ஏன் நீக்க வேண்டும் என்று நீலாவணன் வாதிட்டிருக்கிறார். "என் கவிதையின் உயிரை எடுத்த பிறகு, நான் அதனைப் பாட ஒப்பேன்" என்று கண்டிப்பாகக் கூறி, சன்மானத்தையும் நிராகரித்து, புறப்பட்டு விட்டார்!

அவருக்கும் எனக்கும் ஒரு மிக அற்ப விஷயத்திலே, ஒருவகை Mis understanding இல், வேறுபாடு ஏற்பட்டது. இலக்கியச் சத்தியமோ, தனிப்பட்ட வாழ்க்கையின் தூய்மையோ சம்பந்தப்படாத அற்ப விஷயம்! எனவே, எங்களுக்கிடையில் மீண்டும் இசைவு துளிர்க்கலாம், இருவரும் இணைந்து இலக்கியச் செழிப்பினை நுகரலாம் என்று அன்றுவரை-அந்த அவலத் தந்தி கிடைக்கும் அன்றுவரை-நம்பிக்கொண்டிருந்தேன். அந்தோ, என் கவிஞ! நீ என்னை ஏமாற்றிவிட்டாயா? அல்லது என் எதிர்பார்ப்புகள் அனைத்தும் சித்தியாகம் என்கிற என் அகம்பாவந்தான் அழிந்ததா? உன் நீள்துயில்...

அந்த நீள்துயில் பற்றி நீ 1964இல் பாடிய அந்தக் கவிதை இப்பொழுது என் நெஞ்சைத் துளைக்கின்றது. அது:

"இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரு ம
என் ஹ’ம்சையினால்
நொந்தறியா...
யாருமெனை நொந்ததிலை" என்கிற
அந்த இனிய நினைவாம்
அலங்கிர்தத் தாலாட்டுக் (கு)
என்னிதயம் தந்து
பழம் பிழைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்
பருகி, அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தினேன் என்
கம்பளியால்
தாலாட்டில் மாலாகி
என்னை மறந்து துயில்கையில்....
வீண் ஒப்பாரி வைத்திங்(கு)
உலகத்தைக் கூட்டாதே!
அப்பால் நடப்பை அறிவேன்...
அதை ரசிக்க
இப்பயலை மீண்டும்
எழுப்பித் தொலைக்காதே!
தப்பாக எண்ணாதே
தாழ்ப்பாளைப் பூட்டிவிடு!
மேளங்கள் கொட்டி, என்றன்
மேட்டிமையைக் காட்டாதே!
தாளம் மொழிந்து
நடிக்காதே! என் பயண
நீளவழிக்கு, நில
பாவாடை தூவாதே!
ஆழம் அகலம்.....
அளந் தெதுவும் பேசாதே!
மோனத்தில்
உன்னுணர்வை மொண்டு,
இதய நெடும் வானத்தில்
நீ தீட்டி வைத்திருக்கும்
என்னுடைய
தீன உருடை
முழுதும் வழித் தெடுத்து
மீன் விழியில் இட்டு விளக்கேற்றி
தொட்டிலில் நம்
காவியத்தைப் பாடிக் களி!
பின், இயற்கையொடும்
சாவியலை எள்ளிச் சிரி!

சத்தாகக் கவிதை எழுதிவிட்டாய். உன் கட்டளைப் படி, உன் இழப்பை ஏற்று யாராலே சிரிக்க முடிகிறது?

