கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வடஈழ மறவர் மான்மியம்  
 

ஞா. ம. செல்வராசா

 வடஈழ
மறவர் மான்மியம்


காவலூர்க் கவிஞர்

ஞா. ம. செல்வராசா.
அச்சுப் பதிப்பு: ஆனந்தா அச்சகம் யாழ்ப்பாணம், 1971

இறந்தும் இறவாத தெய்வம்

மதங்காணுங் களிறினங்கள் வெருவி நானும்
மறக்குலத்தின் மடக்கொடியே! மதுரத் தேனே
நிதங்காணும் வான்பிறையே! நிறைபூங் காவே!
நீலமணிப் பூச்சரமே! நிலவுப் பெண்ணே!
இதங்காணும் பெட்டகமே! இன்சொல் பாவாய்
இன்பசுக மத்தனையும் வெறுத்தே கர்த்தன்
புதங்காணச் சென்றனையோ அம்மா வுந்தன்
புளிங்குமுகத் திருவதனம் பார்ப்ப தெப்போ

செப்பரிய வுன்செல்வ மகனார் தம்மின்
சேவையினா னுருவான மறவர் நூலுக்
கெப்படியு மெங்கள்குலத் தலைவனான
ஏர்செறியும் வீரசிங்க முதலி யின்கை
யொப்பமுடன் சான்றுரைகள் வேண்டு மென்ற
ஊக்கமதா லதையெடுக்க உடனே நீயும்
இப்புவியை விட்டவரி னிடத்தைத் தேடி
எகினையோ எங்கன்குலக் கொடிNயு

வெஞ்சினப்போர் செய்மறவர் கதையா ராய்ந்து
வித்தகரால் நூற்படைத்து விளங்க வைக்கக்
குஞ்சரம்போ லொருசெல்வ மகனைப் பெற்றுக்
குவலயத்தி லெமக்களித்த தாயே யுன்னை
அஞ்சனத்தால் படமெழுதி அடியார் வாழ்த்த
ஆயிரத்தில் நீயொருத்தி யன்றோ யம்மா!
நெஞ்சிருத்தி நித்தமுனைப் போற்றி நிற்போம்!
நீயிறந்தும் இறவாத தெய்வ மல்லோ

காவலூர்க் கவிஞர்.

அமரருலகெய்திய திருமதி றெப்பியேல் திரேசா அவர்களுக்கு இந்நூலின் சார்பாக அஞ்சலிசெய்யுமுகமாக பிரத்தியேகமாக இக்கவிதைகள் யாக்கப் பெற்றுள்ளன.
நெஞ்சிலூறிய நினைவு

நித்திலத்தீவென்று வித்தகரால் போற்றிப்புகழ்ந்த நம் ஈழவள நாட்டிலே முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களானமறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.

இக்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர். ஆடிநாடித் திறைவரிசை கெஞ்சிக் கொடுத்தனர். ஈழத்திலும் ஏறாத இமயத்திலும் களங்குதித்துச் செங்குருதிக் குளம்மிதித்து வீராண்மையோடுப் பேராண்மையாற்றி வெற்றிக்கொடி நாட்டினர். இவர்கள் சிந்திய செங்குருதிச் செஞ்சேற்றால், புறமுதுகு காட்டா எலும்புப்போறையால், பாடாந்தரையாய்க் கிடந்த இடங்கள் யாவும், கன்றுங் கறவையும் மேயவும், கன்னலுஞ் செந்நெலுஞ் சாயவும், கங்கையும் வாவியும் பாயவும் வழி வகுத்தன.

இவ்விதம் பல்வகையாலும் செழிப்புற்றிருந்த தமிழ் மன்னர்களின் ஆஞ்ஞாசக்கரம், காலச் சுழற்சியால் குடை சாயவும், முடிதாளவும், கொற்றம் வீழவும் வழி ஏற்ப்பட்டன. இதனால் தமிழ் மன்னர்களின் அஞ்சா ஆணையையும், கெஞ்சா சேனையையும் நம்பிவாழ்ந்த போர்ப் புலிகளான மறவர்களின் புயபலமும், நயசுகமும் மிகமிகவீழ்ச்சியுற்றன.

மாடாப்புறாவட்ட மிட்ட மாநகரான ஈழத்திலே வல்லூறான போர்த்துக்கேயரின் ஆணை தலைகாட்டியது. இவ்வாணைக் காலத்தில் வடஈழத்திலே, குறிப்பாகத் தீவகத்திலே குடிபதி களாக வாழ்ந்த மறவர்குலத்தவர்கள் தாம் பாரம்பரியமாய்த் தொழுதுவந்த மதத்திலேமனம் மாறி ஞானதீட்சை பெற்றுக் கத்தோலிக்கராயினர். இக்குலத்தவர்கள் கத்தோலிக்கரான நானூறாம் (400) வருட ஞாபகார்த்தமாக இந்நூல் வெளிடப்பெற்றது.

ஆசிரியர்.பதிப்புரை

எனது சமூகத்தாரின் முன்னேற்றத்தைக் கருதியே இந்நூலைப் பதிப்பிக்க முன்வரலானேன். வருங்கால நமது இளைஞர்கள் தம்மையுணர்ந்து வாழவும், பலபல துறைகளில் முன்னேறவும் இந்நூல் ஒரு புதுப்பாதையை அமைக்கும் என்பதே எனது திடமான நம்பிக்கை.

இதைப்போன்று இன்னம் பல நூல்கள் நமது சமூக முன்னேற்றத்திற்காக வெளியிடுவதற்கு எண்ணியுள்ளேன். தற்போது “மறவன் மலர்” என்ற சஞ்சிகை வெளியிடுவதற்கு ஆராய்வு நடைபெற்று வருகின்றது. மக்கள் எனக்குப் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார்களென நம்புகிறேன்.

“வடஈழ மறவர் மான்மியம்” என்ற நூலை உள்ளத் தூய்மையுடன் தகுந்த ஆராய்ச்சி செய்து எழுதித்தந்த காவலூர்க் கவிஞர் ஞா. ம. செல்வராசா அவர்களை நான் என்றும் மறந்திலேன். அவருடைய திறமையைப்பற்றி இந் நூலுக்கு மதிப்புரையளித்த பேரறிஞர்களே திறம் படக் கூறியிருக்கின்றார்கள். இவ்வறிஞர் சீவந்தராயிருக்கும் போதே இவரைக் கொண்டு பல பல நூல்களை எழுதி முடிப்பது நமக்குப் பெரும் பயனாகும், இவ்வறிஞருக்கு எனது சார்பிலும் மறவர் குல மக்கள் சார்பிலும் என் பணிவான நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

(ர்) டாக்டர் சு. லேயோன்பிள்ளை
(பதிப்பாளர்)
கரம்பன் தெற்கு,
ஊர்காவற்றுறை.
10 - 02 - 1972.

முன்னாள் அரசினர் தலைமைத் தமிழ்
மொழிப் பெயர்ப்பாளர்
முதலியார் குல. சுபாநாதன் அவர்கள்
அளித்த

அணிந்துரை


காவலூர்க் கவிஞர் ஞா. ம செல்வராசா அவர்கள் லைடன் தீவு அன்னையீன்ற அரும்பெரும் புலவர். திரு. வேல்வராசாவின் கவிதைப் படைப்புக்களைச் சில வருடங்களுக்கு முன்னர் அடிக்கடி பத்திரிகைகளிற் படித்துச் சுவைத்தவர்களில் யானும் ஒருவன். கரம்பன் மண்ணிற் பிறந்தயான், இப்புலவருடைய பெயர் “காவலூர்” என்ற அடைமொழி பெற்றிருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவது உண்டு. எங்கள் தீவு மண்ணிற் பிறந்த வண. பீற்றர்பிள்ளை சுவாமியவர்கள் இமயமலையில் இட்ட தீபம்போல் உலகின் பேரறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்கள். இற்றைஞான்று கவிதைத்துறையில் செல்வராசாவும். சிறுகதை விமரிசனத்துறைகளில் இராசதுரையும் காவலூர் அன்னையீன்ற உத்தம புத்திரரத்தினங்களாக ஒளி காலுகின்றனர் என்பதையான் எடுத்துக் கூறவேண்டியதில்லை. இதனைத் தமிழ் கூறும் நல்லுலகமே சான்று பகரும்.

காவலூர் என்பது ஊர்காவற்றுறையைக் குறிக்கும் என்பது என்போன்ற முதியோருக்கு இலகுவில் விளங்கும் சொற்றொடர் அன்று. ஊராத்துறை என்ற இடப்பெயரே முதியோர் பெருவழக்கில் இருந்து வந்தது. இந்த இடப்பெயர் ஆராய்ச்சியினையான் எழுதியுள்ள, ஆனால் இன்னமும் அச்சேறாது தூங்கிக் கொண்டிருக்கும் நூலிற் காணலாம். இவ்வருடம் கார்த்திகை மாதம் யான் மேலைக்கரம்பனுக்குச் சென்றிருந்தபோது, புலவர் அவர்கள் தாம் ஒரு சரித்திர நூல் எமுதி வெளியிடக் கருதியிருப்பதாகக் கூறினார். அது கேட்டு யான் மகிழ்வுற்றேன்.

லைடன் தீவிலுள்ள இடப்பெயர்கள் போர்த்துக்கீச ஒல்லாந்த, ஆங்கில, சிங்கள தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது இடப்பெயர் வரலாற்று ஆராய்ச்சியாளர் கண்டமுடிவாகும். நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ. இராசநாயகம், தெல்லிப்பளை ச. குமாரசுவாமி முதலியார் சரவணமுத்து ஆகியோர் இத் துறையில் அளப்பரும் பணியாற்றியுள்ளனர். இவ்வறிஞர்களுள் “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் வரலாற்றுப் பகுதியினை மூடியிருந்த காரிருளை அகற்றுதற்கு ஏற்பட்ட ஒரு சோடி குத்துவிளக்குத் தீபங்களே ஞானப்பிரகாசரும் இராசநாயகமும் என்பதை அவர்கள் எச்சமாக விட்டுச்சென்ற அருமருந்தன்ன வரலாற்று ஆராய்ச்சி நூல்களே சான்று பகரும். இவ்விரு ஆராய்ச்சி அறிஞர்களும் என் இரு கண்மணிகளாவர். அவர்கள் காலடியிலிருந்து யாழ்ப்பாணச் சரித்திரத்தைப் படிக்கும் பாக்கியம், தீவுப்பகுதியிலே ஒரு மூலையிலே பிறந்துவளர்ந்த இச் சிறியேனுக்குக் கிடைத்ததையிட்டு ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தும் கடப்பாடுடையேன். இவ்விரு பெரியார்களையும் அன்றும் இன்றும் நன்றியறிதலுடன் நினைவுகூர்ந்து பாராட்டிவருகிறேன்.

தமிழ் நாட்டிலே முதன்முதலாக அகராதியை வெளியிட்ட “நாவலர் கோட்டம்” திரு. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ்த் தொண்டும் சைவத்தொண்டும் புரிந்துள்ளாரேனும், அவர் எழுதிய “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் நூல் அநேக புனைந்துரைகளையும் விநோதமான இடப்பெயர் வரலாற்று விளக்கத்தையும் கொண்டுள்ளது. உதாரணமாக வேலனை, நாரந்தனை இடப்பெயர்கள் வந்த வரலாற்றினை ஆராயப்புகுந்த பிள்ளையவர்கள் கூறியுள்ள முடிபுகளை திரு.ச குமாரசுவாமி அவர்கள் எள்ளி நகையாடியுள்ளார்கள்.

நம் காவலூர்க்கவிஞர் அவர்கள் ஓர் ஆபூர்வப் பிறவி என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகக் கூறுமிடத்து வரலாற்று ஆராய்ச்சிக்கும் செய்யுள் இயற்றும் இயற்கைப் புலமைக்கும் வெகுதூரம். கவிஞர் என்பவர் கற்பனையுலகிலே சிறகடித்துப் பறந்து சந்திரமண்டலத்திற்கு அப்பாற் சென்று ஆனந்தம் காணும் இயல்பினர். மகாவலிகங்கை கரைபுரண்டு ஓடுவதையொப்ப தம் உள்ளத்தடத்தில் ஊற்றெடுத்த கவிதைச்சக்தியைச் சொல்லோவியத்தில் வடித்துக்கொடுப்பர். வரலாற்று ஆராய்ச்சிக்கோவெனின். தாம் எடுத்துக் கொண்ட பொருள் வெளிவந்துள்ள நூல்கள் யாவற்றையும் காய்தல் உவத்தலின்றிப் படித்துத் தமது முடிபினை நடுநிலை பிறழாது சீர் தூக்கிப்பார்த்து எடுத்துரைக்கும் வன்மையும் பரந்த அறிவும் வேண்டும்.

காவலூர்க்கவிஞர் கத்தோலிக்க சமயத்திற் பிறந்து வளர்ந்த போதிலும், வேறுபடு சமயங்கள் யாவும் ஆழ்கடலைச் சென்றடையும் பல்வேறு நதிகளொப்ப, எந்நாட்டவர்க்கும் இறைவன் ஒருவனே என்ற பரந்த மனப்பான்மை பூண்டவர். ஆகவே கத்தோலிக்க சமய வழிபாட்டுப் பாடல்களைப் பாடிய அதே வாயால் சைவசமயப் பக்திப்பாடல்களையும் மனங் கோணாது பாடியிருப்பது பெருமைப்படதக்க விஷயமாகும். பாராட்டப்பட வேண்டியதொன்றுங் கூட. கவிஞர் செல்வராசாவும் என்னைப் போலவே “விறதர்மார்” சிறப்பாக நடத்திவந்த சந். அந்தோனியார் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றவராவர். எனக்குத் தமிழ்க்கல்வியும் நல்லொழுக்கமும் ஊட்டிய சைமன் விறதரின் மாணவர்.

ஊர்காவற்றுறை உதயதிசை வாசகராகிய கவிஞர் பிறந்து வளர்ந்த ஊர் முதன்மை வாய்ந்த மீகாமரையும் தண்டல்மாரையும் பெற்றெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே தாம் பிறந்த ஊரிலேயே பிறந்த மக்கள் வரலாற்றினையும். அயல் தீவுகளில் வாழ்ந்துவரும் மக்கள் வரலாற்றினையும் அறிந்து கொள்வதில் கவிஞர் அக்கறை கொண்டுள்ளது இயல்புதான். தம் இளமைப் பருவந் தொட்டே கவிஞரை வறுமைப்பிணி வாட்டிவந்த போதிலும் அவர்பாடுந் தொண்டினைக் கைவிடவில்லை. அத்துடன் தீவுமக்களின் உண்மை வரலாற்றினை அறிந்து கொள்ளும் முயற்சினையும் கைநெகிழவிடவில்லை. இதன் பயனாக எழுந்ததே “வட ஈழ மறவர் மான்மியம்” என்னும் வரலாற்று நூலாகும். இதுவரை எவருமே எழுதத் துணிவின்றிக் கிடந்த ஒரு சமுகத்தினரின் வரலாற்று மேம்பாட்டினைக் கூறும் இந்நூலினை ஆக்கித்தந்த கவிஞரைப் பராட்டாதிருக்க முடியாது. இவ்வரலாற்று நூலினைப் பல இன்னல்கள் வந்து தடுத்தபோதிலும். அது இப்பொழுதாவது அச்சுவாகனமேறி உலாவருவதைக் கண்டு மட்டற்ற உவகையெய்துகின்றேன்.

இந்நூலை எழுதத்தொடங்கியதற்குரிய காரணத்தைக் கவிஞர் அவர்களே தமது முன்னுரையில் விளக்கியுள்ளார். ஆங்காங்கு சிதறிக்கிடந்த வரலாற்றுக் குறிப்புக்களை யெல்லாம் மலர்கள் பல பூத்துக்குலுங்கும் வெல்வேறு துரித்த இடங்கட்கெல்லாம் சென்று அதனை எடுத்து வந்து ஓரிடத்திற் சேர்த்துவைத்திருப்பதொப்ப கவியுலகில் உதயதாரகையாக விளங்கும் நம் கவிஞர் செல்வராசா அவர்களும், இவ்வரலாற்று நூலை உருவாக்குவதில் அரும்பாடுபட்டு உழைத்து வந்துள்ளார் என்பது இந்நூலினைப் படிப்போர் க்குத் தௌ;ளெனப் புலப்படும்.

இந் நூலில் சுவாமி ஞானப்பிரகாசர், இராசநாயக முதலியார் கண்டமுடிவுகள் எடுத்தாளப்பட்டிருப்பது கண்டு மகிழ்வுறுகின்றேன். எனினும் இதன்கண் திரு. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் உண்மைவரலாறு போலக் காட்டியுள்ள புனைந்துரைகளையும் ஆதாரமற்ற கூற்றுக்களையும் கண்டு வருந்துகிறேன். இடப்பெயர் வரலாற்று ஆராய்ச்சிக்கும் பிள்ளை அவர்களுக்கும் வெகுதூரம். தமிழ் பற்று பிள்ளை அவர்களின் சரித்திரங்களை மறைத்துவிட்டது என்று யான் கருதுகிறேன். “தற்போது நராயணன்தானை இருந்த இடம் நரந்தனையெனவும். வேலன்தானை இருந்த இடம் வேலணையாகவும் மருவி வழங்கு கின்றது.” என திரு. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் கூறியிருப்பதை யான் எற்றுக் கொள்ள முடியாத நிலையிலிருக்கிறேன். புனித பிரான்சிஸ் சவேரியார் வட இலங்கைக்கு விஜயஞ் செய்தார் என்பது பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் முடிபுக்கும் இந்நூலாசிரியரின் முடிபுக்கும் பேதமுண்டு. வடமராட்சி, தென்மராட்சி என்ற இடப்பெயர் ஆராய்ச்சி முடிபும் (பக். 78) எமக்குச் சம்மதமன்று. இவற்றிற்கு வேறு கருத்துமுண்டு

இந்நூலில் இடைக்கிடை ஏற்ப்பட்டுள்ள சொற்பிழைகள், வாக்கிய அமைப்புப்பிழை, அச்சுப்பிழை முதலியன அடுத்த பதிப்பில் திருத்தியமைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

யான் பிறந்த நாட்டிற்பிறந்து யான் படித்த பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்று, இயற்கையாகவே கவிபாடுந்திறனைச் சரஸ்வதி கடாட்சத்தாற் பெற்ற நம் காவலூர்க் கவிஞர் வறுமையால் உடல்வாடியபோதும் மனத்தைரியத்தைக் கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வந்த உழைப்பின் பயனாக ஈன்றெடுத்த இந்நூலாகிய பிள்ளையைக் கண்டு யான் பெருமைப்படுகின்றேன். பெருமகிழ்வெய்துகின்றேன். நம் புலவர் அவர்கள் இன்னும் இத்தகைய சரித்திர நூல்களை வெளியிட எல்லாம் வல்ல இறைவன் அவரை ஆசீர்வதிப்பாராக.

- குல. சபாநாதன் -

“முருகன் அருள்”
3ஃ2, இராமகிருஷ்ண ரெறேஸ்
வெள்ளவத்தை
1971ம் ஆண்டு மார்கழித் திங்கள் 22ம் திகதிவிசேட நன்றி

நோய்வாய்ப்பட்டிருந்தும் சிரமம் பார்க்காது நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந் நூலில் மேலுறையின் கடைசிப் பக்கத்தில் அறிமுகவுரை எழுதி என்னைப் பெருமைப்படுத்திய எனது மதிப்பிற்குரிய ஆசிரியர் த. ச. அருளானந்தம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இறைவன் அவருக்கு நீடிய ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் அருளுவாராக.

- ஆசிரியர் -வித்துவான் நீ. மே. யோ. வேதநாயகம் டீ. யு.
அவர்கள் சொல்லிய

மதிப்புரை

காவலூர்க் கவிஞர் ஞா. ம. செல்வராசா எழுதிய “வட ஈழ மறவர் மானிமியம்” என்னும் சிறிய நூலை வாசித்தேன். ஆசிரியர் தமது ஆற்றலுக்கு அமைவாக வடமாநிலத்தில் முக்கியமாக நெடுந்தீவில் வாழும் மறவர் சாதியரைப்பற்றி ஆராய்ந்துள்ளார். இத்தகையதொரு வரலாற்று நூல் இன்றைய மனித வாழ்வைச்சிந்திக்க வைக்குமாயின் ஆசிரியரின் முயற்சி பயனுடையதாகும்.

சமுதாயங்களில் மனிதருள் உயர்வு, தாழ்வு ஏன் உண்டாக வேண்டும்? இவ்வினாக்களுக்கு விடை காணவேண்டும். மனித இனத்தைச் சாதிகளென்றும், சமங்களென்றும், நாடுகளென்றும் பலவகையாகப் பிரிக்கிறோம். உலகில் இன்று நிலவும் துன்பங்கள், இன்னல்களுக்கு எல்லாம் இப்பிரிவினைகளே காரணமாகும்.

மக்கள் எத்தொழிலைச் செய்தாலும் சமமானவர்கள். உயர்வு, தாழ்வுக்குக் காரணம் பிறப்பல்ல, செய்யுந் தொழில்களல்ல, அற ஒழுக்கங்களுமல்ல. மனமே உயர்வு தாழ்வுகளைப் படைத்தது. இதனைச் சமுதாயங்களும், சமயங்களும் ஏற்றுக்கொண்டன. அன்பைப்போதிக்கும் சைவமும், உல சகோதரத்துவத்தைப் போதிக்கும் கிறிஸ்தவமும் சாதிப்பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தனவா? ஆகவே நாங்கள் அர்த்தமற்ற பழைய நம்பிக்கைகளிலிருந்து நம்மை விடுவிக்க வேண்டும். மனிதன் போலித்தனமான சங்கை மகிமைகளை எதிர்பார்க்கும் ஒரு சாராரை உயர்வாகவும் மற்றொரு சாராரைத் தாழ்வாகவும் மதிக்கிறான். மனிதன் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும். எவ்வளவு தாழ்வான வேலை செய்தாலும் எல்லாரும் மனித சமுதாயத்துக்கு நன்மையே செய்கின்றனர்.

மறவர் பழைய சமுதாயங்களில் உயர்ந்தபணிகளைச் செய்திருக்கலாம். அவர்களுடைய பூர்வீகம் இன்றைக்கு முக்கியமானதா? மக்கட்பிரச்சனை எவ்வளவு சிறியதாயினும் அது உலகளாவிய பிரச்சினையாகும். ஒரு சிறுநூல் உண்மைப் பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? இன்று நாங்கள் சிறு சிறு பிரிவுகளாக எங்களைப்பிரித்து வைக்கும் சமுதாயத்தோடு, சமயங்களோடு போர் செய்ய வேண்டும். அவை சொல்வனவற்றைச் சிந்தனையின்றி ஏற்றுக்கொள்ளக் கூடாது. சுயமாகச் சிந்திக்கப் பழக வேண்டும். உண்மையென்று நாம் நம்புவதை எத்தகைய துன்பம் வந்தாலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இதுதான் இன்றைய தேவையாகும்.

முன்பு மறவராயிருந்து பின்னர் ஒதுக்கப்பட்ட ஓர் இனம் சொல்லமுடியாத மனத் துன்பத்துக்கு உள்ளாவது இயல்பே. இப்படியான தாழ்வுச்சிக்கலை உண்டாக்கியது யாது? சமுதாயமல்லவா? அவர்கள் அணைந்து கொண்ட மதம் அவர்களை உயர்த்தியதா? இல்லை. ஆகவே மறக்குடியினராயினும், வேறு எவராயினும் உள்ளப்புரட்சி ஒன்று செய்ய வேண்டும். உளுத்துப்போன சமயபோதனைகளினாலும். சமுதாயப் பழக்க வழக்கங் களாலும் நாம் உருவாக்கியுள்ளோம். வாலிபர்கள் இச்சிறைகளிலிருந்து தங்களை விடுவித் துப் புதிய ஒரு உலகைப்படைக்க முன் வரவேண்டும்.

வட ஈழமறவர் மான்மியத்தை ஆசிரியர் அரிது முயன்று எழுதியுள்ளார். வரலாற்று நூல்களை எளிதில் மதிப்பிட முடியாது. பல நூல்களிலும் செய்தித் தாள்களிலும் காணப்பட்டவைகளையோ, ஊர்ப்பெயர், பழக்க வழக்கங்கள் என்பவற்றையோ, ஆதாரமாகக்கொண்டு தமது கட்சியை நிறுவ ஆசிரியர் முயல்கின்றார். சில சில அடங்களில் ஆசிரியரின் கருத்து மேலும் ஆராயப்படவேண்டும். உதாரணம்: வடமர், தென்மர், புனித சவேரியாரின் இலங்கை விஜயம், மறவர் பறங்கியர், சம்பந்தக் கலப்பு முதலியன. ஆசிரியரின் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

சரித்திர நிகழ்ச்சிகளல்ல, அவற்றை உண்டாக்கக் காரணமானவைகளையே நாம் சிந்தித்து. உலகை உயர்த்த முயல வேண்டும்: நாங்கள் எல்லோருமே மறவர்: - வீரராக வேண்டும்: சிறிது சிந்தியுங்கள். உலகில் அனைத்து வேற்றுமைகளைக் காண்கிறோம். அவைகளில் மதங்களும் அடங்குகின்றன. கிறீஸ்தவ மறையைத் தழுவிக்கொண்ட மறவர் அடைந்த லாபம் என்ன? சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டனர். கிறிஸ்துவின் திருமறை உடல் என்று பராட்டப்படும் திருச்சபை சாதிவேற்றுமைகளைக் களைந்து எறிந்ததா? நெடுந்தீவிலும், ஏனைய இடங்களிலும் சாழும் சாதி வேளாளர் இந்த மறவரைச் சமமாக மதிக்கின்றனரா? இல்லை. அமைப்பு மதங்கள் யாவுமே, மனிதனைச் சிந்திக்க விடாமல் அவனிடம் பயத்தை வளர்த்து வந்திருக்கின்றன. பயம் இருக்கும் இடத்தில் அன்பு உண்டாகுமா? அன்பில்லாத இடத்தில் அடக்கம், சமத்துவம், எளிமை ஆகியன உண்டாகுமா? உலகதுன்பங்களுக்கு இந்த அமைப்புக்களே காரணமாகின்றன. அமைப்புக்களை அழிக்க முடியாது. அமைப்புக்களால், சமாதானமோ வாழ்வில் வளமோ ஒண்டாகாட்டா. சிந்தனையாளர்கள் இவ்வமைப்புக்களிலிருந்து வெளியேறித் தாமாகவே உண்மையை, சத்தியத்தைக் கடவுளைக் காண முயல வேண்டும்.

ஆசிரியர் தமது நூலில் காணப்படும் குறை நிறைகளை ஆராய்ந்து, தேவையான இடங்களில் எனக்குத் தெரிந்த சரிந்திரக்குறிப்புகளைப் பெய்து மதிப்பீடு செய்யும்படி கேட்டிருந்தார். வெறும் சரித்திர நிகழ்ச்சிகளிலும் அவற்றை ஆக்கக் காரணமான மனித ஒள்ளங்களை ஆராய்வதால் அதிகம் பயனடையலாம். வரலாற்றுக் குறிப்புக்கள் எவ்வளவு செம்மையாக இருந்த போதிலும், அவை தரும் போதனைகளை நாம் கிரகிக்கத் தவறுவோமாயின் வரலாற்றை வாசிப்பது வியர்த்தமாகும். மாய்ந்து போன மறவர் குலப்பெருமையை அறிவதிலும், அதை மீண்டும் நிலைநாட்டுவதிலும் பார்க்கச் சாதி, சமய, கட்சி வேற்றுமைகள் கடந்த சமத்துவமான உலக சமுதாயத்தை நாம் படைக்கலாம். தனிநபர் ஒவ்வொருவரும் துணிவராயின் அது நிச்சயம் கைகூடும். “வட ஈழ மறவர் மான்மியம்” இப்புரட்சியின் அடிக்கல்லாக அமைவதாக மறக்குல மக்களே! இது உமது முன்னோர் செய்த பகைப்போரல்ல அன்புப்பேர், தினவு எடுக்கும் உங்கள் தோள்களை இப்போருக்கு அர்ப்பணிப்பீர்களாக.

நீ. வே. யோ. வேதநாயகம்.முன்னுரை

சில வருடங்களுக்கு முன் நான் நெடுந்தீவிலிருந்து ஊர்காவற்றுறைக்கு மோட்டார் வள்ளத்தில் வரும் போது. அவ்வள்ளத்திலுள்ள இரு முதியவர்களின் மத்தியில் நடைபெற்ற சிறு சம்பாஷணையே நான் இந்நூல் எழுதுவதற்கு மூலகாரணம். “நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும், காலகதியில் இவர்கள் போர்த்துக்கேயரோடு சம்பந்தம் செய்தார்களென்றும், இதன் பிற்பாடே இவர்களை இழிகுலத்தார்களென்று மக்கள் அழைத்தார்களென்றும், மற்றப்படி உள்ளபடியே இவர்கள் மேன்குல மக்களென்றும்” ஒரு முதியவர் சொல்லி முடித்தார்.

இவரது ஒழிப்பு மறைப்பில்லாத – களங்கமில்லாத பேச்சு என் நெஞ்சைக் கவர்ந்தது. மனதில் ஆழமாகப் பதிந்தது. இதன் பிற்பாடு மறவரைப்பற்றியும், நெடுந்திவ சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்களைப் பற்றியும் சற்று ஆராய்ந்து ஓர் நூல் உழுதி வெளியிட வேண்டுமென்ற அவா என்மனத்தில் வேரூன்றியது.

இதன் காரணமாகப் பலபல பழங்காலச் சரித்திர நூல்களையும், நாட்டுப்பாடல்களையும், நிலபுலப் பெயர்களையும், உறுதிச் சாசனங்களையும், பண்டுதொட்டுப் பரவணியாகப் பேசிவந்த கதைக்குறிப்புக்களையும் சேகரிக்கத் தெடங்கினேன். ஆராய்ச்சித் துறையிலீடுபாடுள்ள நல்லறிஞ்சர்களைச் சந்தித்தும், சில கிராமங்களுக்கும் தீவகங்களுக்கும் நேரில் சென்றும், “மறவன்” நாமம் பொறிக்கப்பட்ட காணிகளையும், குளங்களையும், உறுதிச் சாசனங்களையும் பார்வையிட்டும், பலவருடங்களாக இதே முயற்சியீடுபட்டு என்னாலியன்றவரை ஆதாரங்களும் குறிப்புக்களும் மேற்கோள்களும் காட்டி “வட ஈழ மறவர் மான்மியம்” என்ற தலையங்கத்துடன் இச்சிறு நூலை எழுதி முடிக்கலானேன்.

ஆறாக்கவலை:

இந்நூலை நான் எழுதிமுடிப்பதற்கு எனக்குப் பக்க பலமாக நின்று அரிய குறிப்புக்களையும், கிடையாத பழங்கால நூல்களையும் தந்துதவியவர் கொழும்பு யம்பட்டா வீதியில் வசித்த காலஞ்சென்ற பண்டிதர் P. யோசப் அவர்களாவர். இவர் தொய்வு நோயினால் அவஸ்தைப்பட்டுக் கிடக்கும் சமயமும், நான் அவர் வீட்டிற்க்கு சென்று விட்டால் உடனே எழுந்து நான் எழுதிச் சென்ற குறிப்புக்களைப் பார்வையிட்டுத் திருத்தம் செய்யாமலிருக்கவே மாட்டார்.

