கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை  
 

தம்பிஐயா தேவதாஸ்

 

இலங்கைத் தமிழ்ச்
சினிமாவின் கதை

STORY OF SRILANKAN
TAMIL CINEMA


தம்பிஐயா தேவதாஸ்
(B.A.(Cey.), B.Ed.(Cey.),
Diploma in Journalism.

----

முதற்பதிப்பு: தி.பி. 2025 (கி.பி. 1994)
இரண்டாம் பதிப்பு: தி.பி. 2031 (கி.பி. 2000)

உரிமை: தம்பிஐயா தேவதாஸ்,
90/5 புதுச்செட்டித் தெரு, கொழும்பு - 13,
இலங்கை.

வெளியீடு: வி.எஸ். துரைராஜா,
75 உவாட் பிளேஸ், கொழும்பு 7, இலங்கை.

விலை:
இந்தியா ரூபா : 75/-

இலங்கை ரூபா : 200/-

Ilankai Thamil Cinemavin Kathai (Stoy of Srilankan Tamil Films) by Mr. Thambyayah Thevathas
90/2 NEW CHETTY STREET COLOMBO -13, SRILANKA
First Edition 1994.

VST Publication V.S. Thurairajah, 75, Ward Place, Colombo - 7,
All Rights Reserved,
Price: Ind. Rupees: 75/=


ஒளி அச்சக்கோப்பு: பா.செல்வராஜ். பி.எஸ்ஸி., வ. சாந்தி, அ. ஜெயராஜசிங்கம், மூவை நா. சுந்தரராசன், ஓவியம், பக்கமாக்கல்: ஓவியம் பாலமுருகன், மெய்ப்பு: புலவர் வெற்றியழகன், அலுவலக இணைப்பு: செ.ரா.ஷோப்னா, காந்தளகம், சென்னை: எதிர்மறை: சக்தி வண்ண ஆய்வகம், சிந்தாதிரிப்பேட்டை: அச்சு: ஜேசிபிடாட்ஸ், நுங்கம்பாக்கம்: கட்டுவேலை: பாலாஜி கட்டாளர், இராயப்பேட்டை: அட்டை ஓவியம்: எஸ்.டி.சாமி, கொழும்பு: அச்சிடல் தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன், எம்.ஏ., எம். எஸ்ஸி., காந்தளகம், 834, அண்ணாசாலை, சென்னை - 600 002

----

அணிந்துரை

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த மீடியம் சினிமாதான் என்பதில் அபிப்பிராய பேதம் கிடையாது. ஏனைய ஊடகங்களை விட, இப்பொழுதுதான் நூறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் இந்த விஞ்ஞானம் சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் மிக அதிகமானது. ஒரு சராசரிக் குடிமகனது அன்றாட வாழ்வின் அதிக அளவு இரண்டறக் கலந்து போய்விட்ட மீடியம் இதுதான். உலக உருண்டையின் பல்வேறு பாகங்களில் வாழும் பலதரப்பட்ட படைப்பாளிகள் இதை உற்சாகத்தோடு முன் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சிங்கள சினிமா கூட, சிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஈழத்தின் தமிழ் சினிமா…?
மிகமிகப் பின்தங்கிப் போய், இன்றும் அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருக்கிறது. இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும், அந்த சினிமாவே தங்கள் சினிமா என்று ஈழமக்கள் கொண்டாடியதும் இதற்கு முக்கிய காரணங்கள்.

சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய சினிமா விநியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி லாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள், தங்களுக் கென்று ஒரு ஈழத் தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை.

இவற்றிற்கு மத்தியில், தொழிற் நுட்பத்திலும் மீடிய ஆளுமையிலும் மிகச் சாதாரணமாய் இருந்த – ஆனால், ஈழ மண்ணின் மணத்தையும் இலங்கைத் தமிழரின் ஆத்மாவையும் ஓரளவு பிரதிபலிக்க முயன்ற ஓன்றிரண்டு தமிழ்ப் படங்களையும் பார்த்திருக்கிறேன்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் நடுவர் குழு அங்கத்தவனாகவும், விருந்தினனாகவும் கலந்து கொண்ட சமயங்களில், அதிகம் மக்கள் தொகையற்ற சின்னச் சின்ன நாடுகளிலிருந்து வந்த அற்புதமான படங்களைப் பார்க்கும் போதெல்லாம், இலங்கையிலிருந்துகூட இப்படியொரு படம் - தமிழ்ப்படம் வரக்கூடாது என்று நான் அங்கலாப்பதுண்டு.

இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதைய சூழ்நிலையின் ஊடாக உலக தரம் வாய்ந்த பல அசாத்தியமான படங்களைத் தரமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இது வெறும் உணர்ச்சி வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மனசு வைத்தால், ஈழத்து இளைய தலைமுறையின் வீரிய வீச்சு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும். இது சத்தியம்.

சர்வதேச கலை இலக்கிய அரங்கில், தமிழ் மொழியின் முகத்தை ஈழத்து எழுத்துக்களே அடையாளம் காட்டப் போகின்றன என்ற உறுதியான விமர்சனம் வைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், அந்த நம்பிக்கை திரைப்படங்களுக்கும் பொருந்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

இலங்கையின் தமிழ் சினிமாவைப் பற்றி ஓர் அறிமுக நூல் வெளியாவது இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமானதே. ஏனெனில் அவரவர் வரலாறு தான் அந்தந்த மக்களின் சாகித்தியங்களைச் சாதனைகளாக வளர்க்கும்.

இந்தநூலின் ஆசிரியர் ஒரு சினிமா ஆர்வலர் என்று அறிகிறேன். அவரது இந்த முயற்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

இதன் பதிப்பாளர் கட்டிடக்கலைஞர் திரு. வி.எஸ். துரைராஜா என் நெடுநாளைய நண்பர். இலங்கைத் தமிழ் சினிமாவுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்திருப்பவர். அவரிடம் இது போன்ற இன்னும் பல ஊக்குதல்களை நான் எதிர்பார்க்கிறேன்.
பாலுமகேந்திரா.

----

என்னுரை

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதையை எதற்காகச் சொல்ல வேண்டும்? வேறு எந்தச் சினிமா வரலாற்றுக்கும் இல்லாத சோகக்கதை எமது இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றுக்கு இருக்கிறதே அதனால் சொல்ல வேண்டும்.

இந்தத் தமிழ்ச் சினிமாவின் கதையை நான் எவ்வாறு சொல்ல வந்தேன்? பெரும்பாலான இலங்கைத் தமிழ்ப் படங்களைப் பற்றிய தகவல்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன். பல புதைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். எங்கள் சினிமாவுக்குக்காக அரும்பாடுபட்ட பல கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்கள் செய்த சாதனைகளுக்காக அவர்களிற் சிலரை ரூபாஹினியில் பேட்டி கண்டிருக்கிறேன்.

இந்த அநுபவங்கள்தான் என்னை இப்படியான நூல் ஒன்றை எழுதத் தூண்டியது. இலங்கைச் சினிமா முன்னேற உழைத்த உன்னதக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் எழுதியுள்ளேன். இந்நூலை நான் விமர்சன ரீதியாக எழுதவில்லை. வரலாற்றுப் பாங்காகவே எழுதியுள்ளேன்.

ஆனால், நமது தமிழ்ச் சினிமாவை ஆராயப்போகும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூல் அடிப்படையாக அமையும் என்று எண்ணுகிறேன்.

இந்நூலின் பெரும்பகுதி தினகரனில் வெளிவந்தது. சிறுபகுதி வீரகேசரியிலும் வந்திருக்கிறது. அதற்காக அவற்றின் ஆசிரியர்கள், திருவாளர்கள் ஆர். சிவகுருநாதன், ஆ. சிவநேசச் செல்வன், ஆர். ராஜகோபால் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.

இந்நூல் சுருக்கமாக அமையவேண்டும் என்பதற்காக, சில சம்பவங்களைச் சுருக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. இலங்கை - இந்தியக் கூட்டுத்தயாரிப்புகளின் கதையைத் தவிர்த்திருக்கிறேன். சினிமாச் சஞ்சிகைகளைப்பற்றிச் சொல்லவேயில்லை.

எனது அறியாமை காரணமாகச் சில தகவல்களை நான் தவறவிட்டிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்ளுவேன்.

எனது தொடர் கட்டுரைகளை இவ்வாறு நூலுருவில் கொண்டுவருவதில் பிரபல கட்டடக் கலைஞரும், கலை அபிமானியுமான திரு. வி. எஸ். துரைராஜா பெரிதும் உதவியிருக்கிறார். எனது கனவை நனவாக்கிய அவரின் உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அழகிய முறையில் அச்சிட்ட காந்தளகம் உரிமையாளர். க. சச்சிதானந்தன் அவர்களுக்கும் நன்றி. அழகாக அட்டைப் படம் வரைந்த எஸ்.டி. சாமி அவர்களுக்கும் நன்றிகள். அணிந்துரை வழங்கிய பிரபல நெறியாளர் பாலு மகேந்திராவுக்கும் எனது நன்றி.

1993ஆம் ஆண்டுவரையான கதைதான் இது. இதுவரை இலங்கையில் திரைக்கு வந்த திரைப்படங்களின் வரலாற்றைச் சுருக்கமாகத்தான் எழுதியிருக்கிறேன்.

2000ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி உலகரீதியிலும் சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்தச் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற விதத்திலே படங்களைத் தயாரித்தால் இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்று நம்பலாம்.

எனது இந்நூலின் முதலாவது பதிப்பில் 1993ஆம் ஆண்டு வரையான கதையையே எழுதினேன். இவ்விரண்டாவது பதிப்பில் 2000ஆம் ஆண்டு வரையான கதையை எழுதியுள்ளேன். இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை எழுதப் போகின்றவர்களுக்கு எனது இந்நூல் ஆரம்பப் படியாக அமையும் என்று நம்புகிறேன்.

நான் அரும்பாடுபட்டுத் தேடிச் சேர்த்த தகவல்களையும் அவற்றுக்கு ஆதாரமான புகைப்படங்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். சினிமா என்ற கலைமீது ஆர்வம் கொண்ட அனைவரும் இப்புத்தகத்துக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.

வாசகர்கள் அனைவரும் என் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

90/5 புதுச்செட்டித்தெரு அன்புடன்
கொழும்பு - 13 தம்பிஐயா தேவதாஸ்
இலங்கை
06.01.2000

----

அத்தியாயம் பக்கம்
1. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பம் 1
2. சமுதாயம் 9
3. தோட்டக்காரி 17
4. கடமையின் எல்லை 29
5. பாச நிலா 41
6. டைக்ஷி டிறைவர் 44
7. நிர்மலா 52
8. மஞ்சள் குங்குமம் 60
9. வெண் சங்கு 68
10. குத்து விளக்கு 78
11. மீனவப்பெண் 95
12. புதிய காற்று 102
13. கோமாளிகள் 110
14. பொன்மணி 120
15. காத்திருப்பேன் உனக்காக 135
16. நான் உங்கள் தோழன் 145
17. வாடைக்காற்று 156
18. தென்றலும் புயலும் 165
19. தெய்வம் தந்த விடு 177
20. ஏமாளிகள் 192
21. அநுராகம் 200
22. எங்களில் ஒருவன் 209
23. மாமியார் வீடு 217
24. நெஞ்சுக்கு நீதி 228
25. இரத்தத்தின் இரத்தமே 237
26. அவள் ஒரு ஜீவநதி 245
27. நாடு போற்ற வாழ்க 256
28. பாதை மாறிய பருவங்கள் 261
29. ஷர்மிளாவின் இதய ராகம் 270
30. தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப் படங்கள் 283
31 முடிவுரை


1. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பம்
சினிமா என்பது ஓர் உன்னதக் கலைச் சாதனமாகும். எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரபலமான கலையாகும். வேடிக்கையாக ஆரம்பித்த சினிமாக்கலை வேகமாக உலகமெல்லாம் பரவி அனைத்து மக்களையும் ஈர்த்து நிற்கின்றது.

இந்தச் சினிமா, கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் எமது இலங்கை நாட்டில் சளைத்துவிடவில்லை. சர்வதேசப் பரிசில்களைப் பெறுமளவுக்குப் பல சிங்களப் படங்கள் இங்கிருந்து உருவாகியிருக்கின்றன. அந்தச் சிங்களப் படத்தொழிலை நம்பியே பல கலைஞர்கள் நிலைக்கத் தொடங்கி விட்டார்கள். அது பெரிய தொழிலாகவே மாறிவிட்டது.

இந்த உயர்ந்த நிலை இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டும் ஏன் ஏற்படவில்லை? இலங்கையின் தமிழ்த் திரை உலகம் இறந்துவிட்டது போன்று காணப்படுவதற்குக் காரணம் என்ன? இவை போன்ற கேள்விகள் என் மனத்தில் உதித்தன@ மனத்தை உறுத்தின.

1991ஆம் ஆண்டு ஜே.வி.பியினரின் அச்சுறுத்தலால் இலங்கையில் இந்தியப் படங்கள் சிலமாதங்கள் திரையிடப்படாமல் இருந்தன. அப்பொழுது சில பழைய இலங்கைத் தமிழ்ப் படங்கள் கொழும்பில் மட்டும் காட்சி தந்து மறைந்தன. பல படங்கள் எங்கே என்று தெரியவில்லை. பல தயாரிப்பாளர்கள் தம் படங்களை அரைகுறையாக வைத்திருக்கிறார்கள். பல திரைப்படங்களைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் எரித்துவிட்டது.

எத்தனையோ வருடங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படங்களின் வரலாறே அழிந்துவிடும் போலிருக்கிறது!

அந்தக் கலைஞர்களின் பெயர்களை எல்லோருமே மறந்துவிடும் நிலை உருவாகிவிட்டது. இந்தக் கலைஞர்களின் கலையபிமானத்தை மற்றவர்களும் அறியவேண்டாமா?

இவ்வாறான பலத்த வேதனைகளாலும் உரத்த கேள்விக்கணைகளாலும் அந்த வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போமா என்று எண்ணத்தோன்றியது.

நான் எழுதுவது இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதைமட்டுமல்ல@ நம் நாட்டுச் சினிமாக் கலைமீது ஆசைகொண்ட அபிமானிகளின் சோக வரலாறும்கூட. இந்த வரலாறே எங்கள் ரசிகர்களின் மனத்தை ஆட்கொள்ளாதா?

தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், தென்னிந்தியாவிலேயே அதிகமான தமிழ்ப் படங்கள் உருவாகியிருக்கின்றன. நெடுங்காலமாகவே இந்தியத் தமிழ்ப் படங்களை இலங்கை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆரம்ப காலச் சிங்களப் படங்கள்கூடத் தென்னிந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுவந்தன. 1956ஆம் ஆண்டின் பின்புதான் இலங்கையிலும் சிங்களப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது ஆண்டுகள் 25க்கு மேற்பட்ட சிங்களப் படங்கள் திரைக்கு வருகின்றன. அந்தளவுக்கு முன்னேறிவிட்டன.

1950ஆம் ஆண்டிலேயே இலங்கையில் தமிழ்ப்படத் தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை 50க்கு மேற்பட்ட தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், அவற்றில் 36 படங்கள் மட்டுமே திரைக்கு வந்திருக்கின்றன.

இலங்கையில் உருவான கதைத் தமிழ்த் திரைப்படங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:-

(1) குறுந் திரைப்படங்கள் (16 மில்லி மீட்டர்)

(2) சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட படங்கள் (டப் படங்கள்)

(3) தமிழ் மொழியிலேயே தயாரிக்கப்பட்ட முழுநீளப் படங்கள்.

(4) இலங்கை - இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்.

‘சமுதாயம்’, ‘பாசநிலா’ ஆகிய இரண்டு படங்களும் 16 மில்லி மீட்டரில் தயாரிக்கப்பட்ட குநற் திரைப்படங்களாகும்.

‘கலியுககாலம்’, ‘நான்கு லட்சம்’, ‘யார் அவள்’, ‘சுமதி எங்கே’, ‘ஒரு தலைக்காதல்’, ‘பனிமலர்கள்’, ‘இவளும் ஒருபெண்’, ‘அஜாசத்த’ போன்ற எட்டுப் படங்களும் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட படங்களாகும்.

‘தோட்டக்காரி’, ‘கடமையின் எல்லை’, ‘டாக்ஸி டிரைவர்’, ‘நிர்மலா’, ‘மஞ்சள் குங்குமம்’, ‘வெண்சங்கு’, ‘குத்து விளக்கு’, ‘மீனவப் பெண்’, ‘புதிய காற்று’, ‘கோமாளிகள்’, ‘பொன்மணி’, ‘காத்திருப்பேன் உனக்காக’, ‘நான் உங்கள் தோழன்’, ‘வாடைக்காற்று’, ‘தென்றலும் புயலும்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘ஏமாளிகள்’, ‘அனுராகம்’, ‘எங்களில் ஒருவன்’, ‘மாமியார் வீடு’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘இரத்தத்தின் இரத்தமே’, ‘அவள் ஒரு ஜீவநதி’, ‘நாடு போற்ற வாழ்வு’, ‘பாதை மாறிய பருவங்கள்’, ‘ஷர்மிளாவின் இதயராகம்’ போன்ற 26 திரைப்படங்களும் முழுநீளப் படங்களாகும். அவற்றில் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற படம் அகலத்திரையி;ல (70 மி.மீ) எடுக்கப்பட்டதாகும்.

‘பைலட் பிரேம்நாத்’, ‘தீ’, ‘நங்கூரம்’, மோகனப் புன்னகை’, ‘வசந்தத்தில் ஓர் வானவில்’ போன்ற படங்கள் இலங்கையில் எடுக்கப்பட்ட இந்தியப் படங்கள். இவற்றுடன் இலங்கைக் கலைஞர்களுக்குத் தொடர்பிருந்தாலும் தயாரிப்பு என்ற ரீதியில் இவை இந்தியப் படங்களே. இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள் என்று சொல்லலாம்.

இலங்கையில் உருவான இத்தனை படங்களும் தரமானவையா? தரமற்றவையா? என்பது வேறு விடயம். இத்தனை படங்களையும் உருவாக்க நம் கலைஞர்கள் எத்தைன பாடுபட்டிருப்பார்கள்? அவர்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டி வரவேண்டியிருந்தது. உண்மையான கலைஞர்கள் பலரின் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து பிறந்தவைதாம் இந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்.

தமிழ்ச் சினிமா பிறந்த தென்னிந்தியாவிலேயே இன்று கூடத் தயாரிப்பாளர்கள் ரசிகர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள். கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வளர்ந்துவிட்ட அங்குகூட இப்படியான ஒருநிலை.

வசதிகள் அதிகமற்ற அந்தக் காலத்திலேயே இலங்கையில் இத்தனை தமிழ்ப் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால், இந்தக் கலைஞர்கள்ஹ எத்தனை பெரிய கெட்டிக்காரர்கள் ஆத்ம திருப்திக்காக அவர்கள் ஈடுபட்ட மாபெரும் முயற்சிகள் எத்தனை பெருமை வாய்ந்தவை.

முதலாவது சிங்களப் பேசும் படம் 1956ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பெயர் ‘கடவுனு பொறந்துவ’ (உடைந்த உறுதிமொழி) என்பதாகும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்களாகிய நாம் பெருமைப் படலாம். ஏனெனில், அந்த முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவர் தமிழரான எஸ்.எம். நாயகம் என்பவரே.

உண்மையான சிங்களக் கலாசாரத்தைப் பிரதிபலிக்காலமும் பிறமொழிப் படங்களை டப் செய்தும் ஆரம்பித்த சிங்களச் சினிமா, இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவர்கள் மட்டுமல்ல, வளர்த்துவிட்டவர்களும் தமிழ் பேசும் கலைஞர்களே! இவர்கள் தான் சிங்களக் கலாசாரத்தையே சினிமாவில் சீரழித்தவர்கள் என்ற பெயரையும் பின்னாளில் பெற்றுக்கொண்டார்கள்.

இலங்கையின் முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை (16 மி.மீ) தயாரித்தவர் ஒரு சிங்களவர்.

அன்றுமுதல் இன்றுவரை இலங்கையில் உருவாகும் அனைத்து சிங்கள, தமிழ்ப் படங்களிலும் சிங்கள தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் ஒற்றுமையாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கையில் தமிழ்ப்படத் தயாரிப்பு முயற்சிகள் 1951ஆம் ஆண்டுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டன.

முக்கியமாக ‘குசுமலதா’ என்ற தமிழ்ப் படத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இத்திரைப்படம் 1951-12-29 இல் திரையிடப்பட்டதாகக் குறிப்புகள் இருக்கின்றன. பி.ஏ.டபிள்யூ. நிறுவனத்தினர் தயாரித்த இப்படத்தில் எடிஜெயமான, ருக்மணிதேவி ஜோடியாக நடித்தார்கள். இப்படத்தின் பாடல்கள் இடம்பெற்ற இசைத்தட்டொன்று இப்பொழுதும் இலங்கை வானொலி நிலையத்தில் இருக்கிறது.

1951ஆம் ஆண்டு இந்தியாவில் ‘சங்கவுனு பிலிதுற’ என்ற சிங்களப் படத்தைத் தயாரித்தார்கள். அப்படம் இலங்கையில் 1951-05-20இல் திரையிடப்பட்டது. பி.ஏ.டபிள்யூ. ஜெயமான்ன என்பவர் இப்படத்தைத் தயாரித்து நெறியாண்டார். இச்சிங்களப் படத்தையே தமிழுக்கு டப் செய்து ‘குசுமலதா’ என்ற பெயரை வைத்தார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இச்சிங்களப்படத்துக்கு இந்தியக் கலைஞர்களைக் கொண்டே தமிழ்க்குரல் வழங்கப்பட்டிருப்பதால்’ குசுமலதாவை’ இலங்கைத் தமிழ்ப் படம் என்று முற்று முழுதாகச் சொல்லிவிட முடியாதே!

அக்காலத்தில் இலங்கையில் தமிழ்ப் படங்களை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் பல கலைஞர்களின் உள்ளத்தில் உருவாகியிருந்தது. திரைப்படத் தயாரிப்பு என்பது பணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால் பலர் முன்வரவில்லை. கலையார்வம் கொண்ட செல்வந்தர்கள் குறைவாக இருந்தார்கள். சில செல்வந்தர்கள் இந்தியத் தமிழ்ப்படங்களை இங்கு இறக்குமதி செய்து திரையிடப்பெருந் தொழிலாகவே மாற்றிக்கொண்டார்கள். இலங்கை ரசிகர்களும் அப்படங்களையே பார்த்து ரசிக்கப் பழகிக்கொண்டார்கள். இன்று ஒரு புதிய சிங்களப் படம் ஒரே நேரத்தில் 16 தியேட்டர்களில் ஓடுகிறது. இதைப் போலவே அந்தக் காலத்தில் ஒரு புதிய இந்தியத் தமிழ்ப் படம் 16 தியேட்டர்களில் ஓடியிருக்கிறது. காலப்போக்கில் இந்நிலை மாறி வந்தது.

இலங்கைத் தமிழ்ப் படங்களில் ஆர்வமும் தேசாபிமானமும் கொண்ட பலர் தலைநகரிலும் மலையகத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அடிக்கடி துளிர்விட்டுக் கொண்டேயிருந்தனர்.

1952 ஆம் ஆண்டளவில் நாடக அனுபவமும் சினிமா ஆர்வமுமுள்ள இலங்கைக் கலைஞர்கள் சிலர் மலையகத்தில் கொஸ்லந்தை என்ற ஊரில் ஒன்றுகூடினார்கள். அந்தக் கலைஞர்கள்தாம் இலங்கையில் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற பெருமையைத் தேடிக்கொண்டார்கள்.

அவர்கள்தாம் எம்.வி.ராமன், ஏ.அருணன், வி.தங்கவேலு, ஹென்றி சந்திரவன்ஸ போன்ற கலைஞர்கள். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதால் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பதுதான் அந்த முடிவு. அந்த எண்ணங்களின் பிரதிபலனாகக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘சினிமாக் கலாநிலையம்’ என்ற மன்றத்தை உருவாக்கினார்கள்.

மன்றத்தின் முதல் முயற்சி ஆரம்பமாகிவிட்டது அவர்கள் கூட்டுறவு முறையில் கறுப்பு வெள்ளை நிறத்தில் தமிழ்த் திரைப்படமொன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.


2. ‘சமுதாயம்’
‘சினிமாக் கலா நிலையம்’ தயாரிக்க இருக்கும் அப்படத்துக்கு ‘சமுதாயம்’ என்று பெயர் சூட்டினார்கள். அந்த நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான வி. தங்கவேலு கதாநாயனாகவும் தர்மதேவி என்ற நடிகை கதாநாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது. ‘சமுதாயம்’ திரைப்படம் 35 மி.மீட்டர் பிலிமில் சில ஆயிரம் அடிகள் வளர்ந்துவிட்டது.

கலைஞர்களிடையே போட்டியும் பொறாமையும் இன்றுமட்டுமல்ல அன்றும் நிலவியது. அப்படியான இழுபறிநிலை இப்படத்துக்கும் ஏற்பட்டுவிட்டது. தயாரிப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே. 35 மி.மீட்டரில் உருவான கறுப்பு வெள்ளைப் படமான ‘சமுதாயம்’ ஆயிரம் அடி வளர்ச்சியுடன் நின்றுகொண்டது.

இத்திரைப்படம் இப்படியே நின்றுவிட்டதால் இந்தக் குழுவின் ஒரு அங்கத்தவரான ஹென்றி சந்திரவன்ஸ இன்னும் சில அங்கத்தவர்களுடன் ஒன்று சேர்ந்து நடிகர்களை மாற்றி ‘சமுதாயம்’ என்ற பெயரிலேயே புதிதாகப் படமொன்றை உருவாக்க முனைந்தார்.

சந்திரவன்ஸவின் குழுவிலிருந்தும் சிலர் பிரிந்து சென்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஏ. அருணனும் வி. தங்கவேலுவுமாவார்கள். இவர்கள் இருவரும் கொஸ்லாந்தையில் நீண்ட காலமும் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் இருவரும் கொஸ்லாந்தையில் நீண்ட காலம் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ‘புரட்சி’ என்ற பெயரில் 35 மி.மீட்டரில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க முனைந்தார்கள். இப்படத்திலும் வி. தங்கவேலுவே கதாநாயகன். படம் 7000 அடி வளர்ந்துவிட்டது. போட்டியும் பொறாமையும் இந்தக் குழுவுக்குள்ளும் வளர்ந்துவிட்டன. தயாரிப்பாளர்களுக்குள்ளும்;, கலைஞர்களுக்குள்ளும் பெரும் பிணக்குகள் ஏற்பட்டுவிட்டன. அவர்கள் செய்த புரட்சியில் ‘புரட்சி’ என்ற படமும் நின்று கொண்டது.

ஒருபுறம் இந்நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்க கொழும்பில் வேறு ஒரு முயற்சியும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவரான எஸ்.எம். நாயகம் ‘கடல் கடந்த தமிழர்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான தமிழ்ப் படமொன்றைத் தயாரிக்கப்போவதாக விளம்பரம் செய்தார். நடிகர் நடிகையர் தெரிவும் நடைபெற்றது. ஆனால், திரைப்படம் வெளிவரவில்லை.

ஹென்றி சந்திரவன்ஸ எப்படியாவது தமிழ்ப் படமொன்றைத் தயாரித்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன் விடாப்பிடியாக நின்றார். அவர் ‘சமுதாயம்’ படத்தை 16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் தயாரித்து அதை 35 மி.மீட்டருக்கு மாற்ற எண்ணியிருந்தார்.

இதற்கிடையில் அருணனுக்கும் தங்கவேலுவுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டது. தங்கவேலு அந்தக் காலத்தில் கொழும்பில் பிரபலம் பெற்று விளங்கிய நாடக நடிகர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்தார். அந்த நடிகர் தான் பி.எஸ். கிருஷ்ணகுமார். தங்கவேலுவும் கிருஷ்ணகுமாரும் ஒன்று சேர்ந்து ‘தோட்டக்காரி’ என்ற பெயரில் தமிழ்ப் படமொன்றை உருவாக்கினார்கள். ‘சமுதாயம்’ படமும் ‘தோட்டக்காரி’ படமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தன.

கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் 10 ரூபா வாங்கியே சமுதாயத்தை வளர்த்தார்களாம். ஹென்றி சந்திரவன்ஸ முதலாவது 16 மி.மீட்டர் தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற பெருமையைத் தேடிக்கொண்டார். இப்படத்துக்கான நெறியாள்கையை அவரே கவனித்தார். பின்னாட்களில் பல படங்களில் தந்தை பாத்திரங்களில் தோன்றிய அமரர் எஸ்.என். தனரெத்தினமே இப்படத்தின் கதாநாயகன். அப்பொழுது தனரெத்தினதுக்கு வயது 18. ஜெயகௌரி கதாநாயகி. ஏ.எஸ். ராஜா வில்லன், ஆர். காசிநாதன், ஆர்.வி. ராசையா, இரத்தினகுமாரி போன்றோரும் நடித்தார்கள். நடிகர் சந்திரபாபுவின் சகோதரியின் மகள்மார் இருவரும் இப்படத்தில் தோன்றியிருக்கிறார்கள். எம்.ஆர். ராதாவின் இலங்கை மனைவி கீதாவும் இப்படத்தில் சில காட்சிகளில் தோன்றினார். கதை வசனம் பாடல்களை ஜீவா நாவுக்கரசன் எழுதினார். அக்காலத்தில் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய வேலைக்காரி என்ற படம் புகழ்பெற்று விளங்கியது. அப்படத்தின் கதையையே சமுதாயமே தழுவியிருந்தது.

படத் தயாரிப்புக்கு 10 ரூபா வேண்டியதற்கான பற்றுச் சீட்டுகளைச் சரிபார்ப்பதில் சில்லையூர் செல்வராஜன், சந்திரவன்ஸவுக்கு உதவியிருக்கிறாராம்.

செலவுச் சுருக்கத்துக்காக இந்தப் படத்தின் எந்தவொரு காட்சியும் ஸ்ரூடியோவுக்குள் பிடிக்கப்படவில்லை. கொழும்பைச் சுற்றியுள்ள தனியார் வீடுகளிலேயே படப்பிடிப்புகள் நடைபெற்றன. வெளிப்புறக் காட்சிகளை பியசேன சிறிமான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, அநுராதபுரம், அம்பாறை போன்ற இடங்களில் ஒளிப்பதிவு செய்தார். அங்கொடையில் கொத்தட்டுவ என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டிலேயே ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டனவாம்.

இசையடைப்பைத் திலக் கருணாதிலக கவனித்தார். வினோதினி, இந்திராணி செல்லத்துரை, அம்பிகா தாமோதரம், முஹமட் பியாஸ் ஆகியோர் பின்னணி பாடியிருந்தார்கள். அப்போது புகழ்பெற்ற இலங்கை வானொலிப் பாடகியான வினோதினி பாடிய “இதுவா நீதி இதுவா நேர்மை” என்ற பாடல் சிறப்பாக விளங்கியதாகப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

‘சமுதாயம்’ திரைப்படம் 16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் எடுக்கப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் எடுக்க முடியாத அமைப்பு முறை கொண்டது. இந்த ஒரு பிரதியைக்கூடத் திரையிடுவதற்குத் தியேட்டர்கள் கிடைக்காமல் பெரும்பாடு பட்டுவிட்டார்கள்.

இந்தியாவிலிருந்து படங்களை இறக்குமதி செய்து பெரும் பொருளீட்டிய வர்த்தகர்கள் சிங்களப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்களே தவிர, இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கு ஆதரவு கொடுக்கப் பின்வாங்கினார்கள்.

கடைசியில் தியேட்டர் கிடைக்காமல் மண்டபமொன்றிலேயே ‘சமுதாயத்தை’க் காட்டினார்களாம். 1962இல் பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் விசேட ஏற்பாட்டின்பேரில் ‘சமுதாயம்’ திரையிடப்பட்டது. அப்போதைய ‘வீரகேசரி’ ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் விழாவை ஆரம்பித்து வைத்தார். அங்கு ஒரு வாரம் ஓடியதாம். ஆனால், அதற்கு முன்பே கொழும்பு – 15, பு@மென்டால் வீதியில் அமைந்துள்ள மொமினியன் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டதாக சில்லையூர் செல்வராஜன் சொல்லியிருக்கிறார்.

‘சமுதாயம்’ தொடர்ந்து பிற ஊர்களிலும் மன்றங்கள் பாடசாலைகள் சார்பிலும் திரையிடப்பட்டது. ஒரு வருடத்தின் பின்பு சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தெமட்டகொடை மானெல் தியேட்டரில் திரையிடப்பட்டது. தமிழரசுத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவ்வாரம்ப விழாவுக்கு தலைமை தாங்கினார்.

அந்தக் காலத்தில் இந்தியப் படங்களின் தாக்கத்திhல் ‘சமுதாயம்’ படத்திற்குத் தலைநகரில் அதிக வரவேற்புக் கிடைக்கவில்லையாம். ஆனாலும், மலையகத்திலும் வடக்கு கிழக்குலும் அதிக வரவேற்புக் கிடைத்ததாம். வடபகுதியின் கல்லூரியின் பலவற்றில் இப்படம் காண்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

சந்திரவன்ஸவின் தளராத முயற்சியினாலும் கடும் உழைப்பினாலுமே இத்திரைப்படம் உருவானது. இலங்கையில் தமிழ்ச் சினிமா பிறப்பதற்கு அடியெடுத்துக் கொடுத்த பெருமை சந்திரவன்ஸவைச் சாரும்.

திரு. சந்திரவன்ஸ ‘சமுதாயம்’ தமிழ்ப் படத்தை உருவாக்கிய அதே சமயத்தில் ‘சமாஜய’ என்னும் சிங்களத் திரைப்படத்தையும் உருவாக்கினார். ‘சமுதாயம்’ படத்தின் தழுவலே அதுவாகும்.

திரு. சந்திரவன்ஸ இவற்றைத் தொடர்ந்து பல சிங்களப் படங்களையும் உருவாக்கினார். 1974இல் வெளிவந்த ‘சுமதி எங்கே’ (டப் படம்) இவர் உருவாக்கிய இரண்டாவது தமிழ்ப் படமாகும்.

ஆரம்ப காலமும் முதலே இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதையை எழுதவேண்டும் என்பது என் ஆசை. 1978ஆம் ஆண்டளவில் திரு. சந்திரவன்ஸவை நான் அடிக்கடி சந்தித்து வந்தேன். கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியடியில் ஆதமல்லி பில்டிங்கில் மூன்றாவது மாடியில் அவரது அலுவலகம் அமைந்திருந்தது.

அலுவலகத்தின் ஒரு சுவரை ‘சமுதாயம்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அழகுபடுத்தின. மற்றச் சுவர்களில் வேறு சிங்களப் படங்களின் புகைப்படங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

திரு. சந்திரவன்ஸவின் அலுவலகத்தில் எந்நேரமும் சினிமாக் கலைஞர்கள் கூடியிருப்பார்கள். நான் திரு. சந்திரவன்ஸவைச் சந்திக்கும் போதெல்லாம் தன் ஆரம்பகால சினிமா வரலாறுகளைக் கூறுவார்.

‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் தனது மூன்றாவது தமிழ்ப் படத்தை உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது. இப்படத்துக்கான கதை. வசனம், பாடல்களைத் திருமதி இராஜம் புஷ்பவனம் எழுதியிருந்தார். எண் சாத்திரத்தின் படி இவரே இப்படத்துக்கு ‘கீதாஞ்சலி’ என்ற பெயரைச் சூட்டினார்கள். படம் தயாரிக்க ஆரம்பமானபோதுதான் அந்தச் சோகமயமான சம்பவம் நடைபெற்றது. ஆம்@ 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி திரு. சந்திரவன்ஸ மாரடைப்பால் மரணமானால்;. ‘கீதாஞ்சலி’ படத்தில் நடிக்க வந்த பலர் இவருக்கு இறுதியஞ்சலி செலுத்த நேர்ந்துவிட்டது.

சமுதாயம் தோட்டக்காரியும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன என்று முன்பு குறிப்பிட்டேன். அதில் சமுதாயமே முந்திக்கொண்டது.

இதே காலப்பகுதியிலே பல தமிழ்ப் படங்கள் உருவாகியதாக செய்திகள் வெளிவந்தன. ‘புரட்சி’, ‘மலைவாசல்’, ‘கடல்கடந்த தமிழர்’, ‘ஏன் பிறந்தாய் மகனே’, ‘சரிந்த வாழ்வு’ என்பனவே அவற்றின் பெயர்கள்.

இவற்றின் பெயர்கள் செய்திகளிலும் விளம்பரங்களிலும் வெளிவந்தனவே தவிர, படங்கள் திரைக்கு வரவில்லை.


3. ‘தோட்டக்காரி’
1960ஆம் ஆண்டளவில் ஏ. அருணனிடமிருந்து பிரிந்து சென்ற வீ. தங்கவேலு, கலையார்வம் மிக்க இளைஞரான பி.எஸ். கிருஷ்ணகுமாருடன் இணைந்து கொண்டார்.

இவர்கள் இருவரும் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். பி.எஸ். கிருஷ்ணகுமார் பிரபல சிங்களச் சினிமா இயக்குநர் சிறிசேன விமல வீரவிடம் பயிற்சி பெற்றார்.

அந்தத் தமிழ்ப் படத்துக்கு நடிகர் – நடிகையர் தேவை என்று விளம்பரமும் வெளிவந்துவிட்டது. கிரிபத்கொட நவஜீவன ஸ்ரூடியோவில் இப்படத்துக்கான நடிகர் தேர்வு இடம்பெற்றது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு 20க்கு மேற்பட்ட கலைஞர்கள் வந்திருந்தார்கள்.

திரைப்படத்துக்கு ஏற்ற முகவெட்டும், நடிப்பாற்றலும், தமிழ்மொழித் தேர்ச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற கலைஞர்களை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.

இதே நவஜீவன ஸ்ரூடியோவில் ‘றொடி கெல்ல’ சிங்களப் படத்திற்கான நடிகையர் தெரிவும் நடைபெற்றது.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகை சந்தியாகுமாரி வந்திருந்தார். சந்தியா குமாரியுடன் ‘சேபாலிகா குரூஸ்’ என்ற பெண்ணும் வந்திருந்தார். அந்தப் பெண்ணின் அழகிலும், உருவத்திரும் விருப்பம் கொண்ட கிருஷ்ணகுமார், ‘அவரையே தனது படத்தின் கதாநாயகியாகப் போடலாமா’ என்று எண்ணினார் கிருஷ்ணகுமார் அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்த்தார்.

அவருக்கும் சினிமாவில் ஆர்வம் இருந்தது. ‘அந்தப் பெண்ணின் உருவம் திரைப்படத்திற்கு பொருத்தமானதா’ என்று பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. அவர் தேறிவிட்டார். எல்லோரது அபிப்ராயங்கிளன்படியும் அந்தப் பெண்ணே கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகைகளின் சொந்தப் பெயரை மாற்றுவது அப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது. ‘சேபாலிகா குரூஸ்’ என்ற அவரது பெயர் ‘ஜெயஸ்ரீ’ என்று மாற்றப்பட்டது.

படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்தினால் விமலவீரவின் வற்புறுத்தலின்படி இயக்குநர் பி.எஸ். கிருஷ்ணகுமாரே கதாநாயகனாக நடிக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது.

கிருஷ்ணகுமார் கதாநாயகனாகவும், ஜெயஸ்ரீ கதாநாயகியாகவும் நடிக்க படப்பிடிப்புகு ஆரம்பமாகியது. அந்தத் திரைப்படத்தின் பெயர்தான் ‘தோட்டக்காரி’.

1960ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒருநாள், கம்பளையில் உள்ள ‘ரெவன்ஸ்கிறே’ எஸ்ரேற்றில் ‘தோட்டக்காரி’யின் முதலாவது படப்பிடிப்புகு ஆரம்பமாகியது. தொழிலாளர் தலைவர் அமரர் கே.ராஜலிங்கம் கமராவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.

தயாரிப்பாளர் வீ. தங்கவேலுவும் இப்படத்தில் நடித்தார். ‘கொழும்பு முன்னேற்ற நாடக மன்ற’க் கலைஞர்களான வீ.மோகன்ராஜ், ஆர். வரதராஜன், கே.ஆர்.ஆறுமுகம், ஜாபீர்குமார், தங்கையா, நல்லையா, பிரகாஷ், முத்துவேல், வீணைகுமாரி, சாந்தி, வசந்தி போன்றோரும் நடித்தனர்.

வெளிப்புறங்களிலும் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இவ்வேளையில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பணக் கஷ்டத்தினால் மிகவும் திண்டாடிப்போனார்கள்.

இவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்கினார்கள் ஒரு கலைத் தம்பதியினர். இவர்களின் பண உதவியுடன் ‘தோட்டக்காரி’ தொடர்ந்து வளர்ந்தாள். தோட்டக் காரியை வளர்த்துவிட்ட அந்தக் கலைத் தம்பதியினர்தான் திரு.எஸ்.ஆர். முத்துவேலுவும், திருமதி. ரஞ்சனி முத்துவேலுவும் ஆவார்கள்.

பாடல்களை பி.எஸ்.கே. குமார், கணேசாள் (அங்கவை) ஆகியோர் இயற்றினர். கே.ஏ.சவாஹிர் இசை அமைத்த பாடல்களை ஜி.எஸ்.பி.ராணி, புஷ்பராணி, வரதராசா, அருண்லந்தரா, கே. குமாரவேல், கௌரீஸ்வரி முதலியோர் பாடினர். கதாநாயகியின் உரையாடல்களுக்கு செல்வம் பெனாண்டோ பின்னணிக் குரல் வழங்கினார். தயானந்த விமலவீர ஒளிப்பதிவு செய்ய துவான்கபூர் படத்தொகுப்பைச் செய்தார்.

தேயிலை எஸ்ரேற் முதலாளி ஸ்ரீவேலு முதலியாருக்கும், வேலைக்காரி லட்சுமிக்கும் பிறந்தவள்தான் வள்ளி. முதலியாரின் தம்பி ஸ்ரீரங்கம், தன் அண்ணனின் சொத்துக்களை வஞ்சகத்தால் கவர முனைகிறான்@ அதற்காக அவரைக் கொலை செய்கிறான். முதலியாரின் மகன் ஸ்ரீதரைப் பாதிரியார் ஒருவர் காப்பாற்றி சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கிறார். தோட்ட உரிமை ஸ்ரீரங்கத்துக்கு வருகிறது. அவன் தோட்ட மக்களைத் துன்புறுத்துகிறான்.

தோட்டக் கணக்கப்பிள்ளையின் மகன் சுந்தர் வள்ளியைக் காதலிக்கிறான். வாக்குறுதிகள் பல கொடுத்து விட்டுக் கொழும்புக்குச்செல்கிறான். ஆடி வேல்விழா வைபவத்தில் ஸ்ரீரங்கம், வள்ளியைக் கண்டுவிடுகிறான். அவள் தப்பி ஓடிக்கொழும்பில் தன் காதலன் சுந்தரைத் தேடி அலைகிறாள். அப்பொழுது சிங்கப்பூரிலிருந்து திரும்பியிருக்கும் ஸ்ரீதரால் காப்பாற்றப்படுகிறாள்.

அவள் தன் தங்கை என்பதை அறிந்து, சுந்தரைக் கண்டுபிடித்து அவளுக்கு வாழ்வளிக்க முனைகிறான். ஸ்ரீரங்கம் சட்டத்தின் கையில் அகப்படுகிறான். வள்ளி – சுந்தர் திருமணம் நடைபெறுகிறது.

இதுதான் தோட்டக்காரி திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.

இலங்கையின் மலையகச் சூழலை வைத்தே கதை பின்னப்பட்டதால் அந்தக் காலத்தில் இந்தத் திரைப்படம் பிரதானமானதாகக் கணிக்கப்பட்டது. தென்னகப் படங்களைப் பார்த்தே பழக்கப்பட்டிருந்த எமது ரசிகர்கள், இலங்கைக் காட்சிகளை இத்திரைப்படத்தில் கண்டதும் புதுமைப்பட்டார்கள்.

தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. எஸ். தொண்டமான், ஜனநாயகத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜனாப் ஏ. அசீஸ் ஆகியோரின் உரைகளும் படத்தின் ஆரம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தன.

இது ஆரம்பப் படமாகையால் தொழினுட்பரீதியில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. ‘தோட்டக்காரி’ 1963.09.27இல் கொழும்பில் கிங்ஸ்லி உட்பட 9 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

இப்படம் மத்திய கொழும்பில் 2 வாரங்களும், தென் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பண்டாரவளை ஆகிய இடங்களில் தலா ஒரு வாரமும் கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன் போன்ற இடங்களில் ஒருவாரத்திலும் குறைந்த தினங்களும் ஓடியதாம்.

அந்தக் காலத்தில் 41ஃ4 இலட்சம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட ‘தோட்டக்காரி’ வருமானமாக 21ஃ2 இலட்சம் ரூபாவை மட்டுமே தந்ததாம்.

‘பணத்தைப் பொறுத்தவரை சிறிது இழப்புத் தானென்றாலும் எங்களாலும் இலங்கையில் தமிழ்ப் படம் தயாரிக்க முடியும் என்ற ஆத்ம திருப்தியை அப்பொழுதே பெற்றுவிட்டோம்’! என்று கூறினார் பி.எஸ். கிருஷ்ணகுமார்.

திரு. கிருஷ்ணகுமார், கொழும்பு மில்வீதி, 10 ஆம் இலக்க இல்லத்தில் வாழ்ந்துவருகிறார். திரைப்பட வரலாற்றை அறிவதற்காக நான் அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன். தனது கலைவாழ்க்கையைப் பற்றி அழகழகாகச் சொல்லுவார். தான் நெறியாண்ட இரண்டு படங்களினதும் (தோட்டக்காரி, மீனவப்பெண்) பட ஆல்பங்களை அழகாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

ரூபாவாஹினியில் பல வருடங்களாக எஸ். விஸ்வநாதன் ‘காதம்பரி’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக நான் கிருஷ்ணகுமாரை முதன்முதலில் பேட்டி கண்டேன்.

அவர் ‘தோட்டக்காரி’ திரைப்படத்தின் றீல்களை இன்னும் அழகாகப் பாதுகாத்துவருகிறார். 14 றீல்கள் மொத்தமாக இருத்தல்வேண்டும். ஆனால், ஒன்று தவறிவிட்டதால் தோட்டக்காரியை மீண்டும் பூரணமாகத் திரையிடமுடியாமல் இருப்பதையிட்டுக் கவலை தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவர்களின் பெயர்களில் திரு. கிருஷ்ணகுமாரின் பெயரும் விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.

இலங்கையில் உருவான ‘தோட்டக்காரி’ திரைப்படத்துக்குப் பலரின் பாராட்டுகளும் கிடைத்தன.

அப்பொழுது தலைவர் எஸ். தொண்டமானும் பாராட்டுச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். தினகரனில் (1963.08.25) ‘நியமன எம்.பி. தொண்டமானின் கருத்து’ என்ற தலைப்பில் அந்தச் செய்தி வெளிவந்திருந்தது.

‘தோட்டக்காரி’ படம், தயாரிப்பாளர் தங்கவேலுவுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். கலாசார அமைச்சர் பி.ஜி.ஜி. கலுகல்ல தலைமையில் காண்பிக்கப்பட்டபோது நானும் பார்த்தேன். இப்படம் தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதால் சிருஷ்டிக் கலைஞனுக்குச் சவால் விடும் வகையிலான விஷயமொன்றை முன்னணிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.;

‘தொழிலாளர்களும் அவாகளது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களும் இப்படத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டும்’ என்று அந்தச் செய்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தச் செய்தி வெளியான அதே மாதம் 16ஆம் திகதி ‘தினகரன்’, ‘தோட்டக்காரி’ படத்துக்கு நீண்ட விமர்சனம் எழுதியது.

…இலங்கையின் முதலாவது 35 மி.மீட்டர் தமிழ்ப் படமான ‘தோட்டக்காரி’யைத் தயாரித்த ஸ்ரீ கணபதி பிக்ஸர்சாரும், வீ. தங்கவேலுவும் பாராட்டுக்குரியவர்கள். இலங்கையிலேயே ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிப்பது என்றால் அதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும்.

காதல், சூழ்ச்சி, தொழிலாளர் போராட்டம் என்று ஒரு சாதாரண படத்துக்கு வேண்டிய அத்தனை அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஓரிரு பாடல்கள்கூட நன்றாக இருக்கின்றன. ஒலி-ஒளிப்பதிவுகள் திறமையாக இல்லையானாலும் இது முதல் முயற்சிதானே?

ஜெயஸ்ரீயின் நடிப்பு நம்பிக்கையூட்டுகிறது. கதாநாயகன் கிருஷ்ணகுமாரும் பரவாயில்லை. தோட்டத் துரையாக வரும் மோகன்ராஜுன் நடிப்பு குறிப்பிடத்தக்கது.

‘தோட்டக்காரி’ முதல் முயற்சி. ஆனால், அதிகப் பிரயாசையுடன் எடுக்கப்பட்டது. இதை இந்தியப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போர் பல குறைகளைக் காணலாம். அவர்கள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் படம் எப்படி இருந்ததை என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். எந்தக் கலையும் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். அதனால், ‘தோட்டக்காரி’ தயாரிப்பாளர்கள் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள் என்று தினகரன் விமர்சனம் எழுதியது. வீரகேசரி (11.08.63) யிலும் ‘ராஜு‘ என்பவர் விமர்சனம் எழுதினார்.

முதலாவது திரைப்படத்தில் குறைகள் அதிகம், நிறைவுகள் சொற்பம் என்று எதிர்பார்ப்பது சகஜம். அந்த எண்ணத்துடன் சென்ற எனக்கு ஏக காலத்தில் ஏமாற்றமும், மகிழ்ச்சியுமாக இருந்தது. ‘தோட்டக்காரி’ தரமான படமாகத் தென்பட்டதே அதற்குக் காரணம். கலைஞர்களின் பெயர்கள் சிங்களத்திலும் காட்டப்படுகிறது.

பெண்கள் கொழுந்து பறிக்கும் காட்சி ‘தோட்டக்காரி’யில் முதலாவதாக இடம்பெறுகிறது. ஜெயஸ்ரீயும் கிருஷ்ணகுமாரும் ரசிகர்கள் பாராட்டும் வகையில் நடித்துள்ளார்கள். தோட்டத் துரையாக வரும் மோகன்ராஜ் பண்பட்ட நடிகராக விளங்குகிறார்.

சவாஹிரின் இசை அமைப்பு அருமை. இலங்கையிலும் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கையில் ‘வணக்கம் சார்’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். வேட்டியும் சேட்டும் அணிந்திருந்த நடுத்தர வயதுள்ள மனிதர் ஒருவர் நின்றிருந்தார். அவர் தான் தயாரிப்பாளர் தங்கவேலு. ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று பாராட்டினேன்.

என்று அந்த விமர்சனம் முடிகிறது. ‘தோட்டக்காரி’யின் தயாரிப்பாளர்களில் பிரதானமானவர் வீ. தங்கவேலு. அவரது பேட்டியொன்றும் வீரகேசரியில் (25.09.63) வெளிவந்திருந்தது.

‘இலங்கையில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. ஆனால், சந்தர்ப்பம் என்னை அந்த வழிக்கு இழுத்துச் சென்றுவிட்டது.

சிறுவயது முதல் நான் நாடகம் நடிப்பதில் ஆர்வங்கொண்டிருந்தேன். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையும் பிறந்தது. இதனால் தந்தையுடன் சண்டைபிடித்துக்கொண்டு அவரைப் பிரிந்து வந்தேன். இது 1950ஆம் ஆண்டில் நடந்தது.

பல காலமும் கஷ்டப்பட்டு கண்டியிலும் ‘மாவனெல்ல’ என்ற இடத்தில் சில்லறைக் கடையும், சைவ ஹோட்டலும் நடத்தி நல்ல முறையில் வாழ்ந்துவந்தேன்.

அப்பொழுது ‘நடிகர் தேவை’ என்ற விளம்பரத்தைக் கண்டு மகிழ்ந்து விண்ணப்பம் அனுப்பினேன். நடிகராக்ச சேர்த்துக்கொள்ளப்பட்டேன். சில காலத்தின் பின் ஏமாற்றப்பட்டேன். மற்றொரு படத்திலும் சேர்ந்தேன். அது படப்பிடிப்புடன் நின்றுவிட்டது.

அதன் பின்பே சொந்தத்தில் படம் தயாரிக்கலாம் என்று எண்ணினேன். சில்லறைக் கடையையும் சைவ ஹோட்டலையும் விற்றேன். சொந்த ஊரில் இருந்த நிலபுலன்களையெல்லாம் விற்றேன். அந்தப் பணங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஸ்ரீ கணபதி பிக்ஸர்ஸ்’ சினிமா நிறுவனமாகும்.

இலங்கையின் வளத்துக்கும், வருமானத்துக்கும் இரவு பகல் என்று பாராது உழைப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்க்கையைக் கதையாகக் கொண்டே படத்தைத் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ என் மனதில் உருவாகியிருந்தது.

எனது நண்பர் சுமணதாசவுடன் பி.எஸ். கிருஷ்ண குமாரைச் சந்தித்தேன். அவர் படத்துக்கான கதை வசனத்தை எழுதி டைரக்ஷன் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

அதன் பின் நவஜீவன ஸ்ரூடியோ அதிபர் சிறிசேன விமலவீரவின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் தனது ஸ்ரூடியோவிலேயே முதலாவது தமிழ்ப் படம் உருவாக வேண்டும் என்று விரும்பினார். ‘தோட்டக்காரி’யை ரசிகர்களின் முன்னிலையில் கொண்டுவரவேண்டுமென்று கடுமையாக உழைத்தேன். முன் அனுபவம் இல்லாத எனக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்டன. பொருளாதார நெருக்கடியால் படம் வளர்வது தடைப்பட்டது. அப்போது திருமதி ரஞ்சனி முத்துவேலு பணஉதவி செய்தார்.

‘இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் ‘தோட்டக்காரி’யைத் தங்கள் சொந்தப் படம் என்று கருதி ஆதரவு தரவேண்டும்’ என்று தயாரிப்பளர் பேட்டி கொடுத்திருந்தார்.

தயாரிப்பாளர் கெஞ்சிக் கேட்கும் அளவுக்கு நம் நாட்டுச் சினிமா ரசிகர்கள் விளங்கினார்கள். ‘நம் நாட்டுத் தயாரிப்புக்களையும் நாம் பார்க்கவேண்டும்’ என்ற தேசாபிமான உணர்வு அப்பொழுதே நம் ரசிகர் மனதில் ஏற்பட்டிருக்குமானால் இப்போதுள்ள நம் நாட்டுச் சினிமாக்கலை பெருமளவுக்கு முன்னேற்றங்களைக் கண்டிருக்கும்.


4. ‘கடமையின் எல்லை’
தமிழ்ப் படமாக மாறிய ஆங்கில நாடகம்
ஆங்கில நாடக மேதை மகாகவி சேக்ஷ்பியரின் துன்பியல் நாடகங்களில் ‘ஹம்லட்’ என்ற நாடகமும் ஒன்றாகும். யாழ்ப்பாண ஆசிரிய கலாசாலையொன்றில் கடமையாற்றிய ஆங்கில விரிவுரையாளர் ஒருவருக்கு இந்த நாடகத்தின்மீது தனிப்பிரியம். அவர் இந்த நாடகத்தை ஒரு தமிழ்ப் படமாக எடுத்தால் என்ன? என்று நீண்ட நாட்களாகவே எண்ணி வந்தார்.