XII

`இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்தவன் நான்' என்ற இறுமாப்புடன் என்னை 'வித்தக விமர்ச'கனாகவோ, ஞானம் பாலிக்கும் 'ஆசா' னாகவோ இலக்கிய உலகிலே நானை திணித்துக் கொண்டனல்லன். அன்னும் இன்னும், நாளையும் அந்த இனிய உலகிலே நான் பரமார்த்த ஊழியனே. 'நான் இலக்கிய உலகிலே இவற்றைச் சாதித்து விட்டேன்' என்று எதையாவது தொட்டுக் காட்டவும் கூச்சப்படும் ஒரு முதிர்ச்சியும் என்னை வந்து சேர்ந்திருக்கின்றது. இவ்வளவு காலமும் நான் எழுதியவைஎல்லாம், நாளை நான் எழுதப்போகம் ஓர் உந்நத இலக்கியப் படைப்பிற்கான பயிற்சியே என்று சத்தியமாக நம்புபவன் நான். எனவே, என் கருத்துக்களைச் செலாவணிப்படுத்தும் அதேவேளையில், இன்றளவும், எல்லோரிடத்திலிருந்தும், நேற்றுத்தான் பேனா தூக்கிய ஓர் இளவலின் அனுபவத்திலிருந்துங்கூட, எதையாவது கற்றக் கொள்ள ஆர்வம் உள்ளவனாய் இருக்கிறேன்.

இந்த ஆர்வத்தின் துவக்கம் நீலாவணையில் முளைவிட்டது என்றே நினைக்கின்றேன். நீலாவணனின் நட்பினாலேதான், இளந் தலைமுறைச் சார்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களிடமிருந்து நான் நிறையக்கற்றேன். அவர்களுடைய பழக்கமும் அநுபவமும் என்னுடன் சேர்ந்திருக்காவிட்டால், முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கை அழகுகளை என்னாலே தரிசிக்க இயலாது போயிருக்கக்கூடும்.

நீலாவணன் நினைவுகள் தொற்றி நான் சமைத்த சஞ்சாரம் ஒரு முடிவினை நோக்கி நகருகின்றது. இஃது ஒருதலைப்பட்சமான தரிசனம் போலவும். அவர் என் தமிழ் ஊழியத்தை எவ்வாறு தரிசித்தார். என நோக்குதல் ஒரு வகையான முழுத்துவத்துக்கு உதவும்.

மட்டக்களப்புத் தமிழ் கலாமன்றம் 1962 ஆம் ஆண்டில் தமிழ் விழா ஒன்றினை நடத்தியது. அதிலே, புலவர் மணி ஏ பெரியதம்பிப்பிள்ளை, மகாவித்துவான் எஃப். எக்ஸ். சி.நடராஜா 'சொல்லின் செல்வர்' செ.இராஜதுரை, எஸ்.பொ.ஆகியோர் பல்வேறு தமிழ்த்துறைகளிலே மட்டக்களப்பு மண்ணுக்குக் கௌரவஞ் சம்பாதித்துத் தந்தமையைப் பாராட்டும் வைபவமும் இடம் பெற்றது. நால்வருக்கும் பொற்பதங்கள் சூட்டி, பொன்னாடை சாத்தி, பாவாரம் புனைந்து மகிழ்ந்தார்கள்.

அவ்விழாவிலே கவிஞர் நீலாவணனே எனக்குப் பாவாரம் வழங்கினார். அதனை அவர் தமது கைப்படவே எழுதியிருந்தார். அரை நூற்றாண்டு பரந்துபட்ட என் அநுபவத்திலே, எழுத்துக் கலை பயிலும் அநேகருடைய கையெழுத்துப் பிரதிகளை வாசிக்கும் யோகம் எனக்கு வாய்த்துள்ளது. நீலாவணனின் முத்து முத்தான கையெழுத்தின் வண்ணத்துக்கு நிகரான ஒன்றினை நான் இன்றைவரை பார்த்ததில்லை என்று சத்தியமாகக் கூறுவேன். அவருடைய கையெழுத்தில் தமிழ் லிபிகள் அச்சுச் சுத்தமான சுந்தரம் பெற்றன. அத்தகைய கையெழுத்தில் அமைந்த பாவாரம் இதுதான்:

கல்விப் பெருக்கம்
கலைப் பெருக்கம் மற்றுயர்ந்த
செல்வப் பெருக்கம்
செழிக்கின்ற யாழ்ப்பாண
மண்ணிலே, வள்ளி
மணவாளன் வேல்முருகன்
இன்னருளால் நாவலனை
ஈன்றெடுத்துச் சங்கிலியன்
நல்ல தமிழரசு
நாட்டி வழிகாட்டியதாம்
நல்லூரின் கண்,
ஈழநாட்டினிலே நாவலர்க்குப்
பின்வாரி சாகப்
பிறந்தானெம் பொன்னுத்துரை!

