நூலகம் திட்டம் (நூலக எண்: 1020)

 
 

மின்னூலாக்கம்: சந்திரவதனா

 
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
     
  மீட்டாத வீணை  
 

ஏ. ரி. நித்தியகீர்த்தி

 

மீட்டாத வீணை

*

எழுதியவர்:
ஏ. ரி. நித்தியகீர்த்தி
(ஏ.ரி.நிதி)

*

கமலா வெளியீடு


2


முதற் பதிப்பு - மார்கழி 1974
பதிப்புரிமை ஆசிரியருக்கு
கமலா வெளியீடு
காக்கியவளவு, புலோலி கிழக்கு,
பருத்தித்துறை
விலை. ரூ.4-50சிறீ லங்கா அச்சகம்,
யாழ்ப்பாணம்


3

அன்னைக்கு இது என் அன்புக் காணிக்கை


4


பதிப்புரை


இளம் எழுத்தாளர் ஏ.ரி.நித்தியகீர்த்தி அவர்களின் முதல் நாவலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வளரும் எழுத்தாளர், வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவார் என்பதில் ஐயமில்லை.

அவருக்கும், இந்நாவலை வெளியிட உதவிய சிறீ லங்கா புத்தகசாலை, அச்சக உரிமையாளர் திரு. என். தெய்வேந்திரம் அவர்களுக்கும், அச்சகத்தில் பணியாற்றிய திரு. சி. கனகசபை, திரு. ஆர். இராஜேந்திரராஜா, திரு. ச. சின்னையா, மற்றும் அச்சக ஊழியருக்கும், அட்டைப் படத்தை வரைந்துதவிய திரு. டி. ரி. இராஜநாயகம் அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.கமலா வெளியீட்டார்.

----------


மீட்டாதவீணை

1

பக்கம்-1

ஓங்கி வளர்ந்த பனைமரங்கள் ஓலைகளால் திரை போட, அதனூடே தனது ஒளிக்கற்றை நீட்டி தரையைப் பார்க்கத் துடிக்கிறது பொங்கிவரும் பெரு நிலவு. அந் நிலவுக்கு இளங்காற்று தோழன் போலும். அதனால்தான் அந்த ஓலைத் திரையை விலக்கி, நிலவின் ஒளி முகத்தைத் தரைக்குக் காட்டுகிறது. வாழ்க்கைப் பயணம் முடிந்து, பாதி வழியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு காய்ந்த ஓலைக்குக் காற்றின் செய்கை பிடிக்கவில்லை. அது பனையோடு மோதி, மோதி, பலத்த ஓசையுடன், தனது ஆட்சேபனையைத் தெரிவிக்கிறது. காற்றின் குறும்பு கவிஞருக்கு விருந்தாகலாம். ஆனால் பாவம், இளங்கோ என்ன தவறு செய்தான்? அவன் குடிசைக்குள் தவழ்வது போதாதென்று, அவன் விளக்கோடுமா அதற்கு விளையாட்டு?


மெழுகப்பட்ட தரையில் தாயின் சேலையை விரித்து, குழந்தையைப் போல் குப்புறப் படுத்தபடி புத்தகமொன்றைப் படிக்க முயன்று கொண்டிருந்தான் அவன். இளங்கோ தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கி விடக் கூடாதென்று பயந்த தென்றலாள், மண்ணெண்ணெய் விளக்கின் சுடரோடு விளையாடி, அவனைத் தன் பக்கம் ஈர்க்க முயன்றான். அசைகின்ற விளக்கின் சுடருக்கேற்ப தன் புத்தகத்தையும் அசைத்து நற்கருத்துக்களை அசை போட்டுக் கொண்டிருந்தான் அவன். அவன் கவனத்தை ஈர்க்க தென்றலாள் மட்டுமா முயல்கிறாள்? இளங்கோவின் தாயும் பலமுறை முயன்று விட்டாள்.பக்கம்-2

"தம்பி சாப்பிட இல்லையே?" ஐந்தாவது தடவையாக அவள் கேட்டாள்.

மெதுவாக விழிகளை உயர்த்தினான் இளங்கோ. குடிசை வாசலில் இருந்தபடி அவள் ஒடியல் முறிக்கிறாள். அதை முறிக்கும் வேகத்திலிருந்து, பொறுமையை அவள் இழந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிகிறது. அவன் முறுவலித்தான்.

"என்னம்மா, திருவிழாவுக்கு நேரமாச்சுதே?"
அவன் கேலியாகக் கேட்பது அவளுக்குப் புரிகிறது.

"உங்களைப் போல நாங்களென்ன படத்துக்கே போறம்? வா... வா... கையைக் கழுவிக் கொண்டு" அவள் பட படவென்று பேசியபடி ஒடியலை அப்புறப் படுத்துகிறாள்.

நாதஸ்வர ஓசை காற்றில் தவழ்கிறது. புத்தகத்தை ஒதுக்கி, குடிசைக்கு வெளியே இருக்கும் குடத்து நீரில் தன் கைகளைக் கழுவிக் கொள்ள இளங்கோ விரைகிறான். வெண்ணிலவின் தண்ணொளி அவன் பொன்னிற மேனியை மெருகேற்றுகிறது. தென்றலாள் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறாள். அந்த வேகத்தில் அவன் சுருண்ட கேசம் நெற்றியில் புரள்கிறது. இல்லையேல், அழகாக அரும்பியிருக்கும் அவன் மீசையைப் பார்த்து, அது அழகுப் போட்டிக்கு அழைக்கிறதோ? கைகளைக் கழுவித் தாயருகில் வந்தமர்ந்தான். வெந்தயக் குழம்பி ன் வாசம் மூக்கைத் துளைக்கின்றது. குழம்புச் சட்டிக்குள் சோற்றைப் போட்டு, தாய் அதைக் குழைக்கிறாள். சிறிது தயிரும் ஊற்றிச் சோற்றைப் பிசைந்தாள். நாவில் நீர் ஊறுகிறது. இளங்கோ இரு கைகளையும் விரித்து நீட்டினான். விரல்களிடையே தயிரும், குழம்பும் வழிந்தோட, அவன் கரங்களில் திரட்டிய சோற்றைக் கொடுத்தாள் தாய்.

"தம்பி இன்னும் கொஞ்சம் சாப்பிடன்."

"எனக்குப் போதும் நீ சாப்பிடு." வழக்கமாக அவன் சொல்லும் பொய்யது.
பக்கம்-3

அவள் கடைசிப் பிடியைச் சாப்பிட்டு, சட்டியைக் கழுவினாள். கழுவவும் வேண்டுமா? சில வினாடிகளில் பல வேலைகளை முடித்து இளங்கோவின் தாய் திருவிழாவிற்குச் செல்லத் தயாராகி விட்டாள். அவனும் தன் வேட்டியைச் சுற்றிக் கட்டிக் கொண்டான். ஒரு கையில் சுருட்டிய பாயும், மறு கையில் அரிக்கன் விளக்குமாகத் தாய் முன்னே நடக்க, ஓலைக் கதவை இறுகக் கட்டிவிட்டு அவன் பின் தொடர்ந்தான்.

"தங்கமக்கை, நில். நாங்களும் வாறம்." பக்கத்து வீட்டு மீனாட்சியின் குரலது.

இளங்கோவின் இதயத்தில் ஓர் இனந்தெரியாத இன்ப உணர்ச்சி பரவியது. அது மீனாட்சியின் குரல் தந்த உணர்வல்ல. அதைத் தொடர்ந்து காற்று சுமந்து வந்த மல்லிகையின் மணம் தந்த மகிழ்ச்சியா? அதுவுமல்ல. அந்த மல்லிகையைச் சுமந்து வந்த இளமங்கை செய்யும் இன்பக் கிளர்ச்சி.

"கெதியாக வா பிள்ளை" இளங்கோவின் தாய் சொல்கிறாள். அவனும் சொல்லத் துடிக்கிறான். நிலவு மேகத்தில் மறைந்திருக்கிறது. மேகத்தினூடே அதன் ஒளி சிறிது தெரிகிறது. மீனாட்சியின் பின்னால் பட்டுப்பாவாடை சரசரக்கிறது. மேகம் கலைகிறது. இளங்கோவுக்குப் பூவாடையும், பாவடையும் வாடைக்காற்றுத் தரும் மயக்கத்தைத் தருகின்றன. ´பளிச்´ சென்று நிலவு தெரிகிறது. வெண்ணிலவா? இல்லை. அது பெண்ணிலவு. அடி மேல் அடி வைத்து மீனாட்சியின் மகள் செல்லம் வருகிறாள். ´பருவ நிலா பவனி வருகிறது.´

நீல நிறத்தில் கால்வரை நீண்ட பாவாடையும், அதே நிறத்தில் சட்டையும் அவள் அணிந்திருந்தாள். நிலவின் ஒளி அவள் சிறிய பாதங்களில் பட்டுத் தெறிக்கும் போது, பாவாடையின் மஞ்சள் வர்ணக் கரை ஒளிபக்கம்-4


யிழந்தது. கருவிழிகள் அங்குமிங்கும் ஓடும் போது அவன் இதயமும் சேர்ந்து ஓடியது.

"இளங்கோ, நீ இப்பதானே கோயிலுக்குப் போறாய். என்ரை மோன், இண்டு முழுக்க அங்கதானே. சாப்பிடக் கூட வர இல்லை. பெடியள் திருவிழா இல்லே? நீயேன் போகல்லை.?" மீனாட்சி கேட்டாள்.

"என்ரை இவனுக்கு உதுகள் பிடிக்காது பிள்ளை. உது மற்றதுகள் மாதிரியில்லை. எத்தனை தடவை சொன்னனான் போகச் சொல்லி" தாய் தங்கம் அங்கலாய்த்தாள்.

"உவன் தம்பிக்கும் பொல்லாத கோவம். எல்லாப் பொடியளும் சேரக்குள்ள இவனேன் சேரல்லை?" மீனாட்சி வினாவினாள்.

செல்லத்தின் விழிகளும் அதையே கேட்டன. அவன் பதில் ஒரு புன்னகைதான். மேளக் கச்சேரி இப்பொழுது தெளிவாகக் கேட்டது. அவர்கள் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். பாதையின் இரு பக்கங்களிலும் மனிதர்கள் நடந்தனர். சிரத்த முகங்கள், கலகலப்பான பேச்சுக்கள், வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் காட்சி. செல்லத்தின் விழிகள் துரு துருவென அங்குமிங்கும் ஓடி அலைந்தன. கூண்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் அந்தப் பைங்கிளி வெளியே வந்ததால் ஏற்பட்ட களிப்புணர்ச்சி, அவள் கண்களிலே பளபளத்தது. அலங்காரச் சிகரங்கள், வண்ண வண்ண விளக்குகள், வாழையும், சவுக்க மரங்களும்... அப்பப்பா, என்ன காட்சி! அதை விட துள்ளியோடும் குழந்தைகளின் ´கல, கல´ சிரிப்பொலி, பல்லில்லாக் கிழவிகளின் பொக்கை வாய்ச் சிரிப்பு, பருவக் குமரிகளின் மந்தகாசப் புன்னகை... செல்லத்தின் இதயம் மட்டுமா, எல்லா நல்ல உள்ளங்களும் இன்பத்தில் தவழ்ந்தன. கன்னியர் கூட்டத்தை நோக்கிக் கண்களைச் சுழல விடும் காளையர், கடைக்கண்பக்கம்-5


ணோரத்தால் கள்ளமாகப் பார்த்துத் தங்களுக்குள் ´குசு குசுக்கும்´ மங்கையர் கூட்டம், விழிகளால் பேசும் காதலர், அதை விமர்சனம் செய்யும் தாய்மார்கள்... இவைகளை மறந்து தவில் வித்துவான்கள் இருவர் சவால் விடுவது போல் முழங்கித் தள்ளுகிறார்கள். அதை இரசிப்பது போல் ஒருவர் தலையசைத்து, அந்த இரசிப்பை யாராவது இரசிக்க மாட்டார்களா என்று அங்குமிங்கும் நோட்டம் விடுகிறார். வெண்மணற் பரப்பின் நடுவே அமைக்கப் பட்ட அலங்கார மேடையில் மேளக் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. பெரிய மேளந்தான். அதனால் பெரியவர்கள்தான் அங்கு அதிகம். சின்ன மேளத்தை எதிர் பார்த்து மற்றவர்கள் காத்திருந்தார்கள்.

"கலாவரை மணலை நீ போட்டிருந்தால் கதை வேறை" கோயில் மடத்தில் நடந்து கொண்டிரந்த சீட்டுக் கச்சேரியிலிருந்து வரும் குரலது.

"டேய், துரையன்தான் மூக்குத்தூள் போட்டவன்" தூங்கும் போது மூக்ககுத்தூளைப் போட்டு ஓடியவனைப் பழிவாங்கத் துடிக்கும் நண்பனுக்கு உதவுகிறான் ஒரு சிறுவன். துரையனைத் Nதுடி இருவரும் ஓடுகின்றனர்.

"அவனைக் கோயிலுக்கை விடக் கூடாது." சாதி வெறியர் ஒருவர் குடிவெறியில் கத்துகிறார். இருவர் அவரைச் சாந்தப் படுத்துகின்றனர்.

கோயிலை நெருங்கியதும் தங்கம் தன் சேலை முடிச்சை அவிழ்த்து அவன் கரங்களில் பத்துச் சதத்தைத் திணிக்கிறாள்.

"கடலை வாங்கிச் சாப்பிடு"

பத்து வயதிலும் அவள் அவனுக்குப் பத்துச் சதந்தான் கொடுத்தாள். இன்று இருபது வயதுக் காளைக்கும் அதைத்தான் கொடுக்கிறாள். செல்லம் பார்க்கிறாள். வெட்கத்தால் அவன் முகம் சிவக்கிறது. அவள் புன்


பக்கம்-6

னகை பூத்தாள். அவள் அதரங்களிலிருந்து முத்துதிர ஆரம்பிக்கிறது.

"அம்மா, அண்ணன் அங்க நிற்கிறார்."
அதற்குள் மகாதேவன் தன் தாயையும், தங்கையையும் காண்கிறான். மல்யுத்த வீரனின் உருவத்தைப் போன்றது அவன் உடலமைப்பு. கரிய உருண்டு, திரண்ட அவனது தோள்களும், பரந்த மார்பும் பாவையரின் விழி அம்புகட்கு விருந்தாகிக் கொண்டிருந்தன.

"கந்தசாமி, மேளக்காரருக்கு சோடாவை உடைச்சுக் குடு" என்று தன் சகாவிற்கு உத்தரவைக் கொடுத்து தாயை நோக்கி மகாதேவன் வந்தான். தாயின் முகத்தில் பெருமிதம் பொங்குகிறது.

"ஏன் வர நேரஞ் செண்டது? இந்தாங்கோ, கோயிற் பிரசாதம்." மகாதேவன் இலையில் சுற்றப் பட்ட திருநீற்றையும், பூவையும் நீட்டுகிறான். இளங்கோவைத் தவிர மற்றவர்கள் பூசிக் கொள்கிறார்கள்.

"பெரியவர் பூசமாட்டார் போலை" மகாதேவன் சிறிது குத்தலாகச் சொன்னான்.

"அவன் அப்பிடித்தான் மேனை. உதெல்லாம் மினைக்கெட்ட வேலையாம். நீங்கள் சினேகிதரெண்டு இருக்கிறனீங்கள், சொல்லித் திருத்த வேண்டாமே?" தங்கம் பெருமூச்சு விட்டாள்.

"உது கெட்ட பழக்கம் தம்பி" மீனாட்சி ஒத்துபஇ பாடினாள். செல்லத்தின் விழிகளிலும அதிருப்தி தெரிகிறது.

"டேய் இளங்கோ. கோயில் விசயத்திலை நீ விலகி நடந்தது, பெடியளெல்லாருக்கும் பெரிய கோவம். கொஞ்சம் விட்டுக் கொடுத்து நட" என்று அவன் தோளில் தட்டி மகாதேவன் சொன்னான். மாமி பாயைத்


பக்கம்-7


தாங்கோ" என்று பாயையும் வாங்கிக் கொண்டு அவன் கூட்டத்தை விலக்கி முன் வரிசையை நோக்கி நடந்தான். மக்கள் அவனைக் கண்ட மாத்திரத்தில் வழி விட்டனர். பெண்கள் மூவரும் மகாதேவனைப் பின் தொடர, இளங்கோ விழிகளால் அந் நால்வரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டு, வாலிபர்கள் கூடியிருந்த மரத்தடியை நோக்கி நடந்தான். மகாதேவன் பெண்களை முன்வரிசையில் இருத்தி, தன் சால்வையில் கடலை வாங்கி அவர்களுக்கும் கெர்டுத்தான். பின்னர் அவர்களிடமிருந்து அவனும் விடைபெற்றான்.

அமைதியும், அழகும் கொண்ட அந்த இனிய கிரமாத்தில் இணைபிரியாத நண்பர்கள் இளங்கோவும் மகாதேவனும். ஆண்டுக்கு ஒருமுறை வரும் கோயிற் திருவிழாவின் அன்றைய நிகழ்ச்சி அவ்வூர் இளைஞர்களால் நடாத்தப் படுகிறது. கட்டுக்கடங்காக் களிப்போடு காளையர்கள் கலந்து அதை நடாத்துகையில், இளங்கோ மட்டும் விலகிக் கொண்டது அவர்கட்கு கசப்பைத தருவது வியப்பல்ல. அவனது செய்கைக்குக் கண்டனந் தெரிவிக்க, அவர்கள் அங்கு காத்திருந்தார்கள். அவர்களில் மணியன் சிறது முன்கோபி. முரடனுங்கூட. இளங்கோ அவர்களை நெருங்கியதும் அவன்தான் முதலில் பேசினான்.

"வரவேண்டும். வரவேண்டும். எங்கே ஐயா வரவில்லையென்றால் திருவிழா நின்று விடுமோ என்று பயந்தோம்." நாடக பாணயில் அவன் பேசியதும் மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

"தங்கள் திருவுளங் கனிய அன்பன் வருகை தந்துள்ளேன்" அதே பாணியில் இளங்கோ பதிலளித்தான்.

"கடவுள் இருப்பிடம், மூடக் கொள்கைளின் பிறப்பிடம், எனப் பரபட்பிடும் தாங்கள், வருகையின் காரணத்தைப் புகல்வீரோ?" மணியன் தொடர்ந்தான்.


பக்கம்-8


"மடைமை இருளகற்றி, அறிவு ஒளிபரப்ப திருவுளங் கனிந்து தங்கள் முன் எழுந்தருளினேன்." இளங்கோவும் விடவில்லை.

"இருள் இங்கில்லை நண்பரே. பாவம். பட்டப்பகலில் விளக்கோடு புறப்பட்டாய். கண்களைக் கொஞ்சம் திறந்து பார். இருள் போயிடும். இளங்கோ, அந்த இளங் கலைஞனின் இனிய இசையிலே இந்தச் சனமெல்லாம் கட்டுண்டிருக்கிறதைப் பார். சிரிப்பும், சிங்காரமும் நிறைஞ்சிருக்கிறதைப் பார். இவையெல்லாம் நாம் நடாத்தும் திருவிழா நமக்களிக்கும் பேரின்பம். இதில் நீ கலந்து கொள்ளக் கூடாதோ? அதை நடாத்தும் நாங்கள் மடையன்களோ?"

மணியனின் கேள்வி நண்பர்கட்கு மகிழ்வூட்டியது.

"மணியா, இசைக்கும் இன்பத்துக்கம் நான் எதிரியில்லை. அது ஆண்டவன் பேரிலைதான் நடக்க வேணுமே? மொழியாலை இனத்தாலை, மதத்தாலை சிதறிக் கிடக்கிற இந்தச் சமுதாயத்தை ஒன்றாக்க வேண்டிய நாங்கள் சிந்தனைக்குச் சிறை போடுற மதத்தை வளர்க்கவே விழா எடுக்க வேணும்.? கலைவிழா எண்டால் நான் கலநது; கொள்ளத் தவற மாட்டேன். இது கடவுள் விழா." இளங்கோ சிறிது ஆவேசமாகப் பேசினான்.

கடவுளும், மதமுந்தான் எங்கடை சமுதாயத்தின்ரை கட்டுக் கோப்பையும், ஒழுங்கையும் கட்டிக் காக்கிறது. இது உனக்குத் தெரியாதே?" மணியனுக்குப் பதில் மனோகரனெனும் மற்றொருவன் கேட்டான்.

"இல்லை. அன்பைப் பரப்பிறதாகச் சொல்லி, அழிவைப் பரப்பினது மதந்தான். கடவுள் பெயராலை கணக்கில்லாத மக்கள் மடிஞ்சிருக்குதுகள். மனித வரலாற்றிலேயே கறை படிஞ்சிருக்கு. முகமதியப் போர், சிலுவை யுத்தங்கள் இதுக்கெல்லாம் மதங் காரணமில்லையோ? இன்றைக்கும் இந்து, முஸ்லீம் கலகம் நடக்குது எதாலை?பக்கம்-9

வெளிநாட்டான் எங்களை ஆள விரும்பினதுக்கு மதமும் ஒரு காரணந்தானே? தங்கடை பக்தர்கள் கடவுளுக்காகப் போராடி உயிரிழந்த நேரத்திலை இந்தக் கடவுள் வந்து அவர்களைக் காப்பாத்தினவரே?" இளங்கோ தொடர்ந்திருப்பான். அவள் தோளில் முரட்டுக் கரமொன்று விழுந்தது. அது மணியனின் தந்தை வேலுப்பிள்ளையரின் கரம்.

"டேய் கழுதை, நல்ல பெடியளையும் கெடுக்க வந்தனியே? எலும்பு முறிச்சுப் போடுவன் போடா வீட்டை" அவர் சீறினார். அவனோ சிரித்தான்.

"என்னடா சிரிப்பு?" பளாரென்று ஓர் அறை அவன் கன்னத்தில் விழுந்தது. ஆவேசத்தால் இளங்கோவின் கரங்கள் துடித்தன. அவன் ஆத்திரத்தோடு அவரைப் பார்த்தான்.

"என்னடா பர்க்கிறாய்? தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே." வேலுப்பிள்ளையார் வார்த்தையை முடிக்கவில்லை. மனிதனின் சிந்தனை எவ்வளவுதான் விரிந்திருந்தாலும், சில சமயங்களில் அவன் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறான். உணர்ச்சிக்குப் பின்னர்தானே அறிவு வேலை செய்கிறது. வேலுப்பிள்ளையரின் வார்த்தைகள் இளங்கோவின் இதயத்தைச் சுண்டி இழுத்தன. அவன் தன்னை மறந்தான். அவனது மூடிய கரங்கள் அவரது முன்வரிசைப் பற்களைப் மிக மோசமான முறையில் முத்தமிட ஆரம்பித்தன. அதுவும் சில வினாடிகள்தான். தந்தை தாக்கப் படுவதைப் பார்த்து மணியன் சும்மா நிற்கவில்லை. இளங்கோவின் வயிற்றில் ஓங்கி உதைத்தான். இளங்கோ நிலத்தில் விழுந்தான். தொடர்ந்து மணியனின் கால்களுக்குப் பந்தானான். ´சண்டை, சண்டை´ எனுங் குரல் எங்கும் பரவியது. மக்கள் இசையை மறந்தார்கள். கூட்டம் சண்டை நடக்கும் இடத்தைச் சூழ்ந்து கொண்டது. நண்பர்கள் மணியனைப் பிடித்துக் கொண்டனர். நால்வர் அவன் தந்தை வேலுப்பிள்ளையைப் பிடித்திருந்தனர்.


பக்கம்-10

அவர் உறுமினார். எங்கிருந்தோ வந்த மகாதேவன் நிலத்தில் விழுந்திருந்த இளங்கோவைத் தூக்கி நிறுத்தினான். அவன் நெற்றியில் வழிந்த இரத்தத்திலே வெண்மணல் ஒட்டியிருந்தது.

கூட்டத்தை விலக்கித் தன் மகனைப் பார்க்கத் துடிக்கிறாள் தங்கம். அவளோடு ஒட்டிக் கொண்டு செல்லமும், மீனாட்சியும் நிற்கின்றனர். யாரோ ஒரு பெரியவர் கூட்டத்தை விலக்குகிறார். மணியனையும், வேலுப்பிள்ளையையும் மற்றவர்கள் இழுத்துச் செல்லுகிறார்கள். இளங்கோவின் கரத்தைப் பிடித்திருக்கிறான் மகாதேவன்.

"தம்பி" என்கிறாள் பதறிய தங்கம். வெறுப்போடும், ஆத்திரத்தோடும் இளங்கோ அவளைப் பார்க்கிறான். மருண்டு, கலங்கிய விழிகளோடு செல்லமும் அவனைப் பார்க்கிறாள்.

"தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே"
இளங்கோவின் இதயத்தில் அக்குரல் கேட்கிறது. பைத்தியம் பிடித்தவன் போல் அவன் ஓடுகிறான். தாய் அவனைப் பின் தொடர்கிறாள்.

"தம்பி இளங்கோ" என்று அவள் கத்துகிறாள். அவன் திரும்பியும் பாராது ஓடுகிறான். வெறிச்சிட்ட தெருவில் இருவரும் ஓடினர். கல்லொன்று தடக்கித் தாய் நிலத்தில் விழுகிறாள். அவன் திரும்பிப் பார்க்கிறான். ஆனால் அவன் கால்கள் நிற்கவில்லை. "தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே" அந்தக் குரலொன்றுதான் அவனுக்குக் கேட்கிறது. அது ஒன்றுதான் அவனைத் தொடர்கிறது. அவன் வேகமாக ஓடுகிறான்.


2

பக்கம்-11


இயற்கை அழகுதான். ஆனால் இதயங்கள் ஏங்கும் போது, அதை இரசிக்கும் கண்களும் தூங்கி விடுகின்றன. கடலன்னை விரித்த வெண்மணற் பரப்பில் வீழ்ந்து கிடந்த இளங்கோவின் இதயம், தரையில் தள்ளப்பட்ட மீனைப் போல் துடித்தது. உயர்ந்து, உயர்ந்து பொங்கிவரும் பேரலைகள் கூட கரைக்கு வந்ததும் அடங்கி விடுகின்றன. அவன் இதயத்தில் மோதுகின்ற துன்ப அலைகளோ ஆர்ப்பரிக்கின்றன. மேலும் மேலும் பொங்குகின்றன. இதயச் சுவர்களோடு மோதி அதனை உடைக்கப் பார்க்கின்றன. ஊருருவத் துடிக்கின்றன. அந்தப் போராட்டத்தின் விளைவுதான் அவன் கண்களில் பாயும் நீரோட்டம். அவன் இதயத்தின் ஓலம் கடலின் பேரிரைச்சலை அடக்கி விடுகிறது.

´எனக்கு அப்பா இல்லையா?´அவன் குழந்தையாக இருந்த நாள் முதல் குமுறிக் கொண்டிருந்த அந்தக் கேள்வி இன்று அவன் குரல் வளையைப் போட்டு நெரிக்கிறது. நீண்ட அந்த இரவிடமிருந்து நிலவு விடைபெறும் வரை, அவன் தன் நினைவிழந்தே இருந்தான். அவன் எழுந்திருக்க முயன்றான். அவன் விழிகளிரண்டிலும் செவ்வானம் தெரிந்தது. கால்கள் தள்ளாடின. கட்டுடல் கனலெனக் கொதித்தது. அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான்.

தங்கம் குடிசைக் கதவில் தன்னுடலைச் சாய்த்தபடி இருந்தாள். அவள் முழங்காலிற் சிந்திய இரத்தத்தோடு


பக்கம்-12


அவள் சேலை ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் விழிகளோ அவளது இரத்த உறவைத் தேடிக் கொண்டிருந்தன. அவன் ஏன் ஓடினான்? அவள் விழுந்த போதும் பாராமல் ஏனப்படி ஓடினான்? அவர்கள் அவனை ஏனடித்தார்கள்? இப்படி ஓராயிரங் கேள்விகள் அவள் இதயத்தில். தூரத்தில் தள்ளாடித் தள்ளாடி வரும் இளங்கோவின் உருவம் அவளுக்குத் தெரிகிறது. எழுந்திருக்க முயல்கிறாள். முழங்காலின் வேதனை தடுக்கிறது. காலோடு ஒட்டியிருந்த சேலையை விடுவிக்க முயல்கிறாள். இரத்தத்தால் இறுகி விட்ட அந்த உறவைப் பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. பற்களை இறுகக் கடித்தபடி சேலையை இழுக்கிறாள். வேதனை அவளைப் பிடித்துத் தின்கிறது. சேலை விடுபடுகிறது. ஆனால் இரத்தம் குபு, குபு எனப் பெருகுகிறது.

"தம்பி, என்னடா இது?" தாய் மகனை நோக்கி ஓடுகிறாள்.

குடிசையின் கதவருகில் இளங்கோ வந்தான். அவன் தள்ளாடிய உடலுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததென்று அவனுக்கே தெரியவில்லை. தன்னை அணைக்க வந்த கரங்களை தன் பலங்கொண்ட மட்டும் தள்ளினான். தடுமாறிய தாய் "தம்பி" என்றபடி நிலத்தில் வீழ்ந்தாள். குருதி வடிந்து கொண்டிருந்த அவள் முழங்காற் புண்ணில், தரையிலிருந்த சிறிய கற்கள் குத்தி மேலும் வேதனையைக் கொடுத்தன. அவள் இதயப் புண்ணிற்கு?

அவளுடல் பதைக்கிறது. உள்ளம் துடி துடிக்கிறது. உதடுகள் நடு நடுங்க கண்களில் வடியும் நீர் புழுதியிற் படிகிறது. புழுவைப் பார்ப்பது போல் இளங்கோ அவளைப் பார்க்கிறான். அவனுடலும் நடுங்குகிறது. குடிசையின் கதவில் சாய்ந்தவாறு அவன் நிற்கிறான். அவன் கால்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. அவன் தன் உடலின் சக்தி யாவற்றையும் திரட்டிக் கேட்கிறான்.

"என்ரை அப்பன் ஆர்?"


பக்கம்-13

´சுளீர்´ என சவுக்கால் அடித்தது போன்ற உணர்ச்சி தங்கத்தின் உடலில் பரவுகிறது.

"கடவுளே, ஐயோ என்ரை கடவுளே" அவள் புழுதியிற் புரண்டு, புரண்டு அழுகிறாள். வெண்மையும், கருமையும் கலந்திருந்த அவள் கூந்தலில் புழுதியின் செம்மை படர்கிறது. அழுகித் துர்நாற்றமடித்து, ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு மாமிச பிண்டத்தைப் பார்ப்பது போல், இளங்கோ அவளைப் பார்க்கிறான். அவன் கண்கள் இருளடைகின்றன. இதயம் எப்பொழுதோ இருண்டு விட்டதே. அவன் தரையில் மெதுவாகச் சாய்கிறான்.

தங்கமோ, தன் மகன் தரையில் சாய்ந்ததைக் காணவில்லை. அவள் கன்னத்தில் பாயும் கண்ணீரில் ஒட்டிக் கொள்ளும் புழுதியை அவள் தன் கண்ணீரால் கழுவுகிறாள். மீண்டும் அது ஒட்டிக் கொள்ளும். அவள் விழி நீரும் விடாது அதைக் கழுவும்.

"மாமி, என்ன மாமி இது?" அதிர்ச்சியும், அன்பும் கலந்த குரல். மெல்லிய இரு கரங்கள் அவள் முதுகில் பட்டன.

"செல்லம், என்ரை மோனை" செல்லத்தைக் கட்டிக் கொண்டு தங்கம் கதறினாள். அவள் இதயமே வெடித்தது போல் அவள் குமுறினாள்.

"மாமி, மாமி அழாதேங்கோ மாமி" செல்லம் அவளை அணைத்த படி சொன்னாள். அந்தக் குரலில்தான் எத்தனை கனிவு! ஆனால் தங்கமோ வாய்விட்டு அழ ஆரம்பித்தாள்.

செல்லம் செய்வதறியாது திகைத்து நிற்கையில், தங்கம் அவளை அணைத்தபடி அழுதாள். எவ்வளவு நேரம் அழுதாளென்று அவளுக்கே தெரியாது. கண்ணீர் நின்றுபக்கம்-14

விடலாம். ஆனால் வேதனை...? செல்லம் மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொள்கிறாள். அவளருகில் அவள் கொண்டு வந்த கைப்பெட்டி இருந்தது. பனங்காணியில் நுங்கு பொறுக்கிக் கொண்டிருந்தவள், தங்கத்தின் அழுகுரல் கேட்டுத்தான் ஓடி வந்தாள். கைப்பெட்டியில் அவள் பொறுக்கிய நுங்குகள் இருந்தன. அவையெல்லாம் அணில் கோதியவை. அதிலொன்று மிகச் சிறியது. ஒரே ஒரு கண்தான் அதிலிருக்கும். அதையும் அணில் கோதி விட்டது. தங்கம் அதையே வெறித்துப் பார்த்தாள். அது சொல்லுமா அவள் கதையை?

"காலெல்லாம் இரத்தம். விழுந்தனீங்களோ?" முழங்காலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் செல்லம். தங்கம் எழுந்திருக்க முயன்றாள்.

"அப்பிடியே இருங்கோ மாமி" செல்லம் சொல்லி விட்டு குடிசை வாசலிலிருந்த தண்ணீர்க் குடத்தை நோக்கி ஓடினாள். சிரட்டை நிறையத் தண்ணீரை எடுத்தாள்.

பட்ட மரம் போல் குடிசைத் தரையில் வீழ்ந்திருந்த இளங்கோவை அவள் விழிகள் வியப்போடு பார்க்கின்றன. திருவிழா ´நித்திரை போலை´ அவள் மனம் எண்ணமிடுகிறது. இரவில் நடந்ததெல்லாம் கனவு போல் தெரிகிறது. கூரையில் செருகியிருந்த ஒரு பழஞ் சேலையையும், சிரட்டையில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு அவள் தங்கத்தை நோக்கி நடந்தாள்.

"வேண்டாம் பிள்ளை. நான் கழுவிறன்" தன் காற் புண்ணைக் கழுவ வந்த செல்லத்தைப் பார்த்து தங்கம் அன்போடு சொன்னாள்.

"சும்மா இருங்கோ மாமி" கண்டிப்பான ஓர் அன்புக் கட்டளையைப் போட்டு, செல்லம் தானே புண்ணைக் கழுவினாள். தங்கம் நன்றியோடு அவளை நோக்கினாள்.


பக்கம்-15

"அவன் என்ன செய்கிறான்?" தங்கம் கேட்டாள். "காலைக் கொஞ்சம் நீட்டுங்கோ, ´அது´ படுத்திருக்கு. எங்க விழுந்தனீங்கள்? உங்களுக்க சண்டையே?" செல்லம் கேட்டாள். ´அது´ என்பது இளங்கோவைத்தான்.

"ஊ... ஊ... மெதுவா. நோகுது பிள்ளை. அவனுக்கு என்னைப் பிடிக்கல்லை. நான் செய்த பாவம்." தங்கத்தின் குரல் தழதழத்தது.

"மருந்து ஒண்டுமில்லையே? மருந்து போட்டால்தானே புண் மாறும்." செல்லம் குறிப்பிட்டது முழங்காற் புண்ணைத்தான்.

"வீட்டுக்க இருக்கு. இடது பக்கச் சுவருக்கு மேல் பரியாரியாரின்ரை மருந்து வைச்சனான்." தங்கம் சொன்னாள். செல்லம் அதை எடுத்து வர எழுந்தவள், தயங்கினாள்.

"ஏன் பிள்ளை?" தங்கம் கேட்டாள்.

"அது படுத்திருக்கு" தங்கத்தின் முழங்காலிற் பாய்ந்த இரத்தம், செல்லத்தின் கன்னங்களில் பிரதிபலிக்கிறது. அந்த நேரத்தில் கூட தங்கத்தின் முகத்தில் புன்னகை பரவியது.

"போ, செல்லம்"

செல்லம் போகிறாள். நீண்ட அவள் பாவாடை கால்களைத் தடுக்கிறது. குடிசை வாசலில் அவன் படுத்திருந்தான். அவன் முகம் அவளுக்குத் தெரியவில்லை. அவனைத் தாண்டித்தான் அவள் போக வேண்டும். இதயம் படபடத்தது. அவன் எழுந்து விடக் கூடாது என அவள் ஏங்கினாள். தயக்கம் அவளுக்கு மட்டும் உரியதல்ல. அங்கு வாழும் இளமங்கையர் பலருக்கு இத் தயக்கம் இருப்பது அவளுக்குத் தெரியும். அதுவும் அவர்கள் கிராமமோ உயர்ந்த வேலிகளைப் போட்டு இளம் உள்ளங்களைப் பழக

பக்கம்-16


விடாது, பார்க்க விடாது தடுக்கும் தாழ்ந்த உள்ளங்கள் நிறைந்தது. இதனால் தனிமையில் அவர்கள் சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் பயத்தாலும், படபடப்பாலும் தங்களையே இழந்து விடுவார்கள். அவளும் இதற்கு விதிவிலக்கல்ல. பருவம் வருமுன் அவள் இளங்கோவோடு கிட்டியடித்திருக்கிறாள். கிளித்தட்டுவாள். கெந்திப் பிடிப்பாள். ஓடி, ஒளித்து விளையாடுவார்கள். அவையெல்லாம் பழைய இன்ப நினைவுகள். காலம் தன் கடமையைச் செய்யும் போது அவர் ஊராரும் கடமையென எண்ணித் தங்கள் மடைமையைச் செய்வார்கள். வேலிகள் எட்டடிக்கு உயரும். அவள் நடை, உடை, பாவனை அனைத்திலும் குறை காணத் துடிக்கும் ஒரு கூட்டம். பழைய நண்பர்களைப் பார்க்கக் கூடாது. பேசினாலும் தலை நிமிரக் கூடாது. அவள் சிரிப்பது குற்றம். சிங்காரிப்பது சிறுமை.

அவளுக்கு இன்று பதினாறு வயது. காலம் அவள் கால்களுக்கு விலங்கிட்டது இரண்டு வருடங்களுக்கு முன்னரே. அதுவரை பட்டாம் பூச்சி போல் அவள் பறந்து திரிந்தாள். சிறுவர், சிறுமியர் கூடுமிடமெல்லாம் அவள் நிற்பாள். அவர்கள் போடும் கும்மாளம், விளையாட்டு, சிரிப்பு, வேடிக்கை கணக்கிலடங்கா. அந்தக் ´குண்டான்´ கோபாலனிடம் அவனைப் பட்டஞ் சொல்லியே எத்தனை முறை குட்டு வாங்கினாள். ´மாங்கொட்டை´ மணியன் அவளை ஓட ஓட விரட்டியிருக்கிறான். ஏன் இளங்கோ கூட அவனை ´அவிச்ச இறால்´ என்று அழைத்ததற்காக எத்தனை முறை அவளை அடித்திருப்பான். ஆனால், அவள், மனோ, கமலா, மாலா எல்லோரும் சேர்ந்து அந்தச் சிறுவர்களைப் பட்டம் சொல்லியே அழ வைத்திருப்பார்கள். அவர்கள் பாடசாலை நடத்தியிருக்கிறார்கள். விளையாட்டுப் போட்டி நிகழ்த்தியிருக்கிறார்கள். சமைத்து விளையாடி இருக்கிறார்கள். கல்யாணம் கூட நடத்திப் பார்த்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் பறந்து செல்லும் பைங்கிளியவள். கூண்டுக் கிளியாக அவள் மாறிய போது கதையே மாறியது.


பக்கம்-17

அவள் பெயரளவில் பெரிய மனுசியாகி விட்டாள். ஏனவள் அப்டியானாள்? அவளுக்குப் புரியவில்லை. அவள் பெரிய மனுசிதானா? அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. உடலில் ஏற்படும் சிறுமாற்றம் உள்ளத்தில் எவ்வளவு மாறுதலை ஏற்படுத்த முடியும்? அவளால் மாற முடியவில்லை. ஆனால் ஊரும், உற்றாரும், பெற்றவளும் அவளை மாற்றினார்கள். அவளால் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. அன்று முதல் இன்று வரை பெண்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ஆண் வர்க்கமும், அவர்களால் பேதைகளாகவே உருவாக்கப் பட்ட மற்றைய பெண்களும் சேர்ந்து, அந்த இளங்கன்னியின் இன்பச் சிறகை ஒடித்தனர். பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் அவள் சுதந்திரம் அழிக்கப் பட்டது. இன்பம் பறிக்கப் பட்டது. அறிவு ஒடுக்கப் பட்டது. எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கத்தையும், பயத்தையும் ஊட்டினார்கள். தன்னோடு ஓடி, ஆடித் திரிந்தவர்களுக்கே பயந்து அவள் ஒளித்தாள். சிந்திக்கவும் பயந்தாள். சிறகொடிந்த பறவையானாள். அவள் மட்டுமா அப்படி வளர்க்கப் படுகிறாள்?

செல்லம் மெதுவாக அடி மேல் அடி வைத்து நடந்தாள். ஒருவாறு அவனைத் தாண்டி மருந்துக் குப்பியை எடுத்தாள். அவன் பின்னாலிருந்து தன்னைப் பார்ப்பது போன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவள் கரங்கள் நடுங்கின. அவள் பருவமடைந்த பின்னர், முதன்முறையாக ஒரு வாலிபன் இருக்கும் இடத்தில் தனித்து நிற்கிறாள். யாரோ தன்னைத் தொடுவது போன்ற உணர்ச்சி அவள் உடலெங்கும் பரவுகிறது. அவள் கையிலிருந்த மருந்துக் குப்பி நழுவி நிலத்தில் விழுந்தது. அவள் நடுங்கியவாறு திரும்பினாள். ஆனால் இளங்கோ எழுந்திருக்கவில்லை. இரு கரங்குளுக்கும் இடையே முகத்தைப் புதைத்தவாறு குப்புறப் படுத்திருந்தான். அவள் எண்ணமெல்லாம் வெறும் பிரமையா? இல்லை, அவள் அடிமனத்தில் எழுந்த சில உணர்ச்சிகளின் விளைவா? கையிலிருந்து நழுவிய குப்பி உருண்டு சென்று இளங்கோவின் மார்புக்கருகில் அடைக்கலம் புகுந்தது. அவள்பக்கம்-18

தன்னை அறியாது விரலைக் கடித்துக் கொண்டாள். நன்றாகவே கடித்து விட்டாள். விரல் வலித்தது. குப்பியை எப்படி எடுப்பது? அவனைத் தாண்டி வரவே பயந்தவள், அவன் மார்புக்கடியில் இருக்கும் குப்பியை எடுப்பதென்றால் நடக்குமா?

ஏதோ ஓர் அசட்டுத் துணிச்சல். அவள் குனிந்து குப்பியை எடுக்க முயன்றாள். அவள் கூந்தலில் ஒரு கரம் விழுந்தது. செல்லத்தின் உடல் பயத்தால் நடுங்கியது. அவள் நிமிர முயன்றாள். அதற்கு முன்னர் அந்தக் கரமே அவள் தலையை நிமிர்த்தியது. ´பளாரென´ அவள் கன்னத்தில் விழுந்த அறை, செல்லத்தை நிலைதடுமாறச் செய்தது.

"அம்மா" என்ற படி அதிர்ச்சியோடு அவள் பார்த்தாள். அங்கே அவளன்னை பத்திரகாளியாகக் காட்சியளித்தாள்.

"கழுதை, எங்கையடி வந்தாய்?" மீனாட்சி சீறினாள். "போடி வீட்டை" அவளைத் தள்ளியவள் "எங்கே அந்த நாய் தங்கம்?" என்று கத்தினாள். செல்லம் அழுதவாறே ஓடினாள்.

பனங்காணியில் மகளைத் தேடி வந்த மீனாட்சி குடிசையின் பின் பக்கத்தால் வந்ததால், தங்கத்தைக் காணவில்லை. ஆனால் தங்கம் அவளைக் கண்டாள்.

"ஏன் மீனாட்சி, ஏனிப்படி சினக்கிறாய்?" தங்கம் கேட்டாள்.

"நாயே, உன்ரை பழக்கத்தை என்ரை மோளுக்கும் பழக்கிறியே? அவளை வீட்டுக்கை விட்டிட்டு நீ வெளியிலை காவலே? ரோசங்கெட்ட நாயள். நாயள். அயலுக்க வந்தியள் இல்லே, உள்ள குமரையெல்லாங் கெடுக்க. தகப்பன் தெரியாத பிள்ளையளைப் பெத்து..." மீனாட்சி வசைமாரி பொழிந்தாள்.

பக்கம்-19


செல்லமோ, அழுதவாறு ஓடி விட்டாள். ஓட முடியாத ஒருத்தி கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தாள். அவள் காற் புண்ணுக்கு மருந்து கிடைக்கவில்லை. இதயப் புண்ணுக்கோ மேலும் வேதனை கிடைத்தது. இளங்கோ, நித்திரையானால் எழுந்திருப்பான். நல்ல காலம் அவன் மயக்கமுற்றிருந்தான். மீனாட்சி பொரிந்து தள்ளி விட்டுப் போய் விட்டாள். தங்கம் நொண்டியவாறே குடிசைக்குள் வந்தாள். தன் மகனைத் தொட்டதும் அவள் பதறினாள். அவனுடல் கனலெனச் சுட்டது.