இந்நூல் எப்போ அச்சுவாகனமேறிப் புத்தகரூபமாக வருமென்ற தாகத்தோடும் அவாவோடும் இருந்த இப்பண்டிதமணி நூல் வெளிவருவதற்கு முன்பே அமராகிவிட்டார். இவரது மறைவை நினைக்கும் போது மனம் வேதனைப்படுகின்றது. இப்பெரியார்க்கு என் இதயங்கனிந்த அஞ்சலியை முதற்கண் சமர்ப்பிக்கின்றேன். இப்பேரறிஞரைப் போன்றே இந்நூல் எழுதிமுடிப்பதற்கு என்னை இரவும் பகலும் ஊக்குவித்து ஒத்தாசை புரிந்தவர் காலஞ்சென்ற ம. செபஸ்தியாம் பிள்ளையாவர். இவர் புங்குடுதீவைத்தாயகமாகக் கொண்டவர். கொழும்பு உணவுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் லிகிதராகக் கடமையாற்றியவர். இம் மெய்த் தொண்டமனுக்கும் இந்நூலைக் கண்ணாரக்காணும் பாக்கியம் கிட்டாததையிட்டு மனம் வருந்துகிறேன். அன்னார்க்கும் என் அஞ்சலி உரித்தாகுக.

ஊக்கமளித்த உத்தமர்கள்:

நான் தினகரனில் பணியாற்றிய காலத்திலேயே இந்நூலை எழுதுவதற்கு ஆரம்பித்தேன். கொழும்பை விட்டு என் தாயகம் வந்ததின் பின் இந்நூலைப்பற்றிய ஆர்வமோ இதனை எழுதி முடிக்கவேண்டுமென்ற சிந்தனையோ கிஞ்சிற்றும் இல்லாம் போய்வி;ட்டது. என் ஆப்த நண்பனும் சகல சாதிமக்களாலும் நன்னு மதிக்கப்படுபவரும், அரசாங்கத்தாரால் நியமனம் செய்யப்பட்ட கரம்பன் கிராமசங்க சமாதானக் குழுவினரிலொருவரும் கரம்பன் தெற்கைத் தாயகமாகக் கொண்டவருமான திரு. ம. ரெத்தினம் அவர்கள். ஒரு நாள் ஊர்காவற்றுறையில் என்னைச் சந்தித்து இந்நூலைப் பற்றி விசாரித்தார். “நான் அதனை எழுதாமல் விட்டுவிட்டேன்” என விடையளித்தேன். இதனை நான் சொன்னதும் அவர் மிகவுந் துக்கப்பட்டு “கட்டாயம் இதனை எழுதிமுடியுங் கள் இதற்கு வேண்டிய சகல வசதிகளையும் நான் செய்து தருகிறேன். என் வீட்டில் ஓர் அறையை உங்களுக்கென ஒதுக்கிவிடுகிறேன். போக்கு வரத்துக்கோ, செலவுக்கோ நான் பங்கீடு பண்ணுகிறேன் இதனைச் சீக்கிரம் எழுதிமுடியுங்க”ளென்று என்னை அன்புடன் வற்புறுத்திக் கேட்டார். இவரின் தூண்டுதலினால் மீண்டும் இந் நூலின் வேலையை ஆரம்பித்தேன். அவர் சொல்லிய பிரகாரம் என்னை எவ்வகையிலும் தளம்பவிடாமல் உதவிகள் புரிந்தபடியால் இவரது இல்லத்தில் வைத்தே இந்நூலை எழுதிமுடிக்க வாய்பேற்பட்டது. இவ்வுத்தமரின் தூண்டுதலும், உதவியும் அமைதியான அறையும் வாய்க்காவிடில் இந்நூலை எழுதிமுடிக்காமல் விட்டிருப்பேன் என்பது திண்ணம். இவ்வளவு கடமைகள் புரிந்த இவ்வன்பருக்கு என் மனம் நிறைந்த நன்றியைப் பகிரங்கமாகக் கூறுதல் தகமையே. இவரைப்போன்றே இவரது சகோதரர் புங்குடுதீவில் வசிப்பவரான திரு. ம. சின்னத்தம்பி அவர்களும் இந்நூலை எழுதிமுடிப்பதற்கு ஊக்கிவித்த உத்தமரில் ஒருவராகும். கிழமைக்கு ஒருமுறையாவது புங்குடுதீவிலிருந்து ஊர்காவற்றுறைக்கு வந்து என்னைச் சந்தித்து எனக்குப் பொருளுதவிய புரிந்து என்னை இப்பணியில் ஊக்குவித்ததை நான் என்றும் மறந்திலேன். அவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

மேற்கூறிய பெரியார்களைப் போன்று சகோதரத்தீவு சங்கக்கடை அதிபர் திரு. வெ. பர்ணபாஸ் அவர்களும், சகாயமாதா சரித்திரநூலின் பதிப்பாசிரியருமான திரு. ஜேக்கப் மைக்கேல் அவர்களும் இப்பணியில் எனக்கு இடைவிடாது ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்த உத்தமர்களாவர். அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றியை சமர்ப்பிப்பது என் கடமையே. என் ஆப்த நண்பரின் மைந்தனும், சமூகப்பணியாற்றும் நல்லிளையனும்,, மோட்டார் இயந்திரவியல் தராதரப்பத்திரம் பெற்றவருமான ரெத்தினம். யு. சிறீராஜ் அவர்கள் இந்நூலை அவரது இல்லத்தில் வைத்து எழுதும்போது கிழமைக்கணக்காக என்னுடன் விழ்த்திருந்து துணை புரிந்துள்ளார். நாளாந்தம் பல தடவை என்னைத் துவிச்சக்கர வண்டியிலேற்றி என்னில்லத்திற்குக் கொண்டு செல்லுவார். என்னைச் சோர்வடையாமல் இந்நூலை எழுதி முடிப்பதற்கு மூலகாரணமாயுள்ளவர்களில் இவருமொருவர் இவருக்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றியைக் கூறுகிறேன்.

இதயம் நிறைந்த இளைஞர்கள்:

இந்நூல் உழுதிமுடித்ததின் பின் பலகைப் பிரதிகளெடுப்பதற்கு என்னுடன் ஒத்துழைத்து எனக்குச் சேவைபுரிந்த ஒருசில நல்லிளைஞர்களைப் பற்றி இங்கு குறிப்பிடா மலிருக்க முடியாது. மற்றும் இளைஞர்களைப் போன்று விதண்டாவாதம் பேசாமலும், சாட்டுப்போக்குச் சொல்லாமலும், தட்டிக்கழிக்காமலும், குறிப்பிட்ட நேரம் தவறாமலும் அமைதியாகவும், அமைச்சலாகவும், அன்பாகவும், சோர்வடையாமலும் ஒன்று கூடி வந்திருந்து அழகான எழுத்துக்களில் பிழையில்லாமல் கிழமைக்கணக்காக எழுதிமுடித்துத் தந்தவர்கள், செல்வர்களான ம. அ. பவுலில், பெ. பேதுறுப்பிள்ளை, அ. யேசப்மைக்கல் ஜெயராசா, அன்ரனி ஜோர்ஜ், அ. பீற்றர் முதலானவர்களாவர். இச்சிறார்கள் மேன்மேலும் சமூகப்பணியிலீடுபட்டு உழைப்பார்களென்றும், விசேஷமாக தங்கள் மறவர் குல முன்னேற்றத்திற்கு மாண்பரிய சேவை செய்ய பின்னிற்கமாட்டார்க ளெனவும் நம்புகிறேன். அவர்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

பேருதவி புரிந்த பெருந்தகை:

பல வருடங்களாக அரும்பாடுபட்டு எழுதிய இச்சிறுநூலை அச்சுவாகனமேற்றிப் புத்தக ரூபமாக்குவதற்கு நான் எடுத்துக் கொண்ட பிராயத்தனங்களோ சொல்லுந்தரமன்று புத்தகம் எழுதிமுடிவுற்று சுமார் ஒரு வருடகாலமாக எத்தனையோ செல்வந்தர்களையும், பணம் படைத்தவர்களையும், சமூகத் தொண்டர்களையும் சந்தித்து இந்நூலை அச்சுவாகன மேற்றுவதற்கு உதவிகோரினேன் ஒருவரேனும் இப்பெருங்கைங்கரியத்திற்கு நன்மனதோடு முன்வரவில்லை.

காத்திரப்பிரகாரமாக என் அலுவலின் நிமித்தம் ஒரு முறை கொழும்புக்கு விஜயஞ் செய்திருந்தேன். அவ்வமயம் எனது நண்பர் (ர்) டாக்டர் சு. லேயோன்பிள்ளை அவர்களை யெம்பட்டா வீதியிலுள்ள அரசமரச் சந்தியில் சந்தித்தேன். அவரைச் சந்தித்ததும் புத்தகம் அச்சிடுவதைப்பற்றி அவ்வளவு திடமான நம்பிக்கையில்லாமல் வேண்டா வெறுப்பாய் போக்கடிப்போக்காய் கதைத்தேன். அவர்வாயிலிருந்து வெறுப்பான, கசப்பான வார்த்தைகள் எதுவும் வெளிவராமல், “வாருங்களய்யா இதைப்பற்றி யோசிப்போ”மெனக்கூறி என்னைத் தன்வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் புத்தகத்தைப்பற்றி மனம்விட்டு இருவரும் அளாவினோம். கடைசியாக டாக்டர் லேயோன்பிள்ளை அவர்கள் திறந்த மனதோடும், நிறைந்த சிந்தையோடும், பரந்த நோக்கோடும், விரிந்த மனப்பாண்மையோடும் எவ்வளவு செலவு வந்தாலும் தானே அதனை அச்சுவானமேற்றித் தருவதாக உறுதி கூறினார்.

போதிய வருவாயும், பொருள்வளமும், செல்வச் செல்வாக்கும் இல்லாதிருந்தும் சமூகப்பணியே பெரும்பணியென மனத்தில் நினைத்து தம் மூதாதையரின் வீரப்பிரதாபத்தையும், மறவகுலப் பெருமையையும் வருங்காலச்சந்ததியினராவது நன்குணர்ந்து மார்புதட்டி மறவனென்று கூறவும். ஏனைய சமூகங்களைப்போல் ஏறு நடை போட்டு முன்னேறவும் இந்நூலர் ஓர் புதுப்பாதையை அமைக்குமென்ற நன்னோக்கத்தோடு பெருந்தொகைப் பணம் செலவழித்து அச்சுவாகனமேற்றிய பெருமகனைத் திருமகனைப் பெருந்தகையை நான் மாத்திரமல்ல மறவர் குல மக்களனைவரும் ஒரே குரலெழுப்பி நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இவரின் திரு முயற்சியான இப் பெருமுயற்சியில்லாவிடில் இச்சிறுநூல் புத்தக வடிவமாக இன்று உங்கள் கையில் தவழ்ந்திருக்க முடியவே முடியாது. இத்தகைய குலப்பணிபுரிந்த குலமணிக்கு என் சார்பிலும் மறவர் குலமக்கள் சார்பிலும் விசேஷமாக வருங்காலச் சந்தியினர் வளங்கொழிக்க, வாழ்வளிக்க இன்றே ஏறு நடைபோடும் வீர இளைஞர்கள் சார்பிலும் மீண்டும் ஓர் முறை நன்றியையும், வணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.

இன்னும் தமது அருமருந்தன்ன நேரத்தை செலவழித்துப் பார்வையிட்டுக் காலந்தாழ்த்தாது தகுந்த மதிப்புரையும் குறிப்புக்களுமளித்த வித்துவான் N. ஆ. ஐ. வேதநாயகம் டீ. யு. அவர்களுக்கும் என் மன நிறைந்த வணக்கத்தையும் நன்றியையும் சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கைச் சரித்திர வல்லுனர்களாகவிருந்த நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் இராசநாயகம் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இறைவனடி எய்தியபின் அவர்களின் இடத்தை நிரப்பிவரும் ஆராய்ச்சி அறிஞர்களுள் முதலியார் குல. சபாநாதன் அவர்கள் குறிப்பிடத்தக்க ஒருவராவர். இவர் சுவாமி ஞானப்பிரகாசரின் ஆசீர்வாதத்தையும் - மதிப்பையும் நன்குபெற்றவர். எத்தனையோ ஆராய்ச்சி நூல்களை எழுதியவர் தற்போது வெளிவந்த “நல்லூர்க்கந்தசுவாமி கோயில்” வரலாற்று நூலும் இவரது படைப்பேயாம் இத்தகைய பெரியார் இச்சின்னஞ்சிறிய நூலுக்கு மதிப்புரை அளித்தமைக்கு என் நெஞ்சு நிறைந்த வணக்கத்தையும் நன்றியையும் சமர்ப்பிக்கின்றேன்.

இச்சிறுநூலை நாலா பேர்களின் கண்களும் கவரக்கூடிய விதத்தில் காலந் தாழ்த்தாது அச்சுவாகன மேற்றிச் சிறப்பாய் முடித்துத்தந்த யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தினருக்கும் என்பணிவான வணக்கமும் நன்றியும் உரித்தாகுக.

தீவகம் வாழ் மறவகுலமக்கள் இனிமேலாவது தங்களைச் சிந்தித்து, தங்கள் குலப்பெருமையை நன்குணர்ந்து எல்லோரும் ஒரு மணப்பட்டு ஒன்று திரண்டு மறவகுல முன்னேற்றத்திற்குப் பணியாற்றி ஓர் புதுப்பாதையில் வெல்வதற்கு ஆவன செய்வார்களே யாகில் அதுவே இந்நூல் நான் எழுதியதற்கு அடையும் பெரும் பேறாகும்.

ஆசிரியர்
காவலூர்க், கவிஞர். ஞா. ம. செல்வராசா


அரசினர் வைத்தியசாலைக்கருகாமை,
ஊர்காவற்றுறை.
20. 10. 1971.

இந்நூலாசிரியரின் பிற நூற்கள்.

1. சிந்தாகுல மாலை
2. சகாயமாதா சரித்திரம்
3. சகாயமாதா பெரிய பிரார்த்தனை
4. யாழ்ப்பாணம் புதுமை மாதாங்கோயில் சரித்திர வரலாறு
5. பாலதீவு அந்தோனியார்கோயில் சரித்திர வரலாறு
6. சரவணை சின்னமடுமாதா ஆலய வரலாறு
7. வட நாரந்தனை ஸ்ரீ மனோன்மணியம்பாள் பேரில் பதிகம்
8. வட நாரந்தனை ஸ்ரீ மனோன்மணியம்பாள் திருஊஞ்சல்
9. நயினைத்தபால் (நயினை நாகேஸ்வரி பேரில்)
10. நாகதூதம் (நயினை நாகேஸ்வரி பேரில்)
11. நயினை பொற்தேர்க்கீர்த்தனை (நயினை நாகேஸ்வரி பேரில்)
12. காந்தி அண்ணல் அம்மானை (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
13. நேருஜி அனுதாபக் கீதம் (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
14. காந்தி அண்ணல் கீதம் (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
15. திருமலை யாத்திரைச் சிந்து (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
16. குமுறும் நெஞ்சம் (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
17. சன்னதியான் கும்மி (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
18. நல்லூர்க் கந்தன் கீர்த்தனை (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
19. தமிழன் கீதம் (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
20. வட ஈழ மறவர் மான்மியம் (கொழும்பு கலைமகள் கம்பனி வெளியீடு)
21. மேலைக்கரம்பன் ஸ்ரீ முருகன் பேரில் பதிகம் (அச்சிலிருப்பது)
22. மருதமடுத்திருப்பதியின் உண்மைவரலாறு (அச்சிலிருப்பது)


சில குறிப்புக்கள்

பண்டைத் தமிழரிடையே சாதிப்பாகுபாடுகள் உயர்வு தாழ்வு என்னும் வேற்றுமைக ளில் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆரியக்கலப்பின் பின் நான்கு வர்ணத்தோடு பஞ்சமர் எனப்படும் புதியதொரு பாகுபாடும் தோன்றியது. பஞ்சமரில் யாவருமே பழைய திராவிடர் ஆவர். ஆகவே மறவர், பரதவர், கடைஞர், உழவர் முதலியவர்களே தூய தமிழராவர், உயர்ந்தசாதியினர் ஆரியக்கலப்பு உடையவர்களாய் இருக்கவேண்டும். வள்ளுவர் அல்லது பறையர் தம்மை ஆதித்திராவிடர் என்பதில் பெருமையடைய நியாயம் உண்டு.
ஆரியமாயையில் மயங்கிய உயர்சாதியினர் வேதங்களின் அல்லது ஆகமங்களின் கொள்கைகளோடு, ஆரியரின் நான்கு பிரிவுகளுள் தம்மையும் அடக்கிக் கொண்டனர். வேளாளர் தம்மை மூன்றாம் வர்ணமாகிய வைசியரோடு ஒப்பாக்கிக் கொள்ளப் பல வாதங்கள் நடத்தி வந்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பனர் அவர்களைச் சூத்திரராகவே மதித்து வந்தனர். ஆறுமுக நாவலரே தமிழர்களின் சூத்திரப்பட்டத்தை ஏற்றுக் கொண்டவர் களில் ஒருவர். அரசாங்கங்களின் செல்வாக்கைப் பெறத் தங்கள் பண்பாடுகளைத் துறந்தவர்களே இந்த உயர் சாதியினர். இவர்களின் பூர்விகங்களை ஆராய்ந்தால் நாம் வெட்கப்பட வேண்டுமேயன்றிப் பெருமைப்பட ஒன்றுமில்லை.

இன்று ஆதிக்கமுள்ள அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் தங்கள் இனத்தையோ மொழியையோ மேம்படுத்த முனையாது சுயநல வேட்பாளராயிருப்பது போல அன்று உயர் சாதியினர் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் அவர்களைப் பெரிய கொம்பர்களாய் நினைப்பது தவறு.

நெடுந்தீவில் போர்த்துக்கேயர் காலத்திலே கிறிஸ்தவம் ஊன்றப்பட்டு விட்டது. போர்த்துக்கேயர் அடிமைகளாய் வாழ்ந்த வருணத்தினரை மதமாற்றஞ் செய்யவில்லை. சுதந்திரமாக வாழ்;ந்தவர்களையே மதமாற்றம் செய்தனர். சில இடங்களில் அரசர்கள் மதம் மாறிய போது அவர்களோடு குடிமக்களும் மதம் மாறிக்கொண்டனர். ஆகவே நெடுந்தீவுக் கிறிஸ்தவர்கள் போர்த்துக்கீசர் காலப் பரம்பரையினராயின் அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்த ஒரு சாதியினரின் சந்ததியினரே. ஒல்லாந்தர் இலங்கைக்கு வந்தபோது வேலணைத்தீவு, அணலைதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளில் ஆறு கோயில்களும், சுமார் பத்தாயிரம் கிறிஸ்தவர்களும் இருந்தமை வரலாற்று உண்மையாகும்.

உயர்சாதி வேளாளக் கிறிஸ்தவர்களை ‘வேதக்காரப்பள்ளர்’ என்று சைவசமயிகள் நகையாடுவது உண்டு. நெடுந்தீவு முதலிய இடங்களில் இந்த ஒதுக்குதல் மனப்பான்மை முதிர்ச்சி பெற்று மறவர் என்னும் பெரே அழிந்துபோகவும் இடமிருந்தது என்பதை நாம் தட்டிக் கழிக்கவும் முடியாது.

நாம் முன்பு எப்படியிருந்தோம், இப்பொழுது எப்படியிருக்கிறோம் என்பதை ஆராய்வதால் ஏற்பட்ட தவறுகள் நீங்கி விடுவதில்லை. “நான் இப்பொழுது எப்படி இருக்கிறேன்” என்பதை ஆழமாக ஆராய்வதே நமது கடமை இதிலிருந்து தான் எமது மதிப்புரை எழுந்தது.

நீ. மே. யோ. வேதநாயகம்.

1
ஈழமும் பாண்டியரும்


ஈழ நாட்டில் தமிழனின் குடியேற்றம் எப்போது ஏற்பட்டதென்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாமலிருக்கிறது. எனினும் விஜயன் இலங்கைக்கு வருமுன் பன்னெடுங்காலமாகத் தமிழரே இத்தீவை ஆட்சி செய்தார்களென்று பழங்காலச் சரித்திரங்கள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய நாட்டிலிருந்து தமிழ் மக்கள் குடியேறுமுன், நாகர் என்னும் சாதியார் இத்தீவை ஆண்டுள்ளார்கள். இவர்களின் குலப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டே நாகபட்டணம், நாகபுரம், நாககுன்று, நாகர்கோயில் முதலாம் இடப்பெயர்களும் வழங்கியுள்ளன. இலங்கையிலும் பண்டைக்காலந்தொட்டு வழங்கியுள்ள நாகவழிபாடும் அதன் ஆலயங்களுமிருப்பதை அறியலாம். நயினாதீவு, நாகபூஷணி அம்மன் ஆலயம் இதற்கோர் எடுத்துக் காட்டாகும்.

இவர்களுடன், இந்திய நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் போர்பொருதி இவர்களை வென்று ஈழநாட்டை அரசுசெய்தனர். இவர்கள் தங்கள் இராசதானியாக மாதோட்டத்தையும், திரிகோணமலையும் ஆக்கிக்கொண்டு மாதோட்டத்தில் திருக்கேதீச்சரத்தையும், திரிகோணமலையில் கோணேசர் ஆலயத்தையும் கட்டி எழுப்பினர்.

துழரசயெட ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுழஉநைவலஇ ஊநலடழn டீசயnஉh 1848 – P. 73.
 யாழ்ப்பாணச் சரித்திரம் பக். 3 (ஆ. முத்துத்தம்பி)

பண்டைக்காலத் தமிழர் காலத்தில் மாதோட்டம் மிகச் சிறந்த செல்வ நாடாய்த் திகழ்ந்தது. ரோமர், கிரேக்கர் முதலானோர் தம்மரக்கல்களோடு இங்கு வந்து, தந்தம் முத்து, தோகை, இலவங்கம், முதலாம் விலையுயர்ந்த திரவியங்கள் ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.

மாதோட்டத்தை ஆண்ட சிற்றரசர்களோடு பலமுறை சோழரும், பாண்டியரும் போர் பொருதியுள்ளனர். சிலகாலம் சோழரும் பாண்டியரும் இங்கு ஆணையுஞ் செலுத்தியுள்ளார் கள்.

“தென்னாடு முத்துடைத்து” என ஒளவையாரால் புகழ்ந்து பாடப் பெற்ற நாடே பாண்டி நாடாகும். பாண்டிய மன்னர்க்குரிய செல்வங்களுள் முத்தே பிரதானமானது. முத்தாரமார்பனாய் பாண்டிய மன்னன் விளங்கினானென்றும், பாண்டிமாதேவியின் சித்திரச் சிலம்பினுள்ளே முத்துக்களே பரலாய் விளங்கிய தென்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

பாண்டி நாட்டிலுள்ள பிரசித்தம் வாய்ந்த துறைகளான குமரி, கொற்கை, பொருனை, பொதிகை முதலானவைகளிலே பெருந்தொகையான முத்துக்கள் அகப்படும். இதனைத் தென்பாண்டி நாட்டில் தோன்றிய பெரும் புலவரான குமரகுருபர அடிகள் ஒரு செய்யுளிலே வெகு அழகாகச் சொல்லியிருக்கின்றார்.

“கோடும் குவடும் பொருதரங்கக்
குமரித் துறையில் படுமுத்தும்
கொற்கைத் துறையில் துறைவாணர்
குளிக்கும் சலாபக் குவால் முத்தும்
ஆடும் பெருந்தண் துறைப் பொருனை
ஆற்றில் படுதெண் ணிலாமுத்தும்
அந்தண் பொதியத் தடஞ்சாரல்
அருவி சொரியும் குளிர் முத்தும்”

மேலே சொல்லப்பட்ட செய்யுளால் பாண்டி நாட்டின் கடல்படுதிரவியமான முத்துச் சிறப்பு தெளிவாகிறது.

ஆரியர் தென்னாட்டில் குடியேறுவதற்கு முன் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் கி. மு. 1000 ஆண்டளவில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. பினிசியர் இவ்விராச்சியங் களோடு வாணிபஞ் செய்துள்ளார்கள். சலமோன் அரசனுக்குத் தென்னிந்தியாவினின்று மயில், குரங்கு, தந்தம், சந்தனக்கட்டை முதலாந் திரவியங்கள் கொண்டு செல்லப்பட்டன. முதலாம் நூற்றாண்டில் றோமாபுரியை ஆண்ட அகஸ்தஸ் என்ற மன்னனுக்கு பாண்டிய அரசன் தூது போக்கினனென்றும், அத்தூதுவனை யவன வேந்தன் வரவேற்று மிகவும் சங்கை செய்தானென்றும், பின் யவன மன்னனுக்கும், பாண்டிய அரசனுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டதென்றும் இந்திய சரித்திரங்கள் கூறுகின்றன.

தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் பக். 9 (வண. ளு. ஞானப்பிரகாசர்)
அலையும் கலையும் (டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை)

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிங்கள மன்னனான விஜயன் பாண்டியன் புத்திரியை மனந்து இலங்கைக்கு வரும்போது, பாண்டி நாட்டிலிருந்து எழுநூறு மேன்குலச் சீடமாட்டிகளோடும், பதினெட்டுவரிசையான பரிவாரங்கனோடும், ஐந்து வரிசையான ஏவலர்களோடும் வந்துள்ளதாக மகாவம்சம் கூறுகிறது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் நூற்றுப்பதினாறு பேர்களாவர். இந்நூற் றுப்பதினாறு மன்னர்களும் மொத்தம் 1740 ஆண்டுகள் ஆணை செலுத்தியுள்ளார்கள். ஈழ நாட்டுடனும் பாண்டிய மன்னர்கள் பலமுறை போர் பொருதி வெற்றிவாகை சூடினர். ஆனால் இவர்களின் ஆளுகை வெகு காலம் நீடிக்கவில்லை. எனினும் முதலாம் புவனேகபாகு என்னும் சிங்கள அரசன் காலத்தில் பாண்டி இராச்சியத்தை ஆண்ட ஐவர் சகோதரரும், பெரும் வலிமைபடைத்த தமது மந்திரியை ஒரு பெருஞ்சேனையுடன் இலங்கைக்கனுப்பி நாடுநகர்களையும், கோட்டை கொத்தளங்களையும் பாழாக்கிப் புத்தருடைய தந்ததாதுவையும் மற்றும் செல்வங்களையும் கொள்ளையடித்துப் பாண்டி நாட்டுக்கு மீண்டு குலசேகர மன்னனுக்கு தந்ததாதுவை அளித்தனா.; (மகாவம்சம்)

தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் (வண. ளு. ஞானப்பிரகாசர்)
யாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்)

சடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் (1251-1280) இலங்கை அரசனிடம் யானைத் திறை பெற்றுள்ளதாகவும் சிதம்பரக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அக்கல்வெட்டுவருமாறு.

கொங்க ருடல்கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து
வெங்க ணழலில் வெதுப்புமே – மங்கையர்கண்
சூழத்தா மம்புனையுஞ் சுந்தரத் தோள் மீனவனுக்
கீழத்தா னிட்ட இறை.

இச் சுந்தர பாண்டியன் ஈழத்து வேந்தனொருவன் திறை கொடுக்காதொழிந்த காரணத்தால் காலில் சங்கிலிபூட்டி வருத்தியதாகவும், சடவர்மன் இரண்டாம் வீரபாண்டியனும் இவ்வண்ணமே இலங்கையரசர்களிலிருவருள் ஒருவனைக் கொண்று அவனுடைய சேனை இரதம், சிங்காசனம், முடி முதலான சகல பொக்கிஷங்களையும் கைப்பற்றி, கோணமலையிலும், திரிகூடகிரி மலையிலும் பாண்டிய துவசங்களை நாட்டி, மற்ற அரசனிடம் யானைத்திறை கொண்டதாகவும் சாசனங்கள் கூறுகின்றன. (1254-1257)
யாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்)

இவ்விதம் பலம் வாய்ந்த பாண்டிய இராச்சியம் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜய நகர் அதிர்பர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டது. இதனால் பாண்டியர்களால் சிலசில பகுதிகள் ஆளப்படலாயிற்று. கயத்தார் பாண்டிய மன்னனுக்குத் தூத்துக்குடி மாத்திரம் திறை செலுத்திக்கொண்டிருந்தது. வடக்கேயுள்ள சிறு சிறு நகரங்களுக்கு தும்பிச்சிநாயக்கர் அதிகாரியாயிருந்தார். கயத்தார் பாண்டியனும், தும்பிச்சி நாயக்கரும் விஜயசநகர் சக்கரவர்த்திக்கு திறை வெலுத்திச் சக்கரவர்த்திகளாயிருந்தனர்.

இவ்வண்ணம் பாண்டிய இராச்சியம், தலைசிறந்து விளங்கியதற்கும், பலபல போர்களிலே வெற்றி ஈட்டியமைக்கும், முத்துக்குளிப்புத்துறை சிறந்ததற்கும் மறவர்களின் போர்த்திறனே முக்கிய காரணம். மறவர்களே சகல பாண்டிய மன்னர்களுக்கும் நம்பிக்கையான படைவீரர்களுமாவர்.

சத்திய மறையின் ஆட்சி முத்துக்குளித்துறையின் மாட்சி.
(ரெமிஜியஸ்பர்னாந்து டீ.யு.)

2
மறவரின் போர்த் திறன்

மறவர்கள் பாலைநிலத்தைச் சார்ந்தவர்கள். “மறம்” என்பது வீரம் என்னும் கருத்துடையது. ஆகவே மறவர்கள் வீரஞ்செறிந்த மக்கள். தமிழ்நாட்டுப் போர்வீரர்கள்.

மறக்குடி மகளிர்களும் வீரப் பெண்மணிகளாவர். பாண்டிநாட்டிலே போர்ப்பறை கேட்டால் ஆடவரிலும் பார்க்கப் பெண்மணிகளே மிகவும் ஆனந்தமடைவார்கள். தாய்நாட்டு க்காகப் போர்புரியத் தங்கள் குடும்பத்திற்கு வாய்ப்பேற்பட்டதென எண்ணித் துள்ளிக் குதிப்பர்.

மறக்குடித் தாய்மார்களே தம் புத்திரர்களை வீரச் செயல்களுக்கும் போர்ப் பயிற்சிக்கும் ஊக்குவித்துள்ளார்கள். அவர்கள் தம் தாய், தந்தை, அரசன், மகன் முதலானோருக்குள்ள கடமைகள் யாதென்பதைக் கூறும் கருத்தைப் பொன்முடியார் என்னும் பெண் புலவி கீழ் வரும் செய்யுளால் விளக்குகின்றார்.

ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக்கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாளருஞ் சமமுடுக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புற 312)

அதாவது, பிள்ளைகளைப் பெற்று நாட்டுக்குத் தருதல் எங்கள் கடமை. அவர்களைச் சான்றோனாக்குதல் தந்தையர் கடமை. வேல், வாள் முதலிய போர்கருவிகளைத் தாயாரித்துக் கொடுத்தல் கொல்லர் கடமை. அவர்களுக்கு நல்ல நடையைக் கற்ப்பித்து, நாட்டுக்குகந்த குடிமக்களாக்குதல் அரசர் கடமை. போரில் யானைகளைக் கொன்று முன்னேறிப் போரிடல் அப்பிள்ளைகள் கடமையாகும். இதுவே மறக்குல வீரத்தாய்மார்கள் அடிக்கடி தம் பிள்ளைகளுக்குக் கூறும் நல்லுபதேசமாகும். இன்னுமொரு வீரத்தாய் கூறுவதை பூங்காணூத்திரை என்னும் பெண்புலவி கீழ்வருஞ் செய்யுளால் கூறுகிறார்.