தொழிலாளர் புத்திரராய்
தோன்றியவர் தாமே
வழிகாட்டி வையகத்தை
வாழ்வித்த தெய்வங்கள்
அந்த மரபின் அடிநாதப்
பின்னணியில்
சுந்தரனே! பொன்னு!
தொழிலாளி சண்முகத்தின்
மைந்தனாய் வந்து
வளர்ந்து கலைபயின்ற
அந்தக் கதையெல்லாம்
அறியும் அறிவுலகம்!

முன்னொருகால் உன்னை,
பெரியார் எனக்குரைத்தார்
சென்னையிலே சொற்செல்வர்
சேர்ந்திருந்த பேரவையில்
உன்னையவர் கண்டாராம்
ஊரில் அவர் உயர்ந்த
பென்னம் பெரிய
குடியிற் பிறந்தாலும்
'பெற்ற பொழுதில்
பெரிதுவந்தேன்; பொன்னத்துரை
சொற்பெருக்கை என் சொல்வேன்
சூடினான் வெற்றி' யென்றார்

பெற்றது நீ பி.ஏ.தான்
பேச்சாளர் என்றிங்கு
சொற்சிலம்ப மாடுகிற
சூளுரைக்கும் பேச்சாளர்
போலன்றி நல்ல
பொருளமையப் பேசுதலே
மேல்என் றுணர்த்தியதை
மேடைகளிற் கண்டோம் நாம்!

பால் ஒன்றும் உண்மைப்
பருவ உணர்வுகளின்
பாலே யதார்த்தப்
படைப்புகளைச் செய்து வெற்றி
நாட்டிச் சிறுகதைக்கும்
நாணயத்தை நம்முடைய
நாட்டிற் பெருக வைத்த

நம்புதுமைப் பித்தனென்று
ஏட்டில் எழுத்தினிலே
எங்கெங்கோ கண்டதுண்டு!
பாட்டில் இவையெல்லாம்
பாடுதற்குக் கட்டாது!
வெள்ளாங்கா டு.வீ.
வியாகேச தேசிகராய்
உள்ளந் திறந்து
உரைத்த விமர்சனங்கள்
பள்ளிப் பொடிகளொடு
பண்டிதர்கள் பாவலர்கள்
எல்லோரும் கூடி
எதிர்த்ததை ஊரறியும்
மூப்பன் முருகனையும்
முத்தமிழின் வித்தகனைப்
பேப்பர்களிலே நோட்டீஸாப்
போட்டதையும் நாடறியும்

புக்க திருநாடும்
பொன்னாடே என்ற பொரு
தொக்க கலைக்கழக
நாடகப் போட்டியிலே
தக்க தெனப் பரிசு
சான்றோர் வியந்தளித்தார்
'சுவடு'ம் 'அவா'வும் 'குமி'ழும்
'சூடிக் கழியா
நவமல'ரும் 'தீ'யும்
நமக்குள்ளே நீயும்
கவிஞனென்ற நிச்சயத்தை
நாடறியச் செய்தாய்
நவமாய் பரிசோ
தனைகள் நடத்தி
எல்லோரும் ஒன்றி
இலக்கியத்தை வாழ்விக்கச்
சொல்லுகிறாய், உண்மையிதைச்
சொல்லுபவன் நீயாமோ?
'எல்லாம் தெரிந்தோர்'
இருக்க? எனும் எங்கள்
செல்வர் திருக்கூட்டம்;
சீக்கிரமே உண்மையினைக்
கண்டறியும்! நீயோர்
கவிஞன் கரைஞனுயிர்
கொண்டு துடிக்கின்ற
நாடகத்தின் ஆசிரியன்
கண்டனத்தில் வல்ல
சிறந்த விமர்சனகன் நீ!
பெண்கொடுத்த நாட்டுக்கும்
பேர்தந்த பேச்சாளன்
பட்டப் படிப்பும்
படித்தவன்நீ ஆசிரியன்
மட்டக் களப்புக்கும்
மத்தியகல் லூரிக்கும்
கொட்டிப் புகழைக்
கொடுத்த கொடையாளன்!
தொட்டுச் சுவைக்க ஒரு
சொற்செல்வன் என்பதெல்லாம்
நாடறிந்த செய்தியெனில்
நானறிந்த செய்தியையும்
பாடவந்தேன் இப்பெரிய
பாராட்டு வைபவத்தில்