"தம்பி, தம்பி எழும்படா. என்னடா உனக்கு?" பதறியபடி அவன் முகத்தில் நீர் தெளித்தாள். அவனோ எழவில்லை. அவள் பதறினாள். விழி நீரை உகுத்தாள். செய்வதறியாது தவித்தாள். உதவிக்கு வர உறவென்று ஒன்று அவளுக்கு இல்லை. வைத்தியரிடம் போகலாம். அவனைத் தனியாக விட்டுச் செல்ல அவளுக்கு மனமில்லை. வைத்தியருக்குக் கொடுக்க அவளிடம் பணமும் இல்லை. கண்ணீர் பெருகியது. மீனாட்சி ஒருத்திதான் அவள் மீது சிறிதாவது அநுதாபம் கொண்டவள். அவளும் கோபம் கொண்ட பின் தங்கம் எங்கே போவாள்? "முருகா, முருகா" எனப் புலம்பினாள். பக்தர்கள் பாடுவது போல், அவள் இதயம் உருகி வரவில்லை. அவளைப் போலவே எலும்பாலும், சதையாலும் உருவான எத்தனையோ மனிதர்களுக்கு ஏற்படாத கருணையா அவர்களால் உருவாக்கப் பட்ட கற்சிலைகளுக்குத் தோன்றப் போகிறது?

தங்கத்துக்குப் பொறுக்கவில்லை. குடிசையை விட்டு வெளியே வந்தாள். இதயத்தை இளங்கோவிடம் விட்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே அவள நொண்டி, நொண்டி நடந்தாள். "கடவுளே, கடவுளே பரியாரியார் கோவிக்காமல் பிள்ளையை வந்து பார்க்க வேணும். உன்னாணை, உனக்கு நான் கற்பூரம் கொளுத்துவேன்." அவள் வாய் விட்டுச் சொல்லிக் கொண்டு போனாள்.


3

பக்கம்-20

இதயம் எங்கோ, எங்கோ பறக்கிறது. வெம்மையான ஏக்கப் பெருமூச்சு ஒன்று அவளையும் மீறி வருகிறது. வாளிப்பான தன்னுடலில் வாளி நீரை அள்ளி வார்க்கிறாள் தேவி. அந்த ஏக்கத்தின் வெம்மையைத் தகிக்க முடியவில்லை. அவள் வாளிக் கயிற்றைப் பற்றி இழுக்கும் போது, அவளை முத்தமிட வருவது போல வேகமாக ஓடி வரும் துலா, வாளியில் நீர் நிரம்பியதும் மெதுவாகப் போய் விடுகிறது. எத்தனை வாலிபர்கள் தேவியை ஏக்கத்தோடு பார்த்திருப்பார்கள்? அவள் ஏக்கமும் அவர்களுக்குப் புரிந்திருக்குமே! ஆனால் தேவி யாருக்கும் தேவியாக முடியவில்லை. சுற்றி வர கிடுகு வேலி போடப்பட்ட கிணற்றடி அது. ஓலைக் கிடுகின் ஊடாக ஒளிந்திருந்து, ஒட்டிய சேலையினூடே ஒளி விடும் அவள் உடலழகைப் பார்த்து இரசிக்க வாலிபர்கள் இருந்தார்கள். ஆனால் வாழ்வுக்கு வறுமை கட்டிய சுவரைக் கடந்து, அவளுக்குத் தாலி கட்ட யாரும் இருக்கவில்லை. உருண்டு, திரண்டிருந்த அவள் மார்பகங்களில் இன்று காணும் தளர்வு, அவள் முப்பதிரண்டு வயதைத் தாண்டுகிறாள் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

ஆழமான அந்தக் கிணற்றின் அடித் தளத்திலிருக்கும் நீரை அவளால் அள்ளி வார்க்க முடிகிறது. அவள் இதயத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆசைக் கனவுகள், ஏக்கங்கள் யாருக்குத் தெரியப் போகின்றன? அந்தக் கிணற்றில்தான் அவள் ஆவி பிரியுமென தேவி அடிக்கடி எண்ணுவ


பக்கம்-21

துண்டு. அள்ளிய நீரை அருகிலிருந்த வாளியில் ஊற்றுகிறாள்.

´கல கல´ வெனும் ஓசை கேட்கிறது. நீரை நிலத்தில் ஊற்றும் ஓசையா? இல்லை. செல்லத்தின் சிரிப்பொலி அது.

"என்ன அக்கா ஓட்டை வாளியிலை தண்ணியை ஊத்திறியள்" செல்லம் சிரித்தாள். "தண்ணீர் வெளியே ஓடுது."

தேவி வாளி ஓட்டை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள். அவளும் ஓர் ஓட்டை வாளிதான். அவள் பருவமும் ஓட்டை வாளியில் ஊற்றிய நீராகத்தான் மாறுகின்றது.

"அதனாலை என்ன செல்லம்? வெளியிலை ஊற்றிய நீர் வாய்க்காலிலைதானே பாயும். உங்கடை வாழையளுக்குத்தானே நல்லது." தேவி குளிப்பது செல்லம் வீட்டுக் கிணற்றில்தான்.

"வாழைக்கு இந்தத் தண்ணி போகாது. அதோடை போதாது. தேவையில்லாத புல்லுக்கும் பூண்டுக்கும்தான் இது உதவும். செல்லத்தின் வார்த்தைகளில் கள்ளமில்லை. ஆனால் அவை தேவியின் உள்ளத்தை ஊடுருவத்தான் செய்தன. பாழாகி வரும் அவள் பருவம், எந்தப் பயிரை வளர்க்கப் பயன் படுமோ?

"என்னக்கா யோசிக்கிறியள்?"

தேவி கன்னத்தில் வடிந்த தண்ணீரோடு தன் கண்ணீரையும் சேர்த்துத் துடைத்தாள். செல்லத்தோடு எவ்வளவுதான் அன்பாக அவள் பழகினாலும், செல்லத்தின் இளமை அவளது பொறாமையைத் தூண்டுவதுண்டு. மலர்களெல்லாம் ஏன் வாட வேண்டும்? அப்படியே வாடாது இருந்து விட்டால்...?


பக்கம்-22

"செல்லம் நீ குளிக்க இல்லையே. நாலு வாளி அள்ளி வாக்கட்டே?" தேவி கேட்டாள்.

"குளிக்கத்தானே அக்கா வந்தனான். இரண்டு பேருமாகக் குளிப்பம்" செல்லம் சொன்னாள். அவள் உடைகளைக் களைய ஆரம்பிப்பதற்குள், தேவி ஒரு வாளி நீரை அப்படியே செல்லத்தின் மேனியில் ஊற்றி, கல கலவென நகைத்தாள்.

"போங்கோ அக்கா" என்று போலிக் கோபத்துடன் கூறிய படியே செல்லம் குளிப்பதற்குத் தயாரானாள்.

இரு பெண்களின் கேலிப் பேச்சும், சிரிப்பொலியும் கிணற்றடியைக் கலகலப்பாக்கின. ஊர் வம்பெல்லாவற்றையும் அவர்கள் கதைத்தார்கள். சிறிது நேரத்தில் இளங்கோவைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. ஒரு வாரத்திற்கு முன்னர் திருவிழாவில் நடந்த சம்பவம் முதல் தனக்குத் தாயார் அடித்தது வரை ஒன்று விடாது செல்லம் சொன்னாள்.

"அது பாவம், சரியான காய்ச்சலாம். ஆசுபத்திரியிலை மூன்று நாள் இருந்ததாம். இப்ப எப்பிடியோ தெரியாது." செல்லம் சொன்னாள்.

"அவன் பாவந்தான். அவன்ரை தகப்பன் ஆரோ தெரியல்லை. எங்கடை அம்மம்மாக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கும். அவ பழைய காலத்து மனுசி. தங்கம் மனுசியும் ஒண்டும் சொல்லாதாம்." தேவியும் பரிந்து பேசினாள். "அது சரி, உனக்கேன் அவனிலை இவ்வளவு பரிவு?" தேவி கிண்டலாகத்தான் கேட்டாள்.

ஆனால் செல்லத்தின் கள்ளங் கபடமில்லாத உள்ளத்தில் அது ஏதோ செய்தது. நிமிர்ந்த அவள் விழிகளிரண்டும் கண்ணீரால் நிரம்பியிருந்தன. தேவி, செல்லத்தின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.


பக்கம்-23


"செல்லம் ஏனடி, நான் என்ன சொல்லிப் போட்டன்?"

"இல்லையக்கா, எனக்கு இது விளங்க இல்லையக்கா. தங்கம் மாமிக்கு நான் மருந்தெடுக்கப் போனது பெரிய குற்றமே? பாவம் மனுசி. காலெல்லாம் இரத்தத்தோடை கதறுது. இதுக்கு..." செல்லம் விம்மினாள். "அம்மா, அதுக்கு இப்பிடி என்னை அடிச்சிருக்கக் கூடாது." பொல பொலவென அவள் கன்னங்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

தேவி, செல்லத்தின் தலையை அன்போடு தடவி, அவளது முகத்தை நிமிர்த்தினாள். கண்ணீரைத் துடைத்தாள்.

"செல்லம், இப்பதான் உனக்கு வயசு பதினாறு. இதைப் போல ஆயிரம் பேச்சைக் கேட்டுக் கேட்டு நான் அழாத நாளேயில்லை. இப்பதானே இது உனக்கு ஆரம்பம். செல்லம் அழாதை"

"அக்கா, ஊரார் என்னைப் பற்றி என்னவும் பேசட்டும். என்ரை அம்மாவே அப்பிடி நினைக்கலாமோ?"

"போடி பேச்சி, உனக்கு உலகம் தெரியல்லை. கொம்மா, உன்னிலை கோவத்திலையே அடிச்சவ? ஊர் வாய்க்கு ஏற்பட்ட பயத்திலை. உன்னை அப்பிடிப் பார்த்த உடன் ஏற்பட்ட அதிர்ச்சியிலை உனக்கு அடிச்சிட்டா"

"ஊருக்குப் பயப்பிடுற அம்மா தன்ரை மகள் மனசைப் பற்றி யோசிக்க இல்லையே. அக்கா என்ரை மனம் பட்டபாடு. நான் விட்ட கண்ணீர் - அது அவவுக்குத் தெரிய இல்லையே"

"செல்லம், நீ இன்றைக்கு வடிக்கிற கண்ணீரைப் பற்றி யோசிக்கிறாய். ஊர் வாயைத் திறந்தால் இண்டைக்கு மட்டுமில்லை, நீ எண்டைக்குமே கண்ணீர் வடிக்க வேணுமே! இதைத்தான் கொம்மா யோசிக்கிறா.


பக்கம்-24

"அக்கா, நீங்கள் எப்பவுமே அம்மாமாரின்ரை பக்கந்தானே"

"பிள்ளையில்லையே தவிர, எனக்கும் அம்மாமாரின்ரை வயசுதானேடி" தேவி சொன்னாள்.

"அக்கா, அப்பிடிச் சொல்லாதையிங்கோ. காலம் வரும்."

"இல்லையடி. அதுக்கு முன்னாலை காலன்தானடி வருவான்."

"அக்கா"

"மரத்தைப் பாரடி. வளருது. பூக்குது காய்க்குது. என்னையும் பாரடி.... செல்லம். செல்லம் என்னைப் போலை ஒரு வாழ்க்கை எந்தப் பெண்ணுக்குமே வேண்டாமடி. கட்டழகன், கை நிறையக் காசோடை இருப்பவன்... எண்டெல்லாம் நான் கண்ட கனவுகளைக் கண்ணீராலேயே கலைச்சிட்டன். எனக்கு அன்பு காட்ட ஒருத்தன் வேண்டாமடி. இந்த ஊர் வாயை மூட, எனக்கும் ஒருவன் இருக்கிறானெண்டு சொல்ல ஒரு காலம் வருமோ?"

தேவியின் வேதனை, அவளையும் மீறி விட்டது. அவள் விம்மி, விம்மி அழலானாள். செல்லத்தின் ஆதரவான வார்த்தைகளால் அவள் துயரத்தை அடக்க முடியவில்லை. செல்லத்தின் கண்களிலும் கண்ணீர் பெருகியதுதான் மிச்சம். அவர்கள் கண்ணீரில் குளித்தார்கள். இன்னும் எத்தனை பேர் இப்படியோ...?

தேவியின் வீடும், தங்கத்தின் குடிசையும் மீனாட்சியின் வீட்டின் இருபங்கங்களிலும் உள்ளவை. மீனாட்சி வீட்டுக் கிணற்றைத்தான் அவர்கள் எல்லோரும் உபயோகித்தார்கள். தேவி, இடையில் நீர் நிறைந்த குடத்துடனும், தோளில் ஈரச் சேலையையும் போட்டுக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள். குடத்தை விட அவள் இதயந்தான்

பக்கம்-25

கனத்தது. குடத்தை நிலத்தில் வைத்து சேலையைப் பிழிந்து காய வைத்தாள். சேலையிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக நிலத்தில் விழுந்தது. கனலென எரிக்கும் கதிரவனின் வெப்பத்தில் அது காய்ந்து விடும். ஆனால் அவள் கண்களில் கசியும் நீரை நிறுத்துவதற்கு யார் வரப் போகிறார்கள்?

"பிள்ளை, பிள்ளை முருங்கைக்காய் வேணுமே?" கையில் நான்கு முருங்கைக்காயுடன் தங்கம் நொண்டி, நொண்டி வந்தாள்.

"வாங்கோ தங்கமக்கை" எப்பிடி இப்ப இளங்கோக்கு?" தேவி தன் ஈரக் கூந்தலை உலர வைத்தபடி கேட்டாள்.

"யாரது தங்கமே...! கண் தெரியிது இல்லை. வா பிள்ளை இஞ்சாலை" தேவியின் பாட்டிக்கு யாராவது மனிதர்களைக் கண்டால் போதும். சிறு வயதிலே தாய், தந்தையை இழந்த தேவியையும், அவள் தம்பி கோபாலையும் வளர்த்தவள் அந்தக் கிழவிதான். ஓடியாடி உழைத்த அவள் இன்று ஓய்ந்து விட்டாள். நரை விழுந்த தலை, இருக்கையை விட்டு அதிகம் நகர முடியாத நிலை... காலதேவன் அவள் கதைக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருந்தான். ஆனால், அவளோ இன்னும் தன்கதையின் முகவுரையைக் கேட்க இரசிகர்களைத் தேடிக் கொண்டிருந்தாள்.

"பிள்ளை, அந்த நாளிலை... உவள் தேவிக்கு பத்து வயது... நல்ல காய்ச்சல்..." அவள் ஆரம்பித்தாள்.

"தங்கமக்கை, எனக்குப் பெடியள் படிக்க வரப் போகுதுகள். முருங்கைக்காய் என்ன விலை?" தேவி கேட்டாள். தேவி சொல்லிக் கொடுக்கும் ´டியூசனில்தான்´ அவர்கள் வயிறு நிரம்ப வழியிருந்தது.

"நீ தாரதைத் தா பிள்ளை" தங்கம் சொன்னாள். தேவி முருங்கைக்காயை வாங்கி, பணம் எடுப்பதற்கு


பக்கம்-26

உள்ளே சென்றாள். தங்கத்தின் எண்ணம் மகனைச் சுற்றிக் கொண்டிருந்தது.

"நேற்றுத்தானே இவ்வளவு நாளைக்குப் பிறது சோறு சாப்பிட்டவன். ஒரு நல்ல கறியோடை சாப்பாடு கூட அவனுக்குச் சரியாகக் குடுக்க முடியல்லை. பாவம், எழும்பக் கூட எவ்வளவு கஸ்டப் படுகிறான். என்ன செய்யிறது? எல்லாம் என்ரை தலை எழுத்து. செய்த பாவம்" தங்கத்தின் சிந்தனை திடீரெனத் தடைபட்டது. அவள் விழிகள் திண்ணையிலே விழுந்திருந்த ஓர், இரண்டு ரூபாய்த் தாளில் நிலைத்தன. மடித்தபடி இருந்தது அந்த நோட்டு. அவள் தன் வெறும் மடியைத தடவிக் கொண்டாள். ´இரண்டு முட்டை... ஒரு தோடம்பழம்... அரிசிக்கும் போதும்´ அவள் இதயம் கணக்குப் போட்டது. அடி மனதில் காசை எடுக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்குகிறது. அதற்கு எதிர்க்கட்சியும் இல்லாமல் இல்லை. ஒரு வினாடிக்குள் அவள் இதயத்தில் நடக்கும் போராட்டம், உடலெங்கும் வியர்வையைப் பெருகச் செய்கிறது. எடுப்பதானால் தேவி வருமுன் எடுக்க வேண்டுமே! தேவியின் காலடி ஓசை கேட்கிறது. தங்கம் ஒரு கணம் சிலையாக நின்றாள். இருதயம் மிக வேகமாகத் துடிக்கிறது. கண்மூடி கண் திறக்கும் நேரத்தில், அந்த இரண்டு ரூபாயை அவள் தன் மடியில் செருகிக் கொண்டாள்.

அவள் இதயத்தின் படபடப்பு - அவள் உடலில், பேச்சில், இதழ்களில் மலர்ந்த சிரிப்பில் - எல்லாந் தெரிந்தது. தேவி பார்த்திருப்பாளா?

"ஏன் தங்கமக்கை உந்தக் காலுக்கு மருந்து போடுறதில்லையே?" தேவி கேட்டவாறு ஐம்பது சதத்தைக் கொடுத்தாள்.

"ஓம் பிள்ளை போடோணும்" தங்கம் திண்ணையிலிருந்து எழுந்தாள். தேவியை நிமிர்ந்து பார்ப்பதற்கு அவளால் முடியாதிருந்தது. அங்கிருந்து வேகமாகப் போக
பக்கம்-27

நினைத்தாள். நெற்றி வியர்வையைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள்.

"நான் வாறன் பிள்ளை." தங்கம் நடந்தாள். தலை குனிந்தவாறு நடந்தாள். இதயம் படபடத்தது. ´ஐயோ அதையேன் எடுத்தன்?´ என்று சஞ்சலத்துடன் அவள் நடந்தாள். இதயத்தில் புயல் வீசியது.

"மேனை, தேவி இஞ்சவா மேனை" கிழவி தேவியைக் கூப்பிட்டாள். "உவள் தங்கம் எனக்கொரு சொல்லும் சொல்லாமல் போயிட்டாள். வரட்டும்."

"என்ன அம்மம்மா, எனக்கில்லே வேலையிருக்கு" தேவி வந்தாள்.

"என்னடி பெரிய வேலை? அந்த நாளிலை உவள் தங்கம் செய்ற வேலை உனக்குத் தெரியுமோடி? பாவமவள் தனிச்சுப் போனாள். அப்ப, அவளுக்குச் செய்த பாவத்துக்குத்தானே, இப்ப நாங்கள் அனுபவிக்கிறம். எடியே, உவள் விட்ட கண்ணீர், என்ரை காலைப் பிடிச்சுக் கொண்டு உவள் கதறின கதறல், கலியாணஞ் செய்யாமல் அவள் பிள்ளைத்தாச்சி எண்ட உடன், நாங்கூட சிரிச்சனான். எடியே, உவள் ஆருக்காவது சொன்னாளே, உவன்ரை தகப்பன் ஆரெண்டு எனக்கு மட்டுந் தெரியும். பார் அவளை இண்டைக்கு வரை ஒரு பொடிப் பிள்ளைக்குஞ் சொல்ல இல்லை. எடியே தேவி, அவளின்ரை அரிசி தண்ணியிலை வேகிறதில்லையடி. அவள் விட்ட கண்ணீரிலை வெந்ததடி." கிழவி பேசிக் கொண்டே இருந்தாள். தேவியோ தன் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டாள். அதையே இளங்கோ கேட்டிருந்தால், இந்நேரம் அந்தக் கிழவியின் காலைப் பிடித்தாவது உண்மையை அறிந்திருக்க மாட்டானா?


4

பக்கம்-28

பட்டப் பகலென எறித்தது வெயில். இளங்கோ இன்னும் இருளில்தான் இருந்தான். ஆதவனின் ஒளி அகிலத்தின் இருளை அகற்றுகிறது. பேரறிஞர் அள்ளித் தந்த அரும் பெருங் கருத்துக்களெல்லாம் அவ்விளைஞனின் இதய இருளை அகற்றவில்லையே! ஒருவன் சிந்தனை தெளிந்தென்ன? உலகில், மனித உணர்வுகளை உணராத ஒரு மனிதன் இருந்தாலும், இங்கு கண்ணீர் பெருகத்தான் செய்யும்! உள்ளங்கள் உருகத்தான் செய்யும்! தன் தந்தை யாரென்று அறிந்து விட்டால் இளங்கோவின் சிந்தை சாந்தி பெறுமா? உண்மையை அறிய வேண்டுமென்ற உணர்வை விட, உலகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்ற வேதனைதான் அவனைக் கொன்றது. இகழ்ச்சியை, அதுவும் குறுகிய நோக்குடையோரின் நச்சு நாவில் தோன்றும் இகழ்ச்சியை, தாங்கிக் கொள்ளும் இதயம் எங்கே இருக்கிறது? இகழ்ந்தவர்கள் இளங்கோவை இன்னும் மறந்து விடவில்லை. அவனோடு மோதிய வேலுப்பிள்ளையும், அவர் மகனும் இன்னமும் வஞ்சந் தீர்க்கக் காத்திருந்தனர்.

கன்னத்தில் ஊன்றிய இரு கரங்கள், வெறித்த பார்வை... ஆண்டிகளுக்குத் தேவையான அந்த அமைப்பு அவனுக்கு ஏன்?

"டேய், இளங்கோ என்னடா யோசிக்கிறாய்? உரிமையோடு அழைக்கும் இப்படியான உறவுக்காக எத்தனை உள்ளங்கள் ஏங்குகின்றன.


பக்கம்-29

"கோபால் எப்படா வந்தனீ?"

"அப்பப்பா என்னடா வெயில்? உன்ரை உடம்பிலை அடிச்ச வெயில் முடிஞ்சுதே மச்சான்? என்னடா ஒரு கிழமையா படுத்திட்டாய். தியேட்டரிலை இரண்டு படம் வந்து போயிட்டிது."

இளங்கோ, புன்னகை புரிந்தான்.

"நீ போக இல்லையேடா?"

கோபால் கல கலவெனச் சிரித்தான். இளங்கோவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் கேள்வியில் என்ன தப்பு?

"டேய் எல்லாருந்தான் பகிடி விடுவினம். எண்டாலும் நீதான் ஒருத்தன் சுத்தி வளைச்சு விடுவாய்"

"என்னடா இப்ப பெரிய பகிடி விட்டிட்டன்?"

"´நொண்டி, நானில்லாமல் எப்பிடியடா படத்துக்கு போவாய்´ எண்டதை என்ன மாதிரி கேட்டிட்டாய்?" கோபால் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் கை வாடிப் போன தனது வலது காலைத் தடவியது. இளம் வயதில் வந்த ´போலியோ´ அவன் வலது காலில் தனது ஞாபகச் சின்னத்தை விட்டுப் போயிற்று.

இளங்கோ தன்னை நொந்து கொண்டான். உடலின் ஊனம் உள்ளத்திலும் ஒரு வடுவை ஏற்படுத்தும். மற்றவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அதைச் சுற்றித்தான் இருக்குமோவென பேதையுள்ளம் எண்ணமிடும். இவ்வாறெல்லாம் இளங்கோ நினைக்கவில்லையே. வேதனையை வேடிக்கையாக்கும் கோபால் ஒரு விசித்திரப் பிறவிதான்.

"கோபால், இப்பிடிப் பேய்ப்பகிடி உன்னோடை விடுவனே? மச்சான், டேய் எப்ப படத்துக்குப் போவம்?"

பக்கம்-30

" படம் இருக்கட்டும். உன்ரை உடம்பு எப்பிடி? டேய் இந்தாடா, உனக்கு தோடம்பழமும், முட்டையும் வாங்கிக் கொண்டு வந்தனான்."

படலையைத் திறந்த தங்கம் தன் கையிலெடுத்த இரண்டு ரூபாயைக் கசக்கியபடி நின்றாள்.

"டேய் கோபால், உனக்கேனடா இந்த வேலை? கொக்கா அங்க பாவம், டியூசன் சொல்லிக் கொடுத்து ஏதோ இரண்டு, மூண்டு ரூபாயை உழைக்குது. அதையும் நீ..." இளங்கோ கேட்டான். கோபால் சிரித்தான்.

"மடையா, உனக்குக் காய்ச்சல் எண்டால் மெத்தை வீட்டுக் காரரும், காரிலை போறவையுமே முட்டை வாங்கித் தரப்போகினம்? வெயிற் சூடு அதிலை வந்தவனுக்குத்தான் தெரியும். கொம்மா நிற்கிறா கேள். அவவுக்கு விளங்கும். வெயிலிலை வராத உனக்கு விளங்குமே?"

தங்கத்தின் கையிலிருந்த காசு கனலெனச் சுட்டது. தனக்கு வெயில் சுடுவதை மட்டுந்தான் அவள் நினைத்தாள். அது தேவிக்கும் சுடும் என்பதை ஏன் நினைக்கவில்லை.?

"உங்கடை வீட்டைதான் தம்பி போயிட்டு வாறன்." தங்கம் சொல்லியவாறு அவர்களைக் கடந்து உள்ளே சென்றாள். கால்கள் சிறிது தடுமாறின.

"தங்கமக்கை, இந்த முட்டையைத் தோடம்பழத்திலை கரைச்சுக் கொடுங்கோ. இவனுக்கு நல்லது."

உள்ளே சென்ற தங்கம் ஓடி வந்தாள். "தம்பி, மேனை ஒரு பிழையில்லோ நடந்து போச்சு. உங்கடை வீட்டு முத்தத்திலை ஒரு இரண்டு ரூபாய் விழுந்து கிடந்திது. என்ரை மடியாலைதான் விழுந்தது எண்டு நான் எடுத்துக் கொண்டு வந்திட்டன். இஞ்ச வந்த பார்த்தால் என்ரை காசில்லோ கைப்பெட்டிக்க கிடக்குது. மோனை,


பக்கம்-31

உதைக் கொக்காட்டைக் குடுத்து விடுறியே?" தங்கத்தின் இதய பாரம் சிறிது குறைந்தது.

"அடி சக்கை, டேய் படத்துக்குக் காசு வந்திட்டுது" கோபால் இளங்கோவின் முதுகில் மகிழ்ச்சியுடன் அடித்தான்.

"மோனை, மெதுவா அடியன். அவன் சுகமில்லாதவனில்லே. படங்கிடம் பாராமல் அதைக் கொக்காட்டைக் குடுத்துப் போடு நான் சொல்லிப் போட்டன்" தங்கம் சொன்னாள்.

"அம்மா, கருப்பணி இருக்குதே? இவனுக்குக் கொஞ்சம் குடன்" இளங்கோ தாயிடம் சொன்னான்.

"தம்பி, உந்த மாங்கயை வெட்டு, கருப்பணி கொண்டு வாறன்." தங்கமக்கை ஒரு மாங்காயையும், சத்தகக் கத்தியையும் கோபாலிடம் கொடுத்து உள்ளே சென்றாள். கோபால் மாங்காயை வெட்ட ஆரம்பித்தான்.

"டேய், எத்தனை நாளைக்கடா நாங்கள் மற்றவையின்ரை உழைப்பிலை சீவிக்கிறது. எஸ். எஸ். சி. பாஸ் பண்ணி மூன்று வருசமாப் போச்சு. ஒரு வேலை, வெட்டி செய்யிறமே? பார். கொக்கான்ரை காசிலை படத்துக்குப் போறம.;" இளங்கோ சொன்னான்.

"அதிலை என்னடா பிழை? மண்ணை நம்பித்தானேடா மரமிருக்கு எண்டாலும், இந்த மரஞ்செடி ஒண்டுமே இல்லையெண்டால் இந்த மண்ணுக்கு என்னடா மதிப்பு?

"கோபால், இப்பிடிச் சொல்றதாலை உன்ரை மனச்சாட்சியை உன்னாலை ஏமாத்த முடியுமோ? வேலையில்லாமல் இருக்கிறம் எண்ட கவலை உனக்கில்லையோ?"

"இரண்டு கால் மனுசருக்கே இஞ்ச வேலையில்லையாம். நானென்னடா ஒரு காலிலை நிற்கிறவன்தானே எனக்கார் வேலை தருவினம்?"


பக்கம்-32


"இந்தா தம்பி, கருப்பணியைக் குடிச்சுக் குடிச்சுக் கதையுங்கோ." தங்கம் கருப்பநீரைக் கோபாலிடம் கொடுத்தாள். அவன் வாங்கிப் பருக ஆரம்பித்தான்.

"தம்பியவையள், நானும் உந்த வேi விசயமாக கொஞ்சம் கதைக்க வேணும். உவர், கணவதிப்பிள்ளை யண்ணன் இருக்கிறாரில்லோ, என்ன சொன்னாலும், மனுசன் எங்களுக்குப் பெரிய உதவி. அவரின்ரை தியேட்டரிலை.... என்ன தம்பி அதுக்குப் பேர்?"

"மகாலட்சுமி தியேட்டர்" கோபால், தங்கத்துக்கு உதவினான்.

"ஓம்... அதுதான். அங்க ஒரு சின்ன வேலை கேட்டால் தர மாட்டாரே? இளங்கோ, மோனை உனக்கு விருப்பமெண்டால் நான் கேட்டுப் பாக்கிறன்"

"அடி சக்கையெண்டானாம். அப்ப, ஓசிப் படமெல்லே. உடன போய்க் கேளுங்கோவன்." கோபால், இளங்கோவின் முதுகில் இன்னுமோர் அடி கொடுத்திருப்பான். தங்கத்தைப் பார்த்து விட்டு கையை மடக்கிக் கொண்டான்.

"போய்க் கேட்டுப் பாரம்மா. ஏதாவது வேலை தந்தால் பெரிய காரியம்" இளங்கோ சொன்னான்.

"இளங்கோ.. இளங்கோ.."

"படலேக்க ஆரோ கூப்பிடினம். ஆரது? உள்ள வாங்கோவன்" தங்கம் அழைத்தாள்.

"அது நான்தான் மாமி. எப்பிடி மோனுக்கு?"

"அட மகாதேவனே வா மோனை வா" தங்கம் வாயார வரவேற்றாள். "கொம்மா, அண்டைக்குப் பேசின பேச்சிலை, எங்களைத் திரும்பியும் பார்க்க மாட்டியள் எண்டில்லே நினைச்சனான். பாவம் அந்தப் பெட்டை வேற வீணாக..."


பக்கம்-33

"அவள் தங்கைச்சி, விசயத்தைப் பிறகுதானே சொன்னவள். எண்டாலும் பாருங்கோ, அவளுக்கும் அது வேணும். பொம்பிளைப் பிள்ளையள் கொஞ்சம் புத்தியா நடக்க வேண்டாமே? அட, கோபால் நீயும் நிற்கிறியே?"

"வா மச்சான், நல்ல நேரம். கருப்பணி நேரம். இரன்." கோபால், மகாதேவனின் கரத்தைப் பிடித்து நிலத்தில் அமர்த்தினான்.

"அம்மா, மககாதேவனுக்கும் கருப்பணி கொண்டு வாவன்" இளங்கோ தாயை வேண்டினான். தங்களம் உள்ளே சென்றாள். "மகாதேவா, தோட்டமெல்லாம் எப்பிடி?"

"இப்பத்தானடா தண்ணி இறைச்சிட்டு வாறன்" மகாதேவனின் மேனியில் ஓடிய வியர்வை அதைத் தெளிவாகச் சொல்லிற்று. ஒரு பெரிய பானையில் தங்கம் கருப்ப நீரைக் கொண்டு வந்து வைத்தாள். கோபால் இன்னொரு மாங்காயை வெட்டிக் கிண்ணத்துள் போட்டான். இருவரும் கருப்ப நீரைக் குடிக்க ஆரம்பித்தனர்.

"திருவிழாச் சண்டையைப் பற்றி பெடியள் என்ன கதைக்கிதுகள்?" இளங்கோ கேட்டான்.

"வேலுப்பிள்ளை மாமா, உன்னை ஒரு கை பார்க்கிறனெண்டுதான் நிக்கிறார். மணியனும் முறுகிக் கொண்டுதான் நிக்கிறான். நீ அதைப் பற்றிக் கவலைப் படாதை."

"நானொண்டும் சண்டித்தனத்துக்குப் பயந்தவனில்லை." இளங்கோ ரோசத்தோடு சொன்னான்.

"மச்சான் நான் நிக்கிறன். நீ விடாதை" கோபால் தோள் கொடுத்தான்.

"ஏனடா, நானொருத்தன் இல்லையே? நாங்கள் படிச்ச பெடியள். அவர் அந்தக் காலத்து ஆள். கொஞ்சம்


பக்கம்-34

நாங்கள்தானே பணிஞ்சு போக வேணும்" மகாதேவன் கூறினான்.

"தம்பி மகாதேவன், உண்மையிலே மோனை. நாவூறு படக் கூடாது, நீ ஒரு விசயம் தெரிஞ்ச பிள்ளை. ஊரோட ஒத்தோடத் தெரிஞ்ச நல்ல பிள்ளை." தங்கத்தின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.

"அம்மா, உந்த விசயத்திலை நீ தலைப்போட்டால், வீண் தொந்தரவுதான் வரும்" இளங்கோ எச்சரித்தான்.

"கேட்டியே தம்பி?" மகாதேவனைப் பார்த்துச் சொன்ன தங்கம் முணுமுணுத்தாள். ஏதோ நல்லதுக்குச் சொன்னால்..."

"மகாதேவா, வேலுப்பிள்ளையர் உனக்கு மாமாவா இருக்கலாம். அவர் என்ரை பொறுமையைச் சோதிக்க நான் இடங் குடுக்க மாட்டன்." இளங்கோவின் அந்த வார்த்தைகளால் மகாதேவனின் முகம் வாடியது.

";ஆறிற நெருப்பை ஏன் வீணாகக் கிளறுறாய்? இளங்கோ, ஒண்டு சொல்லுறன், மாமாவோ, மச்சானோ... ஆராயிருந்தாலும், எங்கடை அடுப்பு எரிஞ்சால்தான் எங்களைச் சுத்தி ஆக்கள் வருவினம். பசியாலை வயிறு எரிகிற நேரத்திலை ஆர் வருகினம்? நாங்களும் கஷ்டப் பட்ட நாங்கள்தான். எங்கடை கையை நம்பி வாழுற நாங்கள், இஞ்ச வந்து மாமாக்கு அப்புக்காத்து வேலை, நான் பார்க்கத் தேவையில்லை."

"நீ வீணாகக் கோவிக்கிறாய் மச்சான். இளங்கோ மனமுடைஞ்சு போயிருக்கிறான். நாங்கள்தானே..." கோபால் முடிக்கு முன்னர் மகாதேவன் குறுக்கிட்டான்.
"அதுக்குத் தானேடா நான் வந்தனான். உந்த விசயத்தை என்னோடை விடுங்கோவன். அவையா ஏதும் கிளறினால் நாங்களும் பார்ப்பம். இல்லையெண்டால்,


பக்கம்-35

ஏன் வீண் மனக்கசப்பு? இளங்கோ நீ சிநேகிதன். மணியனோ மச்சான். மாமா, மாமி வேறை."

"உனக்கும் ஒரு தங்கைச்சி அங்க வயசு வந்து நிக்குது" கோபால் குறுக்கிட்டான்.

"உந்தக் கதையை விடு தம்பி. உவன் குடிகாரனுக்கு என்ரை செல்லத்தைக் குடுப்பனே? அதுக்கில்லை மச்சான். ஒரு நல்லது கெட்டதுக்கு, நாலு பேர் வீடு தேடி வர வேணுமே. தனிச்சு வாழுற காலம் போயிட்டுது. இது சமுதாயம். பல இனம், பல மொழி பேசிற மக்களே ஒருவரை ஒருவர் நம்பி வாழ வேண்டிய காலம். நீ செத்தாக் கூட, உன்னைத் தாக்க நாலு பேர் வேணுமோ, இல்லையோ?"

"மகாதேவா, நீயேன் கவலைப் படுறாய்? இந்த விசயம் என்னைப் பொறுத்தவரை முடிஞ்சு போனதுதான். கோயில் கூடாதென்றால் அதை இடிக்கச் சொல்லி பக்தர்களுக்குத்தான் சொல்ல வேணும். ஆனால் அதை அவர்கள் பக்தியிலே இருக்கைக்க சொன்னால், இடி எங்க விழும்? நாங்கள் இளம் பெடியள்தான். இடத்தைக் காலத்தைப் பார்த்துக் கதைக்கத் தெரியல்லை" இளங்கோ சொன்னான்.

இவர்கள் பேச்சைக் கேளாதவள் போல் தங்கம், குடத்திலிருந்த தண்ணீரை எடுப்பதற்கு வெளியே வந்தாள். ஆனால் தண்ணீரை எடுக்காமலே பதறியபடி ஓடி வந்தாள்.

"ஐயோ பெடியள் அங்கேயல்லோ வேலுப்பிள்ளையரும் மோனும் வருகினம். ஐயோ பிள்ளையாரே! கம்பு தடியோடை நாலைஞ்சு பேருமில்லோ வருகினம்" மகாதேவன் துள்ளியெழுந்தான். கோபால் தடுமாறியவாறு எழுந்தான். இளங்கோ அசையவில்லை.

"ஓடுங்கோடா, பெடியள் நான் அவையோடை கதைக்கிறன்" தங்கம் பதறினாள்.


பக்கம்-36

"பார்த்தியேடா எங்கடை வீரத்தாயை" கோபால் அந்தச் சமயத்திலும் சிரித்தான். மகாதேவனின் முகம் மிகவும் கடுமையாக இருந்தது.

"மாமி உள்ளை போங்கோ. இஞ்ச கொலை நடந்தாலும் நீங்கள் வெளியிலை வரக் கூடாது."

"கும்பிட்டன் பெடியள், உங்க உங்க பாட்டிலை போங்கோடா" தங்கம் அவசரப் படுத்தினாள்.

"அம்மா, உள்ளை போ" இளங்கோவின் குரலில் ஒரு தலைவனின் உரம் இருந்தது. தங்கம் "என்ரை பிள்ளையாரே!" என்ற படி உள்ளே போனாள்.

"டேய், கோபால் நீ இளங்கோவோடை நிண்டு கொள். நான் போய் அவையைச் சந்திக்கிறன். ஒரு தம்பி இஞ்ச கதைக்கக் கூடாது. உங்க பாட்டிலை இருக்க வேணும்."

"மகாதேவா, நீ போ. என்ரை விசயத்தை நான் பார்க்கிறன்" இளங்கோ சொல்லுமுன் படலையருகில் சத்தம் கேட்டது.

"ஒரு தம்பி இஞ்சை கதைக்கக் கூடாது எண்டில்லே சொன்னனான். இளங்கோ நான் சொல்லுறதை நீ கேள்." சத்தம் போட்ட மகாதேவன் படலையை நோக்கினான்.

"யாரடா அங்கை, உள்ள இருக்கிறவன், சண்டியனென்றால் வெளியிலை வாடா" வேலுப்பிள்ளையரின் குரல் கர்ச்சித்தது.

கோபால் இளங்கோவை அசையாமல் பிடித்துக் கொண்டான். தங்கம் அங்குமிங்குமாகப் பதறியபடி நின்றாள். மகாதேவன் படலையை நோக்கி நடந்தான். நிமிர்ந்த அவனது நெஞ்சும் நேரான அவனது நடையும் ஒரு மல்யுத்த வீரனை நினைவுட்டின.


பக்கம்-37

"டேய் வெக்கம் கெட்டவனே, வீரமிருந்தால் வெளியிலை வாடா."

"எடியே தங்கம் உன்ரை மோனை வரச் சொல்லு பார்ப்பம்."

"இண்டைக்கு இரண்டிலை ஒண்டு, உவன் நேற்றுப் பிறந்தவன். எங்கடை வேலுப்பிள்ளையருக்கு கை வைக்கவோ?"

பல குரல்கள் மாறி மாறிக் கேட்டன. மகாதேவன் படலையைத் திறந்தான். கம்பும் கையுமாக ஐந்தாறு மனிதர்கள் அங்கு நின்றார்கள். அவனைக் கண்டதும் அவர்களிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. வேலுப்பிள்ளை முன்னால் வந்தார்.

"மகாதேவா, உனக்கு இஞ்ச என்னடா வேலை?" அவர் கேட்டார்.

"மாமா, ஒருத்தனுக்கு அடிக்கிறதுக்கு இவ்வளவு பேர் என்னத்துக்கு?" மகாதேவன் நிதானமாகக் கேட்டான். வேலுப்பிள்ளையின் கரம் அவனது தோளில் விழுந்தது.

"நீ உதுக்குள்ளை தலையைப் போட்டால் சொல்லிப் போட்டன், கிள்ளி எறிஞ்சு போடுவன். பிறகு கோவிக்காதை"

"மாமா, நீங்கள் பெரிய மனுசர். இது என்ன சின்னத்தனமான வேலை? அவன் இளம் பெடியன் ஏதோ சொன்னான். அதுக்குள்ள நீங்களேன் தலையைப் போட்டியள்? பெடியள் விசயத்தை பெடியளோட விடுங்கோவன்" மகாதேவன் அமைதியாகச் சொன்னான்.

"மடையா, எனக்குப் புத்தி சொல்ல வாறியே? விட்டனெண்டால் பல்லுப் பறக்க" வேலுப்பிள்ளையர் கையை ஓங்கினார். யாரோ ஒருவன் அதைப் பிடித்துக் கொண்டான்.


பக்கம்-38


அயலிலுள்ள வேலிகளினூடே பல தலைகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. மீனாட்சி சேலைத் தலைப்பை மடியில் செருகிய படி ஓடி வந்தாள். செல்லம் படலை வாசலில் நின்று ஒழுங்கையில் நடப்பதைப் பார்த்தாள். தேவியும் அருகில் நின்றாள்.

தகப்பனை விலக்கிக் கொண்டு முன்னால் வந்தான், மணியன்.

"மகாதேவா, உன்னோடை எங்களுக்குக் கதையில்லை. எங்கேயடா அவன்?"

"அண்ணே, அண்ணே என்ன அண்ணே இது? என்ரை மோனோட என்ன செய்யிறியள்? டேய் மணியா, போடா அங்கலை." மீனாட்சி மணியனை அப்பால் தள்ளினாள்.

"தங்கைச்சி, நீ வீட்டை போ. இது ஆம்பிளையள் விசயம்." வேலுப்பிள்ளை கட்டளையிட்டார்.

"வெக்கங்கெட்ட வேலையில்லே செய்யிறியள். மாமனும், மருமோனும் சண்டையே? அண்ணே, அவன் சின்னப் பெடியன். உனக்குப் புத்தி எங்க போச்சு?" மீனாட்சி சத்தமிட்டாள். வேலுப்பிள்ளையின் மடியில் பிடித்துத் தள்ளிக் கொண்டு போனாள். வேலுப்பிள்ளையர் தனித்ததும் மெதுவாக, ஆனால் கோபத்தோடு பேசினாள்.

"உனக்கு மூளையிருக்கே அண்ணே, இளங்கோவோடை சண்டை போட இப்பவோ வரவேணும்? என்ரை மகனிலை ஆராவது தொட்டியளோ சொல்லிப் போட்டன். உன்ரை செத்தவீட்டுக்கும் நானில்லை. உங்கடை கலியாணத்துக்குமில்லை"

வேலுப்பிள்ளை குறி தவறுவதை உணர்ந்தார். இளங்கோவோ வெளியே வரவில்லை. மகாதேவனோ உறுதியாக அங்கு நின்றான். யாருமற்ற இளங்கோவோடு மோதலாம். ஆனால் மகாதேவனோடு மோதினால் விளைவு நல்லதாக இருக்காதே.


பக்கம்-39

இச் சமயத்தில் எங்கிருந்தோ வந்த தேவியின் பாட்டி, தன் பொல்லையும் ஓங்கியவாறு ஓடி வந்தாள்.

"டேய் வேலுப்பிள்ளை, என்னடா செய்றாய், உவன் தங்கத்தின்ரை வளவுக்க? வேலை மினைக்கெட்டதுகள். போங்கோடா, எல்லாரும் அவ, அவயின்ரை வீட்டுக்கு... அங்க பெண்டுகள் பிள்ளையளைப் பற்றிக் கவலையில்லை. அவேக்குச் சண்டித்தனமும், சண்டையும், டேய் வேலுப்பிள்ளை கூட்டிக் கொண்டு போடா உவங்களை. உங்கடை கதையெல்லாம் கிழிச்சனெண்டால்.... சந்தி சிரிக்கும். அவையும், அவையின்ரை சண்டித்தனமும்."