மீனுண் கொக்கின் றூவியயன்ன
வானரைக் கூந்தல் முதியோன் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்று முவகை
யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழைதுயல் வரும் வெதிரத்து
வான்பெயர்த்தூங்கிய சிதரினும் பலவே (புற 277)

அதாவது கொக்கின் இறகுபோல நரைத்த கூந்தலுடைய முதியவள், தன் புதல்வன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று, தானும் மடிந்தானெனுஞ் செய்தி கேட்டு, தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியிலும் அதிகம் மகிழ்ச்சியடைந் தாளென்பதாகும்.

பாண்டியருக்கும், சோழருக்கும் போர் மூண்டபோது அப்போரில் ஒரு குடும்பத்திலேயே தந்தை, கணவன் இரு சகோதரர்கள் போர்முனை சென்று ஆவி துறந்தனர். அவ்வீட்டில் எஞ்சியுள்ளோர் ஒரேஒரு மகளிரும் அவள் பெற்றெடுத்த ஏக மைந்தனுமேயாம். இவ்வீரமகளிர் தந்தைக்கு கல் நாட்டி மலர் தூவி வழிபட்டாள். கணவனும் இரு சகோதரர்களும் போரில் வேல் பட்டு இறந்ததை நினைந்து அகமகிழ்ந்தாள். இன்னும் போர் முடியவில்லை. ஈற்றில் தன் ஏக மைந்தனையும் போருக்கு அனுப்பினாள். அப்போரில் புதல்வனும் முள்ளம் பன்றி போல் தேகமெங்கும் அம்புகள் தைத்து ஆவி துறந்தான். மைந்தன் இறந்த செய்தியை வீரத்தாய் கேட்டுப் போர்க்களஞ் சென்று தன் மைந்தனின் சடலத்தைப் பார்த்தாள். தன் ஏகமைந்தன், தேகமெங்கும் அம்புகள் தைத்து இறந்துகிடப்பதைக் கண்டாள். இதைக் கண்ணுற்றதும் அவள் வாயிலிருந்து வெளிவந்த கருத்தின் செய்யுள் இதுவேயாம்.

கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் - பின்னிக்று
கைபோய்க கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தானென் ஏறு (822)

இதுமட்டுமல்ல, வீரத்தாய்மார்கள் தன் மைந்தனைப் போர்முனைக் கனுப்பியபின், அப்போர்முனையில் வீரழிழந்து மனஞ் சோர்வடையக்கூடிய இழிசெயலைப் புரிந்ததாகக் கேள்விப்படின், அம்மைந்தனை மிகமிகக் கடிந்து பேசிச்சினப்பாள். ஒரு தாயானவள் தன் மகன் பகைக்களிற்றின் மேலே யெறிந்து கூரிய வேலைத்திரும்பிக் கையேந்திப் பெறக்கூடிய ஆற்றல் இல்லாமையால் அவ்வேலிழந்து வெறுங்கையனாய் புறங்கொடுத்தது கண்டு,

வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
சோகேன் அத்தை நின்னீன்றனனே
பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி
அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
புகர்முகக் குஞ்சர மெறிந்த எஃகம்
அதன்முகத் தொழிய நீபோந்தனையே
அதனால் எம்மில் செய்யாப் பெரும்பழி செய்;;த
கல்லாக் காளையை ஈன்ற வயிறே

எனக் கூறி மிகவும் மனம் வருந்தி வெறுப்பாள். இவ்வாறே மறவர் குலத்து மகளிர்கள் வீரஞ்செறிந்த பெண்மணிகளாகத் திகழ்ந்துள்ளனர்.

இம்மறவர் குலத்தவர் உயர்குடி மக்கள். இவர்களைத் தமிழகம் மிகவும் கௌரவமாகமதித்தது. தமிழர்களின் வீரத்துக்கு வித்திட்டவர்கள் இக்குலத்தவர்களே யாவர். இவர்களை மாறன், சேர்ப்பன், தேவன், மறவன், அகம்படியார், கள்ளர் செயங்கொண்டார், தென்கொண்டார், தொண்டைமண்டலத்தார், படையாட்சியார், வண்டையார் முதலாம் சிறப்புப் பெயர் கொண்டழைப்பர்.

போர்க்களத்தில் முன் வைத்த காலை பின் வைக்காத குலத்தவர்கள். மாற்றானின் படைக்கலம் வரும்போது விழித்த கண் இமைத்தல் தங்குலத்திற்கு இழுக்கெனக் கூறுவர்.

“விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்
திழைப்பின் ஒட்டன்றோ வன்கணவர்க்கு”
என்றார் திருவள்ளுவர்

வட்டுடை அணிந்து போருக்குச் செல்லும் போது, போர்க்களத்தில் வீரவெறியூட்டும் இசைக் கருவிகளான பறை, பம்பை, திட்டை, தடாலி, முழவு, முருடு, கரடிகை, திண்டி முதலானவைகள் ஒலிக்கும்போது இவ்வீரமறவர்களின் தலைகள் கறங்கி ஆடும். நரம்புகள் யாவும் முறுக்கேறி வீரம் பிறக்கும். இத்தகைய லெட்சணங்களைப் பெற்றவர்களே மறவராவர்.

3
நெடுந்தீவின் பழங்காலச் சிறப்பு

வீரஞ் செறிந்த மறக்குடி மக்கள் இலங்கையிலும் பூர்வகாலந் தொட்டு நிலத்தரசர்களாய், குடிபதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பாண்டிய மன்னர்களுக்குப் போர்ப்பணி புரிந்தவர்கள் மாத்திரமல்ல, இம்மன்னர்களின் முத்துக் குளிப்புத் துறைகளுக்கும் காவலாளிகளாகவும் கடமை செய்துள்ளார். பாண்டியர்களின் தொடர்பு விஜயன் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைக்கேற்பட்டுள்ளதென முன் அத்தியாயத்தில் கூறியுள்ளோம். மாதோட்டத்தில் ஆணைசெலுத்திய தமிழ் சிற்றரசர்கள் பாண்டியருக்கும் சோழருக்கும் திறை செலுத்தியும் வந்துள்ளார்கள். சிலகாலம் சோழரும் பாண்டியரும் நேரடியாகவும் மாதோட்டத்தை ஆண்டுமுள்ளனர்.

விஜயன் இலங்கை அரசனான பிற்பாடும் பாண்டியரும் பலமுறை படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினர். இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் யாழ்ப்பாணத்திலே தங்குவதற்கு விருப்பங் கொண்டனர். வேறுசிலர் வெற்றியீட் டிய சந்தோஷத்திற்காக மன்னர்களிடம் சன்மானமாக நிலங்களைப் பெற்றுங் குடிபுகுந்தனர். இன்னும் சில மறவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமக்குச் சேவகம் புரிவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகத் தருவித்துமுள்ளனர்.

யாழ்ப்பாண குணவீரசிங்கையாரியச் சக்கரவர்த்தி மதுரையரசனுக்குப் படைத்துணை யனுப்பிய சந்தோஷத்திற்காகப் பெருந்தொகைத் திரவியமும் கன்னடர் சிலரையும், சிவிகையார் சிலரையும், வில்லியர் சிலரையும் வேடர் சிலரையும் இத்துடன் மறவர் சிலரையும் அனுப்பிவைத்தாகவும், மறவரை மறவழன்புலவிலிருத்தினரெனவும் யாழ்ப்பாணச் சரித்திரங் கூறுகிறது.

சங்கிலி அரசன் காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்த மறவர்கள் ஆதியில் மறவன் புலத்தில் குடியேறி, பின்பு பன்றியந்தாழ்வில் போய் தங்கியிருந்ததாகவும் யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது.

இன்னும் “1048ம் ஆண்டு நல்லூரை ஆண்ட கூழங்கைச் சிங்கை ஆரியனுக்கு மறவர்களே படைவீரர்களாக இருந்தனர். இவர்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர் களேயாவர் இவர்கள் மறவகுலச் சத்திரியராவர். போரில்லாக்காலங்களில் கமஞ்செய்வதே இவர்களின் பிரதான தொழில். இவர்களின் குலரப்பெயர்களை அடிப்படையாகக்கொண்டே மறவராட்சியென அழைக்கப்பட்டு, மராட்சியெனத்திரிந்து, பின் வடமராட்சி, தென்மராட்சியென வழங்கப்படுவதாயிற்று. இவர்கள் வழிபடும் தெய்வம் ஐயை அல்லது துர்க்கை. சண்டைக்குத் தலைமைபூண்ட இப்பெண்தெய்வத்தையே மறவர் மாத்திரமன்றி தமிழ் அரசர்களும் வணங்கி வந்தனர். இதன் காரணமாகவே நல்லூரரசன் வீரமாகாளியம்மை கோயிலைத் தன் இராசதானியில் கட்டுவித்து வணங்கி வந்தான். மறவர் குடியேறிய பாகங்களிலெல்லாம் துர்க்கை கோவில்கள் ஸ்தாபிதமாயின. பருத்தித் துறை சாமுண்டியம்மை, வல்வை முத்துமாரியம்மை, இடைக்காடு மாதகல், அராலி, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய இடங்களிலுள்ள அம்மன் கோயில்களெல்லாம் இந்நோக்கமாகவே உண்டாயின.”

மேலே கூறிய செய்தி 7-2-67ல் தினகரனில் வெளிவந்த கட்டுரைச் செய்தியாகும். இதனை இங்கு பிரசுரிக்கவேண்டிய பிரதான நோக்கம், கோயில்களைப் பற்றியல்ல மறவர் களின் குடியேற்றத்தைச் சுட்டிக்காட்டவேயாகும்.

இவ்வித ஏதுக்களைக்கொண்டு மறவர்கள் யாழ்ப்பாணத்தில் பலபாகங்களிலும் குடியேறியுள்ளது நிச்சயமென்பதை முடிவுகட்டலாம். இவர்கள் குடியேறிய ஒரு சிலஇடங்களில் தற்போது இக்குலத்தவர்கள் இல்லாவிடினும் இவர்களின் குலப்பெயர் களைக் கொண்ட கிரமங்களான மறவன்புலம், மறவன்காடு, மறவனோடை, மறவன்பிட்டி இன்றும் இருப்பதை நாம் அறியலாம்.

இவர்களின் குடியேற்றம் மாதோட்டத்திலுமுண்டு. மாதோட்டப் பகுதியில் மறவர்களின் நாமத்தோடு அநேகம் காணிகளும், கிராமங்களும் இருக்கின்றன. அடம்பனுக்கருகில் மறத்திகன்னாட்டி என்னும் ஓர் கிராமம் இருப்பதையும், அங்கு ஏராள மான மறவர்கள் இன்றும் நிலத்தரசர்களாயிருந்து வருவது இதற்கோர் எடுத்துக்காட்டாகும். பூநகரியிலும் இக்குலத்தவர்கள் சீவிக்கின்றார்கள்.

மறவர்கள் உயர்வான சத்திரியகுலத்தவர்களான படியால் மேன் குடிமக்கள் எவ்வித அச்ச ஆசவமின்றி சம்பந்தம் செய்ததினால் காலகதியில் இவர்களின் குலம் கருகிப் போயிருக்கலாமெனவும் யூகிக்க இடமுண்டு.

மாதோட்டத்திலும், யாழ்ப்பாணப் பகுதியிலும் மறவர்களின் நாமங்களைக் கொண்ட காணிகள், தோட்டங்கள், வயல்கள் விளங்குமாப்போன்று நெடுந்தீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, லைடன்தீவு முதலாந் தீவுகளிலும் பலபல இடங்கள் செறிந்து விளங்குவதினால் இங்கும் இவர்களின் குடியேற்றம் இருந்திருப்பது உண்மையேயாகும். அதிலும் விசேஷமாக நெடுந்தீவில் இவர்கள் நிச்சயம் குடிபுகுந்திருப்பதற்குப் பலபல காரணங்களுமுண்டு.

நெடுந்தீவு இந்தியாவுக்கு வெகு சமீபமாயிருப்பதாலும், அதிலும் பாண்டி நாட்டின் கிராமங்களான, இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், கோடிக்கரை, தனுஷ்கோடி, அக்காமடம், தங்கச்சிமடம், வல்லை முதலான கிராமங்கள் இருபது மைல் தூர வித்தியாசத்திலே அமைந்துள்ளதாலும், வல்வை ஓர் பிரசித்தம் வாய்ந்த கடற்றுறையாக விளங்கியதினாலும், வல்லையிலும் மேற்கூறிய கிராமங்களிலும் பெருந்தொகையான மறவர்கள் வாழ்ந்தமையாலும், மறவர்கள் வெகு இலகுவாக நெடுந்தீவில் வந்து தங்குவதற்கும், குடிபதியாய் வாழ்வதற்கும், வாய்ப்பிருக்கிறது.

அன்றியும் சிங்கள அரசன் காலத்திலும், யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்திலும், இத்தீவு சகல சீர்சிறப்புகளுடன் தலைநிமிர்ந்து விளங்கியதுமல்லாமல் ஆதியில் இலங்கைக்குப் படையெடுத்து வந்த பாண்டிய சோழ மன்னர்களுக்கும், பிறநாட்டு வணிகர்களுக்கும் தகுதிவாய்ந்த ஓர் கேந்திர ஸ்தானமாகவும் அமைந்துள்ளது. மார்த்தாண்ட சிங்கை ஆரியன் தனது முத்துக்குளிப்புத் துறைகளையெல்லாம் காவல்காக்க நெடுந்தீவிலே ஒரு கப்பல் படையை வைத்துள்ளதாகவும் சரித்திரங் கூறுகிறது. (யா. ச. ஆ. மு.)

கண்ணகியின் காற்சிலம்பு செய்ய இரத்தினம் கொண்டுவருவதற்காகக் கரிகால் சோழன் அனுமதியோடு வந்த மீகாமனின் கப்பல் படையோடு, வெடியரசனுக்குச் சார்பாக திருவடி நிலையில் காவல்செய்த வீரசாராயணனும், கீரிமலையிலிருந்த ஏலேலங்குருவனும், ஒரு பெருங் கடற்போர் நடத்திய துறையும் நெடுந்தீவென்பதையும் சரித்திரம் சொல்லாம லில்லை.

குணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ. மு. பி)
வுநஅpழசயட யனெ ளுpசவைரயட ஊழபெரநளவ ழக ஊநலடழn

யாழ்ப்பாணத்தரசனான சங்கிலி மன்னன் போர்த்துக்கேய தளபதி மாநாட்டின் அல்போன்சா சூசாவோடு 5000 பர்தா நாணயமும், இரு கொம்பன் யானைகளும் வருடக் கப்பமாகத் தருவதாகவும், முன் திறையாக இருவருடக் கப்பத்தையும் ஒருங்கே செலுத்தி சமாதான உடன்படிக்கை செய்துகொண்டதும் நெடுந்தீவிலேயாம்.

இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மணிபல்லவம், நாவலந்தீவு முதலாம் பெயர்கள் நெடுந்திவையே குறிப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். பால்தீவு, தயித்தீவு, அபிஷேகத்தீவு எனவும் நெடுந்தீவு அழைக்கப்பட்டதாம்.

சிங்களமக்கள் வடபகுதிகளில் பரவியிருந்த காலத்தில் நெடுந்தீவிலிருந்து அநேக மருந்து மூலிகைகளைப் பெற்றுள்ளார்கள். இதனால் அவர்கள் இத்தீவை “அவசத லோகய’ வென அமைத்தனர். வைத்தியத் தொழிலில் பெரும் புகழ் வாய்ந்து “வைத்திய ராஜசிங்கன்” என்னும் பட்டஞ் சூட்டப் பெற்ற யாழ்ப்பாண அரசனான செகராசசேகரன் நெடுந்தீவை “மருத்துமா மலைவனம்” எனப் பெயர் கொண்டழைத்துள்ளான். (யாழ்ப்பாண வைபவமாலை)

“நெடுந்தீவு” என்னும் தலையங்கத்துடனும் “ஈழத்தின் காவல்தளம்” என்னும் உபதலையங்கத்துடனும் தினகரன் வாரமஞ்சரியில் திரு. எஸ். கே. பரமேஸ்வரன் பி. ஏ (ஆனர்ஸ்) அவர்களால் எழுதப்பெற்று 1969ம் ஆண்டு வைகாசி மாசம் 23ந் திகதி கட்டுரையில் நெடுந்தீவின் பண்டைக்காலச் சிறப்பு தெளிவான ஆராய்வுத் திறனோடு எழுதப்பட்டிருக்கிறபடியால் அதன் ஒரு பகுதியை அப்படியே கீழே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.

“வரலாற்றுக் காலத்தில் நெடுந்தீவு பெரும் புகழ்பெற்றதும், மதிப்பு வாய்ந்ததுமான ஒரு தீவாக இருந்திருக்கின்றது. காரணம் இந்தியாவிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி வரும் படையெடுப்பை முக்கிய முதல்வாயிலாகவுள்ள நெடுந்தீவிலிருந்து கண்காணிக்க முடிந்தது. அக்காலத்தில் படையெடுப்பு அயல்நாடான பாரதத்திலிருந்தே அடிக்கடி ஏற்ப்பட்டது. எனவே நெடுந்தீவு சிங்களமன்னர் காலத்திலுஞ் சரி, யாழ்ப்பாண மன்னர் காலத்திருஞ் சரி இலங்கை இராச்சியங்களுக்கு ஒரு காவற்றளமாகவும், சிறந்த போர்முகமாகவும் அமைந்திருந்தது. இதனால் முதன் முதல் போர்வீரரே இங்கு சென்று குடியிருக்கவேண்டும். பாடிவீடு அமைத்து வாழ்ந்த போர்வீரர் காலப்போக்கில் தம் குடும்ப வாழ்க்கைக்கேற்ப நாட்டை வளமாக்கி வாழ்ந்து வரலானார்கள்.”

மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது.

4
குடியேற்றம்

தமிழ் நாட்டிலே தொழிலின் காரணமாகவே சாதிப்பிரிவுகளேற்பட்டதென்பது சகலரும் ஒரே வாய்ப்பட ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும். பலபல தொழில்களைப் புரியும் சகல சாதியரும் நாட்டுக்குத் தேவைப்பட்டபடியால் எல்லாக் குலத்தவர்களும் ஈழநாட்டில் குடியேற்றப்பட்டனர். இன்னும் இராசபவனிக்கும், அரசாங்க சேவைக்கும் தேவைப்பட்ட சிவிகை காவுவோர், கோல் கொண்டொழுகுவோர், முரசடிப்போர், பறைசாற்றுவோர் முதலா னோர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இவர்களைப் போலவே அரசனையும் நாட்டையுங், காப்பதற்கும், பயமின்றி வாழ்வதற்கும், பகைவரை அழித்தொழிப்பதற்கும் தம் சொந்தக் குலத் தொழிலாய்க் கொண்ட மறவர்களையும் தம் நாற்படைகளிலும் பணிபுரிவதற்கும் வரவழைத்து அமர்;;த்திக் கொண்டனர்.

குடியேற்றப்பட்ட சாதியார்கள் அனைவரும் வேளாண் முதலிமார்களின் துணைகொண்டே, தருவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் மறவர்கள் படைவீரர்களா கவும் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இலங்கைக்கு வந்தார்களேயொழிய ஏனைய சாதியர்களைப் போல் வேளாண் பிரபுக்களால் குடியேற்றப்பட்டார்களென நம்ப இடமில்லை.

குடியேற்றப்பட்ட சாதியருள் ஒருசல சாதிமக்களுக்கு அரசாங்கம் சில பல ஒழுக்கங்களை வகுத்து, அதனைக் கட்டாயச் சட்டமுமாக்கி அதன் பயனாய் நாட்டுக்கு வருமானத்தையும் ஊழியத்தையும் தேடிக்கொண்டது. உதாரணமாக வேளாளர், செட்டிகள் முதலாம் சாதியருள் தாம் தாம் ஒழுதுண்டு வாழ்பவரைத் தவிர உழவர், பள்ளர் முதலாம் பண்ணையாட்களைக் கொண்டு கமஞ்செய்து உண்பவரெல்லாம் தமக்கு வேலைசெய்யும் அத்தனை வேலையாட்களையும் கொண்டு வருஷமொருமுறை பதினைந்து நாட்களுக்கு இராச ஊழியஞ்செய்ய அனுப்புதல் வேண்டும். விளைவில் ஆறிலொரு பங்கும் கொடுக்க வேண்டும். சிவியார் எனப்பட்டோர் அரசாங்க சிவிகையாட்களாகவும், சிவிகை முன் செல்லும் கூறியராகவும், அரன்மனை வாயிலாளராகவும், ஒவ்வொரு குழுவினராக மாதந் தோறும் முறைப்படி இராசசேவை செய்யவேண்டும். இத்தொண்டிற்காக அரசாங்கத்தால் நிலங்கள் அவர்களுக்கு உபகரிக்கப்பட்டன. ஆண்டிகளானோர் விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்து ஊர்கள் தோறும், கிராமங்கள் தோறும் சென்று சங்குகள் ஊதி மக்களைத் துயிலெழுப்ப வேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலும் செய்யும் சேவைகளை ஒழித்த மற்றக்காலங்களில் ஊர்தோறும் சென்று யாசகம் பண்ணுவதோடு மாரியம்மன் கோயில், பிடாரி கோயில்களுக்குப் பூசகராயும் வலைஞர் முதலிய சாதியாருக்கு குருக்கள் மாராகவும் பணியாற்றவேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானவர்களில் அரசாங்க கடற் சேவையிலிருப்பவரைத் தவிர, மற்றவர்கள் முத்துக்குளிப்புக் காலத்தில் வருடத்தில் பதினைந்து நாளைக்கு அரசாங்க கடமையாற்றக் கடமைப்பட்டவராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. வலையர் அரசன் வேட்டைக்குச் செல்லும் போது உடன் செல்லவேண்டும். கடைஞர் சுண்ணம் நீற்றுக் கொடுத்தல் வேண்டும். கம்மாளர், கொல்லர், தச்சர் முதலான விஸ்வகர்ம குலத்தவர்கள் கிராம மக்களுக்கு தேவைப்பட்ட கலப்பை, கொழு, அரிவாள் முதலியவைகள் கூலியின்றிச் செய்து கொடுத்தும், வருடத்தில் எட்டு நாளைக்கு இராசகாரியமுஞ் செய்தல் வேண்டும். இவர்களுக்குக் கிராமங்கள் தோறும் வரியின்றி நிலங்கள் வழங்கப்பட்டன. ஈழத்திரும்பென நெடுங்காலம் பெயர்படைத்த இரும்பு யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட இரும்பேயாம். கன்னார், தட்டார், கற்சிற்பியர் இராச அரண்மனையிலும் கோயிலிலும் வருடத்தி;ல் பதினைந்து நாள் வேலைசெய்யுங் கடமைப்பட்டவராவர். மேலே கூறப்பட்ட சாதியரைப் போலவே மறவரும் பதினாறு முதல் இருபத்துநான்கு வயது வரையும் போர்ப்பயிற்சி கற்றுப் பின்பு கிராமக் காவலராகி அரவரால் தத்தமக்கு விடப்பட்ட நிலத்தில் பயிர்செய்து வாழ்ந்து படைத்தொழிலுக்கு வேண்டிய காலத்தில் தொண்டாற்றவும் கடமைப்பட்ட வராயினர்.

இவ்விதிகளுக்கமையவே பண்டைக் காலத்தில் சகலசாதியரும் வருடத்தில் சில நாட்களுக்கு இராசபணிகள் செய்து வந்தனர். இவ்வழக்கம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம் வரைக்கும் நீடித்திருந்து பின்பு 1810ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
(யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. மு. பி.)

கைலாயமாலைப் பாடலிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலும் கூறப்பட்ட தனிநாயகமுதலியும் அவன் பரிவாரங்களும் நெடுந்தீவில் குடியேறுவதற்கு முன்னும், முஸ்லிம்கள் சங்கு குளிப்பதற்கு இங்கு வந்து தங்குவதற்கு முன்னும், படைவீரர்களே ஆதியில் நெடுந்தீவில் குடியேறினர் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. இவர்கள் தமிழ் நாடான பாண்டி நாட்டிலிருந்தே வந்தவர்களாவர். பாண்டிநாட்டில் போர்வீரர்கள் யாவரும் மறவர் குலத்தார் என்பது சங்க இலக்கியங்களாலும் மற்றும் இந்தியநாட்டுச் சரித்திரங்களாலும் சந்தேகமறத்தெளிந்த உண்மையாகும். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும். நெடுந்தீவில் இவர்கள் குடியேறிய காலத்தில் தாம் இந்தியாவில் வசித்த கிராமத்தின் பெயரான வல்லையை இங்குஞ் சூட்டியுள்ளார்கள். தற்போது வல்லையெனப்பட்ட பெயரால் வெல்லையாக மாறப்பட்டு வந்துள்ளது. யுத்தத்தில் பணிபுரியாத மறவர்கள் வெல்லையில் குடியேறியிருக்கலாம். போர்வீரர்கள் மாத்திரம் துறைமுகத்துக் கருகாமையில் பாடி அமைத்து வாழ்ந்து பின்பு குடும்பமாய் வாழ்வதற்கும் இவ்விடத்தையே வளமாக்கிக் கொண்டிருக்கலாம். காலகதியில் தமிழ் மன்னர்களின் செல்வாக்கும், யுத்தங்களும் குறைந்து குறைந்து போக, யுத்தத் தொழிலையே நம்பியிருந்த மறவர்கள் தம் சீவனத்திற்காக வௌ;வேறு தொழில்களைப் புரியவுந் தலைப்பட்டனர். வெல்லையில் குடியிருந்தோரும் மெல்ல மெல்லத் துறைமுகத்தை நாடிவரலாயினர். துறைமுகத்தில் போர் வீரராகக் கடமையாற்றியோரும், வெல்லையிலிருந்து மெல்ல மெல்ல வந்தோருமான இக்குலத்தவர்கள் தம் தாயகமான இந்தியாவை நாடாமல், நெடுந்தீவு நடுக்குறிஞ்சியையே தம் சொந்த நடாக்கிக் கொண்டு வாழலானார்கள். இவர்களின் குலப்பெயர்களைக் கொண்ட மறவன்புலம் என்னும் ஒரு பரந்த வெளியும், மறவனோடையும் நெடுந்தீவிலிருப்பது கண்கூடு.


5
ஈழத்தில் போர்த்துக்கேயரும்
கத்தோலிக்கமும்

ஐரோப்பிய சாதியாருள் இலங்கைக்கு முதன் முதல் காலடி வைத்தவர்கள் போர்த்துக்கேயராவர். இவர்கள் இலங்கையில் பிரதானமாய் நடைபெறும் வியாபாரமான ஏலம், கறுவா, கராம்பு முதலாம் வாசனைத் திரவியங்களைத் தம்கைவசமாக்க ஆவல் கொண்டிருந்தனர்.

காத்திராப் பிரகாரமாக 1505ம் ஆண்டு இவர்களின் தளபதியான லோறன்சோடி அல்மெயிடா கீழ் நாடுகளின் கடல்களிலே சூறையாடித் திரியும் முஸ்லிம்களைப் பிடிக்கும் நோக்கமாகச் சாகாரஞ் சுற்றிவந்தபோது பெரும்புயலில் அகப்பட்டுத் திசை தெரியாது காலித் துறைமுகத்தை அடைந்து, பின்பு இலங்கையின் தலைப்பட்டணம் கொழும்பென அறிந்து அங்குபோய் நங்கூரம் பாய்ச்சினான். அப்போது கொழும்பைக் கட்டி ஆண்டவன் எட்டாம் வீரபராக்கிரமவாகுவாகும்.

இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகையைக் கண்டதும் முஸ்லிம்களானோர் தாம் வழமையாய் நடத்தி வரும் வியாபாரத்துக்கும், முத்துக் குளிப்புத் துறைகளுக்கும் சங்கடங்கள் வந்ததென நினைத்து சிங்களவர்களைப் போர்த்துக்கேயருடன் போர் பொருதும்படி ஏவி விட்டனர். சிங்களவரானோர் இவர்களின் நிறம், உடை, உணவு முதலானவைகளைக் கண்டு அதிசயப்பட்டிருந்தும் முஸ்லிம்களின் தூண்டுதலால் போருக்கெழுந்தனர். எனினும் போர்த்துக்கேயரின் பீரங்கிகளின் அதிர் வெடியைக் கேட்டதும், அச்சமுற்றுப் போரை நிறுத்திச் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.

முத்துக்குளிப்புத் துறையின் காரணமாக முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கேயருக்கும் பல முறைகளில் யுத்தங்கள் ஏற்ப்பட்டன. இவ் யுத்தங்களினிறுதியில் முஸ்லிம்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் முத்துக் குளிப்புத் துறைகள் யாவும் போர்த்துக்கேயர் வசமாயின.

இவர்கள் கொழும்பை அடைந்த காலத்தில் திரிகோணமலையும், மட்டக்களப்பும் ஒரு தமிழ்ப்பிரதானியாலும், யாழ்ப்பாணம், மன்னார், நெடுந்தீவு முதலாம் ஏனைய தீவுகளும் ஏழாம் செகராசசேகரன் அல்லது சங்கிலி என்னும் நாமம் பூண்ட தமிழ் மன்னராலும் ஆளப்படலாயிற்று. இவ்வரசன் தன் தமையனைக் கொன்று அரசு கட்டிலேறியவன். தன் தமையன் பக்கம் சார்ந்தோரனைவரையும் எவ்வித ஈவிரக்கமின்றிக் கொலை புரிந்தனன். இவனது கொடூரச் செயலைக் கூற்றோ என்னம் சரித்திராசிரியர் விபரிக்கும் போது, இவனுடைய மாளிகையின் முன்னலில் ஓர் பாரிய குற்றியிருந்ததாகவும், அக்குற்றியின் மேல் வைத்துத் தனது பிரசைகளின் தலைகளை வெட்டுவானென்றும், இக்கொடிய தண்டனைக்குப் பாரிய குற்றங்களும், சாட்சிகளும், விசாரனைகளும் தேவையில்லையென்றும் அற்ப சொற்பமான சமுதாயம், கட்டுக்கதை, சந்தேக நினைப்பு அல்லது கனவுதானுமே போதுமாயிருந்ததென்றும் கூறியுள்ளார். யாழ்ப்பாணக் கரையோரங் களில் வந்தேறிய கப்பல்களைக் கொள்ளையடிப்பதும் இவனது வழக்கமாயிருந்தது. இதனால் போர்த்துக்கேயரும் இவன்பால் வெறுப்புக் கொண்டனர்.

கத்தோலிக்க வேதத்தை இலங்கைக்கு முதன்முதல் கொண்டுவந்தவர்களும் போர்த்துக்கேயராவர். இவர்கள் இம்மதத்தை இங்கு பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் கொஞ்சமல்ல. இவர்களின் திருமுயற்சியான இப்பெருமுயற்சியை அழித்தொழிக்க தமிழ் சிங்கள ஒல்லாந்த அரசுகள் எடுத்துக் கொண்ட பிரயாசைக ளெல்லாம் வீண் விரயமானதுமன்றிப் பல மாகாணங்களிலும் விரைவில் பரவி ஒன்றுக்கு றூறாய்ப் பெருகி பலவேத சாட்சிகளையும் தோன்றச் செய்தது.