வீடுவரும் கற்றோர்
வியக்க விருந்தோம்பி
மாடாய் உழைக்கும்
மனைக்கரசி ஈஸ்பரத்தை
உள்ளம் அளவே
உருவுடைய உத்தமியைக்
கொள்ளக் கிடைத்தவன்நீ
உண்மையிலே கோமான்தான்
அள்ளிச் சுவைக்க
அநுராகன் மேகலையும்
இல்லையெனில் உன்றன்
இலக்கியமே இல்லையெனும்
உண்மையினை இந்த
உலகறியா! நான் அறிவேன்
பொன்னுத் துரையே
புதுமைச் சிறுகதைக்கோர்
மன்னா! உன்னையென்
மனந்திறந்து பாடுதற்கு
இந்நேரம் போதா!
இருக்குதொரு பொன்னேரம்
பாடவருவேன் பரிசொன்றும்
வேண்டாங் காண்!

நீடித்திடும் மண்ணில்
நிலக்கும் இலக்கியங்கள்
சூடித் தமிழ்த்தாயைச்
சோடித்து வாழவைத்து
பொன்னும் பொருளும்
பொலிந்து பொலிந்து சுகம்
தன் மனைவி சுற்றம்
தனிசிறக்க நீடூழி
பொன்னா! வளர்க் புகழ்!

என்கவிஞனே! நீலாவணனே! 'இருக்கு தொரு பொன்னேரம்; பாட வருவேன்; அதற்குப்பரிசும் நந்தேன்' என்று வாக்குத் தந்தாயே! அந்தப் பொன்னேரத்துக்காக நான் எத்தனை ஆண்டுகள் தவமிருந்தேன்? என் தவம் பொய்த்ததா.... நீலாவணா!

XIII

ஓ, நீலாவணா!

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி. நேசகரம் இணைத்தோம்....

ஒனி இனிது, நிழலும் இனிது. நிழலிலே அமர்ந்து ஒளி இனிது என்று தத்துவமோ அனுபவமோ இசைத்தல்கூட இனிது. வாழ்வதற்காக மாழ்வதும் இனிது. உயிரின் முற்று நிலை சாவு. எனவே, சாவு இனியது என்று துணிதலும் இனிது. அத்துணிச்சல் உன் கவித்துவ நெஞ்சைப் போன்ற இனியது.

ஆரம்பம் இறுதியை நாடிய பயணம். உயிர் சாவை நாடிய பயணம். பற்பல ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வுகளிலெல்லாம் சஞ்சரித்து, 'ஓ நீலாவணா' என மனக்கேவலுடன்... பேனா ஊற்று வற்றியதா? மன ஊற்று வரண்டதா? சரஸ”ம் ஊற்றே. வற்றாத ஊற்று... வற்றாததினால் அது நித்தியமும்.

திடீரென இருளும். அதன் ஊடாக என் மணம் மேய்கிறது. வைகறைக்கு முன்னாலே சோம்பல் முறிக்கும் இருள். இருளைகூட சாமங்களாகப் பிரித்து சாதிக்குறிகள் தீட்டுவதும் அறிவின் வக்கிரம்!