கிழவிதான் அவள். ஆனால் அவள் வார்த்தைக்கு ஒரு சக்தியிருந்தது. நாலு விசயந் தெரிஞ்சவள் அவள். சாதாரணமான விசயங்கள் மட்டுமல்ல, பலரது வாழ்க்கை இரகசியங்களையே அவள் அறிந்திருந்தாள்.

"படலையைக் கட்டடி தங்கம். உன்ரை பெடியனைக் கொஞ்சம் அடக்கி வையன். போங்கோடா எல்லாரும்"

முதலில் நடந்தவர் வேலுப்பிள்ளைதான். மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். மணியன் ஏதேதோ முணுமுணுத்தவாறு நடந்தான். தேவி, தன் பாட்டியை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அந்தக் கிழவிக்குப் பிறகு பிறந்தவர்கள்தானே, அந்த மனிதர்கள் எல்லோரும்.


5

பக்கம்-40

காலம் காதலரைப் பொறுத்த வரையில் கொடியதுதான். அவர்கள் பிரிந்திருக்கும் போது விரிந்தே செல்லும். பிரிந்தவர் கூடினால் அது விரைந்தே ஓடி விடும். எப்படியிருந்தாலும் கவலைகளை, கசப்பான நிகழ்சிகளை மறப்பதற்குக் காலம் ஒரு மருந்துதான். மாதங்கள் சில கடந்து விட்டன. கஞ்சியில் உப்பை விட்டுக் கரைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. தங்கம் மீது அவள் கொண்ட கசப்புணர்ச்சி எப்பொழுதோ கரைந்து போய் விட்டது. அவள் எண்ணங்கள் மகளின் எதிர்காலத்தை எண்ணிக் கனவு காண்கின்றன. செல்லம் தேங்காய் துருவுகிறாள். அவள் இதயமோ தேனென அவள் காதுகளில் பாயும் பாடலுடன் கலந்து விடுகிறது. அதற்கு இணையாகப் பாட இதழ்கள் துடிக்கின்றன. கன்னம் இரண்டும் மாம்பழமெனச் சிவக்கின்றன. கருவிழிகளோ, அந்தப் பாடல் வந்த பாதையில் பறந்து செல்கின்றன. கண்களைக் கூசச் செய்வது அந்தக் கதிரவனா, இல்லை - அவன் கதிர்கள் வியர்வையில் மோத தீப்பிழம்பென ஒளி விடும் அக்காளையின் சிவந்த மேனியா? ஒரு கையில் கயிற்றுடன் துலா ஓடிக் கொண்டிருந்தான் இளங்கோ. ஓடும் துலா மீது தன் தங்கையின் இதயமும் ஓடுகிறது என்பதை அறியாமல், மகாதேவன் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தான். தன்பாதையில் தனித்து நடக்கக் கஸ்டப்படும் கோபால், வாய்க்காலில் பாய்ந்து வரும் நீருக்கு அதன் பாதையைக் காட்டிக் கொண்டிருந்தான்.


பக்கம்-41


"கோபால் வெங்காயத்துக்குத் தண்ணீ காணும். தக்காளிக்குத் திருப்பி விடு“ மகாதேவனின் இடையீட்டால் இளங்கோவின் பாடல் தடைப்படவில்லை.

"மச்சான், மேலை அவன் பாடுறான். இஞ்ச வயிறு தாளம் போடுது" கோபால் தந்திரமாகத் தன் பசியைத் தெரிவித்தான்.

இளங்கோ தன் பாட்டை இடையில் நிறுத்தி ´ரிகார்ட்டை´ மாற்றினான்.

"பசியாலே வாடும் ஏழை முகத்தைப் பார்ப்போரில்லையா" அடுக்களையில் வெண்கலப் பாத்திரத்தின் ஓசையுடன் செல்லத்தின் கிண்கிணிச் சிரிப்பொலி கேட்கிறது.

"அம்மா, பாட்டு கேட்டுதே? கஞ்சியைக் கொண்டு போ" செல்லம் தாயைப் பார்த்துச் சிரித்தாள்.

"பாரடி, அவங்களிண்டை பாட்டை" மீனாட்சி புன்சிரிப்போடு கஞ்சிக் கலயத்தைத் தூக்கினாள். பச்சைப் பசேலென்ற வெங்காயத் தோட்டமும், அதில் பாய்ந்து செல்லும் தண்ணீரும் அவள் உள்ளத்தைக் குளிரச் செய்கின்றன. ஒருபுறம் பழுத்துத் தொங்கும் தக்காளிப் பழங்களும், கத்தரிக்காய்களும் அவள் மகனின் உழைப்புக்கு நன்றி செலுத்துகின்றன.

"இளங்கோ, இறங்கு போதுமடா. கஞ்சியும் வந்திட்டுது" மகாதேவன் சொல்லியவாறு கிணற்றுக் கயிற்றை விட்டு கோபாலை நோக்கி நடந்தான். "போடா மண்வெட்டியைத் தந்திட்டுப் போய் முகத்தைக் கழுவு"

"மாமி, கஞ்சியை ஊத்துங்கோ. வந்திட்டன்" கோபால் நொண்டி, நொண்டி கிணற்றடியை நோக்கி நடந்தான். இல்லை ஓடினான். மகாதேவன் வாய்க்கால்களைச் சரிப்படுத்தினான்.பக்கம்-42


"தம்பிமாரே, வாங்கோ. கஞ்சி ஆறப் போகுது" மீனாட்சி நின்றவாறு குரல் கொடுத்தாள்.

தோட்டம் அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்தது. அடுக்களையிலிருந்த செல்லத்துக்கு அங்கு நடப்பதெல்hலம் நன்கு தெரியும். திருவிழா நிகழ்ச்சியின் பின் அவள் இதயம் புதுக் கோலங் கொண்டது: எண்ணங்கள் ஏனோ இங்கோவையே வட்டமிட்டன. அவனைப் பற்றிய அவளது கள்ளத் தனமான எண்ணங்களினால் அவள் உள்ளத்திலே ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று. அடிக்கடி தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். தலையை வாரிக் கொள்வாள்: உடைகளையும் மாற்றிக் கொள்வாள். அவன் விழிகள் தன்மீது பட வேண்டுமென ஏங்குவாள். ஏதோ நினைத்துப் புன்னகை புரிவாள்.

"உனக்கு ஏன் அவனிலை இவ்வளவு பரிவு? தேவியின் கேள்வி, அவள் காதுகளில் ரீங்காரம் செய்யும். அவள் ´கிளுக்´கெனச் சிரிப்பாள்.
அது... அது... அததான்... அந்த உறவுக்குப் பெயரை அவள் இதயம் தேடும். ´காதல்´ என மனதுக்குள் சொல்வாள். வேறு யாருக்கும் கேட்டு விட்டதோ என்று பயத்துடன் அங்குமிங்கும் பார்த்துக் கொள்வாள்.

"பாருங்கோ மாமி, நான் இரண்டு கோப்பை குடிக்க இல்லை. இளங்கோ நாலாவது கோப்பைக்கு நீட்டினான். டேய் போதுமடா"

"கோபாலண்ணன் எப்பவும் பகிடிதான். பாவம் அதுக்குப் பசியாக்கும். அதின்ரை கோப்பை சின்னன்தானே. நல்லாக் களைச்சுப் போச்சு. செல்லம் தன்னோடு பேசிக் கொண்டாள். அவள் விழிகள் அடுக்களை யன்னலினூடே இளங்கோவை விழுங்கிக் கொண்டிருந்தன.

பக்கம்-43குடியுங்கோடா, பெடியள், நல்லாக் குடியுங்கோ. களைச்சுப் போனியள். பசிக்காதே?" மீனாட்சி சொல்லியவாறு கோப்பைகளில் கஞ்சிலை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மூன்று நண்பர்களும் அவள் முன்னாலிருந்து கஞ்சியைப் பருகினர்.

"எண்டாலும் மாமி, உங்கடை கை பட்டால் கஞ்சி ஒரு தனிச் சுவைதான்."

"ஏனடா கோபால் வேண்டியளவு கஞ்சி இருக்கிதே, பிறகு ஏன் அம்மாவுக்கு ஐஸ் வைக்கிறாய்?" மகாதேவன் கேட்டான்.

"பார்த்தீங்களே மாமி, ஒரு சொல்லு உங்களைப் பற்றி நல்லாச் சொல்ல விட மாட்டான்"

கோபால் கஞ்சிக் கோப்பையை நீட்டினான்.

"ஓமடா மேனை, உவனுக்கு என்ன தெரியும்? அப்ப அவர் இருக்கைக்க என்ரை கஞ்சியெண்டால் போதும். மனுசன் சோறும் சாப்பிடாது. அவ்வளவு ஆசை"

"அம்மான்ரை சோறு அவ்வளவு திறம். அதுதான்" மகாதேவன் சொன்னான்.

"ஊத்துங்கோ மாமி" கோபால், மகாதேவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.

"இளங்கோ, என்னடா வெட்கப் படுகிறாய்? இந்தா பிடி" மீனாட்சி கஞ்சியை ஊற்றினாள். கஞ்சியைப் பருகும் நிலையில் அவனில்லை. அவன் கண்களோ யன்னலினூடே நடமாடும் இளவஞ்சியின் அழகைப் பருகின.

´அது பார்க்குது´ அவள் விழிகள் படபடத்தன. முகமோ மேலும் சிவந்தது. அவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். ´பாரடி, பாரடி´ என்றது ஓர் உள்ளம். ம்.... ஹ_ம் ´அது பார்க்குது´ என்றது மறு உள்ளம்.பக்கம்-44


ஆசையும் நாணமும் போட்டியிட்டன. இறுதியில் இரண்டுக்குமே பாதித் தோல்விதான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள். ´குபு குபு´ வென கறி கொதித்து அடுப்பை அணைத்தது. அவன் தன்னிலை அடைந்தாள். நேரம் நகர்ந்தது. மாலையில் கூடுவதாகக் கூறி நண்பர்கள் பிரிந்தனர்.

சுருண்ட தன் கேசத்தைச் சீப்பின் பின்பக்கத்தால் அழுத்தி மேலும் அழகு படுத்தினான் இளங்கோ. வெடித்திருந்த சிறிய கண்ணாடியில் அவனுருவம் இரண்டாகத் தெரிந்தது. அவனிதழ்கள் காலையில் பாடிய பாடலை அசை போட்டுக் கொண்டிருந்தன. மறைந்து கொண்டிருந்த கதிரவனின் ஒளி மங்கிய செந்நிறத்தை எங்கும் பரப்பியது. "தியேட்டர்கார கணபதிப்பிள்ளையாரோட கதைச்சனான். உன்னை வந்து தன்னைக் காணட்டுமாம். சொல்லுறது கேட்டிதே" தங்கம் மாட்டுக்கு நுங்கைச் சீவியவாறு மகனுக்குக் கதையைச் சொன்னாள். "அவருக்கும் என்னாலே ஒரு அலுவல் நடக்க வேண்டுமாம். சொன்னவர். மனுசன், என்றுதான் சொல்லவில்லை. நீ போய் அவரைப் பார்க்கிறியே?"

"ஓம்... ஓம் படத்துக்குத்தானே போறம். தியேட்டரிலே அவரோட கதைக்கிறன். தேத்தண்ணி இல்லையே?" இளங்கோ கேட்டான்.

கொஞ்சம் பொறடா மேனை. தண்ணி கொதிக்க இல்லை." "எனக்கு நேரஞ் சென்று போச்சு" இனங்கோ புறப்பட்டான். வெள்ளை வேட்டியும், தவிட்டு நிறச் சேர்ட்டும் அவனை அழகு படுத்தின.

"அட இதைக் குடிச்சிட்டுப் போவனடா"

எல்லாத்துக்கும் பிறகு வாரன்.

"தம்பி டேய், பெரிய மனுசர் கொஞ்சம் கவனமாகக் கதையடா. எல்லாம் பிள்ளையார் செய்வார்."பக்கம்-45

"சரி சரி நான் வாரன்"

இளங்கோ மகாதேவனது வீட்டை நோக்கி நடந்தான். அடுத்த வீடுதான் ஆனாலும் இரு வீட்டிற்கும் இடையில் பல பனைமரங்கள் இருந்தன. இனம் தெரியாத ஓர் இன்ப உணர்ச்சி அவன் இதயத்தில் பரவியது. புதியதொரு நற்கருத்தைப் படிப்பது போன்ற ஓர் உணர்ச்சியது. ´செல்லம்´ புத்தம் புதியதொரு கவதைதான். அவன் இதயவீணையில் அந்த இன்பக் கவிதை இசையாகப் பிறந்து எங்கோ அவனை அழைத்துச் சென்றது.

´சட சட´ வென வேலியைப் பிரித்துக் கொண்டு துள்ளி விழுந்தது ஓர் ஆட்டுக்குட்டி. இளங்கோ ஆட்டுக்குட்டியை நோக்கினான். வேலிக்கு அப்பால் தன் விழிகளைத் திருப்பினான். கைகளை உதறியவாறு நின்றாள் செல்லம். ´பட பட´ வென அவள் விழிகள் துடித்தன. முத்தான அவள் மேல்வாய்ப் பற்கள், கீழ் அதரத்தைக் கடித்தன. இயற்கையிலேயே சிவந்த அவள் இதழ்கள் இரத்தம் சிந்தும் நிலையில் இருந்தன. மலரைச் சுற்றும் வண்டென அவன் விழிகள் அவளது அழகு முகத்தைச் சுற்றின. அவள் ஒரு பனையை அணைத்தபடி பைங்கொடியென நின்றாள். பச்சைக் கொடியல்ல அது பவளக்கொடி. சில கணங்கள்தான் கண்கள் பேசின. ஆனால் பலயுகங்கள் பேச வேண்டியதைப் பேசின.

செல்லம் ஏதோ சொல்லத் துடித்தாள். ம்.... வாதம் முடியவேயில்லை. கையை நீட்டி ஆட்டுக்குட்டியைக் காட்டினாள். இளங்கோவிற்கு உணர்வு வந்தது. துள்ளும் ஆட்டுக்குட்டியை மார்போடு அணைத்துத் தூக்கினான். வேலிக்கு அருகில் அவள் வந்தாள். ஆட்டுக்குட்டியை அவள் கரங்களில் கொடுத்தான். அவனது இதயத்தை...? குட்டியை அணைத்தபடி அவளஇ ஓடினாள். ஆனால் அவள் உள்ளம்...?பக்கம்-46

"செல்லம்" துணிந்து அவன் அழைத்தான். ஓடிய கால்கள் நின்றன. அவளிதயம் ´பட பட´ வெனத் துடிக்கிறது. யாராவது பார்த்தால்...? மெல்ல அவள் திரும்பினாள்.

"என்னாலே எல்லாருக்கும் கரைச்சல். கொம்மா உனக்கு அடிச்சும் போட்டாவாம்" இளங்கோ விக்கி, விக்கிச் சொன்னான். முதன்முறை மேடையில் பேசுபவனுக்குக் கூட அத்தனை தயக்கம் வராது.

´இல்லை´ என்பது போல் அவள் தலையை அசைத்தாள். குறுநகை ஒன்று அவள் இதழ்களில் நெளிந்தது. கன்னத்தில் தெரிந்த சிகப்பு செவ்வானத்தின் பிரதிபலிப்பா? இல்லை வானம்தான் அவள் சிவந்த வண்ணத்தைப் பிரதிபலிக்கிறதா? ´டக்´ கென ஒரு ஓசை. ´படக்´ கென்றன இதயங்கள் இரண்டு. இரண்டா? விளாமரத்திலிருந்து விழுந்த பழமொன்று அவள் காலடியில் உருண்டது. அவள் அதை எடுத்தாள். அவனை நோக்கி எறிந்தாள். அவன் இரு கரங்களாலும் ஏந்திக் கொண்டான். புன்னகை சிரிப்பொலியாக மாறியது. அவள் துள்ளி ஓடி மறைந்தாள். அவன் கரங்களில் அந்தப் பழமிருந்தது.

"டேய் கெதியாக வாவனடா, நேரமாச்சுது இல்லே" ஏதுமறியாத மகாதேவன் படலையருகிலிருந்து கத்தினான். இளங்கோ அவனை நோக்கி விரைந்தான். "சைக்கிளுக்கு காத்து காணுமே?" இளங்கோ சைக்கிள் டயரை அழுத்தியபடி கேட்டான்.

"அது காணுமடாப்பா. எங்கே உவன் கோபால்?"

"நான் ரெடி. வாங்கோவனடாப்பா" கோபால் தங்களது வீட்டுப் படலையில் இருந்து கத்தினான்.

"நாங்கள் படத்துக்குப் போறம். செல்லம் அம்மாட்டைச் சொல்லு" மகாதேவன் சொல்லியவாறு சைக்கிளை கோபாலை நோக்கி உருட்டினான். இளங்கோ பின் தொடர்ந்தான்.


பக்கம்-47

அவர்களது ´அரசடி´ கிரமாத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது அவர்கள் படம் பார்க்கச் செல்லும் தியேட்டர். மாதம் ஒரு முறையோ இரு முறையோ படம் பார்க்க அக்கிராமத்து வாலிபர்கள் தவறுவதில்லை. பயிர்கள் நன்கு பலன் கொடுக்கும் நாட்களில் வாரம் ஒரு படம் கூடப் பார்ப்பார்கள். சைக்கிள் முன்பக்கத்தில்(பாரில்) கோபால் இருந்தான். பின்பக்க ´கரியரில்´ இளங்கோ இருக்க மகாதேவன் வெகுவேகமாக சயிக்கிளைச் செலுத்தினான். கோபாலின் வேடிக்கைப் பேச்சில் சிரித்து மகிழ்ந்தவாறு அவர்கள் சென்றனர். தியேட்டர் நெருங்கினதும் இளங்கோ குதித்தோடிச் சென்று ´கலரி´ கியூவில் நின்றான். கோபால் இறங்கி வேடிக்கை பார்த்தான். மகாதேவனோ சயிக்கிளைப் ´பார்க்´ பண்ணுவதற்குச் சென்றான். கோபால் கரிய மெல்லிய உருவம் கொண்டவன். ஆனால் கண்களோ மிகுந்த ஒளி வீசுபவை. அங்குமிங்கும் ஓடிய அவன் விழிகள், ஓர் அழகு மங்கையிடம் அடைக்கலம் கொண்டன.

அரைப்பாவாடை, அழகாக வாரிய கேசம், காதில் இரண்டு பெரிய வளையங்கள், அதனோரத்தில் சுருண்டு தொங்கும் மயிரிழைகள், அதுவரை நீண்டிருக்கும் அழகிய கண்கள். கோபால் அவளையே பார்த்தவாறு நின்றான். "என்ன மச்சான் கணபதியரின்ரை மகளைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறாய்?" மகாதேவன் தோளில் தட்டிக் கேட்டான். "கணபதிப்பிளையரின்ரை தியேட்டரிலே ஓடுற படம் பார்க்கத்தான் டிக்கட் எடுக்க வேணும். வாசலிலே நடமாடும் இவளைப் பார்க்கிறதுக்கு..."

"டேய் கொஞ்சம் பண்பாடு வேணுமடா. அக்கா, தங்கையளோட பிறந்தநாங்கள் எங்கள் பார்வையிலாவது கொஞ்சம் பண்டு வேணுமடா"

"அழகு இரசிக்கத்தானே மச்சான்"


பக்கம்-48


"மலரை இரசிக்கிற மாதிரி ரசியடா, சுவைக்கிற மாதிரியில்லை" "மதுவுக்காகத்தானேடா வண்டு மலரைச் சுத்துது"

"வண்டு எல்லா மலரையும் சுத்தும். நாங்களும் அப்படிச் செய்தால்..."

"என்ரை கண் அந்த மலரை மாந்திரந்தானேடா நாடுது"

"கோபால், நீ கொம்புத்தேனுக்கு ஆசைப் படலாமேடா?"

கோபால் சிரித்தான்.

"மச்சான், எல்லாரும் மனம் புண்படக்கே அழுவீனம். நீ சிரிக்கிறாய். உள்ளத்திலே நீ அழுகிறதை உலகுக்கு மறைக்கலாம். ஆனால் உயிர் நண்பனுக்கு நீ மறைக்க முடியாதடா"

கோபால் பலமாகச் சிரித்தான்.

"உன் கற்பனை அருமையடா. எதுக்ககாக நான் அழ வேணும்?"

"என் நாவாலேயே உன்னை நான் சுட்டதற்காக. மச்சான், வேதனையாக இருந்தாலும் இந்த ஆசையை உன் இதயத்தில் இருந்து முளையிலே கிள்ளி விட நான் விரும்புகிறேன். அடைய முடியாத ஆசைகள் உன் இதயத்தையே பிரித்துக் கொண்டு விருட்சமாகி விடக்கூடாது பார்.."

"எது எப்பிடியோ, ஒன்றை நீ சரியாகப் பிடிச்சிட்டாய்" மகாதேவா, உணர்ச்சிகள் சாதாரணமான மனிதனை விட குறைகள் நிறைந்த மனிதனிடந்தான் அதிகம். என்ரை உடல்தானடா ஊனம். ஆனால் உள்ளம் உயரத்திலேதான் எப்பவும் தாவும். அது அவளிடம் தானே தாவிட்டுது." அவன் அவளைச் சுட்டிக் காட்டினான். தியேட்டர் வாசலில் நின்ற அவளும் திரும்பிப் பார்த்தாள். அவன்


பக்கம்-49

வேடிக்கையாக ஆந்தை போல தன் விழிகளை உருட்டினான். அவள் அவனது குறும்பைப்பார்த்துச் சிரித்தாள். போலனின் முகத்தில் வெற்றிப் புன்னகை படர்ந்தது.

"தோழரே, பார்த்தீரா, என் சிந்தை தனைக் கொள்ளை கொண்ட சிங்காரப் பைங்கிளியின் சிரிப்பழகை?" கோபால் ராஜபாட் நடிகனைப் போல் பேசினான்.

"டிக்கட் எடுத்தாச்சு வாங்கோ" இளங்கோ அழைத்தான்.

"ஒன்று அங்கொடைக்கே" மகாதேவன் கேட்டான். ஆனால் படம் முடிந்து அவர்கள் வெளியெ வந்த போது மகாதேவனுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தியேட்டர் ஊழியன் ஒருவன் வந்து கோபாலைக் சுட்டிக் காட்டி முதலாளி அழைப்பதாகக் கூறினான். கோபாலின் குறும்ப வம்மை விலைக்கு வாங்கி விட்டதோ என்று அவன் நினைத்தான். கோபாலோ சிரித்தவாறு ஊழியனைப் பின் தொடர்ந்தான். முதலாளியின் அறையை அவன் நெருங்கிய போது அவனது இதயத்தரசியின் இனிய குரல்தான் அவனை வரவேற்றது.

"அப்பா பசிக்குது வாங்கோவன் வீட்டை போவம்"

"பொறு அமுதா. ஒரு சின்ன வேலை. முடிச்சிட்டுப் போவம். கணபதிப்பிள்ளையர் மகளை அமைதிப் படுத்தினார். ஐம்பதை அவர் நெருங்கிக் கொண்டிருந்தாலும், அவரைப் பார்ப்பவர்கள் வயதைக் குறைத்தே மதிப்பார்கள். அழகான ´பிரேம்´ போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். தேசிய உடையில் அவர் தோற்றம் அவரது பெரிய உருவத்தை அழகாகக் காட்டியது.

"வா தம்பி உள்ளே, ஏதோ வேலை கேட்டியாம்" கணபதிப்பிள்ளையா அப்படி அழைத்த போது, கோபால், யாருடைய கண்பார்வை படாவிட்டாலும் அதிர்ஷ்ட தேவதையின் ஓர் விழி தன் மீது விழுவதை உணர்ந்தான்.


பக்கம்-50


"ஓம் பாருங்கோ. கால் கொஞ்சம் ஏலாதுதான். என்றாலும் ஏதாவது செய்வன். உங்களுக்கு ஆர் சொன்னது, எனக்கு வேலை வேணுமென்று?"

"கொம்மாதான்."

கோபால் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அதிர்ஷ்ட தேவதையாவது தன்னைப் பார்ப்பதாவது. இந்த அழகு தேவதையாவது கொஞ்சம் சிரிக்கட்டுமென நினைத்தான். இளங்கோ நிற்க வேண்டிய இடத்தில் தான் நிற்பது அவனுக்குப் புரிந்தது.

"அம்மாவோ சொன்னவ? வயர்லசிலேயே கதைச்சனீங்கள்? கோபால் கேட்டு விட்டு தலையைச் சொறிந்தவாறு அவளைப் பார்த்தான். அவள் ´கிளுக்´ கெனச் சிரித்தாள்.

அவனது மெலிந்த தோற்றமும், அசட்டுச் சிரிப்பும் கணபதிப்பிள்ளையரையும் மனதுக்குள் சிரிக்க வைத்தாலும் அதை மறைத்தவாறே அவர் சிறிது கடுமையாகக் கேட்டார் "என்ன சொல்லுறாய்?"

"கோவியாதேங்கோ ஐயா, எங்கடையம்மா மேலே போய் கனகாலம்"

"அப்ப... நீ...?"

"நான் தங்கத்தின்ரை மகனில்லை. அவன் வெளியிலே நிற்கிறான்" ஓகோ... அவனை வரச் சொல்லு"

"அப்ப எனக்கு வேலை...? கோபால் நீட்டினான்.

"ஓய் வாரவனுக்கெல்லாம் வேலை குடுக்கவே தியேட்டர் வைச்சிருக்கிறம். போங்காணும் வெளியிலே"
கணபதிப்பிள்ளையர் சத்தமிட்டார்.

"முதலாளி கோவியாதையிங்கோ. வேலை தராமலே சீட்டைக் கிழிக்காமல், வாசலிலே சீட்டுக் கிழிக்கிற வேலையென்றாலும் தாங்கோ."
கோபால் முதலாளியைக் கேட்டானா? இல்லை அமுதாவைக் கேட்டானா? திடீரென கணபதிப்பிள்ளையின் குரல் மாறியது.பக்கம்-51

"நீ அரசடியே?"

"ஓம், ஓம் நாங்களெல்லாரும் ஒரு ஊர்தான். நீங்கள் பட்டணம் வந்திட்டியள். தியேட்டர் நல்ல தியேட்டர். சோக்கான படம்." அவன் ஏதேதோ சொன்னான். ´அமுதா´ அவன் நெஞ்சை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். "உனக்கு தேவியவை சொந்தமே?"

கணபதிப்பிள்ளையரின் கேள்வி கோபலைத் திகைக்க வைக்கவில்லை. டியூசன் டீச்சர் தேவியக்கா பிரசித்தமானவள்தான். "அவள் எனக்கு அக்கா"

"நீ அவவின்ரை தம்பியே!" கணபதிப்பிள்ளையர் ஆச்சரியத்தோடு கேட்டார்.

"அவ அக்கா என்றால், நான் தம்பிதானே"
துணிவோடு அவன் அளித்த பதில் அமுதாவை மீண்டும் நகைக்க வைத்தது.

"இளங்கோ இஞ்ச வா. உன்னைத்தான் தேடுகினம்" வாசலில் காத்திருந்த இளங்கோவை கோபால் கூப்பிட்டான்.

"இவன்தான் தங்கத்தின்ரை மோன்" கோபால் அறிமுகப் படுத்தினான்.

"கொம்மா உன்னைப் பற்றிச் சொன்னவ. வேலை இல்லாமல் பெடியள் படுகிறபாடு உனக்குத் தெரியுந்தானே? வேலை தந்தால் ஒழுங்காகச் செய்வியே?" கணபதிப்பிள்ளையர் இளங்கோவைக் கேட்டார். இளங்கோ தலையசைத்தான்.

"இப்ப உனக்கு டிக்கட் கிழிக்கிற வேலைதான். ஓழுங்காக இருந்தால் பிறகு பார்த்துச் செய்வன். கசம்பள விசயம் முதல் மாத வேலையைப் பார்த்துத்தான் தருவன். சரியே!"

"ஓம்" இளங்கோ தலையையும் அசைத்தான்.

"மனேஜரோட நாளைக்கு வந்து கதை. எத்தனை மணிக்கு வரவேண்டும் என்றெல்லாம் அவர் சொல்லுவார். கவனமாக அவர் சொல்லுற படியெல்லாம் நடக்க வேணும்"


பக்கம்-52


"சரி"

"அப்ப போயிட்டு நாளைக்கு வா"

இளங்கோ நடந்தான்.

"அப்ப நான்... கோபால் இழுத்தான்.

"ஓ... உனக்கு..." கணபதிப்பிள்ளையர் அவனை உற்று நோக்கினார். "எதுக்கும் நீ நாளைக்கு எங்கடை வீட்டை வா. நான் சொல்லுறன்" கோபாலும் விடை பெற்றுக் கொண்டான். விருப்பமின்றித்தான்.

வீடு நோக்கி நண்பர்கள் சென்றனர். வழியெல்லாம் கோபால் அமுதாவின் அழகைப் பற்றியே பேசினான். மகாதேவன் மனமோ தோட்டத்திலிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவன் தோட்டத்தில் சில தக்காளிப் பழங்கள் களவாடப் பட்டிருந்தன. யாராக இருக்கும்? மணியனும் அவன்ரை ஆட்களுமோ? மகாதேவனின் கேள்விக்கு அன்றிரவு பதில் கிடைத்தது. ஆனால் பதிலோ அவனை அதிர்ச்சியடையச் செய்தது. தங்கையின் கையால் சோறு வாங்கிச் சாப்பிட்டு, வெளியே சிறிது உலாவ அவன் வந்த பொழுது இரவு பதினொரு மணி இருக்கும்.

6

பக்கம் 53

மையிருட்டு எங்கும் பரவியிருந்த வேளை மகாதேவனின் மனமோ இருட்டில் இல்லை. உலகம் இருளில் இருந்தாலும் அவனிதயத்தில் ஒளியிருந்தது. தன்னம்பிக்கை, தளராத உழைப்பு இவையிரண்டும் அவனிதயத்தை என்றுமே இருளில் விடவில்லை. ´மிளகாய்க்கு´ நாளை மருந்தடிக்க வேண்டுமென்று எண்ணியவாறு மெதுவாக அங்கும் இங்கும் உலாவினான். "சர சர" வென ஒரு சத்தம் கேட்டது. அவன் காதுகள் கூர்மையாகின. யாரோ வேலியைப் பிரிப்பது போன்ற ஓசை. மகாதேவன் கூரையில் செருகியிருந்த ´டார்ச்சைக்´ கையிலெடுத்தான். மறு கையில் நீண்ட கம்பொன்றை எடுத்தான். மெதுவாகத் தோட்டத்தை நோக்கி நடந்தான். அந்த இருட்டிலும் வெகுவேகமாக ஓர் உருவம் தோட்டத்தில் நடப்பது அவனுக்குத் தெரிந்தது. அவனும் பதுங்கிப் பதுங்கி அதை நெருங்கினான்.

"யாரது?" கையிலிருந்த டார்ச்சை அழுத்தினான்.

ஆனால் என்ன கோளாறோ அது ஒளி தரவில்லை. அதற்குள் உருவம் ஓட ஆரம்பித்தது. மகாதேவன் பின்னால் துரத்தினான். சில வினாடிகள் இருவரும் ஓடினர். ஆனால் இருவருக்கும் இடைவெளி குறுகியது. மகாதேவன் எட்டிப் பிடித்திருப்பான். அதற்குள் வாழைக்கு வெட்டி வைத்திருந்த குழியொன்றில் உருவம் விழுந்தது. மகாதேவன் தன் கையிலிருந்த கம்பத்தால் ஓங்கியடித்தான். "ஆ... அம்மா" என்று உருவம் முனகியது.


பக்கம் 54

மகாதேவனின் உடல் புல்லரித்தது. காரணம் அது ஒரு பெண்குரல். மகாதேவன் செய்வதறியாது ஒரு கணம் திகைத்தான். அவன் பலமாக அடித்திருந்தான். தன்னை ஒருவாறு சமாதானப் படுத்திக் கொண்டு அவன் "யாரது?" என்று அதட்டினான்.

பேச்சு வரவில்லை. கருமுகில்கள் மெல்ல, மெல்ல விலகின. பிறைநிலா சிறிது ஒளி கொடுத்தது. மகாதேவன் குழியருகில் குனிந்து பார்த்தான். ´அடி எக்கச் சக்கமாக எங்கேயும் பட்டிட்டுதோ?´ அவன் மனது பதை பதைத்தது.

"அடிச்சுக் கொன்று போடுவன். ஆரது?"

அவன் மீண்டும் கேட்டான், பதிலில்லை. அவன் சந்தேகம் வலுத்தது. அவன் கையால் குழியைத் தடவினான். அவன் கையில் நடுங்கும் ஒரு கரம் சிக்கியது. ஆ... அம்மா, அவள் அழ ஆரம்பித்தாள். நிலவின் ஒளியில் அவளை அவன் பார்த்தான். அவனால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. கையிலிருந்த டார்ச்சும், தடியும் கீழே விழுந்தன. பாம்பைத் தொட்டது போல் அவளைப் பற்றியிருந்த தன் கரத்தை இழுத்துக் கொண்டான். "சீ... இப்படிக் களவெடுக்க உனக்கு வெட்கமாக இல்லையே" வெறுப்போடு அவன் கேட்டான். அவள் விம்பினாள். "தேவி, நீ கோபாலிட்டைச் சொல்லியிருந்தான் உனக்குத் தேவையான அளவு தந்திருப்பனே!"

"அம்மா" அவள் அழுதாள். விக்கி, விக்கி அழுதாள். இருகரங்களாலும் முகத்தை மூடியவாறு அழுதாள். அவனுள்ளத்தை ஏதோ அரித்தது.

"இதுக்குள்ளேயே இருக்கப் போறியே, வெளியிலை ஏறி வா" அவன் குழியைக் காட்டிச் சொன்னான்.

அவள் நிலத்தில் கையை அழுத்தி எற முயன்றாள். இருட்டில் தெரியாது அவன் கால்களை அவள் கை அழுத்தியது. அவன்பக்கம் 55

கால்களில் ´பிசு பிசு´ வென ஏதோ ஒட்டியது. "கையிலே என்ன? ...ஆ ...இரத்தம். அவள் நெற்றியிலிருந்து இரத்தம் வடிந்தது. அவள் கண்களை மறைத்தது. அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்தாள்.

"தேவி"

அவள் நின்றாள். "டேய், ஒருத்தருக்கும் சொல்லாதேடா. கோபாலுக்குத் தெரிஞ்சால் என்னைக் கொன்று போடுவான்"

"தேவி" அவன் ஏதோ சொல்லத் துடித்தான்.

"உன்னைக் கேட்டால் நீ தருவாய்தானடா... எப்பவுமே கைநீட்டி வாங்கிறதை விட களவெடுக்கிறது கொஞ்சம் மானத்தைக் காக்குமென்று நினைச்சிட்டேனடா" அவள் விம்மினாள்.

"தேவி" அவனுள்ளம் ஏனோ வருந்தியது. "சரியாக இரத்தம் வருகுது"

இதயம் சிந்துகிற இரத்தம் யாருக்கும் தெரிய இல்லையே.

"மகாதேவா, டீச்சர் வேலைக்கு ஒரு சோதனையிருக்காம். அதுக்குக் கொஞ்சக் காசு கட்ட வேணும். சேர்த்த காசு போதாது. அதுதான்... உன்ரை உழைப்பைக் களவாடி அதை வித்து எனக்கொரு உழைப்பைத் தேடப் பார்த்தேன்."

"தேவி, கேட்டால் நாங்கள் தர மாட்டமே"

"எத்தனை தடவையடா கேட்கிறது? எந்த முகத்தோட கேட்கிறது. கொம்மாக்கு முப்பத்தாறு ரூபா இருபத்தெட்டுச் சதம் இன்னும் கடனாக இருக்கு. டேய், உன்னைக் கும்பிட்டன். ஆருக்கும் சொல்லிப் போடாதே"


பக்கம் 56

அவள் போய் விட்டாள். வேலிக்கு மறுபுறத்தில் இன்னொரு உருவமும் அசைந்தது.

அவன் தனியே நின்றான். எங்கும் இரவின் அமைதி. ஆழ்ந்த உறக்கத்தில் எல்லோரும் வீழ்ந்திருக்கும் நேரம். எத்தனை உள்ளங்கள் தூங்கும்? எத்தனை உள்ளங்கள் ஏங்கும்? அவனைத் தோளில் தூக்கி விளையாடிய தேவி! அவன் காதுகளைத் திருகி கணக்குச் சொல்லிக் கொடுத்த தேவி! அவனைக் குளிப்பாட்டியவள். பள்ளிக்கூடம் கூட்டிச் சென்றவள். அவளுக்குத் தோள் கொடுக்க யாருமில்லை.
அவள் கணக்கைச் செய்வதற்கு வழி கிடைக்கவில்லை. இன்று அவள் கண்ணீரில் குளிக்கிறாள். அவளுக்குப் பாதை காட்ட யாருமே இன்றி பரிதவிக்கிறாள். வயதில் அவர்களிடையே எட்டு ஆண்டுகள் பேதமிருந்தது. வாழ்வில்... மகாதேவன் இடிந்தவன் போலானான். அவன் கண்கள் என்றுமே இல்லாமல் ஏனோ அன்று கலங்கின. அவளோ என்றும் போல் அன்றும் அழுதாள். இல்லை, அன்று அதிகமாகவே அழுதாள்.

--------------------------------------


"இந்தச் சேர்ட்டையில்லே தைச்சு வைக்கச் சொன்னனான். அம்மா, உவள் செல்லம் எங்கே? அவளுக்கு வர வர விளையாட்டுக் கூடிப் போச்சு. சேர்ட்டு கிழிஞ்சு ஒரு கிழமையாகுது. அதைத் தைச்சு வைக்க அவவுக்கு நேரமில்லை" மகாதேவன் அடுத்தநாள் மாலை கோபத்தோடு சத்தமிட்டான். மா அரித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. செல்லம் மா இடித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி, கொண்ணன் இன்றைக்கு ஒரு மாதிரி நிற்கிறான்?" மெதுவாக செல்லத்திடம் தாய் கேட்டாள்.

"ஓமம்மா, படம் பார்த்திட்டு வரேக்க நல்லா இருந்தவர், காலையிலே இருந்து ஒரு மாதிரித்தான்" செல்லம் நெற்றியின் முன்னே விழுந்த தலைமயிரை விலக்கி விட்டு, தொடர்ந்து மா இடித்தாள்.பக்கம் 57

"நான் கேட்கிறது ஒருத்தருக்கும் கேட்க இல்லையோ?" அவன் மீண்டும் கத்தினான்.

"ஏனடா சத்தம் போடுகிறாய்? அவளில்லே மா இடிக்கிறாள்." தாய் சொன்னாள். அவன் சேர்ட்டையும் தூக்கிக் கொண்டு அவர்கள் முன்னே வந்தான்.

"நீங்களும் இப்ப பெரிய உத்தியோகம். இதெல்லாம் தைக்க உங்களுக்கு நேரமிருக்காது" அவன் பெரிதாகச் சத்தமிட்டான்.

"நூல் வாங்கித் தரச் சொல்லி எப்ப சொன்னனான்? நீ வாங்கித் தந்தால்தானே தைக்கிறதுக்கு" செல்லம் சொல்லியவாறே தொடர்ந்து இடித்தாள். மாவைத்தான் அவன் மனதையல்ல.

"பொத்தடி வாய் ஒருக்கால் சொன்னால் போதுமே, நீ சொன்ன உடனே நாங்கள் போய் வாங்கி வரவேணும்."

"அவர் சொன்ன உடனே நாங்கள் தைக்க வேணும்" அவள் முணுமுணுத்தாள்.

"என்னடியங்க முணுமுணுக்கிறாய்?"

சேர்ட் அவள் முகத்தில் வந்து விழுந்தது. செல்லம் சிணுங்க ஆரம்பித்தாள்.

"எனக்குத் தெரியாது நீ மாவை இடி." அவள் சேர்ட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள்.

"ஐயோ மோனை, மோனை பார்த்தியேடா உன்ரை வேலையை. அவள் போய்ப் படுத்தாளோ...? அட சண்டை பிடிக்கிற நீ, மா இடிச்சாப் போல போடக் கூடாதோ?"

மீனாட்சி அங்கலாய்த்தாள். தங்கையின் வேலை நிறுத்தத்தின் விளைவு அவனுக்குப் புரிந்தது. தானே மா இடிக்க வேண்டி வரும் என்பதை நினைத்ததும் தலையை என்னமோ செய்தது.

"அம்மா, நூலை வாங்கித் தரச் சொல்லு"


பக்கம் 58

அண்ணனின் நேரடித் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

"சேர்ட் இப்ப தேவையில்லை வந்து மா இடிக்கச் சொல்லு" மகாதேவனும் தாயிடந்தான் சொன்னான்.

"சேர்ட் தைச்சாப் போலதான் மா இடிப்பேனென்று சொல்லு" அவள் பதில் கொடுத்தாள்.

"அட உங்கடை சண்டையைக் குப்பையிலே போடுங்கோடா. எனக்கில்லே கோயிலுக்கு நேரமாச்சு. எடி செல்லம், கொண்ணனுக்கு தேத்தண்ணி குடுத்தனீயே?"

"அதெல்லாம் குடிச்சுப் போட்டுத்தானே கத்திது."

"எப்பயடி தேத்தண்ணி தந்தனீ?"

அவன் கேட்டான். அவள் சேர்ட்டோடு ´விடு விடு´ என வெளியே வந்தாள்.

"இரண்டு கோப்பை தேத்தண்ணியும், இரண்டு எள்ளுருண்டையும் சாப்பிட்டுப் போட்டு இப்ப சொல்லுற பொய்யைப் பார்."

"உங்களை யாரடி எள்ளுருண்டை எடுக்கச் சொன்னது?" செல்லம் விரலைக் கடித்தாள். மகாதேவன் "மோடு மோடு" என்று முணுமுணுத்தான்.

"காலையிலை இல்லே ஒவ்வொண்டு தந்தனான். எல்லாத்தையும் ஒரே நாளிலை முடிச்சுப் போட வேணும்"

தாய் தன் பல்லவியைத் தொடங்கினாள்.

"இவளும் சாப்பிட்டவள்"

தாயின் தண்டனையிலும் தங்கைக்குப் பங்கு கொடுக்க அவன் நினைத்தான்.

"நீதானே கூடச் சாப்பிடனீ"


பக்கம் 59


கூடிய பங்கை அவனுக்குக் கொடுக்க அவள் முயன்றாள்.

"வாடி நீ வந்து மாவை இடி. போடா தேவியிட்ட கொடுத்து சேர்ட்டை தை. போவனடா."

தாய் சீறினாள். தங்கை சேர்ட்டை அவனிடம் கொடுத்து ஓடி வந்து உலக்கையை எடுத்தாள். அவன் தேவி வீடு நோக்கி நடந்தான். பக்கத்து வீடுதானே.

"அன்பின் வழியது உயிர் நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு"

"அதாவது அன்பின் வழியில் இயங்கும் உடம்புதான் உயிருள்ள உடம்பு. அன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெறும் உடலே."

மகாதேவன் தேவியின் வீட்டை நெருங்கிய பொழுது அவளஇ பிள்ளைகளுக்கு அன்புடைமை படிப்பித்துக் கொண்டு இருந்தாள். அவன் சிறிது நின்று கவனித்தான். அவனும் படிக்க வேண்டிய பாடந்தான். தேவி தலையில் பெரிய கட்டொன்று போட்டிருந்தாள். அவள் முகம் வெளிறி, வாடிப் போய் இருந்தது.

"தேவி" அவன் அழைத்தான். மின்சாரத் தடையால் திடீரென வானொலி நிற்குமே, அது போல் அவள் குரல் நின்றது. அவளள் அவனைப் பார்க்க முடியாது தலை குனிந்தாள்: அவள் மீண்டும் நிமிர்ந்த போது அவள் விழியோரங்கள் நீரால் நிறைந்திருந்தன. மகாதேவன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.

"சேர்ட் தைக்க..."

அவன் குரல் அடைத்தது. இதற்குள் வானொலியில் பல நிலையங்கள் ஓரே நேரத்தில் வேலை செய்வது போல படிக்க வந்த பிள்ளைகள் சத்தமிட ஆரம்பித்தார்கள்.


பக்கம் 60

"பிள்ளைகளே, திருக்குறளைப் பாடமாக்குங்கோ. இந்த மாமாக்கு இதைத் தைச்சுக் குடுத்திட்டு வாறன்."

தேவி வீட்டின் மறுபுறம் போனாள். மகாதேவன் பின் தொடர்ந்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவள் தனது கை மெசினால் சேர்ட்டைத் தைக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் தையல் ஊசி சேர்ட்டைத் தொடும் போது அது அவனிதயத்தைத் துளைப்பது போலிருந்தது. அவள் சேர்ட்டைத் தைத்து அவனிடம் நீட்டினாள்.

"தேவி"

அவள் தலை குனிந்தே இருந்தது.

"காயம் பலமா?" பதிலில்லை.

"நீயென்று தெரிஞ்சிருந்தால் அடிச்சிருக்க மாட்டன்."

அவள் பேசவில்லை.