அவரது எண்ணம் செயலுருவாகியது. இந்த நாடகத்தைத் தழுவித் தமிழ்ப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் முதன் முதலாகத் தமிழ்ச் சரித்திரப் படமொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.

படம் தயாரிப்பதற்குப் பட நிறுவனம் வேண்டுமே? ராஜா ஜோஷ{வா, கே. கதிர்காமத்தம்பி, ஏ.ஜே.சாள்ஸ், ஏ.எம். ஜோசப் போன்றோரின் உதவியுடன் ‘கலாபவன பிலிம்ஸ்’ நிறுவனத்தை உருவாக்கினார்.

தமது படத்துக்குக் ‘கடமையின் எல்லை’ என்ற பெயரையும் சூட்டினார்.

திரைக்கதை வசனம் பாடல்களை வித்துவான் ஆனந்த ராயர், எஸ். பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோரைக் கொண்டு எழுதுவித்தார்.

நெறியாள்கையுடன் இசை அமைக்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். இப்படியான பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அந்த விரிவுரையாளர் யார் தெரியுமா? அவர்தான் எம். வேதநாயகம் (பி.ஏ.)

அந்த நாட்களில் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்த பலர் இப்படத்தில் நடிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். மன்னார் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு நாடகம் நடிப்பதில் பெரிதும் ஆர்வம். சினிமாவில் நடிக்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தான். பள்ளிப் பருவம் முடிந்து கொழும்புக்கு வேலைக்குப்போனபோது, நாடகத்தைப் போலவே சினிமாவும் அவனைத் தேடி வந்தது. ஆம். அவன் ‘கடமையின் எல்லை’யில் மன்னனாக நடிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டான். அந்த நடிகன்தான் தேவன் அழகக்கோன்.

நவாலியைச் சேர்ந்த ஓர் இளைஞன், கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகப் பண்ணையில் பயின்றுவந்தான். இவனுக்கும் ‘கடமையின் எல்லை’யில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த நடிகரின் பெயர்தான் ஏ. ரகுநாதன்.

இளவரசன் கமலநாதன்தான் கதையின் முக்கியப் பாத்திரம். இந்தப் பாத்திரத்திற்குக் கராட்டிச் சம்பியன் பொனி றொபட்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இளைஞன், கொழும்புக்கு வந்து 15 வருடங்களாக மேடை நாடகங்களில் நடித்துவந்தான். இவனும் இப்படத்தில் நடிகராகத் தெரிவு செய்யப்பட்டான். இந்த நடிகரின் பெயர்தான் எம். உதயகுமார்.

ஏ. ஐராங்கனி, ஜீ. நிர்மலா, எஸ். பஸ்தியாம்பிள்ளை, ஆர். அமிர்தவாசகம், எஸ்.ரி.அரசு, கே. துரைசிங்கம், ஆர். காசிநாதன், குமார், லூக்காஸ் போன்றோரும் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

வீ. முத்தையா, வீ. கமலலோஜனி, அம்பிகா தாமோதரம், ரீ. புவனேஸ்வரி போன்றோர் பாடல்களைப் பாடினார்கள்.

எம்.ஏ.கபூரும், ஏ.ரீ. அரசும் கூட்டாக ஒளிப்பதிவை மேற்கொண்டார்கள். கொழும்பு ‘சிலோன் ஸ்ரூடியோ’ வுக்குள் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படம் உருவானது.

படத்துக்கான கலை நிர்மாணத்தை கே.ஏ. வின்சென்ற் கவனித்தார்.

‘கடமையின் எல்லை’ (04.10.1966) ‘சிலோன் தியேட்டர்ஸின்’ 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வேதனை என்னவென்றால் இத்தனை கஷ்டப்பட்டு உருவாக்கிய இயக்குநரால் இப்படத்தைத் திரையில் பார்க்க முடியவில்லை. காரணம், ‘கடமையின் எல்லை’ திரைக்கு வருமுன்பே அதன் இயக்குநர் எம். வேதநாயகம் காலமாகிவிட்டார்.

மணியோசை முழங்குகிறது. காக்கையினங்கள் ஆனந்தத்துடன் ஆரவாரித்தன. ஆழ்கடலின் பேரலைகள் கற்பாறைகளில் மோதி வெண்ணுரை பரப்புகின்றன. இந்தக் காட்சிகளுடனே கடமையின் எல்லை திரைப்படம் ஆரம்பமாகியது.

உரையாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் இடம் பெற்றன. பொதுவாக நடிப்பில் எல்லோருமே நாடகப் பாணியைப் பின்பற்றியிருந்தார்கள்.

இன்பரசனாகத் தோன்றிய தேவன் அழகக்கோனின் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தாலும் தென்னிந்திய நடிகர் சிவாஜி பாணியைப் பின்பற்றியிருந்தார். இப்படத்தில் அறிமுகமான ஏ.ரகுநாதனும் பி.உதயகுமாரும் பின்னாளில் சிறந்த திரை நாயகர்களாக உருவாகினார்கள்.

கதாநாயகியாக ஜி. நிர்மலாவும், தயாராக ஐராங்கனியும் நடித்தார்கள். அக்காலத்திலும் தமிழ் நடிகைகள் பஞ்சம் நிலவியிருக்கவேண்டும். பெண் பாத்திரத்தில்கூட ஆண் ஒருவர் நடித்தார். அதிகமான உப பாத்திரங்கள் தோன்றின. ஆரம்பகால முயற்சி என்பதால் தொழில் நுட்பத்துறையில் பல குறைபாடுகள் தெரிந்தன.

துள்ளி விளையாடும் புள்ளிமான் ரூபா காதல் வயப்பட்டாள். இளவரசன் கமலநாதனும் அவளை நேசித்தான். காதலர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். தம்மை இன்பரசனும் ரூபாவின் தந்தையும் மறைந்திருந்து பார்ப்பதை இளவரசன் கண்டுவிட்டான். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் ரூபா தன்னைக் காதலிப்பதாக நடிக்கிறாள் என்று எண்ணி வெகுண்டான் கமலநாதன். அவன் எட்டி உதைக்கவே அவள் பதறிப்போய்விட்டாள்.

இப்படியான உணர்ச்சிகரமான பல காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றன.

பல ஊர்களிலும் இத்திரைப்படம் இரண்டு வாரங்களுக்குமேல் ஓடவில்லை. இத்தனை பிரம்மாண்டமான தயாரிப்பு பொருளாதார ரீதியில் பெருந்தோல்விப்படமாகியது.

ஆரம்ப நிலையிலிருந்து தமிழ்ப் படத்துறையில் இப்படியான பிரம்மாண்டமான கதையைத் திரைப்பட ஆக்கத்திற்குத் தெரிவு செய்ததே பெருந்தவறு என்று கூறப்பட்டது.

‘கடமையின் எல்லை’ திரைப்படத்தைப் பற்றிப் பத்திரிகைகள் பலவாறு விமர்சனங்களை எழுதின. அந்தக்காலச் சூழ்நிலையை அறிந்த எவரும் குறைகளை அதிகமாக எழுதவில்லை. இயக்குநர், தயாரிப்பாளர்களின் துணிவைப் பாராட்டி எழுதினர்.

அக்காலத்தில் இலங்கையில் தமிழ்ப் படத் தயாரிப்பு என்பது எல்லா வகையிலும் தோல்வியிலேயே முடியும் என்பதை அறிந்திருந்தபோதிலும் சில தீவிர கலைஞர்கள் தம் திருப்திக்காக இவ்hறு சில திரைப்படங்களை உருவாக்கினார்கள். அவ்வாறான முயற்சியில் ‘கடமையின் எல்லை’ திரைப்படமும் ஒன்றாகும்.

சினிமா என்ற கலை மீது கொண்ட காதலால் இவ்வாறான முயற்சியை திரு. வேதநாயகம் மேற்கொண்டார். இந்த வகையில் இலங்கைச் சினிமாவின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர்களின் பெயர்களில் திரு. வேதநாயகத்தின் பெயரும் குறிப்பிடச் சொல்லக்கூடிய பெயராகும்.

ஒரு பத்திரிகை இவ்வாறு எழுதியது… ‘கோட்டையில் ஆவிவரும் காட்சிகள் ஆங்கிலப் படங்களைப் போல் அமைந்திருந்தன. வாட் சண்டைகள்முதல் குதிரைச் சவாரிகள்வரை எல்லாமே கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டிருந்த. காதல் காட்சிகளுடன் இலங்கைப் பாடகர்களின் இன்னிசையும் யாழ். கலாNÑத்திர மமாணவிகளி; நடனங்களையும் கண்டு களிக்கலாம்…’ என்று எழுதியது.

‘… நடிகர்களில் பலர் நன்கு நடித்திருந்தாலும் தேவன் அழகக்கோன் எம் மனதில் ஒரு செய்தியை நிறுத்தினார். இமவர் கதாநாயனைவிட எம்மனதில் முன்னிற்கிறார். அதற்குக் காரணம் அவரது திரைக்கு ஏற்ற முகவெட்டும் உடல் அமைப்பும்தான் என்று எண்ணமுடிகிறது. அவர் தென்னிந்திய நடிகர் ஒருவரின் பாணியை மட்டும் கைவிட வேண்டும்’ என்று இன்னுமொரு பத்திரிகை புத்திமதி சொல்லியது.

நெறியாள்கையையும் இசை அமைப்பையும் வேதநாயகமே ஏற்றிருந்தாரல்லவா? சினிமாவைப் பொறுத்தவரை அவரது முதலாவது படைப்பு இது. ஆனாலும், அனுபவம் பெற்ற பலருடன் ஒப்பிடக்கூடியளவு தனது கடமையைச் செய்திருந்தார் என்பது உண்மையே.

அதிகமான காட்சிகள் வெளிப்புறங்களிலேயே எடுக்கப்பட்டன. ஒளிப்பதிவாளர்கள் கபூருக்கும் அரசுக்கும் தமது திறமைகளை காட்ட அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன.

‘மனம் வைத்த தொன்று’ என்ற பாடல் இனிமையாக இருந்தது.

‘இப்படத்தைப் பற்றி கதாநாயகி ஜி. நிர்மலா தனது கருத்தைக் கூறியிருந்தார். இப்படத்தின் கலைஞர்கள் அனைவரும் அனுபவம் இல்லாதவர்கள். இதுவே இப்படத்தின் தோல்விக்குக் காரணம். படப்பிடிப்பின்போது டைரக்டர் மனம் போனபடி ‘குதி’, ‘தொங்கு’ என்றெல்லாம் ஆட்டிப்படைத்தார். கட்டுப்பாடுகளை விதித்தார்களே தவிர, நடிக்க சந்தர்ப்பம் தரவில்லை. இப்படம் தோல்வி அடைந்தால் என் எதிர்காலம் பாதிக்கப்படுமோ? என்று அஞ்சுகிறேன்’ என்று பேட்டி கொடுத்திருந்தார். வேடிக்கை என்னவென்றால் அவர் நடித்த முதல் படமும் கடைசிப்படமும் ‘கடமையின் எல்லை’யேதான்.

படத்தின் உப கதாநாயகன் எம். உதயகுமார் என்ன கூறினார் தெரியுமா? ‘நடிப்புத் திறனற்றவர்களை முக்கியபாத்திரத்தில் நடிக்க வைத்ததே படத்தின் தோல்விக்குக் காரணமாகும். சினிமாத் துறையின் வளர்ச்சியை அறிந்து புதுமையான முறையில் படத்தை உருவாக்கியிருக்கவேண்டும். அதை விடுத்து பழமையைப் புகுத்துவதும் பழக்கமற்ற செயல்களில் ஈடுபடுத்துவதும் படுதோல்வியைத்தானே கொண்டுவரும். தயாரிப்பாளர்கள் பணத்தை விரயம் செய்து படம் டைரக்ட் செய்யும் முறையைப் பயின்றுள்ளனர்’ என்று எழுதினார்.

அந்தக் காலத்தில் நடிகராகவும் நாடகத் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருந்த ஏ. நெயினார் தன் கருத்தைத் தினகரனில் எழுதியிருந்தார். ‘எத்தனையோ செல்வந்தர்கள் இருந்தும் துணிந்து முன்வந்த திரு. வேதநாயகம் அவர்களைக் கலைஞர்களாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா? என்று கேட்டிருந்தார்.

அந்தக் காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ‘சுதந்திரன் (06.10.1966) பத்திரிகையும் விமர்சனம் எழுதியது.

‘சேக்ஷ்பியரின் கதையைத் தமிழ்ப் படமாகச் செய்திருப்பதன் மூலம் இயக்குநரின் ஆற்றலையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. தமிழ் மரபுடன் கதையை நடத்திச் செல்வதற்கு ஒரு பாராட்டு! அருவக்காட்சிகள், போர்க்காட்சிகள், கதாநாயகியின் சமாதிக் காட்சி போன்றன டைரக்டரின் திறமையைக் காட்டுகின்றன…’ என்று எழுதியது.

வீரகேசரியும் (04.10.66) விமர்சனம் எழுதியது.

‘சேக்ஷ்பியரின் கதைகள் எதுவும் தமிழில் முழுப்படமாக வெளிவரவில்லை. அம்முயற்சியைத் துணிந்து மேற்கொண்டு சரித்திரப் படமாகத் தயாரித்திருப்பதை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ள வேதநாயகத்துக்கு இது முதற்படைப்பாக இருந்த போதிலும் அனுபவம் பெற்றுள்ள பலரோடு ஒப்பிடக்கூடிய முறையில் கடமையைத் திறமையாகச் செய்துள்ளார்.

இலங்கையில் இப்பொழுது சிங்களச் சினிமாத்துறை நன்கு வயர்ந்துவிட்டது. அங்கு தமிழ்க் கலைஞர்கள் பலர் கடமையாற்றுகிறார்கள். அவர்கள் தமிழ்ப்பட உலகை முன்னேற்றும்’ ஒரு பணிக்குத் திரு. வேதநாயகம் தயார்ப்படுத்தும் அம்சமாக இப்படம் எடுக்கப்பட்டதையிட்டு நாம் மிகவும் பாராட்டுவோம்!’ என்று விமர்சனம் எழுதியது.

‘கடமையின் எல்லை’ திரையிடப்பட்டபோது எனக்கு வயது 15. அப்பொழுது நான் கொழும்பு விவேகானந்த மகாவித்தியாலயத்தில் 10ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.

கொழும்பில் எல்பினிஸ்ரனிலும், ரொக்ஸியிலும் இப்படத்தைத் திரையிட்டிருந்தார்கள். எனது மாமா சிவநாமம் என்னை அப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச்சென்றார். எல்பினிஸ்ரன் தியேட்டரில் 2ஆம் வகுப்பு டிக்கெட் எடுத்துக்கொண்டோம். அப்போது ஒரு டிக்கெட்டின் விலை 1 ரூபா 10 சதம் மட்டும்தான்.

தியேட்டரில் மேல்வகுப்பு இருக்கைகளில் சிலர் இருந்தனர். இரண்டாம் வகுப்பு இருக்கைகளில் எங்களுடன் சேர்த்து எல்லோருமாக ஒரு 50 பேர் இருப்போம். கலரி மட்டும் நன்றாக நிறைந்திருந்தது. அப்போது கலரி டிக்கெட்டின் விலை 50 சதம் மட்டுமே.

படம் ஆரம்பமாகியது. திரையில் மணியோசை முழங்கியது@ ஆழ்கடலின் நீள் அலைகள் கற்பாறைகளில் மோதிவெண்ணுரை பரப்பின. யாழ்ப்பாணக் கோட்டை தெரிந்தது. அடுத்த சில பாத்திரங்கள் பேசின. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அந்த உரையாடல்கள் அமைந்திருந்தன. நான் மகிழ்ச்சி நீடிப்பதற்கு முன்பே கலரிப் பக்கத்திலிருந்து கூச்சல்கள் கிளம்பின.

‘என்ன விஷயம்’ என்று நான் மாமாவிடம் வினவினேன். ‘இலங்கைப்படம் என்றால் கலரில் உள்ளவர்கள். அப்படித்தான் கூச்சல் போடுவார்கள். நீ பேசாமல் படத்தைப் பார்’ என்றார் மாமா. காட்சிக்குக் காட்சி கலரிக் காரர்களின் கூக்குரல் அதிகரித்துக்கொண்டே வந்தது.

அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று அறிவதற்காக எனது காதுகளைக் கூர்மையாக்கினேன். ‘பனங்கொட்டை….. பனங்கொட்டை… பனங்கொட்டைப் படம் எங்களுக்கு வேண்டாம்.’ இவைதான் அவர்களின் கூக்குரலின் அர்த்தம்.

நானும் ‘பனங்கொட்டை’ என்பதால் அவர்கள் சொன்ன சொற்கள் எனக்கு வேதனையை ஏற்படுத்தின. அவர்கள் என்ன சொல்லிக் கூக்குரலிட்டாலும், அது ‘பனங்கொட்டைப்படம்’ என்பதால் படம் முடியும்வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் நானும் மாமாவும் வீடு திரும்பினோம்.

இப்படியெல்லாம் எமது இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் வரலாறு வளர்ந்துவந்தது.

இப்படத்தின் மூலமே முதன் முதலில் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் திரைப்படமொன்றில் அறிமுகமாகியது. ஆனாலும் இப்படியான சரித்திரப்படத்துக்கு யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் பொருந்தவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் பின்பு வந்த பல தமிழ்ப்படங்களுக்கு யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் பொருந்தி விட்டன.


5. ‘பாச நிலா’
கல்லூரிக்குள் உருவான திரைப்படம்
1965ஆம் ஆண்டளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஜோசப் தேவனந்தன் என்ற ஆசிரியர் கல்வி கற்பித்துவந்தார். இவரும் இலங்கையில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தார். சக ஆசிரியர் தேவகுலதுங்கத்துடன் சேர்ந்து திரைக்கதையை எழுதிவிட்டார்.

யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் ஏ.ஈ. மனோகரன், ஜயேந்திரா போன்றோருடன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சிலரும், செல்வி ஐடா துரைசிங்கம் போன்றோரும், நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

பலாலி ஆசிரிய கலாசாலை மாணவனாக இருந்த எம்.எச்.ஹக் இப்படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.

யாழ்ப்பாணப் பாடசாலைகள், பேராதனைப் பூங்கா, தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் உருவான இப்படத்தின் கதையை மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் எழுதியிருந்தார்கள்.

வயது முதிர்ந்த தம்பதியொன்றுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகள். கீதாவே மூத்தவள். மச்சான் முறையான குமார் என்ற இளைஞனும் இவர்களுடன் ஒன்றாகவே பாடசாலைக்குச் சென்று வருவான்.

ஒருநாள் மூவரும் படகொன்றில் சுற்றுலா போகிறார்கள். குமார் கேலிக்காகப் பயம் காட்டுகிறான். அதிர்ச்சியடைந்த கீதா ஊமையாகி விடுகிறாள். அவளது தம்பியும் படிக்காமல் குட்டிச் சுவராகி விடுகிறான்.

நான் உன் குடும்பத்துக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தேன். இறுதியில் உன் தம்பிகூட என்னை அடித்துவிட்டான். இனி மேல் இந்த உலகத்தில் வாழ்வதில் பயனில்லை. எனவே, நான் தற்கொலை செய்யப்போகிறேன்!’ என்ற கூறிவிட்டு வைத்தியசாலையின் மேல் மாடியிலிருந்து குதித்துவிட ஓடினான். அதிர்ச்சியடைந்த கீதா வாய்விட்டு அலறிவிடுகிறாள்.

பரீட்சையில் சித்தியடைந்த குமார், கொழும்புக்கு வந்துவிடுகிறான். கீதாவுக்கும் கொழும்பிலேயே சிகிச்சை நடைபெறுகிறது. குமார், கீதாவின் தம்பியை நல்வழிப்படுத்த முனைந்தபோது, அவனால் தாக்கப்படுகிறான். குமார் தனக்கு நடைபெற்றவைகளக் கீதாவுக்குக் கூறுகிறான்.

அந்த ஊமைப்பெண் வாய் பேசத்p தொடங்கினாள். குமாருக்கும் கீதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

இதுதான் ‘பாசநிலா’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.

குமாராக ஏ.ஈ. மனோகரனும், கீதாவாக ஐடாதுரை சிங்கமும், தம்பியாக ஜயேந்திராவும் பாத்திரமேற்றார்கள்.

1966ஆம் ஆண்டில் ‘பாசநிலா’ திரையிடப்பட்டது. அக்காலத்தில் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் 5 நாட்களும், வேல்விழாவின்போது கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் 3 நாட்களும், காண்பிக்கப்பட்டதாம். தொடர்ந்து யாழ்ப்பாணப் பகுதியின் பல பாடசாலைகளிலும் தினமும் ஒரு காட்சியாக 50க்கும் மேற்பட்ட முறை காட்டப்பட்டதாம்.

லண்டனில் ‘வெஸ்ற் மினிஸ்ரர் சென்றல் ஹோலில்’ திரையிடப்பட்ட முதல் இலங்கைப் படம் ‘பாசநிலா’ தான்.

இதன் பின்பு ஜோ. தேவானந்த பல சிங்கள தமிழ்ப் படங்களை இயக்கிவிட்டார். ஆனால், இந்தப் ‘பாசநிலா’வில் கிடைத்ததுபோன்ற ஆத்மதிருப்தி வேறு எதிலும் கிடைக்கவில்லை. எனது மூத்த பிள்ளை, இந்தப் ‘பாசநிலா’ படறீல்கள்தான் என்று சொல்லி மகிழ்கிறார்.


6. ‘டைக்ஷி டிறைவர்’
கலைத்தம்பதிகள் உருவாக்கிய படம்
1950ஆம் ஆண்டளவில், சுண்டிக்குளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.

இவ்விளைஞர் இலக்கிய ஆர்வம் காரணமாக ‘லட்டு’ என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.

சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் படித்துவந்த மாணவி ஒருத்தியும் ‘லட்டு’ பத்திரிகையை வாசித்துவந்தார். அதற்குக் கதை கட்டுரைகளையும் எழுதி அனுப்பினார். பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளருக்கு நன்றிக் கடிதங்கள் எழுதினார். நாளடைவில் நன்றிக் கடிதங்கள் காதல் கடிதங்களாக மாறின. அவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்தது.

இந்தக் கலைத் தம்பதிகள்தான் சுண்டிக்குளி சோமசேகரனும் திருமதி மாலினிதேவி சோமசேகரனும் ஆவர்.

திரு. சோமசேகரன் 1955ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்று வாஹினி ஸ்ரூடியோவில் துணை ஒலிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார். அந்தக் காலத்தில் ‘தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை’ என்ற படம் வெளிவந்தது. அப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘பொற்கைப் பாண்டியன்’ என்ற நாடகம் இடம்பெற்றது.

இந்தக் காட்சியில்தான், தனது கலைப்பணியைத் திறமையாக ஆரம்பித்திருப்பதாகப் பெருமையாகச் சொன்னார் சோமசேகரன்.

1960ஆம் ஆண்டு கொழும்பு சிலோன் ஸ்ரூடியோ இவரை வரவேற்றது. அங்கு 50க்கு மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தார்.

இவருக்கு இளமையிலிருந்தே இலங்கையில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்துவந்தது. இவரது ஆசைக்கு மனைவியும் தூண்டு கோலாக இருந்தார். தங்கள் படக் கொம்பனிக்குத் ‘தங்கமணி பிக்ஸர்ஸ்’ என்ற பெயரைச் சூட்டினார்கள். சோமசேகரன் சிறந்த ஒலிப்பதிவாளரல்லவா? எனவே, முதலில் பாடல்களை ஒலிப்பதிவு செய்தார். யூ.எல். ஹமீட் எழுதிய பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசை அமைத்தார். அன்ரனி, கௌரீஸ்வரி, ஏபிரஹாம் போன்றோர் பின்னணி பாடினர்.

லெனினின் மூலக்கதைக்கு பி.எஸ். நாகலிங்கம் வசனம் எழுதினார்.

வானொலி நாடகத் துறையின் முன்னோடியான கலாஜோதி எஸ். சண்முகநாதன் (சானா), எஸ். ராஜேஸ்வரன், தேவன் அழகக்கோன், ரொஸாரியோபீரிஸ், எம்.பி. பாலன், அரசு, பரமானந்தம், யோகா தில்லை நாதன், சந்திரகலா, இந்திரா, வசந்தா, ருத்ராணி மற்றும் பலர் நடிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

ஒளிப்பதிவில் எம்.ஏ. கபூருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். திரு. சோமசேகரன் இயக்குநர் பொறுப்பையும், திருமதி மாலினிதேவி தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்கள்.

‘டைக்ஷி டிறைவர்’ என்ற பெயரில் படம் 27.12.66 இல் திரைக்கு வந்துவிட்டது. கொழும்பில் சென்றல், முருகன் உட்பட 8 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அன்றைய தியேட்டர் நிர்வாக அமைப்பு காரணமாக நகரப்பகுதிகளில் 2 வாரங்களுக்குப் பின் கிராமப்புறத் தியேட்டர்களுக்கு மாற்றவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், பருத்தித்துறை போன்ற கிராமப்புறத்தில்கூட, தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேல் ஓடியது.

படித்த ஏழை இளைஞன் அசோக், ஒரு டைக்ஷி டிறைவர். இவனது உழைப்பிலேயே தாயாரும், ஊமைச் சகோதரி மீனாவும் வாழ்ந்து வருகிறார்கள்.

மேஜர் வரதநாதனின் மகள் பிறேமா, டைக்ஷி டிறைவரைக் காதலிக்கிறாள். தந்தை இதை எதிர்க்கிறார். மேஜரின் மருமகனும் பிறேமாவின் முறை மாப்பிள்ளையுமாகிய சங்கர், அசோக்கைப் பழிவாங்கும் நோக்குடன் ஊமைப் பெண் மீனாவைக் கெடுத்து விடுகிறான்.

தங்கையின் உயிர் பிரியுமுன்பாவது அவளைச் சுமங்கலியாக்கிவிட அசோக் முயல்கிறான். ஆனால், மீனா இறந்த பின்பே சங்கர் அவளுக்கு இரத்தத் திலகமிட்டு சுமங்கலியாக்குகிறான்.

இதுதான் ‘டைக்ஷி டிறைவர்’ திரைப்படத்தின் கதைச்சுருக்கம். தென்னிந்தியத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் பல அம்சங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சண்டைகள், கார் ஓட்டங்கள், நடனங்கள் என்று பல இருந்தன.

பெரியவராகத் தோன்றும் சண்முகநாதன் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் கேள்வி கேட்க, அவரது மருமகனாகத் தோன்றும் தேவன் அழகக்கோன் இந்தியப் பேச்சுவழக்கில் பதில் அளிப்பார். இரண்டும் கலந்த உரையாடல்கள்.

1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தக் கலைத்தம்பதியரின் வீட்டுக்குச் சென்றேன். ஹவ்லக் றோட்டில் அவர்களது வீட்டைக் காணமுடியவில்லை. ஆம், அது 83 ஜுலை கலவரத்தில் எரிந்துவிட்டது. திரைப்படம் சம்பந்தமான தஸ்தாவேஜுகளும் அழிந்துவிட்டனவாம். தீ அரக்கனிட மிருந்து தப்பிய ஒரே ஒரு பொருள் எது தெரியுமா? அவர்கள் ஏற்கனவே தந்து எனது வீட்டில் அகப்பட்டு விட்ட ஒரு சினிமா அல்பம் மட்டும்தான்.

83 ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின் சோமசேகரன் மத்தியகிழக்கு நாடொன்றுக்குத் தொழில் தேடிச் சென்று விட்டார். மாலினிதேவி தனது பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

1987ஆம் ஆண்டு வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் அமைப்படை என்ற பெயரில் வந்தபோது இவரது வீடும் தரைமட்டமாகியது. இதில் இவரது புதல்வர்களில் ஒருவரும் இறந்துவிட்டார்.

உயிர்தப்பிய பிள்ளைகளுடன் திருமதி மாலினிதேவி இந்தியாவுக்குச் சென்று திருச்சியில் குடியேறினார். இப்பொழுது அங்கேயே வாழ்ந்துவருகிறார்.


7. ‘நிர்மலா’
இலங்கையின் ‘நாடகத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் அமரர் கலையரசு சொர்ணலிங்கம். இவரது நாடகப் பண்ணையில் நவாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயின்றுவந்தார். பின்பு கொழும்பு இராணுவத் தலைமை அலுவலகத்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். கொழும்பில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார். ‘தேரோhட்டி மகன்’, ‘நெஞ்சில் ஓர் ஆல்பம்’ போன்ற நாடகங்களில் இவர்தான் கதாநாயகன். ‘கடமையின் எல்லை’ திரைப்படத்திலும் தோன்றினார். இந்த இளைஞர்தான் ‘நிர்மலா’வைத் தயாரிப்பதில் முன்னின்ற ஏ.ரகுநாதன்.

இவர் 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் யாழ்ப்பாணம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் புகையிரதத்தில் சன நெருக்கடியாக இருக்கும். அதனால், இவர் கதவருகே நின்றுகொண்டு பிரயாணம் செய்தார். அவர் நிற்கிறாரே தவிர, அவரது எண்ணமெல்லாம் நாடகம், சினிமா பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.

“என்ன பொங்கலுக்கு ஊரில் நாடகமோ” எதிரில் நின்றவர் அவரது சிந்தனையைக் கலைத்தார். “நாடகம் இல்லை ஒரு தமிழ்ப் படம் எடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார் ரகுநாதன்.

“பணம் படைத்தவர்கள் நினைக்கவேண்டிய விஷயமல்லவா இது” வந்தவர் அதைரியப்படுத்தினார்.

“நம் நாட்டிலும் தமிழ்ச் சினிமா என்ற புதுத்தொழில் உருவானால் நம் இளைஞர்கள் எத்தனையோ பேருக்கு வேலை வழங்கலாம். அதுக்காகவாவது நாம் இதில் இறங்கக்கூடாதா?” ஆதங்கப்பட்டால் ரகுநாதன்.

“அது சரி இலங்கையில் நடிகர்கள் இருக்கிறார்களா”? வந்தவர் கேலியாகக் கேட்டார்.

ரகுநாதன் பதில் சொல்லவில்லை.

‘நடிகர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்” தனது மனதுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டார். இப்படித்தான் ஆரம்பமாகியது நிர்மலா படத் தயாரிப்பு.

ரகுநாதனின் ஊரான நவாலியைச் சேர்ந்த இன்னொரு இளைஞர் கலைவேட்கையால் அலைந்துகொண்டிருந்தார். எப்படியாவது திரை உலகில் நுழையவேண்டும் என்ற அவாவில் தமிழகம் சென்றார். எம்.ஜி.ஆரின் உதவியால் சென்னை வாஹினி ஸ்ரூடியோவில் எடிட்டர் மகாலிங்கத்தின் கீழ் பயிற்சி பெற்றார். ‘சபாஷ் தம்பி’, நாம் மூவர்’, ‘உயிர்மேல் ஆசை’, ‘யாருக்காக அழுதான்’, ‘அரச கட்டளை’ போன்ற தென்னிந்தியப் படங்களுக்கு இந்த இளைஞர் உதவி எடிட்டராகப் பணியாற்றினார். அவர்தான் எம். அருமைநாயகம்.

‘நிர்மலா படத்தை இயணக்குவாற்காக அருமைநாயகம் இலங்கைக்கு அழைக்கப்பட்டார். இவரும் ரகுநாதனும் சேர்ந்து நிர்மலா படத்தை உருவாக்கினார்கள். கலையரசு சொர்ணலிங்கத்தின் இன்னுமொரு மாணவரான நவாலியூர் நடேசன், துறையூர் மூர்த்தியின் மூலக்கதையை தை;துக்கொண்டு நிர்மலாவுக்கான கதை வசனங்களை எழுதினார்.

நடிகர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்கள். மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த த. தங்கவடிவேல் சிறந்த மேடை நடிகர். இரா. நாகலிங்கம் (அன்புமணி) எழுதிய ‘திரைகடற்தீபம்’ ‘தியாக பூமி’ போன்ற நாடகங்களிலெல்லாம் இவர்தான் கதாநாயகன். இவரே நிர்மலா திரைப்படத்தில் கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சிறுமி பரீதா தாஜுதீன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. கொட்டஞ்சேனை குட் செப்பர்ட்கொண் வெண்டில் படித்துக்கொண்டிருந்தாள். சிறு வயது முதலே படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாள். பாடசாலை நாடகங்களில் நடித்தாள். கலை நிகழ்ச்சிக்காகத் தன் பெயரைச் சந்திரகலா என்று மாற்றினார்.

‘சலோமியின் சபதம்’ என்னும் நாடகம் இவருக்குப் புகழ் தேடிக்கொடுத்தது.

சில சிங்களப் படங்களில் நடனமாடியவர், ‘மாத்துரு பூமி’ என்ற சிங்களப் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். இவரே நிர்மலா படத்தில் கதாநாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஏ. ரகுநாதன், கண்டி விஸ்வநாதராஜா, ஐசாக் செல்வரத்தினம், சிலோன்சின்னையா, எஸ். நாகராஜா ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஏ. பிரான்சிஸ், ஏ. குணசேகரம், மகிந்தன், அரசு, பாலன், நாகேந்திரன், சஹாப்தீன், கோகிலா, ராஜரட்ணம், ரமணி போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

கவிஞர் முருகையன் ஒரு பாடாலை மட்டும் எழுத மிகுதியானவற்றைத் தான்தோன்றிக் கவிராயர் (சில்லையூர் செல்வராசன்) எழுதினார்.

1964ஆம் ஆண்டு ஓர் இளைஞர் தனது 22வது வயதில் ‘திருகோணமலை இசைக் கழகம்’ என்ற பெயரில் ஓர் இசைக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவின் மூலம் தனது இசையமைக்கும் திறமையை வெளியிட்ட அந்த இளைஞர்தான் திருகோணமலை ரீ. பத்மநாதன். இவரே நிர்மலா படத்துக்கு இசை அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். பேர்டினன்ட் லோப்பஸ் டாக்டர் சாந்தி காராளசிங்கம், சுகிர்சுதாகனகராஜா, துரைசிங்கம், எம்.பி. பாலன் ஆகியோர் பின்னணி பாடினர்.

எம்.ஏ. கபூர் அப்பொழுது 20க்கும் மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டார். அவர் ஒளிப்பதிவு செய்த 3வது தமிழ்ப் படம் நிர்மலாவாகும். ஒலிப்பதிவு – சுண்டிக்குளி சோமசேகரனுக்கும் ஒப்பனை சரவணபவானந்தனுக்கும் கலை – வின்சென்டுக்கும் வழங்கப்பட்டன.

கலாபவன பிலிம்ஸாரின் இரண்டாவது தயாரிப்பான நிர்மலா கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் வளர்ந்து கொண்டிருந்தாள்.

யாழ்ப்பாணத்தில் அப்பொழுதே ஆயிரம் தடவைக்கு மேல் மேடையேறிவிட்ட நாடகம்தான் அமரர் வீ.வீ. வைரமுத்துவின் ‘அரிச்சந்திர மயானகாண்டம்’ ஆகும். இந்நாடகம் ‘நிர்மலா’ மூலமே முதன் முதலாகத் திரைக்கு ஏறியது.

18 நாட்களில் ‘நிர்மலா’ எடுத்து முடிக்கப்பட்டு 15.07.1968இல் திரைக்கு வந்துவிட்டது. கொழும்பில் ஜெஸீமா, முருகன் உட்பட இலங்கையின் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் ‘அரச கட்டளை’ ரவிச்சந்திரனின் ‘நான்’, கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ‘பணமா பாசமா’ போன்ற படங்களுடன் நிர்மலாவும் ஓடியது.

சின்னையா, புலி மார்க், தீப் பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். ரகுநாதனும் சந்திர கலாவும் (நிர்மலா) இவருடைய பிள்ளைகள்.

சந்திரகலாவை இளைஞர்கள் சிலர் கடத்திச் செல்லுகின்றனர். அவள் தப்பி வந்து விடுகிறாள். இந்தக் கதையினால் நிர்மலாவின் திருமணப்பேச்சுகள் தடைபடுகின்றன.

கொழும்புக்கு வேலை தேடி வரும் தங்கவடிவேல் நண்பன் ரகுநாதன் வீட்டில் தங்குகிறான். தங்கவடிவேலுவுக்கும் சந்திரகலாவுக்கும் காதல் அரும்புகிறது. முதலாளிக்கும் சந்திரகலா மீது ஆசை இருக்கிறது. ரகுநாதன் தன் தங்கையைத் தங்கவடிவேலுவுக்கே கட்டிக்கொடுக்க விரும்பி கோயிலில் ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையில் முதலாளியின் கையாட்கள் சின்னையாவைக் கொலை செய்கிறார்கள். தந்தையைக் கொலை செய்தவன் மனேஜர்தான் என்று எண்ணிய ரகுநாதன் அனைத் தாக்க ஓடுகிறான். ஏற்கனவே அங்கு மனேஞர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். பழி ரகுநாதன் மீது விழவே அவன் சிறை செல்கிறான்.

சந்திரகலா தனிமைப்படுத்தப்படுகிறாள். கணவனைத் தேடிக் கண்டிக்குப்போகிறாள். அதே வீட்டுக்குத் தங்கையைத் தேடி ரகுநாதனும் வருகிறார்.

அந்த வீடு அவர்களின் மாமி வீடு என்று தெரியவருகிற. தங்கவடிவேலுவுக்கும் சந்திரகலாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ரகுநாதனுக்கும் மாமியின் மகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

இதுதான் நிர்மலா திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். இதுவரை வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களை விட, நடிப்பிலும் தொழில்நுட்பத் துறையிலும் சிறந்து விளங்கியது. லோப்பஸ் பாடிய “கண்மணி ஆடவர்” என்ற பாடல் புகழ் பெற்ற சினிமாப் பாடலாக விளங்கியது.

நிர்மலாவைப் பார்த்த அமரர் கலையரசு சொர்ணலிங்கம் அப்பொழுது தன் கருத்தை வெளியிட்டிருந்தார். ‘நிர்மலாவைத் தொடர்ந்து இனிமேல் அதிக தமிழ்ப்படங்கள் வரும்’ என்பது தான் அவரது கருத்து.

இப்படத்தைப் பற்றி விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன் வானொலியில் விமர்சனம் செய்தார். “நடிகர்கள் எல்லோருமே கதைக்கு ஏற்ற விதத்தில் நடித்துள்ளனர். படம் எடுக்கப்பட்ட முறையிலும் ஒரு சீர்ஒழுங்கு இருப்பதை உணர முடிகிறது” என்று குறிப்பிட்டார்.

‘கலையார்வமும் கலைத்தாகமும் மிக்க இரு இளைஞர்களின் நீண்டகாலக் கனவுதான் நிர்மலா. தமிழ்நாட்டிலும் திரையிடக்கூடிய நல்ல படமாக நிர்மலாவைத் தயாரித்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்ப்படங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை இப்படம் நிரூபிக்கிறது.’ என்று எழுதியது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகை.

‘பிரபல நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இந்தியத்தயாரிப்புகள் என்ற திரைகளைக் கிழித்து எறிந்துவிட்டுப் பார்க்கும் ரசிகர்களுக்கு நிர்மலா நிச்சயம் மகிழ்ச்சியைத் தருவாள். இரண்டாந்தர தென்னிந்தியப் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிர்மலா நிச்சயம் உயர்வானது என்று அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘இளம்பிறை’ என்ற சஞ்சிகை எழுதியது.

‘நிர்மலாவாக நடித்த சந்திரகலா பாத்திரத்துடனேளே ஒன்றிப்போய்விடுகிறார். வெளிப்புறக் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ்ப் படங்கள் படிப்படியாக முன்னேறறுகின்றன என்பதற்கு நிர்மலா எடுத்துக்காட்டாகும் முன்னேறுகின்றன என்பதற்கு நிர்மலா எடுத்துக் காட்டாகும்’ என்று மித்திரன் (15.07.78) குறிப்பிட்டது.

‘நிர்மலாவில் புகுத்தப்பட்டுள்ள வி.வி. வைரமுத்துவின் ‘மயாகாண்டம்’ நாடகம் ஒரு தனி எடுப்பாக இருக்கிறது. இந்நாடகத்தைச் சினிமாவில் காணும்போது ஒரு தனி அழகு தோன்றுகிறது’ என்று மதிவாணன் என்பவர் ராதா (20.07.68) சினிமா சஞ்சிகையில் எழுதியிருந்தார்.

‘இலங்கைப் படம் என்றால் தரமற்றது என்று பலரும் இடும் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் தோன்றியிருக்கிறது நிர்மலா ஒவ்வொருவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். சந்திரகலா தோன்றும் கட்டங்கள் இந்தியத் திரைப்படங்களின் சாயலை ஒத்திருக்கின்றன. இலங்கைப் படம் என்று குறைத்துக் கணிக்க முடியாத அளவுக்குத் திறமையாக நடித்துள்ளார்’ என்று அப்பொழுது வெளிவந்த பெண்கள் பத்திரிகையான ஜோதி (16.07.68) எழுதியது.

‘நிர்மலாவு’க்குப் பின்னர் ஒளிமயமான எதிர்காலம் இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கு உண்டு என்று நம்பலாம்’ என்றது கே.வி.எஸ். மோகனை ஆசிரியராகக் கொண்ட ‘கதம்பம்’.

நிர்மலாவும் ஆரம்பகாலத் திரைப்படம் என்பதால் சில குறைகள் இருக்கவே செய்தன. ஆனாலும், தொடரும் படங்களுக்கு நிர்மலா வழிகாட்டியாக அமைந்தது.

திரைப்பட ஆர்வம் காரணமாகத் தன் தொழிலையே ராஜினாமா செய்தவர் கலைஞர் ஏ. ரகுநாதன். பின்னாளில் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற படம் உருவாகக் காரணமாக இருந்தவர். 1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரம் ரகுநாதனையும் பாதித்தது. இந்தியா சென்றார். சிலகாலம் அஞ்ஞாதவாசம் செய்தார். இப்பொழுது பிரான்சில் இருக்கிறார்.

பிரான்ஸஸின் தலைநகர் பாரீஸில் இருந்துகொண்டு பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இலங்கைக் கலைஞர்கள் பலருடன் சேர்ந்து ‘கலைமன்றம்’ அமைத்து பல நாடகங்களை மேடையேற்றிவருகிறார்.

இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய பெயர்களில் ஏ.ரகுநாதனின் பெயரும் ஒன்றாகும்.


8. ‘மஞ்சள் குங்குமம்’
மேடை நாடகம் திரைப்படமாகியது
கொழும்பில் தமிழ்க் கலைநிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஒரு புகைப்படக்கலைஞரைக் காணலாம். இவர் பிடித்த படங்கள் இடம்பெறாத தமிழ்ப் பத்திரிகைகள் இலங்கையில் இல்லையெனலாம். இவர் புகைப்படக்கலைஞர் மட்டுமல்ல நாடகத் தயாரிப்பாளரும் கூட. புகழ்பெற்ற பல்வேறு நாடகங்களைப் பல இடங்களில் மேடையேற்றிவந்தார். அவற்றில் ஒரு நாடகத்தைத் திரைப்படமாக்கலாமா என்று எண்ணினார். தனக்கு அறிமுகமான கலை உலக நண்பர்களையும் கலை அபிமானிகளையும் தேடி அலைந்தார்.

அப்படிக் கலைத்தாகத்துடன் விளங்கிய அந்தப் புகைப்படக்கலைஞர்தான் கிங்ஸ்லி எஸ். செல்லையா.

கலை அபிமானம் கொண்ட இளைஞர் ஒருவர் ஆயிரத்து ஐந்நூறு ரூபா சம்பளம் தரும் தொழிலையே தூக்கி எறிந்துவிட்டுக் கலை உலகுக்கு ஓடிவந்தார். தமிழகம் சென்று சிவாஜி கணேசனின் நண்பராகி ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில் ஈழத்துப் புலவராகத் தோன்றி நடித்தார்.

‘கொள்ளைக்காரன்’, ‘ஒரு மனிதன் இரு உலகம்’ போன்ற நாடகங்களைப் பருத்தித்துறையிலும் யாழ்ப்பாணத்திலும் பலமுறை மேடையேற்றினார். இலங்கையில் எப்படியும் ஒரு தமிழ்ப்படம் தயாரித்தே ஆகவேண்டும் என்று துடித்துக்கொண்டு நின்றார். அவர்தான் பருத்தித் துறையைச் சேர்ந்த வி. வைத்தியலிங்கம், ஸ்ரீசங்கர் என்ற கலைஞரின் இயற்பெயர்தான் வைத்திலிங்கம்.

கிங்ஸ்லி செல்லையாவும் ஸ்ரீசங்கரும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள்.

இவர்களுடன் ஏ. சுந்தரஐயா, பதூர்தீன், பரஞ்சோதி ஆகியோருடன் ஒன்று சேர்ந்து சிறந்த முறையில் தமிழ்படமொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். அதற்காக ‘கீதா லயம் மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.

1969ஆம் ஆண்டு முதல் கிங்;ஸ்லி செல்லையாவின் ஆனந்தா புரடக்ஷன் மூலம் “மஞ்சள் குங்குமம்” என்ற நாடகத்தை மேடையேற்றிவந்தார்கள். இந்த நாடகத்தையே திரைப்படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்த நாடகத்தை ஓர் இளைஞர் இயக்கி வந்தார். அவரையே திரைப்படத்தையும் இயக்கச் செல்வோமா என்று எண்ணினார்கள்.

எட்டியாந்தோட்டையில் இங்கிரியவத்தையில் பிறந்து கலையார்வத்தின் காரணமாகக் கொழும்புக்கு வந்தவர் இந்த இளைஞர். அவருக்கு முதலில் பம்பலப்பிட்டிய கிறீண் லண்ட்ஸ் ஹொட்டேலில் வேலை கிடைத்தது.

அந்த ஹோட்டலுக்கு சினிமாஸ் குணரத்தினம், எஸ். ராமநாதன், சுண்டிக்குளி சோமசேகரன் போன்ற கலையுலகப் பிரமுகர்கள் வந்துபோவார்கள். இவர்களின் அறிமுகம் இந்த இளைஞனுக்குக் கிடைத்தது.

ஏ.எஸ். நாகராஜனின் உதவியால் சிங்களப் படங்களில் கோஷ்டி நடனம் ஆடத் தொடங்கினார். லெனின் மொறாயஸ{ம், எஸ்.எஸ். சந்திரனும் நாடகத்துறையை அறிமுகப்படுத்தினார்கள். சினிமாத் துறையில் இவரை டெக்னீஷியனாக்கியவர் சுண்டிக்குளி சோமசேகரனே.

காமினி பொன்சேகா ஆரம்பத்தில் புகைப்படப்பிடிப்பாளராகவே திரை உலகத்துக்கு வந்தார். காமினி நடிகனாக மாறி, பின்பு தயாரிப்பாளராக மாறியபோது தனது படத்தை (ஒப நெத்திநம்) இந்த இளைஞரைக் கொண்டே இயக்கினார்.

இந்த இளைஞர்தான் எம்.வி.பாலன், இவருக்கே மஞ்சள் குங்குமம் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எம். உதயகுமாரும் ஸ்ரீசங்கரும் பிரதான நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சிறுமி ஒருத்தி ஆறு வயதிலே அழகாக நடனமாடினாள். நாடகத் தந்தை இராஜேந்திரம் மாஸ்டரின் ‘மனோரஞ்சித கானசபா’வில் நடிப்புப் பயிற்சி பெற்றாள். வளர்ந்ததும் ஸ்ரண்ட் மாஸ்டர் முத்துலிங்கத்திடம் வாட் பயிற்சியும் பெற்றாள். மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினாள். ‘ஒக்கொம ஹரி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிங்களச் சினிமாவிலும் அறிமுகமானார். பல சிங்களப் படங்களில் நடன அமைப்பையும் கவனித்துக்கொண்டு நடனமும் ஆடினார்.

இவரையே மஞ்சள் குங்குமம் படத்தில் கதாநாயகியாகப் போடலாம் என்று எண்ணினார்கள்.

அவர்தான் ஹெலன் எஸ்தர் என்ற இயற்பெயர் கொண்ட ஹெலன்குமாரி. அக்காலத்தில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றிய ஓர் இளைஞர் இப்படத்துக்கு உதவி இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் அந்தனி ஜீவா.

ரொசாரியோ பீரீஸ். சிலோன’ சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். லீலா நாராயணனி; பரதநாட்டியமும், பரீனா லையின் கவர்ச்சி நடனமும் இப்படத்தில் இடம்பெற்றன. மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை போன்றோரும் நடித்தனர்.

சில்லையூர் செல்வராஜனும், இக்னேஷியஸ் மொறாயஸ{ம் பாடல்களை எழுதினார்கள்.

இந்தியாவில் நாகர்கோவிலில் பிறந்த இசைக்கலைஞர் ஒருவர் இலங்கைக்கு வந்தார். நூற்றுக்கு மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு இசை அமைத்தார். இவரது இசைத் திறமையை அறிந்த இலங்கை அரசாங்கம் இவருக்குக் கௌரவப்பிரஜை அந்தஸ்தை வழங்கியது.

அவர்தான் இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி. இவரே மஞ்சள் குங்குமம் திரைப்படத்துக்கான இசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இசை அமைப்பில் ஏ. சுந்தரஐயரும் உதவி செய்தார். இந்த இரு இசைப்பாளர்களுமே தலா ஒவ்வொரு பாடலையும் பாடினார்கள். எம்.ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், சுஜாதா போன்றோரும் பின்னணி பாடினர்.

எம்.ஏ. கப+ர் ஒளிப்பதிவு செய்த நான்காவது தமிழ்ப் படம் இது. சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவு செய்த மூன்றாவது தமிழ்ப்படமும் இதுவே.

கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் படம் வளர்ந்து வந்தது. பணக் கஷ்டத்தால் வேகம் குன்றியது பிரபல வர்த்தகர் ஜி. நாராயணசாமியின் உதவியுடன் படம் தொடர்ந்து வளர்ந்தது.

கொழும்பு ஆடிவேல் விழாக் காட்சி, வெசாக் விழாக் காட்சி, 1969இல் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக் காட்சி போன்றவற்றை இப்படத்தில் இணைத்தனர்.

“மஞ்சள் குங்குமம்” 14.03.1970இல் கொழும்பில் கிங்ஸ்லி உட்பட இலங்கை எங்கும் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் நிர்வாகம் தனியாரின் கைகளில் இருந்தது. அதனால், இப்படத்துக்குப் போட்டியாக எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும் திரையிடப்பட்டன. ஆனாலும், மஞ்சள் குங்குமம் சுமாராக ஓடியது.

இளைஞன் சங்கர், நடன மங்கை ஜெயா மீது காதல் கொள்கிறான். அவளும் சங்கர்மீது அன்புள்ளவள் போலவே காட்டிக்கொள்கிறாள். சங்கரைத்தேடி குமார் வருகிறான். சங்கர் தன் மனோரதியக் காதலி ஜெயாவை அறிமுகப் படுத்துகிறான். ஜெயா குமாரை வரவேற்றுக் கட்டி அணைக்கிறாள். இதைக் கண்ட சங்கர் பதறிப்போனான். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஜெயா சங்கர் மீது அன்பு கொண்டவள் போல் நடந்துகொள்கிறாள். குமார் இவர்களைப் பிரிந்துசெல்ல முயலுகிறான். ஜெயா தனது நடத்தைக்கு விளக்கம் கூறுகிறாள்.

ஜெயாவுக்கு சங்கரைப்போலவே உருவமுடைய அண்ணன் ஒருவன் இருந்தானாம். அவன் கெட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்திருந்தான். தங்கை ஜெயாவின் புத்திமதிகளுக்கு ஏற்ப வீடு திரும்பினான். இதை விரும்பாத அவனது கூட்டாளிகள், அவனைக் கொன்று விடுகிறார்கள். அதனால், சங்கரைத் தன் அண்ணனாக நினைத்துப் பழகுவதாக விளக்கம் கூறினாள்.

தன் நண்பன் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்து வேண்டிக்கொண்டதற்கிணங்க சங்கர் தன் முறைப்பெண்ணை மணக்கிறான்.

இதுதான் மஞ்சள் குங்குமத்தின் கதைச் சுருக்கமாகும். சங்கராக ஸ்ரீசங்கரும், குமாராக உதயகுமாரும், ஜெயாவாக ஹெலன்குமாரியும் நடித்தார்கள். முறைப்பெண்ணாக மஞ்சுளாவும் மரணப்படுக்கையில் உள்ள நண்பனாக டைரக்டர் எம்.வி. பாலனும் நடித்தார்கள்.

ஸ்ரீசங்கருக்கு இப்படத்தில் மூன்று வேடங்கள். “தித்திப்பு செம்மாதுளம்பூ” என்ற பாடலை இசையமைப்பாளர் முத்துசாமி பாடினார். இனிமையான இப்பாடலுக்கு டைரக்டர் எம்.வி. பாலனும் உருக்கமாகவே வாயசைத்து நடித்திருந்தார்.

மஞ்சள் குங்குமம் எட்டு வருடங்களின் பின் மீண்டும் திரையிடப்பட்டது. 10.10.78இல் தெமட்டகொடை சமந்தா தியேட்டரிலும் மேலும் நான்கு தியேட்டர்களிலும் திரையிட்டார்கள்.

கீதாலயம் மூவீஸ் என்று முன்பு ஆரம்பமாகிய படம் “விநாயகர் பிலிம்ஸ்” அளிக்கும் மஞ்சள் குங்குமம் என்று தொடங்கியது. பிரபல தொழிலதிபர் ஜி. நாராயணசாமியின் திரைப்பட நிறுவனமே ‘விநாயகர் பிலிம்ஸ்’ ஆகும். பழைய காட்சிகள் சிலவற்றை நீக்கிவிட்டுப் புதிய ஆரம்பக் காட்சியைச் சேர்த்திருந்தார்கள்.

ஸ்ரீசங்கர் தோன்றும் பாடற்காட்சி, தமிழரசுக் கட்சி மாநாடு, தயாரிப்பாளர்கள் உரையாடும் காட்சிகள் போன்றவை நீக்கப்பட்டிருந்தன.

மஞ்சள் குங்குமம் சமந்தாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. மற்றும் நான்கு ஊர்களிலும் தலா 3 தினங்களே நின்றுபிடித்தது.

எட்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் திரையிடப்பட்ட மஞ்சள் குங்குமம் எட்டு நாட்கள்கூட ஓடாததையிட்டுக் கலை உள்ளங்கள் கவலை கொண்டன.


9. ‘வெண் சங்கு’
சிங்களப் படத் தயாரிப்பாளரின் தமிழ்ப்படம்
இமு 1970ஆம் ஆண்டு. அதுவரை ஏழு இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வந்துவிட்டன. ஆனால், அவை அதிக நாட்கள் ஓடவில்லை. அடுத்த படத்தை ஆர்வத்துடன் தயாரிக்கும் மனவளத்தையோ பணவளத்தையோ அவை மீண்டும் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கவில்லை.