ஏகாந்தம் இனிது. கூட்டமும் இனிது. கூட்டத்திலே நின்று கோஷம் போடுவது நன்று. கோஷம் போடுதல் இயக்கத்துக்குச் சேமம். சேமம் நன்று. இயக்கத்தின் நோக்க விசாரணை ரிஷ’மூலச் சள்ளை! இயக்கத்தின் ஸ்தாபித்த நோக்கம் பழங்கதை-கனவு! கோஷம் பற்றிய பிரக்ஞை உன் பரமார்த்த சீடன் உனக்கக் கல்வெட்டுக் குறிப்புகள் இணக்கம் பொழுது, 'பாட்டாளி மக்களின் விடுதலைக்கு ஒரே வழியான சமூக விஞ்ஞானத்தை- சோஷலிச யதார்த்தத்தை-வாயளவில் வெறுத்ததும் நீலாவணன் விட்ட இமாலயத் தவறாகும்' எனக் கோஷ’த்தது தொற்றியும்! கோஷங்கள் பற்றிய தலைவரின் விளக்கங்கள் சந்தர்ப்பங்களின் வசம். தத்துவ உளறல்களோ; உளறல்களின் தத்துவமோ? எதுவாயினும், அது தலைவரின் உரிமை-ஏகம்! தொண்டர்கள் கோஷம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கொள்கை முரண்பாடுகள் கோஷத்தின் இரக்கத்திற்குள் அமுங்கிப் போகும். கொள்கையல்ல; கோஷமே பிரதானம். எனவே, கோஷமும் நன்று. இயக்கமும் நன்று. கூட்டத்தில் இருந்தாலும், இயக்கங்கள் இற்ற தவ நிலையில், ஏகாந்தத்தினைச் சுகித்தல் யோகம். அந்த யோகத்தினைச் சுகித்த இரண்டு யோகக்காரர்கள் என்கிற உறவு உன் நினைவுகளுடன் நீடித்து நீளுகின்றது. உறவுகள் இனியன.

இருளின் இருட்காட்டிலே அந்த உறவு ஒளியின் உற்பத்தி ஊற்றையா துழாவுகிறேன்?

இது இருட் காடு என்றா சொன்னேன்? பொய்யும் என் தத்துவமே! எண்ணற்ற விண்மீன்கன் இந்த விசும்பிலே சித்திக்கிடக்கின்றன. நீலாவணைக் கடற்கரையில் உன் கவிதைசுவைத்தமணற்பரப்பின் ஒரு பிடியை அள்ளி, அதன் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லிவிட முடியுமா? சிருஷ்டி ஓர்மத்தை மட்டிடுவதும் அப்படித்தான்! கடலின் ஓதையல்ல. 'தலைவராலே முடியும்' என்கிற கோஷம் ஓதையல்ல. 'தலைவராலே முடியும்' என்கிற கோஷம் பின்னாலே, வெகு தூரத்திலே, கேட்கிறது. நாம் சங்கமிக்காத கோஷங்களின் ஓதமும் இனிதே.

கலவியின் சுருதியைச் சொல்லிலே இசைப்பவன் நான். அந்த இராகத்திலே இலயித்தல் இனிது. கலவி ஆற்றலின் பிறப்பிடமும் ஊற்றே. ஊற்றுகளை ஆராதனை செய்யும் மதம் நன்றே. மதத்திற்கான ஆராதனைகள். மத ஆராதனைக்கான இலக்கிய வடிவங்களைச் சிருஷ்டிக்கம் வெறியிலே நான் கலந்த பொழுது, தனி மனிதப் பிதற்றல்கள் என்று சுயமத நக்கிகள் என்னைச் சாடுவதற்காகவே தமது நிதானங்களை இழந்த பொழுது, இனியனே, நீ என்னுடன் இருந்தாய். என்னையும் கவிதைப் பொருளாய் உயர்த்தினாய்... நாளையும் உன் கவிதைப் பொருளாய் நான் உயிர்ப்பேன் என்று பேராசைப்பட்டேன். நீ தந்த வாக்குறுதி என்ற நெய்யை உறிஞ்சிச் சடைத்த சுடர் அது! நீ இன்று இல்லை.