"தேவி, என்னோட பேச மாட்டியா?"

அவன் கண்கள் கலங்கியவாறே கேட்டான்.

"தேவா" மடைதிறந்த வெள்ளம் போல் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. மகாதேவனின் கண்களும் நீரைக் கொட்டின. ஏன்? வெளியே பிள்ளைகள் சத்தமிட்டுப் படித்தனர்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"

சில கணங்கள் கண்ணீரில் மறைந்தன. அவன் சேர்ட்டால் தன் கண்ணீரைத் துடைத்தான்.

"தேவி, அழாதே. டீச்சர் வேலைக்கு அப்ளை பண்ணினனியே?" அவன் கேட்டான். அவள் இல்லையெனத் தலையசைத்தாள்.


பக்கம் 61

"இன்னும் எவ்வளவு காசு வேணும்?"

அவள் பேசவில்லை. அவனிரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை நீட்டினான்.

"இது போதுமா?"

"தேவா" அவள் விம்மினாள். "வேண்டாமடா"

"ஆராவது பார்த்தால்..."

"தேவி இது போதுமோ?" அவன் கேட்டான்.

"தேவா..." அவள் கரங்கள் நடுங்கின. அவன் அக்கரங்களைப் பற்றி, காசைத் திணித்தான். அவளுடலே இப்பொழுது நடுங்கியது. அவன் அவள் கரத்தை இறுகப் பற்றினான். அவன் கண்கள் அவளை அன்போடு பார்த்தன. அவள் அவன் விழிகளைப் பார்த்தாள். ஆயிரம் ஆடவர்கள் ஆசையோடு அவளைப் பார்த்திருக்கிறார்கள். அன்போடு பார்த்த முதல் ஆடவன் அவன்தான். தன் பெற்றோர்களை இழந்த பின்னர் முதலாவது முறையாகக் கருணை பொங்கும் அக் கண்களை அவள் கண்டாள். அந்த உணர்ச்சிப் பெருக்கு அவளை மெய் மறக்கச் செய்தது. மொழிப் பிரச்சனை அங்கு எழவில்லை. அவர்கள் வார்த்தைகளை அள்ளிக் கொட்டவில்லை. அவர்கள் கண்கள் பேசிய மொழி, இணைந்த கரங்கள், பேசிய மொழி அவை அவர்கள் இதயங்கள் பேசிய மொழி!

"தேவி அழாதே"

"இல்லைத் தேவா, ஒரு நெஞ்சின் வேதனையை இன்னொரு நெஞ்சு அறியும் போது, ஆறுதல் தரும் போது வரும் உணர்ச்சிப் பெருக்கு இது"

அவள் முந்தானையால் விழிகளைத் துடைத்தாள்.

"தேவா, தெய்வம் கூட...."பக்கம் 62

"தேவி, சே.... இதென்ன பேச்சு. போ. பிள்ளைகள் காத்திருக்குதுகள். முகத்தைத் துடைச்சுக் கொண்டு போ.

"தேவா" அவளால் தன்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அவள் மீண்டும் விம்மினாள். அவள் இரு கரங்களையும் கூப்பி அவனை வணங்கினாள். அவன் நடந்தான். திரும்பிப் பார்த்தான். அவள் சிலையென அப்படியே நின்றாள். அவள், அவன் சேர்ட்டிலிருந்த கிழிசலைத் தைத்து விட்டாள். அவன், அவனிதயத்திலிருந்த....

------------------------------------------------


"டேய் இளங்கோ இவ்வளவு புத்தகம் படிக்கிறாயடா. இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லனடா"

"என்ன மகாதேவா, கேளன் பார்ப்பம்"

"உன் கையிலே காயம் பட்டால் உனக்கெப்படியடா தெரியும்?"

"கண்ணால் பார்த்தால் தெரியும்"

"முதுகிலே பட்டால்....?"

"என்ரை உடலிலே எங்கே பட்டாலும் என்னால் உணர முடியும் தானேடா?"

"வெளியிலே உள்ள காயத்தை எங்களால் பார்க்கவோ, உணரவோ முடியுது. பயங்கரமான மிகவும் சின்னக் கிருமிகளாலே ஏற்படுகிற நோய்களை எப்படியடா அறிகிறது? அதுக்கு விசேடமாகப் படிக்க வேணும். அந்த நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கப் பட்ட உண்மைகளை நாம் அறிய வேணும். அதுக்குத்தானே டொக்டர்மார் இருக்கினம்."

"உடலுக்கு மட்டுந்தான் நோய் வருகுதா?"

"இல்லை உள்ளங்களைப் பீடிக்கிற நோய்தான் பயங்கரமானது. உடல் நோய்களுக்குக் கூட உள நோயே பல சமயங்களில் காரணமாக இருக்கிறது"

"அதை எப்படியடா கண்டு பிடிக்கிறது?"


பக்கம் 63


இளங்கோ நண்பனை வியப்போடு பார்த்தான். அவனுக்கு ஒரு சந்தேகம். தனது காதல் நோய் மகாதேவனுக்குத் தெரிந்து விட்டதோ என்று.

"என்னடா அப்பிடிப் பார்க்கிறாய்? மகாதேவன் கேட்டான்.

"ஓர் உள்ளத்தில் உள்ளதை எப்படி அறிந்து கொள்வது?" மகாதேவன் கேள்வியைக் கேட்டான். இளங்கோ சிரித்தான்.

"இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கிடைச்சால் பல பிரச்சினைகளைத் தீர்க்கலாம். எனக்குத் தெரிந்த வழி ஒன்றே ஒன்றுதான் மகாதேவா. இரண்டு இதயங்கள் பேசுகிற மொழி அன்புதான். அந்த மொழியால்தான் உள்ளங்கள் உறவாட முடியும்."

"இளங்கோ, உதடுகள் சிரிக்கும் போது எத்தனை உள்ளங்கள் அழுகுதடா. ஏன் இந்தக் கொடுமை?"

"தனித்தனி உள்ளங்களை எடுத்துப் பார்த்தால் அதற்குப் பல காரணம் இருக்கும். ஆனால், பொதுப்படையாக நோக்கினால் பெரிய உண்மை விளங்கும். நாம் வாழுகிற - இல்லை இருக்கின்ற இந்த சமுதாயத்திலே உண்ண உணவோ, இருக்க இடமோ எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் உள்ளத்தில் அமைதியோ ஒருவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் இயற்கையின் படைப்பிலே இரு மனிதர்களுக்கு இடையே இருக்கும் பேதம். இதே மனிதர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள். இந்த சமுதாயம் மனிதனை மதிப்பிடும் முறை அதன் கண்களில் உயர்ந்ததாக, சிறந்ததாக, மதிப்பிடப் படுபவை. இவைகளால் உந்தப் பட்ட ஒரு மனிதன் இயற்கையாக அவனுக்குள்ள தேவைகள், ஆசைகள் எண்ணங்களோடு மோதுகிறான். அந்த மோதலின் விளைவுதான் அவன் கண்களில் வடியும் கண்ணீர்"

"இளங்கோ, பெரிய லெக்சரே அடிச்சிட்டாய். ஆயிரமாயிரம் அறிஞரெல்லாம் எவ்வளவோ சொன்னார்கள். ஆனாலும் வாழ்க்கை வர வர வறண்டுதான் தெரியிதே"

இளங்கோ ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டினான். ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்.


பக்கம் 64

இதைக் கேள் மகாதேவா. எவ்வளவுதான் மழை பெய்தாலும் அது கடலிலே பெய்தால் பயனென்ன? கண்களை மூடியிருக்கிறோம் நாம். முன்னால் அழகோவியம் இருந்தாலென்ன? அலங்கோலம் இருந்தால் என்ன? ஏட்டில் எழுதியென்ன? மேடைகளில் பேசியென்ன? நாட்டில் நடக்க வேண்டும் மாற்றம். சமுதாயம் என்பது எது? நாங்கள்தான். திடமான உனது தோள், இச் சமுதாயத்தின் ஒரு பகுதியெனத் துணிவு கொள்! காளையரும், கன்னியரும் கட்டியெழுப்ப வேண்டியதுதான், எங்கள் புதிய வாழ்க்கையென நிமிர்ந்து சொல்! பகுத்தறிவற்ற பழைய நம்பிக்கைகளைத் தகர்த்தெறி! சாதி, மதம் வேண்டாம்! பேசும் மொழியில் பேதம் காண வேண்டாம். பாடுபடுவோம்! பகிர்ந்து உண்போம்! ஏங்கும் எழையில்லை! ஏப்பமிடப் பணக்காரர் இல்லை! சீதனம், சீர்வரிசை வேண்டாம். சிங்காரக் கன்னியர் வாழ்க்கை சிதைவுற வேண்டாம்!

இளங்கோ உணர்ச்சி வசப்பட்டு வாக்கியங்களை உரக்கப் படித்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. தங்கம் சேலைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள். இங்கோவும், மகாதேவனும் ஆச்சரியத்துடன் அவளைத் தொடர்ந்தனர். கணபதிப்பிள்ளையர் காரில் இருந்தார். அவர் கண்கள் கோபத்தாலோ, மது வெறியாலோ சிவந்திருந்தன.

"எடியே தங்கம், உன்ரை மோன் கோயில் விசயத்திலேயெல்லாம் தலைப் போடுகிறானாம். அவனுக்கு வேலையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது, கவனமாக இருக்கச் சொல்."

அவள் விறைத்துப் போய் நின்றாள். கார் ´விர்´ ரென்று புறப்பட்டுச் சென்றது. இளங்கோவின் காதுகளில் கணபதிப்பிள்ளையரின் வார்த்தைகள் கேட்கவில்லை. காரில், அவருக்கு அருகிலிருந்த வேலுப்பிள்ளையரின் வெற்றிப் புன்னகைதான் அவன் கண்களில் தெரிந்தது. திருவிழாவோடு அவன் வாழ்க்கையின் போர் விழாவும் ஆரம்பமாகி விட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான்.


7
பக்கம் 65


உணர்வுகளின் வேகத்தோடு உடல் இயங்குவதில்லை. தன்னால் முடிந்தவரை வேகமாக அவன் சைக்கிளைச் செலுத்தினான்.அவனது ஒரேயொரு தவிட்டு நிறச் சேர்ட் காற்றில் பறந்து கொண்டிருந்தது. வியர்வை சிந்தும் அவன் மார்பைக் காற்று துடைத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் பெருகிய வியர்வை முத்து முத்தாக நிலத்தில் விழுந்தது. எட்டி எட்டி அவன் சைக்கிளை உதைத்தான். எண்ணங்களோ கணபதிப்பிள்ளையரைச் சுற்றியிருந்தன. மகாலட்சுமி தியேட்டர் நெருங்கியது. அடுத்ததுதான் ´மகாலட்சுமி பவனம்´. கணபதிப்பிள்ளையரின் மாடிவீடு. அவன் சைக்கிளைச் சுவரோடு சாத்தினான். கார் போகக் கூடிய பெரிய வாசற் கதவுகள் ஆவெனத் திறந்திருந்தன. அவன் உள்ளே நுழைந்தான். அவன் வாசற்படியிற் காலெடுத்து வைத்ததும் உள்ளேயிருந்து கொடுரமான வார்த்ததைகள் வெளி வந்தன.

"எடடா காலை, என்ன துணிச்சலோடயடா நீ என்ரை வீட்டு வாசலை மிதிப்பாய்? நீ எந்தச் சாதியென்று தெரியுமோடா? எந்தச் சாதிக்காரனுக்குப் பிறந்தது என்று தெரியுமோடா?" வாசற்படி நெருப்புக் கண்டங்களால் கட்டப்பட்டது போல் அவன் கால்களை இழுத்துக் கொண்டான்.

"ஐயா ஒரு மனுசனுடைய வார்த்தையைக் கேட்டு என்னை ஏன் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள மறுத்தனீங்


பக்கம் 66

கள்? வறுமையோட நாள்தோறும் போராடுற ஒரு தாயின் பசியைத் தீர்க்க நீங்கள் உதவக் கூடாதா? நாலுநாள் என்ரை வேலையைப் பார்த்திட்டு வேண்டாமென்றால் நிற்பாட்டுங்கோ."இதைக் கேட்கத்தானே அவன் வந்தான். அவன் காதுகள் இப்பொழுது கேட்பதென்ன? அவன் காதுகளில் விழுந்த அவ்வார்த்தைகளை விட அவன் கண்களில் விரிந்த காட்சி அவனிதயத்தைச் சுக்குநூறாக உடைத்தது. அவன் உற்ற நண்பன் கோபால், உணர்ச்சியற்ற விழிகளால் இளங்கோவைப் பார்த்தான். ஏளனப் புன்னகையுடன் அவனை எச்சலிலை நாயைப் பார்ப்பது போல் பார்க்கும் வேலுப்பிள்ளையரின் கண்கள் அவனைக் கொல்லவில்லை. ஆணவத்தோடு ஆலகால விசத்தைக் கலந்து வரும் கணபதிப்பிள்ளையரின் வார்த்தைகள் அவனை அசைக்கவில்லை. ஆனால் அங்கு அசையாமல் நிற்கும் கோபால், ஆருயிர் நண்பனுக்குக் கிடைத்த அலங்கோல வரவேற்பைக் கண்டு கலங்காமல் நிற்கும் கோபால் இளங்கோவைத் தடுமாற வைத்தான்.

"கோபால், கோபால்" அவன் குரல் தழதழத்தது. "நீ... நீ... கோபால் நீயடா?"

பெரியவர் சொன்னது கேட்க இல்லையே? போடா வெளியிலே" அவன் வெளியிலேதான் நின்றான். ஆனாலும் வேலுப்பிள்ளையர் தன்ரை செல்வாக்கைக் காட்டினார்.

துடிக்கும் நண்பனின் துயரம் கலந்த குரல் கோபாலின் காதுகளில் விழவில்லையா? துன்பம் வரும் போதெல்லாம் துணை நிற்கும் நண்பன்! தன் மகிழ்வை அவனுடன் பரிமாறிக் கொள்ளும் நண்பன்! அவன்தானா அது?

"டேய் யாரடா உள்ளேயிருக்கிறது. வாசலிலே நிற்கிற நாயைப் பிடிச்சு வெளியிலை தள்ளு" கணபதிப்பிள்ளையர் வேலையாளுக்குக் கட்டளையிட்டார்.

"இளங்கோ, ஏன் நிற்கிறாய்? போ, போடா" கோபால்தான் பேசினான்.


பக்கம் 67

"கோபால்..." ஏதோ கேட்க முயன்ற இளங்கோ வார்த்தைகள் வராது தவித்தான். சைக்கிளை நோக்கிக் கால்கள் சென்றன. அதை உருட்டிக் கொண்டு அவன் நடந்தான். தளர்ந்த நடை, தொங்கும் தலை, இளங்கோவின் இதயம் இரும்பெனக் கனத்தது. இதுதான் வாழ்வா? இரக்கமின்றி அவனிதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சும் இவர்கள்தான் மனிதர்களா? இணைந்தவன் இதயம் உடையும் போது, தன் வழி செல்பவன்தான் இவ்வுலகில் நண்பனா? இளங்கோ இனியதொரு சமுதாயத்தை உருவாக்க இளைஞரையும் இள நங்கையரையும் தேடினாயே. உன் இனிய நண்பனே உன்னுடன் இன்று இல்லையே! மழைத்துளி விழுவதால் கடலின்; உவர்ப்பு மாறி விடாது! கடலோடு நீயும் கலந்து விடு! கண்மூடிக் கொள்கைக்குக் கை தட்டு! பணத்தைக் கட்டி வைத்துக் காப்போருக்கு வாழ்த்துப் பாடு! நீ வாழலாம்!

"சே... எது சமுதாயம்? இரண்டு மனிதர்கள்தான் சமுதாயமா? வசதியுள்ளோர் சொல்வதுதான் அதன் சட்ட திட்டமா? நாங்கள்தான் சமுதாயம்! நாம் வாழத்தான் இங்கு சட்டமோ, சம்பிரதாயமோ! நம்மை வாழ விடாமல் தடுக்கவல்ல! ஒரு சிலர் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளவல்ல! போராடு! இதயமற்றோர் செய்கையால் வேரோடு சாய்ந்த குடும்பங்களோடு சேர்ந்து போராடு! ஏழைகள் தோழனாய், எத்தர்களின் காலனாய் தோளோடு தோள் சேர்த்துப் போராடு!

இளங்கோவின் இதயம் போராடுகிறது. என்ன தவறு அவன் செய்தான்? தந்தையை அறியாதது அவன் தறல்லவே! தவறு அவனுடையது அல்ல. தண்டனை அவனுக்கா? தவறாக இருந்தாலும் தண்டனை கொடுக்க அவர்கள் யார்? வசதியுள்ளவர்கள். தங்கள் வாயசைவால் ஒருவன் வாழ்வை அழிக்கவோ, அளிக்கவோ வல்லவர்கள் ஒரு சிலர்தான். பலரை விலைக்கு வாங்கக் கூடியவர்கள் சட்டங்கள், சம்பிரதாயங்களைத் தங்கள் வசதிக்கேற்றவாறு வளைத்துக் கொள்ளக் கூடியவர்கள். இல்லாதவர்


பக்கம் 68

களை இணைய விடாது தங்கள் பொல்லாத ஆட்சியை நடத்துபவர்கள். பணத்தைப் பாதுகாக்கக் குலம், கோத்திரம் என்பார். இனம், மொழியென்பார். இன்னும் ஆயிரம் பேதம் சொல்வார். சமுதாயம் இவர்களின் கைப்பொம்மையா? இல்லாதவர்கள் இவர்களுக்கு அடிமைகளா? இல்லை, இல்லை இரு கரமிருக்கு. இதயத்தில் உரமிருக்கு. உழைத்து வாழ என்னால் முடியும். நிலம் இருக்குதா? அதில் போட உன்னிடம் முதல் இருக்குதா? உழைப்புதான் எனது முதல். உள் உணர்ச்சி பேசுகிறது. அறிவு தூங்குகிறது.

"என்ன தம்பி இளங்கோ, சைக்கிளுக்குக் காத்துப் போட்டுதோ? ஏன் உருட்டிறாய்?" மேசன் கோவிந்தர் கேட்டார். அவர் வாயில் கள்ளின் மணம் வீசியது.

"இல்லையண்ணை. சும்மா தெரியாதே"

"இஞ்சனைக்க நல்ல சாமான் தம்பி. இவன் இரத்தினத்தின்ரை ஒன்றுதான் போட்டன், வலு கலாதி. ஒன்றைப் போட்டிட்டு வாவன். இரண்டு பேருமாய் போவம்"

"இல்லையண்ணை நான் உது பாவிக்கிறதில்லை"

"என்ன தம்பி இன்னும் தொடங்க இல்லையே? இப்பத்தைப் பெடியள் பத்து பன்னிரண்டு வயசிலே தொடங்கிறாங்கள்"

"எனக்குப் பழக்கமில்லை"

இளங்கோ குடிக்க மாட்டான் என்பது தெளிவாகத் தெரிந்ததும் கோவிந்தர் துணிந்து கேட்டார்
"தம்பி, என்ரை கணக்கிலே ஒன்று குடியன்"

"இல்லையண்ணை"

"சரி பின்னே இந்த பீடியை என்றாலும் பத்து"

"உதுகளும் பாவிக்கிறதில்லை"


பக்கம் 69

"நல்ல பழக்கம் தம்பி, அப்ப சைக்கிளிலை ஏறன் போவம்"

இளங்கோ சைக்களில் தாவி ஏறினான். கோவிந்தர் பின்னால் ஏறிக் கொண்டார். தலையில் தலைப்பாகை, காதில் ஒரு பீடி, சவரம் செய்யாத முகம், சீமேந்து படிந்த கால்கள் இவைகள் கொண்ட கோவிந்தருக்கு வயது நாற்பது இருக்கும். சைக்கிள் நகர்ந்தது.

"தம்பி, வேலுப்பிள்ளையவையோட கொளுவலாம், உண்மையே?" இளங்கோ பேசவில்லை.

"தம்பி, நல்லதுக்குச் சொல்லுறன். பெரியாக்களோட கொஞ்சம் கவனமாக இருக்க வேணும். வயித்தைப் பார்க்க வேணும் இல்லையோ?"

"அண்ணே, ஒரு வேலையுமில்லாமல் பெரிய கஷ்டமா இருக்கு" இளங்கோ சொன்னான்.

"என்ன கதையிது? வேலையோ இல்லை? எங்கடை பொடியளுக்கு உடம்பைக் கொஞ்சம் வளைக்க விருப்பமில்லை."

"அப்பிடிச் சொல்லாதேங்கோ அண்ணே. கமம் செய்ய எனக்கு விருப்பம்தான். இப்ப காடு வெட்டவும் கட்சி மாற வேணுமே. கையிலை நாலு காசு வேண்டாமே?"

"அது உண்மைதான். சொல்லுரன் என்று கோவிக்கக் கூடாது. தம்பி கூலிவேலை செய்தால் என்ன குறைஞ்சே போயிடுவம்!"

அது உங்கடை வாயாலே வரவேணுமென்றுதான் கதையே தொடங்கினனான். அண்ணே உங்கடை மேசன் பாட்டியிலே எனக்கும் ஒரு வேலை தாங்கோவன்"

"அட தம்பி நீயோ? என்ரை சிவ சிவா. உந்த உடம்பு என்ன ஆகும்? நானொரு கதைக்குச் சொன்னால்..."


பக்கம் 70

"அண்ணே, அப்பிடிச் சொல்லாதேங்கோ. அழகு பார்க்கிறதுக்கு இல்லை இந்த உடம்பு. தன்னைத்தானே பார்க்க முடியவில்லை என்றால்..."

"தம்பி, நீ வெற்றிக்குத்தான் கதைக்கிறியே"

"அண்ணே, ஒரு வேலை தர மாட்டிங்களே?"

"தம்பி, சைக்கிளை நிற்பாட்டு" கோவிந்தர் சைக்கிளால் குதித்து இளங்கோவின் இரு கைகளையும் பிடித்தார்.

"தம்பி, உனக்கு நல்லகாலம் காத்திருக்கு. உன் கையை நம்புறாய். உன்னை யாருமே நம்பலாம். நான் வெறியிலை சொல்ல இல்லை. நாளைக்குக் காலைமை வெள்ளன அரசடிச் சந்திக்கு வா. வேலை காத்திருக்கும். உதுக்குள்ளை ஒரு கொட்டில் இருக்கு. ஒன்று போட்டிட்டு வாரன். நீ போ" கோவிந்தர் போய் விட்டார். இளங்கோவின் இதயத்தில் ஒருவிதத் திருப்தி.

----------------------------------------------------------------

இளங்கோ வீட்டிற்கு வந்த பொழுது அவன் தாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்:

"தம்பி, கணபதிப்பிள்ளையரோட கதைச்சனீயே?"

"நான் கதைக்க இல்லை. என்னாலை கதைக்க முடியவில்லை. அம்மா, நானும் மனுஷன்தானே. நானும் மற்றவையைப் போல தலை நிமிர்ந்து வாழக் கூடாதா? எந்தச் சாதிக்காரனுக்கு நான் பிறந்தனான் என்று கேட்டார்" அவன் குரல் தழுதழுத்தது. "சொல்லம்மா, உனக்குத் தெரியாமல் இருக்காதே. யாரம்மா, என்ரை அப்பன்?"

இளங்கோ தன் முதுகைத் தாய்க்குக் காட்டியவாறே பேசினான். தங்கம் அவனருகில் வந்து அவன் முதுகில் கையை வைத்தாள்.


பக்கம் 71


"மோனை, உன்ரை இதயம் துடிக்கிற மாதிரி என்ரை வயிறும் எரியுதடா. ஆனால் என்னாலை எப்பிடி இதைச் சொல்லுறது என்றுதானடா தெரிய இல்லை"

"அம்மா" இளங்கோ தாயின் கைகளைப் பற்றினான். நான்கு கண்களும் குளமாயின.

"அம்மா, நீ கலியாணமே கட்ட இல்லையாமே. உனக்கு எப்பிடியம்மா நான் பிறந்தேன்?"

"டேய், டேய் உன்னைக் கும்பிட்டனடா. என்னைக் கேளாதேயடா" அவள் கெஞ்சினாள்.

"அம்மா, கசப்பான உண்மைகள் வேதனையாகத்தான் இருக்கும். அதை மறைக்கிறது அதைவிட வேதனை அம்மா. சொல்லம்மா, சொல்லம்மா" அவன் கெஞ்சினான்.

"இல்லை இல்லை என்னைக் கேட்காதேயடா. அதை என்னாலே சொல்ல முடியாதடா"

"அம்மா, பயப்படாதே. இனி எந்த உண்மையுமே என்ரை இதயத்தை இதுக்கு மேலே சித்திரவதை செய்யாது. உன்னை விட்டு நான் போக மாட்டேன். எது நடந்தாலும் உன்னோடையே இருப்பன். சொல்லம்மா" அவன் மீண்டும் மீண்டும் கெஞ்சினான்.

வேதனையும் வெட்கமும் கொண்டு தங்கம் அவன் முகத்தைப் பார்க்க முடியாது தவித்தாள். ஒரு தாயிடம் ஒரு மகன் இப்படியும் கேட்க நேர்ந்ததே! தங்கள் ஒரு மூலையில் போய் நின்று அழுதாள். இளங்கோவின் இதயத்தை அது ஏதோ செய்தது. தனது துயரை விடத் தன் தாய் படும் வேதனை மிக மிக அதிகமென அவன் நினைத்தான். அந்த வேதனையை அவளோடு அவனால் பகிர்ந்து கொள்ள முடியாதா? ஒருவருக்காக ஒருவர் அங்கு கண்ணீர் வடித்தனர்.


8
பக்கம் 72

அவன் கண்களால் சாடை காட்டினான். அவள் அருகில் சென்றாள். அவன் அவள் கரங்களைப் பற்றினான். "உன்னை நான் காதலிக்கிறேன்" என்றான் அவன்.

செல்லம் விரலைக் கடித்துக் கொண்டாள். அவள் மருண்ட விழிகள் அங்குமிங்கும் பயத்துடன் பார்த்தன. புத்தகம் மார்பில் சாய்ந்தது. "சே புத்தகம் வாசிக்கும் போதும் இவ்வளவு பயமா? என்றது உள்ளம். இந்தக் கதையிலே வருகிற மாதிரித்தான் வாழ்க்கையிலும் நடக்குமா? அவன் வருவானா? அப்படிச் சொல்வானா? ´அது அப்படிச் சொல்லாது. வெக்கமில்லையே அப்பிடிச் சொல்ல! அதுக்கும் என்னிலை விருப்பமே? ஏன் பின்னே அப்படிப் பார்த்ததாம்? அன்றைக்குப் பயமில்லாமல் என்னோட கதைச்சுப் போட்டிது. அது என்னைக் காதலிக்க இல்லையென்றால் என்ன செய்யிறது?´ செல்லம் ஏக்கத்தோடு கன்னத்தில் கையை வைத்தாள்.

""இன்னும் கொஞ்சம் கறி போடட்டே?"
உள்ளே மீனாட்சி மகாதேவனைக் கேட்டாள்.

"இவன் இளங்கோக்கு இறைச்சி அனுப்ப இல்லையே?" மகாதேவன் கேட்டான்.

´அண்ணனுக்கு அதிலே நல்ல பிடிப்பு´ அவள் நினைத்தாள்.

"அதுகளோட சும்மா, சும்மா கொண்டாட்டம் வேண்டாம். உன்ரை மாமாவை பகைக்க ஏலுமே?"


பக்கம் 73

தாய் கேட்டாள். செல்லத்துக்கு துக்கமாக இருந்தது. "நல்ல மாமாமார். பாவம் அவன்ரை வேலையையும் கெடுத்து, உங்கடையாக்கள் எல்லாரும் இப்பிடித்தான். ஏனிந்த எரிச்சல்? தாங்கள் வாழ்ந்தால் போதுமே? மற்றவை மனுசரில்லையே?" மகாதேவன் கேட்டான்.

"இப்ப நீ சாப்பிட வந்தனீயோ? உந்த பேய்க்கதைகள் கதைக்க வந்தனீயோ?" மீனாட்சி சிறிது கோபமாகக் கேட்டாள்.

"இப்ப என்ன சொல்லிப் போட்டன்? சோறு போடக்க என்றாலும் சந்தோஷமாகப் போட மாட்டியள். மனுசன் மாடாக உழைக்கிறதுதான் மிச்சம்" மகாதேவன் பதிலுக்குச் சத்தம் போட்டான். செல்லம் எழுந்து அடுக்களைக்குள் போனாள்.

"நீ போ அம்மா. நான் சாப்பாடு போடுறன். என்ன அண்ணே வேணும்? கொஞ்சம் இறைச்சி போடட்டே?" அவள் கேட்டாள்:

"நீயும் கொண்ணனும் பட்டபாடு. நாங்கள் ஏதாவது சொன்னால் அவருக்குப் பெரிய கோவம். நான் எங்கேயாவது போரன்" தாய் சேலையைச் செருகிக் கொண்டு தன் ஒப்பாரியை வைக்க தேவி வீட்டை நோக்கிப் போனாள். போகு முன்னர் செல்லத்தின் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டுப் போனாள்.

"என்னடி சொன்னவ?" மகாதேவன் கேட்டான்.

"நீ கோபத்திலே சரியாகச் சாப்பிட மாட்டியாம். வடிவாகச் சாப்பாட்டைப் போட்டுக் குடுக்கட்டாம். செல்லம் சொன்னாள். மகாதேவன் சிரித்துக் கொண்டான்.

"அம்மாக்கு விசரடி. வேலுப்பிள்ளை மாமா செய்தது சரியே...? இஞ்சர்... செல்லம்... கொஞ்சம்


பக்கம் 74

இறைச்சிக்கறி கொண்டு போய் தங்கம் மாமியிட்ட குடுத்து விடு. மனுசி நான் போற நேரமெல்லாம் கருப்பணிக் கஞ்சியும் அதும், இதுவும் தரும்.

"நீ சாப்பிடு. நான் குடுக்கிறன்" அவள் சோற்றைப் போட்டாள்.

"போதும், போதும். நீ போடுறதைப் பார்த்தால் அம்மா பிழையில்லைப் போல இருக்கு.

மகாதேவன் ஒருவாறு சாப்பிட்டு எழுந்தான். செல்லம் ஒரு கோப்பையில் கறியும் கொண்டு, வேலியை நோக்கி நடந்தாள்.

"தங்கம் மாமி... தங்கம் மாமி"

"ஆர்... பிள்ளை? செல்லமே... என்ன மோனை, இந்த வெயிலுக்க?" தங்கம் கேட்டாள்.

"இறைச்சி காய்ச்சினனாங்கள், இந்தாங்கோ"

தங்கம் வேலியை நெருங்கினாள். "உங்களுக்குப் பிள்ளை வேற வேலையில்லை. ஏன் உதெல்லாம்?"

"மாமி, எங்கே உங்கடை மோனைக் காண இல்லை?"

"அதை ஏன் பிள்ளை கேட்கிறாய்? அவனில்லே மேசன் வேலைக்குப் போட்டான்"

"ஓ... அண்ணன் சொன்னவர். பாவம்... படிச்சுப் போட்டு உந்த வெய்யிலுக்குள்ள என்ன செய்யப் போகுது!"

"உன்னாணை மேனை மெய், நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தன். அவன் கேட்டால்தானே. எல்லாம் மேனை என்ரை பாவத்துக்குத்தான்"

"மத்தியானம் சாப்பிட வருமே"

"இல்லை பிள்ளை. கொண்டு போய் குடுக்க வேணும். பிள்ளை, ஒரு வாழையிலை வெட்டித் தாவன்"


பக்கம் 75

"இந்தாங்கோ, கறியைப் பிடியுங்கோ. கத்தியைக் கொண்டு வாங்கோ, வெட்டித் தாரன்" "நேரஞ் சென்று போச்சு, நானும்..." தங்கம் கறியை வைத்து விட்டுக் கத்தியைக் கொண்டு வந்தாள். செல்லம் வாழை இலையை வெட்டிக் கொடுத்தாள்.

"நீயே பிள்ளை இறைச்சி காய்ச்சினனீ?"

"ஓம்... அம்மா உதுகள் தொடமாட்டா இல்லே"

"ஓம்... ஓம்..."

"நேரமில்லே சென்று போச்சு. அது வேலை செய்து களைச்சுப் போயிருக்கும்"

"ஓம் பிள்ளை, நான் பிறகு வந்து கதைக்கிறன்"

தான் சமைத்ததை அவன் உண்ணப் போகிறான் என்பதில் செல்லத்துக்கு ஒரு மகிழ்ச்சி.

"என்ன அங்கே வேலிக்க செய்யிறாய்? வயசு வந்த பெட்டையளுக்கு என்னடி அடுத்த வீட்டிலே வேலை? செல்லம் கரடுமுரடான அக் குருல் வந்த திக்கை நோக்கினாள். சாம்பல் நிறத் தலைமயிர், ஹிட்லர் மீசை, கரிய மேனியில் தொங்கும் வெண்ணிறச் சால்வை... வேலுப்பிள்ளையர் நின்றார். தன்னைச் சுதாரித்துக் கொண்டு செல்லம வரவேற்றாள்:

"வாங்கோ மாமா. அம்மா அடுத்த வீட்டுக்குப் போயிருக்கிறா. வந்து இருங்கோவன்" மகாதேவன் அப்பொழுது வெளியே வந்தான். அவர் முகத்தைப் பார்க்க அவனால் முடியவில்லை. தலை குனிந்திருந்தான்.

"என்னடா மருமகனே, சண்டைக்கு வந்திடாதே. நான் அதுக்கு வர இல்லை. கொம்மாவைக் கூப்பிடன். பிள்ளை தம்பியவை, உங்களுக்கு உலகம் தெரியேல்லை. சொந்த மாமன் தேவையில்லை. மச்சான் தேவையில்லை. யாருக்குப்


பக்கம் 76

பிறந்தது என்று தெரியாததுகளோட கொண்டாட்டம். "மாமா, ஏன் பழைய குப்பைகளைக் கிளறுகிறீங்கள்? இதாலே இப்ப என்ன நன்மை வரப் போகுது? மாமி சுகமாக இருக்கிறாவே?"

"அவளுக்கு என்ன குறை? அந்தப் பக்கம் வந்து பார்த்தாலென்ன?"

"தோட்டமும், வேலையும்.... நேரமென்றால்..."

"அண்ணே, எப்ப வந்தனீ? எடி செல்லம், மாமாக்கு தேத்தண்ணி குடுத்தனீயே?" மீனாட்சி வேகமாக வந்த படியே பேசினாள். வேலுப்பிள்ளையர் கதிரையில் இருந்தார். மகாதேவன் கப்போடு சாய்ந்தவாறு நின்றான். மீனாட்சி தரையில் உட்கார்ந்தாள்.

"சாப்பிட்டியோ? சோறு கிடக்கு. இன்றைக்கு இறைச்சியும் காய்ச்சினனாங்கள்..." மீனாட்சி இழுத்தாள்.

"நான் சாப்பிட்டுத்தான் வந்தனான். மணியனுக்கு வேலை ஒன்று கிடைச்சிட்டுது.

"எங்கடை மணியனுக்கோ? அவன் பிள்ளை இராசா மாதிரி. எங்கேயண்ணை வேலை?"

மகாதேவனின் கண்களில் ஆவல் தெரிந்தது.

"சும்மாவே, கவன்மேந்து வேலையில்லே. கிராமசமையிலே கிளார்க் வேலை."

"பிள்ளையாரே, பிறகென்ன? அவன் கெட்டிக்காரன். என்ரை மோனும் இருக்கிறான். காற்சட்டை போடுவம், நாலு இங்கிலீசு பேசுவம், அதுகள் கிடையாது. தோட்டம் செய்யத்தான் தெரியும்.

"அம்மா மற்றவன் வாழ்கையிலே முன்னேறுகிறான் என்றால் அதற்கு சந்தோசப் படு. ஏலாது என்றால் பேசாமல் இரு. ஏன் உன்ரை மோனை ஒப்பிட்டுப் பார்ர்த்து உன் மனசைக் கஷ்டப் படுத்துகிறாய்?" மகாதேவன் கேட்டான்.


பக்கம் 77

"எது அண்ணே முன்னேற்றம்? காற்சட்டை போட்டால் முன்னேற்றமே? அப்பிடியென்றால் எங்கடை நாடு எப்பவோ முன்னேறியிருக்குமே! உந்தக் காற்சட்டை போட்டதுகளுக்கும் சேர்த்துத்தானே உன்னைப் போல உள்ளவை உழைக்க வேண்டியிருக்கு"

செல்லம் இப்படிப் பேசுவது வெகு குறைவு. ஆனாலும் தாயின் வார்த்தைகளால் அண்ணன் மனம் நோகக் கூடாதே என்ற எண்ணத்தோடு, வேலுப்பிள்ளையர் மீது அவளுக்கு இயற்கையாக உள்ள வெறுப்பையும் அவள் அப்படிக் கொட்டினாள்.

"போடி உள்ளே, அவவின்ரை வாயைப் பார். வர வர உங்களுக்கு வாய் பெருக்கிது. மாமாக்கு முன்னாலே பேசுகிற பேச்சே இது?" மீனாட்சி சீறினாள்.

"அவள் சின்னப் பெட்டை. அவளை ஏன் திட்டிறாய்? செல்லம், நீ போய் தேத்தண்ணியைப் போடு பிள்ளை. மீனாட்சி, உன்னோட கொஞ்ச விசயம் கதைக்க இருக்கு" வேலுப்பிள்ளையர் அங்குமிங்கும் பார்த்தார். மீனாட்சி புரிந்து கொண்டாள்.

"மகாதேவா, வெற்றிலை முடிஞ்சுது, வாங்கிக் கொண்டு வாறியே?" எப்பிடி அங்கிருந்து போவதென தடுமாறிக் கொண்டிருந்த மகாதேவன் மெல்ல வெளியேறினான். செல்லம் அந்தப்புரத்துக்குப் போனாள். அதாவது அடுக்களைக்கு. வேலுப்பிள்ளையரும், மீனாட்சியும் குசுகுசுவெனக் கதைத்தார்கள். மிகவும் முக்கியமான விசயத்தை அவர்கள் கலந்தாலோசிக்கிறார்கள் என்பது முகபாவனையில் தெரிந்தத: செல்லத்தின் மனதில் இனந் தெரியாத ஓரு சஞ்சலம் ஏற்பட்டது.

"ஏன் இந்த மனுசன் இப்ப இஞ்ச வந்தது?" மகாதேவன் மனதிலும் பெரிய கேள்விதான். கடைசியாக மலர்ந்த முகத்துடன் வேலுப்பிள்ளையர் எழுந்தார்.


பக்கம் 78

அப்ப மீனாட்சி, உன்ரை கையிலைதான் விசயமிருக்கு. நாங்கள் ஒன்றுக்க ஒன்று. ஏதோ ஒன்றாக இருக்க வேணும் என்றுதான் என் ஆசை"

"நீயேன் கவலைப் படுகிறாய்? அப்பு, அம்மாவே இருந்தால் இப்ப எவ்வளவு சந்தோசப் படுவினம், அண்ணே" எல்லாம் நல்லா நடக்கும். நான் நாளைக்கு வீட்டுப் பக்கம் வாரன்" மீனாட்சி சொன்னாள்.

"இஞ்ச பார் என்ரை மறதியை... "செல்லம்... செல்லம்..." மாமா கூப்பிட்டார்.

"என்ன மாமா?" செல்லம் வந்தாள்.

"மாமி உனக்குக் குடுக்கச் சொன்னவள்" ஒரு பார்சலை அவர் நீட்டினார்.

"அட சீலையே...! அம்மா இஞச பாரன். மாமி சீலை அனுப்பியிருக்கிறா. நானின்னும் போடக் கூடத் தொடங்கவில்லை"

"நீ இன்னும் சின்னப் பிள்ளையே? அது அது அந்தந்த வயசிலே நடக்கும். மாமி உன்னிலே எவ்வளவு அன்பு, பார்த்தியே?" தாய் கேட்டாள்.

"அப்ப நான் வரட்டே" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"செல்லம், அந்த மாம்பழம் கொஞ்சம் இருக்குது இல்லே?" மீனாட்சி வினவினாள்.

"கொஞ்சம் நில்லுங்கோ, மாமா. கொண்டு வாரன்" செல்லம் உள்ளே ஓடினாள்.

"கொத்தானுக்கும் சேர்த்து நல்ல பழமாக எடு பிள்ளை" மீனாட்சி சொன்னாள். செல்லத்தின் மனதில் மீண்டும் அந்தப் பயம் எழுந்தது. "யாருக்கோ நல்ல பழத்தைத் தெரிந்து எடுக்கச் சொல்லுறியே அம்மா, எனக்குத் தேவையானதை நான் எடுக்கு விடுவாயா?" அவளிதயம் கேட்டது. வேலுப்பிள்ளையர் மனநிறைவுடன் விடைபெற்றுக் கொண்டார்.


பக்கம் 79

"செல்லம்" தாய் இவ்வளவு அன்பாக அவளை என்றுமே அழைத்ததில்லை.

"என்னம்மா?"

"வா உனக்குத் தலை இழுத்து விடுகிறன்" அன்பான அந்த அழைப்பு செல்லத்துக்கு அதிசயமானதுதான். செல்லம் சீப்பும் கையுமாகத் தாயின் அருகில் போய் அமர்ந்தாள். தாய் தலையை வார ஆரம்பித்தாள்.

“செல்லம், தோட்டத்தைப் பார்த்தியே, மிளகாய் எல்லாம் பழுத்திட்டுது“

"ஓமம்மா, இனி எல்லாம் பிடுங்கிக் காய வைச்சு, விற்க வேண்டியதுதான்."

"பார்த்தியே அம்மா, ஆட்டுக்குட்டி துள்ளுகிற துள்ளலைப் பார்."

"துள்ளுகிற வயசிலை துள்ளுது. இன்னும் கொஞ்ச நாளிலே யார் கையுக்குப் போகுதோ?"

"எதுதானம்மா நிலையானது? மாலையிலே வாடி விடும் என்று காலையிலே பூத்த மலரைப் பார்த்து கவலைப் படலாமா? பூத்திருக்கிற நேரம் அழகாக இருந்தால் அதைப் பார்த்து பூரிக்கிறது தானம்மா இன்பம். நாளை என்ன நடக்குமென்று இன்றைய அமைதியை ஏனம்மா கெடுக்க வேணும்?"

"வாழ்க்கை நீண்ட கால, நீண்ட தூரப் பயணமடி. அதின்ரை ஒவ்வொரு பகுதியையும், திட்டம் போட்டு, எதிர்பார்த்து நடக்க இல்லையென்றால் ஏமாற்றம்தானடி கிடைக்கும்"


பக்கம் 80

"அம்மா, காலம் மாறுது. என்னத்தை நாங்கள் திட்டமிட்டாலும் இடையிலே ஏற்படுகிற மாற்றங்கள் எங்கள் மனக்கோட்டைகளை எல்லாம் தரைமட்டம் ஆக்கிடுதே. எதிர்பாராதவை எத்தனையோ நடக்குது. எங்கள் வாழ்க்கை கனவு காண்கிறதிலேயே கழிந்திடுது.நாங்கள் வாழவேயில்லையே என்று கடைசி நேரம் மட்டும் கவலைப் படுகிறம்."

"பிள்ளைகளைப் பெத்தவைக்கு என்ன செல்லம் கவலை? தன்ரை பிள்ளை நல்ல, பாதுகாப்பான இடத்திலே சந்தோஷமாக வாழவேணுமே என்றுதானே நினைக்கிறம்."

"அன்பு, பாசம் வாழ்க்கையிலே அத்தியாவசியமானவை. அவைகளை அடையாதவன், அடைய முடியாதவன் மனிதனாக வாழவே முடிகிறதில்லை. ஆனால் அன்பும், பாசமும் மட்டும் இருந்தால் போதாதம்மா. ஓரளவுக்கு அறிவும் வேணும். கணமூடித்தனமான அன்பும், பாசமும் அதற்குப் பாத்திரமானவனின் வாழ்க்கையையே பலி கொண்டு விடும். அதுக்குப் பிறகு எங்கேயும் கண்ணீர் தானம்மா மிச்சம்."

"அறிவு, அநுபவத்திலே தானடி கிடைக்குது. வயசு போனால் அது தானாக வருகுது."

"அப்பிடியென்றால் வயசு போன ஆட்களெல்லாமே அறிவாளிகளே? இளவயசினர் எல்லாம் முட்டாள்களோ?"

"செல்லம், இதையெல்லாம் எங்கே படிச்சனீ? எங்கடை காலத்திலே தாயைப் பார்த்து இப்பிடிக் கேட்பமே?"

"அம்மா, காலம் மாறுது. அதோட நாங்களும் மாற இல்லையென்றால் வாழ்க்கை வேம்பாகத்தான் இருக்கும். உங்கடை காலத்திலே அறிவுச் சுதந்திரமே இருந்ததில்லை. அதுவும் பெண்களுக்குச் சுதந்திரமேயில்லை."