‘பணம் தரும் படமொன்றை என்னால் தயாரிக்க முடியாதா? என்ற கேள்வி புகழ்பெற்ற சிங்களப் படத்தயாரிப்பாளரான ஒரு தமிழரின் மனதில் எழுந்தது.

சினிமாவில் ஆர்வம் மிக்க யாழ்ப்பாண இளைஞன் ஒருவன் சென்னை சென்றான். அங்கு தங்கியிருந்து திரை உலகின் நெளிவு சுளிவுகளையெல்லாம் அவதானித்தான். 1944ஆம் ஆண்டு சினிமா அபிமானி ஒருவருடன் சேர்ந்து ‘பிரபாவதி’ என்னும் தமிழ்ப்படத்தைத் தயாரித்தான். பின்பு தனித்தும் சில படங்களை உருவாக்கினான்.

‘தெய்வநீதி’ (1950), ‘கலாவதி’ (1951), நம்ம குழந்தை’ (1955), ‘வைரமாலை’ (1956) போன்ற படங்களே அவை. இவற்றை இந்த இளைஞனே நெறியாண்டான். நீண்ட நாட்களின்பின் இலங்கை திரும்பினான். பல சிங்களப் படங்களைத் தயாரித்து நெறியாண்டான். ‘மீனா மூவீஸ்’ என்ற சினிமா நிறுவனத்தை உருவாக்கினான். வெல்லம்பிட்டியில் ஆர்.ரீ. ஸ்ரூடியோவைக் கட்டினான். இந்தத் தமிழ் இளைஞனின் மனதில்தான் இலங்கையிலும் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தால் என்ன? என்ற கேள்வி உருவானது. அந்த இளைஞனின் பெயர்தான் டபிள்யூ.எம்.எஸ். தம்பு. அவர் தயாரிக்கத் தொடங்கிய தமிழ்ப் படத்தின் பெயர்தான் ‘வெண்சங்கு’, தம்புவே மூலக் கதையை எழுதினார். அவரது கதைக்கு வானொலி எழுத்தாளரான சிறில் ஜே. பெர்னாண்டோ திரைக்கதை வசனம் எழுதினார். வசனம் எழுதுவதில் இவருக்கு சந்திரா கணேசானந்தனும் பரமானந்தனும் உதவி புரிந்தனர்.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் அராலியில் ஓர் இளைஞன் பல்வேறு நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றிருந்தான். ‘புவனேந்திரன்’ என்ற அந்த இளைஞனையே இப்படத்துக்குக் கதாநாயகனாகத் தெரிவு செய்தார்கள்.

சிறுவயது முதலே நாடக ஆர்வம்மிக்க ஓர் இளம்பெண் கொழும்பில் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துவந்தார். ‘தினகரன்’ நாடக விழாவில் சிறந்த நடிகை என்ற விருதும் இவருக்குக் கிடைத்தது. அந்த நடிகையின் பெயர் தான் ‘குமாரி ராஜம்’. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் இவருக்கே கிடைத்தது.

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் அவர். நடிகர், நாடகாசிரியர், பாடலாசிரியர், பாடகர், வில்லிசை வேந்தர் இத்தனை சிறப்புமிக்க இவர், இப்படத்தில் வில்லனாக நடிக்கத் தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் ‘நடிகவேள்’ லடிஸ் வீரமணி.

இவர்களுடன் ஏ.எஸ். ராஜா, ரொசாரியோ பீரிஸ், நவசிவாயம், எம்.ஏ. ஜபார், ஜீ. பீட்டர் தேவன், ஓ.நாகூர், ரி.எஸ். பிச்சையப்பா, சுந்தர்ராஜ், அல்பிரட் தம்பிராஜ், சாமுவேல், தங்கராஜா, தியாக ராஜா, கிஸ்மத், பாயிஸ் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

திருகோணமலையில் பல நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர் பி. இந்திராணி. இவருக்கும் இப்படத்தில் சிறந்த பாத்திரம் வழங்கப்பட்டது. பல வானொலி நாடகங்களில் நடித்துவந்தவர் சுப்புலட்சுமி. இவர்களுடன் நூர்ஜஹான், ருத்ராணி, வனஜா, மேரி கமலா, சந்திரா, மஞ்சுளா பேபிராணி, தேவி கணேசானந்தன் போன்றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ‘அடங்காப் பிடாரி’ என்ற நகைச்சுவை நாடகம் புகழ்பெற்று விளங்கியது. அப்பொழுதே அந்நாடகம் வடபகுதியிலும் 1000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு விட்டது.

இந்நாடகத்தின் சில நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தின் இடையிலே புகுத்தப்பட்டன. இதனால், சுண்டிக்குளி நாடக மன்றத்தின் ‘அடங்காப் பிடாரி’ நாடகத்தின் பிரதான நடிகர்களான வி. பரமானந்தாராஜா, எஸ். கே. நடராஜன், கனகையா, சிவனேசன், கீத பொன்கலன் போன்றோரும் சினிமா நடிகர்களானார்கள்.

இந்தப் படத்தின் இசையமைப்பில் விசேட கவனம் செலுத்தினார் தம்பு. இசையமைப்பாளர் முத்துசாமியை அழைத்துக்கொண்டு இந்தியா சென்றார். ரி.ஆர். பாப்பாவின் உதவியுடன் சில பாடல்களை இசை அமைத்தார். ராஜு என்ற பாடகரும் கௌசல்யா என்ற பாடகியும் ரி.ஆர். பாப்பாவின் இசைக்குழுவில் அறிமுகமாகியிருந்தார்கள். அவர்களே ‘வெண்சங்கு’ படத்தின் பாடல்களைப் பாடினார்கள்.

இலங்கையில் பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்தான் எஸ். தெய்வேந்திரா, இவரே இப்படத்துக்கான ஒளிப்பதிவைக் கவனித்தார். ஏ.எஸ். பத்மநாதன் இவருக்கு உதவியாக இருந்தார். ஒலிப்பதிவு றிச்சட் டி சில்வாவுக்கு வழங்கப்பட்டது.

சிங்களத் திரை உலகின் சிறந்த ‘ஸ்ரண்ட்’ நடிகர்களான றொபின் பெர்னாண்டோ, அலெக்சாண்டர் பெர்னாண்டோ ஆகியோர் சண்டைக் காட்சிகளை அமைத்தார்கள். நடனக் காட்சிகளுக்குப் பொறுப்பாக விளங்கியவர் ருத்ராணியாவார்.

கதிர்காமம், கீரிமலை, நல்லூர் போன்ற புனித இடங்களிலும் படப்பிடிப்புகள் நடைபெற்றன. இப்போது அழிந்து போய்விட்ட யாழ்நகர் பொதுசன நூல் நிலையம், சுப்பிரமணியம் பூங்கா, காரைநகர் கசோரினாபீச் போன்ற இடங்களில் எடுத்த காட்சிகளும் இப்படத்தில் இருக்கின்றன. திரைப்படத்தின் விளம்பரத்துக்குப் பொறுப்பாக கிங்ஸ்லி செல்லையா விளங்கினார்.

‘வெண்சங்சுகு’ 31.07.1970இல் திரைக்கு வந்தது. தலைநகரில் செல்லமஹால், ஈரோஸ் உட்பட இலங்கை எங்கும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இக்காலத்தில் இலங்கையில் கே. பாலசந்தரின்
‘இரு கோடுகள்’ சின்னப்பாதேவரின் ‘துணைவன்’ எம்.ஜி.ஆரின் ‘நம்நாடு’ போன்ற படங்கள் திரையிடப்பட்டிருந்தன. ‘வெண்சங்கு’ சுமாராக ஓடியது.

நமசிவாய முதலியாருக்கு (ஏ.எஸ். ராஜா) ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தார்கள். மகள் ராஜி (குமாரி ராஜம்) பட்டதாரியாவாள். தம்பலகாமம் தம்பிமுத்து (லடிஸ் வீரமணி) முதலியாரின் மகனைக் கடத்திச்சென்றுவிட்டு 25000 ரூபா பணம் கேட்கிறான்.

இன்ஸ்பெக்டர் ராஜன் (புவனேந்திரன்) சிறுவனைக் கண்டுபிடித்து முதலியாருக்குத் தெரிவிக்கிறான். ராஜனுக்கும் ராஜிக்கும் காதல் ஏற்படுகிறது. முதலியார் இந்தக் காதலுக்குத் தடைவிதிக்கிறார். முதலியார் கொலை செய்யப்படுகிறார். பழி இன்ஸ்பெக்டர் ராஜன் மீது விழ, கைதுசெய்யப்படுகிறான். அநாதையாகிவிட்ட ராஜி, தம்பலகாமத்தில் ஆசிரியை வேலை செய்கிறாள். தம்பி முத்து ராஜியைக் கெடுக்க முயலுகிறான். தந்தை முதலியாரைக் கொன்றவன் தான் என்றும், தன் ஆசைக்குச் சம்மதிக்காவிட்டால் அவளையும் கொலை செய்துவிடப்போவதாகப் பயமுறுத்துகிறான்.

விடுதலையான ராஜன், அப்போதுதான் தனது தந்தை, தம்பிமுத்துவைத் தேடி வருகிறான். இந்தச் சம்பவத்தை ராஜன் மறைந்திருந்து பார்க்கிறான். தந்தை என்றும் பாராமல் பொலிசுக்குத் தெரிவிக்கிறான். தம்பிமுத்து நஞ்சருந்துகிறான். அவன் இறக்கும் தறுவாயில் மகன் ராஜனையும் ராஜியையும் ஒன்று சேர்த்து வைக்கிறான்.

இதுதான் ‘வெண்சங்கு’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். இத்திரைப்படத்தைப் பற்றிப் பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் எழுதினார்கள்.

அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த வாரப்பத்திரிகை ‘சுதந்திரன்’ ஆகும். அதன் ஆசிரியர் கோவை மகேசன் விமர்சனம் எழுதினார்.

‘இலங்கையில் தமிழ்ப் படங்கள் தயாரிக்க முடியுமா? என்ற நிலை இருந்துவந்தது. இதற்கான பதிலைத் தமது சாதனையின்மூலம் காண்பித்திருக்கிறார்கள். நம் நாட்டுக் கலைஞர்கள். 8வது தமிழ்ப்படமாக ‘வெண்சங்கு’ வெளிவந்திருக்கிறது. தயாரிப்பாளர், நெறியாளர் டபிள்யூ. எம். எஸ். தம்பு. சினிமாத் துறையில் அனுபவம் மிக்கவர்.

‘வெண்சங்கு’ படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படத்தின் ஓட்டம் விறுவிறுப்பாக இல்லை. பாத்திரங்கள் உரையாடும்பொழுது ஏனோ இத்தனை மந்தகதி என்று தெரியவில்லை. லடிஸ் வீரமணியின் நடிப்பு நன்றெனினும் சில இடங்களில் நாடக பாணியைக் கைக்கொள்ளுகிறார். புவனேந்திரனின் முகத்தில் உணர்ச்சியையே காணவில்லை. ராஜத்தின் நடிப்பு பரவாயில்லை. கௌசல்யா பாடும் ‘நீயும் யாரோ நானும் யாரோ’ என்னும் பாடல் இனிமையானது. தம்பு தயாரிக்கும் அடுத்த தமிழ்ப் படம் தலை சிறந்த தமிழ்ப் படமாக அமையும் என்பதை ‘வெண்சங்கு’ எமக்குச் சொல்லாமல் சொல்லுகிறது. என்று எழுதியிருந்தார்.

‘வீரகேசரி’யில் ‘அருள்ராஜ்’ என்பவரும் விமர்சனம் எழுதினார். தம்புவின் ‘வெண்சங்கு’ அனைவரும் பார்த்து மகிழக்கூடிய படமாகும். தம்பு நீண்ட காலம் தமிழகத்திரையுலகுடன் தொடர்பு கொண்டிருந்தவர். ‘வெண்சங்கு’ இவரின் கன்னி முயற்சியாகும். இனிமையான பாடல்கள், சிறந்த நடிப்பு, கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகள், காதல், ஹாசியம், சண்டை, நல்ல ஒலி, ஒளி அமைப்பு, சிறந்த டைரக்ஷன் அத்தனையும் கொண்டபடம் ‘வெண்சங்கு’ என்று பூசி மெழுகி எழுதினார்.

டபிள்யூ. எம்.எஸ்.தம்பு அவர்கள் 1992இல் காலமானார். இவரது வீடு, கொழும்பு -7, ஹோட்டன் பிளேஸில் இருக்கிறது. அங்கு இவரது மகன் றொபின் தம்பு வாழ்கிறார். இவரது வீட்டிலேயே எடிட்டிங் அறை இருக்கிறது. அதற்கு எஸ். நாதன் பொறுப்பாக இருக்கிறார். ‘வெண்சங்கு’ படத்தைப்பற்றிய தகவல்களை இவரே தந்துதவினார்.

கதாநாயகி குமாரி ராஜத்தை ரூபவாஹினியில் ‘காதல் பரி’க்காக நான் பேட்டி கண்டேன். ‘வெண்சங்கு’ படத்தில் கதாநாயகனுக்குப் பதிலாக வேறு இருவர் வில்லனை எதிர்த்துச் சண்டை செய்கிறார்கள். வில்லன் காதல் கீதம் பாடுகிறான். இவ்வாறான காட்சிகள் இடம்பெற்றதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன்.

ராஜம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார். ‘அந்தக் காட்சிகளுக்கு மறக்க முடியாத சில வரலாறுகள் உண்டு என்று சொல்லத் தொடங்கினார். ‘வெண்சங்கு’ திரைப்படத்தில் கதாநாயகன் சம்பந்தமான 75 வீதக் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன. தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் இடையில் சிறுசிறு பிரச்சினைகள் எழுந்தன. மிகுதிப் பகுதியை நடித்துத் தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் கதாநாயகன்.

நெறியாளர் அனுபவப்பட்ட மனுஷரல்லவா? இப்படியான பிரச்சினைகள் வரக்கூடும் என்ற காரணத்தினால் முக்கியமான ஆரம்பக் காட்சிகளையும் இறுதிக் காட்சிகளையும் முன்கூட்டியே எடுத்து வைத்துவிடுவார். இப்படியான நிலை ‘வெண்சங்கு’க்கும் வரவே கதாநாயகனை விட்டுவிட்டே மிகுதிப் பகுதியை எடுத்து முடித்தார்.

கதாநாயகன் பாடவேண்டிய பாடலை வில்லன் பாடுவதாக அமைத்தார். கதாநாயகனுக்குப் பதிலாக வேறு ஒருவரை வில்லனுடன் மோதவிட்டுப் படத்தை எடுத்து முடித்துவிட்டார்.

என்று பதில் சொன்னார் ராஜம். இப்படிப் பதில் சொன்ன நடிகை ராஜம், இப்பொழுது நம்மிடையே இல்லை. அவர் 02.11.1992 இல் காலமானார்.

இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ‘வெண்சங்கு’ படத்தைத் தயாரித்து நெறியாண்ட டபிள்யூ.எம்.எஸ். தம்பு அவர்களின் பெயரும் குறிப்பிடத்தக்க பெயராகும்.


10. ‘குத்துவிளக்கு’
மண்மணம் வீசிய திரைப்படம்
யாழ்ப்பாண நகரின் நவீன நாகரீகத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு கட்டடங்கள் அங்கு உயர்ந்து நின்றன. ஆறு மாடிகள் கொண்ட வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைத்தூபி என்பன அவற்றில் சிலவாகும். இத்தனை கட்டடங்களையும் நிர்மாணித்தவர் கட்டக் கலைஞரும் கலை அபிமானியுமான வீ.எஸ். துரைராஜா அவர்களாவர். இவர் நிர்மாணித்த அழகுக்கட்டடங்கள் யாழ்நகரில் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து நகரங்களிலும் நிமிர்ந்து நிற்கின்றன.

கட்டடக்கலை, பல்கலைகளுக்கும் தாய்க்கலை என்பார்கள். சித்திரம் சிற்பம் போன்ற பழங்கலைகளுடன் சினிமா என்ற நவீனகலையும் அதனுள் அடங்கும். எனவே, திரைப்படக்கலையிலும் திரு. வீ.எஸ். துரைராஜா ஈடுபாடு கொண்டவராக விளங்கியதில் ஆச்சரியமில்லை.

திரு. துரைராஜாவை நான் ரூபவாஹினியில் பேட்டி கண்டபோது, அவர் சொன்னார். “இலங்கைத் தமிழருக்குத் தனித்துவம் இருக்கிறது. அவர்களின் பேச்சுவழக்கு, பழக்கவழக்கங்கள் வாழ்க்கைமுறைகள் போன்றவை தனித்துவமானவை. இந்த இலங்கைத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக் கலைஞர்களைக் கொண்டே இங்கு ஒரு தமிழ்ப்படம் உருவாக்கக்கூடாதா என்று எண்ணினேன்.

இலங்கைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்பவல்லுனர்கள் போன்றோரை ஒன்றிணைந்து ஒரு உன்னதமான தமிழ்ப்படத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே நிலை கொண்டிருந்தது. அந்த எண்ணத்தின் உருவம்தான் இந்தக் “குத்து விளக்கு” என்று கூறினார் திரு. வி.எஸ். துரைராஜா.

யாழ்ப்பாண மண்ணுக்குரிய ஒரு கதைக் கருவைக் கொண்ட மூலக்கதையை எழுதிவிட்டார். திரைக்கதை வசனம் எழுதும் ஒருவரையும் இயக்குநர் ஒருவரையும் அவர் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது 1971ஆம் ஆண்டு காலப்பகுதி. அப்போது இலங்கையரான பாலுமகேந்திரா இந்தியாவில் திரைப்படம் சம்பந்தமாகப் படித்துவிட்டு இலங்கை வந்தார். அவருடன் தொடர்பு கொண்ட குத்துவிளக்கை இயக்கும் படி கேட்டபொழுது மலையாளப்படமொன்றை இயக்கவேண்டி ஏற்பட்டதால் இந்தியா சென்றுவிட்டார்.

திரைக்கதை வசனங்களை எழுதுவதற்காக சினிமாவில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் ஈழத்து ரெத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை யுபீட்டர்ஸ் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகக் கடமையாற்றியவர். பாடல்கள் இயற்றுவதில் திறமை காட்டினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைக் குருவாகக்கொண்டு பல பாடல்களை இயற்றினார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற படத்தில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று இவர் இயற்றிய பாடல் புகழ்பெற்று விளங்கியது. குத்து விளக்கு திரைப்படத்துக்கான பாடல்களையும் இவரே எழுதினார்.

அன்று திரைப்படத்துறையில் பிரபலம் பெற்று விளங்கிய டபிள்யு.எஸ்.மகேந்திரன் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அச்சுவேலியைச் சேர்ந்த நமசிவாயம் என்னும் இளைஞன் சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்தான். ‘பாராவழலு’ என்ற சிங்களப் படத்தில் நடித்தபோது தனது பெயரினை, ‘ஜெயகாந்’ என்று விவசாயக் கொண்டான். ‘குத்து விளக்கு’க் கதையில் விவசாயக் குடும்பத்தின் மூத்த மகன் ‘சோமு’ முக்கியப் பாத்திரமாகும். அந்தச் சோமு என்ற பாத்திரம் ஜெயகாந்துக்கு வழங்கப்பட்டது.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பரதநாட்டியத்தில் புகழ்பெற்று விளங்கியவர் செல்வி லீலா நாராயணன். அவர் முகபாவங்களை அழகாகக் காட்டுவார் என்பதால் கதாநாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இளைஞர் ஆனந்தன் பல மேடை நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் கதக்களி நடனத்திலும் தேர்ச்சிபெற்றவர். இவர் கதாநாயகியின் காதலனாகத் தோன்றினார்.

திருமலையில் பிறந்த பி. இந்திராதேவி நாடகத்திலும் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர். ‘வெண்சங்கு’ திரைப்படத்தில் நடித்து அனுபவப்பட்டவர். இவருக்குக் கதாநாயகனின் தாயாரான நாகம்மா பாத்திரம் வழங்கப்பட்டது.

எம்.எஸ். இரத்தினம், பேரம்பலம், திருநாவுக்கரசு, நாகேந்திரன், நடராஜன், பரமானந்தன், ஸ்ரீசங்கர் போன்றோர் மேடைநாடக அனுபவ முள்ளவர்கள். இவர்கள் இப்படத்தின் மற்ற நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

யோகா தில்லைநாதன், சாந்திலேகா, தேவிகா, பேபி பத்மா போன்றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னாளில் ‘மரீக்கார்’ என்று புகழ்பெற்ற எஸ். ராம்தாஸ் முதன் முதலில் நடித்தபடம் ‘குத்துவிளக்குத்தான்’.

1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘குத்துவிளக்கு’ ஆரம்பவிழா நடைபெற்றது. கொழும்பு வீ.எஸ்.ரீ. கட்டடத்தின் மேல் மாடியில் வீ.எஸ்.ரீ. பிலிம்ஸ் ஸ்தாபனத்தாரின் ஸ்ரூடியோவில் விழா ஆரம்பமாகியது. பிரபல தென்னிந்திய நட்சத்திரம் சௌகார் ஜானகி கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணப் பகுதிக்கோயில் குளங்களிலும், வயல் வெளிகளிலும், கொழும்பு, கண்டி, மாங்குளம் போன்ற பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்புகள் இடம்பெற்றன.

நல்லூர் முருகன் கோயில், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவற்றின் திருவிழாக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், திரைப்பட இயக்குநர்களையோ, எழுத்தாளர், பாடலாசிரியர்களையோ, தொழில்நுட்பக்கலைஞர்களையோ இறக்குமதிசெய்யமுடியாது. அவர்களது சேவைகளை எமது திரைப்படங்கள் பெறமுடியாது. அந்த அளவுக்கு இவைகளை இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்தது. இதன் விளைவால் ‘குத்துவிளக்கு’ நூற்றுக்கு நூறு வீதம் இலங்கைத் தயாரிப்பாக விளங்கியது.

குத்துவிளக்கு திரைப்படத்துக்காக மண்ணின் மணத்தை விளக்கும் பாடல் ஒன்றுக்கான கருவை திரு. துரைராஜா நினைத்து வைத்திருந்தார். இவரது கருத்தை வைத்து ஈழத்து ரெத்தினம் அழகான பாடல் ஒன்றை எழுதினார். இப்பாடல் பலராலும் பாராட்டப்பட்டது.

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா

கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அழுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா

ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா

பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா

புத்தகமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

பாடல் வரிகளிடையே பெரியார்கள். கோயில்கள், நதிகள் போன்ற பெயர்கள் வந்தன. அதைப்போலவே படத்தில் அவற்றின் உருவங்கள் தோன்றின. மண்ணின் மணத்தைச் சொல்லி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இந்தப்பாடலின் ஆரம்பத்தில் ‘ஈழம்’ என்ற சொல் இருப்பதால், வானொலியில் ஒலிபரப்பத் தடைவிதிக்கப்பட்டது.

இசை அமைப்பை ஆர். முத்துசாமி ஏற்றுக்கொண்டார். சங்கீதபூசணம் குலசீலநாதன், மீனா மகாதேவன் ஆகியோர் பாடினர். “ஆதிசிவன் பெற்ற” என்ற பாடலை இசை அமைப்பாளரே பாடினார்.

‘கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாட்டியத்தில் அனுபவம் பெற்றவர்கள். ஆனால், இப்படத்தில் ஒரு நாட்டியந்தானும் இடம்பெறவில்லையே’ ஏன் என்று திரு. துரைராஜாவிடம் கேட்டேன்.

‘இப்படத்தைக் கலைஅம்சங்களுடன் சத்தியஜித்ரேயின் பாணியில், தரமான படைப்பாக்குவதே எனது நோக்கமாக இருந்தது. அதனால், அநாவசியமான நடனங்களையும், தெருச்சண்டைகளையும் புகுத்திப் படத்தின் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார் தயாரிப்பாளர்.

நல்ல விளம்பரத்தின்பின் ‘குத்துவிளக்கு’ 24.02.1972இல் திரைக்கு வந்தது. மத்திய கொழும்பு (செல்லமஹால்), தென்கொழும்பு (ஈரோஸ்), யாழ்ப்பாணம் (புதிய வின்ஸர்), திருகோணமலை (நெல்சன்), மட்டக்களப்பு (இம்பீரியஸ்), பதுளை(கிங்ஸ்) ஆகிய ஆறு இடங்களில் திரையிடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் புதிய வின்சர் தியேட்டரில் ‘குத்துவிளக்கு’ படத்தின் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல்நாள் படம் பார்க்க வந்திருந்த ‘ஏகாம்பரம்’ என்ற விவசாயியே குத்துவிளக்கேற்றி முதற்படக் காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த ஏற்பாட்டைத் தயாரிப்பாளர் செய்திருந்தார். ‘இந்த விழாவை ஆரம்பிப்பதற்கு நகர மேயர் அல்லது அமைச்சர்கள் போன்றோரை ஏன் அழைக்கவில்லை’ என்று தயாரிப்பாளரிடம் கேட்டபோது.

‘இத்திரைப்படத்தின் கதை ஒரு விவசாயியின் கதையாகும். எனவே, இத்திரைப்பட விழாவின் ஆரம்பத்தை ஒரு விவசாயியின் மூலம் ஆரம்பித்து வைக்க விரும்பினேன்’ என்று கூறினார்.

வேலுப்பிள்ளை ஓர் ஏழை விவசாயி. அவர் மனைவி லட்சுமி. மூத்த மகள் மல்லிகா, இளைய மகள் ஜானகி, இவ்விரு சகோதரிகளுக்காகவும் வாழும் அண்ணன் சோமு. இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாண விவசாயியின் ஒரு குடும்பம்.

சிங்கப்பூர் பணக்காரர் குமாரசாமி. பணமே உலகம் என்று வாழும் மனைவி நாகம்மா. அவர்களின் செல்வமகன் செல்வராஜா. கொழும்பில் வாழும் நாகரீக மகள் ஜெயா. இந்த இரண்டு குடும்பங்களுடனும் இணைந்து வாழும் இந்தியத் தொழிலாளி இராமசாமி. மற்றவர்களின் பிரச்சினைகளே தன் தொழில் என்று வாழும் தரகர் மணியத்தார். இவர்களைச் சுற்றியே கதை ஓடுகிறது.

மல்லிகாவுக்கும் செல்வராஜனுக்கும் காதல் மலருகிறது. கஷ்டப்பட்டுப் படித்துக் கடன் வாங்கிப் பல்கலைக்கழகம் போகிறான் சோமு. ஏழை என்ற காரணத்தினால், மல்லிகாவைச் செல்வராஜனுக்குக் கட்டிக் கொடுக்க மறுக்கிறார் நாகம்மா. பணக்காரப் பெண்ணொருத்திக்கு செல்வராஜனைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால், நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொள்கிறாள் மல்லிகா. குத்துவிளக்கு ஒளி இழக்கிறது.

இதுதான் ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் கதைச்சுருக்கமாகும்.

வானம் பார்த்த பூமியை நம்பி வாழும் ஏழை விவசாயிகளின் பிரச்சினை, சீதனப் பிரச்சினை, படித்த இளைஞர்களின் தொழிலில்லாப் பிரச்சினை, யாழ்ப்பாணத்தில் வேரூன்றியிருந்த சாதிப் பிரச்சினை, ஏழைப் பெண்களின் உள்ளத்தில் உருவாகும் உண்மைக் காதல், பணக்கார இளைஞர்களின் பொழுதுபோக்குக் காதல் என்று பல்வேறு பிரச்சினைகளை இப்படம் எம்முன் எடுத்துக்காட்டியது.

யாழ்ப்பாணக் கிராமமொன்றின் கதையை முதன்முதலாக இப்படத்தின்மூலம் திரையில் காணமுடிந்தது. உரையாடல்கள் முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலேயே அமைந்திருந்தன.

‘இந்தியச் சினிமாவின் கவர்ச்சியில் ஊறியிருக்கும் இலங்க ரசிகர்களின் மத்தியில் யாழ்ப்பாணத் தமிழ் எடுபடுமா? என்று கேட்டதற்கு ‘இது இலங்கையில் வாழும் யாழ்ப்பாண விவசாயியின் கதை. இதற்கு இந்தியப் பேச்சுவழக்கைப் புகுத்தி யதார்த்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை’ என்றார் தயாரிப்பாளர்.

‘குத்துவிளக்கை’ப் பற்றிப் பத்திரிகைகள் பல்வேறு விமர்சனங்கள் எழுதின. ‘தினகரனில்’ ஸ்ரீரங்கம் பின்வருமாறு எழுதினார். ‘இந்தியப் படங்களைப்போல் கும்கும் சண்டைகள் குத்துவிளக்கில் இல்லை. காதலர்கள் தொட்டு உறவாடாத அளவுக்குக் காதல் காட்சிகள் இயற்கையாக அமைந்துள்ளன. சோமுவின் மனக்கொதிப்பைக் குமுறும் கடல் அலைகளாலும் உயிர் பிரிவதைப் புகைவிடும் குத்துவிளக்காலமும் காட்டுவது இயக்குநரின் திறமையாகும். ‘ஈழத்திருநாடே’ என்ற பாடலும் அதற்காகப் படம்பிடித்திருக்கும் விதமும் நெஞ்சத்தைத் தொடுவனவாக அமைந்துள்ளன.’ என்று எழுதினார்.

எஸ்.என். தனரெத்தினம் ஆரம்ப முதலே இலங்னைத் தமிழ்ச் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர். அவர் அப்பொழுது ‘வீரகேசரி’யில் உதவியாசிரியராகக் கடமையாற்றினார். இவர் எழுதிய விமர்சனம் ‘மித்திரன்’ வாரமலரில் வெளிவந்தது.

‘சீதனப்பேய் தலைவிரித்தாடும் யாழ்ப்பாணத்திலுள்ள இரு குடும்ப அங்கத்தவர்களையும், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் ‘குத்துவிளக்கு’ அழகாகச் சித்திரிக்கிறது.

பணம் இல்லாவிட்டாலும் குணம் நிறைந்த வேலுப்பிள்ளை. பெயருக்கேற்ற உருவமும் குணமும் கொண்ட மனைவி லெட்சுமி. அடுத்த வீட்டு இளைஞனுடன் கண்களினால் காதல் செய்யும் மல்லிகா. தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணன் சோமு.

சிங்கப்பூர் பணக்காரரானாலும் நல்ல மனிதர் குமாரசாமி. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற கூற்றை நம்பவைக்கும் நாகம்மா. மல்லிகாவின் மனத்தைக் கவர்ந்த பொறுப்பற்ற பணக்காரப்பிள்ளை செல்வராஜா. கொழும்பு நகரில் கற்கச் சென்று நாகரீக மோகத்தில் நிலைதடுமாறும் ஜெயா. எந்நேரமும் இந்தியா செல்லத் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியத் தொழிலாளி ராமசாமி. தரகர் மணியத்தார்.

இப்படத்தில் இத்தனை பாத்திரங்களும் உயிர்பெற்று வந்துவிட்டன. மனிதனுக்கு அடிமையாக இருக்கவேண்டிய பணம் மனிதனை அடிமை கொள்கிறது என்ற செய்தியை எமக்குத் தெரிவிக்கிறது.

‘ஈழத்திருநாடே’ என்ற பாடல் இலங்கையர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரே பார்வையில் இலங்கையின் இயற்கைக் காட்சிகளைக் காணும் பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. தனியொரு மனிதர் முதலீடு செய்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அது திரு. வீ. எஸ். துரைராஜா அவர்களாகத்தான் இருக்கும்.

தேசிய விழிப்புணர்ச்சியைத் தூண்டியுள்ள முதல் ஈழத்துத் தமிழ்;ப்படைப்பு ‘குத்துவிளக்கு’ என்பதில் ஐயமில்லை. இப்படம் இலங்கையில் வெற்றித் தமிழ்ப் படங்களைத் தயாரிக்கமுடியும் என்பதை நிரூபித்துவிட்டது’ என்று எழுதினார்.

‘குத்துவிளக்கு’ திரையிட்டபொழுது கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் பல பாடசாலைகளுக்கும் சென்று இப்படத்தைப்பற்றிப் பிரச்சாரம் செய்தார். வடபகுதி மாணவர்கள். ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் வேண்டுகோளின்படி, இப்படம் பகல் வேளைகளில் மாணவர்களுக்காகக் காட்டப்பட்டது. பல மாணவர்கள் பாடசாலைக் குழுக்களாகச் சென்று பார்த்து ஆதரவு வழங்கினார்கள்.

கொழும்பில் ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தைத் தியேட்டர் உரிமையாளர்கள் 14 நாட்கள் மட்டுமே ஓடவிட்டார்கள். ஆனால், யாழ்நகரில் தொடர்ந்து 40 நாட்கள் ஓடியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்படம் 50வது தினத்தை சங்கானையிலும், 100ஆவது தினத்தைச் சுன்னாகத்திலும் கொண்டாடியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 100ஆவது தினத்தைக் கொண்டாடிய முதல் இலங்கைத் தமிழ்ப்படம் ‘குத்துவிளக்கு’த்தான். இப்படத்தின் வெற்றிவிழா, அப்பொழுது தபால்துறை அமைச்சராகவிருந்த திரு. செல்லையா குமாரசூரியர் தலைமையில் கொழும்பில் கொண்டாடப்பட்டது. கலைஞர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர் திரு. துரைராஜா பரிசு வழங்கிக் கௌரவித்தார்.

1975ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் வர்த்தகப் பிரிவில் ‘குத்துவிளக்கும்’ திரையிடப்பட்டது. இப்படம் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபவாஹினி தொலைக்காட்சியில் ‘காதம்பரி’ நிகழ்ச்சிக்காக திரு.வீ.எஸ். துரைராஜாவைப் பேட்டி காண ஆயத்தம் செய்வதற்காக அவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். குத்துவிளக்கின் றீல்கள் சில தவறிவிட்டதாகச் சொன்னார். அதன் நெகடிவ்களைக்கொண்டு ஹெந்தளை, விஜயா ஸ்ரூடியோவில் புதிய றீல்களைச் செய்து கொடுத்தேன். குத்துவிளக்கின் சில காட்சிகள் திரு.துரைராஜாவின் பேட்டியின்போது, போட்டுக் காட்டப்பட்டன. 1988ஆம் ஆண்டு இவரது பேட்டி ரூபவாஹினியில் ஒளிபரப்பானது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘குத்துவிளக்கு’ ரூபவாஹினியில் முற்றுமுழுதாக ஒளிபரப்பப்படுவற்கு பி. விக்னேஸ்வரன் ஒழுங்குகள் செய்தார்.

வீரகேசரியில் (3.8.93) ஆ. சிவப்பிரியன் பின்வருமாறு எழுதினார். ‘எமது மக்களின் இரசனையை மேம்படுத்தவும் தமிழ்ச் சினிமாவை உலகளாவிய தரத்துக்கு உயர்த்தவும் தென்னிந்திய சினிமாவை நம்பியிருப்பதில் பயனில்லை. இதற்கு ஒரே வழி எமது இலங்கைத் தமிழ்ச் சினிமாவை வளர்த்தெடுப்பதே.

இன்று இங்கு எடுக்கப்படும் தொலைக்காட்சி நாடகமோ திரைப்படமோ அப்பட்டமாகத் தென்னிந்தியத் தமிழ்ச் சினிமாவைப் பிரதிபண்ணுகின்றன. ஏராளமான தொழில் நுட்பக் குறைபாடுகள் வேறு.

இலங்கைத் தமிழ் மக்களுக்கெனத் தனியான கலாசாரப் பண்பாடு உண்டென்பதை எமது கலைஞர்களே உணர்வதில்லை. தரமான கதைகள் சரியான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு, நாடகமாகவோ, படமாகவோ எடுக்கப்படுவதில்லை.

எமது கலாசாரம், பண்பாடு, பேச்சுமொழி என்பவற்றுக்கு இசைவாகப் படைப்புகள் வெளிவரும்போது மக்கள் ஆதரவளிப்பார்கள். இதற்குச் சிறந்த உதாரணம் எம் நாட்டில் வீ.எஸ். துரைராஜா தயாரித்து மகேந்திரன் இயக்கிய ‘குத்துவிளக்கு’ படமாகும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் மண்வாசனையுடன் நல்ல தயாரிப்பு வசதிகளுடன் உருவாக்கிய இப்படம் 100 நாட்கள்வரை ஓடியது என்று எழுதினார்.

ஆரம்ப காலத்தில் பல பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்நீச்சல்போட்டு தனித்து நின்று ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற ரீதியில் திரு.வீ.எஸ். துரைராஜா அவர்களின் பெயரும் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிடவேண்டிய பெயராகும்.


11. ‘மீனவப் பெண்’
பெயர் மாறிய படம்
‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்றொரு தமிழ்ப் படம் நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வந்தது. இலங்கையின் முதலாவது தமிழ்ப் படத்தை (35 மி.மீ) உருவாக்கிய பி.எஸ். கிருஷ்ணகுமாரே இப்படத்தையும் தயாரித்து நெறியாண்டார்.

1964ஆம் ஆண்டு கொழும்பு முன்னேற்ற நாடக மன்றத்தின் உதவியுடன் இப்படம் எடுக்கப்பட்டது. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கலைஞர்களை ஒன்று சேர்ந்தே இப்படம் உருவாக்கப்பட்டது.

எம்.எல்.ஜெயகாந் (யாழ்ப்பாணம்), தேவன் அழகக் கோன்(மன்னார்), கே.தங்கையா (பதுளை), முத்தழகு (ஹட்டன்), சிலோன் சின்னையா (அம்பிட்டிய), சுசில்குமார் (தலவாக்கலை), ராஜலக்சுமி (திருகோணமலை), சுப்பையா, லீலாரஞ்சனி, கே. நல்லதம்பி, கே.வேலாயுதன், எஸ். மாரிமுத்து, பெனடிக் லாசரஸ், கே.ஆப்தீன் ஆகியோர் நடிகர், நடிகைகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர். தோட்டக்காரியைப் போல் இப்படம் இயக்குநருக்கு அதிக கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. எல்லோரும் உணர்ந்து நடித்தமையே அதற்குக் காரணமாகும். கதை வசனத்தையும் கிருஷ்ணகுமாரே எழுதினார். தோட்டக்காரி படத்துக்கு இசை அமைத்த கே.எம்.சவாஹிர்தான் இப்படத்துக்கும் இசை அமைத்தார்.

படம் 10 வருடங்கள் தயாரிப்பில் இருந்துவிட்டது. பணக்கஷ்டம் காரணமாக இத்தனை காலம் நீண்டுவிட்டது. சினிமா ஆர்வமிக்க வர்த்தகர் ஒருவர் கிருஷ்ணகுமாரின் கஷ்டத்தை உணர்ந்து உதவ முன்வந்தார். ‘ஒற்றுமை இருந்தால் தமிழ் நாட்டைவிடச் சிறந்த முறையில் இயங்கும் தமிழ்ப் படம் தயாரிக்கலாம்’ என்ற கருத்தைக் கொண்டிருந்த இந்த வர்த்தகர்தான் ஜனாப். கே.காதர் மீரா (முத்தலீப்)

‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற பெயர் அழகாக இருந்தாலும் அதிஷ்டம் இல்லாததாகிப் போய் விட்டது. அப்படம் ‘மீனவப்பெண்’ என்று பெயர் மாற்றப்பட்டு கே.காதர் மீராவின் உதவியுடன் வளர்ந்துவந்தது. இத்தயாரிப்பில் பி.எஸ். அருண்ராஜ் என்ற இளைஞரும் உதவி புரிந்தார். அந்தக் காலத்தில் 24000 ரூபா செலவு செய்து படம் முற்றுப்பெற்றது.

எம்.என்.எம். புரடக்ஷன் ‘மீனவப்பெண்’ 1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. இலங்கை எங்கும் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இக்காலத்தில் தான் ‘இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்’ ஆரம்பிக்கப்பட்டது.. உள்@ர்த் திரைப்பட வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டுத்தாபனத்தால் ‘மீனவப்பெண்’ணுக்கு எதுவித உதவியும் கிடைக்காதது துரதிஷ்டமே.

தோணிக்கரை என்ற மீன்பிடிக் கிராமத்தில் ‘ராமையா’ என்ற நேர்மையான மீனவன் வாழ்ந்து வந்தான். இவனுக்குப் ‘பார்வதி’; என்னும் மகளும் ‘ராஜு‘ என்னும் மகனும் இருந்தார்கள். சங்கர் என்பவனும் ராமையாவுடன் தோணியோட்டி உழைத்துவரும் அநாதை இளைஞன். நாளாவட்டத்தில் பார்வதிக்கும் சங்கருக்கு காதல் மலருகிறது.

தோணிக்கரையின் வியாபார உரிமையை, முதலாளி ராஜப்பன் தனதாக்கியிருந்தான். இவனால் மீனவர்கள் கஷ்டப்பட்டனர். ராமையா குடும்பம் சொந்தத்தோணி வைத்திருந்ததால் இன்னல்களுக்கு ஆளாகவில்லை.

வருடா வருடம் இடம்பெறும் முருகன் திருவிழாவில் ராஜப்பன் பார்வதியைக் கண்டுவிட்டான். அவளை எப்படியும் அடையவேண்டுமென்பது அவனது ஆசை. பார்வதியை ஒருமுறை அவன் இழுத்தபோது ஆவேசம் கொண்ட அவள் அவனது கன்னத்தில் அறைந்துவிட்டாள்.

ஆத்திரம் கொண்ட ராஜப்பன் வழிவாங்கும் எண்ணத்துடன் ராமையாவின் தோணியைச் சதி செய்து தான் உடமையாக்கிக் கொண்டான். சங்கரையும் பார்வதியையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்தான். முடிவில் சங்கர் சொல்லப்பட்டான். பார்வதி தப்பியோடி மஞ்சுளா என்ற பெயருடன் டொக்டர் முரளியின் ஆஸ்பத்திரியில் நேர்சாக வேலை செய்கிறாள்.

டொக்டர் முரளியின் உதலியுடன் தோணிக்கரை வந்த மஞ்சுளாவுக்கு (பார்வதி) அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் யாரை இறந்ததாக எண்ணியிருந்தாளோ அதே சங்கர் மீண்டும் தோணிக்கரையில் நின்றான். சி.ஐ.டி. சிவராம் சங்கரைப்போல் உருவமுள்ளவனாகையால் ரௌடி ராஜப்பனையும் அவன் கள்ளக் கடத்தல் செய்வதனையும் சங்கர் என்ற பெயரில் வந்து கண்டுபிடிக்கிறான். அதுவரை தனக்கு உதவிய மஞ்சுளாவை விரும்பிய டொக்டர் முரளி உண்மையை உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறார்.

இதுதான் மீனவப்பெண் திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். ராமையாவபக வீ. சுப்பையாவும், பார்வதியாக ராஜலக்சுமியும், சங்கராக ஜெயகாந்தும், ராஜப்பனாக தேவன் அழகக்கோனும் டொக்டர் முரளியாக சுசில்குமாரும் தோன்றினார்கள்.

‘மீனவப்பெண்’ திரைப்படத்தில் கதை அமைப்பு, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு அம்சங்களில் குறைகள் இருந்தனதான். அக்காலத்தில் திரையிடப்பட்டிருந்த பிரபலமான தென்னிந்தியப் படங்களுடன் மீனவப்பெண்ணும் ஓடியது. அந்த ஆரம்ப காலத்திலேயே இப்படியான துணிகர முயற்சியில் பி.எஸ். கிருண்குமார் ஈடுபட்டிருக்கிறார். முதல் முதலில் இரண்டு தமிழ்ப்படங்களை இயக்கிய பெருமை அவரையே சாரும்.

‘மீனவப்பெண்’ பற்றிப் பத்திரிகைகளில் பல விமர்சனங்கள் வெளிவந்தன. அப்பொழுது வெளிவந்த ‘தேசாபிமானி’ என்னும் பத்திரிகையும் வித்தியாசமான முறையில் விமர்சனம் எழுதியது.

‘இலங்கையின் அழகான ஒரு கடற்கரை ஊர் தோணிக்கரை. அங்கே ஒரு காடு இருக்கிறது. அந்தக் காட்டிலுள்ள பயங்கரக் குகைகளில் ஒரு பெரிய கொள்ளைக் கோஷ்டி, அதற்குத் தலைவன் நன்றாகச் சிரிக்கத்தெரிந்த மீனவன். இன்னொரு மீனவன் பஞ்சாயத்துத் தலைவனாம். அவனுக்கு ஒரு மகளும் ஒரு வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.

ஒருநாள் தேவன் அழகக்கோன், சுப்பையாவைத் தொழில் செய்யமுடியாமல் செய்துவிடுகிறார். மூவாயிரம் ரூபா சீதனத்துக்கு ஜெயகாந்தை காசநோய்க்காரிக்குக் கல்யாணம் பேசுகிறார்கள். மணவறையில் இரத்தவாந்தி எடுக்கும் மணப்பெண்ணுக்கு முதலுதவி செய்யாமல் ஜெயகாந் தாலி கட்டுகிறார்.

ஜெயகாந்தைக் குகைக்குக் கடத்திப்போய்க் கட்டி வைத்துச் சாட்டையால் அடிக்கிறார்கள். கடற்கரையில் வாழும் ராஜலக்சுமி விறகு பொறுக்க காட்டுக்குள்தான் போவாள். அவளையும் குகைக்குள் கொண்டுபோய்விடுகிறார்கள். அங்கு அவள் சோகமான பாடலொன்றைப் பாடுகிறாள். ஜெயகாந்தைக் கடற்கரையில் புதைத்துவிடுகிறார்கள்.

குகைக்குள்ளிருந்த ராஜலக்சுமி கடலில் குதித்துக் கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்னால் வந்து மிதக்கிறார். அவருக்கு டொக்டர் ஒருவர் அடைக்கலம் தருகிறார். ஜெயகாந்துக்கு மீண்டும் படத்தில் தோன்றும் லக் அடிக்கிறது. அவர் கராட்டி தெரிந்த சி.ஐ.டி. ஆகிவிடுகிறார். சுசில்குமார் மூக்கைப் பிடித்து ஒரு காதல்பாட்டு பாடுகிறார். ஜெயகாந் இதுவரை பாடாததால் அதே பாடலுக்கு இன்னுமொரு கட்டுமரத்தில் நின்று ஓகோ’ என்று அபினயம் பிடிக்கிறார். அதே பாடலுக்கு பற்றிக் ஆடை அணிந்த பெண்கள் கரையில் ஆடிக்காட்டுகிறார்கள்.

வில்லன் பிடிபடுகிறான். மீனவப்பெண் முடிந்துவிட்டது. ரொம்ப சுபம், இப்படி எழுதப்பட்ட அந்த விமர்சனத்தின் இறுதிப் பகுதியில் ‘பின்குறிப்பு’ என்று பின்வருமாறு சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன.

‘இலங்கைத் தமிழ்ப் படம் என்றால் காசு கொடுத்துப் பார்ப்பது நமது கடமை என்று சொல்லப்படுகிறது. நான் எனது கடமையைச் செய்தேன். இலங்கையில் தமிழ்ப்படம் எடுக்கத் தொடங்கி ஏறக்குறைய 15 ஆண்டுகளாகி விட்டன. 15 ஆண்டுகள் என்பது லேசுபட்ட சங்கதியல்ல. எனவே, பத்தாவது படம் லேசுப்படாத சங்கதியாக இருக்கவேண்டும்’ என்று அந்த பி.கு. முடிவடைகிறது.

மீனவப்பெண் சுமாராகவே இருந்தது. சுமாராகவே ஓடியது.

இலங்கையில் முதலாவது (35 மி.மீ) தமிழ்ப்படத்தை நெறியாண்டவர் என்ற பெயருடன் முதன் முதலில் இரண்டு படங்களை நெறியாண்டவர் என்ற பெயரும் பி.எஸ். கிருஷ்ணகுமாருக்கே கிடைக்கிறது.


12. ‘புதிய காற்று’
இலங்கையில் தயாரான ஆரம்பகாலத் திரைப்படங்கள் பல. ஏதோ காரணங்களுக்காகத் தோல்வியைத் தழுவி வந்தன. தொழில்நுட்பரீதியிலும் கலைத்துவரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவை வெற்றிபெறவில்லை. ‘நான்குலெட்ம்’, ‘கலியுககாலம்’ போன்ற மொழி மாற்றுப் படங்களும் தமிழ் ரசிகர்களை வெற்றி கொள்ளவில்லை. இத்தோல்விகளுக்கெல்லாம் காரணம் தென்னிந்தியத் தமிழ்ப்படங்களின் ஆக்கிரமிப்பே என்று கூறப்பட்டது.

சில வருடங்கள் மௌனமாகக் கழிந்தன. 1975ஆம் ஆண்டும் பிறந்தவிட்டது. அப்பொழுது மலையக இளைஞன் ஒருவனுக்கு 35 வயதாகியது. அவர் மலையகத் தொழிற்சங்கமொன்றின் செயலாளராகவும் விளங்கினார். மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார்.

இந்த இளைஞருக்கு இலங்கையில் தமிழ்ப் படமொன்றைத் தயாரிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. கண்ணீராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட மலையக மக்களின் வாழ்க்கையை மற்றவர்களும் அறிந்து கொள்ளவேண்டும். அத் திரைப்படத்தில் மூலம் மலையக மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.

எண்ணம் செயலாக மாறியது. தொழிலதிபரான அவ்விளைஞன் ‘கணேஷ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். தனது முதலாவது தமிழ்ப் படத்துக்கு ‘புதியகாற்று’ என்று பெயர் சூட்டினார். பல்வேறு சாதனங்களின் மூலமும் விளம்பரம் செய்தார். அந்த இளைஞரின் பெயர்தான் வீ.பி. கணேசன்.

புதிய காற்றுக்கான மூலக்கதையை வீ.பி. கணேசனே எழுதினார். அதற்கான திரைக்கதை வசனங்களைப் பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பைக்கொண்டு எழுதுவித்தார். படத்தை இயக்க நல்ல நெறியாளர் வேண்டுமல்லவா! அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். பல சிங்களப் படங்களை நெறியாண்ட அனுபவசாலிதான் எஸ். ராமநாதன். மலையகத்தைச் சேர்ந்த இந்தக் கலைஞரே இப்படத்தின் இயக்குநராகத் தெரிவுசெய்யப்பட்டார். ஒளிப்பதிவை லினிடி கொஸ்த்தா பொறுப்பேற்றார்.

பல சிங்களத் திரைப்படங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் பரினாலை என்ற நடிகை. இவரும் வீ.பி. கணேசனும் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இரண்டாவது கதாநாயகனாக டீன்குமார் என்ற இளம் நடிகரும், அவருக்கு ஜோடியாக வீணாகுமாரி என்ற புதிய நடிகையும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவர்களுடன் ஏற்கனவே சினிமா அனுபவமுள்ள எஸ்.என். தனரெத்தினம், சிலோன் சின்னையா, எஸ்.ராம்தாஸ், கே.ஏ. ஜவாஹர், ஜோபுநஸீர், செல்வம் பெர்னாண்டோ ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

விமல்சொக்கநாதன், ஏ.ஈ. மனோகரன், ஏ.ரகுநாதன், சிவலிங்கம், சந்திரகலா ஆகியோரும் கௌரவப் பாத்திரங்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

‘புதியகாற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 1975-04-20 இல் மலையகத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு என்று பல பகுதிகளிலும் படப்பிடிப்பு இடம்பெற்றது.

இசை அமைக்கும் பொறுப்பு ரீ. எப். லதீப்புக்கு வழங்கப்பட்டது. அதுவரை வானொலியில் பாடி வந்த வீ. முத்தழகுவும், சி. கலாவதியும் முக்கியப் பாடகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவர்களுடன் சுஜாதா அத்தநாயக்க, சுண்டிக்குளி பாலச்சந்திரன் புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ. ஈ மனோகரன் ஆகியோரும் பாடினார்கள். சாது, கௌரி ஆகியோர் பாடல்களை இயற்றினர். கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல்களை இயற்றுவதில் துணை செய்திருக்கிறார்கள். இசை அமைப்பில் சங்கர் கணேஷ் உதவியிருக்கிறார்கள். ‘மே தினம்’ என்ற பாடலைக் கண்ணதாசனும் ‘ஓ என்னாசை’ என்ற பாடலைப் பூவை செங்குட்டுவனும் எழுதினார்கள். கே. பாலசிங்கமும் ஹரிஹரனும் ஒலிப்பதிவு செய்தார்கள். 5மாதங்களுக்குள் படம் தயாரிக்கப்பட்டுவிட்டது.

‘புதியகாற்று’ பலத்த விளம்பரத்தின் பின் 1975-10-03 இல் இலங்கை எங்கும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

இந்தப் படம் திரையிடப்பட்டபொழுது நல்ல வரவேற்புக் கிடைத்தது. இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமும் அந்நேரத்தில் வேறு தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் நிறுத்திவைத்து உதவி செய்தது.

‘ஒரு தோட்டத்துரைக்கு இரண்டு புதல்வர்கள், இளைய மகன் கண்ணன் இலண்டனில் படித்துவிட்டு இலங்கை திரும்புகிறான். அவன் மலையகத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களை நேசிக்கிறான். தொழிலாளி ஒருவனின் மகள் ராதாவைக் காதலிக்கிறான். இதைக் கண்ட அயலவர்கள் ராதா கண்ணனால் ஏமாற்றப்படப்போகிறாள் என்று எள்ளி நகையாடினார்கள்.

ஆனால், கண்ணன், ராதாவின் பெற்றோரின் அனுமதி பெற்று அவளை மணமுடிக்க விரும்புகிறான். இவர்களின் தொடர்பை மூத்தவன் குமார் வெறுக்கிறான். தன் காதலி கீதாவும் தொழிலாளியின் மகள் என்பதை அறிந்து அவளையும் வெறுத்து ஒதுக்குகிறான். தன் காதலி கீதாவையும் தம்பியின் காதலி ராதாவையும் கடத்திச்சென்று கொலை செய்ய முயலுகிறான். கண்ணன் தன் அண்ணனுடன் சண்டை செய்து அவர்களை மீட்கிறான். கடைசியில் கண்ணனும் ராதாவும் திருமணத்தில் இணைகிறார்கள்.

இதுதான் ‘புதியகாற்று’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும் ‘புதியகாற்று’ திரைப்படம் மலையக மக்களின் சில பிரச்சினைகளை எடுத்துக் காட்டியது என்பது உண்மை தான்;. ஆனாலும், படம் தென்னிந்தியப் படங்களின் பாணியைப் பின்பற்றியது என்பதும் உண்மையே.

மலையக மக்களி; வாழ்க்கைப் பிரச்சினைகளான குடும்பக்கட்டுப்பாடின்மை, குடிப்பழக்கம், ஊதியக் குறைவு, குடியிருப்பு வசதியின்மை போன்ற சில பிரச்சினைகள் படத்தில் காட்டப்பட்டன. ஆனாலும், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அதிகமாக எடுத்துக் காட்டப்படவில்லை என்று பலாண கூறினர்.

வழக்கமான படங்களைவிட, இத்திரைப்படம் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தது. மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 34 நாட்களும், தென்கொழும்பில் (பிளாசா) 21 நாட்களும் ஓடியது. யாழ்ப்பாணத்தில் (ராணி) 38 நாட்களும், மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) 29 நாட்களும், திருகோணமலையில் 14 நாட்களும் தொடர்ந்து ஓடியது. மலையகத்திலும் (பதுளை-18 நாட்கள் ஹட்டன் -18 நாட்கள், நுவரெலியா 15 நாட்கள், மாத்தளை – 15 நாட்கள்) சுமாராக ஓடியது.