யார் சொன்னது? நீ இருக்கிறாய். பள்ளி எழுச்சி! இயற்கைத் தாயின் கருப்பையிலே அருணன் பிறப்பதற்கான நோக்காடு. நேற்று, மாலை வானிலே அவன் தன் சுவடு அற மாண்ட பொழுதுகூட, இன்று அவன் தோன்றுவான் என்ற நம்பிக்கை தன் வலுவில் இம்மியும் இழக்கவில்லை. எனவே, நான் ஆந்தைகளுடன் சேர்ந்து பிலாக்கணம் வைக்கவும் இல்லை. கோஷ்டியில் கரைதல் என் ஆணவத்துக்கு அந்நியமானது.

படைப்புச் சுழற்சி. கலவியின் தொடர்ச்சி. பென்னம் பெரிய வேள்விக் குண்டம். ஹைட்ரஜன் அணுக்கள் கலவியின் பலிப் பொருளாக, ஹ“லிய அணுக்கள் பீய்ச்சிப் பிறக்கின்றன. பலிக்கும் பிறப்புக்கு மிடையில் உம்பாரமான சக்தி ஒழுகி வழிகின்றது. புவியிலே உயிரைத் தோற்றுவிக்கவும் இரட்சிக்கவும் புறப்படும் ஒளி கலவியிலே கருவூன்றிக் கனன்று கனியும் வித்தை! இந்தச் சக்தி மிக மிக இனியது. இதுவின்றி உயிரில்லை; பயிரில்லை; சிரிப்பில்லை; சிங்காரமில்லை; அன்பில்லை; அறமில்லை; கலப்பில்லைக் களிப்பில்லை; மழலையின் அழுகுரல் இன்பங்கூட இல்லை. சூனியப் பெருமோனத்தின் அசத்த மஹத்! சக்தி உண்டு. அது இனிது. இனிது பற்றிய ஒரு கணிப்பு. ஒரு வினாடிக்க, சூரியப் பரப்பில், நாற்பது இலட்சம் பொருண்மை சக்தியாக மாறுகிறது. பூமியின் மீது உயிரும் அருளும் பாலிக்க, ஒளிச் சக்தி நிமிஷம் ஒன்றுக்கு ஒரு கோடியே பதினோர் இலட்சத்து அறுபதாயிரம் மைல் வேகத்திலே பாய்ந்து வருகிறது. ஒரு நிமிஷத்தை அறுபதால் வகுக்க வரும் நேரத்துகளே வினாடி. ஒவ்வொரு வினாடியும் பூமி முந்நூறு கோடி கோடி கிலோவாட்டவர் சக்தியைப் பெற்றச் சுகிக்கின்றது. தேவதத்தன், தனஞ்சயன்! உயிர்போகினும் போகாது தலைகிழித்து அகல்வது தனஞ்சயன்! வாயுவின் ஸ்திதிகள் போல்வதே அதன் கதிகள். பதினாறு வயது இளவயது மங்கையின் மாசறுகொங்கை தழுவும் தென்றலும், சடசடவென்று சரித்துச் சிலம்பாடும் புயலும்! வாயு இடையிற் புகுந்த சண்டன். முகிலாலும்-செஞ்சூரியனைநோக்கி நியமித்த முகிலாக இருந்தாலும்-சூரியனுக்கத் திரைகட்ட முடியாது. அதுஈற்றிலே சூரிய ஆற்றலின் ஒரு தோற்றமே தான் என அறிக்கையிட்டு மழையாக கரைந்து உருகும். அந்தப் பலியிலே மீண்டும் முகிலுக்கு உயிர்ப்புச் சித்திக்கும். வாயுவினாலும்-அவன் சண்டான சண்டனாக இருந்தாலும்- சூரிய ஆற்றலைக் கட்டுப்படுத்த ஏலாது.