"நான் உடுக்கிறது, உண்ணுறது எது என்றதையே அப்புதான் தீர்மானிப்பார். அவர் சொன்னதுதான் சட்டம். அவர் தீர்மானிச்சதுதான் எங்கள் வாழ்க்கை. ஆனால் அதை விரும்பி நாங்களும் ஏற்றுக் கொண்டோம்."


பக்கம் 81

"ஆனால் பயந்து, பயந்து வாழ்ந்தியள். உங்கடை உணர்ச்சிகளை கட்டுப் படுத்தினியள். ஆசைகளை அடக்கினியள். மரியாதை என்ற பெயரில் உங்கள் வாய்களுக்குப் பூட்டுக்கள் போடப் பட்டன."

"அது என்னமோ உண்மைதானடி. ஆசையிருந்தால் அதை வெளியிட அச்சம் இருந்தது"

"இன்னொரு பிறவி உனக்கு கிடைச்சால் நீ அப்பிடித்தான் வாழ ஆசைப் படுவியா?"

"இதென்னடி கதை? இதையெல்லாம் பெண்டுகள் கதைக்கிறதே. நாலு இளம் பெட்டையளைப் பற்றிக் கதைக்க வேண்டும். சீலை, சட்டையைப் பற்றிக் கதைக்க வேண்டும். இல்லையென்றால் ஊர்வம்மை, அரிசி, மீன் விலையைக் கதைக்க வேணும். நீ ஏதோ பெரிய ஆக்கள் மாதிரிக் கதைக்கிறாய்"

"அம்மா, பொன்னான நேரம் எங்களுக்கும் கிடைச்ச மாதிரி ஆண்களுக்கு கிடைக்கிறதில்லை. அதை எங்கள் நன்மைக்கு நாங்கள் பாவிக்கிறதில்லை. நேற்று நீ சின்னவளாக இருந்து போது ஊர்ப் பேச்சைக் கேட்டு நீயே மனம் நொந்திருப்பாய். ஆனால் இன்றைக்கு நீயே இளம் பெண்களைப் பற்றி எத்தனை வம்பு பேசுகிறாய்? என்னைப் பற்றி நாலுபேர் பேசினால் உனக்கு எப்படியிருக்கும்?"

"காலாகாலத்திலே நடக்க வேண்டியது நடந்தால் பேச இடமில்லையே"

"என் வாழ்க்கை என் கையிலே இல்லையே. நீ தேடி வைச்ச சொத்து, அண்ணன் தேடுகிற சீதனம் இதுகளை நம்பித்தானே ஒருவன் எனக்கு மாலை போடுவான். இது எல்லோருக்கும் இருக்குதே? பொருள் இல்லாதவர்களுக்கு காலாகாலத்திலே என்னதான் நடக்குது? உங்களுக்கு நேரமிருக்கு, உங்கள் கற்பனைக்கு வேலையிருக்கு. நாலு பெண்கள் சேர்ந்தால் நாற்பது பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்திடுவியள். அம்மா, இது ஞாயமே?"


பக்கம் 82


"உதெல்லாம் தேவி சொல்லித் தந்தவளே?"

"வெதும்பிப் போன இதயங்கள், வேதனையில் வெந்து போன பேதைகள் வாய் திறந்து சொல்லாததை நான் சொல்லுறன்"

"உன்னைப் பற்றி நினையன். உனக்கு ஏன் உந்த வம்பு?"

"இது வம்பு இல்லையம்மா. இளம் பெண்களுக்கு இழைக்கப் படுகிற அநீதி. நாளை எனக்கும் நடக்கலாம்."

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். மாமா ஏன் வந்தவரென்று தெரியுமே?"

"மகளுக்கு எவ்வளவு நகை போடுவாய்? காசாக எவ்வளவு வைச்சிருக்கிறாய்? வீடு, காணியெல்லாம் எழுதித் தருவியே? என்று கேட்கத்தான் வந்திருப்பார்."

"என்ரை பழக்கம் உன்னை விட்டுப் போகாது. ஒட்டிக் கேட்டனீயே?"

"கேட்க என்னம்மா இருக்கு? இதை விட்டால் வேற என்னத்தை மாமா கேட்பார்?"

"மணியன் நல்ல பெடியன்"

"வேலை கிடைக்க முன்னம், பச்சைக் குடிகாரனெண்டு நீதானே பேசுறனீ?"

"குடிகாரனெல்hலம் கூடாதவனே?"

"கூடாதவன் குடிகாரனாகவும் இருந்திட்டால் அது கூடாதுதானே"

"குடும்பப் பெண் நினைச்சால் குடிகாரனையும் திருத்த முடியுமடி"

"அவரைத் திருத்த நான் அவருக்கு மாலை போட வேணுமே? நீ அவருக்கு சீதனம் குடுக்க வேணுமே?"


பக்கம் 83

"எடியே, பேய்க்கதை கதைக்காதே. என்ரை அண்ணன் மகன்"

"அவன் உன்ரை அண்ணன் மகன்தான். நான் உன்ரை மகளம்மா."

"அதுதானடி உன்ரை வாய் இவ்வளவு நீளம்"

மீனாட்சி தலை இழுத்து முடிந்ததால் எழுந்தாள்.

"உன்னோடை என்னடி கதை? கொண்ணனுக்கும் விருப்பமென்றால் சரிதான்"

"அண்ணனுக்கும், மணியனுக்குமே கலியாணம்?"

"பல்லுக் கொட்டிப் போடுவன். கதையாதே"

செல்லத்தின் தலையிலொரு குட்டு விழுந்தது.

"என்ரை விருப்பமில்லாமல் உது நடக்காது" செல்லம் பிடிவாதமாகச் சொன்னாள். கோபமும், வேதனையும் அவள் கண்களில் நீரை வரவழைத்தன.

"நானென்ன ஆட்டுக்குட்டியே, வாரவனுக்கு வித்துப் போட? அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அவன் எனக்குத் தேவையில்லை."

"நீ தோளுக்கு மேலே வளர்ந்திட்டாய். எடியே வாயைப் பொத்தடி. உனக்கென்ன நாங்கள் நஞ்சே தரப் போறம்?"

"அதையாவது தாங்கோவன், ஒருத்தருக்கும் கரைச்சலில்லை."

"நான் அண்ணனுக்கு ஓமென்று சொல்லிப் போட்டேன்."

"என்னைக் கேட்காமல் ஏன் சொல்ல வேணும்?"


பக்கம் 84

"ஓ... நீ பெரிய ஆளில்லே, உன்னைக் கேட்கிறதுக்கு. எனக்கு ஏறிச்சிது என்றால்..." தான் பின்னிவிட்டட செல்லத்தின் பின்னலைப் பிடித்து இழுத்தாள்.

"அம்மா, நீ பின்னி விட்டதை நீயே குலைக்காதே" செல்லம் சொன்னாள்.

"அது என்ரை விருப்பமடி"

"பின்னினது நீதான், தலை என்ரைதானே?"

"பெத்ததை மறந்து போனீயே. உரிமை எனக்குத்தானடீ"

"நானென்ன காணியோ, பூமியோ, உறுதி காட்டி உரிமை பாராட்ட?"

"அப்ப உனக்கு நான் தேவையில்லை"

"மற்றவர்களை நாங்கள் நம்பி வாழவேண்டி இருக்கிற படியால்தானே எங்கள் வாழ்க்கையை இப்படிப் பாழாக்கிறியள்."

"ஏனடி, அப்பிடிச் சொல்லுகிறாய்? நீ நல்லாயிருக்கிறதற்குத்தானே எல்லாம் செய்யிறன். அவன் கவன்மேந்து வேலை. வடிவான பொடியன்.
சொந்த மச்சான். கரும்பு தின்ன என்னடி கூலியே வேணும்?"

"கரும்போ, வேம்போ என்று உனக்குத் தெரியுமே?" அவர்களது பாதி உரையாடலின் போதே வந்த மகாதேவன் இப்பொழுது உள்ளே வந்தான்.

"அம்மா, அவன் கரும்பு இல்லை. கருந்தேள். கூலியும் குடுத்து, எங்கடை கரும்பையும் நாங்கள் குடுக்கப் போறம், அவன் குதப்பி எறிய. ஏனம்மா உனக்கு இந்த எண்ணம்?"

"பார்த்தியே அண்ணே, எனக்குக் கலியாணம் வேண்டாம். அம்மாவைப் பேசாமல் இருக்கச் சொல்லு."


பக்கம் 85

"இரண்டு பேரும் ஒரு கட்சியே! டேய், இவள் பொம்பிளையின்ரை பேச்சைக் கேட்டு நீ..."

"நீ என்ன ஆம்பிளையே?" செல்லம் கேட்டாள்.

"பார் பார், அவளின்ரை வாயைப் பார். நெருப்புக் கொள்ளி வைக்கோணும். எல்லாம் நீ குடுக்கிற இடமடா. என்ரை ஒரு சொல்லுக்கு மதிப்பில்லை. தாய் பொழிந்து கொண்டு இருந்தாள். செல்லம் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டாள். மகாதேவன் கிணற்றடியை நோக்கி நடந்தான். அவன் ஒரு வாளி நீரை அள்ளித் திரும்பிய பொழுது தேவி அவன் முன்னே நின்றாள். அவன் முறுவலித்தான். அவளும் பதிலுக்கு நகைத்தாள். அவன் அவள் வாளியில் தண்ணீரை அள்ளி ஊற்றினான்.

"டீச்சர் சோதனைக்கு அப்பிளை பண்ணினனான். உன்ரை காசு இரண்டு மாசத்திலே தந்து போடுவன்."

"அதைப் பற்றிக் கவலைப்படாதே. முதலில் வேலை கிடைக்க வேணுமே!"

"தேவா, கேட்கிறனென்று கோவிக்காதே. எதை எதிர்பார்த்து எனக்கு நீ உதவி செய்கிறாய்?" தேவன் அவளை வெறித்துப் பார்த்தான். எதுவும் பேசாமல் அவன் நடந்தான்.

"தேவா..." அவன் நின்றான்.

"என்ன?" அவன் குரல் கடுமையாக இருந்தது.

"நீ கோவிச்சிட்டாயே?" அவள் குரல் பரிதாபமாக இருந்தது.

"நீ அப்பிடிக் கேட்டிருக்கக் கூடாது."

"இன்னும் கனபேர் இப்ப எனக்கு உதவி செய்ய வருகினம்."


பக்கம் 86

"அப்ப என்ரை உதவி தேவைப்படாது."

"அவை எதையோ எதிர் பார்க்கினம்."

"அதுதானோ அப்பிடிக் கேட்டனீ?"

"இன்னும் கோவமே?"

"தேவி, நீ எனக்கு அ, ஆ... சொல்லித் தந்தனீ. என் தலையிலே குட்டி கணக்குச் சொல்லித் தந்திருக்கிறாய். நான் அம்மா, அம்மா என்று கத்தக் கத்த முகமெல்லாம் சவுக்காரம் போட்டுக் குளிப்பாட்டியிருக்கிறாய். அப்ப எல்லாம் என்னத்தை எதிர் பார்த்தாய்?"

"தேவா" அவள் குரல் கம்மியிருந்தது.

"கள்ளங்கபடம் இல்லாத அந்த வயசிலே எவ்வளவைக் கொடுத்தாய். எவ்வளவை எடுத்தாய் என்று இலாப நட்டக் கணக்குப் பார்க்கத் தெரியாதடா. இந்த வயசு இலாபம் பார்க்கிற வயசு. கொடுக்கிற கை கூட எடுக்கிறதைக் கணக்குப் பார்த்துத்தானடா கொடுக்குது."

"தேவி, உந்தக் கணக்கை நீ எனக்குச் சொல்லித் தர இல்லையே"

"தேவா, என்னுடைய இதயமோ, அன்பு, பாசம், இரக்கம் இதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறது. அவை உள்ள இதயங்கள் உலகில் இல்லையென்ற முடிவுக்கு வந்து எவ்வளவோ நாளாச்சு. என் கணக்கே நாறிப் போச்சு."

"தேவி, உன் வாழ்க்கை ஒரு நாள் மலரத்தான் போகுது. நீயும் கலகலப்பாக எல்லாரையும் போலச் சிரிக்கத்தான் போறாய். மனதைத் தளர விடாதே."

"தேவா, ´உனக்கு இனி என்னடி வாழ்க்கை´ என்ற கேள்வியைத்தான் எல்லாரும் என்னைக் கேட்கிறவை. உன்னைப் போல நல்ல வார்த்தை நாலைச் சொல்லியிருந்தாலே நான் இவ்வளவு கண்ணீர் வடிச்சிருக்கவே மாட்டேன்." அவள் பேசி முடிக்கவில்லை. அவள் கண்ணீருக்கு வேலை மீண்டும் வந்தது.


பக்கம் 87

"நானும் நெடுக, நெடுக பார்க்கிறன். இப்பவும் அங்கே இருந்து பார்த்துக் கொண்டுதான் நின்றனான். எவ்வளவு நேரமாக கிணற்றடியிலே உங்களுக்குக் கதை. தேவி, உனக்கு வெட்கம், ரோசம் கிடையாதே? அவன் இளம் பெடியன். இன்னும் கொஞ்ச நாளையிலே எங்கடை வயசை நீ எட்டிப் பிடிச்சிடுவாய். அவனோட உனக்கு என்னடி கதை? உனக்கு இனி என்னடி வாழ்க்கை? சின்னஞ் சிறுசுகளையாவது வாழவிடன்." மீனாட்சி வார்த்தைகளால் மலரை நெருப்பினால் பொசுக்கினாள். தேவி வேதனை தாங்காது ஓடினாள். ஆனால் வேதனையும் அவளோடுதான் ஓடியது. அவள் கையிலிருந்த வாளிநீர் சேலையை நனைத்தது. அவள் கன்னங்கள் எப்படி நனைகின்றன?


9

பக்கம் 88


வானம் ஏனோ அழுதது. சில நாட்களில், சில நேரங்களில் அது அழும். சிலர் கண்களுக்கு என்றுமே மாரிகாலம்தானோ? தேவி வாசற்படியில் இருந்து விம்மி, விம்மி அழுதாள். வானம் அவளோடு போட்டியிட முடியாது நின்று விட்டது.

"தேவி, தேவி, ஏன் மேனை அழுகிறாய்?"

"தேவியின் வயது சென்ற பாட்டி கனிவோடு கேட்டாள். தேவியோ எதுவும் பேசாது அழுதாள். கிழவி தனது பொல்லை ஊன்றியவாறு தேவியின் அருகில் தள்ளாடித் தள்ளாடி வந்தாள். அவள் கைகள் தேவியின் தலையை வருடின.

"மோனை, விளக்கும் வைக்காமல் ஏன் மேனை அழுகிறாய்? காசு இல்லையே?"

"அம்மம்மா" தேவி கிழவியைத் தன்னோடு அணைத்த படி அழுதாள்.

"அழாதே மோனை. காசில்லா விட்டால் அழுகிறதே? நான் எவ்வளவு கஸ்டப்பட்டு உங்களை வளர்த்தனான். ஒரு நாளாவது அழுதனானே? சீ... சீ... கெட்ட பழக்கம். எழும்பு பிள்ளை. போய் விளக்கை வை."

"அம்மம்மா... எங்களை ஏனம்மா வளர்த்தனீ?" கிழவி, அழும் தேவியின் கண்ணீரைத் துடைத்தாள்.


பக்கம் 89

"எனக்கில்லே கண் சீராகத் தெரியாதாம். இல்லையென்றால் நானே விளக்கு கொழுத்திப் போடுவன். மோனை, மண்ணெண்ணெய் வாங்கக் காசில்லையே? இஞ்சை பாரன் மோனை, என்ரை தோடு இரண்டு கிடக்குது இல்லே..."

" அம்மம்மா" தேவி தன் தலையைக் கிழவியின் மடியில் வைத்துக் குழந்தையைப் போல் அழுதாள்.

"மீனாட்சியக்கையவை வேலியை அடைச்சுப் போட்டீனம். அங்க தண்ணியள்ள வரக் கூடாதாம்."

"என்னடி கதையிது? உவள் மீனாட்சி எப்ப வந்தவள் வேலியடைக்க? எடியே மீனாட்சி, மீனாட்சி? கிழவியின் குரலில் எங்கிருந்து அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை.

"வேண்டாம் அம்மம்மா"

"எடி, என்னை விடடி." கிழவி தேவியை உதறி விட்டு வேலியை நோக்கி நடந்தாள்.

"எடியே மீனாட்சி" கிழவி கத்தினாள்.

"யாரங்க சத்தம்?" மீனாட்சி வெளியில் வந்து பதிலுக்குச் சத்தமிட்டாள். கிழவிக்குக் கண்ணும் நன்றாகத் தெரியாது. இருட்டு வேறு. அவள் வேலியைப் பிடித்துக் கொண்டு கத்தினாள்.

"ஆரைக் கேட்டடி வேலி அடைச்சனி? மரியாதையாக எங்கடை பாதையை விட்டிடு. இல்லை...?"

"என்ன கிழவி, பயப் படுத்திறாய். என்ரை வேலியை அடைக்க உன்னைக் கேட்க வேணுமோ?" மீனாட்சி கேட்டாள்.

"எடியே, உந்தக் கிணறு என்ரை அவரும், உன்ரை கொப்பனும் சேர்ந்து வெட்டினதடி. நீ யாரடி எங்களைத தடுக்க?"


பக்கம் 90

"தண்ணி எடுக்க வாரீpங்களோ? இல்லை இஞ்சை மாப்பிள்ளை தேடுறியளோ? உன்ரை பேத்தியைக் கொஞ்சம் அடக்கி வை."

"அடியே, என்ரை பேத்தியையும் தெரியும். உன்ரை ஆட்டமும் தெரியும். சொன்னால் உன்ரை பெடியள் கிணத்துக்க விழுந்திடுங்கள்." மாறி மாறி இருவரும் வசைமாரி பொழிந்தனர். சில நிமிடங்களின் பின் கிழவி தன் கைப்பொல்லால் வேலியை அடிக்க ஆரம்பித்தாள். மட்டைகள் கீழே விழுந்தன. வேலி வழிவிட ஆரம்பித்தது. கிழவியின் கையிலிருந்த பொல்லுக்கும், அதை விட வலிமையான அவளது நாவுக்கும் பயந்து மீனாட்சி தூரவே நின்று சத்தமிட்டாள். கிழவியைத் தடுக்க வழியின்றித் தேவி நின்றாள். செல்லமோ ´அம்மாக்கு உதுவும் வேணும், இன்னும் வேணும்´ என்று எண்ணியவாறு அடுக்களையில் வேலையாக இருந்தாள். வேலியைப் பிரித்த கிழவி சும்மா இருக்கவில்லை.

"எடியே, உந்தக் கிணற்றிலே நானும் தண்ணியள்ளுகிறதுதான். ஏலுமென்றால் நிற்பாட்டிப் பார் பார்ப்பம்." கிழவி கைத்தடியை அங்குமிங்கும் சுழற்றியவாறு நடக்க ஆரம்பித்தாள். கிழவியைத் தடுக்கத் தேவி வேலியைத் தாண்டி வரவேண்டியிருந்தது.

"விடு மேனை என்னை" என்று சொல்லியபடி கிழவி நடக்க ஆரம்பித்தாள். மீனாட்சிக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை.

"குறுக்கால போக. நீங்கள் நாசமாகப் போக" என்று மண்ணை வாரி தேவி மீது அவள் வீசினாள். தேவியின் உடலெங்கும் மண். அவள் கண்களைத் திறக்க முடியாது தவித்தாள். கிழவியோ கண்டவாறு பேசிய படி கிணற்றடியை நெருங்கி விட்டாள்.

"மீனாட்சியக்கை சும்மாயிருங்கோ. அம்மம்மா இல்லே கிணற்றடிக்குப் போகிறா." தேவி கண்களைத் துடைத்தவாறு தவித்தாள். மீனாட்சிக்கு அவள் தவிப்பு மேலும் உற்சாகத்தை அளித்தது.


பக்கம் 91

"நாய்கள், நாய்கள், பொறுக்கி நாய்கள் தொலைஞ்சு போங்கோ." அவள் கற்களாலும் வீச ஆரம்பித்தாள். அடுக்களையிலிருந்த செல்லம் விசயம் விபரீதமாவதை உணர்ந்து தாயைத் தடுக்க ஓடி வந்தாள். இதற்குள் கிழவியோ துலாக்கயிற்றை ஒருவாறு தேடிப் பிடித்தாள்.

"வரச் சொல்லடி பார்ப்பம். அவளை. வந்து தடுக்கச் சொல்லடி. இது நெல்லுக் குத்தின கையடி. என்ன நினைச்சாள் உவள்" கிழவியின் குரலும் வாளியின் ஓசையும் தேவியின் காதுகளில் விழுந்தன.

"அம்மம்மா, நீங்கள் அள்ளாதேங்கோ. நான் வாரன்." தேவி கத்தியவாறு கிணற்றடியை நோக்கி ஓடினாள். அதற்குள் கிழவி துலாவைத் தாழ்த்தினாள். வாளி ஆழமான கிணற்று நீரில் முட்டி மோதியது. அந்த ஓசை கிழவியின் போராட்டத்தின் வெற்றியை அவளுக்கு அறிவுறுத்தின. அவள் வளைந்த முதுகை நிமிர்த்தினாள். வெற்றிக் களிப்பு அவள் கண்களில் விளையாடியது.

"எடியே பிள்ளை, வாளியைக் கொண்டு வா தண்ணி வார்க்க" அவள் தேவியை அழைத்தாள்.

"நீர் நிரம்பிய வாளி கிணற்றின் விளிம்பை அடைந்தது. கிழவி குனிந்து வாளியைத் தூக்க முயன்றாள். முடியவில்லை. அது விளிம்போடு மோதியபடி நின்றது. கிழவிக்கோ தோல்வியை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நன்றாகக் குனிந்தாள். வாளியை இழுத்தாள். வாளி வேகமாக வெளியே வந்தது. துலா ´படாரென´ மரத்தோடு மோதியது. கிழவி தடுமாறினாள். கிணற்றின் விளிம்பை நோக்கி அவள் கால்கள் வழுவிச் சென்றன. மறுகணம் அவள் ஆழமான அக்கிணற்றின் அடித்தளத்தில் கிடந்தாள். தேவி ´வீலென´ அலறினாள். அவளைத் தொடர்ந்து செல்லம் "ஐயோ" எனக் கத்தினாள். ஓரு கணம் சிலையாக நின்ற மீனாட்சியும் "கடவுளே" எனக் கூக்குரலிட்டாள்.

பக்கம் 92


"என்ன, என்ன நடந்தது?" பதறியபடி நொண்டி, நொண்டி அப்பொழுதுதான் வந்த கோபால் அங்கு வேகமாக வந்தான். கிணற்றைச் சுற்றி நின்ற மூன்று பெண்களும் கத்தினார்கள்.

"அம்மம்மா கிணத்துக்கையடா..." தேவி அலறினாள். கோபாலின் உடல் துடித்தது. கிணற்றின் விளிம்புவரை அவன் சென்றான். அவனுடல் நடுங்கியது. "அம்மம்மா அம்மம்மா" ´ஐயையே, என்னாலே இறங்கவும் ஏலாதே´ அவன் பதறினான். இயற்கையின் கொடுமை அன்றுதான் அவனிதயத்தை ஆழமாகக் கூறு போட்டது.

"டேய், சும்மா நிற்காதேடா. யாரையாவது கூப்பிடடா." தேவி அழுதழுது வேண்டினாள்.

"ஐயோ அண்ணனும் எங்கேயோ போட்டுதே" செல்லம் பதை பதைத்தாள்.

கோபால் கண்களில் கண்ணீர் பெருக வலது காலை இழுத்து, இழுத்து வெளியே ஓடினான். தூரத்தில் இளங்கோ வந்து கொண்டிருந்தான். கோபாலின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.

"இளங்கோ, இளங்கோ..."

நடந்து வந்த இளங்கோ கோபாலின் குரல் கேட்டு ஒரு கணம் நின்றான். அவனால் நடக்க முடியவில்லை. அவன் கண்களில் வெறுப்பும், அருவருப்பும் வியர்த்திருந்த முகத்தை இன்னும் கோரமாக்கின. ´இந்த நன்றி கெட்டவனோட எனக்கென்ன கதை. கதைச்சாலும் கை வைக்க வேண்டித்தான் வரும். பேசாமல் எங்கேயாவது போயிட்டு பிறகு வருவம்.´ இளங்கோ இந்த முடிவோடு திரும்பி நடந்தான். கோபால் திகைத்தான்.

"இளங்கோ, இளங்கோ நில்லடா. டேய், டேய் இஞ்ச வாடா" இளங்கோ வேகமாக நடந்தான். கோபால் கால்களை இழுத்தபடி பின்னால் ஓடினான்.

பக்கம் 93

"டேய், டேய் அம்மம்மா கிணத்துக்க விழுந்திட்டாடா. வாடா" கோபால் கத்தினான். தெருவில் ஓடிய ´டிராக்டர்´ சத்தத்தில் அவன் குரல் அமிழ்ந்தது. அதற்குள் இளங்கோ அடுத்த தெருவில் திரும்பிப் போய் விட்டான். கோபால் ஒழுங்கை மணலில் விழுந்து, விழுந்து அழுதான். என்றுமே சிரித்துக் கொண்டிருக்கும் கோபால் அன்று அழுதான்.

இளங்கோ கோயிற் கிணற்றில் நன்கு குளித்தான். நாளெல்லாம் உழைத்த களைப்பு உடலை விட்டு மறைந்து விட்டது. ஆனால் உள்ளத்தில் ஒரு சோர்வு. அவன் மனதில் மகிழ்ச்சியில்லை. ´இளங்கோ, இளங்கோ´ கோபாலின் கீச்சுக் குரல் . அதுவும் அவலமான ஒரு குரலாக அவன் காதில் ரீங்காரமிட்டது. ஏன் அப்பிடி அவன் கூப்பிட்டவன்? மனதை ஏதோ அரித்தது. அவன் வீட்டை நோக்கி நடந்தான். தூரத்தே ´பெற்றேமாக்ஸ்´ விளக்கோடு சைக்கிளில் யாரோ வந்தார்கள்.

"டேய் இளங்கோ, எங்கேயடா போனனீ? ஒரு கையில் விளக்கோடு, மறுகையால் பிரேக்கை அழுத்தினான் மகாதேவன்.

"என்ன மச்சான் விளக்கோட?" இளங்கோ கேட்டான்.

"உனக்கு விசயம் தெரியாதே? கோபாலின்ரை அம்மம்மா இல்லே கிணத்துக்க விழுந்து போச்சு"

"என்னடா!" இளங்கோவின் காதில் கோபாலின் குரல் மீண்டும் ஒலித்தது. அவன் இதயத்தை யாரோ இரு கைகளால் பிசைவது போல் இருந்தது.

"ஏறி விளக்கைப் பிடியனடா" மகாதேவன் அவசரப் படுத்தினான். இளங்கோ சைக்கிள் பாரில் ஏறியமர்ந்தான். வழியில் மகாதேவன் தனக்குத் தெரிந்ததை விளக்கினான்.


பக்கம் 94

"நானும் வீட்டை நிற்க இல்லை மச்சான். நல்ல காலத்துக்கு, பெண்டுகளின்ரை சத்தங் கேட்டு அயலுக்க இருந்து நாலைஞ்சு பேர் வந்தவையாம். அதுகளில்லையென்றால் அந்தப் பெண்கள் என்ன செய்யும்? பாவம், கோபால் காலும் ஏலாது கிழவியிலே சரியான பாசமடா. மனுசிதானே வளர்த்து ஆளாக்கினது. கதறிக் கொண்டிருக்கிறான். பார்க்க ஏலாமலிருக்கடா"

அழுகுரல் இப்பொழுது நன்கு கேட்டது. பெண்களின் அழுகுரலையும் மீறிக் கொண்டு அந்த ஆண் குரல் நெஞ்சைப் பிளந்தது.

"அம்மம்மா... என்ரை அம்மம்மா... என்னைத் தூக்கி வளர்த்தியே, உன்னைத் தூக்கக் கூட ஏலாமல் நின்றேனே. என்ரை அம்மம்மா... என்னை விட்டுப் போனீயே..."

விளையாட்டு, வேடிக்கையென்று நாளெல்லாம், பொழுதெல்லாம் ஊரெல்லாம் சிரிக்க வைக்கும் கோபால் அப்படிக் கதறுகிறான். கூவும் குயிலோசை நமக்கு இனிதே. அது சோகக் கீதமா, இல்லை இன்பச் சங்கீதமா என்பது குயிலுக்குத்தானே தெரியும். பெண்கள் பலர் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தவாறு ஒப்பாரி வைத்தனர். தங்கமும் அங்கிருந்தாள். ஏன்? மீனாட்சி கூட சேர்ந்தழுதாள். செல்லமும் கண்ணீர் வடித்தாள். ஆனால் தேவி அழவில்லை. அவள் கண்கள் அந்த மனிதர்களையே பார்த்தன. ஏன அவர்கள் அழுகிறார்கள்?

கிழவியின் மறைவு அவ்விதயங்களை நெகிழ வைத்ததா? கன்னி இவள், இனித் தனிய என்ன செய்வாளென எண்ணி மனம் நொந்தார்களா? உயிரோடு இருக்கையில் வாழ்க்கையிலெ உதவாத இம்மனிதர்கள் உணர்ச்சியற்ற உடலைப் பார்த்து ஏன் அழுகிறார்கள். அவள துயரத்தில் என்றுமே பங்கு கொள்ளாத இவர்கள் இன்று மட்டும் ஏன் ஓடி வந்தார்கள்? உதடுகளில் ஒப்பாரி, உள்ளங்களோ உறியில் வைத்த கறியில், பெட்டகத்தில் பூட்டி வைத்த பணத்தில், மற்றவர்


பக்கம் 95

வாழ்வை நினைத்துப் பொறாமைத் தீயில்! சாவீடு கல்யாணம் பேசும் சந்தையாகும். நரம்பில்லா நாக்குகள் அங்கு பல கூடும். கன்னியர் வாழ்வைக் கெடுக்க பல கதைகள் தேடும்! சுடுகாட்டில் கிழவியின் உடல் எரியும்! சாவீட்டில் உயிரோடு உள்ளவர்களின் வாழ்வு.

இதற்குத்தான் இங்கு கூடுகிறார்களா? நாளை தங்கள் வீட்டுக்கு நாலு மனிதர்கள் வரவேண்டும் என்று கூறுகிறார்கள்: அவர்கள் கண்ணீரெல்லாம் பொய்யா? கடந்து போன தங்கள் வாழ்வில், கவலை நிறைந்த காலங்களை நினைத்தும் கண்ணீர் வடிக்கிறார்கள். ´ஐயோ நாளை நானும் இறந்து விடுவேனே´ என்று பயந்து கண்ணீர் வடிக்கிறார்கள். தேவி - அவளுக்காக இங்கு எத்தனை பேர் அழுகிறார்கள்?

அவர்கள் அழுகிறார்கள். ஏன் அவள் அழவில்லை? ஏன் அவள் அழ வேண்டும்? கிழவிதான் செத்த வீட்டுச் செலவுக்குத் தன் தோட்டை விட்டுப் போனாளே.

-------------------------------------------------------

எட்டு வீடும் முடிந்து விட்டது. இனி எட்டிக் கூட அங்கு பார்க்க யாரும் இல்லை. தேர்தல் முடிந்த பின் வாக்காளருக்கு ஏற்படும் நிலைதான். அவள் வீட்டிற்கு இருந்த ஒரே சட்டையும் கிழிந்து விட்டது. தேவி சேலையைப் போர்த்திக் கொண்டு தன் கிழிந்த சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தாள். அவள் தையல் மெசின் ஓசையைத் தவிர வேறு ஓசை அங்கில்லை. குனிந்த தலை நிமிராது அவள் தைத்துக் கொண்டிருந்தாள். அவள் சட்டையில்லா மேனியழகை இரு விழிகள் பருகுவதை அவள் காணவில்லை. அவள் தலையை நிமிர்த்திய போதுதான், அவரும் தொண்டையைச் செருமினார். துள்ளி எழுந்த தேவி கதவுக்குள் ஒளிந்தளர்.

"ஏன் தேவி பயப்படுகிறாய்? நல்ல காரியமாகத்தான் வந்தனான்."


பக்கம் 96

தேவி அவசர, அவசரமாகச் சட்டையை மாட்டிக் கொண்டாள். அவள் வெளியில் வராமலே பதிலைச் சொன்னாள்.

"தம்பி தியேட்டருக்குப் போயிட்டான்"

"ஓ தெரியும். அம்மம்மா செத்தது உனக்குப் பெரிய கவலைதான். நடக்கிறது நடந்துதானே தீரும். அவள் தன் கழுத்தைத் தடவிக் கொண்டாள். ´நடக்க வேண்டியவை நடப்பதில்லையே´ என்றது மனம்.

"நான் வருவேனென்று நீ நினைச்சிருக்க மாட்டாய். என்னமோ மனம் கேட்கவில்லை. பாவம் நீயும் ஒரு பெண் பேதை. என்ன செய்வாய்?"

மற்றவர்களின் அனுதாபம் சில சமயங்களில்தான் உள்ளங்களுக்கு ஆறுதலைத் தருகின்றன. தேவிக்கு ஏனோ அந்தச் சமயத்தில் அது எரிச்சலைத்தான் தந்தது. ´இந்த மனிதருக்கு ஏன் இந்தக் கவலையெல்லாம்´ அவள் நினைத்தாள். அவரோ கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

தேவி, உன்னை நான் தேர்த்திருவிழா அன்று பார்த்தனான். வேலுப்பிள்ளையர்தான் உன்னைப் பற்றிச் சொன்னார். எனக்கென்னமோ உன்னிலை ஒரு பரிவு வந்திட்டுது. அதுதான் உன்ரை தம்பிக்கும் என்ரை தியேட்டரிலே வேலை கொடுத்தனான்." கணபதிப்பிள்ளையர் கனிவோடு சொன்னார்.

"இப்ப ஒருத்தரும் வீட்டிலே இல்லை. நீங்கள் தம்பி இருக்கைக்க வாங்கோவன்" தேவி சொல்லி விட்டு நாக்கைக் கடித்தாள்.

"இல்லை உன்னோட தனியாகப் பேசத்தானே வந்தனான். இது விசயமாகத் தங்கத்தை உன்னட்டை அனுப்பி வைக்கப் பார்த்தனான். அவளின்ரை பெடியனைப் பற்றி

பக்கம் 97

ஊரிலே நல்ல கதையில்லை. பிறகு அது எனக்கும் கூடாதென்றுதான் அவனுக்கு வேலையும் கொடுக்கவில்லை." அவரது சுற்றி வளைத்த பேச்சு அவளுக்குப் புரியவில்லை.

"தேவி, உனக்கும் ஆரும் இல்லை. எனக்கும் ஒரு துணையில்லை."

"தயவு செய்து நீங்கள் போறீங்களே?" அவள் கேட்டாள்.

"நான் சொன்னது விளங்கிச்சே?"

"இதுக்கு மிஞ்சி விளக்கம் வேண்டாம்." அவள் கதவுக்கு வெளியே வந்தாள். "எரியிற வீட்டிலே பிடுங்கிறது லாபமென்று பார்க்கிறியள்." அவரோ நிதானம் தவறவில்லை. மெல்லச் சிரித்தார்.

"தேவி, வலிய வார சீதேவி - எனக்கொன்றும் அவ்வளவு வயசாக இல்லை. நிரந்தரமாக ஒரு துணையைத் தேடி கனகாலமாக நானும் திரியிறன். உனக்கோ இனி என்ன வாழ்க்கை?" தேவிக்கு தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.

"என்னைப் போல ஆராவது கிடைச்சால் சரி. இல்லையென்றால் குளமோ... குட்டையோ..." அவர் தொடர்ந்தார்.

"நிற்பாட்டுங்கோ. ஆறுதல் சொல்ல வந்தனீங்களோ? ஆசையைத் தீர்க்க வந்தனீங்களோ? இப்ப வாங்க வந்தது நீங்கள். விற்க நான் தயாரில்லை. அந்த விலை உங்களால் தர முடியாது."

"தேவி கார், பங்களா, காசு, பணம் எனக்கு இருக்கிற மாதிரி இந்த ஊரிலே ஆருக்கும் இல்லை."

பக்கம் 98

"இதயம், பாசம், பண்பு இது இருக்கிறவன் ஏழையில்லை. எண்பது வயதைத் தாண்டினாலும் எனக்குத் துணையாக இருக்கலாம். ஆனால் நீங்கள்... சீ... போங்கோ." கணபதிப்பிள்ளையர் புன்னகையோடு எழுந்தார்.

"இலாபமும், நட்டமும் வாழ்க்கையிலே இயற்கை. இப்ப எனக்கு மாத்திரம் நட்டமில்லை. உனக்கும்தான். மனம் மாறினால் சொல்லி அனுப்பு. காரை அனுப்புறன். இல்லை ஒரு முழக்கயிறுதான் வேணுமென்றால்... அது உன்ரை தலைவிதி." அவர் எழுந்து நடந்தார். அவர் படலையருகில் சென்றதுதான் தாமதம், தேவி சத்தமிட்டாள்.

"நில்லுங்கோ"

"தேவி" ஆசையோடு அவர் திரும்பினார். அதே சமயம் மீனாட்சியின் கண்கள் வேலியினூடே அக்காட்சியை இரசித்தன. ஆனால் அதற்குள் மகாதேவன் வந்தான். படத்தின் ´கிளைமாக்ஸ்´ காட்சியில் ரீல்ஸ் அறுந்த கதை போலாயிற்று மீனாட்சிக்கு. படக்கதை புரியாவிட்டாலும் ஒரு புதுக்கதையை மீனாட்சியால் உருவாக்க முடியாதா? அவன் மனமின்றி வேலியைப் பிரிந்து சென்றாள். இந்த வேலிகள்தான் எங்கள் பெண்களின் பொழுது போக்குச் சாதனம்.

"இந்தக் காசை ஏன் வைச்சிட்டுப் போறியள்?" தேவி தையல் மெசின் மேசையிலிருந்த பணத்தைக் காட்டினாள்.

"ஓ... அது உனக்குத்தான்."

வியாபாரமே நடக்க இல்லையே. அட்வான்ஸ் எதுக்கு. ?" அவள் கேட்டாள்.

அது அந்த வியாபாரத்துக்கு இல்லை. எனக்கு நீ காட்சியளித்ததற்கு, கதைத்ததற்கு."


பக்கம் 99

"ஓ, அப்படியென்றால் உங்கடை தியேட்டரிலே கடனுக்கு படம் காட்டிரியளோ?" அவருக்குப் புரியவில்லை. அவர் விழிகளை உருட்டினார். மடித்த நூறுரூபாய் நோட்டு அவர் முகத்தில் வந்து விழுந்தது.

"உங்கடை மகள், என்ரை தம்பிக்கு அடிக்கடி காட்சி தாராளாம். அவன் ஏழை. வீணாக நட்டப் படாதேங்கோ."

கணபதிப்பிள்ளையரின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அவர் ஓங்கி, படலையைச் சாத்தி விட்டு நடந்தார். அடுத்தடுத்து வீட்டு வாசல்களில் பல உருவங்கள் அவரை வியப்போடு நோக்கின.10
பக்கம் 100

இருள் சூழும் நேரம். அமைதி, பயங்கரமான அமைதி. கிழவியின் இருமல் ஒலியோ, முனகல் ஒலியோ, முணுமுணுப்போ இப்பொழுது இல்லையே. இனந்தெரியாத பயம் தேவியின் இதயத்தில் பரவுகிறது. தனிமை, மிக மிகப் பயங்கரமானது. பள்ளிக்கூட விடுமுறை. பிள்ளைகள் கூட படிக்க வருவதில்லை. செல்லம், தேவியோடு பேசுவதும் தடை செய்யப் பட்டது. ஊரெல்லாம் அவளைப் பார்க்கும் பார்வை, பார்த்த பின் தமக்குள் அவர்கள் பேசும் பேச்சு - செய்யாத தவறுக்கு அவள் தண்டனை அனுபவித்தாள். வீட்டுக்குள் அவளால் இருக்க முடியவில்லை. கோபால், இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவேயில்லை. படலையருகில் அவள் நின்றாள். வேலை முடிந்து, கோயிற் கிணற்றில் குளித்து விட்டு இளங்கோ ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு வந்தான்.

"தம்பி, இளங்கோ இஞ்ச ஒரு விசயம், வந்திட்டுப் போறியே!" தேவி அவனை அழைத்தாள்.

"தம்பி, இவன் கோபால் தியேட்டருக்குப் போனவன். இரண்டு நாளாக வரவில்லை."

அவள் குரலில் பயம் தொனித்தது. இளங்கோவின் முகம் மாறியது.

"அவனோட நான் கதைக்கிற இல்லை."

"எனக்குத் தெரியும் தம்பி. எனக்காக, அவனை ஒருக்காப் போய் பார்க்க மாட்டியே?"

அவள் ஏக்கத்தோட கேட்டாள். அவன் பேசவில்லை. அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது. வேறு யாரோ தெருவோரம் போனார்கள். அவள் கூப்பிட்டாள்.


10
பக்கம் 100

இருள் சூழும் நேரம். அமைதி, பயங்கரமான அமைதி. கிழவியின் இருமல் ஒலியோ, முனகல் ஒலியோ, முணுமுணுப்போ இப்பொழுது இல்லையே. இனந்தெரியாத பயம் தேவியின் இதயத்தில் பரவுகிறது. தனிமை, மிக மிகப் பயங்கரமானது. பள்ளிக்கூட விடுமுறை. பிள்ளைகள் கூட படிக்க வருவதில்லை. செல்லம், தேவியோடு பேசுவதும் தடை செய்யப் பட்டது. ஊரெல்லாம் அவளைப் பார்க்கும் பார்வை, பார்த்த பின் தமக்குள் அவர்கள் பேசும் பேச்சு - செய்யாத தவறுக்கு அவள் தண்டனை அனுபவித்தாள். வீட்டுக்குள் அவளால் இருக்க முடியவில்லை. கோபால், இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவேயில்லை. படலையருகில் அவள் நின்றாள். வேலை முடிந்து, கோயிற் கிணற்றில் குளித்து விட்டு இளங்கோ ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு வந்தான்.

"தம்பி, இளங்கோ இஞ்ச ஒரு விசயம், வந்திட்டுப் போறியே!" தேவி அவனை அழைத்தாள்.

"தம்பி, இவன் கோபால் தியேட்டருக்குப் போனவன். இரண்டு நாளாக வரவில்லை."

அவள் குரலில் பயம் தொனித்தது. இளங்கோவின் முகம் மாறியது.

"அவனோட நான் கதைக்கிற இல்லை."

"எனக்குத் தெரியும் தம்பி. எனக்காக, அவனை ஒருக்காப் போய் பார்க்க மாட்டியே?"பக்கம் 101

அவள் ஏக்கத்தோட கேட்டாள். அவன் பேசவில்லை. அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது. வேறு யாரோ தெருவோரம் போனார்கள். அவள் கூப்பிட்டாள்.

"கந்தசாமி அண்ணையே, இஞ்ச ஒருக்கால் வந்திட்டுப் போங்கோ"

"என்ன பிள்ளை?" அவர் கேட்டார்.

"அண்ணே எங்கடை கோபாலைக் கண்டனீங்களே?"

"இல்லை பிள்ளை" அவர் வேகமாக நடந்தார். அவளோடு பேசவே ஆண்கள் பயந்தார்கள். காரணம் பெண்கள்தான். இளங்கோ இன்னும் நின்றான்.

"தம்பி, தனிய இரவிலே எப்பிடி... அவன்... அவன் கொஞ்சம் கூட யோசனையில்லை."

அவள் விசித்து, விசித்து அழுதவாறே உள்ளே போனாள். இளங்கோவின் மனதை ஏதோ அரித்தது. கோபாலைத் தேடி அவன் போவதா? அதுவும் கணபதிப்பிள்ளையர் வீட்டிற்கா? அவன் தன்மானம் மனிதத் தன்மையை மறைத்தது.

கப்போடு சாய்ந்தவாறே அவள் நிலத்திலிருந்தாள். கன்னத்தில் அவள் கைகளிரண்டும் பதிந்திருந்தன. விரல்களினிடையே அவள் விழி, நீர் ஓடியோடி இப்பொழுது காய்ந்து விட்டது. எரியாத அடுப்பொன்று அருகே. எரிகின்ற உள்ளமோ அவளிடத்தே இருட்டு. இதுதான் அவளுக்குப் பழக்கமானது. கண்களை மூடினாள். அப்பொழுதும் இருட்டுத்தான். மூடிய கண்கள் மூடியே இருந்து விட்டால்...?

குளமோ, குட்டையோ ஒரு முழக் கயிறோ...? சே... அவளுக்கென்று யாரும் வேண்டாம். அவளுக்காக பேசக் கூட ஒருவரும் இல்லையா?பனையோலைகள் பயங்கரமாக ஓர் ஓசையை ஏற்படுத்தின. காற்றினால் புழுதி அவள்
பக்கம் 102


உடலெங்கும் வாரி இறைக்கப் பட்டது. அவள் அந்த அரசடியைப் பொறுத்த வரையில் புழுதியில் விழுந்த பூமாலைதானே.