மன்னாரின் வேதாட்சிகள் (பக். 5 வண. ஏ. ஜே. பி. அன்ரேனியஸ்)
இலங்கை அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளும் (விக்கர் தம்பிநாயகம்)


புதிதாய் தோன்றிய இக்கத்தோலிக்க மதம் வெகுசீக்கிரத்தில் வளர்ந்தோங்கி வருவதை ஆலோசிக்கும் பொருட்டு புத்த சந்நியாசிகளால் அவிசாவளையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தி;ல் விவேக புத்தி படைத்த ஒரு பௌத்த குரு “மனிதனின் மரணத்துக்குப் பின்னுள்ள சீவியத்தைப்பற்றி பிரான்சிஸ் சவேரியாரின் போதனைகள் நியாயமானதென்றார்.” இவ்வளவு தான் இவரை உடனே நாடுகடத்தி பர்மாவக்கனுப்பவும், கப்பல் வருமளவும் திரிகோணமலையில் மறியல் வைக்கவும் உத்தரவாயிற்று. இதனை அறிந்த கத்தோலிக்கர்கள், இவரைச் சிறைச்சாலையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். யோன்டிசில்வா என்னும் போர்த்துக்கேயக் கனவானும் அடிக்கடி சிறைச்சாலை சென்று இவருக்குச் சத்திய வேதத்தைப் போதித்து வந்தார். இவரின் போதனையால் மனம் மாறிய பௌத்த சந்நியாசி வண. பிராண்ஸிஸ் அந்தணுஸ் சுவாமியாரால் ஞானத்தீட்சை பெற்றுக் கத்தோலிக்கராயினர். காத்திருந்த கப்பலும் வந்து இவரை அரகனுக்குக் கொண்டு சென்றது. இவரின் மனதை மாற்ற பௌத்த குருமார்கள் எடுத்த முயற்சிகள் யாவும் வீணாயின. கடைசியாய் அரகன் என்ற இடத்தில் 1543ம் ஆண்டு மார்கழி மாசம் 5ம் திகதி சிரச்சேதம் செய்யப்பட்டு வேதாட்சியென்னும் மகிமை இப் பௌத்த குருவுக்கே உரியதாகும்.

1543ல் போர்த்துக்கேயத் தளபதியான மாட்டின் அல்போன்சா டீசூசா ஒரு சிறு கப்பற்படையுடன் சங்கிலியன் ஆணைக்குளடங்கிய நெடுந்தீவு சென்று நங்கூரம் பாய்ச்சி தம் வரவை அவனுக்கு அறிவித்தனன். போர்த்துக்கேயரின் வருகையை அறிந்த சங்கிலியன் தற்போது தான் பலவழியாலும் பலமிழந்து சோர்வுற்றுத் தளர்ந்திருக்கும் நிலையையுணர்ந்து, போருக்குப் புறப்பட எத்தனியாமல் 5000பரதாசு நாணயங்களும் வருடா வருடம் திறையளிப்பதாகக் கூறி. இவ்வருடத்திறைகளையும் உடனே செலுத்தி, தாம் கப்பல்களில் சூறையாடிய ஆயுதங்களையும் திருப்பிக் கொடுத்து சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனன்.

இங்ஙனமிருக்க மன்னார் வாசிகளானோர் இந்தியாவிலே, புனித பிரான்சிஸ் சவேரியாரால் போதிக்கப்பட்டுவரும் கத்தோலிக்க மதத்தின் உண்மையையும், சத்தியத்தையும் தம் குலத்தவர் வாயிலாக அறிந்ததும் தாமும் அம்மறையில் சேரவேண்டு மென்று ஆசைப்பட்டு மன்னாரில் ஓர் வகையில் தேசாதிபதி போலும். மற்றோர் வகையில் சிற்றரசன் போலுமிருந்த உறசிங்கம் அல்லது இளசிங்கம் என்னும் பெயர்கொண்ட தம் குலத்தவரின் தலைமையில் 1544ம் ஆண்டு ஆவணி மாசம் புன்னைக்காயலில் பேராதனை பண்ணிநின்ற புனித பிரான்ஸிஸ் சவேரியாரிடம் கரையாபட்டாவோ என்னுமிடத்திலிருந்து தூது சென்றனர்.

மன்னார் வாசிகள் கத்தோலிக்கராவதற்குள்ள ஆசையை அறிந்திருந்தும், அச்சமயம் புனித சவேரியார் இந்தியாவை விட்டு உடனே புறப்பட்டு வருவதற்கு வசதியற்றவரான படியால், தமது நாமங்கொண்ட ஒரு சுதேசகுருத் தொண்டரை மன்னாருக் அனுப்பிவைத்தார். இக்குருத் தொண்டர் மன்னாருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு ஞானதீட்சை கொடுத்து கத்தோலிக்கராக்கினர்.

தன்னாணைக்குட்பட்ட மன்னாரில் பிறமதத்தைச் சேர்ந்த குருவானவர் வேதம் போதிப்பதையும் மன்னார் வாசிகள் அப்புதிய மறையில் சேருவதையும் “ஜெதகாஸ்” அல்லது சைவக்குருக்கள் மூலம் அறியவந்த சங்கிலி மன்னன் சீறிச்சினந்து மன்னாரையடு த்துள்ள தாய்த்தீவின் கரையோரங்களிலும், யாழ்பாணத்திலுமுள்ள 5000 வீரர்களை ஆயதபாணிகளால் ஆயத்தப்படுத்தி தானே தளக்கத்தனாய் நின்று மன்னாருக்கு புறப்பட்டான். அங்கு சென்று இப்புதிய மறையை கைவிடுமாறு அவ்விசுவாசிகளை மிரட்டியும், விரட்டியும், அச்சுறுத்தியும் பார்த்து யாதொரு பலனில்லாதது கண்டு கத்தோலிக்கரானோர் அனைவரையும் சிரச்சேதம் செய்விக்குமாறு உத்தரவிட்டான். உத்தரவு பிறந்ததும் வீரரானோர் எவ்வித ஈவிரக்கமுமின்றிக் கத்தோலிக்கரானோர் அனைவரையும், அவர்களின் கைக்குழந்தைகளையும் தம் கூரிய வாள்களுக்கு விருந்திட்டனர்.

வேதசாட்சிகளானோர் தொகை ஆன்றெடிசூசா என்பவர் போர்த்துக்கல்தேச அரசனான 3ம் யோண் டின்பவருக்கு 1545ம் ஆண்டு கார்த்திகை மாசம் 15ம் திகதி எழுதிய கடிதத்தில் 700 கிறீஸ்தவர்கள் கொல்லப்பட்டார்களென்றும், கோட்டே இளவரசனான டொன்யோண் போர்த்துக்கால் அரசனான 3ம் டொன்ஜோனுக்குக் கோவையிலிருந்து 1545ம் ஆண்டு கார்த்திகை மாசம் எழுதியபோது அக்கொடுங்கோலன் 700 கிறீஸ்தவர்களை கொன்றானென்றும், வண லெவாவர் சுவாமியார், சந்தக் குருஸ் சுவாமியாருக்கு எழுதியபோது 600 வேதசாட்சிகளென்றும், 1545ம் ஆண்டு கார்த்திகை மாசம் இவ்வாறே பட்டணத்தில் மீசாங்களைப்பற்றி கல்விமான்களால் எழுதப்பட்ட நூலில் வேதாட்சிகளின் தொகை 600 என்றும் பலபல சரித்திராசிரியர்களும் பலவித கணக்கில் எழுதப்பட்டுள்ள போதிலும் 600க்கும் 700க்கும் இடைப்பட்ட கத்தோலிக்கரானோர் வேதாட்சிகளானார்களென்பது முற்றிலும் உண்மையாகும். இவர்களனைவரும் கடைஞர் குலத்தைச் சேர்ந்தர்களென “மன்னார் வேதாட்சிகளின் உண்மை வரலாறு” என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

மன்னாரின் வேதாட்சிகள் பக் 7

மன்னார்க் கிறீஸ்தவாத்களுக்கு சங்கிலியனால் நடைபெற்ற இக்கொடூர சம்பவத்தைக் கேள்விப்பட்ட புனித பிரான்ஸிஸ் சவேரியார் தாங்கொணாத் துயரால் மனம் நொந்தவராய் தனது வேதப்பரப்புதல் வேலைகளையெல்லாம் நிறுத்தி விட்டுக் கோவைக் குச்சென்று அல்போன்சாடீசூசா என்னும் தேசாதிபதியை நேரில் சந்தித்து, மன்னாரின் வேதகாலபனையைவிளக்கி, இதனைச் செய்வித்த கொடுங்போலனான சங்கிலியனைத் தண்டிக்காவிடில் அங்கு வேதப்பரப்புதல் வேலை செய்வதில் நம்பிக்கையில்லையென்றும் எடுத்துரைத்தார். இதனைச் செவிமடுத்த தேசாதிபதி கடுங்கோபங்கொண்டு இக் கொடூரனை ஒழித்துக் கட்டப் பெரும் படையொன்று திரட்டும்படி கட்டளையிட்டும் கரையோரமாயுள்ள தளபதிகட்கெல்லாம், தம்சைனியங்களைச் சேர்த்துக்கொண்டு நாகபட்டினம் வரும்படியும், அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கேகி அவ்வரசனைக் கொல்லவேண்டும் அல்லது அவனை உயிரோடு பிடித்தால் பிரான்சிஸ் சவேரியார் கையில் ஒப்படைக்கவேண்டும் அவன் சீவிக்க வேண்டுமோ அல்லது சாகவேண்டுமோ என்பதைச் சவேரியாரே தீர்ப்பாரென்று கட்டளையிட்டான்.

இக்கட்டளைப்படி படைகள் திரட்டப்பட்டன. இங்ஙனமிருக்க பேகு தேசத்திலிருந்து திரும்பிவந்த போர்த்துக்கேயரின் வியாபாரக் கப்பலொன்று யாழ்ப்பாணக் கடற்கரையில் மோதியதால் நாகபட்டணத்திலிருந்த பறப்படவிரந்த, கடற்படையும் உடனடியாக நிறுத்தப் பட்டது. இதனால் மன்னாரைத் தாக்கவிருந்த யுத்தமும் பின்போடப்பட்டது.

எனினும் சங்கிலியனின் கர்வத்தை அடக்கவேண்டுமென்ற எண்ணமும், மன்னாரைக் கைப்பற்ற வேண்டுமென்ற ஆசையும் போர்த்துக்கேய மன்னனான மூன்றாம் தொன்சுவானின் மனதை விட்டு அகலவில்லை. ஆகவே 1560ம் ஆண்டில் மீண்டும் ஒரு பெரும்படை திரட்டி டொன் கொன்ஸ்ரன்ரைன்டிபிறகன்சா தலைமையில் 92 கப்பல்கள் படைகளுடனும் 4000 படைவீரர்களுடனும் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்று ஊர்காவற் துறையில் பண்ணைத் துறையையண்மி யாழ்ப்பாண அரசனான சங்கிலியனோடு போர் பொருதினர். இப்போரில் சங்கிலியன் தோற்கடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மன்னார் முதலாமிடங்கள் யாவும் போர்த்துக்கேயர் வசமாயின.

புனித பிரான்சிஸ் சவேரியாரும் மன்னாரிலிருந்து சங்கிலி மன்னனைக் காண வரும் வழியில் நெடுந்தீவிற்குச் சென்று அங்கு ஓர் மகமதியச் சிறுமிக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தாகவும் சரித்திரம் கூறுகிறது. (இலங்கை அப்போஸ்தலர்களும் வேதாட்சிகளும்) விக்ரர் தம்பிநாயகம்.


6
நெடுந்தீவில் கத்தோலிக்கவேதமும்
சஞ்சுவான் கோயில்
கிறீஸ்தவர்களும்

போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம், மன்னார்; முதலாமிடங்களைக் கைப்பற்றியபின், கத்தோலிக்கசமயம் எவ்வித இடைய+றுமின்றி நாலா பகுதிகளிலும் வளரத் தொடங்கியது. பெருந்தொகையாகக் கத்தோலிக்க குருமார்கள் தருவிக்கப்பட்டு மத போதனைகளும், ஞானத்தீட்சையும் கொடுக்கப்பட்டு ஆலயங்களும் எழுப்பப்பட்டன. யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் அதன் சுற்றுப் புறங்களிலும், தீவுப் பகுதிகளிலும் வண. பேதுறுதே பெற்றக்கோன் சுவாமியாரால் பதினாறாம் நூற்றாண்டில் போதகம் பண்ணப்பட்டது. இக்குருப்பிரசாதியாலேயே ஊர்காவற்றுறையில் முதன்முதல் கத்தோலிக்க வேதம் போதிக்கப்பட்டு, அங்குள்ளார்க்கு ஞானதீட்சையும் கொடுக்கப்பட்டு தற்போது வாடிவீடு அமைத்திருக்கும் இடத்தில் யுவானியார் கோயிலும், அதன் எதிரேயிருக்கும் சுங்கவளவில் இரண்டடுக்கு குருமனையும் கட்டி எழுப்பப்பட்டன.

போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் எவ்வண்ணம் மன்னாரில் கத்தோலிக்க வேதம் ஆரம்பிக்கப்பட்டதோ அவ்வண்ணமே ஏனைய தீவுகளிலும் பார்க்க முதன்முதல் நெடுந்தீவில் கத்தோலிக்க வேதம் ஆரம்பிக்கப்பட்டதென யூகிக்க இடமிருக்கிறது.

முதன் முதல் கத்தோலிக்க வேதம் ஆரம்பிக்கப்பட்ட பாரதபூமியும் நெடுந்தீவும் வெகு சமீபமாயிருப்பதினாலும், புனித சவேரியார் நெடுந்தீவைத் தரிசித்தமையாலும், போர்த்துகேயப் படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன் நெடுந்தீவில் தங்கியிருந்தமையாலும் கத்தோலிக்க வேதம் ஏனைய தீவுகளையும் விட இங்கு முதன் முதல் தோன்றியிருக்கலாமெனக் கூற இடமுண்டு. பதினேழாம் நூற்றாண்டில் யோசேவ்வாஸ் முனிவரும் நெடுந்தீவைத் தரிசித்துப் பலபேருக்கு ஞானத் தீட்சை கொடுத்துள்ளார். நெடுந்தீவில் முதன்முதல் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியவர்கள் சஞ்சுவானியார் கோயிற் கிறீஸ்தவர்களேயாவர்.

இவர்கள் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியபின் போர்த்துக்கேயருக்கு இவர்கள் பால் மீசுரமான அன்பும் அபிமானமும், நம்பிக்கையும் ஏற்படலாயிற்று. இவர்களும் பத்தி விசவாசமுள்ள கத்தோலிக்கராகவும், வேத வைராக்கிய சீலர்களாகவும் திகழலாயினர். புதிய கிறீஸ்தவர்களாக இருந்தபோதிலும், வேதகடமைகளை அனுசரிப்பதிலும், கோயில் பணிகள் புரிவதிலும் எட்டுணையேனும் பின்வாங்காமல் ஒழுகி வாழ்ந்தனர்.

அன்றியும் தாங்கள் சந்ததி சந்ததியாய் தொழும்பராயிருந்து வந்த சைவசமயத்தை யும் அதன் ஆலய வழிபாட்டையும் தேர்த்திருவிழாக்களையும், விரத அனுட்டானங் களையும், அந்திரேட்டிகளையும், சைவஉணவு முறைகளையும் முற்றறக் கைவிட்டும் விட்டனர். சமயமாற்றத்திற்காக இடையிலுறவு பூண்ட போர்த்துக்கேயரைப்போல் மச்சமாமி சம் உண்டு. லாகிரி வஸ்துக்கள் அருந்தியும், தமிழரின் பண்பாட்டுகந்த உடை நடை பாவனைகளை மெல்ல மெல்லக் கைநெகிழ்ந்தும், பரங்கியரைப்போல் பால்சட்டை, கோட்டு சப்பாத்து, தொப்பி முதலியவைகளை அணிந்தும், மணச் சடங்கும், பிணச்சடங்கும் மேற்கத்தியரைப் போன்று கேளிக்கையாக நடத்தியும் வந்தனர். காலகதியில் யாழ்ப்பாணத் திலோ மற்றுந் தீவகங்களிலோ எவருந் துணியாத மனதிலே நினையாத வகையில் பரங்கியரோடு சம்பந்தங்களும் செய்யத் தலைப்பட்டனர். பிற்பாடு சகல துறைகளிலும் அசல் பரங்கியரைப்போல் சீவித்துக் காலகதியில் தம் சிவனத்திற்காக அவர்களின் கடற்படையிலும் சேர்ந்து கப்பல் தொழில்களிலும் பழகி காலாந்தரத்தில் கைதேர்ந்த கம்மாளருமாயினர்.


7
மரக்கலம் ஓட்டிய வீரர்கள்.

பண்டைக் காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகத்திலிருந்து வடநாடு சென்று வாணிபஞ் செய்த பாரிய மரக்கலங்களில் இவர்கள் முதன்மை வாய்ந்த மீகாமராகவும் தண்டல் மாராகவும் அநேகர் பணியாற்றியுள்ளனர்.

இவர்கள் தண்டல் மாலுமிகளாகப் பணியாற்றிய

மரக்கலங்களின் நாமாவலி

மாலுமிகளின் பெயர்கள். மரக்கலங்களின் பெயர்கள்

சுவக்கீன் தானியேல் மரியயோசேப்பினா இம்மானுவேல் ஸ்கூனர்
சுவக்கீன் பறுனாந்து சத்தியாபடகு (இஃது இவர்களின் இனத்தவ
சவிரி சீனிமுத்து ரான பிரபல வைத்தியர் அந்தோனி சந்தியா
மனவேல் அந்தோனி என்பவருக்குச் சொந்தமானது)

அ. கபிரியேல் கதிரேசன்புரவி, சுப்பிரமணியபுரவி, கித்தானா

அ. சவிரி வீரலெட்சுமி, மரியயோசப்பினா, கந்தசாமி புரவி, (இக்கப்பல் தூத்துக்குடி வெள்ளையப் பா பிள்ளைக்குச் சொந்தமானது) (வீரலெட்சுமி என்ற பாய்க்கப்பல் வ. க. ஆ செட்டியாருக்குச் சொந்தமானது. இது 1884ல் புயலில் அகப்பட்டு கோவைக் கரையில் தரைதட்டியது.)

இன்னாசி தானியேல் மெனிஸ்டர் (இக்கப்பல் யம்போ என்னும் பரங்கியருக்குச் சொந்தமானது)

இன்னாசி நசரேத் உடுகேசன்
பிலிப் மரிசலீன் அறவளத்தம்மன்
வைத்தியான் சீனி யோசேப்பினா ஸ்கூனர்
இகஸ்தீன் தொம்மன் சுப்பிரமணியபுரவி
சுவக்கீன் மனவல் கதிரேசன் ஸ்கூனர் (இக்கப்பல் வ. ச. ஆ. செட்டியாருக்குச் சொந்தமானது.)

சவிரி அந்தோனி பாட்டியாபோட்
சவிரி வைத்தியான் வேலாயுத புரவி
அந்தோனி தீயோகு வீர்ச்மரிய (இக்கப்பல் அ. ச. மு. செட்டியா ருக்குச் சொந்தமானது.)

யக்கோ கபிரியேல் வேலயுத புரவி, வீர்;ச்மரிய
வெலிச்சோர் இறெப்பியல் வீர்ச்மரிய
யாக்கோ சவிரி வேலாயுத புரவி
கபிரியேல் ஞானம் வீர்ச்மரிய
வயித்தி கபிரியேல் வேலாயுத புரவி
யக்கோ மிக்கேல் வேலாயுத புரவி
பேதுரு குருசு வீர்ச்மரிய8
மதமாற்றத்தாலேற்பட்ட
மனமாற்றம்

இங்ஙனம் பலவகையாலும் சஞ்சுவான் கோயில் மக்கள் போர்த்துக்கேயரின் வாழ்க்கையைப் பின்பற்றியதால் இவர்களுடன் நெருங்கிய தொடர்பும் நேசபாசமும் மதிப்பும் வைத்து நடந்து வந்த நெடுந்தீவுப் பெருங்குடி மக்களும், மற்றுஞ்சாதியரும் மெல்ல மெல்ல இவர்களின் உறவையும், நட்பையும் கைநெகிழ்ந்தனர். இவர்களைக் கைவிடவேண்டியதற்கும் பல பல காரணங்கள் இல்லாமலில்லை. கைவிட்டதைப் பற்றிச் சற்று ஆழ்ந்து யோசித்தால் ஆச்சரியமுமில்லை.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் ஏனைய தீவுப் பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் இந்திய சிற்ப்பக்கலையுடன் தேங்கி வழிந்த சைவ ஆலயங்களும் வானளாவிய கோபுரங்களும், தேர்களும், தேரோடும் வீதிகளும் அன்ன சத்திரங்களும், திருக்குளங்களும் நிறைந்திருந்தன. வீதிகள் தோறும், கோலங்களும், கற்பூரப்புகையும், தேவார திருவாசகமும் ஒலித்தன. விபூதிப் பட்டை சாற்றிய ஆண்களையும் பெண்களையுமே தெருக்களிலும் திண்ணைகளிலும் காணலாம். மங்கல அமங்கல காலங்களிலும் அனாவிசியமான வெறியாட்டங்களோடு கூடிய களியாட்டங்களின்று அவரவர் சாதிக்குரிய வரிசை முறையோடும், சைவசமய விதிகளோடும் நடைபெறும் தமிழ்ப் பண்பாட்டிற்குரிய அணிகலன்களே ஆண்களிலும் பெண்களிலும் நின்றெறிக்கும்.

இவ்விதம் தமிழ் விதியோடும், சைவமுறையோடும் தமிழ் மன்னர் காலத்தில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்கள், எதிர் பாராமல் வந்த புதுச்சாகியத்தாரோடு உறவு கொண்டும், அவர்களோடு ஒன்றறக் கலந்தும், அவர்களைப்போல் புலால் உண்டும், லாகிரிவஸ்துக்கள் அருந்தியும், பாரம்பரியமாய் தொழுதுவந்து சைவ சமயத்தைக் கைநெ கிழ்ந்தும், புதுமறையில் புகுந்தும், விரதங்களை விட்டும், சைவ உணவுகளை விலக்கியும் வாழ்வார்களேயானால், இவர்களை அவ்வூரில் வாழும் பெருங்குடி மக்களும் பிறரும் துரோகிகளென்றும், விரோதிகளென்றும், ஒதுக்கிவையாதிருப்பார்களோ? அவர்களோடு நட் புறவுகொள்ளவும், கொடுக்கல் வாங்கல் பண்ணவும் மனம் ஒப்புவார்களோ! அன்றியும், எந்தவொரு உயர் சாதித் தமிழ் மகனாயினும் மாட்டிறைச்சியுண் போனைப் பொதுவாகப் “புலையன்” என்றழைப்பது சைவத்தமிழர் வழக்கம். இவர்கள் ஒழிப்பு மறைப்பின்றி பரங்கியரோடு கூடிப் பகிரங்கமாக மாட்டிறைச்சியை உண்டு வந்தால் இவர்களை வக்கணையாகப் புலையரென்றழையார்களோ? இது மட்டுமன்று போர்த்துக்கேயர் ஒல்லாந் தரின் நெருக்கிடையாலும், அடிதண்டம், பிடிதண்டம் முதலாங் கொடுந் தண்டணையாலும் அற்பசொற்ப சலுகையாலும், கைக்கூலியாலும் பட்டம், பதவி, பணம் முதலாம் பிற ஏதுக்களாலும் ஒரு சில சாதியர்கள் மதமாறினாலும் இவர்களைப்போன்று எந்தவொரு குலமும், எந்தவொரு நாடும், எந்தவொரு தீவும், கொஞ்சமேனும் அச்ச ஆசவமின்றி மணத்துணிவோடு பரங்கிகளோடு சம்பந்தம் செய்ததுண்டா? அதிலும் தமிழ் நாட்டைச் சூறையாடவும், தமிழ் மன்னனைச் சிறைப்பிடிக்கவும், தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு முதலானவைகளைச் சீரழிக்கவும், சைவ சமயத்தை அழித்தொழிக்கவும் ஆயுதபாணிகளோடு வந்திறங்கிய அந்நியரோடு சம்பந்தம் கொண்டால் எந்தத் தமிழ் மகனின் மனம் கொதியாதிருக்கும். இப்பேர்ப்பட்டவர்களை ஈனச்சாதியரென்றும், நச்சுச்சாதி யரென்றும் நாடு பூராவும் திரண்டு ஒதுக்கிவையாதிருப்பர்களோ. எந்தவொரு மேன் குலத்தில் தோன்றி ஒருவன், கீழ்க்குலத்தாரிடம் வகைதெரியாமல் சம்பந்தம் செய்து விட்டால், அவனை மாத்திரமன்று அவனது சந்ததி பூராவையும் நாம் கீழ்க் குலத்தாரென்று வக்கணை சொல்லியும் அவர்களிடம் பந்தி போசனம் பண்ணாமலும், சம்பந்தங்கள் செய்யாமலும் ஒதுக்கி வைத்துவருவதை நாம் இன்றும் காணலாம் ஒரு தனிமனிதன் செய்த தவறுக்காக அந்தச் சந்ததிமுழுதுமே பாதிக்கப்பட்டால், உயர்வோடும், பெருமையோடும், சைவ முறையோடும் வாழ்ந்து வந்த ஒரு பழமைவாய்ந்த ஒரு தமிழ்க்குலம் முழுவதுமே இவ்விழிவான தவறுதலைச் செய்திருந்தால் அக்குலத்தைப் “பரங்கி” என்ற நாமத்தை முன்னணியாக வைத்துத் “தமிழ்ப் பரங்கி” யென்றும் “சப்பாத்து பரங்கி” யென்றும் “மாடு தின்னிப் பரங்கி” யென்றும் அழையாமல் அவர்களின் உண்மைக் குலப் பெயர்கொண்டழைப்பதெங்ஙனம்?

இவர்கள் பரங்கியராக மாறியமைக்கும் இவர்களை பறங்கியரென்று அழைத்ததற்கும் “இலங்கை கத்தோலிக்க திருச்சபை” என்னும் நூலில் யேசுசபையைச் சேர்ந்த மறைத் திரு. சைமன் கிறகோரி பெரைராச் சுவாமியாரும், இவர்களைக் குறிப்பிடும் போது “போர்த்துக்கேய பரம்பரையினர், வஹக் கோட்டையைச் சுற்றிமட்டும் வாழவில்லை. வட இலங்கையிலும் இவர்கள் வாழுகின்றனர். குறிப்பாக நெடுந்தீவு, புங்குடுதீவு, இரணைதீவு போன்ற தீவுகளிலும் வாழுகின்றனர்” எனக் கூறியுள்ளார். இவ்வாரய்ச்சியாளரின் கூற்றுப் படி, போர்த்துக்கேயரின் காலத்தில் இக்குலத்தவர்கள் பரங்கியர் என்று அழைக்கப்பட்டது உண்மையென ஒப்புக்கொள்ள வேண்டியதொன்றாகும்.


9
முதலிமார்கள்

சிங்கையாரிய மகராசன் யாழ்ப்பாணத்தில் குடியேற்றம் செய்யக்கருதி தமிழ்நாட்டர சர்களுக்குத் திருமுகம் அனுப்பி வேளாண்குலப் பிரபுக்களையும் அவர்கீழுள்ள குடிமக்களையும் அனுப்பி வைக்குமாறு வேண்டினன். இவனது வேண்டுகோளுக்கினங்கி குடிகள் அனுப்பப்பட்டன. வந்திறங்கிய குடிகளை அரசன் பதினொரு பகுதிகளில் நிறுத்தினான். பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனையும், தம்பியையும் திருநெல்வேலி யிலும், காவிரிய+ர் நரசிங்கதேவனை மயிலிட்டியிலும், களவிநகர் செண்பக மாப்பாணையும் அவன் உறவினனான சந்திரசேகர மாப்பாணையும், கனகராயன் செட்டியையும் தெல்லிப் பளையிலும், கோவலூரிரிலிருந்து வந்த பேராயிரமுடையானென்னும் வேளாளனை இணுவிலிலும் (இவ்வூர் திருத்தப்படாமையால் இதனை விட்டு மேலைக்கிராமத்தில் போயிருந்தான்.) கச்சூர்வேளாளன் நீலகண்டணையும் தம்பிமார் நால்வரையும் பச்சிலைப் பள்ளியிலும், சிகரமாநகர வேளாளன் கனகமழவனையும், அவன் தம்பிமார் நால்வரையும் புலோலியிலும், கூபக நாட்டு வேளாளன் கூபகார்யேந்திரனையும், புண்ணியபூபாலனையும் தொல்புரத்திலும், புல்லூர்வேளான் தேவராயேந்திரனை கோயிலாக் கண்டியிலும், தொண்டைமண்டலத்து மண்ணாடுகண்ட முதலியை இருபாலையிலும், செய்யூர் இருமரபுந்துய்ய தனிநாயக வேளாளனை நெடுந்தீவிலும், காஞ்சிபுரத்து பல்லவன் என்னும் பிரபுவையும் இரண்டு துணைப்பிரர்க்களையும் பல்லவராயன் கட்டிலும் முறையேயிருத்தி அவ்வவ்பகுதிகளுக்கு அதிகாரிகளுமாக்கி வைத்தனர்.

இதன் பின் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு காவற்றளங்களும் அமைத்து, வடபகுதிக்கு இமயமான மாதாக்கனையும், கீழ்த்திசைக்கு சம்பகமாதாக்கனையும் தென்றிசைக்கு வல்லிய மாதாக்கனையும் தளபதியாகவும், வீரசிங்கனை சேனாதிபதி யாகவும் ஆக்கிவைத்தான்.

இவர்களை ஊரகக்காவலராகவும் மற்றும் ஊர்ப்புறக் காவலராக நாராயணனுக்கும், வேலனென்பவனுக்கும் இருதானைகளையும் ஒப்படைத்து இவ்விரு பேர்களையும் தாணைத் தலைவர்களாகவுமாக்கி வைத்தான். தற்போது நாராயணன் தானை இருந்த இடம் நாரந்தனையெனவும், வேலன்தானை இருந்த இடம் வேலணையாகவும் மருவி வழங்குகின்றன. (யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. மு)

தமிழ் அரசர் காலத்தில் ராயன், அதிராயன் முதலியென்னும் கௌரவப் பட்டங்கள் வேளாண் குலப் பிரபுக்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுவந்தது. மந்திரி, லிகிதர் முதலாம் உத்தியோகம் பார்த்தவர்கள் யாவரும் வேளாண் முதலிமார்களேயாவர். ஐரோப்பிய சாதியாரின் காலத்திலும் இவ்வுத்தியோகம் பார்த்தவர்கள் யாவரும் முதலிமார்களென்றும், ஈற்றில் இவ்வுத்தியோகங்கள் முதலியார் உத்தியோகமென்று அழைக்கப்பட்டு வந்தது.

போர்த்துக்கேயர், தம் காலத்திலுள்ள தமிழ் இராசகுடும்பத்தாருக்கு, “இராசா” வெனும் பட்டப் பெயரைத் தம் பெயர்களோடு சேர்க்கலாகாதென்றும், அதற்குப் பதிலாக “முதலி” என்னும் பட்டத்தை சேர்ப்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டனர். இதனால் பரராசசிங்கன் என்னும் முதன் மந்திரி இறந்த பிற்பாடு, இப்பதவியை வேறெருவருக்கு கொடுக்காது இதற்குப்பதிலாக நாலு மாதாக்கர்களை நியமித்துள்ளார்கள். கீழ் நாட்டுக்குச் சோழசிங்கச் சேனாதிராசா முதலியையும், வட பகுதிக்கு குமாரசூரிய முதலியையும் பதிவு செய்தனர்.