இலங்கையில் அதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்திப் பார்த்தபொழுது ‘புதியகாற்று’ புதிய நம்பிக்கையூட்டியது.

இப்படத்தைப் பற்றிப் பலரும் விமர்சித்தனர். வீரகேசரி (05-10-1975) இதழில் மேகமூர்த்தி விமர்சனம் எழுதினார்.

‘.....தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கையைக் கருவாகக்கொண்டு உருவான இப்படம் மலையகச் சூழலிலேயே எடுக்கப்பட்டமை யதார்த்தமாக உள்ளது. கணேஷ், டீன்குமார், பரீனாலை, வீணா ஆகியோர் தமது பாத்திரங்களை ஏற்றவகையில் செய்திருக்கிறார்கள். சிறந்த நடிப்பை தனரெத்தினம், சின்னையா ஆகியோரிடம் காணமுடிந்தது. வசனங்கள் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ‘புதியகாற்று’ முன்;னைய படங்களைவிடச் சிறந்தது என்று கூறலாம்.

‘இப்படம் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் முற்றிலும் உண்மையே’ என்று எழுதியிருந்தார்.

அப்பொழுது தினகரனில் ‘சித்திரதர்சனி’ என்ற பகுதியை விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் எழுதிவந்தார். அப்பகுதியிலும் ‘புதியகாற்று’ விமர்சனம் இடம்பெற்றது.

‘......புதியகாங்கு நமது நாட்டுத் திரைப்படத் தயாரிப்பில் ஒருபடி முன்னேறியுள்ளது. தொழில்நுட்ப அம்சங்களில் நமது நாட்டுத் தமிழ்ப் படங்களும், தமிழ்நாட்டுப் படங்களின் தரத்துக்கு உயர்வது மகிழ்ச்சியைத் தருகிறது. லெனிடி கொஸ்தாவின் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. மேதின ஊர்வலக் காட்சி, மோட்டார் வண்டி வளைந்த பாதைகளில் ஓடும் காட்சி போன்றவை அவருடைய சினிமா நோக்குக்கு உதவுகின்றன. லத்தீபின் இசை அமைப்பில் உருவாகிய மெட்டுகளை அடிக்கடி முணுமுணுக்கத் தோன்றுகிறது. ‘கதையின் அடிநாதம் மலைநாட்டில் ஒரு மாற்றம், புதிய காற்று வீசவேண்டும் என்பதே வர்க்கபேதமற்ற சமுதாயம் மலைநாட்டில் உருவாகக் கூட்டுப்பண்ணை உருவாகி வருகிறது என்றும் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும் என்றும் கதாநாயகன் கூறுவதுடன் படம் முடிவடைகிறது…..’ என்று எழுதியிருந்தார்.

இடைவழியில் மௌனமாகிப் போய்விட்ட தமிழ் படத்துறையை கலகலக்க வைத்த பெருமை வீ.பி. கணேசனையேசாரும். அதிக விளம்பரத்தின் மூலம் அதிக பலனைப் பெறலாம் என்பதையும் நிரூபித்தவர் வி.பி. கணேசனே.

இலங்கையில் தமிழ்ப்படம் தயாரித்தல் என்பது பிரச்சினைக்குரிய விஷயம் என்று கருதிய காலகட்டத்தில் ‘புதியகாற்று’ திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இப்படியான காலகட்டத்தில் இவ்வாறான பிரமாண்டமான தமிழ்ப்படத்தை உருவாக்கிய வீ.பி. கணேசன் பாராட்டப் படவேண்டியவரே.


13. ‘கோமாளிகள்’
வானொலி நாடகம் திரைப்படமாக மாறியது
1974ஆம் ஆண்டு பொரளை டி.எஸ். சேனனாயக்கா வித்தியாலய மண்டபத்தில் அரைமணிநேர நகைச்சுவை நாடகமொன்றை மேடை ஏற்றினார் ஓர் இளைஞர். அதனைத் தொடர்ந்து பல வானொலி நாடகங்களை எழுதி நடித்தார்@ மேடை ஏற்றினார்.

இந்தக் கலைஞரிடம், மக்கள் வங்கியின் வானொலி விளம்பரத்துக்காக நாடகம் ஒன்றை எழுதித் தரும்படி கேட்டார் சில்லையூர் செல்வராஜன்.

இந்த இளைஞர் அரைமணிநேர மேடை நாடகமாக எழுதிய அந்த நாடகத்தை 90 வாரங்கள் ஒலிபரப்பக் கூடியதாக நீட்டி எழுதிக் கொடுத்தார். அப்படிப் பிரபலமாக 90 வாரங்கள் ஒலிபரப்பான நாடகத்தின் பெயர் தான் கோமாளிகள் கும்மாளம். இந்த நாடகத்தைச் சிறப்புற எழுதி பிரதான பாத்திரத்தில் நடித்த அந்த இளைஞர்தான் எஸ். ராமதாஸ்.

கலை அபிமானமுள்ள ஒரு முஸ்லிம் வர்த்தகரும் அவரது நண்பர் ஏபிரகாமும் இந்த ‘கோமாளிகள் கும்மாளம்’ நாடகத்தை வாராவாரம் வானொலியில் கேட்டு வந்தார்கள். இந்த நாடகத்தைத் திரைப்படமாக உருவாக்கலாமா? என்ற எண்ணம் அந்த வர்த்தகரிடம் உருவாகியது. அவர் அந்த எண்ணத்தை நண்பர் ஏபிரகாமிடம் சொல்ல, ஏபிரகாம் ராம்தாஸிடம் கேட்க அவர் ஓம் என்று சொல்ல படத் தயாரிப்பு ஆரம்பமாகியது. படத்தைத் தயாரிக்க விரும்பிய அந்த வர்த்தகரின் பெயர்தான் எம். முஹமட்.

ராம்தாஸ் படத்தின் பிரதான பாத்திரமான மரிக்காராக நடிப்பதுடன் கதை வசனம், உதவி டைரக்ஷன் போன்ற பல பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.

எஸ். ராமநாதன் அப்பொழுது சிங்களத் திரை உலகில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கினார். புதியகாற்று திரைப்படத்தைப் பக்குவமாக நெறியாண்ட வெற்றிக்களிப்பில் இருந்தார். அவரே இப்படத்தின் நெறியாளராகவும் படத்தொகுப்பாளராகவும் தெரிவுசெய்ப்பட்டார்.

ஊர்காவற்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிங்களத் திரை உலகில் ஒளிப்பதிவுத் துறையில் பலகாலம் அனுபவம் பெற்றிருந்தார். ‘தமயந்தி’ என்ற சிங்களப் படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இவரையே கோமாளிகள் படத்தின் ஒளிப்பதிவாளராகத் தெரிவு செய்தார்கள். அவர்தான் ஜே.ஜே. யோகராஜா, எஸ். ராம்தாஸ், மரிக்கார் என்ற பிரதான பாத்திரத்தில் நடித்தார். ‘புரோக்கர் கந்தையா’ என்ற நாடகத்தில் புரோக்கர் கந்தையாவாக நடித்தவர் ரீ. ராஜகோபால், இவர் இப்படத்தில் அப்புக்குட்டி என்ற பாத்திரத்தை ஏற்றார். சுமதி என்ற நாடகத்தில் பிறின்ஸிபல் சாமிநாதனாக நடித்துப் புகழ்பெற்றவர் எஸ். செல்வசேகரன். இவருக்கு இப்படத்தில் ‘உபாலி’ என்ற பாத்திரம் வழங்கப்பட்டது.

இலங்கை வானொலியில் பிரபலமான அறிவிப்பாளராக விளங்குபவர்தான் பி.எச். அப்துல் ஹமீத். இவர் இப்படத்தில் ஐயராக நடித்தார்.

பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராஜனுக்கு நீண்ட காலமாகவே திரைப்படத்துறையுடன் நெருங்கிய தொடர்புண்டு. ‘தணியாத தாகம்’ திரைப்படச் சுவடிரய எழுதியவர். பல விவரணத் திரைப்படங்களை உருவாக்கியவர். ‘கமம்’, ‘தங்கமே தங்கம்’, ‘பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம்’ புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் சான்றிதழ்களைப் பெற்றது.

திருமதி. கமலினி செல்வராஜன் இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர். கலைத்துறையில் புகழ்பெற்றவர். இந்தக் கலைத் தம்பதிகள் இப்படத்தில் காதல் ஜோடியாக நடித்தார்கள்.

வானொலி நடிகைகளில் முதன்மையானவர் சுப்புலட்சுமி காசிநாதன். இவர் இப்படத்தில் செல்லமணியாகப் பாத்திரமேற்றார். பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற ஆனந்தராணி, ஐயரின் மனைவியாக நடித்தார். தோட்டக்காரி படத்தில் கதாநாயகிக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் செல்வம் பெர்னாண்டோ. இவர் கோமாளிகள் படத்தில் கதாநாயகியின் தாயாக நடித்தார்.

பல நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற கே.ஏ. ஜவாஹர் புதியகாற்று படத்தில் முதன் முதலில் வில்லனாக அறிமுகமானார். இவர் கோமாளிகள் படத்தில் தணிகாசலம் பாத்திரத்தை ஏற்றார்.

கணீர் என்ற குரலுடைய சந்திரசேகரனுக்கு இதுதான் முதற்படம். முஸ்தபா வில்லனாகத் தோன்றினார். இவர்களுடன் செல்வராணி, ரவிமகேந்திரா, எஸ். ஏபிரகாம், முபாரக் போன்றோர் நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான இசைக் கோஷ்டியின் தலைவர்தான் கண்ணன். கொழும்பில் பிரபல்யமான திறீஇஸ்டார்ஸ், சுபஸ்ரார் குழுவினரின் சுப்பர் அன்ஸ்டார் கலைஞர்தான் நேசன் தியாகராஜா.

இந்தக் கண்ணனும் நேசமும் இணைந்து இப்படத்துக்கு இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பாவுஸ{ல் அமீர் ஆகியோர் பாடல்களை இயற்றினர். அமரர் மொஹிதீன் பெக் இப்படத்திலேயே முதன் முதலாகத் தமிழ் சினிமாப் பாட்டுப் பாடினார். முத்தழகு, கலாவதி, சுஜாதா, எஸ். ராம்தாஸ் ஆகியோரும் பாடல்களைப் பாடினார்கள்.

ஒலிப்பதிவை சாரங்கராஜா, பென்ஸ் ஆகியோர் செய்தார்கள்.

கோமாளிகள் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வத்தளை சுஜீவா ஹோட்டலில் படமாக்கப்பட்டன.

அமர்ஜோதி மூவீஸின், ‘கோமாளிகள்’ 45 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்டது. தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் புதிய தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் வசதி செய்துகொடுத்தது. கோமாளிகள் 22-10-1976இல் ஆறு இடங்களில் முதன் முதலாகத் திரையிடப்பட்டது.

ஒரு பணக்காரருக்குப் பெரிய மாளிகை ஒன்று இருக்கிறது. அதில் சிங்களம், தமிழ், முஸ்லீம் எனப் பல இனத்தவர் வாடகைக்கு இருக்கின்றனர். இவர்கள் அம்மாளிகை தமக்குச் சொந்தமாக வேண்டுமெனப் பணக்காரருடன் வெகு அன்பாக நடந்துகொள்கிறார்கள்;;. இவற்றை நகைச்சுவையுடன் விளக்குவதே இப்படத்தின் கதையாகும்.

கோமாளிகள் படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினார். நானும் முதன் முதலாக இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதினேன். அது தினகரனில் 9.11.76இல் வெளிவந்தது. ‘.......கோமாளிகள்’ முன்னைய படங்களைவிட வேறுபட்டிருந்தது. இப்படம் தேசிய தமிழ்ப்பட வளர்ச்சிக்குப் புதிய வேகத்தைக் கொடுத்தது.....’ என்று எழுதியிருந்தேன். ‘தினகரன்’ பத்திரிகையில், ‘கோமாளிகள்’ படத்தைப் பற்றி எச்.எம்.பி. மொஹிதீனும் நீண்ட விமர்சனம் எழுதியிருந்தார்.

‘........கோமாளிகள்’ நல்லதொரு பாதையைத் திறந்துள்ளது. தமிழ்நாட்டுப் படங்களுக்கு மட்டுமே இங்குமதிப்பு உண்டு என்ற எண்ணம் இலங்கைத் தயாரிப்பாளர் மத்தியில் இருந்தது. இது தவறான கருத்து என்பதைக் ‘கோமாளிகள்’ நிரூபித்துள்ளது. நல்ல படம் எதுவென்றாலும் நம் ரசிகர்கள் வரவேற்பார்கள். ‘கோமாளிகள்’ நல்லதோர் அத்திவாரத்தைப் போட்டிருக்கிறது. அதன் மேல் நல்ல கட்டடங்கள் எழட்டும்....’ என்பது அவரது விமர்சனத்தின் சுருக்கமாகும்.

25.10.76இல் வீரகேசரியில் ‘சாவன்னா’ விமர்சனம் எழுதினார். ‘.... உள்@ரில் தரமான படங்களைத் தயாரிக்கலாம் என்பதை நிலைநாட்டும் வகையில் கோமாளிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் இரசிகர்களை நன்கு சிரிக்க வைக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் நாடு முன்னேறும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது கதை. ....ஒரு கருத்தை சீரியஸ்ஸாகச் சொல்லித்தான் மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டுமென்பதில்லை. சிரிக்க வைத்தும் சிந்திக்கச் செய்யலாம்...’ என்று அந்த விமர்சனம் விளங்கஞ் சொல்லியது.

மித்திரன் வார மலரில் லக்ஷ்மியும் விமர்சனம் எழுதினார். ‘……‘கோமாளிகள்’ படத்தில் பல பொறுப்புக்களையும் ஏற்றத்தோடு மரிக்காராகத் தோன்றி நன்றாக நடித்திருக்கிறார் எஸ். ராம்தாஸ். சில இடங்களில் உபாலி ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறார். காதல் காட்சி சில்லையூர் செல்வராஜன், அவர் தம் மனைவி கமலினி ஆகியோரின் பொறுப்பு. ‘சம்மதமா’ என்ற பாட்டும் காட்சியும் நன்றாக இருக்கின்றன.

அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த ‘சுதந்திரன்’ பத்திரிகையில் அதன் ஆசிரியர் கோவை மகேசன் விமர்சனம் எழுதியிருந்தார். ‘..... ‘கோமாளிகள்’ சிரிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் என்றாலும் - அதன் தொய்வற்ற படப்பிடிப்பு, தொழில்நுட்பம், அதில் கையாளப்பட்டிருக்கும் விதம், திறமையான நெறியாள்கை போன்றவை ஈழத்துத் திரைப்பட உலகில் ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது….’ என்று அவர் எழுதினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘மல்லிகை’யின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் விமர்சனம் எழுதினார். ‘யாழ்ப்பாணத்துத் தியேட்டரில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ‘கோமாளிகள்’ திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் நுழைவுச்சீட்டுக் கிடைக்காமல் திரும்பிப் போனார்கள் என்பதே அந்த அதிசயமாகும்..... தணிகாசலமாக வரும் கே.ஏ. ஜவாஹிரின் நடிப்பு மனத்துக்குப் பிடித்திருந்தது. உபாலியும் நன்றாக நடித்திருந்தார். அடுத்தது மரிக்கார் எஸ். ராம்தாஸைச் சொல்லலாம்...’ என்று எழுதினார்.

‘கோமாளிகள்’ திரைப்படம், அதுவரை திரையிடப்பட்ட பல இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களைவிட, அதிக நாட்கள் ஓடியது. மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 76 நாட்களும், தென் கொழும்பில் (பிளாசா) 55 நாட்களும் தொடர்ந்து ஓடியது. யாழ்ப்பாணம் (வின்ஸர்), திருகோணமலை (கிருஷ்ணா), மட்டக்களப்பு (ராஜேஸ்வரா) ஆகிய தமிழ்ப் பிரதேசங்களில் முறையே 51.33.32 நாட்கள் தொடர்ந்து ஓடியது. பதுளை, கட்டுகஸ்தோட்ட, பண்டாரவளை ஆகிய மலையகப் பகுதிகளில் முறையே 20-17-15 நாட்கள் ஓடியது.

விமர்சனங்கள் குறிப்பிட்டதுபோல், இப்படத்தின் பொருளாதாரரீதியான வெற்றி, இலங்கையில் இனிமேல் தமிழ்ப் படங்களை வெற்றிகரமாகத் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

கோமாளிகள் படத்தின் உருவாக்கத்திற்குக் காரணமான முக்கிய நபர்களான எஸ். ராம்தாஸ{ம் எம்.முஹமட்டும் பாராட்டப்பட வேண்டியவர்களே.


14. ‘பொன் மணி’
உங்கள் மகளின் கதையாகலாம்
அது 1976ஆம் ஆண்டு. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞரிடம் சிறு தொகைப்பணம் இருந்தது. மூன்று இலட்சம் ரூபா அளவு பணம் அது. அந்த இளைஞர் கொழும்பில் ஒரு ஹோட்டல் கட்டலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தார். இவருக்கு ஒரு மைத்துனர் இருந்தார். அவர் புகழ்பெற்ற எழுத்தாளர், வானெலி அறிவிப்பாளர், பெயர் பெற்ற விளம்பர நிர்வாகி, இவருக்கும் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை.

இளைஞரும் மைத்துனரும் ஒருநாள் சந்தித்துக்கொண்டார்கள். மைத்துனர் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கலாம் என்று ‘ஐடியா’ கொடுத்தார். இளைஞருக்கும் ஆசை வந்துவிட்டது. சர்வதேசத் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் தயாரித்தால் அதை வெளிநாடுகளுக்கு விற்றே அதிக பணமும் புகழும் பெறலாம் என்று ஆசைப்பட்டார் இளைஞர்.

ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த இளைஞரின் பெயர்தான் காவலூர் ராஜதுரை. அவர்கள் இருவரும் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘பொன்மணி’

டைரக்டராக பத்திராஜா தெரிவு செய்யப்பட்டார். சிங்களத் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கிய டொனால்ட் கருணாரட்ண ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

படைப்பாற்றல் திறமை உள்ளவர்களை நடிகர்களாகத் தெரிவுசெய்யலாம் என்று இயக்குநரும் காவலூர் ராஜதுரையும் முடிவு செய்தார்கள். முதலில் திருமதி. சர்வமங்களம் கைலாசபதி தெரிவு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பல அறிஞர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள்.

மருத்துவத் துறையில் புகழ்பெற்ற டொக்டர் சிவஞானசுந்தரம் (நந்தி) மின் பொறியியலாளர் திருநாவுக்கரசு, வித்யோதய பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி பவானி திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற மாவட்ட நீதவான் எஸ். யோகநாதன், ஓய்வுபெற்ற மாநகரசபை ஆணையாளர் எல்.ஆர். அழகரெத்தினம், முன்னாள் நகர சபை அங்கத்தவர் மன்மதராயர், தகவல் திணைக்களத்தைச் சேர்ந்த செல்வி. கமலா தம்பிராஜா, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி சித்திரலேகா, மௌனகுரு, எம்.எஸ். பத்மநாதன், எம். சண்முகலிங்கம், ஆர். ராஜசிங்கம், எஸ். ரமேஸியஸ், ராஜேஸ் கதிரவேல், லடிஸ் வீரமணி ஆகியோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அரசாங்க ஊழியரான கே. பாலசந்திரன் கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஊதியமின்றி நடித்துத் தருவதாக ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். இதற்கு முன் ‘சுமதி எங்கே’, ‘நான் உங்கள் தோழன்’ போன்ற படங்களில் நடித்திருந்த சுபாஷினி இப்படத்தில் கதாநாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

‘பொன்மணி’யின் ஆரம்ப விழா 22.8.76இல் கொழும்பில் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் ஆர். பியசேனாவின் தலைமையில் நடைபெற்றது. முதலாவது படப்பிடிப்பு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் நடைபெற்றது. தொடர்ந்து காரைநகர், பாஷையூர், மண்ணாத்தலைதீவு, பண்ணைக்கடல், நாச்சிமார் கோயில் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. படப்பிடிப்பு அரைவாசி முடிந்துவிட்டது. கதாநாயகன் பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். படத்தை அரைவாசியில் நிறுத்திவிடுவோமா என்ற எண்ணம்கூட ராஜதுரைக்கு ஏற்பட்டதாம் ‘ஒருசதமும் ஊதியமாக வேண்டாம் என்று சொன்ன கதாநாயகன் 5000 ரூபா பெற்றுக்கொண்ட பின்பே படத்தை முடித்துக்கொடுத்தார். படத்தின் தயாரிப்பு நிர்வாகி பிரபல விளம்பர வாக்கியமொன்றை எழுதியிருந்தார்…. ‘உங்கள் மகளின் கதையாகலாம்’ என்பதே அவ்விளம்பர வாக்கியம்.

ஒரு யாழ்ப்பாண இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண் பொன்மணி. திருமணப் பருவம் வந்தபோது தன் அக்காவின் திருமணம் எப்போது நிறைவேறும் என்று காத்திருந்தாள். இவள் தாழ்ந்தகுலக் கிறிஸ்தவனைக் காதலித்தாள். குடும்பத்தவருக்கும் தன் சொந்த, எதிர்காலத்துக்கும் இடையில் அவள் ஒரு முடிவு எடுக்கவேண்டியிருந்தது. அவள் தன் காதலனுடன் ஓடிவிடுகிறாள். இவர்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் திருமணம் நடைபெறுகிறது. பொன்மணிக்கு ஏற்கனவே பேசிய ஒருவனின் கையாளால் அவள் சுடப்படுகிறாள். பிரேத ஊர்வலத்துடன் கதை முடிகிறது. இதுதான் பொன்மணி திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

எம். றொக்சாமி இசை அமைத்த பாடல்கள் சிறந்து விளங்கின. கமலினி செல்வராஜன், இயற்றிய பாடல் ஒன்று பெண்களின் மன உணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது. அதை சக்திதேவி குருநாதபிள்ளை உருக்கமாகப் பாடியிருந்தார்.

எடுக்கும் இளம் தோளில் மணமாலையே
மிடுக்கு நடைபோடத் தடைபோடுமே
மன்னவன் வருவான் மையல்தருவான்
வருமெனில் வராதோ நாணமே

ஒருநாள் வாழ்வின் திருநாள் சுவைநாள்
காதல் சுகநாள் இரவு இனிக்கும் திருநாள்
வருமெனில் வராதோ நாணமே

முழவோ தாளம் பொழிய
குழலோ கீதம் பிழிய
நிலா தேன்தரும் நாள்
வருமெனில் வராதோ நாணமே

தோழி கேலி மொழிய
சுற்றல் ஆசி சொரிய
கனா பலித்திடும் நாள்
வருமெனில் வராதோ நாணமே.

இதுவே அந்தப் பாடலின் வரிகள். மற்றப் பாடல்களைச் சில்லையூர் செல்வராஜன் எழுதியிருந்தார். அவற்றில் பின்வரும் பாடல் கருத்துச் செறிவுடன் விளங்கியது.

‘பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்
பார்த்திருப்பார் கண்ணனை காத்திருப்பார்
காதலினால் அல்ல கண்ணனிலே உள்ள
போதையினாலல்ல

உண்டிடத் தீனியும் மேனிமூடிட
ஒரு முழம் சேலையும் தந்துவிட்ட
ஒரு நொண்டியும் கண்ணனே’

என்று அமைந்தது அந்தப் பாடல்.

எஸ்.கே. பரராஜசிங்கமும் ஜெகதேவியும் பாடிய இன்னுமொரு பாடலும் இனிமையாக விளங்கியது.

‘வானில் கலகலவென இருபறவைகள் திரியுது
மேலில் தழுவிய கொடிமலர் குறுநகை புரியுது
தேன் நிலவினிலே ஒன்றாகுவோம்
சிங்காரத் தெய்வீகப்பண்பாடுவோம்’ என்று

ஆரம்பமாகிறது அந்தப் பாடல். மற்றப் பாடல்களை ரஜனி, ராகினி, சாந்தி, ஜனதா ஆகியோர் பாடினர்.

பெரும் விளம்பரத்தோடு திரையிடப்பட்ட பொன்மணி, திரைகளில் ஒருவாரம் மட்டுமே காட்சியளித்தது. ஆனாலும், வேறு எந்த இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கும் இல்லாத அளவுக்குப் பலர் விமர்சனம் எழுதினர். அவைகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்தன.

தினகரனில் (15.04.77) எச்.எம்.பி. மொஹிதீன் இப்படத்தைப்பற்றிச் சிறு குறிப்பு எழுதினார். ‘பிரபல தமிழ் எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் கதையாக்கத்தில் உருவான, அதிகம் பிரபல்யப்படுத்தப்பட்ட ‘பொன்மணி’ இப்பொழுது திரையிடப்பட்டிருக்கிறது. ஏனோ இப்படத்துக்குக் கூட்டத்தைக் காணவில்லை. இயக்குநர் பரீட்சியம் மிக்கவர். ஒளிப்பதிவாளரும் திறமைசாலியே. எழுத்தாளரும் நல்லவரே. நடிகர்களோ சமுதாயத்தின் உயர்மட்டப் பெரியவர்கள். இத்தனைபேரும் கூட்டுமொத்தமாகத் தலைபோட்டும் கூட்டம் வராததை புதுமையைத் தருகிறது. நானும் படத்தைப் பார்த்தேன். பொறுமையோடு பார்க்கமுடிந்தது. ரசிக்கமுடியவில்லை....’ என்றுதன் எண்ணத்தை எழுதினார்.

அப்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பகுதித் தலைவராகப் பேராசிரியர் சுச்சரித்தகம்லத் கடமையாற்றினார். அவரும் ‘பொன்மணி’ பற்றி சிங்களப் பத்திரிகையில் (தினமின) விமர்சனம் எழுதினார். நான் அந்தக் கட்டுரையை மொழிபெயர்த்தேன். அது தினகரனில் வெளியாகியது.

‘......தமிழ்மக்கள் மத்தியில் வாழ்ந்து வருபவரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிறந்த நெறியாளருமான தர்மசேன பத்திராஜா பொன்மணியை நெறிப்படுத்தியுள்ளார். சாதி, சீதனப் பிரச்சினைகள் பற்றிக்கதை பின்னப்பட்டுள்ளது...... ரசிகர்களின் இதயங்களை ஊடறுத்துச் சென்று அறிவுக்கண்களை, இளையவர்களின் பிரச்சினைகளை நோக்கித் திரும்பும் வண்ணம் படம் அமைந்துள்ளது. ஆனாலும், இப்படம் தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன?

முதலாளித்துவ அமைப்பினால் வேண்டுமென்றே புகுத்தப்பட்ட வர்க்க முரண்பாடுகள் இதன் தோல்விக்கு இன்னுமொரு காரணமாகும். ......தியேட்டர் உரிமையாளர்களே இரசிகர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சிலர் வேண்டுமென்றே விளம்பரம் செய்யாமல் விட்டிருக்கிறார்கள்….. தமிழ் ரசிகர்களின் தென்னிந்திய சினிமா மோகமே இதன் தோல்விக்குக் காரணமாகும். தர்மசேன பத்திராஜா தமிழ் ரசிகர்களை அந்த மாயலோகத்திலிருந்து பிரித்து அவர்கள் வாழுகின்ற உண்மை உலகம் இதுதான் என்று காட்டினார்.

‘..... தென் இலங்கையில் எழுச்சிபெறும் கலை, வியாபார ரீதியான தோல்விகளைப் பொருட்படுத்தாதது போல வடக்கிலும் இந்த நிலை உயர்ந்து செல்லவேண்டும்’. என்று அமைந்திருந்தது அந்த விமர்சனம்.

கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி ‘பொன்மணி’ பற்றி தினகரனில் (24.04.77) நீண்ட விமர்சனம் எழுதினார்.

‘இலங்கைத் திரைப்பட வரலாற்றில் பொன்மணி, தென்னிந்தியத் திரைப்பட அமைப்பிலிருந்து வேறுபடும் முதல் முயற்சியாகும். தொழில்நுட்ப அழகியல் அம்சங்களைக் காத்திரமான முறையில் அறிந்து உணர்த்தும் உள்@ர்க் கலைஞர்கள் எழுத்தாளர்களின் இணைப்பு முயற்சியால் தோன்றியது இப்படம். ஆனாலும், இதன் தோல்வி காத்திரமாக ஆய்வு செய்யப்படுவது அத்தியாவசியமாகும்.

.....பொன்மணி, சாதாரண தமிழ்ப் படங்களைவிட வேறுபாடானது. கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மிதமிஞ்சி சிருங்காரப்படுத்தாமலும், மிகையுணர்ச்சி படக்காட்டாமல் யதார்த்தமாக இயங்கக்கூடியளவு உள்ளவாறே காட்டியுள்ளார் பத்திராஜா.

..... கதை அமைப்பைப் பொறுத்தவரை முக்கியப் பாத்திரங்கள் கணேசும் தாயுமே. இப்பாத்திரங்கள்மீது முழு அவதானமும் விழுந்துள்ளமைக்குக் காரணம், இப்பாத்திரங்களில் நடித்த சண்முகலிங்கம், பவானி திருநாவுக்கரசு ஆகியோரது நடிப்பேயாகும்.

...யாழ்ப்பாண இந்துத் தமிழ்க் குடும்பத் தலைவியின் ஏக்கங்களையும் தாபங்களையும் வெகு இயல்பாகப் பவானி திருநாவுக்கரசு பிரதிபலித்துள்ளார்....

‘.... பாடல்களில் ‘பாதையில் எத்தனை ராதைகள்’ வெற்றியீட்டியுள்ளது. கதையின் செல்நெறியை விளக்க அப்பாடல் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ளது. ‘வானில் கலகலவென’ என்னும் பாடலில் ஒலிப்பதிவின் தெளிவின்மை காரணமாக பரராஜசிங்கத்தின் திறமை வீணடிக்கப்பட்டுள்ளது. றொக்சாமியின் திறமை, பாடல்களுக்கான மெட்டமைவுடன் வரையறைபெற்றுவிடுகிறது...... பொன்மணி ஜனரஞ்சகப் படமாகவும் இல்லாது, இலக்கணச் சுத்தமான, யதார்த்தப் படமாகவும் இல்லாது நிற்கிறது...’ என்று எழுதினார்.

விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் ‘டெயிலிமிரர்’, ‘தினகரன்’ போன்ற பத்திரிகைகளில் விமர்சனம் எழுதினார்.

‘.....முழுப்படத்திலும், சுமார் 60 வசனங்களையே பாத்திரங்கள் பேசுகின்றன. துரதிஷ்டவசமாக அந்த வசனங்கள் தர்க்கரீதியாக அமையவில்லை. இரண்டு பாத்திரங்கள் பேசும்போதுகூட இடைவெளி அதிகம். சில பாத்திரங்கள் புத்தகத் தமிழ் பேசுகின்றன. சில பாத்திரங்கள் கொச்சைத் தமிழ் பேசுகின்றன. நடிப்புதான் இல்லாவிட்டாலும் குரல் அமைப்பில்கூட கவனம் செலுத்தப்படவில்லை. ..... படத்தை முழுமையாக ரசிப்பதற்குத் தடையாக இருப்பவை, படத்தின் மந்தகதியும் நாடகத் தன்மையுமாகும்.

..... இப்படத்தின் சிறப்பான அம்சம் இசையாகு;ம. செல்வராஜனின் பாடல்கள் தனிச்சிறப்பானவை.... படத்தின் முக்கியச் செய்தி என்ன? என்னைப் பொறுத்தவரை அங்கு செய்தியைக் காண முடியவில்லை’ என்று எழுதினார்.

தினகரனில் (2.6.77) விமர்சனம் எழுதிய இன்னுமொருவர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ. நுஃமான்.

‘.....இலங்கையில் இதுவரை வெளிவந்த வேறு எந்தத் தமிழ்ப்படம் பற்றியும் இத்தகைய காத்திரமான விமர்சனங்கள் வெளிவரவில்லை. இந்த உண்மை ஒன்றே ‘பொன்மணி’ மற்றப் படங்களிலிருந்து வேறுபடுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். ‘பொன்மணி’யின் கதை, நடிப்பு, படப்பிடிப்பு, இசை அமைப்பு, படத்தொகுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகளே தோல்விக்குக்காரணம் என்று கூறுவதற்கில்லை. தென்னிந்தியத் தமிழ்ப் படங்களே நமது படங்களின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்களாகும்.’ என்று அவர் குறிப்பிட்டார்.

இரா. சிவச்சந்திரனும் தினகரனில் (5.5.77) விமர்சனம் எழுதினார். ‘காவலூர் ராஜதுரையின் ‘பொன்மணி’ திரையிடப்பட்டு ஒருவார காலத்துக்குள்ளேயே மறைந்து விட்டமை இலங்கைச் சினிமா அபிமானிகளுக்கு மனத்தாங்கலான சம்பவமே... பத்திராஜா சினிமாவில் புகழ்பெற்றவர். அப்படிப்பட்டவர் இங்கே ஏன் தவறிழைத்தார் என்று விளங்கவில்லை. மொழி விளங்காமை, யாழ்ப்பாணத்து சமுதாய அமைப்பையும் இயக்கங்களையும் முறையாகப் புரிந்துகொள்ளாமை போன்றவையே தோல்விக்கு முக்கியக் காரணம்போல் தோன்றுகிறது.... டொக்டர் நந்தியின் தோற்றம் நடிப்பு வசன உச்சரிப்பு என்பன இயல்பாக அமைந்துள்ளன....’ என்று எழுதினார்.

வீரகேசரியில் (10.4.77) ‘மண்மகள்’ விமர்சனம் எழுதினார். யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் வாழ்க்கை, கலை, கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது பொன்மணி… சிறந்த கேரள, வங்காளப் படங்களைப் போல் சிறப்பு அம்சங்களுடன் இப்படம் விளங்குகிறது’ என்று அவர் புகழ்ந்து எழுதினார்.

இப்படி எல்லாம் பெரிய விமர்சனங்கள் கிடைத்த ‘பொன்மணி’ திரையிடப்பட்ட எல்லாத் தியேட்டர்களிலும் எண்ணி எட்டு நாட்களே நின்று பிடித்தது.

பொன்மணியின் பொறுப்பாளர் காவலூர் ராஜதுரை என்ன சொன்னார் தெரியுமா? ‘தயாரிப்பாளர் என்னை நம்பிப் பணத்தைத் தந்தார். நான் இயக்குநரை நம்பிப் பணத்தையும் கதையையும் கொடுத்தேன். நடிகர்கள் இயக்குநரின் புகழுக்குப் பயந்து சொன்னதைச் செய்தார்கள். இதனால் படம் இந்த நிலைக்கு வந்தது’ என்று சொன்னார்.

1978ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பொன்மணி’ பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது பிரபல்யமான சினிமாச் சஞ்சிகையான ‘பொம்மையும்’ விமர்சனம் எழுதியது.

‘…… காதல் திருமணத்தை வலியுறுத்தும் இப்படம் இலங்கையில் பெரும் சர்ச்சைக்கு உட்பட்டது. பல பத்திரிகைகளில் ‘பொன்மணி’ பற்றிய விவாதப் பத்திகள் வெளியாயின. இலங்கையின் இயற்கை எழிலில் தயாரிக்கப்பட்ட இப்படம் இலங்கையின் திரைப்பட வளர்ச்சியில் ஒரு மைல்கல். ராஜ்குமார் பிலிம் சார்பில் பத்திராஜா இயக்கிய இப்படத்தின் கதை வசனத்தை எழுதியவர் இலங்கை வானொலியில் பணியாற்றும் காவலூர் ராஜதுரை’ என்று சுருக்கமாக எழுதியது.

சென்னையிலிருந்து வெளிவரும் ‘தினமணிக்கதிர்’ என்னும் சஞ்சிகையும் (27.1.78) விமர்சனம் எழுதியது.

‘இலங்கையிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவுக்கு வந்திருக்கும் தமிழ்படம் ‘பொன்மணி’ ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவரின் மகள் பொன்மணி, வீட்டை விட்டு ஓடி ஒரு மீனவழன மணந்து கொள்கின்ற கதை. கதாநாயகியாக நடித்திருக்கு சுபாஷினி நமது ஊர் தமிழ்ப்படக் கதாநாயகியைப் போல கவர்ச்சியாக இல்லை என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கதாநாயகனின் பெயர் பாலச்சந்திரன். சாதாரண சட்டையைப் போட்டுக்கொண்டு படம் முழுவதும் அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கும் பரமசாது. நமக்குத் திருப்தி-கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கைக் காட்சிகள். திருப்தியில்லாதது பேசும் தமிழ்.

அதாவது கேரளீய சிங்களம், பாதிப் படத்துக்கு மேல், உட்கார்ந்திருக்க முடியவில்லை’ என்று தினமணி கதிர் எழுதியது. இதில் ‘கேரளீய சிங்களம்’ என்றால் என்ன என்று பலருக்கும் புரியவில்லை.

‘பொன்மணி’ இலங்கையில் அதிக தினங்கள் ஓடாவிட்டாலும் அதீத பெயர் பெற்றுவிட்டது. அதனால், அப்படத்தை மீண்டும் சுருக்கி எடிட் செய்திருந்தார் காவலூர் ராஜதுரை.

இலங்கைத் தொலைக்காட்சியில் (ரூபாவாஹினியில்) முதன் முதலில் காட்டப்பட்ட இலங்கைத் தமிழ்ப்படம் ‘பொன்மணி’ தான். 9.5.84இல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. பொன்மணியை இரண்டாவது முறையும் (21.3.85) ஒளிபரப்பினார்கள்.

அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த ‘சிந்தாமணி’யில் ‘சஞ்சயன்’ பின்வருமாறு எழுதினார். ‘இலங்கைப் படமான’ பொன்மணியைப் பார்க்கும் வாய்ப்பு 21.3.85 இல் ரூபவாஹினி ரசிகர்களுக்குக் கிடைத்தது. இலங்கைப் படந்தானே என்று முன்பு சலித்துக்கொண்டவர்கள் கூட, பின்பு ‘பரவாயில்லை படம் நன்றாகவே இருக்கிறது’ என்று கூறக்கேட்டபோது ஈழத்துத் தமிழ் ரசிகர்களின் ரசனையில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. இப்படம் பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தயாரிக்கப்பட்டது. வெளிப்புறக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டன. தென்னிந்தியப் படங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கால கட்டத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட துணிகர முயற்சி தொழில் நுட்பத் துறையில் முன்னேறியிருந்த தமிழ்நாட்டுப் படங்களின் முன்னே அன்று ‘பொன்மணி’ எடுபடவில்லை.

….தமிழ்நாட்டுப் பாரதிராஜா, பாக்கியராஜாக்கள் தரும் இப்போதைய பாணியை என்றோ ‘பொன்மணி’ மூலம் தந்துவிட்டார் ஈழத்துப் பத்திராஜா…. தமிழகத்திலிருந்து புதுமைப் படைப்புகள் என்று இங்கு வரும் திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது இப்படங்களுக்கெல்லாம் முன்னோடி ‘பொன்மணி’ என்றே சொல்லவேண்டும்.

….அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜாதி, மதம் இரண்டையுமே காதலுக்காக அறுத்தெறிந்து வெற்றிபெறும் இளம் ஜோடியைக் கண்டோம். ‘பொன்மணி’யிலோ ஜாதி, மத வெறிக்குப் பொன்மணி பலியாவதன் மூலம் ஜாதி, மத வெறியர்கள் வெற்றிபெறுவதைக் கண்டோம்…’

இவ்வாறு ‘பொன்மணி’யின் மையக் கருத்து அமைந்திருந்தது. எது எப்படியாயினும் இப்படியான புதுமைப்படைப்பு உருவாகக் காரணமாயிருந்த காவலூர் ராஜதுரையும் முத்தையா ராஜசிங்கமும் பாராட்டுக்குரியவர்களே.

‘பொன்மணி’ திரைப்படம் பின்பு பல வெளிநாடுகளின் காண்பிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அப்படத்தை விருப்பத்துடன் பார்த்து வருகின்றனர்.

15. ‘காத்திருப்பேன் உனக்காக’
மலையகத்தில் வத்தேகமவில் உள்ள ஒரு தமிழருக்கு எஸ்றேற்றும் பல தொழில்களும் சொந்தமாக இருந்தன. சினிமாவைத் தன் வாழ்நாளில் பார்க்க விரும்பாத இந்தத் தந்தை, தன் தொழிலின் நிர்வாகத்தைப் புதல்வர்களுக்குக் கொடுத்தார். புதல்வர்களுக்கு சினிமாமீது தனிப்பிரியம்.

இந்தப் புதல்வர்கள் ஒரு சிங்களப் படம் தயாரிக்கலாமா? என்று எண்ணினார்கள். ஆனால், தேசிய தமிழ்த் திரைப்பட வரலாற்றுக்கு முதலில் தமது பங்களிப்பைச் செய்யலாம் என்று பின்பு தீர்மானித்தார்கள். அதன்படி ‘காத்திருப்பேன் உனக்கா’ என்ற பெயரில் தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்படி முடிவு செய்த சகோதரர்கள்தான், எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். ஜெயராஜ் ஆகியோராவர்.

படத்துக்கான கதை தம்பி ஜெயராஜிடம் ஏற்கனவே தயாராக இருந்தது. அது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கலைத்துறையில் இவர்களது குருவான நவாலியூர் நா. செல்லத்துரை இம்மூலக்கதைக்கான திரைக்கதையையும், வசனங்களையும், பாடல்களையும் எழுதினார்.

இந்த மூன்று சகோதர்களின் உறவினர் துரைபாண்டியன். இவர் சினிமா உலகில் அனுபவப்பட்டிருந்தார். இயக்குநர் பொறுப்பை இவரிடம் கொடுக்கலாம் என்றால், அவர் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தன் பெயரைப் பதிவு செய்திருக்கவில்லை. எனவே, இப்பொறுப்பு எஸ்.வி. சந்திரன் என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டது.

இளைஞர் எஸ்.வி. சந்திரன் நீண்ட காலமாகவே சிங்களப்பட உலகில் எடிட்டராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் எடிட்டரும் இவரேதான். ‘துப்பத்தாகே ஹித்த வத்தா’ என்ற சிங்களப் படத்தின்மூலம் முதன் முதலாக டைரக்டராக அறிமுகமானார். துரை பாண்டியன் இப்படத்தின் இணை இயக்குநராகக் கடமையாற்றினார்.

உதவி டைரக்டராக மூனாஸ் தெரிவுசெய்யப்பட்டார். நிதி மேற்பார்வைப் பொறுப்பை எஸ்.வி. பாலசுப்பிரமணியம், வி. தர்மலிங்கம், பி. சுப்பையா ஆகியோர் பொறுப்பேற்றார்கள்.

பல வருடங்களுக்கு முன் கண்டியிலிருந்து ‘செய்தி’ என்ற பத்திரிகை வெளிவந்தது. அதன் ஆசிரியர் நாகலிங்கம். அவர் மகன் சிவராம், நல்ல அழகான இளைஞன். இவரே இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.

கொழும்பைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண்கதாநாயகியாக நடித்தார். கண்டி விஸ்வநாதராஜா நாடகங்களில் அனுபவப்பட்டவர். ஏற்கனவே ‘நிர்மலா’வில் நடித்தவர். இவருக்கும் இப்படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ரவிசெல்வராஜ் பிரதான உப பாத்திரத்தில் நடித்தார்.

ஏ.எம்.லதீப் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் இப்படத்தில் தந்தை பாத்திரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். நா.செல்லத்துரையும், தர்மலிங்கமும் கலைத் தாகமுள்ளவர்கள். இவர்கள் இருவரும் இப்படத்தில் முக்கியமான உப பாத்திரங்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

மற்றும் சந்திரகுமார், மித்திரகுமார், குலேந்திரன், பாலகிருஷ்ண், கிருஷ்ணராஜா, ருக்மணிதேவி, ஸ்ரீதேவி, கிருஷ்ணகுமாரி, சந்திரா, ஜெயதேவி, நிர்மலா, ரத்னகலா, வசந்தி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

இது எம். முத்துசாமி இசை அமைத்த 5வது தமிழ்ப்படம். ஆரம்பத்தில் திலகநாயகம் போல் பின்னணி பாடினார். அது வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. பின்பு அவர் பாடிய பாடல்களை ஜோசப் ராஜேந்திரன் பாடினார். சுஜாதா அத்தநாயக்காவும் பாடினார்.

ஜெய்ந்திரா மூவிஸ் ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்தின் ஆரம்ப விழா 6.9.76இல் மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. ஆரம்பப் படப்பிடிப்பு அங்கேயே தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து கொழும்பு, கண்டி, தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை போன்ற இடங்களில் நடைபெற்றது.

9மாதங்களின் பின் படம் சம்பூர்ணமாகியது. 24.06.77இல் இலங்கையின் பல நகரங்களிலும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

ராஜாவை, ராஜி காதலிக்கிறாள். ஆனால், ராஜாவோ அத்தை மகள் சாந்தியைக் காதலிக்கிறான். ராஜியின் சகோதரனான கண்ணன் ராஜாவின் தங்கையான வனிதாவைக் காதலிக்கிறான்.

ராஜா, சாந்தா திருமணம் நடைபெற இருந்த சமயத்தில், வனிதாவைக் கெடுத்துவிட்டுத் தனது தங்கை ராஜியின் கழுத்தில் தாலி ஏறினால் வனிதாவுக்கு வாழ்வளிப்பேன் என்கிறான்.

தங்கைக்கு வாழ்வு கொடுப்பதா? அல்லது சாந்தாவை மணந்து வாழ்வதா? என்ற சிக்கலில் விழுகிறான். முடிவில் தன் தங்கைக்காகக் காதலியின் சம்மதத்துடன் ராஜியைத் திருமணம் செய்ய முன்வருகிறான் ராஜா. இதுதான் ‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். எல்லாம் சரிதான் கதையின் முடிவுதான் சிறந்ததாக அமையவில்லை.

1977ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ‘கீதா’ என்ற சினிமா பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. இதன் ஆசிரியர் தமிழ்நெஞ்சனாவார். இவருக்கு உதவியாக ஜெயசீலனும் அதே பாத்திரிகையில் இருந்தார். இந்தக் ‘கீதா’ இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியில் அதிக பங்களிப்புச் செய்திருக்கிறது. மற்ற தேசிய பத்திரிகை செய்யாத அளவுக்கு அதிகமாகவே உதவியிருக்கிறது.

இந்தக் ‘கீதா’வும் அப்பொழுது ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்துக்கு விமர்சனம் எழுதியது.

‘… ஒருகாதல் கதை, கருத்துள்ள குடும்பக் கதையாகவும் அமையும் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. வசனத்தின் சிறப்புகள் படம் முழுவதும் பரவி இருந்தாலும் முக்கிய நடிகர்களின் வாயிலிருந்து வெளிப்படும்போது உயிர்ப்பு பெறுகிறது…. கதாநாயகன் சிவராமின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. விஸ்வநாத ராஜாவின் நடிப்பு அருமை. செல்வராஜின் துடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. கீதாஞ்சலி காதல் காட்சிகளைவிட, சோகக் காட்சிகளில் எடுபடுகிறார். ஸ்ரீதேவி வசனங்களை அழுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கிருஷ்ணகுமாரி கோபப்படும்பொழுது சிறப்பாக இருக்கிறது. செல்லத்துரை, லதீப், தர்மலிங்கம் ஆகியோர் தந்தைகளுக்குரிய தாக்கமான நடிப்பினைச் சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். சந்திராவின் தாய்மை நடிப்பிலும் தரம் இருக்கிறது. ருக்மணிதேவி, தான் ஒரு பழம்பெரும் நடிகை என்கதை நிரூபிக்கிறார்.

ஆர். முத்துசாமி பாடல்களுக்கு ஏற்றவகையில் இசை அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் எஸ். தேவேந்திரா தனது தனித்திறமையை நிரூபித்திருக்கிறார். எடிட்டராகவும் டைரக்டராகவும் கடமையாற்றி சிறப்பான ஒரு படத்தை நமக்கு அளித்திருக்கிறார் எஸ்.வி. சந்திரன்.

இலங்கையில் ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டுமென்ற இலட்சிய வேட்கையில் பல இலட்சங்களை வாரி இறைத்து ஒரு படத்தைத் தயாரித்து இருக்கின்றனர். ஜெயேந்திரா மூவீஸார் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று தயாரிப்பாளருக்கு ‘சப்போட்’ பண்ணி விமர்சனம் எழுதியது.

வீரகேசரியில் (03.07.77) ‘கண்ணன்’ என்பவர் விமர்சனம் எழுதியிருந்தார். …உள்நாட்டுத் திரைப்பட வளர்ச்சியில் ‘காத்திருப்பேன் உனக்காக’ ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர். எம். ஜெயராஜின் இக்கதை சிறுகதையாக இருந்தபோதிலும் நவாலியூரானின் திரைக்கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக ஓடத்துணைசெய்கிறது. சிவராம் சர்வலட்சணமுள்ள கதாநாயகனாக விளங்குகிறார். காதல், சண்டை, சோகக்காட்சிகளில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். கதாநாயகி கீதாஞ்சலி சோகக்காட்சிகளில் தனித்துப் பிரகாசிக்கிறார். வில்லனாக நடிக்கும் செல்வராஜ் சோடைபோகவில்லை. விஸ்வநாதராஜாவின் நடிப்பை எவராலும் மறக்கமுடியாது. அவர் நகைச்சுவையிலும் சோகத்திரும் இணையற்று நிற்கிறார். ஸ்ரீதேவியும் கிருஷ்ணகுமாரியும் இலங்கையில் நடிகைகள் பஞ்சத்தை நீக்குவார்கள் என நம்பலாம். நா.செல்லத்துரை ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். லத்தீப் தன் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்.

ஆர். முத்துசாமியின் இசையில் உருவான ‘பட்டுப்புல்மேனி’ என்று சுஜாதா பாடும் பாடல் இனிமையாக இருக்கிறது. எஸ். தேவேந்திராவின் கமரா பளிச்சென்று தன் ஒளிப்பதிவைக் காட்டுகிறது…’ என்று பொதுவாக எழுதியது.

இலங்கைத் தமிழ் மக்களோடு இணைந்த சில பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘மெய்கண்டான்’ கலண்டராகும். அந்த மெய்கண்டான் கொம்பனியினர் ‘கலாவல்லி’ என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தனர். அந்தச் சஞ்சிகையில் ‘கோவிலூர் செல்வராஜன்’ விமர்சனம் எழுதினார்.

‘….தமிழகத்தைப்போல் இலங்கையிலும் தரமான படத்தைத் தயாரிக்கமுடியும் என்று சவால்விட்டிருக்கும் எஸ்.வி. சந்திரனுக்கு ஒரு சபாஷ். கண்ணுக்கினிய கோணங்களில் படமாக்கியிருக்கும் எஸ். தேவேந்திராவின் கமரா நுணுக்கங்களைப் போற்ற வேண்டும். படத்தின் கடைசியில் இடம்பெறும் சுடலைக்காட்சி நெஞ்சத்தை உருக்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்தாமணியில் (03.07.77) ‘நக்கீரர்’ நன்றாகப் புகழ்ந்து விமர்சனம் எழுதினார்.

‘…படப்பிடிப்பு சில இடங்களில் தென்னிந்தியப் படமோ என்று பிரமிக்கவைக்கிறது. பாடல்கள் தனியாக ஹிட் ஆகாவிட்டாலும் படத்தில் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. இதுவரையில் வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களின் கதாநாயகர்களுக்குச் சவாலாக நடித்துள்ளார் சிவராம்.

செல்வராஜ் இணை நடிகராக ஈடுகொடுத்து நடித்துள்ளார். படத்தின் டைரக்டர் சந்திரனே எடிட்டர் என்பதால், படத்தின் சில கட்டங்களில் குறிப்பாகக் காதல் காட்சிகளில் மிகவும் நுண்ணியமாகக் கை வைத்துள்ளார்.! ‘காத்திருப்பேன் உனக்காக’ ஒரு வெற்றிப்படமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.’ என்று தூக்கி எழுதியது சிந்தாமணி. 1984ஆம் ஆண்டுக் காலத்தில் ரூபவாஹினித் தொலைக்காட்சி இலங்கைத் தமிழ்ப்படங்கள் பலவற்றை வாரா வாரம் தொடராகக் காட்டியது. அவ்வாறே ‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படமும் 13.11.84 முதல் காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டும் ‘சிந்தாமணி’ விமர்சனம் எழுதியது. அது எப்படி என்று பாருங்கள் ‘….இப்படத்தி; குரல் டப்பிங் படுமோசம். வாயசைப்பும் உச்சரிப்பும் வேற்றுமொழி டப்பிங் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. பல இடங்களில் வசன உச்சரிப்பில் தமிழ்க் கொலை சகிக்க முடியாதபடி இருக்கிறது. ஒரு சில கட்டங்களில் தோன்றினாலும் காலஞ்சென்ற பிரபல நடிகை ருக்மணிதேவியி; நடிப்பைத்தான் நன்றாக ரசிக்கமுடிகிறது…’ என்று இறக்கி எழுதியிருந்தது. இந்தச் சில வருட இடைவெளிக்குள் இப்படி வித்தியாசமான விமர்சனம் எழுதியதன் காரணம் என்னவோ தெரியவில்லை.

ஒருவேளை ஆரம்பகால விமர்சனம் ஊக்குவிப்பு விமர்சனமாக இருக்கலாம்.

இப்படம் திரையிடப்பட்டபோது மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 24 நாட்களும், தென் கொழும்பில் (பிளாசா) 21 நாட்களும் ஓடியது. இப்படம். யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிக நாட்கள் ஓடியது. அங்கு (வின்ஸர்) 42 நாட்கள் தொடர்ந்து ஓடியது. மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) 15 நாட்களும், திருகோணமலையிலும் (ராஜ்), பதுளையிலும் (லிபர்ட்டி) தலா 11 நாட்கள் ஓடியது. கட்டுகஸ்தாட்டையில் (சீகிரி) 10 நாட்கள் மட்டுமே ஓடியது.

முதலில் இப்படம் திரையிடப்பட்டபோது, அதிக ரசிகர்கள் பார்க்காவிட்டாலும் ரூபவாஹினியில் காட்டப்பட்டபோது பலரும் பார்த்தார்கள். பாராட்டினார்கள்.

பொருளாதார ரீதியில் இப்படம் வெற்றிபெறவில்லை. பொதுவாக ரசிகர்கள் ‘நல்ல படம்’ என்று சொல்லும் அளவுக்குச் சிறந்து விளங்கியது. அந்த வகையில் இப்படத்தைத் தயாரித்த சகோதரர்களான எம். ஜெயராமச் சந்திரனை;, எம். தீனதயாளன், எம். செல்வராஜா ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்களே.


16. ‘நான் உங்கள் தோழன்’
1978ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இந்த ஆண்டு பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும். வருடத்திற்கு ஒன்று இரண்டு என்று வந்துகொண்டிருந்த படம் இந்த ஆண்டில் அடுக்கடுக்காக ஆறு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்த 6 படங்களில் முதலாவது வந்ததுதான் ‘நான் உங்கள் தோழன்’ திரைப்படமாகும். இது வீ.பி. கணேசனின் இரண்டாவது தமிழ்ப்படமாகும். வீ.பி. கணேசன் ‘புதியகாற்று’ திரைப்படத்தைத் தயாரித்த தன் மூலம் பல அனுபவங்களைப் பெற்றிருந்தார். இரண்டாவது படத்தில் பல புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டுமென்று எண்ணியிருந்தார்.