சே... என்ன வாழ்க்கை? என்ன மனிதர்கள்? என்ன செய்ய முடியும்? விரக்தியும், வெறுப்பும் சேரும் போது ஒருவித வெறி ஏற்படுகிறது. ஏன் நான் அழ வேணும்? என்னைப் பற்றி இல்லாத பொல்லாததைக் கதைக்கிற இந்த மனிதர்களை பழி வாங்க வேணும். அழ வைக்க வேணும். அவள் போராடினாள். ´சொந்தத் தம்பியே வர இல்லையே! இனி எனக்கு ஆர்? என்ரை வாழ்க்கை என்ன மாதிரி இருக்கப் போகுது?´ அவள் முன்னால் இருட்டுத்தான் இருந்தது.

"தேவி, தேவி" மெல்லிய அந்தக் குரல் மெதுவாக அவளை அழைத்தது. தேவியின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி. உடலிலே ஒரு படபடப்பு. அவள் எழுந்தாள்.

"விளக்கைக் கொளுத்த நெருப்புப் பெட்டியும் இல்லை" அவள் சொன்னாள்.

"விளக்கு வேண்டாம்"

"தேவா"

"தேவி, அம்மாக்குத் தெரியாமல் வந்தனான். பலத்துக் கதைக்காதே." அவன் அவளுக்கு மிக அருகில் நின்றான்.

"தேவா, ஏன் அப்பிடி வந்தனீ?"

"தேவி, இன்று முழுக்க நீ தண்ணி அள்ள இல்லை. அடுப்படியாலே புகையே வர இல்லை. விளக்கு எரிய இல்லை. நீ இருக்கிறீயோ இல்லை செத்துப் போனீயோ என்று பார்க்க வந்தனான்." அவன் குரல் தழுதழுத்தது.

"தேவா, நீ ஒருத்தனாவது என் நினைவோடை இருக்கிறியே" அவள் அழுதாள்.


பக்கம் 103


"சும்மா அழாதே தேவி. எவ்வளவு நாளைக்கு இப்பிடி அழுகுறது? அடுப்படிக்க போ சொல்லுறன்."

இருவரும் அடுக்களைக்குள் நுழைந்தார்கள்.

"தேவி, உனக்கு இடியப்பம் கொண்டு வந்தனான். சாப்பிடு." தேவியின் உடல் சிலிர்த்தது. அவளுக்கா அன்பு காட்ட யாருமில்லை? உலகத்திலுள்ள உள்ளங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் கூட அவனுடைய அன்பைச் செலுத்த முடியாதே. ஆயிரம் உறவுகள் இருந்தென்ன! உண்மை அன்பிலே உருவாகும் ஒர் உறவுக்கு அவை ஈடாகுமா?

"தேவா, தேவா" நன்றிப் பெருக்காலும் கண்ணீர் பெருகலாம். அவன் அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் தடுக்கவில்லை. அது அவளுக்குத் தேவைப் பட்டது. கண்ணீரைத் துடைக்க கரமிருந்தால் அது பெருகினாலும் இன்பமே.

"சாப்பிடு தேவி" அவன் உரிமையோடு சொன்னான். இருட்டில், அவள் இடியப்பத்தையும் கறியையும் கலந்தாள். ஒன்றோடு ஒன்று இணையும் போது சுவைதான்.

"நீயும் சாப்பிடு"

அவன் மறுக்கவில்லை. அவள் குழைத்துக் கொடுத்தாள். இருவரும் சுவைத்து உண்டனர்.

"தேவி, இன்றைக்கு உன் கண்ணீரை நான் துடைக்கிறேன். எப்பவுமே கண்ணீர் வராமல் பார்க்க..."

"எனக்கு ஆர் இருக்கினம்" தேவா, இது கிடைச்சதே நான் செய்த புண்ணியம்"

"தேவி, ஊரெல்லாம் உன்னைப் பற்றி ஏனிப்பிடிக் கதைக்கிறது?"

"அதைத் தட்டிக் கேட்க யாராவது தாலி கட்டியிருக்க வேணுமே!"


பக்கம் 104

"தேவி, கோபால் எங்கே?"

“எனக்குத்தான் நிம்மதியில்லை. என்னாலே அவன் ஏன் கஷ்டப் பட வேண்டும்?”

"தேவி, அப்பிடிச் சொல்லாதே. உன்னோடு பேசுற ஒவ்வொரு நேரமும் எனக்கு இன்பமாக இருக்கு. இந்த இன்பம் நிலைக்காதா என்று ஏக்கமாகவும் இருக்கு."

"தேவா"

"தேவி, எங்களிருவருக்கம் இடையிலே ஒரு அன்புப் பாலத்தை நாங்கள் எப்பவோ அமைச்சிட்டம். அது நிரந்தரமானது. தேவி, என்னை மன்னிச்சிடு. களங்கம் இல்லாமல் ஆரம்பிச்ச இந்த அன்பு இப்ப..."

அவன் அவள் கரங்களைப் பற்றினான். அவனையறியாது கரங்கள் நகர்ந்தன. அவள் தோள்களைப் பற்றி மார்போடு அணைத்துக் கொண்டன. அவள் நடுங்கினாள். வார்த்தைகள் வரவில்லை. நாக்கு அசைய மறுத்தது. உதடுகளோ துடித்தன. அவன் அவள் காதோடு சொன்னான். இல்லை நெஞ்சோடு பேசினான்.

"தேவி, நானுன்னைக் காதலிக்கிறேன். அப்படித்தான் சொல்ல வேணும்." அவளுடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. இதமான அவன் அணைப்பை இழக்க அவளால் முடியவில்லை. ஆனால் இதயமோ ´தவறு தவறு´ என்று அவைளக் குத்தியது.

"தேவா, தேவா... நான்... நான...ன் ..." அவள் நடுங்கினாள். அவன் மேலும் அணைத்துக் கொண்டான்.

"தேவி, நீ சொல்லத் துடிக்கிறது எனக்குத் தெரியும். என்னை விட வயசில் கூடின உன்னை நான் எப்படி மனைவியாக்க முடியும், என்று நீ ஏங்குகிறாய். தேவி, உன்னை விட இளையவனை உன்னாலே ஏற்றுக் கொள்ள முடியுமென்றால்...


பக்கம் 105

"முடியாது தேவா முடியாது"

அவள் தன்னை விலக்கிக் கொண்டாள்.

"தேவா, குழந்தையாக நீ இருக்கைக்க கன்னமெல்லாம் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திருக்கிறனடா. உன்னைக் கணவனாக நான் கனவு கூடக் கண்டதில்லையே. டேய், நீ குழந்தையடா, இன்னும் என் குழந்தையடா."

"தேவி... தேவி..." அவன் அழுதான்.

"டேய், என்னிடம் பாசமுள்ளவங்கள் இல்லையடா. இருக்கிற நீயும், பாசம் வைச்ச ஒரே காரணத்தாலே வாழ்நாள் முழுக்க என்னோடு கஷ்டப் பட வேணுமே?"

"தேவி, என்னோடு வாழுறது கஷ்டமென்று நினைக்கிறியா?"

"டேய் தேவா, என்னை விட இளமையான எத்தனையே அழகான பெண்கள் உனக்காகக் காத்திருக்குதுகள்."

"நீ யாருக்காகக் காத்திருக்கிறாய்?"

"காலனுக்காகத் தேவா. அன்புக்காக நான் ஏங்கினனான். அதை உன் ஒவ்வொரு சொல்லிலேயும், செயலிலேயும் அள்ளி அள்ளித் தந்திட்டாய். அது போதுமடா. அதை விட அதிகமாக எதிர்பார்த்தால் நான் அன்பில்லாதவள் ஆயிடுவேன்."

"தேவி, நான் உனக்குத் தகுதியில்லையா?"

"வயசிலே, வசதியிலே நான்தான் உனக்குத் தகுதியில்லை."

"நானே விரும்பேக்க...?"

"குழந்தை விரும்புறதெல்லாம் கொடுத்தால்...?"

"நான் இன்னும் குழந்தையே...?"


பக்கம் 106

"எனக்கு எப்பவுமே நீ குழந்தைதானடா"

"உன்ரை மனசை மாத்த மாட்டியே"

"என்ர வயசு மாற வேணுமே"

"தேவி, நான் ஏமாந்திட்டன்."

"இல்லை. என்னை ஏமாத்திடாதே. இது ஒரு சபலமடா. தேவா, உன் மேலே எனக்கு இருக்கிற அன்போ, மதிப்போ அணுவளவு கூடக் குறையவில்லை."

"தேவி, எனக்கோ அது ஆயிரம் மடங்கு கூடியிருக்கு. நான் தவறாகக் கேட்டிருந்தால் என்னை மன்னிச்சிடு."

"அப்பிடிச் சொல்லாதே."
அவள் அவன் தோளில் தட்டினாள். அவன் தலையைக் கோதி விட்டாள்.

"தேவி, ஆனால் என்ன உருவத்திலே உனக்கு வேணுமோ, அந்த உருவிலேயே உன் பின்னாலே வர நான் எப்பவும் தயாராக இருக்கிறேன்."

"தேவா" என்றுமில்லாத ஓர் ஆறுதல் அந்த வினாடி அவளிதயத்திற்கு ஏற்பட்டது.

ஆறுதல், அமைதி இவையெல்லாம் அவள் வாழ்வில் மின்னலெனத் தோன்றி மறைவன. வறுமையும், வற்றாத கண்ணீரும்தான் அவள் வாழ்வில் நிலையானவை. பிரகாசமான ´டார்ச்சின் ஒளி´ அவர்கள் மீது விழுந்த போது அவள் நிலைகுலைந்தாள். தேவன் தலை குனிந்தான். அவர்கள் இருவரையும் விட இதயம் ஒடிந்தவள் கையில் ´டார்ச்சுடன்´ நின்ற மீனாட்சிதான். இவ்வளவு தூரம் இரவு நேரத்தில் இருவரும் தனித்து நிற்கும் அளவிற்கு போய் விட்டதே! வழக்கமாக அவள் வாயாடிதான். ஆனால் அன்றோ வார்த்தைகள் வர மறுத்தன.பக்கம் 107

"டேய்.... ...டேய்... பெடியன் நீயும்... கடவுளே..." தான் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும் போது ஒரு தாய் மனம் தவிக்குந்தானே!

"அடப்பாவி, இன்னும் நிற்கிறியோடா, போடா வீட்டே." அவள் கத்தினாள்.

மகாதேவன் நடந்தான். கண்களைக் கூசவைக்கும் ஒளியை அவள் முகத்தில் பாய்ச்சியவாறே மீனாட்சி தேவியை நெருங்கினாள். கண்களைக் கூசச் செய்தது, டார்ச்சின் ஒளி மட்டுமல்ல. கோபக்கனல் வீசும் மீனாட்சியின் கண்களும்தான். பற்களைக் கடித்தவாறே பயங்கரமான பெண் வேங்கையென அவள் தேவி மீது பாய்ந்தாள். ஒரு கரம் அவள் கூந்தலைப் பற்றியிழுத்தது.

"நாயே, பேயே" என பல்லோடு பல்லைக் கடித்தவாறே மீனாட்சியின் வாயிலிருந்து வந்த நெருப்புத் துண்டுகள் மறக்க முடியாதவை. திருப்பிச் சொல்ல முடியாதவை. தன் மகன் சம்பந்தப் பட்டட விடயமாதலால் அவள் பலத்த சத்தமிடவில்லை. ஆனால் அவை தேவியின் நெஞ்சைப் பலம் கொண்ட மட்டும் தாக்கத் தவறவில்லை. ´டார்ச்´விளக்கு தேவியின் முகத்தோடு ஒரு முறை மோதியது. அடுத்து கீழே விழுந்ததும் பளார், பளாரென கன்னமிரண்டிலும் இரக்கமின்றி மீனாட்சி அடித்தாள். தேவியின் கண்கள் இருண்டன. அவளைப் பிடித்துத் தள்ளி விட்டாள் மீனாட்சி. அடுக்களையின் ஒரு மூலையில் போய் அவள் விழுந்தாள். அணைக்கத் தெரியாத கரங்களுக்கு அவளை அடிக்க உரிமை இருந்தன. மீனாட்சி போய் விட்டாள். ஆனால் தேவியின் உயிர் போகவில்லையே. அவள் இன்னும் அந்த மூலையில்தான் கிடந்தாள். இன்னும் இருளில்தான் இருந்தாள். இரவும், பகலும் மாறி மாறித்தான் வரும். அவள் வாழ்வில் பகல் வரவில்லையே!


பக்கம் 108

பாவம் தேவியக்கா. மற்றவன் எப்படி நடந்தாலென்ன, நான் மனிசத் தன்மையோட நடக்க வேணும். இளங்கோ மகாலட்சுமி தியேட்டர் வாசலில் எண்ணமிட்டவாறு நின்றான். படம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் கண்கள் கோபாலைத் தேடிக் கொண்டிருந்தன. கோபால் வெளியே வந்தான். இளங்கோவைப் பார்த்தான். அங்குமிங்கும் பார்த்தான். ஒரு ஒதுக்குப் புறத்தை நோக்கி நடந்தான். அங்கிருந்து இளங்கோவை வருமாறு சைகை செய்தான். இளங்கோவுக்கு எரிச்சலாக இருந்தது. ஒருவனோட கதைக்கக் கூடப் பயமா? ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கோபாலை நோக்கி நடந்தான்.

"இளங்கோ, ஆராவது வர மாட்டினமே என்று ஏங்கிக் கொண்டிருந்தனான். அக்கா எப்பிடி இருக்கிறாள்?" கோபால் முற்றாக மாறி விட்டான். சிரிப்பு, வேடிக்கை எதுவுமே இல்லை. கவலை அவன் கண்களில் குடிகொண்டிருந்தது.

"அந்த நினைவு உனக்கு இருக்குதே?" இளங்கோ கேட்டான்.

"இளங்கோ... என்னிலே உனக்கு சரியான கோவம்" இளங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"உன்னோடு உறவு கொண்டாட வரயில்லை. கொக்கா அங்க அழுது கொண்டிருக்கிறாள்."

கோபால் இளங்கோவின் தோள்களைப் பிடித்தான். அவன் கண்கள் கலங்கின.

"இளங்கோ, உன்னை வேண்டாமென்ற இடத்திலே நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்று உனக்குக் கோவம். டேய், இளங்கோ என்னைப் பாரடா" இளங்கோ பார்க்கவில்லை.

"இளங்கோ, என்னைப் பாரடா மச்சான்." கோபாலின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் பார்க்கவேயில்லை.
பக்கம் 109

"இளங்கோ, உனக்குத் தெரியாதடா எங்கள் நிலை"

"என்னடா தெரியாது? தொண்டை கத்திக் கத்தி உன்ரை கொக்கா படிப்பிக்கிறது தெரியாதே? தையல் மெசினைச் சுத்திச் சுத்தி அவள் சாகிறது தெரியாதே? அவள் அப்பிடிக் கஸ்டப்பட, நானும், நீயும் அந்தக் காசிலே படம் பார்த்தது தெரியாதே? டேய், உனக்கு வேலை கிடைச்சதாலே நீ என்னை மறக்கலாமடா. என்னாலேயே முடிய இல்லையேடா. கூடப் பிறந்த அவளை உன்னாலே எப்பிடி மறக்க முடிஞ்சது?"

"இவ்வளவுதானடா உனக்குத் தெரியும். இவ்வளவுதானடா எனக்குத் தெரிஞ்சிருந்தது. டேய், இது மாத்திரமில்லையடா. நானும், நீயும் தண்ணி வார்க்கிற தோட்டத்திலேயே அவள் கள்ளக் களவாகக் காய்கறி பிடுங்கிறது, உனக்குத் தெரியாதடா. அப்பிடிப் பிடுங்கப் போய் மகாதேவனிட்டை அடி வாங்கினது உனக்குத் தெரியாதடா. அவள் இரத்தஞ் சிந்தச் சிந்த நான் கண்ணீர் சிந்தினது உனக்குத் தெரியாதடா."

"கோபால்" இளங்கோ நண்பனைப் பார்த்தான்.

"டேய், அந்தக் காட்சியைப் பார்த்த பிறகுதான் உன்னை அப்பிடிப் பேசினவங்களின்ரை காலைப் பிடிச்சுக் கொண்டு வேலை செய்யிறன். டேய், அது மட்டுமில்லையடா, என் அக்கா மேலே தவறான ஆசையோட என் முதலாளி இருக்கிறான் என்று தெரிஞ்சும் கை நீட்டி நான் அவனிட்டை காசு வாங்கிறன். என்னடா பார்க்கிறாய்? ´மானம் கெட்டவனே´ என்று பேசப் போறியா? ஏழைக்கு எதுக்கடா மானம்? எழுத்திலே வைச்சுக் கொள்ளடா அதை. உடலை மறைக்கவே ஒரு துணியில்லை. மானமா? இருட்டிலே வாழ்கிற நமக்கு நேர்மையா?"

"கோபால், கவலைப் படாதேயடா. அமைதியாயிரு."

அடக்கி வைத்த துயரமெல்லாம் அணை கடந்தது. கோபால் பொருமினான்.


பக்கம் 110

"டேய், வறுமை என் அக்காவைக் கன்னியாகத்தான் காலத்தைக் கழிக்க விட்டிது. கால் வயிற்றைத்தான் நிரப்ப விட்டிது. போகட்டும்... அவளை களவெடுக்கிற அளவுக்கு விரட்டிச்சிதேடா... டேய்... டேய்... என்ன கொடுமையடா" கோபாலின் உடல் குலுங்கியது. இளங்கோ வார்த்தைகள் வராது தவித்தான்.

"டேய், உன் உடம்பிலே உரம் இருக்கடா. உன் கையிலே வலுவிருக்கடா. உனக்கு இரண்டு காலிருக்கடா. நீ உழைக்கலாம். உன் காலிலே நிற்கலாம். நான்... நான்... காலில்லாதவனடா. மற்றவன் காலைப் பிடிச்சுத்தானடா வாழவேணும்.

"கோபால், கோபால்... சிரிக்க மாந்திரந்தானாடா சிநேகிதம்? அழுகிற நேரத்தில் என்னை ஏனடா மறந்தாய்? உனக்கு வேலையும் வேண்டாம்: ஒன்றும் வேண்டாம். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்பமடா. ஒன்றாகச் சாப்பிடுவமடா."

"இளங்கோ... டேய்... டேய்... அவனால் பேச முடியவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டான். சில வினாடிகள் இருவரும் எதுவுமே பேசவில்லை. இளங்கோவின் கை நண்பனின் தோள் மீது இருந்தது. "வாடா வீட்டை போவம்" இளங்கோதான் கேட்டான்.

"நான் வரயில்லை. இந்தக் கிழட்டு முதலாளி என்னை என்ன கேட்டான் தெரியுமே? அக்காவைத் தனக்குக் கட்டித் தரட்டுமாம். எனக்கு ஐயாயிரம் தாரானாம். அடிச்சுக் கொன்றிருப்பேன். வீட்டுக்கு வந்த உனக்கு அன்றைக்கு என்ன சொன்னவன்? டேய், உயிர் போனாலும் இவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறதுதான். இஞ்சதான் நான் வேலை செய்யப் போறன்." இளங்கோ எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். கோபால் வர மறுத்து விட்டான்.


பக்கம் 111

"இளங்கோ கோவிக்காதே. இந்தக் காசை அக்காட்டைக் குடு. கொம்மாவைக் கொஞ்ச நாளைக்கு அவளோட இருக்கச் சொல்லடா. என்னை இஞ்சயே இருக்கச் சொல்லி முதலாளியின்ரை ´ஓடர்´. நீ கவலைப் படாதை. இந்தப் பக்கம் வந்தால் என்னைச் சந்தியாமல் போகாதை. அக்காவைப் பார்த்துக் கொள்ளடா, பாவம் அது."

இளங்கோ விடை பெற்றான். கோபால் அவன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு நின்றான். கைகள் கண்களைத் துடைத்துக் கொண்டன.11
பக்கம் 112

"கொஞ்சம் எழும்பு பிள்ளை. மெதுவா... மெதுவா... வாயைக் கொஞ்சம் திற... ஆ... ஆ... இன்னொரு கரண்டிதானே. இதையும் குடி பிள்ளை."

ஒரு கரத்தால் தேவியை அணைத்தவாறு, மறு கரத்தால் தங்கம் மருந்தைப் பருக்கினாள். அந்த அணைப்பு, அன்பான வார்த்தைகள் அவை இருக்கும் போது தேவிக்கு ஏனந்த மருந்து?

"இப்ப என்ன செய்யிது பிள்ளை? இன்னும் கிறுதி இருக்கிறதே?"

"இப்ப எனக்கு ஒன்றும் இல்லை." தேவி சிரிக்க முயன்றாள். மயக்கம் வந்து அடுக்களையில் விழுந்ததாகத்தான் அவள் சொல்லியிருந்தாள். அவள் கன்னங்கள் வீங்கியிருந்தன. வலது கன்னம் வீங்கியதால் அவள் அகன்ற விழிகள் சிறிதாகக் காட்சியளித்தன. நெற்றியில் ஆங்காங்கே பஞ்சில் மருந்தைத் தோய்த்துத் தங்கம் ஒட்டியிருந்தாள்."

"அம்மா" இளங்கோ வந்தான். "எப்பிடி இப்ப அக்காவுக்கு?"

"காய்ச்சல் விட்டிட்டுது. இன்றைக்குச் சரக்குத் தண்ணியோட சோறு குடுப்பம்."

"இளங்கோ, உங்களுக்கு என்னாலே பெரிய கஷ்டம்." தேவி மெதுவாகப் பேசினாள்.

பக்கம் 113

"என்ன கதை இது? பிள்ளை நாங்களென்ன பிறத்தியே? நீ ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனே...? தம்பி, வந்து சொல்லாட்டால் நீ அந்த அடுப்படிக்க தனிய கிடந்து செத்திருப்பாய்.

"இருந்தும் என்னத்துக்கு...?" தேவி முணுமுணுத்தாள்.

"அப்பிடிச் சொல்லாதை மேனை." தேவி படுத்திருந்த பாயில் அமர்ந்து தங்கம் அவள் தலையை வருடினாள். இளங்கோவிற்கே அது பொறாமையாக இருந்தது.

நான்கைந்து நாட்களாகத் தங்கம் தேவி வீட்டில்தான் இருக்கிறாள். சமையல் கூட அங்குதான். அங்கேயே அவள் படுத்துக் கொள்வாள். இளங்கோ மட்டும்தான் தங்கள் வீட்டில் படுத்தான்.

"மேனை, நான் சொன்ன சாமான் வாங்கினனீயே?"

"ஓமம்மா, இஞ்ச பையுக்க கிடக்கு. அக்காவுக்குத் தோடம்பழமும் வாங்கினனான்." அவன் சொன்னான்.

"எங்கே அது?" தாய் கேட்டாள்.

"தைக்க வேணுமில்லே"

"அவள் எழும்பித்தான் தைக்க வேணும்." தங்கம் சொன்னாள்.

"என்ன தங்கமக்கையது?" தேவி கேட்டாள். இளங்கோவின் கையில் சட்டைத் துணியிருந்தது.

"சட்டைத் துணி பிள்ளை."

"நாளைக்கு நான் தைச்சுத் தாரன்." தேவி சொன்னாள். தங்கம் சிரித்தாள்.

"உந்தத் துணியிலை சட்டை தைக்க நான் என்ன குமரியோ, இது உனக்குப் பிள்ளை."


பக்கம் 114

தேவியின் உடல் சிலிர்த்தது. மனிதர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவள் கண்களில் நன்றி பெருகியது.

"நான் கடைக்குப் போறன். அம்மா, ஏதும் வாங்க இருக்கிறதே?" இளங்கோ கேட்டான்.

"கருவாடு வாங்கிக் கொண்டு வா." இளங்கோ வெளியே வந்தான். சிறிது தயங்கினான். தேவியின் வாயில் அவன் பெயர் அடிபட்டதே அவனைத் தயங்க வைத்தது.

"தங்கமக்கை, இளங்கோவைப் பற்றி ஒன்று கேட்கிறன் சொல்லுவீங்களோ?"

"என்ன பிள்ளை?" தங்கம் கேட்டாள்.

"தம்பி கோபாலன் அடிக்கடி சொல்லுவான், இளங்கோ மனசிலே பெரிய ஒரு கவலை இருக்கு"

"தேவி, நீ என்ன கேட்கப் போகிறாய் என்று எனக்கு விளங்குகிறது. ஆனால்..."

"ஏன் அதை மறைக்கிறியள்? தன்ரை தகப்பனைத் தெரிய இல்லையென்றால் ஒரு பிள்ளை எவ்வளவு கவலைப் படும்?"

"தேவி, அவன் எவ்வளவு வேதனைப் படுகிறான் என்று எனக்குத் தெரியும்." தங்கம் சொன்னாள்.

"தங்கமக்கை, அந்தப் பிள்ளைய இந்த ஊரெல்லாம் என்னமாய் பழிக்கிறது? ஏனிந்தக் கொடுமை? அவன் என்ன பாவஞ் செய்தான், ஆருக்கும்? நல்லதோ, கெட்டதோ அதைச் சொல்லி விடுங்கோவன்."

"தேவி, என்னிதயத்துக்குள்ளேயே அடங்கியிருக்கிற அந்த உண்மையை யாருக்குச் சொல்லி அழுவன்?"


பக்கம் 115

"ஏன் தங்கமக்கை, அவனுக்கே சொல்ல முடியாத..."

"அவனுக்குத்தான் சொல்ல முடியாது. அவன் அதை அறிஞ்சிட்டால்... தேவி... ஒரு தாய் தன் மகனிடம் என்னத்தை எதிர்பார்க்கிறாள்?"

"அவன் பெரிய மனுசனாக வேணும். நாலுபேர் அவனைப் பற்றி நல்லாச் சொல்ல வேணும். படிக்க வேணும். பட்டம் பெற வேணும். நாலு காசு சம்பாதிக்க வேணும்."

"இது எல்லாம் இருந்தும் எத்தனையோ தாய்மார்கள் கடைசி நேரத்திலே கவலைப் படுகீனம். அது ஏன்?"

தேவிக்குப் பதில் தெரியவில்லை. அவள தங்கத்தைக் கேள்விக் குறியோடு நோக்கினாள்.

"தேவி, உனக்கு இப்ப இது விளங்காது. தேவி உடலுக்கும், உள்ளத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்கிறதென்று படிச்சவை சொல்லுவினம். உடலிலே சக்தி இருந்தால் மாத்திரம் மனுசன் வாழுறானே? உள்ளத்திலேயும் சக்தி வேணும். சாப்பாடு உடம்புக்குச் சக்தி கொடுக்கும். மனசுக்கு அன்புதானே சக்தியைக் கொடுக்கும்."

"உண்மைதான் தங்கமக்கை. அன்பையே அறியாத குழந்தைகள் மனக்கட்டுப்பாட்டை இழக்கின்றன. பயந்து வாழ்கின்றன. தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கை இல்லாத தன்மையும் வளருது."

"ஆனால்..." தேவி தங்கமக்கையைப் பேச விடவில்லை.

"அளவுக்கு மீறின அன்பும் குழந்தையைக் கெடுக்கும். தாயையே எல்லாத்துக்கும் நம்பியிருக்கிற குழந்தை தன் கால்களிலே நிற்க முடியிறதில்லை.. சில சமயங்களில் கட்டுக்கடங்காமல் போய் விடும். இதையெல்லாம் நான் தெரிஞ்சு என்ன பிரயோசனம்?"


பக்கம் 116

"அன்பு குழந்தைகளுக்கு எவ்வளவு தேவையோ அதை விட அதிகமாக ஒரு தாயும் அன்பை எதிர்பார்க்கிறாள் தேவி. ஒரு தாய் தன்ரை மகன் பெரிய வேலையில் இருந்தாலும் இல்லை இழிஞ்ச நிலையில் இருந்தாலும் எதிர்பார்க்கிறது அவனுடைய அன்பைத்தான். அன்பாக "அம்மா" என்று அவன் கூப்பிடைக்க... தேவி, அந்த சந்தோசத்தை எந்தத் தாய்தான் இழக்க விரும்புவாள்?

"தங்கமக்கை, எதையோ தொடங்கி எதையோ கதைக்கிறம்."

"இல்லை! தேவி, அதையேதான் கதைக்கிறம். இஞ்ச பார் இளங்கோ என்னோட இருக்க வேணுமென்றால், அவன் தகப்பன் யாரென்பதை எப்பவுமே அவனுக்குச் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.

வெளியே நின்ற இளங்கோ ´அம்மா சொல்ல மாட்டியா?´ என்று எங்கினான்.

"அவன்ரை அன்பிலே உங்களுக்கு அவ்வளவு சந்தேகமே? ஏன் பயப்படுறியள்?" தேவி கேட்டாள்.

"அன்பு அதிகமாக, அதிகமாக அதை இழந்திடுவமோ என்ற பயமும் கூடுது. தேவி இந்த உண்மையைச் சொல்லி எங்கடை உறவை அழிக்க என்னாலே ஏலாது. நான் சரியாக பயந்தனான். இந்த உண்மையை மறைக்க என்ரை உயிரையும் நான் குடுப்பன்."

"தங்கமக்கை, எனக்காவது சொல்லக் கூடாதே. சத்தியமாகச் சொல்லுறன், நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்N;டன்.

"என்னை அணுவணுவாகத் தின்று கொண்டிருக்கிற இந்த இரகசியத்தை ஆருக்காவது சொல்லத்தான் வேணும் தேவி, ஆனால் ஒன்று நான் செத்த பிறகுதான் அது அவனுக்குத் தெரிய வேணும்.

"சொல்லுங்கோ தங்கமக்கை"


பக்கம் 117

இளங்கோ தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். இதயம் வேகமாகத் துடித்தது. பரீட்சை முடிவைப் பார்க்கத் துடிக்கும் மாணவனைப் போல் அவன் நின்றான்.

"உலையை வைச்சிட்டு வந்தனான். அடுப்பிலே கொதிக்குது." தங்கமக்கை அவர்களை ´சஸ்பென்சில்´ விட்டு அடுக்களைக்குள் சென்றாள்.

"டேய் இன்னும் நீ கடைக்குப் போக இல்லையே. இஞ்ச என்னடா செய்யிறாய்?" தாயின் கேள்வி இளங்கோவை அங்கிருந்து அனுப்பியது. அவன் வேண்டா வெறுப்பாக நடந்தான். சோற்றடுப்பைப் பார்த்து விட்டு அவள் மீனைக் கழுவ ஆரம்பித்தாள். அவள் எண்ணமெல்லாம் கடந்து போன காலத்தைச் சுற்றியது.

தங்கம் சொன்ன கதை தேவியின் கண்களைக் குளமாக்கியது. "தங்கமக்கை, உங்கடை நெஞ்சு கல்லு. இல்லையென்றால் இதை எப்பவோ சொல்லியிருப்பியள்... ஒன்று சொல்லுறன். எங்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திட்டியள். என்ரை உயிர் இருக்கு மட்டும், இளங்கோக்காக நான் எதையும் செய்வன்." தேவி சொன்னாள். தங்கம் அழுதாள். அந்தக் கண்ணீரில் சோகமில்லை. ஓர் ஆறுதல் இருந்தது. அவள் இதயபாரம் குறைந்தது.

சூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூ

அரசியில் கல்லுப் பொறுக்கிக் கொண்டு இருந்தாள் மீனாட்சி. "கொம்மான் இப்ப வருவார். அவருக்கு இரண்டிலே ஒன்று சொல்ல வேணும்."

"அவனைக் கட்ட என்னாலே ஏலாது. வேற யாரையும் பார்க்கச் சொல்லு." செல்லம் புகையும் அடுப்போடு போராடிக் கொண்டிருந்தாள்.

"அடியே உனக்கு விசரே? என்னைத் தின்னுறதுக்குத்தானே எல்லாம் பிறந்திருக்கு. அவன் மீசை முளைச்சு


பக்கம் 118

கொஞ்ச நாள் ஆகவில்லை, அதுக்குள்ள குறுக்கால போறான். இவள் என்னடா என்றால் அவ நினைச்சதுதான் சட்டமாம்."

"அம்மா, எனக்கு அவனைப் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்யச் சொல்லுறாய்?"

"என்னடி அது பிடிக்கிறது? நாங்களெல்லாம் என்ன அவரைப் பார்த்து, இவரைப் பார்த்தே கலியாணம் கட்டினனாங்கள். அம்மா, அப்பு சொன்னால் அதுக்குப் பிறகு என்னடி பேச்சு?"

"அம்மா, அது அந்தக் காலம்."

"அப்ப நீ போய்த் தேடி ஒருத்தனை பிடிக்கப் போறியே? என்னடி நீ தேவடியாளுக்குப் பிறந்ததாக நினைப்பே? காலடிச்சு முறிச்சுப் போடுவன் கனக்கக் கதைச்சியென்றால்..."

"அடிச்சுக் கொல்லுங்கோவன், விருப்பமில்லையென்றால்..."

"சனியனே, இரண்டாங்கதை கதையாதே. உனக்கும், மணியனுக்கும் கலியாணம் நடக்கத்தான் போகுது. மூத்தவன் அங்கே ஆருக்கோ பின்னாலே திரியிறான். நான் எவ்வளவு நாளைக்கு நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறது? கொம்மானுக்கு நான் ஓமென்று சொல்லப் போறன். நாளைக் குறிச்சு சட்டு, புட்டென்று விசயத்தை முடிக்க வேண்டியதுதான்.

செல்லத்தின் கண்களில் கண்ணீர் வந்தது. அடுப்பின் புகையாலா? இல்லை இதயத்தில் இட்ட நெருப்பாலா?

"ஏனிப்ப கண்ணைக் கசக்கிறாய்?"

இதுவரை வெளியே இருந்து அவர்கள் உரையாடலைக் கவனித்த மகாதேவன், உள்ளே வந்தான்.

பக்கம் 119

"ஏனம்மா அவளைச் சும்மா அழ வைக்கிறாய்? மகாதேவன் கேட்டான்.

"புத்தி கெட்டவனே. அவளுக்குப் புத்தி சொல்ல வேண்டிய நீ நடக்கிற நடையைப் பார். ரோஷமில்லையேடா உங்களுக்கு? என்ரை மோளை என்னோட விடு, நான் அவளுக்குக் கட்டி வைப்பன். நீ உன்ரை வேலையைப் பார்."

வேதனையோடு மகாதேவன் தன் தங்கையைப் பார்த்தான். தனது செயல் தவறென எண்ணும் ஒருவன் தலை நிமிர்ந்து பேசும் சக்தியை இழந்து விடுகிறான். தேவியின் தொடர்பு அவன் குடும்பத்தில் புயலை உருவாக்கி விட்டது. அவன் வார்த்தைகள் மதிப்பிழந்தன. இல்லை அவனால் பேசவே முடியவில்லை. தங்கைக்காக அவன் வருந்தினான். ஆனால் அவன் என்ன செய்ய முடியும்?

"எடியே, கொம்மான் வருகுதில்லே, கண்ணைத் துடையடி." வேலுப்பிள்ளையர் வாய் நிறையச் சிரிப்புடன் வந்தார்.

"வா அண்ணே. ஏன் நிற்கிறாய்? இரன்."

மகாதேவன் கதிரையை இழுத்துப் போட்டான்.

"மேனை, போய் ஒரு சோடா வாங்கிக் கொண்டு வாவன்." மகாதேவனைத் தாய் வெளியேற்றினாள். செல்லம் உள்ளே போய் கதவிடுக்கில் மறைந்து கொண்டாள்.

"என்ன மீனாட்சி, நான் சொன்ன விசயம்...?" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"அண்ணே, உனக்குத் தெரியுந்தானே எங்கடை நிலைமை. வீடும், தோட்டமும் அவளுக்குத்தானே. இருக்கிற நகையோட இன்னும் கொஞ்சம் செய்யலாம்."

"அப்ப எல்லாம் சரியென்று சொல்லு." வேலுப்பிள்ளையர் சொன்னார்.


பக்கம் 120

"எனக்கு இவன் மூத்தவனிலேயும் நம்பிக்கை இல்லை. நீ அவனுக்கும் எங்கேயும் ஒன்றைப் பேசன்!"

"அவனுக்கே பொம்பிளையில்லை? நீ பயப்படாதே. அவனுக்கு நல்ல இடம் நான் பார்க்கிறன். இவள் செல்லத்தின்ரையை எப்ப செய்வம்?"

"வாறமாசம் ஒரு நல்ல நாளிருக்கு. தப்பினால் மூன்று மாசம் போக வேணும்."

"இந்தா அவளின்ரை குறிப்பு. அதுகளுக்கு அருமையான பொருத்தமாம். நீங்கள் சரியென்றால் வாhற மாசமே வைக்கலாம்."

"எனக்கு ஒன்றுமில்லை. இவன் மகாதேவனிட்டையும் ஒரு சொல்லு சொல்லுவம்."

கதவிடுக்கில் செல்லம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். ´அப்ப எனக்கு மணியன்தானோ புருசன்? கடவுளே இது என்ன அநியாயம்? ஐயோ எங்கே போவன்? ஆர் எனக்கு இருக்கீனம்? அண்ணனும் பேசாமல்தானே நிற்குது. அம்மா தான் நினைச்ச மாதிரி எல்லாம் செய்து போடுவா.´ ஒன்றும் செய்ய முடியாது அவள் தவித்தாள்.
´இளங்கோ... ஏன் என்ரை மனம் எப்பவும் அதை நினைக்கிறது. எனக்கும், அதுக்கும் என்ன உறவுß அது என்னைக் கட்டுமே...? கதைக்கிறதேயில்லை. அதுக்கு என்னைப் பிடிக்க இல்லையாக்கும்.´ அவள் ஏதேதோ எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். மகாதேவன் சோடாவோடு வந்தான்.

"மேனை, இவள் செல்லத்தின்ரை விசயம்... வாற மாசம் நல்ல நாளொன்று இருக்குதாம். செய்யலாமென்று நாங்கள் நினைக்கிறம்." மீனாட்சி சொன்னாள்.

"இதிலே நான் என்னத்தைச் சொல்லுறது? அவள் தங்கச்சியைக் கேட்டுப் போட்டு செய்யுங்கோவன்." மகாதேவன் சொன்னான்.

"அவனும் சரியென்றிட்டான். அப்ப, அண்ணே நீ வேண்டியதைக் கவனி."


பக்கம் 121

மகாதேவன் வெறுப்போடு அறைக்குள் சென்றான். தங்கையின் கண்ணீர் ததும்பும் முகத்தைப் பார்த்தான்.

"செல்லம், உனக்கு விருப்பமில்லையென்றால் சொல்லன். ஏன் பயப்படுகிறாய்?" மகாதேவன் கேட்டான்.

"என்னைப் பார்த்தால் தெரிய இல்லையே? அண்ணே, எனக்காக நீ சொல்லன்."

"என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லையே! தங்கைச்சி, மனமுடைஞ்சு போய் நான் நிற்கிறன். அம்மாக்கு என்னைக் கண்டாலே பிடிக்க இல்லை."

"அண்ணே, எப்பவுமே என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லைத்தானே! நான் பெட்டைதானே! எல்லாருக்கும் பேய்ச்சிதானே! என்ரை சொல்லை அம்மா கேட்பாவே?"

"செல்லம், உனக்கு வேற யாரிலேயும் விருப்பமே?" மகாதேவன் தங்கையின் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் படபடத்தன. எப்படி அவள் அதைச் சொல்வாள்? அவனுக்கு விருப்பமோ என்று அவளுக்குத் தெரியாதே? ஒருதலைக் காதலா அது? அவள் தவிததாள். ´இல்லை´ என்பது போல் தலையசைத்தாள். அதற்குள் வேலுப்பிள்ளையர் விடைபெற்றார். வீடு அமைதியில் ஆழ்ந்தது. அவள் யாரோடு வாழ வேண்டும், அந்த வாழ்க்கை என்று ஆரம்பமாக வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப் பட்டு விட்டன.

இரவு மணி பத்து இருக்கும். செல்லம் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தாள். தாயோ நாட்டுக்கூத்து பார்க்கம் போய் விட்டாள். மகாதேவன் வாசலில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். ஆட்டுக்குட்டி கத்தியது. விடாது தொடர்ந்து கத்தியது. அவள் எழுந்து பாயில் சிறிது நேரம் அமர்ந்தாள். ஆட்டுக்குட்டியின் கத்தல் அடங்கவில்லை. அவள் எழுந்து அதைப் பார்க்கச் சென்றாள் ஆட்


பக்கம் 122


டுக்குட்டியோ தன்னைக் கட்டியிருந்த கயிற்றில் தன் கால்களை மாட்டிக் கொண்டு அசைய முடியாது தவித்தது. ´டார்ச்சை´ நிலத்தில் வைத்து அதன் சிக்கை அவிழ்க்க முயன்றாள் அவள். தாயின் வார்த்தையை மீற முடியாமல் அவள் மாட்டிக் கொண்டாள். இங்கே ஆட்டுக்குட்டி மாட்டியிருக்கிறது. அவள் அதை அணைத்தவாறு சிக்கை அவிழ்த்தாள். அதன் மெல்லிய உடலை கன்னங்களில் பதித்தவாறு எண்ணங்களை எங்கோ ஓட விட்டாள்.

"ஆ..." ஓசை வந்த ஒழுங்கையை நோக்கினாள் அவள். ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்தது. பால் வெள்ளம் போல் பாயும் நிலவொளியில் ஒரு காலைக் கையில் பிடித்தவாறு நின்றது இளங்கோவேதான். ஆட்டுக்குட்டி அவள் கையில் இருந்து தாவியது. அவள் உள்ளமும்தான். நிலவின் ஒளியில் வெள்ளிக் கிண்ணம் போல் மின்னும் கன்னத்தையும், சுருண்டு இரு பக்கங்களிலும் திரண்டு அவ்வழகை மறைத்துத் தன்னழகைக் காட்டு முயலும் கருங்கூந்தலையும் பார்த்தவாறு இளங்கோ நின்றான்.

"செல்லம் காலிலே ஏதோ குத்திப் போட்டுது. உந்த ´டார்ச்´ சைக் கொண்டு வாவன்." அவன் மிக மிக மெதுவாகப் பேசினான். ஒருகணம் அவள் தயங்கினாள். பின்னர் அவர்களைப் பிரிக்கும் வேலியை நோக்கி நடந்தாள். அவன் வானத்தைப் பார்த்தான். நிலவு அங்கேதானே நிற்கிறது. எப்படி அவனருகில் வந்தது? அவன் கரங்கள் வேலியில். கண்களோ அவள்; வேல் விழியில். நிலவு, நிலவில் குளிக்கிறதே. மயக்கும் அவன் பார்வையைத் தாங்காது அவள் தன் பாதத்தை நோக்கினாள்.

"செல்லம்" அமுதென இனிக்கும் அச்சொல்லை அன்பெனும் தேனில் குழைத்து அவன் அழைத்தான். மல்லிகை மலரின் மணம் அவனை மயக்கியது. தென்றலாள் அதைச் சுமந்து வந்தாள். பந்தலில் இருந்தது மல்லிகை மலர். பக்கத்தில் நிற்பது...?

பக்கம் 123

"செல்லம்" மீண்டும் குழலின் நாதமென அவள் காதில் விழுந்தது அந்தக் குரல்.

"டார்ச்" அவள் நீட்டினாள்.

"காலிலே ஒன்றும் குத்த இல்லை." இளங்கோ சொன்னான்.

"என்ரை இதயத்திலேதான்..."

´சரியான கள்ளன்.´ அவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

"மாமி கூத்துக்குப் போயிட்டாவே?"

அவள் ஆமெனத் தலையசைத்தாள்.

"கொண்ணன்...?"

அவள் வீட்டைக் கையால் சுட்டிக் காட்டினாள்.

"நித்திரையே?"

அவள் அதற்கும் தலையசைத்தாள். ஒருகணம் அவன் பேசவில்லை. பின்னர் கேட்டான்.

"கிணற்றடியில் போயிருந்து கதைப்பமே?"

அவள் நெஞ்சு படபடவெனத் துடித்தது. மின்னலென மறைந்து விடுமா இந்த இன்பம்?