இங்ஙனம் வேளாண்குலப்பிரபுக்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட இம் முதலிப்பட்டம் காலகதியில் பரங்கியரால் வௌ;வேறு சாதியாருக்கும் வழங்கப்படலாயிற்று. மீன் குத்தகையைவிற்று அரசிறையைப் பெருக்கவேண்டுமென்றெண்ணிய போது வேளாண்குல மக்கள் இக் குத்தகையை வாங்குவதற்குப் பின்னின்ற படியால் கரையார் திரண்டு தமக்குள்ளே ஒரு அதிகாரியை நியமித்தால் வருமானம் பெருகுமெனப் பரங்கியருக்கு எடுத்துக்காட்டிய பின், அந்நோக்கத்திற்கு உடன்பட்டு கரையாருக்குள்ளும் ஒருவனை மந்திரியாக்கி அவனுக்குத் தொன்பிலுப்பு குருகுல நாயகமுதலியெனும் பட்டத்தைச் சூட்டினர். ஒல்லாந்தரானோர் பதினெட்டு இறாசல்களைப் பெற்றுக்கொண்டு இம் முதலிப் பட்டத்தை யாவருக்கும் வழங்கியும் வந்தனர்.

நெடுந்தீவில் செல்வஞ் செல்வாக்குப் படைத்த வேளாண் குலப்பிரபுவான இரு மரபுந்துய்ய தனிநாயக முதலியென்னும் பட்டத்தையும், இவர்காலத்திலேயுள்ள இன்னெரு அதிகாரியான வீரசிங்கம் என்பவருக்கும் வீரசிங்கமத்தேசு முதியென்னும் பட்டத்தையும் பரங்கியர் வழங்கியிருப்பதையும் அறிகிறோம்.

வேளான்குலப் பிரபுக்களுக்கு “முதலி” யெனும்பட்டம் பழங்காலத்திலிருந்தே வழங்கி வந்தபடியால், தனிநாயகமுதலிக்கு இப்பட்டம் பரங்கியரால் வழங்கப்பட்டதென எண்ண நியாயமில்லை. “மொன்” என்ற பட்டத்தை ஒல்லாந்தரால் வழங்கப்பட்டதென ஏற்றுக் கொள்ள இடமுண்டு. வீரசிங்கமத்தேசு முதலியென்னும் பட்டத்தையும் பரங்கியர் வழங்கியிருப்பதையும் அறிகிறோம்.

வேளாண்குலப் பிரபுக்களுக்கு “முதலி” யெனும்பட்டம் பழங்காலத்திலிருந்தே வழங்கி வந்தபடியால், தனிநாயக முதலிக்கு இப்பட்டம் பரங்கியரால் வழங்கப்பட்டதென எண்ண நியாயமில்லை. “டொன்” என்றபட்டத்தை ஒல்லாந்தரால் வழங்கப்பட்டதென ஏற்றுக்கொள்ள இடமுண்டு. வீரசிங்கத்திற்கு வழங்கிய முதலிப்பட்டம் இவர்களால் கொடுக்கப்பட்டதெனக் கூறுதல் உண்மையேயாகும்.

சிங்கையாரின் காலத்தில் குடியேற்றப்பட்ட தனிநாயக முதலியின் வரிசையில், வீரசிங்கம் என்ற ஒருவரை சேனாதிபதியாக்கி வைத்தானென கைலாசமாலைப்பாடலிலும், வைபமாலையிலும் கூறப்பட்டுள்ளது. அப்பாடல் வருமாறு,

வென்ற படைவீர சிங்கனெனும் வீரியனைத்
தன்னிருச் சேனைக்குத் தலைமை செய்து - துன்னிவரும்
ஆனை குதிரை யமருமிடங் கடல் போற்
சேனைமனிதர் செறியிடமோ - டானவெல்லாம்
அங்கங்கே சேர்வித் -

மேலே கூறப்பட்ட வீரசிங்கனின் பெயர் கைலாசமாலைப் பாடலிலும், நெடுந்தீவிலும் மாத்திரம் சொல்லப்படுகிறதேயொழிய வேறு யாழ்ப்பாணச் சரித்திரக் குறிப்புக்களிலும், பிற பகுதிகளிலும் கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சிங்கை ஆரியன் காலத்தில் சொல்லப் பட்ட, இரு மரபுந்துய்ய தனி நாயக முதலியும் சேனாதிபதி வீரசிங்கமும் போர்த்துக்கேயரின் காலத்தவராக இருத்தல் முடியாது. இவ்விருவர்களின் சந்ததியில் வந்து இந்நாமங்களை வாரிசாகப் பெற்ற வேறு இருவர்களாயிருத்தல் வேண்டும். இவர்கள் “டொன்பிலுப்” பென்றும், “வீரசிங்க மத்தேசு” என்றும் கிறீஸ்தவ நாமங்களைப் பெற்றுள்ள படியால் இவ்விருவரும் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தவராயிருத்தல் உண்மை யாகும்.

சிங்கை ஆரிய மன்னன் மேற்கொண்ட குடியேற்றத்தைப்பற்றி, கைலாயபாடலும், யாழ்ப்பாண வைபமாலையும் “பாண்டிமழவன் சென்று குடிகளைக்கொண்டு வந்தானெனக் கூறும் கூற்று, ஆகாயகங்கையில் மலர்ந்த தாமரையோடொக்கும்” என முதலியார் இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார். (யா. ச. பக். 239) இக் குடி யேற்றத்தைப் பற்றி “போதியசான்றுகள் ஏற்படும் வரையில் இது ஓர் மதிவல்ல ஊகமாத்தி ரமேயாய் நிற்குமென்க” என யாழ்ப்பாண வைபவவிமர்சனத்தில் நல்லூச்சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, இக்குடியேற்றம் பற்றி சில முரண்பாடுகளிருப்பதினால், இதில் தோன்றிய இரு முதலிமார்களின் கால விளக்கங்களைத் திட்ட வட்டமாகக் கூறமுடியாமலிருக்கிறது. ஆயினும் இரு கேணிகளும், இரு கிணறுகளும் தனிநாயக முதலி இத்தீவில் அதிபதியாக இருந்ததையும், வீரசிங்கமத்தேசு முதலி செல்வஞ் செல்வாக்காய் வாழ்ந்தவையும் உண்மைப்படுத்திச் சுட்டிக்காட்டும் சின்னங்களாக விளங்குகின்றன.10
தீவுப்பகுதிகளில் வாழும்
மறவர்கள்


யாழ்ப்பாணப் பகுதிகளில் குடியேறிய மறவர்கள் மங்கியது போல், நெடுந்தீவில் வாழ்ந்த மறவர்களும் அருகிப்பேயினரெனச் சொல்வதற்கிடமில்லை. மதமாற்றத்தால் “மறவ” என்ற நாமம் மங்கியதேயொழிய அக்குலத்தவர்கள் இன்றும் நெடுந்தீவில் வெகுசிறப்புடன் வாழ்கிறார்கள்.

வசைகளால், வக்கணையால், வடுக்களால், பட்டத்தால் வழங்கப்படும் நாமங்கள் நெடுங்காலம் நிலைத்து நிற்பது கண்கூடு. நாளடைவில் சொந்தப் பெயர்கள் அடியோடு எவருக்குமே தெரியாது அழிந்து வக்கணைப்பெயரே நிலைத்து ஈற்றில் சரித்திரங்களிலும் இடம் பெறுகின்றன.

இதற்கு தமிழ் இலக்கியத்திலே ஒரு உதாரணங் கூறலாம். பழங்காலத்தில் “தழும்பன்” என்ற பெயரோடு ஒரு மறக்குடித் தலைவன் வாழ்ந்தனன். இவனது உடம்பு முழுவதும் பகைவரின் படைக்கலத்தால் உழுதுண்ட தழும்புகளால் நிறைந்திருந்தன. இத்தழும்புகளை அவன் பார்த்துப் பார்த்து மனம் பூரிப்பான். ஒவ்வொரு தழும்புந் தன் தேகத்திலேற்பட்ட வரலாறுகளை மிக ஆனந்தமாகக் கூறுவான். காலப்போக்கில் இவனது சொந்த நாமம் மறைந்து “தழும்பன்” என்ற சிறப்புப் பெயரே இவனுக்கு ஏற்படலாயிற்று.

தமிழ்ப் பெரும் புலவாரான பாணர் இவனது வீராண்மையை வியந்து, பெரும் புண்ணால் அழகு பெற்றவன் தழும்பன் என்ற கருத்தமைத்து,

“இரும்பாண் ஓக்கல் தலைவன்,
பெரும்புண் ஏர் தழும்பன்” என்று பாடியுள்ளார். (நற்றிணை 300)

இன்னும் விதானை, உடையார், பட்டங்கட்டி, மெலிஞ்சி என்னும்பட்டப்பெயர்களே அநேகருக்குத் தெரியுமேயொழிய, அவரவர்களின் சொந்த நாமம் பல பேருக்கும் தெரிந்திலது. சரித்திரங்களிலும், விதானையார் தோட்டம், மணியகாரன் தோப்பு, உடையார்வளவு, மெலிஞ்சியார்கேணி என்ற பட்டப் பெயர்களே காணப்படும். உறுதிகளிலும், தோம்புகளிலும் அநேகம் இவ்வண்ணமே இருக்கும்.

சில எழுத்தாளருக்கும், நடிகர்களுக்கும் அவர்களின் புனைப்பெயர்களும். வக்கணைப் பெயர்களும் துலங்கிறதேயொழிய உண்மைப் பெயர்கள் யாதென எவருக்குமே தெரியாமலிருக்கிறது. புளிமூட்டை, புதுமைப்பித்தன், பாரதிதாசன், நாடோடி, ஊர்க்குருவி இவைகள் போன்று இன்னும் எத்தனையோயுண்டு.

மேற்கூறிய வக்கணைப் பெயர்களை போன்றே நெடுந்தீவில் குடியேறி வாழ்ந்த படைவீரர்களுக்கும் சொந்தக் குலப்பெயரான “மறவர்” என்ற நாமம் மங்கிப் பட்டச் சாதிப்பெயரே நிலைத்து நிற்கிறது. இவ்விதம் மறவனென்ற நாமம் மங்கி வௌ;வேறு விதமான பட்டப்பெயர் சொல்லி அழைக்கப்படுவார்களே வீரசிங்க மத்தேயு முதலியின் சந்ததியராவர் இவர்கள் மறவர் குலத்தவர்களேயன்றி வேறு எக்குலத்தவர்களுமல்ல வெண்பதற்கு பல பல காரணங்களுண்டு.

ழூ தமிழ்இலக்கியங்களின் படி படைவீரர்கள் யாவரும் மறவர்களென்பதை ஒத்துக் கொண்டால், நெடுந்தீவில் முதன் முதல் குடியேறிய போர்வீரர்கள் அத்தனைவரும் மறவர்களென்பது உண்மை.

ழூ படைவீரர்கள் ஒருவரிருவரே அல்லது ஒரு குடும்பம் இரு குடும்பங்களோ ஒரு நாட்டில் குடியேறியிருக்கவும் படைவீரர்களாக வந்திருக்கவும் முடியாது. பெருந்தொகை யாகக் குடியேறியிருக்க வேண்டுமென்பதே நிச்சயம். அப்படியாயின் நெடுந்தீவில் பெருந்தொகையாகக் குடியேறியவர்கள் இரு சாதிகளேயாவர். ஒன்று முதன் முதல் படைவீரர்களாக வந்த மறவர்கள். அடுத்தது தனிநாயகமுதலி, கந்தப்பமுதலி முதலாம் பிரபுக்களோடும், இன்னும் வேறு சில முதலிமார்களோடும் குடியேறிய வேளாண் குலப் பெருங்குடிமக்கள் மற்றவர்கள் யாவருமே இம்முதலிமார்களோடு பண்ணை ஆட்களாகவும் குடிமக்களாகவும் அற்பசொற்பமாக வந்தவர்களேயாகும். இன்றும் நெடுந்தீவில் பெருந்தொகை மக்களாகவுள்ளவர்களும் மேலே குறிப்பிட்ட இரு சாதிகளேயாவர். இவ்விரு சாதியருள் வேளாண்குலத்தவர்கள் ஒருபோதும் படையில் போர்வீரராகச் சேர்ந்திருக்கவுமாட்டார்கள். ஆகவே அடுத்த பெருந்தொகையாகவுள்ள மக்களான வீரசிங்க மத்தேசு முதலியின் குலத்தவர்களே படைவீரர்களான மறவராயிருத்தல் நிச்சயம்.

ழூ நெடுந்தீவில் குடியேறிய ஒவ்வொரு சாதியாரும் தத்தம் சாதித்தொழில்களை இன்னும் செய்து வருதல் கண்கூடு. அப்படியாயின் இவர்கள் செய்த குலத்தொழிலென்ன? எந்தத்தொழிலையும் தம் குலத்தொழிலாக இவர்கள் செய்து வருவதைக் காணோம். கப்பல் தொழிலும் உத்தியோகங்களுமே தற்போது இவர்களின் தொழிலாகத் தெரிகிறது. தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாகக் கடமையாற்றிய பின்பு போர்த்துக்கேயருடன் சேர்ந்து கடல் படைவீரராகப் பணிபுரிந்து பிற்பாடு படிப்படியாகக் கப்பல் தொழில்பழகி தண்டல்மாராகவும், மாலுமிகளாகவும் திகழ்ந்துள்ளார்கள். படை வீரராகக் கடமையாற்றியதால் வேறுகுலத் தொழில் இவர்கள் செய்யவில்லை. மறவர்களானபடியால் போர்த்தொழிலே இவர்களின் குலத்தொழிலாய் அமைந்துள்ளது.

ழூ பூர்வகாலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட வல்லைத்தேவன், வலஞ்ஞைமாறன், கொம்புத்தேவன், நீலமாறன், முதலாம் நாமங்களும் கத்தோலிக்கரான பிற்பாடு இப்பெயர் களையே முன்வரிசையாகக் கொண்டு கொம்பன் அந்தோனி நீலன் குருசான், சக்காயியா னாள் முதலாம் பெயர்களும் இவர்களை மறவர் குலத்தவர்களென நிச்சயப்படுத்துகிறது.

ழூ இவர்களுக்கோர் பிள்ளை பிறந்து முப்பத்தொராம் நாள் சடங்கு நடைபெறும் பொழுது அப்பிள்ளையை வளர்த்து மிடத்தில் சிங்கரூபங்கீறி, அதன் மேல் பிள்ளையைக் கிடத்தித் தாலாட்டுப்பாடுவது வழக்கம். சிங்கம் மறவர்களின் குலதெய்வமான துர்க்கையின் வாகனமாகும். இதனாலேயே சிங்கரூபம்கீறுவதென எண்ண இடமுண்டு. (இவ்வழக்கம் போர் த்துக்கேயருக்கு முன் இவர்கள் மத்தியில் இருந்ததாக அனுபோகப்பட்ட மருத்துவம்மாவும், காலங்கண்ட மூதாட்டியுமான சவீனம்மை கூறியுள்ளதாக ஆயுள் வேதவைத்தியர் இ. லோயோன்பிள்ளை எனக்குச் சொல்லியுள்ளார்.)

ழூ இவர்கள் மத்தியில் அக்காலம் பாடப்பெற்ற தலாட்டுகளும், மணமக்களின் வாழ்த்துப் பாக்களும் இவர்களை மறவரெனச் சுட்டிக்காட்டுகிறது.

ழூ மறவருக்கமைந்த வடிவத்தைப் “பண்டைத் தமிழர் பண்பாடு” என்னும் நூலில் கூறப்பட்டதைப்போல், “கல்லெனத்திரண்டதோளர், கட்டமைந்த மேனியர், முறுக்கு மீசையர், தருக்குமொழியினர், வீறிய நடையினர், சீறிய விழியினர், முதலாம் அம்சங்கள் இவர்களுக் கிருப்பதையும் பரக்கக்காணலாம்.

ழூ மறவர் குலத்தவர்களில் ஒரு பகுதினரான கருங்கை மறவர் போரில்லாக் காலங்களில் காடுகளில் சென்று புலிகளை வேட்டையாடி அப்புலிகளின் பற்களை எடுத்துவந்து தம் மாதர்களுக்கு மாலையாகக் கோர்த்துக் கழுத்தில் அணிவதற்குப் பரிசாகக் கொடுப்பர்.

“மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலி”
என ஒரு பழங்காலக் கவிதை இதன் உண்மையை எடுத்தோதுகிறது.

நெடுந்தீவில் வாழ்ந்த இக்குலத்தவர்களும் சங்கு மணிகளாலும், பொன்னாலும் அணிகலன்களைத் தேடாது, புலிப்பல், புலிநகம் முதலானவைகளையே சிறு நூல்களில் கோர்த்துக் கழுத்தில்கட்டியும், பன்றி முள்ளுகளைக் கொண்டையில் செருகியுமுள்ளார்க ளெனப் பரம்பரைக் கதைகளுமுண்டு.

ழூ மணவீடுகளில் புதுமாப்பிள்ளையும், புதுப்பெண்ணையும் வியந்து கூறிப் பெண்கள் வாழ்த்துக்கள் படிப்பது தமிழர் வழக்கம். இவ்வழக்கம் இவர்களுள்ளும் இருந்து வந்தது. ஒரு பெண் மாப்பிள்ளையை வியந்து கூறிப்படிக்கும் பாடலில் ஒன்றைக் கீழே தருகிறேன்.

ஆனைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
ஆலமரம் போதாது

குதிரைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
கொல்லைகளம் போதாது

சிங்கங்களைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
சிறுதோட்டம் போதாது

வேங்கைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
வெளிநிலங்கள் போதாது

வேல் சொருகி வைப்பதற்கோ - பெண்கொடுத்த
வீட்டுவளை போதாது

அம்புவில்லு வைப்பதற்கோ - பெண்கொடுத்த
அரண்மனையோ போதாது

போதாது போதாது - பெண்கொடுத்த
சீதனங்கள் போதாது.

இவ்வாழ்த்துப்பா மூலம் இவர்கள் மறவர் குலத்தவர்களென்பதும், புலிவேட்டையாடு வர்களென்பது தெரிகிறது.

அன்றியும் அக்காலம் இக்குலத்தவர்களின் மணக்கோல ஊர்வலங்களில் மணமுரசோடு, கோலாட்டம், மறாட்டியம், புலியாட்டம் முதலாம் விளையாட்டுக்களும் இடம் பெறும். ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். வேறுசாதியாரின் மண்வீடுகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது.

வீரசிங்க மத்தேசு முதலியின் சந்ததியார்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவோ, அடக்கப் பட்டவர்களாகவோ இருந்தால் மேற்கூறிய காரணங்களிலொன்றேனும் இவர்கள் மத்தியில் நிலவி இருக்க முடியாது. தமிழ் மன்னர் காலத்தில் எவ்வளவோ சாதிச்சட்டங்கள், சாதிப்பாகுபாடுகள், சாதிவழமைகள், சாதித்தொழில்கள், சாதித்தெருக்கள், சாதிச்சேரிகள் நிறைந்திருந்தன. அவ்வண்ணம் இவர்களும் ஒர் குறைவான சாதியாராயிருந்தால், இச்சட்டங்கள், தொழில்கள், வரிசைகள் இவர்களையும் வெகுவாகப்பாதித்திருக்கும். இவர்களில் எவரேனும் நெடுந்தீவில் பழங்காலத்தில் ஓர் மகிமையான உத்தியோகத்தைப் பார்த்திருக்கவும் முடியாது. அவ்வண்ணம் பார்ப்பதற்கும் தேசவழமையின்படி அரசாங்கம் இடங்கொடுத்திருக்கவும் மாட்டாது. அங்ஙனமாயின் இவர்களுள் இருவர் அரசாங்கப் பிறப் பிறப்புப் பதிவுகாரராக அக்காலம் கடமையாற்றியிருந்ததின் காரணமென்ன? இவர்கள் இவ்வுத்தியோகம் பார்க்கக்கூடியதகமையுள்ள குலத்தவர்களாயிருந்ததின் காரணமாகவே அரசாங்கம் இப்பொறுப்பான, சங்கையான, மதிப்பான உத்தியோகத்தைக் கொடுத்துள்ள தென எண்ண இடமுண்டு. அன்றியும் இன்று தானும் நெடுந்தீவில் கிராமச்சங்க உறுப்பினராக, உபாத்திமாராக, சங்கக் கடைப்பொறுப்பாளராக, குருவாக கன்னியாஸ்திரிமாராகத் திகழுவதையும் காணலாம்.

இன்னும் நெடுந்தீவில் வாழும் இக்குலத்தவர்கள் மாத்திரமல்ல, இவர்களின் சந்ததியராக புங்குடுதீவில், காவலூரில், கரம்பனில் வாழ்பவர்களும் அன்றும்மின்றும் எவரு க்கேனும் எக்குலத்தவருக்கேனும் அடிமைப்படாமல், தொண்டுபுரியாமல், ஒதுங்கி வாழாமல், சீவிப்பதுயாவரும் அறிந்ததேயாம் இவர்களுக்கு நெடுந்தீவிலும் மற்றும் தீவுகளிலும், பரந்து நிறைந்த காணிகளும், தோட்டங்களும், மாடகூடங்களும், பல பல தேவாலயங்களும் இவர்கள் மத்தியில் தேங்கிவழிவதுங் கண்கூடு, இவர்கள் ஆசிரியராக, சுகாதார உத்தி யோகத்தர்களாக, புகையிரதப் போர்மன்களாக. அரசாங்க சான்றிதழ் பெற்ற வைத்தியர்க ளாக, நேர்சுகளாக, புகையிரதப் போர்மன்களாக. அரசாங்க சான்றிதழ் பெற்ற வைத்தியர் களாக, நேர்சுகளாக, கப்பற்தொழிலாளர்களாக, பல பல லிகிதர்களாக, போர்மீளிகளின் சிப்பந்திகளாக, கட்டுமான கொந்தராத்துக்காரர்களாக, பி. ஏ. பி. ஏ. சி. பட்டதாரிகளாக இன்று பல்லோரும் மதிக்கக்கூடியவகையில் சுடர்விட்டு வாழ்கிறார்கள்.

இவைகள் யாவையும் நல்ல தூய உள்ளத்தோடு, அப்பழுக்கில்லா மனதோடு அலசி ஆராய்ந்து பார்த்தால், போர்த்துக்கேயரின் காலத்திற்குப் பிற்பாடே, அதாவது கத்தோலிக்கரான பின்பே, இவர்களுக்குப் பிற்பாடே, அதாவது கத்தோலிக்கரான பின்பே, இவர்களுக்குப் போர்வீரர், மறவர் என்ற நாமம் அற்றுப்போய், பரங்கியர் என்ற பெயர் நிலைக்க வந்ததென முடிவுகட்ட இடமுண்டு.சரித்திர சம்பாஷணை

மாணவன்: ஐயா! வணக்கம். தங்களை நான் சந்தித்துச் சில சரித்திரக்குறிப்புக் களை அறியவேண்டுமென்ற ஆவலுள்ளவனாயிருந்தேன். இன்றுதான் எனக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. சொற்பநேரந் தங்களோடு உரையாடுவதற்கு அனுமதி தரவேண்டும்.

ஆசிரியர்: தம்பி! மிகவும் சந்தோஷம் தாராளமாகப் பேசலாம்.

மாணவன்: ஐயா! யாழ்ப்பாணத்தில் குடியேற்றப்பட்ட தமிழ்ச் சாகியத்தாரனைவரும் எங்கிருந்து குடியேற்றப்பட்டார்கள். சுமார் எத்தனை குலத்தவர்கள்வரை இருப்பார்கள்?

ஆசிரியர்: சந்தேகமில்லாமல் நமது அண்டை நாடாகிய இந்தியாவிலிருந்தே குடியேற்றப்பட் டார்கள். குடியேற்றப்பட்ட சாதிகளை ஓரளவில் சொல்லப்போனால் 1697ம் ஆண்டு ஒல்லாந்த தளபதியான தோமஸ் வன்றீ என்பவரின் அறிக்கையின்படி நாற்பதும், (யா. வை. க. பக். 107) 1790ம் ஆண்டு தலைவரிக்காக எடுத்த கணக்கின்படி ஐம்பத்தெட்டுச் சாதிகளுமாவர். (யா. ச. ஆ. முத்துத்தம்பி) இன்னும் ஒரே சாதிக்குள்ளே கீழ் மேலென்று எத்தனையோ சாதிப்பிரிவினைகளுமுண்டு. உதாரணமாக உயர்குடி மக்களென்று சொல்லப் படும் வேளாளருள்ளும் சோழநாட்டு வேளான், பாண்டிநாட்டு வேளாளன், தொண்டைநாட்டு வேளாளன், துளுவ வேளாளன் என்ற இன்னோரன்ன வேளாளரும், மடைப்பள்ளியாருள்ளும் இராசமடைப்பள்ளி என்றும் பலபல பிரிவுகளுண்டு. இப்படிச் சகலசாதியார்களிலுமுள்ள பிரிவுகள் யாவையும் மொத்தமாகக் கணக்கெடுத்துப்பார்த்தால் நூற்றுக்கு மேலே வரும்.

மாணவன்: ஒரே சாதிக்குள்ளிருக்கும் ஏற்றத்தாழ்வைக் கண்டெறிவதெப்படி?

ஆசிரியர்: இந்தக் காலத்திலே எந்தச் சாதியையும் கண்டறிய முடியாது. இது உனக்கு வியப்பாகத்தானிருக்கும். ஆனால் அந்தக்காலத்தில் அதாவது தமிழரசர் காலத்திலே ஒவ்வொரு சாதியையும் மிக இலகுவாகக் கண்டறியக்கூடியதாக நகை அணிவதிலே, உடை உடுத்துவதிலே, கொண்டை கட்டுவதிலே அரசாங்கம் சட்டம் அமைத்திருந்தது. உதாரணமாக நான் சொல்லிய நாலு வேளாண் குலத்தவர்களையும் எடுத்துக்கொள்வோம். சயசிங்கன் என்னும் அரசன் காலத்தில் இந் நான்கு வேளான் குலத்தவர்களும், இராச குடும்பத்தாருக்குப் பெண் வேண்டிய காலத்தில் எவ்வித பேதம் பராது தங்களிடத்தில் பெண்ணெடுக்க வேண்டுமென்று இராசகட்டளை பிறப்பிக்கவேண்டுமெனக் கொல்லிமழவன் என்னும் வேளாண்பிரபு அரசனிடம் வேண்டினன். இதனை அறிந்த அரசன் தனது மந்திரி புவனேக பாகுவோடு யோசித்து இதற்குச் சூழ்ச்சிசெய்ய வேண்டுமெனத் திட்டந் தீட்டி, “இராச குடும்பத்தாரனைவரும் வழக்கம் போலப் பட்டத்துப் பெண்ணை இராச குடும்பத்திலும், ஏனைய பத்தினிமாரைத் தொண்டை மண்டலத்து வேளாண் முதலிகளோடும், பெண் கொள்ளலாமென்றும், மற்றய பெண் கொள்ள வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்தும், தொண்டைமண்டலத்து வேளாளர் கொண்டையும், மற்றைய வேளாளர் பின் குடும்பியும், முதலிமார்கள் வண்டிக்கடுக்கனும், மற்றய வேளாளர் முத்துக்கடுக்கனும், செட்டிகள் ஓட்டுக்கடுக்கனும் தரிக்க வேண்டுமென்றும் சட்டம் பிறப்பித்தான். இந்தக் கொண்டையையும், கடுக்கனையுங் கொண்டே எந்த வேளாளனென்று இலகுவில் கண்டு பிடிக்கலாமல்லவா?

மாணவன்: யாழ்ப்பாணத்தில் குடியேறிய சாதியர்கள் தாங்களாக வந்து குடியேறினார்களா? அல்லது அரசர்களால் குடியேற்றப்பட்டார்களா?

ஆசிரியர்: முதலாவது அரசர்களாலே குடியேற்றப்பட்டார்கள். பிற்பாடு தங்கள் சொந்த விருப்பத்திற்கும் வந்து குடியேறியுள்ளார்கள்.

மாணவன்: அரசர்கள் குடியேற்றம் நடத்த வேண்டிய காரணம் என்ன?

ஆசிரியர்: யாழ்ப்பாணத்தைத் தமிழ் மன்னர்கள் கைப்பற்றிய போது நாகர் என்னும் சாதியாரே இங்கு காணப்பட்டனர். ஆகவே தமிழரின் குடியேற்றம் இங்கு அவசியமாயிற்று. அன்றியும் அரசனுக்குச் சேவகம் புரியவும், காட்டை களனிகளாக்கவும், நாட்டை நகரங்களாக்கவும் பெருந்தொகையான மக்கள் தேவைப்பட்டனர். இதனால் பலபல தொழில் தெரிந்த சகல சாதியாரும் குடியேற்றப்பட்டார்கள்.

மாணவன்: அரசனுக்குச் சேவகஞ் செய்யும் சாதியார்கள் யாவர்?

ஆசிரியர்: அரசனுக்குச் சகல சாதியர்களுமே சேவகஞ்செய்ய வேண்டியவர்களேயாவர். ஆனால் இராசமாளிகைக்கும், இராசபவனிக்கும் கட்டாயத்தோடு பணிபுரியவேண்டியவர்கள் சிலருண்டு. அவர்களுள்ளும் மிக முக்கியமானவர்கள், படைவீரர், சிவிகைகாவுவோர், கட்டியஞ் சொல்வோர், முரசடிப்போர், பறையடிப்போர், வாசல்காப்போர் முதலானவர்கள்.

மாணவன்: இவர்களுக்கு தமிழ் மன்னர்கள் என்னென்ன விதமான சட்டங்களியற்றி எந்தெந்த வகையில் சலுகைகளும் கொடுத்து வந்தனர்?

ஆசிரியர்: மேற்கூறிய சாதியர்களுக்கு மாத்திரமல்ல, இன்னும் பலபல சாதியர்களுக்கும் சட்டங்களுமியற்றிச் சலுகைகளுமளித்து வந்தனர். உதாரணமாக வேளாளர் செட்டிகளுக்கு உழுதுண்டு வாழ்வோரைத்தவிர, பண்ணை ஆட்களை வைத்து உழுதுண்போரெல்லாம். தமது பண்ணை ஆட்கள் எத்தனைபேர்களோ அத்தனை வரும் இராசாங்கத்துச் சேவை செய்ய வருஷத்தில் பதினைந்து நாளைக்கு அனுப்புதல் வேண்டும். விளைவிலும் ஏனைய வேளாளரைப் போன்று ஆறிலொருபங்கு கொடுக்கவேண்டும்.

மற்றவர்கள் பதினாறு வயது முதல் இருபத்துநான்கு வயதுவரை யுத்தப்பயி ற்சிபயின்று கிராமக் காவலராக கடமையாற்றி, போர்ப்பறை முழங்கும்போது படையில் சேர்ந்தும் சேவைசெய்ய வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாக வழங்கப்பட்டன. யுத்தமில்லாக் காலங்களில் நிலங்களில் பயிர்செய்து வாழுதல் வேண்டும்.

சிவியார் அரசாங்கத்துக்குச் சிவிகை ஆட்களாகவும், சிவிகை முன் செல்லுங் கூறியராகவும், அரன்மனை வாயில் காப்போராகவும், மாதங்கள் தோறும் முறைப்படி ஒவ்வொரு தொகையினராக மாறி மாறிக் கடமையாற்றல் வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாய்விடப்பட்டன.

உமணர் இரசாங்கத்துக்கு உப்பு அமைப்பவர்களாக இருந்தார்கள்.

ஆண்டிகள் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று சங்கநாதஞ் செய்து மக்களைத் துயிலெழுப்பவேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலுமுள்ள முறைக்காலங்களைத்தவிர ஏனைய நாட்களில் ஊர்தோறுஞ் சென்று யாகஞ்செய்து பிழைக்க வேண்டும். பிடாரிகோயிலுக்கும், மாரியம்மன் கோயிலுக்கும் பூசகராயும் கடமையாற்றலாம்.

முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானோர் முத்துக்குளிப்புக் காலங்களில் வருஷத்தில் பதினைந்து நாளைக்கு இராச ஊழியஞ் செய்யக் கடமைப்பட்ட வராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை.