எல்பிட்டிய என்ற ஊரில் பிறந்து சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய தமிழ் இளைஞர் எஸ்.வி. சந்திரன் இயக்கிய முதல் தமிழ்ப் படம்தான் இது. (ஆனால் இவர் இயக்கிய ‘காத்திருப்பேன் உனக்காக’வே முதலில் திரைக்கு வந்தது.) படத்தொகுப்பும் இவரே.

1957இல் கொழும்பில் கார்டினர் அவர்களால் ‘சிலோன் ஸ்ரூடியோ’ ஆரம்பிக்கப்பட்டது. அங்கே உதவி ஒளிப்பதிவாளராக ஒரு தமிழ் இளைஞர் சேர்ந்து கொண்டார். 1963இல் ஹெந்தலையில் கே. குணரட்ணம் அவர்கள் ‘விஜயா ஸ்ரூடியோ’வை ஆரம்பித்தபோது இங்கே வந்து சேர்ந்துவிட்டார். இந்த இளைஞர் அங்கு கடமையாற்றிய எம். மாஸ்தானை குருவாகக்கொண்டு பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார். இந்த இளைஞனின் பெயர்தான் எஸ். வாமதேவன். இவர்தான் ‘நான் உங்கள் தோழன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்.

கொழும்பில் பல நாடகங்களை எழுதி நெறியாண்டு நடித்து புகழ்பெற்று விளங்கினார் ஒரு இளங்கலைஞர். இவர் தினகரன் நாடக விழாவில் ‘சிறந்த இயக்குநர்’ என்ற பரிசையும் பெற்றவர். சிறுவயது முதலே சினிமா ஆர்வம் மிக்கவராக விளங்கிய இவ்விளைஞருக்கு இப்படத்துக்கான கதை வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. எம்.எம். ராவூப் என்ம் அந்த முஸ்லீம் இளைஞரின் புனைபெயர்தான் ‘கலைச்செல்வன்’ இவர் இப்படத்துக்கான கதை வசனத்தை எழுதியதுடன் கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தார்.

பிரதான பாத்திரத்தில் தயாரிப்பாளர் வீ.பி. கணேசனே நடித்தார். ‘சுமதி எங்கே’யில் அறிமுகமாகி ‘பொன்மணி’யில் நடித்த சுபாஷினியே கதாநாயகி. சிங்கள நடிகைகள் ஜெனீடா, ருக்மணிதேவி ஆகியோரும் ஒப்பந்தமாகினர்.

‘கோமாளி’களில் அறிமுகமாகி ‘புதியகாற்றில்’ வில்லனாக நடித்த கே.ஏ. ஜவாஹருக்கு இப்படத்திலும் வில்லன் வேடம் கிடைத்தது. ‘காத்திருப்பேன் உனக்காக’வில் அப்பாவாகத் தோன்றிய எம்.எம்.ஏ. லதீப் இப்படத்தில் இளம் வில்லனாகத் தோன்றினார். நகைச்சுவை வேடத்தில் எஸ். ராம்தாஸ், குடியானவனாக ஏகாம்பரம் ஆகியோரும் நடித்தனர். எஸ்.என். தனரெத்தினத்துக்கு கிறிஸ்தவ பாதிரியார் வேடம் வழங்கப்பட்டது.

இவர்களுடன் எஸ். சின்னையா, ஹரிதாஸ், சிவலிங்கம், தம்பிராசா, மைக்கல், டொன்போஸ்கோ, ஆர்.டி.ராஜா, எஸ். ராஜா சிதம்பரம், யோகநாதன், பஞ்சலிங்கம், அந்தனி ஜீவா, ரகுநாதன் போன்றவர்கள் நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

சந்திரகலா, ஜெயதேவி, ராஜம், நிர்மலா போன்றோர் பெண் பாத்திரங்களை ஏற்றனர். எம். றொக்சாமி இசை அமைத்த இரண்டாவது தமிழ்ப்படம் இதுவாகும். சாந்தி, முருகவேள், சாது ஆகிய கவிஞர்கள் பாடல்களை இயற்றினர்.

முத்தழகு, கலாவதி, பாலசந்திரன், மொஹிதீன்பெக், சுஜாதா, கனகாம்பாள் ஆகியோர் பாடல்களைப் பாடினர். ஒலிப்பதிவு கே. பாலசுப்பிரமணியம், ஒப்பனைப் பொறுப்பு சுப்புவுக்கு. பட ஆரம்ப விழா 12.11.76இல் ஹெந்தள விஜயா ஸ்ரூடியோவில் நடைபெற்றது.

படப்பிடிப்பு யாழ்ப்பாண நகரவீதிகள், மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் கோவில் பகுதி போன்ற பல இடங்களில் இடம்பெற்றது. ஒருவருடம் தயாரிப்பில் இருந்த இப்படம் 06.01.78.இல் ஏழு நகரங்களில் திரையிடப்பட்டது.

‘டொக்டர் கண்ணன் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பணியாற்றுகிறான். அக்கிராமத்துப் பெண் ராதா, கண்ணன்மீது காதல் கொள்கிறாள். ஆனால், அதைக் கண்ணன் மறுக்கிறான். ராதாமீது மோகம் கொண்டிருந்த ராஜன் தன்னை மணமுடிக்கும்படி அவளை வற்புறுத்துகிறான்.

ராதா கண்ணன்மீது கொண்டிருந்த காதலை அறிந்த ராஜனுக்கு டொக்டர் மீது வெறுப்பு. ஒருநாள் ராஜனின் பிடியிலிருந்து தப்புவதற்காகக் கண்ணனின் வைத்தியசாலைக்குள் தஞ்சமடைகிறாள் ராதா. தண்ணீர் தாகத்தினால் அவள் தவறுதலாக மயக்கமருந்தைப் பருகிவிடுகிறாள். அங்கு வில்லனால் அவள் கெடுக்கப்படுகிறாள். பழி கண்ணன்மீது விழுகிறது. இறுதியில், குற்றத்தை ஒப்புக்கொள்கிறான் வில்லன். இதுதான் ‘நான் உங்கள் தோழன்;’ கதைச் சுருக்கம். கண்ணனாக கணேசனும், ராதாவாக சுபாஷினியும், ராஜனாக லதீப்பும் தோன்றினார்கள்.

அப்பொழுது ‘சிந்தாமணி’ பத்திரிகையில் ‘ஈழத்துத் திரைவானில்’ என்ற பகுதி பிரசுரமாகிவந்தது.

‘பிரபல தொழிற் சங்கவாதியான வீ.பி. கணேசன் திரைப்படங்கள் மூலம் தொழிலாளர்கள் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டிவருகிறார். அவர் புதியகாற்றை அடுத்து ‘நான் உங்கள் தோழனை’ வழங்கியுள்ளார். உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி வாழ்ந்த அரக்க உள்ளங்களை அன்பின் துணைகொண்டு பண்புடன் வென்ற மாவீரனின் இலட்சியக் காவியமே ‘நான் உங்கள் தோழன்’ என்று அந்தச் செய்தி அமைந்திருந்தது. ‘சிந்தாமணி’யில் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றியவர் வீ.ரி. இரத்தினம். இவர் அப்பொழுது இப்படத்தைப் பார்த்துவிட்டுத் தன் அபிப்பிராயங்களை எழுதினார்.

‘….ஈழத்தில் தமிழ்ப்பட வளர்ச்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறுதுபோல் ‘நான் உங்கள் தோழன்’ வந்திருக்கிறது… தொழிலாளர் வர்க்கத்தின் தோழனாக வாழ்க்கையில் உயர்ந்த வீ.பி. கணேசன் திரைப்படம் மூலம் தனது இலட்சியத்தை எடுத்துக் காட்டமுனைந்த செயலே ‘நான் உங்கள் தோழன்.’ .....இலங்கைத் தமிழ்ப் படங்களை முன்னேற்றப் பாடுபட்டுவரும் வீ.பி. கணேசனின் துணிவும் நல்லெண்ணமும் அவருக்கு எதிர் காலத்தில் நல்ல வெற்றிகளைத் தேடித் தரப்போகிறது…. எது எப்படியோ ‘புதியகாற்று’ வாசனையுடன் புறப்பட்ட வீ.பி. கணேசனை ‘நான் உங்கள் தோழன்’ ஒரு படி உயர்த்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை...’ என்று எழுதினார்.

கொழும்பிலிருந்து பல காலமாகும ஒரு சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதுதான் கே.வி.எஸ். மோகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘கதம்பம்’. இந்தச் சஞ்சிகையும் இலங்கைப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதுவும் ‘நான் உங்கள் தோழன்’ பற்றி விமர்சனம் எழுதியது.

‘....வீ.பி. கணேசன் ‘புதியகாற்றை’ விட நன்றாக நடித்துள்ளார். சிங்கள நடிகை ஜெனீடா, தாயாக நடிக்கும் ருக்மணிதேவி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். தனரெத்தினத்தின் பாதிரியார் நடிப்பு அருமை. பண்ணையார் ஜவாஹர் வில்லனுக்குரிய கொடுந்தன்மை முழுவதையும் முகத்தில் தேக்கி மனதில் நிற்கும்படி நிலைத்துவிட்டார். இளம் வில்லன் லத்தீப்பின் நடிப்பில் நயமுண்டு. வயது முதிர்ந்தவராக வரும் கலைச்செல்வன் எம்.எம். ரவூப், நவரச நடிகராக விளங்குகிறார். ராம்தாஸ் மருந்து கலக்குபவராக வந்து பச்சைத் தமிழ் பேசுகிறார். ஜுனியர் சிவலிங்கத்தை நாம் மறக்கமுடியாது. சுபாஷினிகூட உணர்ச்சிகளை அழகாக முகத்தில் காட்டியிருக்கிறாரே! ஏகாம்பரம் சோடைபோகவில்லை.

வாமதேவின் ஒளிப்பதிவு குளிர்ச்சியாக இருக்கிறது. டொக்டருக்குக் கிராமத்தவர் தரும் வரவேற்பு சற்று மிகையானது. வில்லனின் மனமாற்றம் இயற்கையாக அமையவில்லை. இவ்வாறு சில குறைபாடுகள் இருந்தாலும் டைரக்டர் சந்திரன் திறம்பட செய்துள்ளார்’ இவ்வாறு ‘கதம்பம்’ விமர்சனம் எழுதியது.

தினகரனில் அடிக்கடி சினிமாக் கட்டுரைகளை எழுதி வருபவர் எம்.எவ். ஜெய்னுலாப்தீன். அவரும் விமர்சனம் எழுதினார். ‘நான் உங்கள் தோழ’னில் நாடகத்துறை நடிகர்களின் நடிப்பைத்தான் முதலில் பாராட்டவேண்டும். கதாநாயகனும் தயாரிப்பாளருமான வீ.பி. கணேசன் நடிப்பில் புதியகாற்றைவிட முன்னேறியுள்ளார். அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

கே.ஏ. ஜவாஹர், எம்.என். நம்பியாரைப் போல் கிராமத்தை ஆட்டிப்படைக்கிறார். அவர் மகனாக வரும் லத்தீபும் இவருக்குச் சளைத்தவரல்ல என்பதை நடிப்பின் மூலம் நிரூபிக்கிறார். கலைச்செல்வன் சுபாஷினியின் தந்தையாக வந்து சுடர் விடுகிறார். தனரெத்தினம் அசல் பாதிரியாராகவே மாறிவிடுகிறார். ஏகாம்பரம் டொக்டரைக் கெஞ்சும் காட்சியில் அப்ளாஸ் வாங்கிவிடுகிறார். சின்னையா தனது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். சிதம்பரம் முரடன் என்பதைத் தனது உருவ அமைப்பினால் நிரூபித்துள்ளார். ராம்தாஸ், ஜுனியர் சிவலிங்கம், டொன்பொஸ்கோ ஹாஸ்ய வெடிகளைக் கூறியிருக்கிறார்கள். படத்தில் இன்னுமொரு முக்கிய அம்சம் எம்.கே. றொக்சாமியின் இசை அமைப்பாகும். முத்தழகுவும் பாலச்சந்திரனும் இனிமையாகப் பாடியுள்ளார்கள் என்று அந்த விமர்சனம் இடம்பெற்றது.

மித்திரன் வாரமலரில் லக்ஷ்மி அதிகமான இலங்கைத் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். அவரும் விமர்சனம் எழுதினார். கவர்ச்சி மங்கையின் பாத்திரத்தை ஜெனீடா ஏற்றுள்ளார். ராதாவின் உணர்ச்சி மிக்க பாத்திரத்தை ஏற்று சுபாஷினி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். ஜெயதேவியின் நடிப்பும் பரவாயில்லை. நடனமாடும் மங்கையாக சந்திரகலா தோன்றி மேலை நாட்டு நடனம் ஆடுகிறார். ;இவர் பெண் எழுத்தாளர் என்பதால் பெண் பாத்திரங்களை முக்கியமாகக் குறிப்பிட்டார்போலும்.

‘நான் உங்கள் தோழன்’ பெரும் பாலும் மலையகப் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது. ஆனால், அது மலையகத்தைவிட வடகிழக்குப் பகுதிகளிலேயே அதிக நாட்கள் ஓடியது.

இப்படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 55 நாட்களும், தென்கொழும்பில் (பிளாஸா) 27 நாட்களும் ஓடியது.

யாழ் நகரில் (ராணி) 56 நாட்கள் ஓடிய இப்படம் வவுனியாவில் (இந்திரா) 25 நாட்களும், மன்னாரில் (அயின்) 20 நாட்களும், காங்கேசன்துறையில் (யாழ்) 15 நாட்களும், முல்லைத்தீவில் (சிவசோதி) 10 நாட்களும் ஓடியது.

மட்டு நகரில் (றீகல்) 31 நாட்களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 18 நாட்களும், வாழைச்சேனையில் (வெலிங்டன்) 10 நாட்களும் ஓடியது.

திருகோணமலையில் (சரஸ்வதி) 20 நாட்கள் ஓடிய இப்படம் மூதூரிலும் (நியூ இம்பீரியல்) கிண்ணியாவிலும் (ஸ்ரீதேவி) தலா 10 நாட்ள் ஓடியது.

பதுளையிலும் (கிங்ஸ்), ஹட்டனிலும் (விஜிதா) தலா 18 நாட்கள் ஓடிய இப்படம் கண்டியிலும் (ஓடியன்) மாத்தளையிலும் (சென்றல்) தலா 14 நாட்கள் ஓடியது.

1978ஆம் ஆண்டில் முதன் முதலாகத் திரையிடப்பட்ட ‘நான் உங்;கள் தோழன்’ 6 வருடங்களின் பின் மீண்டும் ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டது.

அப்பொழுதும் பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டினார்கள். எது எப்படியோ ‘புதியகாற்று’ திரைப்படத்தில் இருந்த ‘மண்வாசனை’ இப்படத்தில் இருக்கவில்லை. ஜனரஞ்சக அம்சங்கள் நான் உங்கள் தோழனில் மிக அதிகமாகவே இருந்தன. எப்படியாயினும் இரண்டாவது வெற்றிப் படத்தையும் தயாரித்த வீ.பி. கணேசன் பாராட்டுக்குரியவரே.


17. ‘வாடைக்காற்று’
நாவல் திரைப்படமாகியது
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் பிறந்த ஓர் இளைஞனுக்கு சிறுவயது முதலே கலைகள்மீது அதிக ஆர்வம். இரசிகமணி கனகசெந்திநாதன், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்ற கலை உள்ளங்கள் இவ்விளைஞருக்குக் கலை ஆர்வத்தை ஊட்டினர். அரசாங்க உத்தியோகம் பெற்றுக்கொழும்பு வந்த இவ்விளைஞன் குரும்பசிட்டியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் சேர்ந்து ‘கமலாலயம் கலைக்கழகம்’ என்ற மன்றத்தை ஏற்படுத்தினார்.

இம்மன்றம் கொழும்பில் பல நாடகங்களை மேடையேற்றியது. 1976ஆம் ஆண்டில் தமிழ்ச் சினிமாவில் அதிகம் பேர் ஆர்வம் கொண்டிருந்தனர். கமலாலயம் கலைக்கழத்திற்கும் இவ்வாசை ஏற்பட்டது. இவ்வெண்ணத்தைச் செயற்படுத்துவதில் ஒரு குழுவைத் தெரிவு செய்தார்க். அக்குழுவில் இவ்விளைஞர் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவ்விளைஞரின் பெயர்தான் அ.சிவநாதன். தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் பி.சிவசுப்பிரமணியம்.

திரைப்படம் தயாரிப்பதற்கு நல்ல கதையொன்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கதை பற்றி இலக்கிய முன்னோடிகளான இரசிகமணி கனக செந்திநாதன், ஏ.ரி. பொன்னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்றோரிடம் விசாரித்தபொழுது, ‘இப்பொழுது ஈழத்து எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் நூலுருப்பெற்றுள்ளன. அவற்றில் பொருத்தமான கதையொன்றைத் தெரிவு செய்யுங்களேன்’ என்ற அறிவுரை கிடைத்தது. அதற்கிணங்க அ.சிவதாசனும் அவர் மனைவி உஷாசிவதாசனும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈழத்து நாவல்களை வாசித்துப்பார்த்தார்கள். இறுதியில் ‘வீரகேசரி’ பிரசுரமாக வெளிவந்த இரண்டு நாவல்களைத் தெரிவுசெய்தார்கள். ஒன்று ‘பாலமனோகரன்’ எழுதிய, ‘நிலக்கிளி’ மற்றது ‘செங்கை ஆழியான்’ எழுதிய ‘வாடைக்காற்று.’

இலங்கையரும் தென்னிந்தியப் பிரபல திரைப்பட இயக்குநருமான பாலுமகேந்திரா, கலைத்தம்பதிகளான அ. சிவதாசனுக்கும் உஷாதேவி சிவதாசனுக்கும் நெருங்கிய நண்பர். பாலுமகேந்திராவிடம் இவ்விரு நாவல்களையும் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார்கள். ‘நிலக்கிளி’யின் கதாநாயகி பதஞ்சலியின் பாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகையைத் தென்;னிந்தியாவிலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ‘வாடைக்காற்று’ நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப இலகுவாகப் படமாக்கலாம்’ என்று பதில் சொன்னார் பாலுமகேந்திரா. எனவே, ‘வாடைக்காற்று’, நாவலைப்படமாக்க முடிவுசெய்தார்கள்.

எழுத்தாளர் செங்கை ஆழியான் இலங்கையில் அதிகமான நாவல்களை எழுதியவர். அவற்றில் பலவற்றுக்கு சாகித்திய மண்டலப் பரிசு போன்றவை கிடைத்திருக்கின்றன. இவர் எழுதிய ‘வாடைக்காற்று’ 1973இல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்து, ஒரு சில நாட்களுக்குள்ளேயே 5000 பிரதிகளும் விற்பனையாகிவிட்டன. இந்நாவலில் நூலாசிரியர் செங்கை ஆழியான் பின்வருமாறு எழுதியிருக்கிறார். ‘7 ஆண்டுகளுக்கு முன்பு நெடுந்தீவில் சில நாட்கள் தங்கவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் விளைவாகவே ‘வாடைக்காற்று’ நவீனம் பிறந்தது. இது கற்பனையின் இனிய கனவன்று@ காலத்தைப் பிரதிபலிக்காத சமுதாயப் பிடிப்பில்லாத தயாரிப்பான்று. இக்கதையில் வரும் சம்பவங்கள் நிகழக்கூடியனதாகுமா? பாத்திரங்கள் இருக்கக்கூடியனதாமா? என்று சிலர் சந்தேகிப்பின் அவர்களுக்காக நான் இரக்கப்படுவேன். நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் உணர்ந்தவற்றையும் தான் இந்நவீனம் பேசுகின்றது.’ இவ்வாறு செங்கை ஆழியான் எழுதியது போலவே, நாவலும் யதார்த்தம் பொதிந்து விளங்கியது உண்மைதான்.

‘வாடைக்காற்று’க்குத் திரைக்கதை வசனம் யார் எழுதுவது என்று செங்கை ஆழியானிடம் கேட்கப்பட்டது. ‘இன்னொரு பிரபல எழுத்தாளரான செம்பியன் செல்வன், வாடைக்காற்றுக்கான திரைப்பட வசனத்தை ஏற்கனவே எழுதிவைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். திரைக்கதை வசனப்பிரதி திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் கொடுத்துப் பதிவு செய்யப்பட்டது. முதலில் கூட்டுத்தாபனத்தில் ‘ஏ’ பிரிவில் பதிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் ‘பி’ பிரிவில் பதிவு செய்யப்பட்டு தயாரிப்புக்கு 50 சதவீத கடன் உதவி வழங்கப்படும் என்றும் கூட்டுத்தாபனம் கூறியது. ‘கமலாலயம் மூவீஸ்’ என்ற கம்பனி பதிவு செய்யப்பட்டது. திருமதி. உஷா சிவதாசன், ‘பெனின்சுலாக் கிளாஸ் வேர்க்’ உரிமையாளர் ஆர். மகேந்திரன், ‘சீமாசில்க்’ உரிiமாளர் எஸ். குணரெத்தினம் ஆகியோரின் பணஉதவியில் படத்தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகின. தயாரிப்பு நிர்வாகிகளாக ஏ. சிவதாசனும், பி. பாலசுப்பிரமணியமும் தொழிற்பட்டார்கள். படத்தயாரிப்புக்கு ஒரு ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. அதில் ஏ.ரகுநாதன், கே.எம்.வாசகர், சில்லையூர் செல்வராஜன், பி. சிவசுப்பிரமணியம், ஏ. சிவதாசன் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

அப்பொழுது ஒரு தமிழ் இயக்குநர் 50க்கும் மேற்பட்ட இந்தியத்திரைப்படங்களில் டைரக்ஷன் துறையில் கடமையாற்றி இருந்தார். ஹொலிவூட் தயாரிப்பாளர்களுடனும் வேலை செய்திருந்தார். சிங்களத் திரைப்படத் துறையில் முன்னோடியான அவர்தான் பிறேம்நாம் மொறைஸ். இவரையே திரைப்பட இயக்குநராக அந்தக் குழுவினர் தெரிவுசெய்தார்கள். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய இடங்களில் ஒலிப்பதிவு துறையில் அனுபவம் பெற்றிருந்த ஒரு தமிழர் இருந்தார். அவர்தான் இலங்கையில் முதலாவது கலர்ப் படத்தை எடுத்து ஏ.வீ.எம்.வாசகம், இயக்குநரின் ஆலோசனையுடன் இக்குழு இவரை ஒளிப்பதிவாளராகத் தெரிவு செய்தது. இவர்கள் அனைவரினதும் ஆலோசனைப்படி நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்), எஸ்.யேசுரட்ணம் (பொன்னு), ஏ,ஈ. மனோகரன் (செமியோன்), டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), ஏ. பிரான்ஸிஸ் (சவிரிமுத்து), கே கந்தசாமி (சூசை), கே.ஏ.ஜவாஹர் (சுடலை சண்முகம்), எஸ்.எஸ். கணேசபிள்ளை (சிவசம்பு), லடிஸ் வீரமணி(பேயோட்டி), கே. அம்பலவாணர் (யூசுப்), சந்திரகலா (பிலோமினா), ஆனந்தராணி (நாகம்மா), வசந்தா அப்பாத்துரை (திரேசம்மா), ஜெயதேவி (அன்னம்) மற்றும் எஸ். பரராசசிங்கம், சிவபாலன், அன்ரன் ராஜன் லம்போர்ட், பிரகாசம், டிங்கிறிசிவகுரு, நேரு போன்றோர் பாத்திரத்துக்கு ஏற்றவாறு தெரிவுசெய்யப்பட்டார்கள். கலைஞர் வேல் ஆனந்தன், மாலினி விஜயேந்திரா ஆகியோர் நடனமாடினார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ. சிவதாசன், ஒரு சிறந்த நடிகராகவிளங்கினாலும் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகமான படங்களுக்கு தொகுப்புச் செய்த எஸ். இராமநாதன் இப்படத்துக்கான படத்தொகுப்பைச் செய்தார். நடிகர் கே.எஸ். பாலசந்திரனே உதவி டைரக்டர். இலங்கையில் தமிழ் சிங்கள சினிமாத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரீ.எவ். லத்தீப் முதலில் ‘புதிய காற்று’க்கு இசை அமைத்தார். இப்பொழுது ‘வாடைக்காற்று’க்கு இசை அமைத்தார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் இயற்றியபாடல்களை ஜோசப் ராஜேந்திரன், முத்தழகு, சுஜாதா ஆகியோர் பாடினர். திரைக்கதை வசனங்களை கே.எம். வாசகரும் எழுதினார். ஒலிப்பதிவு எஸ். சென்யோன்ஸ், ஒப்பனை செல்வராஜா, சண்டைப்பயிற்சி நேரு, ஸ்டில்ஸ் அருள்தாசன்.

‘வாடைக்காற்று’ ஆரம்பவிழா 10.02.77ல் கொழும்பு கமலாலயம் மூவிஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. வாடைக்காற்றின் கதை பெரும்பாலும் நெடுந்தீவை நிலைக்களனாகக் கொண்டிருந்தாலும் அங்கு சென்று படமெடுப்பது மிகவும் சிரமமானதால் பேசாலையில் படம் பிடிக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பின் பின் பிலிம்சுருள்கள் மெயில்றெயினில் கொழும்புக்கு அனுப்பப்படும். அங்கு கழுவப்பட்ட பின் மறுநாள் பேசாலைக்கு அனுப்பி அங்குள்ள ‘போலின்’ தியேட்டரில் போட்டுப் பார்க்கப்படும். அதன் பின் மேலும் படம்பிடிக்க வேண்டியதைப் பிடிப்பார்கள். இவ்வாறு ஒருமாதம் பேசாலையில் தங்கியிருந்து படப்பிடிப்பு செய்யப்பட்டது. 43 நாட்களில் முழுப்பட வேலைகளும் முடிவடைந்தன.

திரைப்படம் வெளிவருமுன் இசைத்தட்டு வெளிவந்துவிட்டது. பாடல்கள் வானொலியில் ஒளிபரப்பாகின. இலங்கைத் திரைப்படமொன்றின் இசைத்தட்டுக்கள் முதலில் வெளிவந்தன என்ற பெருமையை முதலில் வாடைக்காற்றே பெற்றது. நல்ல விளம்பரத்தின் பின் வாடைக்காற்று 30.03.1978ல் இலங்கையில் பலபாகங்களிலும் திரையிடப்பட்டது.

வருடாவருடம் இலங்கையின் வடபகுதியிலும் கரையூரிலும் மன்னாரிலும் இருந்து மீனவர்கள் பருவநிலைக்கு ஏற்ப நெடுந்தீவுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். கடலை நம்பி வாழும் அவர்களின் வெற்றி தோல்விகள், ஆசாபாசங்கள், தொழில்முறைப் பூசல்கள், கிராமத்துப் பெண்களுடன் அவர்களுக்கு உண்டாகும் காதல், அதன் விளைவுகள் போன்றவற்றை மையமாகவைத்தே கதை பின்னப்பட்டுள்ளது.

‘வாடைக்காற்றைப் பற்றி பலர் விமர்சித்தார்கள். அப்பொழுது ‘பைலட் பிறேம்நாத்’ படத்துக்காக இலங்கை வந்திருந்த நடிகர் மேஜர்சுந்தரராஜன் தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.

‘வாடைக்காற்று திரைப்படத்தைப் பார்க்கும்பொழுது, சிறந்த யதார்த்தபூர்வமான படத்தைப் பார்த்த மனத்திருப்தி எனக்கு ஏற்பட்டது. சுடலை சண்முகம் (ஜவாஹர்) விருத்தாசலம் (பாலச்சந்திரன்) மரியதாஸ்(இந்திரகுமார்) பொன்னு(யேசுரெத்தினம்) ஆகியோரின் பாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. இரண்டு பாடல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் சர்வதேசரீதியாக எங்கேயும் திரையிடக்கூடிய அற்புதப்படைப்பு.... சர்வதேசப்பரிசு பெறக்கூடிய ஒரு தமிழ்ப்படம் இலங்கையிலிருந்து நிச்சயம் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

நான் எழுதிய விமர்சனம் தினகரனில் (25.04.78) வெளிவந்தது. ‘நாவலின் உயிரோட்டங்களைப் புரிந்துகொண்டு நாவல்வாசகனும், திரைப்பட ரசிகனும் வேறுபாடு காணாத அளவுக்கு திரைப்படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர் பிறேம்நாத் மொறைஸ்...’ என்று எழுதினேன். வீரகேசரியில் (27.03.78) அதன் வாரவெளியீட்டு ஆசிரியர் பொன் இராஜகோபால் நீண்ட விமர்சனம் எழுதினார்.

‘....வீரகேசரி’ பிரசுரமான ‘வாடைக்காற்று’ நாவல் வாசகர் மத்தியில் பெரும்வரவேற்பு பெற்றது. இப்பொழுது படமாகி வெற்றிகண்டுள்ளது. படமாக்கியவர்கள் மண்வாசனையையும் தனித்துவத்தையும் பேணமுற்பட்டதால் இப்படம் வெற்றியாய் அமைந்துள்ளது. பொருத்தமான நடிகர் தெரிவு, யதார்த்தம் குன்றாத நெறியாள்கை, தனித்துவமான பாணி போன்றவை இப்படத்தின் வெற்றியாகும். வர்த்தகபாங்கிலான வலிந்து புகுத்தப்பட்ட சில காட்சிகளும் இருக்கின்றன.... சகல ரசிகர்களையும் திருப்திப்படுத்தி ஓடக்கூடிய தகைமை இப்படத்துக்கு உண்டு’ என்று எழுதினார்.

சிந்தாமணியில் (09.04.78) கு.ம. சுந்தரம், ‘ஆனந்த விகடன்’ பாணியில் விமர்சனம் எழுதினார்.... கமலாலயம் கலைக்கழகம் தந்த நடிகர்க்ள படத்தில் நன்றாக சோபித்தார்க். ஜவாஹர், லடீஸ் வீரமணி, வசந்தா ஆகியோர் தம்பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளார்கள். மனோகரன் இந்திரகுமார் ஆகியோரைவிட பாலச்சந்திரனே மனதில் நிற்கிறார். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் இயற்கையாக இருக்கின்றன. சிறப்பாக நடித்திருப்பவர் யேசுரட்ணம்தான். அவர் நடிப்பில் நிறைந்து நிற்கிறார். தந்தை பிரான்ஸிஸ்ஸைவிட தாய் வசந்தா சிறப்பாக நடித்துள்ளார். ஜவாஹரும் லடீஸ்வீரமணியும் நன்றாக நடித்துள்ளார்கள். நடிகர்களில் 10 பேரைத் தெரிவுசெய்தால் அவர்களுக்கு பின்வருமாறு புள்ளி வழங்கலாம்.

1. எஸ். யேசுரட்ணம் - 65

2. கே. எஸ். பாலந்திரன் - 60

3. கே.ஏ. ஜவாஹா – 58

4. வசந்தா அப்பாத்துரை – 56

5. லடீஸ்வீரமணி – 50

6. ஏ.ஈ. மனோகரன் - 45

7. சந்திரகலா – 40

8. ஆனந்தராணி – 35

9. எஸ்.எஸ். கணேசப்பிள்ளை – 28

10. இந்திரகுமார் – 30

என்று புள்ளி வழங்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மல்லிகை (01.04.78)யில் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் விமர்சனம் எழுதினார்.... சினிமாவுக்காக நாவலில் சில இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தபோதிலும், அடிப்படைக்கு சிதறாமல் படமாக்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். யேசுரட்ணமும் பாலச்சந்திரனும் திறமையாக நடித்துள்ளனர். ஜவாஹர் மிகையாக நடிக்க முனைந்துள்ளார். லடிஸ் வீரமணியின் நடிப்பில் பரம்பரை நடிகனின் குழைவு தெரிகிறது. மற்றவர்களும் பாத்திரங்களை உணர்ந்து செய்கிறார்கள்.... மணல் காட்டையும் பனங்கூடலையும் கிடுகுக் கொட்டில்களையும் பின்னணியாக வைத்துக்கொண்டு இப்படியொரு அழகை பிலிம் சதுரத்துக்குள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சிரமப்பட்டு தமது கடமைகளைச் செய்துள்ளனர். குடாநாட்டுப் பேச்சுத்தமிழ் கதையோட்டத்துடன் இயற்கையாக அமைகிறது.... படத்தின் வெற்றிக்கு வலுவான கதையும் பொருத்தமான பாத்திரங்களுமே முதற்காரணம் என்பதை நம்நாட்டுச் சினிமாத் துறையினர் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்’ என்று அறிவுரை கூறி எழுதினார்.

இப்படம் மத்திய கொழும்பில் (கெயிட்டி) 21 நாட்களும், தென்கொழும்பில் (கல்பனா) 8 நாட்களும் ஓடியது. யாழ்நகரில் (ராணி) 41 நாட்களும், வவுனியாவில் (ஸ்ரீமுருகன்) 20 நாட்களும், பேசாலையில் (போலின்) 21 நாட்களும், கிளிநொச்சியில் (ஈஸ்வரன்) 18 நாட்களும் ஓடியது. திருமலை நகரில் (சரஸ்வதி) 20 நாட்களும், மூதூரில் (இம்பீரியல்) 8 நாட்களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 18 நாட்களும், செங்கலடியில் (சாந்தி) 18 நாட்களும் ஓடிய இப்படம் மட்டக்களப்பில் (றீகல்) 7 நாட்களும் மட்டுமே ஓடியது. மலையகத்தில் ஹட்டனில் (லிபேர்ட்டி) 12 நாட்களும் ஓடிய இப்படம் பண்டாரவளையிலும் (மொடொர்ன்), மாத்தளையிலும் (தாஜ்மஹால்) தலா 10 நாட்கள் ஓடியது. வருடா வருடம் இலங்கைத் திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு ஜனாதிபதி பரிசு வழங்கப்பட்டு வந்தது. 78இல் தமிழ்ப் படம் ஒன்றுக்குப் பரிசு கிடைத்தது. அவ்வாண்டில் சிறந்த தமிழ்ப் படமாக ‘வாடைக்காற்று’ தெரிவுசெய்யப்பட்டது. இப்படத்தில் நடித்த யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆறு வருடங்களின் பின் (27.06.84) ரூபவாஹினியில் ‘வாடைக்காற்று’ திரைப்படத்தைப் பகுதி பகுதியாக ஒளிபரப்பினார்கள். வழமையைப்போல, சிந்தாமணியில் ‘சஞ்சயன்’ விமர்சனம் எழுதினார். தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தின்போது, இலங்கை தமிழ்த் திரைப்படங்கள் அதிக நாட்கள் ஓடாது தோல்வியைத் தழுவின. இன்று அப்படங்களை ரூபவாஹினியில் பார்க்கும்போது ‘நன்றாகத்தானே இருக்கிறது’ என்று கூறும் கருத்துகளைக் கேட்கமுடிகிறது.

வாடைக்காற்றில் இயற்கையான நடிப்பும் நடையுடை பாவனைகளும் இதயத்தைத் தொடுகின்றன. யேசுரட்ணமும் ஜவாஹரும் நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். வசந்தாவின் நடிப்பு மீனவ சமுதாயத்தில் நாம் காணும் ஒரு பெண்ணையே நம் கண் முன்னே காட்டுகிறது. பாலச்சந்திரனும் ஆனந்தராணியும் பாத்திரமுணர்ந்து செய்துள்ளனர்.

‘….இதுவரை இலங்கை சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைந்திருக்கிறது ‘வாடைக்காற்று’ என்று எழுதினார்.

படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெறவில்லை. இது ஒழுங்கு, கட்டுப்பாடு, திட்டமிட்ட அடிப்படையில் உருவான புது முயற்சி. இம்முயற்சியை மேற்கொண்ட கமலாலயம் மூவீசாருக்கு இலங்கை ரசிகர்கள் என்றும் நன்றியே சொல்லவேண்டும்.


18. ‘தென்றலும் புயலும்’
டொக்டர் தயாரித்த படம்
திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்.

அந்த டொக்டர்தான் எஸ்.ஆர். வேதநாயகம். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘தென்றலும் புயலும்’.

இந்த டொக்டருக்குத் திருகோணமலையிலுள்ள ஒரு வங்கி மனேச்சர் கூட்டாளி. வங்கி மனேஜருக்கு ஓரளவு நடிகர் முத்துராமனின் முகச்சாயல். அதனால், இவருக்கும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை டொக்டர் நிறைவேற்றினார். பி.எஸ்.சி. பட்டதாரியான அந்த பேங் மனேஜரின் பெயர்தான் சிவபாதவிருதையர்.

திருகோணமலையில் மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்து வந்தவர் அமரசிங்கம். அவரும் இப்படத்தில் நடிப்பதற்காகச் சேர்ந்து கொண்டார். கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய சாம்பசிவமும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

திருகோணமலை, மூதூர் ஆகிய பகுதிகளில் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்தான் ‘தென்றலும் புயலும்’ இதன் கதையையே திரைப்படத்துக்கு ஏற்ற திரைக்கதையாக அமைந்த வசனம் எழுதினார் டொக்டர் வேதநாயகம்.

டொக்டர் வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் அனைவரும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு வந்தார்கள்.

இவர்கள் தங்கள் படத்தை இயக்கக்கூடிய நல்ல இயக்குநரைத் தேடினர். மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்களத் திரை உலகில் ஒளிப்பதிவுத் துறையில் புகழ்பெற்று விளங்கினார். 50 சிங்களத் திரைப்படங்களுக்கும் ஐந்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து முடித்திருந்தார். அவர்தான் எம்.ஏ. கபூர். அவரை இப்படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குநர் ஆக்கினார்கள்.

பி.எஸ். நாகலிங்கம் என்ற இளைஞர் நீண்ட நாட்களாகவே இலங்கைத் திரைப்பட உலகில் பல்வேறு துறைகளில் கடமையாற்றி வந்தார். அவரே இப்படத்துக்கு உதவி இயக்குநராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் மேடை நாடகங்களிலும் சில சிங்களப் படங்களிலும் நடித்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் ‘புதியகாற்று’ மூலம் அறிமுகமாகி நல்ல பெயர் பெற்றிருந்தார். திடகாத்திரமான உடலும் திரைக்கேற்ற முகவெட்டும் கொண்ட இவ்விளைஞர்தான் டீன்குமார். இவருக்கும் இப்படத்தில் நல்ல பாத்திரம் வழங்கப்பட்டது.

டொக்டர் வேதநாயகம் நடிகைகளைத் தேடினார். அப்பொழுது கொழும்பில் சந்திரகலாவும் ஹெலன் குமாரியும் பிரபல நடிகைகளாக விளங்கினார்கள். தாய்ப்பாத்திரத்துக்கு செல்வம் பெர்னாண்டோ பொருத்தமானவர். இவர்கள் மூவரும் இப்படத்துக்கு ஒப்பந்தமானார்கள்.

இவர்களுடன் கே.ஏ.ஜவாஹர், எஸ்.என்.தனரெத்தினம், கந்தசாமி, ஜோபுநஸீர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

‘நிர்மலா’ என்ற படத்துக்கு இசை அமைத்ததன்மூலம் திருகோணமலை இசைக்கழகத்தைச் சேர்ந்த ரீ.பத்மநாதன் நல்லபெயர் வாங்கியிருந்தார். அவரே தென்றலும் புயலும் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கும் இசை அமைத்தார். கவிஞர் சண்முகப்பிரியா இயற்றிய இப்பாடல்களை முத்தழகு, பேர்டின் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினர். படத்தொகுப்பு அலிமான், கலை – சத்தியன்.

படப்பிடிப்பு திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயம், கடற்கரை, மூதூர்ப்பகுதி போன்ற இடங்களில் நடைபெற்றது.

ராஜேஸ்வரி பிலிம்ஸ், ‘தென்றலும் புயலும்’ திரைப்படம் 12.4.1978இல் இலங்கையில் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது.

ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கடமை உணர்ச்சி மிக்கவன். இளையவன் செல்லபிள்ளை. நாகரீக மங்கையொருத்திக்கு அடிமையாகி வாழ்க்கையின் கீழ் மட்டத்துக்கு வருகிறான். மூத்தவன் காதலிக்கு பெண்ணைத் தாயின் நன்மைக்காகத் திருமணம் செய்யாமல் வாழ்கிறான். வறுமையால் வீடு வாடுகிறது. குருடனாகிப் போய்விட்ட தம்பி அண்ணனைக் குத்திவிடுகிறான்.

வீட்டு வேலைக்காரன் தன்னைத் தானே கட்டுவிட்டுத்தன் இதயத்தை எஜமானுக்குப் பொருத்தும்படி குறிப்பிடுகிறான். வளர்ப்புமகன் டொக்டராக வந்து இதயமாற்றுச் சிகிச்சை செய்து எஜமானைச் சுகதேகியாக்கிவிடுகிறான்.

இதுதான் ‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

‘பறாளையூர் பிறேமகாந்தன்’ இலங்கைக் கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது, திரைப்படங்கள் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறாh. பல சஞ்சிகைகளை நடத்தியிருக்கிறார். 1978ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ‘மின்விழி’ என்ற சஞ்சிகையை நடத்திவந்தார். அந்தச் சஞ்சிகையின் மேமாத இதழைத் ‘தென்றலும் புயலும்’ திரைப்படச் சிறப்பு மலராக வெளியிட்டார். அதில் ‘நெஞ்சின் அலைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.

‘…..1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் பொழுதே ‘நான் உங்கள் தோழன்’ திரையிடப்பட்டுப் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. சென்ற மாதம் ‘வாடைக் காற்று’ வந்தது. அதைத் தொடர்ந்து ‘தென்றலும் புயலும்’ புத்தாண்டுப் பரிசாக வந்திருக்கிறது. எங்கள் கலை வாழவேண்டும்@ எமது கலாசாரமும் வளரவேண்டும்@ அதனால், தமிழ்மொழி உயரவேண்டும். இந்த உயரிய நோக்கத்தோடு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ‘தென்றலும் புயலும்’ படத்துக்கு ஆதரவு தரவேண்டும்’ என்று எழுதியிருந்தார்.

மற்றப் படங்களைப் போல் தென்றலும் புயலும் படத்துக்கு அதிகம் பேர் விமர்சனம் எழுதவில்லை. வீரகேசரியில் (23.04.78) ‘டி.ஆர்.டி.’ விமர்சனம் எழுதினார்.

‘….ராஜேஸ்வரி பிலிம்ஸ் வேதாவின் ‘தென்றலும் புயலும்’ படத்தில் கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டு நடிக்கிறார்கள். தென்னகப் படங்களுக்கு நிகராக மலையகத்து எழிற்காட்சிகளை படமாக்கி, கபூர் மனதைக் குளிரவைக்கிறார். பாடல்களும் பாடல் காட்சிகளும் நன்றாக இருக்கின்றன. வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் ஆகியோர் படத்தை ஆக்கிரமித்திருந்தாலும், டீன்குமார் ஒரு சில காட்சிகளில் தோன்றி மனத்தில் நிற்கிறார். ஜவாஹர் வழக்கம்போல் வந்து தனது பங்கைச் செலுத்துகிறார். தனரெத்தினம், ஜோபுநஸீர், கந்தசாமி, சாம்பசிவம் ஆகியோர் தோன்றி மறைகின்றனர். நடிப்புக்கு இலக்கணம் கூறித் திகைக்க வைக்கிறார் செல்வம் பெர்னாண்டோ. இசை கதைவசனம் பரவாயில்லை. நடிகைகள் பஞ்சம் என்று கூறுபவர்கள் இப்படத்தைப் பார்ப்பது நல்லது.

இலங்கைப் படம் என்ற வகையில் குறைகளை மறந்து ரசிகர்கள் ஆதரவளிப்பது நமது கடமையாகும், என்று அந்த விமர்சனம் முடிவடைகிறது.

இது பெரும்பாலும் திருகோணமலைக் கலைஞர்கள் உருவாக்கிய படம் என்பதால் திருகோணமலையில் மற்ற இடங்களைவிட அதிக நாட்கள் ஓடியது.


இப்படம் ஓடிய இடங்களும் நாட்களும்:-
மத்திய கொழும்பு (கெபிடல்) 9 நாட்கள்
தென்கொழும்பு (ஈரோஸ்) 7 நாட்கள்
யாழ்ப்பாணம் (லிடோ) 15 நாட்கள்
திருகோணமலை (லக்சுமி) 30 நாட்கள்
மட்டக்களப்பு (விஜயா) 12 நாட்கள்
மன்னார் (குமரன்) 12 நாட்கள்
அக்கரைப்பற்று (சாரதா) 14 நாட்கள்
வாழைச்சேனை (ஈஸ்வரி) 14 நாட்கள்
நீர்கொழும்பு (மீபுரா) 7 நாட்கள்

இந்தப் படத்துக்கும் மூதூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், அங்கு இப்படம் 4 நாட்கள் மட்டுமே ஓடியது.

1978ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி பரிசு இப்படத்தில் நடித்த செல்வம் பெர்னாண்டோவுக்குக் கிடைத்தது.

இப்படியான ஒரு கலைமுயற்சியில் ஈடுபட்ட டொக்டர் வேதநாயகம் 29-07-93இல் காலமானார். அவர் மறைந்தாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவரது பெயர் என்று மறையாது.


19. ‘தெய்வம் தந்த வீடு’
மலையகத்தில் ஹட்டன் நகரில் பிரபல வர்த்தகர் ஒருவர் இருந்தார். ஹட்டன் ‘லிபேர்டி’ தியேட்டரும் இவருக்குச் சொந்தமானதே. கலைகளில் பற்றுமிக்க இவர். தனது தியேட்டரிலேயே இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட்டு அவற்றுக்கு ஆதரவு வழங்கி வந்தார். தானும் இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசை.

‘கடமையின் எல்லை’, ‘நிர்மலா’ படங்களுக்குப்பின் தானும் ஒரு படம் யாராவது உதவியுடன் தயாரிக்க வேண்டும் என்று கலைத்தாகத்துடன் நின்றார் ஏ. ரகுநாதன்.

அந்த வர்த்தகரும் இந்த ரகுநாதனும் சந்தித்துக் கொண்டார்கள். வழமையைவிட வித்தியாசமான முறையில் பிரமாண்டமான அமைப்பில் தமிழ்த் திரைப்படம் தயாரிக்கலாம் என்று தீர்மானித்தார்கள். படவேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி ரகுநாதனுடன் சேர்ந்து திரைப்படம் தயாரிக்க முன்வந்த அந்த வர்த்தகரின் பெயர்தான் வீ.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை. அந்தப் படத்தின் பெயர்தான் ‘தெய்வம் தந்த வீடு.’

படத்தின் கதை தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள பல கோயில்களில் படப்பிடிப்பு நடைபெறவேண்டும். இதுவரை வெளிவந்த மற்றப் படங்களைவிட வித்தியாசமான அமைப்பில் இருத்தல் வேண்டும். அதாவது அகலத்திரையில் (சினிமாஸ்கோப்) படம் அமைய வேண்டும் என்று பல திட்டங்களைப் போட்டார்கள்.

தில்லானா மோகனாம்பாளின் அருட்டுணர்வின் காரணமாகவோ என்னவோ, நாதஸ்வரக் கலைஞன் ஒருவனும் நாட்டியக்காரி ஒருத்தியும் காதல் கொள்ளும் கதையை ரகுநாதன் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். இதற்கான திரைக்கதை வசனத்தை ஏ. ஜுனைதீன் எழுதினார்.

‘நீண்ட காலமாகும எனக்கிருந்த படம் தயாரிக்கும் ஆசைக்கு ரகுநாதனின் நல்ல கதை உற்சாகத்தைத் தந்தது. உடனே படத்தைத் தொடங்கத் தீர்மானித்து விட்டேன்’ என்று ஆரம்பத்தில் பேட்டியளித்தார் பொன்னுசாமிப் பிள்ளை. இந்தியாவில் பிரபல திரைப்பட இயக்குநர்கள் பி. நீலகண்டன், பி.மாதவன் ஆகியோருடன் இணைந்து கடமையாற்றினார் ஓர் இலங்கையர்; பல சிங்களத் படங்களையும் இயக்கியிருக்கும் இவர்தான் வில்பிரட் சில்வா. இவரை இப்படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

பி.எஸ். நாகலிங்கம் என்ற கலைஞர் சினிமாத்துறையில் பல காலமாகவே ஈடுபட்டு வந்தார். பல படங்களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றியிருக்கிறார். இவரை இப்படத்துக்கு இணை டைரக்டராக நியமித்தார்கள்.

எம்.ஏ. கபூரை ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக்கொண்டார்கள். இது இவருக்கு 6வது தமிழ்ப்படம்.

ஏ. ரகுநாதன் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குமுதினி (றேலங்கி செல்வராஜா) என்ற புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மற்றும் டீன்குமார், எஸ்.என். தனரெத்தினம், கே.ஏ. ஜவாஹர், விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்புலட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்ஸிஸ், முத்துசாமி, சிவபாலன், கண்ணன், ஏ.நெயினார், மனோகரி, தேவராஜ், ரெமீஜியஸ், சிவாஸ்கர், அரியதாஸ், சுதுமலை தம்பிராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவர்களுடன் யாழ்ப்பாணத்தில் நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலையரசு சொர்ணலிங்கம், பூந்தான் ஜோசப், நடிகமணி வி.வி. வைரமுத்து ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் சேர்க்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இப்படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். எம்.கே. றொக்சாமி, கண்ணன், நேசம்தியாகராசா ஆகிய மூவருமே அவர்கள்.

வீரமணிஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதர் ஆகியோர் பாடினர். பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே. பத்மநாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்க்கப்பட்டது. ஒலிப்பதிவு சென்ஜோன்ஸ்@ ஒப்பனை – சுப்பு@ தொகுப்பு – அலிமான்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஓவிய ஆசிரியர் செ. சிவப்பிரகாசம். கலைநிர்மாணத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற படப்பிடிப்புகளுக்கு ஸ்ரில் போட்டோக்களை யாழ் பிரபாபோட்டோ உரிமையாளர் தியாகராஜா எடுத்தார்.

‘லிபேர்டி பிலிம்ஸ்’ வி.கே.டி. பொன்னுசாமிப் பிள்ளை தயாரிக்கும் ‘தெய்வம்தந்தவீடு’ (சினிமாஸ்கோப்) திரைப்படத்தின் தொடக்க விழா 16.09.1977இல் பம்பலப்பிட்டி மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஆரம்பமாகியது.

அப்பொழுது மஸ்கேலியா – நுவரெலியா மூன்றாவது எம்.பியாக விளங்கிய எஸ். தொண்டமான் அவர்கள் கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். நடிகர் எஸ்.என். தனரெத்தினம் கிளாப் அடிக்க, ஒளிப்பதிவாளர் கபூர் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார்.

யாழ்ப்பாணத்தில் 28.10.77 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. படப்பிடிப்புகள் பல வீடுகளில் நடைபெற்றன. யாழ் 2ஆம் குறுக்குத் தெருவில் உள்ள ‘பொன்மீன்’ இல்லம், இணுவிலில் துரையின் இல்லம், இப்படிப் பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

பல்வேறு சைவக் கோவில்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. நயினாதீவு நாகபூஷணி அம்மன், மாவிட்டபுரம் கந்தசாமி, செல்வச்சந்நிதி, மானிப்பாய் மருதடிவிநாயகர், ஆனைக்கோட்டை மூத்தநயினார். பறாளை முருகன், சண்டிலிப்பாய் இரட்டையபுலம் வைரவர், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார், நல்லூர் கந்தசாமி, நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார், கதிர்காமம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் மற்றும் கொழும்பு ஹட்டன் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவு நடைபெற்றது.

வீரமணி ஐயர் இயற்றி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாடிய ‘நாதர் கேட்குதடி நல்லூர்நாதம் கேட்குதடி’ என்ற பாடல் இடம்பெற்றபோது இந்தக் கோயில்கள் காட்டப்பட்டன. ஒரு மாதத்திலேயே படத்தின் பெரும்பகுதி நிறைவு பெற்று விட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் (14.07.1978) படம் திரைக்கு வந்தது.

வேணுகோபால் ஒரு நாதஸ்வரக்கலைஞன். அவனுக்கு ஒரு நாட்டியக்காரிமீது (ஜானகி) காதல். ஆனால், நாட்டியக்காரிக்கோ கலைமீது காதல், நாதஸ்வரக்கலைஞன்மீது அவனுடைய மைத்துனிக்கு (சந்திரா) காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்கு (கிருஷ்ணன்) நாதஸ்வரக்கலைஞனி மைத்துனிமீது காதல். இந்தக் காதல்களினால் ஏற்படும் மோதல்கள்தான் இப்படத்தின் மூலக்கதை. வேணுகோபாலனாக ஏ. ரகுநாதனும் கிருஷ்ணனாக டீன்குமாரும் நடித்தனர். ஜானகியாகப் புதுமுகம் குமுதினியும், சந்திராவாக, சந்திரகலாவும் தோன்றினர். சிந்தாமணியில் (23.07.78) இப்படத்துக்கான விமர்சனம் வந்தது.

‘சினிமா ரசிகர்கள் பல்வேறுதரப்பட்டவர்கள். எல்லோரையும் கூட்டுமொத்தமாகத் திருப்திப்படுத்தமுடியாது. அதற்காக ஒரு படத்திலேயே எல்லாத்தரத்தினருக்கும் பிடித்தமான காட்சிகளைத் திணித்தார் எப்படி இருக்கும்? ‘தெய்வம்தந்தவீடு’ படம் மாதிரி இருக்கும்.

‘உலகத்திலேயே தமிழில் வெளியான முதலாவது கறுப்பு வெள்ளை சினிமாஸ்கோப்பு’ என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் இப்படம், பல்வேறு சுவைகள் ஒன்று சேர்ந்த விசித்திரச் சுவையாகக் காட்சி தருகிறது.

படம் அங்கும் இங்கும் இழுபட்டுச் செல்கிறது. ஆரம்பத்திலும் கோயில் வருகிறது. இறுதிக்காட்சியிலும் கோயில் வருகிறது. கதையுடன் சம்பந்தப்படாவிட்டாலும், இலங்கையின் பிரபல சைவ ஆலயங்களின் காட்சிகள் புகுத்தப்பட்டுள்ளன.

மேடை நாடகம் ஒன்றில் காட்சி அமைவதுபோல் இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் நத்தை வேகத்தில் நகர்கிறது. கதாநாயகன் பாத்திரத்தில் ரகுநாதன் பூரண வெற்றி பெறாவிட்டாலும் நாதஸ்வரத்தை வாசிப்பதுபோல் பாவனை காட்டும்போது அசல் நாயனக்காரராகவே மாறிவிடுகிறார்.