´அதுக்கும் என்னிலே...´ அவள் உள்ளம் துள்ளியது. ´நெஞ்சுக்குள் இருக்கிறதெல்லாம் சொல்லிப் போட வேணும்.´ அவள் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். ´கொஞ்சமும் பயமில்லை இதுக்கு´ அவள் மெல்லத் திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள். இளங்கோ ஏமாற்றத்தோடு அவள் பின்னழகில் தன்னை இழந்து நின்றான். செல்லம் வீட்டினுள் எட்டிப் பார்த்தாள். மகாதேவனின் குறட்டை ஒலி நன்றாகக் கேட்டது. அவள் திரும்பி இளங்


பக்கம் 124

கோவைப் பார்த்தாள். பின்னர் கால்கள் பின்னலிட கிணற்றடியை நோக்கி நடந்தாள். இளங்கோ இன்ப மிகுதியில் தன்னை மறந்தான். ஒரே தாவலில் வேலியைத் தாண்டி அவளைப் பின் தொடர்ந்தான். கிணற்றடியை இருவரும் அடைந்தனர். அவள் இருதயம் பலமாக அடித்தது. நிலவின் இனிமை! அவர்கள் தேடித் தவித்த தனிமை! அவன் அவளுக்கு மிக அருகில் நின்றான். இளந்தென்றலாள் அவர்களோடு விளையாடினாள். காற்றில் தவழ்ந்த அவள் கருங்கூந்தல் அவன் கன்னத்தைத் தீண்டியது. அந்த இதமான சுகத்தில் இமைக்கவும் மறந்து அவள் அழகைப் பருகினான். கரத்தை உயர்த்தி கூந்தலை அவள் ஒதுக்கினாள். பாய்ந்து கொண்டிருந்த மின்சாரமோ தடைபடவில்லை. ´கல கல´ வென்ற கண்ணாடி வளையலின் ஓசையை அவள் சிரிப்பொலியென எண்ணி அவன் ஏமாந்தான்.

"செல்லம்" அவள் கருவிழிகள் அவன் விழிகளைச் சந்தித்தன.

"செல்லம்... எனக்கு உன்னிலே... உனக்கு...?

அவள் ´கிளுக்´ கெனச் சிரித்தாள். இது சொல்லித் தெரிய வேண்டுமா? அவனுக்கும் வெட்கமாக இருந்தது. அவள் மெல்லிய கரத்தில் தன் கரத்தை வைத்தான். அவள் நடுங்கும் தன் கரத்தை இழுத்துக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அதாவது வார்த்தைகள் வரவில்லையே தவிர இதயங்கள் பேசின. ´நான் அவசரப்பட்டு விட்டேனா?´ அவன் நினைத்தான்.

´கையை இழுத்துப் போட்டன். அதுக்கு கோவமோ தெரியாது, நானென்ன செய்ய, ஆசையிருந்தாலும் வெட்கம் விடுகுதே?´ அவள் நினைத்தாள்.

"செல்லம்" அவன் எச்சிலை விழுங்கினான். நெஞ்சில் நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். "என்னை நீ கலியாணம் கட்டுவியே?"


பக்கம் 125

அவள் பளபளக்கும் விழிகள் மீண்டும் உயர்ந்தன. இம்முறை அதன் ஓரங்களில் பனித்துளியென இரு துளி நீர் திரண்டிருந்தது. அவனுக்கு என்னமோ செய்தது.

"நான் பிழையாக ஏதும் கேட்டுப் போட்டனே?" அவன் கேட்டான்.

"இல்லை" யென அவள் தலையசைத்தாள். இரு துளிகள் நீரும் அவன் கையில் பட்டுத் தெறித்தன.

"ஏன் செல்லம்?" அவன் மீண்டும் அவள் கரத்தைப் பற்றினான். அவள் தடுக்கவில்லை.

"பேசு செல்லம், ஏன் பயப்பிடுகிறாய்?"

அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் முதன் முதலாகப் பேசினாள்.

"எனக்கும் மணியனுக்கும் கல்யாணமாம். நீங்கள் என்னைக் கட்டாட்டால் நான் செத்துப் போவன்." சிறு குழந்தை போல் அவள் பேசினாள். அவனுடல் சிலிர்த்தது. அவனை நம்பி ஓர் உயிர். அதுவும் அவனில்லையென்றால் அவள் செத்துப் போவாளாம். அவள் இதயத்தில் அவனுக்கு ஓர் இடம். அதுவும் மிக உயர்ந்த இடம்.

"செல்லம்" அவன், அவள் கரத்தை எடுத்து ஒரு முத்தம் கொடுத்தான். "நீ இல்லையென்றால் எனக்கும் வாழ்க்கையில்லை. உன்னைத்தானே நாளெல்லாம் நினைச்சுக் கொண்டிருக்கிறன்."

"நினைச்சுக் கொண்டிருந்தால் போதுமே? கலியாணத்துக்கு நாளும் குறிச்சுப் போட்டினம்."

"நீ, விருப்பமில்லையென்று சொல்லுறதுதானே?"

"நான் சொன்னனான். அவே கேட்க மாட்டினம்."

பக்கம் 126

"உனக்குத் தெரியுந்தானே செல்லம், கொம்மா என்னைத் தன்ரை மருமகனாக ஒரு நாளும் ஏற்க மாட்டா."

"அப்ப, என்ன செய்யிறது?"

"செல்லம், இஞ்ச நாங்கள் ஒண்டாக வாழ ஏலாது"

"அப்பிடியென்றால்..."

"ஓம்... நாங்கள் எங்கேயாவது ஓடிப் போகத்தான் வேணும்."

"ஐயோ, எனக்குச் சரியான பயம்"

"என்னை நம்புறியே?"

"வேற ஆரை நான் நம்புறது?"

"நம்பிக்கை இருந்தால் என்னோட வாறதுக்கு ஏன் பயப்படுறாய்?"

அவள் அவனைப் பார்த்தாள். அவள் குரல் தழதழத்தது. "என்னைக் கைவிட மாட்டியளே?"

"செல்லம், நீ என்ரை உயிரில்லே!"

"அது ஒரு நாள் போயிடும். அப்பிடிப் போனாலும் என்னைக் கூட்டிக் கொண்டு போவியளே?"

"செல்லம்" அவன் அவளை வாரியணைத்துக் கொண்டான். "செல்லம், செல்லம்"

"விடுங்கோ" விழிகள் நான்கும் மிக மிக அருகில் நின்றன. அடக்கி வைத்த அன்பையெல்லாம் அவை பரிமாறிக் கொண்டன.

"செல்லம், உன்னை நான் எப்பவுமே விட மாட்டன்." எந்த இளம் பெண்ணும் தன் அன்புக்குரியவனிடம் இருந்து


பக்கம் 127

எதிர்பார்க்கும் அந்த வார்த்தைகள். செல்லத்தின் உடலெங்கும் ஓர் இன்பப் புயல் வீசுகிறது. அவள் அதரங்களின் துடிப்பில் என்ன வார்த்தையோ?

"ம்... நான் போக வேணும். அண்ணன் எழும்பினால்...?"

"செல்லம் வாற கிழமை சந்திப்பம். அப்ப நான் என்ரை திட்டத்தை சொல்றன். எங்கேயாவது போய் இரண்டு பேருமாக இருப்பம்."

"உங்களை நம்பி நான் எங்கேயும் வருவன். எப்பிடிச் சந்திக்கிறது?" பேசாத செல்லம் என்னவெல்லாம் பேசுகிறாள்! அவளுக்கே வெட்கமாக இருந்தது.

"வாற திங்களும் கூத்திருக்கு. கொம்மா தப்ப விட மாட்டா. நாங்களும் சந்தர்ப்பத்தை விடக் கூடாது."

"நான் போகட்டே? அண்ணன் எழும்பி வந்தாலும்..." அவள் அவன் அணைப்பை விட்டு விலகினாள்.

"செல்லம்" அவன் கண்களால் மீண்டும் அவளை அருகில் அழைத்தான். அவள் அருகில் வந்தாள். அவள் சிறு விரல்கள் அவன் கன்னத்தைத் தடவின. அவன் எங்கோ, எங்கோ பறந்தான். அவன் எதிர்பாராத போது கன்னத்தில் கிள்ளி விட்டு அவள் துள்ளி ஓடி மறைந்தாள். அவன் இதழ்களில் இன்பப் புன்னகை மலர்ந்தது. அவள் கிள்ளிய, அந்த இன்ப வேதனை அப்படியே நிலைக்காதா என அவன் ஏங்கினான். இமைகள் மூடாத ஓர் இரவு அவர்களை விட்டு மறைந்து விடலாம். ஆனால் அந்த இனிய இரவு அவர்கள் இதயங்களில் என்றுமே மறையவில்லை.


12
பக்கம் 128


வெறுந் தரையில் படுத்திருந்தான் மகாதேவன். அவன் விழிகள் கூரையை நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால் கூரை அவனுக்குத் தெரியவில்லை. மனதை ஏதொ அரித்துக் கொண்டிருந்தது.

எதையோ இழந்தவன் போலல்ல, எல்லாவற்றையுமே இழந்தது போன்ற நினைப்பு - வெறுமை - எல்லாமே வெறுமையாக இருந்தது.

"அண்ணே" அவன் அசையவில்லை.

"அண்ணே" செல்லம் மீண்டும் கூப்பிட்டாள்.

"ம்..."

"என்ன அண்ணே, எழும்பி இரன். ஏனிப்பிடி இருக்கிறாய்? தேத்தண்ணியைக் குடி"

அவன் எழுந்து தேத்தண்ணியையும், ஒரு கையில் பனங்கட்டியையும் வாங்கிக் கொண்டான். செல்லம் தரையில் இருந்தாள். முழந்தாள் இரண்டையும் கைகளால் கட்டிக் கொண்டு செல்லம் அவனைப் பார்த்தாள். அவன் தன் விழிகளைத் திருப்பிக் கொண்டான்.

"உனக்குச் சுகமில்லையே?" செல்லம் கேட்டாள்.

"சும்மா கரைச்சல் தராமல் போ." அவன் எரிந்து விழுந்தான். அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. தன் கால் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தங்கையைப் பார்த்தான்.

"செல்லம்"


பக்கம் 129

செல்லத்தின் விழிகள் மலர்ந்தன. அண்ணன் அன்பாகத்தான் அழைக்கிறான்.

"ம்..."

"உனக்கு மணியனைப் பிடிக்க இல்லையே" அவன் கேட்டான்.

"உனக்குப் பிடிப்பே?" அவள் திருப்பிக் கேட்டாள்.

"எனக்கு விருப்பமில்லை." அவன் சொன்னான்.

"அம்மாக்குச் சொல்லன்:"

மகாதேவன் முகத்தில் இருள் பரவியது. ஏன், தாயை எதிர்த்து அவனால் பேச முடியாமலிருக்கிறது? இதுவரை காலமும் அவன் வார்த்தைக்கு அங்கு மதிப்பிருந்தது. ஆனால் இன்று...? தேவியின் தொடர்பு தவறானதா...? அவனால் அதைத் தீர்மானிக்க முடியவில்லை. தான் செய்வது சரியானது என்று அவனால் அடித்துச் சொல்ல முடியவில்லை. அது அவனது கோழைத்தனமா அல்லது தேவியின் துணிவின்மையா?

உலகம் ஆயிரம் சொன்னாலும், தான் செய்வது சரியானது என்று ஒரு தீர்க்கமான முடிவுக்கு அவன் வந்திருந்தால் அவனை அசைத்து விட முடியாது.

"என்ன பேசாமல் இருக்கிறாய்?" செல்லம் கேட்டாள்.

"செல்லம்... எனக்கொரு ஆசை... எவ்வளவோ ஆசைகள்... அதையெல்லாம் அம்மாக்காக, இந்த ஊருக்காக விட்டுக் குடுத்திருக்கிறன்... ஏன் தெரியுமோ? என்னாலே உன்ரை வாழ்க்கை பாழாகக் கூடாது. நீ நல்ல ஒருவனைக் கட்டி நல்லா இருக்க வேணும்.... கேட்டிதே?"

செல்லம் "ம்" கொட்டினாள்.


பக்கம் 130

"நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன். உனக்குப் பிடிச்சால் சொல்லு" அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் ஆவலோடு அவனைப் பார்த்தாள். அவன் குரலைச் செருமிக் கொண்டான். தேத்தண்ணியின் கடைசி மண்டியையும் எடுத்து வாயில் விட்டுக் கொண்டான்.

"உனக்கு, உவன் இளங்கோவைப் பிடிச்சிருக்கே?"

செல்லத்துக்கு எங்கோ இன்ப வானத்திலே தவழ்வது போன்ற உணர்ச்சி. கண்கள் மலர்ந்தன.

"அண்ணே" அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் கால்களைத் தன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. தன் தங்கையின் முகத்தில் தோன்றிய வண்ணக் கோலங்களை மகாதேவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவனை நான் இன்னும் கேட்க இல்லை..."

"அதுக்கும் என்னிலே விருப்பம்" செல்லம் சொல்லி விட்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

மகாதேவன் முகத்தில் புன்னகை பரவியது.

"அப்பிடியென்றால்...?"

அவள் முகத்தை மூடிக் கொண்டு கதவிடுக்கில் மறைந்தாள்.

"அப்ப, நான் அவனோட கதைக்கட்டே...?" மகாதேவன் கேட்டான்.

"அம்மாதான்..." செல்லம் இழுத்தாள்.

"அதைப் பற்றிப் பயப்பிடாதே. அதுகள் பழசுகள். ஒரு நாளும் மாறாது. அதுகளைப் பார்த்தால் நாங்கள் வாழ முடியாது."

"இல்லையண்ணை... அம்மா அழும்... அதுவும் எங்களுக்காக எவ்வளவு கஷ்டப் பட்டது?


பக்கம் 131

"கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாப் போயிடும். எங்களை விட்டால் அவவுக்கும் ஆர் இருக்கினம்? நான் இளங்கோ வீட்டை போயிட்டு வாறன்..."

"முதுகெல்லாம் புழுதி" செல்லம் சொன்னாள். அவன் முதுகைக் கையால் தட்டினான். அவள் கொடியிலிருந்த துவாயை எடுத்துத் தட்டி விட்டாள்.

மகாதேவன் இளங்கோ வீடு நோக்கி நடந்தான். அது அவனது நிமிர்ந்த நடைதான். செல்லத்தின் மனதில் ஒருவித அமைதி நிலவியது.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +


மகாதேவன் இளங்கோ வீட்டிற்குப் போன போது தங்கமும் அங்கிருந்தாள்.

"வா தம்பி. வா... இப்ப எல்லாம் உங்களைக் காணக் கிடைக்குதில்லை." தங்கம் வரவேற்றாள்.

"மாமி, இளங்கோ இல்லையே?" மகாதேவன் கேட்டான்.

"வந்திட்டனடாப்பா" உள்ளே இருந்து இளங்கோ குரல் கொடுத்தவாறு வெளியே வந்தான். முன்பு போல் மகாதேவனை ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. தன் காதலை நண்பன் ஏற்றுக் கொள்வானா என்ற தயக்கம் அவனுக்கு இருந்தது. அவனைக் கலந்து கொள்ளாமலே பல விடயங்களைத் தான் தீர்மானித்ததும் ஒரு குற்றவாளியின் மனநிலையை அவனுக்குக் கொடுத்தன.

"வாறியே, இப்பிடி ஒரு நடை போயிட்டு வருவம்:" மகாதேவன் நண்பனின் தோளில் கை போட்டவாறு கேட்டான்.

"கொஞ்சம் இருங்கோவன்ரா. தேத்தண்ணி போட்டுத் தாரன்"


பக்கம் 132

"நீங்கள் போடுங்கோ மாமி. நாங்கள் வந்திட்டம்." மகாதேவனும், இளங்கோவும் ஒழுங்கையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். திருவிழா ஒலிபெருக்கி சினிமாப் பாடலொன்றை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் ஏதேதோ கதைக்க முயன்றார்கள். ஆனால் இருவர் மனமும் அதில் ஒன்றவில்லை. முடிவில் மகாதேவன் ஆரம்பித்தான்.

"மச்சான், ஒரு விசயம் எனக்கு நீ மறைச்சுப் போட்டாய்."

இளங்கோவின் இதயம் ´பட பட´ வென அடித்துக் கொண்டது. ´செல்லம் சொல்லிப் போட்டாளோ!´ அவன் மனம் எண்ணமிட்டது.

"என்னடாப்பா, நீ சொல்லுறாய்?"

இளங்கோவின் நா தடுமாறியது. இருவரும் தாங்கள் வழக்கமாக இருந்து கதைக்கும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். இளங்கோ ஒரு கிளையை ஒடித்து நிலத்தில் போட்டுக் கொண்டிருந்தான். மாலை நேரம் பறவைகள் எல்லாம் கூடுகளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன. மரத்தின் மேலும் குருவிகளின் சத்தம் கேட்டது.

"அதை நானே சொல்ல வேணுமே?" மகாதேவன் கேட்டவாறு தொடர்ந்தான். "இளங்கோ, செல்லம்... எங்கடை செல்லம்.."

"மகாதேவா, கோவிக்காதே. எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிச்சிருக்கு..."

"மச்சான்... எனக்குப் பெரிய சந்தோஷமடாப்பா"

"மகாதேவா" இளங்கோவின் உடல் சில்லிட்டது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. நண்பனின் எதிர்ப்பைத்தான் அவன் எதிர்பார்த்தான். இளங்கோவின் கண்களில் நன்றி பெருகியது. அவன் தன் நண்பனின் கையைப் பற்றினான்.


பக்கம் 133

"மகாதேவா உனக்கு... உனக்கு என்னை..." இளங்கோ பேச்சை முடிக்கவில்லை. அவன் கண்கள் கலங்கின. அவன் அந்திவானத்தைப் பார்த்தான்.

"இந்தத் தகப்பன் பெயர் தெரியாத தரித்திரத்தை உன்ரை தங்கைச்சிக்கு..."

மகாதேவன் அவனைப் பேச விடவில்லை.

"பேய்க்கதை கதையாதே... நாங்களென்ன நேற்று, முந்தநாள் பழக்கமே! ஒன்றாப் படிச்சு... ஒன்றாய் விளையாடி... திண்டு குடிச்சனாங்கள்... செல்லம் உனக்குத் தெரியாதவளே? இல்லை அவளுக்குத்தான் உன்னைத் தெரியாதோ? மச்சான்... எனக்கு ஒரு விசயம் விளங்குது. அன்பு, பாசம், காதல் இதெல்லாம் எங்கே, எப்பிடி உருவாகுது என்று தெரியாது. உருவாகிட்டால் அந்தச் சக்தி மகத்தான சக்திதான். அது தூய்மையாக இருந்தால் இந்த ஊரை மாத்திரமில்லை, இந்த உலகத்தையே எதிர்த்துப் போராடும்…” மகாதேவன் எதையோ நினைத்து அப்படிப் பேசினான்.

“மச்சான், நான் கவலைப் பட்டது ஊருக்காக இல்லை… நீ விரும்ப இல்லையென்றால் அது எனக்குப் பெரிய கவலையாக இருந்திருக்கும்… ஊரிலே எனக்கு இருக்கிற மானக்கேடு உனக்குத் தெரியும். அதுதான் நான் செல்லத்தையும் கூட்டிக் கொண்டு எங்கேயாவது போகலாம் என்று பார்க்கிறன். கொம்மா கடைசி மட்டும் ஒத்துக் கொள்ளா.

“ஓடிப் போகப் போறியளே?” மகாதேவன் கேட்டான். “டேய் நான் என்ன மண்ணாங்கட்டிக்கே இருக்கிறன்? மச்சான், நீ கவலைப் படாதே. வாற வெள்ளிக்கிழமை உனக்கும், அவளுக்கும் பிள்ளையார் கோவிலிலே தாலி கட்டு. தடுக்கிறவன் தடுத்துப் பார்க்கட்டும்.

“ஏன் வம்மை விலைக்கு வாங்குவான். வேலுப்பிள்ளையர், மணியன் சும்மா இருப்பீனமோ? கட்டாயம் ஏதும் கலாதி வரும். பிறகு எங்களுக்குத்தானே மரியாதை இல்லை?” இளங்கோ கேட்டான்.


பக்கம் 134

“அட, கோபால் வாறான். வா மச்சான் வா.” மகாதேவன் அழைத்தான். கோபால், முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அவனது இருள் படிந்த முகம் சிறிது மலர்ந்தது.

“என்னடாப்பா, புளியடியிலே புரட்சிச் சதியோ?” கேட்டவாறு அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான். மூவரும் கலந்து கதைக்க ஆரம்பித்தார்கள்.

“மச்சான், கல்யாணம் முடிஞ்சிட்டால்… இஞ்ச ஒரு தம்பியும் ஒண்டும் செய்ய ஏலாது. ஏன் நாங்கள் இஞ்ச கல்யாணத்தை வைப்பான். சந்நிதியிலே வைச்சுத் தாலியைக் கட்டிக் கூட்டிக் கொண்டு வருவம்.” கோபால் வழி சொன்னான்.

“அது நல்ல ´ஐடியா´. செல்லத்தை, கோயிலுக்கு என்று அம்மாட்ட சொல்லி நான் கூட்டிக் கொண்டு வாறன்." மகாதேவன் தன் பங்கை விளக்கினான்.

"நானும், அக்காவும் கோயிலுக்கு வாறம். இன்னும் நாலைஞ்சு பெடியளை விசயத்தைச் சொல்லாமல் கூட்டிக் கொண்டு போகலாம். ஆக்களும் வேணுமில்லே!" கோபால் பேசினான்.

"கொம்மாவைக் கேட்டனீயே?" மகாதேவன் கேட்டான்.

"இல்லையடாப்பா... அவவுக்குத் தெரிய வேண்டாம். தாலியைக் கட்டி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவம். எல்லாத்துக்கும் காசு வேணுமே!" இளங்கோ பதிலளித்தான்.

"அதைப் பற்றிக் கவலைப் படாதே. எங்கடை செல்லத்துக்குச் சிலவழிக்க இல்லையென்றால் ஆருக்குச் சிலவழிக்கிறது?" மகாதேவன் தன் கடமையை நினைவூட்டினான். பல மணி நேரம் நண்பர்கள் கதைத்து இறுதி முடிவோடு வீடு திரும்பினர். பெரியதொரு சாதனையை ஏற்படுத்தத் தயாராகும் வீரர்கள் போலிருந்தது அவர்கள் மனோநிலை. இந்தத் துணிவும், மனோதிடமும் ஏன் தேவியின் விடயத்தில்

பக்கம் 135

தனக்கு இல்லையென மகாதேவன் நினைக்காமல் இல்லை. நண்பர்களின் இத்தனை ஒத்துழைப்பு இருந்த போதும் தன் பிறப்பின் இரகசியம் இளங்கோவின் இதயத்தை அன்று அதிகமாக அரித்தது.

++ ++ +++ +++ +++ +++

"தேவியக்கா, தேவியக்கா" மெதுவாகச் செல்லம் வேலியருகில் நின்று அழைத்தாள். நிலவின் ஒளி வெள்ளத்திலே அவளும் ஒன்றிப் போய் நின்றாள்.

"செல்லம், கொம்மா திருவிழாவுக்குப் போயிட்டா போலை..." தேவி சிரித்துக் கொண்டே வந்தாள். இருவரும் அலம்பல் வேலி அருகே இருக்கின்றனர்.

"ஓமக்கா... எப்பிடி இப்ப உங்களுக்கு...?"

"நல்ல சுகமடி... தம்பி பிறகும் தியேட்டருக்குப் போயிட்டான். துணைக்கு தங்கமக்கை வாரனெண்டவ. இன்னும் காண இல்லை."

"தங்கம் மாமியோ...? அதுக்குச் சாப்பாடு போட்டிட்டுத்தானே வருவா"

"எதுக்கு...? ஓகோ... அவருக்குகோ?"

"சும்மா பகிடிதான். போங்கோ அக்கா"

"எடியே, உனக்கு அவன் மணியனைப் பேசியாச்சு. நீ இன்னும் இளங்கோவை நினைச்சுக் கொண்டிருக்கிறியே?"

"மணியன், அவன் பழைய காலத்து ஆள். அந்த ஆக்கள் மாதிரியேதான். அக்கா, சமுதாயத்துக்குப் புதிய பூக்கள் வேணும். பழைய குருட்டு நம்பிக்கைகளையும், கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளையும் தகர்த்து எறிகிற உறுதியுள்ளவை வேணும்."

"அதெல்லாம் உன்ரை இளங்கோட்டை இருக்காக்கும்."


பக்கம் 136

"ஏனக்கா, மணியனைப் போல ´அது´ சீதனங் கேட்டே வந்தது? அன்பு உள்ளம் இருந்தால் நல்ல பண்பெல்லாம் தானாக வருகுது. ´அதுக்கு´ என்னிலே விருப்பம்... எனக்கும் அதிலே..."

"கொள்ளை ஆசை" தேவி சிரித்தாள். செல்லம் கன்னஞ் சிவந்தாள்.

"செல்லம், எங்கடை ஊரிலே ஆம்பிளையளே தாங்கள் விரும்பினவளைக் கட்ட முடியாமல் போயிடுது. நீ ஒரு பொம்பிளை... அதுவும் இளங்கோ... ஊர் சும்மா இருக்காதே!"

"அதை நினைச்சால்தான் பயமாயிருக்கு. வேலுப்பிள்ளை மாமா சும்மா இருக்க மாட்டார். என்ரை நல்ல காலம். அம்மா கோவிச்சாலும் அண்ணனுக்கு விருப்பம். அண்ணன் என்னைக் கைவிடாது."

தேவியின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டது. தேவன்... கைவிட மாட்டான். அவள் எண்ணங்கள் அவனது கடைசிச் சந்திப்பில் மிதந்தன. செல்லம் ஏதேதோ சொன்னாள். தேவியோ ´ம்´ கொட்டிக் கொண்டிருந்தாள்.

"அக்கா, என்ன அக்கா, நான் பேசுறன். நீங்கள் யோசிச்சுக் கொண்டு..." செல்லம் கேட்டாள்.

தேவி பூவரசம் இலையொன்றை ஒடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். செல்லம் மணப் பெண்ணாவாள். இளங்கோவோடு கரம் கோர்த்துத் திரிவாள். கணவனுக்கு உணவாக்கி அவனோடு உண்பாள். குழந்தை பிறக்கும். அதை மார்போடு அணைத்து மகிழ்வாள். தன்னைக் காட்டி "இந்த மாமியைப் பார்" என்பாள். குழந்தை சிரிக்கும்.

"செல்லம்... எனக்குப் பொறாமையாக இருக்கடி" தேவியின் கண்கள் கலங்கின.

"அக்கா..." செல்லம் தடுமாறிப் போனாள்.


பக்கம் 137


"எடியே, நீ நல்லா இருக்க வேணுமடி. செல்லம், உன்னிலே எனக்கு எவ்வளவு அன்பிருந்தாலும் குழந்தை, குட்டி, புருசன்... என்று யாரை நினைச்சாலும் எனக்கு... எனக்கு... என் நிலைதானடி தெரியிது. கடவுளே... எனக்கு ஏனிந்தக் கூடாத மனம்?"

"அக்கா, அழாதேங்கோ. நான்தான் உங்களை அழ வைச்சிட்டன்."

"இல்லையடி, நான் அழவென்றே பிறந்தனான்." எப்பொழுதுமே அவர்கள் உரையாடல் தேவியின் கண்ணீரில்தான் முடியும். தேவி தன்னுள்ளத்தைத் திறந்து சொல்லி அழுவது செல்லத்திடந்தான்.

"நீ போய்ப் படு செல்லம்."

"தங்கம் மாமி இன்னும் வர இல்லை...ß"

"இன்னுங் கொஞ்சத்திலே வருவா."

"நீ போய்ப் படு" தேவியும் செல்லமும் பிரிந்து சென்றனர். செல்லம் வீட்டுக்குள் சென்ற போது மகாதேவன் தூக்கம் வராது தரையில் புரண்டு கொண்டிருந்தான். நிலவு அவனைச் சுட்டெரித்தது. அவன் எழுந்து வெளியே வந்தான். அவன் கண்கள் வேலியினூடே சென்று தேவியைத் தேடின. வீட்டின் விளக்கொளியில் அவள் நிற்பது நிழலாகத் தெரிந்தது. அந்தக் கடைசிச் சந்திப்பு நிழலாக அவன் நெஞ்சில் ஓடியது. அவளை அவன் அணைத்த போது... அவள் கரங்கள் அவன் தலையைக் கோதிய போது...

தேவன் தன் தலைமயிரைக் கைகளால் குழப்பிக் கொண்டான். வீட்டினுள் நுழைந்து செல்லத்தை நோக்கினான். புன்னகை மலர அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே வந்தவன் இளங்கோ வீட்டை ஆராய்ந்தான். தங்கத்தின் குரல் அவனுக்குக் கேட்டது. விரைவாக அவன் தேவியின் வீட்டை நோக்கி நடந்தான்.


பக்கம் 138

தேவி தூணோடு சாய்ந்தவாறு கற்பனை உலகில் நின்றாள். தேவன் மிக அருகில் வந்த பின்னர்தான் அவள் அவனைக் கண்டாள். ஒரு கணம் திகைத்தாள். தேவன் சில வினாடிகள் தலை குனிந்து நின்றான். அவன் அகன்ற மார்பு பொங்கித் தணிந்து கொண்டிருந்தது. நிலவு அவனை அணைத்துத் தன் ஆசையைத் தணித்துக் கொண்டிருந்தது. தேவியின் விழிகளும் போட்டியிட்டன.

"தேவி" அவன் அருகில் வந்தான்.

"தேவா, தங்கம் மாமி வருவா." அவன் அவள் கரங்களைப் பற்றினான். தேவி வேகமாக மூச்செறிய ஆரம்பித்தாள். அவள் கண்களில் ஒரு மயக்கம்.

´தேவா´ அவள் உதடுகள் அசைந்தன. வார்த்தைகள் வரவில்லை. அவள் மீண்டும் முயன்ற போது அவன் உதடுகள் அந்த அசைவையும் தடுத்தன. அவள், அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். இதயங்கள் இரண்டும் ஒன்றாகத் துடித்தன. அந்தத் துடிப்பின் ஓசையிலே உலகத்தின் சத்தங்கள் கேட்கவில்லை. தேவி கண்களை மூடிக் கொண்டாள்.

தங்கத்தின் கண்கள் அந்தக் காட்சியை நம்ப மறுத்தன. இளங்கோ தலையைக் குனிந்து கொண்டான். அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வரவை அறிந்து கொள்ளாமலே அன்பின் அணைப்பில் கட்டுண்டு இருந்தார்கள் தேவியும், தேவனும்.

"தேவி" தங்கத்தின் குரல் நடுங்கியது. தங்கம் நிலத்தில் அப்படியே இருந்து விட்டாள். திடுக்குற்ற தேவி பாம்பை மிதித்தவள் போல் பதறி, விலகிக் கொண்டாள். தேவன் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு நின்றான்.

யாருமே பேசவில்லை. தேவி தூணோடு முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தேவன் தலை குனிந்தவாறு கரங்களைப் பிசைந்தான். இளங்கோ வானத்தை வெறித்துப் பார்த்தான். அவன் சிந்தனையில் பல கேள்விகள் மோதின.

பக்கம் 139

தேவி - அவன் இதயத்தில் அன்பையும் ஒரு தூய்மையான இடத்தையும் பெற்றிருந்தாள். அவளா அந்த நிலையில்...? அவனால் நம்பவும் முடியவில்லை. ஆனால் உண்மை... மறுக்கவும முடியவில்லை. அடக்கம், அன்பு, இன்முகம் இவையெல்லாம் தேவியின் அணிகலன்கள் என அவன் எண்ணியது உண்டு. அந்த ஊரிலேயே விரிந்த சிந்தையும், முதிர்ந்த அறிவும் கொண்டவள் அவள்தானென அவன் கருதினான். அவளா இப்படி...? தனக்கு இளையவன் ஒருவனுடன் தன்னை மறந்து இந்த நிலையிலா?

தேவன்... எதையுமே நின்று, நிதானித்துச் செய்பவன். வாழ்வுக்கெனச் சில விதி முறைகளை அமைத்து அதன்படி நடப்பவன். அவனா அப்படி...? அக்கா, தம்பி போல் பழகியவர்கள். அவர்களா இந்த நிலையில்...? காதலிப்பது தவறென்று இளங்கோ நினைத்ததில்லை. இளங்கோ செல்லம் உறவுக்குப் பெயர் காதல்தான். ஆனால் இது காதலா...? வெறும் உடல் இச்சையின் விளைவா...? இந்த உறவிலும் ஓர் உண்மை அன்பு - காதல் - உருவாக முடியுமா...?

நால்வரின் நாக்குகளும் அசையவில்லை. இதயத்துக்குள்தான் எத்தனை போராட்டம். அமைதியான அந்தப் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. முதலில் அசைந்தவன் தேவன்தான். தலை குனிந்தவாறு மெதுவாக அவன் படலையை நோக்கி நடந்தான். அவன் மூன்றடி கூட வைத்திருக்க மாட்டான். தங்கத்தின் குரலால் அவன் உடல் சிலிர்த்தது.

"நில்லடா"

அவன் மட்டுமல்ல, இளங்கோவும் திடுக்குற்றான். தேவியின் விழிகள் மருண்டன. அது சாதாரணமான தங்கத்தில் குரலல்ல. அவள் இதயத்தின் உணர்ச்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்த குரல்.

"போவியே? நீ போவியேடா? அவளை இப்பிடியே விட்டிட்டுப் போவியேடா?"


பக்கம் 140

இருந்த தங்கம் ஆவேசம் வந்தது போல் எழுந்து கத்தினாள். தேவன் ஆடியே போய் விட்டான். தேவி திகைப்போடு தங்கத்தை நோக்கினாள். இளங்கோ தாயை இந்தக் கோலத்தில் என்றுமே கண்டதில்லை.

சாரம் மட்டுமே தேவன் அணிந்திருந்தான். அவன் மேனியிலிருந்து வியர்வை பெருகி ஓடியது. அவன் அசையாது நின்றான். தங்கம் ஓடிச் சென்று அவன் மடியைப் பிடித்து உலுக்கினாள்.

"டேய், டேய்... உன்னை நல்ல பெடியனென்று நெச்சனடா. படலைக்கு அங்காலே காலெடுத்து வைச்சாய்... முறிச்சுப் போடுவனடா... முறிச்சு"

இதுவரை பேசாது நின்ற இளங்கோவுக்குத் தாயின் செய்கை அதிகப்பிரசங்கித் தனமாகத் தோன்றியது. தவறு தேவனுடையது மாத்திரமல்லவே! தேவி விரும்பா விட்டால் இது நடக்குமா? அதுவும் அங்கு, அப்படி விபரீதமாக ஏதும் நடந்து விடவில்லை. அவன் தாயை நெருங்கி அவள் கைகளைப் பற்றியவாறு "அம்மா" என்றான். அவன் கைகளைத் தள்ளி விட்டு "என்னடி தூணுக்க ஒளியிறாய்? இஞ்சாலை வாடி." என்று தேவியைப் பார்த்து அவள் சீறினாள். தேவி நடுங்கியவாறு வெளியே வந்தாள். வேங்கையைப் போல் பாய்ந்து அவள் கூந்தலைப் பற்றித் தன் முகத்திற்கு அருகே இழுத்தவாறு தங்கம் பேசினாள்.

"எடியே, உனக்குத் தெரியுந்தானேடி, நாளெல்லாம் நான் ஏன் அழுகிறனென்று உனக்குத் தெரியாதே? நான் பெத்த பிள்ளைக்குத் தகப்பன் இல்லையென்று ஊரெல்லாம் சிரிக்குதே உனக்கும் தெரியுந்தானேடி. எடியே... எடியே..."

"உனக்குத் தானேடி சொன்னனான். உன்ரை கொப்பன் செய்த வினையாலே நான் என்ரை மோனைக் கூட நிமிர்ந்து பார்க்க ஏலாமல் இருக்கிறனென்டு."

பக்கம் 141


தேவியும் அழ ஆரம்பித்தாள். இளங்கோவின் உள்ளம் எதையோ கேட்கத் துடித்தது. வார்த்தைகள் வரவில்லை. மகாதேவன் செய்வதறியாது தடுமாறினான்.

"டேய் தேவா, கேட்டியேடா இவன்ரை அப்பன் ஆரென்று" சொல்லுறனடா கேள்... டேய், அறிவு கெட்டு நிக்கிறாளேடா இந்தப் பேச்சி, இவளைப் போல தானடா அண்டைக்கு நானும் நின்றன். பெடியள், ஆசை பாசங்கள் பெண்டுகளுக்கு இல்லையே? ஏழையளுக்குக் கிடையாதே? வயசாகியும் வாழ வழியில்லாமல் நான் ஏங்கிக் கொண்டிருந்தனடா. டேய், தடி மாடு மாதிரி நிக்கிறியேடா, உன்னைப் போலத்தான்டா அன்றைக்கு வந்தார்.... டேய், அந்தப் பழியைப் பாவத்தைத் தானடா இண்டைக்கு அவனும், நானும் இன்னும் சுமக்கிறம். அடி பாவிப் பெண்ணே, ஏனடி நீயும் குறுக்கால போறாய்?" அப்பன் செய்த பாவம் போதாதேடி?"

தேவியும் தங்கமும் அழுதார்கள். தேவனின் கண்களும் கலங்கின. அவன் மிக மெல்லிய குரலில் பேசினான்.

"மாமி, பிழை என்னிலைதான்... நான்தான் மாமி... ஆனால் நான் அவளைக் கைவிட மாட்டன். அவளுக்கு நான்தான் தாலி கட்டுவன்." மகாதேவன் குரல் மெதுவாக ஒலித்தாலும் அதில் உறுதியிருந்தது.

"தம்பி, டேய் உன்னைக் கும்பிட்டனடா... இப்ப சொன்னியே அந்தச் சொல்லைக் காப்பாத்திடு. இவள் எனக்குப் பிள்ளையடா... அவன்ரை தமக்கை. கோபால் வயித்திலே இருக்கிற நேரத்திலேதான் ஒரு நாள், இவளின்ரை தகப்பன் என்னை..."

இளங்கோ ஒன்றும் பேசாது வெளியே நடந்தான். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அவனை யாரும் தடுக்கவில்லை. தடுக்கும் நிலையில் அங்கு யாரும் இல்லை.


13

பக்கம் 142

பருவ நிலவுதான். அன்று அதன் ஒளிவெள்ளம் வழமையை விட பல மடங்காக இருந்தது. துள்ளும் தேவியின் உள்ளத்தைப் போல், பூரித்து நிற்கும் செல்லத்தைப் போல் நிலவுக்கும் மகிழ்ச்சியா? அதுதான் என்றுமில்லாத வகையில் முக மலர்ந்து ஒளி கொட்டுகிறது. தேவி வீட்டு மல்லிகைப் பந்தல் கூட அன்று முற்றாக மலர்ந்து மணம் வீசியது. தென்றலில் தவழ்ந்து வரும் இனிய நாதஸ்வர ஓசை வேறு அவர்கள் உள்ளத்தை அலை பாய வைத்தது. தேவியின் இதயத்தில் இன்று கேட்கும் இன்பநாதம் இதுவரை காலமும் ஏன் கேட்கவில்லை?

செல்லத்தின் கூந்தலில் மல்லிகைச் சரத்தைச் செருகி அதன் அழகை இரசித்தாள் தேவி. செல்லமோ தன் கூந்தலை அழகு படுத்தும் அந்தக் கரங்களின் மென்மையையும் அது அசையும் வேகத்தையும் பார்த்து இரசித்தாள்.

"கொஞ்சம் திரும்பு செல்லம்." செல்லத்தின் முகவாயைப் பற்றி நிமிர்த்திய தேவி, அவள் நெற்றியில் திலகமிட்டாள். நான்கு விழிகளும் சிரித்தன.

"அக்கா" என்று சொல்லியவாறு செல்லம் தேவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"அடியே, கழுத்தை விடடி. பொட்டில்லே அழியப் போகுது." தேவி செல்லமாகக் கடிந்து கொண்டாள். ஆனால் செல்லமா விடுவாள்?


பக்கம் 143

"அக்கா, எத்தினை மணிக்கு நாங்கள் போறது?"

"என்னடி அவசரம், இரவோட இரவா சந்நிதியிலே தாலிகட்டு. அப்பிடியே விடியக் கச்சேரிக்குப் போய் கல்யாண எழுத்து. எத்தினை தடவை சொல்லிப் போட்டன். இன்னும் கொஞ்சத்திலை கார் வந்திடும். கெதியாச் சீலையைக் கட்டு."

"கட்டி விடுங்கோவன்."

"சீலை கட்டத் தெரியாது. கல்யாணம் கட்ட வெளிக்கிட்டிட்டாள். வாடி இஞ்சாலே."

கேலி, சிரிப்பு, போலிக் கோபம் இவைகளோடு அவர்கள் இருவரும் தங்களை அலங்கரித்துக் கொண்டனர்.

ஊரெல்லாம் கோவில் திருவிழாவுக்குக் கூடியிருக்கும் நேரம் - அதைத்தான் தங்கள் மணவிழாவுக்குத் தகுந்த நேரமாக நண்பர்கள் தேர்ந்தெடுத்தனர். பட்டு வேட்டி சர சரக்க இளங்கோவின் வீட்டை நோக்கி நடக்கும் தேவனின் இதயத்தில் ´எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே´ என்ற கவலை இருந்தது. தாங்கள் செய்யப் போகும் புரட்சித் திருமணத்தின் விளைவை எண்ணிப் பார்க்கும் போது ஒருவித பயமும் அவனுக்கு இருந்தது. தாய் மீனாட்சி கோயிலுக்குப் போய் விட்டாள். தங்கை செல்லத்துக்கும் தேவி வீட்டில்தான் அலங்காரம் நடக்கிறது. தேவன் வரு முன்னரே இளங்கோ தயாராகி விட்டான். கைகளைக் கட்டியவாறு நிலவொளியில் அவன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அவன் இதயமும் ஒரு நிலையில் இல்லை.

"நீ, ரெடியே மச்சான்?" தேவன் கேட்டுக் கொண்டே வந்தான்.

"நான் ரெடி. மற்றவை...?"

"கொம்மா, அவேயை இஞ்ச கூட்டிக் கொண்டு வரத்தான் போறா. இஞ்சதானே கலியாணச் சாப்பாடு" மகா

பக்கம் 144

தேவன் சிரித்தான். இளங்கோவும் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் சிறிது கவலையும் இருந்தது. இப்படித்தானா அவர்கள் திருமண விருந்து நடக்க வேண்டும்? நண்பர்கள் இருவரும் இருந்து, நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றி மீண்டும் ஒரு முறை கதைத்துக் கொண்டார்கள். எங்கிருந்தோ கோபாலும் அங்கு வந்து சேர்ந்தான்.

"கார் சரியாகப் பத்து மணிக்கு வரும். மேசன் கோவிந்தரும் வாரார். ´டிரைவர்´ ஒரு சாட்சிக்குக் கையெழுத்துப் போடுவார். வேற ஒரு தம்பிக்கும் விசயம் தெரியாது. நாளைக்கு எல்லாம் முடிஞ்சு ஊருக்கு வந்தாப் போலைதான் பிரச்சனை இருக்கு." கோபால் மிக வேகமாகப் பேசினான்.

"விசயம் முடியட்டும். நடந்து முடிஞ்சாப்போலே ஆரும் அசைக்க ஏலாது. அம்மாக்கு நாங்கள் பயப்பிடலாந்தான். வேற ஆருக்கும் ஏன் பயப்பிட வேணும்? நாங்களென்ன கொலையோ செய்யப் போறம்? மனசுக்குப் பிடிச்சவையைக் கலியாணங் கட்டுறது பெரிய பிழையே? எங்கடை ரிஜிஸ்ரேசனைச் செய்வம். செல்லம், மைனர் இளங்கோ தாலியைக் கட்டினால் சரி." மகாதேவன் சொன்னான்.

"அதுகள் வருகுதுகள்." இளங்கோ சொன்னான். அவனுக்கு வெட்கமாக இருந்தது. தங்கம், தேவியையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.

தங்கத்தின் முகத்தில்தான், எவ்வளவு பெருமிதம்? கோபால் கூட பழைய கோபாலாக மாறி விட்டான். என்றுமில்லாத இன்பம் அவன் இதயத்தில் பொங்குகிறது. தேவியின் கைகளைப் பிடித்தவாறு செல்லம் வருகிறாள். எத்தனை விதமான உணர்ச்சி அவர்களுக்கு. மகிழ்ச்சிதான் - அது தொண்டைக் குழிக்குள் சிக்கி விட்டது போன்ற ஒருவித தடுமாற்றம். கால்கள் பின்னுகின்றன. கண்களோ நிலத்தில் - மகிழ்ச்சி, பயம், தயக்கம், வெட்கம்... இவைகள் முன்னே வர அவர்கள் பின்னே வந்தார்கள்.

பக்கம் 145

நாணம் - பெண்களுக்குத்தான் சொந்தமா? இளங்கோவின் கன்னங்களும் சிவக்கின்றனவே! மகாதேவனும் நிலத்தைத்தான் பார்த்தான்.

குடிசையின் வாசலை அவர்கள் நெருங்குகிறார்கள். மணப்பெண்களுக்கு வானம் பனித்துளியால் பன்னீர் தெளித்து வரவேற்கிறது. நிலவோ வெண்பட்டுக் கம்பளம் விரிக்கிறது. பனை மரத்தால் விழும் நுங்குகளின் ஓசை பட்டாசுகளாகின்றது. கோவிலிலிருந்து மேளத்தையும், நாதஸ்வரத்தையும் தோழி தென்றலாள் அழைத்து வருகிறாள். தங்கம் வளர்த்த வாழைகள் கூட குலை போட்டு அவர்கள் வாசலில் காத்து நின்றன.