கொல்லர், தச்சர் முதலானோர் கிராமத்தாருக்கு வேண்டும் கல்பை, கொழு, அரிவாள் முதலியபயிர்த் தொழில் கருவிகளைக் கூலியின்றிச் செய்து கொடுக்கவேண்டும். வருஷத்தில் எட்டு நாளைக்கு இராச கருமமுஞ் செய்தல் வேண்டும். அரசாங்க நிலங்கள் மான்யமாய் விடப்பட்டன. நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன.

கைக்கோளர், சேணியர்களுக்குயாதொரு கட்டுப்பாடுமி;ல்லை.

கன்னார், தட்டார், கற்சிப்பியர் முதலானோர்! இராச அரண்மனையிலும், கோயில்களிலும் வருஷத்தில் பதினைந்து நாட்கள் வேலை செய்யக் கடமைப்பட்டவராவர்.

வண்ணார் முறைமுறையாக அரசன் சென்று தங்குமிடங்களுக்கு வெள்ளை கட்டுங்கடனுடையார்.

பறையர் யுத்தகாலங்களில் முற்பறை கொட்டுங் கடனுடையர்.

இவ்வண்ணம் ஒவ்வொரு சாதியாரும் வருஷந்தோறும் சில சில தினங்களுக்கு இராசகாரியங்கள் செய்து வந்தனர். இவ்வழக்கம் பரங்கியர், ஒல்லாந்தர் காலங்களிலும் நீடித்து இருந்து பின் ஆங்கிலேயர் காலத்தில் 1810ம் வருடம் இவைகள் நீக்கப்பட்டன.

மாணவன்: ஒவ்வொரு சாதியாருக்கும் ஒவ்வோர் விதிகள் புறம்பு புறம்பாக அமைக்கப்பட்டிருந்தது உண்மைதானா?

ஆசிரியர்: ஆம் அது முற்றிலுமுண்மை. நல்லூர் நகரத்திலேஅந்தணர்க்கு, செட்டிகளுக்கு, வேளாளருக்கு, கன்னாருக்கு, தட்டாருக்கு, கைக்கோளருக்கு, சாயக்காரருக்கு, தையற்கார ருக்கு, உப்புவாணிபருக்கு, சிவியாருக்குமாக மொத்தம் அறுபத்து நான்கு தெருக்கள் இருந்தனவாம். தீண்டாச் சாதியாருக்கு மேலே கூறப்பட்ட தெருக்களில் இருக்கையில்லை. இவர்களுக்குச் “சேரி” என்ற புறம்பான ஒதுக்கிடம் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பிடப் பட்ட சாதித் தெருக்கள் இன்றும் அப்பெயரோடே வழங்கப்பட்டு வருவதை நாம் அறியலாம்

மாணவன்: தமிழ் மன்னர் காலத்தில் இவ்வளவு கட்டுப்பாடும், சட்ட திட்டமும் நடைபெற வேண்டிய காரணமென்ன?

ஆசிரியர்: இதற்குக் காரணம், தமிழ் மன்னர்கள் யாவரும் சைவ சமயத்தவர்கள். இதனால் சைவசமயத்திற்கேற்ப நேரகாலப் பூசைகள், அனுசாரங்கள், உணவுவகைகள் முதலானவைகள் யாவும் சைவ சமயவிதிகளின் படி அனுட்டிப்பதினாலும், இவ்விதிகளுக்கமைய அசுசியான தொழில்களையும், தகாத உணவுகளையும் உண்போரைத் தொட்டாலும், ஏன் கண்ணால் கண்டாலுமே தீட்டுப்படுமென்று நகரங்களைக், கிரமாங்களை ஒரளவுக்குத் தொத்துவியாதியில்லாமல் காப்பதற்குமே இச்சட்டங்களை உண்டாக்கியுள்ளார்கள். அதிகம் சொல்வானேன் பரங்கியர் காலத்துக்கு முன் கள்ளைத்தவிர வேறு மது பாணங்களில்லை. இந்தக் கள்ளையும் சில தீண்டாச் சாதியார் உணவாக அருந்திவந்தார்களேயொழிய மதுபானமாகவில்லை. அங்ஙனம் கள்ளைக்குடித்து வெறியோடு வருவோரைத் தண்டாதிகாரிகளின் தூதர்கண்டால் அவர்களுக்கு விலங்கிட்டு வருத்துவார்களென்று யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வண்ணம் மதுபானத்தையே சைவிதிகளுக்கு மாறானதென்று தமிழ் மன்னர்கள் வெறுத்துச் சைவத்தை வளர்த்துள்ளார்கள்.

மாணவன்: அப்போ தமிழ் மன்னர் காலத்தில் சைவசமயத்தைக் தவிர வேறு சமயங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லையா?

ஆசிரியர்: அற்பசொற்பமாக வேறு சமயங்கள் இருந்திருப்பினும், தமிழ் மன்னனான சங்கிலியன் காலத்தில் தான் கத்தோலிக்க வேதம் முதன் முதலாக வடமாகாணத்தில் தலைகாட்டியது.

மாணவன்: போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன் கத்தோலிக்க வேதம் வடமாகாணத்திலுண்டா?

ஆசிரியர்: ஆம், மன்னாரில் மாத்திரம் உண்டு. ஆனால் செழித்தோங்கவில்லை. போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்பே கத்தோலிக்க வேதம் செழிப்புற்றது.

மாணவன்: மன்னாரில் கத்தோலிக்க வேதம் எப்போ ஆரம்பிக்கப்பட்டது?

ஆசிரியர்: 1542ம் ஆண்டு ஐப்பசி மாசம் 28ம் திகதி தூத்துக் குடியிலிருந்து புனித பிரான்சிஸ் சவேரியார் றோமாபுரியிலிருக்கும் புனித இஞ்ஞாசியாருக்கு எழுதிய கடிதத்தின் படி தூத்துக்குடி, புன்னைக்காயல், வேம்பாறு, மணப்பாடு, காயல்பட்டணம் முதலாம் ஊர் களிலே கத்தோலிக்க வேதம் பரப்பட்டதெனத் தெரிகிறது.

இவ்விடங்களிலுள்ளவர்கள் முத்துக்குளிப்பதற்கும் சங்குகுளிப்பதற்கும் மன்னார்த்தீவுக்கு அடிக்கடி வந்துள்ளார்கள். இவர்கள் மூலம் முதன் முதலாக மன்னார் வாசிகள் கத்தோலிக்க வேதத்தை அறிந்து, அதன் மகிமையையுணர்ந்து ஞானத்தீட்சை பெற்றுக் கத்தோலிக்கரானார்கள். யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றியது 1560ம் ஆண்டேயாம். இதன்படி பதினெட்டுவருடங்களுக்கு முன்னே மன்னாரில் கத்தோலிக்க வேதம் ஆரம்பிக்கப்பட்டது.

மன்னார் வேதாட்சிகளின் உண்மை வரலாறு.

மாணவன்: மன்னாரைத்தவிர வேறிடங்களில் போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் கத்தோலிக்க வேதம் தோன்றவில்லையா?

ஆசிரியர்: யாழ்ப்பாணச் சரித்திரங்களில் மன்னாரை மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் போர்த்துக்கேயர் கொழும்பைக் கைப்பற்றிய பின் யாழ்ப்பாண நாட்டையும் கைப்ப ற்றுவதற்காக 1543ம் ஆண்டு நெடுந்தீவில் நங்கூரம் பாய்;ச்சிய போது, இதனையறிந்து யாழ்ப்பாண மன்னனாகிய சங்கிலியன் போர்த்துக்கேயரின் வலிமைக்கஞ்சி 5000 பரதாசு நாணயங்களும். இரு கொம்பன் யானைகளும் வருடாவருடம் திறமையாத் தருவதாகச் சமாதான உடன்படிக்கை செய்த பிற்பாடு, அடிக்கடி போர்த்துக்கேயரின் நடமாட்டம் நெடுந் தீவில் ஏற்பட்டதாலும், புனித சவேரியார் மன்னாரிலிருந்து வரும் போது நெடுந்தீவில் தங்கி ஒரு துலுக்கச் சிறுமிக்கு உயிர்ப்பிச்சையளித்ததென்று சரித்திரங்கள் கூறுவதாலும், அன்றியும் போர்த்துக்கேயப் படைகள் எங்கு செல்லுகிறதோ அங்கங்கெல்லாம் கத்தோலிக்கக் குருமாரும் செல்லுவது வழக்கமாயிருப்பதாலும், மன்னாருக்குப்பின் நெடுந்தீவில் கத்தோலிக்க வேதம் தோன்றியிருக்கலாமெனக் கூற இடமுண்டு.

மாணவன்: நீங்கள் சொன்ன ஒரு குறிப்பிலிருந்து புனித பிரான்சிஸ் சவேரியார் இலங்கைக்கு வந்தது உண்மைபோல் தெரிகிறது. ஒரு சில பேர்கள் சின்னச் சவேரியார் மாத்திரம் இலங்கைக்கு வந்தாரேயொழிய, புனித பிரான்சிஸ் சவேலரியார் வரவில்லையென்று வாதாடுகிறார்களே இதன் உண்மை என்ன?

ஆசிரியர்: சின்னச் சவேரியார் என்பவர் மன்னாருக்கு வந்து வேதம் போதித்த ஒரு சுதேச குருப்பிரசாதி. புனித பிரான்சிஸ் சவேரியாரால் மன்னாருக்கு அனுப்பிவைக்கப்பட்டவர். மன்னார் வேதகலாபனையின் போது அங்குள்ள விசுவாசிகளுக்கு வேதம் போதித்து உயிர் நீத்தவர். ஆனால் கலவரம் முடிந்த பிற்பாடு மன்னாரைத் தரிசித்தவர் தான் புனித பிரான் சிஸ் சவேரியார். இவர் இலங்கையை தரிசித்துக் கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் முதலாமிடங்களுக்குச் சுற்றுப்பிரயாணமும் செய்திருக்கிறார்.

மாணவன்: புனித பிரான்சிஸ் சவேரியார் மன்னாரைத்தரிசித்த பொழுது நெடுந்தீவுக்குச் சென்ற வண்ணம், அதன் அருகேயுள்ள புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, லைடன்தீவு முதலாம் தீவுகளுக்கும் சென்றிருப்பாரா?

ஆசிரியர்: நான் மேலே சொன்ன இடங்களைத்தவிர இவர் இலங்கைக்கு வந்த பொழுது வேறிடங்களுக்குச் செல்லவில்லை.

மாணவன்: ஐயா! என்னை மன்னிக்கவேண்டும். நீங்கள் யாழ்ப்பாண இராச்சியத்திற்குட்பட்ட நெடுந்தீவைத் தவிர வேறு தீவுகளுக்குச் செல்லவில்லையென்று சொல்லுகிறீர்கள். ஆனால் 20. 05. 1970ல் வெளியான ஒரு பத்திரிகையில் “புனித பிரான்சிஸ் சவேரியார், புங்குடுதீவில் நிறுவப்பட்டடிருக்கும் அர்ச். சவேரியார் கோயிலின் பக்கத்தேயுள்ள வெளிக் கொண்ட பிராந்தியம் “பரதவெளியென்றும், அதனையடுத்துள்ள பிரதேசம் புனித சவேரியா ரின் வாழ்நாளில் அவர் செபம் செய்வதற்கு உபயோகிக்கப்பட்டதென்றும்” எழுதப்பட்டுள்ளதை நான் வாசித்தேன். அங்ஙனம் புனித பிரான்சிஸ் சவேரியார் தம் வாழ்நாளில் செபம் சொல்லுவதற்கு இப்பிரதேசத்தைத் தெரிந்திருந்தால் புங்குடுதீவுக்கு வந்தாரென்றும், இங்கு தம் வாழ்நாளைக் கழித்தாரென்றும் ஏன் நம்பக்கூடாது? ஏற்றுக் கொள்ளக் கூடாது?

ஆசிரியர்: தம்பி! நீ இப்போது என்னிடத்தில் பொறுப்பாக மாட்டிக் கொண்டாய். உன்னோடு நான் அதிகநேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. உன்னுடைய விவேகமற்ற புத்தியைத் தெளிவுபடுத்த நேரத்தைச் செலவழித்தாலும் பரவாயில்லை. நான் சொல்லப்போவதைக் கவனமாய்க்கேள். கேட்டதின் பின் நன்கு சிந்தி. சிந்தித்துப் பார்த்து எழுதியவரின் கெடுபிடிக்கதைகளையும் அலசி ஆராய்ந்து எதுசரி எதுபிழை என்பதை முடிவுகட்டு. தம்பி! புனித சவேரியார் புங்குடுதீவுக்கு வந்தார் வரவில்லை என்பதை முடிவுகட்டுமுன் அப்பத்திரிகையில் சொல்லிய இடங்களின் பிழைகளை முதல் பேசுவோம். “பரதவெளி” என்றவொரு வெளி புங்குடுதீவில் இல்லவேயில்லை. “பரவர்” அல்லது “பரதர்” என்ற சாதிப்பெயரை அடிப்படையாகக் கொண்டு அவ்வெளியிருக்குமேயாகில் பண்டைக்காலத்தில் இவ்வெளியில் பரவர்கள் வாழ்ந்திருக்க வேண்டுமே. சரித்திரகாலந் தொட்டு இற்றவரைக்கும் புங்குடுதீவில் மாத்திரமல்ல யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுற்றியுள்ள ஏனைய தீவுகளிலும் (மன்னாரைத்தவிர) ஒரு மருந்துக்குத்தானும் பரதவர்களின் குடியேற்றம் இல்லாதிருக்கையில் அச்சாதியாரின் நாமத்தோடு புதிதாக புங்குடுதீவில் இவ் “வெளி” முளைத்திருப்பதற்கு நியாயமில்லையே. அடுத்தது, இப்பரதவெளியை அடுத்துள்ள பிரதேசத்தில் புனித சவேரியாரின் வாழ்நாளில் அவர் செபம் செய்வதற்கு உபயோகிக்கப் பட்டதென்றும் எழுதியிருக்கிறதே. இப்பிரதேசம் பரதவெளியில் எங்கிருக்கிறது. அர்த்தமற்ற பரதமவெளி இருக்குமிடமே ஒரு சின்னத்தீவு. இச்சின்னஞ் சிறிய தீவில் ஒரு “பிரதேசம்” எப்படியிருக்க முடியும். ஒரு பிரதேசத்தில் தீவுகள் இருக்கலாமேயொழிய, தீவில் ஒரு பிரதேசம் இருக்க முடியுமா? அது போகட்டும். புனித சவேரியாரின் வாழ்நாளில் “செபம் செய்வதற்கு உபயோகிக்கப்பட்ட தென்றும்” அப்பத்திரிகையில் வரையப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் எவ்வளவு பாரதூரமான பொய்ச் செய்தி. இச்செய்தி தங்கள் பகுதிக்கு ஒரு மதிப்பைத் தேடுவதற்கு எழுந்த செய்தியேயொழிய வேறில்லை.

மாணவன்: நீங்கள் இதனை ஒரேயடியாக அப்படிச் சொல்ல வேண்டிய காரணமென்ன?

ஆசிரியர்: புனித சவேரியார் ஒரு சாதாரண பேர்வழியல்ல. ஒரு மகாபுனிதர். காயம் அழியா வரம் பெற்றவர். இவரது வாழ்க்கை வரலாறுகளை எத்தனையோ பெரும் பெரும் நூலாசிரியர்கள் எத்தனையோ பாஷைகளில் பிறந்த திகதியிலிருந்து புனிதபட்டம்; பெற்ற வரை பஞ்சாங்க ரூபமாக வரைந்துள்ளார்கள். எந்தவொரு பாஷை நூலிலாவது, “புங்குடுதீவில் பரதவெளியை அடுத்துள்ள பிரதேசத்தை புனித சவேரியாரின் வாழ்நாளில் செபம் செய்வதற்கு உபயோகித்தாரென்று” எழுதப்படவில்லை. அன்றியும் புனித சவேரியாருக்கு 1616ம் ஆண்டு முத்திப்பேறு பட்டம் அருளுவதற்காக, அவர் சுற்றுப்பிரயாணம் செய்த நாடுகளில், சீவித்தபிரசேதங்களில் செய்த புதுமைகளைத் திரட்டுவதற்காக கண்கண்ட சாட்சிகளான சில உண்மைப் பேர்வழிகளைத் திருச்சபை அதிகாரிகள் வரவழைத்து இந்தியாவில் விசாரணை பண்ணினர். இவ்விசாரணைக்கு மன்னாரிலிருந்து பன்னிரண்டுபேர்கள் சென்றிருந்தனர். இப்பன்னிருவரில் 40 வயதுடைய மனுவல்டி தையி;ட்டி என்பவன். “மன்னாருலேற்பட்ட பெருவாரி நோயால் நாளொன்றுக்கு இருநூறுபேருக்கு மேற்பட்;டோர் இறந்ததாகவும், இந்நோய் புனிதபிரான்சிஸ் சவேரியாரின் செபவேண்டுதலின் பின் மன்னாரிலிருந்து முற்றாக இந்நோய் நீங்கினதென்றும், மன்னார்த் தளபதியும், கண்டி நாட்டின் பிரதம தளபதியுமாகிய ஜோண் மெல்லோ சம்பாயோ என்பவர் சொல்லக்கேட்டேன்” என்று சாட்சியம் பகர்ந்துள்ளான். புனித சவேரியார் புங்குடுதீவில் தங்கியிருந்தால், அங்கு அவரால் நடைபெற்ற புதுமைகளுக்குச் சாட்சி சொல்ல யாராவது சென்றிருப்பார்கள். + அன்றியும் வண, மன்சிலாஸ் சுவாமியாரோடு சவேரியார் மன்னாரைத் தரிசித்தபோது வேதசாட்சிகள் ரெத்தஞ் சிந்தியவிடத்தை ஆசாரத்துடன் முத்தி செய்தாரென்றும் சரித்திரங்களில் கூறப்பட்டுள்ளது. புனித சவேரியார் தம்வாழ்நாளில் கூறப்பட்டுள்ளது. புனித சவேரியார் தம்வாழ்நாளில் செபம் பண்ணுவதற்காகத் தாம் ஒரு வெளியைத் தெரிந்திருப்பாரேயாகில், அவர் உள்ளபடியே வண. வில்லா கொண்டே அருளப்பசுவாமியார் மணப்பாட்டிலிருந்து எழுதிய கடிதத்திற்கு இலங்கைத்தீவில் தாம் ஆசித்து வந்ததும், வந்தவுடன் ஆசாரத்துடன் முத்தி செய்ததுமான “தோட்டவெளி” யைத் தெரிவித்திருப்பாரேயொழியப் புங்குடுதீவுப் “பரதவெளி” யை ஒருபோதும் தெரிந்திருக்க மாட்டாரென்பது உண்மை. இவைகளிலிருந்து நீ வாசித்த பத்திரிகைச் செய்தி முழுதும் பொய்யென்பது புலனாகிறதல்லவா?

ழூ மாந்தை மாதா
+ இலங்கை அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளும்

மாணவன்: ஐயா, நீங்கள் சொன்ன செய்திகள் யாவும் முற்றிலும் உண்மை, புங்குடுதீவுக்குப் புனித சவேரியார் வந்த கதையும் இதைப்போல் ஒரு கட்டுக்கதை போலத் தான் தெரிகிறது.

ஆசிரியர்: கட்டுக்கதையென்ன. முற்றிலும் கட்டுக்கதையும் கபடச்செய்தியுமேதான். புனித சவேரியார் புங்குடுதீவுக்கு வரவுமில்லை. வருவதற்கு நினைக்கவுமில்லை.

மாணவன்: யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள தீவுப்பகுதிகளில் பரவர்கள் குடியேறியுள்ளார்களா?

ஆசிரியர்: பரவர்கள் யாழ்;ப்பாணத்திலுஞ்சரி, தீவுப்பகுதிகளிலுஞ்சரி குடியேறியதாகச் சரித்திரங்களில் சொல்லப்படவில்லை. அங்ஙனம் அவர்கள் குடியேறியிருந்தால் அவர்கள் வாழ்ந்த இடங்கள், நிலங்கள், காணிகள் முதலானவைகள் அவர்களுடைய நாமத்தோடு இன்றைக்கும் விளங்கியிருக்கும்.

மாணவன்: “வடுகரின் கொடுமைகளினால் கன்னியாகுமாரியிலும் அதன் சுற்று வட்டாரங்களிலுமுள்ள பரதகுலமக்கள் பலபல தீவுகளில் போய் ஒழித்தார்களென்றும், அதில் ஒருபகுதியார் புங்குடுதீவின் தென்கீழ் முனையில் கரையிறங்கிக் குடியேறினார்களென்றும், கரையிறங்கியதும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் கரத்தில் இலங்கிய திருச்சிலுவை யடையாளத்தின் ஞாபகமாக “குருசு” ஒன்றை நாட்டி பின்னொரு கொட்டிலுமமைத்து ஆராதனை பண்ணிவந்தார்களென்றும், காலகதியில் அவ்விடத்தைவிட்டுத் தற்போது விளங்கும் ஆலயத்தைக் கட்டினார்களென்றும், இவ்வாலயம் தமிழகத்திலிருந்து வந்த பரதகுலமக்களால் நிர்மாணிக்கப்பட்டதென்றும்” இன்னொரு பத்திரிகையில் படித்தேன் அது உண்மைதானா?

ஆசிரியர்: பரதகுலமக்கள் வடுகரால் இம்சிக்கப்பட்டதும் உண்மை. இவர்கள் அஞ்சிப் பயந்து வௌ;வேறு தீவுகளுக்கு ஒழித்துக் குடியேறியதும் உண்மை. இவர்களின் இந்தத் துன்பகாலங்களில் சவேரியார் என்னும் நல்லாயன் இவர்களுக்குத் துணை புரிந்ததும் உண்மை. ஆனால், வடுகரின் நெருக்கிடையால் ஒரு பகுதிப் பரதகுலமக்கள் புங்குடுதீவுத் தென்கோடி முனையில் வந்து குடியேறினார்களென்பதும், இவர்களால் குருசு நாட்டப்பட்டதென்பதும், பின்னால் தற்போதுள்ள சவேரியார் ஆலயம் பரதகுலமக்களால் கட்டுவிக்கப்பட்டதுமான செய்தி சரித்திரத்துக்கு ஒவ்வாததும் ஒப்புக்கொள்ள முடியாததுமான ஒரு பொய்ச் செய்தியாகும். எனெனில், தங்களைப்பாது காப்பதற்காகத் “தீவுகளில் போய் ஒழித்துள்ளார்க”ளென்று சவேரியாரின் கடிதங்களில் வரையப்பட்டிருக்கிறதே யொழிய ஒருபகுதியார் புங்குடுதீவில் போய் ஒழித்தார்களென்று எழுதப்படவில்லை. கன்னியா குமரி, தூத்துக்குடி முதலாமிடங்களிலும் தென்னிந்தியக் கரையோரங்களிலும் அநேகதீவுகள் பரந்து நிறைந்து கிடக்கின்;றன. தங்களுக்கு அருகாமையிலுள்ள தீவுகளில் போய் இவர்கள் குடியேறியுள்ளார்கள். எத்தனையோ மைல்களுக்கப்பாலுள்ள புங்குடுதீவில் இவர்கள் ஒருபோதும் வந்திருக்க மாட்டார்கள். அங்ஙனம் புங்குடுதீவுக்கு வந்திருந்தால் இன்னும் சமீபமாயிருக்கும் கச்சைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு முதலாம் தீவுகளுக்கும் இவர்கள் சென்றிருக்கலாமே. ஆகவே இந்தச் செய்தியும் ஒரு சிலரின் சுயநல நோக்கத்திற்காக எழுதப்பட்;டவைப்புக் கட்டேயன்றி சரித்திரசம்பவமன்று.

அடுத்தது குருசடியை எடுப்போம். “குருசடி” என்று பாரம்பரியமாய்ச் சொல்லிவந்த வளவு இன்றும்; புங்குடுதீவில் இருக்கிறது உண்மை. 1600ம் ஆண்டில் பேதுறு தே பெற்றக்கோன் சுவாமியாரால் தீவுப்பகுதிகளில் வேதம் போதிக்கப்பட்டது. இச் சுவாமியாரால் இத்தீவுகளுக்கு வேதம் போதிப்பதற்காக இக்குருசை நாட்டியிருக்கலாம். அல்லது நெடுந்தீவிலிருந்து, புங்குடுதீவுக்குக் குடியேறிய கத்தோலிக்கர்களாலும் இச் சிலுவை நாட்டப்பட்டு மிருக்கலாம். போர்த்துக்கேயர் காலத்தில் எங்குபார்த்தாலும் குருசுகள் தான் வேதம் போதிக்க நாட்டப்பட்டிருந்தது. ஊர்காவற்றுறையில் முதன் முதல் வாடிவீட்டில் ஒருகுருசு நாட்டப்பட்டே வேதம் போதிக்கப்பட்டது. அழிந்துகிடந்த மருதமடு பெமாலைமாதா ஆலயத்தை மீண்டுங் கண்டறியவும் ஒரு குருசு மரமே குறிகாட்டியாக நின்றது. சிங்கள நாட்டில் இன்றைக்கும் வத்தளை, ஜாயெல, றாகமை, கந்தானை, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு முதலாமிடங்களில் ஒவ்வொரு சந்தியிலும், வீதிகளிலும் குருசுகள் நாட்டப்பட்டிருப்பதை அறியலாம். இது மாத்திரமல்ல, ஒல்லாந்தர் காலத்தில் கிறீஸ்தவர்களல்லாதார் தலைப்பாகை அணியமுடியாதிருந்தது. ஏனெனில் தலைப்பாகையில் சிலுவைச் சின்னம்பொறித்தே அணிய வேண்டுமெனச் சட்டமிருந்தது. இதனால் தலைப்பாகை அணிய விரும்புவோர் சிலுவைச் சின்னமிட்டே அணிந்து வந்தனர். மேலும் வயல்களில் விளைந்த நெல்லைக்களத்தில் குவித்து அரசினர் தம் பங்கை எடுக்க வரும் வரைக்கும். அந்நெல்லுக்குவியலில் சிலுவையடையாளம் இட்டிருக்க வேண்டுமென்னும் சட்டமுமிருந்தது. ஆகவே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் காணிகளின் எல்லைகளுக்கும் கல்லறைகளுக்கும், புதுமனை அத்திவாரங்களுக்கும், ஆலயக்கொட்டில்களுக்கும், இது போன்ற வௌ;வேறு கருமங்களுக்கும் பொதுவாகச் சிலுவைக்குறிப்பே பாவிக்கப்பட்டுவந்த படியால், புனிதசவேரியாரின் கையிலிருந்த சிலுவையை ஞாபகப்படுத்த நாட்டப்பட்ட குருசென வர்ணிப்பது விந்தையும் வேடிக்கையுமான கதையாகும்.

மாணவன்: புங்குடுதீவு சவேரியார் கோயிலுக்குச் சேர்ந்தவர்கள் பரகுலமக்களென்று சிலர் சொல்லிக் கொள்கிறார்களே அது உண்மை தானா?

ஆசிரியர்: பரதகுலமக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறவில்லையென்று ஏலவே சொல்லிமுடித்து விட்டேன். அதைப் பற்றி இனவியாக்கியானந் தேவையில்லை. ஆனால் பரத குலமக்கள் ஆதியில் மன்னார் மாவட்டத்தில் குடியேறியிருந்தது உண்மை. இன்றைக்கும் வங்காலை, பேசாலை, பறப்பாங்கண்டல் முதலிய இடங்களில் பெருந்தொகையாக வசிக்கிறார்கள். கொழும்புப் பகுதியிலும், நீர்கொழும்புப் பகுதியிலும் பிற்பகுதியில், வந்து குடியேறியுள்ளார்கள். இவ்வளவு இடங்களிலுமே பரதகுலமக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். அன்றியும் பரதகுல மக்களுக்கு ஆதிதுவக்கம் அதாவது பரங்கிக்காரர் காலந்துவக்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கௌரவப்பட்டப் பெயர்வழங்கி வந்திருக்கிறது. சிங்களவருள்ளும் இப்பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலோ, கொழும்பு, நீர்கொழும்பு, மன்னார் மாவட்டம் முதலாமிடங்களிலேயுள்ள பரதகுல குடும்பத்தாருக்கும் இப்பட்டங்கள் இல்லாமலில்லை. இன்றைக்கும் அப்பெயர்களோடே அழைக்கப்பட்டு வருகிறார்கள். பெரைரா, கொரியா, கோமஸ், வில்வராயன் மஸ்கறிஞஸ், பீரிஸ், கூஞ்ஞே, தற்குருஸ், கல்தேரா, கொரேரா இவை போன்ற இன்னும் நூற்றுக்கணக்கான கௌரவப்பட்டப் பெயர்கள் அவர்கள் மத்தியில் உண்டு. புங்குடுதீவிலும் இக்குலத்தவர்கள் இருந்திருப்பார்களேயாகில் அல்லது இன்று இருப்பார்களேயாகில் இப்பட்டப் பெயர்கள் தாங்கிய ஒரு குடும்பமாவது அருமைக்காகவாவது இருத்தல் வேண்டுமே. அப்படி ஒருவருக்கும் ஒரு பெயரையும் காணோமே. ஆகவே இந்த அபுனுவாஸ் கதைகளில் வீண் நேரத்தைப் போக்காமல் பயன்படக் கூடிய கேள்விகளைக்கேளும் தம்பி.

மாணவன்: தமிழ் மன்னர்காலத்தில் இராசபவனிக்கும், இராசாங்க சேவைக்கும் சில சாதியார்கள் கட்டாய சேவையாளராக நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களுள் படைவீரர்களும் ஒருவரென்றும் கூறினீர்கள். இப்படை வீரர்கள் எக்குலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களைத் தமிழ் நாடு என்ன பெயர் சொல்லி அழைக்கிறது?

ஆசிரியர்: இப்படைவீரர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைத்தமிழ்நாடு மறவர், தேவர், கள்ளர், அகம்படியர், படையாட்சி, மாறன், அப்பலத்தார் முதலான இன்னோரன்ன பெயர் சொல்லி அழைக்கிறது.

மாணவன்: இவர்களைக் கள்ளரென்றும் அழைப்பதாகக் கூறினீர்கள், அப்படியானால் இந்தக் கள்ளக் கூட்டத்தை அரசாங்கம் சேவைக்கு எப்படி நம்பிக்கையுடன் வைத்திருப்பது?

ஆசிரியர்: “கள்ளர் மறவர் கணக்கர் அகம்படியர் மௌ;ள மௌ;ள வந்து வேளாளரானார்கள்” என்று ஒரு சுலோகமும் தமிழ் நாட்டிலுண்டு. இவர்களைக் கள்ளரென்று கூறியவுடன் பொதுவாக வீட்டிலும் நாட்டிலும் களவெடுக்குஞ் சாதியாரென்றும், கொள்ளையடிப்பவரென்றும் நம்பிக் கொள்ளுகிறார்கள். அது முற்றிலுந்தவறு. அதனை நன்கு விளங்கினால் அதன் உண்மை தெரியும்?

மாணவன்: தயவு செய்து அதனை ஒவ்வொன்றாக விளங்கப்படுத்துங்கள்.