கதாநாயகி பிரயாசையுடன் நடிக்க முயன்றிருக்கிறார். ஆமினாபேகத்தின் குரல் நடித்த அளவுக்கு குமுதினியின் முகம் நடிக்கவில்லையே. சந்திரகலா தனது பங்கை நன்றாகச் செய்துள்ளார். சுப்புலட்சுமி காசிநாதனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

வில்லன் டீன்குமார் கலகலப்பாக வந்துபோகிறார். அப்பாவியாக வரும் விஸ்நாதராஜாவுக்கு வேடப்பொருத்தம் பிரமாதம். ஆனால், நடிப்பு சற்று ஆவர். எஸ்.என். தனரத்தினம் உடையாராக வருகிறார். ஜவாஹரின் நடிப்பு வழக்கம்போல் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஜெயதேவி தொடைகாட்டும் கவர்ச்சித்தாரகையா அல்லது நகைச்சுவை நடிகையா என்று புரியவில்லை. அவருடன் ஏ. நெயினாரும் வேறு பாத்திரங்கள் ஒரே குவியல். சம்பவங்களும் ஒரே அவியல், சண்டைக்காட்சி நகைச்சுவைக்காட்சியாகிவிட்டது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது மனதில் பதிந்திருப்பது என்.கே. பத்மநாதனின் நாதஸ்வர இசை ஒன்றுதான்’ என்று அமைந்தது அந்த விமர்சனம்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ (31.07.78) பத்திரிகையில் ‘உதயவாணன்’ என்ற வாசகர் விமர்சனம் எழுதியிருந்தார்.

‘…..இப்பொழுதெல்லாம் காரணமில்லாமல் பெயர் வைப்பது சகஜமாகிவிட்டது. உதாரணம் தெய்வம் தந்த வீடு. சிறந்த படம் என்று கூறமுடியாவிட்டாலும் சிறந்த முயற்சி. ரகுநாதனிடம் ஆர்வமும் திறமையும் இருக்கிறது. ஆனால், அவரது தோற்றம் ஒத்துழைக்கவில்லையே. நடிப்பில் குமுதினியைவிட சந்திரகலா பரவாயில்லை. ஆனால், நடனமாடும்போது குமுதினி ஜொலிக்கிறார். இதுவரை வந்த ஈழத்து நடிகைகளில் குமுதினி அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். ஆனால், இவற்றைத் தவிர, நடிப்பு முக்கியமானதல்லவா?

சந்திரகலாவும் சுப்புலட்சுமியும் சோகக் காட்சிகளில் நன்றாக எடுபடுகிறார்கள். ஜவாஹரும் தனரெத்தினமும் டீன்குமாரும்தான்.

சாந்தி தியேட்டரில் (யாழ்ப்பாணம்) அனைத்துப் பாத்திரங்களின் முகங்களும் உடல்களும் நீளமாகத் தெரிகின்றனவே என்றும் எழுதினார் இந்த வாசகர்.

‘சினிமாஸ்கோப்’ இல்லாமல் சாதாரண படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் இப்படியான பிரச்சினை ஏற்பட்டிருக்காது. சாதாரணப் படங்களே ஒழுங்காக வளரவில்லை. அதற்குள் ‘சினிமாஸ்கோப்’ தேவைதானா என்று அப்பொழுது பலர் சொன்னார்கள்.

இலங்கை வானொலி மாதாமாதம் வெளியிட்டுவந்த சஞ்சிகையின் பெயர் ‘வானொலி மஞ்சரி’ அப்பொழுது வானொலி நிலையத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரன் அறிவிப்பாளராகக் கடமையாற்றினார். பத்திரிகை, நாடகம், சினிமா போன்றவற்றில் ஈடுபாடுடையவர். இவரும் இப்படத்தைப்பற்றி ‘வானொலி மஞ்சரி’யில் விமர்சனம் எழுதினார்.

‘ஆசை யாரை விட்டது? ஏ. ரகுநாதனை விட்டு வைக்குமா? ‘தெய்வம்தந்த வீடு’ திரைப்படத்தில் கதாநாயகனாக ரகுநாதன் நடித்திருக்கிறார். ‘கலைஞர்கள் ஒவ்வொருவரும் விமர்சகர்களாக இருக்கவேண்டும்’ என்பார்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘கடமையின் எல்லை’ வெளிவந்தபோது, ரகுநாதனின் உடலமைப்பும் முகவெட்டும் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று……

பல கோயில்களின் பெயர்களையும் நடிகர்களின் பெயர்களையும் கொண்டு இப்படத்தை விளம்பரப்படுத்தியதற்குப் பதிலாக ‘மாயா ஜாலம் நிறைந்த’ ஒரு மர்மச் சித்திரம்’ என்று விளம்பரப்படுத்தியிருக்கலாம்.

யாழ்ப்பாண தமிழ் பேசக்கூடிய ஒருவரேனும் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இல்லையா? இது ஒரு மாயாஜாலம்.

கதாநாயகன் ஒரு நாதஸ்ர மேதை. இவன் நாட்டியக்காரி ஒருவரைக் காதலித்துத் தோல்வி கண்டதால் 4 ஆண்டுகள் நாதஸ்வரத்தைத் தொடாமல் குடிபோதையில் விழுகிறான். நாதஸ்வர மேதையின் அத்தையின் மகள் சந்திரகலா, அவளுக்கு நாதஸ்வர மேதையின்மேல் காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்குச் சந்திரகலாமீது காதல்.

டீன்குமார், சந்திரகலா தன்னைத் திருமணம் செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறார். அது முடியாமல் போகவே பலாத்காரத்தில் இறங்கிவிடுகிறார். இறுதியில் பெண்மை வென்றுவிடுகிறது. வில்லனின் தலையில் இரத்தம் வடிகிறது. ‘உன்குடும்பத்திலும் இப்படி இரத்தம் சிந்தவைப்பேன்.’ இது வில்லனின் சபதம்.

நான்கு வருட இடைவெளிக்குப் பின் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதற்கு மேடை சம்மதிக்கிறார். ஆனால், இதே கோயிலில் நாட்டியக்காரியின் நடனம் இடம்பெறும் என்று கேள்விப்பட்டதும், ஒரு மூலையில் போய் ஒதுங்கிவிடுகிறார். நாட்டியக்காரி அவரிடம்போய் சில தத்துவங்களைச் சொன்னதும் அவர் சம்மதிக்கிறார்.

நாதஸ்வர இசைக்கு நாட்டியம் நடைபெறுகிறது. சனக்கூட்டத்துக்குள் வில்லனும் துப்பாக்கியோடு வந்து நிற்கிறான். நாதஸ்வர மேதையைக் குறிபார்த்து ஒருமுறை சுடுகிறான். ஆடிக்கொண்டிருந்த நாட்டியக்காரி நாதஸ்வர மேதையின் காலடியில் விழுந்து சாகிறாள். நாதஸ்வர மேதை இன்னும் நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்தவில்லை. அவரின் வாயாலும் நாதஸ்வரத்தாலும் இரத்தம் பாய்கிறது (இது அடுத்த மாயாஜாலம்) நாதஸ்வர மேதை நாட்டியக்காரியின்மேல் விழுந்து சாகிறார்.

இந்த மாயா ஜாலங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைகிறது இந்தப் படத்தின் பெயர். ….நகைச்சுவை என்ற பெயரில் நான்கைந்து பேர் அடிக்கும் கொட்டம், சில வேளைகளில் ஆபாசமாகவும் அபத்தமாகவும் தெரிகிறது.

ஓர் அரைக்கிறுக்குப் பாத்திரத்தில் விஸ்வநாதராஜா நடிக்கிறார். இவரது நடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. ஜவாஹரின் நடிப்புப் பரவாயில்லை. தனரெத்தினம் வெகுசீரியசாக நடிக்கிறார். மேலும் குறிப்பிடும்படியாக இந்தப் படத்தில் வேறு எதுவும் கிடையாது.’

இப்படி வித்தியாசமான முறையில் எழுதினார் ஜோர்ஜ் சந்திரசேகரன்.

‘தெய்வம்தந்தவீடு’ யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிக நாட்கள் ஓடியது. தயாரிப்பாளரின் சொந்தத் தியேட்டரான ஹட்டன் லிபேட்டியிலும் 16 நாட்கள் மட்டுமே ஓடியது.


‘தெய்வம்தந்தவீடு’ ஓடிய இடங்களும் நாட்களும்:-
மத்திய கொழும்பு (செல்லமஹால்) 13 நாட்கள்
தென்கொழும்பு (மெஜஸ்ரிக்) 13 நாட்கள்
தென்கொழும்பு (ஈரோஸ்) 05 நாட்கள்
யாழ்ப்பாணம் (சாந்தி) 34 நாட்கள்
வவுனியா (றோயல்) 14 நாட்கள்
கிளிநொச்சி (பராசக்தி) 14 நாட்கள்
மட்டக்களப்பு (ராஜேஸ்வரா) 14 நாட்கள்
வாழைச்சேனை (வெலிங்டன்) 06 நாட்கள்
கல்முனை (ஹரிசன்) 16 நாட்கள்
திருகோணமலை (லக்சுமி) 09 நாட்கள்
மூதூர் (இம்பீரியல்) 05 நாட்கள்
பண்டாரவளை (சீகிரி) 13 நாட்கள்
பதுளை (றெக்ஸ்) 06 நாட்கள்.

எல்லாவற்றையும்விட வேடிக்கை ஒன்று நடைபெற்றது. ‘தெய்வம் தந்தவீடு’ திரைப்படம் வெளிவந்தபோது, ‘தினகரனில்’ தயாரிப்பாளர் பொன்னுசாமிப்பிள்ளையின் பேட்டி வந்திருந்தது. இத்திரைப்படம் தயாரித்ததன்மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எவை? என்ற கேள்விக்குப் பதில் சொல்லியிருந்தார்.

‘பிடித்தது படம், படித்தது பாடம், மூன்று வாரத்தில் படத்தை முடித்துத் தருவோம் என்பார்கள். எத்தனையோ மாதம் இழுத்தடிப்பார்கள். ‘மேக்கப்மேன்’ றேட்டில்கூட ‘கட்’ வைக்கிற ஆசாமிகள் இருக்கிறார்கள். லாபம் இருந்தால் எவரையும் தம்முடன் சேர்த்துக்கொள்வார்கள். உண்மை சொல்கிறர்களை ஒதுக்கி விடுவார்கள். பாஷை தெரியாதவனுக்கும் பாத்திரம் கொடுப்பார்கள். அமைதிப் பேர்வழியாக இருப்பார்கள். அதற்குள் இருக்கிற திருட்டுத்தனத்தைப் போகப்போகத்தான் புரிந்துகொள்ளமுடியும். ‘தெய்வம் தந்தவீடு’ படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் சொல்லியிருந்தார்.

முழு யூனிற்றும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டது. அதன் பின்புதான் கதையில் மாற்றம் செய்யவேண்டும் என்று ஓட்டலிலே உட்கார்ந்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், மூன்று நான்கு நாட்கள் வீணாகிவிட்டன. செட்டுக்கோ லொகேஷனுக்கோ வருவதற்கு முன் என்ன செய்யப்போகிறோம் என்று ஒரு டைரக்டர் திட்டமிட வேண்டாமா? ‘ஸ்டார்ட்’ ‘கட்’ இந்த இரண்டைத் தவிர, வேறு வார்த்தைகளே இவருக்குத் தெரியாதா? ஏதோ படம் ஒழுங்காக வெளிவந்ததென்றால் ஒளிப்பதிவாளரும் தொழில்நுட்பக் கலைஞர்களுந்தான் அதற்குக் காரணம்.

ஒருமுறை தெய்வம் தந்தவீடு படத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்கள், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்துக்குப் போடப்பட்ட செட்டைவிட பிரமாதமாகப் போட்டிருக்கிறோம். வந்து பாருங்கள்’ என்றார்கள். ஆசையோடு போய்ப்பார்த்தேன். சின்ன மேளம் நடக்கும் நாட்களில் சுற்றிப் போடப்படும் அலகங்காரப் பந்தல்தான் அங்கிருந்தது. கொஞ்சநாட்களாவது சொகுசாக இருக்கப் போடப்பட்ட திட்டம்தான் இந்த அவுடோர் சூடிங். இலங்கையிலே தமிழ்ப்படம் ஒழுங்காக வளரவேண்டுமென்றால் ஒட்டுண்ணிகள் ஒதுங்க வேண்டும்’ என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இப்படி அனுபவப்பட்ட இவர் இரண்டாவது படத்தையும் தயாரிக்க இருந்தார். ஆனால் 1983 கலவரத்தில் இவர் கொல்லப்பட்டார். அவர் இறந்து விட்டாலும் அவரது பெயர் இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பது உண்மையே.


20. ‘ஏமாளிகள்’
ராம்தாஸின் இரண்டாவது படம்
‘கோமாளிகள்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மரிக்கார் எஸ். ராம்தாஸ்’ வெளியிட்ட படம்தான் ‘ஏமாளிகள்’. இலங்கைத் தமிழ்ப் படங்கள் அதிகமாக வெளிவந்த ஆண்டான 1978இல் வெளியான 5வது தமிழ்ப்படம்.

நகைச்சுவையைப்பொறுத்தவரை, எஸ். ராம்தாஸ் குழுவினருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. சிரிப்பின் மூலம் ரசிகர்களை வெல்லலாம் என்ற எண்ணம் ராம்தாஸ{க்கு வந்துவிட்டது. ஏ.ஏ.எம். மவுஜுத் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.

‘கோமாளிகள்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். இராமநாதனையே இப்படத்தினையும் இயக்கத் தெரிவுசெய்தார்கள். கமறா ஜே.ஜே. ஜோகராஜா. இது இவருக்கு இரண்டாவது தமிழ்ப்படம்.

‘கண்ணன்-நேசம் இசை அமைத்தார்கள். கலாவதி, ஜோசப் ராஜேந்திரன், ஸ்ரனி, சிவானந்தன் ஆகியோர் பின்னணி பாடினார்கள். இதுவும் ‘ராம்தாஸ்’ ஏற்கனவே எழுதி ஒளிபரப்பிய வானொலி நாடகமே. ராம்தாஸே திரைப்படத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை வசனம் எழுதினார். உதவி டைரக்ஷன், தயாரிப்பு மேற்பார்வை போன்றவற்றை அவரே பொறுப்பேற்றார்.

‘கோமாளிகள்’ திரைப்படத்தில் சில்லையூர் செல்வராஜன் - கமலினி செல்வராஜன் ஆகியோர் அறிமுகமானது போல், இப்படத்திலும் புதிய ஜோடி அறிமுகமாகியது.

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் அறிமுகமாகி பெயர் பெற்றவர் என். சிவராம். சிங்களப் படங்கள் பலவற்றில் நடித்துவிட்டு ‘மஞ்சள் குங்குமம்’, ‘தென்றலும் புயலும்’ படங்களில் நடித்ததன்மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிப் புகழ்பெற்றவர், ஹெலன் குமாரி. இவர்கள் இருவருமே இப்படத்தில் புது ஜோடியாக அறிமுகமானார்கள்.

‘மீனவப்பெண்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஜலஷ்மி இப்படத்தில் ‘செல்லமணியாக’ நடித்தார்.

மரிக்கார் ராம்தாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலிசெல்வசேகரன் ஆகியோருடன் கே.ஏ. ஜவாஹர், டொன்பொஸ்கோ, இரா. பத்மநாதன், ஜேசுரட்ணம், விக்டர், ஈஸ்வரன், ஏபிரஹாம், ஆர். ரீ. ராஜா, செழியன் வயணவப்பெருமாள், மணிமேகலை, ஜெயதேவி, செல்வம் பெர்னாண்டோ, ருவினா, சுட்டி போன்றோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

ஒலிப்பதிவு சென் ஜோன்ஸ் படத்தொகுப்பு எம்.எஸ். அலிமான்.

‘கோமாளிகள்’ போல் இப்படத்திற்கு அதிக விளம்பரம் கிடைக்கவில்லை. ஆனாலும் சில மாதங்களுக்குள் படம் வளர்ந்துவிட்டது.

‘பாக்கீர் பிலிம்ஸ்’ ஏமாளிகள் 06.10.1978இல் இலங்கையில் ஏழு ஊர்களில் திரையிடப்பட்டது.

இப்படத்துக்கு அதிக விமர்சனமும் கிடைக்கவில்லை. 24.10.78இல் ‘தினகரன்’ விமர்சனம் எழுதியது.

‘….இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிந்திக்க வைக்கக்கூடிய எதுவுமே இல்லை. வர்த்தக நோக்கில் படம் பரவாயில்லை. படத்தில் நடித்திருப்பவர்களில் அநேகர், ஏற்கனவே சினிமா அனுபவம் பெற்றவர்கள். இரா. பத்மநாதன், விக்டர், செழியன் வயணவப்பெருமாள் ஆகியோருக்கு மட்டுமே இது முதலாவது படம். இந்த அனுபவபூர்வமான கலைஞர்களின் ஒத்துழைப்புத் தான் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகும்.

ரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே கதை பண்ணப்பட்டிருக்கிறது. நம் நாட்டு ரசிகர்களைச் சிரிப்பின் மூலம்தான் மடக்கவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார் ராம்தாஸ். சண்டைக்காட்சியும், கிளப் நடனமும் இணைக்கப்பட்டால்தான் நமது ரசிகர்கள் திருப்திப்படுவார்கள் என்ற எண்ணத்தில் அவை வலிந்து புகுத்தப்பட்டுள்ளன.

‘பகலில் மட்டும்தான் உங்கள் மனைவிக்குக் கணவனாக நடிக்கவேண்டுமா? என்று ராம்தாஸ் பீடிகையுடன் வினவுவதும், சிறிது நேரம் ராஜகோபால் திருதிருவென்று விழித்துவிட்டு ‘அதைப்பிறகு பார்க்கலாம்’ என்று கூறுவதும் மிகுந்த சிரிப்பை உண்டாக்குகிறது. தன் மகனுக்குப் பைத்தியம் என்று ராம்தாஸ் வேதனையுடன் கூறுவதைக் கேட்ட செல்வசேகரன் ஒருவரை ஒருவர் வேதனையுடன் பற்றிக் கொள்வதும், ‘மது பருகுவோமா? என்று கேட்பதும் அருமையான கட்டங்கள். இவர்களுடன் டொன்பொஸ்கோ வேறு. உரையாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் மலையகப் பேச்சு வழக்கிலும் அமைந்திருக்கின்றன.

‘ராஜகோபாலின்’ மனைவியான வரும் ‘ராஜலஷ்மியின்’ நடிப்பு சில இடங்களில் இயற்கையாக அமைகிறது. செல்வசேகரனின் மனைவியாக வரும் ‘மணிமேகலை’ பரவாயில்லை. காதல் ஜோடியாக வரும் ‘சிவராம் ஹெலன்குமாரி’ இருவரும் நன்று நடித்துள்ளனர். சிவராமைவிட, ஹெலன்குமாரி, தான் சினிமாவுக்கு அனுபவசாலி என்பதை நிரூபித்துள்ளார்.

‘ஜெயதேவி’க்கு இப்படத்தில்தான்நடிக்க இடம் கிடைத்திருக்கிறது. வழமையைப்போல் ஜவாஹர் அட்டகாசம் செய்கிறார். அவருடன் ஆபிரகாமும் ஆர்.ரி.ராஜாவும் சேர்ந்து விடுகிறார்கள். இரா. பத்மநாதன், செல்வம் பெர்னாண்டோ, ஜேசுரட்ணம் ஆகியோர் சில காட்சிகளில் தோன்றினாலும் தம் பாகத்தைப் பாராட்டும் வகையில் செய்துள்ளார்கள்.

பாடல்களை ஈழத்து இரத்தினமும், பவுசில் அமீரும் இயற்றி இருக்கிறார்கள். கண்ணன்-நேசம் இசை அமைந்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ‘கோமாளிகள்’ போல் சிறந்து விளங்கவில்லை. ‘வான் நிலவு தோரணம்’ என்று ஜோசப் ராஜேந்திரனும், கலாவதியும் பாடும்பாடல் இனிமையாக இருக்கிறது. ஸ்ரெனி சிவானந்தன் பாடும், ‘வா இந்தப் பக்கம்’ என்ற பாடலுக்கு இசை அமைப்பாளர்களில் ஒருவரான நேசம் தியாகராஜா வாயசைத்தவாறு நடனமாடியுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கக் கட்டடத்தை ஒளியும் நிழலும் கொண்டு மாற்றியமைத்து காதல்கள் ஓடி விளையாடும் பிரமாண்டமான மாளிகையாகக் காட்டி ரசிகர்களைப் பிரமிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.ஜோகராஜா, டைரக்ஷன் பொறுப்பை, அனுபவப் பட்ட இயக்குநர் எஸ். ராமநாதன் கச்சிதமாகச் செய்துள்ளார். காட்சிகள் நீண்டனவாக அமைந்திருந்தாலும் அவரது திட்டமிட்ட படப்பிடிப்பின் மூலம் படத்தொகுப்பாளர் அலிமானுக்கு அதிக சிக்கல் ஏற்படவில்லை. பல நடிகர்கள் வரும் காட்சிகளில் உரையாடல்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

குறைகள் சில இருப்பினும் நம் நாட்டுத் திரைப்படம் என்ற உணர்வுடன் பார்த்து மகிழக்கூடிய படம் ‘ஏமாளிகள்’, தயாரிப்பாளர் ஏ.ஏ.எம். மவுஜுத்துக்கு எமது பாராட்டுகள்’ என்று அமைந்தது அந்த விமர்சனம்.

யாழ்நகரில் (ராஜா) 52 நாட்களும், வவுனியாவில் (வசந்தி) 29 நாட்களும், மன்னாரில் (நாதன்ஸ்) 14 நாட்களும் ஓடியது. மட்டக்களப்பில் (றீகல்) 20 நாட்களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 5 நாட்களும், வாழைச்சேனையில் (ஈஸ்வரி) 7 நாட்களும் ஓடியது. திருகோணமலையில் (ஸ்ரீகிருஷ்ணா) 17 நாட்களும் ஓடியது.

மலையகத்தில் பண்டாரவளையில் (மொடர்ன்) 18 நாட்களும், கண்டியில் (ஓடியன்) 5 நாட்களும் ஓடியது.

இலங்கைத் தமிழ்ச் சினிமாவுக்கு நடிகர் எஸ். ராம்தாஸ் அதிக பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

‘கோமாளிகள்’ திரைப்படத்தை உருவாக்கியதுடன் அவரது பங்களிப்பு ஆரம்பமாகியது. அந்தப் பங்களிப்பின் தொடர்ச்சியே ‘ஏமாளிகள்’ திரைப்படமாகும்.


21. ‘அநுராகம்’
ஒரு கதை, இரண்டு மொழிகள்
1978ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்க 4 ½ லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இப்படிப் போட்ட முதலையும் மீண்டும் பெறுவதற்கு அப்படம் 10 லட்சம் ரூபாவை வசூலாகப் பெறவேண்டும். ஆனால், அதுவரை திரைக்கு வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களில், ‘கோமாளிகள்’, ‘நான் உங்கள் தோழன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 8 லட்சம் ரூபாவை வசூலாகப் பெற்றன. அதனால், தயாரிப்பாளர்கள் தமிழ்ப்படம் தயாரிக்கப் பின் வாங்கினார்கள்.

இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய ஒரு வழியைச் சொன்னார் ஒரு தமிழ் நடிகர். ஒரே நேரத்தில் ஒரே கதை: ஒரே தொழில் நுட்பக்கலைஞர்கள்@ ஆனாலும் நடிகர்களும் பாடகர்களும் வேறு வேறு, அதாவது ஒரே கதையை தமிழிலும் சிங்களத்திலும் படங்களாகத் தயாரிக்கும்போது, தமிழ்ப்படத்தின் செலவில் 2 லட்சம் ரூபா அளவு குறைகிறது. அப்படியே தமிழ்ப்படம் தோல்வி அடைந்தாலும், சிங்களப்பட வசூல் அந்தத் தமிழ்ப்பட, நஷ்டத்தை ஈடுசெய்யும்.

இந்த மாற்று வழியைசல் சொன்ன தமிழ் நடிகர் தான், மலையகத்தில் கொஸ்லந்தையில் நாராயணசாமி, அமிர்தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது மகன்@ ‘சமுதாயம்’ திரைப்படத்தின் கதாநாயகன், பின்னாளில் குணச்சித்திர வேடங்களில் தோன்றிய அமரர் எஸ்.என்.தனரெத்தினம்.

இந்த மாற்று வழியைப் பிரபல சிங்களப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஒரு சிங்களவர் ஏற்றுக்கொண்டார். அவர்தான் பிரபல இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் தம்பியான யசபாலித்த நாணயக்காரா.

இந்த மாற்று வழியில் யசபாலித்த ஒரு தமிழ்ப்படத்தையும் ஒரு சிங்களப் படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிக்கத் தொடங்கினார்.

சிங்களப் படத்தின் பெயர் ‘கீதிகா’ தமிழ்ப்படத்தின் பெயர் ‘அநுராகம்’ தமிழ்ப்படத்தின் கதாநாயகன் என். சிவராம்’ கதாநாயகி சந்திரகலா.

சிங்களப் படத்தின் கதாநாயகன் விஜயகுமாரணதுங்க, கதாநாயகி மாலினி பொன்சேகா.

தமிழ்ப்படத்துக்கான கதை வசனத்தையும் உதவி இயக்குநர் பொறுப்பையும் பி.எஸ். நாகலிங்கம் ஏற்றுக்கொண்டார்.

ஜே. யோகராஜா ஒளிப்பதிவு செய்த மூன்றாவது தமிழ்ப்படம் இது. மற்றும் நடிகர்களாக எஸ்.என். தனரெத்தினம், எஸ். விஸ்வனாதராஜா, செல்வம் பெர்னாண்டோ, டொன்பொஸ்கோ ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். இரண்டுமொழிகளிலும் அனோஜா, லிலியன், பி.எஸ். பெரேரா, ரஷி ஆகியோரும் நடித்தனர்.

இப்படத்துக்கு, சரத் தசனாயக்க இசை அமைத்தார். ‘ஈழத்து ரெத்தினம்’ இயற்றிய பாடல்களை முத்தழகுவும் கலாவதியும் பாடினார்கள். ஒலிப்பதிவு-ஈ.டி. சென்யோன்ஸ், ஒப்பனை-பெனாட், படத்தொகுப்பு-துரை பவானந்தன், தயாரிப்பு நிர்வாகம் கே. குமார்.

படம் 19 நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டுவிட்டது. அநுராகம் 1978ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட 6வது தமிழ்ப்படமாகும். 27.10.1978இல் தீபாவளி வெளியீடாக இப்படம் ஆறு ஊர்களில் வெளியிடப்பட்டது.

ராஜா ஒரு பணக்கார இளைஞன். அழகான எதையும் ஓவியமாக வரைவது அவனது பொழுது போக்கு. அவன் விடுமுறையைக் கழிக்க பண்டாரவளைக்கு வருகிறான். அங்கு வசந்தி என்ற அழகியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. இவர்களைப் பிரிக்க முயன்றான் வசந்தியின் மைத்துனன் நாகப்பன். அவன் ராஜாவின் காலையே முறித்துவிடுகிறான். தந்தை சதாசிவம் பண்டாரவளைக்கு வந்து தனது மகன் ராஜாவைப் பிடிவாதமாகக் கொழும்புக்கு அழைத்துவந்துவிடுகிறார்.

ராஜாவின் உறவால் கருவுற்ற வசந்தி, ஊர் ஜனங்களுக்குப் பயந்து வேறு ஊர் சென்று விடுகிறாள்.

தனக்காகக் காத்திருக்கும் தன் அத்தைமகள் நளினியின் உதவியுடன் வசந்தியைத் தேடுகிறான் ராஜா. ஐந்து வருடங்கள் கழிந்துவிடுகின்றன.

வசந்தியின் மகன் கண்ணன் தந்தையைத் தேடிப் புறப்படுகிறான். மகன் கண்ணனைத்தேடி வசந்தி அலைகிறாள்.

இறுதியில் எல்லோருமே ஒன்று சேர்கின்றனர். இது தான் ‘அநுராகம்’ கதைச் சுருக்கமாகும். ராஜாவாக என். சிவராமும் வசந்தியாக சந்திரகலாவும் நடித்தார்கள். தந்தை சதாசிவமாகத் தனரெத்தினமும் வில்லன் நாகப்பனாக விஸ்வநாதராஜாவும் நளினியாக அனோஜாவும் கண்ணனாக ரஷியும் தோன்றினார்கள்.

மலைநாட்டுப் பற்றி ஈழத்து இரத்தினம் இயற்றி முத்தழகு பாடிய பாடல் சிறந்து விளங்கியது.

‘எண்ணங்களாலே இறைவன்தானே
பொன் வண்ணத்தாலே வரைந்துவிட்டானே’
வண்ண வண்ணத் தோற்றங்கள் தன்னாலே
எந்நாளும் நிலையாகும் எழில் கொஞ்சும் மலையகமே’

என்று தொடங்கும் பாடல்தான் அது.

இப்படத்தைப் பலரும் பாராட்டினார்கள். ‘சிந்தாமணி’யும் (05.11.1978) பாராட்டி விமர்சனம் எழுதியது.

‘இதுவரை இலங்கைப் படங்களிலிருந்து ‘அமெச்சூர்’ தன்மையின்றி வர்த்தக நோக்குடன் கூடிய முழுமை’ அநுராகத்தில் காணமுடிகிறது. பல வெற்றிப் படங்களைத் தயாரித்த யசபாலித நாணயக்காரவின் கைவண்ணத்தில் இப்படம் வெளிவந்திருக்கிறது. ஒரு சாதாரண கதையை விறு விறுப்பாக இயக்கியிருக்கிறார் அவர். கமறாமூலம் புகுந்து விளையாடியிருக்கிறார் யோகராஜா. ஒலிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. நறுக்குத் தெறித்தாற்போல் வசனம் எழுதியிருக்கிறார் உதவி இயக்குநர் பி.எஸ். நாகலிங்கம், முத்தழகுவும் கலாவதியும் இனிமையாகப் பாடியிருக்கிறார்கள். அவை ரசிகர்களை வாய்திறந்து பாடி மகிழ வைக்கின்றன.

கதாநாயகன் சிவராம் உள்@ர்த் தமிழ்ப்பட நடிகர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துவருகிறார். சந்திரகலாவும் நன்கு நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பின் முதிர்ச்சியுடன் தோற்றமும் போட்டி போடுகிறது. விஸ்வநாதராஜா வில்லனாக வந்து தான் ஒரு குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபிக்கிறார். பண்பட்ட நடிகர் தனரெத்தினம் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறார். ஆனாலும், திரைமறையில் இப்படத்துக்கு அவர் பல வழிகளில் உதவியிருக்கிறார்.

அனோஜாவின் பாத்திரம் அனுதாபத்தைப் பெறுகிறது. செல்வம் பெர்னாண்டோ பாட்டியாக வந்து கச்சிதமான நடித்துள்ளார். டொன்பொஸ்கோ ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார். மாஸ்டர் ரஷி வெறு அருமையாக நடித்துள்ளார்.

‘போமிலா’ கதையென்றாலும் படத்தை நன்றாக உருவாக்கித் தந்திருக்கிறார் யசபாலித்த… என்று அமைந்திருந்தது. அந்த விமர்சனம்.

‘ரமேஸ் என்பவர் அடிக்கடி திரைப்படங்களைப்பற்றி விமர்சனம் எழுதினார். அவர் இப்படத்தைப் பற்றி எழுதிய விமர்சனம் மித்திரனில் (02.11.1978) இடம் பெற்றது.

‘மலையகத்தின் இயற்கைச் சூழலில் இப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆடல், பாடல், காதல், ஹாஸ்யம், சண்டைக் காட்சிகளுக்குக் குறைவில்லை. படம் போரடிக்காமல் செல்கிறது. வலுவான கதை இல்லாவிட்டாலும் சம்பவங்களின் கோர்வையும் கருத்தாழமிக்க வசனங்களும் படத்தை ஓட்டிச் செல்கின்றன.

விஸ்வநாதராஜாவும் தனரெத்தினமும் நன்கு நடித்துள்ளனர். கதாநாயகன் சிவராம் சில காட்சிகளில் எவ்வித உணர்ச்சியுமின்றி நடித்துள்ளார். சந்திரகலாவின் நடிப்புப் பரவாயில்லை. அனோஜா நடிக்க முயன்றுள்ளார். செல்வம் பெர்னாண்டோ பரவாயில்லை டொன்பொஸ்கோ சிரிக்க வைக்கிறார்.

சரத் தசனாயக்காவின் இசை அமைப்பில் முத்தழகு கலாவதி பாடியுள்ள பாடல்கள் இனிமையாகவுள்ளன. யோகராஜாவின் ஒளிப்பதிவு நன்றாகவுள்ளது.

1978இல் வெளிவந்த ஆறு படங்களுக்கும் நானும் விமர்சனம் எழுதியிருந்தேன். இப்படத்தைப்பற்றி நான் எழுதிய நீண்ட விமர்சனம் தினகரனில் (14.11.1978) வெளி வந்திருந்தது.

கதாநாயகன் என். சிவராமே காட்சி முழுவதும் நிறைந்து நிற்கிறார். சில இடங்களில் எவ்வித உணர்ச்சியுமின்றி சும்மாவே நின்று விடுகிறார். சந்திரகலா இப்படத்தில் தன் திறமையைசக் காட்டியுள்ளார். குழந்தையுடன் அழும் காட்சியில் ரசிகர்களையும் அழவைத்துவிடுகிறார்.

தனரெத்தினமும் விஸ்வநாதராஜாவும் தமது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர். செல்வம் பெர்னாண்டோ வழமையைப் போல் திறமாக நடித்துள்ளார். டொன்பொஸ்கோ சிறிது நேரம் தோன்றி மறைந்தாலும் அவரது நகைச்சுவைகள் நினைவில் நிற்கின்றன.

இனிமையான ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. முத்தழகுவும் கலாவதியும் தமக்கே உரித்தான இனிய குரலில் யாரையும் பின்பற்றாமல் நன்கு பாடியிருக்கிறார்கள். மலையகத்தின்; எழில் காட்சிகளை திறம்படப் படம்பிடித்துள்ளார். யோகராஜா – கருத்தாழமிகு வசனங்களை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் நன்கு செயற்பட்டிருக்கிறார். பி.எஸ். நாகலிங்கம். சலிப்புத்தட்டாமலும்கதை, புரியும்படியும் படத் தொகுப்புச் செய்துள்ளார். துரை பவானந்தன்.

செல்வசேகரன், அமினாபேகம், ஏ. நெயினார், ஞெய்ரஹீம் சஹிட் போன்றோரின் குரல்கள் பாத்திரங்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

சமத்கார பிலிம்ஸ் ‘அநுராகம்’ மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 42 நாட்களும் தென்கொழும்பில் (சபையார்) 16 நாட்களும் ஓடியது.

யாழ்நகரில் (வின்சர்) 56 நாட்களும் வவுனியாவில் (நியூ இந்திரா) 20 நாட்களும் காட்சியளித்தது.

மட்டக்களப்பில் (விஜயா) 18 நாட்களும் மூதூரில் (இம்பீரியல்) 10 நாட்களும் நின்று பிடித்தது.

மலையகத்தில் மாத்தளையில் (தாஜ்மஹால்) 30 நாட்களும் பதுளையில் (மொடொன்) 20 நாட்களும் கட்டுகஸ்தோட்டையில் (சீகிரி) 14 நாட்களும் ஓடியது.

அநுராகம் திரையிடப்பட்ட சமயம் ஏற்பட்ட புயலினால் கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளில் பட வசூல் பாதிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார ரீதியில் ‘அநுராகம்’ வெற்றிப்படமே. காரணம் இப்படத்துக்கு 1 ½ லட்சம் ரூபா மட்டுமே செலவாகியிருந்தது.

எத்தனையோ தமிழ்த் தயாரிப்பாளர்கள் பயந்து பின்னின்ற வேளையில் சிங்களவர் ஒருவர் துணிந்து இம்முயற்சியில் ஈடுபட்டார் என்றால் அவரது பெருந்தன்மையை என்னவென்று சொல்வது.


22. எங்களில் ஒருவன்
இலங்கையில் புதிய தமிழ்ப்படங்கள் வெளிவரும்பொழுது அவற்றில் பல புதுமுகங்கள் அறிமுகமாவார்கள், கலைஞர்கள் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள்கூட, புதுமுகமாக அறிமுகமாவார்கள். ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்திலும் பல புதிய தயாரிப்பாளர்கள் அறிமுகமானார்கள்.

ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சிறுவயதிலிருந்தே நாடகக் கலைமீது அதிக ஆர்வம். இந்த வர்த்தகர் தன் பெயரை வெளியிடாமலே, பல தமிழ் நாடகங்கள் மேடையேறுவதற்குப் பொருளாதார உதவி செய்திருக்கிறார்.

இந்த வர்த்தகரின் பெயர் வெளியே தெரியும் வகையில் அவரை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் எஸ்.வி.சந்திரன். அப்படி அறிமுகமான அந்த வர்த்தகரின் பெயர்தான் எம்.ஜே. ஆப்தீன். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான், எங்களில் ஒருவன்’

எஸ்.வி. சந்திரன் ஒரு நகைச்சுவைப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அந்தப் படத்துக்கான கதாநாயகனைக்கூட மனதில் வைத்திருந்தார்.

எம்.ஜே. ஆப்தீன், எஸ்.வி. சந்திரனும் ஒன்று சேர்ந்து நகைச்சுவைப் படமொன்றைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.

‘மரிக்கார்’ என்ற பெயரில் இப்பொழுது ‘எஸ். ராம்தாஸ்’ புகழ்பெற்று விளங்குகிறார். இதே பாணியை 1960ஆம் ஆண்டளவில் ‘காசீம் காக்கா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ்பெற்று விளங்கியவர் றொசாரியோ பீரிஸ். இவருக்குத் தம்பியொருவன் இருந்தான். றொசாரியோ பீரிஸ் நாடகங்கள் நடிக்கும்போது இந்தத் தம்பி உதவி செய்வான். றொசாரியோ பீரிஸ் காலமானதும் இந்தத் தம்பியும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினான். இவன் சில படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி மறைந்திருக்கிறான். அவனது பெயர்தான் டொன்பொஸ்கோ. இவரையே இப்படத்தின் கதாநாயகனாகப் போடவேண்டும் என்று டைரக்டர் சந்திரன் ஏற்கனவே தீர்மானித்திருந்தார். இவருக்கு ஜோடியாகத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக நடிகையின் பெயர் ‘காஞ்சனா’.

இவர்களுடன் எஸ். செல்வசேகரன், ஏ.நெய்னார், கே.ஏ. ஜவாஹர், லத்தீப், தர்மலிங்கம், ரெமியஸ், ஆர். ரி. ராஜா, ராகவன், மகாராஜா, விஜயராஜா, எஸ்.கே. ராஜன்.

ஜெனீடா, ஜெயதேவி, மணிமேகலை, ஸ்ரீதேவி, ரத்னகலா, சர்மிளா என்று பல நடிக நடிகையர் தெரிவுசெய்ப்பட்டனர்.

தமிழ் நடிகர் அலெக்சாண்டர் பெர்னாண்டோ ஆரம்பத்தில் சிறந்த நாடக நாடிகராக விளங்கியவர். புகழ்பெற்ற மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தவர். பல சிங்களப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவருக்கு இப்படத்தில் கௌரவ வேடம் கொடுக்கப்பட்டது.

பல படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக விளங்கிய என்.செல்லத்துரை. இப்படத்தின் பிரதான ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். உதவி இயக்குநர் அன்ரன்கிங்ஸ்லி.

ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசை அமைத்தார். ஜோசப் ராஜேந்திரன், முத்தழகு, குலசீலநாதன், சுஜாதா, ஜெகதேவி ஆகியோர் பாடல்களைப் பாடினர். ஒலிப்பதிவு கே.பி. பாலசிங்கம், நிர்வாகம் லால், ஒப்பனை சுப்பு, படத்தயாரிப்பில் ஆர். சௌந்தரராஜன், லாஸரஸ் அந்தனி, எஸ். சிவசோதி, மேர்ஸி சந்திரன் ஆகியோர் உதவினர். எம்.ஜே.ஏ. புரடக்ஷன் ‘எங்களில் ஒருவன்’ 18.05.1979இல் திரைக்கு வந்தது.

தந்தையுடன் சண்டைபிடித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான் ரமேஷ் என்ற இளைஞன். பூங்காவொன்றில் பழைய நண்பன் ஈஸ்வரனைச் சந்தித்தான்;. இவர்கள் இருவரும் இணைந்து முன்னேற முயலுகிறார்கள்.

முதலாளி ஒருவர் இவர்களுக்கு மனமிரங்கி தனது சைவஹோட்டலில் சர்வர் வேலை கொடுக்கிறார். இவர்களது கூத்தாட்டத்தில் அடிக்கடி ஹோட்டலில் சண்டை ஏற்படுகிறது. ஒருநாள் றெளடியொருவன் கடையை நொருக்கித் தள்ளுகிறான். அன்று முதல் இவர்கள் ஹோட்டலைவிட்டு விலகுகிறார்கள்.

இவர்கள் இருவரும் றைவராகவும், மெக்கானிக்காகவும் வேறு இடத்தில் வேலைக்குச் சேர்கிறார்கள். முதலாளியின் மகளுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் அந்த வேலை பறிபோய்விடுகிறது.

பின்பு பிரபல நடிகராக மாறியபின் பழைய காதலியைத் திருமணம் செய்கிறான்@ சுகவீனமுற்ற தந்தையையும் காப்பாற்றுகிறான்.

இதுதான் ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்தின் கதைச்சுருக்கம். ரமேஷாக டொன்பொஸ்கோவும், ஈஸ்வரனாக எஸ். செல்வசேகரனும், இன்னுமொரு சர்வர் ரவியாக ஏ. நெய்னாரும் முதலாளியாக கே.ஏ. ஜவாஸரும் தோன்றினார்கள். அறிவிப்பாளர் எஸ்.கே. ராஜன் இப்படத்தில் அறிவிப்பாளராகவே தோன்றினார்.

இப்படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 35 நாட்களும் தென்கொழும்பில் (சபையார்) 12 நாட்களும் ஓடியது.

இது வடபகுதியிலும் அதிக நாட்கள் ஓடவில்லை. யாழ்ப்பாணம் (ராணி), வவுனியா (ஸ்ரீமுருகன்), மன்னார் (அயின்) ஆகிய இடங்களில் தலா 15 நாட்கள் மட்டுமே ஓடியது.

மட்டக்களப்பில் (விஜயா) 14 நாட்களும், கல்முனையில் (கமல்) 10 நாட்களும், களுவாஞ்சிக்குடியில் (சாரதா) 7 நாட்களும் ஓடியது. திருகோணமலையில் (சரஸ்வதி) 18 நாட்களும் ஹட்டனில் (விஜிதா 10 நாட்களும் ஓடியது.

இப்படத்தைப்பற்றி ‘சிந்தாமணி’ (20.05.1978) ‘ஈழத்துத் திரைவானில்’ என்ற தலையங்கத்தின் கீழ் விமர்சனம் எழுதியது.

‘…..மூலக்கதை, திரைக்கதை வசனம், படத்தொகுப்பு” நெறியாள்கை, ஆகிய பொறுப்புக்களை எஸ்.வி. சந்திரன் ஏற்றியிருக்கிறார். இலங்கையில் தேர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. நகைச்சுவையை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். டொன் பொஸ்கோ, செல்வசேகரன் பாத்திரமுணர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அழுதழுதே சிரிக்க வைக்க முனைகிறார்கள். அவர்கள் அழுகின்ற சில கட்டங்களில் நாம் தலையில் அடித்துக்கொள்கிறோம்.

சைவ ஹோட்டல் முதலாளியாக நடிக்கும் ஜவாஹரும் டீ மேக்கராக வரும் நெய்னாரும் தாம் தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.

சண்டைகள், கிளப் நடனங்கள் இல்லாமல், குடும்பத்தின் சகல அங்கத்தினரும் பார்த்து மகிழக்கூடிய விதத்தில் சந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆர். முத்துசாமி இசை அமைத்த பாடல்கள் கேட்கக் கூடியனவாக இருக்கின்றன. என். செல்லத்துரை புதிய கோணங்களில் கமறாவைக் கையாண்டிக்கிறார், என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.

இந்தப் படத்தைப் பற்றி தினகரனில் (12.06.79) நானும் இப்படி விமர்சனம் எழுதினேன்.

‘…..விருப்பு வெறுப்பற்ற நடிகர் தேர்வில் இப்படத்தில் 25க்கு மேற்பட்ட நடிக நடிகையர் தோன்றுகிறார்கள். டொன்பொஸ்கோ ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவையை அள்ளி வீசுகிறார். அவரது புள்ளி மீசையுடன் கூடிய முகபாவம் சிரிப்பை உண்டாக்குகிறது. இவரது சிரிப்புப் போதாதென்று செல்வசேகரனும் நெய்னாரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறார்கள்.

செல்வசேகரன் சாம்பார் வாளியை முதுகுப்புறமாகப் பிடித்துக்கொண்டு பொஸ்கோவுடன் உரையாடுவதும், நெய்னார் தேநீர் அடிப்பதும் அவர்களது நல்ல நடிப்புக்கு உதாரணங்களாகும்.

தந்தையாகத் தோன்றும் ஏகாம்பரத்திற்கு நடிப்பதற்குச் சில காட்சிகளே கிடைத்தாலும் அத்தனை காட்சிகளிலும் தான் ஒரு சிறந்த குணசித்திர நடிகன் என்பதை நிறுவுகிறார். அதனால்தான், அவருக்கு அதிகமான ‘குளோஸ்-அப்’ காட்சிகள் கிடைக்கின்றன. ஏகாம்பரத்தின் மனைவியாகத் தோன்றும் மணிமேகலை தனது பங்கைத் திறம்படச் செய்கிறார். புதுமுகம் காஞ்சனா காதல் காட்சிகளில் சுடர்விடுகிறார். கே.ஏ. ஜவாஹர் தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். அவரது அடம்பிடித்த மனைவியாக ஜெயதேவி தோன்றுகிறார்.

அலெக்சாண்டர் பெர்னாண்டோ, ஜெனீடா ஆகியோர் கௌரவ நடிகர்களாகத் தோன்றுகிறார்கள். அலெக்சாண்டருடன் மோதுவதற்கென்றே லத்தீப் தோன்றுகிறார்.

எம்.எஸ். ஈஸ்வரன், விஜயராஜா, சிதம்பரம் போன்ற நடிகர்களுக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் சுடர்விடுவார்கள் என்பதற்கு அவர்களது நடிப்பாற்றல் சான்று பகருகின்றது. இயக்குநர் சந்திரனே படத்திலும் டைரக்டராகத் தோன்றுகிறார்.

ஆர். முத்துசாமி படத்துக்கு இசை அமைத்துள்ளார். அவருக்கு அவரது மகன் எம். மோகன்ராஜும் உதவியிருக்கிறார். ஜோசப் ராஜேந்திரன், சுஜாதா பாடியுள்ள ‘சிலைமேனியே’ என்ற பாடலும் முத்தழகு, ஜெகதேவி பாடியுள்ள ‘உன்னைத் தேடி வந்ததொரு’ என்ற பாடலும் இனிமையாக இருக்கின்றன. குலசீலநாதன் குழுவினர் பாடும் பாடலில் ‘நடிகர் திலகம் போலே நண்பர் நடிக்கணும். மக்கள் திலகம் போலே அள்ளிக்கொடுக்கணும்’ என்ற வரிகள் நகைச்சுவை மிக்கவை.

பாடல்களை ஈழத்து ரெத்தினம் இயற்றியுள்ளார். ஒலிப்பதிவை கே. பாலசிங்கம் கவனித்திருக்கிறார். என். செல்லத்துரை என்ற புதியவர் (தமிழ்த்திரை உலகுக்கு) ஒளிப்பதிவைத் திறம்பட செய்துள்ளார். கொழும்பின் புதிய கட்டடங்கள்மீது அவரது கமராக் கண்கள் சென்று வருகின்றன. அன்ரன் கிங்ஸ்லி என்ற இளைஞர் நெறியாள்கையில் சந்திரனுக்கு உதவியிருக்கிறார்.

குறைகள் சில இருப்பினும் நம்நாட்டுப் படைப்பு என்ற தேசிய உணர்வுடன் பார்த்து மகிழக்கூடிய படம் ‘எங்களில் ஒருவன்’. இலங்கைத் தமிழ்த்திரைப்பட வரலாற்றுக்கு மேலுமொரு படத்தைத் தயாரித்தளித்த கலைப்பிரியர்கள் எம்.ஜே. ஆப்தீன், ஆர். சௌந்தராஜன், லாசரஸ் அந்தனி, எஸ். சிவசோதி, மேர்ஸி சந்திரன் ஆகியோருக்குப்பாராட்டுகள்’ என்று அந்த விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.

உண்மைதான். தயாரிப்பாளர்களுடன் எஸ்.வீ. சந்திரனும் பாராட்டுக்குரியரே! ஆனால், இப்படமும் அதிக நாட்கள் ஓடாதது கவலைக்குரியதே.


23. ‘மாமியார் வீடு’
1978ஆம் ஆண்டளவில் கூட்டுத்தயாரிப்பு என்ற பெயரில் பல தென்னிந்திய சினிமாக்காரர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினார்கள். ‘பைலட் பிறேம்நாத்’ படத்தை இங்கு பிடிப்பதற்குப் பெரிய பட்டாளமே வந்து சேர்ந்துவிட்டது.

இலங்கைக் கலைஞர்களுக்கு அவர்கள் வாய்ப்பு வழங்கவில்லை என்று உள்@ர்க் கலைஞர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தினர்.

அவர்கள் இங்குள்ள சிங்கள நடிகை மாலினி பொன்சேகாவுக்கு மட்டும் ஓரளவு வாய்ப்புக் கொடுத்தார்கள்.

அந்த வகையில் மாலினி பொன்சேகா, கீதா குமாரசிங்க போன்ற நடிகைகள் தமிழ்நாட்டிற்குப்போய் நடித்துக் காட்டிவிட்டு வந்தார்கள்.

ஆனால், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைத் தமிழ் நடிகை ஒருவர் தென்னிந்தியத் தமிழ்ப்படத்தில் நடித்துக்கொடிகட்டிப் பறந்திருக்கிறார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த நடிகை தமிழ்நாடு சென்று நீச்சல் உடையிலே நடித்துவிட்டு வந்துவிட்டார். அவரின் பெயர்தான் கே. தவமணிதேவி. ‘எழிலான தோற்றம் எடுப்பான சரீரம். இயற்கையிலேயே தவமணிக்கு….’ இப்படி அப்போதைய ரசிகர்கள் விமர்சித்தார்களாம்.

அங்கு போன கையோடு தவமணிதேவி பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது இலங்கையிலேயே எடுக்கப்பட்ட தனது போட்டோவைப் பிரசுரத்துக்காகக் கொடுத்தார். அந்தப் போட்டோவில் தவமணிதேவி நீச்சலுடையில் நின்று புன்னகை புரிந்தார்.

தவமணி நீச்சலுடைக் கவர்ச்சிப் படத்தை வெளியிட்டு அதன் கீழே ‘பதிவிரதை அகல்யாவாக நடிக்க இலங்கையிலிருந்து வந்திருக்கும் தவமணிதேவி குடும்பப் பெண்கள் தாராளமாகச் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று கூறுகிறார்’ என ஒரு பத்திரிகை குறிப்பு எழுதி வெளியிட்டதாம்.

இது நடந்தது 1936ஆம் ஆண்டில் ஆனால், 1997ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இரு நடிகைகளும் ஒரு நடிகரும் இலங்கை வந்து இங்குள்ள நடிகர்களுடன் நடித்து விட்டுச் சென்றார்கள்.

புங்குடுதீவில் பிறந்த செல்லையா மாஸ்டர், சங்கானையில் கல்யாணம் செய்தார். இவர்களது மூத்தமகன், சினிமா ஆசை காரணமாக இந்தியாவுக்கு ஓடினான். அங்கு கதை வசனம் எழுதி, டைரக்டராகிப் பின்பு தயாரிப்பாளராகவே உயர்ந்து விட்டான். அங்குள்ள நடிகை ஒருவரையும் திருமணம் செய்துகொண்டார்.

அந்தத் தயாரிப்பாளரின் பெயர் வீ.சி. குகநாதன் அந்த நடிகையில் பெயர் ஜெயா. இந்த நடிகைதான் இலங்கையில் படம் நடிக்க வந்தார். இவருடன் மீரா என்ற புதுமுகம், பத்மஸ்ரீ எஸ்.வி. சுப்பையாவும் இலங்கைக்கு வந்தார்கள்.

மலையக இளைஞன் ஒருவனுக்கு சினிமா மீது தனியாத காதல், அதனால், 1955இல் இந்தியாவுக்கு ஓடினான். தான் எழுதி வைத்திருந்த கதையைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் காட்டினான். கலைவாணரோ, தன் வீட்டு அலுமாரியில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த கதைகளைச் சுட்டிக்காட்டி “இவைகளை வைத்திருக்கவே இடம் போதவில்லை. இவற்றுக்கிடையில் உமது கதையை எங்கே வைப்பேன்? என்று திருப்பிக்கேட்டார்.

ஆனாலும், இளைஞனின் புத்திபூர்வமான உரையாடலில் மயங்கிய கலைவாணர் அதை வாசித்துப் பார்த்தார். கதை பிடித்துவிடவே கலைவாணர் அதை மேடை நாடகமாகவே போட்டுவிட்டார். அந்தக் கதையின் பெயர்தான் ‘மாமியார் வீடு’ அந்த இளைஞனின் பெயர்தான் கே. வெங்கடாசலம்.

இந்த வெங்கடாசலம் சென்னையில் டைரக்டர் ஏ.எஸ். நாகராஜனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கொண்டார். அவரின் சிபாரிசுக் கடிதத்துடன் இலங்கைக்கு வந்த வெங்கடாசலம் நாயகத்தின் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகச் சேர்ந்துகொண்டார்.

1966இல் ‘மஹறேஹமுவூஸ்திரிய’ என்ற சிங்களப் படத்தைத் தனியே இயக்கினார். பின்பு சிங்களத் திரை உலகில் புகழ்பெற்ற இயக்குநராக உயர்ந்தார். தனது பெயரை ‘கே.வெண்கட்’ என்று சுருக்கிக் கொண்டார்.

இந்த வெண்கட்டிற்கு நீண்ட நாட்களாகவே இலங்கையில் தமிழ்ப் படமொன்றை இயக்கவேண்டும் என்று ஆசை. ஆசைக்கு வழிசமைத்துக்கொடுத்தார்கள் எம்.பி.எம். ரமீஸ், எம்.பி.எம். ஸமீர் என்ற சகோதரர்கள் ‘மாமியார் வீடு’ என்ற பெயரில் ஏற்கனவே என்.எஸ். கிருஷ்ணனிடம் கொடுத்த கதையைத் திரைக்கு ஏற்றவாறு வசனம் எழுதி வைத்திருந்தார் வெண்கட். இந்த படத்தில் இந்திய நடிகர்களையும் இலங்கை நடிகர்களையும் ஒப்பந்தம் செய்யலாம் என்று வெண்கட்டும் தயாரிப்பாளர்களும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

யாழ்ப்பாணம் மாதகல்லைச் சேர்ந்த சிவகுமாரன் என்ற இளைஞன் நல்ல முகவெட்டு உடையவர். இவரைத் தன் நாடகங்களில் நடிக்க வைத்தார் எம். உதயகுமார். வெண்கட் கதாநாயகன் ஒருவரைத் தேடியபோது அவரிடம் சிவகுமாரனை அறிமுகப்படுத்தினார் உதயகுமார். வெண்கட் இவரையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார்.