சமூக விஞ்ஞானமோ? சோஷலிச யதார்த்தமோ? உண்மையை ஊடறுத்து உண்மைகளைத் தரிசிக்க ஏலாதும் சத்தம் போடும். சத்தம் கோஷமே. கோஷம் தலைவரின் உயர்ச்சிக்கு உவப்பானது. இருளின் பயத்தைப் போக்க அது தொண்டர்களக்கும் பயன்படும். பயன்படுவன நல்லன. நல்லன இனியன.

இந்த இருளைத் துழாவித் தேர்ந்தேன் ஒரு சத்தியம்.
சூரியன் உதிப்பான் என்பது நிச்சயம்.
முகிலின் அசைவிலே ஓர் அமைதியுண்டு
அதில் அழகு உண்டு.
அது மழையாக ஒழுகும் பொழுது அதற்கு ஓர் இசை உண்டு.
இசை இனிது.
தென்றலிலே ஒரு சுருதி உண்டு.
சுருதி இனியது.
புயலிலே ஒரு வேகம் உண்டு.
வேகம் நன்று.

இவை அனைத்தையும் கற்பனையிலே படைக்கும் கவிஞனின் ஆற்றல் இனிது. அவன் மதியின் மோஹன மயக்கத்திலே காதலியின் முகத்தைக் காணுவான். கருக்கொண்ட முகிலிலே அவளுடைய கார் குழலை ஸ்பரிசிப்பான். காக்கை இறகினிலே அவளுடைய கரிய விழியைத் தரிசிப்பான். சொடுக்கும் மின்னலிலே இல்லையான இடையை இணக்குவான். புறாவிலே விம்மும் கொங்கைகளைப் பார்ப்பான். துடிக்கும் புழுவிலே விரகதாபத் தவிப்புத் தெரியும். பாலிலே பிரிவின் கசப்பை நுகர்வான். உறுத்தலிலே கலவியை அநுபவிப்பான். பொருந்தாப்பொருளிகளிலேகூட அமைதி கற்பித்தல் உணர்ச்சி. அந்த உணர்ச்சி சிருஷ்டி மயமானது. சிருஷ்டி உணர்ச்சி இசைமயமானது. இசை மிக இனிது. யாழும், குழலும், மழலையும் எண்பிக்கும் சத்தியம். இவை அனைத்தும் கைவரப் பெற்றவன் கவிஞன். சூரியன் உதிப்பான் என்பது சத்தியம். ஒ, நீலாவணா! நீ கவிஞன் என்பது நிச்சயம்.

பாணன் ஒருவன். அவன் பல கருவிகளை இசைக்கலாம். விடுதலை வெறியன் ஒருவன். சமரிலே பல கருவிகளைப் பயிலலாம். பாணனும் வெறியனும் சத்தியம். சத்தியம் சக்திமயமானது. சக்தியே ஆற்றல். இந்த ஆற்றலின் சாதகன் கவிஞன். அவன் உணர்ச்சியைப் போற்றும் போகி, உணர்ச்சியை அறுக்கும் யோகியும்! மாயத்தோற்றங்கள் வளர்க்கும் வேள்வியன். மருட்சி நீக்கி மெய்ம்மை நாட்டும் சத்தியனும்! அவன் பயத்துக்குப் பலியாகும் கோழை. பயத்தைப் பலிவாங்கும் வீரனும்! அவன் வேணுகானம் பொழியும் தீர்த்தன். சமரிலே சூறாவளியாகச் சுழலும் பார்த்தனும்!அவன் சாவான். அவனைச் சாவு தீண்டுவதும் இல்லை. ஓ, நீலாவணா! நீலாவணைக் கடற்கரையில் உதயசூரியனின் முதற்கிரணங்கள் பரவுகின்றன...அந்த அற்புத காட்சிக்கு உன்னையும் சாட்சியாய் அழைக்கின்றேன். அது ஆற்றலின் பிழம்பு. நீ உணர்ச்சிப் பிழம்பு!

** முற்றும்**