ஆசிரியர்: சரி சொல்லுகிறேன் கேள். முதலாவது கள்ளரை எடுப்போம். போர் துவங்குவதற்கு முன் இவர்களுக்குள்ள முதற்பணி என்னவெனில், எதிரிகளின் நாடுகளிற் புகுந்து கோட்டை, கொத்தளம், அகளி, படைவீரர்முகாம் முதலானவிடங்களெல்லாம் மறைமுகமாகச் சுற்றிப் பார்த்து அங்குள்ள பலம், பலவீனம், வெடிப்பு, உடைப்பு, பயிற்சி, கருவி முதலானவைகளைக் கண்ணோட்டம் பார்த்தும். பின் கடற்துறைகளிற் சென்று எந்தெந்த முனைகளில் புதிதாகக் கோட்டைகள் அமைக்கிறார்கள். கொத்தளங்கள் கட்டுகிறார்கள். எத்தனைபோர் மீளிகள், மருந்துக் கப்பல், உணவுக்கப்பல் புதிதாக வெள்ளோட்டம் விடுகிறார்களெனவறிந்தும், பிற்பாடு உள்நாடுகளில் புகுந்து, செல்வங்கொழிக்குதா அல்லது பஞ்சம் நிலவுதா, குடிமக்களுக்கு மன்னன் பால் வெறுப்பா அல்லது விருப்பாவென ஆராய்ந்தும் இவைமுதலான வேவுகளைப்பார்த்து தன் நாட்டரசனுக்கு இரகசியத்துப்பு கொடுப்பவர்களே கள்வராவர். மற்றப்படி பிறருடைய பொருட்களைக் களவெடுப்பவரல்லர்.

அடுத்தது மறவரை எடுப்போம். இவர்கள் தான் தவறாமல் போர்ப்பயிற்சி செய்தும், இளஞ்சிப்பாய்களுக்குப் போர்க்கலைபயிற்றுவித்தும், கருவிகளைத் துருப்பிடியாமல் பாதுகாத்தும், கரியேற்றம், பரியேற்றம், ரதவோட்டம் முதலான பயி;ற்சிகளைப் பரந்த வெளியிடங்களில் கொண்டு சென்று அணிவகுத்து ஒத்திகை பார்த்தும் வருவதே இவர்களின் கடமையாகும்.

கணக்கரானோரும் மறக்குலப் போர்வீரர்களிலொருவர். இவர்களின் பிரதான கடமை அரசனுக்குச் சேர வேண்டிய திறைகளை, வரிகளை, கப்பங்களை வசூலிப்பதாகும். வேறுகுலத்தவர்களால் திறைப்பணங்களை ஒழுங்காக அறவிட முடியாதபடியால் இப் பொறுப்பையும் மறவருக்கே ஒப்படைக்கப்பட்டது. இவர்களைக் கணக்கர், கணக்காயரென்றும் அழைப்பர்.

கடைசியாக அகம்படியாரை எடுப்போம். அகம் + படியார், நெஞ்சுபணியாதவர். அதாவது எவருக்கும் தலைவணங்காதவர் என்று அர்த்தம். அடுத்தது அகம் ஸ்ரீ வீடு. வீட்டில் தங்குபவர் என்றும் ஒரு கருத்துண்டு. போராற்றி நாடுபிடிபட்டதும் எவருக்கும் தலைவணங்காமல், அந்நாட்டில் முதன் முதல் அஞ்சா நெஞ்சத்துடனும், ஓர்மத்துடனும் குடிபுகுந்து, அங்கே நிலையாகத் தங்கி அரசனின் பணிகளாற்றுபவர்களாவர். இந் நால்வரும் நாலு தொழில்களைச் செய்தாலும் யுத்தகாலங்களில் ஒன்றாகவே போர்முனையில் நின்று போர்புரிபவர்களாவர்.

மாணவன்: ஐயா! அந்நான்கு பகுதியாரிலுமுள்ள வித்தியாசங்களும், உள்கருத்தும் இப்போ எனக்கு நன்கு விளங்கிவிட்டது. இன்னும் மறவகுலத்தவரைத் தவிர வேறுசாதியாரை அரசாங்கம் போர்வீரர்களாக எடுக்க மாட்டார்களா?

ஆசிரியர்: ஒருபோதும் இல்லை. வடநாட்டுப்போர்வீரர்கள் ரஜபுத்திரர். தென்நாட்டுப் போர்வீரர்கள் மறவர். இவ்விருசாதியாரையுமே, இந்திய நாட்டுச் சி;ப்பாய்களென்று. பார நாட்டுக் காவியங்கள் பறைசாற்றுகின்றன. தமிழ் இலக்கியங்களில் மறவர்களின் வீரம், தீரம், போர்த்திறன், முதலியவைகளும் போர்ப்பறை கேட்டதும் மறக்குலப்பெண்டிரின் ஆரவாரமும். ஆனந்தக் கூத்தும், தம்கணவன் மார்களை, சகோதரர்களை, மக்களைப் போர்முனைக்கு அனுப்பிவைக்கும் அணியடுக்கும் போர்முனையிலே புறமுதுகுகாட்டாது நெஞ்சிலே காயம்பட்டிறந்ததைக் கண்டால் அவர்கள்படும் அகமகிழ்ச்சியும். மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. மற்றச் சாதியாரனைவரும் போர் என்று கனவு கண்டாலுமே அஞ்சிப்பயந்து நாட்டையும் வீட்டையும் விட்டு அயல் நாடு செல்வர். மறவர்கள் போருக்கென்றே பிறந்தவர்கள். இவர்களின் குலத்தொழிலும் போராடுவதேயாகும். இதனாலேயே தமிழ் மன்னர்கள் மறவர்குலத்தாரை மாத்திரம் போர் வீரர்களாகத் தெரிந்தெடுப்பதின் காரணமாம்.

மாணவன்: மறவருக்கு மாத்திரந்தானா யுத்தத் தொழிலை அரசாங்கம் பதிவாகக் கொடுத்தது.

ஆசிரியர்: ஆம் ஒவ்வொருசாதியாருக்கும் ஒவ்வொரு தொழிலைப்பதிவாகவும், கட்டாயச் சட்டமாகவும் கொடுத்த வண்ணம் மறவர் குலத்தாருக்கு யுத்தத் தொழிலைப் பதிவாகக் கொடுத்தது மாத்திரமல்ல. அக்குலத்தவர்களின் ஆண்மக்கள்; பதினாறு வயது ஏற்பட்டதும் யுத்தப் பயிற்சியில் ஈடுபட வேண்டுமென்று கட்டாயச் சட்டமு மியற்றியுள்ளார்கள். இச்சட்டம் வேறு எக்குலத்தாருக்குமில்லையென்று யாழ்ப்பாணச் சரித்திரமே வலியுறுத்திக் கூறுகிறது.

மாணவன்: அப்போ தமிழ் நாட்டுப்படைவீரர். போர்வீரர் என்று சரித்திரங்களில் குறிப்பிடுவதெல்லாம் மறவரையொழிய மற்றச்சாதியாரல்லவென்பதுவே உங்கள் முடிவு.

ஆசிரியர்: என் முடிவென்ன. இந்திய இதிகாசங்களில் பாரத நாட்டுக் காவியங்களின், பண்டைக்காலச் சரித்திரங்களின், சங்க இலக்கியங்களின். முடிவாகும்.

மாணவன்: இம் மறவர் குலத்தார் தென்னிந்தியாவில் எங்கெங்குள்ளனர்?

ஆசிரியர்: இவர்கள் தென்னிந்தியாவில் பலபாகங்களிலுமிருக்கிறார்கள். ராமனாட் ஜில்லாவில் வல்லையென்றதுறை யையடுத்த ஒரு பகுதியிலே இவர்கள் ஏராளமாக உண்டு. இன்றைக்கும்இவர்கள் இங்கு நிறைந்துள்ளார்கள்.

மாணவன்: இலங்கைத்தீவில் இக்குலத்தவர்கள் எப்போது குடியேற்றப்பட்டார்கள்? எங்கெங்கு குடியேறியுள்ளார்கள்?

ஆசிரியர்: இவர்கள் மற்றச் சாதியாரைப்போன்று அரசர்களாலோ வேளாண் முதலிமார்களாலோ, அன்றேல் மதகுருக்களாலோ குடியேற்றப்பட்டவர்களல்ல. தமிழ்நாட்டு மன்னர்கள் இலங்கைக்குப் படையெடுத்துப் போர் நடத்திய காலங்களிலெல்லாம் படைவீரர்களாகவே இங்கு வந்தவர்கள்.

மாணவன்: படைவீரர்களாகவந்தவர்கள் பின் எப்படி இங்கு குடிபதிகளானார்கள்?

ஆசிரியர்: சில காலங்களில் தமிழ்நாட்டு மன்னர்கள் யாழ்ப்பாணத்தையும், சிங்களப்பகுதிகளினையும் கைப்பற்றி ஆணை செலுத்தியபோது இப்படைவீரர்களில் ஒரு சிலர் தம் தாயகம் திரும்பாமல் இங்கேயே தங்கியுள்ளனர். வேறு சிலர் போரில் வெற்றியீட்டிய சந்தோஷத்திற்காக அரசர்களால் சன்மானமாக வழங்கியுள்ள காணிகளில் தங்குவதற்கு விருப்பங் கொண்டனர். பிறிதொருபகுதியார் தமிழ் மன்னரின் ஆட்சிக்காலம் அஸ்தமித்ததும் வேற்றிடஞ் செல்லாது தாம் பணியாற்றிய பகுதிகளிலே குடும்பத்தோடு சீவிக்க வழிகோலினர். இவ்விதமாகவே மறவர்குலத்தார் யாழ்ப்பாணத்தில் குடிபதிகளாயினரெனக் கூறலாம்.

மாணவன்: மறவர்கள் யாழ்ப்பாணத்தில் குடிபதிகளாக வாழ்ந்த பூர்வீக இடங்களில் ஒரு சிலவற்றைக் கூற முடியுமா?

ஆசிரியர்: ஏன் கூறமுடியாது. பட்டப்பகல்போல் வெட்டவெளிச்சமாக இருக்கிறதே இருபெரும் பகுதிகள். ஒன்று வடமராட்சி (வட + மறவர் + ஆட்சி) மற்றது தென்மராட்சி (தென் + மறவர் + ஆட்சி) இன்னும் மறவன்புலம் (சாவகச்சேரியிலுள்ளது) மறத்திகன்னாட்டி (அடம்பனுக்கும் நெடுங்கண்டலுக்கு மிடையிலிருக்கிறது) தற்போதும் மறவர்கள் இங்கு பெருந்தொகையாக வாழ்கிறார்கள். இன்னும் மறவன்பிட்டி, மறவன்திடல். மறவன்காடு, மறவன் ஓடை முதலாம் பெயர் கொண்ட இடங்களெல்லாம் இவர்களின் பூர்வதலங்களாம். நெடுந்தீவு, புங்குடுதீவு முதலிய தீவுகளிலும் மேற்கூறிய நாமங்கள் கொண்ட காணிகளும் குறிச்சிகளும் இருக்கின்றன. வேலணையில் பழைய பஸ்நிலையத்திற் கருகாமையிலிருக்கும் ஒருகாணியின் பெயர் வலதேவன் சீமாவென்று அழைக்கப்படுகிறது. இது மாத்திரமல்ல தமிழ்மன்னர்காலத்தில் மறவர்களுக்குக் காணிகள் குறிச்சிகள் கொடுத்தவிதமும் ஒரு நூதனமுறையாகும். அது எப்படியெனில். காணிகளோ, குறிச்சிகளோ விரும்புகின்ற மறவனைத் தமிழ் மன்னன் அழைத்து, மூச்சுப்பிடிக்கும்வரைக்கும் நீளத்துக்கும் அகலத்துக்கும் ஓடச்சொல்லி, ஓடுமட்டும் ஒடி எங்கே களைத்து நிற்கிறானோ அங்கிருந்து ஒடியதூரம் வரைக்கும் உள்ளநிலத்தைச் சதுரப்பட அளந்து மான்யமாகக் கொடுக்கப்பட்டதாம். கொடுக்கப்பட்ட குறிச்சிகளுக்கு அந்தந்த மறவர்களின் நாமமே வழங்கப்பட்டதாம். இவ்வண்ணம் மறவர்களுக்கு மான்மமாக வழங்கப்பட்ட குறிச்சிகள் பருத்தித்துறை சிவன்கோயிலுக்கருகாமையிலுள்ள சிங்கபாகுதேவன் குறிச்சி, வதிரியிலே வதிரிபாகுதேவன் குறிச்சி, உடு;ப்பிட்டிப்பகுதிகளிலே சமரபாகு தேவன்குறிச்சி, செயக்கொடி பாகுதேவன் குறிச்சி, குறுளிபாகுதேவன் குறிச்சி முதலியன இன்றைக்கும் உறுதிச்சாசனங்களில் எழுதப்பட்டு வருகின்றன. அன்றியும் மறவருள்ளே தலைசிறந்த அதிகாரிகளாக விளங்கிய வீரமாணிக்கத் தேவனும், நராங்குபாகுதேவனும் பலாலியிலும், நரசிங்க தேவனும், சி;ன்னநாட்டான் தேவனும் மயிலிட்டியிலும் சிற்றரசர்களைப் போன்றவலிமையோடு வாழ்ந்தார்களென்றும் பாரம்பரியமாய்;ச் சொல்லி வரங்கதைகளுமுண்டு.

மாணவன்: இவ்வண்ணம் சீர்சிறப்போடு பலவிடங்களிலும் பரவியிருந்த மறவகுலம் தற்போது குன்றிக் குறைந்து சிலவிடங்களில் அடியோடு இல்லாமல் அழிந்து போன தன் காரணமென்ன?

ஆசிரியர்: மறவர்கள் காட்டை வெட்டிக் களனியாக்கவும், நாட்டை நகரமாக்கவும் வரவழைக்கப்பட்டவர்களல்ல. நாட்டைக்கைப்பற்ற தமிழரசர்களோடு படைவீரர்களாக வந்தவர்கள். போர்வீரர்கள் குடும்ப சகிதமாய் வருவதற்குக் காரணமில்லை. யுத்தம் முடிந்தபின் நிரந்தரமாக இங்கு தங்குவதற்குவிருப்பங்; கொண்டனர். இதனால் தங்களுக்கு வாய்ப்பான இடங்களையும் தேடிக்கொண்டனர். இவர்கள் சத்திரிகுலத்தவர்கள், புயபலபராக்கிரம முள்ளவர்கள். அழகானவசீகர புருடர்கள், இன்னும் மன்னர்கள் மத்தியிலும் நல்ல மதிப்பையும் பெற்றவர்கள். மறப்பெண்டிர்கள் அதிகம் இல்லாமையால் நல்ல சாதிமக்கள் எவ்வித கூச்சமுமின்றி இவர்களை விவாகஞ் செய்யத்தலைப்பட்டனர். காலகதியில் சம்பந்தம் செய்த சாதியார் தம்குலந்தழைக்கவழி கோலினர். இதனால் மறவர்குலம் குன்றிக் குறைந்து போகலாயிற்று. சில இடங்களில் மத மாற்றத்தினாலும் இவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். இதனாலும் இவர்களின் குலம் ஒடுங்கி உள்ளது.

மாணவன்: இவர்கள்;; எந்தச்சமயத்தைச் சேர்ந்தவர்கள்?

ஆசிரியர்: போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் வருகைக்கு முன் தமிழர்கள் யாவரும் சைவர்கள் என்பதை முன் கூறியுள்ளேன். மறவர்களும் சுத்த சைவர்களேயாவர். போர் வீரர்களாயிருந்தாலும் சைவவிதிகளின் படியே ஒழுகிவந்தனர்@ இவர்கள்; போருக்குப் புறப்படும் போது தங்கள் குலதெய்வமான சக்கம்மாளுக்குப் பொங்கலிட்டுப், பலி கொடுத்துப் போர்க் கருவிகளுக்கு மஞ்சள் பூசியுமே செல்வது வழக்கம்.

மாணவன்: ஐயா! புங்குடுதீவு நெடுந்தீவிலும் மறவரின் குலப்பெயர்கள் கொண்ட காணிகள் இருப்பதாகச் சொன்னீர்கள். அப்படியானால் அங்கேயும் மறவர்கள் குடிபதியாயிருந்தவர்களா?

ஆசிரியர்: சரித்திர ஆசிரியர்கள் ஆங்காங்கேயுள்ள காணிப் பெயர்களை, கல்வெட்டை, உறுதிச்சாசனங்களைக் கொண்டே இன்னன்ன சாதியார்களின் குடியேற்றங்களென்றும் கூறுகிறார்கள். மட்பாண்டங்கள், சிலைகள், காசுகளைக்; கொண்டு ருசுப்படுத்துகிறார்கள்.

உதாரணமாக சாட்டியிலே குயவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்க அவர்களால் வனையப்பட்ட மட்பாண்டங்கள் ஏராளமாக உடைபட்டு அங்கு புதைந்து கிடப்பது இதற்கோர் எடுத்துக்காட்டாகும். இதேபோல் புங்குடுதீவிலும் நெடுந்தீவிலும் மறவர்களின் நாமந்தாங்கிய காணிகள் இருப்பதினால் இத்தீவுகளிலும் மறவர்கள் வாழ்ந்தார்களென்பதை ஏன் நம்பமுடியாது.

மாணவன்: நம்பலாம். ஆனால் இவர்கள் இங்கு குடிபதிகளாக வாழ்ந்தார்களென்று யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளதா?

ஆசிரியர்: சகல சம்பவங்களும் சரித்திரங்களில் இடம் பெற்றிருக்க முடியாது. விசேஷ சம்பவங்களான அரசர்களின் காலம், அரசுமாற்றங்கள், யுத்தங்கள், மதங்கள், ஒவ்வொரு அரசர்களின் செங்கோன்மை, அவர்களால் ஆக்கப்பட்ட திருப்பணிகள் இவை முதலானவைகளையே சரித்திராசிரியர்கள் சேகரித்து சரித்திரங்களை உருவாக்க முயலுவார்கள். சில சரித்திராசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமானவைகளைத் தம்குலத்துக்கு, மதத்துக்கு சாதகமானவைகளை நுணுக்கி ஆராய்ந்தும் மற்றவைகளைக் கூட்டியும் குறைத்தும் தட்டிக்கழித்தும் எழுதுவதும் இயல்பு. இன்னும் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எத்தனையோ ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு ஆசிரியர்களின் எழுத்தும் கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறதை எத்தனையோ உதாரணங்களில் எடுத்துக் காட்டலாம். ஆகவே தீவுப்பகுதியில் மறவர்களின் குடியேற்றத்தைப் பற்றி யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கட்டாயம் இடம் பெறவேண்டுமென்ற நியதியில்லை.

மாணவன்: அப்படியானால், மேற் கூறிய இருதீவுகளிலும் மறவர்கள் குடிபதிகளாய் வாழ்ந்தார்களென்பதை எப்படி நிரூபி;க்கமுடியும்?

ஆசிரியர்: பாரம்பரியமான கதைகள், பட்டோலை, தோம்பு, உறுதிச்சாசனம், கல்வெட்டு, நாட்டுப்பாடல், பிறஏதுக்கள், நம்பகமானயூகம் இவைகளைக்கொண்டு வடிவாக நிரூபிக்கலாம். சரித்திராசிரியர்களும் நான்மேலே சொல்லியவைகளையே ஆதாரமாகவைத்துச் சரித்திரங்களை நூல் வடிவமாக்கினார்களென்பதை மறவாதே.

மாணவன்: ஐயா! மன்னிக்கவும் உங்கள் விளக்கத்தைத் தயவு செய்து கூறுங்கள்.

ஆசிரியர்: கவனமாய்க்கேள். முதலாவது தென்னிந்தியத் தமிழ் நாட்டுப் படைவீரர்கள் யாவரும் மறவர்களென்பதைப் பரிபூரணமாக ஒப்புக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் படைவீரர் யாவரும் வேறு எக்குலத்தாருமில்லை மறவரே மறவரென்று சகல தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. ஆகவே படைவீரர்களானோர் மறவர்களென்பதை மறவாமல் மனதில் வைத்துக் கொள்.

இரண்டாவது: தமிழ் மன்னர் காலத்தில் நெடுந்தீவிலே ஏராளமான படைவீரர்கள் இறக்கப்பட்டிருந்ததாகவும், தமிழ் மன்னர்களின் பாதுகாப்புக்கும், போர்த்தளத்திற்கும் நெடுந்தீவிலே ஒரு வலிமை பொருந்திய கேந்திர ஸ்தானமாக அமைக்கப்பட்டிருந்ததாகவும் யாழ்ப்பாணச் சரித்திரங்கள் கூறுகின்றன.

மூன்றாவது: தென்னிந்தியக் கரையோரங்களிலுள்ள கிராமங்களிலும், ராமனாட்ஜில்லாவிலும், வல்;லையென்ற துறையிலும் ஏராளமாக இருப்பவர்கள் மறவர்களேயாவர்.

நான்காவது:- யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள சகல தீவுகளிலும், நெடுந்தீவே மேற் கூறிய இந்திக்கரைக்கும் கிராமங்களுக்கும் சமீபமாயிருப்பது. இதனால் போர் முடிந்த பிற்பாடு மறவர்களில் சிலர் பொழுது போக்கிற்காக நெடுந்தீவில் குடும்பமாய் வந்து தங்கவும், பிற்பாடு குடி பதிகளாக வாழவும் வாய்ப்பிருக்கிறது.

ஐந்தாவது: மறவர்கள் இந்தியாவில் வாழ்ந்;த ‘வல்லை’ யென்ற துறையின் பெயர் நெடுந்தீவிலுமிருப்பது அது இன்று வெல்லையாக வழங்கப்படுகிறது. வல்லையென்ற கிராமத்திலிருந்து வந்த மறவர்கள், நெடுந்தீவில் குடியேறியபோது தங்கிராமப் பெயரைமறவாது இதற்கும் அப்பெயரையே சூட்டினரென எண்ண இடமுண்டு. பருத்தித் துறைக்குப் போகும் வழியிலுள்ள ஒரு வெளியில் மறவர்கள் குடியேறியிருந்ததினால் அதற்கும் வல்லை வெளியென்ற நாமத்தைச் சூட்டியிருப்பது கண்கூடு. அன்றியும் மறவர்களின் குடியேற்றம் இல்லாவிடில் அவர்களின் குலப் பெயர்கள் கொண்ட காணிகள் அங்கிருக்க முடியாது. இவ்வகையான ஏதுக்களைக் கொண்டு படைவீரர்களான மறவர்கள் நெடுந்தீவில் குடிபதிகளாக வாழ்ந்தார்களென நம்ப இடமுண்டு.

மாணவன்: அப்படியானால் ஆதியில் நெடுந்தீவில் வாழ்ந்த மறவக் குடிகளின் சந்ததியார்கள் இன்றும் இருக்கிறார்களா?

ஆசிரியர்: இருக்கத்தானே வேண்டும். நெடுந்தீவில் ஏராளம் படைவீரர்கள் இருந்தார்களென்றும், இப்படைவீரர் காலகதியில் நெடுந்தீவிலே குடிபதிகளாக வாழ்ந்தார்களென்றும் சரித்திரங்கள் கூறும் பொழுது படைவீரர்களான மறவர்கள் நெடுந்தீவில் இல்லாமல் இருக்க முடியுமா?

மாணவன்: ஐயா! நீங்கள் சொல்லுமாப் போல் மறவர்கள் நெடுந்தீவில் இருக்க வேண்டியது உண்மையிலும் உண்மை. ஆனால் தற்போது அவர்கள் யாரென்பதை ருசுப்படுத்துவதெப்படி?

ஆசிரியர்: வடிவாக ருசுப்படுத்தலாம். சில குலமக்களின் மகிமைகள் பொதுப்பெயரோடு இணைந்து, அப்பொதுப் பெயரே நாளாந்தம் பாவனைக்கு வந்தபடியால் சில சாதியாரின் உண்மை வரலாறுகளும் மங்கிமறைந்து போயிருக்கிறது. உதாரணமாக ‘மன்னார் வேதசாட்சிகள்’ என்ற பதத்தை எடுத்துக்கொள்வோம். இப்பதம் பொதுப் பெயரைக் கொண்டு வழங்குவதால் எந்தக்குலமக்கள் “வேதசாட்சிகளா” னார்கள் என்ற மகிமைப்பட்டத்தை எடுத்துக்கொள்ள முடியாமலிருந்தது. இச்சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுவதற்காக இருதுறவிகள் தற்கரீதியாக இருபுத்தகங்களே எழுதியுள்ளார்கள். தற்போது அதனைப் பற்றி சிலவல்லுனர்கள் ஆராய்ச்சிபண்ணி “கடைஞர் குலத்தார்களே” மன்னாரில் வேதசாட்சிகளானார்களென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இதேபோல் “படைவீரர்கள்” என்ற பொதுப்பதமே நெடுந்தீவில் பாவனையில் இருந்தபடியால், மறவனென்ற பெயரோடு கூடிய தனிக்குலம் மங்கிப் போய்விட்டது. இக்குலமக்கள் யாரென்பதை சிலபல ஆதாரங்கள் மூலம் சொல்லுவதற்கு வழியிருக்கிறது.

மாணவன்: ஐய! அதனை தயவு செய்து விபரமாகச் சொல்லுங்கள்.

ஆசிரியர்: தம்பி! சிங்கை ஆரியன் மன்னன் காலத்தில் பலபல வேளாண் முதலிமார்களும் அவர்களது பரிவாரங்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற்றப்பட்டார்களென்று முன் கூறியுள்ளேன். நெடுந்தீவில் குடியேறியவர் தனி நாயக முதலியும் அவர் பரிவாரங்களுமாவர். இவர் செய்யூர் வேளாளனும் இந்திரனைப் போன்ற செல்வந்தனும், குவளைமாலை மார்பனும், சத்தியத்திலே சிறிதும் தளம்பாதவனும், இருமரபுந்துய்யவனும் என்று யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இவரது சந்ததியாரே இன்று நெடுந்தீவில் வேளாளராக இருப்பவர்கள் நெடுந்தீவுவேளாண்குடி மக்களே எவ்வித கலப்பில்லாத உயர் சாதிமக்களென்று யாவரும் ஒரே வாய்ப்படச் சொல்லி வருகிறார்கள். இவர்களை உயர்குல மக்களென்று சொல்லுவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை. பிறநாட்டு மக்களுக்கு அன்னபானாதிகள் கொடுத்து உபசரிப்பதிலே இவர்களுக்கு நிகராக வேறு எந்த நாட்டு வேளாளருமில்லையென்றே சொல்லலாம்.

இவர்கள் சிங்கை ஆரியன் மன்னன் காலத்தில் வந்தவர்களேயொழிய அதற்குமுற்பட்டவர்களல்ல. ஆனால் இவர்களுக்குமுன் படைவீரர்களான மறவர்களே வந்துள்ளார்கள். நெடுந்தீவில் மறவர்கள் காலடிவைக்கும் போது வேறு தமிழ்குடிகள் இல்லை. சங்குகுளிப்பதற்கும், முத்துக்குளிப்பதற்கும் சோனகர்கள் மாத்திரம் வந்து தங்கி உள்ளனர். தனிநாயக முதலியின் குடியேற்றத்திற்குப் பின் நெடுந்தீவில் இருசாதிகள் மாத்திரம் சனப்பெருக்கத்தாலும், வலிமையாலும், செல்வஞ் செல்வாக்காலும், மேன்மையோடு இருந்திருக்கின்றனர். முதலாவது வேளாண் குடிமக்கள், இரண்டாவது மறவ குடிமக்கள் இதனை நாம் யூகத்தால் ஒப்புக்கொள்ள முடியும். இவ்விரு சமூகமும் பரம்பரைச்சைவ சமயத்தவர்கள், தமிழ் மன்னர்களாலும் நன்குமதிக்கப்பட்டவர்கள். தமிழ் மன்னரின் காலமொழிந்து, போர்த்துக்கேயரின் காலம் தலைப்பட்டபின் இவ்விரு சமூகத்தாரின் நட்புறவும் குறைந்த, பகைமைவளர்ந்து ஈற்றில் மறவர் என்ற நாமமே அழிய ஏதுவாயிற்று.

மாணவன்: ஐயா! இவர்களுக்குப் பகமைவரவேண்டிய காரணமென்ன?

ஆசிரியர்: தம்பி! மறவர்களின் மத்தியில் ஏற்பட்டமத மாற்றமே இதற்;கு மூலகாரணமாம். போர்த்துக்கேயர் எங்கெங்கு ஆணை செலுத்தச் சென்றார்களோ அங்கங்கெல்லாம் கத்தோலிக்க மதத்தை ஸ்தாபிதம் பண்ணுவதே அவர்களின் முதல் வேலையாகவிருந்தது. நெடுந்தீவில் வந்திறங்கிய போதும் தங்கள் சமயத்தை நிலைநாட்டும் வேலையிலே அதிக ஊக்கம் கொண்டனர். நெடுந்தீவில் தலை சிறந்த தலைவனாகவிளங்கிய தனிநாயக முதலியையும் அவர் சந்ததியாரையும் முதன் முதல் தம்மதத்திலே சேர்ப்பதற்குப்பாடுபட்டனர். பட்டம், பதவி, பணம் தருவதாகவும் கூறினர். ஒன்றுக்கும் வேளாண் குலமக்கள் இணங்காத படியால் போர்த்துக்கேயரின் ஜம்பம் அவர்களிடம் பலிக்காமல் போய்விட்டது. பின் இவர்களுக்கு அடுத்தாற் போலுள்ள வலிமையுள்ள சாதியாரான மறக்குல மக்களிடம் தங்கள் வலையை வீசினர்.

மறவர்களும் போர் முயற்சியில்லாமலும், தமிழ் மன்னர்களால் கிடைக்கப்பெறு ஊதிய மில்லாமலும், வறுமைப்பட்டிருந்தமையால் போர்த்துக்கேயரின் பகடப் பேச்சுக்கும், பசப்புமொழிக்கும், பட்டத்துக்கும், பதவிக்கும், பணத்திற்கும் இலகுவில் ஏமாந்தனர். ஈற்றில் மறவர்குலம் முழுவதும் பாரம்பரியமாய் தொழுதுவந்த சைவ சமயத்தைக் கைநெகிழ்ந்து கத்தோலிக்கராயினர்.

மாணவன்: மதமாற்றஞ் செய்த இம் மறவர்குலத்தார்கள் எவ்வண்ணம் வேளாண் குலத்தவர்களால் பாதிக்கப்பட்டனர்.

ஆசிரியர்: தம்பி! இம்மறவர்கள் தம்மை விலைக்குவிற்று மதமாற்றம் செய்தது மாத்திரமல்ல, போர்த்துக்கேயரைப் போல் மாட்டிறச்சிகளைப் புசித்தும், மதுமானங்களைக் குடித்தும், அவர்களின் கப்பற்படைகளில் சேர்ந்தும், சகல துறைகளிலும் அவர்களைப்போல் சீவித்தும், ஈற்றில் எவ்வித அச்ச ஆசவமின்றிப் பரங்கியரோடு சம்பந்தங்களும் செய்தனர். இதையறிந்த வேளாண் குலத்தவர்கள் மாத்திரமல்ல அவர்களுக்குக்கீழுள்ள ஏனைய சாதியார்களுமே இவர்களை அறவே வெறுத்தனர்.

அந்தக் காலத்தில் எந்த உயர்ந்த சாதியாராயிருந்தாலும் மாட்டிறைச்சி புசிப்போரைப் ‘புலாலுண்ணும் புலைய’ரென ஒதுக்கிவைப்பது வழக்கம். இவர்களும் பரங்கியரைப் போலப் பகிரங்கமாக மாட்டிறைச்சியைப் புசித்து வந்தபடியால் இவர்களையும் புலையரென்றும். பரங்கியரென்றும் தள்ளிவைத்து இவர்களோடு நட்புறவு கொண்டாடாமலும், நன்மை தின்மைகளில் பங்குபற்றாமலுங், கொடுக்கல் வாங்கல் செய்யாமலும், மறவரென்றோ தேவரென்றோ அல்லது படைவீரரென்றோ கௌரவமாக அழையாமலும் வந்தனர். காலகதியில் இவர்களும் பரங்கிக் கோலமாகவே சீவித்தபடியால் மறவனென்ற நாமம் அடியோடு மங்கிப் பரங்கிப் பெயரே தலைதூக்கியது.