இவர்களுடன் எம். உதயகுமார், எஸ். ராம்தாஸ், எஸ். என். நடராஜா, எஸ். செல்வசேகரன், இரா. பத்மநாதன், வீ. சண்முகராஜா, முத்துலிங்கம், என். மெண்டிஸ், சாந்திலேகா, பி.எஸ். பெரேரா போன்ற நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

திரைக்கதை வசனம், ஆகிய பொறுப்புகளை கே. வெண்கட் ஏற்றுக்கொண்டார். ஒளிப்பதிவை ஜே.யோகராஜா கவனித்தார். படத்தொகுப்பு லோகநாத்.

ஈழத்து இரத்தினம், சண்முகலிங்கன், வெண்கட் ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு எம்.கே. றொக்சாமி இசை அமைத்தார். வீ. முத்தழகு, ஜோசப் ராஜேந்திரன், நூர்ஜான், சண்முகலிங்கன், கலாவதி, திருமதி றொக்சாமி ஆகியோர் பாடினர். ஒலிப்பதிவை மேவின் பெயின்ஸ், சுப்பிரமணியம் ஆகியோர் கவனித்தனர்.

நடனம் றொனால் பெனான்டோ. ஒப்பனை-சுப்பு. படம் எஸ்.பி.எம். ஸ்ரூடியோவில் வேகமாக வளர்ந்தது.

ஷோலே என்ட ரெய்மன்ஸ் ‘மாமியார் வீடு’ 25.08.1979இல் திரையிடப்பட்டது. குடிப்பழக்கத்தினால் குட்டிச்சுவராகும் ஒரு குடும்பத்தின் கதையே திரைப்படம்.

‘மித்திரன்’ வாரமலரில் (16.09.79) வழமையைப் போல் ‘லக்சுமி’ விமர்சனம் எழுதினார்.

‘...... ‘பைலட் பிறேம்நாத்’ கூட்டுத் தயாரிப்பைத் தொடர்ந்து பரபரப்பில் உருவான படங்களில் ஒன்றுதான் ‘மாமியார் வீடு’. எனவே, தமிழக நட்சத்திரங்களின் கவர்ச்சி ‘மாமியார் வீட்டில்’ மேலோங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதே.

.......குடியினால் விளையும் கேடுகளை ஓரளவு புலப்படுத்த முனையும் ‘மாமியார் வீடு’ கதையில் ஒன்றும் புதுமையில்லை. ஆனாலும், நடிகர்கள் தமது நடிப்பினால் கதையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். எஸ்.வி.சுப்பையாவுக்குக் குடிகார அண்ணன் பாத்திரம். கச்சிதமாக நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக எஸ். ராம்தாஸ் நடித்திருக்கிறார். இடைக்கிடை சிரிக்கவும் வைக்கிறார். சுப்பையாவின் தங்கையாகத் தோன்றும் ஜெயாவும் தனது பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார்.

மீராவுக்குக் கவர்ச்சி வேடம் இடையிலே வந்துபோகும் அவருக்கு நடிக்கச் சந்தர்ப்பமில்லை.

இப்படத்தின் மூலம் தமிழ்ப் படத்துறைக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்திருக்கிறார். அவர்தான் சிவகுமாரன். நல்ல முகவெட்டும், எடுப்பான தோற்றமும் கொண்ட அவர், சுப்பையாவின் தம்பியாக நடிக்கிறார். ரசிகர்களைக் கவரும் விதத்தில் நடிக்கும் அவர், சண்டைக் காட்சியில் சோபிக்கிறார். உதயகுமாரும் தனது நடிப்பில் சோடை போகவில்லை. செல்வசேகரன் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

......றொக்சாமியின் இசை அமைப்பில் ‘இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்’ என்று ஜோசப் ராஜேந்திரன் பாடும் பாடல் இனிமையாக இருக்கிறது. ‘பூத்திருக்குது’ என்ற பாடலை கலாவதி சின்னச்சாமி பாடியிருக்கிறார். தாலாட்டுப் பாடல் ஏனோ எடுபடவில்லை.

இதுவரை இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் இது சற்று மாறுபட்டதாக இருக்கிறது. தமிழகத்துப் படங்களைப் பார்த்து ரசித்துப் பழகிப்போன நம்நாட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப டைரக்டர் கே. வெண்கட் ‘மாமியார் வீட்டை’ உருவாக்கியிருக்கிறார் என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.

நான் எழுதிய விமர்சனமும் தினகரனில் (11.09.1979) வெளிவந்திருந்தது.

“...இயக்குநர் வெண்கட் நமது ரசிகர்களின் சுவையைப் புரிந்து கொண்டு அவர்களை வெல்லுவதற்காக 3 தென்னிந்திய நட்சத்திரங்களை ஏவி விட்டிருக்கிறார். அவாகள் பெயர்பெற்ற இந்திய நட்சத்திரங்களாக விளங்கியபொழுதும் அவர்களுக்குள்ளேயே இந்த இயக்குநர் அமிழ்ந்துவிடவில்லை. நம்நாட்டு சிவகுமாரனே படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.

கதை வசனத்தை வெண்கட்டே எழுதியிருக்கிறார். இலங்கை ரசிகர்களின் மனோ நிலையையும் பழக்கத்தையும் மனதில் கொண்டு கதை இலகுவாக்கப்பட்டிருக்கிறது. வசனங்கள் சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நடிகர் எம். உதயகுமார் கண்டெடுத்த ‘சிவகுமாரன்’ என்ற வைரத்தை வெண்கட் நன்றாகப் பட்டை தீட்டியிருக்கிறார். அந்த அளவுக:கு அவர் நடிப்பில் பிரகாசிக்கிறார்.

எஸ்.வி. சுப்பையா தனது பாத்திரத்தை உணர்ந்து திறமாக நடிக்கிறார். அவரைத் தென்னிந்தியப் படங்களில் அப்பாவாகப் பார்த்த நாங்கள் இப்படத்தில் இளைஞராகப் பார்க்கிறோம். இலங்கையின் நடிகைகள் பஞ்சத்தைத் தென்னிந்திய ஜெயாவும் மீராவும் ஈடுசெய்கிறார்கள். ராம்தாஸ் ஒரே நேரத்திலேயே ஹாஸியப் பாத்திரத்தையும் வில்லன் பாத்திரத்தையும் ஏற்றியிருக்கிறார். ஆனால், எமது மனதில் நிற்பது நகைச்சுவைப் பாத்திரம்தான்.

இது எம். உதயகுமார் நடித்திருக்கும் மூன்றாவது தமிழ்ப் படமாகும். அந்த வகையில் முன்னைய படங்களைவிட, இதில் திறம்பட அமைதியாக நடித்திருக்கிறார். செல்வசேகரனுக்கு அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் தோன்றும் காட்சிகளிலெல்லாம் ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார். சிங்கள நடிகை சாந்திலேகா அசல் தமிழ்ப் பெண்போல் நன்றாக நடித்திருக்கிறார். இரா. பத்மநாதன் இடைக்கிடை வந்து போகிறார்.

படத்தின் அடுத்த வெற்றி ஜே. யோகராஜாவின் அருமையான படப்படிப்பாகும். ட்றெயின் பிரயாணக் காட்சியொன்றே நல்ல உதாரணமாகும். வயல்கள், குடிசைகள், மாடிகள் போன்றவற்றை ட்றெயினில் இருந்தவாறே பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.

எம்.கே. றொக்சாமியின் இசையமைப்பில் இனிமையான 5 பாடல்கள் உருவாகி இருக்கின்றன. வெண்கட் இயற்றிய ‘இந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன்’ என்ற பாடலை ஜோசப் ராஜேந்திரன் இன்பமாகவும் துன்பமாகவும் பாடியிருக்கிறார். படம் முடிந்து வெளிவரும்பொழுது இரசிகர்கள் இந்தப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ஜோசப் ராஜேந்திரன் தன் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.

ஈழத்து இரத்தினம் எழுதிய ‘பூத்திருக்கு காய்த்திருக்கு’ என்ற பாடலைக் கலாவதி பாடியிருக்கிறார். காவடிப்பாடலை சண்முகலிங்கம் இயற்றியிருக்கிறார்.

தாயும் தங்கையும் சுப்பையாவை அடிக்கும் காட்சி அருவருப்பாக இருக்கிறது. எது எப்படியோ முந்திய இலங்கைப்படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது ஏற்படும் ஒருவித ஏமாற்றவேதனை, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வரும்பொழுது ஏற்படவில்லை.

......நம்நாட்டுச் சினிமா வளர்வதற்கு நமது ரசிகப்பெருமக்களை மடக்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஒரு சில தென்னிந்திய நடிகர்களை இறக்குமதி செய்து நடிக்க வைப்பது நல்லவழிதான். இந்த வளமான வழியை முதலில் காட்டித்தந்த இயக்குநர் வெண்கட்டுக்கும் தயாரிப்பாளர் ரமீஸ், சமீஸ் சகோதரர்களுக்கும் எமது பாராட்டுகள்’ என்று விமர்சனம் எழுதினேன்.

கே. வெண்கட் மேலும் பலவித தமிழ்ப் படங்களை உருவாக்குமுன்பே இளவயதில் காலமானார். 1983 கலவரத்தில் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டார்.


24. ‘நெஞ்சுக்கு நீதி’
மூன்று நாடுகளை ஒன்றிணைத்த படம்
‘பைலட் பிறேம்நாம்’ படத்துக்காகப் பல தென்னிந்தியக் கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சென்றனர். ‘மாமியார் வீடு’ திரைப்படத்துக்காக எஸ்.வீ. சுப்பையா, ஜெயா, மீரா போன்றோர் வந்து போனார்கள். இப்படித் தென்னிந்தியக் கலைஞர் ஒருவர் இருவரை இறக்குமதி செய்து இலங்கைப் படத்தில் நடிக்கவைத்தால் ஓரளவு வெற்றிபெறலாம் என்ற கருத்து இங்கு பலர் உள்ளங்களில் உருவாகியது

இப்படியான எண்ணம் இலங்கையில் உள்ள கலைத் தம்பதி ஒன்றுக்கும் உருவாகியது. இவர்கள் ஏற்கனவே இலங்கையில் ஒரு தமிழ்;ப் படத்தையும் அதன்பின் ஒரு சிங்களப் படத்தையும் தயாரித்த அனுபவசாலிகள். இலங்கைத் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்தவர்களின் பெயர்களில் இவர்கள் பெயர்களும் அடங்குகின்றன. அந்தக் கணவனின் பெயர் சுண்டிக்குளி சோமசேகரன்@ அவரது மனைவியின் பெயர் மாலினிதேவி சோமசேகரன், ஸ்ரீதர் தன் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் இரண்டு புது முகங்களைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தினார். ஒருவர் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, மற்றவர் நடிகர் ஸ்ரீகாந். புதிய அலையாக வந்த ‘அவள்’ என்னும் திரைப்படத்தில் இவர் ஒருமாதியாக நடித்திருந்ததால் இவருக்குக் ‘கவர்ச்சி வில்லன்’ என்ற பெயர் கிடைத்தது. ஸ்ரீகாந் மலேசியாவுக்குப் போயிருந்த சமயம் மாலினிதேவியைச் சந்தித்தார். மாலினிதேவி தயாரிக்க இருக்கும் இலங்கைத் தமிழ்ப் படத்தில் ஸ்ரீகாந் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அப்பொழுதே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தொலைக்காட்சிச்சேவை சிறந்து விளங்கியது. மலேசியாவில் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்று விளங்கினார் ஒரு நடிகர். அவர் பெயர் சிவாஜி ராஜா. அவரும் இலங்கைப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இவர்களுடன் சிங்களத் திரைஉலகில் சிறந்த ஜோடியாக விளங்கிய றோய் டி சில்வாவும் சுமனாவும் இப்படத்தில் நடிக்க முன்வந்தார்கள்.

இவர்கள் மட்டுமல்ல ஏ. ரகுநாதன், டீன்குமார், கே.ஏ. ஜவாஹர், எஸ். ராம்தாஸ், எஸ். ராஜகோபால், எம்.வீ. பாலன், கலைச்செல்வன், விஸ்வநாதராஜா, டொன்பொஸ்கோ, ஜோநஸீர், விஜயராஜா, தனரெத்தினம், பரீனாலை, ஹெலன்குமாரி, சந்திரகலா, யோகா தில்லைநாதன், ராஜலக்சுமி, மானல்வானகுரு, ஜெயதேவி என்று சினிமா அனுபவம் பெற்ற பெரிய பட்டாளமே நடிகர், நடிகைகளாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

‘இந்த நாட்டின் திறமையான கலைஞர்கள் பலரை ஒன்று சேர்த்து இப்படத்தை உருவாக்குகிறேன்’ என்று சொன்னார் இயக்குநர் சுண்டிக்குளி சோமசேகரன். தயாரிப்பு இவரது மனைவி மாலினிதேவி சோமசேகரன். தயாரிப்பில் இவர்களுக்கு உதவியாக விளங்கினார் லோர்ட் எஸ். கந்தசாமி.

இவர்களது முதலாவது தயாரிப்பான ‘டைக்ஷி டிறைவ’ருக்குக் கதைவசனம் எழுதிய பேராதனை ஏ, ஜுனைதீனே இப்படத்துக்கும் கதைவசனம் எழுதினார். எம். ஏ.கபூர் ஒளிப்பதிவு செய்த ஏழாவது தமிழ்த் திரைப்படம் இது.

பல பாடல்களுக்கு இசை அமைத்து, பல பாடகர்களை அறிமுகப்படுத்தி, பல சிங்களப் பாடல்களின் இசைத்தட்டுகளை உருவாக்கிவந்தார். தமிழ் இளைஞர் ஒருவர். அவர் ‘கலியுககாலம்’ என்ற டப் படத்துக்கும் இசை அமைத்தார். பின்நாளில் நடிகர் தியாகராஜன். ஸ்வப்னா போன்ற நடிகைகளை வரவழைத்து ‘இளையநிலா’ என்ற படத்தைத் தயாரித்தார். இளையநிலாவுக்கு இவரே இசை அமைத்தார். இப்படத்துக்கு இவர் இசை அமைத்து எஸ்.பி. சுப்பிரமணியம், எஸ்.பி. சைலஜா ஆகியோர் பாடிய பாடல்களின் இசைத்தட்டு இப்பொழுதும் இலங்கை வானொலி நிலையத்தில் இருக்கிறது.

அந்த இசை அமைப்பாளர்தான் ‘சண்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சண்முகமாவார். ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திரும் ஈழத்து ரெத்தினம், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு ‘சண்’ இசை அமைத்தார்.

முத்தழகு, கலாவதி, நித்தி கனகரெத்தினம், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர்.

இலங்கையில் தமிழ்ப்படங்கள் உருவாகுவதை இந்தியப் படங்களுடன் தொடர்புடைய பலர் பல காலமாகும எதிர்த்து வந்திருக்கிறார்கள். இந்த எதிர்ப்பாளர்கள் இலங்கையிலும் இருந்தார்கள், இந்தியாவிலும் இருந்தார்கள்.

ஸ்ரீகாந் இலங்கைக்கு வந்து படம நடிப்பது தென்னிந்தியாவிலுள்ள பிரபல நடிகர் ஒருவருக்குப் பிடிக்க வில்லையாம்.

ஸ்ரீகாந்தின் இலங்கை விஜயத்தை அந்த நடிகர் பல தடவை தடுத்துப் பார்த்தார். ஆனாலும் ஸ்ரீகாந் இலங்கைக்கு வந்துவிட்டார். வந்து நடித்துவிட்டு விரைவாக திரும்ப வேண்டியிருந்தது. அவர் போய் விட்டார். படத்தில் அவர் நடித்த பாத்திரத்துக்குக் குரல் கொடுத்த மீண்டும் வரவில்லை.

பின்பு ஸ்ரீகாந்தின் பாத்திரத்துக்கு வானொலி அறிவிப்பாளர் எஸ். நடராஜசிவம் குரல் கொடுத்தார். பல சிரமங்களுக்கு மத்தியில் பல வருடங்களுக்குப் பின்பு ‘நெஞ்சுக்குநீதி’ 04.04.1980இல் இலங்கையில் திரையிடப்பட்டது.

மூன்று குடும்பங்களைச் சுற்றி கதை நகர்கிறது.

ஒரு குடும்பத்தில் வலிப்பு நோயுள்ள விஸ்வநாதராஜாவும் அவரது தங்கை பரீனாலையும் இருக்கிறார்கள்.

மற்றது பணக்காரக் குடும்பம். ஏ. ரகுநாதன் மூத்த அண்ணன். இவருக்கு ஸ்ரீகாந் தம்பி. இவர்களுக்கு தங்கை சுமனா.

மூன்றாவது குடும்பம் பெரியது. தந்தை கே.ஏ. ஜவாஹர்.

ஏழைப்பெண் பரீனாலையைப் பணக்காரப் பையன் டீன்குமார் காதலிக்கிறார். பரீனாலை தாயாகிறாள்.

விஸ்வநாதராஜா, டீன்குமாரின் குடும்பத்தோடு கடைசிவரை போராடி தனது தங்கையை டீன்குமாருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்.

இதுதான் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.

இத்திரைப்படத்தைப் பற்றி ஏ. மதுரைவீரன் ‘தினகரனில்’ விமர்சனம் எழுதினார்.

......நல்ல கதையைத் தந்த திரைக்கதை வசனகர்த்தா ஏ. ஜுனைதீன் பாராட்டுக்குரியவர். ஆனால், நல்ல கதையை நல்ல முறையில் படமாக்கத் தவறிவிட்டார்கள். கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் நடிகர் நடிகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து, டைரக்டர் சோமசேகரனைப் பாராட்டவேண்டும். எல்லா நடிகர் நடிகைகளும் தங்கள் பாத்திரங்களைத் திறம்படச் செய்துள்ளனர்.

இவ்வரிசையில் விஸ்வநாதராஜா, பரீனாலை, ஸ்ரீகாந், ஏ.ரகுநாதன், யோகா தில்லைநாதன், கலைச்செல்வன், டீன்குமார், ராஜகோபால், ஜவாஹர், ராம்தாஸ், ஜோபு நஸீர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

மலேசிய நடிகர் சிவாஜிராஜாவின் காட்சிகளை நீக்கி, தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் அதிகரித்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

எம்.ஏ.கபூர் தனது ஒளிப்பதிவுப் பணியைத் திறம்படச் செய்துள்ளார்.

எஸ். ராம்தாஸ், எம்.வீ. பாலன் தோன்றும் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கலாம். பெரேரா, லிலியன், டொன்பொஸ்கோ போன்றோரும் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றுகின்றனர். ஒரு பெண்ணின் இடுப்பின்மீது குரங்குபோல் தாவிக்கொண்டு கொஞ்சுவது என்ன நகைச்சுவையோ?

இப்படியான பிரமாண்டமான படைப்பை உருவாக்கிய டைரக்டர் சுண்டிக்குளி சோமசேகரன் பாராட்டுக்குரியவரே’ என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.

இப்படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 28 நாட்களும், தென்கொழும்பில் (சபையார்) 14 நாட்களும் ஓடியது. யாழ் நகரில் (ராணி) 22 நாட்களும், வவுனியாவில் (நியூ இந்தியா) 14 நாட்களும் ஓடியது. மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) திருகோணமலையிலும் (ஸ்ரீகிருஷ்ணா) தலா 14 நாட்கள் ஓடியது.

ஹட்டனில் (பிறின்ஸ்) 10 நாட்கள் ஓடியது.

இவற்றைவிட, மேலுமொரு திரைப்படத்தை உருவாக்க இந்தக் கலைத் தம்பதிகள் முயன்றார்கள்.

1983 ஜுலைக் கலவரம் வந்தது. பாமன்கடையில் இருந்த இவர்களது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

திரு. சோமசேகரன் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்றார். திருமதி. மாலினி சோமசேகரன் யாழ்ப்பாணம் சென்றார். பின்பு இந்தியா சென்றார். இப்பொழுது திருச்சியில் இருந்துகொண்டு கலைமுயற்சியில் ஈடுபடுகிறார்.


25. ‘இரத்தத்தின் இரத்தமே’
கொழும்பு நகரின் பிரபலமான ஹோட்டல்களில் ‘பிறைட்டன்’ ஹோட்டலும் ஒன்று. தென்னிந்தியாவிலிருந்து இங்கு வரும் பிரபல நடிகர் நடிகையர் பெரும் பாரும் இந்த ஹோட்டலில்தான் தங்குவார்கள். அப்பொழுதெல்லாம் அந்தக் கலைஞர்களைப் பார்ப்பதற்கு ஹோட்டலுக்கு வெளியே பல ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். சில வேளைகளில் நானும் அங்கு நின்றிருக்கிறேன்.

அந்த ஹோட்டல் அப்பொழுது எஸ்.கே. அரியரெத்தினத்துக்குச் சொந்தமாக இருந்தது. ஹோட்டலில் தங்கிய நடிகர்களுடன் பழகியதில், இவருக்கும் இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது.

அதையும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கவேண்டும் என்று தொடங்கிவிட்டார்.

பிரபல தென்னிந்திய சினிமா இயக்குநர் ஏ.சீ. திருலோகச்சந்தரின் கதைக்கு ஆரூர்தாஸ் வசம் எழுதினார்.

‘பைலட் பிறேம்நாத்’ கூட்டுத் தயாரிப்பில் இணை இயக்குநராகக் கடமையாற்றியவர் ஜோதேவானந். அப்படத்தில் ‘கடமைக்காக’ இவரது பெயர் போடப்பட்டிருந்தாலும் ‘இரத்தத்தின் இரத்தமே’ படத்தில் முழுமையாக இயங்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

பல சிங்களப் படங்களுக்கு உதவி இயக்குநராக விளங்கிய அன்ரன் கிரகரியும் பத்திரிகையாளர் ஜோ. ஜெயசீலனும் உதவி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

முக்கியமான பாத்திரங்கள் தென்னிந்தியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. ஜெய்சங்கர், ஜெயச்சந்திரன், ராதிகா, அசோகன், நாகேஷ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

கவர்ச்சிப் பாத்திரங்களும் அடிவாங்கும் பாத்திரங்களும் சிங்கள நடிகையர் நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

அப்பாத்திரங்களில் கீதாகுமாரசிங்க, அனோஜா வீரசிங்க, பியதாச விஜயகோன், அலெக்சாண்டர் பெர்னாண்டோ போன்றோர் நடித்தனர்.

சிறுசிறு பாத்திரங்கள் உள்நாட்டுத் தமிழ்க் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன.

தர்மலிங்கம், டிங்கிறி, கனகரெத்தினம், சச்சிதானந்தன், சண்முகராஜா, ஸ்ரீவிஜயதீபன், வசந்தர், ராஜலக்சுமி, நடராஜா, ஆர்.பி.கந்தையா, ராம்குமார் போன்றோர் அச்சிறுசிறு பாத்திரங்களை ஏற்றுக்கொண்டனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும்பாலும் இலங்கையர்களாகவே இருந்தனர். எம்.ஏ. கபூர் ஒளிப்பதிவைப் பொறுப்பேற்றார்.

எம்.கே. றொக்சாமி இசை அமைப்புக்குப் பொறுப்பு. ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களைப் பிரபல ஒலிபரப்பாளர் எஸ்.கே. பரராஜசிங்கம், ஜோசப் ராஜேந்திரன், ஜேசுதாஸ், சுஜாதா ஆகியோர் பாடினர்.

பிறைட்டன் பிலிம்ஸாரின் ‘இரத்தத்தின் இரத்தமே’ திரைப்படத்தின் ஆரம்ப விழா 26.11.1979இல் ஆரம்பமாகியது. சிவாஜி கணேசன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து கமறாவை முடுக்கி வைத்தார். கபூர் கமறாவை இயக்க ஜோதேவானந் ‘ஓகே’ சொன்னார்.

இந்தியக் கலைஞர்கள் இலங்கை வந்தார்கள். மூன்று மாதத்துக்குள் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்தன. படம் ஈஸ்மென்ட் கலர் என்பதால் ஹொங்கொங்குக்கு அனுப்பிக் கழுவப்பட்டது.

ஜெய்சங்கர் ஒரு பொலிஸ் அதிகாரி. கீதா அவரது தங்கை. ஜெயச்சந்திரன் பெண்களுக்குப் பொதை மருந்துகளைக் கொடுத்து அவர்களைக் கெடுப்பவன். முதலில் அனோஜாவைக் கெடுக்கிறான். பின்பு கீதாவை மயக்கிக் கெடுக்க முனைகிறான். அவளை நிர்வாணமாகப் பார்க்கவேண்டும் என்கிறான். போதை மருந்து கிடைக்கும் என்பதால் அதை அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவள் நிர்வாணமாக நிற்கும்பொழுது அண்ணன் ஜெய்சங்கர் கண்டு விடுகிறான்... அவமானம் தாங்கமுடியாமல் தங்கை தற்கொலை செய்கிறாள். பொலிஸ் அதிகாரி வில்லனைச்சுட்டுக்கொல்கிறார்’.

எப்படி இருக்கிறது கதை? மலையாள ‘ஏ’ படம்போல் இருக்கிறதல்லவா?

கீதா நிர்வாணமாக நிற்கும் காட்சியில் அவரது பின்னழகைத் திரையில் நீண்டநேரம் காட்டினார்கள். தணிக்கை சபை சில காட்சிகளைக் கத்தரித்த பின்புகூட, படம் படுகவர்ச்சியாக இருந்தது. இந்தப்படம் 100 நாட்கள் ஓடாமல் வேறு எந்தப்படம்தான் ஓடும்?

இத்திரைப்படம் 11.04.1980இல் இலங்கையில் ஆறு நகரங்களில் திரையிடப்பட்டது. இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று முதன் முதலில் ஒரே தியேட்டரில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

இப்படம், மத்திய கொழும்பில் (கிங்ஸ்லி) 105 நாட்கள் தொடர்ந்து ஓடியது. தென் கொழும்பில் (சவோய்) ஓடிய நாட்கள் 52 ஆகும்.

யாழ்ப்பாணத்தில் (ஸ்ரீதர்) 56 நாட்களும், வவுனியாவில் (ஸ்ரீகிருஷ்ணா) 30 நாட்களும், சுன்னாகத்தில் (நாகம்ஸ்) 34 நாட்களும் ஓடியது.

மட்டக்களப்பில் (விஜயா) 35 நாட்களும், திருகோணமலையில் (லக்சுமி) 30 நாட்களும், கல்முனையில் 20 நாட்களும், பதுளையில் (கிங்ஸ்) 28 நாட்களும் தொடர்ந்து ஓடியது.

ஏ.எச். சித்தீக் காரியப்பர் ஓர் இளம் பத்திரிகையாளர். அவர் இப்படத்தைப் பற்றி ‘தினகரனில்’ விமர்சனம் எழுதினார்.

‘......’இரத்தத்தின் இரத்தமே’ படத்தில் புதிய துறையான நெறியாள்கை கையாளப்பட்டுள்ளமை சிறப்புக்குரியது. காட்சிக்குக் காட்சி மாறுபட்டு ஒலிக்கும் தனி இசை ஆங்கிலப் பாணியைக் காட்டுகிறது.

போதை மருந்தூட்டிப் பெண்களைத் தம் வசப்படுத்தி, அவர்களின் கற்பைச் சூறையாடுவதுடன், அவர்களைக்கொலை செய்யும் காமப்பித்தர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதுதான் கதை.

காமனின் போதை மருந்தை உண்டு கற்பை இழக்கநேரிடும் பெண்களில் இன்ஸ்பெக்டரின் தங்கையும் அடங்குகிறாள்.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்கிறது. இனிமையாக இசை அமைத்த பாடல்கள் புதியவர்களால் பாடப்பட்டமை போற்றத்தக்கது. நாகேஷின் நகைச்சுவை நன்றாக அமைந்துள்ளது. அனைவரது நடிப்பும் பிரமாதம். இலங்கையின் தலைநகரிலுள்ள காட்சிகள் பலவற்றை உள்ளடக்கியது பாராட்டுக்குரியது. டைரக்டர் ஜோ. தேவானந் பாராட்டுக்குரியவர். ‘பிறைட்டன் அரியரெத்தினம்’ தனது பெயர் நிலைத்து நிற்கக்கூடிய விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.’

இப்படித் தன் விமர்சனத்தின்மூலம் புகழ்ந்திருந்தார்.

அப்பொழுது சென்னையிலிருந்து ‘சினிமா எக்ஸ்பிறஸ்’ பத்திரிகை வந்துகொண்டிருந்தது. மற்றைய சினிமாப் பத்திரிகைகளைவிட, அளவில் பெரிதாகவும் இருந்தது. அந்தப் பத்திரிகையில் ‘சிலோன் சினிமா’ என்ற தலையங்கத்தில் நம்நாட்டுச் சினிமாச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். அதை ‘இலங்கை மனா என்ற பெயரில் நமது எம்.எம்.மக்கீன் அவர்களே எழுதி வந்தார். இப்படத்தைப் பற்றியும் எழுதினார்.

‘மிகக் குறுகிய காலத்தில் ஜெய்சங்கர், ராதிகா, அசோகன், நாகேஷ், ஜெயச்சந்திரன் நடித்துக்கொடுத்த ‘இரத்தத்தின் இரத்தமே’ இலங்கைத் தமிழ்ப்படம் இலங்கையில் சக்கை போடு போடுகிறது. நூறுநாள் தாண்டிவிடும் என்கிறார்கள். ஜெய்சங்கர் 100வது நாள் விழாவுக்குக் கட்டாயம் இலங்கை வருவார் என்று நம்புகிறார்.

இப்படத்தின் வெற்றி ரகசியம் என்னவென்று ஒரு தீவிர ரசிகரிடம் கேட்டபோது, ‘கர்ணன் ஸ்டைலில் மிகவும் புத்திசாலித்தனமான மூளையோடு செக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.

சிவாஜியின் ‘மோகனப் புன்னகை’ கதாநாயகி கீதா இதில் தாராளமாகக் கவர்ச்சியைக் காட்டுகிறார். சென்சார் சில காட்சிகளில் கத்தரிக்கோல் போடவும்செய்தது. இந்தப் படம் தமிழகத்தில் காட்டப்படுமானால் கீதாவுக்குத் தமிழ்ப்பட மார்க்கட் மட்டுமல்ல, தெலுங்குப் பட மார்க்கட்டும் பிய்த்துக்கொண்டு வரும்’ என்று எழுதினார்.

1981ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இப்படம் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ்த் திரைப்படம் எதுவும் அதுவரை இந்தியாவில் திரையிடப்படவில்லை. ஆனால், இத்திரைப்படம் இந்தியாவுக்கு நாலரைலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

1981 நவம்பர் மாதம் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது. அங்குள்ள தியேட்டர்களில் ஒரு வாரம் மட்டும் ஓடியது. அங்குள்ள பத்திரிகைகள் இப்படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் வருடா வருடம் நடத்தப்படும் திரைப்பட விழா 1981ஆம் ஆண்டிலும் நடைபெற்றது. இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்த கீதாகுமாரசிங்கவுக்குச் சிறந்த துணைநடிகைக்கான விருது கிடைத்தது.

பிரபல ஸ்ரில் படப்பிடிப்பாளர் மைக்கல் விக்டோரியா, இப்படத்தைச் சிங்கள மொழிக்கு டப் பண்ணும் உரிமையைப் பெற்றார். அது ‘யுக்தியட்ட சண்டியா’ என்ற பெயரில் சிங்கள ஊர்களில் நன்றாக ஓடியது.


26. ‘அவள் ஒரு ஜீவநதி’
எழுத்தாளர் தயாரித்த படம்
மலையகத்தில் பிறந்த ஓர் இளைஞனுக்குச் சிறுவயது முதலே எழுதுவதில் தனிப்பிரியம். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை, சமயக்கட்டுரை என்று பலவற்றை எழுதி வந்தான்@ நாடகம் எழுதி அதில் நடித்தும் வந்தான்.

மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் படிக்கும்போதே இவன் எழுதி நடித்த பல மேடை நாடகங்களுக்குப் பல்வேறு பரிசுகள் கிடைத்தன.

இவன் எழுதிய முதல் நாடகம் ‘தீர்ப்பு’ ஆகும். முதலில் நடித்த நர்கம் ‘பலேபுரடியூஷர்’ என்பதாகும். பின்னாளில் கொழும்புக்கு வந்து 20க்கும் மேற்பட்ட நாடகங்களை மேயேற்றினான். அக்காலத்தில் இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைக்கதையாக்கப் போட்டியிலும் இவன் எழுதிய ‘சுற்றும்சுடர்’ என்ற பிரதிக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது.

சில நண்பர்களின் உதவியுடன் தமிழ்த் திரைப்படமொன்றையும் தயாரித்தான். அந்த இளைஞன் தான் ‘மாத்தளை கார்த்திகேசு’ அவர் தயாரித்த படத்தின் பெயர் தான் ‘அவள் ஒரு ஜீவநதி’.

மாத்தளைக் கார்த்திகேசுவைக் கலைத்துறைக்குக் கொண்டு வந்தவர். ஜே.பி. றொபேர்ட். கார்த்திகேசுவும் றொபேர்ட்டும் இன்னும் பல கலைஞர்களும் ஒன்று சேர்ந்து, கொழும்பில் ‘கவின் கலை மன்றம்’ என்ற நாடகக் குழுவை நடத்திவந்தனர். இக்குழுமூலம் கார்த்திகேசு எழுதி. றொபேர்ட் இயக்கிய பல நாடகங்கள் மேடையேறின.

இந்த இரு கலைஞர்களும் ‘அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தையும் உருவாக்க முனைந்தனர். கார்த்திகேசுவின் திரைக்கதைப்படி 2 கதாநாயகர்கள் தேவை.

அவர்களில் ஒருவராக ஏற்கனவே திரைப்படங்களில் நடித்து அனுபவமுள்ள டீன்குமாரைத் தெரிவு செய்துகொண்டார்கள்.

மற்றவர் யார்? கொழும்பில் பிறந்து கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் கல்லூரியில் படித்துவந்தான் ஓர் இளைஞன். 7 வயது தொடக்கமே வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவந்தான். பாடகனாக வரவேண்டுமென்பதே ஆசை. ஆனால், நடிகனாகவே வர முடிந்தது. 1974ஆம் ஆண்டு இவனுக்கு வயது 20. கே.எஸ். செல்வராஜாவின் இயக்கத்தில் உருவான மேடைநாடகத்தில் முக்கியப் பாத்திரத்தில் தோன்றினான். எஸ்.வி. சந்திரனின் ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்தில் சிறிது நேரம் தோன்றி மறைந்தான்.

இந்த இளைஞனும் இப்படத்தில் இன்னுமொரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டான். அந்த இளைஞன்தான் விஜயராஜா.

இவர்களுடன் கே.எஸ். பாலச்சந்திரன், எம்.ஏகாம்பரம், ஆh. சிதம்பரம், கந்தையா, சீதாராமன், ஸ்ரீதர் மோகன்குமார் போன்றோர் நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள். பரீனாலை, அனுஷா, சந்திரதேவி, சந்திரகலா போன்றோரும் நடிகைகளானார்கள்.

படத்தை இயக்கும் பொறுப்பை ஜே.பி. றொபேர்ட்டும், ஜோ. மைக்கலும் இணையாக ஏற்றுக்கொண்டார்கள்.

நாடக உலகிலிருந்தே ஜே.பி. றொபேர்ட் திரை உலகிற்கு வந்தவர். இலங்கை ‘கலாச்சாரப் பேரவை’ நடத்திய ‘களங்கம்’ என்னும் நாடகம் இவருக்குச் சிறந்த இயக்குநருக்கான பரிசை வாங்கிக்கொடுத்தது. இவர் இப்படத்தின் இயக்குநரானார். இவருடன் இன்னுமொரு நாடக அனுபவசாலியான ஜோ. மைக்கலும் இப்படத்தின் இணைஇயக்குநராக நியமிக்கப்பட்டார்.

1961ஆம் ஆண்டில் அரசாங்க இசையாசிரியராக நியமனம் பெற்றவர் எம்.எஸ். செல்வராஜா. இவர் பல சிங்களப் படங்களுக்கு இசை அமைத்தார். 1971ஆம் ஆண்டுமுதல் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் மெல்லிசைப் பாடல்களுக்கு இசை அமைத்துவந்தார்.

பாடகர் வீ. முத்தழகுவின் ‘ஸப்தஸ்வரம்’ என்ற ஒரே நபர் மேடை நிகழ்ச்சிக்கு இசை அமைத்துப் புகழ்பெற்றார். இவ்வாறு இசை அமைப்பில் புகழ்பெற்ற இவருக்கு இப்படத்துக்கு முதன் முதலாக இசை அமைக்கும் பொறுப்பை வழங்கினார்கள்.

ஈழத்து ரெத்தினம், மௌனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களை வீ. முத்தழகு, கலாவதி, சுஜாதா, எஸ்.வீ.ஆர். கணபதிப்பிள்ளை, ஜோசப் ராஜேந்திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினர்.

இது எழுத்தாளர் தயாரிக்கும் படமல்லவா? பலரும் நல்ல கதையை எதிர்பார்த்தார்கள்.

பலவித கஷ்டங்களின் மத்தியில் கீதாலயா மூவீஸ் ‘அவள் ஒரு ஜீவநதி’ திரைப்படம் 17.10.1980இல் 6 ஊர்களில் திரையிடப்பட்டது.

மலையகத்தில் தோட்ட உரிமையாளர் ஒருவருக்கு ஒரே மகள். அவள் தன் அத்தானைக் காதலிக்கிறாள். அது ஒருதலைக் காதலாகும். ஆனால், அத்தானோ தனக்கு இரத்ததானம் செய்த ஒருத்தியை விரும்பி மணந்துகொள்கிறான். தன் அத்தானால் கைவிடப்பட்ட பெண், பழிச்சொல்லுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொள்ள முனைகிறாள். அச்சமயம் அவளைக் காமுகர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் எழுத்தாளன். அவளுடன் தாம்பத்திய உறவில்லாது வெறும் சதிபதியாக வாழ்கிறான் எழுத்தாளன். கடைசியில் எழுத்தாளன் கொலை செய்யப்படுகிறான். அதனால், அவள் துறவறம் பூணுகிறாள். அவள்தான் ‘அவள் ஒரு ஜீவநதி’.

எழுத்தாளர் மாத்தளை கார்த்திகேசுவின் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்தான் இது.

படம் திரையிடப்பட்டு பத்து நாட்களின்பின் கே.எஸ். சிவகுமாரன் வீரகேசரியில் (26.10.1980) விமர்சனம் எழுதினார்.

‘இலங்கை நாடகத்துறையில் ஈடுபட்ட பலரும் திரை உலகிலும் தமது ஆற்றலைக் காட்ட விழைவது இயல்பே. ‘அவள் ஒரு ஜீவநதி’ ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய படம். அனாவசியமான விளக்கங்களும் காட்சி நீட்டல்களும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. நடிப்பில் மேடைத்தன்மை குறைந்திருக்கிறது.

டீன்குமார், விஜயராஜா, கே.எஸ். பாலச்சந்திரன், திருச்செந்தூரன் ஆகியோரின் நடிப்புமுறை சினிமாவுக்கு ஏற்றதாக இருக்கிறது. டீன்குமாருடைய ஸ்ரைல் அலட்சியமாகத் தோற்றம் கொடுக்கும் அதேவேளையில், நிதானத்துடன் இயங்குவதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சாடையாக சிவாஜி பாணி தென்பட்டாலும் இவர் பிரக்ஞையாகவே சுயபாணியில் நடிக்க முற்படுவது வரவேற்கத்தக்கது.

விஜயராஜாவும் தனது ஆற்றலை நன்றாக வெளிப்படுத்துகிறார். பாத்திர அமைப்புக் காரணமாகச் சிறிது எச்சரிக்கையுடன் நடிக்க முற்படுகிறார்.

‘வாடைக்காற்று’ படத்தில் கே.எஸ். பாலச்சந்திரனின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இவரது ஆற்றல், நாடகத்திலும் பார்க்க சினிமாவிலேயே நன்றாக வெளிப்படுகிறது. அவர் இப்படத்தில் தனித்துவமான பாணியில் நடிக்கிறார்.

திருச்செந்தூரன் கிறிஸ்தவ பாதிரியராக ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார். அவருடைய பாத்திரமும் பண்பான பயிற்சியும் பரவசப்படுத்துகின்றது.

கார்த்திகேசு, ஏகாம்பரம், சிதம்பரம், பரீனாலை, அனுஷா போன்றோரும் தமது திறமைகளைக் காட்டுகின்றனர். பரீனாலை தன் எல்லைக் கட்டுக்குள் நின்று தன்னாலியன்ற அளவு ஒத்துழைக்கிறார். பாத்திரத்தின் தன்மையை அவர் கொண்டுவருகிறார். அனுஷாவும் ரசிக்கும்படி நடிக்கிறார்.

ஆக படத்தொகுப்பு, நடிப்பு இரண்டிலும் சிறப்பாகவும், நெறியாள்கை, படப்பிடிப்பு ஆகியவற்றில் புறபஷனலாகவும், இசை அமைப்பில் லலிதமாகவும், பாடல்களில் இனிமையாகவும் இணைந்த இப்படம் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.

மாத்தளை கார்த்திகேசுவின் படக்கதை முடிவும், ‘ஜீவநதி’ என்ற பெயரைக் கதாநாயகி பெறப் பொருத்தமானவரா? என்ற ஐயமும் ஏற்படுகிறது.

இக்கதையில் முக்கியப் பாத்திரம் எழுத்தாளனின் மனைவியல்ல@ எழுத்தாளனின் காதலியான நேர்ஸ்தான். அவளைச் சுற்றித்தான் ஏனைய பாத்திரங்கள் இயங்குகின்றன. அவரே இரத்த தானம் செய்கிறார். அவளுக்கே பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. அவள்தான் உண்மையான ஒரு ஜீவநதி. ஆனால், கார்த்திகேசுவின் கதைப்படியும், றொபேர்ட்டின் நெறியாள்கையின்படியும் முதலாளியின் மகள் பரீனாலையே கதாநாயகி.

படத்தில் கவர்ச்சி, கராட்டே, ஆபாச நடனம், தழுவல், அணைத்தல், முத்தமிடல் போன்ற பாவனைக்காட்சிகள் எல்லாம் வருகின்றன.

இவை பொழுதுபோக்கு ரசிகர்களுக்கு உரியவை. ஆனாலும், அவை படத்தின் கட்டுக்கோப்புக்குக் குந்தகமாக இருக்கின்றன.

நாம் தென்னிந்திய சினிமாவுடன் வர்த்தகரீதியில் போட்டிபோட முடியாது. இந்நிலையில் நமது திரைப்பட முயற்சிகளுக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், இலக்கியத்தில் நமது தனித்தன்மை காட்டமுடிந்ததுபோல், சினிமாவிலும் அந்நிலையைப் பெறச் சந்தர்ப்பம் ஏற்படாமல் போய்விடுமல்லவா? எனவேதான், வளரும் கலைகளுக்கு ‘டபிங் ஸ்ராண்டணாஸ்’ என்ற மாதிரி விமர்சனம் செய்யவேண்டியிருக்கிறது’ என்று எழுதி முடித்தார். உண்மைதான். விமர்சனம் எழுதாமல் விளம்பரமே பல விமர்சகர்கள் எழுதினர்.

இப்படத்தைப்பற்றி நானும் விமர்சனம் எழுதினேன். அது தினகரனில் (25.10.80) வெளிவந்தது.

‘மாத்தளை கார்த்திகேசு தனது எழுத்தாற்றலைச் சினிமா உலகம் நோக்கியும் திருப்பியிருக்கிறார். இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று பலர் எதிர்பார்த்தனர். சிறந்த முறையில் ஆரம்பமான கதை, சினிமா சமாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டபோது, கார்த்திகேசுவின் தனித்துவத்தைக் காணமுடியாமல் போய்விட்டது.

கதாநாயகன் டீன்குமார் தன் காட்சியில் திறம்பட நடிக்கிறார். இப்படத்தில்தான் இவருக்கு நடிக்க அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. தான் கமறாவுக்குப் புதியவனல்ல என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். நாட்டுப்பாடல் காட்சியொன்றே அவரது நடிப்பாற்றலுக்கு நல்ல உதாரணமாகும்.

இளம் கதாநாயகன் விஜயராஜா நாடக உலகத்திலிருந்து, திரை உலகத்திற்கு வந்திருக்கிறார். ‘எங்களில் ஒருவன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களில் அவர் தலைகாட்டினாலும் இப்படத்தில்தான் தன் திறமையைக்காட்ட சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. காதல் காட்சிகளில் நன்கு ஜொலிக்கிறார்.

கே.எஸ். பாலச்சந்திரன் தென்னக நடிகர் ஒருவரை ஞாபகப்படுத்தினாலும் தன் முத்திரையையும் பதிக்கிறார். பரீனாலையும் அனுஷாவும் பரவாயில்லை. கார்த்திகேசு பல இடங்களில் நன்றாக நடித்திருந்தாலும் சில இடங்களில் நாடகபாணி தென்படுகின்றது. எம். ஏகாம்பரமும் சில காட்சிகளில் தோன்றினாலும் தன் பாத்திரத்தைத் திறம்படச் செய்கிறார். ஆர் சிதம்பரம் தானும் தென்னக வில்லன்கனுக்குச் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்கிறார். திருச்செந்தூரன் பாதிரியாகராக அமைதியாக நடிக்கிறார்....’ என்று விமர்சனம் எழுதினேன்.

‘அவள் ஒரு ஜீவநதி’ மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 22 நாட்களும், தென்கொழும்பில் (ஈரோஸ்) 13 நாட்களும் ஓடியது. யாழ்ப்பாணத்தில் (வின்ஸர்) 14 நாட்களும், மட்டக்களப்பிலும் (றீகல்), திருகோணமலையிலும் (சரஸ்வதி) தலா 8 நாட்கள் ஓடியது. தயாரிப்பாளர் கார்த்திகேசுவின் சொந்த ஊரான மாத்தளையில் இப்படம் அதிக நாட்கள் ஓடவில்லை.

படம் திரையிடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப்பின் இத்திரைப்படம் (18.09.1984) ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டது. அப்பொழுது ‘சிந்தாமணி’யில் ‘சஞ்சயன்’ விமர்சனம் எழுதினார்.

‘ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஊற்றுத்தன்மையை உள்ளத்திலும் ஏற்படுத்தும் தன்மை ‘அவள் ஒரு ஜீவநதி’ படத்தில் இல்லை.

கணவனை இழந்து விதவையாகி வெண்ணிற ஆடையுடன் வீட்டைவிட்டு வெளியேறும் பெண்ணை ‘ஜீவநதி’ என்று, ஒரு நதியையும் காட்டி படத்தலைப்பிலும் ஒரு பாடலைப் புகுத்தி படத்தை முடித்துவிட்டால் மட்டும் போதுமா?

ஜீவன் இல்லாத பாத்திரப் படைப்புகளால் ஜீவநதியில் உணர்ச்சிப் பிரவாகத்தைக் காணமுடியவில்லை.

நாடகபாணி நடிப்பிலும் ஒரு திரைப்படம் தயாரிக்க முடியுமென்றால் அது நிச்சயமாக ‘அவள் ஒரு ஜீவநதி’யாகத்தான் இருக்கமுடியும்’ என்று அந்த விமர்சனம் முடிகிறது.

மாத்தளை கார்த்திகேசுவுக்கு நாடகமூலம் கிடைத்த நல்ல பெயர் இப்படத்தின் மூலம் கிடைக்கவில்லை. ஆனாலும், சினிமா பற்றிய பல படிப்பினைமிக்க அனுபவங்கள் அவருக்குக் கிடைத்துவிட்டன.


27. ‘நாடு போற்ற வாழ்க’
வீ.பி. கணேசனின் மூன்றாவது படம்
செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் படங்களைத் தயாரிக்கும் முயற்சியை ஆரம்பித்து வைத்தவர் யசபாலித நாணயக்கார.

இதே முயற்சியைப் பின்னாளில் வீ.பி.கணேசனுடனும் சேர்ந்து செய்தார்.

இவர்கள் இருவரும் உருவாக்கிய சிங்களப் படத்தின் பெயர் ‘அஞ்சனா’ அதன் தமிழ் ‘றீமேக்’தான் நாடுபோற்ற வாழ்க’.

இரண்டு படங்களிலும் ஒரே கதை. ஒரே தொழில்நுட்பக் கலைஞர்கள். ஆனால், நடிகர்கள் மட்டுமே வித்தியாசமானவர்கள். சிங்களப் படத்தின் கதாநாயகன் விஜய குமாரணதுங்க. தமிழ்ப் படத்தின் கதாநாயகன் வீ.பி. கணேசன். ஆனால், இரண்டு மொழிப் படங்களிலும் கதாநாயகிகள் கீதாகுமாரசிங்க, ஸ்வர்ண மல்லவராச்சி ஆகிய இருவருமாவர்.

இவர்களுடன் கே.எஸ். பாலச்சந்திரன், எஸ். ராம்தாஸ், எம். ஏகாம்பரம், லத்தீப், செல்வசேகரன், டொன்பொஸ்கோ, சிதம்பரம், மணிமேகலை, ரஞ்சனி போன்றோரும் நடித்தனர்.

யசபாலித்த படத்தை இயக்கினார். கதைவசனமும் உதவி செறியாள்கையும் எஸ்.என். தனரெத்தினம். ஒளிப்பதிவு ஜே.ஜே. யோகராஜா.

ஈழத்துரெத்தினம் இயற்றிய பாடல்களுக்கு சரத்தசனாயக்க இசை அமைத்தார். முத்தழகு, கலாவதி, சுஜாதா, சந்திரிகா, பாலச்சந்திரன் ஆகியோர் பின்னணி பாடினர்.

படப்பிடிப்பு 1980ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகியது. பாடல் ஒலிப்பதிவுகள் ‘சரசவிய’ ஸ்ரூடியோவில் நடைபெற்றன. படப்பிடிப்புகள் கொழும்பு மலையகம் என்று பல இடங்களில் நடைபெற்றன.

பலத்த விளம்பரத்தின் பின் 31.07.1981இல் 6 நகரங்களில் கணேஷ் பிலிம்ஸ், ‘நாடு போற்ற வாழ்க’ திரையிடப்பட்டது.

கண்ணன் (கணேஷ்) என்ற ஏழை இளைஞனும் மரிக்காரும் (ராம்தாஸ்) நண்பர்கள். செல்வந்தர் ஒருவருக்கு (லத்தீப்) செய்த உதவியால் நண்பர்கள் இருவருக்கும் எஸ்ரேட்டில் வேலை கிடைக்கிறது. செல்வந்தரின் மகள் சரோஜா (சுவர்ணா) எஸ்டேட் சுப்பிறிண்டன் விஸ்வநாத்துடன் (பாலச்சந்திரன்) நெருங்கிப் பழகும் அதேவேளையில் கண்ணன் மீதும் அன்பு செலு;துகிறார். கண்ணனனோ இன்னுமொரு செல்வந்தரின் (ஏகாம்பரம்) மகளான வனிதாவை (கீதா) உண்மையாகக் காதலிக்கிறார். விஸ்வநாத்தின் தொடர்பால் சரோஜா தாயாகிறார். வழி கண்ணன் மீது விழுகிறது.

கடைசியில் மோதல் வருகிறது. பின்பு விஸ்வநாத் ஒப்புக்கொள்கிறார். இறுதியாக இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

இதுதான் ‘நாடு போற்ற வாழ்க’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.

அப்பொழுது இத்திரைப்படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினார்கள். நானும் விமர்சனம் எழுதினேன். அது தினகரனில் (11.08.1981) வெளிவந்தது.

1975 வரை பெரிதும் தேக்கமுற்றிருந்த இலங்கைத் தமிழ்ச் சினிமாவைப் ‘புதியகாற்று’ மூலம் வேகம் கொள்ளச்செய்தவர் வீ.பி. கணேசன். ‘புதியகாற்று’, ‘நான் உங்கள் தோழன்’ படங்கள் மூலம் பல மேடை நடிகர்களைத் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.

சிங்களத் திரை உலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து நெறியாண்டவர் யசபாலித்த நாணயக்கார.

இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய படம்தான் ‘நாடு போற்ற வாழ்க’

‘புதியகாற்று’ மூலம் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் காட்டப்பட்டன. ‘நான் உங்கள் தோழன்’ மூலம் உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டங்கள் காட்டப்பட்டன. ஆனால், ‘நாடு போற்ற வாழ்க’ திரைப்படத்தில் அப்படியான பிரச்சினைகள் முன்வைக்கப்படவில்லை. அது ஜனரஞ்சகப் படைப்பாக விளங்கியது. தோட்டப் பின்னணியில் கதை நிகழ்கின்றபொழுதிலும் தோட்டத்தில் வாழும் மேல் வர்க்கத்தினரின் பாலியல் சிக்கல்களையே கதை கூறியது.

நடிகர்கள் எல்லோருமே ஏற்கனவே சினிமா அனுபவம் உள்ளவர்கள். முன்னைய படங்களைவிட, இப்படத்தில் கணேஷ் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாகத் தோன்றும் பாலச்சந்திரன் திறம்படச் செய்கிறார்.

தமிழ் நடிகைகள் பஞ்சத்திற்கு இப்படம் நல்லதொரு உதாரணமாகும். கீதாவின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. சுவர்ணாவும் நன்றாக நடிக்கிறார். தந்தைகளாகத் தோன்றும் ஏகாம்பரமும், லத்தீப்பும் வரும் காட்சிகள் எல்லாம் பாராட்டும்படி இருக்கின்றன. இவர்களுடன் மணிமேகலை, செல்வசேகரன், டொன்பொஸ்கோ, ரஞ்னி போன்றோரும் தோன்றுகிறார்கள்.

நான்கு பாடல்களையும் ஈழத்து ரெத்தினம் எழுதியிருந்தார். சரத் தசநாயக்க இசை அமைத்த மூன்றாவது தமிழ்ப்படம் இது.

மலையகத்தில் வனப்புமிக்க காட்சிகளை அருமையாகப் படமாக்கியிருக்கிறார். ஜே.ஜே. யோகராஜா...’ என்று நீண்டதாக விமர்சனம் எழுதியிருந்தேன்.

கணேஷின் மற்றப் படங்களைப்போல் இப்படம் அதிக நாட்கள் ஓடவில்லை. மத்திய கொழும்பில் (கெயிட்டி) நான்கு வாரங்களும், தென்கொழும்பில் (பிளாசா) ஒரு வாரமும் ஓடியது.

யாழ்ப்பாணம் (சாந்தி), மட்டக்களப்பு (சுபராஜ்), திருகோணமலை (ஸ்ரீகிருஷ்ணா), வவுனியா (நியூ இந்திரா) ஆகிய இடங்களில் தலா இரண்டு வாரங்கள் ஓடியது.

1989ஆம் ஆண்டில் ஜே.வி.பி. பிரச்சினையால், இந்தியப்பொருட்கள் இலங்கையில் பாவிக்கக்கூடாது என்ற ஒருநிலை உருவானது. அதனால், இந்தியப் படங்களும் திரையிடப்படாமல் தடை ஏற்பட்டது. அதனால், ஏற்கனவே திரையிடப்பட்ட இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களை மீண்டும் திரையிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 30.06.1989 ‘நாடு போற்ற வாழ்க’ மீண்டும் கொழும்பில் மட்டும் (செல்லமஹால்) திரையிடப்பட்டது. பழைய படமாகையால் அறுந்து விழுந்தோடிய இப்படம் ஐந்து நாட்கள் ஓடியது.