"நில்லுங்கோடி பிள்ளையள். கடவுளே, நாவூறு படப் போகுது." தங்கம் வாசலில் அவர்களை நிற்க வைத்து உள்ளே ஓடினாள். தயாராகத் தான் வைத்துச் சென்ற தட்டத்தை ஏந்தி வந்தாள். வாழைப்பழத்தின் மீது திரி வைத்து எரிந்து கொண்டிருந்த அதனை, மணப்பெண்களின் முகத்தை மூன்று முறை சுற்றி எடுத்தாள். பெண்கள் குடிசைக்குள் ஓடி மறைந்தனர்.

நண்பர்கள் நடக்க வேண்டியவைகளை மீண்டும் மீண்டும் கதைத்தனர். கடைசியாகக் கோபால் நேரம் போவதைச் சுட்டிக் காட்டினான்.

"வாருங்கோடா பெடியள், இலை போடுறன்." தங்கம் உணவருந்த அழைத்தாள்.

"அம்மா, நீ குழைச்சுத் தா அம்மா... நாங்கள் கையிலே சாப்பிடுறம்." இளங்கோ சொன்னான்.

"போடா, கல்யாண விருந்து கையிலேயே சாப்பிடுறது? இலை போட்டாச்சு வாங்கோ."

"இல்லை மாமி, நீங்கள் குழைச்சுத் தார மாதிரி வருமே? உங்கடை கையாலே எல்லாருக்கும் தாங்கோ" மகாதேவன் கேட்டுக் கொண்டான்.

பக்கம் 146

"இவங்கள் விடாங்கள். கையைக் கழுவிக் கொண்டு வாங்கோடா. மோனை தேவி, செல்லத்தையும் கூட்டிக் கொண்டு வா... எல்லாரும் ஒன்றாச் சாப்பிடுங்கோ."

தங்கம் ஒரு பெரிய சட்டியில் சோற்றைப் போட்டாள். பல கறிகளையும் அதற்குள் போட்டாள். இளங்கோவுக்குப் பிடித்தமான தயிரும், வெந்தயக் குழம்பும் சேர்க்கப் பட்டிருந்தன.

"நல்லாச் சாப்பிடுங்கோடா. பிள்ளையார் துணையிருந்தால், கடவுளே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் இப்பிடிக் குழைச்சுத் தர மாட்டனே? பிள்ளையள், ஏதோ உங்கடை விருப்பப்படி நடக்கிறியள். ஒன்றாக, ஒற்றுமையாக இருங்கோ. கடவுள் கைவிட மாட்டார். கையை வடிவாக நீட்டன் செல்லம்."

செல்லம் தன் அலங்காரம் கெடாத வகையில் சோற்றைச் சாப்பிட்டாள். தங்கத்தின் சுவையான சமையலை விட, அந்தச் சூழல், அவளது அன்பு வார்த்தைகள் அதற்கு இன்னும் சுவையூட்டின. விரல்களிடையே தயிரும், குழம்பும் வழிந்தோட ஆண்கள் மூவரும் அதை நக்கி நக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கத் தேவிக்கு வெட்கமாக இருந்தது.

தம்மை மறந்து உணவருந்திக் கொண்டிருந்த அவர்களுக்குக் காரின் ஓசை உணர்வை ஊட்டியது.

"கார் வந்திட்டிது" செல்லந்தான் தன்னையறியாமல் சொல்லிவிட்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

எல்லாரும் அவசர அவசரமாக எழுந்தனர்.

குடிசைக்கு வெளியே வந்த கோபால் தெருவை எட்டிப் பார்த்தான். அவன் முகம் வெளிறியது.

"வாடைக் காரில்லை. அது கணவதிப்பிள்ளையரின்ரை கார். இந்த மனிசன் ஏன் இப்ப வருகுது? அவன்

பக்கம் 147

மெதுவாக உள்ளே வந்து சொன்னான். எல்லோர் முகத்திலும் திகில் பரவியது. தங்கம் ´பிள்ளையாரே, பிள்ளையாரே´ என்று முணுமுணுத்தாள். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.

"மனுசன் என்னட்டைத்தான் வந்திருக்க வேணும். தியேட்டருக்கு நான் போகல்லை. அதுதான் போலை. நான் பார்த்துக் கொண்டு வாரன். நீங்கள் ஒருவரும் வெளியிலே வராதேங்கோ." கோபால் அவசர அவசரமாகக் காரை நோக்கி நடந்தான்.

"ஏதும், தொந்தரவென்றால் கூப்பிடு கோபால்" மகாதேவன் சொன்னான். எல்லோரது கண்களும் அவன் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு நின்றன. நிமிடங்கள் யுகங்களாகக் கடந்தன.

++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++

கோபால் காரை நெருங்கினான். கணபதிப்பிள்ளையர் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"கோபால், நீயேன் தியேட்டருக்கு வரயில்லை?"

"அக்காக்குச் சுகமில்லை..." கோhபல் தலையைச் சொறிந்தான்.

"என்ன, தேவிக்குச் சுகமில்லையோ? பாவம். நீதானே அவளைப் பாக்க வேணும். காரிலே ஏறு. உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்.“

கோபால் முதலில் தயங்கினான். பின்னர் காரிலேறி அவர் பக்கத்தில் அமர்ந்தான். கணபதிப்பிள்ளையரின் நெற்றி வியர்த்திருந்தது. அவர் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

"கோபால், நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு கஸ்டப் படுறியள்! ஊரெல்லாம் திருவிழாக் கொண்டாடுது. நீங்கள்

பக்கம் 148

இரண்டு பேரும் மாத்திரம் இஞ்ச தனிய இருக்கிறியள். நீ நினைக்கிறியே, கொக்காக்கு ஒரு மாப்பிள்ளை கிடைப்பானென்று?"

கோபால் ஒன்றும் பேசாது அவரைப் பார்த்தான். அவர் தொடர்ந்தார்.

"கோபால், உங்கடை துன்பத்தைப் பார்த்தால் எனக்கு மனங் கேட்க இல்லை. நானொரு முடிவுக்கு வந்திட்டன். கோபால், கொக்காவை நானே கட்டுறன். உனக்கு வேணுமான நேரமெல்லாம் காசு நான் தருவன். காலேலாத நீ கஷ்டப் படத் தேவையில்லை."

கோபால் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் தன் பையில் கையை விட்டுச் சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கைகளில் திணித்தார். தூரத்தே வாடகைக் காரின் விளக்கொளி கோபாலின் முகத்தில் விழுந்தது.

அக்காவைக் கட்ட அவர் முடிவு செய்து விட்டாராம்.

யார், யாருக்காக முடிவு செய்கிறார்கள்? எத்தனை மனிதர்களின் வாழ்வை, எதிர்காலத்தை எல்லாம் எவரெவரோ ஏன் முடிவு செய்கிறார்கள்? இந்தக் காணி உனக்குச் சொந்தமென்று நிலத்தைப் பிரித்த மனிதன், லட்சக் கணக்கான மனிதர்களின் தாய் நாட்டைக் கூடத் தானே தீர்மானிக்கிறான். நீ பேச வேண்டிய மொழி, உடுக்க வேண்டிய உடை, உண்ண வேண்டிய உணவு - இவையெல்லாவற்றையும் இன்று யார் யாரோ நமக்காகத் தீர்மானித்து விடுகிறார்களே! கோபாலுக்குச் சிந்திக்க நேரமிருக்கவில்லை. வாடகைக் கார் அவர்களைக் கடந்து தங்கம் வீட்டு வாசலில் நின்றது.

"காசைப் பிடி கோhபல். கார், ஏன் இந்த நேரத்திலே?" கணபதிப்பிள்ளையர் கேட்டார்.


பக்கம் 149

கோபால் காசை வாங்கிச் ´சேர்ட்´ பையில் போட்டுக் கொண்டான்.

"தங்கம் மாமிக்குச் சுகமில்லைப் போல. அதுதான் கார் வருகுது. நீங்கள் போங்கோ. அக்காவோட கதைச்சுப் போட்டு நான் சொல்ரன்."

"கோபால், இன்னும் அரைமணித்தியாலத்திலே வாரன். நல்ல முடிவாச் சொல்லு. முதலிலே கொக்கா பஞ்சிப் படுவாள். எல்லாம் உன்ரை கையிலே கிடக்கு. நீ நினைச்சால் இந்தக் காரிலே ராசா மாதிரி இருக்க ஏலாதே?"

கோபால் காரை விட்டு இறங்கினான். கணபதிப்பிள்ளையர் மீண்டும் பையில் கையை விட்டு இன்னொரு நூறு ரூபாயை எடுத்துக் கோபாலிடம் கொடுத்தார். அவர் கார் மெதுவாக நகர்ந்தது. அவர் முகத்தில் புன்னகை விரிந்திருந்தது.

+++++++++++++++ +++++++++++ ++++++++

"கெதியாக ஏறுங்கோ காரிலே" கோபால் அவசரப் படுத்தினான்.

முன் ´சீட்டில்´ மேசன் கோவிந்தர் இருந்தார். அவர் பக்கத்தில் இளங்கோ ஏறிக் கொண்டான். மகாதேவன், தங்கம், செல்லம், தேவி நால்வரும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

"கோபால், ஏறன்." இளங்கோ துரிதப் படுத்தினான்.

"இல்லை, நான் வரயில்லை."

"ஏன்? என்ன? காரிலிருந்து பல குரல்கள் கேட்டன.

"இல்லை. இன்னுங் கொஞ்சத்திலே கணவதிப்பிள்ளையர் வருவார். இஞ்ச ஒராள் இருந்தால்தான் ஏதும் நடக்காமல் பார்க்கலாம்."


பக்கம் 150

"என்ன மண்ணாங்கட்டி நடக்கப் போகுது? பேய்க்கதை கதையாமல் ஏறு." மகாதேவன் சத்தம் போட்டான்.

"கதைக்க நேரமில்லை. நீங்கள் போங்கோ. ஏலுமென்றால் நான் பஸ்ஸிலே வாரன். கணவதிப்பிள்ளையர் இப்ப வருவார்." கோபால் கைகளைப் பிசைந்தான்.

"அவர் வரட்டும். அவருக்கு ஏன் நாங்கள் பயப்பிட வேணும்? நீ ஏறு மச்சான்."

மகாதேவன் வற்புறுத்தினான். ஆனால் கோபால் மறுத்து விட்டான்.

"இல்லை மச்சான், நான் இஞ்சை இருந்தாலும் என்ரை நெஞ்சு உங்களோடைதான் இருக்கு. நீங்கள் திரும்பி வரேக்க இஞ்சையும் ஆள் வேண்டாமே?"

இளங்கோவும், மகாதேவனும் கோபாலின் கரங்களைப் பற்றினர். கார் மெதுவாக நகர ஆரம்பித்தது.

"அக்கா" கோபால் தேவியைப் பார்த்தான்.

"கோபால்" அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. "தம்பி, வர மாட்டாயா?" என்று கண்கள் கெஞ்சின. அமைதியாக அவன் புன்னகைத்தான். அவன் உள்ளத்தின் உவகையெல்லாம் அந்தப் புன்னகையில் மலர்ந்தது. கார் மறையும் வரை அவன் கைகளை ஆட்டிக் கொண்டே நின்றான். ´அம்மம்மா, இன்றைக்கு நீ உயிரோடை இருந்தால்...´ அவனிதயம் எண்ணமிட்டது. கோபால் நீண்ட பெருமூச்சோடு கோவிலை நோக்கி நடந்தான்.

+++ +++ +++

அலங்கார ஊர்த்தியில் ஆண்டவனின் பயணம், கோயிலைச் சுற்றிச் செல்ல ஆரம்பித்து விட்டது.

பக்கம் 151

"கட்டாடி, பந்ததந்துக்கு எண்ணெய் ஊத்தி நல்லா எரியன். வழி விடுங்கோ, வழி விடுங்கோ" வேலுப்பிள்ளையரின் கம்பீரமான குரல் மேள, நாதஸ்வர ஓசைகளைக் கடந்து நன்றாகக் கேட்கிறது.

கோயில் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. வண்ண வண்ண விளக்குகள் கண் சிமிட்டுகின்றன. வாண வேடிக்கைகள் என்ன! இதயத்தை இழுக்கும் இசை வெள்ளந்தான் என்ன! அழகு, இனிமை, மகிழ்ச்சி... பொங்கி வழிகிறது. ஊரெல்லாங் கூடி என்ன செய்கிறது? வெண்கலச் சிலைக்கு விழா எடுக்கிறது. காசு மாலைகள், காப்புகள், சங்கிலிகள் போட்டு அந்தச் சிலைக்கு அழகு பார்க்கிறார்கள். பொருள் அள்ளிக் கொடுத்துப் போற்றுகிறார்கள். இந்த விழாவை நடத்த இத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள். யாருமில்லாத இடத்தைத் தேடி திருமணஞ் செய்ய அந்தக் காதலர்கள் போகிறார்கள். ஓ... மனிதர்களே! உங்களில் ஒருத்திக்கு வாழ்வளித்து விழா நடத்த உங்களால் முடியவில்லையே! இந்தச் சிலைக்கு விழா எடுக்க வெட்கமில்லையா?

ஒரு மூலையில் நின்றவாறு கோபால் சிந்தித்தான். இளங்கோவின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன.

"நாங்கள் எவ்வளவோ எதிர்ப்பை எதிர்பார்த்து இந்தக் கலியாணம் செய்யப் போகிறம். ஏன் இந்த ஊருக்கு இது பிடிக்க இல்லை? உழைக்கிற கை எங்கடை கை. நாங்கள் தாலி கட்டினால் எங்கடை பெண்சாதி பிள்ளையளை இவே பார்க்கப் போற இல்லை. இன்பமோ, துன்பமோ அது எங்களோடைதான். ஒரு திருவிழாவை நடத்த இவ்வளவு பேர் கூடினமே, ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நாலுபேர் கூடக் கூடாதோ? திருவிழா நடத்திறது தெய்வத்துக்காக இல்லை. இந்த ஊரிலே தங்களைப் பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்ள, தங்கடை செல்வாக்கைப் பெருக்கி, தாங்கள் நினைச்சவாறு நடக்க, இன்றைக்குப் பொது விசயம் என்று சொல்லுறதிலே முக்காவாசியும் தனிமனிதனுடைய சுயநலத்திலேதான் உருவாகுது. கோபால், எங்கடை

பக்கம் 152

கலியாணத்தைக் கோயிலிலே வைச்சு அந்தச் சிலைகளுக்கு மதிப்புக் கொடுத்து இன்னும் பல போலி மனிதர்களை உருவாக்க நான் விரும்ப இல்லை. என்றாலும் உங்களுக்காக என் கொள்கைகளை ஒதுக்கி வைச்சு வாரன்:"

இளங்கோ சொன்னதிலே எவ்வளவு உண்மையிருக்கு! பண்பும், அன்பும் இல்லாதவைக்கும் ஒரு மதிப்பைத் தேடுறதுக்கு கோயில் பயன்படுகுது. கணபதிப்பிள்ளையர், வேலுப்பிள்ளையர் போல ஆட்கள்தான் திருவிழா நடத்தீனம். எவ்வளவு சின்ன மனிதர்கள் இவர்கள்! ஓர் இதயத்தின் உணர்ச்சிகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? தங்கள் சுயநலம் ஒன்றையே கருத்தில் கொண்டு வாழும் இவர்கள் ஊரின் பெரிய மனிதர்களாவது எப்படி? இவர்களின் குரல்தான் சமூகத்தின் குரலானது எப்படி?

"அதுகள் தாலியைக் கட்டிக் கொண்டு ஊருக்கு வரேக்க இந்த மனிதர்கள்தானே முன்னுக்கு நின்று பேசப் போகினம். ஆட்களை வைச்சு அடிப்பீனம். வீட்டுக்கு நெருப்பு வைப்பீனம். தோட்டத்துக்க மாட்டை அவிழ்த்து விடுவீனம். ஊரை விட்டே துரத்துவீனம். தங்கடை எண்ணங்கள் நிறைவேறாத படியால் பழி தீர்த்துக் கொள்ளுவீனம்!"

கோபாலின் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நேரத்திலே கணபதிப்பிள்ளையர் அவனைத் தேடி வருவார். தேவியின் முடிவைக் கேட்க வருவார். வேலுப்பிள்ளையர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெகுவேகமாக யாரையோ தேடுகிறார்.

"மீனாட்சி, இஞ்ச வா ஒரு கதை"

"என்ன அண்ணே" மீனாட்சியும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேலுப்பிள்ளையரை நோக்கி வருகிறாள். இருவரும் கோபால் ஒதுங்கி நின்ற மருத மரத்திற்கு அருகில் வருகிறார்கள். கோபால் மரத்துக்குப் பின்னால் மறைகிறான்.

பக்கம் 153

"மீனாட்சி, செல்லமும் மகாதேவனும் வீட்டிலேயே?"

"ஓமண்ணை" மீனாட்சி சொன்னாள்.

"பேய்க்கதை கதையாதை. அதுகள் இரத்தினனின்ரை காரிலே எங்கேயோ போகினமாம். படத்துக்குப் போன பெடியள் கண்டு சொல்லுதுகள்." வேலுப்பிள்ளையர் சொன்னார்.

"என்ரை பெடியளோ? எந்த வம்புக் குட்டியள் சொன்னது? பல்லுக் கொட்டிப் போடுவன்." மீனாட்சி சீறினாள்.

"அதுகள் சும்மா சொல்லாதுகள். நீ வீட்டை போய்ப் பார். நானும் கெதியா வாரன்." வேலுப்பிள்ளையர் சொன்னார்.

"பொறு, பொறு நான் வந்து கதைக்கிறன்." மீனாட்சி சேலையைக் செருகிக் கொண்டு நடந்தாள். வேலுப்பிள்ளையர் கோவிலை நோக்கிச் சென்றார். கோபால் மரத்தின் பின்னாலிருந்து வந்தான்.

"கோபால்" மீனாட்சியின் குரல் அவனை ஏதோ செய்தது.

"கோபால், வீட்டை போக வேண்டியிருக்கு. வாரியோ துணைக்கு?" மீனாட்சி கேட்டாள்.

"வாரன் மாமி" கோhபால் அவளை நோக்கி நடந்தான். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

"மேனை, தேவனைக் கண்டனீயே?" மீனாட்சி கேட்டாள்.

"இல்லை" அவன் தடுமாறினான். அவள் வழி நெடுகத் தன் பிள்ளைகளின அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டு நடந்தாள். வீட்டை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் கணபதிப்பிள்ளையரின் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது.


பக்கம் 154

"கோபால், தேவி வீட்டிலே இல்லையோ?" அவர் கேட்டார்.

கோபால் தன் பையில் கையை விட்டு அவர் கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

"கோபால்" அவர் கோபத்தோடு கத்தினார்.

"முதலாளி விசயம் முடிஞ்சு போச்சு. வீணாக மினைக்கெடாதேங்கோ" கோபால் சொன்னான்.

"என்ன விசயம்? என்ன நடந்தது? எங்கே தேவி? செல்லம், செல்லம்! தேவா... தேவா, டேய் தேவா!" மீனாட்சி திறந்திருந்த படலையைத் கடந்து வீட்டுக்குள் ஓடினாள். கத்தினாள்.

"ஐயோ, என்ரை பிள்ளையள்... எடே கோபால், எங்கேயடா இவங்கள்?"

அவள் கேட்ட கேள்வியைத்தான் கணபதிப்பிள்ளையரும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கைகளில் கோபாலின் ´சேர்ட் காலர்´ இருந்தது.

"என்ரை அக்காவைப் பற்றிக் கேட்க நீங்கள் ஆர்?" கோபால் கோபமாகவே கேட்டான்.

"சொல்லப் போறியோ இல்லையோ? எலும்பு முறிச்சுப் போடுவன்."

கோபால் முகத்தைத் திருப்பிக் கொண்டான்: அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவன் திமிறினான்.

"சொல்லடா" கணபதிப்பிள்ளையர் கத்தினார். ஓங்கி மீண்டும் ஓர் அறை. கோபாலின் வலுவிழந்த கால்கள் அவனைத் தாங்கிக் கொள்ள மறுத்தன. திருவிழாவை மறந்து தெரு விழாவைப் பார்ப்பதற்கு சனம்; கூட ஆரம்பித்தது. பணபலம், உடற்பலம் உள்ளவன் ஒருவனால்


பக்கம் 155

ஓர் ஏழை நொண்டி உதைக்கப் படுகிறான். கதை பரவுகிறது. வேலுப்பிள்ளையர், அவர் மகன் மணியன் எல்லோரும் அங்கு வருகிறார்கள். மீனாட்சியோ வயிற்றலடித்தபடி கதறுகிறாள். கோபாலின் இதழோரத்தில் படிந்த புழுதியை, கடைவாயில் வடிந்த இரத்தம் கழுவுகிறது. அவன் தலையை நிமிர்த்தினால், எங்கே அடி விழுமோ என்ற எண்ணத்தில் நிலத்தையே பார்த்தபடி இருக்கிறான்.

மணல் ஒழுங்கை - அந்த மணலில் விழுந்திருக்கும் கோபால், சுற்றி ஒரு கூட்டம். வேலுப்பிள்ளையர் நடுவிற்கு வருகிறார்.

"ஐயோ அண்ணே, என்ரை பெடியளைக் காணயில்லை." மீனாட்சி அழுகிறாள்.

"தேவியில்லை. இளங்கோ இல்லை. செல்லமும் இல்லை. எங்கே தங்கம்?" கணபதிப்பிள்ளையர் கேட்டார். "விசயம் விளங்க இல்லையே!"

வேலுப்பிள்ளையரும், மணியமும் விளங்கிக் கொண்டார்கள்.

"ஐயோ, அவளோடை என்ரை மகன் ஓடிப் போயிட்டான்." மீனாட்சி கத்தினாள்.

"செல்லம்...?" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"இளங்கோவோட..." மணியன் காறித் துப்பிவிட்டு நடந்தான்.

"சீ... சீ... அந்தத் தகப்பனில்லாதவனோட..." வேலுப்பிள்ளையரும் நடந்தார்.

"அண்ணே, அண்ணே நில்லண்ணே. எனக்கொரு வழி சொல்லு" மீனாட்சியின் குரல் அவர் காதில் விழவில்லை. கூட்டத்தின் கண்கள் கணபதிப்பிள்ளையரையே நோக்கின.


பக்கம் 156

"நாயள், நாயள் எக்கேடும் கெட்டுப் போங்கோ. மானம், ரோசம் கிடையாது. ஊரின்ரை பேரைக் கெடுக்க வந்ததுகள்." அந்த நல்ல மனிதரும் பேசி விட்டு நடந்தார். திருவிழா முடிந்தது. கூட்டம் கலைந்தது.


14
பக்கம் 157

மீனாட்சி சேலைத் தலைப்பை நிலத்தில் விரித்துக் குடிசையின் தரையில் படுக்கிறாள். அவளால் அழுகையை இன்னும் அடக்க முடியவில்லை.

"என்ரை பெடியள் இப்பிடிச் செய்யுங்களோ?" அவள் வாய் முணுமுணுக்கிறது.

"ஐயோ கடவுளே, எனக்கு இனி ஆர்?"

வெறிச்சோடிக் கிடந்தது வீடு. பொழுது விடிந்து விட்டது. தேத்தண்ணி போட்டுத் தரச் செல்லமில்லை. கிணற்றடியிலே தேவன் தண்ணீர் இறைக்கும் சத்தம் இல்லை. ஆடு மட்டும் கத்துகிறது. தனிமை... பயங்கரமான தனிமை.

´எடியே, அதை வையடி. இதை எடடி´ இப்படி மீனாட்சி இனி யாருக்குச் சொல்ல முடியும்?

"அம்மா, தேத்தண்ணியைக் குடியன்." மீனாட்சி எழுந்து பார்க்கிறாள். அவள் இல்லை. செல்லம் இல்லை. வெறும் பிரமைதான்.

"கொண்ணனுக்குத் தேத்தண்ணி குடுத்தனீயே?" கேட்கத் துடிக்கிறது நாக்கு. அவனும் அங்கில்லை. அவளும் அங்கில்லையே. மீனாட்சிக்குத் தன் தலையை நிலத்தோடு மோத வேண்டும் போலிருக்கிறது. அவள் எழுந்து கிணற்றடியை நோக்கி நடக்கிறாள். வாளியில் தண்ணீர் இல்லை. அவனிருந்தால் வாளி நிறையத் தண்ணீர் இருக்குமே. மீனாட்சி கிணற்றுக் கட்டில் இருந்து விடுகிறாள்.
பக்கம் 158


ஆடு அவிழ்த்துக் கொண்டு ஓடி மிளகாய்ச் செடிகளைக் கடிக்கிறது. துள்ளி எழுகிறாள்.

"சூ... சூ... அடி செல்லம் ஆட்டைப் பிடிச்சுக் கட்டடி. இஞ்ச மிளகாயெல்லாம் கடிக்குது. கொண்ணன்..."

அவள் வார்த்தைகள் பாதியில் நிற்கின்றன. மீதி கண்ணீராக வடிகிறது. செல்லம் வரவில்லை.

ஆட்டை இழுத்துக் கட்டிய கோபால் மீனாட்சியின் அருகில் போய் நின்றான்.

"மாமி"

"மோனை" அவனைப் பிடித்துக் கொண்டு அவள் அழுதாள். "மோனை... மோனை... அதுகள் இல்லாமல் என்னாலே இருக்க ஏலாது..."

"மாமி, இன்னுங் கொஞ்சத்திலே அதுகள் வந்திடும். நீங்கள் விரும்பினால், அதுகள் இஞ்சையே இருக்கும். மாமி, ஆசைப்பட்டதுகள் கலியாணம் கட்டினால் என்ன பிழை?" கோபால் கேட்டான்.

"மாமி, நீங்கள் கோபப் பட்டால் ஞாயம். ஏன் மற்றவைக்கு இவ்வளவு வருத்தம்? உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவை எல்லாம் இப்ப எங்கே?"

"ஓமடா மோனை, எனக்கும் விளங்குது. நானும் என்ரை எண்ணப்படி நடக்கு வேணுமென்று பார்த்தன். அதுகள் கெட்டிக்காரர்கள், என்ரை பிள்ளையளில்லே? கோபால் அதுகள் எப்ப வரும்?" மீனாட்சி கேட்டாள்.

"இவ்வளவும் கலியாணம் முடிஞ்சிருக்கும். வழியிலே வந்து கொண்டிருப்பீனம்." கோபால் சொன்னான்.

"மோனை... அதுகள் புதுக்கப் புதுக்க மாப்பிளை பொம்பிளையா வரப் போகுதுகள். நான் ஒன்றும் செய்ய இல்லை. கொஞ்சம் உதவி செய்யிறியே? ஒரு சோறு காய்ச்சிப் போடுவன்."


பக்கம் 159

மீனாட்சி பழைய மீனாட்சியானாள். பம்பரமானாள். வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள். வீட்டு வாசலில் கோபாலைக் கொண்டு இரண்டு வாழைகள் நட்டு வைத்தாள். அக்கம் பக்கத்தவர்களும் ஒரு சிலர் வந்து உதவ ஆரம்பித்தார்கள். தடல்புடலாகச் சமையல் நடக்க ஆரம்பித்தது. மீனாட்சியின் மனதின் ஓர் ஓரத்திலே சிறிது வெட்கமும், வேதனையும் இருந்தாலும் அவள் முகத்தில் அது தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. தனக்குப் பயந்து பிள்ளைகள் அங்கு வரமாட்டார்களோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவர்கள் வரவேண்டுமென அவள் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். எல்லோரும் மணமக்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

"பெடியள், வெடியைக் கொளுத்துங்கோடா, கார் வருகுது" மீனாட்சி சத்தமிட்டாள். படபடவென சீனவெடிகள் வெடித்தன. கார் மணல் ஒழுங்கையில் திரும்பியது. திகைப்போடு மணமக்கள் காரை விட்டு இறங்கினர். குத்துவிளக்கும், கும்பமும் அவர்களை வரவேற்றன. கோபால் புன்னகையோடு நின்றான். மீனாட்சி புதுச்சேலை அணிந்து மலர்ந்த முகத்தோடு காணப்பட்டாள். வாசலில் அவர்களை ஆராத்தி எடுக்க இரு பெண்கள் காத்திருந்தனர். அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. ஓடிப் போனவர்களுக்கா இந்த வரவேற்பு? தேவன் தன் தாயைப் பார்த்தான். ´அம்மா, எங்களை மன்னித்து விடு´ என்று அவன் கண்கள் கெஞ்சின.

ஆனால் மீனாட்சியின் கண்களிலோ பூரிப்புப் பொங்கியது. அப்பப்பா, தேவிதான் என்ன அழகாக இருக்கிறாள். முகமோ மலர் போலிருக்க, கூந்தலிலும் மல்லிகை மலர்களை அழகாகச் செருகியிருந்தாள். கழுத்திலும் அழகியதொரு மலர்மாலை - கன்னம் இரண்டிலும் மகிழ்வும், நாணமும் செங்குழம்பைப் பூசிக் கொண்டிருந்தன. ஆனால் கண்கள் மட்டும் மருட்சியோடு மீனாட்சியைப் பார்த்தன.

பக்கம் 160

அந்தப் பார்வை மீனாட்சியின் இதயத்தை ஏதோ செய்தது. தேவிக்கு, தான் பல கொடுமைகளைச் செய்து விட்டதைப் போன்ற உணர்வு - ஒரு கணம் அவள் அம்மம்மாவுக்கு ஏற்பட்ட கதி நினைவுக்கு வருகிறது. அடுக்களையில் வைத்து அவளை அடித்தது - பாவம் பெண் பேதை. மீனாட்சி மீண்டும் தேவியைப் பார்த்தாள். தேவியின் விழியோரங்களில் நீர் திரள ஆரம்பிக்கின்றது. மீனாட்சிக்து அது என்னமோ செய்கிறது.

"மருமகளே, வா" மீனாட்சி ஓடிச் சென்று அவள் கரங்களைப் பிடிக்கிறாள். தேவியின் கரங்கள் நடுங்குகின்றன. இதழ்கள் படபடக்கின்றன. அவள் பேச முடியாது தவிக்கிறாள். தேவனின் இதயத்தில் இடம் கிடைத்தது பெரிதல்ல. மீனாட்சியே அவளை ஏற்றுக் கொண்டால்...? தேவி அப்படியே குனிந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள். மீனாட்சியின் உடலெங்கும் ஒரு புல்லரிப்பு. ஒரு பெண்ணுக்கு அவளுக்கு உரிய இடத்தைக் கொடுத்தால், இத்தனை இன்பமா? அவள் கரங்கள் தன் மருமகளின் கூந்தலைத் தடவுகின்றன. கண்கள் ஏனோ இன்பத்தால் பனிக்கின்றன. அவள் கண்கள் மட்டுமா? தங்கம் சேலைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கோபால் தன் கண்களில் வடியும் கண்ணீரை மறந்து அந்த இன்பக் காட்சியைப் பார்த்து நிற்கிறான். இளங்கோவோ அந்த இன்பத்தில் செல்லத்தின் கரங்களை அழுத்துகிறான். செல்லமோ தன் தாயை எண்ணிப் பெருமை கொள்கிறாள்.

"என்னடா, பார்த்துக் கொண்டு நிற்கிறாய்? பெரிய மனுசர் மாதிரி செய்யிறதையும் செய்து போட்டு. அதுகள் வெயிலுக்க நிக்குதுகள், கூட்டிக் கொண்டு வாவெனடா உள்ளே" மீனாட்சி தேவனைப் பார்த்து உரிமையோடு பேசுகிறாள். தேவன் புன்னகையோடு எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்து வருகிறான்.


பக்கம் 161

கலியாண வீடு களை தட்டுகிறது. ஆண், பெண்களெல்லாம் எங்கிருந்தோ வந்து சேருகிறார்கள். மீனாட்சி மகாராணி போல் அங்குமிங்கும் கட்டளையிட்டவாறு திரிகிறாள்.

"இலையைப் போடு, இலையைப் போடு என்று அவள் குரல் கேட்கும்.

"தங்கம், இந்த இலையைப் பார்த்து கறியைப் போடு." என்பாள்.

"இளங்கோ மோனை, நெய் விடட்டோ?" என்று கேட்பாள்.

"அடக் கோபால் சாப்பிடனடா. சோறு அப்பிடியே இருக்கு" என்று கடிந்து கொள்வாள்.

+++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++


கலகலப்பாக அன்றைய பொழுது அங்கே மறைந்து கொண்டிருந்தது. கணபதிப்பிள்ளையர் மதுப்புட்டிகளைக் காலி செய்து கொண்டிருந்தார். அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மதுப்புட்டிகள் காலியாகக், காலியாக மனதில் குரோதமும், கோபமும் நிரம்புகின்றன.

"இதயம், பாசம், பண்பு - இது இருக்கிறவன் ஏழையில்லை. எண்பது வயதைத் தாண்டினாலும் எனக்குத் துணையாக இருக்கலாம்... ஆனால்... நீங்கள்... சீ... போங்கோ."

தேவியின் வார்த்தைகள் அவர் இதயத்தில் இன்னும் இருந்தன. ஆண்களால் எதையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணால் அவன் புறக்கணிக்கப் பட்டால் அது தாங்க முடியாத வேதனைதான். அதுவும் கணபதிப்பிள்ளையர் பணத்தால் வெற்றிகளையே கண்டு வந்தவர். அவரால் அதைத் தாங்க முடியுமா?

பக்கம் 162

"விசயம் முடிஞ்சு போச்சு, வீணாக மினைக்கெடாதேங்கோ" கோபால் சொன்னவை அவர் காதில் விழுகின்றது. அவர் மேசையில் ஓங்கி அறைகிறார். மதுப்புட்டிகள் நடுங்குகின்றன. அவர் கதவை ஓங்கிச் சாத்திவிட்டு நடக்கிறார். எதிரே வந்த மகளையும் சட்டை செய்யாது ஏதோ ஒரு வெறியுடன் அவர் காரை ஓட்ட ஆரம்பிக்கிறார். அவருடைய கார் அவரது கையாள் வீட்டிற்குச் செல்கிறது. அவருக்கு வேண்டாதவர்களை அடிப்பதற்கும், அழிப்பதற்கும் என்று இருப்பவன்தான் நடராசன். அவன் கையில் காசை வைத்து "காரியத்தை முடி" என்கிறார் கணபதிப்பிள்ளையர்.

"முதலாளி கவலைப் படாதேங்கோ" என்கிறான் அவன். அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை மலர்கிறது.

+++++++++++ +++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++


திண்ணையில் இருந்தவாறு கோபால், இளங்கோ, தேவன் ஆகியோர் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதிரவன் விரைவாக மறைந்து கொண்டிருக்கிறான். புதுத் தம்பதிகள் இரவைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியும் போலும். இளங்கோ, தேவனின் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே சுழல்கின்றன.

தேவியின் தலையை மீனாட்சி வாரிக் கொண்டிருக்கிறாள். தன் மருமகளின் நீண்ட, நெளிந்த கூந்தலைத் தடவும் போது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. தன் மகனின் குறைகள் நிறைவுகளையும், விருப்பு வெறுப்புகளையும் அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு எதிரே தங்கம் செல்லத்தின் கூந்தலை அலங்கரிக்கிறாள். கிழவிகள் இடையிடையே கேலியும் செய்கிறார்கள். இளசுகள் வெட்கத்தால் இதழைக் கடித்துக் கொள்கிறார்கள்.

"தங்கம், பொழுதுபடப் போகுது. பொழுதுபட்டால் தலை இழுக்கக் கூடாது. கெதியா இழுத்து விடு." மீனாட்சி சொல்கிறாள். தேவியின் தலை பின்னியாயிற்று. அவள் எழுகிறாள்.


பக்கம் 163

"இஞ்ச திரும்பு பிள்ளை, பார்ப்பம்" மீனாட்சி தேவியைப் பார்க்கிறாள். "கடவுளே, நாவூறு படக் கூடாது. என்ரை கண்ணே பட்டிடும் போலயிருக்கு."

"மாமி, நீங்கள் தேத்தண்ணியும் குடிக்க இல்லை. போட்டுக் கொண்டு வரட்டே?" தேவி கேட்டாள்.

"போ பிள்ளை. இன்றைக்கு உனக்கு வேற வேலை கனக்க இருக்கு. போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. செல்லம், நீயும் போவனடி" மீனாட்சி சொன்னாள்.

"கொஞ்சம் பொறு மீனாட்சி. இன்னும் முடிய இல்லை. தலையைக் கொஞ்சம் குனி பிள்ளை." தங்கம் சொன்னாள்.

தேவி அறைக்குள் சென்றாள். எப்படியோ அங்கு வந்து விட்ட தேவன், அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அவள், அவன் விழிகளை ஆசையோடு பார்த்தாள். திருமணத்தின் பின் அவர்கள் இப்பொழுதுதான் தனிமையில் சந்திக்கின்றனர்.

"தேவி" அவன் கரங்கள் அவள் கன்னத்தைத் தடவுகின்றன. அவள் அவன் திறந்த மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொள்கிறாள். அவள் செவ்விதழ்கள் அங்கே முத்திரையைப் பதிக்கின்றன. அவள் மெதுவாகப் பேசுகிறாள்.

"இன்னும் கொஞ்சம் பொறுங்கோ."

"ம்... ஹ_ம்" அவன் அவளை இறுகக் கட்டிக் கொள்கிறான்.

"விடுங்கோ. ஆரும் வரப் போகினம்... விடுங்கோவன். மாமியைக் கூப்பிடுவன்." தேவி சொல்கிறாள்.

"எனக்குப் பயமில்லை"

"மா... மி..."

பக்கம் 164

"டேய், அங்க என்னடா சத்தம்?" தேவி, இன்னும் முகம் கழுவ இல்லையே?" மீனாட்சியின் குரல் கேட்கிறது.

தேவி தேவனின் கன்னத்தில் கிள்ளி விட்டுத் துள்ளி ஓடுகிறாள். அதை ஜன்னலினூடே பார்த்த செல்லம் ´கிளுக்´ கெனச் சிரிக்கிறாள்.

"என்னடி சிரிப்பு?" மீனாட்சி கேட்க, தங்கம் பார்க்க செல்லம் ஒன்றும் சொல்ல முடியாது தவிக்கிறாள்.

"செல்லம், நான் கிணத்தடிக்குப் போறன். நீ வா" தேவி கிணற்றடியை நோக்கிப் போகிறாள். அவள் நடையில் ஒரு துள்ளல். உள்ளத்தின் எதிரொலியது. முகத்திலே மின்னுகிறது ஒரு புன்னகை. அவள் கதை குளத்திலோ, குட்டையிலோ முடியவில்லை. அவள் ஏங்கிக் கிடந்த வாழ்வு கிடைத்து விட்டது. அவள்... அவள்... இன்று ஒருவனுக்கு... அவள் ஆசைக்குரியவனுக்கு மனைவி. நம்ப முடியவில்லை. அவளுக்குக் கலியாணம் முடிந்து விட்டது. அவள் தாiலியைத் தடவிக் கொள்கிறாள். அவள் இதயமே மகிழ்ச்சியில் வெடித்து விடும் போலிருக்கிறது. தக்காளிப் பழங்களைக் கைகளால் தட்டியவாறு அவள் குழந்தை போல் துள்ளித் துள்ளி ஓடுகிறாள். இனி அவளை யாரும் கேலி செய்ய முடியாது.

இந்த உலகம் முழுவதும் கேட்கும் வகையில் "எனக்கும் கலியாணம் ஆகி விட்டது." என்று அவள் கத்த விரும்பினாள். வானத்துப் பறவைகளைப் பார்த்துக் கைகளை வீசினாள். வாழை இலைகளை வருடினாள். ஆட்டுக்குட்டியை அணைத்து முத்தங் கொடுத்தாள். நிலவைப் பார்த்துச் சிரித்தாள். இன்னும்; சில மணி நேரங்களின் பின், அவள் தன் கணவனின் மார்பில் சாய்ந்திருப்பாள். அந்த இணைப்பிலே அவள் வாழ்வின் இனிய நாதம் கேட்கப் போகிறது. அந்த இன்பநாதம் எழுந்து அவளுடலெங்கும் ஓடுகிறது. கிணற்றடியை அடைந்த தேவி வாய்விட்டுச் சிரித்தாள்.

பக்கம் 165

அவள் கண்களில் ஓட்டை வாளிதான் முதலில் பட்டது. ஒரு சேலைத் துண்டால் அவள் அந்த ஓட்டையை அடைத்தாள். அவள் இனி ஓட்டை வாளியில்லை. அந்த நீர் வீணாகப் போய் விடாது.

"எடி செல்லம், செல்லம்... கெதியாக வாவனடி" அவள் கிணற்றடியில் நின்று கத்தினாள்.

"வந்திட்டனக்கா... போக விடுங்கோவன்" தன் வழியை மறித்துக் கொண்டு நின்ற இளங்கோவைச் செல்லம் கெஞ்சினாள். அவளுக்கு ஓர் ஆசை - தேவி அக்காவைப் போல தானும் அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு ஓட வேண்டுமென்று. அவள், அவன் கன்னத்தைக் கிள்ள நெருங்கினாள். கை நடுங்கியது. அவன் சிரித்தான். அவள் வெட்கத்தோடு ஓடினாள்.

தேவி தண்ணீர் அள்ள ஆரம்பித்தாள். கிணற்று விளிம்பில் நின்றவாறு துலாக்கயிற்றை இழுத்தாள். யாரோ பின்னால் அசைவது போன்ற உணர்வு. செல்லமா? அவள் திரும்பினாள். அதற்குள் நடராசன் காரியத்தை முடித்து விட்டான். அவன் கை பலங்கொண்ட மட்டும் அவளைத் தள்ளியது.

"ஐயோ, அம்மா" அவள் வீரிட்டாள். கிணற்றின் பாதாளத்தை நோக்கி அவளுடல் போய்க் கொண்டிருந்தது. கணபதிப்பிள்ளையரின் கையாள் நடராசன் வேலியால் பாய்ந்து மறைந்து விட்டான்.

செல்லம் "வீல்" என்று அலறினாள்.

தேவனுக்கு எந்தக் குரலும் கேட்கவில்லை. ஆனால் தேவியின் குரல் தெளிவாகக் கேட்டது. எல்லோரும் கிணற்றடியை நோக்கி ஓடினார்கள். தங்கமும், மீனாட்சியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். செல்லம் விம்மினாள். தேவனைத் தொடர்ந்து இளங்கோவும் கிணற்றுக்குள் இறங்கினான். கோபாலே கற்சிலை போல நின்றான்.


பக்கம் 166

நிலவு மறையவில்லை. அந்த வேதனைக் காட்சியைக் காண்பதில் அதற்கும் மகிழ்ச்சியா? இல்லை - தேவியின் முகத்தைத் தேவன் பார்க்க வேண்டுமென்று ஒளி கொடுக்கிறதா? கிணற்று நீர் - அதற்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது அந்த இன்பநாதம். தேவன் தேவியைத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டான். அவள் நெற்றியில் இப்பொழுது கரைவது குங்குமமல்ல. இரத்தம். அந்த இரத்தத்தைக் கரைப்பது தண்ணீர் மட்டுமல்ல, அவன் கண்ணீரும் கூட. தேவி தன் விழிகளால் ஏதோ சொல்லத் துடிக்கிறாள். அந்தப் பார்வை, ´ஓ... தேவா, என்னை வாழ வைச்சிட்டாய்´ என்கிறதா? இல்லை, ´தேவா, இந்த உலகம் ஏன் என்னை வாழவிடவில்லை?´ என்று ஏக்கத்தோடு கேட்கிறதா? தேவனின் கண்களில் திகில் பரவுகிறது. அவன் முடியும் வரை அவளைத் தன் மார்போடு சேர்த்துக் கொள்கிறான். ´தேவி, என்னைப் பிரிந்து போய் விடாதே.´ எனும் அவன் இதயத்தின் ஒலி அவளுக்கும் கேட்கட்டும் என்றா? இல்லை அவன் இதயத் துடிப்பாவது அவள் இருதயத்தை இயங்க வைக்காதா என்ற ஏக்கத்திலா? தேவி அவனையே பார்க்கிறாள். அந்தப் பார்வை... அந்தப் பார்வை... அப்படியே நிலைத்து விடுகிறது.

"தே... வி........................"

தேவனின் குரல் கிணற்றுச் சுவரெங்கும் மோதி எதிரொலிக்கிறது. பல இதயச் சுவர்களிலே மோதிப் பரிதாபமாக ஒலிக்கிறது. கிணற்றின் மேலிருந்து கண்ணீர்த் துளிகள் அவன் மேனியில் விழுந்து நனைக்கின்றன. அதைச் சகிக்க முடியாது நிலவு கருமேகங்களிடையே மறைந்து கொண்டது.

முற்றும்.
 

மின்னூல் வடிவம் : தி. கோபிநாத் (2008)
அண்மைய மாற்றம் : 31.01.2008