மாணவன்: நீங்கள் கூறியதைப்பார்த்தால் முதலாவது மதமாற்றம். இரண்டாவது, மாட்டிறைச்சி உண்ணல், மூன்றாவது பரங்கியரோடு சம்பந்தம் செய்தல் ஆகிய இம் மூன்றுமே இவர்களை ஒதுக்கி வைத்ததற்குக் காரணம் போல் தெரிகிறது.

ஆசிரியர்: தம்பி! இம்மூன்றையும் நீ சாதாரணமான குற்றமாக விளங்கக்கூடாது. இவைகள் யாவும் பாரிய இழுக்கானவைகளாகும். முதலாவது மதமாற்றத்தை எடுத்துக் கொள். மதமாற்றத்தால் எத்தனைநாடு எத்தனை நகரம் எத்தனை உயிர்கள் சீவபலியாகியிருக்கின்றன தெரியுமா? “சிலுவைப்போர்” என்ற தனியுத்தமே நடைபெற்றிருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரே நாட்டில் ஒரே குறிச்சியில் பாரம்பரியமாய்ச் சைவசமயத்தில் வாழ்ந்தவர்கள். ஒன்று சேர்ந்து ஆலயங்களை அமைத்து திருவிழாக்களை நடத்தியவர்கள். தேரிழுத்தவர்கள், விரதம், நவராத்திரி, சிவராத்திரி, அந்திரேட்டி முதலாம் சைவ அனுட்டானங்களை அனுட்டித்தவர்கள், தீபாவளி, சித்திரை வருடம், தைப்பொங்கல் முதலாம் பண்டிகைகளை வெகுகேளிக்கைகளோடு கொண்டாடியவர்கள். திடீரென்று அற்பசொற்ப சலுகைகளுக்காக ஒருவர் இருவரல்ல ஒரு பழைமை வாய்ந்த மறக்குலம் முழுதுமே மதம் மாறிவிட்டால். மாறியதும் போதாமல் தாம் தொண்டு தொட்டுப் பூசித்து வந்த மதத்தைப் பழித்தும் இழித்தும், கழித்தும் வந்தார்களேயானால் சைவாபிமானியர்களுக்கு ஆத்திரம் வராமலிருக்குமா? இதனால் தாம் மாறிய குலத்தை தம் உறவிலிருந்து பிரித்துவையாதிருப்பார்களா? மதவிரோதிகள், சண்டாளர்கள், கள்துரோகிகளென்று ஏசாமலும் பேசாலும் திட்டாமலும் திமிறாமலும் இருப்பார்களா? இரண்டாவது மாட்டிறைச்சி புசிப்பதை எடுப்போம். மாட்டிறைச்சி தின்பது குற்றமா என்று நீ நினைப்பாய். நீ நினைப்பது முற்றிலும் சரி ஏனெனில் இன்று சர்வமதத்தவர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். சில சைவர்கள் தானும் விபூதிப் பூச்சோடு நேரே கடைக்குச் சென்று அல்சேஷன் நாயைச் சாட்டி இறச்சிவாங்கிக் கொண்டு போகிற காலத்தில் நீ வாழ்கிறாய். ஆனதால் பழங்காலச் செய்தி உனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவது மகாபாவமென்றே எண்ணி வந்தனர். இதனைச் சாப்பிடுஞ் சாதியாரை ஈனரென்று ஒதுக்கிவைத்தனர். மாடுகள் அடிப்பதையும் உண்பதையும் எவ்வண்ணம் வெறுத்தார்களென்பதற்கு ஒரு சில உதாரணங்கள் சொல்லுகிறேன் கேள்.

ஒல்லாந்தர் காலத்தில் சண்முகநாயக முதலியார் என்பவர், பசுநிரைகள், ஆளடிமை, நிலம் புலங்கள் மிகுதியாயுடையவர். இத்தோடு இராசாங்க உத்தியோகத்தாலும் மிகவும் சிறப்புப் பெற்றவர். இவரிடத்தில் ஒரு நாள் ஒல்லாந்ததேசாதிபதி தன் வீட்டில் நடைபெறும் விருந்திற்கு சமையல் செய்வதற்காக ஒருகாளைக் கன்றைத் தரும்படி கேட்டார். முதலியார் அவர்கள் இவ்வீனச் செயலுக்குத் தான் உடன் படமாட்டேனென்றும், புசிப்பது மாத்திரமல்ல, மாற்றார் புசிப்பற்குக் கொல்லக் கொடுப்பதும் பெரும் பாவமென்று கூறிக் காளைக்கன்றைக் கொடுக்க மறுத்துவிட்டார். அத்தோடு தாம் பார்த்த இராசாங்க உத்தியோகத்தையும் உதறித்தள்ளிவிட்டார். இது மாத்திரமா? யாழ்ப்பாணத்தில் அரசுபுரிந்த பரங்கித்தேசாதிபதி தன் கீழுள்ள கிராமாதிகாரிகளை வருஷமொருமுறை தனக்குஒவ்வொருவரும் ஒரு காளைக்கன்று தரும்படி கட்டளையிட்டான். இக் கட்டளையின் பிரகாரம் முதன் முறைக்குரியவரானவர் திருநெல்வேலி ஞானப்பிரகாசராவர். திருநெல்வேலி அதிகாரம் முழுவதும் இவர் கையிலே இருந்தது. இவர் ஒர் சைவவேளாண் குலத்தவர். இப்பெரியார் பரங்கிகளுக்கு உணவுக்காக காளைக்கன்று கொடுத்து இந் நாட்டில் வாழ்வதிலும் பார்க்க இவ்வூரை விட்டு வெளியேறுவதே சாலச் சிறந்ததென்று நினைத்துச் சிதம்பரஞ் சென்று துறவு பூண்டு வாழலானார். சிதம்பரத் திலேயுள்ள ஞானப்பிரகாசமென்னும் திருக்குளம் இவரால் வெட்டப்பட்டதாகும். இன்னும் காளைக்கன்று கொடுக்குங் காரணமாக வரணித்தில்லைநாதரும் யாழ்ப்பாணத்தைவிட்டு நீங்கி சோழநாடடைந்து ஞானப்பிரகாசரின் மகிமையையறிந்து அவர்பாற் சென்று காஷாயம் பெற்றுத் தில்லைநாதத்தம்பிரான் என்னும் நாமத் தோடு விளங்கலாயினர்.

இவ்வண்ணம் கோவதைக்கஞ்சியும். ஒல்லாந்தரின் அட்டூழியத்திற்குப் பயந்தும் பெரும் பெரும் வேளாண் குல மக்களும், சைவப் பெரியார்களும் யாழ்ப்பாண நாட்டைவிட்டு நீங்கி வேதாரணியம், சம்போடை, சிதம்பரம் முதலிய நாடுகளுக்குக் குடியேறினர். மேலே சொல்லிய உதாரணங்களினால் அக்காலத்தமிழர்கள் எவ்வண்ணம் பசுவதையை எதிர்த்தார்கள் வெறுத்தார்களென்று நன்கு விளங்குகிறது. இந்த நிலைபரம் இருந்த காலத்தில் உள்வீடுகளில் ஒன்றாகக்கலந்து உண்டு களித்து வந்த மறவர்கள் யாபேரும் அரோசிக்கக் கூடிய முறையில் மாட்டிறச்சியையும், பண்டியிறச்சியையும் இன்னும் பலபல இறச்சிகளையும் பரங்கியரோடு கூடிப் புசித்து வருவார்களேயானால் சைவப் பெருமக்களும், பிரபுகளும், பிறமக்களும் இவர்களைப் புலாலுண்ணும் புலையரென ஒதுக்கி வைக்கமாட்டார்களா? தங்களின் சைவக்கலங்களில் பாத்திரங்களில் கைதொட விட்டிருப்பார்களா? இவர்களைக் கீழ்க்குலத்தாரென்று அழையாமல் வேறு எவ்வண்ணம் அழைப்பார்கள். மூன்றாவது பரங்கியரோடு சம்பந்தஞ் செய்வதை எடுத்துக்கொள். தமிழரின் அக்கத்திலே பக்கத்திலே அயலிலே இல்லாதவர்கள், எவ்வகையிலும் தொடர்பில்லாத அன்னியர்கள், தமிழரின் பண்பாடு தெரியாதவர்கள், அன்றியும் தமிழ் நாட்டைக் கைப்பற்றவும், தமிழ் மன்னனைச் சிறைப்பிடிக்கவும், தமிழ் மதத்தைவேரோடு அழிக்கவும், எட்டாத தூரத்திலிருந்து படையெடுத்து வந்த துரோகிகளோடு, சத்துராதிகளோடு சம்பந்தஞ் செய்யவுந் தலைப்பட்டால் இவர்களை நாட்டுத்துரோகிகள், தமிழனைக் காட்டிக்கொடுத்த கயவர்களென்று திட்டமாட்டார்களா? இவர்களை மறவரென்றும் தேவரென்றும் எவ்வண்ணம் அழைக்கமனம் வரும். சம்பந்தக் குடியாரின் பெயர்சொல்லி அழைக்காமல் தமிழனின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவதற்கு நாவசையுமா?

இவ்வித இழிகோலங்களும் அலங்கோலங்களும் செய்த மறவரை நெடுந்தீவுப் பெருங்குடி மக்கள் கீழ்க் குலத்தாரென்று ஒதுக்கியும் அவர்களின் நட்புறவை நீக்கியும், சொந்தக் குலப் பெயரைச் சொல்லாமல் வசவு வக்கணையாகப் பரங்கியரென்றழைத்தும் வந்தது விந்தையா? அல்லது வியப்பா?

மாணவன்: ஐயா! இக்குலத்தவர்கள் மறவர்கள் என்பதை நிரூபிக்க நீங்கள் முன்சொல்லிய காரணங்களை விட இன்னும் வேறு ஏதுக்களுண்டா?

ஆசிரியர்: ஆம் உண்டு. இவர்களுக்கு வழங்கியுள்ள பழங்கால நாமங்களைக் கொண்டும் ருசுப்படுத்தலாம். வல்லைத் தேவன், வலங்கை மறான், புலிமாறன், விலங்குத் தேவன், கோரமாறன், கொம்புத்தேவன், நீலமாறன் முதலாம் பெயர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேவன் மாறன் என்ற நாமங்கள் மறவருக்கு உரித்தான பெயர்களாகும். இன்னும் இவர்கள் கத்தோலிக்கரான பின் ஞானஸ்நானப் பெயரோடும் இவர்களின் குலப்பெயர்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவு நூலில் பரக்கக் காணலாம். விலங்குப் பாவுலு (இவர் விலங்குத் தேவன் சந்ததி) கொம்பன் அந்தோனி (இவர் கொம்புத் தேவன் சந்ததி) நீலன் குருசான் (இவர் நீலமாறன் சந்ததி) இவ்வண்ணம் எத்தனையோ பெயர்களுண்டு. இன்னும் இக் குலத்தவர்கள் வணங்கிய சக்கம்மாள் என்னும் தேவதையின் பெயரைக் கொண்டும் ஒரு பெண்மணிக்கு சக்காயி ஆனாள் என்ற பெயரும் ஞானஸ்நான டாப்பில் இருப்பதையும் அறியலாம்.

இன்னும் இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். அப்பாடல் வருமாறு:

“சோழநாடு கண்டு வந்தீரோ தம்பி
சோழப் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
சேரநாடு கண்டு வந்தீரோ தம்பி
செந்நெல் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
பாண்டிநாடு கண்டு வந்தீரோ தம்பி
பச்சை முத்துக்கொண்டு வந்தீரோ தம்பி
சென்னை நாடு கண்டு வந்தீரோ தம்பி
சீரகம் கொண்டு நீ வந்தீரோ தம்பி
மதுரைநாடு கண்ட வந்தீரோ தம்பி
மஞ்சள்பொடி கொண்டு வந்தீரோ தம்பி
கொங்குநாடு கண்டு வந்தீரோ தம்பி
கொத்தமல்லி கொண்டு வந்தீரோ தம்பி”

இவ்வண்ணம் ஒவ்வொரு நாட்டையும் சரக்குகளையும் சொல்லி முடித்த பின்.

“அப்பாவைப் பார்த்திடவந்தீரோ தம்பி
ஆனைக்குட்டி வாங்கவந்தீரோ தம்பி
ஆச்சியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
ஆட்டுக்குட்டி வாங்க வந்தீரோ தம்பி
மாமனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
மான்குட்டி வாங்கிட வந்தீரோதம்பி
அத்தையைப் பார்த்திட வந்தீரோ தம்பி
அன்னக்குஞ்சு வாங்க வந்தீரோ தம்பி
பாட்டனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பசுக்கன்று வாங்கிட வந்தீரோ தம்பி
பாட்டியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பால் மோர் குடித்திடவந்தீரோ தம்பி”

இப்பாடலைப்பாடும்போது பெற்றார், பேரர்கள், மாமன்மார்கள் முதலானோர்கள் ஆட்டுக்குட்டி, பசுக்கன்று, கோழிக்குஞ்சுகளையும் மாமன், அத்தை முதலானோர் ஆனை, குதிரை, மான் முதலியவைகளை வெள்ளித் தகட்டிலும், செம்பத்தகட்டிலும், சில பணம் படைத்தவர்கள் தங்கம் பொன்னிலும் செய்து அன்பளிப்புச் செய்வர். இவைகள் முடிந்ததும் வயது முதிர்ந்த பெரியவரொருவர் பிள்ளையைத் தூக்கி மடியில்வைப்பர். அப்போது மறவ வாலிபர்கள் மறாட்டியமும்@ சிலம்பும் அடிப்பர் (மறாட்டியம் என்பது ஒரு முளத்தடிகொண்டடிக்கும் கோலாட்டம்) இவர்கள் கோலாட்டம் அடிக்கும்போது, பிள்ளையை வைத்திருக்கும் பெரியவர் கீழ்வரும் பாடலைப்பாடுவர்.

“ஆனைமுது கேறிவந்தீரோ தம்பி
அரசைப் பிடித்திடவந்தீரோ தம்பி
குதிரை முதுகேறி வந்தீரோ தம்பி
கொடியை உயர்த்திட வந்தீரோ தம்பி
தேரினிலேறி நீ வந்தீரோ தம்பி
தேசம் பிடித்திட வந்தீரோ தம்பி
வேலைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வெற்றியெடுத்திட வந்தீரோ தம்பி
வாளைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வடநாடு வென்றிட வந்தீரோ தம்பி
ஈட்டி சுழற்றி நீ வந்தீரோ தம்பி
ஈழம் பிடித்திட வந்தீரோ தம்பி
படைகள் திரட்டி நீ வந்தீரோ தம்பி
பகைவனை வென்றிட வந்தீரோ தம்பி”

இப்பாடலில் மறவர்களின் வீரமும், அவர்கள் பணி யாற்றும் படைகளின் வரிசையும், பாவிக்கும் ஆயுதநாமங்களும் நாடு பிடிக்கும் திறனும் தொனிக்கிறது. அன்றியும் சிங்கரூபம் கீறி பிள்ளையை வளர்த்திவைத்திருப்பதின் காரணம் இவர்களின் குலதெய்வமான சக்கம்மாளின் சிங்கவாகனத்தை நினைப்பூட்டுதற்கென எண்ண இடமுண்டு.

மாணவன்: ஒல்லாந்தரால் மாடடிப்பதற்காக தருவிக்கப்பட்ட சாதியாரை வேளாண் குலத்தவர்கள்; துன்புறுத்த வில்லையா?

ஆசிரியர்: ஆணை செலுத்திக் கொண்டிருக்கும் அரசன் தன் தேவைக்காக ஒரு சாதியாரைக் கொண்டு ஒரு தொழிலை நடத்தும் போது குடியானவர்கள் அதற்குத்தடை விதிக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. அன்றியும் மாடடிக்கும் தொழிலையே தன் சொந்தத் தொழிலாகக் கொண்ட சாதியானை இங்கு தருவித்து அரசாங்கம் செய்து வருகிறது. அதிலும் இத்தொழிலை யாழ்ப்;பாணக்கோட்டைக்குள்வைத்துச் செய்தார்களே யொழிய ஊர்ப்பக்கங்களில் வைத்துச் செய்யவில்லை இம்மாடடிக்கும் சாதியார் சகல ஊர்களிலுமுள்ள சேரிகளில் வாழ்கிறார்கள். நெடுந்தீவிலும் அவ்வண்ணமே இருக்கிறார்கள். இன்றைக்கும் இக்குலத்தவர்கள் வீடுகளுக்கும் கடைகளுக்கும் ஆடு மாடுகள் அடித்துக் கொண்டே திரிகிறார்கள். இவர்களை வேளாண் குலத்தவர்கள் எதிர்க்கவுமில்லை எதிர்க்கத் தேவையுமில்லை.

மாணவன்: சாயவேர் தோண்டியெடுக்கும் சாதியார்கள் நெடுந்தீவில் இருந்தார்களாமே அவர்களின் நிலைபர மென்ன?

ஆசிரியர்: சாயவேர் எடுக்கும் தொழில் நெடுந்தீவில் மாத்திரமல்ல பல பல விடங்களிலும் நடைபெற்றிருக்கின்றன. பல பல சாதியார்களும் செய்துமிருக்கின்றார்கள். ஒல்லாந்தர் இச் சாயவேர்களை நாகபட்டணம் அனுப்பி பெருந் தொகைப்பணத்திற்கு விற்று நல்ல லாபம் பெறுவதற்காக கூலியில்லாமல் சாயவேர்களைத் தோண்டி எடுத்துத் தரும்படி ஊர் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டனர். அங்ஙனம் கூலியின்றிச் செய்யாதோரை அடித்து வதைத்துச் செய்து தரும்படியும் கட்டாயச் சட்டங்களையிட்டனர். இதனால் சாயவேர்த் தொழிலாளர்கள் யாவரும் ஒல்லாந்தருக்கு அஞ்சிப்பயந்து யாழ்ப்பாண நாட்டை விட்டு வன்னிநாடு சென்று பண்டாரவன்னியனின் ஆளுகையின் கீழ் வாழ்ந்தனர். நெடுந்தீவிலுள்ள சாயவேர்த் தொழிலாளரும் அவ்வண்ணமே சென்றனர்.

மாணவன்: ஐயா! இன்னு மொருகேள்வி. அதாவது வீர சிங்கம் மத்தேசு முதலி என்பவர் யார்? அவரைப்பற்றி யாழ்ப்பாணச் சரித்திரங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்: வீரசிங்கனைப்பற்றிய செய்தி நெடுந்தீவில் மாத்திரம் பாரம்பரியமாகப் பேசப்பட்டு வருகிறது. சிங்கை ஆரியன் காலத்தில் யாழ்ப்பாண நாட்டைப் பதினொரு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேளாண்குல முதலிமார்களையும், நாற்றிசைக்கு ஒவ்வோர் தளபதிகளையும், குடியேற்றியபோது தன் சொந்தச் சேனைக்கு வீரசிங்கம் என்பவனைச் சேனாதிபதியாக்கினானென கைலாயமாலையில் குறிக்கப்பட்டுள்ளது. இதனையோ யாழ்ப்பாண வைபவமாலையிலும் மயில்வாகனப் புலவரும் சுட்டிக் காட்டியுள்ளார். யாழ்ப்பாணச் சரி;;த்திர நூல்களிலெல்லாம் ஒரேயொரு வீரசிங்கனைப்பற்றியே எழுதப்பட்டிருக்கிற படியால் நெடுந்தீவில் பேசப்படும் வீரசிங்கனாகவே இருத்தல் வேண்டுமென்பது யூகம். எனினும்பாரம்பரியமாய்ச் சொல்லி வந்த கதைகளை அலசிப் பார்க்கும்போது படைவீரர்களாக வந்தவர்களில் இவர் ஒர் தலையதிகாரியாக இருக்கலாமெனவும், இக்குலத்தவர்களே இவரைத் தம்மினத்தவரென்று இன்றும் கொண்டாடுகிறார்களென்றும், இவரும் ஒரு படைவீரனானபடியால் இவரையே ஒரு படைக்குச் சேனாதிபதியாக சிங்கை ஆரியன் நியமித்திருக்கலாமென்றும் எண்ண இடமுண்டு.

நிற்க, சில பூர்வநாமங்ளைத் தம் குடும்பவாரிசுப் பெயர்களாக சிலர் அன்றும் இன்றும் தரித்துக்கொண்டு வருவது வழக்கமாயுள்ளது. இஃதேபோல் சேனாதிபதி வீரசிங்கனின் நாமத்தையே அவரின் வழித்தோன்றலான போர்த்துக்கேயர் காலத்தில் மிகவும் பிரசித்தம் வாய்ந்த மறவர் குலத்தலைவனாக விளங்கிய வீரசிங்க மத்தேசுமுதலியும் தரித்திருக்கலாமென எண்ண இடமுண்டு. போர்த்துக்கேயர் தம் சமயத்தை நெடுந்தீவில் விதைக்க வீரசிங்கனையே தம் கையாளாக வைத்திருக்கலாமென்றும், இவருக்கு ஞானதீட்சை கொடுத்து மத்தேசு என்னும் நாமத்தையும் முதலி என்னும் பட்டத்தையும் வழங்கியிருக்கலாமென்றும் பிற்பாடு இவர் வீரசிங்க மத்தேசு முதலியென அழைக்கப்பட்டாரெனவும் முடிவுகட்ட நியாயமுண்டு. தனிநாயக முதலி வெட்டிய கேணி;க்கருகிலும் கிணற்றுக்கருகிலும் இவரால் வெட்டப்பட்ட கேணிகளும் கிணறுகளும் இன்றைக்கும் இவரது நாமத்தை மங்கவிடாமல் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவன்: இக்குலத்தவர்கள் புங்குடுதீவிலும் குடியேறியுள்ளார்களா?

ஆசிரியர்: ஆம் இவர்கள் நெடுந்தீவிலிருந்தே புங்குடுதீவுக்கும் ஊர்காவற்றுறைக்கும் பெருந்தொகையாகக் குடியேறியுள்ளார்கள். இக் குலத்தவர்களுக்குப் பெருந்தொகையாகக் காணிகள் ஊர்காவற்றுறையில் இருந்திருக்கின்றன. படையாட்சிக்கு குறிச்சியிலிருக்கும் சந்தியோகுமையோர் ஆலய வளவும், ஊர்காவற்றுறை கன்னியர் மடமும் பெண்பாடசாலைக் காணிகளும் இம்மறவ குல மூதாட்டி ஒருவரால் சன்மானமாக வழங்கப்பட்ட தென்றும், அம்பலப்புலத்திலுள்ள மத்தேசு வாய்க்காலும், இக் குல அதிகாரியான வீரசிங்க மத்தேசு முதலி என்பவரால் வெட்டப்பட்டதெனவும் வழக்கத்திலிருக்கும் ஒரு உண்மைப் பேச்சாகும். புங்குடுதீவிலும் இவர்களுக்கு ஏராளமாகக் காணிகளுண்டு. புனித சவேரியார் ஆலயமும் இவர்களாலேயே அடியிடப்பட்டதாகும். இவ்வாலயத்தை இவர்கள் அடியிடுவதற்குமுன் “குருசடியே” இவர்களின் சமய ஆராதனைத்தலமாக விளங்கியது. பிற்பாடு பாத்திப் பிட்டி அல்லது கோயில் பிட்டி என்றழைக்கப்படும் இடத்தில் வெள்ளைக்காரன் கோயில் என்று சொல்லப்படும். ஒர் ஆலயம் இருந்ததென்றும், காலகதியில் தற்போது கிராமக்கோடு இருக்கும் இடத்தில் மாதாகோயில் எழுப்பப்பட்ட தென்றும், இவ்வாலயமும் ஒல்லாந்தரால் மாதா சொரூபம் ஓர் ஆலமரப் பொந்தில் கண்டெடுக்கப்பட்டதென்றும் கூறுவர்.

மாணவன்: நீங்கள் சொல்லிய விஷயங்கள் யாவும் எனக்குப்புதிய தென்பைக் கொடுத்திருக்கிறது. நான் ஒன்றை மாத்திரம் உங்களுக்குச் சொல்லாமல் மறைத்து விட்டேன். அதாவது நானும் மறவர் குலத்தைச் சேர்ந்தவன். இனிமேல் தலைநிமிர்ந்து மார்தட்டி மறவனென்று துணிந்து கூறுவேன். பரவனென்றதையோ பரங்கியென்றதையோ இன்றோடு நான் மறந்துவிட்டேன்.

ஆசிரியர்: தம்பி உன்னைச் சமாதானப்படுத்துவதற்காக நீ மறுவகுலம் என்பதை உருவகப்படுத்தியோ அல்லது வைப்புக்கட்டியோ நான் கூறவில்லை. உண்மையைச் சொல்லியுள்ளேன். உங்கள் உயர் குலத்துக்கு இடையிலேற்பட்ட மத மாற்றமே ஒரு சாபக்கேடாக அமைந்ததே யொழிய வேறில்லை. அங்ஙனம் நீயும்உன்குலத்தார்களும் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது ஒடுக்கப்பட்டவராகவோ அல்லது தீண்டாதவராகவோ இருந்திருந்தால், யாழ்ப்பாணத்திலே குடியேறிய வேளாண்குல முதலிமார்களுள் அதிகம் உயர்ந்தசாதி முதலியாயுள்ள இருமரபுந்துய்ய தனிநாயக முதலி உங்கள் குலத்தார்களை நடுக்குறிச்சியில் குடியிருக்க விட்டிருப்பாரா? ஒருபோதும் விட்டிருக்கமாட்டார். தமிழ் மன்னர் காலத்தில் ஒவ்வொரு சாதியாருக்கும் சாதியா சாரங்கள் அமைத்தும் அவரவர்க்குரிய குலத்தொழில்களும் கொடுத்தும், தீண்டாதாரைச் சேரிப்புறங்களிலிருத்தியும் அதற்குரிய சட்டங்கள் ஆக்கியும் வைத்திருந்தார்களல்லவா? இன்றைக்கும் நெடுந்தீவில் மாத்திரமல்ல யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சகல சாதியாரும் அந்தந்த நியதியின்படியே தத்தம் குலத்தொழில்களைச் செய்தும் ஒழுகியும் வருகிறார்கள். அப்படியானால் உங்கள் குலத்தவர்கள் செய்த குலத்தொழிலென்ன? தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாகக் கடமையாற்றியும், பின் போர்த்துக்கேயரின் ஆளுகையின் காலத்தில் அவர் களோடிணைந்து, கடற்படையில் சேர்ந்து கப்பல் தொழிலைப்பழகியும், படிப்படியாக அத்தொழிலில் முன்னேறி பிரசித்தம் வாய்ந்த தண்டல் மாராகவும் கைதேர்ந்த மாலுமிமாராகவும் விளங்கிப் பாரிய மரக்கலங்களை ஒட்டியும் (இக்குலத்தவர்களால் செலுத்தப்பட்ட மரக்கலங்களின் நாமங்களும் தண்டல் மார்களின் பெயர்ப்பட்டியல்களும் பிறிதொரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது) இன்றைக்கும் அதே தொழில்களைச் செய்தும் வருகிறார்களே யொழிய, ஏதாவது வேறுதொழில்களை அன்றுமின்றும் செய்ததுண்டா? அல்லது உயர்குடிமக்கள் இவர்களைக் கொண்டு எந்தத் தொழில்களையாவது செய்வித்தது முண்டா? நெடுந்தீவில் மாத்திரமல்ல, இவர்கள் குடியேறிய புங்குடுதீவு, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை முதலாமிடங்களில் தானும் ஏதாவது கீழ்த்தரமான தொழில்களைச் செய்ததுண்டோ, உங்கள் குலத்தவர்கள் யாவரும் பண்டுதொட்டுப் பரவணியாகச் செய்து வந்த தொழில்கள் படைத்தொழில், கடல்தொழில், கமத்தொழில், கைத்தொழில்களே யன்றி வேறு தொழில்களில்லையே. சரி நெடுந்தீவில் குடியேறியவர்களுள் எந்தச் சாதியார் படைவீரராக இருத்தல் வேண்டும். வேளாண்குடிமக்கள் ஒருபோதும் படைவீரராகக் கடமையாற்றியிருக்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் ஆளடிமைகளை வைத்து நிலங்களைப் பண்படுத்திக் கமம் செய்திருப்பார்களே யொழிய போர்த்தொழிலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். மற்றச் சாதியார்களும் அவ்வண்ணமே தத்தம் தொழில்களைச் செய்திருப்பார்களேயன்றி படையில் சேர்த்திருக்கவுமாட்டார்கள். அன்றியும்தமிழ் மன்னர்கள் மறவர்களைத் தவிரவேறு சாதியாரைப்படையில் சேர்த்திருக்கவும் மாட்டார்கள். மறக்குலத்தாரில் பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் போர்ப்பயிற்சி செய்து படைவீரராகக் கடமையாற்ற வேண்டுமென்று கட்டாயச்சட்டமும் அமைத்திருக்கிறார்களல்லவா? அப்படியானால் வேறு சாதியார்கள் படைவீரராகச் சேரமுடியுமா? வேளாண்குடிமக்கள் படைவீரராகச் சேர்ந்து தம்மை மறவர்களாக்க விரும்புவார்களாக? நீங்கள் மறவரென்பதற்குச் சந்தேக மில்லாமல் கூறுவதற்கு உங்களின் தேக அமைப்பு, புய பலம், வீரம், முகவசீகரம், மாற்றானுக்குத் தலைவணங்காத் தன்மை, உடை, நடை, நாகரீகம், நாததேயங்கள் கடற்படைப்பயிற்சி, போசனவகைகள் முதலியயாவும் மறவரென்றே உங்களை எடுத்துக் கூறுகிறது. அன்றியும் உங்கள் குலத்தவரான வீரசிங்கனை, சிங்கை ஆரிய மன்னன் சேனாதிபதியாக்கிய சம்பவமும் இன்னும் உங்களை மறவர்களென உண்மைப்படுத்துகிற தல்லவா? மேலும் போர்த்துக்கேயர் தானும் நீங்கள் சாதாரண சாதியாராகவிருந்தால் உங்கள் தலைவனான வீரசிங்க மத்தேசு முதலியை மதித்துக் கண்ணியப்படுத்தி முதலிப்பட்டம் வழங்கியிருப்பார்களா? வேளாளரையும் உங்களையும் தவிர நெடுந்தீவில் வேறு குலத்தவர்களில் முதலிமார்களுண்டா? இல்லவேயில்லை. ஆகவே ஆதிகாலத் தொழில்துவக்கம், இற்றவரைக்குமுள்ள தொழில், நடை, கல்வி, பண்பு, வீரம், முகவசீகரம், உத்தியோகம், அராங்கமதிப்பு இவைகள் யாவையும் அலசிப்பார்த்தால் நீங்கள் மறவர்கள் என்பதில் என்ன சந்தேகம், மறவர்களும் வேளாளரைப் போல ஓர் உயர்ந்த சாதியாரென்றே மக்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

மாணவன்: சற்றும் சந்தேகமில்லாமலும், எந்தச் சாதியாரும் ஒரேவாய்ப்பட மறவர்களென்றே ஒப்புக்;கொள்ளக் கூடியவிதத்திலும், ஏற்றுக்கொள்ளக் கூடியவகையிலும் ருசுப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் இவ்வளவு நேரமும் எனக்குச் சொன்ன சரித்திரக்குறிப்புக்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்;டவனாயிருப்பேன். தங்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் சென்று வருகிறேன்.
வணக்கம்.