அதற்கு முன் ரூபவாஹினியிலும் காட்டப்பட்டது. எது எப்படியோ இலங்கைத் தமிழ்த்திiர்பட வரலாற்றில் தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்த பெருமை வீ.பி. கணேசனையே சாருகிறது.


28. ‘பாதை மாறிய பருவங்கள்’
‘தெய்வேந்திரா’ என்ற இளைஞர் சிங்களத்திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர். வெளிநாட்டிலும் ஒளிப்பதிவுத் துறையில் பயிற்சி பெற்றவர். பல சிங்களப் படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். ‘வெண்சங்கு’, ‘காத்திருப்பேன் உனக்காக’ ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் இவரே.

இளைஞர் சிறீஸ்கந்தராஜாவின் தந்தை நாதன் அவர்கள் நல்ல செல்வந்தர். அவருக்குத் தென்னிந்திய சினிமாக் கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பிருந்தது. இவருக்கும் இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டுமென்பது ஆசை.

தெய்வேந்திராவும் சிறீஸ்கந்தராஜாவின் தந்தையும் சந்தித்துக்கொண்டார்கள். பிரதான பாத்திரங்களில் தென்னிந்தியக் கலைஞர்களையும் உபபாத்திரங்களில் இலங்கைக் கலைஞர்களையும் நடிக்கவைத்து ஒரு வர்ணப் படத்தை இலங்கையிலேயே உருவாக்குவோம் என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

டைரக்டர் தெய்வேந்திராவுக்கு வானொலிக்காரர் இரா. பத்மநாதன் நண்பர். தனது படத்துக்கான கதையை எழுதித் தரும்படி டைரக்டர் இரா. பத்மநாதனிடம் கேட்டார்.

வானொலிக்காரர்கள் இரா. பத்மநாதன், கே. கந்தசாமி, கவிஞர் ஈழத்து ரெத்தினம் ஆகியோர் மட்டக்கப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு திரைக்கதை எழுதினார்கள். அவர்களது கதையில் உரையாடல்கள் மட்டக்களப்புத் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அதைப் பொதுவான தமிழுக்கு மாற்றி எழுதவேண்டியிருந்தது. இவர்களது வசனங்களை மட்டுமல்ல, கதையையே புதிதாக மாற்றி எழுதினார் ஜோர்ஜ் சந்திரசேகரன்.

கதையின்படி ¾ பகுதி கொழும்பில் நடைபெற்றது. ¼ பகுதி மட்டக்களப்பில் நடைபெற்றது.

பிரபலமான மலையாள நடிகர் பிறேம் நஸீரின் மகன் ஷாநவாஸ். ‘சுவரில்லாத சித்திரங்கள்’ மூலம் அறிமுகமான நடிகை சுமதி. பல படங்களிலும் நடனமாடிய மாயா ஆகியோர் இப்படத்தில் நடிக்க இலங்கை வந்தார்கள்.

சிங்கள நடிகைகளான சாந்தி ரசிகா, லீனாடி சில்வா ஆகியோருடன் நடராஜசிவம், இரா. பத்மநாதன், விஜய ராஜா, ராஜா கணேசன், எஸ்.என். தனரெத்தினம், ஜோர்ஜ் சந்திரசேகரன், ரீ. ராஜேஸ்வரன், சிதம்பரம் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

ஒரு கதாநாயகன் மூன்று கதாநாயகிகள். இரண்டாவது கதாநாயகனாக நடராஜசிவம் தெரிவுசெய்யப்பட்டார்.

ஒருநாள் படப்பிடிப்ணபுக்கு நடராஜசிவம் சென்றார். தான் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் தயாரிப்பாளர் நடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போய்விட்டார்.

பின்பு ஜோர்ஜ் சந்திரசேகரன் நடிக்க இருந்த பாத்திரத்தில் நடராஜசிவமும், யாரோ நடிக்கவேண்டி இருந்த பாத்திரத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரனும் நடித்தார்கள்.

திரைக்கதையில் பல்வேறு சிறு பாத்திரங்கள் வந்து போகின்றன. அவற்றுக்கு அவ்வப்போது படப்பிடிப்பைப் பார்க்கவந்தவர்களைப் பயன்படுத்தினார்கள்.

படப்பிடிப்புகள் கொழும்பு, மலையகம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்றன. தயாரிப்பாளர்கள், பாடல்களின் இசை அமைப்பில் அதிக அக்கறை காட்டினார்கள். ஆர். முத்துசாமி பல படங்களுக்கு இசை அமைத்தவர். அவர் மகன் மோகன்ராஜ் மேடையில் பல இசை நிகழ்ச்சிகளைச் செய்துவந்தார். ‘எங்களில் ஒருவன்’ என்ற படத்தில் தந்தையுடன் சேர்ந்து இசை அமைத்தார். தனித்து ‘புளுகர்கள் யாக்கிரதை’ என்ற படத்துக்கு முதன் முதலில் இசை அமைத்தார். ஆனால், அப்படம் வெளிவரவில்லை.

எம். மோகன்ராஜ் இப்படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார். அவருக்கு உதவியாக ரங்கன் இருந்தார்.

பாடல்களை ஸ்ரீஸ்கந்தராஜா, இரா. பத்மநாதன், அம்பி, செ. குணரத்தினம் ஆகியோர் இயற்றினர்.

அப்பாடல்களை மோகன், கே.எஸ். பாலச்சந்திரன், கே. ஜெயகிருஷ்ணா, பி. கிருஷ்ணன், ராணி ஜோசப் ஜெகதேவி ஆகியோர் பாடினர்.

பல கஷ்டங்களின்பின் 15.10.1982இல் ஸ்ரீகருமாரியம்மன் கிறியேஷன், ‘பாதை மாறிய பருவங்கள்’ திரைப்படம் இலங்கையில் ஐந்து இடங்களில் திரையிடப்பட்டது. ‘கதை வசனம் தயாரிப்பு ஸ்ரீஸ்கந்தராஜா’ என்று இருந்தது. கௌரவ நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் ஜோர்ஜ் சந்திரசேகரனின் பெயரும் இருந்தது. இப்படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினர். நானும் எழுதினேன். அது ‘வீரகேசரி’யில் (31.10.1982) வெளிவந்தது.

‘......தெய்வேந்திரா, தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். வர்ணக் காட்சிகள் எல்லாம் மனத்தை மயக்குகின்றன.

கதை நாயகன் அந்தக் காலத்துத் ‘திரும்பிப்பார்’ சிவாஜியை நினைவுபடுத்துகிறார். மூன்று கதாநாயகிகள். கதாநாயகன் இருவரை ஏமாற்றி மூன்றாவது பெண்ணிடம் சிக்கித் திருந்தியபோது, கைதுசெய்யப்படுகிறான். நீண்ட காலமாகப் பெண்களை ஏமாற்றிய ஒருவன் சில நாட்களில் வேதனையால் மனம் மாறுகின்றார்.

மனம் மாறுவதற்கான காரணத்தைச் சிறிது விளக்கமாகத்தான் காட்டியிருக்கக்கூடாதா? இலங்கை நடிகைகள் தென்னகப் படங்களில் கவர்ச்சியைக் காட்ட அழைக்கப்படுவது போல், இந்த இலங்கைப் படத்தில் கவர்ச்சியைக்காட்டுவதற்கென்றே தென்னகக் கவர்ச்சித்தாரகை மாயாவை அழைத்திருக்கிறார்கள். இந்நடிகை கவர்ச்சியை மிக அதிகமாகக் காட்டிக்கொண்டே சில இடங்களில் மற்ற நடிகைகளைவிடத் திறமாகவும் நடிக்கிறார். சுமதிக்கு உருவத்தில் முதிர்ச்சி போதவில்லை. பல நடிகைகளுக்கு வானொலியினர் இரவல் குரல் வழங்கியிருக்கிறார்கள்.

படத்தொகுப்பில் தொய்வு தெரியவில்லை. பாடல் காட்சிகள் வர்ணத்தில் இருக்கின்றன. இதுவரை இலங்கையில் உருவான தமிழ்த் திரைப்படங்களைவிட, இப்படத்தின் தொழில் நுட்ப அம்சங்கள் சிறந்து விளங்குகின்றன.

இப்படத்தின் நல்ல அம்சஙக்ளில் ஒன்று சிறந்த படப்பிடிப்பாகும். பொதுவாக எல்லா நடிகர்களும் திறம்பட நடித்திருந்தாலும், நம்பமுடியாத கதை நிகழ்வுகள் வெறுப்பை உண்டாக்குகின்றன.

இத்தனை பெரிய முயற்சியில் ஈடுபட்ட கலைஞர்கள், சிறந்த கதையொன்றைத்தெரிவு செய்து படத்தைத் தயாரித்திருந்தார்களானால் அவர்களின் முயற்சியை மேலும் அதிகமாகவே பாராட்டியிருக்கலாம்.

இப்படம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மூன்று வாரங்கள் ஓடியது. மட்டக்களப்பிலும் ஹட்டனிலும் இரண்டு வாரங்கள் ஓடியது.

இப்படம் 1982இல் திரையிடப்பட்டது. இக்காலத்தில் இன்னும் சில திரைப்படங்களும் தயாரிப்பில் இருந்தன. 1983ஆம் ஆண்டு பிறந்தது. ஜுலை மாதம் வந்தது. ‘கலவரம்’ நிகழ்ந்தது. கே.குணரெத்தினத்துக்குச் சொந்தமான ஹெந்தள விஜயா ஸ்ரூடியோ தீ வைக்கப்பட்டது. அரைகுறையாக வளர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் படங்கள் சிலவும் எரிந்து சாம்பலாகின.

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றிலும் கருமேகங்கள் சூழத்தொடங்கின.

இலங்கைத் தமிழ் சினிமாவின் வரலாற்று நாயகர்களில் சிலர் புலம்பெயர்ந்தார்கள் பலர் மௌனம் சாதித்தார்கள்.


29. ‘ஷர்மிளாவின் இதய ராகம்;’
1982ஆம் ஆண்டு ‘பாதை மாறிய பருவங்கள்’ என்ற படம் திரையிடப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் சிங்களக் கலவரம் உருவாகியது. அதனால், தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் பலர் புலம்பெயர்ந்தார்கள். தொடர்ந்து 10 வருடங்களாக எந்தத் தமிழ்த் திரைப்படமும் உருவாகவில்லை. இலங்கையில் தமிழ்ச் சினிமா அழிந்தொழிந்து போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றியது.

ஆனால், அது தவறு என்பதை 1989ஆம் ஆண்டு வெளிவந்த செய்தியொன்று தெரிவித்தது. ‘ஷர்மிளாவின் இதயராகம்’ என்ற படம் உருவாகிறது என்ற செய்திதான் அது.

அந்தக் காலத்தில் இலங்கையில் ‘வீரகேசரி’, ‘தினகரன்’, ‘சிந்தாமணி’ ஆகிய பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. காலக்கோளாறினால் ‘சிந்தாமணி’ பத்திரிகை நின்றுவிட்டது. அந்தச் ‘சிந்தாமணி’ பத்திரிகையில் 1987.01.04 முதல் பிரபல பெண் எழுத்தாளர் ஜெகியா ஜுனைதீன் தொடர்ந்து 32 வாரங்களாக எழுதிய தொடர்கதைதான் ‘ஷர்மிளாவின் இதயராகம்’.

அநேக வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1989இல் ‘ஷர்மிளாவின் இதயராகம்’ முதற்பதிப்பாகப் புத்தக உருவில் வெளிவந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் தமிழ் பேசும் வாசகர்களின் விருப்பத்துக்கிணங்க இக்கதைப் புத்தகம் இரண்டாவது பதிப்பாகவும் வெளிவந்தது.

இந்தக் கதை பலரையும் கவர்ந்தது. இத்தனை ஜனரஞ்சகமான கதையைத் திரைப்படமாக்கினால் வெற்றிபெறலாம் என்று எண்ணினார். இந்நாவல் ஆசிரியையின் கணவர். அவர்தான் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன்.

‘பேராதனை ஜுனைதீன்’ நீண்ட காலமாகும இலங்கைச் சினிமாத் துறையுடன் தொடர்புடையவர். ஏற்கனவே இலங்கையில் உருவான ‘டைக்ஷி டிறைவர்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘தெய்வம் தந்த வீடு’ ஆகிய படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர். சுமார் 10 சிங்களப் படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.

‘மவுண்டன் இன் த ஜங்கில்’ என்ற ஆங்கிலப் படத்துக்கு உதவி இயக்குநராகவும் கடமையாற்றியிருக்கிறார்.

தனது மனைவி எழுதிய ‘ஷர்மிளாவின் இதயராகம்’ என்ற கதைக்கும் இவரே திரைக்கதை வசனம் எழுதினார். முஸ்லிம் பாத்திரங்களைத் தமிழ்ப் பாத்திரங்களாக மாற்றித் திரைக்கதை எழுதினார். முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களைக்கொண்டே இந்தத் திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்று எண்ணினார். கலைக்கு இனமத பேதம் இல்லை என்பதற்கு இணங்க இதே படத்தைச் சிங்களத்திலும் உருவாக்க முனைந்தார். ‘ஷர்மிலா பிலிம்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படமே, இலங்கையின் முதலாவது கலப்படமற்ற தேசிய வர்ணத் திரைப்படம் என்று கொள்ள வேண்டும்.

பிறப்பால் முஸ்லிமான சஷி பிரபலமான சிங்களத் திரைப்பட நடிகர். இவரே இப்படத்தின் கதாநாயகன் இவருடன் வீணா ஜெயக்கொடி, நிலானி அபேவர்த்தன, லீனாடி சில்வா, றோஹித்த மான்னகே போன்ற சிங்கள நடிகர்கள் நடித்தார்கள் இவர்களுடன் மரிக்கார் எஸ். ராம்தாஸ், கே.எஸ். பாலச்சந்திரன், கே.ஏ. ஜவாஹர், எம்.எம். லத்தீப், ஜோபு நசீர், கே. மோகன்குமார், கமலஸ்ரீ, என். ராஜம், ரஞ்சனி, எஸ். விஸ்வநாதராஜா, எஸ்.என். தனரெத்தினம், கலைச்செல்வன், எம். உதயகுமார், டபிள்யூ. ரட்ணம், என். ராஜு ஆகியோரும் நடித்தனர். ஜே. பாத்திமா சுல்பிகா, டி. ஜெயப்பிரியா, ஜே. உஸாமா அலி போன்ற குழந்தை நட்சத்திரங்களும் தோன்றின.

பேராதனை ஜுனைதீன், கதை திரைக்கதை வசனங்களுடன் பாடல்கள் சிலவற்றையும் எழுதினார். இன்னும் சில பாடல்களை எஸ். விஸ்வநாதராஜா, ‘புஸல்லாவ இஸ்மாலிகா’ ஆகியோர் எழுதினர். சரத் தசனாயக்கா இசை அமைக்க பாடல்களை வீ. முத்தழகு, எஸ்.வீ.ஆர். கணபதிப்பிள்ளை, கலாவதி. ராணிஜோசப், விஸ்வநாதராஜா ஆகியோர் பின்னணி பாடினர். வானொலிக் கலைஞர்கள் பலர் உரையாடல்களுக்குக் குரல் வழங்கினர். கதாநாயகனுக்கு ஏ.ஆர்.எம். ஜிப்றி குரல் வழங்கினார். ஜே.ஜே. யோகராஜா ஒளிப்பதிவு. லயனல்குணரத்ன ஒலிப்பதிவு. நடன அமைப்பு பி.எம். நந்தகுமார்.

இயக்குநர் சுனில் சோமபீரிஸ், இணை இயக்குநர் ஏ.ஏ. ஜுனைதீன். தயாரிப்பு நிர்வாகிகள் எஸ்.வி. ரஞ்சன், ஜே.ஜே. அசன்அலி. தயாரிப்பு மேற்பார்வையும் கலை நிர்மாணமும் பிரபல ஓவியர் எஸ்.டி. சாமி. தயாரிப்பு ஏ.ஏ. ஜுனைதீன், திருமதி ஜெக்கியா ஜுனைதீன் ஆகியோர்.

இலங்கையில் தயாரான இந்தத் தமிழ்த் திரைப்படம் சிங்களத்தில் டப் பண்ணப்படுவதும் முக்கிய அம்சமாகும். இச்சிங்களப்படத்தின் பெயர் ‘ஓப மட்ட வாசனா’ என்பதாகும்.

1989ஆம் ஆண்டே தயாரித்து முடிக்கப்பட்ட ‘ஷர்மிளாவின் இதயராகம்’ 4 வருடங்களின் பின்பே திரைக்கு வந்தது.

படம் திரையிடுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்குக் கொழும்பு ரீகல் தியேட்டரில் போட்டுக் காட்டினார்கள். என்னையும் ஜுனைதீன் அழைத்திருந்தார். என்னைப் போலவே நண்பர் மொழிவாணனும் படத்தைப் பார்த்தார். இவர் தனது கருத்தை விமர்சனமாகத் தினகரனில் (27.06.93) எழுதினார்.

‘படத்தின் டைடிலைப் பார்த்தவுடனேயே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருமை! சாமிக்கு ஒரு சபாஷ்! ஆரம்பமே சண்டைக் காட்சி. அசத்திவிட்டார்கள்! தென்னிந்தியப் படத்தைப் பார்ப்பதுபோன்று ஒரு பிரமை! யோசிக்கவைக்கிறது. நம் நாட்டிலும் இப்படியும் ஒரு திறமைசாலியா என்று!

கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பைக் குறைவின்றிச் செய்திருக்கிறார்கள். முகவரி தொலைந்துபோன கலைஞர்களுக்கு இப்படத்தில் முகம் காட்டுவதற்கு ஜுனைதீன் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

….இதுவரையில் இலங்கையில் உருவான திரைப்படங்களைவிட, ‘ஷர்மிளரின் இதயராகம்’ உயர்ந்து நிற்கிறது.

இந்தியாவிலிருந்து எந்தக் குப்பையை இங்கு கொண்டுவந்து கொண்டினாலும் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து அந்தக் குப்பைமேட்டில் குளிர்காய்ந்துவிட்டு, சலித்துக் கொண்டு திரும்பும் நம் நாட்டு ரசிகர்கள், இப்படத்துக்குக் கண்டிப்பாகத் தம் ஆதரவை வழங்கவேண்டும்’ என்று எழுதினார்.

பல்வேறு பிரச்சினைகளின் பின் ‘ஷர்மிளாவின் இதய ராகம்’ திரைப்படம் 24.09.1993இல் திரையிடப்பட்டது. மத்திய கொழும்பு (கபிடல்), கட்டுகஸ்தொட்டை (நியூ சீகிரி), நுவரெலியா (திவோலி) ஆகிய மூன்று இடங்களிலேயே முதன் முதலில் திரையிடப்பட்டது.

வழமையைவிட, இப்படத்துக்குத் தேசியப் பத்திரிகைகள் பெரும் வரவேற்;பைக் கொடுத்தன. ‘வீரகேசரி’யில் ஆர் ராஜலிங்கம் விமர்சனம் எழுதினார்.

‘…இப்படம் முன்னர் வெளிவந்த படங்களோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ அபிவிருத்தி அடைந்துள்ளது. நாவலில் வந்த ஷர்மிளா எந்தளவுக்கு வாசகர் மனதைத் தொட்டதோ அந்த அளவுக்குப் படத்தில் வந்த ‘ஷர்மிளா’ ரசிகர்கள் மனதைத் தொடவில்லை என்றே தோன்றுகிறது.

ஜவாஹர், ராம்தாஸ், லத்தீப், சாண்டோ முத்தையா தேவர் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.

….ஏனைய நம் நாட்டுக் கலைஞர்களும் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபட இந்தப் படம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரவேண்டும் என்பதே எமது ஆசை என்று எழுதினார்.

தினகரனில் ‘மானா மக்கீன்’ வித்தியாசமான முறையில் விமர்சனம் எழுதினார்.

அன்பான ஷர்மிளா சகோதரி’! என்று விளித்து எழுதினார். எப்படியோ பல போட்டிகளுக்கும் பொறாமைகளுக்கும் மத்தியில் உங்கள் இதயராகத்தை இசைக்க வேண்டியிருக்கிறது.

இது உங்கள் தலைவிதிமட்டுமல்ல எங்கள் தலைவிதியும் கூட.

…ஷர்மிளா இலங்கைப் பெண் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் அருமை பெருமையா வந்திருப்பவள். அவளுக்குக் கியூவரிசையில் இருந்து விதிவிலக்கு அளியுங்கள்@ ஒரு நல்ல தியேட்டரைத் தாருங்கள் என்று உங்கள் தந்தை (ஏ,ஏ. ஜுனைதீன்) போராடியிருக்கலாம்.

….எது எப்படியானாலும் என் அபிமானிகள் உங்களை ஒருமுறை காண வருவார்கள் என நிச்சயமாக நம்புகிறேன். என்று எழுதியிருந்தார்.

இப்படம் மத்திய கொழும்பில் 4 வாரங்களும் நுவரெலியாவில் 3 வாரங்களும் கட்டுகஸ்தோட்டையில் 2 வாரங்களும் தென் கொழும்பில் (கொன்கோட்) 1 வாரமும் ஓடியது.

இப்படம் திரையிடப்பட்டு ஒரு மாதத்தின்பின் இப்படக்கலைஞர்களுக்கு மருதானை எல்பிஸ்டன் ‘சரசவிபாயா’ வில் ஒரு பாராட்டு விழா வைத்தார்கள். அலையோசை ஞானப்பிரகாசம் அதை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஏ. ஜுனைதீன் பேசினார்.

‘நான் மவுண்டன் இன் தன ஜங்கில் ஆங்கிலப்படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். அப்படத்தில் உழைத்த பணத்தினால் கண்டியில் வீடு கட்டினேன். ‘ஷர்மிளாவின் இதயராகம்’ படத்துக்காக அவ்வீட்டை விற்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. இப்படத்துக்காக 21 லட்சம் ரூபாவைச் செலவு செய்தேன். திரைப்படக் கூட்டுத்தாபனம் 6½ லட்சம் ரூபா கடனாகத் தருவதாகக் கூறியது. பின்பு தர மறுத்துவிட்டது. இப்படத்தை ‘மா ஒபட வாசனா’ என்ற பெயரில் சிங்களப்படமாக டப் செய்கிறேன். அப்படத்தின் இறுதி வேலைகளைச் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபா இல்லாமல் கஷ்டப்படுகிறேன்’ என்று கூறினார். இவற்றைக் கூறும் பொழுது அவர் மேடையில் அழுதேவிட்டார்.

மானாமக்கீன் இக்கூட்டத்தில் ‘இனிமேல் இலங்கையில் தமிழ்த் திரைப்படம் உருவாகாது’ என்றார். மசூர் மௌலானா இனித்தான் தமிழ்ப்படங்கள் வரவேண்டும் என்று கூறினார்.

எது எப்படியோ இதன்பின்பும் தமிழ்ப்படங்கள் உருவாகுவதாக செய்திகள் வெளிவந்தன. அவை உண்மையும் கூட!


30. தமிழ்ப்படங்களாக
மாறிய சிங்களப்படங்கள்
1931ஆம் ஆண்டு ‘இந்தியத் தமிழ்ப் பேசும்படமான காளிதாஸ்’ திரையிடப்பட்டது. இந்தப்படத்தில் ஓர் அதிசயம். கதாநாயகி தமிழில் பேசுவாள்@ பாடுவால். ஆனால் அவளது கேள்விகளுக்குக் கதாநாயகன் தெலுங்கில்தான் பதில் சொல்லுவான். அவ்வப்பொழுது துணைநடிகர்கள் இந்தியிலும் பேசியிருக்கிறார்க்ள. இப்படித் தான் இந்தியாவின் முதல் தமிழ்ப்படம் தமிழ் பேசத்தொடங்கியது. பின்னாளில் வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட விசேடமான படங்கள் அவற்றின் தனித்தன்மை கருதி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ்ப்படங்களில் கணிசமான அளவு டப் படங்களும் இருக்கின்றன.

இப்படியான முயற்சி 1973ஆம் ஆண்டில் இலங்கையிலும் நடைபெற்றிருக்கிறது. சிங்களப் படமொன்றை தமிழில் மொழிமாற்றம் செய்யும் முயற்சிதான் அது.

ஆரம்பகாலத்தில் சிங்களப் படங்கள் தென்னிந்தியவில் தயாரிக்கப்பட்டன. இவை பின்பு இலங்கையில் தயாரிக்கப்பட்டபோது தென்னிந்தியத் தமிழ்க்கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சென்றனர். அவர்கள் பல சிங்களப் படங்களை இயக்கினர். ஒளிப்பதிவு செய்தனர். இசை அமைத்தனர். பின்னணி பாடினர். அவர்களே சிங்களப் படங்களை வளர்த்துவிட்டனர். வழிகாட்டி விட்டனர். உயர்த்தி விட்டனர். அவர்களின் ப. நீலகண்டன், எஸ். நாகராஜன், மஸ்த்தர், ரீ.ஆர். பாப்பா, ஏ.எம். ராஜா, ஜிக்கி என்று பல கலைஞர்களின் பெயர்களை கூறிக்கொண்டே போகலாம். திரையில் தோன்றுபவர்களைத் தவிர திரையில் பின்னால் தொழிற்பட்ட கலைஞர்கள் எல்லோரும் இந்தக் கலைஞர்களே 1956ஆம் ஆண்டு வரை இவர்களே சிங்கள சினிமா உலகை ஆட்டிப்படைத்தனர்.

1956ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியக்கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சினிமாத் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தடைபோட்டது.

அதனால் இந்தியக் கலைஞர்களிடம் உதவியாளர்களாக இருந்த இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள் சிங்களச் சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

இவர்களில் சு. சோமசேகரன், கே. வெண்கட், எஸ். ராமநாதன், எஸ். செல்வரெத்தினம், எம்.எஸ். தம்பு, லெனின்மொறைஸ், ஜோ. தேவானந், எஸ்.வி. சந்திரன், எம்.வீ. பாலன், எம்.எஸ். ஆனந்தன், ஏ. அர்ஜுனா போன்றோரைக் குறிப்பிடலாம். அர்ஜுனாவின் ஆரம்ப கால முயற்சிகளில் ‘கலியுககாலய’ என்ற சிங்களப்படமும் ஒன்றாகும். இப்படத்தை தமிழ்மொழிக்கு டப் செய்து வெளியிடலாமே என்று அர்ஜுனா எண்ணினார்.


(1) கலியுக காலம்
இப்படித்தான் ‘கலியுககாலம்’ டப் படம் உருவானது. டப் படம் என்றால் நடிகர்களின் உதட்டசைவுக்கு ஏற்றவாறு வசனம் எழுதவேண்டும். இப்படி வசனம் எழுதுவதில் ஈழத்து ரெத்தினம் சமர்த்தர். அவரே வசனத்தை எழுதினார்.

வசனங்களைப்போலவே பாடல்களும் முக்கியமானவை. பாடல்களையும் ரெத்தினமே எழுதினார்.

அந்தக் காலத்தில் இசை அமைப்பாளர் ‘சண்’ கொழும்பு பிரதான வீதியில் றெக்கோட்பார் வைத்திருந்தார். பல சிங்களப் பாடகர்களின் பாடல்களை இசைத் தட்டில் ஏற்றிக்கொடுத்தார். ‘கலியுக காலய’ சிங்களப்படத்துக்கும் இசை அமைத்திருந்தார். இவரே இதன் தமிழ்ப்பதிப்பான ‘கலியுக காலமும்’ தமிழ்ப்படத்தின் 5 பாடல்களுக்கும் இசை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றார். எம்.பி. பரமேஸ், குலசீலநாதன் போன்றோர் பின்னணி பாடினர். சுஜாதா அத்தநாயக்க, அமுதன் அண்ணாமலை போன்றோர் இப்படத்தின் மூலமே சினிமாப்பாடகர்களானார்கள்.

பெரும்பாலான வானொலிக் கலைஞர்களுக்கு இப்படமே சினிமாவில் நுழைவதற்கான வாசற்படியாக அமைந்தது.

‘கலியுக காலய’ சிங்களப்படம் 1975ஆம் ஆண்டிலேயே திரையிடப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே (14.04.74) ‘கலியுக காலம்’ தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.

இப்படத்தில் இடம்பெற்ற உருப்படியான அம்சம் எதுவென்றால் ‘சண்’ இசை அமைத்த பாடல்கள் மட்டுமே. இப்பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இலங்கை வானொலி நிலையத்தில் இருக்கிறது.

‘அர்ஜுனா’ என்ற தமிழர் தயாரித்தார். ‘சண்’ என்ற தமிழர் இசை அமைத்தார் என்பதைத் தவிர இப்படத்தை இவ்வளவு பணம் செலவழித்து தமிழாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதோ தெரியவில்லை.


(2) ‘நான்கு லெட்சம்’
‘கலியுக காலம்’ டப் படம் அதிக நாட்கள் ஓடவில்லை. ஆனாலும் மேலுமொரு சிங்களப்படத்தை டப் பண்ணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1946ஆம் ஆண்டு இலங்கையில் ஒருபெரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. உண்மையாகவே இடம்பெற்ற இக்கொள்கைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிங்களத் திரைப்படமொன்றை உருவாக்கினார்கள். பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் டைரஸ் தொடவத்தை இப்படத்தை இயக்கினார். படம் 1971ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படம் திரையிடப்பட்டு இரண்டு வருடங்களின் பின்பு இதனைத் தமிழில் மொழிமாற்றம் செய்யும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இப்படத்தை தமிழாக்கும் பொறுப்பு பிரபல அறிவிப்பாளர் மயில்வாகனனிடம் கொடுக்கப்பட்டுது. ‘ஹாறலக்Ñ’ என்ற சிங்களத் தொடரின் கருத்தான ‘நான்கு லெட்சம்’ என்ற பெயரே தமிழ்ப்படத்துக்கும் வைக்கப்பட்டது. கலைஞர்கள் பி.எச். அப்துல்ஹமீட், எஸ். ராம்தாஸ் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இப்படத்துக்கான வசனங்களை எழுதினார்கள்.

ரீ. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன், நடராஜ சிவம், ஜோர்ஜ் சந்திரசேகரன் போன்றோர் படத்துக்குக் குரல் வழங்கினர். படம் கொழும்பு (கிங்ஸ்லி) உட்பட நான்கு ஊர்களில் மட்டுமே திரையிடப்பட்டது.

படத்துக்கு அதிக விளம்பரம் கிடைக்கவில்லை. உண்மைக் கொள்ளைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதைத்தவிர வேறு விசேடம் எதுவும் இப்படத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. வானொலிக் கலைஞர்கள், தமது சினிமா ஆர்வத்தையும் ஆசைகளையும் இப்படத்தின் மூலமும் தொடர்ந்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். தயாரிப்பாளர்கள் எப்படியான படம் தயாரித்தாலும் படத்துக்குக் குரல் சேர்ப்பதற்கு வானொலி நிலையத்தை நோக்கியே வரவேண்டியிருந்தது.


(3) ‘யார் அவள்’
1955ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் அதிக தமிழ் நாடகங்கள் மேடையேறிக்கொண்டிருந்தன. அக்காலத்தில் பல நாடகங்களை இயக்கி வந்தார் தமிழ் இளைஞர் ஒருவர். சென்னைக்குச் சென்ற அவ்விளைஞர் இங்குள்ள ரேவதி ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவாளராகச் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து இந்தியரிவல் இருக்க விசா கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இலங்கை திரும்பிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட சில ஆங்கிலப்படங்களில் உதவி ஒளி;பதிவாளராக் கடமையாற்றினார். முதன்முதலாக ‘சுது துவ’ என்ற சிங்களப் படத்தை நெறியாண்டதுடன் ஒளிப்பதிவையும் கவனித்தார். தொடர்ந்து பல சிங்களப் படங்களை நெறியாண்டார். காமினி பொன்சேகாவை ‘சூரயன்கேத் சூரயா’ படத்தின் மூலம் பிரபலமாக்கினார். விஜயகுமாரணதுங்கவை கதாநாயகன் ஆக்கினார். கீதா குமாரசிங்கவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியரும் இவரே. சிங்களத்திரை உலகில் சிறந்த இயக்குநராக இவர் விளங்கினார்.

இந்தத் தமிழ் இளைஞரின் பெயர்தான் லெனின் மொறைஸ். அந்தக் காலத்தில் ‘அந்த நாள்’ என்றொரு புதுமையான இந்தியத் தமிழ்ப்படம் இலங்கையில் திரையிடப்பட்டது. இப்படத்தைப் பார்த்துச் சொக்கிப்போன இவ்விளைஞர், இதே போன்றதொரு சிங்களப்படத்தையும் உருவாக்கினால் என்ன என்று எண்ணினார். அவ்வெண்ணத்தைச் செயலிலும் காட்டத்தொடங்கிவிட்டார். அச்சிங்களப்படத்தின் பெயர்தான் ‘அபிரஹச’ (பரம ரகசியம்) என்பதாகும். இந்தப் படம் இவருக்கு சிங்கள ரசிகர்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. பெரும் புகழைக் கொண்டு வந்தது.

அவர், இதே படத்தைத் தமிழ்மொழிக்கு டப் செய்தார் என்ன என்று எண்ணினார். அவரது எண்ணத்துக்கு பிரபல ஒலிப்பதிவாளர் எஸ். சாரங்கராசா களம் அமைத்துக்கொடுத்தார். புதிதாக ஒரு பாடல் காட்சியைப் படம் பிடித்து இப்படத்துக்குள் செருகினார். அக்காலத்தில் பொப்பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றிருந்தவர் ஏ.ஈ மனோகரன். சிங்களத் திரை உலகின் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்கியவர் மாலினி பொன்சேகா. இவர்கள் இருவரையும் இணைத்து உருவாக்கிய பாடல் காட்சிதான் அது. அந்தமொழி மாற்றுப்படத்தின் பெயர்தான் ‘யார் அவள்’. பிரபல ஒலிப்பதிவாளர் எஸ். சாரங்க ராஜாவின் புதல்வர்களான எஸ். சாஸ்வதராஜ், எஸ். மனோராஜ் ஆகிய இருவரும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள். எஸ்.ஏ. அழகேசனின் மூலக் கதைக்கு ஈழத்து ரெத்தினம் வசனம் பாடல்களை எழுதினார்.

இசை அமைப்பை எம்.கே. றொக்சாமியும், ரீ.எப். லத்தீப்பும் ஒன்றிணைந்து பொறுப்பேற்றார்கள். அந்தக் காலத்தில் பிரபலம் பெற்று விளங்கிய ஹிந்திப் பாடல்களின் மெட்டுக்களை அப்படியே பிரதிபண்ணி பாடல்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஹிந்திப் பாடல்களை அப்படியே அழகாகப் பாடும் டொனிஹசன் மற்றும் சுஜாதா, எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.

சிங்கள நடிகர்களின் வாய் அசைப்பிற்கு வானொலித்தமிழ்க் கலைஞர்களின் குரல்கள் ஒலித்தன. பி.எச். அப்துல் ஹமீத், நடராஜ சிவம், ஜோர்ஜ் சந்திரசேகரன், ஆமினா பேசும் போன்றோர் குரல் கொடுத்திருந்தார்கள். விமர்சகர் ஒருவர், ‘ரசிகன்’ என்ற புனைபெயரில் வீரகேசரியில் சிறிய விமர்சனம் எழுதியிருந்தார்.

‘…..இயக்குநர் லெனின் மொறைஸ் தனது கைவண்ணத்தைத் திறம்படக் காட்டியுள்ளார். நீருக்கடியில் பிணத்தைத் தேடும் காட்சி, பின்னணி இசை ஆகியவற்றை லெனின் மொறைஸ் புதிய பாணியில் கையாண்டுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள காபரே நடனங்கள் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்துகின்றன. மனோகரனும் மாலினியும் தங்கள் பாகத்தை கனகச்சிதமாகச் செய்துள்ளனர்’ என்று அந்தச் சிறிய விமர்சனம் அமைந்திருந்தது.

தர்ஷினி பிலிம்ஸ் ‘யார் அவள்’ 09.04.1976இல் ஆறு நகரங்களில் திரையிடப்பட்டது. ஏனோதானோ என்று விளம்பரம் செய்யப்பட்டது.

படம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்து 21 நாட்கள் ஓடியது. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் 15 நாட்கள் ஓடியது.

இப்படியான மொழிமாற்றுப்படமே 20 நாட்கள் ஓடியது ஆச்சரியமே. ‘புதிய காற்று’ ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்ட நம்பிக்கையே அதற்குக் காரணம் என்று பலர் கூறினர்.

1983ஆம் ஆண்டில் லெனின் மொறைஸ் ‘நெஞ்சுக்குத் தெரியும்’ என்ற முழுநீளத் தமிழ்ப்படத்தை உருவாக்கியிருந்தார். நல்லூர் மனோகரன், ஹெலன்குமாரி போன்ற பலர் நடித்திருந்தார்கள்.

1983 ஜுலைக் கலவரத்தில் ஹெந்தல ‘விஜயா ஸ்ரூடியோ’ எரிக்கப்பட்ட போது, இப்படமும் எரிந்து சாம்பலாகியது. அப்படத்தின் சில காட்சிகளை ஏற்கனவே பார்த்திருந்த சிலர் அருமையான காட்சிகள் என்று புகழ்ந்தனர். லெனின் மொறைஸ் 28.05.1994ல் காலமானார்.


(4) ‘சுமதி எங்கே’?
எச்.சி.சந்திரவன்ச முதலாவது 16 மி.மீ. தமிழ்ப்படமான ‘சமுதாயம்’ படத்தை உருவாக்கியவர். அதன் பின்பு பல சிங்களப் படங்களைத் தயாரித்தவர். படம் வெற்றி பெறுகிறதோ தோல்வி அடைகிறதோ அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார். தொடர்ந்து படங்களைத் தயாரித்துக்கொண்டே இருப்பார்.

‘சமாஜய’, ‘சுனில’, ‘சேயாவ பசு பசு’, ‘சுகதிய கறா’, ‘வனகத்த கெல்ல’ போன்ற பல சிங்களப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார். கடைசியாக வெளியிட்ட ‘வனகத்த கெல்ல’ என்ற படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்வோமா என்று எண்ணினார். தமிழ்ப் படத்துக்குப் பொருத்தமான எதையாவது படம் பிடித்து இப்படத்துடன் இணைத்து விட்டால் அதைத் தமிழ்ப்படமாகவே மாற்றிவிடலாம் என்று தீர்மானித்தார். அதற்கு நல்ல கதை வசனம் வேண்டுமே?

1960ஆம் ஆண்டு முதல், சிறுகதை, கவிதை, கட்டுரை, சோதிடம், சித்த வைத்தியம், சங்கீதம், வில்லுப்பாட்டு, கேலிச்சித்திரம், வானொலி நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கினார் ஒரு பெண் எழுத்தாளர். அவர்தான் திருமதி இராஜம் புஷ்பவனம்.

இவரே இப்படத்துக்கான வசனம் பாடல்களை எழுதினார். எண் சாத்திரப்படி இப்படத்துக்கு ‘சுமதி எங்கே’ என்றும் பெயர் சூட்டினார். இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றுக்குத் திரைக்கதை வசனம் எழுதிய முதலாவது பெண்மணி திருமதி இராஜம் புஷ்பவனம் என்றே கூறவேண்டும்.

இப்படத்தில் நடிப்பதற்காக அப்புத்தளையிலிருந்து ‘பிலோமினா சொலமன்’ என்ற அழகிய தமிழ்ப்பெண்ணை அழைத்து வந்தார்கள். எண் சாத்திரம் பார்த்த இராஜம் புஷ்பவனம் இவருக்கு ‘சுபாஷினி’ என்ற புதிய பெயரைச் சூட்டினார். சுபாஷினிக்கு இப்படத்தில் சிறு பாத்திரமே வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு அடுத்து வந்த இரண்டு படங்களில் இந்த சுபாஷினி கதாநாயகியாகவே நடித்து விட்டார்.

‘சுமதி எங்கே’ திரைப்படத்தில் ஜபீர்குமார், யோகேஸ்வரன், காசிநாதன், ஏ.எஸ். ராஜா, சுப்பு லட்சுமி, ஸ்ரீலதா, சுசில்குமார், வீ.ராஜம், எம். தனூஸ் போன்றோரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். இசை அமைப்பை இந்திராணி செல்லத்துரை கவனித்தார். இவருடன் குலாம் யாஸீன், உதயகுமார், ஜெயந்தி, ஜெயகௌரி, நளினி, லக்சுமி போன்றோரும் பின்னணி பாடினர்.

இலங்கையில் உள்ள பல புனித தலங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன. திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் போன்ற இடங்களும் அவற்றில் அடங்கும். பணக்கஷ்டம் காரணமாக இப்படம் ஆறு வருடங்கள் தயாரிப்பில் இருந்து விட்டது. 27.11.1976இலேயே திரைக்கு வந்தது.

காட்டில் கொள்ளைக்காரரிடம் சிக்கிய சுமதி அவர்களிடமிருந்து தப்பி விடுகிறாள். விவசாயிகளுடன் சேர்கிறாள். பிச்சைக்காரர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கிறாள். பல சாகசங்களைப் புரிந்துவிட்டு இறுதியில் பெற்றோரை அடைகிறாள் இதுதான் ‘சுமதி எங்கே’யின் கதையாகும்.

இத் திரைப்படம் கொழும்பில் ஒரு வாரமும், யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களும் ஓடியது. மட்டக்களப்பிலும் பதுளையிலும் தலா ஐந்து நாட்கள் ஓடியது.

பத்திரிகைகள் கூட ஏனோ தானோ என்று விமர்சனம் எழுதின. காய்த்த மரத்துக்குத்தான் கல்லெறி விழுமென்பது உண்மைதானே.


(5) ஒருதலைக் காதல்
பெப்டிஸ் பெர்னாண்டோ பிரபலமான சிங்கள நடிகர், படத் தயாரிப்பாளர். அவர் ‘எக்திககதாவ’ என்ற சிங்களப் படத்தைத் தயாரித்தார். கதாநாயகனும் அவரே. கதாநாயகி ஜெனிடா.

நடிகரும் எழுத்தாளருமான கலைச்செல்வனின் தயாரிப்பு மேற்பார்வையில் இப்படம் ‘ஒருதலைக் காதல்’ என்ற பெயரில் தமிழுக்கு டப் செய்யப்பட்டது. டப் படங்களில் பாத்திரங்களின் உதட்டசைவுகளுக்கு ஏற்பவே வசனமும் பாடலும் எழுதவேண்டும். அதை ஈழத்து ரெத்தினம் பொறுப்பேற்றார். பாடல்களுக்கு எம்;. றொக்சாமி இசை அமைத்தார். தமிழ்ப் பாடல்களை முத்தழகும் கலாவதியும் பாடினார்கள்.

கதாநாயகனுக்குக் கலைச்செல்வன் குரல் வழங்கினார். கதாநாயகிக்கு செல்வம் பெர்னாண்டோவின் குரல் ஒலித்தது. ஜவாஹர், டொன்பொஸ்கோ போன்றோரின் குரல்களும் ஒலித்தன.

தமிழ்ப் பாடல்களுடன் மேலும் இரண்டு வேற்றுமொழிப் பாடல்களுக்கு இடம்பெற்றன. அவற்றில் ஒன்று லதா மங்கேஷ்கர் பாடிய ஹிந்திப் பாடல். மற்றையது அல்பிராடோ பெஞ்சமின் பாடிய கிரேக்கமொழிப் பாடலாகும்.

செவன் ஆட்ஸ் ‘ஒருதலைக் காதல்’ 12.12.1980ல் திரையிடப்பட்டது. கொழும்பில் 6 வாரங்களும், யாழ்ப்பாணத்தில் 7 வாரங்களும் ஓடியது. அந்தக் காலத்துத் தமிழ்ப்படத்தின் சுமாரான வசூலைவிட இப்படம் அதிக வசூலைப் பெற்றது. 1981ல் நடைபெற்ற அனைத்து இலங்கை கத்தோலிக்க திரைப்படப் போட்டியில், (ஓ.சீ.ஐ.சீ) தரமான சிருஷ்டி என்ற பாராட்டையும் பெற்றது.


(6) பனிமலர்கள்
சிங்களத்திரை உலகின் சிறந்த இசை அமைப்பாளர்களில் சரத் தசனாயக்கவும் ஒருவர். ‘அநுராகம்’ தமிழ்த்திரைப்படத்துக்கும் இவரே இசை அமைத்தார். இவர் ‘மிஹிதும்சிஹினி’ என்ற சிங்களப்படத்தைத் தயாரித்தார்.

இப்படத்தை டப் பண்ணி அதற்கு ‘பனிமலர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். அதற்கான தயாரிப்பு நிர்வாகத்தை எஸ்.என். தனரெத்தினம் மேற்கொண்டார்.

இப்படத்தில் விஜயகுமாரணதுங்கவும் மாலினி பொன்சேகாவும் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இவர்களுடன் றோய்டி சில்வா, சுமனா போன்றோரும் நடித்திருந்தார்கள்.

மொழிமாற்றுப் படத்துக்கு வசனம் முக்கியமாகும். அதனைப் பி.எஸ். நாகலிங்கம் எழுதினார்.

தயாரிப்பாளரே இசை அமைப்பாளர் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே போடப்பட்ட மெட்டுகளுக்கு ஈழத்து ரெத்தினம், சண்முகப்பிரியா ஆகியோர் பாட்டெழுதினர். இவர்களின் பாடல்களை முத்தழகு, அருள்தாஸ், சந்திரிகா, கலாவதி ஆகியோர் பாடினர்.

குரல்வளம் மிக்க குறத்தி ஒருத்தியின் கதையே இது. விஜயகுமாரணதுங்கவின் பாத்திரத்துக்குக் கலைஞர் ஆர். திவ்வியராஜன் குரல் கொடுத்தார். மாலினிக்கு ஆமினா பேகமும், சுமனாவுக்கு செல்வம் பெர்னாண்டோவும், றோய்டி சில்வாவுக்குக் கே. சந்திரசேகரனும் குரல் கொடுத்தனர்.

மெவுனா பிலிம்ஸ் ‘பனிமலர்கள்’ 06.01.81 திரையிடப்பட்டது. கொழும்பில் 3 வாரங்களும், யாழ்ப்பாணத்தில் 2 வாரங்களும் ஓடியது. டப் படங்களைப் பொதுவாக ரசிகர்கள் கணக்கெடுக்காதவைப் போலவே பத்திரிகை விமர்சகர்களும் கணக்கெடுக்கவில்லை.


(7) இவளும் ஒரு பெண்
ஏற்கனவே 6 சிங்களப் படங்கள் தமிழுக்கு டப் செய்யப்பட்டு விட்டன. பின்பு எந்தப் படத்தை டப் பண்ணுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

யசபாலித்த நாணயக்கார, 2 தமிழ்ப்படங்களை இயக்கிவிட்டார். அவரது சிங்களப்படம் ஒன்றின் பெயர் ‘கஹனியக்’ என்பதாகும். இதைத் தமிழில் டப் பண்ண முடிவு செய்யப்பட்டது. இதற்கான தமிழ் வசனங்களை எஸ்.என். தனரெத்தினம் எழுதினார். அதற்கு ‘இவளும் ஒரு பெண்’ என்று பெயர் சூட்டினார்கள்.

படத்தில் விஜயகுமாரணதுங்க, மாலினி, வீணா போன்றோர் நடித்திருந்தார்கள். பழைய தென்னிந்தியத் தமிழ்ப்படங்களின் தொகுப்புக்குத்தான் இதன் கதை.

ஈழத்து ரெத்தினம் அவரின் மகள் சாந்தி ரெத்தினம் ஆகியோர் பாடல்களை இயற்றினர். மொஹிதீன் பெக், முத்தழகு, கலாவதி, சந்திரிகா, எஸ்.பி.ஆர். கணபதிப்பிள்ளை ஆகியோர் பாடினர். இவற்றுக்கான இசை அமைப்பு பி.எல். சோமபால, படத்தொகுப்பு எம்.எஸ்.அலிமான்.

படத்தின் பெயர்தான் தமிழ், ஆனால் பாத்திரங்களின் ஆடை அணிகள் எல்லாம் இது ஒரு சிங்களப் படம் என்று அப்படியே காட்டியது.

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘கிறேஸிபோய்ஸ்’ என்ற ஆங்கிலப்படம் இலங்கையிலும் சக்கைபோடு போட்டது. அதன் தாக்கத்தால் எஸ். ராம்தாஸ் குழுவினரும் ‘கிரேஸி கோமாளிகள்’ என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தி வந்தார்கள். அதில் எஸ். ராம்தாஸ், ஆர். ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன் மணிமேகலை, ஈஸ்வரன் ஆகியோர் நடித்து வந்தனர். அந்த நாடகத்தையும் படம்பிடித்து இப்படத்துடன் இணைத்துவிட்டனர்.

சிங்களத்தில் அதிக நாட்கள் ஓடிய இப்படம் ஏழு மாதங்களின் பின் தமிழ்ப் படமாக திரைக்கு வந்துவிட்டது.

கிறேஸி கோமாளிகளுடன் ‘இவளும் ஒரு பெண்’ என்று விளம்பரம் செய்யப்பட்டது.

விக்ரம் பிலிம்ஸாரின் ‘இவளும் ஒரு பெண்’ 07.08.1981இல் கொழும்பிலும் (ஜெஸீமா), யாழ்ப்பாணத்திலும் (லிடோ) திரையிடப்பட்டது.

இவ்விரு தியேட்டர்களிலும் ஒருவாரத்தின் பின் இப்படம் எங்கே போனது என்றே தெரியவில்லை.


(8) அஜாசத்த
ஜாதகக் கதைகளில் ‘அஜாசத்த’ மன்னனின் கதையும் ஒன்றாகும். இக்கதையை இதே பெயரில் சிங்களப்படமாக தயாரித்து இருந்தார்கள். படம் போட்ட இடங்களில் எல்லாம் அதிக நாட்கள் ஓடியது. பௌத்த மதக் கதை என்பதால் சிங்கள மக்கள் பெருவாரியாகப் பார்த்தார்கள். அதிக அளவில் பணம் குவிந்தது.

இப்படத்தைத் தமிழிலும் உருவாக்கலாம் என்று யாரோ கதையைக் கொடுத்து விட்டார்கள்@ தமிழ் சினிமா ஆர்வலர்கள் பலர். நாசுக்காக விஷயத்தை முடித்து விட்டார்கள்.

ஏ.எஸ்.ஜி. பிலிம்ஸ் ‘அஜாசத்த’ 26.03.1982இல் இலங்கை எங்கும் ஆறு தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்படம் திரையிடப்பட்ட திகதியை நான் அப்பொழுதே குறித்து வைத்திருந்தே;. படம் ஒன்றோ இரண்டோ நாட்கள் ஓடியதாக ஞாபகம். அதன் பின்பு அவை எங்கே சென்றன என்றே தெரியவில்லை.

‘அஜாசத்த’ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மட்டும் இசைத்தட்டாக வெளிவந்தது. பாடகர் வி. முத்தழகுவின் முயற்சியால் வெளிவந்த இவ்விசைத்தட்டு இப்பொழுது இலங்கை வானொலி நிலையத்தில் மட்டும்தான் இருக்கிறது.


31. முடிவுரை
கரவெட்டியைச் சேர்ந்த கலைஞர் தேவதாசன் சென்னைச் சினிமா உலகுடன் நன்கு தொடர்புள்ளவர். இலங்கையில் தமிழ்ப்படமொன்றை உருவாக்க வேண்டுமென்ற முனைப்பில் நின்றார். தன் படத்துக்கு. ‘மாநகரக்காதல்’ என்ற பெயரும் வைத்துவிட்டார். இப்படத்துக்கான பாடல்களையும் இந்தியாவில் ஒலிப்பதிவு செய்துவிட்டார். யாழ் - சுதாகர் இயற்றிய பாடல்களுக்கு நீதிதேவன் இசையமைத்தார். இப்பாடல்கள் ஒலிநாடாவாகவும் சீ.டி. இசைத்தட்டாகவும் வெளிவந்துவிட்டன. ஆனால் படம் வெளிவரவில்லை.

ஆனாலும் கலைஞர் தேவதாச் உள்@ர் திரைக்கலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ‘சலனசித்திரம்’ என்ற பெயரில் திரைக்கலைச் சங்கம் ஒன்றை உருவாக்கினார். அச்சங்கத்தின் மூலம் பல சினிமா ஆர்வலர்களை ஒன்று சேர்த்துச் ‘செந்தமிழ் ஃபிலிம் கொம்பனி’ என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். உள்@ர் சினிமா முன்னோடிகளும் பிரபல தொழிலதிபர்களும் இக்கொம்பனியில் இணைந்திருக்கிறார்கள்.

எம்.டபிள்யூ. இராஜசிங்கம், தெ. ஈஸ்வரன், எம். புஷ்பராஜா, எஸ். தியாகராஜா, மனோ கணேசன், சே. தில்லைநாதன், சி. தங்கராஜா, பி. ஆரூரன், காவலூர் ராஜதுரை போன்றோரே அவர்கள் இச்சினிமாக் கொம்பனி பல முயற்சிகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில், சினிமாச் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது. திரைப்படக் கல்லூரி ஒன்றை நிறுவுவது. தரமான திரைப்படங்களை உருவாகுவது என்பன இக்கொம்பனியின் நோக்கம் என்று தெரியவருகிறது.

இச்சினிமா நிறுவனம் நிச்சயமாக 2000 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கும் என்று நம்பலாம்.


எச்சரிக்கை
இந்நூலில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களையோ, புகைப்படங்களையோ, தனியாகவோ, கூட்டாகவோ, உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ மீள்பிரசுரம் செய்யக்கூடாது.

மீள்பிரசுரம் செய்யவேண்டிய தேவை ஏற்படின் ஆசிரியரின் அனுமதி பெற்றேயாகவேண்டும்.

மீறுவோர் மீது புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும்.


திரு. தம்பிஐயா தேவதாஸ்
இவர், யாழ்ப்பாணம் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிஐயா ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வர். புங்குடுதீவு மகாவித்தியாலயம், கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவர். தற்பொழுது கொஃகொள்பிட்டி மெதடிஸ்த தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். இலங்கை ஒலிபரப்ணுபுக் கூட்டுத்தாபனத்தில் உதவி அறிவிப்பாளராகவும் பணியாற்றுகிறார். ‘நாளைய சந்ததி’, ‘அங்கும் இங்கும்’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதுடன் கல்விச்சேவையில் அதிதித் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

ரூபவாஹினியில் ‘காதம்பரி’ மூலம் உள்@ர்க் கலைஞர்களைப் பேட்டி கண்டுவருகிறார். ‘இதயத்தில் ஓர் உதயம்’ என்ற தொலைக்காட்சி நாடகத்தின் தயாரிப்பாளரும் இவரே.

சிறுகதை எழுத்தாளராகவே இலக்கிய உலகிற்குள் நுழைந்தார். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சினிமா சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘நெஞ்சில் ஓர் இரகசியம்’, ‘இறைவன் வகுத்த வழி’, ‘மூன்று பாத்திரங்கள்’ ஆகிய மூன்று நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து நூலுருவில் வெளியிட்டிருக்கிறார். ‘இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை’ என்ற இந்நூல், இவரது நான்காவது நூலாகும்.